போபால்:தடையை மீறி டௌ கெமிக்கல்ஸ் முற்றுகைப் போராட்டம்!
சரியாக சன் செய்திகள் முடிந்து, ‘சுதந்திர வம்சம்’ தொடங்கிய நேரம் –
எல்லா மக்களையும் போல சாதாரணமாக இருந்த ஒரு குடும்பத்தின் ‘வம்சம்’, அரசியல் வியாபாரத்தில் வலது காலை எடுத்து வைத்து நுழைந்து ‘குறுகிய காலத்தில்’ முன்னேறி, ஆசிய பெரும் பணக்காரர்களில் ஒருவராக மாறியதுடன் இன்று பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழகத்தை ஒட்டு மொத்தமாக அடகு வைக்கும் தரகு வேலையை கச்சிதமாக செய்தும் வருகிறது. அந்த ‘வம்சத்தின்’ ஆணிவேரான மாண்புமிகு தமிழக முதல்வரின் பேரன் அருள்நிதி, சன் டிவி நேயர்களுக்கு ‘சுதந்திரதின நல்வாழ்த்துகளை’ புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தபோது –
சென்னை ஈகாட்டுத்தாங்கல் கூவம் நதி மேம்பாலத்தில் ஆரம்பித்து டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் வரை சாலையின் இருபுறமும் காவல்துறையினர் வரிசையாக நிற்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பதினைந்தடி இடைவெளியில் நிற்க ஆரம்பித்த காவல்துறை வாகனங்களையும் கருத்தில் கொண்டால் –
‘அமைதிப் பூங்காவான’ தமிழகத்தின் தலைநகரான சென்னையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், அதுவும் ஆகஸ்ட் 15 – 64வது ‘சுதந்திரதினத்தில், ஆயிரம் அடி சுற்றளவுக்கு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.
காரணம், மகஇக, விவிமு, புமாஇமு, புஜதொமு, பெவிமு ஆகிய அமைப்புகள் அறிவித்திருந்த முற்றுகை போராட்டம். அதுவும் அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ‘டெள’ கெமிக்கல்ஸ் நிறுவனத்தை இந்தியாவிலிருந்து வெளியேறச் சொல்லி இந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் நடத்தப் போவதாக அறிவித்திருந்த முற்றுகை போராட்டத்தை முறியடிப்பதற்காகத்தான் இந்த அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு.
அதாவது அமெரிக்ககாரன் ‘சுதந்திரமாக’ வாழ, ‘இந்தியர்களை’ கைது செய்ய, ‘இந்திய’ சுதந்திரதினத்தில், ‘இந்திய’ அரசின் அனுமதியுடன், தமிழக காவல்துறை அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.
இந்த ஆரம்பப் புள்ளியே 64ம் ஆண்டு சுதந்திரதினம் யாருக்கு என்பதை தெளிவாக உணர்த்திவிட்டது. ஏகாதிபத்தியத்துக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அவர்களது அடிவருடிகளான இந்திய தரகு முதலாளி வர்க்கங்களுக்கும்தான் சுதந்திரம். அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கல்ல என்பதை நிரூபித்துவிட்டது.
‘மாதம் மும்மாரி பொழிகிறதா..?’ என எட்டப்பன் பரம்பரையில் வந்த மாமன்னர் கருணாநிதி தன் கைத்தடிகளிடம் கேட்டிருக்கக் கூடும். அதற்கேற்ப தூறலும் ஆரம்பித்தது. எனவே குதூகலத்துடன், ‘ஆம் மன்னா… இப்போது கூட தூறிக் கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் அஞ்சா நெஞ்சன் அழகிரி வெளியிட்ட ‘தமிழ்ப்பட’த்தையும், ‘எந்திரன்’ படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா உருவான விதத்தையும் பார்த்துக் கொண்டு சந்தோஷமாக வீட்டுக்குள் அடைந்துக் கிடக்கிறார்கள்…’ என்று நா கூசாமல் புளுகியிருக்கவும் கூடும்.
இதற்கேற்றபடி காசி தியேட்டருக்கு அருகிலிருந்த ‘உயர்தர’ சைவ உணவகத்தில் ஓசியில் டிபன் சாப்பிட்டுவிட்டு கீழே இறங்கிய காவல்துறை உயரதிகாரி ஒருவர், ஒயர்லெஸ்ஸில், ‘500லேந்து ஆயிரம் போலீஸ்காரர்கள் இருக்காங்க. நம்மை மீறி எதுவும் நடக்காது. சி.எம்.மை சந்தோஷமா இருக்கச் சொல்லுங்க…’ என பின்பாட்டு பாடவும் செய்தார்தான்.
ஆனால், உண்டுக் கொழுத்தவர்களுக்கு தெரியாது நக்சல்பாரி அமைப்பினரின் போராட்ட வடிவம் ஒருபோதும் பிசுபிசுத்ததில்லை என்று.
இத்தனைக்கும் காசி தியேட்டரிலிருந்து கிண்டியிலுள்ள ‘டெள கெமிக்கல்ஸ்’ அலுவலகம் வரை பேரணி நடத்த அனுமதி வாங்கும் பொருட்டு காவல்துறையை அணுகியபோதே அனுமதி மறுக்கப்பட்டது. போதும் போறாததுக்கு ‘சட்டப்படி’ ஸ்டேவும் வாங்கியிருந்தார்கள். எனவே பேரணியும் நடைபெறாது, தோழர்களும் வரமாட்டார்கள் என்றுதான் காவல்துறை நம்பியது.
ஆனால், ‘தமிழ்ப்படமும்’, ‘எந்திரன்’ பாடல் கேசட் வெளியீட்டு விழா உருவான விதத்தையும் பார்ப்பதற்காக நாங்கள் வாழவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் போபாலில் நிகழ்த்தப்பட்ட படுகொலையில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி உழைக்கும் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் ஊனமாகியிருக்கிறார்கள். இன்றும் அந்த மக்களின் ‘வம்சம்’ ஊனத்துடனேயே பிறக்கிறது. அவர்களுக்குரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இந்தப் படுகொலை சம்பவத்துக்கு காரணமான ஆண்டர்சனை கைது செய்ய வேண்டும். இந்தியாவிலிருந்து அவனை தப்பிக்க விட்ட காங்கிரஸ் தலைமை தண்டிக்கப்பட வேண்டும். ‘யூனியன் கார்பைட்’ நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கும் ‘டெள கெமிக்கல்ஸ்’ தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்லக்கு தூக்கும் ‘இந்தியப் பிரதமர்’ மன்மோகன் சிங்கையும், உள்துறை அமைச்சரான ப.சிதம்பரத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளோடு தோழர்கள் சென்னையின் காசி தியேட்டர் இடத்தில் குவிந்தார்கள்.
இதை நிச்சயம் இப்போதிருக்கும் ஆளும் வர்க்கமும், காவல்துறையும் எதிர்பார்க்கவில்லை.
தடையை மீறி பேரணி காலை 10.30க்கு புறப்படும் என்று தோழர்கள் பிரசாரம் செய்திருந்தார்கள். எனவே 8 மணி முதலே காசி தியேட்டர் அருகில் காவல்துறையினர் குவிந்தார்கள். தாம்பரத்திலிருந்து வரும் பேருந்து காசி தியேட்டர் நிறுத்தத்தில் நின்றதுமே, சிவப்புச் சட்டை அல்லது சிவப்பு பனியன் அணிந்து யார் இறங்கினாலும் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டார்கள். இதே நிலைமைதான் வடபழனியிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் பேருந்து விஷயத்திலும் நடந்தது. காசி தியேட்டர் நிறுத்தத்தில் இறங்கும் ஆண், பெண், குழந்தை உட்பட ஒவ்வொரு பயணியும் கண்காணிக்கப்பட்டனர்.
காலை 9.30 மணிக்குள் இப்படியாக 6 பேருந்து வாகனங்களில் தோழர்கள் கைது செய்யப்பட்டு விஜயா தியேட்டர் வழியாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். வாகனத்தில் ஏறி சென்றபடியே தோழர்கள் எழுப்பிய கோஷம் அப்பகுதி முழுக்கவே எதிரொலித்தது.
9.35 மணிவாக்கில் செங்குன்றத்திலிருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் பேருந்து காசி தியேட்டர் நிறுத்தத்தில் நின்றது. கிட்டத்தட்ட 30க்கும் அதிகமான சிவப்புச் சட்டை தோழர்கள் இறங்கினார்கள். அவர்களை அப்படியே கைது செய்வதற்காக காவல்துறையினர் விரைந்தார்கள்.
அப்போதுதான் பறை ஒலிக்க ஆரம்பித்தது.
விஜயா தியேட்டர் இருக்கும் சாலைக்கு நேர் எதிரான சாலை. மேற்கு சைதாப்பேட்டையை கடந்து ஜாபர்கான் பேட்டை வழியே வடபழனி செல்லும் பேருந்துகள் வரும் சாலையும் அதுதான். அச்சாலையின் முனையிலிருந்துதான் – காசி தியேட்டர் திருப்பத்தில் – பறையொலி எழுந்தது. பேருந்திலிருந்து இறங்கிய தோழர்கள் அந்த ஒலி வந்த திசையை நோக்கி விரைந்தார்கள். அவர்களை கைது செய்ய வந்த காவலர்களும் தோழர்களை பின்தொடர்ந்தார்கள்.
அங்கே மெல்ல மெல்ல பூக்க ஆரம்பித்த காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.
சாரிசாரியாக, எந்தெந்தப் பகுதியிலிருந்து எந்தெந்த அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் வருகிறோம் என்பதை பகிரங்கமாக அறிவிக்கும் சிவப்பு பேனர் ஏந்தியபடி செஞ்சேனை தோழர்கள் ‘டெள் கெமிக்கல்ஸை’ எதிர்த்தும், போபால் படுகொலைக்கு நீதி கேட்டும் வர ஆரம்பித்தார்கள். பேருந்திலிருந்து இறங்கிய தோழர்கள் அவர்களுடன் இரண்டற கலந்தார்கள்.
திகைத்த காவல்துறை உடனடியாக செயலில் இறங்கியது. இரு காவல்துறை வாகனங்கள் இருபதடி இடைவெளியில் மறித்து நின்றது. ஊர்வலமாக வரும் தோழர்கள் காசி தியேட்டர் மெயின் ரோட்டை அடையக் கூடாது. போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்யக் கூடாது என்பதே காவல்துறையினரின் நோக்கம். அதற்கேற்ப பச்சை நைலான் கயிற்றை எடுத்து இரு வாகனங்களுக்கும் இடைப்பட்ட பகுதியை மறித்தார்கள்.
ஆனால், காவலர்களின் இந்த பயம் அர்த்தமற்றது என்பதை தோழர்களின் தொடர் கோஷங்களும், போராட்டங்களும் உணர்த்தின. உணர்ச்சிக்கு அடிமையாகி நிலைதவற தோழர்கள் என்ன ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சி உறுப்பினர்களா என்ன? சுய ஒழுக்கமும், சுய கட்டுப்பாடும் நிரம்பிய புரட்சிகர நக்சல்பாரி அமைப்பின் அங்கத்தினர்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை எந்தவகையிலும் பாதிக்கக் கூடாது; அதேநேரம் போராட்டத்தின் ஆணிவேரையும் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். தங்களுக்காகத்தான் கொட்டும் மழையிலும் தோழர்கள் போராடுகிறார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்… என்பதற்கு ஏற்பவே செஞ்சேனை தோழர்கள் களத்தில் நின்றார்கள். சாலை ஒருபோதும் தோழர்களால் மறிக்கப்படவில்லை. தோழர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயன்ற காவலர்களால்தான் போக்குவரத்து ஸ்தம்பித்தது என்பது அப்பகுதியை கடந்த ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும், வாகனத்தில் அமர்ந்துக் கொண்டிருந்தவர்களுக்கும் தெரியும்.
காலை 8 மணி முதலே கைது செய்யப்பட்ட தோழர்களை தவிர்த்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் அப்பகுதியில் குவிந்ததும், குழுகுழுவாக பேட்டரியால் இயங்கும் மைக் வழியே தொடர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள். யாருக்காக போராடுகிறோம்; யாரை எதிர்த்து போராடுகிறோம்; எதற்காக இந்த முற்றுகைப் போராட்டம் என்பதை மக்களுக்கு உணர்த்தியதும், புமாஇமு அமைப்பை சேர்ந்த தோழர்கள் வீதி நாடகம் நடத்த ஆரம்பித்தார்கள்.
மழை நிற்கவில்லை. தோழர்களும் அசரவில்லை, கலைந்து செல்லவுமில்லை. காவலர்கள்தான் மழைக்கு பயந்து ஆங்காங்கே ஒதுங்க ஆரம்பித்தார்கள். ஆனால், பகுதி மக்கள் தோழர்களுக்கு தோள் கொடுக்கும் வண்ணம் மழையை பொருட்படுத்தாமல் நின்றார்கள். பத்து நிமிடங்கள் நடைபெற்ற அந்த வீதி நாடகத்தில், போபால் படுகொலை சம்பவம் அப்பட்டமாக நிகழ்த்திக் காட்டப்பட்டது.
அமெரிக்க கொடியை தலைப்பாகையாக கட்டிய ஒரு தோழரை, உலகவங்கி தொப்பி அணிந்த மற்றொரு தோழர் அழைத்து வருகிறார். கதர் குல்லா அணிந்த தோழர் அவர்கள் இருவருக்கும் கூழை கும்பிடு போட்டு இடங்களை சுற்றிக் காட்டுகிறார். ஓரிடத்தை அமெரிக்க தலைப்பாகை அணிந்த தோழர் தேர்வு செய்கிறார். உலக வங்கி தொப்பி அணிந்த தோழர், கதர் குல்லா அணிந்த தோழரை அழைத்து நிபந்தனைகளை விதிக்கிறார். கதர் குல்லா தோழர் அனைத்தையும் தலையசைத்து ஏற்கிறார். யூனியன் கார்பைடு நிறுவனம் உருவாகிறது. அதை தட்டியில் எழுதப்பட்ட எழுத்துகள் வழியே தோழர்கள் உணர்த்துகிறார்கள். பிறகு சாம்பிராணி புகையின் மூலம் விஷவாயு கசிவையும், அதனால் மக்கள் பட்ட வேதனையையும், இறப்பையும் ரத்தமும் சதையுமாக தோழர்கள் நடித்து கண்முன்னால் கொண்டு வருகிறார்கள். அதுவும் தூளியில் தூங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையைப் போன்ற பொம்மையை ஏந்தியபடி ஒரு பெண் தோழர் அழுதக் காட்சி, நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த அனைவரது நெஞ்சிலும் அறைந்தது. எப்பேர்ப்பட்ட அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை முகத்திலறைந்தது போல் இந்த வீதிநாடகம் படம் பிடித்து காட்டியது.
இதனையடுத்து அமெரிக்க கொடியை தலைப்பாகையாக அணிந்த தோழரை, நான்கைந்து தோழர்கள் தூக்கிக் கொண்டு செல்ல, கதர் குல்லா அணிந்த தோழர் கையசைத்து அவரை அனுப்பிவைக்கும் காட்சி, நடந்த உண்மைகளை மக்களுக்கு அப்பட்டமாக உணர்த்தியது.
இந்த நாடகத்தை வீடியோவில் படம் பிடிக்க வந்த காவல்துறையினரை தோழர்கள் தடுத்தார்கள். குரலை மட்டுமே உயர்த்தி, ‘படம் பிடிக்கக் கூடாது’ என்றார்கள். மறுபேச்சில்லாமல் அதற்கு காவலர்கள் கட்டுப்பட்டார்கள். இத்தனைக்கும் தடுத்த தோழர்களிடம் சாதாரண தென்னங்குச்சிக் கூட இல்லை. ஆனால், இமயமலையையே பெயர்த்து எடுக்கும் சக்திப் படைத்த மக்கள் திரள் அவர்களின் பின்னால் இருந்தது. துப்பாக்கி ஏந்திய காவலர்களை கட்டுப்படுத்தும் வலுவான ஆயுதம், மக்கள் திரளே என்பதற்கு இச்சம்பவம் ஒரு சாட்சி.
அதேபோல் காவலர்களை புகைப்படம் எடுக்கவும் தோழர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால், முற்றுகைப் போராட்ட பேட்ஜ் அணிந்த தோழர்கள் வளைந்து வளைந்து வீடியோவும் எடுத்தார்கள். புகைப்படமும் எடுத்தார்கள். காதில் புகை வர வர இக்காட்சியை காவல்துறை உயரதிகாரிகள் பார்த்தார்கள்.
செய்தி ஊடகங்களில் என்.டி.டி.வி சேனல் மட்டுமே வந்திருந்தது. தோழர்களிடம் அனுமதி பெற்று அனைத்து நிகழ்வையும் அவர்கள் படம் பிடித்தார்கள்.
வீதி நாடகம் முடிந்ததும் பேரணிக்கு முன்பு வந்த புஜதொமு அமைப்பின் தலைவரான தோழர் முகுந்தன், பேட்டரியால் இயங்கும் மைக்கை வாங்கி முழக்கங்களை எழுப்ப, தோழர்கள் அதை எதிரொலித்தார்கள்.
இதன் பிறகு மகஇக-வின் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் 20 நிமிடங்கள் சிறப்புரை நிகழ்த்தினார். ஸ்பீக்கர் இல்லை. மின்சாரத்தால் இயங்கும் மைக் இல்லை. ஆனால், மருதையன் தோழரின் உரையை அங்கிருந்த அனைவரும், காவலர்கள் உட்பட அமைதியாக கேட்டார்கள். கட்டுப்பாடுக்கும், ஒழுக்கத்துக்கும் எந்தளவுக்கு அமைப்புத் தோழர்கள் பெயர் போனவர்கள் என்பது மீண்டும் நிரூபனமானது.
ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும், இரு பிரிவினர்தான் அதிகாலையிலேயே பணிக்கு செல்கிறார்கள். பள்ளி மாணவர்கள் ஒரு பிரிவினர். காவலர்கள் மறுபிரிவினர். பள்ளி மாணவர்களுக்காவது மிட்டாய் கிடைக்கும். காவலர்களுக்கு அதுக் கூட கிடைக்காது. பிரதமர் வந்தாலும் சரி, முதல்வர் சென்றாலும் சரி, ரவுடிகள் நடந்தாலும் சரி பாதுகாப்புத் தர வேண்டியது காவலர்களின் கடமையாகிறது… என்ற பொருள்பட தோழர் மருதையன் தன் உரையை ஆரம்பித்ததும் அங்கிருந்த செஞ்சேனை தோழர்கள் பலத்த கரவொலி எழுப்பினார்கள் என்றால், பல காவல்துறையினர் முகமலர்ந்து தங்கள் மகிழ்ச்சியை தெரியப்படுத்தினார்கள்.
தொடர்ந்து மறுகாலனியாக்கத்தால் நம் நாடு திவாலாகி வருவதை குறித்து பேசிய தோழர், இந்த முற்றுகைப் போராட்டத்தை தடுப்பதன் மூலம், ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சுதந்திரம் கிடைத்திருக்கிறது… மக்களுக்கல்ல என்றார்.
இதனையடுத்து மீண்டும் தொடர் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆளும் வர்க்கங்களை அம்பலப்படுத்தும் பேனர்களையும், தட்டிகளையும் ஏந்தியபடி செஞ்சேனை தோழர்கள் தாம்பரம் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரமாக நிற்க ஆரம்பித்தார்கள். இதன் மூலமாக சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஒவ்வொருக்கும் பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்படும் அவலங்களும், போபால் படுகொலையில் மூடி மறைக்கப்பட்ட உண்மைகளும் உணர்த்தப்பட்டன.
‘தயவுசெஞ்சு அரெஸ்ட் ஆகிடுங்க… இல்லைனா எங்களுக்கு வேலை போயிடும்…’ என காவல்துறை உயரதிகாரியின் கெஞ்சலுடன் செஞ்சேனை தோழர்களை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்ற ஆரம்பித்தனர்.
இந்தக் கைது நடவடிக்கை வைபவம் முழுமையாக நடந்து முடிய இரண்டு மணி நேரங்களானது. அந்தளவுக்கு தோழர்கள் புறமுதுகிட்டு ஓடாமல் கைதாகிக் கொண்டேயிருந்தார்கள். கைதான தோழர்களில் கணிசமானோர் பெண்கள். சில பெண் தோழர்கள் குழந்தைகளோடு கைதானார்கள்.
எம்.ஜி.ஆர்.நகர், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், ஜாபர்கான்பேட்டை பகுதிகளிலுள்ள அனைத்து திருமண மண்டபங்களும் தோழர்களால் நிரம்பி வழிந்தன.
அதுவரை மழையும் நிற்கவில்லை.
ஒரு பிஞ்சுக் குழந்தை. ஒண்ணரை வயதுதான் இருக்கும். சிவப்புச் சட்டை, சிவப்பு டிராயர் அணிந்திருந்தார். தன் அப்பாவின் தோளில் அமர்ந்தபடி குடையை விலக்கிவிட்டு மழையில் நனைந்தபடியே போராட்டத்தை கண்கொட்டாமல் பார்த்தார். மழையில் நனைந்தால் தன் மகனுக்கு ஜலதோஷம் பிடிக்கும், காய்ச்சல் வரும் என்றெல்லாம் யோசிக்காமல் நேரடி போராட்டத்தை காணும் வாய்ப்பை தன் மகனுக்கு வழங்கிய அந்தத் தோழருக்கு சிவப்பு வணக்கங்கள்.
சவுகார்பேட்டையிலிருந்து இருவர் இப்போராட்டத்தை காண்பதற்காகவே வந்திருந்தனர். அவர்களுக்கு இப்போராட்டம் குறித்து தெரிந்தது, மின்சார ரயிலில் நடைப்பெற்ற பிரசாரம் மூலமாகத்தான். போபால் படுகொலை நிகழ்வை அம்பலப்படுத்தும் ஜூலை மாத ‘புதிய ஜனநாயக’ சிறப்பிதழையும், ஆகஸ்ட் 15 ‘டெள கெமிக்கல்ஸ்’ முற்றுகைப் போராட்டத்தை வலியுறுத்தும் 2 ரூபாய் பிரசுரத்தையும் விற்பனை செய்வதற்காகவும், நிதிவசூலுக்காகவும் தோழர்கள் வார இறுதியில் சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்தடத்தில் பிரசாரம் மேற்கொண்டார்கள். அப்போது அறிமுகமானவர்கள்தான் அந்த சவுகார்பேட்டை நண்பர்கள். செஞ்சேனை தோழர்களின் போராட்டத்தை முழுமையாக பார்த்த அவர்கள், அமைப்பில் தாங்கள் சேர விரும்புவதாக சொன்னது நிச்சயம் உணர்ச்சிவசப்பட்டல்ல.
குளிர்சாதன அறையில் அமர்ந்து, ஸ்காட்ச் விஸ்கியை குடித்தபடி ‘டெள கெமிக்கல்ஸ்’ நிறுவனத்தின் இந்திய அடியாள்களும், மற்ற பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய தரகர்களும், ஆளும் வர்க்க எட்டன்களும் முற்றுகைப் போராட்டத்தை ஒடுக்கிவிட்டதாக மகிழ்ச்சியடையலாம். அதற்கேற்ப காவல்துறையினரும், உளவுத்துறையினரும் ‘சும்மா 10 பேர்தான் போராடினாங்க…’ என பொய்யான தகவல்களை சொல்லி அவர்களை குளிப்பாட்டலாம்.
ஆனால், தில்லி செங்கோட்டையில் பிரதமரும், தமிழகத்தில் முதல்வரும் நாம் சுதந்திரம் வாங்கிவிட்டதாகச் சொல்லும் தேசியக் கொடியை ஏற்றிய அதேநேரத்தில்தான் –
செங்கொடியை ஏந்தியபடி நாம் இன்னும் சுதந்திரம் வாங்கவேயில்லை என்பதை முன்பே கைதானவர்கள் போக மீதமிருந்த தோழர்களில் ஒரு பகுதியினராகிய இரண்டாயிரத்துக்கும் அதிகமான தோழர்கள் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.
உண்மையான சுதந்திரப் போராட்டத்திற்கு ஒரு அச்சாரமாய் இந்த முற்றுகை போராட்டம் அமைந்தது. ஆம். போலி சுதந்திர தினத்தில் ஒரு உண்மையான சுதந்திரப் போராட்டம்.
_________________________
– அறிவுச்செல்வன்
_________________________
வினவுடன் இணையுங்கள்

















படத்தை பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்
தொடர்புடைய பதிவுகள்