Saturday, May 25, 2024
முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவர் நீரே!

பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவர் நீரே!

-

பங்குச் சந்தையின் புள்ளிகளைப் பதற்றத்துடன் அண்ணாந்து உற்று நோக்கும் பங்குதாரர்கள் போல, பங்குச்சதையின் திருப்பலியைக் கேட்க மண்டியிட்டு அண்ணாந்து பரிதாபமாக இறைஞ்சும் அப்பாவி ஏசுவின் குழந்தைகள்.

‘பங்குத்தந்தை’ – குழப்பம் வேண்டாம். ஊரை அடிச்சிப் பங்குப் போட்டுக் கொள்வது, அவ்வளவுதான். ஆடு, மாடு திருடு போயிட்டால் ஊர் நாட்டில் சொல்வார்கள்… ‘எவனோ பங்கு போட்டுத் தின்னுட்டான் பாவி’ என்று. பாவம், மந்தைகளைக் காப்பாற்ற மீண்டும் ஒருமுறை மீட்பர் உயிர்த்தெழுவாரா?!

பங்குகளை பிரித்துக்கொள்வதில் சாதிகளைப் போலவே படிநிலைகள் உண்டு. அதாவது பெரிய பங்கு, சிறிய பங்கு, மீடியம் பங்கு என்று. திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரையில் இது ஒரு பெரிய மறை மாவட்டம். எழுபது, எண்பது பங்குகள் இருப்பதாக கிருத்துவ வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன. இருக்கட்டும், பரவாயில்லை. இதற்கெல்லாம் பாஸ் யார்ர்ர்…ரான்னா ‘சேசு சபை’ என்கிற ‘அந்தப்புற’ குருக்கள் சபைதான். அந்த அந்தப்புறத்திலொரு மகராஜன்தான் நம்மூரு சாமி யாரு? ராஜரத்தினம்.

இவரை Father  என்றும் அழைப்பார்கள். ‘சாமியாரா? Father ? ரெண்டுல எதாவது ஒண்ணு சொல்லுங்க’ என்று கேட்காதீர்கள். ரெண்டுமே ஒண்ணுதான் பிரதர்…! அதாவது Father  ரா குடித்தனம் பண்ணி, பிறகு சாமியாரா ஆனவங்க பலபேர். ஆனா சாமியாரே Father ஆகி புதுக்குடித்தனம் நடத்துறது இப்பவெல்லாம் ஃபேஷன்.

ஸ்தோத்திரம் ஆண்டவரே!

இதை பிளாரன்ஸ் மேரியிடம் கேட்டால்… ‘பாஸ்டேட்’ என்கிறார் ஆத்திரத்துடன். சரி அத்த விடுங்க சார்… பங்குக்கு வருவோம். ரொம்ப கொழப்பம் வேண்டாம்…. சிறிய பங்கு எம்.எல்.ஏ மாதிரி, பெரிய பங்கு எம்.பி மாதிரி. ஏதோ தன்னால முடிஞ்ச அளவு கர்த்தரிடம் மன்றாடிப் பங்குப் பெறுபவர் சிறிய பங்குத்தந்தை. முழங்கை வரையிலும் கையை விட்டு, கர்த்தரிடம் முழங்காலிட்டு அள்ளிக் கொள்பவர்தான் பெரிய பங்குத் தந்தை; அவ்வளவுதான் மேட்டர்.

அதாவது ஏசு அப்பத்தைப் பங்கிட்ட மாதிரி இப்படித்தான் சிறுசும், பெருசும் சுமார் ‘ச்சேர்’ பண்ணிக்கிறாங்க. பங்குன்னா… ஏதோ நம்மூர் திருவிழாவுல ஊருக்கே ரெண்டு கெடா வெட்டி, வீட்டுக்கு பிடி கறிய எடுத்துக்கிட்டுப்போற சாதாரண விவகாரமில்ல இந்தப் பங்கு. உண்டியல் காசு, கண்ணுக்கெட்டாத தூரம் நெல்வயல், நூறு, இருநூறு ஏக்கர்ல தென்னந்தோப்பு, வாழத்தோப்பு, மாந்தோப்பு, அதன்பிறகு வரி வசூலிக்க கல்யாணம், கருமாதி, ஞானஸ்ஞானம், ஈஸ்டர், கிருஸ்துமஸ், இதுபோதாம ‘புது நன்மை’னின்று புடுங்கிறதெல்லாம் பங்குத் தந்தையின் நன்மைக்கே.

இப்படியாக குவிகிறது தந்தையின் பங்கு. இந்தப் பங்குச் சந்தையில் மட்டும் புள்ளிகள் எப்பவும் ஏறுமுகத்திலேதான் இருக்கும். இதுல இன்னொன்னு என்னான்னா… மகாஜன சங்கம், தேவர் பேரவை மாதிரி ‘பங்குப்பேரவை’யின்னு ஒன்று உண்டு. அதாவது ஃபாதர் சங்கம், மதர் சங்கம், பிரதர் சங்கமெல்லாம் போதாதாம். மாதர் சங்கம், இளைஞர் சங்கம், பாலர் சங்கம், சிறுவர் மன்றம், சிறுவர் பாராளுமன்றம்… இப்படியாக பட்டியல் நீள்கிறது. கிருத்துவ வட்டாரங்களை தன் நிர்வாகத்தின் கீழ் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளவே இந்தச் சங்கங்கள். சொல்லப்போனால் வெள்ளைக்காரன் காலத்து ஏயத் வாரி, பகல் வாரி மாதிரிதான் இவைகள்.

இந்த கலைகளுக்கு ஒரே ஒரு கண்டிஷன். ஒரு கன்னத்தில் அடித்தால்… மறு கன்னத்தைக் காட்டாமல், எவனாவது ரோசப்பட்டு திருப்பி அடித்தவன் கன்னத்தில் அடித்தால், அவன் பேரவைகளில் அங்கம் வகிக்க முடியாது.

மேற்கண்ட நிர்வாக முறைகளைக் கட்டுக்கோப்பாக நடத்திச் செல்ல ஒரு தலைமை அலுவலகம் வேண்டுமல்லவா…?  அதுதான் மாயத்தீவு தூய வளனார் கல்லூரி, திருச்சி – 02. அந்த சாம்ராஜ்ஜிய ராஜாதான் ஸாட்சாத் Father  ராஜரத்தினம், நிற்க.

”தனக்கு சவக்குழியைத் தோண்ட தானே அதற்கு ஆட்களையும் தயார் செய்கிறது முதலாளித்துவம்” – என்று ஆசான் கார்ல் மார்க்ஸ் சொன்னது நினைவுக்கு வருகிறது. அது இந்த பாதிரிக்கு எப்படியோ கச்சிதமாக பொருந்துது பாருங்க…!

சில பல வருஷங்களாக கட்டாயப்படுத்தி ஒரு கன்னியாஸ்திரிய கெடுத்திருக்கிறாரு இந்த ராஜரத்தினம். பிளாரன்ஸ் மேரி கேட்காத போதே முன் வந்து பல பரிசு பொருட்களை காஸ்ட்லியாக வாங்கித் தந்திருக்காரு இந்த ராஜரத்தினம். ‘எதையோ வாங்கித் தந்து விட்டுப் போகட்டும் எழவ எடுக்க. அந்த செல்ஃபோன் எதுக்கு? நம்ம Father  வாங்கித் தரணும்? இப்ப பாத்தீங்களா, குதிர குப்புற தள்ளினதுமில்லாம, குழியும் பறிக்குதில்ல’ என்று சக குருக்கள் கொழப்புறாங்க.

எங்க ஊர்ல ஒரு பழமொழி உண்டு. ‘கிணத்த சுத்தி விளையாடுகிற புள்ளைக்கு கிணத்துலதான் சாவு’ என்று. இப்போது பிளாரன்ஸ் மேரி கொடுத்த டைரிய நம்ம ஏட்டம்மாவே படிச்சிட்டு முகஞ்சுழிக்குது. ‘இது ராஜரத்தினத்திற்கு தேவைதானா? சரி! அத்த உடுங்க பிரதர், எதஎத பங்கு போடறதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லையா?’ என்று சாதாரண ஏழைக் கிருத்துவன் கேட்பது நியாயம்தான். என்ன பண்றது?! பங்குத் தகராறுன்னா… கொஞ்சம் அப்பிடி, இப்பிடி இருக்கத்தான் செய்யும். தெரியாமலா ‘சர்ச்ல இதெல்லாம் சகஜமப்பா…ன்னு’ மதுரை சேசு சபை தலைவர் தேவதாசு சொன்னாரு. அவருக்கு இருக்கிற ‘வெத்தலப்பெட்டி’ அனுபவம் நமக்கெல்லாம் வருமா?

வேளைக்கு மூணு வகை கறிய வறுத்துப்போட்டு, சாம்பல் மாறாத சிம்லா ஆப்பிளையும், ஊட்டி ஆரஞ்சையும் வயிறுமுட்ட திங்க வச்சு, பூசைக்கு பூசை ஒயின்ன ஊத்திவுட்டு, கரந்த பாலுல துளி தண்ணி கலக்காம சுரண்ட காய்ச்சி எடுத்து, அதுல பிஸ்தா பருப்பைக் கொட்டி மெதக்கவுட்டு, அதை இதமான சூட்டுல கழுத்து வரைக்கும் முங்க வச்சு, மினிஸ்டர் காட்டன்ல அங்கி தச்சி போட்டுவுட்டு, அதுக்கு நாடாவையும் கோத்துக்குடுத்து, இலவம்பஞ்சு மெத்தையும் போட்டுவுட்டு, படுக்கப்போற நேரம் பாத்து… நீ தனியாகத்தான் படுக்கணுமின்னா… எந்த மழுமட்டையாவது கேக்குமா?! கொஞ்சமாவது இந்த சேசு சபைக்கு ‘புத்தி வேண்டாமா?! இல்ல… சேசு சபையில இருக்கிற முக்கால்வாசி குருக்கள் அப்படியா வளர்ந்தவங்க?

சினிமாவுல புது மாப்பிள்ளைய First Nightக்கு ‘ஏற்பாடு’ பண்ணி அனுப்புறத நாம பார்த்திருக்கிறோம். அதுவும் அஞ்சு நிமிசத்துல அந்த காட்சி முடிஞ்சிறும். ஆனால் வருசம் முச்சூடும் பல Fatherகள் மந்தைகளின் வரிப்பணத்தில் தங்களை இப்படித்தானே ‘தயார்’ செய்துக்கொள்கிறார்கள். அப்புறமென்ன… கன்னிமேரிக்கு தொண்டூழியம் செய்யப்போயி… கன்னித்தன்மை இழந்தது தானே மிச்சம் பிளாரன்ஸ் மேரிகளுக்கு.

தான் கற்பம் அடைந்ததைப் பற்றி ராஜரத்தினத்திடம் பிளாரன்ஸ் மேரி  சொன்னபோது… ‘வெரி சிம்பிள் கருவ கலைச்சிடு’ என்று தமிழ் சினிமா வில்லன் மாதிரி சொல்லிவிட்டு புனித லூர்து அன்னை ஆலயத்தின் உச்சியில் இருக்கிற சிலுவை அதிர்ந்த மாதிரி எகத்தாளமாக சிரித்திருக்கிறார் Father Mr. ராஜரத்தினம். என்ன செய்வது Fatherரச் சொல்லி குத்தமில்ல. மந்தைகளைச் சொல்லணும். ‘Father ஸ்தோத்திரம்… Father ஸ்தோத்திரம்’னு நீயே ‘அப்பா’ ஸ்தானத்தைக் குடுத்துட்டு, அப்புறம் Motherஐ வச்சிக்கிறது தப்புன்னா… எந்த ரத்தினம் கேக்கும். இல்ல சேசு சபைதான் இதை காதிலே போட்டுக்குமா?! கேட்காது.

ஏனென்றால் அந்தப் புள்ளியில்தான் தூயவளனார் நிறுவன சாம்ராஜ்ஜியத்தின் ஒளிவட்டம் பாதுகாக்கப்படுகிறது.

ஓ… மந்தைகளே! அப்பத்தை ஏசுவின் சதையென்றும், ஒயினை ஏசுவின் ரத்தமென்னும் பாதிரிகள் உங்களுக்கு தந்துவிட்டு, ஆனால் அவர்களோ நீங்களெல்லாம் தாயாக மதிக்கின்ற கன்னியாஸ்திரிகள் சதையையும், ரத்தத்தையும், கற்பையுமல்லவா உறிஞ்சுகிறார்கள். ‘நம்ம சாமியார்’ என்று நீங்கள் இன்று மௌனம் சாதிக்கலாம். பிளாரன்ஸ் மேரி இடத்தில் நம்முடைய அக்கா, தங்கை இருந்திருந்தால்… என்ன செய்திருப்பீர்கள்?! மறு கன்னத்தைக் காட்டியிருப்பீர்களா?! சொல்லுங்கள்.

ஒரு துறவிக்கு மிதமிஞ்சி பூர்த்தி செய்யப்பட்ட மற்ற எல்லா சுகபோகங்களும் சேர்ந்துதான் பாலியல் என்கிற காமத்தைக் கோருகின்றன. துறவி என்று நம்பி சாந்தமாக நீங்கள் ஜெபிக்கும் போதெல்லாம் பாதிரியின் எண்ணம் விஸ்வாமித்திரன் ரூபத்தில் வந்து எள்ளி நகையாடுகிறது. துறவு என்கிற அந்த போலியான உண்ணாவிரத முறையிலேயே ‘பழச்சாரு’ என்கிற அந்த முடிவும் அடங்கியுள்ளதை நீங்கள் பார்க்க மறுப்பதன் விளைவுதான் ராஜரத்தினங்கள்.

குடும்பம் இருப்பவனுக்கு ஒரு சாப்பாடு. சத்திரத்தில் இருப்பவனுக்கு ‘பல’ சாப்பாடு. – இந்த இரண்டாவது வகையறாதானே பாதிரிகளும், சாமியார்களும். ஒரு மனிதனாக பிறந்தவனுக்கு பாலியல் தேவையென்பது ஒரு சாதாரண எதார்த்தத் தேவைதான். இதில் ஆச்சரியத்திற்கோ, அதிசயத்திற்கோ ஒன்றும் இடமில்லை. ஆனால் அதைமூடி மறைத்துக்கொண்டு, மக்களை ஏமாற்றி, மடமையில் ஆழ்த்தி, நம்பவைத்து கருவறுக்கின்ற காரியத்திற்கு ‘துறவு’ என்று ஒளிவட்டத்திற்குள் சல்லாபம் புரியும் இந்த கேடுகெட்ட கிரிமினல் கும்பலை, கும்மாளம் போடவிட்டு இன்னும் எத்தனை காலம் வேடிக்கைப் பார்ப்பீர்?!

இல்லை. இதற்கெல்லாம் எந்த சேசு சபை வந்து பதில் சொல்லப்போகிறது. 16வது அல்ல 100வது பெனடிக்ட் வந்தாலும் உங்களுக்கு பதில் கிடைக்கப்போவதில்லை. மாறாக கர்த்தர்மேல் பாரத்தைப் போடச் சொன்னார்கள். இருந்தே இருக்கிறது தவறாமல் எல்லாருக்கும் மறுகன்னம்.

இப்படியே தான் நாட்டின் ஒரு பெருங்கூட்டத்தை பக்தி என்கிற ஒரு கஞ்சா போதையில் வைத்திருக்கின்றன மதங்கள். ‘மதம் என்பது அபினி போன்றது’ என்று இந்த அவலத்தைத்தான் கார்ல் மார்க்ஸ் விளக்கினார்.

இனி கன்னியாஸ்திரிகளை கற்பழிக்க எங்கோ வெளியிலிருந்து சோத்து மூட்டை கட்டிக்கொண்டு ஒரு காமுகன் வரத்தேவையில்லை. அத்தகைய காமுகர்கள் அங்கிக்குள்ளேயே உலாவுகிறார்கள். சங்கராச்சாரி, பிரேமானந்தா, நித்தியானந்த வரிசையில் மற்றவர்களை தள்ளிவிட்டு நிற்கிறார்கள் பாதிரிகள். காமத்திற்கேது மத பேதங்கள்.

”இவர்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். தேவனே! இவர்களை மன்னியும்” என்று தன்னை சிலுவையில் அறைந்தவர்களை, தான் சாகும் தருவாயில் கூட, ஏசுவின் மன்னிக்கின்ற பெருந்தன்மையை குறிக்கின்ற புகழ்பெற்ற விவிலியத்தின் வசனம் இது. இதை அப்படியே ராஜரத்தினத்திற்குப் பொருந்தினால், அவர் ஒருமுறை அல்ல, நூறு முறை மன்னிக்கப்படுவார். இந்தப் பாவ மன்னிப்புத்தான் அடுத்தடுத்த பொறுக்கித்தனத்திற்கு அடியெடுத்துக் கொடுக்கிறது. எனவே பாவ மன்னிப்புகள் இருக்கும்வரை பாவத்திற்கு பஞ்சமில்லை. ஆனால் ‘கர்த்தர் ஆயிரம்முறை பாவமன்னிப்பு வழங்கினாலும், நான் விடப்போவதில்லை’ சொல்லுகிறார் பிளாரன்ஸ்மேரி. வாழ்த்துக்கள், அப்படியே செய்யக் கடவதாக…!

பாதிரிகளின் இந்த ஆபாசத்தையும், ஆணாதிக்கத்தையும் விரும்பாதவர்கள் ஒன்று தங்களின் கைகளில் கனக்கும் ‘புதிய, பழைய ஏற்பாடுகளை’ வீசியெறிய வேண்டும். அல்லது எல்லாம் கர்த்தருடைய கிருபை’ என்று சிலுவையைப் போட்டுக் கொண்டு மழுங்கிக் கிடக்க வேண்டும். ஒரு பாதிரியார் ‘ஒரு தேடப்படும் கிரிமினல் குற்றவாளி’ என்று ஆனப்பிறகும், ‘தினமும் போலீஸ் ஸ்டேசனில் காலையும், மாலையும் கையெழுத்திடவேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டபின்பும், நமக்கு ரோசம் வருவதில்லை. பதிலாக உடனிருந்த பெண்ணின்மீது பழி சுமத்த மட்டும் உங்களுக்கு என்ன யோக்கிதை இருக்க முடியும். ஆண்களாக பிறந்த ஒவ்வொருவரும் தலைகுனிய வேண்டிய விசயமில்லையா இது.

கருவை சுமந்த கன்னியாஸ்திரியின் சீருடையை உருவி எரியும் இந்த சேசு சபைக்கு, அதற்கு காரணமான ராஜரத்தினத்தின் அங்கியை கழட்ட, ஏன் துப்பில்லை? ஏனென்றால் அப்படி ஒன்று நடந்து விட்டால், அந்த சேசு சபையே அம்மணமாக நிற்க வேண்டி வரும் என்று அந்த சபைக்கே தெரியும். ‘இது மேல் சாதி சாமியார்களின் சதி’ என்று ராஜரத்தினம் சொல்வது உண்மையானால் அந்த சாமியார்களின் பெயர் பட்டியலை வெளியிட முடியுமா?! முடியாது. ஏனென்றால் எல்லா சாதி தில்லுமுல்லுகளும் சேர்ந்துதான் கூட்டாஞ்சோறு தின்னுகிறார்கள். மாட்டிக்கொண்ட பிறகு ‘நானில்லை, அவனில்லை’ என்று லாவணிப்பாடுகிறார்கள்.

திருடியதில் சமமான பங்கும், சரியான எடையும் இருக்கின்றவரை இவர்களுக்குள் பிரச்சனை வராது, என்பதுதான் திருடர்களின் பெருந்தன்மையின் எல்லை. எனவேதான் முறை தவறி திருடும் இவர்கள் முறையான பங்கை எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பில் மண்விழும்போதுதான் ஆளுக்காளு போட்டுக்கொடுப்பதும் அடியாள் சேர்ப்பதும் நடக்கிறது.

பாதிக்கப்பட்ட பிளாரன்ஸ் மேரி பக்கம் நிற்க ஒரே ஒரு சேசு சபை குருவுக்கும் ஆண்மை கிடையாது. மன்னிக்கவும்… யோக்கியதை கிடையாது.

முதலாளிகளால் ஓசோன் படலம் ஓட்டை

பாதிரிகளால் தூயவளனார் சாம்ராஜ்ஜிய குடையில்

சல்லடைகண் ஓட்டை

ஸ்தோத்திரம் ஆண்டவரே!

கர்த்தராகிய ஏசுகிருத்து ராஜரத்தினத்துடன்

இருப்பாராக…!

கா…ம…ன்

____________________________________________________________________

 

– சா.செல்வராசு, ம.க.இ.க மையக் கலைக்குழு

_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவர் நீரே ! | வினவு!…

  கருவை சுமந்த கன்னியாஸ்திரியின் சீருடையை உருவி எரியும் இந்த சேசு சபைக்கு, அதற்கு காரணமான ராஜரத்தினத்தின் அங்கியை கழட்ட, ஏன் துப்பில்லை?…

 2. கர்த்தராகிய ஏசுகிருத்து ராஜரத்தினத்துடன்

  இருப்பாராக…!

  கா…ம…ன்

  சுப்பர்
  மக்கள் திருந்த வேண்டும்.நடக்குமா?

 3. பரிசுத்தமானவற்றை நாய்களுக்கு கொடாதேயும் பன்றிகளின் முன் முத்துக்களை சிதறவிடாதேயும் ..ஆமென்..!

 4. தோழர் செல்வராசு தனக்கே உரிய நகைச்சுவையோடு சொல்லியிருந்தாலும் காரம் கொஞ்சமும் குறையவில்லை. இந்தக் கட்டுரை பாதிரிகளுக்கு மட்டமல்ல மதப் போர்வையில் திரியும் அனைத்து மதத் துறவிகளுக்கும்தான். பக்தர்கள் விழிப்படைந்தால் மட்டுமே இக்கயவர்களை கருவருக்கமுடியும். சிறப்பாக எழுதிய தோழர் செல்வராசுக்கு வாழ்த்துக்கள்.

 5. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
  பழித்தது ஒழித்து விடின்.

  இதனைத் தான் வள்ளுவர் அன்றே சொல்லிவிட்டு சென்றார். இன்னும் உலகம் திருந்தவில்லையே….

  ” 27 “‘பிறன் மனைவியுடன் உறவுகொள்ளும் பாவத்தைச் செய்யாதே’ என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

  28 ஆனால் நான் சொல்கிறேன். ஒரு பெண்ணைக் காமக் கண் கொண்டு நோக்கி, அவளுடன் உடலுறவு கொள்ள விரும்பினாலே, அவன் அவளுடன் விபச்சாரம் செய்தவனாகிறான்.

  29 உங்கள் வலது கண் நீங்கள் பாவம் செய்யக் காரணமானால், அதைப் பிடுங்கி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஓர் உறுப்பை இழப்பது நன்று.

  30 உங்கள் வலது கை உங்களைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஒரு பகுதியை இழப்பது நன்று. ” – மத்தேயு 5: 27 -30

  உண்மையில் விவிலியத்தைப் படித்தவர்கள் தானா இவர்கள் எல்லாம் என எனக்கே சந்தேகமாக இருக்கின்றது. …. திருத்துவ பள்ளிகளிலும் காசுக் கொடுத்து பாஸ் ஆகி வந்து இருப்பார்களோ இந்தக் கபோதிகள் ……………………… கர்த்தரே !!!

  • “வேளைக்கு மூணு வகை கறிய வறுத்துப்போட்டு, சாம்பல் மாறாத சிம்லா ஆப்பிளையும், ஊட்டி ஆரஞ்சையும் வயிறுமுட்ட திங்க வச்சு, பூசைக்கு பூசை ஒயின்ன ஊத்திவுட்டு, கரந்த பாலுல துளி தண்ணி கலக்காம சுரண்ட காய்ச்சி எடுத்து, அதுல பிஸ்தா பருப்பைக் கொட்டி மெதக்கவுட்டு, அதை இதமான சூட்டுல கழுத்து வரைக்கும் முங்க வச்சு, மினிஸ்டர் காட்டன்ல அங்கி தச்சி போட்டுவுட்டு, அதுக்கு நாடாவையும் கோத்துக்குடுத்து, இலவம்பஞ்சு மெத்தையும் போட்டுவுட்டு, படுக்கப்போற நேரம் பாத்து… நீ தனியாகத்தான் படுக்கணுமின்னா… எந்த மழுமட்டையாவது கேக்குமா?! கொஞ்சமாவது இந்த சேசு சபைக்கு ‘புத்தி வேண்டாமா?! இல்ல… சேசு சபையில இருக்கிற முக்கால்வாசி குருக்கள் அப்படியா வளர்ந்தவங்க?” so by just reading any books are scriptures or following any serious of acts five-time a day or performing a lavish yaghna are not going to make any human being a saint, because human body is made to perform physical pleasure so to control and suppress such pleasure thoughts from mind one have to lead a life away form food and other lavish things which induce the physical needs…that is the reason siddhars from Tamil Nadu lived a frugal life and fallowed a hermit life style and also they followed yoga to control their mind, but many recent day Gurus, Pastors, Imams live a lavish life style and they fall in to performing all the illegal acts…

 6. ராஜரத்தினத்தின் அக்கிரமங்களை விளாசித்தள்ளியவர், ப்ளாரன்ஸ் மேரியின் தவறுகளையும் கொஞ்சம் கோடிட்டிருந்தால் தராசு கொஞ்சம் நியாயமாக இருந்திருக்கும். ஏன் நீங்கள் ராஜரத்தினம் உங்களைக் கட்டாயப்படுத்தியபோது, மறுக்கவில்லை? அதற்கு ப்ளோரன்ஸ் மேரியின் பதில்-”எங்கே என்னோடு இனி பேசாமல் இருந்துவிடுவாரோ என்று சம்மதித்தேன்”. இந்த பேட்டிகளை தினத்தந்தி,தினகரனில் காணலாம். பெண் என்பதால் இரக்கம் வருவது சரி. ஆனால் தவறுகளில்…? முதல் முறை நடக்கும் போது தான் அது கற்பழிப்பு. அதற்கு பின் நடந்ததும், அவர் சொல்வதிலும் அவர்(ப்ளோரன்ஸ்) அவர் பக்கமும் பாதி குற்றம் உள்ளது என்பதையே காட்டுகிறது. அதுபோல அவர் சார்பாக காடுவெட்டி குருவை சந்தித்ததாக சில செய்திகள் வந்தன. அதுபோல திருச்சியில் பணியில் இருந்த ஒரு வன்னிய உயர் போலிஸ் அதிகாரியும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டினார் என்பதை திருச்சி மக்கள் அறிவார்கள். இரண்டு பக்கமும் தவறுள்ள ஒரு குற்றத்திற்கு சாதிச்சாயம் பூசியது யார்? இன்னமும் திருச்சியில் ஒரே கல்லறைத்தோட்டத்தில் தலித்துக்களுக்கும், மற்றவர்களுக்கும் வேறு வேறு இடங்கள் என்பதை ம.க.இ.க. அறியுமா? சாமியார்களுக்குள்ளும்,கன்னியாஸ்திரிகளுக்குள்ளும் சாதி வேறுபாடுகள் அதிகம் உண்டு என்பதை அறிவீர்களா? நெல்லை,பாளையங்ககோட்டைப் பகுதியில் விசாரியுங்கள். முதலில் திருச்சியில் அவர்களிடமுள்ள சாதி பாகுபாடுகளுக்கு எதிராக ம.க.இ.க. சும்மா பேருக்காகவேணும் போராட்டம் ஏதாவது நடத்தியிருந்தால், இந்தப் போராட்டத்திற்கு அவர்கள் ஆதரவு கொஞ்சமாவது கிடைத்திருக்கலாம். மேற்சொன்ன காரணங்களே இதை சாதி ரீதியாக அணுகவைத்துவிட்டது. அதுதான் உண்மை. ஒரு கட்டுரையோ அல்லது செய்தியோ வெளியிடும் முன் கொஞ்சம் ஹோம் ஒர்க் செய்யவேண்டும். கதை எழுதுவது போல் நினைத்தவற்றையெல்லாம் எழுதக் கூடாது. ஏசு சபை போல ஃபாதர்களுக்கு பல சபைகள் உண்டு. அது போல கன்னியாஸ்திரிகளுக்கும் பல சபைகள் உண்டு. ஒன்றின் நடவடிக்கைகளில் மற்றவர்கள் தலையிடமாட்டார்கள். ஒன்று பிஷப்பிடம் புகார் அளிக்கவேண்டும் இல்லை அவர்கள் தலைமை திருச்சபைக்கு புகார் அனுப்பவேண்டும். அது போல் ஏசு சபை என்பது கல்விப்பணிக்கானது. அவர்கள் பங்கு என்று சொல்லப்படுகின்ற சிவில் நடவடிக்கைகளில் தலையிடமாட்டார்கள். கட்டுரை என்பது மேம்போக்காக இருப்பதை தவிர்க்கவும். அது எழுத்தாளனின் மீதான நம்பகத்தன்மையை கேள்விகுறியாக்கும். விவாதமும்,குற்றச்சாட்டுகளும் அறிவுப்பூர்வமாக இருக்கவேண்டும். மேற்சொன்ன தகவலைக்கூட நான் கேள்விப்பட்டதை உறுதிப்படுத்தியபின்பே பதிவிடுகிறேன். மேலும் ஐந்துவருடங்கள் அவர்கள் நடத்தும் கல்லூரியில் படித்த அனுபவமும் உண்டு. இறுதியாக- மதம் என்பது அபின் போன்றது, அதை இங்கே ஒவ்வொருசாதிக்கும் வெவ்வேறு பாத்திரத்தில் ஊற்றிவைத்திருக்கிறார்கள். அந்தப் போதையிலும் தாங்கள் எந்தப் பாத்திரத்தில் பருகுகிறோம் என்பதை மக்கள் அறிந்தே உள்ளார்கள். அதனால் தான் இதுபோன்ற பிரச்சினைகளில் தலையிடும்போதெல்லாம் அவர்கள் உண்மையான பிரச்சினையை மறந்து அதற்கு ஆதரவளிக்கிறார்கள்.

  • நண்பரே,

   பிரச்சினையின் மய்யமாக இருப்பது ஒழுக்கசீலராக தம்மைக் காட்டிக் கொள்ளும் ஒரு பாதிரியின் ஒழுக்கங்கெட்டத்தனமும் – அதைப் பின் நின்று பாதுகாக்கும் கிருத்துவ அமைப்பின் தடித்தனமுமே. நீங்கள் குறிப்பிட்ட சாதிப் பிரச்சினை நிச்சயமாக கிருத்துவ சபைகளுக்குள் உள்ளது. அதை கட்டுரையாளர் நியாயப்படுத்தவில்லை.

   ஒன்றைப் பற்றிப் பேசும் போது, அதன் மய்யத்தை விட்டு விலகி பிறிதொன்றைப் பற்றிப் பேசுவது முந்தயதைக் காப்பதற்கான உள்நோக்கம் கொண்டது என்று கருதுகிறேன். அவ்வகையில் உங்கள் மறுமொழியில் நீங்கள் அறிந்தோ அறியாமலோ அந்த உள்நோக்கத்தைக் கொண்டு எழுதியுள்ளீர்கள்.

   நீங்கள் மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ள சாதி அம்சம் கூட, நம்பிக்கையாளர்கள் மத்தியில் ஒரு பிரச்சினையாக இல்லாமல் போனதற்குக் காரணம் அவர்களின் கண்மூடித்தனமான நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் ஆதாரம் அவர்கள் பீடத்தின் மேல் கொண்டிருக்கும் மூடத்தனமான பக்தி. இதை உடைக்காமல் அதை உடைக்க முடியாது என்றே கருதுகிறேன்.

   ஃப்ளாரன்ஸ் மேரி நீங்கள் குறிப்பிட்டது போல சாதித் தலைவர்களைச் சந்தித்தார் என்பதை ஒரு வாதத்துக்காக உண்மை என்று வைத்துக் கொண்டாலும், அதில் பெரிதாக ஒரு தவறை நான் காணவில்லை. நீங்கள் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளான அவரின் கோணத்திலிருந்து இதைக் காண வேண்டும். ஒரு வலுவான அமைப்புடன் தன்னந்தனியே மோதும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவர், தனக்குக் கிடைக்கும் ஆதரவு எங்கேயிருந்து வந்தாலும் அதைப் பற்றிக் கொள்ள முனைவது இயற்கையானது தானே?

   நிர்பந்திக்கப்பட்டு திணிக்கப்படும் ஒழுக்கத்தின் யோக்கியதையை நாம் கேள்விக்குள்ளாக்கும் போது தான், அந்த ஒழுக்கத்தின் மேண்மையில் மயங்கிக் கிடக்கும் பற்றாளர்களுக்கு சரியான தெளிவை உண்டாக்க முடியும் – அந்த அம்சத்தில் கட்டுரை சரியான விதத்தில் அமைந்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.

   இத்தனை நாள் ஒப்புக் கொண்டு இப்போது ஏன் எதிர்க்க வேண்டும் என்று கேட்கிறீர்கள் – நான் அப்படி ஏன் எதிக்கக் கூடாது என்று கேட்கிறேன். அவர் இத்தனை நாள் அமைதியாக இருந்தார் என்பதற்காக எப்போதுமே அமைதியாக இருக்க வேண்டும் என்கிறீர்களா?

   எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றிலிருந்து கத்தோலிக்கக் கனியாஸ்திரியாக சென்ற ஒரு பெண்ணை அக்குடும்பத்தினர் திரும்ப அழைத்து வந்து திருமணம் முடிக்க முயற்சித்த போது, திருச்சபை அப்பெண்ணிற்கு அத்தனை காலமாய் படிப்புக்கும் பிற செலவுகளுக்கும் ஆன பணத்தைக் கறாராக வசூலித்த பின்னரே அனுப்பியது. அப்பெரும் தொகையை புரட்ட அக்குடும்பம் பட்ட பாட்டை நேரிலேயே கண்டிருக்கிறேன். முழுவதும் கிருத்துவக் குடும்பங்கள் இருக்கும் ஒரு கிராமத்தில் திருச்சபையைப் பகைத்துக் கொண்டு காலம் தள்ளவும் முடியாது.

   ____________________________________________

   கட்டுரையாளரின் நக்கல் சூப்பர்!

   வாழ்த்துக்கள்!

   • I do not agree with our criticism and evaluation about the whole Jesuits of Tamil Nadu. today, you talk about the Christians, my questions is who you are to talk about us. Are you one among us? we know to take decision about our own problems. when there was system of education in the hands of only rich people and high caste people, it is our catholic church which opened our eyes to have better education. when we were suffering as Dalits in the Tamil society, it is our catholic church which gave us reorganization. we received a caste identity not from our catholic church but form the Tamil society which blindly obeyed the Braminical system. I just like to ask you why your are judging us. who are you to impose your concept of justice to us? if a problem is in one community, it is the community which should solve, not the third person. you people always have a negative attitudes towards the religion but you forget the enormous service which the catholic church is doing until today.

    • நாங்க உங்களுக்கு கல்வி தந்தோம், தமிழ் சமூகத்தில் சாதிரீதியாக மறுக்கப்பட்ட கல்வியை தந்தோம். அதையெல்லாம் மறந்து விட்டு ஒரே ஒரு பாதிரியாரு அதுவும் வெளிப் பொண்ண இல்ல, உள்ளார வந்துவிட்ட கன்னியாஸ்திரிய கையப் பிடிச்சு இழுத்தா அது தப்பா. கொஞ்சமாவது நன்றி உணர்ச்சி வேண்டாம். ஹாய் பாதிரி பக்கவா பேசிட்டீங்க போல‌

 7. சாதி, மதம், பாவம், புண்ணியம், முன்ஜென்மம், பின்ஜென்மம் இது போன்ற சொல்லை வைத்து நாடகம் ஆடும் கயவர்கள் ஆட்டு மந்தைகள் போல அதிகமாக பெருகிவிட்டனர். இதை மக்கள் உணர வேண்டும்!

  ஆ..ம்..ஏ..ன்…..!

 8. ஒரு வேளை கட்டுரை மேம்போக்காக இருக்கலாம் ஆனால் காதொலிக் கிறிஸ்தவர்களின் குருத்துவம் எனும் திருவருள்சாதனதிக்கு முரணாக உள்ளது பாதரின் செயல்.கிறிஸ்தவ நம்பிக்கைகளை புகுத்தும் இவர்கள் செயல் எவாறு மறுபடிகிறது என்று இன்னும் விரிவாக அலசி இருக்க வேண்டும்.அப்படி இருந்து இருந்தால் ஆடு மந்தைகளாகவும் பூம் பூம் மாடுகளாகவும் இருக்கும் காதொலிக் கிறிஸ்தவர்கள் கேள்வி கேட்கலாம்.காதொலிக் கிறிஸ்தவர்கள் வினவு படிப்பது என்பது எனது மூட நம்பிக்கையாக கூட இருக்கலாம்.
  குருதுவம் எனும் துறவுக்கு இவர்கள் எடுத்துக்காட்டுவது இயேசுவின் இறுதி இராஉணவை.ஒவொரு திருபலி கொண்டடமும் இயேசுவின் கல்வாரி பலியின் தொடர்ச்சி என்றும் அதை நிறைவேற்றும் குருவனவார் இயேசுவின் மறு உருவம் என்றும் காலம் காலமாக காதொலிக் கிறிஸ்தவர்களிடம் புகுத்தபடும் நம்பிக்கை.இன்று பல கிறிஸ்தவர்களை வாய் மூட வைதிருப்பது இந்த நம்பிக்கை தான்.
  கிறிஸ்தவர்களிடம் இந்த நம்பிகஎய் புகுத்தும் இவர்களின் செயல் அனைத்து காமகோடிகளை விஞ்சும் செயலாக உள்ளது.அரசியல் பகுப்பாய்வு என்ற தலைப்பில் வகுபெடுத்த பாதரியார் ஒருவர் தனது குருத்துவத்தை பிராமண பூசரிகளோடு ஒபிட்டு கூறினார்.தாங்கள் இறைவனுக்கு தொண்டு செய்பவர்கள் என்று பீத்தி கொண்டார்.நீங்கள் கூறும் பெரிய வியாழன் குருதுவ விளக்கமும் இப்பொது கூறும் விளக்கமும் முரண் படுகிறதே என்று கேட்ட என்னை வெளியேற்றிய பின்பு கூட்டம் தொடர்ந்தது.
  இதன் மூலம் தெளிவாவது என்ன என்றால் ஹிந்துத்துவ சாதி அடுக்கு முறைகளை போற்றி பாதுகாப்பது கிறிஸ்தவம்.பூசாரிகளின் இடத்தை குருக்கள் பிடித்து விட்டார்கள்.சாதி பெயாரால் ஒளிந்து கொள்ள முயற்சிக்கும் இவர்களை நடுதெருவில் நிறுத்தி………..
  என்னை பொறுத்த வரை கட்டுரையாளர் இன்னும் கடுமை காட்டி இவர்களை முழுமையாக அம்மணபடுத்தி இருக்க வேண்டும்.

 9. ப்ளாரன்ஸ்மேரி ஒன்றும் தீப்பெட்டிதொழிலில் தீக்குச்சி அடுக்கவோ,பின்னலாடை யில் பஞ்சு சுமக்கவோ, பீடிசுற்றவோ, சித்தாள் வேலையோ இல்லை தார் ரோடுபோடும் வேலைகளைச்செய்யும் ஏழை அப்பாவிப்பெண் அல்ல. அவர்கள் நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். நாமெல்லாம் அறிவென்றால் ஆங்கிலம் என்று நினைக்கிறோமே அதிலும் நன்றாகத் தேர்ச்சி பெற்றவர்கள். எப்படி பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. அதானால் தான் தவறுக்கு அவரும் உடன்பட்டிருக்கிறார் என்ற சந்தேகம் வருகிறது. மேலும் எனது கருத்துக்கு பதில் அளித்தவர்,அவர் சாதித்தலைவர்களை சந்தித்ததை நியாயப்படுத்தினால், நான் சொன்னகருத்தும் நியாயமானதே. ஒரு படிப்பறிவில்லா அப்பாவிப்பெண்களுக்கும், இவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. பெண்கள் என்பதால் இவர்கள் எளிதில் ஏமாந்துபோவார்கள் என்பது உண்மை தான். ஆனால் எத்தனையோ பெண்கள் இன்று சமூக அவலங்களையும் தங்களுக்கு நேரும் கொடுமைகளையும் துணிந்து எதிர்கொள்கிறார்கள். அவர் அமைதியாக இருந்தார் என்பதும் நம்புவதற்கில்லை. இருதரப்பும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றத் தகுதியுடையவர்கள். மேலும் எனது கருத்தில் நான் சொல்லவந்தது- இந்தப் பிரச்சினை நீர்த்துப்போகக் காரணமே சாதி..சாதி..சாதி என்பதுதான். இதில் ராஜரத்தினத்தின் செயல்களை கொஞ்சம் கூட நியாயப் படுத்தி நான் எழுதவில்லையே. இந்தியாவில் உள்ள எல்லா மதங்களிலும் உள்ள மிகப்பெரிய பிரச்சினை இதுதான். சாமியார்களின் பிரச்சினை பெரிதாவது இல்லை கண்டிக்கப்பட்டு மறக்கப்படுவது- அவர் எந்த சாதியைச்சேர்ந்தவர் என்பதைப் பொறுத்தது. உண்மையா இல்லையா..? இதில் கற்பழிப்புச்சாமியார்களிலிருந்து கொலைகாரச்சாமியார்கள் வரை இதுதானே உண்மை. சாத்திக்குள் சாதி பார்த்து, மதங்களினால் மதம் பிடித்து நாம் மனிதர்கள் என்பதையே மறந்துபோனோம்.

 10. ஏசு சபை என்பது கல்விப்பணிக்கானது. அவர்கள் பங்கு என்று சொல்லப்படுகின்ற சிவில் நடவடிக்கைகளில் தலையிடமாட்டார்கள். கட்டுரை என்பது மேம்போக்காக இருப்பதை தவிர்க்கவும்.இன்னமும் திருச்சியில் ஒரே கல்லறைத்தோட்டத்தில் தலித்துக்களுக்கும், மற்றவர்களுக்கும் வேறு வேறு இடங்கள் என்பதை ம.க.இ.க. அறியுமா? THESE ARE ALL NEW TO US.

 11. கட்டுரையாளரின் நக்கலும் நையாண்டி விதமும் நன்றாகவே இருந்தாலும், எல்லாவற்றையும் பொதுப்படையாக குறை சொல்வது நியாயாமல்ல… பாதிரியார்கள் எல்லோரும் ஒழுக்க சீலர்கள் என்று யாரும் சொல்லவில்லை… “சேவைக்காக” குருவாகும் பலரில் “தேவைக்காக” குருவாகும் சிலரும் உண்டு… ஆனால், அவர்களை முன்னிறுத்தி மொத்த கிறிஸ்தவ / சேசு சபை அமைப்புகளையும் இவ்வாறு பழி போடுவது தவறு…

  மனித சமுதாயத்தில் எங்கோ யாரோ ஒருவர் இவ்வாறு தரங்கெட்டு தவறு செய்தால், அதே மனித சமுதாயத்தை சார்ந்த தனது தாய் தந்தையும் தவறானவர்கள் என்று கட்டுரையாளர் சொல்வார் போலும்…

  யார் மனதும் புண்பட இதை சொல்லவில்லை… நியாயமாக இருப்பவர்களின் மனத்தை உங்களின் கட்டுரை புண்படுத்தும் அளவுக்கு உள்ளது என்பதும், அதனை தவிர்க்க வேண்டும் என்பதும் மட்டுமே என் கருத்து…

 12. பதிமூன்று பதினான்கு ஆண்டுகள் இறையியல் படித்த பாதிரியார் சாதி போர்வையில் ஒளிய நினைப்பது அவர்கள் படித்த இறையியல் கல்வியை கேள்விகுறி ஆகுகின்றது.கிறிஸ்தவத்தில் சாதி வேற்றுமை உள்ளது மறுபதற்கு இல்லை.காதொலிக் கிறிஸ்தவ படி நிலைகளை பார்த்தால் குருவானவர் முதன்மேயன்வர்.திருச்சபையின் சட்டதிட்டங்கள் அனைத்தும் அமல்படுத்துவதற்கு அதிகாரம் படைதவர்.காதொலிக் சபையில் பொதுநிலையினர் என்று அழைக்கப்படும் சபை மக்கள் டம்மி பீசுகள்.தங்களை கேள்வி கேட்கும் மக்களை திருச்சபைஇலிருந்து தள்ளி வைக்கும் வானளாவிய அதிகாரம் படைத்தவர்கள்.இவர்கள் அதிகாரம் சாதியால் குறைந்து விடுவது இல்லை.
  திருச்சபைசட்டதிட்டங்கள் அமல்படுத்துவது என்று பார்த்தால் ஒரு ஒரு கன்யாஸ்த்ரீகும் ஒரு பாதிரியாருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசங்கள் உண்டு.காதொலிக் சபையில் ஒருகன்யாஸ்த்ரீயின் உயர் படிப்பு,வேலை பயிற்சி அனைத்தும் பாதிரியார்களை சார்ந்து இருக்கும்.இதே கண்ணோட்டத்தில் பார்தோம் என்றால் ஆரம்ப காலத்தில் வானளாவிய அதிகாரம் படைத்த இயேசு சபை குரு ஒரு கன்யாஸ்த்ரீயை மிரட்டி பணிய வைத்தார் என்பதில் ஆச்ரிய படுவதற்கு ஒன்றும் இல்லை.
  ராஜரெத்னம் எனும் இயேசு சபை குரு சாதரண ஒரு தலித் என்ற பார்வையில் பார்க்க வேண்டாம்.அவருக்கு பக்க பலமாக ரோம் சம்ரஜிய்மே உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.

 13. அதோ, இந்துமதத்தின் சாதிவெறியர்களின் கண்ணுக்கு முன் கூட தோன்றக்கூடாது என்று குப்பனுக்கு தீர்ப்பு வழங்கியிருந்தனர். பிரம்மனின் நாக்கில் பிறந்த பார்ப்பானின் மனுதர்ம ஆட்சியில் தனது தாய்தந்தையருக்கு முறையாக பிறக்கவேண்டிய இடத்தில் பிறந்த குப்பன் அடிமை சேவகம் பண்ணிக்கொண்டிருந்தான். இந்த உலகத்தில் எல்லாம் வல்ல பரமபிதாவிற்கு முன் எல்லோரும் சமம் என்று பிரச்சாரம் செய்துகொண்டு வந்த ஏசு சபை குப்பனுக்கும், சுப்பனுக்கும் கல்வி மருத்துவம் தந்து மதம் மாறக்கூவியது. தங்களையும் மனிதர்களாக மதிக்கிறார்களே என்று நம்பிச்சென்ற குப்பன் ஒரு ராஜரத்தினமாகவோ, தேவசகாயமாகவோ… பிழைக்க வழியின்றியும், சுயமரியாதைக்காவும் இந்து மதத்தைவிட்டு ஓடிய குப்பன்கள் பலர். தங்கள் குடும்பத்தில் மற்றவர்களை நல்ல நிலைக்குக்கொண்டுவர தம்குடும்பத்தின் தலைப்பிள்ளை ஏசு சேவகம் செய்ய தத்தம் செய்யப்பட்டார். தனது குடும்ப வறுமையை போக்க நல்ல நிலைக்குக் கொண்டுவர பல ராஜரத்தினங்களும், தேவசகாயங்களும் தோன்றினர். ஆனால் அவர்கள் தங்கள் குடும்ப வாழ்வை இழக்கவேண்டிய கட்டாயம் என்ற சிலுவையையும் சுமந்தனர். பாவம் ராஜரத்தினமும், மேரிகளும் இன்று சிலுவையில். ஏசு சபை மேரியின் இரத்தத்தில் ராஜரத்தினத்தின் பாவத்தைக் கழுவ நினைக்கிறது. இருவருக்கும் சமமான தண்டனை கொடு. அல்லது அதைக்கொடுக்க ஏசு சபைக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. ஏசு சபையே உனது புழுங்கிப்போன வெள்ளை அங்கியைக் கழற்று. துறவு வாழ்க்கையை ஒழி. இனிமேல் ராஜரத்தினமும் மேரியும் உருவாக மாட்டார்கள். இந்து மதத்திற்கு பயந்து கிறித்துவம் வந்தது பாம்புக்கு பயந்து புற்றைத்தேடி வந்த தவளையின் கதையாக ஆனது.

 14. the nuns are not raped (in any religion) they just corrupted with their own interest.
  If they were raped they would fight from the next day. But they didn’t.

  All the — sanyas and priests know the technique to cheat the women in the name of GOD.

  My humble opinion. We all just fight against “The Hindu” religion. We don’t have BALLS to criticise on other religions openly.

  Could U?

 15. வினவு நிச்சயம் ஒர் போலி மதசார்பற்றவர் இல்லை (pseudo secularist)(கருணா/லல்லு/ஜெயா/மாயா/சானியா) போல் இல்லை வால் பிடிக்கும் கம்யூனிஸ்ட்டும் இல்லை. தவறை சுட்டிக்காட்டும் வினவுக்கு வாழ்த்துகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க