வில்லவன்
வில்லவன்

நாவல்களை வாசிப்பதன் மீதான ஆர்வம் வற்றிப்போய் ஒரு தசாப்தம் ஆகிறது. விருப்பத்தெரிவின் பட்டியலில் இல்லாமல் போய் அதைவிடக் கூடுதலான காலம் ஆகிவிட்டது. இத்தகைய நிலையில்தான் தோழர் ஒருவர் நவல் எல் சாதவி எழுதிய ‘woman at point zero’ எனும் நூலைப் பரிந்துரைத்தார். தமிழில் சசிகலா பாபு மொழியாக்கத்தில் சூன்யப் புள்ளியில் பெண் எனும் தலைப்பில் எதிர் வெளியீடு பதிப்பகத்தால் சென்ற மாதம் வெளிவந்திருக்கிறது. தோழர் விவரித்ததை பகுதியளவாக புரிந்துகொண்டு இதனை ஒரு கட்டுரைத் தொகுப்பு என நினைத்து வாங்கினேன். சற்றே ஏமாற்றத்துடன் வாசிக்கத் துவங்கிய சில நிமிடங்களில் பிர்தவ்ஸ் வாழ்ந்த கொடிய உலகிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தேன்.

நவல் எல் சாதவி

நாவலை எழுதிய நவல் எல் சாதவி 1931-ல் எகிப்தில் பிறந்து, மருத்துவம் படித்து மனநல மருத்துவராக பணியாற்றியவர். கெய்ரோ சிறைச்சாலையில் இருந்த தண்டனை பெற்ற பெண்களின் பண்புகளை ஆராய்ச்சி செய்தவர். அங்கே அவர் சந்திக்க விரும்பிய, பல நாட்கள் சந்திக்கவே ஒப்புக்கொள்ளாத, தூக்கு தண்டனைக்கு முதல்நாள் சந்திக்க ஒப்புக்கொண்ட பிர்தவுஸ் எனும் பெண்ணின் உண்மைக் கதையே இந்த நாவல். மதப் பிற்போக்குத்தனம் கொண்ட ஒரு சமூகம் பெண்களை எப்படியெல்லாம் நடத்தும் என்பதற்கான சாட்சியாக காட்சியளிக்கிறார் பிர்தவுஸ்.

சாதவி ஆராய்ச்சி செய்யும் சிறையில் பிர்தவுஸ் மட்டும் தனித்துத் தெரிகிறார். யாருடனும் பேசுவதில்லை. அவரைப் பார்க்க பார்வையாளர்கள் யாரும் வருவதும் இல்லை. தனக்கு தரப்பட்ட உணவைக்கூட காலை வரை சாப்பிடாமல் எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் அந்தக் கைதி. அவரது நடவடிக்கைகள் அவரை சந்திக்க வேண்டும் எனும் ஆவலை தூண்டுகிறது. சிறை மருத்துவரிடம் அவரை ஒரு சந்திப்புக்கு ஒப்புக்கொள்ள வைக்க முடியுமா என கேட்கிறார்.

(சிறை மருத்துவர்) “நான் முயற்சி செய்து பார்க்கிறேன், அவர் எனது கேள்விகளுக்கே பதில் சொல்வதில்லை. தமது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க எழுதப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் அவர் கையெழுத்திடவும் மறுத்துவிட்டார். நீங்கள் ஒரு மனநல மருத்துவர் என்று அறிமுகப்படுத்துகிறேன். ஒருவேளை அப்போது அவர் உங்களை சந்திக்க ஒப்புக்கொள்ளக்கூடும்”

(சாதவி) “அவரது கருணை மனுவை யார் எழுதியது?”

”நான்தான் எழுதினேன். உண்மையில் அவரை கொலை செய்தவராக நான் கருதவில்லை. இத்தனை கனிவான பெண் கொலை செய்திருக்கக்கூடும் என உங்களால் நம்பவே முடியாது.”

”கனிவான நபர்கள் கொலை செய்ய மாட்டார்கள் என உங்களிடம் யார் சொன்னது?”

படிக்க:
♦ #MeToo : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள் !
♦ #MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !

அன்று சிறை மருத்துவரின் கோரிக்கையை பிர்தவுஸ் நிராகரிக்கிறார். அப்போது துவங்கிய சாதவியின் ஏமாற்றம் பல நாட்களுக்கு தொடர்கிறது. இந்த ஏமாற்றத்தை அவர் தன் மீது நாட்டமில்லாத ஒருவரிடம் காதல்வயப்பட்ட தருணத்தோடு ஒத்திருந்ததாக குறிப்பிடுகிறார் சாதவி.

ஒரு நாள் அவர் பணி முடிந்து காரில் ஏறுகையில் பிர்தவுஸின் அறைக்காவலர் மூச்சிறைக்க ஓடி வருகிறார்.

”அவர் உங்களை சந்திக்க விரும்புகிறார்”

அதைக்கேட்ட சாதவிக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதைப்போல சுவாசத்தின் வேகம் அதிகரித்தது. முன்னெப்போதையும்விட அவர் இதயம் வெகுவேகமாக துடித்தது. அவர் கால்கள் அவர் எடையை சுமக்காததைப்போன்ற இலகுவான நடையில் அதிவேகமாக பிர்தவுஸின் அறையை அடைகிறார். அங்கு உறைந்துபோனவராய் நிற்கையில் கத்தி போல ஊடுருவும் குரலில் பிர்தவுஸ் சொல்கிறார் “ஜன்னலை மூடுங்கள்!”

“நான் பேசவேண்டும்; இடையூறு செய்யாதீர்கள்; உங்கள் பேச்சை கேட்பதற்கு என்னிடம் நேரமில்லை. இன்று மாலை ஆறு மணிக்கு என்னை அழைத்துச் சென்றுவிடுவார்கள் (தூக்கிலிட). நாளை காலை நான் இங்கு இருக்க மாட்டேன்.” என்பதாக தொடங்கும் பேச்சு அவர் கைது செய்யப்படும் நிகழ்வை விவரிக்கும்வரை நீள்கிறது.

நாவலின் கதையை விவரிப்பதைவிட ஒரு கொலைக்குற்றவாளி, நீண்ட நாள் பாலியல் தொழில் செய்தவரின் கதை ஏன் உங்களுக்கும் எனக்கும் அவசியப்படுகிறது என்பதை பேசுவது சரியாக இருக்கும் என கருதுகிறேன். ஆகவே நாவலில் இருக்கும் சில சம்பவங்களை மட்டும் பார்க்கலாம்.

சூனியப் புள்ளியில் பெண் (ஆங்கில நூல்)

தன்னை ஒரு பாலியல் தொழிலாளியாக வைத்து பணம் ஈட்டிய பெண்ணிடம் இருந்து தப்பி, ஒரு போலீஸ்காரனால் உடலுறவுக்கு பயன்படுத்தப்பட்டு பிறகு சாலையில் பசியோடு குளிரில் அலைகிறார். அப்போது ஒருவர் காரில் வந்து அவரை அழைத்துசெல்கிறார். அவர் வாழ்வில் பலமுறை எதிர்கொண்டதுதான் அப்போதும் நடக்கிறது. ஆனால் விதிவிலக்காக அவருக்கு அதற்காக பத்து பவுண்ட் பணம் கிடைக்கிறது. இருபத்தைந்து ஆண்டு கால வாழ்வில் அவர் முதல் முறையாக தொடும் பணம். அந்த பணத் தாள் கொடுக்கும் வினோத அனுபவத்தோடு வீதியில் நடக்கிறார். உணவகம் ஒன்றில் கோழி இறைச்சி வறுபடும் மணம் அவரை வந்தடைகிறது.

கடையில் நுழைந்து கோழி வறுவல் ஒன்றை ஆர்டர் செய்கிறார். மேசைக்கு வந்த கோழி வறுவலை நிதானமாக ஒவ்வொரு வாயாக முழுமையாக மென்று உண்கிறார். எவ்வளவு நேரம் ஒரு கவளம் உணவை (இறைச்சியை) வாயில் வைத்திருக்க இயலுமோ அவ்வளவு நேரம் வைத்திருந்து விழுங்குகிறார். அவருக்கு உணவை பரிமாறும் ஊழியர் அவர் சாப்பிடுவதை பார்க்காமல் முகத்தை வேறு பக்கம் வைத்துக்கொள்கிறார். தான் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை யாரும் கண்காணிக்காமல் இருக்கும் ஒரு தருனத்தை தன் வாழ்நாளில் அப்போதுதான் எதிர்கொள்கிறார் பிர்தவுஸ். அவர் குழந்தைப்பருவத்தில் இரவு உணவு இல்லாமல் தூங்கப்போவதே வழக்கமாக இருந்திருக்கிறது. பசியிலும் குளிரிலும் கோழிக்குஞ்சுகளைப்போல தம் சகோதர சகோதரிகள் சுருண்டு கிடந்து செத்துப்போனது அவருக்கு நினைவுக்கு வருகிறது. எப்போதும் அவர் அப்பா பசியோடு உறங்கப்போவதில்லை. ஆகவே அவருக்கு மட்டுமான உணவை பிர்தவுசின் தாய் வீட்டு சுவர் பொந்துகளில் ஒளித்து வைப்பார். அவர் அப்பா மீதம் வைத்த உணவுதான் அவருக்கும் ஏனையோருக்கும் கிடைக்கும்.

ஒரு பியஸ்தர் நாணயத்துக்காக அவர் சிறு வயதில் ஏராளமாக அடி வாங்கியிருக்கிறார். வேலை வாங்கப்பட்டிருக்கிறார், அழுதிருக்கிறார், ஏமாற்றப்பட்டிருக்கிறார். நூறு பவுண்ட் பணத்துக்காக ஒரு 60 வயது முதியவருக்கு மணம் முடித்துக்கொடுக்கப்படுகிறார் 19 வயது பிர்தவுஸ். அந்த கணவர் பிரார்த்தனை செய்யும்போதுகூட பிர்தவுஸ் சாப்பிடுவதை திருட்டுத்தனமாக கண்காணிக்கிறார்.

படிக்க:
♦ பெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா ? நவீன மருத்துவமா ?
♦ பார்ப்பனிய ஆணாதிக்கம் தான் பாஜக-வின் இந்திய தனித்துவம் !

சிறுமியாக இருக்கையில் உடன் விளையாடிய இன்னொரு சிறுவனால் பாலியல்ரீதியாக (விளையாட்டாக) பயன்படுத்தப்பட்டதில் தொடங்கும் அவர் வாழ்வு இறுதியாக தன்னால் கொல்லவும் முடியும் என ஒரு ஆணிடம் விவரிக்கும்வரை ஒரு பாலியல் பண்டமாகவே நீள்கிறது. பெற்றோர்களை இழந்த பின் கெய்ரோவிற்கு அவரை அழைத்துச்செல்லும் அவர் மாமா, பிறகு 100 பவுண்ட் கொடுத்து அவரை மணமுடித்து செல்லும் அவரது முதிய கணவர், அவரிடமிருந்து தப்பி ஓடுகையில் அடைக்கலம் கொடுத்த ஒரு கடைக்காரர், அங்கிருந்து தப்பிச் செல்கையில் சந்தித்த ஒரு விபச்சார தரகுப் பெண், வழியில் விசாரணை செய்த போலீஸ்காரன் என அவர் எதிர்கொண்ட எல்லோரும் அவரை இரக்கமின்றி நுகர்கிறார்கள்.

பத்தொன்பது வயதில் திருமணம் எனும் பெயரில் அவரை வாங்கிய கணவர் வாயில் ஒரு விகாரமான ஒரு புண்ணோடு இருப்பவர். அதில் இருந்து வழியும் ரத்தத்தோடும் சீழோடும்தான் அவர் பிர்தவுஸுடன் உறவுகொள்கிறார். கணவர் உறங்கியபின் தன் முகத்தை பலமுறை சோப்பு போட்டு கழுவியதாக குறிப்பிடுகிறார் பிர்தவுஸ். அந்த வாழ்வை தொடர இயலாமல் தன் மாமா வீட்டுக்கு வந்தவருக்கு உணவுகூட கொடுக்காமல் திருப்பி கணவரிடம் சேர்க்கிறார்கள். அந்த நாள் முழுவதும் அவர் உணவில்லாமல் பசியோடிருக்கிறார், அந்த பசியின்போது அவர் கணவர் “உனக்கு சாப்பாடு போடக்கூட யாரும் இல்லை. நீ என்னை நம்பித்தான் பிழைத்தாக வேண்டும்” என்கிறார்.

நாவலின் எல்லா பக்கங்களிலும் அவர் எதிர்கொண்ட துயரங்கள் மட்டுமே நிறைந்திருக்கிறது. அப்படியான துயரங்களில் ஓரளவு சகிக்கக்கூடிய துயரங்கள்தான் அவருக்கு கிடைத்த மகிழ்ச்சி தரும் அனுபவங்களாய் இருந்திருக்கின்றன. அடைக்கலமளித்த கடைக்காரர் அவரிடம் உனக்கு ஆரஞ்சுப் பழம் பிடிக்குமா தேன் நாரத்தைகள் பிடிக்குமா என கேட்கிறார். பிர்தவுஸுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. என்ன வேண்டும் என்றோ என்ன பிடிக்கும் என்றோ யாரும் அவரிடம் கேட்டதில்லை.

முதல் பத்து பவுண்ட் சம்பாதித்த பிறகு நிமிர்ந்து சாலையில் நடக்கிறார். பலரும் அவரை “அழைக்கிறார்கள்”. முடியாது என மறுத்துவிட்டு நகர்கிறார். தன்னால் ஒருவனை நிராகரிக்கவும் முடியும் எனும் நம்பிக்கை அவரை பரவசமூட்டுகிறது. ஒருவன் அவரை அனுகும்போது அவனை தலை முதல் கால்வரை பார்த்துவிட்டு முடியாதென்கிறார். அவன் ஏன் என கேட்கிறான்.

”ஏனெனில் இங்கே நிறைய ஆண்கள் இருக்கிறார்கள். நான் யாருடன் செல்வது என்பதை நான்தான் முடிவு செய்வேன்” என்கிறார் பிர்தவுஸ்.

அப்படியானால் என்னை ஏன் நீ தேர்வு செய்யவில்லை என அவன் கேட்க உன் நகங்கள் அழுக்காக இருக்கின்றன எனக்கு அவை சுத்தமாக இருக்க வேண்டும் என பதிலளிக்கிறார் அவர். முதல் முறையாக அவர் உடல் அவருக்கு சொந்தமாகிறது. ஒரு உயர்மதிப்பு கொண்ட விபச்சாரிக்கு கிடைத்த அந்த வாய்ப்புகூட மத கட்டுப்பெட்டித்தனம் கொண்ட சமூகத்தில் குடும்பப்பெண்களுக்கு வாய்ப்பதில்லை. பிறகும் அவர் விபச்சாரத்தை நியாயப்படுத்தி வாழவில்லை சில காலத்துக்குப் பிறகு ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அந்த குறைவான சம்பளத்தில் கழிவறைகூட இல்லாத அறையில் வாழ்கிறார். அங்கே முதல் முறையாக காதல்வயப்பட்டு ஏமாற்றப்படுகிறார். பிறகு கடைசி துணுக்கு ஒழுக்கத்தை தூர எறிந்துவிட்டு மீண்டும் பாலியல் தொழிலுக்குப் போகிறார். அதிகாரிகள் இளவரசர்கள் என பலரும் நாடும் பெண்ணாகிறார்.

இறுதியில் ஒரு காவல்துறையில் செல்வாக்குள்ள விபச்சாரத் தரகனால் அச்சுறுத்தப்பட்டு அவன் கட்டுப்பாட்டில் இருக்க நிர்பந்திக்கப்படுகிறார். ஒரு நாள் அவன் அழைப்பை நிராகரிக்கையில் ஏற்பட்ட சண்டையில் அவன் எடுத்த கத்தியை பிடுங்கி அவனைக் கொன்றுவிட்டு வெளியேறுகிறார்.

கதை முடியவில்லை. சாலையில் நடந்து போகும் பிர்தவுஸை பெரிய காரில் வந்த நபர் அழைக்கிறான். இவர் மறுக்க விலை ஆயிரம் பவுண்டாகிறது. மீண்டும் மறுக்க அது இரண்டாயிரமாகிறது. அவன் கண்களை உற்றுப்பார்த்து பிர்தவுஸ் சொல்கிறார் “மூன்றாயிரம்”. அதற்கும் ஒப்புக்கொள்கிறான் அந்த அரபிய இளவரசன். உறவுக்குப்பிறகு பெற்ற பணத்தை அவன் கண் முன்னாலேயே கிழித்து வீசுகிறார் அவர். தான் தொட்ட முதல் பியஸ்தர் கொடுத்த அதே உணர்வு அவருக்கு இப்போது தோன்றுகிறது. அந்த இளவரசன் சொல்கிறான் “உண்மையில் நீ ஒரு இளவரசிதான். நீ முதலில் சொன்னபோது ஏன் நான் நம்பாமல் போனேன்?”

படிக்க:
♦ ஐ.டி. பெண் ஊழியர்கள் தாக்கப்படுவதற்கு யார் பொறுப்பு?
♦ மற்றுமொரு ஐடி காதல் கதை….

அதனைத் தொடர்ந்து நீளும் அந்த சிறு உரையாடலில் அரபிய இளவரசன் கேட்கிறான் “நீ யாரையேனும் கொலை செய்திருக்கிறாயா?”

”ஆமாம் கொன்றிருக்கிறேன்.”

”இல்லை நீ மென்மையானவளாக இருக்கிறாய். ஒரு கொசுவைக்கூட கொல்வாயா என எனக்கு சந்தேகமாக இருக்கிறது.”

”கொசுவைக் கொல்ல மாட்டேன், ஆனால் ஒரு மனிதனைக் கொல்வேன்.”

”நான் இதை நம்ப மாட்டேன்.”

”நான் என்ன செய்தால் நம்புவாய்?”

”நீ அதை எப்படி செய்வாய் என எனக்கு புரியவில்லை.”

அப்போது கையை உயர்த்தி ஓங்கி அவனை அறைந்துவிட்டு “ நான் உன்னை அறைந்துவிட்டேன் என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும். அதேபோல எளிதானதுதான் உன் கழுத்தில் கத்தியை செருகுவதும், அதற்கும் இதே அசைவு போதுமானது. பட்டினிகிடக்கும் உன் நாட்டு மக்களிடம் சுரண்டி விபச்சாரிகளுக்கு கொட்டிக்கொடுக்கும் நீ என்னால் கொல்லப்படுவதற்கு தகுதியானவன் என்பதை இப்போதேனும் நம்புவாய் என எண்ணுகிறேன்” என்கிறார் பிர்தவுஸ்.

மத அடிப்படைவாதிகள் வாழும் நாடு பெண்களுக்கு ஒரு கொடும் சிறையாகவே இருக்கும் என்பதை பிர்தவுஸ் வாழ்க்கை மட்டுமல்ல நாவலில் வரும் எல்லா பெண் பாத்திரங்களும் உணர்த்துகின்றன. கணக்கிலடங்காத பெண்கள் இப்போதும் பகுதியளவுக்கான பிர்தவுஸின் வாழ்வை வாழ்கிறார்கள். அடிப்படைவாதிகள் எழுச்சிபெறும் எல்லா இடங்களிலும் பிர்தவுஸ்கள் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கிறார்கள். கொடுந்துயரமாக அவர்களுக்கு ஒரு விபச்சாரிக்கு கிடைக்கும் சுதந்திரம்கூட கிட்டுவதில்லை, குறைந்தபட்சம் அவர்களின் கதையை கேட்க சாதவியைப் போன்ற ஆட்களும் கிடைப்பதில்லை.

அவர் படித்திருந்தால் எல்லாம் சரியாகியிருக்கும் என உச்சுகொட்டும் கலாம் டைப் அறிவுரையாளர்களுக்கு ஒரு தகவல்.. பிர்தவுஸ் பள்ளி இறுதி வரை படித்தவர். தேசிய அளவில் ஏழாவது ரேங்க் எடுத்து தேறியவர். அவர் தப்பி ஓடிய தருணங்களில் எல்லாம் தமது பள்ளி சான்றிதழை மறக்காமல் எடுத்துக்கொண்டு போயிருக்கிறார். ஒரு உயர் மதிப்பு கொண்ட விபச்சாரியான பிறகு தன் வீட்டில் நூலகத்தை அமைத்திருக்கிறார். தமது தனிமையை அனேகமாக அங்கேயே செலவிட்டிருக்கிறார்.

நூல்: “சூனியப் புள்ளியில் பெண்”
ஆசிரியர்: நவல் எல் சாதவி
தமிழில்: சசிகலா பாபு

வெளியீடு: எதிர் வெளியீடு,
96, புதிய திட்ட சாலை,
பொள்ளாச்சி – 642002

பக்கங்கள்: 152
விலை: ரூ. 160.00

வினவு மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

1 மறுமொழி

  1. இந்த நாவலை ஒரு ஆண்டுக்கு முன் நான் படித்திருக்கிறேன்.ஆனால் இதை நாவல் என்று சொல்வதை விட மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு அப்பாவி பெண்ணின் ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த நாவலில் ஆசிரியர் நவல் எல் சாதவி எந்த இடத்திலும் நமக்கு தென்பட மாட்டார். பிர்தவுஸ் மட்டும் தான் தெரிகிறார். இந்த நாவலில் ஆசிரியர் பிர்தவுஸ் என்று கூட சொல்லலாம். நவல் எல் சாதவி ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்யும் அதிகாரி போன்றுதான் வருவார். இந்த நாவலில் பிர்தவுஸின் காதலன் முதலில் கம்யுனிச புரட்சிக்காரனாக வருவான். ஆனால் பெண்களை பற்றிய மதிப்பீட்டில் ஓரு பிற்போக்குவாதியாக இருப்பான். அவனது திருமணத்திற்கு பிறகு மீன்டும் பிர்தவுஸை சந்தித்து காதல் வசனம் பேசி உடலுறவு கொள்வான். இந்த முறை பிர்தவுஸ் ஏமாறாமல் உடலுறவு முடிந்த பின் அவனிடம் பேரம் பேசி பணம் கேட்பார். அப்பொழுது அவனிடம் ஏற்படும் நடுக்கத்தை பிர்தவுஸ் நக்கலாக விவரிப்பார்.காதலியாக ஏமாந்தவர் விபாச்சாரியாக ஏமாறாமல் இருப்பார். இந்த நாவல் எனக்கு அறிமுகமானது ”ஊரில் மிக அழகான பெண்” என்ற சாரு நிவேதிதாவின் மொழிபெயர்ப்பு கதை தொகுப்பின் வழி என்பது நகைமுரண். அந்த நூலில் சாரு “நவல் எல் சாதவி“ போன்ற வெளிநாட்டு பெண் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திவிட்டு அவர்கள் அரசாங்கத்திற்கும் சிறைக்கும் அஞ்சாமல் எழுதுவதாகவும் தமிழ் பெண் எழுத்தாளர்கள் விருதுக்கும் சினிமா பிரபலத்திற்கும் அதன் மூலம் கிடைக்கும் பணத்திற்கும் எழுதுவதாகவும் இதை சொன்னால் தன்னை ஒரு ஆணாதிக்கவாதி என்று விமர்சிப்பதாகவும் சொல்லியிருப்பார்.ஆனால் சாரு நிவேதிதாவின் எத்தனை நாவல்கள் அரசதிகாரத்தை எதிர்த்து எழுதப்பட்டது என்ற விவரம் அதில் இல்லை. சாரு நிவேதிதாவின் பாஜக ஆதரவு கொள்கைகாகவா இல்லை பணத்திற்காகவா என்பதை சாரு நிவேதிதா விளக்கவில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க