அமெரிக்காவில் மையம் கொண்ட பொருளாதார சுனாமி ஐரோப்பிய கரைகளை வந்தடைந்துள்ளது. அட்லாண்டிக் சமுத்திரக் கரையை அண்டிய அயர்லாந்து, மத்திய தரைக் கடல் நாடுகளான போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி, கிறீஸ் ஆகிய நாடுகளும் சுனாமியின் அகோரமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. இவற்றில் கிரீசில் ஏற்பட்ட பாதிப்புகள் மட்டும் வெளித் தெரிய ஆரம்பித்துள்ளது. முதன் முதலாக செல்வந்த மேற்கு ஐரோப்பிய வட்டத்தை சேர்ந்த ஒரு தேசம் திவாலாகின்றது. மக்கள் வங்கிகளையும், வங்கிகள் அரசாங்கத்தையும், அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தையும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். யார் குற்றவாளி?
துருக்கி, ஜெர்மனி என்று அந்நிய நாடுகளின் ஆக்கிரமிப்புக்குள் உள்ளாகி சின்னாபின்னமான கிறீஸ், செல்வந்த நாடுகளின் வரிசையில் சேர்ந்த பொருளாதார அதிசயம் எதிர்பாராதது தான். பலமான பொருளாதாரத்தைக் கொண்ட ஜெர்மனியிடம் இருந்து கடன் பெறக் காத்திருக்கும் கிறீஸ், இரண்டாம் உலகப் போரில் நாஜிகள் திருடிய தங்கத்தை மீட்க முடியாமல் உள்ளது. கேந்திர முக்கியத்துவம் காரணமாக, கிறீஸ் சோஷலிச முகாமில் சேர விடாமல் தடுத்த பிரிட்டன், புராதன கலைப்பொருட்களை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை.
கிரேக்கம் ஐரோப்பிய நாகரீகத்தின் தொட்டில் என புகழப்படுவதெல்லாம், பாட நூலில் மட்டும்தான். நாகரீகம் கற்றுக் கொண்ட நாடுகள், தற்போது கிரீசை அடிமையாக்க திட்டம் போடுகின்றன. அந்நிய நாட்டு கடனை வாங்கி ஒலிம்பிக் போட்டி போன்ற ஆடம்பரங்களில் செலவிட்டதால், பொதுநல சேவைக்கு அள்ளிக் கொடுத்ததால், வந்தது இந்த நெருக்கடி என்று திட்டுகின்றன. கொடுத்த கடனை அடைப்பதற்கு 110 பில்லியன் டாலர் கடன் வழங்கப்படுகின்றது. இந்தக் கடனில் ஜெர்மனியின் பங்கு அதிகம். ஜெர்மனி நெருக்கடியில் சிக்கிய தனது வங்கிகளின் மீட்சிக்காக ட்ரில்லியன் யூரோக்களை அள்ளிக் கொடுத்த்து. அதனோடு ஒப்பிடும் போது சகோதர ஐரோப்பிய நாடான கிரீசுக்கு வழங்கியது சொற்பத் தொகை.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்தவராக இணையும் நாடுகளுக்கு என்று சில விதிமுறைகள் இருந்தன. வருடாந்த பட்ஜெட்டில் துண்டு விழும் தொகை மூன்று வீதத்திற்கு கூடக் கூடாது. அரசின் மொத்த அந்நிய/உள்நாட்டு கடன்கள் 60 வீதத்திற்கு மேலே அதிகரிக்க கூடாது.மீறினால் அபராதம் விதிக்கப்பட்டது. கிறீஸ் அரசால் ஒரு போதும் அந்த இலக்கை அடைய முடியவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பொய்க் கணக்கு காட்டிக் கொண்டிருந்தது.
மோசடியான கணக்குகளை எழுதுவதற்கு, பொருளாதாரத்தில் சூரப் புலிகளான அமெரிக்க கணக்காளர்களை அமர்த்தியது. அமெரிக்க முதலீட்டு வங்கியான Goldman Sachs அரசாங்கத்தின் கடன் தொகையை குறைத்துக் காட்டி கணக்கை முடித்தார்கள். எப்படி? கிரேக்க அரசின் கடன் பத்திரங்கள் யென், டாலர் நாணயப் பெறுமதிக்கு மாற்றப் பட்டன. அரசாங்கம் கொடுக்க வேண்டிய கடன் நிலுவைகளை எதிர்காலத்தில் கொடுப்பதாக வேறொரு கணக்கில் குறித்தார்கள். மேலதிகமாக Goldman Sachs வங்கியே ஒரு பில்லியன் யூரோ கடனாக கொடுத்து சரிக்கட்டியது.
கிரேக்க மக்கள் கடன் அட்டைகளில் வாழ்ந்து கொண்டிருக்கையில், அரசாங்கம் அந்நியக் கடன்களால் இயங்கிக் கொண்டிருந்தது. நிதி நெருக்கடி தோன்றிய காலத்தில் இருந்தே, வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத மக்கள் கடன் அட்டைகளில் பணம் எடுத்து செலவழிக்கின்றனர். இந்தக் கடனை எல்லாம் எப்போது திருப்பிக் கட்டுவோம் என்பது அவர்களுக்கே தெரியாது. இது நெருக்கடியை இரட்டிப்பாக்குகின்றது. தற்கால கிரேக்க பொருளாதாரம் ஒரு மாயையின் மேலே தான் கட்டப்பட்டிருந்தது.
பாரம்பரிய விவசாய நாடான கிரீஸ், எழுபதுகளுக்குப் பின்னர் விவசாயத்தைக் கைவிட்டது. அதிக வருமானம் ஈட்டித் தரும் உல்லாசப் பிரயாணத் துறையில் நம்பியிருந்தது. இருப்பினும் உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்க அரசு வழங்கிய மானியத்தைக் கொண்டு, விவசாயத் துறையும் மறுமலர்ச்சி கண்டது. அகதிகளாக அல்லது சட்டவிரோதமாக குடியேறிய அல்பேனிய, இந்திய, பாகிஸ்தானிய கூலியாட்கள் வயல்களில் குறைந்த கூலிக்கு வேலை செய்தார்கள். இதனால் கிரேக்க விவசாயிகள் வளமாக வாழ முடிந்தது. தனது நாட்டு விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கும் ஜெர்மனி போன்ற பணக்கார ஐரோப்பிய நாடுகள், கிரேக்க விவசாயிகளுக்கு கொடுத்த மானியத்தை பொருளாதாரத் தவறாக சுட்டிக் காட்டுகின்றன. ஆமாம், கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனைப் போல வாழ நினைக்கலாமா?
இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜிகளின் ஆக்கிரமிப்பில் இருந்த கிரீசை விடுவிக்க கம்யூனிச கட்சியின் விடுதலைப் படை போராடியது. எந்த வல்லரசின் உதவியுமின்றி, பெரும்பாலான பகுதிகளை விடுதலை செய்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். பெரும்பான்மை கிரேக்க மக்கள் விவசாய சமூகமாக இருந்தமையும், கம்யூனிஸ்ட்களின் வெற்றிக்கு மூல காரணம். பிரிட்டனின் உதவியுடன் கம்யூனிசக் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
அதன் பிறகு கிரீஸ் மேற்குலக பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் வந்தது. விவசாய பொருளாதாரம் புறக்கணிக்கப்பட்டு, அந்த இடத்தில் சுற்றுலாப் பொருளாதாரம் புகுத்தப்பட்டது. ஒரு காலத்தில் மீனவ சமூகத்தினர் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த தீவுகள் மெருகூட்டப்பட்டன. பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற பணக்கார ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த உல்லாசப் பயணிகள் கிரேக்க தீவுகளை தமது கோடைகால காலனிகளாக மாற்றினார்கள். அவர்கள் கொண்டு வந்து கொட்டிய பணம் கிரேக்க மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் காரணமாக இருந்தது.
கை நிறையச் சம்பாதித்து வாய் நிறையச் சாப்பிடும் மக்கள், கம்யூனிஸ்ட்கள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள் என்பது உண்மை தான். சிறிது காலம் தடை செய்யப் பட்டிருந்து, பின்னர் புத்துயிர் பெற்ற கிரேக்க கம்யூனிசக் கட்சியும் பாராளுமன்ற அரசியல் சாக்கடையில் கலந்து விட்டது. இருப்பினும் கம்யூனிச அபாயம் கனவில் வந்து மிரட்டினாலும், கிரேக்க அரசு கலங்கிய அப்படியான சந்தர்ப்பங்களில்,” யாமிருக்கப் பயமேன்” என்று ஆட்சியைப் பிடித்தது இராணுவம்.
பாசிசவாதிகளும், தேசியவாதிகளும் நிறைந்திருந்த கிரேக்க இராணுவம், அயல் நாடான துருக்கியைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி கொண்டிருந்த்து. கிரீசுக்கும் துருக்கிக்கும் ஜென்மப் பகை. பிற்கால இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு தலைமை தாங்கிய ஓட்டோமான் துருக்கியர்கள், முழு கிரீசையும் தமது சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக வைத்திருந்தார்கள். கிரேக்க கிறிஸ்தவ மதகுருக்கள் தலைமையில் துருக்கியருக்கு எதிரான விடுதலைப் போராட்டம் நடந்தது.
முதலாம் உலகப் போரின் பின்னர்தான் நவீன கிரேக்க தேசம் உருவானது. அன்றிலிருந்து இன்று வரை தன்னை துருக்கியின் முதன்மை எதிரியாகக் காட்டிக் கொள்வதில், கிரீசுக்கு அலாதிப் பிரியம். நிலப்பரப்பில், மக்கட்தொகையில் பல மடங்கு பெரிதான துருக்கியுடன் இராணுவரீதியாக மோதுவது சாத்தியமில்லை. இருப்பினும் அதைச் சொல்லிச் சொல்லியே ஆயுதங்களை வாங்கிக் குவித்தது. அன்று கிரீசுக்கு ஆயுதங்களை ஆயுதங்களை விற்றுக் கொண்டிருந்த மேற்குலக நாடுகள், இன்று பொருளாதார பிரச்சினைக்கு அதையே காரணமாகக் காட்டுகின்றன.
கிரேக்கர்களையும், துருக்கியரையும் மதம், மொழி போன்ற அம்சங்கள் பிரித்து வைத்திருந்தாலும், நெருங்கிய கலாச்சார ஒற்றுமைகளை கொண்டுள்ளனர். சராசரி கிரேக்கர்களின் மனோபாவத்தை, மேற்கு ஐரோப்பியருடன் ஒப்பிட முடியாது. கிறிஸ்தவ மதம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் அவர்களை பிற ஐரோப்பியருடன் பிணைப்பதில்லை. மத்திய கிழக்கு நாடுகளின் ஒன்றியம் உருவானால், கிரீஸ் அதில் மிகக் கச்சிதமாக பொருந்தும். “லஞ்சம், ஊழல் கிரேக்க சமூகத்தை விட்டு இன்னும் அகலவில்லை, அது தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்…” என்று ஐரோப்பிய பொருளாதார நிபுணர்கள் ஒப்பாரி வைக்கின்றனர். ஐரோப்பிய மத்திய வங்கியும் ஏதோ இப்போது தான் கண்டுபிடித்ததைப் போல பதறுகின்றது.
கிரீசில் சிறிது காலம் வாழ்ந்த அகதிகளுக்கு கூட இதெல்லாம் எப்போதோ தெரியும். அகதித் தஞ்சம் கேட்ட குற்றத்திற்காக சிறை சென்றதும், பணம் கொடுத்து விடுதலையானதும் பல அகதிகளுக்கு அவர்களது தாயகத்தை நினைவுபடுத்தின. சாதாரண கிரேக்க மக்கள் முன்னர் லஞ்ச, ஊழல் பிரச்சினை குறித்து முறையிடவில்லை என்பது உண்மைதான். நமது நாடுகளில் லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொள்ளும் மத்திய தர வர்க்கத்தைப் போலத்தான் சராசரி கிரேக்கர்களும் வாழ்ந்தார்கள். லஞ்சப் பேய் ஒரு காலத்தில் தமது இருப்பிற்கே ஆப்பு வைக்கும் என்பதை காலம் தாழ்த்தித்தான் புரிந்து கொண்டார்கள்.
நல்லது. தற்போது எழுந்துள்ள பொருளாதார பிரச்சினைக்கு என்ன தீர்வு? ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை சீர்குலைக்கும் கிரீசை வெளியேற்றி விடலாம். மேற்குலக முதலீட்டு வங்கிகள், அரசாங்கத்தின் கடன்பத்திரங்களில் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அரை வாசித் தொகை திருப்பித் தரப் படும் என்று ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. மிகுதி அரைவாசி யார் தருவார்கள்? சந்தேகமில்லாமல் கிரேக்க பிரஜைகள் தான். தமது சம்பளத்தை, ஓய்வூதியத்தை குறைத்து, காப்புறுதிகளுக்கு அதிக கட்டுப்பணம் கட்டி, வங்கிச் சேவைக்கு அதிக கட்டணம் செலுத்தி, கடனை அடைப்பார்கள்.
இந்த நிபந்தனைகளுக்கு கிரேக்க பாராளுமன்றத்தில் ஆளும் சோஷலிசக் கட்சியும், தீவிர வலதுசாரிக் கட்சியும் ஒப்புதல் அளித்துள்ளன. இவையெல்லாம் கிரேக்க மக்களை ஆத்திரமுற வைத்ததில் வியப்பில்லை. இன்றைக்கும் தமது லாபத்தை குறைத்துக் கொள்ளாத முதலாளிகளும், ஆடம்பரங்களைக் குறைத்துக் கொள்ளாத பணக்காரர்களும் கடன் சுமையை பொறுப்பேற்க வேண்டும். தேசத்தின் தவறான முகாமைத்துவத்திற்கு இவர்கள் காரணமில்லையா? அதிகம் படித்த கணக்கியல் நிபுணர்கள் தானே கணக்கில் மோசடி செய்தார்கள்? சிக்கலான பொருளாதார சூத்திரமெல்லாம் சாதாரண பொதுமகனுக்கு புரியாத சிதம்பர ரகசியம். ஆயினும் அப்பாவி பொது மக்கள் தான் பொருளாதார பிரச்சினைக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
கிரீசின் பொருளாதாரப் பிரச்சினை யூரோ நாணயத்தை பாதிக்கின்றது. இது ஒரு வகையில் நன்மையை தந்தாலும், நீண்ட கால நோக்கில் தீங்கு விளைவிக்கலாம். யூரோ நாணயத்தின் பெறுமதி குறைந்துள்ளதால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்கு வழிவகுத்துள்ளது. ஆயினும் பணக்கார ஐரோப்பிய நாடுகள் மட்டுமே இதனால் லாபமடைந்துள்ளன. தற்போது முன்பு இருந்ததைப் போல முன்னேறிய வட ஐரோப்பிய நாடுகள், பின் தங்கிய தென் ஐரோப்பிய நாடுகள் என்ற பிரிவினை மீண்டும் தோன்றியுள்ளது. கிரீஸ், தென் இத்தாலி, தென் ஸ்பெயின், தென் போர்த்துக்கல் என்பன, ஒரு காலத்தில் வறுமையில் வாடிய அபிவிருத்தியடையாத பகுதிகளாக இருந்தன. அந்தப் பகுதி மக்கள் வேலை தேடி செல்வந்த வட- ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தாராளமான நிதி வழங்கல், தென் ஐரோப்பாவின் அபிவிருத்திக்கு உதவியது. குறிப்பாக உல்லாசப் பிரயாணத் துறை, ரியல் எஸ்டேட் போன்ற பொருளாதார அபிவிருத்திகளே இடம் பெற்றன. அங்கேயெல்லாம் உல்லாசப் பயணிகளாக சென்றதும், வீட்டுமனை வாங்கியதும் வட- ஐரோப்பியர்கள் தான். பொருளாதார நெருக்கடியால் அவர்கள் தமது நாடுகளிலேயே தங்கி விட்டார்கள். அவர்களது அரசுகளும் கடும் பிரயத்தனப் பட்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டன. இதனால் என்ன நடந்தது என்றால், தென்னக ஐரோப்பிய பகுதிகளில் வேலைகள் பறி போயின. அந்த இடத்தில் வட ஐரோப்பிய மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
யூரோ நாணய கூட்டமைப்பில் இருந்து கிரீசை வெளியேற்றுவதால், பிற ஐரோப்பிய நாடுகள் தமது பொருளாதாரத்தை பாதுகாக்க நினைக்கின்றன. கிரீசை தொடர்ந்தும் வைத்துக் கொள்வதற்காக ஆகும் செலவு, தற்போது வழங்கிய கடனை விட மூன்று மடங்கு அதிகம். அதனால் கிரீசை கழற்றி விடுவதே உத்தமம். கிரீசும் வேறு வழியின்றி தனது பழைய தேசிய நாணயமான டிராக்மாவை மீண்டும் கொண்டு வர வேண்டும். ஆனால் புதிய டிராக்மாவை யூரோவுக்கு பரிமாற்றம் செய்யும் போது, ஐரோப்பிய ஒன்றியம் குறைந்த விலையை நிர்ணயிக்கும். இதனால் கிரேக்கர்கள் வாங்கிய கடன், திருப்பிச் செலுத்தப் படும் காலம் வரும் போது இரண்டு மடங்காகி இருக்கும். அதனோடு வருடாந்தம் கட்ட வேண்டிய வட்டியையும் சேர்த்துப் பாருங்கள். கிரீஸ் திவாலானதால் பணக்கார ஐரோப்பிய நாடுகளும், ஐ.எம்.எப்.பும் புதிய வருமானத்தை தேடிக் கொண்டுள்ளன. அதை விட பெறுமதி குறைந்த டிராக்மாவை சுவீகரித்துக் கொண்ட கிரீசுக்கு வட- ஐரோப்பிய உல்லாசப் பிரயாணிகள் அதிகளவில் படையெடுப்பார்கள். சுருக்கமாக சொன்னால், மேற்கு ஐரோப்பிய நாடுகள் கீழே விழுந்த கிரீசை தமது காலனிய சுரண்டலுக்கு உட்படுத்தப் போகின்றன. “கிரேக்க அரசாங்கம் தீவுகளை வெளிநாடுகளுக்கு விற்கப் போகின்றது,” என்ற வதந்தியும் மக்கள் மத்தியில் உலவுகின்றது.
சாதாரண கிரேக்க மக்களின் தார்மீக கோபாவேசம், வேலை நிறுத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் மூலம் வெளிப்படுகின்றது. ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்தை மூடும் அளவிற்கு தொழிற்சங்கங்கள் வலுவாக உள்ளன. கிரீசில் போர்க்குணமிக்க தொழிற்சங்கம், கம்யூனிஸ்ட் கட்சி (KKE ) யினுடையது. ஆயினும் இன்றைய கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிக்கு தயாராக உள்ளதா என்பது கேள்விக்குறி. ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளராக இருப்பதே தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. பாசிச இராணுவ ஆட்சியின் கீழ் கடுமையாக பாதிக்கப்பட்ட கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது ஆயுதமேந்திய வன்முறைப் போராட்டத்திற்கு தயாராக இல்லை. அந்த இடத்தை வேறு சில இடதுசாரி இயக்கங்கள் பிடித்துள்ளன.
எழுபதுகளில் இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததில் ஏதென்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. மார்க்சிச-லெனினிசத்தையும், கூடவே அனார்கிசத்தையும் கொள்கையாக கொண்ட தீவிரவாத அமைப்புகள் உருவாகின. நீண்ட காலமாக பிடிபடாமல் இருந்த அதன் தலைவர்கள், மேற்குலகின் நிர்ப்பந்தத்தின் பின்னர் கைது செய்யப்பட்டனர். இத்துடன் கிரீசின் இடதுசாரி தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதாக, ஏகாதிபத்தியம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. எல்லாம் சிறிது காலம் மட்டும் தான். அமெரிக்காவின் நிதி நெருக்கடி அவர்களின் உறக்கத்தை கெடுத்தது.
கிரீசில் முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டிக் கொண்ருந்தது. பொய், சூதுவாது, மோசடி மூலம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்ட கும்பல் ஒன்று, காவல்துறையை ஏவி மக்கள் எழுச்சியை அடக்க முடியாது தத்தளிக்கின்றது. நிதி நெருக்கடியின் விளைவாக தன்னிச்சையாக தோன்றிய மக்கள் போராட்டம் அதிகார வர்க்கத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. இவையெல்லாம் ஒரு சில தினங்களில் ஓய்ந்து போகும் சலசலப்புகள் என்று தான் பலரும் நினைத்தார்கள். இரண்டு வருடங்கள் போராட்டம் தொடரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
மே 5 அன்று, ஏதென்ஸ் மாநகரில் மூன்று லட்சம் மக்கள் அணிதிரண்ட ஊர்வலம் சாதாரண நிகழ்வல்ல. அனைத்தையும் இழந்தவர்களின் கலகம், வங்கிகளை கலக்கமடைய வைத்தது. பன்னாட்டு நிறுவனங்கள், வங்கிகள், ஆடம்பர அங்காடிகள், என்று எவையெல்லாம் முதலாளித்துவத்தின் குறியீடாக உள்ளதோ, அவையெல்லாம் இலக்குகளாகின. அமைதிவழிப் போராட்டம் எதையும் சாதிக்காததைக் கண்ட இளைஞர்கள் பலர் தீவிரவாத வழியை நாடுகின்றனர். பெற்றோர்களால் தமது பிள்ளைகளை தடுக்க முடியவில்லை. அல்லது விரும்பவில்லை. அவர்களைப் பொறுத்த வரை இழப்பதற்கு எதுவுமற்றவர்கள். போராட்டத்திற்கு தள்ளப்பட்டவர்கள். அவர்களுக்கு நேற்று வரை அரசியல் வேப்பம்காயாக கசத்தது. இன்று அரசியல் அவர்களை பற்றிக் கொண்டுள்ளது.
கிரேக்க அரசுக்கும், முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுப்பவர்கள் அனார்கிஸ்ட்கள் என்ற இடதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்களை ஒரு அமைப்பு என்று கூற முடியாது. அப்படி சொல்வதையே வெறுக்கிறார்கள். அவர்களுக்கென்று கட்சி, தலைவர், செயலாளர் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொருவரும் சுதந்திரமான தனிநபர்கள். ரகசிய வலைப்பின்னல் மூலம் சந்தித்துக் கொள்கிறார்கள். பொதுவான போராட்டத்தில் இணைந்து கொள்கின்றனர். செல்லிடத் தொலைபேசி, இன்டர்நெட் போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளை போராட்டங்களை ஒழுங்குபடுத்த பயன்படுத்துகின்றனர்.
இதுவரை காலமும், இந்த சாதனங்களை எல்லாம், முதலாளித்துவம் தனது எதிரிகளை கண்காணிக்கவும், எதிரி நாட்டு அரசுகளை கவிழ்க்கவும் பயன்படுத்தி வந்தது. “ஆஹா, எழுந்தது பார் டிவிட்டர் புரட்சி.” என்று தமது சாதனைகளை தாமே பாராட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் என்றோ ஒரு நாள், மேற்குலக நாடுகளிலும் “டிவிட்டர் புரட்சி” வெடிக்கும் என்று கனவு கண்டிருக்க மாட்டார்கள். கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், என்று எங்கெல்லாம் நெருக்கடி தோன்றுகிறதோ, அங்கெல்லாம் மக்கள் போராடக் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் நூறாண்டு கால போராட்டத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட உரிமைகளை, அவர்கள் ஒரே நாளில் இழக்கத் தயாராக இல்லை.
_______________________________________
•கலையரசன்
தொடர்புடைய பதிவுகள்
- சத்யபாமா பல்கலைக்கழகம்: பாறையில் முளைத்த விதை, ஒரு தொழிற்சங்கம் உருவான கதை!
- வினவு கட்டுரைக்காக 5 தொழிலாளிகள் சஸ்பெண்ட்! ஜேப்பியாரின் வெறியாட்டம்!!
- ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை !!
- ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!
- இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !
- கான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் !!
- வீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை !
- உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஒரு சோகம்!!
- “சினிமா கழிசடை தமன்னா விளம்பரத்துக்குப் பல கோடி! உரிமைகளைக் கேட்கும் தொழிலாளருக்குத் தடியடி!”
- அரசின் பென்சன் மோசடியும், போக்குவரத்து தொழிலாளிகளின் அவலமும் !!
- சத்யமேவ பிக்பாக்கெட் ஜெயதே!
- தனியார்மயத்தின் தோல்வி: விமான முதலாளிகளின் வேலை நிறுத்தம்!
- திவாலாகும் அமெரிக்காவிற்கு அடிமையாகும் இந்தியா !
- மக்கள் மீதான போருக்கு எதிராக… சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் – வீடியோ!
*110 பில்லியன் யூரோ அல்ல 160 பில்லியன் என்பதுதான் சரியானது (ஆஸ்றேலிய தினசரிகளின்படி).
*இப்பிரச்சனையை PIGS (Portugal, Ireland, Greece, Spain) Problem என்று ஏளனமாக குறிப்பிடுகிறார்கள்.
உலக செய்திகளுக்கு இணையத்தையே நம்பிக்கொண்டிருக்கும் என்போன்றவர்களுக்கு தோழர் கலையரசன் மிகப்பெரும் துணை. கிரீசில் நடப்பதை மிக எளிமையாக அதே சமயத்தில் சரியான கண்ணோட்டத்துடனும் பதிவு செய்திருக்கிறார். நன்றி தோழர் கலையரசன்,
இதை யாராவது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் பயனுள்ளதாக இருக்கும்
ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸ், சுற்றுலா, கடன் அட்டை, துருக்கி அபாயம், மொத்தத்துல கிரீசை ஒரு பொய்யான பொருளாதரத்துல கொண்டு விட்ட மேற்கு நாடுகளின் விளைவை தோழர் கலையரசன் அழகா விளக்கியிருக்கார். அவர் தொடர்ந்து உலக செய்திகளை வினவுல எழுதணும்ணு கோருகிறேன். அடுத்த ஆப்பு ஸ்பெயினா, போர்ச்சுக்கலான்னு தெரியல!
மிக நான்றாக எழுதி இருக்கீறார்கள். வாழ்த்துக்கள். கூடுமானவரை தமிழ் மொழி பெயர்ப்பு கை கொடுத்து இருக்கு அனால் ரியல் எஸ்டேட் அப்படியே ஆங்கிலத்தில் வந்துவிட்டது.!
ஆம் அடித்தட்டு மக்கள் மட்டுமே சுரண்டப்படுவார்கள் இங்கே என்றான் நிறுவனத்திற்கு நம் PF அழ படுவதை போல் . அரசாங்கம் முதாலளிகளுக்கு
இப்போதுதான் இந்த விசயமே புரியுது. , சரியான மார்க்சிய லெனினிய தலைமை இல்லாத இந்த போராட்்டம் நீர்த்து போயிடும்….பாக்கலாம்
ஐரோப்பாவுல ஒதுங்குன அமெரிக்க சுனாமி இந்தியாவ எப்ப தாக்கப் போகுதோன்னு பீதியக் கிளப்புது இந்தக் கட்டுரை. தம்பி கேள்விக்குறி சொன்னது மாரி நம்ம ஆளுக இல்லேன்னா புரட்சி நமத்துப் போவும்ணு தோணுது!
கிரீஸ் அரசாங்கம் ஒரு கோமாளி அரசாங்கம் .மெசினுக்கு இந்த பக்கம் தாளை விட்டால் அந்த பக்கம் யூறோ நாணயம் கொட்டோ கொட்டுன்னு கொட்டபோகுது .இந்த அமெரிக்க டெக்னிக்க புரிஞ்சுகங்கபா …
அமெரிக்கா திவால் ஆனபோது டாலரை பெருமளவில் அச்சடித்து தப்பித்து கொண்டது .நம்ம கருணாநிதி 20000 கோடி நாசிக்ள அச்சடிக்க ஆடர் கொடுத்துட்டு வந்த்ருகிறார் .அதை வைத்துகொண்டு கொஞ்சம் கொஞ்சம் ஆக மக்களை சுரண்டி பார்த்து கூலி கொடுக்க வேண்டும் .இல்லாவிட்டால் விலை வாசி எல்லாம் எகிறிவிடும்.இதுதான் முதலாளியோட கணக்கு .கிரீஸ் அரசாங்கத்துக்கு சுரண்ட தெரியல .
it is not only in the greece, even we have to face in india itself, because it is not easier one to give back to world bank about 33,83,000 crores within this year end. dont worry it is the amount our indian govt have credit to world bank. The common men are all thinking it is all being in events finally it will be taken care by the govt. Yes the common men of greece were also thought so. Now we too… let us see.
மேலை நாடுகளில் நடக்கும் போரட்டங்கல்போல் ஏன் இந்தியாவில் நடத்தமுடியவில்லை என்பதை நாம் யோசிக்க வேண்டும் .
மேற்கத்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சீர்திருத்ததிலே தான் கவனம் செலுத்துவார்கள்.அவர்கள் புரட்சிக்கு தயார் நிலையில் இல்லாதவர்கள்.சமூக ஜன நாயக கட்சிகள் போல சீர் திருத்தங்களையே முன் மொழிவார்கள் .தேவை என்றால் கோட்பாட்டு ரீதியில் நிறைய பேசுவார்கள்.மாவோ போன்ற தலைவர்கள் அவர்களை ஈர்பதில்லை.மார்க்ஸ் ,ஏங்கல்ஸ் ,லெனின் என்ற வரிசையில் சிலர் ஸ்டாலினை ஏற்கிறார்கள், மாவோவை ஏற்ட்பதில்லை.இது எனது அனுபவம் ,(ஸ்கண்டிநேவிய நாடுகளை வைத்து )
கிரீஸ் பொருளாதார நிலையில் தாழ்ந்த நாடு ,முரண் பாடுகள் நிறைந்தநாடு ..பொறுத்திருந்து பார்ப்போம்.
கிழ்காணும் தளத்தில் உங்கள் கேள்விக்கு பதில் உள்ளது. ஏன் மாவோ மற்றும் ஸ்டாலின் போன்றவர்களை ஏற்பதில்லை என்பதற்கும் இத்தளத்தில் பதில் உள்ளது. மற்றும் கிரேக்க பிரச்சனை என்ன? அங்கு என்ன நடக்கிறது என்பதட்ட்கும் தகவல் உள்ளது.
http://www.wsws.org/tamil
http://www.wsws.org
வணக்கம் கலையரசன்,
உங்கள் கட்டுரைகள் பல விடயங்களைத் தொட்டுச்செல்கின்றன. இந்த வேளையில் சில கேள்விகளை உங்களை நோக்கி முன்வைக்க விரும்புகிறேன் பதில் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
1. மகிந்த ராஜபக்ச அரசு பற்றிய உங்கள் கருத்து என்ன?
2. பிரான்சில் இருக்கும் சோபாசக்தி அவருடன் இணைந்து வேலைசெய்யும் சுகன் லண்டன் ராகவன் ஆகியோர் பற்றி உங்கள் கருத்து என்ன?
3. டக்ளஸ் தேவானந்தா பற்றி உங்கள் கருத்து என்ன?
4. பிரான்ஸ் தலித் முன்னணி பற்றி உங்கள் கருத்து என்ன?
5. புலிகள் பற்றியும் தமிழ் தேசியம் பற்றியும் என்ன கருதுகிறீர்கள்.
6. தனி ஈழம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
இவை பற்றி விரிவான விளக்கம் இல்லாவிட்டாலும் ஒரிரு வரிகளில் ஏதாவது சொன்னால் சமகால அரசியலில் தெளிவில்லாமல் தென்படும் உங்கள் நிலைபாடுகள் பற்றி நாங்களும் அறிந்து கொள்ளலாம்.
மகிந்த ராஜபக்ச,டக்ளஸ் தேவானந்தா , சோபாசக்தி , சுகன், பிரான்ஸ் தலித்,
தமிழ் தேசியம், தனி ஈழம், புலிகள் இவை எல்லாம் ஒன்றுக்கொன்று முரண் பட்டவை போல தோன்றலாம் .ஆனால் இவை யாவும் ஒன்றினையும் புள்ளி கம்யூனிஸ எதிர்ப்பாகும் .இப்போ சந்தோசமா panadian ?
தோழர் கலையரசன் எழுதிய கட்டுரைகள் எல்லாவட்றையும் படித்தால் தங்கள் சந்தேகங்களுக்கு ஓரளவு விடை கிடைக்கும் என எண்ணுகிறேன்,
//தோழர் கலையரசன் எழுதிய கட்டுரைகள் எல்லாவட்றையும் படித்தால் தங்கள் சந்தேகங்களுக்கு ஓரளவு விடை கிடைக்கும் என எண்ணுகிறேன்,//
மேற்குறித்த எது பற்றியும் கலையரசன் இது வரை எழுதவோ குறிப்பிடவோ இல்லை. நான் அவர் எழுதிய எல்லாக் கட்டுரைகளையும் பொதுவாகப் படித்துள்ளேன். இப்போதைக்கு இத்தோடு நிறுத்திக்கொள்ள விரும்புகிறேன். கலையரசனிடமிருந்து பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.