கடந்த டிசம்பர் 19ஆம் தேதியன்று தனது நெருங்கிய தோழியும் அ.தி.மு.க.வின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சசிகலா மற்றும் அவரது உறவினர்களைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாகவும், இவர்களுடன் கட்சிக்காரர்கள் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவித்துள்ள தமிழக முதல்வரும் அ.தி.மு.க. தலைவியுமான ஜெயலலிதா, சசிகலாவை போயஸ் தோட்டத்திலிருந்தும் வெளியேற்றியுள்ளார். மன்னார்குடி மாஃபியா என்று அழைக்கப்பட்ட சசிகலா கும்பலின் விசுவாச அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
யாருடைய தலையீடும் இல்லாத, நிர்வாகத் திறன்மிக்க ஆட்சியை ஜெயலலிதா தருவார் என்று பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கிய பிம்பம் கடந்த ஆறு மாதங்களுக்குள் உடைந்து நொறுங்கிவிட்டது. ஜெயாவின் ஆட்சி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி, எதையும் உருப்படியாகச் சாதிக்க முடியாமல் சீர்கேடைந்துள்ளது என இந்தியா டுடே போன்ற ஊடகங்களே குறிப்பிடுகின்றன. ஜெயா ஆட்சியில் சசிகலா கும்பலின் ஆதிக்கத்தை மூடிமறைத்தும், கருணாநிதியின் குடும்ப ஆட்சியைச் சாடியும் நேற்றுவரை பிரச்சாரம் செய்துவந்த பார்ப்பனப் பத்திரிகைகள், இப்போது சசிகலா கும்பல் வெளியேற்றப்பட்டதும், ஜெயா ஆட்சியில் சசிகலா கும்பலின் தலையீடு காரணமாகவே ஊழல்கொள்ளை, நிர்வாகச் சீர்கேடுகள் பெருகியதாகவும், ஜெயாவுக்கு எதுவுமே தெரியாது என்பது போலவும், ஊரறிந்த ஊழல் பெருச்சாளியை உத்தமராகக் காட்டி ஒளிவட்டம் போடுகின்றன.
சசிகலா வெளியேற்றப்பட்டதை மாபெரும் புரட்சி போலச் சித்தரிக்கும் பார்ப்பன ஊடகங்கள், இனி தலையீடற்ற, ஊழலற்ற நிர்வாகம் தொடங்கப் போவதாகவும், ஜெயாவின் அற்புதமான ஆட்சியில் இருந்த ஒரேயொரு குறையும் அகற்றப்பட்டுவிட்டது போலவும் சித்தரிக்கின்றன. ஜெயலலிதா மயக்கத்திலிருந்து தெளிந்து விட்டதாகவும், தொண்டர்களிடம் நிலவி வந்த அதிருப்தி நீங்கிவிட்டதாகவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றன. அன்றைய ரஷ்யப் பேரரசி ஜாரினிக்கு ஒரு ரஸ்புடீன் இருந்ததைப் போல, ஜெயாவுடன் ஒட்டியிருந்த மன்னார்குடி கும்பல் இலஞ்சஊழல், நியமனங்கள், வெளியேற்றங்கள் அனைத்தையும் ஜெயாவுக்குத் தெரியாமல் செய்ததாகச் சித்தரிக்கும் பார்ப்பன ஊடகங்கள், ஜெயாவை நிரபராதியாகக் காட்டும் முயற்சியில் அம்மா எதுவும் தெரியாத களிமண் என்பதை எதிர்மறையில் ஒப்புக் கொள்கின்றன. இவர்கள் கூறும் களவாணிக் கும்பலால் கடந்த 20 ஆண்டுகளாக ‘ஆட்டுவிக்கப்பட்ட பொம்மை’யை வேறென்னவென்று அழைப்பது?
சொந்த சிந்தனை முறையில் ஜெயா ஒரு பார்ப்பன பாசிஸ்டு. அந்த வகையில் அவரது தலைமையிலான அ.தி.மு.க. என்ற பொறுக்கி கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியதும் பார்ப்பனக் கும்பல் மகிழ்ந்தது. எனினும், ஓட்டுக்காக, பிற்படுத்தப்பட்ட சாதி ஆதிக்க சக்திகளைக் கொண்ட சமூக அடித்தளத்தை மன்னார்குடி மாஃபியா மூலமாக ஜெயலலிதா பராமரித்துப் பயன்படுத்தி வந்தார். தொடக்கம் முதலே ஜெயாவின் ஊழல்கொள்ளையை மறைக்க இந்தக் கும்பல் மீது பழிசுமத்திப் பார்ப்பன ஊடகங்களும் பயன்படுத்திக் கொண்டன. கட்சியிலுள்ள எதிர்கோஷ்டிகளும் சசிகலா கும்பலின் தலையீட்டினால்தான் அமைச்சர்களேகூட அம்மாவை நெருங்க முடியாமல், கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்டபெயர் ஏற்பட்டுள்ளதாகக் கருத்தை உருவாக்கின.
ஜெயாவையும் அவரது கட்சியையும் சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கும் அரசியல் விமர்சகராகக் காட்டிக் கொள்ளும் துக்ளக் சோ, இது சட்டத்துக்கு அப்பாற்பட்ட எவ்வித அதிகார மையமும் செயல்படாமல் முடக்கும் தீர்மானகரமான நடவடிக்கை என்று சசிகலா கும்பல் வெளியேற்றப்பட்டதைப் பற்றி பெருமையுடன் கூறுகிறார். ஜெயலலிதாவின் ஆலோசகரான துக்ளக் சோவின் உறவினர்களும், பார்ப்பனக் கூட்டமும் போயஸ் தோட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருப்பதாகக் கிசுகிசு ஏடுகள் பரபரப்புச் செய்திகளை வெளியிடுகின்றன. குஜராத்தின் மோடி பாணியில், “ஊழலற்ற நல்லாட்சி’’, “சிறந்த அரசாளுமை” முதலான முழக்கங்களை முன்வைத்து 2014இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியைச் சாதிக்கவும், அந்நிய முதலீடுகளை ஈர்த்து கார்ப்பரேட் சேவையில் புதிய அத்தியாயம் படைக்கவும், ஏற்கெனவே ஊழல்கொள்ளைக் கூட்டமாக அம்பலப்பட்டுப் போயுள்ள சசிகலா கும்பலின் மீது பழி போட்டு தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொள்ளவும்தான் ஜெயலலிதா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
உலகவங்கி எடுபிடிகளான மன்மோகன் சிங் பிரதமராகவும், அலுவாலியா திட்டக் கமிசன் துணைத்தலைவராகவும், தரகு முதலாளிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரான அமித் மித்ரா மே.வங்க நிதியமைச்சராகவும் இருப்பதைப் போல, மறுகாலனியாதிக்கத்தின் கீழ் கார்ப்பரேட் சேவைக்கேற்ற வகையில் அரசு அமைப்பிலும் அரசியல் கட்சிகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அரசியல் சாராத படித்த வர்க்கத்தினரும், நிபுணர்களும், வல்லுநர்களும் நிர்வாகத்தை நடத்தினால்தான் நாடு முன்னேறும்; வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற பிரச்சாரத்துடன், நிபுணர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உலக வங்கித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நேற்றுவரை சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக இயங்கிய தமது விசுவாசக் கும்பல்களை வைத்துக் கொண்டு இத்தகைய நோக்கத்தை நிறைவேற்ற இயலாது என்பதால், அந்த இடத்தில் கார்ப்பரேட் சேவைக்கேற்ற ஆலோசகர்களை ஆளும் கட்சிகள் அமர்த்தி வருகின்றன.
மக்களுக்கும் கட்சி ஊழியர்களுக்கும் அப்பாற்பட்ட அதிகாரமாகச் செயல்பட்ட மன்னார்குடி கும்பலை அகற்றிவிட்டு, அந்த இடத்தை இப்போது பார்ப்பனக் கும்பல் கைப்பற்றியிருக்கிறது. பா.ஜ.க. இல்லாத பா.ஜ.க. ஆட்சியாக ஜெயலலிதாவின் ஆட்சி உருமாற்றம் பெற்றிருப்பதைப் பார்ப்பன பாசிஸ்டுகள் உச்சிமுகர்ந்து கொண்டாடுகின்றனர். சட்டத்துக்கு அப்பாற்பட்ட மன்னார்குடி கும்பலோ பொறுக்கித் தின்பதற்கு மட்டும்தான் அதிகாரத்தைப் பயன்படுத்தியது. ஆனால், பார்ப்பனக் கும்பலின் அதிகாரம், தமிழகத்தில் கடுமையான விளைவுகளையே ஏற்படுத்தும். பகுத்தறிவு, திராவிடம், ஈழ ஆதரவு, பார்ப்பன எதிர்ப்பு, தமிழின உணர்வுகளை வேரறுப்பதும், தீவிரவாத பயங்கரவாதப் பீதியூட்டி புரட்சிகர ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதும், கார்ப்பரேட் கொள்ளைக்கான மறுகாலனியாக்கத்தை புதுவேகத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதும்தான் நடக்கும். இப்படித்தான் குஜராத்தில் மோடியின் ஆட்சி பயங்கரவாதப் பீதியூட்டி, பெயரளவிலான மனித உரிமை ஜனநாயக உரிமைகளை நசுக்கி, கார்ப்பரேட் கொள்ளைக்கான களமாக அம்மாநிலத்தை மாற்றியது. குஜராத்தின் மோடி மற்றும் பார்ப்பனக் கும்பலின் ஆலோசனைப்படி ஆட்சி நடத்தக் கிளம்பியிருக்கிறார், பாசிச ஜெயா. பாசிசம் என்பதை கார்ப்பரேட்டிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும் பொருத்தமானது என்று விளக்கமளித்தான், முசோலினி. அதற்கு இலக்கணப் பொருத்தமாகத் திகழ்கிறது பாசிச ஜெயாவின் பச்சையான பார்ப்பன ஆட்சி.
நாடாளுமன்றம் லேட்நைட் ஷெட்யூல் போட்டுக் கொண்டு லோக்பால் மசோதாவை நிறைவேற்ற, தில்லியின் குளிர் தாங்காத பயத்தில் மும்பைக்கு முகாம் மாற்றிக் கொண்டு 11 லட்ச ரூபாய் வாடகையில் உண்ணாவிரத மைதானம் ஏற்பாடு செய்து போராட்டத்தைத் தொடங்கிய கையோடு முடித்துள்ள அண்ணா ஹசாரே அலையின் தெறிப்புகள் நாடெங்கும் சிதறியிருக்கின்றன. அவை பற்றிய பல்வேறு நாளிதழ்களில் வெளிவந்துள்ள சில தகவல்களை தொகுத்து வழங்குகிறோம். இவை எதுவும் எமது கற்பனை அல்ல.
1. முதலில் ஆகஸ்டில் நடந்த உண்ணாவிரதம் – சீசன் 2ல் ‘ஆதரவாளர்களுக்கு விருந்துச் சாப்பாடு’ என்ற செய்தி
ராம்லீலா மைதானத்தில் அண்ணாவின் உண்ணாவிரதம் ஆறாவது நாளை நுழையும் போது , கூடியிருந்த ஆதரவாளர்கள் தயாரித்து வைக்கப்பட்டிருந்த சுவையான உணவுகளை உண்டு மகிழ்ந்தார்கள். டெம்போக்களில் வந்து இறங்கிய பிரெட் பக்கோடா, கச்சோரி, சமோசா, ஆலூ பூரி, பரோட்டா, ரசகுல்லா, தேநீர், பிஸ்கட்டுகள், அரை டசன் வகையான நொறுக்குத் தீனிகள் என்று எது வேண்டுமானாலும் வாங்கித் தின்னும் வாய்ப்பு ஆதரவாளர்களுக்கு அளிக்கப்பட்டது.
ஆரோக்கியத்தைப் பேண விரும்புகிறவர்களுக்கு வாழைப்பழங்களும் மாம்பழ ஜூசும் கூட கிடைத்தன. பாதி உண்டு வீசப்பட்ட பேப்பர் தட்டுகளால் குப்பைக் கூடைகள் நிரம்பி வழிந்தன.
‘எவ்வளவு சாப்பிட முடியும், என் வயிறு நிரம்பி விட்டது’ என்று மறுத்தார் ஆதரவாளர் விஜய் ஆனந்த். ஆர்வலரோ விடாமல் ஒரு தட்டு நிறைய கச்சோரிகளை நிரப்பிக் கொடுத்து, ‘இது பிரசாதமுங்க, வேணாம் என்று சொன்னால் விடப்போவதில்லை’ என்றார். ‘இதைத் தூக்கித்தான் போட வேண்டும்’ என்றார் ஆனந்த்.
மைதானத்தின் ஒரு மூலையில் பட்டம் விட்டுக் கொண்டு தீனிகளையும் குளிர்பானங்களையும் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்த குழந்தைகள் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தார்கள். ‘அண்ணாவைப் பற்றிக் கேள்விப்பட்டு என் நண்பர்களுடன் இங்கு விளையாட வந்தோம்’ என்றான் ஒரு சமோசாவை சுவைத்துக் கொண்டிருந்த தரியா கஞ்சிலிருந்துந்து வந்திருக்கும் 12 வயது சுஹைல்.
2. ‘அண்ணா ஹசாரேக்கு ஆதரவாக நடனம் ஆடிய நடிகை சொர்ணமால்யா’
டிசம்பர் 11 அன்று அண்ணா ஹசாரேக்கு ஆதரவாக சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் எம்.பி.நிர்மல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். உண்ணாவிரதப் போராட்டம் நடந்த இடத்தில் நடிகை சொர்ணமால்யா குழுவினரின் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மாலையில் உண்ணாவிரத போராட்டம் முடிக்கப்பட்டது. அப்போது ஊழலுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி கோஷம் எழுப்பினார்கள்.
3. மும்பையில் மையம் கொண்டிருக்கும் அண்ணா ஹசாரே புயல் சென்னையிலும் மழை பெய்விக்க நட்சத்திர பலமாக ரஜினிகாந்த் ஆதரவு
அண்ணா குழுவின் போராளிகள் சென்னையில் ஏற்பாடு செய்யும் மூன்று நாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தனது கல்யாண மண்டபத்தை இலவசமாக விடுவதாக ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
“மண்டபத்தை இலவசமாக வழங்கிய ரஜினிகாந்த் அது நாட்டுக்காகத் தான் செய்யும் தொண்டு என்று தெரிவித்தார்” என்றார் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்திரமோகன். “அவர் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதை எப்போதுமே வரவேற்கிறோம், ஆனால் அதைப்பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை”
4. ரஜினியின் கல்யாண மண்டபம் என்ற கவர்ச்சி கூட போதுமான கூட்டத்தைக் கொண்டு வர முடியவில்லை என்பது நாட்டுப் பற்றுள்ளுவர்களுக்கு கவலை தரும் செய்தி. தென் மாவட்டங்களைச் சேர்ந்த திரைப்படப் புகழ் தமிழ் எழுத்தாளர் தனது குழுவினருடன் கலந்து கொண்டிருந்தால் இன்னும் 20 பேர் தேறியிருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
வேலை நாளாக இருப்பதால் கூட்டம் குறைவு என்று சொல்லப்பட்டாலும் 29 பேர் உண்ணாவிரதம் இருக்கும் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் மாணவர்கள் கூட்டம் கூட தென்படவில்லை. “மக்கள் ஏன் உண்ணாவிரத மண்டபத்துக்கு வரவில்லை என்று புரியவில்லை. சிறை நிரப்பும் போராட்டத்தை நினைத்து மாணவர்கள் பயந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறோம். அவர்களுக்கு நல்லபடியாக எடுத்துச் சொல்லி பங்கேற்றுக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும்” என்று ஒரு தன்னார்வலர் சொன்னார்.
ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் இணைய தளத்தில் 1,500 பேர் சென்னையிலிருந்து ஆதரவு தெரிவித்து பதிவு செய்திருந்தாலும் மண்டபத்தில் சுமார் 200 பேர்தான் கூடியிருந்தார்கள்.
‘இயக்கத்தின் சென்னை பிரிவுக்கு பிரபலமான தலைவர் ஒருவர் இல்லாததால்தான் கூட்டம் கூடவில்லை’ என்று தமிழ்மணி என்ற திரைப்பட இயக்குனர் கருத்து சொன்னார். ‘முல்லைப் பெரியாறு, கூடன்குளம் போன்ற பிரச்சனைகளில் ஆழ்ந்திருக்கும் மக்கள் ஊழலைப் பற்றி கவலைப்படவில்லை’ என்றும் அவர் நினைக்கிறார்.
‘சென்னையில் சரிவர பிரபலப்படுத்தாதுதான் கூட்டம் வராததற்கு காரணம்’ என்று சில நடுத்தர வயதினர் கருத்து தெரிவித்தார்கள். பிரகாஷ் குலேச்சா ஜெயின் என்ற சமூகஆர்வலர் ‘மும்பையில் அண்ணா உண்ணாவிரதம் பற்றி தெரியும். ஆனால் சென்னையில் எந்த இடம் என்று இன்று காலை வரை தெரிந்திருக்கவில்லை’ என்று குறைப்பட்டார்.
“சென்னையில் மொழி வெறி பெரிதாக இருக்கிறது. அண்ணா இந்தியில் மட்டும் பேசுகிறார். போன வாரம் அவர் வந்து போன பிறகு நகரத்தில் இயக்கம் சூடுபிடித்து விட்டது” என்று உபேந்திரன் என்ற மென்பொருள் ஊழியர் தெரிவித்தார்.
5. வெளிநாட்டு இந்தியர்களுக்கான விழா நடைபெற இருப்பதை ஒட்டி ஜெய்பூரின் அண்ணா ஹசாரே ஆதரவாளர்களுக்கு ஊர்வலம் நடத்தவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும், தொடர் உண்ணாவிரதம் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது. கலெக்டரேட் சர்கிளுக்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதி கிடைத்தது. மாலையில் நூற்றுக்கணக்கான இளம் ஆதரவாளர்கள் ஸ்டேடஸ் சர்கிள் அருகில் கூடி மெழுகுவர்த்தி ஏற்றினார்கள்.
6. அடுத்ததாக போராட்டத்தின் மையமான மும்பையின் MMRDA மைதானத்தில் சைதன்யர் ஒருவரைப் பார்க்கலாம்.
அண்ணாவின் சமையலறை என்ற பெயரில் 50,000 பேருக்கு சாப்பாடு வழங்குவதற்காக ஹரியானாவின் ரோஹ்தக்கிலிருந்து ஜன்சேவா சன்ஸ்தானின் தன்னார்வலர்கள் வந்திருந்தார்கள். 60 சமையல்காரர்கள் நடு இரவு வரை உணவு வழங்கத் தயாராக வேலை செய்கிறார்கள். பூரி, கூட்டு, பருப்பு, சோறு சாப்பாட்டுக்கும், தாளித்த அவல்+தேநீர் சிற்றுண்டிக்கும் வழங்கப்படுகின்றன.
இதே பணியில் சூரத்தைச் சேர்ந்த சிறீ கிரிராஜ் சேவா சமிதியும் ஈடுபட்டிருந்தது. “முதலில் பகவான் கிருஷ்ணனுக்குப் படைத்து விட்டுதான் ஆதரவாளர்களுக்கு வினியோகிக்கிறோம்” என்றார் சுவாமி பரம் சைதன்யா. “பலர் தானம் செயதார்கள். யாரிடமும் பணம் வாங்குவதில்லை. சிலர் எண்ணைய், அரிசி, கோதுமை மாவு கொடுத்தார்கள். கடவுளின் அருளால் பற்றாக்குறையே ஏற்படவில்லை” என்று சுவாமி சைதன்யா தெரிவித்தார். “சமைப்பதற்கு பிராண்டட் சமையல் எண்ணையும் மசாலாக்களும் பயன்படுத்துகிறோம்” என்றும் உறுதியளித்தார்.
சுபாஷ் குப்தா என்ற இன்னொரு தன்னார்வலர் “50,000 பேருக்கு உணவளிக்கத் தேவையான உருளைக்கிழங்குகள், கோதுமை, அரசி கைவசம் இருக்கிறது. தீரத் தீர கொண்டு வருகிறோம்” என்றார்.
‘நான் அண்ணா ஹசாரே’ தொப்பி அணிந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தட்டுகளில் – பூரி, உருளைக்கிழங்கு-பட்டாணி, சோறு, பருப்பு என்று கிடைத்த உணவுப் பொருட்களை நிரப்பிக் கொண்டார்கள். மூன்று வேளை உணவு பரிமாறப்பட்டது.
“எல்லோருக்கும் உணவு வழங்கப்படுகிறது. காலையிலிருந்து எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று கணக்கில்லை” என்று ஒரு ஊழியர் தெரிவித்தார். தட்டு நிறைய உணவைக் குவித்து வைத்திருந்த ஒருவர் “சாப்பாடு நல்ல ருசியாக இருக்கிறது, நாங்க வெகு தூரத்திலிருந்து அண்ணாவை ஆதரிக்க வந்திருக்கிறோம். வெயிலில் காத்திருக்க வேண்டியிருக்கிறது’ என்றார். தனது நண்பர்களுடன் மைதானத்துக்கு வந்திருந்த சங்கேத் மேத்தா என்ற பிசினஸ் மேன், “உணவு மிகவும் சுவையாகவும் சுத்தமாகவும் இருக்கிறது. அருகில் எதுவும் சாப்பாட்டு கடைகள் இல்லாததால் இது நல்ல ஒரு முயற்சி” என்று பாராட்டினார்.
7. மும்பை மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கும் ஒரு இளம் போராளியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு கொஞ்சம் தள்ளியிருக்கும் புனேவை எட்டிப் பார்த்து விட்டு வந்து விடுவோம்.
புனேவின் ஆர்பிஐ சதுக்கத்தில் அண்ணாவைப் போன்று வேடமிட்ட டாக்டர் கோபால் பேலே உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். பேலேவுக்கு அண்ணாவுக்கும் 12 ஆண்டுகள் பழக்கம் இருக்கிறது. ஹோமியோபதி மருத்துவராக பணி புரியும் பேலே, அண்ணாவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் நகரக் கிளையின் தலைவராகவும் இருக்கிறார்.
சென்ற முறை கலந்து கொண்ட 13 பேரிலிருந்து இந்த முறை எண்ணிக்கை 17 பேராக உயர்ந்திருக்கிறது. இளைஞர்களை மையமாகக் கொண்ட இயக்கம் என்று அண்ணா சொல்லியிருந்தாலும் இந்த முறை போராட்டத்தில் ஒரு இளைஞரைக் கூடப் பார்க்க முடியவில்லை.
‘பிற வேலைகளில் ஈடுபட்டிருப்பதால் இளைஞர்கள் இதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை’ என்று ஊழலுக்கு எதிரான இந்தியா ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அசோக் லாஞ்சேவர் கருதுகிறார். “அதனால்தான் போராட்டத்தில் கலந்து கொள்பவர்களில் பெரும்பகுதியினர் ரிட்டையர்ட் ஆனவர்களாக இருக்கிறார்கள். உண்ணாவிரதம் இருக்க விரும்பிய பல இளைஞர்களை வேறு வேலைகளுக்கு அனுப்பி விட்டதால் அவர்களால் உண்ணா விரதத்தில் கலந்து கொள்ள முடியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
8. ஒரு பள்ளி மாணவனே உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறான் மும்பையில்.
அண்ணா ஹசாரேவின் 3 நாட்கள் உண்ணா விரதத்தில் கலந்து கொள்ள தனது தந்தையுடன் MMRDA மைதானத்துக்கு வந்திருக்கிறான் 8ம் வகுப்பு படிக்கும் பிரதீக்.
தனது பள்ளிப் பையுடனும் மூன்று நாட்களுக்கான மாற்று உடைகளுடனும் உண்ணாவிரத மைதானத்துக்கு வந்திருக்கும் பிரதீக்கின் அப்பா ரமேஷ் லாரி ஓட்டுனராக பணி புரிந்து வேலை இழந்தவர். ‘கல்வியை ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமை என்று உறுதி செய்யும் கல்வி பெறும் உரிமை சட்டத்தை அரசு இயற்றியிருக்கிறது ஆனால் என் பையன் படிக்கும் பள்ளிக் கூடம் பள்ளிக் கட்டணத்தை உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறது. பள்ளியை நடத்துவது மேலும் மேலும் கஷ்டமாகி வருவதாக பள்ளி நிர்வாகம் சொல்கிறது. ஆனால் ஆங்கில வழி வகுப்புகளை நன்கு நடத்தி வருகிறது’
பிராதிக் மராத்தி வழி வகுப்பில் படிக்கிறான். அவனது அம்மா அங்கன்வாடி ஊழியராக வேலை பார்த்து மாதம் 2,000 ரூபாய் சம்பாதிக்கிறார். ஆனால் பள்ளிக் கட்டணமாக ஆண்டுக்கு 3,000 ரூபாய் வரை கட்ட வேண்டியிருக்கிறது. “என்னைப் போன்ற மாணவர்களுக்கு படிக்க வாய்ப்பு வேண்டும்” என்று சொல்லும் பிராதிக் ஒரு எஞ்சினியர் ஆகி ராணுவத்தில் சேர விரும்புகிறான்.
உண்ணா விரதம் இருப்பதன் மூலம், பள்ளிக் கட்டணத்தைக் கட்ட முடியாததால் மற்ற மாணவர்கள் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது வெளியில் நிறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்படும் தனது நிலைமைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வந்திருக்கிறான்.
உணவு பாதுகாப்பு சட்டம், உயர்கல்வியில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் சட்டம், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு என்று வரிசையாக ‘மக்கள் நல்வாழ்வு’ திட்டங்கள் காத்திருப்பதும் அதைப் பற்றி லோக்பாலும் அண்ணா ஹசாரேயும் பேசப் போவதில்லை என்பதும் பிரதீக்குக்கும் அவனது குடும்பத்தினருக்குக்கும் தெரிய வாய்ப்பில்லை!
9. மீண்டும் சென்னையில். ஊழலுக்கு எதிராக பரதநாட்டியம் ஆடிய சுவர்ணமால்யாவின் தங்கை ராதிகா கணேஷ்.
‘மோகன்தாஸ், ஒரு மனிதனின் உண்மை கதை’ என்ற புத்தகத்தைக் கையில் பிடித்த படி நின்றிருந்தார் 24 வயதான ராதிகா கணேஷ். லண்டனின் பிரையன் மூரல் நிறுவனத்தில் வெளித்தொடர்பாளராக வேலையை விட்டு விட்டு இந்தியா திரும்பி அண்ணாவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறார் ராதிகா. ‘இந்த அளவிலான புரட்சியை வாழ்க்கையில் நான் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. அதனால் அதில் பங்கேற்க விரும்புகிறேன்’.
வழக்கறிஞராக வேலை செய்யும் அம்மா மாலினி கணேஷ், அக்கா நடிகை சுவர்ணமால்யா இவர்களின் ஆதரவுடன் வந்திருக்கும் ராதிகா, “இந்தப் போராட்டம் நம் ஒவ்வொருவரது போராட்டம். லண்டனில் நானும் நண்பர்களும் இந்தியாவின் நிகழ்வுகளை கவனித்து வந்தோம். ஊழல் எதிர்ப்பு இயக்கம் எங்கள் விவாதங்களில் தவறாமல் இடம் பிடிக்கும். நண்பர்கள் இயக்கம் வெற்றி பெற விரும்பினார்கள். ஆனால் நான் இன்னொரு படி எடுத்து வைத்து இந்தியாவுக்குத் திரும்பி இயக்கத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்”.
10. கடைசியாக ‘அண்ணா வின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் மீது எனக்கு ஏன் அக்கறையில்லை’ என்று சொல்லும் மணீப்பூரைச் சேர்ந்த ரோனித் சிங்கன்பம் என்ற இசையமைப்பாளர்
‘மணிப்பூரில் அரசாங்கத்தின் அட்டகாசங்களுக்கும் போராட்டங்களுக்கும் நடுவில் நான் வளர்ந்தேன். தில்லிக்கு வந்த பிறகுதான் நாட்டின் பிற பகுதிகளில் வாழ்க்கை எவ்வளவு வேறுபட்டு இருக்கிறது என்று புரிந்தது. இம்பாலுக்கு வெளியில் மக்கள் எவ்வளவு பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்று புரிந்தது. வடகிழக்கு மாநில மக்கள் இந்தியர்களாகவே நடத்தப்படுவதில்லை.’
அதே போன்ற நிலையில் வாழும் பழங்குடி மக்கள், தலித்துகள், காஷ்மீரிகளின் போராட்டங்களையும் அவரால் புரிந்து கொள்ள முடிகிறது.
‘எனது இசை நான் அறிந்த மனித வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. பாதுகாப்பான வாழ்க்கையை அடைந்த பிறகுதான் ஊழல் போன்ற பிரச்சனைகளைப் பற்றி யோசிக்க முடியும். இந்த நாட்டினால் பழிவாங்கப்படுபவனாக நான் உணர்கிறேன். மணிப்பூரில் வாழும் மக்கள் எந்த நேரத்திலும் சுட்டுக் கொல்லப்படலாம் என்று பயத்தில் வாழ்கிறார்கள். அந்த மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்த பிறகுதான் பிற பிரச்சனைகளைப் பற்றி நான் கவலைப்பட முடியும். அதனால் ஊழல் எதிர்ப்பு இயக்கம் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை.’
அண்ணா ஹசாரேவின் கீழ் அணி திரளும் பாரத ஞானமரபு சிக்கிமுக்கு சுற்றுலா செல்வதற்கு பாதுகாப்பான ஏற்பாடுகள் செய்து கொடுப்பதோடு நின்று விடுகிறது. மணிப்பூர் மக்கள் நிம்மதியாக வாழ அது உத்தரவாதம் அளிப்பதில்லை.
ஆக மொத்தத்தில் இந்த செய்திகளைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது? பானி பூரி நன்கு விற்பனையாகிறது! பரத நாட்டியம் அரங்கேறுவதற்கு ஒரு மேடை கிடைத்திருக்கிறது!
இந்திய தேசியம் என்ற பொய்மைத் தோற்றம் உருப்பெறத் தொடங்கிய காலத்தில்தான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டது. பலவீனமடைந்துவிட்டதாகவும், உடையப்போகிறதென்றும் பொய்ப்பிரச்சாரமும் பீதியும் கிளப்பப்பட்ட போதிலும் அணை அசையாமல் நிற்கிறது; இந்திய தேசியமோ ஆடிக் கொண்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையைத் தகர்ப்பதற்கு முன்நிற்கிறார்கள் இந்திய தேசியவாதிகள்.
நியாயமான மாநில உரிமைக்காகவும் தேசிய இன உரிமைக்காகவும் நடத்தப்படும் போராட்டங்களை பிரிவினைவாத முத்திரை குத்தி ஒடுக்குவதுதான் இந்திய தேசியத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் வழி என்பது பாரதீய ஜனதா, காங்கிரசு மற்றும் போலி கம்யூனிஸ்டு கட்சிகளின் கொள்கை. என்றபோதிலும், நதிநீர்ப் பங்கீடு மற்றும் எல்லைப் பிரச்சினைகள் போன்ற மாநிலங்களுக்கிடையிலான தகராறுகளில் நியாயஅநியாயங்களைப் பரிசீலித்து, இவர்கள் நிலைப்பாடு எடுப்பதில்லை. மாறாக, ஓட்டுப் பொறுக்குவதற்காக மாநிலவெறி, இனவெறியைத் தூண்டுவதுதான் இந்தத் தேசியக் கட்சிகளுடைய மாநிலப் பிரிவுகளின் நடைமுறையாக இருந்து வருகிறது.
இக்கட்சிகளின் அனைத்திந்தியத் தலைமைகள், பிராந்திய நலன்களைக் கைவிட்டுச் சுமுகமாகப் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று பொதுவில் உபதேசிக்கின்றன. அதேநேரத்தில், சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களிலும் ஓட்டுப் பொறுக்கும் நோக்கில் இரு மாநிலப் பிரிவுகளையும் தனித்தனியே தூண்டிவிடுகின்றன. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடுகள், அவர்களிடம் நிலவும் தமிழக விரோதப் போக்கை மட்டுமின்றி, அவர்களால் விதந்தோதப்படும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான சந்தர்ப்பவாதத்தையும் மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியிருக்கின்றன.
இந்திய தேசியத்தையே தனது பார்வையாகக் கொண்ட அல்லது அதற்கு விலைபோய்விட்ட ஊடகங்களும், “தேசிய மொழியாக” ஆங்கிலத்தை வரித்துக் கொண்டுள்ள ஊடகங்களும் அந்தந்த மாநிலங்களுக்குத் தகுந்தாற்போன்று சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்கின்றன. இரண்டு மாநிலங்களிலும் பத்திரிகை நடத்தும் இந்துவும் எக்ஸ்பிரசும், ஏன், சன் தொலைக்காட்சி குழுமமும், இடத்துக்கும் மொழிக்கும் ஏற்ப எழுதியும் பேசியும், தேசியவாத சமரச நாடகமாடுகின்றன. இங்கே தமிழகத்துக்கு ஆதரவாக சண்டப்பிரசண்டம் செய்யும் தினமணி, இந்தியாடுடேயின் முதலாளிகள், கேரளத்தில் வெளியாகும் இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் மலையாள இந்தியா டுடேயில் வேறு மாதிரி எழுதுகின்றனர். அந்தந்த மாநில ஆசிரியர் குழுக்களின் “சுதந்திரம்’’, “உரிமை” அல்லது சமரசவாதம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு இந்த அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்துகின்றனர்.
காங்கிரசு, பா.ஜ.க. மற்றும் அவற்றுடன் கூட்டுச் சேர்ந்துள்ள கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல; தேசியவாதத்தை வரித்துக் கொண்டுள்ள போலி கம்யூனிஸ்டு கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. குழுச் சண்டை மற்றும் ஊழல் அரசியலில் மூழ்கி நாறும் போலி மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் அச்சுதானந்தன்தான் கேரளத்தில் இனவெறித் தலைவராக முன்னின்று தமிழர் எதிர்ப்பைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடைய எத்தனிக்கிறார். கட்சிக்குள் நடக்கும் பதவிச் சண்டையில் தமிழர் எதிர்ப்பு தரும் ஆதரவைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.
அச்சுதானந்தனின் இனவெறி நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது, மத்தியத் தலைமை. தமிழகத்திலுள்ள போலி மார்க்சிஸ்ட் தலைமையோ துரோகத்தனமான மௌனம் சாதிக்கிறது. இங்கே, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவான போராட்டங்களில் சேர்ந்து கொள்ளும் இங்குள்ள போலி கம்யூனிஸ்டுகளின் தலைமையோ, அச்சுதானந்தனின் தமிழர் எதிர்ப்பு இனவெறிப் பிரச்சாரம் குறித்தும், அதற்கு அங்குள்ள வலது, இடது போலிகளின் ஆதரவு குறித்தும் மூடிமறைத்துக் கொண்டே தமிழக உரிமைக்குக் குரல் கொடுப்பதாக நாடகமாடுகின்றன.
1970களின் இறுதியில் இடுக்கி அணை கட்டப்பட்ட பிறகுதான் இப்பிரச்சினை தொடங்கியது. அந்த அணைக்குப் போதிய நீர் கிடைக்காததால், அதன் முழுத்திறனில் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலையில், முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தமிழகத்துக்குச் செல்லும் நீர் முழுவதையும் இடுக்கி அணைக்குத் திருப்பி விட வேண்டும் என்பதற்காகவே, “மலையாள மனோரமா” நாளேட்டுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு புரளியை கிளப்பிவிட்டார் அச்சுதானந்தன். 1979இல் நடந்த நிலநடுக்கத்தால் முல்லைப் பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுவிட்டதென்றும், அது உடைந்தால் 5 மாவட்டங்களில் பேரழிவும் 60 இலட்சம் மலையாளிகளின் உயிருக்குப் பேராபத்தும் நேரிடும் என்ற பீதியை அச்சுதானந்தன் தலைமையிலான இனவெறிக் கும்பல் கிளப்பி வருகிறது.
இந்தப் பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் கிளப்பப்பட்ட பீதி, இடுக்கி அணைக்கான நீர்த் தேவைக்காக கேரளம் கொடுத்து வந்த நிர்ப்பந்தம் ஆகியவற்றை முகாந்திரமாகக் கொண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியும் அதன் மலையாள அதிகாரிகளும் சதித்தனமாக கேரளாவுக்குப் பல சலுகைகளைத் தந்தனர். அணையின் பாதுகாப்பு பொறுப்பு கேரள அரசுக்கு அளிக்கப்பட்டது. நீர்த்தேக்கப் பகுதிக்கான நில வாடகை, மின் உற்பத்திக்கான குத்தகை ஆகியவற்றை உயர்த்தவும், இடுக்கி அணையிலிருந்து மின்சாரம் விலைக்கு வாங்குவதும் ஒப்பந்தமானது. முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்துக் கொள்ளப்பட்டது . நீர்மட்டம் 16 அடி குறைக்கப்பட்டதால், கம்பம் பள்ளத்தாக்கின் 40 சதவீத நீர்ப்பாசனமும் 40 சதவீத விவசாய உற்பத்தியும் குறைந்தன. இவ்வளவு சலுகைகளைப் பெற்ற பிறகுதான் முல்லைப் பெரியாறு அணையையும் அதன் ஒரு பகுதியான பேபி அணையையும் வலுப்படுத்திய பிறகு, வல்லுநர்கள் ஆய்வு செய்து பரிந்துரைத்த பிறகு, அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்வது பற்றி பரிசீலிப்பதற்கு ஒப்புக் கொண்டது, கேரள அரசு.
இதன்படி, தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெரியாறு அணையைப் பலப்படுத்திய பின்னும், போலி மார்க்சிஸ்டுகள் மற்றும் காங்கிரசு தலைமையிலான கூட்டணி அரசுகளும் ஊடகங்களும் இந்தப் பொய்ப்பிரச்சாரத்தைத்தான் தொடர்ந்து வருகின்றனர். பேபி அணையைப் பலப்படுத்த தமிழக அரசு எடுத்த முயற்சிகளைத் தடுத்தும் வந்தனர். கேரள திரையுலகைச் சேர்ந்த கதாசிரியர் வாசுதேவன் நாயர் போன்ற சிலர் மட்டுமே இத்தகைய இனவெறிப் போக்கைக் கண்டித்திருக்கின்றனர். அணையின் உறுதிப்பாடு குறித்த வல்லுநர் குழுவின் ஆய்வு முடிவுகளை ஏற்ற உச்ச நீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை உடனடியாக 142 அடிக்கும், பேபி அணையை வலுப்படுத்திக் கொண்ட பிறகு 152 அடிக்கும் உயர்த்திக் கொள்ளவும், தமிழகத்துக்கு உரிமை வழங்கியது. அதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் 2006ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்க மறுத்ததோடு, போலி மார்க்சிஸ்டு கட்சியின் அச்சுதானந்தன்தலைமையிலான கேரள கூட்டணி அரசு அவசர அவசரமாக சட்டமன்றத்தைக் கூட்டி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முறியடிக்கும் வகையில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. “முல்லைப் பெரியாறு உட்பட கேரளாவில் உள்ள 22 அணைகளின் கட்டுப்பாட்டை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட ஆணையம் ஒன்றை நிறுவி, அதன் செயல்பாட்டில் வேறு எந்த அரசும் நீதிமன்றங்களும் தலையிடவோ குறுக்கிடவோ முடியாது” என்று கேரள அரசு அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. அதோடு, உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிராக முல்லைப் பெரியாறு மற்றும் அதன் பேபி அணையை வலுப்படுத்தவும், அவற்றை நிர்வகிக்கவும் தமிழகத்துக்குள்ள உரிமையைச் செயல்படுத்தும் தமிழக அதிகாரிகளையும் தாக்கித் தடுத்தது.
கேரளத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசு மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், பா.ஜ.க. முதலிய இந்திய தேசியவாதக் கட்சிகள் அச்சுதானந்தன் அரசின் இந்த அடாவடிகளுக்கு ஒத்துழைத்து ஆதரவளித்தன. உச்ச நீதிமன்றமும் தனது உத்தரவை கிடப்பில் போட்டு, அதன் உத்தரவுகளுக்குப் பணிய மறுத்த கேரள அரசைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ முன்வராமல் சமரச நாடகமாடத் தொடங்கியது.
கேரள அணைகள் பாதுகாப்புச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது; குறிப்பாக, இரு மாநில ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்ட முல்லைப் பெரியாறு அணைக்குப் பொருந்தாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்குத் தொடுத்தது. உச்ச நீதிமன்றத்தின் 2006ஆம் ஆண்டின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி கேரள அரசும் வழக்குத் தொடுத்தது. தனது முந்தைய தீர்ப்பைப் புதைகுழியில் போட்ட உச்ச நீதிமன்றம், புதிதாக வழக்குகள் வந்ததைப் போல விசாரணையைத் தொடங்கியது. அதன் பரிந்துரையின்படி நடந்த இரு மாநில முதல்வர்களின் பேச்சுவார்த்தை முறிந்தது. அதன் பிறகு, இரு மாநில மத்திய அரசுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட அதிகாரத்துடன் கூடிய உயர்மட்டக் குழுவை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் அமைத்தது, உச்ச நீதிமன்றம். அது, அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய ஒரு வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. மொத்தத்தில், மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி சக்கரத்தைச் சுற்றவிட்டது.
இதற்கிடையே அணை வலுவிழந்துவிட்டது என்று காட்டும் நோக்கில் மத்திய இராணுவ அமைச்சரும் கேரளத்தைச் சேர்ந்தவருமான ஏ.கே. அந்தோணி மூலம் கடற்படைக் குழு, ரூர்கி ஐ.ஐ.டி.யிலிருந்து நில அதிர்ச்சி பாதிப்புகளை ஆய்வு செய்யும் வல்லுநர் குழு ஆகியவற்றை வைத்துத் தனக்குச் சாதகமான ஆதாரங்களைத் திரட்டி, அவற்றை வைத்து கேரள அரசு ஒருபுறம் வழக்காடியது. மறுபுறம், குறும்படங்கள், பிரச்சாரங்கள் மூலம் அணை உடைந்து பேரழிவு ஏற்படும் என பீதி திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. இறுதியாக, உச்ச நீதிமன்ற உயர்மட்டக் குழு அறிக்கையும் தீர்ப்பும் தனக்குச் சாதகமாக இராது என்ற அச்சம், வரவிருக்கும் பிரவம் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவை காரணமாக இந்தப் பொய்ப்பிரச்சாரம் உச்சத்துக்குச் சென்றிருக்கிறது. ‘தமிழகத்துக்குத் தண்ணீர், கேரளத்துக்குப் பாதுகாப்பு’ என்ற நயவஞ்சகமான நோக்கம் கொண்ட ஒரு முழக்கத்தை வைத்துப் புதிய அணை கட்டும் திட்டம் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசில் அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் பெருமளவில் உள்ள தமது இனத்தவர்களை வைத்து புது அணைக்கான ஆதரவும் திரட்டப்படுகிறது.
இவர்களின் பீதியூட்டும் பொய்ப்பிரச்சாரம் காரணமாக வெறிபிடித்த அணிகள், கேரளத்துக்குத் தோட்ட வேலை செய்யப் போன தமிழகத் தொழிலாளர்களைத் தாக்கி, பெண்களைச் சிறைபிடித்து அவமானப்படுத்தியிருக்கின்றனர். சபரிமலைக்குப் போன பக்தர்களையும் தாக்கியுள்ளனர். காங்கிரசின் கேரள அமைச்சர் உண்ணாவிரதமிருந்து மேலும் வெறியேற்றினார். “தண்ணீர் கொடுத்த கேரள மக்களுக்கு தமிழர்கள் துரோகம் செய்து விட்டனர் ” என்று அச்சுதானந்தன் நஞ்சு கக்கினார். காங்கிரசு, பா.ஜ.க. வினர் அணையைத் தாக்கவும் செய்தனர்.
இவற்றின் காரணமாகக் கொதித்துப்போன தமிழக மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டங்களில் குதித்துள்ளனர்.தமிழக போலீசின் வடநாட்டு அதிகாரிகள் தடுத்தும் தடியடி நடத்தியும் மக்கள் எழுச்சியை அடக்க முடியவில்லை. அன்றாடம் பல ஆயிரம் மக்கள் கேரள எல்லை நோக்கி அணிவகுத்துச் செல்கின்றனர். மூன்று வாரங்களுக்கு மேலாகப் போராட்டம் நீடிக்கிறது. பல நாட்கள் எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, கேரளத்தில் காய்கறி விலைகள் உயர்ந்தன. தமிழக மக்களுடைய கொதிப்பின் சூடு தெரியத்தொடங்கியவுடனே, சபரிமலை பக்தர்களை வரவேற்பது போன்ற நாடகங்களை கேரள அரசு அரங்கேற்றத் தொடங்கியிருக்கிறது.
அதேநேரத்தில் அணையின் உறுதியைச் சோதிப்பதற்காக தற்போது வந்திருந்த உச்ச நீதிமன்றம் நியமித்த வல்லுநர் குழுவிடமும் கேரள அதிகாரிகள் அடாவடித்தனம் செய்திருக்கின்றனர். தமக்கு சாதகமான முடிவு வராத வரை, எத்தகைய நடுநிலை வல்லுநர்களின் முடிவுக்கோ, தீர்ப்புகளுக்கோ கட்டுப்பட முடியாது என்பதே கேரள அரசின் நிலை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. 1979இல் அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் ஏராளமான சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. முல்லைப்பெரியாறு அணையைத் தகர்ப்பதன் மூலம், வனவளமிக்க அப்பகுதியைத் தமது சுற்றுலாக் கொள்ளைக்கு விழுங்கிக் கொள்ள முனைகிறார்கள் கார்ப்பரேட் தரகு முதலாளிகள். சொல்லப்போனால், பழைமையான அரை வட்ட வடிவிலான 500 மீட்டருக்கும் மேல் உயரமான இடுக்கி அணைதான் ஒப்பீட்டளவில் அபாயகரமானதும், அவர்கள் அச்சுறுத்துவதைப் போன்ற நிலநடுக்கம் ஏற்பட்டால் முதலில் உடையக்கூடியதும் ஆகும். எனினும், இந்த உண்மைகள் எதுவும் காதில் ஏறாத அளவுக்கு கேரள மக்கள் மத்தியில் திட்டமிட்டே பீதி பரப்பப்பட்டிருக்கிறது.
ஏறக்குறைய 60 இலட்சம் மலையாளிகள் தமிழகத்திலும் இலட்சக்கணக்கான தமிழர்கள் கேரளத்திலும் வாழ்கின்றனர். முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தின் ஆகப்பெரும்பான்மையினர் தமிழ் மக்களே. வரலாற்றுப் பாரம்பரியம், பண்பாடு மற்றும் பொருளாதார ரீதியான பொதுநலன்களையும் நீண்ட எல்லையையும் கொண்டுள்ள இரு இனங்களுக்கும் இடையிலான முரண்பாடு நட்பு ரீதியில் தீர்த்துக் கொள்ளக் கூடியதே. இதனைப் பகைமையானதாகவும் நிரந்தரமானதாகவும் மாற்றுவதற்கு இரு இனங்களிலும் உள்ள இனவாதச் சக்திகள் மேற்கொள்ளும் எத்தணிப்புகளுக்கு இடங்கொடுக்கக் கூடாது.
தமிழகத்தின் நீர்பிடிப்புப் பகுதியில் உருவாகி மேற்கு நோக்கி ஓடும் ஆறுதான் பெரியாறு என்ற போதிலும், இந்தத் தண்ணீர் ‘கேரளம் தமிழகத்துக்குக் கொடுக்கும் தானம்’ என்ற கண்ணோட்டம் அச்சுதானந்தன் உள்ளிட்ட மலையாள இனவெறியர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை மீறுவதற்கும், அணையை உடைப்போம் என்று மிரட்டுவதற்கும் இந்தக் கருத்துதான் அடிப்படை. இதனை முறியடிக்க வேண்டுமானால் உணவு, காய்கறி, இறைச்சி, பால் ஆகிய அனைத்துக்கும் கேரளம் தமிழகத்தைச் சார்ந்திருக்கிறது என்ற உண்மையை அவர்கள் உணரச்செய்ய கேரளத்துக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். கேரளத்துடனான எல்லைகள் அனைத்தையும் தமிழக அரசே மூடவேண்டும். இப்பிரச்சினையில் நயவஞ்சக நாடகம் நடத்துவதற்கு திமுக, அ.தி.மு.க. உள்ளிட்ட மாநிலக் கட்சிகளை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, அனைத்திந்திய அரசமைப்பின் அதிகாரத்துக்கு கேரளம் கட்டுப்படாதபோது, தமிழகமும் கட்டுப்படக்கூடாது. இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தமிழக மக்கள் சகித்துத்தான் தீரவேண்டும். இல்லையேல், தமிழகம் பாலைவனமாகும். இத்தகைய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தாமல் தமிழகம் நீதியைப் பெற முடியாது.
2006 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த மறுக்கும் கேரளத்துக்கு எதிரான பொருளாதாரத் தடை மட்டுமின்றி, மைய அரசின் அதிகாரத்தை நிராகரிக்கும் நடவடிக்கைகளையும், இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தொடங்க வேண்டும். நிபந்தனையற்ற முறையில் இத்தீர்ப்பினை அமல்படுத்த கேரளம் சம்மதித்தால், கேரள மக்களிடம் பரப்பப்பட்டிருக்கும் பீதியை அகற்றத் தமிழகம் ஒத்துழைக்கலாம். இந்திய அல்லது சர்வதேச வல்லுநர்களைக் கொண்டு அணையின் வலிமையைச் சோதித்து உறுதி செய்து கொள்ள அனுமதிக்கலாம். ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுதான் நமது நோக்கம். கேரள மக்களின் உயிரைப் பலியிட்டு தம் வாழ்வைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ் மக்கள் யாரும் விரும்பவில்லை. அது கேரள இனவெறியர்கள் செய்துவரும் பொய்ப்பிரச்சாரம்.
காவிரி, ஈழம், தமிழக மீனவர் பிரச்சினை, முல்லைப்பெரியாறு எனத் தமிழகம் வஞ்சிக்கப்படுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. ஒருமைப்பாடு என்பது ஒரு வழிப்பாதையல்ல.
கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)
சிங்கள இனவெறி பிடித்த இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி, ஸ்டாலின் என்ற வழக்குரைஞர் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் தொடுத்த வழக்கில், “தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும், அதைத் தாண்டிய சர்வதேசக் கடல் பரப்பிலும் அச்சமின்றி பாதுகாப்புடன் மீன் பிடிப்பதற்குக் கடலோரக் காவல் படையினர் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அதை இந்தியக் கடற்படை கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவைப் பத்து நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும்.” என அந்நீதிமன்றம் அக்டோபர் 14 அன்று இடைக்காலத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு வெளிவந்த அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தமிழக மீனவர்கள் மீது 13 தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. இதனால், நீதிமன்றத் தீர்ப்பின்படி உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய கடலோரக் காவல்படை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞர் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து இந்தியக் கடலோரக் காவல்படை இவ்வழக்கு தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் பிரமாண வாக்குமூலப் பத்திரமொன்றை மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், “சிங்களக் கடற்படையினர் ஒருபோதும் எல்லை தாண்டி வந்து தமிழக மீனவர்களைத் தாக்கியதில்லை. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதும், தடை செய்யப்பட்ட வலைகளை மீன் பிடிக்கப் பயன்படுத்துவதும்தான் இப்பிரச்சினைக்குக்” காரணமெனத் தெரிவித்திருப்பதோடு, இப்பிரச்சினைக்குத் தீர்வாக, “தமிழகத்தை ஒட்டியுள்ள இந்திய இலங்கை சர்வதேச கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதைத் தடை செய்ய வேண்டும்; இதனை மீறும் மீனவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தது.
கொலைகார சிங்களக் கடற்படையை உத்தமர்களாகவும், தமிழக மீனவர்களை கிரிமனல் குற்றவாளிகளாகவும் காட்டும் அயோக்கியத்தனம் ஒருபுறமிருக்க, பாக். நீரிணையிலும் கச்சத் தீவையொட்டியுள்ள கடற்பகுதியிலும் காலங்காலமாக மீன் பிடித்துவரும் தமிழக மீனவர்களின் பாரம்பரியமிக்க உரிமையை மறுப்பதன் மூலம், அவர்களின் வாழ்வாதாரத்தையே நசுக்கிவிட இந்திய அரசு விரும்புகிறது என்பதைத்தான் இவ்வாக்குமூலம் எடுத்துக் காட்டுகிறது. சிங்களக் கடற்படை இந்தியாவைப் பார்த்து, “நண்பேன்டா” எனக் குத்தாட்டம் போடுவது நமது மனக்கண் முன் விரிகிறது.
தமிழக மீனவர்கள் இந்த வாக்குமூலத்தைத் திரும்பப் பெறக் கோரித் தமிழகக் கடலோரப் பகுதியெங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதையடுத்தும்; தமிழக அரசு இந்த வாக்குமூலத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்ததையடுத்தும் கடலோரக் காவல் படை இவ்வழக்கு தொடர்பாக புதிய வாக்குமூலமொன்றை டிசம்பர் மாதத்தில் தாக்கல் செய்தது.
கடலோரக் காவல்படை உண்மையை உணர்ந்து, தனது தவறைத் திருத்திக் கொண்டு புதிய வாக்குமூலப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவில்லை. தமிழகத்தையொட்டியுள்ள இந்திய இலங்கை சர்வதேசக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதைத் தடை செய்ய வேண்டும் என்ற அதனின் அடாவடித்தனமான ஆலோசனையை மட்டும் நீக்கிவிட்டு, தமிழக மீனவர்களை கிரிமினல் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் தீய எண்ணத்தோடுதான் அப்படையின் புதிய வாக்குமூலப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
சிங்களக் கடற்படை தங்களைத் தாக்கும்பொழுது, அது பற்றி உடனடியாகத் தங்களிடமுள்ள வீ.எச்.எஃப். என்ற தகவல் தொடர்புக் கருவி மூலம் கடலோரக் காவல்படைக்குத் தமிழக மீனவர்கள் தகவல் கொடுப்பதில்லை. ஆனால், சிங்களக் கடற்படை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்லும் ஒவ்வொரு முறையும் எங்களுக்குத் தகவல் தருகிறார்கள் எனக் கூறும் காவல்படை, கடந்த ஜூன் மாதம் தொடங்கி அக்டோபருக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 17,102 படகுகள் எல்லைதாண்டி வந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்திருப்பதாக சிங்கள அரசு கூறி வருவதையே தமிழக மீனவர்கள் எல்லைதாண்டிச் செல்கிறார்கள் என்ற தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாகக் காட்டியிருக்கிறது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதாகவே ஒப்புக் கொள்வோம். இக்‘குற்றம்’ பற்றி கடலோரக் காவல்படைக்குத் தகவல் கொடுக்கும் சிங்களக் கடற்படை, அம்மீனவர்களைக் கையும்களவுமாகப் பிடித்து கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்காமல், அடித்துத் துரத்துவதையும் சுட்டுக் கொல்வதையும் எந்தச் சட்டம் நியாயமென்று கூறுகிறது? இந்திய இலங்கை கடல் எல்லையில் 24 மணி நேரமும் ரோந்து வந்து கொண்டிருப்பதாகக் கூறும் கடலோரக் காவல் படை, சிங்களக் கடற்படை தகவல் கொடுத்தவுடனேயே விரைந்து சென்று தமிழக மீனவர்களைக் கையும் களவுமாக இதுவரை ஒருமுறைகூடப் பிடித்ததில்லையே? தமிழக மீனவர்களுக்கு எதிராக கடலோரக் காவல்படை காட்டும் ‘ஆதாரங்கள்’ குறித்து இவை போல பல கேள்விகளை நீதிமன்றத்தில் எழுப்பினால், அப்படை அசடு வழிய நிற்கத்தான் முடியும்.
சிங்களக் கடற்படை எல்லை தாண்டிவந்து தமிழக மீனவர்களைத் தாக்கியிருக்கும் சம்பவங்கள் ஏராளம் உண்டு. சிங்களக் கடற்படையினரின் அக்கிரிமினல் குற்றங்களை மூடிமறைக்கும் நோக்கத்தோடுதான் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டிச் செல்வதாக ஊதிப் பெருக்குகிறது, கடலோரக் காவல்படை. 1974 இல் செய்துகொண்ட ஒப்பந்தப்படி கச்சத் தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதற்குத் தடையேதும் கிடையாது என ஒருபுறம் சொல்லிக்கொண்டு, இன்னொருபுறம் அந்தப் பகுதியில் மீன் பிடிப்பதை எல்லைத் தாண்டிச் செல்லும் கிரிமினல் குற்றமாகக் காட்ட முயலுவது கடைந்தெடுத்த பித்தலாட்டத்தனமாகும்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் ஒவ்வொரு முறையும் அது பற்றி தமிழக போலீசிடம் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. இந்திய அரசு இப்புகார்கள் பற்றி எந்தவிதமான மேல்நடவடிக்கையும் எடுக்காமல் குப்பையாகப் போட்டு வைத்திருப்பதை மறைத்துவிட்டு, தமிழக மீனவர்கள் தம் மீதான தாக்குதல் பற்றி புகார் கொடுக்காமல், ஊடகங்களின் மூலம் ஊதிப் பெருக்கி விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் என அபாண்டமாகப் பழி போடுகிறது, கடலோரக் காவல்படை. தமிழக மீனவர்கள் தாங்கள் தாக்கப்படுவதையும், சகோதர மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையும், தமது படகுகளும், வலைகளும், பிடித்து வைத்திருந்த மீன்களும் நாசப்படுத்தப்பட்டதையும் ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வரவில்லையென்றால், இந்திய அரசு இது போன்ற சம்பவமே நடக்கவில்லை என்றல்லவா சாதித்திருக்கும்?
500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு, அது குறித்த விசாரணைகூட நடக்காத நிலையில், அவ்வாறு கொல்லப்படுவதற்குத் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டுவதுதான் காரணமென்றும், எனவே அதனைத் தடுப்பதன் மூலம்தான், அதாவது தமிழக மீனவர்களின் வாழ்வாதார உரிமையைப் பறிப்பதன் மூலம்தான் இப்படுகொலைகளைத் தடுக்க முடியும் என்ற இந்திய அரசின் வாதம், அதன் நயவஞ்சகத்தை மட்டுமல்ல, இந்திய ஆளும் கும்பலின் தமிழின வெறுப்பையும் எடுத்துக் காட்டிவிட்டது.
வழிப்பயணத்தில் சந்தித்த ஒரு ஆட்டோ ஒட்டுநரை பேச விட்ட போது கிடைத்த விசயம். இனி அவரே பேசுகிறார்….
சரியாத்தான் சார் கேப்பேன், தகராறு வேண்டான்னுதான் பார்ட்டிகிட்ட பேரம் பேசுவேன். அவ்ளோ தூரம் ஓட்றதுக்கு இவ்ளோ வாங்குனாதான் பத்தோ இருபதோ எனக்குத் தேறும்
பெட்ரோலுக்கே பாதி காசு போயிடுது. வண்டிக்கு வாடகை தொனோம் கொடுக்கணும். இது எல்லாம் போக ஒரு நாளைக்கு சம்பாதிக்க வேண்டும். தினசரி வாடகை 150 ரூபாய் பகலுக்கு, ராத்திரிக்கு 80 ரூபாய். 24 மணி நேரம் ஓட்டிட்டு வண்டியை ஓனர்கிட்ட் கொடுத்துட்டுதான் வீட்டுக்கு போவனும். ஷிப்டு, காலேல 10 மணிக்கு ஆரம்பிக்குதுன்னா ஓனராண்ட பேசி வண்டி எடுக்கும் போது மணி 12 கிட்ட ஆயிடும். அப்புறம் நைட்டு வரைக்கும் ஓட்டி விட்டு எக்மோர்ல வண்டியிலேயே தூங்கி விட்டு, எழுந்து முகம் கழுவி விட்டு மறுபடியும் 10 மணி வரை ஓட்டுவேன். வீடு அரக்கோணம் பக்கத்தில ஒரு கிராமம், வண்டி எடுப்பது சிந்தாதிரிப் பேட்டையில்.
இப்படி என் பொழைப்பு ஓடுது சார். 1990-ல் இருந்து 20 வருஷமா ஆட்டோ ஓட்றேன். மெட்ராசில எல்லா இடமும் ஓரளவுக்குத் தெரியும். அதிகமா படிக்கல. 3ம் கிளாஸ் படிக்கும் போதே அப்பா செத்துட்டார். அதனால் வேலை செய்ய வந்துட்டேன். முதலில் கந்தசாமி கோயிலாண்ட ஒரு கடையில் டெலிவரி வேலை பார்த்தேன். பொருள் எல்லாம் எடுத்துப் போய் கொடுத்து விட்டு வர வேண்டும். சைக்கிளில் போவேன். அதற்கு பிறகு மாத்தி மாத்தி சம்பள வேலை. ஒரு நேரத்தில ஆட்டோ ஓட்டக் கத்துக்கிட்டு தொழில்ல விட்டேன். ஏதோ முன்ன இருந்ததுக்கு நல்லாத்தான் இருக்கிறேன்.
1000 ரூபாய் வரை வருமானம் வந்தால் 500 ரூபாய் பெட்ரோலுக்கே போயிடும். ஒரு டியூட்டி சென்ஞா 700 ரூபாய் வரை நிக்கும். அவ்வளவு இருந்தாதான் குடும்பம் நடத்த முடியும், ரெண்டு பசங்க ஒருத்தன் 7ம் கிளாஸ் இன்னொருத்தன் 4. ரெண்டு பேரும் பிரைவேட்டு ஸ்கூல்தான். இங்கிலீஷ் மீடியத்துலதான் படிக்க வைக்கிறேன். நான்தான் படிக்கலை. படிப்பு வேணும் சார். எம் பசங்களை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. பெரிய படிப்பு படிச்சவன் மாதிரி நோட்டுல எழுதுகிறாங்க சார்.
ஸ்கூல் பீஸ் பெரியவனுக்கு வருஷத்துக்கு 22,000 ரூபாய், சின்னவனுக்கு 20,000 ரூபாய் ஆவுது. வருமானம் ஆட்டோ ஓட்டறது மட்டும்தான். சொந்த வீடு கிராமத்தில அதை ரிப்பேர் கூட செய்யமுடீல. வெலவாசி ஏற ஏற கஷ்டமா இருக்கு சார். மதியம் சாப்பாடு 50 ரூபாய் வரை ஆகிடுது. ஒரு டீயும் வடையும் கூட 10 ரூபாய்க்கு கம்மியா இல்ல. ராத்திரீல ஒரு தோசையும், இரண்டு பரோட்டாவும் சாப்பிட்டா 60 ரூபாய் ஆகி விடுகிறது. இப்படி எனக்கு சாப்பாட்டுச் செலவே ஒரு நாளில் கணிசமாக ஆவுது. அன்னைக்கு என்னடான்னா ஒரு கடையில டீ விலை 6 ரூபாய் ஆக்கிட்டதா சொல்றான்.
மாசக் கடைசில சவாரி குறைவாத்தான் கிடைக்கும், பிசினஸ் செய்றவங்கதான் ஏறுவாங்க. மாச ஆரம்பித்தில சம்பளம் கிடைத்த புதுசில சவாரி அதிகமா கிடைக்கும். குளிர் காலத்தில எதுக்கு வெளியில் அலைகிறோம் என்று வீட்டுக்குப் போயிடுவாங்க, அப்பவும் குறைவுதான்.
நல்லவேளை எனக்கு குடிப்பழக்கம் எல்லாம் இல்ல, இல்லைன்னா அதுக்கு வேற தெனோம் 100 ரூபா மொய்யெழுதனும்.
ஆட்டோக்கு எப்சி காலாவதி ஆகி ஒரு மாசம் ஆவுது. அதை ரின்யூ பண்ண போனா அங்கேயும் பணம்தான். போக நாலஞ்சு நாள் ஓட்ட முடியாது. எங்க ஊரில் ஒருத்தன் நிலங்களை வளைச்சுப் போட்டு நாலஞ்சு வீடு கட்டிட்டான் சார். இப்போ பெரிய கடை வச்சிருக்கான். அவங்களும் எங்களை மாதிரிதான் 5 அண்ணன் தம்பிகள், அவன் நடுவில் உள்ளவன், நான் எங்க வீட்டில் நடுவில் உள்ளவன். சிந்தாதிரிப் பேட்டையில் பல வகையான கடைகள் வச்சிருக்கான், பாபுன்னு பேரு.
என் கூடப் படிச்சவன்தான், சின்ன வயசிலேயே நல்லா படிக்கிறவன்தான். நான் ஏதாவது தொழில் ஆரம்பிச்சா ஒன்ன வாட்ச்மேன் வேலைக்காவது வைச்சுக்கிறேன் என்று அப்போ சொல்வான் சார். கொஞ்சம் பெயின்ட் வாங்க அவன் கடைக்குப் போனா, எல்லாம் லிஸ்ட போட்டு விலை சொன்னான். டிஸ்கவுண்டு எதுனா குடுன்னா 1200 ரூபாய் பில்லில் 100 ரூபாய் குறைச்சுக்கிறேன் என்றான், அவ்வளவுதான் சார் நட்பு எல்லாம்!
நமக்கு சொந்தமா ஆட்டோ வாங்க எல்லாம் முடியலை சார். சிட்டில வீடு இருந்தாத்தான் கொடுப்பாங்களாம். தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க சிட்டில இருந்தாலும் அவங்க கிட்டப் போய் கேட்க முடியாது சார். அந்த சின்ன வயசு பிரண்டுகிட்ட ஒன் அட்ரஸ் போட்டு ஆட்டோ எடுத்துக் கொடு என்று கேட்டா முடியாதுன்னு சொல்லிட்டான் சார். ஏதாவது பிரச்சனை வந்தா என் தலையிலதானே விழும் என்று காரணம் சொல்றான். பாசம்லாம் எதுவும் கிடையாது சார். எல்லாம் பணம்தான்.
சம்பாதிக்கிறது எல்லாம் செலவுக்கே சரியாகப் போயிடுது. அரை காணி நிலம் இருக்கு, ஆனா அதுலேருந்து எந்த வருமானமும் கிடையாது. ரெண்டு சீட்டு போட்டிருக்கிறேன். எங்க வீட்டுக்காரி கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்தில ஒரு நகை கூட வாங்கித்தலேன்னு என்று தொணதொணக்க, 1 லட்ச ரூபாய் சீட்டு 3 மாதம் இருக்கும் போது 7000 ரூபாய் தள்ளி எடுத்தேன். அதை வச்சு நகை வாங்கப் போனோம், அப்போ சவரன் 16,500 ரூபாய், அஞ்சர சவரன் வாங்கினோம். 82,500 ரூபாய் சேட்டு பில் போட்டான்.
ஒரு மாசம் கழிச்சு அக்கா பொண்ணுக்கு கல்யாணச் செலவு வந்தது. அக்கா செத்து போச்சு சார், நாமதான் செய்யணும். அந்த நகையை சேட்டுக்கிட்ட திரும்பக் கொண்டு கொடுத்தா, 70,000 ரூபாய் தரேன் என்கிறான். கேட்டா செய்கூலி, சேதாரம் எல்லாம் கழிக்கிறானாம். என்னா சார் நியாயம் இது. நகைய வாங்கிக்கிட்டுப் போய் அப்படியே வச்சிருந்தோம். போட்டுக் கூடப் பார்க்கவில்லை. அதுக்கு என்ன சேதாரம். நாம ஒன்னரை மாசம் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறத இவன் சும்மா உட்கார்ந்துகிட்டே ஒரே நொடியில அடிச்சுக்கிட்டுப் போகப் பார்க்கிறான். பேசாம எழுந்துட்டேன். நான் போலீசில போய் கம்ப்ளெயின்ட் கொடுக்கலாம்னேன் ஆனா பக்கத்தில இருக்கிறவன் எல்லாம் எதுக்கு போலீஸ் வம்பு எல்லாம் பேசித் தீத்துக்கோன்னு சமாதானம் சொல்றான். நம்ம நாடு உருப்படாது சார். இவனுங்களே இப்படி இருந்தா எப்படி.
அப்புறம் திரும்பப் பேசி எடுத்து 75,000 ரூபாய் தந்தான். ஏதோ 1000 – 2000 கழிச்சுக்கிட்டு கொடுப்பான்னு பாத்தா இப்படி ஒரேயடியாக 7,500 ரூபாய் அடிச்சுட்டான் சார். இப்படி சும்மா இருந்துகிட்டே சம்பாதிக்கிறானுங்க சார். நீ உருப்படவே மாட்டே என்று சொல்லிட்டுத்தான் வந்தேன். இப்படி சம்பாதிக்கிறவனுங்க, ஆட்டோல ஏற வந்தா பேரம் பேசுவானுங்க, இவ்வளவு தூரத்துக்கு 40 ரூபாயா, கொஞ்சம் நியாயமா, தருமமா கேளுப்பான்னு சொல்லுவானுங்க!
இது மாதிரி சேட்டுங்க வந்து என்னா அட்டூழியம் பண்ணுறானுங்க, நம்ம ஊர்க்காரனுங்க இந்த சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி வச்சிருந்தா அங்க போய் வம்பு செய்து கடையை மூடுறான். இந்த சவுகார்பேட்டையில் சேட்டுங்களும் அப்படித்தான் கடை வச்சிருக்கானுங்கள, அவனுங்கள கேட்க ஆள் கிடையாது.
ஏழை பாழைங்க ஒரு குடிசை வைக்க நிலம் வேணும்னா வாங்க முடியாது, எங்க ஊரிலேயே 60க்கு 20 நிலம் 5 லட்ச ரூபாய் சார். இந்த அரசாங்கம் எல்லாம் என்னதான் செய்யுதுன்னே தெரியல கலைஞர் போய் ஜெயலலிதா வந்தா அவங்களும் அப்படித்தான். விஜயகாந்த் வந்தா என்ன செய்வாரோ!’
– பேசி முடித்து விட்டு ஆட்டோக்காரர் அவர் பிழைப்பை பார்க்க போய்விட்டார். அவர் பேசியது அனுபவப் பேச்சு. படித்து தெரிந்து கொண்டதில்ல. அவற்றில் ஒரு சிலவற்றை தவிர்த்து விட்டுப் பார்த்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. முக்கியமாக எந்த வேலையும் செய்யாமல் அந்த சேட்டு உட்கார்ந்த இடத்திலேயே விற்ற நகையை மீண்டும் வாங்கி 7,500 ரூபாய் சம்பாதித்து விட்டார். இல்லை சுருட்டி விட்டார்.
இனி அதே நகையை மீண்டும் 82,500 ரூபாய்க்கு விற்பார். மேலும் சுருட்டலாம். அதை திரும்ப வாங்கினாலும் சுருட்டல் தொடரும். இது சேட்டுக்கு மட்டும்தானா? பங்கு சந்தை, ஆன்லைன் வர்த்தகம், வங்கிகள், நிதி நிறுவனங்கள், அம்பானி, டாடா, பிர்லா, மிட்டல்…எல்லோரும் இதுதானே செய்கிறார்கள்?
முதலாளிகளின் தொழில் முனைப்பு என்ன என்பதை ஒரு ஆட்டோ ஓட்டுநர் தெரிந்து கொள்ளும் போது அதியமான் போன்ற ‘படிப்பாளிகள்’ அதற்கு திறமை, புத்துயிர்ப்பு, சாகசம் என்று புரிந்து கொள்கிறார்கள். ஒரு வேளை அதியமான் அவர்கள் ஒரு வருடம் ஆட்டோ ஓட்டித்தான் பிழைக்க வேண்டும் என்று இருந்தால் அவரும் புரிந்து கொள்வாரா? இவ்வளவிற்கும் அனுபவம்தான் பெரிய ஆசிரியன் என்பது அவரது கூற்று, எங்களதல்ல…..
‘முன்னாள் விமானப்படை அதிகாரியான அஞ்சலி குப்தா தற்கொலை செய்து கொண்டார்…’ என்ற செய்தி ஆங்கில நாளிதழ்களின் துணுக்குச் செய்தியாக வந்திருந்ததை நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள். தற்கொலை செய்து கொள்ளும் காரணுங்களுக்கு நம் நாட்டிலா பஞ்சம் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், இந்தத் தற்கொலைக்கு பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது. போராடி வாழ முயன்ற அஞ்சலி குப்தா, பெண் என்ற காரணத்தினாலேயே தனது போராட்டத்தையும் தொடர முடியாமல், வாழவும் முடியாமல் தன் வாழ்வை முடித்துக் கொண்டார். அந்தப் பெண்ணின் கதையை படியுங்கள்.
டெல்லியை சேர்ந்த அஞ்சலி குப்தா, மூன்று பெண்களில் இரண்டாவது பெண்ணாகப் பிறந்தவர். புத்திசாலியான பெண்ணும்கூட. டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் பட்டம் பெற்றிருந்தார். தனது தாயைப் போல ஆசிரியராக அவர் விரும்பவில்லை. ஆசிரியை பணி என்பது பெண்களுக்கான பணியாக இருப்பதாகவும் ஆண்கள் மட்டுமே செய்யக்கூடியது என்று சொல்லப்படும் துறையொன்றில் பணியாற்றவே, தான் விரும்புவதாகவும் அடிக்கடி தனது தாயிடம் சொல்லுவாராம். விமானப்படை பாதுகாப்புப் பிரிவு அவரது எண்ணத்துக்கு உகந்ததாக இருந்தது.
அலங்காரப் பதுமையாக பிரபலமடைவதற்கு சமூகம் வைத்திருக்கும் அடிமைத்தன ஆளுமைகளை வளர்த்துக் கொண்டு, அதன்படி நடப்பவர்களே, வாழ்பவர்களே, முன்னுதாரணமானப் பெண்கள் என்று ஊடகங்கள் போற்றுவதை பார்த்திருக்கிறோம். இந்த இலக்கணப்படி தென்படும் பல பெண்கள், ஆளுமைகளாக இருப்பதையும் கவனித்திருக்கிறோம். ஆனால், அஞ்சலி அதற்கு எதிராக, சமூகம் தடை விதித்திருக்கும் துறையில் பெண்கள் நுழைய வேண்டும், சாதிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். இத்தகைய பெண்களை பொதுவாழ்வில் காண்பது அரிது. அப்படி அரிதாக வருபவர்களும் தமது இருப்பை சுலமாக கொண்டிருப்பதில்லை என்பதையே அஞ்சலியின் கதை உணர்த்துகிறது.
டேராடூனில் பயிற்சி முடித்ததும் அஞ்சலி குப்தா விமானப்படை பிரிவின் பெண் அதிகாரியாக 2001ல் பெங்களூருவில் சேர்ந்தார். அங்கு அவர் ஒருவர் மட்டுமே பெண் அதிகாரி. எனவே மூன்று ஆண் அதிகாரிகள் அஞ்சலியை மனதளவிலும், உடலளவிலும் பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்திருக்கின்றனர். இதை யாரிடம் புகாராக சொல்வதென்று அவருக்கு தெரியவில்லை. விமானப்படை பிரிவின் விதிகளின்படி புகார்கள் அவரது கமாண்டிங் அதிகாரி வழியேதான் வெளிவர வேண்டும். ஆனால், அந்த கமாண்டிங் அதிகாரி மீதுதான் அஞ்சலியின் புகார் இருந்தது.
பொதுவாக இந்திய விமானப்படை, ஆண்கள் நிறைந்த ஒரு துறை. ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்தால் அதனை முறையாக விசாரணை செய்திருக்க வேண்டும். ஆனால், உயரதிகாரிகளை காப்பாற்றும் பொருட்டு அவர்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க பல்வேறு முறைகேடுகள் செய்திருக்கிறது இந்திய விமானப்படை. ஒரு குற்றமும் இழைக்காத பெண், பாலியல் புகார் கொடுத்த ஒரே குற்றத்திற்காக மட்டுமே தண்டிக்கப்படுவது கேடுகெட்ட செயல்.
உயரதிகாரிகளின் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட அஞ்சலி குப்தா, 2005ல் ஒரு குற்றசாட்டை தாக்கல் செய்தார். விமானப்படைக்கென்றே தனியாக உள்ள இராணுவ நீதிமன்றம்தான் அங்குள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கும். பெரும்பாலும், இந்த இராணுவ நீதிமன்றங்களைத் தாண்டி சிவில் நீதிமன்றங்களுக்கு எந்த வழக்கும் செல்வதில்லை. அஞ்சலி குப்தாவின் குற்றசாட்டு மனுவும் அவ்வாறே விசாரிக்கப்பட்டது.
நீதிபதி பண்டோபாத்யாயாவின் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவொன்று விசாரணை நடத்தியது. ஆர்.எஸ்.சௌத்ரி, சிரியக் மற்றும் சோப்ரா என்ற மூன்று அதிகாரிகள் மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார் அஞ்சலி குப்தா. ஆனால், அவரால் தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்பதால் அவர் புகார் அளித்திருந்த மூன்று அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய தேவை இருக்காது என்று இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதோடு மட்டும் விடவில்லை. அஞ்சலி குப்தாவின் குற்றச்சாட்டுகளை எல்லாம் நிராகரித்ததோடு அவரை டிஸ்மிஸ் செய்து தண்டிக்கவும் செய்தது இந்திய விமானப்படை. அதாவது, அஞ்சலி குப்தா உயரதிகாரிகளிடம் பணிவாக நடக்கவில்லை, பொய்யான பயண ரசீதுகளை கொடுத்தார், சீனியர் அதிகாரியின் உணவுப் பொட்டலத்தை வீசி எறிந்தார் என்பதுதான் அவர் மீது இந்திய விமானப்படை வைத்த பொய்க் குற்றச்சாட்டுகள். இந்திய விமானப்படையால் அதிகபட்சமாக அவர் மீது சுமத்தக் கூடிய குற்றச்சாட்டுகளின் தரம் இதுதான். இவ்வளவு மலிவாகவே ஒரு பெண்ணை பழிவாங்க முடியும் என்பதை கவனியுங்கள்.
அவர் மீதான குற்றச்சாட்டுகளின் லட்சணம் இப்படியிருக்க, உண்மை நிலவரமோ வேறாக இருந்தது. அதாவது, உயரதிகாரிகளோடு ஒத்துழைப்பு கொடுத்து நடந்துக் கொள்ளாத போதெல்லாம் அவர் தொல்லைகளுக்கு ஆளானார். இரவு நேர பார்ட்டிகளில் சேர்ந்துக் கொள்ளாதபோது, பணி நியமனம் போன்றவற்றில் உயரதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது ஒத்துப் போகாதது போன்றவை சில காரணங்கள். அதைக் குறித்து அவர் புகார் தெரிவித்தபோதோ ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவுக்கு மாற்றப்பட்டுக் கொண்டேயிருந்தார். அதாவது ஒரே வருடத்தில் ஆறு தடவைகள் கூட மாற்றல்களை சந்தித்திக்கிறார்.
அஞ்சலி குப்தா வெறுமனே பாலியல் வன்முறைகளை மட்டும் எதிர்த்தால் கூட அவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால், அவர் தனது துறையில் நடக்கும் அதிகார முறைகேடுகளையும் எதிர்த்துக் கேட்டிருக்கிறார். ஒரு பெண் இப்படி உண்மையாக நடந்து கொள்வது விமானப்படை அதிகார வர்க்கத்திற்கு பிடிக்கவில்லை.
இந்தநிலையில்தான், அஞ்சலி குப்தாவை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட்டது இராணுவ மற்றும் விமானப்படைகளுக்கான நீதிமன்றம். ஆனால், அஞ்சலியின் புகார் குறித்த உண்மைகளை வசதியாக மறந்துவிட்டது. அதோடு, பல பெண்ணுரிமை அமைப்புகளின் தனிப்பட்ட விசாரணைக்கும் இந்திய விமானப்படை அனுமதி மறுத்தது.
உலகின் மிகப்பெரிய விமானப்படைகளுள் ஒன்றாக விளங்கும் இந்திய விமானப் படைபிரிவில், 800க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்களுள் அஞ்சலியின் புகார் மட்டும்தான் வெளிச்சத்துக்கு வந்தது. இராணுவக் கோர்ட்டால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட முதல் பெண் விமானப்படை அதிகாரி அஞ்சலிதான் என்று ஊடகங்கள் எழுதின. வேறு சில பெண் அதிகாரிகளும் புகார்கள் கொடுத்திருக்கலாம். ஆனால், அதன் விபரங்கள் வெளிச்சதுக்கு வரவில்லை. இப்படி வரவில்லை என்பதாலேயே வேறு யாரும் புகார் கொடுத்திருக்க மாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. அஞ்சலி குப்தாவிடம் விமானப்படைப் பிரிவு நடந்ததுக் கொண்ட விதம் அதைத்தான் உணர்த்துகிறது.
2005ல் இந்தத் தீர்ப்பு வந்தபோது அஞ்சலிக்கு 29 வயது. அப்போது அவர் விமானப்படையின் பயிற்சிப்பிரிவு நிர்வாகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்தப் பணிநீக்கத்தை அஞ்சலி குப்தா ஏற்க மறுத்தார். அப்போதும் அவர் போராட்டத்தை கைவிடவில்லை. விமானப் பிரிவுக்கான இராணுவ நீதிமன்றம் அவரை குற்றவாளியென்று தீர்ப்புகொடுக்கும் பட்சத்தில் சிவில் நீதிமன்றதுக்கு செல்லப்போவதாகவும் கூறினார். அதைத்தொடர்ந்து உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். ஆனால், காவல்துறையோ, இந்தப் பிரச்சினை விமானப்பிரிவின் உள்ளார்ந்தது என்றும் சீனியர்களுடனே பேசித்தீர்த்துக் கொள்ளும்படியும் கூறி கை கழுவிவிட்டது.
காவல்துறை மனுவை கண்டுக்கொள்ளாமல் விடவே, அஞ்சலி குப்தா கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினார். சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று கோரினார். அதோடு கர்நாடகாவின் பெண்கள் அமைப்பையும் அணுகினார். அஞ்சலி குப்தா புகார் கொடுத்திருந்த அதிகாரிகளுக்கும் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் மூலமாக சம்மன்கள் பறந்தன. அஞ்சலி கொடுத்த புகார் மனுவினால்தான் இராணுவ கோர்ட் அவரை பணிநீக்கியதென்று குப்தாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
தனது மானம் காற்றில் பறப்பதை தடுக்க விரும்பிய இந்திய விமானப்படை பிரிவு, தனியான ஸ்பெஷல் கோர்ட் மூலம் விசாரிப்பதாக கூறியது. அதில் இரண்டு பெண் அதிகாரிகளும் இருப்பார்களென்றும் சொன்னது. மேலும், அஞ்சலி குப்தா தற்கொலை செய்துக்கொள்வேன் என்று சொன்னதாக காரணம் காட்டி அவரை வீட்டுச்சிறையிலும் அடைத்தது. அவருக்கு மனரீதியாக பாதிப்புகள் இருக்கலாமென்று பொய்யாக ஒரு கதையை எழுதி, பெங்களூரு நிம்ஹான்ஸில் அவருக்கு பரிசோதனையும் நடத்தியது.
அநீதிக்கெதிராகவும், ஆணாதிக்கத்துக்கு எதிராகவும் போராடும் பெண்களை மனநலம் குன்றியவர்கள் என்று ஒதுக்கும் சமூகத்தின் தாக்குதலை அஞ்சலியும் சந்தித்தார்.
அதன்பின் அவர் மீது 15 சார்ஜ் ஷீட்டுகள் பதியப்பட்டு அவை பின்பு ஏழாக குறைக்கப்பட்டன. இறுதியில், ஒழுக்கமின்மை, பணத்தை சரியாக கையாளாதது, வேலையில் ஒழுங்கின்மை, தவறான ரசீதைக்காட்டி ரூபாய் 1080 பயணப்படியாகப் பெற்றது போன்ற பொய்யான காரணங்களை பட்டியலிட்டு அவரை பணியிலிருந்து நீக்கியது ஸ்பெஷல் கோர்ட்.
இதன்படி பார்த்தால், இந்திய விமானப்படையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியே கூறவே முடியாது என்பதை புரிந்து கொள்ளலாம். அப்படிச் சொன்னால் அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகள் முதலில் நிராகரிக்கப்படும். பின்பு, புகார் மனு அளித்தவரின் பாதுகாப்புக்காக என்று கூறி அவரை வீட்டுச் சிறையில் அடைப்பார்கள். பிறகு, ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுடன் பொய்யான தகவல்களையும் சேர்த்து குற்றம்சாட்டியவரையே பணியிலிருந்து நீக்கம் செய்துவிடுவார்கள். இறுதியில், அதிகார வர்க்கத்தின் திமிரோடும் ஆணாதிக்கக் கொழுப்போடும் விமானப்படையை விட்டு துரத்திவிட்டு குற்றத்தின் நிழல் கூட படாமல் இந்திய தேசக்கொடியை பெருமையுடன் பட்டொளி வீசி பறக்க விடுவார்கள்.
போராடும் பெண்களின் ஒழுக்கத்தை சிதைப்பது நமது சமூகத்தில் இயல்பாகவே நடக்கும் ஒன்றுதான். ஐஎம்எஃப் தலைமை நிர்வாகி ஸ்ட்ரௌஸ் கான் மீது பாலியல் புகார் கொடுத்த பெண் மீது சந்தேகங்களை எழுப்பி அந்த சந்தேகங்களின் அடிப்படையில் அப்பெண்ணின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியதாக்கி அவனை தப்பவிட்டது அமெரிக்க நீதிமன்றம். இங்கு அஞ்சலி மீது குற்றத்தை திருப்பி குற்றவாளிகளை பாதுகாக்கிறது இந்திய இராணுவ நீதிமன்றம்.
முறை தவறி நடந்துக்கொள்வது மட்டுமே பாலியல் முறைகேடு என்று ஆகாது. பெரும்பாலான சமயங்களில் ஆணாதிக்கம் நுட்பமாகவே வெளிப்படுகிறது. மனதளவில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும் முறைகேடுதான். சாதாரணமாகவே வெளியில் வரும் பெண்கள் இதனை அன்றாடம் அனுபவிக்கிறார்கள். பேருந்தில், மார்க்கெட்டில், பணியிடங்களில், சாலைகளில் என்று எல்லா இடங்களிலுமே இது வியாபித்திருக்கிறது. கண்ணுக்கு தெரிந்து நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் பொதுமக்களின் கண்டனத்துக்கு உள்ளாகின்றன. பெரும்பாலான சமயங்களில் அதன் பரிமாணம் வெளியில் தெரியாதபோது பாதிக்கப்பட்ட பெண் மட்டுமே உள்ளுக்குள் வைத்து குமையும்படியாக இருக்கிறது.
முக்கியமாக பெண்கள் தமது உரிமைக்காக உரத்து குரல்கொடுப்பதை, தைரியமாக எதிர்த்து நிற்பதை பெரும்பாலான ஆண்கள் சகித்துக் கொள்வதில்லை. அவர்களை விரட்டிவிடவே முனைகின்றனர்.
பொய்யான ரசீது கொடுத்து பயணப்படி பெறுவது என்றால் இந்தியாவில் இருக்கும் அனைத்து அரசாங்க மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளாஇயும் அல்லவா பணிநீக்கம் செய்ய வேண்டியிருக்கும்? அஞ்சலி பொய்யாக பயண ரசீது கொடுத்தார், அதன் மதிப்பு 1080 ரூபாய்தான் என்பதும் இது திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட மலிவான குற்றசாட்டு என்பதை நிரூபிக்கிறது. அரசாங்க அதிகாரிகளுக்கு மட்டும் தேசபக்தி பொங்கியா வழிகிறது? போலிச் சான்றிதழ் கொடுத்து ஆதர்ஷ் வீட்டு மனையில் இடம் பெற்றவர்கள் யார்? அரசியல்வாதிகளோடு சேர்ந்து இராணுவ உயரதிகாரிகளும்தானே! இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் பெண்கள் மீது பாலியல் ரீதியான வன்கொடுமை நிகழ்த்துவதும் இதே இராணுவ அதிகாரிகள்தானே!
அஞ்சலியின் வழக்கில் அவர் மீதுதான் குற்றம்சாட்டப்பட்டதே தவிர அவர் கொடுத்த குற்றச்சாட்டுகள் எதுவும் தீர விசாரிக்கப்படவே இல்லை. அஞ்சலி பெண் என்பதாலேயேதான் பதவியும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. புகார் கொடுத்த அவர் மீதே வழக்கு திருப்பப்பட்டு அவரையே குற்றவாளியாக்கியது இந்த அதிகார அமைப்பு.
இந்திரா நூயி, பிரதிபா பாட்டீல் என்று பெண்கள் சாதிக்க ஏதோ தடையேயில்லாதது போல உருவம் கொடுக்கும் இந்திய அதிகார வர்க்கத்தின் இருண்ட முகம் இதுதான்.
பெண்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் இந்த ஒடுக்குமுறைகளை நம்முன் நிறுத்தப்படும் ‘சாதித்துக்காட்டிய பெண்கள்’ எதிர்க்கொள்வதில்லையா? அவர்களும் நிச்சயம் எதிர்கொண்டிருப்பார்கள். ஆனால், ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்துக்கொண்டு, விட்டுக்கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள். இதனை தமது சாமர்த்தியமாகவும் சாதனையாகவும் கருதிக்கொண்டு பேட்டிகள் கொடுக்கிறார்கள். சாதிக்க விரும்பும் பெண் சமூகத்துக்கு அறிவுரையும் கொடுக்கிறார்கள். அவர்களில் எவரும் இதனை அம்பலப்படுத்தவோ, எதிர்த்துக் குரல் கொடுக்கவோ தயாரில்லை. அதனால்தான் முன்னுதாரணமான பெண்களாகப் போற்றப்படுகிறார்கள்.
ஏனெனில் இதனை அம்பலப்படுத்த அஞ்சலியைப் போன்ற மனஉறுதியும் ,தைரியமும் தேவைப்படுகிறது. அதற்கு அஞ்சலிகள் தங்களை பலிகொடுக்கவும் வேண்டியிருக்கிறது. விடாமல் போராடிய அஞ்சலியின் தைரியமும், எதிர்த்து நிற்கும் உறுதியும் பாராட்டப்படவேண்டிய ஒன்று. ஆனால், விமானப்படை பிரிவில் அஞ்சலியின் வழக்கு மட்டும்தான் இதுவரை வெளிவந்திருக்கிறது என்றால் இன்னும் எத்தனைப் பெண்கள் வெளியில் சொல்லக்கூட திராணியற்று உயரதிகாரிகளுக்கு பணிந்து நடக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி குமுறிக் கொண்டிருக்கிறார்களோ? பொதுவெளியில் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் வன்முறையை உரத்துச் சொல்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தாமல் அவர்களையே குற்றவாளிகளாக்குவது என்ன நியாயம்?
———-
பணிநீக்கம் செய்யப்பட்டபின் அஞ்சலிகுப்தா பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த செப்டம்பர் 11ஆம் தேதியன்று போபாலில் அவரது குரூப் கேப்டன் அமித் குப்தாவின் வீட்டுக்கு சென்றார். தங்கினார். தங்கள் மகனது திருமண வேலைகள் தொடர்பாக அமீத் குப்தாவும் அவரது குடும்பத்தினரும் வெளியே சென்ற சமயத்தில் அஞ்சலி குப்தா தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டார்.
விசாரணையில், 51 வயதான அமீத் குப்தா, அஞ்சலியை திருமணம் செய்துக் கொள்வதாக நீண்ட நாட்கள் கூறிவந்ததும், இருவரும் ‘லிவிங் டு கெதர்’ அடிப்படையில் ஒன்றாக வாழ்க்கை நடத்தியதும் தெரிய வந்தது. தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அஞ்சலியை திருமணம் செய்துக் கொள்வதாகவும் அமீத் குப்தா வாக்களித்திருக்கிறார். அதை நம்பிய அஞ்சலி, ஏமாற்றப்பட்டிருக்கிறார்.
இந்த விஷயத்தை மிகைப்படுத்தி இதனால் மட்டுமே அஞ்சலி தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களும், விமானப்படையும் கூறி வருகின்றன. இது அஞ்சலி உடைந்து போவதற்கு ஒரு முகாந்திரமாக மட்டுமே என்பதை மறைக்கின்றன. விமானப்படையில் இருந்து அநீதியாக நீக்கப்பட்டதும், அதற்கெதிரான போராட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்ததுமே அஞ்சலியின் தற்கொலைக்கு அடிப்படையான காரணம் என்பதை குழி தோண்டிப் புதைக்கின்றன. போராட்டக் குணம் கொண்ட பெண்கள் கூட தனிப்பட்ட வாழ்வில் எதிர்பார்க்கும் அன்பும், காதலும் கிடைக்காதபோது உடைந்து போகத்தான் செய்கிறார்கள் என்பதை உணர மறுக்கின்றன.
காலம் காலமாக இப்படித்தான் பெண்கள் வீழ்த்தப்படுகிறார்கள். இதற்காகவே பல கதைகளை புனைந்திருக்கிறார்கள். சிவனுக்கும் பார்வதிக்கும் நடனத்தில் போட்டி வந்ததாகச் சொல்லப்படும் கட்டுக் கதையையே எடுத்துக் கொள்வோம். போட்டியில் பார்வதி வெற்றி பெற்று விடுவாள் என்ற நிலையில், ஒரு பெண்ணிடம் தோற்பதா என்று நினைத்த சிவன், தனது இடதுகாலை சற்றே தூக்கினான். அதற்கும் ஈடு கொடுத்து ஆடினாள் பார்வதி. உடனே தன் வலது காலை ஊன்றியபடி, தன் ஆணுறுப்பு வெளியே தெரியும் வகையில் இடது காலை உயரே தூக்கிக் கொண்டே போனான் சிவன். பார்வதி சட்டென்று ஆடுவதை நிறுத்தி விட்டாள். தன் இடது காலை இந்தளவுக்கு உயர்த்த அவள் விரும்பவில்லை. எந்தப் பெண்ணால் இப்படிச் செய்ய முடியும் பார்வதி தோற்றுப் போக, சிவன் வெற்றி பெற்று நடனத்துக்கு ராஜாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டான். இதுதான் ஆணாதிக்கத்தை ஏற்றிப் போற்றும் சிதம்பர ரகசியம்.
பார்வதி ஏமாற்றப்பட்டது புராணக்கதை, பழங்காலக்கதை. ‘நிலமை இன்று தலைகீழ். திறமையிருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. பெண்கள் இல்லாத துறைகள் என்று ஏதாவது இருக்கின்றனவா…’ என்றுதானே நமக்குத் தோன்றுகிறது? சாதிக்க இன்று பெண்களுக்கு தடைகளுமில்லை, எந்த நிபந்தனைகளுமில்லை என்றுதான் விளம்பரங்கள் முதல் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் வரை திரும்பத் திரும்ப உரத்துச் சொல்கின்றன.
சின்னத்திரை நிகழ்ச்சிகளில், பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் ஆணுக்கிணையாக உயரத்தைத் தொட்ட பெண்களின் படங்களை விதவிதமான போஸ்களில் போடுவார்கள். கட்டுரைகள் எழுதுவார்கள். விமானப்படை அதிகாரியாக, கப்பல்படை அதிகாரியாக, தொழில் முனைவோராக, வைஸ் பிரசிடெண்டுகளாக, தலைமை செயலர்களாக, வங்கிகளில், நாடாளுமன்றத்தில் என்று வகைக்கொன்றாக அந்தப் படங்கள் இருக்கும். நாமும் அவற்றை வியந்து பார்த்துக்கொண்டிருப்போம். அவை சொல்ல வருவதெல்லாம் என்ன?
இன்றைய தேதியில் பெண்கள் நுழைய முடியாத துறை என்று ஏதாவதொன்று இருக்கிறதா என்ன? பெண்கள் எல்லாத்துறைகளில்முன்னேறி சாதனை புரிந்துவிட்டார்கள். இனி அவர்களை சமையற்கட்டுக்குள் அடைத்துப் பூட்டி வைக்க முடியுமா? பெண்கள் சாதிக்க இந்த உலகம் காத்துக்கொண்டிருக்கிறது, இனி அவர்கள் சாதிக்க வேண்டியதுதான் பாக்கி…’
இதுதான் உண்மையா?
பெண்கள் இந்த முதலாளித்துவ சமுதாயத்தில் ஒப்பீட்டளவில் முன்பைவிட அதிகமாக இருக்கிறார்கள், இன்றைய நவநாகரிக சமூகத்தில் பெண்கள் எல்லாத்துறைகளிலும் நுழைந்துவிட்டார்கள். ஆணுக்கு சரிசமமாக போட்டியிடுகிறார்கள் என்பதெல்லாம் உண்மைதான்.
அதனினும் உண்மை, நாம் வியப்புடன் பார்ப்பதற்காகவே நம் கண்முன் நிறுத்தப்படும் அந்த பொம்மை பிம்பங்களின் பெருமைக்குப் பின்னே இருப்பது அப்பட்டமான ஆணாதிக்க – அதிகார வர்க்கத்தின் கோர முகம் என்றால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், இந்த உண்மை முகம் அந்தப் பிம்பங்கள் ஏற்படுத்தும் கண்கூசும் பிரகாசத்தில் மறைந்து ஒளிந்துக் கொள்கிறது.
ஆம். எதிர்த்து போராடும் பெண்கள் பற்றி வெளியில் அவ்வளவாக தெரிவதில்லை. அவர்கள் மௌனமாக பழிவாங்கப்படுகிறார்கள். விரட்டிவிடப்படுகிறார்கள். பெண்கள் அதாகிவிட்டார்கள், இதாகிவிட்டார்கள் என்று சொல்லப்படும் பெருமைக்குப் பின்னால் இருக்கும் இன்றைய உண்மைநிலை இதுதான். அஞ்சலி குப்தா – ஆணாதிக்க வக்கிரத்தை, அதிகார வர்க்கத் திமிரை, அதன் இழிநிலையை சகித்துக்கொள்ளாமல் போராடியவர். முடிவில், வாழத்தகுதியில்லாத இச்சமூகத்திலிருந்து விடைபெற்றுக் கொண்டவர்.
அந்த வகையில் அஞ்சலி தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரை அவராக வாழ விடுவதற்கு இந்த சமூகம் விரும்பவில்லை. இந்திய விமானப்படை எதிரிகளை குண்டு போட்டு அழிக்கிறதோ இல்லையோ, தனது படையில் இருக்கும் போராட்ட குணம் கொண்ட பெண்ணை எந்த குண்டையும் வீசாமலேயே துடிக்கத் துடிக்கக் கொன்றிருக்கிறது.
அஞ்சலி குப்தா மறைந்து விட்டார். ஆனால், இடைவிடாது இறுதி வரை போராடிய அவரது போராட்டத் தருணங்கள் நம்மை கேலி செய்கின்றன. வெட்கப்படுவோர், வேதனைப்படுவோர் அத்தகைய போராட்டங்களை சாகவிடமால் காப்பதற்கு முனையட்டும்.
கி.பி. 1860-ஆம் வருடம், ஜூன் மாதம். இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வளாகம் மக்கள் வெள்ளத்தால் ததும்புகிறது; பற்பல நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் அறிஞர் பெருமக்கள், என்னதான் நடக்கும் என்று கிசுகிசுத்தவாறு அமர்ந்திருக்கும் பிரபு குலத்தவர்கள். நடைபெற இருந்த மாபெரும் விவாதப் போரைப் பற்றி ஆரவாரத்துடன் பேசிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம் என ஆக்ஸ்போர்டு வளாகம் அதிர்ந்து கொண்டிருந்தது.
ஆக்ஸ்போர்டின் கலகலப்பிற்கு காரணம் உண்டு, ‘இயற்கைத் தேர்வின் மூலம் உயிரினங்களின் தோற்றம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டு அன்றைய இங்கிலாந்தில் ஒரு சூறாவளியைக் கிளப்பியவர் சார்லஸ் டார்வின். பரிணாமத் தத்துவத்தை 230 பக்கங்களில் விவரிக்கும் இச்சிறுநூல் ஏற்படுத்திய புயலில் விவிலியமும் பறந்து சென்றது.
இறைவனின் மறைவாக்கு கேள்விக்குள்ளாக்கப்படுவதை கிறித்தவ பாதிரிகள் கடுமையாக எதிர்த்தார்கள். பொதுமேடையில் விவாதத்திற்குத் தயாரா என்று டார்வினின் ஆதரவாளர்களுக்கு சவால் விட்டனர்.
மதத்தின் பிடியிலிருந்து அறிவியலை மீட்கும் கடமையுணர்வுடன் ஆக்ஸ்போர்டு விவாதத்திற்கு வருகை தந்தனர் டார்வினின் ஆதரவாளர்களான ஹக்ஸ்லியும், ஹூக்கரும். அறிவின் அடக்கத்துடன் அமர்ந்திருந்த இவ்வறிஞர்களின் எதிரில் ஆக்ஸ்போர்டு மதத்துறையின் பிரபலமான மதகுரு பிஷப் வில்பர் போர்ஸ் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து வீற்றிருந்தார். அவரைச் சுற்றி வெண் தூண்களாய் ஆண்டவனடியார்கள் மூளையைச் சாணை பிடித்துக் கொண்டு (!) அமர்ந்திருந்தனர்.
விவாதம் தொடங்கிற்று. வேத நூலை முத்தமிட்டு, சிலுவை ஏந்திய கரங்களுடன் தொண்டையைக் கனைத்துவிட்டு பேச ஆரம்பித்தார் பிஷப், ”மக்களே! பரமபிதாவின் பெயரால் உங்களை வேண்டுகிறேன். சாத்தானின் அவதாரமான சார்லஸ் டார்வின், நீங்களெல்லாம் குரங்கிலிருந்து தோன்றியவர்கள் என கூசாமல் கூறியிருக்கிறான். பாலூட்டி சீராட்டி வளர்த்த உங்கள் பாட்டன்மார்களும், முப்பாட்டன்மார்களும் குரங்குகளா? இதை ஏற்கப் போகிறீர்களா? எனது கேள்விக்கு இங்கு அமர்ந்திருக்கும் குரங்கின் சீடர்கள் என்ன பதில் தருவார்கள். இவர்கள் குரங்கிலிருந்து உதித்ததாகச் சொல்வது தன் பாட்டன் வழியாகவா, பாட்டி வழியாகவா” என்று கேலி செய்த திருப்தியுடன் இறுதியில் ‘டார்வினின் ஆராய்ச்சி சத்தியமறையின் புனிதக் கொள்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி இருக்கையில் அமர்ந்தார்.
‘புனித’க் கொள்கையால் உணர்வூட்டப்பட்ட மக்களின் கரவொலியின் நடுவில் பேச வந்தார் டார்வினின் சீடர் ஹக்ஸ்லி.
டார்வின்
வெறியுட்டப்பட்ட மத உணர்வுகளின் மத்தியில் உண்மையைப் பேசுவதற்கு ஒரு மனிதனுக்கு எத்தனை தைரியம் வேண்டும். மதமெனும் குகையிலிருந்த மக்களை விஞ்ஞான உண்மையெனும் ஒளியை நோக்கி ஈர்ப்பதற்கு அனைத்து அவலங்களையும் சகித்துக்கொண்டார் ஹக்ஸ்லி. டார்வினின் ஆராய்ச்சியை விரிவாக பேசினார். ஒரு பாதி மக்களையாவது உண்மையினை ஏற்கவைத்தார். பொது விவாதம் முடிந்தது.
ஆனால் டார்வின் எழுப்பிய புயல் ஓயவில்லை. குரங்குகளை கண்ட இடமெல்லாம் கல்லாலடித்து துரத்தினார்கள் மறை உணர்வு கொண்ட மக்கள்.
இங்கிலாந்தின் தேவாலயங்களில்,கருப்பு உடை தரித்த பக்த கோடிகள், கால்களின் கீழ் டார்வினின் புத்தகத்தை மிதித்தவாறு இறைவனின் புனிதக் கொள்கையை சாத்தானாகிய டார்வினிடமிருந்து காப்பதாக உறுதி பூண்டார்கள்.
கி. பி. 1950 – ‘பொதுவுடைமைப் பூதம்’ ஐரோப்பிய நாடுகளைப் பற்றிப் பரவும் காலம், கம்யூனிஸ்ட் சாத்தான்களிடமிருந்து புனிதக் கொள்கையை காப்பதற்க்கு போப்பாயஸ் XII எச்சரிக்கிறார், ”பரிணம வாதத்தை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் இதைக்கொண்டு பொருள் முதல்வாதிகளும், நாத்திகர்களும் உலகை உருவாக்கிய தேவனின் பங்கை மறைக்கிறார்கள். எந்த உயிரின மூலப்பொருளில் இருந்து மனிதன் தோன்றினானோ, அதைப் படைத்தவன் தேவனே” என்று அருள்மொழிந்து பரலோகம் சென்றார்.
கி.பி. 1996 – வாடிகன் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு போப் ஜான் பால் II சொல்வதாவது. ‘மனிதன் ஒற்றை அடியில் உருவாக்கப்பட்டவன் என்பதில்லை. தேவனால் படிப்படியாக பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் என்பதை ஏற்கலாம்’ சென்ற நூற்றாண்டில் (டார்வினால்) வெளியிடப்பட்ட பரிணாம வளர்ச்சி பற்றிய தத்துவம், ஆய்வுசெய்யும் அறிஞர்களுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் குறிப்பிடதக்க பங்காற்றியிருக்கிறது. ஆனால் அனைத்திற்க்கும் மூலகர்த்தா தேவன்தான் என்று ஏற்கனவே போப் பயஸ் XII அருளியிருப்பது முக்கியமான ஒன்றாகும்”.
போப் அவர்களே! காலில் போட்டு மிதித்த சாத்தானின் கருத்தை 137 ஆண்டுகள் கழித்து சிறிது ஏற்கிறோம் என்று ஏன் நடிக்க வேண்டும்? உலகத் தோற்றம் குறித்து பைபிள் கூறுவது நீங்கள் அறியாததல்ல.’
கலீலியோ
‘ஐந்து நாட்களில் அண்ட _ பிண்ட சராசரங்களைப் படைத்த பரமபிதா, ஆறாவது நாள் களிமண்ணை உருட்டி ஆதாமையும், அவன் விலா எலும்பிலிருந்து ஏவாளையும் படைத்து விட்டு ஏழாவது நாள் ஓய்வெடுக்கச் சென்றார்.”
ஆறு நாட்கள் வேலை, ஏழாவது நாள் விடுமுறை என்பது தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமையை உங்கள் பரமபிதாவுக்கு வழங்குவதில் எமக்கு ஆட்சேபணையில்லை.
ஆனால் டார்வினின் பரிணாமத் தத்துவத்தை சிறிது ஏற்றுக் கொண்டாலும் பைபிளின் முதல் அத்தியாயம் தவறாகுமே! மாற்ற வேண்டுமே!
இல்லை. எதுவும் மாற்ற வேண்டியதில்லை. போப்பின் அறிக்கைகளுக்கு பொழிப்புரை தருகிறார் கத்தோலிக்க திருச்சபையின் தகவல் தொடர்பாளர் பிரான்சிஸ் மானிஸ்கால்கோ. அதாவது போப்பின் பரிணாமத் தத்துவம் பற்றிய கருத்தை, அவர் மதத் தலைவர் என்ற முறையில் கூறியதாகவோ, கத்தோலிக்கர்களுக்கு வழிகாட்டும் கோட்பாடு என்ற முறையில் சொல்வதாகவோ தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாதாம்.
எங்களுக்குப் புரிகிறது. ஏன் இந்த இரட்டை வேடம்?
விஞ்ஞானிகள் தாங்கள் கண்ட உண்மைகளுக்கு உங்களின் அங்கீகாரத்தை வேண்டி நின்ற காலத்தில் அதை மறுத்தீர்கள். இன்று சந்திரனுக்கு விண்கலம் அனுப்புவது முதல், கணிப்பொறியின் இண்டர்நெட் வரை எந்த விஞ்ஞானியும் உங்களது அக்மார்க் முத்திரைக்கு ஏங்கவில்லை.
ஆனால் மதம் உயிர் வாழ்வதற்கும், காலத்திற்கேற்றவாறு புனரமைப்பதற்கும் அறிவியல் தேவைப்படுகிறது உங்களுக்கு. அதிலும் கடுகளவாவது நேர்மை இருக்கிறதா? இவ்வளவு காலம் திருச்சபை அறிவியல் அறிஞர்களைத் தவறாக நடத்தியது _ இனி அப்படிச் செய்யமாட்டோம் என்று குற்றம் புரிந்த உணர்வுடன் பாவமன்னிப்பு பெறுவதுதானே நியாயம்!
அறிவியலின் அற்புதங்களை அனுபவித்துக்கொண்டு தேவனின் ‘அற்புதங்களை’ப் பிரச்சாரம் செய்வது; பிறகு தேவனின் மகிமை காப்பதற்கு அறிவியலை அவமதிப்பது என்ற திருச்சபையின் திமிருக்கும், இரட்டை வேடத்திற்கும் நீண்ட வரலாறு உண்டு.
மனிதனின் இன்பம் ததும்பும் வாழ்க்கை பரலோகத்தில் மட்டும்தான் என்று மாயை காட்டிய மதவெறியர்களின் கூற்றை பொய்யாக்கி பூமியில் அந்தகைய அற்புதங்களைச் சாதித்திருக்கிறது அறிவியல். நேற்றைய வானொலி முதல் இன்றைய கணிப்பொறி வரை அதன் சாதனைகள் தொடருகிறது. மனித குலத்தின் இத்தகைய பிரம்மாண்டமான அறிவியல் – தொழில் நுட்ப புரட்சிக்கு அடிப்படையான விஞ்ஞான உண்மைகளைக் கண்டவர்கள் மத்திய கால விஞ்ஞானிகள்.
இயற்கையின் புதிரை விடுவிக்க காட்டிலும், களத்திலும், கடலிலும் திரிந்தார்கள். ஊனையும் – உயிரையும் வருத்தி தான் கண்ட உண்மையை நிருபிக்க தளராமல் போராடினார்கள். மதத்தின் பிடியிலிருந்து மனித சிந்தனையை விடுவிக்க திருச்சபையின் கழுவாய்களுக்கு தங்களது உயிரைக் கொடுத்தார்கள்.
பேராற்றல் மிக்க சிந்தனையும், போராட்டமும் கொண்ட இவர்களைத்தான் மாபெரும் மனிதர்கள் என்று குறிப்பிடுகிறார் ஏங்கெல்ஸ். இவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தமும் அறிவியல் உலகம் அசுர வேகத்துடன் வளரக் காரணமாயிருந்தது. இவர்களது இழந்து போன வாழ்க்கையில்தான் இருபதாம் நூற்றாண்டின் மனித குல வாழ்க்கை உயிர் வாழுகிறது.
இத்தகைய ‘மாபெரும் மனிதர்களுக்கு’ எதிராக போப்பும், திருச்சபையும், ஏனைய பாதிரிகளும் நடத்திய பயங்கரவாத நடவடிக்கைகளை அறியும் நாகரீக உலகின் மனிதர்கள் எவரும் வெட்கப்படவேண்டும்; கோபம்கொள்ள வேண்டும்.
கோபர்நிகஸ்
அறுவை சிகிச்சையின் போதும், பிரசவத்தின் போதும் வலிதெரியாமல் இருப்பதற்காக பயன்படும் குளோராஃபார்ம் எனும் மயக்க மருந்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் யங் சிம்ஸன் சென்ற நூற்றாண்டில் கண்டுபிடித்தார். இதற்கு திருமறையில் ஆதாரமிலையே என்று கடுமையாக எதிர்த்தார்கள் பாதிரிமார்கள். ‘கஷ்டத்தில் நீ குழந்தை பெறுவாய்’ எனும் பைபிளின் வாக்கியத்தைக் கொண்டு தாய்மார்கள் பிரசவத்தின் போது மயக்க மருந்து பயன்படுத்தக் கூடாது அப்போதுதான் தாய்ப்பாசம் இருக்க முடியும் என் வற்புறுத்தினார்கள்.
இரத்தத்தை வகைபிரித்து, இரத்த வங்கியில் சேமிக்கப்படும் முறையினால் உலகமெங்கும் பலகோடி மனித உயிர்கள் காப்பாற்றப்படுகின்றது. மனித ரத்தம் பற்றிய ஆய்வை நடத்திய ‘குற்றத்திற்காக’ செர்வெட்டஸ் எனும் விஞ்ஞானி கழுமரத்தில் ஏற்றி உயிருடன் கொளுத்தப்பட்டார். பரமபிதாவின் புனிதம் காக்க இந்த தண்டனை வழங்கியவர் கால்வின் என்ற புராட்டஸ்டன்ட் பாதிரியார்.
தேவனின் மகிமை கூறி ஆவியெழுப்ப, விமானமேறி உலகைச் சுற்றி சுற்றி வருகிறார்கள் சுவிசேசத்தின் ஊழியர்கள். தேவனின் செய்தியை திருச்சபையின் விண்கோள்கள் பூமி உருண்டையின் மீது பொழிந்த வண்ணம் உள்ளன. ஆனால் உலகம் உருண்டையானது, தட்டையானதல்ல, பூமி சூரியனைச் சுற்றிவருகிறது என்று சொன்ன கியார்டனே புருனோவை உயிரோடு கொளுத்தினார்கள் கத்தோலிக்க மத குருமார்கள்.
‘வானுலகக் கோள்களின் சுழற்சிபற்றிய’ தனது கண்டுபிடிப்பை 36 ஆண்டுகளுக்கு முன்பே நூலாக எழுதியும், திருச்சபையின் கொலை வெறிக்குப் பயந்துபோன கோப்பர்நிகஸ் இறுதியில் தனது மரணப்படுக்கையில் இருந்து வெளியிட்டார்.
பூமியின் இயக்கத்தையும், சூரியனைச் சுற்றி வருவதையும் கண்டு சொன்ன கலிலீயோ திருச்சபையினால் சித்ரவதை செய்யப்பட்டார். அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் கலிலீயோ விவிலியத்தின் ‘உலகம் பற்றி உண்மைகளை’ ஏற்று தன் கண்டுபிடிப்புகளை மறுக்க வேண்டியிருந்தது. கலிலீயோவின் தொலைநோக்கியை சாத்தானின் கருவி என்றார்கள் கிறித்தவ பாதிரிகள்.
கி.பி. 370-இல் அலெக்சாண்டிரியாவில் (இன்றைய கெய்ரோ நகரம்) அரும்பாடுபட்டு சேர்த்துவைத்த நூலகத்தையும், அருங்காட்சியகத்தையும் ஆர்ச் பிஷப் சிரில் தலைமையிலான பாதிரிப்படை சூறையாடிக் கொளுத்தியது. நூலகத் தலைவரும் பெண் விஞ்ஞானியுமான ஹைப்பேஷியாவை சித்திரவதை செய்து கொளுத்தினார்கள்.
விஞ்ஞானிகளை வேட்டையாடிய திருச்சபையின் ரத்தக்கறை படிந்த வரலாற்றின் ஒரு சில துளிகள்தான் இவை. அனைத்துலக பாதிரிகளின் எண்ணிக்கையை விட அவர்கள் இழைத்த குற்றங்களின் எண்ணிக்கை அதிகமானதாகும்.
இன்று மதிப்பிட முடியாத அளவுக்கு சொத்துக்களைக் குவித்து வைத்துக்கொண்டு திருச்சபையின் பாதிரிகள் வாழும் உல்லாச வாழ்க்கைக்கு வசதிக்ள செய்தது அறிவியல்தான். விவிலியம் அல்ல.
கூன் விழுந்த முதுகுடன், மண்புழுவை மட்டும் மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டிருப்பார் டார்வின். தான் கண்ட மயக்க மருந்தை சோதனை செய்ய தன்னுடம்பையே கருவியாக்கி பல தடவை மயக்கமடைந்தார் சிம்ஸன். எந்த உண்மையையும் சோதித்தறிய அலைந்து திரியும் கலிலீயோ தன் சொந்த வாழ்வின் எழிலைத் துறந்தார். மரணப்படுக்கையிலும் கூட கோள்களின் அமைப்பு பற்றி ‘பிதற்றிக்’ கொண்டிருந்தார் கோப்பர்நிகஸ். உயிரோடு கொளுத்தப்பட்ட போதும் விவிலியத்தின் முட்டாள் தனத்தை ஏற்க மறுத்தார் புருணே.
எதிர்காலத்தில் திருச்சபை தமக்கு அங்கீகாரம் வழங்கும் என்ற நம்பிக்கையிலா இவர்கள் தங்களை வருத்திக்கொண்டார்கள்?
தேவனின் ஊழியர்களே சொல்லுங்கள். யார் பாவிகள், யார் சத்தான்கள்.
குளிரூட்டப்பட்ட அறையில் நித்திரை கொண்டு, காலை எழுந்து உயர்தர ஒயினைக் குடித்து, வறுத்த முழுக்கோழியை முழுங்கி, பளபளக்கும் வெண்பட்டு அங்கியை உடுத்தி, மாருதி காரில் பவனி வந்து, தேவாலயத்தில் கூடியிருக்கும் மந்தைகள் முன்னால், புளித்த ஏப்பத்துடன், பாதிரி திருவாய் மலர்வார், ”கஷ்டத்தில் ஜீவிக்கின்ற கர்த்தரின் குழந்தைகளே சாத்தான்களிடமிருந்து விலகியிருங்கள்.”
எங்கள் விஞ்ஞானிகளின் கால் தூசிகூடப் பெறாத பாதிரிகளே இரண்டாயிரம் ஆண்டுகளாக நீங்கள் செய்துவரும் தேவ ஊழியம் இதுதானே!
‘திருமறையில் ஆதாரமில்லையே’ என்ற எந்த அறிவியல் உண்மைகளை மறுத்து விஞ்ஞானிகளை அழித்தீர்களோ அதே அறிவியலை உங்களுடைய வாழ்க்கையில் வெட்கமில்லாமல் பயன்படுத்தி வருகிறீர்களே. சுவிசேசப் பிரசங்கிகளே பதில் சொல்லுங்கள்.
புருணோ
போயிங் 707 விமானத்தில் அனைத்துப் பாதிரிகளையும் அள்ளிப்போட்டு இமயமலையின் உச்சியில் கொண்டுபோய், பாராசூட் இல்லாமல் தள்ளிவிட்டால் நாங்கள் குற்றவாளிகளல்ல; ஏனென்றால் புவி ஈர்ப்புவிசையை கண்டுபிடித்த நியூட்டன் பைத்தியம் என்று பட்டம் கட்டியது திருச்சபைதான்.
குடல்வால் அறுவை சிகிச்சைக்காக வாடிகனில் 3 ஆண்டுகள் தலைமறைவாயிருந்த போதுதான் போப் முன்னர் கண்ட அறிக்கையை வெளியிட்டார். சிம்ஸனின் ஆவியும், செர்வெட்டஸின் ஆவியும் போப்பிடம் வந்து நியாயம் கேட்டதோ! குளோரோஃபாமும், ரத்தமும் கிடையாது என மறுத்திருந்தால் போப்பின் கதி என்ன? அறிவியலின் ஒழுக்கம் அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை. ஆனால் கருணையே உருவான கடவுளின் ஒழுக்கம்தான் அதை அனுமதிக்கிறது.
இப்படி கொலை பாதக வரலாற்றைத் தெரிந்து கொண்டும் கல்லுளி மங்கன் போல சாந்த சொருபீயாகக் காட்சியளிப்பதற்குத்தான் கிறித்தவப் பாதிரிகளுக்கு பத்தாணாடு கால பயிற்சி கொடுக்கிறார்கள் போலும்.
‘கிறித்தவத்தின் மாபெரும் ஞானி (ஏசு கிறிஸ்து) மக்களின் ஆத்மாக்களுக்கு விடுதலை கோரி, தமது உடம்பைத் தியாகம் செய்தார்; நவீனமான, கல்வியறிவு மிகுந்த ஞானியோ (பாதிரி) தனது சொந்த ஆத்மாவின் விடுதலைக்காக மக்களின் உடம்புகளைத் தியாகம் செய்கிறார்’ என்று காரல்மார்க்ஸ் சொன்னதை நிரூபிக்கிறது 2000-ம் ஆண்டு கால திருச்சபையின் வரலாறு.
மனித குலத்தின் ஊழியர்களான விஞ்ஞானிகள் உயிர் காக்கும் முறைகளைக் கண்ட போது தேவனின் ஊழியர்களான பாதிரிகளோ கழுமரத்தைக் கண்டுபிடித்தார்கள்.
எனவேதான் தேவகுமாரனைச் சிலுவையில் ஏற்றியவன் பிலாத்தா, திருச்சபையின் முன்னோர்களா என்ற சந்தேகம் வருகிறது.
ஞாயிற்றுக் கிழமைதோறும் கோடிக்கணக்கான மக்களுக்குப் பாவ மன்னிப்பு அள்ளி வீசும் பாதிரி வகையறாக்கள் 2000 ஆண்டுகளாகச் செய்து வரும் குற்றங்களுக்கு யாரிடம் மன்னிப்பு பெறுவார்கள்? ஒருவருக்கொருவர் பாவத்தையும் மன்னிப்பையும், பரிமாறிக்கொள்வார்களா? விவிலியம் இதற்கு என்ன தீர்ப்பு சொல்கிறது?
விஞ்ஞானம் வளர்ந்து விட்டதால் பூவுலகின் ஒழுக்கம் கெட்டுப்போய்விட்டது என்று இறுதி அஸ்திரம் ஒன்றை ஏவுகிறார்கள் பைபிளின் ஒழுக்கசீலர்கள். அதாவது களிமண்ணிலிருந்து ஆதாம் தோன்றினான் என்றால் ஒழுக்கம். பரிணாம வளர்ச்சி என்றால் ஒழுக்கக் கேடு. பூமி தட்டை என்றால் ஒழுக்கம். உருண்டை என்றால் ஒழுக்கக்கேடு. அதாவது பொய்யும், முட்டாள்தனமும் ஒழுக்கம். உண்மையும், பகுத்தறிவும் ஒழுக்கக் கேடு.
இந்த ‘ஒழுக்கத்தை’ப் பிரச்சாரம் செய்ய அனுமதிக்காததால் முன்னாள் சோசலிச நாடுகளில் கம்யூனிஸ்ட்டுகள் கிறித்துவ மதத்தைக் ‘கொடூரமாக’ ஒடுக்கினார்கள் எனக் கூப்பாடு போடுகிறார்கள். ‘புதிய ஏற்பாட்டின்’ காவலர்கள். ரசியாவிலும், சீனாவிலும் இந்த ‘ஒழுக்கத்திற்கு’க் கிடைத்த வெற்றியைத் தான் திருச்சபையும், தேவனாகிய அமெரிக்காவும் கைகோர்த்துக் கொண்டாடுகிறார்கள்.
இரத்தக் கறை படிந்த வரலாறு திருச்சபைக்கு மட்டும் சொந்தமானதல்ல; பார்ப்பன இந்து மதமும், இசுலாமும் தனித்தனியே வேத புத்தகங்கள் வைத்திருந்தது போலவே, தங்கள் சொந்தக் கழுமரங்களையும் நிறுவியிருந்தார்கள்.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹவின் திருநாமத்தால் ஆரம்பிக்கும் திருக்குர்-ஆனுக்கு 35 சிறப்புப் பெயர்கள் உண்டு. அதில் ஒன்று அந்நதீர்-அச்சுறுத்தி எச்சரிப்பது. பைபிளில் பரம்பிதா உலகை ஆறுநாட்களில் படைத்தார். குர்-ஆனில் அல்லா உலகை ஆறு கட்டங்களாகப் படைத்தார். பரமபிதா களிமண்ணில் இருந்து ஆதாமைப் படைத்தார். அல்லாஹ் சுட்ட களிமண்ணிலிருந்து ஆதாமைப் படைத்தார். பைபிளுக்கம் குர்-ஆனுக்கும் இடைவெளி 557 ஆண்டுகள்.
சிம்சன்
ஆனால் கடவுள் தங்களை எப்படிப் படைத்தார் என்ற உண்மையைத் திருக்குர் ஆன் விளக்கத்திலிருந்து தெரிந்து கொள்வதற்கு முன்னரே 6 நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த சிந்து சமவெளித் திராவிடர்கள் கடவுளைப் படைத்து விட்டார்கள் –சுட்ட களிமண்ணைக் கொண்டு.
தசாவதார தத்துவத்தை கைவசம் வைத்திருக்கின்ற பார்ப்பனர்களுக்கு படைப்புத் தத்துவம் பற்றி கவலை இல்லை. அப்படி என்றால் டார்வினின் பரிணாம தத்துவம்? தஞ்சை சரபோஜி நூலகத்தில் உள்ள ஓலைச் சுவடிகளிலிருந்து திருடப்பட்டதாக இருக்கலாம்.
இந்தக் கூற்றை திட்டவட்டமாக சைவர்கள் மறுக்கிறார்கள். தசாவதார நாயகன் விஷ்ணுவைப் படைத்தவன் சிவன் தான் என்கிறார்கள்.
ஆனால் கோஷ்டிப் பூசலின்றி அவர்கள் ஏற்கும் படைப்புத் தத்துவம் ஒன்று வேதத்தின் புருஷ சூக்தத்தில் இருக்கிறது. விராட் புருஷனின் தலையிலிருந்து பிராமணர்களும், தோளிலிருந்து சத்திரியர்களும், தொடையிலிருந்து வைசியர்களும், பாதத்தில் இருந்து சூத்திரர்களும் தோன்றினார்கள் என்ற ‘உயரிய’ படைப்புத் தத்துவம்தான் அது.
ஒரு வேளை டார்வின் தத்துவத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும், தரத்தால் பிரிக்கப்பட்ட நான்கு வகைக் குரங்குகள் அவர்களுக்கு தேவை.
ஈரேழு பதினாலு உலகங்களிலிருந்தும் கடவுளைத் துரத்தும் பணியை விஞ்ஞானிகள் செய்து விடுவார்கள். அதில் ஐயமில்லை.
ஆனால் கடவுளைத் துரத்துவதைவிடக் கடினமான பணி கடவுளின் ஏஜெண்டுகளைத் துரத்துவதுதான். அதை விஞ்ஞானிகள் செய்ய முடியாது. அதற்குச் சமூக விஞ்ஞானிகள் வேண்டும். ஆம். கம்யூனிஸ்டுகள் வேண்டும்.
”வந்தே மாதரம். ஏழெட்டு தடவை சொல்லிப் பாருங்கள், நாவினிக்கும், தொண்டை இனிக்கும்” என்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து கொண்டிருந்தார் எழுத்தாளர் சிவசங்கரி. அதென்ன சர்க்கரை வியாதிக்கு மாற்று மருந்தா என்று வாசகர்கள் தேடியலைய வேண்டாம். ”சொல்லச் சொல்ல இனிக்குதடா…. முருகா” மாதிரி இதுவும் ஒரு இனிப்பு மந்திரம்.
வந்தே மாதரம். ஆனந்தமடம் நாவல் வாயிலாக பங்கிம் சந்திரரால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடல். தற்போதுள்ள ”ஜன கண மன” வுக்குப் பதிலாக இதையே தேசிய கீதமாக அறிவிக்க வேண்டுமென்பது பாரதீய ஜனதாவின் கோரிக்கை. பார்ப்பன இந்து தேசியத்தை உத்திரவாதம் செய்யும் பாடல் இது என்பதை நிரூபிக்க இதைவிட வேறு சான்று தேவையில்லை.
கசையடியையும், தடியடியையும், சிறைவாசத்தையும் சகித்துக் கொள்வதற்கு காந்தியவாதிகளுக்கு அருமருந்தாகப் பயன்பட்ட ‘வந்தேமாதரம்’ சுதந்திரத்தின் பொன்விழாவையொட்டி மலிவு விலையில் விற்பனைக்கு வந்திருக்கிறது.
சோனி நிறுவனம் வழங்கும் ஏ.ஆர்.ரகுமானின் ஒரிஜினல் வந்தேமாதரம் விலை அறுபதே ரூபாய். டூப்ளிகேட் வந்தேமாதரம் இன்னும் மலிவு விலையில் கிடைக்கலாம்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் பிறக்கும் பாக்கியம் பெறாதவர்களும், பிறந்தும் டெல்லி சென்று சுதந்திரம் ‘கை மாறுவதை’க் காணக் கொடுத்து வைக்காதவர்களும், 1997 ஆகஸ்டு-14 நள்ளிரவில் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் கண் விழித்து அமர்ந்திருந்தோம். தூர்தர்ஷன் மட்டுமின்றி, பி.பி.சி., சி.என்.என், ஸ்டார் போன்ற அந்நியத் தொலைக்காட்சிகளும் பொன்விழாக் கொண்டாட்டத்தை நேரடியாக ஒளிபரப்பின; எம்.டி.வி., வி.சானல் போன்ற சர்வதேசத் தொலைக்காட்சிகள் திரையில் தோன்றும் தங்கள் நிறுவனத்தின் பெயருக்கே மூவண்ணம் தீட்டிவிட்டன. கத்தியின்றி ரத்தமின்றி உலத்தையே இந்தியா வென்றடக்கிவிட்டதோ என்ற ஐயம் ஒரு கணம் எழத்தான் செய்தது.
”1947 ஆகஸ்டில் பெற்றது போலி சுதந்திரம்; இப்போது உலக வர்த்தகக் கழகத்தின் கீழ் இன்னொரு சமஸ்தானமாக இணைந்திருக்கும் இந்தியா, பெயரளவிலான இறையாண்மையையும் இழந்து மீண்டும் காலனியாகி வருகிறது” என்ற உண்மையை ஏகப்பட்ட ஆதாரங்களுடன் சிரமப்பட்டு நிறுவ வேண்டிய அவசியமின்றி மிக எளிதாகப் புரிய வேத்தது இந்தப் பொன்விழாவின் நேரடி ஒளிபரப்பு.
டெல்லி விஜய் சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான மேடையின் பின்புறம் லேசர் வாண வேடிக்கை. முன்புறம் அதை வாய் பிளந்து பார்க்க வந்த இந்தியர்கள். பல்வேறு ‘பிராந்தியங்களின்’ கலைக்குழுக்கள் ஆடிக் களைத்து இறங்கியபின் ரகுமானின் வருகையை அறிவித்தார் அறிவிப்பாளர்.
”சுதந்திரத்தின் பொன்விழாவையொட்டி தான் இசையமைத்திருக்கும் ‘வந்தே மாதரம்’ என்ற தொகுப்பிலிருந்து சில பாடல்களைப் பாடவிருக்கிறார் ரகுமான். அவரை அறிமுகப்படுத்தத் தேவையில்லை. ரகுமானைத் தெரியாதவர்கள் இசையைத் தெரியாதவர்கள்” என்றார்.
ஜீன்ஸ் பாண்ட், தொள தொளப்பான வெள்ளை சட்டை, பிய்ந்துவிடப்பட்ட தலைமுடியுடன் மேடையேறினார் ரகுமான். லேசான ஹம்மிங்கில் தொடங்கியது பாடல். சாமியாடியைப் போல சற்று நேரம் கண்களை இறுக மூடிக் கொண்டு ‘தேசபக்தி’யை வரவழைத்துக் கொண்ட பின்னால் லேசாக வலிப்பு வந்தவரின் தோரணையில் வந்தே மாதரத்தைத் தொடங்கினார் ரகுமான்.
வந்தே மாதரம் ஒளிப்பேழையாகவும் (வீடியோ காசெட்) விரைவில் வெளிவருமாம். தற்போது ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் மட்டும் காட்சியமைப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அது மீண்டும் மீண்டும் ஒளிப்பப்படுகிறது. (இந்த தேசபக்திப் பிரச்சாரத்தில் தூர்தர்ஷனை விஞ்சுகிறது சன் டி.வி.)
பாலைவனத்தில் மூவண்ணக்கொடி பறக்கிறது. பாலைவன மணலின் மஞ்சள் நிறத்துக்குத் தோதான எதிர் நிறத்தில் உடையணிந்த இந்தியர்கள் திட்டுத் திட்டாகக் கீழே நிற்கிறார்கள். கொடியின் மறைவிலிருந்து ஹெலிகாப்டர்கள் வெளியே வருகின்றன. கீழே அண்ணாந்து பார்த்து நிற்கும் இந்தியர்களுக்கு சோத்துப் பொட்டலம் போடவா, குண்டு போடவா என்று தெரியவில்லை.
அப்புறம், மணிரத்தினம் – சுகாசினியின் ‘இந்திரா’ படத்தில் தாழ்த்ப்பட்ட சிறுமிகள் பட்டுப் பாவாடை சட்டையுடன் சந்தோஷமாகத் துள்ளிக் குதிப்பதைப் போல, கையில் தேசியக் கொடியுடன் சிறுவர்களும், சிறுமிகளும் குறுக்கு நெடுக்காக ஸ்லோமோஷனில ஓடுகிறார்கள். எல்லோரும் மகிழ்ச்சியையும், வெகுளித்தனத்தையும், வெட்கத்தையும் மட்டுமே வெளிப்படுத்தும் ஆபத்தில்லாத, தொல்லையில்லாத இந்நியச் சிறுவர்கள், சிறுமிகள்.
தனக்கு மெட்டுக்களை வாரி வழங்கும் ராஜஸ்தான் விசயத்தில் ரகுமான் நன்றி மறக்கவில்லை. பள்ளிகள் நடத்தும் சுதந்திரதின அணிவகுப்பு போல இரண்டிரண்டு பேராக பாலைவனத்தில் ஒரு நீண்ட வரிசையை ஊர்வலம் விட்டுவிட்டார். என்ன, சுதந்திரத்தின் சூடு பொறுக்காமல் அவர்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டிருப்பார்கள்- அவ்வளவுதான்.
பிறகு யானை மீது தேசியக்கொடி; கதகளி நடனம்…. அவ்வளவுதான்.
இந்தக் காட்சிகளின் பின்னணியில், தொலை தூரத்தில், கால்களைக் கொஞ்சம் முன்னால் மடக்கி, கைகளை உயர்த்தி, இதயத்திலிருந்தோ – வயிற்றிலிருந்தோ அல்லாமல் தொண்டையிலிருந்து ”வந்தே…. மாதரம்” என்று ரகுமான் பாடுகிறார். பம்பாய் படத்தில் பாறை மீது நின்று கொண்டி விரக வேதனையுடன் ”உயிரே…. உயிரே” என அரவிந்தசாமி அரற்றும் காட்சி நினைவுக்கு வந்தது.
கதர்க் குல்லாய்க்காரர்கள் போராடியதையும், தடியடிபட்டதையும், சூடு பட்டுச் செத்ததையும் காட்சிகளாக வடிவமைத்து ‘வந்தே மாதரம் ‘ பாடுவதை விட்டு பாலைவனத்தில் ஏன் கொடியேற்றவேண்டும் என்று கலாரசனையற்ற பாமரர்கள் சிந்திக்கலாம்.
சோனி எனும் ஏகாதிபத்தியத் தொழில் நிறுவனத்தால் உலகெங்கிலுமுள்ள 27 நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் தேசங்கடந்த தேசபக்திப் பாடல் ஒலிப்பேழை – வந்தே மாதரம். அவ்வாறிருக்க அதில் குறுகிய தேசிய உணர்வைத் தூண்டும் விவகாரங்களும், எதிர்கால சந்தையைப் பாதிக்கக் கூடிய கடந்த கால வரலாறும் கிளறப்படாமல் இருப்பது நல்லது என் அவர்கள் கருதியிருக்கக் கூடும்.
விஜய் சதுக்கத்தின் மேடையில் ரகுமான் இரண்டு பாடல்களைப் பாடியபின் கிடைத்த இடைவேளையில் இந்தியாவின் இந்நாள் பிரதமரும் முன்னாள் பிரதமர்களும் மேடையேற்றப்பட்டார்கள். மைனாரிட்டி அதிசயமான சந்திரசேகர் முதல் 13 நாள் அற்புதமான வாஜ்பாயி வரை அனைவரும் பிடிபட்ட குற்றவாளிகள் போல சிறிது நேரம் மேடையில் வரிசையாக நிறுத்தப்பட்ட பின், தொலைக்காட்சிக் காமெரா ரகுமானிடம் பிரியாவிடை பெற்று பாராளுமன்றம் சென்றது.
மின்னணு இசைக்கருவிகளுடன் மக்கள் மன்றத்தில் ரகுமானின் ‘வந்தே மாதரம்’ தொடர, மக்கள் பிரதிநிதிகள் மன்றத்தில், பழைய ஆர்மோனியப் பெட்டியின் துணையுடன் பீம்சேன் ஜோஷி நடுங்கும் குரலில் தனது வந்தே மாதரத்தைத் துவங்கினார்.
இந்துஸ்தானி வந்தேமாதரம், பாப் வந்தேமாதராக உருமாறியதெப்படி?
”புதிய ஒலிகளைப் பயன்படுத்தி வந்தே மாதரம் பாடலுக்குப் புத்துயிர் கொடுக்கலாம், எல்லோரும் பாடத்தக்க பாடலாக அதை மாற்றலாம் என்ற யோசனையுடன் என நண்பன் பாலா என்னை அணுகினான்… ஒரிஜினல் மெட்டு மிகவும் ஆன்மீகத் தன்மை கொண்டதாக இருந்தால் (அதைமாற்றி) புதிதாக இசையமைக்க எனக்கு 3 மாதங்கள் பிடித்தது” என்கிறார் ரகுமான்.
வந்தே மாதரம் என்பதைத் ‘தாய் மண்ணே வணக்கம்’ என்று மொழியாக்கம் செய்து பாட்டெழுதிக் கொடுத்திருக்கிறார் கவியரசு வைரமுத்து. வால்மீகிக்குத் திருத்தம் செய்து ராமாயணத்தைத் தமிழாக்கிய கவிச் சக்கரவர்த்தி கம்பனை இனத்துரோகி என்றார் பெரியார். இந்தக் கவியரசரை என்னவென்று அழைப்பது?
இந்த ஒலி, ஒளிப் பேழைகளை நாம் இன்னும் முழுமையாக்க காண, கேட்கவில்லை. எனினும் பானைச் சோறு எப்படி இருக்கும் என்பதை ஒரு சோறே கட்டுகிறது. முற்றிலும் லண்டனில் பதிவு செய்யப்பட்ட இந்த வந்தேமாதரம் பாடல் ஒலி / ஒளிப் பேழையில் லெக் வாலேசா, அன்னை தெரசா, தலாய் லாமா, மாதுரி தீட்சித் போன்ற பலர் வந்தே மாதரத்திற்கு உதட்டசைத்திருக்கிறார்களாம். கிளிண்டனை அணுகினார்களா என்று தெரியவில்லை.
”ஒருமுற்றிலும் பதிய தலைமுறை என் இசையை ரசித்துக் கொண்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பின் நான் திரும்பிப் பார்க்கும் போது அவர்கள் ‘முக்காபுலா’, ‘சிக்கு புக்கு ரயிலே’ என்று மட்டும் பாடிக் கொண்டிருக்கக் கூடாது. வந்தேமாதரம் போன்ற பாடல் ஒலிப் பேழைகளை நான் வெளியிடும் காரணம் இதுதான்” என்கிறார் ரகுமான்.
”இனி வரும் வருடங்களுக்கு இந்திய இளைஞர்களுக்கு ஒரு இசை உற்சாகத்தை அளிக்கத்தான் வந்தேமாதரம்” என்கிறார் சோனி நிறுவனத்தின் இயக்குநர்.
வந்தமாதரத்தின் இசையை மட்டுமல்ல, பாடகனையும் சர்வதேசத் ‘தரத்திற்கு’ மாற்றியமைத்து விட்டது சோனி. மைக்கேல் ஜாக்சன் போன்றோரைப் போல ரகுமானின் தலைமுடியையும் பிய்த்துத் தொங்கவிட்டு விட்டது. உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைக்கு ஏற்ப இந்திய அரசியல் சட்டத்தையே திருத்தியமைக்கலாம் என்னும் போது முடியைத் திருத்துவதொன்றும் பெரிய விவகாரமில்லை.
பொன்விழாவையொட்டி இந்திய இளைஞர்களிடம் சுதந்திரம் பற்றி கருத்து கேட்டது ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சி.
”முன்பு சன்னி மொபெட்டில் சென்று கொண்டிருந்தேன்; இப்போது சுசுகி வாங்கியிருக்கிறேன். வேகமாக சுதந்திரமாகச் செல்கிறேன்” என்றார் ஒரு இந்திய இளைஞர்.
ஆகஸ்டு -14 பாகிஸ்தான் சுதந்திரத்தைக் கொண்டாடும் முகமாக வி- சானல் தொலைக்காட்சியில் ஜீன்ஸ் பாண்ட் அணிந்த பாப் பாடகி மேடையில் வந்து குதித்து ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்றவுடன் அரங்கமே விசிலடித்து ஆர்ப்பரித்தது.
ஆகஸ்டு -15 இந்தியப் பொன்விழா கொண்டாட்டத்தையொட்டிய வி. சானலின் சிறப்பு நிகழ்ச்சியில் ஒரு பாப் பாடகி மேடையில் தோன்றினார். நாற்காலியில் அமர்ந்து குனிந்து நிமிர்ந்தார். அவரது மேற்சட்டையின் முன்புறம் டர்ர்ரென்று கிழிந்தது – வந்தேமாதரம்!
இந்தியாவின் வடமேற்கே பாகிஸ்தானை அடுத்துள்ள நாடான ஆப்கானிஸ்தானின் அதிபர் கர்சாயும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் கடந்த அக்டோபர் 5ஆம் தேதியன்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்தியாவின் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியாக ஆப்கான் திகழும் என்று அந்த ஒப்பந்தத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2014இல் ஆப்கானிலிருந்து நேட்டோ படைகள் முற்றாக விலகிய பிறகு, ஆப்கானின் பாதுகாப்புக்கு உற்ற துணையாக இந்தியா நிற்கும் என்றும், ஆப்கான் படைகளுக்கு இந்திய இராணுவம் முறைப்படி 2014லிருந்து பயிற்சி அளிக்கும் என்றும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கான் படைகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதற்கு ஈடாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடத்தைப் பெற அந்நாடு வாக்களிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
இது தவிர, ஆப்கானின் ஹஜிகாக் பகுதியில் உள்ள வளமான இரும்புத் தாதுவைத் தோண்டியெடுக்கும் சுரங்கங்கள் அமைக்கவும், வடக்கு ஆப்கானில் உள்ள எண்ணெய் எரிவாயு வளத்தை அகழ்ந்தெடுக்கவும் இந்தியா உதவும் என்றும், விமானப் போக்குவரத்து மட்டுமின்றி, கடன் மற்றும் காப்பீடு துறைகளிலும் இந்தியாவும் ஆப்கானும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்படும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போருக்குப் பிந்தைய ஆப்கானில் மறு நிர்மாணப் பணிகளைச் செய்தல், வர்த்தக மையங்களை இணைக்கும் சாலைகள் அமைத்தல், சிறிய அளவிலான மின் திட்டங்கள் மற்றும் மருத்துவமனைகள் அமைத்தல் முதலான அடிக்கட்டுமானத் துறைகளிலும் இந்தியா பங்கேற்கும் என்றும், கடல்வழியைப் பயன்படுத்த பாகிஸ்தானை மட்டுமே சார்ந்திருந்த நிலை மாறி, இனி இந்திய உதவியுடன் கடல்வழியை ஆப்கான் பயன்படுத்தும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“”இந்தியாவுடனான நட்புறவுக்குப் பெரிதும் முயற்சித்தவரும், ஆப்கான் அமைதி நடவடிக்கைக்கான உயர் தலைவருமான முன்னாள் ஆப்கான் அதிபர் பர்ஹானுதீன் ரப்பானி கொல்லப்பட்ட பிறகு போடப்படும் இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பும் பெரும் முன்னேற்றத்தை அளிக்கும்” என்று இந்திய ஆட்சியாளர்கள் ஏற்றிப் போற்றுகின்றனர். “”2 பில்லியன் டாலர் அளவுக்கு ஆப்கானுக்கு உதவி செய்து, இந்தியா மிக முக்கிய கொடையாளராக உள்ளது என்று ஆப்கான் மக்கள் பாராட்டுகின்றனர். மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கும் வர்த்தகத்துக்கும் அடிக்கடி ஆப்கானியர்கள் இந்தியாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். சினிமா நடிகர்நடிகைகள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் படங்களைத் தங்கள் கடைகள், வீடுகளில் ஒட்டி வைக்கும் அளவுக்கு இந்திய சினிமாக்கள், தொலைக்காட்சித் தொடர்களுக்கு ஆப்கான் மக்களிடம் பெருத்த வரவேற்பு உள்ளது. இந்துஸ்தான் எங்களது நண்பன், பாகிஸ்தான் எங்களது எதிரி என்று ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் உளமாறக் கூறுகின்றனர்” என்று ஊடகங்கள் இந்தப் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை ஆப்கானியர் வரவேற்பதாக வானளாவப் புகழ்ந்து தள்ளுகின்றன.
“”அமெரிக்காவின் நீண்டகால நெருங்கிய கூட்டாளியாகச் செயல்பட்ட பாகிஸ்தான், இந்த ஒப்பந்தத்தால் தனிமைப்பட்டுள்ளது. ஆப்கான் படைகளுக்குப் பயிற்சி அளிப்பதோடு, உஸ்பெகிஸ்தானின் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைத் தாக்கி அழிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஆப்கானின் அண்டை நாடான தாஜிகிஸ்தானிலுள்ள போர்விமானத் தளத்தையும் இந்தியா பயன்படுத்தும். ஆப்கான் மட்டுமின்றி, அதன் அண்டை நாடுகளிலும் தீவிரவாதத்தை வேரறுக்க இந்தியா பாடுபடும். இவற்றின் மூலம் இந்தியா தெற்காசியாவில் மட்டுமின்றி, மேற்காசியாவிலும் செல்வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று இராணுவ ஆலோசகர்கள் இந்த ஒப்பந்தம் குறித்துக் கருத்து தெரிவிக்கின்றனர்.
பெருமிதத்துடன் சித்தரிக்கப்படும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் ஆப்கானில் மூலதனமிட்டு வளரவும் விரிவடையவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், தெற்காசியாவில் அமெரிக்காவின் நம்பகமான அடியாளாக உள்ள இந்தியா, இப்போது மேற்கு, மத்திய ஆசியப் பகுதிகளிலும் தலையிட்டு அமெரிக்காவுக்கு அடிமைச் சேவகம் செய்ய இன்னுமொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வல்லரசுக் கனவில் மிதக்கும் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு இந்த ஒப்பந்தம் சாதகமானதாகத் தோன்றினாலும், அதன் மறுபக்கமோ பேரபாயமானது.
கடந்த அக்டோபர் 7ஆம் நாள் ஆப்கான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் பத்தாம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் நாளாகும். தீவிரவாதத்தை முறியடிப்பதும், தாலிபான்களையும் அல்கய்தா தலைமையையும் அழித்தொழிப்பதும்தான் நோக்கம் என்று ஆப்கானை ஆக்கிரமித்த அமெரிக்கா, கடந்த மே மாதத்தில் பின்லாடனையும் சுட்டுக் கொன்ற பின்னரும் தனது ஆக்கிரமிப்பை நீக்கிக்கொண்டு விடவில்லை. ஆப்கானில் அது வெற்றி பெறவும் முடியவில்லை.
ஆப்கான் பிரச்சினையைத் தீர்த்து, அமைதியை நிலைநாட்டுவதல்ல அமெரிக்காவின் நோக்கம். ஆப்கானிலும் மத்திய ஆசியப் பகுதியிலும் காலூன்ற ஒரு காரணம் தேவை. அமெரிக்காவின் தலையீடு தேவை என்பதை நியாயப்படுத்துவதற்கு ஒரு தீராத பிரச்சினை இப்பகுதியில் நீடிக்க வேண்டும். அப்போதுதான் மத்திய ஆசியப் பிராந்தியத்தைக் கட்டுப்படுத்தி மேலாதிக்கம் செலுத்த முடியும். அதற்காகவே பயங்கரவாதத்தை அமெரிக்கா காரணமாகக் காட்டுகிறது. உள்நாட்டு நெருக்கடிகளின் காரணமாக ஆப்கான் சிக்கலிலிருந்து மீள அமெரிக்கா விரும்பினாலும், அதனால் ஆப்கானிலிருந்து காலை எடுக்க முடியவில்லை. எனவே, பாக். மூலமாக தாலிபான்களில் ஒரு பிரிவினருடன் சமரசப் பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்கிறது.
மறுபுறம், அமெரிக்காவின் விசுவாச நாடான பாகிஸ்தான், ஆப்கானில் மேற்கொள்ளப்படும் எந்த அமைதி நடவடிக்கையிலும் தன்னை முன்னிறுத்த விழைகிறது. பாகிஸ்தானின் மேற்குப் பகுதியிலுள்ள தீவிரவாத ஹக்கானி இயக்கத்தினருக்கும் ஆப்கானின் தாலிபான் இயக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதால், சமரசப் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் தலையிட்டு செல்வாக்கு செலுத்தவே விரும்புகிறது.
பாக். ஆளும் வர்க்கம் அமெரிக்காவை ஆதரிக்கிறது என்றாலும், பாகிஸ்தானில் அதிகரித்துவரும் அமெரிக்கத் தலையீட்டின் காரணமாகவும், பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் அமெரிக்கா நடத்திவரும் ஆளில்லாத விமானத் தாக்குதலாலும் பாக். மக்களிடம் அமெரிக்க எதிர்ப்பு மனப்போக்கு நிலவுவதால், அதையும் கணக்கில் கொண்டு மக்களின் பொதுக்கருத்துக்கு மதிப்பளிப்பதாகக் காட்டிக் கொள்ள அமெரிக்காவுக்குப் பெயரளவிலான எதிர்ப்பைக் காட்டுகிறது.
பாகிஸ்தானின் மேற்குப் பகுதி தாலிபான்களின் புகலிடமாக இருப்பதால், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த அங்கு பெருமளவு படைகளை பாகிஸ்தான் குவிக்க வேண்டியிருக்கிறது. கிழக்குப் பகுதியில் உள்ள இந்தியாவுடன் முறுகல் நிலை இருந்தால், இந்திய எல்லையில் மேலும் படைகளைக் குவிக்க வேண்டியிருக்கும் என்பதால், தற்காலிகமாக இந்தியாவுடன் முறுகலற்ற நிலையை மேற்கொள்ள பாக். விரும்புகிறது.
இதனடிப்படையில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியபாக். வர்த்தக அமைச்சர்கள் இருதரப்பு உறவுகள் மேம்பட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். விசா, கடவுச்சீட்டு முதலான விவகாரங்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் பாக். முன்வந்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தேர்தலில் நிரந்தரமற்ற உறுப்பினராக பாக். போட்டியிடுவதை இந்தியா எதிர்க்கவில்லை. பாக். ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் ஆப்கானில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்திவரும் சூழலில், அமெரிக்கா தனது நிதியுதவிகளை நிறுத்தப் போவதாக மிரட்டி வருவதால் பாக். இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல முனைகளில் போர் தொடுத்து பின்னடைவைச் சந்திப்பதை விட, தற்போதைக்கு இந்தியாவுடன் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைமை பாக்.கிற்கு உள்ளது. மறுபுறம், பாகிஸ்தானின் புதிய அணுகுமுறையைக் கணக்கில் கொண்டு செயல்படுமாறு அமெரிக்கா இந்தியாவை வலியுறுத்துகிறது.
இவற்றை வைத்து பாகிஸ்தான் அமெரிக்காவால் ஓரங்கட்டப்பட்டு, ஆப்கான் விவகாரத்தில் இந்தியா முக்கியத்துவம் பெற்று வருவதாக ஊடகங்கள் சிலாகிக்கின்றன. தெற்காசியா மட்டுமின்றி, மத்திய ஆசியாவில் செல்வாக்கு செலுத்துமளவுக்கு இந்தியா வல்லரசாக வளர்ந்து வருவதாகவும், ஆப்கான் ஆட்சியாளர்கள் பாகிஸ்தானை நம்பாமல் இந்தியாவைப் பெரிதும் நம்புவதைப் போலவும் அவை ஊதிப் பெருக்குகின்றன. ஆனால் ஆப்கான் அதிபரோ, பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இரட்டைச் சகோதரர்கள் என்று டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானபோது தெரிவித்துள்ளார். அதாவது, பாகிஸ்தானைப் புறக்கணித்துவிட்டு ஆப்கானில் அமைதியையோ வளர்ச்சியையோ சாதிக்க முடியாது என்று அவர் வெளிப்படையாகவே தெரிவிக்கிறார்.
ஆப்கானில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் அந்நியத் துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் அமெரிக்கத் துருப்புகள் மட்டும் ஒரு லட்சம் பேராவர். சி.என்.என். தொலைக்காட்சியின் கூற்றுப்படி, கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படையினர் 2,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் அமெரிக்கர்கள் மட்டும் 1,780 பேராவர். பத்தாம் ஆண்டு ஆக்கிரமிப்புப் போரின் தொடக்கத்தையொட்டி, கடந்த செப்டம்பரிலிருந்தே தாலிபான்களின் தாக்குதல்கள் அடுத்தடுத்து நடந்தன. ரப்பானி கொல்லப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாக பாக். ஆதரவு பெற்ற ஹக்கானி குழுவினர் காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். காபூல் நகரை ஏறத்தாழ 20 மணி நேரத்திற்கு தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அச்சுறுத்துமளவுக்கு தாலிபான்கள் இன்னமும் வலுவாகவே உள்ளனர். அமெரிக்கா மற்றும் அதன் தலைமையிலான நேட்டோ கூட்டணிப்படைகளாலேயே ஆப்கானில்வெற்றி கொள்ள முடியாத சூழலில், இப்போது இந்தியா அங்கு நுழைவது புலி வாலைப் பிடித்த கதையாகவே முடியும்.
இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் விரிவடைவதற்கும் இந்திய ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் அடியாளாகச் சேவை செய்யவும் இன்னுமொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பாகிஸ்தானின் வாலை முறுக்கி வம்புக்கு இழுப்பது இந்திய ஆளும் வர்க்கத்தின் விரிவாக்கத்துக்கும் மேலாதிக்கத்துக்கும் அவசியமாகிவிட்டது. மறுபுறம், தற்காலிகமாக இந்தியாவுடன் இணக்கம் காட்டும் பாகிஸ்தான், நாளை போர் தொடுக்கத் துணிந்தால் அது அணு ஆயுதப் போராக மாறும் அபாயம் உள்ளது.
மேலும், ஏற்கெனவே அமெரிக்க பொம்மையாட்சிக்கு ஆதரவாக உள்ள இந்தியாவை எதிர்க்கும் தாலிபான்கள் ஆப்கானிலுள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு, இந்தியக் கட்டுமானப் பணியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போதைய ஒப்பந்தத்தின் மூலம் ஆப்கான் ஆட்சியாளர்களுடனான இந்தியாவின் கூட்டு வலுப்பட்டுள்ள நிலையில் தாலிபான்களின் தாக்குதல் ஆப்கானில் மட்டுமின்றி, இந்தியாவிலும் தொடர்வதற்கான பேரபாயமும், இஸ்லாமியத் தீவிரவாதிகள் மற்றும் அமெரிக்க எதிர்ப்பாளர்களின் தாக்குதல் இலக்காக இந்தியா மாறும் பேரபாயமும் ஏற்பட்டுள்ளது.
இவற்றைக் காட்டி மீண்டும் பயங்கரவாதப் பீதியூட்டிக் கருப்புச் சட்டங்கள் நாட்டு மக்கள் மீது ஏவப்படும். பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் என்று புரட்சிகர ஜனநாயக இயக்கங்கள் ஒடுக்கப்படும். இந்துவெறி பயங்கரவாத சக்திகள் இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாத வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விடும். இவற்றின் விளைவாக அமெரிக்கக் கைக்கூலித்தனம் மேலும் அதிகரிக்கும். பாகிஸ்தானைப் போல இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலும் அதற்கெதிராக அரசு பயங்கரவாதத் தாக்குதலும் தீராத தலைவலியாக மாறிப் போகும். எவ்வாறு பாகிஸ்தான் மதவெறிச் சக்திகளாலும், தீவிரவாதத்தாலும், இராணுவ ஒடுக்குமுறையாலும், அமெரிக்காவின் தாக்குதலாலும் கந்தலாகிக் கிடக்கிறதோ, அதைப் போன்றதொரு நிலைக்கு இந்தியா இழுத்துச் செல்லப்படும் பேரபாயம் சூழ்ந்துள்ளதையே நிலைமைகள் சுட்டிக் காட்டுகின்றன.
அக்டோபர் மாத கடைசி வாரம். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் விஜயகுமார் மதியம் செமஸ்டர் தேர்வு எழுதி விட்டு சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் தனது அறைக்கு வருகிறார். ஆந்திராவைச் சேர்ந்த அவர், நான்கு மாணவர்கள் பகிர்ந்து கொள்ளும் வீட்டில் தங்கியிருந்தார். திரும்பி வந்தவர் யாருடனும் பேசாமல் சிறிது நேரம் அப்செட்டாக உட்கார்ந்திருக்கிறார்.
ஏடிஎம்மில் பணம் எடுக்கப் போவதாக உடன் தங்கியிருந்தவர்களிடம் சொல்லி விட்டு வெளியே போனவர், அருகில் இருந்த கடையில் கெரசின் வாங்கி, ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத தெருவில் தன் மீதே ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டிருக்கிறார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துப் போவதற்குள் அவரது உயிர் பிரிந்து விட்டது.
அவருக்கு வயது 19. எஞ்சினியரிங் 2-ம் ஆண்டு படிக்கிறார். அன்றைய கணக்கு தேர்வில் சரியாக எழுதவில்லை என்ற கவலையில் தனது உயிரை தானே எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இது போன்று பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தேசிய குற்றப்பதிவுகள் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி 2010-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 1,34,599 பேர் தம்மைத் தாமே மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, நான்கு நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு தற்கொலை நடக்கிறது. இந்தக் கட்டுரையை நீங்கள் படித்து முடித்திருக்கும் முன்பு இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் யாரோ ஒருவர் தனது உயிரை எடுத்துக் கொண்டிருப்பார்.
இந்தியாவில் தற்கொலை வீதம் கடந்த 20 ஆண்டுகளில் உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. ஒரு லட்சம் மக்கள் தொகையில் இத்தனை பேர் என்ற வீதத்தில் தற்கொலைகளை அளவீடு செய்கிறார்கள். 1989-ல் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 8.47 என்று இருந்த இந்த வீதம் 2010-ல் 11.4 ஆக உயர்ந்திருக்கிறது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம்தான் இந்தியாவிலேயே அதிகம் தற்கொலை நிகழும் மாநிலங்களாக இருக்கின்றன. மேற்கு வங்காளம், மகாராஷ்டிரம் என்ற இரண்டு மாநிலங்களையும் சேர்த்தால் நாட்டில் நிகழும் தற்கொலைகளில் 57.2% முன்னேறிய மாநிலங்களாக கருதப்படும் இந்தப் பகுதிகளில் நடைபெற்றிருக்கின்றன.
தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்திலும், விழுப்புரம் மாவட்டத்திலும், கேரளாவிலும் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின் படி, இந்த புள்ளிவிபரம் பிரச்சனையை குறைத்து மதிப்பிடுகிறது என்று தெரிய வந்தது. பல தற்கொலைகள் தற்கொலைகளாக பதிவு செய்யப்படுவது இல்லை என்றும் உண்மையான தற்கொலை வீதம் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும் இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முத்துக்குமார், செங்கொடிபோன்று போராட்ட நோக்கத்தோடு நிகழும் தற்கொலைகள் சமூகத்தை தட்டி எழுப்ப நேரடியான விமர்சனத்தை வைத்தாலும், ஒவ்வொரு தற்கொலையும் சமூகத்தின் மீது தனிநபர் வைக்கும் விமர்சனமாகவே பார்க்கப்பட வேண்டும். ஏதோ ஒரு வகையில் அல்லது பல வழிகளில் ஒருவர் சமூகத்தினால் நிராகரிக்கப்படுவதாக உணர்ந்து தம்மைத் தாமே மாய்த்துக் கொள்கிறார்.
2010-ம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த தற்கொலைகளில் 21.1% உடல் நோய்களை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் என்றும், 23.7% குடும்ப பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொள்பவர்கள் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிற காரணங்கள் தேர்வில் தோல்வி, காதலில் ஏமாற்றம், வறுமை, தொழில் தோல்வி, கடன் நெருக்கடி என்று பதிவாகியுள்ளன.
இத்தகைய தற்கொலைகளுக்கு பின் இருக்கும் மன அழுத்தம் எத்தகையது என்று பார்ப்போம். மேலே சொன்ன ஆந்திர மாணவரை எடுத்துக் கொள்வோம். 19 வயதில் வீட்டிலிருந்து வேறு ஊருக்கு வந்து, சோழிங்கநல்லூரிலிருந்து திருப்போரூர் போகும் சாலையிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஏரியை நிரப்பி உருவாக்கப்பட்ட குடியிருப்பில் வசிக்கிறார். பல லட்ச ரூபாய் நன்கொடை, கல்விக் கட்டணம் கட்டி சத்தியபாமா கல்லூரியில் எஞ்சினியரிங் படிக்கிறார். அதற்காக ‘சிரமப்பட்டு’ பணம் திரட்டிய பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளின் சுமை மனதில்.
தங்கியிருந்த வீட்டு உரிமையாளருக்கு மாதா மாதம் வாடகை கொடுப்பதோடு உறவு முடிந்து போய் விடும். வீட்டு உரிமையாளருக்கோ சுற்றி இருக்கும் வீடுகளில் வசிப்பவர்களுக்கோ இந்த மாணவர்கள் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பது மட்டுமே அக்கறையாக இருக்கும். கல்லூரியை நடத்தும் ‘தர்ம பிரபுக்கள்’ அவரது திறமைகளை வளர்ப்பதிலோ, அறிவை பெருக்குவதிலோ இல்லை கற்றுக் கொடுப்பதிலோ அக்கறை கொண்டிருப்பதை விட பணம் சம்பாதிப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள்.
‘கொடுத்த காசுக்கு ஒரு டிகிரி வாங்கி, நல்ல ஒரு நிறுவனத்தில் சேர்ந்து விட வேண்டும், சேர்ந்து வரும் சம்பளத்தில் பெற்றோர் பட்ட கடனை அடைத்து விட வேண்டும். உடன் பிறந்தவர்களை கை தூக்கி விட வேண்டும். எல்லோரையும் போல சமூகத்தில் மதிப்பாக வாழ வேண்டும்.’ இதுதான் அவரது வாழ்க்கையைச் செலுத்தும் எண்ணங்கள்.
இதில் எந்த இடத்திலும் இவர் மீது உண்மையான அக்கறை, அவரது வளர்ச்சியில் கவனம் கொண்டுள்ளவர்கள் யாருடனும் உறவாடும் வாய்ப்பு அவருக்கு இல்லாமல் போயிருக்கலாம். ‘ஒரு தேர்வில் மோசமாக எழுதியதால், மதிப்பெண் குறையும், மதிப்பெண் குறைந்தால் கேம்பஸ் நேர்முகத்தில் வேலை கிடைக்காது, வேலை கிடைக்காவிட்டால் பொருளாதார நெருக்கடி, நண்பர்களுக்கிடையே மதிப்பு இழப்பு’ என்று அவரது மனதில் ஓடிய கணக்கை வெளிப்படையாக பேசி சரியான தீர்வு காண அவருக்கு யாரும் இருந்திருக்கவில்லை. முக்கியமாக ஒரு இளைஞன் தனது பிரச்சினைகளுக்கான சமூக அடிப்படைகளை தெரிந்து கொள்ளாமல் தான்தான் அதற்கு காரணம் என்று யோசிப்பதும், அதன் படியே முயற்சி செய்வதும்தான் இறுதியில் தற்கொலையில் போய் முடிகின்றன.
எல்லா உறவுகளையும் பண பரிமாற்றங்களாகவும், தனிநபர் போட்டியாகவும் குறுக்கி விடுவது உலகமயமாக்கப்பட்ட, தனியார் மயப்படுத்தப்பட்ட, மறுகாலனியாக்க சமூகத்தின் இயல்பாக இருக்கிறது.
”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…” என்பதுதான் வாழ்க்கையின் தத்துவ அடிப்படையாக போதிக்கப்படுகிறது. அதுதான் வெற்றியின் வழி, சமூக முன்னேற்றத்தின் அடிப்படை என்று முதலாளித்துவ சமூகம் திட்டமிடுகிறது. ஆனால், உழைத்து பணம் சம்பாதிப்பதும், ஈட்டிய பணத்தை செலவழிப்பதும் மற்றவர்களைச் சார்ந்த சமூக அடிப்படையிலேயே நடக்கிறது. இந்த முரண்பாடுகளின் கூர்மை தனி மனிதர்களை மேலும் மேலும் மன அழுத்தங்களுக்கு உள்ளாக்குகிறது.
முதலாளித்துவ அமைப்புகள் கூர்மையாக செதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட ஹாங்காங் நகரில் நீங்கள் ஒரு மின்னணு கருவிகள் விற்கும் கடைக்குப் போனால், புருவம் மழித்து மீள் வரையப்பட்ட, முகத்தில் அதீத ஒப்பனை போடப்பட்ட அழகான விற்பனையாளர் இளம்பெண் உங்களை வரவேற்பார். அவரது சிரிப்பும், உபசரிப்பும், அக்கறையும் மனதை நிறைத்து விடும். அவரது ஷிப்ட் மாறும் நேரத்தில் நீங்கள் போய் ஒரு காமராவை வாங்கிக் கொண்டு வெளியில் வந்து, சில நிமிடங்களுக்குப் பிறகு தெருவில் அவர் வரும் போது பார்த்தால், அவருக்கு உங்களை அடையாளமே தெரியாது, முகத்தில் புன்சிரிப்பு முழுவதுமாக மறைந்திருக்கும். அவரது உலகில் முழுவதுமாக மூழ்கியிருப்பார். ‘அடுத்த ரயிலைப் பிடித்து எப்போது வீடு போய் சேருவது, மாலை உணவுக்கு என்ன திட்டமிடுவது?’ என்ற சிந்தனைகள்தான் அவருக்கு மிஞ்சியிருக்கும்.
கடைக்குள் பார்த்த அந்த பெண் தான் பெறும் சம்பளத்துக்கு தன்னையே செதுக்கிக் கொண்ட ஒரு பிம்பம். அப்படி செதுக்கிக் கொண்ட பிம்பங்களோடு நாளுக்கு 8 மணி நேரம், வாரத்துக்கு 5 நாட்கள் வேலை பார்த்து பணம் சம்பாதித்து, வேலைக்கு வெளியே தனக்குப் பிடித்த கொண்டாட்டங்களில் அந்த பணத்தை செலவிட்டுக் கொள்ளலாம் என்பதுதான் முதலாளித்துவ அமைப்பு நமக்குக் கொடுக்கும் சுதந்திரம். செய்யும் பணியில் முழு ஈடுபாட்டுடன், உண்மையான மகிழ்ச்சியுடன் செய்யும் வாய்ப்பும், சூழ்நிலையும், தத்துவ அடிப்படையும் யாருக்கும் கிடைப்பதில்லை.
பணியிடத்தில் எப்படி பணம் ஈட்டுவது என்ற நோக்கத்திலான சூழலிலும், பணி முடிந்த பிறகு நம்மிடமிருந்து எப்படி பணத்தை ஈட்டுவது என்ற நோக்கத்திலானவர்களையும் சந்திப்பதுதான் உச்சக்கட்ட முதலாளித்துவ அமைப்பின் விளைவாக இருக்க முடியும். குடும்பம், காதல், நட்பு என்று அனைத்து உறவுகளும் பண பரிமாற்றங்களாக சுருங்கி விடுவதுதான் நவீன முதலாளித்துவ சமூகத்தின் இறுதி லட்சியம்.
அந்த லட்சியத்தை நோக்கிய பாதையில் சாந்தகுமாரும் அவரைப் போன்ற லட்சக்கணக்கான மக்களும் திரும்பிய பக்கமெல்லாம் சுயநல முகங்களை மட்டும் பார்க்கிறார்கள். உறவினர்கள், நண்பர்கள் அல்லது எதிர்பாராத புதியவர் ஒருவர் என்று எங்காவது காணக்கிடைக்காத அன்பும் அக்கறையும் பார்க்க நேர்ந்தால் ஒரு கணம் உளம் உருகி நிற்கிறார்கள். அத்தோடு தன்னை உலுப்பிக் கொண்டு தனது ஓட்டத்தைத் தொடர்ந்தால்தான் அவர் தனது வாழ்க்கையை செழிப்பாக்கிக் கொள்ள முடியும். தனித்து ஓடும் அந்த லட்சிய ஓட்டத்தில்தான் ஒரு சிலர் தமது வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள்.
அத்தகைய ஓட்டத்தில், தடுக்கி விழுபவர்களையும் ஓட முடியாதவர்களையும் மிதித்துக் கொண்டும், அவர்களை விட வேகமாக ஒடும் போது மட்டுமே ஒருவர் தனது இடத்தை அடைய முடியும். ஆக ஓடுவதே சமூக முரண்பாட்டை ஏற்றுக் கொண்டுதான் என்றான பிறகு ஒரு தனிநபரது மனது சிதறுண்டு போவது சர்வ சாதாரணம் என்பதை நாம் அறிவோமா?
கடந்த 20 ஆண்டுகளின் உலக மயமாக்கல், தாராளமயமாக்கல் மூலம் பெரும்பகுதி மக்கள் சிறப்பான வாழ்க்கையைப் பெற்று விட்டார்கள் என்று ஊளையிட்டுக் கொண்டு மேன்மேலும் அதே பாதையில் நாட்டைச் செலுத்த முயலும் மன்மோகன் சிங் முதலானவர்களின் முகத்தில் அறையும் புள்ளிவிபரங்களில் இது முக்கியமான ஒன்று. இதே திசையில் மேலும் உந்தித் தள்ள சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு என்று யாரோ குவித்து வைத்திருக்கும் மூலதனத்தை பாய்ச்சி விட்டால், நம் நாடு வல்லரசாகி விடும் என்று கனவு காணவும் இவர்கள் பிதற்றுகிறார்கள்.
உண்மையில் வால்மார்ட்வந்தபிறகு எத்தனை சில்லறை வணிகர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள்? எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும்?
அதற்கு ஜோசியம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. சமீபத்திய ஆண்டுகளில் நாம் அடிக்கடி படிக்கும் “பல இலட்சம் விவசாயிகள் தற்கொலை” எனும் புள்ளி விவரம் அதற்கு விடையளிக்கவில்லையா? அந்தப் புள்ளிவிவரம் எனும் கணக்கு எழுப்பும் பொருளோவியத்தை புரிந்து கொண்டால் இந்தியாவின் தற்கொலை குறித்த பொருளையும் நாம் அறியலாம்.
தற்கொலை ஒரு கோழைத்தனம் என்று ‘வீரம்’ பேசுவதை விடுத்து, சக மனிதனின் துன்பம் கொண்டு போரடும் போது மட்டுமே தனிப்பட்ட முறையில் தனது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியுமென்ற தனிநபர் சிந்தனையிலிருந்து நமது மக்களை விடுவித்து சமூக மனிதர்களாக, உறுதியான மனிதர்களாக மாற்ற முடியும். தற்கொலையால் மரித்தோருக்கு உயிர்த்திருப்போர் செய்யக்கூடிய அஞ்சலியாக இது மட்டுமே இருக்க முடியும்.
ஒளிபுகாத
அடர்காட்டின் நடுவில்
அரிவாள்களைக் கூராக்கி
பாதை செய்கிறோம்
ஏளனச் சிரிப்புகளும்,
வன்மம் பொங்கும்
ஊளைச் சத்தங்களும்,
முற்றும் அறிந்த
மேதாவித்தனங்களும்,
திரும்பும் திசைகளிலெல்லாம்
எதிரொலிக்கின்றன.
புதைசேறு அழுத்துகிறது
புரட்ட முடியாத பாறைகளில்
யுகங்கள் கழிகின்றன.
அரவம் நெளிகிறது.
சற்றே கண்ணயர்ந்தாலும்
அட்டைகள் உயிர் குடிக்கின்றன.
சதுப்பு நிலத்தில்
தெறித்து மின்னும்
எங்கள் வியர்வைத் துளிகளின்
வெளிச்சத்தில்தான்
பாதை தொடர்கிறது.
பின்னொரு நாளில்
பனிக்கட்டிகள்
சேகரிக்க வரும்போழுது
நீ இதனை நம்ப மறுப்பாய்…
நாங்கள் நம்ப மறுத்ததைப் போல.
ஆனால்
நாங்கள்
இப்படித்தான் வாழ்கிறோம்,
வாழ்ந்தோம்.
எது தூண்டிற்று
என நீ கேட்பாய்.
உணர்வு என்பேன்.
அதன் பொருளை
அகராதிகளில்
கண்டறிய முடியாது.
பனிக்கட்டி மறந்து நீ
பதிலின் விளக்கம் கேட்பாய்.
உரையாடல் தொடர்கையில்
மாலை கவிந்து
நட்சத்திரங்கள்
முளைக்கத் துவங்கும்.
_________________________________________
புதிய கலாச்சாரம் – செப்டம்பர் 2008
__________________________________________
முதலாளிகளை சந்தையில் ஃபிரீயாக தொழில் முனைய விடும்போது அவர்களிடம் உருவாகும் திறமை மற்றும் போட்டியின் காரணமாக பொருட்களின் விலை தாழ்ந்து அது நுகர்வோருக்கு பலனளிக்கும் என்பது சுதந்திர சந்தையை ஆதரிக்கும் பொருளாதாரப் புலிகளின் கருத்து. ஆனால் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகிய மயங்கள் அமுல்படுத்தப்பட்ட இந்த 20 ஆண்டுகளில் விலைவாசி பன்மடங்கு உயர்ந்திருக்கின்றதே அன்றி குறையவில்லை என்பதுதான் உலக மக்களின் அனுபவம். மேலும் தொழிலாளர்களின் உழைப்பை எவ்விதத்திலெல்லாம் சுரண்டலாம் என்பதில்தான் முதலாளிகளின் திறமையும் உள்ளது.
இவ்விலைவாசி உயர்வின் நீட்சியாக ஆலைத் தொழிலாளிகள் தங்களுக்கு ஏற்படும் பொருளாதாரப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துகொள்ள முதலாளிகளுக்கு எதிராக ஊதிய உயர்வு கோரி போராட ஆரம்பிக்கின்றனர். தொழிலாளர்களின் இந்த நியாயமான போராட்டத்தை ஒடுக்க அப்போராட்டங்களுக்கு எதிராக சதிசெய்வது, அச்சுறுத்துவது, மற்றும் தொழிலாளர்களை சாதி ரீதியாக பிளவுபடுத்துவது போன்ற கீழ்த்தரமான வேலைகளை முதலாளிகள் செய்வதும், அதற்கு நமது அரசே உடந்தையாக இருப்பது என்பதும் நமது இந்திய வரலாற்றில் பதிந்த ஒன்றுதான். இதற்கு உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகள் என்று விதிவிலக்கல்ல.
இந்திய நுகர்வுச் சந்தையில் 80 சதவீதத்தை வைத்திருக்கும் ஹிந்துஸ்தான் யுனி லீவர் நிறுவனத்தின் புதுச்சேரி கிளை (DETS) வடமங்கலத்தில் இயங்கி வருகின்றது. இந்நிறுவனம் 4 வருடங்களுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்குவதாக தொழிலாளர்ளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் இந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே அவ்வொப்பந்ததை முறையாக நடைமுறைப் படுத்தியதில்லை. புதிய ஊதிய உயர்வு நடைமுறை படுத்தப்பட வேண்டிய காலகட்டத்தில் நிர்வாகம் நோவு கோழி போன்று கண்ணை மூடிக்கொண்டு இருக்கும். இதற்கு எதிராக தொழிலாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு போராட்டம் ஆரம்பமாகும்போது நிர்வாகம் சில முன்னனியாளர்களை முடக்கச் செய்வதும் அச்சுறுத்துவதுமாக செய்து முறையான ஊதிய உயர்வினை அமுல்படுத்துவதை காலங்கடத்தும்.
இவ்வாறு காலங்கடத்துவதன் மூலம், தொழிலாளர்களை கோபமுறச் செய்து அதன் மூலம் தவறுகளை இழைக்க வைத்து நிர்வாகத்திற்குச் சாதகமான ஊதிய ஒப்பந்தத்தை 1 அல்லது 11/2 வருடங்கள் கழித்து நிறைவேற்றிக்கொள்ளும்.. இந்த இடைப்பட்ட காலத்திற்குண்டான ஊதியத்தை தொழிலாளர்களுக்கு நிர்வாகம் வழங்குவதில்லை. இதன் மூலம் தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டுவதே நிர்வாகத்தின் நோக்கம்.
2002-ம் ஆண்டு 18 மாதங்கள் கழித்தும் 2007-ல் 1 ஆண்டு கழித்தும் ஊதிய உயர்வை அறிவித்தது. இதனிடையில் 2002-ல் இருவரையும் 2007-ல் ஆறு தொழிலாளர்களையும் பணியிடை செய்தது. இக்காலகட்டங்களில் அந்நிறுவனத்தில் செயல்பட்டு வந்த வெல்ஸ் யூனியன் இதற்கு எதிராக போராட வழிதெரியாது புழுங்கிக் கொண்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக புதுவையில் செயல்பட்டு வந்த புஜதொமுவின் போராட்டங்களை கண்டு கடந்த 2008-ல் ஒர்க்கர்ஸ் யூனியன் (புஜதொமு) என்ற சங்கத்தை நிறுவினர். ஆரம்பத்தில் ஒர்க்கர்ஸ் யூனியனை (புஜதொமு) அங்கீகரிக்காத நிர்வாகம் தொழிலாளர்கள் பெருமளவில் இணைந்ததை அடுத்து நமது சங்கத்தை அங்கீகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனடிப்படையில் நிர்வாகம் ஒர்க்கர்ஸ் யூனியனை (புஜதொமு) அழைத்து 2011க்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை வெல்ஸ் யூனியனுடன் இணைத்து கடந்த 30-07-11 அன்று தொடங்கியது.
இம்முறையும் நிர்வாகமானது வரலாற்றில் தனக்கிருந்த தொழிலாள விரோத அனுபவத்தை செயல்படுத்தத் தொடங்கியது. முதலில் தொழிலாளர்களில் 4 பேருக்கு மெமோ கொடுத்தது. பின்பு ஒர்க்கர்ஸ் யூனியனில் (புஜதொமு) சங்க முன்னனியாளர்கள் ஐவரையும், வெல்ஸ் யூனியனில் இருவரையும் பணி நீக்கம் செய்தது. ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது தொழிலாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்களான சங்க முண்ணனியாளர்களை தொழிலாளர் துறை ஆணையரின் மூலமாக விசாரணை நடத்தாமல் நடவடிக்கை எடுக்கக்கூடது என்றும் தொழிலாளர் நலச் சட்டம் 12(3) கூறுகிறது.
ஆனால் இந்துஸ்தான் யுனிலீவர் நிர்வாகம் இதனை மயிரளவிற்கும் மதிப்பதில்லை. ஏழு தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததன் மூலம் உள்ளிருப்புப் போராட்டம் நடக்கும், இதைச் சட்ட விரோதம் என காரணம் காண்பித்து சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து விளையாட தீர்மானித்தது. ஆனால் புஜதொமு தனது வழிகாட்டுதலின் மூலம் அவ்வாறு நடவாமல் செய்து நிர்வாகத்தின் முகத்தில் கரியை பூசியது.
இதன் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்டு அதனடிப்படையில் 23-12-11 மேட்டுப்பளையம் தொழிற்பேட்டையில் தொடங்கி பேரணியாக சென்று தொழிலாளர் ஆணையரிடம் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்வதென திட்டமிடப்பட்டது. ஆனால் காவல்துறையோ அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பு செய்து நிர்வாகத்திற்கு ஆதரவாக வேலை செய்தது. அனுமதி இல்லையெனில் தடையை மீறி அணிதிரண்டு பேரணி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என தொழிலாளர்கள் தங்களது நிலைப்பாட்டை போர்க்குணத்துடன் தெரிவித்த பிறகு காவல்துறை இறங்கிவந்து பேரணி வேண்டாம் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என அனுமதி அளித்தது.
புதுவை வரலாற்றிலேயே முதல் முறையாக 600 தொழிலார்களுடன், நிர்வாகத்தின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும், அதற்கு துணைநிற்கும் அரசையும் அம்பலப்படுத்தும் விதமாக 23-12-11 அன்று தொழிலாளர் துறை ஆணையர் முன்பு தோழர் அய்யானார் தலைமையேற்க அதிரடியான முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இந்துஸ்தான் வெல்ஸ் சங்கத்தைச் சார்ந்த உறுப்பினர்களும், சங்கத் தலைவர் ஜோதிமணி மற்றும் பொருளாளர்கள் விநாயகம், புருசோத்தமன் ஆகியோர் நிர்வாகத்தினை அம்பலப்படுத்தும் விதமாகவும் பேசினர். புஜதொமு அலுவல செயலாளர் தோழர் லோகநாதன் நிர்வாகம் தொழிலாளர்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறது என்றும் 9 வருடங்களாக பஞ்சபடி மாற்றாமல் தருவதினை சுட்டிக்காட்டிப் பேசினார். மேலும் புஜதொமு பொதுசெயலாளர் தோழர் கலை ஆலை முதலாளிகளின் அடக்கு முறைக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் தனிதனியாக போராடினால் வெற்றிபெற முடியாது அனைத்து ஆலை தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராடினால்தான் வெற்றி பெற முடியும் என வலியுறுத்தி பேசினார்.. பிறகு பேரணியாகச் சென்று தொழிலாள ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில் பணியிடை செய்யப்பட்ட 7 தொழிலாளர்களையும் மீண்டும் பணியமர்த்தவும், cod யினை விரைந்து முடிக்கவுமான கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் இந்துஸ்தான் தொழிலாளர்கள் அல்லாது கோத்ரெஜ், மெடிமிக்ஸ் பவர், லியோ பாஸ்ட்னர், யூகால், MRF, L&T சுஸ்லான் ஆலைத் தொழிலார்களும் கலந்துகொண்டனர். புதுவையில் மாற்றுத் தொழிற்சாலை தொழிலார்களையும் அணிதிரட்டிப் போராடியது இதுவே முதல்முறையாகும். செஞ்சட்டை செங்கொடி சூழ முழக்கமிட்ட ஆர்ப்பட்டத்தை பெருமளவு மக்கள் வியப்புடன் நோக்கினர். அருகிலிருந்த தொழிலாளர்கள் தங்களது வேலையை விடுத்து உரையை கவனத்துடன் கேட்டனர். தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வூட்டி,, அவர்களிடம் முதலாளிகளின் இலாபவெறியையும், உழைப்புச் சுரண்டலையும் விளக்கி புரியவைக்கும்போது ஆவர்கள் போர்க்குணத்துடன் அணிதிரள்வாளர்கள் என்பதனை இந்த போராப்பாட்டம் மெய்பித்தது.
‘கண், இது நாள் காண விரும்பிய காட்சி இதுவோ!’ எனுமாறு அந்த நூற்குவியலைப் பார்க்கப் பார்க்க விழிகள் வியப்பிலும், மலைப்பிலும், விருப்பிலும் மலர்ந்து போனது. அத்தனையும் சோவியத் ரசியாவில் அச்சிடப்பட்ட நூல்கள். மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தாரால் தயாரிக்கப்பட்ட நூல்கள். நான் பார்த்தபோது ஏறக்குறைய இருநூறுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் தமிழும் ஆங்கிலமுமாக புத்தகங்கள் குவிந்துக் கிடந்தன. ஒரு நாலு புத்தக அட்டை தயாரிக்கவே என்னவாறு வடிவமைக்கலாம் என்று நாம் திணறிப் போகிறோம். ஆனால், அங்கு குவிந்திருந்த ஒவ்வொரு புத்தக அட்டையும் மனித முகங்களைப் போல வெவ்வேறு அழகாய் விளங்கின. முக்கியமாக அவைகளில் அழகின் மிரட்சியின்றி தொழில்நுட்பத்தின் தேர்ச்சியோடு மனித அழகியலின் உணர்ச்சியும், ஈர்ப்பும் வண்ணங்களாக நெருக்கம் காட்டின.
குறிப்பாக, வெளிர்பச்சை, இலைப்பச்சை, ஒருவித மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் அன்று நான் பார்த்த ‘தாய்’ நாவலின் அழகும் கட்டமைப்பும் வடிவமைப்பும் அடுத்தடுத்த அதன் மறுபதிப்புகளில் பார்க்க முடியாத ஒன்று. குழந்தைகள் கையில் புத்தகம் கிடைத்தால் எப்படி சுவைத்துப் பார்த்து, தீண்டிப் பார்த்து, விரித்துப் பார்க்குமோ அப்படியொரு மனநிலையில் நூல்களைத் தழுவி அலசிப் பார்த்தேன் நான். நம் நாட்டு அனுபவத்தில் ஆங்கில நூல் உசத்தியாகவும், தமிழ் நூல் தரம் குறைந்தும் தயாரிக்கப்படுமோ என்ற எண்ணத்தோடு ஒரு ஆங்கில நூலையும் ஒரு தமிழ் நூலையும் எடுத்து எனது முட்டாள்தனத்தை முகர்ந்து பார்த்தேன். இரண்டு தாள்களிலும் ஒரே வாசம்தான். இரண்டைக் கிள்ளினாலும் அதே உணர்ச்சிதான். ‘பார்ப்பானுக்குப் பூணூல், உழைப்பவருக்கு அரைஞாண் கயிறு’ என்று பழக்கப்பட்ட நாட்டில், சோவியத் தயாரித்த எல்லா நூல்களும் ஒரே நூலாக அதாவது ஒரே தரமாக இருந்ததே எனக்கு மகிழ்ச்சியும் வியப்பையும் கொடுத்தது.
நூல்களின் தலைப்பையும் பொருளடக்கத்தையும் பார்த்து வியந்துபோன கூட வந்த நண்பர், ”அப்பா, பிரம்மாண்ட உழைப்புங்க… இவ்வளவு விசயம் வெளிய தெரியாம கெடக்கு பாருங்க…” என்று நெகிழ்ந்து போனார். ஆம், உண்மைதான். உலகெங்கும் மனித அழிவுக்கு ஆயுதம் கொடுக்கும் அமெரிக்காவைப் பீற்றித் திரியும் அறிவாளிகள் உலகத்தில், மனித அழகுக்கு உலகெங்கும் அறிவைக் கொடுத்த சோவியத் ரசியாவின் உன்னத பங்களிப்பைப் பற்றிப் பேசுவது கிடையாது. அனைவருக்கும் கல்வியறிவு மறுக்கப்பட்ட கேடுகெட்ட பார்ப்பன இந்து மதம் கோலோச்சும் நம் நாட்டில், அனைவருக்கும் சமூக அறிவையும், அரசியல் அறிவையும் வாரி வழங்கிய மாஸ்கோ நூல்கள் உலக முதலாளித்துவத்தால் இறுக்கிக் கட்டப்பட்ட நம் விழிகளின் திரைகளை அவிழ்த்து விட்டன என்பது எவ்வளவு நன்றியோடு நினைக்கப்பட வேண்டிய விசயம்…
அன்றைய காலகட்டத்தில் தமிழகமெங்கும் நடமாடும் புத்தகக் காட்சி வடிவில் இதனைக் கொண்டு சென்ற நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரும் நினைக்கப்பட வேண்டியவர்கள். ‘சோவியத் ரசியா என்றால் வெறும் கம்யூனிசத்தைப் பிரச்சாரம் செய்யும் நூல்கள்தான்’ என்று சில குருட்டுப்பூனைகள் கூறுவது எவ்வளவு அபத்தம் என்பதை அங்கு எண்ணிறந்த தலைப்புகளில் இறைந்து கிடந்த பல்துறை நூல்களைப் பார்த்து புரிந்து கொள்ள முடிந்தது. முக்கியமாக, ‘அனைவருக்குமான’ என்ற தலைப்பில் உடல் இயங்கியல், வேதியியல், விலங்கியல், கணிதவியல்… என்ற வரிசையிலான நூல்கள் கம்யூனிசத்துக்கு தொடர்பில்லாதவர்களின் பொது அறிவையும் சமூக அறிவையும் வளர்ப்பதில் பெரும்பங்காற்றும் அரிய நூல்களாகும்.
சங்கம் வைத்து ஆண்ட மன்னர்களாயிருக்கட்டும், சட்டசபை வைத்து ஆளும் தமிழாய்ந்த தமிழர்களாயிருக்கட்டும்… இல்லை மாவட்டத்துக்கு மாவட்டம் அறிவைப் புதைக்கும் சுடுகாடாய் விளங்கும் இத்தனைப் பல்கலைக்கழகங்களாய் இருக்கட்டும், இவற்றில் தண்ட சம்பளம் வாங்கிக் கொண்டு ஆறுகால் நாற்காலிகளாய் அலையும் ஆராய்ச்சியாளர்களாக இருக்கட்டும்… இவர்களால் தமிழில் தரமுடியாத பல்வேறு இயற்கை மற்றும் உலகக் கண்ணோட்டமுள்ள பல நூல்களை மாஸ்கோ பதிப்பகம் அழகுத் தமிழில் அச்சிட்டுக் கொடுத்திருந்தது.
‘மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவனானான்’, ‘நான் ஏன் தந்தையைப் போல இருக்கிறேன்’, ‘பூமி எனும் கோள்’, ‘பொழுதுபோக்கு பௌதிகம்’ என்று பல நூல்களைப் பார்க்கையில், இப்படிப்பட்ட நூல்களை எழுதித் தயாரிக்கவில்லையென்றாலும் இங்குள்ள பாடநூல் குழுவினர் இவைகளையெல்லாம் பாடநூல்களாக வைப்பதற்கு என்ன கேடு வந்தது! வைத்தால் நம் அருமைப் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கு அதுவும் தாய்மொழியில் எவ்வளவு பயனுள்ளதாய் இருக்கும் என்று இங்குள்ள எருமைகளின் மீது ஆத்திரம்தான் வருகிறது. அறிவியல் நூல்கள் மட்டுமல்ல, உலகக் கண்ணோட்டமுள்ள இலக்கிய விமர்சனங்கள், நாவல்கள், கார்க்கி, லியோ டால்ஸ்டாய், ஆண்டன் செகவ், மிகைல் சோலகேவ் போன்றோரின் குறிப்பிடத்தகுந்த கதைகள் மட்டுமல்ல ஓஸ்த்ரோவ்ஸ்க்கி, பரிஸ் வசிலியெவ், ஜான் ரீட் போன்ற செயற்களத்தின் போராளிகளையும் படைப்பாளிகளாக உலகுக்குக் காட்டி உத்வேகமளித்தவை மாஸ்கோ நூல்கள்.
இன்று அக்கிரகாரத்து கழுதையாகவும், அமெரிக்க கைடாகவும் விளங்கும் ஜெயகாந்தன் கூட ருஷ்யப் புரட்சி சித்திரக்கதையின் மொழிபெயர்ப்பில் அசத்தியிருப்பார். ‘போயசு தோட்டமே நல்ல ஆள்’ என்று போய்க் கிடக்கும் தா.பாண்டியன்தான் ‘நிலம் என்னும் நல்லாள்’ நூலின் மொழியாக்கம் என்றால் உங்களால் நம்ப முடியுமா? இப்படி தமிழகத்தில் பலரிடமும் உள்ள படைப்பாற்றலையும், மனிதக் கூறையும் வெளிக்கொணர்ந்தவை மாஸ்கோ நூல்கள். ரா.கிருஷ்ணையா போன்ற எண்ணிறந்த மொழியாக்கப் படைப்பாளிகளை அடையாளம் காட்டியவையும் மாஸ்கோ நூல்கள்தான்.
சொல்ல பல இருந்தும் சுருக்கமாக இவைகளை நினைவு கூறும்படி சமீபத்தில் மீண்டும் நியூ செஞ்சுரி குடோனுக்கு சென்று மாஸ்கோ நூல்களை காணும்படி நேர்ந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த காட்சி இப்போது இல்லை. விசாலமான இடத்திலிருந்து மெல்ல மெல்ல கழிக்கப்பட்ட மாஸ்கோ நூல்களின் மிச்ச சொச்சம் அந்த வளாகத்தின் கடைசி தட்டுமுட்டு சாமான்கள் போடப்படும் ஒரு தரமற்ற அறைக்குள் மூச்சு திணறும்படி கொட்டிக் கிடந்ததைப் பார்த்து நெஞ்சம் புழுங்கியது. ஏறத்தாழ கவனிப்பாரின்றி கைவிடப்பட்டு குப்பை மேடாக அந்த நூல்கள் கொட்டிக் கிடந்தும் அதன் கெட்டி அட்டைகள், தாள்களை இறுகப் பிடித்துக் கிடந்தது. சும்மா இல்லை, சோவியத் பாட்டாளி வர்க்கத்தின் உறுதியான சோசலிச உழைப்பின் அடையாளம் அது.
வெறும் தொழிலுக்காக இந்த வேலையில் ஈடுபடுபவர்களால் இப்படி ஒரு பொறுப்புணர்ச்சியுடன் கூடிய நூல் தயாரிப்பை செய்ய முடியாது. ஒரு நூல், அது 1974ல் அச்சிடப்பட்டிருக்கிறது. 37 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நூலின் முதுகில் இருக்கும் கம்பி துருவேறாமல், திசை விலகாமல் ‘கூலியுழைப்பும் மூலதனமும்’ என்ற மார்க்சின் படைப்பை மதிப்புடன் பாதுகாத்து வைத்திருக்கிறது. திசை விலகிய நிறுவனமும் இதன் மதிப்பறியாமல் குப்பையாக கொட்டியிருக்கிறது. இத்தனை அலட்சியங்களுக்குப் பிறகும் மாஸ்கோ நூல்களின் வண்ணங்களோ, தாள்களின் தன்மையோ சீர்குலையாமல் இருப்பதைப் பார்க்கையில் எத்தனைப் பாட்டாளி வர்க்கக் கரங்களின் விருப்பார்வத்துடனும், முன்முயற்சியுடனும் இந்த நூல்கள் உலகுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்ற உணர்ச்சி நெஞ்சில் நிறைகிறது.
நான் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அங்கே காவலாளியாய் குடியிருக்கும் நேபாளி ஒருவரின் நான்கு வயது குழந்தை லெனினின் ‘சர்வாதிகாரப் பிரச்சினையின் வரலாற்றைப் பற்றி’ என்ற நூலை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, பறிப்பவர்களிடம் தரமாட்டேன் என்று பிடிவாதமாக நூலை இழுத்து தனது வெற்றுடலின் நெஞ்சோடு அனைத்துக் கொண்டான். புரியாத மனங்களுக்கு குழந்தையின் குறிப்பு அது.
இந்தியாவில் ஏற்கெனவே இயங்கிவரும் மற்றும் புதிதாக நிறுவப்படும் அணு உலைகளின் பாதுகாப்புத்தன்மையைக் கண்காணிக்கவும் உறுதி செய்யவும் புதிய சட்டத்தையும், அச்சட்டத்தின் கீழ் செயல்படத்தக்க புதிய ஆணையம் ஒன்றையும் உருவாக்கும் நோக்கத்தோடு அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதாவைத் தயாரித்து, அதனை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக முன்வைத்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு. இதுநாள்வரை இந்தியாவிலுள்ள அணு உலைகளின் பாதுகாப்புத்தன்மையைக் கண்காணித்துவந்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தைவிட, புதிதாக உருவாக்கப்படும் ஆணையம் எந்தவொரு அமைச்சகத்துக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாகச் செயல்படும் என்றும்; அணுஉலைகளை இயக்குவதற்கு அனுமதி வழங்கவும், கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவும்; அணு உலைகள் எந்த அளவிற்கு கதிர்வீச்சை வெளியிடலாம் எனத் தீர்மானிக்கவும்; அணு உலைகளை ஆய்வு செய்யவும், அணு உலைகளை இயக்கும் நிர்வாகத்திற்கு வழிகாட்டவும் உள்ளிட்டு இவ்வாணையத்திற்குப் பலவிதமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மைய அரசு தெரிவித்திருக்கிறது.
ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்து அணு உலைகளைப் பற்றிய அச்சத்தை மக்கள் மத்தியில் மிகத் தீவிரமாக ஏற்படுத்தியிருப்பதால், அவர்களின் அச்சத்தைப் போக்கும்விதமாக அணு உலைகளின் பாதுகாப்புத் தன்மையைக் கண்காணிக்க சுதந்திரமான ஆணையம் உருவாக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார். அந்த உறுதிமொழியைச் செயல்படுத்தும்விதத்தில்தான் இந்தப் புதிய சட்டமும், ஆணையமும் உருவாக்கப்படுவதாக காங்கிரசு கூட்டணி அரசு தெரிவித்திருக்கிறது.
அணு மின்சாரத்திற்கு மாற்று வேறு எதுவும் கிடையாது என ஆளும் கும்பலும் அதிகார வர்க்கமும் அடித்துப் பேசி வரும் நிலையில்; அமெரிக்கா மற்றும் பிரான்சிலிருந்து அணு உலைகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில்; ஜெய்தாபூர், கூடங்குளம், கல்பாக்கம், கைகா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் அணு உலைகளுக்கு எதிரான போராட்டங்கள் பரவிவரும் நிலையில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை மசோதா மற்றும் அதன்கீழ் உருவாக்கப்படவுள்ள ஆணையத்தின் சொல்லிக் கொள்ளப்படும் சுதந்திரம், நடுநிலை, ஒளிவுமறைவற்ற தன்மை பற்றி அறிந்துகொள்வது மிகவும் அவசியமானதாகிவிடுகிறது.
இம்மசோதாவின்படி அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்படுவதற்கு முன்பாக அணு பாதுகாப்பு கவுன்சில் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். இக்கவுன்சிலின் தலைவராக பிரதமரும், 5 அல்லது 6 மைய அமைச்சர்கள் அக்கவுன்சிலின் உறுப்பினர்களாகவும் இருப்பர். இந்த கவுன்சில் அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு தேடுதல் கமிட்டியை அமைக்கும்; அக்கமிட்டி அலசி ஆராய்ந்து ஆணையத்தின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படத் தகுதி வாய்ந்த நிபுணர்களை கவுன்சிலுக்குப் பரிந்துரைக்கும். அப்பரிந்துரையின்படி கவுன்சில் ஆணையத்தை நியமிக்கும். இப்படிச் சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொன்னால், அணு பாதுகாப்பு கவுன்சிலுக்கு, அதாவது பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் நெருக்கமானவர்கள், அணுசக்தி தொடர்பான மைய அரசின் விருப்பங்களுக்குத் தலையாட்டுபவர்கள் மட்டும்தான் இந்த ஆணையத்தின் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் வரமுடியும்.
இவ்வாணையத்தின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மட்டுமல்ல, ஆணையத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் கவுன்சிலுக்கு உண்டு. இக்கவுன்சில் தரும் வழிகாட்டுதல்களுக்கும் உத்தரவுகளுக்கும் ஆணையம் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என இம்மசோதாவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது அணு உலைகளின் பாதுகாப்பைக் கண்காணித்துவரும் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அணுசக்தி அமைச்சகத்துக்கும் அணுசக்தி கமிஷனுக்கும் கட்டுப்பட்டது என்றால், புதிதாக அமையவுள்ள ஆணையம் பிரதமரின் தலைமையில் அமைக்கப்படும் கவுன்சிலுக்குக் கட்டுப்பட்டது. இதிலெங்கே சுதந்திரமும், ஒளிவுமறைவற்ற தன்மையும் உள்ளது? இவ்வாணையம் புதிய மொந்தை பழைய கள்ளு என்பது தவிர வேறெதுவும் இல்லை என்பதை இம்மசோதாவின் பல்வேறு விதிகளும் எடுத்துக் காட்டுகின்றன.
இவ்வாணையத்தின் செயல்பாடுகள் இந்திய அரசின் சர்வதேசக் கடப்பாடுகளுக்கு ஊறு விளைவிக்காதவாறு இருக்க வேண்டும் என இம்மசோதாவின் 20ஆவது பிரிவு குறிப்பிடுகிறது. அணு சக்தித் துறையைப் பொருத்தவரை இந்தியாவின் சர்வதேசக் கடப்பாடு என்பது அமெரிக்காவின் அணு ஆற்றல் மேலாதிக்கத்திற்குத் தாளம் தட்டுவது தவிர வேறெதுவும் கிடையாது. மேலும், அமெரிக்கா மற்றும் பிரான்சைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து அணு உலைகளை வாங்குவதற்குப் போடப்பட்டுள்ள இறக்குமதி வர்த்தக ஒப்பந்தங்கள், இது தொடர்பாக மைய அரசு அளிக்கும் வாக்குறுதிகளைக்கூட இந்த விதியின்படி இந்தியாவின் சர்வதேச கடப்பாடுகளாகி விடுகின்றன. இதனால் பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள சர்ச்சைக்குரிய ஆறு அணு உலைகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள பழைய தொழில்நுட்பத்தில் அமைந்த 10,000 மெகாவாட் திறனுள்ள அணு உலைகளின் பாதுகாப்புத் திறன் குறித்து ஆணையம் கேள்வி கேட்க முடியாது என அம்பலப்படுத்தியிருக்கிறார், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ.கோபாலகிருஷ்ணன். அதாவது, இவ்விதியின்படி, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகபோக நிறுவனங்கள் இந்தியாவிற்கு விற்கவுள்ள அணு உலைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் ரப்பர் ஸ்டாம்பாக இந்த ஆணையம் செயல்படும் என்பதுதான்.
அணுசக்தி தொடர்பாகப் போடப்பட்டுள்ள 123 ஒப்பந்தம் உள்ளிட்ட சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் அணு உலைகளை இறக்குமதி செய்வதற்கான வியாபார ஒப்பந்தங்களை நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்காமலேயே, அதன் ஒப்புதலைப் பெறாமாலேயே கள்ளத்தனமாகப் போட்டுக் கொண்டு வந்த மன்மோகன் சிங் கும்பல், ஆணைய உறுப்பினர்கள் கடிதம் எழுதுவதற்குக்கூட சுதந்திரம் வழங்கவில்லை. இம்மசோதாவின் பிரிவு 20 (ஞு)இல் அணு உலைகளின் ஆற்றல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விவரங்களைக் கேட்டுப் பெறுவதற்கு இந்த ஆணையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அந்நிய நாட்டு நிபுணர்களுக்குக் கடிதம் எழுத வேண்டுமென்றால், அதற்குக்கூட அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
‘‘இந்த ஒழுங்குமுறை ஆணையம் நாட்டின் இறையாண்மைக்கு, ஒற்றுமைக்கு, பாதுகாப்புக்கு, அந்நிய நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள நட்புறவுக்கு, பொது ஒழுங்கிற்கு, நன்னடத்தைக்கு, நன்னெறிகளுக்கு எதிராகச் செயல்படக் கூடாது” என இம்மசோதாவின் 21ஆவது பிரிவு வரையறுக்கிறது. அணு உலைகள் நாட்டு மக்களின் உடல் நலத்திற்கும், நாட்டின் சுற்றுப்புறச் சூழலிற்கும் கேடு விளைவிக்காதபடி இயங்குவதைக் கண்காணிக்க உருவாக்கப்படும் ஆணையத்திற்கு இத்துணை நிபந்தனைகள் விதிக்க வேண்டிய அவசியமென்ன? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல அணு உலைகளின் பாதுகாப்புக்கும் நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் முடிச்சு போட வேண்டிய அவசியமென்ன?
அணுக்கதிர் வீச்சின் அபாயங்களை முன்னிறுத்தி அணு உலைகளை எதிர்ப்பதை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானதாகவும் நாட்டின் இறையாண்மைக்கு விடப்படும் சவாலாகவும் ஆளும் கும்பல் முத்திரை குத்துகிறது. இந்த அடிப்படையில்தான் கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடி வரும் மீனவர்கள் மீது தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே, ஒழுங்குமுறை ஆணையம் நாட்டின் இறையாண்மைக்கு, பாதுகாப்புக்கு எதிராகச் செயல்படக் கூடாது என்ற நிபந்தனையின் பொருள் ஆணையம் சுற்றுப்புறச் சூழல் பிரச்சினைகளையோ, மக்களின் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளையோ காட்டி அணு உலைகள் இயங்குவதற்குத் தடை விதிக்க முடியாது என்பதுதான்.
ஆணையம் பொதுநலனுக்கு எதிராகச் செயல்படுவதாக மைய அரசு கருதினால், ஆணையத்தின் தலைவரையும் பிற உறுப்பினர்களையும் பதவி நீக்கம் செய்வதோடு, ஆணையத்தையே கலைத்துவிடுவதற்கும்; குறைந்தபட்சம் ஆறு மாத காலத்திற்கு ஆணையத்தின் பொறுப்புகளை மைய அரசு தானே எடுத்துக் கொள்ளுவதற்கும் ஏற்ப இம்மசோதாவில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆணையத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தப்பித்தவறிக்கூட அரசின் அணுக் கொள்கைகளுக்கு எதிராக நடந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தோடுதான் இப்படிபட்ட எதேச்சதிகார விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, கலைக்கும் அதிகாரத்தை மைய அரசு தனது கையில் வைத்துக் கொண்டு, சுதந்திரமாகச் செயல்படும்படி ஆணையத்தை உருவாக்கப் போவதாகத் தம்பட் டம் அடிப்பது கடைந்தெடுத்த பித்தலாட்டத்தனம் தவிர வேறில்லை.
அணு உலைகள் அனைத்துமே நாட்டின் வளர்ச்சிக்காகவும் பொது நலனுக்காகவும்தான் செயல்படுத்தப்படுவதாகவும், அவற்றை எதிர்த்துப் போராடுபவர்கள் பொது நலனுக்கு எதிரானவர்களாகவும் ஆளுங்கும்பலால் சித்தரிக்கப்படுகிறார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால் பொது நலன் என்ற போர்வையில் அபாயம் நிறைந்த அணு உலைகளைத்தான் மைய அரசு பாதுகாக்கத் துடிக்கிறது என்பது விளங்கும்.
சிவில் அணு உலைகளைப் பெயரளவில் கண்காணிக்கும் அதிகாரம் கொண்டுள்ள இந்த ஆணையம், இராணுவ நோக்கங்களுக்காகச் செயல்பட்டு வரும் அணு உலைகள் இருக்கும் பக்கம் தலைவைத்துக் கூட படுக்க முடியாது; சிவில் அணு உலைகளின் பாதுகாப்புத் தன்மை குறித்த அம்சங்களில்கூட, அவ்வணு உலைகள் தொடர்பான அனைத்து விசயங்களையும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கக் கூடாது என்றும் இம்மசோதாவில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், அணு மின் நிலைய வளாகத்துக்குள் நடக்கும் விபத்துக்களுள் இந்த ஆணையம் முக்கியமானவையாகக் கருதுவதை மட்டும் வெளியுலகுக்கு அறிவித்தால் போதும் என்றும் இம்மசோதா தெளிவுபடுத்தியிருக்கிறது. இது, அணு உலையில் இருந்து அவ்வப்போது வெளிப்படும் கதிர்வீச்சுக் கசிவால் ஏற்படும் சிறு சிறு விபத்துக்களையும், அதனால் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களும், அணு உலை இயங்கும் பகுதியில் வசிக்கும் மக்களும் பாதிக்கப்படுவதையும் குழிதோண்டிப் புதைக்கும் சதி தவிர வேறெதுவும் கிடையாது.
‘சுதந்திரமாக’ச் செயல்படவிருக்கும் இந்த ஆணையம், அரசாங்கம் அமைக்கும் விசாரணை கமிசன்களைப் போல, அரசின் ஊதுகுழலாகத்தான் செயல்படும். கூடங்குளம் அணு மின்நிலைய பிரச்சினையையொட்டி அமைக்கப்பட்டுள்ள முத்துநாயகம் கமிட்டியின் செயல்பாடுகளுக்கும் இந்த ஆணையத்தின் செயல்பாடுகளுக்கும் இடையே பெருத்த வேறுபாடு எதுவும் இருக்கப் போவது கிடையாது என இப்பொழுதே நாம் அடித்துச் சொல்லிவிடலாம்.
இதுவொருபுறமிருக்க, நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ள அணு விபத்து காப்பீடு சட்டத்தில், “அணு உலையின் வடிவமைப்பில் தவறு இருந்து, அதனால் விபத்து நேரும் பட்சத்தில் அந்த உலையை விற்பனை செய்த நிறுவனத்திடமிருந்து அந்த அணு உலையை இயக்கும் நிறுவனம் குறைந்தபட்ச இழப்பீடு கேட்பதற்கு” ஏற்ப விதிகள் உருவாக்கப்பட்டிருந்தன. இந்த விதிகளை அச்சட்டத்தில் மன்மோகன்சிங் தானே முன்வந்து சேர்க்கவில்லை. போபால் படுகொலை தீர்ப்பு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த கோபமும், வெறுப்பும் இப்படிபட்ட விதியை அச்சட்டத்தில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தை மன்மோகன் சிங்கிற்கு ஏற்படுத்தியது.
இந்த விதியை அச்சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என அமெரிக்கா கொடுத்த நெருக்குதலையடுத்து, இந்த விதியை நீர்த்துப் போகச் செய்துவிடும் திருத்தங்களை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காகத் தற்பொழுது முன்வைத்துள்ளது, மன்மோகன் சிங் கும்பல். மன்மோகன் சிங் இந்தத் திருத்தத்தை அறிவித்துவிட்டுதான், ஒபாமாவைச் சந்திக்க கடந்த மாதம் விமானம் ஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அணு விபத்துக்களால் பாதிக்கப்படும் மக்கள் அணு உலைகளைத் தயாரித்து விற்ற நிறுவனத்திடமிருந்து நேரடியாக நட்ட ஈடு கோருவதற்கு வழிவகை செய்யும் பிரிவையும் இந்தச் சட்டத்திலிருந்து நீக்க வேண்டுமென்றும் அமெரிக்கா நிர்பந்தித்து வருகிறது. மன்மோகன் ஒபாமாவைச் சந்தித்தபொழுது, அமெரிக்கா கோருவதையெல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என அவரிடம் வாக்குறுதி அளித்துவிட்டுத் திரும்பியதோடு, இந்த மாதத்திற்குள் அணு விபத்து காப்பீடு சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிடுவேன் எனச் சபதமும் போட்டுள்ளார்.
அணு உலைகளின் பாதுகாப்புத் தன்மை குறித்த தகவல்களையும் உண்மைகளையும் மூடிமறைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மசோதாவை அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா என அழைக்கிறார்கள். அணு விபத்து காப்பீடு சட்டத்தில் இந்தியாவிற்கு அணு உலைகளை விற்கும் ஏகபோக நிறுவனங்களிடமிருந்து விபத்துக்கான நட்ட ஈடு பெறுவதைத் தடுக்கும் சட்டத்திற்கு அணு விபத்து காப்பீடு சட்டம் எனப் பெயரிடுகிறார்கள். இது, அருவெறுக்கத்தக்க பித்தலாட்டத்தனமும் கிரிமினல்தனமும் கொண்டதுதான் மன்மோகன் சிங் கும்பல் என எடுத்துக் காட்டுகிறது.