Monday, August 15, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க கவுன்சிலருக்கு மல்லையா பீரு! மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு!

கவுன்சிலருக்கு மல்லையா பீரு! மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு!

-

குந்திக்கினு கொறிக்கிறவன்
ஓடிக்கினு பேசுறவன்
அட்ச்சிகினு தூங்குறவன்
அம்சமா லபக்குறவன்
நெட்டுல நோண்டுறவன்
வினவுல பொருமுறவன்
அல்லா மாம்சும்
மறக்காம ஓட்டு போடுங்கப்பு!

வரப்போறது
உங்காட்சி, எங்காட்சி இல்லடே!
உள்ளாட்சி தேர்தல்!

சரிலே,
அது என்னடே
ஆட்சியில உள்ளாட்சி, வெளியாட்சி
ஓபனாட்சி, குளோசுடு ஆட்சி…ன்னு
பிரிச்சு விளையாடுதீக!

கட்டிங் மேட்டருல
வட்டம்னா என்ன,
மாவட்டம்னா என்ன,
கோட்டையின்னா என்ன
இல்ல செங்கோட்டையின்னாதான் என்னடே?

உறைய மாத்தி
கலரை மாத்தி
டேஸ்ட மாத்தி
எப்புடி அட்ச்சாலும்
சாராயம் சாராயம்தாம்லே,
கூமுட்டையில ஏதுடா குல்சா முட்டை!

ஏலே, மக்கா!
வைட்டமின் ‘ப’
ஆயிரத்துல ஆரம்பிச்சா கவுன்சிலரு
‘எல்லுல’ போனா எம்.எல்.ஏ
‘சி’யிலு முடிஞ்சா எம்.பி
ஹவாலாவுல டீலீங்னா லோக்கல் மினிஸ்டர்
சுவிஸ்ஸுக்கு கை மாத்துனா சென்ட்ரல் மினிஸ்டர்
உலகவங்கியோட டைரக்டா பேசுனா பிரைம் மினிஸ்டர்
கூட்டிப் பெருக்கிப் பாத்தா
சில்லறைங்களுக்கு உள்ளாட்சி
நோட்டுக்கு மத்த ஆட்சி!
கவுன்சிலருக்கு மல்லையா பீரு!
மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு!

___________________

ரிங்கப்பு, மேட்டருக்கு வா!
நிர்மலா பெரியசாமி எபக்டுல சொன்னா,
” தமிழகத்தில் தி.மு.க தனித்துப் போட்டி
கலைஞர் அறிவிப்பு, உடன்பிறப்புகள் உற்சாகம்”

ஏலேய் வீணாப்போன உடன்பிறப்புகளா!
எங்கனயிருந்து நைனா ஜாலி?
இதென்ன மாயாஜால் மங்காத்தா ஷோவா?
இல்ல மாகாபலிபுரம் மிட்நைட் டான்சா?

தில்லிக் குளுருல கனிமொழிக்கு அப்பீட்டு
சப்பாத்தி துன்னு ராசாவுக்கு சீதபேதி ரிப்பீட்டு
சேலத்து சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம்
ஏட்டையா கஸ்டடியில,
விழுப்புரத்து பொன்முடி சப் இன்ஸ்பெக்ட்டரு பாக்கட்டுல
கே.கே.எஸ்.எஸ்.ஆர் ரிமாண்டுக்குன்னு
டுடேயா, டுமாரோவான்னு வெயிட்டிங்!
பொங்கலூர் பழனிச்சாமி RAC யில புக்கிங்!
பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி ஆட்டமெல்லாம் குளோசாகி
பல்லி ஊறும் பாளைச்சிறையில் குடிமுழுக
அஞ்சா நெஞ்சன் அஞ்சி அஞ்சி எஸ்ஸாக
எங்கனயிருந்துடே உற்சாகம்?

கட்சியில ஒரு கோடிப்பேருங்குறான்
ஊருக்கொரு சிங்கம், தளபதி, நாட்டாமைங்குறான்
ஆனா அம்மா அடிச்ச அடியில
ஜட்டியக் காணோம், ஜாக்கியக் காணோம்னு ஓடுறான்
பொண்டாட்டி புள்ளகளை பாத்து அழுவுறான்
களி தின்னு விக்கலுல நெளியுறான்
மாஜிஸ்ரேட்டு முன்னாடி கதறுறான்
மீடியாவக் கண்டா ஒளியுறான்
மீறிக்கேட்டா புலம்புறான்

இத விடுடா,
அம்மா அரஸ்ட்டுல அண்டம் கிடுகிடுங்க
ரப்பர் ஸ்டாம்ப் பிரதிபா பட்டீல் பாட்டியண்ட
காப்பாத்து, காப்பாத்துன்னு முறையிடுறான்.
வீராதி வீரன்னு ரீல்விட்டுகிணு
கைப்புள்ளயாட்டம் ராஷ்டிரபதி பவனுல
புகார் கொடுக்குறவன
இன்னுமா இந்த ஊர் உலகம் நம்புது!

ஆனது ஆச்சு, ஆட்சியும் போச்சு
வாரிசு சான்சும் ஜஸ்ட் மிஸ்ஸிங்ன்னு
தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின்
ஊரு ஊரா புண்ணிய ஷேத்திரம் போறமேரி
வேலூர், கடலூர், திருச்சி, மதுரை, பாளைன்னு
உடன்பிறப்பு மேஸ்திரிகளை ஜெயில்ல பாத்தாரு,
ஆறுதலை ஏதோ கொஞ்சம் கொடுத்தாரு
விட்டா சேலம் சிவராஜ வைத்தியர் கணக்கா
ஓரே நாளுல மூணு ஜெயிலுக்கு போனாலும் தீராதுன்னு
போங்கடா போக்கத்தவனுகளான்னு
பாடி செக்கப்புக்கு இலண்டனுக்கு பறந்தாரு

இப்ப வெயிட்டான பாடியோட
உள்ளாட்சி தேர்தலுல பேசுதாறு
“கட்சியப் பாத்து போடாதீங்க,
ஆளப்பாத்து போடுங்கன்னு” புலம்புராறு!
அடுத்து யார் அரஸ்ட், யார் ரிமாண்டு,
எந்த ஸ்டேசன், எந்த ஏட்டுன்னு
இன்னும் எம்புட்டு நாளு அலையறது!

_______________________

னிமொழியை காங்கிரசு கண்டுக்கிலைனு
காங்கிரசை கலைஞர் கண்டுக்கல
ஆ வூன்னா காங்கிரசு தனித்துப் போட்டியினு
மைக் மாமா இளங்கோவன் கானா பாட்டு பாடி
கட்சிய கொன்னுட்டான்னு
கதர்க்காரனுவக துக்கப் படுறானுவ

சத்தியமூர்த்தி பவனுல
வேட்டியக் கிழிச்சது போக
இருக்குற துணிய வச்சு
கோமணம் கட்டுற பயலுவ
இப்போ உள்ளாட்சித் தேர்தலுல
தனித்துப் போட்டின்னு சொல்லிகிட்டு
அதுக்கு 12 வேட்டி கோஷ்டி தலங்கள போட்டு
கமிட்டி அமைச்சுருக்கானுக!
இன்னா தெகிரியம்!
டெபாசிட்டே தேறாத
தொப்பைத் தலையனுகளுக்கு
தெனாவட்ட பாத்தியாடே?

_____________________________

“சரக்கடிச்சுட்டு சட்டமன்றம் வாறான்னு”
அம்மா எகிற
“நீதான் கூட இருந்து ஊத்திக் கொடுத்தியா”ன்னு கேப்டன் திமிற
அது முந்தா நேத்து காமடி
“ஏதோ சீட்ட பாத்துப் போட்டுக்குடும்மா”ன்னு
போயஸ் தோட்டுத்துல காத்திருந்து
ஜாக்பாட்டு அடிச்சாரு நம்ம காப்டன்
இது நேத்து காமடி

அது கேப்டனுக்கு பம்பர் பிரைசுன்னா
அம்மாவுக்கு ராப்பிச்சைக்கு கொட்டுற சோறுதான்
பெறவு பிச்சைக்காரன் பிரியாணிக்கு அடிபோட
அம்மா பீச்சாங்கையால அடிச்சு விரட்ட

ஊர்மேய்ஞ்சு உடம்பு வளர்த்த
ஜல்லிக்கட்டு காளை கணக்கா
நம்ம காப்டன்  ஓடுறாரு, ஓடுறாரு,
நான்ஸ்டாப் ரன்னிங்குதான்.
பார்சிலானோவுல
காளைச்சண்டையை முடிச்சுக்கிட்டாலும்
நம்ம கேப்டன் காளை
மப்போட மிரண்டு புறண்டு ஓடுறதை நிறுத்துமாலே?

_______________________________

ப்பாலிக்கா நம்ம கேப்டனுக்கு
சிவப்பு வாளியில
காமரேடுங்க தண்ணி காட்டுனாங்களாம்!
அவுக கதையைக் கேட்டீகன்னா
அழுவுற புள்ளயும் வியுந்து வியுந்து சியிக்கும்!

காவிக்காரனை எதிர்க்கணும்னா
கதர்க்காரனோட கூட்டு!
கருப்பு சிவப்பு ஊழலை ஓய்க்கணும்னா
போயஸ்தோட்டுத்துல எச்சலை விருந்து
அம்மா அதிகாரத்தை வீய்த்தணும்னா
கோபலாபுரத்துல ஆறிப்போன டீ!

பதிவுலகுல வட போச்சேன்னு
மொக்கைங்க பேசுறமேரி
நம்ம காம்ரேடுங்களும் அம்மாகிட்ட
படாதபாடு பட்டாச்சு!
அப்பாவாச்சும் புத்தி வந்துச்சாடே?

பார் கேப்டன் ஒரு காலத்துல
சிவப்பு மல்லி படத்துல,
சிவப்பு சொக்கா போட்டுகினு,
சிவப்பு கண்ண உருட்டி உருட்டி
சிவப்பு டயலாக் உட்டவராச்சேன்னு
டாஸ் கேப்பிடல் படிச்ச நம்ம
மார்க்சிஸ்ட் மாமாக்கமாரு
வந்தவரைக்கும் ஆதாயம்ணு
கூட்டணியாம்!

இதுல கேப்டன்
கண்டிசனா தா.பாண்டியன் மாமாவும்
வரணும்னு உத்தரவு போட
அதுக்கென்ன, செஞ்சுட்டாப் போச்சுன்னு
காம்ரேடுங்க ஒத்துக்கிணாங்களாம்!
பட்சே
அம்மையிண்ட முந்தானையை விட்டு
ஒருபோதும் இறங்காம் பாடில்லான்னு
அச்சன் தா.பா பேக் சைடு பெவிகால் தடவி
அவிடே அரை சீட்டு, கால் சீட்டு கிடைச்சாலும் மதின்னு
வெல் செட்டில்டாம்!
ஏலேய் ஆஃபாயில் அபிஷ்டுங்களா
சீக்கிரம் புரட்சி வர்ரது மாதிரி தெரியிதுடே!

சரிடே
புல்சே புண்ணாக்காட்டம்
ரொம்ப சிரிக்காதலே!

நெக்ஸ்ட் அயிட்டம்
பெரியார் சொன்ன ‘கண்ணீர்த்துளி’ சோகம்லே!

___________________________

“யாருக்காக, இது யாருக்காக,
இந்த மாளிகை வசந்த மாளிகை”ன்னு
சால்வை போட்ட சிவாஜி கெட்டப்புல
நம்ம வைகோ அண்ணே வாராறுலே!
எங்கனயும் சேர முடியாது,
எவிடயும் அடைய முடியாது,
இதுதாம்லே ரியாலிட்டி.
ஆனா அதைக்கூட கொஞ்சம்
ரோசமா நம்ம அண்ணன்
தனிச்சுப் போட்டின்னு
அடைகாக்குற பொந்துக் கோழி மேரி
பினாத்தும் போது
சிரிக்கவும் முடியல,
அழவும் முடியல,
உனக்கு எப்புடிலே?

___________________

ல்லாக் கட்சிக்காரனும் அத்துவிட்ட
இந்த காவிக் கட்சிப் பயலுவ
கோயம்புத்தூர் கவுண்டர் கட்சிக்காரனோட
கூட்டாம்டே!
காவிப்பயலுவ பாய கொல்லணும்பான்
கவுண்டர் பயலுவ சக்கிலியரை ஒழிக்கணும்பான்
இரண்டு பயலுவகளையும்
வளத்து விட்டது அய்யா கட்சியும், அம்மா கட்சியும்தான்!
இல்லேன்னா இவனுகளை எவன் மதிப்பாம்டே?

___________________

“அடங்க மறு, அத்து மீறு, திருப்பி அடி”
“எளிய மனிதனுக்கு அதிகாரம்,
கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்”னு
எதுகை மோனை எபக்டுல
ஒரு காலத்துல முழங்குன
நம்ம தம்பி திருமாவும்
ஃபீல்டுலதாம்டே இருக்காரு!
காங்கிரசு எருமையையே
கண்டுக்காத கலைஞரு
காய்ஞ்சு போன சிறுத்தைக் குட்டிக்கா
பால் குடுப்பாறு!
பாய்சன் குடுக்காம இருந்தா சரி!

என்ன செய்ய?
அரசியல்னு ஆயிப்போச்சு
இப்ப போய் புழப்ப மாத்த முடியுமா?
தம்பி திருமாவும் யாராவது
கூட்டணி வையுங்கய்யான்னு
குய்யா முய்யான்னு கத்துராறு
மாம்பழத்துக்கிட்டயும் தூது விடுராறு

மாம்பயத்தை கடிச்சு துன்ன
அவன் கட்சியிலேயே ஆளு இல்லைன்னு ஆயாச்சு,
பெறவு
வெம்பிப்போன மாம்யத்தை
கைக்காசு போட்டு
தின்னு பேதியாக
எவனும் தயாரில்ல!
ஆனா பாத்துக்கிடுங்க
தைலாபுரம் லாக்கரு
ரொம்பித்தான் வழியிது
வழியிறத கொஞ்சம்
நக்கலாம்ணு
சில பயலுவ அங்கனயும்
கிடக்கான் பாத்துக்கிடுங்க!

பெறவு நம்ம எஸ்.ஆர்.எம்
பச்சமுத்து கட்சியும்
அல்லா ஊர்லயும் போட்டியிடுதாம்!
காலேஜ், சொத்து பத்தை காப்பத்தருதக்கு
இதவிட்ட ஏதுடே வழி?

இதுதாம்டே உள்ளாட்சி தேர்தலு லைவ்!

அல்லா கட்சிக்காரனும்
அம்மாவாசை நல்ல நேரத்தை விட்டா கிடைக்காதுன்னுட்டு
மனு தாக்கல் செய்ஞ்சுருக்கான்!
ஒரே நாளுல 66,000 மனுக்களாம்!
நம்ம நேரம் எம்புட்டு கெட்டுப்போச்சு, பாத்தியாலே?

அது கிடக்கட்டும்
பல கிராமத்துல
ஆலமர, அரச மர பஞ்சாயத்து பெரிசுங்கள கூட்டி
பதவிகளை ஏலம் விடுறாய்ங்களாம்!
இதுனால ஜனநாயகம் கெட்டுப் போச்சுன்னு
நம்ம அண்ணா ஹசாரே அம்பிங்க
வருத்தப் படுதானுங்களாம்!

ஏலே போக்கத்த மூதிகளா
இதத்தாம்லே ராலேகான் சித்தியில
அண்ணா பண்ணிக்கீராறு
அவரு காட்டுத ஆளுதாம்லே
அங்கன பிரசிடண்டு!
மருமக உடைச்சா பொன்குடம்
மாமியார் உடைச்சா மண்குடாமாலே!

சரிலே
கடைசியில ஒன்னு சொல்லுதேன்!
திருப்பதி போய் முடிய வழிச்சு
அடிக்கிற மொட்டையும்
உள்ளாட்சி தேர்தலுல
வேகாத வெயிலுல நின்னு
வோட்டு போட்டு உனக்கு நீனே
அட்ச்சுக்கிற பட்டை நாமமும்
நல்லா மேச்சாகுதுலே!

போய் புள்ளி குட்டிகளை படிக்க வைக்க,
போராடுற வழியப் பாருலே!

________________________________________________________

– காளமேகம் அண்ணாச்சி
_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

  • கூடங்குளம் பற்றி விரைவில் எழுதுகிறோம். கூடங்குளம் மக்கள் போராட்டத்தை ஆதரித்தும், அணு உலைகள் மூலம் ஆதிக்கம் செய்ய விரும்பும் ரசிய, அமெரிக்க மேல்நிலை வல்லரசுகளை எதிர்த்து ம.க.இ.க தோழமை அமைப்புகள் தமிழகம் முழுவதும் விரிவான சுவரொட்டி பிரச்சாரத்தை நடத்தியிருக்கின்றன.

   • கூடன்குள போராட்டம் என்னை பொறுத்தவரை, ஏதோ, கடைசி நேரத்தில், ஒன்றுமே செய்ய இயலாத கட்டத்தில் நடத்தி, மக்களின் போராட்டத்தை வினடித்து விட்டார்களோ என்று தோன்றுகிறது..

    ஒரு நல்ல விஷயம்.. மக்களுக்கு போராட கற்றுகொடுதுள்ளது…

    இந்த போராட்டத்தை 1990 இல் நாம் செய்து இருக்க வேண்டும்…

    முதலாளித்துவ ஊடகங்கள் இதை, நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிற போராட்டம் போல் மறைமுகமாக செய்திகளை வெளியிருகின்றனர்…

  • அணுப்பிளவு ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டினாலும் சென்ற நூற்றாண்டின் மிகப்பெரும் இயற்பியல் அறிஞர்களின் பல்வேறு இயற்பியல் விதிகளின் ஒன்றிணைவாலும் பொறியியல் வல்லுனர்களினாலும் சாத்தியமாயிற்று. மனித இனத்தின் மிகப்பெரிய சாதனைகளில் இது ஒன்று. உயிர் என்பதன் ஒரு விளக்கம் தன்னை அறிதலும், தனது சுற்றத்தை அறிதலுமே. அந்த வகையில் சென்ற நூற்றாண்டே மனித இன வரலாற்றில் இது வரையில் சிறந்த ஒன்று.

   இதனால் சமூகத்தில் ஏற்பட்ட பாதிப்பு என்பது அவ்வளவு சிறந்த ஒன்றல்ல. தனது மேலாண்மையை நிரூபிக்க அமெரிக்கா இந்த மிகப்பெரும் அறிவியல் சாதனையை அழிவுக்கு பயன்படுத்தியது. இன்றும் உலகை மிரட்டி வருகிறது.

   அணுப்பிளவில் வெளிப்படும் ஆற்றல் உபயோகப்படுத்த சிறந்ததா அதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள். அணுப்பிளவு ஆற்றல் தனது நாட்டுக்குத் தேவையில்லை என்று அமெரிக்கா என்றோ முடிவெடுத்துவிட்டது. இருப்பதை என்ன செய்ய. அடுத்தவனுக்கு விற்று விடு. இதையேதான் புகையிலையிலும் செய்தார்கள். முதலில் புகையிலை நுரையீரல் புற்றுநோய் மற்றும் பல்வேறு நோய்களை கொடையாக அளிக்க வல்லது என்று மருத்துவ வல்லுனர்கள் கூறிய போது அதை மறுத்தார்கள். மூடிமறைத்தார்கள். அந்த உண்மையைக் கண்டறிந்து இவர்களை அம்பலப்படுத்தியவர்களை வேலை இழக்க வைத்தார்கள், இன்னல் அளித்தார்கள், கொலை கூட செய்தார்கள். உண்மை நிச்சயம் வெளிவந்து விட்டது. மறைக்க இயலாமல் போன போது தனிமனித சுதந்திரத்தை காரணங்காட்டி புகையிலை விற்றார்கள். மக்களின் எதிர்ப்புகளினால் அந்த அரசாங்கம் வேறு வழியின்றி சட்டம் கொண்டு வந்தது. இப்பொழுது அமெரிக்க புகையிலை முதலாளிகளின் நிலைப்பாடு என்னவென்றால் ” புகைப்பிடித்தல் உடல்நலத்துக்குத் தீங்கானது. அதனால் மற்றவருக்கு விற்று விடுவோம்” என்பது. இங்கும் அதே தனிமனித சுதந்திரம். ஆண்மைத்தனம். போன்ற வெற்றுபிரச்சாரத்தினால் விற்கிறார்கள். விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குறிவைப்பது சிறார்களையும் விடலைப்பருவத்தார்களையும்தான்.

   இதோ அணு உலைகள் அமெரிக்க உடல்நலத்திற்குத் தீங்கானது. அதனால் இந்தியாவுக்கு விற்று விட்டார்கள். பாரத அரும்பெரும் பிரதமர் மண்மோகன் சிங்கு கையூட்டு பெற்று கைநாட்டு இட்டுவிட்டார். பாரதத்தாயின் சேலை முதல் பிரா ஜட்டி வரை அனைத்தையும் அவிழ்த்துவிட்டார்.

   ரசியத் தொழில்நுட்பத்தில் உருவான இந்த அணு உலை பாதுகாப்பற்றது. (அதற்காக அமெரிக்க தொழில்நுட்பத்தில் தயாராகி நம் நாட்டுக்கு வரவிருக்கும் அணு உலைகள் ஒன்றும் பாதுகாப்பானது என்று கூறவில்லை.) அணுப்பிளவு ஆற்றல் சிறிதே எட்டியிருந்தே பார்க்க வேண்டிய ஒன்று. மக்கள்நெருக்கம் மிகுந்த இடங்களில் அணு உலைகள் வைத்தல் கூடாது. அணுக்கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற இன்னும் ஒரு ஒத்துக்கொள்ளத்தக்க முறை வரவில்லை. அதற்கு என்ன செய்ய. இன்னும் பல கேள்விகள் விடையளிக்கப்படாமல் உள்ளன.

   ஆற்றல் தேவையானது. எவ்வகையில் வெளிப்படுத்தி அதை உபயோகிக்கப் போகிறோம் என்பதில்தான் அனைத்தும் உள்ளது. நமக்கு இருப்பது ஒரு உலகம், ஒரு வீடு. இதில் நம்மைத்தவிர பிறரும் வாழ்ந்து வருகின்றனர். நமக்குப்பின்னால் வருபவர்களுக்கும் இது தேவைப்படுகிறது. அதை மனதில் கொள்ள வேண்டும்.

   இந்த முதலாளித்துவ சமூகம்தான் மனித இனத்தின் வளர்ச்சியிலேயே மிகப் பேராசை கொண்ட ஒன்று. அதன் போக்கில் விட்டால் அனைத்து கண்டுபிடிப்புகளையும் கொண்டு இந்த இனத்தையே பூண்டோடு அழித்து விடும். தன்னோடு சேர்த்து இந்த உலகையும் அழித்து விடும் அபாயமும் உள்ளது. அணு உலைகள் தேவையா அல்லவா என்பதல்ல பிரச்சினை. முதலாளித்துவம் எப்போது ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் இங்கு கேள்வி. எவ்வளவு விரைவில் நடக்கிறதோ அவ்வளவுநன்று.

 1. கண்ணீர் அஞ்சலி :

  நேபாளத்து இமயமலை உச்சியில் ஊர் சுற்றிப் பார்க்கும்போது, விபத்து நடந்து செத்துப்போனால் அஞ்சலி. திருச்சியில் கண்ணீர் மழை!
  இன்னொவா காரில் இடியாப்பம் சாப்பிட்டுக்கொண்டே, நூற்று இருபது வேகத்தில் போய் செத்துப்போனால் அஞ்சலி!!

  எல்லாம் சரி.
  சாரம் சரிந்து, மதியச் சாப்பாடுகூட சாப்பிடாமல் உயிர் விடும் கட்டிடத்தொழிலாளிக்கு மட்டும் அஞ்சலி இல்லையா?

  திருட்டு மணல் லாரி ஏடாகூடமாக ஓடி, திருவள்ளூர் பள்ளி மாணவர்கள் மீது ஏற்றி கொலை செய்யப்பட்டால், அவர்களுக்கு இல்லையா கண்ணீர் அஞ்சலி?

  குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால், பிளாட்பாரவாசிகளாயிருந்து துடிதுடித்து உயிர் துறந்த உயிர்களுக்கு அஞ்சலி இல்லையா?

  அஞ்சலி செலுத்த கண்ணீர் வருவதற்குக்கூட மேற்குடியாயிருக்கவேண்டும்!!

  இருக்கட்டும். இந்த இமயமலை ஏரோப்ளான் இறப்பைக்கூட திருச்சியில் அரசியலாக்கி, உள்ளாட்சியில் ஓட்டுக்கேட்பார்கள். மறக்காமல் ஓட்டுப்போட்டுவிடுங்கள்!!

  ஏனென்றால், ஏரோப்ளானிலிருந்து விழுந்து செத்துப்போனவர்கள் ரொம்பப் பாவம்!!

 2. அண்ணாச்சிஓ .. உங்க கவிதை ரொம்ப நல்ல இருந்திச்சி.. போராட்டம் வரட்டும்.. போராடுவோம்…

 3. டெபாசிட்டே தேறாத
  தொப்பைத் தலையனுகளுக்கு
  தெனாவட்ட பாத்தீங்களா!- காலம் கெட்டுபோச்சு அண்ணாச்சி-சீமான் அண்ணாச்சி
  என்ன பன்னுறாவுக.

  _____________________________

 4. அல்லாக் கட்சிக்காரனும் அத்துவிட்ட
  இந்த காவிக் கட்சிப் பயலுவ
  கோயம்புத்தூர் கவுண்டர் கட்சிக்காரனோட
  கூட்டாம்டே!
  காவிப்பயலுவ பாய கொல்லணும்பான்
  கவுண்டர் பயலுவ சக்கிலியரை ஒழிக்கணும்பான்

  ==>இப்படித்தான் எல்லா வரிகளும் கண்ணுக்குத் தெரியுது..வரிக்கு 1 அல்லது 2 வார்த்தைகளுக்கு அப்புறம் தமிழ் எழுத்துரு தெரியாமல் வெற்றிடமாக உள்ளது..ஏதேனும் ஃபான்ட் நிறுவணுமா?

 5. வெக்கம் கேட்ட பசங்களே ….
  தேர்தலில் ஜனநாயகத்தை நீருபிக்க தகுதிவாய்ந்த நபர்களை தேர்வு செய்ய சொல்லாம,வெக்கம் கேட்ட மன்மோகன்சிங் போல வோட்டுப்போடாதென்னு சொல்ல வேக்கமயில்ல ?…எழுதுற கட்டுரையை எழுச்சியோடு கோபப்பட்டு எழுது ..அனால் மக்கள் நம்பிக்கையை குழி தோண்டி புதைக்கதை….அரசியலை குறை கூற உங்களுக்கு என்ன தகுதியிருக்கிறது ?
  புரட்சி வாழ்த்துக்கள் ….

 6. மிக அருமையாக இருக்கிறது. இசை அமைத்து பாடலாக்கி கிராமம்,நகரம் யாவற்றிலும் போட முடியுமானால் இன்னும் அருமையாய் இருக்கும

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க