“காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகவிற்கு பாசிச பாஜக அனுமதி! தமிழகத்தை பாலைவனமாக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் சதித்திட்டத்தை முறியடிப்போம்!” என்கிற முழக்கத்தின் கீழ் 03.01.2019 அன்று காலை 11 மணியளவில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுக்கட்சினர் திரளாக கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி தருமபுரி மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பிரசுரங்கள், நூற்றுக்கணக்கான சுவரொட்டி, கிராமங்கள்தோறும் தெருமுனைப்பிரச்சாரம் என வீச்சான பிரச்சாரம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தினை மக்கள் அதிகாரம் தோழர் சிவா தலைமை தாங்கி நடத்தினார். அவர் பேசுகையில்; “ஏற்கனவே தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீர் கொடுக்காததால் ஊருக்கே சோறுபோட்ட டெல்டா விவசாயிகள் சென்ற ஆண்டு மட்டும் 400 பேர் கருகிய பயிரை பார்த்து நெஞ்சுவெடித்து இறந்தனர். இன்றைக்கு கஜா புயலால் மிச்சமிருந்த விவசாயத்தையும் இழந்துள்ளனர். அவர்கள் மீண்டெழவே 20 ஆண்டுகள் ஆகும் என்கிற நிலையில், சொந்த நாட்டிலேயே சோத்துக்கு கையேந்தி நிற்கின்றனர்.

இந்த நிலையில் அணையைக்கட்டினால் தமிழகம் பாலைவனமாகும். அடுத்ததாக நிலத்தடிநீர் ஆணைய மசோதாவை நிறைவேற்றப் போகிறார்கள். எனவே இனியும் வேடிக்கை பார்க்காமல், மக்களுக்கு எதிராக இருக்கும் இந்த அரசை நம்பாமல் கிராமங்கள், நகரங்கள்தோறும் போராட்டத்தைக் கட்டிஎழுப்புவதுதான் தீர்வு.” என்று பேசினார்.

அவரைத்தொடர்ந்து புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு பேசுகையில், “மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கான காரணம், அரசாங்கத்தின் கொள்கையே தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்காகவே இருப்பதுதான். 1991-ல் கொண்டு வரப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தை வளர்ச்சி என்ற பெயரில் அமல்படுத்தி வருகிறார்கள்.

megathathu dam issue dharampuri PP Protest (5)“நீரின்றி அமையாது உலகு” என்றார் வள்ளுவர் அப்படி எல்லா உயிருக்கும் ஆதாரமாக இருக்கும் தண்ணீரைதான் விற்பனை செய்கிறார்கள். அதற்காகதான் மேகதாதுவில் அணையை கட்டத் துடிக்கிறார்கள். கார்ப்பரேட்டுகள் தண்ணீர் கொள்ளயடிப்பதை நாம் வேடிக்கை பார்க்கமுடியுமா? உயர்கல்வி ஆணையம், மருத்துவ ஆணையம், நிலத்தடி நீர் ஆணையம் என்று.. எல்லாம் ஆணையம் என்கிற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகை செய்கிறார்கள். எல்லாமே காசு என்றால் கவர்மெண்டு எதற்கு, நாம் கட்டும் வரிபணம் எங்கே போகிறது, எனவே மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்” என்றார்.

மக்கள் அதிகாரம், பென்னாகரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜா பேசுகையில், “ஒருபக்கம் 2019 புத்தாண்டை இந்தியா முழுவதும் கொண்டாடுகிறோம். இன்னொரு பக்கம் விவசாயிகளின் ஏக்கம், பரிதவிப்பு என ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் காவிரிப் பிரச்சினைதான் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. அணையை கட்டி தமிழகத்து தண்ணீர் கொடுக்கிறோம் என்று கூறிகிறார்கள், ஆனால் இன்றைக்கு உள்ளூரில் பல கிராமங்களுக்கு குடிநீர் தேவை பூர்த்தியாகமல் பல மைல்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டியுள்ளது.

பலமுறை மனுக்கொடுத்தாலும் அதிகாரிகள் திரும்பி பார்ப்பதில்லை அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் இவர்கள் எப்படி மாநிலப்பிரச்சினையை தீர்ப்பார்கள் எனவே தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரத்தை வாழ்வாதரத்தை அழிக்கும் வேலையில் பிஜேபி-யும் அதிமுக-வும் இறங்கியிருக்கிறார்கள். எனவே அனைத்துப் பிரச்சினைக்கும் போராடினால்தான் வாழ்வு! இல்லையென்றால் சாவுதான் மிஞ்சும்..” என்று எச்சரித்தார்.

அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் சிறப்புரையாற்றினார், அவரது உரையில் “தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டம். மற்ற மாவட்டங்களை காட்டிலும் பருவமழையும் 52 % குறைந்துள்ளது. மழை குறைந்தால் குடிநீர் தேவையும் அதிகரிக்கும். எனவே, நம்பி இருப்பது காவிரிநீரைத்தான். தண்ணீர் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுச்சொத்து அதனை என்னுடைய சொத்து என்று கர்நாடகா உரிமை கொண்டாடுகிறது. அதற்கு மோடியும், தீர்ப்புகளும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறது.

படிக்க:
♦ மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : அரசியல் சட்ட விரோதமானது !
♦ மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி!

காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த பிறகுதான் கர்நாடகாவில் அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். அதனை ஆணையம் தலையிட்டு தடுக்காமல் மாதம் மாதம் கூட்டம் நடத்துவது என்று தமிழகத்திற்கு துரோகம் செய்வார்கள். ஆனால் இவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்று பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.

கர்நாடகாவில் அணையை கட்டி அங்குள்ள தண்ணீரை கார்ப்பரேட்டுகள், சொகுசு பங்களாக்கள் மேட்டுக்குடிகள் ஆகியோர் கும்மாளமிடுவதற்கு பயன்படுத்தி வருகிறார்கள், எனவே 10 லட்சத்துக்கு கோட்டு போடும் மோடியும், பல ஆயிரம் கோடிகளை கொள்ளையிடும் பி.ஜே.பி அமைச்சர்களும், அவர்களின் எடுபிடியான தமிழக அரசும்; உயர்மின் கோபுரம் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதரத்தை பறிப்பதற்கு எதிராக 8 மாவட்ட விவசாயிகள் 12 நாட்களாக போராடியும் கண்டுகொள்ளவில்லை.

தாயிடம் அழுதால் பால் கிடைக்கும், பேயிடம் அழுதால் சாவுதான் கிடைக்கும் என்பதைதான் இந்த அரசாங்கம் நமக்கு காட்டுகிறது, எனவே 40 ஆண்டுகளாக தீர்ப்புகளை நம்பி ஏமாந்து விட்டோம். இனியும் ஏமாறக்கூடாது.

மக்கள் போராட்டம் மூலம் ஸ்டெர்லைட்டை மூடியதும், ஜல்லிக்கட்டை வென்றெடுத்ததும் தமிழர்கள்தான். எனவே தமிழகத்துக்கு அப்படிப்பட்ட போராட்ட பாரம்பரியம் இருக்கிறது எனவே ஜல்லிக்கட்டு போராட்டம் போல், வடமாநில விவசாயிகள் போராட்டத்தை போல கட்சி பாராமல் ஒருங்கிணைந்து போராடினால்தான் இப்பிரச்சினையை தீர்க்கமுடியும்” என்று அறைகூவல் விடுத்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பின்னர் மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல பொருளாளர் தோழர் கோபிநாத் பேசுகையில், “கர்நாடகாவில் அணையை கட்ட பிஜேபி அனுமதி அளித்து தமிழகத்தின் எதிரி என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறது. அணையைக்கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட வராது. 22 மாவட்டங்கள் குடிநீர் இல்லாமல் பாலைவனமாகும். இதனை எதிர்த்து போராடுவதற்கு அனுமதி இல்லை காரணம் சட்டம் ஒழுங்கு பாதிக்குமாம்.

ஆனால் இங்கே சந்து பொந்துகள் தோறும் சாராயம் விற்பதற்கு மாமூல் வாங்கிக்கொண்டு அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்காதாம். எல்லா அதிகாரிகளும் மூன்று வேலை சோறு தின்பது விவசாயிகளின் வியர்வை, உழைப்பில்தான். எடப்பாடியும், பன்னீர்செல்வமும் சட்ட வகையில் போராடுவோம் என்று கூறுவது கர்நாடகா அணைகட்டுவதற்குதான் உதவும். காவிரி எங்களுக்கு சொந்தம் என்று கர்நாடகா சொல்வதற்கும், மோடி சொல்வதற்கும் பின்னால் கார்ப்பரேட்டுகளின் கூட்டு அடங்கியிருக்கிறது.

அணையை கட்டினால்தான் டெல்டாவில் இருக்கும் மீத்தேன், ஹட்ரோகார்பன், போன்ற கனிமவளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க முடியும், மேலும் 8 வழிச்சாலை, 6 வழிச்சாலைக்கு எதிராக போராடினால் கடுமையாக ஒடுக்கிறது இந்த அரசு. அடிப்படை உரிமையை பறிப்பவர்களிடம் எப்படி பிரச்சினையை தீர்க்க முடியும்.

மக்களின் வீரம் செறிந்த போராட்டம்தான் ஸ்டெர்லைட்டை மூடியது, வீரம் செறிந்த போராட்டம்தான் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது. எனவே ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல நம்முடைய போராட்டதை தொடங்குவோம்! காவிரி உரிமையை மீட்டெப்போம்.” என்று அறைகூவி அழைத்தார்.

இந்த  ஆர்ப்பாட்ட நிகழ்வை திரளான மக்கள் இறுதிவரை நின்று கவனித்தனர். அணையை கட்டினால் தமிழகம் சுடுகாடாக மாறும் அபாயத்தை உணர்த்தும் வகையிலும், காவிரி தீர்ப்புகள், ஆணையங்கள் மூலமும் தீர்வு கிடைக்காது, மாற்று மக்கள் எழுச்சிதான் தீர்வு என்பதை உணர்த்தும் வகையில் ஆர்ப்பாட்டம் அமைந்தது.


தகவல்:
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம், தொடர்புக்கு – 97901 38614

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க