எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர் மருதையன் ஆற்றிய உரை!
படம் பிரசுரம்: கார்டியன் நாளிதழ்: மூலம்: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்
கார்டியனில் 08-04-2016 அன்று வெளிவந்த புகைப்படம், ஜப்பானின் ‘புகழ்’ பெற்ற கார் உற்பத்தியின் இன்றைய நிலையைக் காட்டுகிறது. அசெம்பிளி லைனில் எந்த தொழிலாளியுமின்றி ரோபோக்கள் மட்டுமே காரின் உப பாகங்களை கோர்த்து பொருத்துகின்றன. குட்டி நாடு ஜப்பான் ‘தொழில் வளர்ச்சியில் என்னமா அடிச்சு போறான் பாத்தியா?’ என்று முதலாளித்துவ அறிஞர் பெருமக்கள் வியப்பது உடன் நினைவுக்கு வருகிறதா?
இன்றைய நிலையில் ஜப்பானில் கார் உற்பத்தி எவ்விதம் நடைபெறுகிறது என்பதைக் காட்டுகிறது. அசெம்பிளி லைனில் எந்த தொழிலாளியுமின்றி ரோபோக்கள் மட்டுமே காரின் உப்பாகங்களை கோர்த்து பொருத்துகின்றன படம் பிரசுரம்: கார்டியன் நாளிதழ்: மூலம்: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்
ஆனால் தொழில் நுட்ப வளர்ச்சியின் பெயரில் போற்றப்படும் ஜப்பானின் மறுபக்கம் என்ன?
இந்து ஆங்கில நாளேட்டில் 03-04-2016 அன்று மறுபிரசுரமான ராய்ட்டர்ஸின் கட்டுரை ஜப்பானில் ஓவர்டைம் பார்ப்பதால் கசக்கிப் பிழியப்படும் தொழிலாளர்களின் மரணம் மிகப்பெரும் அளவில் அதிகரித்திருப்பதாக சொல்கிறது. அதுவும் பணிச்சுமையால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் இளைஞர்களும் ஆவர்.
ஜப்பானில் கடந்த வருடத்தில் (மார்ச் 2015 வரை) மட்டும் ஓவர்டைம் பார்த்து மரணமடைந்தன் மூலம் கரோஷி காப்பீடுக்கு (Karoshi-பணிச்சுமையால் மரணமடைந்தவர்களுக்கான காப்பீடு) விண்ணப்பித்தவர்கள் 1,456 பேர் என்கிறது அந்நாட்டு தொழிலாளர் அமைச்சகம். ஆனால் அரசின் புள்ளிவிவரத்தை விட பத்து மடங்கு தொழிலாளிகள் ஓவர்டைம் பார்த்து மரணமடைந்திருப்பதாகச் சொல்கிறார் பணிச்சுமையால் மரணடமடைந்தவர்களுக்கான தேசிய பாதுகாப்பு பேரவையின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஹிரோஷி கவகைட்டோ.
ஜப்பானில் தொழிலாளர்களுக்கான வரையறுக்கப்பட்ட வேலை நேரம் என்ற குறைந்தபட்ச அடிப்படை உரிமை கூட கிடையாது என்கிறார் ஹிரோஷி. இது தொழிலாளிகள் வகைதொகையின்றி சுரண்டப்படுவதற்கு வாய்ப்பாக இருக்கிறது. இலாப வெறியால் கசக்கிப் பிழியப்படுகிற தொழிலாளி ஒருவேளை பணிச்சுமையால் இறந்துபோனால் இரண்டுவிதமான காப்பீடுகள் ஜப்பானில் இருக்கின்றனவாம்.
முதல் வகையில் பணிச்சுமையின் காரணமாக மாரடைப்பு போன்ற இதய நோய்களால் ஒரு தொழிலாளி இறந்துபோனால் காப்பீடு பெறுவதற்கு இறப்பதற்கு முன் கடைசிமாதத்தில் 100 மணிநேரம் ஓவர்டைம் பார்த்திருக்க வேண்டுமாம். அல்லது இறப்பதற்கு முன் ஆறுமாதங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களில் தொடர்ச்சியாக 80 மணிநேர ஓவர்டைம் பார்த்திருக்க வேண்டுமாம். வேறு விதமாக சொல்வதென்றால் ஜப்பானில் ஒரு தொழிலாளி ஒருமாதத்தில் 100மணி நேரம் ஓவர் டைம் பார்த்தால் அவர் மாரடைப்பால் செத்துப்போவது உறுதி என்பதை ஜப்பானிய தொழிலாளர் அமைச்சகம் ஒரு விதியாகவே அறிவிக்கிறது.
இரண்டாவது வகையில் பணிச்சுமையின் காரணமாக ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டால் காப்பீடு பெறுவதற்கு தற்கொலைக்கு முந்தைய மாதத்தில் 160 மணிநேரத்திற்கும் மேல் ஓவர்டைம் பார்த்திருக்க வேண்டுமாம். அல்லது கடைசி ஆறுமாதத்தில் மூன்றுமாதங்களுக்கு மேல் தொடர்ச்சியாக 100 மணிநேரத்திற்கும் மேல் ஓவர்டைம் பார்த்திருக்க வேண்டுமாம். அதாவது ஜப்பானில் ஒரு தொழிலாளி ஒருமாதத்தில் 160 மணிநேரத்திற்கும் மேல் ஓவர்டைம் பார்த்தால் அவர் தற்கொலை செய்யப்படுகிறார் என்றாகிறது!
ஜப்பான் தொழிலாளர் அமைச்சக தகவலின் படி, கடந்த நான்கு வருடங்களில் வேலை தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட இளைஞர்கள் 49% பேர். இதில் 39% பேர் பெண்களாவர்! தொழில்நுட்பத்தின் உச்சம் என்று சொல்லப்படுகிற ஜப்பான்தான் உலகிலேயே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறவர்களின் நாடு!
முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொழிலாளி எட்டுமணி நேரம் செய்கிற வேலையை இயந்திரங்கள் நான்குமணி நேரத்தில் செய்கிற பொழுது தொழிலாளி ஒன்று வேலையிழப்பார் அல்லது அவரது வேலை நேரம் இன்னும் கூடுதலாகி பன்னிரெண்டு, பதினான்கு மணிநேரம் உழைக்க வேண்டியிருக்கும். இதனால் சுரண்டலின் கொடுமை கூடுமே தவிர குறையாது.
எடுத்துக்காட்டாக ஜப்பானில் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளிகள், ஒப்பந்த தொழிலாளிகள் என இரும் பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். வரையறுக்கப்படாத ஒப்பந்த வேலைகளில் பெரும்பாலும் இளைஞர்களும் பெண்களும் பணியர்மத்தப்படுகின்றனர். ஜப்பானில் 1990-ல் 20% ஆக இருந்த ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, 2015-ல் 38% ஆக அதிகரித்திருக்கிறது. இதில் 68% பெண்கள் ஆவர். ஜப்பான் வழக்கறிஞர்கள் மற்றும் போராளிகளின் கருத்துப்படி பெரும்பாலான ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இடைவேளையும் ஓவர் டைம் பார்ப்பதற்கான ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்கின்றனர். இளைஞர்கள் வேறுவேலையில் சேர்வதற்கான அனுபவமின்மை காரணமாகவும் பிரசவ கால விடுப்பு எடுக்கும் பெண்கள் மீண்டும் பணியில் வேறு எங்குமே சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையிலும் இவர்கள் இடைவேளை குறித்தோ ஓவர்டைம் ஊதியம் குறித்தோ வாய்திறப்பதில்லை என்கின்றனர்.
எமிக்கோ தரோநிஷி
திருமதி. எமிக்கோ தரோநிஷி பணிச்சுமையால் தற்கொலை செய்துகொண்ட தன் கணவரின் நினைவாக பணிச்சுமையால் தற்கொலை செய்துகொள்ளும் பிற தொழிலாளிகளுக்கு காப்பீடு பெற்றுத் தருவதில் இறங்கியிருக்கிறார். இவர் கம்பெனிகளின் மூர்க்கத்தனமான சுரண்டல் எத்தகையது என்பதை அம்பலப்படுத்துகின்றார். இவரது கருத்தின்படி சில கம்பெனிகள் சம்பளத்தோடு 80 மணி நேர ஓவர்டைம் பார்ப்பதையும் கட்டாயமாக்குகின்றனவாம். 80 மணி நேர டார்கெட்டை நிறைவு செய்யவில்லையென்றால் கூலியை திருப்பித்தர வேண்டுமென கம்பெனிகள் நிர்ப்பந்திப்பதை எடுத்துக்காட்டுகிறார். இத்தகைய முறையால் தொழிலாளிகள் பலரால் குறைந்த பட்ச கூலியைக் கூட பெறமுடிவதில்லை என்கிறார்.
முதலாளித்துவ சமூகத்தில் இராக்கெட் விட்டாலும் சரி ரோபோ வேலை செய்தாலும் சரி இலாபத்தை நிர்ணயிப்பது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியல்ல. பாட்டாளிகளின் கூலியுழைப்புதான் இலாபத்தை நிர்ணயிக்கிறது. ஆகையால் தான் ரோபோக்கள் கார் உற்பத்தி செய்வது தொழில்நுட்பத்தின் உச்சம் என்று வியக்கிற நாட்டில் தொழிலாளிகள் ஓவர்டைம் பார்ப்பதால் தற்கொலை செய்துகொள்கிறார்கள்! மாரடைப்பால் சாகிறார்கள். இந்தவகையில் ஜப்பானை மனிதர்களைக் கொல்லும் ரோபோக்களின் நாடு என்று சொல்லலாம். ரோபோக்கள் வளர்ச்சி பெற்று செயற்கை அறிவைக் கண்டடைந்து மனித குலத்தை கட்டுப்படுத்துவதாகவும், அதை சில சூப்பர் ஹீரோக்கள் தடுத்து நிறுத்துவதாகவும் நிறைய ஹாலிவுட் படங்களை வெளிவந்திருக்கின்றன. உண்மையில் அந்த ரோபோக்கள் முதலாளித்துவ வர்க்கமாகவும், தடுத்து நிறுத்தி இந்த உலகைக் காப்பாற்றப் போவது தொழிலாளி வர்க்கம் மட்டுமே.
கேள்வியும் தொடர்ச்சியும்: தொழில்நுட்ப வளர்ச்சி தொழிலாளிக்கு எதிரானதா? இல்லை. சமூகத்தில் நிலவும் உற்பத்தி முறையில் தொழிலாளிகள் என்ன பாத்திரம் வகிக்கிறார்கள் என்பது தான் தொழிலாளிகளின் வாழ்நிலையை நிர்ணயிக்கிறது. இதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இப்பொழுது வாசகர்கள் விவாதிப்பதற்கு ஒரு செய்தி: முதல் தொழிற்புரட்சியில் நீராவி இயந்திரம் மற்றும் மின்சாரம், இரண்டாவது தொழிற்புரட்சியில் கன்வேயர் பெல்ட் மூன்றாவது தொழிற்புரட்சியில் கணிணிமயமாக்கம் நான்காவது தொழிற்புரட்சியில் தானியங்குதல் (Automation-ரோபோக்கள் மயமாவது) என்று தொழில்நுட்ப சகாப்தத்தை வரையறுக்கிறார்கள். ஆனால் தற்பொழுது உலகில் வெறும் 62 பேரிடம் இருக்கும் சொத்து, உலகில் 360 கோடி பேர் வைத்திருக்கும் சொத்திற்கு சமம் என்கிறது ஆக்ஸ்பம் வெளியிட்ட அறிக்கை. முதலாளித்துவம் கார், செல்போன் வீடியோகேம் வழங்கியது என்று வாதிட்டவர்கள் 66க்குள் இருக்கிறார்களா? 400 கோடிக்குள் இருக்கிறார்களா?
ஏழு ஆண்டுகளாக “உரிமை கோரப்படாத” தொழிலாளர் வைப்பு நிதி (PF), பொது வைப்பு நிதி (PPF), அஞ்சலகங்களில் உள்ள சிறுசேமிப்பு மற்றும் நிலுவையில் உள்ள கணக்குகளில் உள்ள நிதி ஆகியவற்றை மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றிவிடுவதாக ஒரு அறிவிப்பினை மத்திய நிதித்துறை அமைச்சகம் மார்ச் 12-ம் தேதி அன்று வெளியிட்டது. மேலும் ஒரு தொழிலாளி பணியிலிருந்து விலகினால் அவருடைய பி.எஃப் கணக்கில் உள்ள தொகையை 58 வயது நிறைவடைந்த பிறகுதான் பெற முடியும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பில் இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் தொழிலாளர்களுக்கும் சேமிப்பு வைத்துள்ளவர்களுக்கும் இ-மெயில் மூலமாக 60 நாட்களுக்குள் அறிவித்துவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இவ்வாறு மூத்த குடிமக்கள் நல நிதிக்கு திருப்பப்படும் தொழிலாளர்களின் நிதியின் மொத்தத் தொகை 27,000 கோடி ரூபாய்!
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தாத்ரேயா தொழிலாளர் அனைவரும் அரசின் பிரதிநிதிகள் என்றும் தொழிலாளர் வைப்பு நிதியை வேறுபயன்பாட்டிற்கு பயன்படுத்த அரசுக்கு உரிமையுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பைப் பார்க்கும் சாதாரண குடிமக்கள் அனைவரும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூத்த குடிமக்கள் மீதான நல்லெண்ணெத்திலிருந்து மேற்கொள்ளும் சரியான நடவடிக்கை போல தோன்றும். இது உண்மையா?
பக்காத் திருடர்கள் மோடி-தாத்ரேயா கும்பல்!
மோடி – தாத்ரேயா
சாதாரண நடைமுறையில் இருந்து ஒரு கேள்வி எழுப்பினாலே, இந்த மோசடியைப் புரிந்து கொள்ள முடியும். இரு சக்கர வண்டி வாங்கிவிட்டு தவணைத் தொகை கட்டத் தவறியவர்களையும் கடன் கட்டாமல் இருக்கும் விவசாயிகளையும் எந்த வங்கியும் நிறுவனமும் ‘ஆள் ஊரில் இல்லை’ என்ற காரணத்திற்காக விட்டு விடுவதில்லை. அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு அவமானப்படுத்துவதுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுவது, அடியாட்களைக் கொண்டு கட்டச் சொல்லி மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. அந்த வகையில், தொகையை பெற்றுக் கொள்ளாத தொழிலாளர்களை தொடர்பு கொண்டு அத்தொகையை ஒப்படைப்பது ஒன்றும் சிரமமான காரியமல்ல.
உரிமை கோரபட்டாத தொகையிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,650 கோடி ரூபாயும் 2014-15 ஆண்டில் மட்டும் 6,400 கோடி ரூபாயும் சம்பந்தப்பட்டவர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க மிச்சமிருக்கும் தொகையை அந்தத் தொழிலாளர்களுக்கு கொடுக்க முடியாமல் போய்விட்டதற்கான காரணங்கள் என்ன, அந்தத் தொழிலாளர்களைக் கண்டடைந்து ஒப்படைக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன என்ற எந்த நடைமுறை பிரச்சனையையும் மத்திய அரசு முன்வைத்து தனது முடிவிற்கு நியாயம் கற்பிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
தொழிலாளர்களால் கோரப்படாத நிதி என்ற ஒரு பெயர் வைத்திருப்பதே அயோக்கியத்தனமானது. ஏனென்றால், ஒரு தொழிலாளி கட்டும் பி.எஃப். தொகை என்பது அவருக்கு உரிய முறையில் எந்த நிறுவனமும் தொடக்கத்தில் அறிவித்து விடுவதில்லை. பலருக்கும் இந்தத் தொகை பற்றி தெரியாது. அவ்வாறு தெரிந்திருந்தாலும் அத்தொகையை கோரி பெறுவதற்கான வழிவகைகளும் தெரியாத தொழிலாளர்கள் தான் நமது நாட்டின் பெரும்பான்மையினர். மொத்தத்தில் அப்பாவி தொழிலாளர்கள் தங்களது இரத்தத்தை சிந்தி சேர்த்தத் தொகையை, அவர்களால் கோரப்படாத நிதி என்று சொல்வதன் நோக்கமே, அத்தொகையை திருடுவதற்கான அடித்தளமாக இருப்பதை உணரமுடியும்.
முக்கியமாக, 1995-ல் கொண்டு வரப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திலோ, தொழிலாளர் வைப்பு நிதியிலோ அரசின் பங்களிப்பு எதுவும் இல்லை. ஆகையால், 7 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத தொழிலாளர் நிதியை எடுப்பதற்கு அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.
இது மட்டுமல்லாமல், கடந்த 2011-ம் ஆண்டில் இதுபோன்று தொழிலாளர் வைப்பு நிதி கணக்கீடுகளின் மீதான வட்டி வரவை வேறு வகையான பயன்பாட்டிற்கு திருப்ப மத்திய அரசு முயற்சித்த போது தொழிலாளர் வைப்பு நிதி வாரியம் தடுத்து நிறுத்தியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தை செல்லாக்காசாக்கும் மோடி கும்பல்!
தொழிலாளர் வைப்பு நிதி என்பது தொழிலாளர்கள் தங்களது சம்பளத்திலிருந்து மாதாமாதம் செலுத்தும் ஒரு தொகையும் அவருக்கு வேலையளிப்பவர் செலுத்தும் ஒருதொகையும் சேர்ந்ததாகும். இது தொழிலாளர்களின் வாழ்நாள் முழுவதற்குமான சமூக பாதுகாப்புக்கானதாகும். இதில் கை வைக்க அரசுக்கு உரிமையில்லை.
தொழிலாளர் அனுமதியில்லாமல் வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. உரிமைக் கோரப்படாத நிதியை எடுப்பது என்பது வருங்கால வைப்பு நிதிச் சட்டத்திற்கே எதிரானது. தொழிலாளர் வைப்ப் நிதியை திருடும் மத்திய அரசின் முடிவிற்கு தொழிலாளர் நலத்துறை, வருங்கால வைப்பு நிதித்துறை அதிகாரிகளே எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இத்தனையையும் மீறித்தான் இந்த திருட்டு வேலையை நடத்தி வருகிறது, மோடி-தாத்ரேயா கும்பல். குறிப்பாக, இந்த விசயம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த தொழிலாளர் வைப்பு நிதிக்கான அறங்காவலர் வாரியத்தில் கூட இது குறித்து விவாதிக்கவில்லை.
தற்போது வைப்பு நிதி விவகாரத்தில், தொழிலாளர்களை அரசின் பிரிதிநிதிகள் என்றும் கூறும் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தாத்ரேயாவோ, தொழிலாளர்களுக்கு எதிராக தொழிலாளர் சட்டங்களைத் திருத்திய போது, தொழிலாளர்களின் கருத்தைக் கேட்கவில்லை என்பது மட்டுமல்ல, கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியன்று நாடுதழுவிய அளவில் நடத்தப்பட்ட மாபெரும் வேலைநிறுத்தத்தையும் பொருட்படுத்தவில்லை.
மல்லையா – பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.9000 கோடி கடனை திருப்பி செலுத்தாதவர்
கார்ப்பரேட் முதலாளியான மல்லையா பொதுத்துறை வங்கிகளிடம் வாங்கிய தொகையில் ரூ.9000 கோடி திருப்பிக் கட்டாமல் வெளிநாடுகளில் உல்லாசமாக சுற்றுவதும், இவனுக்கு விசா கொடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்ததும், இவனிடம் நீதித்துறை கெஞ்சிக் கொண்டிருப்பதும் உலகம் நாறிக்கொண்டிருக்கும் விசயங்கள். திருபாய் அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பத்ம விருதுகள் கொடுத்து பட்டவர்த்தனமாக தான் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலிதான் என்று காட்டிக்கொள்கிறது மோடி அரசு. இந்தப் பின்னணியில், தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதலை சேர்த்துப் பார்க்க வேண்டும்.
வைப்பு நிதித் திட்டத்தில் உறுப்ப்பினர்களாக உள்ள நிறுவனங்கள் 7,43,000. மொத்த உறுப்பினர்கள் 8,87,62,000. மொத்த முதலீட்டுத் தொகை 6 இலட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய். ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை 44 இலட்சம் பேர். இவர்களது ஒட்டுமொத்த வாழ்வையும் சூறையாடி ஒட்டுமொத்த வருங்கால வைப்பு நிதியையும் கொள்ளையடிக்க கார்ப்பரேட் கும்பல் படுவேகமாக செயல்பட்டுக் கொண்டுருக்கிறது. இதற்கு மோடி அரசு பக்கபலமாக செயல்பட்டு வருவதையே இந்த நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.
பார்ப்பனமயமாக்க-மறுகாலனியாக்க நடவடிக்கைகளை முறியடிப்போம்!
வளர்ச்சி, முன்னேற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பார்ப்பன பயங்கரவாத பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பல், கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறிக்கு இந்தியத் தொழிலாளர்களை பலியிடும் வேலைகளை வேகமாக செய்து வருகிறது. இந்தியாவில் மூலதனமிட ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகளைக் கூவி கூவி அழைக்கும் மோடி, இளம் இந்தியா என்ற பெயரில் மலிவான கூலி பெறும் தொழிலாளர்களை உருவாக்குகிறது. புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் மாணவர்களை 8ம் வகுப்பு முதல் கட்டாய உற்பத்தியில் ஈடுபடுத்த இருக்கிறது. இதற்காக குழந்தைத் தொழிலாளர் சட்டத்தையும் திருத்தியுள்ளது. கடந்த 80 ஆண்டுகளாக தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளான 8 மணி நேர வேலை, தொழிலாளர்களுக்கு பணி நேரத்தில் வழங்கவேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், சங்கம் வைக்கும் உரிமை, நிரந்தர வேலை போன்ற அனைத்து உரிமைகளையும் பறித்து வருகிறது. இதற்காக சட்டத் திருத்தங்கள் செய்து வருகிறது. தொழிலாளர்களின் பி.எப். நிதி கொள்ளையடிக்கும் தற்போதைய மாற்றங்கள் இதன் ஒருபகுதிதான்.
தொழிலாளர்களின் போராட்டம்
தனது மறுகாலனியாக்க, தொழிலாளர் விரோதப் போக்குகளை திணிக்க,மோடி தலைமையிலான அரசும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலும் நாட்டில் தொடர்ந்து மதவெறி கிளப்பி வருகிறது. மதக்கலவரங்கள், சாதிக்கலவரங்களைத் தூண்டிவிட்டு தொழிலாளர் வர்க்கத்தை பிளவுப்படுத்தும் வேலையில் வேகமாக இறங்கியுள்ளது. பழைய சட்டங்கள் அனைத்தையும் திருத்தி நாட்டை பார்ப்பனமயமாக்கும் வேலையை செய்து வருகிறது.
மோடி அரசின் இந்த நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள வேண்டியது தொழிலாளர் வர்க்கத்தின் கடமை. நமது உரிமைகள் பறிக்கப்படுகிறது என்பதற்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடே மறுகாலனியாக்கத்தில் தள்ளப்படுவதற்கு எதிராகவும் மீண்டும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காட்டுமிராண்டி நிலைக்கு மனித சமூகமே தள்ளப்படுவதற்கு எதிராகவும் போராடுவது நமது வரலாற்றுக் கடமை.
மே நாளில் மேற்கத்திய நாடுகளின் தொழிலாளர்கள் இவ்வாறுதான் தங்கள் மீதான அடிமைத்தனத்திற்கு எதிராக ஒன்று திரண்டு போராடி உரிமைகளை நிலை நாட்டினர். அந்தத் தியாகத்தின் பரம்பரை என்ற வர்க்க உணர்வுடன் ஒன்றிணைவோம்! போராடுவோம்!
“உரிமைக் கோரப்படாத நிதி” என்ற பெயரில் தொழிலாளர்களின் பி.எப். நிதியைத் திருடும் மோடி அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவோம்!
எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர் கோவன் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழுத் தோழர்கள் பாடிய பாடல்!
பாருங்கள் – பகிருங்கள்!
————————————————–
JNU பெயரைத் தெரியுமா ? தோழர் கோவன் பாடல் !
எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர் கோவன் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழுத் தோழர்கள் பாடிய “ஜே.என்.யூ பெயரைத் தெரியுமா? அங்கு மாணவர் போராட்டம் தெரியுமா?” பாடல்!
எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சென்னை தியாகராயக் கல்லூரி மாணவர் அரவிந்தன் ஆற்றிய உரை!
சென்னை சட்டக் கல்லூரி மாணவி கனிமொழி ஆற்றிய உரை!
மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாச வல்லவன் ஆற்றிய உரை!
பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆற்றிய உரை!
கொலைகார ராம்கியை இழுத்து மூடு, அதிகார வர்க்கத்தை ஆட்டம் காணச் செய்த மக்கள் போராட்டம்
கொலைகார ராம்கி நிறுவனத்தை இழுத்து மூடு என அ.முக்குளம் கிராமத்தில் நடைபெற்ற அனைத்து கிராம மக்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தால் ஆட்டம் கண்ட அதிகார வர்க்கம் மக்களை திருச்சுழியில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இதே போல 18-11-2015 அன்று நடந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் மக்களின் கேள்விகளுக்கும், தோழர் வாஞ்சிநாதனின் சட்டரீதியான கேள்விகளுக்கும் பதிலளிக்க இயலாமல் அம்பலப்பட்ட அதிகாரிகள் ராம்கி நிறுவனத்தை மூடுவதாக வாய்மொழி உத்தரவாதம் கொடுத்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை என்பதால் இதற்கு தீர்வு காணும் விதமாக மக்கள் அனைவரும் திருச்சுழி தாலுகா அலுவலகத்தை நோக்கி அணிதிரண்டனர்.
கூட்டம் ஆரம்பம் ஆவதற்கு முன்னரே டி.எஸ்.பி மக்கள் மிரட்டும் தொனியில் பேசினார். இந்த அதிகார வர்க்கம் மக்களுக்கானது அல்ல, காவல் துறை ஏவல்துறையே என்பதை நடைமுறையில் கற்றுக் கொண்ட மக்கள் டி.எஸ்.பி-யை அடிக்காத குறையாக அறைக்குள் ஓடச் செய்தனர்.
தோழர் வாஞ்சிநாதன் மக்களை கட்டுப்பாடாக இருக்கச் செய்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மக்களிடம் அறிவித்து மக்களின் முடிவே எடுக்கப்படும். அதுவரையில் அமைதி காக்க கூறி பேச்சுவார்த்தைக்கு ஊருக்கு 5 பேர் வீதம் சென்றனர்.
அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தோழர் வாஞ்சிநாதன், “இந்த நிறுவனம் எந்த விதமான சட்ட திட்டங்களையும் பின்பற்றவில்லை. நாட்டிற்கே அடிப்படையாக விளங்கும் விவசாயம் அழிக்கப்படுகிறது. 100-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்து இருக்கிறார்கள் என்ற காரணத்தால்தான் 04-07-2013 அன்று மாவட்ட ஆட்சியர் மூடி சீல் வைத்திருக்கிறார். எனவே, இந்த நிறுவனத்தால் என்ன பாதிப்பு என்பதை மக்களாகிய நாங்கள் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை. இனி இந்த நிறுவனத்தை எப்படி மூடுவது என்பது பற்றிதான் அரசு முடிவு செய்ய வேண்டும். அதிகாரிகளிடம் எப்போது முறையிட்டாலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு ராம்கி நிறுவனம் கோர்ட் மூலம் தடையாணை பெற்று விட்டது. வழக்கு கோர்ட்டில் இருக்கிறது நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று காரணத்தைக் கூறி இழுத்தடித்து வருகின்றனர். முறையாக நோட்டீஸ் கொடுக்கவில்லை என்ற காரணத்தைக் கூறித்தான் அவர்கள் தடையாணை பெற்றுள்ளனர். அரசு நினைத்தால் தடை ஆணையை ரத்து செய்ய வைக்க முடியும் அல்லது வழக்கை திரும்பப் பெற்று ராம்கி நிறுவனத்துக்கு முறையான நோட்டீஸ் கொடுத்து அந்த நிறுவனத்தை மூடி சீல் வைக்க முடியும். இவை எல்லாம் கோர்ட்டில் ஒரு அரைமணி நேர வேலை.
ஆனால், அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் ராம்கி நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு மக்களுக்கு தீங்கு விளைவித்து வருகிறது. மக்கள் இப்போது மிகுந்த கொந்தளிப்பில் இருக்கிறார்கள். சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அரசு 133-ஆம் விதியைப் பயன்படுத்தி உடனடியாக ராம்கி நிறுவனத்தை மூட முடியும். அதற்கான சட்ட ஆணையை நாங்களே தயாரித்துக் கொண்டு வந்திருக்கிறோம். இப்போது அதிகாரிகள் உங்கள் முடிவை கூறுங்கள்” என்று தன் வாதத்தை எடுத்துரைத்தார்.
அதிகாரிகள் கலந்தாலோசித்து விட்டு வருகிறோம் என்று கூறி சென்றவர்கள் சிங்கப்பூரில் உள்ள ராம்கி நிறுவன முதலாளியுடன் தொலைபேசியில் கலந்தாலோசித்து விட்டு வந்தனர்.
மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வந்தவர்கள், “நாங்கள் புதியவர்கள், இதில் அனுபவம் இல்லை, நடவடிக்கை எடுக்கின்றோம், கால அவகாசம் வேண்டும். 133 சட்டத்தை பயன்படுத்தினால் அவர்கள் தடை ஆணை பெற்று விடுவார்கள்’ என்று ஏதேதோ மழுப்பினார். எப்படியாவது மக்களை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதைத் தவிர அவர்களிடம் வேறு நோக்கம் இல்லை. கெஞ்சுவது, மிரட்டுவது என்றே நேரம் கடந்தது.
தாசில்தார் சின்னதுரை, தொகுதி தேர்தல் அதிகாரி தியாகராஜன் ராம்கி நிறுவனத்திடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது அப்பட்டமாகத் தெரிந்தது. அதிலும் தியாகராஜனுக்கு ராம்கி முதலாளி அதிகமான எலும்புத் துண்டை போட்டுவிட்டார் போலும், மிகவும் விசுவாசமாக நடந்து கொண்டார்.
பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு இல்லை அதிகாரிகள் ராம்கியின் கைக்கூலிகள் என்பதை அறிந்த மக்கள் கொந்தளிப்பிற்கு உள்ளானார்கள். புரட்சியின் ஆணிவேரான பெண்கள் தாசில்தார் அலுவலகத்துக்கு நுழைய முயற்சித்தனர். தடுக்க முயன்ற காவல்துறை உயர் அதிகாரிகளை இளைஞர்கள், பெண்கள் “போய்யா” எனக் கீழே தள்ளிவிட்டு “என்ன கைது செய்யப் போகிறாரா? தூக்கில் போடப் போகிறாயா? முடிந்தால் செய்” என்று கூறிவிட்டு அதிரடியாக நுழைந்தனர். இதனால் போலீசுக்கும், மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்களை கட்டுப்படுத்த இயலாமல் ஆட்டம் கண்டது அதிகார வர்க்கம்.
“ஒரு எளவு விழுந்து 13 நாள் காரியம் முடிவதற்குள் அந்த வீட்டில் இன்னொரு எழவு விழுந்துருது. ஒரு வீட்டுல ஒரே நாளில் அப்பாவும் மகனும் கிட்னி பெயிலியரல் செத்தா பொம்பள நாங்க புள்ள குட்டிய வச்சுகிட்டு என்னையா பண்றது, நாங்க எப்புடி வாழ்றது” என்று கோபத்தோடும் கண்ணீரோடும் கத்தியதோடு “வாழ உரிமை இல்லாது எங்களுக்கு வாக்குரிமை எதற்கு? ஊருக்குள் யார் வந்தாலும் விரட்டியடிப்போம்” என்ற ஆவேசமாகக் கூறி வாக்காளர் அட்டையை அதிகாரிகள் மீதும் அவர்களின் மேசை மீதும் வீசி எறிந்து தங்களது கோபக் கனலை வெளிப்படுத்தினர். இதற்கு இடையே ஆர்.டி.ஓ “தயவுசெய்து மக்களை கலைந்து போகச் சொல்லுங்கள்” என்று தன் அறைக்குள் சென்று விட்டார்.
“வாழ உரிமை இல்லாது எங்களுக்கு வாக்குரிமை எதற்கு?”
மக்களின் கொந்தளிப்பைப் பார்த்து கலக்கமடைந்த அதிகாரிகள் வேலையை விரைவுபடுத்துவது போல காட்டிக் கொண்டு நேரத்தைக் கடத்தி அந்த இடைவெளியில் மேலும் நிறைய காவலர்களை வரவழைத்தனர். எதற்கும் அசைந்து கொடுக்காத மக்கள் நீ எவ்வளவு போலீஸ் படையும் இறக்கு, சந்திக்கத் தயார் எனக் கூறி அருகிலேயே பாத்திரங்கள் வாடகைக்கு வாங்கி தாலுகா அலுவலகத்திலேயே சமைக்கத் தொடங்கியதைக் கண்டு மேலும் நடுக்கம் கொண்டது அதிகார வர்க்கம்.
பிறகு ஏ.டி.எஸ்.பி பேச்சு வார்த்தைக்கு வந்தார். “நீங்கள் சனிக்கிழமை வாருங்கள் கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மூட நடவடிக்கை எடுக்கிறோம் எங்களை நம்புங்கள்” என்று கூறினார். “சரி இன்று நடந்த பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுக்கப்பட்டது, எங்கள் கோரிக்கை என்ன என்பதைக் குறிப்பிட்டு எழுதி ஆவணமாக அனைத்து அதிகாரிகளும் கையெழுத்து போட்டு தாருங்கள், நாங்கள் சனிக்கிழமை வருகிறோம்” என்றோம். முதலில் தயங்கியவர்கள் பின்னர் ஒப்புக் கொண்டனர்.
குறிப்பாக, “133 விதியை பயன்படுத்தி நிறுவனத்தை மூட முயற்சிக்கிறோம் என்பதை அதில் குறிப்பிட வேண்டும்” என்று தோழர் வாஞ்சிநாதன் வலியுறுத்தினார். சரி என்று ஒப்புக் கொண்டனர். அதை டைப் செய்து கொண்டு வந்து கொடுத்தனர். அதை வாசியுங்கள் என்று கூறியபோது, அதில் 133 விதியை பயன்படுத்த முயற்சிக்கிறோம் என்னும் வாக்கியமே இடம் பெறவில்லை. என்ன இது என்று கேட்டதற்கு சமாளித்தனர்.
பிறகு ஏ.டி.எஸ்.பி.யே தோழர் வாஞ்சிநாதன் கூறிய விதிகளை தன் கைப்பட எழுதினார். அதை ஆர்.டி.ஓ சரிபார்த்து டைப் செய்து வாருங்கள் என்று தன் உதவியாளரிடன் கொடுத்தார். டைப் செய்த உதவியாளர் வாசிக்க ஆரம்பித்தார். வழக்கம் போலவே ‘கைய புடிச்சி இழுத்தியா’ கதையாக 133 விதியை பயன்படுத்த முயற்சிக்கிறோம் என்னும் வாக்கியம் இல்லை. இப்போது அதிகாரிகளுக்கும் அதிர்ச்சி. என்ன இது ஏ.டி.எஸ்.பி எழுதி ஆர்.டி.ஓ சரிபார்த்தை யார் மாற்றுகிறார்கள். மாற்றுவது யாரும் இல்லை ராம்கியின் எலும்பு துண்டுக்கு வேலை செய்யும் தேர்தல் அதிகாரிதான். “கடைசி வரையில் 133 விதியை சேர்க்காமல் கலைய மாட்டோம். இந்த வாக்கியத்தை சேர்ப்பதில் என்ன சிக்கல் எல்லா வாக்குறுதியையும் நிறைவேற்ற போகிறீர்கள் என்று கூறியபிறகும் அதை எழுத்து பூர்வமாக கொடுப்பதில் என்ன சிக்கல்” என்று வலுயுறுத்திய பிறகு எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்தனர்.
இதனிடையே ஏ.டி.எஸ்.பி “இவ்வளவு மரணம், இத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறீர்களே, இத்தனை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்” என்று மக்களைப் பார்த்து கேட்டார்.
“இவ்வளவு காலமும் இந்த அரசையும், சட்டத்தையும், நீதிமன்றத்தையும் நம்பினோம். ஒவ்வொரு குறைதீர்க்கும் நாளிலும் நாங்கள் அத்தனை அதிகாரிகளிடமும் மனு கொடுத்தோம். அத்தனை மனுவையும் அடியில் போட்டு உட்கார்ந்து கொண்டு இப்போது நாங்கள் உங்கள் சட்டத்தை காலில் போட்டு மிதித்த பிறகுதான் எங்கள் கோரிக்கையை கேட்கவே ஆரம்பித்து இருக்கிறீர்கள்” என்றனர், மக்கள்.
இறுதியாக, “இனி நாங்கள் உங்களை தேடி வர மாட்டோம் நீங்கள் எங்களை தேடி வரும்படிதான் எங்கள் போராட்டம் அமையும்” என்று எச்சரித்தனர் மக்கள்.
அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், நீதிமன்றமும் மக்களுக்கு உதவாது. அரசு எந்திரம் மக்களை ஒடுக்கும் கருவியை என்பதை இப்பகுதி மக்கள் நடைமுறையில் உணர்ந்து அதை முறியடிக்க போராட்டமே தீர்வு என்பதை அனுபவத்தின் மூலம் தெரிந்து கொண்டனர்.
மக்கள், மக்கள் மட்டுமே உலக வரலாற்றைப் படைக்கும் உந்து சக்திகள் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகின்றது.
இறுதியாக, தோழர் வாஞ்சிநாதன் “அதிகாரிகள் இன்னும் 1 வாரத்திற்குள் ராம்கி நிறுவனத்தை மூடி சீல் வைக்காவிட்டால் தொடர் போராட்டம் நடைபெறும்” என்றும், “15-ம் தேதி ஜெயலலிதா வரும் போது கருப்புக்கொடி காட்டும் போராட்டம் செய்யப்படும்” என்றும் அறிவித்த போது மக்கள் “அதோடு தீக்குளிப்பு போராட்டம் கூடச் செய்வோம் எதற்கும் தயார்” என்றனர் ஆவேசத்துடன்.
இறுதியாக, தோழர் வாஞ்சிநாதன் அனைத்து கிராம மக்களையும் கலைந்து செல்லலாம் என்று அறிவித்த பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.
பத்திரிகை செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
நோய்க்கு வைத்தியம் பார்த்துக் கொண்டே வயதானவர்கள் பிசினசுக்கு ( பிச்சைக்கு) கிளம்பிவிடுகிறார்கள்.
“நைட்டு படுக்கும் போது கால்ல ஐஞ்சி வெரலும் இருந்துச்சி, காலையில எழுந்துப் பார்த்த புண்ணா இருந்த நடுவிரல, காணோம், சொல்லாமக் கொள்ளாம என் விரலை ஆட்டையப் போட்டுடுச்சே எலி, எத்தன நாய்க்கும், பூனைக்கும் சோறு போடுறேன், பசினு சொல்லியிருந்தா எலிக்கும் சோறுப் போட்டுறுப்பேனே” என வேதனையை மறக்க வேடிக்கையாகப் பேசுகிறார்கள் மருத்துவமனையில் இருக்கும் தொழுநோயாளிகள்.
மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு முன்பு வாரத்தில் ஒருநாள் கறிச்சோறு உண்டு. ஆனால், சாப்பிடும்போது, கறியா தன் விரலா என்று தெரியாமல் தொழுநோயாளிகள் உணர்ச்சியற்ற விரலையே தின்றக் கொடுமையெல்லாம் இங்கு சாதாரணம்.
நரம்புகள் இழுத்து சுருங்குவதால் முகம் உருமாறி சிங்க வடிவமாக தோன்றும்
தொழுநோய் மருத்துவமனையின் அருகாமைப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தால் நோயாளிகள் தப்பிக்க வழியுண்டு. வேற்று மாநிலம், வெளி ஊர்களிலிருந்து வந்தவர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியது. சுற்றத்தினர் துரத்தியவுடன் நோயின் கவனிப்பின்றி காது, மூக்கு, பிறப்புறுப்பில் ஏராளமாக புழு வைத்து…….. சீழ் வடிந்து எங்கு செல்வது என்று தெரியாமல்,ரோட்டில் மாண்டவர்கள் ஏராளம். தொழுநோயாளிகள் என்ற புறக்கணிக்கப்பட்ட உலகத்திற்குள் உங்களை அழைத்துச் செல்கிறோம்.
சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் செங்கற்பட்டு நகரத்தை ஒட்டி இயற்கைச்சூழலில் 550 ஏக்கர் பரப்பளவில் அமைந்தள்ளது திருமணி மத்திய தொழுநோய் போதனா மற்றும் ஆராய்ச்சி மையம் (Central Leprosy Teaching and Research Institute). 1924ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து கிருத்துவ தேவாலாயத்தின் பங்களிப்புடன் துவக்கப்பட்டு தற்போது மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. தொழுநோயாளிக்களுக்கா ன 124 படுக்கை வசதிகளுடன் மற்றும் வெளிநோயாளிகளுக்கான மருத்துவ பிரிவு,ஆய்வக பிரிவு, அறுவைச்சிகிச்சை பிரிவு, தொற்றுநோய், புள்ளியல் பிரிவு என்று இவற்றின் கீ்ழ் 32 துணைப் பிரிவுகள் இயங்குகின்றன. அவற்றில் தோழுநோயாளிகளுக்கான காலணிகள்,உடைகள்,உணவு தயாரிக்கும் பிரிவுகள் மற்றும் உயர் மருத்துவ ஆராய்ச்சிக்கான ஆய்வ பிரிவு,நூலக பிரிவு, என்று பரந்து விரிந்துள்ளது இம்மருத்தவமனை. ஒரு டஜனுக்கும் மேற்பட்ட துறைசார் அதிகாரிகள் கீழ் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள்,ஊழியர்கள் மற்றும் அலுவலகப் பிரிவு என்று 300 க்கும் மேற்பட்டோர் இங்கு பணிபுரிகின்றனர்.
மொட்டையம்மாள்:
இவர், திருவண்ணாமலையின் வேளாந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர். கவுண்டமூட்டின் அதிஷ்டலட்சுமியாகப் பிறந்தவர். மொட்டையம்மாளின் குடும்பப் பொறுப்பும், சுறுசுறுப்பும், வாய் கணக்கும் குடும்பத்தினரை வியக்கவைத்தது. அப்பா, தன் 4 ஆண் பிள்ளைகளைக் காட்டிலும், மொட்டையம்மாள் மீது உயிரையே வைத்திருந்தார். அதிஷ்டமானவள் என்பதால், வீட்டின் விசேஷங்களிலும், விவசாய வேலைகளிலும் மொட்டையம்மாளைத்தான் முதல் ஆளாக நிற்க வைத்து அழகுப் பார்த்தார்கள். 16 வயதில் உறவுக்காரப் பையனுக்கு, சீர் செனத்தியுடன் மணம் முடித்தார்கள். திடீரென இவரது உடல் முழுவதும் கொப்பளம். முதலில் அம்மையோ, அலர்ஜியோ என்று கவனித்தது குடும்பம்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளி – நீண்டநாட்கள் மாத்திரையை உட்கொள்ளும் நோயாளிகள், சர்க்கரை, உப்பு(பிபி), கண்பார்வை இழப்பு, கிட்னி பெயிலியர் போன்ற ஏராளமான நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.
பிறகு, இது தொழுநோயின் ஒரு வகை என உறுதியானது. அதன் பிறகு, அவரது வாழ்க்கையே பட்டுப்போனது. தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு செங்கல்பட்டு திருமணி ஆஸ்பத்திரியே கதியானது. குடும்பத்தினர் நோயைப் பற்றி வெளியில் சொன்னால் மானம் போய்விடும் என ஊராரிடம் மறைந்தனர். கணவனோ, சீர் செனத்தியெல்லாம் திருப்பி அனுப்பிவிட்டு, தான் கட்டிய தாலிக் கொடுத்துவிடும்படியும், தனக்கும், அவளுக்கும் ஒன்றுமில்லை என்று ஊர்ப்பஞ்சாயத்தைக் கூட்டி, அடுத்து, தன் மறுமணத்தை உடனே முடித்துக் கொண்டார்.
இன்றும் சிகிச்சையில் இருக்கும், மொட்டையம்மாள் மனமுடைந்துச் சொல்வது “நோயின் கொடூரமும், வலியும்கூட எனக்கு நோகல… என் குடும்பம் என்னை ஒதுக்கியதுதான் என்னால தாங்க முடியாத நோய்” என்பார். “நீ இருந்தா உன் தம்பிகளுக்கு பொண்ணு கிடைக்காது” ன்னு அம்மா சொன்னாங்க. இப்ப அதே வார்த்தையை தம்பிகள், தன் பிள்ளைகளின் கல்யாணத்துக்கும் சொல்றாங்க. ஆனா கூடவே, “நீ சம்பாதிக்கறதுல அத்தை முறைக்கு செய்ய வேண்டிய சீரை செஞ்சிடுன்னுறாங்கமா” , “எனக்கு தோல் மட்டும்தான் மறத்துப் போச்சி, மனசு மறத்துப்போகலையேம்மா” னு அழுவார்.
இப்போது இவர் வெளிநோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டே,திருவாண்ணாமலையில் கலா கார்மெண்ட்ஸ்சில் உதவியாளராகச் சேர்ந்து, தையல்காரராக உயர்ந்து தைரியத்துடன் வாழ்ந்து வருகிறார். வாங்கும் சம்பளத்தில், சிறு பகுதியை அங்கிருக்கும் அனாதை இல்லத்துக்கு உதவுகிறார்.
விஜயா:
கும்பகோணம் வலங்கைமானைச் சேர்ந்தவர். பள்ளியில் நீளம் தாண்டும் போட்டி வீராங்கனை. காதல் திருமணம். திடீரென இவரது உடல் முழுவதும் கொப்பளம் வெடித்து தொழு நோய் என்று தெரிந்தது. குஷ்ட நோயாளியின் கணவர் என்ற கேலிப்பேச்சால் தூக்கில் தொங்கினார் அவரது கணவர். உடல் முழுவதும் கொப்பளம் வெடித்த வலியைத் தாங்குவதா, காதல் கணவன் இறந்த துக்கத்தை தாங்குவதா? பிறந்த குழந்தையை காப்பதா? என்று திக்குத் தெரியாமல் கலங்கியது வாழ்க்கை.
அவரது இயல்பே துடுக்குத்தனம் என்பதால், மருத்துவம் பார்க்கும் ஆஸ்பத்திரியிலும் நடத்தையில் பழி சுமத்துகின்றனர். இவ்வளவு வேதனையியிலும், தன்னைப்போல நோயுற்ற முதியவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை மனமுவந்துச் செய்கிறார். இரண்டு கால்களும், கைவிரல்களும் இல்லாத சக நோயாளி அரியை திருமணம் செய்துக் கொள்கிறார். தாம்பரம் மெப்ஸ்இல் கிடைத்த வேலையை செய்துக் கொண்டு மகளையும் கொண்ட கணவரையும் காப்பாற்றுகிறார்.
முத்துசா:
‘பாம்பென்றால் படையே நடுங்கும் என்பார்கள், ஆனால் முத்துசா என்றால் பாம்பே நடுங்கும். பல வகையான கொடிய பாம்புகளுடன் விளையாடிவர் முத்துசா.
தொழுநோயாளிகளை சுத்தமான சூழ்நிலையில் வைத்து அவர்களை ஆரோக்கிய மனிதர்களாக்குவதில் முக்கியமானவர்கள் துப்புரவுத் தொழிலாளர்கள். மற்றவர்கள் பார்ப்பதற்க்கே மிரளும் புழுக்கள் கொட்டும் அழுகிய தசை,ரத்தம்,சீழ் இவற்றோடு அவர்களது மலத்தையும் வாருகிறார்கள் இந்த தொழிலாளிகள்.
இவர் ஒரு தொழு நோயாளி. செங்கல்பட்டில் யார் வீட்டில் பாம்பு புகுந்தாலும் அவர்கள் அலறும் அலறல் முத்துசா என்றே இருக்கும். பாம்பு கடிக்கான பச்சிலை வைத்தியமும் தெரிந்தவர். பலமுறை பாம்பு கடித்தும் தன் வைத்தியத்தால் பிழைத்தவர். தன் ஊர் பிள்ளைகளுக்கும் பாம்பின் மீதிருந்த பயத்தை போக்கி, அவர்களுக்கும் பாம்பு பிடிக்கும் வித்தையைக் கற்றுத் தந்தவர். கடைசியில், செங்கல்பட்டு அரசு அதிகாரி வீட்டில் புகுந்த நல்ல பாம்பை பிடிக்கும் போது கடித்துவிட்டது. உடன் இருந்தவர் பாம்பை அடிக்க முற்பட, முத்துசா விடவில்லை. “வேணாம் வாயில்லாத ஜீவன்” என்று தடுத்துவிட்டார். உடனே கையை கயிற்றினால் கட்டிவிட்டு பச்சிலையை மருந்தைச் சாப்பிட்டார். தனக்கு விஷம் இறங்காததை தெரிந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லச் சொன்னார்.
மருத்தவமனை ஊழியர்களுக்கோ, கையில் கட்டியிறுந்த கயிறை கழற்றினார்கள் ஆனால் முத்துசா கயிற்றை கழற்றவேண்டாம். பாம்பு கடித்த இடத்தை கிழித்து இரத்தம் வடிய செய்யுங்கள் என்றார். ஆனால் அதை காதில் வாங்காத பயிற்சி மருத்துவர்கள் கயிற்றை அவிழ்த்ததும் சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. மக்கள் அனைவருமே கண்ணீர் வடித்து, மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
டிக்கு, கஸ்தூரி:
சக நோயாளிகளுக்கு இட்லி, சுண்டல், டீ விற்று காலம் தள்ளுகிறார் ஒரு தொழு நோயாளி. இப்பவும் டீ 5 ரூபாதான். கோபால் அண்ணன் டீக்கு துப்புரவு பணியாளர்களும், கட்டுகட்டுபவர்களும் வாடிக்கையாளர்கள்.
மூன்று வயதிலேயே தொழுநோயால் பாதிக்கப்பட்டார் கஸ்தூரி. செங்கல்பட்டு மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சையுடன் வளர்ந்தவர். அவர் வயசுக்கு வந்ததும் மருத்துவமனையில்தான். உடனிருந்த நோயாளிகளே தன் பெண் மாதிரி சடங்கெல்லாம் மகிழ்ச்சியாக செய்தனர். இதைப் போலவே, சிறு வயதிலேயே நோயால் பாதிக்கப்பட்ட டிக்கு என்ற ஒரிசா முஸ்லீம் சிறுவனும் மருத்துவமனையிலே வளர்ந்தவன். இருவரும் விரும்பினர். இவர்கள் திருமணத்தையும் உடனிருந்த நோயாளிகளே முன்னிருந்து நடத்தினர். ஆனால் இவர்கள் குழந்தை பெற்று கொள்ளக் கூடாது. எனென்றால், கஸ்தூரியும் டிக்குவும் சாப்பிட்ட மாத்திரைகளின் பக்கவிளைவுகள் அப்படி. பிறக்கும் குழந்தை கை,கால் இல்லாமல் இறக்கை விரிந்த மாதிரி இருக்கும். தலையே இல்லாமல் கூட பிறக்கும் என்றனர் மருத்துவர்கள்.
அதனாலென்ன…. இருவரும் தன் சகநோயாளியின் பெண் குழந்தையை தத்தெடுத்தனர். இப்போது டிக்கு மீன் வியாபாரி. கஸ்தூரி ஒயர் கூடை பின்னுபவர். தன் மகள் சந்தியாவுக்கு பொறுப்பான தாய் தந்தையாக வாழ்க்கை நடத்துகின்றனர்.
முஸ்லீம் கணவனின் ரம்ஜானையும், தனது இந்துபண்டிகையும், சேர்த்து தற்போது மாறியிருக்கும் கிறித்துவ பண்டிகையையும் கொண்டாடும்
இவர்களின் வாழ்க்கையில் மதபேதம் இல்லை.
செல்லம்மா வயது 72:
நோய்க்கு வைத்தியம் பார்த்துக் கொண்டே வயதானவர்கள் பிசினசுக்கு ( பிச்சைக்கு) கிளம்பிவிடுகிறார்கள்.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர். கணவர் நகை ஆச்சாரி. இவருக்கு ஆண், பெண் என்று இரண்டு பிள்ளைகள். செல்லாம்மாவின் 60வயது வரை இந்நோய் இருப்பது அவருக்கு தெரியவில்லை. தனக்கு ஏற்படும் சாதாரணக் காயங்கள்கூட ஆறாமல் இருப்பதைக் கண்டு வருத்தமடைந்தார். பிறகு ஆய்வில் தொழுநோயின் பாதிப்பு தெரியவந்தது. தன் அம்மா தங்களை வளர்த்து ஆளாக்கியதை நினைத்து கடைசிவரை கவனிப்புடன் பாரத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர் அவரது பிள்ளைகள். ஆனால், குடியிருக்கும் வீட்டிலோ, தங்கள் குடும்பத்துக்கும் அந்நோய் தொற்றிவிடும் உடனே வீட்டை காலி செய்ய வேண்டும் கூறிவிடுகின்றனர். இப்படி இரண்டு வீடுகள் மாறிய குடும்பத்துக்கு மறுபடியும் வீடுமாறுவதில் சிக்கல் . கடைசியில் அம்மாவை திருமணி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.
மற்ற நோயாளிகளின் அவல நிலையைப் பார்த்ததும் தனக்கும் தொழு நோய் என்பதை ஏற்க செல்லம்மாவின் மனம் மறுக்கிறது. பேரன் பேத்தி என்ற வாழ்ந்த செல்லம்மா தான் புறக்கணிக்கப்பட்டு கடைசிவரை மருத்துவமனையிலே இருந்துவிடவேண்டியதை நினைத்து, சாப்பிட மறுக்கிறார். சிகிச்சை எடுத்துக்கொள்ள மறுக்கிறார். காயங்கள் பெரிதாகி விரல்களை இழக்கும் நிலைக்குச் சென்றதும், மனநோயாளியானார். இப்போது, மனநோய்க்கும் மருந்து எடுப்பதில்லை. வாரம் ஒரு முறை பாசத்துடன் வரும் தன் பிள்ளையையும் எதிரியைப் போல் பார்க்கிறார். இப்படி மருத்துவமனையின் உள்நோயாளியாக வருடக்கணக்கில் சிகிச்சைப் பெற்றாலும், சுற்றியிருப்பவர்கள் நடத்தும் விதத்தில் மனநோய்க்கு ஆளானவர்கள் ஏராளம்.
மனநோய்க்கு மட்டுமல்ல, சமூக புறக்கணிப்பால், இரயில் முன் விழுந்து தற்கொலை செய்துக்கொணடவர்கள் ஏராளம்.
தொழுநோயால் பெண்கள் பாதிக்கப்பட்டால், கணவன் அவர்களை விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். ஆனால், பெண்களோ கணவனுக்கு தொழுநோய் என்றால், இறக்கும்வரை உடனிருந்து கவனிப்பார்கள்.
இப்படி பல முகங்கள், பல கதைகள்.
இந்த நோய் ஒழுக்கக் கேட்டாலோ, பாவம் செய்வதாலோ வருவது இல்லை. ஊட்டச்சத்து குறைப்பாட்டாலும், நோய் எதிர்ப்பு குறைவதாலும் தோன்றி வீரியமடைகிறது. அதைப்போல், இது பார்த்தவுடன் தொற்றுவதோ, பழகியதும் தொற்றுவதோ கிடையாது. இதனை ஏர் பார்ன் டிசீஸ் [Air Born Disease] என்று வகைப் படுத்துவார்கள். நோயாளிகள் விடும் மூச்சுக்காற்றில் கிருமிகள் வெளிப்படும். அருகில் இருப்பவர் நோய் எதிர்ப்பு சக்தியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தால் தொற்ற வாய்ப்பில்லை. இரண்டும் குறைந்தால் வாய்ப்புக்கள் அதிகம். தொற்றியதும் உடனேயும் வெளிப்பாடாது. வருட கணக்கில் கழித்துத்தான் தெரிய வரும். முக்கியமாக, தொழுநோயின் பாதிப்பு இரண்டு வகைகளில் வெளிப்படும். பொதுவில் தொழுநோய் எளிதில் பரவும் ஒரு நோய் இல்லை எனலாம்.
முதல் வகையில், இஎன்எல் ரீயக் ஷன்(ENL Reaction) இதற்கான மருந்து, ப்ரட்னி சோலான் [Prednisolone] எனும் சிறாய்ட் மாத்திரைகள் மற்றும் ஊசி, டிஎல்டி எனப்படும் [Thalidomide], மற்றும் தடுப்பு மருந்தான எம்பி-எம்டிடி[MB -MDT] அட்டை மாத்திரை. இது 12 மாதத்திற்கானது.
இதை நோயாளிகள் “வாத்தியார் மாத்திரை” என்றே அழைப்பர். ஆனால் தொழுநோய் மட்டுமே உள்ள நோயாளிகளை பலவித புதிய நோய்களுக்கு ஆளாக்குவதும் இந்த வாத்தியார் மாத்திரைதான். நீண்டநாட்கள் இந்த மாத்திரையை உட்கொள்ளும் நோயாளிகள், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கண்பார்வை இழப்பு, சிறு நீரக பாதிப்பு போன்ற ஏராளமான நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.
நீண்டநாட்கள் இந்த மாத்திரையை உட்கொள்ளும் நோயாளிகள், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கண்பார்வை இழப்பு, சிறு நீரக பாதிப்பு போன்ற ஏராளமான நோய்களுக்கு ஆட்படுகின்றனர்
டிஎல்டி மாத்திரையை உட்கொள்ளும்போது, கண்டிப்பாக நோயாளிகள் மருத்துவமனையில்தான் இருக்கவேண்டும். இதன் பக்கவிளைவுகள் கொடூரமானது. இது தொழுநோயைக் கட்டுப்படுத்தும் ஆனால், பல்வேறு பல நோய்களைக் கொண்டு வரும். நரம்புகள் இழுத்து சுருங்குவதால் முகம் உருமாறி சிங்கம், குரங்கு எலிப் போன்ற மிருகங்களின் தோற்றத்தை பெறுவார்கள். மூக்கு முழுவதுமாக அழுந்தும். மூச்சு விடுவதற்கும் சிரமம். அதில், முழு நேரமும் தூக்கம். உடல் ஊதிப்போதல் இருக்கும். முக்கியமாக, பெண்கள் குழந்தைப் பெற்றுக் கொள்ளக்கூடாது. மீறிப் பிறந்தால், இறக்கைப்போன்ற கைகள், தலையில்லாத முண்டம் போன்று பல்வேறு குறைபாடுகளோடும், சேதங்களோடும் குழந்தை பிறக்கும். இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது நல்ல ஓய்வு, சத்தான சாப்பாடு என்ற நல்ல கவனிப்பு இருக்க வேண்டும். ஆனால் இந்த வாய்ப்பு இவர்களுக்கு இல்லை. இது பக்க விளைவுகளை இன்னும் அதிகப்படுத்துகிறது.
மறுபுறம், இந்திய அரசோ தொழுநோய் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கணக்கு காட்டுகிறது. இது அப்பட்டமானப் பொய் என்பதற்கு தற்போது சிகிச்சையில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்த நெஸ்லா, தமிழ்நாட்டைச் சேர்ந்த சித்ராவும், பீகாரைச் சேர்ந்த பூஜா மீனாக்குமாரி என்று தினமும் புதிய நோயாளிகளே வரும் குழந்தைகளே சாட்சி.
இரண்டாவது வகை, அல்சர் ஊண்ட்(Ulcer wound). இதில் கை, கால்களில் உணர்ச்சியற்ற தன்மை அதிகமாக இருக்கும். இதனால், கை, கால்களில் புண்கள் உண்டாகும். எலும்புகள் சக்தியை இழந்து மணல் போல சிதறும், வலி தெரியாததால், விரல்கள் மடங்கி புண்களில் புழு வைக்கும். அடுத்தவர் அதன் நாற்றத்தை தாங்காமல் துரத்தும் வரை,அவர்களுக்கு புண்ணின் தீவிரம் தெரிவதில்லை. இந்த புண்களுக்குப் பிரதான மருந்து யூசால் (EUSOL-Edinburgh University Solution of lime)என்று சொல்லக்கூடிய பிளிச்சிங் தண்ணீர். இந்த வகை நோயாளிகள் சோறு இல்லாமல் கூட இருப்பார்கள். ஆனால் தினமும் கட்டு- டிரஸிங்- இல்லாமல் இருக்க முடியாது. பிற நோய்களில், புண்களின் கட்டைப் பிரிக்கும்போது புண்ணிலிருந்து சீழ் , இரத்தம் வரும். ஆனால் இக்கட்டைப் பிரிக்கும்போது நூற்றுக்கணக்கில் சின்னதும் பெரியதுமாகக் புழுக்கள் கொட்டும். இதை முதலில் பார்க்கும் பயிற்சி மருத்துவர்களும் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்கள். ஆனால், கட்டு கட்டுபவர்கள் மிரண்டால் தொழுநோய் புண் தீராது. இல்லை என்றால் புழுக்களே விரல்களை அரித்து தின்றுவிடும்.
புழுவுடன் வரும் நோயாளிகளை கட்டுகட்டுபவர்கள் விளையாட்டாக, “என்னா உன் புள்ளக்குட்டியோட வந்து சேர்ந்துட்டியா?” என்பார்கள். “கிண்டல் பண்ணாதம்மா, தீபாவளி, கிறிஸ்மஸ், பொங்கல்-னு பண்டிகை நாளா வந்திடுச்சி பிசினசுக்குத் {பிச்சை} தொடர்ந்துப் போயிட்டேன், அதான் கவனிக்கமுடியல புழு வெச்சிடுச்சி” என்று சிரிப்பார்கள். தொழுநோயாளிகளை சுத்தமான சூழ்நிலையில் வைத்து அவர்களை ஆரோக்கிய மனிதர்களாக்குவதில் முக்கியமானவர்கள் துப்புரவுத்தொழிலாளர்கள். மற்றவர்கள் பார்ப்பதர்க்கே மிரளும் புழுக்கள் கொட்டும் அழுகிய தசை,ரத்தம்,சீழ் இவற்றோடு அவர்களது மலத்தையும் வாருகிறார்கள் இந்த தொழிலாளிகள்.
நோயாளிகள் விடும் மூச்சுக்காற்றில் கிருமிகள் வெளிப்படும். அருகில் இருப்பவர் நோய் எதிர்ப்பு சக்தியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தால் தொற்ற வாய்ப்பில்லை. இரண்டும் குறைந்தால் வாய்ப்புக்கள் அதிகம்.
அடுத்து,கட்டுக்கட்டுபவர்களை தொழுநோயாளிகள் தன் வினையை தீர்க்கவந்த தெய்வமாகவே பார்ப்பார்கள். “எங்கள சுத்தியிருக்கறவங்க, சொந்தகாரங்களே எங்களை தொட பயப்படுறாங்க, ஆனா, யார் பெத்த பிள்ளைகளோ எங்க பாவத்தை இப்படி சுத்தப்படுத்தறீங்க” னு உணர்ச்சி வசப்பட்டு …அழுவார்கள். “கை, கால்களில் எந்த வெரல் அழுகியிருக்கோ பார்த்து எடுங்க”, என்றும் கெஞ்சுவார்கள். கட்டுகட்டும் முறைகள் பல உண்டு, ஆனாலும் இவர்கள் கொலுசுக்கட்டு கட்டுமா என்று விரும்பி கேட்பார்கள். புண்ணிருக்கும் விரல்களுக்கு மட்டும் கட்டக்கூடாது, கெண்டைக்காலையும் சேர்த்து கட்டு கட்டவேண்டும் அதுதான் கொலுசு.
அதைக் கட்டி முடிக்கும்போது முடிச்சிப்போடாதே சுருக்குப்போடு என்று கூறுவார்கள். எனென்றால், மறுநாள் கட்டை தானே பிரித்து தயராக இருக்கவேண்டும் அல்லவா? புண்ணைச் சுத்தம் செய்யும்போதும் நாத்தம் அதிகமானால், அவர்களே கூசிப் போவார்கள், “உப்பு வைச்சிக் கட்டுமா நாத்தம் தாங்கமுடியல” என்பார்கள். உப்பு என்பது மெக்னிசியம் சல்பேட். புண்ணில் மேல் இருக்கும் அழுகிய தசையை எடுக்கும். அடுத்து அவர்கள் “புண்ணு ஆறி மூட மாட்டேன்னுது, மேலே வளருது, நீலக் கல்லு தேய்ச்சிக் கட்டுமா” என்பார்கள், நீலக்கல்லு என்பது காப்பர் சல்பேட். “எனக்கு சிவப்பு மருந்து சேராது, யூசால் மட்டுமே வெச்சி கட்டுமா”, சிகப்பு மருந்து என்பது ப்பிடாடின் – இப்படியாக தன் புண்ணுக்கு என்ன, என்ன சிகிச்சை என்பதும் அவர்களுக்குத் அத்துப்படி. இவர்கள் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளலாம். இவர்களின் பிள்ளைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்கள். நோயாளிகளின் பிள்ளைகள் என்று சொல்லவே முடியாது.
இதை, மருத்துவமனை மருத்துவர்களே, புதிதாக மருத்துவம் பயிலும் மாணவர்களிடம், “கேஸ் ஷீட் பார்க்கறதைவிட நோயாளிகள் சொல்றதைக் கேளுங்க சரியாக இருக்கும்” என்பார்கள்.
இக்கட்டைப்பிரிக்கும்போது நூற்றுக்கணக்கில் சின்னதும் பெரியதுமாகக் புழுக்கள் கொட்டும். இதை முதலில் பார்க்கும் பயிற்சி மருத்துவர்களும் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்கள்.
தனக்கு சிகிச்சைஅளிக்கும் மருத்துவமனை ஊழியர்களை உறவுமுறையில்தான் அழைப்பார்கள். மருத்துவர்களை அப்பா என்றும், செவிலியர்களை அம்மா என்றும் கட்டு கட்டுபவர்கள், துப்புரவு பணியாளர்களையும் அக்கா, அண்ணா என்றும் அன்போடு அழைப்பார்கள்.
கைகள், கால்கள் விரல்களின்றி மொட்டையாக இருந்தாலும், ஒயர்கூடைப் போடுவது, ஓவியம் வரைவது, கவிதை எழுவது, நாடகம் போடுவது என பார்ப்பவர்களை பிரமிக்க வைப்பார்கள்.
நோய்க்கு வைத்தியம் பார்த்துக் கொண்டே வயதானவர்கள் பிசினசுக்கு ( பிச்சைக்கு) கிளம்பி விடுகிறார்கள்.சிலர் சக நோயாளிகளுக்கு இட்லி, சுண்டல், டீ விற்று காலம் தள்ளுகிறார்கள். இப்பவும் டீ 5 ரூபாதான். கோபால் அண்ணன் டீக்கு துப்புரவு பணியாளர்களும், கட்டுகட்டுபவர்களும் வாடிக்கையாளர்கள்.
போன ஜென்மத்துல என்ன பாவம் செய்தோமோ குஷ்டத்துல கஷ்டப்படுறோமோ? என்று கூறும் இவர்களை சுற்றி இருப்பவர்கள் புறக்கணித்தாலும், வாழ்க்கையில் விரக்தி அடைவது இல்லை. கை, கால் விரல்கள் இல்லாமல் போனாலும், மடங்கிப்போனாலும், தன் வேலைகளை தானே செய்துக் கொள்கிறார்கள். எடுத்த பிச்சையையும், சக நோயாளிகளுடன் பங்கீட்டு சாப்பிடுவார்கள். முன்பெல்லாம், புறக்கணிக்கப்பட்ட பெண் நோயாளிகள் பாலியல் தொழிலில் தங்களை காத்து கொண்டனர். ஒரு சிலர் போதைப் பொருட்களை விற்பதற்கும், ரவுடியின் கையாட்களாகவும் இவர்களை பயன்படுத்துகின்றனர். சாராயம் காய்ச்சி விற்றவர்களும் உண்டு. இவர்களிடமும் போலீசு மாமூலுக்கு மிரட்டும். இப்படி வாழ்க்கை முடித்து இறப்பவர்களை அடக்கம் செய்ய இவர்களுக்குள் தனி குழு உண்டு.
மலர், செங்கமலம், ராஜி, தன்னை சுற்றியிருக்கும் நாய், பூனை மற்றும் குரங்குகளுக்கு இவர்கள் வைக்கும் பெயர்கள். தங்களை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டும் என்பதை விலங்குகள் மீது இவர்கள் பாசம் வைத்திருப்பதை பார்த்தாலே தெரியும். ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சைப்பெறும்போது கையில் இருப்பதை திண்ணக் கொடுத்து எதாவது ஒரு விலங்கை நண்பனாக்கிக் கொள்வார்கள்.
NGO க்கள் தன் வெளிநாட்டு வருமானங்களை கூட்டுவதற்கு இவர்களை போட்டோ எடுத்து புராஜக்ட் செய்துவது தனிக் கதை. மறுபுறம், தொழுநோயாளிகளை இந்து, முஸ்லீம் மதத்தினர் அதிகம் வெறுத்து ஒதுக்குவதால், ஆதரவு காட்டுவதாக அவர்களை கிறித்துவ மதத்தினர் சுற்றி வருவதுண்டு. பழம், பிஸ்கட் என்று தீனிகளை வைத்தே நோயாளிகளை பிடிப்பதுண்டு. அவர்களுடன் ஒன்றியிருப்பதுப் போல் போட்டோ எடுத்து அவற்றை டாலராக மாற்றுக்கிறார்கள். வட்டியில் வயிறு பெருக்கும் மார்வாடிகள், தங்களின் பாவங்களை கழுவ தொழுநோயாளிகள் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். வருடத்திற்கு இரு முறை வண்டியில், ஒருவேளை உணவு, பழையதுணிகள் போர்வைகள் கொடுத்து புண்ணியம் தேடுகிறார்கள். இவர்களில் எவர் ஒருவரும் இவர்களின் நிரந்தர ஆரோக்கியம் பற்றி சிந்திப்பதில்லை.
ஆராய்ச்சி என்ற பெயரில் சுவர்களுக்கு பெயிண்டு அடிப்பது, தரைகளுக்கு டைல்ஸ்போடுவது பூச்செடிகளை பராமரிப்பதை தவிர வேறோன்றும் நடப்பது இல்லை.
படிக்காதவர்கள், விவரம் தெரியாத குடும்பத்தினர் மட்டுமல்ல, பார்த்தவுடன், பழகியவுடன் தொற்றிக்கொள்ளும் நோய் அல்ல என்று தெரிந்தும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இவர்களை நடத்தும் அவலம் சொல்லி மாளாது. நோயாளியை பார்த்து,”அட்டென்டர் இல்லாம பார்க்கமுடியாது”. “எட்டவே உட்காரு”. “உங்களுக்குனு இருக்கற ஆஸ்பத்திரியிலேயே போய் கட்டுபோட்டுக்கோ” என்று விரட்டுவிடுவார்கள்.
எதுக்கு வந்திருக்கிற? என்றுகூட கேட்காமல், அவர்களின் நோய்க்கும் சம்மந்தமில்லாத மாத்திரைகளை தலையில் கட்டி துரத்துவார்கள்.
அவர்களுக்கென்று இருப்பதாக சொல்லும் தொழுநோயின் ஆராய்ச்சி மருத்துவமனையின் நிலையோ அதைவிட அவலம். 700 ஏக்கர் நிலப்பரப்புடன் உள்ள பெரும் இயற்கை சூழல். சம்பளம் உட்பட அதன் மாத செலவு கோடிக்கணக்கில். மாதம் இலட்சத்திற்கும்மேல் சம்பளம் வாங்கும் மருத்துவர்கள். குளிரூட்டப்பட்ட அலுவலக அறைகள், கணினி மயமாக்கப்பட்ட விவரங்கள், காம்பவுண்டுக்குள்ளும் வெளியேயும் சுற்றி வர ஏராளமான வாகனங்கள், மினுக்கும் கட்டிடங்கள், என்று எங்கும் நோங்கினும் கண்ணுக்கு இனிமை. ஆனால், அதற்கு ஆதாரமான தொழுநோயாளிகளின் நிலையோ தீராதக் கொடுமை. 50-60 களில் கண்டுப்பிடிக்கப்பட்ட மாத்திரைகளை தவிர புதியதாக எதுவுமே நோயாளிகளுக்கு இல்லை. ஆராய்ச்சி என்ற பெயரில் சுவர்களுக்கு பெயிண்டு அடிப்பது, தரைகளுக்கு டைல்ஸ்போடுவது பூச்செடிகளை பராமரிப்பதை தவிர வேறோன்றும் நடப்பது இல்லை. தொழுநோயாளிகளின் சாதாரண சளிக்கும், வெளியில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் அவலமே நீடிக்கிறது.
பைபிள் காலத்தில் தொழுநோயாளிகளை ஊரை விட்டே விரட்டி தனி கொட்டடியில் வைத்திருந்த காலம் உண்டு. அவர்கள் மீது ஏசு நாதர் இரக்கம் காண்பித்த கதைகளையும் கேட்டிருப்போம். அன்றிலிருந்து கிட்டத்தட்ட 20 நூறாண்டுகள் கழிந்து விட்டன. எனினும் இந்தியாவில் தொழு நோயாளிகளின் சமூக நிலை பெரிதாக மாறிவிடவில்லை. குடும்பம், சுற்றம் துரத்துகிறது. ஏழ்மை காரணமாக ஆரம்பத்திலேயே குணப்படுத்த வேண்டிய நோய் இறுதியில் ஆட்கொல்லி நோயாக மாறுகிறது. குடும்ப ஆதரவும் இல்லாமல், வேறு தொழிலும் செய்ய முடியாமலும் அவர்கள் பிச்சை எடுத்தே வாழ நேர்கிறது. சிலர் தமது நோயின் தீவிரத்தை தணித்துக் கொண்டு சாதாரண வேலைகளை செய்து வந்தாலும் தனது நோயை மறைக்க பெரும்பாடுபடவேண்டியிருக்கிறது. பெண்கள் என்றால் இந்த சமூக அவலம் இன்னும் சோகத்தை கூட்டி சுமக்க வைக்கிறது.
இந்த மக்களுக்கு வேலை செய்யும் மக்களின் அர்ப்பணிப்பு ஒன்றுதான் நோயாளிகளுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச நம்பிக்கை. ஒரு சிலர் இம்மக்களை அவர்களின் வீடுகளுக்கும் அழைத்துப் போவதுண்டு. கட்டுப் போடுபவர்கள் சிலருக்கும் இந்த நோய் தாக்குவதுண்டு. குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் இவர்கள் இல்லை என்றால் தொழுநோயாளிகளுக்கு மனித குலத்தில் பிறந்ததனால் எந்த பயனும் இருக்காது.
ஏதோ அரசு நிறுவனம் ஒன்று இருப்பதால் இந்த மக்களுக்கு ஒரு குறைந்தபட்ச சிகிச்சையாவது இருக்கிறது. சுகாதாரத் துறையில் தனியார் மயம் பூர்த்தியானால் இம்மக்கள் அனைவரும் வலிந்து இறப்பதைத் தாண்டி வேறு வாழ்க்கையை நினைக்கவே முடியாது. செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கும் இம்மருத்துவமனையை ஒரு முறை நேரில் சென்று பாருங்கள். தொழுநோயின் நாற்றம் இச்சமூக அமைப்பின் நாற்றத்தை புரிய வைக்கும்.
படிப்படியான மதுவிலக்கு என்பது மக்களை மடையர்களாகக் கருதும் ஆணவப் பேச்சு! முதல்வர் ஜெயாவின் தேர்தல் நாடகம்!
அன்புடையீர் வணக்கம்!
குடிபோதையால் தமிழ்ச்சமூகமே சீரழிக்கப்பட்டு பெண்கள், மாணவர்கள், சிறுவர்கள் எனக் குடிப்பது அதிகரித்துள்ளது. ஒரு கோடி பேர் குடி நோயாளிகளாக உள்ளனர். லட்சக்கணக்கான பெண்கள் விதவைகளாக வாழ்வை இழந்துள்ளனர்.
கடந்த ஓராண்டாக டாஸ்மாக்கை மூடக் கோரி மக்களும் பல்வேறு அமைப்புகளும் போராடி வருகின்றனர். சசிபெருமாள் அநியாயமாக கொலை செய்யப்பட்டார். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை ஒரு மாதத்துக்கும் மேலாக சிறையிலடைத்தது இந்த அரசு. மேலப்பாலையூர் விவசாயிகள் ஒரு மாதம் சிறை வைக்கப்பட்டனர். கடையை மூடச்சொல்லி போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு போட்டு கோவை, சென்னை, கடலூர் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
படிப்படியான மதுவிலக்கு – ஜெயாவின் ஆணவப் பேச்சு
“ஊருக்கூரு சாராயம்” எனப் பாடிய கோவன் தேசத்துரோக வழக்கில் கைது.. மதுவிலக்கை அமல்படுத்து என்ற திருச்சி மாநாட்டில் பேசியதற்காக மக்கள் அதிகார நிர்வாகிகள் உட்பட 6 பேர் மீது தேசத் துரோக வழக்கு. இதுதான் ஜெயா அரசின் டாஸ்மாக் மீதான நிலைப்பாடு.
ஆனால், நேற்று தேர்தல் பிரச்சார உரையாற்றிய ஜெயலலிதா, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த இருப்பதாகக் கூறியிருக்கிறார். இது ஆழ்ந்து சிந்தித்து எடுத்த முடிவு எனக் குறிப்பிட்ட அவர் தி.மு.க ஆட்சியில் விற்கப்பட்ட மதுப்புட்டிகளின் அளவையும் தனது ஆட்சியில் விற்கப்பட்ட மதுவின் அளவையும் ஒப்பிட்டு தனது ஆட்சியில் குடிகாரர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாகக் காட்டியிருக்கிறார். தமிழ்ச்சமூகத்தை போதையால சீரழித்து விட்டு வாக்குக்கு ஆயிரக்கணக்கில் பணத்தை விட்டெறிந்து மீண்டும் முதல்வராக முடியும் என்ற ஆணவம்தான் அவரை இப்படிப் பேசவைக்கிறது. எந்த சுயமரியாதையுமின்ற அடிமைகளாக இருக்கும் அ.தி.மு.க கட்சிக்காரர்கள் போல் அனைத்து மக்களையும் ஏளனமாக நினைக்கிறார்.
சட்டமன்றத்தில் அமைச்சர் ந்ததம் விஸ்வநாதன் ‘மதுவிலக்கை அமல்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை. கள்ளச்சாராயம் பெருகும். அரசுக்கு வருமானம் பாதிக்கும். அண்டை மாநிலங்களுக்குச் சென்று குடிப்பார்கள்’ என்று பதில் சொன்னார். தமிழகத்தைப் போல மக்கள் போராட்டங்கள் நடைபெறாத கேரளத்தில் கால இலக்கு தீர்மானித்து மதுவிலக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பீகார் அரசு முழு மதுவிலக்கு அறிவித்திருப்பதுடன், கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கு கடும் தண்டனையும் அறிவித்திருக்கிறது. தமிழக முதல்வரோ மதுவிலக்கு என்பதை தேர்தல் வாக்குறுதியாக்கி தன்னை மீண்டும் முதல்வராக்கினால் படிப்படியாக மதுவிலக்கு என்று பேரம் பேசுகிறார். இந்த அறிவிப்பைக் கேட்டு டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
சாராய ஆலைமுதலாளிகள், பார் நடத்தும் அ.தி.மு.க கட்சிக்காரர்கள், அதிகார வர்க்கத்தினர், டாஸ்மாக்கால் ஆதாயம் அடைபவர்கள் என சாராய சாம்ராஜ்யம் ஜெயா, சசி உள்ளிட்டு பரந்து விரிந்தது. எனவேதான் மக்கள் அதிகாரம் சொல்கிறது. தங்கள் தெருவிலுள்ள சாராயக் கடையை மூடுவதற்கு யாரையும் முதல்வராக்க வேண்டிய அவசியமில்லை. காத்திருக்கவும் தேவையுமில்லை.
மக்களே களத்தில் இறங்கிப் போராடினால் டாஸ்மாக்கை மூடமுடியும். கடந்த ஓராண்டாக மக்கள் அதிகாரமும் மக்களோடு இணைந்து போராடியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வரும் ஏப்ரல் 20 அன்று தமிழகத்தின் முக்கிய இடங்களில் டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருக்கிறோம். அ.தி.மு.க பொதுச்செயலரின் இந்த அறிவிப்பை புறந்தள்ளி அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
சி.இராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர்.
மக்கள் அதிகாரத்தின் டாஸ்மாக் அலுவலக முற்றுகைப் போராட்ட அறிவிப்பு
யாருக்காக அரசு? மூடு டாஸ்மாக்கை!
அன்பார்ந்த பெரியோர்களே! தாய்மார்களே!
நாங்கள் மக்கள் அதிகாரம், மூடு டாஸ்மாக்கை என்று தமிழகமெங்கும் போராடி வரும் இயக்கம், சீரழிக்கப்பட்டு வரும் இளைஞர்களை மீட்க, தாய்மார்களின் கண்ணீர் துடைக்க, தமிழ்ச் சமுதாயத்தை பேரழிவிலிருந்து காப்பாற்ற ஏப்ரல் 20 அன்று டாஸ்மாக் அலுவலக முற்றுகை அறிவித்திருக்கிறோம். அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம்.
நாங்கள் மக்கள் அதிகாரம். டாஸ்மாக் கடையை மூடிய எங்கள் விவசாயிகளும், மாணவர்களும் கைது செய்யப்பட்டார்கள். ஊருக்கு ஊரு சாராயம் என்று பாடிய எமது பாடகர் கோவன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். திருச்சியில் நாங்கள் நடத்திய மாநாட்டில் உரையாற்றியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த அடக்குமுறைகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். போராட வாருங்கள் என்று உங்களையும் அறைகூவி அழைக்கிறோம்.
பீகாரில் மது விலக்கு… கேரளாவில் மது விலக்கு…
பீகாரில் கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை!
தமிழ்நாட்டிலோ டாஸ்மாக்கை மூடு என்று பேசினாலே தேசத்துரோக வழக்கு!
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் இருந்து என்ன பயன்?
எத்தனை இளம்பெண்கள் தாலியறுத்தாலும், எத்தனை மாணவர்கள் அப்பனை இழந்தாலும், எத்தனை குடும்பங்கள் கண்ணீரில் தவித்தாலும் டாஸ்மாக்கை மூட முடியாது என்கிறார் ஜெயலலிதா.
மூடினால் அரசுக்கு வருமானம் போகும் என்பதல்ல பிரச்சினை. மூடினால் சாராய ஆலை முதலாளிகளுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் போகும். போலீசு அதிகாரிகளுக்கு, அரசு அதிகாரிகளுக்கு பார் நடத்தி கொள்ளையடிக்கும் கட்சிக்காரர்களுக்கு கோடிக்கணக்கில் வருவாய் போகும். அதனால்தான் இலவசம் தருகிறேன், ஓட்டுக்கு பணம் தருகிறேன், ஆனால் சாராயக் கடையை மட்டும் மூட முடியாது என்கிறார் ஜெயலலிதா.
இன்னும் கடை திறந்து, இன்னும் குடிக்க வைப்பது எப்படி என்று திட்டம் தீட்டுகிறார்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். இதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? நம்முடைய தெருவில், நம்முடைய ஊரில் கடையை மூடுவதற்கு நாம் யாரைக் கேட்க வேண்டும்? தேர்தல் வரை நாம் ஏன் காத்திருக்க வேண்டும்?
தேர்தலுக்காகக் கூட டாஸ்மாக்கை மூட முடியாத தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்தப் போகிறதாம். நாம் 100% ஓட்டுப் போட வேண்டுமாம்.
எம்.எல்.ஏ ஆவதும் பதவிக்கு வருவதும் அவர்கள் கவலை.
கடையை மூட வேண்டும்என்பது நமது கவலை.
நாளை வரப்போகும் அரசு – ஒருவேளை கடையை மூடினாலும்
இன்று டாஸ்மாக் கடைக்கு காவல் நிற்கும் போலீசு
நாளை கள்ளச்சாராய வியாபாரத்துக்கும் துணை நிற்கும்.
சாராயத்தை நிறுத்த வேண்டுமென்றால்
மக்களாகிய நாம் போராடாத வரை
நாம் அதிகாரம் செலுத்தாத வரை முடியாது
நாம் முடிவு செய்தால், நாம் போராடினால்
நாளையே கடையை மூட முடியும்.
நாம் போராடாதவரை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
கடையை மூடாது.
அனைவரும் வாரீர்!
ஏப்ரல் 20 டாஸ்மாக் அலுவலத்தை முற்றுகையிடுவோம்.
“ஒடுக்கப்பட்ட வர்க்கம் தன்னுடைய விடுதலையைத் தானே நிறைவேற்றுவதற்குப் பக்குவம் பெறாதிருக்கின்ற வரையில், இன்றுள்ள சமூக அமைப்பு ஒன்றுதான் சாத்தியமானது என்று அதன் பெரும்பான்மையினர் கருதிக்கொண்டிருப்பார்கள்.” – எங்கெல்ஸ் குடும்பம், தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்.
தேர்தலைப் புறக்கணியுங்கள்’ என்று நாம் கூறும்போது “தேர்தலையா புறக்கணிக்கச்சொல்கிறாய்?” என்று மக்கள் யாரும் கொதித்தெழுவதில்லை. இந்தத் தேர்தல் ஜனநாயகம் தங்களுக்கு எதையும் வழங்கவில்லை என்பதை மக்கள் தம் சொந்த அனுபவத்தில் உணர்ந்தேயிருக்கிறார்கள். அதனால் தான் ‘தேர் தலைப் புறக்கணித்து விட்டு வேறென்ன செய்வது?” என்று விழிக்கிறார்கள். எங்கெல்சின் வார்த்தைகளில் சொன்னால் ‘இன்றுள்ள சமூக அமைப்புதான் சாத்தியமானது என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள். ஆளும்வர்க்கமோ இந்த ஜனநாயக அமைப்புதான் மனிதகுலம் கண்டறிந்த அதி உன்னத சமூக அமைப்பு என்றும், இதற்கு வேறு மாற்றே இல்லை என்றும் சாதிக்கிறது. “வேறென்னமாற்று” என்று ஏக்கத்துடன் கேட்கும் மக்களின் அவலத்திற்கும், “வேறு மாற்றே இல்லை” என்று சவால் விடும் ஆளும்வர்க்கத்தின் ஆணவத்திற்கும் இடைப்பட்ட சந்தில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது இந்தியாவின் தேர்தல் ஜனநாயகம்.
ஜனநாயகம் என்பது வேறு ஏதோவொரு ஒரு உன்னதமான இலட்சியத்தை அடைவதற்கான வழிமுறையா, அல்லது ஜனநாயகம்தான் அந்த லட்சியமா? இது வழிமுறை என்றால் அந்த உன்னத லட்சியம் என்பது என்ன என்ற கேள்விக்கு நாம் விடை காணவேண்டும். அல்லது ஜனநாயகத்தைப் பாதுகாப்பது தான் ஜனநாயகத்தின் லட்சியம் என்றால் அந்த லட்சியத்தின் லட்சனம் என்ன என்பதையும் நாம் பிரித்து ஆராய வேண்டியுள்ளது.
இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே பகவான் எடுத்துள்ள பதினொன்றாவது அவதாரமான மார்க்சிஸ்டு கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி (இந்து நாளேடு 25.3.2004) தனது கட்டுரை யொன்றில் ரத்தக் கண்ணிர் வடிக்கிறார்.
தேர்தலில் பணம் ஆறாக ஒடுகிறது. அரசியல் கட்சிகள் முதலாளிகளுடன் நேரடியாகத் தங்களை அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள் அரசின் கொள்கைகளோ மேலும் மேலும் பணக்காரர்களுக்கு ஆதரவாகவே சென்று கொண்டிருக்கின்றன. ஜனநாயகத்தின் அர்த்தம் களவாடப்படுகிறது. தேர்தல் ஜனநாயகத்தின் வெளியலங்காரம் பாதுகாக்கப்படுகிறது; ஆனால் ஜனநாயகத்தின் சாரமோ புறந்தள்ளப்படுகிறது” என்கிறார் யெச்சூரி.
தேர்தல் அரசியலின் சீரழிவுகளை இன்னமும் அடுக்கலாம். 13-வது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கிரிமினல் குற்ற வழக்குகளில் சிக்கிய அயோக்கியர்கள்; இந்தத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் கோடீசுவரர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்களின் நிலை இதுவென்றால், நிர்வாக எந்திரமும் போலீசும் ஆளும் வர்க்கத்தின் கையாட்படையாகவும் கிரிமினல்களின் கூடாரமுமாகவே செயல்படுகின்றன. சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காகவே இறக்கப்பட்டிருக்கும் நங்கூரமான நீதிமன்றமோ மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் கட்டைப் பஞ்சாயத்து மன்றமாக இருக்கிறது.
யெச்சூரியின் கண்ணிருக்கு வலுச்சேர்க்கும் ஆதாரங்களை நாம் இன்னமும் அடுக்கலாம். ஆனால் “ஜனநாயகத்தின் அர்த்தம் களவாடப்படுகிறது. அதன் சாரம் புறந்தள்ளப்படுகிறது” என்று அவர் கூறுகிறாரே அந்த சாரம் என்ன என்பதே நம் முன் உள்ள கேள்வி.
இந்தச் சீரழிவுகளின் மரபணுக்களைத் தன்னகத்தே கொண்டிராத துய்மையான தெளிந்த கன்னிமை குலையாத அந்த ஜனநாயகத்தின் சாரம் என்ன? யெச்சூரியும், தினமணியின் நடுப்பக்கக் கட்டுரையாளர்களான காரியக் குருடர்களும், அசடுகளும் மீட்க விரும்பும் அந்த தேவனுடைய சாம்ராச்சியம் எங்கே இருக்கிறது? பைபிளைப் போலவே இதுவும் காகிதத்தில்தான் இருக்கிறது – அரசியல் சட்டக் காகிதத்தில்.
இந்திய அரசியல் சட்டத்தின் ஜனநாயக அஸ்திவாரம் கீழ்க்கண்ட அடிப்படை உரிமைகளை நமக்கு வழங்குகிறது. “சட்டத்தின் முன் அனைவரும் சமம், மத, இன, சாதி, பால் வேறுபாடுகளின் அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படாமை பேச்சுரிமை வழிபாட்டுரிமை தனிநபர் சுதந்திரம் மற்றும் வாழ்வுக்குப் பாதுகாப்பு.”
அரசியல் சட்டத்தின் வழிகாட்டும் கோட்பாடோ ஒரு பொற்காலத்தை நமக்குப் படமாகக் காட்டுகிறது.
“எல்லோருக்கும் சமநீதி, பசியும் வறுமையும் அற்ற வாழ்க்கை, கவுரவமாக வாழும் சுதந்திரம், கவுரவமான ஊதியம் பெறும் உரிமை, பாலின சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு. கட்டாய அடிப்படைக் கல்வி, பொதுச்சுகாதாரம், சத்துணவுக்கு அனைவருக்கும் சம வாய்ப்பு, தேசிய சொத்துக்கள் வளங்களைப் பாதுகாத்தல்…” என்று ரீல் ரீலாக ஒடுகிறது இந்தப்படம்.
நடப்போ கற்காலத்தை நோக்கித் திரும்பிச் செல்வதாக இருக்கிறது. ஒரு வர்க்கத்துக்கு ஒரு நீதி, உணவுக் கிடங்கின் வாசலிலேயே மக்கள் பட்டினியால் செத்தாலும் 6 கோடிடன் உணவுத் தானியத்தைப் பூட்டி வைப்பதற்கான சுதந்திரம், குறைந்தபட்ச ஊதியம் என்ற சட்டப் பாதுகாப்பையே நீக்குதல், உடன்கட்டை முதல் விபச்சாரம் வரையில் அனைத்துக்கும் அங்கீகாரம். வன்கொடுமைத் தடைச்சட்டத்தையே ஒழிப்பது, தொடக்கப் பள்ளிகள் முடல், அரசு மருத்துவமனைகள் மூடல், சுரங்கங்கள், காடுகள், துறைமுகங்கள், பொதுத்துறைகள், அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏலம் விடுதல். வழிகாட்டும் கோட்பாடுகளின் லட்சணம் நடைமுறையில் இப்படித்தானிருக்கிறது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால் எந்தப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று ஆள்வதற்கான நியாயவுரிமையை இந்த அரசாங்கம் பெறுகிறதோ அந்த மக்களின் நலன்களை பணக்காரவர்க்கத்துக்கு அதாவது வாக்குச் சாவடியையே தங்கள் வாழ்க்கையில் பார்த்திராத வர்க்கத்திற்குக் காவு கொடுப்பதே இந்த ஜனநாயகத்தின் சாரமாக இருக்கிறது.
ஆனால் கிழக்கே செல்ல வேண்டிய ஜனநாயகம் மேற்கு நோக்கித் திசை திரும்பிவிட்டதாகவும் அதனைத் தேர்தல் முறையின் வாயிலாகவும் இந்த அரசமைப்புக்கு உட்பட்டும் மீண்டும் நெறிப்படுத்தி விட முடியுமென்றும் நம் பச் சொல்கிறார்கள் யெச்சூரி வகையறாக்கள். அதாவது இந்த அரசமைப்பு கூறும் இலட்சியங்களைத் தேர்தல் ஜனநாயக வழிமுறை மூலமே அடைந்துவிட முடியும் என்று ஆசைகாட்டுகிறார்கள்.
சொத்துரிமையையும் சுரண்டும் உரிமையையும் அடிப்படை உரிமைகளாகக் கொண்டிருக்கும் ஜனநாயகம், அனைவருக்கும் சமநீதியை எப்படி நிலைநாட்ட முடியும் என்பதே கேள்வி.
இந்தியாவின் முன்னணி தரகு முதலாளிகள்.
கேள்வியை இப்படிப் போடுவோம். “இந்தியா யாருக்குச் சொந்தம்?” “சந்தேகமில்லாமல் இந்தியர்களுக்குத்தான் சொந்தம்” என்று பதில் வரும். ஆனால், தொலைபேசித் துறையில் பாதி பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தம், எண்ணெய் எரிவாயுத் துறையில் பாதி அம்பானிக்குச் சொந்தம், துறைமுகங்களும் பிரதமரின் தங்க நாற்கரச்சாலையும், சுரங்கங்களும் கனிம வளங்களும் அமீனா அருண்சோரியின் கையில் கிடைத்த அனைத்தும் அந்நிய முதலாளிகளுக்குச் சொந்தம். “எஞ்சியிருக்கும் இந்தியா இந்தியர்களுக்குச் சொந்தம்” என்று பொருள் கொள்ளலாமா?
“ஒரு சொத்தின் உடைமையாளனுக்குத்தான் அதன்மீது அதிகாரம் இருக்கிறது” என்ற எளிய உண்மையை அளவுகோலாகக் கொண்டு பார்த்தால் இந்தியா என்ற சொத்தின் மீதான அதிகாரம் பெரும்பான்மை இந்தியர்களிடம் இல்லை. ஆனால், இந்தியா என்ற தேசத்தின் மீது மக்களுக்கு அதிகாரம் இருக்கிறதாம். முந்தையது பொருளாதார ரீதியான அதிகாரமாம்! பிந்தையது அரசியல் ரீதியான அதிகாரமாம்! அதாவது மக்களின் இறையாண்மையாம்!
“சொத்துடைமையாளர்கள் தான் தேசத்தின் நியாயமான சொந்தக்காரர்கள். மற்ற மக்களெல்லாம் விடுதியில் தங்கிச் செல்லும் வழிப்போக்கர்களைப் போன்றவர்கள்” என்றார் ஒரு 18-ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் முதலாளித்துவ அறிஞர். “தனிச் சொத்துடைமைதான் நாகரிகத்திற்கு அடிப்படை என்றால், நாகரிகத்தைக் காப்பதுதான் அரசின் கடமை என்றால், யாருக்குத் தேசம் சொந்தமாக இருக்கிறதோ, அவர்கள் தான் அதை ஆட்சி செய்ய வேண்டும்” என்றார் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி.
அனைவருக்கும் வழங்கப்படும் வாக்குரிமை, தங்களது சொத்துரிமையில் கை வைத்துவிடாமல் தடுப்பதெப்படி? மன்னனிடமிருந்து பறிக்கப்பட்ட இறையாண்மையை மக்கள் தமக்கெதிராகப் பயன்படுத்திவிடாமல் தடுப்பதெப்படி? – என்ற கேள்விகளுக்கு விடை கானும் போக்கில்தான் எல்லா முதலாளித்துவ ஜனநாயக மாயைகளும் உருவாக்கப்பட்டன. பேச்சுரிமை எழுத்துரிமை தொடங்கி எல்லா வகையான உரிமைகளும் மக்கள் நல அரசு முதல் பஞ்சாயத்து ராஜ் வரையிலான எல்லா மாயத் தோற்றங்களும் இந்த வகைப்பட்டவை தான்.
முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீதான மயக்கத்தைப் பராமரிப்பதில் பெரும்பங்கு வகிக்கும் பல கட்சி ஆட்சி முறை, வேறுபட்ட அரசியல் பொருளாதாரக் கருத்தோட்டங்களுக்கும் இடமளிப்பதைப் போன்றதொரு பிரமையை மக்களிடம் தோற்றுவிக்கிறது. உண்மையில் சொத்துடைமை வர்க்கத்தின் வேறுபட்ட பிரிவினருடைய நலன்களையும், அவர்களுக்கிடையிலான முரண்பாடுகளையும் தான் இவர்கள் பிரதிபலிக்கின்றனர். உற்பத்திச் சாதனங்களின் மீதான தனியுடைமையைப் பாதுகாப்பதென்ற சத்தியப்பிரமாணம் அடிப்படையிலேயே இவர்களை ஒன்றிணைக்கிறது. ஓரணியாய் வைத்திருக்கிறது.
இதற்கு உடன்படாதவர்கள் தான் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் அல்லது ஜனநாயக வழிமுறைகளில் நம்பிக்கையில்லாதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டுப் போலீசால் விலங்குகளைப் போல வேட்டையாடப்படுபவர்கள்.
முதலாளித்துவச் சுரண்டலை ஒப்புக் கொள்வது என்ற நிபந்தனையின் பேரில் நமக்கு வழங்கப்படும் உரிமைகள் தான் முதலாளித்துவ ஜனநாயக உரிமைகள். எனவே இந்த உரிமைகள் தன்னியல்பிலேயே முரண்பாடுகளைக் கொண்டிருப்பதில் வியப்பில்லை.
மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு எழுத்தறிவே இல்லாத போது எழுத்துரிமையால் என்ன பயன்? கல்வியறிவிருந்தாலும் லட்சக்கணக்கில் பணமின்றி பத்திரிக்கை நடத்த முடியாது எனும்போது கருத்துரிமையால் என்ன பயன்? வேலை வாய்ப்பே இல்லாத போது இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்யும் உரிமையால் என்ன பயன்? உள்ள தொழில்களே நசிந்து கொண்டிருக்கும் போது எங்கு வேண்டுமானாலும் தொழில் நடத்தும் உரிமையால் என்ன பயன்? பட்டினியால் சுருண்டு கிடப்பவனுக்கு வாழ்வுரிமையால் என்ன பயன்?
மக்கள் தமக்குத் தெரிந்த முறையில் இந்தக் கேள்வியை எழுப்பிக் கொண்டு தானிருக்கிறார்கள். “உணவு தண்ணீர் மின்சாரம் சாலை, கல்வி, மருத்துவம் வேலை. என எதையுமே வழங்க முடியாத வாக்குரிமையால் என்ன பயன்?” என்று தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள்.
அப்துல் கலாமின் கூற்றுப்படி ”ஒவ்வொரு குடிமகனுக்கும் ஜனநாயகத்தில் சமஉரிமை உண்டு என்பதற்கு நிரூபணமாக விளங்கும் தேர்தலை, புனிதமான வாக்குரிமையை, தாய்மண்ணுக்கு ஆற்ற வேண்டிய கட்டாயக்கடமையை” கேவலம் இரண்டு குடம் தண்ணீருக்காக ஒரு ரேசன் கடைக்காக ஒரு மருத்துவ மனைக்காகப் புறக்கணிக்கிறார்கள், ‘உரிமையின் அருமைபுரியாத’ மக்கள்.
பச்சையாகச் சொல்வதானால் இரண்டு வேளை சோறும் துணியும் கொடுக்கத் தயாரென்றால் எங்களுக்கு உன் வாக்குரிமையே வேண்டாமென்று பத்திரம் எழுதித்தரவும் தயாராக இருக்கிறார்கள் ஏழை இந்தியர்கள். அதாவது “சோறா – சுதந்திரமா” என்ற கேள்விக்கு ”சோறு” என்று பதிலளிக்கிறது ஏழைகளின் இந்தியா. ஆளும் வர்க்கமோ ”சோறு போட முடியாது, ’சுதந்திரம்’ தான் தருவேன்” என்று முழங்குகிறது.
“பொருளாதாரச் சுரண்டல் காரணமாக நீ வழங்கும் எந்தச் சுதந்திரத்தையும் பணமில்லாத மக்களால் பயன்படுத்த இயலவில்லை” என்று சொன்னால் ”பொருளாதார ஏற்றத்தாழ்வும் சுதந்திரத்தின் ஒரு அங்கமே” என்று பதில் சொல்கிறது முதலாளித்துவம்.
’அரசியல் சமத்துவம்’ என்ற முதலாளித்துவ நரித்தனத்தின் சாயம் இங்கே வெளுத்து விடுகிறது. ’தனிநபர் சுதந்திரம்’ என்ற சொற்றொடரின் உண்மையான பொருள் விளங்கத் தொடங்குகிறது.
’கட்டுப்பாடுகள் இல்லாமை’ என்ற எதிர்மறைப் பொருளில் மட்டுமே சுதந்திரத்திற்கு விளக்கம் கூறும் முதலாளித்துவம் பொருளாதார ஏற்றத்தாழ்வை இயற்கையானதாகவும் தலையிடக் கூடாததாகவும் சித்தரிக்கிறது.
”அவனவன் பாடு அவனவனுக்கு; உன் சொந்தக் காலில் நின்று கொள்; யாரும் உனக்கு வாழ்க்கையை வழங்க முடியாது; நீயே முயன்று முன்னேறிக்கொள்; முன்னேறுவதற்காக பொய், களவு, சூது சதி போன்ற வழிமுறைகளை நீ பின்பற்ற வேண்டியிருந்தால் செய் – அது உன் திறமை” என்கிறது முதலாளித்துவம்.
எனவே “சொத்து சேர்ப்பவன் தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றவன் தனிநபரின் மகிழ்ச்சிதான் உயர்ந்த லட்சியம். இந்தப் போட்டியில் இடறி விழுந்த திறமையற்ற மனிதர்கள்தான் ஏழைகள்.அவர்களுக்காக நாம் இரக்கம் காட்ட முடியாது. திறமையின்மையின் விளைவுதான் ஏழ்மை” என்கிறது முதலாளித்துவம்.
ஆடுகளைத் தின்பதற்கு ஒநாய்கள் இயற்கையாகவே பெற்றிருக்கும் சுதந்திரத்தைத்தான் முதலாளித்துவத் தனிநபர் சுதந்திரம் வலியுறுத்துகிறது. முடியாட்சிக்கும். சர்வாதிகாரத்திற்கும் எதிரானதாகத் தன்னைச் சித்தரித்துக் கொள்ளும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சித்தாந்தம், கோட்பாட்டிலும் நடைமுறையிலும் அதற்கு நேரெதிரான துருவத்தில் நிற்கிறது.
வலியதே வெல்லும் என்ற இந்தச் சித்தாந்தம் பாசிசம், நாஜிசம், பார்ப்பனியம், நிறவெறி ஆகிய அனைத்துப் பிற்போக்குத் தனங்களுடனும் தொப்புள் கொடி உறவைக் கொண்டிருக்கிறது.
பெரும்பான்மையான உழைக்கும் மக்களைத் தேவையற்றவர்களாகவும் செத்தொழிய வேண்டியவர்களாகவும் மக்கள் நலத்திட்டங்களை ’தேசத்தின் மீது’ திணிக்கப்பட்ட சுமைகளாகவும் தொழிலாளர்களின் உரிமைகளை பொருளாதாரத்திற்குப் பூட்டப்பட்ட விலங்குகளாகவும் சித்தரிக்கும் மறுகாலனியாக்கக் கொள்கையின் ’பார்வை’ திடீரென்று தோன்றிய திசைவிலகல் அல்ல. இதுதான் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சாரம்.
அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையில் முதலாளித்துவம் மிகத்தந்திரமாக எழுப்பியிருக்கும் தடுப்புச்சுவரைத் தகர்க்காமல் சுதந்திரம், சமத்துவம் என்ற இந்தச் சொற்களுக்கான உண்மையான பொருளை நாம் காண முடியாது.
இன்று உற்பத்திச் சாதனங்களின் மீதான உடைமை வெகுவிரைவாகத் தனியார் முதலாளிகளின் கைக்கு மாறிக் கொண்டிருக்கும் போது, உலகின் செல்வங்கள் அனைத்தும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில பன்னாட்டு தொழிற்கழகங்களின் உடைமையாகி வரும்போது அரசியல் அதிகாரம் மட்டும் நம் கையில் நீடிக்க முடியும் என்று கருதுவது அசட்டுத்தனம் சொத்தின் உடைமையாளன் தான் தேசத்தை ஆள்கிறான். இதுதான் முதலாளித்துவ ஜனநாயகம்.
உற்பத்திச் சாதனங்களின் மீதான தனியுடைமையை ஒழிக்கும் சோசலிசம் ’ஜனநாயக விரோதமானது’ என்று எதிரிகள் கூக்குரல் எழுப்புவதன் காரணமும் இதுதான். எதிரிகளின் ’ஜனநாயக’ உரிமையைப் பறிப்பது தான் தங்களது ஜனநாயக உரிமையை மக்கள் நிலைநாட்டிக் கொள்வதற்கான முன்நிபந்தனை அந்த நடவடிக்கையின் பெயர் புரட்சி.
இந்த ஜனநாயகம் என்பது வேறெந்த உயர்ந்த இலட்சியத்தையும் அடைவதற்காக உருவாக்கப்பட்ட வழிமுறை அல்ல. ஜனநாயகத்தின் இலட்சியம் முதலாளித்துவத் தனிச் சொத்துடைமை. இன்று அதன் பரிணாம வளர்ச்சி ஏகாதிபத்திய மறுகாலனியாக்கம்!
இந்தத் தேர்தல் ஜனநாயகத்தை ஒரு ’வழிமுறை’ என்று இன்னமும் நம்பிக் கொண்டிருப்பவர்கள் தாராளமாக வாக்களிக்கலாம். நீங்கள் யாருக்கு வாக்களித்தாலும் பாசிசத்திற்கு வாக்களிக்கிறீர்கள் என்றே பொருள். ஏனென்றால் முதலாளித்துவ ஜனநாயகத்தின் தவிர்க்கவியலாத நிலைமறுப்பே பாசிசம்.
உலகின் வயல்கள் யாவும்
சிறிய உதடுகள் இரண்டுடன் முரண்படுகின்றன
வரலாற்றின் வீதிகள் யாவும்
வெறுங்கால்கள் இரண்டுடன் முரண்படுகின்றன.
அவர்கள் பயணஞ் செய்கின்றனர்
நாங்கள் தங்கி நிற்கிறோம்
தூக்குமரம் அவர்களுக்குரியது
கழுத்துக்கள் எங்களுக்குரியன
முத்துக்கள் அவர்களுக்குரியன
பாலுண்ணிகளும் தோற் பொட்டுக்களும் எங்களுடையன.
இரவும் விடியலும் பிற்பகலும் பகல் வெளிச்சமும்
அவர்களுக்குரியன
தோலும் எலும்பும் எங்களுடையன.
பகற்பொழுதின் சூரிய வெப்பத்தில் நாம் பயிரிடுகிறோம்
நிழலிலிருந்து அவர்கள் உண்கிறார்கள்
அவர்களது பற்கள் அரிசி போல் வெண்மை
எம்முடையவை காடு போற் கருமை
அவர்களது நெஞ்சுகள் பட்டுப்போல் மென்மையானவை
எம்முடையவை தூக்குமரச் சதுக்கங்கள் போல் அழகற்றவை.
எனினும் நாமே உலகின் மன்னர்கள்.
அவர்களுடைய வீடுகளில் வகைப்படுத்தப்பட்ட
கோப்புக்களின் அடுக்குக்கள்
எம்முடையவற்றில் இலையுதிர் காலத்தின் இலைகள்
அவர்களது சட்டைப் பைகளில் திருடர்களதும்
துரோகிகளதும் முகவரிகள் உள்ளன
எம்முடையவற்றில் ஆறுகளும் இடியும் உள்ளன.
சன்னல்கள் அவர்களுக்குரியன
காற்றுக்கள் எங்களுக்குரியன
கப்பல்கள் அவர்களுக்குரியன
அலைகள் எங்களுக்குரியன
பதக்கங்கள் அவர்களுக்குரியன
அழுக்கு எங்களுக்குரியது
கவர்களும் மாடிமுகப்புக்களும் அவர்களுக்குரியன
கழுத்துத்துணியும் கட்டாரியும் எங்களுக்குரியன.
ஆனாலும் என் அன்பே
இப்போது நாம் நடைபாதையிலேதான் உறங்க வேண்டும்.
– முஹம்மது அல் மஜீத் (சிரியா)
நன்றி: தாயகம் (செப் ’2003)
(யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலாண்டிதழ்)
டாஸ்மாக்கை மூடு என்றால் தேச துரோக வழக்கு !
தேச துரோக வழக்கு போடாதே என பேச அனுமதி மறுப்பு!
அனுமதி மறுக்காதே என்றால் கைது!
இதுதான் தேர்தல் ஆணையத்தின் ஜனநாயகம்!
மூடு டாஸ்மாகை என்ற முழக்கத்தின் கீழ் திருச்சியில் பிப்ரவரி 14 சிறப்பு மாநாடு மக்கள் அதிகாரம் சார்பாக நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பேசிய மக்கள் அதிகாரம் தோழர்கள், மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆறுபேர் மீது தேசதுரோக வழக்குபோட்டுள்ளது தமிழக அரசு. டாஸ்மாக்கை மூடு என பேசியதற்காக தேசதுரோக வழக்கு போட்டதை பல்வேறு அரசியல் கட்சியினரும் ஜனநாயக சக்திகளும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த தேசதுரோக வழக்கிற்கு எதிராக மக்கள் அதிகாரம் சார்பாக தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தருமபுரியில் உள்ள பல்வேறு கட்சியினர், ஜனநாயக சக்திகள் பேசுவதற்கு முன்வந்தனர்.
இந்நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மக்கள் அதிகாரம் தோழர்களும் சிபிஐ, சிபிஎம், திமுக, தேமுதிக, திக, விசிக உள்ளிட்ட கட்சியினரும் தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவகம் முன்பாக குவிந்தனர்.
முன்னதாக, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அனுமதியை உரிய நேரத்தில் வழங்காமல் இழுத்தடித்து வந்தது போலிசும்,தேர்தல் ஆணையமும். ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்புவரை அனுமதி குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆன் லைனில் பதிவு செய்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் பிரச்சாரம் செய்வதெல்லாம் மோசடி, பித்தலாட்டம். மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதில், ஜனநாயக உரிமைகளை நசுக்குவதில் போலீசை விட நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என காட்டிக்கொண்டது தேர்தல் ஆணையம்.
இது குறித்து போலீசிடம் விசாரித்த போது, நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கலாம் என்று சொல்லி தேர்தல் அதிகாரிக்குத் தெரிவித்து விட்டோம் என்றது. தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்த போது, போலீசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றார் தேர்தல் அதிகாரி. போலீசு பதிலளித்துவிட்டதாகத் தெரிவித்தனரே என்று கேட்ட போது, உங்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்று தெரிவித்தார். இந்த தகவல் மட்டும் உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டதற்கு பதிலளிக்காமல் வாய்மூடிக்கொண்டார். அனுமதி மறுத்துவிட்டதாக இருந்தால் எங்களுக்கு எழுத்துபூர்வமாக கொடுங்கள் என்ற போது, அதற்கும் பதிலளிக்கவில்லை. இதன் பின்னர், மாலையில் வருமாறு தெரிவித்தார் தேர்தல் அதிகாரி. மாலையில் தோழர்கள் சென்ற போது, இன்னும் உங்களுக்கு பதில் வரவில்லை என்றார். தேர்தல் அதிகாரியின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், சட்டத்தை நீங்கள் மதிப்பதில்லை, நீங்கள் சொல்லும் சட்டத்தை நீங்கள் மதிக்க வேண்டும் என்று எச்சரித்துவிட்டு வந்தனர். இந்நிலையில்தான் மறு நாள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காலை முதலே பலவேறு ஜனநாயக சக்திகள் ஆர்ப்பாட்டம் குறித்தும், தேசதுரோக வழக்கை போட்டதைக் கண்டித்தும் தங்களது ஆதரவை மக்கள் அதிகாரத்திற்கு தெரிவித்துவந்தனர். மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆர்ப்பாட்ட இடத்தில் குவிவதைக் கண்ட போலீசு அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டத்தைத் தடுத்தது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான தோழர்கள், ஜனநாயக சக்திகள் ஊர்வலமாக ஆர்ப்பாட்ட இடத்தை நோக்கி முழக்கமிட்டபடியே சென்றனர்.
தருமபுரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்களும் குழந்தைகளும்
தடையை மீறி நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கான ஊர்வலத்தை தோழர்.முத்துக்குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர், தருமபுரி தொடங்கிவைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய விவசாயிகள் விடுதலை முன்னணியின் பென்னாகரம் வட்டச் செயலாளர், தோழர்.கோபிநாத் பேசும் போது, “டாஸ்மாக் இன்று தமிழகத்தின் ஒருதலைமுறையையே சீரழித்துவிட்டது. டாஸ்மாக்கினால் பல குடும்பங்கள் நடுவீதிக்கு வந்துள்ளன. பல தாய்மார்கள் விதவையாக்கியுள்ளனர். இப்படிப்பட்ட டாஸ்மாக்கை மூடு என்று பேசியதற்காக மக்கள் அதிகாரம் தோழர்கள், மாநாட்டில் சிறப்புரையாற்றிய பேச்சாளர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளது. சிறுமியைக் கூட அந்த வழக்கில் இணைத்துள்ளது. பல்வேறு கட்சிகளை இணைத்துக்கொண்டு மக்கள் அதிகாரம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு 4 நாட்கள் முன்னதாகவே விண்ணப்பித்தும், இன்று காலையில் பதிலளிக்கிறார்கள் போலீசு அதிகாரிகள். அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார்கள். அனுமதி இல்லை என்று மூன்று நாளாக அலைக்கழித்துள்ளது. அதனை எழுதித்தருவதற்கு கூட துப்பில்லை. இப்படிப்பட்ட அரசிடம் கோரிக்கை வைத்து, டாஸ்மாக்கை மூட முடியுமா? முடியாது. டாஸ்மாக் ஒரு சாதாரண விசயம். இதனை மூடுவதற்கு இந்த அரசிடம் கெஞ்சுவது வீண்வேலை.
தேர்தல் என்ற நாடகத்திலே, ஆண்டுமுழுவதும் மக்களைத் திருடி கொள்ளையடிக்கும் அதிகாரிகள் கூட்டம், ஜனநாயகமாக நாங்கள் தேர்தலை நடத்துகிறோம் என்கின்றனர். இது ஒரு மோசடி. இதுமட்டுமல்ல, இந்த தேர்தலை நடத்திதான் டாஸ்மாக்கை மூட முடியுமா? முடியாது. ஆகையால், டாஸ்மாக்கை மூடுவதற்கான போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுக்க வேண்டும்” என்று போலீசையும் தேர்தல் நாடகத்தையும் அம்பலப்படுத்தி பேசினார். இதன் பின்னர், தோழர்களை போலீசு கைது செய்வதாக அறிவித்து கைது செய்தது.
அரை மணிநேரத்திற்கும் மேலாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் குழந்தைகள், பெண்கள் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த தோழர்களிடம் தேர்தல் அதிகாரிகள் வந்து, உங்களது ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று சொல்லி, எழுத்துபூர்வமாக கடிதத்தைக் கொடுத்தனர். தேர்தல் அதிகாரிகளின் இந்த மோசடித்தனத்தையும் ஜனநாயகமாக குரல் கொடுப்பதற்கு கூட அனுமதி மறுத்துவிட்டு, இறுதியில் வந்து பசப்புவதையும் அம்பலப்படுத்தி தோழர்கள் அந்த அதிகாரிகளை விரட்டியடித்தனர்.
பார்ப்பன இந்துமதவெறியும், ஆதிக்க சாதிவெறியும் இணைந்து இந்தியாவெங்கும் பெண்ணை பாரம்பரிய அடிமைகைளாக தக்க வைக்க முயல்கின்றன. முதலாளித்துவமும், நுகர்வுக் கலாச்சாரமும் அவளை சந்தையின் அடிமையாக்கி நுகர்வில் கரைத்து வருகின்றன. இந்த இரு முனைத் தாக்குதலில் மிதிபடும் பெண்களின் வலி என்ன?
இந்த நூலில் இடம்பெறும் பெண்களின் கதைகள் அந்த வலியை ஆழமாக உணர்த்துகின்றது.
கிராமத்து வாழ்க்கையில் கருப்பு நிறம் ஒரு பெண்ணுக்கு தரும் சித்திரவதை எப்படி இருக்கும்? தாலிபான்களிடம் சாகாமல் அந்த வங்க பெண் எழுத்தாளர் ஏன் தப்பிக்கவில்லை? இந்திய சுற்றுலாவுக்கு வந்த அந்த அமெரிக்க மாணவி ஊர் திரும்பியதும் மனநோயாளியானது ஏன்? பாலியல் வன்முறையை ஒரு பெண் எதிர்க்க பயப்படுவதும், மாத விலக்கு என்றொரு உயிரியல் நிகழ்வை அவமானமாக கருத வைப்பதும் வேறு வேறா? பாலஸ்தீனத்து தாய் அபு ரஹ்மேவிடம் இன்னும் கண்ணீர் வற்றாமல் இருப்பது எப்படி? 20 ரூபாய் எலுமிச்சை சாதத்தை கனவாகக் கருதும் அந்த பூங்கா பராமரிக்கும் பெண்ணின் பொழுது எப்படி போகிறது?
அரசு மருத்துவமனையில் குழந்தைகள் குடிக்கும் தாய்ப்பாலில் சோசலிசம் இருப்பதை அறிவீர்களா? இந்தியாவுக்கு அருகே இருப்பதாகச் சொல்லப்படும் ‘சிங்கப்பூர் சொர்க்கத்தில் வீட்டு வேலை செய்யச் செல்லும் ஒரு தமிழ்ப் பெண்ணின் கதை என்ன? மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட மணிஷா கட்லாலின் கிராமத்தை சுடுகாடாக்கியது யார்? கொல்கத்தா தன்னைக் கைவிட்டு விட்டதாக கூறும் அந்த பெண் பத்திரிகையாளரின் வருத்தம் எது?
இவர்கள் புதுமைப் பெண்கள் அல்ல; போராடும் பெண்கள். போராடும் கடமையை உணர்த்தும் வலிமையான பெண்கள். அந்தப் போராட்டத்தில் தங்களது உயிரையும் வாழ்வையும் இழந்த பெண்கள்.
பெண் விடுதலையானது சமூக விடுதலையின் அங்கம் என்பதை உணர்ந்தவர்களுக்கு இந்த பெண்கள் தமது நெஞ்சுரத்துடன் துணை வருவார்கள்.
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்
பெண்: வலியும் வலிமையும் – புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2016 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 20-ம் (நூல் விலை ரூ 20, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
தாய்ப்பால் சோசலிசம்
கருப்பாயி
தாலிபான்களை எதிர்த்து உயிர் துறந்த வங்கப் பெண் !
நீங்கள் ஒரு போதும் கேட்க விரும்பாத பாரதக் கதை !
என்னாது மாசா மாசம் வருமா ?
பாலஸ்தீனம்: ஒரு விதவைத் தாயின் வீரக்கதை!
ஏம்மா… ஒரு எலுமிச்ச சாதம் என்ன விலைம்மா ?
நாமறியாத அரசு செவிலியர்கள் !
கிம்பெர்லி ரெவேரா : ஆதிக்கத்திற்கு துணை போகாத வீரம் !
சிங்கப்பூர் : நினைத்தாலே கசக்கும்
மணிஷா எழுதிய கவிதை !
கொல்கத்தா என்னை கைவிட்டு விட்டது !
மேட்டுக்குடி இந்தியாவின் பெண் வெறுப்பு !
பக்கங்கள் : 80 விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு)
$27
Payumoney மூலம்(உள்நாடு)
ரூ.400
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.