உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 10-அ

ரு ஞாயிறன்று அவர்கள் வோல்காவின் அக்கரையிலிருந்த புல்வெளிக்குச் சென்றார்கள்.

பூத்த புல்தரையில், விண்மீன்கள் போல ஒளிர்ந்த வெண் சாமந்தி மலர்களுக்கு இடையே அவளை நிழல்படம் பிடித்தான் அலெக்ஸேய். அப்புறம் அவர்கள் நீந்திக் குளித்தார்கள். பின்பு அவள் ஈர நீச்சல் உடையைக் களைந்து மாற்றுடை அணிந்து கொள்ளும் வரை அவன் கரையோரப் புதருக்கு அப்பால் பணிவாக மறுபுறம் திரும்பி நின்றுகொண்டிருந்தான்.

அவள் கூவி அழைத்ததும் அவன் திரும்பினான். மெல்லிய உடை அணிந்து, வெயிலில் பழுப்பேறிய கால்களை மண்டியிட்டு அமர்ந்திருந்தாள் அவள். பூந்துவாலையைத் தலைமீது சுற்றிக் கட்டியிருந்தாள். சுத்தமான கைத்துவாலையைப் புல் மேல் விரித்து, அது பறந்து விடாமல் ஓரங்களைக் கற்களால் அழுத்தி, வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலத்தை அவிழ்த்து அதன் மேல் ஒழுங்காகப் பரப்பினாள். உருளைக் கிழங்குக் கூட்டும் எண்ணெய்க் காகிதத்தில் கச்சிதமாக வைத்துச் சுற்றப்பட்டிருந்த மீனும் வீட்டில் செய்த பிஸ்கோத்துகளுங்கூட பொட்டலத்தில் இருந்தன. உப்பும் கடுகு துவையலையுங்கூட மறக்காமல் கொண்டு வந்திருந்தாள் ஓல்கா. குதூகலமும் விளையாட்டும் கொண்ட அந்த பெண் இவ்வளவு அக்கறையுடன் திறைமையாக வீட்டுக் காரியங்கள் செய்வது பார்க்க இனிமையாகவும் நெஞ்சைத் தொடுவதாகவும் இருந்தது. “இழுத்தடித்தது எல்லாம் போதும். இன்று மாலையே இவளுக்கு எல்லாவற்றையும் சொல்கிறேன். இவள் கட்டாயமாக என் மனைவி ஆக வேண்டும் என்பதை அவளது மனதில் பதியும்படி சொல்லிவிடுகிறேன்” எனத் தீர்மானித்துக் கொண்டான் அலெக்ஸேய்.

சற்று நேரம் கரையில் படுத்திருந்த பின் மீண்டும் நீந்திக் குளித்துவிட்டு, மாலையில் ஓல்கா வீட்டில் சந்திப்பதாக முடிவு செய்து கொண்டு வீடு திரும்பும் பொருட்டுப் படகுத் துறைக்கு மெதுவாக நடந்தார்கள். களைத்துப் போயிருந்தாலும் அவர்கள் உள்ளங்களில் இன்பம் அலை மோதியது. துறையில் எதனாலோ படகையே காணோம். கதிரவன் ஸ்தெப்பி வெளியில் படிந்து விட்டான். மறு கரையில் செங்குத்தான மேட்டின் வழியாக ஊர்ந்து பளிச்சிடும் ரோஜா நிறக் கதிர்க் கற்றைகள் நகர வீடுகளின் முகடுகளுக்குப் பொன்முலாம் பூசின. ஜன்னனல் கண்ணாடிகள் குருதிச் செம்மையுடன் ஒளிர்ந்தன புழுதிபடிந்த அசைவற்ற மரங்கள். கோடைக்கால மாலை வெக்கை நிறைந்து அமைதியாக இருந்தது. எனினும் நகரில் எதுவோ நிகழ்ந்துவிட்டது. இந்த வேளையில் வழக்கமாக வெறிச்சோடிக் கிடக்கும் வீதிகளில் ஏராளமான ஆட்கள் பரபரப்புடன் நெரிந்தார்கள். செம்மச் செம்ம ஆட்களால் நிறைந்த இரண்டு லாரிகள் விரைந்து சென்றன. சிறு கூட்டம் அணிவகுத்து நடந்தது.

“இக்கரையிலேயே இரவைக் கழிக்க நேர்ந்தால் என்ன செய்வது?” என்றான் அலெக்ஸேய்.

கதிர் வீச்சும் பெரிய கண்களால் அவள் அவனை நோக்கி, “நீ உடன் இருக்கையில் எனக்கு ஒரு பயமும் கிடையாது” என்று கூறினாள்.

அவன் அவளைத் தழுவி முத்தமிட்டாள், முதல் தடவை, ஒரே தடவை முத்தமிட்டான். துடுப்புக் கொண்டிகளின் சத்தம் ஆற்றின் மீது மந்தணமாகக் கேட்டது. அளவுக்கு மேல் ஆட்களை ஏற்றுக் கொண்டு மறுகரையிலிருந்து புறப்பட்டது ஒரு படகு. அலெக்ஸேயும் ஓல்காவும் இப்போது அதைப் பகைமையுடன் நோக்கினார்கள், எனினும் அது என்ன செய்தி கொண்டுவருகிறது என்று முன்னுணர்ந்தவர்கள் போன்று பணிவுடன் அதை எதிர் கொள்ளச் சென்றார்கள்.

படிக்க:
#SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் !
மோடியின் ஐந்தாண்டு கால யோகா தின செலவு ரூ. 114 கோடி

ஆட்கள் பேசாமல் படகிலிருந்து கரையில் குதித்தார்கள். எல்லோரும் உல்லாச உடைகள் அணிந்திருந்தார்கள். எனினும் அவர்களுடைய முகங்களில் கவலையும் சோர்வும் ததும்பின. ஆழ்ந்த தோற்றம் கொண்ட பரபரப்புள்ள ஆடவர்களும் கிளர்ச்சி பொங்கும் அழுத முகங்கள் உள்ள மாதர்களும் நடைப் பலகைகள் வழியே அவர்கள் இருவரையும் கடந்து சென்றார்கள். ஒன்றும் விளங்காதவர்களாக ஓல்காவும் அலெக்ஸேயும் படகில் தாவி ஏறிக்கொண்டார்கள். நொண்டிப் படகோட்டி அர்க்காஷா மாமா, அவர்களுடைய களி பொங்கும் முகங்களைப் பார்க்காமலே, “யுத்தம்…. இன்று வானொலியில் செய்தி அறிவிக்கப்பட்டது…..” என்றான்.

“யுத்தமா?… யாருடன்?” என்று அலெக்ஸேய் இருக்கையிலிருந்து திடுக்குற்றுத் துள்ளி எழுந்தான்.

“எல்லாம் அந்த பாழாய்ப் போகிற ஜெர்மன்காரர்களோடுதான், வேறு யாரோடு?” என்று கோபத்துடன் துடுப்புக்களை வலிப்பதும் வெடுக்கென்று அவற்றைத் தள்ளுவதுமாக விடையிறுத்தான் அர்க்காஷா மாமா. “ஆட்கள் ஏற்கனவே படைதிரட்டு நிலையங்களுக்குப் போகத் தொடங்கி விட்டார்கள். படை திரட்டல் நடக்கிறது” என்றான்.

உலாவிலிலிருந்து வீட்டுக்குக்கூடப் போகாமல் நேரே படை திரட்டு நிலையம் சென்றான் அலெக்ஸேய். இரவு 12.40-க்குப் புறப்பட்ட ரயிலில், தனக்கெனக் குறித்த விமானப் படை பிரிவுக்குப் புறப்பட்டு போய்விட்டான் அவன். நடுவில் வீட்டுக்கு ஓடிப்போய் பெட்டியை எடுத்து வரத்தான் அவனுக்கு ஓரளவு நேரம் கிடைத்தது. ஓல்காவிடம் அவன் பிரிவு சொல்லிக்கொள்ளக் கூட இல்லை.

அவர்கள் ஒருவருக்கொருவர் எப்போதாவதுதான் கடிதங்கள் எழுதிக்கொண்டார்கள். ஆனால் அவர்களுடைய பரஸ்பர அன்பு குறைந்துவிட்டது; அவர்கள் ஒருவரை ஒருவர் மறக்கத் தொடங்கி விட்டார்கள் என்று இதற்கு அர்த்தமல்ல. மாணவருக்குரிய குண்டு குண்டான எழுத்துக்களில் வரையப்பட்ட அவளுடைய கடிதங்களை அவன் ஆவலே வடிவாக எதிர்பார்த்தான், அவற்றைச் சட்டைப் பையிலேயே வைத்திருந்தான், தனிமையில் விடப்பட்டதுமே மறுபடி மறுபடி படித்தான். காட்டில் திரிந்த துன்ப நாட்களில் இந்தக் கடிதங்களையே அவன் மார்புற அழுத்திக் கொண்டான், அவற்றையே பார்த்தான். எனினும் அந்த இரு இளம் வயதினரின் உறவு நிச்சயமற்ற ஒரு கட்டத்தில் திடீரென அறுந்து போய்விட்டது. ஆகையால் இந்தக் கடிதங்கள் மூலம் அவர்கள் நெடுங்காலம் நன்கு பழகியவர்கள், நண்பர்கள் என்ற முறையிலேயே ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள். இன்னும் பெரிய எதையும் இதனுடன் பெரிய எதையும் சேர்க்க அவர்கள் அஞ்சினார்கள். எனவே அது மனம் விட்டுச் சொல்லப்படாமலே இருந்துவிட்டது.

இப்பொழுது மருத்துவமனையில் படுத்துக் கிடக்கையில் ஒரு விஷயத்தைக் கண்டு அலெக்ஸேய் திகைப்பு அடைந்தான். இந்தத் திகைப்பு கடிதத்துக்குக் கடிதம் மிகுந்து கொண்டு போயிற்று. ஓல்கா தானே மனதைத் திறந்து பேச முன்வந்ததுதான் அவனுக்குத் திகைப்பூட்டிய விஷயம். தான் அவனுக்காக ஏங்குவதை ஓல்கா கூச்சமின்றித் தன் கடிதங்களில் இப்பொழுது விவரித்தாள். அன்றைய தினம் அர்க்காஷா மாமா வேண்டாத நேரத்தில் தங்களை மறு கரைக்கு இட்டுச் செல்ல வந்தது குறித்து வருந்தினாள். அலெக்ஸேய்க்கு என்ன நேர்ந்தாலும் சரியே, தான் எப்போதும் நம்பத்தக்க ஒரு நபர் இருப்பதை அவன் அறிந்து கொள்ள வேண்டும் என்றும், வேற்றிடங்களில் சுற்றித் திரிகையில், போர் முடிந்ததும் சொந்த வீடு திரும்புவதற்கு ஓர் இடம் இருப்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள்.

இவ்வாறெல்லாம் எழுதுபவள் யாரோ புதிய, வேறொரு ஓல்கா என்பதுபோல் தோன்றியது. அவளுடைய நிழற் படத்தை பார்க்கும் போதெல்லாம், ஒரு காற்று வீச வேண்டியது தான், முதிர்ந்த சிறகு விதை போல அவள் தன் பூத்துணி உடையுடன் பறந்துபோய் விடுவாள் என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகும். இந்தக் கடிதங்களை எழுதியவளோ, நல்லவள், காதலிப்பவள், காதலுனுக்காக ஏங்குபவள், அவனை எதிர்பார்த்துக் காத்திருப்பவள். இந்த நினைப்பால் அவனுக்கு மகிழ்ச்சியும் குழப்பமும் ஒருங்கே உண்டாயின. மகிழ்ச்சி அவன் வசமின்றியே உண்டாயிற்று. தான் இத்தகைய உறவுக்கு உரியவன் அல்ல; இவ்வளவு ஒளிவு மறைவற்ற உறவாடலுக்குத் தக்கவன் அல்ல என்று அலெக்ஸேய் எண்ணியபடியால் அவனுக்கு மனக்கலக்கம் ஏற்பட்டது.

தான் முன்போன்ற வலிமை நிறைந்த இளைஞன் அல்ல, கால்களற்ற அங்கவீனன், அர்க்காஷா மாமாவை ஒத்தவன் என்று ஆரம்பத்திலேயே எழுத அவனுக்குத் துணிவு வரவில்லையே. நோயாளித் தாயார் அதிர்ச்சியால் இறந்து போய் விடுவாளோ என்ற பயத்தால் உண்மையை எழுதத் தயங்கிய அவனுக்கு இப்போது ஓல்காவைக் கடிதங்களில் ஏமாற்றுவது வலுக்கட்டாயம் ஆகிவிட்டது. இந்த ஏமாற்றுச் சிடுக்கில் நாளுக்கு நாள் அதிகமாகச் சிக்கிக் கொண்டு போனான்.

இந்தக் காரணத்தால் கமிஷினிலிருந்து வந்த கடிதங்கள் அவனுக்கு முற்றிலும் எதிரெதிரான உணர்ச்சிகளை – களிப்பையும் துயரையும், நம்பிக்கையையும் கலவரத்தையும் ஏற்படுத்தின. அவை ஏககாலத்தில் அவனுக்கு உற்சாகமூட்டின. அவனைத் துன்புறுத்தி வதைத்தன.

எனினும், தனது கனவை நனவு ஆக்கிக்கொண்டதுமே, அதாவது படையணிக்குத் திரும்பித் தனது செயல் திறனை மீண்டும் அடைந்ததுமே, ஓல்காவிடம் காதலைப் பற்றி மறுபடி பேசுவது என்று அவன் ஆழ்ந்த சங்கற்பம் செய்துகொண்டான். இவ்வாறு நிச்சயித்து, தனது இந்தக் குறிக்கோளை அடைவதற்கு முன்னிலும் அதிக விடாப்பிடியாக முயன்றான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க