இந்தியாவின் தேசிய கௌரவங்கள் லிஸ்ட்டில் கவர்னர்களுக்கு முக்கிய இடமுண்டு. அரசியல் சட்டத்தின் ஆட்சியை அவர்தான் பாதுகாக்கிறார் என்ற பில்டப்பும், கவர்னர் மாளிகை, குடியரசு தின மரியாதை என்று ஏகப்பட்ட அயிட்டங்களும் அதில் அடக்கம்.
அப்பேற்பட்ட மரியாதை கொண்ட இந்த பதவியை பிக்பாக்கெட் என்று அழைப்பதில் சில அப்பாவி தேசபக்தர்களுக்கு வருத்தம் இருக்கும். போகட்டும், வருத்தத்தை கொஞ்சம் தாங்கிக் கொண்டு மீதியைப் படியுங்கள், நீங்களே கும்முவீர்கள்!
வெளியே குதிரை வளர்ப்பு தொழிலைக் காட்டிவிட்டு உள்ளுக்குள் முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியிருக்கும் ஹசன் அலியை அமலாக்கப்பிரிவு கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இந்த ஹசன் அலி சிங்கப்பூர் போவதற்கு பாஸ்போர்ட் வாங்கிக் கொடுத்தவர் தான் தற்போது புதுச்சேரியில் கவர்னராக இருக்கும் இக்பால் சிங். அப்போது பீகார் மாநில காங்கிரஸ் எம்.பியாக இருந்தவர்.
இந்த சிங்கப்பூர் விஜயம் மூலமும் கருப்புப் பணம் வெளியேறிக்கிறது என்பதால் ஹசன் அலிக்கும், கவர்னர் சிங்குக்கும் உள்ள தொடர்பை தற்போது விசாரித்து வருகிறார்கள். எனினும் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த கவர்னர் என்பதால் சிங் அப்படி சுலபமாக சிக்கவிடமாட்டார்கள்.
நேற்று அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் புதுச்சேரி பந்த் நடந்திருக்கிறது. நோக்கம் ஊழல் கவர்னரை மாற்றச் சொல்வது. அதிலும் கூட அந்த சிங்கை தண்டிக்க வேண்டும் என்று கூட அவர்கள் கோரவில்லை. சரி, ஊழல் கட்சியான அ.தி.மு.கவே மக்கள் ஆதரவுடன் பந்த் நடத்துமளவுக்கு சிங் என்ன செய்தார்?
இவரது அப்பா லால்சிங், ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது அடிபட்டவராம். அந்த தகுதியை வைத்து அரசியலில் ஆளான இக்பால் சிங் மோசடிகளின் மூலம் சொத்து பத்துக்களை பெருக்கி வருகிறார். சரக்குக்கு பேர் போன புதுச்சேரியில் இவர் குடிக்கும் சீமைச்சாராய விஸ்கியின் ஒரு ஃபுல்லின் விலை ஒரு இலட்சமாம். கவர்னரின் உதவியாளரான அதிகாரிகளே இதை புரோக்கர்கள் மூலம் வாங்கி வைப்பார்களாம். என்ன விடயமாக இருந்தாலும் கவர்னரோ அவரது உதவியாளரான எஸ்.கே.சிங்கோ இலஞ்சத்தை வெளிப்படையாக கேட்டு வாங்குவார்களாம்.
வீட்டுவசதித் துறையில் பெரும் ஊழல் நடந்ததாக ஒரு புகார் கவர்னருக்கு வர சிங் என்ன செய்தார் தெரியுமா? உடனே அந்த மந்திரியை தொடர்பு கொண்டு பங்கு கேட்டு மிரட்டினாராம். இவையெல்லாம் சில பத்திரிகைகளில் வந்துள்ளன. ஒருவேளை இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று தேசபக்தர்கள் கேட்கக்கூடும். அதற்காகவே ஒரு 70mm ஸ்பெஷல் கொள்ளை ஒன்று நடந்து ஆதாரப்பூர்வமாக அனைத்து பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது.
தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் மகன் சுகன்ஜித்சிங்கும், இந்த இக்பால் சிங்கின் மூத்த மகனும் சேர்ந்து ஒரு அறக்கட்டளையை (கொள்ளையடிக்கிறதெல்லாம் இப்ப இந்த பேரில்தான்) துவங்கி அதன்மூலம் ஒரு மருத்துவ கல்லூரியை தொடங்க திட்டமிட்டனர். டாக்டர் கல்லூரியென்றால்தான் நன்கொடையை வைட்டமின் சி-யில வாங்க முடியும். இதற்கு காரைக்கால் அருகே நெடுங்காட்டில் 50 ஏக்கர் நிலத்தை வளைத்திருக்கின்றனர். அடுத்து புதுவை அரசின் அனுமதி கோரிய போது சுகாதார செயலாளர் விஜயன் மறுத்திருக்கிறார்.
உடனே அவரை விடுமுறையில் அனுப்பிவிட்டு வேறு அதிகாரியைப் போட்டு காரியத்தை சாதித்த போது விசயம் வெளியே வந்து நாறத் துவங்கியிருக்கிறது. இதில் பேரு ரிப்பேரு ஆனதும் நம்ம இக்பால் சிங், அப்போது கூட மனமில்லாமல் கல்லூரிக்கான அனுமதியையும், இடத்தையும் விற்பதற்கு முயற்சி செய்கிறாராம். இது நடந்தால் ஊழல் செய்யாத மாதிரியும் இருக்கும். நிஜத்தில் பல பத்து கோடிகளை சாப்பிட்ட மாதிரியும் இருக்கும்.
கடைசியாக்த்தான் இந்த சர்தார்ஜியோட நட்பு கருப்புப் பணக்குதிரை ஹசன் அலியோட இருக்கிறது என்பது தெரிய வந்தது. இதற்க்காக டெல்லி சென்று விளக்கம் கொடுத்த சர்தார்ஜி இன்னும் பதவி விலகாமல் ஜம்மென்று இருக்கிறார். அப்படியே அவர் பதவி விலகினாலும் அது ஒன்றும் தண்டனை இல்லையே? கொள்ளையடித்த பணம் இருக்கையில் அடுத்து மேகலாயாவிற்கு கூட கவர்னராக செல்லலாம்.
கவர்னர் மாளிகை என்று எல்லா மாநிலங்களிலும் ஒரு பெரும் நிலப்பரப்பை வளைத்து மாளிகைகளை கட்டி, நூற்றுக்கணக்கான வேலையாட்கள், அதிகாரிகளைப் போட்டு, இவர்களுக்கு செய்யப்படும் மரியாதை என்ன, போற்றுதல் என்ன, புடலங்காய் என்ன…
புதுச்சேரி போன்ற சிறு மாநிலங்களிலேயே இவர்கள் இப்படி ஆட்டம் போட்டால் பெரிய மாநிலங்களில் எப்படி ஆட்டம் போடுவார்கள்? ‘ரப்பர் ஸ்டாம்பு’ என்று கேலி செய்யப்படும் இந்த ஜந்துக்களே இப்படி என்றால் அதிகாரம் கொண்ட அமைச்சர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்?
காங்கிரசு கட்சி தனது பழைய பெருச்சாளிகள் பலருக்கும் இப்படித்தான் வாழ்வும், தொழிலும் அளித்து வருகிறது. ஹைதராபாத்தில் என்.டி.திவாரி போட்ட குத்தாட்டம் உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது அந்த குத்தாட்டம், வழிப்பறிக் கொள்ளையாக புதுச்சேரிக்கு வந்திருக்கிறது. நீங்கள் மிகவும் மதிக்கும் இந்திய அரசியல் சட்டத்தின் பாதுகாவலர்களான கவர்னர்களின் நடைமுறை இப்படித்தான் இருக்கிறது. இவர்களை தண்டிக்க வேண்டுமென்றால் இந்த பெருச்சாளிகளை உருவாக்கும் அரசியல் அமைப்பை தகர்க்க வேண்டும். தேவையில்லை என்பவர்கள் என்ன செய்யலாம் சொல்லுங்கள்!
மே தினம்! இந்த உலகில் மனித குலத்தின் ஆகப் பெரும்பான்மையினருக்கு, உரிமைகளை பெற்றுத் தந்த தினம். செந்நீர் சிந்தி, தியாகம் புரிந்து போராட்டத்தின் மூலமே மறுக்கப்பட்ட நமது உரிமைகளை கைப்பற்ற முடியும் என்று நிரூபித்த தினம்!
இது ஏதோ தொழிலாளர் தினம் என்று மட்டும் சிலர் நினைக்கிறார்கள். இல்லை நீங்கள் எந்த வேலை செய்பவராக இருந்தாலும் உங்களுக்கு கிடைத்திருக்கும் எட்டுமணி நேர வேலை, ஓய்வு, விடுமுறை, பணிப்பாதுகாப்பு, இதர உரிமைகள் அத்தனையும் முதலாளிகளின் கருணையால் கிடைத்து விடவில்லை. அவை ஒவ்வொன்றும் முதலாளிகளை அடி பணியவைத்து தொழிலாளர் வர்க்கம் கொண்டு வந்த அடிப்படை உரிமைகள்.
தனது தொழிற்சாலையில் அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்த தொழிலாளி வர்க்கம்தான் பின்னர் அனைத்து மக்களின் விடுதலைக்காக சோசலிசப் புரட்சிகளையும் நடத்தியிருக்கிறது. இன்று உலகில் சோசலிச முகாம் இல்லை என்பதால் அதன் முக்கியத்துவம் குறைந்து விடவில்லை, முன்பை விட அதிகமாயிருக்கிறது.
அமெரிக்காவின் உலக மேலாதிக்கமும், மறுகாலனியாக்கமும் முழு உலகையும் அரசியல், சமூக, பொருளாதாரம் அத்தனையிலும் சுரண்டி ஆதிக்கம் செய்கிறது. மேலாதிக்க வெறி பிடித்தலையும் அதன் ஆக்கிரமிப்பு போர்கள் அதிகரித்து வருகின்றன. ஆப்கான், ஈராக், லிபியா, பாக்கிஸ்தான் என்று பல நாடுகளில் அதன் ஆதிக்க வெறிக்காக அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை பன்னாட்டு நிறுவனங்கள், அமெரிக்காவின் ஆசிபெற்ற தரகு முதலாளிகள் சேர்ந்து ஒட்டச் சுரண்டுகின்றனர். தேசத்தின் தலைவிதியே இவர்களது லாபவெறிக்காக திருத்தி எழுதப்படுகிறது. சமீப காலமாக இருந்து வந்த குறைந்த பட்ச உரிமைகள் கூட இன்று தொழிலாளி வர்க்கத்திற்கு கிடையாது. சிறப்பு பொருளாதா மண்டலங்கள் என்ற பெயரில் அடிமைகள் மட்டும் வசிக்கும் முதலாளிகளின் சமஸ்தானங்கள் அதிகரித்து வருகின்றன.
நாடு வல்லரசாகிறது என்ற பெயரில் டாடா, அம்பானி, மிட்டல் போன்ற தரகு முதலாளிகள் நாட்டின் அரசியல் பொருளாதாரத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன், மேற்குறிப்பிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளையை சட்டப்படியே நடத்த அரசே கொள்கை வகுத்துத் தருகிறது.
நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில், அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் இலவசங்களை போட்டிப்போட்டுக் கொண்டு அறிவித்தார்களே ! எந்த கட்சியாவது (பெயரளவில் இருக்கின்ற) “தொழிலாளர் சட்டப்படி, ஊதிய உயர்வு, போனஸ் பிற உரிமைகள் வழங்க உத்திரவாதப்படுத்துவோம் ! 1926 தொழிற்சங்க சட்டப்படி சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமையை அங்கீகரிப்போம். இதை மீறும் முதலாளிகளை தண்டிப்போம்” என்று சொன்னார்களா ? யாரும் சொல்லவில்லை. ஆக… உரிமைகளற்ற இலவசம் என்பது உயிரற்ற உடலுக்கு சமமானது. அந்த வகையில் இன்றைக்கு தொழிலாளர்கள் மட்டுமல்ல, இதரப் பிரிவு உழைக்கும் மக்களின் வாழ்க்கையும் சூறையாடப்பட்டு நாடோடிகளாக்கப்பட்டிருக்கிறார்ள். இந்த கொடுமைகளுக்கு காரணமான, கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளையையும், இதற்கு அடிப்படையாக இருக்கும் மறுகாலனியாக்கத்தையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.
இந்த மே தினத்தில் இந்த கடமையினை அறைகூவலாக விடுத்து ம.க.இ.க வும் தோழமை அமைப்புகளும் தமிழகம் முழுவதும் மே தினத்தை போராட்ட நாளாக கடைபிடிக்கின்றன. நுகர்வு கலாச்சார பண்டிகைகளையே கொண்டாடும் நாம் உண்மையில் கடைபிடிக்க வேண்டிய நாள் மே தினமாகும்.
மே நாள் என்ற உரிமைக்கு வித்திட்ட நாளில், அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களையும் போராட்டத்திற்கு அறைகூவும் விதமாக நடைபெறவிருக்கும் பேரணியில் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நமது அரசியல், சமூக கடமைகளை நினைவுபடுத்தும் இந்த நாளில் கலந்து கொள்வதன் மூலம் உங்களது அரசியல் வாழ்வை ஆரம்பிக்கலாம். வாருங்கள், விடுதலைப்பணியில் சேருங்கள்!!
________________________________________
மே நாள் பேரணி
மே 1, 2011
பேரணி துவங்குமிடம்: கல்லறை பேருந்து நிறுத்தம், ஜேம்ஸ் தெரு அருகில், பூந்தமல்லி
நேரம்: காலை 9.30 மணி
தலைமை: தோழர் முகுந்தன், தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு
முழக்கங்கள்:
மே நாள் வாழ்க!
சர்வதேசப் பாட்டாளி வர்க்க ஒற்றுமை ஓங்குக!
அமெரிக்க உலக மேலாதிக்கத்தையும் மறுகாலனியாக்கத்தையும் முறியடிப்போம்!
சட்டபூர்வமாக அரசு சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் பகற்கொள்ளை அடிக்க வழி வகுக்கும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயத்தை முறியடிப்போம்!
கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு பாதை வகுத்துக் கொடுத்து லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் கொட்டத்தை ஒடுக்குவோம்!
ஊழல் ஒழிப்பு, நல்லாட்சி என்று பேசி கார்ப்பரேட் பகற்கொள்ளையை மூடிமறைக்கும் ஊடகங்கள், ‘உத்தமர்கள்’, தன்னார்வக் குழுக்களின் முகமூடிகளைக் கிழித்தெறிவோம்!
கார்ப்பரேட் கொள்ளையர்கள், ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளை நாமே தண்டிக்க, நக்சல்பாரி பாதையில் அணிதிரள்வோம்!
_____________________________
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை, அலைபேசி: 94448 34519
ஊழலை ஒழித்துக் கட்டிவிட்டு தான் மறுவேலை என்று இந்தியாவின் நீதித் துறையும் மத்திய புலனாய்வுத் துறையும் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருப்பது போல ஆங்கில செய்தி ஊடகங்களில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் சீசனில் சிறப்பாகக் கல்லா கட்டி முடித்த பின், இப்போது செய்திச் சேனல்களின் ஸ்டூடியோக்களில் நடந்து கொண்டிருப்பது நியாயத் தீர்ப்பு சீசன்.
துரித வாழ்க்கை, துரித உணவு, அதிவேக பைக், அதிவேகக் காதல், அதிவேக விளையாட்டு என்று அனைத்திலும் அதிவேகத்தை விரும்பும் அவர்களின் நேயர்கள் தொய்ந்து போய் விடக்கூடாது என்பதற்காக நீதியையும் துரிதப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் விசாரணைக்கு அழைத்து வரும் போது கல்மாடியின் மேல் எரியப்பட்ட பிய்ந்த செருப்பின் மனசாட்சியைப் பற்றிய வியாக்கியானங்களால் செய்திச் சேனல்கள் நிரம்பி வழிகின்றன.
இது ஊழல் செய்திகளின் படையெடுப்பால் நொந்து போய் அவலச் சுவையில் ஆழ்ந்திருந்த ஆங்கில செய்திச் சேனல்களின் நேயர்களுக்கு இப்போது ஒரு ரிலாக்சேசன் கிடைத்திருக்கிறது. வாய்க்கால் வரப்புத் தகராறுகளுக்குக் கூட தலைமுறை தலைமுறையாய் நீதி மன்றங்களின் படியேறி சலித்துப் போன சாமானிய மக்களுக்குக் கூட ஒருவேளை உண்மையிலேயே இந்த முறை உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத் தான் தீர வேண்டியிருக்குமோவென்ற சந்தேகம் தோன்றியிருக்கலாம்.
அதன் உண்மைத் தன்மையை நாம் உரசிப் பார்க்கும் முன் மக்களுக்கு மேற்கண்டவாறு நம்பிக்கையூட்டு விதமாக கடந்த சில நாட்களாக ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணைகளிலும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணைகளிலும் நடந்துள்ள சில ‘திருப்பங்களை’ நாம் அறிந்து கொள்வது அவசியம்.
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை விவகாரத்தில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளை விசாரித்து வரும் சி.பி.ஐ, தற்போது அதன் மீது தனது இரண்டாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே தி.மு.கவின் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா மற்றும் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஸ்வான் டெலிகாமின் (தற்போது எடில்சாட்) சாகித் பல்வா மற்றும் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் டெலிகாமின் உயரதிகாரியான ஹரி நாயர் மற்றும் சுரேந்திரா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றப் பத்திரிகையில் கருணாநிதியின் செல்வப் புதல்வி கனிமொழியின் பெயரும் கலைஞர் தொலைக்காட்சியின் உயரதிகாரியான சரத் குமார் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேல் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை அடிமாட்டு விலைக்கு விற்றதற்காக லஞ்சமாகப் பெற்றார்கள் என்பதே. லஞ்சப் பணமான 200 கோடி ரூபாயை மொரிஷியஸில் உள்ள உப்புமா கம்பெனிகள் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு கைமாற்றியுள்ளனர். சி.பி.ஐ விசாரணை துவங்கியதும் அவசரகோலத்தில் அதைத் திருப்பிக் கொடுக்கவும் முயற்சித்துள்ளனர்.
தேசிய அளவிலான ஊடகங்கள் இந்நடவடிக்கைகள் ஊழலை ஒழித்து விடும் என்பது போலச் சொல்வதைக் கடந்து, சி.பி.ஐ விசாரணைகளால் கிடுக்கிப் பிடி போடப்பட்ட தி.மு.க, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை மனதில் கொண்டு வேறு வழியின்றி காங்கிரசு கூட்டணியில் இருந்து வெளியேற முடியாமல் தவிப்பதாகச் சொல்கிறார்கள். கனிமொழியின் பெயரும் சரத் குமாரின் பெயரும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றிருப்பது விசாரணைகளின் களத்தை கருணாநிதியின் வீட்டுக்குள்ளேயே கொண்டு வந்து விட்டதாக அதிரும் பின்னணி இசையின் ஊடாக அறிவிக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க, காமன்வெல்த் போட்டிகளையும் அதில் நடந்த ஊழல்களையும் நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். அதுபற்றிய செய்திகள் வெளியான போது இந்தியாவின் மானம் மரியாதையெல்லாம் சர்வதேச அரங்கில் சிறப்பாகக் கொடி கட்டிப் பறந்தது. தற்போது சுழன்றடித்து வரும் ஊழல் புயல்களுக்கான ஒரு முன்னறிவிப்பாக அமைந்தது காமன்வெல்த் ஊழல்.
முறைகேடுகளைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகி நாற்றமடிக்கத் துவங்கிய பின்னும் அப்போது காமன்வெல்த் போட்டிகளின் பொறுப்பாளராகவும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்த சுரேஷ் கல்மாடியின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆ.ராசாவுக்குக் கொடுக்கப்பட்டதைப் போல் அவருக்கும் போதிய அவகாசம் அளிக்கப்பட்டது.
காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழலைப் பற்றிய பரபரப்பான செய்திகளின் வெளிச்சத்தில் அது தொடர்பான டெண்டர் விவரங்கள், பட்ஜெட் ஒதுக்கீடு, கான்ட்ராக்ட் விவரங்கள் அடங்கிய முக்கியமான கோப்புகள் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்புக் கமிட்டி அலுவலகத்திலிருந்து திடீரென்று ‘காணாமல்’ போன செய்திகள் அமுக்கப்பட்டது. இப்போது தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பசியாலும் பட்டினியாலும் பரிதவித்துக் கிடக்கும் நிலையில், சுமார் முப்பதாயிரம் கோடிகளை அள்ளியிறைத்து, நான்கு லட்சம் குடிசைவாசிகளை தில்லியிலிருந்து விரட்டியடித்து, தில்லி நகரத்துக்கு புதுப் பணக்கார வேஷம் கட்டிவிடும் முயற்சியாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சுமார் பத்து லட்சம் கூலித் தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து, பல நாடுகளில் இருந்து வரும் வெள்ளைத் தோல் துரைமார்களை மகிழ்விக்கும் முகமாய் நாற்பதாயிரம் பெண்களை வடகிழக்கு மாநிலங்களிலிருந்து கடத்தி வந்து விபச்சாரத்தில் தள்ளி நடத்தப்பட்ட அந்த விளையாட்டுப் போட்டி, பல பன்னாட்டுக் கம்பெனிகள் கொள்ளையடிப்பதற்கென்றே நடத்தப்பட்டதாகும்.
அதில் நடந்த ஊழல் முறைகேடுகள் வெளியே கசிந்த போது அது மேட்டுக்குடி இந்தியர்களின் கவுரவப் பிரச்சினையாகிப் போனது. அதே போல் ஸ்பெக்ட்ரம் ஊழலின் பிரம்மாண்டமான பரிமாணம் மக்களை திகைப்புக்குள்ளாக்கியது. ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் எனும் பிரம்மாண்டம் அதிர்ச்சியூட்டியது. தற்போது ரிலையன்ஸ் மற்றும் எடில்சாட்டின் உயரதிகாரிகளுக்கு பிணை மறுக்கப்படும் செய்திகள் நேயர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டியிருக்கின்றன. சுரேஷ் கல்மாடியின் மீது வீசப்பட்ட செருப்பைத் தாங்களே வீசியதாக உணர்வுப் பூர்வமாய் நம்பவைக்கும் விதமாய் ஊடகங்கள் அதை ஒரு திகில் சம்பவத்தைப் போல் காட்சிப்படுத்துகின்றன.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் நடந்த ஊழல்கள் ஊழலுக்கான புதிய இலக்கணத்தைப் படைத்துள்ளன. தனியார் கம்பெனிகள் கொள்ளை அடிப்படிப்பதற்காகவே ஆயிரக்கணக்கான கோடிகளை வாரியிறைத்து நடத்தப்பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள். ஏதாவது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கமிஷன் அடிப்பது, கள்ளக் கணக்குக் காட்டுவது என்பதைக் கடந்து ஊழல் செய்வதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டது தான் காமன்வெல்த் போட்டிகள். நெல்லுக்குப் பாய்ந்ததில் கொஞ்சம் புல்லுக்கும் என்றில்லாமல் – நெல்லே போடாத புல் வயலில் மக்களின் வரிப்பணத்தை அள்ளி வீசினார்கள்.
இப்படி தனியார் முதலாளிகளும், காண்டிராக்டர்களும் மஞ்சக் குளிப்பதற்காகவே பென்சன் தொகையிலிருந்து 171 கோடிகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து 744 கோடிகள், மற்றும் தில்லி கார்பொரேஷன் ஊழியர்களின் சம்பளப் பணத்திலிருந்து 80 சதவீதம் என்று மக்கள் பணத்திலிருந்தும் பிற நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்தும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காகத் திருப்பி விடப்பட்டது. இப்படி மக்கள் பணத்தை எடுத்து மேன்மக்களின் ஓய்வு நேரக் கொண்டாட்டங்களுக்கு செலவழித்துத் தீர்த்ததில் ஊழல் இருப்பதாக முதலாளித்துவ ஊடகங்களோ இப்போது குபீர் ஊழல் எதிர்ப்புப் போராளியாக அவதாரம் எடுத்திருக்கும் அண்ணா ஹசாரேவோ நினைப்பதில்லை.
அதே போல் மக்களுக்குச் சொந்தமான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை அடிமாட்டு விலைக்கு பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகுமுதலாளிகளுக்கும் தாரை வார்த்ததைப் பற்றியும் இவர்கள் மூச்சு விடுவதில்லை. உண்மையில் நடந்த கொள்ளையை அப்படியே மூடி மறைத்து விட்டு அதில் நடந்த சில சில்லறையான நடைமுறைத் தவறுகளைத் தான் ஊழல் என்றும் அது பற்றி நடந்து வரும் விசாரணைகளையும் தான் ஊழல் ஒழிப்பிற்கான முகாந்திரம் என்றும் சொல்கிறார்கள்.
இந்த விசாரணைகளையும் அதன் மீது தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையையும் கைதுகளையும் கவனிக்கும் எவருக்கும் ஒரு விஷயம் துலக்கமாகப் புரியும். அதாவது, ஸ்வான் டெலிகாம் என்பதே ரிலையன்சின் டம்மி கம்பெனி என்பது தெட்டத் தெளிவாக நிரூபணமாகியும் அனில் அம்பானியின் மேல் கைவைக்கத் துணியவில்லை. அதே போல், ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ஊழல் நடந்துள்ளது என்று ஒப்புக் கொள்பவர்களும் கூட, அப்படி அநியாய விலையில் விற்கப்பட்டதைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று சொல்வதில்லை. விசாரணைகளை விறுவிறுப்பாக நடத்துவது போல் பம்மாத்து செய்யும் அரசும் கூட அவ்வாறு சொல்வதில்லை.
மாறாக, ராசாவிற்குப் பின் கபில் சிபல் அத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு ரத்தன் டாடா, சுனில் மிட்டல், அனில் அம்பானி ஆகிய தனியார் தரகு முதலாளிகளை வருந்தி அழைத்து அவர்களது தொழிலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் தமது அரசு உண்டாக்கி விடாது என்கிற உத்திரவாதத்தை அளிக்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய், ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்றும் அறிவிக்கிறார். இவரோடு கூடி கும்மியடித்து தான் ஊழலுக்கு எதிரான சட்டத்தை உருவாக்கப் போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ளட்டும்.
அதே போல், மக்களின் வரிப்பணத்தை வெட்டி கவுரவத்துக்கும் வீண் ஆடம்பரத்துக்கும் வாரியிறைத்ததை ஊழல் என்று முதலாளித்துவ ஊடகங்கள் சொல்வதில்லை – அதன் நேயர்களான படித்த நடுத்தர வர்க்கமும் அவ்வாறு நினைக்கவில்லை. நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடும் போது இப்படி மேனைமக்கள் கூடிக் கூத்தடிக்கவும் இந்தியாவின் இல்லாத கவுரவத்தை பறைசாற்றிக் கொள்ளவும் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளியிறைத்தது ஊழல் இல்லை – அப்படித் தேனை அள்ளி வழங்கிய கல்மாடி புறங்கையை நக்கியது மட்டும் ஊழல் என்கிறார்கள்.
ஆ.ராசாவோ, கல்மாடியோ, கனிமொழியோ தண்டிக்கப்படக் கூடாது என்பதல்ல எமது வாதம். இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால், இவர்கள் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் தான். இவர்களின் செயல்பாடுகள் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தன என்கிற வரம்பிற்கு உட்பட்டது தான். உண்மையில் நடந்த குற்றம் என்பது முற்றிலும் வேறு. அதைச் செய்தவர்கள் இன்னமும் வெளியில் தான் உலாவுகிறார்கள்.
காமன்வெல்த் போட்டியைப் போன்ற ஒரு வீண் ஆடம்பரம் இன்னுமொரு முறை மக்களின் வரிப்பணத்திலிருந்து நடக்காமல் தடுப்பதை இந்த விசாரணைகள் செய்துவிடப் போவதில்லை. அடுத்து இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திட்டத்தோடு அரசு காய் நகர்த்திக் கொண்டு வருகிறது. இன்னும் அதற்கான ஏற்பாடுகள், உள்கட்டமைப்புகள் என்னும் பெயரில் மக்களின் வரிப்பணம் வாரியிறைக்கப் படுவதை இந்த விசாரணைகளும் கைதுகளும் அண்ணா ஹசாரேக்களின் போராட்டங்களும், மெழுகுவர்த்திகளும் தடுத்துவிடப் போவதில்லை. அது இந்தியாவின் கவுரவம் என்கிறார்கள்.
அதே போல், மக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்து கொள்ளை போவதையும் தடுக்கப் போவதில்லை. அவையெல்லாம் பொருளாதார நடவடிக்கைகள் எனும் பெயரில் சட்டப்பூர்வமாக்கியிருக்கிறார்கள். இதோ வேதாந்தாவின் தொழிற்சாலைக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. அவர்கள் அள்ளிச் செல்லும் இயற்கை வளங்கள் என்பது ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை விட பல மடங்கு அதிகமானது. அதற்காக அவர்கள் அரசுக்குத் தரப் போகும் தொகையானது ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்குக் கொடுக்கப்பட்ட தொகையை விட குறைவானது.
இது இயக்குநர் ஷங்கர் போன்றவர்களின் ஒருவகையான தயிர்வடைத்தனமான சிந்தனை. அதாவது தெருவில் எச்சில் துப்புவது குற்றம் – உலக நாடுகளின் கழிவுகளெல்லாம் இந்தியக் கடலில் துப்புவது? பிக்பாக்கெட் அடிப்பது மாபெரும் தவறு – மக்கள் பணத்திலிருந்து வரிச்சலுகையெனும் பெயரில் ஐந்து லட்சம் கோடிகளை முதலாளிகளின் பாக்கெட்டில் வைப்பது? ஆனால் இவர்கள் பிந்தயதை நியாயப்படுத்துகிறார்கள் என்பதை உங்களுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழியின் பெயர் குற்றப் பத்திரிகையில் இழுத்து விடப்பட்டிருப்பதால் கருணாநிதி மனவுளைச்சளுக்கு ஆளாகி விட்டார் என்றும் ஈழத்துக்கு அவர் இழைத்த துரோகங்களுக்கு அது ஆண்டவனாகப் பார்த்து அளித்த ஒரு தண்டனையென்றும் இணையத்தில் வாள் சுழற்றும் தமிழினவாதிகள் கருதுகிறார்கள். இது காரியக்கிறுக்கைப் போன்றதொரு காரியவாத அப்பாவித்தனம்.
இதோ இன்றைய செய்திகளில் பாராளுமன்றப் பொதுக் கணக்குகளுக்கான கமிட்டியின் விசாரணை வரைவு அறிக்கையில் ஸ்பெக்ட்ரம் ஊழலை பிரதமர் மௌனமாக இருந்து அங்கீகரித்தார் என்றும் சிதம்பரத்துக்கு அதில் இருந்த தொடர்பையும் அம்பலப்படுத்தியதை காங்கிரசு தி.மு.க இரண்டுமே ஒன்றாக சேர்ந்து கொண்டு இரட்டைக் குழல் துப்பாக்கியைப் போல எதிர்க்கிறார்கள். கலைஞர் டி.வியில் இருபது சதவீத பங்குகளைக் கொண்ட கனிமொழி குற்றப் பத்திரிகையில் சதிக்கு உடந்தையாக இருந்தார் எனும் அம்சத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார் – அதே நேரம் அதில் அறுபது சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும் தயாளு அம்மாள் சேர்க்கப்படவில்லை.
அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் டெலிகாமின் உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கம்பெனிக்குச் சொந்தக்காரரான அனில் அம்பானியை விசாரணைகளில் இருந்து விடுவித்திருக்கிறார்கள்.
கல்மாடியை காங்கிரசு கட்சியிலிருந்து விலக்கிவிட்டது என்றும் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் அலறிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அவர் நீக்கப்படவில்லையென்றும் விசாரணைகளுக்காக சிறையில் இருப்பதால் ஒரு இடைக்கால ஏற்பாடாகவே தாம் பொறுப்பேற்றிருப்பதாகவும் மல்ஹோத்ரா தெரிவிக்கிறார்.
இந்த ஊழல் விசாரணைகள் மூலம் அரசு புலி வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதும் அதிலிருந்து எப்படி வெளியே வருவது எப்படி முடித்துக் கொள்வது என்பதிலும் தான் அவர்கள் முன் இப்போதிருக்கும் ஒரே பிரச்சினை. கல்மாடி, கனிமொழி போன்ற சில விட்டுக் கொடுப்புகளை செய்து விட்டு ஒரேயடியாக ஊத்திமூடி விட முடியுமா என்றே பார்க்கிறார்கள்.
வாசகர்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசு என்பதே முதலாளிகளின் நலனைக் காப்பதற்கும் அதன் கொள்ளைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்குமே இருக்கிறது. காங்கிரசு பாரதிய ஜனதா என்று இதில் கட்சி வேறு பாடெல்லாம் கிடையாது என்பதே உண்மை. மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவர்களுக்குக் கீழே இருக்கும் ஒரு சில நபர்களை பலியாடுகளாக்கி மற்றவர்களைத் தப்புவிக்கும் முகமாகவே இந்த விசாரணைகளின் திசைவழி இருக்கிறது என்பதை எதார்த்த நிலமைகள் தெளிவாகக் காட்டுகிறது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தேசத்தின் கவுரவம் – அம்பானி உலகப் பணக்காரர் பட்டியலில் இடம் பெறுவது தேசத்தின் கவுரவம் என்று நினைக்கும் நடுத்தர வர்க்க பார்வையின் மூலம் நாம் ஊழலின் ஊற்றுமூலத்தை புரிந்து கொள்ள முடியாது. ஊழலின் மிக அடிப்படையாகவும் ஊற்றுமூலமாகவும் இருக்கும் தனியார்மய தாராளமய உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து வீழ்த்தாமல் ஊழலை ஒழித்துக் கட்டிவிடலாம் என்று நம்புவதே அடிப்படையற்றது என்பது தான் யதார்த்தமான நிலவரமாக உள்ளது.
கனிமொழி குற்றப்பத்திரிகையில் வந்ததை வைத்து தமிழக கிசுகிசு அரசியல் ஏடுகள் எல்லாம் கருணாநிதி குடும்ப பிரச்சினை, கனிமொழியை கைவிட்டு விட்டார்கள், காங்கிரசு உறவு பாதிப்பு, கருணாநிதி டென்ஷன் என்று மாலை நேர டி.வி சீரியல்களின் கதைகளை எழுதுகிறார்கள். இத்தகைய அரட்டைகளின் மத்தியில் நாம் இந்த ஊழல்களின் அடிப்படையைப் புரிந்து கொள்ள முடியாது. அதுதான் இந்த ஊழல் செய்தவர்களின் பெரும்பலம். நமது பலவீனத்தை எப்போது விடப்போகிறோம்?
அண்ணாச்சி கடையில் வைத்துத்தான் கலா, அவளது அம்மா சாந்தி இருவரும் பழக்கம். தினசரி ஒரு ஆண் மளிகை, காய்கறிகளை வாங்குவது குறித்து அவர்களுக்கு வியப்பு. “அம்மா ஊருல இருக்காங்களா, எப்ப வருவாங்க” என்று சமாதானம் கொள்வதும், கூடவே இத்தகைய ஆண்கள் குறித்த பரிதாபமும் கலந்து என்னிடம் பேசுவார்கள். அந்த பரிதாபம் தவறு என்று விளக்க முனையும் போதெல்லாம் சிரித்தவாறு அதை முடித்து விடுவார்கள்.
கலாவுக்கு 25 வயதளவிலும் அம்மாவுக்கு 50க்கு மேலும் இருக்கும். சாந்தி பாசக்கார மதுரையிலிருந்து சென்னைக்கு பிழைக்க வந்தவர். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேல் இங்கு வசிக்கிறார். சுற்று வட்டாரங்களில் நிலையாக வசிக்கும் குடும்பங்கள் அனைத்திலும் அவரது பெயர் பிரபலம். அவரது பேச்சில் மதுரையின் மண்வாடை இன்னமும் மணம் வீசுகிறது. வயது தரும் சுகவீனங்கள் அவ்வப்போது வந்து செல்லும். சில நாட்கள் ஓய்வு எடுக்கலாமே என்றால்,” உழைச்சாத்தானே வாழ முடியும், நம்மளுக்கெல்லாம் லீவும் கிடையாது, ஒழிச்சலும் கிடையாது” என்பார்.
வீட்டு வேலைதான் சாந்தியின் அலுவலக வேலை. இந்த வயதிலும் கூட அவர் நான்கைந்து வீடுகளில் வேலை பார்க்கிறார். ஒரு சில வீடுகளில் இருபது ஆண்டுகளாகவும் பணி செய்கிறார். சுற்று வட்டாரத்தின் நல்லது கெட்டதுகளில் எல்லாம் அக்கறையுடன் கலந்து கொள்வார். வெள்ளேந்தியான அவரது பேச்சு இன்னமும் நகரத்தின் மர்மங்களை கற்றுக்கொள்வதாகவோ, புரிந்து கொள்வதாகவோ இல்லை. ” இந்த வீட்டுக்காரங்க எல்லாம் ஊருக்கு போகும் போது சாவியை சாந்தியம்மா கிட்ட கொடுத்துட்டு போவாங்க! அந்த அம்மா மேல அவ்வளவு நம்பிக்கை” என்று அண்ணாச்சி சொல்வார்.
கலா ஒரு எவர்சில்வர் பாத்திரக் கம்பெனியில் வேலை செய்கிறாள். எப்போதும் களைப்பிருந்தாலும் உண்மையில் களையாக மலர்ந்திருக்கும் முகம். அவளுடன் பேச ஆரம்பிக்கும் போது கண்களில் தோன்றும் மலர்ச்சியை கவனித்திருக்கிறேன். நட்புக்காக அந்த கண்கள் எப்போதும் காத்துக் கொண்டிருப்பது போலத் தோன்றும். வேலையைப் பற்றி கேட்டாள் விரிவாக சொல்வாள். பாத்திரங்களுக்கு பவுடர் போட்டு பாலீஷ் செய்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலை. தினமும் நூறு ரூபாய் சம்பளம். எப்படியும் வாரத்திற்கு 500 கிடைக்கும். விடுமுறை, விடுப்பு என்றால் சம்பளம் கிடையாது. சீசன் குறைவான நேரங்களில் விடுமுறை அதிகம்.
ஆனால் இதுமட்டுமே கலாவின் வேலை அல்ல. காலையில் கம்பெனி வேலைக்கு போகும் முன்பு அம்மாவுடன் ஒரு வீட்டிற்கு சென்று துணிகளை துவைத்துக் காயப்போடுவாள். அந்நேரத்தில் தெருவில் நடந்து கொண்டிருந்தால், “என்னண்ணே இன்னைக்கு என்ன குழம்பு” என்று சிரிப்பாள். காலை வேலைக்கு பிறகு வீடு சென்று குளித்துவிட்டு கம்பெனிக்கு செல்வாள். இந்த நேரக்குறைவிலும் அவளது உடை அலங்காரங்கள் எளிமையுடன் கொஞ்சம் நேர்த்தியாகவே இருக்கும். தினமும் தலை நிறைய பூச்சூடியே செல்வதை பார்த்திருக்கிறேன். பூக்களின் மீது அவளுக்கு நேசம் அதிகம்தான்.
மதிய உணவுக்காக வீடு வந்து இருப்பதை சாப்பிட்டு விட்டு இருக்கும் அரைமணி நேரத்தில் மற்றுமொரு வீட்டிற்கு சென்று பெருக்கி துடைப்பாள். மாலை வந்ததும் இன்னுமொரு வீடு. ஆக மூன்று வீடுகளில் வேலை, பகல் முழுவதும் கம்பெனி வேலை…. ஆனால் இந்த நெருக்கடியான பணிச்சூழல் குறித்து எப்போதும் அவளிடம் சலிப்போ, களைப்போ, விரக்தியோ, புகாரோ காண முடிந்ததில்லை. தற்செயலாக சந்திக்க நேர்ந்தால் ஒரு சிரிப்பு, ஒரு விசாரிப்பு… மலர்ந்து விரியும் அந்தக் கண்களில் இருக்கும் கனிவு என்னை எப்போதும் உற்சாகப்படுத்துகிறது.
சங்கிலித் தொடர் போன்ற இந்த வேலை உலகத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது என்பதை அவளால் தெரிந்து கொள்ள முடியாது. இந்தியா – பாக் கிரிக்கெட் போட்டியின் போது அவளை அண்ணாச்சி கடையில் சந்தித்தேன். இன்று கம்பெனிக்கு போகவில்லையா என்று கேட்டதற்கு, ” அதாண்ணே கிரிக்கெட்டுல இந்தியா ஜெயிச்சுருச்சுன்னு கம்பெனியில அரை நாள் லீவு விட்டாங்க” என்றாள். உண்மையில் அது போட்டியை பார்ப்பதற்காக இந்தியா முழுவதும் அரசு, தனியார் அனைவராலும் அளிக்கப்பட்ட விடுமுறை. அதில் பத்து பேர்கள் வேலை செய்யும் கலாவின் சிறு கம்பெனியும் அடக்கம் என்பது கொஞ்சம் ஆச்சரியம்தான். ஆனாலும் இந்த போட்டியை பார்க்க முனைப்பில்லாத வேறு ஒரு இந்தியாவைச் சேர்ந்தவளான கலாவுக்கு அன்று கொஞ்சம் ஓய்வு கிடைத்திருக்குமோ?
சாந்தி தனது சம்பாத்தியத்தில் இரு மகள்களை கட்டிக் கொடுத்திருக்கிறார். அவர்களையெல்லாம் கோடை விடுமுறைக்கு அழைத்து வந்து கவனிக்க வேண்டும் என்பதை கடமையாகவும், பாசத்தோடும், நிறைவோடும் சொல்வார். சாந்திக்கு ஒரு வயதான அண்ணனும் உண்டு. அவருக்கென்று குடும்பம் ஏதுமில்லை என நினைக்கிறேன். காலை வேலைகளில் இவரும் சாந்தியம்மாவோடு வேலைக்கு போவார். சிறு உதவிகள் செய்வார். மாலை வேளைகளில் தெருவில் இருக்கும் தண்ணீர் தொட்டியின் நீர்விடும் நேரத்தை கவனித்துக் கொள்வார். இதில் வருமானம் ஏதுமில்லை.
இவர்கள் மூவரும் 1000ரூபாய் வாடகையுள்ள குடிசையில் வாழ்கிறார்கள். வீட்டில் சமையல் என்பது கிடைக்கும் நேரத்தை பொறுத்தது. சனி, ஞாயிறு கூட இதே நிலைமைதான். சில வேளைகளில் அருகாமை வீட்டில் இட்டலி விற்கும் பெண்ணிடமிருந்து வாங்குவார்கள். சில நாட்கள் நானும் அங்கு செல்லும் போது, ” என்னண்ணே இன்னைக்கு சமையல் லீவா” கலா கேட்பாள். சாந்தியம்மா கிண்டல் செய்யும் மகளை கடிந்து கொள்வார். இலவச டி.வீ, அடுப்பு எல்லாம் சாந்திக்கும் கிடைத்திருக்கிறது. அது குறித்து பேசும் போது ” எல்லாம் நம்ம பணம்தான். நம்மகிட்ட வசூலித்து நமக்கே தாராங்க” என்றார். தேவை காரணமாக டி.வியை விற்று விட்டார்கள்.
வேலை செய்யும் ஒரு வீட்டில் ஏதோ பழைய பெரிய டி.வியைக் கொடுத்திருக்கிறார்கள். அது அடிக்கடி மக்கர் செய்கிறது. அதை எப்படி சரி செய்வது என்று என்னிடம் ஆலோசனை கேட்பார் சாந்தி. இடையில் தேர்தல் வந்தது. யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்றேன். இரட்டை இலை என்றார். காரணம் உள்ளூர் அ.தி.மு.க பிரமுகர்தான் சாந்திக்கும் தமிழக அரசுக்குமான பாலமாக திகழ்பவர். டி.வி, அடுப்பு கூட அவர் மூலம்தான் கிடைத்ததாம். ஆதலால் தி.மு.க அரசின் நலத் திட்டங்களை வாங்கிக் கொடுத்தபடியால் அ.தி.மு.கவுக்கு ஓட்டு. அவர்களைப் பொறுத்தவரை அந்த அ.தி.மு.க காரர்தான் தமிழக அரசு.
சமீபத்தில் ஒரு நாள் முதன் முறையாக கலாவின் முகத்தில் இருக்க கூடாத ஒரு சோகத்தை கவனித்தேன். விசாரித்த போது வேலை செய்யும் ஒரு வீட்டில் ஏதோ ஸ்டூலில் ஏறி பரணில் இருக்கும் பொருளை எடுக்க முனைந்த போது சாந்தியம்மா தவறி விழுந்து விட்டார். எலும்பு முறிவு எதுவும் இல்லையென்றாலும் கடுமையான வலி. நான்கு நாட்கள் நகர முடியாமல் படுக்கையில் இருந்திருக்கிறார். இதிலிருந்து மீண்டு வந்த போது அடுத்த இடி தயாராக காத்துக் கொண்டிருந்தது.
சில நாட்களாகவே அவருக்கு கடும் தலைவலி. மருத்துவரைப் பார்த்ததில் கண்ணில் பிரச்சினை, அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள். ஓரிரு வருடங்களுக்கு முன்பாகவே கண் பரிசோதனை செய்து கண்ணாடியும் வாங்கி வைத்திருந்தார் சாந்தி. ஆனால் அலுவலக வேலை போல வீட்டு வேலை செய்பவர்கள் அதுவும் சாந்தி அப்படி எந்நேரமும் கண்ணாடி அணிந்திருப்பது சாத்தியமல்ல. அதற்கு அவர் பழகிக் கொள்ளவும் இல்லை.
அறுவை சிகிச்சைக்கு பத்தோ, இருபதோ ஆயிரம் ஆகுமாம். எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் இலவசமாக செய்யலாம், தனியார் மருத்துவமனைகள் போல நன்றாகவும் கவனிப்பார்கள் என்று பேசிப்பார்த்தேன். அவர்களுக்கு அது தெரியாமல் இல்லை. எனினும் அவர்கள் வேலை செய்யும் வீட்டுக்காரர்களில் நெருக்கமானவர்கள் சிலர் தனியாரிடமே செய்து கொள்ளச் சொல்லியிருப்பதோடு கொஞ்சம் பண உதவி செய்வதாகவும் வாக்களித்திருக்கிறார்களாம். வேறு பிரச்சினைகள் என்றால் பரவாயில்லை, கண் இருந்தால்தானே வேலை செய்ய முடியும் என்று சாந்தி யோசிக்கிறார்.
தற்காலிகமாக புதுக்கண்ணாடி ஒன்று வாங்கியிருக்கிறார். அதில் பார்த்தால் கீழே எதுவும் தெரியவில்லையாம். கண்ணிலிருந்தும் நீர் அதிகம் வடிகிறதாம். போகப் போக சரியாகிவிடும் என்று சொல்லியிருக்கிறார்களாம். இதில் சரியாகவில்லை என்றால் அறுவை சிகிச்சையாம். இப்போது முன்பு போல எல்லா வீடுகளுக்கும் சாந்தி செல்வதில்லை. கலாதான் அவற்றை செய்து ஈடு கொடுக்கிறாள். இதனால் பலநாட்கள் கம்பெனி வேலைக்கு போகவில்லை. பெயரில் கம்பெனி இருந்தாலும் அது ஒரு தினக்கூலி கடைதான். என்று வேண்டுமானாலும் போய்க் கொள்ளலாம்.
கம்பெனி வேலைக்கு போகாத நாட்களில் கலாவின் அலங்காரத்தை பார்க்க முடியாது. சமயத்தில் நைட்டி, துப்பாட்டாவோடு கூட மாமவுடன் அவள் அருகாமை வீடுகளுக்கு செல்வாள். சமயத்தில் சாந்தியும் செல்கிறார். என்ன நோவு வந்தாலும் அவர்களால் வேலை செய்ய முடியாமல் இருக்க முடியாதோ என்னமோ?
சாந்திக்கு இப்போது இருக்கும் ஒரே கடமை மகளை திருமணம் செய்து கொடுப்பதுதான். அதற்காக அவர் கொஞ்சம் சேமித்தும் வைத்திருக்கிறார். கண் ஆப்பரேஷனது செலவு குறித்தும் பயம் இருக்கிறது. கலா மணமாகி போய்விட்டால் சாந்தியம்மாவும் அவரது அண்ணனும் என்ன செய்வார்கள்? ஏதாவது படுத்த படுக்கையாகி விட்டால் யார் பார்ப்பார்கள்? வீடுகளுக்கு செய்யும் வேலை நின்று போனால் வருமானத்திற்கு என்ன செய்வார்கள்? இதையெல்லாம் கணக்கிலெடுத்துதான் கலா திருமணம் செய்வாளா? கேள்விகள்…. நெருடுகின்றன.
அவர்களைப் பொறுத்தவரை அத்தகைய தொலை நோக்கு திட்டம், பாதுகாப்பு எதுவும் கிடையாது. அவர்களது உலகத்திற்கு வெளியே இருந்து பார்ப்பதால் மட்டுமே நமக்கு இந்த கேள்விகள் தோன்றுகின்றன. ஏழைகள் வாழ்க்கையை இயல்பாக எதிர்கொண்டு யதார்த்தமாக செல்கிறார்கள். இழப்பின் வலி அவர்களையும் துன்புறுத்தும் என்றாலும் அதன் காலம் குறுகியதுதான்.
இதே மீண்டும் கலாவின் எளிமையான அலங்கார உடையோடு கூடிய பழைய உற்சாகத்தை பார்க்கிறேன். ” என்னண்ணே ஞாயிற்றுக்கிழமைக்கு கறி ஏதும் எடுக்கலியா? ஒரு நா உங்க சமையலை சாப்பிடணும்னே, நீங்க கூப்பிடலேன்னாலும் நான் கண்டிப்பா வருவேன்”.
கடந்தவருடம் அமைதிக்கான நோபல் பரிசை ஓபாமா பெற்றார். இது நமக்கு மட்டுமல்ல, அவருக்கேக் கூட அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். இந்த வருடம் அந்த ’அதிர்ச்சிக்குரிய’ பரிசைப் பெற்றிருப்பவர் சீனத்தைச் சேர்ந்த லியு ஜியாபோ. இவ்விருதைப் பெறுவதற்குமுன் சீனாவிலேயே அவரைப் பற்றி அறிந்தவர்கள் மிகவும் குறைவு. இவ்விருதுக்குப் பின்னரே அவரைப் பெருமளவு மக்கள் தெரிந்துக்கொண்டார்கள். அதன்பின் நிறைய கட்டுரைகளும் செய்திகளும் அவரைப்பற்றி வெளிவந்தன. மனிதஉரிமை போராளி என்று பத்திரிக்கைகள் புகழாரம் சூட்டின. தற்போது அவர் அரசாங்கக் கைதியாக சீனநாட்டின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நோபல் பரிசு பெற்ற விவரம் கூட அவருக்குத் தெரியாது என்றும் அவரை அவரது துணைவி கூடசந்திக்க அனுமதி மறுப்பு என்றும் பரபரப்பான செய்திகள் வெளிவந்தன.
லியுவிற்கு நோபல்பரிசு கிடைத்தது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. நார்வேயிலிருக்கும் பாராளுமன்ற கமிட்டியினால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் மட்டும் லியு நோபல் பரிசை வென்றிடவில்லை. மாறாக, சீனாவுக்கெதிரான அமெரிக்க மேலாதிக்கத்தின் அங்கமாகவே திட்டமிடப்பட்டு லியுவிற்கு கொடுக்கப்பட்டது. சீன நாட்டோடு வலிமையான பொருளாதார பந்தத்தால் அமெரிக்கா பிணைக்கப்பட்டுள்ளது என்றாலும், அரசியல் ரீதியில் அந்நாட்டை அடக்கி வைத்திருக்கவே அமெரிக்கா விரும்புகிறது. வளர்ந்து வரும் சீன பொருளாதரமும் அமெரிக்காவிற்கு இசைவாக இல்லை. எனவே மனித உரிமை என்ற முகாந்திரத்தில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சீனாவை குட்டுவதற்கு அமெரிக்கா தயங்கியதில்லை. இப்போது நோபல் பரிசால் குட்டுகிறது.
இந்த அமைதிக்கானநோபல் பரிசை சீனாவை சேர்ந்தவருக்கு அதிலும் லியூ ஜியாபோவுக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? மனிதஉரிமைக்காக அவர் என்ன செய்தார்? இந்த கேள்விகளுக்கானவிடைகள் நமக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தருகின்றன.
அமெரிக்காவின் அத்தனை மேலாதிக்க போர்களுக்கும் அவர் துணைபோயிருக்கிறார் என்ற உண்மைதான் அது. சீனாவில் இருந்து கொண்டே தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். கொரியா மற்றும் வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த ஆக்கிரமிப்பு போர்களையும், ஈராக் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு போர்களையும் வெளிப்படையாக ஆதரித்திருக்கிறார் இந்த லியு. 2004-ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஈராக் போருக்கு ஆதரவாகப் பேசி ஜார்ஜ் புஷ்ஷை புகழ்ந்திருக்கிறார்.
இந்தப் போர்களும் எல்லாம் பச்சையான மேலாதிக்க வெறிக்காக கொடூரமாக நடத்தப்பட்டவை. அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டிக்கொள்ள நிகழ்த்தப்பட்டவை. அவற்றை ஆதரிப்பதே அப்பட்டமான மிகப்பெரும் மனித உரிமை மீறல். அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலை நிலைப்பாட்டை ஆதரித்து, பாலஸ்தீனியர்களை குற்றம் சாட்டுகிறார் இந்த ’மனித உரிமை போராளி’ லியு.
அப்படிபட்டவரை மனிதஉரிமைப் போராளி என்று மேலைநாட்டு ஊடகங்கள் அழைப்பது சீனவை மட்டுமல்ல உலக மக்களையே அவமதிப்பதாகும். சீன அரசாங்கத்துக்குள் தங்கள் ஏஜெண்டுகளை நுழைக்க முடியாது என்று கண்டுகொண்ட அமெரிக்க முதலான மேற்கத்திய நாடுகள், இதுபோன்ற நூதன வழிகளைத் தேர்ந்தெடுக்கின்றன. சீனஅரசுக்கெதிராகப் பேசியவர் என்பதோடு அமெரிக்காவின் அத்தனை செயல்களுக்கும் கூஜாவாக இருந்தவர் என்பதே இந்த லியூவின் முக்கியமான தகுதிகள். அமெரிக்க ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் இந்த அயோக்கியருக்கு நோபல் பரிசு கொடுத்திருப்பதன் மூலம் சீனாவை மனித உரிமை மீறிய நாடு என்று பிரச்சாரம் செய்வதற்கு தோதாக இருக்கும் என்பதே இந்த அழுகுணியாட்டத்தின் நோக்கம்.
சீனா மனித உரிமையை மீறியதா, பின்பற்றுகிறதா என்பதெல்லாம் அமெரிக்காவின் கவலை அல்ல. அப்படி இருந்திருந்தால் அமெரிக்கா மலிவாக நுகர்வதற்காக சீனத்து தொழிலாளிகள் கசக்கி பிழியப்படுவது குறித்தும், நிலக்கரி சுரங்க விபத்தில் ஆண்டுதோறும் பல நூறு தொழிலாளிகள் இறந்து போவது குறித்தும் அமெரிக்கா பேசியிருக்க வேண்டும். ஆனால் என்றுமே அப்படி பேசியதில்லை.
இந்த நோபல் பரிசின் கண்ணைப் பறிக்கும் விளம்பர ஒளியில் லியு செய்த குற்றம் காணாமல் போய் ஊடகங்கள் சொல்வதே உண்மையென்று மக்கள் நம்பிவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது.
பென் சென்டர் என்ற எழுத்தாளர்கள் அமைப்பின் தலைவராக 2007 வரை லியு இருந்திருக்கிறார். பென் சென்டர், மனிதஉரிமை மற்றும் ஜனநாயகத்துக்கான, ஆங்கிலோ- அமெரிக்க தன்னார்வ மற்றும் தனியார் குழுக்களின் முக்கிய அமைப்பு. இந்த அமைப்பிற்கு படியளக்கும் ஸ்பான்சர்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குத்தான் இந்த பென்சென்டரை வைத்திருக்கிறார்கள். லியு தற்போது அவ்வமைப்பின் போர்டு உறுப்பினர்களில் ஒருவர்.
இவ்வமைப்புக்கும், அமெரிக்கா அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு வாஷிங்கடனை அடிப்படையாக கொண்டு இயங்கும் மற்றொரு பேச்சுரிமை அமைப்பான ஃப்ரீடம் ஹவுஸ் என்ற அமைப்புக்கும் நெருங்கிய தொடர்புண்டு. 1941-இல் இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்க உளவுத்துறையால் கம்யூனிஸ்டுகளுக்கெதிரான பிரச்சாரத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்ளப்பட்ட அமைப்பு இந்தஃப்ரீடம் ஹவுஸ்.
திபெத், மியான்மர், உக்ரைன், ஜியார்ஜியா, செர்பியா மற்றும் கிர்கிஸ்தான் போன்றநாடுகளில் முக்கியமான தன்னார்வக் குழுக்களின் மூலமாக அமெரிக்காவின் அதிகாரவர்க்க நபர்களுக்கான கொள்கைகளை திருப்திகரமாக நிறைவேற்றுவது இந்த அமைப்பின் சமீபத்திய நடவடிக்கைகளாகும். அவ்வமைப்பைச் சார்ந்து சீனாவில் இயங்கும் அமைப்புதான் பென் சென்டர்.
இதிலிருந்தே லியுவின் நிலைப்பாடும், அவருக்கு நோபல் பரிசு வழங்கியதன் நோக்கத்தையும் புரிந்துக்கொள்ளலாம்.
சீனாவில் தாராளமயமாக்கல் முழுமையாக வரவேண்டும்; சந்தை எல்லோருக்கும் திறந்துவிடப்படவேண்டும் ; வெளிநாட்டு வங்கிகளை வரவேற்கவேண்டும்; அந்நிய முதலீடுகளுக்கு வழிவகை செய்ய வேண்டும்; மொத்தத்தில் கார்ப்பரேட்டுகளுக்கும், முதலாளிகளுக்கும், வங்கிகளுக்கும் நாட்டை தாரை வார்த்துக்கொடுக்க வேண்டும் என்று அப்பட்டமாக முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்தான் லியு ஜியாபோ. சீனா இன்னும் அதிகமாக முதலாளித்துவப் பாதையில் பயணிக்கவேண்டும், முதலாளித்துவப் பொருளாதாரத்தில் வளரவேண்டும் என்பதுதான் லியு மற்றும் அவரது ஆதரவாளர்களின் நிலைப்பாடு.
இந்த நோக்கில் சீனா ஏற்கனவே சென்று விட்டது என்பதுதான் உண்மை. அதாவது பொருளாதரத்தில் முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்ட சீனா அரசு அமைப்பில் மட்டும் ஒரு கட்சி சர்வாதிகாரத்தை வைத்திருக்கிறது. அதையும் திறந்து விடவேண்டும் என்பதுதான் லியு மற்றும் அமெரிக்காவின் நோக்கம்.
இதனை அவர் 2008-இல் எழுதியசார்ட்டர் 8-இல் மேற்குலகஅரசியல்பாணியை சீனா கடைப்பிடிக்க வேண்டுமென்றும்,அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்க வேண்டுமென்றும் நிலங்களை தனியார் கையகப்படுத்தப்படவேண்டுமென்றும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். முதலாளித்துவத்தில்தான் வளர்ச்சி அடங்கி இருக்கிறது என்று அவர் கருதுகிறார். மறுகாலனியாக்கத்தை ஆதரிக்கிறார். மேலும், அவர் தலைமை தாங்கிய நிறுவனங்களெல்லாம் அமெரிக்காவின் நிதி உதவியைப் பெற்றிருக்கின்றன.
இந்தநிலையில் அவர் நோபல் பரிசு பெற்றிருப்பதை பொருத்தி பார்க்கலாம்.
அதோடு, லியு ஜியாபோவை நோபல் பரிசுக்குப் பரிந்துரைத்த நபரையும் கருத்தில் கொள்ளவேண்டும்.லியுவை அமைதிக்கான பரிசுக்கு பரிந்துரைத்தவர் வேறு யாருமல்ல, அமெரிக்க அரசாங்கத்திடமிருந்தும், சிஐஏவிடமிருந்தும் நீண்ட காலமாக நிதியுதவி பெற்று வரும் தலாய் லாமாதான் அவர். அவரோடு, லியுவை பரிந்துரைத்தவர்கள் பட்டியலில் பல நேட்டோ அதிகாரிகளும் அடங்குவர்.இதிலிருந்தே அந்தபரிசின் அரசியலை விளங்கிக்கொள்ளலாம்.
நோபல் பரிசானது அமைதிக்கானதாகக் கொள்ளாமல் எதற்கானதாக இருக்கிறது ? அமெரிக்காவின் வழிகாட்டுதலின் பேரால், தன்னார்வக் குழுக்களின் வழியாக அமெரிக்காவின் கூஜாக்களுக்கு விளம்பரம் செய்து வழங்கப்படுகிறது. இதற்கு லியு ஜியாபோ ஒரு கருவி. உலகில் எத்தனையோ நாடுகளில் எத்தனையோ பேர் அரசாங்கக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் நிறவெறிக்கு சான்றாக, முமியா அபு ஜமால் எனும் கறுப்பின பத்திரிக்கையாளர் செய்யாத குற்றத்துக்காக தூக்குதண்டனை கைதியாக நாட்களை பென்சில்வேனியா சிறையில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். லியு ஜியாபோவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் ஒபாமா முமியா அபு ஜமாலை விடுவிப்பாரா என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்கிறார். அதேபோல லியுவின் விடுதலைக்கு குரல் கொடுக்கும் அமெரிக்கா இங்கு இந்திய அரசால் சிறையில் வதைக்கப்படும் பினாயக் சென் என்ற உண்மையான மனித உரிமைப் போராளிக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
முதலாளித்துவ நாடுகளில் மக்களின் பொது சொத்துகள் முதல் உழைப்பு வரை எப்படி சுரண்டப்படுகின்றது என்பதற்கும் ஏற்றதாழ்வுகள் எப்படி அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதையும் இந்தியாவிலேயே கண்கூடாகக் காணலாம். இதற்கு ஐரோப்பிய நாடுகளும் விதிவிலக்கல்ல. 200 ஆண்டுகளுக்கு மேலாக முதலாளித்துவத்திலிருந்து காலாவதியாகிக் கொண்டிருக்கும் அமெரிக்காவிலேயே பெரும்பாலான மக்கள் முதலாளித்துவத்தை தூக்கியெறிய வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இந்தஅமைப்பை மாற்றவேண்டும் என்று போராடுகிறார்கள்.தனியார்மயம், உண்மையில் வளர்ச்சியை பாதிக்கிறது என்பதை பல லத்தீன் அமெரிக்கநாடுகளில், இந்தியாவில் கண்கூடாகக் காணலாம்.
அமைதிக்கான நோபல் பரிசு என்பது அமெரிக்க மேலாதிக்க அரசியலுக்கான ஒரு கருவிதானே தவிர மனிதஉரிமைகளைப் பற்றியோ அல்லது ஜனநாயகத்தைப் பற்றியோ, அப்பாவி மக்கள் மீதான போர்கள் குறித்தோ அதற்கு எந்தக் கவலைகளுமில்லை என்பதையும் இந்தவருடத்தின் பரிசு பெற்றலியு ஜியாபோ அமெரிக்காவின் போர்களை உற்சாகப்படுத்துபவராகஇருந்திருக்கிறார் என்பதையும் ஊடகங்கள் அம்பலப்படுத்தாது. நாம் அம்பலப்படுத்த வேண்டும்.
____________________________________________________________
– சந்தனமுல்லை, புதிய கலாச்சாரம் – 2011 ______________________________________________________
உழைத்து முன்னேறலாம் என்ற கருத்து மக்களைக் காயடிக்கவே பயன்படுகிறது!
வழக்கம் போல இந்தக் கட்டுரை மிகுதியாகவோ குறைவாகவோ எதிர்ப்பை சந்திக்கலாம். “எல்லாரையும் குற்றம் சொல்கிறீர்களே, யார்தான் நல்லவர்கள், நீங்க மட்டும் யோக்கியமா, நீங்கள் எதாவது சமூகப்பணி செய்திருக்கிறீர்களா, சினிமாக்காரரை சினிமாக்காரராக பாருங்கள், அவர்களால் முடிந்த உதவி செய்வதை எதிர்க்காமலாவது இருங்கள்….” என்றெல்லாம் வாழையடி வாழையாக ஊட்டப்பட்டிருக்கும் “உன்னால் முடியும் தம்பி” டைப்பில் கேட்பார்கள். ஆனாலும் அப்படி கேட்பவர்கள் கொஞ்சம் அருள் கூர்ந்து இதை படித்து விட்டு அந்தக் கேள்விகள் சரியா என்று சொல்லட்டும்.
தமிழகத்தை மொக்கை தேசமாக்கி வரும் சினிமா, தொலைக்காட்சி, சீரியல்கள் போக நாம் கவலைப்பட வேண்டிய மற்றொரு அயிட்டம் அப்துல் கலாம் டைப் தன்னம்பிக்கை போதை கலாச்சாரம். இதை அன்று அமெரிக்க ரிடர்ன் உதயமூர்த்தி துவங்கி வைத்தார். பின்னர் அப்துல்கலாம் அதை நவீன ஊடக வசதி, ஜனாதிபதி அதிகார வசதி மூலம் தமிழகமெங்கும் விஷமரம் போல வளர்த்தெடுத்தார்.
பள்ளி நிர்வாகிகளது கட்டளைக்காக திரட்டப்பட்ட அந்த அப்பாவிக் குழந்தைகளிடம் “குழந்தைகளே கனவு காணுங்கள், 2020-இல் இந்தியா வல்லரசாகப் போகிறது” என தேசிய கீத மொக்கையாக்கினார். இன்றைக்கு இருவரும் மார்க்கெட்டில் இல்லையென்றாலும் இந்த சரக்குதான் பத்திரிகை, ஊடகங்கள், புத்தகக் கண்காட்சி எல்லாவற்றிலும் விலை போகிற சரக்கு. அதுதான் இது “நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை சாதிப்பீர்கள்!”.
உழைத்தால் வெற்றியெனும் இந்த தாராக மந்திரம் மேற்கத்திய நாடுகளின் நடுத்தர வர்க்கத்தை, அரசியல் ரீதியாக மொன்னையாக்குவதற்காகவும், பறிக்கப்பட்ட உரிமைகளுக்கு போராடாமல் இருப்பதற்கும், வாழ்க்கை தோல்விகளுக்கு தன்னையே காரணமெனக் கற்பித்துக் கொள்ளவும், நுகர்வு கலாச்சாரத்தின் மறுபக்கமாக, சுயநலத்தை ஒரு ஒழுக்கம் போல பின்பற்றுவதற்காகவும் திட்டமிட்டு திணிக்கப்பட்ட ஒரு மோசடிச் சரக்காகும். அப்படி அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த சரக்கு போதனைகள் கடந்த பத்திருபது ஆண்டுகளாக தமிழ் வாரப் பத்திரிகைகளில் போதையூட்டும் பல தொடர்களாக வந்திருக்கின்றன.
இந்தியாவிலும் மறுகாலனியாக்கத்தின் விளைவாக ஏழைகள் அதிகரிப்பது போல நடுத்தர வர்க்கமும் அதிகரித்து வருகிறது. அவர்கள் வளர்ச்சிக்கேற்ப இந்த சரக்கும் சந்தையில் மிகுந்த கிராக்கியைக் கொண்டிருக்கிறது. இந்த ‘உழைத்து’ முன்னேறிய முதலாளிகளின் வாழ்க்கையை ஜிகினா வார்த்தையில் செட்டப்போடு தயாரித்துதான் கிழக்கு பதிப்பகத்தின் பெரும்பாலான புத்தகங்கள் படையெடுக்கின்றன.
இக்காலச் சூழலில்தான் எஸ்.ஆர்.எம் எனும் பிரம்மாண்டமான கார்ப்பரேட் உயர்கல்வி தொழிலை நடத்தி வரும் பச்சமுத்து, “புதிய தலைமுறை” பத்திரிகையை ஆரம்பித்தார். தனது தொழிலை இடையூறின்றி ஒரு சேஃப்டியோடு நடத்துவதற்காக இந்த தேர்தலில் ஒரு கட்சி ஆரம்பித்து எல்லா தொகுதிகளிலும் போட்டியிட வைத்தார். அதற்காக மண்வெட்டி விவசாயி தோற்றத்தில், கமாண்டோ படத்தில் ஆர்னால்டு துப்பாக்கியுடன் வருவது போல போஸ் கொடுத்து வெளியிடப்பட்ட சுவரொட்டியை நீங்களும் பார்த்து நகைத்திருப்பீர்கள். தொழில், ஊடகம், கட்சி என்று எல்லா துறைகளிலும் கால் பதித்து தமது சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரிப்பது இப்போதைய முதலாளிகளின் பாணியாகும். பச்சமுத்துவும் அப்படித்தான்.
புதிய தலைமுறை பத்திரிகையின் முழுமுதல் கொள்கையே இந்த ‘உன்னால் முடியும் தம்பி’ மேட்டர்தான். ஆரம்பத்தில் அட்டை டூ அட்டை இந்த அப்துல் கலாம் டைப் மொக்கையையே போட்டு வதைத்தார்கள். அதனாலேயே ஓரிரண்டு இதழ் வாங்கிவிட்டு நிறுத்தி விட்டேன். அச்சமயம் ஒரு நண்பர் கூட ” இந்த இதழில் வேலை செய்யும் அனைவரும் கொஞ்ச நாளுல மொக்கைச் சக்கரவர்த்தியாகி விடுவாங்க” என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.
தற்போது இந்த தன்னம்பிக்கை சரக்கோடு, அரசியல், பரபரப்பு நிகழ்வுகள் என்று கொஞ்சம் காக்டெயில் போல கலந்து “புதிய தலைமுறை”யில் தருகிறார்கள். ஆனாலும் சுய முன்னேறத்தின் மூலம் சாதிக்கப் போகும் அந்த இந்திய வல்லரசுக் கனவுதான் இவர்கள் சட்டியில் இருக்கும் ஒரே பதார்த்தம்.
புதிய தலைமுறை இதழின் செய்தியாளர்கள் யுவகிருஷ்ணா (லக்கிலுக்), அதிஷா இருவரும் நடிகர் சூர்யாவை பேட்டி கண்டு அவர் பேசியதையே பெரும் வாழ்க்கை சாதனையாக வரித்தும், விரித்தும் எழுதியிருக்கிறார்கள். சினிமா நடிகரைப் பற்றியதென்பதால் இந்த கட்டுரை நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதாவது சூர்யா மாபெரும் சாதனையாளராகவும், அவரிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டுமெனவும் பரவசப்படுகிறார்கள். இதை எழுதியவர்களுக்கும் நிறைய பாராட்டுக்கள்! இப்படி ஒரு கட்டுரை எழுத வாய்ப்பு கொடுத்தமைக்காக நாமும் பாராட்டினை தெரிவித்துக் கொள்வோம்.
சூர்யாவின் சினிமா வெற்றிக்கு காரணம் என்ன? திறமையா? பின்னணியா?
முடிந்தால் அந்தக் கட்டுரையை படித்து விடுங்கள். அதில் சரவணன் எனும் சராசரி நடுத்தர வர்க்க இளைஞன் இன்று வெற்றியடைந்த திரை நட்சத்திரமாக உயர்ந்திருப்பதை சிலாகித்து சொல்கிறார்கள். கல்லூரி முடித்த சரவணன் வேலைக்கு மிகவும் மெனக்கெடவில்லை. அவரது உறவினர்கள் கார்மெண்ட் தொழிலில் இருந்தபடியால் ஒரு வேலையை தேடிக்கொள்கிறார். இதில் தனிப்பட்ட சாதனை எங்கே உள்ளது? அதே போல பட்டப்படிப்பு முடித்ததே சாதனையென்றால் தமிழகத்தில் வருடா வருடம் சில இலட்சம் சாதனையாளர்களை நாம் வாழ்த்த வேண்டும்.
மேலும் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளமும், அதற்குரிய சமூக அங்கீகாரமும், இறுதியாக சுயசாதி உறவினர்களது ஆதரவும்தான் அய்யாவின் துணித் தொழில் இரகசியம். இதில் அவர் கடுமையாக உழைத்து எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் மேலாளர் பதவியை அடைகிறாராம். எல்லா குடும்ப நிறுவனங்களிலும் குடும்ப உறுப்பினர்களே முக்கிய பதவியை அடைகிறார்கள். சான்றாக இந்து பேப்பரில் ராம், ரவி, முரளி, மாலினி போன்ற ஐய்யங்கார் வாரிசுகளெல்லாம் அந்த பேப்பரின் உரிமையாளர்கள் என்ற தகுதியில்தானே எடிட்டோரியல் பதவிகளை வகித்தார்கள்? திருபாய் அம்பானியின் மகன்களான முகேஷ், அனில் இருவரும் பொதுத் தேர்வு போட்டித் தேர்வு எழுதியா தலைமை நிர்வாகியானார்கள்?
அவ்வளவு ஏன், பச்சமுத்துவின் முதல் மகன் எஸ்.ஆர்.எம் கல்வித் தொழிலையும், இரண்டாவது மகன் புதிய தலைமுறை பத்திரிகையையும் கவனித்துக் கொள்கிறார்கள். இது பச்சமுத்து என்ற பண்ணையாரின் மகன்கள் என்பதால் கிடைத்ததா, இல்லை அவர்கள் சொந்தமாக கஷ்டப்பட்டு உழைத்து கிடைத்ததா?
இடையில் வீட்டிற்கு வரும் இயக்குநர்கள் சரவணனை நடிக்க வரும்படி அழைக்கிறார்களாம். அவரோ விருப்பமில்லாமல் தட்டிக் கழிக்கிறாராம். இதை கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். தமிழகத்தில் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனிடம் யாராவது ஒரு இயக்குநர் நடிக்க வரும்படி அழைத்தால் என்ன செய்வான்? காலில் விழுந்து அதை ஏற்றுக் கொள்வான். இங்கே சிவக்குமார் பையன் என்ற காரணத்திற்காக வாரிசு அடிப்படையில் மட்டுமே பலர் கூப்பிடுகின்றனர். அவர்களெல்லாம் போண்டா இயக்குநர்கள் என்று கருதிய சரவணன் இறுதியில் அறிவாளி இயக்குநர் மணிரத்தினம் சொந்தப் படம் என்று அழைத்ததும் தட்டமுடியாமல் சம்மதிக்கிறாராம். இப்படியாக “நேருக்கு நேர்” படத்தில் அறிமுகமாகிறார்.
இந்தக் காலத்தில்தான் தமிழக அரசியலில் மட்டுமல்ல, சினிமாவிலும் வாரிசுகளே நுழைய முடியும் என்ற நிலை உருவாகிறது. விஜய், சிம்பு, சூர்யா, அருண் விஜயகுமார், தனுஷ், ஜெயம்ரவி, அதர்வா, விஷால், சிபிராஜ், பிரஷாந்த், கார்த்தி என்று ஏராளம்பேர் வாரிசு தகுதியில்தான் கதாநாயகனாக நடிக்கிறார்கள். அதன்படி சரவணன் சூர்யாவாக மாறியதற்கு சொந்த தனிப்பட்ட தகுதி ஏதும் காரணமில்லை. சொல்லப் போனால் சூர்யாவை விட பல தகுதி கொண்ட இளைஞர்களெல்லாம் இந்த சமூகப்பின்னணி இல்லாமல்தான் சினிமாவில் நுழைய முடியவில்லை.
ஆக சினிமாவில் நுழைவதற்கு இப்படிப்பட்ட வாரிசுகள்தான் நுழைய முடியும் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதில்லையா? பழைய மன்னராட்சிக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? இதேபோல குமுதம், விகடன், தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிகைகளிலும் கூட வாரிசுகளே தீர்மானிக்கிறார்கள். அரசியலை எடுத்துக் கொண்டால் ராகுல் காந்தி முதல் கனிமொழி வரை ஆயிரத்தெட்டு எடுத்துக்காட்டுகள் உண்டு. ஆக அரசியல், சினிமா, ஊடகம் எல்லாம் பணக்கார குடும்பங்களால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் என்றால் அந்த நாட்டில் மக்களெல்லாம் அடிமைகள் என்றே பொருள். சூர்யா சினிமாவில் நுழைந்தது என்பதை இந்த பின்னணியில் புரிந்து கொண்டால் உண்மை விளங்கும்.
அடுத்து ஆரம்பத்தில் நான்கைந்து வருடங்கள் அவருக்கு படங்கள் சரியாக அமையவில்லை. தோல்வியாம். இதற்குப் பிறகுதான் அவர் டான்ஸ், சண்டை என்ற வித்தைகளையெல்லாம் கற்கிறாராம். ராகுல்காந்தி அரசியலுக்கு வந்து இளைஞர் காங்கிரஸ் தலைவராகி அதன் பிறகு ஆயிரத்தெட்டு வசதிகளோடு அரசியல் ‘கற்பது’ போல நம்ம சூர்யாவும் கற்றுக் கொள்கிறார். முக்கியமாக அவரது படங்கள் தோல்வியடைந்தன என்றாலும் சினிமா உலகில் இருந்து அவர் தூக்கியெறியப்படவில்லை.
பாரதிராஜா, பாக்யராஜ், இளையராஜா போன்ற கிராமத்து இளைஞர்களெல்லாம் கனவுடன் சென்னை வந்து தமிழக சினிமாவை ஆட்டுவித்ததெல்லாம் இன்று கனவில் கூட சாத்தியமில்லை. ஷங்கர், மணிரத்தினம், கவுதம் மேனன் போன்ற பெரிய இயக்குநர்களிடம் உதவியாளாராக சேரவேண்டுமென்றால் டாக்டர், இன்ஜினியர், எம்.பி.ஏ இன்னபிற உயர்கல்விகளோடு ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி என்று கூடுதல் மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். இன்று ஒரு சில விதிவிலக்குகள் தவிர சாதாரண இளைஞர்கள் எவரும் சினிமாவில் நுழைய முடியாதபடி அங்கே பெரும் சுவர் எழுப்பப்பட்டு விட்டது. வசதி, சிபாரிசு, அரசியல் பின்னணி என்று இருந்தால்தான் முடியும்.
இப்படித்தான் உண்மையான திறமைகள் தமிழ் சினிமாவில் நுழைய முடியாமலும், அப்படி நுழைந்தாலும் சில ஆதிக்க கும்பல்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே வேலை செய்ய முடியும். ஆக சூர்யா தனது மேலான பின்னணி காரணமாக பெரிய போட்டிகள் எதுவுமின்றி ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் நீடித்திருக்கிறார்.
இந்நிலையில் இயக்குநர் பாலாவிடம் வாய்ப்பு கேட்டாராம். அவரும் சூர்யாவை வைத்து நந்தாவை எடுத்தாராம். அதன் பிறகு ஏறுமுகமாம். இதில் என்ன முன்மாதிரி உள்ளது? இயக்குனர் சொன்னபடி கேட்டு ஒருவர் நடித்திருக்கிறாரே அது அவரது ஆற்றலில்லையா என பலர் கேட்கலாம். மார்க்கெட் போன சியான் விக்ரமை முன்னணி நட்சத்திரமாக்கிய இயக்குநர் பாலவிடம் நமது இலக்கிய குருஜி நாயகனாக நடித்தால் கூட கம்பீரமாக மிளிர்வார் எனும்போது நடிப்பு பின்னணியும், அனுபவமும் உடைய சூர்யாவின் வெற்றிக்கு பாலாவை பாராட்டலாமே ஒழிய இதை சூர்யா தனிப்பட்டு உழைத்து முன்னேறியதாகச் சொல்லவதற்கு எதாவது இருக்கிறதா? சினிமா என்பது இயக்குனர் முதல் லைட்பாய் வரை பலரின் கூட்டுமுயற்சி . அதன் வெற்றியை ஒருவருக்கு மட்டுமே உரித்தாக்குவது என்பது மோசடி. சில நல்ல இயக்குநர்கள, விறுவிறுப்பான கதைகள், வெற்றியடைந்த இசை என்று காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் சூர்யாவின் வெற்றிப் பின்னணி. இத்தகைய வாய்ப்பு கிடைக்கும் போது உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு இளைஞன் கூட வெற்றி பெறமுடியும். ஆனால் அவனுக்கு சூர்யாவைப் போன்ற பின்னணி இருக்காது என்பதால் அது சாத்தியமில்லை.
மேலும் சினிமாவைப் பொறுத்த வரை ஒரு நடிகரது முகம் தொடர்ந்து திணிக்கப்படும்போது அந்த முகத்தை மக்கள் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள். சான்றாக நடிகர் விஜயை எடுத்துக் கொள்வோம். சூர்யா போல இல்லாமல் அப்பா சந்திரசேகரால் திட்டமிட்டு வளர்த்து நுழைக்கப்பட்டவர் விஜய். நடிக்க வரும்போதே அவருக்கு நடனம், சண்டை, ஃபார்முலா நடிப்பு எல்லாம் தெரியும். ஆனால் ஆரம்ப காலத்தில் வரும் விஜயின் முகத்தை நீங்கள் கூட சகித்திருக்க மாட்டீர்கள். அப்போதெல்லாம் எஸ்.ஏ சந்திரசேகர் மகனுக்கு ஜோடியாக சங்கவி போன்ற நடிகைகளை கவர்ச்சி காட்டி நடிக்க வைத்தார். காதல் காட்சிகளையெல்லாம் நீலப்படங்கள் போல எடுத்தார். அதனால் அன்று ரசிகர்கள் விஜயைப் பார்க்க சென்றார்கள் என்பது கூட உண்மையில்லை. ஆனால் அசராத தந்தையின் முயற்சியால் விஜய் தொடர்ந்து சினிமாவில் நீடிக்க அந்த முகம் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே தற்போது உள்ள தகவல் ஊடக தொழில் நுட்பத்தில் ஒரு வீட்டுப் பூனையைக்கூட ஒருசிலபடங்களில் நடிக்க வைத்து ஸ்டாராக மாற்ற முடியும். தேவர் பிலிம்சின் ஆடு,மாடு, யானைகளெல்லாம் உழைத்து முன்னேறிய கதையாக ஒத்துக் கொண்டால் நாம் சூர்யாவையும் ஒத்துக் கொள்ளலாம்.
கல்வி கற்பது மக்களது உரிமையா? வள்ளல்களது தர்மமா?
சினிமாவிற்கு அடுத்து சூர்யா தனது வள்ளல் பாத்திரத்திற்கு வருகிறார். தந்தை சிவக்குமார் ஆரம்பித்து வைத்த கல்வி உதவியை இப்போது அகரம் என்ற அறக்கட்டளை மூலம் பெரியதாக நடத்தி வருகிறாராம். ஏழை மாணவர்களுக்கு உதவி, கல்லூரி படிப்பு, காம்பஸ் இன்டர்வீயு என்று வேலை வாங்கித் தருவது வரை செய்கிறாராம். இது தெரியாமல் தமிழக இளைஞர்கள் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போய் தவமிருக்கிறார்களே ஏன்? கன்னியாகுமரி முதல் சென்னை வரை படிப்புக்கும், வேலைக்கும் அலையும் அத்தனை இளைஞர்களும் சூர்யா வீட்டிற்கு வந்தால் எதிர்காலத்தையே வெறும் ஐந்து நிமிடத்தில் பெற்று விடலாமே?
கருணாநிதியும், ஜெயலலிதாவும் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அள்ளிவிடுவது மக்களை பிச்சைக்காரர்களாக்கும் உத்தி என்று நோகாமல் எக்காளம் பேசுபவர்கள் சூர்யாவின் இந்த கல்விப் பிச்சை பற்றி என்ன சொல்வார்கள்? உடனே இது கல்வி என்பதால் டி.வியோடு ஒப்பிட முடியாது, படிப்பைக் கொடுத்தால் அந்த பையன் தனது எதிர்காலத்தை தானே அடைவான், இது அடிப்படையான சமூக மாற்றத்திற்கான உதவி என்று வாதாடுவார்கள்.
ஒரு குழந்தை படிப்பதும், படிக்காமல் போவதும் அதனுடைய தனிப்பட்ட பிரச்சினையா? இல்லை அந்த குடும்பத்தின் பிரச்சினையா? இல்லை இவர்களைப் போன்ற ஒட்டு மொத்த மக்களிடமிருந்து வரிவசூலிக்கும் அரசின் பிரச்சினையா? நாட்டு மக்களுக்கு இலவச, தரமான கல்வி கொடுக்க வேண்டிய அரசு அதை ஒழித்து விட்டு காசு இருப்பவனுக்குத்தான் கல்வி என்று சுயநிதிக் கல்லூரி முதலாளிகளை ஊக்குவிக்கிறது. புதிய தலைமுறையில் தன்னம்பிக்கை சரக்கை போதிக்கும் பச்சமுத்துவின் எஸ்.எம்.ஆர் கல்லூரிகளில் இலவசமாகவா கல்வி கொடுக்கிறார்கள்? இல்லை பல இலட்சங்களில் மாணவர்களுக்கு கல்வியை விற்கிறார்கள்.
நடிகர் சூர்யா வெற்றிகரமான நட்சத்திரமாக உருவெடுத்து, அகரம் அறக்கட்டளையை நடத்தும் இந்தக் காலத்தில்தான் ஏழைகளும், கீழ்த்தட்டு நடுத்தர மக்களும் உயர்கல்வி கற்க முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. மாதச்சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கமும் குழந்தைகளின் கல்விக்காக நுரை விடும் அளவுக்கு வதைபட்டு ஒடுகிறது. இதில இந்த நல்லவர் கல்வி உதவி செய்கிறாராம். யாரை ஏமாற்றுகிறீர்கள்?
சமீபத்தில் கூட சென்னை எம்.சி.ராஜா அரசு விடுதியில் படிக்கும் தலித் மாணவர்கள் விடுதியின் அவல நிலை காரணமாக சாலை மறியல் செய்தார்கள். இன்னும் நிலைமை அப்படியேதான் உள்ளது. இதற்கு முன் பல வருடங்களாக அப்படித்தான் உள்ளது. ஒரு வேளை சூர்யாவிற்கு கல்விதான் அக்கறை என்றிருந்தால் இந்த சாலை மறியலில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அல்லது தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தமிழகமெங்கும் பெற்றோர்கள் போராடினார்களே அதில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.
சமீபத்தில் சென்னை மேட்டுக்குடி பள்ளி ஒன்று ஏழைகளை பள்ளியில் சேர்க்கச் சொல்லும் அரசின் கொள்கை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களிடம் பிரச்சாரம் செய்கிறது. இந்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சூர்யா உண்ணாவிரதமோ குறைந்தபட்சம் மெழுகுவர்த்தி போராட்டமோ செய்வாரா? எஸ்.ஆர்.எம் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் 25லிருந்து 50 இலட்சமும் இல்லை அதற்கு மேலும் வசூலிக்கிறாரே பச்சமுத்து அவரை எதிர்த்து ஒரு அறிக்கையாவது விட்டுப் பார்க்கட்டுமே. அதை நமது புதிய தலைமுறை செய்தியாளர்கள் ஒரு ரிப்போர்ட்டாக எழுதட்டும். நாமும் சூர்யாவின் சமூக கடமையை மெச்சுவோம்.
ஆம். இன்றைக்கு நமது மாணவர்களுக்கு தரமான இலவசமான கல்வி கிடைக்க வேண்டுமென்றால் நாம் அதற்காக அரசை எதிர்த்து போராட வேண்டும். இது ஒன்றும் நமக்கு தரப்படும் பிச்சை அல்ல. நமது உரிமை. பறிக்கப்பட்ட அந்த உரிமைக்காக மக்கள் அணி திரண்டு போராடும்போது மட்டுமே அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற நிலையை சமூகம் அடைய முடியும். இந்த போராட்ட உணர்வு இருக்கக் கூடாது என்ற அடிமைகளின் நிலையைத்தான் இத்தகைய கல்வி வள்ளல்களின் நடவடிக்கைகள் உருவாக்குகிறது. மேலும் சமூகமாக நாம் சேர்ந்து போராடி பெற வேண்டிய உரிமைக்கான சிந்தனையை, இப்படி பணக்காரர்களின் கருணை உள்ளத்தால் ஒரு சிலருக்கு வழி ஏற்படும் என்ற மாயையை உருவாக்கி அழிக்கிறார்கள்.
நண்பர்களே, நடிகர் சூர்யாவின் சினிமா பிடிக்கும், அவரது நடிப்பு பிடிக்கும் என்று சொன்னால் பிரச்சினை அல்ல. அது வெறும் இரசனை சம்பந்தப்பட்டது. ஆனால் அவரது வெற்றியிலிருந்து நாமும் கற்றுக் கொண்டு உழைத்தால் நல்ல நிலையை அடைய முடியும் என்று சொன்னால் அது ஆபாசமானது, கண்டனத்திற்குரியது. அயன் படத்தின் டிக்கெட் சிலநூறுகள் என்றால் அது பல ஆயிரங்களில் தியேட்டர் முதலாளிக்கும், இலட்சங்களில் வினியோகஸ்தருக்கும், கோடிகளில் தயாரிப்பாளருக்கும் போகிறது. அந்த கோடிகளில் சிலவற்றை எடுத்துக் கொள்ளும் கோடீஸ்வரன்தான் சூர்யா. இவரைப் போன்ற பெரும் பணக்காரர்கள் தத்தமது குடும்பங்களின் தேவைக்கு மீறி பிரம்மாண்டமாக சேர்த்து வைத்திருக்கும் பணத்தால்தான் பல ஏழைகள் படிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இதை மறைக்க ஒரு லட்சத்தை தானம் செய்து அதை பல லட்சங்களுக்கு விளம்பரம் செய்கிறார்கள். தன்னை ஒரு வள்ளல் போல முன்னிறுத்துகிறார்கள். ஊடகங்களும் இந்த நட்சத்திர சேவையை செவ்வனே செய்து வருகிறது.
உன்னால் முடியும் தம்பி சித்தாந்தத்தின் சூட்சுமே மக்களை காயடிப்பதுதான். இதில் தொடர்ந்து பயணம் செய்தால் நடுத்தர வர்க்கம் பாசிசத்தை ஆதரிக்கும் மனநிலைக்கு இயல்பாக பழகிக் கொள்ளும். ஆளும் வர்க்கமும் அதைத்தான் விரும்புகிறது. மக்களைச் சுரண்டி வாழும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்போது “கார்ப்பரேட் சமூக பொறுப்பு” என்று சீன்போடுவது அதிகரித்திருக்கிறது.
நமது இயலாமை என்பது நமது பறிக்கப்பட்ட செல்வத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதுதான் நமது விடுதலைக்கான ஒரே வழி. ஆகவே இந்த கனவான்களையும், தரும வள்ளல்களையும் எப்போதும் விலக்கி வையுங்கள். விடுதலைக்கான சிந்தனையை பாதுகாத்துக் கொள்ளுங்கள். நமக்கான முன்னுதாரணங்களை நாம் பகத்சிங்கிடம் தேடவேண்டுமே ஒழிய, ஒரு கட்டவுட் நட்சத்திரத்திடமிருந்து அல்ல.
Ø கூடுதலாக்கப்பட்டுள்ள கடுமையான வேலைப்பளு மற்றும், தொழிற்சாலையின் பணிச்சூழல் காரணமாக சமீப நாட்களில் பலர் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர்.
Ø சில வாரத்திற்கு முன்பாக ஆய்வு மேற்கொண்ட தொழிற்சாலை ஆய்வாளர் தனது ஆய்வின் போது 7 தொழிலாளா்கள் முதுகு தண்டுவட நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து பதிவு செய்துள்ளார்.
Ø பணிச்சுமையை கண்டித்து, கட்டாயப்படுத்திய பணி நேர நீடிப்பை கண்டித்து 30 நாட்களுக்கும் மேலாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Ø சமரச நடவடிக்கை மேற்கொண்டு பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வாருங்கள் என அறிவுறுத்துவதற்கு பதிலாக “என்ன அங்கே நடக்கிறது என கடுமையோடு வினவும் மாநில முதல்வர்”
Ø உடல்நலமில்லை, பணியில் சிரமம் இருக்கிறது என தெரிவித்த தொழிலாளர்கள் பலர் அந்த தொழிற்சாலையின் அடுத்தடுத்த மாநிலங்களில் உள்ள கிளைகளுக்கு அதிரடி ஊர் மாற்றம்.
Ø நிர்வாகத்தின் சார்பில் மாநில முதல்வரை சந்தித்துவிட்டு வந்தபின் வேலைநிறுத்தம் செய்யும் பணியாளர்களில் 250 பேரை டிஸ்மிஸ் செய்யப் போகிறோம் என பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுக்கும் நிர்வாகத்தின் துணைத் தலைவர் பி.பாலேந்திரன்.
Ø இவையெல்லாம் எங்கே என்று யோசிக்கிறீர்களா? வருடத்தில் ஒரு நாள் கூட இம்மாநிலத்தில் தொழிலாளாளர்கள் அமைதியின்மை (labour unrest) என்பதை பார்க்க முடியாது என பெருமைப்பட்டுக் கொள்ளும் நம்ம மாண்புமிகு பாசிச நாயகனான மோடியின் குஜராத்தில்தான் !!
குஜராத்தின் ஹலோல் எனுமிடத்தில் அமைந்துள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனம் அமைந்துள்ளது. இதில் செவ்ரோலெட் உள்ளிட்ட பல நவீன கார்கள், இறக்குமதி செய்யப்பட்ட உதிரிகளை வைத்து தயார் செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கும் பணியில் சுமார் 4000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் ஐஎன்டியுசி மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதன் விளைவாக டிசம்பரில் 3 வருடம் அமுலில் இருக்குமாறு பணிச்சுமை விபரங்களுடன் இணைந்த ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்பட்டது.
இருப்பினும் பணிச்சுமை மிகுதியின் காரணமாக, கட்டாயப்படுத்தி தொடர்ச்சியாக கூடுதல் நேரம் பணிபார்க்க கட்டாயப்படுத்தலின் காரணமாக பலர் தீராத முதுகு வலி மற்றும் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரிவிக்கிறார் மஹிர் தேசாய், பொதுச் செயலாளா், குஜராத் காம்டர் மண்டல் எனும் ஐஎன்டியுசி சார்பு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்.
குஜராத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கையின் விளைவுகளை 2010-11- ம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மேற்படி ஆண்டில் அதிகமான தொழிற்சாலை கதவடைப்புகள் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
ஹலோல் ஆலைப்பிரிவில் சுமார் 900 பணியாளர்கள் வருடத்திற்கு 85,000 கார்களை உற்பத்தி செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தினால் சுமார் 1500 கார்கள் உற்பத்தி என்பது பாதிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 21-ம் தேதி பெரும்பான்மையான தொழிலாளர்களின் ஆதரவோடு “தர்ணா”ப்போராக தொடங்கியது, தொடர்ந்து வேலை நிறுத்தமாக மாறியது. வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் சட்ட விரோத வேலைநிறுத்தம் என்று வைத்துக் கொண்டாலும் அதிகமான அளவில் தொழிலாளர்கள் பங்கு பெறும் போது மாநிலத்தின் தொழிலாளர் துறை தலையிட்டு சமரச முயற்சிக்கான நடவடிக்கையை தொடங்க வேண்டும். ஆனால் அது போன்ற முயற்சி எதுவும் துவக்கப்படவில்லை.
ஐஎன்டியுசி சங்கத்தின் தலைவர் நிஹின் மித்ரா தெரிவிக்கையில் தொழிலாளர்களின் பணிச்சுமை என்பது ஒவ்வொருவருக்கும் சுமார் 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் பலர் உடல் நல பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். உடல் நலமில்லை என புகார் தெரிவிப்பவர்களில் பலா் இந்த ஆலையின் விற்பனை பிரிவுகளான டில்லி, குர்கான், சென்னை மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மறுபுறம் 4 தொழிலாளா்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை தலையிட்டு தனது அடக்குமுறையை உபயோகித்து பல தொழிலாளர்களை வெளியேற்றியுள்ளது. இது போன்ற வேலை நிறுத்தங்களுக்கான தொழிலாளர்களின் ஆதரவு பெருகும் சூழல் ஏற்பட்டால் அருகிலுள்ள மற்ற பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து தொழிலாளர்களை வரவழைத்து பணியிலிருக்கும் தொழிலாளர்களின் பணி பறிபோய்விடும் என மிரட்டும் போக்கை கடைப்பிடிப்பது இங்கு சிறப்பு பொருளாதார மண்டலங்களில் வழக்கமாக உள்ள ஒன்று என்கின்றனர் இங்கு வேலை நிறுத்தத்தில் இருக்கும் தொழிலாளர்கள்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வழங்கும் சம்பளத்தில் பத்தில் ஒரு பகுதி கொடுத்தாலே இந்தியாவில் தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள் என்பதால்தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு தொழில் துவங்க வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்திற்கு இதன் தொழிலாளர்களால் புகார் அனுப்பப்பட்டு தொழிலாளர் நலன் காக்கும் பணி இவரது பணியில் ஒரு பகுதி என்று கருதக் கூடிய மாவட்ட ஆட்சித்தலைவரை இது குறித்து விசாரித்து அறிக்கை சமா்ப்பிக்க மனித உரிமை ஆணையம் உத்திரவிட்டுள்ளது.
ரூ 7000 மட்டுமே சம்பளமாக பெறும் தொழிலாளியை மாநிலம் விட்டு மாநிலம் மாற்றினால் எவ்வாறு அவரது குடும்பத்தை பராமரிக்க இயலும் என்கின்றனர் இங்குள்ள தொழிற்சங்க தலைவர்கள். இந்த நிறுவனத்தின் உதவி தலைவர் பி. பாலேந்திரன் தெரிவிக்கையில் கடந்த ஊதிய ஒப்பந்தத்திற்கு பிறகு தொழிலாளர்கள் நல்ல முறையில் சம்பளம் பெற்று வருகின்றனர். இவர்களது வேலை நிறுத்தம் என்பது தேவையற்றது. இந்த வேலை நிறுத்தத்தை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள் இது சட்ட விரோத வேலை நிறுத்தம் என அறிவித்துள்ளனர். எனவே தொழிலாளர்கள் உடனடியாக வேலை நீக்கத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும் என எச்சரிக்கிறார்.
இதன் நடுவில் பி.பாலேந்திரன் மாநில முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்தது குறித்து கேட்ட போது சட்ட விரோத வேலை நிறுத்தம் தொடர்ந்து வருவதால் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது எனவே 250 பணியாளர்களை நிரந்தர பணி நீக்கம் செய்யப் போகிறோம் என அனுமதி கேட்கப்பட்டது என்ற செய்தியை மறுக்கவில்லை.
மற்றொரு புறம் இந்த ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடையுத்திரவு பிறப்பிக்கப்பட்டு 4 பேர்கள் சேர்ந்து நின்றால் கூட காவல் துறையினரால் விரட்டியடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மோசமான தொழிலாளர் விரோத நடவடிக்கை என்கின்றனர் தொழிலாளர்கள்.
தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தினால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் இதன் தயாரிப்பு பணிகளை தற்காலிகமாக, மாநிலத்தின் எல்லைக்கருகிலும் மகாராஷ்டிரா மாநிலத்திலுமாக அமைந்துள்ள தலேகான் தொழிற்சாலைக்கு நிர்வாகம் மாற்றியுள்ளது.
இணைய தளங்களில் வெளியான இந்த வேலை நிறுத்தம் பற்றிய செய்திகள், மற்றும் வட மாநில ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் முதற்கட்டமாக இந்த அளவிற்கு மட்டுமே விவரங்கள் நமக்கு தெரிய வந்துள்ளது.
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் விளைவுகளினால் இந்தியாவில் தாராளமாக திறந்துவிடப்பட்டுள்ள “சிறப்பு பொருளாதார மண்டலங்களின்” கீழ் வரும் பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர்களை கையாள்வது, அவர்களின் கோரிக்கைகளை கவனிக்காமல் விடுவது, மிரட்டுவது, ஊர்மாற்றம் செய்வது, வேலைநீக்கம் செய்வது, என்பது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் என்பது மிகுதியாகவே இருந்து வருகிறது. கையாலாகாத தொழிலாளர் துறை என்பது தலையிடுவதோ, தனது குறைந்த பட்ச அதிகாரத்தைப் பயன்படுத்துவதோ சுத்தமாக இல்லை என்பதே எதார்த்தம்.
“தொழில்துறையில் புரட்சி, வளர்ச்சியில் மின்னும் எங்கள் தேசத்தை பாருங்கள்” என்கிற மோடியின் குஜராத் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. ஓட்டுக்கட்சி சங்க தலைமைகளை புறந்தள்ளி தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாகவும் புரட்சிகர அரசியலின் கீழ் ஒன்றிணைந்து போராட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவிகரமாக இருக்கும்.
முதலாளிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து தாலாட்டும் மோடியின் குஜராத், தொழிலாளிகளின் உரிமையை எப்படி காலில் போட்டு மிதிக்கிறது என்பதற்கு இந்த செய்தியே போதுமானது. பாசிச மோடியின் இரசிகர்கள் என்ன சொல்வார்கள்?
சாதி வெறிபிடித்த கப் பஞ்சாயத்தால் கொல்லப்பட்ட மனோஜ்-பப்லி
கப் சாதி பஞ்சாயத்து தீர்ப்பினால் கொலை செய்யப்பட்ட மனோஜ் மற்றும் பப்லியை யாரும் மறந்திருக்கமுடியாது. அரியானா மாநிலத்தின் கரோரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மனோஜ் மற்றும் பப்லி. இருவரும் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். காதலித்து திருமணம் புரிந்து கொள்ளவும் முடிவெடுத்தனர். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.
அவர்கள் திருமணம் தொடர்பாகக், கூடிய கப் பஞ்சாயத்து மனோஜ் மற்றும் பப்லியின் திருமணம் செல்லாது என்றும் அவர்கள் பிரிய வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. நேரடியாக இருவருக்கும் உறவுமுறை இல்லாவிட்டாலும், ஒரே கோத்திரத்தில் பிறந்த இருவரும் சகோதர உறவு என்பதுதான் காரணம்..
போலீசை அணுகிய பப்லி மற்றும் மனோஜ், கோர்ட்டுக்குச் சென்று திரும்பும் வழியில், கடத்தப்பட்டு மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். சில நாட்கள் கழித்து இருவரின் பிணங்களும் ஒரு கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. மனோஜின் தாய் சந்தரபதி கொடுத்த புகாரினால் பப்லியின் உறவினர்கள் நான்கு பேர் மீதும், கப் பஞ்சாயத்து தலைவர் கங்காராஜ் மற்றும் டிரைவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்தது. அதோடு இவ்விவகாரம் பெரும் விவாதத்தையும் கிளப்பியது.
இக்குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் கேட்டுக்கொண்டார். கடந்த 2010, மார்ச் மாதம் இந்த வழக்குக்கு தீர்ப்பும் அளிக்கப்பட்டது. அதனை வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என்று சில வக்கீல்கள் கருத்து தெரிவித்தனர்.
அந்த தீர்ப்பு இதுதான், கொலை செய்த குடும்ப உறுப்பினர்களுக்கு மரண தண்டனையும் கொலைக்குக் காரணமான கங்காராஜுக்கு ஆயுள் தண்டனையும் கடத்திச்சென்ற டிரைவருக்கு ஏழு ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. அதோடு அசட்டையாக செயல்பட்ட்ட போலிசார் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு, சாதிப்பிடியில் சிக்கியுள்ள இந்திய நீதிமன்றங்களின் வரலாற்றிற்கு சற்றும் மாறாமல் தற்போது திருத்தி எழுதப்பட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் அரியாணா உயர்நீதி மன்றம் கடந்த 2011 மார்ச் மாதம் கொலைக்குற்றவாளிகள் நான்கு பேருக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியளித்ததோடு, முக்கிய குற்றவாளியான கங்காராஜையும் சதீசையும் விடுதலையும் செய்திருக்கிறது.
இந்த செய்தி, மனோஜின் தாய் சந்தரபதிக்கு மிகுந்த மனவேதனையையும் அதிர்ச்சியையும் தந்திருப்பதாகக் கூறூகிறார், சந்தரபதியின் ஆதரவாளர் ஒருவர். என்ஜிஓ-கள் மற்றும் ஊடகங்களின் தகவல்கள்படி, ஒரே கோத்திரத்தில் மணம் புரிந்ததற்காக மட்டும், கப் பஞ்சாயத்துகள் ஒரு வாரத்துக்கு நான்கு பேரை கொலை செய்கின்றன. தாலிபான்களின் ஆதிக்கத்தை முற்றிலுமாக அழிக்க இந்தியா முழு ஒத்துழைப்பு நல்கும் என்று எங்கெங்கோ சென்று முழங்கி வருகிறார் மன்மோகன்.
ஆனால் பாராளுமன்றத்துக்கு சற்று அருகிலேயே இந்த கப் பஞ்சாயத்து கொலைகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன!
கப் பஞ்சாயத்து – வெறி பிடித்தவர்களின் சாதிமன்றம்
ஒவ்வொரு சாதிக்கும் இங்கு சங்கம் இருப்பதுபோல அங்கு பஞ்சாயத்துகள் இருக்கின்றன. அதனை கப் பஞ்சாயத்து என்றும் கூறலாம். அல்லது கட்டப்பஞ்சாயத்து என்றும் கூறலாம். அந்த பஞ்சாயத்துத் தலைவர்கள் வைத்ததுதான் சட்டம். இந்திய சட்டங்கள் எதுவும் அங்கு செல்லுபடியாவதில்லை. சொல்லப்போனால், இந்திய சட்டத்தையே ‘திருத்தி’ எழுத முயன்று கொண்டிருக்கின்றன, இந்த சாதி சங்கங்கள்.
பல்வேறு கோத்திரங்களின் கப் சங்கங்கள் சேர்ந்து சர்வ கப் பஞ்சாயத்தை அமைத்திருக்கின்றன. இந்தியாவில் கப் பஞ்சாயத்துகள் கி.பி 600-ஆம் ஆண்டிலிருந்தே இயங்கிக்கொண்டிருப்பதாக வரலாறு கூறுகிறது. ஆரம்பத்தில் ஒவ்வொரு கப் பிரிவினரையும் பாதுகாக்க தனித்தனி பஞ்சாயத்துகள் இருந்திருக்கலாம். ஒவ்வொரு கப்பும், பொதுவாக 84 கிராமங்களை உள்ளடக்கியது.
அந்த கிராமங்களிலிருப்பவர்கள் ஒரே சாதியின் உட்பிரிவினராக இருப்பார்கள். இது போன்ற 300 உட்பிரிவு கப் பஞ்சாயத்தினரை உள்ளடக்கியது சர்வ கப் பஞ்சாயத்து. அரியானா, பஞ்சாப், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த கிராமங்கள், தோராயமாக 25,000 கிராமங்கள் இந்த சர்ச கப் பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தனித்தியங்கும் வல்லமை பெற்ற இந்த கப் பஞ்சாயத்துகள் திக்தத் எனப்படும் ஆணைகளை பிறப்பிக்கும்.
கொலை செய்வதற்கான ஆணைகள், கற்பழிப்புகள், ஆட்கடத்தல்கள் மற்றும் சொத்து தொடர்பான பிரச்சினைகள் முதலியன அதில் அடங்கும். பெரும்பாலும் குடும்பத்தின் கவுரவம் மற்றும் சாதிப்பெருமையே இதற்கான காரணங்களாக அமையும். இதற்கு அதிகம் இலக்காவது பெண்களே.
அரியானாவில்தான் பெண்சிசுக் கொலை மிகவும் அதிகம் என்பதை இங்கு நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். பழைமையில் ஊறிப்போன இந்த கப் பஞ்சாயத்துத் தலைவர்கள் வைப்பதே சட்டம். உள்ளூர் சட்டமும், போலீசும் இதற்கு அடிபணிவதே வாடிக்கை.
மேலும், போலிசும், கப் பஞ்சாயத்தினரை சேர்ந்தவர்களாகவே இருப்பதால் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதில்லை. இப்படி, ஒரே உட்பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் மனோஜூம் பப்லியும். ஒரே கோத்திரத்தில் பிறந்துவிட்டால் அவர்கள் சகோதர உறவுமுறையினர் என்பதால் அவர்களை கொலைச் செய்ய உத்தரவிடுகிறார் கப் பஞ்சாயத்துத் தலைவர் கங்காராஜ்.
பப்லியின் குடும்பத்தினரும் பப்லிக்கு விசம் கொடுத்தும் மனோஜை அடித்தும் கொடூரமாகக் கொலை செய்கின்றனர். இது வெளிச்சத்துக்கு வந்த ஒருசில கவுரவக்கொலைகளில் முக்கியமானதொன்று.
இன்னும் வெளியே சொல்லப்படாத எண்ணற்ற கொலைகள் மவுனமான முறையில் நடந்தபடி இருக்கின்றன. பெரும்பாலும் அவை பெற்றோராலும் குடும்பத்தினராலுமே நடத்தப்படுகின்றன. மேலும், அக்கொலைகள் மூடி மறைக்கப்படுகின்றன. கொலையுண்டவர்களின் பிரேதங்கள் வீட்டுக்கு முன்பாக மரங்களில் தொங்க வைக்கப்படும்.
காதலர்களுக்கு மரண பயத்தை கிளப்பும்படியும், இளந்தலைமுறைக்கு படிப்பினையாகவும், தங்கள் பிள்ளைகளை கொலை செய்த குடும்பத்தினரை, ’தீயனவற்றை அழித்த வீரர்களாக’ போற்றப்படும் கொடுமையும் நடக்கும்.
ஒரே கோத்திரத்தில் மணம் புரிந்த தங்கள் பிள்ளைகளை யாருக்கும் தெரியாமல் கொலை செய்துவிடுவது கப் பஞ்சாயத்துக்கு காட்டும் விசுவாசமென்றும் கூறுகிறார் கப் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஒருவர். இதிலிருந்தே கப் பஞ்சாயத்துகளைப் பற்றி கற்பனைச் செய்து கொள்ளலாம். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வது தவறு, அந்த தவறுக்கு மரண தண்டனையே சரியென்று கிராமத்தினர் நினைக்கின்றனர்.
கொலை செய்யத்தூண்டும் கப் பஞ்சாயத்தினரோ கொலை செய்பவர்களோ கிராமத்தினருக்கு ஒரு போதும் கொலையாளிகளாகவோ வில்லன்களாகவோ தோன்றியதில்லை.
இப்படித்தான் மனோஜ் மற்றும் பப்லியின் கொலையும் கவுரவமாக எண்ணப்பட்டது. சகோத உறவினர் மணம் செய்து கொள்ள முடியாது. சட்டமும் நீதிமன்றமும் அதனைப் புரிந்து கொள்வதில்லை. பெண்ணின் உறவினர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதால் என்ன பயன்?
அந்த திருமணம் மிகவும் தவறானது, நீதிமன்றத்தின் தீர்ப்பும் தவறானது என்ற எண்ணமே கிராமத்தினருக்கு இருந்தது. சாட்சி சொல்லவும் யாரும் வரவில்லை. மீடியாக்களின் பிரச்சினைகளுக்குப் பிறகே போலீசு சந்தரபதியின் வழக்கை பதிவு செய்தது. மனோஜின் உறவினர்கள் கைது செய்யப்பட்டபோது தீர்ப்பினால் குற்றவாளிகளின் குடும்பங்கள் பாதிக்கப்படுமென்று உள்ளூர் செய்திதாள்கள் எழுதின. ஆனால் மனோஜின் குடும்பம் பாதிக்கப்பட்டதை மறந்துவிட்டன,போலும்!
கிராமத்தினருக்கு வயல்வெளிகளைத் தாண்டி வெளி உலகம் சற்றும் பரிச்சயம் இல்லை. இந்த கப் பஞ்சாயத்து இந்துக்கள் பெரும்பாலானோர் சிறு விவசாயிகள். வளர்ந்துவரும்(!) இந்தியப் பொருளாதாரத்தால் கைவிடப்பட்டு வஞ்சிக்கப்பட்டவர்கள். இன்றைய நிலையில் விவசாயம் இவர்களுக்கு பெரும் பலனை தராத பொய்த்துப்போன தொழில்.
சாதிப்பெருமையும் ஆதிக்கசாதி திமிரினாலும் வேறு தொழில்களை மேற்கொள்ளவும் மறுக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் அப்படி மீறினாலும் பிழைப்பதற்கு வேறு தொழில் எதுவும் இல்லை. தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலகமயமாக்கத்தின் மூலம் இவர்களது வாழ்க்கைநிலை மேலும் கவலைக்குரியதாக தள்ளப்பட்டிருக்கிறது.
கப் பஞ்சாயத்தினர் சொல்வதே வேதவாக்கு. மேலும், இந்த குடும்ப கவுரவத்தை காப்பதற்கு பெண்னே முக்கியமான கருவி. இந்த மனோபாவத்திற்கு மட்டும் படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடு இல்லை. பெண் உயர்ந்த சாதியாகவும், ஆண் தாழ்ந்த சாதியாகவும் இருந்துவிட்டால் தண்டனைகள் காட்டுமிராண்டித்தனத்தை மிஞ்சி விடும். பார்ப்பன இந்து மதவெறிக்கு பலியாவது காதலர்கள்தான்.
சென்ற வருடத்தில், கவுரவத்திற்காக ஒரு பெண் பத்திரிக்கையாளர் தனது குடும்பத்தாலே கொலை செய்யப்பட்டதை அறிந்திருப்பீர்கள். இத்தனைக்கும் அந்தப்பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் உயர் படிப்பு படித்தவர்கள், பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர்கள். பெரிய பதவிகளில் இருப்பவர்கள். அந்தப் பத்திரிக்கையாளர் தாழ்ந்த சாதி ஆணை காதலித்ததே அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம்.
படித்த படிப்பும், பதவியும் சாதியத்தை அவர்களது மனங்களிலிருந்து மாற்றிவிட்டதா என்ன?
இந்த சாதி மனோபாவம் நீதிமன்றங்களையும் விட்டுவைக்கவில்லை என்பதற்கு மனோஜ் பப்லி வழக்கின் தீர்ப்பும் ஒரு சான்று. இந்த தீர்ப்பு பல கங்காராஜுகளுக்கு சட்டப்பூர்வமாக கொலை செய்யும் அங்கீகாரத்தை வழங்கியிருக்கும் தீர்ப்பு.
கவுரவக்கொலைகள் போன்ற குற்றங்களுக்கு எப்படிப்பட்ட தண்டனையை வழங்கியிருக்கவேண்டும்? மாறாக, முன்னேறிய சமூகத்தில் இதற்கெல்லாம் இடமில்லை என்பதாக எப்படி உரத்துச் சொல்லியிருக்க வேண்டும்? மாறாக, சென்ற வருடத்தின் தீர்ப்பு ஏற்படுத்திய நம்பிக்கைகளை முற்றாக குலைத்து போட்டிருக்கிறது தற்போது உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு.
எத்தனையோ ஆபத்துகளுக்கு மத்தியில் உயிரை பணயம் வைத்து சாதி ஆதிக்கத்தை எதிர்த்து நின்றிருக்கிறார்கள். சொல்லப்போனால், சந்தரபதிதான் அரியாணா மாநிலத்தில் முதன்முதலாக கவுரவக் கொலைகளை எதிர்த்து வழக்குத் தொடுத்தவர். இந்நிலையில் கப் பஞ்சாயத்து தலைவர் கங்காராஜின் விடுதலையானது எத்தனைபேரின் நம்பிக்கையை குலைத்து போட்டிருக்கிறது!
சொல்லப்போனால், சந்திரபதியின் வாழ்க்கை தற்போது பேராபத்தில் இருக்கிறது. விடுதலை செய்யப்பட்ட கொண்டாட்டத்தில் இருக்கும் கங்காராஜ் இன்னும் எத்தனை கவுரவக்கொலைகளை சட்டத்தைப் பற்றி சற்றும் பயமின்றி, தைரியமாகச் செய்யப்போகிறானோ? இனி பாதிக்கப்பட்ட பெண்கள், சாதிவெறியும், ஆணாதிக்கமும் நிறைந்த கப் பஞ்சாயத்து அநீதியை எதிர்த்து நிற்பார்களா?
அல்லது நீதிமன்றத்தையோ போலீசையோதான் நாடிவர தைரியம் கொள்வார்களா?
கங்காராஜுக்கு ஒரு அரசியல் பின்புலம் இருப்பதும் இன்னொரு காரணம். இங்கு இருக்கும் வாக்கு வங்கி காரணமாக எந்த அரசியல்வாதிகளும் கப் பஞ்சாயத்தினரை பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை. சாதி இந்துக்களுக்காக சட்டத்தை வளைக்கவும் அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
தேர்தலின்போது எந்த வேட்பாளரை ஆதரிக்கவேண்டுமென்று கப் பஞ்சாயத்தினர் கூறுகிறார்களோ அவர்களுக்கே மொத்த சமூகமும் வாக்களிக்கிறது. சில அரசியல்வாதிகள் வெளிப்படையாகவே கப் பஞ்சாயத்துகளை ஆதரிப்பதாக சொல்கின்றனர். தங்கள் ஓட்டு வங்கியை இழக்க விரும்பாத அரசியல்வாதிகள் கப் பஞ்சாயத்தை ஆதரிப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. இதில் சித்தாந்த ரீதியாக பா.ஜ,க இந்த கப் பஞ்சாயத்து காட்டுமிராண்டித்தனத்திற்கு நெருக்கமாக இருக்கிறது.
இன்று கங்காராஜையும் கொலையாளிகளையும் விடுவிக்க முடியுமெனில், கப் பஞ்சாயத்தினருக்கு எதிரான சட்டங்களோ மசோதாக்களோ இன்னமும் எந்த வடிவத்துக்கும் வரவில்லையென்றுதானே பொருள்?
சட்ட அமைச்சரும்,மாவோயிஸ்டுகளால் பல பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் என்று நயவஞ்சகமாகக் கதறும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கப் பஞ்சாயத்துக்கு கொலைகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது அன்னா ஹசாரேதான் கவுரவக் கொலைகளுக்கு எதிராக கப் பஞ்சாயத்தினருக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பாரா? மாறாக, சாதி இந்துக்களின் கோரிக்கைக்கு அல்லவா அதிகார வர்க்கம் மறைமுகமாக செவிசாய்க்கிறது?
அரியாணாவின் முதலமைச்சரும் இவ்விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டார். ”கவுரவக்கொலைகள் சமூகப்பிரச்சினை, இதைப்பற்றிய எந்த முடிவை எடுக்கவும் சமூகத்திற்கு உரிமை இருக்கிறது” என்று முடித்துக்கொண்டார். எந்த அரசியல் கட்சியும் கவுரவக்கொலைகளை பற்றி பேசக்கூட தயாராக இல்லை. காங்கிரஸ் எம்.பி நவீன் ஜிந்தால் வெளிப்படையாகவே கப் பஞ்சாயத்தினருக்கு தனது ஆதரவை வழங்கியிருக்கிறார்.
இந்த தைரியத்தில்தான், கப் பஞ்சாயத்தினர் இந்திய திருமண சட்டத்தில் ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக்கொள்வதை சட்டரீதியாகவும் தடுக்கும்படி திருத்தங்கள் கொண்டுவர கூறுகிறார்கள். தங்களிடம் ஓட்டு கேட்க வரும் வேட்பாளர்களிடமும் அதையே வலியுறுத்துகிறார்கள்.இப்போது புரிந்திருக்குமே, கங்காராஜின் தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கும் ரகசியம்!
இந்த பின்னணியில்தான், கொலையாளிகள் நான்குபேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக மாறியிருக்கிறது. முக்கிய குற்றவாளியும் விடுதலை செய்யப்படுகிறார். இந்தத் தீர்ப்பு, சாதிக்கு நீதிமன்றங்களும் விதிவிலக்கல்ல என்பதைத்தான் காட்டுகிறது!
இந்தியா அதாகி விட்டது இதாகி விட்டது என்றும் சொல்லப்படுவதை தாண்டி, சற்று நிதானமாக உரித்து பார்த்தால் காணக்கிடைப்பது இதுதான் – பார்ப்பனிய சாதியமைப்பும், அதைப் பாதுகாக்கின்ற அரசு, அரசியல், நீதிமன்றங்களும்தான் இந்த வட இந்தியக் காட்டுமிராண்டித்தனத்தின் பாதுகாலவர்கள். சொந்த நாட்டு காதலர்களைக்கூட காப்பாற்ற வக்கில்லாத இந்த நாடுதான் 2020இல் வல்லரசாகப் போகிறதாம்!
கீழ்வேளூரில் போட்டியிடும் தி.மு.க அமைச்சர் மதிவாணனிடம் நக்கீரன் நிருபர் செல்வகுமார் கேட்கிறார்,” நிலைமை எப்படி இருக்குண்ணே?”.
அதற்கு அந்த அமைச்சர்,”நல்லாவே இருக்கு. ஆனா நாம் தமிழர் இயக்கத்து தம்பிகள்….எனக்கு எதிராக் களமிறங்கி கேன்வாஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவங்க தலைவர் சீமான், தி.மு.கவை எதிர்த்து வேலை செய்யச் சொல்லவில்லை. காங்கிரஸ் மட்டும்தான் அவங்க குறி. இங்க மட்டும் எனக்கு எதிரா ஏன்?” என்று வருத்தப்பட்டாராம்.
உடனே நக்கீரன் நிருபர் நாம் தமிழர் மாநில பொறுப்பாளர்களில் ஒருவரான தஞ்சை வழக்கறிஞர் நல்லதுரையிடம் இது குறித்து விசாரிக்க அவர் அதிர்ச்சியானாராம். அதன்படி,”தி.மு.கவுக்கு எதிராக பிரச்சாரம் பண்ணும்படி எங்க தலைமை உத்தரவிடவில்லை. இதை மீறி பிரச்சாரம் செய்த இயக்கத்தவர் யார்னு விசாரித்து நடவடிக்கை எடுப்போம். நாங்க கட்டுப்பாடான இயக்கம்” என்றாராம்.
நல்லா கவனிங்க, இந்த மதிவாணன் ஒரு சாதாரண தி.மு.க தலைவரோ, இல்லை வெறும் எம்.எல்.ஏவோ இல்லை. அவர் அமைச்சர். கூட்டணி தர்மத்தின்படி அவர் சீமான் கட்சியை கடுமையாக எதிர்த்து பேசியிருக்க வேண்டும். ஆனால் அவரோ அதற்கு மாறாக “காங்கிரசைத்தானே தோக்கடிக்கணும்னு சொன்னீங்க, பின்ன ஏன் என்னை எதிர்க்கிறீங்க”ன்னு பாசத்தோடு அந்த தம்பிகள் குறித்து வருத்தப்பட்டால் என்ன பொருள்?
இவ்வளவிற்கும் சீமான் சில இடங்களில் கருணாநிதி ஆட்சியையும் விமரிசித்திருக்கிறார். அது கொஞ்சமா, கூடுதலா என்பது பிரச்சினையல்ல. இல்லை கருணாநிதி கூட தம்பி சீமான் தன்னை எதிர்க்காதற்கு நன்றி என்றா சொன்னார்? இவ்வளவிற்கும் இந்த சீமானை உள்ளே போட்டு ஐந்து மாதங்கள் அடைத்தவரே அவர்தானே? எதன் பொருட்டு இந்த கைது? எல்லாம் காங்கிரசு பெருச்சாளிகளை குளிர்விக்கத்தானே? அது போல இந்த கைதுக்காக சீமானும் கருணாநிதி மீது கோபம் கொள்ளவில்லையா என்ன?
கூட்டிக் கழித்து பார்த்தால் தேர்தலென்பது யதார்த்தத்தில் கட்சிகள், கூட்டணிகள் என்று கூட நடப்பதில்லை. அந்தெந்த தொகுதியில் ஜெயிப்பதற்கு தேவையென்றால் சொந்தக் கட்சியைக்கூட எதிர்ப்பார்களோ, தெரியவில்லை.
இதில் நக்கீரனுக்கு வந்த சோதனை என்ன? அ.தி.மு.கவிற்கு ஒரு ஜூ.வி போல தி.மு.கவிற்கு ஒரு நக்கீரன். அண்ணன் சீமானோட தம்பிகளால் ஒரு தி.மு.க அமைச்சருக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக உடனே சீமான் கட்சிக்காரரிடம் போட்டுக் கொடுக்கிறார்கள். ஏன்? தி.மு.க வெற்றிபெற வேண்டுமென்ற விருப்பமும், அதையொட்டிய கருத்துக் கணிப்பும் பலித்தால்தானே அடுத்த ஐந்து வருடங்கள் குப்பை கொட்ட முடியும்?
சரி இதில் கட்டுப்பாடான நாம் தமிழர் தம்பிகள் ஏன் அங்கே கட்சி முடிவுக்கு மாறாக தி.மு.கவை எதிர்க்க வேண்டும்? ஒரு வேளை அண்ணன் சீமானை விட இனவுணர்வு கொண்டு துரோகமிழைத்த தி.மு.கவையும் எதிர்க்க வேண்டும் என்று ஓவர் ஸ்மார்ட்டாக பணி செய்தார்களா? அப்படியெனில் அவர்கள் முதலில் சீமானையல்லவா குறுக்கு விசாரணை செய்திருக்க வேண்டும்? இல்லை அந்த ஊர் அ.தி.மு.க தலைவர்கள் இந்த தம்பிகளை கவனித்தோ இல்லை கன்வின்ஸ் செய்தோ இறக்கினார்களா?
திருச்சியில் அமைச்சர் நேரு போட்டியிடுகிறார். சாதி, பண, அரசியல் என எல்லா செல்வாக்கிலும் லீடிங்கில் இருப்பவர். அவரது தம்பி ராமஜெயம் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயாவிற்கு எதிராக தி.மு.க வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து தீவிரமாக வேலை செய்தாராம். உடனே திருச்சி மாவட்ட அ.தி.மு.க பெரும்புள்ளிகள் அவரிடம் ” அண்ணே நாங்க மட்டும் அமைச்சர் நேருவுக்கு எதிராக வேலை செய்யல. அது மாதிரி நீங்களும் ஸ்ரீரங்கத்துல எங்க தலைவிக்காக கம்னுதானே இருக்கணும், ஏம்ணே?” என்றார்களாம். என்ன எழவு அண்டர்ஸ்டேண்டிங் இது?
கரூர் தொகுதியில் அமுல்பேபி ராகுல்காந்தியின் அருளால் போட்டியிடும் பேறுபெற்றவர் ஜோதிமணி. காட்டன் சேலையில் கதர் காங்கிரசு வஸ்திரத்தோடு தெரு தெருவா பெரியவங்க கால்ல விழுந்து “எப்படியாவது என்ன ஜெயிக்க வச்சுருங்க”ன்னு பாடுபட்ட இந்த அம்மணி சீமானுக்கு ஒரு கடிதம் எழுதினாராம். ” அண்ணே நான் உங்க தங்கச்சி மாதிரி, என் தொகுதிக்கு வந்து எதிர்த்து பிரச்சாரம் செய்யாதீங்கண்ணே”ன்னு அதில் உருகியிருந்தாராம். என்ன இருந்தாலும் தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை சென்டிமெண்டுக்கு தனி மவுசு உண்டில்லையா?
அதே போல கரூருக்கு வந்த அண்ணன் சீமானும் “தங்கச்சி நீ காங்கிரச விட்டுவெளிய வந்தீன்னா உன்ன நானே ஜெயிக்க வப்பேன். காங்கிரசு ஈழத்தமிழரின் இரத்தம் குடித்த பகைவர்கள்”னு விளக்கம் அளித்து பேசியிருக்கிறார். இதுல நால்லா பாருங்க! சீமான் காங்கிரசை தீவிரமாக எதிர்க்கிறார். அதில் முக்கியமாக சோனியா காந்தியை வறுத்தெடுக்கிறார். அந்த சோனியாவின் புத்திரன் போட்ட பிச்சை சீட்டில் நின்று கொண்டு புத்திரனது அம்மாவை கிழிக்கும் அண்ணனிடம் பாசமுள்ள தங்கையாக ஜோதிமணி கெஞ்சுகிறார் என்றால்…? ஏசுவே ஏசுவே இது என்ன அரசியல்?
தி.மு.க நட்சத்திர பேச்சாளர் வெற்றிகொண்டான் முன்னர் ஒரு கூட்டத்தில் பேசும்போது,” போன தேர்தல்ல பி.ஜெ.பியை ஆதரிக்க வேண்டியிருந்தது. இந்த தேர்தல எதிர்க்க வேண்டியிருக்கு. இப்படியே போன தலைவா அடுத்த வாட்டி ஜெயலலிதா கூட கூட்டணி கீட்டணி வச்சிராத” என்றார். ஆனால் அப்படி கூட்டணி ஏற்கனவே இருக்கத்தானே செய்கிறது?
தி.மு.க ஆட்சியில் மிடாஸ் தொழிலுக்கு எந்த இடையூறும் இல்லை. சுமங்கலியிலும் ஜெயா டி.வி நன்றாகவே தெரிகிறது. ஜெயாவின் பாதுகாப்புக்கும் ஒரு குறையுமில்லை. அதே போல நாளை புரட்சித் தலைவி வந்தால் கருணாநிதி, சன்.டி.வியின் தொழில்களுக்கு எந்த பங்கமும் வராது. அரசியல் வேறு, தொழில் வேறு!
உள்ளூர் அளவிலும் இந்த புரிந்துணர்வு தி.மு.க, அ.தி.மு.க தலைவர்களிடம் இருக்கிறது. ஆளும்கட்சியாகவே இருந்தாலும் சாலை ஒப்பந்தங்கள், மணல் கொள்ளை, சுயநிதி கல்லூரி போன்றவற்றில் எதிர்க்கட்சியினரும் தொழில் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் பொதுக்கூட்டம், அறிக்கை, மாநாடு என்ற விவகாரங்களில் மட்டுமே ஏதோ கொஞ்சம் மோதிக் கொள்கின்றனர். மற்ற நேரங்களில் ‘சமாதான சகவாழ்வுதான்’.
மக்கள் இந்த இரண்டு கட்சிகளையும் ஏதோ ஜென்ம பகைவர்கள் போல எண்ணிக் கொண்டிருக்கும் போது இரு கழகங்களின் பெருச்சாளிகளும் ஒற்றுமையாக ஊர் வயலை நாசம் செய்து வருகின்றன. பெருச்சாளிகளின் தொழில் ரகசியத்தையும், ஒரே அலைவரிசையையும் மக்கள் உணரும்போது மட்டுமே இந்த திரைமறைவுக் கூட்டணியின் மோசடி அகற்றப்படும். அது வரை மாறி மாறி செட்டப் வழக்காடு மன்றம் போல கேட்டு இரசிப்பதுதான் மக்களது தலையெழுத்தா?
“நான் குல்பர்கா சமூகக் கூடம் எரிந்து தீர்ந்த அடுத்த தினம் அங்கே சென்றிருந்தேன். அதன் தரையெங்கும் மனிதச் சதை தீயில் பொசுங்கி கூழாகப் படிந்திருந்தது. அது எனது காலணியின் கீழ் பகுதியில் சவ்வு போல் ஒட்டிக் கொண்டு நின்றது. அந்தத் தரையின் ஒரு மூலையில் பாதி எரிந்தும் எரியாமலும் இருந்த ஒரு புத்தகத்தை நான் கண்டெடுத்தேன். அது ஒரு பிரிட்டானிக்கா என்சைக்ளோ பீடியா. அதன் மேல் படிந்திருந்த சாம்பலின் மிச்சங்களைத் தட்டிவிட்டு முதல் பக்கத்தைப் புரட்டினேன் – அஸன் ஜாஃப்ரி என்கிற பெயர் அழகான முத்து முத்தான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அன்றைக்கு நாண் அணிந்திருந்த காலணிகளை அதற்குப் பின் நான் பயன்படுத்தவும் இல்லை – அதன் அடிப்பகுதியை சுத்தம் செய்யவும் இல்லை”
சன்சீவ் பட் - படம் தெஹெல்கா
குஜராத் கலவரங்களை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் முன் 2002-ம் ஆண்டு குஜராத் காவல்துறையின் உளவுப் பிரிவு கமிஷனராய் இருந்த சஞ்சீவ் ராஜேந்திர பட்டின் வாக்குமூலத்திலிருந்து வெளியே கசிந்துள்ள பகுதிகளில் மேலே உள்ள பகுதிகள் காணப்படுகிறது. இந்த அறிக்கையின் விவரங்களை தெகெல்கா பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.
பிப்ரவர் 27-ம் தேதி 2002-ம் ஆண்டு கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் முதலமைச்சர் கூட்டிய காவல் துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டுள்ளார். அந்தக் கூட்டத்தில் வைத்து முசுலீம்களைப் பழிவாங்கும் நேரம் இதுவென்றும், இந்துக்கள் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளப்போகிறார்கள் என்றும், அதைக் காவல் துறை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் மோடி பகிரங்கமாக உத்திரவிட்டார்.
அடுத்த நாள். இந்துக்களின் பழிவாங்கும் உணர்ச்சி, அரசு இயந்திரத்தின் மௌனமான அங்கீகாரத்துடன் அரங்கேறுகிறது. முசுலீம்களைக் கண்ட இடத்திலெல்லாம் கொன்று குவித்தனர் இந்து பயங்கரவாதிகள். கருவிலிருந்த முசுலீம் குழந்தைகள் கூட அன்றைக்குத் தப்பவில்லை. தொடர்ந்து நடந்த வன்முறை வெறியாட்டத்தில் நூற்றுக்கணக்கான முசுலீம்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். காந்தி பிறந்த மண் என்று போற்றப்படும் மாநிலம் முசுலீம்களின் இரத்தத்தால் சிவந்தது.
கலவரத்தால் அச்சமடைந்த நூற்றுக்கணக்கான முசுலீம்கள் மெகானி நகரில் இருக்கும் குல்பர்கா சமூகக் கூடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். அது பிப்ரவரி 28-ம் தேதி. அன்று அங்கே தஞ்சமடைந்திருந்தவர்களில் ஒருவர்தான் காங்கிரஸின் முன்னாள் எம்.பி ஹஸன் ஜாஃப்ரி. அன்று அந்தக் கூடத்துக்கு வெளியே முசுலீம்களைக் கொன்று போட வேண்டுமென்று கூச்சலிட்டுக் கொண்டு ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, வி.எச்.பி போன்ற இந்து பயங்கரவாத இயக்கங்களின் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்திருக்கிறார்கள். அந்தப் பகுதியின் கள நிலவரத்தை பார்வாட் எனும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் பட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
சஞ்சீவ் பட் தனது மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நிகழவிருக்கும் இனப் படுகொலையை எப்படியாவது தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். ஒருவரும் கண்டு கொள்ளாமல் போகவே முதலமைச்சர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு ஓ.பி. சிங் என்கிற அதிகாரியிடம் பேசுகிறார். ஆனால் அங்கே குல்பர்கா சமூகக் கூடம் அமைந்திருக்கும் மெகானி நகர் பகுதியிலோ கொஞ்சம் கொஞ்சமாகப் பிற பகுதிகளில் இருந்து திரட்டி வரப்பட்ட இந்து வெறியர்களின் கும்பல் பெரிதாகிக் கொண்டேயிருந்திருக்கிறது.
முந்தைய தினம் மோடியின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளின் உண்மையான பொருளை சஞ்சீவ் உணர்ந்து கொண்ட போது அங்கே குல்பர்கா சமூகக் கூட முற்றிலுமாக எரிந்து போயிருந்தது. 69 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அஸன் ஜாஃப்ரியை வெளியே இழுத்து வந்த இந்து வெறியர்கள், அவரது கழுத்தில் நாய் பிடிக்கும் இரும்புச் சுருள் கண்ணியை மாட்டி இறுக்கி, தரதர வென்று இழுத்துள்ளனர். பின் இறந்த அவரின் உடலைத் துண்டுத் துண்டாகப் பிளந்து நெருப்பில் அடையாளம் தெரியாத அளவுக்கு எரித்துள்ளனர்.
இவையெல்லாம் ஏதோ ஆத்திரத்தில் செய்யப்பட்ட கொலைகள் அல்ல. சட்டென்று ஒரு கண நேர கோபத்தில் நிகழ்ந்த வன்முறைகள் அல்ல. அன்றைக்கு நிகழ்ந்த கொலைகளை எப்படியெப்படியெல்லாம் அனுபவித்துச் செய்தார்கள் என்பதையும், கற்பழிப்புகளை எப்படியெல்லாம் திட்டமிட்டு ஒரு கலையைப் போல் நிறைவேற்றினார்கள் என்பதையும், முசுலீம் குழந்தைகளைக் கொன்று களிப்புற்ற தங்கள் அனுபவத்தையும் பின்னர் அவர்களே தெகல்காவின் கேமரா முன் நிதானமாக அசை போட்டுச் சொன்னதைக் கேட்டு நாடே திகைத்து நின்றது. மனசாட்சி கொண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
தீயிட்டுக் கொளுத்தப்பட்ட குல்பர்கா சமூகக் கூடதை ஆய்வு செய்யச் சென்ற போது எரிந்து போன நிலையில் கண்டெடுத்த அஸன் ஜாஃப்ரியின் என்சைக்ளோ பீடியாவைக் கையில் ஏந்தி நின்ற அந்த கணத்தின் மனப்பதிவுகளை சஞ்சீப் பட் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
“எனது கையில் பாதி எரிந்த போன நிலையிலிருந்த அந்தப் புத்தகத்தில் இருந்த ஹஸன் ஜாஃப்ரி எனும் அந்த அழகான கையெழுத்தை கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன். அந்த நேரத்தில் எனது பள்ளி நாட்களின் நினைவுகள் நிழலாடியது. அப்போதெல்லாம் இணையம் போன்ற வசதிகள் கிடையாது. என்சைக்ளோ பீடியாவைப் படிக்க வேண்டுமென்றால் சில கிலோ மீட்டர்கள் சைக்கிளை மிதித்து நூலகத்துக்குத் தான் செல்ல வேண்டும். எனது மாணவப் பருவத்தின் லட்சியமே ஒரு நல்ல என்சைக்ளோ பீடியாவை சொந்தமாக வாங்குவது தான். இதோ, எனது கையில் இப்போது ஒரு என்சைக்ளோ பீடியா இருக்கிறது – பாதி எரிந்து போன நிலையில் – தீயில் பொசுங்கிய மனித சதைக் கூழ் படிந்து போன நிலையில். நான் ஜாஃப்ரியை எனது வாழ்நாளில் சந்தித்ததேயில்லை. ஆனால், அந்த அழகான கையெழுத்து நிச்சயம் அந்த மனிதரின் பக்குவப்பட்ட கலாச்சாரத்தை எனக்கு உணர்த்தியது”
2002ம் ஆண்டு குஜராத்தில் இந்து வெறியர்கள் நிகழ்த்திக் காட்டிய அந்த படுகொலைச் சம்பவங்களில் கொல்லப்பட்ட முசுலீம்களில் எத்தனையோ அஸன் ஜாஃப்ரிக்களின் நெஞ்சை உலுக்கும் கதைகள் உள்ளது. படுகொலைச் சம்பவங்களின் பின்னுள்ள சதியை அம்பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிய தனது சொந்தக் கட்சிக்காரரான ஹிரேன் பான்ட்யாவைக் கூட பின்னர் கொன்று போட்டனர் இந்து பயங்கரவாதிகள். சென்ற வருடத்தின் ஜனவரி மாதம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரின் முன் கொடுக்கப்பட்ட இந்த வாக்குமூலங்களைக் கொண்டு நடப்பிலிருக்கும் சட்டங்களைக் கொண்டே மோடியைத் தண்டிக்க முடியும். தூக்கில் கூட போட்டிருக்க முடியும்.
ஆனால் இதுவரை அதைத் தன் சொந்த அரசியல் நலன்களுக்காகக் கூட முன்னெடுத்துச் செல்ல காங்கிரசு முயலவில்லை. கார்ப்பரேட் உலகத்தால் மோடிக்கு நல்லவர் வல்லவர் என்கிற ஞானஸ்நானம் வழங்கப்பட்டு அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்று முதலாளித்துவ ஊடகங்களும் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. மோடியின் பொருளாதார ‘சாதனைகளின்’ ஒளியில் தான் கருகிப் போன சில ஆயிரம் முசுலீம்களின் கனவுகளும் உள்ளன என்பதை இவர்கள் மிக வசதியாக மறந்து விடத் துடிக்கிறார்கள்.
குஜராத்தின் சாதனைகள் பற்றிய மயக்கத்தில் இருப்பவர்கள் இன்றும் தொழில்கள் பறிக்கப்பட்டு, வாழ்விடம் பறிக்கப்பட்டு, வாழ்க்கையே பறிக்கப்பட்டு, சொந்தங்களை இழந்து குஜராத்தில் அகதிகளாய் அலையும் அந்த அப்பாவி முசுலீம்களிடம் சென்று அதைப் பற்றி பேசட்டும். ஆனால், ஜனநாயகத்திலும், சக மனிதனின் வாழும் உரிமையின் பேரிலும் உண்மையான அக்கறை கொண்டவர்கள் சிந்தித்துப் பார்க்க எம்மிடம் ஒரு கேள்வி உண்டு – “இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அமைதி?”
(தற்போது இந்த நேர்மையான தைரியமான காவல் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்திருக்கிறார். அதில் மோடி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டதையும், மோடி அங்கே கலவரத்திற்கு ஆதரவாக தெரிவித்த்தையும் கூறியிருப்பதோடு, இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக விசாரிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் சஞ்செய் பட்டின் இந்த நேரடி வாக்குமூலத்தை மறுத்து மோடியின் பக்தர்களான சில போலீசு அதிகாரிகள் பேசிவருகின்றனர். கோத்ரா எரிப்பு நடந்த இரவில் கூடிய அந்த கூட்டத்தில் இந்த சஞ்செய் பட் இல்லவே இல்லை என்று சக்ரவர்த்தி எனும் அன்றைய டி.ஜி.பி கூறியிருக்கிறார்.
வேறு இரு போலீசு அதிகாரிகள் மோடி கூட்டிய அந்த கூட்டத்தில் யாரெல்லாம் இருந்தார்கள் என்று நினைவில்லை என்று சமாளித்திருக்கிறார்கள். ஆனால் இந்த பச்சைப் பொய்யை சஞ்செய் பட்டின் ஓட்டுநராக இருந்த தாரா சந்த் யாதவ் மறுத்திருக்கிறார். அன்றைய கூட்டத்திற்கு சஞ்செய் கலந்து கொண்டதையும், அவருக்காக வாகனத்துடன் வெளியில் காத்துக் கொண்டிருந்ததையும் அந்த ஓட்டுநர் துணிச்சலுடன் தெரிவித்திருக்கிறார். இதற்காக மோடி கும்பல் இவரை என்கவுண்டர் செய்தாலும் செய்யலாம்.
ஏனெனில் எந்த கொலைக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் இவர்கள் துணிந்தவர்கள்தான் என்பதை பிரக்யா சிங், அசீமானந்தா, மோடி மூலம் அறியலாம்.
நூற்றுக்கணக்கான முசுலீம் மக்களை கொன்று குவித்த அந்த கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதும், அதற்கு தலைமையேற்றவர்தான் நரேந்திர மோடி என்பதற்கும் இதை விட என்ன ஆதாரம் வேண்டும்?
கசாப்பை தூக்கில் போடவேண்டும் என்று தும்மினாலும், சிந்தினாலும் கூப்பாடு போடுபவர்களின் கோரிக்கையை நாம் மறுக்கவில்லை. ஆனால் கசாப் கொன்றதை விட அதிக எண்ணிக்கையில் கொன்றவரும், கசாபின் காலத்திற்கும் முந்தையவருமான நரவேட்டை நாயகன் மோடியைத் தூக்கில் போடவேண்டும் அல்லவா? எப்போது போடுவீர்கள்?
ரிலையன்சின் அதிபர் முகேஷ் அம்பானி குடியிருக்கும் “ஆன்டிலியா” எனும் 27 மாடி குடிசையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இல்லையென்றால் வினவில் முன்னர் வந்த கட்டுரையை படியுங்கள்.
தற்போது ஒரு சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டப்படி அம்பானியின் குடும்பம் ஒரு மாதத்திற்கு எவ்வளவு நீரை பயன்படுத்துகிறது என்பதை வெளிக் கொண்டு வந்திருக்கிறார். அதன்படி கிரேட்டர் மும்பையின் முனிசிபால்டி நிர்வாகம், அம்பானியின் ஆன்டிலியா மாளிகைக்கு மாதம் ஐந்து இலட்சம் லிட்டர் நீரைக் கொடுக்கிறதாம்.
அதாவது தினசரி 17,000 லிட்டர் நீர். கற்பனை செய்ய முடியவில்லையா? பிளாஸ்டிக் குடம் கணக்கில் சொன்னால் தினசரி 850 குடங்கள். இவ்வளவு நீரை பயன்படுத்துவதற்கு அம்பானியின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் எத்தனை பேர்? அம்பானி அவரது சம்சாரம், மூன்று குழந்தைகள் மட்டுமே.
குடும்பத்தில் 5 உறுப்பினர்கள். 5 பேர் வாழும் ஆன்டிலியாவின் பரப்பளவு 5 இலட்சம் சதுர அடிகள். 5 பேர்களுக்கு தேவைப்படும் ஒரு மாத நல்ல நீர் 5 இலட்சம் லிட்டர். எல்லாம் ஐஞ்சுக்கு ஐந்து என்று மேட்சாகத்தான் பொருந்துகிறது. எனினும் அம்பானியின் நீர் தேவையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஆன்டிலியா குடிசையில் உள்ள நீச்சல் குளம், கார்களை கழுவ, நாய்களை குளிப்பாட்ட இன்ன பிற அத்தியாவசிய தேவைகளுக்குத்தான் அந்த நீர் பயன்படுகிறது. இது போக நீரை விரயமாக்கும் பழக்கமெல்லாம் அம்பானியின் பரம்பரைக்கே இல்லை.
மேலும் நீருக்காக முனிசில்பாடி நிர்வாகம் வசூலிக்கும் தொகையை அம்பானி தவறாது கட்டிவிடுகிறார். பிசினசில்தான் அவர் அரசை ஏமாற்றுவார், அது போக அவர் ஒழுங்காக நீர்வரி கட்டும் நல்ல குடிமகன்தான். நாமும் அவரது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் விதிக்கும் கப்பத்தை ஒழுங்காக கட்டுகிறோம் அல்லவா அது போலத்தான் அம்பானியும் நல்ல பிள்ளையாக நீர்வரி கட்டுகிறார்.
இந்த தண்ணி கணக்கு என்பது முனிசிபால்டி அளிக்கும் நல்ல நீர் மட்டும்தான். இது போக ஆன்டிலியாவின் அன்றாடத் தேவைக்காக எவ்வளவு நிலத்தடி நீர் பயன்படுகிறது என்பதை யாரும் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கூட அறியமுடியாது. அதெல்லாம் காந்தி கணக்குதான்.
நண்பர்களே, மும்பையின் நெரிசலையும், தாரவி முதலான குடிசைப் பகுதிகளின் நரக வாழ்வையும் நாம் கொஞ்சமாவது கேள்விப்பட்டிருப்போம். பத்துக்கு பத்து தீப்பெட்டி போன்ற இடத்தில் எல்லா பொருட்களோடும், எல்லா குடும்ப உறுப்பினர்களும் தீக்குச்சிகளைப் போல அடைபட்டு வாழ்கிறார்கள். பல குடிசைகளுக்கு ஒரு கழிப்பறை, குளியலறை என்பதுதான் அவர்களது சதவீதக் கணக்கு. காலை கடனுக்காக அதிகாலையில் கழிப்பறை முன்பு எப்போதும் நிற்கும் வரிசை. ஏக், தோ, தீன்….தஸ் என்று எண்ணிவிட்டு கக்கூஸ் கதவு தட்டப்படும். அந்த பத்து கண நேரத்தில்தான் முந்தைய நாளின் சாணியை அதிவேகமாக காலி செய்ய வேண்டும். தாமதித்தால் கதவு உடைக்கப்படும்.
ஒரு நாளைக்கு 850 குடங்கள் என்பது கிட்டத்தட்ட 85 குடும்பங்கள் பயன்படுத்தும் நீர். மும்பையில் இருக்கும் ஏழைகளும், கீழ்தட்டு நடுத்தர வர்க்கமும் தமது முழு தேவைக்கு மாநகராட்சி நீரைத்தான் நம்பியிருக்கிறார்கள். அதிலும் அவர்களுக்கு எல்லா நாளும் போதுமான நீர் கிடைப்பதில்லை. இது மும்பைக்கு மட்டுமல்ல எல்லா மாநகரங்களுக்கும் பொருந்தும். இத்தகைய சூழலில் வைத்துப் பார்த்தால் அந்த 850 குடங்களின் ஆபாசம் நமது கண்ணை உறுத்தும்.
அம்பானி ‘உழைத்து’ முன்னேறிய கதையை கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வாசிக்கும் அதன் வாசகர்கள் தினசரி பூஜையே செய்கிறார்களாம். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வெற்றிக்காக ஆர்ப்பரித்த அம்பானி தம்பதியினரின் தேசபக்தியைக் கண்டு கிரிக்கெட் இரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் விடுகிறார்கள்.
அம்பானிக்கு தேசபக்தி இருக்கிறது என்பதை விட இந்த தேசம்தான் அம்பானி மேல் பக்தி கொண்டிருக்கிறது எனச் சொல்லலாம். அதனால்தான் அம்பானியும் சளைக்காமல் தனது பக்த கோடி அடிமைகளுக்கு அன்றாடம் பங்கு சந்தை மூலம் திவ்ய தரிசனம் தருகிறார். பக்தர்களின் காணிக்கை மூலம் ரிலையன்சு கோவில் தினசரி குடமுழுக்கை நடத்துகிறது. அம்பானி நமஹா என்ற மந்திரம் இந்தியாவின் தேசிய மந்திரமாகிவிட்டது. அதன்படி பார்த்தால் 850 குடம், திருப்பள்ளி எழுச்சி கொள்ளும் பகவான் ஆய் போய்விட்டு கழுவுவதற்கு பயன்படுகிறது என்றால் நாம் செய்த புண்ணியம்தான் என்ன?
சாய்பாபா செத்துவிட்டார். அவரது பக்தர்களுக்கோ, ‘கடவுள் இறந்துவிட்டார்’! கடவுளின் மரணம் நிச்சயம் ஒரு வருந்தத்தக்க இரங்கல் செய்திதான். ஆனால் நமக்கோ கடவுளை விடவும், பக்தர்களைப் பற்றியே அதிக கவலை!
பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்த சாயிபாபா அந்தப் பணத்தில் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், இலவச மருத்துவமனைகள் என கட்டி வைத்துள்ளார். இப்போது அவருக்கான ஆதரவு சக்திகள் தங்களின் தர்க்கத்துக்கு பயன்படுத்தும் பாய்ண்ட்டும் இதுதான். ‘எப்படியோ சம்பாதிச்சுட்டுப் போகட்டும்ங்க.. எவ்வளவு சேவை செய்யிறாரு. கொள்ளையடிக்கிற மத்த எவனும் இதை செய்யிறானா?’ என்பது பக்தர்களுடையது மட்டுமின்றி, பொதுவான மிடில் கிளாஸ் மனநிலையின் வாதமும் கூட.
’எப்படியோ சம்பாதிச்சுப் போகட்டும்’ என்ற சொற்களின் மூலம் மிகப் பெரிய மோசடித்தனங்களையும், ஏமாற்று வேலைகளையும் மிக எளிமையாக இவர்கள் கடந்து செல்கின்றனர். சாயிபாபாவுக்கு மட்டுமல்ல.. இன்று ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கும், குவைத் ராஜாவுக்கும் கூட இதே தர்க்கத்தைதான் பொதுப்புத்தி பொருத்துகிறது. தேர்தல் களத்தில் தி.மு.க.வின் ஊழல்கள் எல்லாம் வாக்குக்கு எதிரானதாக மாறாது எனச் சொன்ன டீ கடைக்காரர் ஒருவர், ‘நாட்டுல எவன் சார் கொள்ளை அடிக்கல.. ஏதோ அவன் பத்து காசு பார்த்தானா… நமக்கு ரெண்டு காசு தந்தானா.. ரைட்டு ஓ.கே.ன்னுட்டுப் போக வேண்டியதான்’ என்று பெருந்தன்மையாக ஊழலை அங்கீகரித்தார்.
நாட்டின் மிகப் பெரும் கொள்ளைகளுக்குதான் இப்படி என்றில்லை. பன்னெடுங்காலமாக இந்த சிஸ்டம் மக்களை கொஞ்சம், கொஞ்சமாக Corrupt செய்து வந்திருக்கிறது. அதன் விளைவு… ஊழல் என்றில்லை… எல்லாமே இப்படித்தான் நடக்கும், ஏற்றுக்கொண்டு அனுசரித்துதான் வாழ வேண்டும் என மக்களின் மனங்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. ‘போலிஸ்னா அடிக்கத்தான் செய்வான். அரசியல்வாதின்னா ஊழல் பண்ணத்தான் செய்வான். அதிகாரின்னா லஞ்சம் வாங்கத்தான் செய்வான்’ என சீரழிவுகள் அனைத்தையும் சமூகத்தின் இயல்புகள் என ஏற்றுக்கொண்டிருக்கிறது பொதுப்புத்தி. ‘சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?’ என வடிவேல் கேட்பது வெறும் நகைச்சுவை அல்ல, இந்த சமூகத்தின் மனசாட்சி!
அனைத்தையும் அனுசரித்துப் போவதும், ஊழலையும், பொறுக்கித்தனத்தையும், நேர்மையின்மையையும் அன்றாட வாழ்க்கையின் அம்சங்களாக கொள்வதும் தனிப்பட்ட நபரின் விருப்பத் தேர்வாக இருக்கும் வரை அது ஓர் தனிநபரின் ஆளுமைப் பிரச்னை மட்டுமே. ஆனால் எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் செய்துபோவது ஒரு சமூக மனநிலையாக மாற்றப் பட்டிருக்கிறது. அதனால்தான் தேர்தலில் போட்டியிடும் யாரும் உத்தமர் இல்லை என தெரிந்தும் மக்கள் வாக்களிக்கின்றனர். தேர்தலில் மட்டுமல்ல.. வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் சமரசத்தால்தான் எல்லோரும் எதிர்கொள்கின்றனர்.
இன்று கல்வி என்பது கொழுத்த பணம் புரளும் வர்த்தகம். தனியார் கல்லூரிகளில் ஒரு எம்.பி.பி.எஸ். சீட் ஒரு கோடி ரூபாய் விலைபோகிறது. இந்த அநீதியை எதிர்த்து ‘கல்வி என்பது அடிப்படை உரிமை. அதை இலவசமாக ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை’ என உரிமையை போராடிப் பெற யாரும் தயாரில்லை. மாறாக, கிடைத்த படிப்பைப் படிக்கவும், ‘பணத்தைக் கொடுத்தாலும் வேலையை முடித்துத் தரும்’ நீரா ராடியாக்களைத் தேடவுமே விரும்புகின்றனர்.
ஆனாலும் அவர்களுக்கு ஒரு கட்டத்தில் மனசாட்சி உறுத்துகிறது. தங்களின் அட்ஜஸ்ட்மெண்ட் வாழ்க்கையை நியாயப்படுத்தத் தொடங்குகின்றனர். மாறாக, தங்களுக்கென ஒரு முற்போக்கு அடையாளத்தை சூடிக்கொண்டவர்களோ… அனைத்தையும் அனுசரித்துச் செல்லும் பச்சோந்தித்தனத்தையே கொள்கையாகப் பேசத் தொடங்குகின்றனர். முற்காலத்தியில் முற்போக்குப் பேசி தற்போது ஓட்டரசியலின் லாபங்களை அறுவடை செய்துகொண்டிருக்கும் (ML to MLA) ரவிக்குமார் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். சந்தர்ப்பவாத அரசியலுக்கு கொள்கை சாயமடித்து… விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டும் வேலையை ரவிக்குமார் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்.
இந்த மோசமான சிஸ்டத்தை மாற்றுவதற்குப் பதிலாக இதற்குள் சாமர்த்தியமாக வாழ்வது எப்படி என அனுதினமும் மக்களுக்கு வகுப்பு எடுக்கப்படுகிறது. தன்னை சூழ்ந்திருக்கும் துன்ப துயரங்களுக்கான காரண சக்தியை கண்டறிந்து அகற்றுவதற்குப் பதிலாக… அதன் தாக்குதலை சமாளித்து தற்காத்து வாழ்வது எப்படி என்றே சனங்களுக்குப் போதிக்கப்படுகிறது. ‘ஆயிரம்தான் இருந்தாலும் அவன் புருஷன். நாலு அடி அடிச்சாலும் வாங்கிக்கிட்டு சேர்ந்துதான் வாழனும்’ என்பது அப்பத்தாக்களின் அறிவுரை மட்டுமல்ல… அரசாங்கத்தின் அருளாசியும் இதுதான். ஈஷா தியான மையம், வாழும் கலை… எல்லாம் இந்த கும்பல்தான். நோய் நிவாரணிக்குப் பதில் வலி நிவாரணியும், மயக்க மருந்துமே இவர்களின் பரிந்துரை.
இந்த இடத்தில் நாம் சாயிபாபாவைப் பேசுவோம். சாய்பாபா யார்? அவர் சாதாரண மனிதன். அதனால்தான் இப்போது செத்தும்விட்டார். இத்தனை நாட்கள் தன்னை தெய்வம் என சொல்லிக்கொண்ட சாய்பாபா, மாய மந்திர வித்தைகள் எல்லாம் செய்து உலகம் முழுக்க பக்தர்களை வளர்த்துக்கொண்டு, பல லட்சம் கோடி ருபாய் சொத்துக்களையும் சேர்த்துவிட்டார். அந்த வித்தைகளின் செய்முறை விளக்கம், Working stills வரை வெளியான பின்னும் அவரும் கைவிடவில்லை, மக்களும் அவரை கைவிடவில்லை. இந்த மோசடிகளைப் பேசினால், ‘அவர் தனி மனிதனாக ஒரு நகரத்தையே உருவாக்கியிருக்கிறார். அங்கு பல லட்சம் பேர் மருத்துவ வசதி பெருகின்றனர். கல்வி வசதி பெருகின்றனர்’ என பேச்சை மடை மாற்றுகின்றனர்.
இவ்வளவுப் பேருக்கு இலவசமாக அனைத்தையும் செய்வதற்கு உண்டான பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது? மாய மந்திரத்தில் கொண்டு வந்தாரா? ரிசர்வ் பேங்க் ஆபீஸர் வந்து ஒவ்வொரு நோட்டிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாரா? ‘எல்லாம் பக்தர்கள் கொடுத்தது’ என்பார்கள். ’பக்தர்கள் ஏன் கொடுத்தார்கள்?’ என்றால், ‘இது என்ன கேள்வி? அவர் பகவான், இவங்க பக்தர்கள். குடுக்குறாங்க’ என அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஆக, தான் இறைவன் அல்லது தெய்வீக சக்தி படைத்தவன் என சாய்பாபா தன்னைச் சுற்றி எழுப்பிக் கொண்ட இமேஜ்தான் இத்தனைக்குமான அடிப்படை. அந்த அடிப்படையே பொய்களாலும், மோசடிகளாலும் உருவாக்கப்பட்டது என்பதுதான் பிரச்னையின் மையம்.
உங்கள் மகனோ, தம்பியோ, தங்கையோ தான் வேலைப் பார்க்கும் இடத்தில் அலுவலகப் பணம் 10 லட்சத்தைத் திருடிவிட்டான் என வைத்துக்கொள்ளுங்கள். திருடியப் பணத்தில் நான்கு அனாதைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான். இப்போது ‘ஏன் திருடினாய்?’ என கேட்டால் ’அதான் அனாதைப் புள்ளைங்களைப் படிக்க வைக்கிறேன்ல’ என பதில் சொன்னால் அது யோக்கியமானதா? ‘ஏதோ தெரியாத்தனமாகத் திருடிவிட்டான். அதை உணர்ந்து பிராயச்சித்தமாக அனாதைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான்’ என்று சொன்னால் கூட அந்த தர்க்கம் புரிந்துகொள்ளக் கூடியது. குற்றத்தை ஒப்புக்கொள்ளும் குறைந்தப்பட்ச நேர்மையேனும் அதில் உண்டு. ஆனால் பாபாவின் பக்தர்களோ திருட்டையே ஒரு தெய்வீகத்தன்மையாகப் பார்க்கின்றனர்.
சாய்பாபா சம்பாதித்தது = திருட்டுப் பணம் என்ற இந்த ஒப்பீட்டில் பொருந்தாப் புள்ளி ஒன்று உண்டு. ஓர் எல்லைக்குப் பிறகு சாய்பாபா தானாக சென்று யாரிடமும் திருடவில்லை. பக்தர்கள் தானாக வந்து கொட்டிய பணம் அது. ’பக்தர்கள் மனமுவந்து கொடுத்ததை அவர் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்திக்கிட்டார். அது தப்பா?’ என்று கேட்கிறார்கள். வேறு சிலரோ, ’அவர் பணம் சம்பாதிப்பதும், அதற்கு கையாளும் வழிமுறைகளும் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இறுதியில் அந்த பணம் முழுவதையும் சமூகத்துக்குத் தொண்டு செய்யத்தானே பயன்படுத்துகிறார்? இதில் என்ன தவறு இருக்க முடியும்?’ என கேட்கிறார்கள். அதாவது குடியிருக்குறது குடிசையா இருந்தாலும் போய் சேர்ற இடம் கோயிலா இருக்கனும். காரணம் முக்கியம் இல்லை, விளைவுகளே முக்கியம் என்கிறார்கள். ஆனால் காரணமின்றி செயல் இல்லை. சாய்பாபாவின் மாய மந்திரத்தையும், அவர் நடத்தும் இலவச மருத்துவமனையையும் ஒன்றுடன் ஒன்று பிரித்துப் பார்க்க முடியாது. மந்திரம்தான் மருத்துவமனையின் அஸ்திவாரம்.
இன்று சாயிபாபாவின் பிராண்ட் அம்பாசிடர்களாக இருக்கும் அப்துல் கலாம் முதல் மானா மூனா சிங் வரை, சச்சின் டெண்டுல்கர் முதல் மு.கருணாநிதி வரை சகலரும் பாபாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். தனி விமானத்தில் புட்டபர்த்தி விரைகிறார் ஸ்டாலின். இவர்கள் எப்போதேனும் மக்கள் பிரச்னைக்காக இத்தனை விரைவாக செயல்பட்டதுண்டா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் தவிட்டுத் தொழிற்சாலையில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் ஏற்பட்ட தீ விபத்தில் 17 வட மாநிலத் தொழிலாளர்கள் இறந்துபோனார்கள். ஏறக்குறைய 10 நாட்களுக்கும் மேலாக கேட்பாரின்றி கிடந்த அந்தப் பிணங்களை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஏனெனில் அவை வி.ஐ.பி.களின் பிணங்கள் அல்ல.
அதிகாரத்துடன் ஒத்துப்போவது, அதிகாரத்துக்கு ஒத்து ஊதுவது, எது பொதுப்புத்தியோ, எது பெரும்பான்மை கருத்தோ, எதற்கு சந்தையில் மவுசு இருக்கிறதோ, எது விலைபோகிற பண்டமோ… அதன் பக்கம் நின்றுகொள்வது்… இதுதான் இந்த சந்தைப் பொருளாதாரம் மக்களிடம் கொண்டு வந்திருக்கும் மனநிலை. இதில் நியாயம், நீதி, அறம் என்பவை எல்லாம் பொருளற்ற வெறும் சொற்கள் மட்டுமே. சுருங்கச் சொன்னால் டிரெண்ட்டுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும். அவன்தான் சாமர்த்தியசாலி. இப்படி சுயநலமாகவும், ஒட்டுண்ணியாகவும், பச்சோந்தித்தனமாகவும் இருப்பதை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு தகுதியாகவே கணக்கிடுகின்றன. இதை ஊடகங்கள் தெரிந்தே செய்கின்றன.
சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது மனைவியை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பது அனைவரும் அறிந்த கதைதான். இதனால் அவரது வியாபாரத்துக்கு எந்த குந்தகமும் இல்லை. ஊடகங்களில் ஊருக்கு உபதேசித்து அறுவடை செய்த இமேஜை அடியுரமாகப் போட்டு இப்போது ஊர், ஊருக்கு ஈஷா யோகா மையம் நடத்திக்கொண்டிருக்கிறார் சத்குரு. இதேபோல் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மீதும், நித்தியானந்தா மீதும் ஏராளமான சர்ச்சைகள் உண்டு. ஆனாலும் ஊடகங்கள் இவர்களை ஐகான்களாக முன்னிருத்துகின்றன. இதன் மறுகோணம், இவர்கள்தான் இந்தியாவின் இந்துத்துவ சாரத்தை தக்க வைத்துக்கொள்கிற குவி மையங்கள். ’ஏன் டி.ஜி.எஸ்.தினகரன் செய்யவில்லையா?’ என்றால், ஆம் அதுவும் இதற்கு இணையான அயோக்கியத்தனம்தான். ஆனால் எந்த மெயின் ஸ்ட்ரீம் பத்திரிக்கையும் டி.ஜி.எஸ்.தினகரனை வைத்து தொடர் எழுதுவது இல்லை என்பதை நாம் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
சாய்பாபாவைப் பொருத்தவரை கடைசியில் எல்லோரும் வந்து முட்டி நிற்கும் இடம் மனிதநேயம். ’இதையாவது செய்யிறாருல்ல.. மத்தவன் யாரும் செய்யலல்ல’ என்ற புள்ளியில் வந்து நிற்பார்கள். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மனிதநேயம் என எதுவும் இங்கு இல்லை. தமிழ் மக்களின் உள்ளன்போடு கூடிய மனிதநேயத்தை சுனாமி சமயத்தில் நாம் எல்லோருமேப் பார்த்தோம். சுனாமியில் இறந்துபோனவர்களுக்கு வீடும், வாழ்வாதார வசதிகளும் செய்து தருவதாகக் கூறி பல்லாயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு நிதி உதவி வாங்கின பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். இன்றுவரை அதில் பாதிப் பணம் கூட செலவிடப்படவில்லை. பல தன்னார்வ நிறுவனங்கள் மீது சுனாமி நிதி முறைகேடு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றன. இதை எப்படி மதிப்பிடுவீர்கள்? ‘என்.ஜி.ஓ. காரன் என்னவோ பண்ணிட்டுப் போறான். எங்கேயோ வெளிநாட்டுல பணம் வாங்கி யாரோ நாலு பேருக்காவது வீடு கட்டி தந்தானா, இல்லையா?’ என இதை நியாயப்படுத்துவது சரியானதா? சாய்பாபாவின் ‘எப்படியோ நல்லது செய்தாருல்ல’ லாஜிக்கும் இப்படித்தான். அவை, ஊரை ஏமாற்றிக் கொள்ளை அடித்தவன் தன் ஏமாளி பக்தர்களுக்கு வீசி ஏறியும் பிஸ்கட் துண்டுகள். அதற்குள் நல்லனவற்றைத் தேடுவது என்பது, பெரியாரின் மொழியில் சொல்வதானால், ‘மலத்துக்குள் அரிசி பொறுக்கும் வேலை!’
இது யாவற்றையும் கடந்து பிறந்தால் இறந்துதானே ஆக வேண்டும்? இதை எழுதிய நான் தொடங்கி வாசிக்கும் நீங்கள் வரை ஒருநாள் சாகத்தான் போகிறோம். அதுபோல் இப்போது சாய்பாபாவும் இறந்திருக்கிறார். வடிவேலு வசனத்தைதான் நானும் சொல்கிறேன், ‘சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?’!
_________________________________________________
வினவு பின்குறிப்பு:
சாயிபாபா ட்ரஸ்ட்டின் மொத்த சொத்து 40.000 கோடி ரூபாயிலிருந்து 1,45,000 கோடி ரூபாய் வரைக்கும் இருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதில் கூட சரியான கணக்கை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. போகட்டும். நாம் குத்து மதிப்பாக ஒரு இலட்சம் கோடி என்றே வைத்துக் கொள்வோம். இதில் சாயிபாபா செலவழித்தது எவ்வளவு? தண்ணி டேங்க் கட்ட 100 கோடி, மருத்தவமனைக்கு 100கோடி, கிருஷ்ணா நதிக்கு 100 கோடின்னு கொஞ்சம் கருணை உள்ளத்தோடு கணக்குபோட்டாலும் மொத்தம் ஆயிரம் கோடியைத் தாண்டவில்லை. எனில் மிச்சம் 99, 000 கோடி எங்கே யாரிடம் இருக்கிறது?
அது பிரச்சினையே இல்லை. தற்போது சாய்பாபா ட்ரஸ்ட்டை நிர்வகிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஆதினத்தை கைப்பற்றும் போட்டி ஆரம்பித்து விட்டது. சூடு பிடிக்கும் போது இந்த ஆன்மீகக் கொள்ளையர்களின் கொள்ளையை புரிந்து கொள்ளலாம்.
அடுத்து சாய்பாபவின் பக்தராக இருப்பவருக்கு எதாவது தகுதி வைத்திருக்கிறார்களா? இல்லை. நன்கொடை கொடுக்கப்படும் பணத்தின் ரிஷிமூலத்தை ஆய்வு செய்து தணிக்கை செய்திருக்கிறார்களா? அதுவும் இல்லை.
அதாவது தொழிலில் மோசடி செய்து அபகரிக்கப்படும் பணம், கருப்புப்பணம், இலஞ்சம் பணம், ஊழல் பணம், இன்னபிற கொள்ளைப் பணங்களும், அதன் உரிமையாளர்களான ஃபிராடு பேர்வழிகளும் தாராளமாக சாயிபாபாவை சந்தித்தார்கள். நன்கொடையும் கொடுத்தார்கள். சாயிபாபாவும் அவர்களை பரந்த உள்ளத்தோடு ஏற்று, ஒரு இலட்சம் கோடியில் ஒரு சாம்ராஜ்ஜியத்தையும் கட்டிக் கொண்டார். இடையில் செக்ஸ் மோசடி, கொலை என்று எல்லா மர்மங்களும் கொண்ட திரில்லரில் மறைந்து விட்டு இன்று ஒரே அடியாக போய்ச் சேர்ந்தார். ஆக இந்த வள்ளலின் பின்னணி இதுதான் என்று தெரிந்தால் கைகூப்பி தொழுவீர்களா, காறித் துப்புவீர்களா?
உடைந்து போயிருப்பார்கள் பாவம். கடைசி நம்பிக்கையான உயிர்த்தெழுதல் நடக்கவில்லை, ஒரு விசை ஒரு வினாடியில் இயக்கத்தை நிறுத்திவிட்டது.
மற்றவர் சோகத்தில் ஆரவாரிக்கும் அநாகரிகம் எனக்கு இல்லை என்றாலும், இவர்களது கண்ணீரில் என் கண்கள் கலங்கவில்லை. ஆனாலும் இன்று புட்டபத்தி சாய்பாபா பக்தர்களுக்கு என் அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்… இன்றைய மனிதனின் மரணத்திற்காக அல்ல, இதுவரைக்கும் மூடர்களாக இருந்த மக்களின் அறிவு மயக்கத்திற்காக.
பொதுவாக நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் எல்லாம் ஓர் இழவு விழுந்தவுடன் அழுதுவிட்டு, பிணத்தை ஒழித்துவிட்டு, மூன்றாம், பத்தாம், பதினாறாம் நாளில் விருந்து தின்றுவிட்டு, அடுத்த வேலை பார்க்கப்போவதுதான். வசதியைப் பொருத்து ஓராண்டுக்குப் பின் ஒரு நினைவுநாள் கொண்டாட்டம் பத்திரிகை விளம்பரம்..
ஆனால் எவ்வளவு நெருக்கமானவரின் மரணத்துக்குப்பின்னும், எவரும் வாழ்க்கையை வாழாது விடுவதில்லை. மரணமும் யதார்த்தம் என்று மனத்தின் மூலையில் அறிவு சொல்லிக்கொண்டிருப்பதால்.
அறிவே பழுதாகும்போது மனம் சிதிலமடையும், உடையும், திசைதெரியாமல் தடுமாறும். இதனால்தான் பாபா பக்தர்களிடம் எனக்கு அனுதாபம் அதிகமாகிறது.
வித்தைகாட்டி மயக்கியவனை வித்தகன் என்று கூடச்சொல்லலாம், இறைவன் என்று சொல்ல ஆரம்பித்தால்? காசு வாங்கிக்கொண்டு யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் புகழ்ந்து திரியலாம், ஆனால் காசு கொடுத்து ஒருவனை கடவுள் என்று கூப்பாடு போட்டால்? இங்கேதான் அறிவின் மயக்கம். இங்கேதான் ஆபத்தும்.
எந்த அளவிற்கு தன்னம்பிக்கையிழந்து, தோல்வி வரும் என்ற பயத்தில், நம்மால் முடியாததை இவனாவது செய்வானா என்ற எதிர்பார்ப்பில் இவன்பின் இத்தனை சாதாரண மக்கள் அலைந்திருக்கிறார்கள்! இவன்மூலம் காரியம் சாதிக்கும் தொடர்புகளை விருத்தி செய்துகொள்ள வந்த வியாபாரிகள், இவனது பக்தகோடிகளையும் கவர்வதற்காக வந்து கொஞ்சிய அரசியல்வாதிகளை விட்டுவிட்டாலும், இவன்பின் நின்று நம்பிக்கிடந்தவர்கள் கோடிக்கணக்கானவர்கள். அவர்கள் மீதுதான் என் அனுதாபம்.
அவர்களெல்லாம் பாவம் தைரியம் இழந்தவர்கள், தடுமாறுபவர்கள் வாழ்க்கையில் உழைப்பும் முனைப்புமே வெற்றியைத்தரும் என்பது தெரியாதவர்கள், தன் காலில் நிற்கும் வலிமை இல்லாமல் தூண் தேடியவர்கள்!
அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன்.
தெய்வமே உயிரை இயந்திரங்களில் தொங்கவைத்திருந்த்து என்ற போதும் அந்த தெய்வத்திடம் தன்னையே உயிர்ப்பித்துகொள்ளும் சக்தி இருந்தது என்று நம்பி ஏமாந்தவர்களின் சோகத்திற்கு என்ன ஆறுதல் கூறுவது. அவர்கள் அழட்டும். கண்ணீர் விடட்டும். நம்பி ஏமாறுவதும் மனித இயல்புதான். ஆனால் துக்கத்தின் அளவு நீளமில்லை, extended grief கூட ஆறுமாதத்திற்கு மேல் தீவிரமாய் இருக்காது. அவர்கள் மீண்டு விடுவார்கள், மரணத்தினை ஏற்று அதையும் தாண்டி வாழ்க்கையை வாழ்வார்கள். ஆனால்….
இதே பக்தர்களில் இரு பிரிவினர் உருவாக வாய்ப்புள்ளது. சிலர் செத்தால் என்ன சாமி அருவமாய் வந்து கூட இருக்கும் எனும் பிரமையில் வாழ்வைத் தொடர்வார்கள். பிறர், சரி இந்த ஒரு தெய்வம் செத்துப்போனாலும் இன்னும் புது தெய்வங்கள் இருக்கும் என்று தேடுவார்கள் –அவர்களுக்காக மீதி இருப்பவற்றுள் ஒன்று வசீகரிக்கும் அல்லது புதிதாய் ஒன்று முளைத்து கடைவிரிக்கும். இவர்களுக்கு இத்துடனாவது இந்த மடமையை விடலாமே என்று மட்டும் தோன்றாது.
இது நுகர்வு கலாச்சாரத்தின் காலகட்டம். ஒரு பொருள் காலாவதியானால் இன்னொன்று உருவாக்கி, விளம்பரப்படுத்தி விற்கப்படும். அதே பொருள்தானே, அப்போதே அது பயன்படவில்லையே என்று நிராகரிக்காமல் புதிய வடிவ-விளம்பரத்தில் விற்கப்படும் அதே வெட்டியானதை வாங்க இன்னும் மக்கள் முண்டியடிப்பார்கள். இவர்களுக்காக அனுதாபம் தெரிவிப்பதைத்தவிர்த்து நான் என்ன செய்ய முடியும்?வரிசையில் நிற்பார்கள், இந்த வரிசையில் செத்தபாபா பக்தர்கள் முன்வரிசைக்கு முண்டியடிப்பார்கள், அவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து விட்டு வேறென்ன என்னால் செய்ய முடியும்?
தூக்கம் போதாமல் கொதிக்கும் விழிச்சூட்டில்
வியர்க்கும் முகம் துடைத்து,
அவசரமாய்… குளித்த தலைதுவட்ட நேரமின்றி
மின்சார ரயிலின் வாசல்படியோரம்
தலைசாய்த்து முடியுலர்த்திப் போகும்
உழைக்கும் பெண்ணே உனக்குத் தெரியுமா?
இன்று லெனின் பிறந்தநாள்!
உன் தலையில் பட்டு வியர்க்கும் சூரியன்
உன் விரல்கள் பட்டு இறுகும் செங்கல்
உன் மூச்சு பட்டு வளையும் கம்பிகள்
உன் உடலில் பட்டு ஆவியாகும் காற்று
உச்சி வெயிலை உழைப்பாய் மாற்றும்
கட்டிடத் தொழிலாளியே உனக்குத் தெரியுமா?
உழைப்பவர்க்கே அனைத்து அதிகாரம் என்பதை
நடைமுறைப்படுத்திய தோழர் லெனின் பிறந்தநாள் இன்று!
அழைத்து மகிழும் வெறும் பெயரல்ல,
உழைக்கும் வர்க்கம் தெரிந்து பின்பற்ற வேண்டிய கருத்து லெனின்.
உலகம் நன்றாய் இருக்க வேண்டும்
என்று ஒவ்வொருவரும் உபதேசித்துக் கொண்டிருந்தபோது,
இந்த உலகை உருவாக்கிய உழைப்பவர் நன்றாயிருக்க வேண்டும் என்று
நடைமுறைப்படுத்தினார் லெனின்.
மண்ணையே பெயர்க்கும் மழை
வேலி முட்களை முறிக்கும் சூறைக்காற்று
கண்களைக் குழப்பும் மின்னல்…
கண்களே திறந்தாலும் எங்கெனும் இருட்டு…
அழுத்தும் பாறை… ஆளுக்கொரு புலம்பல்
இத்தனைக்கும் மத்தியில் நம்பிக்கையுடன் தலைதூக்கும் ஒரு பசுந்தளிர்…
அதுதான் லெனின்…. அதுதான் லெனின்!
சுரண்டப்பட்ட தொழிலாளர் இதயமெங்கும்
ரத்தமாய் கலந்தார்…
எத்தனை முறை கைது செய்தாலும்
உழைக்கும் வர்க்க புரட்சி அலையில்
சித்தமாய் எழுந்தார்…
சிறைப்படுத்த முடியாத சிந்தனையாய்
லெனின் மக்களிடம் கலந்தார்…
வெற்றிடங்களை லெனின் விட்டு வைப்பதில்லை…
பாட்டாளி வர்க்கமாவது.. புரட்சியாவது… என
எள்ளி நகையாடிய எதிரிகளின் மூளையில்
‘பயங்கரமாய்’ நுழைந்தார்…
என்ன செய்ய முடியும் உங்களால்?
கேட்டது முதலாளித்துவ வர்க்கம்..
என்ன செய்ய வேண்டும்?
விடையறுத்தார் லெனின்…
ரசிய பாட்டாளி வர்க்கமோ புரிந்து கொண்டது… புரட்சி வென்றது.
புரிந்து கொண்டோமா நாம்?
சைபீரியக் கடுங்குளிருக்கு நாடு கடத்திய போதும்
லெனின், தோழர்களின் புரட்சிக் கனல் குறையவில்லை,
சாதாரண ஏ.சி. அறை, பணிப் பாதுகாப்பில் வைக்கப்பட்டவுடனேயே
சடாரென வர்க்கச் சூடு இறங்கி விடுகிறது சிலருக்கு.
மக்கள் மீது நம்பிக்கை வைத்து புரட்சியிலேயே இறங்கினார் லெனின்.
தன் மீது நம்பிக்கை வைத்து
ஒரு தெருமுனைக்கூட்டத்தில் இறங்கவே நமக்குத் திகில்…
ஆசை மட்டும் போதாது…
ஆள்வைத்து புரட்சி செய்யவும் முடியாது…
அவரவரே அனுபவித்து போராடுதலே புரட்சியின் விதி.
புரட்சிக்கு லீவு போட்டுவிட்டு
பொழுதுக்கும் கூலி அடிமைத்தனத்துக்கு வேலை செய்வதா?
இல்லை.. கூலி அடிமைத்தனத்தை ஒழித்துக் கட்ட
கொஞ்சம்.. புரட்சிகர அமைப்பில் இறங்கிப் பார்ப்பதா?
ஊசலாடும் மனங்கள் ஒரு முடிவுக்கு வர
லெனின் பிறந்தநாளை கொண்டாடுங்கள்…
இங்கு
இதற்கு
இன்றுதான்
முதன் முதலாய்
ஒளி வரும் என்றார்கள்!
பனிச் சாரல் சடசடக்க
கண்ணாடிச் சன்னல் தடதடக்க
கருப்படர்ந்த இரவின் ஊடாக
வெளியில் பார்வையை
உலவ விட்டுக் காத்திருந்தோம்;
இருளில் வழி சொல்லும்
ஒளிக்காக.
இன்றுதான்
முதன் முதலாய்
ஒளி வரும்
என்றார்கள்.
அந்த ஒளியோடு
ஒரு சேதியும் வருமென்றார்கள்!
எங்கள்
பசிக்கான உணவு
குறைக்கப்பட்டிருந்தது.
எங்கள்
உழைப்பின் கூலி
சுறண்டப்பட்டிருந்தது.
ஜமுக்காளத்துக் கிழிசலில்
ஊதைக் காற்றுப் புகுந்து
உயிர்க் குலையும் சில்லிட்டது.
ஏமாற்றம் தந்த
பாலற்ற முலைக்காம்பால்
நிறுத்தாமல் விசும்பின
பச்சிளங் குழந்தைகள்.
வயது முகவரி எழுதிய
வரிகளின் சுருக்கத்தோடு
ஏதாவது உண்ணக்கேட்டு
ஏக்கத்தோடே கை நீட்டி
எங்களையே பார்த்திருந்தது
எங்கள் மூதாதைக் கூட்டம்.
யாவரும்தான் காத்திருந்தோம்.
தினவெடுத்த தோளோடும்
விலிசுமந்த இதயத்தோடும்
இளைஞர்களும் பெண்களும்
கால் கடுக்கக் காத்திருந்தோம்!
எங்கள் யாவரையும்
ஒன்று சேர்ந்திருக்கச் சொல்லி
சேதி வருமென்றார்கள்.
வருகின்ற ஒளியின் ஊடாய்
வானுயரக் கரமுயர்த்தி
விண்ணதிரக் கோஷமிட்டு
ஆர்ப்பரிக்கும் கூட்டத்துள்
குவிந்துவிடச் சொன்னார்கள்.
காத்திருந்தோம்.
செக்கர் சூரியன்;
உடலின் உழைப்பு;
கரங்களில் கருவி;
இவைகளின் வேதி மாற்றத்தால்
சுரக்கும் வியர்வை.
வியர்வை விழுந்தால்
விளையும் கதிர்.
வளையும் இரும்பு.
உழைப்பு எமது.
எனில்;
அதன் வினையும் எமதன்றோ?
வியர்வையின் வினை
மறுக்கப்பட்டுவிட்டதால்
இந்த இருளில்தான்
நாங்கள்
இருந்து கொண்டேயிருந்தோம்.
பழக்கப் பட்டுப்போன
இருளுக்கு மாற்றுத் தேடித்தான்
இங்கே காத்திருந்தோம்.
இங்கு
இதற்கு
இன்றுதான்
முதன் முதலாய்
ஒளி வரும் என்றார்கள்.
அதோ
வந்துவிட்டது.
வந்தேவிட்டது.
இல்யீச் விளக்கு!
அதன் ஒளிக்கதிரில்
அனைவரும் துள்ளினோம்.
வந்தேவிட்டது
இல்யீச் விளக்கு!
அப்போது எங்களுள்
கூடவே குந்திக்கோண்டிருந்த
பேதமை, மடமை,
ஐயம், மதம்,
கூச்சம், அச்சம்,
அத்தனையும் துணுக்குற்று
இருளில் சிதறியோடியதை
நாங்கள் காணுற்றோம்.
ஒளி சொன்ன சேதியில்,
வந்துதித்த ஒளியினூடாய்,
வானுயரக் கரமுயர்த்தி,
விண்ணதிரக் கோஷமிட்டு,
ஆர்ப்பரிக்கும் கூட்டத்துள்
குவிந்து செயல்பட்டோம்;
குவியல் குவியலாய்.
எங்கள் பின்னால்
எங்களுக்காக,
ஒரு தாயும்கூட நடந்து வந்தாள்.
அப்பக்கூடை தலை சுமக்க!
வினையின் வினையறுக்க
வீர நடையிட்டோம்.
கரத்தில் கரங் கோர்த்து,
நெஞ்சில் உறமிருத்தி,
மண்ணில் குருதி பாய்ச்சி,
நிலம் அதிர நடையிட்டோம்.
அடித்து விரட்டப்பட்டதால்
அரண்மனைக் குகையிலிருந்து
புறமுதுகிட்டோடின
நரித்தோல் உடல்கள்.
பின்,
நாங்கள் வென்றோம்.
வென்ற பின்,
எம் வியர்வை எமதானது;
விளைக் கதிரும் எமதானது;
வளையும் இரும்பு எமதானது;
உழைப்பு எமதானது;
எனில் –
அதன் வினையும் எமதேயானது!
வினை தூண்டியது
இல்யீச் விளக்கு!
உங்கள் அம்மா பழமையான எண்ணங்களை விடுத்து புதுமையாக இருக்கவேண்டுமென்று எண்ணியிருக்கிறீர்களா?உங்கள் அம்மா வசதியாக சல்வார் அணிந்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணியிருக்கிறீர்களா? ‘எதுக்கு இவ்ளோ கஷ்டபடறீங்க இந்த நீளமுடிய வைச்சுக்கிட்டு, கட் பண்ணுங்க’ என்று சொல்லியிருக்கிறீர்களா? ‘யாராவது ஏதாவது சொல்வார்கள்’ என்பதற்காக சிரமம் கொடுத்தாலும் தலைமுடியை குறைக்காமல் இருப்பவரா உங்கள் அம்மா?
அப்படியானால், உங்களுக்கும் எனக்கும் ஒற்றுமை இருக்கிறது.
பெரியம்மாவும், அம்மாவும் மாடர்னாக இருக்கவேண்டும் என்று நானும் ஆசைப்பட்டிருக்கிறேன். பெரியம்மா பொட்டு வைத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பியிருக்கிறேன். நான் சைக்கிள் ஓட்டும் வயதில், அவர்கள் இருவரும் சைக்கிள் ஓட்டவேண்டுமென்றும், ஸ்கூட்டி ஓட்டியபோது அவர்களும் ஸ்கூட்டி ஓட்டவேண்டுமென்றும் சண்டை போட்டிருக்கிறேன். எட்டாவது படிக்கும்போது ‘சைக்கிள் ஓட்டுங்க’ என்று அம்மாவை நானும் குட்டியும் விழ வைத்து முழங்கையில் காயம் வர வைத்திருக்கிறோம்.
‘டீச்சர்னா கொண்டைதான் போடணுமா, குட்டி முடிலே கூட க்ரோக்கடைல் க்ளிப் வைச்சு கொண்டை போடலாம்’ என்றெல்லாம் முடியை வெட்ட ஐடியா செய்திருக்கிறேன். ‘ரிடையர் ஆகிட்டு என்கூடதானே இருப்பீங்க, அப்போ நான் சொல்றதைதான் கேக்கணும்’ என்று அதிகாரம் செய்திருக்கிறேன்.
பெரியம்மா, எண்ணத்தில் எனது நண்பர்களின் அம்மாக்களைவிட, முற்போக்காக இருந்தாலும், தோற்றத்தில் பழமையானவரே. எந்த சமூகக் கட்டுபாடுகளையும், அதன் நிழல் கூட என்மேல் படாமல் வளர்த்த பெரியம்மா , நான் கல்லூரி முடிக்கும் தருவாயில்தான் பொட்டிடவும், தலைமுடியை சிறிதாவது வெட்டவும் முன்வந்தார். ஏனெனில், அப்போது அவர் 45 வயதை தாண்டியிருந்தார். ‘வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு, இந்த அம்மா இப்படி ட்ரெஸ் பண்ணிக்குது’ என்று அந்த வயசுக்கு, இதற்கு மேல் எந்த சமூகமும் எதுவும் சொல்லவிட முடியாதில்லையா!
தோற்றத்திற்கே, அதுவும் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டு பெண்மணிக்கே இவ்வளவு குழப்பங்கள் என்றால்….கடந்த நூற்றாண்டின் பெலகேயா நீலவ்னாவுக்கு எவ்வளவு உள்மனப் போராட்ட்ங்கள், குழப்பங்கள் இருந்திருக்கவேண்டும்? ஒரு புரட்சியாளரின் தாயாக அவர் தன்னை எத்தனை மாற்றிக் கொண்டிருந்திருக்க வேண்டும்?ஒவ்வொன்றையும் மாற்றிக்கொள்ள எவ்வளவு கடந்து வந்திருக்க வேண்டும்? அந்த வலிநிறைந்த… இல்லை, பழமையை உதறிய வலிமை நிறைந்த போராட்டத் தருணங்களை, உணர்ச்சி ததும்பும் கதை சொல்லல் மூலம் நம்மையும் அந்த காலத்திற்குள் கொண்டு செல்கிறது மாக்சிம் கார்க்கியின் “தாய்” நாவல்.
மக்சிம் கார்க்கி
கல்லூரி காலத்தில் ரயில் பயணத்திற்கு வழித்துணையாக வீட்டிலிருந்த ‘தி மதர்’ நாவலை எடுத்து வாசித்திருந்தாலும் முதல் ஒன்பது அத்தியாயங்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை. அப்போது தாய் நாவலை என்னால் முழுமையாக ஏன் வாசிக்க முடியவில்லை என்று யோசித்து பார்க்கிறேன். அன்றைய இரசிய சமூகத்தின் கொந்தளிப்பான காலத்தைப் போன்றது இல்லை நம் சூழல். கட்டுப் பெட்டியாக மட்டுமே வாழ சபிக்கப்பட்டிருக்கும் தமிழ் சமூகத்தில் ஒரு இளம்பெண் தாய் நாவல் படிப்பதற்கான மன எழுச்சி இங்கே இருக்காதோ?
தற்போது, ‘தாயை’தமிழில் வாசித்தேன். அநேகமாக நாவல் முழுவதும் உண்மையாக நடந்தவையாகவே இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அல்லது அந்த காலத்தின் வரலாற்றுணர்வை மாக்சிக் கார்க்கி தனது கலைப் பார்வையின் மூலம் மிகவும் நெருங்கியிருக்கலாமென்றும் தோன்றுகிறது.
பாவெல் எனும் புரட்சியாளரின் தாய் நீலவ்னா கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலையிலிருந்து எப்படி தனது மகனின் கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள், உண்மையை புரிந்து கொள்கிறாள், புரட்சியாளர்களுக்கு உதவ உத்வேகம் கொள்கிறாள், தனது வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியை எப்படி கண்டடைகிறாள் என்பதை உணர்வு பொங்க சொல்லுவதோடு நம்மையும் அந்த தாயோடு பயணிக்க வைக்கிறது நாவல்.
ஒரு ஆலைகுடியிருப்பிலிருந்து ஆரம்பிக்கிறது பெலகேயா நீலவ்னாவின் கதை. புகைபோக்கிகளுடனும், தொழிலாளிகளை குறித்த நேரத்தில் வர ஆணையிடும் சங்குடனும் கம்பீரமாக நிற்கும் அத்தொழிற்சாலை அப்பகுதி மக்களை நாள்முழுதும் சக்கையாக உறிஞ்சியெடுக்கிறது. அவர்களது வாழ்க்கையில் குறிப்பாக ஆண்களது சந்தோஷம் என்பது குடிப்பதும் சண்டையிடுவதுமே. நீலவ்னாவின் கணவனும் இதற்கு விதிவிலக்கல்ல. கிட்டதட்ட இருபது வருடங்கள் கணவனிடம் அடியும் உதையும் வாங்கியே அவளது இளமைக்காலம் கழிந்துவிடுகிறது. அவளது கணவன் இறந்துவிட, நீலவ்னாவின் மகன் பாவெலும் அதே ஆலையில் வேலைக்குச் சேர்கிறான்.
பாவெலுக்குச் சில தோழர்களுடன் பரிச்சயம் ஏற்படுகிறது. அவனுக்குள் மாற்றங்கள் உண்டாகிறது. ஒரு தொழிலாளி கிட்டதட்ட முப்பது வருடங்கள் உழைத்து கண்ட பலன் ஒன்றுமில்லை, ஆலைதான் வளர்ச்சியடைகிறதே தவிர அவர்களது வாழ்க்கையில் கிஞ்சித்தும் மாறுதல் ஏற்படவில்லை, தமது அடிமை நிலையிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டுமென்றால் தொழிலாளிகள் இறுக்கமாக இணைவதே இதற்கு விடை என்பதை உணர்ந்துக்கொள்கிறான். நிறைய புத்தகங்களை வாசிக்கிறான். அவனோடு இன்னும் பல தோழர்கள் வீட்டிற்கு வருகிறார்கள். ஒன்றாக வாசிக்கிறார்கள். தங்களுக்குள் விவாதிக்கிறார்கள்.
பெலெகேயா நீலவ்னா இவை அனைத்தையும் பார்க்கிறாள். அவர்கள் பேசுவதைக் கேட்கிறாள். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து கொள்கிறாள். தனது கடந்த கால வாழ்க்கையையும் அவளது தோழிகளின் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறாள். பாவெல் பேசுவதைக் குறித்து மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியை அடைந்தாலும் தனது மகனின் பாதுகாப்புக் குறித்து கலக்கமடைகிறாள். ஏனெனில், பாவெல் படிப்பது அத்தனையும் தடை செய்யப்பட்ட புத்தகங்கள். அவை தொழிலாளிகளின் உண்மை நிலையைப் பேசுவதோடு அந்த நிலைமைய மாற்றுவதற்கான வழியையும் போதிக்கின்றன.
சிறிது சிறிதாக பாவெலின் வீட்டில் கூட்டம் அதிகரிக்கிறது. எங்கிருந்துதான் மனிதர்கள் வருகிறார்களோ தெரியாது, குறித்த நேரத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு தேநீர் வைத்துக் கொடுப்பதும், வெந்நீர் கொடுப்பதும் அவர்கள் பேசுவதை கேட்பதுமே தாய்க்கு ஆனந்தம். தாயாலும் அவர்களைப் போல வாசிக்க முடிந்தால்…..பாவெலில் நண்பர் அந்திரேய் மூலமாக வாசிக்கக் கற்றுக்கொள்கிறாள் அந்தத் தாய்.
இதன் நடுவில், வீடு போலிசாரால் சோதனையிடப்படுகிறது. பாவெலின் நண்பரை கைது செய்து கொண்டு செல்கிறார்கள். இது தாயை அதிர்ச்சிகுள்ளாக்குகிறது. ஆனாலும், தொழிற்சாலைக்குள் பிரசுரங்கள் பரவுவதை யாராலும் தவிர்க்க முடியவில்லை. தொழிலாளிர்களிடையே பேசிய பேச்சுக்காக போலீஸ் பாவெலை கைது செய்கிறது. தாய்க்கு கதறியழ வேண்டும் போலிருக்கிறது. ஆனால், அமைதியாக ஏற்றுக்கொள்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக தானே பிரயத்தனப்பட்டு புத்தகங்களை வாசிக்கிறாள். பாவெலின் நண்பர்களுக்கு பிரசுரங்களை ஆலைக்குள் தொழிலாளிகளிடையே தொடர்ந்து விநியோகிப்பது எப்படியென்று தெரியவில்லை.
தாய் இவ்வேலையை செய்ய முன்வருகிறாள். ஒருவேளை விநியோகிப்பது நின்று விட்டால் செய்தது பாவெல்தான் என்று நிரூபணமாகிவிடும். இதற்கு ஒரேவழி, பிரசுரங்கள் தொடர்ந்து ஆலைக்குள் தொழிலாளிகளுக்குக் கிடைக்கச் செய்வதுதான் என்று நண்பர்கள் பேசுவதைக் கேட்டதும் அவள் அவ்வேலையை செய்வதாக முன்வருகிறாள்.
ஆப்பம் விற்கும் பெண்ணுடன் உதவி செய்பவராக தொழிற்சாலைக்குள் செல்கிறாள் தாய். பிரசுரங்கள் தொழிலாளிகளின் கைகளை அடைகின்றன.
இதில் தாய்க்கு பெரிதும் மகிழ்ச்சி. தனது மகனிடம் இதைப் பற்றி உடனே சொல்லவேண்டும் என்றும் அவன் இதை அறிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைவான் என்றும் எண்ணுகிறாள். இரவுகளில் உறங்கப் போகும் முன் இயேசுவிடம் இந்தக் குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்யவும் தயங்குவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தாய் தனது மகனின் புதிய மார்க்கத்திலிருக்கும் உண்மையை அறிந்துக்கொள்கிறாள். அதுவே சத்தியம் என்றும் உழைக்கும் மக்கள் அனைவரும் இதனை உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்றும் எண்ணுகிறாள். பாவெலும் சிறையிலிருந்து வந்துவிடுகிறான்.
மேநாள் நெருங்குகிறது.
'தாய்' திரைப்படத்திலிருந்து
மேநாள் பேரணிக்கான வேலைகள் நடக்கின்றன. மகனின் மேலுள்ள பாசத்தினால் தாய்க்கு அழுகை முட்டுகிறது. ஏனெனில், பேரணியை தலைமை தாங்கி நடத்தப் போவது பாவெல். போலிஸ் சிறைக்கு அனுப்பினாலும் அனுப்பலாம். தாயால் சிலநேரங்களில் ஒரு தாயாக நடந்துக்கொள்வதை தவிர்க்க முடிவதில்லை. ஆனாலும், தாங்கிக் கொள்கிறாள்.
பெரும் எழுச்சியுடன் மேநாள் பேரணி நடக்கிறது. பெரும் கூட்டம் திரள்கிறது. தாயால் பாவெல் அருகில் கூட நெருங்க முடியவில்லை. ஆனால், பாவெல் தனது மகன் என்று தாயின் மனம் மகிழ்ச்சி கொள்கிறது. பேரணியில் பாவெல் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவதோடு முதல் பாகம் முடிகிறது.
இரண்டாவது பாகத்தில், தாய் ஒரு புரட்சியாளராக பரிணமிப்பதும், நாட்டின் பல பகுதிகளுக்கு பயணம் சென்று பிரசுரங்களை சேர்ப்பிப்பதும், தனது மகனைப் போல பல புரட்சியாளர்களைச் சந்திப்பதும் உணர்வுமிக்க வகையில் விவரிக்கப்படுகிறது. உழைக்கும் மக்களும்,விவசாயிகளும் ஒன்று சேர்ந்தால்தான் முதலாளித்துவத்தை ஒழிக்க முடியும் என்றும் அதில்தான் மக்களின் விடுதலை இருக்கிறது என்றும் தாய் உண்ர்ந்துக்கொள்கிறாள். புதிது புதிதாக மனிதர்களைச் சந்திக்கிறாள். ஆரம்பத்தில் அவளுக்கு ஏற்படும் தயக்கங்களும், அவர்களுடன் நட்பு கொள்வதும் மிக இயல்பாக எழுதப்பட்டிருக்கிறது.
வாசிக்கும் நமக்கு, அநேக இடங்களில் உணர்ச்சிப் பெருக்கால் கண்களில் நீர் கோர்த்துக்கொள்கிறது. மக்களின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரையும் ஈந்த அநேக இளைஞர்கள்……புதிய உலகை கனவு கண்ட இளைஞர்கள்….
வாசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கணத்தில், நானும் அந்தத் தாயைப் போல இருக்க மாட்டோமா என்ற ஆசை தோன்றியது. ஏனெனில், இதுநாள் வரை வாழ்ந்து வந்த வாழ்க்கையின் பிழைப்புவாதம் பின்னோக்கி இழுக்க, முற்றிலும் புதுமையான சத்தியமான கருத்துகள் நம்மை முன்னோக்கிச் இழுக்க நமக்குள் நடைபெறும் ஒரு சிறு போராட்டத்தைத்தான் தாயும் பிரதிபலிப்பதாகத் தோன்றியது. அந்த போராட்டத்தை வாழாமல் நாமும் தாயின் உணர்வை அடைய முடியாது என்றே தோன்றுகிறது.
இவை நடுவில், அந்தத் தோழர்களுக்கிடையிலான வாழ்க்கை முறை, அவர்களுக்கிடையிலான காதல், இசை எல்லாம் வெகு இயல்பாக வந்து செல்கிறது. உடல்நிலை சரியில்லாத ஒரு தோழரின் மரணம், அதன் பாதிப்புகள், உழைத்து ஓடாய் தேய்ந்த மனிதனின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள், தாய் ட்ரங்கு பெட்டியில் பிரசுரங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் சென்று முஜீக்குகளிடம் சேர்ப்பது, தாயை அவர்கள் இனம் கண்டுக்கொள்வது என்று இரண்டாம் பாகம் முழுக்க தாயின் புரட்சிக்கான பயணம் கண்முன் விரிகிறது. இவை நிச்சயம் உண்மை நிகழ்ச்சிகளாகத்தான் நடந்தேறியிருக்க வேண்டும்.
இன்று நாம் அந்நூற்றாண்டு மக்களைப் போல இல்லை. பலவகைகளில் முன்னே வந்துவிட்டோம். ஆனாலும், அவர்களை போன்ற சிந்தனைகளோ அல்லது சமூகமயமான தீர்வுகளை நோக்கியோ செல்லாமல் போராட்டக் குணத்தை இழந்து நிற்கிறோம்.
ஒருவேளை பாவெலும்,அவனது நண்பர்களும், தாயும் சேர்ந்து கஷ்டபடுபவர்களுக்கு உணவு கொடுத்தோ அல்லது செருப்பில்லாமல் கஷ்டபடுபவர்க்ளுக்கு செருப்பு வாங்கித் தந்தோ, வேலை வாங்கித்தந்தோ தங்கள் தொண்டுள்ளத்தை நிரூபித்திருக்கலாம். ஒன்றிரண்டு மாதங்களிலோ வருடங்களிலோ அந்த தொண்டும் அணைந்து போயிருக்கும். ஆனால், எதற்கும் சமரசப்படுத்திக்கொள்ளாமல் மனிதகுல விடுதலைதான் சமூகமயமான தீர்வு என்று ஏன் தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்க வேண்டும்?எத்தனையோ ஆபத்துகள் இருப்பது தெரிந்தாலும் அச்செயல்களில் ஏன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்?
இன்றும் கூட, எண்ணற்ற தோழர்கள் கொள்கை மீது கொண்ட பற்றால் மனிதகுல விடுதலைக்காக வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்திருக்கிறார்கள். கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தும் கூட, சற்றும் அஞ்சாமல், சாதிய அடக்குமுறையை எதிர்த்து, அரசாங்கத்தை எதிர்த்து வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். நாம் வசதி என்று கருதும் அனைத்தையும் அற்பமாக எண்ணி உதறி தள்ளியிருக்கிறார்கள்.ஆனால் ஹார்வார்டுகளிலும், ஆக்ஸ்போர்டுகளிலும் படித்து வந்த டாக்டரேட் மேதைகளோ நம்மை சுரண்டுகிறார்கள். நமது உயிரை பணயம் வைக்கிறார்கள். பள்ளியை/கல்லூரியைத் தாண்டாத தோழர்கள், அல்லது அப்படி படித்திருந்தும் அதை தூக்கியெறிந்துதானே சமூகத்திற்காக/நமக்காகக் குரல் கொடுக்கிறார்கள்?
ஆனால், நம்மில் எத்தனை பேர் இதனை உணர்ந்திருக்கிறோம்? ஒன்றிரண்டு பேர்களுக்கு நம்மாலானதை பிச்சையிடுவதைப் போல செய்துவிட்டு தானப்பிரபு பட்டம் கட்டிக்கொள்கிறோம். புரட்சி செய்துவிட்டதைப் போல இறுமாந்து போகிறோம். நாம் சுயநலவாதிகளாக இருந்து கொண்டு, அந்த சுயநலத்திற்கும் காரணம் காட்டிக்கொண்டு தோழர்களை பிழைக்கத் தெரியாதவர்களென்றும், ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லையென்றும் அவர்களை இழிவுபடுத்தியத்தைத் தவிர வேறு என்ன?
தாயின் உலகில் ஊக்கத்துடன் பயணம் செல்லுங்கள். புதிய மனிதானாகவும், வாழ்க்கையின் பொருளை உணர்ந்தவராகவும் திரும்புவீர்கள்.
புத்தகம் : தாய், ஆசிரியர்- மாக்சிம் கார்க்கி, NCBH வெளியீடு, விலை : ரூ 200
நூல் கிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம்,10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002. தொலைபேசி: 044-2841 2367