privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்போராடிய இடிந்தகரை மீனவரைக் காவு வாங்கியதா கடற்படை விமானம்?

போராடிய இடிந்தகரை மீனவரைக் காவு வாங்கியதா கடற்படை விமானம்?

-

பத்திரிகை செய்தி

கடற்படை-விமானம்நேற்று காலை இடிந்தகரை மக்கள் கடலில் இறங்கி நடத்தி வந்த போராட்டத்தின் போது, கண்காணிப்பு என்ற பெயரில் அச்சுறுத்தும் விதத்தில் மக்களின் தலைக்கு மேலே மிகத்தாழ்வாக குறுக்கும் நெடுக்குமாக சீறிக்கொண்டு சென்றது கடற்படை விமானம். அந்த இரைச்சலால் தாக்கப்பட்ட பல முதியவர்களும் சிறுவர்களும் தண்ணீரில் தடுமாறி, மயங்கி வீழ்ந்தார்கள்.

அலைகளால் மக்கள் அடித்துச் செல்லப்படாமல் பாதுகாப்பதற்காக, கயிறு கட்டி மக்களுக்குப் பாதுகாப்பு வலயம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இடிந்தகரை கீழத்தெருவைச் சேர்ந்த மீனவர் சகாயம்(42) என்பவர், கடற்படை விமானத்தின் ஒலியால் நிலைகுலைந்து வீழ்ந்து நினைவிழந்தார்.

உடனே அவரை இடிந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். ஆபத்தான நிலையில் இருப்பதால், நாகர்கோயில் கொண்டு செல்லுமாறு அவர்கள் கூறவே, மனைவி தமீனாவும் உறவினர்களும் சகாயத்தை நாகர்கோயில் ஜெயசேகர் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உடனே அனுமதிக்கப்பட்டு சோதனை செய்ததில், அவரது மூளை பலமாக பாதிக்கப் பட்டிருப்பதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். பத்தடி உயரத்தில் சீறிய விமானத்தின் ஒலி சகாயத்தின் தலையில் இடியாய் இறங்கியிருக்கிறது.

ஜெயசேகர் மருத்துவமனைக்கு காவல்துறை உயரதிகாரிகள் வந்து சென்றிருக்கின்றனர். நடந்த சம்பவம் பற்றி சகாயத்தின் மனைவி தமீனா நேற்றே புகார் கொடுத்திருக்கிறார். அப்புகாரை கூடங்குளத்திலிருந்து ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளர் நேரில் மருத்துவமனைக்கே வந்து பெற்றுச் சென்றிருக்கிறார். இருப்பினும் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. சகாயத்தின் மருத்துவம் குறித்தும் போலீசு அக்கறைப்படவில்லை.

அந்த தனியார் மருத்துவமனைக்கு சகாயத்தின் மனைவி இதுவரை சுமார் 30,000 ரூபாய் கட்டியிருக்கிறார். அவர்களுக்கு செலவிடும் சக்தி இல்லை. சகாயத்தை தீவிர சிகிச்சை பாதுகாப்பிலிருந்து அகற்றினால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

சகாயத்துக்கு ஏதேனும் நேர்ந்தால் அது கூடங்குளம் அணு உலைக்கு இந்த அரசு கொடுத்திருக்கும் இரண்டாவது இரத்தப் பலியாகவே இருக்கும். மீனவ மக்கள் தங்கள் ஊரில், தங்கள் கடலில் இறங்கி நின்று அமைதி வழியில் போராடுவதும்கூட இன்று மரணதண்டனைக்குரிய குற்றமாகிவிட்டது.

விமானத்தை தாழ்வாகப் பறக்க விட்டு மக்களை மிரட்டுவது என்பது, எல்லாப் போர்களிலும் ஆக்கிரமிப்பு இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கை. ஈழத் தமிழ்மக்களுக்குப் பழகிப் போன சிங்கள இராணுவத்தின் நடவடிக்கை. இரண்டு நாட்களுக்கு முன் இடிந்தகரை மாதா கோயிலின் கோபுரத்தை தட்டி விடும் அளவுக்குத் தாழப்பறந்தன விமானங்கள். இவ்வாறு பறப்பதன் நோக்கம் பாதுகாப்போ கண்காணிப்போ அல்ல. இந்த நடவடிக்கையின் ஒரே நோக்கம் மக்களை அச்சுறுத்துவதுதான்!

அணு உலைப் பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு, தென் தமிழகத்தின் கடலோரக் கிராமங்கள் இன்று முப்படைகளின் முற்றுகைக்கு ஆளாக்கப் பட்டிருக்கின்றன. ஈழத்தமிழ் அகதி முகாம்களைப் போல, தென் தமிழகத்தின் கடலோர கிராமங்கள் அனைத்தும் மாற்றப்படுவதை நாம் அனுமதிக்க கூடாது.

மீனவர் சகாயத்தின் உயிருக்கு பாதிப்பு நேர்ந்தால் அதற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பு. அவருடைய மருத்துவத்துக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். அவரது மனைவி கொடுத்த புகாரின் மீது உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும். விமானங்கள், கடற்படைப் படகுகளின் அச்சுறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும். போலீசு படைகளை அப்பகுதியிலிருந்து வாபஸ் பெறவேண்டும். 144 தடை உத்தரவை நீக்கவேண்டும். எல்லா போலீசு அத்துமீறல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் –

என்று அரசைக் கோருகிறோம். இக்கோரிக்கைகளுக்காக போராட அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம்.

இவண்

அ.முகுந்தன், ஒருங்கிணைப்பாளர், போராட்டக்குழு,

ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: