privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பா"இழப்பதற்கு இனி ஏதுமில்லை, தாக்குங்கள்!"

“இழப்பதற்கு இனி ஏதுமில்லை, தாக்குங்கள்!”

-

ஸ்பெயின் சுரங்கத் தொழிலாளர்களின் கிளர்ச்சி

 

கிரீஸைத் தொடர்ந்து ஸ்பெயினைக் கவ்வியிருக்கிறது உலக முதலாளித்துவ நெருக்கடி. நிதி மூலதனச் சூதாடிகளால் சூறையாடப்பட்ட ஸ்பெயின், திவால் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. “கடன் வேண்டுமானால், சிக்கன நடவடிக்கைகளை அதிகப்படுத்து; மக்கள் நலத்திட்டங்களை நிறுத்து; பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்கு” என்று உத்தரவிடுகின்றன சர்வதேச நாணய நிதியமும், ஐரோப்பிய மத்திய வங்கியும்.

போனஸ் வெட்டு, பென்சன் வெட்டு, வேலையில்லாதவர்களுக்குப் பராமரிப்புத் தொகை வெட்டு, பள்ளிகள்  மருத்துவமனைகள் மூடல், துறைமுகம், ரயில்வே, விமானநிலையங்கள் தனியார்மயம்  என்று அடுக்கடுக்கான தாக்குதல்களை பிரதமர் மரியானார ஜோய் நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார். “வீதிகளில் பெட்ரோலை ஊற்றாதீர்கள்!” என்று நாடாளுமன்றத்தில் அலறின எதிர்க்கட்சிகள். வீதிகளோ ஏற்கெனவே எரியத் தொடங்கிவிட்டன.

சிக்கன நடவடிக்கையின் தொடக்கமாக நிலக்கரிச் சுரங்கங்களை மூடிவிட்டு, நிலக்கரியை இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்தது ரஜோய் அரசு. 18ஆம் நூற்றாண்டு முதல் 5 தலைமுறைகளாக நிலக்கரி வெட்டி வரும் அஸ்தூரியா பிராந்தியத்தின் சுரங்கத் தொழிலாளர்கள், உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினர். 8000 சுரங்கத் தொழிலாளர் குடும்பங்களுடன், அப்பகுதி மக்கள் அனைவரும் இணைந்து அந்தப் பிராந்தியத்துக்குள்ளேயே போலீசை நுழைய விடாமல் போர் நடத்துகிறார்கள். சாலைகளில் தடுப்பரண்கள் எழுப்பி போலீசுக்கு எதிராகக் கவண் கற்களையும் ராக்கெட்டுகளையும் ஏவுகிறார்கள். எங்கும் தீ; கரும்புகை. “இழப்பதற்கு இனி ஏதுமில்லை. தாக்குங்கள்!” என்று புகையைக் கிழித்துக் கொண்டு எழும்புகின்றன பெண்களின் குரல்கள்.

கருப்புப் பயணம் என்ற பெயரில் அஸ்தூரியாவிலிருந்து தலைநகர் மாட்ரிட் நோக்கி தொழிலாளர்கள் தொடங்கிய நடைபயணம், ஜூலை 10 அன்று மாட்ரிட் நகரில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டமாகியது.

ஸ்பெயின்-சுரங்கத்-தொழிலாளர்கள்

அரசு ஊழியர்கள் சாலை மறியலில் இறங்கினார்கள். லாரி ஓட்டுனர்கள் நெடுஞ்சாலைகளை மறித்து வண்டிகளை நிறுத்தினார்கள். நாடு முழுவதும் 60 நெடுஞ்சாலைகள் முடங்கின. “நாங்கள் பயங்கரவாதிகளல்ல, நிலக்கரிப் பெண்கள்” என்று முழங்கிய வண்ணம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் மனைவியர்கள் அதிரடியாக நாடாளுமன்றத்தில் நுழைந்தார்கள். போராட்டக்காரர்கள் ஏவிய ராக்கெட் தொழில் அமைச்சகத்தின் சன்னலை நொறுக்கியது. “அடுத்தமுறை வெடிமருந்தோடு வருவோம்” என்று முழங்கியது ஒரு குரல்.

1934இல் 3000 தொழிலாளர்களை உயிர்ப்பலி கொடுத்து, ஃபிராங்கோவின் பாசிச ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை துவக்கிய அஸ்தூரியாவின் சுரங்கத்தொழிலாளர்கள், போர்க்குணமிக்க கம்யூனிஸ்டு மரபில் வந்தவர்கள்.

‘‘எப்போதுமே தேசத்தின் முதல் எழுச்சி எங்கள் சுரங்கத்தில்தான் தொடங்கும். நாங்கள்தான் முன்னணியில் நிற்போம். இதோ, வரலாறு திரும்புகிறது” என்றார் மெனன்டெஸ் என்ற சுரங்கத்தொழிலாளி.  ஆம்; இது ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தின் மறுவருகை.

__________________________________________________
– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: