வெள்ளாற்றை கட்டாந்தரையாக்கிய மணல் கொள்ளையர்கள்-தண்டனை என்ன?
தமிழக அரசே மணல் குவாரிகளை உடனே மூடு
என்ற கோரிக்கைகளை முன்வைத்து 10-11-14 திங்கள் அன்று மாலை 4.30 மணியளவில் அதிகமாக மக்கள் கூடுமிடமான கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெருந்திரளாக விவசாயிகள், பொது மக்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து அதிகளவில் கலந்து கொண்டார்கள். போராட்டதிற்கு மனித உரிமைப் பாதுகாப்பு மையம் செயலாளர் வழக்கறிஞர் புஷ்பதேவன் தலைமை ஏற்று நடத்தினார். அருகில் விருத்தாசலத்தில் இருந்தாலும் பல மாதங்களாக நடந்த மணல் கொள்ளைக்கு தாமதமாக வருகிறீர்கள் என கிராம மக்கள் நேசத்தோடு கடிந்து கொண்டதற்கு அமைப்பின் சார்பில் வருத்தம் தெரிவித்து ஆற்றின் இரு கரையிலும் உள்ள மக்களிடம் பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்த அனுபவத்தை விளக்கினார்.
“அனைத்து மக்களும் மணல் குவாரிகளை மூட வேண்டும் என விரும்புகின்றனர். தலைமை ஏற்று போராட்டம் நடத்த உரிய நபர்கள் இல்லாததால் மணல் கொள்ளை தொடர்கிறது. மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மணல் கொள்ளையை மூடும் வரை தொடர்ந்து போராடும்.
தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு எதிராக போராடினோம். காவல் துறைக்கு எதிராக போராடினோம், சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு எதிராக போராடினோம் எங்களை யாராலும் விலைக்கு வாங்க முடியவில்லை என்பதை இந்த நேரத்தில் பெருமையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் அரசியல் எங்களுக்கு அந்தப் பண்பை, துணிவை வழங்கியிருக்கிறது.
பொதுப்பணித்துறைக்கு 40 லாரிக்கு மணல் கணக்கை காட்டிவிட்டு 400 லாரி மணல் கணக்கில் வராமல் கொள்ளையடிக்கப்படுகிறது. அதனால்தான் அதிகாரிகள் முதல் யார் எதிர்த்தாலும் பணம் வீசி எறியப்படுகிறது. நமது வீட்டு பொருளை கொள்ளையடிக்க நமக்கு லஞ்சம் கொடுக்கிறான். நாம் இத்தகைய சூழ்ச்சிக்கு பலியாகாமல் போராட வேண்டும் ” என உரையாற்றினர்.
அவரைத் தொடந்து கார்மாங்குடி பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் உரையாற்றும் போது, “மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்படும் அதே ஊரைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன்தான் மணல் கொள்ளைக்கு காரணம். லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு மக்களுக்கு எதிராக செயல் படுகிறார். அதிகாரிகளிடம் பேசுவது, மணல் கொள்ளையர்களிடம் பேசுவது, மக்களிடம் பேசுவது என மூன்று செல் வைத்திருக்கிறார். அனைத்திற்கும் புரோக்கராக செயல்படுகிறார். கட்சிகளை நம்பி பயனில்லை. தி.மு.க செய்ததை அ.தி.மு.க விரைவாக செய்கிறது. எந்தக் கட்சியும் மணல் கொள்ளையை தடுக்க முன்வராது. நாம் தான் போராட வேண்டும் எத்தகைய போராட்டத்திற்கும் நான் மக்களை திரட்டி கலந்து கொள்ள தயாராக இருக்கிறேன்.” என்று கூறினார்.
மருங்கூரை சேர்ந்த பஞ்சமூர்த்தி உரையாற்றும் போது, “வருபவர்கள் எல்லோரும் மணல் கொள்ளையை தடுப்பது போல் பேசி கடைசியில் பணம் வாங்கிக் கொண்டு சென்று விடுகிறார்கள். நீங்களும் அது போல் இருந்தால் என்னை அழைக்காதீர்கள் என்று கூறினேன். ஆனால் மனித உரிமைப் பாதுகாப்பு மைய நண்பர்கள் தங்கள் அமைப்பைப் பற்றி விளக்கிச் சொன்னதும் அவர்களைப் பற்றி நான் விசாரித்தேன். அதன்பிறகுதான் நான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். மணல் குவாரிகளை நிரந்தரமாக மூட உரிய போராட்டம் நடத்த வேண்டும்” என பேசினார்.
மனித உரிமைப் பாதுகாப்பு மைய செயற்குழு உறுப்பினர் செல்வக்குமார் காவல் துறையை மிகவும் கடுமையாக தாக்கி பேசினார். மேலும், “நாம் இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவது இந்தப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளையும் உள்ளூர் ஓட்டுக்கட்சிகளையும் அம்பலப்படுத்தவும்தான். இதற்கு ஆதரவான அதிகாரிகளும், அரசாங்கமும் நல்லவர்கள் போலவும், இதை எதிர்த்து போராடும் மக்களும் அமைப்புகளும், தீவிரவாதிகள் போலவும் அரசாங்கம் சித்தரிக்கிறது” என்று பேசினார்.
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் இளங்கோவன் உரையாற்றும் போது, “படத்தில் வரும் வசனம் போல எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும். என்ன உண்மை என்றால் இந்தப் பகுதியில் உள்ள வெள்ளாறு யாருக்கு சொந்தம்? என்பது. மக்கள் இது அரசாங்கத்திற்கு சொந்தம் என்று நினைத்தால் அது தவறு. இந்த ஆறு இந்தப் பகுதி மக்களுக்கு சொந்தமானது, இந்த ஆற்றில் உள்ள மணலை கொள்ளையடிக்கும் கொள்ளையனுக்கு சொந்தமல்ல, மக்களுக்கு உணவளிக்கும் இந்தப் பகுதி விவசாயிகளுக்கு சொந்தமானது. அதை இந்தப் பகுதி மக்கள் தான் பாதுகாக்க வேண்டும். அதற்கு போராட வேண்டும். நாங்கள் மணல் லாரியை மறித்து போராடினோம். காவல் துறையினர், ‘மறிப்பவர்கள் மட்டும் நில்லுங்க, வேடிக்கை பார்ப்பவர்கள் தனியே போங்க’ என்றவுடன் நானும் சிலரும்தான் மறியலில் இருந்தோம். அனைவரும் விலகிவிட்டனர் இப்படி போராடினால் எபப்டி வெற்றி பெற முடியும்” என பேசினார்.
அறிவரசன் என்ற இளைஞர் பேசும் போது, “இந்த மணல் கொள்ளை பற்றி பலமுறை அரசாங்கத்திற்கு தகவல் தெரிவித்தும், புகார் மனு எழுதியும் எந்த வித பயனும் இல்லை. மாறாக மணல் கொள்ளையர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆற்றை பாதுகாக்க வேண்டும் என்று மனு போடும் என்னை 20-க்கும் மேற்பட்ட போலீஸ் வீட்டுக்கு வந்து ‘உனக்கு மட்டும் 144 தடை போட்டிருக்கிறோம்’ என்று மிரட்டுகிறது. ஆனால், ஒரு கொலை நடந்ததை விசாரிக்க 2 போலீஸ் மட்டும் வருகிறது. இது தான் மணல் கொள்ளையனின் அடியாள் போலீஸ் என்பதை நிரூபித்தது. இங்குள்ள 2 பெரிய கட்சிகளும் 2 ஜாதிக் கட்சிகளும் நான்தான் வீரன், சூரன், பெரிய புடுங்கி என்று மார்தட்டி கொள்ளும். இப்ப எல்லாரும் எங்கடா போனீங்கள்” என்று தன்னுடைய உணர்வை வெளிபடுத்தி ஆவேசமாக பேசினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
இவர்களைத் தொடர்ந்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு பேசும் போது
“மணல் கொள்ளையால் இந்த பகுதி எந்தளவு பாதிக்கப்படுகிறது. என்று இங்கு பலரும் பேசினார்கள். கருவேப்பிலங்குறிச்சி தொடங்கி கார்மாங்குடி வரை ஆற்றில் மணல் இல்லை வெறும் களிமண்தான் தெரிகிறது. இப்போதே 150 அடியில் உள்ள போர்வெல் ஆட்டம் கண்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து குடிக்க தண்ணீர் கிடைக்காமல் குடங்களை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நமது விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்று விட்டு ஊரைகாலி செய்து பஞ்சம் பிழைக்க நகரத்துக்கு கூலிகளாக ஓட வேண்டிய அவல நிலை ஏற்படும்.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு
மணல் அள்ளுவது அரசாங்கம். நமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கி கொள்வது நமது வாழ்வாதாரத்தை பாதுகாக்காது. மக்கள்தான் போராடி மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். எந்த ஓட்டுக் கட்சியும் இதற்காக போராட மாட்டார்கள். அனைத்துக் கட்சிகளும் இத்தகைய கொள்ளையை ஆதரிக்கின்றன. சட்டப்படிதான் அனைத்தும் நடக்கிறது. மேலும் இதில் அவர்களுக்கும் கமிஷன் போகிறது. உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் முதல் VAO, தலையாரி, தாசில்தார், கோட்டாட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், தலைமை நிலைய செயலாளர் வரை அனைவருக்கும் இதில் பங்கு போகிறது. அதனால் யாரும் போராடவோ, தடுத்து நிறுத்தவோ முன் வரமாட்டார்கள். இதைப் புரிந்து கொண்டு மக்களாகிய நாம் தான் போராடி தடுத்து நிறுத்த வேண்டும்.
மணல் கொள்ளையாகட்டும், வாக்களிப்பதற்காகட்டும் அற்ப பணம் 1000, 2000 வாங்குவதிலா நம் வாழ்க்கையை நடத்துகிறோம். வருடம் முழுவதும், பிள்ளைகளை படிக்க வைப்பது, நல்லது கெட்டது பார்ப்பது என அனைத்திற்கும் நாம் குடும்பத்தோடு இரவு பகலாக உழைக்கிறோம். அந்த வருமானத்தில்தான் நாம் குடும்பத்தை நடத்துகிறோம்.
ஆனால் மணல் கொள்ளை மட்டுமல் அனைத்து வளங்களும் கொள்ளை போகிறது. கல்வி, மின்சாரம், மருத்துவம், குடிநீர் என மக்களின் அடிப்படை வாழ்வுரிமைகள் அனைத்தையும் பாதுகாத்து வழங்குவதற்கு பதிலாக தனியார்மயமாக்கி ‘காசுள்ளவன் வாங்கட்டும் இல்லாதவன் செத்து போகட்டும்’ என அரசின் தனியார்மயக் கொள்கை தாராமயக் கொள்கை சொல்கிறது. மோடி அரசோ, மன் மோகன் சிங் அரசோ, அதி.மு.க., தி.முக எந்த அரசாக இருந்தாலும் மக்களுக்காக இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை ஆற்றுமணல் கொள்ளை இவற்றை விசாரிக்க சகாயம் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உத்திரவிட்டது. தமிழக அரசு அந்தக் குழுவை நடத்த விடாமல் எல்லா முட்டுக்கட்டைகளையும் போடுகிறது.
வெள்ளாறு மட்டுமல்ல தாமிரபரணி, காவிரி, பாலாறு, கொள்ளிடம் என அனைத்து ஆறுகளும் சாகடிக்கப்படுகின்றன. விவசாயிகள் சங்கத்தினர் அமைத்து மணல் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்துவதுடன் உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்து பேராடி வருகிறார்கள். தமிழக அரசோ மணல் கொள்ளைக்கு ஆதரவாக விவசாயிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்துகிறது. ஆற்றில் 3 அடிக்கு மேல் மணல் அள்ளக் கூடாது. இரண்டு பொக்லைன்தான் பயன் படுத்த வேண்டும். ஆனால் சட்டத்தை யார் மதிக்கிறார்கள்.
கடலூர் மாவட்டத்தின் நீர் மட்டம் செமி கிரிட்டிகல் (அரை நெருக்கடி நிலை) என வரையறுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து மக்களிடம் கருத்து கேட்டபிறகு தான் மணல் எடுக்க வேண்டும். ஆனால் எந்த மக்களை கலந்து பேசினார்கள். மணல் கொள்ளையை எதிர்த்து போராடியவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். தடுத்து நடவடிக்கை எடுத்த கோட்டாட்சியர், தாசில்தார், துணை ஆய்வாளர், ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர்கள் கொலை மிரட்டலை சந்தித்தனர்.
குடிநீருக்காகதான் மூன்றாம் உலகப் போர் என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள். ஆனால் அரசோ நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கு பதிலாக தனியார் கொள்ளைக்கு திறந்து விடுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் தீவிரவாதி என மிரட்டி பொய் வழக்கு போட்டு மக்களை அச்சுறுத்துகிறது.
மனித உரிமை பாதுகாப்பு மையம் மக்களின் அனைத்து வாழ்வாதார போரட்டங்களுக்கும் உறுதுணை யாக இருக்கும். காவல் துறையின் மிரட்டலைப் பற்றி கவலை வேண்டாம். அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம். இத்தகைய மணல் கொள்ளையை எதிர்க்க அமைப்பாக திரண்டு இடை விடாமல் தொடர்ந்து போராடினால் கண்டிப்பாக குவாரிகளை மூட முடியும். விருத்தாசலம், மணிமுத்தாறு பகுதியில் கிராம மக்கள் ஒற்றுமையாக திரண்டு போராடி குவாரியை தடுத்து நிறுத்தியுள்ளார்கள். வேலுர் பாலாறு மணல் குவாரிகளுக்கு எதிராக போராடிய மக்கள் மணல் கொள்ளையனிடம் வாங்கிய பணம் 1.5 லட்சம் ரூபாயை திருப்பி வீசி எறிந்துள்ளனர். அத்தகைய மான உணர்வுதான் அதிகாரிகளையும், அரசியல் கட்சிகளையும், அச்சுறுத்தும். வேட்டியிலும், மீசையிலும் இல்லை மானம், நாம் வாழும் காலத்தில் அநீதிகளுக்கு எதிராக நாம் என்ன செய்தோம் என்பதில்தான் இருக்கிறது. வெற்றி தோல்வி உறுதியான பிறகுதான் போராடுவது என்பது அறியாமை, சுதந்திரத்திற்காக போராடிய திப்பு, கட்ட பொம்மன், மருது சகோதரர்கள், வ.உ.சி. ஆகியோர் போராட்டத்தின் தியாகத்தில்தான் சுதந்திரம், சுயமரியாதை, நாட்டுப் பற்று உயிர்ப்புடன் இருக்கிறது.
உழைக்கும் மக்களும் விவசாயிகளும் இந்த பகுதி மக்களும் ஒற்றுமையுடன் திரண்டு போராட வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் மணல் அள்ளுவதை எதிர்த்து பஞ்சாயத்தில் தீர்மானம் போட வேண்டும். உங்களுடைய அனைத்து போராட்டத்திலும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உறுதுணையாக களத்தில் இருக்கும் என உறுதியளிக்கிறோம்” என பேசினார்.
கூட்டத்தின் இறுதியில் நமது அறிவிப்பை ஏற்று பல விவசாயிகள் போராட்டத்திற்கு தங்கள் பெயரை பதிவு செய்தனர். நன்கொடை அளித்தனர். ஒன்றும் செய்ய முடியாதா? என ஏங்கிய மக்களுக்கு எழுச்சியூட்டுவதாக இருந்தது ஆர்ப்பாட்டம். அதிகளவில் போலீசு பாதுகாப்புக்கு நின்றனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தமிழக அரசே! தமிழக அரசே!
கைது செய், கைது செய்!
மணல் கொள்ளையர்களை, கைது செய்!
நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு!
மணல் கொள்ளையை, தடுக்காத
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!.
வேடிக்கை பார்க்குது, வேடிக்கை பார்க்கது,
மாவட்ட நிர்வாகமே
மொத்தமா, வேடிக்கை பார்க்கது.
மணல் கொள்ளையை, வேடிக்கை பாக்குது!
3 அடிக்கு அனுமதி வாங்கி
30 அடிக்கு அள்ளுறான்
தாசில்தாரும், டி.எஸ்பியும்
மாட்டுவண்டிய மடக்கிறாங்க
மணல் லாரிய அனுப்புறாங்க
யாருக்கடா அரசாங்கம், வெங்காய அரசாங்கம்.
போராடுவோம் போராடுவோம்!
மணல் குவாரிகளை,
மூடும்வரை போராடுவோம், போராடுவோம்
கொள்ளை போகுது கொள்ளை போகுது
மணல் கொள்ளை தட்டிக் கேட்டால்
போலீசு வருது பொய் வழக்கு போடுது
கனிம வளம், நீர்வளம்
பொதுப்பணித்துறை வருவாய்த்துறை
அதிகாரி எங்கே? அதிகாரி எங்கே?
எத்தனை துறை இருந்தாலும் வக்கில்ல வக்கில்ல
மணல் கொள்ளையை தடுக்க
வக்கில்ல, வக்கில்ல
அனுமதியோம் அனுமதியோம்
மண்ணையும்,மக்களையும் காட்டிக்கொடுத்து
மணல் கொள்ளைக்கு, காசுவாங்கும்,
துரோகிகளை அனுமதியோம்.
புறக்கணிப்போம், புறக்கணிப்பாம்!
விவசாயத்தை, அழித்து விட்டு
குடிநீருக்கு வேட்டு வைக்கும்,
மணல் கொள்ளைக்கு ஆதரவளிக்கும்
பஞ்சாயத்து தலைவரை புறக்கணிப்போம்!
கவுன்சிலரையும்,கட்சிகாரனையும் புறக்கணிப்போம், புறக்கணிப்போம்!
தீர்மானம் போடு! தீர்மானம் போடு!
மணல் குவாரிகளை மூடுவதற்கு
பஞ்சாயத்தில தீர்மானம் போடு
ஒன்றியத்தில தீர்மானம்போடு
மாவட்ட கவுன்சில தீர்மானம் போடு!
மாவட்ட ஆட்சியரே உத்திரவு போடு!
அரசியல்வாதிக்கு பல லட்சம்
எதிர்த்து கேட்டால் உனக்கும் பங்கு
மானம் இழந்து வாழ்க்கையா?
மணல் கொள்ளைக்கு லஞ்சப்பணமா?
வீசி எறிவோம் வீசி எறிவோம்
வாங்கிய பணத்தை
வீசிஎறிவோம் வீசிஎறிவோம்…
கைது செய் கைது செய்
வெள்ளாற்றை கட்டாந்தரையாக்கிய
மணல் கொள்ளை மா பியாக்களை கைது செய்
துணை நின்ற அதிகாரிகளை கைது செய்! கைது செய்!
தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், விருத்தாச்சலம்
“என் குழந்தைக்கி ரெண்டு வயசாகப் போகுது, உங்க பள்ளிக்கூடத்துல சேக்கறதுக்கான விவரம் தெரிஞ்சுக்கலாம்னு….” நான் முடிக்கக் கூட இல்லை..
பூ, காய், கனி, விலங்கு அதோட குட்டிங்க, பறவை அதோட குட்டிங்க, இதுபோல எது எதோட தொடர்பு உடையது என்பதை சொல்லிக் கொடுப்போம் (படம் : உதாரணத்துக்கு மட்டும்)
“உள்ள வாங்க மேடம், இந்த சேர்ல உக்காருங்க” என்றவர் ஃபேன் சுவிட்சை தட்டிவிட்டு நேராக இருந்த நாற்காலியை தேவையில்லாமல் சரிசெய்து போட்டு மரியாதையை காட்டிய விதமே மிகவும் பவ்யமாக இருந்தது. பலிகொடுக்கக் கொண்டு போகும் ஆட்டுக்கு செய்யும் மரியாதையை செயல்ல காட்டிவிட்டு வேலையை தொடங்கிச்சு அந்தம்மா.
“வருசத்துக்கு 13,500 ரூபா டேர்ம் பீஸ் கட்டணும். நீங்க ரெண்டு அல்லது மூணு முறையா பிரிச்சுக்கூட கட்டலாம் மேடம். அட்மிஷன் பீஸ் 2,500 ரூபா, ஆண்டு விழாவுக்கு காஸ்டியூம் வாங்க ஏதாவது கொஞ்சம் பணம் கட்றா மாதிரி இருக்கும். கராத்தே, பரதநாட்டியம், பாட்டுகிளாஸ் இதுவும் இருக்கு. இது வேணுன்னா அதுக்கு தனியா பீஸ் கட்டணும். மத்தபடி எதுக்கும் நாங்க காசு வாங்கறதில்ல.”
“நாங்க முக்கியமா குழந்தைக்கி அடிப்படையான விசயங்களத்தான் சொல்லித்தர்றோம். வீட்ல பாத்திங்கன்னா குழந்தைங்க தானா சாப்பிடாது. ஊட்டச்சொல்லும். கண்ட எடத்துலயும் கண்டதையும் பண்ணி வப்பாங்க. வீட்டுக்கு வர்ரவங்ககிட்ட நல்ல ரெஸ்பான்ஸ் பண்ணாது. ஹாய், பாய் இப்படி எதுவும் சொல்லாம மரியாதை குறைவா நடந்துக்கும். அடிப்படையில டிசிப்ளினா நடந்துக்கணுங்கறத கத்துக் கொடுக்குறோம்.
சிலபஸ்ன்னு எடுத்துகிட்டா பூ, காய், கனி, விலங்கு அதோட குட்டிங்க, பறவை அதோட குட்டிங்க, இதுபோல எது எதோட தொடர்பு உடையது என்பதையும், சாலையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும். அப்பறம் யோகா, பாட்டு, பரதநாட்டியம் இதெல்லாம் கத்துக் கொடுப்போம். இதுக்காக நான் ஸ்பெசலா குழந்தைகளடோ சைக்காலஜி படிச்சிருக்கேன். அதையெல்லாம் தாண்டி நானும் ரெண்டு குழந்தைகளுக்கு தாய்.
காலையில ஒன்பதரை மணிக்கு கொண்டு வந்து விடணும். மதியம் பன்னிரெண்டரை மணிக்குக் கூட்டிட்டு போயிடணும். ஸ்னாக்ஸ் மட்டும் கொடுத்துவிடணும். கூடுதலா விடற ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மாதத்துக்கு முன்னூறு ரூபா கட்டணம். மாலை நாலுமணி வரைக்கும் குழந்தைங்கள விடலாம். கூடுதலான நேரம் விட்டா சாப்பாடு கொடுத்து விடணும். கண்டகண்ட பாக்கெட் ஐட்டமெல்லாம் அனுமதிக்கிறது கிடையாது. ஒன்லி ஹெல்த்தி ஃபுட், வீட்ல பிரிப்பேர் பண்ணது மட்டுந்தான் கொண்டு வரணும். மத்தபடி எங்க குழந்தைங்க போல பாத்துப்போம். நீங்க என்னைக்கி மேடம் அட்மிஷன் போட்றீங்க? அட்ரச சொல்லுங்க?”
மூச்சு முட்ட ஒப்பிச்ச அந்தம்மா கூலா இருந்தாங்க. எதுத்தாப்போல கேட்டுட்டு இருந்த எனக்குதான் வேத்துப்போச்சு. ஏழு கழுத வயசான நமக்கே டிசிப்பிளினோட இருக்க முடியாம தடுமாருறோம். பச்ச பிள்ளைக்கி எதுக்குங்க டிசிப்பிளின். அந்தம்மா சொல்ற கணக்கப் பாத்தா ஒரு மாச மளிகை சாமானுக்கு செய்ற செலவ ஒரு மாசம் புள்ளைய பாத்துக்க கொடுக்கணும் போல இருக்கு. பட்டினி கெடந்து, பிள்ளைய அவங்கள பாத்துக்க சொல்லிட்டு நமக்கு என்ன வேலையின்னு தோணினாலும் ஒரு வீட்டில் ஒரு குழந்தையா தனிச்சு வாழும் இந்த நகர வாழ்க்கையில குழந்தைகளோட சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமும் இருக்கு என்பதை ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.
மத்த பிள்ளைகள பாத்து எல்லாரைப்போலதான் நாமளுங்கற எண்ணம் உருவாகும்.
கிராமத்துல பிள்ளைங்க சேந்து விளையாடும், சேந்து சாப்புடும், குழந்தைகள் உலகத்துல உள்ள நல்லது கெட்டது புரிஞ்சுக்கும் வாய்ப்பு அதிகம். மத்த பிள்ளைகள பாத்து எல்லாரைப்போலதான் நாமளுங்கற எண்ணம் உருவாகும். தெருவுல வித்துட்டு போற எல்லாத்துக்கும் அடம் பிடிக்காம வீட்டு சூழல் புரிஞ்சுருக்கும். வீட்ல பெரியவங்க இருப்பாங்க, கூடமாட பாத்துப்பாங்க. வெளியே தெருவில கூட்டிட்டுப் போவாங்க. அக்கம்பக்கம் உள்ளவங்க கூட ஒத்தாசையா நடந்துக்குவாங்க.
ஆனா நகரத்துல நெலம வேற. மனிதர்களின் வாழ்க்கை முறை, அதன் சூழல், குழந்தைகளின் உலகம் வேறா இருக்கு. பெற்றோர் கண்காணிப்பு இல்லாமல் குழந்தைகளை தனியா விட முடியாது. அதிக படிப்பு, பெரிய வேலையா இருந்தாலும் சரி (ஆடம்பர வாழ்க்கையை பெருக்கிக் கொள்ள), கூலி உழைப்பு சாப்பாட்டுக்கே கணக்கு பார்க்கும் வேலையா இருந்தாலும் சரி, கணவன் மனைவி இருவருமே வேலைக்கி போக வேண்டிய சூழ்நிலை நகரத்து மக்களுக்கு. குழந்தைகளோ சேர்ந்து பழக, விளையாட முடியாமல் தனிச்சு போய்றாங்க. அதனாலேயே சின்ன வயசில குழந்தைகளை இதுபோல இடத்துக்கு அனுப்ப வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்படுது.
தேவை இருந்தாலும் நமக்கான இடம் இது இல்லங்கற முடிவோட அரசு அங்கன்வாடி இருக்கும் இடத்தை விசாரிக்கத் தொடங்கினேன். அனேகம்பேர் கை காட்டியது தனியார் கல்வி சாரா பள்ளியைதான். “அங்கன்வாடி நம்ம பகுதிக்கு எங்க இருக்குன்னு தெரியல” என்றதே பதிலாக இருந்தது. அங்கன்வாடியை தேடும்போது அடிக்கொண்ணு டே-கேர், கிரச், நர்சரி என்று தனியார் நிறுவனங்களத்தான் கடந்து போகவேண்டி இருந்தது.
நான் அலைஞ்சு திரிஞ்சு தேடியதுல கண்டுபிடிச்ச ரெண்டு அங்கன்வாடியில ஒன்னு பழுதடஞ்சு எந்த வசதியும் இல்லாமல் இருந்தது. “குழந்தைகள் யாரும் வர்ரதில்ல, தடுப்பூசிக்காக கர்ப்பவதியும், குழந்தைகளும் வாரத்துக்கொருக்க வருவாங்க, மத்தபடி பூட்டிதான் கெடக்கு”ங்கற தகவலோட அடுத்த அங்கன்வாடியில சந்திச்சவங்கதான் சாரதா.
புறக்கணிக்கப்படும் அங்கன்வாடிகள்
பல குழந்தைங்க அம்மா அம்மா என்று அழுக, ஒரு குழந்தை முந்தானையை பிடிச்சு இழுக்க, இரு குழந்தைகள் அடித்துக்கொள்ள, அவர்களை சமாதானம் செய்யும் நேரத்தில் மற்றொரு குழந்தை சத்துமாவு பாக்கெட்டை பிரிச்சு கொட்ட குழந்தைகளை விட வரும் பெற்றோர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல என்று தசாவதானியாக வேலை பார்த்தவரிடம் எனக்கு பதில் சொல்வது கூடுதல் சுமையாக இருக்குமோ என்ற தயக்கத்தோடவே அணுகினேன்.
ஆனால் மிகவும் பக்குவமாக சொன்னார் “சமைக்கிற நேரமாச்சு. இன்னும் டீச்சர் வரல. கேஸ் வேற தீந்துப்போச்சு. வெளிய வெறகடுப்புலதான் சமைக்கணும். கொழுக்கட்ட புடிக்கணும், முட்ட அவிக்கணும். இந்த பிள்ளைங்க வேற படுத்தி எடுத்துருவாங்க” என்று தன் வேலையின் நெருக்கடி நிலையை புலம்பிய போதே ஒரு குழந்தை மலம் போய்விட்டது. “கொஞ்ச நேரம் இங்க உக்காருங்க நான் இப்ப வந்துர்ரேன்.” என்று அந்த வேலையை கவனித்துவிட்டு வந்தார்.
ஒரு வயசு புள்ளையெல்லாம் சேத்துக்குவோம். நீங்க கொண்டாந்து விடுங்க. முதல்ல கொஞ்சம் அழும், அடம் பண்ணும். போகப் போக சரியாகிடும். இந்த அஸ்வின் கூட ஒரு வயசுலேருந்து வர்ரான். நான் எந்த வேல பாத்தாலும் எம்பின்னாலேயே வருவான். சேர்லதான் உக்காருவான். மடில போட்டுதான் தூங்க வக்கணும். ஒரு நாள் வீட்டுல இருக்க மாட்டான், பால்வாடிக்கி போறேன்னு அழுது அடம்பிடிக்கிறான்னு அவங்க அம்மா சொல்லுவாங்க.
இந்த பாப்பா பேரு க்ரேஸ் நல்ல புள்ள. நல்லா சாப்புடுவா, தூங்கி எழுந்து நான் சாப்புடும் போதும் சாப்புடுவா. வீட்டுக்கு போகும் போது மறக்காம கொழுக்கட்டைய கேட்டு வாங்கிட்டு போவா. நல்லா சாப்புடற குழந்தைகள பாத்துக்கறதுல எந்த கஸ்டமும் இருக்காது.
காவியா சமத்துக்கார பொண்ணு எந்தப் பொருள் கீழ கெடந்தாலும் எடுத்து வச்சுருவா. யார் ஒண்ணுக்கு போனா, ரெண்டுக்கு போனான்னு கரெக்டா வந்து சொல்லிருவா. ஒன்னு கேட்டா ஒம்பது சொல்லுவா நல்ல சுட்டி.
காலையில ஒம்பது மணிக்கு வருவேன் நாலு மணிக்கு திரும்பி போவேன். அஞ்சு வருசமாச்சு இந்த வேலைக்கு வந்து. வேலைக்கு சேந்த புதுசுல ஒரே தலைவலியா இருக்கும். ஒரு லட்சரூபா குடுத்து இந்த வேலைக்கு வந்தோமே நம்மளால நெலைக்க முடியுமான்னு தொணுச்சு. இப்ப ஒரு நாளைக்கி லீவுன்னு வீட்டுல இருக்க முடியல இந்த பிள்ளைங்க ஞாபகம் வந்துருது.
ஒவ்வொரு குழந்தையின் தனித் தன்மை பத்தி கூறியது வியப்பாகவும் சந்தோசமாகவும் இருந்தது. அதே வேளை குழந்தைகளின் அழகான மழலை பேச்சை புரிந்து கொள்ளும் அறிவும் ஆற்றலும் நமக்கு இல்லை என்பதை ஒத்துக்கொள்ள தோன்றியது.
அங்கன்வாடியில் ஆயா வேலை பார்க்க படிப்பு ஒரு தகுதி இல்லை. வாழ்க்கையில் நலிவுற்றவர்கள், விதவைகள், கைவிடப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்கிறது அரசு. ஒரு குழந்தையை கவனிக்க முடியாமல் வீட்டில் வேலைக்காக ஆயாக்களை வச்சுக்குறவங்களா இந்த வேலைக்கு வரப்போறாங்க. துப்புரவு தொழில்ல தாழ்த்தப்பட்ட பிரிவினரைத் தவிர வேறு யாரும் அந்த வேலைக்கு வர்ரதில்லை. அது போலதான் இந்த ஆயா வேலையும். வாழ்க்கையில் கைவிடப்பட்ட நிலைமையில இருப்பவர்களே இந்த வேலைக்கு வருகிறார்கள்.
அங்க இருக்கும் குழந்தைகள்ள நாலு பேரு ஆட்டோக்காரங்க குழந்தைகள். ரெண்டு வீட்டு வேலை செய்பவரின் குழந்தைங்க. பழைய பேப்பர் வாங்குபவரின் குழந்தை ரெண்டுபேர். இப்படி அங்க இருக்கும் குழந்தைகள்ள அடிப்படைத் தொழிலாளியின் குழந்தைகளே அதிகம் பேர்.
அங்கன்வாடி இந்திய அரசால் நடத்தப்படும் தாய் சேய் நல மையம். 1975-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைகள் திட்டத்தின் கீழ் பசியால் வாடி நலமற்றவர்களாக மாறுவதைத் தடுக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவும் இம் மையங்கள் துவங்கப்பட்டிருக்கு. இன்னும் பசியால் வாடும் குழந்தைகள் இல்லாத நெலமைய கொண்டு வரமுடியாம இப்பதான் மசாலா முட்டை போட திட்டம் போட்ருக்கு அரசு.
உரிமைகளுக்காகப் போராடும் அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் (ஆகஸ்ட் 11, 2014)
நாப்பதாண்டு காலம் முடியப்போகுது மக்கள் தொகை எவ்வளவோ பெருகிப்போச்சு. குழதையை க்ரஷ்சில் விடும் வசதி படைத்த பெற்றோர்கள் ‘ஸ்கைப்’ மூலம் குழந்தை என்ன செய்யுது என்று அறியும் அளவுக்கு வசதி வாய்ப்பு ஒருபக்கம் பெருகிப்போச்சு. ஆனால் தண்ணி, டாய்லெட், ஆயா, டீச்சர், சமையல் பெருட்கள், கட்டிடம், பாதுகாப்பின்மை என்ற வசதி குறைவற்ற இந்த அங்கன்வாடி மையம் பெரும்பான்மை மக்களின் தேவையாக உள்ளது.
வீதிக்கி வீதி சாராய கடையை திறந்திருக்கும் அரசு தேடியும் அகப்படாத அளவுதான் அங்கன்வாடி திறந்துள்ளது. அதுக்கும் போதிய அளவு ஆட்கள் இல்லாமல் 40 குழந்தைகளுக்கு ஒரு டீச்சர் ஒரு ஆயா என்ற வீதத்துலயும், டீச்சருக்கு வேறு வேலைகளையும் கொடுத்து வருது நிர்வாகம். சரிவர கவனிக்க முடியாதது மட்டும் இல்லாமல் பாதுகாப்பு அற்றதாகவும் உள்ளது. தேனி உத்தம்பாளையம் குழந்தைகள் கடத்தல் விசயமே இதுக்கு சாட்சி.
தினக் கூலிக்கு வேலை செய்றவங்களும், மாதச் சம்பளம் குறைவாக உள்ளவர்களும் பெருகிவரும் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க முடியாமல் திணறும் வேளையில், குழந்தைகளை பணம் கொடுத்து பார்த்துக்கொள்ள எப்படி முடியும். தனியார் பள்ளிகள், கல்லூரிகள் போல தனியார் குழந்தைகள் காப்பகமும் கொள்ளையடிக்கின்றன. விதவிதமான விளையாட்டு சாதனங்கள், ஆண்டுவிழா கொண்டாட்டங்கள், கேளிக்கைகள், பெற்றோருக்கு விளையாட்டு போட்டி, பரிசு என்று கவர்ச்சி திட்டம் போட்டு பெத்தவங்க பிரச்சனையை பணம் பண்றாங்க.
அங்கன்வாடியில வேலைபார்க்கும் ஆயாக்களோ ‘குழந்தைகள் சைக்காலஜி’ படிக்கல. சாதாரண மக்களுக்கு இருக்கும் இளகிய மனம் உள்ளவராகவும் இயல்பிலேயே மக்களிடம் பந்தபாசத்துடன் நடந்துகொள்பவர்களாகவும் இருக்காங்க. ஆரம்பத்தில் குழந்தைகள், தண்டனை கைதிகளைப்போல பார்க்கவே பரிதாபமாக இருந்தாலும், அவர்கள் அன்பில் கொஞ்ச நாள்லயே விட்டுப்பிரிய மனமற்றவங்களா மாறி போறாங்க.
மூணு மாசம் முடிஞ்சுருச்சு. இப்ப என்னோட குழந்தைய அழைக்க போகும் போது, இன்னும் சரியாக பேச்சுக் கூட வராத மத்த குழந்தைகள் பைய எடுத்துக்கொடுத்து, கதவை தொறந்துவிட்டு, டாட்டா காட்டும் போது டிசிப்ளினை பத்தி பாடம் நடத்துன அந்த ‘மேடம்’தான் ஞாபகத்துக்கு வர்றாங்க!
“ஆரிய உதடுகள் உன்னது, திராவிட உதடுகள் என்னது, கலக்கட்டுமே!” என்று சீனுக்கு பாட்டு எழுதிய வைரமுத்து, இப்போது ஆரிய உதட்டில் தான் கரைவது மட்டுமல்லாமல், தமிழர்களையும் கரைக்க தருண் விஜய் என்ற ஒரு பா.ஜ.க. ‘சீனை’ தூக்கிக்கொண்டு அலைய ஆரம்பித்திருக்கிறார்.
ஆரியப் பார்ப்பன தமிழ் அழிப்புக்கும், ஆதிக்கத்திற்கும் எதிராக உயர்தனிச் செம்மொழியை ஒரு வாளாக உயர்த்திப்பிடித்த கால்டுவெல்லுக்கோ, இல்லை பார்ப்பனிய திரிபுக்கு எதிராக தமிழ்ச்சமர் புரிந்த பரிதிமாற் கலைஞர், தேவநேயப் பாவணர் போன்றவர்களையெல்லாம் புதிய தலைமுறைகளுக்கு போற்றிச் சொல்லவோ, விழா எடுக்கவோ விரும்பாத வைரமுத்து, தமிழுக்காக உயிரையே கொடுத்த தாளமுத்து, நடராசனுக்காகவெல்லாம் ஒரு போஸ்டர் கூட அடிக்காத ‘வெற்றித் தமிழர் பேரவை’ இப்போது தமிழுக்காக ஒரு குரலை கொடுத்ததற்காக காவி தருண் விஜய்க்கு ஒரு பாராட்டு விழா எடுக்கிறது என்றால், வைரமுத்துவுக்கு “வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருண்டை உருளுது” என்பது நமக்கு புரிகிறது.
“ஆரிய உதடுகள் உன்னது, திராவிட உதடுகள் என்னது, கலக்கட்டுமே!” என்று சீனுக்கு பாட்டு எழுதிய வைரமுத்து, இப்போது ஆரிய உதட்டில் தான் கரைவது மட்டுமல்லாமல், தமிழர்களையும் கரைக்க தருண் விஜய் என்ற ஒரு பா.ஜ.க. ‘சீனை’ தூக்கிக்கொண்டு அலைய ஆரம்பித்திருக்கிறார்
ஈழத்தமிழர் படுகொலை, மீனவர் படுகொலை, ஆரம்ப வகுப்பிலேயே தமிழ்வழிக் கல்வி அழிப்பு, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு… என நீளும் அநீதிகளின் போது எங்கேயும் தலையைக் காட்டாத இந்த வெத்துத் தமிழ்ப் பேரவைக்கு பா.ஜ.க. தருண் விஜய் போலவே திடீர் தமிழ்க் காதல் வந்தது திகைக்க வைக்கிறது. கொஞ்சம் காசு சேர்த்து விட்டால் தனக்குத்தானே கால் அமுக்கு பேரவை, கை அமுக்கு பேரவை என்று அல்லக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம் காட்டிக் கொள்ள தமிழகத்தில் பஞ்சமா என்ன?
தமிழை தாய் மொழியாக கொள்ளாத ஒருவர், தமிழுக்குக் குரல் கொடுப்பதும், “தமிழை நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்க குரல் கொடுப்பது, திருவள்ளுவர் பிறந்த நாளை இந்திய மொழிகளின் திரு நாளாக கொண்டாட வேண்டும், இந்தியாவின் இரண்டாவது மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும். (முதல் இடம் சமஸ்கிருதத்திற்கு அல்லது எல்லோரும் வைரமுத்து அளவுக்கு வாட்டப்படும் வரை சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்திக்கு போல) பாரதியார் வாழ்ந்த காசி இல்லத்தை நினைவுச்சின்னமாக்க வேண்டும்” என்றெல்லாம் பா.ஜ.க. தருண் விஜய் போராடுவதால் பாராட்டு விழா நடத்துவதாக வைரமுத்து அளக்கிறார்.
அட, ஈர வெங்காயமே! ஆக தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இனி தமிழை வாழவைக்க முடியாது என்று தன்னை வைத்து ஒரு முடிவுக்கே வந்துவிட்டது கவிப்பேரரசு!
கால்டுவெல் கூட தமிழைத் தாய்மொழியாக கொள்ளாத அயர்லாந்துக்காரர்தான், ஆரியப் பார்ப்பன எதிர்ப்பு மரபில் தமிழின் தனித்துவத்தை அவர் ஆதாரங்களுடன் நிறுவியதும், பல அயல்நாட்டு அறிஞர்கள் தமிழின் செம் மொழித்தன்மைக்கு குரல் கொடுத்ததும் வரலாறு.
ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததும் தனது கல்லறையில் “இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என எழுதச் சொன்னதும், பெஸ்கி பாதிரியார் என்ற வீரமாமுனிவர் இலக்கணம், அகராதி வரைந்து இனிய தமிழுக்கு ஏற்றம் தந்ததும், வைரமுத்துவுக்கு வசதியாய் காவி மசக்கையால் மறந்துபோனதா?!
சமஸ்கிருதத்தில் பதவி ஏற்கும் தருண் விஜய்
ஆரிய சமஸ்கிருதத்தையும், அதன் நாறிய இனவெறி சரக்குகளையும் தள்ளிவிட்டு, அன்னைத் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை செய்தவர்களையெல்லாம் விட்டுவிட்டு, “மீண்டும் சமஸ்கிருதத்தை அரியணைக்கு ஏற்ற வேண்டும்” என்று பகிரங்கமாக பேட்டியளிக்கும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன குள்ளநரி தருண் விஜய்க்கு பாராட்டாம்!
அப்படி என்ன போராடிவிட்டார், அந்த தமிழ்த் தருமி! சிதம்பர நடராசர் கோயிலில் தமிழ்பாட தீட்சிதர்களுடன் உழைக்கும் மக்களும், கம்யூனிஸ்டுகளும் சண்டைக்கு நின்று சாதித்த போது வைரமுத்து என்ன வளிமண்டலத்திலா இருந்தார்!
வாயைத் திறந்து தமிழுக்கு ஆதரவாக ஒரு வார்த்தைகூட காணோம். மண்டபத்தில் ஆர்.எஸ்.எஸ். ‘எழுதிக் கொடுத்ததை மயக்குறு வண்ணம் பேசுவதாலேயே தமிழுக்கு போராளி என்றால், இத்தனை இன அழிப்பையும் செய்துகொண்டே, தமிழ் பெயர்களை சிங்கள மயமாக்கிக்கொண்டே, இலங்கையில் தமிழ் இலக்கியத்தை பேச – கூட்டம் நடத்த குரல் கொடுத்த ராஜபக்சே கூட ஒரு போராளிதான், பாவம் பாராட்டுவிழா நடத்த வைரமுத்துவுக்குத்தான் வசதியாக நேரம் வாய்க்கவில்லை போலும்!
தமிழை வழக்காடு மொழியாக ஆக்குவது இருக்கட்டும் முதலில் தமிழகத்தில் தமிழ்தான் வழிபாட்டு மொழி என்று அறிக்கை விடவும் அதை தருண் விஜய்யின் தமிழக பா.ஜ.க. கூட்டாளிகள் வழிமொழியவும் யோக்கியதை உண்டா?
தமிழுக்காகத்தான் இத்தனையும் என்று நம்மிடம் போக்கு காட்டும் வைரமுத்துவிற்கே உரைக்கும் படி தருண் விஜய் தனது நோக்கத்தை தெரிவிக்கிறார் இப்படி “தமிழ்த் தாய்க்கான பணியை இந்தியத் தாய்க்கான பணியாகப் பார்க்கிறேன்.” அப்படிப்போடு! தமிழ்த்தாயை இந்தியத் தாயாக்க, சமஸ்கிருதத் தாயாக்க, ஆரியப் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ், கமண்டலத்தில் அடைக்கத்தான் இத்தனை அகத்திய வேலையும்.
“இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பெரு மறைப்பையும்…, உண்டு பண்ணுகிற ஆரிய பாஷையில் எனக்கு ஆசை வொட்டாது, சாகாக் கல்வியை லேசில் அறிவிக்கும்… தென் மொழியிடத்தே மனம் பற்றச்செய்த…” என்று தமிழை வெறும் மொழியாக மட்டும் பார்க்காமல் அதை ஆரிய வர்ணாஸ்ரம சமஸ்கிருத எதிர்ப்பின் வரமாகப் பார்த்த வள்ளலார், பார்ப்பனியத்துடன் முரண்பட்டு ஏற்படுத்திய அமைப்புக்குப் பெயர் சமரச சன்மார்க்க சபை! வர்ணாஸ்ரம வெறிக்கு தமிழனை கிடாவாக வெட்டி, தமிழை பொங்கலாக வைக்கும் சுத்த சமரச சரணாகதிக்குப் பெயர் ‘வெற்றித் தமிழ் பேரவை!’ தமிழை வெறும் சொல்லிலிருந்து மட்டும் பார்த்தால் நாம் எப்படி ஏமாந்துவிடுவோம், என்பதற்கு இதுவும் ஒரு சான்றுதான்!
நாம் சொல்வது என்ன? கவிப்பேரரசு காதில் ரீங்காரமிடும் தமிழ் கொசு தருண் விஜயே கூறுகிறார். “அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் விழாவை தமிழக கிராமத்தில் கொண்டாட உள்ளேன்.” (தினமணி, 11.11.2014). போச்சுடா! இனி வை.கோ., ராமதாசு வகையறாக்களுக்கு தமிழின சவடால் அடிக்க ஒரு பருக்கையும் மிஞ்சாது போல!
வரலாற்றில் ஆரியப் பார்ப்பனியம், அருந்தமிழ் நூல்களை பகையாடி தீயில் எரித்தது, உறவாடி ஆடிப்பெருக்கு நீரிலும் அழித்தது. எஞ்சியிருக்கும் தமிழ் உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத மறுப்பு போன்ற அடிப்படைகளையும் அழித்தொழிக்க இப்போது ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனக் கும்பல் தமது வரலாற்றுப் பகையான தமிழை அழித்தொழிக்க, தமிழுக்கு குரல் கொடுப்பதாய் வேலைகாட்டி, தமிழ், தமிழின உணர்வை உட்கவர்ந்து ஒழிக்கும் திட்டத்தோடு உறவாடிக் கெடுக்க முனைந்துள்ளது.
ஒரு ‘நல்லி’ எலும்பு கிடைத்தால் கூட வாய்ப்பை பயன்படுத்த நாயாய் அலையும் பா.ஜ.க காவிப்படை, தமிழகத்தின் ‘தலைசிறந்த எழுத்தாளர்’ நல்லி குப்புசாமி செட்டியின் எட்டு நூல் வெளியீட்டு விழாவையும் விட்டு வைக்காமல், உள்ளே நுழைந்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பாராட்டியுள்ளது. செட்டிக்கும் பா.ஜ.க. பட்டாய் விளையும் என்ற கணக்கில் மகிழ்ச்சி! செட்டிக்கு ஒரு சால்வை செலவு, தருண் விஜய்க்கு ஒரு ‘தமிழ் கிளிப்பிங்ஸ்’ வரவு! ரஜினி வீட்டில் ‘டீ’, கமலுக்கு ‘குப்பை’, வைரமுத்துவுக்கு ‘தமிழ்’ என்று எது கிடைத்தாலும், அதில் செல்வாக்கை தமிழகத்தில் ஏற்படுத்த படாதபாடு படுகிறது பா.ஜ.க.
கார்ப்பரேட்டை திணித்து, கசம்பிடித்த ஆரியத்தை திணிக்கும் கும்பலின் ஒரு விஷஜந்து, திருக்குறளைப் பற்றி பேசுவதற்கு பெரிய ஆதரவாம்!
தமிழகத்தில் ஆடு, மாடுகளே அம்மா… அம்மே! என அழகு தமிழில் பேச கற்றுக் கொண்ட பிறகும், இன்னும் “அவா… பார்தம்…” என்று தம் கட்டும் சு.சாமி, இல.கணேசன் வாய்களை வைத்துக்கொண்டு இவர்கள் தமிழுக்கு குரல் கொடுக்கப் போகிறார்களாம்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சாதி வெறியை ஏற்காத திருக்குறளையும், “சதுர்வர்ணம் நமா சிருஷ்டம்” என்று சாதிவெறியை கக்கும் பகவத்கீதையும் சமமாக மதிப்பார்களாம்! இதுதான் பாரதப் பண்பாடாம்! இந்தக் கயமையை ஏற்க முடியுமா? தீண்டாமையையும் ஏற்போம்! திருக்குறளையும் ஏற்போம் என்பது எவ்வளவு அயோக்கியத்தனம்.
இதை அம்பலப்படுத்தி போராடத் துப்பின்றி, வடக்க உள்ளவனையே மடக்கிட்டோம் பாத்தியா என்ற மப்பு வேறு! உ.பி.யிலும், அரியானாவிலும், குஜராத்திலும் தாழ்த்தப்பட்டவர்களையும், இசுலாமியர்களையும் போட்டுத் தள்ளி விட்டு தமிழ் வாழ்க! என்று குரல் கொடுத்துவிட்டால் மட்டும் பாராட்டலாம் என்பதை விட பச்சை அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியுமா?
கம்பி வளைத்து, கரணை பிடித்து, சாரம்கட்டி வண்ணம் பூசும் வட மாநில தொழிலாளிகளின் வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து வரும் தமிழை, தெருக்குரலை ஆதரிக்கத் துப்பில்லை! கார்ப்பரேட்டை திணித்து, கசம்பிடித்த ஆரியத்தை திணிக்கும் கும்பலின் ஒரு விஷஜந்து, திருக்குறளைப் பற்றி பேசுவதற்கு பெரிய ஆதரவாம்!
வைரமுத்து மட்டுமல்ல பார்ப்பன மேலாதிக்கத்தை ஏற்க மறுக்கும் மனங்களை தமிழாலேயே என்கவுண்டர் செய்ய ஏராளமான இலக்கிய அமித்ஷாக்கள் களத்தில் நிற்கிறார்கள்! ஜோ.டி.குரூஸ், ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன், பத்ரி இப்படி பலவிதமான ஷாக்கள் இலக்கியம், ஊடகம், நாடகம், சினிமா, தமிழ் என விதவிதமாக போட்டுத்தள்ள புறப்பட்டுவிட்டார்கள்! எச்சரிக்கை தமிழகமே, நம் எதிரில் தமிழ் படமெடுத்தாடும் காவிப் பாம்புகள்!
ஆய்வாளர் எம்.எஸ்.எஸ் பாண்டியன் டில்லியில் நவம்பர் 10 அன்று மாலை மறைந்து விட்டார். 1993 இல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம் பற்றிய கட்டுரை ஒன்றை எகனாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லியில் அவர் எழுதியிருந்தார். ம.க.இ.க வின் அந்தப் போராட்டத்தைப் பற்றி மட்டுமின்றி, அதன் அரசியல் பின்புலத்தையும் விளக்கிச் சென்றது அக்கட்டுரை. அந்தக் கட்டுரையின் வழியாகத்தான் எம்.எஸ்.எஸ் பாண்டியன் எங்களுக்கு அறிமுகமானார்.
1990 களின் துவக்கத்தில் நாங்கள் முன்வைத்த பார்ப்பன பாசிசம் என்ற கருத்தாக்கத்தையும், அதனை கருத்தியல் ரீதியாக முறியடிப்பதற்கு இந்து மதத்தின் ஆன்மாவான பார்ப்பனியத்தை தாக்க வேண்டும் என்பதையும் மார்க்சிய லெனினிய அமைப்புகளே ஏற்றுக்கொள்ளத் தயங்கிய அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. (இப்போதும் நிலைமை பெரிதும் மாறிவிடவில்லை). தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு மரபு குறித்து கிட்டத்தட்ட எதுவுமே தெரியாத, அதே நேரத்தில் “மைய நீரோட்டத்தில் சேர மறுக்கும்” தமிழகம் குறித்து ஒருவித வெறுப்பும் கசப்புணர்ச்சியும் கொண்டிருந்த “வட இந்திய மனோபாவத்தை” அசைப்பதற்கும், வட இந்திய அறிவுத்துறையினருக்கு திராவிட இயக்கம் குறித்த புரிதலை ஏற்படுத்துவதற்கும் அவரது ஆங்கிலக் கட்டுரைகள் பெரிதும் உதவின.
90 களில் மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் இல் அவர் பணியாற்றிய காலத்தில் அவரை சந்திக்கவும் பேசவும் வாய்ப்பிருந்தது. ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவான கருத்தைக் கொண்டிருந்தபோதும், புலிகள் இயக்கத்தையும் பார்ப்பனிய எதிர்ப்பு உள்ளடக்கமற்ற தமிழினவாத அரசியலையும் அவர் விமரிசினக் கண்ணோட்டத்துடனேயே அணுகினார்.
இந்திய அறிவுத்துறையில் ஒருவர் பார்ப்பனிய எதிர்ப்பு சிந்தனையாளராக இருப்பதும், இறுதிவரை அந்நிலைப்பாட்டில் நீடித்து நிற்பதும் அரிது. அத்தகைய ஒருவர் சிந்தனையாளராக அங்கீகரிக்கப்படுவதோ அரிதினும் அரிது. பாண்டியன் அதில் வெற்றி பெற்றிருந்தார். எம்ஜியாரையும், ஜெயலலிதாவையும் திராவிட இயக்கம் என்று அங்கீகரிக்கும் பார்ப்பனியர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்வதற்கும், இடைநிலைச் சாதிகளின் பார்ப்பன எதிர்ப்பு நீர்த்துப்போய் அவர்கள் நிறுவனமயமாவதைப் புரிந்து கொள்வதற்கும் அவரது எழுத்துக்கள் பயன்படும். குறிப்பாக, 19 ஆம் நூற்றாண்டில் நாடார் சாதியினர் தீண்டத்தகாதோராக நடத்தப்பட்டதையும், அவர்களது முன்னேற்றத்தில் கிறித்தவ மிசனரிகளின் பாத்திரத்தையும் பற்றிய வரலாற்றை, என்.சி.இ.ஆர்.டி யின் 9 ஆம் வகுப்பு பாடநூலிலிருந்து நீக்க வேண்டுமென்று நாடார் சங்கங்களும் ஓட்டுக்கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுத்த போது, இந்தக் குரலின் பார்ப்பன அடிவருடித் தன்மையை அவர் கூர்மையாக அம்பலப்படுத்தினார்.
1996 இல் அனைத்திந்திய புரட்சிகர பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு சென்னையில் நடைபெற்றபோது, அதன் கருத்தரங்கில் அவர் ஒரு பேச்சாளர். அன்று உடல்நலக் குறைவால் அவரால் உரையாற்ற இயலாத போதிலும், வராமலிருப்பது சரியல்ல என்று கருதி நிகழ்ச்சியில் வந்து அவர் கலந்து கொண்டதும், நக்சல்பாரி அமைப்பினர் மீது அவர் காட்டிய மதிப்பும் மறக்கமுடியாதவை. பார்ப்பன பாசிசத்தின் வெற்றிமுகம் குறித்தும், ஜனநாயக இயக்கங்களின் பின்னடைவு குறித்தும் அந்நாட்களில் அவர் வெளிப்படுத்திய வருத்தமும் மறக்கமுடியாதது. அறிவுத்துறையினரிடம் நிலவும் அகம்பாவம் சிறிதுமற்ற அவரது இயல்பான உரையாடும் முறையையும், இதமான நட்புணர்வையும் நினைக்கையில் அவரது மறைவு தோற்றுவிக்கும் துயரம் அதிகரிக்கிறது.
கம்யூனிச அகிலத்தின் 150-ம் ஆண்டில் சாதி, மதம், இனம், மொழி கடந்த பாட்டாளி வர்க்க சர்வதேசிய ஒற்றுமையை கட்டியமைப்போம்!
மாற்று அதிகார மன்றங்களைக் கட்டியமைப்போம்!
மேற்கண்ட முழக்கங்களின் கீழ் அஞ்செட்டி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி அத்திமரத்தூர் கிளையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. தோழர்களும் புதிய ஜனநாயகக் கட்டிடத் தொழிலாளர் சங்க தோழர்களும் உள்ளூர் மக்களும் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது. நாட்றாபாளையம் பேருந்து நிலையத்தில் விண்ணதிரும் முழக்கங்களும் எளிய கிராம விவசாயிகள், தொழிலாளர்கள் நடத்திய பேரணி அங்கிருக்கும் மக்களுக்கு புதிய நம்பிக்கையூட்டும் வண்ணம் அமைந்தது.
இதனைத் தொடர்ந்து விவசாயிகள் விடுதலை முன்னணியின் அஞ்செட்டி ஒன்றிய அமைப்பாளர் தோழர்.சரவணன் கொடியேற்றினார். தோழர்கள் செவ்வணக்கம் செலுத்திய பின்னர், கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர் முனியப்பன் ரசியப் புரட்சியின் முக்கியத்துவத்தையும் இதனைக் கொண்டாட வேண்டிய அவசியத்தையும் மக்களுக்கு உணர்த்தி உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளைவிட நவம்பர் புரட்சி தான் உழைக்கும் மக்கள் கொண்டாட வேண்டிய விழா என்பதை விளக்கி ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர்.ராமு உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து கம்யூனிச அகிலம் என்பதை மக்களுக்கு அறிமுகப்படுத்தி பேசினார் ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர் சுரேசு. முதலாம் கம்யூனிச அகிலத்தின் 150 ஆண்டை ஒட்டிய அவரது உரையில் சர்வதேச அளவில் மூன்று அகிலங்கள் இருந்ததையும் அவை ஒவ்வொன்றின் சாதனைகளையும் மக்களுக்கு விளக்கினார்.
இந்தியா போன்ற காலனி நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதற்கும் உழைக்கும் மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு உத்வேகமூட்டுவதற்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை வீறுகொண்டெழச் செய்வதற்கும் ஜெர்மனியின் பாசிசத்தை வீழ்த்துவதற்கும் தோழர்கள் லெனின், டிமிட்ரோவ் தலைமையில் கம்யூனிச அகிலம் செய்த பணிகளையும் தோழர் ஸ்டாலினின் மகத்தான பங்களிப்பையும் விளக்கினார். இந்த வெற்றிக்கும் நவம்பர் புரட்சி தான் உத்வேகம் மூட்டியது என்பதையும் தோழர் விளக்கி பேசினார்.
தற்போது நமது நாட்டில் நடந்து வரும் மாற்றங்கள் மூலம் இந்த சமூக அமைப்பு உழைக்கும் மக்கள் வாழத்தகுதியற்றதாக மாறிவிட்டதையும், பெங்களூரில் தெருநாய்களிடம் கடிப்பட்டு சாகும் ஏழைகளின் குழந்தைகளை இந்த சமூகம் காப்பாற்ற முடியாமல் போனதிலிருந்தும், சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவது தினம் தினம் நடக்கும் நிகழ்வுகளாக மாற்றப்பட்டுள்ளதையும் விளக்கினார்.
முகலிவாக்கம் கட்டிட விபத்தும் ஒசூரில் சென்னை சில்க்ஸ் அடுக்குமாடி கட்டிடத்தை நவீன முறையில் ஓரிரு மாதங்களில் கட்டியதையும் குறிப்பட்டு, நாதியற்ற ஏழை கூலி விவசாயிகளுக்கு அடைக்கலமாக இருந்த கட்டிடத் தொழிலும் இனி நமக்கு கிடைக்காது என்பதை மக்களுக்கு உணர்த்தினார்.
தற்போதைய மோடி அரசு நேரடியாக பார்ப்பன பாசிசத்தைக் கொண்டுவந்துள்ளதை விளக்கினார். இந்துத்துவாவை எதிர்ப்பதாக கூறும் சி.பி.ஐ.யின் தளி எம். எல். ஏ. ஒரு தரகு முதலாளி என்பதை உழைக்கும் மக்களின் சொந்த அனுபவத்திலிருந்து விளக்கினார். ஓட்டுக் கட்சிகள் எல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகளாக மாறிவிட்டதை உணர்த்தினார். அதனால், இவர்கள் பாசிசத்தின் கோடாரிக் காம்புகள் என்பதையும் உணர்த்தினார். பார்ப்பன பாசிஸ்ட் மோடி உழைக்கும் மக்கள் மீது திணித்துவரும் எண்ணற்ற அடக்குமுறைகள் சாதாரண ஏழைகள் வாழத் தகுதியற்ற நாடாக நமது நாடு மாறிவிட்டதை சுட்டுக்காட்டினார்.
தொகுப்பாக பார்க்கும் போது, கிராமங்கள் தோறும் உண்மையான ஜனநாயகத்திற்கான மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டி எழுப்புவதுதான் இன்று நம்முன் உள்ள கடமை என்பதை உணர்த்திப் பேசினார்.
இறுதியாக, புதிய ஜனநாயகக் கட்டிடத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தோழர்.தீபன் நவம்பர் புரட்சிவிழா நடத்துவதாக உள்ளூர் மக்களிடம் தெரிவித்த போது பலரும் நிதி உதவி, இனிப்புகள் வழங்கி உதவினர் என்பதை நினைவு கூர்ந்து, வி.வி.மு.வின் நேர்மைக்கு கிடைத்த பரிசாக கருதுவதாக கூறி நன்றியுரையாற்றினார்.
மிகவும் பின்தங்கிய கிராமமான நாட்றாபாளையத்தின் உழைக்கும் மக்கள், வி.வி.மு. தோழர்கள் நடத்திய ஊர்வலம், தெருமுனைக் கூட்டம் புதிய நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்ததாக தெரிவித்தனர். சூழ்ந்து இறுதிவரை ஆதரவு தந்த மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை தோழர்கள் பகிர்ந்து கொண்டனர்.
தகவல் விவசாயிகள் விடுதலை முன்னணி, அஞ்செட்டி
11. சென்னை – ஆவடி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத்தின் ஆவடி- அம்பத்தூர் பகுதி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக்குழு தோழர்கள் இணைந்து சென்னை பட்டாபிராம் பகுதியில் ” நவம்பர் புரட்சி நாளை நெஞ்சிலேந்துவோம்! புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்! ” என்கிற தலைப்பில் நவம்பர் புரட்சி நாள் விழா நடத்தப்பட்டது.
7.11.2014 அன்று மாலை 6 மணியளவில் துவங்கிய இவ்விழாவில் இப்பகுதிகளுக்குட்பட்ட பு.ஜ.தொ.மு கிளை மற்றும் இணைப்பு சங்கத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் சுமார் 400 பேர் வரை கலந்துக் கொண்டனர். தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் துவங்கிய விழாவுக்கு திருவள்ளூர் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் மு.முகிலன் தலைமை தாங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட தோழர் இராஜேந்திரன் “போலீஸ் இல்ல; பொறுக்கி” என்கிற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார். போலீசின் உண்மை முகத்தை ஜனரஞ்சகமான முறையில் திரைகிழித்து, அனைவரும் போலீசை எள்ளி நகையாடும்படி செய்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
திரு.வெள்ளையன்
கோக் – பெப்சியை அமெரிக்க மூத்திரம் என்றும் பிரச்சாரம் செய்து மக்களை திரட்டியவை நமது அமைப்புகள் என்றும், தொழிலாளர்களை மட்டுமல்லாமல் அனைத்து உழைக்கும் மக்களை பாதிக்கக் கூடிய எல்லா பிரச்சனைகளிலும் தலையிட்டு போராடுகின்ற பாரம்பரியம் கொண்டவை என்றும் நமது போராட்டங்களை நினைவு கூர்ந்தார். இத்தகைய புரட்சிகர அமைப்புகள் நடத்துகின்ற “நவம்பர் புரட்சி நாள்” விழாவில் கலந்துக் கொண்டதில் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.
மார்க்சிய – பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தோழர் தமிழேந்தி அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
திரு.தமிழேந்தி
தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களோடு கலந்து கொண்டுள்ள இவ்விழாவில் அவரை வாழ்த்துரை வழங்க அழைத்தமைக்கு நன்றி தெரிவித்து, தொழிலாளர்களின் உரிமைப் பறிப்புகளுக்கெதிரான போராட்டத்தில் உங்களோடு இணைந்து போராட தயாராக உள்ளேன் என்றும், தூய்மை இந்தியா என்ற பெயரில் கையில் துடைப்பத்தை எடுத்துள்ள இந்து மதவெறி பயங்கரவாதி மோடியை விரட்டியடிக்க தொழிலாளர்களின் குடும்பத்தினர் துடைப்பத்தை கையிலெடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலப் பொருளாளர் தோழர்.பா. விஜயகுமார் அவர்கள், பிற்போக்கும், மானக்கேடும் மிகுந்த பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டுகின்ற தீபாவளியை அம்பலப்படுத்தியதோடு ரசியப் புரட்சியை உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்கள் ஏன் கொண்டாட வேண்டும் என்பதனையும் எடுத்துரைத்தார்.
தோழர் பா.விஜயகுமார் (சிறப்புரை)
ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சரியான வழிகாட்டுதலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சோசலிச அரசின் சாதனைகளை எடுத்துச் சொன்னார். நாட்டுப்பற்று, மனித சமூகத்தை நேசித்தல், சுரண்டல்-அடக்குமுறைகளுக்கெதிரான போராட்டத்தில் அர்ப்பணிப்பு ஆகியவற்றை கம்யூனிசம் போதித்தது. முதலாளித்துவமோ சுரண்டல், சுயநலம், நுகர்பொருள் மோகம், போதை-பொறுக்கித்தனங்களையே போதித்து வருகிறது என சாடினார். லாபவெறி பிடித்து அலைகின்ற முதலாளித்துவத்துக்கு இந்து மதவெறி பாசிஸ்டுகள் பாதசேவை செய்கின்ற அதே தருணத்தில், மதவெறியூட்டுவதன் மூலம் உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தி வருவதையும் சுட்டிக்காட்டினார். மறுகாலனியாக்கம், இந்து மதவெறி பாசிசம் ஆகிய இரண்டையும் முறியடிக்கும் வகையில் தொழிலாளி வர்க்கம் தனது இரு கரங்களிலும் போர் வாளை ஏந்திப் போராட வேண்டியுள்ளது என்கிற வரலாற்றுக் கடமையை நினைவூட்டியதுடன், தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் அணித்திரளுமாறு அறைகூவல் விடுத்தார்.
நிகழ்ச்சிக்கு இடையிலும், இறுதியிலும் குழந்தைகள் பங்கேற்ற ஓவியப் போட்டி, பாடல்கள், மாறுவேடப் போட்டி, கவிதை வாசிப்பு, உரைவீச்சு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கிளை சங்கத் தொழிலாளி ஒருவரது மனைவி தோழர் சாந்தி ”மாற்றம் தேவை” என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.
வீரமங்கை வேலு நாச்சியார் வேடமணிந்த 7 வயதான பூவரசி, சார்லி சாப்ளின் வேடமணிந்த 7 வயதான பிரபஞ்சன், ” நாடு முன்னேற்றமுன்னு மோடி முழங்குறாரு ”என்று மோடியின் முகத்தில் காறி உமிழ்ந்த 3 வயதான செயலினி போன்ற எண்ணற்ற குழந்தைகள் தங்களது திறமைகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தினர். இளம்தொழிலாளர்கள் பங்கேற்ற புரட்சிகர கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. போட்டிகளில் கலந்துக் கொண்ட குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பார்வையாளராக இருந்த குழந்தைகளுக்கும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
போட்டிகளில் பங்கேற்ற சிறுவர் – சிறுமியர்
பு.ஜ.தொ.மு-வின் மூத்த தோழர்.எழில்மாறன், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர்.ஜெயராமன், காஞ்சி மாவட்ட தலைவர் தோழர் நாச்சியப்பன் ஆகியோர் மேற்படி பரிசுகளை வழங்கினர். விழாவின் இறுதியாக காஞ்சிபுரம் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் ஆனந்தன் நன்றியுரையாற்றினார். பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. கலந்துக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் உணவருந்தி சென்றனர்.
பரிசளிப்பு
நவம்பர் புரட்சி தினத்தை தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினர் மத்தியிலும் ஒரு நம்பிக்கையூட்டும் தினமாக மாற்றுவதற்கு இந்த விழா உதவிபுரிந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டங்கள்
12. திருச்சி
நவம்பர்-7 ரசிய புரட்சி நாள் வெல்க! புரட்சிக்கு ஏங்குது நாடு இதுதான் தருணம் போராடு!
மனித நேயம், சேவை, உதவி, அன்பு, பாசம், உழைப்பு, அரசியல், பொருளாதாரம் என அனைத்தும், இன்று லாப நோக்கத்தோடும், வெறியோடும் பிரித்து மேயப்பட்டு வருகிறது. நாட்டின் வளங்கள்,காடு,மலை,கடல்,உயிரினம் முதல் பிணங்கள் வரை இன்று காசு பொறுக்கும் பண்டமாகவே பார்க்கப்படுகிறது. மக்களை பாதுகாக்க, சேவை செய்யவே பிறப்பெடுத்துள்ளதாக கூறிக்கொண்டுள்ள அரசும், அரசியல் கட்சிகளும் சுரண்டிய சுரண்டலில் 2G, நிலக்கரி,கிரானைட் துவங்கி பச்சிளம் குழந்தைகளின் உயிரின் ஆதாரமான ஆவின் பால் வரை கைவைத்துவிட்டனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனைக்குள்ளான ஜெயலலிதா இன்னமும் நாட்டின் நிர்வாகத்தை நடத்துகிறார். IAS அதிகாரிகள் ஜெயாவுடன் ஆலோசனை நடத்தி ஒப்புதல் பெற்ற பிறகே டம்மி பீசான பன்னீர் செல்வத்திடம் ஒப்புக்கு கையெழுத்து பெற கோப்புகளை அனுப்புகின்றனர். ஊழலிலும், கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஊறிபோயுள்ள இந்த நபர்களே இன்று நாட்டின் அரசியல், பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றனர். மோடி,லேடி, உள்ளிட்ட எல்லா கேடிகளும் தனியார்மய, தாராளமய கொள்கைகளுக்காக நாட்டை திறந்துவிட்டு வருகின்றனர்.
அரசியல்,பொருளாதாரம்,கல்வி,இலக்கியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் இவர்கள் முதலாளித்துவ சுரண்டலுக்கான கொள்கையை திணித்தும் சமூகத்தை சீரழித்தும் வருகின்றனர். இந்த பிணந்தின்னி கழுகுகள் கூட்டத்தை எதிர்கொள்வது எப்படி? மனிதனின் அடிப்படை உரிமைகள் பறிபோவதை தடுக்க முடியுமா? பண்டிகைகள், பிரார்த்னை, பரிகாரம் மூலம் இதனை சரி செய்ய முடியுமா? மூடத்தனங்கள் உலகை விடுவித்ததாக வரலாறு இல்லை, விஞ்ஞான பூர்வமான செயல்பாடுகளே விடிவைத் தரும்.
1917 நவம்பர் புரட்சி உணர்த்தும் பாடம் இதுதான், ரசிய மண்ணில் ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சிக் கெதிராகப் போராடிய புரட்சியாளர்களின் பின்னே துவக்கத்தில் மக்கள் செல்லவில்லை. மன்னனை நம்பினார்கள், புகழ்ந்தார்கள், மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டப் பிறகுதான் ஜாரின் கோர முகத்தை சோவியத் மக்கள் கண்டு கொண்டனர். இத்தகைய கொடுங்கோன்மையை முன்னமே உணர்ந்து அமைப்பாக திரட்டப்பட்டிருந்த புரட்சியாளர்கள் ஜாருக்கு எதிராக போராடி அதிகாரத்தை மீட்டெடுத்தனர்.
இப்படிப்பட்ட நவம்பர் புரட்சிக்கு இது 97ம் ஆண்டு, நமது நாட்டை ஆக்கிரமித்துள்ள நச்சு கிருமிகளான முதலாளித்துவ சுரண்டலையும், பழமைவாத நில உடைமை சிந்தாந்தத்தையும், ஆரிய பார்ப்பன சூழ்ச்சிகளையும், சாதிய கொடுமைகளையும் வீறுகொண்டு வீழ்த்தவும், முறியடிக்கவும், அறைகூவி அழைக்கிறது நவம்பர் புரட்சி.
புதிய வரலாற்றை படைப்போம்! – அதனை இப்புவி முழுவதும் பரப்புவோம் வாரீர்!!
என பிரசுரமாக அச்சிடப்பட்டு உழைக்கும் மக்களிடம் நவம்பர் புரட்சி நாளின் அவசியத்தை வழியுறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது.
BHEL
திருச்சி துவாகுடியை அடுத்துள்ள BHEL தொழிற்சாலை முன்பு உள்ள டிரைனிங் செண்டர் அருகில் காலை 7 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனை சேர்ந்த தோழர் திருஞானம் அவர்கள் தலைமை வகிக்க தோழர்.நாராயணசாமி அவர்கள் கொடியேற்றினார். பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் மாநில செயலாளர் தோழர்.சுந்தர்ராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தோழர்.பொன்னுசாமி நன்றியுரையாற்றினார்.
குட்செட்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின்-தலைமையில் இயங்கும் சுமைப்பணித்தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம் சார்பாக குட்செட் பகுதியில் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து நவம்பர்-7 தினத்தை ஒட்டி காலை 7.30 மணி அளவில் கொடியேற்றி, பட்டாசுவெடித்து, இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.
சு.தொ.பா.ச வின் தோழர்.குத்புதீன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமைப்பணித்தொழிலாளர் பாதுகாப்புச் சங்கத்தின் சிறப்பு தலைவரும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உறுப்பினருமான தோழர்.ராஜா கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட தலைவர் தோழர்.காவிரி நாடன் வாழ்த்துரை வழங்கினார். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைகுழு தோழர்கள் புரட்சிகர பாடல்கள் பாடி சிறப்பித்தனர். இறுதியில் சு.தொ.பா.ச வின் தோழர்.முத்துகருப்பன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தில்லைநகர், காந்திபுரம்
இதைதொடர்ந்து காலை 10 மணியளவில் திருச்சி தில்லைநகர் காந்திபுரம் பகுதியில் ம.க.இ.க மாவட்ட செயலாளர் தோழர்.சரவணன் தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ம.க.இ.க.மையக் கலைக்குழு தோழர்.சத்யா அவர்கள் கொடியேற்றி நவம்பர்-7 நாம் ஏன் கொண்டாட வேண்டும் என அதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
அடுத்ததாக பேசிய கலைக்குழு தோழர் கோவன் மோடி அரசின் தனியார்மய தாராளமய கொள்கைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் இந்து மதவெறி பாசிசத்தை பற்றியும் சீரழிவு கலாச்சாரத்தை பற்றியும் விளக்கி பேசினார். கலைக்குழுவினர் புரட்சிகர பாடல்கள் பாடி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இறுதியில் பு.மா.இ.மு.மாநகர பொருளாளர் தோழர்.ஓவியா நன்றியுரையாற்றி இந்நிகழ்ச்சியை நிறைவு செய்தார். வெடி வெடித்து,இனிப்புகள் வழங்கி பகுதி மக்களுடன் நவம்பர்-7 தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம்.
அன்றைய தினத்தில் திருச்சி மாநகர் முழுவதும் பாலியல் சீரழிவு கலாச்சாரத்திற்க்கு எதிராக வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் இக்கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி கைதட்டி உற்சாகமூட்டி அனுப்பி வைத்தோம்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
உறையூர் கைத்தறி மண்டபம்
அன்று மாலை உறையூர் கைத்தரி மண்டபத்தில் நவம்பர் புரட்சி விழா சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தினை ம.க.இ.க.மாவட்ட செயலாளர் தோழர்.சரவணன் தலைமையேற்றி நடத்தி வைத்தார்.
ம.க.இ.க.மாவட்ட செயலாளர் தோழர்.சரவணன்
பெண்கள் விடுதலை முன்னணியின் திருச்சி மாவட்ட தலைவர் தோழர் நிர்மலா பேசும்போது:
நாடு முன்னேறாமல் இருக்க காரணம் மக்கள் தொகை பெருக்கம் என மக்கள் மீது பழியை போடுகிறது நமது அரசு. ஆனால் தோழர் லெனின் குழந்தைகளை நாட்டின் செல்வம் என வர்னிக்கிறார். ஒவ்வொரு குழந்தையும் மண்ணில் பிறக்கும் போது வெறும் வயிறும்,வாயுடன் பிறப்பதில்லை இரண்டு கைகளோடும் கால்களோடும்தான் பிறக்கிறது. சமூக உற்பத்தியில் பெரும் பங்காற்றுகிறார்கள். இன்று கல்வி என்பதே பெண்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. ஆனால் சோவியத்தில் அடிப்படைக் கல்வி முதல் ஆராய்சி கல்வி வரை இலவசமாக தாய் மொழியில் கொடுத்தது மட்டுமல்ல விண்வெளிக்கு முதன் முதலாக பெண்ணை அனுப்பியது. சோசலிச புரட்சியே இதற்கு காரணம். ஆனால் இங்கே ஓட்டு போடும் உரிமை கூட இங்கே பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டிருந்தது. அனைத்து பொறுப்புகளும் மதிப்பிழந்தே உள்ளது. ஆனால் சோவியத்தில், சாதாரண பால் கறந்து விற்பனை செய்யும் சாதாரண பெண்ணை பாராளுமன்றத்திற்க்கு அனுப்பி மதிப்பளித்தது என இன்றைய நிலைமையையும் சோவியத் யூனியனில் நிலவிய நிலைமையையும் ஒப்பிட்டு பேசினார்.
பெண்கள் விடுதலை முன்னணியின் திருச்சி மாவட்ட தலைவர் தோழர் நிர்மலா
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநகர பொருளாளர் தோழர்.ஓவியா பேசும் போது:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநகர பொருளாளர் தோழர்.ஓவியா
இளைஞர்கள் ஊதாரியாக சுற்றுவதும் வருத்தப்படாத வாலிபர் சங்கமாக பொறுப்பற்று திரிவதுதான் பெருமையா?
உண்மையான மகிழ்ச்சி என்பது நம்முடைய அனைத்து உரிமைகளும் பறிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து போராடுவது நம்முடைய கடமை என ஏன் உணர்வதில்லை. நவம்பர் 7 கமல் பிறந்த நாளை கொண்டாடுவது மகிழ்ச்சி என இளைஞர்கள் கருதுகின்றனர் ஆனால் சமூக விடுதலைக்காக மாணவர்களும்,இளைஞர்களும் அரசின் அடாவடித்தனத்தை எதிர்த்து போராடுவதை இப்போது செய்யாமல் வேறு எப்போது செய்வது என அறைகூவல் விடுத்தார்.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட தலைவர் தோழர்.காவிரி நாடான் பேசும் போது:
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட தலைவர் தோழர்.காவிரி நாடான்
மறுகாலனியாக்கத்தை விரைவாக அமுல்படுத்தும் நோக்கில் நாட்டின் போடி, லேடி, கேடிகள் ஆட்சி செயல்படுகின்றன. கல்வி,மருத்துவம்,ஆலைகள்,சாலைகள் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. சேவைதுறைகள் ஒழித்து கட்டப்படுகின்றன. தொழிலாளர்கள் சட்டங்கள் திருடப்பட்டு முதலாளிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது.
மின்சாரம்,தண்ணீர்,பால் என அத்தியாவசிய பொருட்களை கடுமையாக விலையேற்றப்படுகின்றன. காரணம் கேட்டால் நட்டத்தில் இயங்குகின்றன என பொய்யை பரப்புகின்றனர். “மின்வாரியம் நட்டம் என்பது மோசடி அதனை தனியார்மயமாக்கவே இந்த வழிமுறைகள் எங்களுக்கு வேறு வழியில்லை” என மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையமே எமது தோழர்களிடம் சரணடைந்து ஒத்துக் கொண்டது உலகறிந்த விசயம். இப்படிப்பட்ட முதலாளித்துவ தாசர்களின் ஆட்சியை எதிர்த்து பல்வேறு மக்களும் போராடி வருகின்றனர். கூடங்குளம் மக்கள் கல்விக்கான போராட்டம்,மீனவர்கள் போராட்டம்,கலாச்சார சீரழிவுக்கு எதிரான போராட்டம் என நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இனி தனித் தனி போராட்டங்கள் தீர்வை தராது. ஒட்டுமொத்த மக்களும் சேர்ந்து போராடும் போதே நிரந்தரமான தீர்வு கிடைக்கும். மாமேதை லெனின் பாதையில் ரசிய புரட்சியை போல நமது மண்ணிலும் மக்களை திரட்டி போராடுவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என பாரதிதாசன் கவிதையோடு தனது உரையை முடித்தார்.
பிறகு அன்று மாலை நடைபெற்ற பேச்சுபோட்டி, பாடல் போட்டி, கவிதைப் போட்டி, மாறுவேடப்போட்டி என கலந்து கொண்டு வெற்றியடந்தவர்களுக்கு இவ்விழா மேடையில் பரிசுகள் கொடுக்கப்பட்டது.
சிறுவர் கலை நிகழ்ச்சி, பரிசளிப்பு, பார்வையாளர்கள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
சிறுவர்கள் கலை நிழச்சிகள், பெரியவர் கலைநிகழ்ச்சி மற்றும் ம.க.இ.க மையக்கலைக்குழுவினரின் புரட்சிகர பாடல்கள் அரங்கத்தில் வந்திருந்தவர்களை உற்சாகமூட்டினர்.
ம.க.இ.க மையக்கலைக்குழுவினரின் புரட்சிகர பாடல்கள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
இடையில் இனிப்பு, காரம், தேநீர் என கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.
செய்தி: மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி திருச்சி கிளை
சென்னை, நெல்லையைத் தொடர்ந்து ஈரோட்டிலும் அம்பலப்பட்டது மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் ‘கருத்துக் கேட்புக் கூட்டம்’ எனும் நாடகம்!
“மொத்தத்தில், மின்சார ஒழுங்கு முறை ஆணைய கருத்துக் கேட்புக் கூட்டம் நம் அமைப்புகளின் பிரச்சாரக் கூட்டமாக மாறியிருந்தது. இனி வரும் கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்கு ஆணையம் பிரச்சாரம் செய்யவில்லையென்றாலும் நாம் பிரச்சாரம் செய்யலாமென தீர்மானித்துள்ளோம். மண்டப வாடகை, மைக்செட் செலவில்லாமல் பிரச்சாரம் செய்யவும் அதிகாரிகளை எதிர்க்கும் போர்க்குணத்தை மக்களிடம் பரப்பவும் வாய்ப்பாக அமையும் அல்லவா?”
இது சென்ற ஆண்டு (2013) திருச்சியில் நடந்த மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் கருத்துக் கேட்பு கூட்டம் பற்றி வினவில் வெளியான கட்டுரையின் இறுதியில் நாம் தெரிவித்திருந்த கருத்து.
இதனால்தானோ என்னவோ இந்த ஆண்டு இந்த கருத்து கேட்பு கூட்டத்தை திருச்சியில் வைக்காமல் தவிர்த்துள்ளது ஆணையம். ஆனாலும் என்ன? எந்த ஊரில் வைத்தாலும் உழைக்கும் மக்களும் தோழமை அமைப்புகளும் இருக்கத்தானே செய்கின்றன. 31.10.2014 அன்று ஈரோட்டில் வைத்திருந்த கூட்டத்தை விளம்பரம் செய்து நடத்த தீர்மானித்தோம். ஈரோடு, கரூர், கோவை, நாமக்கல்,திருச்சி பகுதி தோழர்கள் இணைந்து கருத்து கேட்பு கூட்டத்தை ‘சிறப்பாக்க’ முடிவு செய்து களமிறங்கினோம். 350 சுவரொட்டிகள் மூலம் ஈரோடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரம் செய்தோம். 3000 பிரசுரங்கள் அச்சிட்டு பகுதி மக்கள், விசைத்தறி தொழிலாளர்கள், பேருந்து பயணிகள் மத்தியில் கருத்தைப் பரப்பியதுடன் கருத்து கேட்பு கூட்டத்திற்கு வந்து ஆணையத்தின் கார்ப்பரேட் ஆதரவு – மக்கள் விரோத போக்கை கண்டிக்க அழைத்திருந்தோம்.
முன்னதாக நமது நெல்லை மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களும், சென்னை பு.மா.இ.மு தோழர்களும் இந்த வேலையை சிறப்புற செய்து ஆணையத்திற்கு நெருக்கடி கொடுத்திருந்தனர். நமது புதிய ஜனநாயகம், வினவு தளத்தில் வந்த கட்டுரைகளுடன் தமிழ்நாடு மின்துறைப்பொறியாளர் அமைப்பின் தலைவர் திரு. சா.காந்தி அவர்கள் தற்போது தொகுத்துத் தந்த பிரசுரம் மற்றும் கட்டுரைகளும் நமக்கு கை கொடுத்ததன.
மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென மின்வாரியமே கோராத நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தன் முனைப்புடன் கட்டண உயர்வை அறிவித்து மக்களிடம் கருத்து கேட்டது. இணையத்தில் வெளியிட்டிருந்த இந்த கட்டண விவரத்தைப்பற்றி இணையத்தின் மூலம் கருத்து தெரிவிக்க அக்டோபர் 23-ம் தேதி வரை காலக்கெடு தந்து அதன் பின் நேரடியாக மக்களிடம் கருத்து பெறுவதற்காக மாநிலத்தில் 3 இடங்களில் மட்டும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது.
இணையத்தில் கட்டண விவரத்தைப் பார்க்கவும் இணைய வழியில் தங்கள் கருத்தைப் பதிவு செய்யவும் எவ்வளவு மக்கள் தயாராக இருக்கின்றனர் என்பது வாசகர்கள் அறியாததல்ல. மேலும், மாவட்டத்திற்கு ஒரு இடத்தில் கூட்டம் நடத்தினாலே அங்கு வந்து கருத்து தெரிவிக்க வசதியும் விழிப்புணர்வும் இல்லாத மக்களுக்கு 10 மாவட்டத்திற்கு ஒரு இடத்தில் கூட்டம் நடத்தினால் எத்தனை பேர் வந்து கருத்து தெரிவிப்பார்கள்? 10 ரூபாய்க்கு இலவச திட்டங்களை அறிவிக்க 30 ரூபாய் செலவில் விளம்பரம் செய்யும் அரசுகள் இதனால்தான் உரிய விளம்பரமே செய்யாமல் கூட்டத்தை நடத்தின. இவற்றிலிருந்தே இது கண்துடைப்பு நாடகம் என்பதையும் ஒரு சடங்குக்காக கூட்டம் நடத்திவிட்டு மக்களிடமிருந்து கருத்து கேட்டுத்தான்- மக்களின் ஒப்புதலுடன்தான் மின் கட்டணத்தை உயர்த்தினோம் என்று ஏய்க்கவே இந்த கூட்டங்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆனால், சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டது என்பார்களே அது இந்த ஆண்டு ஒழுங்கு முறை ஆணையத்தின் கூட்டங்களுக்கு அப்படியே பொருந்தும். சென்னை, நெல்லை, ஈரோடு என நடத்திய 3 கூட்டங்களிலும் தலையிட்டு ஆணையத்தின் மக்கள் விரோதத் திட்டத்தை நமது அமைப்புகள் அம்பலப்படுத்தின.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தனியார் மின் முதலாளிகளின் கொள்ளைக்கு ஆதரவாகவே இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது; அதற்கேற்பவே செயல்படுகிறது; அவ்வாறே செயல்பட்டுத் தீரும் என்பதை தமிழக மக்களுக்கு தெளிவாக உணர்த்தியது ம.க.இ.க மற்றும் தோழமை அமைப்பினரின் இந்த அம்பலப்படுத்தல். அது மட்டுமல்ல; ஆணைய உறுப்பினர்களின் வாயாலேயே அதை ஒத்துக்கொள்ளவும் வைத்தார்கள் எமது தோழர்கள். ஆம், சென்னையில் தோழரின் கேள்வியை நைச்சியமாக தவிர்த்து, நெல்லையில் பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடி, ஈரோட்டில் வரலாறு காணாத வகையில் இரவு 9 மணி வரை கூட்டத்தை நடத்தியும் ஜகா வாங்க முடியாமல் இறுதியில் உண்மையை ஒத்துக்கொண்டு கையெடுத்துக்கும்பிட்டு கதறியது இந்த ஆணையம்.
தோழர்கள் துவக்கத்திலேயே எழுப்பிய அர்த்தமுள்ள கேள்வி : “இந்த கூட்டத்தில் பெரும்பாலோர் கட்டணத்தை ஏற்றக் கூடாதென்று கூறினால் உயர்த்தாமல் விடப் போகிறீர்களா?” என்பதுதான். இந்த கூட்டங்களில் பேசிய யாரும் கட்டணத்தை ஏற்றிக்கொள்ளுங்கள் என்று கூறவில்லை. இருந்த போதும் மின் கட்டண உயர்வு முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்று என்பதால் மக்களின் கருத்து கட்டண உயர்வைத் தடுத்து நிறுத்தவில்லை. இந்த மாதம் 15-ம் தேதி முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டது.
ஆனால், ஆணையம் போன்ற அதிகார வர்க்க கும்பலிடம் கைதொழுது நின்று காரியம் சாதிக்கலாமென்ற மக்களின் அறியாமையை இந்த கூட்டங்களின் வாயிலாக நாம் தகர்த்தெறிந்துள்ளோம். ‘இவ்வாறுதான் பேச வேண்டும்’, ‘அதிகாரிகளின் மனம் கோணாமல் கோரிக்கை வைக்க வேண்டும்’ என்கிற கேடுகெட்ட சட்டவாத வரம்புகளை மீறியே ஆக வேண்டுமென மக்களுக்கு உணர்த்தியுள்ளோம். தோழர்கள் பேசியதற்காக ஆணையத்திடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டவர்கள் கூட இறுதி கட்டத்தில் தோழர்களுடன் சேர்ந்து கலகம் செய்த அரிய காட்சியை அரங்கேற்றினோம்.
மற்ற எல்லா இடங்களையும் விட அதிக எண்ணிக்கையில் ஈரோடு கூட்டத்திற்கு பொது மக்கள் கருத்து தெரிவிக்க திரண்டனர். கோவை மாவட்ட சிறு தொழில் முனைவோரும் ஈரோடு, பள்ளிப்பாளையம் விசைத்தறி உரிமையாளர்களும் உணர்வு பூர்வமாக பங்கெடுத்துக் கொண்டதுடன் உரிய புள்ளி விவரங்களுடன் ஆணையத்திடம் கேள்வியெழுப்பினர். தாங்கள் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் பலரையும் அழைத்து வந்திருந்தனர். விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கணிசமாக திரண்டு வந்திருந்தனர். அந்த வகையில் அரங்கம் நிரம்பி வழியும் அளவுக்கு நிறைந்திருந்தனர்.
காலையில் வந்த கூட்டம் குறைந்த போது மாலையில் மேலும் அதிகமான மக்கள் வந்து அரங்கை நிறைத்தனர். அந்த வகையில் சுமார் 1600 பேருக்கு மேல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 130 பேர் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டு கருத்து தெரிவித்தனர். வழமையாக மாலைக்குள் முடியும் கூட்டம் இரவு 9 மணி வரை நடந்து முடிந்தது. அது மட்டுமல்ல, நெல்லையில் பதில் சொல்ல முடியாமல் திணறிய அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்ட ஆணைய அதிகாரிகள், பதில் சொல்லும் நிகழ்ச்சியையே கடைசியாக தள்ளிப் போட்டு விட்டனர். பெயர் பதிவு செய்திருந்த 130 பேரிடமும் கருத்து கேட்ட பின்னரே தங்கள் கருத்தைப் பேசுவதென மாற்றிக்கொண்டனர். ஆனாலும் பதில் கூறும் நெருக்கடியை தள்ளிப் போட முடிந்ததே தவிர, தவிர்க்க முடியவில்லை. மாறாக, ஏராளமானோர் ஆணையத்தின் யோக்கியதையை சந்தி சிரிக்க வைக்கவே இந்த நடைமுறை உதவியது. பேசிய பலரும் மக்களுக்கு விரோதமாகவும் முதலாளிகளுக்கு கைக்கூலிகளாகவும் செயல்படும் ஆணையத்தை வறுத்தெடுத்தனர்.
நமது தோழர்களுக்கு முன்னதாக பேசிய 25 பேரும், எல்லா விலைவாசியும் ஏறியுள்ள இன்றைய நிலையில் மின் கட்டணத்தை ஏற்றுவதும் தவிர்க்க முடியாததுதான். ஆனால், பார்த்து- கொஞ்சம், கொஞ்சமாக ஏற்றுங்கள்; இடி போல இறக்காமல் மெல்ல மெல்ல (வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல) ஏற்றுங்கள் ; எங்களுக்கு மட்டுமாவது ஏற்றாமல் விட்டு விடுங்கள்… என்றவாறு இறைஞ்சினர்.
அடுத்ததாகப் பேசிய கோவை பு.ஜ.தொ.மு தோழர் இராமசாமியோ, “மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடிய பெரியார் பிறந்த இந்த மண்ணில்தான் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தைக் குறைத்துவிடும் என்ற மூட நம்பிக்கை அதிகமாக உள்ளது. மற்ற இரு கருத்துக் கேட்பு கூட்டங்களை விட இங்குதான் மக்கள் எதிர்பார்ப்புடன் பெருமளவில் திரண்டுள்ளீர்கள். ஆனால், நாங்கள் மின் கட்டணத்தை குறையுங்கள் என பேச வரவில்லை.” என்று அதிரடியாகவே ஆரம்பித்தார்.
“ஆணையம் ஏற்கனவே மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என திட்டமிட்டுக் கொண்டுதான் கூட்டத்தை நடத்துகிறது. நம்மை ஏமாற்றவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. நஷ்டம் என்று மக்கள் மேல் கட்டணத்தை சுமத்துகிறார்கள். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் தங்கள் சம்பளம் போன்ற அனைத்து சலுகைகளையும் குறைவில்லாமல் அனுபவித்து வருகின்றனர். நஷ்டம் ஏன் அடைந்தது என்று அதிகாரிகள் இங்கு தெளிவாக சொல்லவேண்டும். முறையான பதில் சொல்லாமல் இவர்களை இங்கிருந்து வெளியே விடக் கூடாது” என்றார். அது வரை பேசிய யாரையும் இடைமறிக்காத ஆணையம், தோழர் பேசிக் கொண்டிருந்த போது இடைமறித்து நிறுத்த முயன்றனர். ஆனால், மக்களோ “அவரைப் பேச விடு” என்று அதிகாரிகளுக்கெதிராக ஆவேசப்பட்டனர். வேறுவழியில்லாமல் அதிகாரிகள் அனுமதித்தனர்.
பிறகு பேசிய பலரும் மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்று பேசினர். இதில் போலி கம்யூனிஸ்ட் அமைப்புகளாகிய CPM, இந்திய மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்றும் நஷ்டத்தை ஈடுகட்ட வேறு வழிகளில் முயற்சிக்கலாம் என்றும் ஆலோசனைகள் வழங்கினர். ஆனால் தனியாரிடம் அதிக விலைக்கு கொள்முதல் செய்ததும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் மின்சாரம் வழங்கியதும்தான் இந்த நட்டத்திற்குக் காரணம் என்ற உண்மையை வாய்தவறிக் கூட பேசவில்லை.
அடுத்தாக மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர் ஆனந்த், ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தீர்மானித்து விட்டு கருத்துக் கேட்பு என்று சொல்லி மக்களை ஏமாற்றும் ஆணையத்தின் செயலை கடும் ஆவேசத்துடன் கண்டித்தார். இவர்களை நம்பி நாம் இங்கு வருகிறோம், இவர்களோ நம்மை ஏமாற்றுகின்றனர். எனவே, இன்று இவர்களை ஓட ஓட விரட்டவேண்டும். அப்போதுதான் மக்களை ஏமாற்ற நினைக்கும் போது அவனவன் நினைத்துப் பார்ப்பான் என்றதும் அதிகாரிகள் முகத்தில் ஈயாடவில்லை.
அடுத்ததாக பேசிய விவசாய சங்கத்தை சேர்ந்த ஒருவர் எனக்கு முன்னால் பேசியவர்கள் அதிகாரிகளை ஆத்திரமுட்டும் வகையில் பேசியிருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றார். உடனே மக்கள் தரப்பிலிருந்து, “ பேசியது சரிதான், நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டாம்” என்றனர்.
பிறகு பேசிய ஈரோடு பு.ஜா.தொ.மு தோழர். புஷ்பராஜ் கட்டண உயர்வால் விவசாயிகள், தொழிலாளர்கள் படும் பாதிப்பை பேசினார். இறுதியாக நஷ்டம் எப்பொழுது ஏற்பட்டது, எதனால் ஏற்பட்டது? என்று வினவினார். கூடுதலாக 1994 – 95 ம் ஆண்டு 347 கோடி உபரியாக மின்வாரியம் வைத்திருந்தது. ஆனால் ஆணையம் உருவாக்கப்பட்ட பிறகு 2007 – 2008 ல் 3512 கோடி நஷ்டம் எப்படி வந்தது என்றும் கேள்வியெழுப்பினார்.
அடுத்ததாகப் பேசிய மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் சாருவாகன் “1998-ல் துணைமின் உற்பத்தியாளர்களிடம் மின்சாரம் வாங்க யூனிட் ரூ.3.41 என்று விலை நிர்ணயித்து 13 ஆண்டுகாலம் நீடிக்கக் கூடிய ஒப்பந்தம் போடப்பட்டது. இது 2008ல் அவசரமாக ரத்து செய்யப்பட்டு, பிறகு அதே நிறுவனங்களிடம் யூனிட்டுக்கு ரூ. 7.91 என்று விலை நிர்ணயித்து 15 ஆண்டுகள் நீடிக்கும் படி ஒப்பந்தம் போட்டது ஏன்? இதனால் 700 கோடி அளவில் நஷ்டம் ஏற்படுத்தியது ஏன்? டாடா நிறுவனத்துடன் 2.41க்கு மின்சாரம் வாங்குவது என்று போட்ட ஒப்பந்த்தை மீறி இன்றுவரை கூடுதல் கட்டணம் கொடுத்து மின்சாரம் வாங்குவதால் 1000 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்படுத்தியது ஏன்?” என்று நஷ்டத்திற்கான காரணத்தை பட்டியலிட்டு கேள்வியெழுப்பினார்.
இதனை மக்கள் கைதட்டி வரவேற்று ஆமோதித்தனர். அதிகாரிகளோ கூட்டத்தின் போக்கு கண்டு திகைத்தனர்.
பிறகு பேசிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் சேக்,
“லாபம் வரும்போது, அதற்கு தாங்கள்தான் காரணம் என்று பெருமை பேசி லாபத்தில் இன்செண்டிவ்,போனஸ் என்று எடுத்து கொண்டு நன்றாக அனுபவித்த அதிகாரிகள், தன் திறமையின்மையால் நஷ்டம் உண்டாகும் போது அதை ஏன் மக்கள் தலையில் சுமத்த வேண்டும்? நியாயமாகப் பார்த்தால் இவர்களது சொத்தை பறிமுதல் செய்துதானே நஷ்டத்தை அடைக்க வேண்டும்? மேலும் தனியார் மின் உற்பத்தி முதலாளிகள் கொழுப்பதற்காக பொதுத்துறை நிறுவனத்தை திட்டமிட்டே அழித்து தேசத்திற்கே துரோகம் செய்யும் இவர்களை ஏன் தேச துரோக வழக்கில் கைது செய்யக் கூடாது?” என்றதும் கூடியிருந்த மக்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
அடுத்ததாக நாமக்கல் தோழர்.சத்தியா பேசும் போது, “மக்கள் இவர்களை நம்பி ஏமாந்தது போதும். இனி நாம் இவர்களை எதிர்த்துப் போராட அணிதிரள்வதன் மூலம்தான் எதையும் சாதிக்க முடியும்” என்றும், “ஆணையம் தனியாருக்கு சேவை செய்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது” என்றும் அம்பலப்படுத்தினார்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர். ஓவியா பேசும் போது “ஒவ்வொரு முறையும் கூட்டம் நடத்துகிறார்கள், நாமும் சென்று எதிர்ப்பு தெரிவிக்கிறோம், ஆனால் கட்டணத்தை உயர்த்தி கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு அந்த தைரியம் எப்படி வந்தது? நாம் இவர்களை நம்பும் வரைதான் நம்மை ஏமாற்றுவார்கள், இவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்துகொண்டு விட்டால் இவர்களை அகற்றி விட்டு அந்த இடத்தில் நமக்கான நிர்வாகத்தை ஏற்படுத்தலாம்” என்றார்.
கோவை பு.மா.இ.மு தோழர் பாபு பேசிய போது இந்த மூன்று தெய்வமும் நம்மை ஏமாற்றுவதற்காகவே இங்கு வந்திருக்கிறார்கள், இவர்கள் தனியாருக்குதான் சேவை செய்வார்கள். நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய MP, MLA –க்களுக்கு கூட இவர்களை கேள்வி கேட்க அதிகாரம் இல்லை. இந்த தெய்வங்கள் எடுப்பதுதான் முடிவு. இவர்கள் கோவையின் சிறு தொழில்களை அழிக்க முடிவு செய்து விட்டார்கள்.. அதற்காகத்தான் இந்தக் கட்டண உயர்வு. இவர்களை நாம் இது போன்ற கூட்டங்களால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. இந்த கட்டமைப்பே தனியாருக்கானதுதான், நமக்கில்லை இதை நொறுக்கும் போது மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றார்.
இறுதியாகப் பேசிய கரூர் தோழர், அதிகாரிகளும், ஆணையரும் எப்படி தனியாருக்காக சேவை செய்கிறார்கள் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இதுவரை காலமும் தன்னுடைய பொறுப்பு என்று கூறியவற்றையெல்லாம் தன்னால் கூட கட்டுப்படுத்த முடியாத ஆணையங்களிடம் ஒப்படைத்து தனது பொறுப்பை கைகழுவுகிறது. ஏற்கனவே அரசு நிறுவனம் BSNL அழிந்து இப்போது தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சேவை செய்யத் தொடங்கிவிட்டது. இதன் அடுத்த முயற்சிதான் மின்வாரிய நஷ்டம், கட்டண உயர்வு… என்பவை. இந்த அரசு முறைக்குள் நின்று இதற்குத் தீர்வு தேடுவது முட்டாள்தனம். இதற்கு வெளியிலிருந்து ஒரு புரட்சி மூலம்தான் தீர்வு காண முடியும் என்று முடித்தார்.
தோழர்களுக்கு இடையில் பேசிய அனைவரும் கூட கட்டண உயர்வை எதிர்த்துதான் கருத்தை பதிவு செய்தனர். கருத்து கேட்பு மாலை 7 மணிவரை நடந்தது. இது முடிந்ததும் பதிலளிக்க வந்த மின்வாரிய இயக்குநர் தங்களின் எதிர்கால திட்டம் பற்றியும் தாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம் என்ற வகையிலும் விளக்கமளித்துக் கொண்டு சென்றார்.
மக்களும் தோழர்களும் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் பேசியதால் இடை மறித்த தோழர்கள், “கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறுங்கள் தேவையில்லாதது எல்லாம் எதற்கு?” என்றனர். ஆனால், அவர் மீண்டும் நஷ்டத்திற்கான காரணத்தை சொல்லாமல் பேசவே தோழர்கள் மேடைக்கு அருகே சென்று மைக்கில், “நஷ்டத்திற்கான காரணம் என்ன? எப்பொழுதிலிருந்து நஷ்டம்? அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்” என்றனர்.
ஏற்கனவே சென்னை, நெல்லையில் பதில் சொல்ல முடியாமல் திணறிய அதிகாரிகள் இந்த கூட்டத்திற்காக நிறைய குறிப்புகள் எடுத்து வந்திருந்தும் பதில் சொல்லத் திணறினர். பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் நிலக்கரியை வாங்கி இரயிலில் கொண்டு வந்ததே நட்டத்திற்குக் காரணம் என்றார். 7 ஆண்டுகளாக புதிதாக நாம் மின்உற்பத்தி செய்யவில்லை. தனியாரிடமிருந்தே மின்சாரம் வாங்கினோம் என்றார். இடைமறித்த தோழர்கள் 7 ஆண்டுகளாக ஏன் புதிதாக உற்பத்தி செய்யவில்லை? என்றதும் மக்கள் அனைவரும் பதில் சொல் என்று ஆவேசத்துடன் ஆர்ப்பரித்தனர். காவல்துறை இடையில் வந்து தோழர்களிடமும் மக்களிடமும் கெஞ்சி அமைதிப்படுத்தியது.
கடைசிவரை மக்களின் கேள்விகளுக்கு பதிலே சொல்லவில்லை. இடையில் ஆணையர், மின்வாரிய இயக்குநரிடம் அதை ஏன் செய்யவில்லை? இதை ஏன் செய்தீர்கள் என்று சில கேள்விகளை எழுப்பி நாடகமாடினார். வாரிய அதிகாரியிடமிருந்து அப்போதும் பதில் இல்லை என்றதும் சரி ‘ரிட்டனாகக்’ கொடுங்கள் என்று சொல்லி நாடகத்தை அடுத்த காட்சிக்கு நகர்த்த முயன்றார். தோழர் சாருவாகன் இடைமறித்த போது அதிகாரிகள் தடுத்தனர். ஆனால் கூடியிருந்த மக்களோ, “அவரைப் பேசவிடு” என்றனர். “நம் கேள்விகளுக்கான பதிலை அதிகாரிகள் கூறமாட்டார்கள். நான் கூறுகிறேன்” என்று சொல்லி மின் வாரியத்தை ஒழித்துக் கட்ட அரசாங்கமும் அதிகார வர்க்கமும் மேற்கொண்டுள்ள சதிகளைப் பேசினார். அதிகாரிகள் எதுவும் செய்ய முடியாமல் பின்னால் நின்று புலம்பித்தள்ளினர்.
ஆணைய உறுப்பினர் ஒருவர், தான் இவற்றைக் குறித்துக் கொண்டதாகக்கூறி சமாதானப் படுத்த முயன்றார். அதன் பிறகும் தோழர்கள் கேள்வியெழுப்பி உங்கள் முடிவு என்ன என்ற பின், மற்றொரு ஆணைய உறுப்பினர், “1997-ல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட தனியார்மயம்- தாராளமயம்- உலகமயம் என்ற கொள்கைக்குப் பிறகே தனியார் துறை வளர்ந்தது. 15 வருடத்திற்கு பிறகு தற்போது பாதிப்பு தெரிந்தாலும் இதை எப்படி மாற்ற முடியும்? அதனால் இப்போது பேசிப் பயனில்லை. மேலும் இப்போது தொழிற்சாலைகள் பெருகி விட்டன. மின்சாரத்தின் தேவை அதிகமாகி உள்ளது” என்றார்.
“தங்கள் வாயாலேயே தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைதான் காரணம் என்று சொன்னதற்கு நன்றி” என்று தோழர்கள் கூறினர். உடனே சுதாரித்த ஆணைய உறுப்பினர், “நான் சாதாரண நபராகவே பேசினேன். பத்திரிக்கையில் எதுவும் போடாதீர்கள்” என கையெடுத்து கும்பிட்டார்.
அடுத்துப் பேசிய தோழர்கள் “பள்ளி, கல்லூரி மாணவர் நலனுக்காகத்தான் தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியதாக நீங்கள் கூறியது பொய். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கவே தனியாரிடம் மின்சாரம் வாங்குகீறிர்கள். அதில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டத்தான் இந்தக் கட்டண உயர்வு என்பதை நீங்களே உங்கள் வாயால் ஒத்துக்கொண்டீர்கள். இதுதான் மக்கள் உணர வேண்டியது” என்றார்.
இதை மறுக்க முயன்ற ஆணையர், “29 கார்ப்பரேட் நிறுவனத்திற்கு மட்டும்தான் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. அது நாங்கள் எடுத்த முடிவில்லை. அரசு போட்ட ஒப்பந்தம். அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்” என்றார்.
இதைத்தான் காலையிலிருந்து எமது அமைப்புகளின் சார்பாக உணரவைக்க முயற்சித்தோம். அதிகாரிகள் தங்கள் வாயாலேயே ஒத்துக்கொண்டது நாங்களே எதிர்பார்க்காத்து. 1991-ல் உருவாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையும் காட் ஒப்பந்தமும்தான் இவர்களுக்கு முக்கியம். அதற்கு சேவை செய்யத்தான் இந்த ஆணையம். எனவே தனியார்மயத்தை ஒழிக்காமல் மின்கட்டண உயர்வைத் தடுக்க வேறு தீர்வில்லை என்று விளக்கினோம். கூடியிருந்த மக்கள் இதை கைதட்டி வரவேற்றனர். வேறு வழியில்லாமல் கூட்டம் முடிவதாக ஆணையம் அறிவித்தது.
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்பது சட்டபடியே நம் நாட்டை தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு வழிவகுக்கும் ஒர் ஏற்பாடாகும். இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தவே ஒழுங்குமுறை ஆணையங்கள் கையில் அதிகாரத்தை ஒப்படைத்து விட்டு அரசாங்கம் தனது பொருப்பிலிருந்து நழுவிக் கொள்கிறது. பன்னாட்டு முதலாளிகளுக்கு ஏதுவாக சட்டங்களை மாற்றுகிறது. இந்த அமைப்பை வைத்துக்கொண்டு விலைவாசி உயர்வு உள்ளிட்ட எந்த வாழ்வாதார உரிமை பாதிக்கப்பட்டாலும் மக்களுக்கு தீர்வு கிட்டாது. ஏனென்றால் மக்கள் மீதான ஒடுக்குமுறை அனைத்தும் சட்டப் பூர்வமாகவேதான் அரங்கேறுகின்றன. எனவே, இந்த சட்டப்பூர்வ அமைப்புக்குள் நின்று இதற்கு தீர்வு தேடுவதில் அர்த்தமில்லை. இந்த கட்டமைப்பையே அடித்து நொறுக்குவதன் மூலமாக மட்டுமே, மக்கள் தங்களுக்கான சொந்த கட்டமைவை புத்தம் புதிதாக உருவாக்குவதன் மூலம் மட்டுமே மக்களுக்கான விடிவை உருவாக்க முடியும் என்பதை வந்திருந்த மக்களுக்கு உணர்த்தும் படி இருந்தது.
அந்த வகையில் இந்த ஆட்சியும் அதிகார அமைப்புகளும் மட்டுமே மக்களுக்கானவை என்றும், இந்த அமைப்பு முறைக்குள் நின்று இரைஞ்சுவதன் மூலமாக மட்டுமே ஏழைகள் தங்கள் வாழ்வை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மக்களிடம் உருவாக்கப்பட்டிருந்த அடிமை மனோபாவத்தை உடைத் தெரிந்துள்ளோம். இந்த அமைப்பு முறையே மக்கள் விரோதமானதுதான். அப்படி நரிகளுக்காக கட்டியமைக்கப்பட்ட ஆட்சியில் ஆடுகளுக்கு நீதி கிடைக்காது; இந்த ஆட்சியமைப்பிற்கு வெளியே மக்கள் திரள் போராட்டங்களினூடாகத்தான் நீதி பெற முடியும் என்பதை ஓரளவிற்கேனும் புரிய வைக்க முயற்சித்துள்ளோம்.
அடுத்த ஆண்டுகளில் ஒன்று இந்த கருத்துக்கேட்பு நாடகத்தை நடத்த பயந்து அடாவடியாக மின் கட்டணத்தை ஏற்ற வேண்டும். அல்லது, காவல் துறையின் கப்-சிப் தர்பாரை உருவாக்கி மக்கள் யாருமில்லாத அரங்கில் இந்தக் கூத்தை அரங்கேற்றுவதன் மூலம் இது ஜனநாயக ஆட்சியல்ல என்று அம்பலப்பட வேண்டும். இரண்டில் எதுவெனினும் அது மக்களுக்கும் சமூக மாற்ற அரசியலுக்கும் சாதகமானதே! இதுதான் மக்களை திரள் திரளாக அரசியல் படுத்தும் அரசியல் நடைமுறை. ஆளும் வர்க்க தீவிரவாத பூச்சாண்டிக்கு வாய்ப்பளிக்காமல் மக்களே தங்கள் சொந்த நடைமுறையிலிருந்து இது யாருக்கான ஆட்சி என்பதைப் புரிந்து கொள்ளச் செய்வதற்கான அரசியல் போராட்டம். இதன் போக்கில் மட்டுமே ஒரு கருத்து, சமுதாயத்தையே புரட்டிப் போடும் மாபெரும் ஆற்றலாக – புரட்சியாக மாறும் ரசவாதம் அரங்கேற முடியும். இதைக் கண்டுதான் ஆளும் வர்க்கம் குலை நடுங்குகிறது.
மாபெரும் ஓட்டுக்கட்சிகளை அசாதாரணமாகக் கையாளும் அதிகாரிகள் நமது விவசாயிகளும், தொழிலாளிகளும், மாணவர்களுமான எளிய தோழர்கள் பேசும் எளிய உண்மைகளைக் கண்டு அச்சமடைகின்றனர். அந்த வகையில் இந்த கூட்டங்களிலான நமது வினையை லெனின் கூறிய வார்த்தைகளைக் கொண்டு வர்ணிக்கலாம்- “மாபெரும் தொடக்கம்”.
செய்தி : மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஈரோடு, கோவை, கரூர், நாமக்கல், திருச்சி மாவட்டங்கள்,
தொடர்புக்கு-9750304727
தூத்துக்குடி துறைமுகக் கழகத் தலைவருக்கு 8 கோடி லஞ்சம் !
தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜன் தலைமறைவு !
சி.பி.ஐ.யே கைது செய்! சொத்துக்களை முடக்கு ! எனவும் தாதுமணல் கொள்ளையன் வைகுண்ட ராஜனை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும், கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வலியுறுத்தியும் மதுரை மாவட்டக்கிளை சார்பில் 10.11.2014 அன்று காலை 10.00 மணி அளவில் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. உயர் நீதிமன்ற வழக்குரைஞர் தோழர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார்.
உயர் நீதிமன்ற வழக்குரைஞர் லூயிஸ் “மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்தும் இந்தப் போராட்டம் மிகவும் முக்கியமான போராட்டமாகும். பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தாது மணலைக் கடத்திக் கொள்ளையடித்தவர் தலைமறைவாகியிருப்பதாகச் சொல்வது ஒரு நாடகமாகும். சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு உதவி செய்ததற்காக ஒரு அதிகாரிக்கு மட்டுமே 8 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்றால், கொள்ளையின் பரிமாணத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம். வைகுண்டராஜனை கைது செய்யவும் அவரது சொத்துக்களை முடக்கவும் போராட்டத்தை நாம் மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.”
வழக்குரைஞர் ராஜேந்திரன்
“ஆதாரபூர்வமான தகவல்களை சேகரித்தபின்தான் வைகுண்டராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் தலைமறைவாகி நடுக்கடலில் படகில் உல்லாசமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. வைகுண்டராஜன் மிகப் பெரிய திருடன் மட்டுமல்ல. மிகப் பெரிய ரவுடியும் கூட. அவர் மீது நடவடிக்கை எடுத்தால் நடவடிக்கை எடுப்பவரின் உயிர் தங்குமா என்பது தெரியாது. அப்படிப்பட்ட ஒரு கொள்ளையனை, ரவுடியை காப்பாற்ற என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.”
வழக்குரைஞர் ஜெகன்
“இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அவைகளைச் சுரண்டுவதற்கும், அழிப்பதற்கும் அனுமதிக்கக் கூடாது என்கிறது உச்சநீதி மன்றம். ஆனால் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவது தடுக்கப்பட வில்லை. நாடு முழுவதும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் கொள்ளையை ஆராயத் தான் சகாயம் குழுவை உயர் நீதிமன்றம் நியமித்தது. ஆனால் 30 மாவட்டங்களில் ஆய்வு என்பதை மதுரை மாவட்டத்தில் கிரானைட் கொள்ளையை மட்டுமே விசாரிக்கும் குழுவாக தமிழக அரசு சுருக்கி விட்டது. இதன் மூலம் கனிம வளக் கொள்ளையர்களைக் காப்பாற்றும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது தெளிவாகவே தெரிகிறது. கனிம வளக் கொள்ளை என்பது மிகப் பெரியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஆய்வு செய்யவேண்டும். அப்போது தான் பல உண்மைகள் வெளியே வரும். ஆனால் பணம் விளையாடுகிறது.”
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தோழர் குருசாமி வி.வி.மு. உசிலை வட்டம்
“வைகுண்டராஜன் மற்றவர்களைப் போல ஒரு சராசரி ஆள் இல்லை. திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய 3 மாவட்டங்களில் அவனது பெயரை உச்சரிக்கவே மக்கள் பயப்படுகின்றனர். வைகுண்டராஜனை எதிர்த்த பலரும் தாக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சாதி ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி தனது கொள்ளையைத் தொடர்ந்துள்ளன. பெயரை உச்சரிக்கவே பயந்த தூத்துக்குடியிலும், அதன் சுற்று வட்டாரக் கிராமங்களிலும் வி.வி.முவும் பிற தோழமை அமைப்புகளும், வைகுண்டராஜனின் கொள்ளையை அம்பலப்படுத்தி போராடிய பொழுது அந்தப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடனும் அச்சத்துடனும் பார்த்தனர். உங்களால் மட்டும் தான் வைகுண்டராஜனை எதிர்க்க முடியும் என்று பல கிராம மக்கள் எங்களைப் பாராட்டினர். எங்களோடு இணைந்து போராட முன்வந்தனர்.
தோழர் குருசாமி
இன்றைக்கு வைகுண்டராஜன் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் வருகின்றன. காவல் துறைக்குத் தெரியாமல் எதுவும் நடப்பதில்லை. ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் ஒற்றைக்கண் சிவராசன், சந்தனக் கடத்தல் வீரப்பனை சுற்றி வளைத்தவர்களுக்கு வைகுண்ட ராஜனை பிடிக்க முடியாதா? முடியாது என்றால் சொல்லுங்கள். நாங்கள் மக்களின் உதவியோடு அவனைப் பிடித்து ஒப்படைக்கிறோம். அந்த நிலைமையை காவல்துறை உருவாக்காது என்று நினைக்கிறோம்.”
வழக்குரைஞர் வாஞ்சிநாதன், உதவிசெயலர் ம.உ.பா.மையம் மதுரை
“கடந்த 20 வருடங்களாக வைகுண்டராஜன் கடத்தல் சாம்ராஜ்யத்தை நடத்தி வருகின்றார். தாது மணல் எடுத்து அணுகுண்டு தயாரிப்புக்குத் தேவையான தோரியத்தின் மூலப்பொருளான மோனோசைட்டைப் பிரித்து, வெளி நாடுகளுக்குக் கடத்தி வந்துள்ளார். இது கனிமவள சட்ட விதிகளின்படி குற்றம். இது ஒரு தேச விரோத செயல். தூத்துக்குடி ஆட்சியராக இருந்த ஆசிஸ்குமார் தாதுமணல் கொள்ளை பற்றி தமிழக அரசுக்கு அறிக்கை கொடுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
வழக்குரைஞர் வாஞ்சிநாதன்
தொடர்ந்து சட்ட விரோதமாக தாது மணலைக் கடத்தி வந்த வைகுண்ட ராஜனின் கொள்ளையை மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை வெளிக் கொணர்ந்தது. தூத்துக்குடிப்பகுதியில் ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம், முற்றுகைப் போராட்டம் நடத்தினோம்.
வைகுண்ட ராஜனின் கொள்ளைக்கு உதவி செய்ததற்காக தூத்துக்குடி துறைமுக கழக தலைவர் சுப்பையா IAS-க்குக் கொடுக்கப்பட்ட லஞ்சம் 7½ கோடி ரூபாய். இந்த வழக்கு 2012-ல் பதிவு செய்யப்பட்டாலும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இன்று வைகுண்டராஜன் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் தலைமறைவாகி விட்டார். R.S.S. பாஜக பிரமுகர்களை தொடர்பு கொண்டு வருகிறார். இது CBIக்கும் தெரியும்.
வைகுண்டராஜன் தலைமறைவானதால் அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி என்று CBI அறிவிக்க வேண்டும். அவரது சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகுண்டராஜனைக் கைது செய்தால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். CBI வைகுண்டராஜனைக் கைது செய்யத் தவறினால், மத்தியிலுள்ள பஜகவும் இந்தக் கொள்ளைக்குத் துணை போவதாகத்தான் கருத வேண்டியது வரும்.”
லயனல் அந்தோணி ராஜ், மாவட்ட செயலர், ம.உ.பா. மையம், மதுரை
“3 மாவட்டங்களில் 20 ஆண்டுகளாக 3 லட்சம் கோடி ரூபாக்கும் மேல் கொள்ளையடித்த மிகப் பெரிய குற்றவாளி வைகுண்டராஜன். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தாதுமணல் கொள்ளை சம்பந்தமாக தமிழக அரசுக்கு அறிக்கை கொடுத்தார். நீதிமன்றம் கண்காணிக்க உத்தரவிட்டது. எதையும் தமிழக அரசு மயிரளவுக்குக் கூட மதிக்கவில்லை. காரணம் வைகுண்டராஜன் ஜெயா டிவியின் பங்குதாரர் மட்டுமல்ல அவர் ஜெயாவின் பினாமியாகவும் இருந்தார். ஜெயாவுக்கும் வைகுண்டராஜனுக்கும் அவ்வளவு நெருக்கம். அதனால் தான் அவரால் தொடர்ந்து சட்டவிரோதமாக தாது மணலைக் கடத்த முடிந்தது.
லயனல் அந்தோணி ராஜ், மாவட்ட செயலர், ம.உ.பா. மையம் மதுரை
சுப்பையா IASக்கு வைகுண்டராஜன் கொடுத்த லஞ்சம் 7½ கோடி ரூபாய். முன்ஜாமின் மனுவுக்கு எதிராக CBI வாதிட்டதால் ஜாமின் மறுக்கப்பட்டது. எனவே வைகுண்டராஜன் தலைமறைவாகிவிட்டார். ஆடிக்காற்றில் அம்மியே பறப்பதுபோல, ஜெயாவே ஊழலில் தண்டனை பெற்று தவிக்கிறபோது வைகுண்டராஜனை கைது செய்வது பெரிய வேலை இல்லை. பாஜகவுக்கும் ஜெயாவுக்கும் உள்ள அரசியல் போட்டியில், வைகுண்டராஜனை தமிழக அரசு பாதுகாக்கிறது. ஆனால் வைகுண்டராஜனோ பா.ஜ.க வின் உதவியை நாடுகிறார். இது CBIக்கும் தெரியும்.
வைகுண்டராஜன் தலைமறைவாகி விட்டார் என்றால் அவர் என்ன அண்டார்டிகாவுக்கு சென்று விட்டாரா இல்லை அட்லாண்டிக் சென்று விட்டாரா? நடுக்கடலில் நவீன படகில் இருப்பதாகத்தானே செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்ய வேண்டியது தானே. இதை நாங்கள் கவனித்துக் கொண்டும் இருக்கிறோம். இதற்காக போராடிக் கொண்டும் இருக்கிறோம். ஒரு அதிகாரிக்கே 8 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்றால், தமிழகத்துள்ள பல அதிகாரிகளுக்கு வைகுண்டராஜனால் கொடுக்கப்பட்ட லஞ்சம் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டியிருக்கும். அந்த அளவிற்கு சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் கொள்ளை நடந்திருக்கிறது.
இந்தக் கொள்ளைக்குத் துணைபோன அத்தனை அதிகாரிகளையும் தண்டனை வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும். இந்த வழக்கு ஒரு கண்துடைப்பாக இருந்துவிடக் கூடாது. சிபிஐ பம்மாத்து செய்யக் கூடாது. தாது மணலிலுள்ள தோரியத்தைக் கடத்தி தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் விற்பனை செய்து கொள்ளையடித்த வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அவரது சொத்துக்கள் அனைத்தையும் முடக்க வேண்டும். வைகுண்டராஜனை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் மனித உரிமை பாதுகாப்பு மையம் தமிழகம் முழுவதும் வைகுண்டராஜன் ஒரு தேடப்படும் குற்றவாளி என்று நாங்கள் அறிவிப்போம். வைகுண்டராஜன் கைதுசெய்து தண்டிக்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.”
ஆர்ப்பாட்டத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்,ம.உ.பா.மையம் மற்றும் தோழமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பெண் தோழர்கள், யா.ஒத்தக்கடை சில்வர் பட்டறைத் தொழிலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். அன்று காலை உயர் நீதிமன்றத்திற்கு வந்தவர்களின் கண்ணிலிருந்து வைகுண்டராஜன் தப்பவில்லை.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
“சமஸ்கிருதம்தான் இந்தியா. …சமஸ்கிருதத்தை நீக்கினால் இந்திய உணர்வே அழிந்து விடும்… பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்துக்கும் சமஸ்கிருதம் தேவை… உயர்பதவிகளைப் பெற, சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிலைமை முன்னொரு காலத்தில் நிலவியது. அந்நிலையை மீண்டும் உருவாக்க வேண்டும்.”
(தருண் விஜய், டைம்ஸ் ஆப் இந்தியா, ஆக-23, 2013)
தமிழால் பிழைக்கும் வைரமுத்துவே, சமஸ்கிருத – பார்ப்பன வெறியனுக்கு தமிழ் மகுடம் சூட்டாதே! உனது பிழைப்புக்காக தமிழன் மானத்தை விலைபேசாதே!
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தருண் விஜய்க்கு விழாவா? வெட்கமாயில்லை?
இருநூறாண்டுகளுக்கு முன் பார்ப்பன ஆதிக்க சக்திகளால் அழிக்கப்பட்ட தமிழையும், திராவிட மரபையும் மீட்டுத்தந்தார் அயர்லாந்திலிருந்து வந்த கால்டுவெல் !
தமிழால் வயிறு வளர்க்கும் சினிமாக் கவிஞன் எவனும் அவருக்கு விழா எடுக்கக்காணோம்!
கால்டுவெல்லையும், திராவிட மரபையும் அழிப்பதையே தனது கொள்கையாக கொண்ட ஆர்.எஸ்.எஸ் வடநாட்டுக்காரன் “தமிழ் ஆதரவு” என்று நடித்தால் உடனே அவனுக்கு விழாவாம்!
ச்சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கயமையில் காங்கிரசை விஞ்சும் பாஜக!
ஈழத்தமிழின அழிப்புப் போரை எதிர்த்து அன்று கும்பலோடு கோவிந்தா! இன்று ராஜபக்சேவுக்கு வக்காலத்து, சிங்களவெறி பிக்கு அநகாரிக
தர்மபாலாவுக்கு இங்கே தபால்தலை வெளியீடு!
தமிழக மீனவர்களைக் காப்போம் எனப்பேசி ஓட்டுப் பொறுக்கிவிட்டு, தற்போது மீனவர்களுக்கு தூக்கு! படகு பறிமுதல், ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா என்று சு.சாமியின் திமிர்ப்பேச்சு!
இந்தி – சமஸ்கிருத திணிப்பு, பாடநூல்கள் பார்ப்பனமயம்..! கூடவே தமிழுக்கு ஆதரவு என்று தருண் விஜய் நடத்தும் நாடகம்!
இத்தனைக்குப் பிறகும் காவிக் கிரிமினல்களைப் பாராட்ட மியூசிக் அகாதமிக்குப் போகும் தமிழன், இளித்தவாயனா, இனத்துரோகியா?
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
வீடு, அலுவலகம், வீடு என்று எந்திரமயமான வழித்தடத்தில் வாழ்க்கையை கொடுத்திருக்கும் சென்னை மாநகரில் ஞாயிறு என்பது ஒரு தற்காலிக விடுதலை. எந்திரகதியான இயக்கத்திலிருந்து விடுபட்டு எஞ்சிய வாழ்க்கையை தொட்டுப் பார்க்க கிடைத்திருக்கும் ஒரு நாள். ஆகவே அந்த நாளை குறிபார்த்தே அனைத்து சமூக அரசியல் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
நிஜபாரதமாதா கூறு போட்டு பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்கப்பட்டு விட்ட போது பேனர் மாதாதான் அச்சமற்ற இந்துக்களின் ஒரே அடைக்கலமோ!
இதன்படி இந்த ஞாயிற்றுக்கிழமை 09.11.2014 இரண்டு முக்கிய நிகழ்வுகள். யாருக்கு முக்கியம், எதற்கு முக்கியம்? மோடி அரியணை ஏறி சங்க பரிவாரம் தனது செல்வாக்கைக் காட்ட விரும்பியதால் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு. இது முதல் நிகழ்வு. இரண்டாவது எழுத்தாளர் ஜெயமோகனின் புத்தக வெளியீட்டு விழா. அதுவும் வெறும் புத்தகமல்ல. மகாபாரதம். இரண்டிலுமே கிருஷ்ணன் இருக்கிறான். முன்னதில் கார்ப்பரேட் கிருஷ்ணனும், பின்னதில் கார்ப்பரேட் உலகம் இளைப்பாறும் பிருந்தாவன இலக்கிய கிருஷ்ணனும் இருக்கிறார்கள். இருவேறு நிகழ்வுகள் என்றாலும் இரு துருவ வேறு அல்ல. ஒன்றின் தொடர்ச்சி அல்லது நீட்சி .
ஆனால் தமிழ்நாட்டில் மோடி அலை சுனாமியாக வீசியதாக அருளிய ஊடகங்களின் பொய் வெளிறிப் போனாலும், அவர்களது கிராபிக்ஸ் கற்பனை இன்னமும் மறைந்துவிடவில்லை. ஆதலால், ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் விவாதமாக கொண்டு சேர்க்கப்பட்டது. பின்னது ஊடகங்களில் பேசப்படவில்லை. ஓரிரு பத்திரிகையாளர்களிடம் தொடர்பு கொண்டு ஜெயமோகன் நூல் வெளியீடு பற்றி கேட்ட போது அவர்களுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. கமல், இளையராஜா பங்கேற்கிறார்கள் என்று தெரிவித்த போதும், “அப்படியா, யாரையாவது அனுப்புவார்கள்” என்பதாக முடித்துக் கொண்டார்கள். பிருந்தாவனத்தின் ரசனையும், இந்திரபிரஸ்தத்தின் அரியணையும் அனைவருக்கும் அல்ல.
முன்னது மேன்மக்களுக்கு, பின்னது சாதா மக்களுக்கு……
இதனால் எதற்குப் போவது என்ற குழப்பம். மக்கள் குறித்தா, மேன்மக்கள் குறித்தா… . ஜெயமோகனின் மகாபாரதம் புத்தக வெளியீட்டு விழா எழும்பூர் மியூசியம் அரங்கில் நடக்கவிருக்கிறது என்று தெரிந்திருந்தது. ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்து விட்டதாகவும், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு, நீதிபதி ராமசுப்பிரமணியன் அனுமதி வழங்க உத்தரவிட்டதாகவும் செய்தி வெளியாகியிருந்தது.
அதுவும், முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, ஆர்.எஸ்.எஸ் சார்பில் திறமையாக வாதிட்டது பற்றி நாளிதழ்களில் படித்த போது நீதித்துறையிலும் இந்து உணர்வுள்ள நீதிபதிகள் இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. “ஆர்.எஸ்.எஸ் போடும் காக்கி நிக்கர் யூனிஃபார்ம் அவர்களை போலீஸ் அல்லது ராணுவப் படையினர் என்று குழப்பத்துக்கு வழி வகுக்கும்” என்ற வாதத்துக்கு, “போலீஸ் இப்போது அரை நிக்கர் போடுவதில்லை, ஆர்.எஸ்.எஸ்சின் யூனிஃபார் 1920-களில் வடிவமைக்கப்பட்டதையே அவர்கள் இன்றும் போடுகிறார்கள்” என்று தெளிவுபடுத்திய நீதிபதி, “அவர்கள் லத்தி கம்புகளை ஏந்தி வரப் போவதில்லை என்று அவர்களது வழக்கறிஞர்கள் உறுதியளித்திருக்கிறார்” என்றும் கூறியிருந்தார். “ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான பொதுமக்களின் உரிமையை குறிப்பான காரணங்கள் இல்லாமல் கட்டுப்படுத்த முடியாது” என்று உச்சநீதி மன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க உத்தரவிட்டிருந்தார் நீதிபதி ராமசுப்பிரமணியம்.
‘அம்மாவுக்கு’ பிணை வழங்கி லீகல் பாயிண்டுகளை உருவாக்கிய நீதித் துறை ஆர்.எஸ்.எஸ்-க்கு மட்டும் சளைத்து விடுமா என்ன? ஆனாலும் ராம சுப்பு அரசியல் சட்டத்தை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ் வரலாற்றையும் கரைத்து குடித்திருக்கிறார். ஆகவே ஏப்பமும் பெருசுதான்.
எழும்பூர் செல்வதற்கான பேருந்து சொல்லி வைத்தது போல மியூசியத்தைத் தாண்டிதான் சென்றது. மேம்பாலத்தைக் கடக்கும் போது மியூசியம் தியேட்டரினுள் வெளிச்சமும் கூட்டமும் தென்பட்டன. பிருந்தாவனத்திற்கே உரிய ரம்மியத்தை அதாவது மேன்மக்கள் பங்கேற்கும் ரசனைக்கு ஊறுவிளைவிக்காத வகையில் அங்கே காட்சிகள் உருவாக ஆரம்பத்திருந்தன.
“மோடியும் லேடியும் இருக்கும் போது என்ன செய்துவிடுவார்கள்” – அரைமணி நேர கைது எனும் குருஷேத்ர யுத்தத்திற்கு தயாராகும் வீர இந்துக்கள்
ஆனாலும் மியூசியத்தை தவிர்த்து விட்டு அடுத்த வரும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை நிறுத்தத்தில் இறங்கி ராஜரத்தினம் ஸ்டேடியம் நோக்கியே நடையை போட்டேன். குழந்தைகள் மருத்துவமனைக்குள் அந்த நேரத்திலும் கூட்டம் தெரிந்தது. பார்த்து ரசிப்பதற்குரிய உடல்களையோ உடல் மொழியையோ அங்கிருக்கும் ஏழை பாழைகள் கொண்டிருக்கவில்லை. நூறடிதூரத்தில் பிருந்தாவனக் காட்சியில் மெய்மறந்தவர்களுக்கு இந்த மெய் நிச்சயம் எரிச்சலூட்டும்.
மருத்துவமனை வெளியே மழைத் தண்ணீரோ, சாக்கடை தண்ணீரோ தேங்கியிருந்தது. வெளியில் கிடந்த பெஞ்சுகளில் சில ஆண்கள் உட்கார்ந்திருந்தனர். விளம்பரம்தான் என்றாலும் ‘சுவட்ச் பாரத்’ வெளிச்சம் இங்கே எல்லாம் வருவதற்கு வாய்ப்பில்லை.
சாலையைக் கடந்து ருக்மிணி லட்சுமிபதி சாலையில் திரும்பும் இடத்தில் தடுப்பு வைத்து மறித்திருந்தார்கள். ஒரு பெரும் போலீஸ் படையே நின்றிருந்தது. அதிக ஆள் நடமாட்டமே இல்லை. ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் போல அரை டவுசர் அணிந்த யாரும் நடமாடுவது போல தெரியவில்லை. போலிசு படை யாரிடமிருந்து யாரை பாதுகாக்க இவ்வளவு குவிக்கப்பட்டிருக்கிறது? குஜராத்திலும், கோவையிலும் காக்கி சட்டை நிறுவனம், காக்கி பேண்டின் பாக்கெட்டில் பஞ்சாமிர்தம் அருந்திக் கொண்டே சா (Saw)வரிசை படங்களை பார்த்ததோ இயக்கியதோ நினைவுக்கு வந்தது.
வழியில் புனித அந்தோணியார் தேவாலயத்தில் மாலை நேர பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அதற்குள் மக்கள் நிரம்பியிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் கூட்டம் போடும் போதும் அருகிலேயே ஆமென் சொல்வதை சாத்தியப்படுத்திய தந்தை பெரியாரின் தமிழக மண் கொஞ்சம் பெருமை அளித்தது. ஆனாலும் இது எத்தனை நாளைக்கு? சிலுவைக் கோவிலை சிவன் கோவிலென இடிக்கவும், பேசவும், அதற்கு தத்துவ விளக்கம் கொடுக்கவும் கூடிய கோமான்கள் எழும்பூர் மியூசியத்தில் இருக்கும் போது பெரியாரின் நினைவு மட்டும் என்ன சாதிக்கும்?
ரோட்டின் ஒரு புறம் வரிசையாக மாநகர போக்குவரத்து பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 32-க்கும் குறையாத பேருந்துகளை வாடகைக்குப் பிடித்து வந்திருக்கிறார்கள். ஒரு பேருந்தில் 40 பேர் வைத்தாலும் 1,200 பேருக்கும் அதிகமான கூட்டம். ஒரு கோடிப் பேர் வாழும் சென்னையில் ஒரு ஆயிரம் பேர்தான் இந்து ஞான மரபின் மானம் காக்க குழுமியது ஷத்திரிய இந்துக்களுக்கு நிச்சயம் வருத்தம் அளித்திருக்கும். ஆனால் எழும்பூர் மியூசியத்தில் 500 பேர் கூடியிருந்தார்கள் என்றால் அது பிராமண இந்துக்களுக்கு மகிழ்ச்சியளித்திருக்கும். என்ன இருந்தாலும் ஊர்வலம், தடை, சிறை என்றால் அது சூத்திர-பஞ்சம இந்துக்களின் கடமை அல்லவா?
தமிழிசை ரொட்டுல உக்காந்தாதான் சூத்திர சுயம்சேவக்குகள் அடுத்த தேர்தல்ல ஓட்டு கேக்க வேலை செய்வாங்க! ஆனாலும் தியாகம் தியாகம்தான்.
மைதானத்தை நெருங்க நெருங்க போலீஸ் கூட்டம் நிறைய தெரிந்தது. மைதானத்துக்குள் போகும் வழியில் பலர் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். “என்ன மீட்டிங் முடிந்து விட்டதா” என்று கேட்டதும் “இல்ல, இல்ல இன்னும் நடக்குது” என்று மலையாளம் கலந்த தமிழில் பதிலளித்தார். கம்யூனிச வாடை உள்ள சேட்டன்கள் சென்னை டீக்கடைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இந்து தர்ம வாசனை உள்ள மலையாளிகள் சங்க பரிவார அணிவகுப்பிற்கு வந்து சேர்ந்ததும் பொருத்தமானதே.
உள்ளே போய் பார்த்தால், ஒரு 1,000 பேர் இருப்பார்கள். அதில் பாதி பேர் காக்கி அரை நிக்கர் போட்டவர்கள். சிறு சிறு கும்பல்களாக சுற்றிக் கொண்டிருந்தார்கள். அரை நிக்கர் போட்டு, தலையில் கூம்புத் தொப்பியும் (ஆர்.எஸ்.எஸ் சீருடை) வைத்திருந்த ஒருவரைச் சுற்றி ஏழெட்டு இளைஞர்கள் நின்றிருந்தார்கள். தேசத்தை கட்டியமைப்பது, அன்னியரை விரட்டியடித்தல் என்று பேசிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்தால், “வேன் வந்தா நம்ம வேனான்னு பார்த்து ஏறணும். எல்லாரும் ஏறிட்டாங்களான்னு பார்த்துக்கணும்” என்று ஊருக்கு போகும் பிரச்சனையை பேசிக் கொண்டிருந்தார்கள். இந்து தர்மம் காக்கத்தான் என்றாலும் இல்லற தர்மம் காக்க ஊர் போய் சேரவேண்டுமல்லவா?
மைதானத்தின் ஒரு பகுதியில் இருந்து சோகையாக பாட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ஒருவேளை ஊர்வலம் தடை என்பதால் ஏற்பட்ட சோகப் பெருக்கின் காரணமாகவா அந்த சோகை? ஆனால், மைக்கில் ஒருவர் பாடுவது மட்டும்தான் சத்தமாக வந்தது, 1,000 பேர் கூடிய கூட்டத்தில் ஏழெட்டு பேர் கூட கோரஸ் பாடவில்லை.
மைக்காரர் “சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி, கிராமம் அனைத்தும் தவபூமி” என்று உணர்ச்சியை பொழிய முயற்சித்து பாடிக் கொண்டிருந்தார். வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தார். மைக்கின் குறையா அல்லது அவரது குரலின் குறையா என்று தெரியவில்லை. கூடியிருந்த 99% பேர் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தவபூமியான கிராமங்களை அழிக்கும் புதிய பொருளாதாரக் கொள்கையை பாஜக ஏற்றுக் கொண்டு காங்கிரசுக்கு போட்டியாக அமல்படுத்தும் போது அங்கே சந்தனம் புழுதியாக மணக்கிறது என்பதை எந்த இந்துதான் ஏற்பான்?
எத்தன மணிக்கு ஊருக்கு போவோம்! நம்ம வண்டி எங்க நிக்குது?
ஆர்.எஸ்.எஸ் சீருடை போட்டிருந்த ஒருவர் தன்னந்தனியாக, பரிதாபமாக உட்கார்ந்திருந்து பாடல் வரிகளை திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார். உலகின் வாழ்க்கையும், உணர்ச்சியும் எங்கே போய்க் கொண்டிருக்கும் போது புராதன இனக்குழுவின உணர்ச்சிகளும், ஆரம்ப கால சொத்துடமை ராஜ்ஜியங்களின் ராஜதந்திரமும் மோதிக் கொள்ளும் பாரதத்தை பத்து வருடம் தனியாக சொல்லப் போகும் ஜெயமோகனைப் போலத்தான் இவரா? இல்லை யார் வந்தாலும் எங்களது சாதகத்தை விடமாட்டோம் என்று உறுதியேற்கும் முன்குடுமி வைத்து முன் கோப நம்பூதிரிகளின் இலட்சிய மாதிரிகளா?
சற்று தொலைவில் 4 இளைஞர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு பையன் ஸ்மார்ட் ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தான். அதனால் என்ன, இதெல்லாம் அந்தக் காலத்தில் மகாபாரதத்தில் கண்டுபிடித்த கருவிகள்தானே? இல்லை வெண்முரசைத்தான் ஸ்மார்ட் போனில் படிக்க முடியாதா?
“என்ன மீட்டிங் எதுவும் இல்லையா, பாட்டா பாடிக்கிட்டு இருக்காங்களே”
“மீட்டிங் இல்லை, இது பேரணி. அது எல்லாம் முடிஞ்சாச்சு, எங்கள இப்ப அரெஸ்ட் பண்ணியாக்கும் வெச்சிருக்கு”
“ஏன்?”
“கோர்ட்ல அனுமதி கொடுத்த பொறகும், பேரணிக்கு கிளம்பியதும் எல்லாத்தையும் பிடிச்சி இங்க அடைச்சிட்டாங்க, சுத்தி பாருங்க போலீசு நிக்கிறாங்கள்ள”
“அப்படின்னா எல்லாரும் புழல் சிறைக்கு போவாங்களா?”
“அதெல்லாம் இல்லை, இப்போ விட்டுருவாங்க. ஆனா, இத வச்சி நீதிமன்ற அவமதிப்பு வழக்குக் கூட போடலாமோ. நம்ம மாநிலத்திலதான் ஒரு முதலமைச்சர் இருக்கே, அவங்களுக்கு இந்துக்கள்னாலே பிடிக்காது. இந்து ஓட்டு வேண்டாமாம், அதான் தடை பண்ணிட்டாங்க. இனி பாருங்க நல்ல வளர்ந்திருவோம்.”
கவனியுங்கள் ஒரு இந்து பரிவார தொண்டரின் உத்தி இந்துக்களின் ஓட்டுக்களைத்தான் குறி வைக்கிறது. அப்படி ஓட்டுக்களை வாங்கி ராஜ்ஜிய பரிபாலனம் செய்யும் சங்கபரிவாரங்கள் ஒருபுறம். மறுபுறம் இந்து மேன்மக்கள் இளைப்பாறும் பிருந்தாவன கதாகலாட்சேபத்தை ஜெயமோகன் நடத்துகிறார். இதுதான் இந்து தர்மத்தின் “கேயாஸ் தியரியோ?”.
ராஜராஜசோழன் பெயரை போட்டே ஆயிரம் பேருதானா! இதுக்கு ரஜினி போரை போட்டா கூட ரெண்டு ஆயிரத்தையாவது தேத்தலாமே!
சட்டையில் ராஜேந்திர சோழன் முடிசூடிய 1000-வது ஆண்டு விழா என்ற பேட்ஜ் அணிந்திருந்தார், அந்தத் தொண்டர்.
“ராஜேந்திர சோழன் முடிசூட்டு விழாவுக்குத்தான் இந்த பேரணியா”
“நாங்க கொண்டு வரலை. அதான் எங்களை இங்க வச்சிருக்காங்க. நாங்கெல்லாம் வரலைன்னா எல்லாரையும் ஜெயிலுக்கே கொண்டு போயிருப்பாங்க. இவ்வளவு பேர் இருக்கறதாலதான் இங்க வைச்சிருக்காங்க”
பரவாயில்லை ஆயிரம் பேருக்கே காவல் துறை பயப்படுவதாக அவர் கூறியிருக்கிறார். எனில் குஜராத்தில் காவல் துறை ‘பயந்து’ போய் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு போட்டியாக வேலை செய்வதும் நியாயம்தான்.
“அப்படியா, படிக்கிறீங்களா, வேலை செய்றீங்களா”
“இங்கதான் ஏர்போர்ட்ல வேலை செய்றோம். பெருங்குடில தங்கியிருக்கோம்”
“ஏன் ஊரை விட்டு இங்க வேலைக்கு வாரீங்க. அதுவும் உங்க கன்னியாகுமரி எம்.பி அமைச்சாரகவும் இருக்காரு. மோடியும் மேக் இன் இந்தியான்னு ஊரு பூராவும் தொழிற்சாலையா கட்டி குவிக்கப் போறாருன்னு பேசுறாங்களே?”
“எங்க ஊருக்கு அதெல்லாம் வராது, புல்லட் டிரெயின் இருக்குல்ல, அத கன்னியாகுமரி வர கொண்டு வரதுக்கு முயற்சி பண்றாங்களாம்”
அடேயப்பா, பூனா – அகமதாபாத் புல்லட் டிரெயினுக்கே 50,000 கோடி என்றால் காசி – கன்யாகுமாரிக்கு நிச்சயம் 50 லட்சம் கோடி செலவாகும். ஆகட்டுமே, இனி விஷ்ணுபுரவாசிகள் சடுதியில் புல்லட்டில் வந்து பிருந்தாவன நிகழ்வுகளை அடிக்கடி நடத்தலாம்.
“இன்னைக்கு இங்கயே பக்கத்துல மகாபாரதம் புத்தகம் வெளியீட்டு விழா நடத்துகிறாங்களே, அது பத்தி தெரியுமா”
“தெரியாதே”
“ஜெயமோகன், உங்க மாவட்டத்துக்காரருதான். மகாபாரதத்தை 4 புத்தகமா எழுதியிருக்கிறாராம். அதை வெளியிடுகிறார்கள்”
“அப்படியா, தெரியாதே”
என்ன செய்வது சூத்திர இந்துவுக்கு விதிக்கப்பட்ட அறிவுத் தேடலில் பார்வதிபுரத்து கடாட்சம் இருக்குமென்பது யாராவது எதிர்பார்த்தால் அது அநீதி!
இதற்கு மத்தியில் அரை நிக்கர் யூனிஃபார்ம் போட்ட ஏழெட்டு பேர் அணிவகுப்பு நடத்த முயற்சித்திருந்தார்கள். “ஏக், தோ ” என்று இப்படி அப்படி கொஞ்சம் நடந்தார்கள். வரிசையும் இல்லை விறைப்பும் இல்லை. இதற்கு மானமிகு வைகோவின் கருஞ்சட்டை படை கூட பரவாயில்லை. அதனால் என்ன கூட்டணி தளபதி எனும் முறையில் கலிங்கத்து புயலை கமலாலயம் பக்கம் கொண்டு வந்து பயிற்சி எடுத்தால் போயிற்று!
“வேன் வந்ததும், தங்களோடு கூட வந்தவர்கள் எல்லோரும் வந்து விட்டார்களா என்று பார்த்து விட்டு ஏறவும்” என்று மைக்கில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். சரி கூட்டம் கலைய ஆரம்பித்து விட்டது என்று வெளியில் வர முயற்சித்தேன்.
ஒருவர் தொலைபேசியில், “அரெஸ்ட் ஆயாச்சு, இங்க ஸ்டேடியத்தில வச்சிருக்காங்க, பாதி பேர சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு கொண்டு போயிருக்காங்க” என்று சீரியசாக பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு அம்மா, தொலைபேசியில், “ஆமா, ஒரே குழப்பம், கணவர் ஒரு இடத்தில், மனைவி ஒரு இடத்தில்னு ரெம்ப கஷ்டம்” என்று யாரிடமோ புலம்பிக் கொண்டிருந்தார்.
சென்னை நகரின் ரம்மியமான நவம்பர் மாதத்தில் நடக்கும் இந்த செல்லக் கைதுக்கே இத்தனை புலம்பல் என்றால், காஷ்மீரில், குஜராத்தில், முள்ளிவாய்க்காலில் அலறும் சோகங்கள் இவர்கள் காதில் வெறுப்பாக விழத்தானே செய்யும்? அது வெறுப்பல்ல, விவேகம், வாழ்வின் அடிமுடி அறியாத தேடல் மாரத்தான் என்று தத்துவ விளக்கம் சொல்ல எழுத்தாளர் ஜெயமோகன் இருக்கிறார்.
ராஜஸ்தான் தலைப்பாகையுடன் வந்திருக்கும் சேட்டு இந்துக்கள், வேடிக்கை பார்க்கும் தமிழ் இந்துக்கள்!
மியூசியம் நோக்கிப் போகும் சாலையில் அரை நிக்கர் யூனிஃபார்ம் போட்ட 2 பையன்களும், இன்னொருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தனர். வேகமாக போய் அவர்களை எட்டிப் பிடித்து விசாரித்தேன்.
“ஆமாங்க, எல்லாத்தையும் அரெஸ்ட் பண்ணி வச்சிட்டாங்க” என்று தளர்ந்து போய் கூறினார், அந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் தந்தையானவர்.
“ஏன், என்ன விஷயமாம். கோர்ட்லதான் உத்தரவு வாங்கியாச்சாமே” என்று கேட்டதும்,
“ஆமா, அது கொடுத்திருக்காங்க. ஆனா, இன்னைக்கு காலையில 11 மணிக்கு வடபழனில ஏதோ கட்சி பிரச்சினை பண்ணினாங்களாம். அதுதான் டிவில எல்லாம் பிளாஷ் நியூசாம். அதான் பேரணியை தடுத்து அரெஸ்ட் பண்ணி வச்சிட்டாங்க”
இங்கே அவர் சொன்னது மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் வடபழனியில் நடத்திய ஆர்ப்பாட்டம். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது அல்லவா?
“தெனம்லாம் யாருங்க போக முடியும். ஞாயித்துக் கிழமைகள்ள போவோம். காலையில 6 மணியிலருந்து 8 மணி வரை உடற்பயிற்சி, பாட்டு எல்லாம் நடத்துவாங்க” என்றார்.
விஜய்டிவியில் வெண்முரசு நிகழ்வு! பாபநாசமா கொக்கா!
பரவாயில்லை இனி நித்தம் ஷாகா போகாமலே ஆர்.எஸ்.எஸ் படையில் சேர முடியும். இந்த விதி பிருந்தாவனத்திற்கும் உண்டு. பங்குச்சந்தை குறித்து அசைபோடும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முதலாளியே, ஜெயமோகனின் வெண்முரசை சிலாகிக்கிறாரில்லையா?
எனினும் இந்த சூத்திர இந்துவுக்கும் வெண்முரசு கூட்டம் குறித்தும், ஜெயமோகன் பற்றியும் தெரியவில்லை. அது பிரச்சினையில்லை. இல. கணேசனும், வானதி சீனிவாசனும் படித்து திளைக்கும் ஜெயமோகன் மகாபாரதத்தை ஒரு சாதா இந்து படித்தால் அதன் தரம் என்னாவது? இல்லை படித்தால்தான் அவர்களால் புரிந்து கொள்ள முடியுமா?
சரி, இவ்வளவு தூரம் வந்து விட்டோம். ஊர்வல புராணம் முடிந்து விட்டது. புத்தக வெளியீட்டு விழாவையும் பார்த்து விடுவோம் என்று மியூசியம் வாயிலுக்குள் நடந்து கொண்டிருக்கும் போது, இணைய உலகின் இந்து ஞானமரபு கனவான்களான ஜடாயு, ஹரன் பிரசன்னா, பத்ரி போன்ற ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகள் பேரணியில் கலந்து கொண்டு கைதாகியிருப்பார்களா அல்லது கமல்ஹாசனையும், இளையராஜாவையும் பார்க்க புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருப்பார்களா என்ற சந்தேகம் வந்தது. நிச்சயம் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்குத்தான் போயிருப்பார்கள் என்று நினைத்தால் பின்னர் புத்தக வெளியீட்டு விழா புகைப்படங்களில் அவர்கள் தெரிந்தார்கள்.
மோடிக்காக தெருவில் இறங்கி பெருக்கிய உலகநாயகன், ஜெயமோகனுக்காக மேடையில் ஏறி வார்த்தைகளால் குளிப்பாட்டுகிறார்! களத்திலும் கருத்திலும் கமல்!
அதுவும் ஒரு குறையல்ல. பிருந்தாவனத்தில் இளைப்பாறும் மேன்மக்கள்தான் சாதா இந்துக்களை அணிதிரட்டி ஆடவைத்து ஆட்சியை கைப்பற்றும் சாதுர்யம் படைத்தவர்கள். அவர்களைப் போய் போர்க்களத்தில் அதுவும் அரைமணிநேர கைது விவகாரத்தில் சிக்கவைக்க நினைப்பது பெருங்கேடு!
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் குறித்த விவகாரம் ஊடகங்களில் பிரம்மாண்டமாக விவாதிக்கப்பட்ட போது வெண் முரசுக்கு மட்டும் அந்த பாக்கியம் இல்லையா என சிலர் கேட்கலாம்.
பாபநாசம் படத்திற்கு ஒரு பிரமோசனாக வெண்முரசு விழாவை விஜய் டீவியில் போடுவதற்கு உலக நாயகனும், உலக ஊடக அதிபர் முர்டோச்சின் தமிழ் தரகர்களும் பேசி முடித்து விட்டார்கள். ஆக படத்துக்கு படம், இலக்கியத்துக்கு இலக்கியம்.
ஆனால் இந்த சாமர்த்தியம் இவ்விதமாக மட்டும் புரிந்து கொண்டிருக்க யாராலும் முடியாது. ஏனெனில் விழாவில் பேசிய கமல் ஜெயமோகனை புகழ்ந்து தள்ளியதை பார்த்தால் இங்கே படைப்பாளி அல்லவா சிங்கம் என்று தோன்றும். ஆனால் அந்தப் பணிவும் இந்த மார்க்கெட்டிங்கையும் பார்த்தால் இது இதுதான் உண்மையான மகாபாரதத்தை புரிந்து கொள்ள வேண்டிய இடம். மற்றபடி இது விஷ்ணுபுரத்தின் தலைமறைவு உறுப்பினரானா நீயா நானா ஆன்டனியால் நடந்தாக நினைத்தாலும் குற்றமில்லை. விசயம் நடப்பதுதான் முக்கியம். யாரால் என்று யாராவது பேசிக் கொள்வது பிரச்சினை அல்ல.
சூத்திர இந்துக்களை இயக்கும் சாத்திர இந்துக்கள், வெண்முரசு கொட்டிய வெற்றிகரமான தருணத்தில்! இந்த சிந்தனை குழாமில் யார் யாருக்கு மோடியின் ஜாக்பாட் கிடைக்கும்?
ஆகையால் கமல் மோடியின் ‘சுத்த’ இயக்கத்தில் மனமுவந்து கலந்து கொண்டிருப்பதையும் பார்த்தால் பிருந்தாவனமும், இந்திரப்பிரஸ்தமும் ஏற்கனவே ஒரு அலைவரிசையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
எனினும் தமிழகம் முழுக்க ஒரு 5,000 சூத்திர பஞ்சம இந்துக்கள் கூட ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தில் கலந்து கொள்ள தயாரில்லை எனும் போது, பத்துவருட மகாபாரத தவத்தின் கூடவே பத்து இலட்சம் இந்துக்களை சேர்ப்பதற்கும் முயல வேண்டும்.
கைது எபிசோடை முடித்துக் கொண்ட வானதி சீனிவாசன் அவசரம் அவசரமாக ஜெயமோகன் நிகழ்வில் கலந்து கொண்டதை பார்க்கும் போது மேற்சொன்னது சரிதான் என்று தோன்றியது.
மேலதிகமாக சென்ற தேர்தலின் போது எழுத்தாளர் ஜெயமோகன், தானைத்தலைவர் மோடியை ஆதரித்ததாக வெளிப்படையாக பேட்டி கொடுத்தார் வானதி சீனிவாசன்! இதை வெண்முரசு வேந்தரும் மறைமுகமாகக் கூட மறுக்கவில்லை.
கடந்த முறை எங்கள் ஊருக்கு சென்ற போது அங்கு கோவிந்தா கோஷ்டிக்கும் அப்பொழுது புதிதாக வந்திருந்த அல்லேலுயா கோஷ்டிக்கும் நடந்த சண்டைகளை பற்றி சொல்லி இருந்தேன். பல மாதங்கள் கழித்து மீண்டும் ஊருக்கு சென்ற போது “கோவிந்தா vs அல்லேலுயா”வாக இருந்த சண்டை இந்த ஒரே வருடத்தில் “கோவிந்தாக்”கள் vs “அல்லேலுயாக்”கள் ஆக வளர்ந்திருந்தது. இது முதல் அதிர்ச்சி; எங்கள் ஊரில் அல்லேலுயா கூட்டத்தின் அசுர வளர்ச்சிக்குக் காரணம் சமீபத்தில் திருபெரும்புதூரில் இழுத்து மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலை என்பது இன்னொரு அதிர்ச்சி.
ஆமாம் நம்புங்கள், சாட்சாத் பின்லாந்து நிறுவனமான நோக்கியாவே தான்.
திருபெரும்புதூர் சிப்காட்டிற்கு சில கிலோமீட்டர் பக்கத்தில் இருக்கும் எங்கள் ஊரில் இருந்து நோக்கியா நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தவர் கணேசன். இவர் பன்னிரண்டாவது வரை படித்திருக்கிறார். தந்தை இல்லை. கல்லூரிக்குக் கூட போகாத தன் மகன் எதிர்காலம் என்னவாகுமோ என்று கவலைப் பட்டு வந்த கணேசனின் அம்மாவிற்கு இன்ப அதிர்ச்சி அளித்தது புதிதாக வந்த நோக்கியா தொழிற்சாலை. கணேசனுக்கு மாத சம்பளம், சீருடை எல்லாம் கொடுத்து அவன் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கி வைத்தது நோக்கியா. அந்த புதிய அத்தியாயம் குறை அத்தியாயமாக கலைந்து விடும் என்று பாவம் அந்த அப்பாவி அம்மாவிற்கு தெரிந்திருக்கவில்லை.
கணேசன் தங்களுக்கு சொந்தமாக இருந்த நிலத்தை விற்று அதோடு கொஞ்சம் கடன் வாங்கி வீட்டை கட்டினான். ஒரு லோன் போட்டு பைக் எடுத்தான். மாதத் தவணைகள் போக மிச்சம் இருந்த ஊதியத்தில் குடும்பம் ஓடியது. அடுத்து கல்யாணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தான். ஆனால், அப்போதுதான் அவன் தலையில் இடி இறங்கியது.
தொழிலாளர்கள் மத்தியில் நோக்கியா நிறுவனம் மூடப்படப் போகும் தகவல் அரசல் புரசலாக பரவத் தொடங்கியது. கணேசன் வேலை செய்த யூனிட் தான் முதல் பலி. கிட்டத்தட்ட வேலை போகப் போவது உறுதியாகிவிட்டது. மாதத் தவணைகள், கடன், வட்டி, எதிர்காலம் என அனைத்தையும் குறித்து கணேசன் கவலைப்படத் தொடங்கினான். கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்த நிலை; கணேசனின் அம்மாவுக்கு. மெல்லச் சீராகி வந்த தங்கள் நிலமை மீண்டும் பழைய ஏழ்மைக்கே திரும்ப போகிறதே என்று கவலை. கும்பிட்ட கடவுள் தன்னை கைவிட்டு விட்டதே என்று புலம்ப தொடங்கினார். அப்போதும் இல்லாத கடவுளை மட்டுமல்ல, சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்களையும் நம்பக் கூடாது என்று அவர் புரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை.
வினவையே சுற்றி வரும் அறிஞர் பெருமக்களுக்கே மறுகாலனியாக்கத்தின் தாக்குதல் பூமாலையாக தெரியும் போது அந்த அபலை அம்மாவின் அவலத்தை போக்கும் அறிவு யாருக்கு இருக்கும்?
அவர்கள் பக்கத்து வீட்டில் இருந்த நம் அல்லேலுயா கோஷ்டியைச் சேர்ந்த கிறிஸ்டி அலயஸ் திரிபுரசுந்தரி அக்காவிடம் கணேசனின் அம்மா புலம்புவது வழக்கம். அந்த அக்காவோ கணேசனின் அம்மாவிடம் மெல்ல கிறிஸ்துவின் மகிமைகளை பற்றியும் ஜபத்தை பற்றியும் விளக்கத் தொடங்கினார், நம் கிறிஸ்டி (இனிமேல் அலயஸ் இல்லை). கணேசனின் தாய்க்கு முதலில் இதில் பெரிய ஈடுபாடு ஏற்படவில்லை. ஆனால் கிறிஸ்டியும், நம் அல்லேலுயா ஃபாதரும் தொடர்ந்து பேசி வந்தார்கள்.
“அம்மா, ஒரு 500 ரூபாய் தான் செலவாகும், உங்கள் வீட்டில் ஒரு ஜபக் கூட்டம் வைக்கலாம், உங்கள் மகன் வேலை போகாமல் இருக்க கர்த்தரை கும்பிட்டு ஜபம் செய்தால், கர்த்தர் உங்கள் குடும்பத்தையும் மகனையும் காப்பாறுவார்” என்று ஃபாதர் வற்புறுத்தத் தொடங்கினார்.
கணேசனின் அம்மாவிற்கு முதல் பயம், ஊரில் இருப்பவர்கள் தன்னை ஒதுக்கிவிட்டால்? ஏற்கனவே கிறிஸ்டி வீட்டில் நடந்த கோவிந்தா vs அல்லேலுயா சண்டைகள் பற்றி தெரியும். ஆனால், நம் அல்லேலுயா ஃபாதர் ஜகஜால கில்லாடி ஆயிற்றே. அவர் தன் ஜபத்தால் மேன்மை அடைந்தவர்கள் என ஒரு பட்டியலை கொடுக்க தொடங்கினார், “செட்டியாருக்கு ஜபத்தால் இதயத்தில் இருந்த ஓட்டையை அடைத்தேன், கிறிஸ்டியின் கணவருக்கு எலும்பு முறிவை ஜபத்தால் குணமாக்கினேன், பக்கத்து தெரு சிவாவுக்கு ஜபத்தால் வட்டி தொழிலில் லாபம் வர வைத்தேன்” என அடுக்கத் தொடங்கினார். விட்டால் அம்மாவுக்கு புதுதில்லியில் ஜாமீன் வழங்கியதே ஏசு பெருமான்தான் என்று கூட சொல்வார்.
கணேசனின் அம்மாவிற்கு மனது கரையத் தொடங்கியது. ஜபத்திற்கு இசைந்தார். முதலில் 500 ரூபாய்க்கு ஒரு ஜபம் என்று ஆரம்பித்த ஃபாதர் மெல்ல ஜபக் கூட்டத்தையும் கட்டணத்தையும் அதிகமாக்கி விட்டார்.
“என்ன கணேசா நீ வேலை போகும் என்று சொல்லி 2 மாதம் ஆகிறது, இன்னும் உன் நிறுவனத்தில் அதைப் பற்றி பேச்சே இல்லை பார்த்தியா? எல்லாம் ஜபத்தின் மகிமை, உனக்கு பயமிருந்தால் சொல் இன்னொரு ஜபம் செய்து விடலாம், உன் வேலை உறுதியாகிவிடும்” என ஜபங்கள் வார வாரம் தொடர்ந்தன, ஒவ்வொன்றும் 500 ரூபாய் செலவில்.
நோக்கியா நிறுவனத்தின் மனிதவள மேலாண்மை அதிகாரிகள் பிரச்சனை வராமல் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவதை பற்றி திட்டமிட எடுத்துக் கொண்ட நேரத்தை நம்ம ஃபாதர் காசாக்கி விட்டார்.
ஒரு நாள் சுபயோக சுபமுகூர்த்த தினத்தில், மூன்று மாதம் சம்பளம், பிஎஃப், இன்னும் கொஞ்ச பணம் கொடுத்து நோக்கியா நிறுவனம் கணேசனை வீட்டுக்கு அனுப்பி வைத்தது. நடுத்தெருவில் விடப்பட்ட கணேசனின் வாழ்க்கைக்கு ஈடாக கிடைத்த மூன்று மாத சம்பளம், பிஎஃப் விஷயத்தைப் பற்றி கணேசன் வீட்டுக்கு வந்த ஃபாதர் கேட்டுக் கொண்டார். வேலை போனதை பற்றிய செய்தி சற்றே அதிர்ச்சி; உடனே சுதாரித்தார், “கணேசா பணத்த கம்பேனி கொடுக்கல, நம்ம உண்மைய பண்ண ஜபம், கர்த்தர், உன் கஷ்டங்களுக்கு மனமிறங்கி உன் கம்பனி ஓனர் மனச மாத்தி உனக்கு இப்படி பணம் வர ஏற்பாடு பண்ணியிருக்கார். கர்த்தருக்கு தான் நன்றி சொல்லனும்” சொல்லி வைப்போம் என்று ஃபாதர் அடித்துவிட்டது உண்மையில் வேலை செய்துவிட்டது. கணேசனும் அவன் அம்மாவும் கர்த்தரின் மகிமையில் உருக அவரின் ஆட்டுக் குட்டியாகி விட்டார்கள்..
வந்த பணத்தில் பத்து சதவீதத்தை சர்ச்சுக்கு நன்கொடையாக கொடுக்கக் கோரினார் ஃபாதர். இல்லை, இல்லை ஆணையிட்டார். நடந்தது. கணேசனை ஒரு பெட்டிக் கடை போடச் சொன்னார், இனி தவறாமல் ஜபம் செய்யவும், மாதம் குறிப்பிட்ட அளவு நிதியை கர்த்தருக்கு அளிக்கவும் செய்தால் கணேசன் பெரிய பணக்காரன் ஆகிவிடுவான் என அல்லேலுயாவில் சேர்த்து விட்டார்.
கணேசனின் ஜபம், திடீரென வந்த பணம் எல்லாம் கிறிஸ்டி, கணேசன், கணேசன் தாயார் , ஃபாதர் மூலம் ஊர் முழுவதும் பரப்பப்பட்டது. ஊரில் பலரும் கடன் தொல்லை, விவசாய பிரச்சனை, வரதட்சணை பிரச்சனை, வருமானத்தை பெருக்கிக் கொள்ள என்ற பல பிரச்சனைகள் மற்றும் ஆசைகளை தலையில் போட்டு குழம்பியபடி உட்கார்ந்திருப்பதை பார்த்த ஃபாதர் பல புதிய ஜபங்களை அறிமுகப்படுத்தி விட்டார்.
100 ரூபாய்க்கு ஒரு ஜபம்- இது குழந்தைகளுக்கு நோய் வராமல் இருக்க, 300 ரூபாய்க்கு ஒரு ஜபம் இது தொழிலில் லாபம் வர, 500 ரூபாய்க்கு ஒரு ஜபம் இது கணவன் மனைவி சண்டை வராமல் இருக்க, குழந்தை பாக்கியம் இன்ன பிற இல்லற பிரச்சனைகள் தீர, 1000 ரூபாய் ஜபம் நோய்கள் தீர, 5000 ரூபாய் ஜபம் கேன்சர், இதய நோய் மாதிரியான் கொடிய நோய்களில் இருந்து குணம் பெற என்று ஜபபட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
முதலில் இதனால் பாதிக்கப்பட்டது எங்கள் ஊரில் இருந்த விநாயகர் கோவில் ஐயர்தான், கோவிலுக்கு வரும் பெண்கள் கூட்டம், சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் டல்லடிக்கத் தொடங்கின. அவர் தான் ஊரில் மெல்ல இந்த பிரச்சனையைப் பற்றி ஆரம்பித்து வைத்தார்.
“சரஸ்வதி, மகாலட்சுமி, மழைக்கு ஒரு கடவுள், வெயிலுக்கு ஒரு கடவுள், நோய் தீர்க்க ஒரு கடவுள், என்று முப்பத்து முக்கோடி தேவர்கள் நம் மதத்தில் இருக்கிறார்கள், எனக்கு எல்லாரையும் குளிர்விக்கும் மந்திரங்கள் தெரியும், வேதம் தெரியும், சாஸ்திரங்கள் தெரியும். எல்லாம் இருந்தும், இவர்கள் ஏன் ஒத்த ஜீசஸ் பின்னாடி அலையறாள்? கலி முத்திடுத்து, கலி முத்தினா இப்படித் தான் தெய்வங்கள நிந்திச்சு, ஒருத்தர ஒருத்தர் வெட்டிண்டு சாவப் போறா, ஆனால் நான் இருக்கும் போதேவா அந்தக் கொடுமைகள் இந்த பூமிக்கு வரணும்” என்று கோவிந்தா கோஷ்டிகளை உசுப்பேத்தினார்.
வீடுகளில் சண்டைகள் அதிகமாகிவிட்டன. இதில் முதல் பலி குழந்தைகள், பல குழந்தைகளுக்கு இரண்டு பெயர்கள், குடியானவர்கள் தெருவில் ஒரு குழந்தைக்கு பெயரே வைக்கவில்லை, சண்டை போய் கொண்டிருக்கிறது. வீடுகளில் இரண்டு பூஜை அறைகள்.
காலையில் சத்தமாக சுப்பிரபாரதம், அதை விட சத்தமாக கிறிஸ்து பாடல்கள். சிறுவர்களுக்கு பரீட்சை என்றால் ஒரு கோஷ்டி கோவிலில் அர்ச்சனை என்று அவர்களை கூட்டிச் சென்றுவிடுகிறது, மறு கோஷ்டி வீட்டில் அதிக மார்க் எடுக்க ஜபம் வைக்கிறது, பிள்ளையை படிக்க விடுவதில்லை.
பண்டிகைகள் என்றால் பெரும் தலைவலி. தீபாவளிக்கு மறுநாள் நோம்பு செய்வார்கள், மகாலட்சுமியை வேண்டி என நினைக்கிறேன். கோவிந்தா கோஷ்டி நோம்பில் மும்முரம் காட்ட, நம்ம ஃபாதர் தீபாவளிக்கு மறுநாள் ஒரு புது ஜபக் கூட்டத்தை அறிமுகப்படுத்தி பிரச்சனையை கிளப்பிவிட்டார். ஊரில் தீபாவளி ரணகளமாகிவிட்டது. மகாலட்சுமி விரதமா, நம்ம ஃபாதரின் புது ஜபக் கூட்டமா என பட்டிமன்றம் லைவில் ஒளிபரப்பாகவில்லை, அவ்வளவுதான்.
தன்னுடைய வருமானம் கணிசமாக குறைவதை பொறுக்க முடியாமல் எங்கள் ஊரில் இருக்கும் ஐயர் எடுத்தார் அவர் அஸ்திரத்தை. கணபதி ஹோமம், சத்தியநாராயண பூஜை, சிறப்பு சரஸ்வதி ஹோமம், கஜ ஹோமம், புஜ ஹோமம் என பெரிய பட்டியல். சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள், அபிஷேகங்கள் என அவரும் கிளம்பிவிட்டார்.
ராஜசேகர் தம்பதிகள் எங்கள் ஊரில் இருக்கும் அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள். அவர்களின் மகன் சந்தோஷ் பன்னிரெண்டாவ்து வகுப்பு படிக்கப் போகிறான். அவன் கண்டிப்பாக மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்து விட வேண்டும் என்பது அவர்களின் ஆசை. ராஜசேகரின் மனைவி சந்தியா அல்லேலுயாவில் இணைந்து விட்டார். ராஜசேகர் மிகத் தீவிர கிருஷ்ண பக்தர். போதாதா..பிரளையம் வர!
முதலில் சந்தியா சிறப்பு ஜபக் கூட்டம் ஒன்றை தன் விட்டில் நடத்தினார். சுமார் 5,000 ரூபாய் வரை ஃபாதருக்கு கொடுத்தார். ஆனால் பரீட்சையில் சந்தோஷ் எதிர்பாராத வகையில் குறைந்த மதிப்பெண் எடுத்து விட்டான். அதாவது 100-க்கு 99 மதிப்பெண். ஜபத்தை கேலி செய்து கை கொட்டி சிரித்த ராஜசேகர், வீட்டில் சிறப்பு சரஸ்வதி பூஜை நடத்தினார். ஹோமம் வளர்த்து பலருக்கு உணவளித்து சிறப்பாக நடந்த அந்த பூஜைக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவாகியது. நம்ம ஐயரும் ஒரு பெரிய தொகையை வாங்கி விட்டார்.
நம்புங்கள் அவர்கள் மகன் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துவிட்டான். சரஸ்வதி பூஜை ஜெயித்து விட்டது. இப்பொழுது யேசுவை விட சந்தியாவிற்கு ஈகோ முட்டிக் கொண்டது, ஒரு புது ஜபக் கூட்டம் சில பல ஆயிரங்கள், இந்த முறையும் சந்தோஷ் 100 மதிப்பெண் பெற்றுவிட்டான். ஒரு வழியாக தற்காலிகமாக சண்டை டிராவில் முடிவடைந்தது. இருந்தாலும், நம்ம ராஜசேகர் ஒரு முறை தோற்றதை குத்திக் காட்டியபடி தான் இருக்கிறார்; அது தான் அந்த 99 மார்க்.
ஊரில் பல பிள்ளைகள், வீட்டில் நடக்கும் இந்தப் பிரச்சனைகளால் மன உளைச்சல் அடைந்துள்ளனர். எங்கள் எதிர் வீட்டில் இருக்கும் நிஷா குட்டி நான்காவதுதான் படிக்கிறாள். வீட்டில் கோவிந்தா அல்லேலுயா சண்டை, பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவள், ஒரு நாள் வெறுப்பாகி பெற்றோர்களிடம், “இனிமே இப்படியே சண்டை போட்டு ஹெட் ஹேக் (தலைவலி) வரவச்சீங்க, நான் முஸ்லிம் மததுக்கு மாறிப்போய்டுவேன், எம் பேரை ஃபாத்திமான்னு வச்சிப்பேன்” என்று பொருமிவிட்டாள்.
இவர்கள் கூத்துகளை பார்த்துக் கொண்டிருந்தால், பல சுவாரசியமான விஷயங்கள் மனதில் ஓடுகிறது.
பழங்குடி மக்கள், விவசாயம் பார்க்கத் தொடங்கிய போது அவர்கள் விவசாயத்திற்கு உதவும் அனைத்தையும் கடவுளாக வழிபட்டனர். ஆரியர்கள் வருகைக்கு பின், மந்திரங்கள் மூலம் இயற்கையை கட்டுப்படுத்தலாம். மழைக்கு ஒரு கடவுள் அவனை குளிர்விக்க ஒரு மந்திரம், வெயிலுக்கு ஒரு கடவுள் அவனை குளிர்விக்க ஒரு மந்திரம், மலையை குளிர்விக்க ஒரு பூஜை, பாமபை குளிர்விக்க ஒரு பூஜை என வேதங்களையும் தாண்டி பல கடவுள்களையும், பூஜைகளையும், மந்திரங்களையும் யாகங்களையும் உருவாக்கி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கத் தொடங்கினார்கள் பார்ப்பனர்கள்.
உலகெங்கும் எந்த மதமானாலும் இப்படித்தான் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வு என்று இப்படியாக தமது கல்லாவை ஓட்டுகின்றன.
பொதுவில் வரலாற்றில் மதங்கள் மக்களின அப்பாவித்தனமான நம்பிக்கையை மேலும் மூட நம்பிக்கையாக்கி தான் தம் இருப்பை உறுதி செய்து கொள்கின்றன. அதனால்தான் மார்க்ஸ் இந்த மதங்களை அபின் என்றார். கூடவே இதயமற்ற உலகின் ஏக்கப் பெருமூச்சு என்றும் அதனை மதிப்பிடுகிறார். அதனால்தான் கம்யூனிஸ்ட்டுகள் மதங்களின் இருப்பை பொருளாதார பிரச்சினைகளின் கட்டமைப்பில் நீடிப்பதாக புரிந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள், போராடுகிறார்கள்.
எந்த தந்திரங்களை செய்து ஹிந்து மதம் தன்னை நிறுவிக் கொண்டதோ இன்று அதே தந்திரத்தை கிறிஸ்துவம் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் இதில் கிருஷ்ணனை விட கிறிஸ்துவின் மதம்தான் சீனியர். இந்து மதம் உலகின் ஆதிமதம் என்று பீலா விட்டாலும் அது கங்கைக் கரை சப்பாத்தி மற்றும் தயிர் சாத வாடையைத் தாண்டி எங்கேயும் போகவில்லை. கிறிஸ்துவின் அபிமானிகள்தான் முதலாளிகளின் கருவூல மகிமையை பெருக்க வேண்டி
‘ரிஸ்க்’ எடுத்து கடல் தாண்டி, கண்டம் தாண்டி ஜபிக்க வந்தார்கள். வடமொழி மந்திரங்களோ இமயத்தை தாண்டவே முடியாது என்று குந்திவிட்டன.
இதையும் தாண்டி ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் காலரை துக்கி விட்டுக் கொள்ள ஒரு பெருமையான செய்தி இல்லாமல் இல்லை. இந்த அல்லேலுயா கூட்டம் அடித்து விட்டுக் கொண்டிருப்பதெல்லாம் சிறிய அளவு டூபாக்கூர்கள்தான். பாருங்கள், ”மோடி வந்தால் இந்தியாவின் மொத்த பிரச்ச்னைகளும் நொடியில் மறைந்து ராம ராஜ்யம் முளைக்கும்” என்று சொன்னதை விடவா அந்த அல்லேலுயா பாதிரி சொல்லிவிட்டார்?
ஆப்பிரிக்க நாடுகளை ஏகாதிபத்திய சுரண்டலும், அதன் காரணமாக வறுமையும், உள்நாட்டு போர்களும் ஒரு புறம் வதைத்துக் கொண்டிருக்க, மறுபுறம் கொடிய ஆட்கொல்லி நோய்கள் கொத்துக் கொத்தாக மக்களை கொன்றழித்துக் கொண்டிருக்கின்றன.
எபோலா என்னும் கொடிய உயிர்க்கொல்லி இரத்த ஒழுக்கு தொற்று நோய் டிசம்பர் 2013 முதல் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின்படி கினியா, சியரா லியோன், லைபீரியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இன்று வரை சுமார் 12,008 பேர் எபோலாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5,078 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
லைபீரிய அரசின் சுகாதரத்துறை குழு ஒன்று எபோலாவால் கொல்லப்பட்டவர்களின் உடல்களை எரிக்கும் காட்சி (ஆகஸ்ட் 22, 2014)
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான டாக்டர்களை கொண்டிருந்த நாடுகளில் சுகாதார ஊழியர்களும் கூட எபோலா, லஸ்ஸா போன்ற வைரஸ்களால் கொல்லப்படுவதன் மூலம், கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் எபோலாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர்.
எபோலா மட்டுமின்றி லஸ்ஸா, லுஜோ, மஞ்சள் காய்ச்சல், ஹண்டா போன்ற பல்வேறு வகையான வைரஸ்கள், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ரத்த ஒழுக்கு நோயை உருவாக்குகின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் எபோலாவைப் போலவே லஸ்ஸா வைரசும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மேற்காப்பிரிக்காவில் ஏழை நாடான சியரா லியோனில் லஸ்ஸா வைரசினால் ஆண்டுக்கு சுமார் 5,000 பேர் கொல்லப்படுகின்றனர். 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 150-க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர். அதாவது 40,000 பேருக்கு 1 மருத்துவர். சீனாவில் 500 பேருக்கு 1 மருத்துவர், இந்தியாவில் 1,500 பேருக்கு 1 மருத்துவர், அமெரிக்காவில் 350 பேருக்கு 1 மருத்துவர் என்பதுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். லஸ்ஸா போன்ற வைரஸ், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் நோயாளிகளிடமிருந்து தொற்றும் அபாயத்தால் அங்கு சுகாதாரத்துறையில் வேலை செய்ய பலர் முன்வராத நிலை ஏற்பட்டுள்ளது.
ஷேக் உமர் கான் என்ற டாக்டர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக லஸ்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் பார்த்து காப்பாற்றி வருகிறார். மகேரா கிராமத்தின் ஒரு ஏழைக் குடும்பத்தில் பத்து குழந்தைகளில் ஒருவராக பிறந்த கான் சிறுவயது முதலே டாக்டராக விரும்பியிருக்கிறார். படித்து பட்டம் பெற்ற பின் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கெனெமாவின் அரசு மருத்துவமனையில் இரத்த ஒழுக்கு நோய் மருத்துவ நிபுணராக பணியாற்றி வந்தார்.
டாக்டர் ஷேக் உமர் கான்
எபோலா நோய் தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து, டாக்டர் கான் எபோலா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்துள்ளார். லஸ்ஸா வைரஸ் தொற்று நோய்க்கு சிகிச்சையளித்து வந்த அனுபவமும் நோயாளிகள் மீதான அவருடைய அக்கறையும் சில நோயாளிகள் குணமடைந்து சாதாரண நிலைக்கு திரும்ப உதவியிருக்கின்றன. சியரா லியோன் அரசு அவரை தேசத்தின் நாயகனாக அறிவித்தது.
கட்டுப்பாட்டு வரம்புக்கு அப்பாற்பட்டு எபோலா பரவிக்கொண்டிருப்பதால், உலகெங்கும் எபோலா நோய் பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உலக அளவிலான மருத்துவ அவசரநிலையை அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து நோய் தொற்று மேற்கத்திய நாடுகளுக்கு பரவி விடக்கூடாது என்பது இதன் முதன்மையான நோக்கங்களில் ஒன்று. என்ன இருந்தாலும் மேற்குலகின் உயிர் ‘மகத்தானதல்லவா’! ஆனால் கிழக்கின் உயிரை வதைக்கும் மேற்குலகின் பொருளாதார ஆக்கிரமிப்பு வைரசை தடுத்து நிறுத்த இப்போது சோசலிச முகாம் ஏதும் இல்லை.
இக்கொடிய தொற்று நோய்கள் மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்க நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க (Quarantine) அங்கே போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. சியரா லியோன் மட்டுமின்றி லிபீரியாவில் அதிக பட்சமாக 2,704 பேர் இந்நோய் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர். கினியாவில் 981 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லிபீரியாவின் தலைநகரிலேயே கூட பள்ளிகளின் வகுப்பறைகள் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன என்பதையும், நாட்டின் மொத்த மக்கள் தொகையான 42 லட்சம் பேருக்கு 52 மருத்துவர்கள் (80,000 பேருக்கு 1 மருத்துவர்) மட்டுமே உள்ளனர் என்பதையும் கொண்டு அந்நாட்டின் சுகாதாரத்துறையின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
எபோலா தமது நாடுகளுக்கு பரவக்கூடாது என்ற அளவில் மட்டுமே பிற உலக நாடுகள் இப்பிரச்சனையைப் பார்க்கின்றன. பெயரளவில் மட்டுமே எபோலாவை எதிர்த்து போராடுவதற்காக மருத்துவ குழுக்களையும், உதவியையும் அனுப்பி வருகின்றன.
எபோலா போன்ற வைரஸ்களை உயிரியல் ஆயுதங்களாக பயன்படுத்தி பேரழிவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதால், அமெரிக்கா உயிரியல் ஆயுத முறியடிப்பு என்ற அளவில் மட்டுமே இப்பிரச்சினையை பார்க்கிறது. ஏற்கனவே சியரா லியோனில் லஸ்ஸா வைரசைக் கொண்டு அமெரிக்க இராணுவமும், பல்கலைக்கழகங்களும் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. எழவு வீட்டிலும் ஆதாயம் இல்லாமல் இல்லை!
எபோலா வைரஸ் (மாதிரிப்படம்) – நன்றி : http://conorhearn.com/
எபோலா வைரஸ் ஒரு ஆர்.என்.ஏ வகை வைரஸ் ஆகும். 1976-ல் முதன்முதலில் ஆப்பிரிக்காவின் காங்கோவில் எபோலா நதிக் கரையில் இருந்து பரவிய ரத்த ஒழுக்கு நோயின் காரணியாக இந்த வைரஸ் கண்டறியப்பட்டதால் எபோலா என்று பெயர் சூட்டப்பட்டது. எபோலா வைரசில் ஐந்து வகைகள் இருக்கின்றன. இன்று வரை கிட்டத்தட்ட 42 முறை இந்நோய் பரவி பலரை பலிகொண்டுள்ளது.
பாக்டீரியா முதல் மனிதன் ஈறாக அனைத்து உயிர்களும் செல்களால் ஆனவை. ஒரு செல் என்பது, தன்னை நகலெடுத்து பல்கிப் பெருகுவதற்கும், பாரம்பரிய பண்புகளை சந்ததிகளுக்குக் கடத்துவதற்கும், அதாவது தன்னிசையாக இயங்குவதற்கு தேவையான அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு முழுமையான அமைப்பாகும். முதலில் ஒரு செல் உயிரி தோன்றி அதுவே பின்னர் பரிணாம வளர்ச்சியடைந்து பல்வேறு உயிர்களாக வளர்ச்சியடைந்திருக்கிறது.
செல்கள் உருவாவதற்கு முன்னர், முதலில் புரோட்டின்களும் நியூக்ளியோ அமில மூலக்கூறுகளும் இணைந்து உயிருள்ளவற்றிற்கும் உயிரற்றவற்றிற்கும் இடைப்பட்ட ஒரு அமைப்பு உருவானதாக என நவீன அறிவியலாளர்கள் நிரூபித்திருக்கின்றனர். இவ்வமைப்பை கொண்டவை தான் வைரஸ் எனப்படுவன.
வைரஸ்கள் என்பவை மரபுப் பண்புகளை கொண்ட ஒரே ஒரு டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ வை சுற்றி புரோட்டின் உறை சுற்றப்பட்ட எளிய அமைப்பாகும். இவை தனித்து இயங்க முடியாது, இவை பாக்டீரியாக்கள், தாவரங்கள், விலங்குகள் போனற பிற உயிர்களின் செல்களில் உட்புகுவதன் மூலம் மட்டுமே இயங்க முடியும். நமது மனித செல்லை விடவும், ஒரு செல் உயிரியான பாக்டீரியாவை விடவும் 100 மடங்கிற்கும் மேல் சிறியவையாக இருக்கும் வைரஸ்களை உயிருள்ளனவையாக தான் ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர். மரபியலின் படி ஆர்.என்.ஏ-வை மட்டும் கொண்டவை ஆர்.என்.ஏ வைரஸ், டி.என்.ஏ- வை மட்டும் கொண்டவை டி.என்.ஏ வைரஸ் என வகைப்படுத்தப்படுகின்றன.
மற்ற உயிரணுக்களுடன் தொடர்பு ஏற்படும் போது வைரஸ்கள் தமது டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ வை அந்த செல்லின் உட்செலுத்தி மரபணுவை மாற்றுகின்றன. பின்னர் அந்த செல்லில் இருக்கும் என்சைம்கள், அமினோ அமிலங்களையும், பிற மூலக்கூறுகளையும் பயன்படுத்திக் கொண்டு வைரசின் மரபணுக்கள் தம்மை பிரதியெடுத்துக்கொள்கின்றன. இதற்கான காலம் அடைகாக்கும் காலம் (Incubation Period) எனப்படுகிறது. இவ்வாறு பல்கிப்பெருகிய பிறகு அந்த செல்லை உடைத்துக் கொண்டு வெளியே வந்து மற்ற செல்களை தாக்குகின்றன. இவ்வகையில் உடல் முழுவதும் வைரஸ் தொற்று வேகமாக பரவுகிறது.
எபோலா வைரஸ் உள்ளமைப்பு (நன்றி : http://conorhearn.com/)
ஒவ்வொரு வைரசும் ஒரு குறிப்பிட்ட வகையிலான செல்களில் குடியேறி பல்கிப் பெருகுகின்றது. உதாரணமாக போலியோ வைரஸ் நரம்பு செல்களையும், எயிட்ஸ் (HIV) வைரஸ் நோயெதிர்ப்பு உயிரணுக்களான ரத்த வெள்ளை அணுக்களையும் தாக்குகின்றன.
நமது நோய் எதிர்ப்பு அமைப்பானது இரு அம்சங்களை, கட்டங்களைக் கொண்டது. முதலாவது உள்ளார்ந்த நோயெதிர்ப்பு (Innate Immune System). இது வெளியிலிருந்து வரும் பொதுவான நோய்க்கிருமிகள் மற்றும் உடலுக்கு ஒவ்வாத வெளி மூலக்கூறுகள் எதுவாயினும் அவற்றை தாக்கி அழிக்கின்றன. இரண்டாவது தகவமைத்துக் கொள்ளும் நோயெதிர்ப்பு (Adoptive Immune System). இது குறிப்பிட்ட நோய்க்கிருமிகள், வெளி மூலக்கூறுகளின் பண்புகளையும், அவற்றை எதிர்த்து போராடும் வழிமுறைகளையும் தனது நினைவகத்தில் வைத்துகொண்டு மேம்படுத்திக் கொள்ளும். ஆயினும் வைரஸ்களின் மரபணுக்கள் பிறழ்வு (Mutate) மூலம் தொடர்ந்து தம்மை தகவமைத்துக் கொள்வதால் நோயெதிர்ப்பு சக்தியையும் மீறி நமக்கு அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படுகிறது.
ஒன்றோடொன்று ஊடாடி இணைந்து செயலாற்றும் நோயெதிர்ப்பு அமைப்பின் முக்கிய முன்னணிப் படையணியாக இரத்தத்தில் உள்ள ஏழு வகையான இரத்த வெள்ளை அணுக்கள் செயலாற்றுகின்றன. இந்நோய்யெதிர்ப்பு செயல்பாடானது ஒரு மூலக்கூறு உடலுக்கு சொந்தமானதா (Self Molecule) அல்லது வெளியிலிருந்து வந்துள்ளதா என்பதை தீர்மானிப்பதிலிருந்து துவங்குகிறது. வைரஸ் அல்லது பாக்டீரியா நமது உடலை தாக்கும் போது அவற்றின் மேலுள்ள புரோட்டின்களை கொண்டு அது வெளியிலிருந்து வந்த தாக்குதல் என வகைபிரித்து இரத்த வெள்ளை அணுக்களுக்கு செய்தி அனுப்பப்படும். உடனடியாக அவை அந்த பாக்டீரியாவை அல்லது வைரஸ் தாக்குண்ட செல்களை கொன்றழிக்கும் வேலையை துவங்கி விடுகின்றன. நோயெதிர்ப்பு அமைப்பின் செல்கள், நோய்க் கிருமிகளையும், அவற்றால் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கும் சீர்செய்யும் நடவடிக்கைகளில் இறங்கும்போது அப்பகுதியில் அழற்சி ஏற்படும், உடல் வெப்பநிலை உயரும். இதைத் தான் நாம் காய்ச்சலாக உணர்கிறோம்.
மத மூடநம்பிக்கைகளால் பரவும் எபோலா
எபோலா வைரஸ் உடலில் நுழைந்த உடன் முதலில் உடலில் நோய்க்கிருமிகளின் ஊடுறுவலுக்கு எதிரான படை அணியில் முதல் வரிசையில் இருக்கும் பலவகையான நோயெதிர்ப்பு உயிரணுக்களை குறிவைக்கிறது. பின்னர் இரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் பரவுகிறது. நோயெதிர்ப்பு அமைப்பை செயலிழக்க வைத்த பின் இரத்த நாளங்களை உள்ளிருந்தே அரித்து தின்கிறது. இதனால் இரத்த நாளங்களுக்குள் கட்டிகள் உருவாகின்றன. மேலும், அட்ரினலின் சுரப்பியையும் இந்த வைரஸ் தாக்குவதால் உடலின் ரத்த அழுத்தமும் பாதிக்கபடுகிறது.
அதன் பின் முதலில் சாதாரணக் காய்ச்சல் போல் ஆரம்பிக்கும் இந்நோய் படிப்படியாக தலைவலி, வாந்தி, மயக்கம், மூட்டுவலி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும். மேலும் மூச்சு விடுவதில் சிரமம், தசை வலி மற்றும் ரத்தப்போக்கு இருக்கும். சிலருக்கு வியர்வை நாளங்களில் இருந்து உடலின் அனைத்து துளைகளின் வழியாகவும், உடலினுள்ளும் ரத்தக் கசிவு ஏற்படலாம்.
எபோலா வைரஸ் உடலில் நுழைந்த இரண்டு முதல் 10 நாட்களுக்குப் பிறகுதான் அதன் அறிகுறிகளே தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு 21 நாட்கள் வரைகூட அறிகுறிகள் தெரியாமல் இருக்கலாம். பல்லடுக்கு இரத்த சோதனைகளின் மூலம் மட்டுமே இந்நோயை கண்டறிய முடியும். அதற்குள் இந்த வைரஸ் உடல்முழுவதும் பரவி அபாயகட்டத்தை எட்டியிருக்கும்.
பாதிக்கப்பட்டவர்களின் வியர்வை, உமிழ்நீர், சளி, இரத்தம் போன்ற உடல் திரவங்களின் மூலம் பரவுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடமிருந்து சுமார் 7 வாரங்கள் வரை எபோலா மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த நோயை கண்டறிவதும், கட்டுப்படுத்துவதும் கடினமாயிருக்கிறது. குறிப்பாக இதை சாத்தியப்படுத்தும் மருத்துவ கட்டமைப்பு வசதிகளும், குறைந்தபட்ச விழிப்புணர்வும் ஏழைகளின் கண்டமான ஆப்பிரிக்காவில் இல்லை.
டாக்டர் ஷேக் உமர் கான்
நம்மூர் போல ஆப்பிரிக்காவிலும், இறந்தவர்களின் உடலை குளிப்பாட்டும் வழக்கம் இருப்பதால், எபோலாவினால் இறந்தவர்களின் உடலில் இருந்தும் எபோலா பரவியுள்ளது. மட்டுமின்றி மக்களின் அறியாமை மற்றும் வேறு வழியில்லை எனும் நிலைமை காரணமாக பாரம்பரிய நாட்டுப்புற மருத்தவர்களிடம் – நம்மூர் சிவராஜ் வைத்தியர் போல – சென்று மருத்துவம் பார்க்கின்றனர். இதுவும் எபோலா பரவுவதற்கு ஒரு காரணம்.
மற்ற வைரஸ்களைப் போலவே எபோலா வைரசும் பல்கி பெருகும் போது தன்னைத்தானே மாற்றிக் கொள்கிறது. சியரா லியோனில் 200-க்கும் மேற்பட்ட எபோலா பாதிப்படைந்தவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து எபோலா வைரசின் ஆர்.என்.ஏ-வை படியெடுக்கும் பணி நடத்தப்பட்டது. எபோலா குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளாக மாற்றமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்விலும் டாக்டர் கான் முக்கிய பங்காற்றியுள்ளார்.
டாக்டர் கான் சிகிச்சையளித்து வந்த கெனெமா மருத்துவமனையில் மனிதர்களை கொன்று தின்பதாக புரளி கிளம்பியதையடுத்து அம்மருத்துவமனை தாக்குதலுக்குள்ளானது. கானுடன் வேலை செய்த சுகாதார ஊழியர்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளானதையடுத்து யாரும் அவ்வேலைக்கு வராததால் அம்மருத்துவமனையில் இரத்த ஒழுக்கு நோய்ப் பிரிவையே மூடிவிடும் நிலைக்குள்ளானது.
இத்தனை இடர்ப்பாடுகளுக்கும் மத்தியில் பின்னரும் கான் தனது வேலையை தொடர்ந்து செய்து வந்துள்ளார். இத்தனைக்கும் அவர் வறட்டுக் கோட்பாட்டுவாதியல்ல, மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிரம்பிய கான் தனது வாழ்க்கை பணியை மிகவும் நேசிப்பதாக கூறியிருந்தார். எபோலா போன்ற நோய்கள் தம்மையும் தாக்கக் கூடும் என்று அவருக்கு நிச்சயம் தெரியும். அவரே அதை கூறியிமிருக்கிறார். ஆனால் தான் இந்த வேலையை விட்டு சென்றால் வேறு யார் வந்து இதை செய்வார்கள் என்று மருத்துவராக தொடர்ந்து தனது கடமையை செய்து வந்திருக்கிறார்.
யாரும் செய்யத் தயங்கும் வேலையை அர்ப்பணிப்புடன் செய்து வந்த டாக்டர் கானுக்கும் எபோலா தொற்று ஏற்பட்டு அவர் கடந்த ஜூலை மாதம், தனது 39-வது வயதில் மரணமடைந்தார். கான் மட்டுமின்றி செவிலியர், ஆய்வக உதவியாளர் என இந்த ஆய்வில் பணியாற்றிய ஐவர் எபோலாவினால் உயிரிழந்துள்ளனர்.
எபோலாவை எதிர்த்து போரிடும் மருத்துவப் பணியாளர்கள்
எபோலா பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் சராசரியாக 70%. இன்று வரை எபோலா போன்ற இரத்த ஒழுக்கு ஆட்கொல்லி நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலக சுகாதார நிறுவனம் Zmapp என்ற பரிசோதனை மருந்தை எபோலாவை குணப்படுத்த பயன்படுத்தலாம் என்றும் அறிவித்தது. ஆனால், இந்த மருந்து டாக்டர் கானுக்கு கொடுக்கப்படவில்லை. பரிசோதனை மருந்து டாக்டர் கானுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியாததால் அவருக்கு அதை கொடுக்கவில்லை என அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். அவரது குடும்பத்தினர் இது குறித்து தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
மனிதகுலத்தின் இயற்கை பற்றிய அறிவு பல மடங்கு அதிகரித்தாலும், மிக எளிய அடிப்படையான எபோலா போன்ற நோய்களிலிருந்து கூட ஆப்பிரிக்க மக்களை பாதுகாப்பதைக் செய்ய முடியவில்லை. முதலாளித்துவ லாப வேட்டை தீர்மானிக்கும் திசையில் விஞ்ஞான பணிகள் திசை திருப்பி விடப்படுவதே எபோலாவின் கொலை வேட்டை ஆரம்பித்ததற்கும், தொடர்ந்து பரவுவதற்கும் காரணம்.
நமது சகமனிதர்கள் அடிப்படையான மருத்தவ வசதிகளும், வாழ்க்கை வசதிகளும் இல்லாமல் வாழும் போது நுகர்வுக் கலாச்சாரத்தின் மூலம் எண்ணிறந்த வசதிகள் அத்தியாவசியமானதாக கொட்டப்படுகின்றன. ஒரு ஹாலிவுட் படத்திற்கும், வீடியோ விளையாட்டிற்கும் செய்யப்படும் கிராபிக்ஸ் செலவுகளை வைத்து பல ஊர்களுக்கு தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகளைச் செய்ய முடியும். இதுவே அமெரிக்காவின் போர்த் தளவாடங்களின் மதிப்பீட்டில் முழு ஆப்பிரிக்க கண்டத்திற்கே வாழ்வளிக்க முடியும்.
சரியாகச் சொன்னால் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளங்கள்தான், மேற்குலகின் பளபளப்பிற்கும், அடாவடிக்கும் காரணம்.
விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் நவம்பர் 7 ரஷ்ய புரட்சிநாள் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
தம்பிக்கோட்டை, மழவேனிற்காடு, அண்ணாநகர், அதிராம்பட்டினம் ஆகிய கிளை பகுதிகளில் திரளான தோழர்கள் கொடியேற்றி, இனிப்பு வழங்கியும், இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியை அடைய அர்ப்பணித்து பாடுபடவும் உறுதியேற்று நவம்பர் புரட்சி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி, பட்டுக்கோட்டை
2. தருமபுரி
ஏழை மக்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய உன்னத நாள் உழைக்கும் மக்களின் பொன்நாள்
நவம்பர் 7 ரசிய புரட்சிநாள் நீடுழி வாழ்க
நவம்பர் 7 ரசிய புரட்சி நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் இயங்கி வரும் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
வி.வி.மு செயல்படும் எட்டு பகுதிகளில் கொடியேற்றி பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும், கிராமங்களில் பேரணியாக சென்றும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதற்கு முன்னதாக இளைஞர்களுக்கு வாலிபால் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மூன்று கிராம இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக K அக்ரகாரம் கிளை பகுதியில் மையப்படுத்தி பொதுக்கூட்டம் போல மேடை அமைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்கு தோழர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தோழர் சிவா, வட்டாரக் குழு உறுப்பினர் தலைமை தாங்கினார்.
தோழர் சக்திவேல், பு.மா.இ.மு “புதியதோர் உலகைப் படைக்க புரட்சிப் பாதை வேண்டும்” என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.
தோழர் பாலன், பு.மா.இ.மு, “பகத்சிங் கனவை நினைவாக்குவோம்” என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.
தோழர் அற்புதம், பு.மா.இ.மு “நாங்க சும்மா இருந்தாலும் நாடு எங்களை விடுவதில்லை” என்ற துரை சண்முகம் எழுதிய கவிதை வாசித்தார்.
எட்வின், இலக்கியா போன்ற சிறுவர்கள் புரட்சிகர பாடல் பாடினார்கள்.
இறுதியாக நவம்பர் 7 சிறப்பையும் புதிய ஜனநாயகப் புரட்சியின் தேவையையும் பற்றி தோழர் முத்துகுமார் சிறப்புரை ஆற்றினார். விளையாட்டு பரிசு பொருட்கள் கொடுத்தும், பொதுமக்கள் மற்றும் தோழர்களுக்கு உணவு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல் விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம் வட்டம்
9943312467
3. கோத்தகிரி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் இயங்கிவரும் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் சார்பாக 97-வது ரசியப் புரட்சி நாள் விழா கொடியேற்றத்துடன் துவங்கி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சி துவக்கமாக வாகனபிரிவு சார்பாக தோழர்கள் கொடியேற்றி சிறப்புரை நிகழ்த்தி அனைவருக்கும் இனிப்பும் தேநீரும் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்புரை நிகழ்த்தி அனவைருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விரு நிகழ்ச்சிகளிலும் தோழர் ஆனந்த் ராஜ் தலைமையேற்க தோழர் விஜயன் சிறப்புரையாற்றினார்.
பகல் 12 மணிக்கு அனைத்துப் பகுதி தோழர்களையும் ஒன்றிணைத்து அரங்கு கூட்டம் நடத்தப்பட்டது. தோழர் ஆனந்தராஜ் முன்னிலையில் தோழர் யுவன் சிறப்புரையாற்றினார். தோழர்களும் தோழரின் குழந்தைகளும் எழுச்சிமிகு புரட்சிகர பாடல்களை பாடி அனைவருக்கும் உணர்வூட்டினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு பெண்கள், குழந்தைகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டனர். தோழர்கள் தத்தமது குடும்பத்துடன் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது. மேலும், இந்நிகழ்ச்சியில் சுமார் 50 பேர் புதிய தோழர்களாக கலந்து கொண்டார்கள். புரட்சிகர பாடலும் உரைகளும் இவர்களை அமைப்பாக உயர்த்த உதவும் வகையில் அமைந்தன.
இறுதியாக, அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது.
பார்ப்பன பண்பாட்டு பண்டிகைகளுக்கு மத்தியில் நவம்பர் புரட்சிநாள் விழா என்பது பாட்டாளி வர்க்க திருவிழா பண்பாட்டு நிகழ்ச்சியாக, தனியார்மயம், தாராளமயம், ஒழிப்பு, மேலாதிக்க அமெரிக்க பார்ப்பன பாசிசத்தை ஒழிக்க பாட்டாளிகள் ஒன்றிணைவதின் அவசியத்தை அனைவருக்கும் இந்நிகழ்ச்சி உணர்த்தியது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல்,
பாலன் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்
4. கோவை – நவம்பர் புரட்சி தின விழா
கோவை சின்னவேடம்பட்டி CRI கம்பெனி அருகில் உள்ள தனியார் இடத்தில் நவம்பர் புரட்சி தின விழா கொண்டாட முடிவு செய்தோம். கோவையின் விசேச காவல்துறை அராஜகம் காரணமாக சரவணம்பட்டி காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். வழக்கம் போல் அனுமதி மறுத்தார்கள்.
“என்ன காரணம்..?” எனக் கேட்டால், “கமிஷனர் உத்தரவு. அதற்கு மேல் எங்களிடம் எதுவும் கேட்க வேண்டாம்” என காவல் நிலையத்தில் கறாராக கூறிவிட்டார்கள்.
CRI முதலாளியின் நிர்ப்பந்தம் காவல் துறையின் மேலிடத்தில் மிகவும் பலமாக உள்ளது என்பதை அறிந்தோம்
“ஒலிபெருக்கி இல்லாமல் தனியார் இடத்தில் நடத்துவோம்” என்றோம்.
உடனே காவல் துறை, “சின்னவேடம்பட்டி ஊருக்குள் வேண்டுமானால் தண்ணீர் டேங்க் மைதானத்தில் நடத்துங்கள்” என்று ஜனநாயகமாக (!?) சொன்னார்கள்.
எப்படியும் இவர்கள் CRI கம்பெனி அருகில்தான் நடத்துவார்கள்; ஊருக்குள் போக மாட்டார்கள் என்று சரவணம்பட்டி காவல் துறை சாதுர்யம் காட்டியது.
“நாம் உடனே ஊருக்குள் நடத்துகிறோம்” என்று எழுதிக் கொடுத்தோம். உடனே காவல் துறை திடுக்கிட்டு மேலே கேட்டுச் சொல்கிறோம் என பின்வாங்கினார்கள். பின்னர் வேறு வழி இல்லாமல் 5-ம் தேதி இரவு அனுமதி வழங்கினார்கள். ஒரு நாளில் நோட்டீஸ் போஸ்டர் அடிப்பதிலிருந்து அணிதிரட்டல் வரை எல்லா ஏற்பாடும் செய்து 7-ம் தேதி மாலை 5 மணிக்கு விழா தொடங்கியது.
மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் திலீப் தலைமை தாங்க சின்னவேடம்பட்டி மக்கள் ஆங்காங்கே இருந்தவாறே கவனிக்க தெருமுனை நிகழ்ச்சியாக ஆரம்பித்து பொதுக்கூட்டமாக மாறியது.
டுகெதர் கம்பெனி துணைத் தலைவர் தனது அனுபவங்களை, முதலாளித்துவ பயங்கரவாதத்தை விளக்கினார்.
ஃபெரோலிங்க்ஸ் செயலாளர் தோழர் நித்தியானந்தன் முதலாளியின் வீட்டை முற்றுகையிட்ட அனுபவத்தை சொல்ல கூட்டம் களை கட்டியது.
கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்க முருகன் மில் தலைவர் தோழர் ரங்கசாமியும் இணைச் செயலர் ஜெகநாதனும் பாட்டாளி வர்க்கத்தின் கம்பீரத்துடன் பேசினார்கள்.
கம்போடியா மில் கிளைச் செயலாளர் தோழர் மோகன்ராஜ் நவம்பர் புரட்சியின் சிறப்பு, யூனியன் கார்பைடு அராஜகம், மோடியின் தொழிலாளர் விரோத போக்கு என சகல அம்சங்களையும் இணைத்து சிறப்பாக உரையாற்றினார்.
CRI கிளைச் செயலர் தோழர் குமாரவேல் “புஜதொமு சங்கத்தின் அரசியல் எங்களை வளர்த்தது, எங்களுக்கு சுய மரியாதையை கற்றுக் கொடுத்தது, நவம்பர் 7 நிகழ்ச்சியை எங்கள் பகுதியில் நடத்தியது பொருத்தமான முடிவு” என்றார்.
இறுதியாக மாவட்டச் செயலாளர் தோழர் விளவை இராமசாமி பேசுகையில்,
கோவையில் நடந்த புஜதொமு சங்கத்தின் வீரமிக்க போராட்டத்தை இணைத்துச் சொல்லி, 1917 நவம்பர் புரட்சி தொழிலாளர்களுக்கு என்ன செய்தது அதன் சாதனை என்ன? கோவையில் நவம்பர் 7 ஐ எப்படி நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றும், காவல்துறை இராணுவம் போன்றவற்றை எப்படி பாட்டாளி வர்க்கம் கையாள வேண்டும் என்றும், நமது வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றும் நம்பிக்கையூட்டும் படி ஒரு மணி இருபது நிமிடங்கள் பேசினார். நவம்பர் புரட்சியின் எழுச்சி பகுதி முழுவதும் பரவும்படி பேசினார். பகுதி மக்களின் ஆதரவு, CRI முதலாளியின் பித்தலாட்டதை தோலுரித்தது. இவையெல்லாவற்றையும் CRI முதலாளியை தனிமைப்படுத்தும் இலக்கில் பேசி நிறைவு செய்தார்.
பின்னர் கோவை மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் நடந்த புரட்சிகர கலை நிகழ்ச்சி சின்னவேடம்பட்டி மக்களை நமது அமைப்பின் பக்கம் திருப்பும் வகையில் அமைந்தது.
பின்னர் அனைவருக்கும் இனிப்பு காரம் தேநீர் வழங்கப்பட்டது. சிஆர்ஐ கிளைத் தலைவர் தோழர் மூர்த்தி நன்றி சொல்ல நவம்பர் புரட்சி தின விழா கம்பீரமாக நிறைவடைந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கோவை
5. மதுரை – நவம்பர் புரட்சிதின விழா
மதுரையில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் நவம்பர் ரசிய சோசலிச புரட்சி நாள் விழா அரங்கக்கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
விழாவிற்கு புஜதொமு தோழர் பிரகாஷ் தலைமை தாங்கி நடத்தினார். தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியுடன் காலையில் துவங்கிய விழா முதலில் கத்தி திரைப்படம் விவாதிக்கப்பட்டது. விவாதத்தை மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலர் தோழர் லயனல் அந்தோனிராஜ் தலைமை தாங்கி ஒருங்கிணைத்தார்.
கத்தி திரைப்படம் போலியான கார்ப்பரேட் எதிர்ப்பை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களை அரசே அனுமதித்து சொந்த நாட்டு மக்களை கொள்ளையிட அனுமதித்து வருகிறது. ஆனால் படமோ மிகவும் செயற்கையாக விஜயின் கதாநாயக பிம்பத்துக்காக கார்ப்பரேட் எதிர்ப்பை வைத்து பின்னப்பட்டுள்ளது. நிஜத்தில் விஜய் கோக்கின் தூதராக இருந்து கொண்டு படத்தில் மட்டும் கோலா கம்பெனியை எதிர்த்து போராடுவது போல் நடிப்பதை மிகப்பெரிய மோசடி என்று பல்வேறு தோழர்கள் தம் கருத்தை கூறினார்கள் . இதே கருத்தை விவாதத்தை ஒருகிணைத்த தோழர் லயோனல் அந்தோனிராஜ் அவர்களும் விவரித்து உரையாற்றினார்கள்.
திரைப்பட கலந்துரையாடல் முடிந்தவுடன் மதியம் மாட்டுகறி விருந்து நடைபெற்றது. மதிய நிகழ்வாக மதுரை புமாஇமு தோழர் அன்பழகன் “விளையாட்டும் அரசியலும்” என்கின்ற தலைப்பில் உரையாற்றினார். விளையாட்டில் ஏழை மற்றும் அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு பணக்காரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர் என்பதை உதாரணங்களோடு அம்பலப்படுத்தி, சோசலிசத்தில் மட்டுமே திறமையான வீரர்கள் ஜொலிக்க முடியும் என்பதை விளக்கி பேசினார்.
உசிலம்பட்டியை சேர்ந்த விவிமு தோழர் கயல்விழி “இன்றைய சமூக நிலையில் பெண்களின் மீதான ஒடுக்குமுறை”யை பற்றி பேசினார். பெண்கள் வீட்டில் ஓய்வின்றி வேலை பார்ப்பது பற்றியும், அவர்களின் மீதான மத, சாதி வன்முறைகள் பற்றியும், உசிலை வட்டாரத்தில் கொளரவ கொலைக்கு பலியான விமலா தேவியை உதாரணமாக காட்டியும் பேசினார்.
மதுரை பெவிமு தோழர் ராணி, அவர் எப்படி அமைப்புக்குள் வந்தார் என்ற அனுபவத்தை பற்றி பேசினார். தோழர்களின் அர்பணிப்பான போராட்டமும் மக்களை நேசிக்கும் தன்மையையும் பார்த்து, தானும் அமைப்புக்குள் செயல்பட வேண்டும் என்று முடிவுக்கு வர ஈர்க்கப்பட்டதை நினைவுகூர்ந்தார். தன்னுடைய பகுதியில் டாஸ்மாக்கிற்கு எதிராக பெவிமு சார்பாக சுவரொட்டி ஒட்டியதால் காவல் துறை வழக்கு பதிந்து தேடிய போது முதலில் தாம் பதட்டப்பட்டதையும் அதற்கு தோழர்கள் தைரியத்தையும் ஆதரவும் நம்பிக்கையும் தந்து போராட ஊக்கமளித்ததை உணர்வுடன் பகிர்ந்து கொண்டார்.
விவிமு வின் உசிலை வட்டாரச் செயலர் தோழர் குருசாமி “இந்து பாசிசத்தின் இளைய பங்காளியான சாதியவாதிகள்” என்ற தலைப்பில் பேசினார். பார்ப்பனவாதிகளை எதிர்ப்பது போல இடைநிலை சாதிகளை எதிர்ப்பது அவ்வளவு எளிதானது அல்ல. இடைநிலை சாதிகளை எதிர்ப்பது என்பது நம்கண் முன்னால் நம் அருகில் இருப்பவர்களை எதிர்ப்பது. இது மிகப் பெரிய போராட்டம். அதில் தோழர்களின் சமரசங்களை விமர்சனத்துக்குள்ளாக்கினார். மேலும் சாதியவாதிகள் எவ்வளவு அபாயகரமாக வளர்ந்து வருகிறார்கள் என்பதை எச்சரிக்கை செய்தும் அதை முறியடிப்பது புரட்சிக்கு எவ்வளவு அவசியமானது என்ற அவசியத்தை விளக்கி பேசினார்.
ம.உ.பா. மையத்தின் மதுரை மாவட்ட இணைசெயலாளர் வாஞ்சிநாதன் தோழர்கள் அரசியல் வேலை செய்வதில் நம்முடைய மனத்தடைகள் என்ன? என்பதை சுட்டிக்காட்டி பேசினார். அதில் இன்று பாசிசம், கார்ப்பரேட் பயங்கரவாதமும் பரவி வருகின்ற சூழலில் தோழர்கள் அதற்கு எதிராக தொடர்ச்சியாக, உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டும் என்கின்ற உணர்வு இல்லாமல் இருப்பது பற்றியும், குடும்பத்தில் தோழர்கள் செய்து கொள்ளும் சமரசங்களையும் விமர்ச்சித்து சுட்டிக்காட்டியும், எதிரிகள் எவ்வளவு தீவிரமாக வேலை செய்கிறார்களோ அதை விட தீவிரமாகவும் அறிவுபூர்வமாகவும் செயலாற்றினால்தான் வெற்றி சாத்தியம் என்று எச்சரிக்கை செய்து பேசினார்.
இறுதியாக மகஇக வின் மாநில் செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் “கம்யூனிச அகிலத்தின் 150-வது ஆண்டும் மறுகாலனியாக்க சூழலில் நவம்பர் புரட்சியின் இன்றைய தேவையும் ” என்ற தலைப்பில் பேசினார்.
முதலாம் அகிலம் உருவாகியதில் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரின் பங்களிப்பு பற்றியும் பாரிஸ் கம்யூன் எழுச்சியை மார்க்ஸ்ம் ஏங்கல்ஸ்ம் ஆதரித்ததையும் மேலும் 2-வது அகிலத்தின் சந்தர்ப்பவாதிகள் ஏகாதிபத்திய விசுவாசிகள் ஆனதை தோழர் லெனின் எவ்வாறு அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தினார் என்பதை ஆதாரங்களுடன் விளக்கி பேசினார்.
மேலும் இன்று நாடு மீண்டும் காலனியாகி வருகின்ற சூழலில் நவம்பர் புரட்சி எவ்வாறு நமக்கு உத்வேகமளித்து நம்முடைய நாட்டிலும் அத்தகைய தொரு புரட்சி தேவை என்பதை நமக்கு முன் உள்ள சூழல்களையும் சவால்களையும் ஒப்பிட்டு விளக்கி பேசினார்.
உரைகளுக்கிடையே தோழர்கள் ஆசை, திருமுருகன், கலைசெல்வி ஆகியோர் புரட்சி தினம் மற்றும் சமூக அவலங்களை பற்றியும் தாம் எழுதியிருந்த கவிதகைளையும், மேலும் சிலர் புரட்சிகர பாடல்களையும் பாடினார்கள். பெவிமு தோழர்கள் “சாதி வெறியர்களுக்கு எதிராக போராடி உயிர்நீத்த வீராங்கனை விமலா தேவி”யின் போராட்டத்தை சிறு நாடகமாக நடத்தி காட்டினார்கள்.
இறுதியில் சர்வதேச கீதத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.
தகவல் : மக்கள் கலை இலக்கியக் கழகம், மதுரை.
6. தஞ்சை – மனித குல வரலாற்றில் மகத்தான நாள் நவம்பர் ஏழு!
“மனித குல அறிவாற்றலை அறிவுச் சொத்துடமை என்ற பெயரில் தனி உடமையாக்கி கொள்ளையடித்து வளர்ச்சியை தடுக்கிறது முதலாளித்துவ சமூகம். அதற்கு நேர் எதிராக மனித குல அறிவு வளர்ச்சியின் தொடர்ச்சியை, தனது அறிவியல் அனுபவத்தை, ஆற்றலை உலகெங்கும் பரவலாக்கி மனித குலம் முழுமையும் வளர்த்தது சோசலிச சமூகம்” என்றார் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலர் தோழர்.காளியப்பன்.
மகத்தான ரஷ்ய சோசலிச புரட்சியின் 97-ம் ஆண்டுவிழா தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் கொண்டாடப்பட்டது. காலையில் தஞ்சை கீழ வாசலில் ம.க.இ.க தஞ்சை மாநகர பொருனர் தோழர்.அருள் தலைமையில் ம.க.இ.க செயற்குழு உறுப்பினர்கள் தேவன் இராசேந்திரன், தமிழ்ச்செல்வன் முன்னிலையில் ம.க.இ.க கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மாலையில் இரயிலடியில் ம.க.இ.க மாநகரச் செயலர் தோழர்.இராவணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர்.காளியப்பன் சிறப்புரையாற்றினார்.
மனித குல வரலாற்றில் மகத்தான நாள் நவம்பர் ஏழு. அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களால் இழிவு படுத்தப்பட்ட ரஷ்ய நாட்டின் பாட்டாளி வர்கமும், விவசாயிகளும் இணைந்து, ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தலைவர் தோழர்.லெனின் தலைமையில் மனித குலம் கண்டிராத சமத்துவ சமுதாயத்தை படைத்தனர். உலகிற்கே வழிகாட்டும் பாட்டாளி வர்க்க அரசாக சோவியத் ரஷ்யா விளங்கியது. ஏகாதிபத்திய காலனிய சுரண்டலிலிருந்து விடுபட காலனிய நாடுகளுக்கு உதவியது. சீனா, கிழக்கு ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பாட்டாளி வர்க்க அரசுகள் அமைய துணை நின்றது.
ரஷ்ய மக்களின் உழைப்பும், பாட்டாளி வர்க்க சர்வதேச கண்ணோட்டமும், இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளின் பொருளாதார, அறிவியல் வளச்சி பெற பேருதவி புரிந்ததை யாரும் மறுக்க முடியாது. நெய்வேலி நிலக்கரி சுரங்கம், பொக்காரோ பிலாய் இரும்பு ஆலை போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் இன்றும் அதற்கு சாட்சியாக விளங்குகின்றன.
உலகமயம் என்ற போர்வையில் மேல்நிலை வல்லரசுகள் இந்திய வளங்களை கொள்ளையடிக்கும் இன்றைய மறு காலனியாக்கச் சூழலை ஒப்பிட்டால் சோவியத் ரஷ்யாவின் உதவி எவ்வளவு மகத்தானது என்பது விளங்கும்
இரண்டு கோடி ரஷ்ய மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து பாசிச ஹிட்லரின் கோரத் தாக்குலிலிருந்து உலக மக்களை காப்பாற்றினார்.
முதலாளித்துவவாதிகள், அற்ப அறிவு ஜீவிகள் கம்யூனிசம் தோற்றுவிட்டது, அது பிறந்த மண்ணிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது என்று கதைத்தாலும் கை கொட்டி மகிழ்ந்தாலும் மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமை ஒழிக்கப்படும் வரை மார்க்சிய – லெனினியத்திற்கு மரணமில்லை முதலாளித்துவம் ஒழிக என்றும் முழக்கம் அமெரிக்க தெருக்களிலேயே ஒலிக்கத் தொடங்கி இருப்பதே இதற்கு சாட்சி.
தனியார் மயம், தாராளமயம், உலக மயம் என்று பெருங்கூச்சலோடு அரங்கேறிக் கொண்டிருக்கும் மறு காலனியாக்க சூழலின் மார்க்சிய – லெனினிய மாசேதுங் சிந்தனையை உயர்த்தி பிடித்து புரட்சிகர போராட்டத்திற்கு அணி திரள்வது மட்டுமே இன்று நம் கண் முன்னே உள்ள ஒரே ஒரு தீர்வு என்று கூறி புரட்சிகர அமைப்புகளில் அணி திரள அறை கூவல் விடுத்தார்.
ம.க.இ.க தோழர்கள் குடும்பத்துடன் பங்கேற்தோடு மக்கள் அணி திரண்டு ஆதரவளித்தனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல்: மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சாவூர்
7. வேலூர்- 97 -ம் ஆண்டு நவம்பர் புரட்சி விழா!
ருஷ்யாவில் மாமேதை லெனின் அவர்கள் தலைமையில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றிய சோசலிசப் புரட்சியின் 97 -ம் ஆண்டு விழா வேலூர் தோட்டப்பாளையத்தில் நவம்பர் 7, 2014 அன்று மக்கள் கலை இலக்கியக் கழகம், வேலூர் கிளையின் சார்பாக தெருமுனைக் கூட்டமாக பொதுமக்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.
விழாவை தலைமை ஏற்று நடத்திய ம.க.இ.க மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் தனது தலைமை உரையில், இன்றைய மோடி அரசு பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்து அவர்கள் கொள்ளையடிக்க வழிவகுக்கும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைச் சாடினார்.
தோழர்.வாணி விழாவில் சிறப்புரையாற்றினார். பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, அதிகரித்து வரும் காய்கறி- மளிகை ஆகிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால் சாமான்யர்கள் படும் அவதிகளை எடுத்துரைத்தார். ஒரு பக்கம் கல்வி – சுகாதாரம் – மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அரசு புறக்கணிப்பதும், மறுபக்கம் தனியார் முதலாளிகள் இத்துறைகளில் கொள்ளையடிக்க அரசு அனுமதி அளித்துள்ளதால் இவை யாவும் மக்களுக்கு எட்டாக் கனியாக இருப்பதற்கான காரணம் தாராளமயத்தின விளைவுதான் என்பதை தனது உரையில் முன்வைத்தார்.
அந்நிய முதலீடு இந்தியாவிற்குள் வந்தால் பன்னாட்டுக் கம்பெனிகள் பல்கிப் பெருகும்; வேலை வாய்ப்பு பெருகும் என்றார்கள்; அவ்வாறு வந்த நோக்கியா நிறுவனம் 24,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து கொள்ளையடித்த பிறகு திடீரென கம்பெனியை இழுத்து மூடியதால் முப்பதாயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து நடுத் தெருவில் நிற்பதற்கு இந்த ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கும் புதிய பொருளாதாரக் கொள்கையே காரணம் என்பதை தனது உரையில் நிறுவினார்.
மரத்தடியில் சரகுகளை மட்டுமே கூட்டித் திரியும் மோடியும் – தமிழிசை சௌந்தரராஜனும் நாறிக் கிடக்கும் நகராட்சிக் கால்வாய்களையும், பேருந்து நிலைய கக்கூசுகளில் குவிந்து கிடக்கும் மலக்குவியல்களையும் கூட்ட முன்வரவேண்டியதுதானே என கேள்வி எழுப்பி மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் மோசடியை எள்ளி நகையாடினார்.
சாராயக் கடைகளை அடித்து நொறுக்கினால் மட்டுமே சாராயத்தினால் ஏற்படும் கேடுகளை ஒழிக்க முடியும் என்பதை எழுச்சியோடு தனது உரையில் எடுத்து இயம்பினார். மேலும் பெருகி வரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை, சாதி மறுப்புத் திருமணங்களில் நடைபெறும் கௌரவக் கொலைகள், சிறு வயதிலேயே நடைபெறும் கட்டாய குழந்தைத் திருமணங்கள் போன்ற பல்வேறு சமூகப் கொடுமைகளைச் சாடிய அவர் 97 ஆண்டுகளுக்கு முன்பு ருசியாவில் நடைபெற்ற புரட்சியைப் போன்று இந்தியாவில் புரட்சி ஒன்றை நடத்தாமல் மேற்சொன்ன கொடுமைகளிலிருந்து மக்கள் விடுபட முடியாது; எனவே அத்தகையதொரு புரட்சிக்காகப் போராடும் மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற புரட்சிகர அழைப்புகளில் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என அறைகூவல் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.
விலைவாசி உயர்வைச் சாடி ”உப்பு வெலக் கூடிப் போச்சண்ணே“ என்கிற பாடலையும், மோடியின் முன்னேற்றத்தைச் சாடி ”நாடு முன்னேற்றமுன்னு மோடி முழங்குறாரு” என்கிற பாடலையும் விழா மேடையில் தோழர்கள் பாடினர்.
விழாவில் தோழர். துரை.சண்முகம் அவர்களின் ”ரசியப் புரட்சி! செயலின் மகிழ்ச்சி!” என்கிற கவிதையை தோழர்.முத்துராமன் வாசித்தார்.
இறுதியில் தோழர்.அகிலன் நன்றி உரை கூறி விழாவை முடித்து வைத்தார். அதன் பிறகு அங்கு கூடியிருந்தவர்களுக்கு இனிப்பும் காரமும் வழங்கி தங்களது மகிழ்ச்சியை தோழர்கள் பகிர்ந்து கொண்டனர்.
விழாவையொட்டி மக்களிடையே பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இது ஒரு புதிய நல்லதொரு புரட்சி விழாவாக இருந்ததாகவும், நாலு விசயங்களை தெரிந்து கொள்கிற விழாவாகவும் இருந்ததாக விழாவில் கலந்து கொண்டு மக்கள் குறிப்பாக பெண்கள் கருத்து தெரிவித்தனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல்: மக்கள் கலை இலக்கியக் கழகம், வேலூர்
8. தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட்த்தில் கோவிபட்டியில் உள்ள முடுக்கலான்குளத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து நவம்பர் 7 ஐ எளிமையாக கொண்டாடினர்.
காலை 8.00 மணியளவில் பேருந்து நிறுத்தத்தில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் பங்கேற்க, சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடித்தும், நம் நாட்டு நிலைமைகளுடன் ஒப்பிட்டும் விளக்கவுரையாற்றப்பட்டது. உடனே வண்டியை எடுக்காமல் சுமார் 15 நிமிடம் காத்திருந்து நமக்காக ஒத்துழைத்த பேருந்து ஓட்டுனர் உள்பட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அன்று மாலையில் 10 பேர் பங்கேற்ற அறைக்கூட்டமும் நடத்தப்பட்டது.
தூத்துக்குடியில் புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணி சார்பாக மாலை 5.00 மணியளவில் தொழிலாளர்கள், வழக்குரைஞர்கள் உள்ளிட்டு 12 பேர் கலந்துகொண்ட அறைக்கூட்டத்தில் “ஸ்டாலின் சகாப்த்தம்” குறுந்தகடு காண்பிக்கப்பட்டு, நம் நாட்டு நிலைமைகளுடன் ஒப்பிட்டு விளக்கப்பட்டது. கலந்துரையாடல் பாணியில் கேள்வி பதிலாக பேசப்பட்ட இக்கூட்டம் 2.30 மணி நேரம் நடந்தது. இங்கு நடத்தப்படும் முதல் நவ. 7 நிகழ்ச்சியாகவும் இது அமைந்தது.
அதே போல் நெல்லையிலும் 20 மாணவர்களுக்கு இரண்டு அறைக் கூட்டங்களாக எடுக்கப்பட்டது.
9. ஒசூர்
உலகின் முதல் சோசலிச குடியரசு நாளான நவம்பர் 7 ஐ ஓசூரில் செயல்பட்டு வரும் புரட்சிகர அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தனது தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியுடன் சேர்ந்து டி.வி.எஸ் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான கொத்தகொண்டப்பள்ளியில் உழைக்கும் மக்களோடு இரண்டறகலந்து அவர்களுடன் ஐக்கியப்பட்டு எழுச்சிகரமாக கொண்டாடின. உழைக்கும் மக்கள் தன்னார்வத்துடன் பேதமின்றி கலந்துக்கொண்டு தங்களின் பங்களிப்பை செலுத்தினர். 07.11.2014 மாலை 5 மணியளவில் கொடியேற்றி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி கூடியிருந்த மக்களிடையே ஒரு பொதுக்கூட்டம் போல முறையாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
புதிய ஜனநாயத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் தலைமையில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் இரவிச்சந்திரன், மற்றும் மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ரசியாவில் புரட்சிக்கு முன் இருந்த சுரண்டல் அவல நிலைமைகளை பட்டியலிட்டு எடுத்துரைத்து அதனை அடியோடு ஒழித்துக் கட்டி உழைக்கும் மக்களை அரியனையில் அமர்த்தி பூவுலக சொர்க்கமாக நிகழ்த்திக்காட்டிய வரலாற்றை தொகுத்து கூட்டத்தில் எளிமையாக உரையாற்றப்பட்டது. அந்த நாளை நாம் நமது நாட்டில் ஒரு திருவிழாவை போல கொண்டாடி மகிழ்வதோடு நில்லாமல் அவ்வாறு இங்கும் ஒரு புரட்சியை சாதித்துக்காட்டவேண்டும் என்ற உறுதிமொழியோடு களத்தில் போராட அழைப்புவிடுவதாகவும் இக்கூட்டம் அமைந்திருந்தது.
இக்கூட்டத்தின் முடிவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 02.11.2014 அன்று காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை நடத்தப்பட்ட சிறுவர், பெரியவர், பெண்கள் பங்கேற்ற பல்வேறு விளையாட்டுப்போட்டிகளுக்கான பரிசுகளை வழங்கி மகிழ்விக்கப்பட்டது.
இறுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் கோபால் நன்றியுரையாற்றினார்.
இரவு உணவாக மாட்டுக்கறி உணவு பரிமாறப்பட்டது. இந்நிகழ்வின் இறுதிவரை கலந்து கொண்ட ஒரு தொழிலாளி இதுதான் உண்மையான மகிழ்வான விழா. நான் இனி இதுமாதிரியான விழாவினில் தவறாமல் வருடம்தோறும் எங்கிருந்தாலும் வந்து கலந்துக்கொள்வேன் என்றும் வழமையான தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களை புறக்கணிப்பேன் என்றும் அறிவித்துச் சென்றதே இந்த நவம்பர் தின விழா நிகழ்சியின் வெற்றியை பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
இவண் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஓசூர். தொடர்புக்கு-9788011784
சதி என்ற சொல் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. அவர் தன்னை எம்.ஜி.ஆரின் உடன்கட்டை (சதி) என்று அறிவித்துக் கொண்டவர். தற்போது குன்ஹாவின் தீர்ப்புப்படி, அவர் கூடிச் சதி செய்து கொள்ளையடித்த குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது இ.பி.கோ 120 – பி பிரிவின் படியான சதி. அ.தி.மு.க. அடிமைகளின் கூற்றுப்படி அம்மாவுக்கு எதிரான இத்தீர்ப்பு ராஜபக்சே அரங்கேற்றியிருக்கும் சர்வதேசச் சதி.
தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக, தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பன சதியின் நாயகிதான் பொறுக்கி அரசியலின் அம்மாவான பாப்பாத்தி ஜெயலலிதா.
இவை ஒருபுறமிருக்க, நாம் இங்கே கூறவிரும்பும் சதி என்பது தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக, தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பனச் சதி! இந்தச் சதியின் நாயகி – ஜெயலலிதா.
பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் ஜெ. வெளியிட்டிருக்கும் அறிக்கையைப் பார்த்தீர்களா? பொது வாழ்வு என்பது நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானது என்பது அரசியலில் நுழைந்த காலம் முதல் அவருக்குத் தெரியுமாம். நினைவு தெரிந்த நாள் முதல் பல சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி வந்திருக்கிறாராம். தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக எந்த தியாகத்தையும் செய்வாராம்!
குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட ஒரு திருடன், தான் நிரபராதி என்று கூறிக் கண்ணீர் விடுவதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். தன்னைத் தியாகி என்று பிரகடனம் செய்து கொள்வதும், தான் கொள்ளையடித்த சமுதாயத்தையே தனக்காகக் கண்ணீர் விடுமாறு மிரட்டுவதும் எங்காவது நடக்குமா? தமிழகத்தில் நடக்கிறது. அது மட்டுமல்ல, உண்ணாவிரதத்துக்கு 200 ரூபாய், மனிதச் சங்கிலிக்கு 300, பால்குடத்துக்கு 500, மொட்டைக்கு 3000, மரணத்துக்கு 3 லட்சம் – என்று தமிழக மக்களின் மானமும் உயிரும் விலை பேசப்படுகிறது. தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் முன்னால் மண்டியிடுமாறு தமிழகமே நிர்ப்பந்திக்கப்படுகிறது.
வரலாற்றில் தனிநபர்கள் வகிக்கும் பாத்திரத்தை விளக்கப் புகுந்த ரஷ்ய மார்க்சிய அறிஞர் பிளக்கானவ், “தனி நபரின் முக்கியத்துவம் என்பது ஒரு மன்னன் பெண்பித்தனாக இருப்பதற்கும், அவனது குதிரை லாயக்காரன் பெண்பித்தனாக இருப்பதற்கும் இடையிலான வேறுபாட்டைப் போன்றது. முன்னதற்கு அரசியல் விளைவு உண்டு, பின்னதற்கு அரசியல் விளைவு கிடையாது” என்பார். அந்த வகையில் எம்.ஜி.ஆர் என்ற பாசிசக் கோமாளியின் பெண்பித்து தோற்றுவித்த “அரசியல் விளைவை” நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். சூடு சொரணையும் சுயமரியாதையும் இல்லாத நிலையை நோக்கித் தமிழ்ச் சமுதாயம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சுதாகரன் திருமண ஊர்வலத்தில்… “நடந்து வந்ததொரு நகைக்கட, அதை நிறுக்க தேவையொரு லாரி எட!”
ஒருபுறம் ஜெயலலிதாவின் குற்றங்களை இருட்டடிப்பு செய்யும் வட இந்திய, பார்ப்பன ஊடகங்கள், இன்னொருபுறம் கூலிக்கு மாரடிக்கும் அ.தி.மு.க. கூட்டத்தின் மீது வெளிச்சத்தைப் பாச்சி, இவையனைத்தும் தமிழ்ச் சமூகத்துக்கே உரிய இழிவுகள் என்பதாகவும், திராவிட இயக்க அரசியலின் விளைவு என்பதாகவும் கேலி செய்கின்றன. பொறுக்கி அரசியலின் “அம்மா”வான பாப்பாத்தியை குற்றத்திலிருந்து விடுதலை செய்து விட்டு, திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் கூண்டில் ஏற்றுகிறது இந்தத் தந்திரம்.
தமிழ்நாட்டைப் பீடித்த அரசியல் சீக்கு!
“வேறு எந்த ஆட்சியிலும் தமிழகம் இவ்வளவு தாழ்ந்து போனது கிடையாது. ஊழல் மூலம் நடக்கும் பகல்கொள்ளையிலும் சரி, அரசின் ஆசியுடன் நடக்கும் அராஜகங்களிலும் சரி, சுய விளம்பர விவகாரத்திலும் சரி, ஆளும் கட்சியின் தொண்டர்படையாக போலீசு துறை மாறியிருப்பதிலும் சரி, எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பாளர்களும் காலிக் கூட்டங்களால் தாக்கப்படுவதிலும் சரி, கூசாமல் பொய ்கூறுவதிலும் சரி, இந்த ஆட்சியின் கேவலத்துக்கு நிகரான ஆட்சியை இதுவரை தமிழகம் கண்டதில்லை. இவர் நீக்கப்படவேண்டிய முதல்வர், இது போய்த்தொலைய வேண்டிய ஆட்சி” – ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சிக் காலத்தைப் பற்றி ஜூன் 1995 – இல் துக்ளக் சோ எழுதிய வரிகள் இவை.
சோ வழங்கியிருக்கும் மேற்கண்ட தீர்ப்பில், “ஊழல் மூலம் நடக்கும் பகற்கொள்ளை” என்ற நான்கு சொற்களை மட்டும்தான் குன்ஹா தனது தீர்ப்பில் நிரூபித்திருக்கிறார். ஜெயாவின் மற்ற குற்றங்களெல்லாம் தண்டிக்கப்படுவதற்குக் காத்திருக்கின்றன. ஆனால், இதுவே சோ-வுக்குப் பொறுக்கவில்லை. கொஞ்சமும் கூச்சமேயில்லாமல் குன்ஹாவின் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கிறார்.
இன்று ஜெயாவுக்கு வக்காலத்து வாங்கும் பிராமணோத்தமர்கள் அன்று ஜெயலலிதாவை எதிர்ப்பவர்களோடு சேர்ந்து “கோயிந்தா” போடக் காரணம் இருந்தது. 1996-ல் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்ற அம்மாவின் அமைச்சர்களும், எம்.எல்.ஏ. க்களும் மக்களால் அடித்தே விரட்டப்பட்டனர். தோல்வி உறுதி என்ற நிலையில், எதிர்த்தரப்புடன் சேர்ந்து கொள்வதன் மூலம் யோக்கியர் வேடமும் போடலாம், எதிர்ப்பின் வீரியத்தையும் குறைக்கலாம் என்பதுதான் அன்று அவாள் காட்டிய எதிர்ப்பின் உட்பொருள்.
தாழ்த்தப்பட்டோர் நிலங்களை அபகரித்துக் கட்டப்பட்ட சிறுதாவூர் பங்களா (பட உதவி : நக்கீரன்)
எம்.ஜி.ஆரின் சாவுக்குப்பின் ஜெயலலிதா தமிழக அரசியலில் தலையெடுக்கத் தொடங்கிய காலத்திலேயே, “இது தமிழ்நாட்டின் அரசியல் சீக்கு” என்று புதிய ஜனநாயகத்தில் குறிப்பிட்டோம். ஆம். இது திராவிட இயக்கத்தின் அரசியல் சீரழிவைப் பயன்படுத்தி வளர்ந்த பார்ப்பனச் சீக்கு. சோ, சு.சாமி, ஆர்.வி., சங்கராச்சாரி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும் பார்ப்பன ஊடகங்களும் சேர்ந்து இந்த அரசியல் சீக்கைத் திட்டமிட்டேதான் தமிழக மக்களின் தலையில் கட்டினர். அவர்களுடைய திட்டம் அ.தி.மு.க. வின் தோற்றத்திலிருந்தே தொடங்குகிறது.
கொள்கை, மக்கள் நலம் என்று தொடங்கி, பின்னர் நாடாளுமன்ற அரசியலில் ஊறி, மெல்ல மெல்லப் பிழைப்புவாதக் கட்சிகளாக சீரழிந்த வேறெந்தக் கட்சியோடும் அ.தி.மு.க.வை ஒப்பிட முடியாது. எம்.ஜி. ஆரால் துவக்கப்படும்போதே அது ஒரு அடிமைகள் கூட்டம். அ.தி.மு.க. என்பது ராமாவரம் தோட்டத்தில் சோறு தின்றதையும், எம்.ஜி.ஆர். கையால் அடிவாங்கியதையும் பெருமையாகக் கருதும் விசுவாச அடிமைகளை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி. “எம்.ஜி.ஆர். வள்ளல், தமிழகம் அவர் சொத்து, பதவி அவர் போடும் பிச்சை, விசுவாசமே கட்சியின் கொள்கை, பிழைப்புவாதமே அரசியல்” எனத் தேர்ந்து தெளிந்த கூட்டம் அது. ஜனநாயகம் என்ற சொல்லுக்கும் பாசிசக் கோமாளியான எம்.ஜி.ஆருக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.
சக்களத்தி சண்டை – சதிகாரத் தலைவி!
எம்.ஜி.ஆரின் சாவுக்குப் பின்னர் புரட்சித் தலைவரின் புரட்சிச் செல்வி என்ற முறையிலும், எம்.ஜி.ஆர். ரசிகர்களால் “அண்ணி” என்று அங்கீகரிக்கப்பட்டிருந்த உரிமையின் அடிப்படையிலும், அ.தி.மு.க. கட்சியும் இரட்டை இலை சின்னமும் தன் பெயருக்குத்தான் எழுதி வைக்கப்பட வேண்டும் என்பதே அன்று ஜெயலலிதாவின் கோரிக்கையாக இருந்தது. எம்.ஜி.ஆர். அவ்வாறு உயில் எழுதவில்லை. விளைவு – சக்களத்தி சண்டை தமிழக மக்கள் முடிவு செய்யவேண்டிய அரசியல் பிரச்சினையாகிவிட்டது. எம்.ஜி.ஆர். என்ற கிழட்டுப் போக்கிரியிடம் தான் பட்ட துன்பங்களுக்கான விலையை, ஜெயலலிதா தமிழ் மக்களிடமிருந்து வசூலிக்க நேர்ந்த கொடுமை இப்படித்தான் தொடங்கியது.
“ஜானகி மோரில் விசம் வைத்து எம்.ஜி.ஆரைக் கொன்றார்” என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டும், எம்.ஜி.ஆரின் சவ வண்டியில் இடம் பிடிப்பதற்கு அவர் நடத்திய தெருக்கூத்தும், உச்சகட்டமாக அவரது உடன்கட்டை பிரகடனமும், நடைபெற்றது சக்களத்தி சண்டைதான் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள். அது மட்டுமல்ல, இவையனைத்தும் சர்ச் பார்க் கான்வென்டில் படித்த “பாப்பாத்தி” வெளிப்படுத்திய உயர்ந்த பண்பாட்டுத் தரத்துக்கான முதல்நிலை ஆதாரங்களும் கூட.
பிறகு ஜெ. சட்டமன்றத்தில் கருணாநிதி கையிலிருந்து பட்ஜெட் அறிக்கையைப் பிடுங்கி தி.மு.க.வினரின் ஆத்திரத்தை தூண்டினார். பெண் என்றும் பாராமல் என்னை முந்தானையைப் பிடித்து இழுத்தார்கள் என்று ஒப்பாரி வைத்தார். “என்னை லாரி ஏற்றிக் கொல்ல கருணாநிதி சதி செய்தார், கோயில் பிரசாதத்தில் விஷம் வைத்துக் கொல்லச் சதி செய்தார்” என்று கலர் கலராகக் குற்றம் சாட்டினார். இறுதியாக, ராஜீவின் கொலைக்கு தி.மு.க. மீது பொய்ப்பழி போட்டு, ராஜீவின் பிணத்தைக் காட்டியே 1991-ல் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். எம்.ஜி.ஆரின் பிணவண்டியின் மீதும் பின்னர் ராஜீவின் பிணத்தின் மீதும் ஏறி அரியணையில் அமர்ந்த அம்மாவின் “அரசியல் வரலாறு” இது.
“என்னைக் கொல்ல சதி” என்பதையே கொள்கை முழக்கமாக வைத்து, அதிகார நாற்காலியைக் கைப்பற்றிய கும்பல், இன்று அதே “கொள்கை” வழியில் குன்ஹாவின் தீர்ப்பையும் “கர்நாடகா, ராஜபக்சே, கருணாநிதி கூட்டு சதி” என்கிறது. சாட்சியங்களை மிரட்டிப் பல்டியடிக்க வைத்து, அம்பலப்பட்டு, அதன் காரணமாக விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென்று உச்சநீதி மன்றத்தால் உத்தரவிடப்பட்டு, பின்னர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கை அங்கே இழுத்தடித்து, நீதிபதிகளையும் அரசு வழக்குரைஞர்களையும் துன்புறுத்தி விரட்டி, இறுதியில் தன் கைப்பாவையாக ஒரு அரசு வழக்குரைஞரை நியமிக்க வைத்து, அப்புறமும் தப்பிக்க முடியாமல் தண்டிக்கப்பட்டுவிட்டார் ஜெயலலிதா. இத்தனையும் நாடறிந்த உண்மைகள். இருந்தபோதிலும், இதனைச் சதி என்று சித்தரிக்கும் பிரச்சாரத் தந்திரம் அவர்களது “சதிகார”த் தலைவியின் மூளையில் அல்லாமல் வேறு எங்கே பிறந்திருக்க முடியும்?
திருட்டு மட்டுமா குற்றம்?
அ.தி.மு.க ஏவிவிட்ட ரவுடி கும்பலால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வழக்குரைஞர் சண்முகசுந்தரம். (கோப்புப் படம்) (பட உதவி : நக்கீரன்)
ஏற்கெனவே டான்சி, பிளசன்ட் ஸ்டே வழக்குகளில் சந்தி சிரித்து, தற்போது சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் தோழிகளின் பித்தலாட்டங்கள் அனைத்தையும் குன்ஹா பிரித்து மேந்து காறி உமிழ்ந்த பின்னரும், கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல், “சட்டையை மாற்றிக் கொண்டு அடுத்த பஞ்சாயத்துக்குக் கிளம்பும் வடிவேலுவைப் போல”, கம்பீரமாக சிறை வாசலிலிருந்து சிவப்புக் கம்பளத்தின் மீது நடந்து வருகிறார் ஜெயலலிதா என்றால், தமிழ்ச் சமுதாயத்தைப் பற்றிய அவரது மதிப்பீடு என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். 1991-96 காலத்தில் இந்தக் கும்பல் ஆடிய ஆட்டம் எப்படி இருந்திருக்குமென்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.
வளர்ப்பு மகன் திருமணப் புகைப்படங்களையும், அதில் தோழிகளின் அலங்காரத்தையும், அவர்களின் தோரணையையும் பாருங்கள். அவற்றில் கவனிக்கத்தக்கவை புடவை, நகைகளின் மதிப்பு அல்ல. மொத்த தமிழ் சமுதாயத்தையே எள்ளி நகையாடுகின்ற அவர்களது பார்ப்பனக் கொழுப்பும் அதிகாரத்திமிரும்தான். மொத்த நாட்டையுமே தமது பரம்பரை சொத்தாகக் கருதி, செருக்குடன் வீதியுலா வந்த மன்னர்களின் திமிரை ஜெயலலிதாவின் முகத்தில் நீங்கள் பார்க்க முடியும்.
“பொதுச்சொத்தைத் திருடினார்கள்” என்று மட்டும் கூறுவது ஜெ. – சசி கும்பலின் குற்றத்தைப் பெரிதும் குறைத்துச் சித்தரிப்பதாக இருக்கும். பயந்து எச்சரிக்கையாகத் திருடும் பிக்-பாக்கெட்டுகளுக்கும் கழுத்தில் கத்தி வைத்துப் பிடுங்கும் வழிப்பறிக் கொள்ளையர்களுக்கும் வேறுபாடிருக்கிறது அல்லவா? எப்படித் திருடினார்கள் என்பதில்தான் இருக்கிறது அவர்களது குற்றத்தின் தன்மை.
ஆசிட் வீசப்பட்ட நிலையில் சந்திரலேகா (கோப்புப் படம்) (பட உதவி : நக்கீரன்)
கண்ணைக் கவர்ந்த பெண்களையெல்லாம் அந்தப்புரத்துக்குத் தூக்கி வரச்சொன்ன மன்னர்களைப் போல, கண்ணில்பட்ட நிலங்கள், வீடுகளையெல்லாம் தம் பெயருக்கு மாற்றிக் கொண்ட ஆணவம், துணைப்பதிவாளரை வீட்டுக்கே வரவழைத்து, விரும்பிய இடங்களையெல்லாம், விற்பவர் – வாங்குபவர் பெயர்களையே குறிப்பிடாமல் நடத்திக் கொண்ட பத்திரப் பதிவுகள், கட்டுக்கட்டாக இலஞ்சப்பணத்தை மஞ்சள் பையில் வைத்து வங்கிக்குக் கொடுத்தனுப்பிய “சாமர்த்தியம்”, பணத்தைப் போடுவதற்காகவே அவசரம் அவசரமாக உருவாக்கப்பட்ட உப்புமாக் கம்பெனிகள் – என்று குன்ஹாவின் தீர்ப்பு பட்டியலிடும் ஆதாரங்களைப் பார்க்கும்போது, அவையெல்லாம் இந்த திருட்டுக் கும்பல் அவசரத்தில் விட்டுச் சென்ற தடயங்களாகத் தெரியவில்லை. விடிவதற்குள் – ஐந்தே ஆண்டுகளில் – முடிந்தவரை சுருட்ட முயலும் திருடனின் அவசரம் இந்த தடயங்களில் தெரிகிறது. “இனி விடியவே போவதில்லை, நாமே நிரந்தர முதல்வர்” என்கிற அகம்பாவம் தந்த அலட்சியமும் அவற்றில் தெரிகிறது.
ஜெயாவின் நிர்வாகத்திறன் – வரலாற்றுச் சான்றுகள்
ஜெயலலிதாவின் திருட்டு அம்பலமாகியிருக்கும் இந்த தருணத்தில், என்ன இருந்தாலும் அவரது “நிர்வாகத்திறன்” என்று புனைகதை எழுதுகின்றன ஊடகங்கள். இந்த அரசின் நிர்வாகத்திறனுக்கு சான்று கூற, மின்வெட்டு பிரச்சினை குறித்து மூன்றாண்டுகளாக ஜெயலலிதா அவிழ்த்துவிடும் புளுகு மூட்டைகளே போதுமானவை.
வாரிசுரிமையாக சிறிது காலம் முதல்வர் பதவியில் அமர்ந்திருந்த ஜானகிக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. ஜானகியை ஆர்.எம்.வீரப்பன் பின்னாலிருந்து இயக்கினார்; ஜெயலலிதாவுக்கு சசிகலாவின் கணவன் நடராசன். இருந்தும் அமைச்சர் பதவி கிடைக்காத கோபத்தில், “வருங்கால முதல்வரே” என்று நடராசன் போஸ்டர் அடித்து ஒட்டிக் கொண்டதும், ஆத்திரமடைந்த ஜெயலலிதா, போலீசை விட்டு வெடிகுண்டுப் புரளி கிளப்பி நடராசன் நடத்திய கூட்டத்தைக் கலைத்ததும், பிறகு முதல்வர் பதவியைக் கைப்பற்ற நடராசனும், பிரதமர் பதவியைப் பிடிக்க சு.சாமியும் சதி செயவதாகப் பத்திரிகைகளுக்கு ஜெயலலிதா பேட்டி கொடுத்ததும் அம்மாவின் நிர்வாகத் திறமையைப் பறைசாற்றும் வரலாற்று சான்றுகள்.
பிறகு உயிர்த்தோழி சசியை வூட்டுக்காரன் நடராசன் போயஸ் தோட்டத்திலிருந்து இழுத்துக் கொண்டு போனதும், பிரிவாற்றாமை தோற்றுவித்த காப்பிய சோகத்தால் அம்மா ராஜினாமா கடிதம் கொடுத்து, பின்னர் அதனை திரும்பப் பெற்றதும், ஊடல் முடிந்து சசிகலா மீண்டும் போயஸ் தோட்டத்தில் குடியேறியதும் அம்மாவின் அரசியல் வரலாறு. இவற்றைப் போன்ற அழிக்க முடியாத அசிங்கமான பக்கங்கள் ஆயிரம் இருக்கின்றன.
பழைய தமிழ் சினிமாக்களின் ஜமீன்தார் பங்களாக்களில் கக்கத்தில் துண்டுடன் அணிவகுத்து நிற்கும் வேலைக்காரர்களைப் போல, போயஸ் தோட்டத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரிசையா நிற்க, காலில் விழுந்து எழுந்த பின்னரும் முதுகு நிமிராத கூன்பாண்டி அமைச்சர்கள் வாயிற்புறத்தில் காத்திருக்க, மலையாள மாந்திரீகர்களும், பில்லி சூனியக்காரர்களும், ஜோசியர்களும்தான் போயஸ் தோட்டத்தில் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயித்தார்கள், இன்றும் நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார்கள். நேர்மை, சுய சிந்தனை, சுய மரியாதை உள்ள அதிகாரி தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றும் திறன்தான் அம்மாவின் நிர்வாகத்திறன். அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அடிக்கடிப் பந்தாடுவதன் மூலம் கறாரான நிர்வாகியைப் போலக் காட்டிக் கொள்வதென்பது, பாசிசக் கோமாளி எம்.ஜி. ஆரிடமிருந்து அம்மா கற்றுக்கொண்ட நிர்வாக அரசியல் பாடம்.
அழகிரிகளுக்கெல்லாம் அம்மா!
தான் சந்தேகப்படுபவர்கள் மீதெல்லாம் கஞ்சா கேசு போடுவது ஜெயாவின் “நிர்வாகத் திறன்” – அப்படிப்பட்ட அதிகார முறைகேடுகளுக்குப் பலியான செரீனா
கலகம் செய்யும் அ.தி.மு.க. காலிகள் அம்மாவின் கவுரவத்தைக் காப்பாற்றும் விதத்தில் கட்டுப்பாடாக நடந்து கொள்ளவேண்டும் என்று தலையங்கம் எழுதுகின்றன பார்ப்பன ஊடகங்கள். எப்பாடுபட்டாலும் காலித்தனத்தில் அம்மா எட்டியிருக்கும் சிகரத்தை தொண்டர்களால் தொடவியலாது என்பதே உண்மை.
கிரிமினல்களையும் போலீசையும் தனது தனிப்பட்ட கூலிப்படையாகப் பயன்படுத்திக் கொள்வதில் அழகிரிகளுக்கெல்லாம் அம்மா ஜெயலலிதா. ஸ்பிக் பங்கு விற்பனையில் தனது ஊழலுக்கு உடன்பட மறுத்த குற்றத்துக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு, ப.சிதம்பரம், மணிசங்கர் ஐயர் மீதான தாக்குதல்கள், வழக்குரைஞர் சண்முக சுந்தரத்தை ரவுடிகளை வைத்து தாக்கியது மட்டுமல்ல, குற்றுயிராக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரைச் சாகடிப்பதற்காகவே மருத்துவமனையின் மின்சாரத்தைத் துண்டித்தது – என்று இந்தக் குற்றப் பட்டியல் வெகு நீளமானது.
தனது ஆட்சியில் உளவுத்துறைக்கு அம்மா வழங்கிய வேலையை மிகவும் கவுரவமான சொற்களில் குறிப்பிட வேண்டுமானால், அதனை மாமா வேலை என்று சொல்லலாம். அமைச்சர்களின் கள்ளத்தொடர்புகளை வேவு பார்ப்பது, தோழி சசிகலாவின் கணவருடைய இரவு நேர நடமாட்டத்தைக் கண்காணிப்பது, சசிகலா கும்பல் பதுக்கிய சொத்துக்களை மீட்டு ஒப்படைப்பது போன்றவை அவற்றில் சில. இப்போதும் கூட குன்ஹாவின் தீர்ப்பை முன்னரே மோப்பம் பிடித்துக் கூறத் தவறிய காரணத்தினால் கடமை தவறிய உளவுத்துறை மீது அம்மா கோபம் கொண்டிருப்பதாக மிகவும் இயல்பாக எழுதுகின்றன ஊடகங்கள். கிரிமினலுக்கும் – போலீசுக்கும், கடவுளுக்கும் – புரோக்கருக்கும், ஜோசியனுக்கும் – உளவுத்துறைக்கும் இடையிலான வேறுபாட்டை ஒழித்ததுதான் இவ்விசயத்தில் அம்மாவின் சாதனை எனக் கூறலாம்.
ஜெயா கும்பலின் ஆடிட்டராக இருந்து வந்த பாஸ்கரன்
அம்மாவின் அதிருப்திக்கு ஆளாகிறவர்கள் பதவி போனாலும், அடி வாங்கினாலும் அமைதி காக்க வேண்டும். வளர்ப்பு மகனாக தங்கத்தில் குளிப்பாட்டப்பட்ட சுதாகரன், திடீரென்று செருப்படி வாங்கி கஞ்சா கேசில் உள்ளே தள்ளப்பட்டதும், அப்புறம் அக்யூஸ்டு எண்: 4 என்று அங்காளி பங்காளியாக பெங்களூரு நீதிமன்றத்தில் தனது முன்னாள் வளர்ப்புத்தாயுடன் அமர வேண்டியிருந்ததும் ஒரு உதாரணம். நில ஆக்கிரமிப்பு முதல் கொலை மிரட்டல் வரையிலான பல வழக்குகளில் உள்ளேபோன நடராசன், ராவணன் உள்ளிட்ட சசி குடும்பத்தினர், நடராசனின் ஆசை நாயகி என்று சசிகலாவால் சந்தேகிக்கப்பட்ட காரணத்தினால் கஞ்சா வழக்கில் சிறை வைக்கப்பட்ட செரினா – என இப்பட்டியல் வெகு நீளமானது.
இலஞ்சப் பணத்தை மறைப்பதற்கு சரியான முறையில் வழிகாட்டாமல், வருமானவரி வழக்கில் தங்களைச் சிக்கவைத்து விட்டதாக ஆத்திரம் கொண்ட தோழிகள், ஆடிட்டர் ராஜசேகரை போயஸ் தோட்டத்துக்குள் வைத்துக் கட்டையாலும், செருப்பாலும் அடித்தனர். வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக துப்பாக்கி வைத்தும் அவர் மிரட்டப்பட்டார். இது பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாகிவிடாமல் தடுப்பதற்காக சட்டமன்றத்தில் தாமரைக்கனியை விட்டு வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கில் குத்தச் சொல்லி, அதனைத் தலைப்புச் செதியாக்கிய கிரிமினல்தான் ஜெயலலிதா. இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இத்தகைய குற்றங்களையெல்லாம் விசாரித்து தண்டனை விதிக்கும் பட்சத்தில் அவற்றுக்கான ஆயுள் தண்டனைகளை அனுபவிப்பதற்கே, அம்மா மேலும் பல ஜென்மங்கள் எடுக்க வேண்டியிருக்கும்.
இன்று குன்ஹாவின் கொடும்பாவி எரிப்பு, கழுதை என்றும் முண்டமென்றும் அவரை வசைபாடும் சுவரொட்டிகள், தீர்ப்புக்கு எதிராக நகராட்சிகள் நிறைவேற்றும் கண்டனத் தீர்மானங்கள் போன்ற “நீதிமன்ற அவமதிப்பு”களைக் கண்டு சட்டத்தை மதித்து நடக்கும் குடிமக்கள் சிலர் தமது அதிர்ச்சியைத் தெரிவிக்கிறார்கள். ஆனால், நீதிபதிகளுக்கு தலைவியின் வரலாறு தெரியுமாதலால் அவர்கள் யாரும் அதிர்ச்சி காட்டவில்லை. சுப்பிரமணியசாமிக்கு எதிராக உயர் நீதிமன்ற வளாகத்தில் போலீசு பாதுகாப்புடன் நடத்தப்பட்ட மகளிர் அணியின் நிர்வாண நடனம், நிலக்கரி ஊழல் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லட்சுமணனின் மருமகன் மீது போடப்பட்ட கஞ்சா வழக்கு, சீனிவாசன் என்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வீட்டுக்கு மின்சாரம், குடிநீரைத் துண்டித்து மிரட்டியது, சொத்துக்குவிப்பு வழக்கின் நீதிபதிகளையும், அரசு வழக்குரைஞர் ஆச்சார்யாவையும் துன்புறுத்தி விரட்டியது, நீதித்துறையையே எள்ளி நகையாடும் விதத்தில் சக்கர நாற்காலியிலும், ஸ்டிரெச்சரிலும் தோழிகள் நடத்திய நீதிமன்ற விஜயங்கள் ஆகியவற்றை ஒப்பிடும்போது, இன்று ரத்தத்தின் ரத்தங்கள் காட்டும் நீதிமன்ற அவமதிப்பு பொருட்படுத்தத்தக்கதே அல்ல.
அம்மா ஆட்சியில் சட்டமன்றத்தின் நிலை பற்றி விளக்கவே தேவையில்லை. அண்ணாமலை நகர் பத்மினி வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பிரச்சினைக்காக எதிர்க்கட்சிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியபோது, சட்டமன்றத்தையே வெளிப்புறமாகப் பூட்டி, மின்சப்ளையையும் தண்ணீரையும் துண்டித்து வரலாறு படைத்தவர் ஜெயலலிதா. அதுமட்டுமல்ல, தனக்கு எதிராக வழக்கு தொடுக்க சு.சாமிக்கு ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி கொடுக்கவிருக்கிறார் என்று தெரிந்தவுடனே “கவர்னர் என்னை கையைப் பிடித்து இழுத்தார்” என்று சட்டமன்றத்திலேயே குற்றம் சாட்டி சென்னா ரெட்டியை கதிகலங்கடித்தார்.
2001-ல் டான்சி ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெ. தேர்தலில் போட்டியிடவே முடியாது என்ற நிலை ஏற்பட்டவுடன், வேண்டுமென்றே 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்து, அதன் காரணமாகத்தான் வேட்புமனு மறுக்கப்பட்டதைப் போல ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். எம்.எல்.ஏ. வாக இல்லாத நிலையிலும் கவர்னர் பாத்திமா பீவியை விலைபேசி, முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் வேறு வழியின்றி ராஜினாமா செய்து பன்னீரை முதல்வராக்கினார். பன்னீர் முதல்வராக இருந்த காலத்தில் ஒரு நாள்கூட சட்டமன்றக் கூட்டம் நடக்காமல் பார்த்துக் கொண்டார்.
அற்பத்தனத்தின் அம்மா!
தரம் தாழ்ந்த அற்பத்தனத்தில் ஜெயலலிதாவை விஞ்சக்கூடியவர்கள் இல்லை. தமிழகத்தில் நெடுஞ்சாலைக் கொள்ளைகள் அதிகம் நடப்பதாக காங்கிரசு குற்றம் சாட்டியவுடன், “மத்திய அரசுதான் திருடர்களை அனுப்பி என் அரசின் பெயரைக் கெடுக்கிறது” என்று சட்டமன்றத்திலேயே பதிலளித்தார். பிறகு “நான் ஆட்சிக்கு வந்தவுடனேயே திருடர்கள் எல்லோரும் ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்கள்” என்றார். போயஸ் தோட்ட வட்டாரத்தில் நடமாடிய நரிக்குறவர்களைக் கைதுசெய்து, தன்னைக் கொல்வதற்குப் புலிகள் தற்கொலைப்படையை அனுப்பியிருப்பதாக செய்தி வெளியிட்டார்.
அவ்வளவு ஏன், மூன்று முறை முதலமைச்சராகி, செல்வியிலிருந்து அம்மாவாக பதவி உயர்வு பெற்ற பின்னரும், தனது இளமைக்கால சினிமா குத்தாட்டக் காட்சிகளை ஜெயா டிவியில் வெளியிட்டுத் தனது இமேஜைப் பராமரித்துக் கொள்கிறார் ஜெயலலிதா; எதிர்க்கட்சித் தலைவர்கள் பற்றிய தரங்கெட்ட விமரிசனங்களை ரசித்துச் சிரிப்பது மட்டுமல்ல, தனது சொந்தக் கட்சிக்காரர்களையே இழிவுபடுத்துவதிலும் இன்பம் காணுகிறார். கட்சியிலிருந்து விலகியவர்களை “தனது உதிர்ந்த உரோமங்கள்” என்று கூறிய ஒரு நபரின் பண்பாட்டுத் தரத்தை என்னவென்று கூறுவது? அம்மாவின் கோபத்துக்கும் ஆசிட் வீச்சுக்கும் இலக்கான கே.கே.எஸ்.எஸ்.ஆர். குடும்பத்தோடு போயஸ் தோட்டத்துக்குச் சென்று காலில் விழுந்தார். அதை அப்படியே புகைப்படம் எடுத்து மறுநாள் ஊடகங்களில் வெளியிட்டு அவரை அவமானப்படுத்தினார் ஜெயலலிதா.
போலீசின் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட இருளர் பெண்ணை, காசுக்காக பொய் சொல்கிறார் என்றும்; பட்டினிச்சாவுக்குள்ளான சிறுவனின் வயிற்றில் சோற்றுப்பருக்கைகள் இருப்பதாக போஸ்ட்மார்ட்டம் அறிக்கை கூறுவதால், அது பட்டினிச் சாவல்ல என்றும் பேச முடிந்த ஒரு ஜந்துவைத்தான் “அம்மா” என்று அழைக்கிறார்கள் அ.தி.மு.க. அடிமைகள். பார்வையற்றோர் போராட்டத்தின் மீதான தாக்குதலாக இருக்கட்டும், சாலைப்பணியாளர்கள் – மக்கள் நலப் பணியாளர்கள் தற்கொலையாகட்டும் இவையெதுவும் ஜெயலலிதாவிடம் கடுகளவு இரக்கத்தையும் தோற்றுவித்ததில்லை. ஏனென்றால், நடிப்புக்காகக் கூட கருணையை வரவழைக்க முடியாத முகம் அது.
ஜெ. கைதுக்காக பேருந்தில் எரித்துக் கொல்லப்பட்ட 3 அப்பாவி மாணவிகளுக்காக தமிழகம் பதறியது. ஆனால் ஜெயலலிதா மனம் இரங்கவில்லை. அந்த வழக்கின் எல்லா சாட்சிகளையும் பல்டியடிக்க வைத்தார். குற்றவாளிகள் விடுதலையாகிவிடுவார்கள் என்ற நிலையில் பிள்ளையைப் பறி கொடுத்த பெற்றோர், மனுச் செய்ததன் பேரில் உயர்நீதி மன்றம் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், ஜெ. ஆட்சியில் இருந்தவரை அந்த வழக்கை நடத்தவிடவில்லை. இப்போதும் குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் வக்கீல் வைத்து வாதாடுகிறார் ஜெ.
ஜெ. வின் காலடியில் கையாலாகாத் தமிழர்களா?
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயா பிணையில் விடுதலையானதையடுத்து, அவர் உற்சவ மூர்த்தி போலக் கொண்டாட்டமாக அழைத்து வரப்படும் காட்சி : தமிழகத்தின் அவமானச் சின்னம்.
யார் பாதிக்கப்பட்டவர்கள் என்பது ஜெயலலிதாவின் அக்கறையல்ல, யார் தனது அடிமைகள் என்பதே அம்மாவின் கவனத்துக்குரியது. ஜெயலலிதாவின் கருத்துப்படி, அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு அவர் கடப்பாடுடையவர் அல்ல, தமிழக மக்கள்தான் அவருடைய தியாகத்துக்குக் கடன்பட்டிருக்கின்றனர். தற்போது தமிழர்களின் கடன் பாக்கியில் இந்த 21 நாள் தியாகமும் சேர்ந்து விட்டது. மூவர் தூக்கு முதல் முதியோர் உதவித்தொகை வரை, நதிநீர் பிரச்சினை முதல் சமஸ்கிருத வார எதிர்ப்பு வரை அனைத்துமே, கையாலாகாத தமிழர்களுக்கு, தனியொருத்தியாக தான் பெற்றுத்தந்த வெற்றியாகவோ, அல்லது தமிழர்களுக்குத் தான் அளிக்கும் பிச்சையாகவோ இருக்க வேண்டும் என்பதை அவர் உறுதி செய்து கொள்கிறார்.
தனது உள்ளுணர்வின்படியே அவர் ஒரு பார்ப்பன பாசிஸ்டு என்ற காரணத்தினால், பா.ஜ.க. வைப் போல “கொள்கை” என்ற சுமை அவருக்கு தேவைப்படுவதில்லை. ஈழம், கூடங்குளம் முதல் இலவச அரிசி வரையில் திராவிட, தமிழின, கவர்ச்சிவாதக் கொள்கைகளை அவர் தனது தேவைக்கேற்றபடி திருடிக் கொள்கிறார். தேவைப்படாத போது, அவற்றை பீ துடைத்த துணியைப் போலத் தூக்கியெறியவும் அவர் அஞ்சுவதில்லை. இந்த “யூஸ் அண்டு த்ரோ” அணுகுமுறையில் அமைச்சர்களுக்கும் கொள்கைகளுக்கும் இடையில் அவர் அதிக வேறுபாடு பார்ப்பதில்லை. அம்மாவின் இந்த அசாத்திய துணிச்சலையும் போர்க்குணத்தையும் கண்டு சிற்பி முதலான “அறிஞர்களும்”, சீமான், நெடுமாறன், வேல்முருகன், தா.பா போன்ற “போராளி”களும் புல்லரித்து நிற்க, சோ ராமஸ்வாமி அயரோ, சுயமரியாதை முதல் தமிழின உணர்வு வரையிலான அனைத்து பிராம்மண விரோதக் கொள்கைகளையும் கட்சிகளையும் மதிப்பிழக்கச் செய்யும் ஜெயாவின் சாமர்த்தியத்தை மெச்சி ரசிக்கிறார்.
அடையாளம் காண்போம் அடிமைச் சதியை!
சுயமரியாதையும் கவுரவமும் இழந்த கையேந்திகளாகவும் அடிமைகளாகவும் தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிப்பது என்கிற பார்ப்பனப் பாசிசக் கும்பலின் கனவுத் திட்டத்தையே, தனது தனிப்பட்ட இலட்சியமாகக் கொண்டிருக்கும் ஒரு சதிகாரியின் பிடியில் சிக்கியிருக்கிறது தமிழகம். ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணற்கொள்ளை, கிரானைட் கொள்ளை, தண்ணீர்க் கொள்ளை, ரியல் எஸ்டேட் என்று இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் கிரிமினல் கும்பல்கள், அதிகார வர்க்க கிரிமினல்கள், பன்னாட்டு நிறுவனங்கள் சார்ந்த தரகுக் கும்பல்கள் தமிழகத்தைத் தமது வேட்டைக்காடாக்கிக் கொண்டிருக்கின்றன. பிழைப்புவாத அடிமைகளின் கும்பலாகத் தோன்றிய அ.தி.மு.க. என்ற கட்சியோ, மேற்சோன்ன தொழில்கள் அனைத்திலும் ஊடுருவியிருக்கும் தொழில்முறை கிரிமினல் மாஃபியாவாக வளர்ந்திருக்கிறது.
கள்ளச்சாராயம், விபச்சாரம், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சமூகவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கிரிமினல்கள், தமக்கென ஒரு சமூக ஆதரவுத்தளத்தை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு அன்னதானம், திருமணத்துக்கு மொய் எழுதுவது, இழவுச் செலவுக்குப் பணம் தருவது என்பன போன்ற உத்திகளைக் கையாள்வதைப் போலவே, ஒரு ரூபாய் இட்டிலி, இலவச சைக்கிள் போன்ற திட்டங்கள் இறக்கப்படுகின்றன. கள்ளச் சாராயத்தை விற்பவன் கிரிமினல், டாஸ்மாக் சாராயத்தை விற்பது அரசு என்பது மட்டுமே வேறுபாடாக எஞ்சியிருக்கிறது.
இலவசத் திட்டங்களுக்கான வருவாயைத் திரட்டும் பொருட்டுத்தான் டாஸ்மாக் என்பது பொய். டாஸ்மாக் என்பது அரசின் பண்பாட்டுக் கொள்கை. சீன மக்களை அடிமை கொள்ள கஞ்சாவைப் பரப்பியதைப் போலவே, தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் சாராயக் கடைகளை பரப்புகிறது அரசு. கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனர்கள் மீது போர் தொடுத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் போலவே, டாஸ்மாக் கடைகளை எதிர்க்கும் பெண்கள் மீது போர் தொடுக்கிறது அம்மாவின் போலீசு. நெடுஞ்சாலைகள், பள்ளிகள், வழிபாட்டிடங்கள் என அங்கிங்கெனாதபடி எங்கும், கேரளத்தில் மது விற்பனை குறைக்கப்படுவதால் கேரள எல்லையோரத்திலும் சாராயம் ஆறாய் ஓடுகிறது. போதை அடிமைத்தனம் பரப்பப்படுகிறது.
முதியோர் உதவித்தொகை, மடிக்கணினி போன்ற அரசின் அதிகாரபூர்வ நலத்திட்டங்களும், ஓட்டுக்குப் பணம், கறி விருந்து போன்ற ஊழல் முறைகேடுகளும், மொட்டைக்கு 3000, பால்குடத்துக்கு 500 என்ற கழிசடை அரசியலும், மக்களின் ஜனநாயக உணர்வற்ற மனோபாவம் என்ற ஒரு புள்ளியில் சந்திப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் அடிமைத்தனம் பரப்பப்படுகிறது.
ஜெயலலிதாவின் கைதைத் தொடர்ந்து தமிழகத்தில் நாம் கண்ட பிழைப்புவாதிகளின் “போராட்டங்களும்”, கூலிக்கு மாரடிப்போரின் கூச்சலும், போலீசும் காலிகளும் இணைந்து நடத்திய வன்முறைகளும், மக்களிடம் பரப்பப்பட்ட அச்சமும், உச்சநீதி மன்றத் தீர்ப்பின் கயமையும் இந்த அரசியல் கட்டமைப்பின் சீரழிவையும் தோல்வியையும் துல்லியமாகப் பிரகடனம் செதிருக்கின்றன.
தமிழ்ச் சமுதாயமோ ஒரு நூற்றாண்டுக்கு முன் பார்ப்பன ஆதிக்கம் நிலைநாட்டியிருந்த அடிமைத்தனத்தைக் காட்டிலும் கொடிய அடிமைத்தனத்தில் சிக்குண்டு கிடக்கிறது. அன்று தோளில் துண்டு அணியும் உரிமை இல்லாத போதிலும், தமிழ்ச் சமுதாயத்தின் இடுப்பில் வேட்டி இருந்தது. இன்றோ தமிழ்ச் சமுதாயம் வேட்டி அவிழ்ந்தது தெரியாமல் வீதியில் கிடக்கிறது. நாம் எதிர்கொண்டிருப்பது முன்னிலும் சிக்கலானதொரு சூழல். தேவைப்படுபவை அதற்குப் பொருத்தமானதொரு போராட்டங்கள்.
ஆற்றுமணல், தண்ணீர், இயற்கை வளங்கள் அனைத்தையும் யாரும் உருவாக்க முடியாது. இயற்கைத் தாய் மனித குலத்திற்கு வழங்கிய கொடை மட்டுமல்ல; ஆடு, மாடு, மரம், செடி, கொடி, மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானது.
அரசு இத்தகைய வளங்களை பாதுகாக்க வேண்டும். மாறாக இயற்கை வளங்கள் அனைத்தையும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்கிறது மத்திய அரசு.
ஆற்றுமணல் கொள்ளையில் உள்ளூர் கவுன்சிலர் தொடங்கி வட்டம், ஒன்றியம், மாவட்டம், மாநிலம் வரை, கட்சி பொறுப்புக்கு தக்கவாறு கமிசன் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மேலும் தலையாரி முதல், வி.ஏ.ஓ, தாசில்தார், பொதுப்பணித்துறை பொறியாளர், மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், மந்திரி, மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரி, தலைமை நிலையச் செயலாளர் வரை அதிகார மட்டத்தில் கமிசன் போகிறது.
பாதிக்கப்படும் மக்கள் எதிர்த்து போராடினால் அவர்களை போலீசை வைத்து பொய் வழக்கு போட்டு மிரட்டுகிறது.
மேலும் சாதி பாகுபாட்டை உருவாக்கி மக்களை மோதவிட்டு பிளவுபடுத்துகிறது.
எதிர்ப்புணர்வை மழுங்கடிக்க குடும்ப அட்டை மூலம் மக்களுக்கு பணம் வழங்குவது, ஊர் கோவிலுக்கு நன்கொடை, மணல் லாரி ஒன்றுக்கு பஞ்சாயத்துக்கு 100 தருகிறேன் என கமிசன் பேசுவது என கிராம மக்களை தங்கள் ஊர் நலனுக்கு எதிராக தாமே செயல்படும் அவல நிலை இன்று உருவாக்கப்பட்டுள்ளது.
விருத்தாசலம் மணிமுத்தாறு, வெள்ளாறு ஆகிய இரண்டு ஆறுகள் கடலூர் மாவட்டம் முழுவதும் குடிநீருக்கும், விவசாயத்திற்கு உயிர் ஆதாரமாக இருக்கின்றன. தற்போது வெள்ளாறு முழுவதும் கருவேப்பிலங்குறிச்சியில் தொடங்கி நேமம், கார்மாங்குடி, மேலப்பாலையூர், கீழப்பாலையூர், சி.கீரனூர், மருங்கூர், தொழூர், காவனூர், பவழங்குடி, தேவங்குடி வரை, வெள்ளாறு வறண்ட பாலைவனமாக, முட்புதர் முளைக்கும் களிமண் தரையாக மிகக் கொடூரமாக காட்சியளிக்கிறது.
இப்பகுதியில் விவசாய பம்ப் செட்டுகள் தண்ணீர் எடுக்க முடியாமல் உதறுகிறது; சுற்று வட்டாரத்தில் குடியிருப்பு பகுதியில் வீட்டு போர்கள் தண்ணீர் இல்லாமல் மீண்டும் பல லட்சம் செலவு செய்து போர் போட வேண்டிய நிலை. மணல் கொள்ளைக்கு ஆதரவு அளித்து விட்டு அவன் பணம் வாங்கி விட்டான், இவன் பணம் வாங்கி விட்டான் என ஒதுங்கி நின்று அதனால் நாமும் ஏதாவது வாங்கினால் என்ன? என்ற காரியவாதமாக சிந்திக்கலாமா? நமது வீட்டை கொள்ளையடிப்பவனிடம் நாம் கமிசன் வாங்கி அனுமதிப்போமா? சற்று யோசித்து பாருங்கள். பசிக்கிறது என தொடைக்கறியை அறுத்து சாப்பிடுவதா?
காடு, மலை, குடிநீர், கிரானைட், தாதுமணல், பாக்சைட், இரும்பு சுரங்கம், மருத்துவம், கல்வி, மின்சாரம், என அனைத்தும் சட்டப்படிதான் கொள்ளையடிக்க தனியாருக்கு அரசு அனுமதி அளிக்கிறது. அனைத்துக் கட்சிகளும் இத்தகைய கொள்கையை ஆதரிக்கின்றன. பாதிக்கப்படும் மக்கள் தனியாக நிற்கிறார்கள். ஆற்று மணலை சுரண்டி நிலத்தடி நீரை அழித்து விட்டு மழைநீரை சேகரிக்க நமக்கு அறிவுரை சொல்கிறது அரசு.
ஆற்று மணல்தான் பஞ்சு போல தண்ணீரை தேக்கி வைத்து நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கிறது, மணலை முழுமையாக அகற்றினால் பழைய நிலைமைக்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்ற விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஆற்றுமணல் முழுவதும் சுரண்டப்படுவதால் ஆறு சாகடிக்கப்படுகிறது.
கொள்ளையனுக்கு மணல் அனைத்தும் பணமாக, லாபமாக தெரிகிறது. நிலத்தடி நீர் வற்றி விடும்; பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாழாகும்; எதிர்கால சந்ததியினர் குடிநீருக்காக பல மைல் காலி குடத்துடன் நடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்படுமே. ஆடு மாடுகள் செடி கொடிகள் என்ன ஆகும் என்ற கவலை, பொறுப்பு அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு இல்லை. ஆனால், அங்கேயே தலைமுறையாக வாழும் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் மணல் கொள்ளையை வேடிக்கை பார்க்கலாமா?
மூன்று அடிதான் மணல் அள்ள வேண்டும் என்ற சட்டம் சொல்கிறது. வெள்ளாற்றில் 30 அடிக்கு மேல் அள்ளப்பட்டு ஆறு முழுவதும் கட்டாந்தரையாக்கப்பட்டுள்ளது. ஏன், மணற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை இல்லை. மாட்டுவண்டியை மடக்கிப் பிடிக்கும் காவல்துறை, தாசில்தார் மணல் லாரியை மடக்கி பிடிக்காத மர்மம் என்ன?
தாமிரபரணி, காவிரி, பாலாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் பாசன விவசாயிகள், சங்கம் அமைத்து மணற்கொள்ளைக்கு எதிராக மக்கள் மத்தியில் போராடுவதுடன், உயர்நீதிமன்றத்திலும், பசுமை தீர்ப்பாயத்திலும், உச்சநீதி மன்றத்திலும் 100-க்கு மேற்பட்ட வழக்கு தாக்கல் செய்து போராடி வருகின்றனர். இதன் விளைவாக வரைமுறையின்றி மணல் அள்ளுவதில் சில கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்தது. ஆனால், அதை அமல்படுத்தாமல் தமிழக அரசு ஆற்று மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்படுவதுடன் விவசாயிகளை எதிர்த்து வழக்கு நடத்துகிறது.
காலை 7 முதல் மாலை 5 மணி வரை தான் மணல் எடுக்க வேண்டும்.
தமிழக அரசு சிறப்பு அனுமதி பெற்றுதான் பொக்கலைன் பயன்படுத்த வேண்டும்.
நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுமா, மணல் அள்ள அனுமதிக்கலாமா, வேண்டாமா என பொதுப்பணித்துறை, சென்னையில் உள்ள சுற்றுச் சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.
மணல் அள்ளுவதில் இரண்டு பொக்கலைன் எந்திரங்கள்தான் பயன்படுத்த வேண்டும்.
ஒரு மீட்டர் மட்டுமே மணல் அள்ள வேண்டும்.
கரை ஓரத்தில்தான் அள்ள வேண்டும்.
இதனால் உள்ளூர் மக்களுக்கு நிலத்தடி நீர், சாலை வசதி, விவசாயம் என எந்த பாதிப்புகளும் வரக்கூடாது.
இதை கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்புக் குழு, தாசில்தார் தலைமையில் சிறப்புக் குழு என இருக்கிறது. ஆனால், மணற்கொள்ளை மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சட்டத்தை, விதிமுறைகளை அதிகாரிகள் மதிக்காத போது பாதிக்கப்படும் மக்கள் மட்டும் ஏன் மதித்து நடக்க வேண்டும்.
மணல் குவாரிகளை அரசுதான் நடத்துகிறது என பொதுப் பணித்துறை அதிகாரிகள் பதில் சொல்கிறார்கள்; யார் எதிர்த்தாலும் ஆயிரம், லட்சம் என பணம் கொடுக்கிறார்கள்; மணல் கொள்ளையால் ஆதாயம் பெறும் பினாமி யார் என்ற சொல்ல மறுக்கிறார்கள். கள்ளக் கடத்தல் போல நடக்கிறது மணல் தொழில். புகார் மனு கொடுத்தவரை மிரட்டுவது, நடவடிக்கை எடுத்தால் தாசில்தாரை லாரி ஏற்றிக் கொல்வது, அச்சுறுத்தலுக்கு அடி பணியாமல் எதிர்த்தால் கூலிப்படை வைத்து கொலை செய்வது என செயல்படுகிறார்கள் மணல் மாஃபியாக்கள். தனிநபராக கொள்ளையர்களை எதிர்க்க முடியாது. ஆனால், அமைப்பாக, பாதிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கமாக திரண்டால் எவனையும் எதிர்க்க முடியும் என்பதை நாம் புரிந்து கொண்டு போராடினால் வெல்லமுடியும்.
தமிழகம் முழுவதும் கனிம வளக் கொள்ளையை விசாரிக்க சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இன்றுவரை அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது. நிலத்தடி நீரை எடுத்து விட்டு ஓடி விடுவான் மினரல் வாட்டர் கம்பெனி. மணலை அள்ளிவிட்டு ஓடிவிடுவான் மணல் கொள்ளையன். அங்கே நிரந்தரமாக வாழும் நாம் பிள்ளை குட்டிகளை ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு பஞ்சம் பிழைக்க பரதேசியாக எங்கே ஓடுவது? தண்ணீர் இல்லாமல் என்ன செய்ய முடியும்? கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் மணல் அள்ளுவதை முழுமையாக தடை செய்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதி ஏடு, கட்சி பாகுபாடு ஏடு அனைவரும் ஆற்று மணலை பாதுகாப்போம் என களம் இறங்கினால் எத்தகைய அநீதிகளையும் தடுக்க முடியும். மணிமுத்தாறிலும் மணல் கொள்ளை தொடங்கியது. சூழ்ச்சிகளை முறியடித்து பரவளூர் கிராம மக்கள் சாதி கடந்து ஒன்றிணைந்து போராடி தடுத்து நிறுத்தியுள்ளனர்.
நமது வாழ்வாதாரங்களை பாதுகாக்காமல் நமக்கான அரசை உருவாக்காமல் எவ்வளவு உழைத்தாலும் பலன் இல்லை. மணல் கொள்ளை மட்டுமல்ல எல்லா அநீதிகளுக்கும் எதிராகவும் தயங்காமல் சமரசமின்றி போராட வேண்டும். அப்போதுதான் உண்மையான எதிரிகளையும், அவர்களுக்கு உதவும் துரோகிகளையும் இனம் கண்டு விரட்டியடிக்க முடியும். ஆற்றுமணலை மட்டுமல்ல அனைத்து வளங்களையும், வாழ்வாதாரங்களையும் காக்க போராடுவோம் வாரீர்!
தமிழக அரசே
அனைத்து மணல் குவாரிகளையும் மூடு!
வெள்ளைற்றை கட்டாந்தரையாக்கிய மணல் கொள்ளையர்களுக்கு தண்டனை என்ன?
கனிமவளக் கொள்ளையை விசாரிக்கும் சகாயம் ஐ.ஏ.எஸ்-க்கு முழு ஒத்துழைப்பு வழங்கு!
உழைக்கும் மக்களே
மானம் இழந்து வாழ்க்கையா? மணல் கொள்ளைக்குப் பணமா?
வாங்கிய பணத்தை வீசி எறியுங்கள், மணல் கொள்ளைக்கு எதிராகப் போராட வாருங்கள்
மணல் கொள்ளைக்கு லஞ்சமா? நீர் ஆதாரத்தை அழித்து வாழ்க்கையா?
ஆர்ப்பாட்டம்
நாள்: 10-11-14 திங்கள் நேரம் : மாலை 4 மணி இடம்: கருவேப்பிலங்குறிச்சி
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு – 9360051121, 9003631324