நூல் அறிமுகம் : வரலாறும் வக்கிரங்களும்

வரலாற்றை எவ்விதமாக ஆய்வு செய்யவேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக விளங்கும் ரொமீலா தாப்பரின் இந்நூல், இந்தியாவைப் பற்றி சமூக விஞ்ஞான முறையில் ஆழ்ந்து ஆய்வு செய்துள்ளது.

விபரங்களை சேகரித்து அவற்றிலிருந்து உண்மைகளை கண்டறிந்து அந்த உண்மைகளின் அடிப்படையில் முடிவு எடுக்கவேண்டும் என்ற உயரிய அறிவுபூர்வமான பொதுக் கோட்பாடு வரலாற்று ஆய்வுக்கு மிகமிக அவசியமானதாகும் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் தங்கள் வசதிக்கேற்ப ஒரு முடிவை அல்லது முடிவுகளை எடுத்துவிட்டு அவைகளுக்கேற்ப “விபரங்களை சேகரிப்பதிலும் அல்லது உண்மை விபரங்களை திரித்து திசை மாற்றுவதிலும் ஒரு சாரார் எப்போதுமே ஈடுபட்டு வந்துள்ளனர். இப்போதும் ஈடுபட்டு வருகின்றனர்.

வரலாற்று ஆய்வில் இத்தகைய வக்கிரப் போக்கை அம்பலப்படுத்துவதிலும் அதே சமயத்தில் விபரங்களின் அடிப்படையில் வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு வரலாற்று உண்மைகளை நிலை நிறுத்துவதிலும் வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பர் முன்னணியில் இருப்பவர். அவரின் இந்த இருமுனைப் போராட்டத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது “வரலாறும் வக்கிரங்களும்” என்னும் இந்த அரிய நுல்…

வரலாறு என்பது கடந்தகால நிகழ்வுகளை வெறுமென பட்டியலிட்டுக் காட்டுவதல்ல. மாறாக உற்பத்திக் கருவிகள் படிப்படியாக முன்னுக்கு வந்ததன் விளைவாக சமூகத்தில் ஏற்பட்டு வந்த மாறுதல்களை அறிவதேயாகும். இந்த அடிப்படையில் இந்நூலில் கடந்தகால இந்திய வரலாற்றை ஊடுருவிப் பார்த்துள்ளார் திருமதி தாப்பர்.

கி.பி. 500-க்கு முந்தைய பண்டைய இந்தியர்கள், வரலாற்று ஆவணங்கள் என்ற நோக்கில் முக்கியமானவைகள் என்று கருதி பாதுகாத்து வைத்தவைகள் சமய நிறுவனங்களின் வரலாறுகள் மட்டுமேயாகும்; கி. பி. 500-க்கு பிறகு, வரலாற்றுத் தன்மையுடைய வாழ்க்கை வரலாறுகள் துருக்கிய முகலாய அரசர்களின் ஆதரவுடன் எழுதப்பட்டன; அனுபவ வருணனைகள் என்பதால் அவை, வரலாற்று மதிப்புமிக்கவை. ஆனால் அவை பிராமி மொழியில் எழுதப்பட்டிருந்தன. ஆனால் அந்த மொழியின் வரிவடிவத்தை இந்தியர்கள் மறந்துவிட்டனர் என்பதால் இந்திய வரலாற்று ஆய்வுகளை ஆங்கிலேயரின் ஆதரவுடன் தான் நடத்தவேண்டியிருந்தது என்று ரொமிலா தாப்பர் தனது ஆய்வில் முடிவு செய்கிறார்.

படிக்க:
புராணங்கள், அறிவியல், சமூகம்
இந்துத்துவ சதி சூழ்ச்சி நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு !

மேலும் 18 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் தங்களுடைய ஏகாதிபத்திய காலனியாதிக்க முறைக்கேற்ப ஐரோப்பிய மொழிகளும் இந்திய மொழிகளும் குறிப்பாக சமஸ்கிருதமும் ஒரே வழித் தோன்றியவை என்றும் ஐரோப்பியர்களும் இந்திய உயர்குல இந்துக்களும் ஆரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் எழுதி மொழி – இனவாதத்தை கிளப்பினர். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த தேசியவாதிகளும் அந்த எதிர்ப்பை இந்து மதக் கண்ணோட்டத்துடனேயே கிளப்புகின்றனர் என்றும் ரொமிலா தாப்பர் ஆதாரங்களுடன் விவரிக்கிறார்.

“வேதகால இலக்கியத்தின் துவக்கக் காலத்திற்கு இந்தியாவின் நாகரிக உதயத்தை தொடர்புபடுத்துவது காலப் பிழையாகும்” என்று பிரகடனம் செய்கிறார் ரொமிலா தாப்பர். இந்தியாவில் முதலில் தோன்றிய சிந்துவெளி நாகரிகம் (ஹரப்பா நாகரிகமும்) வேதகால நாகரிகம்தான். அதாவது ஆரிய நாகரிகம்தான் என்று இந்துமதவாதிகள் நிருபிக்க முயல்கின்றனர். இதை இலக்கியச் சான்றுகளைவிட மிக நம்பிக்கையான அகழ்வாராய்ச்சி சான்றுகளைக்கொண்டு முறியடிக்கிறார் ரொமீலா தாப்பர்.

வரலாற்றை எவ்விதமாக ஆய்வு செய்யவேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக விளங்கும் அவரது இந்நூல், இந்தியாவைப் பற்றி சமூக விஞ்ஞான முறையில் ஆழ்ந்து ஆய்வு செய்துள்ளது…  (இந்நூலின் பதிப்புரையிலிருந்து பக்-3-4)

“வரலாற்றின் பொருளைக் காண்பதில் இருவித சிந்தனை முறைகள் இருக்கின்றன. தற்காலத் தேவைகளை கடந்த காலத்தில் காணமுயல்வதும், பழங்காலத்தின் படிமத்தை தற்காலத்தின் மீது பதிக்க முயல்வதும் அவ்விரு செயல் முறைகளாகும்.” என்று கூறும் தாப்பர், பழங்காலப் படிமம் ஒன்று தற்காலத்தே எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு ஆரிய இனத்தின் (Race) உயர்வு குறித்த கருத்தாக்கத்தை சுட்டிக் காட்டி, இட்லரும் பாசிஸ்டுகளும் அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதை குறிப்பிடுவர்… (பக்-5)

ஆரிய இனத்தின் உயர்வு குறித்த கருத்தாக்கம் சிந்து வெளி நாகரிக ஆய்விலும் நுழைந்து, அந்த நாகரிகம் ஆரியருடையது என வரையறுக்கும் போக்கு தொடர்கிறது. மொழியியல், தொல்லியல், சூழலியல், பொருளியல் சான்றுகளை வைத்துப் பார்க்கும்போது, ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே சிந்துவெளி நாகரிகம் செயல்பட்டிருந்தது என்றும், அதே நாகரிகத்தின் பிற்காலத்தே தான் ஆரியர்கள் வந்தார்கள் என்றும், வந்தாலும் அந்த மக்களோடு உறவாடியும் முரண்பட்டும் வாழ்ந்தனர் என்றும் தெரிய வந்தன. ரிக்வேதத்தில் பல திராவிட மொழிச் சொற்கள் இடம்பெற்றுள்ளதும் பிராகுயி என்கிற திராவிட மொழி அந்தப் பகுதி சார்ந்த பலுசிஸ்தானில் இன்றும் வழக்கிலிருப்பதும் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமாகும் என்கிற கருத்திற்கு வலுச்சேர்க்கின்றன. இருப்பினும் இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாது அரசியல், சமயம் சார்ந்த ஆரியச் சார்பான சிந்துவெளி நாகரிகம், ஆரிய நாகரிகம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்தக் கருத்தின் வழியில் சிந்துவெளி நாகரிகம் (Indus valley civilization) சிந்து சரஸ்வ தி நாகரிகம் (Indus Saraswathy Civilization) எனப் பெயர்மாற்றம் பெற்றுள்ளது. ரொமிலா தாப்பர், ஆர். எஸ். சர்மா, இர்ஃபான், ஹபீப் போன்ற வரலாற்றுப் பேரறிஞர்கள் இதை மறுத்துள்ளனர். வரலாற்று ஆய்வில் ஏற்படும் தவறான இவ்வகைக் கண்ணோட்டம் வரலாற்றில் ஏற்படும் வக்கிரத்துக்கு மற்றொரு சான்றாகும்… (பக். 6-7)

படிக்க:
கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்ட வங்கிகள் | தோழர் விஜயகுமார் உரை
சபரிமலையில் பெண்கள் நுழையலாமா ? ஆச்சரியமூட்டும் சர்வே முடிவுகள்

மற்ற நாடுகளில் இல்லாத சாதிப்பிரிவுகள் இந்தியாவில் ஏற்பட்டு, அவையே சமூக அமைப்பின் அடித்தளமாயின. தாப்பர் சொற்களில் இந்தியாவில் சமூக அமைப்பு ஜாதி அமைப்பாக உருவாயிற்று. இது வருணக் கொள்கையாயிற்று. பிராமணன், சத்ரியன், வைசிகன், சூத்திரன் என்ற இந்த நான்கு வருணமும் முறையே பிரமனின் வாய், தோள், தொடை, பாதம் ஆகியவற்றிலிருந்து உண்டாக்கப்பட்டன என்ற ரிக்வேதம் கூறுகிறது. இது ரிக்வேதத்தின் பிற்காலச் சேர்க்கை என்றும் கருதப்படுகிறது. இவ்வகை சாதிய அமைப்புகள் உருவாக, சமூக பொருளாதார அந்தஸ்து, அரசியல் ஆற்றல், சுத்த அசுத்த வேறுபாடு ஆகியன பெருமளவு உதவின. சாதி-வருணம் இரண்டுக்கும் உள்ள ஒரு சிறுவேறுபாட்டையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். வருணம் என்பது சடங்கு ஆசாரத்தின் அந்தஸ்தாகும். “ஜாதி ‘ என்பது உண்மையான சமூக அந்தஸ்தாகும். இன்றைய சமூகவியல் ஆய்வில் சாதி/வருணம் -வர்க்கம் பற்றிய ஆய்வு சிறப்பிடம் பெறக் காணலாம். உயர்வாகக் கருதப்படும் பிராமணர்களுக்குள்ளேயே, சூத்திரர், மிலேச்சர் போன்ற பிரிவுகளும் இருப்பதைச் சில சான்றுகள் வழி ஆசிரியர் காட்டுகிறார். பலவகைத்தொழில் செய்தோர், இனக் குழு மக்கள் முதலியோரும் காலப்போக்கில் புதிய சாதிகளை தோற்றுவித்தனர். சாதிய உறவுகள், முரண்கள் பற்றியும் குறிப்பிடத்தவறவில்லை. “ஹரப்பா காலத்திலேயே சாதிய அமைப்பாக வளர்ச்சி பெறக் கூடிய சமுகக் கூறுகள் இருந்தன” என்றும் எழுதுகிறார். இவ்வகைச் சான்றுகள், இந்திய சாதி அமைப்பு பற்றிய ஆய்வை விரிவுபடுத்த உதவும்.

வினவு செய்திப் பிரிவு சாதிகளோடு சமயங்களும் தொடர்புகொண்டன. இனக் குழுமக்களின் சமய நம்பிக்கைகள் இந்து மதத்தோடு இணைக்கப்பட்டன. சமய இயக்கங்கள் புதிய சாதிகள் தோன்ற வழிவகுத்தன… (பக்.8) (இந்நூலுக்கு இராம.சுந்தரம் எழுதியுள்ள அணிந்துரையிலிருந்து)

நூல்: வரலாறும் வக்கிரங்களும்
ஆசிரியர்: டாக்டர் ரொமீலா தாப்பர்
தமிழில்: நா.வானமாமலை

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098.
பேச: 044 – 26251968, 26359906

பக்கங்கள்: 82
விலை: ரூ.35.00 (ஆகஸ்டு-2008 பதிப்பு)

இதர மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க