Sunday, July 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 626

மோடி அலை என்ற வெங்காயம் !

4

அரியானா, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்:மோடி அலை என்ற வெங்காயம்!

காராஷ்டிராவில் கடந்த 15 ஆண்டுகளாக நீடித்தவந்த காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசு கூட்டணி ஆட்சியும், அரியானாவில் கடந்த பத்தாண்டுகளாக நீடித்துவந்த காங்கிரசு ஆட்சியும் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தப்பட்டுள்ளதைக் காட்டி மீண்டும் மோடி அலை சுழன்றடிப்பதாகப் பார்ப்பன ஊடகங்கள் குதூகலிக்கின்றன. அரியானாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள அதேசமயம், மகாராஷ்டிராவில் அதிக இடங்களைக் கைப்பற்றி தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி ஆட்சியை பா.ஜ.க. அமைத்துள்ளது. இதைக் காட்டி நாடாளுமன்றத் தேர்தலின் போது வீசிய மோடி அலையானது இப்போது சுனாமியாகச் சுழன்றடித்துள்ளது என்றும், அமித் ஷாவை பா.ஜ.க. தலைவராக்கியதன் மூலம் தான் நினைத்ததை மோடி சாதித்துவருகிறார் என்றும், அமித்ஷாவின் சாணக்கியத்தனத்தை இச்சட்டமன்றத் தேர்தல்கள் நிரூபித்துக் காட்டிவிட்டன என்றும் ஆளும் வர்க்க ஊடகங்கள் துதிபாடுகின்றன.

மனோகர்லால் கட்டார்
அரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார்

மகாராஷ்டிராவில் கடந்த 2009-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசுக் கட்சியும் கூட்டணி சேர்ந்து 37 சதவீத வாக்குகளைப் பெற்றன. இம்முறை இவ்விரு கட்சிகளும் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிட்டதால் கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட இவ்விரு கட்சிகள் பெற்ற வாக்குகள் ஏறத்தாழ 3 சதவீதம் குறைந்துள்ளது. இந்த 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூடுதலான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்த 3 சதவீத வாக்கு வித்தியாசமும்கூட, அதிகாரத்திலிருந்த காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசின் கூட்டணி ஆட்சியில் நடந்த லவாசா மற்றும் ஆதர்ஷ் ஊழல் கொள்ளைகள் அம்பலப்பட்டு நாறியதாலும், தொடர்ந்து 15 ஆண்டுகளாக நீடித்த இக்கூட்டணி ஆட்சி மீதான மக்களின் அதிருப்தியாலும் பா.ஜ.க.வுக்கு எதிர்மறையில் கிடைத்த வாக்குகளேயன்றி, மோடி முன்வைக்கும் வளர்ச்சிப் பாதையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து அளித்த வாக்குகள் அல்ல. மோடி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் முதலான முக்கிய தலைவர்கள் மூன்று மாதங்களாக முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு பிரம்மாண்ட பேரணிகளை நடத்தியபோதிலும், வெறும் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தைத் தான் ஏற்படுத்த முடிந்துள்ளதேயன்றி, மற்றபடி மோடி அலையுமில்லை, சுனாமியுமில்லை.

அரியானாவின் 90 தொகுதிகளில், 47 எம்.எல்.ஏ.க்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் அம்மாநிலத்தில் முதன் முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. இருப்பினும், அரியானாவில் கடந்த மே மாதத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது 34.7 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த பா.ஜ.க, இப்போது அம்மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் 33.2 சதவீதம்தான் பெற்றுள்ளது. மோடியின் வளர்ச்சிப்பாதை என்று ஊதிப் பெருக்கப்பட்ட பலூன் காற்றுப் போன நிலையிலும் அரியானாவில் இந்த வெற்றியை பா.ஜ.க.வால் எப்படி சாதிக்க முடிந்தது?

விதர்பா விவசாயி தற்கொலை
மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தின் தீராத அவலம் : கடன் சுமை தாளாமல் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட விவசாயி (கோப்புப் படம்)

அரியானாவில் ஜாட் சாதியத் தலைவரும் லோக்தளக் கட்சியின் தலைவருமான சவுதாலா, ஆசிரியர் நியமன ஊழலில் சிக்கி அம்பலப்பட்டதாலும், காங்கிரசு தலைவியான சோனியாவின் மருமகன் ராபர்ட் வதோராவுக்கு ஆதரவாக டி.எல்.எஃப்.  என்ற கட்டுமான நிறுவனத்துக்கு நிலம் கையளித்ததில் நடந்த ஊழல் முறைகேடுகள் அம்பலப்பட்டுள்ளதாலும், இவ்விரு கட்சிகளுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை பா.ஜ.க. அறுவடை செய்து கொண்டது. மறுபுறம், ஏறத்தாழ 27 சதவீதமாக உள்ள ஜாட் சாதியினர் தொடர்ந்து அரியானா அரசியலில் செல்வாக்கு செலுத்தி வந்த நிலையில், பிராமணர்கள், குஜ்ஜார், காம்போஜ், சீக்கியர், ஜாட், பனியா, யாதவா, ராஜபுத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முதலான சாதிகளை ஈர்த்து, அந்தந்த வட்டாரத்துக்கேற்ப மெகா சாதிக் கூட்டணி கட்டிக்கொண்டு மேற்படி சாதிகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு விலைபேசியும் பதவி வாக்குறுதிகள் கொடுத்தும் ஓட்டுப் பொறுக்கியது.

காங்கிரசுக்கு ஆதரவாக இருந்துவந்த தாழ்த்தப்பட்ட வால்மீகி சாதியினரின் வாக்குகளை ஈர்க்க, டெல்லியில் வால்மீகி சாதியினர் நிறைந்துள்ள பகுதியில், கையில் துடப்பத்தை ஏந்தி தெருவைக் கூட்டுவதாக நிழற்படத்துக்குக் காட்சியளிக்கும் நாடகத்தை தூய்மை இந்தியா திட்டத்தின் பெயரால் மோடி நடத்தினார். குறிப்பாக கன்ஷிராமால் தொடங்கப்பட்ட பிற்பட்ட- சிறுபான்மையின அரசு ஊழியர் சங்கத்தை உடைத்து, அதன் முக்கிய தலைவர்களை பா.ஜ.க.வுக்கு இழுத்துக் கொண்டும், சீக்கியர்களில் ஒரு பிரிவினரைத் தன்பக்கம் வளைத்துப் போட்டுக் கொண்டும் தனக்குச் சாதகமான சாதிய முனைவாக்கத்தைக் கட்டிக் கொண்டு, மோடி-அமித் ஷா கும்பல் இந்த வெற்றியைச் சாதித்துள்ளது. படுகேவலமான இச்சாதிய முனைவாக்கத்தைத்தான் அமித் ஷாவின் சாணக்கியத்தனம் என்றும் மோடி அலை என்றும் பார்ப்பன ஊடகங்கள் ஊதிப் பெருக்குகின்றன.

அரியானாவில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்ததும் மோடி, சுஷ்மா கோஷ்டிகளுக்கிடையே முதல்வர் பதவிக்கும் அமைச்சர்கள் பதவிக்குமான நாய்சண்டை முற்றி சந்தி சிரித்தது. பேரங்கள் – சமரசங்களுக்குப் பிறகு, “பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு பெண்கள்தான் காரணம், இந்தியாவின் பாரம்பரியமிக்க ‘காப்’ பஞ்சாயத்துகளின் தீர்ப்புகள் நியாயமானவை” என்றெல்லாம் பேசிவரும் அப்பட்டமான இந்துத்துவ வெறிபிடித்த பிற்போக்குத் தலைவரும் மோடியின் விசுவாசியுமான மனோகர்லால் கட்டார் இப்போது முதல்வராக்கப்பட்டுள்ளார்.

தேவேந்திர ஃபட்னாவிஸ்
மகாராஷ்டிராவின் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ள பா.ஜ.க., தேர்தலுக்குப்பின் சிவசேனாவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கத் தீர்மானித்துள்ளது. பேரங்கள் படியாமல் முறுக்கிக் கொண்டிருந்த சிவசேனாவுக்கு அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு அமைச்சர் பதவி வழங்கவும், துணை முதல்வர் பதவி வழங்கவும் பா.ஜ.க. ஒப்புக் கொண்டுள்ளதையடுத்து இக்கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளன. இங்கேயும் மோடி, நிதின் கட்காரி கோஷ்டிகளுக்கிடையே முதல்வர் பதவிக்கும் அமைச்சர்கள் பதவிக்குமான நாய்ச்சண்டை தொடர்ந்ததால், யார் முதல்வர் என்று தீர்மானிக்க முடியாமல் இழுபறி நீடித்து, தற்போது மோடியின் விசுவாசியும், ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரைச் சேர்ந்த சித்பவன பார்ப்பனருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக்கப்பட்டுள்ளார். மொத்தத்தில் இவ்விரு மாநிலங்களிலும் இதர கோஷ்டிகள் ஓரங்கட்டப்பட்டு, மோடி-அமித்ஷா கும்பலின் விசுவாசிகளே முதல்வர்களாகவும் முக்கிய அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மறுகாலனியாக்கத்தின் கீழ் விவசாயமும் விவசாயிகளும் நாசமாக்கப்பட்டுள்ளதற்கும், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்குமுறைகள் தொடர்வதற்குமான அடையாளக் குறியீடாக உள்ள மாநிலங்கள்தான் மகாராஷ்டிராவும், அரியானாவும். பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ள மகாராஷ்டிராவின் தீராத அவலமாக விவசாயிகள் தற்கொலைச் சாவுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2001 முதல் இதுவரை 11,029 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த தீபாவளியன்று கடன் சுமை தாளாமல் 6 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளதையும் சேர்த்து நடப்பு 2014-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 906 பேர் மாண்டு போயுள்ளனர்.

பன்னாட்டு நிறுவனங்களின் மனங்கவர்ந்த மாநிலமான அரியானாவில் அமைந்துள்ள குர்கான் தொழிற்பேட்டையானது, முதலாளித்துவப் பயங்கரவாதத்தின் தலைமையகமாகத் திகழ்கிறது. மறுகாலனியாக்கத்தின் கீழ் தொழிலாளர்களின் உரிமை பறிப்பும், கொடூரமான சுரண்டலும் முதலாளித்துவ பயங்கரவாதமும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள முதன்மை மாநிலம்தான் அரியானா என்பதை மாருதி மற்றும் ஹோண்டா தொழிலாளர்களின் மீதான அடக்குமுறையும், அதற்கெதிரான தொழிலாளர்களின் போராட்டமும் நிரூபித்துக் காட்டியது. ஆனாலும் மறுகாலனியாக்கத்தின் குறியீடாக உள்ள இவ்விரு மாநிலங்களில் அவலத்திலும் அடக்குமுறையிலும் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க எந்த ஓட்டுக் கட்சியும் எந்தத் திட்டத்தையும் இத்தேர்தலில் முன்வைக்கவில்லை.

மாருதி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
மாருதி நிறுவனத்தின் அடக்குமுறைக்கு எதிராகப் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இணைந்து குர்கானில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

இவ்விரு மாநிலங்களிலும் மறுகாலனியச் சூறையாடலையும் இந்துவெறி பாசிசத் தாக்குதலையும் மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இந்துவெறி பாசிச கும்பல் அதிகாரத்துக்கு வந்திருப்பதும், மோடியின் விசுவாச பார்ப்பன பாசிசத் தளபதிகளாக உள்ள கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகளே முதல்வராக்கப்பட்டிருப்பதும் பேரபாயமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஓட்டுக்கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்களின் விகிதாச்சாரமும் அமைய வேண்டுமென்றும், இதற்கேற்ப தேர்தல் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் சுடுகாட்டில் உட்கார்ந்து கொண்டு சாம்பிராணி புகையை எழுப்பிக் கொண்டிருக்கிறது, மார்க்சிஸ்ட் கட்சி.

– குமார்
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014
_______________________________

ஆஸ்திரேலியாவில் மோடியை எதிர்த்து போராட்டம்

6
இந்திய பூர்வகுடிகளின் எதிரியான பார்ப்பனியத்தின் தளபதி மோடிக்கு ஆஸ்திரேலிய பூர்வகுடி நடன வரவேற்பு!
இந்திய பூர்வகுடிகளின் எதிரியான பார்ப்பனியத்தின் தளபதி மோடிக்கு ஆஸ்திரேலிய பூர்வகுடி நடன வரவேற்பு! படம்  நன்றி – The Hinduஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மோடி ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். ஏற்கனவே அமெரிக்காவில் அவர் செய்த மாபெரும் ‘சாதனை’கள் குறித்து இன்றும் ஊடகங்கள் புளகாங்கிதம் அடைந்து வருகின்றன. இந்த ஃபுல்காங்கிதம் தற்போது கங்காரு தேசத்திலும் நடக்கிறது.

சிட்னியில் புலம்பெயர் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு கூட்டத்துக்கு நேற்று (17/11/2014) மோடி சென்றார். இந்தியர்கள் 16,000 பேர் மோடியை வரவேற்க அலைகடலென திரண்டிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. கூட்டத்தின் பிரம்மாண்டத்தை சித்தரிக்கும் ஊடகங்கள், மோடி செல்லுமிடமெல்லாம் அவரை விடாமல் துரத்தும் 2002-ம் வருட குஜராத் முஸ்லிம் மக்கள் படுகொலைகளின் நீதிக்கான வேட்கையை மூடி மறைக்கின்றன. கவித்துவ நீதியின் மீது நாட்டம் கொண்ட அறவுணர்வு குன்றாத இந்தியர்கள் ஆஸ்திரேலியாவிலும் இருக்கிறார்கள் என்பதற்கு சான்று பகர்கிறது இந்த செய்தி.

நூற்றுக்கணக்கான மக்கள் — பெரும்பாலும் சீக்கியர்கள் திரண்டு மோடிக்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில், ‘மோடி உங்கள் கரங்களில் ரத்தம் தோய்ந்திருக்கிறது’, ‘பொய் ஒருபோதும் உண்மையாகாது’, ‘தவறு எப்போதும் சரியாகாது’, ‘தீமை நல்லதாக மாறாது’ என்று எழுதப்பட்டிருந்தன. சிட்னியில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவின் பிரதமர் டோனி அபட் மெல்போர்னில் ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சிக்கும் சென்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர், போராட்டக்காரர்கள்.
இந்த எதிர்ப்பு குறிப்பாக 2002-குஜராத் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலைக்காக என்பது குறிப்பிடத்தக்கது. சிட்னியில் என்ன நடக்கிறது என்று கார்ப்பரேட் ஊடகங்களின் மூலம் மோடி மகிமை அள்ளித் தெளிக்கப்படும் போது ஆஸ்திரேலிய வாழ் சீக்கிய மக்களின் எதிர்ப்பெல்லாம் எங்கேயும் வராது.

"மோடி உங்கள் கையில் இரத்தக் கறை" ஆஸ்திரேலிய சீக்கிய மக்கள் எதிர்ப்பு!
“மோடி உங்கள் கையில் இரத்தக் கறை” ஆஸ்திரேலிய சீக்கிய மக்கள் எதிர்ப்பு!

இதோடு கூடவே “காஷ்மீர் கவுன்சில் ஆஃப் ஆஸ்திரேலியா” எனும் குழுவினரும் மோடியை எதிர்த்து போராட்டத்தை பதிவு செய்திருக்கின்றனர். இந்த போராட்டம் நியூ சவுத் பாராளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்றது. காஷ்மீருக்கு அமைதியான தீர்வு ஏற்பட்டால்தான் இந்தியா, பாக் இருநாடுகளும் முன்னேற்றத்தை அடையுமென கவுன்சிலின் நிறுவனர் மும்தாஸ் மியன் ஊடகங்களிடம் கூறினார்.

modi-sydney-2மோடி எனும் பாசிஸ்டை எவ்வளவுதான் மூடி மறைத்து மேக்கப் போட்டு மினுக்க வைத்தாலும் உண்மை மறைந்து விடாது. மோடி எங்கு சென்றாலும் அங்கே எதிர்ப்பதற்கு நம் மக்கள் இருக்கிறார்கள். காட்டுவதற்குத்தான் ஊடகங்கள் இல்லை.

modi-sydney-1

மேலும் படிக்க:

கும்மிடிப்பூண்டி, கடலூரில் நவம்பர் தின விழா !

0

நவம்பர் புரட்சி தின கொண்டாட்டங்கள் – 5

17. திருவள்ளூர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக 97-வது நவம்பர் புரட்சி தின விழா கும்மிடிப்பூண்டி பகுதியில் SMV மஹாலில் நடத்தப்பட்டது.

nov7-thiruvallur-poster

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின், திருவள்ளூர் மாவட்ட தலைவர் தோழர். விகந்தர் தலைமை உரையாற்றினார்.

தனது தலைமை உரையில், ரஷ்ய புரட்சி நாளை நாம் உயர்த்தி பிடிக்க வேண்டிய அவசியமென்ன என்று தொடங்கி, இது தொழிலாளி வர்க்கம் அரசாள வந்த நாள், முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டிய நாள் என்றும் அத்தகைய பயங்கரவாதத்தை நாமும் நாள்தோறும் சந்தித்து வருகிறோம் அதை முறியடிக்க வேண்டியுள்ளது என்று தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

சிறுவர்களுக்கான நிகழ்ச்சியில், புரட்சிகர பாடல்களும் கல்வி தனியார்மயம் குறித்த நாடகமும் நடத்தப்பட்டது. கல்விக் கொள்ளையர்களின் லாப வெறிக்கு இளந்தளிர்கள் ‘நரபலி’ தரப்படும் அவலத்தை சித்தரிக்கும் வகையில் அமைந்த நாடகம் பார்வையாளர்களை உறைய வைத்தது. பகத்சிங் வேடமணிந்த மூன்று இளம் சிறுவர்கள் “லால் சலாம், இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டது “அந்த வீரன் இன்னும் சாகவில்லை” என்ற பாடலை நினைவூட்டுவதாக அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் SRF மணலி கிளையை சேர்ந்த தோழர். ராஜா முற்போக்கு கவிதைகள் வாசித்தார். இக்கவிதை அனைவரையும் ஈர்த்தது.

நவம்பர் புரட்சி தினத்துக்காக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர் துரை.சண்முகம் எழுதிய கவிதையை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர். சுப.தங்கராசு வாசித்தார்.

பகத்சிங் குறித்து கிளைச் சங்க தோழரின் மகள் 10 நிமிடம் உரையாற்றினார். சிறுவர்கள் முதல் முறையாக மேடையில்  பங்கேற்றது மற்ற பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் உற்சாகமூட்டுவதாக இருந்தது.

பிரச்சாரக்குழுவின் “குப்பை உணவு”, “நவம்பர் புரட்சி” ஆகிய பாடல்கள் பார்வையாளர்களை பலத்த கரகோஷத்தோடு வரவேற்கச் செய்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அடுத்ததாக எழுச்சியுரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச்செயலாளர் தோழர் சுதேஷ்குமார், நிலவுகின்ற சமூக அமைப்பில் உள்ள பண்பாட்டுச் சீரழிவுகளையும், இந்த சீரழிவுகளின் விளைவாக உழைக்கும் மக்களின் எழுச்சி தள்ளிப் போவதையும் விளக்கினார். ஸ்மார்ட் போன் கலாச்சாரத்தின் காரணமாக சிறுவர்கள் முதற்கொண்டு சீரழிவதையும், “ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் தாம் அவர் அப்பா இல்லன்னா வெறும் டப்பா” எனுமளவுக்கு செல்போன் மீதான் மோகம் திணிக்கப்பட்டுள்ளதை சாடிய தோழர், ஆபாச சீரழிவு கலாச்சாரம் குடும்ப உறவுகளையும் விட்டுவைக்கவில்லை என்பதை தோலுரித்துக்காட்ட மறக்கவில்லை. குடும்பம் ஒரு கோவில், அன்னை அதில் தெய்வம் என்பதெல்லாம் காலாவதியாகி, நுகர்வே சகலமும் என்ற ஒரு நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ள அவலத்தை எடுத்துரைத்தார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட பிரச்சாரக் குழு இந்து மதவெறி பயங்கரவாதத்தை திரைகிழித்தும், ரஷ்ய புரட்சி நாளை உயர்த்திப் பிடித்தும் பாடல்களை பாடினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர். சுப.தங்கராசு இருவரும் நினைவுப் பொருட்களை வழங்கி உற்சாகப்படுத்தினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக, சங்கத்தின் செயலாளர் தோழர் ரமேஷ் நன்கொடையாக புது ஆடை வழங்கியதை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர். சுப.தங்கராசு பெற்றுக்கொண்டார்.

320-க்கும் மேற்ப்பட்ட தொழிலாளிகள் தம் குடும்பத்துடன் கலந்து கொண்ட இந்த விழா, தொழிலாளிகளிடமும், அவர்தம் குடும்பத்தினரிடமும் உற்சாகத்தை தந்துள்ளது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கும்மிடிப்பூண்டி பகுதி தலைவர், தோழர். கோபாலகிருஷ்ணன் நன்றியுரைக்கு பின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் மாவட்டம்.- 9444213318

18. கடலூர் அண்ணாகிராமம்

உழைக்கும் மக்கள் அலையென எழுந்து அதிகாரத்துக்கு வந்த நாள்
உழைக்கும் மக்களின் உன்னதமான விழா.

நவம்பர் 7 ரசிய புரட்சி நாள் நீடூழி வாழ்க!

வம்பர் 7 ரசிய புரட்சி நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக அண்ணாகிராமம் பகுதியில் கொண்டாடபட்டது. தோழர்கள்,ஆதரவாளர்கள் மற்றும் அந்த ஊர் பொதுமக்கள் என்று அனைவரும் கலந்து கொண்டார்கள்.அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டு இருந்தது. பெருந்திரளான மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.

முதல் நிகழ்ச்சியாக நவம்பர் புரட்சியை விளக்கும் விதமாக “ஸ்டலின் சகாப்தம்” படத்தை பெரிய திரையில் போட்டு காட்டப்பட்டது. பின்னர் தலைமை உரையாக தோழர் கருணாமூர்த்தி நவம்பர் 7-ன் முக்கியத்துவத்தையும் பற்றியும், இந்த நாளில் உழைக்கும் மக்கள் ரசிய நாட்டில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததையும், உலக பாட்டாளிகளுக்கு வழி காட்டியதையும் விளக்கி கூறினார்.

இந்நாளை ஒவ்வொரு உழைக்கும் மக்களும் தங்களுடைய பண்டிகை போல கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், இன்று நம் நாட்டில் மறுகாலனியாக்கத்தாலும், பார்ப்பன பாசிசத்தாலும், உழைக்கும் மக்களுக்கு ஏற்படும். பாதிப்புகளை விளக்கி பேசினார். உழைக்கும் மக்கள் இன்று நாள்தோறும் விலைவாசி உயர்வு, மானியவெட்டு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள், ஆனால் இன்று பெரும் முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து மக்களைச் சுரண்டி வாழ்கிறார்கள்.

ஆகையால், உழைக்கும் மக்களாகிய நாம் ஒன்று சேர்ந்து மக்கள் கமிட்டிகளை கட்டவேண்டும். அதன் ஊடாக ஒரு புதிய ஜனநாயகக் குடியரசை ஏற்படுத்த வேண்டும் என்று விளக்கி பேசினார்.

பின்னர் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பின்பு அனைத்து மக்களுக்கும் உணவளிக்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இவண்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

கடலூர் மாவட்டம்

ஐடி பிரமிடில் பாலாஜி அண்ணாவுக்கு இடமில்லை

22

it 2பாலாஜி அண்ணா தளர்ந்து போயிருந்தார். நாற்பத்தி ஏழு வயதுக்கு அவர் கண்களின் கீழே வளையமிட்டிருந்த கருமையும், முகமெங்கும் இருந்த சுருக்கங்களும் பார்க்க என்னவோ போல் இருந்தது. முன்னைப் போல் துறுதுறுவென்று அலைபாயும் கண்கள் இல்லை. பத்துப் பண்ணிரண்டு வருடங்களுக்கு முன் எந்த நேரமும் நெருக்கிய புருவங்களோடு நம் கண்களை அவர் ஊடுருவிப் பார்த்தால் பசித்த புலியை நேரிட்டுச் சந்தித்தது போல் இருக்கும்.

“ஏய்… சரியாச் சொல்லு. பொய் சொல்லக் கூடாது. நீ கோஸ்ட் அடிக்கும் போது ப்ரைமரி ஹார்ட் டிஸ்கையும் செகண்டரி ஹார்ட் டிஸ்கையும் சரியாத் தானே செலக்ட் பண்ணினே? அப்புறம் எப்படிடா டேட்டா லாஸ் ஆச்சி. உண்மைய ஒத்துகிட்டா என்னால காப்பாத்த முடியும்… இல்லாட்டா வேலை போயிடும் பரவாயில்லையா?” உணர்ச்சிகளற்ற அவரது இன்றைய முகம் முன்பு ஒரு காலத்தில் நான் செய்த தவறை மறைக்க முயற்சித்த போது அனல் கக்கியது நினைவுக்கு வந்தது.

பாலாஜி சார் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட பாலாஜி அண்ணா நான் பொறியியல் படித்து கணினி பழுது பார்க்கும் நிறுவனம் ஒன்றில் முதன்முதலாக வேலைக்குச் சேர்ந்த போது எனது தொழில்நுட்ப பயிற்சியாளராக இருந்தார். கணினித் தொழில்நுட்பத்தில் ஆனா ஆவன்னா சொல்லிக் கொடுத்த ஆசான்.

நாவல் நெட்வேர் என்கிற கணினி இயங்குதளத்தை(Operating system) இன்றைய ஐ.டி தலைமுறையினர் அனேகமாக மறந்திருப்பார்கள். அந்த இயங்குதளத்தில் புழக்கத்தில் இருந்த நாவல் டைரக்டரி சர்வீஸ் (NDS) என்ற நுட்பத்தில் பாலாஜி நிபுணர். பின்னர் அதே தொழில்நுட்பத்தை நாவல் நிறுவனத்திடமிருந்து விலைக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 2000 இயங்குதளத்திலிருந்து ஆக்டிவ் டைரக்டரி சர்வீஸ் (ADS) என்ற பெயரில் சந்தைப்படுத்தி நாவலை ஒழித்ததோடு சர்வர் மார்க்கெட் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டது.

இந்தப் போக்கு துவங்கிய இரண்டாயிரமாவது ஆண்டுகளின் துவக்க காலத்தில் பாலாஜி எங்கள் கண்களுக்கு அசகாய சூரராக தெரிந்தார். அப்போது தான் பல வங்கிகள் தமது சேவையை கோர் பாங்கிங் (Core Banking) என்று சொல்லப்படும் மையப்படுத்தப்பட்ட கணினி வலைப் பின்னலுக்குள் கொண்டு வரத் துவங்கியிருந்தன. அந்த பிராஜக்டுக்காக விண்டோஸ் இயங்குதளத்திலும் ஆக்டிவ் டைரக்டரியிலும் எங்களுக்கு பயிற்சி அளித்தார் பாலாஜி.

it 3ஓரிரு ஆண்டுகளில் (2004 ஜனவரி என்பதாக நினைவு) ஐ.பி.எம் நிறுவனத்திடமிருந்து பாலாஜிக்கு கூடுதல் சம்பளத்துடன் வேலைக்கான அழைப்பு வந்தது. ஐ.பி.எம் வேலையை ஏற்று பெங்களூர் சென்றவரிடம் இருந்து அதன் பின்னர் பெரிய அளவில் தகவல்கள் ஏதும் வரவில்லை. அவ்வப் போது பொதுவான நண்பர்களிடமிருந்து சில தகவல்களைக் கேள்விப் பட்டு வந்தேன். ஒவ்வொரு முறை அவரைக் குறித்துக் கேள்விப் படும் போதும் அவர் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை செய்வதாக அறிந்து கொள்ள முடிந்தது. சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் சென்ற வாரம் எதேச்சையாக தேனீர் கடை ஒன்றில் வைத்து தான் அவரை நேரில் பார்த்தேன்.

”இப்போதைக்கு வேலை எதுவும் இல்லைடா.. ஆறு மாசமாச்சி. தேடிகிட்டு இருக்கேன், பார்க்கலாம். உனக்கு ஏதாவது லீட் தெரிஞ்சா சொல்லேன்”

ஆச்சர்யமாக இருந்தது.

“அட… உங்களுக்கேவா வேலை இல்லை? சும்மா தமாஸ் பண்ணாதீங்க பாஸ்.”

”உனக்கு கேட்க தமாசா இருந்தாலும் அது தான்பா உண்மை.”

”இல்லையே, நான் அப்பப்ப கேள்விப்பட்ட வரைக்கும் நீங்க அடிக்கடி கம்பெனி மாறிகிட்டே இருந்தீங்க… ஒவ்வொரு தடவை கம்பெனி மாறும் போதும் நல்ல சம்பளத்துக்கு மாறியிருக்கீங்க… அப்புறம் எப்படி வேலை போகிற நிலைமைக்கு வந்தீங்க?”

”உண்மைய சொல்லப் போனா… நான் ஒரு பிரமிட் மேல ஏறிகிட்டு இருந்தேன்.. நீ பிரமிட் பார்த்திக்கே இல்ல? அதுக்கு மேலே போகப் போக உயரம் அதிகமாகிட்டே இருக்கும்.. அதே நேரம் இடம் குறைஞ்சிகிட்டே இருக்கும்.. புரியுதா?”

“புரியலையே பாஸ்”

it 1”இப்ப டி.சி.எஸ்ஸோ காக்னிசண்டோ இல்ல இது மாதிரி எந்த கம்பெனியா இருந்தாலும் எடுத்துக்க. அவனுக்கு கீழ் மட்டத்துல ஒரு ஆயிரம் எல்-1 ரிசோர்ஸ் (L1 – resource – முதல் கட்ட தொழில்நுட்ப அறிவுள்ள ஆற்றல்கள் அல்லது மனித வளங்கள்) தேவைப்பட்டால் அதில் 40 சதவீதம் தான் எல்-2 ரிசோர்ஸ் தேவை. அதாவது 400 பேர். அதுக்கு மேல எல் – 3 ரிசோர்ஸ் ஒரு 40 பேர் தேவை. அதுக்கும் மேல எஸ்.எம்.இ (SME – Subject Matter Experts / துறை சார் வல்லுனர்) ஒன்னோ ரெண்டோ பேர் தான் தேவை. ஒரு இன்ஜினியர் குறிப்பிட்ட ஒரு ஸ்கில் செட்ல (Skill set) எல்-1ல துவங்கி எஸ்.எம்.இயா முடிய சுமாரா எட்டுலேர்ந்து பத்து வருசம் ஆகும்… அது தான் அவனோட கேரியர் கிராஃப். அதுக்குப் பின்னே மேனேஜ்மெண்டுக்கு போகலாம்.. இல்லேன்னா ப்ரீசேல்ஸா (pre-sales – விற்பனைக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குபவர்) போகலாம்.. முடியலைன்னா பிரமிடோட உச்சிலேர்ந்து கீழ விழுந்து தான் ஆகனும், என்னை மாதிரி”

”சரி பாஸ் நீங்க எல் – 2லயோ எல்- 3லயோ கொஞ்சம் வருசத்தை இழுத்து அடிச்சிருக்கலாமே…?”

“செய்திருக்கலாம்.. ஆனா அப்ரெய்சல் அவ்வளவா எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு வருசமும் ஒரு குரோத் காட்டியாகனும் இல்ல? நான் நம்ம கம்பெனியில இருந்து போன கொஞ்ச நாள்ல கல்யாணம் ஆச்சி.. ரெண்டு பசங்க. அவங்க படிப்பு… பொண்டாட்டியோட செலவு.. வீடு வாங்கினது.. கார் வாங்கினது.. இப்படி கமிட்மெண்டுக்கு மேல கமிட்மெண்டா சேர்ந்து கிட்டே போகுதில்லே? அதை ஈடுகட்டனும்னா நான் அடுத்த கட்டத்துக்கும் அடுத்த கம்பெனிக்கும் மாறித்தானே ஆகனும்?”

”அதான் நிறைய கம்பெனிகள் இருக்கே? ஒவ்வொரு லெவலுக்கும் நாலஞ்சி கம்பெனி மாறினாலே வருசத்த ஓட்டிடலாமே?”

“இல்லடா.. ஒரே லெவல்லே இருந்து இன்னொரு கம்பெனிக்கு ஜம்ப் ஆனா சம்பளத்துல அந்தளவுக்கு ஹைக்(Hike – உயர்வு) இருக்காது. ஒரு குறிப்பிட்ட ஸ்கில் செட் உள்ள ஒரு ரிசோர்சுக்கு இவ்வளவு தான் சம்பளம்னு ஒரு ஸ்டேண்டர்ட் இருக்கில்லே… அது எல்லா கம்பெனி ஹெச்.ஆருக்கும் (HR – Human resources / நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆள் எடுக்கும், சம்பளம் நிர்ணயம் செய்யும் வேலையைச் செய்யும் மனித வளத் துறை) இந்த ஸ்டேண்டர்ட் என்னான்னு தெரியும் இல்ல?”

”சரி, நீங்க மேனேஜ்மெண்ட் லைன்ல போக முயற்சி செய்யலையா?”

it 5“அதுக்கு தனியா ஐ.டி.ஐ.எல், பி.எம்.பி, சிக்ஸிக்மான்னு தனியா படிக்கனும். டெக்னிக்கலா படிக்கறது வேற இது வேற.. எனக்கு செட் ஆகலை. அதுவுமில்லாம மேனேஜ்மெண்ட் சைட்ல போக என்னோட சுபாவமும் ஒத்துக்காது. அப்படியும் வேற வழியில்லாம பிராஜக்ட் மேனேஜர் வேலைக்கு நாலஞ்சி இண்டர்வ்யூ போய் பார்த்தேன்… தேர்வாகலை.”

”ஆன் சைட் போக ஏதும் முயற்சி செய்யலையா?”

”உனக்கே தெரியுமே… இங்க அப்பாவுக்கு வயசாயிடிச்சி. நான் மட்டும் தான் ஒரே பிள்ளை. இந்த நிலைமைல அவரை அங்கே கூட்டிப் போகவும் முடியாது விட்டுட்டு போகவும் முடியாது..”

”சரி என்ன செய்யலாம்னு இருக்கீங்க?”

”இன்னும் முடிவு செய்யலை. வீட்டு லோனுக்கு தவணை கட்டி நாலு மாசமாச்சி. காரை விக்க முடிவு பண்ணிட்டேன். அந்தக் காசை வச்சி கொஞ்ச நாள் ஓட்டலாம். வீட்டை என்ன செய்யறதுன்னு தெரியலை. பசங்க ரெண்டு பேரும் படிக்கிறாங்க. இந்த வருசம் முடிய இன்னும் அஞ்சாறு மாசம் இருக்கு. அது வரைக்கு முயற்சி செய்து பார்த்துட்டு வீட்டையும் வித்துட்டு ஊருக்கே போகலாமான்னு ஒரு யோசனை இருக்கு. பாக்கி இருக்கிற லோன் போக ஏழெட்டு லட்சம் கிடைக்கலாம். வர்ற காசுல ஊர்ல போயி ஏதாவது சின்னதா பிசினஸ் செய்யலாம்னு நினைக்கிறேன்…”

”அவ்வளவு தானா?”

”……..” நீண்ட மௌனம் ஒன்றே பதிலாக வந்தது.

“ம்?” உறைந்து போயிருந்தவரை லேசாக உசுப்பினேன்.

“ஆங், அவ்வளவு தாண்டா. திரும்பி நின்னு யோசிச்சிப் பாத்தா ஈரோட்லேர்ந்து இருபத்தி மூணு வயசுல எப்படி கிளம்பினேனோ அப்படியே திரும்பிப் போறேன். என்ன சாதிச்சோம்னு நெனைச்சி நெனைச்சி பார்த்தாலும் ஒன்னும் தோன மாட்டேங்குது. ரொம்ப யோசிச்சா டிப்ரஷன்ல விழுந்திடுவேனோன்னு பயமா இருக்கு… சரி, உன் நெம்பர் குடு… பின்னாடி பார்க்கலாம்”

பாலாஜி அண்ணா சென்று விட்டார். ஐ.டி வாழ்க்கையின் நிலையாமை பணிப் பாதுகாப்பின்மை குறித்தெல்லாம் முன்பே தெரிந்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை செவுளில் அறைந்து உணர்த்திச் சென்றார் பாலாஜி. காலையில் துவங்கி மாலையில் முடிவுரும் பட்டாம்பூச்சின் வாழ்க்கை போல் ஐ.டி துறையின் வாழ்க்கை ஓரிரு பத்தாண்டுகளிலேயே முடிவுக்கு வருவதை அங்கும் இங்கும் கேள்விப்பட்டிருந்தாலும் அணுக்கமான ஒருவரின் முடிவை முதன் முறையாக நேரில் காண்கிறேன்.

சரியாக அந்த சந்தர்பத்தில் கழிவறையில் பயன்படுத்திய பின் தூக்கியெறியப்படும் மலம் துடைக்கும் காகிதம் போல் அருவறுப்பாக உணர்ந்தேன். சொந்த வாழ்க்கையை மறந்து பிறந்து வளர்ந்த சமூகத்தை மறந்து சமூக கடமைகளை மறந்து எவனோ ஒரு அமெரிக்கனுக்கு உழைத்துத் தேய்ந்து இளமையைத் தொலைத்த பின் தூக்கியெறியப்படும் அவலம் எனக்குத் தொழில் சொல்லிக் கொடுத்த ஆசானுக்கு மட்டுமே விதிக்கப்பட்டதா என்ன? – யோசிக்கிறேன். நீங்களும் யோசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

– சுகுமாரன்.

ஜெயா நிரபராதி : ஊடகங்கள் எழுதிய விநோத தீர்ப்பு !

5

ஜெயா – சசி கும்பல் மீதான சொத்துக்குவிப்பு வழக்கும், அவ்வழக்கில் பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும் இந்தியச் சமுதாயத்தின் தலைமை சக்தியாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ள பார்ப்பனக் கும்பலின் கிரிமினல் புத்தியை, பித்தலாட்டத்தனத்தைப் புரிந்துகொள்ளும் வாப்பைத் தமிழக மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இப்பார்ப்பனக் கும்பல் ஊடகங்களில் தமக்குள்ள ஆதிக்கம், செல்வாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, இச்சொத்துக் குவிப்பு வழக்கே மோசடியானது போலவும், தேர்தல்கள் மூலம் ஜெயாவை வீழ்த்த முடியாத தி.மு.க., அவரைப் பழிதீர்த்துக் கொள்ள பின்னிய சதிவலை போலவும், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கில் வழங்கியிருக்கும் தீர்ப்பு அநியாயமானதென்றும் ஒரு அயோக்கியத்தனமான கருத்தைத் தமிழக மக்களின் பொதுப்புத்தியில் விதைத்துவிட முயலுகின்றன. இந்த வகையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த அம்மாவின் அடிமைகளைவிட, தினமணி, இந்து, துக்ளக், கல்கி, விகடன் குழும இதழ்கள் உள்ளிட்ட பார்ப்பன ஊடகங்களும்; தந்தி, புதிய தலைமுறை உள்ளிட்ட சூத்திர ஊடகங்களும் தம்மை அபாயகரமானவையாகத் தோலுரித்துக் காட்டிக் கொண்டுள்ளன.

சோ ராமஸ்வாமி அய்யர்
குற்றவாளி ஜெயாவைத் தியாகி போலக் காட்டுவதற்காக தீர்ப்பு குறித்து துணிந்து பொய்களையும், அவதூறுகளையும் அள்ளிவிட்டு வரும் துக்ளக் சோ ராமஸ்வாமி அய்யர்.

2ஜி வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள ஆ.ராசாவை உலக மகா வழிப்பறிக் கொள்ளையன் போலச் சித்தரித்து செய்திகளையும், கருத்துப் படங்களையும் வெளியிட்டு வரும் இந்த ஊடகங்கள், சொத்துக் குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப் பெற்ற ஜெயாவை மறந்தும்கூட குற்றவாளி என்று குறிப்பிட்டு எழுதுவதில்லை.

“குடும்பச் சூழ்நிலை காரணமாக நடிக்க வந்து, தாய் சந்தியாவின் மரணத்துக்குப் பின்னால் அரசியலுக்கு வந்து கூடா நட்பு கேடா முடியும் என்ற பழமொழிக்கு உதாரணமாக பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சென்றுவிட்டார், ஜெயலலிதா” என ஜெயாவை ஏதுமறியா அப்பாவியாக, நம்பி ஏமாந்து போன வெகுளிப் பெண்ணாக முன்னிறுத்துகிறது, ஆனந்த விகடன் (08.10.2014). அ.தி.மு.க. அடிமைகள் ஜெயாவின் மீதான தமது விசுவாசத்தை, பக்தியைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகின்றனர் என்றால், பார்ப்பன ஊடகங்களும் அவர்களுக்குச் சளைத்ததாகத் தெரியவில்லை. விகடன் குழுமம் ஜெயாவிற்காக உப்புக் கண்ணீரை உகுக்கிறது என்றால், கல்கி இதழோ இரத்தக் கண்ணீரே வடிக்கிறது.

“நல்ல கல்வியறிவு, விசயஞானம் உள்ளவர், ஏராளமான புத்தகங்களை வாசிக்கும் பழக்கமுள்ள அறிவாளி, சாமானிய மக்களிடம் பரிவு காட்டியவர்,  மக்களிடம் மிகுந்த செல்வாக்கு உடையவர் என்றெல்லாம் பெயர் பெற்றுள்ள ஜெயலலிதா இத்தகைய தண்டனையை அடைந்தது அனைவர் மனத்திலும் ஈரத்தை ஏற்படுத்தியுள்ளது” எனப் படிக்கும் வாசகனே நெளியும் அளவிற்கு ஒரு குற்றவாளியை அனுதாபம் கொள்ளத்தக்க தியாகியைப் போலக் காட்டுகிறது, கல்கி (12.10.2014).

2ஜி, ஆதர்ஷ், நிலக்கரிச் சுரங்க ஊழல்களைப் பற்றி எழுதும்போதெல்லாம் ஊழலை இனியும் சகித்துக் கொள்ளக் கூடாது என அறம் பேசிய இப்பார்ப்பன ஊடகங்கள், ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகின்றன. “2ஜி முறைகேடு, நிலக்கரிச் சுரங்க ஊழல் போன்ற பல இலட்சம் கோடி ஊழல்களுக்கு முன்னால், 66 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு பொருட்டாகவே பொதுமக்கள் பார்வையில் படாதது ஜெயாவின் அனுதாபத்திற்கான காரணமாக இருக்கலாம்” என எழுதியும், (29.9.2014), “65 கோடி ரூபாவுக்கு 4 வருஷம் தண்டனைன்னா, 1,76,000 கோடி ரூபாவுக்கு 10,828 வருஷம் தண்டனை வருது” (28.9.2014) எனக் கணக்குப் போட்டுக் காண்பித்தும் ஜெயாவின் ஊழலை சப்பை மேட்டராகக் காட்ட முயலுகிறது, தினமணி.

தினமணி ஆசிரியர் வைத்தியநாத அய்யர்
தினமணி ஆசிரியர் வைத்தியநாத அய்யர்

போலீசு போடும் பொய் வழக்குகளைக்கூட நியாயப்படுத்தி எழுதும் குரூரப் புத்தி கொண்ட துக்ளக் சோ, சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு குறித்து எந்தவொரு எதிர்வாதத்தையும் முன்வைக்காமல், குப்பையைப் போல அலட்சியப்படுத்தி ஒதுக்கித் தள்ளுகிறார். “ஜெயலலிதா குற்றவாளி என்று கூறி, அவருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தின் நேர்மையே சந்தேகத்துக்குரியதாகிவிடும் என்ற அளவுக்கு வெளியே பிரச்சாரம் நடந்தது” எனக் குறிப்பிட்டு, குன்ஹாவின் தீர்ப்பை அரசியல் நிர்பந்தம் காரணமாக அளிக்கப்பட்ட தீர்ப்பாகக் கொச்சைப்படுத்தியிருப்பதோடு, “அதே ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில், எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் தீர்ப்பு வந்திருக்க முடியும்.  அதற்குத் தேவையான ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்” எனக் கிசுகிசு பாணியில் தலையங்கமே தீட்டி, பழிவாங்கும் நோக்கில் ஜெயாவிற்குத் தண்டனை அளிக்கப்பட்டிருப்பதாகக் காட்ட முயலுகிறார், அவர்.  மேலும், இந்தத் தீர்ப்பு ஜெயலலிதாவுக்குப் பின்னடைவோ, இல்லையோ, தமிழக அரசியல் எதிர்காலத்துக்கு ஒரு சோதனைக் காலமாகிவிடும்” எனக் குறிப்பிடும் துக்ளக் சோ, இதன் மூலம் ஜெயாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனையைத் தமிழகத்தின் மீது விதிக்கப்பட்ட தண்டனையாகக் காட்டி ஜெயாவைக் குற்றத்திலிருந்தும், தண்டனையிலிருந்து விடுவித்துவிடுகிறார்.

“உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் மேல்முறையீடுகளுக்குப் பிறகுதான், இந்தப் பிரச்சினை பற்றி முடிவான கருத்தைத் தெரிவிக்க முடியும். குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டு, சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டு, ஜெயலலிதா அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்கிற ஜெயலலிதா தரப்பு வழக்குரைஞர்களின் வாதம் பொய்யானது என்று தள்ளிவிட முடியாது” என எழுதி குன்ஹாவின் தீர்ப்பை ஒதுக்கித் தள்ளுகிறது, தினமணி (29.9.2014).

தினமணி கருத்துப்படம்
சொத்துக் குவிப்புக் குற்றத்தைச் சப்பையாகக் காட்டும் நோக்கில் தினமணி நாளிதழ் வெளியிட்ட கருத்துப்படம்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை இப்படி ஒதுக்கித் தள்ளும் தினமணி வைத்தியநாத அயரும், துக்ளக் சோ இராமஸ்வாமி அயரும் 2ஜி வழக்கை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி விசாரிப்பதையே இறுதியான தீர்ப்பு போலக் காட்டி தி.மு.க.வின் வாயை அடைத்து வருகிறார்கள். ஒரு கீழமை நீதிமன்றம் ஜெயாவிற்கு அளித்த தண்டனையைத் தகுதியற்றதாகப் பார்க்கும் இக்கும்பல், 2ஜி வழக்கிலோ வேறோரு அளவுகோலைப் பிரயோகிக்கிறது. “ஜெயாவிற்கு எதிரான தீர்ப்பு அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவை ஏற்படுத்தும். ஆனால், தி.மு.க.வின் 2ஜி ஊழல் கறை மற்றும் குடும்ப அரசியலை மக்கள் மறக்கவில்லை” எனக் கொஞ்சம்கூடக் கூச்சநாச்சமின்றி ஒருதலைப்பட்சமாக எழுதுகிறார், துக்ளக் சோ (08.10.2014). பார்ப்பானுக்கும் சூத்திரனுக்கும் ஒரேவிதமான நீதி இருக்கக்கூடாது, இருக்க முடியாது என்பதுதான் இதன் மூலம் இக்கும்பல் சொல்லவரும் செய்தி.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்காக தமிழகத்தையே நிலைகுலையச் செய்தனர் அ.தி.மு.க. காலிகள்.  தமிழக அமைச்சரவையே பரப்பன அக்ரஹாரா சிறையின் முன் தவம் கிடந்தது. தனது விசுவாச அடிமையைத் தமிழக முதல்வராக்கி, அதன் மூலம் மிகவும் வெளிப்படையாகவே அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார், ஊழல் குற்றவாளி ஜெயா. தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த இழிநிலை குறித்து ஒரு வார்த்தைக்கூடக் கண்டித்துப் பேசாத பார்ப்பன ஊடகங்கள், ஜெயாவின், அ.தி.மு.க.வின் எதிர்காலம் குறித்துதான் அதிகம் கவலை கொள்கின்றன.
அ.தி.மு.க. கும்பல் பொதுச் சொத்துக்களைச் சூறையாடிய வெறியாட்டங்களை ஊடகங்கள் வன்முறையாகச் சித்தரிக்கவில்லை.  “போராட்டம்” என்று திரித்து எழுதின. இது குறித்து துக்ளக் சோவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, “ஒருநாள் கடையடைப்பு, பொதுச் சொத்து சேதம், தெருவில் ரகளை போன்றவை நடந்திருக்கின்றன. அடுத்தநாள் இவை போன்று கண்டிக்கத்தக்க சம்பவங்கள் நடைபெறவில்லை. இதை வைத்துக்கொண்டு சட்டம்-ஒழுங்கே சீர்குலைந்துவிட்டதாகச் சொல்ல முடியாது” எனக் கேவலமான முறையில் நியாயப்படுத்தி பதில் அளித்தார், அவர். (துக்ளக், 15.10.2014)

“உங்க வீட்ல ஒருவன் ஜெயிலுக்குப் போனால் அழமாட்டீர்களா? தனி நபருக்குக் குடும்ப அளவில் என்றால், ஒரு தலைவிக்கு மாநில அளவில் நடக்கிறது” என்று இந்தக் கேவலத்திற்கு வியாக்கியானம் அளித்தது, தினமணி (02.10.2014).

ஜெயாவின் அரசியல் வாழ்வே இப்படிபட்ட வன்முறைகளும் ஆபாசக் கூத்துக்களும் நிறைந்ததுதான் என்பதற்கு மகளிரணி நடத்திய ஆபாச நடனம் தொடங்கி, மூன்று மாணவிகளை எரித்துக் கொன்றது வரையில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், இந்து நாளேடோ, “தீர்ப்பு வெளியான நிமிடம் தொடங்கி, அதை அ.தி.மு.க.வினர்எதிர்கொண்டவிதமும் அவர்கள் ஆற்றிய எதிர்வினைகளும் அவர்களின் தலைவிக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.  கடையடைப்பு, வாகனங்கள் எரிப்பு, வன்முறைகள் இது போன்ற எதிர்வினைகள், ஜெயலலிதாவின் துணிவான, உறுதியான அணுகுமுறை மீது மதிப்பு கொண்டவர்களுக்கும்கூட அதிருப்தியையே உருவாக்கியுள்ளது. அடுத்து, கர்நாடக உயர்நீதி மன்றத்தில் ஜெயலலிதாவைப் பிணையில் வெளியே எடுப்பதற்கான நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கும்போதே, இங்கு அ.தி.மு.க.வினர் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் அவர்களின் தலைவிக்கு மேலும் இடைஞ்சல்களை ஏற்படுத்துமே தவிர, எந்தவகையிலும் உதவாது என்பது சட்டத்தின் போக்கை அறிந்தவர்களுக்கு நன்கு புரியும்” எனப் பதைபதைத்து தலையங்கம் (அக்.4) தீட்டியது.

மூத்த பத்திரிகையாளர் ஞாநி
“ஜெயா தன்னை சுயபரிசீலனை செய்து கொள்ள வேண்டும்” என இந்தியா டுடே இதழ் வழியாக வேண்டுகோள் விடுத்த மூத்த பத்திரிகையாளர் ஞாநி.

ஜெயாவின் தலையாட்டி பொம்மை என்பதைத் தவிர ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக உட்கார வைக்கப்பட்டிருப்பதற்கு வேறு காரணம் எதுவும் கிடையாது. ஓ.பி. முதல்வராகியிருப்பதும், அவரைப் பின்னிருந்து ஜெயா இயக்குவதும் தமிழகத்திற்கு நேர்ந்துள்ள அவமானம். ஆனால், இந்து நாளேடோ, “முதல்வர் பதவியில் தனக்குப் பதிலாக இன்னொருவரை அமர்த்திய விதம் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறனுக்கு ஒரு சான்று” என விசிலடித்து வரவேற்கிறது. மேலும், “ஜெயா தன்னைக் குற்றமற்றவர் என நிரூபித்து, அதன்பின் முதல்வர் நாற்காலியில் உட்கார வேண்டும்” எனத் தனது ஆலோசனையைப் பணிவோடு முன்வைக்கிறது. (அக்.18)

உச்சநீதி மன்றம் ஜெயாவிற்காக சட்டத்தையே வளைத்து அளித்திருக்கும் பிணையை அ.தி.மு.க. அடிமைகள் மட்டுமா கொண்டாடினார்கள்?  புதிய தலைமுறை, தினத்தந்தி, பாலிமர் ஆகிய தொலைக்காட்சிகள் உற்சவ மூர்த்தி போல ஜெயா பெங்களூரிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டதைக் கொண்டாட்டமாக ஒளிபரப்பின. இதைக் கண்டு ஜெயா டி.வி.கூட கூச்சத்தில் நெளிந்திருக்கக் கூடும். ஊடகங்களில் ஜெயா டி.வி.க்கு இணையான ஊதுகுழலைக் குறிப்பிட வேண்டும் என்றால், அது தந்தி டி.வி.யாகத்தான் இருக்க முடியும். ஜெயாவிற்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டதைக்கூட மூடிமறைத்து, மழுப்பலாகக் கூறும் அளவிற்கு அதனின் ஜெயா விசுவாசம் கொடிகட்டிப் பறந்தது.

ஜெயாவிடம் விசுவாசமாக நடந்து கொள்வதில் தினத்தந்தியின் ரெங்கராஜ் பாண்டே, ஹரிஹரன் போன்றவர்கள் ஒரு ரகம் என்றால், தமிழக அறிவுஜீவி வர்க்கம் இன்னொரு ரகம். தீர்ப்பு குறித்து கருத்துக் கூறாமல் தமது விசுவாசத்தைப் பறைசாற்றிக் கொண்டவர்கள் மத்தியில், வாயைத் திறந்த ஒரு சிலரோ ஜெயாவிற்கு அனுதாபம் ஏற்படுத்தும் வகையிலேயே கருத்துக்களைப் பதிவு செய்தனர்.  குறிப்பாக, தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளரான ஞாநி, “தன் கடந்த 23 வருட அதிகாரப் பயணத்தில் தன் தவறுகள் என்னென்ன, நண்பர்கள் முதல் கொள்கைகள் வரை தன் தேர்வுகளில் நடந்த பிழைகள் என்னென்ன? என்றெல்லாம் தனியே, தன்னந்தனியே அமர்ந்து ஜெயலலிதா யோசிப்பாரானால், இந்த 30 வருட அரசியலையும்கூடத் தூக்கி எறிந்துவிட்டு வேறொருவராகத் தன்னை வடிவமைத்துக் கொண்டுவிடலாம். அதற்கான திறனும் சாத்தியமும் உடையவர்தான் ஜெயா” என வேண்டுகோள் விடுத்திருக்கிறார் (இந்தியா டுடே, அக்.29). ஜெயா, பார்ப்பன பாசிசத் திமிரும் அகங்காரமும் நிறைந்த தனது நடவடிக்கைகளின் மூலம் எத்தனை தடவை இந்த அறிவுஜீவிகளின் முகத்தில் காரி உமிழ்ந்தாலும், அவர்களோ அதையெல்லாம் துடைத்துப் போட்டுவிட்டு, சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல, ஜெயாவைத் திருத்தியே தீருவது என்ற கனவோடு எழுதியும் பேசியும் வருகிறார்கள். ஜெயாவை அம்மா என அழைக்கும் அ.தி.மு.க. தொண்டனின் பிழைப்புவாதத்தைவிட, ஜெயாவை அறிவும் திறமையும் கொண்டவராகக் காட்டும் அறிவுஜீவிகளின் காரியவாதக் கற்பிதம்தான் சகிக்கவே முடியாத அசிங்கமாகத் தெரிகிறது.

ரெங்கராஜ் பாண்டே
தந்தி டி.வி.யின் தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டே – ஊடகத்துறையில் உள்ள ஜெயா விசுவாசிகளுக்கு ஒரு வகை மாதிரி.

2ஜி, நிலக்கரி ஊழல் ஆகியவற்றைக் காட்டி ஜெயாவை நிரபராதியாகக் காட்டும் மோசடித்தனத்தில் மட்டும் ஊடகங்கள் ஈடுபடவில்லை. “பொதுமக்கள் மட்டும் யோக்கியமா? அவர்களும்கூடத்தான் சமயம் வாய்த்தால் ஊழலில் ஈடுபடுகிறார்கள். நீதிபதி குன்ஹா தீர்ப்பு வந்த நாளின் கலவரச் சூழலில், ரூ.14-க்கு விற்க வேண்டிய பால் பாக்கெட்டை ஒரு கடைக்காரர் ரூ.20-க்கு விற்கிறார். ரூ.30-க்குச் செல்ல வேண்டிய சவாரிக்கு ரூ.100 கேட்கிறார் ஆட்டோக்காரர்” என உதாரணங்களைக் குறிப்பிட்டு, மக்களைக் குற்றவாளிகளாக்கி, ஜெயாவை விடுவித்துவிட்டது, இந்து நாளேடு. (எங்களுக்கு என்ன தண்டனை குன்ஹா?, இந்து, செப்.30).  1,76,000 கோடி ரூபாய்க்கு 66 கோடி ரூபாய் ஈடாகாது என வாதாட வந்த ஊடகங்கள், 66 கோடி ரூபாய் ஊழலை 20 ரூபாய்க்கு ஈடாக்கிவிட்டன.

நடுநிலை எனக் கூறிக்கொள்ளும் ஊடகங்களின் குதர்க்கமும் வக்கிரமும் நிறைந்த இந்த ஆவுகளை ஒப்பிடும்பொழுது, “அ.தி.மு.க. வைச் சேர்ந்த அமைச்சர்களிடமே 500 கோடி ரூபாய் சொத்து இருக்கும்பொழுது, அம்மாவிடம் 66 கோடி ரூபாய் சொத்து இருக்க முடியாதா?” என ஜெயாவின் குற்றத்தை நியாயப்படுத்திப் பேசும் அ.தி.மு.க. தொண்டன் யோக்கியவானாகத் தெரிகிறான்.
– குப்பன்
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014
_______________________________

உசிலை போலீசு உதவியுடன் சாதிவெறியர் அராஜகம்

2

மீபத்தில் விவிமு, மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற அமைப்புகள் உசிலை வட்டாரத்தில் ஒட்டிய ஜெயா கைது, விமலாதேவி கௌரவக்கொலை சம்பந்தமான போஸ்டர்களை பழனி என்ற பழனியப்பன் எனும் சிறப்பு சார்பு ஆய்வாளர் தலைமையில் ஒரு குழு சேர்ந்து தொடர்ந்து கிழித்தெறிந்து அம்மா மற்றும் ஆதிக்க சாதி விசுவாசத்தைக் காட்டினார்கள்.

உசிலை சட்டமன்ற உறுப்பினர் பார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த கதிரவன் தலைமையில் 4.11.2014 அன்று மீனவர்களுக்கு தூக்கு, பால்விலை உயர்வு, விமலாதேவி கொலை சம்பந்தமாக கம்யூனிஸ்டுகளை இழிவுபடுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மீனவர் தூக்கை கண்டித்து நெஞ்சை உயர்த்தியும், பால்விலை உயர்வுக்கு கொஞ்சம் பம்மியும், விமலாதேவி கொலைக்கு சாதிவெறி விசத்தைக் கக்கியும் ரெட்காசி மற்றும் கதிரவன் ஆகியோர் பேசினர்.

“விமலாதேவி கொலை சம்பந்தமாக அந்தப் பகுதியில்ஆ ர்ப்பாட்டம் நடத்த யாருக்கும் அனுமதி மறுத்தபோது இவர்கள் எப்படி போஸ்டர் அடித்து பேசுகிறார்கள்” என ஒருவர் உளவுத் துறையை தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘பா.பி கட்சியினரிடம் இது பற்றி பேசமாட்டோம் என்று எழுதி வாங்கிக் கொண்ட’தாகக் கூறினார். “ஏன் தடுக்கவில்லை” எனக் கேட்டதற்கு, “தடுக்க எல்லாம் முடியாது, கேஸ்தான் போட முடியும். இந்தக் கூட்டத்துக்கு டி.எஸ்.பிதான் அனுமதி கொடுத்தார்.அவரைப் போய் கேளுங்க” எனத் திமிராக பதில் சொன்னார்.

அவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்த பொழுது அருகில் உள்ள நாடார் வணிகவளாக மாடியில் விவிமு தோழர் குருசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்னரசு ஆகியோர் நின்று கூட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த ரெட்காசி ஆபாச வார்த்தைகளால் திட்டி ஆட்களை அனுப்பி அவர்களை அடித்து விரட்ட கட்டளையிட்டான். காவல்துறை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது. குரைக்கிற நாயைப் போல் அருகே வரை வந்து விட்டு தோழர்கள் அஞ்சாமல் எதிர்கொள்ள தயாராய் இருந்ததைப் பார்த்து விட்டு பேசாமல் திரும்பிப் போனார்கள்.

அதன்பின் அங்குவந்த ஆய்வாளர் தென்னரசை நோக்கி, “இங்க என்னய்யா பண்ற வெண்ண” (காவல் துறை உங்கள் நண்பன்) என்றார். அதற்கு தென்னரசு, “மரியாதையாக பேசுங்க” என்றதும் சுருதி குறைந்தது. “பிரச்சனை வந்துவிடும், தயவுசெய்து வாருங்கள் தோழர்” எனக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு இருவரையும் அவ்விடத்தை விட்டு 10 காவல்துறையினரின் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றது போலீசு. குருசாமியை அருகில் உள்ள தெருவிலும், தென்னரசு அவர்களை மதுரை ரோட்டில் கொங்கபட்டி அருகிலும் இறக்கிவிட்டு அவர் ஆட்டோ பிடித்து வீடு செல்லும் வரை காத்திருந்து அனுப்பி வைத்தது காவல்துறை. மேற்கண்ட அமளியில் சில காவல்துறையினர் மட்டும் பா.பி கட்சியினரை தடுக்க ஓடி வந்தனர். ஆனால், அவர்கள் அராஜகத்தை சட்டரீதியாக தட்டிக் கேட்கவில்லை.

பார்வர்ட் பிளாக் கூட்டத்தில் அவர்கள் பேசியதன் சாராம்சம்,

இந்த உசிலை பகுதியில் உள்ள நாடார், செட்டியார், ஆசாரி, வெள்ளாளர் போன்ற அனைத்து சாதியினரையும் காப்பவர்கள் நாங்கள். நாடார்கள் வணிகம் செய்து சம்பாதித்து எங்கள் சாதியினரின் உழைப்பில்தான் உயர்ந்தவர்கள். எங்களுடைய காடுகளில் வேலை செய்வதற்கு பறையர், பள்ளர், சக்கிலியர்கள் உதவி புரிந்தார்கள் என்ற பரப்புரையோடு ஆதிக்கசாதிக்கு துணை போகாத காரணத்தால் சி.பி.எம் தோழர் செல்லக்கண்ணுவை “நாயே, பேயே” என்ற பலவாறும் பழித்தனர். நாங்கள்தான் உண்மையான இடதுசாரி அமைப்பு, எங்களிடம் சாதிபிரிவினை கிடையாது என்று கூறினார்கள்.

ஆனால், மதியம் 3 மணியளவில் வணிக வளாகத்தில் இருந்த டீக்கடையின் பாத்திரங்களை உடைத்து நொறுக்கி எறிந்து நாடார் சாதி என்ற சொல்லவியலாத வார்த்தைகளால் திட்டி எங்களுக்கு எதிராக மாடியில் போட்டோ எடுக்க உதவி செய்கிறீர்களா என சண்டை போட்டு கடை அடைக்கச் சொல்லி மிரட்டினர். காவல்துறை அவர்களது ரவுடியிச அரசியலுக்கு எந்தவித சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உசிலை காவல்துறை பெரும்பான்மையாக ஆதிக்கசாதியினருக்கு துணையாகவே உள்ளனர்.

_____________________

சிலம்பட்டியில் 06.11.2014 அன்று மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை ஆர்.டி.ஓ அலுவலகம், பஸ் நிலையம் அருகில் தேனிரோடு, தாலுகா அலுவலகம் அருகில் என மூன்று இடங்களில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக பிரச்சாரம் நடத்தப்பட்டது.

தோழர் குருசாமி தனது உரையில் மேற்கண்ட விஷயங்களுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக  தலைப்பில் உள்ள மூன்று விஷயங்களின் அபாயத்தை பற்றியும் விளக்கிப் பேசினார்.  இறுதியாக “காவல்துறை, ஊடகங்கள், பார்வர்ட் பிளாக் கட்சியினர் எல்லாம் நக்சல்பாரிகள் ஊடுருவல் என்கிறார்களே, நக்சல்பாரிகள் எங்கேயும் ஊடுருவவில்லை. நாங்கள் பாகிஸ்தானில் இருந்தோ, ஆப்கானிஸ்தானில் இருந்தோ வரவில்லை. நக்சல்பாரி என்பதன் அர்த்தம் நாட்டுப்பற்றுள்ளவன், சாமானியனுக்கு அதிகாரம் கிடைக்கப் பாடுபடுபவன்” எனறு கூறி நக்சல்பாரி தோற்றத்தை விளக்கினார்.  கதிரவன் கூட்டத்தில் ஏற்படுத்திய அமளியின்போது கண்டுகொள்ளாத காவல்துறையையும் கடைகளை சேதப்படுத்திய ரெட்காசியையும் எச்சரிக்கை செய்து, “நக்சல்பாரி அரசியல் கொண்ட நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம், எல்லாவற்றிற்கும் தயார்” எனக்கூறி முடித்தார்.

மூன்று இடங்களிலும் வழக்கத்திற்கு மாறாக என்னவெல்லாம் பேசுவோம், ஏதும் பிரச்சனை நடக்குமோ என எதிர்பார்ப்புகளோடு மக்கள் கவனித்தனர். பிரச்சார இயக்கத்தில் வி.விமு தோழர்களுக்கு 70-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நான்கைந்து வாகனங்களோடு காவல் நின்றனர்.

தோழர் அ. சந்திரபோஸ் தலைமையில் நடந்த இந்தப் பிரச்சார இயக்கத்தில் உசிலை வட்டார வி.வி.மு செயலாளர் தோழர் குருசாமி, தோழர் ஆசை உரையாற்றினார்கள். தனியார்மய, தாராளமயத்தை எதிர்த்து தோழர்களால் முழக்கம் எழுப்பப்பட்டது.

usilai-milk-price-eb-demo-3

இந்தியாவில் தனியார்மயக் கொள்ளைக்குப் பின் கார்ப்பரேட், தரகு முதலாளிகளால் எப்படி சுரண்டப்படுகிறது. உழைக்கும் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தோழர் சந்திரபோஸ் தனது தலைமை உரையில் தொகுப்பாக எடுத்துரைத்தார்.

usilai-milk-price-eb-demo-1

தோழர் ஆசை உழைக்கும் மக்கள் மொழி நடையில் ஆவின் நஷ்டத்திற்கு காரணமாய் மக்கள் பணத்தை சுருட்டிய அதிமுக கொள்ளையர்கள் மாதவரம் மூர்த்தி, வைத்தியநாதன் சொத்தை பறிமுதல் செய்யாமல் பால்விலை ஏற்றம் மூலம் மக்கள் பணத்தை பறிக்கும் செயலைக கண்டித்து பேசினார்.

usilai-milk-price-eb-demo-2

உசிலை பகுதியில் சமீபகாலமாக உசிலையில் தேனிரோட்டில் முருகன் கோவில்வரை, வத்தலக் குண்டு ரோட்டில் டவுன் போலீஸ் ஸ்டேசன் வரை, மதுரை ரோட்டில் கண்ணன் தியேட்டர் வரை, பேரையூர் ரோட்டில் ஆர்.டி.ஓ அலுவலகம் வரை வாய்மொழி உத்தரவாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாக கூறி, காவல்துறை நமது அரசியல் ரீதியான போஸ்டர்கள் ஒட்ட விடாமல் கிழிப்பது, வழக்கு போடுவது, மேலும் இந்த இடங்களுக்குள் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுப்பது என்று ஜனநாயகத்தைக் காத்து வந்தது.

ஆனால், சமீபத்தில் அம்மாவுக்கு தண்டனை வழங்கி சிறையில் அடைத்தவுடன் அதிமுக காலிகளுக்கு பேருந்து நிலையம் அருகில் ஏற்கனவே சொன்ன 144 தடை உத்தரவு உள்ள இடத்தில் உண்ணாவிரத மேடை அமைக்க அனுமதி கொடுத்தது. அடுத்து தேவர் ஜெயந்தியை ஒட்டி அவர்கள் சொன்ன 144 மைய இடமான தேவர் சிலையைச் சுற்றி போஸ்டர், பிளக்ஸ் மற்றும் முருகன்ஜீ மேடை அமைத்து பேச அனுமதி அளித்து மேலும் தனது ஆதிக்கசாதி ஜனநாயகத்தைக் காட்டியது.

usilai-milk-price-eb-demo-4

செய்தி
புஜ செய்தியாளர்

உசிலம்பட்டி.

வேலிக் கருவையில் அரசுப் பள்ளி – அரியலூர் போராட்டம்

2

தனியார் கல்விக்கொள்ளையில் அரசுப் பள்ளியின் அவலம்

ளர்ச்சி என்ற போதையை நாடு முழுக்க பரவ விட்ட பாஜக-வின் முகம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. இந்த வேளையில், தன்னுடைய கருணை பார்வையால் மட்டுமே நாட்டின் பிரச்சினைகளை தீர்த்துவிட முடியும், அது அதிகார வர்க்கத்தின் துணையுடன் மட்டுமே நடக்கும் என மோடியும்-லேடியும் நம்பும் ‘அதிகார வர்க்கம்’ ஒரு கொழுத்த எருமை என்பதை நீங்கள் படிக்கப் போகும் செய்தி உணர்த்தும்.

சன்னாசிநல்லூர் பள்ளி

அரியலூர் மாவட்டம் , செந்துறை ஒன்றியத்தில் வெள்ளாற்றங்கரையில் உள்ளது சன்னாசிநல்லூர் என்ற கிராமம் (தொல்.திருமாவளவனது சொந்த கிராமமான அங்கனூரிலிருந்து 4 கி.மி தொலைவில் உள்ளது). இங்கு செயல்பட்டுவந்த அரசு தொடக்கப் பள்ளி கடந்த 2009-2010 கல்வியாண்டில் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

6-ம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளி செயல்பட்ட இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டது. புதிய கட்டிடத்தில் ஒரு வகுப்பறை மட்டுமே உள்ள நிலையில் மீதி நான்கு வகுப்புகளும் பள்ளிக்கு அருகில் உள்ள வேலிக்கருவைக் காட்டில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

சன்னாசிநல்லூர் பள்ளி

தூறல் வந்தாலும் வெயில் அதிகமாக இருந்தாலும் கூட பள்ளிக்கு விடுமுறை என்ற முறையில் பள்ளி கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வந்திருக்கிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், எந்த பயனும் இல்லை. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அங்கு படித்துவரும் மாணவர்களுக்கு பாம்புகள் மற்றும் பூச்சிகளின் ‘வேலிக்கருவை வகுப்பறைக்குள்’ வந்துவிடுவதால் மாணவர்கள் உயிருக்கு ஆபத்து என புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து புகார் அளித்தும் அதிக்காரிகள் ‘ இதோ பணம் ஒதுக்கி விட்டோம், கூடிய சீக்கிரம் கட்டிடம் கட்டிவிடுவோம் ’ என்று சளைக்காமல் பதில் சொல்லி மக்களை விரக்தியின் அவநம்பிக்கையின் விளிம்புக்கு தள்ளி உள்ளனர்.

சன்னாசிநல்லூர் பள்ளி

இவர்களிடம் எதையும் பெற முடியாது எல்லாம் எங்கள் தலைவிதி என்று மக்கள் இருந்து வந்த நிலையை கிராம இளைஞர்கள் மூலமாக அறிந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் உடனடியாக பள்ளிக்கு சென்று பார்த்து உண்மையை அறிந்துகொண்டு, அன்று இரவே கிராம பொதுமக்களை சந்தித்து நம்பிக்கையூட்டி போராட்டம் ஒன்றே தீர்வு என்பதையும் மனு கொடுப்பதால் தீர்வு இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினர். மறுநாள் கிராம பொதுமக்களின் சார்பாக ஊர்கூட்டம் கூட்டப்பட்டது. கிராமத்தின் அனைத்து பிரிவினரும் கலந்துகொண்டனர். மறுநாள் பள்ளியில் பெற்றோர் சங்கத்தை கூட்டி என்ன செய்யலாம் என முடிவு செய்வது என தீர்மானித்து கலைந்தனர்.

சன்னாசிநல்லூர் பள்ளி

கடந்த 12.11.2014-ம் தேதி காலை பெற்றோர் கூட்டம் நடைபெற்றது. பலமுறை மனு கொடுக்கப்பட்டதை பற்றியும் அதனால் எந்த பயனும் இல்லை என்பதை பற்றியும் மக்கள் விரக்தியுடன் பேசினர். பள்ளிக்கூடம் இப்படியே நடந்தால் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்ப்பதை தவிர வேறு வழியில்லை என சூழ்நிலையின் தாக்கத்தில் பேசினர்.

சன்னாசிநல்லூர் பள்ளி

தோழர்கள் மீண்டும் அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டி கல்வி தனியார்மயம் என்பது எவ்வளவு மோசமானது என்பதையும் அரசுப் பள்ளிகளின் மீதான நமது கவனமின்மையால் நமது எதிர்கால தலைமுறையே கல்வி வியாபாரத்தால் பாதிக்கப்படும் என்பதையும் பேசி புரிய வைத்தனர். நமது குழந்தைகளின் கல்வி உரிமைக்கு நாம் போராடாமல் வேறு யார் போராடுவது? என்ற கேள்வியை முன்வைத்தனர்.

ariyalur-school-12

ariyalur-school-10

பிறகு பொதுமக்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டமே தீர்வு என முடிவு செய்தனர். அதன்படி 14.11.2014 ம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து போராடுவது என முடிவு செய்யப்பட்டது.

போராட்ட புகைப்படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:
புதிய ஜனநாயகம் செய்தியாளர்,
ஜெயங்கொண்டம்.

மோடி கிளீன் இந்தியா – காமடி வீடியோ !

9

ந்தியாவெங்கும் பிரபலங்கள் விளக்குமாற்றுடன் தெருவிலிறங்கியிருக்கிறார்கள். மோடியின் ஆணையை ஏற்று இவர்கள் செய்யும் அந்த சுத்தமான நகைச்சுவை இணையமெங்கும் கொட்டிக் கிடக்கிறது. அவற்றிலிருந்து இந்த வீடியோ சித்திரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. படத்தை பாருங்கள், பரப்புங்கள், கருத்துக்களை தெரிவியுங்கள்! நன்றி!!

புராணங்கள், அறிவியல், சமூகம்

2

மிகப்பழங்கால இந்தியர்களுக்கு நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் தெரிந்திருந்தன என்று சிலர் நம்புகிறார்கள். இந்தக் கூற்றுக்கு அறிவியல்பூர்வ சான்றுகள் ஏதும் இல்லை என்பதை ‘5,000 ஆண்டுகளுக்கு முன்பாக போதிய அறிவு இருந்திருக்கக்கூடும், ஆனால் அது பாதுகாக்கப்படவில்லை என்ற சாத்தியத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்’ என்றும், அல்லது ‘அப்படியொரு அறிவு இருந்ததை நாம் தீர்மானகரமாக மறுத்துவிட முடியாது’ என்றும் விளக்குகிறார்கள். எனவே, இந்தக் கண்ணோட்டத்தை மீளாய்வு செய்வது பலனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறோம்.

அறிவியல் புனைகதை
ஆர்தர் சி கிளார்க்கின் அறிவியல் புனைகதையை ஸ்டான்லி குப்ரிக் எடுத்த திரைப்படக் காட்சி.

கொஞ்சம் யதார்த்தவாதமும் பெருமளவில் அமானுஷ்ய அம்சங்களும், அமானுஷ்ய சக்தியும் அடங்கிய புனைகதைகளுமான கட்டுமானத்தை உடையது என்ற வகையில் தொன்மவியலை  மாய எதார்த்தவாதம் என்று பொருள் கொள்ளலாம். மேலும், தொன்மங்கள் மனித நடத்தையின் உக்கிரமான நிலை, குழப்பங்கள், மனப்பாங்குகள் மற்றும் புதிர்களை படம் பிடிக்கின்றன. தொன்மங்களிலிருந்து கற்பனையை நீக்கி விட்டால் அவை சலிப்பூட்டும் போதனையாக தளர்ந்து விடும்.

வானூர்திகள், பலதலைகள், பல கைகள் மற்றும் அறிவியல் புனைவு மற்றும் தொழில் நுட்பப் புனைவுகள் என்று சொல்லப்படக் கூடிய அனைத்து வகையான எந்திரங்கள் என தொன்மப் பழமையில் ஊறிய வளமான கற்பனைகள் நம்மிடம் ஏராளம் உள்ளன. இந்த வகையில், பழமையான வரலாற்றைக் கொண்ட எந்த ஒரு சமூகத்தையும் விட நாம் எந்த விதத்திலும் வேறுபட்டிருக்கவில்லை. இதை அடிப்படையாகக் கொண்டு நவீன கண்டுபிடிப்புகள் பழங்காலத்தில் இருந்தன என்று சொல்ல முடியுமா? அப்படி சொல்வது, எல்லா கற்பனைப் பொருட்களுமே பண்டைய சமூகத்தின் பருண்மையான கண்டுபிடிப்புகள் என்ற அபத்தக் கற்பனை முடிவுக்கு நம்மை இட்டுச் செல்லும். மட்டுமல்லாமல், தொன்மங்கள் மக்களின்  நம்பிக்கையுடன் இணையும் போது தொன்மவியல் மதத்துடன் சிக்கிக் கொள்கிறது.

கற்பனை என்பது ஆற்றல்மிக்க படைப்பூக்க சக்தியாக இருந்தது, தொடர்ந்து இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கற்பனைகளை உள்ளடக்கிய தொன்மங்கள் தற்காலத்திலும் உருவாகியுள்ளன. ஜூல்ஸ் வெர்ன், ஆர்தர் சி. க்ளார்க்* ஆகியோரை நாம் படித்தால், அவர்கள் விவரிக்கும் வெளிகள் தெளிவாக வேறுவகையினதாக இருந்தாலும்  விண்வெளிப் பயணங்களின் சகாப்தத்துக்குள் நாம் அடித்து செல்லப்படுகிறோம். அல்லது ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 என்ற நாவலை எடுத்துக் கொண்டால், எந்திர மற்றும் கம்ப்யூட்டர் வகை மனிதர்களின் எதேச்சதிகார ஆட்சிமுறையின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்ற உலகுக்குள் நாம் நுழைகிறோம். இந்த கற்பனைகள் சில நேரங்களில் தீர்க்கதரிசனங்களாக ஆகி விடுவதும் உண்டு.

ஸ்டார் வார்ஸ் பாத்திரம் ஒன்றுடன் நடிகர் மார்க் ஹாமில்
ஸ்டார் வார்ஸ் பாத்திரம் ஒன்றுடன் நடிகர் மார்க் ஹாமில்

ஆனால், குறிப்பிடத்தக்க ஒரு வேறுபாடு உள்ளது. சமகால கற்பனைகள் எதிர்கால எதார்த்தத்துடன் இணைப்பை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் நடக்கும் முயற்சி இதற்கு மாறாக தொன்மங்கள் வாயிலாக நிகழ்காலத்தை பழைய சமூகத்துடன் முடிச்சுப் போடுவதாக இருக்கிறது. எனவே, கற்பனைகளை கடந்த காலத்தில் வைக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தில் வைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

தொன்மவியலை அதன் வளமான, தனித்த அடையாளத்துடன் தொன்மவியலாகவே படிக்க வேண்டும். எகிப்தியர்கள், கிரேக்கர்கள், இந்தியர்கள், சீனர்கள் மற்றும் இதர பழங்கால தொன்மங்களின் படைப்பாளிகள் தொன்மங்களில் கடவுளையும், அமானுஷ்ய சக்திகளையும் உருவாக்கினர். எனவே அதனை வரலாறுடனும், அறிவியலுடனும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொன்மங்கள் என்பவை பழங்கதைகள்; வரலாறு என்பது அறிவியலின் துணை கொண்டு நடவற்றைப் பற்றி செய்யப்படும் கருத்தாக்கம். வரலாற்றை தொன்மம் கொண்டு பதிலீடு செய்வது அபத்தமானது. பிரதமர் நரேந்திர மோடி பழங்கால தொன்மவியலை சமகால அறிவியலுடன் இணைத்து இப்போது இருக்கும் கண்டுபிடிப்புகள் அனைத்தும் பழங்காலத்தில் இருந்தன என்று கூறிய கருத்துக்களைப் போல கற்பனையானது என்றும் சிலர் கருதுகின்றனர்.

கனவும், நிதர்சனமும்

அறிவியல் என்பது தகவலையும், சேகரிக்கப்பட்ட அறிவையும் அடிப்படையாகக் கொண்டது. இந்தத் தகவலையும் அறிவையும் ஒரு முறையை கையாண்டு, தர்க்கபூர்வமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஒரு தடயத்தை ஆதாரமாக ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் அதன் நம்பகத்தன்மையை கடுமையான பரிசோதனைக்கு உடபடுத்துதல் அவசியம். இந்த நடைமுறையை மனதின் கற்பனைக்கு பொருத்த இயலாது.

மேலும் அறிவியல் கண்டுபிடிப்புகள் வெறுமனே கற்பனைத் திறனின் கணநேர தாவல்கள் அல்ல. அவற்றுக்கு நீண்டதொரு கர்ப்பக்காலம் உண்டு. ஆகாய விமானம் போன்ற ஒன்று இறுதி நிலையை எய்தும் முன்னர் பல்வேறு கட்டங்களையும், முயற்சிகளையும் தாண்டி வருகிறது. பழங்கால தொன்மப் படைப்புகளின் உருவாக்கத்திற்கு இத்தகைய பதிவு செய்யப்பட்ட எந்த ஆதாரமும் இல்லை. அறிவியல், அதன் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் ஆகியவற்றின் உருவாக்கத்துக்கு படைப்புத் திறன் கொண்ட கற்பனை அவசியம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து தான். ஆனால், அதே நேரம் அவை கற்பனையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை அல்ல. கற்பனையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை கனவுகளாக மட்டுமே எஞ்சும்; எதார்த்தத்துக்கு வராது.

ஜார்ஜ் லூகாஸ்
‘ஸ்டார் வார்ஸ்’ உருவாக்கிய ஜார்ஜ் லூகாஸ் தனது படைப்புகளில் ஒன்றுடன்.

இப்போது உள்ள சூழலில் அதிகாரபூர்வமாக மேற்கொள்ளப்படும் இந்த பிரச்சாரம் பரிணாமக் கோட்பாட்டை நிராகரித்து, தெய்வீகம் என்ற கருத்திலிருந்து முழுதும் துண்டிக்கப்படாத அறிவார்ந்த படைப்பு  (Intellectual Design) கோட்பாட்டை வைத்த ஜார்ஜ் புஷ் மற்றும் அமெரிக்கர்களின் செயலைக் காட்டிலும் ஒரு படி மேல் செல்கிறது. கடவுளுக்கு மிக நெருக்கமான போப் கூட சமீபத்தில் பரிணாமக் கோட்பாட்டை ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடவுள் நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகளைப் பொறுத்தவரை மக்கள் வெகுளித்தனமானவர்கள். ஏனெனில் அவர்களுடைய இந்த நம்பிக்கைகள் பொதுவாக கேள்விக்கு உட்படுத்தப்படுவதில்லை. மக்களின் இந்த பலவீன நிலையை தவறாக பயன்படுத்திக் கொள்வது எளிது.

எனவே இத்தகைய முழக்கங்கள் நம்பிக்கை கொண்ட மக்களை கடுந்தேசியவாதிகளாக, பகுத்தறிவற்றவர்களாக, கடந்தகாலம் பற்றிய மாறாத எண்ணத்தை உருவாக்கி அறிவியலுக்கு எதிரானவர்களாக உருமாற்றக்கூடியது. அறிவியல் அறிவு ஏற்படாத சூழலில் அறிவியல் கண்டுபிடிப்புகள் இருந்ததாக சொல்வது ஒரு வகையில் அறிவியலின் பொருத்தப்பாட்டை நிராகரிக்கும் செயல்பாடு.

தொன்மவியலும், மதமும் எளிதில் ஒன்று கலக்கின்றன. மதத்துடன் அரசியல் என்ற வெடிபொருள் கலவை தான் இங்கு அனைவரும் கவலைப்படுகின்ற ஒன்றாக இருக்கிறது. தொன்மவியலுடன் அறிவியலையும், மதத்தையும், அரசியலையும் கலக்கிறோம். இது மாலடோவ் காக்டெயில் என்றழைக்கப்படும் பல வெடிமருந்துகள் கலவையின் ஆபத்தையும் விஞ்சக்கூடியது. நாம் செல்ல வேண்டிய இடம் இதுவல்ல.

விக்ரம் சோனி, ரொமிலா தப்பார்.
தமிழில் சம்புகன்.

* ஜூல்ஸ் வெர்ன், பிரான்சை சேர்ந்த 19-ம் நூற்றாண்டின் அறிவியல் புனைகதை எழுத்தாளர். ஆர்தர் சி. க்ளார்க், அமெரிக்காவின் அறிவியல் புனைகதைசொல்லி.

கட்டுரை, படங்கள் : நன்றி thehindu.com

குறிப்பு :

கடந்த மாதம் அக்டோபர் 25-ம் தேதி பிரதமர் மோடி சர் ஹெச்.என். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையை திறந்து வைத்தார். முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி இயக்குநராக உள்ள இந்த மருத்துவமனையின் தொடக்க விழாவில் மருத்துவர்கள், முக்கியப் பிரமுகர்கள் எனப் பலரும் குழுமியிருந்தனர். இந்த விழாவில் பேசிய மோடி பழங்கால இந்தியர்கள் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையில் (Plastic Surgery) நிபுணத்துவம் பெற்றிருந்தனர் என்று திருவாய் மலர்ந்தார். அதற்கு எடுத்துக்காட்டாக துண்டிக்கப்பட்ட விநாயகனின் தலையிருந்த இடத்தில் யானையின் தலையை சிவன் ஒட்டிய புராணத்தை அடித்து விட்டார். அப்போது எத்தனை மருத்துவர்கள் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தனர் என்று தெரியாது. மோடி இத்துடன் நின்று விடவில்லை. மரபணுவியலிலும் பண்டைய இந்தியர்கள் சிறந்து விளங்கினர் என்றார். இதற்கு உதாரணமாக குந்தி தேவி கருத்தரிக்காமல் கர்ணனை பெற்றதை கூசாமல் குறிப்பிட்டார்.

மோடியின் இந்த உளறல்களை சகித்துக் கொண்டு இறுக்கமாக செய்திகளை வெளியிட்டன ஊடகங்கள். ஆனால், வெளிநாட்டு ஊடகங்கள் மோடியை பரிகசித்தன; சமூக வலைதளங்களில் எள்ளி நகையாடப்பட்டார். மோடியின் பிதற்றலை விமர்சிக்கத் தயங்கிய இந்திய விஞ்ஞானிகளையும், இந்திய ஊடகங்களையும் கடுமையாக சாடினார், கரண் தப்பார் என்ற பிரபல ஊடகவியலாளர். இந்திய அரசமைப்பு சட்டப் பிரிவு 51(A)1 -ன் படி இந்தியக் குடிமகன்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அறிவியல் மனப்பான்மைக்கு எதிராகவே மோடி பேசியதை பதிவு செய்தார், கரண் தப்பார். கரண் தப்பாரின் கட்டுரை தி இந்து நாளிதழில் வெளியானது.

அதற்கு பிறகு Mythology Science and Society என்ற தலைப்பில் வரலாற்றறிஞர் ரொமிலா தப்பாரும், விக்ரம் சோனி என்ற அறிவியலாளரும் இணைந்து எழுதிய கட்டுரை தி இந்து நாளிதழில் நவம்பர் 7-ம் தேதி வெளியானது. அதன் தமிழாக்கம் இது.

காலில் விழுந்தால் கௌரவம் – காதலில் விழுந்தால் குற்றமா ?

5

kolkata honourm killing 1காசு பணத்துக்கு மட்டுமல்ல
கௌரவத்திற்கு நட்டம் என்றும்
கள்ளிப்பால் ஊற்றி
நடக்கின்றன கொலைகள்.

சொந்த சமூகத்தின் கௌரவப்பசிக்கு
தோள்சுமந்த பிள்ளையை
அறுத்துப் போடும் கசாப்புக்காரனுக்குப் பெயர்
‘மானஸ்தன்’.

‘காலில்’ விழுவதை
கௌரவமாய் ஏற்கும் சாதி
‘காதலில்’ விழுவதை
சமூகக் குற்றமாக்கி
உறவையே கொளுத்துவதற்குப் பெயர்
‘வீரம்’.

இலவசம் வாங்கவும்
இட ஒதுக்கீடு கோரவும்
வெட்டிப் பெருமையை வீசிவிட்டு
ஒடுக்கப்பட்டதாக
பேசுவதன் பெயர்
கௌரவமா காரியவாதமா?

விளைநிலத்தின் நாளத்திற்குள்
ஓடும் நீரை
அத்துமீறி உறிஞ்சிடும்
கோக்கையும் பெப்சியையும் கண்டு
கொதிக்காத கௌரவம்
காதலின் தவிப்புக்கு
‘ரெட்டைக்குவளை’ வைக்கிறது.

விதையையும் விவசாயத்தையும்
தனதாக்கிக்கொண்டு
உழவனின் மரபுரிமையை மறுக்கும்
மூலதனத்தின்
கழுத்தில் விழாத
கௌரவக் கயிறுகள்
‘சாதி மறுப்பை’
தேடிப்பிடித்து தூக்கிலிடுகின்றன.

“தேசத்தின் கௌரவம்” காக்க
காதலர் தினத்து இளைஞர்களை
கைப்பிதுங்க
தாலியோடு துரத்தும்
காவிப்புலிகள்
கௌரவக் கொலையாளிகளின்
மீசைக் குகைக்குள்
பதுங்கிக் கொள்கின்றன.

PAKISTAN-WOMEN-CRIME-PROTESTசேரியை எரிக்கவும்
காதலைப் பிரிக்கவும்
செயல் ஊக்கத்தையே
சாதிக்கணக்கெடுப்புகள்
கூடுதலாய்த் தந்துள்ளன.

பள்ளிப் பதிவேட்டிலிருந்து
சாதியை நீக்கினால்
ஒழியுமா இந்தக்கொலைகள்
பிறப்பிலும் இறப்பிலும்
பேசும் மொழியிலும்
சாதியை தீண்டாமையை
நஞ்சாய்க்கலந்திட்ட பார்ப்பனியத்தை
சரித்திரத்திலிந்தே நீக்கவேண்டும்
சட்டம் செய்து அல்ல
யுத்தம் செய்து!

– கோவன்

ஆவினுக்கே பால் ஊற்ற அரசு செய்த சதி – திருச்சி ஆர்ப்பாட்டம்

0

திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து பால் விலை ஏற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பால் விலையை லிட்டருக்கு ரூ 10 உயர்த்தி உள்ளது, அரசு. இதனை அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் கண்டித்தத்துடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். நமது அமைப்பின் சார்பிலும் திருச்சி பகுதியில் இப்பிரச்சனையை மக்களிடம் விரிவாக கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்து விலை உயர்வு அன்று நகரம், புறநகர், கல்லூரி, கடைவீதி என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

அதன் பின் 3.11.2014 நகரின் மையப் பகுதியில் உள்ள சிக்னலில் பிரசுரம் வினியோகித்து பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கபட்டது. ஆயிரக்கணக்கான நபர்களை சந்தித்து பேசப்பட்டது. பால் உற்பத்தியாளர்கள் சிலர் தமக்காக தான் விலை உயர்த்தப்பட்டது என அப்பாவித்தனமாக கூறினர்.

  • பருத்திக் கொட்டை, புண்ணாக்கு மானிய விலையில் தருவதற்கும், விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் இந்த அரசுக்கு வேறு வழி இல்லையா?
  • மொட்டை அடிச்சவனுக்கும், மொளப்பாரி தூக்கினவனுக்கும் பல கோடிகளை ஒதுக்கிய பணத்தை ஏன் பால் உற்பத்தியாளர்களுக்கு தரக்கூடாது

பால் விலையை உயர்த்தி தான் இதை செய்ய வேண்டுமா? இது மக்களை மோதவிடும் தந்திரம் என விளக்கப்பட்டது.

இப்படி ஒரு கண்ணோட்டம் இருக்கிறதா என்கிற தோரணையில் அமைப்பு பிரசுரத்தை பெற்றுக் கொண்டனர். இது போல தவறான கண்ணோட்டத்தில் கேள்வி கேட்பவர்களிடம் பொறுமையாக விளக்கப்பட்டது. அ.தி.மு.க கொடி கட்டிய காரிலும் பிரசுரம் வழங்கி விளக்கப்பட்டது. விருப்பம் இல்லாமல் பிரசுரம் மட்டும் பெற்றுச் சென்றனர். காலை முதல் மாலை வரை பிரசுரம் வழங்கியது நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பால் விலை உயர்வு ஏழை நடுத்தர மக்கள் மீது விழுந்தது இடி! ஆவின்-க்கே பால் ஊற்ற அரசு செய்த சதி” என்ற தலைப்பில் 05.11.2014 அன்று திருச்சி பாலக்கரை இராமகிருஷ்ணா பாலம் அருகே காலை 10.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பால் விலை உயர்வு ஆர்ப்பாட்டம்

பெண்கள் விடுதலை முன்னணியின் பொருளாளர் தோழர். பவானி தலைமை ஏற்று நடத்தினார். ம.க.இ.க தோழர் ஜீவா, மனித உரிமைப் பாதுகாப்பு மைய தோழர் காவேரி நாடன், ம.க.இ.க-வின் மாநில இணை செயலாளர் தோழர் காளியப்பன் ஆகியோர் உரையாற்றினர்.. ம.க.இ.க மையக் கலைக்குழுவினரின் புரட்சிகர பாடல்கள் போராட்ட உணர்வை மக்களிடையே விதைத்தது. இவ்வார்ப்பட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தோழர்கள், பெண்கள் குழந்தைகள் என கலந்து கொண்டனர்.

தோழர் பவானி பேசும் போது:

milk-price-trichy-demo-08

இந்த பால் விலை உயர்வினால் சாதாரண மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பருத்திக் கொட்டை, புண்ணாக்கிற்கு அரசு மானியத்தை ரத்து செய்ததன் விளைவு, விவசாயிகளுக்கு பால் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. அவர்களால் முடியாத நிலையில் ஆடு மாடுகள் பேப்பரை தின்னும் அவலநிலைதான் இருக்கின்றது என்றார்.

ம.க.இ.க தோழர் ஜீவா பேசும் போது:

“போதிய தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு ஆவின்பால் கொடுக்க பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். அந்த அளவுக்கு ஆவின் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அரசாங்கம் அதிலும் கலப்படம் செய்வதுடன் அதன் விலையையும் ஏற்றி குழந்தைகளுக்குக் கூட வஞ்சனை செய்கிறது. தண்ணீரைக் கூட இலவசமாக வழங்காத அரசிடம் நாம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். தண்ணீர், கல்வி, மருத்துவம், போன்றவற்றைக் கூட இலவசமாகத் தர முடியாது என்று சொல்லும் இந்த அரசு எதற்கு? இதற்கெதிராக ஒரு போராட்டம் இல்லை. ஆனால், ஜெயலலிதா ஒரு கிரிமினல் குற்றவாளி. அவர் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து 22 பேருந்துகள் எரிக்கப்பட்டன. இந்த இழி நிலை மாற நாம் போராட வேண்டும். இந்த அநீதியான ஆட்சியாளர்களை எதிர்த்து நிற்கும் நக்சல்பாரிகளே இந்த தேசத்தைக் காப்பவர்கள்” என்றார்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்டத் தலைவர் காவிரி நாடன் பேசுகையில்:

milk-price-trichy-demo-14

“பால் விலை உயர்வு மட்டுமல்ல, மின்கட்டணமும் உயரப்போகிறது. மக்களின் கருத்துக் கேட்டே மின் கட்டண உயர்வு என்று சொல்லி நடத்தும் கருத்த கேட்புக் கூட்டம் ஒரு நாடகமே. மீனவ சமூகம் பாதிப்பு, இலங்கை அரசு அனைத்தும் இவர்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடர்ந்து நடத்துகிறது. விடுதலை புலிகளுக்கு ஆயுதம், மருந்து கொடுத்தார்கள் என மீனவர்களை சிறை வைத்தது அரசு. ஆனால், சிங்கள ராணுவத்திற்கு நிதி, ஆயுதம் கொடுத்து லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றது இந்திய அரசு, இதற்கு என்ன தண்டனை? காங்கிரசுக்கு மாற்றாக பாஜக என மக்கள் நினைத்தனர். இவர்கள் அனைவரும் நாட்டை காட்டி கொடுக்கும் துரோகிகளே!” என்றார்.

தோழர்.காளியப்பன் பேசும் போது:

milk-price-trichy-demo-16

“எந்த பரிசீலனையும் இல்லாமல் விலையை ஏற்றியிருக்கிறது அரசு. பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் நிதி தர வேண்டும். ஆவின் நிறுவனம் நட்டத்தில் இயங்குகிறது என காரணம் கூறுகின்றனர். இது சரி என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆவின் நிறுவனம் ஏன் நட்டத்தில் இயங்குகிறது? அப்படி இயங்கினாலும் விலையை ஏன் உயர்த்த வேண்டும்” என தோழர் கேள்வி எழுப்பினார்.

“25 லட்சம் குடும்பங்கள் பால் உற்பத்தியே நம்பியே உள்ளது. கல்வி மருத்துவம் எப்படியோ அப்படி பாலும் அடிப்படை தேவை. பால் நோயாளிகளுக்கு மருந்தாகவும் குழந்தைகளுக்கு உணவாகவும் பயன்படுகிறது. தமிழ்நாடு பால் உற்பத்தியில் 2-ம் இடத்தில் இருந்தும், மக்கள் சத்து பற்றாக்குறையுடன் உள்ளனர். நாட்டு மக்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டிருந்தால் விலை ஏறியிருக்காது. பாகிஸ்தான் பயங்கரவாதம் இல்லை. மக்களின் வயிற்றிலடிப்பதே பெரிய பயங்கரவாதம். அரசின் அடிப்படை நோக்கம், ஆவின் நிறுவனத்தை முடிவிட்டு, தனியாருக்கு கொடுப்பதே. இது மட்டுமின்றி பேருந்து கட்டணம், மின் கட்டணம் உயர்வு. எல்லா துறைகளையும் நட்டத்தில் இயங்குவதாக காட்டி தனியாருக்கு தாரைவார்க்கின்றது. இதை மக்கள் போராட்டத்தின் மூலமே மாற்றியமைக்க முடியும்” என சிறப்புரையாற்றினார்.

பாய்லர் பிளன்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் செயலாளர் தோழர் சுந்தர்ராஜ் நன்றியுரை கூறி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

விலை உயர்வை கண்டு விரக்தியடைந்து வீட்டுகுள் முடங்காமல் வீதியில் இறங்கி போராடும் போது இந்த அரசின் சதி செயலை அம்பலப்படுத்தவும், அரசு பணிய வேண்டிய நிர்ப்பந்தமும் குறைந்தபட்சம் விலையை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். மக்கள் வீதியில் இறங்கி போராடுவதன் மூலமே இந்த அரசின் மக்கள் விரோதப் போக்கை கைவிட வைக்க முடியும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்:

மக்கள் கலை இலக்கியக் கழகம் வாழ்க!
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வாழ்க!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வாழ்க!
பெண்கள் விடுதலை முன்னணி வாழ்க!

மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனை ஓங்குக!
புதிய ஜனநாயக புரட்சி வெல்க!

பச்சிளம் குழந்தைகளின் வயிற்றிலடித்து
ஆவின் பாலுக்கு விலை உயர்வு
பச்சத்தண்ணியில் காசு பொறுக்கும்
பாதகத்தி ஆட்சியிலே
பாலுக்கு விலை ஏறுதுன்னு
புலம்பாதே! புலம்பாதே!

இடுப்புக் கோவணம் உருவுவதற்கும்
எதிர்காலத் திட்டம் வருது
மறவாதே! மறவாதே!

ஆரோக்கியா, திருமலான்னு
தனியார் நிறுவனத்தை வளர்க்காதே!
ஆவினுக்கு பாலை ஊத்தி
பச்சிளம் குழந்தைகளின்
வயிற்றிலடிக்காதே! வயிற்றிலடிக்காதே!

பருத்திக்கொட்டை, புண்ணாக்கு
மானியத்தை வெட்டாதே!
மாடுகளின் மடியறுத்து
பொறுக்கித் தின்ன அலையாதே!

ஏய்க்காதே! ஏய்க்காதே!
பால் உற்பத்தியாளர் பெயராலே
பால் விலை உயர்வுன்னு ஏய்க்காதே!
தனியார் பாலின் கொள்கைக்கு
துணை போவதை மறைக்காதே!

அரசுத்துறைகள் நட்டமென்று
ஆட்டையை போட நினைக்காதே!
ஆவின் நிறுவனம் நட்டமாம்!
மின் வாரியம் நட்டமாம்!
போக்குவரத்து துறையும் நட்டமாம்!
பொது துறைகளே நட்டமாம்!
இது அரசுத்துறைகளை இழுத்துமூட
அரசே நடத்தும் நாடகம்!

நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
ஆவின் பாலில் கலப்படம் செய்து
2000 கோடி கொள்ளையடித்த
அ.தி.மு.க அமைச்சர்கள்
துணை போன அதிகாரிகள் மீது
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!

தனியார்மயம், தாராளமயம்
தாலியறுக்க வந்தாச்சு!
சேவைதுறைகளையும் ஒழித்துகட்ட
உலகவங்கி சொல்லியாச்சு
கல்வி, மருத்துவம் தனியாராச்சு
ஆலைகள், சாலைகள் தனியாராச்சு
விவசாய மானியம் பறிபோச்சு
பாலும் மோரும் பறிபோகுது,
பார்த்துக் கொண்டிருந்தா தீராது!
வீதியில் இறங்கி போராடு!

விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!
தனியார்மயம், தாராளமயம்
உலகமய தாசர்களை
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!

கிழித்தெறிவோம்! கிழித்தெறிவோம்!
தனியார்மய, தாராளமய
உலகமய கொள்கைகளை
கிழித்தெறிவோம்! கிழத்தெறிவோம்!

ஏறுது ஏறுது விலைவாசி!
காரணம் யாரு நீ யோசி
மோடி, லேடி கேடிகள் ஆட்சி!
தேவையான்னு மாத்தி யோசி!

விலைவாசி ஏறுன சோகத்தில்
வீதியை நொந்து சாகாதே!
அமைப்பாய் திரண்டு போராடினா
அரசை பணியவைத்த வரலாறுண்டு!

பாலு விலை ஏறுதுன்னு
ஓட்டுகட்சிகள் அலறுது பாரு!
தனியார் மயமே காரணமுன்னு
சொல்ல மறுப்பது ஏன்னு கேளு!
தி.மு.க, அ.தி.மு.க வுக்கும்
காங்கிரஸ், BJP க்கும்
வேறு வேறு கொள்கை அல்ல!
தனியார் மயத்தை புகுத்துவதில்
எல்லாம் கூட்டு களவாணிகளே!

பறிமுதல் செய்! பறிமுதல் செய்!
ஆவின் பாலில் கொள்ளையடித்த
அ.தி.மு.க காலிகளின்
அதிகாரிகளின், அமைச்சர்களின்
சொத்துகளை பறிமுதல் செய்!.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி.
திருச்சி மாவட்டம்.

கொட்டும் மழையிலும் மக்கள் கொண்டாடிய புரட்சி தினம்

0

நவம்பர் புரட்சி தின கொண்டாட்டங்கள் – 4

16. சென்னை – புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தும் நோக்கத்தை முன்வைத்து மாணவர்கள் – இளைஞர்கள் மத்தியில் செயல்பட்டு வரும் புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளை ஒவ்வொரு ஆண்டும் உழைக்கும் மக்களுடன் இணைந்து நடத்தி சிறப்பித்து வருகின்றது. அதன் மூலம் ரசியப் புரட்சியின் அனுபவங்களையும், புரட்சிகர உணர்வையும் வரித்துக்கொண்டு வருகிறது.

இவ்வாண்டும், பு.மா.இ.மு சென்னை, விழுப்புரம், கடலூர், கரூர், திருச்சி, கோவை, தர்மபுரி, தூத்துக்குடி என பல மாவட்டப் பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள், உழைக்கும் மக்களின் திரளான பங்கேற்புடன் நவம்பர் புரட்சி நாளை சிறப்பித்துள்ளன.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் நடத்திய நவம்பர் புரட்சிநாள் விழா செய்தித் தொகுப்பு;

உண்மையில் ஒரு விழாவை சிறப்புற நடத்த வேண்டுமென்றால், விழாவிற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்றால், விளையாட்டுப் போட்டிகள் இல்லாமல் சாத்தியமே இல்லை. ஒரு விழாவை அழகுபடுத்தும் மிகச் சிறந்த வடிவங்களில் ஒன்று விளையாட்டுப் போட்டிகள்.

அந்த வகையில், நவம்பர் புரட்சி நாளை முன்னிட்டு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சென்னைக் கிளையின் சார்பாக, குரோம்பேட்டை, மதுரவாயல், சந்தோஷ் நகர் ஆகிய பகுதிகளில் விளையாட்டு போட்டிகள், அப்பகுதி மக்களின் முழு ஒத்துழைப்போடும், பங்கேற்போடும் சிறப்புற நடைபெற்றன.

விளையாட்டுப் போட்டிகள்

குரோம்பேட்டை பகுதியில் 50 க்கும் மேற்பட்ட சிறார்களின் உற்சாகத் துள்ளலோடு விளையாட்டுப் போட்டிகள் எளிமையாக நடைபெற்றன. காலை 11 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை போட்டிகள் நடைபெற்றன. பகுதிச் செயலர் தோழர். தம்புராஜ் நவம்பர் புரட்சி நாளின் சிறப்புகளை விளக்கி போட்டியை தொடங்கி வைத்தார். சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கும் லெமன் ஸ்பூன், ஸ்லோ சைக்கிள், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் மற்றும் உழைக்கும் மக்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. சிலம்பாட்டத்தைப் பார்த்த இளஞ்சிறார்கள், தாங்களும் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொடுங்கள் என்று தங்கள் ஆவலை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர். அப்பகுதி மக்கள் திரளாக கலந்துகொண்டு தங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர்.

மதுரவாயல் பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், உழைக்கும் மக்கள் பங்கேற்புடன் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே விளையாட்டுப் போட்டிகளுக்கான தயாரிப்புகள், மக்களிடம் நேரில் வீடு வீடாக சென்று அறிவிப்பது என வேலை உற்சாகத்துடன் நடைபெற்றது. தோரணங்கள், பேனர்கள் என ஒரு விழாவின் தன்மையோடு நடந்த போட்டிகளில் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என சுமார் 50 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்தோடு போட்டிகளில் பங்கேற்றனர். உறியடித்தல், மியூசிக் சேர், லெமன் ஸ்பூன், ஸ்லோ சைக்கிள் என பல்வேறு போட்டிகள் மாலை வரை உற்சாகத்தோடு நடத்தப்பட்டன. அப்பகுதிமக்கள் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து நிகழ்ச்சிகளை அப்பகுதியே திருவிழாக்கோலம் பூண்டதுபோல் இருந்தது.

எழும்பூர் டாக்டர்.சந்தோஷ் நகரிலோ, மழையும் போட்டியின் பங்கேற்பாளர்களில் ஒன்றாக ஆனது. காலை முதல் மாலை வரை உற்சாகத்தின் விளிம்புக்கே செல்லும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நூற்றுக் கணக்கானோரின் பங்கேற்போடு நடத்தப்பட்டன. திட்டமிட்ட போட்டிகளைத் தாண்டி, மக்களின் ஆர்வத்தின் காரணமாக கூடுதலாகவும் போட்டிகள் நடத்த வேண்டியதாகி விட்டது.

தோழர்களுக்கு இணையாக பொறுப்புகளை எடுத்துக் கொண்டு பகுதி இளைஞர்களும் போட்டிகளை நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளித்தனர். வழக்கமாக, பெற்றோர்களின் அழுத்தத்தின் காரணமாக வெளியில் வரத் தயங்கும் இளம்பெண்கள், எங்களைக் கூப்பிட மாட்டீர்களா? என்று உரிமையோடு கேட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். அந்தளவுக்கு உற்சாகம் பகுதியில் மழையோடு சேர்ந்து கரைபுரண்டோடியது. அப்பகுதி மக்கள் மதிய உணவு இடைவேளையின் போது போட்டிகளை நடத்திய பு.மா.இ.மு தோழர்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்து உணவளித்து மகிழ்ந்தனர். 5000 க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இப்பகுதியில் நடந்த விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சியில் பெரும்பான்மையான மக்கள் இதில் கலந்து கொண்டது விளையாட்டு போட்டியை நடத்திய எமது பு.மா.இ.மு விற்கு கிடைத்த அங்கீகாரமாக இருந்தது.

சந்தோஷ் நகரில் நடந்த விளையாட்டுப் போட்டிகள்


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஒட்டுமொத்தமாக, உழைக்கும் மக்களின் உண்மையான திருவிழாவான நவம்பர் 7 விழாவையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் இப்பகுதி உழைக்கும் மக்களை பற்றிக்கொண்டு, அவர்களின் மனங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதை பார்க்கமுடிந்தது.

இருசக்கர வாகன பேரணி

சென்னை வாழ் உழைக்கும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் பு.மா.இ.மு தோழர்கள் குரோம்பேட்டையில் தொடங்கி திரிசூலம் விமான நிலையம், கிண்டி, அசோக் பில்லர், வடபழனி, கோயம்பேடு வழியாக மதுரவாயலுக்கும், மதுரவாயலில் தொடங்கி அரும்பாக்கம், அமைந்தகரை, கீழ்ப்பாக்கம் வழியாக எழும்பூர் வரை செங்கொடி ஏந்தி இரு சக்கர வாகனப் பேரணியாக கொடியேற்றும் நிகழ்ச்சிக்குச் சென்றனர். சிவப்புச் சட்டை அணிந்த இளைஞர்களின் அணிவகுப்பை உழைக்கும் மக்கள் ஆங்காங்கே நின்று கவனித்தனர்.

குரோம்பேட்டையில் தொடங்கி நடந்த பேரணி

மதுரவாயலில் தொடங்கி நடந்த பேரணி

நமக்கு எந்த வகையிலும் பயன்படாத,
அழுகி நாறுகின்ற இந்த அரசமைப்பை
இன்னும் ஏன் நாம் கட்டிக்கொண்டு அழவேண்டும்.
இந்த அரசமைப்பு முறையை மொத்தமாக தூக்கியெறிவோம்!

உழைக்கும் மக்களாகிய நம் கையில் அதிகாரம் இருக்கும் வகையில்
மாற்று அதிகார அமைப்புகளுக்கான
போராட்டக் கமிட்டிகளை கட்டியெழுப்புவோம்.
அதற்கொரு மாபெரும் அரசியல் எழுச்சியை உருவாக்குவோம்!
உழைக்கும் அனைவரும் புரட்சிகர அமைப்பாக அணிதிரள்வோம்.
நம் நாட்டிலும் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்,
இம் மண்ணிலும் ஒரு சொர்க்கத்தைப் படைப்போம்!

என்ற கருத்துக்கள் அடங்கிய பிரசுரம் வழி நெடுகிலும் மக்களிடம் வினியோகிக்கப்பட்டது. பலர் இதனைப் பெற்று ஆர்வமுடன் உடனே படித்தனர். சாலையில் வாகனக்களில் உடன் வந்த பொதுமக்கள் ஆர்வத்தோடு என்ன விசயம், எங்கு செல்கிறீர்கள் என கேட்டு தெரிந்து கொண்டு வாழ்த்தினர்.

பாட்டாளி வர்க்கத்திற்கேயுரிய கம்பீரத்துடன் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி!

வம்பர் 7 ரசியப் புரட்சி நாள் விழாவை முன்னிட்டு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சென்னைக் கிளையின் சார்பாக நவம்பர் 7 அன்று காலை கொடியேற்ற நிகழ்ச்சி பு.மா.இ.மு. செயல்படும் குரோம்பேட்டை, மதுரவாயல், சந்தோஷ் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

ஒவ்வொரு பகுதியிலும் பறை முழக்கம் அதிர,
நெஞ்சிலேந்துவோம்! நெஞ்சிலேந்துவோம்!
நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளை
நெஞ்சிலேந்துவோம்! நெஞ்சிலேந்துவோம்!

முறியடிப்போம்! முறியடிப்போம்!
நாட்டை மீண்டும் அடிமையாக்கும்
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!

ஒழித்துக் கட்டுவோம்! ஒழித்துக் கட்டுவோம்!
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி இந்து மதவெறி பாசிசத்தை
ஒழித்துக் கட்டுவோம்! ஒழித்துக் கட்டுவோம்!

நடத்தி முடிப்போம்! நடத்தி முடிப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை
நடத்தி முடிப்போம்! நடத்தி முடிப்போம்!

என கம்பீரமான முழக்கங்களுடன்……கொடியேற்று விழா நிகழ்வு உணர்வுபூர்வமாக தொடங்கியது.

குரோம்பேட்டையில், அப்பகுதியின் செயலாளர் தோழர். தம்புராஜ் தலைமையேற்றார். அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், அமைப்புத் தோழர்கள் உட்பட 70 க்கும் மேற்பட்டோர் அதிகாலை என்றும் பாராமல் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். சென்னை மாநகர செயலாளர் தோழர். வ.கார்த்திகேயன் கொடியேற்றி உரையாற்றினார். ரசியப் புரட்சி மூலம் அந்நாட்டு உழைக்கும் மக்களுக்கு கல்வி, மருத்துவம், சுகாதாரம், என அவர்களது வாழ்நிலைமை எப்படி மேம்பட்டது என்பதைப் பற்றியும், அதைப் போன்று நம் நாட்டின் நிலைமையை எடுத்துக் கூறி, இங்கு ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியின் அவசியத்தைப் பற்றியும் உரை நிகழ்த்தினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அதேபோல், மதுரவாயல் பிள்ளையார் கோயில் தெரு பகுதியில், தோரண வேலைப்பாடுகள் மிளிர, கொடியேற்று விழா அறிவிப்பு பேனர்கள் தெருமுனைகளை நிறைத்திருக்க, அப்பகுதி செயலாளர் தோழர். கிருஷ்ணா தலைமையேற்க, மாநகர இணைச் செயலர் தோழர். மருது கொடியேற்றி நவம்பர் புரட்சி தின உரை நிகழ்த்தினார். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு பத்து இளைஞர்களின் அறிமுகத்தோடு இப்பகுதியில் தொடங்கப்பட்டது பு.மா.இ.மு. அதன் தொடர்ச்சியாக அப்பகுதி மக்களின் ஒத்துழைப்போடு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்காகவும் போராட்டங்கள் நடைபெற்றன. மதுரவாயலை சுற்றியுள்ள மற்ற பகுதிகளுக்கெல்லாம், பிள்ளையார் கோயில் தெரு  மக்கள் என்பவர்கள் எந்தப் பிரச்சினையையும் எதிர்த்து நிற்கும் துணிவுள்ளவர்கள் என்ற மதிப்பை பெற்றுள்ளோம். அப்படி ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலமாகத்தான் ரசியப் புரட்சி போன்று நம் நாட்டிலும் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என உழைக்கும் மக்களுக்கு அறை கூவினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

முத்தாய்ப்பாக, இறுதியில் எழும்பூர், டாக்டர்.சந்தோஷ்நகர் பகுதியில் புதிதாக கொடிக்கம்பம் வைத்து, சிறப்பானதொரு கொடியேற்றுவிழா நிகழ்வு நடைபெற்றது. அப்பகுதியில் செங்கொடி பேரணி, பறை முழக்கம் அதிர, தோழர்கள் செங்கொடிகளுடன் முன்னால் அணிவகுக்க, பின்னால் வரிசையாக இருசக்கர வாகனங்கள் செல்ல, அரசியல் முழக்கங்களின் கனல் தெறிக்க டாக்டர் சந்தோஷ் நகரின் ஒவ்வொரு தெருவுக்குள்ளும் சென்றது. இது எங்கும் சிவப்புமயமாக மொத்த பகுதியையும் மாற்றி விட்டது. ஒட்டுமொத்த பகுதி மக்களும் ஆர்வத்தோடு பு.மா.இ.மு-வை வரவேற்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அப்பகுதி உழைக்கும் மக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், சந்தோஷ் நகர் பகுதி செயலர் தோழர். அசோக் தலைமையேற்க, மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். த.கணேசன் கொடியேற்றி ரசியப்புரட்சிநாள் உரை நிகழ்த்தினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

எல்லாப் பகுதிகளிலும் கொடியேற்று நிகழ்வின் இறுதியாக உழைக்கும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

உழைக்கும் மக்களின் விழாவாக பாட்டாளி வர்க்க உணர்வோடு நடைபெற்ற நவம்பர் புரட்சி விழா !

ழைக்கும் மக்கள் குவிந்து வாழும் பகுதியும், வர்க்கப் பாசத்திற்கும், போர்க்குணத்திற்கும் ஓர் உதாரணமாய் திகழும் பகுதியுமான எழும்பூர் டாக்டர்.சந்தோஷ்நகர் பகுதியில் மாலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பகுதி முழுக்க செங்கொடி ஏற்றியும், ஊரின் நுழைவு வாயிலில் அலங்கார வளைவுகள் வைத்தும் தோழர்களோடு அப்பகுதி இளைஞர்களும் இணைந்து நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை செய்தனர். ஊரே திருவிழாக்கோலம் பூண்டது எனலாம்.

இதனை சாதாரண பகுதி நிகழ்வாகத்தான் நாம் ஏற்பாடு செய்தோம். ஆனால் அப்பகுதி உழைக்கும் மக்கள் திரளாக கலந்துகொண்டு ஒரு பொதுக்கூட்டத்திற்கு இணையாக நிகழ்ச்சியின் தன்மையை மாற்றி விட்டார்கள். தோழர்கள், ஆதரவாளர்கள், அப்பகுதி உழைக்கும் மக்கள், இளைஞர்கள், பெண்கள் என ஏறத்தாழ 500 பேர் வரை நாற்காலியில் அமர்ந்து கவனித்தனர் என்றால், அதைச் சுற்றி ஒட்டுமொத்த ஊர் மக்களும் திரண்டு வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மாலை நிகழ்ச்சியில், வரவேற்புரை ஆற்றிய பு.மா.இ.மு வின் பகுதி செயலர் தோழர். அசோக் சந்தோஷ் நகர் பகுதியில் பு.மா.இ.மு. நடத்திய போராட்டங்கள், அதன் மூலம் சாதிக்கப்பட்ட விசயங்களைக் குறிப்பிட்டு, ஆனால் அதில் நாம் திருப்தியடையவில்லை. உழைக்கின்ற மக்களின் எல்லா அடிப்படைத் தேவைகளும் கிடைக்க வேண்டுமென்றால், ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலமே அது சாத்தியம். அதற்கு அணிதிரள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வரவேற்றார்.

அதன் தொடர்ச்சியாக தலைமையேற்று நடத்திய பு.மா.இ.மு.வின் மாநகர இணைச் செயலர் தோழர். மருது, எப்படி ஹிட்லரின் பாசிசத்திற்கெதிராக லெனின்கிராடு எப்படி ஒரு முன்னுதாரணமான எதிர்ப்புக் களமாக விளங்கியதோ, அதுபோல இந்துமதவெறி பாசிசத்திற்கெதிராகவும், மறுகாலனியாக்க அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழகத்தின் முன்னுதாரணமான ஓர் எதிர்ப்புக் களமாக டாக்.சந்தோஷ் நகர் திகழும் என்ற நம்பிக்கையை, அங்கு நடந்த பல்வேறு போராட்டங்களின் உதாரணங்களிலிருந்து வெளிப்படுத்தி தலைமையுரை ஆற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அப்பகுதியில் பொன்னம்மா அக்கா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவர் பு.மா.இ.மு.வைப் பற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். பு.மா.இ.மு. பகுதியில் செய்த போராட்டங்களைப் பற்றி பெருமையோடு குறிப்பிட்ட அவர், பு.மா.இ.மு இப்பகுதிக்கு வந்த பிறகுதான் பல விசயங்களில் நாங்கள் விழிப்புணர்வு அடைந்தோம், எங்கள் பகுதியில் பல அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன என்று நன்றி உணர்ச்சிபொங்க பேசினார். மேலும், இப்பகுதி மக்களாகிய நாங்கள் கடைசி வரை பு.மா.இ.மு வோடு உடன் இருந்து போராடுவோம் என்று நம்பிக்கையோடும், உணர்வுபூர்வமாகவும் பேசிச் சென்றார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நிகழ்ச்சியில், பு.மா.இ.மு-வால் நடத்தப்படும் டாக்டர். சந்தோஷ் நகர் பகுதியில் இரவுபாடசாலை மாணவர்களின் தனியார்மயத்தை அம்பலப்படுத்திய நாடகம், பு.மா.இ.மு துளிர்களின் புரட்சிகர பாடல், இளம் பெண்களின் புரட்சிகரப் பாடல்கள், பள்ளி மாணவர்கள் அரங்கேற்றிய உழைக்கும் மக்களின் வீரவிளையாட்டான சிலம்பாட்டம், கவிதை என நிகழ்ச்சிகள் அனைத்தும் உழைக்கின்ற மக்களிடையே புரட்சிகர உணர்வூட்டின.

இறுதியாக, சிறப்புரை ஆற்றிய பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். த.கணேசன் “டாக். சந்தோஷ் நகர் பகுதியில் உழைக்கும் மக்கள் வாழும் பகுதி, இந்த அரசால் சேரி என்று புறக்கணிக்கப்பட்ட பகுதி, இந்தப் பகுதி மக்களாகிய நாம் அனுபவிக்கும் கொடுமைகளைப் போலத்தான் நாட்டின் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் இந்த அரசின் மறுகாலனியாக்கக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று சுட்டிக்காட்டி உணர்த்தினார். உழைக்கின்ற மக்களின் மீது பொருளாதார ரீதியாகவும், அதற்கெதிராக போராடும் போது அரசின் ஒடுக்குமுறைக் கருவிகளான போலீசு, இராணுவத்தைக் கொண்டும் கொடூரமாக ஒடுக்கும் இந்த அரசு, முதலாளிகளும், ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளும் கொள்ளையடிக்கும்போது அவர்களை பாதுகாக்கும் அரணாக விளங்குவதை ஜெயா வின் சொத்துக்குவிப்பு வழக்கு – தீர்ப்பு – ஜெயில் – பெயில் – அதிமுக வினரின் வன்முறைகளை உதாரணம் காட்டி இன்றைய அரசியல் நிலைமைகளோடு ஒப்பிட்டு பேசினார். அந்த வகையில், இந்த அரசுதான் நமது எதிரி. அந்த எதிரியை வீழ்த்தாமல் நமக்கு விடிவு இல்லை. அதற்கு நாட்டின் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை சாதிக்க வேண்டும். அதன் தொடக்கப் புள்ளியாக உழைக்கும் மக்கள் கையில் அதிகாரம் இருக்கும் வகையில் மாற்று அதிகார அமைப்புகளை கட்டியெழுப்ப வேண்டும், அதற்கான அரசியல் எழுச்சிக்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டும்” என்று அறை கூவி அழைத்தார்.

நவம்பர் புரட்சி நாளை முன்னிட்டு நவ.2 அன்று மூன்று பகுதிகளிலும் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விழா மேடையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இறுதியாக, டாக். சந்தோஷ்நகர் பகுதி பு.மா.இ.மு.வின் செயற்குழு உறுப்பினர் தோழர். பிரேம் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சி நடைபெற எல்லா வகையிலும் உதவியளித்த அப்பகுதி உழைக்கும் மக்கள், அப்பகுதியின் துடிப்புமிக்க இளைஞர்கள், இவர்கள் இல்லாமல் இந்நிகழ்ச்சி நடத்தியிருக்க முடியாது என்பதை நினைவு கூர்ந்து நன்றி கூறினார். ஆம், இந்நிகழ்ச்சியின் ஒவ்வொரு அணுவிலும் அப்பகுதி உழைக்கும் மக்களின் வியர்வையும், இரத்தமும் கலந்திருந்ததை அப்பகுதி முழுவதும் பார்க்க முடிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பிற்போக்குத்தனமான சிந்தனையை விதைக்கின்ற விழாக்கள் ஏராளமாய் உழைக்கும் மக்களின் வாழ்க்கையை அடைத்துக் கொண்டிருக்கிற இச்சமூகத்தில், உழைக்கும் மக்களின் உண்மையான திருவிழாவாக, நம் விடிவுக்கான வழி சொல்லும் நிகழ்வாக, மாட மாளிகைகள் நிறைந்த சிங்காரச் சென்னையில் இந்த அரசால் சேரிகள் என புறக்கணிக்கப்பட்ட உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் பு.மா.இ.மு நடத்திய இந்நவம்பர் புரட்சிநாள் விழா நிகழ்ச்சிகள் அப்பகுதிகளைச் சார்ந்த மக்களிடையே தங்கள் விடிவுக்கான வழியான புதிய ஜனநாயகப் புரட்சியைப் பற்றிய ஓர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால், அது மிகையில்லை.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

சங்கர மட பயங்கரம் – 4000 கோடி கருப்பு பணம்

16
கருப்பு பணம் வாங்கி சிவந்த கை!
கருப்பு பணம் வாங்கி சிவந்த கை!

டந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி நீலகண்டாச்சாரி சுவாமிகள் என்பவர் பெங்களூரு விஜயநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 2011 – 2012-ம் ஆண்டில் தானும் தனக்கு வேண்டியவர்கள் எட்டு பேருமாக சேர்ந்து ஜெனிசிஸ் என்கிற நிதி அலோசனை நிறுவனத்திற்கு சுமார் 3,994 கோடிகள் அளவுக்கு நன்கொடை வசூலிக்க உதவியதாகவும், இதற்கான கழிவுத் தொகை இரண்டு சதவீதம் வர வேண்டியிருப்பதாகவும், அந்த தொகையை ஜெனிசிஸ் தர மறுத்து மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த ஜெனிசிஸ்? எதற்கான நன்கொடை வசூல் இது? – நீலகண்டாச்சாரியின் புகார் மனு மேலும் சில விளக்கங்களை அளிக்கிறது.

தங்களை காஞ்சி சங்கர மடத்தின் தீவிர பக்தர்கள் என்று குறிப்பிடும் நீலகண்டாச்சாரி, தனக்கும் மடத்தில் உள்ள சிரீதரன் என்பவருக்கும் நல்ல உறவு இருந்தது என்கிறார். சிரீதரன் என்பவர் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதியால் மடத்தின் சார்பாக 10,000 கோடி வரை நன்கொடை வசூலிக்க அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரீதரனை ஜெனிசிஸ் நிறுவனத்திற்கு அறிமுகம் செய்து வைக்கும் நீலகண்டாச்சாரியும் அவரது எட்டு நண்பர்களும், மடத்திற்காக ஜெனிசிஸ் நிறுவனம் நன்கொடை வசூலித்துக் கொடுப்பது அதிலிருந்து இரண்டு சதவீதத்தை கழிவாக தமக்குக் கொடுப்பது என்று பேசி வைத்திருக்கிறார்கள்.

தற்போது ஜெனிசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சரஸ்வதி, அவரது கணவர் கிரிஷ்ணப்பா, இத்தம்பதியினரின் மகள்களான சௌமியா, ஷில்பா, மேகனா மற்றும் மருமகன் சுதாகர் ஆகியோரின் மீது கிரிமினல் சதி புரிந்தது, மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிந்திருக்கிறார் நீலகண்டாச்சாரி. மேலும் இவர்கள் சங்கரமடத்திற்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை தம்மிடமிருந்து மறைத்துள்ளதாகவும், சங்கர மடத்தைப் பயன்படுத்தி கருப்புப் பண சுழற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாகவும் குற்றச்சாட்டில் பதிந்துள்ளார்.

புகாரைப் பெற்றுக் கொண்ட விஜயநகர காவல் நிலையம், ஜெகத்து குருவே விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால் மேல் விசாரணைக்காக கர்நாடக மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு புகாரை அனுப்பி வைத்தது. புகாரின் மேல் விசாரணையைத் துவங்கிய குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஜெனிசிஸ் சார்பில் சில ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மடத்தின் சார்பாக சிரீதரன் என்பவரை நன்கொடையைப் பெற்றுக் கொள்ள அதிகாரம் கொண்டவராக நியமித்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2012-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி ஜெனிசிஸ் சார்பில் மடத்திற்கு அனுப்பட்ட கடிதம் ஒன்றில் மடத்திற்கு உட்பட்ட ஐந்து அறக்கட்டளைகளுக்கு ஜெனிசிஸ் சார்பாக ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்சிஸ் மற்றும் சிட்டி யூனியன் வங்கிக் கணக்குகளின் வழியே 3,992 கோடி ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மடத்தின் சார்பாக இக்கடிதத்திற்கு பதிலளித்துள்ள சிரீதரன், இந்த தொகையைப் பெற்றுக் கொண்டதை உறுதிப் படுத்தி அளித்த கடிதமும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு கிடைத்துள்ளது.

இந்த விவரங்களோடு மடத்தின் கணக்குத் தணிக்கை அலுவலரை அணுகிய குற்றப் புலனாய்வுத் துறை, மடத்திற்கு குறிப்பிட்ட கால கட்டத்தில் கிடைத்த நன்கொடை மற்றும் நிதி விவரங்களை கேட்டிருக்கிறது. மடத்தின் சார்பாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்கு ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால் வெறும் பதினைந்து கோடிகளுக்கு மட்டுமே முறையான கணக்குகள் உள்ளன. ஜெனிசிஸ் நிறுவனத் தரப்பின் படி, அவர்கள் தமக்கு மடத்திடம் இருந்து கிடைத்திருக்க வேண்டிய 2.5 சதவீத கழிவுத் தொகையே இன்னமும் வர வேண்டியுள்ளது என்பது தான்.

சிரீதரனும் விசாரணையில் தனது தரப்பை முன்வைத்துள்ளார். தான் ஜெனிசிஸ் நிறுவனத்தோடு சங்கர மடம் போட்டுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தவிற பிற விவரங்கள் ஏதும் அறிந்திருக்கவில்லை என்றுள்ளார். 2011-12 காலகட்டத்தில் சந்திரசேகர் குரு என்பவரின் தலைமையில் சங்கர மடத்திற்குச் சென்றதாகவும், அப்போது மடத்தின் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஜெயேந்திர சரஸ்வதி கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து நடந்த விவாதங்களில் தான் பங்கேற்கவில்லை, தன்னை அறைக்கு வெளியே செல்லுமாறு ஜெயேந்திர சரஸ்வதி கேட்டுக் கொண்டதாகவும் பதிவு செய்துள்ளார்.

இந்த அளவில் தற்போது விவகாரம் விசாரணையில் உள்ளது. பெங்களூரு மத்திய குற்றப் புலனாய்வுத் துறை மடத்தின் குறிப்பிட்ட ஐந்து அறக்கட்டளைகளின் மூலம் கருப்புப் பண சுழற்சி நடந்திருக்கிறது என்ற கோணத்தில் மேல் விசாரணை செய்து வருகிறது.

என்னது காஞ்சி சங்கர மடத்தில் கருப்பு பணமா என்று யாராவது அதிர்ச்சி அடைய முடியுமா? லோககுரு கம்பெனிக்கு ஒரு கிரிமினல் கூட்டத்தை ஜமுக்காளத்தைப் போட்டு வடித்து எடுத்தாலும் உலகில் வேறெங்கும் கண்டு பிடிக்க முடியாது என்பதைத்தான் யாராவது மறுக்க முடியுமா?

கருப்புபணத்தின் லோககுரு கூட இருப்பது சு சாமி மற்றும் விசுவ இந்து பரிஷத் அசோக் சிங்கால்!
கருப்புபணத்தின் லோககுரு கூட இருப்பது சு சாமி மற்றும் விசுவ இந்து பரிஷத் அசோக் சிங்கால்!

உள்ளே நடந்த ஊழல் விவகாரங்களை சுட்டிக்காட்டிய ஒரே ‘பாவ’த்துக்காக சங்கர ராமனை சாட்சாத் அந்த ’பகவானின்’ சந்நிதியில் ’பகவானின் கண்’ முன்னே போட்டுத் தள்ளியதாகட்டும், சாட்சிகளை காசு கொடுத்து பிறழ் சாட்சிகளாக மாற்றிய சாமர்த்தியமாகட்டும், நீதிபதியிடமே டீலிங் பேசிய திமிராகட்டும் – ஜெகத்து குரு உலகத்து ஜெகத்தின் கிரிமினல்கள் அனைவருக்குமே ஆதி குரு என்பதை நிரூபித்துக் காட்டியவர்.

கும்பகோண மடத்தை சங்கர மடமாக மாற்ற வரலாற்றையே போர்ஜரி செய்து மாற்றியதாகட்டும், பெரும் முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கட்டைப் பஞ்சாயத்து தரகனாக செயல்படுவதாகட்டும் இந்த கும்பலை மிஞ்சிய திருட்டு கும்பலை பார்ப்பது கடினம்.

ஆனால், இந்த மொத்த விவகாரமும் பெங்களூரைச் சேர்ந்த டெக்கான் ஹெரால்டு பத்திரிகையைத் தவிற வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை. இந்த மோசடியை மறைப்பதில் பார்ப்பன பத்திரிகைகள் மட்டுமல்ல, சூத்திர பத்திரிகைகளும் கூட வெட்கமின்றி அணிவகுக்கின்றன. அது போல தேசிய, பிராந்திய என்ற வேறுபாடுமில்லை.

இதே காலகட்டத்தில் 2ஜி வழக்கில் 200 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கனிமொழியின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது பற்றி தேசிய ஊடகத்திலிருந்து பா.திருமாவேலனின் விகடன் பத்திரிகை வரை மாய்ந்து மாய்ந்து எழுதினார்கள். ஊழலுக்கு எதிரான இந்த போர்முரசு சங்கராச்சாரி (அ) சுப்புனி குறித்து வெம்பிய முரசாக ஏன் போங்காட்டம் ஆட வேண்டும்?

சங்கர மடம் காசு கொடுத்து தான் இந்த மௌனத்தை விலைக்கு வாங்கியிருக்க வேண்டும் என்பதில்லை, பார்ப்பன நலன் என்று வந்தால் யாரும் சொல்லாமலே பொத்திக் கொள்ளும் வாய்கள் தான் இவை.

சாராயம் காய்ச்சி விற்பதெல்லாம் ’ராயப்பன்களின்’ வேலையாக பதிவாகியிருக்கும் பொதுபுத்தியின் முன் சோ ராமசாமி சாராயக் கம்பெனியின் தலைமைப் பதவியில் இருந்தார் என்கிற செய்தி நுழைவதில்லை.

இந்த இலட்சணத்தில் சுவிஸ் வங்கியின் பாதுகாப்பறையில் இருக்கும் பல பல பலான கோடி கோடி பணத்தை ஸ்கார்பியோ காரில் பறந்து சென்று மோடி மீட்டு வருவார் என காமிக்ஸ் கதை காட்டிய கனவான்களை நினைத்துப் பாருங்கள்! ஸ்கார்பியோ கார் தயாராகும் பெங்களூருவிலேயே 4000 கோடியை ஆட்டையைப் போட்டு விட்டு ஒன்னும் தெரியாத அம்பி மாதிரி சங்கரமடத்தில் நெய் பொங்கலை மொக்கி விட்டு ஒரு பெருச்சாளி இருக்கிறதே? அது குறித்து தமிழிசை தவிலோசை போல பேசுவாரா? இல கணேசனோ, பொன்னாரோ பொங்கி எழுவார்களா?

அவ்வளவு ஏன், சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போது கூட ஜெயேந்திரனுக்கு பார்டிகார்டாகவும், பிரச்சார பீரங்கியாகவும் பேசிய கூட்டமல்லவா இது!

சமூகத்தை ஏற்றத்தாழ்வுடன் கூடிய படிநிலை அமைப்பாக நிலைநிறுத்திய பார்ப்பனியம் தன்னளவிலேயே குற்றத் தன்மையுடையது தான் – அப்படியிருக்க நடைமுறையில் அதன் இருப்பை உத்திரவாதப்படுத்தும் சங்கர மடம் இந்தக் குற்றத்தை மட்டுமல்ல, இதற்கு மேல் பஞ்சமா பாதகங்களையும் செய்யாவிட்டால்தான் அதிசயம்!

இந்தக் குற்றக் கும்பலையும், அதன் பகிரங்கமான சங்கர மட கம்பெனி ஆபிசையும் இழுத்து மூடுவது எப்போது?

–    தமிழரசன்

மேலும் படிக்க:

Kanchi Mutt had confirmed receipt of funds, claims firm

Firm ‘laundered’ crores in donations to mutt

மேற்குமலைத் தொடர் முதல் வங்கக் கடல் வரை நவம்பர் புரட்சி

0

நவம்பர் புரட்சி தின கொண்டாட்டங்கள் – 3

13. சென்னை – மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி

‘நிதி மூலதனம் கொல்லும் ! கம்யூனிசம் வெல்லும்’ என்ற முழக்கத்தை முன்வைத்து நவம்பர் புரட்சி விழா சென்னையில் ம.க.இ.க மற்றும் பெ.வி.மு சார்பில் நடத்தப்பட்டது. விழாவில் 200-க்கும் மேற்பட்ட தோழர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துக் கொண்டார்கள்.

இதற்கு பெ.வி.மு சென்னை கிளையின் இணைச் செயலர் தோழர் சித்ரா தலைமை தாங்கி நடத்தினார். ரஷ்யாவில் நடந்த புரட்சியை போல இந்தியாவிலும் ஒரு புரட்சியை நடத்த வேண்டும் அதற்காக நாம் பாடுபட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார்.

ம.க.இ.க. தோழர் சோமு வாழ்த்துரையையும், நிகழ்ச்சிகளை பெ.வி.மு. தோழர் செல்வி தொகுத்தும் வழக்கினார்கள்.

புரட்சிகர கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இளம் தோழர்களின் உற்சாகமான பங்கேற்பு பறை முழக்கத்துடன் சிறுவர்களின் நடனத்துடன் தொடங்கியது நிகழ்ச்சி.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பகத்சிங் தன்னுடைய கடைசி நேரத்திலும் இந்த மண்ணை பார்த்துக் கொண்டே சாக விரும்பியதை காட்சியாக நடித்த இளந்தோழர் வெண்மணி பகத்சிங்கை கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.

‘சீரழிவு பண்பாடு’ என்ற தலைப்பில் பேசிய ம.க.இ.க தோழர் இளவரசி பள்ளிகளில் நடக்கும் விழாக்களில் இப்போது குழந்தைகளை விஜய், அஜீத் போன்று வேடங்கள் போட்டு சினிமா பாட்டுக்கு குத்தாட்டம் போடுவதையும், சிங்காரம் என்ற பெயரில் அழகு பதுமைகளாக வளம் வருவதையும் இடித்துரைத்து பேசினார்.

அடுத்து வந்த ம.க.இ.க தோழர் தாமிரபரணி ‘வேலை கிடைச்சிடுச்சி’ என்ற தலைப்பில் இப்போது சமூகம் உள்ள நிலைமையில் இளைஞர்களுக்கான வேலை அரசியல் மாற்றத்திற்காக போராடுவதுதான் என்று பேசி சென்றார்.

‘அம்மா கைது – தமிழகத்தின் துயரம்’ என்ற தலைப்பில் அம்மாவின் கைது குறித்து கவிதை வாசித்தார் பெ.வி.மு வின் இளம் தோழர் கவி. சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான அம்மாவிற்காக அ.தி.மு.க அடிமைகள் நடத்திய தற்கொலை முயற்சிகள், பேருந்து எரிப்பு, கடைகளை அடித்து நொறுக்கியது, தீ மிதித்தது, மண்சோறு சாப்பிட்டது, போஸ்டர்கள் ஒட்டியது போன்ற அபட நாடகங்களை அம்பலப்படுத்தியது கவிதை.

‘போலி ஜனநாயகமும் நவம்பர் புரட்சியும்’ என்ற தலைப்பில் ம.க.இ.க தோழர் வாசுதேவன், இப்போது நிலவும் போலி ஜனநாயக அரசை தகர்த்து எறியாமல் உழைக்கும் மக்களுக்காக அரசை நிறுவ முடியாது, அதற்காக பாடுபட தோழர்கள் நெஞ்சில் உறுதி ஏற்க வேண்டும் என்று தன்னுடைய கவிதையின் மூலமாக தெரிவித்தார்.

சிற்றுரையில் பேசிய சென்னை கிளை செயலாளர் தோழர் அமிர்தா நம்முடைய ‘விடுதலைக்காக பாதை’ புதிய ஜனநாயக அரசை அமைக்க போராடும் புரட்சி பாதை என்பதையும் அதற்காக போராடும் அமைப்புகளில் உள்ள நாமும் மக்களுடன் தியாகத்திற்கு அஞ்சாமலும், அர்ப்பணிப்புடனும், ஐக்கியமுடனும் இருக்க வேண்டும் அப்போது தான் மக்களும் நம்முடன் புரட்சிக்கு வருவார்கள் என்பதை, தங்களுடைய உயிரையும் கொடுக்க தயங்காத தோழர்களின் தியாகத்தை எடுத்துக்காட்டி விளக்கி பேசினார்.

சிறப்புரையில் பேசிய ம.க.இ.க. தோழர் துரை சண்முகம் ‘புரட்சி அழைக்கிறது நீங்கள் தயாரா?’ என்ற கேள்வியை முன் வைத்து, ஒரு அமைப்பாக சேர்ந்து சமூக மாற்றத்திற்காக போராடும் போது மட்டும் தான் பிரச்சினைகள் என்று பலரும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தான் உண்டு தான் வேலை உண்டு என்று சிறுச்சேரி சிப்காட்டில் வேலை செய்து கொண்டு இருந்த உமா மகேஸ்வரியின் நிலை என்ன ? சாதாரணமாக இப்போது பள்ளிகளில் – வேலை பார்க்கும் இடங்களில் – பொது இடங்களிலும் பாதுகாப்பற்ற தன்மைதான் நிலவுகிறது. நமக்கு என்ன என்று விட்டுவிட்டால் இது பல மடங்கு அதிகரித்து, அடக்கிப் போகும் நிலைமைதான் வரும். ஒரு அமைப்பாக இருக்கும் போதுதான் இவற்றை எதிர்க்க வேண்டும் என்ற உணர்வும் – கடமையும் இருப்பதை உணர முடியும். அதற்கான போராட்டம் உங்களை அழைக்கிறது நீங்கள் வரவேண்டும் என்று பேசியது அரங்கில் வந்த பல குடும்ப பெண்களை சிந்திக்க வைக்கும் விதமாக அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அடுத்ததாக ‘கல்யாண கதை கேளு’ என்ற அம்மாவின் வளர்ப்பு மகனின் கல்யாணத்தை விவரிக்கும் ம.க.இ.க.வின் பாடலை ஜெயலலிதா, சசிகலா, தினகரன் போன்று வேடமிட்டு காட்சிப்படுத்தி தோழர்கள் நடத்திய கலை நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

என்றும் அழியாதது, அழிக்கவும் முடியாதது நக்சல்பரி எழுச்சி என்று முழக்கும் பாடலும் தோழர்கள் உணர்வுடன் பாடியது அனைவரையும் கவர்ந்தது.

பெ.வி.மு. தோழர்கள் “நவம்பர் 7 என்ற தினமொன்று”; “இந்து மதவெறிக்கு அடையாளம் காவி”; “பொழப்புக்கு வேல இல்ல” போன்ற புரட்சிகர பாடல்களை பாடியது அரங்கத்தில் சிறப்பாக பாராட்டப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பெ.வி.மு தோழர் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பகுதிகளில் முதல் முயற்சியாக ஓட்டப் பந்தயம், எலுமிச்சை ஸ்பூன், தண்ணீர் நிரப்புதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தினர். அதில் பகுதி குழந்தைகளும் பெண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். பங்கு பெற்ற அனைவருக்கும் விழா அரங்கில் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த புது முயற்சி தோழர்கள் மத்தியும் அணிகள் மத்தியும் மகிழ்ச்சியான தருணமாகவும் ஐக்கியப்படும் தன்மையாகவும் அமைந்தது.

நன்றியுரை பெ.வி.மு. தோழர் சாந்தி வழங்கினார்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

விழா அரங்கில் குழந்தைகள் வரைந்த ஆசான்களின் ஓவியங்கள், கீழைக்காற்று வெளியீட்டகத்தின் நூல்கள் விற்பனைக்கு வைத்திருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பாட்டாளி வர்க்க சர்வ தேசகீதத்துடன் விழா சிறப்பாக முடிந்தது.

நவம்பர் 7 விழாவின் சிறப்புகளையும் கடமைகளையும் நெஞ்சில் ஏந்தி தோழர்கள் உற்சாகமாக கலைந்தனர்.

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை

14. தேனி மாவட்டம்

நவம்பர் 7 ரசிய புரட்சிநாள் நீடுழி வாழ்க

nov7-theni-poster

தேனி மாவடட்த்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் நவம்பர் 7 ரஷ்ய புரட்சிநாள் கொடியேற்று நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

போடிநாயக்கனூர், தேவாரம், நாராயணத்தேவன் பட்டி,கம்பம்,கூடலூர் ஆகிய கிளை பகுதிகளில் திரளான தோழர்கள் கொடியேற்றி, இனிப்பு வழங்கியும், இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியை அடைய அர்ப்பணித்து பாடுபடவும் உறுதியேற்று நவம்பர் புரட்சி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

வி.வி.மு செயல்படும் ஆறு பகுதிகளில் கொடியேற்றி, இனிப்பு வழங்கியும், பேரணியாக சென்றும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இறுதியாக கூடலூர் கிளை பகுதியில் மையப்படுத்தி தெருமுனைக்கூட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு தோழர் மோகன் முன்னிலை வகித்தார்.  தோழர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தேனி மாவட்டம்

15. புதுச்சேரி

நவம்பர் – 7 ரசியப் புரட்சி நாளை நெஞ்சிலேந்துவோம்!

செத்தால் சுடுகாடு போவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான் என்ற போதிலும், பார்ப்பனீயமோ செத்தால் சொர்க்கத்திற்கு போகலாம் என்ற அறிவியலுக்குப் புறம்பாக மூட நம்பிக்கையை மக்களுக்கு சொல்லி மக்களை மடையர்களாக மாற்றுகிறது. செத்தால் தான் சொர்க்கத்திற்குப் போக முடியும் என்ற கற்பனையான நம்பிக்கையில் தான் இந்த அறிவியல் யுகத்திலும் மக்கள் அறியாமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அறிவியல் முன்னேறாத காலத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னேயே மக்கள் உயிருடன் இருக்கும் போதே சொர்க்கத்தில் வாழ்ந்தனர். ஆம், மார்க்சிய வழியில் புரட்சி நடத்தி மண்ணில் சொர்க்கத்தைப் படைத்துக் காட்டியது லெனின் தலைமையிலான பாட்டாளி வர்க்க அரசு.

நமது உழைப்பைச் சுரண்டி சேர்த்த சொத்துக்களை தனது வளர்ச்சியாகக் காட்டி திமிராக வலம் வருகிறது முதலாளித்துவம். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகிய மக்கள் விரோத கொள்கைகள் மூலம் உலகையே முழுங்கத் துடிக்குது முதலாளித்துவம். அதனால், மக்கள் வாழ்விழந்தவர்களாக வேகமாக மாறிவருகிறார்கள். ஆனால், சுரண்டல் இல்லாத, உழைக்கும் மக்களுக்கே அனைத்தும் சொந்தம் என்ற உன்னத பொதுவுடமைத் தத்துவத்தைக் கொள்கையாகக் கொண்ட அரசாக இருந்தது அன்றைய அரசு. இன்று, நவம்பர் 7-ன் தேவை இந்தியாவில் மட்டுமல்லாது உலகெங்கிலும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதை தொழிலாளர்களுக்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும் உணர்த்தி இன்றைய நரக வாழ்க்கையை ஒழித்து மீண்டும் மண்ணில் ஒரு சொர்க்கத்தை படைக்க அறைகூவும் விதமாக புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக இணைப்பு சங்கங்கள் இயங்கும் பகுதியான வில்லியனூர் பகுதியில் அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த அரங்கக் கூட்டத்திற்கு புதுச்சேரி மாநில புஜதொமு தலைவர் தோழர். சரவணன் தலைமையில் நடந்தது. புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் தோழர். பழனிசாமி மற்றும் புதுச்சேரி மாநில இணை செயலாளர் தோழர். லோகநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் ஒரு தோழரின் மகளான நித்யஸ்ரீ நமது நாட்டின் நிலையை எள்ளி நகையாடும், “எங்க நாடு ஆகுது வல்லரசு” என்ற புரட்சிகர பாடலைப் பாடினார்.

கூட்டத்தில் தோழர். சரவணன் தனது தலைமையுரையில், “ஒவ்வொருவரும் மத பண்டிகைகள் கொண்டாடுகின்றனர். ஆனால், அது கொண்டாடும் நோக்கம் பற்றி தெரியாதவர்களாக உள்ளனர். மத பண்டிகைகளின் உண்மையான நோக்கங்களைத் தெரிந்து கொண்டால் நமது வாழ்க்கைக்கு எவ்வளவு நேர் எதிரானது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். மக்களை மூட நம்பிக்கையில் மூழ்க வைப்பதன் மூலம் அவர்களின் போராடும் குணங்களை மழுங்கடிப்பதாகத் தான் உள்ளது” என்பதை இடித்துரைத்துப் பேசினார். மேலும், “நவம்பர் -7 என்பது தான் உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான உன்னத நாள்” என விளக்கிப் பேசினார்.

தோழர். பழனிசாமி தனது உரையில், “நவம்பர்-7 ரசியப் புரட்சிக்குப் பின் அங்கு சட்டம் மக்களிடம் சுற்றுக்கு விடப்பட்டு, அதில் மக்கள் கோரிய திருத்தங்கள் செய்தும் தான் இயற்றப்பட்டது. ஆனால், இன்று மோடியோ தினம் தினம் ஒரு அறிவிப்பின் மூலம் தொழிலாளர் விரோத சட்டங்களை மக்கள் மீது திணித்து வருகிறார். ஏற்கனவே கோவணம் போல் மானத்தைக் காத்து நிற்கும் சட்டத்தைக் கூட அதை அம்மணமாக்கப் போகிறார்” என்பதை விளக்கிப் பேசினார்.

அடுத்தபடியாக, தோழர். லோகநாதன் தனது உரையில், “இன்று மக்கள் படும் பாடுகளுக்குக் காரணங்களைத் தெரிந்து கொள்ளாமல் அறியாமையில் கடன் பட்டு பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். ஒரு புறம், அந்த அறியாமையில் மக்களை மூழ்கடித்து போராடாத மொன்னை களாக மாற்றும் அதே சமயம், மறுபுறம், அதே பண்டிகைகளைக் காரணமாக வைத்து, முதலாளிகள் தனது பணப்பெட்டிகளை நிரப்பிக் கொள்கின்றனர். மக்கள் தான் இருபுறமும் அடிவாங்கும் மத்தளமாக உள்ளனர். மக்களை, அரசியல் தளத்தில் போராடாத மொன்னைகளாகவும், பண்பாட்டுத் தளத்தில் உணர்ச்சியற்ற மொக்கைகளாகவும் மாற்றி வருகின்றது மறுகாலனியாக்கம். இன்று விவசாயம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், மின்சாரம் முதல் ஆறுகள், மலைகள், காடுகள், கடல் என அனைத்தும் முதலாளிகள் கொள்ளையடிக்க திறந்து விடப்பட்டுவிட்டது. ஆனால், புரட்சிக்குப் பிந்தைய ரசியாவில் மேற்கூறிய அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு பெருகி, வேலை நேரம் குறைக்கப்பட்டது. இந்த சூழ்நிலைகளை இன்றைய நமது வாழ்நாளோடு ஒப்பிட்டுப் பார்த்து ரசியப் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்! செத்த பிறகு தேவையில்லை நமக்கு சொர்க்கம்! வாழும் போதே படைப்போம் இந்த மண்ணில் ஒரு சொர்க்கம்!” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

நிறைவாக, நமது பசிக்காக என்பதாக இல்லாமல், உணர்வுகளை வெளிப்படுத்தும் பண்பாட்டு உணவாக மாட்டுக் கறி உணவு வழங்கப்பட்டது. இந்த அரங்கக் கூட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக வந்து கலந்து தங்களது உணர்வை வெளிப்படுத்தினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு – 95977 89801.