privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஇலங்கையின் கொலைக்களங்கள் - 2: முழுமையான தமிழ் விளக்கத்துடன் !

இலங்கையின் கொலைக்களங்கள் – 2: முழுமையான தமிழ் விளக்கத்துடன் !

-

sri-lankas-killing-fields-unpunished-war-crimes

கடந்த மார்ச் 14ம் தேதி, ‘இலங்கையின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்’ என்ற தலைப்பில் இங்கிலாந்து நாட்டின் சேனல் 4 என்ற தொலைக்காட்சி, 2009-ல் இலங்கை இராணுவம் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய போர்க்குற்றங்களையும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் பற்றிய ஆதாரங்களை தொகுத்து வழங்கியிருக்கிறது

ஜூன் 2011-ல் இலங்கையின் கொலைக் களங்கள் என்ற பெயரில் ஒளிபரப்பபட்ட நிகழ்ச்சியின்  தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டது. இலங்கை அரசு தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய போரின் இறுதிக் கட்டங்களில் நடந்த மனித உரிமை மீறல்களைப் பற்றி ஆய்வு செய்வதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

இந்த ஆவணப்படத்தின் நோக்கம் மிகவும் குறுகிய அளவில் வரையறுக்கப்பட்டது. இறுதிக் கட்டப் போரில் 2009ம் ஆண்டில் ஜனவரி மாதத்திலிருந்து மே மாதம் வரை விடுதலைப் புலிகள் கிளிநொச்சியிலிருந்து வெளியேறி வடகிழக்குப் பகுதிகளை நோக்கி நகர்ந்து இலங்கை அரசு படைகள் வெற்றி அடைவது வரையிலான கால கட்டத்தில் போர்க்குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் நடந்தனவா என்பதை மட்டும் ஆய்வு செய்கிறது இந்த நிகழ்ச்சி.

இந்த ஆவணப்படம் அந்த காலகட்டத்தில்,

1. தொலைக்காட்சி நிறுவனங்களால் எடுக்கப்பட்ட வீடியோக்கள், படங்கள்

2. இலங்கை இராணுவத்தினர் தமது மொபைல் போன்களில் எடுத்த வீடியோக்கள்

3. அமெரிக்க சேட்டிலைட் மூலமாக கிடைத்த படங்கள்

இவற்றையும்,

1. போரின் இறுதிக் கட்டத்தில் போர்ப் பகுதியில் பணி செய்த ஐநா ஊழியர்களின் அறிக்கைகள்

2. விக்கிலீக்ஸ் மூலமாக வெளியான அந்த காலத்தில் நடத்தப்பட்ட அமெரிக்க தூதரக செய்திகள்

3. இலங்கை அரசின் அறிக்கைகள்

இவற்றையும்,

இணைத்து இலங்கை அரசு படைகள், இலங்கை இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் அரசின் உயர் மட்டத் தலைமையின் ஆதரவோடும், உத்தரவின் கீழும் போர்க்குற்றங்களை நிகழ்ந்தன என்பதற்கான ஆதாரங்களை முன் வைக்கிறது.

இந்த படத்தில் காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் பல்வேறு இடங்களிலிருந்து திரட்டப்பட்ட, பிற நோக்கங்களுக்காக செய்யப்பட்ட பதிவுகள். இவற்றை இணைத்து போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை இந்த நிகழ்ச்சி வழங்குகிறது. இதைப் பார்க்கும் போது புலப்படும் கொடூரங்கள் கடலுக்குள் மூழ்கியிருக்கும் பனிமலையின் விளிம்பு மட்டுமே என்று புரிகிறது. வீடியோ கேமராக்களால் படம் பிடிக்கப்படாத, பார்வையாளர்களால் பதிவு செய்யப்படாத, களத்தில் நடந்த கொடுமைகள் இதை விட பல நூறு மடங்கு அதிகமானவை, தீவிரமானவை என்பது தெரிகிறது. இலங்கை பேரினவாத அரசின் கொடூரமான நடவடிக்கைகளைப் பற்றிய முக்கியமான ஆவணம் இந்த படம்.

அந்த நிகழ்ச்சியை பார்த்தவுடன் தினமலர் பத்திரிகையின் இணைய பதிப்பில் ‘அது சேனல் four இல்லை சேனல் bore’ என்று தலைப்பிட்டு, ‘எதுவும் சொல்லும்படியாக இல்லை, பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டு கிடப்பதைத் தவிர எதுவும் புதிதாக காண்பிக்கவில்லை, பிரபாகரன் இறந்த விதத்தைப் பற்றி புதிதாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை’ என்று படத்தில் த்ரில்லிங்காக எதுவுமில்லை என்பதாக ஒரு வக்கிரமான கட்டுரை எழுதியிருந்தார்கள். தமிழ், தெலுங்கு படங்களில் வன்முறை காட்சிகளை பார்த்து கை தட்டி ரசிக்கும் ‘தினமலர்’ போன்றவர்கள் போரில் நிகழும் மக்களின் துயரங்களையும் அழிவுகளையும் புரிந்து கொள்ள முடியாதுதான்.

21ம் தேதி ஐநா மனித உரிமை கமிஷனில் அமெரிக்க அரசு கொண்டு வந்த தீர்மானம் ‘இறுதிக் கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்களை இலங்கை உள்நாட்டிலேயே விசாரிக்க வேண்டும்’ என்று இலங்கை அரசையே அதன் தவறுகளுக்கு நீதிபதியாக செயல்படும்படி மட்டுமே வற்புறுத்துகிறது (http://www.youtube.com/watch?v=rmgh0RKr6w4)

இந்த பின்னணியில் ‘இலங்கையின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்’ நிகழ்ச்சியை பார்த்து புரிந்து கொள்ள அதில் சொல்லப்படும் விபரங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே தரப்படுகிறது. இதில் முழு நிகழ்ச்சியின் தமிழாக்கம் – வருணணை, நேர்காணல், விளக்கம், அனைத்தும் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட பகுதியை படித்து உடன் வீடியோவைப் பார்த்தால் புரிந்து கொள்ளமுடியும். ஆங்கிலம் தெரியாத தமிழ் மக்களுக்கு இது பெரிதும் உதவும் என்பதால் உங்கள் நட்பு வட்டத்தில் இந்தக் கட்டுரையினை விரிவாக கொண்டு செல்லுமாறு கோருகிறோம்.

ஜான் ஸ்னோ மறுபடியும் இலங்கையின் உள்நாட்டுப் போரின் கொடூரமான முடிவை ஆய்வு செய்கிறார். மனதை உலுக்கும் விவரிப்புகளுடனும் பொது மக்கள் மீது குண்டு வீசப்படுவது, படுகொலைகள் நிகழ்த்தப்படுவது மற்றும் அட்டூழியங்கள் பற்றிய காட்சிகளுடனும் ‘இலங்கையின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்’  துவங்குகிறது.

இது வரை நாங்கள் ஒளிபரப்பிய காட்சிகளிலேயே அதிகம் அதிர்ச்சியளிக்கும் காட்சிகள் இடம் பெற்ற ஆவணப்படம் ஒன்றை சென்ற ஆண்டு சேனல் 4 ஒளிபரப்பியது. அவை இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் எனப்படும் போராளி படைகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டமான 2009ம் ஆண்டில் படம் பிடிக்கப்பட்டவை.

அந்த காலகட்டத்தில் அரசு படைகள் 40,000க்கும் அதிகமான பொதுமக்களை கொன்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்கள் சொல்கின்றன. மற்றவர்கள் இந்த எண்ணிக்கை அதை விட பல மடங்கு அதிகம் என்று சொல்கின்றனர். எங்களது ஆவணப்படம் இரு தரப்பிலும் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களைப் பற்றி ஆதாரங்களை வழங்கியது. ஆனால் அதன் மனதை பெரிதும் உலுக்கும் கண்டுபிடிப்புகள் இலங்கை அரசு படைகள் நிகழ்த்திய வரிசையான போர்க்குற்றங்களே.

பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் பொது மக்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் குண்டு வீசியது அதில் காட்டப்பட்டது. பெண் போராளிகள் மீதான பாலியல் ரீதியாக தாக்குதலுக்கான ஆதாரங்களையும் அது வழங்கியது. கட்டப்பட்ட கைதிகள் திட்டமிட்டபடி கொல்லப்பட்டதற்கான ஆதாரத்தையும் அது வழங்கியிருந்தது. அந்த ஆவணப்படம் ஜெனீவா முதல் நியூயார்க் வரை உலகத் தலைவர்களுக்கும் அயலுறவுத் துறை அலுவலர்களுக்கும் காட்டப்பட்டது. உலகின் பல பகுதிகளிலும் இருக்கும் தொலைக்காட்சி நிலையங்களிலிருந்து ஒளிபரப்பப்பட்டது.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன்:

“ஒரு பெரும் தாக்கம் ஏற்படுத்திய நிகழ்ச்சி. கவலை தரக்கூடிய நிகழ்வுகளைப் குறிப்பிட்டது, என்ன நடந்தது என்பதைப் பற்றிய முழு விபரங்களையும் பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.”

இது ஆஸ்திரேலிய செனட்டிலும் பேசப்பட்டது

“சேனல் 4ல் மிகவும் தெளிவாகவும் மனதை உலுக்கும் வகையிலும் ஒளிபரப்பப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய கடும் குற்றச்சாட்டுகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன”

ஆச்சரியப்படும்படியாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவின் மனசாட்சியை உலுக்கி ஒரு அறிக்கையை வெளியிட வைத்தது. “எனது 28 வயது மகன் என்னை அழைத்தான். தொலைபேசியில் அழுது கொண்டே, ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ ஆவணப்படத்தைப் பார்த்த பிறகு தன்னை ஒரு சிங்களன் அல்லது இலங்கை குடிமகன் என்று சொல்வதற்கே வெட்கப்படுவதாக சொன்னான்”

எங்களது ஆவணப்படம் போர்க்குற்றங்களுக்கான குறிப்பான ஆதாரங்களையும் சர்வதேச சமூகத்தால் கைவிடப்பட்ட மக்களின் கொடும் துயரங்களையும் காண்பித்தது. இந்த மக்களுக்கு நியாயம் கிடைக்குமா என்பதே இப்போது விடை சொல்லப்பட வேண்டிய கேள்வியாக இருக்கிறது. அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு, அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்களா? இதுவரை, அது நடக்கவில்லை. எனவே, அதன் தொடர்ச்சியான இந்த ஆவணப்படத்தில் நாங்கள் போர்க்குற்றங்களுக்கான புதிய ஆதாரங்களை தருவதோடு, அவற்றுக்கு யார் பொறுப்பானவர்கள் என்பதையும் ஆய்வு செய்கிறோம். இலங்கை அரசின் மிக உயர் பதவிகளில் இருப்பவர்கள்தான் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என்று சுட்டிக் காட்டுகிறது இந்த ஆய்வு.

விடுதலைப் புலிகள் சுதந்திர தமிழ் ஈழ நாட்டை அமைக்கப் போராடிய கொடூரமான ஆனால் ஆற்றல் மிகுந்த ராணுவமாக இருந்தனர். கட்டாய ஆள் சேர்ப்பு, குழந்தை போராளிகள், இந்த அரசு அதிகாரியை கொல்ல நடந்த முயற்சியைப் போல தற்கொலை வெடிகுண்டுகளை கூடப் பயன்படுத்த அவர்கள் தயாராக இருந்தனர்.

எங்களது முதல் ஆவணப்படத்தில் போரின் அரசுப் படைகள் புலிகளையும் லட்சக்கணக்கான தமிழ் பொதுமக்களையும் வடகிழக்கின் மேலும் மேலும் சிறிய பகுதிக்குள், இலங்கையின் கொலைக்களத்துக்குள், எப்படி விரட்டிச் சென்றனர் என்பதை பதிவு செய்தோம்.

டேவிட் மிலிபண்ட், பிரிட்டன் வெளியுறவு செயலாளர் (2007-2010)

“அரசாங்கத்துக்கு ஒரே ஒரு நோக்கம்தான் இருந்தது. அவர்கள் 26 ஆண்டு காலமாக கொடூரமான ஒரு போரை நடத்தி வந்தார்கள். எவ்வளவு காலம் பிடித்தாலும், விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத சக்தியாக மீண்டும்  தலையெடுக்க முடியாதபடி அழித்தொழிக்க முடிவு செய்திருந்தார்கள்”

சர் ஜான் ஹோம்ஸ் – மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. தலைமை (2007-2010)

“பன்னாட்டு சமூகம், ஊடகங்கள், அல்லது மனிதஉரிமை பிரச்சனைகள் என்று யாரும் அதை செய்வதிலிருந்து தங்களை தடுப்பதை அவர்கள் அனுமதிக்க விரும்பவில்லை. அப்படித்தான் அது நடந்து முடிந்தது.”

எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடத்தப்பட்ட அந்த நடவடிக்கைகளை முன் நின்று நடத்தியவர்கள் இன்றும் இலங்கையில் மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள். பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்சேவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவும்தான் போரை வழிநடத்தியவர்கள், போர்க்குற்றங்கள் பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்து வருபவர்கள்.

கோத்தபய ராஜபக்சே

“வெளிநாட்டினர் தமது மதிப்பீடுகளை அல்லது தீர்ப்புகளை இலங்கையின் மீது சுமத்த முடியாது”

மாறாக ஜனாதிபதியின் உத்தரவுப்படி தங்களது சொந்த விசாரணை நடத்துவதாக வலியுறுத்தினர். அது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அல்லது LLRC என்று அழைக்கப்பட்டது. எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்வதற்கு இது போதுமானதாக இருக்கும் என்று அவர்கள் சொன்னார்கள்.

சென்ற ஆண்டு இறுதியில் LLRCயின் அறிக்கை இறுதியாக வெளியிடப்பட்டது. இதுதான் அது.

பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்ததை அது ஒப்புக் கொண்டது. இதுவரை அரசாங்கம் இந்த உண்மையை மறுத்து வந்தது. கைது செய்யப்பட்டு இப்போது காணாமல் போய் விட்ட பெரும் எண்ணிக்கையிலான தமிழர் போன்ற பல பிரச்சனைகளைப் பற்றி தனது கவலையை அது வெளிப்படுத்தியது. ஆனால் அதன் அது எதை சொல்லாமல் விட்டது என்பதுதான் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் . அரசு படைகளின் போர்க்குற்றங்கள் தொடர்பான பெருவாரியான ஆதாரங்களை அது முறையாக பரிசீலிக்கவில்லை. பொதுமக்கள் வேண்டுமென்றே குறி வைக்கப்பட்டார்கள் என்பதை அது குறிப்பாக மறுக்கிறது. விளைவாக, போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டத் தவறியது.

இந்த ஆவணப்படத்தில் நாம் நான்கு குறிப்பான குற்றப்பதிவுகளில் கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு குற்றப்பதிவிலும் போர்க்குற்றங்களுக்கான புதிய ஆதாரங்களை அளிப்பதோடு அந்த குற்றங்களுக்கான இறுதி பொறுப்பு இலங்கை ராணுவம் மற்றும் அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் இருந்தது என்றும் காட்டுகிறோம்.

நமது முதல் குற்றப்பதிவு, போர்ப்பகுதிக்குள் கடைசி சாலை-வழி-உணவு-போக்குவரத்து-குழுவின் ஐநா ஊழியர்கள் சண்டை பகுதியில் மாட்டிக் கொண்ட ஜனவரி 23, 2009-ல் தொடங்குகிறது. அரசுப் படைகளுக்கும் புலிகளுக்கும் இடையே தீவிரமடையும் போரிலிருந்து தப்பிப் பிழைக்க லட்சக்கணக்கான பொதுமக்கள் போரின் முதல் ‘பாதுகாப்பு பகுதி’யாக இலங்கை அரசு அறிவித்த இடங்களுக்கு ஓடினார்கள்

இங்கு நீல டி-சட்டை அணிந்திருக்கும் பீட்டர் மெக்காய் என்ற ஆஸ்திரேலியரையும் சேர்த்து இரண்டு பன்னாட்டு ஊழியர்களால் வழிநடத்தப்பட்ட ஐநா அணியினர் போர்நிறுத்தப் பகுதியில் உடையார்கட்டு என்ற பகுதியில் ஒரு தற்காலிக மருத்துவமனை அருகில் முகாம் இட்டார்கள். அருகில் வசிக்கும் பொதுமக்களின் உதவியுடன் பதுங்குகுழிகள் தோண்டி ஐநா பணிகளுக்கான மையத்தை உருவாக்கினார்கள்.  தகுதர நெறிமுறைகளின்படி மெக்காய் ஐநா மையத்தின் சரியான ஜிபிஎஸ் விபரங்களை குறித்துக் கொண்டார். அவை ஐக்கிய நாடுகள் சபைய இலங்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இருப்பினும் அந்த மையத்தின் மீது குண்டு வீசப்பட்டது.

அடுத்த சில நாட்களில் பாதுகாப்பு பகுதியில் தொடர்ந்து குண்டு மழை பொழிந்தது. பல குண்டுகள் ஐநா வினியோக மையத்தின் மீது அல்லது அருகில் விழுந்தன. அதனால் ஏற்பட்ட அழிவுகளை ஐநா ஊழியர்களே படம் எடுத்திருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களிடையே பதுங்குகுழிகள் தோண்டுவதற்கு உதவி செய்த அப்பாவி பொதுமக்களும் இருந்தார்கள்.

நாம் இந்த புகைப்படங்களை ஒரு தடயவியல் வல்லுனரிடம் காட்டினோம்.

பேராசிரியர் டெரிக் பவுண்டர், தடயவியல் வல்லுனர்

“இந்த புகைப்படங்கள் பெருமளவிலான காயங்களை காண்பிக்கின்றன. முகத்தின் ஒரு பகுதி சிதைக்கப்பட்டு விட்ட ஒரு மனிதர், இன்னொரு மனிதரின் தலை துண்டிக்கப்பட்டு துண்டுகள் சிதறிக் கிடக்கின்றன, அதன் பிறகு ஒரு பெண்ணும் குழந்தையும். இது போன்ற காயங்கள் உலோகத் துண்டுகளால் ஏற்பட்டவை. குண்டு வெடிப்புகள், பறக்கும் உலோகத் துண்டுகள், மற்றும் சிதைவுகளைப் பற்றி பேசுகிறோம்”

“இந்த தடயங்கள் குண்டு வீச்சுடன் பொருந்துகின்றனவா?”

“ஆமாம். இவை குண்டு வீச்சுடன் ஒத்துப் போகின்றன. இவை குண்டு வீச்சால் விளைந்தவை என்பதை மறுக்க எந்த தடயமும் இல்லை”

ஆனால், குண்டு வீச்சு எங்கிருந்து வந்தது என்பது முக்கியமான கேள்வி. அரசு செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் உதய நானயகாரா அரசின் பொறுப்பை மறுத்தார். விடுதலை புலிகள் சில சமயம் பொது மக்களை குறி வைத்தார்கள் என்றார்.

ஒரு ரகசிய ஐநா அறிக்கை களத்தில் இருக்கும் அதன் ஊழியர்களுக்கு குண்டு வீச்சு எங்கிருந்து வருகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று பதிவு செய்கிறது. “குண்டு வீச்சு இலங்கை அரசு படைகளிடமிருந்து வருகின்றன என்பதற்கான சாத்தியம் 100% என்று கருதப்படுகிறது”

இதை உறுதி செய்வதற்கு இன்னும் ஆதாரம் இருக்கிறது. உடையார் கட்டு மீது குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கும் போது, போர் நிறுத்தப் பகுதியிலிருந்த ஐநா ஊழியர்கள் கொழும்பில் இருக்கும் ஆஸ்திரேலிய தூதரகத்துக்கும் ஐநா அலுவலர்களுக்கும் அவசர தகவல்களை அனுப்பி குண்டு வீச்சை நிறுத்தும்படி வேண்டினர். அந்த கோரிக்கைகள் இராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகாவுக்கும் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் நேரடியாக அனுப்பப்பட்டு விட்டதாக ஐநா ஊழியர்களுக்கு சொல்லப்பட்டது. இந்த தொலைபேசி உரையாடல்களுக்கு சிறிது நேரத்துக்குப் பிறகு குண்டு வீச்சு ஐநா பதுங்குகுழிகளை விட்டு சிறிது தூரம் விலகியது. ஆனால் போர் நிறுத்தப் பகுதியில் தொடர்ந்து பொழிந்து கொண்டிருந்தது. சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டு பீட்டர் மெக்காய் பதிவு செய்த வாக்குமூலத்தில் குண்டு வீச்சின் இலக்கு எப்படி மாற்றியமைக்கப்பட்டது என்பதை விவரிக்கிறார்

“இப்போது எங்களுக்கு 100 மீட்டர் தொலைவில் குண்டுகள் விழுந்தன. அவர்கள் விரும்பினால் குண்டு வீச்சை கட்டுப்படுத்த முடியும் என்று இது காட்டியது”

இந்த நிகழ்வு முக்கியமானது. குறைந்தபட்சம் பாதுகாப்பு அமைச்சரும் இராணுவ தளபதியும் போர் நிறுத்தப் பகுதியின் மீது குண்டு வீசப்படுவதைப் பற்றி அறிந்திருந்தார்கள் என்று இது சுட்டிக் காட்டுகிறது. ஐநா பதுங்கு குழிகளிலிருந்து விலகி தாக்கும்படி உத்தரவிடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு பகுதியில் குண்டு வீச்சுக்கு முடிவே இல்லாமல் இருந்தது. பொதுமக்களை கொல்லும்படியான தாக்குதல்கள் குறி வைத்து நடத்தப்பட்டவை என்பதை இது சுட்டிக் காட்டுகிறது.

பேராசிரியர் வில்லியம் ஷாபாஸ், மனித உரிமைகள் வழக்கறிஞர்

“இது மிகவும் முக்கியமான நிகழ்வு என்று நான் நினைக்கிறேன். இலங்கை இராணுவத்தின் வெகு உயர் மட்டங்களில் இந்த தாக்குதல்கள் பற்றி அறிந்திருந்தார்கள் என்று நமக்கு தெரிகிறது. இராணுவம் அவர்களது உத்தரவுகளின் படி தாக்குதல்களை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது.”

“இது வரை நம்மிடம் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் கோத்தபய ராஜபக்சேவும் சரத் பொன்சேகாவும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?”

“அவர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நிகழ்வு சரிவர பரிசீலிக்கப்பட்டால், ஊகங்கள் கூடுதல் தடயங்களால் உறுதி செய்யப்பட்டால், குற்றவியல் வழக்குக்கான சாத்தியம் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்”

பொதுமக்கள் யாரும் கொல்லப்படக் கூடாது என்பதுதான் தனது கொள்கை என்று இலங்கை அரசு போர்க்காலம் முழுவதிலும் வலியுறுத்தி வந்தது. ஆனால் பல வாரங்களாக தொடர்ந்த அரசு குண்டு வீச்சு தமிழ் மக்களை பாதுகாப்பு பகுதிகளிலிருந்து தப்பி ஓட வைத்தது. அதன் பிறகு பிப்ரவரி 12 அன்று அரசு வடக்கில் இருக்கும் நீண்ட மணல் திட்டை புதிய பாதுகாப்பு பகுதியாக அறிவித்தது. சுமார் 3 லட்சம் பொதுமக்கள் இங்கு முகாமிட்டார்கள். இந்த கடற்கரைப் பகுதியில் வாழ்க்கை கொடூரமாக இருந்தது. குண்டு வீச்சு இடைவிடாமல் நடந்தது. இன்னும் ஒன்று நடந்தது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

நமது இரண்டாவது குற்றப்பதிவில், இன்னொரு முக்கியமான தொடர்ச்சியான இலங்கை அரசின் போர்க்குற்றம் பற்றிய ஆதாரங்களை பரிசீலிக்கிறோம். இலட்சக்கணக்கான சிக்கிக் கொண்ட பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் வேண்டுமென்றே மறுத்த குற்றம்.

(பெண் தமிழில் நிலைமையை விளக்குகிறார்)

உணவுப் பற்றாக்குறையின் விளைவுகள் மோசமாக மோசமாக இன்னொரு பற்றாக்குறை தீவிரமானது. தற்காலிக மருத்துவமனைகளில் மருந்துகள் பரிதாபமான அளவுக்கு குறைவாக இருந்தன.

(காயமடைந்த ஆண் நிலைமையை விளக்குகிறார்)

பாதுகாப்பு பகுதியில் மாட்டிக் கொண்ட அரசு நியமித்த மருத்துவர்கள் கூட நிலைமையைப் பற்றி புகார் செய்ய ஆரம்பித்தனர். கூடுதல் மருந்துகள் அனுப்பும்படியான அவர்களின் கோரிக்கைகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாக சொன்னார்கள்.

“இவர்கள் எல்லோரும் தீவிர சிகிச்சை பிரிவு (ICU) நோயாளிகள் – அவசர உதவி தேவைப்படும் நோயாளிகள். எங்களிடம் ஆன்டிபயாடிக்குகளும் தேவையான இரத்தமும் இல்லவே இல்லை. பல முறை தகவல் தெரிவித்தும் அரசாங்கம் மருந்துகள் எதையும் இங்கு அனுப்ப விரும்பவில்லை.”

ஆனால், போர்ப்பகுதிக்கு போதுமான மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைப்பது ஒரு சட்டப்படியான பொறுப்பாகும். பொருட்கள் அனுப்புவதை மட்டுப்படுத்தியதை அரசு எப்படி நியாயப்படுத்தியது? பாதுகாப்பு பகுதிகளில் உணவும் மருத்துவ உதவியும் தேவைப்படும் அகதிகளின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்துச் சொல்வதன் மூலம் அதை செய்தார்கள் என்று புதிய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையை சுமார் 60,000 ஆக அரசாங்கம் மதிப்பிட்டது என்று ஏப்ரல் 2009-ல் கொழும்புவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட கேபிள் தெரிவிக்கிறது. விக்கிலீக்ஸ் இணையதளத்தால் வெளியிடப்பட்ட பெருவாரியான தகவல் பரிமாற்றங்களில் ஒன்றாக அந்த கேபிள் வெளியாகியிருக்கிறது. உண்மையான எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்பதை ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் செயற்கை கோள் படங்கள் மூலம் தெரிந்து வைத்திருந்தன.

இலங்கை அரசாங்கத்திடமும் அதன் உளவு பார்க்கும் மிதவைகளும் செயற்கை கோள்களும் இருப்பதால் அவர்களுக்கும் அது தெரிந்திருக்கும். அகப்பட்டுக் கொண்ட பொதுமக்கள் மீது இந்த குறைந்த மதிப்பீட்டின் விளைவுகள் படு பயங்கரமாக இருந்தன.

டேவிட் மில்லிபண்ட்

“60,000 பேருக்கு ஒரு நாள் உணவளிக்க 30 டன் உணவுப் பொருட்கள் தேவை. ஏப்ரல் மாதத்தில் இரண்டு மூன்று லட்சத்துக்கு குறையாத மக்கள் அந்த பகுதியில் இருந்தார்கள் என்று நமக்கு தெரிகிறது. ஆனால், ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து 27ம் தேதி வரை 60 டன் மட்டுமே அனுப்பப்பட்டது. எனவே, இந்த நான்கு வாரங்களிலும் இரண்டு நாட்களுக்கு 60,000 பேருக்கு போதுமான உணவுதான் கொண்டு வரப்பட்டது. ஒரு மாதத்துக்கு 3 லட்சம் பேருக்கு உணவளிக்கும் அளவு அங்கு வழங்கப்படவில்லை. அங்கு நிலவிய மனிதாபிமான அவசர நிலையின் தீவிரத்தை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இதற்கான பொறுப்பு கொழும்புவில் இருக்கும் அரசாங்கத்துக்கு நேரடியாக போகிறது”

ஒரு சில பொதுமக்கள் பாதுகாப்பு பகுதியிலிருந்து தப்பிப் போக முடிந்தாலும் இலங்கை அரசு மாட்டிக் கொண்ட அகதிகளின் எண்ணிக்கையை தொடர்ந்து குறைவாகவே காட்டி வந்தது. ஐநா கணக்கீடுகளின் படி ஏப்ரல் இறுதியில் 1,25,000க்கும் அதிகமான மக்கள் அந்த பகுதியில் மாட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஜனாதிபதி ராஜபக்சே ஏப்ரல் 28 அன்று சிஎன்என்னுக்கு கொடுத்த மதிப்பீடு

“நாங்கள் பொருட்களை அனுப்புகிறோம். அதனால்தான் இதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்து மக்களை எங்கள் பக்கம் கொண்டு வர விரும்புகிறோம். ஏனென்றால் அங்கு 5000 பேர்தான் இருப்பார்கள், வேண்டுமென்றால் 10,000 என்று சொல்லப்படுவதை கூட வைத்துக் கொள்ளலாம்”. இது மிகப்பெரிய அளவிலான குறைமதிப்பீடு. ஜனாதிபதியே போதுமான மனிதாபிமான பொருட்கள் மறுப்பதை நியாயப்படுத்தும் மோசடியான கணக்கீடுகளை அங்கீகரித்தார்.

ஆதாரங்களை பரிசீலித்த இலங்கைக்கான ஐநாவின் சிறப்பு நிபுணர் குழு என்ன நடந்தது என்பதில் தெளிவாக இருக்கிறது.

“சண்டை நடக்கும் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசாங்கம் வேண்டுமென்றே உணவு, மருந்து பொருட்கள், குறிப்பாக அறுவை சிகிச்சைக்கான தேவைகள் போன்ற மனித உதவிகளை இல்லாமல் செய்து அவர்களது துன்பத்தை அதிகரித்தது. இந்த நோக்கத்துடன் சண்டை பகுதியில் இருந்த பொதுமக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைவாக மதிப்பிட்டது”

சாம் ஜாரிபி, சர்வதேச பொதுமன்னிப்பு சபை

“பன்னாட்டு சட்டம் பழங்கால சித்திரவதை நடவடிக்கைகளை தடை செய்கிறது. பொதுமக்களை பட்டினி, பஞ்சம் அல்லது பெருநோய்க்கு உள்ளாக்குவதை இராணுவ வெற்றிக்கான வழிமுறையாக பயன்படுத்த கூடாது”

பேராசிரியர் வில்லியம் ஷாபாஸ், மனித உரிமைகள் வழக்கறிஞர்

“அலுவலகங்களில் உட்கார்ந்து மின்னஞ்சல் அனுப்பியும் உத்தரவு பிறப்பித்துக் கொண்டும் இருப்பவர்களையும் சட்டத்துக்கு முன் கொண்டு வருவது பன்னாட்டு சட்டத்தின், பன்னாட்டு குற்றவியல் சட்டத்தின் ஒரு பகுதியாகும். பொதுமக்கள் மீதான தாக்குதல், உயிர் வாழ்வதற்கான பொருட்களை பொதுமக்களுக்கு மறுப்பது போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தால் போர்க்குற்றங்களை நிகழ்வதில் பெருமளவு பங்கேற்றதாக கருதப்படும்.”

இறுதி வாரங்களில் போர் நுழைந்தபோது, இன்னும் பல முக்கிய நிகழ்வுகள் போர்க்குற்றங்கள் நிகழ்த்துவதில் அரசாங்கத்தின் பங்களிப்பு நிறைய இருந்தது என்று நிரூபிக்கின்றன.

ஏப்ரல் மத்தியில் அரசு படைகளின் குண்டு வீச்சும் உணவு பற்றாக்குறையும் பாதுகாப்பு பகுதி 2 – புது மாத்தளத்தில் வாழ்க்கையை சகிக்க முடியாததாக்கியிருந்தது. அது மிகவும் அது இன்னும் மோசமாக போகிறது.

ஏப்ரல் 20ம் தேதி அதிகாலை 1 மணிக்கு இலங்கை இராணுவத்தின் தரைப் படைகள் கனத்த ரக ஆயுதங்களை பயன்படுத்தி புது மாத்தளத்தின் மீது தாக்குதல் தொடுத்தனர். கொடூரமான காட்சிகளுக்கும் குழப்பங்களுக்கும் நடுவே ஒரு தற்காலிக மருத்துவமனை மீது குண்டு வீசப்பட்டு நூற்றுக் கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர். நாம் பரிசீலிக்கும் மூன்றாவது குற்றப் பதிவின் நிகழ்வுகள் அதிலிருந்து தொடங்குகின்றன.

அது ஒரு பிணைக்கைதிகள் விடுவிப்பு நடவடிக்கை என்று இலங்கை அரசு அதிகாரபூர்வமாக சொன்னது. உண்மையில் அது ஆயிரக்கணக்கான பொதுமக்களை அவர்களது சொந்த பாதுகாப்புக்காக கூடும்படி அரசாங்கம் சொல்லியிருந்த பாதுகாப்பு பகுதியின் மீது நடத்தப்பட்ட முழு அளவிலான இராணுவத் தாக்குதலாக அமைந்தது. தெரிந்தே பொதுமக்களை குறிவைப்பது ஒரு போர்க்குற்றம். அது நடந்தது மட்டுமின்றி, இராணுவத் தலைமையில் உயர் மட்டங்களில் அங்கீகரிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை நாம் பரிசீலிக்கிறோம்.

தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்க, எடுத்துச் செல்லும் நிலையில் இருந்த காயம்பட்டவர்கள் டிரக்குகளிலும் டிராக்டர்களிலும் ஏற்றப்பட்டு பாதுகாப்பு பகுதியில் இன்னும் உள்ளே இருந்த இன்னொரு தற்காலிக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார்கள். காயங்களினாலும், கட்டுப்படுத்தாத இரத்த இழப்பினாலும் பலர் வழியிலேயே உயிரிழந்தார்கள். பீதிக்கும் குழப்பத்துக்கும் நடுவே என்ன நடந்தது என்று மெதுவாக புலனாகியது.

இலங்கை அரசு படைகள் பாதுகாப்பு பகுதியின் நடுவாக ஒரு கோடு கிழித்து மேற்கு பகுதியில் இருந்த நிலத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. பாதுகாப்பு பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டிருக்க, விடுதலை புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த பொதுமக்கள் அரசு படைகளிடமிருந்து தப்பி எஞ்சியிருந்த பாதுகாப்பு பகுதிக்குள் ஓடினார்கள். பீரங்கி குண்டு வீச்சும், வான் வழி தாக்குதலும் நாள் முழுவதும் தொடர்ந்தது. அதற்கு பிறகு முன்னறிவிப்பின்றி சாவு வந்தது. இப்போது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்கு கிழக்கே சுமார் ஒரு லட்சம் மக்கள் அதுவரை பாதுகாப்பு பகுதியாக இருந்த இடத்தை விட்டு தப்பிக்க போராடினார்கள். முடிந்தவர்கள் கடல் நீரில் இறங்கி நடந்தார்கள். அவர்களில் பலர் காயமடைந்தவர்கள், ஊட்டச் சத்து குன்றியவர்கள்.

தனது காயமடைந்த குழந்தைக்கு உதவி கேட்டு ஒரு தந்தை பரிதாபமாக கதறுகிறார். அவர்கள் அனைவரும் வளைக்கப்பட்டு சிறை முகாம்களுக்கு கொண்டு போக ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டனர். அந்த தந்தை இன்னமும் தனது குழந்தையை கையில் ஏந்தியிருக்கிறார், இப்போது பிணமாக.

ஏப்ரல் 22ம் தேதி அதிகார பூர்வ இராணுவ செய்தி தொடர்பாளர் கனரக ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று போர்க் காலம் முழுவதும் அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தியது போலவே வலியுறுத்தினார். “நான் ஏற்கனவே சொன்னது போல இந்த மீட்பு நடவடிக்கையில் கனரக ஆயுதங்களையோ டாங்கிகளையோ பயன்படுத்தவேயில்லை.”

இத்தனை ஆதாரங்கள் இருந்தும் அரசு சார்பு ஊடகங்கள் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று சொன்னார்கள்.

“வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் படையினர் புதுமாங்குளத்திலிருந்து அம்பலம் புக்கணை வரை விடுதலை புலிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் எல்லா பொதுமக்களையும் விடுவித்து விட்டதாக நம்பப்படுகிறது. கொடூர விடுதலைப் புலிகளால் பொதுமக்கள் பிணையாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளை தாக்குவதை படைகள் தவிர்த்துக் கொண்டிருக்கின்றன. ”

டேவிட் மிலிபண்ட், பிரிட்டன் வெளியுறவு செயலாளர் (2007-2010)

“விடுதலை புலிகள் பொதுமக்களை பாதுகாப்பு கேடயமாக வைத்திருந்தால், அப்படி சில இடங்களில் அதை செய்தார்கள் என்பது உண்மைதான், அதுவும் ஒரு போர்க்குற்றம்தான். ஆனால், அந்த இடங்கள் மீதும் மக்கள் மீதும் குண்டு வீசி தாக்குவதை அது நியாயப்படுத்தாது. பயங்கரவாத அமைப்புகளை விட ஜனநாயக அரசுகளுக்கு அதிகமான பொறுப்பு உள்ளது, அந்த பொறுப்புகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.”

இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளம் அதை கச்சிதமான மீட்பு நடவடிக்கையாக சித்தரித்தது. ஐநா மற்றும் பிற மதிப்பீடுகள் 1500 வரையிலான உயிர்கள் பறிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டுகின்றன.

சாம் ஜாரிபி, சர்வதேச பொதுமன்னிப்பு சபை

“இப்போது கிடைத்திருக்கும் ஆதாரங்கள் போர்க்குற்றங்கள் நடந்தன என்று உறுதியாக சுட்டிக்காட்டுகின்றன. மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களும் நடந்திருக்கலாம். ஒரு முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்”

புதுமாங்களத்துக்கு யார் பொறுப்பாக இருந்தார்கள்? மேற்கிலிருந்து தாக்குதல் பிரிகேடியர் பிரசன்னா டி சில்வாவின் கட்டுப்பாட்டில் இருந்த 55வது படைப்பிரிவினால் நடத்தப்பட்டது. நேரடி தாக்குதல் சுரேந்திர டி சில்வாவின் கட்டுப்பாட்டில் இருந்த 58வது பிரிவினால் நடத்தப்பட்டது. தாக்குதல் நடந்த இடத்தில் அவர் கொடுத்த பேட்டி

“நாங்கள் பெரும் வெற்றி அடைந்திருக்கிறோம். இது பிணைக்கைதிகள் மீட்பு நடவடிக்கைகளிலேயே மிக வெற்றிகரமான ஒன்று என்று சொல்லலாம்”

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இராணுவத் தாக்குதலால் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஏற்றுக் கொண்டது. அந்த சாவுகள் எதிரெதிர் குண்டு வீச்சினால் ஏற்பட்டவை என்றும் இராணுவத்தின் குண்டு வீச்சுகள் அளவுடனும் நியாயப்படுத்தும்படியாகவும் இருந்தன என்றது. ஆனால் ஆதாரங்களின்படி இது ஒரு சாத்தியமான போர்க்குற்றம் என்று சார்பில்லாத பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.

பேராசிரியர் வில்லியம் ஷாபாஸ், மனித உரிமைகள் வழக்கறிஞர்

“இவை ஊகங்கள்தான், தாக்குதல்கள் நடந்த போது அவை தேவைக்கு அதிகமாக இருந்திருக்கலாம், பொதுமக்கள் அல்லது மருத்துவமனை போன்ற பொது இடங்கள் தாக்கப்பட்டிருக்கலாம். உண்மைகளை கண்டறியும் வழி கடுமையான குறுக்கு விசாரணையுடன் கூடிய முழுமையான விசாரணையே ஆகும். பொருத்தமான விளக்கம் தரும்படி தலைவர்கள் கேட்கப்பட வேண்டும்

முறையான எந்த ஒரு விசாரணையும் சந்திக்க வேண்டிய முக்கிய கேள்வி, யார் இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டார்கள்? பொறுப்பு எவ்வளவு உயரம் வரை போகிறது?

சாம் ஜாரிபி, சர்வதேச பொதுமன்னிப்பு சபை

“ஜனாதிபதி ராஜபக்சே நாட்டின் மிக உயர்ந்த இராணுவ அதிகாரி. அவர்தான் தலைமை தளபதி, அப்படித்தான் அவர் தன்னை சித்தரித்துக் கொண்டார். பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்சேவும், தான் இராணுவ போர்த் திட்டங்களில் பெருமளவு ஈடுபட்டிருந்தாக அறிவித்துக் கொண்டார். குறிப்பான நிகழ்வுகளைப் பற்றி இவர்கள் இரண்டு பேரையும் கேள்வி கேட்பதற்கு எல்லா காரணங்களும் இருக்கின்றன. கட்டளை சங்கிலி நடைமுறையில் என்னவாக இருந்தது என்பதை நிறுவுவதற்கு எல்லா காரணங்களும் இருக்கின்றன. குறிப்பாக இறுதி வாரங்களில் நடந்த இரணகளமான, எதிர்பார்த்தபடியே இரணகளமான நிகழ்வுகளுக்கு இது மிக மிக அவசியமானது”

அடுத்த சில வாரங்களில், கனரக குண்டு வீச்சும் இடைவிடா தாக்குதலும் பாதுகாப்பு பகுதியில் மேலும் மேலும் களேபரத்தை உருவாக்கி வந்த போது அரசாங்கத்தின் மேல் மட்டத்திலிருந்து வந்த மறுப்புகள் மேலும் மேலும் திட்டவட்டமாக இருந்தன.

மகிந்த ராஜபக்சே

“நாங்கள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றால் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது.  நாங்கள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை, நாங்கள் இல்லை என்று சொன்னால் இல்லை என்றுதான் பொருள்.”

செயற்கை கோள் படங்களையும் ஐநா நிபுணர்கள் குழுவின் வரைபடங்களையும் இணைத்த ஐநாவின் ரகசிய அலசல் அறிக்கையை நாங்கள் பெற்றிருக்கிறோம். அவர்கள் அப்படிப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தத்தான் செய்தார்கள் என்றும் அவற்றை பாதுகாப்பு பகுதிகளின் மீது குறி வைத்தார்கள் என்றும் அவை சுட்டிக் காட்டுகின்றன.

“கனரக ஹௌவிட்சர் ரக பீரங்கிகளின் சுடும் முனையை மீண்டும் மீண்டும் திருப்பி முதலில் பாதுகாப்பு பகுதி 2ன் மீதும் பின்னர் பாதுகாப்பு பகுதி 3ன் மீதும் இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள் என்பது காலவரிசைப் படியான பீரங்கி படைகளின் நகர்வுகளை ஆய்வு செய்வதன் மூலம் தெரிய வந்தது. பொருத்தமான இராணுவ இலக்குகள் இல்லாத பாதுகாப்பு பகுதி 2 மற்றும் பாதுகாப்பு பகுதி 3க்குள் இருக்கும் இடங்கள் மட்டும் இருக்கும் போதும் இலங்கை இராணுவம் பீரங்கி அணிகளை நிறுத்தியிருந்தது”

போரின் கடைசி அரை மாதத்தில், மே 8, 2009 இரவில் பாதுகாப்பு பகுதி ஒரு மைல் அகலமுள்ள சிறுபகுதியாக குறைக்கப்பட்டது. இதுதான் போரின் மூன்றாவதும் இறுதியானதுமான பாதுகாப்பு பகுதியாகும். மே 17 அன்று அமெரிக்கர்கள் ஒரு போர் நிறுத்தத்தை பரிந்துரைத்தார்கள் என்று புதிதாக வெளியிடப்பட்ட விக்கிலீக்ஸ் கேபிள்கள் பதிவு செய்கின்றன.

“நிலவர அறிக்கை 74: வெளியுறவு தூதுவர் கோத்தபய ராஜபக்சேவிடம் பேசி சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினை சண்டை பகுதிக்குள் அனுமதித்து சரணடைதலை ஏற்பாடு செய்ய அனுமதிக்கும்படி வேண்டினார். ‘நாங்கள் அந்தக் கட்டத்தை எல்லாம் தாண்டி விட்டோம்’ என்பதுதான் ராஜபக்சேவின் பதில்”

அதே நேரம் மீண்டும் குண்டு வீசித் தாக்கப்பட்ட மருத்துவமனைகள் இறந்தவர்களாலும் இறந்து கொண்டிருப்பவர்களாலும் நிரம்பி வழிந்தன. ஆனால் வெளியிலிருந்து உதவி எதுவும் வரவில்லை. அமெரிக்க கேபிள்கள் தெரிவிப்பது போல ஜனாதிபதியின் அலுவலகம் செஞ்சிலுவை சங்கத்துக்கு அனுமதி மறுத்துக் கொண்டே இருந்தது.

“நிலவர அறிக்கை 74: காயமடைந்தவர்களை மீட்டு வருவதற்கு பன்னாட்டு செஞ்சிலுவை சங்கத்துக்கு தூதுவர் மீண்டும் அனுமதி வேண்டினார்”

அந்த கோரிக்கை “உறுதியாக மறுக்கப்பட்டது”

செஞ்சிலுவை சங்கம் மக்களை மீட்க தவறியதால் அரசு படைகள் தாமே அதை செய்ய வேண்டி வந்தது என்று அரசாங்கம் சொன்னது. மீட்பு பணி நடைமுறையில் எப்படி நடந்தது என்று இவர் சொல்கிறார். அரசு படைகள் வரும் போது அவர் பலத்த காயங்களுடன் பதுங்குகுழியில் ஒழிந்து கொண்டிருந்தார்.

(முகம் மறைக்கப்பட்ட மனிதர் பேசுகிறார் -தமிழில்)

படைகள் முன்னேற முன்னேற இன்னும் ஒரு கொலை செய்யும் முறை உருவானது. நிர்வாணப்படுத்தப்பட்டு கட்டப்பட்ட விடுதலைப் புலி போராளிகள் இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்படுவதே எங்களது முதல் ஆவணப்படத்தின் மிகவும் சின்னமாக விளங்கிய காட்சிகளாக இருந்தன. பெண் போராளிகளுக்கு எதிராக பாலியல் வன்முறை நடந்திருக்கலாம் என்பதை சுட்டும் காட்சிகளையும் ஒளிபரப்பினோம். விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி வழங்குனர் இசைப்பிரியாவும் இதில் அடங்குவார்.

பெரும்பான்மை வீடியோக்கள் இலங்கை இராணுவத்தின் படைவீரர்களால் வெற்றியின் நினைவுச் சின்னங்களாக மொபைல் போன் கேமராக்களில் பிடிக்கப்பட்டவை. இந்த வீடியோக்கள் சார்பில்லாத வீடியோ நிபுணர்களாலும், தடயவியல் நிபுணராலும் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையினால் அமர்த்தப்பட்ட சிறப்பு நிபுணர் குழுவினாலும் நம்பகமானவை என்று உறுதி செய்யப்பட்டன. அவை போலியானவை என்று இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. எல்எல்ஆர்சி இந்த வீடியோக்களையும் சட்ட விரோத கொலைகளையும் பரிசீலித்த போது ஒரு முடிவை எட்டுவதை தவிர்த்து விட்டது. பதிலாக இன்னொரு விசாரணை நடத்த பரிந்துரை சொன்னது.

சென்ற மாதம் தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக் கொண்ட இலங்கை இராணுவம் எல்எல்ஆர்சி எழுப்பிய விஷயங்களைப் பற்றியும் எமது சென்ற ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சசாட்டுகளையும் விசாரிக்க முன் வந்தது. ஆனால் இந்த விசாரணை சுதந்திரமான இன்னொரு அமைப்பால் இல்லாமல் இராணுவத்தாலேயே நடத்தப்படும். யாருக்கெல்லாம் இந்த கொலைகளைப் பற்றி தெரிந்திருந்தது என்பதும் யார் இதற்கு ஒப்புதல் கொடுத்தார்கள் என்பதும் முக்கியமான கேள்விகள். ஏனெனில் நமது 4வது குற்றப் பதிவு கொலைகளுக்கான புதிய ஆதாரங்களை கொண்டுள்ளது. அதற்கான பொறுப்பு இலங்கை அதிகார அமைப்பின் மிக உயர் நிலை வரை போகின்றன என்று சுட்டிக் காட்டுகிறது.

நாங்கள் இப்போது பெற்றுள்ள இந்த மனதை உறைய வைக்கும் புதிய வீடியோ பதிவில் குறைந்தது ஒரு கொலை செய்யப்பட்டவரை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன். இந்த பதிவு முன்னணி சார்பற்ற நிபுணர்களால் பரிசீலிக்கப்பட்டு அதன் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேராசிரியர் டெரிக் பவுண்டர், தடயவியல் நிபுணர்

“இது ஐந்து ஆண்களும் ஒரு சிறு பையனும் உள்ள ஒரு கொலைக் காட்சி. 5 ஆண்களின் கைகள் பின்புறம் இருக்கின்றன. அவர்கள் இப்போதுதான் இறந்திருக்கிறார்கள். அவர்கள் கட்டப்பட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் கடைசி மனிதனைத் தவிர மற்றவர்கள் கட்டப்பட்டதற்கான அடையாளம் தென்படவில்லை. நாம் பார்த்த பிற பதிவுகளைப் போலவே இதுவும் இருக்கின்றது. அவற்றிலும் கைதிகள் கைகள் பின்புறம் கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, தரையில் முட்டியிட வைத்து சுடப்பட்டார்கள்”

பாலசந்திரன் பிரபாகரன் என்ற 12 வயது பையனின் கதைதான் இந்த வெறி பிடித்த கொலைகளின் இயல்பை தெளிவாக்குகின்றன. ஒரு மூத்த இலங்கை அதிகாரி சத்திய பிரமாணத்தின் கூழ் கீழ் கொடுத்த வாக்குமூலத்தின் படி அவனது தந்தையின் இருப்பிடத்தைப் பற்றி விசாரணை நடத்தப்பட்டு அந்த பையன் கொல்லப்பட்டான்

“அவன் 5 பாதுகாவலர்களுடன் சரண்டைய அனுப்பி வைக்கப்பட்டான். சிறிது காலத்துக்குப் பிறகு அவரது மகன் மூலம் பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்று அறிந்து கொண்டார்கள் என்று தெரிய வந்தது. அதற்கு பிறகு அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள் என்று எனக்குத் தெரிய வந்தது”

அந்த 12 வயது பையன் சுடப்பட்டது கொலைதான், சண்டையில் ஏற்பட்ட காயங்களினால் அல்ல என்பதை இந்த உயர் விவர படங்களில் தெளிவாக பார்க்க முடிகிறது.

பேராசிரியர் டெரிக் பவுண்டர், தடய நோயியல் நிபுணர்

“அவன் மீது 5 துப்பாக்கிச் சூட்டு காயங்கள் இருக்கின்றன, இங்கே, இங்கே, இங்கே, மற்றும் இந்த இடத்தில் இரண்டு துப்பாக்கிச் சூட்டு காயங்கள். இதுதான் முதலில் சுடப்பட்ட காயமாக இருக்க வேண்டும். அதைச் சுற்றி வெடிமருந்து புகையும் துகள்களும் படிந்திருப்பதால் அது அழுக்காக தெரிகிறது. இதனால் சுடப்பட்ட ஆயுதத்துக்கும் பையனின் உடம்புக்கும் தூரம் 2 அல்லது 3 அடிக்குள்தான் இருந்திருக்கும் என்று தெரிகிறது. அவன் கையை நீட்டி தன்னை கொன்ற துப்பாக்கியை தொட்டிருக்க முடியும். இந்த காயம் பெற்றவுடன் அவன் பின் நோக்கி விழுந்திருக்கிறான். அதன் பிறகு இந்த இரண்டு காயங்களையும் பெற்றிருக்கலாம். அவை கீழ் பகுதியில் மழுங்கலாக இருப்பது, குண்டுகள் உடம்பில் மேல் நோக்கி சென்றன என்று காட்டுகின்றது. அவனது இடது தோளின் மேல் பகுதியில் சந்தேகத்துக்கிடமில்லாத ஒரு வெளியேறும் காயம் இருப்பதை பார்க்க முடிகிறது. எனவே சுடுபவர் அவன் தரையில் விழுந்து கிடக்கும் போது அவன் காலுக்கு அருகில் நின்று கொண்டு மேல் நோக்கி சுட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இது ஒரு கொலை, சந்தேகமில்லாத படுகொலை”

“இந்த குழந்தை சித்திரவதை செய்யப்பட்டதாக ஏதாவது அறிகுறிகள் தெரிகின்றனவா? ஏனென்றால் அவனிடமிருந்து இன்னும் பலரைப் பற்றி தகவல் பெற முயற்சி செய்து கொண்டிருந்தார்கள் என்பது தெளிவு”

“உடல் ரீதியான சித்தரவதைக்கான அறிகுறிகள் எதுவும் உடலில் தென்படவில்லை. ஆனால் அவன் இருந்த நிலைமையை நாம் நினைத்துப் பார்க்க முடிகிறது. அவனுக்கு அருகில் 5 உயிரிழந்த ஆண்களை பார்க்கிறோம். அவர்கள் இவனுக்கு முன்னதாக கொல்லப்பட்டிருக்கலாம். அவன் கண்கள் கட்டப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் எதுவுமில்லை என்பதும் அவன் காலருகில் நின்று கொண்டிருக்கும் ஒருவனால் சுடப்பட்டிருக்கிறான் என்பதும் தெளிவாகிறது. எனவே, இதுவே ஒரு வகையான உளவியல் சித்திரவதைதான்.”

பேராசிரியர் வில்லியம் ஷாபாஸ், மனித உரிமைகள் வழக்கறிஞர் :

“இது ஒரு போர்க்குற்றம். இது ஒரு குற்றம், சாதாரண வகை குற்றம், சூழ்நிலைகளை பொருத்திப் பார்க்கும் போது குறிப்பாக ஒரு போர்க்குற்றமாகிறது அது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு”. அப்படி எந்த விசாரணையும் இது வரை நடக்கவில்லை.

“நாம் இலங்கையில் பார்த்த நடவடிக்கைகளிலிருந்து இது ஒரு மூடி மறைப்பு என்று தெளிவாகிறது. இந்த நிகழ்வுகள் நடந்தன என்பதை மறுக்கும் முயற்சி”

அடுத்த நாள் பையனின் தந்தை பிரபாகரனே கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தலை துணியால் மூடப்பட்ட அவரது உடல் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. நாங்கள் பெற்ற அதிகாரபூர்வமற்ற பதிவு ஒரு தலைக் காயத்தையும், இராணுவ மருத்துவ பணியாளர்கள் மூளையிலிருந்து மாதிரி எடுப்பதையும் காட்டுகின்றன. இன்னொரு புகைப்பட வரிசையில், முதலில் பிரபாகரனின் உடல் இராணுவ சீருடையிலும், பின்னர் நிர்வாணமாகவும், பின்னர் சேறு பூசப்பட்டும் காணப்படுகின்றது. தலைக் காயம்தான் மிகவும் முக்கியமானது.

பேராசிரியர் டெரிக் பவுண்டர், தடயவியல் நிபுணர்

இது உயர் வேக துப்பாக்கி சூட்டு காயம் ஒன்றின் காட்சி. முன்பக்கம் இருக்கும் வெளியேறிய பகுதியை நாம் புகைப்படத்தில் பார்க்கிறோம். புகைப்படத்தில் தெரியாத தலையின் பின்பக்கம் நுழைவு காயம் இருக்கும் என்று ஊகிக்கலாம். தலையில் ஒற்றை துப்பாக்கி குண்டு காயம் படுவது சண்டை சூழலில் சாத்தியமில்லாத ஒன்று. எனவே, தாக்கப்படுபவர் நகராமல் இருக்கும் போது குறி வைத்து சுடப்பட்டிருக்கலாம் என்று சொல்ல வேண்டும்”

பேராசிரியர் வில்லியம் ஷாபாஸ், மனித உரிமைகள் வழக்கறிஞர்

“சட்ட விரோதமான மரண தண்டனைகளை நடத்தும் படைகளுக்கு பொறுப்பான மூத்த இராணுவ அதிகாரி, அவை நடக்க சாத்தியமுள்ள நேரத்தில் அவற்றை நிறுத்தும்படி ஆணையிடா விட்டால், நடந்த பிறகு அவர்களை தண்டிக்காமல் இருந்தால் அவரே போர்க்குற்றங்களுக்கான வழக்கை சந்திக்க வேண்டும். ஒரு வகையில் அவர் இந்த குற்றத்தில் பங்கேற்றிருக்கிறார்”

இந்த ஆவணப்படத்திலும் முதல் படத்திலும் நாங்கள் காட்டிய ஆதாரங்கள் இன்னும் அதிகமான பொறுப்பை சுட்டிக் காட்டுகின்றன. கைகள் கட்டப்படுவது, உடைகள் நீக்கப்படுவது, தலைக்குப் பின் துப்பாக்கியால் சுடுவது, அனைத்தும் இது பிடிக்கப்பட்ட அல்லது சரணடைந்த விடுதலைப் புலி போராளிகளை திட்டமிட்ட முறையில் கொல்வது கொள்கையாக இருந்தது என்பதை சுட்டுகின்றன.

பேராசிரியர் வில்லியம் ஷாபாஸ், மனித உரிமைகள் வழக்கறிஞர்

“இது மிகவும் கடுமையான குற்றம். தலைமை இதை கண்டு கொள்ளாமல் மட்டும் இருக்கவில்லை நேரடியாக வழிநடத்தி கட்டுப்படுத்தி உத்தரவிட்டு நடத்தியது என்று நிரூபிக்க முடிந்தால் கடுமை இன்னும் அதிகமாகிறது. நாங்கள் முழுக் கட்டுப்பாடு வைத்திருக்கிறோம் என்று உயர் அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, இந்த மாதிரிகள் தொடர்ந்து நடந்தன என்று நிரூபித்தால், கீழ் மட்டத்தில் குற்றவாளிகள் இவற்றை நடைமுறையில் நடத்தினார்கள் என்று நிரூபித்தால், உயர் மட்டத்தையும் கீழ் மட்டத்தையும் இணைப்பதில் இருக்கும் சட்ட சிரமங்கள் பெருமளவு நீக்கப்பட்டு விடுகின்றன”

பிரபாகரன் இறந்து விட, போர் நடவடிக்கைகள் மே 18, 2009-ல் முடிவுக்கு வந்தன. போர்க்களத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட உடல்கள் பலவற்றில் கொலை, பாலியல் வன்முறைக்கான அடையாளங்கள் தெரிந்தன.

கடற்கரையில் வெற்றிமாலை சூடிய இராணுவ வீரர்கள் போரில் பயன்படுத்தவே இல்லை என்று சாதித்த கனரக பீரங்கிகளிலிருந்து கொண்டாட்ட முழக்கங்களை எழுப்பினார்கள்.

உலகத்தின் முன்பு இது ஒரு வெற்றி முழக்கம், ஒரு போரிடும் சக்தியாக விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதை குறிக்கும் செய்கை. போர் முடிந்து விட்டது. ஆனால், நாங்கள் காட்டியது போல போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இலங்கையின் எதிர்வினை பெருமளவிலான பன்னாட்டு பிரச்சாரமும் அனைத்து எதிர்ப்பு குரல்களையும் இரக்கமில்லாமல் ஒடுக்கும் முயற்சியுமாக இருந்தது.

இலங்கையின் உள் நாட்டுப் போரின் முடிவைப் பற்றிய உண்மைகள் வெளியாகும் போது உலகம் அவற்றை எப்படி அனுமதித்தது என்ற கேள்வி எழுகிறது. அதற்கான விடை ரகசிய பன்னாட்டு வெளியுறவுகளுக்கான உலகில் இருக்கிறது.

வடக்கில் போர் உச்சக் கட்டத்தில் இருக்கும் போது ஏப்ரல் 29, 2009 அன்று அன்றைய பிரிட்டிஷ் வெளியுறவு செயலர் டேவிட் மிலிபேண்ட் இலங்கை வெளியுறவு அமைச்சர் ரொஹீதா பகலகாமாவுடன் பேச்சு நடத்த இலங்கை தலைநகர் கொழும்புக்கு வந்தார். சூழல் இணக்கமாகவே தென்பட்டது. ஆனால் வெளியிடப்பட்ட ஆதாரம் மிலிபேண்ட் உண்மையில் இலங்கை அரசைப் பற்றி என்ன நினைத்தார் என்று காட்டுகின்றது.

“அவர்கள் பொய்யர்கள்” என்று அவர் சொல்லியிருந்தார். அவரது சொற்கள் கொழும்புவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திலிருந்து வாஷிங்டனில் இருக்கும் வெளியுறவுத் துறைக்கு அனுப்பபட்ட கேபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது கருத்து முறையானதாக இல்லாமல் இருந்தாலும் ஆதாரங்கள் சுட்டிக் காட்டுவது போல துல்லியமானதாக இருந்தது. அவர் சொல்ல முயற்சித்த பொய்க்கு ஒரு கணக்கிடப்பட்ட நோக்கம் இருந்தது.

டேவிட் மில்லிபண்ட்

“தெளிவாக, ஒரு பிரச்சார யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ராஜபக்சே அரசாங்கத்தின் அணுகுமுறை முழுக்க முழுக்க தூய்மையானது என்று வலியுறுத்த வேண்டிய அவசியம் இருந்தது. போரின் இறுதி வாரங்கள், இறுதி நாட்களை நடத்திச் செல்வதற்கு அது தேவையாக இருந்தது”

உலகத்துக்கு எதை வேண்டுமானாலும் சொல்லி, எவ்வளவு நம்பமுடியாததாக இருந்தாலும் சொல்லி, வேண்டிய அவகாசத்தை ஈட்டுவதற்கு பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இருந்தது. ஆதாரங்கள் சுட்டுவது போல விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டவும் திட்டமிட்டு தமிழ் பொதுமக்களை குறி வைக்கவும் அந்த அவகாசம் தேவைப்பட்டது.

ஜனாதிபதி ராஜபக்சேவை கொழும்பில் சந்திக்கும் ஜான் ஹோம்ஸ் அப்போது ஐநா மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான தலைவராக இருந்தார்.

“ராஜபக்சே அரசு உண்மையில்லாத உறுதிகளை அளித்தது, பொய்களை சொன்னது, ஆனால் செய்து கொண்டிருந்ததை தொடர்ந்து செய்தது என்பதுதான் ஐநாவுக்கும் பன்னாட்டு சமூகத்துக்கும் எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டு.”

சர் ஜான் ஹோம்ஸ், மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. தலைவர், 2007-2010

“அது பெருமளவில் உண்மை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் வாக்குறுதிகளை கொடுத்து விட்டு பிறகு அவற்றை காப்பாற்றவில்லை. அவர்கள் செய்ய நினைத்திருந்ததை இறுதி வரை செய்து முடித்தார்கள். அதாவது பொதுமக்கள் உட்பட எத்தனை உயிர்கள் போனாலும் சரி விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக ஒழித்துக் கட்டுவது அவர்களது நோக்கமாக இருந்தது. பன்னாட்டு சமூகத்தில் யாரும் அவர்களை தடுத்து நிறுத்த தயாராக இருக்கவில்லை என்று அவர்கள் நம்பினார்கள், அதுதான் நடந்தது”

அச்சுறுத்தப்பட்ட பொது மக்கள் மீது அனுதாபம் இருந்தாலும் பயங்கரவாதத்தின் மீது போர் என்ற முழக்கத்தின் ஆதிக்கத்தில் இருந்த உலகில் அவர்களுக்காக எதையும் செய்ய யாருக்கும் விருப்பம் இருக்கவில்லை.

“பெரும் அளவிலான தமிழ் மக்கள் வாழும் இந்தியாவின் அரசு உட்பட பல அரசுகள், மக்கள் மீது தமது அக்கறையை காட்ட விரும்பிய போதும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதற்கு இலங்கை அரசுக்கு மறைமுகமான பச்சை விளக்கு காட்டிக் கொண்டிருந்தன”

சாம் ஜாரிபி, சர்வதேச பொதுமன்னிப்பு சபை :

“விடுதலைப் புலிகள் தீர்த்துக் கொட்டப்படுவதை கண்களை மூடிக் கொண்டு மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள பல பேர், பல நாடுகள் உலகெங்கிலும் இருந்தனர்”

சர் ஜான் ஹோம்ஸ், மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. தலைவர், 2007-2010

“இதைச் சுற்றி ஒரு வகையான இராஜதந்திர நடனம் நடைபெற்றது. இதன் முடிவு இலங்கை அரசின் தவிர்க்க முடியாத இராணுவ வெற்றியாகவும், விடுதலைப் புலிகளின் தவிர்க்க முடியாத தோல்வியாகவும் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அது நடப்பதற்காக காத்திருப்பதுதான் தேவையானதாக இருந்தது. முடிந்த வரை சீக்கிரமாக முடிந்து விட வேண்டும் என்ற நம்பிக்கையும், குறைந்த அளவு உயிரிழப்புடன் நடந்து விட வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. கொஞ்சம் கோணலான எண்ணமாக இருந்தாலும், நான் அவதானித்த நிதர்சனம் அதுதான்.”

போரில் வெற்றி பெற்று விட்ட பிறகு இலங்கை அரசு உலகின் பிற நாடுகள் இலங்கை விவகாரங்களிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று எச்சரித்தது. நியூயார்க்கில் ஐக்கியநாடுகள் சபையில் நிகழ்த்திய ஒரு முக்கிய உரையில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்சே தனது சொந்த வழியில் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதாக வலியுறுத்தினார்.

“வரலாறு நமக்கு ஒன்றை கற்றுக் கொடுத்திருக்கிறது. வெளியிலிருந்து தீர்வுகளை சுமத்துவது துயரத்தையும், கோபத்தையும் கொண்டு வந்து இறுதியாக தோல்வியில் கொண்டு விடுகின்றது. இதற்கு மாறாக எங்களுடையது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முறை ஆகும்

இருப்பினும் தனது செய்தியை கொண்டு சேர்க்க ராஜபக்சே வெளிநாட்டு உதவியை மகிழ்ச்சியாக தேடிக் கொண்டார்.   ரகசியமாக பதிவு செய்யப்பட்ட பிரிட்டிஷ் பொது உறவு நிறுவனத்தின் நிர்வாகி ஒருவருடனான இந்த உரையாடல் அதை வெளிப்படுத்துகிறது

“எங்கள் ஒரு அணி ஜனாதிபதி அலுவலகத்தில் வேலை செய்தது. கடந்த ஆண்டு ஜனாதிபதி ராஜபக்சேவின் ஐநா உரையை நாங்கள்தான் எழுதினோம், அது நல்ல முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.”

ஜனாதிபதி இராஜபக்சேவின் அந்த உரை சர்வதேச விமர்சனங்களை தவிர்த்து விடுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பெரும் பிரச்சார தாக்குதலுக்கு முன்னோடியாக இருந்தது. எங்களது முந்தைய ஆவணப்படம், இலங்கையின் கொலைக்களங்கள், உலகம் முழுவதும் காட்டப்பட்டது. இலங்கை அரசாங்கம் அதற்கு பதிலளிக்க தனது சொந்த ஆவணப்படம் ஒன்றை தயாரித்தது. “ஒப்புக் கொள்ளப்பட்ட பொய்கள்” என்று அழைக்கப்பட்ட ஒரு மணி நேர ஆவணப்படம்

மினோலி ரத்னாயகே :

“மோசடி செய்யப்பட்ட காட்சிகள், வேண்டுமென்றே சொல்லப்படும் பொய்கள், உண்மையானவையாக காட்டப்படுகின்றன. வெற்றிடத்திலிருந்து எண்ணிக்கைகள் உருவாக்கப்பட்டு உண்மையாக காட்டப்படுகின்றன. தகவல்களுக்கான ஆதாரம் சொல்லப்படவில்லை, முகங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன, குரல்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.”

போர்ப் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை மனதை உருக்கும் வகையில் வெளிப்படுத்திய அரசு மருத்துவர்களின் வாக்குமூலத்தின் நம்பகத் தன்மையை உடைப்பது இந்த ஆவணப் படத்தின் முக்கிய முயற்சியாக இருந்தது. உயிரிழப்பு விபரங்களை மிகைப்படுத்தி சொல்லும்படி விடுதலைப் புலிகளால் மருத்துவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்று இலங்கை அரசாங்கத்தின் படம் குற்றம் சாட்டுகிறது. போரின் முடிவில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் வெளிப்படையாக தமது வாக்குமூலங்களை திரும்ப பெற்றதாக ஒரு படத்தை காட்டுகிறார்கள்.

“அவர்கள் இப்போது பயமில்லாமல் பேச முடிகிறது. வாருங்கள் கேட்கலாம்”

“நாங்கள் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்தோம். விடுதலைப் புலிகள் எங்களிடம் பொய்களை சொன்னால் அதை நாங்கள் சொல்ல வேண்டியிருந்தது. சில சமயம் அவர்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் வந்து அதை வெளியிடச் சொன்னார்கள்”

சரி, இந்த மருத்துவர்கள் எப்படி இந்த மறுப்பை வந்தடைந்தார்கள்? இந்த அமெரிக்க கேபிள் ஒரு துப்பு கொடுக்கிறது. போருக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் என்று கொண்டாடப்படாமல் இந்த மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் கொழும்பில் குற்றவியல் விசாரணைப் பிரிவில் தடுப்பு ஆணையில் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர் என்றும் அது தெரிவிக்கிறது.

அங்கே என்ன நடந்தது என்பதற்கான ஒரு நேரடி சாட்சியை நாங்கள் இப்போது பெற்றுள்ளோம். அவர்கள் சொன்னதை திரும்பப் பெறாவிட்டால், இலங்கையின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 18 மாதங்களுக்கு சிறை வைக்கப்பட்டு அதன் பிறகு வழக்கு தொடரப்பட்டு பல ஆண்டு சிறைத் தண்டனை பெறுவார்கள் என்று சொல்லப்பட்டது. அரசாங்க பத்திரிகையாளர்கள் என்ன கேள்விகள் கேட்பார்கள் என்று சொல்லப்பட்டு அவற்றுக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்றும் சொல்லித் தரப்பட்டது. செய்தியாளர் கூட்டத்திற்கு பிறகு மருத்துவர்கள் மீண்டும் பல வாரங்கள் காவலில் வைக்கப்பட்டார்கள்.

உள்நாட்டில் விமர்சகர்களை அடக்குவதோடு மட்டுமில்லாமல் வெளிநாட்டு விமர்சகர்களின் நம்பகத்தன்மையை தாக்கும் இயக்கமும் நடத்தப்பட்டது. அரசு சார்பு இலங்கை ஊடங்களை சந்தித்த போது எங்கள் குழுவினர் நேரடியாக அனுபவித்ததை இங்கு குறிப்பிடலாம். ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் அரசு தலைவர்கள் சந்திப்பு நிகழ்வின் போது. ஜனாதிபதி ராஜபக்சேவின் ஊடக ஆலோசகர் உள்ளிட்ட அரசு சார்பு ஊடகவியலாளர்களை நாங்கள் எதிர் கொண்டோம்.

“தமிழீழ விடுதலைப் புலிகள்தான் உங்களுக்கு நிதி அளிக்கிறார்கள்”

“இது முழுமையான திரித்தல், பத்திரிகை தொழிலுக்கு அவமானம். இது நெறிமுறைக்கு மாறானது.

“நீங்கள் அந்த வீடியோக்களை உண்மை என்று மறுக்கிறீர்களா?”

“நிச்சயமாக நான் மறுக்கிறேன். நான் அனைத்தையும் மறுக்கிறேன். நீங்கள் பேசுபவர்களை நிழலில் காட்டினீர்கள், சரிதானே? நீங்கள் சொல்வது .. ”

“ஆமாம், அவர்கள் தமது உயிருக்கு பயப்பட்டதால் நிழலில் காட்டினோம்”

“நீங்க எல்லாம் நிஜம்தானா, நீங்க நிஜமானவங்களா”

அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீதான அச்சுறுத்தல் மிகவும் நிதர்சனமானது. நாடு கடத்தப்பட்ட இந்த சிங்கள பத்திரிகையாளருக்கு அது நன்கு தெரிய வந்தது.

பஷானா அபயவர்தனே, இலங்கையில் ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்கள்

“உண்மையில் நீங்கள் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் பற்றி விவாதிக்க விரும்பினால் கொல்லப்படும் ஆபத்தை சந்திக்க அல்லது சிறையிடப்பட தயாராக இருக்க வேண்டும் அல்லது நீங்கள் நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்படுவீர்கள். ஏனென்றால் இது வரை 60 க்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். 2005 ஆம் ஆண்டு முதல், 26க்கும் அதிகமான ஊடகத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்”

தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் தமிழர்கள் கொடூரமாக அடக்கப்படுகிறார்கள். தமது வீடுகளுக்கு போகக் கூட பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, இராணுவம் அவர்களின் நிலங்களை கையகப்படுத்திக் கொண்டு பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

“இதை போருக்கு பிந்தைய நிலைமை என்று சொன்னாலும் போர் கொள்கை இன்னும் தொடர்கிறது. தமிழ் மக்களின் தேசிய வாழ்க்கை அழிக்கப்பட வேண்டும், தமிழ் பகுதிகள் முழுமையாக இராணுவமயமாக்கப்பட வேண்டும். அதன் மூலம் அரசுக்கு எதிராக எந்த எதிர்ப்பும் வராது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் போர்க் கொள்கை.”

ஜனாதிபதி நியமித்த கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் சமரச குழுவின் கண்டுபிடிப்புகள் பன்னாட்டு விமர்சனங்களை சமாதானப்படுத்த போதுமானவை என்று ராஜபக்சே அரசு எப்போதுமே வலியுறுத்தி வந்தது. அது அவ்வாறு செய்யவில்லை.

பொதுமக்கள் கணிசமான அளவில் இறந்தார்கள் என்பதையும் மனிதாபிமான உதவிகள் பற்றாக்குறையாக இருந்தன என்பதையும் பலர் காணாமல் போனார்கள் என்பதையும் குழு ஏற்றுக் கொண்ட போதிலும் அரசாங்கத்திற்கு எந்த பொறுப்பும் இல்லை என்று சொல்கிறது. கொலை செய்யப்படுவதை காட்டும் வீடியோ ஆதாரங்கள் மீதான முடிவை தவிர்த்ததோடு பிரபாகரனின் 12 வயது மகன் கொல்லப்பட்டது போன்ற குறிப்பான நிகழ்வுகளைக் கூட பதிவு செய்யவில்லை. எந்த இடத்திலும் நாம் இந்த ஆவணப்படத்தில் விளக்கியுள்ளவை உள்ளிட்ட போர்க்குற்றங்களுக்கான அதிகாரப் பொறுப்பு பற்றி அது விவாதிக்கவில்லை

கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் சமரச குழுவின் கண்டுபிடிப்புகள் பன்னாட்டு விமர்சனங்களை சமாதானப்படுத்த போதுமானவை என்று இலங்கை அரசு சொன்னது. அப்படி சமாதானப்படுத்தி விட்டதா?

டேவிட் மிலிபண்ட், பிரிட்டன் வெளியுறவு செயலாளர் (2007-2010)

“தனது உருவாக்கம் அல்லது அமைப்பு அல்லது முடிவுகளில் அந்தக் குழு இதை சாதித்து விட்டதாக நான் நம்பவில்லை. இது ஐ.நா. பொது செயலாளரும் நானும் இன்னும் பலரும் கேட்டதை நிறைவு செய்வதற்கு போதுமானதாக இல்லை. குற்றச்சாட்டுகளை பற்றிய சுதந்திரமான மதிப்பீடு தேவை”

சாம் ஜாரிபி, சர்வதேச பொதுமன்னிப்பு சபை

“போரின் இறுதிக் கட்டங்களில் என்ன நடந்தது என்று விசாரிப்பதாக இலங்கை அரசு பன்னாட்டு சமூகத்துக்கு வாக்குறுதி கொடுத்தது. LLRC அந்த விசாரணைக்கான களமாக இருக்கும் என்றும் அதன் மூலம் இந்த கடும் குற்றச்சாட்டுகளை விசாரிக்கப் போவதாகவும் சொன்னது. இப்போது LLRCன் இறுதி அறிக்கை வெளியான பிறகு இலங்கை அரசாங்கம் அப்படி எதுவும் செய்யவில்லை என்று நமக்குத் தெரிகிறது.

இந்த அச்சம் தரும் இரத்தம் தோய்ந்த போரின் சண்டை நடவடிக்கை இறுதியாக 2009 மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்த நாசமாக்கப்பட்ட நிலப்பரப்பில் எத்தனை பேர் உயிழந்தார்கள் என்று யாருக்கும் சரியாக தெரியாது. இதறகு பொறுப்பான சிலர் யார் என்று நமக்குத் தெரியும். ஜனாதிபதி ராஜபக்சே, அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே இருவரும் இன்னும் அதிகாரத்தில் இருக்கிறார்கள். பாதுகாப்பு பகுதியில் இருந்த புதுமாங்குளத்தின் மீது இரத்த தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியவர்கள் வெளியுறவு பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஜெனரல் சுரேந்திர சில்வா, நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கிறார். போர் குற்றங்களுக்கு பொறுப்பானவர் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர் சில காலத்துக்கு ஐ.நா. பொது செயலாளர் பான் கி மூன் உடைய அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான மூத்த ஆலோசனை குழுவில் நியமிக்கப்பட்டார். பிரிகேடியர் பிரசன்னா டி சில்வா லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இராணுவ தூதராக இருக்கிறார். இவர்களில் பெரும்பாலானோருக்கு வழக்கு தொடரப்படுவதிலிருந்து வெளியுறவுத் துறை சட்ட பாதுகாப்பு இருக்கிறது.

எனவே, இலங்கை அரசாங்கம் இதிலிருந்து தப்பி விட்டதா? அல்லது உலகம் இன்னமும் நீதி கேட்குமா?

டேவிட் மிலிபண்ட், பிரிட்டன் வெளியுறவு செயலாளர் (2007-2010)

“அந்த குற்றச்சாட்டுக்கள் இன்னும் அடுக்குகளில் தூங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இது பாதுகாப்பு சபை உள்ளிட்ட ஐ.நா. உறுப்பு நாடுகளின் மற்றும் ஐநா மனித உரிமைகள் குழுவின் பொறுப்பு. வெறும் சொற்களில் மட்டுமில்லாமல் செயலிலும் குற்றங்களுக்கான பொறுப்பு நிர்ணயிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்”

சாம் ஜாரிபி, சர்வதேச பொதுமன்னிப்பு சபை

“ரத்தக் களறியை சரிவர விசாரிக்காத ஐநாவின் தோல்வியும், இலங்கையில் நடந்த துன்பியல் நிகழ்வுகளும் ஐநாவின் நம்பகத்தன்மையை பெரிதளவு பாதிக்கும். இது போன்ற மனித துயரங்களை தவிர்ப்பதற்காகவே அமைக்கப்பட்ட நிறுவனம் ஐநா.”

கடந்த வாரம், லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட “துர் நோக்கமுடனான குற்றச்சாட்டுகளை உறுதியாக நிராகரிப்பதாகவும்” , “சேனல் 4 ஒளிபரப்புக்கு முன்பாகவே ஒளிபரப்புக்கு ஆதாரமான வீடியோன பதிவுகளையும் பிற ஆவணங்களையும் தம்முடன் பகிர்ந்து கொள்ளாததை எண்ணி” வருத்தப்படுவதாகவும் தெரிவித்தார்கள். “சேனல் 4ன் இலங்கை பற்றிய அறிக்கைகளில் தெரியும் தொடர்ச்சியான பகைமை உணர்வும் பக்க சார்புடனுமான கருத்துக்களை” எண்ணி வருந்துவதாகவும், நாங்கள் “மிகவும் போலியான வீடியோக்கள், நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் மூலம் முழுக்க முழுக்க பொய்யாக இலங்கை அரசு மற்றும் இராணுவத்தின் மூத்த தலைவர்களை குற்றம் சாட்டுவதில்” கவனம் செலுத்துவதாகவும் சொன்னார்கள். சேனல் 4, “போருக்கு பின்னர் இப்போது நாட்டில் நடக்கும் பல நேர்மறையான முன்னேற்றங்களை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகவும் அத்தகைய அணுகுமுறை இப்போது நடந்து கொண்டிருக்கும் முழுமையான சமரச பாதையை பாதிக்கும்” என்றும் இலங்கை தூதரகம் சொன்னது.

கடந்த ஆண்டு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்சே மற்றும் அரசு குழுவினர் ஆஸ்திரேலியாவில் கூடிய 2011 காமன்வெல்த் அரசு தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார்கள். ஷாம்பெயின் குடித்துக் கொண்டு நொறுக்குத் தீனிகளை மென்று கொண்டே உலக தலைவர்களுடனும் பிரிட்டிஷ் ராணியுடனும் உறவாடிக் கொண்டிருந்த போது, தமது மறுவாழ்வு உறுதி செய்யப்பட்டு விட்டதாகஅவர்கள் நினைத்திருக்க வேண்டும். அடுத்த காமன்வெல்த் அரசு தலைவர்களின் சந்திப்பு 2013-ல் இலங்கையில் நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்ட போது 40,000 தமிழர்களின் உயிரை வாங்கிய போரின் நினைவுகள் ஒரு தொலைதூர நினைவாக தோன்றியிருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகமும்தான் அவை மறக்கப்படவில்லை என்று உறுதி செய்ய வேண்டும்.

இத்துடன் ஆவணப்படம் நிறைவடைகிறது.

_________________________________________________________

– தமிழாக்கம்: அப்துல்

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

  1. இந்த தமிழ் விளக்கம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, உங்க கம்யூனிஸ்ட் சித்தாந்தம் உள்ள நாடுகள் ஏன் இலங்கை அரசை ஆதரித்து வாக்களித்தது, சீனாவிற்கு வேண்டுமானால் இலங்கை ராணுவ ரீதியாக தேவை படலாம், ரஷ்யாவும், கியபாவும் ஏன் இலங்கை அரசை ஆதரிக்கின்றது என்பதை விளக்க முடியுமா?

  2. இலங்கையில் நடந்த சம்பவங்களுக்கு இலங்கை அரசு மட்டுமல்ல புலி அனுதாபிகளும் பதில் சொல்லியாகவேண்டும். புலிகள் மாண்டுபோய்விட்டார்கள் என்று ஒரே வரியில் சொல்லமுடியாது. புலிகளுக்கு காசு சேர்த்து அனுப்பி அடிங்க! அடிங்க ! என்று உஜார் படுத்திய புலம் பெயர்ந்த மக்களும் இந்த துன்ப நிகழ்ச்சிக்கு துணை போனவர்களே. இதில் எண்ணெய் ஊற்றி மேலும் எரிய வைத்த வைகோ அண்ணாச்சி மற்றும் நெடுமாறன் கோஷ்டிக்கும் பங்குண்டு. அது சரி. இப்போ எழுதிக் கிழிக்கும் தமிழகத்தின் தமிழுணர்வாளர்களே , நீங்கள் (வினவு உட்பட) அப்போ இலங்கையில் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? ‘இலங்கைல நம்ம தமிழினம் அழியுதய்யா ! என்று வீட்டிலே தாழ்ப்பாள் போட்டுவிட்டு பிலாக்கணம் வைத்துக் கொண்டிருந்தீர்களோ ?
    டில்லி மேல பழி போட்டு நீங்க தப்பிச்சிட்டீங்க. நம்மக் காப்பாத்த ஒரு பயல் கூட வரல்லியே ! செத்த வீடு முடிஞ்சி போச்சய்யா. இப்ப போய் கத்தி என்னடா பண்ணப்போறீங்க?

    • அலெக்சு, தமிழ்நாட்டுல நாங்க என்ன செஞ்சோம்ங்கறத https://www.vinavu.com/category/tamil-eelam/ சுட்டியில போய் பாருங்க, அதே நேரத்துல நீங்க என்ன செஞ்சுகிட்டிருந்தீங்கன்னு சொல்லலயே….?

  3. ம.க.இ.கவின் சார்பாக இந்திய குடியரசு தினத்தில் பெரிய சாலை மறியல் சைதாப்பேட்டையில் நடந்து ஆயிரக்கணக்கில் கைதானார்கள். ரயில், பஸ், தெருமுனைப் பிரச்சாரம் எல்லாம் செய்தோம். மக்கள் கொல்லப்படுவதற்கு இந்திய அரசு மட்டுமல்ல தமிழக அரசியல்வாதிகளும் காரணம் என்று உரத்துச் சொன்னேம்.

  4. சானல் 4 தமிழாக்கம் மிகவும் பாராட்டுக்குரியது.

    // புதுமாங்களத்துக்கு யார் பொறுப்பாக இருந்தார்கள்? மேற்கிலிருந்து தாக்குதல் பிரிகேடியர் பிரசன்னா டி சில்வாவின் கட்டுப்பாட்டில் இருந்த 55வது படைப்பிரிவினால் நடத்தப்பட்டது. நேரடி தாக்குதல் சுரேந்திர டி சில்வாவின் கட்டுப்பாட்டில் இருந்த 58வது பிரிவினால் நடத்தப்பட்டது. தாக்குதல் நடந்த இடத்தில் அவர் கொடுத்த பேட்டி //

    புதுமாங்களம் புதுமாத்தளன் என்றும், சுரேந்திர டி சில்வா சவேந்திர டி சில்வா (பேருக்கேத்த குற்றவாளிதான்) என்றும் திருத்த வேண்டுகிறேன்.

    // ஜெனரல் சுரேந்திர சில்வா, நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கிறார். போர் குற்றங்களுக்கு பொறுப்பானவர் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர் சில காலத்துக்கு ஐ.நா. பொது செயலாளர் பான் கி மூன் உடைய அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான மூத்த ஆலோசனை குழுவில் நியமிக்கப்பட்டார். பிரிகேடியர் பிரசன்னா டி சில்வா லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இராணுவ தூதராக இருக்கிறார். //

    இங்கும் சவேந்திர சில்வா என்றிருக்க வேண்டும். இந்தப் போர்குற்றவாளி ஈழத் தமிழ்ச் சகோதரிகளை வல்லுறவுக் கொலைகளுக்கு உட்படுத்தியது போதாதென்று நியூயார்க்கில் ஒரு சிங்கள அதிகாரியின் மகளையும் மானபங்கம் செய்யமுயன்று செருப்படி வாங்கியவன்.

  5. முள்ளிவாய்க்காலில் இலங்கை மேற்கொண்டது போன்று மனிதத்திற்கு எதிரான மிகப் பெரிய கொடுமைகளை இந்தியாவும் சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் ஈழ மண்ணில் அரங்கேற்றியிருந்தது.

    http://www.tamilwin.com/show-RUmqyDRVPdiq4.html

    nirajdavid@bluewin.ch நிராஜ் டேவிட்

  6. இலங்கையில் புலிகளால்தான் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தமிழ் மக்களையும் சிறுவர்களையும் கேடயங்கலாகப்பயன்படுத்தி மக்களை கொன்று குவித்தார்கள். அமிர்தலிங்கம், பத்மநாபா மற்றும் ஏராளமான தமிழ் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். இதெல்லாம் நியாயம்தான? அதிலும் யாழ்ப்ப்னத்தமிழர்கள் வேறாம் இந்தியாவில் இருந்து சென்ற தோட்டத்தொழிலாளர்கள் வேறாம். வைகோ, நெடுமாறன்,திருமாவளவன் மற்றும் ராமதாஸ் ஆகிய “லெட்டர் படு” கச்சிதலவர்கள் எதோ அறிக்கைவிட்டு தங்கள் பெயரை அவ்வப்போது விளம்பரப்ப்டுத்திகொல்கிரார்கள். மக்களின் வயிறிலடித்து பிழைப்பு நடத்துகிறார்கள்!!!!

  7. தற்போது தமிழகத்தில் தோன்றி இருப்பது தமிழ் இனஉணர்வு அல்ல. ஏன் என்றால் 1990 புலிகள் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை 24 மணி நேரத்தில் வடக்கில் இருந்து முழுதுவதுமாக விரட்டபட்டார்கள். ஆனால் இன்றுவரை தமிழினம் பேசும் யாரும் வாய் திறக்கவில்லை. வினவு உட்பட. தமிழ் பேசும் யாவரும் தமிழர்கள் தானே. 500 ரூபாய் மாத்திரமே எடுத்துகொண்டு போக அனுமதிக்கப்பட்டார்கள். பெண்கள், வயோதிபர்கள், குழந்தைகள் என்று பாராமல் இரவோடு இரவாக விரட்டபட்டர்கள் . அப்போது அமெரிக்கா எங்கு இருந்தது. ஐக்கியநாடுகள் சபை எங்கு இருந்தது. எந்த முகத்தை கொண்டு தமிழினம் பேசுகிறிர்கள். 2002 அம் ஆண்டு கிழக்கில் உள்ள முதூர் என்ற கிராமத்தில் நூற்றுகனகானவர்களை கொன்றார்கள் . 8000 வீடுகள் கொளுத்தப்பட்டன. அப்போது தமிழினம் பேசும் போலி தமிழ் நடிகர்கள் எங்கு இருந்தார்கள்?

  8. ////தமிழ் பேசும் யாவரும் தமிழர்கள் தானே////
    இது “வினாவுக்கு” பொருந்தாத விளக்கம். ஏனெனில் தமிழ் மட்டுமே பேசும் தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பிராமினர்கள் தமிழர்களாக ஏற்றுக்கொள்ளபடமாட்டார்கள் என்று வினவு ஏற்கனவே எழுதிவிட்டது. இந்த நிலையில் தமிழ் பேசும் மற்றும் தமிழில் பெயர் வைத்துகொல்லாத முஸ்லீம்களை தமிழர்களாக எப்படி ஏற்றுக்கொள்வது? ஏதோ ஆதங்கத்தில் எழுதி உள்ளார். அப்போது வீரமணி போன்றோர் “எது வருந்த தக்கது” என்று கூறி விட்டார்கள்.

Leave a Reply to alex பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க