ர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக கேரள மாநில பொருளாதார ஆலோசகர் கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். 46 வயதான கீதா கோபிநாத், ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் நிரந்தர பேராசிரியராக 2010-ஆம் ஆண்டு கீதா நியமிக்கப்பட்டார். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னுக்கு பிறகு நிரந்தர பேராசிரியராக நியமிக்கப்படும் இந்தியர் என்ற பெருமையும் உலக அளவில் மூன்றாவது பெண் என்ற பெருமையும் பெற்றிருந்தார்.

கீதா கோபிநாத்

கேரள இடது முன்னணி அரசு கீதா கோபிநாத்-ஐ பொருளாதார ஆலோசகராக 2016-ஆம் ஆண்டு நியமித்தது. ஆனாலும், இந்த நியமனம் இடதுசாரி வட்டாரங்களில் முணுமுணுப்பை ஏற்படுத்தியது. கீதாவின் கல்வி – அனுபவ பின்னணியை அறியாத அவர்கள் இடதுசாரி குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதாலேயே பொருளாதார ஆலோசகர் பதவி கொடுக்கப்பட்டதாக பேசினர்.

கேரளத்தின் கன்னூரைச் சேர்ந்த விவசாயியும் தொழில் முனைவோருமான டி.வி. கோபிநாத் – வி.சி. விஜயலட்சுமி தம்பதியின் இளைய மகள் கீதா.  டி.வி. கோபிநாத் தந்தை டி.சி. கோவிந்தன் நம்பியார் அறியப்பட்ட இடதுசாரி கட்சித் தலைவரான டி.சி. நாராயணன் நம்பியார் மற்றும் பி.வி.லட்சுமி அம்மாவின் உறவினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரான ஏ.கே. கோபாலானின் உறவினரும்கூட.

கீதாவின் அப்பா தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர். தற்போது மைசூருவில் இவர்களுடைய குடும்பம் வசிக்கிறது. மழலையர் பள்ளி ஒன்றையும் இவர்கள் நடத்துகிறார்கள்.

மூத்த இடதுசாரியான கே.ஆர். கவுரி அம்மா, வேளாண் துறை அமைச்சராக இருந்தபோது அவர் கீழ் இயங்கிய குழுவில் கீதா பணியாற்றியிருக்கிறார். தேசிய தோட்டக்கலை ஆணையத்தின் உறுப்பினராக இவர் இருந்தபோது பாலக்காடு நெல்லியம்பதி ஆர்க்கிட் தோட்டத்தை உருவாக்கினார்.

கொல்கத்தா, டெல்லி, மைசூரு ஆகிய நகரங்களில் பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார் கீதா. டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளநிலை பட்டம் பெற்ற இவர், டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மற்றும் வாஷிங்க்டன் பல்கலையில் தனது முதுகலை பட்டங்களை பெற்றார். ஆய்வுப் படிப்பை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முடித்தார். சர்வதேச நிதி மற்றும் சர்வதேச பொருளாதார கொள்கை குறித்தும் இவர் கற்றுத்தருகிறார். பொருளாதார ஆய்வுகளை வெளியிடும் பிரசித்தி பெற்ற ரிவ்யூ ஆஃப் எகனாமிக்ஸ் ஸ்டடீஸ் இதழின் மேலாண் இயக்குனராகவும் உள்ளார்.  உலக பொருளாதார மன்றம் 2011-ஆம் ஆண்டின் ‘உலகளாவிய இளம் தலைவராக’ இவரை  சிறப்பித்தது.

படிக்க:
ஐ.எம்.எஃப் ஸ்ட்ரௌஸ் கான்: கந்து வட்டிக்காரனின் பொறுக்கித்தனம்!
சிறப்புக் கட்டுரை : உலக வங்கியின் ஆணைப்படி தண்ணீர் தனியார்மயம்

மட்டுமல்லாமல், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மற்றும் ஆக்ஸ்போர்டின் சர்வதேச வளர்ச்சி மையத்தின் ஆய்வுத்துறை உறுப்பினராகவும் ஜி-20 அமைப்பின் ஆலோசகர் குழுவிலும் இடம்பெற்றுள்ளார். தற்போது அமெரிக்காவின் வெஸ்டன் நகரத்தில் கணவர் இக்பால் தாலிபால் மற்றும் மகனுடன் வசிக்கிறார்.

கேரள இடது முன்னணி அரசு, சர்வதேச நாணய நிதியத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் அம்மாநில அரசின் ஆலோசகர், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ளதால், கேரள அரசின் ஆலோசகர் பதவியை கீதா கோபிநாத் ராஜினாமா செய்வார் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.

நமது கேள்வி என்ன? ஐ.எம்.எஃப் என்பது ஏழை நாடுகளுக்கு கடன் கொடுத்து வரி வசூல் இன்ன பிற நிபந்தனைகள் மூலம் கட்டுப்படுத்தும் ஒரு நிறுவனம். உலகவங்கி போல ஏகாதிபத்திய நாடுகளுக்கு உற்ற துணைவனாக இருந்து பணியாற்றுகிறது ஐ.எம்.எஃப்.  இந்த நிறுவனத்தில் ஒருவர் பதவியேற்கிறார் என்றால் அவர் எந்த தகுதிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்? உலக முதலாளித்துவத்தின் உற்ற வழிகாட்டியாக இருக்கும் தகுதியும், அனுபவமும்தான் அதில் முக்கியம். இந்நிலையில் கீதா கோபிநாத் கேரள அரசின் ஆலோகராக சி.பி.எம் கூட்டணி அரசால் தெரிவு செய்யப்பட்டதும், அதே கீதா கோபிநாத்தை ஐ.எம்.எஃப் தெரிவு செய்திருப்பதும் எதைக் காட்டுகிறது? இதற்கு சி.பி.எம் தோழர்கள் என்ன பதில் கூறுவார்கள்?

செய்தி ஆதாரம்: