Saturday, November 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 57

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க வளர அடித்தளமிடும் கவர்ச்சிவாத-மிதவாத இந்துத்துவ அரசியல்!

2024 நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 1-ஆம் தேதி நிறைவடையப் போகிறது. நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கியபோது இருந்த களநிலவரமும் தற்போதைய களநிலவரமும் பெரியளவில் மாறியிருக்கிறது. இந்துத்துவ சித்தாந்தம் செல்வாக்கு செலுத்துகிற பசுவளைய மாநிலங்களில் பா.ஜ.க. கும்பல் சந்தித்துவரும் நெருக்கடிகளானது, இம்மாநிலங்களில் கடந்தமுறை பெற்ற வெற்றியைக் கூட தக்கவைக்க முடியுமா என்ற அச்சத்தை மோடி-அமித்ஷா கும்பலுக்கு உருவாக்கியுள்ளது. ஊதிப் பெருக்கப்பட்ட விஸ்வ குரு பிம்பம், அயோத்தி ராமர் கோயில் திறப்பு, சி.ஏ.ஏ. அமலாக்கம் போன்றவை தேர்தலில் ஓட்டுகளாக மாறும் என்ற பா.ஜ.க.-வின் கணக்கு மக்கள் போராட்டங்களால் பயனளிக்கவில்லை. வேலையின்மை, குறைந்தபட்ச ஆதாரவிலை, அக்னிபாத் திட்டம், இடஒதுக்கீடு கோரிக்கைள் ஆகியவற்றால் வடமாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கைக் குறையும் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஆனால், அதேசமயத்தில் இத்தேர்தலில் கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் கூடுதல் தொகுதிகளை பெறும் வகையில் பா.ஜ.க. தனது தேர்தல் வியூகத்தை அமைத்துள்ளது. குறிப்பாக, ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடந்த தேர்தலைக் காட்டிலும் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, இம்மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவிற்கு பா.ஜ.க. வளர்ந்திருக்கிறது. மேலும், இம்மாநிலங்களை ஆளும் கொள்கைகளற்ற பிழைப்புவாத கட்சிகள் முன்னிறுத்தும் கவர்ச்சிவாத-மிதவாத இந்துத்துவ அரசியலானது, அம்மாநிலங்களை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி கும்பல் சித்தாந்த ரீதியாக வளர்வதற்கான அடிநிலமாக மாற்றி வருகிறது.

பாசிசக் கும்பலுக்கான பாதையை செப்பனிடும் நவீன் பட்நாயக்

சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய இந்திய மாநிலங்களில் ஒன்றுதான் ஒடிசா. அம்மாநிலத்தில் இரண்டில் ஒரு பெண் இரத்தசோகையாலும், மூன்றில் ஒரு குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் பாதிக்கப்படுமளவிற்கு வறுமை, வேலையின்மை, அடிப்படை வசதிகளின்மை, பசி, பட்டினி கோரத் தாண்டவமாடுகிறது. அதேசமயம், இரும்பு, பாக்சைட், மாங்கனீசு, கிராபைட், டோலோமைட், நிலக்கரி என பல்வேறு கனிம மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்த மாநிலமாகவும் ஒடிசா திகழ்கிறது.

இம்மாநிலத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் (BJD) ஆட்சியில் இருக்கிறது. தமிழ்நாட்டில் கருணாநிதியைப் போலவே, காப்பீட்டுத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மூத்த குடிமக்களுக்கான மாத நிதி ரூ.1000 போன்ற 60 கவர்ச்சிவாதத் திட்டங்களை அமல்படுத்தியிருக்கிறார், நவீன். ஒடிசாவில் பி.ஜ.த. வேட்பாளர்களுக்கு பதிவாகும் ஓட்டுகள் நவீனுக்காக போடப்படுபவையே என்று சொல்லப்படுமளவிற்கு சமூக-பொருளாதார-அரசியல் ரீதியாக பின்தங்கிய கணிசமான ஒடிசா மக்கள் நவீனை ஆதரிக்கின்றனர்.


படிக்க: 2024 தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு மாற்றுத் திட்டமும் மக்கள் போராட்டமும் முன்நிபந்தனை!


ஆனால், நவீனின் இந்த கவர்ச்சிவாத அரசியலை எதிர்த்து அரசியல் செய்வதற்கோ, சித்தாந்த ரீதியாக மக்களைத் திரட்டுவதற்கோ அங்குள்ள சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்) கட்சிகளும், அம்பேத்கரிய இயக்கங்களும் திராணியற்று உள்ளன. மேலும், கிட்டத்தட்ட 23 சதவிகிதம் பழங்குடி மக்களும் 18 சதவிகிதம் தலித் மக்களும் வாழும் ஒடிசாவில் சரியான அரசியலை முன்வைத்து அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அமைப்புகளும் இல்லை. இந்தப் பின்னணியில்தான் நவீனால் தொடர்ந்து ஐந்து முறை முதலமைச்சராக முடிந்திருக்கிறது.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன், ஒடிசாவின் சட்டமன்றத் தேர்தலும் ஒருசேர நடைபெற்று வருகிறது. நான்கு கட்டங்களாக நடைபெறும் சட்டமன்ற-நாடாளுமன்றத் தேர்தலில் பிஜூ ஜனதா தளத்திற்கும் பா.ஜ.க-விற்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்) கட்சிகள் இணைந்து போட்டியிட்டாலும் இக்கூட்டணி களத்தில் இல்லாத நிலைமைதான் இருக்கிறது.

எனவே, தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் நவீன் பட்நாயக்-இன் பிஜூ ஜனதா தளமே மீண்டும் வெற்றிபெற்று ஆறாவது முறையாக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது ஒடிசாவில் கூடுதலான மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கின்றன.

கடந்த 2000-ஆம் ஆண்டு, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்துதான், நவீன் முதன்முறையாக ஒடிசாவின் முதல்வரானார். ஒடிசாவில், 1947 போலி சுதந்திரத்திற்குப் பிறகான காலத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். வேலை செய்து வந்தாலும், பா.ஜ.க-பி.ஜ.த. கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. வேகமாக வளர்ந்தது.

வடகிழக்கு மாநிலங்களைப் போலவே ஒடிசாவிலும் பழங்குடி மக்களை இந்துமயப்படுத்துவதற்காக விஸ்வ இந்து பரிஷத், வனவாசி கல்யாண் ஆசிரமம், ஓராசிரியர் பள்ளிகள், விவேகானந்தா கேந்திரா போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 2007-இல் இராமர்-சேது பாலத்தை இடிக்கக்கூடாது என்று பழங்குடிகளைத் திரட்டி ராம் தனு யாத்திரையை நடத்தியது விஸ்வ இந்து பரிஷத்.

இதன் தொடர்ச்சியாக, தனது பலத்தை பரிசோதிக்கவும் கிறித்துவ பழங்குடி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும் நடத்தப்பட்டதுதான் 2008-இல் காவி குண்டர்படையால் கிறித்துவர்கள் மீது நடத்தப்பட்ட கந்தமால் கலவரம். இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த இக்கலவரத்தில் இந்துமதவெறியர்களால் 600 கிராமங்கள் சூறையாடப்பட்டன, 6000-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன, 300-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இடிக்கப்பட்டன, நூற்றுக்கணக்கான கிறித்துவர்கள் கொல்லப்பட்டனர், பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். ஒடிசாவையே உறைய வைத்த இந்த கலவரத்திற்குப் பிறகான 2009 தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பா.ஜ.க-வுடனான 11 ஆண்டுகால கூட்டணியை முறித்துக்கொண்டு தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தார் நவீன் பட்நாயக்.

அதற்கடுத்து 2014-இல் ஒன்றியத்தில் அமைந்த மோடி ஆட்சியானது, இந்தியா முழுவதும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி கும்பலுக்கான மறுமலர்ச்சிக் காலமாக அமைந்தது. ஒடிசாவிலும், திரிபுரா, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் காவிக் கும்பல் வேகமாக வளர்ந்தது. இதன் தொடர்ச்சியாக தொடர்ந்து மூன்று ஐந்தாண்டுகளுக்கு வலுவான எதிர்க்கட்சி இல்லாமல் ஆட்சி நடத்திவந்த நவீனிற்கு 2019-இல் பா.ஜ.க. எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

தற்போது நடப்பதை போலவே 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒருசேர நடத்தப்பட்ட ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் முந்தைய தேர்தலைவிட பா.ஜ.க. 13 இடங்கள் கூடுதலாக பெற்று 23 இடங்களை கைப்பற்றியது. அதேபோல், மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 2014 தேர்தலில் ஒற்றை தொகுதியில் வெற்றிபெற்ற பா.ஜ.க. 2019 தேர்தலில் 8 இடங்களில் வெற்றிபெற்றது. கிட்டத்தட்ட 17 சதவிகிதம் வரை வாக்குவிகிதம் உயர்ந்திருந்தது.

எனவே, பா.ஜ.க-வுடன் போட்டியிட வேண்டுமென்பதற்காக தனது கவர்ச்சிவாத அரசியலுடன் மிதவாத இந்துத்துவ அரசியலையும் முன்னெடுத்தார் நவீன் பட்நாயக். குறிப்பாக 2019-க்குப் பிறகான, தனது ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் பல்வேறு இந்துத்துவ நடவடிக்கைகளையும் கார்ப்பரேட் அரசியலையும் தீவிரமாக மேற்கொண்டார்.

பட்டினி, வளர்ச்சியின்மை, வேலையின்மை, வீடுகள் பற்றாக்குறை, உடல்நலக் குறைபாடுகள், சூழலியல் நெருக்கடிகள் என பல்வேறு சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளில் உழன்று கொண்டிருக்கும் ஒடிசா மக்களுக்காக சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யாமல், கிராமப்புறங்களில் உள்ள கோயில்களைப் பாதுகாப்பது- புனரமைப்பது போன்றவற்றில் முதலீடு செய்து கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்தது, நவீன் அரசு.

2018-இல் அறிவிக்கப்பட்ட “நமது கிராமம், நமது மேம்பாடு” என்ற திட்டத்தையே பூசி மெழுகி “நமது ஒடிசா புதிய ஒடிசா” என்ற பெயரில் கவர்ச்சிகரமாக அறிவித்தது ஒடிசா அரசு. கிராமப்புற வழிப்பாட்டுத் தலங்களைப் பாதுகாப்பது, பாரம்பரிய இடங்களைப் பராமரிப்பது, கிராமப்புறக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது என்ற பெயரில் இந்தத் திட்டத்திற்காக மட்டும் ரூ.4000 கோடி வாரியிறைக்கப்பட்டுள்ளது. பவானி பாட்னாவில் உள்ள கால்கண்டி பல்கலைக்கழகத்தின் பெயரை காலகண்டியின் இந்து தெய்வமான மணிகேஸ்வரியின் பெயரால் மாமணிகேஸ்வரி என பெயர் மாற்றியது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

நவீன் முன்னெடுத்த மிதவாத இந்துத்துவ நடவடிக்கையின் உச்சமே ரூ.973 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட பூரி ஜெகன்நாதர் ஆலய மறுகட்டுமானத் திட்டமும் அதன் பிரம்மாண்டத் திறப்பு விழாவுமாகும். மோடியின் 3.0 ஆட்சிக்கும் இந்துராஷ்டிரத்திற்குமான அடித்தளத்திற்கும் அயோத்தியில் ராமன் கோயில் திறப்பை பா.ஜ.க. கும்பல் அரங்கேற்றியது என்றால், பூரி ஜெகன்நாதர் ஆலயத் திறப்பு நவீனின் 6.0 ஆட்சிக்கான அடித்தளம் எனலாம். மேலும், மோடியின் இராமர் கோயில் திறப்பிற்கு 5 நாட்களுக்கு முன்பாக பூரி ஜெகன்நாதர் கோயில் திறக்கப்பட்டது.

இந்த ஜெகன்நாதர் கோயில் திறப்பை பிரம்மாண்டமாக நடத்திய நவீன் அரசு, கோவில் திறப்பில் மக்களை பங்கேற்க வைப்பதை திட்டமிட்டு மேற்கொண்டது. இதற்காக, ராம ஜென்ம பூமி இயக்கத்தின் போது, உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு செங்கல் தர வேண்டும் என்று காவி கும்பல் கையாண்ட வழிமுறையைப் போல, ஜெகன்நாதர் கோயில் திறப்பின் போது, ஒடிசாவின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெற்றிலை பாக்கையும் கைப்பிடி அளவு அரிசியையும் திரட்டியது நவீன் அரசு. மேலும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் “ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கத்திற்கு எதிராக “ஜெய் ஜெகன்நாத்” முழக்கத்தை முன்னிறுத்தினார் நவீன். ஆனால், அந்த “பூரி ஜெகன்நாதரே மோடியின் பக்தர்தான்” “ஜெகன்நாதர் கோவிலுக்கு ஆபத்து” என ஜெகன்நாதர் கோவிலையே தனது தேர்தலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்தியது பா.ஜ.க. கும்பல்.

மேலும், ஒடிசா தேர்தலையொட்டி, மே 10 அன்று பி.ஜ.த. வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், புகழ்பெற்ற ஆளுமைகளின் பெயரில் 100 பாரம்பரிய பள்ளிகள் உருவாக்குதல், மாநிலம் முழுவதும் உள்ள பகபத் டுங்கி (Bhagabata Tungi) (கிராமப்புறங்களில் மதம், புனித நூல்கள், கலாச்சாரம் குறித்து உரையாடுவதற்கான சிறுகுடிசை) மேம்படுத்துவதற்கான நிதியை வழங்குவது, பாரம்பரிய இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்கான பாரம்பரிய மேம்பாட்டு நிதியாக ரூ.1000 கோடி உருவாக்குவது போன்றவற்றை வாக்குறுதிகளாக அளித்திருக்கிறது. ஏற்கெனவே நாடு முழுவதும் உள்ள 7,200 பகபத் டுங்கிகளை சீரமைப்பதற்காக ஒவ்வொரு டுங்கிக்கும் ரூ.50,000 நிதயுதவி அளிப்பதாக நவீன் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


படிக்க: 2024 தேர்தல் முடிவுகள்: மக்கள் போராட்டங்களால் பாசிசத்தை வேரறுப்போம்!


பா.ஜ.க-விற்கு போட்டியாக, ஒடிசாவின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் மேம்படுத்துவதாக நவீன் அரசு முன்னெடுத்திருக்கும் இந்நடவடிக்கைகளானது அப்பட்டமான கவர்ச்சிவாத-மிதவாத இந்துத்துவ அரசியலாகும். இந்த கவர்ச்சிவாத-இந்துத்துவ அரசியலானது, ஏற்கெனவே வறுமை, பசி, பட்டினி, வேலையின்மை, அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் மக்களின் ஜனநாயக-அரசியல் உணர்வை மழுங்கடித்து மதப் பிற்போக்கில் அழுத்துவதும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் இந்துமதவெறி அரசியலை நோக்கித் தள்ளுவதுமாகும். இவ்வாறு மக்களை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் இந்துத்துவ மதவெறி அரசியலை நோக்கித் தள்ளுவதன் மூலம் ஒடிசாவில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் இந்துத்துவ மதவெறி அரசியல் செழித்து வளர்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது நவீன் அரசு.

நவீனின் மிதவாத இந்துத்துவ நடவடிக்கைகளால், மக்கள் மட்டுமல்ல, பி.ஜ.த. கட்சியினரும், அதன் அணிகளுமே பா.ஜ.க-விற்கு பலியாகியிருக்கின்றனர். இதுவரை பி.ஜ.த-வைச் சார்ந்த ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்களும், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பா.ஜ.க-விற்கு தாவியிருக்கின்றனர்.

ஒடிசாவில் அனுமன் ஜெயந்தி கொண்டாடத் தொடங்கியது முதல் சம்பல்பூர், பலாசூர் என பல இடங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்கள் இந்துமதவெறிக் கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டு சம்பல்பூரில் நடத்தப்பட்ட கலவரத்திற்குப் பிறகு, ஒடிசாவின் ஜெகன்நாத பண்பாட்டில் அனுமன் பணத்திற்கான கடவுளாக வழிபடப்பட்டிருந்தாலும், தற்போது திடீரென அனுமனும், அனுமன் படம் பொறித்த கொடிகளும் பி.ஜ.த. கட்சி இளைஞர்களிடம் செல்வாக்கு செலுத்துகிறது என்கிறார், பி.ஜ.த-வின் மூத்த தலைவர். எனவே, பாசிச பா.ஜ.க-வின் இந்துமதவெறிக்கு மாற்றாக மிதவாத இந்துத்துவத்தை முன்னிறுத்துவதானது தனக்குத்தானே குழிப்பறித்துக் கொள்வது என்பதற்கு ஒடிசாவே சான்று.

மேலும் ஒடிசாவின் கனிம மற்றும் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக வேதாந்தா, ஜிண்டால், ஆதித்யா பிர்லா, அதானி என பல கார்ப்பரேட் கழுகுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு எதிராக அம்மாநிலப் பழங்குடி மக்கள் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் மக்களை மலைகளிலிருந்து விரட்டியடிக்க போலீசையும், துணை ராணுவப் படையையும் பழங்குடி மக்கள் மீது ஏவி வருகிறது ஒடிசா அரசு. பழங்குடி மக்களுக்கு ஆதரவாகப் போராடும் சமூக ஆர்வலர்களையும் ஊபா போன்ற கருப்பு சட்டங்களில் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறது. கூடுதலாக, நயவஞ்சகமாக பழங்குடி மக்களின் நில உரிமையைப் பறிப்பதற்கான சட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறது ஒடிசா அரசு. தனது இருபத்தைந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பழங்குடிகள் மீது நவீன் அரசு நடத்திவரும் உள்நாட்டுப் போரை மூடிமறைப்பதற்கான திரைச்சீலையும் இந்த கவர்ச்சிவாத அரசியலேயாகும்.

கவர்ச்சிவாத-மிதவாத இந்துத்துவ அரசியல்

ஒடிசாவைப் போலவே தெலுங்கானா, ஆந்திரப்பிரதேச மாநிலக் கட்சிகளும் பா.ஜ.க-விற்கு போட்டியாக மிதவாத இந்துத்துவ அரசியலையே முன்வைக்கின்றன. தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சிக்காலத்தில், ஒடிசாவைப் போலவே “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்திற்கு மாற்றாக “ஜெய் ஹனுமன்” முழக்கம் முன்வைத்தது; ஹனுமன் ஜெயந்தியை ஒட்டி 41 நாட்கள் ஹனுமன் பாடல்கள் பாடியது; சுதர்சன, சண்டி மற்றும் ராஜ சியாமள் யாகங்கள் நடத்தியது; ரூ.1800 கோடி செலவில் யாதத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம கோவிலை புனரமைத்தது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவைமட்டுமின்றி, ஆந்திராவிலிருந்து தனித் தெலுங்கானா மாநிலமாகப் பிரிந்த பிறகும், சந்திரசேகர ராவ் மற்றும் ரேவந்த் ரெட்டி என இருவரது ஆட்சியிலும், ரெட்டி, வேல்மா மற்றும் பிராமணர்கள்தான் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால் பாதிக்கப்படுகிற இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரைத் தன்பக்கம் திரட்டிக் கொள்ள பா.ஜ.க. கும்பல் எத்தனிக்கிறது.

ஒடிசாவைப் போலவே, ஆந்திரப் பிரதேசத்திலும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகிறது.  தற்போது பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சி, தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர் என்பதால், பா.ஜ.க-வைப் போலவே அவரது மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. ஆந்திராவில் நடைபெறும் கோயில் திருட்டுகள் மற்றும் கோயில்கள் மீதான தாக்குதலுக்கு ஜெகன் கிறித்துவர் என்பதே காரணம் என பா.ஜ.க-வின் அரசியலையே தானும் செய்கிறது தெலுங்கு தேசம் கட்சி.

ஜெகனும் தன்னுடைய கிறித்துவ மதப்பற்றை மறைத்துக் கொள்வதில்லை என்றாலும், தான் இந்து விரோதி இல்லை என்பதை நிரூபிப்பதற்காக திருப்பதிக்கு செல்வது; பசு பூஜையில் கலந்து கொள்வது; சந்திரபாபு ஆட்சிக்காலத்தில் சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்ட கோவில்களை கட்டுவது என தனது கவர்ச்சிவாத அரசியலுடன் மிதவாத இந்துத்துவ நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இக்கட்சிகளுக்கென தனிக் கொள்கையோ, சித்தாந்தமோ கிடையாது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. அடிமை சேவகம் புரிந்த எடப்பாடி பழனிச்சாமியைப் போல, தேர்தலில் ஓட்டுவாங்குகிற கண்ணோட்டத்தில் மட்டுமே இக்கட்சிகள் பா.ஜ.க-வை எதிர்ப்பதாக நாடகமாடுகின்றனவே தவிர, சித்தாந்த ரீதியாக பா.ஜ.க-வை ஆதரிக்கவே செய்கின்றன. எனவேதான், நாடாளுமன்ற மாநிலங்களவையில் பெரும்பான்மையின்றி பா.ஜ.க. திண்டாடும் போதெல்லாம் பா.ஜ.க-விற்கு இக்கட்சிகள் தோள் கொடுத்தன. காஷ்மீரின் சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, இந்திய விவசாயத்தையே கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் மூன்று வேளாண் சட்டங்கள், சிறுபான்மையினரை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தும் சி.ஏ.ஏ. என கடந்த பத்தாண்டுகளில் பா.ஜ.க-வால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்துராஷ்டிர அடிக்கட்டுமான சட்டத்திட்டங்கள் பெரும்பாலானவை இக்கட்சிகளின் ஒத்துழைப்பால்தான் நிறைவேற்றப்பட்டன.

எனவே, பா.ஜ.க-வுடன் கூட்டணியில்லை என்று சொல்லிக் கொண்டே, பா.ஜ.க-வின் இந்துத்துவ சித்தாந்தத்தை ஆதரிக்கின்ற இந்த பிழைப்புவாதக் கட்சிகள் எதிர்காலத்தில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது. ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. ஊடுருவலுக்கு களம் அமைத்துக் கொடுக்கிற இக்கட்சிகளைப் புறக்கணிப்பதும், இக்கட்சிகளின் மிதவாத இந்துத்துவ அரசியலை முறியடிப்பதும் பாசிச எதிர்ப்பில் முக்கியமானதாகும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – ஜுன் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சாதி மறுப்பு திருமணம் – நெல்லை சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்! | மக்கள் அதிகாரம் கண்டனம்

சாதி மறுப்பு திருமணம் – நெல்லை சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்!

பிள்ளை சாதி வெறியர்களுக்கு பாடம் புகட்டுவோம்!

சாதி மறுப்புத் திருமணங்களை
மக்கள் அதிகாரம் நடத்தி வைக்கும், ஆதரவளிக்கும்!

16.06.2024

கண்டன அறிக்கை

சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தார்கள் என்று கூறி கடந்த ஜூன் 13ஆம் தேதி நெல்லை சிபிஎம் அலுவலகத்தை வெள்ளாளர் முன்னேற்ற கழகம் என்ற சாதி வெறி அமைப்பைச் சேர்ந்த பந்தல் ராஜா தலைமையில் பெண் வீட்டார் தாக்கியுள்ளனர்.

சிபிஎம் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த சாதி மறுப்பு காதல் தம்பதியினரின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று போலீசிடம் புகார் அளித்த பின்னர் தான், இந்தக் கும்பல் சிபிஎம் அலுவலகத்தை தாக்கியதையும் போலீசு அமைதியாக வேடிக்கை பார்த்ததையும் அறிய முடிகிறது.

இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு முழுவதும் எழுந்த கண்டனங்கள் வாயிலாக வேறு வழியின்றி தாக்குதலில் ஈடுபட்ட 25 பேரில் 10 பேர் சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.  பெண் வீட்டார் திடீரென்று ஆவேசப்பட்டு நடந்த நிகழ்வு அல்ல இது.  பந்தல் ராஜா என்ற நபர் கட்டப்பஞ்சாயத்து நடத்திவரும் சாதி வெறி  ரவுடி. வெள்ளாளப் பிள்ளை சாதியினருக்கு தன்னைத் தலைவனாகக் காட்டிக் கொண்டு அச்சாதி இளைஞர்களை ஆதிக்க சாதி வெறியூட்டி பொறுக்கித் தின்பதற்கு பயன்படுத்தும் எண்ணற்ற ஆதிக்க சாதி – ஆர்.எஸ்.எஸ் வெறியர்களில் ஒருவனே. இந்தத் தாக்குதலை நியாயப்படுத்தி சமூக வலைத்தளங்களில் ஆதிக்க சாதி வெறியர்கள் பலர் எழுதி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண் வீட்டாரின் கோபத்தை பயன்படுத்தி திட்டமிட்டு சிபிஎம் அலுவலகம் மீது இந்த பொறுக்கிக் கும்பல் தாக்குதல் நடந்திருக்கிறது. இந்த தாக்குதலுக்கு மாவட்ட போலீசார் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

சாதி மறுப்பு திருமணங்களுக்காக சிபிஎம் அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும் என்று நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் ஸ்ரீ ராம் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

தொடர்ந்து ஆதிக்க சாதி வெறியர்களின் கூடாரமாக மாறிக்கொண்டிருக்கும் நெல்லையில் சிபிஎம் கட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் அதற்குக் காரணமான போலீசு மற்றும் ஆதிக்க சாதி வெறியர்களையும் மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கின்றது.

சம்பவத்துக்கு காரணமான பந்தல் ராஜா உள்ளிட்டோர் தடுப்புக்காவல் சட்டத்தில் அடைக்கப்படுவதுடன் பந்தல் ராஜா உள்ளிட்ட ஆதிக்க சாதி வெறியர்கள் இதுவரை மேற்கொண்ட ஆதிக்க சாதிவெறி சம்பவங்கள் கட்டப்பஞ்சாயத்து ரவுடித்தனங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளும் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்  என்றும்  சம்பவத்துக்குக் காரணமான போலீசுக்காரர்களும்  உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் ஆதிக்க சாதி வெறி சங்கங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இந்த நாட்டையும் இந்த நாட்டு மக்களையும் படையல் போடும் இந்த ஆர்.எஸ்.எஸ் – ஆதிக்க சாதிவெறி கும்பல், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி வ. உ. சிதம்பரனார் உள்ளிட்ட எவரையும் பயன்படுத்துவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.

இதுவரை எண்ணற்ற சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்த மக்கள் அதிகாரம் இனிமேலும் அந்தப் பணியை மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் சாதி மறுப்பு திருமணங்கள் நடத்தி வைப்போம். தடுக்க வரும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம். ஆதிக்க சாதிவெறி சங்கங்களை தடை செய்வதற்காகப் போராடுவோம்!


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வேண்டாம் நீட் : மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் | நேரலை வீடியோ

நீட் தேர்வு – மோசடிகளின் உச்சம்! அதிகார வர்க்கம், கோச்சிங் சென்டர்களின் கூட்டுக் கொள்ளை! நீட் தேர்வை ரத்து செய்! வேண்டாம் நீட், வேண்டும் ஜனநாயகம்! என்ற முழக்கங்களின் அடிப்படையில், ஜூன் 15 அன்று காலை 11.00 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நீர் தேர்வை எதிர்க்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் கலந்துகொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் நேரலை வீடியோவை வாசகர்களுக்கு வழங்குகிறோம்!

காணொளியை பாருங்கள் பகிருங்கள்!!

அர்ஜெண்டினாவில் கார்ப்பரேட்மயத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் | புகைப்படங்கள்

ர்ஜெண்டினா நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் அரசு செலவினங்களைக் குறைப்பது குறித்தான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதை கைவிடுவது குறித்தான மசோதா ஒன்றை தாக்கல் செய்வதற்கான முயற்சியில் ஜேவியர் மிலே அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கையைக் கண்டித்து ஜூன் 12 அன்று தலைநகர் புவெனஸ் ஐரிஸ்-இல் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசு தடியடி, கடும் குளிரில் தண்ணீரை பீய்ச்சி அடிப்பது, கண்ணீர்ப் புகைக்குண்டு, ரப்பர் குண்டுகளைக் கொண்டு சுடுவது போன்ற அடக்குமுறைகளைப் பயன்படுத்தி போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தது. ஆனால், போராட்டங்கள் தொடரும் என்பதை மக்களின் உணர்வு பிரதிபலிக்கிறது.

அர்ஜெண்டினா மக்கள் நடத்திய எழுச்சிமிகு போராட்டத்தின் புகைப்படங்களை வாசகர்களுக்கு பகிர்கிறோம்.

அதிபர் ஜேவியர் மிலே-வுக்கு எதிராக தலைநகர் புவெனஸ் ஐரிஸ்-இல் குவிந்திருந்த மக்கள்
அர்ஜெண்டினா நாடாளுமன்றத்தை மக்கள் முற்றுகையிடமால் தடுப்பதற்காக போலீசு குவிக்கப்பட்டிருந்த காட்சி
போராடும் மக்களை ஒடுக்கும் போலீசு

போராடும் மக்களை அரசு அதிகாரிகள் ‘பயங்கரவாதிகள்’ என்று இழிவு படுத்தியுள்ளனர்.
போராடும் மக்களுக்கு எதிராக கண்ணீர்ப் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தும் போலீசு

“நாட்டிற்கு இழைக்கப்பட்ட துரோகத்தை மறக்க மாட்டோம்” என்று பதாகை கூறுகிறது


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அம்பலமான நீட் தேர்வின் யோக்கியதை | தோழர் ரவி

அம்பலமான நீட் தேர்வின் யோக்கியதை | தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாலஸ்தீனம்: இன அழிப்புப் போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்! நயவஞ்சக நாடகமாடும் அமெரிக்கா!

காசா பகுதி மீது யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசு நடத்திவரும் இன அழிப்புப் போரானது, ஏழு மாதங்களைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டு இதுவரை 35,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொடூரமாகப் படுகொலை செய்துள்ள நிலையில், இன அழிப்புப் போரை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது இஸ்ரேல் அரசு. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இதைக் கண்டிப்பது போல நாடகமாடிக் கொண்டே தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி, இனப்படுகொலைக்குத் துணை நிற்கின்றன.

உலகை உலுக்கிய ரஃபா தாக்குதல்

கடந்த மே 7-ஆம் தேதி முதலாக, காசாவின் தெற்குப் பகுதியில் எகிப்தின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரஃபா பகுதியில் இஸ்ரேலிய இராணுவப் படைகள் தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ளன. மேலும், வடக்கு மற்றும் மத்திய காசாவின் பல பகுதிகளிலும் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேலிய இராணுவத்தின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டினாலும் குண்டுவீச்சினாலும் பாலஸ்தீன மக்கள் நாள்தோறும் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள், குடியிருப்புகள் போன்ற மக்கள் அடர்த்தி அதிகமுள்ள இடங்களைக் குறிவைத்துத் தாக்குவதை, படுகொலை செய்வதை இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து செய்து வருகிறது. கடந்த மே 19-ஆம் தேதி, மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 31 பேர் படுகொலை செய்யப்பட்டனர். வடக்கு காசாவின் ஜபாலியா நகரில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனையையும், பெய்ட் லஹியா நகரில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதையும் அப்பகுதி மக்கள் உறுதி செய்துள்ளனர்.

ஆனால், யூத இனவெறி இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலையையும், இஸ்ரேல் போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டையும் தொடர்ந்து மறுத்து வருவதன் மூலம் சர்வதேச அரங்கில் இஸ்ரேலை பாதுகாத்து வருகிறது, அமெரிக்கா.

முன்னதாக, காசாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் தாக்குதல் நடத்திய போது, ரஃபா பகுதிக்கு பல லட்சம் மக்களை விரட்டியது இஸ்ரேலிய இராணுவம். ஆனால், தற்போது ரஃபா மீதே தாக்குதல் நடத்தி தனது கோரமான இன அழிப்பு நோக்கத்தை வெளிக்காட்டியுள்ளது. மேலும், இங்குள்ள 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மீண்டும் விரட்டியடித்து வருகிறது. அல் மவாசி என்ற பகுதிக்குச் செல்லும்படி இஸ்ரேல் அரசு அடாவடித்தனமாக அறிவித்து இருந்தாலும், பாலஸ்தீன மக்கள் காசாவின் பல்வேறு பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர். மிகுந்த துயரங்களின் ஊடாக கடந்த 15 நாட்களில் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளனர். ரஃபாவிலிருந்து வெளியேறத் தயாராகிக் கொண்டிருந்த ஃபரித் அபு ஈடா, “எங்களுக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை. காசாவில் பாதுகாப்பான அல்லது நெரிசல் அல்லாத இடம் எதுவும் இல்லை. நாங்கள் எங்கும் செல்ல முடியாது” என்று தமது வேதனையை வெளிப்படுத்துகிறார்.


படிக்க: காசா: நிவாரண வாகனத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய இஸ்ரேல்


இஸ்ரேல் அரசானது, எகிப்திலிருந்து தெற்கு காசாவிற்குள் நுழைவதற்கான ரஃபா நுழைவாயிலையும், அதன் அருகில் அமைந்துள்ள கெரெம் ஷாலோம் என்ற மற்றொரு நுழைவாயிலையும் கைப்பற்றி அவ்வழியாக உணவு, குடிநீர் போன்ற நிவாரணப் பொருட்கள் செல்வதைத் தடை செய்துள்ளது. காசாவின் கடற்கரையில் அமெரிக்கா கட்டியுள்ள தற்காலிகத் துறைமுகம் மூலமாக மிகச்சொற்ப அளவிலான நிவாரணப் பொருட்களே காசாவிற்குள் செல்கின்றன. நாளொன்றுக்கு 600 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் தேவைப்படும் நிலையில், 150-க்கும் குறைவான லாரிகள் மட்டுமே உள்ளே செல்கின்றன. இவ்வகையில் யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசானது பட்டினியையும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி இன அழிப்பைத் துரிதப்படுத்தி வருகிறது.

தற்போது நடத்தப்பட்டு வரும் போரானது, 1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்காக 7.5 லட்சம் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்த “நக்பா” என்ற பேரழிவு நடவடிக்கையை விட மோசமானதாகி விடுமோ என்ற அச்சம் பாலஸ்தீன மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதை உறுதி செய்யும் வகையில், காசாவின் மீதான போரை நிறுத்துவதற்காக எகிப்து மற்றும் கத்தாரால் முன்மொழியப்பட்ட மூன்று கட்டப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்ட போதிலும், இஸ்ரேல் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் போரை தீவிரப்படுத்தி வருகிறது.

இஸ்ரேலின் தாக்குதல்களால், காசாவில் 70 சதவிகித கட்டடங்கள் இடிக்கப்பட்டிருப்பது; 36 மருத்துவமனைகளில் 24 மருத்துவமனைகள் செயலிழந்து இருப்பது, மற்றவை பெயரளவில் செயல்பட்டு வருவது; உலகின் பல நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் காசாவிற்குள் செல்வதைக் கட்டுப்படுத்தி மக்களைப் பட்டினியிட்டும் மருத்துவச் சிகிச்சையை மறுத்தும் படுகொலை செய்து வருவது; ஊட்டச்சத்து குறைபாட்டினால் பச்சிளம் குழந்தைகள் துடிக்கத் துடிக்க இறந்து வருவது என நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இந்நிலையில், ரஃபா பகுதி உள்ளிட்ட காசா பகுதிகள் மீதான இஸ்ரேலின் தற்போதைய தாக்குதல்கள் இந்நிலையை மேலும் மோசமாக்கும், பல லட்சம் மக்களின் உயிருக்கே அபாயத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் மனிதாபிமானமிக்க ஒவ்வொருவரையும் பீடித்துள்ளது.

போர் நிறுத்தத்தை ஏற்க மறுக்கும் இஸ்ரேல்

எகிப்து மற்றும் கத்தாரால் முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமானது, காசா மீதான இஸ்ரேலின் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறது. காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய இராணுவப் படைகளைத் திரும்பப் பெற வேண்டும், இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களையும் ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேலியர்களையும் விடுவிக்க வேண்டும் என்று முன்மொழிகிறது.

அந்தவகையில், ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேலியர்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற இஸ்ரேலிய மக்களின் முக்கியக் கோரிக்கையை இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் முன்மொழிகிறது. எனினும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “போர் நிறுத்த ஒப்பந்தமானது இஸ்ரேலின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யவில்லை” என்றும் “இஸ்ரேல், ஹமாஸின் தீய ஆட்சியை மீட்டுருவாக்கம் செய்ய அனுமதிக்காது” என்றும் “ஹமாஸ் தனது இராணுவத் திறனை மீண்டும் கட்டியெழுப்ப அனுமதிக்காது” என்றும் கூறியுள்ளார். அதாவது போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க முடியாது, ஹமாஸ் அமைப்பினரை அழித்தொழிப்பது என்ற பெயரில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து, அம்மக்கள் வாழும் பகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதே நெதன்யாகுவின் பதில். இத்தனை நாட்களாக நடத்தப்பட்டுவரும் போர் நமக்கு உணர்த்துவது அதைத்தான்.

மேலும், போர் நிறுத்தம் ஏற்பட்டால் தனது பிரதமர் பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சமும் நெதன்யாகுவிற்கு உள்ளது. 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில், நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சியானது மத சியோனிஸ்ட், ஷாஸ், யூ.டி.ஜே. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 64 இடங்களைக் கைப்பற்றி மிகக்குறுகிய பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதில் தீவிர வலதுசாரி மத சியோனிஸ்ட் கட்சியிடம் 14 இடங்கள் உள்ளன. அக்கட்சியைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் மற்றும் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகிய இருவரும், காசாவில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டால் தங்கள் கட்சியின் ஆதரவை திரும்பப் பெற்று ஆட்சியைக் கலைத்து விடுவோம் என்று பலமுறை வெளிப்படையாகவே மிரட்டியுள்ளனர். தீவிர வலதுசாரிகள் தங்கள் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டால் ஆட்சியை இழக்க நேரிடும்; அதன் விளைவாக நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே எதிர்கொள்ள நேரிடும். அப்படி நடந்தால் மீண்டும் தன்னால் வெற்றி பெற முடியுமா என்ற அச்சம் நெதன்யாகுவிடம் உள்ளது.

தற்போதைய ஆட்சி கலைக்கப்பட்டால், இஸ்ரேலிய ஹாலிவுட் தயாரிப்பாளர் அர்னான் மில்ச்சன், ஆஸ்திரேலிய தொழிலதிபரும் இஸ்ரேலிய குடிமகனுமான ஜேம்ஸ் பாக்கர் ஆகியோரிடமிருந்து ஆடம்பரப் பரிசுகளைப் பெற்றது உள்ளிட்ட நெதன்யாகுவின் ஊழல் குற்றச்சாட்டுகள் மீண்டும் விசாரிக்கப்படும். அதனால் சிறைக்குச் செல்ல நேரிடும் என்ற அச்சமும் நெதன்யாகுவிடம் உள்ளது. சில மாதங்களுக்கு முன், நெதன்யாகுவின் ஊழல் குற்றச்சாட்டுகளை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நாடாளுமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும், தீர்ப்புகளை முறியடிக்கும் புதிய சட்டத் திருத்தத்தை இஸ்ரேல் அரசு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் – அமெரிக்காவின் மோசடி நாடகம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதற்கு சி.ஐ.ஏ. இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் மூலம் அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனாலும் அதை மீறி இஸ்ரேல் அரசு போரைத் தொடர்ந்து வருவதாகவும் ஒரு பிம்பம் அமெரிக்கப் பத்திரிகைகளால் கட்டமைக்கப்படுகிறது. ஆனால், இது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் போராடும் அமெரிக்க மக்களை ஏமாற்றும் அமெரிக்க அரசின் அயோக்கியத்தனமான நடவடிக்கையாகும். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் சமயத்தில், பாலஸ்தீன ஆதரவு மற்றும் முற்போக்கு சக்திகள், மாணவர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் இந்த ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றி வருகிறது, ஜோ பைடன் அரசு.

சொல்பேச்சு கேட்காத இஸ்ரேலுக்கு பாடம் கற்பிக்கும் நோக்கில் ஒரு பில்லியன் டாலர் (8346 கோடி ரூபாய்) மதிப்பிலான ஆயுதங்கள் வழங்குவதை ஜோ பைடன் நிறுத்தி வைத்திருக்கிறார்; குடியரசுக் கட்சி செனட்டர்கள் குழு கண்டிப்பாக ஆயுதங்கள் வழங்கியே ஆக வேண்டுமென மிரட்டி வருகிறார்கள்; ஆயுதம் வழங்க உத்தரவிடும்படி குடியரசு கட்சியினர் காங்கிரசில் தீர்மானம் கொண்டு வந்தால் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிபர் அதனை முறியடிப்பார்; எனினும் இஸ்ரேலுக்கான ஆதரவை எவ்வித நிபந்தனையுமின்றி அமெரிக்கா வழங்கும் என அமெரிக்காவின் இரண்டு கட்சிகளும் மிகக்கேவலமாக கூத்தடித்து வருகின்றன.

சமீபத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குரைஞர், ஹமாஸ் தலைவர்கள் மூவர், நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை போர்க்குற்ற நடவடிக்கைகளுக்காக கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டுமென முன்மொழிந்துள்ளார். சில ஐரோப்பிய நாடுகள் இதை ஆதரித்து வரவேற்றுள்ள நிலையில், அமெரிக்கா முதல் சில நாட்களுக்கு கள்ள மவுனம் சாதித்தது. பிறகு, கைது வாரண்ட் கேட்பது ‘ஒப்புக்கொள்ள முடியாத செயல்’ என்றும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே எந்த ஒற்றுமையும் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார். குடியரசுக் கட்சியின் சில செனட்டர்களோ, “நீங்கள் இஸ்ரேலைக் குறிவைத்தால் நாங்கள் உங்களைக் குறிவைப்போம்” என வெளிப்படையாகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், இந்நீதிமன்றத்துக்கான நிதியைக் குறைக்க வேண்டும் என்றும் பேசி வருகின்றனர். முன்னாள் அதிபர் டிரம்போ, இஸ்ரேலுக்குத் தொடர்ந்து ஆயுத உதவிகள் செய்ய வேண்டியது அவசியம் எனப் பேசி வருகிறார்.

மேலும், “இரண்டு நாட்களில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வராவிட்டால் இஸ்ரேலை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று எங்களுக்குத் தெரியும்” என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மே 26-ஆம் தேதி கூறியிருந்தது. இந்நிலையில், அடுத்த நாள் இரவே ரஃபா எல்லையில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றின் மீது கொடுந்தாக்குதல் நடத்தி சுமார் 45-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்திருக்கிறது இஸ்ரேல். இந்தத் தாக்குதலில் குழந்தைகள் தலை துண்டாகி இறந்துபோன காட்சிகள் உலக மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. அமெரிக்கா ஆதரவு இருக்கும் வரையில் தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற திமிரில்தான் இஸ்ரேல் இத்தகைய தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

ரஃபா தாக்குதலுக்காக இஸ்ரேலைக் கண்டிப்பது, குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பது என அமெரிக்கா நாடகம் போட்டாலும், பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்துவதற்கான எல்லா அதிகாரமும் அமெரிக்க அரசிடம் உள்ளது. ஆனால், மத்திய கிழக்கில் சரிந்துவரும் தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, பாலஸ்தீன மக்களை இன அழிப்பு செய்ய வேண்டும் என்ற இஸ்ரேலிய அரசின் நோக்கத்திற்கு எந்தத் தடங்கலும் ஏற்படாமல் பாதுகாத்து மேலும் வளர்த்தெடுக்கிறது, அமெரிக்கா.

காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போரானது எட்டு மாதங்களைக் கடந்துள்ள நிலையிலும் இஸ்ரேலிய இராணுவத்தினரின் தாக்குதல்களை ஹமாஸ் படையினர் வீரதீரத்துடன் எதிர்கொண்டு வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினர் “பாப்புலர் ஃப்ரண்ட்” போன்ற பாலஸ்தீன விடுதலைக்கான குழுக்களுடன் இணைந்து போரிட்டு வருகின்றனர்.

அதன் விளைவாக, இஸ்ரேலிய இராணுவத்தினர் கைப்பற்றத் திட்டமிட்ட இடங்களை கைப்பற்ற முடியாமல் பின்வாங்கியுள்ளனர். காசாவின் தெற்கிலுள்ள ஜைடவுன் பகுதியில் சில இடங்களை கைப்பற்ற திட்டமிட்டு, ஹமாஸ் படையினரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் நான்காவது நாளிலேயே அப்பகுதியை விட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறியுள்ளதே அதற்கான சான்றாகும். தொடர்ந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேலிய படைகளுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போர் தொடர்ந்து நடைபெற்றால் ஹமாஸ் அமைப்பினரிடம் பணயக் கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை விடுவிப்பது சாத்தியமில்லை. அதனால், பணயக் கைதிகளை விடுவிப்பதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் போர் நடவடிக்கைகளை மட்டும் தீவிரப்படுத்தி வரும் நெதன்யாகு அரசுக்கு எதிரான மக்களின் கோபம் மேலும் அதிகரிக்கும். கடந்த மார்ச் மாதத்தில் இஸ்ரேலிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியே கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய போராட்டங்கள் நாள்தோறும் நடந்து வருகின்றன.  இப்போராட்டங்களில் கலந்துகொள்ளும் மக்கள், நெதன்யாகு பதவி விலக வேண்டும், ஹமாசுடன் சமாதான ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும், பிணையக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற முழக்கங்களைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இவ்வாறு போராடும் மக்கள் மீது நெதன்யாகு அரசு கடும் அடக்குமுறைகளை ஏவி வருகிறது.


படிக்க: காசா: அல்-ஷிஃபா மருத்துவமனையில் படுகொலைகளைச் செய்யும் பாசிச இஸ்ரேல்!


இன்னொரு பக்கத்தில், எட்டு மாதங்களைக் கடந்து போர் நடைபெற்று வருவதால் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் மத்தியிலும் எப்போது போர் முடிவடையும் என்ற எண்ணம் எழுந்து வருகிறது. இராணுவ அதிகாரிகள் மத்தியில் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணமும், போர் தொடர்ந்து நீடித்தால் இராணுவ வீரர்கள் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பார்கள் என்ற அச்சமும் நிலவுகிறது. மேலும், தங்கள் மகன்கள் காசாவில் பணியாற்றுவதை விரும்பவில்லை என்று 900 இஸ்ரேலிய தாய்மார்கள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெலண்டுக்கு கடிதம் எழுதியிருப்பதும் இவற்றின் வெளிப்பாடுதான்.

இஸ்ரேல் அரசின் இன அழிப்புப் போரை நிறுத்த வலியுறுத்தி அமெரிக்காவில் துவங்கிய கல்லூரி – பல்கலைக்கழக மாணவர் போராட்டம் உலகெங்கிலும் பரவி தீவிரமடைந்து வருகிறது. மாணவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் பல நகரங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள், இஸ்ரேலிய அரசு – பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுடன் தமது பல்கலைக்கழக நிர்வாகங்கள் கொண்டுள்ள உறவுகளைத் துண்டிக்க வைப்பதில் பல இடங்களில் போராட்டக்காரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் போராடுபவர்கள் மீது அரசு ஒடுக்குமுறைகள் ஏவப்படும் நிலையிலும், நம்பிக்கையின் வெளிச்சக்கீற்றாக இப்போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இஸ்ரேலிய அரசுக்கெதிரான இஸ்ரேலிய மக்களின் போராட்டமும் உலகின் பல நாடுகளில் நடைபெற்றுவரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களும்தான் பாலஸ்தீன மக்கள் மீதான கொடிய போரை நிறுத்துவதற்கான நமக்கான ஆயுதங்கள் ஆகும். மற்றபடி, ஐ.நா. சபை தீர்மானங்களாலும் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகளாலும் இந்தப் போரைத் தடுத்து நிறுத்த முடியாது, அவை வெற்றுக் காகிதங்களே.

பாலஸ்தீன குழந்தைகளின் கதறலும் தாய்மார்களின் கண்ணீரும் இன்னும் இலட்சோப இலட்சம் பேரை வீதிக்குக் கொண்டு வரும். மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியமும், யூத இனவெறி பயங்கரவாத இஸ்ரேலும் இப்போராட்டங்களுக்கு முன் மண்கோட்டையாய் சரியும் நாள் வெகுதொலைவில் இல்லை.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஜுன் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விஷவாயு கசிவு – மூன்று பேர் பலி | பொதுப் பணித்துறையின் அலட்சியம் | தோழர் முருகானந்தம்

விஷவாயு கசிவு – மூன்று பேர் பலி | பொதுப்பணித்துறையின் அலட்சியம் | தோழர் முருகானந்தம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தமிழ்நாடு: பாசிசக் கும்பலை வீழ்த்திய பார்ப்பனிய எதிர்ப்பு மரபை வளர்த்தெடுப்போம்!

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களையும் எதிர்க்கட்சிகளின் “இந்தியா கூட்டணி” 233 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இந்தியா கூட்டணி வெற்றிப்பெறவில்லை என்றாலும், “400 இடங்களை கைப்பற்றுவோம்” என வாய்ச்சவடால் அடித்துக்கொண்டிருந்த மோடி-அமித்ஷா கும்பல் பெரும்பான்மை கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது மோடியின் சர்வாதிகாரத்திற்கு கடிவாளமிடும் என்று எதிர்க்கட்சிகளும் கணிசமான பாசிச எதிர்ப்பு சக்திகளும் கருதுகின்றனர்.

அதன் ஒரு அங்கமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 இடங்களையும் தி.மு.க-வும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றியிருப்பது (Clean Sweep) இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. “பா.ஜ.க-வால் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது” என்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி (viral) வருகிறது. இத்தேர்தல் முடிவால், பாசிசக் கும்பலுக்கு தமிழ்நாடு சிம்மசொப்பனமாக திகழ்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபனமாகியுள்ளது.

பாசிஸ்டுகளையும் துரோகிகளையும் புறக்கணித்த தமிழ்நாடு மக்கள்:

இத்தேர்தலில் இரண்டு இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகளையும் 25 சதவிகித வாக்குகளையும் வெல்வோம் என்று அண்ணாமலை தம்பட்டம் அடித்துவந்த நிலையில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றியடையவில்லை. குறிப்பாக, கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியுற்றதையடுத்து, தி.மு.க-வினரும் தமிழ்நாட்டு மக்களும் ஆட்டை பலியிடும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அண்ணாமலையின் தோல்வியை கொண்டாடும் வகையில் கோயம்புத்தூரில் மக்களுக்கு ஆட்டுக்கறி பிரியாணி விருந்து வைக்கப்பட்டது. இதனால் கோயம்புத்தூரிலேயே இருந்துக்கொண்டு பா.ஜ.க. அலுவலகத்திற்கு வராமல் அண்ணாமலை தலைமறைவாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இருப்பினும், திராவிட கட்சிகளின் உதவி இல்லாமல் பா.ஜ.க 11.6 சதவிகித வாக்குகள் வாங்கியுள்ளது; 11 தொகுதிகளில் அ.தி.மு.க-வை பின்னுக்குத் தள்ளி பா.ஜ.க. இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது; தமிழ்நாடு வரலாற்றில் பா.ஜ.க-வினரின் அதிகபட்ச வாக்காக 32.79 சதவிகித வாக்குகளை அண்ணாமலை பெற்றுள்ளார் என்றெல்லாம் கூறி, பா.ஜ.க. தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளது என்று சங்கிகள் கூவி வருகின்றனர். ஆனால், இம்முறை பா.ஜ.க. போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் கூட்டணி கட்சிகளின் வாக்குகளையும் கணக்கிட்டால் பா.ஜ.க. வாக்குவிகிதம் ஒற்றை இலக்கத்தில்தான் இருக்கும் என்பதையும், 2014-இல் பா.ஜ.க. சார்பாக கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனின் 33.6 சதவிகித வாக்கை விட அண்ணாமலையின் வாக்கு குறைவுதான் என்பதையும் பலரும் அம்பலப்படுத்தியுள்ளனர்.

மேலும், அ.தி.மு.க-வை பின்னுக்குத்தள்ளி தி.மு.க-விற்கு போட்டியாக வளர துடிப்பது, தென் மாவட்டங்களில் சாதிய முனைவாக்கத்தை தீவரப்படுத்தி பா.ஜ.க. வேலை செய்வது போன்றவை உண்மை என்றாலும் குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்து பேரணி, ரோடுஷோக்களை நடத்தியது; கோவையில் செல்வாக்கு செலுத்தும் தி.மு.க-வின் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறையிலடைத்தது; தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் போன்ற அறியப்பட்ட முகங்களையும் ராதிகா போன்ற பிரபலங்களையும் தேர்தலில் நிறுத்தியது என தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழ்நாடு மக்கள் பா.ஜ.க.-வை புறக்கணித்துள்ளனர் என்பதே எதார்த்தம்.


படிக்க: 2024 தேர்தல் முடிவுகள்: மக்கள் போராட்டங்களால் பாசிசத்தை வேரறுப்போம்!


அதேபோல், பா.ஜ.க-விற்கு அடிமை சேவகம் புரிந்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகமிழைத்த அ.தி.மு.க. 2019 தேர்தலில் ஒற்றை தொகுதியில் வென்றிருந்த நிலையில், இத்தேர்தலில் அதையும் இழந்துவிட்டது. மேலும் ஏழு இடங்களில் டெபாசிட் இழந்தது. தி.மு.க. மீதான அதிருப்தி வாக்குகளை கூட அறுவடை செய்துகொள்ள முடியாத அ.தி.மு.க. தனது வாக்குகளையும் பா.ஜ.க-விற்கு பறிகொடுத்ததோடு பல தொகுதிகளில் இரண்டாவது இடத்தை பா.ஜ.க-விற்கு தாரைவார்த்துள்ளது. பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டதாக எடப்பாடி பழனிச்சாமி அரங்கேற்றிய நாடகத்தை நம்புவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை என்பதையே இத்தேர்தல் முடிவு காட்டுகிறது.

***

“நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளை பா.ஜ.க. பெற்றால் நான் கட்சியை கலைத்துவிட்டு போய் விடுகிறேன்” என்று சவால் விட்டிருந்த சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது. இருப்பினும் இத்தேர்தலில் 35.60 லட்சம் வாக்குகளை (8.19 சதவிகிதம்) பெற்று நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தால் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது முக்கியத்துவமுடையதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல்முறை போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 1.1 சதவிகித வாக்குகளும்; அதற்கடுத்து வந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3.8 சதவிகித வாக்குகளும், 2021 சட்டமன்ற தேர்தலில் 6.8 சதவிகித வாக்குகளும் பெற்றது; தற்போது இத்தேர்தலில் 8.19 சதவிகித வாக்குகள் பெற்று 8 ஆண்டுகளில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நாம் தமிழர் கட்சிக்கு தேர்தலுக்கு 20 நாட்களுக்கு முன்புதான் கரும்பு விவசாயி சின்னத்திற்கு மாற்றாக புதிய சின்னம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் நா.த.க. தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிறது என்பதைக் காட்டுவதாக பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.

நா.த.க-வின் தேர்தல் முடிவு குறித்து பேசிய அண்ணாமலை, “நாம் தமிழர் கட்சியின் மூலமாக ஒரு செய்தி சொல்ல வேண்டியுள்ளது. திராவிட அரசியலில் இருந்து தமிழர்கள் வெளியே வர தொடங்கியுள்ளனர் என்பது அந்த கட்சியின் செய்தி. அவர்கள் களத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை நானும் நேரில் பார்த்தேன். மக்களிடையே அவர்களும் தங்களின் சித்தாந்தத்தை முன் வைக்கிறார்கள். என்னையும் சீமான் அண்ணனையும் ஒப்பிட வேண்டாம். நாங்கள் அதிக வாக்குகள் வாங்கிவிட்டோம். சீமான் அண்ணன் நாம் தமிழர் கட்சியை கலைப்பாரா என்று நான் கேட்க மாட்டேன். சீமான் அண்ணன் அவர்களின் பாதையில் பயணிக்கிறார். அரசியலில் நேர்மையாக நின்றதை பாராட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சீமான் மீதான அண்ணாமலையின் இந்த பாசத்திற்கான காரணம் பா.ஜ.க – நா.த.க-விற்கு இடையேயான சித்தாந்த உறவுதான். திராவிட எதிர்ப்பு அரசியல் என்ற பெயரில் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலை நீர்த்துப் போகச் செய்து, தமிழினப் பெருமிதம் என்ற பெயரில் பார்ப்பனியத்தை கடத்திக் கொண்டு வருவதுதான் சீமானின் இலக்கு. உண்மையில், சீமான் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. வளர்வதற்கான சித்தாந்த கரசேவையைத்தான் பல ஆண்டுகளாக செய்துவருகிறார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பாசிச பா.ஜ.க-வின் மதவெறி அரசியல் எடுபடவில்லை; மக்கள் பா.ஜ.க-வை எதிரியாகத்தான் பார்க்கின்றனர். பா.ஜ.க-வின் அடிமையாகிப்போன அ.தி.மு.க-வும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு போயுள்ளது. இந்நிலையில் பா.ஜ.க-வை எதிர்ப்பதாக நாடகமாடிக் கொண்டே அதன் சித்தாந்ததை ஊட்டிவளர்க்கும் சீமானுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தை நாம் சாதாரணமாக கடந்து செல்லக்கூடாது.

பார்ப்பன எதிர்ப்பு மரபை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியம் 

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 32.76-ஆக இருந்த தி.மு.க-வின் வாக்கு சதவிகிதம் இத்தேர்தலில், 26.93 சதவிகிதமாக சரிந்துள்ளது. தி.மு.க. போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது இதற்கு காரணமாக சொல்லப்பட்டாலும் விருதுநகர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருமங்கலம் உள்ளிட்ட பல தொகுதிகளில் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே தி.மு.க. வெற்றிப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை உள்ளிட்ட ஒரு சில தொகுதிகளை தவிர பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க-வினர் பெரியளவில் தேர்தல் வேலைகளில் ஈடுபடாமல் மந்தகதியில் இருந்தது தேர்தல் சமயத்திலேயே பேசு பொருளானது. மக்களின் பா.ஜ.க. எதிர்ப்பு தனக்கு வாக்குகளாக அறுவடையாகிவிடும் என்று அலட்சியமாக இருந்த தி.மு.க-விற்காக, பல இடங்களில் இளைஞர்களும் பாசிச எதிர்ப்பு சக்திகளுமே பிரச்சாரம் செய்தனர். இது கடந்த தேர்தலைவிட தமிழ்நாட்டில் வாக்குவிகிதம் குறைந்தற்கு ஒரு காரணமாகவும் கூறப்பட்டது. பிறகு எப்படி இத்தகைய வெற்றியை தி.மு.க-வால் சாதிக்க முடிந்தது.


படிக்க: 2024 தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு மாற்றுத் திட்டமும் மக்கள் போராட்டமும் முன்நிபந்தனை!


அதற்கு காரணம் தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தமிழ்நாட்டில் நிலவும் இந்த மரபுதான் பா.ஜ.க. எதிர்ப்பாகவும் தேர்தல் களத்தில் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளாகவும் எதிர்க்கட்சிகளுக்கு அறுவடையாகியிருக்கிறது என்பதே உண்மை. தேர்தல் தொடங்குவதற்கு முன்னரே பல அமைப்புகள் பாசிசத்தை வீழ்த்தும் நோக்கத்தில் பா.ஜ.க-விற்கு எதிரான பார்ப்பனிய எதிர்ப்பு மரபை தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தை பாசிசக் கும்பலின் சிம்ம சொப்பனமாக விளங்கும் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை முன்னிறுத்தும் வகையில் மேற்கொள்ளவில்லை. பா.ஜ.க. எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு பிரச்சாரமும் கூட வரம்புக்குட்பட்ட வகையிலேயே மேற்கொண்டது. சான்றாக, ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் இழிவுப்படுத்தி பேசிய மோடி, தியானம் செய்கிறேன் என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு வந்தபோது எந்தவித எதிர்ப்பு நடவடிக்கையிலும் போராட்டத்திலும் ஈடுபடாமல் தி.மு.க. கள்ளமௌனம் காத்தது.

மேலும், மூன்று ஆண்டுகால ஆட்சியிலும் தமிழ்நாட்டிற்கே உரிய பார்ப்பனிய எதிர்ப்பு மரபை வளர்த்தெடுக்காமல் தி.மு.க. கவர்ச்சிவாதத்தையும் கார்ப்பரேட் நலதிட்டங்களையுமே முன்னிறுத்தி வருகிறது. இம்முறை தேர்தலின்போது தி.மு.க-வின் கார்ப்பரேட் நல திட்டத்திற்கு எதிராகவும் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பரந்தூர், வேங்கைவயல், நாமக்கல், எண்ணூர் என பல இடங்களில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

திராவிட மாடல், கொள்கை பிடிப்பு என்றெல்லாம் பேசிக்கொண்டே பிற எதிர்க்கட்சிகளை போல பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்ய தி.மு.க. விழைகிறதே ஒழிய பா.ஜ.க. எதிர்ப்புணர்வையும் தமிழ்நாட்டில் அதற்கு அடிப்படையாக உள்ள பார்ப்பனிய எதிர்ப்பு மரபையும் வளர்த்தெடுக்க தி.மு.க. துளியும் தயாராக இல்லை.

எனவே, மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்கள், கவர்ச்சிவாதம் போன்றவற்றை முன்னிறுத்தியே மக்களின் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்துக்கொள்ளலாம் என தி.மு.க. கருதினால் அது தி.மு.க-விற்கு எதிரானதாக மட்டுமல்ல பாசிச பா.ஜ.க-விற்கு ஆதரவானதாக சென்று முடியும்.


பானு

(புதிய ஜனநாயகம் – ஜுன் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சிவகாசி: மக்களின் உயிரைக் குடிக்கும் கந்துவட்டிக் கொடுமை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கந்து வட்டி கொடுமையால் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் ஏழு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

திருத்தங்கல் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் லிங்கம் (45); இவரது மனைவி பழனியம்மாள் (47). இருவரும் முறையே தேவதானம், சுக்கிரவார்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினர்.

இவர்களது மகள் ஆனந்தவல்லி (27). இவருக்குத் திருமணமாகி 2 மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இவர்களது மகன் ஆதித்யா(14).

6 நபர்களிடம் லட்சக்கணக்கில் கந்து வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், இந்தக் கடனை கட்டச் சொல்லி அழுத்தம் கொடுத்தும், மிரட்டியும் வந்ததால் தனது மகள், மகன் மற்றும் பேத்தியைக் கொலை செய்து விட்டு, லிங்கம் – பழனியம்மாள் தம்பதியினர் 22.05.2024 அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடன் பிரச்சினை காரணமாக லிங்கம் கடந்த இரு மாதங்களுக்கு முன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் அளித்த வாக்குமூலத்தில் கடன் வாங்கிய சிலரது பெயரை குறிப்பிட்டு, மிரட்டலால் தான் தற்கொலை முயற்சி செய்ததாக தெரிவித்து இருந்தார். அப்பொழுதே லிங்கம் குறிப்பிட்டிருந்த நபர்கள் மீது போலீசு நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று ஐந்து பேர் உயிரை காப்பாற்றி இருக்க முடியும்.

மீனம்பட்டி திடீர் நகரில் குடியிருப்பவர் ஜெயச்சந்திரன் (51). அச்சக தொழிலாளியான இவரது மனைவி ஞானபிரகாசி (48) பட்டாசுக்கான காகித குழாய் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதியரின் மகள் ஷர்மிளா( 24) எம்.ஏ முதுகலை பட்டம் பெற்ற நிலையில், இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் திருமணத்திற்கு பூ வைத்துள்ளனர். மகன் ஜெயசூர்யா (23) பொறியியல் பட்டப்படிப்பு படித்து ஓசூரில் பணிபுரிந்து வருகிறார்.

கூலி தொழிலாளிகளான ஜெயச்சந்திரன்- ஞானபிரகாசி தம்பதியினர் தங்களின் மகள் மற்றும் மகனின் கல்விச் செலவுக்காகவும், குடும்பச் செலவுக்காகவும், மருத்துவச் செலவுக்காகவும் தாங்கள் வாழ்ந்து வந்த பகுதி கிராமத்திலுள்ள சிலரிடம் ரூபாய் 4 லட்சம் வரை கடன் தொகை வட்டிக்கு பெற்றதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக தாங்கள் பெற்ற கடனுடன் அதிகமான வட்டித் தொகையை கட்ட முடியாமல் தம்பதியினர் தவித்து வந்துள்ளனர்.

ஜெயச்சந்திரன் வீட்டில் இல்லாத சமயத்தில் கந்து வட்டி கொடுத்தவர்கள் தகாத முறையில் திட்டியும் வேறு எந்த தொழிலாவது செய்து (விபச்சாரம் செய்தாவது) பணத்தைக் கொடுக்குமாறு தற்கொலைக்கு தூண்டும் விதமாக பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஞானபிரகாசி, தனது மகள் சர்மிளாவுடன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதே பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இரண்டு வாரத்திற்கு முன்பு குமார் என்பவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.


படிக்க: இசக்கிமுத்துக்களை தற்கொலைக்குத் தள்ளும் கந்துவட்டி அரசுக் கட்டமைப்பு !


“பட்டாசு தொழில் முடக்கப்பட்டுள்ளதால் தற்சமயம் நம் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் கந்து வட்டிக்காரர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்காரர்கள் யாரும் 05.06.2024 முதல் 05.07.2024 வரை கடன் வசூலிக்க வர வேண்டாம் என தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்” என்று மீனம்பட்டி கிராம பொதுமக்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

மீனம்பட்டி கிராமத்தில் 3000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கு பட்டாசு தொழிலையே பிரதானமாக செய்து வருகின்றனர். பட்டாசு தொழிலைத் தவிர வேறு எந்த தொழிலும் இவர்களுக்கு கிடையாது. பட்டாசு ஆலைகளை நான்கு மாத காலமாக அரசு அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.

தங்களது வாழ்வாதாரத்தை இழந்த கிராம மக்கள் உணவிற்குக் கூட வழியில்லாமலும் கல்விச் செலவு, மருத்துவச் செலவு, விலைவாசி உயர்வு என நெருக்கடியில் உள்ளனர். அதனால், மகளிர் சுய உதவி குழுவிடம் கடன் வாங்குகிறார்கள். குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை ஒப்படைக்காதவர்களுக்கு சுய உதவிக் குழுக்காரர்கள் நெருக்கடி கொடுப்பது, இரவு முழுவதும் அவர்கள் வீட்டிற்கு முன் அமர்ந்து கொள்வது, தகாத வார்த்தைகளில் பேசுவது போன்ற காரணங்களால் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி அதை ஈடுகட்ட வேண்டிய அவல நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.

“அருகில் உள்ள வீட்டில் திருமணத்திற்கு மொய் செய்வதற்கு கூட பணம் இல்லாததால், திருமணத்திற்கு செல்லாமல் கதவை அடைத்துக் கொண்டு வீட்டிற்குள் இருந்தோம்” என ஜெஸ்ஸி என்ற பெண் கூறுகிறார்.

“இரண்டு வேலை மட்டும் தான் சாப்பிடுகிறோம்; ஊறுகாய்க்கு கூட வழியில்லை. நான்கு மாதம் வேலை இல்லாமல் வார வட்டி ,மாதவட்டி, மகளிர் சுய உதவிக் குழு கடன் மற்றும் கந்து வட்டி கட்டுவதற்கு கையில் பணம் இல்லை. எங்களின் நிலைமையை புரிந்து கொள்ளாமல் குழுக்காரர்களும் கந்து வட்டிக்காரர்களும் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றனர். கேவலமாக திட்டுகிறார்கள் வீட்டை எழுதிதரச் சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும்!” என மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

மக்களின் நிலை கொரோனா ஊரடங்கில் இருந்த நிலைமையை விட தற்போது மிகவும் மோசமாக உள்ளது என்பதை கள ஆய்வில் “வினவு தோழர்களால்” உணர முடிந்தது.

மகளிர் சுய உதவி குழுக்காரர்கள், கந்து வட்டிக்காரர்கள் செய்யும் கொடுமைகளுக்கு எதிராக பேசுவதற்கே மக்கள் தயங்குகிறார்கள். அவர்களுக்கு எதிராக பேசினால் அடுத்து அவர்களிடம் கடன் வாங்க முடியாது என்று பயப்படுகிறார்கள். இப்படிப்பட்ட மோசமான இழி நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


படிக்க: விழுப்புரம் குடும்பத்துடன் தற்கொலை : தொழில் நசிவு – கந்து வட்டி || தீர்வு என்ன ?


தீப்பெட்டி உற்பத்தியில் 80% தீப்பெட்டிகள் சிவகாசியில் தான் தயார் செய்யப்படுகின்றன. மேலும் இந்தியாவில் தயாராகும் பட்டாசுகளில் 90 சதவிகிதம் சிவகாசியில்தான் தயாராகின்றன. மேலும் இந்தியாவின் அச்சுப்பணிகளில் 60 சதவிகிதம் இங்கு நடைபெறுகிறது. சிவகாசியில் உள்ள 90 சதவிகித மக்கள் இந்த தொழில்களைச் சார்ந்து தான் உள்ளனர். இங்கு இதைத் தவிர மற்ற வேலை வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால், இன்று இந்தத் தொழில்கள் நலிவடைந்து வருவதால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமடைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் தான் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், கல்வி, மருத்துவம் போன்ற செலவுகள் தவிர்க்க முடியாமல் இருக்கின்றன. ஆனால், வருமானம் மிகவும் குறைவு. இதுதான் இங்குள்ள மக்களின் இன்றைய நிலை.

இதனால், இயல்பாகவே மக்கள் கடன் வாங்கும் நிலைமை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அதனைக் கட்ட முடியாமல் நெருக்கடிக்கு மக்கள் ஆளாகின்றனர். எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்து, தரமான கல்வியையும் மருத்துவத்தையும் மக்களுக்கு இலவசமாகக் கொடுத்தால் மக்கள் யாரும் கடன் வாங்கப் போவதில்லை. ஏனென்றால், இதுதான் மக்களின் அடிப்படைப் பிரச்சனையாக உள்ளது. இதை மக்களுக்கு அரசு செய்ய வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்தனர்.

இலாப வெறி பிடித்த முன்னணியான பட்டாசு ஆலைகளின் முதலாளிகளுக்கு சேவை செய்யும் அரசு அதிகாரிகள், சிறு குறு பட்டாசு ஆலைகளை முடக்கி லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குகின்றனர். அதனால், மகளிர் சுய உதவிக் குழுக்களிடமும் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி நெருக்கடியில் சிக்கிக் கொண்டு கடனை கட்ட முடியாமல் தற்கொலையை நோக்கி மக்களைத் தள்ளப்படுகின்றனர்.

இது போன்று தொடரும் தற்கொலைகளில் கடன் கொடுத்தவர்கள் கொடுக்கும் நெருக்கடி, கொலை மிரட்டல்களை தாங்க முடியாமல் தற்கொலைகள் அதிக அளவில் நடக்கிறது. இந்த கிரிமினல்தனத்தை அதிகார வர்க்கம் பாதுகாக்கிறது. இதற்கு எதிராக மக்கள் களத்தில் இறங்கி போராடுவதன் மூலமாகத்தான் கந்து வட்டி கும்பலை முற்றும் முதலுமாக ஒழித்துக் கட்ட முடியும்.


வினவு களச்செய்தியாளர்,
மதுரை

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



2024 தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு மாற்றுத் திட்டமும் மக்கள் போராட்டமும் முன்நிபந்தனை!

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கிய தேர்தல் 44 நாட்களை கடந்து தற்போது ஜூன் 1-ஆம் தேதி நிறைவைடைய போகிறது. ஏழு கட்டங்களாக நடந்த இத்தேர்தலின் முடிவு என்னவாக அமையப்போகிறது என்பது குறித்துதான் அனைவரும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

தேர்தல் தொடங்குவதற்கு முன்னர் வெளியாகியிருந்த கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவை பா.ஜ.க-தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறியது. மோடியின் பிம்பம், பா.ஜ.க-வின் சாதி-மத பிளவுவாத அரசியல் முதலானவை பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு அடிப்படையாக இருக்கும் எனவும் கருத்துக்கணிப்புகள் கூறியது. ஆனால், தேர்தல் தொடங்கியப் பிறகு நிலைமை அப்படியே தலைக்கீழானது. “அப்கி பார், 400 பார்” என்ற முழக்கத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மோடி-அமித்ஷா கும்பல் அந்த முழக்கத்தையே கைவிடும் அளவிற்கு நெருக்கடியில் சிக்கித் தவித்தது. மோடி 400 இடங்களை கைப்பற்றுவாரா? என்று விவாதம் நீர்த்துபோய் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவாரா? என்ற விவாதம் கிளம்பும் நிலை உருவானது.

ஏனெனில், பெரும்பான்மை மக்கள் “பா.ஜ.க. வேண்டாம்” என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள் என்பதை இந்த தேர்தல்களம் துலக்கமாக காட்டியது. 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிப்பதற்கு மோடியின் பிம்பம் முக்கியமான காரணமாக இருந்தது. ஆனால், இம்முறை மோடியின் பிம்பம் காலாவதியாகிவிட்டது. “எல்லாவற்றிற்கும் காலாவதி தேதி உள்ளதுபோல மோடிக்கும் காலாவதி தேதி உள்ளது” என மக்களே கருத்து தெரிவித்தனர்.

பாசிசக் கும்பலின் அடித்தளமாக இருக்கும் ஆதிக்கச்சாதி மக்களிடையே நடந்த போராட்டங்கள் பா.ஜ.க. கும்பலை ஆட்டங்காணச் செய்தது. குறிப்பாக விவசாயிகளின் போராட்டம், இளைஞர்களின் அக்னிபாத் போராட்டம் வடமாநிலங்களில் பா.ஜ.க-வின் முகத்திரையை கிழித்து மக்களிடையே பா.ஜ.க. எதிர்ப்புணர்வை வலுப்படுத்தியிருந்தது. இதன் விளைவாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தில் கூட ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது; பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வாக்குப்பதிவு வெகுவாக குறைந்தது; மதவெறியை கிளப்புவதற்காக ராமன் கோவில் திறப்பு, சி.ஏ.ஏ. அமலாக்கம் போன்ற மோடிக் கும்பலின் நடவடிக்கையும் மக்களிடையே எடுபடவில்லை.


படிக்க: 2024 தேர்தல் முடிவுகள்: மக்கள் போராட்டங்களால் பாசிசத்தை வேரறுப்போம்!


இத்தனை நெருக்கடிகள் இருந்தாலும், மோடி-அமித்ஷா கும்பல் தன்னுடைய அதிகார பலத்தை பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான அனைத்து முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம், போலீசு, நீதித்துறை என ஒட்டுமொத்த அரசுக்கட்டமைப்பும் பா.ஜ.க-விற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஒருபுறம் எதிர்க்கட்சிகளை தேடிதேடி நடவடிக்கை எடுப்பது, மறுபுறம் பா.ஜ.க-வின் அயோக்கியத்தனத்தையும் மோடியின் வெறுப்பு பேச்சுக்களையும் கைக்கட்டி வேடிக்கைப் பார்ப்பது என பா.ஜ.க-வின் ஒரு அங்கமாகத்தான் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கட்டத் தேர்தல் நடந்து முடிந்தப்பிறகும் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அறிவிக்கும்போது பல்வேறு குளறுபடிகளை நிகழ்த்தியது. வாக்குப்பதிவு குறித்தான எண்ணிக்கைகளை ஆறாம் கட்டத் தேர்தல் வரை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. வெளியிட்ட எண்ணிக்கையிலும் திடீரென 1.07 கோடி வாக்குகள் அதிகரித்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சராசரியாக ஒரு தொகுதிக்கு 28,000 வாக்குகள் அதிகரித்தன.  தேர்தல் ஆணையத்தின் இந்த அயோக்கியத்தனங்களை எதிர்கட்சிகள் அம்பலப்படுத்தி பேசினால் “சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்துவதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன” என தேர்தல் ஆணையம்  எதிர்க்கட்சிகளை மிரட்டியது.

தேர்தல் ஆணையத்தின் இம்முறைகேடுகளை தடுக்ககோரி எதிர்க்கட்சிகளும் சிவில் அமைப்புகளும் நீதிமன்றத்தை அணுகினால், தேர்தல் ஆணையம் கூறிய பதிலையே வெவ்வேறு வார்த்தைகளில் நீதிபதிகள் கூறினர். விவிபேட் (VVPAT) ஒப்புகை சீட்டுக்களை எண்ணக் கோரிய வழக்கு முதல் வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய 17சி படிவத்தை தேர்தல் ஆணையத்தை வெளியிடக் கோரிய வழக்கு வரை அனைத்து வழக்குகளிலும் பாசிஸ்டுகளுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கி நீதிமன்றம் சேவை செய்தது.

இந்த மோசடித் தேர்தலின் உச்சமாக, சில இடங்களில் வாக்குசாவடிகளை போலீஸ் துணையுடனே காவிக்கும்பல் கைப்பற்றியதும், வாக்களிக்க வந்த இஸ்லாமியர்களை அடித்து விரட்டியதும் அரங்கேறியது. பல இடங்களில் இஸ்லாமியர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது அம்பலமானது. பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் கள்ள வாக்கு செலுத்துவதை வீடியோக்களாகவே சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்; எதிர்க்கட்சிகளே இல்லாமல் வெற்றி பெறுவதற்கான சூரத், இந்தூர் மாடலையும் பா.ஜ.க. உருவாக்கியது. இவையெல்லாம் ஒட்டுமொத்த அதிகார கட்டமைப்பும் பா.ஜ.க-வின் வெற்றிக்காக பாடுபடுகிறது என்பதைக் காட்டியது.

சமீபத்தில், இராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. எனவே ஜூன் 4-ஆம் தேதி மோடிக் கும்பல் எத்தகைய தில்லுமுல்லுகளையும் அரங்கேற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்பது பெரும்பான்மையானோர் வெளிப்படுத்தும் கருத்தாக உள்ளது. இந்நிலையில், 120 சிவில் அமைப்புகள் இணைந்து, நாடுமுழுவதும் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் “நியாயமான மற்றும் சுதந்திரமான வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்” என்று கடிதம் எழுதியுள்ளன.

22 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கும் மோடி ஆட்சியை விட்டு அவ்வளவு எளிதில் இறங்க மாட்டார்; ஒருவேளை பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரவில்லையென்றால் ரஃபேல் ஊழல், பணமதிப்பு நீக்கம், பி.எம். கேர்ஸ் நிதி, தேர்தல் பத்திரங்கள், பெகாசஸ் உளவு, பனாமா மற்றும் பண்டோரா ஆவணங்கள், அதானி மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை, துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுரங்கங்கள், ரயில்வே போன்றவற்றில் அம்பானி-அதானி கும்பலுக்காக முறைகேடாக போடப்பட்ட ஒப்பந்தங்கள் என இந்த பத்து ஆண்டு காலத்தில் மோடி-அமித்ஷா கும்பல் நிகழ்த்திய முறைகேடுகளும் ஊழலும் விசாரணைக்கு உள்ளாக்கப்படும்; இதை மோடி விரும்ப மாட்டார், எனவே எப்படியாவது மீண்டும் வெற்றிப் பெறவே பார்ப்பார்; ஆட்சியைப் பிடிப்பதற்காக அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் மீது டொனால்ட் டிரம்ப் தாக்குதல் நடத்தியது போன்று இந்தியாவிலும் மோடி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்றெல்லாம் சிவில் அமைப்பைச் சார்ந்தவர்களும் பத்திரிக்கையாளர்களும் எச்சரிக்கின்றனர்.


படிக்க: மோடி பதவியேற்பதை ஏற்கவைக்கும் தி.மு.க-வின் துரோகத்தனம்! | தோழர் அமிர்தா


ஆனால், இந்த அபாயகரமான நிலைமையில் கூட எதிர்க்கட்சிகள் பாசிசக் கும்பலுக்கு எதிராகவும் இந்த மோசடி தேர்தலை அம்பலப்படுத்தியும் மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பதற்கு தயாராக இல்லை என்பதே அவலநிலை. தற்போதுவரை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுப்பது, நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது என்ற வரம்பைத் தாண்டி எதிர்க்கட்சிகள் வர மறுக்கின்றன. ஆனால், சிலர் எதிர்க்கட்சிகளை ஆட்சியில் அமர வைப்பதற்காக மக்கள் இந்த மோசடி தேர்தலை எதிர்த்து போராட வேண்டும் என்று அறைக்கூவல் விடுக்கின்றனர்.

ஆனால் மக்கள் நீண்ட காலமாக போராட்ட களத்தில்தான் உள்ளார்கள். பஞ்சாப், ஹரியானா எல்லைகளில் இன்று வரை விவசாயிகள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாசிசக் கும்பலுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்கள்தான் இன்று தேர்தல் களத்தில் பா.ஜ.க. கும்பலுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மாறாக, எதிர்க்கட்சிகள்தான் மக்களின் போராட்டங்களுடன் கைகோர்க்காமல், மக்கள் போராட்டத்தால் பா.ஜ.க-விற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி வாக்குகளை மட்டும் அறுவடை செய்துகொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றன.

ஆனால், பல இடங்களில் மக்கள் பா.ஜ.க-விற்கு வாக்களிக்காததால் வாக்கு சதவிகிதம் குறைகிறதே ஒழிய, அந்த வாக்குகள் அனைத்தும் இந்தியா கூட்டணிக்கு விழவில்லை. சான்றாக, மணிப்பூர் மக்கள் பா.ஜ.க-விற்கு எதிராக தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். ஆனால், அவர்கள் ஏன் இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுக்கவில்லை என்பதே பரிசீலிக்க வேண்டியது. காரணம், இந்தியா கூட்டணி மணிப்பூர் மக்களுக்கு தன்னை ஒரு மாற்றாக முன்னிறுத்திக் கொள்ளவில்லை; குக்கி மக்களின் போராட்டங்களுடன் கைகோர்த்து நின்று, அவர்களுக்கு நம்பிக்கையூட்டவில்லை என்பதே முதன்மையானது. சொல்லபோனால், இத்துணை துணிச்சலாக பாசிசக் கும்பல் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கே, என்ன நடந்தாலும் களத்திற்கு சென்று மக்களிடம் முறையிடுவதற்கு துணியாத இந்தியா கூட்டணி கட்சிகளின் பலவீனமும் முக்கியமான காரணம்.

மேலும், கடந்த ஆண்டு துருக்கியில் நடந்த அதிபர் தேர்தலில், பாசிஸ்ட் எர்டோகன் பல்வேறு வகைகளில் பலவீனப்படுத்தப்பட்டிருந்தாலும், எதிர் முகாமிடம் பாசிசத்திற்கு எதிரான சரியான மாற்று ஜனநாயகத் திட்டம் இல்லாததால், எர்டோகன் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்ததை தடுக்க முடியாமல் போனது.

எனவே, பாசிச பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கான மாற்றுத் திட்டத்தை முன்வைத்து, பா.ஜ.க-வின் தில்லுமுல்லு தேர்தலுக்கு எதிராகவும் மக்களை வதைக்கும் இந்துராஷ்டிர அடிக்கட்டுமான சட்டத்திட்டங்களுக்கு எதிராகவும் போராட்டத்தைக் கட்டியமைத்தால் மட்டுமே எதிர்க்கட்சிகளால் மக்களுக்கு நம்பிக்கையூட்டி தங்களை ஒரு மாற்று கட்சியாக முன்னிறுத்திகொள்ள முடியும். மாறாக, பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் மட்டும் போதும்; அதுவே தங்களை சிம்மாசனத்தில் அமர்த்திவிடும் என்று எதிர்க்கட்சிகள் கனவு கண்டால், பா.ஜ.க-விற்கு எத்துணை நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதனை சரிவர பயன்படுத்திக் கொண்டு பா.ஜ.க-வை வீழ்த்த முடியாத நிலையே ஏற்படும்.


அறிவு

(புதிய ஜனநாயகம் – ஜுன் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



2024 தேர்தல் முடிவுகள்: மக்கள் போராட்டங்களால் பாசிசத்தை வேரறுப்போம்!

ந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவி்ல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய நாடளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4 அன்று வெளியாகியது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களிலும் பா.ஜ.க. தனியாக 240 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் “இந்தியா கூட்டணி” 233 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களில் வெற்றிப்பெறாத நிலையில் கூட்டணி கட்சிகளை சார்ந்து ஆட்சியமைக்க வேண்டிய நிலைக்கு  பா.ஜ.க. தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே “400 இடங்களை வெல்வோம்” என்று தம்பட்டம் அடித்துவந்த பா.ஜ.க. கும்பலுக்கு இத்தேர்தல் முடிவானது பலத்த அடியைக் கொடுத்துள்ளது.

இந்துராஷ்டிரத்தின் சோதனைசாலையாக இருக்கும் உத்தரப்பிரதேசத்திலேயே பா.ஜ.க. கடும் தோல்வியடைந்துள்ளது. 80 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது பா.ஜ.க. 29 இடங்களை இழந்துள்ளது. தோல்வியின் உச்சமாக ராமன் கோவில் கட்டப்பட்டுள்ள பைசாபாத் (அயோத்தி) தொகுதியிலேயே பா.ஜ.க. தோல்வியை தழுவியுள்ளது. அதேபோல், வளர்ச்சி நாயகன், விஸ்வகுரு வரிசையில் அண்மையில் கடவுள் அவதாரம் வேடம் பூண்ட மோடியே, வாக்குப்பதிவின் முதல் சில சுற்றுகளில் பின்னடைவிற்கு தள்ளப்பட்டு, இறுதியாக வெறும் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாத்தில் வெற்றிபெற வேண்டிய சூழல் உருவானது.

48 தொகுதிகளை கொண்ட மற்றொரு பெரிய மாநிலமான மகாராஷ்டிராவிலும் பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த காலங்களில் மகாரஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை இரண்டாக உடைத்த பா.ஜ.க., தேர்தல் ஆணையத்தின் மூலம் அக்கட்சிகளின் பெயரையும் சின்னத்தையும் பறித்தது. ஆனால், தற்போதைய தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தலா 9 மற்றும் 8 இடங்களை பெற்றுள்ளது. கட்சியை உடைத்துவிட்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்த ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரசும் தலா 7 மற்றும் 1 இடங்களையே பெற்றுள்ளன. மேலும் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, பா.ஜ.க. இம்மாநிலத்தில் 14 இடங்களை இழந்து 9 இடங்களை மட்டுமே பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் 12 தொகுதிகள் கூடுதலாக பெற்று 13 இடங்களை கைப்பற்றியுள்ளது பா.ஜ.க-விற்கு அதிர்ச்சியளித்துள்ளது.

இவை மட்டுமின்றி, கடந்த தேர்தல்களில் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்து தொகுதிகளையும் கைப்பாற்றிய (Clean Sweep)  பா.ஜ.க இம்முறை பல தொகுதிகளை எதிர்க்கட்சிகளிடம் இழந்துள்ளது. குஜராத்தில் எந்த தொகுதியில், “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களிடம் இரண்டு எருமை மாடு இருந்தால் ஒன்றை பறிமுதல் செய்துகொள்ளும்” என்று மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்தரோ அந்த பனஸ்கந்தா தொகுதியில் மட்டும் ஒரு தசாப்தத்திற்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.


படிக்க: பாசிஸ்டுகளின் தேர்தல் ‘ஜனநாயகம்’!


அதேபோல் தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட பா.ஜ.க-வினரை ஊருக்குள் நுழையவிடாமல் விவசாயிகள்  துறத்தியடித்த  ஹரியானாவில், பா.ஜ.க. 5 இடங்களை காங்கிரசிடம் பறிக்கொடுத்தது: பஞ்சாப்பில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றிபெறவில்லை. ராஜஸ்தானில் கடந்த இரண்டு நாடளுமன்றத் தேர்தல்களிலும் மொத்தமுள்ள 25 தொகுதிகளையும் கைப்பற்றிய பா.ஜ.க-வால் இம்முறை 14 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்துள்ளது. அதேபோல், பீகாரில் கடந்தமுறை பா.ஜ.க. கூட்டணி 39 இடங்களை பெற்றிருந்த நிலையில் இம்முறை 24 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

வடக்கிழக்கு மாநிலங்களிலும் பா.ஜ.க. தொகுதிகளை இழந்துள்ளது. கடந்தமுறை வடக்கிழக்கு மாநிலங்களில் உள்ள 25 தொகுதிகளில் 19 தொகுதிகளை கைப்பற்றியிருந்த பா.ஜ.க கூட்டணி இம்முறை 4  தொகுதிகளை இழந்தது. பா.ஜ.க-வால் திட்டமிட்டு குக்கி இன மக்கள் மீது வன்முறைவெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்ட மணிப்பூரில் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. இது மெய்தி மக்களும் பா.ஜ.க-வை புறக்கணித்துள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தேர்தல் தொடங்குவதற்கு முன்னர் மாநில உரிமைக்கான போராட்டம் வீரியமாக நடந்த லடாக்கில் பா.ஜ.க. மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பா.ஜ.க அதிக இடங்களை பெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட மேற்குவங்கத்தில், பா.ஜ.க. ஆறு இடங்களை இழந்துள்ள நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 29 இடங்களை வென்றுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பிலிருந்தே மோடி கிடயாய்கிடந்த தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து தமிழ்நாடு மக்கள் பா.ஜ.க-விற்கு மீண்டும் கதவடைத்துள்ளதுள்ளனர்.

இவ்வாறு இத்தேர்தல் முடிவானது மோடி-அமித்ஷா கும்பலின் தலையில் இடியை இறக்கியுள்ளது. மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் நாடு முழுவதும் நடந்த மக்கள் போராட்டங்களால் தோல்வி முகத்திற்கு தள்ளப்பட்ட பாசிசக் கும்பல், 2024 நாடாளுமன்றத் தேர்தலையும் தோல்வி முகத்தில் அணுகியது. அதன் வெளிப்பாடாக இத்தேர்தலில் பசுவளைய மாநிலங்கள் உள்ளிட்டு நாடு முழுவதும் கடுமையான நெருக்கடிகளை சந்தித்தது. விவசாயிகள் போராட்டம், ராஜ் புத் சாதியினர் போராட்டம் என தேர்தல் தொடங்கிய பிறகும் மக்கள் போராட்டங்கள் ஓயவில்லை. நேர்மையக தேர்தலில் வெற்றிப்பெற முடியாதநிலையில் எதிர்க்கட்சிகளை சிறையிலடைத்து, வங்கி கணக்குகளை முடக்கி, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அரசு அமைப்புகளின் துணையுடன் ஓர் “மேட்ச் ஃபிக்சிங்” தேர்தலை நடத்தி முடித்தது, பாசிசக் கும்பல். ஆனால், ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் துணை நின்ற போதிலும் பா.ஜ.க-வால் தனிபெரும்பான்மையை கூட பெற முடியாதது, பாசிசக் கும்பலின் தோல்வி முகம் எந்த அளவிற்கு தீவிரமாக உள்ளது என்பதையே காட்டுகிறது.

தனிபெரும்பான்மையை பெற முடியாததன் காரணமாக, கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் எந்தவித சட்டவிதிகளையும் மதிக்காமல் பாசிச சர்வாதிகார ஆட்சியை நடத்திவந்த பா.ஜ.க. கும்பல், தற்போது கூட்டணி கட்சிகளை சார்ந்து நடக்க வேண்டிய பரிதாபகரமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிலும் தேர்தல் சமயத்தில் பா.ஜ.க-வால் பல்வேறு அவமானங்களுக்கு உள்ளாக்கப்பட்ட ஆந்திர பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவையும் கட்சி தாவுவதில் இழிப்புகழ் பெற்று “பல்டி குமார்” என்று அழைக்கப்படும் பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ் குமாரையும் நம்பி கயிறு மேல் நடக்கும் நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு, கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி உள்ளிட்டோர் பா.ஜ.க-விடம் பாதுகாப்புத்துறை, விவசாயத்துறை, சபாநாயகர் பதவி உள்ளிட்டவற்றை கோரி நெருக்கடி கொடுப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது பா.ஜ.க-வின் இக்கட்டான நிலையையே காட்டுகிறது.

இன்னொருபுறம், சொந்த கட்சிக்குள் அடியறுப்பு வேலையிலும் ஆர்.எஸ்.எஸ்-ஐ அலட்சியப்படுத்தியும் வந்த மோடி-அமித்ஷா கும்பலின் அதிகாரத்திற்கு இத்தேர்தல் முடிவு எல்லைக்கோடு வகுத்துள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். தேர்தல் முடிவுகள் குறித்து ஆர்.எஸ்.எஸ்-இன் இதழான “ஆர்கனைசர்”-இல் வெளியான “2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வின் ஆட்சி: சில படிப்பினைகளுடன் கூடிய ஒரு வரலாற்று வெற்றி” என்ற கட்டுரையில் மோடி-அமித்ஷா கும்பலுக்கு ஆர்.எஸ்.எஸ். பல விடயங்களை ‘இடித்துரைத்துள்ளது’. அதேபோல், “தி பிரிண்ட்” இணையதளத்தில் “இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர வேண்டிய பா.ஜ.க-வின் ‘கர் வாப்சி’ (தாய் மதம் திரும்புதல்) நேரம்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இதே உள்ளடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்-யைச் சேர்ந்தவர்களும் ஆர்கனைசர் இதழின் முன்னாள் ஆசிரியர்களும் இணையத்தில் பல பதிவுகளை எழுதி வருகின்றனர். இவையெல்லாம் மோடி-அமித்ஷா கும்பலுக்கு இத்தேர்தல் முடிவு கூடுதல் நெருக்கடியை உருவாக்கியுள்ளதையே காட்டுகிறது.

இன்னொருபுறம் “சர்வாதிகாரத்திற்கு கடிவாளமிட்டுவிட்டோம்”, “இந்தியாவின் அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டுள்ளது”, “மோடி இனி வாஜ்பாயாக மாறிவிடுவார்” என்ற பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், எந்த இடத்திலும் இத்தேர்தலில் ஏன் இந்தியா கூட்டணி தோற்றது? என்பதற்கான சரியான பரிசீலனை செய்யப்பட்டதாக தெரியவில்லை.

எவ்வாறு பா.ஜ.க கும்பல் தோல்வியைத் தழுவியதற்கு நாடுமுழுவதும் நடந்த மக்கள் போராட்டங்கள் காரணமாக அமைந்ததோ அதேபோல் இந்தியா கூட்டணி கட்சிகள் இத்துணை தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கும் மக்கள் போராட்டங்கள்தான் அடிப்படையானது. ஆனால், அப்போராட்டங்களை வளர்த்தெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கவே இல்லை என்பதுதான் பரிசீலனை நடத்தப்பட வேண்டிய இடம்.

பாசிசக் கும்பல் தோல்வி முகத்தால், இத்தேர்தலில் மோடி அலை போன்று பாசிசக் கும்பலுக்கு சாதகமான எந்த அலையும் இல்லாத நிலையில், நாட்டின் பல இடங்களில் போராட்ட அலையும் பா.ஜ.க. எதிர்ப்பு அலையும் நிலவியது. அதனை நாடுதழுவிய அளவில் பா.ஜ.க. எதிர்ப்பு அலையாக வளர்த்தெடுப்பதற்கு சாதகமான சூழலும் எதிர்க்கட்சிகளுக்கு இருந்தது. ஆனால், மக்கள் போராட்டங்களில் தலையிட்டு அதனை வளர்த்தெடுத்து மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு எதிர்க்கட்சிகள் துணியவில்லை. மேலும் இந்தியா கூட்டணி கட்சிகள் பா.ஜ.க-வின் கொள்கைகளுக்கு எதிராக ஒத்த அரசியல்-பொருளாதார மாற்றுத்திட்டத்தை முன்வைக்காமல்தான் இந்த தேர்தலை சந்தித்தன. எதிர்க்கட்சிகள் தனித்தனியாகவும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையிலும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. அவ்வறிக்கைகளும் முழுமையான மக்கள் கோரிக்கைகளை பிரதிபலிப்பதாக இல்லாமல் செயல்திட்டமற்ற கவர்ச்சிவாத அறிவிப்புகளாகவே இருந்தன.


படிக்க: 1.07கோடி ஓட்டுகள் மோசடி! பாசிச பாஜகவின் மோசடி தேர்தல் ஆணையம்!


அதேபோல், வடமாநிலங்களில் மக்கள் போராட்டங்களால் பாசிச கும்பலின் மதவெறி போதையிலிருந்து மக்கள் விடுப்பட்டு வரும் போக்கும் உருவாகியிருந்தது. ஆனால் அம்மக்களை பா.ஜ.க-வின் பார்ப்பனிய சித்தாந்ததிற்கு மாற்றாக ஒரு சித்தாந்ததை முன்வைத்து அணித்திரட்டுவது குறித்தெல்லாம் எதிர்க்கட்சிகள் துளியும் சிந்திக்கவில்லை. மாறாக, இவற்றையெல்லாம் செய்யவில்லை எனினும் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் தங்களுக்கு அறுவடையாகிவிடும் என்று மனநிலையிலையில்தான் எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்தித்தன. இதனால், பெரும்பான்மையான மக்கள் எதிர்கட்சிகளை தங்களுக்கான மாற்றாக பார்க்கவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு முக்கியமான காரணம்.

ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி இந்தியா கூட்டணி கட்சிகள் இத்தனை தொகுதிகள் வெற்றிபெற்றிருப்பதற்கு முதன்மையான காரணம் முன்னரே குறிப்பிட்டதுபோல மக்கள் போராட்டங்கள்தான். மேலும், இத்தேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான பாசிச எதிர்ப்பு சக்திகளும் ஜனநாயக சக்திகளும் வெவ்வேறு வடிவங்களில் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. துருவ் ராட்டி போன்ற பலர் இந்தியாவை பாசிச சர்வாதிகாரத்தில் இருந்து காக்க வேண்டும் என்ற ஓரே நோக்கத்திற்காக பா.ஜ.க-வை அம்பலப்படுத்தி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்தனர்.

மக்கள் மோடிக்கும்பலை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதற்காகவும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவும்தான் மக்கள் போரட்டங்களை முன்னெடுத்தனர்; தேர்தலில் இந்தியா கூட்டணிக்கும் வாக்களித்தனர். ஆனால், இந்தியா கூட்டணியின் கையாலாகத்தனத்தாலும் துரோகத்தாலும் பா.ஜ.க கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது. இனியும் மக்களின் கோரிக்கைகளை கைவிட்டுவிட்டு, கடந்த காலங்களைப்போல் மக்கள் போராட்டங்களையும் ஒடுக்குவார்களானால் அது எதிர்க்கட்சிகளுக்கும் ஆபத்தாகத்தான் சென்றடையும்.

மேலும், கணிசமான தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதால் எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறையை பாசிச பா.ஜ.க. நிறுத்தப் போவதில்லை. தேர்தல் முடிவு அன்று மோடி ஆற்றிய உரையில், “ஜூன் 4-க்கு பிறகு ஊழல் தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்” என்று பேசியிருப்பது, வருங்காலங்களில் எதிர்க்கட்சிகள் மீதான பாசிச அடக்குமுறை தீவிரமடையும் என்பதையே காட்டுகிறது. எனவே, மக்களின் பா.ஜ.க. எதிர்ப்புணர்வை வாக்குகளாக அறுவடை செய்துகொண்டு 233 தொகுதிகளில் வென்றுள்ள இந்திய கூட்டணி கட்சிகள், மக்களுக்கு நேர்மையாக இருக்குமெனில் மக்கள் போராட்டங்களுடன் கைகோர்த்து அதனை வளர்த்தெடுக்க வேண்டும். அதுதான் பெரும்பானமை மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றும், எதிர்க்கட்சிகளையும் பாசிச ஒடுக்குமுறையில் இருந்து காக்கும்.

எனவே, எந்த மக்கள் போராட்டங்கள் பாசிசக் கும்பலை தேர்தல் களத்தில் பலவீனப்படுத்தியதோ அதே மக்கள் போராட்டங்களை வளர்த்தெடுத்து பாசிசத்தை வீழ்த்தும் திசையை நோக்கி முன்னேறுவோம்.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – ஜுன் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புதிய ஜனநாயகம் – ஜூன் 2024 | மின்னிதழ்

ன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் ஜூன் 2024 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – 2024 தேர்தல் முடிவுகள்: மக்கள் போராட்டங்களால் பாசிசத்தை வேரறுப்போம்!
  • தமிழ்நாடு: பாசிசக் கும்பலை வீழ்த்திய பார்ப்பனிய எதிர்ப்பு மரபை வளர்த்தெடுப்போம்!
  • பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு மாற்றுத் திட்டமும் மக்கள் போராட்டமும் முன்நிபந்தனை!
  • பசுவளைய மாநிலங்களில் பாசிஸ்டுகளுக்கு முற்றும் நெருக்கடி!
  • ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க வளர அடித்தளமிடும் கவர்ச்சிவாத – மிதவாத இந்துத்துவ அரசியல்!
  • நாடெங்கும் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள் உணர்த்துவது என்ன?
  • பாலஸ்தீனம்: இன அழிப்புப் போரை தீவிரப்படுத்தும் இஸ்‌ரேல்! நயவஞ்சக நாடகமாடும் அமெரிக்கா!
  • ஏழை மக்களின் உறுப்புகளைத் திருடும் மருத்துவ மாஃபியா
  • கார்ப்பரேட் நலனுக்காக சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மோடி பதவியேற்பதை ஏற்கவைக்கும் தி.மு.க-வின் துரோகத்தனம்! | தோழர் அமிர்தா

மோடி பதவியேற்பதை ஏற்கவைக்கும் தி.மு.க-வின் துரோகத்தனம்! | தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வெப்ப அலைக்கு பலியாக்கப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்: அரசே முதல் குற்றவாளி

வெப்பம் மிகுதியாக இருந்த மே 22 மதியம் குவாலியர் ரயில் நிலையம் அருகே ஒரு பரிதாபமான காட்சியை மக்கள் கண்டனர். மூன்று சிறு குழந்தைகளுடன் ஒரு பெண் ரிக்ஷாவின் அருகே நின்று சத்தமாக அழுது கொண்டிருந்தார். ரிக்ஷாவில் மிகவும் பலவீனமான ஒரு ஆண் இறந்துவிட்டதைப் போல் காட்சியளித்தார்.

ஏராளமான நபர்கள் அவர்களைச் சுற்றித் திரண்டனர். ரிக்ஷாவில் அந்த நபரின் உடலில் உயிரின் தடயங்கள் ஏதும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதால், அந்தப் பெண் சத்தமாக அழுது கொண்டிருந்தார். அவர் அழுவதைக் கண்டு குழந்தைகளும் அழத்தொடங்கினர். விசாரணையில் இறந்தது அந்த பெண்ணின் கணவரான உத்தர பிரதேசத்தின் பண்டா (Banda) மாவட்டத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த செங்கல் சூளைத் தொழிலாளி ஓம் பிரகாஷ் (Om Prakash) என்பது தெரியவந்தது. இவர் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த போது கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பல நாட்களாகியும் குணமடையாத நிலையில், அந்நாளில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், செங்கல் சூளை உரிமையாளர்கள் அவர் பணியிடத்தில் இறந்து விடுவதைத் தவிர்க்க அவரை சூளையை விட்டு வெளியேறும்படி கூறியுள்ளனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் உயிரிழந்த தொழிலாளியின் மனைவியான பிரேம்காலிக்கு (Premkali) உதவி செய்ய யாரும் இல்லை. ஆனால் குவாலியர் ரயில் நிலையத்தை அடைவதற்கு எப்படியாவது ரிக்ஷாவை ஏற்பாடு செய்வதில் மிகுந்த தைரியத்தையும் உறுதியையும் காட்டினார் அந்த பெண்மணி. கணவரின் உடலை தங்கள் கிராமத்திற்கு எடுத்துச் செல்ல எந்த நிதியுதவியும் இல்லாமல் முற்றிலும் ஆதரவற்ற நிலையில் இருந்தார்.

இந்த நிலையில்தான் ஸ்டேஷன் மாஸ்டரும், ஒரு சில போலீஸ் அதிகாரிகளும் மிகுந்த இரக்கம் காட்டினார்கள். அவர்கள் அவளுக்கு ஆறுதல் கூறி, உடலை கிராமத்திற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்தனர். மேலும் பிரேம்காலிக்கு கொஞ்சம் பணத்தையும் கொடுத்தனர்.


படிக்க: முடிவுறாப் பயணம்? | புலம்பெயர் தொழிலாளர்கள் | கவிதை


சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு குறித்து எழுதிய எழுத்தாளர் பிரேம்காலி வசித்துவரும் நரைனி தொகுதியின் மொஹாத்ரா கிராமத்தைச் சேர்ந்த தலித்கள் வசிக்கும் குக்கிராமத்திற்குச் சென்றிருந்தார். தலித் மக்கள் அதிகம் வசிக்கும் கிராமம் அது. அவர்கள் முற்றிலும் நிலமற்றவர்களாகவோ அல்லது மிகச் சிறிய நிலங்களைக் கொண்டவர்களாகவோ உள்ளனர். கிராமத்தில் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இந்த நாட்களில் கிராமவாசிகளுக்கு தினசரி கூலி வேலை கிடைத்தாலும், கடும் வெப்பமான வானிலை அவர்களை மிகவும் பலவீனமாகவும் சோர்வாகவும் ஆக்குகிறது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை கிடைப்பது மிகவும் அரிது. இந்த நிலையில்தான், தொழிலாளர் ஒப்பந்ததாரர்கள் வழங்கும் மொத்த தொகையை ஏற்று, பல்வேறு இடங்களில் உள்ள செங்கல் சூளைகளுக்கு வேலைக்குச் சென்று விடுகின்றனர்.

கடந்த அக்டோபரில் தனது கணவர் முன்பணமாக ₹5000 பெற்றுக்கொண்டு தன்னையும் தங்களது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு குவாலியருக்குப் புறப்பட்டதாக பிரேம்காலி கூறுகிறார்.

தானும் தன் கணவனும் சூளையில் இரவு பகலாக உழைத்ததாக அவர் கூறுகிறார். அங்கு தங்களது வாழ்க்கை நிலைமை மோசமாக இருந்ததாக அவர் கூறுகிறார்.

பல்வேறு தொழிலாளர்கள் அளித்த தகவலின்படி, 1000 செங்கற்களுக்கு ₹650 கூலி வழங்கப்படுகிறது. ஒரு தம்பதியினர் இரவும் பகலும் உழைத்தால். ஒரு நாளில் ₹1000 சம்பாதிக்க முடியும். ஆனால் உணவு, மருந்து, வருவதற்கு முன்பு பெறப்பட்ட முன்பணம் போன்றவற்றை கழித்த பின்னரே தொழிலாளர்களின் கைகளில் கூலி வழங்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பிடித்த பின்னரும் கூட, பிரேம்காலி புறப்படும் போது கணிசமான தொகையைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், கணக்குகள் மைனஸ்-இல் உள்ளதென கூறி சூளையை விட்டு வெளியேறும் முன் அவரும் அவருடைய கணவரும்தான் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவரது தாயாருக்கு ஒரு தொலைபேசி செய்தி வந்திருக்கிறது. அதில் சூளை உரிமையாளர் / மேலாளருக்கு பணம் அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்; அதன் பிறகுதான் அவரது மகன் திரும்ப முடியும் என்று கூறியுள்ளனர். ஆனால் அவரால் பணத்தைத் திரட்ட முடியவில்லை.

எனவே பிரேம்காலி இறக்குந்தருவாயில் இருந்த அவரது கணவர் மற்றும் மூன்று சிறு குழந்தைகளுடன் செங்கல் சூளையில் இருந்து பணம் எதுவும் இல்லாமல் வெளியேறினார்.


படிக்க: மும்பை இரசாயன ஆலை விபத்து: தொழிலாளர்கள் கொல்லப்படுவதற்கு அரசே காரணம்!


இதற்கு முன்னதாக பிரேம்காலியின் நெருங்கிய உறவினர் ஒருவர் செங்கல் சூளையில் இருந்து திரும்பிய சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். ஓம் பிரகாஷின் சகோதரர் லவ்-குஷ், பல ஆண்டுகளாக செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். அவர் காசநோயால் பாதிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த நோய் அவரது வேலையுடன் தொடர்புடையது என்ற வலுவான உணர்வு பிரேம்காலிக்கு உள்ளது.

பிரேம்காலியின் கிராமத்தில் உள்ள தலித் குடும்பங்களில் பெரும்பாலானோர் செங்கல் சூளைகளுக்கு செல்வதாகவும், கைரி மற்றும் ஜ்வாஹ்ரா போன்ற சில பக்கத்து கிராமங்களில் இந்த சதவீதம் இன்னும் அதிகம் என்றும் இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். செங்கல் சூளைகளுக்கு இடம்பெயரும் தொழிலாளர்களின் முழு வாழ்க்கையும் அங்கு செங்கற்கள் செய்தே முடிந்து விடுகிறது.

இதற்கிடையில் பிரேம்காலிக்கு வரும் வாய்ப்புகள் மிகவும் மோசமானவை. அவருக்கு எந்தவிதமான வாழ்வாதார உதவியும் இல்லை ஆனால் அவர் மூன்று குழந்தைகளை வளர்க்க வேண்டியுள்ளது. மூன்று குழந்தைகளும் மிகவும் மோசமான ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு மிகவும் பலவீனமாக உள்ளனர். லேபர் கான்ட்ராக்டர் அவரிடம் ஒரு சிறிய தொகையை கொடுத்துள்ளார்; புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் பணம் கொடுப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் அந்த கான்ட்ராக்டர் பணம் வழங்கினாலும் அது பிரேம்காலியின் குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்குப் போதுமானதாக இருக்காது. வித்யா தாம் சமிதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அவரது குடும்பத்திற்கு சிறிய உதவிகளை செய்து வருவதாக அவர் கூறினார்.

இதே போன்றதொரு நிகழ்வில் நீபி கிராமத்தைச் சேர்ந்த செங்கல் சூளைத் தொழிலாளி ஒருவருக்கு உரித்தான நிலுவைத் தொகையான ₹2 லட்சத்தைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இத்தகைய அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழிலாளர் துறை உடனடியாக உதவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இந்த தொழிலாளர்களைப் பாதுகாக்க முடியும்.

[குறிப்பு: இக்கட்டுரை கவுண்டர்கரண்ட்ஸ் இணைய ஊடகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் துயரங்களை எடுத்துரைப்பதால் வினவு வாசகர்களுக்கு இக்கட்டுரையை மொழிபெயர்த்து வழங்குகிறோம்.]


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மக்கள் அதிகாரம், வினவு, புதிய ஜனநாயகம் முகநூல் பக்கங்களை முடக்கிய பாசிச கும்பல்

மக்கள் அதிகாரம் உள்ளிட்ட தோழமை அமைப்புகளின் முகநூல் பக்கங்கள் திட்டமிட்டு பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலால் முடக்கம்!

09.06.2024

பத்திரிகை செய்தி

ன்பார்ந்த தோழர்களே, ஜனநாயக சக்திகளே! வணக்கம்.

06.06.2024 அன்று இரவு 9 மணிக்கு திடீரென மக்கள் அதிகாரம் முகநூல் பக்கம், வினவு மற்றும் புதிய ஜனநாயகம் ஆகிய முகநூல் பக்கங்கள் முடக்கப்பட்டு அதன் பெயரும் மாற்றப்பட்டிருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! வேண்டாம் பிஜேபி! வேண்டும் ஜனநாயகம்! கோடி மக்களிடம் கொண்டு செல்வோம்! என்ற முழக்கங்களை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் வீச்சாக நாங்கள் செயல்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.

குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தல் 2024-ஐ ஒட்டி தேர்தலில் பாசிச பாஜகவை வீழ்த்துவது எப்படி என்ற வெளியிட்டை தமிழ் நாடு முழுவதும் கொண்டு சென்றோம். மக்களிடத்தில் களத்தில் வேலை செய்த அதே அளவிற்கு இணையத்திலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்துக்கு எதிரான தளமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்காக நாங்கள் பங்களிப்பு செய்தோம்.

தமிழ்நாடு முழுவதும் நாங்கள் மேற்கொண்ட போராட்டச் செய்திகளையும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வுக்கு எதிராக மற்ற அமைப்புகள் மேற்கொள்ளும் போராட்டச் செய்திகளையும் மேற்கண்ட எமது முகநூல் பக்கங்கள் வாயிலாக பரப்புரை செய்தோம். தற்பொழுது முடக்கப்பட்ட முகநூல் பக்கங்கள் ஒவ்வொன்றிலும் பல்லாயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

2024 தேர்தல் முடிவுகள் வெளியான அன்று தேர்தல் முடிவுகளை எப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் பரிசீலிக்க வேண்டும் என்பதை ஒரு நாள் முழுவதும் வினவு youtube இணையதளம், மக்கள் அதிகாரம் முகநூல் பக்கங்களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்தோம்.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக நாங்கள் நிகழ்ச்சியை நடத்திய அடுத்த நாளிலேயே எமது முகநூல் பக்கங்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டு அதன் பெயரும் மாற்றப்பட்டு இருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; பாசிஸ்டுகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் எமது முகநூல் பக்கங்கள் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலால் முடக்கப்பட்டு இருக்கின்றது. எமது முகநூல் பக்கங்களை மீட்டெடுக்கும் அதே வேளையில் அவற்றின் பெயர்களை தற்போதைக்கு மாற்ற இயலாது என்றும் அதற்கு கணிசமான காலம் எடுக்கும் என்று முகநூல் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலுக்கு எதிராக செயல்படுவோரின் முகநூல் பக்கங்களையும் இணையதளங்களையும் முடக்குவது என்பது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் இலக்காக இருக்கிறது. அதன்படியே எமது முகநூல் பக்கங்களும் முடக்கப்பட்டிருக்கின்றன.

இதற்காகவெல்லாம் இந்த நாட்டையே பேரழிவில் தள்ளிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு எதிரான எமது போராட்டக் களங்கள் ஒருபோதும் நிற்க போவதில்லை.

பாசிச பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக செயல்படுவோரை முடக்கும் இந்த செயலை அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

முன்னைக் காட்டிலும் இன்னும் வேகமாக அனைத்து வகைகளிலும் ஆர்எஸ்எஸ் – பிஜேபி; அம்பானி- அதானி பாசிசத்துக்கு எதிராக களமாடுவோம் !


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube