பாசிஸ்டுகள் எப்போதும் பொய்யை அடிப்படையாகக் கொண்டே அரசியல் செய்கின்றனர். “எத்தனை பெரிய பொய்யை வேண்டுமானாலும் சொல்லுங்கள், திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்… ஒரு கட்டத்தில் மக்கள் அதனை உண்மை என்று நம்பத் தொடங்கிவிட்டால், நீங்களே அதனைப் பொய் என்று சொன்னாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள்” என்பதுதான் கோயபல்ஸின் பிரச்சாரங்களுக்கு அடிப்படை.

அவரின் உண்மையான வாரிசுகள் நாங்கள்தான் என்பதை நரேந்திர மோடிஜியும் அருண் ஜெட்லிஜியும் நிரூபித்து வருகிறார்கள். இந்தியப் பொருளாதாரம் குறித்து இவர்கள் இருவரும் வாய் திறந்தாலே வெறும் பொய்யாக வந்து விழுகிறது.

நாட்டின் தனிநபர் வருமானம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீத அளவிற்கு அதிகரித்து நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கையில், பெட்ரோல் விலை உயர்வு சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும்போது  விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருக்கிறது என்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வு மிக வேகமாக அதிகரித்து, ஒரு சதவீதம் கோடீஸ்வரர்கள் வசம் நாட்டின் 78 சதவிதம் சொத்துக்கள் குவிந்து கிடக்கும்போது மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பொதுமக்கள் மீது ஏவப்பட்ட பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. ஆகிய நடவடிக்கைகளின் காரணமாக நாட்டின் பொருளாதாரமே நிலைகுலைந்து, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர். ஆனால், மோடியும், அருண் ஜெட்லியும் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதாக அடித்துவிடுகிறார்கள்.

இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 60 சதவிதம் பேருக்கு இன்னமும் விவசாயம்தான் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஆனால், அரசோ இந்த உயிராதாரமான துறையைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது. ஒருபுறம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாக அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் வாய்ச்சவடால் அடித்தாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய விவசாயிகளின் சராசரி வருமானம் உயராமல் தேங்கிக் கிடப்பதாக மைய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறுகிறார்.

வாங்கிய கடனைக் கட்ட வழியில்லாத விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரியும், உற்பத்திப் பொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலையைக் கேட்டும், இராஜஸ்தான், மராட்டியம், தில்லி என நாடு முழுவதும் பெரும் போராட்டங்களை நடத்தினார்கள். இனி விவசாயத்தை நம்பியிருந்தால் வாழவேமுடியாது என்ற நிலைக்கு வந்துவிட்ட விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் கூலி வேலை செய்தாவது பிழைத்துக் கொள்ளலாம் என நகரங்களை நோக்கி வருகின்றனர். நகரங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது.

இவர்கள் பெரும்பாலும் தினக்கூலிகளாக அமைப்புச்சாரா தொழிற்துறையில் வேலைசெய்கின்றனர். இந்தியத் தொழிலாளர்களில் தினக்கூலிகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக அதிகரித்துள்ளது. அதாவது 15 கோடிப் பேர் தினக் கூலிகளாக உள்ளனர். இவர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்காது. கூலியும் நிலையானதாக இருக்காது.

அமைப்புச் சாரா தொழிற்துறைகளில் மட்டுமல்ல, அமைப்புசார் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதம் உண்டா என்றால் அதுவும் கிடையாது. தொழிற்சாலைகளில் கான்டிராக்ட் தொழிலாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, இன்று மூன்றில் ஒரு பங்கு தொழிளாளர்கள் கான்டிராக்ட் முறையில் பணிக்கமர்த்தப்படுகின்றனர்.

படிக்க:
ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்
வேலை வாய்ப்பு அலுவலகங்கள் – நேரடி ரிப்போர்ட்

இதுபோதாதென்று, தொழிலாளர் நலச் சட்டங்களை தொடர்ந்து திருத்தி வரும் மோடி அரசு, நிலையான கால ஒப்பந்தம் (பிக்ஸ்ட் டெர்ம் கான்டிராக்ட்), நீம் போன்ற புதிய முறைகளைக் கொண்டுவருவதன் மூலம் கான்டிராக்ட் முறையை விட மோசமான சுரண்டலைப் புகுத்த வழிசெய்துள்ளது.

விவசாயம் சாராத தொழிற்துறைகளில் 93 சதவிதம் பேருக்கு சிறுதொழில்கள்தான் வேலைவாய்ப்பை அளிக்கின்றன. 2016-ஆம் ஆண்டு பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட பிறகு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிலகங்கள் நாடு முழுவதும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 2017-18 காலகட்டத்தில் சுமார் ஐம்பதாயிரம் சிறுதொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாகவும் தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தமிழகச் சட்டசபையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏறத்தாழ இதே நிலைதான் மற்ற மாநிலங்களிலும் நிலவுகிறது.

பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிவிதிப்பைப் பல மடங்கு அதிகரித்ததால், இன்று பெட்ரோலின் விலை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆட்டோ, ஷேர் ஆட்டோ, குட்டி யானை எனக் கூறப்படும் மினி லாரி, வேன்கள் போன்றவற்றை வைத்து வாழ்க்கை நடத்தும் “சிறு உடைமையாளர்களின்” வருமானம் பெருமளவு குறைந்துள்ளது. இதனைச் சமாளிக்க அவர்கள் தங்களது வேலை நேரத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர் அல்லது தொழிலையே விட்டுவிட்டு வேறு வேலை தேடி ஓடுகின்றனர்.

நாடு முழுவதும் வேலைவாய்ப்பு குறைந்து, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவது குறித்துப் பல ஆய்வு முடிவுகளும், புள்ளி விவரங்களும் வெளியாகியுள்ளன. மத்திய ரிசர்வ் வங்கியினால் நடத்தப்படும் KLEMS இந்தியா டேட்டாபேஸ் என்ற நிறுவனத்தின் ஆய்வின்படி, 2015-16 காலகட்டத்தில் வேலைவாய்ப்பு 1% அளவிற்கு குறைந்துள்ளது. இதே போன்று “இந்திய பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம்” என்ற அமைப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவித அளவிற்கு உயர்ந்திருந்தாலும், வேலைவாய்ப்பு கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 2018-19-ஆம் ஆண்டில் 1% என்ற அளவில் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறுகிறது. 2017 ஆகஸ்டு மாதத்தில் 4.1 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், 2018 ஆகஸ்டு மாதத்தில் 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொழிலாளர் ஆணையத்தின் ஆய்வுப்படியே 2016-17 காலகட்டத்தில் 5.56 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

படித்தவர்கள், படிக்காதவர்கள், திறன் உள்ளவர்கள், திறனற்ற தொழிலாளர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லாத் தொழிலாளர்களும் வேலையில்லாமல் திண்டாடிவருவதாக தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சந்தோஷ் மெக்ரோத்ரா கூறுகிறார். பொறியியல் உள்ளிட்ட தொழிற்துறை சார்ந்த பட்டப்படிப்பு படித்தவர்களிடையேதான் மிக அதிக பட்சமாக 11% அளவிற்கு வேலைவாய்ப்பின்மை நிலவுவதாக அவர் கூறுகிறார்.

பொறியியல் பட்டம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பளிப்பதில் முக்கிய பங்குவகித்த ஐ.டி.. துறையிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் புதிய வேலைவாய்ப்பு உருவாவது 85 சதவீதம் குறைந்துள்ளது. பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள் அடுத்தடுத்து  ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றன.

இவ்வாறு வேலைவாய்ப்பு குறித்து வரும் எல்லா ஆய்வுகளும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதையும் குறைந்த கூலிக்குக் கிடைத்த வேலையைப் பார்ப்பதும் (under employment) அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. தொழிலாளர் ஆணையம், தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு ஆகிய அரசு நிறுவனங்களின் ஆய்வுகள்கூடத் தங்களுக்கெதிராக இருப்பதால், 2017-க்குப் பிறகு இத்தகைய ஆய்வுகள் அனைத்தையும் நிறுத்தும்படி நிதி ஆயோக் உத்தரவிட்டிருக்கிறது. தற்போது நரேந்திர மோடியும், அருண் ஜெட்லியும் என்ன கூறுகிறார்களோ அதுதான் ஆய்வுமுடிவுகள் என ஏற்றுக்கொள்ளும் நிலையில் நாம் நிறுத்தப்பட்டிருக்கிறோம்.

படிக்க:
மக்கள் காயத்திற்கு புள்ளிவிவர மிளகாய் பொடி போடும் மோடி !
மோடி அவிழ்த்துவிட்ட புளுகுமூட்டை – 71 வது சுதந்திர தின உரை

மோடியோ நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதற்குச் சான்றாகத் தொழிலாளர் சேமநல நிதியத்தில் (EPF) 2017-18 காலகட்டத்தில் 45 இலட்சம் பேர் புதிதாகச் சேர்ந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார். சிறு, குறு தொழில்நிறுவனங்களிடம் சேம நல நிதியத்தில் சேர்ந்தால், நிறுவனங்களின் பங்கை அரசே கட்டிவிடும் எனச் சலுகை கொடுத்து, அவர்களைக் கணக்கு தொடங்கவைத்து அதையே வேலைவாய்ப்பு அதிகரிப்பு எனக் காட்டி நம்மை ஏமாற்றுகிறார். பட்டதாரிகள் பக்கோடா கடைபோட்டு பிழைத்துக் கொள்ளலாம் எனக் கூறும் “பனியா” பிரதமரிடமிருந்து நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

“ஸ்டார்ட் அப் இந்தியா”, ஸ்கில் இந்தியா என மோடி காட்டிய ஜூம்லாக்கள் எல்லாம் பிசுபிசுத்துப் போய்விட்டன. “ஸ்டார்ட் அப் இந்தியா” திட்டத்தில் தொடங்கப்பட்ட 25% நிறுவனங்கள், இரண்டு ஆண்டுகள்கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் மூடப்பட்டுள்ளன. ஸ்கில் இந்தியா திட்டத்தின் மூலம் மொத்தமே 6 இலட்சம் பேருக்குதான் வேலை கிடைத்திருக்கிறது.

மோடி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பேருக்கு மேல் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் காற்றில் பறக்கவிட்டது மட்டுமல்லாமல், மக்கள் தமது சொந்த முயற்சியில் உருவாக்கிக் கொள்ளும் வேலைவாய்ப்புகளையும் – தள்ளுவண்டிக் கடைகள் போடுவது, ஆட்டோ ஓட்டுவது போன்றவை – தட்டிப்பறித்துவிடும் வேலையைத்தான் செய்து வருகிறார். இந்த அரசு கொடுங்கனவு (nightmare) என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்!

அழகு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க