இந்தியப் பொருளாதாரம் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கிப் பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டைவிட 36% அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்கிறது ரிசர்வ் வங்கி. 7% அளவுக்கு உயர்ந்துள்ள பணவீக்கம் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 56, 57 ரூபாயாக வீழ்ச்சியடைந்து, மேலும் சரிவை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. ரூபாய் மதிப்புச் சரிவினால் அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் விலைகள், குறிப்பாக இறக்குமதியாகும் எண்ணெயின் விலை உயர்ந்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதோடு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 19.6 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது என்கிறது அரசு.
முந்தைய ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.4 சதவீதமாக இருந்து, கடந்த நிதியாண்டில் 6.5 சதவீதமாக வீழ்ந்து, இவ்வாண்டு ஏப்ரலில் 5.3% அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது, கடந்த பத்தாண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகப் பெரிய சரிவாகும். நுகர்பொருள் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 8.1%லிருந்து 4.6% அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 2011-இல் 5.7 சதவீதமாக இருந்த தொழிற்துறை உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் 0.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று அரசே கூறுகிறது.
இவையெல்லாம் அரசாங்கம் அறிவிக்கும் புள்ளிவிவரங்கள்தான். உண்மைப் பொருளாதாரமோ இதைவிடப் பலமடங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, அரிசி, காய்கறிகள், பால், முட்டை, சமையல் எண்ணெய் முதலான அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 150%க்கு மேல் உயர்ந்து, உழைக்கும் மக்களின் உண்மை ஊதியம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், உணவுப் பணவீக்கம் கடந்த ஏப்ரலில் 10.49% அளவுக்குத்தான் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரக் கணக்குக்காட்டி அரசாங்கம் காதிலே பூச்சுற்றுகிறது.
ஏதோ, இப்போதுதான் இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியில் இருப்பது போல ஆட்சியாளர்கள் சித்தரிப்பதே அயோக்கியத்தனமானது. தனியார்மயமும் தாரளமயமும் திணிக்கப்பட்ட பின்னர், விவசாயமும் சிறுதொழிலும் நசிந்து விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்த போதிலும், அதனைப் பொருளாதார நெருக்கடியாக ஆளுங் கும்பல் ஏற்கவில்லை. பங்குச் சந்தை சரிவு, ரூபாய் மதிப்புச் சரிவு, அந்நிய முதலீடு வீழ்ச்சி என்றதும் இப்போது பொருளாதார நெருக்கடி பற்றி அங்கலாய்க்கின்றனர். பணவீக்கம் பற்றி பேசுகிறார்களே தவிர, விலைவாசி ஏறியதைப் பற்றி பேசுவதில்லை. பெட்ரோல் விலையேற்றம் பற்றி பேசுகிறார்களே தவிர, வாடகை, போக்குவரத்து, மருத்துவம், கல்விக் கட்டணங்கள் கிடுகிடுவென அதிகரித்திருப்பதைப் பற்றி பேசுவதில்லை. இந்தியப் பொருளாதாரத்தின் தரம் தாழ்ந்துவிட்டதாக எச்சரிக்கும் ஸ்டேண்டர்டு அண்டு புவர், ஃபிட்ச் முதலான தர மதிப்பீட்டு நிறுவனங்களும்கூட, நாட்டின் தொழில் மற்றும் விவசாய நெருக்கடி பற்றி வாய்திறக்காமல், அந்நிய முதலீடு வீழ்ச்சியையும் நிதி நெருக்கடியையும் பற்றித்தான் பேசுகின்றன.
“தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க, மன்மோகன்சிங் தலைமையிலான அரசாங்கம் தயக்கத்தையும் ஊசலாட்டத்தைக் கைவிட்டு, அந்நிய மூலதனத்தை ஈர்க்கும் வகையில் உறுதியுடன் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; வங்கி, காப்பீடு மற்றும் பென்சன் நிதிகளில் தனியார்மயத்தைத் தாராளமாக அனுமதிக்க வேண்டும்” என்கிறது, ஸ்டாண்டர்டு அண்டு புவர் எனும் தர மதிப்பீட்டு நிறுவனம். அந்நிய முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையின்மை நிலவுவதால், தாமதப்படுத்தாமல் நிதிச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்கிறார், அரசின் நிதித்துறை ஆலோசகரான கௌசிக் பாசு.
நிதிப் பற்றாக்குறையைப் போக்க அரசாங்கம் கடும் நடவடிக்கைகள் எடுக்கப் போவதாக ஜி-20 மாநாட்டில் ஏகாதிபத்தியங்களிடம் அறிவித்த பிரதமர், அந்நிய முதலீட்டைப் பெருக்க அவசியமான நடவடிக்கைகளை எடுப்போம்; மானியங்களை மேலும் குறைப்போம் என்று உறுதியளித்துள்ளார். இதன்படியே, இந்தியாவின் அரசு பத்திரங்களில் அந்நிய அரசு நிதி நிறுவனங்கள், அந்நிய மத்திய வங்கிகள், காப்பீடு மற்றும் பென்ஷன் நிதி நிறுவனங்கள் 20 பில்லியன் டாலர் (ஏறத்தாழ ரூ.11 ஆயிரம் கோடி) அளவுக்கு முதலீடு செய்ய தாராள அனுமதி, உள்கட்டமைப்புத் துறைகளில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்கள் அந்நிய நாடுகளிலிருந்து திரட்டும் நிதிக்கான வரம்பு அதிகரிப்பு, நீண்டகால வைப்புள்ள உள்கட்டமைப்புப் பத்திரங்களில் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் 25 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய தாராள அனுமதி என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அந்நிய முதலீடுகளைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது மன்மோகன் அரசு.
ஆளும் கும்பல் முன்வைத்துள்ள தீர்வுகள் மீண்டும் ஏகாதிபத்திய நிதிமூலதனம் மற்றும் தரகுப் பெருமுதலாளிகளின் நலனைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறதே தவிர, நெருக்கடிக்குத் தீர்வாக உள்நாட்டுச் சந்தையை வலுப்படுத்த திட்டம் ஏதுமில்லாததால், அது தவிர்க்கவியலாமல் மீண்டும் பொருளாதாரத்தை நெருக்கடிக்குத்தான் தள்ளும். உள்நாடுச் சந்தையை விரிவாக்கி வலுப்படுத்த வேண்டுமானால், புரட்சிகரமான முறையில் அரை நிலப்பிரபுத்துவ உறவுகள் வீழ்த்தப்பட்டு, நிலச்சீர்திருத்தமும் விவசாயத் துறையில் மாற்றங்களும் செய்வதோடு, அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரசாங்கம் பெருமளவில் முதலீடும் செய்ய வேண்டும். அதற்கு மாறாக, முதலீடு பற்றாக்குறை என்ற வாதத்தை வைத்து அந்நிய நிதி மூலதனத்துக்குக் கதவை அகலத் திறந்து விடுவதுதான் ஆளும் கும்பல் முன்வைக்கும் தீர்வு. “குடிகாரனின் கைகால் நடுக்கத்தை நிறுத்த இன்னொரு பெக் ஊற்றிவிடு” என்ற குடிகாரச் சிகிச்சையைத்தான் ஆட்சியாளர்களும் முன்வைக்கின்றனர்.
நெருக்கடியிலுள்ள அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரங்கள் மீண்டால்தான், அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதாரமும் மீள முடியும் என்ற நச்சுச் சுழலில் இந்தியா சிக்கிக் கொண்டுள்ளதால், அங்கே தலைவலி என்றால் இங்கே பேதியாகிறது. ஐரோப்பிய பொருளாதாரச் சரிவை மீட்க விழையும் ஏகாதிபத்தியவாதிகள், அதன் சுமையை வளரும் நாடுகளின் தலையில் சுமத்துவதால், அதற்கு விசுவாசமாக இந்தியாவும் 1000 கோடி டாலர் நிதியுதவி வழங்கப் போவதாக மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
நான்காண்டுகளுக்கு முன்பு அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போதும், ஈராண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய பொருளாதாரம் குப்புற விழுந்தபோதும், இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்காமல் வலுவாக யானை போல உறுதியாக நிற்கிறது என்று உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடிகளை மூடிமறைத்து ஆட்சியாளர்கள் பெருமை பேசினார்கள். ஆனால் இப்போது, உள்நாட்டுப் பொருளாதாரச் சரிவையும் தோல்வியையும் மூடிமறைத்து தப்பிக்கும் தந்திரமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதாரச் சரிவால்தான் இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது என்று பழியை ஐரோப்பா மீது போட்டுத் தப்பிக்க முயற்சிக்கின்றனர்.
ஏற்கெனவே ஏகாதிபத்திய உலகப் பொருளாதாரத்தின் நெருக்கடி முதலாளித்துவக் கட்டமைப்புக்கே ஏற்பட்ட நெருக்கடியாக முற்றியிருக்கிறது. இந்தியாவிலும் தனியார்மயம்தாராளமயம் எனும் மறுகாலனியக் கொள்கை படுதோல்வியடைந்திருக்கிறது.
இந்தத் தோல்விக்கும் வீழ்ச்சிக்கும் பொறுப்பேற்று பதில் சொல்லும் யோக்கியதையோ, நாணயமோ இல்லாத மன்மோகன் சிங் கும்பல், ஐரோப்பிய வீழ்ச்சிதான் நம் வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறி, ஐரோப்பாவுக்கு வேட்டி கட்டிவிடுவதற்காக நமது வேட்டியை உருவுகிறது.
நாட்டையும் மக்களையும் பேரழிவில் தள்ளிவிடும் இக்கொடிய மறுகாலனியத் தாக்குதலை எதிர்த்துப் போராடாவிட்டால், கிரீஸ் நாட்டுக்கு ஏற்பட்ட கதிதான் நமக்கும் ஏற்படும்.
__________________________________________
– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.
___________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- புதை சேற்றில் சிக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!
- உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011): தீராத தலைவலி!
- மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் பிரான்ஸ்!
- ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !!
- இலண்டன்: ‘தற்குறிகளின்’ கலகமும் கனவான்களின் கலக்கமும்!
- ஐக்கிய ஐரோப்பிய குடியரசு, முடிவல்ல ஆரம்பம்
- பொருளாதார நெருக்கடி, கிரேக்கத் தலைநகரம் எரிகின்றது!
- எங்களால் முடியும்! தொழிலாளர் நிர்வாகத்தில் பத்திரிகை நிறுவனம்
- கிரேக்க பொருளாதாரம் திவாலானது எப்படி? – ஆவணப்படம்
- கிறீஸ் மக்களைத் தாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்
உண்மையை பட்டவர்த்தனமாக விவரிக்கும் கட்டுரை…அனா எங்க புடிக்கிறீங்க உங்க கட்டுரைக்கான வார்த்தைகள (நச்சு சுழல், பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது, குடிகாரச் சிகிச்சை , வேட்டி கட்டிவிடுவதற்காக )
ஏழ்மையை சகித்து போகவவும் சமாளித்து போகும் மன நிலை கொண்ட இந்திய மக்கள் பொருளாதார வீழ்சி யை கண்டு எழுச்சி கொள்ள போவது இல்லை காலபோக்கில் மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்பது இந்திய அரசியல் அஸ்திரம் இது உள்ள வரை ஒரு பாதிப்பும் இல்லை
கவல்ப்படாதீங்க ஒபாமாவோட நம்ம மன்மோஹன் சிங் மண்வெட்டிய எடுத்துகிட்டு வறார்…,இன்னும் ஆழமா குழி தோண்டி பொதைக்கிறதுக்கு….