ரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, கடந்த 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டம் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வந்தது. போராடும் ஊழியர்களை கைது – சிறை சஸ்பெண்ட் என்று அடக்குமுறையை ஏவி மிரட்டியது எடப்பாடி அரசு. இறுதியில் பேச்சு வார்த்தைக்கு எடப்பாடி அரசு தயாராக இல்லாத நிலையில், எதிர்க்கட்சிகள் – மக்கள் கோரிக்கைகளை ஏற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு பணிக்கு திரும்பியிருக்கின்றனர்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ் பெறப்பட்டதற்கு காரணம் யார்?

♦ எடப்பாடி அரசின் அடக்குமுறை
♦ எதிர்க்கட்சிகளின் கோரிக்கை
♦ வேலை போகுமென்ற பயம்
♦ மக்கள் ஆதரவில்லை

(இரண்டு பதில்களை தெரிவு செய்யலாம்.)

♦ ♦ ♦ 

ந்தப் போராட்டத்திற்கு நெடிய வரலாறு உண்டு.1.3.2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,  ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சிறப்பு காலமுறை தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை ஒழித்துவிட்டு அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்;

மத்திய அரசில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு இணையான சம்பளத்தைத் தங்களுக்கும் தர வேண்டும், ஒரே கல்வித்தகுதியில் ஒரே வேலையை செய்யும் எங்களுக்கு மட்டும் ஊதியத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற அடிப்படையில் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கோருகின்றனர்.

7-வது ஊதியக் குழுவின்படி பரிந்துரைப்படி 01.01.2016 முதல் ஊதியத்தை வழங்க வேண்டும். ஆனால், அரசோ அக்டோபர் 2017 முதல் கணக்கிட்டு வழங்குகிறது. பாக்கியுள்ள 21 மாத கால நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது ஊழியர்களின கோரிக்கை.

ஐந்தாயிரம் அரசு பள்ளிகளை மூடவும், பல பள்ளிக்கூடங்களை இணைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதைச் செய்யக்கூடாது. இப்படி பள்ளிக்கூடங்களை இணைப்பதால் பல தலைமையாசிரியர் பணியிடங்கள் இல்லாமல் போய்விடும். ஒருவர் தலைமையாசிரியராக பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும்.

அங்கன்வாடி ஊழியர்கள், நகர்ப்புற நூலகர்கள் போன்றவர்களை சிறப்பு கால முறை ஊதியம் என்ற பெயரில் மிகக் குறைவான சம்பளம் வழங்கி, அரசு நியமனம் செய்துவருகிறது. இதை மாற்ற வேண்டும். 3500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும், அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி – யு.கே.ஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும்.

அரசு ஊழியர்களின் பணியிடங்களைக் குறைக்கும் அரசாணைகள் 56, 100, 101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். இந்த அரசாணைகள் அரசுப் பணிகளை ஒப்பந்த முறையில் தனியாருக்கு வழங்க வித்திடுகிறது. இது எதிர்கால வேலை வாய்ப்புகளைக் கடுமையாக பாதிக்கும். அதாவது அரசுப்பணிக்கு இனி ஆட்கள் எடுப்பது இருக்காது. இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாகி விடும். அதை நீக்க வேண்டும்” இதுவே போராடும் ஊழியர்களின் கோரிக்கையாகும்.

இந்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமான கோரிக்கை. இதனை தவறு என்று மறுத்துபேச இந்த ஊழல் கும்பலால் முடியவில்லை. அதனால்தான் போராட்டத்தை குறுக்கு வழியில் ஒடுக்க முயற்சிக்கிறது.

போராட்டம் தொடங்கிய வரலாறு

இந்த போராட்டம் நேற்று இன்று தொடங்கியதல்ல. சுமார் 10 ஆண்டுகளாக இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். போராட்ட வடிவங்கள் ஒன்றல்ல இரண்டல்ல… தங்களால் என்ன வடிவங்களில் கோரிக்கையை எடுத்துரைக்க முடியுமோ அத்தனை வழிகளிலும் போராடி இருக்கிறார்கள். ஆனால், ஆளும் அதிமுக அரசோ அவர்களை கண்டுகொள்ளாமல் இழுத்தடிப்பது அல்லது பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது என்ற பாணியை பத்தாண்டுகளுக்கும் மேலாக செய்து வருகின்றனர்.

கடந்த 2003-ம் ஆண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்து சிறையிடைத்தார் மறைந்த குற்றவாளியான ஜெயலலிதா.

எஸ்மா சட்டத்தின்கீழ் கொடூரமான அடக்குறைகளை ஏவினார். இரவில் வீடு புகுந்து கைது செய்வது, பொது ஒழுங்கை சீர்குலைத்தல் என்று பல்வேறு பொய் வழக்குகளை போட்டு 30 நாட்களுக்கும் மேல் சிறையிடைத்தார்.  1 லட்சத்து 76 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

அதே 2003 காலகட்டத்தில்தான் புதிய ஓய்வூதிய திட்டமும் அமல்படுத்தப்பட்டது. அதற்கான முன்னோட்டம்தான் அந்த அடக்குமுறை.  அன்றிலிருந்தே தொடங்கி விட்டது இதற்கெதிரான போராட்டம்.  ஆரம்பத்தில் இந்த திட்டத்துக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை. சம்பளத்தில் 10 சதவீதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டு பணி ஓய்வின்போது அரசின் பங்களிப்போடு கணிசமான தொகை திரும்ப கிடைக்கும், என அவர்கள் நம்பியதால் எதிர்ப்பு கிளம்பவில்லை.

2016: புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நடத்திய பேரணி. (கோப்புப் படம்)

ஆனால், அரசு ஊழியர்கள் நம்பியதற்கு மாறாக புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பணியாற்றியவர்கள் உயிரிழந்தபோது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அவர்களிடம் பிடிக்கப்பட்ட தொகைகூட கிடைக்கவில்லை. அப்பொழுதுதான் இது ஒரு மோசடியான திட்டம் என உணர்ந்து போராட்டத்தை தொடங்கினர்.

பின்னாளில் எந்த ஜெயலலிதா இத்திட்டத்தை கண்மூடித்தனமாக அமல்படுத்தி ஊழியர்களின் வாழ்வை அதலபாதாளத்துக்கு தள்ளினாரோ அதே ஜெயலலிதாதான் கடந்த முறை சட்டமன்றத்தில் 110-ம் விதியின் கீழும், 2016 சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதிகளின்போதும் இதனை ரத்து செய்வதாக கூறியிருந்தார். அதை நிறைவேற்றக்கோரிதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊழியர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.

2017 ஆகஸ்ட் 22 அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து, செப்டம்பர்-7 2017ம் ஆண்டு தமிழகம் முழுவதும் காத்திருப்புப் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. தடையை மீறி போராட்டத்தை தொடரவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நாட்டண்மைத்தனத்துடன் நடந்து கொண்ட நீதிமன்றம் “இரண்டு மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்” என்று எச்சரித்தது. அதனடிப்படையில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

பிறகு மீண்டும் 24.03.2018 மாநிலம் தழுவிய பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 08.05.2018 கோட்டை முற்றுகை போராட்டம். கைது, சிறை … அப்பொழுதாவது இவர்களின் கோரிக்கையில் ஒருபாதியாவது  நிறைவேற்ற முயற்சித்திருக்கலாம். ஆனால், இல்லை.

மீண்டும் ஜூன் மாதம் அடையாளப் போராட்டம் நடத்தி கைதாகினர். அதனைத்தொடர்ந்து அக்டோபர் 13-ம் தேதி ஜாக்டோ ஜியோவின் உயர்மட்டக் குழு கூடி விவாதித்து  நவம்பர் 27-ம் தேதி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். அந்த சமயத்தில் கஜா புயலால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் போராட்டம் டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

2017-ம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டம். (கோப்புப் படம்)

அப்பொழுதே பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் போராட்டத்தை சுமுகமாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், அடிமை எடப்பாடி அரசோ, மெத்தனம் காட்டியது.

டிசம்பர் 10-ம் தேதி நீதிமன்றத்தில் அந்த விசாரணைக்கு வந்ததால் ஜனவரி 7 வரை போராட்டத்தை ஒத்தி வைக்கவும் அதற்குள் ஊதிய முரன்பாடு குறித்த சித்திக் கமிட்டியின் அறிக்கையையும், புதிய பென்சன் திட்டம் குறித்த ஸ்ரீதர் குழுவின் அறிக்கையையும் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.  அந்த உத்தரவையும் எடப்பாடி அரசு காற்றில் பறக்கவிட்டது. அதைப்பற்றி நீதிமன்றம் எள்ளளவும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது போராட்டமும் தீவிரமடைந்துள்ளது.

அரசின் அடக்குமுறையும் பொய் பித்தலாட்டமும் !

இந்த போராட்டத்தை தனது வழக்கமான பாணியில் கலைத்து விடலாம் என்று கனவு கண்டது அதிமுக கும்பல். அது முடியவில்லை. பிறகு மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதால் பாதிக்கப்படுவார்கள் என்ற போலியான அக்கறையை ஊடகங்கள் மூலம் பரப்பியது. இந்த அக்கறை பள்ளிகளை மூடலாம் என்று முடிவு செய்தபோது வரவில்லை.

போராட்டம் தீவிரமடையவே நீதிமன்றத்தை நாடி தடைவிதிக்கக் கோரியது. முதலில் முடியாது என்று கூறிய நீதிமன்றம் அடுத்தடுத்து மென்மையாக கடிந்தது. பிறகு 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று மிரட்டியது. இவ்வாறு நீதிமன்றம் தலையிடுவது முதல் முறையல்ல, நான்குமுறை இந்த போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துள்ளது.

எப்பொழுதெல்லாம் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகிறார்களோ அப்பொழுதெல்லாம் அந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் நீதிமன்றம் பகிரங்கமாவே இவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

இதுமட்டுமா? சம்பள உயர்வு கேட்டு போராடிய செவிலியர்கள் போராட்டத்திற்கு தடை விதித்ததோடு “சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு செல்லலாம்” என்று எகத்தாளமாக சொன்னது. முதுகலை மருத்துவப் படிப்புக்கு இடஒதுக்கீடு கேட்டு போராடிய அரசு மருத்துவர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவு, போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்துக்கு தடை என அனைத்திற்கும் நீதிமன்றம் தாமாகவே உத்தரவு போட்டு வருகிறது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை 28-ம் தேதிக்குள் பணிக்கு வர வேண்டும். இல்லையென்றால் அந்த இடம் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் என மிரட்டியது. அவ்வாறு வருபவர்கள் அதே பள்ளியில் பணியைத் தொடரலாம் என்ற சலுகையும் அளித்தது. போராடுபவர்களை இதைவிட கொச்சைப்படுத்த முடியாது. இவர்களுக்கு பக்கபலமாக பாஜக அல்லக்கைகள் பள்ளியை நாங்களே நடத்துவோம் என்று வக்காலத்து வாங்கியது.

போராட்டம் தொடரவே, தற்காலிக ஆசிரியர்களை எடுக்கப்போவதாக அறிவித்தது. அதற்கு இதுவரை மூன்று லட்சம்பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். தற்காலிகமாக எடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 10,000 சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிவித்து தனது கொடூர முகத்தை காட்டியது.  இதற்கெல்லாம் அஞ்சாத அரசு ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

அரசோ, போராடுபவர்களுக்கு 17பி நோட்டீஸ் கொடுத்து பணிய வைக்க முயன்று தோற்றுப் போனது. 23-ம் தேதி மாவட்டத் தலைநகர்களில் செய்த மறியலில் உளவுத்துறை புள்ளிவிவரப்படி 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளார்கள். 24.01.2019 அன்று வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற மறியலில் 2 இலட்சத்து 32 ஆயிரம் பேர் கைதாகி உள்ளார்கள். இரண்டு நாட்களிலும் நாலரை லட்சம் பேர் கைதாகியுள்ளனர். இதில் இரண்டு இலட்சம்பேர் பெண் ஊழியர்கள்.

500-க்கும் மேற்பட்டோரை சஸ்பெண்ட் செய்துள்ளது. முன்னணியார்களை  கைது செய்து அவர்கள் மீது 143 சட்டவிரோதமாக கூடுதல், 290 அரசு ஊழியர்கள் சொல்வதை கேட்காமல் இருத்தல், 341 அரசு ஊழியரை தடுத்தல், 353 அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், 7(1)(ஏ) (சிஎல்) பொதுமக்களுகும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துதல் மற்றும் சாலை மறியல் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது போலிசு.

இந்நிலையில், மாநில அரசு மிக மோசமான நிதி நெருக்கடியில் இயங்குவதால் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று வெளிப்படையாகவே  கூறி, நிதி நெருக்கடிக்கான வரைவோலையை பத்திரிக்கையில் விளம்பரம் செய்தது.

அதில், “ஓய்வூதிய நிதிச் சுமையின் காரணமாக உலகம் முழுவதுமே புதிய ஓய்வூதிய முறைதான் பின்பற்றப்பட்டு வருவதாகவும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தினால், மக்கள் நலப் பணிகளுக்கு நிதியே இல்லாமல் போய்விடும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அரசின் மொத்த வருவாயில் 71 சதவீதம் சம்பளத்துக்கே சரியாகி விடுகிறது. ஊழியர்களுக்கான சம்பளத்தையே கடன் பெற்றுத்தான் தர வேண்டியிருக்கும். ஆகவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது.

அதேபோல் 21 மாதங்களுக்கான ஊதிய உயர்வு நிலுவையை பொறுத்தவரை, தமிழக அரசு ஏற்கனவே 24 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறையுடன் இயங்கிவரும் நிலையில், இந்த நிலுவைத் தொகையையும் வழங்கினால் கூடுதலாக 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஏற்படும் அதனைத் தங்களால் வழங்க முடியாது” என்றும் கூறியது.

படிக்க:
அறிவியலை முடக்கும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை விரட்டுவோம் | CCCE கருத்தரங்கம்
வாசகர் புகைப்படம் இரு வாரத் தலைப்புகள் : அரசு பள்ளிகள் | விளையாடும் குழந்தைகள்

அரசின் இந்த மோசடியான பொய் பிரச்சாரத்திற்கு பதலளிக்கும் விதமாக, நிதி நெருக்கடி இருக்கும்போது சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் எப்படி சம்பளம் உயர்த்தினீர்கள் என்றும், 21 மாத நிலுவைத்தொகையை நீதிபதிகள், ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் ஆகியோருக்கு மட்டும் வழங்கியிருக்கிறீர்களே அவர்களுக்கு கொடுக்க மட்டும் எங்கிருந்து நிதி வந்தது என்றும் கேள்வியெழுப்பினார்கள். இதுவரை அதற்கு பதில் இல்லை.

அதோடில்லாமல் வருவாயில் 71 சதவீதம் தங்களுக்கு வழங்கப்படுவதாக  அமைச்சர் சொல்வது உண்மையில்லை. சம்பளத்துக்கான செலவீனம் 31.63%. ஒரு ஆண்டுக்கு 52 ஆயிரத்து 172 கோடி. ஓய்வுதியத்துக்கான செலவீனம் 15.37 சதவீதம். இது ஆண்டுக்கு 25,362 கோடி. ஆக மொத்தம் 47 சதவீதம்தான் ஒதுக்கப்படுகிறது. இந்த சம்பளத்தில் உயர் அதிகாரிகளின் நிர்வாகச் செலவினமான 6.57 சதம், 10 ஆயிரத்து 837 கோடியும், வருடம்தோறும் அரசு செலுத்தும் வட்டியான 17.42 சதவீதமான 28,729 கோடியையும் சேர்த்து ஊழியர்களின் சம்பளமாக சொல்கிறார்கள்” என்பதை அம்பலப்படுத்தினர். அத்துடன் “முதல்வர் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுதான் மக்கள் மற்றும் மாணவர்களுக்கும் நல்லது” என்றனர்.

இந்நிலையில் 28-ம் தேதி இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சசிதரன் மற்றும் சாமிநாதன், “தற்காலிகமாக வேலைக்கு ஆள் எடுத்தால் அவர்களும் நிரந்தரமாக்கக் கோரி போராடுவார்கள். எனவே புதுப்பிரச்சனைக்கு வழி வகுக்காமல் ஊழியர்களுடன் பேசி தீர்வு காண வேண்டும்” என்று கூறி வழக்கை பிப் 18 க்கு தள்ளி வைத்துள்ளது.

இருந்தாலும் முதல்வர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்த ஊழியர்கள் எதிர்த்து போராடுவது அடிமை எடப்பாடியின் எஜமானானர்களாகிய பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்துதான். அதனால்தான் பிடிகொடுக்காமல் நடவடிக்கையை எடுத்து வருகிறது.

கஜானா காலி யாரால் ?

உலகம் முழுவதும் புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் கதறுவதன் பின்னனி என்ன? பங்களிப்புத் ஓய்வூதியத் திட்டம் வாஜ்பாய் அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டமே ஓய்வூதியத்துறையில் தனியார்மயத்தை திறந்துவிடத்தான்.

தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஊதியம், மற்றும் பி.எஃப் போன்றவற்றை அரசு மற்றும் துறைசார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்து அதைப் பெருக்கும் திறன் அரசுக்கு இல்லை எனக் கருதி, இப்பெருந்தொகையைக் கையாளும் பொறுப்பை, ஐ.சி.ஐ.சி.ஐ., கோடக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் கேபிடல், ஹெச்.டி.எஃப்.சி. அம்பானி, அதானி போன்ற தனியார் முதலீட்டு நிதி நிறுவனங்களிடம் அளித்தது மத்திய அரசு.

அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தில் தனது சட்டபூர்வ பொறுப்பைக் கைவிட்டது மத்திய மாநில அரசுகள்.  தொழிலாளர்கள், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை பங்குச் சந்தை சூதாட்டத்திலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி இறைத்ததாலேயே கஜானா காலியானது.

இந்த உண்மையை மறைத்து அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தால்தான்  அரசின் கஜானா காலியாவதுபோன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி போராடுபவர்களை மக்களுக்கு எதிரானவர்களாக காட்டுகிறது.

போராட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் !

ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் பெற்றோர்கள் மத்தியில் எழுந்தாலும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பாக இந்த போராட்டத்திற்கு ஆதரவு வலுத்து வருகிறது.

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள்.

இன்னொருபக்கம் சமூக வலைத்தளங்களில் வேலை இல்லாத இளைஞர்களும் விமர்சித்து வருகின்றனர். ஒரு லட்சம் சம்பளம் போதாதா? எங்களுக்கெல்லாம் வேலையே இல்லை. அதில் பாதி சம்பளத்தை கொடுத்தால்கூட நாங்கள் வேலை செய்யத் தாயார் என்று ஏராளமான எதிர்ப்புக் குரல்களும் வருகிறது. இந்த எதிர்ப்புக் குரல்கள் ஊடகங்கள் மற்றும் அரசு கட்டியமைத்துள்ள பொதுப்புத்தியில் இருந்து கேட்கின்றன. உண்மையில் அரசுப் பள்ளிகளை ஒழிப்பது, கல்வி எனும் மக்கள் உரிமையை விற்பனைச் சரக்காக மாற்றுவது ஆகியவை அரசிடம் இருக்கும் கொள்கை. அந்த அபாயத்தை உணராமல் ஆசிரியர்களை எதிரிகளா பாவிப்பது பாரிய தவறு.

மற்றொருபுறம் அரசுபள்ளியின் தரத்தை உயர்த்த போராடாத ஆசிரியர்கள் சம்பள உயர்வுக்காக மட்டும் போராட வருகிறார்கள் என்ற குரலும் ஒலிக்கிறது. அப்படி வருவதில் உண்மை இல்லாமல் இல்லை. அதற்காக அந்தக் கோரிக்கையை ஆசிரியர்கள் வைக்காமலும் இல்லை.

தீர்வு என்ன ?

ஊழியர்களின் போராட்டத்திற்கு சுமூகமான முறையில் பேசி தீர்வு காண அரசு தயாராக இல்லை. பல்வேறு தரப்பினரை பொய் பிரச்சாரத்தின் மூலம் போராட்டத்திற்கு எதிராக திசைதிருப்பும் கீழ்த்தரமான செயலை செய்து கொண்டிருக்கிறது. மாணவர்களும் பெற்றோர்களும் அரசுப் பள்ளியை தரம் உயர்த்தக்கோரி ஆசிரியர்களோடு களத்தில் இறங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது. கல்வி-வேலைவாய்ப்பு – சம்பள உயர்வு என ஒட்டு மொத்தத்திலும் தீர்வு காண முடியாமல் அரசு தோல்வியடைந்து விட்டது அரசு. இப்பொழுது கரம் கோர்த்து போராடாவிட்டால் நாளை நிச்சயம் இதே அடக்குமுறை நம்மீது பாயும். இதுதான் தமிழகம் சந்தித்து வரும் எல்லா பிரச்சினைகளிலும் நமக்கு கிடைத்திருக்கும் அனுபவம்.

வினவு செய்திப் பிரிவு தற்போது  போராட்டம் விலக்கப்பட்டாலும் அது நீருபூத்த நெருப்பாகவே இருக்கும். அந்த அடிப்படையில் ஆசிரியர்கள் – மாணவ – இளைஞர்கள் -பெற்றோர்கள் இணைந்து சிவில் சமூகத்திற்கான போராட்டமாக முன்னெடுப்பதன் மூலம்தான் அனைவரது உரிமையையும் மீட்க முடியும்!

மேலதிக விவரங்களுக்கு படிக்க:
போராடும் ஆசிரியர்கள் – குறட்டை விடும் பினாமி அரசு !
அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் போராட்டம் வெல்லட்டும் !

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்