Sunday, August 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 520

பொறுக்கி கவர்னர் ஆர்.எஸ்.எஸ் சண்முகநாதன் !

2

Shanmuganathan”கடந்த பல ஆண்டுகளில் ஏழு சகோதரிகள் எனச் சொல்லப்படும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு வகையான சிந்தனைகளுக்கு ஆட்பட்டுள்ளனர். அவர்களிடம் தேசிய சிந்தனைகளைப் புகுத்துவதே ஆளுநராக எனது முக்கிய பணி” என்று 2015-ம் ஆண்டு மே மாதம் பத்திரிகை ஒன்றின் பேட்டியில் குறிப்பிட்டார் வி.சன்முகநாதன். மேகாலயா மாநில ஆளுநராக மத்திய பாரதிய ஜனதா அரசால் அப்போது அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் இந்துத்துவ அரசியலை மேலிருந்து திணிக்கும் ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின் ஒரு கேந்திரமான புள்ளியாக சண்முகநாதன் செயல்பட்டு வந்துள்ளார். இதற்குப் பரிசாக அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின்  பொறுப்பு ஆளுநராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

மேற்படி சண்முகநாதன் மேகாலையா ஆளுநர் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பொறுப்பு ஆளுநர் பதவிகளை தற்போது ராஜினாமா செய்துள்ளார். வடகிழக்கு மாநில மக்களின் வாயில் புனல் வைத்து புகட்டிய தேசிய சிந்தனைகள் அஜீரணமாகியதன் விளைவாக ராஜினாமா செய்தாரா?

இல்லை. மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஆளுநர் மாளிகையை அந்தப்புரமாக மாற்றியது அம்பலமாகி நாறியுள்ள நிலையிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் சண்முகநாதன். அவர் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என மேகாலய இளம்பெண் பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேகாலய மாநில மக்கள் தொடர்பு அதிகாரி பதவிக்கு தாமே நேர்காணல் செய்வதாக கூறி தெரிவு செய்யப்பட்டவர்களை கவர்னர் மாளிகைக்கு வரவழைத்துள்ளார் சண்முகநாதன். கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி இரவு 7 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என்று இப்பெண்ணை அழைத்திருக்கிறார்கள்.  அங்கு சென்ற இப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டிருக்கிறார் சண்முகநாதன்.

“அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றார். எனக்கு கவர்னர் மாளிகையில் ‘பகுதிநேரமாகவோ இல்லை முழுநேரமாகவோ’ வேலை தருவதாக கூறினார்” என்கிறார் பாதிக்கப்பட்ட பெண். தனக்கு நேர்காணல் நடக்கும் போது யாரும் அருகில் இல்லை என்றும் ஆளுநர் மாளிகையில் ஆடம்பரமான ஒரு அறையில் நேர்காணல் நடந்தது என்று தெரிவித்துள்ளார் அப்பெண்.

ஆனால் இச்சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளான டிசம்பர் 7-ம் தேதியே மேற்கண்ட பதவிக்கான நேர்காணல் முடிந்துவிட்டது. எமோர்தினி தங்ஹியூ என்ற பெண்ணிற்கு நேர்காணல் முடிந்து அவர் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அப்பெண்ணிடம் தெரிவித்திருக்கிறது ஆளுநர் மாளிகை.

இது தொடர்பாக சண்முகநாதன் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. பத்திரிகையாளர்களிடம் பேசிய அம்மாநில டி.ஜி.பி. சிங் இவ்விவாகரத்தை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும், சட்டநிபுணர்களின் ஆலோசணையை நாடியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையைச் சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த வாரம் தங்களது ஆளுநரின் மைனர்தனங்களைப் பட்டியலிட்டு மத்திய அரசுக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். ஆளுநரின் நடவடிக்கைகள் (பொம்பிள்ளைப் பொறுக்கித்தனம் என்று வாசிக்க) ராஜ்பவனின் மேன்மையைக் குலைப்பதாகவும், அவர் ராஜ்பவனை “இளம் பெண்களின் கிளப்பாக” மாற்றி ஊழியர்களுக்கு பெரும் அவமரியாதையைச் செய்து விட்டாரென்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்கள் பொதுவாகவே பழங்குடியினச் சமூக விழுமியங்களைப் போற்றக் கூடியவை. இந்தச் சமூகங்களின் கலாச்சாரங்கள் வரலாற்று ரீதியாகவே பெண்களுக்கான முக்கியத்துவத்துவத்தையும், மதிப்பையும் உத்திரவாதப்படுத்தியுள்ளன. இந்நிலையில் ஏற்கனவே தங்களது ஆளுநரின் மைனர்தனங்களால் கொதித்துப் போயிருந்த ஆளுநர் மாளிகை ஊழியர்களின் கவனத்தில் சண்முகநாதனின் பாலியல் அத்துமீறல் முயற்சி தெரிய வந்ததும் கொந்தளித்து எழுந்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆளுநர் சண்முகநாதன் வேலை கிடைக்காததால் இது போன்ற குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்கள் என்று குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதே போன்று 2009-ல் ஆந்திர மாநிலத்தில் ஆளுநராக இருந்த என்.டி திவாரி மீது பாலியல்  குற்றச்சாட்டு எழுந்தபோது முதலில் மறுத்து பின்னர் வேறு வழியில்லாமல் மன்னிப்புகேட்டு ராஜினாமா செய்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இப்பாலியல் குற்றவாளியை பா.ஜ.க தனது கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கிடைத்த தகவலின்படி சண்முகநாதனும் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டங்களின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் பாலியல் பேதமின்றி  போராட்டக்களங்களில் கூடியிருந்த நிலையில் பெண்களுக்கு எதிராக எந்தவிதமான அத்துமீறலோ, துன்புறுத்தலோ நிகழவில்லை. இதை ஒட்டுமொத்த வடநாட்டு ஊடகங்களும் வியந்து பார்த்துக் கொண்டிருந்த அதே நாட்களில் தான் ’காவித் தமிழர்’ சண்முகநாதனின் அயோக்கியத்தனங்களும் அம்பலமாகின.

இதை தொடர்ந்து நேற்று (26-01-2017) குடியரசு தினத்தன்று மேகாலய சிவில் சமூக அமைப்புகள் ஆளுநர் மாளிகை முன்பு சண்முகநாதனை பதவி நீக்க கோரி போராட்டம் நடத்தியுள்ளார்கள். மேகாலயா தாய்வழி சமூகத்தை அடிப்படையாக கொண்டது என்றும் இம்மாநிலத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

“ஆளுநர் என்பவர் மாநிலத்தின் தந்தை போன்ற பதவி. அதில்  இருப்பவர் மீது இதுபோன்ற புகார் எழுந்திருப்பதால் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இது போன்ற ஒழுக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனையினால் ஆளுநரை பதவிநீக்க கோருவது தங்களுக்கும் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்கள்.” மேலும் இதற்காக கையெழுத்து இயக்கத்தையும் ஆரம்பித்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட யோக்கியர்களையும் சட்டமன்றத்தில் பலான படம் பார்க்கும் மகா யோக்கியர்களை கொண்ட ஆர்.எஸ்.எஸ்-ன் ராதா ராஜனோ மெரினாவில் கூடிய தமிழ் மக்களை கட்டற்ற பாலுறவுக்காக கூடிய கூட்டமென்று கொச்சைபடுத்துகிறார். இந்த ஆர்.எஸ்.எஸ் பொறுக்கி கூட்டத்தின் பங்காளியான பா.ஜ எம்.பி சுப்பிரமணிய சாமி தமிழர்களை இன்றளவும் பொறுக்கிகள் என வசைபாடி வருகிறார்.

யார் இந்த சண்முகநாதன்?

டெல்டா மாவட்டமான நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் பிறந்த சண்முகநாதன் தஞ்சாவூரில் படித்தவர். பின்னர் திருச்சி நேஷனல் கல்லூரியில் உயர்கல்வி படித்துள்ளார். 1969-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரச்சாரக்காக (திருமணம் செய்து கொள்ளாத முழுநேர ஊழியர்) சேரும் அவர், அறந்தாங்கி பகுதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பாளராக செயல்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வெவ்வேறு பொறுப்புகளில் இருந்த சண்முகநாதன், 90-களின் துவக்கத்தில் மாநில அமைப்பாளராகவும் (பிராந்த பிரச்சாரக்), பின் தென்னிந்திய அமைப்பாளராகவும் (தக்‌ஷண ஷேத்திர பிரச்சாரக்) பதவி வகித்துள்ளார்.

சண்முகநாதன் மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பாளராக இருந்த போது இணை அமைப்பாளராக இருந்த இல.கணேசன் பின்னர் பாரதிய ஜனதாவுக்குச் சென்று அங்கே பதவிகளைப் பெற்று அரசியல் செல்வாக்கில் உயர்கிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரச்சாரக்கான இல.கணேசனும் பாலியல் விவகாரங்களில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் தான். இந்நிலையில் தனக்கு கீழ் இருந்த இல.கணேசனின் திடீர் வளர்ச்சியைக் கண்டு தானும் பாரதிய ஜனதாவுக்குச் செல்கிறார் சண்முகநாதன்.

இரண்டாயிரமாவது ஆண்டுகளின் துவக்கத்தில் இவ்விருவருக்குமான கோஷ்டி அரசியலைக் கண்டு ஊரே சிரிப்பாய்ச் சிரித்தது. கோஷ்டி அரசியலில் இல.கணேசனின் கை ஓங்கவே, சில காலம் பாரதிய ஜனதாவில் ஒப்புக்குச் சப்பாணியாக இருந்தார் சண்முகநாதன். பின் ஆலய பாதுகாப்புக் கமிட்டி என்கிற சங்பரிவார் அமைப்பு ஒன்றின் மாநிலப் பொறுப்பில் சில ஆண்டுகள் குப்பை கொட்டினார்.

இரண்டாயிரங்களின் மத்தியிலிருந்தே இல.கணேசனின் செல்வாக்கு குறைந்து வந்த நிலையில் மத்தியில் தனக்கு ஆதரவான அதிகாரத் தரகர்களின் துணையுடன் செல்வாக்கை உயர்த்திக் கொள்கிறார் சண்முகநாதன். மேகாலயா ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன் பாரதிய ஜனதாவின் பாராளுமன்ற பாரதிய ஜனதாவின் கூடுதல் செயலாளராக செயல்பட்டு வந்தார். இறுதி வரை ஓட்டுப் பொறுக்கி அரசியலில் விலை போகாத மொக்கையாகவே காலம் தள்ளி வந்த சண்முகநாதன், கடைசியில் ஓட்டரசியல் சந்தையில் விலை போகாத சொத்தைக் கத்தரிக்காய்களின்  இறுதிப் புகலிடமான ஆளுநர் பதவியைப் பிடித்துள்ளார்.

தற்போது 68 வயதாகும் சன்முகநாதன், முன்பு ஆர்.எஸ்.எஸ் பொறுப்புகளில் இருந்த போதே பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் என முணுமுணுக்கின்றன காக்கி டவுசர் வட்டாரங்கள்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் ஒழுக்கத்துக்கும் எள் முனையளவுக்கும் தொடர்பில்லை என்பதை கர்நாடக பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் சட்ட சபையில் பிட்டுப் படம் பார்த்த சம்பவமே உலகுக்கு பறைசாற்றியது வரலாறு. சந்நியாசினி உமாபாரதி – பிரச்சாரக் கோவிந்தாச்சார்யா விவகாரங்கள் இந்தியாவே நாறியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். சஞ்சய் ஜோஷியின் களியாட்டங்கள் குறுந்தகடுகளாக அம்பலமாகி ஊரே இந்துத்துவ கும்பலைக் காறித் துப்பியது.

காங்கிரசு உள்ளிட்ட பிற கட்சிகள் அவ்வப் போது அணிந்து கொள்ளும் மக்கள் நல அரசியல் போன்ற முகமூடிகளெல்லாம் இந்துத்துவா முகரைகளுக்குப் பொருந்தாது என்பதால், அவர்களது அரசியலின் அச்சாணி தனிநபர் ‘ஒழுக்கம்’ தான். ஆர்.எஸ்.எஸ் முழு நேர ஊழியர்கள் கடைபிடிப்பதாகச் சொல்லப்படும் ’பிரமச்சரிய’ விரதம் என்கிற பம்மாத்து தான் இந்துத்துவ அரசியலின் உள்ளே உறைந்து கிடக்கும் பார்ப்பன பாசிச வெறிக்கும் அந்நிய கைக்கூலித்தனத்துக்குமான ஆணுறை.

பாசிச அரசியல் வழங்கும் திமிரும் அதிகாரம் கையிலிருப்பதால் எதையும் மூடி மறைத்து விடலா என்கிற இறுமாப்பும் தான் இந்துத்துவ கும்பலுக்கு தவறு செய்யும் தைரியத்தை வழங்குகின்றது. மலிவான உணர்ச்சிகளைத் தூண்டி மக்களை மத ரீதியில் பிளவு படுத்தி விடலாம் என்கிற நம்பிக்கை இவர்களுக்கு இருக்கும் வரையில் இந்தக் கயவர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாக்க முடியாது.

சனாதன தருமத்தின் ‘புனிதங்களை’ தூக்கி வரும் இவர்களைக் களத்தில் முறியடிப்பதுடன் ஓட ஓட விரட்டுவது ஒன்றே அப்பாவிப் பெண்களைக் காப்பாற்ற ஒரே வழி.

புதுப்பிக்கப்பட்ட நேரம் இரவு 8.50,
27.1.2017

மேலும் படிக்க :

ஜெயா பெண்ணரசியா ? இம்சை அரசியா ?

3
ஜெயா போலீசாலும், வனத்துறை காவலர்களாலும் பாலியல் வன்முறை உள்ளிட்ட அக்கிரமங்களுக்கு ஆளான வாச்சாத்தி கிராமப் பெண்கள். (கோப்புப் படம்)

‘‘பெரியார் கனவு கண்ட புதுமைப் பெண்ணாக நான் அவரைக் காண்கிறேன்.’’ (திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பத்திரிகையாளர் வாஸந்தியிடம் கூறியதாக. தமிழ் இந்து, டிச.7,2016, பக்.11)

‘‘பெண்கள் தங்களது சொந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள், அவமானங்கள் மற்றும் தனிமையோடு ஜெயலலிதாவையும் அவரது வாழ்க்கையையும் ஆறுதலாகவும், விடுதலையாகவும் அடையாளம் காண்கிறார்கள்.’’ (ஷங்கர் ராமசுப்ரமணியன், தமிழ் இந்து, டிச.7, 2016, பக்.11)

ஜெயா போலீசாலும், வனத்துறை காவலர்களாலும் பாலியல் வன்முறை உள்ளிட்ட அக்கிரமங்களுக்கு ஆளான வாச்சாத்தி கிராமப் பெண்கள். (கோப்புப் படம்)
ஜெயா போலீசாலும், வனத்துறை காவலர்களாலும் பாலியல் வன்முறை உள்ளிட்ட அக்கிரமங்களுக்கு ஆளான வாச்சாத்தி கிராமப் பெண்கள். (கோப்புப் படம்)

உண்மையை, நியாயத்தைக் கொண்டு ஒரு விசயத்தை நிரூபிக்க முடியாத போது, நம்பிக்கை என்ற அம்சத்தை முன்னிறுத்தி, அதனை விவாதத்திற்கு அப்பாற்பட்டதாக மாற்றுவது மதவாதிகளின் குயுக்தி. அதுபோல, ஜெயாவின் அரசியல் வாழ்வை, நடவடிக்கைகளைப் பெண் என்ற பாதுகாப்பான அம்சத்தை முன்னிறுத்தி ஆராதிக்கும் போக்கு தமிழகத்தின் பொதுவெளியில் பல்வேறு மட்டங்களில் தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்படுகிறது.

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்றார் பெரியார். ஆனால், ஜெயலலிதாவோ தன்மான உணர்ச்சியையும் அறிவு உணர்ச்சியையும் தமிழகத்திலிருந்தே துடைத்தெறிந்துவிட வேண்டும் என்பதை மூர்க்கமான கொள்கையாகக் கொண்டு செயல்பட்டவர். தன் காலில் விழுபவனை, தன்னிடம் கையேந்தி நிற்பவனை ரசித்து மகிழ்ந்த வக்கிர புத்தி கொண்ட அவர், தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் மீது அவதூறு வழக்கு தொடங்கி தேசத் துரோகக் குற்றச்சாட்டு வரை சுமத்திச் சிறையில் தள்ளிய சர்வாதிகார மனப்பாங்கு கொண்டவர்.

இப்படிபட்ட பெண்மணியை, பகுத்தறிவு பேசும் கி.வீரமணி பெரியார் கண்ட புதுமைப் பெண்ணாகப் பார்க்கிறார் என்றால், பாமர தமிழ்ப் பெண்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கி மாணவிகளுக்கு நாப்கின் வழங்கியது வரையிலான, ஜெயாவின் கவரச்சித் திட்டங்களை மட்டுமே முன்னிறுத்தி அவரைத் தமிழகப் பெண்களின் வழிகாட்டியாகத் தூக்கி நிறுத்துகிறார்கள்.

ஜெயா அறிவித்த பெண்களுக்கான நலத் திட்ட உதவிகளால் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு எந்தளவிற்கு விடிவு ஏற்பட்டிருக்கிறது ? ஒரு பறவைப் பார்த்தாலேகூட, அவரது ஆட்சியைப் பெண்களுக்குச் சாதகமான, பரிவான ஆட்சி என்று கூற முடியாது என்பதற்கு ஏராளமான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன.

தாலிக்குத் தங்கம் திட்டத்தை அறிவித்த ஜெயா அரசுதான், தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து பெண்களின் தாலியை அறுத்தெறிந்தது. கடலூர் மாவட்டத்தில், 450 குடும்பங்களே உள்ள கச்சிராயநத்தம் கிராமத்தில் 105 பெண்களைக் கைம்பெண்களாக்கியிருக்கிறது, அம்மாவின் டாஸ்மாக் கடை. முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராடியபொழுது, முன்னணியில் நின்ற கல்லூரி மாணவிகளை, இளம் பெண்களைப் பாலியல் வக்கிரத்தோடு தமிழக போலீசு அடித்து மிதித்ததைக் கண்டு தமிழகமே விக்கித்து நின்றது.

2016 சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த ஜெயா, தனது தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்றுவது போல 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார். ஆனால், இந்த 500 கடைகளும் போதிய அளவிற்குப் போணியாகாமல் காத்து வாங்கிய கடைகள் என்பதும், போணியாகும் கடைகளில் விற்பனை இலக்கு முன்பைவிட அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதும் அம்பலமாகி, ஜெயாவின் அறிவிப்பு மக்களை, குறிப்பாகப் பெண்களை ஏய்க்கும் நாடகம் என்பது நாறிப் போனது.

பிளஸண்ட் ஸ்டே விடுதி வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டதைக் கண்டிக்கும் தோரணையில் அ.தி.மு.க. காலிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில், உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட விவசாயக் கல்லூரி மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி. (கோப்புப் படம்)
பிளஸண்ட் ஸ்டே விடுதி வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டதைக் கண்டிக்கும் தோரணையில் அ.தி.மு.க. காலிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில், உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட விவசாயக் கல்லூரி மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி. (கோப்புப் படம்)

ஜெயாவின் காலில் அவரது கட்சியைச் சேர்ந்த ஆண்கள் நெடுஞ்சாண் கிடையாக காலில் விழுந்து எழுந்திருப்பதைச் சுட்டிக் காட்டி, சினிமாத்துறையிலும், அரசியலிலும் ஜெயாவை ஆண் உலகம் அவமானப்படுத்தியதற்கான பரிகாரமாக இது இருக்கட்டும் என எழுதுகிறார், வாஸந்தி. ஜெயாவின் காலடியில் ஆண்கள் மட்டுமா விழுந்து எழுந்தார்கள். வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட அவரது கட்சியைச் சேர்ந்த பெண்கள்கூடக் காலில் விழுந்து எழுந்தார்கள்.

கட்சிக்காரர்களின் அடிமைத்தனம் நிறைந்த விசுவாசத்தை எம்.ஜி.ஆர். என்ற ஆணிடமிருந்து வரித்துக் கொண்ட ஜெயா, அதனை அருவருக்கத்தக்க உச்சத்துக்கு எடுத்துச் சென்றார். ஆண்களைக் காலில் விழச் செய்த ஜெயாவின் சாதனை, பெண் விடுதலையின் குறிபொருள் அல்ல. மாறாக, பிழைப்புவாத, அடிமைத்தனத்தனத்தின் குறியீடு.

ஒருபுறம் ஆண்களைக் காலில் விழவைத்த செல்வி ஜெயலலிதாதான் இன்னொருபுறத்தில், எம்.ஜி.ஆர். இறந்த பிறகு உடன்கட்டை ஏறப் போவதாக அறிவித்துத் தமிழகப் பெண்களைத் திடுக்கிட வைத்தார்.

இது மட்டுமா, சுப்பிரமணிய சுவாமி, முதல்வர் ஜெயா மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடுக்க ஆளுநரிடம் அனுமதி பெற்றதையடுத்து, அது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற விசாரணைக்கு வந்தபோது, அவரை அசிங்கப்படுத்துவதற்கு அ.தி.மு.க. மகளிர் அணியை இறக்கிவிட்டார், ஜெயா. அன்று அந்தக் கும்பல் ஆடிய ஆபாச, வக்கிர ஆட்டம் ஜெயா பொறுக்கி அரசியலில் புரட்சித் தலைவி என்பதை நிரூபித்தது.

ஜெயா, மூன்று முறை தேர்தல்களில் வென்று, ஆட்சி அமைத்திருக்கிறார். அவரது ஆட்சி நெடுகிலும் சாதாரண உழைக்கும் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிகளைத் தொகுத்துப் பார்த்தால், அவரது ஆட்சி பெண்களுக்கு அனுசரனையான ஆட்சி அல்ல, பேயாட்சி என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஜெயாவின் முதல் தவணை ஆட்சியில் (1991−96) தமிழக போலீசு நிலையங்கள் பாலியல் வன்கொடுமைக் கூடங்களாகத் திகழ்ந்தன. சிதம்பரம் பத்மினி, அந்தியூர் விஜயா, வாச்சாத்தி கிராமப் பெண்கள் என அந்தக் கொடூரத்திற்கு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழக போலீசு நடத்திய இந்தப் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தபோது, ‘‘அரசிடமிருந்து பணம் பெறுவதற்காகவே, போலீசின் மீது அபாண்டமாகப் பழி போடுகிறார்கள்’’ எனப் பாதிக்கப்பட்ட பெண்களை வேசிகளைப் போலச் சித்தரித்து அவமானப்படுத்தினார், பெண் முதல்வர் ஜெயா.

பிளஸண்ட் ஸ்டே விடுதி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் ஜெயா தண்டிக்கப்பட்டவுடன், அ.தி.மு.க. கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் மூன்று விவசாயக் கல்லூரி மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். மூன்று இளம் மாணவிகளைக் கொன்ற தனது கட்சிக்காரர்களுக்கு எதிராகப் பெண்ணாகிய ஜெயா நெற்றிக் கண்ணைத் திறக்கவில்லை. மாறாக, அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்தக் கொலை வழக்கை ஊத்தி மூடிவிட முயன்று தோற்றுப் போனார். மரண தண்டனை விதிக்கப்பட்ட தனது கட்சிக்காரர்களுக்காக உச்சநீதி மன்றத்தின் கதவுகளை மீண்டும் மீண்டும் தட்டி, அத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கச் செய்தார்.

கோகுல்ராஜ் கொலை மற்றும் மணற் கொள்ளை விவகாரங்களில் நியாயமாக விசாரணை நடத்தியதற்காகத் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு மரணமடைந்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா. (கோப்புப் படம்)
கோகுல்ராஜ் கொலை மற்றும் மணற் கொள்ளை விவகாரங்களில் நியாயமாக விசாரணை நடத்தியதற்காகத் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு மரணமடைந்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா. (கோப்புப் படம்)

அவரது இரண்டாவது தவணை ஆட்சியில் (2001−06) சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டை என்ற பெயரில் தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் மீது தமிழகப் போலீசு நடத்திய பாலியல் வன்கொடுமைகளையும், சித்திரவதைகளையும் சோளகர் தொட்டி என்ற நாவல் பதிவு செய்திருக்கிறது. இந்த மனித உரிமை மீறல்களை விசாரித்த சதாசிவம் கமிசன் போலீசின் அட்டூழியங்களைச் சாட்சியங்களோடு ஆவணப்படுத்தியிருக்கிறது. ஆனால், ஜெயாவோ குற்றமிழைத்த போலீசாரைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களுக்குப் பணப் பரிசுகளையும், வீட்டு மனைகளையும், பதவி உயர்வுகளையும் வாரி வழங்கி கௌரவித்தார்.

அவரது மூன்றாவது தவணை ஆட்சியின்போது, பெண் போலீசு அதிகாரியான விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். கவுண்டர் சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட கோகுல்ராஜ் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞனின் கொலை வழக்கை நேர்மையாக விசாரித்த ஒரே காரணத்திற்காக, அவர் உயர் அதிகாரிகளால் சாதியின் பெயரால் அவமானப்படுத்தப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுத் தற்கொலைக்குத் தள்ளப்பட்டார். அந்த நேர்மையான பெண் அதிகாரியின் அநியாயச் சாவிற்கு பெண்ணான ஜெயா அனுதாபம்கூடத் தெரிவிக்கவில்லை. தனது மகளின் சாவில் மறைந்துள்ள உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காக, விஷ்ணுபிரியாவின் தந்தை சி.பி.ஐ., விசாரணை கோரி வழக்குத் தொடுத்தபோது, விஷ்ணுபிரியாவைத் தற்கொலைக்குத் தள்ளிய போலீசு உயர் அதிகாரிகளைப் பாதுகாக்கும் நோக்கில் சி.பி.ஐ. விசாரணையை மறுத்து வாதிட்டது, ஜெயா அரசு.

இந்த அநீதிகள் உங்கள் மகளுக்கோ, சகோதரிக்கோ நடந்திருந்தால், உங்களால் ஜெயாவைப் பெண்களின் ஆதர்சனத் தலைவராக வியந்தோத முடியுமா? பார்ப்பன சாதித் திமிரும், பணமும், அரசியல் அதிகாரமும் இணைந்து உருவாக்கிய அகந்தையும், மேட்டுக்குடி பொறுக்கித்தனமும் கலந்த கலவைதான் ஜெயா. அருவருக்கத்தக்கதும், உழைக்கும் மக்களுக்கு எதிரானதுமான இந்த தீயகுணங்களைக் கொண்ட ஆளுமையான ஜெயாவைப் பெண் என்பதாலேயே அவரின் தனிப்பட்ட இன்ப, துன்பங்களைப் பெரிதுபடுத்திப் பேசுவதையும், அவரின் கிரிமினல் குற்றங்களை மறைத்துவிட முயலுவதையும் அனுமதிக்க முடியாது.

– திப்பு
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

கலவரம் செய்த போலீசை கைது செய் ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

5

போலீசு ராஜ்ஜியம்…

எழுந்து நின்ற தமிழகமே ! எதிர்த்து நில் !

ஆர்ப்பாட்டம்

நாள் : 30.01.2017
நேரம் : மாலை 4:00 மணி
இடம் : குமணன்சாவடி

PP Notice Slider

ன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே! வணக்கம்,

தமிழகத்தின் உரிமைகளை நசுக்கும் டெல்லிக்கு எதிராக தமிழகமே எழுந்து நின்றது. பணிந்தது பன்னீர் அரசு. தற்காலிகமாக ஜல்லிக்கட்டில் வென்றோம். வங்கக் கடற்கரையில் சீறி எழுந்த மக்கள் போராட்டம் மத்திய, மாநில அரசுகளை பீதியடைய செய்தது. போலீசின் அதிகாரம் செல்லக் காசானது. காளை போராட்டம் காவிரி, விவசாயிகள் தற்கொலை என விரிவடையக் கூடாது என்ற போலீசின் அச்சம் தான் மாணவர்கள் – மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதலுக்கு காரணம்.

ஆட்டோக்களை கொளுத்தியது. மீன் மார்க்கெட்டை வெண்பாஸ்பரஸ் மூலம் எரித்தது. வாகனங்களை அடித்து நொறுக்கியது. வீடுகளில் புகுந்து பெண்களை ஆபாசமாக பேசி, ஆண்களை அடித்து இழுத்து சென்றது என போலீசாருக்கு எதிரான ஆதாரங்களை நாள்தோறும் மக்கள் அள்ளி வீசுகிறார்கள். இதுவரை எந்த போலீசார் மீதும் விசாரணை நடவடிக்கை இல்லை.

காவல்துறை தலைவர் ராஜேந்திரன், சென்னை கமிஷ்னர் ஜார்ஜ், கோவை கமிஷ்னர் அமல்ராஜ் மற்றும் வன்முறை சம்பவத்திற்கு காரணமான, தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரியுள்ளனர். நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் போலீசோ பொய் மேலும் பொய் என்ற மோடி வித்தையை தமிழகத்தில் செயல்படுத்த முயன்று மூக்கறுபட்டு நிற்கிறது.

மாணவர்கள் போராட்டத்தில் ஊடுருவி விட்டனர் என்று சில அமைப்புகள் பெயர்களை சொல்லி பழிபோடும் போலீசார், ஊடுருவி என்ன செய்தார்கள்? என்பதைச் சொல்ல முடிய வில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ்., பாஜக, ஏபிவிபி அமைப்பை சேர்ந்த சிலர் ஊடுருவி மாணவர் போராட்டத்தை சீர்குலைக்க முயன்றதாக இணையதளங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதை பற்றி போலீசார் பேச மறுக்கின்றனர்.

கலவர தினத்தன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் மெரினாவில் இருந்தார்கள். ஜல்லிக் கட்டு நடத்த நிறைவேற்றப்பட்ட சட்ட நகலை தாருங்கள், கலைந்து செல்ல இரண்டு மணி நேரம் அவகாசம் வேண்டும் என போலீசு அதிகாரிகளிடம் கேட்டனர். ஏழு நாள் பொறுத்தவர்கள் இரண்டு மணிநேரம் பொறுக்க முடியாதா?

மாலையில் செய்த வேலையை காலையே செய்திருக்கலாமே. ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தமனை முன்பே அழைத்து வந்து பிரச்சினையை சுமூகமாக தீர்த்திருக்க முடியும் அதை விட்டு தடியடி ஏன் நடத்த வேண்டும்? கர்ப்பிணி பெண் வயிற்றில் ஏன் உதைக்க வேண்டும்? உணவு கொடுத்த மீனவர்களை ஏன் குப்பத்தில் புகுந்து தாக்க வேண்டும்? மாணவர்களுக்கு வந்த உணவு பெட்டியை போலீசார் ஏன் பறித்து திண்ண வேண்டும்? எதற்கும் காவல்துறையில் பதில் இல்லை. ஆனால் காக்கியின் உடம்பில் காவி புகுந்துள்ளது போலிசு அதிகாரிகளின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.

தீர்ப்புகளால், சட்டங்களால் சாதிக்க முடியாததை மெரினாவில் மாணவர்கள் முன்னின்று நடத்திய மக்கள் போராட்டம் சாதித்தது. தினம்தோறும் விடிய விடிய லட்சக்கணக்கான மக்கள் கூடினர். மாணவர்களே தங்களை ஒழுங்குபடுத்தி கொண்டனர். பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. காரணம் அங்கு போலீசு அதிகாரம் இல்லை. ஒருவார காலம் அதிகார போதையை இழந்தபோலீசார் அதிகாரத்தை மீண்டும் சுவைக்கவும் மக்களை அச்சுறுத்தவும் நடத்தப்பட்ட கலவரம் தான் இது.

பண்பாட்டு அடையாளங்கள், இயற்கை வளங்கள், வாழ்வுரிமைகள், வாழ்வதாரங்கள், தாய் மொழி மீதான தாக்குதல் என அனைத்தையும் எதிர்த்துப் போராடி திகைத்த தமிழகத்தில், அனைவரும் பங்கேற்க நடந்த அமைதிப் போராட்டம், நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தியது. சாதி மத பேதமின்றி, ஆண் பெண் அனைவரும் ஒற்றுமையாக போரடியதன் பலத்தை பங்கேற்ற அனைவரும் நேரடியாக உணர்ந்தனர். அதை கருக்கும் முயற்சி தான் போலீசாரின் தாக்குதல்.

காவிரி தொடங்கி கல்வி உரிமை வரை தமிழக மக்கள் போராட வேண்டிய பிரச்சினைகள் வரிசைகட்டி நிற்கின்றன.

காளைக்காக திரண்டவர்கள், போலீசு ராஜ்ஜியத்திற்கு எதிராகவும் திரள வேண்டும். போராட்டம் தான் நமக்கு நிரந்த பாதுகாப்பு போலீசு என்றைக்கும் பொது மக்களுக்கு ஆபத்தானது என்பதை மீண்டும் மீண்டும் போலிசே நிருபித்து வருகிறது. உரிமைகளுக்காக தொடரும் உறுதியான மக்கள் போராட்டம், போலீசு ராஜ்ஜியத்தை வீழ்த்தும் !

unnamed

  • பொது மக்களுக்கு அச்சுறுத்தல் போலீசு தான், போராடுபவர்கள் அல்ல !
  • அமைதிப் போராட்டத்தை கலவரமாக்கிய போலீசு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய் !
    கைது செய் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு : 91768 01656

ஜெயாவின் மறைவுக்கு அனுதாபம் கொள்ள எந்த நியாயமும் இல்லை !

1
சென்னை−ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெயாவின் சடலம்.

ம்மா என அரிதாரம் பூசிக்கொண்ட கோமளவல்லி என்ற ஜெயலலிதா எப்படி இறந்தார், எப்பொழுது இறந்தார், எதனால் இறந்தார் என்பது அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், சசிகலா குடும்பம், நரேந்திர மோடி உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர, மற்ற அனைவருக்கும் மர்மமான புதிராகிவிட்டது. அதன் காரணமாகவே, அவரது மரணம் குறித்து சந்தேகங்களும், வதந்திகளும் இறக்கை கட்டிப் பறக்கின்றன. அதேசமயம், இந்த வதந்திகளுக்கு இணையாக, ஜெயா குறித்தும், அவரது ஆட்சி குறித்தும் அவிழ்த்துவிடப்படும் கட்டுக்கதைகளுக்கும் எந்தப் பஞ்சமுமில்லை.

சென்னை−ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெயாவின் சடலம்.
சென்னை−ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெயாவின் சடலம்.

தி.மு.க.வின் குடும்ப, வாரிசு அரசியலை அக்குவேறு ஆணி வேறாக அலசும் ஊடகங்கள், ஜெயா கட்சியிலும் பதவியிலும் திணிக்கப்பட்ட வரலாறை மறந்தும் எழுதுவதில்லை. ஜெயா, எம்.ஜி.ஆரோடு 20−க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் என்பதுதான் ஊர் உலகம் அறிந்த விடயம். ஆனால், எம்.ஜி.ஆர். இறந்தவுடன், தான் உடன்கட்டை ஏறப் போவதாக அறிவித்தார், ஜெயா. அவர், எம்.ஜி.ஆரின் சட்டபூர்வமான மனைவி இல்லை என்ற நிலையில் இந்த அறிவிப்பு உணர்த்தும் பொருள் என்ன என்பதை விளக்கத் தேவையில்லை.

இப்படிபட்டதொரு தகுதியை மட்டுமே கொண்டு கட்சிக்குள் நுழைந்த அவர், எம்.ஜி.ஆர். இறந்த பின்னர் அந்த ஒரே தகுதியைக் கொண்டே அ.தி.மு.க.வின் பொதுச்செயலர் ஆனார். ராஜீவின் சாவால் எழுந்த அனுதாப அலையைப் பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார்.

தமிழகத்தைக் கொள்ளையிடும் உரிமை தனக்கு மட்டுமே உரியது என்ற தோரணையில், தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் எனத் தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டார். அவர் நடத்திய கொள்ளையை எதிர்த்தவர்கள் மீது அவதூறு வழக்குகள் உள்ளிட்ட அடக்குமுறைகளை ஏவிவிட்டார். இதன் காரணமாகவே தமிழக மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு, 1996, 2006 சட்டமன்றத் தேர்தல்களிலும் 2004 பொதுத் தேர்தலிலும் மண்ணைக் கவ்வினார்.

தேர்தலில் தோற்றாலும், ஊழல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டாலும், அவர் தனது மேட்டுக்குடி பொறுக்கித்தனத்தை மாற்றிக் கொண்டதேயில்லை. ஊழல்தான் நிர்வாகம், நிர்வாகம்தான் ஊழல் என ஆட்சி முறைக்குப் புதிய பொழிப்புரை எழுதியவர் ஜெயா.

ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி மாநில முதல்வராக முடியும் என்ற புர்ரட்ச்சசியை நடத்திக் காட்டியவரும் அவர்தான். முதலமைச்சர் பதவியில் இருந்தபோதே சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு, பதவி பறிக்கப்பட்ட முதல் முதலமைச்சரும் அவர்தான். நீதிபதிகளையும் விலைக்கு வாங்க முடியும் எனக் காட்டி, நீதித்துறையின் புனிதத்தைத் தோலுரித்துக் காட்டிய புர்ரட்ச்சித் தலைவியும் அவர்தான்.

தானே உருவாக்கி வைத்திருக்கும் சட்டம், மரபு ஆகியவற்றுக்கே எதிராகத் திரும்பித் தோல்வியடைந்து நிற்கிறது இந்திய அரசியலமைப்பு. இந்தத் தோல்வியின் எடுப்பான, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உதாரணமாக விளங்கியவர்தான் ஜெயா.

எனினும், பொறுக்கி அரசியலில் புதிய எல்லைகளைத் தொட்ட ஜெயாவைத் திறமைசாலி, துணிச்சல்காரி, சிறந்த நிர்வாகி என்று பார்ப்பனக் கும்பல் துதிப்பதற்கும்; ஜெயா மீது தொடரப்பட்ட ஊழல் வழக்குகள், அவரை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த தி.மு.க. மேற்கொண்ட சதி என அக்கும்பல் உண்மையைத் திரித்துப் புளுகுவதற்கும், தமிழகத்தில் பெரியார் விதைத்துச் சென்ற பார்ப்பன எதிர்ப்பு மரபைத் துடைத்தெறிவதற்கு ஒரு பார்ப்பனத்தியே ஆயுதமாகக் கிடைத்தார் என்பதைத் தவிர வேறு காரணமில்லை.

கட்சி, அரசியல் உள்ளிட்ட பொதுவாழ்விலும், ஆட்சி நிர்வாகத்திலும் அந்தப் பார்ப்பன பீடை வளர்த்துவிட்டுச் சென்றுள்ள அருவருப்பான அலங்கோலங்களை நினைவுகூர்ந்தால், பார்ப்பன பாசிஸ்டான ஜெயாவின் மறைவுக்காகத் தமிழக மக்கள் அனுதாபம் கொள்ள எந்த நியாயமும் இல்லை.

– செல்வம்
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

மெரினா : போலீசின் கொலைவெறித் தாக்குதல் – புதிய வீடியோ

0

ந்தியாவே பார்த்து வியந்த ஒரு போராட்டத்தை ரத்தத்தில் அமித்தியது போலீசு. பெண்களை அகற்ற மானபங்கப்படுத்தியுள்ளது போலீசு. மீனவக் குப்பத்தை சார்ந்த இளைஞர்களையும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் துடிக்கத் துடிக்க கொலை வெறியோடு தாக்கியிருக்கிறது போலீசு. காவலர்கள் மத்தியில் சிக்கியவர்களை வெறி கொண்ட ஓநாய்க் கூட்டம் வேட்டையாடுவதைப் போல சுற்றி நின்று தாக்கும் காட்சிகள் நெஞ்சை நடுங்க வைக்கின்றன. இந்த காட்சிகள் எந்த ஊடகங்களிலும் செய்தியாக வரவில்லை. ஒரு சிலர் தங்களின் உயிரையும் துச்சமெனக் கருதி எடுத்த வீடியோ பதிவு இது. மேலும் பாதிக்கப்பட்ட இளைஞரின் நேர்காணலும் இடம்பெறுகிறது.

புதிய உலகம் உன் கண்ணில் தெரியலையா – கோவன் பாடல்

2

மெரினாவில் நடைபெற்ற போரட்டத்தை இன்று அனைவரும் பேச ஆரம்பித்து விட்டனர். டெல்லிக்கட்டை அடக்க எழுந்த மெரினா எழுச்சியைப் போன்று இந்தியாவிலும், உலகெங்கிலும் மக்கள் போராடி வருகின்றனர். நந்திகிராம் போராட்டம், நியாம்கிரி போராட்டம், கூடங்குளம் போராட்டம், முல்லைப் பெரியாறு போராட்டம், அரபு மக்கள் போராட்டம்,  அமெரிக்காவில் வால் வீதி போராட்டம் அனைத்தும் இத்தகைய எழுச்சிகளின் அங்கம் என்பதை இசையால் இணைக்கிறது இந்தப் பாடல்.

கவனியுங்கள் புரட்சியின் இசை உங்கள் செவிகளில் கேட்கும், சற்று நிமிர்ந்து  பாருங்கள் புரட்சியின் புதிய உலகம் உங்கள் கண்களுக்கு தெரியும்.

புரட்சி… புரட்சி… உன் காதில் விழவில்லையா…?
புதிய உலகம் உன் கண்ணில் தெரியலையா…?

அந்த போர்க்களத்தைப் பார் புரட்சி காதில் கேட்கும்.

சென்னை மெரினா போராட்டத்தில் தோழர் கோவன் பாடிய பாடல் பாருங்கள், பகிருங்கள்.

தடியரசு தின வாழ்த்துக்கள் – கேலிச்சித்திரம்

0

’தடி’யரசு தின வாழ்த்துக்கள்

republic-day-cartoon

————-

குடிகளுக்கு குறி வைக்கும்  ’குடி’யரசு !

republic-day-cartoon2

————-

republic-day-cartoon3

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்

இணையுங்கள்:

தமிழக மக்களின் மெரினா பிரகடனம் !

1

ங்கிலேயனை எதிர்த்த விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்ன மருதுவின் திருச்சிப் பிரகடனத்தைப் போல உலகையே திருப்பிப் பார்க்க வைத்த தமிழக மக்களின் மெரினா போராட்டத்தில் தமிழக மக்களின் மெரினா பிரகடனம் 22.01.2017 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த பிரகடனத்தை மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்  தோழர் ராஜூ அறிவித்து விட்டு, இதில் சேர்க்கை, திருத்தம், விமரிசனம் இருந்தால் கூறுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். பிறகு அங்குள்ள மக்களால் இந்த பிரகடனம் பெரும் ஆரவாரத்துடன் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பாருங்கள் பகிருங்கள்.

தமிழக மக்களின் மெரினா பிரகடனம்

  • தமிழக விவசாயிகளுடைய அனைத்து வகைக் கடன்களும் ரத்து !
  • காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மின் கட்டணம் கல்விக் கட்டணம், பேருந்துக்கட்டணம் ஆகியவை அடுத்த அறுவடை வரை ரத்து !
  • ஜல்லிக்கட்டை நடத்த நிரந்தர சட்டம் !
  • மூடு டாஸ்மாக்கை !
  • ஆற்று மணல் தாது மணல் கிரானைட் போன்ற கனிமவளக் கொள்ளைக்குத் தடை !
  • நீர்நிலைகளைப் பராமரித்து பாதுகாக்கும் பொறுப்பு கண்காணிக்கும் அதிகாரம் – மக்களுக்கே !
  • பணமதிப்புநீக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுதொழில்களுக்கு இழப்பீடு, உடனடிக் கடன் !
  • படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை உதவித்தொகை !
  • தமிழகத்தை அழிக்க வரும் அணு உலை, நியுட்ரினோ, மீத்தேன் ஷேல் கேஸ், கெயில் குழாய் பதிப்பு ஆகியவற்றுக்கு நிரந்தரத் தடை!
  • மீனவர்களின் வாழ்வாதாரம், உயிர்பாதுகாப்புக்கு உத்தரவாதம்!
  • பள்ளிக்கல்வி வரை தாய்மொழியில் அனைவருக்கும் தரமான கட்டாய இலவசக் கல்வி !

பெரும்பான்மை மக்களுக்கு எதிராக சதித்தனமாகக் கொண்டு வரப்படும் சட்டங்களை,
உத்தரவுகளை, தீர்ப்புகளை மக்கள் ஏற்றுக் கீழ்ப்படிய முடியாது

தொடர்புக்கு 9962366321

Marina declaration

Exclusive நடுக்குப்பம் மீனவ மக்களை சூறையாடிய போலீசு – வீடியோ

0

சென்னை மெரினா கடற்கரைக்கு எதிரில் உள்ள நடுக்குப்பம் மீனவர்கள் வசிக்கும் பகுதியில் 23.01.2017 திங்கட்கிழமை அன்று போலீசு நடத்திய கொடூரத் தாக்குதல்.  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்களை திங்களன்று அதிகாலை அடித்து விரட்டுகிறது போலீசு. அடிபட்ட மாணவர்கள் நடுக்குப்பத்திற்கு வந்து மக்களிடம் சொல்லி கதறுகிறார்கள். மாணவர்களுக்கு ஆதரவாக திரண்ட மக்கள் கடற்கரைக்கு செல்கிறார்கள். அவர்களையும் அடித்து துரத்தும் போலீசு இறுதியில் இக்குப்பத்திற்கு வந்து சூறையாடுகிறது.

380 மீன் விற்கும் சிறு கடைகளை தீக்கிறையாக்கியது போலீசு. அந்த பகுதி மக்களை நீ தானே போராடியவர்களுக்கு சோறு கொடுத்தாய் எனச் சொல்லி ஒவ்வொருவரையும் வீடு வீடாகச் சென்று தாக்கியது மட்டுமல்ல, அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த மீன்களைத் திருடித் தின்றுள்ளது தமிழக காவல் துறை.

மேலும் காவலர்கள் குடிசைகளைப் பற்ற வைப்பதும், நின்று கொண்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதும் சமூக ஊடகங்களில் அம்பலமான பின்னரும் அது மார்ஃபிங் எனக் கூறுகிறார் சென்னைக் கமிஷ்னர் ஜார்ஜ். ஆனால் காவல் துறையின் வெறியாட்டங்களுக்கு நேரடி சாட்சியாக  உள்ளனர் இந்த மக்கள். தற்போது போலீஸ் இந்த பகுதிகளில் உள்ள ஆண்களைக் கைது செய்ய அடிக்கடி வருகிறது. இதற்கு பயந்து பகுதியில் உள்ள ஆண்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். வாழ்வாதாரம் இழந்த பெண்கள் கதறுகின்றனர். வினவு செய்தியாளர்கள் நேரடியாக எடுத்த வீடியோ நேர்காணல். பாருங்கள் – பகிருங்கள்.

‘அடியரசு’ தின வாழ்த்துக்கள் – கேலிச்சித்திரங்கள்

8

‘அடியரசு’ தின வாழ்த்துக்கள் – கேலிச்சித்திரங்கள்

Adiarasuஓவியம் : நன்றி -சர்தார்

_______________

நாளைக்கு குடியரசு தினத்த ‘மெர்சல்’ பண்றோம்…

01

ஓவியம் : முகிலன்

_______________

குடிமக்களை அடித்துவிரட்டி குடியரசு தின அணிவகுப்பு !

parade

படம் : நன்றி -துரை
_______________

நம்ம கத்திகுத்து கந்தன் இல்ல… அம்புட்டு பயலுக்கும் இங்கதேன் ட்ரெய்னிங்கு…

03

ஓவியம் : முகிலன்

_______________

போலீசு கக்குவதைச் சொல்லும் ஊடகங்கள் !

02

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்

இணையுங்கள்:

அவர்கள் திரும்ப வருவார்கள் – ஒரு பெண்ணின் குமுறல் – வீடியோ

0

லகம் உற்றுப் பார்த்த ஒரு போராட்டத்தை ரத்தகளறியில் அமித்திய இந்த காவல் துறையும் அரசும் நாக்கை பிடுங்கிக் கொண்டு சாகலாம். நேற்றுவரை பண்புடன் பேசி கைகளை குலுக்கி வாழ்த்தியவனின் மண்டையை உடைத்து, குடிசைகளைக் கொளுத்தி வெறியாட்டம் போட்ட காவல்துறையிடம் இருந்து மக்களும் மாணவர்களும் படிப்பினை பெற்று மீண்டு வருவார்கள்.

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் -வள்ளுவர்

பெண் ஒருவரின் குமுறலையும் கோபத்தையும் பாருங்கள் பகிருங்கள்.

இந்தப் பெண் திமுகவைச் சேர்ந்தவர் என்று மாணவர் போராட்டத்தை எதிர்க்கும் தரப்பினர் (அதிமுக, பாஜக) கூறுகின்றனர். இருக்கட்டுமே. அந்தப் பெண் போராட்டத்தில் கலந்து கொண்டதும் உண்மை. போலிஸ் அங்கே பெரும் வன்முறையை நிகழ்த்தியதும் உண்மை. நடுக்குப்பத்தில் போலீசிடம் அடிவாங்கி படுகாயமுற்று, உடமைகளை இழந்த மீனவப் பெண்களும், ஆண்களும் கூட சென்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்திருப்பார்கள். அதனால் அவர்கள் இந்த வன்முறையையும், ஏவி விட்ட அதிமுக அரசையும் மன்னித்து விடுவார்களா என்ன?

கேலிப்படங்கள் : அம்மாவுக்கு அஞ்சலி – மெரினாவின் குப்பைகள்

1

மாணவர்கள் மீதான தாக்குதல் : சட்டசபையில் அம்மாவுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி !

Panner tribute_______________

குப்பைகளை அப்புறப்படுத்திய மாணவர் போராட்டம் !

marina dust2

marina dust

களச்செய்தி : தமிழக மாணவர்களை ஒடுக்குகிறது மோடி அரசு !

0

தமிழக மாணவர்களை ஒடுக்குகிறது மோடி அரசு !
கைப்பாவையாக செயல்படுகிறது பன்னீர் அரசு !

Chart 5

போராடும் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குவதன் மூலம்
டெல்லியின் ஆதிக்கத்தை திணித்துவிட முடியாது !

தமிழகத்தின் உரிமையை மீட்க ஒன்றிணைவோம் !

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஓசூர் – 97880 11784.

_______________

டெல்லிக்கு எதிராக எழுந்தது தமிழகம்! விடாதே…!
தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டு!

மாணவர்களை  தாக்கி சதி செய்த மோடி அரசை கண்டித்தும், ஓபிஎஸ் பொம்மை அரசை கண்டித்தும் 23.1.2017 , திங்கள்கிழமை  நாகர்கோவில் நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Nagarkovil 1

Nagarkovil 2

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

_______________

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், நாட்றாபாளையம் கிராமத்தில் மக்கள் அதிகாரம், தமிழக மாணவர் எழுச்சியை ஆதரித்து தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் 22-1-2017 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாட்றாபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். உள்ளூர் பெரியவர்கள், வியாபாரிகள், நண்பர்கள் பலரும் இந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர். பலரும் நேரில் வந்து மாணவர் எழுச்சியை ஆதரித்தும் வாழ்த்தியும் பேசினர். குழந்தைகள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர். மக்கள் அதிகாரத்தின் இந்த தர்ணா போராட்டம் அங்குள்ள கிராம மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மெரினாவிலும்தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடக்கும் மாணவர் போராட்டத்தின் சிறப்பை இங்கு விளக்கிப் பேசினர். கோவனுடைய பாடல்கள் ஒளிப்பரப்பட்டன. தோழர் மருதையனுடைய மெரினா உரைகள் போட்டு பிரச்சாரம் செய்யப்பட்டன. இவை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

Thenkani kottai 1

Thenkani kottai

 

தகவல் :
மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு.
கிருஷ்ணகிரி மாவட்ட தொடர்பு எண்: 80152 69381

_______________

 ஜனவரி 25 – மொழிப்போர் தியாகிகள் தினம் !

RSYF Poster

சல்லிக்கட்டு தடை, பொங்கல் விடுமுறை ரத்து, கீழடி ஆய்வுக்கு மறுப்பு, புதிய கல்விக் கொள்கை, இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு…

  • தமிழ் உள்ளிட்ட பல்தேசிய இனங்களின் பண்பாட்டை அழித்து, ஒற்றை பார்ப்பனிய இந்து மத பண்பாட்டை திணிக்கும் மோடி அரசின் சதித்திட்டத்தை முறியடிப்போம் !
  • மொழிப்போர் தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்தி வீறு கொண்டெழுவோம் !
    தமிழகத்தை ஆரிய பார்ப்பன எதிர்ப்பு போரில் தளப்பிரதேசமாக கட்டியமைப்போம் !

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம் – சிதம்பரம்.
தொடர்புக்கு : 8870. 81056.

மெரினா தாக்குதலை கண்டித்த மக்கள் அதிகாரம் தோழர் முரளிக்கு சிறை !

0

திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் முரளி கைது !

திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் முரளி அவரது வீட்டில் நேற்று (24.01.2017)இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் கியூ போலீஸ் தியாகராஜன் ஆகியோரால் கைது செய்யப்பட்டு கொரடாச்சேரி போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நேற்று காலை 10 மணிக்கு திருவாரூர் பேருந்துநிலையம் அருகே நடக்க இருந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தை மோப்பம் பிடித்த போலீசு அவரை கைதுசெய்திருக்கிறது.

மேலும் 11.01.17 அன்று புதிய ரயிலடியில் “நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி” என்ற முழக்கத்தின் கீழ் பல்வேறு கட்சிகள், விவசாய அமைப்புகளை ஒருங்கிணைத்து நாள் முழுவதும் நடந்த மக்களதிகாரம் தர்ணாவில் தொண்டர்கள் கம்பு வைத்திருந்தது, மாலை 5 மணிக்கு முடிக்க வேண்டிய தர்ணாவை 06.45 க்கு முடித்தது மற்றும் நேற்று (23.01.2017) அதிகாலை ஜல்லிக்கட்டு போராட்ட மாணவர்களை போலீசு வெறிகொண்டு தாக்குவதைக் கண்டித்து சுவரொட்டிப் பிரச்சாரம் செய்தது என அவர் மீது 143, 188, 504 IB, 195/17 ஆகிய செக்சன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் கொரடாச்சேரியிலிருந்து திருவாரூர் டவுன் ஸ்டேசனுக்கு அழைத்து வரப்பட்டு நேற்று இரவு 07.15 க்கு நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு நன்னிலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tvr 1

Tvr pp poster

தகவல் :
மக்களதிகாரம்,
திருவாரூர்.

புதிய ஜனநாயகம் – சனவரி 2017 மின்னிதழ்

1

puthiya-jananayagam-january-2017

புதிய ஜனநாயகம் சனவரி 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. போராட்டங்கள் இருட்டடிப்பு : அன்று இந்திராஇன்று மோடி… !
பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்கு எதிரான பொதுமக்கள், புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகளின் போராட்டங்களை மோடியும் தனியார் ஊடகங்களும் கூட்டுச் சேர்ந்து இருட்டடிப்பு செய்து வருவது இந்திராவின் “நெருக்கடிநிலை” காலத்தை நினைவூட்டுகிறது.

2. அதிகாரத்தில் உழவனின் எதிரிகள் ! எழவு வீடானது தமிழகம் !!

3. மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா !
சசிகலாவை மாண்புமிகு முதல்வர் என்று அழைக்கும் தறுவாயில், அவரைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கிய மனனார்குடி மாஃபியாவையும் மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

4. அ.தி.மு.க.வை அழிக்காவிடில் தமிழகமே அழியும் !
தொழில்முறை கிரிமினல் மாஃபியாக்களின் கூடாரம்தான் அ.தி.மு.க. கொள்ளைக்கூட்டத்தின் உள் முரண்பாடுகள் காரணமாக அ.தி.மு.க. அழியும் வரை காத்திருக்கக் கூடாது. அ.தி.மு.க. என்ற விஷப்பூரானை நம் சொந்தக் கரங்களால் நசுக்கி அழிப்பதொன்றுதான், தமிழகம் பிழைப்பதற்கு வழி.

5. ஜெயா மரணம்: தமிழகத்தைக் கவ்வியிருந்த பீடை ஒழிந்தது !

6. ஜெயா: பெண்ணரசியா ? இம்சை அரசியா ?
பெண் என்ற காரணத்தை முன்வைத்து, ஜெயாவின் ஆட்சிக் காலங்களில் நடந்த அனைத்துக் குற்றங்களில் இருந்தும் ஜெயாவை விடுவித்துவிட்டு, அவரை மதிப்பீடு செய்வது அறிவுடமையாகாது.

7. சுயமரியாதையை அழித்து… பார்ப்பனப் பண்பாட்டைத் திணித்து …
சுயமரியாதை அரசியலைப் பேசிவந்த தமிழகத்தில், அதற்கு எதிரான பார்ப்பன அடிமைத்தனமும், மூடத்தனமும் மீண்டும் கோலோச்சும்படி தமிழகத்தைச் சீரழித்தார், பார்ப்பன ஜெயா.

8. வன்முறையே சட்டமாககொள்ளையே ஒழுங்காக
ஜெயாவின் மூன்று தவணை ஆட்சிகளில் அ.தி.மு.க. கும்பல் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நடத்திய கிரிமினல் குற்றச் செயல்களைப் பட்டியல் இட்டால், அக்கட்சியைப் பயங்கரவாதக் கட்சி என்றே முத்திரை குத்த முடியும்.

9. ஜெயாவின் ஈழத்தாய் அவதாரம் : ஆடு நனைகிறதே என அழுத ஓநாய் !
சனாதன தர்மத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது எப்படிப்பட்ட மோசடியோ, அதற்கு இணையானது ஜெயாவின் ஈழத் தாய் அவதாரம்.

10. மேட்டுக்குடி பார்ப்பன பொறுக்கி இங்கிலீஷ் பேசினால் படிப்பாளியாம்! பார்ப்பனக் கும்பலின் பித்தலாட்டம்

11. ஊழலுக்காகவே ஆட்சி ! – இதுதாண்டா ஜெயாவின் தனித்திறமை !!
கட்சி, ஆட்சி மட்டுமின்றி, தமிழ் சமூகத்தையே ஊழலிலும் பிழைப்புவாதத்திலும் மூழ்கடித்ததில் புதிய எல்லைகளைத் தொட்டவர்தான் ஜெயா.

  1. ரவுடித்தனமே ஜெயாவின் துணிவு ! பிச்சை போடுவதே ஜெயாவின் கருணை !!
    அலட்சியமும் மமதையும் தான்தோன்றித்தனங்களும் நிறைந்த ஜெயாவின் நடவடிக்கைகள் துணிச்சலானதாகவும், தமிழர்களின் போராட்டக் குணத்தை மழுங்கடித்துக் கையேந்திகளாக நிறுத்தப்பட்டதை அவரது கருணை எனவும் காட்டுகின்றன ஊடகங்கள்.

13. வங்கிகள் : கருப்புப் பணத்தை மாற்றித்தரும் அரசாங்க ஏஜெண்டுகள் !
கூட்டுறவு மற்றும் தொடக்க வேளாண் வங்கிகளின் வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தடை விதித்துள்ள மைய அரசு, கருப்புப் பணத்தை மாற்ற உதவிய தனியார் வங்கிகளுக்குத் தடை விதிக்க மறுப்பது ஏன் ?

14. பணமற்ற பொருளாதாரம் : உமி கொண்டு வருபவன் அவல் தின்பான் !

புதிய ஜனநாயகம் சனவரி 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா : உள்நாடு ரூ.180

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com