த்தர பிரதேச மாநிலம் புலந்தசாகரில் கடந்த திங்கள்கிழமை அன்று இந்துத்துவ மாட்டுவெறி கும்பல் நடத்திய தாக்குதலில் போலீசு அதிகாரி சுபோத் குமார் சிங் கொல்லப்பட்டார். போலீசு அதிகாரி சுபோத் சிங், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக காவி கும்பலால் அடித்துக்கொல்லப்பட்ட அக்லக் வழக்கை விசாரித்து வந்தார். எனவே, அவரை கொல்ல காவிவெறி கும்பல் திட்டமிட்டு வன்முறையைத் தூண்டியதாக பலர் சந்தேகம் எழுப்பினர். அதற்கு ஆதாரங்களாக பல விசயங்கள் தொடர்ந்து வெளிவந்தபடியே உள்ளன. சுபோத் சிங்கை கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான இராணுவ வீரர் ஜிதேந்திர மாலிக் என்பவரை கைது செய்துள்ளது உ.பி. போலீசு.

ஜிதேந்திர மாலிக்.

காஷ்மீரில் ரைஃபில் பிரிவில் பணியாற்றும் ஜிதேந்திர மாலிக், 15 நாள் விடுமுறையில் உ.பி.யில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார். பசுவைக்கொன்றதாகக் கூறி வன்முறை வெறியாட்டம் நடத்திய கும்பலுடன் சேர்ந்து கொண்ட ஜிதேந்திர மாலிக், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருக்கிறார். இந்த வன்முறையின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் பலவற்றில் இராணுவ உடையுடன் உள்ள ஜிதேந்திர மாலிக், ‘அவனை அடித்துவிட்டு, துப்பாக்கியை எடு’ என கூச்சலிடுவது பதிவாகியுள்ளது. புலந்தசாகர் காவல் நிலையத்தில் நடந்த வன்முறை வெறியாட்டத்தில், வன்முறைக்கு காரணகர்த்தாவான யோகேஷ் ராஜ் என்ற காவிவெறி கும்பல் தலைவனுக்கு வலது புறம் நிற்கிறார் இராணுவ வீரர். இதுவும் வீடியோவாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் மாலிக் மீது வழக்குப் பதிவு செய்தது உ.பி. போலீசு.

உள்நாட்டில் வன்முறை வெறியாட்டத்தை நடத்திவிட்டு, இராணுவ வீரர் மாலிக், ‘எல்லையை பாதுகாக்க’ அடுத்த நாள் காலையில் காஷ்மீருக்கு ஓடிவிட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு, உ.பி. போலீசு கையில் மாலிக்கை ஒப்படைத்தது இராணுவம். கைது செய்யப்பட்ட மாலிக், 15 நாள் நீதிமன்ற காவலில் அனுப்பட்டப்பட்டிருக்கிறார்.

இராணுவ ‘வீரர்’ மாலிக் கையும் களவுமாக வீடியோவில் பிடிபட்ட பின்னரும்கூட, தீர்ப்பு எழுதாதீர்கள் என இராணுவத்தில் உள்ள கும்பல் வெறியனுக்கு முட்டுக்கொடுக்கிறார் இராணுவ தலைமை ஜெனரல் பிபின் ராவத். ஊடகங்கள் போலீசு அதிகாரி கொலை வழக்கில் மாலிக்கின் கைது குறித்து கேட்டபோது, “ஆதாரங்களோடு வாருங்கள், பிறகு முடிவெடுக்கலாம். ஆதாரமில்லாமல் குற்றம் சுமத்தாதீர்கள்” என்கிறார்.

படிக்க:
கழிவு நீர் ஊர்தி வேலை நிறுத்தம் : சாக்கடை அள்ற கையின்னு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க !
வாசகர் புகைப்படம் – இந்த வாரத் தலைப்பு : உங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடை !

விடுமுறைக்கு ஊருக்கு வந்த இராணுவ வீரர், உள்ளூர் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கப்போயிருக்கிறார். கூடுதலாக வீடியோ ஆதாரத்தோடு கொலை குற்றத்திலும் சம்பந்தப்பட்டிருக்கிறார். இதெல்லாம் இராணுவம் செய்கிற சமூக சேவையா? கும்பல் வன்முறையில் ஈடுபட்ட ஒருவருக்கு இராணுவ ஜெனரல் முட்டுக்கொடுக்கிறார் என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம், காவி வெறி கும்பல்தான் திட்டமிட்டு போலீசு அதிகாரியை கொன்றிருக்கிறது என்பதை.

– கலைமதி

செய்தி ஆதாரம்:
Bulandhshar Violence: Soldier Allegedly Involved In Firing Arrested; Don’t Prejudge, Says Army Chief