privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபோயஸ் : பொறுக்கித்தனத்தில் விஞ்சி நிற்பது அத்தையா மருமகளா ?

போயஸ் : பொறுக்கித்தனத்தில் விஞ்சி நிற்பது அத்தையா மருமகளா ?

-

போயசு தோட்டத்தில் ஜெயாவுக்கு ஒரு பொருத்தமான அஞ்சலி ! எழுதலாம் என்று தான் தோன்றுகிறது. போயஸ் தோட்டத்தின் வாசலில் நடந்த ஆபாசக் கூத்துகளுக்கு ஊடகங்கள் அளித்து வரும் கவரேஜைக் காணும்போது, இதைப்பற்றி எழுதவும் கூசுகிறது. மானங்கெட்ட  நிலையின் உச்சம் என ஒன்று இருப்பதாகக் கொண்டால், அந்த நிலையை எட்டியிருப்பது யார், தீபாவா, போலீசா, ஊடகங்களா, தமிழக மக்களா என்று கேட்டால் எளிதில் பதில் சொல்லி விட முடியாது.

தன்னை வரச்சொல்லி அழைத்து விட்டு இப்போது வெளியே துரத்தி விட்டதாக தீபக் மீது குற்றம் சாட்டுகிறார் தீபா.  “இதற்கு ஆதாரம் அந்த போனில் இருக்கிறது” என்று தீபா பேரவை தலைவர் ராஜாவின் போனை காட்டுகிறார். “யாரைக்கேட்டு என் போனிலிருந்து பேசினாய்” என்று தீபாவிடம் கேட்கிறார் பேரவை தலைவர் ராஜா. “அதை அப்புறம் பேசிக்கொள்ளலாம், நம்மை வரச்சொல்லி கூப்பிட்டானா இல்லையா அதை தீபக்கிடம் கேள்” என்கிறார் தீபா.

“மரியாதையாக பேசுங்கள், நீ, வா, போ என்று பேசாதீர்கள். மாதவன் என்னுடைய ஹஸ்பெண்டு” என்று போலீசு அதிகாரியிடம் எகிறுகிறார் தீபா. “எனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை. இது அக்கா தம்பி பிர்ச்சினை” என்கிறார் மாதவன். “நீ ஏன்டா இங்கே வந்தே, திருட்டு நாயே, நகையை எடுத்துகிட்டு ஓடினவன்தானடா நீ” என்று தீபா புருசன் மாதவனை திட்டுகிறார் ராஜா. “எச்சகலை நாயே” என்று தீபக்கை திட்டுகிறார் தீபா.

உலக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையை கவர் செய்ய வந்ததைப்போல ஒரு ஊடகத்தினர் கூட்டம் காமெராவுடன் அங்கே நிற்கிறது. ஊடகத்தினரை போயஸ் தோட்டத்து காவலர்களும் போலீசும் சேர்ந்து விரட்டுகிறார்கள். உடனே ஊடகத்துக்காரர்கள் “உரிமைக்கு” குரல் கொடுக்கிறார்கள்.

இரண்டு நாளாக இதுதான் தமிழகத்தில் முக்கிய செய்தி. இறுதிக் காட்சியில் “சசிகலாவும் தன் தம்பியும் சேர்ந்து சதி செய்து அத்தையை கொன்று விட்டதாகவும், இது குறித்து பிரதமரிடம் முறையிடப் போவதாகவும்” பிரகடனம் செய்கிறார் தீபா.

நேற்று இந்த கூத்துகளுக்கு நடுவில், போயசு தோட்ட வாசலில் ஒரு போலீசு அதிகாரி தீபாவிடம், “கிளம்புங்கம்மா, எப்பேர்ப்பட்ட பெரிய குடும்பம் அம்மா, நீங்க இப்படி பண்ணலமா” என்று உருக்கமாக கெஞ்சிக்கொண்டிருந்தார். நேற்று அரங்கேறி கேவலங்களிலேயே ஆகப்பெரிய கேவலம் இதுதான்.

அறிவோ சொரணையோ சுயமரியாதையோ இல்லாத ஒரு அடிமையைப் போல பேசினாரே அந்த போலீசு அதிகாரி, கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் நாட்டின் ஆகப்பெரும்பான்மையான ஊடகங்கள் ஜெயலலிதாவை அணுகின, அணுகுகின்றன. தீபா விவகாரத்தையும் ஓபிஎஸ்,இ பி எஸ், தினகரன் விவகாரங்களையும் அவ்வாறே அணுகி வருகின்றன.

உண்மை என்ன? நேற்று போயசு தோட்டத்தின் வாசலில் என்ன நடந்ததோ அதுதான் ஜெயலலிதா இருந்தபோது போயசு தோட்டத்துக்கு உள்ளேயும் நடந்து வந்தது. கப்பம் கட்டாத அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்களுக்கு நடந்த ஆபாச அர்ச்சனைகளை ஒப்பிடும்போது நேற்று நடந்தது ஒன்றுமில்லை. உள்ளே “எச்சக்கலை நாயே” என்று அம்மாவால் அழைக்கப்பட்டவர்கள், சட்டமன்றத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்களே என்றும் அழைக்கப்பட்டார்கள் என்பது மட்டுமே வேறுபாடு.

நேற்று நடைபெற்ற குடுமிபிடி ரோட்டில் நடந்த காரணத்தினால், படம் எடுக்கவிடாமல் தடுப்பதற்கு போலீசு முயற்சி செய்தது. அம்மா இருந்தபோது போயசு தோட்டத்தின் காம்பவுண்டுக்கு உள்ளேயே யாரும் நுழைய முடியாமல் போலீசு பார்த்துக் கொண்டதால், லைவ் கவரேஜ் சாத்தியப்படவில்லை என்பதுதான் இரண்டுக்குமான வேறுபாடு.

“பொறுக்கித்தனத்தில் விஞ்சி நிற்பது அத்தையா மருமகளா” என்று கேட்டால் “அத்தைக்கு பக்கத்தில் கூட மருமகள் வரமுடியாது” என்றுதான் சொல்ல வேண்டும். பதவிக்கு வாரிசுரிமை கோரும் பொருட்டு “எம்ஜியாரின் உடன்கட்டை” என்று தயங்காமல் சொல்லிக் கொண்டதாகட்டும், ஜானகியியும் ஜெயலலிதாவும் ஒருவருக்கு எதிராக ஒருவர் கூறிக் கொண்ட கொலைக் குற்றச்சாட்டுகளாகட்டும், ஜெயலலிதா சட்ட மன்றத்தில் தலைவிரிகோலமாக நடத்திய நாடகமாகட்டும், “கவர்னர் சென்னா ரெட்டி என் கையைப் பிடித்து இழுத்தார்” என்று ஜெ குற்றம் சாட்டியதாக இருக்கட்டும் – ஜெயா ஜெயாதான். இவை எதிலும் அத்தையின் கால் தூசுக்குகூட தீபா சமமாக மாட்டார்.

இருந்தாலும் ஜெயலலிதா ஏதோ கண்ணியமான நபரைப் போலவும், ஆளுமைத்திறன் மிக்கவரைப் போலவும், அவர் தலை சாய்ந்தவுடன், அவரது அருமை பெருமைகளை சீர்குலைக்கும் வகையில் கட்சிக்காரர்களும் தீபாவும் நடந்து கொள்வதாகவும் ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

போயசு தோட்டம் என்பது ஒரு திருடியின் சொத்து. பறிமுதல் செய்து மக்களின் உடைமையாக்கப்படவேண்டிய அந்த சொத்தை  மட்டுமின்றி பறிமுதல் செய்யப்பட வேண்டிய பல சொத்துகளை சசிகலா கும்பல் சட்டவிரோதமாகத் தன் பிடியில் வைத்திருக்கிறது. நீதிமன்றம் அதை அனுமதிக்கிறது. போலீசு அதற்கு காவல் காக்கிறது. ஊடகங்கள் இந்த அசிங்கத்தை ஈயாய் மொய்க்கின்றன.

‘பீ’ யே நோயைப் பரப்புவதில்லை. ஈக்கள்தான் அதைச் செய்கின்றன.