Thursday, August 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 476

பேரரசரின் நிர்வாணத்தை உணர வைத்த தேர்தல் காற்று!

3
2017 வைப்ரண்ட் குஜராத் நிகழ்ச்சியில் உரையாற்றும் மோடி

நிர்வாணப் பேரரசரின் கதையைக் கேட்டவர்கள் அந்தக் கதையின் முடிவைக் கேட்டிருக்க மாட்டார்கள். இதோ அந்தக் கதையின் முடிவு இப்படியாக இருந்தது.

பேரரசர் மெல்லக் குனிந்து பார்த்தார்; முதன்முறையாகத் தான் அம்மணமாக இருப்பதை அறிந்து கொண்டார். சுற்றிலும் தலையைத் திருப்பிப் பார்த்தார்; அவையில் உள்ளோர் எல்லாம் அரசர் அணிந்துள்ள ஒளிபொருந்திய அங்கியைக் குறித்து சிலாகிப்பதைப் பார்த்தார். “ஒருவேளை எல்லோரும் நம்மை ஓட்டுகிறார்களோ” என தனக்குத் தானே சந்தேகமாய்ச் சொல்லிக் கொண்டார். தனது தலைமை அமைச்சரும் அவையினர் போலவே சிலாகிப்பதைக் கண்டதும் பேரரசரின் சந்தேகம் அதிகரித்தது. சாளரத்தின் வழியாய் வீசிய காற்று நிர்வாண உடலில் படர்வதை உணர்ந்தார்; பேரரசரின் முகம் அவமானத்தில் கறுத்தது.

***

குஜராத் தேர்தல் எண்ணற்ற ஆச்சரியங்களைத் தன்னோடு அழைத்து வந்துள்ளது. முதன்முறையாக எதற்குமே வளைந்து கொடுக்காதவர் எனக் கருதப்பட்ட மோடி மெல்ல இறங்கி வந்துள்ளார். கடந்த நவம்பர் 10 -ம் தேதி கூடிய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் இது வரை 28 சதவீத வரி விதிப்பு வளையத்தில் இருந்த சுமார் 178 பொருட்களின் வரிவிகிதம் குறைக்கப்பட்டு, அவை 18 சதவீத வரி விதிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் வெறும் 50 பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரி வளையத்தின் கீழ் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்துக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “பாராளுமன்றத்தாலும், பொது அறிவாலும் சாதிக்க முடியாததைச் சாதித்ததற்காக நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றாக வேண்டும் என்கிற கட்டாயத்தை பாரதிய ஜனதா தனக்குத் தானே உண்டாக்கி வைத்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தாம் 150 -க்கும் மேற்பட்ட இடங்களை வென்று சாதனை படைப்போம் என அமித்ஷா வெற்றிக்கான இலக்கை நிர்ணயித்து விட்டார்.

கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் பாரதிய ஜனதா ஆட்சியில் இரண்டு முக்கியமான விளைவுகள் நடந்தேறியுள்ளன. ஒன்று பொருளாதாரத் துறையில்; மற்றொன்று சமூகத் துறையில்.

பொருளாதாரத் துறையைப் பொருத்தவரையில் மோடி ஆட்சிக்கு வந்ததை அடுத்து தனிநபர் வருமானம் தொடர்ந்து குறைந்து, தற்போது ஏழாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பெரும் ஆரவாரத்துடன் 2003 -ம் ஆண்டு ‘வைப்ரண்ட் குஜராத்’ எனும் கொண்டாட்ட நிகழ்வு மோடியால் துவங்கி வைக்கப்பட்டது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முதலாளிகள் இந்நிகழ்வுக்கு வரவழைக்கப்பட்டு புதிய தொழில்கள் துவங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

2003 -ம் ஆண்டு துவங்கி 2017 வரை 8 முறை வைப்ரண்ட் குஜராத் கொண்டாடப்பட்டுள்ளது. 2003 -ம் ஆண்டு நடந்த நிகழ்வில், இந்தியா தவிர 53 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500 தொழிற்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டு சுமார் 66 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் முனைவுக்கான 76 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்வில் 55 ஆயிரம் பார்வையாளர்களும், 110 நாடுகளைச் சேர்ந்த சுமார் ஆறாயிரம் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு 25,578 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

2017 வைப்ரண்ட் குஜராத் நிகழ்ச்சியில் உரையாற்றும் மோடி

கடைசியாக நடந்த ஏழு வைப்ரண்ட் குஜராத் நிகழ்வுகளில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு மட்டும் 84 லட்சம் கோடி; இதில் மிகப் பெரிய முரண் நகை என்னவென்றால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பே 153 லட்சம் கோடி தான். 2014 – 15 காலகட்டத்திற்கான குஜராத் மாநில மொத்த உற்பத்தியின் மதிப்பு வெறும் 7.82 லட்சம் கோடி தான். மேலும், அதற்கும் முந்தைய ஆண்டுகளின் வளர்ச்சி விகிதத்தை விட இது குறைவான அளவு என்பது அம்மாநில அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன.

புள்ளி விவரக் கணக்குகள் ஒருபுறமிருக்க, குஜராத்தின் வளர்ச்சி என்பது வெறும் காகிதத்தில் எழுதப்பட்ட சர்க்கரை தான் என்பதை பட்டேல்களின் இட ஒதுக்கீடு போராட்டம் பட்டவர்த்தனமாக காட்டியது. குஜராத் முழுக்க சுமார் 60 லட்சம் இளைஞர்கள் வேலை கிடைக்காமலும், தொழில் வாய்ப்புகள் ஏதுமின்றியும் உள்ளனர் என்கிறார் அல்பேஷ் தாக்கோர். மத்திய அரசின் தேசிய மாதிரி சர்வே வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி நகர்புற குஜராத்தில் 5.8 சதவீத இளைஞர்களும், கிராமப்புற குஜராத்தில் 11.6 சதவீத இளைஞர்களும் வேலையற்று உள்ளனர்.

குஜராத்தின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த போது தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கையும் அதைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையும் அறிமுகமாகின. இவ்விரு நடவடிக்கைகளும் ஏற்கனவே மரணப்படுக்கையில் இருந்த குஜராத்தின் பொருளாதாரத்தை மொத்தமாக குழியில் தள்ளி மண்ணை அள்ளிப் போடுவதாக அமைந்து விட்டன. சூரத், அகமதாபாத் என குஜராத் முழுவதும் தொழிற்துறையினர் லட்சக்கணக்கில் திரண்டு போராடினர்.

சூரத் நகரில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை எதிர்த்து நடந்த போராட்டம் (கோப்புப் படம்)

தனது சொந்த மாநிலமே தனக்கெதிராக போர்க்கோலம் பூண்டு நிற்பதைக் கண்டு திகைத்த மோடி- அமித்ஷா இணை, பணமதிப்பழிப்பு நடவடிக்கை கருப்புப்பண முதலைகளுக்கு எதிரானதென்றும், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை தொழிற்துறையை ஒழுங்குபடுத்துவதற்கென்றும் இதை எதிர்ப்பவர்கள் ஊழல்வாதிகளென்றும் சொல்லி சமாளிக்க பார்த்தது. இவர்கள் இப்படியான வியாக்கியானத்துடன் மக்களை ஏமாற்ற எத்தனித்த வேளையில் அமித்ஷா மகனின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும், குஜராத் மாநில முதல்வர் விஜய்ரூபானி மும்பை பங்குச்சந்தையில் முறைகேடுகளில் ஈடுபட்ட புகாரும் மேலெழுந்து வந்தன.

ஆக மொத்தம் மோடி அமித்ஷா இணை பொருளாதார வளர்ச்சி, தூய்மையான நிர்வாகம் எனும் பெயரில் இத்தனை ஆண்டுகளாக தங்களை ஏமாற்றி வந்துள்ளனர் என்கிற உண்மையை குஜராத்திகள் மிகத் தாமதமாகப் புரிந்து கொண்டனர். எனவே தான் கடந்த பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் “குஜராத் மாடல்” எனும் பூச்சரத்தை இந்தியர்களின் காதில் சுற்றிய மோடி – அமித்ஷா இணை, அந்தப் பூச்சரத்தை குஜராத்திகளின் முன் எடுக்கவே இல்லை. ஆம், குஜராத் தேர்தல் பிரச்சாரங்களில் காங்கிரசையும் ராகுல் காந்தியையும் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் மோடி, “வளர்ச்சி” என்றோ “குஜராத் மாடல்” என்றோ பேசுவதை மிக கவனமாகத் தவிர்த்து வருகிறார்.

பாரதிய ஜனதா தலைவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை காலி நாற்காலிகளே வரவேற்கும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடாமல் தடுத்துள்ள அமித்ஷா, தற்போது பிரச்சாரக் கூட்டங்களுக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை இறக்கியுள்ளார். மேலும், மாநில அமைச்சர்கள் பிரச்சாரங்களுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் கடுமையான மக்கள் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருப்பதால் போலீஸ் காவலுடன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னொருபுறம் பாரதிய ஜனதா அதிகாரத்துக்கு வருவதற்கு முன் சத்திரியர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் இசுலாமியர்கள் (KHAM) ஆகிய பிரிவினரின் ஓட்டு வங்கியின் பலத்தில் தான் தேர்தல்களை காங்கிரசு வென்று வந்தது. இதற்கு எதிராக பட்டேல் வாக்குவங்கியை ஒருங்கிணைத்து நிறுத்தியது பாரதிய ஜனதா. “இந்து ஒற்றுமை” என்கிற காவி அரசியல் அதன் நடைமுறையில் ஆதிக்க சாதிகளின் கூட்டிணைவாகவே இருந்து வந்துள்ளது. மோடியின் வருகைக்குப் பின், இதே ஆதிக்க சாதிகளின் கூட்டிணைவு தனது காலாட்படையாக ஒடுக்கப்பட்ட மக்களையும் ஆதிவாசிகளையும் இணைத்துக் கொண்டது.

மதமோதல்களின் அடிப்படையில் ஒருமுகப்படுத்தப்பட்ட வாக்குவங்கியின் மூலம் வெற்றி பெற்ற மோடி, அதன் பின் வேறு வழியின்றி “தொழில்கள் நடப்பதற்கான அமைதியான சூழலை பராமரிக்கும்” கட்டாயத்துக்கு ஆளானார். தொடர்ந்து மதவெறி நெருப்பை எரிய விட்டு அதன்மூலம் இனப்படுகொலைகளை முன்னெடுத்துச் செல்வதில் இருக்கும் “நடைமுறை” சிக்கல்களைக் கணக்கில் கொண்டு தான் “வளர்ச்சியை” கையில் ஏந்தினார் மோடி.

எனவே தான் “வளர்ச்சி” கைவிட்டுவிட்ட நிலையில் உத்திரபிரதேச தேர்தலுக்கு முன் அரங்கேற்றியதைப் போன்ற நேரடி மதமோதல்களைத் தூண்டி விடுவது காரிய சாத்திமற்றதாகியுள்ளது. வேறு வழியின்றி ராகுல் காந்தியைக் கிண்டல் செய்வது, பட்டேல் சாதித் தலைவராகவும் தமக்குக் கட்டுப்படாதவராகவும் உருவெடுத்துள்ள ஹர்திக் பட்டேலுக்கு எதிராக செக்ஸ் சி.டி. -யை வெளியிடுவது, குஜராத்தின் வளர்ச்சியின்மைக்கு காங்கிரசை காரணம் காட்டுவது என செயல்திட்டம் வகுத்துள்ளது பாரதிய ஜனதா.

தேர்தலை வெல்லும் அளவுக்குக் காங்கிரசு இன்னும் பலம் பெறவில்லை என்றே தேர்தல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். எனினும், முந்தைய தேர்தல்களைப் போல் பாரதிய ஜனதாவால் சுலபமாக வெற்றி பெற்று விடவும் முடியாது என்பதையே குஜராத்தில் இருந்து வரும் செய்திகள் உணர்த்துகின்றன.

எனவே தான் கறாரான பேர்வழியாக அறியப்பட்ட மோடி, ஜி.எஸ்.டி விவகாரத்தில் மெல்ல இறங்கி வந்துள்ளார். ஒருவேளை காங்கிரசு வென்று விட்டால்? அது காங்கிரசின் வெற்றியாக இருக்காது; மாறாக பாரதிய ஜனதாவின் தோல்வியாகவே இருக்கும்.

மேலும் :

விவசாயிகளின் இரத்தம் குடிக்கும் பாரத ஸ்டேட் வங்கி !

0

திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடியை அடுத்த போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஞானசேகரன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியில் டிராக்டர் வாங்கக் கடன் பெற்றிருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சியின் காரணமாக விளைச்சல் இல்லை. டிராக்டர் கடனுக்கான நிலுவையைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டிராக்டரை பறிமுதல் செய்ய வங்கி மேலாளர் குண்டர்களை அனுப்பியுள்ளார். பறிமுதல் செய்வதில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் ஞானசேகரன் தனியாக இருக்கையில் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர் வங்கியின் அடியாட்படையினர். இதில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்த ஞானசேகரன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

தமிழகத்தில் வறட்சியான மாவட்டங்களில் ஒன்று திருவண்ணாமலை. மழை பொய்த்தால் விவசாயம் பொய்த்து விடும் நிலையில், இம்மாவட்டத்தின் பெரும்பாலானவர்கள் கூலி வேலைக்கு அண்டை மாவட்டங்களுக்கும், ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் செல்கின்றனர். ஆந்திராவில் செம்மரம் கடத்தும் கும்பலிடம் சிக்கி பரிதாபமாக இப்பகுதியினர் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர்.

விவசாயி ஞானசேகரன்

தற்போது மரணமடைந்துள்ள ஞானசேகரன், கடந்த 2010 -ல் சாத்தனூர் கிராமத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில், டிராக்டர் வாங்குவதற்காக 4 லட்சத்து 95 ஆயிரம்  கடன் பெற்றுள்ளார். அதில் ஐந்து தவணையாக 3.5 லட்சம் கட்டியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக நிலவிய வறட்சி மற்றும் உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்காமை காரணமாக அவரால் மீதி கடன் தொகையை செலுத்த முடியவில்லை.

தனது நிலையை வங்கி மேலாளரிடமும் எடுத்து கூறியிருக்கிறார். கரும்புக்கான பணம் பண்ணாரியம்மன் சர்க்கரை ஆலையில் இருந்து ரூ.3 லட்சம் வர வேண்டியுள்ளது. அந்த பணம் வந்தவுடன் கடனைச் செலுத்துவதாகக் கூறியுள்ளார். சர்க்கரை ஆலையின் பீல்டுமேனிடம் பணத்தை பலமுறை ஞானசேகரன் கேட்டபோதும் பணத்தை வங்கியில் போட்டு விடுவதாகக் கூறி அலைக்கழித்திருக்கிறார்கள்.

பாரத ஸ்டேட் வங்கி தனது கடன் வசூல் நடவடிக்கைகளை, தனியார் நிறுவனங்களின் வசம் ஒப்படைத்துள்ளது. கல்விக் கடன் வசூல் நடவடிக்கைகளை, வாராக்கடன் நாயகன், ’யோக்கிய சிகாமணி’ அம்பானியின் நிறுவனத்திடம் ஒப்படைத்தது நினைவிருக்கலாம். அந்நிறுவனத்தைச் சேர்ந்த குண்டர்கள் மிரட்டி, அவமானப்படுத்தியதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட லெனின் என்னும் மாணவரே இந்தக் கிரிமினல்களின் மோசமான  நடவடிக்கைகளுக்கு சாட்சி.

அந்த அடிப்படையில் விவசாய கடனை வசூலிக்கும் பொறுப்பை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது  பாரத ஸ்டேட் வங்கி.  கடந்த 04.11.2017 சனிக்கிழமை, அத்தனியார்  நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ராஜா, வேங்கடபதி ஆகிய  இருவர்  ஞானசேகர் வீட்டில் வந்து கடன் தொகையை செலுத்தக் கோரி பிரச்சினை செய்துள்ளனர். அந்த நேரத்தில் ஞானசேகர் வீட்டில் இல்லை. அவருடைய மகன் ராமதாஸ் மட்டும் இருந்துள்ளார்.

தொலைபேசி வாயிலாக வங்கி மேலாளரை தொடர்பு கொண்ட ராமதாஸ், ”தற்பொழுது தான் மழை பெய்துள்ளது. எப்படியாவது கடனை அடைத்து விடுகிறோம்” எனக் கெஞ்சி இருக்கிறார்.  “அசல் தொகையை கொடுத்து விட்டு வண்டியை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று திமிராகக் பதிலளித்திருக்கிறார் மேலாளர்.

அதனடிப்படையில் குண்டர்கள் டிராக்டரை எடுக்க முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது வந்த ஞானசேகர், “ நான் வங்கியில் தான் கடன் வாங்கினேன். இந்த பிரச்சினையை நான் வங்கியில் தீர்த்து கொள்வேன். உங்களுக்கும் இதற்கும் சம்மந்தமில்லை” என்று குண்டர்களிடம் கூறியிருக்கிறார். ஆனால் ஞானசேகரைத் தள்ளிவிட்டு டிராக்டரை எடுக்க முயற்சித்தனர் குண்டர்கள். அதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பிற்கும் சிறிய அளவில் கைகலப்பு ஏற்படவே தனியார் நிறுவன குண்டர்கள்  இருவரும் அங்கிருந்து  கிளம்பி விட்டனர்.

அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில் ஞானசேகர் தனது நண்பர் மூர்த்தியுடன் ஊருக்குள் சென்று கொண்டிருந்த போது தனியார் நிறுவன குண்டர்கள் இருவரும் ஞானசேகரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். ஞானசேகர் சம்பவ இடத்திலேயே சரிந்து  விழுந்து விட்டார்.

விவசாயி ஞானசேகரனின் குடும்பத்தினர்

தகவலறிந்து சென்ற ஞானசேகரின் மகன் ராமதாஸ் அவரை தானிப்பாடி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சையளிக்க முடியாது என்று கூறி அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர் மருத்துவர்கள். திருவண்ணாமலையில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல் ஞானசேகர் உயிரிழந்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, ராமதாஸ் தானிப்பாடி காவல் நிலையத்திற்கு சென்று தனியார் நிறுவன குண்டர்கள் இருவர் மற்றும் வங்கி மேலாளர் மீது புகார் அளித்துள்ளார். ஆனால் வங்கி மேலாளருக்கு எதிராக புகாரை பதிவு செய்ய முடியாது என்று கூறியுள்ளார் தானிப்பாடி ஆய்வாளர். அதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை உடலை வாங்க மறுத்து  உறவினர்கள் அனைவரும் போராட்டம் நடத்தவே குற்றப்பிரிவு 174 -ன் படி  சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளது போலீசு.

வங்கி மேலாளர் உட்பட அனைத்து குற்றாவாளிகளையும் கைது செய்ய வேண்டும், ஞானசேகரனின் கடனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து திங்கட்கிழமையும் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் தி.மலை கலெக்டரும் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து தனது இருப்பைக் காட்டிவிட்டுச் சென்றார்.

அதன் பிறகு பல்வேறு விவசாய சங்கங்கள் குவிந்தன. விவசாய சங்கத்தினரை வைத்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய அரசு அவர்களை அழைத்து திங்கள் கிழமை மாலை மூன்று மணிக்கு அமைதிப் பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்தது. அந்தக் கூட்டத்தில் ஞானசேகரின் மகள் மங்கையர்க்கரசி, அய்யாக்கண்ணு (டில்லி தொடர்போராட்ட விவசாய சங்கத் தலைவர்), சிபிஎம் கட்சியின் பாலகிருஷ்ணன், திமுக எம்எல்ஏ கிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

( முதல் தகவல் அறிக்கையின் நகல் )

அரசு தரப்பில்  போலீசு துணை ஆணையர், தானிப்பாடி காவல் ஆய்வாளர், மற்றும் ஆர்.டி.ஓ. கலந்து கொண்டனர். இந்தப்  பேச்சுவார்த்தையில் ஞானசேகரைக் கொன்ற குற்றவாளிகள்  ராஜா, வெங்கடபதி மற்றும் வங்கி மேலாளர் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஞானசேகரின் மகள் மங்கையற்கரசி முன்வைத்தார். மேலும், சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்கிறோம். மற்ற இருவரை கைது செய்கிறோம். ஆனால் வங்கி மேலாளரைக் கைது செய்ய முடியாது, என்று கூறியுள்ளார் போலீசு துணை ஆணையர். மேலும் விவசாய கடனை தள்ளுபடி செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை எனக் கூறிய போலீசு துணை ஆணையர், ஆர்.டி.ஓ -விடம் மனு கொடுக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

இதனை எல்லாம் பேச்சு வார்த்தைக்குச் சென்ற குழு ஏற்றுக்கொண்டு உடலை வாங்குவதாக சொல்லி வந்துவிட்டனர். அப்பொழுது ஞானசேகரின் குடும்பத்தினருடன் இருந்த மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் “அதிகாரிகள் எழுத்து பூர்வமாக சொன்னாலே செய்ய மாட்டார்கள். வாய்மொழியாக சொல்வதை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்” என்று கேள்வி எழுப்பினர். இந்த கேள்வியின் நியாயத்தை உணர்ந்த ஞானசேகரின் குடும்பத்தார்  உடலை வாங்காமல் போராட்டம் நடத்துவது என்று முடிவெடுத்தனர்.

போராட்டம் முடிவுக்கு வாராமல் நீடிக்குமோ என்று பதறிய பேச்சுவார்த்தை குழுவிலிருந்த விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, ”அரசு அதிகாரிகள் சொன்னதை செய்வார்கள். அரசை நம்புங்கள். அவர்கள் செய்யவில்லை என்றால் எனது சொந்த முயற்சியில் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கிறேன்” என்று கூறி போராட்டத்தை அரசுக்கு சாதகமான முறையில் முடிவுக்கு கொண்டு வந்தார்.

உடலையும் வாங்கி சென்று அடக்கம் செய்த பின்னர், எந்த விவசாய சங்கமும் இன்று வரை எட்டிக்கூட பார்க்கவில்லை. தற்போது அவர்களுக்கு ஆறுதலாக மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் சட்ட ரீதியான ஆலோசனைகள், உதவிகளை செய்து வருகின்றனர்.

விவசாயிகளின் எதிரியே இந்த அரசு தான். அரசின் வாய் வார்த்தையை நம்பினால் அம்மணமாக நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என்பதற்கு அய்யாக்கண்ணுவின் டில்லி போராட்டமே சாட்சி. ஆனால் இன்னமும் அதனை அய்யாக்கண்ணு உணரவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய் என்று கெஞ்சுவதால் பலனில்லை. ”விளைச்சல் இல்லை, விலை இல்லை, கடனைக் கட்ட முடியாதுஎன்று மறுப்பது மட்டும் தான் ஒரே தீர்வு.

-வினவு செய்தியாளர்

கார்ட்டூனிஸ்ட் பாலாவை விசாரணை செய்ய போலீசுக்கு தடை !

3

கார்ட்டூனிஸ்ட் பாலாவை விசாரணை செய்ய போலீசுக்கு தடை! மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு!

கார்ட்டூனிஸ்ட் பாலாவை கடந்த நவம்பர் 05, 2017 அன்று கைது செய்தது நெல்லை போலீசு. கந்து வட்டி பிரச்சினைக்கு கலெக்டரிடம் மனு கொடுத்தும் தீர்வில்லை என இசக்கிமுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். இதற்குக் காரணமான அரசை அம்பலப்படுத்தி பாலா வரைந்த கார்ட்டூனிற்காக நெல்லைப் போலீசார் அவரை கைது செய்தனர்.

நெல்லை நீதிமன்றத்தில் கார்ட்டூனிஸ்ட் பாலா (கோப்புப் படம்)

அவதூறு செய்தல் (இ.பி.கோ 501) , ஆபாசமாக சித்தரித்தல் (இ.பி.கோ 67) ஆகிய வழக்குப் பிரிவுகளின் கீழ் பாலா கைது செய்யப்பட்டார். மறுநாள் நெல்லை நீதிமன்றத்தில், இவ்வழக்கே சட்டவிரோதமானது என்ற அடிப்படையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வாதாடினார். அதனைத் தொடர்ந்து பாலா பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கு நவம்பர் 15, 2017 அன்று விசாரணைக்கு வந்தது. பாலா கைது செய்யப்பட்டதும், அவர் மீது போடப்பட்ட வழக்குப் பிரிவுகளும் சட்ட விரோதமானவை என்று வழக்கறிஞர்  வாஞ்சிநாதன் வாதங்களை முன் வைத்தார்.

குறிப்பாக இபிகோ 501 (அவதூறு பரப்புதல்) பிரிவின் படி, நீதிமன்றத்தில் மட்டுமே தனிநபர் வழக்குத் தொடுக்க முடியும். அந்தப் பிரிவின் படி கைது செய்வதற்கான உரிமை போலீசுக்கு இல்லை. அவ்வாறு கைது செய்திருப்பது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 199 -க்கு விரோதமானது. பாலா விவகாரத்தில் நெல்லை போலீசும், கலெக்டரும் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாலாவைக் கைது செய்திருக்கின்றனர்.

பாலா வரைந்த கார்ட்டூன்

அடுத்ததாக ஆபாசமாகச் சித்தரித்தல் என்ற வகையில் தகவல் தொழில்நுட்பவியல் குற்றங்கள் (இபிகோ 67) படி இவ்வழக்கை எடுத்துக் கொள்ள முடியாது. கருத்துச் சுதந்திரத்தின் கீழ் ஒரு இந்தியக் குடிமகனுக்கு தனது கருத்துக்களை கலையில் வெளிப்படுத்தும் உரிமை உள்ளது என்பதையும், ஆபாசம் என்பது பார்ப்பவர்களைப் பொறுத்தது என்பதையும் ஏற்கனவே ஓவியர் எம்.எஃப். ஹுசைன் மீதான வழக்கினில் டில்லி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக் காட்டி வாஞ்சிநாதன் வாதாடினார்.

வாதங்களைக் கேட்டுக் கொண்ட நீதிபதி, கார்ட்டூனிஸ்ட் பாலாவை விசாரணை செய்வதற்கு போலீசுக்கு தடையுத்தரவு பிறப்பித்தார். மேலும் போலீசின் முதற் கட்ட தகவல் அறிக்கைக்கும் நீதிமன்றம் தடை பிறப்பித்தது. இதனால் முகத்தில் பூசப்பட்ட கரியுடன் வெறுங்கையோடு திரும்பியது போலீசு.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு

ஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி ! புதிய கலாச்சாரம் மின்னூல்

0

தேர்தல் அரசியலில் காங்கிரசிடமிருந்து தன்னை வேறுபடுத்தி யோக்கிய சிகாமணியாகக் காட்டிக்கொள்வதற்கு பாஜக வசம் இருப்பவை இரண்டு துருப்புச் சீட்டுகள். ஒன்று குடும்ப ஆட்சி, இன்னொன்று ஊழல். ஆனால் இரண்டிலுமே பாரதிய ஜனதாக் கட்சி என்று அழைக்கப்படும் சங்க பரிவார், காங்கிரசுக்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை. பரிவார் என்ற சொல்லின் பொருள் குடும்பம். காங்கிரஸ் குடும்பத்தை விட பாஜக பரிவாரம் மிகப்பெரியது. இந்த பரிவாரத்தில் ஆதிக்க சாதி ரத்த உறவுகள் மட்டுமின்றி, பார்ப்பன-பனியா-மார்வாரி தரகு முதலாளிகளும், மன்னர் பரம்பரையினரும் அடக்கம்.

அரசாங்க கஜானாவைத் தமது சொந்த பணப்பெட்டியாகவே கருதுவது ஆண்ட பரம்பரையின் கண்ணோட்டமாகையால், மற்றவர்கள் பார்வையில் ஊழல் என்று கருதப்படுவதை, பரிவாரம் தனது உரிமையாகவே கருதும். இது பண வகைப்பட்ட ஊழலுக்கு மட்டுமல்ல, எல்லா வகையான அதிகார துஷ்பிரயோகங்கள் விசயத்திலும் இவர்களது பார்வை இத்தகையதுதான். சு.சாமியின் மொழியில் சொல்வதென்றால் பிராமணன் பணம் வாங்குவதில் எந்த தோஷமுமில்லை.

மோடியை பிரதமர் பதவிக்கு ஸ்பான்சர் செய்த கௌதம் அதானி தனது பெயர் பொறித்திருக்கும், தனிப்பட்ட விமானத்தை அவரது தேர்தல் பிரச்சாரத்துக்கு வழங்கினார். இப்படி வெளிப்படையாக வழங்குவதற்கு அதானியோ, அதனை வெளிப்படையாக வாங்குவதற்கு மோடியோ எள்ளளவும் கூச்சப்படவில்லை என்பதுதான் இந்த உறவின் தனிச்சிறப்பு. பிரதமரான பிறகு, ஆஸ்திரேலியாவில் ஒரு நிலக்கரி சுரங்கத்தை அதானிக்கு வாங்கித்தர விரும்பிய மோடி, பிரதமருக்குரிய தனி விமானத்தில் அதானியை அழைத்துச் செல்வதற்கு சிறிதளவும் கூச்சப்படவில்லை. முறைகேடுகளை வெளிப்படையாகச் செய்யும்போது அவை புதிய மரபாகிவிடுகின்றன. திருட்டை வெளிப்படையாக செய்யும்போது அது உரிமையாகிவிடுகிறது. எச்.ராஜாவின் மொழியில் சொல்வதென்றால், “ஆமாங்கறேன், அதுல என்ன தப்புங்கறேன்”. இதுதான் ஊழல் குறித்த பரிவாரத்தின் பார்வை.

சகாரா-பிர்லா டயரிக் குறிப்புகள் காட்டும் மோடியின் ஊழல், அதானிக்காகவும் அம்பானியின் ஜியோவுக்காகவும், எண்ணெய் வயல்களுக்காகவும் நடக்கும் ஊழல்கள், சீரியல் கொலைகளால் மறைக்கப்படும் வியாபம் ஊழல், பண மதிப்பழிப்பு என்ற மாபெரும் ஊழல், அமித் ஷா மகன் ஜெய் ஷா வின் ஊழல், எடியூரப்பா –  ரெட்டி சகோதரர்களின் ஊழல்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழல் மட்டுமல்ல, அந்த ஊழல்களை நியாயப்படுத்தி தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக வுக்காக சவுண்டு கொடுப்பவர்களான கே.டி ராகவன், வானதி சீனிவாசன் போன்றோரும் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். பாபா ராம்தேவ்கள் போன்ற சாமியார்களும் இருக்கிறார்கள். பாஜக ஊழல் குறித்த இந்த தொகுப்பை ஒரு டிரைய்லர் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

ஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி  ! – புதிய கலாச்சாரம் நவம்பர் 2017 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more

20.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 20-ம் (நூல் விலை ரூ 20, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • மைனர் லலித்மோடிக்கு மாமா வேலை பார்த்த பா.ஜ.க.
  • எடியூரப்பா – தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க. முதலமைச்சரின் லேட்டஸ்ட் ஊழல்!
  • BJP கே.டி. ராகவன் மறைக்கும் கருப்புப் பண ஊழல் ஆதாரங்கள்
  • கள்ள நோட்டடித்த கேரள பாஜக தலைவர் கைது!
  • தமிழக பா.ஜ.க.வின் ஊழல்கள் : வானதி சீனிவாசன்
  • பாபா ராம்தேவ் – பதஞ்சலி வெற்றியின் இரகசியம் என்ன?
  • வியாபம் ஊழல் : பார்ப்பன கிரிமினல்தனம் !
  • லாட்டரி மாஃபியா மார்ட்டினுக்கு தமிழக பா.ஜ.க. பாதுகாப்பு!
  • பிர்லா சஹாரா ஆவணங்கள் : மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது!
  • ஊழல் செய்யாத உத்தமரா மோடி?
  • கருப்புப் பணத்தின் ஷா இன் ஷா : அமித்ஷா மற்றும் ஜெய்ஷா!

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 300

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1600

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more

 

 

மீண்டும் வருகிறது அடிமைமுறை – ஆர்ப்பாட்டங்கள் !

0

“தீவிரமடைகிறது கூலி அடிமைமுறை ! தொழிலாளி வர்க்கம் புழுவல்ல; கோடிக்கால் பூதம் என்பதை நிலை நாட்டுவோம் !” என்ற முழக்கத்தின் கீழ் வேலூர் மாவட்டம், ஆம்பூர் பத்திர பதிவு அலுவலகத்தின் முன் பு.ஜ.தொ.மு. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள், பெண்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட செயலாளார் தோழர் சுந்தர் தலைமையேற்று பேசும்போது “விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மோடியின் ஆட்சியில் தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராகப் போராட வேண்டும்.” என தனது உரையில் கூறினார்.

அதன் பிறகு மாவட்ட இணைச் செயலாளர் தோழர் சரவணன், கண்டன உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் சிறப்புரையாற்றினார். அவரது உரையில் “மோடி பிரதமராக பதவியேற்ற கடந்த மூன்று ஆண்டுகளில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் மக்களுக்கு எதிரானவைகளாவே உள்ளன.

பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., நீட் தேர்வு, நிலம் கையகப்படுத்தும் மசோதா மேலும் மீத்தேன் திட்டம், பெட்ரோ கெமிக்கல் மண்டலம் என அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரான திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.

அந்த வரிசையில் தற்போது கார்ப்பரேட்களின் நலனுக்காக ஏற்கனவே தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளான, 44 தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டு விதிமுறைகளாக மாற்றப்படவுள்ளன.

இது தொழிலாளிகளை மீண்டும் கொத்தடிமை நிலைக்கு மாற்றும் என்பதையும் நிதி ஆயோக் பற்றியும் விளக்கி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டம் கடைகள் நெருக்கமாக இருந்த பகுதியில் நடைபெற்றதால் திரளான வணிகர்களும், பொதுமக்களும் கவனித்து சென்றனர். மேலும் கட்டுப்பாட்டுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை அப்பகுதி தொழிலாளிகள் நின்று கவனித்து சென்றனர்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
வேலூர் மாவட்டம்.

***

தீவிரமடைகிறது கூலியடிமை முறை! தொழிலாளி வர்க்கம் புழுவல்ல, கோடிக்கால் பூதம் என்பதை நிலைநாட்டுவோம்! என்கிற தலைப்பில் 11.11.2017 மாலையில் ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பு.ஜ.தொ.மு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர்  தோழர் முகிலன் தலைமையேற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் கண்டன உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் ( மேற்கு ) மாவட்டம்.

***

தீவிரமடைகிறது கூலி அடிமை முறை தொழிலாளி வர்க்கம் புழுவல்ல ! கோடிக்கால் பூதம் என்பதை நிலைநாட்டுவோம்! என்ற முழக்கத்தின் கீழ் 11.11.17 அன்று திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் கும்முடிப்பூண்டி பேருந்து நிலையம் எதிரிலும், திருவொற்றியூர் நகராட்சி அலுவலகம் எதிரிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கும்முடிப்பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்…

கும்முடிப்பூண்டியில்  மாவட்டச் செயலாளர் தோழர் விகந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் செயலர் தோழர் ரமேஷ் தனது கண்டனத்தை பதிவு செய்தார். இறுதியாக மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் கண்டன உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

திருவொற்றியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்…

திருவொற்றியூரில் தோழர் ஆனந்தபாபு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மணலி SRF எம்ப்ளாயீஸ் யூனியன் சங்கத்தின் இணைச்செயலாளர் தோழர் வெங்கடேசன் தனது கண்டனத்தை பதிவு  செய்தார். மாவட்டத் தலைவர் தோழர் சதீஷ் கண்டன உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்

பிரிட்டிஷ் ராஜ் முதல் பில்லியனர் ராஜ் வரை – வளர்ச்சி உருவாக்கும் சமூக ஏற்றத்தாழ்வு !

0

வளர்ச்சி உருவாக்கிவரும் சமூக ஏற்றத்தாழ்வு !

காதிபத்திய சார்பு அமைப்புகளால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலகக் கோடீசுவரர்களின் பட்டியலில் இந்தியத் தரகு முதலாளிகளுள் ஒரு சிலர் தவறாது இடம் பிடித்துவிடுகிறார்கள். இதுபோக, உள்நாட்டில் மல்டி மில்லியனர்களும் காளான்களைப் போலக் கிளைத்து வருகிறார்கள். நாடே பெருமிதம் கொள்ள வேண்டிய சாதனை போல இது சித்தரிக்கப்படுகிறது.

ஆனால், இந்தப் “பெருமிதம்”, “சாதனை” ஒரு மாபெரும் சமூக அவலத்தின் தோள் மீதுதான் ஏறிநிற்கிறது. 99 சதவீத இந்திய மக்களின் வருமானத்தை உறிஞ்சித்தான் இவர்கள் உலக மகா கோடீசுவரர்களாகவும் மல்டி மில்லியனர்களாகவும் வலம் வருகிறார்கள். இந்த உண்மையை உலகமயத்தை ஆதரிக்கும் பொருளாதார வல்லுநர்களாலும் மறுக்க முடியவில்லை.

பிரான்சு நாட்டிலுள்ள பாரீஸ் பொருளாதாரப் பள்ளியின் ஒரு பிரிவான உலக ஏற்றத்தாழ்வு ஆய்வகத்தில் பணியாற்றும் பேராசிரியர் தாமஸ் பிக்கட்டியும் அவரோடு இணைந்து பணியாற்றிவரும் லூகாஸ் சான்ஸெலும் சேர்ந்து 1922 முதல் 2014 வரை இந்திய சமூகத்தில் ஏற்பட்டுள்ள வருமான ஏற்றத்தாழ்வுகளை ஆராய்ந்து, காலனிய காலத்தைவிட, இருபத்தோராம் நூற்றாண்டில் இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வு தீவிரமடைந்திருப்பதை நிறுவியுள்ளனர்.

தமது ஆய்வறிக்கைக்கு அவ்விணையர் இட்டிருக்கும் தலைப்பு, “பிரிட்டிஷ் ராஜ் தொடங்கி பில்லியனர் ராஜ் வரை”. இத்தலைப்பே இந்தியக் குடியரசின் யோக்கியதையை அம்பலப்படுத்திவிடுகிறது.

இந்திய மக்கட்தொகையில் பெரும் கோடீசுவரர்களாக உள்ள ஒரு சதவீத “மேன்மக்கள்”, நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 21.7 சதவீதத்தைக் கைப்பற்றிக் கொள்வதாகக் குறிப்பிடுகிறது, பெக்கட்டின் ஆய்வறிக்கை. இது 2013 – 14 ஆம் ஆண்டுக்கான கணக்கு. அதற்குப் பிறகுதான் மோடி பதவிக்கு வந்தார். இந்தியத் தரகு முதலாளிகளின் பெருத்த ஆதரவோடு பதவிக்கு வந்த அவரது ஆட்சியில் இந்த மேன்மக்களின் வருமானம் மேலும் வேகமாக கூடிக்கொண்டுதான் இருக்கிறது.

மீதமுள்ள 99 சதவீத மக்களின் வருவாயும் ஒருபடித்தானதாக இல்லை. சமூகத்தின் அடித்தட்டில் வாழுகின்ற 50 சதவீத உழைப்பாளிகளின் (இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள்) ஆண்டு வருமானம் கடந்த 34 ஆண்டுகளில் (1980 முதல் 2014 முடிய) 89 சதவீதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. அதேசமயம், அவர்களுக்குச் சற்று மேலேயுள்ள 40 சதவீத நடுத்தர வர்க்கத்தினரின் (சராசரிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டக்கூடிய தனிநபர்களின்) ஆண்டு வருமானம் அதே 34 ஆண்டுகளில் 93 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

அதேபொழுதில் 10 சதவீத மேல்தட்டு வர்க்கத்தின் ஆண்டு வருமானம் 394 சதவீதமும்; இந்த 10 சதவீதத்திற்குள்ளேயே மேல்தட்டில் உள்ள 1 சதவீதத்தினரின் ஆண்டு வருமானம் 750 சதவீதமும்; இந்த 1 சதவீதத்திற்குள்ளேயே மேலேயுள்ள 0.1 சதவீதத்தினரின் ஆண்டு வருமானம் 1,138 சதவீதமும்; இந்த 0.1-க்குள்ளேயே மேலேயுள்ள 0.01 சதவீதத்தினரின் ஆண்டு வருமானம் 1,834 சதவீதமும்; இவர்களுக்கும் மேலேயுள்ள 0.001 சதவீதத்தினரின் ஆண்டு வருமானம் 2,726 சதவீதமும் அதிகரித்திருக்கிறது என வருமான வரித் தரவுகளைக் கொண்டு நிறுவுகிறது, பெக்கட்டின் ஆய்வு.

இந்தியாவில் வருமான வரிக் கணக்கிற்கும் பொய்க் கணக்கிற்கும் அதிக வேறுபாடு இருப்பதில்லை என்பதால், இந்த 10 சதவீதத்தினரின் ஆண்டு வருமான உயர்வு பெக்கட் குறிப்பிடுவதைவிட அதிகமாகவே இருக்கும்.

பெக்கட்டின் ஆய்வின்படி, சமூக அடுக்கில் உச்சாணிக் கொம்பில் இருக்கும் ஒரு சதவீதக் கோடீசுவரர்கள், நாட்டின் ஆண்டு தேசிய வருமானத்தில் கைப்பற்றும் பங்கு 1982 – 83 ஆம் ஆண்டில் வெறும் 6.2 சதவீதமாக இருந்து, இன்று அதோடு ஒப்பிடும்போது 3.5 மடங்கு அதிகரித்திருக்கிறது. இது மட்டுமின்றி, இந்தியா ஆங்கிலேய காலனி நாடாக இருந்த 1939 – 40 ஆண்டுகளில், அப்பொழுது சமூக அடுக்கில் உச்சாணியில் இருந்த 1 சதவீதப் பணக்காரர்கள், நாட்டின் ஆண்டு வருமானத்தில் கைப்பற்றிய பங்கை (20.7%) விட, இன்று பெரும் பணக்காரர்கள் கைப்பற்றும் பங்கு அதிகரித்திருக்கிறது.

இந்திய உழைக்கும் மக்களைச் சுரண்டுவதில் வெள்ளைத் துரைமார்களை விஞ்சிவிட்டார்கள் பழுப்பு துரைமார்கள். மற்ற நாடுகளைப் போலின்றி, ஒருபுறம் சாதியப் படிநிலை ஏற்றத்தாழ்வு இன்னொருபுறம் பொருளாதார (வர்க்க) ஏற்றத்தாழ்வு என்ற இரண்டு நுகத்தடிகளை இந்திய உழைக்கும் மக்கள் சுமக்க வேண்டியிருக்கிறது.

பெக்கட்டின் ஆய்வின்படி 1980 -களுக்குப் பிறகுதான் இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வு படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கி, இன்று அருவருக்கத்தக்க நிலையை எட்டியிருக்கிறது. அந்த 1980 -களில்தான் ராஜீவ் காந்தி அரசு புதிய பொருளாதாரக் கொள்கையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதன் பின், நரசிம்ம ராவ் ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட தனியார்மயம்-தாராளமயம்-உலகமயக் கொள்கையை, அதன் பிறகு வந்த ஒவ்வொரு அரசும் போட்டிபோட்டுக் கொண்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தின.

அக்கொள்கைக்கு வால்பிடித்த ஒவ்வொரு அரசும் நெல்லுக்குப் பாயும் நீர், புல்லுக்கும் புசிவது போல, தனியார் முதலாளிகள் பெறும் வளர்ச்சி, சிறிது சிறிதாகக் கசிந்து அடித்தட்டு மக்களையும் வந்தடையும் என்றன. குறிப்பாக, காங்கிரசு அரசில் நிதி மந்திரியாகவும் வர்த்தகத் துறை அமைச்சராகவும் இருந்த ப.சிதம்பரம், அதற்குக் கொஞ்ச காலம் ஆகும் என வக்கணை பேசினார்.

இதோ, தனியார்மயக் கொள்கைகள் அமலுக்கு வந்து இருபத்தைந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கண்ட பலனோ, மற்ற உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வு – செல்வம் ஓரிடத்தில் குவிவதும் வறுமை மற்றோர் இடத்தில் தாண்டவமாடுவதுமான நிலைமை – மிக வக்கிரமாக வளர்ச்சி அடைந்துகொண்டே செல்வதைத்தான் காண்கிறோம்.

பார்ப்பனியம் அதன் இயல்பிலேயே சமூக ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் சித்தாந்தம் என்பதால், தற்போது ஆட்சியிலுள்ள பா.ஜ.க. அரசு மக்களைச் சுரண்டி முதலாளிகளைக் கொழுக்க வைப்பதில் எந்தவித தயவுதாட்சண்யமும் பார்ப்பதில்லை.

கூலி வெட்டு, சமூக நலத் திட்டங்களுக்கு வெட்டு, தொழிலாளர் நலச் சட்டங்களைக் கைவிடுவது, நிலம், நீர், தாது வளங்கள் உள்ளிட்ட இயற்கைச் செல்வங்களை, வங்கி தொடங்கி தொழிலாளர் சேமிப்பு முடியவுள்ள பொதுப் பணத்தைப் பன்னாட்டு மற்றும் இந்தியத் தரகு முதலாளிகள் ஏப்பம் விடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பது என நாலுகால் பாய்ச்சலில் ஓடுகிறது, மோடி அரசு. முதலீடுகளுக்கு இலாபத்தை உத்தரவாதப்படுத்திய பிறகுதான் உழைப்பாளிகளின் பங்கு பற்றிப் பேச முடியும் எனப் பச்சையாகவே இந்தக் கொள்ளையை நியாயப்படுத்துகிறார்கள்.

தொழிலாளர்களை, விவசாயிகள் உள்ளிட்ட சிறுவீத உற்பத்தியாளர்களைக் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்வதன் வழியாகத்தான் முதலாளிகளின் இலாபம் உத்தரவாதப்படுத்தப்படுகிறது என்ற உண்மையை 19 -ஆம் நூற்றாண்டிலேயே எடுத்துக்காட்டிவிட்டது, மார்க்ஸின் மூலதனம் நூல். மார்க்சியம் கூறும் இந்த அடிப்படையான உண்மையை பிக்கெட்டியின் ஆய்வு மறுக்கவொண்ணாமல் நிரூபித்திருக்கிறது.

முதலாளித்துவ அமைப்பு இந்த ஏற்றத்தாழ்வை மேலும்மேலும் தீவிரப்படுத்தும் திசையில்தான் செல்லுமேயொழிய, தனியார்மய ஆதரவாளர்கள் கதைப்பது போல, எத்தனை ஆண்டுகள் காத்திருந்தாலும் புல்லுக்குப் புசிவது ஒருபோதும் நடவாது.

-செல்வம்
-புதிய ஜனநாயகம், நவம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

ஆளுநர் புரோஹித்தின் கோவை ஆய்வு – கருத்துக் கணிப்பு

6

மிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று 14.11.2017 அன்று கோவையில் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதிகாரிகள் தவிர உள்ளூர் அமைச்சர், எம்.எல்.ஏ. -க்கள் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை.

கோவை பாரதியார் பல்கலை விழாவிற்கு வந்த ஆளுநர் திடீரென இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். அரசின் துறைரீதியான செயல்பாடுகளை ஆளுநர் ஆய்வு செய்ய உள்ளதாகக் கூறி அனைத்துத் அதிகாரிகளும் கோப்புகளுடன் கலந்து கொண்டனர்.

ஆளுநரின் செயலர் ரமேஷ் சந்த் மீனா, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன், காவல் ஆணையர் அமல்ராஜ், எஸ்.பி. மூர்த்தி ஆகியோர் ராஜ விசவாசத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  இவர்களைப் போல 12 முக்கிய துறைகளின் அதிகாரிகளுடன் நடந்த கூட்டம் மதியம் 3.30 மணியளவில் தொடங்கி மாலை 6 மணி அளவில் முடிவடைந்தது.

ஏற்கெனவே புதுச்சேரியில் இதேபோன்று ஆளுநர் கிரண்பேடி, அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை என்ற பெயரில் பல்வேறு மிரட்டல் நடவடிக்கைகளை முதல்வர் நாராயணசாமி அரசாங்கத்திற்கு எதிராக எடுத்து வருகிறார். தற்போது தமிழகத்திலும் இத்திருப்பணியை பாஜக அரசு ஆரம்பித்திருக்கிறது. இது மாநில சுயாட்சியை பாதிக்கும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறியிருக்கின்றன.

ஆளுநர் சரியாகத்தான் செயல்படுகிறார் என அ.தி.மு.க அடிமை அரசு இதை நியாயப்படுத்தி வருகிறது.

பாஜக-வின் நோக்கம் என்ன?

அரசியல்வாதிகள் தலையீடு என்று ஆனந்த விகடன் நகைச்சுவைகளை ரசிக்கும் நடுத்தர வர்க்கத்திடம் செல்வாக்கு பெறுவது,

தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், ஊழலை எதிர்த்தும் பாஜக போராடுகிறது என ஊடகங்களில் செய்திகளை வரவழைப்பது,

ஏற்கனவே பாஜக பண்ணைகளிடம் அடிமையாக இருக்கும் அதிமுக அரசை கோமாளி அடிமைகளாக காட்டுவது,

கோவை போன்ற ஆர்.எஸ்.எஸ் செல்வாக்கு பகுதிகளை உறுதி படுத்துவது, ஆதரவை அதிகப்படுத்துவது. பா.ஜ.க-விற்கு எதிரான இயக்கங்கள், தனிநபர்களை உள்ளூர் அதிகார வர்க்கத்தின் துணையுடன் ஒடுக்குவதை துரிதப்படுத்துவது.

இதன் மூலம் தமிழகத்தில் பாஜக-வின் செல்வாக்கை பல முனைகளில் உயர்த்துவது.

வாக்களியுங்கள்! மூன்று பதில்களை தெரிவு செய்யலாம்.

கேள்வி: தமிழக ஆளுநர் புரோகித்தின் கோவை ஆய்வு – நோக்கம் என்ன?

  • உள்நோக்கம் ஏதுமில்லை
  • நடுத்தர வர்க்கத்திடம் பெயர் வாங்குவது
  • பெயரளவு மாநில சுயாட்சியையும் ஒழிப்பது
  • இந்துத்துவ செல்வாக்கை அதிகரிப்பது
  • ஊழலை ஒழிக்கும் நல்ல முயற்சி
  • மாற்று இயக்கங்களை ஒடுக்குவது

மழைநீரை அகற்ற அரசாங்கத்தை செயல்பட வைத்த மக்கள் அதிகாரம் !

1

மழைநீர் அகற்றப்படவில்லையா? மக்கள் அதிகாரத்தை அழையுங்கள்! – தண்டையார்பேட்டை அனுபவம்.

ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக பெய்த மழை நவம்பர் 5ம் தேதி சற்று ஓய்வு எடுத்தது. தண்டையார்பேட்டை நேரு நகரில் மொத்தம் உள்ள 14 தெருக்களில் 13வது தெரு மட்டும் சற்று உயரம் குறைவு. இளைத்தவனை வலியவன் ஆதிக்கம் செலுத்துவது போல மற்ற தெருக்களில் வழிந்தோடும் மழைநீர் 13வது தெருவில் தஞ்சம் புகும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தெருவில் புதிதாக சாலை அமைக்கும்போது ஏற்கனவே இருந்த சிமெண்ட் சாலைக்கு பதிலாக தார்ச்சாலை அமைக்க ஒப்புதல் கிடைத்துள்ளதாக தெரிவித்து சாலையை உயரம் தூக்காமல் போட்டுள்ளனர். நேரு நகரின் மற்ற தெருக்களில் இல்லாத தார்ச்சாலை இங்கு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. விளைவு தொடர்ச்சியான நீர்த்தேக்கம்.

குழந்தை குட்டிகளுடன் வயதானவர்கள், முதியவர்கள் என யாவரும் துயருரவே தொடர்ச்சியாக மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்போது இயங்குவதில் கோளாறு நிரம்பிய பழைய நீரிறைக்கும் இயந்திரத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். பகுதி இளைஞர்களை கொண்டு இரவு முழுக்க நீர் இறைத்தபின்னும் மறுநாள் காலையில் பெய்த மழை மீண்டும் நீரை வரவழைத்துவிட்டது.

அதிகாரிகளோ, ஊழியர்களோ யாரும் கண்டுகொள்ளவில்லை. முதன்மை சாலை அருகில் வசித்தவர்கள் சாலையை மறித்ததால் அங்கு உடனடியாக வேலை செய்த அதிகாரிகள் சற்று உள்ளே உள்ள இவர்களை கண்டுகொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்படாததால் கண்டுகொள்ளவில்லை.

ஆறு நாட்கள் வீடுகளின் வாசலில் முட்டிக்காலளவு நீரில் நடந்து சென்று பகுதியில் பெரும்பாலானோருக்கு காலில் சேற்றுப்புண் வந்துவிட்டது. பாதம் சிதைந்து போயிருந்தது. போதாக்குறைக்கு சாலையில் இருக்கும் மின்பெட்டி கீழேயே இருப்பதால் தண்ணீரில் மூழ்கியிருந்தது. எனவே, மின்சார வாரியம் மின் இணைப்பை கொடுக்கவில்லை. நீரில் மட்டுமல்ல, இருளிலும் மூழ்கியுள்ளனர். கழிவறைகளில் நீர் மேலேறியதால் பெண்கள், வயதானவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். எந்த ஒரு பிரச்சனையும் கண்டுக்கொள்ளப்படவில்லை. கேட்க நாதியில்லை.

இந்நிலையிலே மக்கள் அதிகாரம் அமைப்பினர் வந்து பார்க்கும்போது இரண்டு மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தில் உள்ள தண்ணீரை மேட்டிற்கு கொண்டு செல்ல சிமெண்ட் சாலையில் துளையிடும் கருவி கொண்டு துளையிட முயன்று கொண்டிருந்தனர். அதிலும் மின்வெட்டு பிரச்சனையால் அந்த வேலையும் நடைபெறவில்லை.

எனவே பகுதி முழுக்க ஒவ்வொரு வீடாக சென்று மக்களை திரட்டிக்கொண்டு மாநகராட் சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளை கையோடு அழைத்துவரலாம் என முடிவு செய்தோம். முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் அதே அளவு பொதுமக்களுடன் சென்று பார்த்தால் அலுவலகத்தில் ஒருவர் கூட இல்லை.

எனவே, அதிகாரிகளை வரவழைக்க சாலையை மறிப்போம் என முடிவு செய்து தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பால முச்சந்தியில் அமர்ந்தோம். உடனடியாக அங்கு முழக்கங்களை தயார் செய்து முழக்கங்களை எழுப்பினோம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் அவர்களுக்கு நிலைமை என்னவென்று ஒரு தோழர் விளக்கினார். பின்னர் மீண்டும் முழக்கம் போடத்துவங்கினோம். மறியல் நடைபெறும்போதே மழை பெய்யத் துவங்கிவிட்டது.

இருப்பினும் யாரும் கலைந்து செல்லாமல் மறியல் தொடரவே இருபது நிமிடங்களில் போலீசு வந்து சேர்ந்தது. தானே நேரில் வந்து பிரச்சனையை முடித்துக் கொடுத்துவிட்டு செல்வதாக ஆய்வாளர் தெரிவித்ததால் அவரை முன்னே அனுப்பிவிட்டு பின்னே தெருக்களில் முழக்கங்களை எழுப்பிக்கொண்டே பகுதிக்கு வந்து சேர்ந்தோம். பகுதிக்கு வந்தவுடன் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் வெளியில் வந்துவிட்டனர். நம்மை அழைத்து வந்த காவல்துறை ஆய்வாளர் அவருக்கு பதிலாக உள்ளூர் காவல் ஆய்வாளர் மற்றும் இன்னொரு காவலரை பொறுப்பாக்கிவிட்டு சென்றுவிட்டார்.

உடனே நமது தோழர் ஒருவர் பொதுமக்களுக்கு நிலைமையை விளக்குவதற்காக வீட்டு திண்ணையில் ஏறி பேசத்துவங்கினார். போராட்டம் அதன் முடிவு குறித்து விளக்கிவிட்டு பிரச்சனை தீரும் வரையில் இந்த இரு போலீசாரை நம்மிடம் விட்டுவிட்டு சென்றுள்ளனர். அவரை நாம்தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என தெரிவித்துவிட்டார். உடனே போலீசாரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என தெரிவித்துவிட்டு இருவரையும் கையோடு தேங்கியிருந்த நீருக்குள் அழைத்து சென்றுவிட்டனர்.

பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் வந்து நீரை வெளியேற்ற துவங்கினர். போராட்ட செய்தி வெளியில் கசிய பாலிமர் செய்தி நிருபர்கள் களத்திற்கு வந்து பொதுமக்களை பேட்டி கண்டு சென்றனர். அச்செய்தியும் வெளிவர தெருவில் உள்ள பிரச்சனை ஊர் முழுக்க தெரிந்தது. இடையில் இரு போலீசாரை பொதுமக்கள் சிறைபிடித்தனர் என செய்தி  பரவவே இன்னும் ஐந்தாறு போலீசு, உளவுப்பிரிவினர் வந்துவிட்டனர். போராட்டத்தில் சமாதானம் பேசி நம்மை அழைத்துவந்த போலீசு வந்துவிட்டு அந்த செய்திப் பதிவை நீக்குமாறு அரைமணி நேரம் கெஞ்சினார். குறைந்தது மறுப்பு செய்தியாவது தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அன்று மாலையே கழிவுநீர் அடைப்பை நீக்க ஜெட்ராடிங் வண்டி தெருவுக்குள் வந்தது.

அத்தெருவை சேர்ந்த முதியவர் ஒருவர் அவர் வந்து கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக தெருவுக்குள் சாக்கடை அடைப்பை போக்க வண்டி வந்திருப்பதாக தெரிவித்தார். அதற்கு காரணம் நீங்கள்தான் என நெகிழ்ந்தார். இரவு 9 மணிவரை அடைப்பை போக்க முயற்சித்தும் வேலை முடியவில்லை. வேலை முடியும்வரை போலீசார் கூடவே இருந்துவிட்டுதான் வீட்டுக்கு போயினர்.

மறுநாள் காலை 6 மணிக்கே போலீசு வந்துவிட்டது. நாம் 9 மணிக்குதான் சென்றோம். வந்தவுடன் நிலைமையை ஆராய்ந்துவிட்டு மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து காலையிலேயே நீர் இரைக்க துவங்கிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் மின்வாரியத்தை சார்ந்தவர்களும் காலையிலேயே வந்துவிட்டு சாலையில் கிடந்த உடைந்து போன மின்பெட்டியை சீரமைக்க துவங்கிவிட்டனர். வெல்டிங் கருவியை கொண்டுவந்து சீரமைத்துவிட்டு சிமெண்ட் காரையில் மேடை அமைத்து உயரே தூக்கிவைத்து மின் இணைப்பை கொடுத்துவிட்டு சென்றனர். வேலையை பார்வையிட துணை பொறியாளர் வந்துவிட்டார்.

அதோடு கூடவே பகுதி மக்களுக்கு மருத்துவமுகாம் ஏற்பாடு செய்துதர வேண்டுமென நாம் கோரியிருந்தோம். கோரியபடி நடமாடும் மருத்துவ முகாமை அழைத்து வந்து மக்களுக்கு மருந்து மாத்திரைகளை கொடுக்க துவங்கினர். பகுதி இளைஞர்கள் நம்மிடம் நீங்கள் இருப்பதனாலே வேலை நடைபெறுகிறது. நீங்கள் போய்விட்டால் இவர்களும் போய்விடுவர் என தெரிவித்தனர். அதோடு எங்களுக்கும் மக்கள் அதிகாரம் டிசர்ட் கொடுங்கள் நாங்கள் போட்டுக்கொள்கிறோம். இங்கு டிசர்ட் போட்ட நபர் இருந்தால்தான் போலீசு பயப்படுகிறது என தெரிவித்தனர்.

கழிவு நீர் அடைப்பு எடுப்பதற்காக சென்னைக்கே மொத்தம் 22 வாகனங்கள்தான் உள்ளன. ஆனால் இப்பகுதிக்காக அன்றைய தினத்தில் சிறப்பாக முகப்பேரிலிருந்து ஒரு வாகனத்தை வரவழைத்து நாள் முழுக்க இப்பகுதிக்கே ஒதுக்கிவிட்டனர். அந்த வண்டியும் போதாமல் மீண்டும் முந்தைய ஜெட்ராடிங் வாகனத்தை கொண்டுவந்துவிட்டனர்.

இவ்வளவு வாகனங்கள் கொண்டுவந்தும் நீரை முழுமையாக வெளியேற்ற முடியவில்லை. கழிவுநீரை வாகனத்தில் அடைத்து வெளியில் விடலாம் என சென்றால் சிறிது நேரத்தில் மற்ற இடங்களிலிருந்து வந்து நிரம்பி விடுகிறது. கழிவுநீர் அகற்றும் நிலையத்திலே அடைப்பு என்பதால் நகரில் எங்கிருந்தும் கழிவுநீரை அகற்ற முடியவில்லை. ஜெட்ராடிங் வண்டி மூலம் அதிக அளவு அழுத்தம் நிறைந்த காற்று மூலம் கழிவுநீர் குழாயில் அடைப்பு எடுக்க முயலும்போது கருவியே உள்ளே நுழைய முடியாத அளவிற்கு அடைப்பு இருந்தது.  மேலும் அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர்தான் தெருவில் நுழைந்துவிடுவதையும் கண்டறிந்தோம்.

தொகுப்பாக பார்க்கையில் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக கழிவுநீர் அடைப்பு எடுக்கும் பணி நடைபெறுவதில்லை என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது. கழிவுநீர் குழாய்க்கு அருகிலேயே மெட்ரோ வாட்டர் குழாயும் உள்ளது. இரண்டில் எதன் அழுத்தம் அதிகமாக உள்ளதோ அதிலிருந்து நீர் மற்ற குழாயில் கலந்துவிடும்.

கழிவுநீருடையது அதிகம் என்றால் மெட்ரோவாட்டரில் கழிவுநீர் கலந்துவரும். மெட்ரோ வாட்டருடையது அதிகமென்றால் கழிவுநீருடன் கலந்து வீணாக சென்றுவிடும். மொத்தமாக இவை இரண்டையும் பழுதுபார்த்து மாற்ற வேண்டும். மழைநீர் கால்வாய் எங்குள்ளது என்றே தெரியவில்லை. மொத்தமாக இதை மாற்றிவிட்டு தெருவில் உள்ள சாலையை உயரம் தூக்கி போட்டால்தான் பிரச்சனை நிரந்தரமாக தீரும். இன்னும் சொல்லப்போனால் கழிவுநீர் அகற்றும் நிலையம் முதல் நகரின் ஒட்டுமொத்த கழிவுநீர் கால்வாய் வரை சீரமைத்தால் மட்டுமே பிரச்சனை நிரந்தரமாக தீர்க்கப்படும்.

அரசின் அணுகுமுறை சென்னைக்கு விடிவுகாலத்தை கொடுக்காது என்பது மட்டுமல்ல சிறு மழைக்கு கூட அல்லாடும் நிலைக்கு வந்துவிட்டதன் காரணமும் இந்த அரசுதான் என்பது தெள்ளத்தெளிவாகிறது. இப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இவர்களிடம் திட்டம் ஏதுமில்லை. கழிவுநீரை வெளியேற்ற வருபவர்களின் மனநிலையே பூசி மெழுகிவிட்டு செல்வதாகத்தான் உள்ளது. தற்காலிக, குறைந்தபட்ச தீர்வினைத்தான் இவர்கள் சொல்கின்றனர். அதுதான் இயல்பு என்பது போல பேசுகின்றனர்.

இத்தெருவுக்கு சாலை அமைக்கவும், மெட்ரோ குழாய் பதிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரி தெரிவித்தாலும் இன்று வரை இரண்டும் நிறைவேறவில்லை. தினமும் பகுதி இளைஞர்களிடம் போலீசு வந்துவிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பினரிடம் மட்டும் பிரச்சனையை சொல்லிவிடாதீர்கள் என சொல்லுவதாக தெரிவிக்கின்றனர்.

உடனுக்குடன் நடைபெறும் வேலைகளை எடுத்துச்சொல்லி போராட்டம் செய்யாதீர்கள் என சமாதானமாக பேசுவதாகவும் தெரிவித்தனர். முதல் நாளிலிருந்தே நீங்கள் போங்கள் நாங்கள் பார்த்து பிரச்சினையை தீர்த்துவிடுகிறோம் என போலீசு நம்மிடம் பேசுகிறது. போராடிய நாளிலிருந்து இன்று வரை தினமும் வந்துவிடும் போலீசு அவ்வப்போதைய கழிவுநீரை அகற்றும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு : 91768 01656.

இனியும் வகுப்பெடுத்தால் உனக்கு செவிப்பறை கிழியும்! கவிதை

3

ந்த விடியல்
எங்களுக்கும் அவ்வளவு
முக்கியமானது…ஆனால்
பொழுதுகள் மட்டும் நகராது…

இருப்பினும்
நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டே
கயிற்றுக்கட்டிலில்
கவிழ்ந்து விடுவோம்.

எங்கள் செவளை மாடும்
கருப்புக்காளையும் மட்டும்
வாயில் எதையோ அசைத்தபடி
மெல்லிய தாளமிட்டுக் கொண்டிருக்கும்.

அண்ணன்களோடு அதிகாலையிலேயே
ஆயத்தமாகிவிடுவோம்….
செவளையையும்; கருப்பனையும்
முல்லை பெரியாற்றில்; களம் இறக்க…

இரண்டு மாடுகளும் மூழ்கி குளிக்கும் அழகு
அவ்வளவு அலாதியானவை,
வேலியில் அமர்ந்திருக்கும்
வண்ணத்துபூச்சிகளும்
வேடிக்கை பார்த்து மகிழும்.

குளித்து முடித்த
அதன் கூரிய கொம்புகளில்
வர்ணம் பூசி,
குங்குமமும், சந்தனமும்
உடல் முழுவதும் தடவி…..

எங்கள் காளைகளின் நெற்றியில்,
மின்மினிபூச்சி பிடித்து பொட்டிட்டு…
அழகு பார்த்த தருணங்கள்
அவ்வளவு சுகமானவை.

மஞ்சள் கிழங்கு
கரும்பு… கருப்பட்டி….
கை முழுக்க திண்பண்டங்கள்….. என்று
கால்கள் முளைத்த திருவிழாவாய்
அப்பா வந்து நிற்பார்.

அம்மா வைத்திறக்கிய
பொங்கலை ஆவிபறக்க
வாழை இலையில் எடுத்து,
ஊதி…… ஊதி எங்கள் காளைகளுக்கு
ஊட்டி மகிழ்ந்த
அந்த டவுசர் காலங்கள்தான்
எவ்வளவு டக்கரானவை.

பருத்திப்பால்,
புண்ணாக்கு, தவிடு அத்தனையும்
கலந்து தயாராய்
தாழியில் வைத்திருப்போம்.
உழுது திரும்பும் – எங்கள்
காளைகளின் பசியமர்த்த,

கருப்பனும், செவளையும்
ஒரே தாழியில் உறிஞ்சிக் குடிக்கும்.
அந்த  ஒற்றுமை கண்டு
வீட்டிற்கு வரும் சுற்றத்தார்
‘கண்ணு’ வைத்து விடுவதாய்
அக்கா அடிக்கடி கூறுவாள்.

அந்த ஆசாரி திறமையானவர்தான்
இருப்பினும்
காளைகளின் கால்களில்
கயிறுகட்டி லாடம் போடும்போது,
குலதெய்வம் ஒன்று விடாமல்
வேண்டிக் கொள்வோம்…

காளைகளுக்கு சிறு சிராய்ப்பும்
ஏற்பட்டு விடக்கூடாதென்று.

இப்படியாக….
எங்கள் வாழ்வின் ‘செம்மை’
வறுமை என்று கோடிட்ட இடம்
அத்தனையும்
உழவாலும், மாடுகளாலும்,
நிரப்பப்பட்ட அடர்த்திகளே அதிகம்.

இங்கே…
எவ்விதத்திலும் மாட்டோடு
தொடர்பற்ற நீங்கள்
உங்களின் புராணக் குப்பைகளை
மூலதனமாக்கி எங்களுக்கு

மாடுகளின் ’புனிதம்’ குறித்தும்
மாடுகளின்  மகத்துவம் குறித்தும்
வகுப்பு எடுப்பதைத்தான்
வேடிக்கையுடனும்­
வெறுப்புடனும் கடக்க வேண்டியதாகிறது…

இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள்
எங்கள் மீது கட்டவிழ்த்துவிடும்
உங்களின் மாட்டரசியலை..

நாங்கள் வகுப்பெடுத்தால் – நீங்கள்
உங்கள்  இரண்டு  செவிப்பறைகளையும்
இழக்க நேரிடும்..

ஏனெனில், எங்கள் கரங்கள் …
மாடுகள் பிடித்து இறுகிப்போனவை.

முகிலன்

புழுவல்ல தொழிலாளி வர்க்கம், கோடிக்கால் பூதம் – ஆர்ப்பாட்டங்கள் !

0

“தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தாதே! தீவிரமாகிறது, கூலி அடிமைமுறை! தொழிலாளிவர்க்கம் புழுவல்ல, கோடிக்கால் பூதம் என்பதை நிலைநாட்டுவோம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

ஓசூரில்…

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக 11.11. 2017 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் ஒசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகே எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். இறுதியாக, கமாஸ்வெக்ட்ரா கம்பெனியின் கிளைச் சங்கத்தலைவர் தோழர் செந்தில் நன்றியுரையாற்றினார்.

தோழர் பரசுராமன் தனது கண்டன உரையில், “தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவது என்பது காங்கிரஸ் ஆட்சியிலே துவக்கப்பட்டாலும் அதனை இப்போது பி.ஜே.பி மோடி அரசு வெறிகொண்டு அமுல்படுத்த துடிக்கிறது.

குறிப்பாக, தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தையும், அதாவது 44 வகையிலான தொழிலாளர் நலச் சட்டங்களையும் விதிமுறை தொகுப்புச் சட்டங்களாக மாற்றுவதன்மூலம் முதலாளிகளுக்கு பெயரளவில் இருந்த நிர்பந்தம்கூட இல்லாமல் ஆக்கிவிடுகிறது.

கார்ப்பரேட் முதலாளிகள் இந்த நாட்டின் இயற்கைவளம், கனிமவளம், ஆகியவற்றை வரம்பின்றி கொள்ளையிடுவதற்கும். கிராமப்புற விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்திக் கொள்வதற்கும். அதன்மூலம் அவர்களை ஏதுமற்ற அநாதைகளாக்கி நகரத்தை நோக்கி கூலி அடிமைகளாக விரட்டி, அவர்களை மீண்டும் கார்ப்பரேட்கள் தம் நிறுவனங்களில் சொற்பகூலிக்கு காண்ட்ராக்ட் முறையில் அமர்த்தி ஒட்டச் சுரண்டுகிறார்கள்.

நிலைமை இவ்வாறு இருக்க, இதுவரை மேற்கண்ட சட்டங்கள் தொழிலாளிகளுக்கு ஓரளவிற்கான பாதுகாப்பை தந்தன. இனிஅந்த குறைந்தபட்ச வாய்ப்புகளும் இல்லாது போய் கொத்தடிமைகளாக வாழும் நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்படுவார்கள்.

மேலும், இந்த அரசமைப்பு முழுவதும் கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு அடியாள்வேலை செய்து கொண்டே போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதை தனது வேலையாக கொண்டிருக்கிறது. எனவே, மக்களுக்கு எதிராகிப் போய்விட்ட இந்த அரசுக்கட்டமைப்புக்கு வெளியே மக்கள் அதிகாரத்துக்கான போராட்டத்தைக் கட்டியமைக்கவேண்டும். அந்தவகையில் போராடும் பிற அனைத்துப் பிரிவு மக்களோடும் இணைந்து அவர்களுக்கு தலைமை தாங்கி தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் வரலாற்றுக் கடமையாற்ற முன்வரவேண்டும்” என பேசி தனது உரையை நிறைவு செய்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஓசூர், தொடர்புக்கு: 97880 11784.

***

காஞ்சிபுரத்தில்…

காஞ்சிபுரம் பெரியார் சிலை அருகில் 11.11.2017 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தோழர் சிவா கண்டன உரையாற்றினார்.

தோழர் சிவா அவர்கள் தனது கண்டன உரையில், “மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையின் தொடர்ச்சியாக இதுவரை பெயரளவிற்கான பாதுகாப்பையாவது வழங்கிவந்த, தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதாவது தொழிலாளர் நலச்சட்டங்களை விதிமுறைத் தொகுப்புச்சட்டங்களாக மாற்ற முனைகிறது மோடி அரசு. இது தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக மாறும் நிலையை நோக்கி நெட்டித்தள்ளுகிறது. தொழிலாளிகளின் உரிமைகளை பறிக்க நினைக்கும் இந்த அரசுக் கட்டமைப்பை தகர்த்து மக்கள் அதிகாரத்தை நிலைநாட்ட நாம் அனைவரும் போராடவேண்டியுள்ளது” என தனது உரையை நிறைவு செய்தார்.

ஆர்ப்பாட்டத்தின் இடையே விண்ணதிரும் முழக்கங்கள் முழங்கப்பட்டன. இதில் திரளான தோழர்கள் மற்றும் தொழிலாளிகள் கலந்துகொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம். தொடர்புக்கு : 88075 32859.

***

திருச்சியில்…

முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!
தீவிரமடைகிறது கூலி அடிமைமுறை! தொழிலாளி வர்க்கம் புழுவல்ல, கோடிக்கால் பூதம் என்பதை நிலைநாட்டுவோம்!

  • உயிர்த் தியாகத்தால் எழுதப்பட்ட உரிமைகள் ஒழிக்கப்படுவதை முறியடிப்போம்!
  • மக்கள் எதிரியான அரசுக் கட்டமைப்பை அடித்து நொறுக்குவோம்!
  • புரட்சிகர அரசியலை ஏந்தி மக்கள் அதிகாரம் படைப்போம்!

என்ற முழக்கத்தை முன் வைத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. அதனடிப்படையில் திருச்சி BHEL Ph-II –வில் 11.11.2017 மாலை 4 மணிக்கு வாயிற்கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தை பு.ஜ.தொ.முவின் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் தோழர் சுந்தரராசு தலைமை தாங்கி நடத்தினார். முதல் நிகழ்வாக தொழிலாளர்கள் மீதான முதலாளித்துவ அடக்குமுறையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பிறகு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் தோழர் கோவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும் போது “இன்றைய உலக முதலாளித்துவம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்திய முதலாளிகளும் சிக்கியுள்ளனர். அவர்களின் இலாப வெறிக்கு தொழிலாளர்கள் மீது வேலை பறிப்பு, காண்ட்ராக்ட்மயம்  போன்றவற்றை அமுல்படுத்தி நவீன கொத்தடிமையாக மாற்ற முயற்சிக்கிறார்கள். அதற்கேற்ப போராடி பெற்ற தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துகிறார்கள். இந்த அபாயத்திலிருந்து மீள தொழிலாளி வர்க்கம் ஒன்றினைந்து போராட முன் வரவேண்டும்.” என்று பேசினார்.

இறுதியாக பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் உதவி செயலாளர் தோழர் சுரேஷ் நன்றியுரையாற்றினார். இக்கூட்டத்தினை 100 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நின்று கவனித்து ஆதரவு கொடுத்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன்,
இணைப்பு பு.ஜ.தொ.மு, திருச்சி.

***

புதுச்சேரியில்…

முதலாளிகள் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக கந்து வட்டி கொள்ளைக்காரனான உலக வங்கி பாராட்டியுள்ளது. அதிலும் ஒரே ஆண்டில் 30 இடங்களுக்கு முன்னேறி உள்ளதை மோடியின் சாதனையாகச் சொல்லியுள்ளது. தமிழகத்திலும், நகர மற்றும் ஊரக திட்டமிடல், மாசுக் கட்டுப்பாடு, தீயணைப்பு, தொழிலாளர் மற்றும் தொழிலக பாதுகாப்பு உள்ளிட்ட 11 துறைகள் மூலம் 37 சேவைகளை மனிதத் தொடர்பின்றி இணைய வழி மூலம் பெறுவதற்கான ஒற்றைச் சாளர தகவை (சிங்கிள் விண்டோ போர்டல்) அறிமுகம் செய்துள்ளது மோடியின் அடிமை எடப்பாடி அரசு.

இப்படி முதலாளிகள் தொழில் தொடங்கி முதலீட்டை அதிகரித்தாலே வேலை வாய்ப்புகள் பெருகி விடும். ஆனால், நாட்டின் எல்லா வளங்களையும் அள்ளிக் கொடுத்தாலும், உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாய்மூடி வேலை செய்வதில்லை. பணிப்பாதுகாப்பு, ஊதிய உயர்வு என உரிமைகளைக் கேட்டு முதலீடுகள் வருவதைத் தடுக்கின்றனர் என்பது தான் மோடியின் வருத்தம்.

எனவே, தொழில் முதலீடுகள் அதிகரித்து வேலை வாய்ப்புகள் பெருகி, தேனும், பாலும் ஓட வேண்டும் என்றால், முதலாளிகள் கொழுக்க வேண்டும், தொழிலாளர்கள் அடிமையாக அவர்களின் காலில் விழுந்து கிடக்க வேண்டும் அப்போது தான் நாடு வளர்ச்சி அடைந்து வல்லரசாகும். இதுதான் மோடியின் மந்திரம்.

தொழிலாளர்களுக்கென 44 நலச் சட்டங்கள் இருந்தும் அவை நடைமுறையில் காலாவதியாகிக் கிடக்கிற நிலையில். அது காகிதத்தில் கூட இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு பாய்கிறது மோடி கும்பல். தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவதன் மூலம் அதை ஒழிக்கும் வேலையை காங்கிரசு ஆரம்பித்தது.

ஆனால், சட்டத்தைத் திருத்திய பிறகும், இருக்கும் சட்டத்தை வைத்துக் கொண்டு தொழிலாளர்கள் ஏதும் முணுமுணுக்கக் கூடாது என்பதற்காக, மூக்கைச் சுற்றித் தலையைத் தொடும் வேலையை விட, ஸ்ட்ரைட்டாக, விதிகளாக மாற்றுவதன் மூலம், ஒட்டு மொத்தமாக ஒழித்துக் கட்டி விடலாம் என்பது தான் மோடியின் ‘வளர்ச்சி’ பார்முலா.

நிரந்தரமான வேலை, 8 மணி நேர வேலை, வார விடுமுறை என அனைத்தையும் பறிப்பது, லே ஆஃப், ஆட்குறைப்பு, கதவடைப்பு விதிமுறைகளைத் திருத்துவது, அனைத்திலும் ஒப்பந்த வேலை, வரம்பில்லா ஓவர் டைம், ஷாப்பிங் மால்கள், கடைகளில் இரவிலும் வேலை, ஊதிய உயர்வு, உரிமை என்பனவற்றில் உள்ள கட்டுப்பாடுகளை ஒழிப்பது என அனைத்து நிலையிலும் பல்வேறு தாக்குதல்களை தொடுக்கக் காத்திருக்கின்றன சட்ட மசோதாக்கள்.

எனவே இருக்கின்ற காகித உரிமைகளைக்கூடப் பறித்து, நம்மை கொத்தடிமையிலும் கீழான அடிமைகளாக மாற்றுவதை ஏற்க மறுக்க வேண்டும். இதற்கு பெயரளவிலான போராட்ட வடிவங்களோ, அரசை நம்புவதோ பலன் தராது என்பது தான் அனுபவங்கள் நமக்கு கற்றுக் கொடுத்த பாடம். ஏனெனில், இந்த அரசமைப்பில் இருக்கும் தொழிலாளர் துறை தான் சட்டம் இருக்கும் போதே தொழிலாளர்கள் மீது அடக்குமுறை செலுத்துவதற்கு முதலாளிகளை உடனிருந்து இயக்குகிறது.

தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் எதிரியாகவும், அவர்கள் மீது அடக்குமுறை செலுத்துவதற்காக அடியாள் வேலை செய்யும் அரசுக் கட்டமைப்பை தகர்த்து, தொழிலாளர்கள், உழைக்கும் மக்களுக்கான அதிகாரத்தைப் படைக்கும் வர்க்கப் போரில் களமிறங்குவதும், அதற்கு ஆயுதமாக புரட்சிகர அரசியலை ஏந்தும் போதுதான் தொழிலாளர்கள் மீது முதலாளித்துவம் திணித்து வைத்திருக்கும் கூலி அடிமை முறையை ஒழித்துக் கட்ட முடியும்.

இதனை முன்வைத்து, “தீவிரமடைகிறது கூலி அடிமைமுறை! தொழிலாளி வர்க்கம் புழுவல்ல; கோடிக்கால் பூதம் என்பதை நிலைநாட்டுவோம்!” என்ற முழக்கத்தினடிப்படையில் கடந்த 11.11.2017 அன்று காலை 10.00 மணிக்கு புதுச்சேரி கவர்னர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

முற்றுகைப் போராட்டத்தை அறிவிக்கும் விதமாக நகரத்தில் சுவரொட்டி ஒட்டியதைப் பார்த்து காலையில் இருந்தே போன் மேல் போன் செய்து, கவர்னரின் செயலாளர் முதல் ஏரியா இன்ஸ்பெக்டர் வரை போராட்டத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினர்.

காலை 11.00 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு 100 மீட்டர் தூரத்தில் உள்ள தெருக்களில் இரு பிரிவுகளாக ஊர்வலமாக வந்து முற்றுகை நடத்தப்பட்டது. முற்றுகை துவங்கிய சில நிமிடங்களிலேயே மிரட்டும் வகையில் போலிசு சுற்றி வளைத்தது. முழக்கங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. ஒரு கட்டத்தில் கேனப்பய மோடியின் கேழ்வரகு மந்திரத்தை முழக்கமாகப் போட்டவுடன் தோழர்களை கைது ஆக வற்புறுத்தி இழுக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் கைது செய்து வண்டியில் ஏற்றி மதிய வேளையில் விடுவித்தது. இப்போராட்டம் தொழிலாளர் மத்தியில் போராட்டத்தின் ஒரு படியை முன்னேற்றும் வகையில் அமைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடர்புக்கு: 9597789801


புதுவை, திருச்சி நவம்பர் புரட்சிவிழா கொண்டாட்டங்கள் !

0

வம்பர் -7 ரஷ்ய சோசலிச புரட்சியின் 100-ம் ஆண்டு, பாட்டாளி வர்க்க ஆசான் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் 150-ம் ஆண்டை முன்னிட்டு திருச்சி காந்திபுரம் பகுதியில் ம.க.இ.க சார்பில் கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

ரஷ்ய புரட்சி தினத்தை பறைசாற்றும் வகையில் முதல் நாள் இரவே சிவப்பு தோரணங்களாலும், வண்ண விளக்குகளாலும் தெருக்கள் அலங்கரிக்கப்பட்டன. காலை 9 மணிக்கு கொடியேற்றும் விழாவிற்கு தோழர் சரவணன் தலைமை தாங்கினார். செயலர் தோழர் ஜீவா கொடியேற்றினார். கொடியேற்றும்போதும், பேசும்போதும் மக்கள் நின்று கவனித்துவிட்டு சென்றனர்.

காந்திபுரம் பகுதியில் உள்ள மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை காண முடிந்தது. இன்றைக்கு நடக்கின்ற அரசியல் சூழ்நிலைகளை பார்ப்பதிலிருந்து நிச்சயமாக மாற்றம் நடக்கும் என்பதை ஆமோதித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் கொடுக்கப்பட்டது.

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக காலை 11 மணியளவில் குறத்தெரு பகுதியில் தெருமுனை கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு பொதுக்கூட்டம் போல ஏற்பாடு செய்யப்பட்டது. சாலைகள் சிவப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டன. மாமேதை லெனினின் உருவப்படம் 10 அடி உயரத்தில் வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ம.க.இ.க-வின் மாவட்ட செயலர் தோழர் ஜீவா தலைமை தாங்கினார். பு.ஜ.தொ.மு தோழர் சுந்தரராஜ் வாழ்த்துரை வழங்கினார். பு.மா.இ.மு தோழர் பிரித்திவ் இன்றுள்ள கல்வியின் அவலத்தை பற்றி பேசினார். சுமைப்பணி சிறப்பு தலைவர் தோழர் ராஜா சோவியத் அரசின் சாதனைகள் குறித்தும், இன்று ஊடகங்கள் தவிக்க முடியாமல் ரஷிய புரட்சி குறித்து எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ளதையும் விளக்கி பேசினார்.

தோழர் கோவன் மூலதனத்தின் அழிவு அதற்குள்ளேயே உள்ளது. அது அழிந்தே தீரும் என்றும், முதலாளித்துவ அராஜக உற்பத்தியால் தேக்கம், வீக்கம் அதிகரித்து அது தனக்குத்தானே சவக்குழி தோண்டிக்கொள்கிறது என்றும் விஞ்ஞான பூர்வமான கண்ணோட்டத்தில் ஆசான் மார்கஸ் உலகுக்கு விளக்கியுள்ளார். அன்று கம்யூனிசம் அழிந்துவிட்டது என்று ஊளையிட்ட முதலாளித்துவவாதிகள் இன்று தங்கள் எதிகாலத்தை பற்றி தெரிந்துகொள்ள மூலதனம் நூலையே புரட்டுகிறார்கள்.

இன்று வேலையிழப்பு, பட்டினிச் சாவுகள், கழுத்தருப்புகள், துரோகங்கள்,  இவையனைத்தும் தவிர்க்க முடியாமல் உள்ளன. இதற்கு ஒரே மாற்று புரட்சி! உலகில் ஆறில் ஒரு பங்கு நிலப்பரப்பை சோவியத் அரசு ஆண்டது. அதை இங்கும் நடத்துவோம் என்று பேசினார்.

ம.க.இ.க தோழர்கள் GST அம்பலப்படுத்தியும், மோடியின் ‘வளர்ச்சி’ குறித்தும், உலகத்திற்கு மாற்று கம்யூனிசமே என உணர்ச்சிப்பூர்வமாக பாடல்களை பாடினார்கள். வியபாரிகள், பொதுமக்கள் மக்கள் அனைவரையும், இக்கூட்டம் ஈர்த்தது.  இறுதியில் நன்றியுரை தோழர் சரவணன் தெரிவத்தார். இனிப்புகள் மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

***

“கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் 150 -ஆம் ஆண்டு! லெனின் தலைமையிலான ரசியப் புரட்சியின் 100 -ஆம் ஆண்டு நிறைவு!” இந்நாளில் உழைக்கும் வர்க்கம், தனது அரசியல் அதிகாரத்தை நிலைநாட்ட ஒன்றுபட்ட போராட்டங்களும் எழுச்சியும் தான் தீர்வு என்பதை தொழிலாளி வர்க்கத்திற்கு உணர்த்தும் வகையில் புதுச்சேரியின் தொழிற்பேட்டை நகரமான திருபுவனையில் கொண்டாடப்பட்டது. நவம்பர் 07 -ம் தேதியன்று பகல் 01.00 மணியளவில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அலுவலக வாயிலில் புஜதொமு தலைவர் தோழர் சரவணன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து, தொழிலாளர்களுக்கு பிரசுரம் கொடுத்து விளக்கிப் பேசி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

“மார்க்ஸின் மூலதனம் எழுதப்பட்டு 150 ஆண்டுகளுக்குப் பின்னரும், லெனினின் தலைமையிலான ரசியப் புரட்சியின் நூறாண்டுகளுக்குப் பின்னரும், இன்றும் அதன் தேவை உள்ளது. அதன் தேவைகளையும் அவசியத்தையும் இன்றைய தொழிலாளி வர்க்கம் உணர ஆரம்பித்திருக்கிறது.

முதலாளித்துவம் தீராத நெருக்கடியில் சிக்கி, அது தன்னைக் காப்பாற்றி கொள்ள வட்டி விகிதத்தை மாற்றுவது, வரி விதிப்பு, செலவு குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் உழைக்கும் மக்கள் மீது கொடுந்தாக்குதல்களை தொடுத்து வருகிறது. “எதைத் தின்றால் பித்தம் தீரும்”  என்ற நிலையில் உள்ளது.

வெவ்வேறு பெயர்களில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், நெருக்கடிகள் மேலும் முற்றுகிறதே ஒழிய தீரவில்லை. இதன் பின்னணியில் தான் மோடியின் கருப்புப் பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, முதலாளிகளின் கடன் தள்ளுபடி, ரேசன் கேஸ் மானிய வெட்டு, தொழிலாளர் சட்டத் திருத்தம் போன்றவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு புறம் ஊதிய வெட்டு, ஆட்குறைப்பு ஆகியவற்றால் வாழ்விழந்த மக்கள், மறுபுறம் முதலாளிகளின் எகிறும் லாபவிகிதங்கள் என்ற இடைவெளி பெருகிக் கொண்டே போகிறது. வீடில்லா மக்கள் ஒருபுறம், மக்களில்லா வீடுகள் ஒரு புறமும் காட்சி தருகின்றன.

இந்த முற்றி வரும் நெருக்கடிகளைத் தீர்க்க வழி தெரியாமல், முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களே மார்க்ஸின் மூலதனத்தைத் தேடும் நிலைக்கு வந்து விட்டனர். இன்றைய இளம் தொழிலாளர்களால் அதிகம் தேடப்படும் நூலாக மாறி இருக்கிறது மூலதனம். உலகில் மிகவும் அறியப்படும் நபராக ஆசான் கார்ல் மார்க்ஸ் இருக்கிறார் என்பதை ஐரோப்பிய ஆய்வுகள் சொல்கின்றன.

சமூக மயமான உழைப்பு, தனிநபர் சுவீகரிப்பு என்பது தான் முதலாளித்துவப் பொருளாதாரம். அதாவது, பொருளுற்பத்திக்கான உழைப்பில் மக்கள் கூட்டாக ஈடுபடுகின்றனர். ஆனால், அதனால் வரும் பெரும் லாபம் முதலாளிகள் என்ற தனிநபர் அபகரித்துக் கொள்கின்றனர். இந்த லாபம் வளர்ந்து கொண்டே போகும் போது தான் முதலாளித்துவம் உயிரோடு இருக்கும்.

இந்த லாப வளர்ச்சிக்கு, உற்பத்திப் பெருக்கம், ஆட்குறைப்பு, ஊதிய வெட்டு என்பது நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். உற்பத்தியில் நவீனமயம் புகுத்துவதன் மூலம், உற்பத்திப் பெருக்கமும், ஆட்குறைப்பும் நடைபெறுகிறது. விலையேற்றத்தாலும், உற்பத்திப் பெருக்கத்திற்கேற்ற ஊதிய உயர்வு  தராமலும் ஊதிய வெட்டை மறைமுகமாக கைக்கொள்கின்றனர் முதலாளிகள்.

இதன் விளைவாக முதலாளிகளின் பெருகும் உற்பத்தியை, வேலை இழப்பு, ஊதிய வெட்டு போன்றவைகளின் காரணமாக மக்கள் வாங்கும் சக்தியற்றவர்களாக மாறுகின்றனர். இந்த இடைவெளி பெருகிக் கொண்டே போகிறது. அதனால், தான் செய்த உற்பத்தியை எப்படியாவது மக்கள் தலையில் கட்டி விட வேண்டும் என்பதற்காக கடன் வசதி, தவணை வசதி போன்ற முறைகளை கையாள்கிறது. ஆனால், அப்படி செய்த பிறகும், உற்பத்தியில் தேக்கம் நிலவி, முதலாளித்துவம் தீராத நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. முதலாளித்துவம் உயிர் வாழ நெருக்கடிகளை அதிகமாக்கிக் கொண்டே செல்ல வேண்டும் என்பது தான் அதன் பொருளாதார விதியாக உள்ளது.

எனவே, முதலாளித்துவம் ஒழிய வேண்டும் என்பதோ, கம்யூனிசம் வர வேண்டும் என்பதோ, நமது சொந்த விருப்பம் அல்ல. அது காலத்தின் கட்டாயம். ஆனால், அது தானாகவே வந்து விடாது. மக்கள் அதை தங்களது சுய விருப்பமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

தீராத நெருக்கடியில் சிக்கி அழுகி நாறும் இந்த முதலாளித்துவ கட்டமைப்பை, ஒழிப்பதற்கும், கூலி அடிமைகளாக உழலும் மக்கள், அந்த கூலி அடிமைத் தனத்திலிருந்து விடுபடுவதற்கும் தனித்தனி போராட்டங்கள் பயன்தராது.”

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடர்புக்கு: 95977 89801


மூலதனத்தின் தத்துவஞானம் !

0

மூலதனத்தின் தத்துவஞானம்!

முன்னுரை:

மார்க்ஸின் மூலதனம் ஒரு பொருளாதார ஆய்வு நூலா, வரலாற்று ஆய்வா, தத்துவஞானமா அல்லது இவை அனைத்துமா? மற்ற தத்துவஞானங்களின் ஆய்வு முறையிலிருந்து மார்க்சியம் எப்படி வேறுபடுகிறது, ஏன் வேறுபடுகிறது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை. ஹென்றி வோல்கவ் எழுதிய “மார்க்ஸ் பிறந்தார்” எனும் நூலில் (முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ) மூலதனத்தின் தத்துவஞானம் என்ற அத்தியாயத்திலிருந்து சில பகுதிகளை மட்டும் தருகிறோம்.

***

மார்க்ஸ் தனக்குப் பின்னால் ஒரு தர்க்கவியலை விட்டுச் செல்லவில்லை என்றாலும் அவர் மூலதனத்தின் தர்க்கவியலை விட்டுச் சென்றிருக்கிறார்… மார்க்ஸ் மூலதனத்தில் ஒரே விஞ்ஞானத்துக்குத் தர்க்கவியலை, இயக்கவியலை மற்றும் ஹெகலிடம் மதிப்புள்ளதாக இருந்த ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு, அதை மேலும் வளர்த்துச் சென்ற பொருள்முதல்வாதத்தின் அறிவுத் தத்துவத்தைக் (மூன்று சொற்கள் அவசியமல்ல, அது ஒரே பொருள் குறித்ததே) கையாண்டார்.

– வி.இ. லெனின்

மூலதனத்தின் தத்துவஞானம் என்ற தலைப்பு விசித்திரமான சொற்றொடராகத் தோன்றலாம். மூலதனம் முதலாளித்துவச் சமூகத்தில் பொருளாதார உறவுகளைப் பற்றிய ஆராய்ச்சி என்பது நமக்குத் தெரியும். சில மேற்கத்திய அறிஞர்கள் மூலதனத்தில் எந்தத் தத்துவஞானமும் இல்லை, மார்க்சும் ஒரு தத்துவஞானி அல்ல என்று மறுப்புரைக்கிறார்கள்.

ஒரு தத்துவஞானி என்பவர் தன்னுடைய சொந்தக் கருத்துக்களின் அமைப்பு குறித்து விசேஷமான தத்துவஞான நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள். மார்க்ஸ் அப்படிப்பட்ட புத்தகங்களை எழுதவில்லை. அவர் எந்தவொரு இடத்திலும் தத்துவஞானக் கோட்பாட்டை விசேஷமாக விளக்கவில்லை. எனினும், அவரே தலைசிறந்த தத்துவஞானியாக இருக்கிறார்.

மார்க்சின் தத்துவஞானம் – இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் – அவர் எழுதிய எல்லா நூல்களிலும் விளக்கப்படுகிறது. அத்தத்துவஞானத்தை அறிந்து கொள்வதற்கு மார்க்ஸ் எழுதிய எந்த நூலைப் படிக்க வேண்டும் என்று கேட்டால், அவருடைய வாழ்க்கையின் முக்கியமான சாதனையாகிய மூலதனத்தைப் படியுங்கள் என்பதே சரியான பதிலாகும்.

சென்ற நூற்றாண்டின் கடைசியில் ருஷ்ய மிதவாதப் பிரமுகரும் சமூகவியலாளருமான நி.மிஹயிலோவ்ஸ்கிக்கு லெனின் தந்த பதில் இதுவே. மிஹயிலோவ்ஸ்கி மார்க்சியத்தை மறுத்து எழுதிய கட்டுரைகளில் ஒன்றில் இக்கேள்வியைக் கேட்டிருந்தார்: மார்க்ஸ் தன்னுடைய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை எந்த நூலில் எடுத்துக் கூறியிருக்கிறார்?

இக்கேள்விக்கு அவரே உடனடியாகக் கண்டுபிடிப்பவரின் சுயதிருப்தியோடு, அப்படி எந்த நூலையும் மார்க்ஸ் எழுதவில்லை, மார்க்சிய இலக்கியம் முழுவதிலுமே அப்படி எந்த நூலும் இல்லை என்று பதிலளித்தார்.

மார்க்ஸ் தன்னுடைய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை விளக்கிக் கூறாத நூல் ஒன்றுண்டா? என்று லெனின் மிகச் சரியாக மறுப்புத் தெரிவித்தார். மார்க்ஸ் தனக்கு முந்திய சமூகவியலிலிருந்து, அதாவது சமூகத்தைப் பற்றிய போதனைகள் மற்றும் தத்துவங்களிலிருந்து அடிப்படையாகவே வித்தியாசமான ஒன்றைப் படைத்த காரணத்தினால், முதலாளித்துவச் சிந்தனையாளர்கள் மார்க்சிடம் சமூக வளர்ச்சி பற்றிய தத்துவஞானத்தைக் காணத் தவறுகிறார்கள் என்று லெனின் எடுத்துக் காட்டினார்.

அக்காலத்திய முதலாளித்துவ அறிவுஜீவிகளின் வட்டாரங்களில் கௌரவம் நிறைந்த, மரியாதைக்குரிய சமூகவியலாளர் என்பவர், பொதுவாக சமூகம் என்றால் என்ன, அதன் நோக்கமும் சாரமும் எவை, மனித இயல்புக்குப் பொருந்துகின்ற சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பனவற்றைப் போன்ற கருத்தாழமிக்க பிரச்சினைகளை விவாதித்திருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.

இச்சமூகவியலாளர்கள் இன்றைய அமைப்பு இயற்கைக்கு முரணானது, ‘மனித இயல்புக்கும்’ நீதிக் கோட்பாடுகளுக்கும் பொருந்தாமலிருக்கிறது என்ற உண்மையைப் பற்றித் தங்களது மனப்பூர்வமான ஆத்திரத்தை வெளியிட்டு, தார்மீக செல்வாக்கைப் பெற்று, அநேகமாகப் புரட்சிக்காரர்களாகக் கூடத் தோன்றியிருக்கலாம்.

மார்க்சுக்கு முந்திய சமூகவியலாளர்கள் சமூகத்தின் நிகழ்வுப் போக்குகளை ஆழமாகப் பார்க்கத் தவறியதுடன் அவற்றை அந்தக் கணத்தில் நடைபெறும் சம்பவங்களின் ஒளியில் பார்த்தார்கள். சமூக உலகம் அரசர்கள், சக்கரவர்த்திகளின் முடிவுகளினால் இயக்கப்படுகிறது, சம்பவங்களின் வளர்ச்சி அவர்களுடைய சித்தத்தையும் பொதுமக்களிடம் தாக்கம் செலுத்திய சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் முற்றிலும் சார்ந்திருக்கிறது என்று நினைத்தார்கள்.

இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டால், வரலாறு என்பது வலிமைமிக்க தலைவர்களின் உணர்ச்சிகளின் போராட்டத்தைச் சார்ந்திருக்கின்ற சம்பவங்கள், நிகழ்வுப் போக்குகள் மற்றும் மெய்விவரங்களின் கதம்பக் குவியலாகத் தோன்றும்; இக்கதம்பக் குவியலில் முக்கியமான நிகழ்வுகளை முக்கியத்துவமில்லாத நிகழ்வுகளிலிருந்து, அதிகச் சிறப்பானவற்றை குறைவான சிறப்புடையவற்றிலிருந்து ஒருவர் வேறுபடுத்திப் பார்க்க முடியாது; இதில் எவ்விதமான விதிகளையும் பார்க்க முடியாது, சமூக வளர்ச்சிக்குப் பின்னே இருக்கின்ற பொறியமைவைப் புரிந்து கொள்ள முடியாது, அல்லது அவற்றின் மீது தாக்கம் செலுத்துவது எப்படி என்பதையும் அறிய முடியாது.

இவையனைத்தும் சமூகவியலில் அகநிலைவாதம், கருத்துமுதல்வாதம். பண்டைக்காலத் தத்துவஞானத்தில் இயற்கையைப் பற்றிய கருத்துக்களில் கருத்துமுதல்வாதம் தொடங்கிய வினாடியிலிருந்தே தீவிரமான எதிர்ப்பு (அதாவது பொருள்முதல்வாதிகள்) இருந்தது என்றால், சமூகத்தைப் பற்றிய கருத்துக்களில் கருத்து முதல்வாதம், மார்க்ஸ் காலம் வரையிலும் ஆட்சி செலுத்தியது.

மார்க்ஸ்தான் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பொருள்முதல்வாதக் கருத்தை முதலில் கையாண்டவர். இது அவருடைய மேதாவிலாசத்தைக் காட்டுகிறது என்றார் லெனின். உணர்ச்சிகளும் கருத்துக்களும் நலன்களும் காரணமல்ல, அவை விளைவே. மனித உணர்விலிருந்து தனித்திருக்கின்ற மிகவும் ஆழமான காரணத்தின் விளைவு என்று மார்க்ஸ் கண்டார்.

எந்த ஒரு மனிதனுடைய ஏதாவதொரு கருத்து அல்லது நோக்கம், அவனுடைய சமூக வாழ்க்கையினால், சமூகத்தில் அவனுடைய நிலைமையினால் நிர்ணயிக்கப்படுகிறது. கருத்துக்கள் முதிர்ச்சியடைந்த சமூகத் தேவைகளைச் சந்திக்க முடியுமானால், அவை சமூகத்தின் பெரும்பான்மையினரது நலன்களை, முதலாவதாகவும் முதன்மையாகவும் பொருளாயத நலன்களை வெளியிட முடியுமானால், அவை பெருந்திரளான மக்களை ஆட்கொண்டால், அப்பொழுது அவை சமூக வளர்ச்சியில் தாக்கம் செலுத்த முடியும்.

பிரெஞ்சு ஜனநாயகப் புரட்சியால் தூக்கியெறியப்பட்ட பிரெஞ்சு சக்கரவர்த்தி பதினாறாம் லூயி.

உதாரணமாக, பிரெஞ்சு முடியாட்சி 18-ஆம் நூற்றாண்டின் கடைசியில் வீழ்ச்சியடைந்தது ஏன்? பதினாறாம் லூயி இந்த அல்லது அந்தத் தவறைச் செய்தது (அதுவும் கூட முக்கியமாக இருந்தபோதிலும்) அதற்குக் காரணமல்ல; எதேச்சாதிகார ஆட்சியும் நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளும் நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தன, முதலாளித்துவம் மற்றும் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த முதலாளி வர்க்கத்தின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தன, அந்த வர்க்கம் ஏற்கெனவே பொருளாதார சக்தியைக் கொண்டிருந்தது, ஆனால் அரசியல் அதிகாரம் இல்லாமலிருந்தது என்பவை அதற்குக் காரணமாகும்.

மனித உணர்விலிருந்து சுதந்திரமான முறையில் வளர்ச்சியடைகின்ற சமூக உறவுகள் கடைசியில் அவ்வக்காலத்திய சித்தாந்த, அரசியல், சட்டவியல் அமைப்புகளை நிர்ணயிக்கின்றன. பொதுவாகப் பார்க்குங்கால், கருத்துக்களின் வளர்ச்சி, சமூக – பொருளாதார நிகழ்வுப் போக்குகளின் வளர்ச்சியைச் சார்ந்திருக்கிறதே தவிர, அதன் எதிர்மறையை அல்ல. அப்படியானால், சமூக உறவுகள் பொருளாயதமானவை, புறநிலையானவை என்பது இதன் பொருளாகும்! மார்க்சுக்கு முந்திய சிந்தனையாளர்கள் அடையத் தவறிய முடிவு இதுவே.

ஆனால், சமூக உறவுகள் மிகவும் பலவிதமாக இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானவை உற்பத்தி நிகழ்வுப் போக்கில் தோன்றுபவை; அவை உற்பத்தி உறவுகள் எனப்படும். அவை முதலாவதாகவும் முதன்மையாகவும் உற்பத்தி செய்பவருக்கும் உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளருக்கும், அதாவது அடிமைக்கும் அடிமை உடைமையாளருக்கும், பண்ணையடிமைக்கும் நிலப்பிரபுத்துவ நிலவுடைமையாளருக்கும், தொழிலாளிக்கும் முதலாளிக்கும் உள்ள உறவுகள்.

இந்த மூன்று உறவுகளும் சுரண்டல் உறவுகளின் வடிவங்கள். இவற்றுக்கு இடையிலுள்ள அடிப்படையான வேறுபாட்டை எளிதில் காண முடியும். ஆகவே உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவு என்ற முறையில் ஒன்று மற்றொன்றாக இயற்கையாக வளர்ச்சியடைந்த மூன்று சமூக-பொருளாதார அமைப்புகளையும் நாம் எடுத்துக் கொள்வோம்.

சமூக வளர்ச்சி இயற்கையான வரலாற்று நிகழ்வுப் போக்கு, அது மனித உணர்விலிருந்து தனித்திருக்கின்ற, ஆனால், அறியப்படக்கூடிய விதிகளுக்கு உட்பட்டிருக்கிறது என்று மார்க்ஸ் கண்டார்.

இக்கருத்துக்கள் அனைத்தையும் மார்க்சிய மூலவர்கள் மிக முந்திய காலமான 1840-கள் மற்றும் 1850-களிலேயே கூறினார்கள். ஆனால், மூலதனத்துக்கு முன்பு இவை விஞ்ஞான ஆதாரத்தைக் கொண்டிருந்தாலும் வெறும் கருதுகோள் என்ற அளவிலேதான் இருந்தன என்று லெனின் கூறினார். மூலதனம் எழுதப்பட்ட பிறகு வரலாற்றுப் பொருள்முதல்வாதம் வெறும் கருதுகோளாக இனியும் இல்லை, அது விஞ்ஞானரீதியில் நிரூபிக்கப்பட்ட உண்மையாயிற்று, சமூகவியல் விஞ்ஞானமாக மாறியது.

மூலதனம் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை உருவாக்குவதிலும் அதை நிறுவுவதிலும் மிக முக்கியமான பாத்திரத்தை வகித்தது ஏன்? ஏனென்றால், மார்க்ஸ் சமூகம் எப்படி அமைக்கப்படுகிறது என்ற ஊக முறையான பொது விவாதங்களுடன் தன்னை நிறுத்திக் கொள்ளவில்லை, அவர் முதலாளித்துவ அமைப்பை உதாரணமாகக் கொண்டு அதன் செயல்முறை மற்றும் வளர்ச்சிப் பொறியமைவை நுணுக்கமாக ஆராய்ச்சி செய்தார்.

ஆகவே, வாசகர் இந்த அமைப்பு முழுவதையும் அதன் உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் என்ற பல்தொகுதியான இயக்கவியல், முதலாளி வர்க்கம் – பாட்டாளி வர்க்கம் என்ற வர்க்கங்களின் முரணியல்பு, தொழிலாளியைச் சுரண்டுவதற்கு முதலாளியின் உரிமையைப் பாதுகாக்கின்ற அரசியல், சட்டவியல் மற்றும் சித்தாந்த அமைப்புகளையும் ஒரு வாழ்கின்ற தொகுதியாகக் காண்கிறார்.

நிலப்பிரபுத்துவம் தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவத்துக்கு வழி விட்டதைப் போலப் பிந்தியதும், அதன் வளர்ச்சியின் புறநிலையான விதிகளின் விளைவாகத் தன்னுடைய சொந்த அழிவை நோக்கி, ஒரு வர்க்கமில்லாத சமூகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை மார்க்ஸ் மறுக்க முடியாத தர்க்கவியலின் மூலம் நிரூபித்தார். ஏகபோக மூலதனம், அதனுடனும் அதன் கீழும் தோன்றியதும் வளர்ச்சியடைந்ததுமான உற்பத்தி முறைக்குத் தளையாக மாறுகிறது. உற்பத்திச் சாதனங்களை ஒருமுனைப்படுத்துவதும் உழைப்பு சமூகமயமாதலும் எந்த அளவுக்கு முனைப்படைகின்றன என்றால், அவை முதலாளித்துவ மேலோட்டுக்கு முற்றிலும் முரணானதாகின்றன. இந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமைக்குச் சாவுமணி அடிக்கப்படுகிறது, உடைமை பறித்தோர் உடைமை பறிக்கப்படுகின்றனர்.

கம்யூனிஸ்டு சமூகம் கனவு காண்பவர்களின் கற்பனாவாத இலட்சியமல்ல, பொருளாதார வாழ்க்கையின் மொத்த இயக்கமுமே அதை நோக்கிச் செலுத்தப்படுகிறது என்பதைச் சந்தேகமில்லாதபடி மார்க்ஸ் விளக்குகிறார். மூலதனம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியலின் வளர்ச்சியை, எல்லா உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைக் கட்டுப்பாடில்லாமல் துரிதப்படுத்துவதன் மூலம் ஒரு புதிய சமூகத்தின், ஒரு புதிய சமூக-பொருளாதார அமைப்பின் பொருளாயத முன்நிபந்தனைகளைத் தயாரிக்கிறது.

மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையினரைச் சுரண்டப்படுகின்ற கூலித் தொழிலாளர்களாக மாற்றி, பெரிய தொழிற்சாலைகளில் வேலை செய்கின்ற தொழிலாளர்களை ஒன்றுசேர்த்து, பழைய சமூகத்தின் அடிமை விலங்குகளை நொறுக்கக் கூடிய, அதைப் புனரமைப்பதைத் தொடங்கக் கூடிய புரட்சிகர சக்தியை மூலதனம் தயாரிக்கிறது.

ஜெர்மன் தத்துவஞானி ஹெகல்

உழைப்பாளர்கள் அனைத்துப் பொருளாயத மற்றும் ஆன்மிக செல்வத்துக்கு உடைமையாளர்களாக இருக்கின்ற, மனிதன் சமூக உற்பத்திக்குச் சாதனமாக இல்லாமல், அவனே மிக உயர்ந்த மதிப்பாகவும் குறிக்கோளாகவும் இருக்கின்ற, ஒவ்வொருவருடைய சுதந்திரமான, பல்துறையான வளர்ச்சி எல்லோருடைய சுதந்திரமான வளர்ச்சிக்கும் நிபந்தனையாக இருக்கின்ற சமூகமே கம்யூனிஸ்டு சமூகமாகும். மார்க்ஸ் இந்தப் புதிய சமூகத்தின் உருவரையைக் கற்பனாவாதச் சுவடு இல்லாமல், எதிர்காலத்தில் பொற்காலம் என்ற இலட்சியச் சித்திரத்தை மனம் போனபடி வரைவதற்கு மிகச் சிறிதளவு கூட முயற்சி செய்யாமல் தயாரித்தார்.

கம்யூனிசத்தை வரலாற்று ரீதியில் தவிர்க்க முடியாதபடிச் செய்கின்ற போக்குகளையும் விதிகளையும் அவர் தர்க்கவியல் ஆராய்ச்சியின் வன்மையோடு வெளிப்படுத்துகிறார். பாட்டாளி வர்க்கப் புரட்சி, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் புதிய சமூகத்துக்குச் செல்கின்ற உண்மையான வழியை எடுத்துக்காட்டுகிறார். இப்படி முதலாளித்துவ உற்பத்தியைப் பற்றிக் கடுமுயற்சி கொண்ட பொருளாதார ஆராய்ச்சியின் போக்கில் மார்க்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருதுகோளைத் தயாரிக்கிறார். அது போல மூலதனம் மார்க்சியத் தத்துவஞானத்தின் உட்கருவான இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையை உள்ளடக்கியிருக்கிறது.

இயக்கவியல்-பொருள்முதல்வாத முறை விசேஷமான சொற்களில் வர்ணிக்கப்படவில்லை, அது செய்முறையில், முதலாளித்துவச் சமூகத்தின் பொருளாதாரத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்குச் செய்முறையில் கையாளப்படுவதன் மூலம் தரப்படுகிறது. மார்க்ஸ் இந்த முறையை எப்படி உபயோகித்தார், எப்படிக் கையாண்டார் என்பதை மூலதனத்தை ஆராய்வதன் மூலம் அறிய முடியும். ஆகவே சமூகத்தை ஆராய்ச்சி செய்வதற்கு இந்த இயக்கவியல் – பொருள்முதல்வாத முறையை ஒருவர் எப்படிக் கையாள முடியும், எப்படிக் கையாள வேண்டும், தத்துவச் சிந்தனையில் இந்த வன்மையான கருவியைக் கையாளுவதில் எப்படி முழுத் திறமையைப் பெற முடியும் என்பனவற்றை மூலதனத்தின் வாசகர்கள் கற்றுக் கொள்கிறார்கள்…

பொருளாதார ஆராய்ச்சியில் இயக்கவியல் முறையை உபயோகப்படுத்துகின்ற பிரச்சினையை மார்க்ஸ் முற்றிலும் வேறுவிதமாக அணுகினார். அவர் யதார்த்தத்தின் மீது இயக்கவியல் வடிவங்களைத் திணிப்பதற்கு மறுத்தார். ஹெகல் செய்ததைப் போல, முன்னரே தயாரிக்கப்பட்ட இயக்கவியல் அமைப்புகளுக்குள் யதார்த்தத்தைப் பொருத்துவதற்கு அவர் முயற்சி செய்யவில்லை.

ஆனால், பொருளாதார நிகழ்வுகள் தோன்றுவதையும் முன்னேற்றமடைவதையும், அவற்றின் போக்குகளையும், ஒரு பொருளாதார அமைப்பு முரண்பாடுகளின் வளர்ச்சியின் மூலமாக முன்னேற்றமடைவதின் உள் தர்க்கத்தையும், அந்த முரண்பாடுகள் தமது சொந்த எதிரிடையாக மாறுவதையும், அதாவது உண்மையில் ஆராயப்படுகின்ற பொருளின் இயக்கவியலை அவர் விருப்புவெறுப்பற்ற முறையில் ஆராய்ச்சி செய்தார்; தன்னுடைய முறை, ஹெகலின் முறைக்கு முற்றிலும் எதிரானது என்று மார்க்ஸ் கூறியதற்குக் காரணம் இதுவே.

முதலாளித்துவச் சமூகத்தின் முன்னேற்றத்தின் பொருளாதார விதியைக் கண்டுபிடிப்பது என்னுடைய இறுதியான நோக்கம் என்று மார்க்ஸ் கூறினார். ஆனால், மூலதனத்தில் எந்த ஸ்தூலமான சமூகம் சித்திரிக்கப்படுகிறது? அது ஜெர்மனியல்ல, பிரான்ஸ் அல்ல, (மார்க்ஸ் மற்ற நாடுகளைக் காட்டிலும் இங்கிலாந்தைக் குறிப்பிட்ட போதிலும்) இங்கிலாந்தும் அல்ல. அவர் முதலாளித்துவத்தை அதன் கலப்பற்ற வடிவத்தில் சித்தரிக்கிறார். அது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தத்துவ ரீதியான மாதிரிப்படிவம், அங்கே அது செத்துப் போன, மாற்றமடையாத ஒன்றாகத் தோன்றவில்லை; ஆனால், மாற்றமடையக்கூடிய, தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கின்ற அமைப்பாகத் தோன்றுகிறது.

இந்த அமைப்பைக் கருத்துக்களில் பிரதிநிதித்துவம் செய்வது எப்படி? அதன் அசாதாரணமான சிக்கல் மற்றும் பல் அடுக்கை சிந்தனையில் எடுத்துக் கூறுவது எப்படி? அதன் அம்சங்களின் உள் காரண காரியத் தன்மையை, அதாவது கட்டமைப்பை, செயல்படுகின்ற நிகழ்வுப் போக்கில் மட்டுமல்லாமல், அதன் வரலாற்றுரீதியான வளர்ச்சியில் புரிந்து கொள்வது எப்படி? முதலாளித்துவ உறவுகளின் மேல்மட்டத்தில் எல்லோரும் பார்க்கின்ற விதத்தில் தோன்றுவதற்கும் அவற்றின் மறைக்கப்பட்ட சாராம்சத்துக்கும் உள்ள தொடர்பை நிறுவுவது எப்படி? முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மொத்த மனப்போக்கான கட்டுமானத்தைக் கருத்தினங்களின் அமைப்பில் பிரதிபலிப்பது எப்படி?

இது மிகக் கடினமான வேலை; சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்கு முன்னேறுகின்ற இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையின் உதவியுடன் மார்க்ஸ் இதை நிறைவேற்றினார்…

மார்க்ஸ் பண்டத்தின் மீது தன்னுடைய கவனத்தைக் குவிக்கிறார். அவர் மூலதனத்தின் முதல் பாராவில் பின்வருமாறு எழுதுகிறார்: முதலாளித்துவ உற்பத்தி முறை நிலவுகின்ற சமூகங்களின் செல்வம் ‘பண்டங்களின் மாபெரும் திரட்டாக’த் தோன்றுகிறது. அதன் அலகு ஒரு தனிப் பண்டமாகும். ஆகவே நம்முடைய ஆராய்ச்சி, பண்டத்தைப் பற்றிய பகுப்பாய்விலிருந்து தொடங்க வேண்டும்.

மார்க்ஸ் மூலதனத்தைப் பொருளாதாரத்தின் ஆரம்ப வாழ்க்கையிலிருந்து, பண்டம், பண்டப் பரிவர்த்தனையிலிருந்து தொடங்குகிறார். இது கற்பனையில் தோன்றவில்லை, அது புலன்களால் அறியப்பட்ட ஒன்று, பொருளாயதமானது. ஒவ்வொருவரும் நாள்தோறும் அதனுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார். முழுப் பொருளாதார அமைப்பின் எல்லாப் பகுதிகளிலும் இடுக்குகளிலும் அது ஊடுருவியிருக்கிறது, வரலாற்று ரீதியில் அதன் தொடக்க நிலையாக இருக்கிறது.

அதே சமயத்தில் பண்டப் பரிவர்த்தனை முதலாளித்துவ (பண்ட) சமூகத்தின் மிகவும் எளிமையான, மிகச் சாதாரணமான உறவு, இந்த உறவை நாம் பல கோடித் தடவைகள் சந்திக்கிறோம். அது சூக்குமக் கருத்தாக்கம். ஆனால், முதலாளித்துவம் தோன்றிய காலத்திலும் வளர்ச்சியடைந்த காலத்திலும் அதன் மிகப் பொருளாயதமான வாழ்க்கையில் வளர்க்கப்பட்ட சூக்குமக் கருத்தாக்கம். ஹெகலின் சூக்குமக் கருத்தாக்கங்களைப் போல அது வெறும் சிந்தனை நடவடிக்கையின் விளைவு அல்ல. பொருளாயத ரீதியில் இருக்கின்ற அமைப்பின் ஒரு பகுதி என்ற முறையில் அது பொருளாயத ரீதியில் தரப்படுகிறது, ஆகவே இந்த அமைப்பின் தத்துவரீதியான மாதிரிப்படிவத்தில் அதற்குரிய இடத்தை அது பெற முடியும், பெற வேண்டும்.

பண்டப் பரிவர்த்தனை என்றால் என்ன? அது எதை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது? பயன் மதிப்புக்கும் பரிவர்த்தனை மதிப்புக்கும் உள்ள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்த எதிரிடைகளின் போராட்டத்தையும் அதன் விளைவாக சூக்கும உழைப்புக்கும் ஸ்தூலமான உழைப்புக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாட்டையும் மார்க்ஸ் ஆராய்கிறார், இன்னும் அதிகச் சிக்கலான கருத்தாகிய மதிப்பின் எக்காலத்துக்கும் உரிய வடிவத்துக்கு, அதிலிருந்து பணவியல் வடிவத்துக்கு வந்து சேருகிறார்.

அவருடைய சிந்தனை முன்னரே முடிவு செய்யப்பட்ட விதிகளின் அடிப்படையில் முன்னே செல்லவில்லை, ஆராயப்படுகின்ற பொருளின் தர்க்கம், இயக்கவியலின் அடிப்படையில் முன்னேறுகிறது. அது பயனுள்ள முடிவுகளை அடைவதற்குத் துல்லியமான காரணம் இதுவே.

முதலாளித்துவ பொருளியல் அறிஞர் ஆடம் ஸ்மித்

மூலதனத்தில் மார்க்சின் முறையை எங்கெல்ஸ் பின்வருமாறு வர்ணிக்கிறார்: ஜெர்மானிய இயக்கவியல் முறையை, அதன் இன்றைய வளர்ச்சிக் கட்டத்தில் பழைய, மேலெழுந்தவாரியான, வெறும் சொல்லோட்டமுள்ள இயக்கமறுப்பியல் முறையோடு ஒப்பிடும் பொழுது, மத்திய காலப் போக்குவரத்துச் சாதனத்தோடு ஒப்பிடுகையில் ரயில்வேயைப் போன்று முன்னது உயர்வானது. இந்த உண்மைக்கு யாரேனும் குறிப்பிட்ட எடுத்துக்காட்டைப் பார்க்க விரும்பினால் அவர் ஆடம் ஸ்மித் அல்லது வேறு அதிகாரபூர்வமான புகழ் பெற்ற பொருளியலாளர் எவராவது எழுதிய புத்தகத்தை எடுத்துப் படிக்கட்டும்.

பரிவர்த்தனை மதிப்பும் பயன் மதிப்பும் இந்தக் கனவான்களுக்கு எவ்வளவு துன்பத்தைக் கொடுத்தன; இந்த இரண்டையும் சரியான முறையில் வேறுபடுத்துவதிலும் அவை ஒவ்வொன்றுக்கும் உரித்தான வரையறுக்கப்பட்ட வடிவத்தை எடுத்துரைப்பதிலும் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதைப் பார்க்கட்டும். பிறகு மார்க்ஸ் எழுதிய தெளிவான, எளிமையான விளக்கத்தை அவற்றோடு ஒப்பிடட்டும்.

முதலாளித்துவ உற்பத்தியின் கட்டமைப்புக்கு முற்றிலும் பொருந்தக் கூடிய விதத்தில் ஒரு கருத்திலிருந்து மற்றொரு கருத்துக்கு, ஒரு கருத்தினத்திலிருந்து மற்றொரு கருத்தினத்துக்கு முன்னேறிச் சென்று மார்க்சின் ஒருங்கிணைந்த தத்துவ மாளிகை நிர்மாணிக்கப்படுகிறது. அடுத்தடுத்து வருகின்ற ஒவ்வொரு கருத்தினமும் முந்திய கருத்தினத்திலிருந்து அவசியமாகப் பெறப்படுகிறது, அது புதிய உள்ளடக்கத்தைப் பெற்றுச் செழுமையடைந்து நிகழ்வுகளின் பரந்த வட்டத்தை மென்மேலும் அதிகமாக உள்ளடக்குகிறது, அதாவது ஸ்தூலமடைகிறது.

பண்டப் பரிவர்த்தனையில் உள்ளுறையாக இருக்கும் ஆரம்ப முரண்பாட்டைப் பற்றிய பகுப்பாய்வு முதலாளித்துவச் சமூகத்தின் வளர்ச்சியடைந்த முரண்பாடுகளை-அவற்றின் ஸ்தூலமான வெளிப்பாட்டில் – சுட்டிக்காட்டுவதற்கு இட்டுச் செல்கிறது, ஆகவே, இந்தச் சமூகம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற புரட்சிகரமான முடிவுக்கு இட்டுச் செல்கிறது.

முதலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தைப் பெறுகிறது.

-புதிய ஜனநாயகம், நவம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

மோடிக்கு எப்ப சார் நோபல் பரிசு கொடுப்பீங்க ?

1

ஜேப்படிக்கு நோபல் பரிசு !

ரிச்சர்ட் தேலர் என்ற அமெரிக்கப் பொருளாதார வல்லுநருக்கு “நடத்தையியல் பொருளாதாரம்” (behavioural economics) என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியதற்காக நோபல் நினைவு பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.  இவை  சாதாரணர்களுக்கு எட்டாத, பேராசிரியர்களுக்கு மட்டுமே புரிகின்ற விசயங்கள் என்று சிலர் நினைக்கலாம். விசயம் அவ்வளவு சிக்கலானதில்லை.

பல சந்தர்ப்பங்களில் மக்கள் தமது பொருளாதார நலன் குறித்துப் பகுத்தறிவுக்கு ஒவ்வாத முடிவுகளை எடுக்கிறார்கள். இருப்பினும், அறிவுபூர்வமாகச் சரியான முடிவை எடுப்பதாகவே கருதிக் கொள்கிறார்கள். இத்தகைய மக்களை ‘நல்வழிப்படுத்துவது’ எப்படி? என்பதைத்தான் தேலரின் நடத்தையியல் பொருளாதாரம் பேசுகிறது.

உதாரணமாக, ஸ்டேன்லி என்பவர் வார விடுமுறையில் தன் வீட்டுத் தோட்டத்துப் புல்வெளியைச் சீர் செய்கிறார். அந்தத் தூசு அவருக்கு ஒவ்வாமைக் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. ஒரு ஆளை வைத்து இந்த வேலையைச் செய்தால், வெறும் பத்து டாலர்தான் செலவாகும். மருத்துவச் செலவு அதைவிட அதிகமாக ஆகிறது. அக்கம் பக்கம் உள்ள ஒரு பையனை வைத்து அந்த வேலையைச் செய்யலாம்.

அதற்கு 10 டாலர் செலவழிக்க விரும்பவில்லை என்கிறார் ஸ்டேன்லி. பக்கத்து வீட்டுக்காரர் உங்களுக்கு 20 டாலர் கொடுத்தால் அவரது தோட்டத்தில் புல் வெட்ட போவீர்களா என்று கேட்டதற்கு, நிச்சயமாக மாட்டேன் என்கிறார் ஸ்டேன்லி. பகுத்தறிவுபூர்வமாகச் சிந்திக்கும் “பொருளாதார மனிதனாக” ஸ்டேன்லி நடந்து கொள்ளவில்லை என்பதுதான் இந்தச் சம்பவத்தில் இருந்து தேலர் கூறவரும் சிக்கல்.

பொதுவாக பொருளாதாரரீதியில் தமக்கு ஆதாயமானதையே நுகர்வோர் தெரிவு செய்கிறார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில்தான் முதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாடுகள் வகுக்கப்படுகின்றன. குறிப்பாக, வேண்டல்–வழங்கல் அடிப்படையில் சந்தையில்தான் ஒரு சரக்கின் சரியான விலை கண்டுபிடிக்கப்படுகிறது என்பதே முதலாளித்துவப் பொருளாதாரம் கூறும் விளக்கம்.

மக்கள் எல்லா நேரங்களிலும் பகுத்தறிவுபூர்வமாக முடிவெடுப்பதில்லை என்று முதலாளி வர்க்கத்துக்குத் தெளிவுபடுத்தியதுதான் தேலரின் சாதனையாம். 2015 -ஆம் ஆண்டு அவர் அமெரிக்கப் பொருளாதாரவியலாளர்கள் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு சரக்கின் விலை வேண்டல் – வழங்கல் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதைக் கொச்சைப் பொருளாதாரம் என்று நிராகரிக்கிறது மார்க்சியம். மார்க்சியம் கூறுவது ஒருபுறமிருக்கட்டும். பகுத்தறிவுக்குப் புறம்பான வகையில் மக்களைச் சிந்திக்கத் தூண்டி, வீட்டுமனை விலைகளை உயர்த்தி உருவாக்கப்பட்டதுதான் சப்-பிரைம் நெருக்கடி என்பது முதலாளித்துவ உலகம் முழுவதும் அறிந்த உண்மை.

தாகத்துக்கு கோக் குடிப்பதும்கூட முதலாளித்துவ விளம்பரங்களால் தூண்டப்பட்ட பகுத்தறிவுக்குப் புறம்பான சிந்தனைதான். இவையெல்லாம் தேலர் சொல்லி முதலாளித்துவம் புரிந்து கொண்ட புதிய உண்மைகள் அல்ல. இருப்பினும், முதலாளித்துவ உலகம் தேலரைக் கொண்டாடுவது ஏன்?

தேலரின் நூல்களில் முக்கியமானது “தூண்டு” (Nudge) என்ற நூல். யாரை, எதற்குத் தூண்டுவது? ஆளும் வர்க்கம் விரும்புகின்ற வழியில் மக்களை சிந்திக்கத் தூண்டுவது, நுகர்வோரை வாங்கத் தூண்டுவது, முதலாளி வர்க்கம் விரும்பும் வகையில் தொழிலாளியைச் சேமிக்கத் தூண்டுவது – என்பதே இதற்கான விளக்கம்.

உண்மையில் இது தூண்டுவது அல்ல, திணிப்பது. சப் பிரைம் நெருக்கடி தோன்றிய நாளிலிருந்து உலக முதலாளித்துவப் பொருளாதாரம் தேக்கத்திலிருந்து மீளவில்லை. சுரண்டல் அதிகரிப்பு, ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு, வேலைவாய்ப்பு சுருங்குதல் போன்ற காரணங்களினால் சந்தைகள் தேங்கிக் கிடக்கின்றன. சந்தையின் தேக்கத்தை உடைப்பது எப்படி, ஆளும் வர்க்கத்தின் தேவைக்கு ஏற்றபடி மக்களைச் சிந்திக்கத் தூண்டுவது எப்படி என்ற கேள்விகளுக்குத்தான் தேலரின் நடத்தையியல் பொருளாதாரம் விடை கூறுகிறது.

தமது சொந்த நலன் குறித்தே கூட ஆழமாகச் சிந்திக்காமல், கொஞ்சம் அசட்டையாக இருக்கும் மக்களை ஏமாற்றிப் பணத்தை ஜேப்படி செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுக்கிறார் தேலர். தூண்டுதல் என்ற வழிமுறையைப் பயன்படுத்தித் தனிப்பட்ட ஆதாயம் பார்ப்பது எப்படி என்று ஒரு புத்தகம் எழுதச் சொல்லியிருந்தால், சுமார் 6000 கோடி டாலர் அளவுக்கு அமெரிக்கர்களின் பங்குச் சந்தை முதலீட்டை ஏமாற்றிய பிளேடு கம்பெனி அதிபர் பெர்னி மேடாஃப், அப்படி ஒரு நூலை எழுதியிருக்க முடியும் என்று கூறியிருக்கிறார் தேலர்.

மேடாஃப் -க்கு 150 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. தேலருக்கு நோபல் பரிசு. ஏனென்றால், தேலர் தனிப்பட்ட ஆதாயத்துக்காக யாரையும் தூண்டவில்லை. பொது நன்மைக்காக என்று கூறிக்கொள்ளலாம். அந்த பொதுநன்மை எனப்படுவதன் உண்மை முகம் என்ன?

தேலர் கோட்பாட்டின் அடிப்படையில் 2008 -இல் அமெரிக்காவில் ஒபாமா அரசுக்கு கொள்கை ஆலோசனை வழங்க “அதிபரின் சமூக மற்றும் நடத்தை அறிவியல்கள்” குழு உருவாக்கப்பட்டது. இங்கிலாந்தில் “நடத்தையியல் குழு”-வின் ஆலோசனைப்படி பெரும்பான்மை பிரிட்டிஷ் ஊழியர்கள் ஓய்வூதிய நிதியங்களில் இணைக்கப்பட்டு விடுகிறார்கள். அவர்கள் வேண்டாம் என்று தடுத்து நிறுத்தாத வரை, சம்பளத்திலிருந்து ஊழியர்களின் பங்களிப்பு பிடித்தம் செய்யப்பட்டுவிடும்.

தமது எதிர்காலம் குறித்து அறிவுபூர்வமாக யோசிக்காமலும் அசட்டையாகவும் சோம்பேறித்தனமாகவும் மக்கள் இருப்பதால், இப்படிப்பட்ட “திணித்தல்” அவசியம் என்கிறார் தேலர். பிரிட்டனில் தேலர் கூறும் இந்த “வழிமுறை”யைக் கடைப்பிடித்து, ஊழியர் சேமிப்புத் திட்டங்களின் மூலம் திரட்டப்பட்டிருக்கும் பணம் சுமார் 2 இலட்சம் கோடி ரூபாய் என்கிறது மார்க்கெட் வாட்ச் என்ற ஆய்வு நிறுவனம்.

நம் ஊரில் செல்போன் கம்பெனிகள் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் தலையில் அவர்களுக்கே தெரியாமல் ஏதோவொரு சேவையைக் கட்டி, அதற்காகப் பணத்தைப் பிடிக்கின்றன. அந்த கோக்குமாக்கு சேவையை “வேண்டாம்” என்று சொல்லி நிறுத்த வழி தெரியாமல் நாம் குமுறுகிறோம். பிரிட்டனில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும் வழிமுறை இதுதான். சேமிப்புக்கு என் பணத்தைப் பிடிக்காதே என்று சொல்வதற்கு சோம்பேறித்தனப்பட்டோ, அசட்டையாகவோ இருக்கின்ற தொழிலாளிகளின் சம்பளப் பணம் இப்படித்தான் கையாடப்பட்டிருக்கிறது. இது தொழிலாளிகளின் எதிர்கால நன்மை கருதிச் செய்யப்படுவதாகக் கூறுகிறார் தேலர்.

“தொழிலாளர்கள் தமது வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் எடுக்கக்கூடாது” என்று மோடி அரசு உத்தரவிட்டதும், அதை எதிர்த்து பெங்களூரு ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தைக் கண்டு அஞ்சி பின்வாங்கியதும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

தொழிலாளர்களின் சேமிப்பை முதலாளிகளுக்குப் படையல் வைப்பதற்குச் சதி செய்து மறைத்துவிட்டு, தொழிலாளிகளின் எதிர்காலத்துக்காகத்தான் அப்படி உத்தரவிட்டதாக அப்போது சொன்னது மோடி அரசு. தொழிலாளர்களின் எதிர்காலம் குறித்துப் பெரிதும் கவலைப்பட்ட அந்த யோக்கியர்தான், இப்போது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதத்தைக் குறைத்திருக்கிறார்.

“உனக்கு எது நல்லது என்று எனக்குத் தெரியும்” என்று மக்களிடம் சொல்வதற்கான அதிகாரத்தை ஆளும் வர்க்கத்துக்கு வழங்குகின்றது தேலரின் கோட்பாடு. பணமதிப்பு அழிப்பின்போது மோடி பேசிய டயலாக்கும் இதுதான். பணமில்லாப் பொருளாதாரம் பரவி, ஊழல் ஒழிந்துவிடும் என்று கூறி பணமதிப்பு அழிப்பைப் பாராட்டிய அறிவாளிதான் தேலர். பிறகு, மோடி அரசு 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டிருப்பதை அறிந்து, தனது கருத்தை வாபஸ் வாங்கிவிட்டிருக்கிறார்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கை கருப்புப் பணத்தை ஒழிக்கும் என்று பாராட்டிய அறிவாளிக்கே நோபல் பரிசு என்றால், பணமதிப்பழிப்பைத் திணித்த மோடிக்கு, அதை விடப் பெரிய பரிசல்லவா கொடுத்திருக்க வேண்டும்!

-ஜோசப் ராஜா
-புதிய ஜனநாயகம், நவம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

அடிமை முறை திரும்புகிறது ! என்ன செய்யபோகிறோம்?

1

அடிமைமுறை திரும்புகிறது ! மார்க்சிய-லெனினிய ஆயுதமேந்துவோம் ! மூலதன ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுவோம் !

அன்பார்ந்த தொழிலாளர்களே !

டந்த மூன்றாண்டுகளில் இந்தியா முழுவதும் புதிய வேலைவாய்ப்புகள் இலட்சக்கணக்கில் குறைந்திருக்கிறது. மறுபுறத்தில் பல கோடி பேருடைய வேலை பறிக்கப்பட்டிருக்கிறது. ஐ.டி துறை துவங்கி ஆட்டோமொபைல் துறை வரையிலும் வேலைப்பறிப்புகள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் கம்பெனிகள் மூடுவிழா நடத்தி இன்னும் பலருடைய வேலையை பறிக்க நேரிடும் என்கிறார், ஏர்டெல் செல்போன் கம்பெனியின் முதலாளி சுனில் பார்தி மிட்டல்.

நாட்டின் தொழில் முதலீட்டை அதிகரித்துவிட்டால், புதிய வேலை வாய்ப்புகள் அதிகரித்துவிடும். அவ்வாறான தொழில் முதலீட்டுக்கு தடையாக இருப்பது இந்தியாவின் தொழிலாளர்கள் தான். தொழிலாளர்களிடம் நெகிழ்வான வேலைமுறை இல்லாமல் இருப்பது தான் தொழில்முதலீடுகளை அதிகரிக்க முதலாளிகள் தயங்குகின்றனர் என்கிறது, மோடியின் அரசு.

தொழிலாளர்கள் நெகிழ்வாக இருக்க வேண்டும் என்பதன் அர்த்தம் என்ன? நிரந்தரமான வேலை வேண்டும் என்று அடம் பிடிக்கக்கூடாது. ஒரே கம்பெனியில் வேலை செய்து , 58 வயதில் அங்கேயே ரிட்டயர்ட் ஆக வேண்டும் என்று நினைக்கக்கூடாது. அதாவது கிடைத்த வேலையை செய்ய வேண்டும், ஒரு இடத்தில் வேலை முடிந்து விட்டால் அடுத்த வேலை எங்கு கிடைக்கிறதோ அந்த வேலைக்கு போவதற்கு பழகிக் கொள்ள வேண்டும். அதாவது, காண்டிராக்ட் வேலையை தொழிலாளர்கள் மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோல 8 மணிநேரம் தான் வேலை செய்வேன் என்று சட்டம் பேச கூடாது. கம்பெனிக்கு தேவை ஏற்பட்டால் 12 மணிநேரம்கூட வேலை செய்ய வேண்டும், ஷிப்ட் முடிந்த பின்னர், அடுத்த ஷிப்டில் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். வாராந்திர விடுமுறை இல்லாமல் ஏழு நாட்களும் வேலை செய்ய பழகிக் கொள்ள வேண்டும்.

அதாவது,முதலாளியின் இலாபம் அதிகரிக்க வேண்டும். அவர்கள் மனம் கனிந்து புதிய, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவார்கள்.வேலை இல்லா திண்டாட்டம் இருக்கவே இருக்காது. இதுதான் மோடியின் வேலைவாய்ப்பு பார்முலா.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மோடியின் புதிய இந்தியா பிறப்பதற்கு நாட்டில் இருக்கின்ற தொழிலாளர் நலச்சட்டங்கள் தடையாக இருக்கின்றன; இந்த சட்டங்களை வைத்துக் கொண்டு தொழிற்சங்கங்கள் குடைச்சல் கொடுக்கின்றன என்று முதலாளிகள் மோடியிடம் ஒப்பாரி வைத்ததால், தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதற்கு தொழிலாளர் நலச்சட்டங்களையும், தொழிற்சங்க அமைப்புகளையும் ஒழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பாய்கிறது, மோடி கும்பல்.

இந்திய தொழிலாளி வர்க்கம் பல்வேறு தியாகங்கள் செய்து உருவாக்கிய தொழிலாளர் நலச்சட்டங்களை முதலாளிகளது இலாப வேட்டைக்கு பலியிடச் சொல்லுகிறார், மோடி. முதலாளியின் இலாபம் நிரந்தரமாக உயர வேண்டும் என்றால், நாமெல்லாம் நிரந்தர வேலை கேட்கக்கூடாது, என்கிறார், டீ கடைமோடி. முதலாளி கொழுக்க வேண்டும் என்றால், தொழிலாளர்கள் காலநேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும் என்கிறது, மோடியின் அரசு.

தொழிலாளர் நலச்சட்டங்களை காலாவதியாக்கும் திருப்பணியை காங்கிரசு கட்சி தான் துவக்கி வைத்தது என்கிற போதிலும், இப்படிப்பட்ட உரிமைகள் காகிதத்தில்கூட இருக்கக்கூடாது என்று வெறித்தனமாக செயல்படுகிறது, பா.ஜ.க அரசு. இந்த அடிப்படையில் தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவது என்று காங்கிரசு கட்சி எடுத்த முயற்சிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்த சட்டங்களை வெறும் விதிமுறையாக மாற்றுகின்ற வேலையை தீவிரமாக்கியுள்ளனர்.

சட்டமாக இருந்தால்அதை கடைபிடிப்பது கட்டாயம் என்று போராட முடியும். விதிமுறையாக இருந்தால் எந்த முதலாளியும் அதை மதிக்கமாட்டான். சட்டம் என்கிற பாதுகாப்பை ஒழித்துவிட்டு, வாய்ப்பிருந்தால் செய்யுங்கள் என்று முதலாளிகளுக்கு அறிவுரை சொல்லப்போகிறதாம் அரசு. இதைவிட அயோக்கியத்தனம் வேறென்ன இருக்க முடியும்?

இதற்கு முதல்படியாக 44 தொழிலாளர் சட்டங்களை தொழிலுறவு விதிமுறைத் தொகுப்பு, ஊதிய விதிமுறைத் தொகுப்பு மசோதா, சமூகப்பாதுகாப்பு மற்றும் தொழிலகப் பாதுகாப்பு விதிமுறைத் தொகுப்பு என 3 விதிமுறைத் தொகுப்புகளாக மாற்ற முடிவெடுத்து, அதற்கான சட்ட மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது, மோடி அரசு. எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால தொடரில் இந்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு தயாராகி வருகின்றனர். அவ்வாறு நிறைவேறினால் என்ன நடக்கும் என்பதற்கு சில உதாரணங்களை பார்க்கலாம்.

முதலாவதாக, தற்போது அமலில் இருக்கும் 1947 ஆம் வருடத்திய தொழிற்தகராறு சட்டத்தின் அத்தியாயம் V (B)-ல் காணப்படும் அனைத்து சட்டப்பிரிவுகளையும் ஒழிக்கிறது, புதிய விதிமுறைத் தொகுப்பு. அத்தியாயம் V (B)-ல் இடம் பெற்றுள்ள சட்டப்பிரிவுகள், 100 பேருக்கு மேல் வேலை செய்யக்கூடிய நிறுவனத்தில் ஆட்குறைப்பு, தற்காலிக கதவடைப்பு ( லே-ஆப் ), நிரந்தர ஆலைமூடல் ஆகியவற்றின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஆட்குறைப்பு மற்றும் தற்காலிக/நிரந்தர ஆலைமூடலுக்கு அரசின் முன்அனுமதி பெற வேண்டும் என நிபந்தனை இருக்கிறது.

300 பேருக்கு மேல் வேலை செய்கின்ற நிறுவனங்களுக்குத் தான் மேற்படி நிபந்தனை பொருந்தும் என்கிற வகையில் சட்டத்தை திருத்த வேண்டும் என்கிறனர், முதலாளிகள். அதேபோல தொழிலாளர்களது வேலை நிலைமைகளில் ஏதேனும் மாற்றம் செய்வதற்கு 21 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு செய்வதோடு அரசின் அனுமதியையும் பெற வேண்டும் என தொழிற்தகராறு சட்டத்தின் பிரிவு 9A சொல்லுகிறது. இதையும் மாற்ற வேண்டும் என்கிறனர். இந்த பிரிவு மாற்றப்பட்டால் முதலாளிகள் நினைத்த மாத்திரத்தில் ஷிப்ட் எண்ணிக்கை, ஷிப்ட் நேரம், வாராந்திர விடுமுறை, வேலைநேரம், வேலைமுறை உள்ளிட்ட எதையும் மாற்றிவிட முடியும்.

இரண்டாவதாக, 1970 ஆம் வருடத்திய காண்டிராக்ட் தொழிலாளர் முறைப்படுத்துதல் மற்றும் ஒழித்தல் சட்டத்தில் ( Contract Labour Regulation and Abolition Act ) திருத்தங்கள் செய்ய முதலாளிகள் நிர்பந்திக்கின்றனர். 20 பேருக்கு மேலாக காண்டிராக்ட் தொழிலாளர்களை பயன்படுத்தினால் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்பதை 100 ஆக உயர்த்துவது, நேரடி உற்பத்தி சார்ந்த எந்த வேலையிலும் காண்டிராக்ட் தொழிலாளர்களை பயன்படுத்த அனுமதிப்பது ஆகியவை முதலாளிகளது முக்கிய கோரிக்கைகள்.

நேரடி உற்பத்தியில் காண்டிராக்ட் தொழிலாளர்களை பயன்படுத்துவதற்கு சட்டபூர்வ தடை இருக்கும்போதே, அனைத்து துறைகளிலும், அனைத்து தொழில்களிலும், அனைத்து வேலைகளிலும் காண்டிராக்ட் தொழிலாளர்கள் அதிக அளவில் இருக்கின்றனர்.சட்டம் திருத்தப்பட்டால் பெயரளவுக்குகூட நிரந்தரத் தொழிலாளர்கள் இருக்கமாட்டார்கள்.

மூன்றாவதாக, தொழிலாளர் துறை மற்றும் தொழிற்சாலைகள் துறை அதிகாரிகள் அடிக்கடி ஆலைகளில் ஆய்வுக்கு வந்து தொந்தரவு கொடுக்கின்ற “இன்ஸ்பெக்டர் ராஜ் “ கட்டமைப்பை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரலிடுகின்றனர், முதலாளிகள். இதற்கேற்ப 1948 ஆம் வருடத்திய தொழிற்சாலைகள் சட்டத்தை திருத்த வேண்டுமென்கிறனர்.

ஏற்கனவே, தொழிற்சாலைகள் ஆய்வாளர் ( Inspector of Factories ) என்றிருந்த பெயரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரி என்று பெயர் மாற்றம் செய்தபோதே இந்த துறைக்கு இருந்த அரைகுறை அதிகாரம் பறிக்கப்பட்டது. பல் பிடுங்கப்பட்ட இந்த அதிகாரிகள் தான் தொந்தரவு தருகிறார்களாம்…இதைவிட ஒரு அப்பட்டமான பொய் ஏதாவது இருக்க முடியுமா?

கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில்கூட 24 மணிநேரமும் வேலை செய்ய அனுமதிப்பது, இரவு ஷிப்டுகளில் பெண் தொழிலாளர்களை ஈடுபடுத்துவது, ஓவர்டைம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவது, குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்து அனைவருக்கும் ஒரே சம்பளம் என்கிற பெயரில் இலாபத்துக்கேற்ப சம்பள உயர்வு கேட்கிற உரிமையை மறுப்பது போன்ற பல்வேறு தாக்குதல்களை இந்த மசோதாக்கள் சுமந்து வருகின்றன.

இந்த மசோதாக்கள் நிறைவேறினால் தொழிலாளர்களது உரிமைகள் சட்டபூர்வமாக இருக்காது. மாறாக, முதலாளிகள் நல்லவர்களாக இருப்பது எப்படி என்று அரசாங்கம் வழிமுறைகளை சொல்லித்தரும். அதனை ஏற்றுக்கொள்வது முதலாளிகளது விருப்பம்.இதனை தட்டிக் கேட்பதற்கு தொழிற்சங்கம் என்கிற அமைப்பு இருக்காது. அப்படி இருந்தாலும் உரிமைகள் ஏதுமற்ற லெட்டர்பேடாகத் தான் இருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறோம் எனக் கூறி முதலாளிகளின் இலாபத்தை அதிகரிப்பதற்காக தொழிலாளி வர்க்கத்தை முற்றிலும் அடிமையாக்கும் சதித்தனம் தீவிரமாக அரங்கேறுகிறது.

இதனை ஏற்றுக்கொண்டு, நம்முடைய முன்னோர் உயிர்த்தியாகம் செய்து நிலைநாட்டிய உரிமைகளை இழந்து கூலி அடிமையாக இருக்கப்போகிறோமா ? பெயரளவில் எதிர்ப்புகளை தெரிவித்துவிட்டு, எந்திரத்தோடு எந்திரமாய் தேய்ந்து மடியப்போகிறோமா? முதலாளிகளது அடியாள்படையாக செயல்பட்டு வருகின்ற அரசு எந்திரத்தை அடித்து நொறுக்கி, உழைக்கும் மக்களுடைய அதிகாரத்தை படைக்கின்ற போரில் களமிறங்க வேண்டிய தருணத்தை இனியும் தள்ளிப்போட முடியாது.மார்க்சிய-லெனிய ஆயுதத்தை ஏந்தி மூலதன ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுவோம்!

தொழிலாளி வர்க்கத்தை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கும் சதியை மோதி வீழ்த்துவோம்!

செயலிழந்த இந்த அரசு கட்டமைப்புக்கு எதிராகப் போராடுவோம்! புரட்சிகர அரசியலின் கீழ் அணிதிரளுவோம்!

உயிர்த்தியாகத்தால் எழுதப்பட்ட உரிமைகள் ஒழிக்கப்படுவதை முறியடிப்போம்!

புழுவல்ல தொழிலாளி வர்க்கம்; கோடிக்கால் பூதம் என்பதை நிலைநாட்டுவோம்!

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஒசூர், தொடர்புக்கு: 97880 11784.


சென்னை, கோத்தகிரி நவம்பர் புரட்சி விழா கொண்டாட்டங்கள் !

0

“கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு!!” நிகழ்வு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புரட்சிகர அமைப்புகளின் சார்பில் கொண்டாடப்பட்டது.

சென்னையில்…

துரவாயல் பிள்ளையார் கோவில் தெரு, மற்றும் நொளம்பூர் ஆகிய பகுதிகளில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பிள்ளையார் கோவில் தெருவில், அப்பகுதி கிளை செயலாளர் தோழர் செந்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். அங்கு சென்னை கிளையின் செயலாளர் தோழர் ராஜா கொடியேற்றி உரையாற்றினார். அவர் தனது உரையில் “ரசிய புரட்சி 100 -வது ஆண்டையும் ஆசான் காரல் மார்க்ஸின் மூலதனம் நூலின் 150 -வது ஆண்டையும் நாம் ஏன் நினைவு கூறவேண்டும். அதை ஏன் உயர்த்தி பிடிக்க வேண்டும் என்பதையும். இன்றைய தினம் நம் மக்கள் எப்படி கொள்ளைக்கார ஓ.பி.எஸ். – எடப்பாடி கும்பலிடமும், கொலைகார காவி கும்பலிடமும் சிக்கித் தவிக்கின்றனர் என்பதையும் விளக்கி பேசினார்.

மேலும் மக்களின் நலனுக்காக அல்லாமல் கார்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் இந்த அரசை தூக்கி எறிவோம்! ரசியப் புரட்சி சாதித்தது போன்று மக்களுக்கான அரசை நமது நாட்டிலும் நிறுவப் போராடுவோம்.” என்று தனது உரையை முடித்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நொளம்பூர் பகுதியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு அப்பகுதியின் கிளைச் செயலாளர் தோழர் கணேசன் தலைமை தாங்கினார். அங்கு சென்னை கிளை இணைச் செயலாளர் தோழர் சாரதி கொடியேற்றி உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் “மக்கள் இங்கு கொத்து கொத்தாக டெங்கு காய்ச்சலால் செத்து கொண்டும், மழை வெள்ளத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் தவிக்கையில் எடப்பாடி அரசு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது.

மேலும் இரட்டை இலை சின்னத்தை எப்படி காப்பாற்றுவது என காவிகளுடன் பேரம் நடத்தி வருகின்றனர். இவர்களை ஒழிக்காமல் நமக்கு வாழ்வில்லை. நாமும் நமது நாட்டில் ரசிய மக்கள் போல் ஒரு புரட்சியை நடத்த வேண்டியுள்ளது.” எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை, தொடர்புக்கு : 94451 12675.

***

கோத்தகிரியில்…

நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பில், “கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு!!” நிகழ்ச்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
அனைத்து தொழிலாளர் சங்கம்,
நீலமலை, கோத்தகிரி.