போயசு தோட்டத்தில் ஜெயாவுக்கு ஒரு பொருத்தமான அஞ்சலி ! எழுதலாம் என்று தான் தோன்றுகிறது. போயஸ் தோட்டத்தின் வாசலில் நடந்த ஆபாசக் கூத்துகளுக்கு ஊடகங்கள் அளித்து வரும் கவரேஜைக் காணும்போது, இதைப்பற்றி எழுதவும் கூசுகிறது. மானங்கெட்ட நிலையின் உச்சம் என ஒன்று இருப்பதாகக் கொண்டால், அந்த நிலையை எட்டியிருப்பது யார், தீபாவா, போலீசா, ஊடகங்களா, தமிழக மக்களா என்று கேட்டால் எளிதில் பதில் சொல்லி விட முடியாது.
தன்னை வரச்சொல்லி அழைத்து விட்டு இப்போது வெளியே துரத்தி விட்டதாக தீபக் மீது குற்றம் சாட்டுகிறார் தீபா. “இதற்கு ஆதாரம் அந்த போனில் இருக்கிறது” என்று தீபா பேரவை தலைவர் ராஜாவின் போனை காட்டுகிறார். “யாரைக்கேட்டு என் போனிலிருந்து பேசினாய்” என்று தீபாவிடம் கேட்கிறார் பேரவை தலைவர் ராஜா. “அதை அப்புறம் பேசிக்கொள்ளலாம், நம்மை வரச்சொல்லி கூப்பிட்டானா இல்லையா அதை தீபக்கிடம் கேள்” என்கிறார் தீபா.
“மரியாதையாக பேசுங்கள், நீ, வா, போ என்று பேசாதீர்கள். மாதவன் என்னுடைய ஹஸ்பெண்டு” என்று போலீசு அதிகாரியிடம் எகிறுகிறார் தீபா. “எனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை. இது அக்கா தம்பி பிர்ச்சினை” என்கிறார் மாதவன். “நீ ஏன்டா இங்கே வந்தே, திருட்டு நாயே, நகையை எடுத்துகிட்டு ஓடினவன்தானடா நீ” என்று தீபா புருசன் மாதவனை திட்டுகிறார் ராஜா. “எச்சகலை நாயே” என்று தீபக்கை திட்டுகிறார் தீபா.
உலக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையை கவர் செய்ய வந்ததைப்போல ஒரு ஊடகத்தினர் கூட்டம் காமெராவுடன் அங்கே நிற்கிறது. ஊடகத்தினரை போயஸ் தோட்டத்து காவலர்களும் போலீசும் சேர்ந்து விரட்டுகிறார்கள். உடனே ஊடகத்துக்காரர்கள் “உரிமைக்கு” குரல் கொடுக்கிறார்கள்.
இரண்டு நாளாக இதுதான் தமிழகத்தில் முக்கிய செய்தி. இறுதிக் காட்சியில் “சசிகலாவும் தன் தம்பியும் சேர்ந்து சதி செய்து அத்தையை கொன்று விட்டதாகவும், இது குறித்து பிரதமரிடம் முறையிடப் போவதாகவும்” பிரகடனம் செய்கிறார் தீபா.
நேற்று இந்த கூத்துகளுக்கு நடுவில், போயசு தோட்ட வாசலில் ஒரு போலீசு அதிகாரி தீபாவிடம், “கிளம்புங்கம்மா, எப்பேர்ப்பட்ட பெரிய குடும்பம் அம்மா, நீங்க இப்படி பண்ணலமா” என்று உருக்கமாக கெஞ்சிக்கொண்டிருந்தார். நேற்று அரங்கேறி கேவலங்களிலேயே ஆகப்பெரிய கேவலம் இதுதான்.
அறிவோ சொரணையோ சுயமரியாதையோ இல்லாத ஒரு அடிமையைப் போல பேசினாரே அந்த போலீசு அதிகாரி, கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் நாட்டின் ஆகப்பெரும்பான்மையான ஊடகங்கள் ஜெயலலிதாவை அணுகின, அணுகுகின்றன. தீபா விவகாரத்தையும் ஓபிஎஸ்,இ பி எஸ், தினகரன் விவகாரங்களையும் அவ்வாறே அணுகி வருகின்றன.
உண்மை என்ன? நேற்று போயசு தோட்டத்தின் வாசலில் என்ன நடந்ததோ அதுதான் ஜெயலலிதா இருந்தபோது போயசு தோட்டத்துக்கு உள்ளேயும் நடந்து வந்தது. கப்பம் கட்டாத அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்களுக்கு நடந்த ஆபாச அர்ச்சனைகளை ஒப்பிடும்போது நேற்று நடந்தது ஒன்றுமில்லை. உள்ளே “எச்சக்கலை நாயே” என்று அம்மாவால் அழைக்கப்பட்டவர்கள், சட்டமன்றத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்களே என்றும் அழைக்கப்பட்டார்கள் என்பது மட்டுமே வேறுபாடு.
நேற்று நடைபெற்ற குடுமிபிடி ரோட்டில் நடந்த காரணத்தினால், படம் எடுக்கவிடாமல் தடுப்பதற்கு போலீசு முயற்சி செய்தது. அம்மா இருந்தபோது போயசு தோட்டத்தின் காம்பவுண்டுக்கு உள்ளேயே யாரும் நுழைய முடியாமல் போலீசு பார்த்துக் கொண்டதால், லைவ் கவரேஜ் சாத்தியப்படவில்லை என்பதுதான் இரண்டுக்குமான வேறுபாடு.
“பொறுக்கித்தனத்தில் விஞ்சி நிற்பது அத்தையா மருமகளா” என்று கேட்டால் “அத்தைக்கு பக்கத்தில் கூட மருமகள் வரமுடியாது” என்றுதான் சொல்ல வேண்டும். பதவிக்கு வாரிசுரிமை கோரும் பொருட்டு “எம்ஜியாரின் உடன்கட்டை” என்று தயங்காமல் சொல்லிக் கொண்டதாகட்டும், ஜானகியியும் ஜெயலலிதாவும் ஒருவருக்கு எதிராக ஒருவர் கூறிக் கொண்ட கொலைக் குற்றச்சாட்டுகளாகட்டும், ஜெயலலிதா சட்ட மன்றத்தில் தலைவிரிகோலமாக நடத்திய நாடகமாகட்டும், “கவர்னர் சென்னா ரெட்டி என் கையைப் பிடித்து இழுத்தார்” என்று ஜெ குற்றம் சாட்டியதாக இருக்கட்டும் – ஜெயா ஜெயாதான். இவை எதிலும் அத்தையின் கால் தூசுக்குகூட தீபா சமமாக மாட்டார்.
இருந்தாலும் ஜெயலலிதா ஏதோ கண்ணியமான நபரைப் போலவும், ஆளுமைத்திறன் மிக்கவரைப் போலவும், அவர் தலை சாய்ந்தவுடன், அவரது அருமை பெருமைகளை சீர்குலைக்கும் வகையில் கட்சிக்காரர்களும் தீபாவும் நடந்து கொள்வதாகவும் ஊடகங்கள் சித்தரிக்கின்றன.
போயசு தோட்டம் என்பது ஒரு திருடியின் சொத்து. பறிமுதல் செய்து மக்களின் உடைமையாக்கப்படவேண்டிய அந்த சொத்தை மட்டுமின்றி பறிமுதல் செய்யப்பட வேண்டிய பல சொத்துகளை சசிகலா கும்பல் சட்டவிரோதமாகத் தன் பிடியில் வைத்திருக்கிறது. நீதிமன்றம் அதை அனுமதிக்கிறது. போலீசு அதற்கு காவல் காக்கிறது. ஊடகங்கள் இந்த அசிங்கத்தை ஈயாய் மொய்க்கின்றன.
‘பீ’ யே நோயைப் பரப்புவதில்லை. ஈக்கள்தான் அதைச் செய்கின்றன.
கோடை வெயிலோடு சேர்ந்து கல்வி ஆண்டின் ஆரம்ப கட்ட துன்பங்கள் மக்களை வாட்டுகின்றன. பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் வந்த பிறகு எந்தக் கல்லூரியில் என்ன படிப்பு கிடைக்கும்? கட்டணம் எவ்வளவு, விடுதி இடம் கிடைக்குமா என்றெல்லாம் ஆரம்பித்து இறுதியில் பிடித்த படிப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஏதாவது ஒரு படிப்பு கிடைக்குமா என்று தவிக்கிறார்கள் மாணவர்கள்.
அன்றாடம் மதிய நேரத்தில் அனைத்து தொலைக்காட்சிகளும் எந்த படிப்பு படிக்கலாம் என்ற வண்ண மயமான கனவுகளையும், கல்லூரிகளையும் நிபுணர்கள் வாயிலாக ஆசை காட்டுகிறார்கள். சிலநேரம் அச்சுறுத்தவும் செய்கிறார்கள்.
ஒரளவு பிடித்த படிப்பும் கல்லூரியும் கிடைத்தவர்களுக்கும் எதிர்காலம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பொறியியல் படித்த மாணவர்கள் பலர் போலீசு வேலைக்குப் போட்டி போடுகிறார்கள். பொறியியல் இடம் கிடைக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றுவதற்கு பல தனியார் பள்ளிகள் தமது மாணவர்களை இறுதித் தேர்வில் காப்பி அடித்து எழுதக் கூட ஊக்குவிக்கின்றன. நாமக்கல் பிராயலர் பள்ளிகள் உருவாக்கும் மன அழுத்தம் ஆண்டுக்காண்டு காவு கொள்ளப்படும் மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது.
மேட்டுக்குடியினர் படிக்கும் பள்ளிகளில் ஏழை மாணவருக்கு 25% இடம் ஒதுக்க வேண்டும் எனும் அரசு உத்திரவு கேலிக்குரிய முறையில் அலட்சியப்படுத்தப்படுகிறது. மல்லையா வகையறாக்களின் வராக்கடனை வசூலிக்க முடியாத அரசுகள், ரிலையன்ஸ் நிறுவனத்தை வைத்து மாணவர்களின் கல்விக் கடனை அடாவடி செய்து வசூலிக்கின்றன. மதுரை மாணவர் லெனின் இப்படித்தான் கொல்லப்பட்டார்.
ஒப்பீட்டளவில் கட்டணக் கொள்ளை இல்லாத அரசுப் பள்ளிகள் திட்டமிட்டே சாகடிக்கப்படுகின்றன. இந்நிலையில் “நீட் தேர்வு” ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களின் மருத்துவக் கல்லூரி படிப்பை நிரந்தரமாக புதைத்து விட்டது.
கேள்வி கேட்க கற்றுத்தர வேண்டிய கல்வி இன்று கேள்விக்கிடமின்றி மக்களை காயடிக்க பயன்படுகிறது. நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் தனியார் மயத்தின் கோரக்கரங்களை அழிக்காமல் நமது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல கல்வியையோ எதிர்காலத்தையோ வழங்கிவிட முடியாது!
தோழமையுடன் புதிய கலாச்சாரம்
நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
கேள்வி கேட்க வைப்பதுதான் கல்வி – கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்
மெட்ரிக் கொலைக்கூடங்கள!
அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி: யார் குற்றவாளி?
கல்வியுரிமையைப் பறித்து… குலத் தொழிலைத் திணித்து…
பிட் அடித்து 100% ரிசல்ட் தனியார் பள்ளிகள் சாதனை!
ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?
தனியார் கல்வியில் கருகிய விட்டில் பூச்சிகள்!
கடன் வசூல் செய்ய வேண்டியது மாணவரிடமா ரிலையன்ஸிடமா ?
கடைச்சரக்கான கல்வி காவிமயமாகும் அபாயம்!
நீட் (NEET) தேர்வு : நரியின் சாயம் வெளுத்தது!
காட்ஸ் ஒப்பந்தம் : அரசுக் கல்வியைத் தூக்கிலிடுகிறார் மோடி!
பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 300
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1600
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
பாவல் குஷிஸ்ன்ஸ்கி (Pawel Kuczynski) போலந்து நாட்டைச் சேர்ந்த ஓவியர். சமூகவியல் நகைச்சுவை பார்வையுடன் இவர் வரைந்த ஓவியங்கள் பிரபலமானவை. 1976 ஆம் ஆண்டு போலந்தில் பிறந்த அவர் போஸ்னன் நுண்கலைக் கல்லூரியில் படித்தவர். 2004 ஆம் ஆண்டு முதல் சமூகவியல் நகைச்சுவை சித்திரங்களை வரைவதில் கவனம் செலுத்தி வருகிறார். இத்துறையில் பல பரிசுகளையும் வென்றுள்ளார்.
அவரது படைப்புகளில் பெரும்பாலானவை வறுமை, பேராசை, அரசியல் மற்றும் இறப்பு ஆகியவற்றை பேசுகின்றன. அவர் சொல்ல வரும் விஷயத்தை ஆதாரங்கள் மற்றும் சித்திரங்கள் கொண்ட விளக்க பாணியுடன் இருக்கும். அவருடைய ஓவியங்கள் எதுவும் மூடு மந்திரமாக பேசுவதில்லை. யதார்த்தமான ஒரு விசயத்தோடு மற்றொரு யதார்த்தமான விசயத்தை எதிர் முரணாக வைத்து அவர் குறிப்பிட்ட கருப்பொருளை உணர்த்துகிறார். இம்மூன்றும் சேர்ந்து அவருடைய ஓவியங்களை சுவாரசியம்கொண்டதாக மாற்றுகின்றன.
காற்று மாசுபாடு
ரத்தத்தை விட வர்ணத்திற்கே மதிப்பு அதிகம்.
கைப்பேசிகள் ரீங்காரிக்கின்றன – குருவி இனங்கள் அழிகின்றன.
காற்று மாசுபாட்டினால் காற்றை விலைக்கு வாங்கும் நிலை
தொடர்ந்து மக்களின் தலையில் இடியாக ஒன்றன் மீது ஒன்றாக பல அறிவிப்புகளை அறிவித்து வருகிறார் மோடி. பணத்தின் மதிப்பை அழித்து மக்களின் பணத்தை வங்கிக்கு கொண்டுவந்துவிட்டு, மல்லையா கடனைத் தள்ளுபடி செய்து வெளிநாட்டுக்கு வழியனுப்பியது பாஜக அரசு. அதே நேரத்தில் வங்கி வாசலின் வரிசையிலும், அவசர மருத்துவ செலவுகளுக்குப் பணமில்லாமலும் நாடெங்கும் நூற்றுக் கணக்கான மக்கள் செத்து மாண்டனர். இன்று அதற்கு சற்றும் குறையாத வகையில் மாடுகளை இறைச்சிக்காக விற்கக் கூடாது என அறிவித்து விவசாயிகள் மீது மீண்டுமொரு தாக்குதலைத் தொடுத்துள்ளது மோடி அரசு.
இந்த அறிவிப்பில் கிரமப் பொருளாதாரத்தை கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைக்கும் நோக்கமும் உள்ளது. பசு புனிதம் என்று இந்தியாவெங்கும் சட்டவிரோதமாக பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் குண்டர்களால் மக்களைக் கொன்ற பாசிசக் கும்பல்; இன்று அதையே சட்டப்பூர்வமாகப் போலீசைக் கொண்டு செய்வதற்கு எத்தனிக்கிறது. அதனால் தான் பாஜக – ஆர்.எஸ்.எஸ் கும்பல் வெவ்வேறு குரல்களில் பேசிப் பார்க்கிறது.
இவற்றையெல்லாம் மக்கள் தங்கள் அனுபவத்திலேயே பார்த்து விட்டனர். மாட்டின் பின்புறத்திற்கு கற்பூரம் காட்டுவதையும், ஒரு கட்டு அகத்திக் கீரையை மட்டும் வழங்கிவிட்டு பசுவை எங்கள் தாய் என தம்பட்டமடித்துக் கொள்ளும் கூட்டத்திற்கு மாடுகளை நம்பி பிள்ளையின் படிப்பு, மகளின் திருமணம், குடும்பத்தின் மருத்துவச் செலவு என தங்கள் வாழ்வின் இரத்தமும் சதையுமாக பிணைத்துள்ள விவசாயிகளின் பதிலடிகளைப் பாருங்கள், பகிருங்கள். நேர்காணல் எடுக்கப்ப்ட்ட இடம் மணப்பாறை மாட்டுச் சந்தை.
இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்ற அறிவிப்பிற்கு தமிழகத்தில் பரவலாக மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்துக் கொண்டிருக்கிறது. இப்பிரச்சினையை ஆரம்பத்தில் இருந்தே மாட்டுக்கறி உண்பவர்களது பிரச்சினையாக மட்டும் சுருக்க நினைத்தது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.
தொலைகாட்சி விவாதங்களில் பசு புனிதம், எங்கள் தாய் போன்றது அதை உண்பது மகா பாவம் என ஏறி நின்று பேசினார்கள். ஆனால் அவர்களுக்கு ஆப்பறையும் விதமாக புரட்சிகர அமைப்புகள், முற்போக்கு – ஜனநாயக சக்திகள் தமிழகமெங்கும் மாட்டுக்கறி திருவிழா நடத்தி எதிர்ப்பைப் பதிய வைத்துள்ளனர்.
இந்து மக்கள் கட்சி போன்ற கூலிப்படை வானரப் பரிவாரங்கள் இதை முசுலீம்களின் பிரச்சினை என்பதாக மடை மாற்ற, பன்றிக்கறி சாப்பிடுவோம் என அறிவித்தது. இவ்வாறு கையை ஊன்றி கர்ணம் போட்டாலும் இந்துத்துவ பருப்பு இங்கு வேகவில்லை. அதனால் பொன்.ராதகிருஷ்ணன் போன்றவர்கள் ஜகா வாங்கி இது மாட்டுக்கறிக்கான தடை கிடையாது. விற்பனைகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம் என பேசிவருகின்றனர். ஆனால் இவர்கள் எவரும் இதை தமிழக விவசாயிகளிடம் நேரில் சொல்லிப் பார்க்கட்டும். மக்கள் வெளுத்து விடுவார்கள்.
உண்மையில் மாட்டுக்கறி என்பது விவசாயிகளை வாழவைக்கும் சுழற்சிமுறையாக உதவுகிறது. அதனால்தான் மற்ற எவரையும் விட மாடு விற்கும் விவசாயிகள் எப்படி தமது மாடுகளை விற்றே ஆக வேண்டும் என்பதை கோபத்தோடு இங்கே பகிர்கிறார்கள். மணப்பாறை மாட்டுச்சந்தையின் குரல்களில் சில உங்களின் பார்வைக்கு!
இந்திய அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், ஊடகங்களும் இந்தியாவின் “சூப்பர் காப்” எனப் புகழப்பட்ட கே.பி.எஸ். கில், 26.05.2017 அன்று மரணமடைந்ததற்கு தங்களது வருத்தத்தைத் தெரிவித்து, அவரது புகழையும் பாடிவருகின்றனர். 30.05.2017 அன்று வெளியான தமிழ் ஹிந்துவில் கூட கே.பி.எஸ். கில் குறித்த சேகர் குப்தா என்னும் முன்னாள் பத்திரிக்கையாளரின் கட்டுரை சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
கன்வர் பால் சிங் கில் என்ற கே.பி.எஸ்.கில், கடந்த 1958-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக அஸ்ஸாம் மாநிலத்தில் பணியிலமர்ந்த அவர், 1980-களின் தொடக்கத்தில் அம்மாநிலத்தின் ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே, இவர் மீது பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. அச்சமயத்தில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் போராட்டக்காரர் ஒருவரை உதைத்தே கொன்றிருக்கிறார். அக்குற்றத்திற்காக இவர் மீது வழக்கு தொடரப்பட்டு, பின்னர் அவ்வழக்கிலிருந்து டில்லி உயர்நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
கிரிமினல் கில்
1984-ம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ். காலிகளும், காங்கிரசு காலிகளும் இணைந்து நடத்திய சீக்கிய எதிர்ப்புக் கலவரத்தைத் தொடர்ந்து, பஞ்சாப்பில் தனி நாடு கேட்டுப் போராடும் போராளிகளின் போராட்டம் தீவிரமடைந்தது. நிலைமையைச் சீர் செய்ய ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைக்குப் பெயர் போன கில், பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். 1984-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட கில் 1988 – 1990 கால கட்டத்திலும், 1991 – 1995 காலகட்டத்திலும் மாநிலத்தின் டி.ஜி.பி.-யாக நியமிக்கப்பட்டார். இக்காலகட்டத்தில் தான் கில்லின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் பஞ்சாப் போலீசு, பல்லாயிரக்கணக்கான பஞ்சாப் இளைஞர்களை, சட்டவிரோதமாகச் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்து, போலி மோதலிலும், போலீசுக் கொட்டடிகளிலும் கொன்று குவித்தது.
டிஜிபியாக பதவியேற்ற பின்னர், ஆபரேசன் பிளாக் தண்டர் என்ற பெயரில், சீகியர்களின் புனித்த் தலமான அமிர்தசரஸ் தங்க கோவிலுக்குள் போலீசு படையை அனுப்பி நூற்றுக்கணக்கானோரை கைது செய்து சுமார் 43 பேரை கோவிலுக்குள்ளேயே கொன்று குவித்தார் கில். இந்தக் காலகட்ட்த்தில் பத்தாயிரக்கணக்கான பஞ்சாபியர்கள் போலீசின் ஒடுக்குமுறையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் போலி மோதல் கொலைகளின் மூலம் கொல்லப்பட்டனர். விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்ட பலரும் ‘காணாமல்’ போயினர். அதாவது தடயமில்லாமல் ஒழித்துக் கட்டப்பட்டனர். 1989 – 1992 காலகட்டத்தில் மட்டும் பஞ்சாபில் சுமார் 5000-க்கும் மேற்பட்டவர்கள், போலீசால் கொலை செய்யப்பட்டனர்.
கே.பி.எஸ்.கில், தீவிரவாதத்தை ஒடுக்க சீக்கியப் போராளி அமைப்புகளைத் தடை செய்து, போராளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன்னால் நிறுத்தவில்லை. மாறாக அவர்களைக் கூண்டோடு போலி மோதல் கொலைகள் மூலம் ஒழித்துக் கட்டினார். இந்த நரவேட்டை நாயகனின் வெறி கொண்ட நடவடிக்கைக்கு அப்பாவிகள் தான் பெரும்பான்மையாகப் பலியாகினர். இது தவிர போராளிகளைக் கொல்லும் போலீசுக்கு பரிசுத்தொகைகளும், காட்டிக் கொடுப்பார்களுக்கும், போலீசுக்கு கங்காணிகளாக செயல்படுபவர்களுக்கும் பெருந்தொகைகளைப் பரிசாக வழங்கினார் கில். அன்றைய காலகட்டத்திலேயே ரூ. 50,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பட்டியலிடப்பட்ட போராளிகளைக் கொல்பவர்களுக்கு பகிரங்கமாகவும், பட்டியலில் இல்லாதவர்களையும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களையும் கொன்றவர்களுக்கு கமுக்கமாகவும் பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.
ஜஸ்வந்த் சிங் கல்ரா
இதனால் கில் என்ற இரத்த வெறியனின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய பஞ்சாப் போலீசு, கொலை செய்வதையே நோக்கமாகக் கொண்டு வெறி கொண்டு திரிந்தது. கொலை செய்தால் பணமும் பரிசும் கிடைக்கும் என்ற அடிப்படையில் பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையைப் போன்று செயல்பட ஆரம்பித்தன போலீசு கும்பல். இந்நிலைமையைக் கண்டு 1993-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை, “கில் போலீசுத்துறை தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், பஞ்சாப் மக்கள் போராளிகளைக் கண்டு பயங்கொள்ளவில்லை, மாறாக போலீசைக் கண்டு தான் அஞ்சி நடுங்குகின்றனர்” என்று எழுதியது.
கில் தலைமையிலான பஞ்சாப் போலீசால், கொட்டடியிலும், போலி மோதலிலும் கொல்லப்பட்ட அப்பாவிகளை சுடுகாட்டில் எரித்த போலீசின் மோசடியை மனித உரிமைச் செயல்பாட்டாளரும், வங்கி ஒன்றின் இயக்குனருமான ஜஸ்வந்த் சிங் கல்ரா அம்பலப்படுத்தி, அது தொடர்பாக பல்வேறு ஆவணங்களையும், ஆதாரங்களையும் திரட்டி வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து 1995 -ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ம் நாள், காலையில் தனது காரைக் கழுவிக் கொண்டிருந்த கல்ராவை, கடத்திச் சென்றது போலீசு கும்பல். அவரது உறவினர்களுக்குக் கூட அவர் குறித்த எந்தத் தகவலையும் தர மறுத்தது போலீசு.
ஜஸ்வந்த் சிங் கல்ராவை உடனடியாக மீட்டுத்தரக் கோரி செப்டெம்பர் 11, அன்று அவரது மனைவி ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். அதில் கில்லுக்கு எதிராக கல்ரா பல்வேறு ஆதாரங்கள் திரட்டியிருந்த சூழலில், அவருக்கு போலீசில் இருந்து மிரட்டல் தொடர்ச்சியாக வந்திருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவரைப் போலீசு தான் கடத்தியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதற்குப் பதில் மனுவில், பஞ்சாப் போலீசு, கல்ராவைத் தாம் கைது செய்யவில்லை என்றும் அவரைத் தேடி வருவதாகவும் நீதிமன்றத்தில் சொன்னது. கில்லின் உத்தரவுப்படி பஞ்சாப் போலீசால் கடத்தப்பட்ட கல்ரா, ஒரு மாத காலம் சித்திரவதை செய்யப்பட்டு அதன் பின்னர் அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து தேடி வருவதாக வெளியுலகிற்குக் கணக்குக் காட்டியது பஞ்சாப் போலீசு.
அதன் பின்னர் கடந்த 2005ம் ஆண்டு, கில்லின் காலகட்டத்தில் சிறப்புப் போலீசு அதிகாரியாகப் பணியாற்றிய குல்தீப் சிங், இவ்வழக்கில் கில்லின் கிரிமினல் தனத்தை நீதிமன்றத்தில் வாக்குமூலமாக விளக்கினார். அவ்வாக்குமூலத்தில், செப்டெம்பர் மாதம், போலீசால் கடத்தப்பட்ட கல்ராவை, அக்டோபர் மாதத்தில் போலீசு அதிகாரி அஜித் சிங் சந்துவின் வீட்டில் வைத்து கில் சந்தித்தார் என்றும் கில் சந்தித்த சில நாட்களில் கல்ரா அங்கிருந்து ஜாபல் போலீசு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் வழியில் போலீசால் கொல்லப்பட்டார் என்றும் கூறியுள்ளார். அதோடு ஒருவேளை ‘கில்’லின் அறிவுரையை கல்ரா ஏற்றிருந்தால் அவர் தம்மைக் காப்பாற்றிக் கொண்டிருந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கு இதன் பின்னர் சூடுபிடித்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. குற்றத்தின் சூத்திரதாரியான ‘கில்’ அயோக்கியத்தனமான முறையில் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ரூபன் தியோல் பஜாஜ் – கேபிஎஸ் கில்
வெறுமனே ஒரு வெறி பிடித்த மிருகமாக, ஒரு கொலைகாரனாக, மட்டும் கில்லின் வாழ்க்கையைச் சுருக்கிப் பார்க்க முடியாது. அவர் ஒரு கடைந்தெடுத்த பெண் பித்தனாகவும் இருந்தார். 1988-ம் ஆண்டு ரூபன் தியோல் பஜாஜ் என்னும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை, விருந்து ஒன்றில் கலந்து கொண்ட போது கில் அத்துமீறி பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார். அப்பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி இது குறித்து புகார் அளித்து வழக்குப் பதிவு செய்தார். 1996-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், பிரிவு 509, பிரிவு 357ன் படி மூன்று மாத கடுங்காவல் சிறைத் தண்டனையும், தொடர்ந்து 2 மாத சிறைத் தண்டனையும், ரூ. 2,00,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது, இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடத்திய கில்லிற்கு தண்டனையை உறுதி செய்த அதே வேளையில் சிறைத் தண்டனையை மட்டும் இரத்து செய்தது.
1988 -ம் ஆண்டு ஒரு பெண் அதிகாரியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய கிரிமினலுக்கு 1989 -ம் ஆண்டு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு.
1995 -ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், மோதல் மேலாண்மை நிறுவனம் என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைவராகப் பதவியேற்றார். அரசாங்கங்களுக்கு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனமாக அது செயல்பட்டது. 1997 -ம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலம் இவரை பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்க அழைத்தது, ஆனால் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளியாக் தீர்ப்பு வழங்கப்பட்டதால் இந்தக் கிரிமினலால் அப்பதவியை ஏற்க இயலவில்லை
அது போல 2000 -ம் ஆண்டு விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்காக தமது தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆலோசனை உதவி வழங்க கில்லை அழைத்தது இலங்கை.
கிரிமினல் கில்லை உபயோகித்துக் கொண்ட குஜராத்- சட்டீஸ்கர் கிரிமினல்கள்
குஜராத்தில் 2002ம் ஆண்டு நரேந்திர மோடியின் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். காலிகளால் நடத்தப்பட்ட குஜராத் கலவரத்திற்கு பிறகு, கில்லை பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தார் மோடி. மோடி – கில் என்ற இரண்டு கிரிமினல்களின் கூட்டணியில் 2002 -ம் ஆண்டிற்குப் பிறகு அங்கு நடத்தப்பட்ட போலீசு வெறியாட்டங்கள் குறித்து தனியான விவரங்கள் எதுவும் தேவை இல்லை.
முசுலீம் மக்களைக் கொன்று குவித்த மோடிக்கு உதவியாக தமது கடமையை ஆற்றிய பின்னர், பழங்குடியின மக்களைக் கொன்று குவிக்க சட்டீஸ்கர் அரசு கில்லை பாதுகாப்பு ஆலோசகராக 2006ம் ஆண்டு நியமித்தது. எங்கெல்லாம் அரசு அதிகாரத்தில் உள்ள கிரிமினல்களுக்கு மக்களை ஒடுக்க கிரிமினல் போலீசு அதிகாரிகள் தேவைப்பட்டனரோ, அங்கெல்லாம் கில் ஆலோசகராகவும், அதிகாரியாகவும் சேவை செய்ய அழைக்கப்பட்டார்.
கிரிமினல்களுக்காக மக்களைக் கொன்று குவித்த கிரிமினல் கில், தனது 82-வது வயதில் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். முதலாளித்துவப் பத்திரிக்கைகளும், ஊடகங்களும், இந்தக் கிரிமினலின் மறைவிற்கு அஞ்சலியும் புகழாரமும் செலுத்துகின்றன. இந்த ஊடகங்களின் யோக்கியதையைப் புரிந்து கொள்ள அவர்கள் போற்றிப் புகழும் கிரிமினல் கில்லின் யோக்கியதையைப் புரிந்து கொண்டாலே போதும்.
சொறியாங்கல்லுக்கு சொறி புடிச்சதும் சந்தன கட்டைக்கி சளி புடிச்சதும் சரித்திரத்தில் கிடையாது. இப்படி ஒரு சொலவடை தஞ்சை மாவட்டத்தில் உண்டு. ஆனால் அப்படியான இயற்கைக்கு எதிர் மறையான மாற்றங்களை சந்தித்து வருகிறது தஞ்சை மாவட்ட காவிரி விவசாயப் பகுதிகள்.
தஞ்சையின் சிறப்பே தட்டுப்பாடற்ற தண்ணியும் மண்மணம் மாறாத பசுமையும்தான். இன்று தப்பிப் பிழைத்த மீதமிருக்கும் பயிர் பச்சையும் ஊட்டச்சத்தற்ற நோஞ்சான் குழந்தை போல் பசுமையை இழந்துவிட்டு உயிர் தண்ணீருக்காக ஊசலாடுகிறது. காலால் மடைமாற்றும் செழிப்பு மிக்க தஞ்சை கிராமங்கள் நோய் வாய்ப்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளது.
தஞ்சை ஒரத்தநாட்டிற்கு அருகே இருக்கும் தென்னமண்நாடு.
டெல்டா பகுதி என்பது திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டையின் ஒரு பகுதியும், கடலூரின் ஒரு பகுதியும் உள்ளடக்கியது. இதில் புது ஆற்றுப் பாசனம் பழைய ஆற்றுப் பாசனம் என இரு டெல்டா பிரிவுகள் உள்ளன. திருவாரூர், திருவையாறு, மன்னார்குடி, நாகப்பட்டினம், கடலூர், சிதம்பரம் அதை ஒட்டிய ஊர்கள் பழைய ஆற்றுப் பாசன பகுதி. தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை இதை ஒட்டிய ஊர்கள் புது ஆற்றுப் பாசனப் பகுதி.
மலைப் பிரேதேசங்களில் உருவாகும் தண்ணீர் கடலை நோக்கி வரும் போது கடலுக்கு முன் உள்ள சமவெளிதான் டெல்டா பகுதி. தண்ணீர் வந்து சேரும் கடைமடை பகுதி என்பதால் வண்டல்மண் பரவிய நஞ்சை நிலம் அதிகமாகவும் தண்ணீர் செழிப்பான பகுதியாகவும் விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மழை ஆரம்பமாகி பருவ மழையும் காவேரி ஆற்றுத் தண்ணீரும் ஒருங்கிணைந்து டெல்டா பகுதிக்கு வந்து சேரும். ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் முடிய தண்ணீரின் அளவு மிதமிஞ்சி இருக்குமென்பதால் நெல் சாகுபடி மட்டுமே இங்கு பிரதானம்.
குருவை, சம்பா என இரண்டு போக நெல்லும் பிறகு ஒரு போக உளுந்து, பயறு, எள்ளு, கடலை போன்ற தண்ணீர் அதிகம் தேவைப் படாத மானாவாரி பயிர் இதுதான் இங்கே வழமையான விவசாயம். விவசாயத்துக்கும் விளைநிலத்துக்கும் இரண்டு மாதம் கோடை விடுமுறை கொடுப்பது வழக்கம். மறு வருடம் ஜூன் மாதம் வந்ததும் பழையபடி குருவை சம்பா என தொடங்கி விடுவார்கள். இப்படித்தான் இங்கே விவசாயிகளின் வாழ்க்கை இயங்குகியது.
காவிரி டெல்டா பகுதியை பொருத்தவரை பாசன ஆற்றைப்போல் வடிகால் ஆறு கூட மதகுக் குழாய் பாலம் என்ற அமைப்பில் தான் இருக்கும். ஏனென்றால் மிதம்மிஞ்சிய தண்ணீரை வயல்களில் இருந்து வடிய வைக்கத்தான். தண்ணீர் செழிப்பான பகுதி என்பதால் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட இழப்பீடு அதற்க்கான நிவாரணம் பற்றிய கணக்கெடுப்புகள் தான் இங்கு அதிகம். வறட்சிக்கான கணக்கெடுப்பு அதுக்கான நிவாரணம் என்பது சமீப காலங்களில் டெல்டா பகுதி சந்தித்து வரும் புதுப் பிரச்சனை.
முழுக்க முழுக்க ஆற்றுத் தண்ணீரையும் கிராம்பபுற விவசாய வாழ்க்கை முறையையும் நம்பி இருந்த மக்கள் காவிரி பிரச்சனை தலை தூக்கியதும் போர்வெல் எனப்படும் ஆழ்குழாய் பாசன முறைக்கு மாறத் தொடங்கினர். மனிதனைப் போல் நிலங்களுக்கும் ஓய்வு கொடுத்து வந்தவர்கள் போர்வெலும், விவசாய இயந்திரமும் வந்தவுடன் நிலத்தை இளைப்பாற விடுவதில்லை. முதலாளித்துவ வழிமுறையிலான இந்த மாற்றம் பெருந்தனக்கார்களை மாற்றி விட்டது.
ஆரம்பத்தில் நிலங்கள் அதிகம் உள்ள பணக்கார விவசாயிகள் தண்ணீர் பாயாத மேட்டுப் பகுதிக்கும், புஞ்சை நிலமான தரிசு நிலத்துக்கும் தண்ணீர் வசதியை ஏற்படுத்த போர்வல் முறையை கொண்டு வந்தார்கள். அதுவும் பேர் சொல்லும் அளவுக்கே குறைவாக இருந்தது. காவிரியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதும் போர்வெல் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. போர்வெல் முறை வந்ததும் இரண்டு போக நெல் விவசாயம் மூன்று போகமாக மாறியது.
தஞ்சை ஒரத்தநாடு.
பழைய காவிரி ஆற்றுப் பாசன பகுதியான திருவாரூர் மன்னார்குடி நாகப்பட்டினம் பகுதியில் இந்த வருடம் விவசாயம் அடியோடு இல்லை. வரலாறு காணாத அதிக வறட்சிக்கு காரணம் ஓ.என்.ஜி.சி எரிவாயு குழாய்கள் பதிப்புதான் என்று அங்கே உள்ள விவசாயத்துறை அரசு அதிகாரிகளே எம்மிடம் கூறினர். முப்பது வருடங்களுக்கு முன் எரிவாயு குழாய்களின் பிரச்சனை எப்படி இருக்கும் என்பதை அப்பகுதி மக்கள் உணரவில்லை. பத்து பதினைந்து வருடம் கடந்ததும் அப்பகுதி மீள முடியாத நிலத்தடி நீர் சீர்கேட்டை சந்தித்தது.
காவிரியில் தண்ணீர் பிரச்சனை 2000 ஆண்டு வாக்கில் படுமோசமானது. அப்பபோது அப்பகுதியில் போர்வெல் போட முடியவில்லை. ஏற்கனவே போடப்பட்ட போர்வெலும் விவசாயத்துக்கு பயன்படவில்லை. நிலப் பகுதி வலுவிழந்தும் நிலத்தடி நீர் கடல் நீர் மட்டத்தை விட கீழிறங்கி விட்டதால் கடல்நீர் நிலப்பகுதிக்குள் ஊடுருவி விட்டது. 150 அடிக்கு கீழே போனாலே கடல் நீர் வருகிறது. கடல் நீர் ஊடுறுவலால் குடிநீருக்குக் கூட அவதிபடும் நிலை அப்பகுதியில் ஏற்பட்டிருக்கிறது. அதனால் முழுக்க முழுக்க காவிரியை நம்பி மட்டுமே அவர்கள் விவசாயம் உள்ளது.
புது ஆற்றுப் பாசனப் பகுதியில் ஒப்பீட்டளவு பாதிப்பு சற்று குறைவு எனலாம். இப்பகுதியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை இல்லை என்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பசுமையை பார்க்க முடிகிறது. காரணம் இப்பகுதியில் போர்வெல் விவசாயம் அதிகம்.
இப்பகுதியில் போர்வெல் போடத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் நூறு நூற்றியைம்பது அடி ஆழம்தான் போடப்பட்டது. அதற்க்கே குழாயில் வரும் தண்ணீரின் அளவு அதிவேகமாக இருக்கும். தண்ணீர் வரும் வேகத்தில் எருமை மாடு கூட எதிர்த்து நிற்க முடியாது. குளிக்கலாம் என்று தண்ணீர் ஊற்றும் இடத்தில் நின்றால் அலேக்காகப் பத்தடி தூரம் தூக்கிப் போட்டுவிடும். மழைக்காலம் முடியும் வரை மோட்டாரே தேவையில்லை. ஆர்டிசியன் ஊற்றுப் போல ( சுடுநீரல்ல) தானாகப் பொங்கி வழியும். பருவ மழையும், போர்வெலில் பொங்கும் நீருமே அந்த நிலங்களுக்கு போதுமானதாக இருந்தது. கோடை காலத்தில் மட்டுமே மோட்டார் ஓடும்.
அப்படி ஒரு வேகத்தில் பீச்சி அடித்த போர்வல்கள் இன்று விளக்கெண்ணை போல் வழிகிறது. 150 அடி வரை இறக்கிய குழாய்கள் 450 – 500 அடி போய்விட்டது. காவிரியில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டால் போர்வல் இல்லாமல் விவசாயம் இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஆரம்ப காலகட்டத்தில் பத்து ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்கள் போர்வெல் போட்டனர். 2000-வது ஆண்டுக்கு பிறகு மூணு ஏக்கர் இருந்தாலே போர்வல் போட தொடங்கி விட்டனர். காரணம் தண்ணீர் தட்டுப்பாட்டால் கைவிடும் நிலைக்கு விவசாயம் தள்ளப்பட்டதுதான்
வடக்கு, மேற்கு மாவட்ட பகுதியில் போர்வெல் போடும்போது 300 அடியில் ஈரப்பசை வந்தாலே பெரிய விசயம். தஞ்சை பகுதியை பொருத்தவரை 150 அடியிலேயே தண்ணி கிடைத்துவிடும். மற்ற பகுதியில் ஒரு லட்சம் ரூபாய் செலவில் போடப்படும் போர்வெலுக்கு தஞ்சையில் 4 அல்லது 5 லட்சம் தேவைப்படுகிறது. மற்ற பகுதியில் போர்வெல் போடும் போது காற்றை உள்ளே செலுத்தி பூமியை குடைந்து குழாயை இறக்க வேண்டும்.
தஞ்சை பகுதியில் பத்தடிக்கு கீழ போனாலே தண்ணீர் பிசுபிசுப்பு வந்துவிடும். அதனால் காற்றை உள்ளே செலுத்த முடியாது. தண்ணீரை உள்ளே செலுத்தி சகதியாக வெளியேற்றிதான் போர்வெல் போட முடியும். மற்ற இடங்களில் போர்வெல் குழாய் மட்டும் இறக்கினால் போதும். டெல்டாவில் குழாயைச் சுற்றி கூழாங்கற்கள், சல்லி, மணல், மக்கு மண் எல்லாம் போட வேண்டும். அதனால்தான் மற்ற பகுதியை விட போர்வெல் போட அதிக செலவு இங்கே ஆகிறது.
தஞ்சை ஒரத்தநாட்டிற்கு அருகே இருக்கும் தென்னமண்நாடு.
காவிரி கைவிட்டாலும், மழை இல்லை என்றாலும் போர்வல் வைத்துள்ளவர்கள் ஓரிரு மூட்டை குறைவாக அறுவடை செய்தாலும் விவசாயத்தை கை விடவில்லை. அதற்காக காவிரியோ மழையோ இல்லாமல் போர்வெலை மட்டுமே நம்பி விவசாயம் செய்ய முடியாது. ஒரிரு ஆண்டுகள் தான் தாக்குப் பிடிக்க முடியும். இதே நிலை நீடித்தால் வரும் காலம் டெல்டா பகுதி நினைத்துப் பார்க்க முடியாத அழிவை சந்தித்து, விவசாயத்தை முற்றிலுமாக கைவிடும் நிலை ஏற்படும்.
போர்வல் வைத்து விவசாயம் செய்வதிலும் அதிக பிரச்சனை உள்ளது. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கும். அதுவும் விட்டு விட்டு வரும். அடிக்கடி இணைப்பு பழுதடையும். தண்ணீர் மட்டம் இறங்கியதால் கூடுதலாக குழாயை இறக்க வேண்டும். கோடை காலங்களில் மோட்டார் பழுது அடிக்கடி நடக்கிறது. 2-பேஸ் கரண்டை 3-பேசாக மாத்த 6 – 7 ஆயிரம் செலவு. ஒரு தடவை மோட்டாரை வெளியே எடுத்து காயில் கட்டி உள்ளே இறக்க 10,000 செலவாகிறது. மோட்டார் ஸ்டாட்டர் பழுதடைந்தால் அதற்கு 2,000 ரூவாய். ஒரு முறை மெக்கானிக் வந்தால் 300 ரூபாய். மோட்டாரின் இழுவைச் சக்தி போதாது என்றால் புது மோட்டார் போட 45 ஆயிரம் ஆகிறது. இப்படியாக செலவு கணக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது.
பணக்கார விவசாயிகள் போர்வெல் போட்டு விவசாயத்தை பெருக்க நினைத்தார்கள். காலங்காலமாக விவசாயத்த மட்டுமே நம்பி இருந்த சிறு விவசாயிகள் எப்படியோ வெளிநாடு சென்று நாயாப் பேயாய் பாடுபட்டு பொருள் ஈட்டி போர்வல் போடுகிறார்கள். விவசாயத்தை தவிர வேறு தொழில் தெரியாதவர்கள் லாபம் இல்லை என்றாலும் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அவர்கள் பிள்ளைகள் நகர்புறத்தில் ஈட்டும் வருமானத்தையும் போட்டுதான் விவசாயத்தை விட்டுவிடாமல் இழுத்துப் பிடித்து ஓட்டுகிறார்கள்.
இதல்லாம் சொல்லிக் கொள்ளும் அளவு நிலம் வைத்துள்ளவர்களின் பிரச்சனை. ஒரு ஏக்கர், அதுக்கும் குறைவு அல்லது நிலமற்ற விவசாயிகளின் நிலை வேறு. வயதானவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் நிலை தடுமாறுகின்றனர். கிராமத்து இளைஞர்களோ முழுவதும் விவசாயத்தை கைவிட்டு விட்டு நகரங்களை நோக்கி விவசாயம் அல்லாத வேறு வேலைக்கு செல்கின்றனர்.
தஞ்சை ஒரத்தநாட்டுக்கு அருகே இருக்கும் சேதுராயன்குடிகாடு.
ஏதோ கொஞ்சம் நடக்கும் விவசாயத்துக்கு கூட ஆள் கிடைப்பதில்லை. வரும் காலங்களில் விவசாயத்துக்கு எதிர் காலம் இல்லை என்பதால் கொத்தனார், சித்தாள், கம்பிகட்டுதல், பெயிண்டர், மெக்கானிக், லாரி கீளினர் போன்ற நகர்ப்புற வேலையை பெரிதும் விரும்புகிறார்கள். ஒரு நாள் விவசாய கூலியாளுக்கு ஒரு நாள் சம்பளம் 400-லிருந்து 500 வரை. வேலை தொடர்ச்சியாக இருக்காது. நகரத்தில் ஆரம்ப அடிப்படை சம்பளம் குறைவாக இருந்தாலும் இரண்டு வருடத்தில் எதிர் காலம் உள்ள ஒரு தொழிலை கற்றுக்கொண்டு முழு தொழிலாளியாகிவிடலாம் என்பது அவர்கள் கருத்து.
தண்ணீர் இல்லாததால் விவசாயம் மட்டும் பாதிக்கவில்லை. மாட்டுக்கு மேச்சல், வைக்கோல் இல்லை. விவசாய இயந்திரங்களுக்கு வாடிக்கையாளர் இல்லை. நன்னீர் மீன் வளர்ப்புக்கு போதுமான தண்ணீர் இல்லாமல் மீன்கள் செத்து மிதக்கின்றன. டீக்கடையில் வியாபாரம் இல்லை. மண்பாண்டம் செய்ய களிமண் இல்லை. சலவை தொழிலாளிக்கு ஆறு குளங்களில்லை. இது போல கிராமங்களில் உள்ள மற்ற சிறு தொழில்களும் பாதித்துள்ளன.
தண்ணீர் பிரச்சனையில் கடந்து வந்த வருடங்களை வைத்து பார்த்தால் காவிரியில் தண்ணீர் வருமா மழை பெய்யுமா என்பது சந்தேகமே. இதே நிலை நீடித்தால் போர்வல் வைத்துள்ளவர்கள் மட்டும் ஓரிரு வருடங்கள் விவசாயத்தை மேற்கொண்டு செய்வார்கள். அதன் பிறகு அவர்களாலும் செய்ய முடியாது.
இப்படியே தொடர்ச்சியாக தண்ணீர் தட்டுப்பாடு இருந்து நிலத்தடி நீரை போர்வெல் மூலம் உறிஞ்சிக் கொண்டே இருந்தால் நான்கு வருடத்துக்குக்குள்ளேயே தஞ்சை புதுப் பாசன டெல்டாவும் திருவாரூர் பகுதியைப் போல் வறண்டுவிடும் அபாயம் உள்ளது.
முப்போகம் விளைந்த தஞ்சை தரணியின் காவிரிப் பகுதி விரைவிலேயே புதுக்கோட்டை ராமநாதபுரம் மாவட்டம் போல் வறண்ட பாலைவனமாகிவிடும் அபாயத்தை எப்படி தடுக்கப் போகிறோம்?
சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஆதரவாக கோவையில் 31.05.2017ல் “மாட்டுக்கறித் திருவிழா” நடத்த முடிவெடுத்து கோவை மக்கள் அதிகாரம் சார்பாக நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. மாலை 5 மணிக்கு காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பாக கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி தலைமையில், ப்ளெக்ஸ், கொடி, முழக்க அட்டை, சீருடை அணிந்த தோழர்கள் தடையை மீறி அதிரும் முழக்கங்களுடன் குவிந்திருந்த போலீசை நோக்கி பேருந்துகள் மற்றும் மக்கள் நெருக்கம் கொண்ட நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அத்தனை பேரிலும் எப்படியோ மோப்பம் பிடித்த போலீசு அதிகாரி ஓடிவந்து தோழர் கையில் வைத்திருந்த மாட்டுக்கறியை பறித்து பிடுங்கியது. “உனக்கு வேணும்னா கேட்க வேண்டியதுதானே” என்பது போன்ற நடவடிக்கையாக தோழர்களும் இழுத்து பிடித்தும் ஆர்வவெறியால் போலீசே வென்றது. இதை ஊடகங்களும் படம்பிடித்தன. தினமும் போலீசிடம் மாமுலாக, தான் விற்கும் பொருளை (பரோட்டா முதல் புண்ணாக்கு வரை) இழக்கும் வியாபாரிகளும், சாமர்த்தியமாக மாட்டுக்கறியை தட்டிபறிக்கும் போலீசை பார்த்து வியந்தனர். போராட்டத்தை காட்சிகளை மறைக்கும் விதமாக போலீசு வாகனத்தை குறுக்கே நிறுத்தி ஊடகத்தையும் தடுக்கமுயன்றது.
மோடியின் மதவெறியை அம்பலப்படுத்தும் முழக்கங்களை பொறுக்க முடியாத போலீசு அவசர அவசரமாக கைது செய்ய முயற்சித்தது, ஆனால் தோழர்கள் கட்டுக்கு அடங்காமல் தொடர்ந்து கைதாக மறுத்து முழக்கமிட்டனர். ஊடகத்திற்கும்பேட்டி கொடுக்கபட்டது. இறுதியில் தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்திற்கு கொண்டு சென்றது போலீசு. வேனில் செல்லும் பொழுது வழியெங்கும் தொடர்ந்து தோழர்கள் முழங்கிய முழக்கங்களால் எரிச்சலடைந்த போலீசு மண்டபத்திற்கு வேனிலிருந்து இறங்கும் பொழுது முழக்கம் கூடாதென மிரட்டியது. தோழர்கள் அதையும் மீறி முழக்கமிட மீண்டும் தள்ளுமுள்ளு ஆனது. மண்டபதிற்கு முன்பாகவும் SP அலுவலகத்திற்கு முன்பாகவும் மீண்டும் ஓர் ஆர்ப்பாட்டம் போல் நடந்தேறியது. பெண் உதவி ஆய்வாளர் உட்பட போலீசு யாவும் ரௌடிக் கூட்டம் போல் செயல்பட்டது. “ரிமான்ட் பண்ற பாரு” என பெண் ரௌடி SI யும் உ(எ)ளவு துறை போலீசு ஒருவரும் மிரட்டினர்.
பதிலுக்கு பதில் தோழர்கள் போராட்ட குணத்துடன் பேசியதை பார்த்து அப்பகுதயில் திரண்டிருந்த மக்கள் கவனம் நம் பக்கம் திரும்பியது, மிரட்டிப் பார்த்த போலீசு தகவல்களை மட்டும் எழுதிக்கொண்டு அடுத்த ஒரு மணிநேரத்தில் ஆர்பாட்டத்தில் பிடுங்கி ஓரமாக பதுக்கிய மாட்டுக்கறிப் பையை திரும்பக் கொடுக்க முற்பட்டனர். அது (மாட்டுக்கறி) அங்கிருந்து தாமதமாக எடுத்து வரப்பட்டதால் அதனை வாங்க தோழர்கள் மறுத்து விட்டனர். கைது செய்து சிறையில் அடைப்பேன் என்ற போலீசு, நாம் கலந்துரையாடலை தொடங்கிய உடனே நீங்கள் விடுதலை என அழுத்தமாக சொல்லி நாம் தயாராவதற்கு முன்பே மண்டப விளக்குகளை அனைத்தது.
இறைச்சிக்காக மாடுகள் விற்பதற்கு மோடி அரசு தடை விதித்த பிறகு, தமிழகத்தின் முக்கியமான மாட்டு சந்தையான மணப்பாறை சந்தை களையிழந்து போயுள்ளது. அச் சந்தையில் உள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் தங்கள் எதிர்ப்பையும் நியாயமான கோபத்தையும் உடனே வெளிப்படுத்தினர். ஒரே இரவில் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் இலட்சக்கணக்கான மக்களை நடுத்தெருவில் நிறுத்தியதைப் போன்ற மற்றுமொரு தாக்குதலே இந்த அறிவிப்பு.
தனது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுடன், கார்பரேட் சேவையில் கை கோர்த்துள்ள மோடி அரசின் இந்த தடை பற்றி விவசாயிகள் வணிகர்களின் கருத்துக்களை கேளுங்கள்! பகிருங்கள்!
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
“கோபமான பரிகாசமும்”“கவிதாவே சத்துக்கான தேடலும்” உங்களுக்குப் பிடித்தமான வாசகம்? — De omnibus dubitandum. எல்லாவற்றைப் பற்றியும் சந்தேகப்படு. -கார்ல் மார்க்ஸ் {கார்ல் மார்க்சின் ஒப்புதல்கள்(1)}
அ) எல்லாவற்றையும் சந்தேகப்படு” என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
வினவு குறிப்பு: இந்த அத்தியாயத்தில் காதலிலும், அறிவுத்துறை தேடலிலும் கல்லூரிப் பருவத்தை கடக்கும் மார்க்சைப் பார்க்கிறோம். எனினும் மார்க்சின் மனைவியான ஜென்னியை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டாமா என்று கார்ல் மார்க்சின் தந்தை கடிதம் எழுதுகிறார். இக்காலத்தில் மலைக்க வைக்கும் எண்ணிக்கையில் புத்தகங்களை படிக்கிறார் மார்க்ஸ். அதே போன்று பல நூல்களை எழுதவும் செய்கிறார். எழுதியவை குறித்த அதிருப்தியால் அவற்றை அழிக்கவும் செய்கிறார். சிந்தனை உலகின் உண்மையை கண்டுபிடிக்கும் பாதையில் ஆவேசமாகவும் பரிசீலனையுடனும் பயணிக்கிறது அவரது பார்வை. அந்த வேகத்தை மட்டுப்படுத்த தந்தை முனைகிறார். இருப்பினும் தன்னுடைய பணி என்ன என்பதை மார்க்ஸ் இக்காலத்தில் தெளிவற்ற முறையிலாவது தேடியிருக்க வேண்டும். மூலதனத்தை எழுதம் பணிக்காக தனது குடும்பம், மகிழ்ச்சி, பொழுது போக்கு அனைத்தையும் இழந்த மார்க்ஸ் அதன் அறிகுறிகளை இங்கேயும் காண்பிக்கிறார். இது படித்தலும் திளைத்தலும் கொண்ட ஒரு இலக்கியவாதியின் காலமல்ல. மனித குலத்தின் இரகசியத்தை கண்டு பிடிக்க பாடுபட்ட ஒரு போராளியின் நெருப்பு காலம். படியுங்கள்
1835ம் வருடத்தின் இலையுதிர் காலத்தில் மார்க்ஸ் பான் பல்கலைக்கழகத்தில் சட்டவியல் படிக்கச் சென்றார். ஆனால் மார்க்சுக்கு சட்டவியலைக் காட்டிலும் உலகம் அதிக விரிவானதாக இருந்தது. அவர் சுதந்திரமான வாழ்க்கை என்ற நீர்ச்சுழலுக்குள் இளமைத் துடிப்போடு குதித்தார். அவர் பலவிதமான ஆன்மீக நடவடிக்கைகளில் முதலில் ஈடுபட்டார்; ஆனால் அவர் கட்டுப்பாடில்லாத மாணவர் கூட்டங்களையும் அவற்றின் தங்குதடையற்ற குதூகலத்தையும் விருந்துகளையும் சண்டைகளையும் பல விதமான வீரசாகசச் செயல்களையும் மறந்து விடவில்லை. ஒரு சண்டையின் போது கார்ல் காயமடைந்தார். ஒரு நாள் அவர் “இரவுக் கால அமைதியைக் குலைத்ததற்காகக்” கைது செய்யப்பட்டார். அவருடைய வற்றாத நகைச்சுவை உணர்ச்சிக்காக நண்பர்கள் அவரை நேசித்தார்கள். ஆனால் அவருடைய புண்படுத்துகின்ற கேலிப் பேச்சும் பரிகாசப் பாடல்களும் அவர்களைப் பயமுறுத்தின. இத்திறமைக்காக மார்க்ஸ் உயர்நிலைப் பள்ளியிலேயே பிரபலமடைந்திருந்தார்.
முதியவரான ஹென்ரிஹ் மார்க்ஸ் தன் மகனிடம் “சண்டைகளையும் தத்துவஞானத்தையும் எப்படி ஒன்று சேர்க்கிறாய்’’ என்று கேட்டதற்குப் போதிய காரணம் இருந்தது. தகப்பனாருடைய கடிதங்கள் மகனுடைய உடல் நலம், மன நலத்தைப் பற்றி அதிகமான அக்கறையைக் காட்டுகின்றன. உடல் நலத்தை நன்கு பேண வேண்டும், ஏனென்றால் “உடல் நலக்குறைவான விஞ்ஞானி பூமியில் மிக அதிகமான பரிதாபத்துக்குரியவர்” என்று அவர் எழுதுகிறார். அவர் தன் மகனுக்கு நற்போதனைகளை வழங்குகிறார்; “இளமைக் காலத்தின் பாவச் செயல்களுக்காக” “பயங்கரமான தண்டனை” பெற்ற குன்ஸ்டர் ஒருவருடைய உதாரணத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.(2)
ஆனால் அவருடைய தகப்பனார் மகனுடைய மாணவ வாழ்க்கையில் ஒழுக்கத்தைப் பற்றி மட்டுமல்லாமல் அறிவு வளர்ச்சியைப் பற்றியும் கவலைப்பட்டார். 17 வயதான கார்ல் பான் பல்கலைக்கழகத்திலிருந்து தகப்பனாருக்கு எழுதிய ஆரம்பக் கடிதங்களில் ஒன்றில் மதத்தைப் பற்றித் தன்னிடம் புதிதாகத் தோன்றியிருக்கும் சந்தேகங்களைப் பற்றி எழுதியிருக்க வேண்டும். ஹென்ரிஹ் மார்க்ஸ் அக்கடிதத்துக்குப் பின்வருமாறு பதிலளித்தார்: “நீ அறநெறிப்படி தொடர்ந்து நல்லவனாக இருப்பாய் என்பதை நான் உண்மையாகவே சந்தேகிக்கவில்லை. ஆனால் கடவுளிடம் தூய்மையான நம்பிக்கை வைப்பது அறநெறிக்குப் பெரும் ஆதரவாக இருக்கும். என்னிடம் இந்த விஷயத்தில் வெறியுணர்ச்சி கிடையாது என்பது உனக்குத் தெரியும். ஆனால் இந்த நம்பிக்கை-சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ – மெய்யாகவே மனிதனுக்கு அவசியம்; நாஸ்திகன் கூட கடவுளை வணங்கும்படி இழுக்கப்படுகின்ற தருணங்களும் வாழ்க்கையில் ஏற்படுகின்றன.”(3)
ஹென்ரிஹ் மார்க்ஸ் தன்னுடைய வாதத்தைப் பலப்படுத்துவதற்காக நியூட்டன், லோக், லேய்ப்னித்ஸ் ஆகியோரை உதாரணமாகக் காட்டுகிறார். ஆனால் ஹென்ரிஹ் மார்க்ஸ் இத்தகைய நயமான கண்டிப்புகளுடன் மட்டும் நிற்கவில்லை; பானில் மிகையான சுதந்திரக் காற்று வீசுகிறது, அங்கிருந்து பிரஷ்யப் பேரரசின் தலைநகரமான பெர்லினின் கட்டுப்படுத்தப்பட்ட, கட்டிறுக்கமான சூழலுக்கு மாற்றிக்கொள் என்று அவர் வற்புறுத்துகிறார். இதற்கு இன்னும் அழுத்தமான காரணங்களும் இருந்தன: அன்றைய ஜெர்மனியின் தத்துவச் சிந்தனை பெர்லின் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டிருந்தது. “இந்த தொழிற்சாலையுடன் ஒப்பிடுகின்ற பொழுது மற்ற பல்கலைக்கழகங்கள் உண்மையான மதுபானக் கூடங்களே’'(4) என்று லுட்விக் ஃபாயர்பாஹ் கூறினார்.
மார்க்ஸ் மற்றும் அவருடைய மனைவி ஜென்னி வான் வெஸ்ட்ஃபாலன்
எந்த வேலையைத் தேர்ந்தெடுப்பது என்ற ஸ்தூலமான பிரச்சினையைப் பற்றி கார்ல் திரும்பத் திரும்பச் சிந்தித்தார். டிரியர் நகரத்திலேயே மிகவும் அழகான பெண், “நடன அரங்குகளின் அரசியாகிய” ஜென்னி வான் வெஸ்ட்ஃபாலனுக்கும் மார்க்சுக்கும் திருமணம் நிச்சயமானதும்-அது “அவருடைய முதல் வெற்றி, மிகவும் மகிழ்ச்சிகரமான வெற்றி” (மேரிங்)-அது மிகவும் அவசரமாக முடிவு செய்யப்பட வேண்டிய பிரச்சினையாயிற்று.
மார்க்சின் தகப்பனார் தன் மகனுக்கு எழுதிய கடிதங்களில் ஜென்னி உனக்காக மாபெரும் தியாகம் செய்திருக்கிறாள் என்று மகனிடம் நினைவுபடுத்தத் தவறவில்லை. ஜென்னி வசதியான எத்தனையோ இளைஞர்களின் வேண்டுதல்களை நிராகரித்திருந்தாள்; ஆனால் கார்ல் எப்படியோ அவளுடைய இதயத்தை வெற்றி கொண்டுவிட்டபடியால் அந்த அசாதாரணமான இளம் பெண்ணின் எதிர்காலம் தன் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருப்பதைக் கார்ல் உணர வேண்டும்; ஆகவே அவர் “உலகத்தின் மரியாதைக்கு” உரியவராக வேண்டும், தன்னுடைய எதிர்காலக் குடும்பத்துக்குப் பொருளாயத வசதிகளைச் செய்வதைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதைக் கார்லும் உணர்ந்தார். அவர் 1836இல் பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பானில் வாழ்க்கையின் ஆனந்தங்களை அனுபவிப்பதில் முழு மனத்துடன் ஈடுபட்டதைப் போல அதே உணர்ச்சி வேகத்துடன் ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டார். அவருடைய அக்கறைகள் மிகவும் பல்வகையாக இருந்தன. மூலச்சிறப்பான பண்டைக் காலம், நாடகம், அழகியல், கவிதை, தத்துவஞானம், சட்டவியல் ஆகியவற்றில் ஆழமான அக்கறை காட்டினார். எதிர்கால வேலையைப் பற்றி முடிவு செய்கின்ற வேதனை நிறைந்த முயற்சியில் அவர் இன்னும் ஈடுபட்டிருந்தார். ஒரு சமயத்தில் எழுத்தாளனாவதென்று நினைத்தார். அவர் இசைப்பாடல்கள், சான்னேட் கவிதைகள் எழுதினார், நோட்டுப்புத்தகங்கள் நிறைய கவிதைகளை எழுதிக் குவித்தார். ஒரு வரலாற்று நாடகத்தையும் கேலியான நாவலையும் கூட எழுதினார். அவருடைய தகப்பனார் கவிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் நாடக ஆசிரியர் போன்ற வேலைகளிலுள்ள சாதகங்களையும் பாதகங்களையும் அவருடன் மிகவும் அக்கறையோடு விவாதித்தார், எத்தகைய பொருட்களைப் பற்றி எழுதலாம் என்று ஆலோசனை கூறினார், அவருடைய திறமையைப் பற்றி அறிவுரை கூறினார்.
தன்னுடைய மகன் “சூக்குமமான கருத்தியலானவற்றில்” ஈடுபடுவதாக ஹென்ரிஹ் மார்க்ஸ் கருதினார்; ஆனால் அவர் நடைமுறைப் பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்பட்டார். அவர் கார்லிடம் “தேசபக்த” நடையில் ஒரு நாடகத்தை எழுதும்படி, பிரஷ்ய முடியாட்சியின் “மேதாவிலாசத்தை” விளக்கிக் கூறும்படி, ஜெர்மானிய உணர்ச்சியில் ஒரு வரலாற்றுப் பொருளைப் பற்றி எழுதும்படி ஆலோசனை கூறினார், ஏனென்றால் அத்தகைய “எழுச்சிப் பாடல்’’ “புகழ் அடைவதற்கும் “பிரபலமடைவதற்கும்” நல்ல அடிப்படையாக இருக்கும் என்றார்.(5) இலக்கிய விமர்சகராக வேண்டும் என்ற மகனுடைய விருப்பத்தை அவர் அங்கீகரிக்கவில்லை; ஏனென்றால் மாபெரும் லேஸ்ஸிங் தன்னுடைய வாழ்நாளில் மிகக் குறைவான பாராட்டுக்களையே பெற்றார், ஏழை நூலகராகவே மரணமடைந்தார்.”(6)
எனினும் நாம் ஹென்ரிஹ் மார்க்சுக்கு உரிய சிறப்பை அளிக்க வேண்டும். அவர்தான் கார்லின் அசாதாரணமான திறமையை முதலில் அங்கீகாரம் செய்தவர்; அவருடைய மகத்தான எதிர்காலத்தை-தெளிவில்லாத முறையில் என்ற போதிலும்-முதலில் உணர்ந்தவர். “கடவுளின் கருணையில் உன்னுடைய மற்றும் உன் குடும்பத்தின் நன்மைக்கு, என்னுடைய ஆரூடம் தவறாக இல்லாமலிருக்குமானால் மனிதகுலத்தின் நன்மைக்காக, நீ இன்னும் நெடுங்காலம் வாழ்ந்திருக்கப் போகிறாய்”(7) என்று அவர் 1836இல் தன் மகனுக்கு எழுதினார்.
சில சமயங்களில் அவர் தன் மகனின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட்டார். கார்லின் திறமை, அவரை ஒத்த வயதுள்ளவர்களிடமிருந்து அவர் வேறுபட்டிருப்பது, அவருடைய அசாதாரணமான மனத்திடம், விடாப்பிடியாக உண்மையைத் தேடல்-இவை அனைத்தின் காரணத்தால் தன் மகனை “ஆபத்தான பிசாசு” பிடித்திருக்கிறது, உலகியல் வெற்றிக்குரிய தெளிவான பாதையிலிருந்து அவரை விலக்கிவிடும், அமைதியான வாழ்க்கையை எதிர்த்துக் கலகம் செய்யும்படி அவரைத் தூண்டும் என்று அவர் நினைத்தார்.
“அது வானத்துப் பிசாசா அல்லது ஃபாவுஸ்டின் பிசாசா?” ஹென்ரிஹ் மார்க்ஸ் தன்னைத் துன்புறுத்திக் கொண்டிருந்த பிரச்சினையைப் பற்றி இப்படிக் கேட்டுக் கொண்டார். கேதேயினுடைய ஃபாவுஸ்டின் முடிவை நினைத்த பொழுது அது பின்பற்றப்பட வேண்டிய உதாரணமாக அன்பு நிறைந்த தகப்பனாருக்குத் தோன்றவில்லை. நிரந்தரமான அதிருப்தியுடன் உண்மையையும் வாழ்க்கையின் மெய்ப் பொருளையும் தேடிய ஃபாவுஸ்டின் உருவம்-அற்புதமான தருணம் என்ற கைக்கு அகப்படாத கானல் நீரைக் கண நேர ஓய்வுகூட இல்லாமல் தேடியவர், மெய்யான மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டிருந்த பொழுது தனக்குக் கிடைத்த சிறு பங்கைக் கொண்டு திருப்தியடையாமல் தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியவர், அவர்களுக்காகத் தங்களுடைய வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் தியாகம் செய்யத் துணிந்தவர்களே வாழ்க்கைக்கும் சுதந்திரத்துக்கும் தகுதி உடையவர்கள் என்று கருதுபவர்-அந்த உருவம் மார்க்சின் தகப்பனாருக்குக் கவர்ச்சியாக இருந்திருக்க முடியாது, தன் மகனைப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் பிசாசு அது என்று அவர் பயந்தார்.
“உன்னையும் உன்னுடைய எதிர்காலத்தையும் பற்றி நினைக்கும் பொழுது என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. ஆனால் என்னிடம் கவலைகளையும் அச்சத்தையும் தூண்டுகின்ற கருத்துக்களைச் சில சமயங்களில் என்னால் அகற்ற முடியவில்லை. உன்னுடைய அறிவுக்கு, உன்னுடைய திறமைகளுக்குத் தகுந்தாற்போல உன் இதயம் இருக்கிறதா என்ற கேள்வி மின்னல் கீற்றைப் போல என்னிடத்தில் தோன்றுகிறது. துன்பம் நிறைந்த இவ்வுலகத்தில் கூருணர்ச்சி படைத்த மனிதன் ஆறுதலடைவதற்கு மிகவும் அவசியமான, சாதாரணமான ஆனால் புனிதமான உணர்ச்சிகளுக்கு உன் இதயத்தில் இடமிருக்கிறதா?. நீ என்றைக்காவது உண்மையான மானுட மகிழ்ச்சியை, குடும்ப மகிழ்ச்சியை அடைவாயா? இது என் இதயத்துக்குக் குறைவான வேதனையைத் தருகின்ற கேள்வியல்ல. ஒரு குறிப்பிட்ட நபரை என்னுடைய குழந்தையைப் போல நான் நேசித்து வருகின்றபடியால் அண்மைக் காலத்தில் மற்றொரு கவலையும் என்னை வாட்டுகிறது. உனக்கு மிகவும் பக்கத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியுண்டாக்க உன்னால் என்றைக்காவது முடியுமா?”(8) அவர் “குறிப்பிட்ட நபர்;” ஜென்னி வான் வெஸ்ட்ஃ பாலன். அந்த நங்கையின் மகிழ்ச்சியைப் பற்றியே இங்கே ஹென்ரிஹ் மார்க்ஸ் உருக்கமாகக் குறிப்பிடுகின்றார்.
ஒருவர் மகிழ்ச்சியைப் பற்றி எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? ஒருவேளை கார்ல் மார்க்ஸ் தனக்கு “மிகவும் பக்கத்தில் இருந்தவர்களுக்கு” அவருடைய தகப்பனார் கனவு கண்ட, கவலைகள் ஊடாடாத “குடும்ப” மகிழ்ச்சியைத் தராதிருந்திருக்கலாம். என்னுடைய வாழ்க்கைப் பணியான மூலதனத்தை எழுதுவதற்காக என்னுடைய உடல்நலத்தை, மகிழ்ச்சியை, குடும்பத்தை நான் தியாகம் செய்தேன் என்று மார்க்ஸ் எழுதியிருக்கிறார், அவருடைய ஓய்வில்லாத வாழ்க்கையின் எல்லாச்சுமைகளையும்-அலைச்சல், சிறை, நாட்டிலிருந்து வெளியேற்றப்படுதல், வறுமை, காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறை-ஜென்னி தன் கணவருடன் பகிர்ந்து கொண்டாள். மூன்று குழந்தைகள் இறந்தன. ஆனால் அவள் மார்க்சின் மிக நெருங்கிய சகாவாக, ஆலோசகராக, அவருடைய நற்தெய்வமாக இருந்தாள். ருஷ்யாவிலிருந்து அமெரிக்கா வரையிலும் புதிய, போராடுகின்ற உலகத்தின் சின்னமாக மார்க்ஸ் ஆகியிருப்பதை அவள் உயிரோடிருந்து பார்த்தாள். இது அவள் இழந்த அனைத்துக்கும் ஈடாக இருந்தது.
ஹென்ரிஹ் மார்க்சின் வருந்தீங்குணர்தல் பொய்த்துவிடவில்லை. அவருடைய மகனைப் பிடித்தாட்டியது வானத்துப் பிசாசு அல்ல, அது ஃபாவுஸ்டின் பிசாசே. அது அவரை ஓரிடத்தில் நிற்க அனுமதிக்கவில்லை; அவருடைய ஆன்மிக வளர்ச்சியில், பரிபூரணத்தை நோக்கி அவருடைய தேடலில், பிடிக்கு அகப்படாத, கவர்ச்சி நிறைந்த “பிசாசுத் தர்க்கவியலை”, முழுமையான அறிவு என்ற பொய்த் தோற்றத்தை, யதார்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதை நோக்கி அவருடைய தேடலில் முடிவில்லாதபடி மென்மேலும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று அது தூண்டியது. அதற்கு மார்க்சும் அவருக்கு “மிகவும் பக்கத்தில் இருந்தவர்களும்” தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று அது கோரியது. மார்க்ஸ் சமூக உண்மையின் தர்க்கவியலின் சேவைக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். அவர் தன்னுடைய பள்ளிக்கூடக் கட்டுரையில் மகிழ்ச்சியைப் பற்றி எழுதிய கருத்துக்கு (“எல்லோருடைய நன்மைக்காகச் செய்யப்பட வேண்டிய தியாகங்கள்”’, “கோடிக்கணக்கான மக்களுடைய மகிழ்ச்சி”) அவர் விசுவாசமாக நடந்து கொண்டார்.
ஃபாவுஸ்டைப் போலின்றி மார்க்ஸ் மெஃபிஸ்டோபிலேத் தனக்குள்ளேயே வைத்திருந்தார். தன்னுடைய சொந்த நூல்களின் மிகவும் ஈவிரக்கமில்லாத விமர்சகராக அவர் எப்பொழுதும் இருந்தார். “எல்லாவற்றையும் சந்தேகப்படு” என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை.முதலாவதாகவும் முதன்மையாகவும் அவர் இதைத் தன்னுடைய சொந்த எழுத்துக்களுக்குக் கையாண்டார்.
மாணவப் பருவத்தின் ஆரம்ப வருடங்களில் அவர் செய்த கவிதைச் சோதனைகள் கண்டிப்பு நிறைந்த தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டன. 19 வயதாகிய மார்க்ஸ் தகப்பனாருக்கு எழுதிய கடிதத்தில் அவற்றைப் பின்வருமாறு மதிப்பிடுகிறார்: “நம் காலத்தைப் பற்றிய கடுந்தாக்குதல்கள், மேலோட்டமான வளர்ச்சியில்லாத உணர்ச்சி வெளியீடுகள், இயல்பான விதத்தில் எதுவுமில்லாதவை, எல்லாமே கற்பனையில் தோன்றியவை, இருப்பதற்கும் இருக்க வேண்டியதற்கும் இடையில் முழுமையான எதிர் நிலை, கவித்துவமில்லாத பிரசங்கச் சிந்தனைகள், ஒரளவுக்கு உணர்ச்சித் துடிப்பும் கவிதாவே சத்துக்கான தேடலும் கொண்டவை.”(9) மார்க்சின் விமர்சனக் கூர்மை இங்கே அவரை ஏமாற்றிவிடவில்லை என்பது வெளிப்படையாகும்.
“வெகு தொலைவிலுள்ள தேவதையின் அரண்மனையைப் போன்ற உண்மையான கவிதையின் பளிச்சிடும் உலகத்தை” அவர் முடிவில் சிற்சில கவிதைகளில் கண்டபோதிலும் இந்த வெற்றி அவருடைய கவித் திறமையைப் பற்றி நிதானமாக மதிப்பீடு செய்வதற்கு ஒரு வாய்ப்பாகவே மார்க்சுக்கு உதவியது, “என்னுடைய படைப்புகள் அனைத்தும் ஒன்றுமில்லாதபடிச் சிதைவடைந்தன.”(10) இக்கூற்றை அதன் நேர்ப்பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்: மார்க்ஸ் தன்னுடைய கவிதைகளையும் நாவல்களின் உருவரைகளையும் எரித்துவிட்டார்.
மார்க்ஸ் “கலைத் தேவதைகளின் நடனங்களையும் வன தேவதைகளின் இசையையும்”(11) கைவிட்ட பிறகு அதிகமான ஆர்வத்துடன் விஞ்ஞானத்தை நோக்கித் திரும்பினார். இதற்கு முன்னர் கூட கவிதை அவருக்குத் துணைத் தொழிலாகவே இருந்தது. அவர் எழுதிக் கொண்டிருந்த இசைப்பாடலை அல்லது கவிதை நாடகத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு சட்டவியல் அல்லது தத்துவஞானத்தில் மூழ்கிவிடுவார். அவர் லேஸ்ஸிங்கின் லவொகொவோன், வின்கெல்மானின் கலைகளின் வரலாறு மற்றும் ஓவி டின் இரங்கற்பாக்களுடன் ரேய்மாருளின் மிருகங்களின் கலை உணர்ச்சிகள், லுடெனின் ஜெர்மன் வரலாறு, அரிஸ்டாட்டிலின் சொல்வன்மை மற்றும் பேக்கன், ஷேல்லிங், கான்ட், ஹெகல் ஆகியோர் எழுதிய நூல்களையும் படித்தார். சட்டவியலைப் பற்றி மலையளவு நூல்களைப் படித்தார். ஒரு வருடத்தில் அவர் படித்த நூல்களின் எண்ணிக்கை நமக்கு மெய்யாகவே திகைப்பளிக்கின்றது !
ஆனால் மார்க்ஸ் வெறுமனே படிக்கவில்லை. அவர் படித்த புத்தகங்களிலிருந்து நீண்ட பகுதிகளை நோட்டுகளில் எழுதிக் கொள்வார்; அவற்றைப் பற்றித் தன்னுடைய சொந்தச் சிந்தனைகளையும் எழுதி வைத்திருப்பார். இந்தப் பழக்கத்தை அவர் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இது அவருடைய சிந்தனையையும் நினைவாற்றலையும் ஒழுங்குபடுத்தியது; அவருடைய ஆராய்ச்சிகளுக்கு மிகவும் உதவி புரிந்தது.
மார்க்ஸ் ஒரு புதிய அறிவுத்துறை பற்றிப் படிக்கும் பொழுது அது உடனடியாக அத்துறையைப் பற்றி சுதந்திரமான பகுப்பாய்வாக முன்னேற்றமடைவது அவருக்கே உரித்தான குணாம்சமாகும். அவர் ஒரு மாணவனைப் போல ஈடுபாடற்ற முறையில் நூல்களைப் படிக்கவில்லை, அவருடைய சுதந்திரமான, படைப்பாற்றல் மிக்க சிந்தனையை ஊக்குவிப்பதற்கு அது ஒரு சந்தர்ப்பமாக, தூண்டுதலாக உதவியது.
அவர் சட்டவியலையும் தத்துவஞானத்தையும் படித்த பொழுது “சட்டவியலின் மொத்தத் துறையையும் உள்ளடக்கிய சட்டவியலின் தத்துவஞானத்தைத்” தேடுகிறார். பதினெட்டு வயதான மார்க்ஸ் இப்பொருளுக்கு அறிமுகமாக மட்டுமே சுமார் 300 பக்கங்களைக் கொண்ட ஒரு மகிழ்ச்சியற்ற நூலை”(12) எழுதுகிறார், அதே கல்வியாண்டில் கலையின் வரலாற்றையும் தத்துவஞானத்தின் வரலாற்றையும் படித்துக் கொண்டிருந்த பொழுது அவர் சுமார் 24 பக்க அளவில் ஒரு உரையாடலை எழுதினார்; அதில் “கலையும் விஞ்ஞானமும் ஓரளவுக்கு ஒன்று சேர்க்கப்பட்டிருந்தன. கிளியாந்தஸ் அல்லது தத்துவஞானத்தின் தொடக்க நிலையும் அவசியமான தொடர்ச்சியும் என்பது அந்த உரையாடலின் தலைப்பாகும். அது நமக்குக் கிடைக்காமல் போனது வருந்தற்குரியதே; ஏனென்றால் அந்தக் கட்டத்தில் எழுதப்பட்டவற்றில் மார்க்சினுடைய பாராட்டைப் பெற்றது இந்தக் கட்டுரை மட்டுமே. மற்றவை அனைத்தும் அவருடைய கவிதைகளைப் போலவே கடுமையான விமர்சனத்திற்கு ஆளாயின.
இந்தக் கல்வியாண்டின் போது (1836-37) அவருக்கு உறக்கமில்லாத இரவுகளும் வேதனைமிக்க ஆன்மீகச் சண்டைகளும் ஏற்பட்டன. “ஆன்மப் பயணம்” ஏற்கெனவே செய்யப்பட்டதை நிராகரிப்பதிலேயே வழக்கமாக முடிந்தது. தத்துவஞானம் மற்றும் சட்டவியலில் ஏதாவதொரு அறிஞரின் கருத்தை மார்க்ஸ் ஏற்றுக் கொண்டு அதைத் தர்க்க ரீதியான முடிவுக்கு வளர்த்துச் செல்வதற்கு முயற்சிப்பார். ஆனால் அதன் விளைவாக அந்த அறிஞரும் அவருடைய போதனையும் தன்னுடைய சொந்தத் தேடல்களும் பயனற்றவை என்பதைக் காண்பார். ஒரு கோவிலில் இருக்கும் விக்கிரகங்களைத் தூக்கியெறிவார், உடனே அதில் புதிய விக்கிரகங்களை நிறுவுவார். உண்மையின் பீடத்திலிருந்து ஒரு விக்ரகத்தைத் தூக்கியெறிவார், அப்பீடத்தில் மற்ற விக்ரகங்களை நிறுவுவார். கவிதை, அழகியல், தத்துவஞானத் துறைகளில் அவர் ஏராளமான நூல்கள் எழுதினார்-ஆனால் உடனே அவற்றை நெருப்புக்கு இரையாக்கினர். மற்ற எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதிலும் எழுதக் கூடிய நூல்களை அவர் ஒரே வருடத்தில் எழுதி முடித்தார். ஒரு அற்பவாதிக்கு இது பெருமையாக இருக்கும். ஆனால் இளைஞரான மார்க்சுக்கு இது அதிருப்தியின் துன்பத்தைக் கொடுத்தது.
மார்க்ஸ் தன்னுடைய கற்பனை உலகங்களைப் படைத்து முடிப்பதற்குள்ளாகவே உடைத்து விடுகிறார், புதிய உலகங்களைத் தேடிப் புறப்பட்டுவிடுகிறார், அவர் எழுதிய தேடல் என்ற கவிதையை ஜென்னிக்கு அர்ப்பணித்தார். அதில் அவரே பின்வருமாறு எழுதுகிறார்:
என்னைக் கட்டிய தளைகளை நொறுக்கி எழுந்தேன்.
“எங்கே செல்கிறாய்?” “எனக்கொரு உலகம் தேடி!”
“இங்கே அகன்ற பசும்புல் வெளிகளும்
கீழே – கடல்களும் மேலே-விண்மீன்களும் இல்லையா?”….
உலகம் என்னிடமிருந்து தோன்ற வேண்டும்,
என் இதயத்தில் அது வேரூன்ற வேண்டும்,
என் இரத்தத்தில் அது ஊற்றெடுக்க வேண்டும்,
என் ஆன்மாவின் மூச்சில் அது வசிக்க வேண்டும் . . .
நான் நெடுந்தூரம் அலைந்து சென்றேன்,
திரும்பினேன் – கீழும் மேலும் உலகங்கள்,
விண்மீன்களும் கதிரவனும் துள்ளின,
மின்னல் வெட்டியது- நான் மடிந்தேன்.(13)
தான் சாதித்தவற்றைப் பற்றித் தொடர்ச்சியான அதிருப்தியும் பரிபூரணத்தை நோக்கி முடிவில்லாத தேடலும் அவருடைய முதிர்ச்சிக் காலத்திலும் அவருடைய சிறப்பான அம்சங்களாக இருந்தன. அவருடைய சிந்தனை உருவமெடுத்த உடனே ஏற்கெனவே சாதிக்கப்பட்டவற்றை அது கடந்து சென்றுவிடும், எழுதப்பட்டவற்றை இதுவரையிலும் அடைந்திராத சிகரங்களிலிருந்து நோக்கும், அதன் பிறகு புதிய சிகரம் தோன்றும். அச்சிகரங்களைத் தன்னுடைய காலடியில் குவிப்பது அவருடைய நோக்கமல்ல, உண்மையை அதன் மெய்யான ஒளியில் பார்க்கக் கூடிய சிகரத்தை எட்டுவதே அவருடைய நோக்கம்.
குறிப்புகள் :
(1)Reminiscences of Marx and Engels, p. 266. 70
(2)Marx, Engels, Collected Works, Vol. 1, pp. 647, 649.
(3) Ibid., p. 647.
(4) Auguste Cornu, Karl Marx und Friedrich Engels. Leben und Werk, Bd. 1, S. 73.
(5)Marx, Engels, Collected Works, Vol. 1, pp. 672, 673.
(6) Marx/Engels, Gesamtausgabe, Bd. 1, Halbband, 2, S. 210.
(7) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 662.
(8) Ibid., p. 670. 78
(9)Ibid., p. 11.
(10) Ibid., p. 17.
(11) Ibid.
(12 ) Ibid., p. 12.
(13) Ibid., p. 559. – தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. அரசு, விவசாயிகள் 5 பேரை சுட்டுக்கொன்றுள்ளது. விளைவித்த விளைப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யவும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவும் விவசாயிகள் 2017 ஜூன் 1-ம் தேதியிலிருந்து போராடி வருகின்றனர். அவ்வாறு போராடிய விவசாயிகளை சுட்டுக்கொன்றுள்ளது ஆர்.எஸ்.எஸ். சவுகான் அரசு. இது ஏதோ சவுகான் அரசு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தப்பித்தவறி செய்துவிட்ட ஒரு சம்பவமாக சுருக்கிப் பார்க்க முடியாது.
டெல்லியில் தமிழக விவசாயிகள் 40 நாட்களுக்கு மேலாக போராடியும் திரும்பிப் பார்க்காத ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. மோடி அரசு; பா.ஜ.க. ஆட்சி செய்யும் மராட்டியத்தில் பால் விவசாயிகளை வஞ்சித்தது அந்த மாநில அரசு; மறைமுகமாக விவசாயிகளைக் கொல்லும் இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகத்தான் சவுகான் அரசு விவசாயிகளை நேரடியாக சுட்டுக் கொன்றுள்ளது.
அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என உறுதியாக அறிவித்தது. தமிழக விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய சொன்ன உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பா.ஜ.க. பினாமி தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்கிறது. இந்த திசையில்தான் சவுகான் அரசு அடுத்தக்கட்டத்திற்கு சென்று விவசாயிகளைச் சுட்டுக் கொன்றுள்ளது.
வறட்சியினால் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யாததால் தமிழ விவசாயிகள் 200-க்கும் அதிகமானொர் தற்கொலை செய்து கொண்டபின்னரும் தமிழக அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகள் சொந்தக் காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டனர் என்று சொன்னதே ஒரு படுகொலைதான். அந்த படுகொலையை சுட்டுக்கொல்வதன் மூலம் நேரடியாக சவுகான் அரசு செய்துள்ளது. இந்த சவுகான் ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேசத்தில்தான் விவசாயிகள் தற்கொலை என்பது அதிக அளவில் நடந்து வருகிறது என்பதுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
விவசாயத்தில் கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வேலையில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க அரசு தீவிரமாக செய்துவருகிறது. அந்த வகையில் தன்னுடைய பசுவதை தடுப்புச்சட்டத்தைக் கொண்டுவந்து நாடு முழுவதிலும் விவசாயிகள் மாடு வளர்க்கும் தொழிலை ஒழித்துக்கட்டி விவசாயிகளை அழித்தும் வருகிறது. விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது; விவசாயத்திற்கான மானியங்களை நிறுத்துகிறது. மற்றொருபுறம், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் மானியங்களையும் வரிச்சலுகைகளையும் வாரி வழங்குகிறது.
ஒரு புறம் ஜிஎஸ்டி மசோதாவை விவசாயிகளுக்காகக் கொண்டுவருவதாக சொல்லிக்கொண்டே விவசாயிகளை அழிக்கிறது. உண்மையில், ஜிஎஸ்.டியின் நோக்கம் விவசாயிகளை அழிப்பதை உள்ளடக்கியதுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயிகளைக் கொன்றொழித்து வருகின்ற இந்த அரசுக் கட்டமைப்பு நம்மை ஆளும் தகுதியிழந்துவிட்டது; அதற்கான நியாய உரிமையையும் இழந்துவிட்டது. அடிப்படை கோரிக்கைகள், நியாயமான உரிமைகள் எல்லாவற்றையும் பயங்கரவாத செயல்பாடுகளாக சித்திரிக்கும் இந்த அரசுக்கட்டமைப்பை இனியும் சகித்துக் கொள்ள வேண்டுமா? உண்மையில், நடப்புகள் எல்லாம் உழைக்கும் மக்களாகிய விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள் மற்றும் சிறுதொழில் புரிபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எதிரான, ஆக அதிகபட்ச கொடுமைவாய்ந்த, பாசிச கொடுங்கோல் ஆட்சி. இதற்கு ஒரு துலக்கமான எடுத்துக்காட்டு, உரிமை கோரிய விவசாயிகளைச் சுட்டுக்கொன்ற ஆர்.எஸ்.எஸ். சவுகான் அரசு! ஆகையால், இந்த கட்டமைப்பை தூக்கியெறிவதே மாற்று! இதில் முதலிடம் வகிக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி கும்பலை விரட்டியடிப்பதே உடனடி தேவை!
விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் பேரழிவு. அனைத்து மக்களும் ஒன்று திரளுவோம். விவசாயியை வாழவிடு… என்ற குரல் ஓங்கட்டும்!
மக்கள் அதிகாரம் : தருமபுரி மண்டலம். தொடர்புக்கு: 81485 73417
கோவை சித்தாபுதூர் பகுதியில் கடந்த 18.05.2017 அன்று அப்பகுதி டாஸ்மாக் கடையை மக்கள் அடித்து நொறுக்கி போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த போலீசு இனி கடை திறக்கப்படாது என வாக்குறுதி அளித்து மக்களைக் கலைத்தது. இத் தகவல் அறிந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் அப்பகுதி மக்களைச் சந்தித்தனர். அவர்களிடம் காவல்துறை மக்களை எப்படியெல்லாம் பொய் வாக்குறுதி தந்து ஏமாற்றும் என்பதை எடுத்துச் சொல்லி போராட்டத்தைத் தொடரவது தான் நிரந்தரமாக டாஸ்மாக் கடைகளை மூட ஒரே வழி என உற்சாகப்படுத்தினர்.
அதை ஏற்றுக் கொண்ட மக்களும் கடையை மீண்டும் திறக்க முயற்சி செய்தால் போராட்டததை தொடருவோம் எனக்கூறினர். இந்நிலையில் 31.05.2017 அன்று மீண்டும் அதே டாஸ்மாக் கடையை திறப்பதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கினர். இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மக்கள் அதிகாரம் தோழர்களை தொடர்பு கொண்டு “அண்ணா நாங்க தனலட்சுமி நகர்ல இருந்து பேசுறோம். கடைய திரும்ப தொடங்க சரக்கெல்லாம் கொண்டுவந்து எறக்குறாங்க” என போராட்டத்துக்கு உரிமையோடு அழைத்தனர்.
அச்சமயத்தில் தோழர்கள் அனைவரும் சென்னை ஐ.ஐ.டி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இத்தகவல் கிடைத்தவுடன் ம.க.இ.க, பு.மா.இ.மு., மக்கள் அதிகாரம் தோழர்கள் திரண்டு சென்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
பிறகு பிற பகுதி மக்களும் அணிதிரட்டப்பட்டனர். பகுதி பெண்கள் கடுமையான குடிநீர் பிரச்சினையிலும் 15 நாளுக்கு ஒருமுறை வரும் குடிநீரை பிடிக்கும் வேலையைக் கூட விட்டு விட்டு கடையை மூடும் போராட்டத்துக்காக வந்தனர்.
மக்கள் கூட்டம் குறைவாக இருந்த போது இளைஞர்கள், பெண்களைச் சேரவிடாமல் கலைக்க முயன்ற போலீசு மக்கள் திரண்ட பின்னர் போராட்டத்தை சுத்தமாக கண்டும் காணாமல் சென்றுவிட்டது. இதனால் அப்பகுதியில் போராட்டம் மேலிம் தீவிரமடைந்து சாலை மறியலாக மாறியது. அதன் பின்னர் மக்களின் முற்றுகை முக்கிய சாலையை நோக்கி சென்றது. இதனைக் கண்டு மேலும் பல மக்கள் போராட்டத்தில் இணைய ஆரம்பித்தனர். அதுவரை அலட்சியமாக இருந்த போலீசு பதறியடித்து ஓடோடி வந்தது.
தோழர்கள் முழக்கமிட்டதை மக்கள் தங்கள் முழக்கமாக மாற்றிக் கொண்டனர். அத்துடன் அவர்களாகவே மேலும் பல முழக்கங்களைப் போட ஆரம்பித்தனர். அதன் பின்னர் போராட்டத்தை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த தோழர்களை தனியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தது போலீசு. எதுவாக இருந்தாலும் இங்கேயே பேசுங்கள் என தோழர்கள் அறிவித்துவிட்டனர்.
அப்போது சீருடையில்லாமல் இருந்த போலீசு ஒருவர் நேரடியாக மக்களை மிரட்டும் தொனியில் “மக்கள் அதிகாரம் உங்களை தவறான பாதைக்கு தூண்டுகிறது நீங்கள் கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள்” எனக் கூறினார். நாங்கள் தான் அவர்களை அழைத்தோம் எங்களை யாரும் தூண்டிவிடவில்லை என மக்கள் பதிலளித்தனர். சரி எதுவானாலும் கலெக்டரிடம் மனு கொடுங்கள் என மீண்டும் கூறியது போலீசு. மக்களோ நாங்கள் ஏன் கலெக்டரைப் போய் சந்திக்க வேண்டும்? அவரை வரச்சொல்லுங்கள். பலமுறை மனு கொடுத்துப் பார்த்துவிட்டோம் என பதிலடி கொடுத்தனர்.
போராட்டத்தில் முதியவர் ஒருவர் அன்றாடங்காய்சியான எங்கள் இடத்தில் டாஸ்மாக்கை திறக்கும் அரசு அதையே கலெக்டர் ஆபிசுலயோ அல்லது போலீஸ் ஸ்டேசன்லயோ கடைய திறக்கிறது தானே எனக் கேட்டார். வயதில் முதியவர் என்று கூட பார்க்காது அவரை “என்ன லூசு மாதிரி பேசுற?” என அவமானப்படுத்தியது போலீசு.
போராடும் மக்களைப் பார்த்தால் உங்களுக்கு லூசு மாதிரி தெரிகிறதா? என தோழர்களும் மக்களும் போலீசை அம்பலப்படுத்தினார். மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுவதை பொறுக்கமுடியாது போலீசு மக்களைத் தாக்கத் தொடங்கியது.
மக்களிடம் இருந்து தோழர்களைப் பிரிக்க முயன்று புமாஇமு தோழர் வினோத்தை குறிவைத்து கொடூரமாக தாக்க ஆரம்பித்தது. மக்கள் அவருக்கு அரணாக இருந்து அவர் மீது விழுந்த அடிகளை வாங்கிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து தோழரைப் பிரித்து வண்டியில் ஏற்றிச் சென்றது போலீசு.
இதையெல்லாம் படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களைப் பார்த்து இதெல்லாம் எடுக்காதே எனக் கூறியுள்ளனர். அதை மீறி போராட்டத்தை பதிவு செய்து கொண்டிருந்த ஒருவரது கேமாரா பேட்டரியை பிடுங்கியது போலீசு.
மக்களும் தோழர்களை கைது செய்து கொண்டு போன வாகனத்தின் பின்னாலே ஓடிச் சென்றனர். அதன் பின்னர் வாகனங்களை ஏற்பாடு செய்து காவல் நிலையம் சென்றனர். மக்களைப் பார்த்த போலீசு தோழர்களை விடுவிப்பதாக வாக்களித்தது. பின்னர் இரவு 12:00 மணிக்கு மேல் வழக்கு பதிவு செய்துவிட்டு விடுவித்தது. மக்களும் அதுவரை காத்திருந்து தோழர்களை அழைத்துச் சென்றனர்.
இறுதியாக அன்று மூடப்பட்ட தனலட்சுமி நகர் டாஸ்மாக் கடை இன்று வரை திறக்கப்படவில்லை.
திவாலான கிரீஸின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்காக தங்கள் மீது சுமத்தப்படும் புதிய சிக்கன நடவடிக்கைகளை (உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகள்) எதிர்த்து இலட்சக்கணக்கான கிரீஸ் மக்கள் தலைநகர் ஏதென்சில் போராடி வருகின்றனர். தனியார் முதலாளிகளின் கடனானது தேசத்தின் கடனாகிப் போனதால் மக்களுக்கான நலத்திட்டங்கள் பறிக்கப்பட்டிருப்பதுடன் ஐரோப்பாவிலேயே மிக மோசமான பொருளாதாரச் சிக்கலில் சிக்க வைக்கப்பட்டுள்ளது கிரீஸ்.
ஸ்பெயின் அரசின் சிக்கன நடவடிக்கைளுக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல் போராடி வரும் ஸ்பெயின் மக்களைப் பார்த்து கிரீஸ் மக்களும் போராடுகிறார்கள். நகராட்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவன ஊழியர்கள், அரசு மருத்துவமனை ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் கிரீஸ் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுகின்றனர்.
2017, மே மாதம் 17ஆம் தேதி ஏதென்சில் நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு வர்க்கப் பின்னணியை சார்ந்த மக்கள் கலந்து கொண்டனர். அரசின் சிக்கன நடவடிக்கையை “காட்டுமிராண்டித்தனமானது” என்று விமர்சித்திருக்கிறது கிரேக்க பொதுத்துறை ஊழியர்கள் சங்கம். ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களை கொள்ளையடிக்கவும் பொதுச்சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களையும் இந்த நடவடிக்கைகள் கடுமையாக பாதித்திருப்பதாக கூறுகிறார் கிரீஸ் தொழிலாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த தானோஸ் வெசிலோபுலோஸ். 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு நிதியுதவி என்ற பெயரில் வழங்கப்பட்ட கடன் சுமார் 15 இலட்சம் வேலையற்றோரைத்தான் உருவாக்கியுள்ளது என்கிறார் அவர்.
கிரீஸை கைத்தூக்கி விடுவதற்காக அளிக்கப்படும் நிதியுதவிகளில் ஐரோப்பிய ஒன்றிய வங்கிகளால் 95 விழுக்காடு விழுங்கப்பட்டு வெறும் 5 விழுக்காடு மட்டுமே கிரீஸ் பொருளாதரத்திற்காக செலவிடப்பட்டுள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
“எங்களது வாழ்க்கையை அழிக்க அவர்களை ஒருபோதும் விடமாட்டோம் என்ற உறுதியான ஒரு செய்தியை கிரீஸ் அரசிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் கூற விரும்புகிறோம்” என்று அனைத்துத் தொழிலாளர் இராணுவ முன்னணித் (PAME) தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் அலெகோஸ் பெராக்ஸிஸ் கூறுகிறார்.
17 மே 2017-ல் கிரீசின் போராட்டக் காட்சிகள்:
கிரீஸை கைத்தூக்கி விடுவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் ஓய்வூதிய வெட்டு, வரி உயர்வு உள்ளிட்ட புதிய சிக்கன நடவடிக்கைகள் திணிக்கப்படுவதை எதிர்த்து நடைபெற்ற அமைதிப் பேரணியில் கிட்டத்தட்ட 12,000 மக்கள் கலந்து கொண்டனர்.
“ஒரு கிரேக்க காவலரின் வாழ்க்கை எவ்வளவு மதிப்பு மிக்கது?” என்று ஜெர்மனிலும் கிரீசிலும் எழுதப்பட்ட பெரிய பதாகையை, மத்திய ஏதென்சில் இருக்கும் லைக்காபெட்டஸ் ஹில்லில் தொங்க விட்டுள்ளனர் கிரீஸ் காவலர் தொழிற்சங்கத்தினர்.
பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன்னதாக நாட்டின் ஒட்டுமொத்த பொதுச்சேவைகளை நிறுத்தி 24 மணி நேர பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர் கிரீஸ் தொழிலாளர்கள்.
கிரீஸ் கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்துத் தொழிலாளர்கள் இராணுவ முன்னணியைச் (PAME-Panergatiko Agonistiko Metopo) சேர்ந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் கிரீஸின் வங்கித் தலைமையகத்தை கடந்து செல்லும் காட்சி.
போராட்டத்தில் கலவரத்தடுப்புக் காவலரை நோக்கி முகமூடியணிந்த ஒரு போராட்டக்காரர் குழல் துப்பாக்கியால் (projectile) சுடுகிறார்.
கலவரத் தடுப்புக் காவல்துறையினரை எதிர்க்கின்றனர் போராட்டக்காரர்கள். அதே நேரத்தில் கிரீஸ் பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே இருக்கும் காவலர்களை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலப்பத்து இளைஞர்கள் கற்களை எறிந்ததுடன் குழல் துப்பாக்கியாலும் சுட்டனர்.
போராடும் இளைஞர்களுக்கும் கிரீஸ் காவல்துறைக்கும் இடையே நடந்த மோதலில் கண்ணீர் புகைக்குண்டுகளால் பதில் தாக்குதல் நடத்தியது காவல்துறை.
போரட்டக்காரர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை எறிந்ததால் தலைநகரின் தெருக்கள் விரைவில் போர்க்களமாகின.
கருப்பையில் சிசுவை வைத்து எப்படி தாய் பாதுக்காக்கிறாளோ அது போலவே வட தமிழகத்தில் ஓடும் பாலாறும் தன்னுடைய மணல் வயிற்றினுள் நீரைப் பாதுகாத்து அதை கால்வாய்களாகவும் ஏரிகளாகவும் குளங்களாகவும் கிணறுகளாகவும் ஊற்றுகளாகவும் பிரசிவித்திருக்கிறது.
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் இருக்கும் நந்தி மலையில் உருவாகி கர்நாடகாவில் 93 கிலோமீட்டரும் ஆந்திரப்பிரதேசத்தில் 23 கிலோமீட்டரும் பயணம் செய்கிறது பாலாறு. பின்னர் வேலூர் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக தமிழக எல்லைக்குள் 222 கிலோமீட்டர் பயணம் செய்து கிட்டதட்ட 2,50,000 ஏக்கர் பாசனப்பரப்பைக் கடந்து காஞ்சிபுர மாவட்டம் வயலூர் முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையோரத்தில் சாக்கடையாக ஓடும் பாலாறு
பாலாற்றில் இருந்து இலட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் இராட்சத ஆழ்துளை கிணறுகள் மூலம் சென்னைக்கு உறிஞ்சப்படுகிறது. அதே போல பாயலூர் மற்றும் ஆயப்பாக்கம் கிராமங்களில் இருந்து கல்பாக்கம் அணுமின்நிலையத்திற்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் 1226 தோல் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் வேலூர் மாவட்டத்தின் பங்கு 37 விழுக்காடு ஆகும். தோல் தொழிற்சாலைகள் வெளியேற்றும் சையனைடு, பாதரசம், குரோமியம் உள்ளிட்ட வேதியியல் இராசயனக் கலவைகள் நேரடியாக பாலாற்றில் கலக்கின்றன.
பாலாற்றங்கரையில் பினாயூர் படுகை 30 அடிக்கும் ஆழமாக மணல் எடுக்கப்பட்டு சகதியாக மாறிய பாலாறு
மறுபுறம் மணல் மாஃபியா கும்பல் பாலாற்றின் வழித்தடம் 222 கிலோமீட்டர் முழுவதையும் 30 அடி ஆழத்திற்கு பெயர்த்தெடுத்து விட்டனர். இதற்கெதிராக மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களாலும் சமூக ஆர்வலர்களின் முன்முயற்சியாலும் வேறு வழியின்றி தனியார் மணல் ஏலத்தை இரத்து செய்து இனி நியாயமான தேவைகளுக்காக மட்டுமே மணல் பயன்படுத்தப்படும் என்று ஒரு சட்ட ஆணையை பிறப்பித்ததார் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் முப்பதடி ஆழத்திற்கு மேல் மணலை தோண்டி பாலாற்றை நாசம் செய்து டாஸ்மாக்கை போல மணல் கொள்ளையை அரசுடைமையாக்கியது அ.தி.மு.க அரசு. சட்டப்படி 3 அடிதான் மணல் அள்ள வேண்டும். ஆனால் அள்ளப்பட்டதோ 20 அடிக்கு மேல். இதை உயர்நீதிமன்றம் அமைத்த குழுவும் உறுதி செய்தது. ஆனால் அன்றைய தி.மு.கவின் அமைச்சர் துரைமுருகனோ 3 அடிக்கு மேல் மணலே எடுக்கவில்லை என்று சாதித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் ஆர்.வேலு இரயில்வேத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் இங்கு இரயில் நீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். பிறகு அதிமுக ஆட்சியில் பாலாறு வரலாறு காணாத வகையில் மணற்கொள்ளையர்களால் சிதைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில் உள்ள வாலஜாபாத் இளையனார் வேலூர் ஆற்றுப்பாலம் நூறடி தூரத்திற்குள் ஆறுக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள்
காவிரி, பாலாறு, பேரியாறு, சிறுவாணி, தாமிரவருணி என தமிழகத்தின் நீர் வளங்கள் பெப்சி கோக் உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பல்களாலும் தமிழகத்து ஓட்டுக்கட்சிகளாலும் மணல் மாபியாக்களாலும் சூறையாடப்பட்டு விட்டது. தமிழகமே முன்னெப்போதும் கண்டிராத வறட்சியின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் வட தமிழகத்தின் காவிரி என்று அழைக்கப்பட்ட பாலாற்றுப் படுகையில் இரண்டு நாட்கள் நடைபயணமாக சென்று அதன் நீராதாரத்தை நம்பியிருக்கும் கிராம மக்களை சந்தித்தார்கள் வினவு செய்தியாளர்கள்.
கதிர், நடராஜ் – புஞ்சை அரசந்தாங்கல் – தினக்கூலி
நாங்க, இந்த பாலாத்தங்கரையில தான் பொறந்தோம். சின்ன வயசுல ஆத்து நெறைய… கண்ணாடி மாறி தண்ணி போவும். அப்பவும் கைல தோண்டிய புது ஊத்து தண்ணிய தான் குடிப்போம். தேங்காத்தண்ணிய போல இருக்கும்.
இப்போ 150 அடி 200 அடி போர் தோண்டுனாக் கூட தண்ணி இல்லை. ஆடு மாடுக்கு தண்ணி இல்லாம கும்பல் கும்பலா ஊர் ஜனங்க வெளியூருக்கு நாடோடியா போய்ட்டாங்க. வீடெல்லாம் இங்க ஆளில்லாம கெடக்குது. அப்போ ஆத்தங்கரை எல்லாம் 20, 30 ஏக்கரில் மாந்தோப்பு இலுப்பை தோப்பு மண்டி கெடக்கும். ஆனா இப்போ பன மரம் கூட காஞ்சி போச்சு.
வளத்தோட்டம் கதிர்,நடராஜ பாலாற்றில் இருந்து வளத்தோட்டத்திற்கு வரும் பாசன கால்வாய் பல தலைமுறையாக சித்திரை வெய்யிலிலும் வற்றாத கால்வாய் இன்று காய்ந்து கிடக்கிறது
இங்கு ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஒரு பெரிய ஏரி கண்டிப்பாக இருக்கும். எல்லா ஏரிக்கும் தண்ணி வர காவா… அதுல இருந்து தண்ணி போற தாங்கல்… இப்படின்னு ஊரே தண்ணி, காவா, ஏரினு பிணைஞ்சு இருக்கும்.
குடிக்கிற தண்ணி ஒரு மணி நேரம் கூட இப்போ கொழாயில வரதில்லை. பூமி காஞ்சி போச்சு. அப்போல்லாம் வெய்யில்ல ஆறு வத்தி போனாலும் அங்கிருக்கும் ஆத்துக்கண்ணுங்கல்ல எந்த காலத்துலயும் தண்ணி வத்தாது. எங்க எடத்துல பத்து கண்ணு, மூணு கண்ணு, ஒத்த கண்ணுனு அதுல எப்பவுமே தண்ணி இருக்கும். அதெல்லாம் வெள்ளத்தின் போது 40 50 அடின்னு இயற்கையா விழுந்த பள்ளம். வெய்யில் காலத்துல அதுல தான் நீச்சல் அடிப்போம்.
ஒவ்வொரு ஆத்துகண்ண சுத்தியும் ஜம்பு கோர, காடு மாறி வளரும். அத அறுத்து இங்க இருக்குறவங்க பாயி மொடைவாங்க. அசுரை, கெண்ட, வெராலு, வெலாங்கு, ஜிலேபினு பல மீனுங்க ஜம்புல வளரும். வெய்யுலுல ஆத்துக்கண்ணுல குளிச்சுட்டு மீன புடிச்சுட்டு தான் வீட்டுக்கு வருவோம்.
அப்போ இங்கஃ பிரிட்ஜ் எல்லாம் இல்லை. தரைப்பாலம் தான் உண்டு. மழக்காலத்துல கண்ணுக்கு எதுக்க தெரியுற காஞ்சிபுரத்துக்கு கூட போக முடியாது. வெள்ளம் ரெண்டு கிலோமீட்டர் அகலுத்துக்கு கர பொரண்டு ஓடும். ஆத்தர அவசரத்திற்கு காஞ்சிபுரத்திற்கு போகணும்னா கூட மாமண்டூர், வடால் வழியா 40 கிலோமீட்டர் சுத்திகினுதான் போக முடியும். இருந்தாலும்… இப்போ இருக்குற கஷ்டம் அப்போ இல்லை.
சின்ன வயசுல நாங்க வீட்டில இருந்த நேரத்த விட ஆத்துல ஆடுனது தான்.. அதிகம். மழைக்காலத்துல வெள்ளம் பொரளும் போது அஞ்சு கிலோமீட்டர் எட்ட வெள்ளம் வரும்போதே, ஆறு எங்களை எச்சரிச்சு வீட்டுக்கு தொரத்திடும். மணல்ல விளையாடுற எங்க காலு, சேத்துல எறங்குற மாறி கீழ எறங்கும். அப்பவே எங்களுக்கு தூரத்தில வெள்ளம் வருதுனு… தெரிஞ்சிடும். நாங்க எல்லாரும் விழுந்தடிச்சு வேகவேகமா கரை ஏறுவோம். அதுக்கு கொஞ்ச நேரத்துல வெள்ளம் எங்க பின்னாடியே வரும்.
புஞ்சை அரசந்தாங்கல் கதிர்,நடராஜ: அப்போல்லாம் வெய்யில்ல ஆறு வத்தி போனாலும் அங்கிருக்கும் ஆத்துக்கண்ணுங்கல்ல எந்த காலத்துலயும் தண்ணி வத்தாது
எங்க தாத்தா எல்லாம் , டேய், காலுக்கு கீழ பனமரம் உயரம் மணலு இருக்குடா அதுல தாண்டா இப்போ வெள்ளம் போகுது. அடுத்து மேல் வெள்ளம் வருண்டா வாங்கடானு கத்துவாரு.. இப்போ சாதாரணமா 50 அடி ஆழத்துக்கு அந்த மணல பல கிலோமீட்டருக்கு வாரிட்டாங்க. அதுக்கு அப்பால ஆறுன்னு எங்க இருக்கும்.
அந்த கீழ் ஊத்து தண்ணிய தான் நாங்க காவாயாக்கி அந்த காலத்துல விவசாயம் பண்ணுவோம். அந்த தண்ணியில எங்க முகமே தெரியும். அவ்ளோ.. தெளிவா இருக்கும்.
விவசாயம் பண்ணுன எங்க குடும்பத்து பசங்க இப்போ ஷூ கம்பெனிக்கும் தோல் கம்பெனிக்கும் தினக்கூலியா போகுதுங்க. வீட்டுக்கு பின்னால கடல் மாதிரி காவாய் போகும். அங்க தான் நாங்க குளிப்போம். துணித் துவைப்போம். அதுதான் எங்களுக்கு விவசாயத்திற்கான பாசனக்காவாய். அது எந்த காலத்துலயும் வத்தாது. இப்போ அத பாருங்க முள்ளு மண்டிக் கிடக்குது.
பாலகிருஷ்ணன் – ஆடு மேய்ப்பவர் – குருவி மலை
மூணு போகம் விளைஞ்ச பூமி இது. முழங்காலு சேத்துல நடந்த இடம் இது. இப்போ பாருங்க இது பொட்டல் காடு மாறி இருக்குது. இப்போ ஒரு போகம் அறுக்குறதே பெரும்பாடா ஆயி போச்சு. அதுக்கே பம்புசெட்டு இருந்தா தான் முடியும். இப்போ ஆடு மாட்டுக்குக் கூடத் தண்ணி இல்லாம நாடோடி மாறி அலையுறோம். இந்த வெய்யுலுல முன்னெல்லாம் ஒருபக்கம் விதைப்பு மறுபக்கம் அறுப்புனு வாழ்ந்தோம்.
பாலாறு பாசன நிலம் ரியல் எஸ்டேட்டாக மாறிய குரூரம் மூணு போகம் விளைஞ்ச பூமி இது. முழங்காலு சேத்துல நடந்த இடம் இது.
மழக்காலத்துல இந்த பூமி வேற மாறி இருக்கும். மழக்காத்துன்னு வெடவெடன்னு இருக்கும். ஒருக்கைல பொறந்த ஆட்டுக்குட்டி மறுக்கைல ஜம்புகூடைனு மழையில திரிவோம். ஆடு ஒருப்பக்கம் நாங்க ஒருபக்கம்னு தீராத மழையில மாட்டிக்குவோம்.
மூணு மாசம் மழை பெஞ்சாலும் மொத்த வருசமும் நாங்க சொகமா இருந்தோம். ஏரித் தண்ணி காவாத்தண்ணி வத்தாம இருந்தது தான் அதுக்குக் காரணம். இப்போ அந்த ஏரியும் காவாவும் எங்க இருக்குனு தேடுறோம்.
வருசத்துல ஆறு மாசம் கடன் வாங்கி சாப்பிடுவோம். அடுத்த ஆறு மாசம் மகசூல வெச்சு அதை அடைச்சுடுவோம். அத நம்பி கடன் குடுப்பாங்க.
இந்த ஆடுங்க தான் இதுநாள் வரைக்கும் எங்க குடும்பத்தக் காப்பாத்துது. ஆடு மேச்சு அஞ்சு பொண்ணுங்கள கட்டிக் கொடுத்துட்டேன். பையனையும் இப்போ கல்லூரி படிப்பு படிக்க வக்கிறேன். இப்போ பொண்ணு வயித்து பேத்திங்களுக்கும் இந்த ஆடுங்கள வெச்சு தான் எல்லாம் செய்யறேன்.
நூறு ஆடுங்க எப்பவுமே எங்கால சுத்தி சுத்தி வரும். மூணு மாசத்துக்கு ஒரு தடவை இதுங்க போடுற குட்டிங்களை வெச்சு தான் இவ்ளோவையும் செஞ்சேன். கட்டிக் குடுத்துட்டாலும் அப்பப்போ தாய்தகப்பனு ஓடியாராங்க. நாம இருக்குற வரைக்கும் தான் செய்ய போறோம்.
வெள்ளாம இல்லாம போனதால மனுசனுக்கு மட்டும் இல்ல ஆடுமாட்டையும் ஆயிரம் நோயோட தான் வளக்குறோம். மனுசனுக்கு ஹார்ட் அட்டாக் வர மாறியே ஆடுங்களும் அப்பப்போ விருவிருனு இழுத்துக்கிட்டு மயக்கம் போட்டு கிழே விழுந்துருதுங்க. மாட்டு டாக்டர வெச்சு அதுகளையும் காப்பாத்த வேண்டி இருக்கு.
முனிரத்தினம் – வளத்தோட்டம் – விவசாயி
அஞ்சு ஏக்கரு நெலம் எனக்கு. ஒரு ஏக்கரு பயிர் வக்கிறதே இப்போ பாடாப்போவுது…. இப்போ இங்க ஆறா இருக்குது? பாலாறுனு இத சொல்ல முடியுமா? வெறும் வேலிக்காத்தானா (சீம கருவேல மரம்) மண்டிக் கிடக்குது. மனசெல்லாம் நோவுது.
காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் உள்ள பாலாற்றுப் பாலம் சீமகருவேல மரமாக மண்டிய அவலம்
ஆத்து மணல கருணாநிதி ஆட்சில வார ஆரம்பிச்சாங்க. அம்மா ஆட்சியில எல்லாத்தையும் வாரி ஆத்தையே சமாதி கட்டிட்டாங்க.
அப்போ எல்லாம் ஆத்து மணலை யாருனா பக்கத்துல வீடு கட்டனும்னா தான் எடுப்பாங்க. நாங்க அதுக்கு ஒரு வண்டி ஒரு அம்பது அறுவதுனு ஓட்டறதே பெருசு. இப்போ எட்டு டயரு வண்டி பன்னெண்டு டயரு வண்டினு ஜே.சி.பிய சுத்தி சுத்தி வெச்சு மொத்தமா வாரிட்டாங்க. வேலிக்காத்தான் முள்ளால ஆத்தையே மூடிட்டு போய்ட்டாங்க.
இருபது வருசத்துக்கு முன்ன கூட நெலம இவ்ளோ மோசமா இல்லை. அப்போ இந்த காச்ச காலத்துல எங்க ஊருகாரங்க எல்லோரும் சேர்ந்து ஆத்துல கொளஞ்சி அடிப்போம் (ஊத்து வாய்க்கால் தோண்டுவது). அதுக்கு ராவோட ராவா எங்க ஊரு பங்குக்கு என்பது பேரு ஆத்துக்கு போவோம். மாடு பூட்டி பலக மாட்டி வாய்க்கா எடுப்போம். இதே மாதிரி ஒவ்வொரு ஊருக்காரங்களும் இந்த காவாய தொடர்ச்சியா தொண்டுவாங்க.
இந்த காவால ஊத்தெடுக்குற தண்ணி மேல்மடைல இருந்து கடைமடை வரைக்கும் ஒரு ஏக்கர் நிலம் ஒரு மணி நேரத்துல பாயும். அப்படி இருந்துச்சு தண்ணி வளம். ஆறு பாத்தா காஞ்சி தான் இருக்கும். ஆனா என்ன மந்திரமோ தெரியாது தண்ணி மட்டும் வத்தாது. இப்போ மணல் போனதிலிருந்து ஆறே செத்துப் போச்சு.
முனிரத்தினம் வளத்தோட்டம் விவசாயி ஆத்து மணல கருணாநிதி ஆட்சில வார ஆரம்பிச்சாங்க
இந்த காச்ச காலத்துல தான் நாங்க நாத்து நடுவோம். குள்ளகார், மோஷம், கிச்சிடி சம்பா, பிசினி இப்படி எடத்துக்கு ஏத்த மாறி ஆளுக்கொரு நெல்லப் போட்டு பயிர் அறுப்போம்.
இந்த ஆத்துல ஒரு முள்ளு செடிய பாக்க முடியாது. இப்போ ஆறே முள்ளு மண்டி கிடக்குது. என்னத்த சொல்ல.
தனசேகரன் – புஞ்சைஅரசந்தாங்கல் – மாணவர்
அம்மா அப்பா பிரிந்ததால் அப்பா வழிப் பாட்டியின் பாதுகாப்பில் இருக்கும் மாணவர் தனசேகரன்.
நான் இப்போ படிக்கிறத நிறுத்திட்டேன். போன வருஷம் ஓரிக்கையில் இருக்கிற சி.பி.டி.லீ(C.P.T.LEE) செங்கல்வராயன் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் எடுத்து படிச்சேன். செமஸ்டர் பீஸ் கட்ட முடியாமல் பாட்டி படிப்பை நிறுத்திருச்சி. இந்த வருஷம் பச்சப்பாஸ் கல்லூரியில் சேர்க்க சொல்லி பாட்டிகிட்ட சொல்லி இருக்கேன். பணம் இல்ல என்ன பண்றதுன்னு தெரியலனு சொல்லுது பாட்டி. எனக்கு Bsc zoology படிக்கணும்னு ஆசை. பாட்டி நூறு நாள் வேலைக்கு போகுது. அதுக்கே இப்போ வேலை இல்லை அதனால் பணம் கிடைக்கலைன்னு சொல்லிடுச்சு.
தனசேகரன் புஞ்சைஅரசந்தாங்கல் மாணவர் எனக்கு Bsc zoology(விலங்கியல்) படிக்கணும்னு ஆசை. பாட்டி நூறு நாள் வேலைக்கு போகுது
விஜயா – மாடு மேய்ப்பவர் – வளத்தோட்டம்
இங்க கீழ் ரோட்டுக்கும் மேல் ரோட்டுக்கும் இடையில இருக்குற இரண்டு கிலோமீட்டர் இடத்துல 25 கவர்மென்ட் மோட்டார்ல… தண்ணி எடுக்குறாங்க. அந்த தண்ணி எங்களுக்கு கிடையாது. மெட்ராசுக்கு போகுது. ஒரு ஆளே உள்ள போற அளவு பைப்புல தான் தண்ணி எடுக்குறாங்க. தண்ணி இங்க காயாம என்ன பண்ணும். மணலையும் வாரிட்டாங்க. இப்போ இருக்குற தண்ணியையும் மோட்டாரப் போட்டு சுரண்டிட்டாங்க. எங்க மாடு கன்னுங்களுக்கு தண்ணியில்ல. அன்னக்கூட சொம்புல தண்ணி எடுத்து மனுசாளுக்கு குடுக்குற மாறி மாடுகளுக்கும் கொடுத்து காப்பாத்தறோம்.
விஜயா தாத்தனாஞ்சேரி எங்க மாடு கன்னுங்களுக்கு தண்ணியில்ல
இருந்த ஏரியும் காவாயும் சிறுத்துப் போயி தூந்துப் போச்சு. ஏரி இருந்த தடமே இப்போ காணும். அப்புறம் தண்ணி எங்க நிக்கும்.
எனக்கு ரெண்டு பொம்பள குழந்தைங்க. உள்ளூரு கவர்ன்மென்ட் பள்ளிக்கூடத்துல மூணாவதும் நாலாவதும் படிக்குதுங்க. எங்க ஊட்டுக்கறாரு விவசாயம் பாத்தவரு இப்போ வேலை இல்லாம சென்ட்ரிங் வேலை பாக்குறாரு. வேலை செய்ய முடியல உடம்பு கஷ்டமா இருக்குனு சொல்றாரு. என்ன பண்றது கொழந்தைங்க இருக்குதே.
சோத்துக்கு வழி இல்லனாலும் நோய்க்கு கொறச்சல் இல்லை. சக்கர நோய்க்கு பத்து வருசமா மாத்திர சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன். காஞ்சிபுரம் கவர்ன்மென்ட் ஆசுபத்திரியில மாசம் ஒருவாட்டி மாத்திரை வாங்கி வரேன். பால் மாடு வெச்சு இருக்கேன்னு தான் பேரு. கொழந்தைங்களுக்கு ஒரு வாய் காப்பி போட்டு கொடுக்குனும்னா கூட கணக்கு பாப்போம். ஏன்னா விக்கற பாலு குறைஞ்சுடும். அத வெச்சு மாட்டுக்கு வக்கபுல்லு வாங்குறதா இல்ல நாங்க சோறு சாப்புடறதா?
தேவராஜன், மேக நாதன், பழனி, சாந்தமூர்த்தி, இரவி, தமிழினி – திருமுக்கூடல் பாலாற்றுத் தடுப்பணைக்கான 50 கிராம கமிட்டிக் குழு முன்னோடிகள் :
இந்த அமைப்பு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது, வட்டார எம்.எல்.ஏக்களை சந்திப்பது, மனு கொடுப்பது, அதிகாரிகளிடம் முறையிடுவது என்று படிப்படியாக இயக்கமெடுத்து பின்னர் அப்பகுதியில் ஆத்தோர கிராமத்தில் இயங்கிய மணல் குவாரியை மக்கள் போராட்டத்தின் மூலம் மூடியது.
திருமுக்கூடல் பாலாற்றுத் தடுப்பணைக்கான 50 கிராம கமிட்டிக் குழு முன்னோடிகள் அரசும் அதிகார வர்க்கமும் வெறும் பத்து கோடி மட்டுமே செலவுள்ள திருமுக்கூடல் தடுப்பணைக் கோரிக்கையை கூட நிறைவேற்றவில்லை
அதற்கு அடுத்து பாலாற்று படுகை நிலத்தடி நீரை அதிகப்படுத்தவும் வெள்ளக்காலங்களில் நீர் வழிந்தோடுவதை தடுக்கவும் தடுப்பணை கட்டும் கோரிக்கைகளை முன் வைத்தது. அதற்காக கல்லூரி மாணவர்களிடம் ஓவியப் போட்டி, கட்டுரை எழுதுவது, புத்தக வெளியீடு, ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, ஊர்வலம், கிராம கூட்டங்கள் என்று பல வழிகளில் இயக்கம் போராடியது.
இதற்கு மக்கள் சிவில் உரிமை கழகம், வட்டார ஆசிரியர் – மாணவர்கள் அணி, சென்னை ஐ.ஐ.டி ஆசிரியர்கள் மற்றும் பொறியாளர் வீரப்பன் இவர்கள் உதவியுடன் ஆற்று மணல் கொள்ளையை ஊடகங்களில் வெளிப்படுத்தியது.
கடந்த பத்தாண்டுகளில் பாலாற்று பாசனப் பரப்பு குறைந்து வருவதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புள்ளி விவரங்களாக சேகரித்து மக்கள் முன் வைத்தது. இதனால் பாலாறு கண்ணெதிரே அழிவதை உணர்ந்த 150 க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து கிராமங்கள் மணல் அள்ளுவதற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி அரசிற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தன.
பாலாறு செய்யாறு வேகவதி ஆறு சங்கமிக்கும் திருமுக்கூடலில் இருந்து சென்னைக்காக உறிஞ்சப்படும் பாலாறு
இவர்களின் சட்டபூர்வ தொடர் போராட்டங்களை கண்டுகொள்ளாத அரசும் அதிகார வர்க்கமும் தொடர்ச்சியாக பாலாற்று மக்களுக்கு துரோகம் இழைத்தன. வெறும் பத்து கோடி மட்டுமே செலவுள்ள திருமுக்கூடல் தடுப்பணைக் கோரிக்கையை கூட நிறைவேற்றவில்லை. மரணத்தில் இருக்கும் பாலாற்றின் கடைசி நீரை உறிஞ்சும் செய்யாறு சிப்காட், ஸ்ரீபெரும்பதூர் சிப்காட், இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டுகளில் இருக்கும் பன்னாட்டு கம்பெனிகள் சட்டபூர்வமாக ஒதுக்க வேண்டிய சமூக நல நிதியை அரசிடம் முறையாக கொடுக்காமல் தாங்களே பூங்கா கட்டுவதாகவும் பொதுப்பணிகள் செய்வதாகவும் ஏமாற்றுகின்றன. இந்த நிதியே பலத் தடுப்பணைகள் கட்ட போதுமானது என்று பலமுறை எடுத்துக்காட்டியும் அதிகார வர்க்கம் பொருட்படுத்தவில்லை.
இதற்கு மாறாக திருமுக்கூடலில் இரயில் நீர் திட்டத்தின் கீழ் ரயில்வேத்துறைக்கு மேலும் பல இராட்சத குழாய்கள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது அரசு. இதற்குத் தேவையான நீராதாரத்திற்கான படுக்கை அணையை(Bed Dam) கட்டி அதை தடுப்பணை கட்டியதாக கணக்கு காட்டி ஏமாற்றியது.
முத்தாள், நடராஜன், காத்தவராயன், ராஜேந்திரன், கண்ணையா – இவர்கள் அனைவரும் வாலாஜாபாத் அருகே பாலாற்றுக்கரையில் உள்ள நெய்குப்பத்தை சேர்ந்த தொழிலாளர்கள்.
நடராஜன்:
நாங்க எல்லாருமே பதினைஞ்சு வயசுல இருந்து ரைஸ் மில்லுல மூட்ட தூக்குற கூலிங்க. நெல் அவிக்கிற வேலையும் செய்வோம். சின்ன வயசுல பாலாத்து தண்ணிய கடந்து தான் ரைஸ் மில்லுக்கு வரணும். ஒத்தையா எங்களால வர முடியாது. அதனால நாங்க ஒருத்தருக்கொருத்தர் கைகோத்து தண்ணிய கடந்து வருவோம். இன்னும் வெள்ளம் பொறன்டா நாலு பானைய நாலு மூலைக்குக் கட்டி அதுல கொஞ்சம் மணலக் கொட்டித் தெப்பம் கட்டுவோம். அத புடிச்சிகினு தான் கரைய கடந்து வேலைக்கு வருவோம்.
வீட்டுக்கு ஒரு ஆளுனு நாங்க தோண்டுன புளியம்பாக்கம் காவாய் இக்கரை காவா, அங்கம்பாக்கம் காவாய் அக்கரை காவாய். அது தான் எங்க ஊரு விவசாயத்த கவனிச்சுகிது.
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில் பாலாற்றுக்கு அக்கரையில் உள்ள நெய்குப்பம் கிராமத்தை சேர்ந்த நெல் மண்டித் தொழிலாளி நடராஜன்
தண்ணி தேவாமிர்தம் மாறி இருக்கும். ஆத்துல காவாய் எடுக்குறதுக்கு மாட்டப் பூட்டி கொளஞ்சி அடிப்போம். அதுக்கு அப்பால பெரம்ப பூட்டி தண்ணி காவாய சீர் பண்ணுவோம். வேலைக்கு வராதவங்களை ஒரு தலக்கட்டுக்கு இவ்ளோன்னு அபராதம் போடுவோம்.
மணல ராவும் பகலும் லாரி வெச்சு அள்ளி ஆத்தையே தூத்துட்டாங்க. இங்க விவசாயமே இல்லை. எங்களுக்கு இந்த ரைஸ் மில்லு வேலை தான் சோறு போடுது.
வேலைக்கு காலைல ஏழு மணிக்கு வந்தா மறுநாளு மதியம் மூணு மணிக்கு தான் முடியும். நாங்க நாலு நாலு பேரு ஒரு குரூப்பா வேலை செய்வோம். நூறு மூட்டைக்குக் குறையாத நெல்லை தொட்டில கொட்டி தண்ணிய உட்டு அலசி மொதக்குற கருக்காய கையில வாரி சுத்தம் பண்ணுவோம். சுத்தம் பண்ணுன நெல்லை டேங்குல கொட்டி அதுல தண்ணிய ஊத்தி வேக வைப்போம்.
நெல்லு வேக நைட் ஒன்பது ஆவும். அத அப்படியே ஆவி கட்டிட்டு நைட் சாப்பாட்டுக்கு போயிடுவோம்.
மறுநாளு வெள்ளென காலைல வெந்த நெல்ல சிமெண்ட் களத்துலக் கொட்டிடுவோம். அதை காய வெக்க பல்லு பெரம்பு ஓட்டுவோம். பிறகு காலாலத் துளாவுவோம். துளாவுவுது விளையாட்டுக் கிடையாது. ரெண்டு காலையும் பாம்பு மாதிரி சரசரன்னு தேச்சுகினு முன்ன போகணும். இதால கோடு போட்ட மாதிரி தரை ஈரமும் காயும் அதால நெல்லும் காயும். இது அரை நாள் முழுக்க மாத்தி மாத்தி செய்யனும். சூடாலே காலே காப்பு காச்சி கெடக்குது.
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையின் பாலாற்று கரையோர கிராமங்களில் வாழும் நெல் மண்டித் தொழிலாளர்கள்
நெல்லு பதமா காஞ்சதும் கையில நிம்டி பாத்து அரிசி ஒடையாம இருக்கானு பாப்போம். பிறகு அதை அம்பாரம் ஆக்கி நைட் பூரா டம் கட்டுவோம். அப்போ தான் அரிசி உடையாம முழுசா இருக்கும். இல்லாட்டி ரவை மாறி அரிசி நொறிங்கிடும்.
பிறகு இதை மெசின்ல போட்டு அரிசியாக்குவோம். பிறகு சைஸ் வாரியா மூட்டையாக்கி லோட் ஏத்துவோம். முதலாளியோட கணக்கு மூட்டைக்கு 20 ரூபாய். இந்த ரெண்டு நாள் வேலைக்கு 600 கிடைக்கும். வருசத்துக்கு ரெண்டு மாசம் தான் முழுசா வேலை இருக்கும். மத்த நாளெல்லாம் பாதி வேலை பாதி கூலி கெடச்சாலே பெருசு.
இப்போ இங்க தண்ணி இல்ல விவசாயமும் இல்ல. எனக்கு வயசாயி போச்சு. எந்த வேலைக்கு போறதுன்னு தெரியல. பசங்கள எப்படி காப்பாத்த போறேன்னு தெரியல. இதுல இந்த இருமுடி செலவு மட்டும் குறையில. என்னாப் பாக்குறீங்க கட்டிங் செலவுதான் என்று சிரிக்கிறார்.
தாத்தனாஞ்சேரி தடுப்பணை – பாலாற்றுக் குறுக்கே செங்கல்பட்டுக்கு அருகே கட்டப்பட்ட தடுப்பணை (Bed Dam)
தாத்தனாஞ்சேரி தடுப்பணையை நேரடியாகவே சென்று பார்த்தோம். தடுப்பணை என்று சொல்வது வெறும் உடைந்த பாறாங்கற்களே. உடைந்த பாறாங்கற்களையே ஐந்தடி ஆழம் ஐந்தடி அகலத்துக்கு பள்ளம் தோண்டி கொட்டி இருக்காங்க. இரு கரைகளிலும் சுமார் முன்னூறு அடி நீளத்திற்கு நடைப்பாதை சிமெண்டு சிலாபு ஒட்டி வைத்து இருக்காங்க. இதற்கு பெயர் தான் தடுப்பனையாம். அதிகாரிகளின் இந்த அக்கிரமத்தை ஊர்காரர்கள் காரித் துப்புகிறார்கள்.
தாத்தனாஞ்சேரி தடுப்பணை நாங்க எங்க ஊரு கரையத் தாண்டி ரோட்டுக்கு போறதுக்கு பிரிட்ஜ் கட்டித் தரக் கேட்டோம்
தாத்தனாஞ்சேரி தடுப்பணையில் இருந்த விக்னேஷ் என்ற மாணவர் கூறியது:
நாங்க எங்க ஊரு கரையத் தாண்டி ரோட்டுக்கு போறதுக்கு பிரிட்ஜ் கட்டித் தர கேட்டோம். அவுனுங்க (அதிகாரிங்க) இங்க வந்து கல்ல கொட்டிட்டு நாங்க தடுப்பணை கட்டிட்டோம்னு சொல்றானுங்க. அதுமட்டுமல்லாமல் இனிமே இங்க பிரிட்ஜ் கட்ட முடியாதுனு சொல்றாங்க. கொட்டிட்டு போன ஆறு மாசத்துக்குள்ள வர்தா புயல் வந்துச்சு. கருங்கல்லு பாதி வெள்ளத்துல அடிச்சிகினு போய்டுச்சு. மீதி இருக்கறது தான் நீங்க பாக்குறது. இங்க தண்ணியும் இல்ல ஒன்னும் இல்ல. எதுக்கு இத செஞ்சாங்கனு தெரியல. அவங்க ஏமாத்தறாங்கனு மட்டும் எங்களுக்கு நல்லாத் தெரியுது.
இது கூட இங்கு பாலாற்றில் எடுக்கும் இரயில் நீருக்காக நீர் ஊத்துக்காக செய்த மோசடி. அதுக்கும் கூட இது பயன்படாது. எதையோ சொல்லிப் பணத்த அடிச்சுட்டாங்க.
***
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் நீராதாரத்தை நம்பி கிட்டத்தட்ட 1200 ஏரி குளங்கள் இருந்திருக்கின்றன. சென்னையின் கட்டுமான பணிகளுக்காகவும் பன்னாட்டு நிறுவன தொழிற்சாலைகளுக்காகவும் வளமான திருவள்ளுவர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் நிலவளமும் நீர்வளமும் சுரண்டப்பட்டுவிட்டன. சென்னையின் செயற்கையான வளர்ச்சியில் பாலாற்றின் இயற்கை அழிவைக் காணலாம்.
பாலாறு என்பது வட தமிழகத்தின் இயற்கை வளங்களை குவித்து வைத்திருக்கும் ஒரு பேரூயிர். அது உருவாக்கிய வளங்களும், வாழ்க்கையும், சுற்றுச்சூழலும் ஏராளம். உலகமயத்தின் அகோரப் பசிக்காக இந்த ஆற்றின் மைந்தர்களும், அவர்கள் உருவாக்கிய வாழ்க்கையும் இன்று அழிந்து கொண்டிருக்கிறது.