தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் என்ற புதிய அமைப்பை மார்ச் 1 முதல் அமலுக்குக் கொண்டு வரப் போவதாகவும் இவ்வமைப்பு மத்திய உளவுப் பிரிவின் கீழ் இயங்குமென்றும் கடந்த பிப்ரவரியில் மைய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. “தீவிரவாதம் தொடர்பான வழக்குகளில், சம்மந்தப்பட்ட மாநில அரசின் சம்மதம் இன்றியே இம்மையம் குற்றவாளிகளின் இருப்பிடங்களைச் சோதனையிட முடியும்; அவர்களின் சொத்துக்கள் மற்றும் அவர்கள் வசமுள்ள ஆவணங்களைக் கைப்பற்ற முடியும்; மேலும், அவர்களைக் கைது செய்யவும் முடியும்” என்றவாறு பல அதிகாரங்களைக் கொண்ட அமைப்பாக இம்மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது, மைய அரசு. சுருக்கமாகச் சொன்னால், இந்த மையம் ஒரே சமயத்தில் உளவுப் பிரிவாகவும் போலீசாகவும் இரட்டைக் கதாநாயகர்கள் போலச் செயல்படும். மேலும், மாநில போலீசார் தாங்கள் சேகரிக்கும் உளவுத் தகவல்களை இந்த மையத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசியல் சாசனப்படி, குற்றவாளிகளைக் கைது செய்வது, அவர்கள் மீது வழக்குப் பதிவது, வழக்கை நடத்துவது ஆகியவை மாநில அரசின், போலீசின் அதிகாரமாகும். மாநில அரசின் சம்மதத்தோடு அல்லது நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே, மையப் புலனாய்வுத் துறை எந்தவொரு வழக்கையும் விசாரிக்க முடியும். மாநில அரசின் கைகளில் மட்டுமே இருந்துவரும் இந்த அதிகாரத்தில் பங்கு போட்டுக் கொள்ளத் தற்பொழுது கிளம்பியுள்ளது, மைய அரசு. இதன் காரணமாகத்தான், இந்த அறிவிப்பு வெளிவந்தவுடனேயே, “இது மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் நடவடிக்கை; சமஷ்டி அமைப்பு முறைக்கும், அரசியல் சாசனத்துக்கும் விரோதமானது” எனக் கூறி, இம்மையம் அமைக்கப்படுவதற்கு எதிராக பா.ஜ.க.வும், அதனின் கூட்டணிக் கட்சிகளும், அ.தி.மு.க.வும், போலி கம்யூனிஸ்டுகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரசு கூட்டணியில், கட்டுச் சோற்றுப் பெருச்சாளியாக இருந்து வரும் மம்தாவும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, இம்மையம் அமைப்பது தொடர்பாக மே முதல் வாரத்தில் முதலமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டப் போவதாக மைய அரசு அறிவித்திருக்கிறது.
மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் இருந்துவந்த கல்வித்துறை போன்றவற்றை பொதுப்பட்டியலின் கீழ் கொண்டுவந்து, மாநில அரசுகளின் பல நியாயமான உரிமைகளை ஏற்கெனவே பறித்திருக்கிறது, மைய அரசு. அதனையெல்லாம் கொள்கைரீதியாகவே ஏற்றுக்கொண்டுள்ள பா.ஜ.க., ஜெயா கும்பல், மாநில உரிமையினைக் கருத்திற்கொண்டே போலீசுக்குரிய அதிகாரங்களோடு தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பதை எதிர்ப்பதாகக் கூறுவது, நகைப்புக்குரிய நாடகமாகும். மக்களின் சகல நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆதார் அடையாளத் திட்டத்தை எதிர்க்காத இக்கும்பல், இப்பிரச்சினையில் மக்களின் உரிமைக்காக நிற்பதைப் போல பீற்றிக் கொள்வது வெற்று அரசியல் ஸ்டண்ட் தவிர வேறொன்றுமில்லை. அவர்கள் பீற்றிக் கொள்வது போல ஒவ்வொரு மாநில அரசும், போலீசும் அந்தந்த மாநில மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் கடமையினையா ஆற்றிவருகின்றன?
தீவிரவாதத்தை ஒழிப்பது, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் ஒவ்வொரு மாநில போலீசும் எந்தளவிற்கு ஆளும் கட்சியின் அடியாளாகச் செயல்பட்டு வருகிறது என்பதும், ஆளும் கட்சியின் ஆசிர்வாதத்தோடு போலி மோதல் கொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது என்பதும் ஊரறிந்த உண்மை. தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை போலீசுக்கு உரிய அதிகாரங்களோடு அமைப்பதன் மூலம் மாநில ஆளும் கட்சிகளுக்குப் போட்டியாக மைய அரசும் களத்தில் குதிக்கத் தயாராகி வருகிறது என்பதுதான் இதன் பின்னுள்ள உண்மை. தனது ஏரியாவில் ஒரு புதிய தாதா நுழைவதை பழைய தாதா விரும்புவதில்லைதானே. இம்மையத்திற்கு எதிராக பா.ஜ.க., ஜெயா, நவீன் பட்நாயக், மம்தா ஆகியோர் போடும் கூச்சல்களை, இந்த தாதாக்களின் அதிகாரப் போட்டியோடு மட்டும்தான் ஒப்பிட முடியும்.
தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் காங்கிரசு கூட்டணி அரசு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்ற கருப்புச் சட்டத்தை இயற்றியிருக்கிறது. மாநில அரசின் அனுமதிக்கெல்லாம் காத்திராமல், இந்தியா வெங்கிலும் விசாரணை நடத்தக்கூடிய தேசியப் புலனாய்வு ஏஜென்சியை உருவாக்கியிருக்கிறது. இந்த அதிகாரக் குவிப்பின் தொடர்ச்சியாகத்தான், உளவுப் பிரிவுக்கு போலீசுக்குரிய அதிகாரங்களைக் கொடுக்கும் அபாயகரமான தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த விசயத்தில் அரசு பாசிசமயமாவதும், மக்கள் அனைவரும் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளைப் போலக் கண்காணிக்கப்படுவதும்தான் மையமான பிரச்சினை. ஆனால், எதிர்த்தரப்போ தமது அரசியல் ஸ்டண்ட் மூலம் இந்த மையமான பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தைச் சிதறடிக்க முயலுகிறார்கள். ஊடகங்களும் எதிர்த்தரப்பு அடிக்கும் ஸ்டண்டையே ஊதிப் பெருக்கி, உண்மையை மக்களின் கண்களிலிருந்து மறைத்துவிட முயலுகிறார்கள்.
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டிருப்பதோடு, அச்சட்டத்தின்படியே இம்மையத்திற்கு வரம்பற்ற அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இச்சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்பது பொடாவின் மறு அவதாரமாகும். இந்திய மக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டத்தின் காரணமாக பொடா சட்டத்தைக் கைகழுவிய காங்கிரசு கும்பல், ஏற்கெனவே அமலில் இருந்துவந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்து, காலாவதியாகிப் போன அக்கருப்புச் சட்டத்தைக் கொல்லைப்புற வழியில் கொண்டுவந்தது.
2008 நவம்பரில் மும்பய் நகர் மீது முசுலீம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திற்குப் பல்வேறு திருத்தங்களை முன்மொழிந்தது, காங்கிரசு கூட்டணி அரசு. இத்திருத்தங்களோடு இச்சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டபொழுது, வெறும் 50 உறுப்பினர்கள்தான் நாடாளுமன்ற மக்களவையில் இருந்தனர்; இத்திருத்தங்களின் அவசியம் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் உரையாற்றத் தொடங்கியபொழுது உறுப்பினர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்து, பின்னர் படிப்படியாக 47 எனக் குறைந்தது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட இலட்சணம் இதுதான். போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்த்தரப்பு இப்பொழுதுகூட இக்கருப்புச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்காமல், இச்சட்டம் மக்களின் ஜனநாயக மற்றும் சிவில் உரிமைகளைக் காலில் போட்டு மிதிப்பதற்கு எதிராகக் குரல் கொடுக்காமல், மாநில அரசின், போலீசின் உரிமைகளில் தலையிடாதவாறு தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் கோருகிறார்கள்.
ஆனால், மைய அரசோ, “மைய உளவுத் துறை தரும் தகவல்களை, எதிர்க்கட்சிகளின் தலைமையில் உள்ள மாநில அரசுகள் தமது அரசியல் நோக்கங்களை முன்னிறுத்தி நடைமுறைப்படுத்தத் தயங்குவதால், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தாம் எடுத்து வரும் முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களை அளிக்கவில்லை. அதனால்தான், போலீசின் அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்ட அமைப்பாகத் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக’’க் கூறிவருகிறது.
மைய அரசின் கீழுள்ள உளவுத் துறையும் சி.பி.ஐ.யும் மாநிலப் போலீசைவிடத் திறமைசாலிகளைப் போலவும், இலஞ்சம், ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகங்களில் ஈடுபடாத, அரசியல் குறுக்கீடு எதுவுமில்லாமல் பணியாற்றும் நேர்மையாளர்கள் போலவும் நகர்ப்புறத்து படித்த நடுத்தர வர்க்கம் எண்ணிக் கொண்டுள்ளது. ஆனால், மாநில போலீசைப் போலவே, மைய அரசின் உளவுத் துறையும் சி.பி.ஐ.யும் அரசியல் எதிரிகளை வேவு பார்க்கவும் பழி வாங்கவும் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. 2008 நவம்பரில் மும்பய் நகர் மீது முசுலீம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை, மைய அரசின் உளவுத் துறையால் முன்கூட்டியே உளவறிந்து சொல்ல முடியவில்லை என்பதிலிருந்தே அதனின் திறமையைப் புரிந்துகொண்டுவிடலாம்.
காலனிய ஆட்சியின்பொழுது, சுதந்திரத்திற்காகப் போராடுபவர்களைப் பற்றி உளவறிவதற்காகப் பயன்படுத்தப்பட்ட உளவுத் துறை, அதன் அரசியல் எஜமானர்களுக்குத்தான் கட்டுப்பட்டதேயொழிய, நாடாளுமன்றத்தில்கூட அதனின் செயல்பாடுகள் பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது. இப்படிபட்ட இரகசியமான அதிகாரவர்க்க அமைப்பிற்கு போலீசுக்குரிய அதிகாரங்களை அளிப்பது அபாயகரமானதுதான் என்றாலும், இதனை மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாகச் சுருக்கிப் பார்க்க முடியாது. மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் இடதுசாரி பயங்கரவாதம்தான் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது எனத் திரும்பத்திரும்பக் கூறிவரும் பின்னணியில்தான் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தையும், அதன் அடிப்படையில் உருவாக்கப்படும் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்தையும் பார்க்க வேண்டும்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் குறித்து தெளிவான வரையறைகள் முன்வைக்கப்படவில்லை. மாறாக, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைக் காப்பது என்ற பெயரில், யாரையும், எந்தவொரு அமைப்பையும் தீவிரவாதிகள் என முத்திரை குத்துமளவிற்குத் தொளதொளப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வரையறையை வைத்துக் கொண்டு, அரசின் ‘வளர்ச்சி’த் திட்டங்களை எதிர்ப்பவர்களைக்கூடத் தீவிரவாதிகளாக முத்திரை குத்தமுடியும். ஆயுத மோதல்கள், குண்டு வெடிப்புகள் போன்ற தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்திருக்கும் பகுதியில்தான் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடும் கிடையாது. இதன்பொருள், அரசை, சட்டபூர்வமான ஜனநாயக வழியில் எதிர்த்துப் போராடுபவர்களைக் கூட இச்சட்டத்தின் கீழ் கைது செய்யமுடியும் என்பதுதான்.
இப்படிக் கைது செய்யப்படுபவர்களை, அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமலேயே 180 நாட்கள் வரையிலும் போலீசு காவலில் வைத்திருக்க முடியும். இது, கொட்டடிச் சித்திரவதைக்கும், அதன் மூலம் பொய்யான வாக்குமூலம் வாங்குவதற்கும் போலீசிற்கு அளிக்கப்பட்டுள்ள சட்டபூர்வ சுதந்திரமாகும்.
இச்சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்வதற்கு அவர் தீவிரவாத அமைப்பின் உறுப்பினராக இருந்தார்; தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற நிரூபிக்க வேண்டிய அவசியமெல்லாம் அரசிற்குக் கிடையாது. அவர் தீவிரவாத அமைப்போடு தொடர்பு வைத்திருந்தார், அதற்காக நிதி வசூல் செய்து கொடுத்தார் என்ற உப்புசப்பில்லாத காரணங்களை முன்வைத்தே கைது செய்ய முடியும்; இதே காரணங்களைக் கூறி, சட்டபூர்வமான முறையில் செயல்பட்டுவரும் சங்கங்கள், அமைப்புகளைக்கூட அரசால் தடை செய்ய முடியும். இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் முன்பே, அவரது சொத்துக்களை அரசால் பறிமுதல் செய்ய முடியும்.
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கப்படுவதை எதிர்ப்பதில் முன்னணியில் உள்ள குஜராத், ஒரிசா, பஞ்சாப், மேற்கு வங்க மாநில முதல்வர்கள்தான் இந்த அரசு பயங்கரவாதச் சட்டத்தை ஏவி, மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதிலும் முன்னணியில் உள்ளனர். அம்மாநிலங்களில் கடந்த நான்காண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் இச்சட்டம் பிடித்துப் போட்டுள்ள ‘தீவிரவாதிகள்’ யார்யாரென்று பார்ப்போமா?
அரியானா மாநிலத்தில் மேல்சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய தாழ்த்தப்பட்டோரும், பஞ்சாபில் அரசின் நாசகார விவசாயக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடிய விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்களும் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளே இல்லாத குஜராத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் எனக் குற்றஞ்சுமத்திப் பலரைக் கைது செய்துள்ள மோடி அரசு, அவர்கள் இன்னென்ன குற்றங்களைச் செய்துள்ளனர் என்பதைக்கூட இதுநாள்வரை பதிவு செய்ய மறுத்துவருகிறது.
மேற்கு வங்கத்தில் சி.பி.எம். குண்டர்களுக்கும், பயங்கரவாத போலீசுக்கும் துணை இராணுவப் படைகளுக்கும் எதிராகப் போராடிய போலீசு அடக்குமுறைகளுக்கு எதிரான சங்கம், வனவாசி சேத்னா ஆஷ்ரம், மதாங்கினி மஹிலா சமிதி உள்ளிட்ட பல சமூக அமைப்புகளும் மாவோயிஸ்ட் ஆதரவு அமைப்புகள் எனக் குற்றஞ்சுமத்தப்பட்டு, அவற்றின் உறுப்பினர்கள் பலர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்டுகளைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்த மம்தா, இந்த வழக்குகளில் ஒன்றைக்கூடத் திரும்பப் பெறவில்லை. ஒரிசா மாநிலத்தில் 2008 ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை இரண்டாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2009 இல் 18 ஆகவும், 2010 இல் 94 ஆகவும் அதிகரித்திருக்கிறது.
கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து இடிந்தகரை பகுதி மக்கள் அமைதியான, சட்டபூர்வமான முறையில் நடத்தி வரும் போராட்டத்தில், நக்சலைட்டுகள் ஊடுருவி விட்டதாக ஜெயா அரசு பீதி கிளப்பியதையும், போராட்டக்காரர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதையும், அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக மைய அரசு அவதூறு செய்ததையும் இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவரையும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களாகவும் தீவிரவாதிகளாகவும் அரசு முத்திரை குத்துகிறது என்பதைத்தான் இந்த வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன.
அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின், அந்நாட்டு அரசு “பேட்ரியாட்” சட்டம் என்றொரு கருப்புச் சட்டத்தை இயற்றியதோடு, தேசியப் பயங்கரவாதத் தடுப்பு மையத்தையும் உருவாக்கியது. மும்பய் தாக்குதலுக்குப் பின், இந்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், தேசியப் புலனாய்வு ஏஜென்சி, தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் என்ற இவையனைத்தும் அமெரிக்காவை மாதிரியாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படி அமெரிக்காவை காப்பியடித்து அடக்குமுறை சட்டங்களையும் அமைப்புகளையும் கொண்டுவருவது ஒருபுறமிருக்க, உள்நாட்டுப் பாதுகாப்பு விசயத்திலும் அமெரிக்கா நேரடியாகத் தலையீடு செய்யும் வண்ணம் தாராளமாக நடந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறது, இந்திய அரசு. வாஜ்பாயி பிரதமராக இருந்தபொழுது, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ., இந்தியாவில் செயல்பட அனுமதித்தார். இந்த ஒத்துழைப்பு மன்மோகன் காலத்தில் இரு நாட்டு இராணுவங்களும் ஒன்றாக இணைந்து இந்தியாவிற்குள்ளேயே தீவிரவாத எதிர்ப்பு பயிற்சியை மேற்கொள்வது என்ற அளவில் வளர்ந்து வருகிறது.
அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் இந்தியா தனது உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக 1,000 கோடி டாலர் பெறுமானமுள்ள ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை வாங்கும் என்பதால், அதன் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியத் தரகு முதலாளிகளும் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைகின்றனர். இந்த வர்த்தக நோக்கம் ஒருபுறமிருக்க, உள்நாட்டு பாதுகாப்பில் தனியார் நிறுவனங்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரி வருகின்றனர். இது, ஒரிசாவிலும், சத்தீஸ்கரிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் போராடும் மக்களைத் தாக்கிவரும் குண்டர் படைகளைச் சட்டபூர்வமாக்கும் கோரிக்கை தவிர வேறில்லை. இவற்றையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு என்பது இந்திய மக்களின் நலன் சார்ந்தது அல்ல என்பதுதான் அது.
_________________________________________
__________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் !
- ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம் !
- போலீசு, இராணுவம் – மக்களுக்கா, ஆட்சியாளர்களுக்கா ?
- பொடா முதலிய அடக்குமுறை சட்டங்கள் பயங்கரவாதத்தை ஒழிக்கவா?
அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவரையும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களாகவும் தீவிரவாதிகளாகவும் அரசு முத்திரை குத்தி அடக்குவதற்குத்தான்.
என்பது மாபெரும் ஜனநாயக நாடுன்னு கூப்பாடு போடும் கபோதிகளுக்கு புரியுமா???
எப்படியாவது இந்த சொரனையற்ற இந்திய மக்களை புரட்சியை நோக்கி அழைத்து செல்லவேண்டும் என்று ஆளும்வர்க்கம் நினைக்கிறது.
ஆனால் இது எல்லாம் கும்பகரண தூக்கத்தில் இருக்கும் இந்த நாட்டின் மக்களை ஒன்றும் செய்யாது என்பதே உண்மை.