தமிழக வரலாற்றில் இதுவரை நமது விவசாயிகள் இப்படிச் சாகவில்லை. கருகிய பயிரைக் கையில் பிடித்தபடி விவசாயிகள் நெஞ்சு வெடித்து செத்துக் கொண்டிருக்கிறார்கள். டெல்டா மாவட்டமே இப்போது சுடுகாடாக காட்சியளிக்கிறது. திரும்பும் பக்கமெல்லாம் வறட்சியும் அதன் பாதிப்புக்களுமே எதிரொலிக்கின்றன. என்ன செய்வது என்று ஆத்திரத்துடன் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள் விவசாயிகள். அந்த ஆத்திரத்தை அரசியல்படுத்தி இதர பிரிவு உழைக்கும் மக்களின் துணையுடன் மக்கள் அதிகாரம் அங்கே பிரச்சாரம் செய்து வருகிறது. பல மாணவர்கள், தொழிலாளிகள், இளைஞர்கள், பெண்கள் இதற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்பும் பொருட்டு மக்கள் கலை இலக்கியக் கழகம் இந்தப் பாடலை தயாரித்து வெளியிடுகிறது.
இந்தப்பாடலுக்கான படப்பிடிப்பு, படத்தொகுப்பு, இசை, தாளக்கருவிகள், ஸ்டூடியோ அனைத்தும் மிகக் குறைந்த செலவில் செய்வதற்கு போராடியும் செலவு எமது கணிப்பைத் தாண்டிவிட்டது. மேலும் நிதிச்சுமை காரணமாகவே இந்தப்பாடலை குறைந்தபட்ச தொழில்நுட்ப வசதிகளோடு மட்டுமே தயாரித்திருக்கிறோம். இருப்பினும் விவசாயிகளின் துயரத்தையும், அதற்கான நமது கோபத்தையும் கலை வடிவில் இந்தப் பாடல் தட்டி எழுப்புமென்றே நம்புகிறோம். இசையமைப்பு நிலையத்தில் ஒரு மணிநேர வாடகை மிகக்குறைந்த அளவு வைத்துக் கொண்டாலும் ரூ.500 ஆகும். தொழிற்முறை இசைக் கலைஞர்களை தாளம் மற்றும் இதர கருவிகளுக்கு மிகக்குறைந்த அளவு பயன்படுத்தினாலும் ஒரு பாடலுக்காக ஒரு கலைஞருக்கு அளிக்க வேண்டிய குறைந்தபட்சம் ரூ 5000 அளிக்க வேண்டும். இதுவே ஒரு கால்ஷீட் அளவு அவர்களை பயன்படுத்தினால் அதன் செலவு இன்னும்அதிகம். இது போக வயலின், கித்தார் என்று கருவிகளுக்கேற்ப கட்டணமும் மாறுபடும்.
இணையத்தில் நாங்கள் வந்த பிறகு வெளியான ம.க.இ.க பாடல்கள் அனைத்தும் வீடியோ பாடல்களாக இலவசமாக வெளியிடப்படுகின்றது.
ஆகவே இது போன்ற முயற்சிகளை தொடர்ந்து செய்ய உங்களால் இயன்றதை அல்ல, இன்னதுதான் கொடுக்க வேண்டும் என்ற கடமையுணர்வுடன் கூடிய தொகையை நன்கொடை அளியுங்கள். சினிமா உலகைச் சேர்ந்த நண்பர்கள் வாடகை இன்றியோ இல்லை குறைந்த வாடகையுடன் கூடிய ஒலிப்பதிவு அரங்கங்கள், படப்பிடிப்பு கருவிகள், கட்டணமின்றி வாசிக்க கூடிய தொழிற்முறை இசைக் கலைஞர்கள் போன்றோரை ஏற்பாடு செய்து உதவுங்கள். இலாபம், விளம்பரம் போன்ற முதலாளித்துவ கறையான்கள் இன்றி மக்களின் பங்களிப்புடன் நமது முயற்சிகள் வெற்றி பெறவும், நமது கருத்தை பரப்பவும் உங்களது ஆதரவு அவசியம். பாடலை பகிருங்கள், நிதியுதவி தாருங்கள்!
நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட இரண்டு வங்கிக் கணக்குகளில் ஒன்றிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் (vinavu@gmail.com) அல்லது தொலைபேசி (Mobile – (91) 97100 82506) மூலம் தெரிவிக்கவும்.
Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 6 1 2 8 0 1 1 0 7 3 8 9
IFSC Code: I C I C 0 0 0 6 1 2 8
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings
____________________________
Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 6 1 2 8 0 1 1 0 7 3 8 9
IFSC Code: I C I C 0 0 0 6 1 2 8
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings
____________________________
பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:
KANNAIAN RAMADOSS
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084
செல்பேசி – 99411 75876
__________________________________
வெஸ்டர்ன் யூனியன் மூலம் பணம் அனுப்புபவர்கள் KANNAIAN RAMADOSS என்ற பெயருக்கு அனுப்பி விட்டு மின்னஞ்சல் மூலம் (vinavu@gmail.com) விவரங்களைத் தெரிவிக்கவும்.
அனைவருக்கும் ரசீது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். நன்றி!
நட்புடன், வினவு
_______________________________________________
பாடல் வரிகள்
ஊரே காஞ்சிருச்சி உயிர் மூ…ச்சு ஓய்ஞ்சிருச்சு
ஆ…ய்வு என்னங்கடா ஆய்வு – நீங்க
அழிஞ்சாத்தான் எங்களுக்கு வாழ்வு.
ஊ…ரை சுத்தி சுத்தி வாய்க்கா.. குளம் ஆறு
முப்போகம் விளஞ்சபோது பஞ்ச… மில்லாத ஊரு
தஞ்சையின் தைரியத்தில் தலை நிமிர்ந்த… நாடு – ஒரு
கொள்ளைக் கூட்டம் ஆள்வதாலே மெல்லச் சாகுது தமிழ் நாடு
கா..விரி பாமினி கோரையாறு குடமுருட்டி
வெட்டுன மணலுதாண்டா செங்கல்லாட்டம் தங்க கட்டி
சின்னம்மா ஓபிஎஸ் சிக்குனவன் சேகர் ரெட்டி
அங்க போயி தோண்டுங்கடா ஆய்வுக் குழுவாம் கம்முனாட்டி
இரணியன் களப்பாள் குப்பு சீனிவாசராவ் வளர்த்த தஞ்சை
வெண்மணி தியா…கிகளை விளைய வைத்த கீழத்தஞ்சை
அறுவடைப் போரா….ட்டம் அடங்கியது… பண்ணை – அந்த
நினைவுகள் அழிவதில்லை அஞ்…சாதே நிமிர்த்து நெஞ்சை
விவசாயிகளுடைய மரணத்திற்கும் கருகிய பயிர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த இழப்பீட்டு தொகை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது விவசாயிகளை வஞ்சிக்கும் கண்துடைப்பு இதை ஏற்கமுடியாது. இந்த அரசு விவசாயிகளை காப்பாற்றாது என்பதற்கு மீண்டும் ஒரு நிரூபணம் தான் இந்த அறிவிப்பு
கர்நாடக காங்- பா.ஜ.க-வின் அடாவடியாலும், மோடி அரசின் துரோகத்தாலும் இந்த ஆண்டும் காவிரியில் தமிழகத்தின் தண்ணீர் பங்கீட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் தீர்வு காண முடியாமல் திராணியற்று நிற்கின்றது. பருவ மழையும் பொய்த்ததால் தஞ்சை டெல்டா விவசாயம் கருகியது மட்டுமல்ல குடிநீருக்கே மக்கள் விலங்குகள் போல் அலையும் நிலை ஏற்படும் என விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்து எச்சரிக்கின்றனர்.
ஆறுகள், ஏரி, குளம் கண்மாய் அனைத்தும் வறண்டுபோன நிலையில், வரைமுறையற்ற மணல் கொள்ளையால் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விவசாயிகள் கடன் சுமையாலும், விளைச்சலுக்கு கட்டு்படியான விலை இல்லாமலும் அழிவின் விளிம்பில் நிற்கின்றனர். தமிழக அரசும், வேளாண்மை துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டலையோ, எச்சரிக்கையையோ, அறிவுறுத்தலையோ வழங்காதது கண்டனத்திற்குரியது. விவசாயத்தின் அழிவிற்கும், விவசாயிகள் மரணத்திற்கும் நேரடியாக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
உலகுக்கே சோறு போடும் உழவர்களுக்கு நன்றி செலுத்துவதுதான் உழவர் திருநாள். பெரும்பாலான விவசாயிகளின் வீடுகள் பயிரை இழந்து, சொந்தங்களை இழந்து, இழவு வீடாக மாறியுள்ள நிலையில் பொங்கல் விழா ஒரு கேடா ? நமது வீட்டில் இழவு விழுந்தால் பொங்கலை நாம் கொண்டாடுகிறோமா? எனவே இந்த பொங்கல் தினத்தை கருப்பு தினமாக கருதி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
கர்நாடகாவும், கேரளாவும் உயிரிழந்த விவசாயிகளைக் கணக்கெடுத்து, வறட்சிப் பகுதிகளை பதிவு செய்து மத்திய அரசிடம் வறட்சி நிவாரணம் பெற்று விட்டது. தமிழக அமைச்சர்கள் காலில் விழுவதற்கும், கும்பிடுவதற்கும் ஒதுக்கும் நேரத்தை ரத்து செய்துவிட்டு தமிழக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரவேண்டும். இல்லை என்றால் பதவி விலக வேண்டும். அமைச்சர்கள் எம்.சி.சம்பத், வெல்லமண்டி நடராசன் போன்றோர் விவசாயிகளின் மரணத்தைக் கொச்சைப்படுத்திப் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களின் எல்லா நிகழ்ச்சிகளையும் விவசாயிகள் புறக்கணிப்பதுடன் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் விவசாயத்தையும் விவசாயிகளையும் வாழ்விப்பதற்கு பதிலாக அவர்கள் நிலங்களை கைப்பற்றி, அகதிகளாக நகரத்தை நோக்கி விரட்டுவது என்பதை கொள்கையாக வைத்திருக்கிறது. ஆற்றுமணல் கொள்ளை, மீத்தேன் திட்டம், பணமதிப்பு நீக்கம், நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிக்காமல், அவற்றை அழித்தல் ஆகியவற்றினை அசுர வேகத்தில் செயல்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் போராடினாலோ அவர்களை போலீசை வைத்துத் தாக்கி, பொய் வழக்குப் போட்டு அச்சுறுத்துகிறது.
பாதிப்புகளை தடுக்க முயலாமல், வெள்ள பேரழிவிலும், வறட்சி பேரழிவிலும் மக்களுக்கு வழங்கும் நிவாரணத்தில் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என அதிகாரிகளும் ஆளும் கட்சியினரும் திட்டம் போட்டு செயல்படுகின்றனர். வறட்சி பாதித்துள்ள முக்கியப் பகுதியான நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் வழங்கவில்லை. மேலும் தமிழகத்தில் வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை என பல மாவட்டங்களில் சம்பளப் பணம் வழங்கப்படவில்லை. தமிழக கரும்பு விவசாயிகளுக்கு மூன்று ஆண்டுகளாக சுமார் 2,000 கோடி நிலுவைத் தொகையை வழங்கவில்லை. பெரம்பலூரில் சொசைட்டியில் பால் கொடுத்தவர்களுக்கு சொசைட்டி மூன்று மாதமாக நிலுவைத் தொகை வழங்கவில்லை. ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் எப்படி ஊழல் செய்யலாம், எப்படி கொள்ளையடிக்கலாம் எனப் போதைக்கு அடிமையான குடிகாரனாக மாறி நிற்கிறது. இத்தகையவர்கள் விவசாயிகள் மரணத்திற்கும், கருகிய பயிர்களுக்கும் கண்ணீர் சிந்துவார்கள், பிரச்சினையை தீர்ப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. இந்த நிலையில் மாற்று வழியை பற்றி சிந்திக்க வேண்டும் என தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறோம்.
மீண்டும் மீண்டும் மனு கொடுப்பது, கவர்ச்சி அறிவிப்புகளை கண்டு ஏமாறுவது, தானாக ஏதாவது நடக்கும் என விவசாயிகள் வெயிலில் ஏன் காத்திருக்க வேண்டும்? பாதிக்கப்பட்ட மக்கள்தான், நிவாரணம் கிடைக்கவும், நிரந்தரத் தீர்வு காணவும், போராடியாக வேண்டும். இது விவசாயிகளின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல என்பதைப் பிற மக்களுக்கு உணர்த்தினால் மட்டுமே விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும்.
கருகிய பயிர்களைக் கண்டோ, வாங்கிய கடனை நினைத்தோ தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைய வேண்டாம். இதில் உங்கள் தவறு ஏதுமில்லை. வங்கிக்கடன், கந்து வட்டிக் கடன், அரசின் நிவாரணம், இழப்பீடு என அனைத்தையும் நம்மால் எதிர் கொள்ள முடியும். மக்கள் அதிகாரம்தான் மாற்று என்பதை நாம் புரிந்து கொண்டால், செயல்படுத்தினால் இந்த நாட்டையும், மக்களையும், இயற்கை வளங்களையும் காக்க முடியும். ஏனென்றால் காக்க வேண்டிய அரசுகட்டமைப்பு தோற்றுப்போய்விட்டது.
உரிய நிவாரணம் கொடுத்து, விவசாயிகளை முழுமையாகக் காப்பாற்றும் வரை மக்கள் அதிகாரம் சார்பில் பல்வேறு விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து பிரச்சாரம், பொதுக்கூட்டம், போராட்டம் என டெல்டா மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நடத்த உள்ளோம்.
தோழமையுடன் வழக்குரைஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்கவுள்ள நிலையில் அவர் பதவி ஏற்றதும் ஏற்படப் போகும் நலன்களின் முரண்கள் (Conflict Of Interests) பற்றி ஊடகங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அக்கறையை வெளிப்படுத்தி வருகின்றன. முதலாளித்துவ உலகில் புழங்கும் பல்வேறு வார்த்தைகள் ஏதோ மாபெரும் தத்துவ விளக்கத்தைக் கொண்டிருக்கும் சிக்கலான நுட்பங்களாக நினைக்கப்படுகின்றன. உண்மையில் இவ்வார்த்தைகளை ஒரு பள்ளிக் கூட சிறுவன் ஆய்வு செய்தாலே அவற்றில் இருப்பது வெறும் வார்த்தைகளே அன்றி வாழ்க்கை பற்றியவை அல்ல என்பதை அறியமுடியும்.
அதன்படி நலன்களின் முரண்கள் என்றால் என்ன? டிரம்ப் எனும் தனிமனிதரின் நலன்களும், அதிபர் என்ற முறையில் உள்ள நலன்களும் மோதிக்கொள்கின்றனவாம். எனில் டிரம்ப் எனும் நபரின் நலன்கள் ஏன் அதிபர் என்ற வகையில் முரண்படவேண்டும்? அதாவது அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவரது தனிப்பட்ட நடவடிக்கையில் வர்த்தகம் சார்ந்தவை இருக்க கூடாதாம்.
டொனால்ட் டிரம்ப்
இது குறித்து எதிர்வினையாற்றிய டிரம்ப் முதலில், நலன்களின் முரண்களைச் சுட்டிக் காட்டுபவர்களை கடுமையாக தாக்கி, முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்து வந்தார். “தேர்தலுக்கு முன்னரே உலகம் முழுவதும் உள்ள எனது சொத்துக்களில் எனக்கிருக்கும் நலன்கள் அனைவரும் அறிந்தது தான். சில நேர்மையற்ற ஊடகங்கள் தான் தேவையில்லாமல் பிரச்சனையை பெரிதாக்குகின்றன” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் டிரம்ப் கருத்திட்டிருந்தார்.
பின்னர் தனது வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் துண்டித்துக் கொள்ளப்போவது தொடர்பாக டிசம்பர் 15 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று வரை நடைபெறவில்லை. ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் அச்சந்திப்பு ஜனவரிக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
தனது நிலைப்பாட்டை சிறிது மாற்றிக் கொண்டதாக அவர் காட்டிக் கொண்டாலும், சட்டவிதிகளின் அடிப்படையில் வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் துண்டித்துக் கொள்ள தனக்கு எந்த கட்டாயமும் இல்லை என்பதை சுட்டிகாட்டி வலியுறுத்தி வருகிறார். அதாவது, நலன்களின் முரண் தொடர்பான அமெரிக்க சட்டத்தில் அதிபருக்கு விலக்கீட்டு உரிமை (Impunity) இருப்பதாக அவர் கூறுகிறார். எனவே அவர் சொல்லும் எதுவும் நடைமுறைக்கு வரப்போவதில்லை என்பதை இது காட்டுகிறது.
வானளாவிய உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் கோல்ப் மைதானங்கள், ஆண்கள் ஆடைகள், தளவாடங்கள் மற்றும் உலகம் முழுவதும் அவரது தனிப்பட்ட ”பிராண்ட்”டுக்கான உரிமம் ஆகியவற்றை உள்ளடக்கியது டிரம்ப்பின் மீப்பெரும் வணிக சாம்ராஜ்யம். இது வணிகம் மற்றும் அரசியலுக்கிடையில் முடிவற்ற பின்னல்களைக் கொண்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கும், அவற்றின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் நன்கொடைகள் அளிப்பதன் மூலம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும், செல்வந்தர்களும் அரசியல் மற்றும் கொள்கை முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதையே அமெரிக்கர்கள் அரசியலில் ஊழல் எனக் குறிப்பிட்டு வந்துள்ளனர்.
ஆனால், டிரம்ப்பின் நிர்வாகம் இவற்றைத் தாண்டி மிக நேரடியான ஊழல் வகை அபாயத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது, இங்கே தேர்தல் பிரச்சாரத்திற்கு நன்கொடை பெறுவது என்பதையும் தாண்டி அதிபரின் சொந்த தனிப்பட்ட செல்வக்கொழிப்பு (Personal Enrichment) என்ற அபாயத்தைக் கொண்டிருக்கிறது. எனினும் சட்டப்படியே இந்த தனிப்பட்ட செல்வக் கொழிப்பு சரிதான் என்று நிறுவுவதே டிரம்பின் விருப்பம். ஊழலை சட்டபூர்வமாக்கி, கையூட்டையும், கழிவையும், தரகர் வேலைகளையும் வர்த்தக சேவை என்று மாற்றிய பிறகு முதலாளித்துவம் தன்னைக் ‘கற்புக்’கரசனாக பிரச்சாரம் செய்ய முடியாது. செய்தால் அது நலன்களின் முரண் அல்ல, முரண்களின் நகை.
இந்த ஊழல்கள், நலன்களின் முரண்கள் இல்லாதபோதும் கூட அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள், முதலாளிகளின் உள்நாட்டு மற்றும் ஏகாதிபத்திய நலன்களுக்கு உகந்த வகையில் மட்டுமே அமெரிக்க அரசின் அரசியல், கொள்கை முடிவுகள் நடைமுறை படுத்தப்படுகின்றன.
அதாவது, இதுவரை கோட்டு சூட்டு கனவான்கள் அமெரிக்க அதிபராக கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை செய்த ’பாரம்பரிய மரபு’ போய், ஒரு கார்ப்பரேட் முதலாளியே நேரடியாக அதிபராகியிருக்கிறார். அதிலும், ட்ரம்பை போன்ற ஒரு பொறுக்கி அதிபராகியிருப்பது அமெரிக்க ஜனநாயகத்தை முற்றிலும் அம்மணமாக்கி விட்டிருக்கிறது. அதனால் தான் முதலாளித்துவ பத்திரிக்கைகள் நலன்களின் முரண்களைக் குறித்து ஒப்பாரி வைக்கின்றன. அந்த ஒப்பாரி ஏகாதிபத்திய நலன்களை நல்லதென்று அங்கீகரிக்கும் வரை பலருக்கும் ஆணவச் சிரிப்பாகவே தோன்றும். எனினும் இந்த நலன்களின் முரண்கள் குறித்து அவர்கள் அழுவதை அப்படி முழுவதுமாக அலட்சியம் செய்து விடமுடியாது. அதன்படி டிரம்ப் சார்பாக எழுந்திருக்கும் இந்த நலன்களின் முரண்களை முதாலளித்துவத்தின் போட்டியாகவும் பார்க்கலாம். இறுதியில் அவர்கள், அவர்களே சொல்லிக் கொள்ளும் ஜனநாயகத்தின்படி கூட வாழ முடியவில்லை. இந்த இலட்சணத்தில் முதலாளித்துவ தாசர்கள் அனைவரும் விரதமிருந்து மலையேறுவதால் பயனில்லை.
இனி நலன்களின் முரண்களைப் பார்ப்போம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நலன்களுக்கிடையிலான முரண்கள் :
பொது சேவைகள் நிர்வாகம் (General Services Administration): முரண்களில் ஒன்று வெள்ளை மாளிகைக்கு மிக அருகிலேயே இருக்கும் வாசிங்டன் டிரம்ப் சர்வதேச விடுதி (Trump International Hotel, Washington DC). 2013-ம் ஆண்டு டிரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் டிரம்ப் குழுமம் அமெரிக்க மைய அரசிடமிடுந்து பழைய தபால் அலுவலக கூடத்தை (Old Post Office Pavilion) குத்தகைக்கு எடுத்துள்ளது. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசு அதிகாரியும் இந்த குத்தகையில் பங்கு வைத்திருப்பதையோ அல்லது அதிலிருந்து ஆதாயமடைவதையோ அதன் ஒப்பந்த விதிகள் தடை செய்கின்றன.
பழைய தபால் அலுவலகம் பெவிலியன் குத்தகையை கண்காணிக்கும் பொறுப்பு பொது சேவைகள் நிர்வாக அமைப்பிடம் இருக்கிறது. டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றதும் அமெரிக்க அரசு மாற்றத்தின் பகுதியாக இவ்வமைப்பின் தலைவரை நியமனம் செய்யவிருக்கிறார்.
அதிபரின் குடும்பத்தினருடன், குத்தகை விதிகள் குறித்து மறுபேச்சு (Renegotiation) நடத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு பொது சேவைகள் நிர்வாகம் தள்ளப்படும்.
தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியம் (National Labor Relations Board): லாஸ் வேகாஸ் டிரம்ப் விடுதியின் பெரும்பான்மை தொழிலாளிகள் அங்கத்தினராக உள்ள தொழிற்சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்த மறுத்த பிரச்சினையில் சென்ற நவம்பர் மாதம் தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியம் டிரம்ப் விடுதி நிர்வாகத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது.
இப்போது புதிய அரசில் தேசிய தொழிலாளர் வாரியத்தின் உறுப்பினர்கள் ஐவரில் காலியாக இருக்கும் இருவரை நியமிக்கும் பொறுப்பில் இருக்கிறார் டொனால்ட் டிரம்ப். மேலும் அடுத்த 2017 நவம்பரில் இவ்வாரியத்தின் சட்ட ஆலோசகரின் (General Counsel) பதவிக்காலம் முடிவடையவுள்ளது. புதிய ஆலோசகரை நியமிக்கும் அதிகாரமும் ட்ரம்பின் கையில் தான் இருக்கிறது.
இவ்வாரியத்தின் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் டிரம்ப் குழுமம் மேல்முறையீடு செய்துள்ளது. அவ்வழக்கில் டிரம்ப்பால் நியமிக்கப்படுபவர்கள் டிரம்ப் குழுமத்தை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்படும்.
அமெரிக்க நீதித்துறை (Department of Justice -DoJ):டாயிஷே வங்கி தனது கடன் பத்திரங்களை (mortgage securities) கைமாற்றியதில் செய்த முறைகேடுகளும் 2008 பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது. இதை விசாரித்த அமெரிக்க நீதித்துறை (Department of Justice -DoJ) 2016-ம் ஆண்டு செப்டம்பரில் டாய்ஷே வங்கிக்கு 14 பில்லியன் டாலர் (92,400 கோடி ரூபாய்) அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
அபராதத் தொகையை குறைக்க அமெரிக்க நீதித்துறையுடன் டாய்ஷே வங்கி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. உடன்பாடு எட்டப்படாத நிலையில் ட்ரம்பின் அரசிலும் பேச்சுவார்த்தைகள் தொடரும். இப்பேச்சுவார்த்தைகள் அமெரிக்க தலைமை வழக்குரைஞரின் மேற்பார்வையில் நடக்கும்.
ட்ரம்பிற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் டாய்ஷே வங்கியின் முக்கிய கடனாளிகளாக உள்ளனர். சுமார் 2.5 பில்லியன் டாலர் (16250 கோடி ரூபாய்) அளவிற்கு டிரம்ப் குழும நிறுவனங்கள் டாய்ஷே வங்கியிடமிருந்து கடன் பெற்றுள்ளன.
இந்நிலையில், புதிய அரசுத் தலைமை வழக்குரைஞரை (அட்டர்னி ஜெனரலை) நியமிக்கும் அதிகாரமும், அமெரிக்க நீதித்துறையை மேற்பார்வையிடும் அதிகாரமும் அதிபராகப் பொறுப்பேற்கும் டிரம்ப்பிடம் உள்ளது.
பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம்(Securities and Exchange Commission): நியூயார்க்கின் வால் வீதியில் எண் 40-ல் இருக்கும் 72 மாடி கட்டிடம் ட்ரம்புக்கு சொந்தமானது. இதை டிரம்ப் குழுமம் பல்வேறு நிதி சூதாட்ட நிறுவனங்களுக்கு அலுவலக குத்தகைக்கு விட்டுள்ளது. பங்கு பத்திர மோசடிகள் தொடர்பாக இக்கட்டிடத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய குடியிருப்போருக்கு எதிராக ஐந்திற்கும் மேற்பட்ட அரசாங்க விசாரணைகள் நடந்து வருகின்றன.
இவ்விசாரணைகளை பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் மேற்கொள்கிறது. டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றதும் ஆணையத்தின் புதிய தலைவரை நியமிக்கவிருக்கிறார்.
உள்துறை (Interior department – DoI): அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாநிலத்தில் சுமார் 18,000 கோடி ரூபாயில் டகோட்டா ஆக்சஸ் பைப்லைன் எண்ணெய் திட்டம் வர இருக்கிறது. இத்திட்டம் நிறைவேறினால் தங்களது நீர் வளம், நில வளம் அழிக்கப்படும் என அங்குள்ள பூர்வகுடி மக்கள் போராடி வருகிறார்கள்.
இத்திட்டத்தை நடைமுறைப் படுத்தும் நிறுவனத்தில் சுமார் ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ. 6,50,00,000) டிரம்ப் முதலீடு செய்துள்ளார். டிரம்ப் தனது பங்குகளை விற்றுவிட்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் சொன்னாலும், டிரம்ப் பங்குதாரராக இருக்கும் மற்றொரு நிறுவனமான ’பிலிப்ஸ் 66’ டகோட்டா பைப்லைன் திட்டத்தில் சுமார் 25% பங்குகளை வைத்திருக்கிறது.
மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து அமெரிக்க உள்துறை தற்காலிகமாக திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்க அரசு மாற்றத்தில் டிரம்ப் உள்துறை செயலரையும் நியமிக்கவிருக்கிறார்.
இரகசிய சேவை அமைப்பு (Secret Services): அமெரிக்க அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாக்கும் கடமையை செய்வது இரகசிய சேவை அமைப்பு (Secret Services). அமெரிக்க அதிபர் வேட்பாளரையும் பாதுகாக்கும் கடமையையும் இவ்வமைப்புக்கு உள்ளது.
டிரம்ப் அதிபர் வேட்பாளராக பிரச்சாரத்திற்கு சென்ற போது அவரது டிரம்ப் ஏரோப்பிளேன் கம்பெனியின் (TAG Air) விமானத்தில் சென்றார். அவரது பாதுகாப்பிற்காக இரகசிய சேவை அமைப்பினரும் உடன் சென்றனர். இதற்கு டிரம்ப்பின் விமானக் கம்பெனி இரகசிய சேவை அமைப்பிடம் கட்டணம் வசூலித்திருக்கிறது.
டிரம்ப் அதிபர் பதவியேற்ற பின் அவர் அமெரிக்க விமானப்படையின் ‘ஏர்போர்ஸ் ஒன்’ விமானத்தை பயன்படுத்துவார். ஆனால் அவரது குடும்பத்தினர் டிரம்ப் ஏரோப்பிளேன் கம்பெனியின் (TAG Air) விமானத்தை பயன்படுத்தலாம். அவர்களை பாதுகாக்க அதில் இரகசிய சேவை அமைப்பினரும் பயணிக்க நேரிடும். இரகசிய சேவையினர் தமது அப்பயணத்திற்கு டிரம்ப்பின் விமானக் கம்பெனிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வகையில் டிரம்ப் குடும்பத்தை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் பயணத்தின் கட்டணத்தை டிரம்ப் குடும்பத்திற்கே செலுத்த வேண்டும்.
வெளிநாடுகளில் : இவை தவிர டிரம்ப் குழுமத்தின் 111 நிறுவனங்கள் 18-க்கும் மேற்பட்ட நாடுகளில் வணிக நடவடிக்கைகளில் பங்குதாரராக, நலன் பெறுபவையாக இருக்கின்றன.
இந்திய முதலாளிகளான அதுல் மற்றும் சாகர் சோர்டியா சகோதரர்கள் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவரை சந்தித்துள்ளனர்.
இந்தியாவில் டிரம்ப் பிராண்டுக்கான உரிமத்தை பெற்று இந்திய தரகு முதலாளிகள் கட்டுமான திட்டங்களை செயல்படுத்துகின்றனர். ட்ரம்பின் பிராண்டில் ஐந்து அதி ஆடம்பர அடுக்குமாடி திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன. அதில் மும்பையைச் சேர்ந்த லோதா குழுமம் கட்டிவரும் அதி ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பும் ஒன்றாகும். இந்த லோதா குழுமத்தின் தலைவர் மங்கள் பிரபாத் லோதா, மராட்டிய பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர்.
பூனே நகரில் டிரம்ப் டவருக்கான (Trump Tower, Pune) நிலம் போலியான ஆவணங்களை தயாரித்து கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக விசாரனையில் இருக்கிறது. பூனே டிரம்ப் டவர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிவரும் இந்திய முதலாளிகளான அதுல் மற்றும் சாகர் சோர்டியா சகோதரர்கள் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவரை சந்தித்துள்ளனர். தங்களுக்கிடையிலான வணிகம் இனி சிறப்பாக தொடருமென்றும் டிரம்ப் இவர்களுக்கு உறுதியளித்துள்ளார். டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதை அடுத்து ’டிரம்ப் பிராண்டு’க்கான மவுசு அதிகரித்துள்ளதாக பிரணவ் பக்தா என்ற கட்டுமானத் துறை ஆலோசகர் தெரிவிக்கிறார்.
மேற்சொன்ன நலன்களின் முரண்கள் சில வகைமாதிரிகள் மட்டுமே. டிரம்ப் தன்னுடைய வருமான வரி விவரங்களையோ அல்லது தனது கடன்களை பற்றிய தகவல்களையோ வெளியிட மறுக்கிறார். அதோடு யார் உரிமையாளர் என எளிமையாக கண்டறிய முடியாத வகையில் கம்பெனிகளுக்கிடையிலான வலைப்பின்னலைக் கொண்ட தனது வணிக சாம்ராஜ்ஜியத்தை அவர் கட்டியமைத்துள்ளார். அதனால் இந்தச் சிக்கலின் முழுப் பரிமாணத்தை நாம் அறிய முடியாது.
பூனேவில் உருவாகும் டிரம்ப் டவர்
ஒருவேளை, அவரே கூறிக்கொள்வது போல தனது வணிக நடவடிக்கைகளில் இருந்து துண்டித்து கொண்டு அவற்றின் கடிவாளத்தை தனது குழந்தைகளிடம் ஒப்படைப்பதாக இருந்தாலும், இந்த நலன்களின் முரண்கள் தீர்ந்து விடப்போவதில்லை.
டிரம்ப் தனது வணிக நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொண்டு ஐவான்கா, டொனால்ட் ஜூனியர் மற்றும் எரிக் ஆகிய தனது பிள்ளைகளிடம் அதை ஒப்படைக்கப் போவதாக சொல்லிவருகிறார். புதிய அதிபர் பொறுப்பேற்கவுள்ள நிலையில், அமைச்சரவை மற்றும் அதிகாரிகள் நியமனங்களில் அறிவுரை வழங்கும் அரசு மாற்ற குழுவில் (Transition Team) ஐவான்கா, டொனால்ட் ஜூனியர் மற்றும் எரிக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மேலும், வெளிநாட்டு தலைவர்களுடனான டிரம்ப்பின் சந்திப்பிலும் அவர்கள் பங்கேற்கின்றனர்.
டிரம்ப்பின் பல வணிகங்கங்கள் ‘டிரம்ப்’ பெயரைக் கொண்டுள்ளன. அவரது வணிக நடவடிக்கைகள் அவரது பெயரைக் கொண்டிருக்கும் வரை, அவற்றில் அவருக்கோ, குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது அவரது வேண்டப்பட்டவர்களுக்கோ பங்குகள் இருக்கும் வரை இம்முரண்கள் தீர்க்கப்படாது என்பதை பல முதலாளித்துவ பத்திரிக்கைகளே சுட்டிக்காட்டி வருகின்றன.
அமெரிக்க சட்டத்தின் படி அரசுப் பதவியில் இருப்பவர்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளைப் பெற முடியாது. இனி அமெரிக்க அரசின் கொள்கை முடிவுகளால் பலன் அடைபவர்கள் “டிரம்ப்” பிராண்டுக்கான உரிமத்தை பெற்று டிரம்ப்புக்கு ’நன்றிக் கடன்’ தீர்க்கலாம். அல்லது அமெரிக்க அரசு அதிகாரத்தையும், இராணுவ பலத்தையும் பயன்படுத்தி வெளிநாடுகளில் டிரம்ப் குழுமம் தனது வர்த்தகத்தை வளர்த்துக் கொள்ளலாம். இது போன்ற எண்ணற்ற முடிவில்லா ‘வாய்ப்புகளை’ கொண்டிருக்கிறது ட்ரம்பின் அரசு நிர்வாகம்.
அமெரிக்க நாட்டு நலன்களுக்கும், டிரம்ப் குழும நிறுவனங்களின் நலன்களுக்கும் இடையிலான முரண்களை தான் நலன்களின் முரண் என்று மேற்கத்திய பத்திரிக்கைகள் சுட்டிக்காட்டி வருகின்றன. இங்கு அமெரிக்க நாட்டு நலன் என குறிப்பிடப்படுவது அமெரிக்க முதலாளிகள் மற்றும் ஆளும் வர்க்கங்களின் ஏகாதிபத்திய நலன்களே அன்றி சாதாரண அமெரிக்க மக்களின் நலனை அல்ல. ஏகாதிபத்திய நலன்களும், டிரம்ப் குழும நலன்களும் ஒத்திசைவாக செயல்படுவதற்கே அதிக சாத்தியமுள்ளது.
ஆக, முதலாளித்துவ பத்திரிக்கைகள் கூறிவருவது போல டிரம்ப்பின் நலன்களுக்கிடையான முரண்கள் தீர்க்கப்பட்டாலும் கூட அமெரிக்க மக்களுக்கோ, உலக மக்களுக்கோ அதனால் விடிவு கிட்டப்போவதில்லை.
2017 புத்தாண்டும் இந்திய இளைஞர்கள் சிலரின் நினைவுகளும் – பாகம் 2
முசாபர்நகர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களைச் சுற்றி சிறு நகரங்கள், கிராமங்கள் எனப் பரவலாக நடந்த கலவரங்களில் சுமார் 50,000 முசுலீம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
லோமன்: ஏன் எங்களுக்கு வேலை கொடுக்க கூடாது ? நாங்கள் போய் விடுகிறோம். படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
2017ல் ஒரு வேலை கிடைத்து விடும் என்பது லோமன் அலியின் நம்பிக்கை. வேலைக்குக் கிடைக்கும் சம்பளப் பணம் உதவியாக இருக்கும் என்பதைத் தாண்டி, அவரது காதலியைத் திருமணம் செய்ய கட்டாயம் ஒரு வேலை செய்தாக வேண்டும். காந்தலாவில் நடந்த திருமணம் ஒன்றில் வைத்துத் தான் அந்தப் பெண்ணை லோமன் பார்த்துள்ளார்; பிறகு கண்டதும் காதல் தான்.
லோமனுக்கு இரண்டு மூத்த சகோதரர்கள். அவர்கள் இருவருக்குமே திருமணமாகி விட்டது. இருவருக்குமாகச் சேர்த்து மொத்தம் ஐந்து குழந்தைகள். லோமனும் அவரது தந்தையும் கைரானாவில் முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கென கட்டப்பட்ட நாகித் காலனியில் உள்ள ஒரே சிறிய அறையில் வசிக்கிறார்கள். அந்தச் சின்ன அறைக்குள் தந்தையுடன் அடைந்துள்ள தன்னால் காதலியுடன் மனம் விட்டுப் பேசக் கூட முடியாது என்கிறார் லோமன்.
லோமனைப் போலவே அவரது காதலிக்கும் 17 வயது தான்; தன்னால் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள முடியுமா என்பதைப் பற்றிக் கூட அவருக்குத் தெரியவில்லை. தனது வயதை நிரூபிக்க எந்த ஆவணமும் இல்லை என்பதாலேயே சட்டச் சிக்கல் ஏதும் வராது என அவர் கருதுகிறார். கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவரது பூர்வீக கிராமமான புகுனாவைச் சேர்ந்த யாராலும் லோமனின் சரியான வயதைச் சொல்ல முடியவில்லை. தோராயமாக 17 இருக்கலாம் என்றே நினைக்கின்றனர்.
”எனது இரண்டாவது பிறந்த நாளன்று எனது தாயார் இறந்து போனார். அது ஒரு கோடைக் காலம் என்பது மட்டும் தான் தந்தைக்கு நினைவில் உள்ளது” என்கிறார் லோமன்.
கைரானாவில் இருந்து 17 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இந்தக் காலனிக்கு இரண்டு வருடங்களுக்கு முன் அந்தக் குடும்பம் இடம் பெயர்ந்துள்ளது. லோமனின் சகோதரர்களும் அருகிலேயே வசிக்கிறார்கள்.
கலவரம் வெடித்த போது ஒன்பதாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன. கலவரத்தில் லோமனின் மாமா கொல்லப்பட்டிருக்கிறார். லோமன் பள்ளியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது அவரது இந்து நண்பர்களே தாக்கியுள்ளனர். ”அதன் பின் அந்த கிராமத்துக்கு நான் மீண்டும் செல்லவே இல்லை” என்கிறார் லோமன். நாகித் காலனியில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் கூலி வேலைகளே செய்கின்றனர்; அதுவும் தொடர்ச்சியாக கிடைப்பதில்லை.
முசுலீம்களின் கொடுமை தாங்காமல் கைரானாவில் இருந்து இந்துக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்று பா.ஜ.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஹுக்கும் சிங் தெரிவித்த கருத்து தங்களுடையதை போன்ற கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இழிவு படுத்துவதென்கிறார் லோமன். ”அவர்கள் எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும், எங்கள் வாழ்க்கையை சீரழிக்க கூடாது. இங்கே யாரால் வாழ முடியும்? இது ஒரு நரகம். அவர்கள் எங்களுக்கு வேலை ஏற்பாடு செய்து கொடுக்கலாமே? அப்படிச் செய்தால் அவர்கள் விரும்பும் இடங்களுக்கு நாங்கள் போய் விடுகிறோம்”.
2013-ம் ஆண்டுக்குப் பிந்தைய வாழ்க்கையில் தனது காதலியைப் பார்த்த நிகழ்வு ஒன்று தான் முக்கியமானது என்கிறார் லோமன். கைரானாவில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து சுமார் 30,000 வரை சேமித்துள்ளார் லோமன். அந்தப் பணத்தில் வாங்கிய வேனில் தான் தனது காதலியை முதன் முறையாகச் சந்தித்த திருமணத்திற்குச் சென்றுள்ளார். ”எனது வெள்ளை வேனையும், வெள்ளைச் சட்டையையும் அவளுக்குப் பிடித்துப் போய் விட்டது” எனச் சிரிக்கிறார் லோமன்.
”அவளது அப்பா அவளுக்கு மாப்பிள்ளை தேடி வருகிறார். அவள் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறாள். நானோ அந்தளவுக்குப் படிக்கவில்லை. ஆனால், சம்பாதிக்கத் துவங்கி விட்டேனென்றால் அவளது தந்தை அவளை எனக்கு மனமுடித்துக் கொடுத்து விடுவார். நான் எனது வாழ்க்கையில் நிறைய இழந்து விட்டேன்… அம்மா, வீடு, மாமா… இனி அவளாவது கிடைக்க வேண்டும்” என்கிறார் லோமன்.
ஒதிஸா : எனது பள்ளிக்கு எப்போது சாலை போடுவார்கள்?”
கான்ச்சன் ஹரிஜன் : இவர் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்று விட்டு ஒடிஸாவில் உள்ள தனது கிராமத்தில் ஆசிரியையாக பணிபுரிய விரும்புகிறார்.
எங்களது கிராமத்திலிருந்து பள்ளிக்கு எப்போது தரமான சாலைகள் அமைத்து பேருந்து வசதி செய்து கொடுப்பார்கள்? படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஒடிஸாவின் நப்ரங்பூர் மாவட்டத் தலைநகரில் அமைந்துள்ள அந்த அரசு மருத்துவமனையில் உள்ள பெண்களுக்கான அழுக்கடைந்த வார்டில் உள்ள படுக்கையில் தனது சகோதரி ராஷ்மிதா ஹரிஜனுடன் அமர்ந்துள்ளார் கான்ச்சன் ஹரிஜன். உதவிக்கு இருப்பவர்களுக்கென தனியே இருக்கைகள் இல்லையென்பதால் அவர்களது 45 வயதான தந்தை பரமானந்தா ஹரிஜன் அருகில் தரையில் குந்த வைத்து அமர்ந்துள்ளார்.
ராஷ்மிதாவுக்கு அறிவாள் செல் அனீமியா (Sickle cell anaemia) என்கிற நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நாளான டிசம்பர் 14-ம் தேதியில் இருந்து இவர்கள் மருத்துவமனையில் தான் இருக்கின்றனர். தனது காலை நேர பணிச்சுற்றுக்காக வந்த மருத்துவர் பிரியரஞ்சன் பகாலி, ராஷ்மிதாவுக்கு சிவப்பணுக்கள் சராசரியான அளவில் பாதி (6 gm/dl) தான் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
12-ம் வகுப்பில் கலைப் பிரிவை எடுத்துப் படித்து வரும் கான்ச்சன், பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பது வருத்தமளிப்பதாகத் தெரிவிக்கிறார். ”ஆண்டு இறுதித் தேர்வுகள் மார்ச்சில் வருகிறது. ஒரு நாள் கூட பள்ளிக்கு விடுப்பு எடுக்கக் கூடாது” என்கிறார் கான்ச்சன். அவரது பெற்றோருக்கு கான்ச்சன் தவிர இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். மொத்தம் ஐந்து பேர் கொண்ட அந்த தலித் குடும்பத்தில் கான்ச்சன் மட்டுமே அதிகம் படித்தவர்.
இரண்டாண்டுகளுக்கு முன் பத்தாம் வகுப்பில் 56 சதவீத மதிப்பெண்களுடன் கான்ச்சன் தேறியவுடன், அவரைத் தனியார் மேல்நிலைப் பள்ளியொன்றில் சேர்த்துள்ளார் அவரது தந்தை. ஒவ்வொரு மாதமும் கல்விக் கட்டணமாக தனது தந்தை நூறு நாள் வேலைத் திட்டத்தில் கூலியாக உழைத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே தனது மாதாந்திர பள்ளிக் கட்டணம் 2,200 ரூபாயைக் கட்டுகிறார் என்பது கான்ச்சனுக்குத் தெரியும்.
அவர்களது கிராமத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நப்ரங்பூரில் உள்ள தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கான உறைவிடப் பள்ளியின் விடுதியில் ராஷ்மிதா தங்கிப் படிக்கிறார். ”அவளுக்கு சுத்தமாக முடியாமல் போய் விட்டது. அந்த விடுதியில் இருந்தி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் தான் அழைத்து வந்தோம்” என்கிறார் கான்ச்சன். அவர்களது கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த வசதிகளும் இல்லையென்பதால் மாவட்டத் தலைநகரில் உள்ள பெரியாஸ்பத்திரிக்கே வந்தாக வேண்டும்.
இந்தியாவின் வறுமையான மாவட்டங்களில் ஒன்றான நப்ரங்க்பூரில் ஆம்புலன்சு வண்டிகள் மிகவும் அரிது. ராஷ்மிதாவுக்கு அதிர்ஷ்டம் இருக்கவே அவருக்கு ஆம்புலன்சு கிடைத்துள்ளது. இதே ஒதிஸாவின் காலாஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த தானா மாஜி கடந்த ஆகஸ்டு மாதம் தனது மனைவியின் இறந்த உடலைச் சுமந்து செல்ல பிண வண்டி கிடைக்காமல் தலைச் சுமையாக தூக்கிச் சென்றது தேசிய ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டது உங்களுக்கு நினைவிருக்கும்.
ஆனால், 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தனது பள்ளிக்குப் போதுமான பேருந்து வசதி இல்லை என்பதே கான்ச்சனுக்கு உள்ள பெரிய கவலை. பத்து ரூபாய் செலவாகும் அந்த முப்பது நிமிட பயணத்தில் உட்கார இடம் கிடைப்பது மிகவும் அரிது. ”பேருந்தில் பயங்கர கூட்டமாக இருக்கும். அங்கும் இங்கும் அழைக்கழிக்கப்பட்டு நசுக்கப்படுவது பெரிய வலி” என்கிறார் கான்ச்சன்.
பயணத்திலும் குடும்பத்தின் பொருளாதார நிலையிலும் உள்ள சிரமங்களைப் பார்த்த பின், மாலை நேர டியூசன் செல்லும் தனது திட்டத்தை கான்ச்சன் கைவிட்டுள்ளார். “எங்களது கிராமத்திலிருந்து பள்ளிக்கு எப்போது தரமான சாலைகள் அமைத்து பேருந்து வசதி செய்து கொடுப்பார்கள்?” என்கிறார் கான்ச்சன்.
இரண்டு வருடங்களுக்கு முன் பக்கத்து மாவட்டமான கோராபுட்டில் உள்ள சிவன் கோயிலுக்கு தனது மாமாவுடன் சென்றது தான் தனது ஒரே வெளியூர் பயணம் என்கிறார் கான்ச்சன். ஆனால், பூரி ஜெகன்னாதரை அதற்கு முன்பே பார்த்து விட வேண்டுமென்பது அவரது கனவு. மார்ச்சில் வரும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் வென்ற பின் பொருளாதாரத்தில் இளங்கலையும் அதன் பிறகு முதுகலையும் படிக்க வேண்டும் என்பது கான்ச்சனின் ஆசை.
படித்து முடித்த பின் தனது கிராமத்துக்குத் திரும்பி அங்கே அவருக்குப் பிடித்த அறிவியல் ஆசிரியரைப் போலவே தானும் ஒரு ஆசிரியையாக வேண்டும் என விரும்புகிறார். “அவர் மிகவும் நல்லவர், எங்களைக் கடிந்து கொண்டதே இல்லை” என்று தனது ஆசிரியரைப் பற்றிக் கான்ச்சன்.
விவசாயிகள் மரணத்திற்கு தேவை நிவாரணம் மட்டுமல்ல – நீதி வேண்டும்!
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இரண்டு நாள் தொடர் போராட்டம்!
தண்ணீர் இன்றி தமிழகத்தில் நிலவும் வறட்சியால் விவசாயிகள் கொத்துக் கொத்தாக மடிந்து வருகிறார்கள். தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மரணத்தின் கோரப்பிடியில் உள்ளனர். இந்நிலையில் காவிரி பொய்த்து, கொள்ளிடம் பகுதியில் நடக்கும் மணற்கொள்ளையால் தண்ணீர் மட்டம் குறைந்து காவிரி டெல்டா பகுதியான தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் நெற்பயிர்கள் கருகிப்போனதையொட்டி, ஆற்றுமணலை அள்ளாதே, தண்ணீரின்றி காயவைத்து எங்கள் பெற்றோரை கொல்லாதே, விவசாயிகள் மரணத்திற்கு நிவாரணம் மட்டுமல்ல, நீதி வேண்டும் ! என்றும் விவசாயிகள் படுகொலைக்கு காரணமான மோடி அரசுக்கு எதிராக – தமிழக அ.தி.மு.க மன்னார்குடி மாஃபியா கும்பலுக்கு எதிராக அமைதி காக்காமல் களத்தில் இறங்கி போராட வேண்டும் என்று புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் மாணவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
வரலாறு காணாத வகையில் தமிழகத்தில் நிலவும் வறட்சியால் அதிர்ச்சியாலும், மாரடைப்பாலும் செத்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் பிரச்சனையை திசை திருப்பும் வகையில் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழக ஓட்டுக்கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ஜல்லிக்கட்டு வேண்டும் என்று மல்லுகட்டுகிறார்கள். குறிப்பாக இந்த விவசாயிகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாத இந்த கேடுகெட்டவர்கள் வீரத்தின் அடையாளமாக ஜல்லிக்கட்டை முன்னிறுத்தி மாணவர்கள், இளைஞர்களை இந்த அற்பத்தனமான, ஆபத்தான கருத்தில் மூழ்கடிக்கடிக்க முயற்சிக்கிறார்கள். கும்பகோணம் கலைக் கல்லூரியில் படிக்கும் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த ஒரு மாணவர் ஜல்லிக்கட்டுக்காக போராட வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தவும் முயற்சித்தார். ஆனால் பெரும்பான்மையான மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகத்தான் போராட்டம் நடத்த வேண்டும் என்று உறுதியாக நின்றனர்.
விவசாயிகள் செத்துக்கொண்டிருக்கும் போது ஜல்லிக்கட்டு கொண்டாட்டம் எதற்காக வேண்டும் என்று பல மாணவர்கள் அந்த மாணவரிடம் கேள்வி எழுப்பினர். இறுதியாக அந்த மாணவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதுதான் முதன்மையானது என்று ஏற்று தனது கருத்தை மாற்றிக் கொண்டார். பின்னர், அரசுக் கலைக்கல்லூரி மாணவர் போராட்டக் குழு சார்பில் மாணவர்கள் விவசாயிகள் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று முழக்கம் எழுப்பி 9 ந்தேதி காலை சுமார் 8.30 மணிமுதல் போராட்டத்தை தொடங்கினர். சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்கு வெளியிலேயே நின்றனர். சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக போராட்டம் தொடர்ந்த பின்பு போலீசாரும், கல்லூரி துணை முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர்கள் சிலரும் சேர்ந்து மாணவர்களை மிரட்டி போராட்டத்தை கலைத்தனர். சூழ்நிலைமைக் கருதி தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்திக்கொண்டனர்.
ஆனால் போராட்டத்தை அடுத்தடுத்த நடத்த வேண்டும் என்ற கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை. அன்றைக்கே முன்னணி மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஜல்லிக்கட்டு பிரச்சனை இரண்டாம்பட்சமானது, விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுவதுதான் உடனடி அவசியமானது என்ற கருத்தின் அடிப்படையில் முடிவெடுத்து அடுத்த நாளும் போராட்டம் தொடரும் என்பதை மாணவர்களுக்கு அறிவித்தனர்.
அடுத்த நாள் 10 ந்தேதி காலை 8 மணிமுதலே போராட்டக்குழு மாணவர்கள் முன் நின்று மாணவர்களை ஒருங்கிணைத்தனர். சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்களை கல்லூரி வாயிலுக்குள் உள்ள ஆற்று பாலத்தில் அமர வைத்து விவாசாயிகளுக்கு ஆதரவான கோரிக்கைகள் அடங்கிய முழக்க அட்டைகளை பிடித்துக்கொண்டு,
நாட்டிற்கே சோறுபோட்ட விவசாயிகள் மடிகிறார்கள் ! மத்திய -மாநில அரசுகள் செய்யும் – இந்த படுகொலைக்கு எதிராக கிளர்ந்தெழுவோம்!
காவிரியை தடுத்து நிறுத்திய ஆற்று மணலை கொள்ளையடித்த பி.ஜே.பி – அதிமுக – ரெட்டி –ராவ் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்! அதிலிருந்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு! ஆற்று மணலை அல்லாதே – எங்கள் பெற்றோரை கொல்லாதே!
என்ற முழக்கங்களை கம்பீரமாக எழுப்பினர். கட்டுக்கோப்புடன் நடக்கும் மாணவர் போராட்டத்தை பார்த்த போலீசார் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து முதல் நாள் போல் மாணவர்களை மிரட்டியும், வகுப்புச் செல்ல விரும்பும் மாணவர்களை தடுக்கக்கூடாது என்று நைச்சியமாக பேசியும் போராட்டத்தை கலைக்க முயன்றனர்.
அந்த தருணத்தில் அங்கு மக்கள் உரிமைப்பாதுகாப்பு மைய வழக்கறிஞர் தமிழ்.ஜெயப்பாண்டியன், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் த. கணேசன் ஆகியோர் வந்தனர். பு. மா.இ. மு மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் போலீசின் சதித்தனத்தை முறியடிக்கும் வகையில் மாணவர்கள் போராட்டத்தை ஆதரித்தும், அச்சமின்றி தொடர்ந்து போராட வலுவூட்டியும் பேசினார். இதைப்பார்த்த பெரியசாமி என்ற போலீசு ஆய்வாளர் முதலில் வெளியில் இருந்து அமைப்பு தலைவர்கள் வந்து பேசக்கூடாது என்றார் . இது மாணவர் அமைப்பின் உரிமை என்றதும், மாணவர்கள் போலீசாரை எதிர்த்ததும் பின்னர் அமையாகிவிட்டார்.
அதைத்தொடர்ந்து மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினர். அப்போது கல்லூரி மாணவர்கள் போரட்டக்குழு வினரிடம் இப்போராட்டத்தை கல்லூரியை விட்டு வெளியில் பொதுமக்களிடமும் கொண்டு செல்ல வலியுறுத்தினோம். அதன்படி அம்மாணவர்கள்.
Ø தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் விவசாயிகளின் மரணத்தை தடுத்த நிறுத்த தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
Ø கடன் வாங்கி வைத்த நெற்பயிர் கண்முன்னே காய்ந்துபோனதை பார்த்து அதிர்ச்சியாலும், தற்கொலை செய்துகொண்டும் இறந்துள்ள விவசாயிகளின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
Ø அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
Ø கொள்ளிடம் பகுதியில் நடைபெறும் ஆற்றுமணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.
என்ற கோரிக்கைகளை முன்வைத்து மனு ஒன்றை தயாரித்துக்கொண்டு அருகில் உள்ள மாவட்ட துணை ஆட்சியரை சந்திக்கப்போகிறோம் என்று மாணவர்களிடம் அறிவித்து விட்டு கிளம்பினர். அரண்டு போன போலீசார் கும்பகோணம் நகர தாசில்தாரை வரவழைத்தார். சில அதிகாரிகளுடன் அங்கு வந்த தாசில்தாரும், போலீசாருடன் கூட்டு சேர்ந்து ஊர்வலம் செல்ல அனுமதியில்லை என்று கூறி மாணவர்களை மிரட்டினர். உங்கள் கோரிக்கை நியாயமானதுதான் வேண்டுமென்றால் 5 பேர் சென்று கொடுங்கள் என்றனர். அதோடு கூட்டத்தை நைச்சியமாக கலைக்கவும் செய்தனர். இதை முறியடிக்கும் வகையில் மாணவர்கள் கல்லூரிக்குள் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்திக்கொண்டு, கல்லூரிக்கு அருகில் இருந்த நீதிமன்ற வாயில் ஒன்று கூடி மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகம் செல்லும் வகையில் ஐந்து ஐந்து பேராக வெளியில் வர வந்தனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட துணை ஆட்சியரை சந்தித்து மனுவும் கொடுத்துவிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என்றும் அரிவித்தனர்.
போலீசார், தாசில்தார், கல்லூரி பேராசியர்கள் கூட்டு சேர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவான மாணவர் போராட்டத்தை சீர்குலைக்க எவ்வளவோ முயன்றனர். ஆனால் விவசாய பின்னணி கொண்ட டெல்டா மாவட்ட மாணவர்கள் தன்மானம், சுயமரியாதை கொண்டவர்கள் என்பதை தங்கள் உறுதியான இரண்டுநாட்கள் தொடர்ந்த போராட்டத்தின் மூலம் நிரூபித்து விட்டனர். நாட்டிற்கே சோறு போட்ட விவசாயிகள் செத்து மடிகிறார்கள் நமக்கென்ன பொங்கல் கொண்டாட்டம். விவசாயிகள் ஆதரவாக போரட்டம் நடத்திய முன்னுதாரமிக்க கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வழியைப் பின்பற்றி கும்பகோணத்தில் உள்ள பிற கல்லூரி மாணவர்களும் போரட்டக்களத்தில் இறங்க வேண்டும் என்று அறைகூவல்விடுத்து பு.மா.இ.மு கும்பகோணம் நகரம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. போரட்டம் தொடரும்.
தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, கும்பகோணம்.
___________________
அனுப்புநர்: அரசு கலைக்கல்லூரி மாணவர்கள்,
கும்பகோணம்.
பெறுநர்: துணை ஆட்சியர் அவர்கள்,
கும்பகோணம்.
பொருள்: வறட்சியால் உயிர்நீத்த விவசாயிகள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி….
ஐயா,
மேற்கண்ட கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் விவசாய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள். விவசாயிகள் வறட்சியாலும், கடன் நெருக்கடிகளாலும் தினம் தினம் உயிரிழந்து வருகின்றனர். பலி எண்ணக்கை 170-க்கும் மேல் சென்றிருப்பது அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. மணற்கொள்ளை, தண்ணீர் கொள்ளை, போன்றவற்றால் விவசாயம் அழிந்து வருகிறது. வைத்த பயிர் கண்முன்னே காய்ந்து போன துயரம் தாங்காமல் விவசாயிகள் மாரடைத்து சாவதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை அரசுக்குள்ளது. மேலும் ஏற்கனவே உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை காக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது. எனவே கீழ்க்கண்ட கோரிக்கைகளை எமது கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி சார்பில் உங்களிடம் வைக்கிறோம். அதனை பரிசீலனை செய்து உரிய முறையில் உடனடியாக நிறைவேற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறேம்.
இப்படிக்கு,
அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், கும்பகோணம்.
(மாணவர்களின் கையெழுத்து படிவம் இணைக்கப்பட்டுள்ளது.)
தூத்துக்குடி விவசாயிகளின் துயரம: ராம்கோ சிமெண்ட், ஸ்டெர்லைட், பவர் பிளாண்ட்கள் உருவாக்கும் பேரழிவு !
விவசாயிகளின் தற்கொலை என்பது இந்த அரசே நடத்தும் படுகொலை என்பதை புரியவைக்கும் விதமாக 500 சுவரொட்டியையும் போட்டு கையோடு கொண்டு சென்றோம்
தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் நெஞ்சு வலி என்று உயிரை விடுவதும் நடக்கத் தொடங்கியது. தொகுத்துப் பார்க்கையில் தமிழகத்தில் நூறைத் தாண்டி விவசாயிகளின் உயிரிழப்பு நடப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஏற்கனவே வட இந்தியாவில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ள புள்ளிவிவரம் நம்மை அச்சுறுத்தியது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட கிராமங்களை ஆய்வுக்குட்படுத்தி உண்மை நிலைமைகளை அறிந்துவர ஒரு குழுவாக விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் சார்பாக புறப்பட்டோம். ஏற்கனவே கிடைத்த விவரங்களிலிருந்து விவசாயிகளின் தற்கொலை என்பது இந்த அரசே நடத்தும் படுகொலை என்பதை புரியவைக்கும் விதமாக 500 சுவரொட்டியையும் போட்டு கையோடு கொண்டு சென்றோம். மாவட்டம் முழுக்க பரவலாக ஒட்டியுள்ளோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தென்பகுதியில் தாமிரபரணி ஓடுகிறது. வடக்கில் வைப்பாறு ஓடுகிறது. இந்த வைப்பாறை சுற்றியுள்ள விளாத்திக்குளம், நாகலாபுரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றோம். முதலில் தி.மு.க முன்னாள் கவுன்சிலரும் சுமார் 100 ஏக்கர் விவசாயம் செய்து வந்தவருமான, பூச்சிமருந்தடித்து தற்கொலை செய்துகொண்ட விவசாயி பவுன்ராஜின் ஊரான கம்பத்துப்பட்டி சென்றோம். செல்லும் வழியிலேயே ராம்கோ சிமெண்ட்டின் சுண்ணாம்பு சுரங்கங்கள் குவித்துள்ள கழிவுமண் மலைகளாக உயர்ந்து நின்ற பகுதிகளினூடாகவே சென்றோம். அக்கிராமத்தில் பெருவிவசாயி பவுன்ராஜின் வீடுகள் சுமார் ஆறடி உயரத்தில் தரைத்தளம் கொண்டு ஒரு சிறு அரண்மனையைப் போல கருங்கற்களால் இழைத்துக் கட்டப்பட்டிருந்தது. நெருங்கிப் பார்க்கையில் அதன் ஒரு பகுதியில் மட்டுமே பவுன்ராஜின் குடும்பத்தினர் வசித்து வருவதைப் பார்த்தோம். மிகப்பெரிய கூடம் அதை ஒட்டிய பகுதிகள் பூட்டியே போடப்பட்டிருக்கிறது. பராமரிப்பின்றி உள்ள அதில் வவ்வால்கள் அடைந்துள்ளன. கம்பத்துப்பட்டி கோயில் பூசாரி அவ்வீட்டைப் பற்றி வருத்தத்துடன் நினைவு கூர்ந்தார். “இந்த வூட்டுல ஒரு காலத்துல எப்பவும் அண்டா நிறைய கம்மங்கஞ்சி, கேப்பை கரைச்சு வெச்சிருப்பாங்க, எப்படியும் ஒரு வேளைக்கு 20, 30 பேராவது அவங்க வீட்டுக்கு வந்துட்டு, போயிட்டு இருப்பாங்க, யாரும் பசியோட திரும்பினது கிடையாது. ஆனா இன்னைக்கு விவசாயிகள் பிரச்சினைக்காக நீங்க ஒரு பத்து பேரு வந்துருக்கிறீங்க, உங்களுக்கு ஒரு வேள சோறு கூட போட முடியாத நிலம வந்துருச்சு, ஒரு வேளைக்கு அளவா ஒரு டம்ளர், ரெண்டு டம்ளர் அரிசிய போட்டு பொங்கித் திங்கிற நிலைமைக்கு வந்துட்டோம்’’ என்றார்.
கோயில் திருவிழாவுக்கு ஒற்றுமையா சேர முடியறப்போ விவசாயத்தை காக்க ஒண்ணு சேரமுடியாதா
இறந்து போன பவுன்ராஜின் உறவினர் அறிமுகமானார். அதன் மூலம் அருகிலுள்ள நடுக்காட்டூருக்கு அடுத்ததாய் சென்றோம். ஊருக்குள் நுழையும்போதே ஒலிப்பெருக்கியின் ஓசை வரவேற்றது. கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் களை கட்டியிருந்தது. சிறுவர்கள் மட்டுமே தெருவில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். ஆனால், பெரியவர்களோ, பெண்களோ முகத்தில் எவ்வித சந்தோசமுமின்றி ஒதுங்கியே வீட்டு வாசலில் நின்றிருந்தனர். ஒலிப்பெருக்கியின் ஓசை கேட்காத தொலைவு தள்ளிச் சென்று சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். ஒருவர் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கும் விவசாயம் செய்வதில் கடன் சுமை ஏறியுள்ளது. வேறு வழியின்றி ஆட்டோ ஓட்டி பிழைப்பை நடத்துகிறார். இவர் ஏற்கனவே சென்னை எம்.எப்.எல் மற்றும் வளைகுடா நாடுகள் என்று பிழைப்புக்காக ஒரு சுற்று சுற்றியவர். இன்று வேறு வழியில்லை, நம் ஊரில் குடும்பத்தோடு இருப்போம் என்று விவசாயத்தை நம்பி வந்துள்ளார். ஆனால், கடந்த பெருமழையும் இப்போதைய வறட்சியும் அவரது நம்பிக்கையை கருக்கி விட்டுள்ளது. எதனால் உங்களுக்கு கடன் சுமை ஏறியது என்று கேட்டபோது மழை பெய்யாததையே காரணமாக முன்வைத்தார்.
ஏன் மழை பெய்யவி்ல்லை என்ற கேள்விக்கு பெரும்பாலான விவசாயிகளிடம் எந்த பதிலும் இல்லை. நாம் இயற்கையை, சுற்றுச் சூழலை சூறையாடிய கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அதற்கு துணை போன அரசு அதிகாரிகளின் துரோகத்தைப் பற்றி சுவரொட்டியை ஒட்டி விட்டு விளக்கியபோது அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், இந்த கடனில் இருந்து மீண்டு வர அவர்கள் பெரிதும் நம்பி எதிர்பார்த்திருப்பது அரசைத்தான். இந்த அரசுதான் கொலைக் குற்றவாளி எனும்போது என்ன சொல்வதென்று தெரியாமல் வாயடைத்து நின்றனர். விவசாயிகளுக்காக எந்த ஒரு ஓட்டுக் கட்சியோ அல்லது சங்கங்களோ இப்பிரச்சினையில் நிவாரண உதவியைத் தாண்டி வேறு எதையும் முன்வைக்கவே இல்லை. நாம் கார்ப்பரேட்டுகள் மற்றும் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு இழப்பீடாக பங்கிட வேண்டும் என்பதை விளக்கியபோது, இது எப்படி நடக்கும் என்ற அவநம்பிக்கையே வெளிப்பட்டது. ”கோயில் திருவிழாவுக்கு ஒற்றுமையா சேர முடியறப்போ விவசாயத்தை காக்க ஒண்ணு சேரமுடியாதா ” என்று கேள்வி எழுப்பினோம்.
பொதுவாக விவசாயிகள் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து விடியும் முன் வேலையைத் தொடங்கி விடுகின்றனர். மாலை பொழுது சாய்ந்ததற்குப் பிறகே வீடு திரும்புகின்றனர். இவர்களுக்கு நாட்டில் நடப்பது குறித்து எதையும் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்ற கண்ணோட்டத்தில் உள்ளனர். அவசியமில்லாமல் கிராமத்தை விட்டு வெளியே செல்வதை தவிர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒரு கிராமத்தில் தினந்தோறும் தினசரி படிப்பவர்களை விரல்விட்டு எண்ணலாம். பிரச்சாரத்திற்கு சென்ற எங்களைக் கூட ஏதோ அதிகாரிகள்தான் நிவாரணம் தருவதற்காக கணக்கெடுக்க வந்துள்ளனர் என்று கருதிக் கொண்டு நெருங்கி வந்தனர். நாம் ஒற்றுமையாக போராடினால்தான் சுற்றுச் சூழலை, இயற்கையை பாதுகாக்க முடியும். விவசாயிகளை பாதுகாக்கவும் முடியும் என்று வலியுறுத்தும்போது அது சாத்தியமற்றதாக அவர்களுக்கு தெரிகிறது. “யாரு போராட்டத்துக்கெல்லாம் வருவாங்க, சம்சாரிங்கெள்லாம் சேர்ந்து கலெக்டர, ராம்கோ கம்பெனிக்காரன எதிர்க்குறதெல்லாம் நடக்காது, புடுச்சு உள்ளார வெச்சுருவானுங்க! அப்புறம் புள்ள குட்டிக்கு யாரு கஞ்சி ஊத்துவா’’ என்றனர். ”மருந்தகுடுச்சுக்கிட்டு செத்துப்போனா அப்ப மட்டும் புள்ள குட்டிய யார் காப்பாத்துவா! அதுக்கு குடும்பத்தோட போராடிப்பாத்துறலாமே” என்று நம்பிக்கையூட்டினோம்.
கூட்டுறவு வங்கியில் நகையை அடகு வைத்து சிலர் வட்டியில்லா கடன் வாங்கியுள்ளதாக கூறினர். பெரும்பாலானோர் வெளியேதான் 5 பைசா வட்டிக்கு வாங்கியுள்ளானர். மண்டிக்காரனிடம் கடன் வாங்கியவர்களும் உண்டு. அதற்கு வட்டி இல்லை. ஆனால் விளைச்சலை அவர்களிடம்தான் விற்க வேண்டும்! அவர்கள் சொல்வதுதான் விலை! அதாவது ஒப்பந்த விவசாயம் என்று கார்ப்பரேட்டுகள் செய்துவரும் அதே வேலைதான்.
”கடன்காரன் 10 பேர் மத்தியில காசு எங்கேன்னு கேட்டுட்டா அது அசிங்கமில்லே! கிராமத்துல வூட்டு வாசல்ல வெச்சு கேட்டுட்டாலே சொந்த பந்தத்துக்கு அது பரவிரும்! அதுனாலதான் வெறுத்துப் போய் மருந்தடிக்கிறாங்க!” என்று மானத்தை, சொன்ன சொல்லை காப்பதை பெரிதாக நினைக்கும் உழவர்களின் உயர்வை புரிந்துகொண்டோம். அதே நேரம் வாங்கிய கடனை கட்டாத மல்லையாவுக்கு ஆயிரம்கோடி தள்ளுபடி செய்யும் அரசை நினைத்து ஆத்திரம் பொங்கியது.
”பக்கத்து ஊருல மழை பேஞ்சா கூட அங்க கூலி வேலைக்கு போய் பொழப்பை ஓட்டலாம்! மொத்தமா காஞ்சுருச்சே சோத்துக்கு என்ன செய்ய” என்று சிறு விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இவர்களுக்கு ”அடுத்த போக விதைப்பை செய்யும் வரை 6 மாதத்துக்கு பிழைக்க வழி இல்லை. அப்போதும் விதைக்க எத்தனை பேரால் பணம் புரட்ட முடியும்; தெரியாது! மண்டிக்காரன் இப்பொழுதே நெருக்கறான்! வட்டிக்காரன் பணம் என்னாச்சு என்று வளைக்கிறான்” என்று விளக்கினார், கே. துரைசாமிபுரம் விவசாயி.
ஆடுமாடு மேய்ப்பவர்களின் நிலையும் கொடுமையாகத்தான் உள்ளது. சுண்ணாம்பு சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் காலில் பட்டால் பொத்துவிடுகிறது. ஆடு மாடு குடிக்கவும் உதவாது. 200 அடிக்கு கீழ் உள்ள நீரை ராம்கோ சிமெண்ட் முதலாளி ஊரைச்சுற்றி நிலத்தில் விடுகிறான். நிலத்தடி நீர் மேலும் குடிக்க லாயக்கற்றதாகிறது. மழை நீர் குறைவாகவே குளத்தில் தேங்கியுள்ளது. “இது ஒரு மாதத்திற்கு கூட ஆடு மாடுகளுக்கு காணாது. அதுக்கப்புறம் தண்ணி இருக்குற ஊரப் பாத்து இதுகள ஓட்டிட்டுப் போனாதான் காப்பாத்தவே முடியும்’’ என்று வேதனையுடன் கூறுகின்றனர்.
போராட்டத்துக்கு தகவல் சொல்லுங்க, கண்டிப்பா வர்றோம்
பெண்களைப் பொறுத்தவரை கம்மாவெட்டு (நூறு நாள் வேலை) தான் கை கொடுக்கிறது. சுமார் 200 பெண்கள் ஒரு குளத்தை தூர்வாரும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். நமது பெண் தோழர்கள் அவர்களை ஒன்றாகத் திரட்டி ”ஏன் உங்களுக்கு விவசாய வேலைகள் இல்லாமல் போனது, உங்கள் கணவர்கள் ஏன் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். உங்கள் ஊருக்கு மழை வர என்ன செய்ய வேண்டியுள்ளது, ” என்று கேட்டனர். பெண்கள் அமைதி காக்கவே சுமார் அரை மணி நேரம் பொறுமையாக விளக்கினர். இயற்கையை சீரழிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளைப் பற்றி விளக்கி ஒற்றுமையாகப் போராடினால் உங்கள் வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நம்பிக்கையூட்டினர். அப்பெண்களில் பலரும் நமது பிரசுரத்தை ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டு “போராட்டத்துக்கு தகவல் சொல்லுங்க, கண்டிப்பா வர்றோம்’’ என்றனர்.
குருவார்பட்டியில் சுமார் 50 ஏக்கர் சொந்த நிலத்திலும் மேலும் 50 ஏக்கர் கட்டுக் குத்தகைக்கும் விவசாயம் செய்யும் தர்மராஜை சந்தித்தோம். குறைவான நிலமுள்ளவர்களுக்கு குறைவான இழப்பு. அதிக நிலத்தில் சாகுபடி செய்தவர்களுக்கு அதற்கேற்ப பேரிழப்பு. ஆனாலும், இரண்டு முறை தி.மு.க பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ள விவசாயி தர்மராஜ் தமது பேரிழப்பை, வேறு வழியின்றி ஏற்றுக் கொண்ட தொனியில் வெளிப்படுத்தினார். அவருக்கும் கூட இயற்கையை சீரழித்த கயவர்களை எதிர்க்க வேண்டுமென்றோ, பகற்கொள்ளைக்கு உதவிய அதிகாரிகளை தண்டிக்க வேண்டுமென்றோ சிந்திக்க தெரியவில்லை. ஆனாலும், நிவாரணம் கேட்டு, இரண்டு முறை விவசாயிகளைத் திரட்டிச் சென்று போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். காமராஜரால் கொண்டுவரப்பட்ட சீமை கருவேல மரம் காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறுஞ்சுவதை அவர் உட்பட பலரும் குறிப்பிட்டனர்.
விவசாயிகள் அமர்ந்துள்ள இடங்களில் பேனரைப் பிடித்து மெகா போனைப் பயன்படுத்தி தெருமுனைப் பிரச்சாரங்களையும் செய்தோம்.
நாம் நமது அரசியலைமுன்வைத்து பேசியபோது, அவர் முகத்தில் புது வெளிச்சம் பிரகாசிப்பது போல் பேசத் தொடங்கினார். ”நாம் உடனே விவசாயிகளைத் திரட்டலாம், வாங்க ஊருக்குள்ள இருக்குறவங்கள பாத்து பேசலாம்” என்று அழைத்துச் சென்று இளைஞர்களை அறிமுகப்படுத்தினார். இவர் போல் ஐந்து ஊருக்கு ஒரு விவசாயி துடிப்புடன் உடன் வருவதை அனுபவமாகப் பெற்றோம். மாலை நேரங்களில் தேநீர் கடை, கோயில் முன்பு கூட்டமாக விவசாயிகள் அமர்ந்துள்ள இடங்களில் பேனரைப் பிடித்து மெகா போனைப் பயன்படுத்தி தெருமுனைப் பிரச்சாரங்களையும் செய்தோம்.
”ஸ்டெர்லைட்டை எதிர்த்து 15 வருசத்துக்கு முன்னாடியே தூத்துக்குடிக்கு வந்து போராட்டத்துல கலந்துக்கிட்டேன். எதையும் தடுக்க முடியல . இப்ப மேஸ்திரி வேலைய மட்டும் பாக்கிறேன். இப்பல்லாம் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்சிக்கு போறதில்லை” என்று விரக்தியுடன் சொன்னார், CPM தோழர் ஒருவர். நாம் பேசப்பேச ஆர்வமானார். சபரிமலைக்கு செல்ல புறப்பட்டுவிட்ட மற்றொரு ஆட்டோ ஓட்டுனரும் நமக்கு தேநீர் வாங்கித்தந்து ஆர்வமுடன் பேசினார். இவர் முதலில் தி.மு.க.வில் இருந்துவிட்டு பிறகு CPM க்கு வந்தவர். ”மலைக்கு போயிட்டு வந்து உங்களோட வர்றேன்” என்று விடை பெற்றார். நமது பிரச்சாரம் இருளில் இருந்த விவசாயிகளின் மனதில் ஒரு நம்பிக்கைக் கீற்றை விதைத்துள்ளது.
(படங்களைப் பெரிதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)
தகவல் விவசாயிகள் விடுதலை முன்னணி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
மாணவர்கள் , இளைஞர்கள் தொழிலாளிகளோடு இங்கே டெல்டாவிற்கு வந்திருக்கிறோம். கடந்த 3 நாட்களில் 28 கிராமங்களைக் கடந்து இருக்கிறார்கள். கிராமச் சுற்றுலாவிற்காக வரவில்லை. உலகிற்கு சோறு போட்ட விவசாயி கொத்து கொத்தாக செத்துப்போவதை கேள்விப்பட்டு பதைபதைத்து ஓடிவந்த ”மக்கள் அதிகாரம்” அமைப்போடு வந்தவர்கள். வந்தவர்களில் பலருக்கும் டெல்டா என்பதை வார்த்தையில் கேள்விபட்டவர்களாகவே இருந்திருக்கிறோம். விவசாயம் என்பதை ஒரு பெயராக மட்டுமே பார்த்து வந்தவர்கள்தான் பலர்.
விவசாயிகளின் மரணத்திற்கு காரணமான காவிரியை தடுத்த மோடியை, ஆற்றுமணலைக் கொள்ளையடித்த அதிமுக-ரெட்டி-ராவ் கும்பலை கண்டித்தும், இவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து விவசயிகளுக்கு நிவாரணமும் நீதியும் வழங்க கோரியும் நாளை 11.01.2017 அன்று நாள் முழுவதும் திருவாரூரில் நடக்கவிருக்கிற ”தர்ணா போராட்டத்திற்கு” அழைப்புவிடுத்து டெல்டா மாவட்டங்களில் குவிந்து விவசாயிகளை சந்தித்து வருகிறோம்.
விவசாயி ஒருவரை பார்த்து “விவசாயம் செய்யறதுல இவ்வளவுப் பிரச்சினை இருக்கு விட்டுட்டு போகவேண்டியதுதானே” என்று நாங்கள் கேட்டபோது “புள்ளைய பெத்து வளர்க்குறீங்க, திடீர்னு ஊனமாயிட்டுனா உட்டுட்டு போவ முடியுமா” என்று அந்த விவசாயி எங்களை கேட்டபோதுதான் தெரிந்தது விவசாயம் பெயர் அல்ல அது உயிர் என்று.
திரும்பிய பக்கமெல்லாம் கருகிய வயல்களும் காய்ந்து போன கரும்புகளும்தான் வரவேற்கின்றன. பசுமை பசுமை எங்கு காணினும் பசுமை என்று படத்தில் கிராமங்களை வைத்து கல்லாக்கட்டிய இயக்குனர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடையத் தட்டி, மீசைய முறுக்கி பாரம்பரியம் – பண்பாடு என முழங்கும் தமிழர்க’ள் விவசாயிகள் படுகொலைக்காக பேசுவதில்லை.
திருவாரூரில் ஒரு கிராமத்துக்கு ஒரு பம்ப் செட் இருப்பதே பெரிய விசயமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 2 மணிநேரம்தான் தண்ணீர் வருகிறது. காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை யாராவது விவசாயிகளின் சாவைப்பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக கிராமத்தில் காலையில் 6 மணி முதல் 8 மணிக்குள் தான் மக்களைப் பார்க்கமுடியும். அதன் பிறகு வேலைக்குச் சென்று விடுவார்கள். தற்போதோ வேலை இல்லாததால் வீட்டில்தான் எப்போதும் முடங்கிக் கிடக்கிறார்கள். விவசாயம் இல்லாத போதும் மாடு வாங்கியதற்காக நோட்டீசு அனுப்புகின்றன வங்கிகள். டெல்டாவிலேயே திருவாரூரின் நிலைமை கொஞ்சம் தேவலாம் என்கிறார்கள். .
நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டியை நோக்கிச் செல்லச் செல்ல குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாத நிலை இருக்கிறது . நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்கிறார்கள். திருவாரூர் – திருத்துறைப்பூண்டியை நோக்கி சென்ற கிராமங்கள் எங்கும் விவசாயம் இல்லை.சிறு விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் தான் அதிக பாதிப்பில் இருக்கிறார்கள். தண்ணீர் பஞ்சம் நினைக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. குடிக்கத்தண்ணீர் கேட்டால்கூட இல்லையென்று பலர் சொல்லுகிறார்கள். ஒரு குடும்பத்திற்கு 3 நாட்களுக்கு 10 குடம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதில்தான் குடிப்பது, குளிப்பது, சமையல் செய்வது என எல்லாவற்றுக்கும் பயன்படுத்த வேண்டிய நிலை. அதனால் தேங்கிய குட்டையில் துணி துவைக்கிறார்கள். துணி துவைத்த பின்னர் அந்தத் தண்ணீரிலே குளிக்கிறார்கள். இதெல்லாம் தெரியுமா தமிழினத்தலைவர்களுக்கு.
ஒரு நாள் பிரச்சாரம் முடித்த பின்னர் இரவு ஒரு ஊரில் தங்கினோம். வண்டியில் கட்டப்பட்டு இருந்த பேனர்களைப் பார்த்துவிட்டு அவ்வூரைச்சேர்ந்த அதிமுக-காரர் ஒருவர் குடித்து விட்டு சண்டையிட ஆரம்பித்தார். ”எப்புடி விவசாயிகள் வறட்சியில சாவுறாங்கன்னு சொல்லலாம்? எங்க ஊர்ல விவசாயி செத்துப்போனாரு. நான்தான் வறட்சியால செத்துப்போனாருன்னு சொல்லி நிவாரணம் வாங்கிக்கொடுத்தேன். என்கட்சியை எப்படி தப்பாப் பேசலாம்”. சரி போதையில் பேசுகிறாரே என்று விலகிச்சென்றோம். அவரோ நாங்கள் இருந்த இடத்திற்கு எதிரே இருந்த ஒருகடையில் நின்று கத்திக்கொண்டு இருந்தார். அப்போது கடைக்காரர் அவங்க சொல்லறது என்னய்யா தப்பு? நாம ரெண்டாயிரம் ரூபாய்க்கு அலையுறோம். அவன்கிட்ட மட்டும் எப்படி கட்டுகட்டா பணம் வந்துச்சு? அவங்க சொத்தை பறிமுதல் செஞ்சா என்ன தப்பு? என்று அவருக்கு பதிலளித்தார்.
நாங்கள் பிரச்சாரம் செய்த பல இடங்களிலும் நிவாரணம் வேண்டும் என்று பேசியவர்கள் கூட நமது வாழ்க்கை இந்த அளவு மோசமானதற்கு காரணமானவர்களின் கொள்ளையடித்தவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பேசியிருப்பதை பார்க்க முடிகிறது. நமது பிரச்சாரம் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சிறுவிவசாயிகள், நடுத்தர விவசாயிகள் என பலரும் நாம் வைக்கும் கோரிக்கை சரிதான் என்பதை பதிவு செய்கிறார்கள். அதிமுக, திமுக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூட வெளிப்படையாக அக்கட்சியை திட்டுகிறார்கள். ”இவனுங்க எல்லாம் திருட்டுபசங்க, தின்றானுங்க, விவசாயிகள் எல்லாம் சாவுறோம். ஒருத்தன் கூட வந்து எட்டிப்பார்க்கல, நாகப்பட்டினத்துலதான் ஜவுளித்துறை அமைச்சர் இருக்கான். அவனுக்கு நாங்க செத்துப்போனது தெரியாதா? எங்க பிரச்சினை எல்லாம் தெரியாதா?
இதற்கு முன் கிராமத்திற்கு சென்றால் உணவுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் இப்போது எங்களுக்கே சாப்பாட்டுக்கு வழியில்லை என்று வெளிப்படையாகச் சொல்லுகிறார்கள். கையில் ஒரு பைசாகூட இல்லை என்கிறார்கள்.
ஒவ்வொரு ஊரிலும் பறையடித்து அனைவரையும் ஒரு இடத்தில் வரவழைத்து பிரச்சாரம் செய்வோம். அதை முடித்துவிட்டு “உங்களிடம் பணம் ஏதுவும் இல்லை என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் கொடுக்கும் நிதியில் இருந்துதான் நாங்கள் பிரச்சாரம் செய்ய முடியும். உங்களை சார்ந்துதான் வந்திருக்கிறோம்” என்று சொன்னவுடன் தங்கள் வீடுகளுக்குச் சென்று வீட்டில் இருக்கும் 5 ரூபாயோ பத்து ரூபாயோ எடுத்து வருகிறார்கள். எத்தனையோ பேர்கள் காசுகொடுக்க முடியவில்லையே என்று கண்ணீர் வடிக்கிறார்கள்.
பிரச்சாரத்திற்கு வந்த தோழர்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்று பக்கத்து வீட்டில் இருந்தாவது சோறு, குழம்பு போன்றவற்றை வாங்கிக்கொண்டு வந்து கொடுக்கிறார்கள். நமக்காக போராட வந்திருக்கிறார்கள் என்று பார்க்கிறார்கள். எந்தக் கட்சியின் மீது நம்பிக்கை இல்லை. விவசாய சங்கங்கள் உட்பட. ரொம்ப நாளா போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். எந்த மாற்றமும் இல்லை என்கிறார்கள். அரசை நிர்பந்திக்கக்கூடிய போராட்டங்கள்தான் தேவை என்பதை உணர முடிகின்றது.
உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை. அதனால் ஒன்றும் ஆகாது என்று கூறுகிறார்கள். விவசாயம் செய்வதற்கு பயமாக இருக்கிறது என்கிறார்கள். இன்னும் சிலரோ தண்ணீர் வந்தால் கூட விவசாயம் செய்வதற்கு பயமாக உள்ளது. ஏற்கனவே கடன் மேல் கடனாக இருக்கிறது. மறுமடியும் விவசாயம் செய்து கடனில் மாட்டிக்கொண்டு தவிக்க வேண்டுமே என்று கவலைப்படுகிறார்கள்.
தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் ஒரு பகுதியில் பிரச்சாரம் செய்தோம். பெண்கள், இளைஞர்கள் என 50க்கும் மேற்பட்டோருடன் இரவு பேசினோம். பிரச்சாரப் பாடல்களைப் பாடினோம். அவர்கள் நாட்டுப்புறப் பாடலை பாடினார்கள். பெண்களும் இளைஞர்களும் போராட்டத்திற்கு வருவதாகக் கூறுகிறார்கள்.
இன்று அடுத்து ஊருக்கு கிளம்புகிறோம். விவசாயிகளைக் கொன்ற அரசை தண்டிக்காமல் பயணம் ஒருபோதும் நிறைவு பெறப்போவதில்லை.
காவிரியை விட, வயல்வெளியைவிட வறண்டு போய்விட்டான் விவசாயி வான்மழை பொய்த்தாலும் காவிரி பொய்க்காது என்பார்கள். இப்போது வான் மட்டுமல்ல இந்த அரசும்தான் பொய்த்துப்போயிருக்கிறது. ஆனால் மாற்றத்தை விதைக்க முடியும் என்ற நம்பிக்கை பொய்க்காது. இதுதான் விவசாயிகளின் நிலை, தமிழனின் நிலை. சூடு சொரணை இருப்போர் இதைக்கேட்ட பின்னரும் அமைதியாக இருக்க முடியாது. நாங்கள் விவசாயிகளோடு அவர்கள் துக்கத்தை எங்களது சொந்தமாக்கி இருக்கிறோம். இதைப்பற்றிப் பேசாமல் ஜல்லிக்கட்டு, பொங்கல், உழவர் திருநாள் என்று பேசுவோரை என்ன செய்வது?
தகவல் மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு 9962366321
***
விவசாயிகள் தற்கொலையை தடுக்க வக்கற்ற அரசு கட்டமைப்பை தூக்கியெறிவோம்
விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்.
தினம்தினம் விவசாயிகள் தற்கொலை, மாரடைத்து சாவது என்ற தமிழ்நாட்டின் சொல்லொன்னா துயரம் தொடர்ந்துக்கொண்டே வருகிறது. இதுவரை 150-க்கும் அதிகமான விவசாயிகள் இறந்துள்ளனர். நேற்று தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் ஒருவிவசாயி தற்கொலை செய்துக்கொண்டார். இப்படி டெல்டா மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் தற்கொலை தொடங்கியுள்ளது. இதனை தடுத்து விவசாயிகளை பாதுகாக்கும் அரசே கொலைகாரனாக இருக்கும் போது விவசாயிகள் இனி போராடுவதை தவிர வேறு வழியில்லை என்று அறைகூவி அழைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியது விவிமு, புமாஇமு அமைப்புகள்.
பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவிமு வட்டார செயலர் தோழர் கோபிநாத் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் உலகில் பெரிய டெல்டா என்று சொல்லப்படும் தமிழகத்தில் இன்று கொத்துகொத்தாக விவசாயிகள் இறப்பது என்பது தொடர்கதையாக மாறியுள்ளது. மாடுகட்டி போர் அடித்தால் மாலாது என்று யானை கட்டி போர் அடித்த சோழ நாடு. இன்று தண்ணீர் இன்றியும், கடன் வாங்கி பயிரிட்டும் விவசாயம் பொய்த்து போனாதாலும் மனம் உடைந்து நெஞ்சு வெடித்து இறக்கிறான் விவசாயி. மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற இடங்களில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை, தற்போது புற்றுநோயாக தமிழ்நாடு விவசாயிகளின் தற்கொலை தொடர்கிறது. இந்த நிலைக்கு காரணம் காங்கிரசு, பிஜேபி கட்சிகள் ஓட்டுபொருக்க மாறி மாறி கடந்த 25 ஆண்டுகளாக தண்ணீர் கொடுப்பதை மறுத்ததுதான் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம். மறுப்பக்கத்தில் டெல்டாவை பாலைவனமாக்கி மீதேன் எடுக்க முதலாளிக்கு சேவை செய்ய காத்திருக்கிறார் மோடி. சேகர் ரெட்டி, ராவ், ஓபிஎஸ் அதிமுக தான் ஆற்று மணல் கொள்ளையடிப்பது, கழிவு நீரை ஆறு குளம் ஏரிகளை அழிப்பது என்ற வேலையை செய்த இந்த திருட்டு கும்பலிடம் நீதி கேட்க முடியுமா? அம்பானி, மல்லையா முதலாளிக்கு கடன் தள்ளுபடி செய்யும் அரசு, சோறுபோட்ட விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்ய மறுக்கிறது. விவசாயிகளின் தற்கொலையை தடுக்க நாம் கறுக்கறுவாலை கையிலெடுத்து வீதிக்கு வரவேண்டும் என்று அறைகூவி அழைத்தார்.
தகவல் விவசாயிகள் விடுதலை முன்னணி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தரும்புரி
வயல் வெளிகளில் ஆடு, மாடுகள் என கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்தன.
நாகப்பட்டினத்திலிருந்து வேதாரண்யம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு பக்கமும் நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் துவண்டு கிடந்தன. கணிசமாக ஏக்கரில் இறால் பண்ணைகளும் அமைக்கப்பட்டு அதற்கு தேவையான தண்ணீரை ராட்சத மின்மோட்டார்கள் மூலம் உறிஞ்சும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன.
சேமங்கலம் என்ற கிராமத்திற்கு நாங்கள் சென்று கொண்டிருந்தோம். மேடும் பள்ளமுமாய் இருந்த அந்த சாலையில் செல்வதே பெரும் சிரமாய் இருந்தது. வழியில் ஒரு பக்கம் ஏரியும் மறு பக்கம் வயல்களும் இருந்தது. அந்த ஏரியில் இருந்த நீரை இஞ்சின் வைத்து விவசாயிகள் பாசனத்திற்காக உறிஞ்சியதால் ஏரி வறண்டு காணப்பட்டது. போதிய தண்ணீர் இல்லாததால் வயல்களும் வறண்டிருந்தன.
வயல் வெளிகளில் கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்தன. இரண்டு விவசாயிகள் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களிடத்தில் ஐயா, ராஜ்குமார் வீடு எங்க இருக்கு என்று கேட்டோம். அவர்கள், நாங்கள் எதற்காக வருகிறோம் என்பதை புரிந்து கொண்டு “நேரா போயிட்டு வடக்க திரும்புங்க என்று வழிகாட்டினார்கள்.
இறால் பண்ணைகளுக்காக தண்ணீரை உறிஞ்சும் வகையில் ராட்சத மின்மோட்டார்கள்
அந்த தெரு வெறிச்சோடி போய் இருந்தது. சற்று தூரத்தில் கீற்றுப் பந்தல் போட்ட வீடு ஒன்று தெரிந்தது. அந்த வீட்டின் முன் உள்ள திண்ணையில் அமர்ந்து ஊர் பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். எங்களை பார்த்ததும் அனைவரும் அமைதியாக எழுந்து நின்றனர்.
எங்களை வீட்டிற்குள் அழைத்து சென்றனர். ராஜ்குமாரின் மனைவி ஒரு மூலையில் துக்கம் தாளாமல் அழுததில் களைப்பாக இருந்தார். வெளியில் இருந்து ஓஓஓஒ……. வென்ற அழுகுரல் நெஞ்சை பிளக்கும் சத்தத்துடம் கேட்டது. அந்த குரல் ராஜ்குமாரின் உறவினர் வீட்டு பெண் சுபா. அவரை சமாதானப்படுத்த முயன்ற ஊர் பெரியவர்கள் தோற்றுப்போயினர்.
எல்லோருடைய கண்களிலும் கண்ணீர் ததும்ப கனத்த இதயத்துடன் பேசினார் அந்த இளம் பெண் சுபா.
“கேரளாவுல வேல பார்த்தாரு சார்.. அங்க இருந்து வந்து 4 ஏக்கரு குத்தகைக்கு வாங்கி தான் பயிறு வச்சாரு…. இதுக்காக ஊர்ல எல்லார்கிட்டயும் கடன் வாங்கினாரு… தை மாசம் அறுவடையாயிடும் குடுத்துடுறேன்னு சொன்னாரு.
எங்கண்ணனுக்கு அப்துல்கலாம ரொம்ப புடிக்கும் சார்
“சீட்டு கம்பனி காரன் தான் ஏமாத்துவான். கஷ்ட படுறவன்.. ஏமாத்த மாட்டான்னு எல்லாரும் அவரு மேல இருந்த மதிப்புல குடுத்தாங்க..”
வெளில வாங்கின கடன் போதாதுன்னு பொண்டாட்டியோட தாலிய கூட அடமானம் வச்சாரு என்று சொல்லும் போதே பேசமுடியாமல் குரல் விம்மியது.
இவ்வளவு கடன் வாங்கி பயிர் செய்யணுமா என்று கேட்டோம் ?
“கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே பேச ஆரம்பித்தார்… விவசாயமாச்சே…. வெளையிர பூமின்னு தெரிஞ்சி எப்படி சார் தரிசா போடா முடியும்?”
ராஜ்குமாரின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி
“எங்கண்ணனுக்கு அப்துல்கலாம ரொம்ப புடிக்கும் சார். அவரோட நினைவு நாளுக்கு ஊர்ல மரக்கண்ணு வாங்கி வந்து நட்டு விழிப்புணர்வு செஞ்சாரு…”அப்பேற்பட்ட மனுஷன் எப்படி சார் விவசாயத்தை விட முடியும்?
சரி, அப்புறம் ஏன் தற்கொல பண்ணிக்கிட்டாரு என்று கேட்டோம்…!.
“ஊர சுத்தி கடன் வாங்கிட்டாரு”. பூமி வெளையில… தண்ணி பாய்ச்சவும் முடிலய. கையில காசும் இல்லை.!
அரசாங்கம் கொடுக்கிறது ஒரு லிட்டரு மண்ணெண்ணெய்.. அத வச்சிக்கிட்டு எப்படி சார் முடியும். மேற்கொண்டு மண்ணெண்ணெய் வாங்கனும்னா பணம் இல்லை. ஒரு பக்கம் பாயும். இன்னொரு பக்கம் காயும்.. இத பாக்க முடியாம தான் சார் அந்த நெலத்துலையே உசுர வுட்டுருச்சி..!
தரிசு நிலங்கள்
கருகிய நெற்பயிர்கள்
இறால் பண்ணைகள்
ஏரியிலிருந்து விவசாயத்திற்கு எடுக்கப்படும் தண்ணீர்
விவசாயத்தை காப்பாற்ற பல மீட்டர் தூரத்திற்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர்.
***
அழகிய நத்தம் கிராமம். பெயரில் இருக்கும் அழகு விவசாயிகள் வாழ்க்கையில் இல்லை. விவசாயி நடராஜன் வீட்டிற்கு சென்றோம். வீட்டு வாசலில் உளுந்து, தேங்காய் உலற வைத்திருந்தனர். உள்ளே சென்ற எங்களை எலிப்புழுக்கைகள் தான் வரவேற்றது. அது மிகவும் பழமையான வீடு.
நடராஜன்
நடராஜனின் உறவினர் சாமிநாதன் எங்களை பார்த்ததும் யார் என்பதை புரிந்து கொண்டு பேச ஆரம்பித்தார். இவருக்கு “விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம். எதை செஞ்சாலும் கொஞ்சம் புரட்சிகரமா தான் செய்வார். சொந்தமா ஆறு ஏக்கர் நிலம் இருக்கு சார். அதுல ரெண்டு ஏக்கர் மட்டும் தான் நெல்லு தெளிச்சாறு. மீதி எல்லாம் தரிசா கெடக்கு.
எஞ்சின் வச்சி ராவும் பகலுமா ஏறச்சாலும் கூட ரெண்டு ஏக்கருக்கு மட்டும் தான் பாயும். ஒரு எறப்புக்கு பத்து லிட்டரு டீசல் வேணும். அதெல்லாம் வாங்கணும்னா பணம் வேணும். கையில காசு இல்ல.
ஏற்கனவே ரெண்டு லட்சம் கடன் வாங்கியிருக்காரு. யாரு கிட்ட போயிட்டு காசு கேக்கறது? மோடி 500, 1000 செல்லாதுன்னு சொன்னதால யாரும் காசு கொடுக்க மாட்றாங்க. உரம் வாங்கவோ, ஆளுவ கூலி கொடுக்கன்னாலும் பணம் இல்ல.
ரெண்டு லட்சம் கடன் எதனால வந்தது?
பசங்கள படிக்க வெக்கவும், பயிர் செய்யவும் வாங்கின கடன் தான் சார். பையன் படிச்சி முடிச்சிட்டான். மூணு வருசமா வேல தேடறான் கெடக்கல. அடுத்து பொண்ணு இருக்கு. அத கட்டி கொடுக்கணும். எல்லாமும் இந்த நெலத்த நம்பி தான் வாங்கினது. நெல்லும் விளைச்சல் இல்லாம போனதால மனசு உடஞ்சி நிலத்துலையே உயிரை விட்டுட்டாரு.
இந்த முறை விளையிலனா அடுத்த முறை பாத்துக்கலாம் . அதுக்காக உயிரை விடுவதா என்று கேட்டோம்.
சாமிநாதன் மற்றும் நடராஜன் குடும்பத்தினர்
கடந்த அஞ்சி வருசமாவே விவசாயத்துல ஒன்னும் லாபம் இல்லங்க. நிலைத்த விக்கவும் மனசு வரல.. தரிசா போடா முடியுமா?
வருஷம் வருஷம் பயிர் காப்பீடு கட்டிட்டு வராரு … ஆனா நஷ்ட ஈடு யாரும் தரது இல்ல.. உழவு மானியம் 500, களைக்கொல்லி மானியம் 300, சின்சல்பெட் மானியம் 200 அறிவிக்கிறாங்க.. ஆனா குடுக்கிறதே இல்ல.
இனி எதை நம்பி பயிர் செய்றது. எனக்கு 30 ஏக்கர் இருக்கு தம்பி. எல்லாத்தையும் நான் தரிசா தான் போட்டிருக்கேன்.
நலமுத்தூர், கருப்பூர் ஆகிய இடங்களிள் தடுப்பணை கட்டி தண்ணீர் தேக்கி வைத்தால் இரண்டு மாவட்டத்திற்கு பாசன பிரச்சனை இருக்காது என்று பல முறை மனு கொடுத்தோம், போராடினோம். எதையும் செய்து தரவில்லை. இந்த அரசாங்கத்து மேல எங்களுக்கு நம்பிக்கையே இல்ல.
இனிமே எதை நம்பி யாரை நம்பி எங்களை விவசாயம் பண்ண சொல்றீங்க? என்ற கேள்விக்கு நம்மால் பதில் கூற முடியவில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் வேண்டும், அவர்களுக்கு பிரச்சனை என்றால் எதையும் கண்டு கொள்வதே இல்லை என்ற அவருடைய ஆதங்கம் நம்மை செருப்பால் அடித்த மாதிரி இருந்தது.
***
ராமர்மடம் விவசாயி பக்கிரிசாமி. ஊரில் ஓரளவுக்கு செல்வாக்கான விவசாயி. சொந்தமா எட்டு ஏக்கர் இருக்கு. அவரோட தம்பி வீராசாமி. விஞ்ஞானி வீராசாமி என்று கூப்பிடுவார்கள். அந்தளவிற்கு விவசாயத்தில் நடந்து வரும் புதிய மாற்றங்களை தெரிந்து கொண்டு விவசாயம் செய்பவர். மற்ற விவசாயிகளுக்கும் ஆலோசனை சொல்லக்கூடியவர்.
பக்கிரிசாமி அவருடைய தம்பி வீராசாமி
இப்படி விவராமாக இருப்பவருக்கு மாரடைப்பு வர என்ன காரணம்?
விவசாயம் தாம் அவரோட செல்லபிள்ளை. சின்ன பையன் மாதிரி ஓயாமல் ஒழைச்சிகிட்ட இருப்பார். எப்பவும் வயக்காட்லயே தான் இருப்பார்.
இந்த முறை 2 ஏக்கர் மட்டும் நெல் தெளிச்சோம். தண்ணி இல்ல. பயிர் கருகிறத பார்த்ததும் மனசு உடஞ்சி போய்ட்டாரு. எந்த வருசமும் இல்லாத அளவு இந்த வருஷம் 60,000 செலவாகிடுச்சி. ஏரி, குட்டை நீரை தான் பாசுவோம். இப்ப எல்லாம் வறண்டு போய்டுச்சி.
நா.. பதினேழு வயசுல இருந்து விவசாய வேலய தான் பாக்குறேன். அப்பல்லாம் வேளாண்மைத்துறை என்ற ஒன்று இருந்தது. விரிவாக்க பணியாளர்கள் வீடு தேடி வந்து ஆலோசனை சொல்லுவாங்க.., மண்புழு உரத்துக்கு மானியம் கொடுப்பாங்க. இப்ப யாரும் வருவதே இல்லை என்றார்.
லாபம் இல்லாத இந்த தொழிலை ஏன் செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு?
“பிறந்த குழந்தை ஊனமாகிவிட்டால் விட்டுவிடுவோமா? அது போலத்தான் விவசாயம். இதுல லாப நஷ்டம் பாக்குறது இல்லை”. இத்தனை வருஷம் விவசாயம் பண்றோம். சாப்பிடுறோம். அவ்ளோ தான். இது ஒரு பண்டமாற்று மாதிரி தான் தம்பி…! என்று விவசாயத்தின் மீதான பாசத்தை வெளிப்படுத்தினார் வீராசாமி. உண்மையில் அவர் விஞ்ஞானி தான்.
***
கடிநெல்வயல் விவசாயி வேதையன் வீட்டிற்கு சென்றோம். காரியம் நடந்து கொண்டிருந்தது. நம்மை பார்த்ததும் அனைவரும் எழுந்து நின்றவர்கள் அருகில் இருந்த நாற்காலியை இழுத்து போட்டு அமர வைத்துவிட்டு பேச ஆரம்பித்தார்கள் ஊர் பெரியவர்கள்.
“ஒரு ஏக்கர் நெலம் இருக்கு அதுல தான் நெல் தெளிச்சோம். வெளச்சல் ஒன்னும் இல்லாம பயிர் எல்லாம் கருகிடுச்சி. இத நம்பி கடன் வாங்கியாச்சி. அரசு சலுகை எதுவும் தரது இல்ல. கேட்டா சிறு விவசாயிங்களுக்கு இல்லன்னு சொல்றாங்க.
நாங்க சம்பா மட்டும் தான் பயிர் செய்வோம். குறுவை, தாளடி எல்லாம் கிடையாது. மற்ற நேரம் கட்டிட வேலைக்கு, உப்பளத்துக்கு தான் வேலைக்கு போவோம்.
இப்ப யாருக்குமே வேலை இல்லை. என்ன பண்றது. இதே மாதிரி நெலமை இருந்தா ஊரை விட்டு தான் போகணும். கூலி வேலையும் இல்லை. சம்பாவும் கை வுட்டுடுச்சி என்றார் வேதனையுடன் கூறுகிறார் வேதியன் மகன்.
சாம்பல் ஆறு, மனங்கொண்டாறு இரண்டு ஆத்துலயும் தடுப்பணை கட்ட பலமுறை மனு கொடுத்துட்டோம். இந்த அதிகாரிங்க கண்டுக்கவே இல்ல. இத செஞ்சு கொடுத்திருந்தாங்கன்னா இந்த இழப்பு வந்திருக்காது.
எத்தனை முறை அதிகாரிங்களை சந்திச்சி மனு கொடுத்திங்கன்னு கேட்டோம்.
25 வருசமா மனு கொடுக்குறோம். எந்த நடவடிக்கையும் இல்லை என்றனர்.
ஏறக்குறைய நாங்கள் சந்தித்த விவசாயிகள் அனைவரும் விவரமானவர்கள். விவசாயத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர்கள் தான். எல்லோருக்கும் பொதுவான பிரச்சனை கடன். ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்குவது, அந்த கடனை அடைக்க முடியாமல் மேலும் கடன் வாங்கி பயிர் செய்வது என்ற சுழற்சி முறையில் தான் தங்களது வாழ்கையை கழித்திருக்கிறார்கள்.
ஊடகங்களும், ஆளும் வர்க்கமும் கூறுவது போல் “வறட்சி” என்ற காரணம் மட்டும் விவசாயிகளுக்கு பிரச்சனை இல்லை. இது முற்றிலும் பத்திரிகைகள் ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாக எழுதுவது. கடைந்தெடுத்த பொய்.
நெல்லிற்கு தகுந்த விலையை அரசு கொடுக்கவில்லை, உரங்களின் விலையேற்றம், மின்வசதி இல்லை. தனியார் கொள்முதல் நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு சென்ற ஆண்டு நெல்லை விவசாயிகளிடம் இருந்து பெற்றார்கள். அன்று முதலே கடனில் தத்தளித்திருக்கிரார்கள்.
இந்த இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் வெள்ளந்தியான விவசாயிகளை ஏமாற்றியது யார்? இயற்கையா? அரசா?
சந்திரனில்
உயிர் வாழ முடியுமா? – என
ஆராய்ச்சியின் உச்சத்தில்
திளைப்பவர்களே,
உங்கள் காலுக்கடியில்
சில உயிர்கள் தவிப்பதை
உணர முடிந்திருக்கிறதா
உங்களால் !
மூலதனத்தின் பெருங்குடல்
மனிதர்களை செரிக்கும்
லாபப் பசியெடுத்தவர்களின்
கரங்கள் ஆட்டுவிக்கும்
அந்த இடங்களுக்குப் பெயர்
சுரங்கங்கள்.
அங்கே…
விழிகள் எங்களுக்கானதாக
இல்லை,
நெற்றிக்கண் வெளிச்சத்தில்
முதலாளிகளுக்கான
தாதுக்களை குவிக்கும்
தசைச் சுரங்கங்களாக
அதுவும்
அவர்கள் கையில்.
உழைத்துக் கொடுப்பதற்காக
மட்டுமே
எங்கள் உடலில்
ரத்தம் ஓட அனுமதிக்கப்படுகிறது,
ஒரு மனிதனாக
உணரத் தலைப்பட்டால்
உயிர் தடை படுகிறது.
பிழியப்படும் உழைப்பில்
தாயின் மார்பிலும்
தாது வடிகிறது.
சுரங்க வாழ்வின் இருளோ
எம் பிள்ளைகளின்
தாய்ப்பால் வரை நீள்கிறது.
சிதைக்கப்படும்
பூமியின் அலறலை
எதிரொலிக்கிறார்கள்
எங்கள் குழந்தைகள்
அறுக்கப்படும்
இயற்கையின் மார்பை
வலியோடு சுமக்கிறார்கள்
எங்கள் பெண்கள்.
உலகின்
நிலக்கரி அனைத்தும்
எங்கள் கண்ணீர் பசையால்
இறுகியிருக்கின்றன…
உலகின்
தங்கங்கள் எல்லாம்
எங்கள் ரத்தத்தால்
ஜொலிக்கின்றன.
நாங்கள்
வெளியே எடுத்துத்தரும்
பொருட்களுக்கு
உள்ள மதிப்பு கூட
உள்ளே இருக்கும்
எங்கள் இதயத்துக்கும்
நுரையீரலுக்கும் இல்லை
உணர்ச்சி
மறுக்கப்பட்ட வாழ்க்கையில்
உருமாறி
அவைகளும் கரியாகிவிட்டன.
வெட்டி முறிக்கும்
முதலாளிகளோ
உலகப் பணக்காரன் வரிசையில்
வெட்டி எடுக்கும்
உழைப்பாளிகளோ
உயிரினங்களிலேயே வறுமையில்.
வேண்டும் ஊதியம்
உழைப்பு நேரம்
உரிய பாதுகாப்பு, இழப்பீடு
உரிமைகள்
எதுவுமற்று
மக்கி மண்ணாகி
மீண்டும்
மூலதனம் வெட்டி எடுத்து
இலாபமீட்டும்
மனிதத் தாதாக
மடிகிறது வாழ்க்கை.
பூமியின் புதையல்களை
கொள்ளையடிக்கிறார்கள்,
பூமியின் புதல்வர்களை
சாகடிக்கிறார்கள்…
வேறு யாருக்கோ
நடப்பதாய்
விலகி இருக்க முடியுமா
உங்களால் ?
செம்பு
அலுமினியம்
பாக்சைட்
தங்கம்
கரி… இப்படி
நீங்கள் நேரடியாகவும்
மறைமுகமாகவும்
அனுபவிக்கும் பொருள்
ஒவ்வொன்றிலும்
கலந்திருக்கிறோம் நாங்கள் !
காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டு !! விளைபொருளுக்கு விலை சொல்லும் உரிமையை தனியார் பள்ளிகள் போல் விவசாயிகளுக்கு வழங்க சட்டம் இயற்று !
மூடு டாஸ்மாக்கை !
திருவாரூரில் தர்ணா 11-1-2017 புதன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
புதிய ரயில் நிலையம் அருகில்.
அனைவரும் கும்பத்தோடு வாரீர்
ஒருங்கிணைப்பு:
மக்கள் அதிகாரம்
திருவாரூர் நாகை தஞ்சை மாவட்டங்கள்
தொடர்புக்கு – 99623 66321
கோட்சே ஆர்.எஸ்.எஸ்-ல் இல்லை என்று அத்வானி சொன்னது பொய் என்கிறார் நாதுராம் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே. படம் நன்றி : ஃபிரண்ட்லைன்
கோட்சே பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் பார்வையிலிருந்து மாறாமல் இருந்துகொண்டே காந்தியின் புகழ்பாடுவது ஒரு கலைதான். இந்தக் கலையைத்தான் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்க பரிவாரம்.
மகாத்மா காந்தியின் படுகொலை உலகத்தில் ஏற்படுத்திய அதிர்ச்சியும், கோபமும், சோகமும் சூழ்ந்த சூழலில் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் தந்திர நடவடிக்கைதான் இது. ஆர்.எஸ்.எஸ். அமைக்கும் தனக்கும் இருந்த தொடர்பை கோட்சே துண்டித்துக் கொண்டார் என்றுதான் பாரதிய ஜனதா தலைவர்களும் அதன் பழைய அவதாரமான ஜனசங்க தலைவர்களும் கூறி வந்தனர்; கூறிவருகின்றனர். பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்ட அத்வானியும் இதைத்தான் கூறினார்.
அவருக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்து கண்டித்தவர் நாதுராம் கோட்சேயின் இளைய சகோதரரான கோபால் கோட்சேதான். இவரும் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டவர். அவர் எழுதிய ”நான் ஏன் காந்தியைக் கொன்றேன்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் டிசம்பர் 1993 அன்று பேசிய கோபால் கோட்சே தானும் சகோதரன் நாதுராமும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர உறுப்பினர்கள் என்ற பலருக்கும் தெரிந்த உண்மையை வெளியிட்டார்.
அதற்குப் பின் ஜனவரி 1994-ல் “ஃபிரண்ட்லைன்” இதழுக்கு பேட்டியளித்த கோபால் கோட்சே, “சகோதரர்களாகிய நாதுராம், தத்தாத்ரேயா, கோவிந்த், நாங்கள் எல்லோருமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினர்களாயிருந்தோம். நாங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதை விட ஆர்.எஸ்.எஸ்-ஸில் வளர்ந்தோம் என்பதே சரியாக இருக்கும். எங்களுக்கு அது ஒரு குடும்பம் போன்றது. நாதுராம் ஆர்எஸ்எஸ்-ஸின் பவுதிக் கார்யவாஹ் (கொள்கைப்பரப்பு செயலர்) ஆக இருந்தார். தான் ஆர்.எஸ்.எஸ்-ஸிலிருந்து விலகிவிட்டதாக கோட்சே அறிக்கை விட்டார். ஏனெனில் காந்தியின் படுகொலைக்குப் பிறகு கோல்வால்கரும் (ஹெட்கேவாருக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்-ன் இரண்டாவது தலைவராக இருந்தவர்) ஆர்.எஸ்.எஸ்-ஸும் பெரும் பிரச்சினையிலிருந்தனர். ஆனால் அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விட்டு விலகவில்லை,”என்றார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் கோட்சேவுக்கு தொடர்பு ஒன்றுமில்லை என்ற அத்வானியின் கூற்றை கடுமையாக மறுத்தார் கோபால் கோட்சே. ”அப்படிச் சொல்வது கோழைத்தனம் என்று நான் அவரை மறுதலித்து விட்டேன். ஆர்.எஸ்.எஸ். ‘காந்தியைக் கொல்லுங்கள்’ என்று தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று வேண்டுமானால் நீங்கள் கூறலாம். ஆனால் கோட்சேயை நீங்கள் கழற்றி விடமுடியாது. இந்து மகாசபை அவரைக் கழற்றி விடவில்லை. 1944-இல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பவுதிக் கார்யாவாஹ் ஆக இருந்த அவர் இந்துமகாசபையின் வேலைகளையும் செய்யத் தொடங்கினார்.”
பிரபல அமெரிக்க வாரப்பத்திரிக்கையான டைம் இதழுக்கு 2000-ம் ஆண்டில் அளித்த பேட்டியில், கோபால் கோட்சேயிடம் ஏன் காந்தியைக் கொல்ல திட்டமிட்டீர்கள் என்று கேட்கப்பட்டது. ”காந்தி ஒரு கபடாதாரி. முஸ்லிம்கள் இந்துக்களை படுகொலை செய்த பின்னரும் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். எவ்வளவு அதிகமாக இந்துக்கள் கொல்லப்பட்டனரோ அந்த அளவுக்கு உயரப் பறந்தது அவரது மதச்சார்பின்மை கொடி.” என்றார்.
படத்தில் இடமிருந்து வலம்: நாதுராம் கோட்சே, நாராயண் தத்தாத்ராய் ஆப்தே, விஷ்ணு ராமகிருஷ்ணா – காந்தி கொலை வழக்கு விசாரணையின் போது. படம் நன்றி : ஃபிரண்ட்லைன்
சமீபத்தில் இதே கருத்தை மீண்டும் வெளியிட்டிருப்பவர் சத்யகி சவார்க்கார். இவர் கோபால் கோட்சேயின் மகள்வழிப் பேரன். அவரது தாயார் ஹிமானி சவார்க்கார் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட்ட அபினவ் பாரத் அமைப்பை நடத்தி வந்தார். அந்த வழக்கு விசாரணை வளையத்திலும் இருந்த அவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார்.
தங்கள் குடும்பம் நாதுராமும், கோபாலும் எழுதியவற்றை பராமரித்து வருவதாகவும், நாதுராம் ஆர்.எஸ். எஸ். அமைப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்ததும், அதன் தீவிரத்தன்மை போதவில்லையென்று உணர்ந்தமையால் ஏமாற்றமடைந்ததையும் அவ்வெழுத்துக்கள் தெளிவாக்குகின்றன என்கிறார் சத்யகி. மென்பொருள் துறையில் பணிபுரியும் அவர் சவார்க்கர் தொடங்கிய இந்து மகாசபையை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சித்து வருகிறார்.
“நாதுராம் 1932-ல் சாங்லியிலில் இருக்கும்போது ஆர். எஸ். எஸ்-ல் இணைந்தார். இறக்கும் வரை அதன் பவுதிக் கார்யவாஹ் – கொள்கைபரப்பு செயலராக இருந்தார். அவர் வெளியேற்றப்படவும் இல்லை. வெளியேறவும் இல்லை…. அவர் ஒரு ஸ்வயம்சேவக் (ஆர்.எஸ்.எஸ்-ன் தினசரி ஷாகாவுக்கு செல்லும் உறுப்பினர்களின் பெயர்) என்கிற உண்மையை மறுப்பதால் ஆர்.எஸ்.எஸ். மீது எனக்கு நிச்சயமாக வருத்தம் இருக்கிறது. காந்திஜி கொலையை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டாலும் அவர்கள் உண்மையைக் கண்டு ஓடி ஒளியக்கூடாது, என்கிறார் சத்யகி.
இன்று மோடி மாபெரும் சிலை வைத்துக் கொண்டாடப்போகும் சர்தார் வல்லபபாய் படேல் (அன்றைய உள்துறை அமைச்சர்) நேருவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஷியாம் பிரசாத் முகர்ஜிக்கு (இவர் தான் பா.ஜ.க-வின் முன்னோடியான ஜனசங்கத்தை 1951-ல் தோற்றுவித்தவர்) எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார்: “காந்தி கொலை வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபைக்கு அதில் இருக்கும் தொடர்பைக் குறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால் இந்த இரு அமைப்புகளின் செயல்பாடுகள் காரணமாக, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் செயல்பாடு காரணமாக, எழுந்த சூழலில்தான் இத்தகைய கொடூர சோகம் நிகழ்ந்திருக்கிறது என எங்களுக்கு கிடைத்த தகவல்கள் உறுதி செய்கின்றன.”
காந்தி இறுதி ஊர்வலத்தில் நேரு மற்றும் பட்டேல். படம் நன்றி : ஃபிரண்ட்லைன்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் குரு கோல்வால்கருக்கு செப்டம்பர் 11,1948-ல் எழுதிய கடிதம் இப்படிச் சொல்கிறது. “இந்து சமுதாயத்திற்கு ஆர்.எஸ்.எஸ். செய்திருக்கும் சேவையைப் பற்றி எவ்வித சந்தேகமும் இல்லை. … ஆனால் ஆட்சேபத்திற்குரிய கட்டம் எங்கு எழுகிறதென்றால், அவர்கள் பழிவாங்கும் உணர்ச்சி கொழுந்துவிட்டெரிய முஸ்ஸல்மான்களை தாக்கத் தொடங்கியபோதுதான். இந்துக்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு நன்மை செய்வது என்பது ஒரு விஷயம். ஆனால் அவர்களின் துன்பங்களுக்கு பழிவாங்குவது என்ற பெயரில் அப்பாவியான ஆண்களையும், பெண்களையும் குழந்தைகளையும் தாக்குவது வேறு…. அவர்களின் பேச்சுக்கள் முழுவதிலும் வகுப்புவாத விஷம் நிறைந்திருக்கிறது. இந்துக்களை உற்சாகப் படுத்தி ஒன்று திரட்டுவதற்கும் பாதுகாப்பதற்கும் விஷத்தைப் பரப்பவேண்டிய அவசியமில்லை. இந்த விஷத்தின் இறுதி விளைவாக காந்திஜியின் உயிர்த்தியாகத்தை நாடு தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. ஆர்.எஸ்.எஸ். மீது இந்திய அரசாங்கத்திற்கோ மக்களுக்கோ துளிக் கூட பரிவு இல்லை. உண்மையில், காந்திஜியின் மரணத்திற்குப் பின் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இனிப்புகளை வினியோகித்தபோது மக்களின் கோபம் அதிகரித்து மேலும் தீவிரமானது.”
அன்று மக்களிடமிருந்து தனிமைப்பட்ட சங்கபரிவாரம் அதற்குப் பிறகு 30 ஆண்டுகள் வனவாசமிருக்க நேரிட்டது. காந்தியின் பாரம்பரியத்தை தனதாக்கிக் கொள்ள என்னதான் முயன்றாலும், கொள்கைரீதியாக கோட்சேயின் பாரம்பரியத்தைதான் பாஜக வரித்துக்கொண்டுள்ளது. அது கொள்கையையும் துறக்க முடியாது.. வரலாற்றையும் மறைக்க முடியாது.
RSS & Gandhi’s murder By A.G. NOORANI
(There is enough historical evidence to nail the RSS’ lie that Nathuram Godse was not a member of that organisation when he assassinated Mahatma Gandhi in 1948.)
தமிழக வரலாற்றில் இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத சம்பவம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. விவசாயிகள் நெஞ்சு வெடித்து செத்துக் கொண்டிருக்கிறார்கள். கருகிய பயிரைக் கையில் பிடித்தபடி செத்துக்கிடக்கிறார்கள், வயல்வெளிகளில்.டெல்டா மாவட்டமே இப்போது சுடுகாடாக காட்சியளிக்கிறது. திரும்பும் பக்கமெல்லாம் வறட்சியும் அதன் பாதிப்புக்களுமே எதிரொலிக்கின்றன. என்ன செய்வது என்று ஆத்திரத்துடன் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள் விவசாயிகள்.
விவசாயிகள் என்றுதானில்லை. டெல்டாவில் எங்கு திரும்பினாலும் யாரிடம் பேசினாலும் விவசாயிகளின் மரணங்களும் கருகிய பயிர்களும் பேசிக்கொண்டே இருக்கின்றன. ஒரு கல்லூரி மாணவனிடம் “ எப்படி கல்லூரி படிப்பு போகிறது” என பேசினால் கூட விவசாயிகளின் சாவைப்பற்றி பேசுகிறான். ஒரு ஓட்டல் உரிமையாளரிடம் “பொங்கல் எப்படி கொண்டாடப் போறீங்க?” என்று கேட்டால் “தம்பி நீங்க வெளியூரா? விவசாயி சாவுறான் எப்படி பொங்கல் கொண்டாட முடியும்?” என்கிறார்.
ஒவ்வொரு நாளும் எத்தனை விவசாயிகள் செத்துப் போவார்கள் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் வயல்வெளிக்குச் சென்றாலே தாங்கள் செத்துப்போய் விடுவோம் என்கிறார்கள் விவசாயிகள். ஜெயலலிதா மறைவை தாங்க முடியாமல் செத்துப்போனார்கள் என்று 3 லட்ச ரூபாய் கொடுத்த அதிமுகவோ விவசாயிகள் சாவை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ஏளனம் செய்கிறது. கரும்பு காய்ந்து போனதை பார்க்க மாட்டாமல் நெஞ்சு வெடித்து செத்துப் போன விவசாயி குடும்பத்துக்கு பொங்கலை முன்னிட்டு 2 அடி கரும்பு கொடுக்கிறோம் என்கிறது தமிழக அரசு. பணமதிப்பிழப்பிற்கு பின்னர் கடன்கூட வாங்க முடியாத நிலையில் விவசாயிகள் அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இத்தனை விவசாயிகளைக் கொன்றது காவிரியைத் தடுத்த மோடி அரசும் ஆற்று மணலைக் கொள்ளையடித்த அதிமுக – ராவ் – ரெட்டி கும்பல்தான். கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு என்ற முழக்கத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்கிறது மக்கள் அதிகாரம். இனியும் ஒரு விவசாயி கூட சாகக்கூடாது. பொங்கல் நமக்கு இல்லை. உழவர்கள் சாகும் போது உழவர்திருநாள் எப்படி நடத்த முடியும்? விவசாயிகள் செத்துக்கொண்டிருக்கும் போது ஜல்லிக்கட்டின் பெருமையைப் பேசிக்கொண்டிருப்பதையும் சசிகலா ஆட்சியைப்பிடிக்க தகிடுதத்தங்கள் ஆடிக்கொண்டிருப்பதையும் மோடியின் உளறல்களையும் எப்படி சகிக்க முடியும். நமது இதயம் கல்லால் செய்யப்பட்டிருக்கிறதா என்ன?
விவசாயிகளுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்க வேண்டும். அதை முன்வைத்து மாணவர்களும் இளைஞர்களும் தொழிலாளிகளும் இதோ தஞ்சை டெல்டாவில் விவசாயிகளை சந்திக்கிறார்கள். நம்முடைய வாழ்வை அழித்த இந்த அரசை அழிக்காமல் தீர்வு இல்லை என்பதை முழங்குகிறார்கள். எவன் செத்தால் எனக்கென்ன என்று பேசுவோர்களை நீ வயிற்றுக்கு சோற்றை தின்கிறாயா இல்லையா என்று சவுக்கால் அடித்து சொரணையை வரவழைக்கிறார்கள். கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் சொல்லுகிறார்கள் ஆறு குளங்களைத் தூர்வாராமல் நம் வாழ்வை அழித்த அரசை தூர்வாருவதுதான் போகி.
சோழநாடு சோறுடைத்தது என்பார்கள் இன்றோ சோழநாடு சுடுகாடாகிவிட்டது. இதைப்பற்றி பேசாமல் இருப்பது அவமானம் மட்டுமல்ல; மனிதனாக வாழ்வதற்கே தகுதியற்றதற்கான அடையாளம். உலகிற்கே சோறு போட்ட விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க ஆதரவுக் கரம் நீட்ட நாங்கள் இருக்கிறோம் என மக்கள் அதிகாரம் தோழர்கள் கிராமங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
இந்த அரசை கழுத்தில் துண்டு போட்டு இழுத்து வருவோம் என நம்பிக்கை ஊட்ட டெல்டாவிற்கு குடும்பத்தோடு வாருங்கள்.
உரிமையோடு அழைக்கிறது மக்கள் அதிகாரம்.
(படங்களைப் பெரிதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)
மக்கள் அதிகாரம் திருவாரூர் நாகை தஞ்சை மாவட்டங்கள்
தொடர்புக்கு – 99623 66321
அதிர்ச்சியாலும் தற்கொலையாலும் இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கு இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கு.
தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வந்து மீண்டும் விவசாயம் செய்யும் வரை மின் கட்டணம், கல்வி கட்டணம் மற்றும் அனைத்து வரிகளையும் வசூலிப்பதை நிறுத்து.
டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாய குடும்பங்களுக்கு ரேசன் கடை மூலம் மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை பொருள்களை இலவசமாக வழங்கு.
குடிநீர் பஞ்சம், விவசாயம் அழிவு, விவசாயிகள் மரணம் ஆகியவற்றை பேரிடராக கருதி தமிழகம் முழுவதும் ஆறு, ஏரி, குளம், கால்வாய்களை தூர் வாரி மராமத்து செய்வதை இந்த ஆண்டு முழுவதும் அரசு வேலையாக அறிவித்து பொதுப்பணித்துறையின் கீழ் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கு.
விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலையை தீர்மானிக்கும் உரிமையை விவசாயிகளுக்கே வழங்க சட்டம் இயற்று!
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடு.
உடனே டாஸ்மாக்கை மூடு.
மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரைவிட்ட விவசாயிகள்
தர்ணா 11-1-2017 புதன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
புதிய ரயில் நிலையம் அருகில், திருவாரூர்.
உலகுக்கே சோறுபோட்ட விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க, அவர்களுக்கு ஆறுதல் சொல்ல, ஆதரவு கரம் நீட்ட இந்த சமூகம் முன்வருமா ! இந்த அரசு நம்மை காப்பாற்றுமா ? என நம்பிக்கையிழந்து தற்கொலையாலும் அதிர்ச்சியாலும் மரணமடைகிறான் விவசாயி.
நாங்கள் இருக்கிறோம். இந்த அரசை கழுத்தில் துண்டு போட்டு இழுத்து வருவோம் என நம்பிக்கை ஊட்ட டெல்டாவிற்கு குடும்பத்தோடு வாருங்கள், சோறு திங்கும் அனைவருக்கும் சொந்தமான துக்கம் இது. உழவருக்காக பொங்கி எழாவிட்டால் இது உயிருள்ள நாடா? நமக்கு பொங்கல். உழவர் திருநாள் என்பது விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத் தருவதுதான். இந்த ஆண்டு பொங்கல் அனைவருக்கும் கருப்பு நாள்.
தொடரும் தமிழக விவசாயிகளின் அகால மரணத்திற்கு காரணம் !
மத்திய, மாநில அரசுகளின் தனியார்மய – தாராளமயக் கொள்கை
காவரி நீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமை மறுக்கப்பட்டது.
ஆறு, ஏரி, குளம் தூர் வாராமல் குடி மராமத்தை தமிழக அரசு செய்யாதது.
அதிமுக – மன்னார்குடி மாஃபியா கும்பல், ஆற்று மணலை கடந்த பல ஆண்டுகளாக வரைமுறையற்று கொள்ளையடித்தது.
ரூ. 500, 1000 செல்லாது என்ற மோடியின் பணமதிப்பு நீக்க அறிவிப்பு ஆகிய அனைத்தும் விவசாயம் அழிந்து வருவதற்கும் விவசாயிகள் தற்கொலை அதிர்ச்சி மரணத்திற்கும் அடிப்படை காரணம்.
மழை பெய்யவில்லை, என்ன செய்ய முடியும்? என்ற வாதம் விஞ்ஞானம் வளர்ந்த 21 ஆம் நூற்றாண்டில் பேசுவது பித்தலாட்டம் மட்டுமல்ல, விவசாயிகளை ஏமாற்றுவது. நிலங்களை பறித்து மீத்தேன் ஷேல் போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்க்கும் சதித்திட்டமும் ஆகும்.
மேலும் ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் செயலிழந்து மக்களின் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க வக்கில்லாமல் தோல்வி அடைந்ததுடன் மக்களுக்கு எதிர்நிலை சக்தியாகவும் மாறிவிட்டது.
(படங்களைப் பெரிதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)
ஒருங்கிணைப்பு: மக்கள் அதிகாரம்
திருவாரூர் நாகை தஞ்சை மாவட்டங்கள்
தொடர்புக்கு – 99623 66321