Monday, September 26, 2022
முகப்பு உலகம் ஈழம் தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!

-

”எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம். அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வெவ்வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி அடையாளப் போராட்டமா நடத்தி, முடிச்சுட்டு போயிடறோம். இதனால யாருக்கு என்ன பயன்? வேற போராட்ட வழிமுறைகளை நாம யோசிச்சா, செயல்படுத்தினா என்ன?”

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
தோழர் செங்கொடி

கேட்ட செங்கொடியை உற்றுப் பார்த்தார் சந்திரசேகரன். சுருக்கமாக சேகர். செங்கொடிக்கு சித்தப்பா. குழந்தை முதல் அவர்தான் செங்கொடியை பார்த்துப் பார்த்து வளர்த்தார். 10 வயதில் தன் அப்பாவை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்து அவருக்கு சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்த அந்த விநாடி முதல், இதோ 21 வயது இளம் பெண்ணாக வளர்ந்திருக்கும் இந்த நொடி வரை, செங்கொடிக்கு எல்லாமும் சித்தப்பாதான். சகலமும் ‘மக்கள் மன்றம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம்தான். செங்கொடியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் சேகருக்கு முழுமையாகத் தெரியும். அதனாலேயே செங்கொடி கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தார். காரணம், இதே கேள்விக்கான விடையைத் தேடிதான் அவரும் பல ஆண்டுகளாக மனதளவில் போராடிக் கொண்டிருக்கிறார்.

அவர்கள் இருவரும் ஆகஸ்ட் 26-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் கை கோர்த்த படி கலந்து கொண்டனர். இதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை இந்திய குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. இதனையடுத்து மூவரும் செப்டம்பர் 9-ம் தேதி அன்று தூக்கில் இடப்படுவார்கள் என்று சிறை அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள்.

இதனை எதிர்த்துதான் அந்த மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில்தான் இருவரும் கலந்துக் கொண்டிருந்தார்கள். செங்கொடி கேட்ட கேள்விக்கு ஒருவேளை சற்றுத் தள்ளி கைகோர்த்தபடி நின்றிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி விடையளிக்கலாம் என்ற ஆர்வத்தில் சேகர் எட்டிப் பார்த்தார். முழக்கங்கள் எழுப்புவதில் மும்முரமாக இருந்த வைகோ, இவர்களை கவனிக்கவில்லை. சரி என்று சேகரும் அமைதியாகிவிட்டார்.

தோழர் செங்கொடியின் இறுதி கடிதம்
தோழர் செங்கொடியின் இறுதி கடிதம்

ஆனால், செங்கொடி அமைதியடையவில்லை என்பதும், அவருக்குள் எழுந்த கேள்விக்கான பதிலை அடுத்த இரண்டு நாட்களில் அவரே கண்டடைவார் என்பதும், தனக்கு சரியென்று பட்ட அந்த விடையை தன் உயிரைப் பணயம் வைத்து உலகுக்கு தெரிவிப்பார் என்பதும், சித்தப்பா சேகர் அறிந்திருக்கவில்லை.

சரியாக ஆகஸ்ட் 28-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்னால் செங்கொடி தன்னைத்தானே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டார். துடி துடித்து இறக்கும் கடைசி நொடி வரை, ‘மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரும் அப்பாவிகள்… அவர்களை விடுதலை செய்…’ என்று முழக்கமிட்டபடியே உயிர் துறந்தார்.

தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.

இப்படிக்கு

தோழர் செங்கொடி

என்று அவரால் எழுதப்பட்ட கடிதம் அனைவரையும் படிக்கச் சொல்லி படபடத்துக் கொண்டிருந்தது.

ஜன் லோக்பால் மசோதா கோரி 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாரே, தனது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அன்று காலை 10 மணியளவில்தான் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டிருந்தார். அதே தினத்தின் மாலையில்தான், தமிழக மக்களின் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளாத அரசை கண்டித்து செங்கொடி தன்னைத்தானே எரித்துக் கொண்டார்.

______________________________________

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!”இப்படி அவ செய்வானு நாங்க நினைச்சே பார்க்கலீங்க…” காஞ்சிபுர மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் கட்டடத்தை வெறித்துப் பார்த்தபடியே பேச ஆரம்பித்தார் சேகர். நள்ளிரவின் அடையாளம் அந்த மருத்துவமனைக்கு நூறடி தள்ளித்தான் தெரிந்ததே தவிர, பிரேத பரிசோதனை கிடங்கின் வாசல் முழுக்க உக்கிரத்தின் வெளிச்சம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

”பதினொரு வருஷங்களுக்கு முன்னாடி, இதோ இந்த ஆஸ்பத்திரி வாசல்லதான் சரஸ்வதி அழுதுகிட்டு நின்னா. தப்புத் தப்பு செங்கொடினு கூப்பிட்டாதான் அவளுக்கு பிடிக்கும். சரஸ்வதிங்கிற தன் பேரையே அவ மறந்துட்டா. காரணம், அந்தப் பேரை வைச்சது அவ அப்பா.

ஓரிக்கை கிராமத்த சேர்ந்தவங்க நாங்க. எங்கண்ணன் பேரு பரசுராமன். செங்கொடிக்கு தங்கச்சியும், தம்பியும் பொறந்ததும் அவங்கம்மா இறந்துட்டாங்க. உடனே எங்கண்ணன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டாரு. ஆனா, சும்மா சொல்லக் கூடாது, வந்த மகராசி செங்கொடியையும் அவ தம்பி, தங்கச்சியையும் தன் கொழந்தைங்க போலவே பார்த்துகிட்டா. அதனாலயே செங்கொடி அந்த மகராசியை ‘சித்தி’னு கூப்பிட மாட்டா. ‘அம்மா’னுதான் வாய் நிறைய கூப்பிடுவா.

எங்கண்ணன் கூலித் தொழிலாளிங்க. நாடாறு மாசம், காடாறு மாசம்னு கிடைச்ச வேலைய செய்துட்டு இருப்பாரு. பல நேரம் வேலையே இல்லாம சும்மாவும் இருப்பாரு. சுபாவத்துல நல்லவரு. ஆனா, அதிகம் குடிப்பாரு. அதனாலயே அப்பப்ப அவருக்கு கிறுக்கு பிடிச்சுக்கும். தன் ரெண்டாவது பொண்டாட்டிய, செங்கொடிய, அவ தம்பி, தங்கச்சிய அது மாதிரி நேரத்துல அடிப்பாரு. தன்னை அடிக்கிறத கூட அந்த மகராசி தாங்கிட்டா. ஆனா, தன்னோட கொழந்தைங்களா நினைக்கிற மூத்தா தாரத்து பசங்களை எங்கண்ணன் அடிக்கிறதை அவங்களால தாங்கிக்க முடியலை.

ஒருநாள் இத தட்டிக் கேட்டாங்க. உடனே எங்கண்ணன், அந்த மகராசி மேல கெரசின் ஊத்தி கொளுத்திட்டாரு. அதிர்ந்து போய் செங்கொடியும், அவ தங்கச்சியும் இத பார்த்துட்டு நின்னாங்க. செங்கொடி சுதாகரிக்கறதுக்குள்ள அவ தங்கச்சி, ‘அம்மா’னு கத்திகிட்டே போய் அந்த மகராசிய கட்டிப் பிடிச்சிகிட்டா. இதைப் பார்த்த செங்கொடி அழுது கூச்சல் போட்டா. அக்கம் பக்கத்துல இருந்தவங்க ஓடி வந்து நெருப்பை அணைச்சு ரெண்டு பேரையும் இதோ, இதே ஆஸ்பத்திரிக்குத்தான் கூட்டிட்டு வந்தாங்க.

கடைசில செங்கொடியோட தங்கச்சியதான் காப்பாத்த முடிஞ்சுது. ‘அம்மா’னு அவ பாசமா கூப்பிட்ட அந்த மகராசிய காப்பாத்த முடியலை. சொன்னா நம்ப மாட்டீங்க. 10 வயசு பொண்ணா, தைரியமா, செங்கொடி அவ அப்பாவ போலீஸ்ல பிடிச்சு கொடுத்தா.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!‘மக்கள் மன்றம்’ அமைப்போட நான் ஆரம்பத்துலேந்தே தொடர்புல இருக்கேன். என் மூலமா செங்கொடிக்கும் அந்த மன்றத்தோட பழக்கம் உண்டு. அதனால நேரா அவ மன்றத்துக்கு வந்து தங்க ஆரம்பிச்சா. நாலு வருஷம் எங்கண்ணன் வேலூர் ஜெயில்ல இருந்துட்டு திரும்பி வந்தாரு. ஆனா, செங்கொடி அவரை மன்னிக்கவும் இல்ல… ஏத்துக்கவும் இல்ல. இந்த 11 வருஷங்களா தன் அப்பாகிட்ட ஒரு வார்த்த கூட அவ பேசலைனா பார்த்துக்குங்க…

அவள நினைச்சு நான் ரொம்ப பெருமை படுவேன். ஆனா, அவ ‘அம்மா’வ நெருப்புக்கு பறிகொடுத்துட்டு எந்த இடத்துல நின்னு அழுதாளோ… அதே இடத்துல அதே மாதிரி எரிஞ்சு கரிக்கட்டையான அவள பார்த்து நான் அழுவேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைங்க…” கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்குமாக தத்தளித்தபடி அழுத சேகர், சட்டென்று  மேற்கொண்டு பேச முடியாமல் கதற ஆரம்பித்தார்.

காவல்துறையின் சைரன் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்று ஒலி எழுப்பியபடி யாராவது பிரச்னை செய்கிறார்களா என்று பார்த்துவிட்டு நகர்ந்தது. ஆங்காங்கே சிதறியிருந்த நான்கைந்து காவலர்கள் அந்த இருட்டிலும் கண்ணாடி மூடப்பட்ட வாகனத்தை பார்த்து விறைப்பாக சல்யூட் அடித்தார்கள்.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
ஆற்றாமையில் காஞ்சி மக்கள் மன்றத்தினர்

__________________________________

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
தோழர் மகேஷ்

”இருளர் சமுதாயத்துக்கு எப்படியாவது கல்வி அறிவு கொடுத்து அவங்களை முன்னேற்றணும்ங்கிறதுனுதாங்க என்னோட லட்சியம். அதுக்காகத்தான் கீழ்கதிர்பூர் கிராமத்துல ‘மக்கள் மன்ற’த்தை நடத்திகிட்டு இருக்கேன்…” நடந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் விலகாததால், மகேஷின் (மக்கள் மன்றத்தின் அமைப்பாளர், பெண்) குரல் கம்மியிருந்தது.

”காஞ்சிபுரம் மாவட்டத்துல இருளர் இன மக்கள் அதிகம். அதுல பெரும்பாலானவங்க அவங்க குழந்தைங்களோட செங்கல் சூளைல கொத்தடிமையா இருந்தாங்க. நாங்கதான் பெரிய அளவுல போராட்டம் நடத்தி அவங்கள எல்லாம் மீட்டோம். இதுக்காக சுத்து வட்டாரத்துல இருக்கிற கிராமங்களுக்கு போய் தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம்.

அப்படித்தான் ஓரிக்கை கிராமத்துக்கு நாங்க போயிருந்தப்ப செங்கொடி எங்களுக்கு அறிமுகமானா. அப்ப அவ 5வது படிச்சுட்டு இருந்தா. ரொம்ப சூட்டிகையான பொண்ணு. அதே நேரத்துல நிறைய கேள்விகள் கேட்டுகிட்டே இருப்பா. எல்லாமே அறிவியல் தொடர்பா இருக்கும். இந்தப் பொண்ணை நல்லா வளர்த்து ஆளாக்கணும்னு நாங்க மன்றத்துல பேசுவோம்.

இந்த நேரத்துலதான் செங்கொடியோட சித்தி இறந்து போனாங்க. அதுக்கு காரணம் அவ அப்பாங்கிறதால திரும்ப அவ தன்னோட கிராமத்துக்கு போக விரும்பலை. நேரா இங்க வந்துட்டா. எங்க அமைப்பை சேர்ந்தவங்கதான் அவள எங்க பொண்ணு மாதிரி வளர்த்தோம்.

ரொம்ப சாப்ட் டைப். அதே சமயத்துல ரிசர்வ்ட் டைப்பும் கூட. அவளுக்கு எழுத, படிக்கத் தெரியுங்கறதால எங்க கிட்ட வந்ததும் நாங்க வைச்சிருக்கிற புத்தகங்களை எடுத்து, புரியுதோ, புரியலையோ படிப்பா. சந்தேகத்தை கேப்பா. அவள தொடர்ந்து ஸ்கூலுக்கு அனுப்ப நாங்க முடிவு செஞ்சோம். ஆனா, தீர்மானமா பள்ளிக்கு போகறதை மறுத்துட்டா. இங்கேந்தே படிக்கிறேன்னு சொல்லிட்டா. வற்புறுத்தி பார்த்த நாங்க, அவ போக்குலயே விட்டுட்டோம். ஆனா, பிரைவேட்டா அவள படிக்க வைக்கிறதை மட்டும் நாங்க நிறுத்தலை.

எங்க கூடவே நாங்க கிராமங்கள்ல பிரச்சாரம் பண்ண போறப்ப வருவா. ‘நம்ம சமுதாயம் முன்னேறணும்னா நாம எல்லாம் படிக்கணும்’னு தன்னை விட வயசு குறைஞ்சவங்ககிட்ட பக்குவமா எடுத்து சொல்லுவா. வார இறுதில படிக்கிற பசங்களுக்கு நாங்க டியூஷன் மாதிரி எடுப்போம். அப்ப சொல்லிக் கொடுக்கறதுல முதல் ஆளா செங்கொடிதான் வந்து நிப்பா.

அவளுக்கு இசையில ஆர்வம் அதிகம். பறைய எடுத்து அடிக்க ஆரம்பிச்சானா, இன்னிக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம். எப்படிப்பட்ட வலு உள்ளவங்களும் ஒரு மணி நேரத்துக்கு மேல பறை அடிக்க மாட்டாங்க. கை வலிக்கும். ஆனா, செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பா. எங்களுக்கே அதை பார்க்க ஆச்சரியமா இருக்கும்.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!இப்படி கலை மூலமா பிரச்சாரம் செய்யறது அவளுக்கு பிடிக்கும். அதனால மனமுவந்து அவ இதை செய்வா. ‘சென்னை சங்கமம்’ல அவளோட நிகழ்ச்சி நடந்திருக்கு. எந்நேரமும் புத்தகமும் கையுமா இருப்பா. ‘இவர்தான் லெனின்’ நூல் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். குறைஞ்சது முப்பது முறையாவது அந்த நூலை படிச்சிருப்பா. அதை மனப்பாடமா ஒப்பிப்பா. ஆனா, அர்த்தம் புரிஞ்சுதான் அவ அப்படி செய்வா.

சேகுவேரா, நெல்சன் மண்டேலா, தந்தை பெரியார், பகத்சிங் நூல்கள்னா அவளுக்கு அவ்வளவு விருப்பம். இவங்களோட புகழ்பெற்ற வாசகங்களை அப்படியே அந்தந்த நேரத்துக்கு எது சரியா இருக்குமோ அப்ப சொல்லுவா.

‘உலகத்தின் எந்த மூலையில் அநீதி நடந்தாலும், அந்த அநீதியை எதிர்த்து எவர் ஒருவர் போராடுகிறாரோ, அவரும் சே-வும் தோழரே…’ங்கிற சேகுவேராவோட வாசகம் செங்கொடிக்கு அவ்வளவு பிடிக்கும்.

ஒருமுறை ஒருத்தர் செங்கொடிகிட்ட… ‘ஏம்மா, படிப்புல இவ்வளவு ஆர்வம் காட்டறியே… பேசாம தபால்ல டிகிரி படி’னு சொன்னாரு. அதுக்கு யோசிக்காம செங்கொடி சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘நான் மக்களை படிக்கறேன். இதுதான் இருக்கிற கல்வியிலயே உயர்ந்த கல்வி. எந்த டிகிரியும் இதுக்கு ஈடாகாது. இந்தப் படிப்பு எனக்கு போதும்…’

இப்படிதான் செங்கொடி, இருந்தா… வாழ்ந்தா. இதுக்காகவே நாங்க நடத்தற அத்தனை ஆர்ப்பாட்டம், போராட்டங்கள்லயும் கலந்துகிட்டா. பத்து நாட்கள், இருபது நாட்கள், ஏன் 60 நாட்கள் கூட இதுக்காக சிறைல எங்களோட இருந்திருக்கா. புழல், வேலூர்னு செங்கொடி பார்க்காத சிறை இல்ல.

பாரதிதாசன் பாடல்கள அவ்வளவு அழகா, உணர்வோட பாடுவா. 2009- மேக்கு பிறகு அவ அதிகம் பாடி ஆடினது, ‘களத்திலிருக்கும் அம்மாவுக்கு கடிதம் எழுதுகிறேன்…’, ‘இமயத்தின் சிகரத்திலே எங்கள் விடுதலையின் முழக்கங்கள்…’

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
மக்கள் மன்ற குழந்தைகளுடன்

பொதுவா நாங்க இணையத்துல வினவு, கீற்று போன்ற தளங்கள்ள சமூக நிலமைகள் சார்ந்து எழுதப்படற கட்டுரைகளோட பிரிண்ட் அவுட் எடுத்து அதை படிச்சுட்டு விவாதிப்போம். அந்த விவாதங்கள் எல்லாத்துலயும் செங்கொடி பங்கேற்பா. தவறாம தன்னோட கருத்து, விமர்சனத்தை முன் வைப்பா. ஆனா, எந்தச் சூழ்நிலைலயும் நாங்க, தனி நபர் போராட்டத்தையோ அல்லது சமூக நிலை சார்ந்த தற்கொலை முயற்சியையோ ஆதரிச்சதில்ல. அவ்வளவு ஏன், செங்கொடி கூட தன்னோட கருத்தை முன்வைக்கும்போது இதைப் பத்தி பேசினதும் இல்ல. ஆதரிச்சதும் இல்ல.

முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு பிறகு அவ ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டா. அதுக்கு பிறகு தொடர்ச்சியா ஈழம் தொடர்பா படிக்கறது, காணொளிகளை பார்க்கறதுனு இருந்தா. ராஜீவ்காந்தி கொலை வழக்குல குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தனோட கருணை மனுக்கள் ஜனாதிபதியால நிராகரிக்கப்பட்டதும் நிலை கொள்ளாம தவிச்சா. அவங்க மூணு பேரையும் எப்படியாவது காப்பாத்தணும்னு சொல்லிகிட்டே இருந்தா. அவங்களுக்காக நடந்த அத்தனை ஆர்ப்பாட்டம், போராட்டத்துலயும் கலந்துகிட்டா.

பைக் ரேலி வேலூருக்கு போனப்ப செங்கொடியும் வந்தா. ஆனா, இயக்கம் சார்பா ஒருத்தர்தான் சிறைக்குள்ள போய் அவங்க மூணுபேரையும் பார்க்க முடியும்னு நிலை இருந்ததால என்னை உள்ள அனுப்பிட்டு அவ வேலூர் சிறைக்கு வெளிலயே காத்திருந்தா. நான் திரும்பி வந்ததும் ‘அவங்க மூணு பேரும் எப்படி இருக்காங்க… மன உறுதி எப்படி இருக்கு’னு துருவித் துருவி கேட்டா.

சென்னை கோயம்பேடுல வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருக்கறதை கேள்விப்பட்டதும் அங்க போகணும்னு துடிச்சா. ஆனா, படிக்கற பசங்களுக்கு பாடம் சொல்லித் தர வேலை இருந்ததால அவள நாளைக்கி (ஆகஸ்ட் 29, திங்கள்கிழமை) கூட்டிட்டு போறதா சொல்லியிருந்தோம்…”

அதற்கு மேல் பேச முடியாமல் பல நிமிடங்களுக்கு அழுத மகேஷ், சற்றே நிதானப்பட்டதும் தொடர்ந்தார்.

”சனிக்கிழமை அன்னிக்கி நளினி – முருகனோட மக, அரித்ராவோட குரலை டிவில கேட்டா. அதுக்கு அப்புறம் அவ தன்னோட வசத்துலயே இல்ல. ’21 வருஷங்கள்ல ஒரேயொருமுறைதான் தன் அப்பா – அம்மாவ அரித்ரா பார்த்திருக்காளா?’னு திரும்பத் திரும்ப கேட்டா.

முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தப்ப முத்துக்குமார் தன்னைத்தானே எரிச்சுகிட்டது செங்கொடி மனசுல ஆழமான தழும்பா பதிஞ்சு போச்சு. முத்துக்குமாரோட இறுதி ஊர்வலத்துல கூட எங்களோட கலந்துகிட்டா. அரித்ராவோட குரல், அவளோட தழும்பை கீறி விட்டா மாதிரி இருந்திருக்கணும். ஒரு மாதிரி மவுனமாவே இருந்தா. நாங்க அவளுக்கு உடம்புதான் சரியில்லை போலனு கோயம்பேடு உண்ணாவிரதத்துக்கு இன்னிக்கி (ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 28) காலைல கிளம்பி போனோம்.

மாலை 5 மணி போல திரும்பி வந்த எங்களுக்கு செங்கோடிய காணாதது முதல்ல பெரிசா தெரியலை. ஏன்னா, அவ பக்கத்துல இருக்கிற முந்திரிதோப்புக்கு அடிக்கடி போய் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பா. அதுமாதிரி போயிருக்கா போலனு நினைச்சோம்.

ஆனா, டிவிஎஸ் 50 எக்ஸ்எல் வண்டி, வழக்கமா நிக்கிற இடத்துல இல்ல. அலுவலகத்துல இருந்த பிள்ளைகளும் செங்கொடி அக்காவ ரொம்ப நேரமா காணும்னு சொன்னாங்க. அப்படியே உடம்பெல்லாம் பதறிடுச்சு. முந்திரிதோப்புக்கு வண்டில போக மாட்டா. அதனால நாங்க எல்லாரும் நாலா பக்கமும் சிதறி செங்கொடிய தேடினோம்.

அப்பத்தான்…”

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
தோழர் செங்கொடி சடலமாக

வார்த்தைகள் தடைப்பட, குரல் மேலும் உள்ளிரங்க வெடித்து அழுதார் மகேஷ்.

அவர் விட்ட இடத்திலிருந்து சில நிமிடங்களுக்கு பிறகு மேகலா தொடர்ந்தார். ”அப்பதான் தாலுகா ஆபீஸ்ல ஒரு பொண்ணு தன்னைத்தானே எரிச்சுகிட்டதா ஃபோன் வந்தது. பதறிப் போய் ஜி.எச்.சுக்கு ஓடினோம். அது செங்கொடிதான்னு அடையாளம் தெரிஞ்சதும் அப்படியே நாங்க நொறுங்கிட்டோம்.

தாலுகா ஆபீஸ் இருக்கிற வளாகத்துலயேதான் தீயணைப்பு நிலையமும் இருக்கு. ஆனா, எங்க தன்னோட போராட்டத்தை அணைச்சுடப் போறாங்களோனு மண்ணெண்ணெய்க்கு பதிலா பெட்ரோலை செங்கொடி பயன்படுத்தியிருக்கா. இதுக்காக தாலுகா ஆபீஸ் பக்கத்துல இருக்கிற ‘வினாயகா பெட்ரோல் பங்க்’ல பாட்டில்ல வாங்கியிருக்கா.

மக்கள்கிட்டேந்துதான் பாடம் படிக்கணும்னு சொல்லிகிட்டு இருந்தவ எதனால இப்படியொரு முடிவு எடுத்தானு தெரியல…” மேகலாவாலும் அதன் பிறகு பேச முடியவில்லை. திருமாவளவன், வைகோ, கொளத்தூர் மணி… என அடுத்தடுத்து தலைவர்கள் மகேஷை பார்ப்பதற்காக வந்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த களேபரத்தில் இன்று காலை 7 மணி அளவில் கலைந்த உடைகளுடன் வந்து சேர்ந்த ஒரு பெரியவர், மருத்துவமனையின் வாசலிலேயே அமர்ந்துவிட்டதை யாரும் கவனிக்கவில்லை.

செங்கொடியின் கடிதத்தை நகலெடுத்து அனைவருக்கும் விநியோகித்துக் கொண்டிருந்தவர்கள், அந்தப் பெரியவரின் கரங்களிலும் ஒரு நகலை திணித்துவிட்டு சென்றார்கள். அதில் எழுதப்பட்ட வாசகங்களையே உற்றுப் பார்த்த அந்தப் பெரியவர் அழுத்தம் திருத்தமாக சொன்னார்:

”உணர்ச்சிவசப்பட்டு எதுக்காக இளைஞர்கள் இப்படியொரு காரியத்தை செய்யறாங்க? இதனால யாருக்கு லாபம்? போராடறதுக்கு இதுவா வழி? எனக்கு வயசாகிடுச்சு. இல்லைனா மக்களை திரட்டி கைல துப்பாக்கிய எடுத்திருப்பேன்…”

‘அடையாளப் போராட்டத்துக்கு பதிலா வேறு போராட்ட வழிமுறையே இல்லையா…’ என்று தன் சித்தப்பாவிடம் கேள்வி கேட்ட செங்கொடி, இந்தப் பெரியவர் சொன்ன பதிலை குறித்தும் யோசிக்க வழியின்றி சாம்பலாகிவிட்டார்.

எந்த முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை தட்டி எழுப்பியதை போல் தன் உடலும் மூன்று தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படட்டும் என்று நம்பிக்கையுடன் செங்கொடியை அழுத்தம்திருத்தமாக எழுத வைத்ததோ -அந்த முத்துக்குமாரின் அப்பாதான் அந்தப் பெரியவர் என்பதை சூழ்ந்திருக்கும் தலைவர்களை கடந்து யாரால் செங்கொடியிடம் இப்போது சொல்ல முடியும்?

அரசியலற்ற அமைதியிலும், விரக்தியிலும், நம்பிக்கையின்மையிலும் மூழகடிக்கப்பட்டிருந்த தமிழகத்தை தனது தீக்குளிப்பினால் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தட்டி எழுப்பினார் முத்துக்குமார். இன்றும் அதே நிலமையைக் காண்கிறோம். மூவர் தூக்கை நிறுத்தமளவு நம்பிக்கையூட்டும் போராட்டங்களும், அரசியல் முழக்கங்களும் தமிழகத்தை பற்றியிருந்தால் செங்கொடி தீக்குளிக்க நேர்ந்திருக்காது. அந்த வகையில் செங்கொடி தன் மீது ஊற்றிய பெட்ரோலுடன் இன்னும் விழித்தெழாத தமிழகத்தின் அரசியலற்ற கோழைத்தனமும் சேர்ந்திருக்கிறது.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!செங்கொடியின் உடலை வேண்டுமானால் பெட்ரோல் எரித்திருக்கலாம். ஆனால் அந்த இளம்பெண்ணின் உள்ளத்தை மொன்னையான தமிழக அரசியல் சூழல்தான் எரித்திருக்கிறது. ஆகவே இது வெறுமனே தீக்குளிப்பினால் நடந்த தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில் போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை மதிப்பற்ற விமரிசனம். அந்த விமரிசனத்தின் மதிப்பறிந்தவர்கள் தங்கள் மீது சுயவிமரிசனம் செய்து கொள்ளட்டும்.

மூவர் தூக்கிற்கு காரணமான பாசிச காங்கிரசு அரசு, பாசிச ஜெயா, அநீதியான நீதிமன்றங்கள் மீதான நமது போராட்டம் மக்கள் அரங்கில் தொடரட்டும். செங்கொடி எனும் அந்த இளம்பெண்ணின் உயிரை இனி மீட்க முடியாது. ஆனால் அந்தப் பிஞ்சு உள்ளம் கவலைப்பட்ட சூழ்நிலையையாவது மாற்றுவோம்.

தோழர் செங்கொடி சென்று வாருங்கள், உங்களைப் புரிந்து கொண்ட தோழர்கள் பலர் இங்கிருக்கிறார்கள், உயிரைக் கொடுத்து நீங்கள் எழுப்பியிருக்கும் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்ற போராடுவார்கள். உங்கள் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தின் மீது ஒரு நெருப்பாய் பற்றவைக்கும், போய் வாருங்கள்!

____________________________________________________________________

– வினவு செய்தியாளர்கள், காஞ்சிபுரத்திலிருந்து
____________________________________________________________

 வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

 1. //தோழர் செங்கொடி சென்று வாருங்கள், உங்களைப் புரிந்து கொண்ட தோழர்கள் பலர் இங்கிருக்கிறார்கள், உயிரைக் கொடுத்து நீங்கள் எழுப்பியிருக்கும் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்ற போராடுவார்கள். உங்கள் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தின் மீது ஒரு நெருப்பாய் பற்றவைக்கும், போய் வாருங்கள்!//

  எந்த மன தைரியத்தில் எழுத முடிந்தது தோழர்! நான் அழுகிறேன்.

 2. உயிர் போக வேண்டாம் என ஓர் உயிர் போவதா?

  மூவர் உயிர் காப்பாற்றபட வேண்டும் மாற்று கருத்து இல்லை

  ஆயினும் இந்த உயிர் கொண்டா,

  உத்வேகமுள்ள, சமூக அக்கறையுள்ள ஓர் உயிரை இழந்துவிட்டோம்

  இழப்பு ஈடு செய்ய முடியாதது

  ஆம், ஈடு செய்ய முடியாத இழப்பிலிருந்து

  மற்ற உயிர்களை காப்போம்

 3. வாழ்வை போரட்டமாக்குங்கள் ….. இன்னும் தொடர வேண்டாம் இந்த தீக்குளிப்பு. எரிக்க வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கியர்கள் . அதற்குள் நாம் எரிய வேண்டாம் . விவேகமாக போராட வேண்டும் …. அவசரமாக முடிவிஎடுக்க வேண்டாம் …. நிச்சயம் நமக்கு நீதி கிடைக்கும்.

 4. தோழர் செங்கொடிக்கு வீரவணக்கம்.

  மனித உணர்ச்சியற்ற மிருகங்களுக்கு மனித உறவின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்ல தனது உயிரை ஈந்த இவரைப் போன்ற தோழர்களை பெற்றெடுத்த மண்ணில் பிறந்ததற்கு நாம் பெருமை கொள்ள வேண்டும்.

  இனி இத்தகைய தோழர்களின் உயிரிழப்பைக் கொண்டு பிழைப்பு நடத்தும் நாய்களுக்கு வேட்டை ஆரம்பம்.

  ஏற்கனவே தோழர். முத்துக்குமாரின் மரணத்தைக் கொண்டு சீமான் போன்ற வெறிநாய்கள் அரசியல் ஆதாயம் அடைந்தன. சீமான், சத்தியராஜ்,மணிவண்ணன், பழ.நெடுமாறன் போன்ற அயோக்கியர்கள் மக்கள் எழுச்சியை தனது அரசியல் மேன்மைக்கு உபயோகித்துக் கொண்டு ஈழத்தமிழர்களின் எதிரியான செயலலிதாவை வாழவைத்தனர்.

  இன்று தோழர் செங்கொடியின் மரணத்தை வைத்து எந்த அயோக்கிய நாயை வாழ வைக்கப் போகின்றனர் என்று தெரியவில்லை. மக்கள் தான் இந்த நாய்களின் அயோக்கியத்தனத்திற்கு தக்க பதிலடி கிடைக்க வேண்டும்.

  • மிருகங்களுக்கு ஏது மனித உணர்ச்சி தோழர் செங்கொடி மருது. இந்த பிழைப்புவாதிகளிடமிருந்து அரசியலற்ற மக்களை காப்பாற்ற வேண்டிய தேவை நீண்டகாலமாகவே தமிழகத்தில் இருந்துகொண்டு இருக்கிறது. அவர்களை அரசியல் மயமாக்குவதற்கு ஒரே வழி வர்க்கப் போராட்டம்தான். மக்களை பாதிக்கும் எந்த ஒரு பிரச்சினைக்குமான தீர்வு வர்க்கப்போராட்டத்தில்தான் இருக்கிறது. இதுதான் தோழர் செங்கொடி கேட்ட கேள்விகளுக்கும் பதிலாகும். வர்க்கப்போராட்டத்தை மக்களிடம் கொண்டு செல்வோம்! ஈழப்போராட்டத்திற்கான நீதியை வென்றெடுப்போம்!. அதற்குத் தடையாக வரும் ஏகாதிபத்திய அம்பிகளை வெட்டி வீழ்த்துவோம். உரிமை என்று வார்த்தையில் மட்டுமே கூவிக்கொண்டு அவர்களுக்கு வாள்பிடித்து வரும் ஒட்டுக் கட்சி மற்றும் தமிழ் தேசியர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி விரட்டியடிப்போம்.

 5. போராட இது வழி அல்ல.அவர் செய்த தியகம் மக்கள் தட்டி எழுப்புமா?

 6. /தோழர் செங்கொடி சென்று வாருங்கள், உங்களைப் புரிந்து கொண்ட தோழர்கள் பலர் இங்கிருக்கிறார்கள், உயிரைக் கொடுத்து நீங்கள் எழுப்பியிருக்கும் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்ற போராடுவார்கள். உங்கள் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தின் மீது ஒரு நெருப்பாய் பற்றவைக்கும், போய் வாருங்கள்!//

  எந்த மன தைரியத்தில் எழுத முடிந்தது தோழர்! நான் அழுகிறேன்.

 7. அய்யா,அம்மா அரசை நடத்தும் அரசியல்வாதிகளே, மாண்டு போன அந்த மானுட தாயின் தியாகத்துக்கு மரியாதை கொடுத்தாவது அவருடைய, எங்களுடைய வேனண்டுகோளான தூக்கு தண்டனையை கைவிடுங்களேன்.

 8. தமிழின் மீதும் தமிழர்கள் மீதும் பற்றுக்கொண்டவர்கள் மிகக்குறைவு…அவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்வது வருத்தமளிக்கிறது…உஙகளுக்குநான் ஒரு விசயத்தினை சொல்ல விரும்புகின்றேன்..சோனியாவின் கைப்பாவையான ஜனாதிபதி, சோனியாவின் அறிவுருத்தலின் பேரிலேயே இவர்களது கருணை மனுவைநிராகரித்துள்ளார்….புலிகள் செய்த ஒரே தவறான ராஜீவ் காந்தியின் கொலையினால் தான் அவர்கள் அழிவுற்றனர்..

 9. மனதை கல்லாக்கும் விஷயம் மறுபடியும் தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது. ஒருகால் அவள் வளர்ந்த சூழலால் தான் இந்த முடிவுக்கு நிச்சயமாக சென்று இருக்க முடியும் அதுவும் சித்தியின் மரண முடிவு மிகுந்த பாதிப்பு எற்படித்திருக்கும். மக்கள் மன்றத்தின் வருங்கால தூண் சரிந்துவிட்டது. எதிர்காலத்தில் அந்த இனத்தின் போராட்ட பேரோளி இப்பொழுது இல்லை. கிழக்கு கடற்கரை சாலையில் உல்லாசாமாக இருக்கும் ஒத்த வயது உடைய நங்கைகள் இதை படிப்பார்களா??

 10. முத்துக்குமாரை போன்றே செங்கொடியின் தியாகத்தையும் இந்த அரசியல்வாதிகள் வீன்க்கதான் போகிறார்கள்.மூன்று பேரின் மரணத்தை நிறுத்தும் சக்தி அரசியல்வாதிகளிடத்தில் இல்லை.மக்கள் எழுச்சியில் தான் உள்ளது.

 11. ராஜீவ் காந்தியின் படுகொலையினாலே சோனியா அரசியலுக்கு வந்தது, வெற்றி பெற்றது, கண்மூடித்தனமாக இலங்கைக்கு ஆதரவு கொடுத்தது…இலங்கையில் அப்பாவித்தமிழர்களில் மரண ஓலத்தை காதில் வாங்காமல் அனைவரையும் பழி தீர்த்தது…புலிகள் போராளிகள், தீவிரவாத வழியைநாடியவர்கள், அவர்களின் அழிவிற்கு அவர்களே பொறுப்பு, ஆனால் தங்களுக்கு ஆதரவு கொடுத்த இந்தியாவிற்குள்ளே நுழைது, ராஜீவைக் கொன்றதன் மூலம் சோனியா என்ற மாபெறும் எதிரியினைத் தேடிக்கொன்டனர்…இந்த ஒரு வரலாற்றுப்பிழயினை அவர்கள் தவிர்த்து இருந்தால் அவர்களின்நிலமையே மாறியிருக்கும்..

  ஆனால் இலஙகைத் தமிழர்களை பழிதீர்த்ததற்க்கு சோனியா விரைவில் ப்தில் சொல்ல வேண்டிவரும்

  • அப்டியா.. அப்போ உங்க தேசபற்று மிக்க பிஜேபி காரங்க ஆட்சில இருக்கும்போது அவங்களை விடுதலை செய்திருக்கலாம் இல்லையா?

   சோனியாவாம்.. சோனியா.. எல்லாருமே குள்ள நரிகள் தான்..

  • puligal ondrum muttalgal allar. avargal rajeev gandhi padukolai nadapatharku 2 maathangal munnal than rajeev gandhiyai santhithu avarin aatharavai petrargal. rajeev gandhiyum viduthalai puligaluku aatharavaga irupen endru uruthi alithar. appadi irukum pothu puligal than thalaiyil thane mannai potukolla enna avasiyam vanthathu?

 12. வீர வணக்கம்! வீர வணக்கம்
  தமிழ் இன விடுதலைக்காக
  மூன்று தமிழர் உயிர் காக்க
  தன்னையே தியாகம் செய்து
  தமிழனுக்கு உணர் ஊட்டிய
  முத்துக்குமரன் சகோதரி
  வீரப்பெண் செங்கொடிக்கு
  வீர வணக்கம் வீரவணக்கம்
  தமிழ் இனத்தின் வீர வணக்கம்

 13. தப்பி பிழைத்து உயிர் வாழ்வதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் மனித மிருகங்களுக்கு மத்தியில், தனது உயிரையும் துச்சமாக நினைத்த போராளி.

 14. inum etthanai pearai intha mathiri nogattithu sagatiika pokirarkal?sariyana arasiyal valikatuthal illamal ippati manarethiyaga pathikapattu irakkirarkal.ungalutiya katturaiyil solvathipola pillipuvathikal ithai purinthukolwargala?

 15. தோழர் செங்கொடிக்கு வீர வணக்கம்.
  வர்க்க அரசியலை புரிந்து கொள்ளாத வரை இப்படிப்பட்ட அருமையான தோழர்களின் இழப்பினை தடுக்க முடியாது.

 16. வீர வணக்கம் தோழர் செங்கொடி,

  நீங்கள் சென்றுவிட்டாலும், உங்களுக்குள் எழுந்த கேள்விக்கான பதிலை மக்களிடம் கொண்டு செல்ல நாங்கள் மண்ணில் வீழும் வரை போராடுவோம்.

  சென்று வாருங்கள் தோழர் செங்கொடி
  வீர வணக்கம்.

 17. no need to release proven criminals.
  Those awaiting for hanging were proven guilty.
  Fools like Senkodi should go to school and get educations.
  If they were raised in Madarasa type clubs this is the end result.

  God Save TamilNadu and India.

  • fool not a thozlar senkodi, u only fool gandhi, u say one line “god save tamilnadu and india” but u show me god first then i belive god save ok fool.

   thozlar senkodi mathiri poraligal poraduvathunal tan unai mathiri yamaligal vasathiyaga inga valinthu kondirukigal evarigal poradavillai endrai ne solvathu pol ne nambum god kuda unai kapathamatan, apo kuda eamathu poraligal tan uthavuvargal

   definitely i say u only big fool

 18. தோழர் முத்துக்குமாரின் மரணம் போல தோழர் செங்கொடியின் மரணமும் வருத்தத்தையும், கோபத்தையும் தருகிறது.

  தோழர் செங்கொடி கண்ட கனவை நனவாக்க களத்தில் இன்னும் வேகம் காட்டுவோம்!

 19. என்ன காரியம் செய்தாய் என் தங்கை… உன் போல் இருக்க முடியவில்லை.. உன் எண்ணம் வெற்றி பெற வைப்போம்.

 20. ***புரட்சியாளர்கள் அழிக்கபடுவதில்லை விதைக்கபடுகிறார்கள்***

  **** வாழ்க தோழர் செங்கொடி, வளர்க போராட்டம்********

 21. இளம்கன்று பயம் அறியாது என்பதற்கு இதுவும் ஒரு சான்றோ? ….எனினும் மனம் ஆறவில்லையே சகோதரி ……..

 22. படிக்கும்பொழுது பல இடங்களில் துக்கத்தினால் தொண்டை அடைக்கிறது, தோழர் செங்கொடிக்கு வீரவணக்கம். இனியேனும் தமிழர்கள் உணர்வுபெற்றெழுவார்களா?

 23. தமிழாயுதமே, முத்துக்குமரனின் வழித்தோன்றலே வீரவணக்கம்!

  முத்துக்குமரனால் மேலும் ஒரு தமிழ்த் த் த் த் தலைவன் – “சீமான்”, ஒரு கட்சி “நாம்ம்ம் தமிழர்”. உன் உயிர் தியாகத்தால்? ? ?

 24. உண்மையிலேயே கண்ணீர் விடுகிறேன்..
  தோழர் செங்கொடியின் விமர்சனத்திற்காக அல்ல.
  எனது செயலின்மைக்காக.
  தோழர் செங்கொடி… உங்கள் முன் மண்டியிடுகிறேன். நிச்சயம் என்னை மாற்றிக்கொள்கிறேன். உங்களுக்கு என் செவ்வணக்கம்.

 25. செங்கொடியின் வீரச்செயல் உயிரை உலுக்குகிறது. இனம்சார் பிண்ணணியில் அவரிடமிருந்த கொள்கை உண்மைப் போராளியின் அடையாளம். என்ன செய்வது? குமரனையும் கொடியையும் இழந்துவிட்டோம். ஒரு போராளியின் உயிர் மகத்தானது. இதைப் பிறப் போரளிகள் உணர்ந்துகொண்டு செயல்பட வேண்டும்.நமது தமிழரின் எழுச்சிதான் நம் கொடிக்கு செலுத்தும் வீர வணக்கம்!

 26. […] தீக்குளித்த செங… செங்கொடி தீக்குளிப்பினால் நடந்தது தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில் போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை மதிப்பற்ற விமரிசனம். அந்த விமரிசனத்தின் மதிப்பறிந்தவர்கள் தங்கள் மீது சுயவிமரிசனம் செய்து கொள்ளட்டும். Source: http://www.vinavu.com […]

 27. மறைந்த செங்கொடிக்கு நாம் செய்ய வேண்டிய கடமை,
  சீமான்,வைகோ,பழ.நெடுமாறன்,போன்ற இனவாதிகள் கும்பலிடமிருந்து செங்கொடியின் போராட்டத்துவக்கம் மாட்டிக்கொண்டு( முத்துகுமாரின் போராட்டதுவக்கத்தை முடக்கியது போல்) முடங்கிவிடாமல்
  மக்கள் போராட்டமாக முன்னெடுத்து போராடுவோம், இனவாத கும்பல்களை தனிமைப்படுத்தி பாடம் புகட்டுவோம் இனி அழிபவர்கள் மக்கள் விரோதிகள் மட்டுமே இருக்க வேண்டும் போராட்டக்கலத்தில் சந்திப்போம்.

 28. தோழர். செங்கொடிக்கு வீரவணக்கம்……………..

  புரட்சியின் எதிரியையும், துரோகியையும் இனம் காண்போம்!!

 29. உணர்வுவயப்பட்டு தீக்குளித்தவர் என்று தான் நானும் முதலில் நினைத்துவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன்.

  பத்து வயதிலேயே தவறு செய்த தந்தையை போலீசில் ஒப்படைத்த செங்கொடி தீர்க்கமான பெண் தான்! அவரது செயல்பாடுகள் இன்னமும் அதை உறுதி செய்கின்றன. ஆனாலும்.. வருத்தமே மேலிடுகிறது.

 30. தப்பாக எண்ண வேண்டாம்…
  சரியான
  வழியில் போராடத்
  துணியாதவர்களின்

 31. why don’t another 50 people set on fire themselves or set fire some corrupt MLA, Party leaders, Police? instead of crying here and showing “support” to a dead women, why don’t you “blood boiling” heroes do something?
  atleast burn some innocent by-stander on street?
  Please do something…instead of doing “OOLAM” 🙂

 32. ///செங்கொடி தீக்குளிப்பினால் நடந்தது தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில் போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை மதிப்பற்ற விமரிசனம். அந்த விமரிசனத்தின் மதிப்பறிந்தவர்கள் தங்கள் மீது சுயவிமரிசனம் செய்து கொள்ளட்டும்///
  வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன்

 33. தயவு கூர்ந்து கேட்கின்றேன் தீக்குளிப்பை நிறுத்துங்கள் ………

  பேரறிவாளன்,சாந்தன்,முருகன்,போன்ற நம் உறவுகளின் மரண தண்டனையை நிறுத்தக்கோரிப்போராடுவதுஎன்பது,ஒரு தத்துவம் சார்ந்தது,கருத்தியல் சார்ந்தது,ஒரு எதிர் அரசியலுக்கான குறியீடு,குறிப்பாக மண்ணின் மைந்தர்களான ,தமிழர்களின் உரிமைகளை அது சுட்டி நிற்கின்றது.இப்போராட்டத்துக்காக எந்த வகையிலும் ஏனைய மனித உயிர்களை பலியிட முடியாது.இவ் விடயத்தில் தமிழகத்தலைவர்கள்,உணர்ச்சி பூர்வமாகஅல்லாமல் ,அறிவு பூர்வமாக போராட மக்களை வழிநடத்தவேண்டும்.இந்திய ஆட்சியாளர்கள் தீக்குளிப்பை ஒரு போதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்போவதில்லை.இதுதான் வரலாறு.மாறாக ஊக்கப்படுத்துவார்கள்.இருபத்திஎளே வயதான இளம்பெண் செங்கொடி ,ஒரு கருத்துக்காக தனது உயிரை தியாகம் செய்ய முன்வந்த அந்த செயலுக்கு நான் தலை வணங்குகிறேன்.அதே வேளைஎன்னால் அதைக்கண்டிக்காமல் இருக்கவும் முடியவில்லை.முத்துக்குமாரும்,செங்கொடியும்,நம்மிடம் அதிகம் இல்லை.தயவு கூர்ந்து கேட்கின்றேன் செங்கோடியோடு இது முடியட்டும்.நமக்கு பல முத்துக்குமார்களும் ,செங்ககொடிகளும் தேவை நமது சமுதாயத்தின் விடிவை உறுதிப்படுத்த.

 34. பத்து நாட்கள், இருபது நாட்கள், ஏன் 60 நாட்கள் கூட இதுக்காக சிறைல எங்களோட இருந்திருக்கா. புழல், வேலூர்னு செங்கொடி பார்க்காத சிறை இல்ல.//

  இன்னொரு பெண் பிறக்கலாம். ஆனால் இன்னொரு கொள்கையுடைய போராளி செங்கொடி போல கிடைக்குமா?.. உம் சேவையை எத்தனை குழந்தைகளும் , மனிதர்களும் இழந்தனரோ பெண்ணே..

  “ஏன் சென்றாய் செங்கொடி?.”

  http://punnagaithesam.blogspot.com/2011/08/blog-post_29.html

 35. தமிழ் தாய் தோழர்.செங்கொடிக்கு வீரவணக்கம்…….

  சொரனை இல்லாத தமிழ் மக்கள் இனியாவது விழிக்கட்டும், அந்த மூன்று உயிர்கலுக்காக மட்டும் இல்லை மீதம் உள்ள அனைத்து உயிர்களுக்கும்………………..

  விழிக்காவிடில் விழிக்க வைப்போம், போராட்டம் மூலம்…,….

  இவன்

  ராஜசூரியன்

 36. வீரவணக்கம், வீரவணக்கம்…..
  தோழர் செங்கொடிக்கு வீரவணக்கம்….

  thozlarkal yean innum naam yosikanum varugal veethieragi poraduvom theavapattal ayethuvam eathi poraduvom

  -வீரவணக்கம்

 37. இந்தப் பின்னூட்டத்தை எவ்வளவு கவனமாகப் பதிந்தாலும் சரியான வகையில் புரிந்து கொள்ளப் படாமல் போகும் ஆபத்து இருக்கிறது. இருந்தாலும் என் கருத்தைச் சொல்லி விட விரும்புகிறேன்.

  சகோதரி செங்கொடியின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். சிறு மலர் போன்ற அழகான இப்பெண்குழந்தை தீயில் கருகிக் கிடப்பது அடி வயிற்றில் அமிலத்தை கரைக்கிறது. வாழ்ந்து சாதிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கும் போது உயிரை விடும் முடிவிற்கு செங்கொடி வந்திருக்கக் கூடாது.

  இப்படி தீக்குளிப்பவர்களை வீரர்களாகவும் உண்மைப் போராளிகளாகவும் வருணிக்கும் மனோபாவம் இணையத்திலும் சுவரொட்டிகளிலும் தொடரும் வரை தீக்குளிப்புகளும் தொடரும் அபாயமும் இருக்கிறது.

  முத்துக்குமரன் என்ற உளவியல் ரீதியாக உதவி தேவைப்பட்ட, அதீத உணர்ச்சி வசப் பட்டு அவசர முடிவெடுத்த ஒரு பரிதாபமான மனிதனை பெரும் வீரனாக வருணிக்கும், தமிழ் சமுதாயத்தின் ஒரு சிறு பிரிவினர்தான் செங்கொடியின் தற்கொலைக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

  இது போன்ற தீக்குளிப்புச் செய்துள்ளவர்களை பின்வருமாறு வரையறுக்கலாம்: பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பப் பின்னணி. கல்வியிலோ தொழிலிலோ பெரிதாக சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் இல்லாத நிலை. எளிதில் கோபப்படும், உணர்ச்சி வசப்படும் சுபாவம். அதீதமான பிடிவாத குணம். அடைத்து வைத்து இருக்கும், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் வன்முறை உணர்வு. வாழ்க்கையின் மீது எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் இருக்கும் மனச் சோர்வு நிலை. தன்னைச் சூழ்ந்துள்ளவர்கள் மீது உள்ள குருட்டுத்தனமான கோபம். அவர்களுக்கு மன வேதனை அளித்து தண்டிக்க வேண்டுமென்ற அடங்காத ஆங்காரம். இன மான உணர்வு, மத உணர்வு போன்ற மனித குலக் குறைபாடுகளை உயர்ந்த கொள்கைகளாக எண்ணிக் கொள்ளும் மூளைச் சலவை செய்யப் பட்ட நிலைப்பாடு.

  இப்படிப் பட்ட மனிதர்களுக்கு ஈழம், ஜிஹாத், இந்துத்துவா, இனமானம், தேசம் போன்ற குறுகிய வரையறைகளுக்கு உட்பட்ட போராட்டங்கள் வீணாகும் வாழ்க்கைக்கு மரணத்தின் மூலமாகவேனும் மதிப்புத் தேடித்தரும் குறுக்கு வழிகளாக மாறி விடுகின்றன.

  இக்கட்டுரையைப் படிக்கும் இளைஞர்கள் அவசியம் சிந்திக்க வேண்டிய விஷயம் இதுதான்: முத்துக் குமரனை வீரனாகவும், செங்கொடியை வீராங்கனையாகவும் கொண்டாடும் குட்டி அரசியல் தலைவர்களிடம் பென்ஸ் கார்கள் இருக்கின்றன. பெண்டாட்டி(கள்) பிள்ளைகள் இருக்கிறார்கள். இயக்குவதற்கு திரைப்படங்களும், புணர்வதற்கு துணை நடிகைகளும் இருக்கிறார்கள். மச்சான்கள் பெயரில் பொறியியல் கல்லூரிகளும், ஸ்விஸ் வங்கி கணக்குகளும் உள்ளன. இவர்களில் யாராவது தீக்குளிக்க வேண்டியதுதானே?

  ஈழப் பிரச்சினை மனித சமுதாயத்தின் பிரச்சினை. அதை உலகத் தமிழர்கள், தமிழ் நாட்டுத் தமிழர்கள், விடுதலைப் புலிகள் என்று படிப் படியாகச் சுறுக்கிக் கொண்டே வந்து புலிகள் இல்லாவிட்டால் ஈழத்தமிழர்கள் அவ்வளவுதான் என்று ரீல் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போதும் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய முடியும்.

  கையறு நிலை வந்ததாக எண்ணி வேலை இல்லாத உதவி இயக்குனர்களும், கண் முன்னாலே தாய் எரிக்கப் பட்டதால் மனமுடைந்து போன பெண்களும் பெட்ரோல்
  வாங்கக் கிளம்பாதீர்கள். மரணத்திற்குப் பின் 72 கன்னிப் பெண்களோ, வீர வணக்கங்களோ, சுவரொட்டிகளோ உங்களுக்கும் உங்கள் கொள்கைகளுக்கும் ஒன்றும் தந்து விடாது. வாழ்க்கை அபூர்வமானது. அதை உபயோகமானதாக மாற்றிக் கொள்ளும் பொறுப்பு நம்மிடம்தான் இருக்கிறது. தீக்குளிப்புகள் மறக்கப் படும். உதாசீனப் படுத்தப் படும். கொள்கைகளை அடைவதற்கு அவை எவ்வகையிலும் உதவாது. காரணம், மரணத்திற்கு அவ்வளவுதான் மரியாதை.

  • வித்தகனுக்கு,
   //இது போன்ற தீக்குளிப்புச் செய்துள்ளவர்களை பின்வருமாறு வரையறுக்கலாம்:
   பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பப் பின்னணி. கல்வியிலோ தொழிலிலோ பெரிதாக சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் இல்லாத நிலை. எளிதில் கோபப்படும், உணர்ச்சி வசப்படும் சுபாவம். அதீதமான பிடிவாத குணம். அடைத்து வைத்து இருக்கும், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் வன்முறை உணர்வு. வாழ்க்கையின் மீது எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் இருக்கும் மனச் சோர்வு நிலை. தன்னைச் சூழ்ந்துள்ளவர்கள் மீது உள்ள குருட்டுத்தனமான கோபம். அவர்களுக்கு மன வேதனை அளித்து தண்டிக்க வேண்டுமென்ற அடங்காத ஆங்காரம். இன மான உணர்வு, மத உணர்வு போன்ற மனித குலக் குறைபாடுகளை உயர்ந்த கொள்கைகளாக எண்ணிக் கொள்ளும் மூளைச் சலவை செய்யப் பட்ட நிலைப்பாடு.//

   மிகக் கவனமாக எடுத்தாளப்பட்ட வரிகள் மூலம் தங்களின் மத்தியதர மேலாதிக்க மனோபாவத்தை மிக நாசூக்காக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நீங்களே சொல்வது போல் இவை மிக மிகக் கவனமான வரிகளே.
   தங்களது ‘வரையறை’யின் பெரும்பான்மையான விஷயங்கள் இந்திய நாட்டின் 70 சதவீதம் பேருக்கு மேலே உள்ளவருக்குப் பொருந்தும். வறுமை, வேலையின்மை, வன்முறையால் ஒடுக்கப்பட்டு வெளிப்படத்துடிக்கும் வன்முறை உணர்வு, இனமான உணர்வு,.. etc. இவை எல்லாம் இந்த முதலாளித்துவச் சமூக அமைப்பில் வாழும் கீழ்த்தட்டு, மத்திய தர வர்க்க மக்களின் அன்றாட மனநிலை. உங்களின் சாமர்த்தியமான வரி என்னவென்றால் இவற்றின் முத்தாயப்பாக ‘மூளைச் சலவை செய்யப்பட்ட’ என்று தீவிரமாகப் போராடும் இயக்கங்களின் எல்லாவற்றையும் சேர்த்து இதை அவர்கள் உபயோகப்படுத்திக் கொள்கிறார்களோ என்று தோன்றவைக்கும் விஷ வரிகள். வரையறையின் கடைசி வார்த்தைகள் மூலம் வறுமை, கல்வியின்மை, அடக்குமுறை எல்லாம் இருந்தாலும் பேசாமல் பொத்திக் கொண்டு வாழ்வது தானே சராசரி மனிதனின் இயல்பு என்கிற தொனி இருக்கிறது உங்கள் கேள்விகளில்.
   ‘குட்டி’ அரசியல் தலைவர்களின் யோக்கியதையைப் பற்றிப் பேசவிரும்பும் நீங்கள் மன்மோகன்கள், கல்மாடி, அம்பானி, டாடா, ராசா Etc போன்ற ‘திமிங்கிலங்களை’ வளைக்க என்ன செய்ய முடிந்தது ? என்ன செய்யலாம் ? என்று ஏதாவது அறிவுரைகள் கூறியிருந்தீர்களென்றால் இப்படிச் செங்கொடிகளும், முத்துக்குமரன்களும் செத்துத்தொலைக்க வேண்டியிருக்காது தானே.
   முத்துக் குமரன் மற்றும் செங்கொடியின் மரணங்கள் உணர்ச்சி வயப்பட்டவை தான். ஆயினும் அவை காட்டும் குறியீடு தமிழ்நாட்டில் தென்படும் ‘போராட்ட மனோபாவ’ வெற்றிடத்தைத் தான். இங்கு போராட்டங்களும் இல்லை. வெற்றிகளும் இல்லை. மக்கள் மானாட மயிலாடவும், ஜோடி நம்பர் டூ வும், பார்த்து வாழப் பழகிக் கொண்ட இந்த வறட்டு மனோபாவத்தின் சமூக வெடிப்புத் தான் இவர்கள் மரணம் தரும் அதிர்ச்சி.
   தங்களைப் போல் வீட்டுக்குள் உட்கார்ந்துகொண்டே அன்ன ஹசாரேவின் மூலம் புரட்சி நடத்த விளைவோருக்கு செங்கொடியும், முத்துக்குமரனும் தரும் அதிர்ச்சியினால் வரும் குற்ற உணர்வுக்கு உங்கள் அறையின் ஏர்கண்டிஷன் வழங்கும் குளிர்ச்சியே போதுமானது.

   • //மன்மோகன்கள், கல்மாடி, அம்பானி, டாடா, ராசா Etc போன்ற ‘திமிங்கிலங்களை’ வளைக்க என்ன செய்ய முடிந்தது ? என்ன செய்யலாம் ?//

    என்னிடம் இதற்கெல்லாம் பதில் இல்லை என்றால் மற்றும் தற்கொலைகள் சரியாகி விடுமா? நீங்கள் சொல்வது போல நான் யாரையும் “பொத்திக்கொண்டு” இருக்கச் சொல்லவில்லை. செத்துப் போகாதீர்கள். செத்துப் போன இளிச்ச வாயர்களை வீரர்கள் என்று புகழ்ந்து இன்னும் கொஞ்ச வேலை வெட்டி இல்லாதவர்களையும் தற்கொலைக்குத் தூண்டாதீர்கள் என்கிறேன். இதில் என்ன உங்களது பிரச்சினை?

    //‘மூளைச் சலவை செய்யப்பட்ட’ என்று தீவிரமாகப் போராடும் இயக்கங்களின் எல்லாவற்றையும் சேர்த்து இதை அவர்கள் உபயோகப்படுத்திக் கொள்கிறார்களோ என்று தோன்றவைக்கும் விஷ வரிகள்//

    தோன்ற வைத்தால் மகிழ்ச்சிதான். அதுதான் என் கருத்து.

    • //தங்களைப் போல் வீட்டுக்குள் உட்கார்ந்துகொண்டே அன்ன ஹசாரேவின் மூலம் புரட்சி நடத்த விளைவோருக்கு //

     எனக்கு அன்னா ஹசாரே மேல் மரியாதை இருப்பதாக சொன்னேனா? உங்கள் புரிதலின் குறைபாடுகளை ஏதோ மறுக்க முடியாத உண்மை மாதிரி திணிக்க வேண்டாம்.

     • “இப்படி தீக்குளிப்பவர்களை வீரர்களாகவும் உண்மைப் போராளிகளாகவும் வருணிக்கும் மனோபாவம் இணையத்திலும் சுவரொட்டிகளிலும் தொடரும் வரை தீக்குளிப்புகளும் தொடரும் அபாயமும் இருக்கிறது. ”

      – சரியாக சொன்னீர்கள்…

      • thozhar.sengodi than uyirai thiyagam seithu 3 appavigalin uyirai kaapatra oru aarambam anaar. athai vimarsanam seiya mudintha neengal antha 3 perin thooku thandanaiyai rathu seiya enna muyarchi eduthirgal? ungalai thozhar.sengodi pola uyirai koduka sollavillai. neengal pirantha intha veera thamizh inathuku enna seitheergal enbathe en kelvi. than inam azhivathai poruthu kolla mudiyatha ovvoru thamizharum ondru kooduvom. than inam kaaka poraduvom. veru vazhiyil. vendraga vendum thamizh… ondraga vendum thamizhar…

 38. சந்தர்ப்பத்தில் சாகும் ஒருவரை இதற்காக இறந்தார் என இலாபம் தேடுவதை நிறுத்துவதுடன், அந்த அம்மணியின் சாவின் மர்மத்தை கண்டறிய வேண்டும் ! கொலை காரர்களுக்கு தனதுயிரை கொடுக்க பெற்றவர்களோ, சகோதர சகோதரிகளோ, உறவுகளோ கொடுக்கவில்லை. யாரோ ஒருவர் கொடுத்திருக்கிறார் ! சந்தேகமே !

  1.”தோழர் செங்கொடி” என்று கையொப்பம் இருக்கிறது.. யாரவது தனது கையொப்பத்தில் தோழர் என்று சேர்த்து இடுவார்களா?
  2.அவர் படித்திருப்பது வெறும் 5 ஆம் வகுப்பு.. அந்த லெட்டரை பார்க்கும்போது நல்ல தமிழ் புலமை உடைய நபர் எழுதி இருப்பது போல் உள்ளது…
  3.அவர் இறக்கும்போது அவர் அருகில் யாருமே இல்லையாம்.. அனால் வினவு பொய்யன் அவர் கோஷம் இட்டார் ஏன் மிகுத்தி சொல்கிறான்… தற்குரிபேற்ற அணி போல…
  4.அந்த கடுதாசி அந்த பெண்மணி வீட்டில் கண்டு எடுக்கப்பட்டதாம்… கண்டு எடுத்தவனை உதைத்து கேட்டல் உளறி விடுவான்…
  5.முருகன், சாந்தன், பேரறிவாளன் உறவுகள் யாருக்குமே வாராத இந்த புதுப் போராட்ட எண்ணம், இந்த அம்மையாருக்கு வந்ததாக நம்ப வேண்டுமா…
  6.அரித்ரா கூட இதை வரவேற்க மாட்டார்… வரவேற்றல் அவரையும் தீ குளிக்க சொல்லிவிடுவார்கள் தோழர் கூட்டங்கள்…

   • 3 பேரு உயிரை காக்க சொல்லிய போராட்டத்தில் 1 உயிர் இழக்கப்படலாமா.. இதிலியே நீங்கள் தோற்று விடவில்லையா… நீங்கள் 3 உயிரை கைப்பற்றினாலும் 2 உயிர் என்று தானே கணக்காகும்… ஏன் உங்கள் மரமண்டைகளுக்கு புரிய மாட்டேன்கிறது… அல்லது 3 போரையும் இழந்ததால் இலவசமாக இந்த 4 வது உயிரும் கணக்ககுமே… 3 உயிருக்கு 1 உயிர் இலவசமோ.. நிறுத்துங்கள் உங்கள் உயிர் விளையாட்டை…

    பழ நெடுமாறன் கூறியது போல “இந்த தீக்குளிப்பு மூலம் நமது நோக்கம் சிதைக்கப்படுகிறது… ” முல்லை முள்ளால் எடுக்க வேண்டும் என்ற பழமொழியை தவறாக புரிந்து கொண்டீர்களோ… உயிரை உயிரை மீட்க நினைக்கும் முட்டாள் தனத்தை என்ன சொல்வது…

    தீக்குளித்து அல்லது தற்கொலை செய்து கொள்வதன் மூலம் அரசை அச்சுறுத்தி சாதிக்கலாம் என்று எவனும் நினைக்காவண்ணம் , இப்படி உயிராயுதம் ஏந்தும் நபர்களுக்கும் அவர்களை தூண்டும் நபர்களுக்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும்…

  • மனிதன் என்ற பெயரில் இங்கே விசத்தைக் கக்கியிருக்கும் ஈனப் புழுவே ..

   1. நாட்டைப் பற்றிய கவலையில்லாமல் குடி கூத்து என்று திரியும் சில எஞ்சினீயர்களே தங்களின் பெயர் முன்னே Er. என்று போட்டுக் கொள்ளும் போது, சமூகத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தான் வேலை பார்க்கும் மருத்துவ நிலையத்திற்காக மக்களை ஏமாற்றும் டாக்டர்களே தங்களின் பெயர் முன்னால் Dr. என்று போட்டுக் கொள்ளும் பொழுது, சமூகத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளும் ஒவ்வொருவரின் பெருமையும் தோழர் என்ற அந்த சொல்லுக்குள்ளே அடங்கும் போது தோழர் என்று பெயருக்கு முன்னே அவர் எழுதியதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?.

   2. உன்னைப் போன்று வெறும் வெள்ளைக்காரனின் வாந்தியை (பாடத்தை)குடித்தால் தான் யாவருக்கும் புலமை வரும் என்று நினைத்திருந்தாயோ ?..

   படிக்காதவர்களும் புரட்சியின்பால் ஈர்க்கப்பட்டு, படித்தறிந்து மக்களுக்கான இலக்கியங்களை மக்களுக்கு கொண்டு சென்ற கதையை நடிகைகளின் தொப்புளைக் காண நா தொங்க அலையும் நாய்கள் எவ்வாறறியும் ?.. தோழர்.செங்கொடி அப்பகுதியில் இருளர் சமுதாய மக்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பவர்.விட்டால் அவருக்கு எழுதப்படிக்க எப்படித் தெரியும் என்று கேட்பாய் போல ?..

   முத்துக் குமாரின் மரணம் தமிழகத்தை எழுப்பியது போல என் மரணமும் எழுப்பட்டும் என்று எழுதுவதற்கு தமிழ் புலமையின் அவசியம் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் யுப்பி நாய்களுக்குத் தான் இதற்கெல்லாம் தமிழ்ப் புலமை தேவை என்று தோன்றும். “மனிதன்” எந்த ரகம்?.

   3.சாயந்திரம் அஞ்சு மணிக்கு ரோட்டுல யாரும் இருக்க மாட்டாங்களா ?.. மூளைய மயிரு மளிக்கிற இடத்துலயே வழிச்சுப் போட்டுட்டு வந்தியா என்ன ?..

   4,5,6. அவர் இதற்காகத் தான் தீக்குளித்தார் என்பதை ஒரு சக மனிதனுக்கு தோழர். செங்கொடியின் வாழ்வு முறை மற்றும் அவரது சமூகப் பங்களிப்பு ஆகியவற்றைக் கொண்டு விளக்கலாம். ஆனால் தன் தாயிடமே ”என்னை உன் கணவனுக்குத் தான் பெற்றாய் என்பதற்கான ஆதாரம் என்ன?” என்று கேட்க வல்ல ஈனர்களுக்கு புரியவைக்கும் விளக்கமோ அதனை விளக்கும் பொறுமையோ எனக்கு இல்லை.
   நாகரிகம் கருதி இதனை இத்துடன் முடிக்கிறேன் என்று நினைக்காதே.
   வினவு தளத்தில் கருத்துக்கள் மட்டறுப்புச் செய்யப்படும் என்பதற்காகத் தான் இத்துடன் முடிக்கிறேன். ஓடிவிடு …

  • நம் சமுக்த்தில் பெண்களின் போராட்டத்தை மட்டும் மதிப்பது இல்லை.மதிப்பது மட்டும் அல்ல அது போராட்டமாகவே ஏற்றுக்கொள்வது இல்லை.அதனால் தான் முத்துக்குமாரரின் இறப்பைக் கூட, தமிழ் ஈனப்பிரச்சனைக்காகத் தான் இறந்தார், என்பதை ஏற்றுக் கொள்ள முடிந்த தினமலரால்,செங்கொடியின் தியாகத்தை சீரணிக்க முடியவில்லை.அதனால் தான் அவரது இறப்பினை காதல் தோல்வி என்றுக் கூறுகிறது.பெண்ணின் போராட்டத்தை மழுக்கடிக்க இந்த ஆணாதிக்க சமுகம் பயன்படுத்தும் கருவி “அவளின் ஒழுக்கத்தை கேள்விக் குள்ளாக்குவது”,செக்ஸ் குற்றச்சாட்டில் கைதான,காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் தேவநாதனை செருப்பால் அடிக்கத்துணிந்த செங்கொடிக்கு,தன்னை காதலிதது கைவிட்டவணை கூணடில் ஏற்றும் தைரியம் இல்லாமலா? தன்னை தானே எரித்துக் கொள்கிறாள்.அந்த கடுதாசி அந்த பெண்மணி வீட்டில் கண்டு எடுக்கப் பட்டதாம்…கண்டு எடுத்தவணை உதைத்து கேட்டால் உளறி விடுவான்…என்றுக் கூறும் “மனிதனே”,உங்கள் தினமலர் காரனை பிடித்து உதைத்துக்கேட்டால் புரிந்துவிடும் யார் செங்கொடியை காதல் தோல்வியில் இறந்ததாக எழுதச்சொன்னார்கள் என்று.பெண்களின் மீது ஒழுக்க ரீதியான் குற்றச்சாட்டை வைத்தால்,பெண்களின் போராட்டம் மழுக்கடிக்கப்படும் என்று மனபால் குடிக்காதீர்கள்.பெண்களே!இது போன்ற கயவ்ர்களின் நயவஞ்சகப் பேச்சை கேட்டு துவண்டு போவாதீர்கள்.துணிந்து நில்லுங்கள்.வீதியில் இறங்கிக் கொடிப்பிடிப்பதால் வேசி என்ற பட்டம் அளிப்பார்களேயானால்,அதனை மனபூர்வமாக ஏற்றுக்கொள்வோம்.நம்மால் வேசி என்ற பெயராவது புனிதமாட்டும்.
   நான் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான் ,

   வினவு வாசகர்களே!தமிழின உணர்வாளர்ளே!மனிதநேயம் படைத்த மனிதர்களே!

   நீங்கள் உண்மையான தமிழனாக இருந்தால்,ஒரு தாய் வயிற்றில் பிறந்தவராக இருந்தால்

   தினமலரை புறக்கணியுங்கள்!
   தினமலரை புறக்கணியுங்கள்!

 39. என்ன காரணங்களை முன் வைத்தாலும் தற்கொலை போராட்டத்தை நான் ஆதரிக்கமாட்டேன் நண்பர்களே,உயிரோடு இருந்து இன்னும் ஆயிரம் நல்ல விசயங்களுக்கு போராடலாமே…

  • நண்பரே தற்கொலை என்பது ஒரு தீர்வல்ல என்பது அனைவரும் அறிந்ததே..

   ஆனால் இங்கே தோழர் செங்கொடியின் தியாகத்தை அப்படி உதாசீனப்படுத்த வேண்டிய அவசியம் என்ன ?.

   அவரது கடிதத்தில் அவரது உணர்வுகள் உங்களுக்குப் புரியவில்லையா ?..

   மூவரின் மரணத்தைக் காப்பாற்ற மட்டும் அவர் அங்கே தீக்குளிக்கவில்லை. நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கவில்லை என்பதற்காகவும் அவர் அங்கே தீக்குளிக்கவில்லை. தோழர் முத்துக்குமாரின் மரணம் எவ்வாறு மக்களைத் தீயாய் வெகுண்டெழச்செய்ததோ அவ்வாறே தனது மரணமும் தமிழகத்தில் ஒரு தீயைப் பரப்பட்டும், அதன் மூலம் உருவாகும் மக்கள் எழுச்சி மட்டுமே மூவரின் விடுதலைக்கான தீர்வு என்ற எண்ணத்தில் தான் அவர் தனது உயிரை தியாகம் செய்துள்ளார்.

   அதனை ஏற்க மறுக்கும் மூளைகளை என்ன செய்வது ?.. அதனை உணர மறுக்கும் எருமைத் தோல்களை என்ன செய்வது ?..

 40. இம் மாக்களை உணர்வால் தட்டி எழுப்புங்கள் தோழரே, உயிரால் அல்ல.

  மூன்று உயிர் காக்க ஓர் உயிர் பலியா? உங்கள் உயிரால் இம் மாக்கள் உணர்வுறுவார்களா, வெற்று ஜடங்கள், சமூக நிகழ்வுகளை வெறும் செய்தியாகவே பார்க்கும் வெற்று ஜடங்கள்..

  போராட்டங்களை வெகு ஜன போராட்டமாக மாற்றுங்கள், அவர்களையும் பங்குரச்செய்யுங்கள். அப்போதுதான் வென்றெடுக்க முடியும்.
  போராட்டத்தை தொடர சமூக அக்கறை கொண்ட உங்களை போன்றோரின் அவசியத்தை அறியீரோ?

  வேண்டாமே மேலும் ஒரு உயிர் தியாகம், களப்பணியில் வெல்வோம்.


  சஹா, சென்னை.

 41. ் 1 உயிரை எடுத்தற்கு… மூன்று பேரின் உயிரை எடுப்பதற்கு உத்தரவு இட்டது நீதிமன்றம்…. இது எந்த வகையிலும் நியாயமான செயல் இல்லை….
  ் அவர் இறந்த பின்பு இந்த நாட்டில் யாருமே கொலை செய்யப்பட வில்லையா????
  ் கொலை செய்தவர்கள் அனைவரையும் தூக்கில் இட்டதா இந்த நீதிமன்றம்….???
  ் 1 உயிர் = 3 உயிர் + (செங்கொடி)
  ் செய்த தவறை என்ணி வருந்தும் போது கடவுள் கூட மன்னித்து விடுவார்…
  – தோழர் கீதா

 42. “முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தப்ப முத்துக்குமார் தன்னைத்தானே எரிச்சுகிட்டது செங்கொடி மனசுல ஆழமான தழும்பா பதிஞ்சு போச்சு”.இவங்க தற்கொலைய கண்டுகாதிங்க. இல்லேனா அடுத்து எவனாவது சாவான். முத்துக்குமார் இறந்ததால் என்ன பெரிதாக மாற்றம் வந்தது? இப்ப அவர உதாரணம் காட்டி இவங்க.. இவங்கள உதாரணம் காட்டி யாரோ???

 43. தோழர் செங்கொடிக்கு எனது வீரவணக்கம்,
  உனது இறப்பின் செய்திக் கேட்டு நான் உறைந்து போனேன்,
  ஆடைகளை கழற்றி,அங்கங்களை காட்டி
  தன் அழகினை நினைத்து பெருமை படும்
  பெண்களுக்கு மத்தியில் உன்னால் எப்படி முடிந்தது
  உன் அங்கங்களை கருக்கிக்கொள்ள!
  அன்று,
  உன் அன்னையை(சித்தி) கொன்றது-ஆணாதிக்கம்
  இன்று,
  உன்னை கொன்றது ஆளும்வர்க்கம்.

  • என் உயிருனும் மேலான தோழியே! நான் கூருகிறேன்: தோழர் செங்கோடியின் மரணம் நினைத்து சோகம் தான் அடைந்தேன்!
   ஆனால்?!!!!!!!!!!!!!!:
   தாங்கள் எழுதியதை பார்த்து கண்ணீர் வடிதேன்! இவன்:
   உயிர் காவலன்.

 44. செங்கொடி போன்ற துணிச்சல்மிக்க பெண்களின் மரணம்!நம் நெஞ்சை பிசைகிறது!அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் நபர்கள் முதலில் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.இது போன்ற ஆற்றல்மிக்க பெண்களை குறிப்பிட்ட ஒரு திசையில் மூலைச்சலவை செய்வதை கைவிடுங்கள்!எத்தகைய கொள்கைகளுடைய இயக்கமாக இருந்தாலும்-அதன் தலைவர்கள் யாராவது இதுவரை தீக்ளித்துள்ளார்களா? சிந்தியுங்கள்!தயவு செய்து வாழவேண்டிய குருத்துக்களை அழிக்காதீர்கள்.தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடக பதிவு-theeranchinnamalai.blogspot.com

 45. செங்கொடி ஏந்தி உரிமைகளுக்கு போராடும் அன்பர்களே!
  இவ்வுலகில் நாம் நினைத்ததை சாதிக்க முடியவில்லை,
  நம் ஒப்பாரிகள் ஓலங்கள் யாரின் செவியையும் எட்டவில்லை,
  நம்மின் போராட்டங்கள், முழக்கங்கள் வெற்றிபெறுவதில்லை,
  என்றாலும் போராடுகிறோம்… எப்போதேனும் கிடைக்கும் வெற்றிக்காக…
  இந்நம்பிக்கை எம்மை உழைக்க வைக்கின்றன..
  தியாகிக்க வைக்கின்றன… உயிரூட்டுகின்றன…..

  இதே நம்பிக்கை இன்னொரு வாழ்க்கையின் மீது வையுங்கள்
  நீங்கள் விரக்தியடைய மாட்டீர்கள்..
  அது இஸ்லாம் கூறும் மறு உலக வாழ்க்கையே..

  இனி செங்கொடிகள் தீக்கரையாக மாட்டார்கள்..
  தூக்குக்கயுருகளில் தொங்க மாட்டார்கள்..
  நம்பிக்கையுடன் போராடுவார்கள்..
  வெற்றி நமாதாகும்..

 46. தற்கொலை செய்து கொள்வது ஒரு கோழைத்தனம் – பகத்சிங்

  விசாரணை என்ற பெயரில் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய சிறப்பு நீதிமன்ற நாடகத்தில் விசாரணைக் காட்சிகள் முடிவடைந்தன. புரட்சியாளர்கள் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தீர்ப்புக்காக காத்திருந்தனர். ஒரு நாள் தோழர்கள் சிறையில் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்ட போது யார், யாருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற விவாதம் நடந்தது. தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று சுகதேவ் எதிர்பார்த்தார். ஆனால் ஆயுள் தண்டனைக் கைதியாக 20 ஆண்டுகள் சிறையில் காலம் கழிப்பதை அவர் விரும்பவில்லை. இது குறித்து அவர் சிறைக்குள் பகத்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார்.
  சுகதேவ் தனது கடிதத்தில் தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதியிருந்தார். ஒன்று, தனக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட வேண்டும் ; இல்லாவிட்டால் விடுதலை செய்யப்பட வேண்டும். இரண்டுக்கும் இடைப்பட்ட தண்டனை எதிலும் தனக்கு உடன்பாடில்லை என்று அவர் கூறியிருந்தார்.

  அக்கடிதத்திற்கு பகத்சிங் பின்வரும் பதில் கடிதம் எழுதினார்.
  மேலும் படிக்க…
  http://ieyakkam.blogspot.com/2011/09/blog-post.html

 47. நான் மிகவும் வருத்தம் அடைகிறேன்! நீங்கள் செய்த இந்த வீர செயல் தமிழின மக்களின் மனதில் பதிந்து எதிரியை எரிக்கும் என்று நான் சாபம் இடுகிறேன்!!!!!!!!!!!!!! இவன் தோழர் செங்கோடி பிரியன்!!!!!

 48. மூவர் தூக்கிற்கு காரணமான பாசிச காங்கிரசு அரசு, பாசிச ஜெயா, அநீதியான நீதிமன்றங்கள் மீதான நமது போராட்டம் மக்கள் அரங்கில் தொடரட்டும். செங்கொடி எனும் அந்த இளம்பெண்ணின் உயிரை இனி மீட்க முடியாது. ஆனால் அந்தப் பிஞ்சு உள்ளம் கவலைப்பட்ட சூழ்நிலையையாவது மாற்றுவோம்.

  தோழர் செங்கொடி சென்று வாருங்கள், உங்களைப் புரிந்து கொண்ட தோழர்கள் பலர் இங்கிருக்கிறார்கள், உயிரைக் கொடுத்து நீங்கள் எழுப்பியிருக்கும் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்ற போராடுவார்கள். உங்கள் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தின் மீது ஒரு நெருப்பாய் பற்றவைக்கும், போய் வாருங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க