privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஉசிலம்பட்டி கள்ளர்சாதி வெறியர்களால் விமலாதேவி கொலை !

உசிலம்பட்டி கள்ளர்சாதி வெறியர்களால் விமலாதேவி கொலை !

-

உசிலை வட்டம் விவசாயிகள் விடுதலை முன்னணியின் அறிக்கை

சாதிவெறியில் தர்மபுரி வன்னியர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் இல்லை உசிலம்பட்டி கள்ளர் சாதிக்காரர்கள் என நிரூபித்துள்ளது விமலாதேவி கொலை. தர்மபுரி திவ்யாவை விட 100 மடங்கு தன் காதலுக்காக போராடியதால்தான் கொலை செய்யப்பட்டுள்ளார் விமலாதேவி.

விமலாதேவி
கொலை செய்யப்பட்ட விமலாதேவி (படம் : நன்றி தினகரன்)

விபரத்தை நேரில் விசாரிப்பதற்காக விமலாதேவியின் காதலன் திலீப்குமாரின் ஊரான மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுக்காவில் உள்ள போலிபட்டி என்ற கிராமத்திற்கு சென்றோம். முற்றிலும் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 100 குடும்பங்கள் வாழும் கிராமம். ஆரம்பத்தில் பேசத் தயங்கினார்கள். நாம் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் நம்மால் அவர்களுக்கு ஆபத்து இல்லை என்பதையும் உணர்ந்த பின்தான் மனம் விட்டுப் பேசினார்கள்.

இந்த ஊரைச் சுற்றிலும் உள்ள சுமார் 100 கிராமங்களிலும் கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதால் தர்மபுரி போன்று ஒரு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்று விரும்புகிறார்கள் என்பதுதான் அவர்களின் தயக்கத்துக்கான காரணம் என்று உணர முடிந்தது.

கொலை செய்யப்பட்ட விமலாதேவியின் பெற்றோர் சின்னச்சாமி என்ற வீரணன் – தேனம்மாள். சின்னச்சாமி என்ற வீரணன் பூதிப்புரத்தில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய செங்கல் சூளையில் லாரி டிரைவராகவும், மற்றும் தன் சொந்த வேலைகளை செய்வதற்கும் திலீப்குமாரை பணிக்கு அமர்த்தியுள்ளார். அதனால் சின்னச்சாமியின் வீட்டிற்கு திலீப்குமார் அடிக்கடி வந்து போக வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் சின்னச்சாமியின் மகள் விமலாதேவிக்கும் திலீப்குமாருக்கும் இடையே காதல் ஏற்பட்டு சேர்ந்து வாழ முடிவு செய்து இருவரும் கடந்த ஜூலை 20-ம் தேதியன்று ரகசியமாக கேரளாவுக்குச் சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் விமலாதேவியின் தந்தை சின்னச்சாமி திலீப்குமார் என் மகளை கடத்தி சென்று விட்டார் என்று போலீசில் புகார் செய்திருக்கிறார். உடனே 25-ம் தேதி போலீஸ் திலீப்குமாரின் இருப்பிடத்தை அறிந்து அவர்கள் இருவரையும் உசிலை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்து வந்துள்ளார்கள். உசிலம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணகுமார் ஆதரவோடு விமலாதேவியின் கழுத்தில் உள்ள தாலியைக் கழற்ற பாரதிய பார்வர்ட் பிளாக் தலைவர் முருகன்ஜீ முயற்சி செய்துள்ளார். அதற்கு விமலாதேவி, “உன் மகள் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாளே, முதலில் அவள் தாலியை கழற்றி விட்டு வா, அப்புறம் நான் தாலியை கழற்றுகிறேன்” என்று முகத்தில் காரி உமிழாத குறையாகப் பேசி அனுப்பியுள்ளார்.

அதன்பிறகு உசிலை சட்டமன்ற உறுப்பினரும் பார்வர்ட் பிளாக் தலைவருமான கதிரவினிடம் வைத்து பேசி தாலியைக் கழற்ற முயற்சி செய்தபோது விமலாதேவி சட்டமன்ற உறுப்பினர் கதிரவனைப் பார்த்து, “உன்னுடைய எம்.எல்.ஏ வேலை இது இல்லை. என் விசயத்தில் தலையிட வேண்டாம், உன் வேலையை பார்த்து விட்டுப் போ” என்று விரட்டியுள்ளார்.

அடுத்து 20-க்கும் மேற்பட்ட கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் படை சென்று விமலாதேவியிடம், “உன் காதலன் திலீப்குமாரே நீ வேண்டாம், உன்னை மறந்து விடுகிறேன் என்று சொல்கிறான். நீ மட்டும் ஏன் தாலியை கழற்ற மறுக்கிறாய்” என்று கேட்டதற்கு அந்த வழக்கறிஞர் படையிடம், “நீங்க 500 பேர் சேர்ந்து போய் ஒருத்தரை மிரட்டினால் மறுத்துதான் பேசுவார், அவர் மறுத்தார் என்பதற்காக நான் மறுக்க முடியாது” என்று விமலா கூறியதால் பருப்பு வேகாமல் திரும்பி விட்டனர் வழக்கறிஞர்கள்.

இப்படி மிரட்டல் தந்திரம் பலிக்காமல் போனதால், சம்பவத்திற்கு மூன்று நாளுக்கு முன் விமலாதேவியின் தந்தை சின்னச்சாமி தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி விசம் குடித்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அந்த நிலையில் தந்தையின் முகத்தை பார்த்தாவது மனசு மாறும் என்று நினைத்து விமலாதேவியை அழைத்துச் செல்ல காவல்துறை துணை கண்காணிப்பாளர் அனுமதித்துள்ளார். தந்தையின் பரிதாப நிலையைப் பார்த்து விமலாதேவி அழுது கவலைப்பட்டுள்ளார்.

அன்று இரவு விமலாதேவியை நீதிபதியிடம் கூட்டிச் செல்ல விடாமல் அந்தப் பகுதி சாதிக் கட்சித் தலைவர்கள் உள்பட, சட்டமன்ற உறுப்பினர், வழக்கறிஞர்கள் என்று 500-க்கும் மேற்பட்டவர்கள் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முற்றுகையிட்டுள்ளனர்.

நீதிபதியும் காலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினால் போதும் என்று கூறியதால் மறுநாள் காலையில்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி கேள்விக்கு, “என்னை யாரும் கடத்தவில்லை, நான் விரும்பித்தான் திலீப்குமாருடன் சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தேன்.” என்று கூறியிருக்கிறார் விமலாதேவி. இப்போது யாருடன் செல்ல விருப்பம் என்று கேட்ட போது திலீப்குமாருடன் செல்வதற்கு சூழ்நிலை இல்லாமல் இருந்ததாலும், நிலைமை கருதியும் என் பாட்டியுடன் செல்ல விருப்பம் என்று விமலாதேவி கூறியதால் அவருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

பின்பு செப்டம்பர் மாதம் விமலாதேவியை வருசநாட்டைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவருக்கு அக்டோபர் 30-ம் தேதி திருமணம் செய்துவைக்க பேசி நிச்சயம் செய்கிறார்கள். இதற்கிடையில் விமலாதேவியின் மனதை மாற்றுவதற்காக இவர்களின் உறவினர் வீட்டுக்கு நிச்சயம் செய்யப்பட்ட சதீஸ்குமாருடன் அனுப்பி வைக்கிறார்கள் பெற்றோர்.

போகும் வழியில் விமலாதேவி நண்பருக்குப் பேசுவது போல் சதீஸ்குமாரிடம் செல்போனை வாங்கி வத்தலக்குண்டு பஸ் நிலையம் வரும்படி திலீப்குமாரிடம் பேசியுள்ளார். திலீப்குமாரும் வத்தலக் குண்டு பஸ் நிலையம் வந்து விட்டார். உடனே திலீப்குமாரை சதீஸ்குமார் அடித்துள்ளார். அதற்கு பதிலாக விமலாதேவியும் திலீப்குமாரும் சேர்ந்து சதீஸ்குமாரை அடித்து கலகம் செய்துள்ளனர்.

இந்நிலையில் அருகில் இருந்த காவல்துறை சார்பு ஆய்வாளர் ஆனந்தி இவர்களை கைது செய்து விமலாதேவியின் பெற்றோரை வரவழைத்து அவர்களோடு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார். காவல்துறை சார்பு ஆய்வாளர் ஆனந்தி கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், விமலாதேவி நான் திலீப்குமாருடன்தான் செல்வேன் எனறு கூறியுள்ளார். அதற்கு அவர்கள் விமலாதேவி அணிந்திருந்த நகைகளை கழற்றி வாங்கிக் கொண்டு ஒரு விடுதலைப் பத்திரமும் எழுதி வாங்கிய பின் அனுப்பியுள்ளனர்.

விமலாதேவி தான் அணிந்திருந்த மூக்குத்தியைக் கூட கழற்றிக் கொடுத்து விட்டு உங்க சொத்து எதுவும் எனக்கு வேண்டாம், ஆள விட்டால் போதும் என்று கூறிவிட்டு திலீப்குமாருடன் பேருந்து நிலையம் வந்தபோது மறுபடியும் விமலா தேவியின் பெற்றோர் திலீப்குமாருடன் தகராறு செய்துள்ளனர். மீண்டும், அவர்களை கைது செய்த சார்பு ஆய்வாளர் ஆனந்தி விமலாதேவியை தனியார் விடுதிக்கு அனுப்பி வைத்துவிட்டு திலீப்குமாரை விரட்டி விடுகிறார். மறுநாள் மீண்டு திலீப்குமார் சார்பு ஆய்வாளர் ஆனந்தியிடம் சென்று விமலாதேவியை என்னுடன் அனுப்பி வையுங்கள் என்று கெஞ்சியுள்ளார். அனுப்ப மறுத்த உதவி ஆய்வாளர் விமலாதேவியை சின்னச்சாமியிடம் ஒப்படைத்துள்ளார்.

26.09.2014-ல் விமலாதேவி வீட்டுக்கு வந்ததிலிருந்து திலீப்குமாருடன்தான் சேர்ந்து வாழ்வேன் என்று தொடர்ந்து உறுதியாக நின்று போராடியதால் 1.10.2014-ம் தேதி இரவு சுமார் 9 மணிக்கு கொலை செய்திருக்க வேண்டும் என்ற தகவல் கூறுகிறார்கள். இரவோடு இரவாக எரித்து விட்டு தூக்கு போட்டு இறந்து விட்டதாக காலையில் உறவினர்களுக்கு தகவல் தருகிறார்கள் பெற்றோர். சின்னச்சாமியின் வீடு பூதிப்புரம் ஊருக்குள் இல்லாமல் தனியாக தோட்டத்து வீடாக இருந்ததால் நடந்த சம்பவம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லாமல் போனது.

விபரம் அறிந்த திலீப்குமார் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தருகிறார். விமலாதேவியின் இறப்பில் சந்தேகம் உள்ளது என்று வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். சமூக நெருக்கடிக்குப் பின் தற்கொலைக்கு தூண்டுதல் என்று பெற்றோரையும் உறவினரையும் சேர்த்து வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

விமலாதேவியை கொலை செய்து சிறு எலும்பு மிஞ்சாமல் எரித்து சாம்பலாக்கிய சுடுகாடு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தமிழகத்தில் நடக்கும் எந்த ஒரு சாதி கலவரத்திற்கும் ஆதிக்கசாதி தலைவர்களும் காவல்துறையும் எப்படி உதவியாக இருக்கிறார்களோ, அதேபோல் இந்த கொலைக்கும் உடந்தையாக இருந்துள்ளார்கள். இதுபோன்ற சாதிவெறி கொலைகள் நடப்பதை தடுக்க உண்மையில் நாம் செய்ய வேண்டியது, கொலைக்கு நேரடியாக உடந்தையாக இருந்த உறவினர்களை மட்டுமல்லாமல் துணைநின்றவர்கள் மீதும் வழக்கு பதிய வேண்டும்.

அதன்படி ஆரம்பத்திலிருந்து இவர்களை பிரிப்பதற்கு உடந்தையாக இருந்த உசிலம்பட்டி துணை கண்காணிப்பாளர், வத்தலக்குண்டு உதவி ஆய்வாளர், உசிலைபகுதி கள்ளர் சாதி தலைவர்கள், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் ஆகியோரின் மீதும் கொலை வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்.

ஆதிக்கசாதி வெறியை குழிதோண்டி புதைத்தால்தான் அந்த புதை மேட்டிலிருந்து சாதிமறுப்பு திருமணம் அதிகரித்து ஆரோக்கியமான புதிய சமூகத் துளிர்விடும்.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
உசிலை வட்டம்.

மதுரை மனித உரிமை பாதுகாப்பு மையம் அனுப்பிய அறிக்கை

உசிலம்பட்டி அருகே பெண் கவுரவக்கொலை ! மூடி மறைக்க ஆதிக்க சாதியினர் – போலீசு – அரசு அதிகாரிகள் கூட்டு சதி !

மனித உரிமை பாதுகாப்புமையம் உசிலை உட்கிளையைச் சேர்ந்த தோழர்கள் இது தொடர்பாக அந்த ஊருக்கு உண்மையறிந்து வரச் சென்றனர். விமலாதேவி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் வீட்டில் இல்லை. ஊர்மக்களிடம் இதுபற்றி விசாரித்த போது ஒருவரும் முறையாகப் பதில் சொல்லவில்லை. ஆனால் அந்தப் பெண்ணும் பையனும் செய்தது தவறு என்று சொல்லியிருக்கின்றனர். மேலும் விசாரித்த போது கடந்த 2 ஆண்டுகளாக விமலாதேவியும், திலீப்குமாரும் நெருங்கிப் பழகிவந்தது அவருடைய குடும்பத்தாருக்குத் தெரிந்தே உள்ளது. ஆனால் அவர்கள் அதை பெரிது படுத்தவில்லை என்று சொல்கிறார்கள். ஊர்க்காரர்கள் இழித்துப் பழித்துப் பேசியதைத் தாங்காமல் தான் வீரணன் விசம் குடித்துள்ளார். அதன் பிறகுதான் இது வெளியே தெரிந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொறுப்பில் உள்ள செல்லக்கண்ணு மற்றும் தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. ஆகியோர் வீரணனுக்கு உறவினர்கள். இவர்கள் இந்தப் பிரச்னையில் வீரணனுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். பி.வி.கதிரவன் ஆதிக்க சாதி அடிப்படையில் ஓட்டு வாங்கி ‘அம்மா’வின் ஆசியில் எம்.எல்.ஏ. ஆனவர். சி.பி.எம். செல்லக்கண்ணு இது போன்ற பிரச்னைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்து காவல்துறைக்குத் தரகுவேலை செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ளவர் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

ஆக இந்தக் கவுரவக் கொலை தருமபுரிமாவட்டம் நத்தம் காலனி இளவரசன் – திவ்யா காதல் பிரச்னையில் வன்னிய ஆதிக்க சாதிவெறியர்கள் எப்படி திவ்யாவின் தந்தை நாகராஜின் சாவுக்கும், இளவரசனின் சாவுக்கும், மூன்று கிராமங்களின் பலகோடி சொத்துக்கள் கொள்ளைக்கும் அழிவுக்கும் காரணமாக இருந்தார்களோ அதுபோலவே இதுவும் நடந்துள்ளது. உசிலம்பட்டி பகுதியில் இது ஒரு மோசமான தொடக்கமாக உணரப்படுகிறது. இது எபோலா போல பரவ வாய்ப்புள்ளது. எனவே இந்தக் கொலையை வெளியே தெரியவிடாமல் அமுக்கிவிடுவதற்கு மாவட்ட காவல் துறை கடும் முயற்சி எடுத்து வருகிறது. கொலையைத் தற்கொலையாக மாற்றிவிடத் துடிக்கிறது. அதற்கு ஆதிக்க சாதியினரின் ஆதரவையும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது மிரட்டலையும் கடைப்பிடித்து வருகிறது.

விமலாதேவி கொலை செய்யப்பட்டதற்கான ஆதரங்கள்:

  • தற்கொலை என்றால் ஏன் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் காவல்துறைக்குத் தெரிவிக்கவில்லை?
  • சுடுகாட்டில் மயான சீட்டு இல்லாமல் பிணம் வெட்டியானால் எப்படி எரிக்கட்டது?
  • 8 பேர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விமலாதேவியின் அப்பா, சித்தப்பா, அம்மா, சித்தி இரண்டாம் திருமணத்திற்கு தயாராக இருந்த சதீஷ்குமார் அவரது அப்பா குருசாமி வெட்டியான் ஆகியோர் அடங்குவார்கள். இவர்கள் எல்லோரும் (வெட்டியான் தவிர) வீட்டில் இருக்கும் போது விமலாதேவி எப்படி தற்கொலை (தூக்கு) செய்துகெள்வார்? அவர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை.

ஆனால் செல்லக்கண்ணு, பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ., ஆதிக்க சாதி கனவான்கள் மற்றும் காவல்துறையின் ஆசியோடு இது மறைக்கப்பட்டுள்ளது. பூதிப்புரத்தில் உள்ள சாதிக்காரர்கள் செத்த பெண்மீது பழி போடுகின்றனர். கொலையை நியாயப்படுத்துகின்றனர். சாதிமாறி காதலிப்பதை மன்னிக்க முடியாத குற்றமாகக் கருதுகின்றனர்.

கொல்லப்பட்ட விமலாதேவியின் கணவர் திலீப்குமார் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள சி.பி.எம். அலுவலகத்தில் சி.பி.எம். கட்சியினரின் பாதுகாப்பில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி (சாதி ஒழிப்பு அல்ல) மற்றும் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரி சுவரொட்டி ஒட்டியுள்ளனர். ஜனநாயக மாதர் சங்கத்தில் உசிலை வட்டப் பொறுப்பில் இருப்பவர் செல்லக்கண்ணுவின் மனைவி முத்துராணி.

“வறட்டு கவுரவத்துக்காக ஒரு கொலை நடந்துள்ளது. தப்பவிடதே. தமிழக அரசே! நடவடிக்கை எடு.” என்று கோரி வி.சி.கட்சியினர் சுவரொட்டி இயக்கம் நடத்தியுள்ளனர். திருமாவளவன் படத்தைப்போட்டு விசிகட்சியினர் ஒட்டிய அனைத்து சுவரொட்டிகளையும் காவல்துறையும், பார்வர்டுபிளாக் கட்சியைச் சேர்ந்த சில வக்கீல்களும் தேடித் தேடிச் சென்று ஒன்றுவிடாமல் கிழித்துவிட்டனர். அதோடு மட்டுமல்லாமல் தலித்துகளை கெட்ட வார்த்தைகளால் நடுரோட்டில் அர்ச்சித்தனர். மேலும் உசிலை நகரில் உள்ள மாட்டிறைச்சிக் கடையில் போய் முன்னாள் ஊராட்சித் தலைவர் தகராறு செய்துள்ளார். விசி கட்சியைச் சேர்ந்த தென்னரசு என்பவரைத் தொலைபேசியில் அழைத்து மிகக் கேவலமாகத் திட்டி கொலை மிரட்டல் விட்டுள்ளனர்.

ஆனால், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒட்டிய சுவரொட்டிகள் ஒன்று கூட கிழிக்கப்படவில்லை. சாதிக்கு சாதி சகித்துப் போய்க்கொள்ளும் நடைமுறை உள்ளதாகச் சொல்லிக் கொள்கின்றனர். இது என்ன உள்குத்தோ தெரியவில்லை.

இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டுதான் ஆர்.எஸ்.எஸ். பிஜேபி கும்பல் தமிழக அரசியலில் காய் நகர்த்துகிறது. சமூக நீதி, இட ஒதுக்கீடு, பெரியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டு பிழைப்பு நடத்தும் கட்சிகள் தான் இந்த மதவெறியர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கின்றனர்.

எமது தோழர்கள் விசாரித்ததில் தெரிந்த ஒரு விவரம் கடும் அதிர்ச்சியைத் தருகிறது. விமலா தேவியின் அப்பா வீரணன் காவல்துறை விசாரணையின் போது “என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் கொலைக் கேசு போட்டுக்கோங்க. ஆனால் என் மகளைக் கொன்னதாத் தான் கேசு இருக்கணும் – அவன் (திலீப்குமார்) பொண்டாட்டின்னு இருக்கக் கூடாது.” என்று சொன்னாராம்.

விமலாதேவியும் – திலீப்குமாரும் கேரளாவில் பதிவுத்திருமணம் செய்து கொண்டதற்கான அத்தாட்சி இருக்கிறது. அவர்கள் திருமணம் ரத்து செய்யப் படவுமில்லை. ஆனால் இதைத் தெரிந்தே வேறு ஒருவன் கட்டிக் கொள்ள சம்மதிக்கிறான் என்றால் சாதி வெறிபிடித்த இந்த சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது. இதை வீழ்த்த நாம் போராடவேண்டாமா?

தகவல்
மனித உரிமை பாதுகாப்புமையம்
உசிலம்பட்டி உட்கிளை மதுரை மாவட்டம்.

news1

பத்திரிகை செய்திகள்

ஆசிரியர் பயிற்சி முடித்த இளம்பெண் தூக்கிட்டு சாவு
ஆசிரியர் பயிற்சி முடித்த இளம்பெண் தூக்கிட்டு சாவு : பெற்றோர் உட்பட 8 பேர் கைது

  1. ஆதிக்கசாதி வெறியை குழிதோண்டி புதைத்தால்தான் அந்த புதை மேட்டிலிருந்து சாதிமறுப்பு திருமணம் அதிகரித்து ஆரோக்கியமான புதிய சமூகத் துளிர்விடும்.

  2. That is why we have to teach caste, community and religion to our children to avoid these type of inter-caste marriage. Everybody should know their caste and religion by heart then there is no confusion in the society. These type of incidents may happen in the same caste also by economic indifference. If a devar boy/girl is killed by dever caste due to economic indifference, it may not be exposed like this. One side dalits are re-writing the history to ‘acquire’ royal status other side they are shouting for justice to ‘acquire’ upper caste girl.

  3. சாதி வெறியை நிலைநாட்டுவதற்க்காக ஜாதி வெறியர்கள் எல்லாம் ஒரணியில் நிற்கிறார்கள். சாதியை ஜாதி வெறியை வேர் அறுப்பவர்கள் எல்லாம் சிதறல்களாக இருப்பதால்தான்… சாதி..ஜாதி வெறி கொலை பாதகத்தடன் ஆட்டம் போடுகிறது.. ஒரு விளக்கம்… உசிலை பகுதியைச் சேர்ந்தவர்களை பிரமலைக் கள்ளர் என்று கூறுவார்கள். அம்பலார் என்று பட்டம் சூட்டிக் கொண்டவர்களைத்தான் கள்ளர் என்று கூறுவார்கள். இவர்கள் எந்த வகை கள்ளர்.

  4. சாதிகள் பல உள்ளன.
    ஆனால் சாதி வெறி என்று வந்தவுடன் எந்த சாதியாக இருந்தாலும் ஒரே நிலையில்தான் வந்து நிற்கின்றன.

    கள்ளர் சாதி என்பதற்குப் பதிலாக ‘சாதி வெறி’ என்று போட்டிருக்கலாமே!

    ‘சாதிவெறியில் தர்மபுரி வன்னியர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் இல்லை உசிலம்பட்டி கள்ளர் சாதிக்காரர்கள்’ என்று சொல்வது ஏற்புடையதல்ல.

    தர்மபுரியில் உள்ள வன்னியர்கள் மற்றும் உசிலம்பட்டியில் உள்ள கள்ளர் மக்களை சாதி வெறியர்களாக காட்டுகிறது இந்த வாசகம்.
    உண்மை அது இல்லையே!
    வன்னியர்கள் மற்றும் கள்ளர்களில் சாதி உணர்வே இல்லாத மக்கள்தான் அதிகம் இருப்பார்கள்.
    தன் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துவதில் மட்டுமே அக்கறை செலுத்தும் இவர்களையும் சாதிவெறியர்கள் என்று சொல்லிட முடியாது..

    வன்னியர் சாதிவெறி, கள்ளர் சாதிவெறி என்கிற சொல்லாடல் ஏற்புடையதா?

    வினவு விளக்கட்டும்.

  5. //‘சாதிவெறியில் தர்மபுரி வன்னியர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் இல்லை உசிலம்பட்டி கள்ளர் சாதிக்காரர்கள்’ என்று சொல்வது ஏற்புடையதல்ல// What the so called Kallar good samiritans did for this honor killing? Silence is one form of acceptance.

  6. கள்ளர் சாதி வெறி ,வன்னியர் சதி வெறி என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லக்கூடாது.அந்த சாதி களில் பலர் சாதி உணர்வு அல்லது வெறி இல்லாதவர்களாக இருக்கலாம் அல்லவா?என்று சிலர் கேட்கின்றனர்.சாதி ஏற்றத்தாழ்வின் காரணமாக நாடைபெறுகின்ற இப்படிப்பட்ட வன்கொடுமைகளைச் செய்கிறவர்களை வேறு எப்படிச் சொல்வது? நான் இந்தச் சாதியைச் சேர்ந்தவன் என்று கருதிக்கொள்வதில் என்ன மேன்மை இருக்கிறது.சாதியின் பெயரால் சக மனிதனுக்கு இழைக்கப்படுகிற கொடுமைகள் மிகக் கேவலமானது.சாதி என்பது என் மேல் சுமத்தப்பட்டிருக்கிற இழிவு என்று உணருவதே சரியானது;அறிவுப்பூர்வமானது. நாகரீகமானது.வன்னியர்,தேவர், நாயக்கர் போன்ற சாதிகள் எல்லாம் வருணாசிரம தருமப்படி சூத்திர சாதிகள்.இவர்கள் வேசிகளுக்குப் பிறந்தவர்கள் என்று சொல்கிறது மனு தர்மம்.பிரம்மனின் காலில் இருந்து பிறந்தவர்களாகச் சொல்கிறது பார்ப்பனீயம்.இதே நீதி தான் தலித்துகளை அவர்ணர்கள்.மனிதர்களே இல்லை என்று சொல்கிறது.இந்த சாதியப் படி நிலையை இன்றுவரை பாதுகாத்து வருகிறது பார்ப்பனீயம்.சூத்திரன் என்ற இழிவை தலை மேல் சுமந்துகொண்டிருக்கிற இவர்கள் அதை எதிர்த்துப் போராடுவதை விட்டு விட்டு தன்னை ஆண்ட பரம்பரையாகச் சொல்லிக்கொண்டு சக மனிதனை மட்டுமல்லாமல் தன் ரத்தத்தில் உருவான பிள்ளைகளையே ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கின்றனர்.இது நியாயமா? சாதியில் உள்ள நல்லவர்களின் கடமை என்ன? இப்படிப் பட்ட காடுமிராண்டித்தனங்களை எதிர்த்துப் போராடுவது தானே? நான் நல்லவன்.ஆனால் அந்தச் சாதியைச் சேர்ந்தவன்.கெட்டவனைச் சொல்லும்போது என்னையும் பாதிக்கிறது.அதனால் சாதியைச் சொல்லாதே.இந்த வாதம் சாதியின் பெயரால் குற்றம் செய்கிறவர்களைப் பாதுகாக்கிறது.எதிர்க்கத் துணிவில்லத அல்லது மனமில்லாதவர்கள் சாடி ஆதிக்க வெறிக்குத் துணை போவதாகத் தானே பொருள்.சாதி என்று கருதுவதே இழிவானது.

  7. காவல்துறையை காவல்துறை என்பதர்க்கு பதில் சாதி சங்கதின் ஏவல் துறை என்று சொல்லலாம் இதான் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

    சாதி சங்கங்களை இனி சாதி சங்கம் என்று யாரும் சொல்ல வேண்டாம் தாலியருக்கும் சங்கம் சொல்லலாம் அத்ன் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

  8. மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ?

    மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன.
    உடலில் 60 மணி நேரத்தில் லார்வாக்கள்
    தோன்றுகின்றன.
    3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன.
    4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன.
    5 நாட்களில் திரவமாய்
    உருகுகிறது மூளை.
    6 நாட்களில் வாயுக்களால்
    வெடிக்கிறது வயிறு.
    2 மாதங்களில் உடல்
    உருகி திரவமாகின்றது.
    இறந்த பிறகு இப்படி மனிதனின் உடல்
    பாகங்கள் சிதைந்து போக, எதற்கு இந்த
    தலைகணம், கோபம், ஆணவம், ஆடம்பரம்,
    கொலை வெறி,கௌரவம், ஜாதி மத
    சண்டைகள் …???
    மனித பிறப்பு மிக .அறியப் பிறப்பு ..
    அதை வாழும் காலத்தில் அனைவரிடமும்
    அன்புடனும் பண்புடனும் ஆதரவுடனும்
    நடந்து கொள்வோமே….

  9. வினவிற்கு மார்க்ஸிஸ்ட்டுகள் மீது வேறு பிரச்சினையில் கோபம் இருந்தால் அந்த பிரச்சினை குறித்து பேசட்டும்… அதை விடுத்து மார்க்சிஸ்ட் தோழரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்ட செயலாளரும் ஆன செல்லகண்ணு மீது அவதூறை வீசுவது ஏன்?… வத்தலகுண்டில் திலீப்குமார் மற்றும் விமலாதேவி ஆகியோருக்கு ஆதரவாக போலீசாருடனும் விமலாதேவியின் உறவினருடனும் சண்டையிட்டு அடிவாங்கியது தோழர்.காசிமாயன். இவர் வத்தலகுண்டில் மா.கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்பில் உள்ளார். அது மட்டுமல்ல … இவர் தோழர் செல்லகண்ணுவின் சொந்த சகோதரர். அதே போல் உசிலம்பட்டி காவல்நிலையத்தில் முருகன்ஜீ, கதிரவன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் திலீப்குமார் மற்றும் விமலாதேவி ஆகியோருக்கு எதிராக ரகளை செய்த பொழுது இவர்களுக்கு ஆதரவாக அங்கு ஒங்கி ஒலித்த குரல் தோழர் செல்லகண்ணு மற்றும் சிபிஎம் தோழர்களின் குரல்களே. எனவே வினவிற்கு சிபிஎம் இடம் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதை பேசி தீர்த்து கொள்ளட்டும். அநியாயமாக ஒரு உயிரை காவு வாங்கியுள்ள தீண்டாமை வன்கொடுமை பிரச்சினையில் ஆதாயம் தேட முயல வேண்டாம்

  10. //நீதிபதி கேள்விக்கு, “என்னை யாரும் கடத்தவில்லை, நான் விரும்பித்தான் திலீப்குமாருடன் சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தேன்.” என்று கூறியிருக்கிறார் விமலாதேவி. இப்போது யாருடன் செல்ல விருப்பம்//
    இந்த வழக்கே கடத்தல் வழக்கு இதில் நீதிபதியிடம் நான் யாராலும் கடத்தபடவில்லை விரும்பிதான் திலிப்குமாருடன் சென்றேன் என்று சொன்ன பிறகு நீதிமன்றன் இதை பொய் வழக்காக தள்ளுபடி செய்து அல்லவா இருக்க வேண்டும் இதற்க்கு பின்பு நீ யாருடன் செல்கிறாய் என்ற கேள்வியே அர்த்தமற்றது அல்லவா ,கட்டிய கணவருடன் அல்லவா அவரை அனுப்பியிறுக்க வேண்டும் இது எதனால் என்பதை வினவு விளக்குமா…

    • விளக்கம் கேட்க வேண்டியது,எதிர்து போராட வேண்டியது , தேவர் சாதிவெறி கயவாளி போலிசு இடமும் , இதயம் இல்லாத நீதி மன்றதிடமும் தான் Mr P.J !

  11. ஒரு தலித் சாதியை சேர்ந்த பட்டதாரி பெண்னை, காஞ்சா ஊதும் பழக்கமுள்ள பிராமின இனத்தை சேர்ந்த லாரி டிரைவருக்கு உங்களால் திருமணம் செய்துகொடுக்கமுடியுமா?

    பணம் பறிக்க நாடக காதல் செய்யும் உங்களால் இப்படி பெண்கள் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள்.

    அதெப்படி நாடக காதலில் அடுத்த சாதி பெண்கள் மட்டுமே தற்கொலை செய்துக்கொள்கிறார்கள் தலித்கள் சாவமல் இருப்பது எப்படி??

  12. இந்த பிரச்னையில் தலையிலிருந்து அவர்கள் , காலிலிருந்து வந்த இவர்கள் என்ற பார்ப்பானீயக் கதைகளை இழுக்க வேண்டாம். அந்த மனுவாதிகள் சொன்ன நான்கு சாதிகளுடன் நாம் நிற்க வில்லை. நூற்றுக்கணக்கான ஜாதிகளை உருவாக்கி இருக்கிறோம். இரண்டு: . கை தட்டு வாங்குவதற்கு ஜாதிகமடக் ள் இல்லை என்று பேசும் நாம் ஜாதிச் சண்டைகள் வராமல் பணியாற்றுவோம் என்று யாரும் சொல்வதில்லை. ஜாதிகள் ஒட்டுமொத்தமாக ஒழிய இன்னும் சில நூறு ஆண்டுகள் ஆகும்; அதுவரை ஜாதிச் சண்டைகளை ஜாதிகளைக் குறைக்க, என்ன செய்ய முடியும்?

    உட்பிரிவுகளைக் களைய ஒரு இயக்கம் வேண்டும். நம் பின்னூட்ட அன்பர் சொன்னது போல் ஜாதிகள் இல்லை என்று மேடைப் பேச்சில் கை தட்டு வாங்குவதுடன், பிள்ளைகளிடம் நான் காதலுக்கு எதிரி அல்ல; சமூக ஏற்றத்தாழ்வுகள் மண வாழ்க்கையை சிதைக்கக் கூடும்; நாம் கூடியவரை நம் ஜாதிக்குள்ளே நீங்களாகத் தேர்ந்தெடுங்கள் என்று சுதந்திரம் கொடுக்க வேண்டும். (உட்ப்ரிவுகளைப் பொருட்படுத்த வேண்டாம்; நான் வேறு பிரிவுகளையும் சமமாகப் பார்ப்பேன்) என்று உறுதி சொல்ல வேண்டும.
    நான் அஸ்ஸாமில் கண்டது: இங்கு காதல் திருமணங்களே ஐந்தில் மூன்று. ஆனால் ஜாதி மறுப்புத் திருமணங்கள் குறைவு. அஸாமில் ஜாதிச் சண்டைகள் வருவதில்லை. பிள்ளைகளிடம் நாம் இன்ன ஜாதியைச் சேர்ந்தவர்கள்; நமது அடையாளம் இவை இவை என்று சொல்வது தவறல்ல; அங்கு பெரும்பாலும் தம் ஜாதியினுள்ளே ஜோடியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள் .

    இங்கோ பல ஜாதி மறுப்பு மணங்கள், அதன் காரணமாக நம் அண்டை, அயலார், நம் குலத்தோர் நாம் அங்கீகரித்த மணத்தை கலைக்க நம்மையே தூண்டும் நிலைப்பாடுகள் வராமல் காக்க முடியும்.

    நான் மீண்டும் சொல்கிறேன்: கலப்பு மணங்கள் ஜாதிகள் ஒழிய வழி வகுக்கும் என்று நான் நம்புகிறேன். ஆனால் இது இருவர், இரு குடும்பத்தினர் என்பதைத் தாண்டி இரு குழுக்கள், இரு சமூகங்கள் சண்டை/கலவரம்/””குல மானம் காக்கும் கொலைகள்””. தம் பிள்ளைகளையே கொல்லத் தூண்டும் வெறித்தனம், இதைத் தூண்டும் கொவிந்தாக் கூட்டம்! என்று நீள்வது தாங்க முடியாமல் இருக்கிறது; அதை நிறுத்தும் முதிர்ச்சி சமூகத்துக்கு வரவில்லை. அதுவரை தீய விளைவுகளைக் குறைக்க விழையும் நல்லெண்ணம் என்று இதைக் கொள்க.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க