Thursday, August 11, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க ஜெயாவுக்கு பிணை மறுப்பு : ஊடக, அதிமுக அடிமைகள் அதிர்ச்சி

ஜெயாவுக்கு பிணை மறுப்பு : ஊடக, அதிமுக அடிமைகள் அதிர்ச்சி

-

jaya-sasi-6“தெய்வத்திற்கு மனிதன் தண்டனையா” எனும் தமிழ் சினிமா முதலாளிகள் வெளியிட்ட சுவரொட்டிதான் தற்போது அதிமுக வட்டாரத்தில் மிகவும் பிரபலம். இதை தமிழ் சினிமா படைப்பாளிகள் எப்படியோ ரூம் போட்டு டிஸ்கஷன் செய்து வெளியிட்டிருந்தாலும் அது சொல்ல வரும் பொருள் வெறும் ‘கற்பனை’ அல்ல.

ஆம். ஜெயலலிதா எனும் ‘அம்மாவின்’ நடவடிக்கைகளை இந்த நாட்டின் சட்டம், நீதிமன்றம், அரசு எதுவும் கட்டுப்படுத்த முடியாது என்பதோடு அம்மாதான் இவற்றை ஏதோ பார்த்து கட்டுப்படுத்துவார் அல்லது கருணை காட்டுவார். இது அதிமுக அடிமைகளின் மனநிலை மட்டுமல்ல அந்த ரவுடிக் கூட்டம் போடும் ஆணையும் ஆகும்.

இப்படித்தான் முழு தமிழகத்திலும் போலீசு ஆதரவுடன் இவர்கள் வன்முறையை செய்து வருகிறார்கள். இந்த கிரிமினல் கூட்டத்திற்க்கு தம்பிராஸ் – பிராமணர் சங்கம் துவங்கி, கல்வி-பேருந்துக் கொள்ளையர்கள் வரை பல்வேறு பங்காளிகள் ஆதரவு ஷோக்களையும் நடத்தி வருகின்றனர்.

இதற்கு மேல் நீதிபதி குன்ஹாவையும், கர்நாடக அரசையும், ஏன் கன்னட மக்களையும் வைது, திட்டி, மிரட்டி சுவரொட்டிகளையெல்லாம் வெளியிட்டு வருகிறார்கள். அனைத்திலும் ஊடும் இழை ஒன்றுதான். அம்மாவை பிணையில் வெளியிடாவிட்டால் நடப்பதே வேறு!

இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை ஜெயாவின் ஆதரவு அலையாக சித்தரித்து தமிழ் ஊடக முதலாளிகள் கவனமாக செய்திகளை தயாரித்து, வார்த்தைகளை தேடிப் போட்டு கருத்துக் கச்சேரிகளை செய்து வருகின்றனர். இவையெல்லாம் சேர்ந்து இன்றைய பிணை வழக்கின் எதிர்பார்ப்பை எகிற வைத்தன என்பதை விட எரிய வைத்தது என்றே சொல்ல வேண்டும்.

ஜெயாவுக்கு எல்லா வசதிகளையும் சிறையில் செய்து கொடுப்பதால் அதிமுக மற்றும் காங்கிரசு கட்சிகளிடையே நல்லுறவு மலருவதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டது. இது ஏதோ அரசியல் ஆய்வு என்று நினைத்தால் நீங்கள் ஏமாளி. எப்படியாவது அம்மாவுக்கு பெயில் கிடைத்தால்தான் மவுண்ட்ரோடு மஹாவிஷ்ணுவுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் என்பதால் எழுதப்பட்ட சாணக்கிய வார்த்தைகள்.

மஹாவிஷ்ணுவே இப்படி என்றால் தந்தி, தலைமுறை போன்ற லோக்கல் சாமிகளின் அடிமைத்தனத்தை பற்றி சொல்லவே வேண்டாம். இன்றைக்கு மதியம் அனைத்து தமிழ் ஊடக இணைய தளங்களிலும் ஜெயலலிதாவுக்கு நிபந்தனையின் பேரில் பிணை வழங்கப்பட்டது, அதிமுகவினர் கொண்டாட்டம் என்ற செய்தி முதலில் வெளியிடப்பட்டது. இதை உண்மை என நம்பி இலண்டன் வாழ் தமிழ் பிபிசி இணைய தளம் கூட அப்படியே காப்பி எடுத்து வெளியிட்டது.

பிறகு மக்கள் அந்த செய்திகளின் இணைப்பில் அமுக்கி பார்த்தால் பக்கங்களை காணவில்லை என்று பார்த்து குழம்பி போனார்கள். ஏன்? உண்மையில் ஜெயலலிதாவுக்கு பிணை மறுக்கப்பட்டிருக்கிறது. இதை கர்நாடக உயர்நீதிமன்றம் தெளிவாக கூறிய போதும் இந்த நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்ட ஊடக முதலாளிகள் மாற்றி பேசியது ஏன்?

எப்படியும் அம்மாவுக்கு பிணை கிடைக்கும், கிடைக்க வேண்டும், கிடைத்தே ஆகும் என்பதே இவர்களின் முடிவு. ஆகவே நீதிமன்றத்தில் ஏதோ சிறு அறிகுறி தெரிந்ததை வைத்தே பிணை என்று கொளுத்திப் போட்டு விட்டார்கள். இவர்கள் கி போர்டில் கொளுத்திய போது அதிமுக ரவுடிகள் பரப்பன அக்ஹரகார வளாகத்தில் சிவகாசி வெடிகளை போட்டு கொண்டாடினார்கள்.

பிறகு மழை பெய்யாமலே வெடிகளும் வார்த்தைகளும் நமத்துப் போய்விட்டன. அதன் பிறகு ஊடக இணைய தளங்களில் ஒன்றுமே நடக்காதது போல, முதலில் பிணை என்று செய்திகள் வந்தன, பிறகுதான் நீதிபதியின் உத்திரவு கிடைத்தது என்று நாங்களெல்லாம் யோக்கியனாக்கும் என்று மேக்கப் போடாமலேயே வேடத்தை மாற்றினார்கள். இந்தக் கூத்துக்கள் காட்டுவது என்ன?

முதலில் சொன்னது போல இந்த சட்டம், நீதி அனைத்தும் அம்மாவுக்கு பொருந்தாது. கல்விக் கொள்ளையர்களும், ஆம்னி பேருந்துக் கொள்ளையர்களும், ஊடகக் கொள்ளையர்களும் ஏக மனதாகவே அம்மாவை ஆதரித்து பேசுகிறார்கள், வேலை நிறுத்தம் செய்கிறார்கள், உண்ணாவிரதம் நடத்துகிறார்கள் என்றால் அம்மாவின் ஆட்சி யாருக்கானது?

ஏழைகளுக்கு – அதுவும் எல்லா ஏழைகளுக்கும் அல்ல – ஒரு ரூபாய் இட்டலியை கொடுத்து விட்டு சுயநிதிக் கொள்ளையர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் தமிழகத்தை கொள்ளையடிக்கலாம் என்றால் அவர்கள் ஏன் அம்மாவிற்கு போராட மாட்டார்கள்?

எங்கே பிராமணன் என்று சோ எழுதிய தொடரை வைத்து இலட்சியவாத பார்ப்பனர்களை அடிப்படையே இல்லாமல் பேசி அழகு பார்த்த பிராமண சங்கம் இன்று பச்சையாக பாசிச ஜெயாவின் கொள்ளையை ஆதரிக்கிறது என்றால் அதுதானே இலக்கண சுத்தமான பார்ப்பனியம்!

இன்று பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் வரிசைப்படி 72வது எண்ணில் இருந்த ஜெயாவின் பிணை கோரும் வழக்கை முதலிலேயே விசாரிக்க வேண்டும் என்று ஜெயா தரப்பு கோரியது. காரணம் தெய்வத்தின் வழக்கை காத்திருந்து விசாரிக்க கூடாதாம். இது மிகவும் அவசரமான வழக்கு என்றெல்லாம் அவர்கள் முழங்கினார்கள். மக்கள் சொத்தை கொள்ளையடித்த ஒரு தலைவியின் பிணை கோரும் வழக்கு மிகவும் அவசரம் வாய்ந்தது என்றால் இதில் எதய்யா அவசரம்? ஊழல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் அவரசம் காட்டினால் அதை ஏற்கலாம். மாறாக அதை ஆதரிப்பதே அரசியல் அவசரம் என்றால் அந்த அரசியலின் யோக்கியதைதான் என்ன?

எனினும் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயா தரப்பு கோரிய விஐபி அவசர முக்கியத்துவத்தை நிராகரித்து விட்டது. வரிசைப்படி வாருங்கள் என்று நெற்றியடியாக சொல்லியதுமே ராம் ஜேத்மாலினியின் மனதுக்குள் குருவி சொல்லியிருக்க வேண்டும் – ஏதோ தப்பு நடக்கப் போகிறதே என்று.

வரிசைப்படிதான் அம்மா வழக்கு விசாரிக்கப்பட இருக்கிறது என்ற செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் ஏன் அவர்கள் வரிசையை மீற முயன்றார்கள் என்று கேள்வி எழுப்பவில்லை. கியூ வரிசை எல்லாம் மக்களுக்குத்தான் என்பதால் அவர்களுக்கு அது ஒரு பிரச்சினை இல்லை.

jayaposterராம் ஜேத்மாலினி இந்த வயதிலும் பல்வேறு வழக்குகளின் சான்றுகளை எடுத்துக் கூறி அம்மாவை பிணையில் வெளியிட வலியுறுத்தினார். லாலு மீதான கால்நடை தீவன வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கினாலும் உச்சநீதிமன்றம் பிணையில் வெளியட்டதையெல்லாம் அவர் சுட்டிக் காட்டினார். மேலும் இந்த வழக்கின் பல்வேறு விவரங்களை எல்லாம் நீதிபதி குன்ஹா ஆழமாக பரிசீலிக்கவில்லை என்று குறிப்பிடவும் செய்தார்.

ஜெயா சட்டத்தை மதித்து நடப்பவர், பிணையில் வந்தால் எங்கேயும் தப்பி ஓட மாட்டார், இந்த வழக்கு நடைபெற்ற 18 ஆண்டுகளில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று அம்மாவின் நன்னடத்தைக்கு பட்டியல் போட்டார். ஆனால் வழக்கு ஏன் 18 ஆண்டுகள் நடைபெற்றது என்ற கேள்வியைக் கேட்டால் இதற்கு நேரெதிராகத்தான் பதில் சொல்ல முடியும். வழக்கறிஞரை மாற்றுவது, நீதிபதியை மாற்றுவது, தொட்டதுக்கெல்லாம் உச்சநீதிமன்றம் சென்று தடை பெறுவது என்று சட்டம் ஒரு இருட்டறை மட்டுமல்ல, அம்மாவின் விளையாட்டறையும் கூட என்று நீருபித்தவர் ஜெயா. இவர் சட்டத்தை மதித்து நடப்பவர் என்றால் அந்த சட்டமே விழுந்து விழுந்து சிரிக்கும்.

ஆரம்பத்தில் ராம் ஜேத்மாலினியின் வாதங்களை வேறு வழியின்றி எதிர்த்துப் பேசிய அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங், மதிய உணவுக்கு பிறகான அமர்வில் நிபந்தனையின் பேரில் பிணை வழங்கினால் ஆட்சேபமில்லை என்று ஆசை காட்டினார். இந்த ஆசைதான் பேராசையாக வெளியே வதந்தியாக மாறி, மஹாவிஷ்ணு, பிபிசி வரை அம்மாவுக்கு விடுதலை என்று அவசர அவசரமாக வெளியிடப்பட்டது.

காலையில் பேசும் போது ஜெயா வெளியே வந்தால் சாட்சிகளை கலைப்பார், தப்புவார் என்றெல்லாம் பேசிய பவானி சிங் மாலையில் மாற்றிப் பேசியது ஒன்றும் அதிசயமல்ல. ஏற்கனவே இவர் போங்காட்டம் ஆடும் போது நீதிமன்றம் அபராதம் விதித்து சந்தி சிரிக்க வைத்ததால் பவானி ரொம்ப மலிவாக நடக்க முடியவில்லை. கொஞ்சம் யோக்கியனாகவும் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டியிருந்தது. குற்றவாளி ஜெயாவுக்கு தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுவதற்கு முன்னரே பவானி சிங்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது முக்கியம்.

இறுதியில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயாவை விடுதலை செய்வதற்கான முகாந்திரங்கள் எதுவும் இல்லை, ஊழல் என்பது அடிப்படை மனித உரிமைகளை மறுப்பது என்றெல்லாம் விளக்கி பிணையை மறுத்திருக்கிறது. மேலும் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை தடை செய்யக் கோரிய மனுக்களையும் ரத்து செய்திருக்கிறது.

இனி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என ஜெயா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு கூறியிருக்கிறது. ஊடகங்களில் இந்த பிணை மறுப்பு அநீதி என நாளையே சிறப்பு கட்டுரைகளை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

சென்னையில் உள்ள கன்னட மக்களை சிறை பிடிப்போம் என சுவரொட்டி போட்ட அதிமுக ரவுடிகள் இனி அடுத்த கட்டமாக என்ன ரவுடித்தனங்களை செய்யலாம் என்று ஆலோசிப்பார்கள். காவிரிப் பிரச்சினையின் போது கன்னட வெறியர்கள் தமிழ் மக்கள் மீது தாக்குதல் செய்தது போல இப்போதும் நடந்தால் அம்மாவின் ஊழல் வழக்கை இரு தேசிய இன மக்களின் மோதலாக மடைமாற்றி ஆதாயம் அடையலாம் எனும் அவர்களின் திட்டம் ஃசெல்ப் எடுக்கவில்லை.

தமிழகத்தில் எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்து இனி பாக்கி ஒன்றுமில்லை என்று வந்தாலும் புதிய வன்முறை வெறியாட்டங்களை அம்மா ரவுடிக் கூட்டம் அரங்கேற்றம் செய்யும். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதாய் சீன் போடும் காவல்துறை இந்த வன்முறையை வேடிக்கை பார்த்து விட்டு எதிர்ப்போரை மட்டும் கைது செய்து உள்ளே தள்ளும். அதிமுக ரவுடித்தனத்தை கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்கே மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் தோழர்கள் தமிழகமெங்கும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.

பாசிச ஜெயா அங்கே சிறை வைக்கப்பட்டிருந்தாலும் அவரது பாசிச கும்பலின் ஆட்சி இங்கே சுதந்திரமாக நடமாடுகிறது. இதை சிறை பிடிக்காமல் தமிழகத்திற்கு விடிவு காலம் இல்லை.

 1. ஜெயலலிதாவுக்கு அ. மார்க்ஸ் மற்றும் சுகுமாரன் என்ற மனித உரிமை ஆர்வலரும் இரங்கியுள்ளனர். அ. மார்க்ஸை அடியொற்றி சிந்திப்பவர் சுகுமாரன். ஆனாலும் சுகுமாரனுக்கு முன்பே ஜெயலலிதா மீது ஒரு பாசம் இருந்து வந்திருக்கிறது. அ. மா சற்று ஆதரிக்க முன்வந்தவுடன் சுகுமாரன் பல அடிகள் பாய்ந்து அம்மாவை ஆதரித்துள்ளார். சு.சாமி – ராஜபக்சே – கருணாநிதி – கர்நாடகம் என்று விரிந்த அரசியல் சதி நடப்பதாக சந்தேகம் வலுத்துள்ளது என்று அம்மாவின் பாரம்பரிய விசுவாசிகளே வெட்கப்படுமளவுக்கு கருத்து தெரிவித்துள்ளார், சுகுமாரன். சுகுமாரனே இப்படி என்றால் செ.கு. தமிழரசன், வேல்முருகன், ஆவடி குமார் போன்ற நிரந்தர விசுவாசிகளின் கருத்தை கேட்பதற்கு அச்சமாக இருக்கிறது.

  • காம்ரேடுகளின் கம்யூனிச பாசம் குறைவில்லாததுதான்! ஆனால் அவாளின் பார்ப்பன பாசம் இரத்தத்தில் ஊறியது! தோழர்நம்பூதிபாடு, தோழர் ஜோதிபாசு இவர்களிடமும் இந்த கூரை நாம் காணலாம்!

  • சுக்தேவ் சொன்னப்புறம் தான் அ மார்க்ஸ் விஷயமா எழுதி இருக்கிற சில கட்டுரைகளை படிச்சேன். என்ன இப்படியெல்லாம் பேசறாரு! வாசகர்கள் வசதிக்காக ஒரு சாம்பிள் இதோ:

   “ஜெயலலிதாவின் பதவி இறக்கம் ஈழத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் ஒரு இழப்புதான். ஈழப் பிரச்சினையில் அவருக்கு உண்மையான அக்கறை இருந்ததா இல்லையா என்பது பிரச்சினை இல்லை. ஈழப் பிரச்சினையில் எத்தனை வலுவாக ஒலிக்கிறோமோ அத்தனை பலம் நமக்கு என அவர் உறுதியாகவும் சரியாகவும் நம்பினார். அவர் ஒலித்த வலுவான குரல் கடல் கடந்து சென்று ராஜபக்ஷே குடும்பத்தின் வயிற்றில் புளியைக் கரைத்து வந்தது. டெல்லியும் அவரது குரலுக்கு அஞ்சியது. இனி அவரது நிழல் ஆட்சி நிச்சயம் ஈழ அரசியலில் அத்தகைய விளைவை ஏற்படுத்திவிட இயலாது”

   ராஜபக்ஷே வயத்துல புளியை கரைக்குக்குதா? என்ன சார் இதெல்லாம்? ஒரு வேளை புளியோதரை சாப்ட்டு இருப்பாரோ?

   // அம்மாவின் பாரம்பரிய விசுவாசிகளே வெட்கப்படுமளவுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

   சுக்தேவ் சொல்றது சரிதான். வெக்கமாத்தான் இருக்கு!

   https://www.facebook.com/notes/marx-anthonisamy/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-7402-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-23-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/732317986840928

   • // ராஜபக்ஷே வயத்துல புளியை கரைக்குக்குதா? என்ன சார் இதெல்லாம்? ஒரு வேளை புளியோதரை சாப்ட்டு இருப்பாரோ? //

    புளியை கரைக்காமலா ராஜபக்சே ஆதரவு ஏடு ஜெ-வை கார்ட்டூனில் கேவலப்படுத்தியது..?! இலங்கை அரசு இணையதளத்தில் ஜெ மோடிக்கு ’காதல் கடிதம்’ எழுதியதாக இழிவுபடுத்தியது..?!

    இந்திய அரசு அதிகாரப்பூர்வமாகவே இலங்கையை நட்பு நாடு என்று கூறிக்கொண்டு ராஜபக்சேயை ஐநா மன்றத்தில் பாதுகாக்கும்போது, இந்தியத் தமிழர்களின் மாநில சட்டமன்றத்தில் ராஜபக்சேயை போர்க்குற்றவாளி என்று கூறி தண்டிக்கவேண்டும் என்றும், இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டும் என்றும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி இந்தியத் தமிழர்களின் நிலைப்பாடும் உலகத் தமிழர்களின் நிலைப்பாடும் ஒன்றுதான் என்பதை உலகநாடுகளுக்கு தெளிவாக உணர்த்தவில்லையா..?! ராஜபக்சேயின் குஷிக்கு காரணமில்லாமலில்லை..

    • ராஜபக்சேயை போர்க்குற்றவாளி என்று கூறி தண்டிக்கவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டவர் அமைச்சரவையை கூட்டி ஏன் தீர்மானம் போடவில்லை. இதிலிருந்தே தெரியவில்லையா சட்டமன்றம் என்பது முகமூடி அமைச்சரவைதான் உண்மை முகம்

  • அ.மார்க்சு சொல்கிறார். \\ஜெயாவைப் பொருத்த மட்டில் இம்முறை அவர் மிகவும் சீராகத் தன் ஆட்சியைச் செலுத்திக் கொண்டிருந்தார். சென்ற முறை விட்ட பிழைகளை இம்முறை கவனமாகத் தவிர்த்து வந்தார்.//

   இம்முறை ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலையை உயர்த்தியது,ஐந்து ஆண்டுகளாக கருணாநிதி உயர்த்தாத பேருந்து கட்டணத்தை உயர்த்தியது,மின் கட்டணத்தை உயர்த்தியது,இப்போது மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தவிருப்பது,மின்சார பற்றாக்குறையை சமாளிக்க வக்கற்று கிடப்பது,மின்சாரமின்றி தொழில்கள் முடங்கிப்போய் தொழில் வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது,அதனால் வறுமை அதிகரிப்பது,மின்சாரம் இன்றி அவதிப்படும் ஏழைகள் கொசுக்கடியால் கொடும் நோய் தாக்குதல்களுக்கு இரையாகி மாண்டு போவது போன்ற கொடுமைகள் எல்லாம் மார்க்சுக்கு சீரான ஆட்சியாக தெரிகிறது.

 2. வழக்கறுத்தீஸ்வரர் கூட எஸ்கேப் ஆயிட்டார் போல இருக்கே! போற ஸ்பீடப் பார்த்தா கூடிய சீக்கிரம் மொத்தமா மங்களம் பாடிடுவான்னு தோன்றது!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க