Friday, July 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 702

கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே – மாவோ !

10

(1994-ம் ஆண்டு புதிய கலாச்சாரத்தில் வெளியான கட்டுரை)

மாவோ நூற்றாண்டு விழா !

மாமேதை மா சே துங் கிழக்கில் உதித்த இன்னொரு செங்கதிர். கீழைக்காற்று மேலைக்காற்றை வெல்ல முடியும் என்று நிரூபித்தவர். இவ்வாண்டில் சர்வதேச பாட்டாளி வர்க்கம் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

எளிய சீன விவசாயக் குடும்பத்தில் பிறந்த மாவோ பத்திரிகையாளனாய், கவிஞனாய், பொதுவுடைமை ஊழியனாய், இராணுவ வீரனாய் – தளபதியாய், அரசுத் தலைவனாய், தத்துவ ஆசிரியனாய், தேசிய – சர்வதேசிய தலைவனாய் உயர்ந்தவர். தத்துவம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய அனைத்திலும் ஆழமான தடயங்களைப் பதித்த அவரது அசலான படைப்புகள் எதிரிகளாலும் போற்றப்படுபவை.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகிய உலகப் பொதுவுடைமைப் பேராசான்களின் வரிசையில் சிறப்பான இடத்தைப் பெற்றவர், மாவோ. அவர் வழங்கிய மாவோ சிந்தனை காலத்தால் அழியாத சித்தாந்தமாக வைத்துப் போற்றப்படும். அதன் ஒளியில் பொதுவுடைமை லட்சியத்தை நோக்கி உறுதியோடு பயணத்தைத் தொடருவோமென இந்த நூற்றாண்டு விழாப்பொழுதில் சபதமேற்போம்.

மாவோ யேனான் உரை
படைப்புக் கலை: சில பிரச்சனைகள்

புரட்சிகர இலக்கியமும் கலையும் உண்மை வாழ்வினின்று வகை வகையான பாத்திரங்களைப் படைக்கின்றன; வரலாற்றை முன்னோக்கி உந்தித்தள்ள மக்களுக்கு உதவுகின்றன. கார்க்கியின் ‘தாய்’ நாவலின் பாவெல், அவனது தாய் ஆகிய இரு பாத்திரங்கள், லூசுன்னின் ஆ கியூ நாவலில் வரும் ஆ கியூ என்ற பாத்திரம் ஆகியவை இத்தகைய பாத்திரப் படைப்புகள்.

மா சே துங்
“கீழே இறங்கிப் போய் மக்களிடம் கேளுங்கள் ; அவர்கள் கலை இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பாருங்கள்!”

பசி, குளிர், பட்டினி, வறட்சி, சுரண்டல், அடக்குமுறைக் கொடுமை, தீண்டாமை, சாதிக்கொடுமை, மதவெறி – இந்த வடிவங்கள் இந்தியாவெங்கும் இருக்கின்றன; மக்கள் இதற்குள்ளேயே சிக்கி, போராடி, அன்றாட விஷயங்களாக அவற்றைப் பார்க்கிறார்கள்; ஆனால் எழுத்தாளர்களோ, கலைஞர்களோ அவ்வாறு மட்டும் பார்ப்பதில்லை; அவற்றைச் செறிவாக்கி, அவற்றுக்குள்ளே முரண்பாடுகளை, போராட்டங்களை எடுத்துக் காட்டி பொது மக்களை விழிப்புறச் செய்கிறார்கள்; சூழலை மாற்றியமைக்க ஒன்றுபட்டுப் போராடத் தூண்டும் படைப்புகளைச் செய்கிறார்கள்; இத்தகைய கலை இலக்கியப் பணி இல்லாவிடில் சமூகத்தை மாற்றும் பணி முழுமை அடையாது; குறைந்தபட்சம், அது விரைவாக முழுமையாகச் செயல்பட முடியாது.

சீன நிலைமைகளில் இதுபற்றிச் சிந்தித்த மாவோ கலாச்சாரப்படையின் அவசியத்தை வலியுறுத்தினார். யேனானின் செந்தளம் அமைந்ததும் இப்பிரச்சனைகளை விவாதிப்பதற்காக கலாச்சார முன்னணியாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் கூட்டப்பட்டார்கள்.

ஒருபுறம் ஜப்பானிய, ஏகாதிபத்தியம் சரமாரியாகக் குண்டுகளால் தாக்கி யேனானை அழித்துக் கொண்டிருந்தது; இன்னொருபுறம், சீன விடுதலைக்கான செந்தளமான யேனானில் கம்யூனிசப் போராளிகள் தங்கள் திட்டங்களைச் செயல் படுத்தினார்கள்; அந்த சூட்டுக்கிடையே தான் கலைஞர்கள் மத்தியில் தனது கருத்துக்களை மாவோ வைத்தார்; விவாதிக்கச் சொன்னார்.

புரட்சி, கலை இரண்டுக்கும் உள்ள உறவுகள் பற்றி பல பிரச்சினைகளை அவர் முன் வைத்தார். வர்க்க நிலைப்பாடு; குறிப்பான நிலைப்பாட்டிலிருந்து, குறிப்பான விஷயங்கள் பற்றி குறிப்பான கண்ணோட்டம்; யாருக்காக, எப்படிப் படைப்பது?; மார்க்சிய – லெனினிய சித்தாந்தக் கல்வி; சமுதாயக்கல்வி; சித்தாந்தப் போர் ஆயுதமாக விமர்சனத்துறை – என்று பல பகுதிகளாக ஆய்ந்து தன் விவாத உரையை நிகழ்த்தினார் மாவோ.

இருபத்திரண்டு நாட்களுக்கு விவாதம் நடந்தது; புரட்சிக் கலைஞர்கள், கோமிந்தாங் ஆட்சி மீது நம்பிக்கை இழந்து யேனானை நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதி அங்குவந்த கலைஞர்கள் ஆகியோர் தத்தம் கருத்துக்களை முன் வைத்து விவாதித்தார்கள். அதில் ஒருவர் வெல்ஸின் உலக அகராதியிலிருந்து கூட கலை இலக்கியம் என்பதற்குச் சொற்பொருள் கூறி விவாதித்தார்; விவாதங்களில் உடன் இருந்து குறிப்பெடுத்த மாவோ அவர்களிடம் புன்சிரிப்போடு சொன்னாரம்; ”கீழே இறங்கிப் போய் மக்களிடம் கேளுங்கள் ; அவர்கள் கலை இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பாருங்கள்!

இந்த விவாதத்தில் குறிப்பான ஒரு விஷயத்தை மட்டும் நாம் எடுத்துக் கொண்டு தமிழ்ச் சூழலுக்குப் பொருத்திப் பார்க்கலாம். கலைஞன் படைக்கிறான்; அவ்வாறு படைக்கும் போது தன் விருப்பத்துக்கு ஏற்ப உயர்ந்த வடிவத்தில் படைப்பதா? அல்லது அதிகமாக மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜனரஞ்சகமாகப் படைத்துப் பரவலாக்குவதா?

தமிழகத்தில் இந்தக் கேள்விகளை அடித்துப் புரட்டிப் போட்டு பிழிந்தெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். புரட்சிக் கலைஞர்களைத் தவிர மற்ற பலர் மிக விரிவான விவாதங்களை (ஒரு முடிவுக்கு வரக் கூடாதென்பதற்காகவே) நடத்தி வருகிறார்கள். சுருக்கமாக, அவர்களின் கருத்து; “கலை மிக உயர்ந்த வடிவத்தைப் பெறும் போதுதான் காலத்தால் அழியாத நிரந்தரத்துவத்தைப் பெறும்; மக்களுக்காக என்று சொல்லிப் பரவலாக்கினால், ஜனரஞ்சகப் படுத்தினால் படைப்பு கொச்சையாகி விடும்; நீர்த்துப் போய் விடும்”. இது சரியா? சரியல்ல, தவறு. மாவோவின் குறிப்புக்களின் ஒளியில் நமது தரப்பு வாதங்களை இனி பார்ப்போம்.

***

மாவோ சொல்கிறார்: ”எம்முடைய இலக்கியமும் கலையும் அடிப்படையாகத் தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீரர்களுக்கானவை. பரவலாக்குதல் என்பதன் பொருள் அவர்களிடம் பரவலாக்குதல்; தராதரங்களை உயர்த்துதல் என்பதன் பொருள் அவர்களுடைய தற்போதைய நிலையிலிருந்து, அந்த மட்டத்திலிருந்து முன்னேற்றுவது என்பதாகும். அவர்களுக்குச் சாதகமானதும், அவர்களால் உடனே ஏற்றுக் கொள்ளக் கூடியதும் எதுவோ அதையே நாம் பரவலாக்க வேண்டும். எனவே, அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு முன், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பணி இருக்கிறது. தராதரங்களை உயர்த்துவதற்கு இது இன்னும் அதிகமாகப் பொருந்தும்.

உயர்த்தத் தொடங்குவதற்கே அடித்தளம் தேவை. ஒரு வாளித் தண்ணீரை எடுத்துக் கொள்வோம். அதைத் தரையிலிருந்து தானே மேலே இழுக்கிறோம்? அந்தரத்திலிருந்தா இழுக்கிறோம்? அப்படியானால், இலக்கியமும் கலையும் எந்த அடித்தளத்திலிருந்து உயர்த்தப்படுவது? நிலப் புரபுத்துவ வர்க்கங்களின் அடித்தளத்திலிருந்தா? முதலாளி வர்க்கங்களின் அடித்தளத்திலிருந்தா? சிறுமுதலாளி வர்க்க அறிவுஜீவிகளின் அடித்தளத்திலிருந்தா? இல்லை, இவை எதிலிருந்தும் அல்ல, பரந்துபட்ட தொழிலாளர், விவசாயிகள், படை வீரர்களின் அடித்தளத்திலிருந்தே… …”

அப்படியானால், தராதரம் – பரவலாக்குதல் இரண்டுக்கும் என்ன உறவு? பிரச்சனையை மக்களின் தேவையிலிருந்து பார்க்கலாம். மக்களுக்கு எளிய, தெளிவான படைப்புகள் வேண்டும். எதிரியுடன் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, எதிரிகளால் எழுத்தறிவற்ற கல்வியற்ற மூடர்களாக, அடிமைகளாக நசுக்கப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு போராட உற்சாகம் வேண்டும்; வெற்றி மீது நம்பிக்கை வளர வேண்டும்; எதிரிக்கு எதிராக ஒரே மனத்தோடு, ஒரே சிந்தனையோடு போராடுவதற்காக பரந்த பொது அறிவு அவர்களுக்கு வேண்டும்; பரந்த கலாச்சார அறிவு வேண்டும்; நிறையக் கலை இலக்கியப் படைப்புகள் வேண்டும்.

மாவோவின் சொற்களில் அவர்களுக்கு உடனே தேவை ‘பட்டாடைகளில் அதிக பூ வேலைப்பாடு’ அல்ல; ‘குளிர்காய விறகு’. ஆனால் மக்களுக்கு ஒரே தரத்தில் படைப்புகள் கொடுப்பது சரியா? சரியல்ல; அவர்கள் அடுத்தடுத்த உயர்ந்த தரங்களைக் கோருகிறார்கள்; அவர்களின் மட்டம் உயர்த்தப்பட வேண்டும். தரம் உயர்த்துவதைத் தீர்மானிப்பது பரவலாக்குதலே; அதேசமயம், பரவலாக்குகின்ற வேலைக்கு தரம் வழிகாட்டுகிறது.

சீனப் புரட்சி அனுபவத்திலிருந்து பார்த்தால், நேரடியாகவும் தரமான படைப்புகள் அளிக்கப்பட்டன; மறைமுகமாகவும் அத்தேவைகள் நிறைவேற்றப்பட்டன. அதாவது, மக்களுக்கு உதவி செய்யும், கற்றுக் கொடுக்கும் முன்னணியாளர்களுக்கு தரமான கலை, இலக்கியம் கொடுக்கப்பட்டது; அவர்கள் தங்களின் ஊக்கமான முன்முயற்சியோடு மக்களுக்கு தரத்தை ஊட்டினார்கள்.

கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே
“உண்மையான கலைப்படைப்பு மக்களிடம் உள்ள கலைஞனைத் தட்டி எழுப்புகிறது; அவர்களது உலகக் கண்ணோட்டத்தை மட்டுமல்லாமல், அழகியல் – கலையியல் ரசனைகளையும் அவர்கள் உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது.”

ந்த அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டு தமிழக நிலைமைக்கேற்ப இப்பிரச்சனையை நாம் அணுகுகிறோம். இதற்கான பிரச்சாரக் கருவியாக, ‘புதிய கலாச்சாரம்’ ஏடு வெகு ஜனக் கலாசார ஏடாக நடத்தப்படுகிறது; இது கலை இலக்கிய பண்டிதர்களுக்காக, கலை இலக்கிய ஆய்வுகள் நடத்தும் பத்திரிகை அல்ல; ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்று விடும் நோக்கமுடையதும் அல்ல. இதனாலேயே ‘புதிய கலாச்சாரம்’ ஒரு இலக்கிய ஏடு அல்ல என்று விமர்சிப்பவர்கள் உண்டு; இலக்கிய ஏடு என்றால் ஆழமான விஷயங்களைப் போடவேண்டும் என்கிறார்கள்.

‘புதிய கலாச்சாரம்’ ஏட்டின் வரம்பை அவ்வாறு குறுக்க முடியாது; ஒரு ‘கணையாழி’ பத்திரிகை போல குறைந்த பட்ச வாசகர்களுக்காக நடத்த முடியாது; லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடைவது எப்படி என்றுதான் சிந்திக்க வேண்டுமே தவிர, அவர்களையெல்லாம் தவிர்த்துவிட்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட முடியாது; இப்படிப்பட்ட ‘இலக்கியத் தவம்’ ‘இலக்கியச் சேவை’ தேவைதானா, அவசியம்தானா என்பதை சமூக அக்கறை கொண்ட கலைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

”அதிகமான மக்கள் மந்தைகள்; அது மலிவான கலாச்சாரத்தையே விரும்புகிறது; குறைந்த அளவு மக்கள் மட்டுமே புத்திசாலிகள், அவர்கள் மட்டுமே தரத்தை விரும்புகிறார்கள்” என்ற வாதத்தை அந்தப் புனித, சுத்த இலக்கியவாதிகள் வைக்கிறார்கள்.

மக்கள் மந்தைகள் அல்லர்; முட்டாள்கள் அல்லர்; தரமில்லாத மூடர்கள் அல்லர்; அனைவருக்கும் விளங்கும்படியான எடுத்துக்காட்டாக சந்தைச் சினிமாக்களின் வெற்றி, தோல்வியை அலசிப் பார்க்கலாம்.

மிக மோசமான மசாலா நெடியடிக்கும் சகலகலா வல்லவன், சின்ன தம்பி, சின்ன ஜமீன், அண்ணாமலை போன்ற படங்கள் வெற்றி அடைகின்றன; ஆபாச ஜோக்குகள், ஆபாச காட்சிகள், மசாலாக்கள் இல்லாத ஆனால் இடைத் தரப்படம் (Off-beat) என்று சொல்லப்படும் வீடு, நிர்மால்யம், மாபூமி, அங்குர், நிஷாந்த், அர்த் – சத்யா போன்ற படங்களையும் (இதில் எல்லாப் படங்களின் கருத்துக்களோடு நாம் ஒத்துப் போகாவிட்டாலும்) கனமான கருத்து, வடிவச் சிறப்பு, சொல்லப்படும் முறை போன்ற தரத்துக்காக மக்கள் வரவேற்றுப் பார்க்கிறார்கள்.

மசாலாப்படம் வெற்றிகரமாக ஓடும் போதெல்லாம் “மக்களின் தரம் மோசம், ‘இதுகளை’ மாற்றவோ, திருத்தவோ முடியாது” என்று பலர் சொல்கிறார்கள்; அதே மக்கள் வேறு வகைப் படங்களை வெற்றி பெறச் செய்தால் மக்களிடம் நல்ல கலையைப் புரிந்து கொள்ளும் குணம் இருப்பதாக அதே நபர்கள் சொல்கிறார்கள். இப்படி ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்குத் தாவுகின்ற இவர்களின் விமர்சனப் பார்வையில்தான் கோளாறு இருக்கிறது.

மோசமான படம் வெற்றி அடையும்போது கீழ்த்தரமான கலை வடிவம், கருத்து இரண்டின் ரசனைக்கும், தீனிபோடுவதை நாம் மறுக்கவில்லை; ஆனால் வேறு வகைப் படங்களை அவர்கள் வெற்றி பெற வைக்கும் அதே மக்களிடம் தரத்துக்கான வாய்ப்புகள் உள்ளன; அவர்கள் தங்கள் தரம் வளர வேண்டும், உயர வேண்டும் என்ற தாகத்தோடு, பசியோடுதான் இருக்கிறார்கள். லெனின் மொழியில் சொல்வதானால், “உண்மையான கலைப்படைப்பு மக்களிடம் உள்ள கலைஞனைத் தட்டி எழுப்புகிறது; அவர்களது உலகக் கண்ணோட்டத்தை மட்டுமல்லாமல், அழகியல் – கலையியல் ரசனைகளையும் அவர்கள் உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது“.

mai இவர்கள் கலை மக்களுக்காக அல்ல, கலை கலைக்காகவே என்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். மனிதன் வீட்டைக் கட்டுகிறான்; அது வீட்டுக்காகவே, குடியிருப்பதற்காக அல்ல என்று சொல்லி ஒருவர் மனம் போன போக்கில் கட்டினால் எப்படிப் பயனற்றதாகப் போகுமோ அதுபோலவேதான் கலையும். இதே கூட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் “2000 பிரதிகளுக்குமேல் ஒரு பத்திரிகை நடத்தப்படுமானால் அது இலக்கியப் பத்திரிகையே அல்ல” என்று ஒரு வரம்பையே அறிவித்தார். வரம்புதான் போட்டாரே, எதற்காக 2000 என்றுதான் புரியவில்லை!

இந்த தந்தக் கோபுரவாதிகள் எப்போதுமே கீழே இறங்குவதில்லை; அதனாலேயே அவர்களுக்கு மக்களைப்பற்றித் தெரியாது; மக்களின் சமூக, கலாச்சாரப் பிரச்சனைகள் பற்றித் தெரியாது; மக்கள் என்ன தரத்தை விரும்புகிறார்கள் – அதன் பிரச்சனை என்ன என்றும் அவர்களுக்குப் புரியாது. (சரியாகச் சொல்வதானால், ஆபாச – மசாலாப் படங்களை உயர்ந்த தரத்தில் கொண்டு வருவதையே இவர்கள் விரும்புகிறார்கள்; எதிர்பார்க்கிறார்கள்; அதையே கலைப்படம் என்று போற்றவும் செய்கிறார்கள்.) மக்களைப் பற்றி விமர்சிப்பதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?.

இதற்கு என்ன காரணம்? இவர்கள் தங்கள் தகுதி, மதிப்பு பற்றி எல்லாக் காலத்துக்கும், கேள்விக்கிடமற்ற, நிலையான உறுதியான இடம் என்று ஒன்றை தாங்களே நினைத்துக் கொள்கிறார்கள்; மக்களின் தரம் சிறுமையுடையது என்ற கண்ணோட்டம் நம் நாட்டைப் பொறுத்த அளவில் மேல் வர்க்க, மேட்டுக்குடி, மேல்சாதிக் கண்ணோட்டமே. மற்ற மக்களைத் தரம் தாழ்ந்தவர்கள் என்று கருதுவதால்தான் அவர்களுக்குக் கலைத் தரம் தேவையில்லை, அவர்கள் வெந்ததைத் தின்று வந்ததை வாழ்ந்தால் போதும் என்று இவர்களே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

எனவே, கலைக்கு ஒரு தரம் வேண்டும் என்று மேட்டுக்குடிக் கலைஞர்கள் சொல்வது வேறு; மாவோ சொல்வது வேறு. இரண்டும் எதிர் எதிர்ப் பாதைகள். மக்களின் உணர்வை, ரசனையை உயர்த்த வேண்டும் என்ற அக்கறை சமூக லட்சியம் உள்ளவர்களுக்குத்தான்; இவர்கள் மாவோ சொல்லும் முறையில் சமூகத்தை அறியும் வடிவமாக, யதார்த்தத்தை அளவிடும் கருவியாகக் கலை இலக்கியத்தைக் கருதுகிறார்கள்; இவர்களுக்குத் திட்டவட்டமான லட்சியம் உண்டு; அதனால், யதார்த்தத்தின் துணுக்குகளை, துகள்களை வைத்திருக்கும் எதிர்மறையான சந்தை இலக்கியத்திலிருந்து ஆய்வு செய்து கற்றுக் கொள்கிறார்கள்; அதேபோல, யதார்த்தத்திலிருந்து முற்றிலும் அறுத்துக் கொள்கிற மேட்டுக்குடிக் காரர்களிடமிருந்து இவர்களும் விலகியே நிற்கிறார்கள். இது நியாயம்தானே?

***

சந்தைச் சினிமா இயக்குனர் ஒருவரை எடுத்துக் கொள்வோம். அவர் காமிராவில் கண்ணைப் பொருந்தும் போதே அவரெதிரே பணம் போட்டவரின் கடுகடுவென்ற முகம் தெரிகிறது; படம் கிராமம் அல்லது நகரத்தில் உள்ள குறிப்பிட்ட பிரிவினரை என்ன வேண்டும் என்ற சிந்தனையோடு அவர் இயங்குவதால் எதிரே அவர்கள் முகம் நிழலாகத் தெரிகிறது; இவற்றுக்கு ஏற்பவும், தன் வர்க்க வாழ்க்கையிலிருந்து உருவாக்கிக் கொண்ட கருத்து அல்லது மழுங்கிப்போன முட்டாள்தனம் ஆகியவற்றைக் கலந்தும் அவர் படம் பண்ணுகிறார்; கொஞ்சமாகவோ, கொசுறாகவோ கிராமப்புறத்து அப்பாவிக் கூலியாள், பண்ணையடிமை, ஒடுக்கப்படும் கிராமத்து உழைப்பாளிப் பெண் / குடும்பம், நாட்டுப்புறச் சொலவடைகள், கிராமப் புற விடலைகள், ரவுடிகள், கோமாளிகள், நாடோடிப் பாத்திரங்கள் என்று யதார்த்தத் துணுக்குகள் தலை நீட்டி விடுகின்றன. இது மசாலா சினிமா இயக்குநரின் தொழில்முறை. யாருக்காக என்பதில் அவர்களுக்கு ஒரு கண்ணோட்டம் உள்ளது – இது எதிர்மறை எடுத்துக்காட்டு.

லூசுன்
பேனாவைக் கையில் எடுக்கும்போதெல்லாம் அந்த வேலையில்லா இளைஞனின் முகம் நினைவில் வந்து தனக்குச் சமூகப் பொறுப்பை நினைவூட்டியது என்றார் லூசுன்.

சீனப்புரட்சி எழுத்தாளர் லூசுன் தனது அனுபவமாகச் சொன்னதை உதாரணம் கொடுக்கலாம். கடுமையான அடக்குமுறை நிலவிய காலகட்டத்தில் தன் வீடு தேடி வந்து கதைப் புத்தகம் கேட்டு வாங்க வந்த இளைஞன் தன் இதயத்தின் அருகில் இருந்த உள் பாக்கெட்டில் வியர்வை ஈரத்தில் நனைந்த பணத் தாளை எடுத்துக் கொடுத்ததை நினைவு கூறும் லூசுன், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பேனாவைக் கையில் எடுக்கும்போதெல்லாம் அந்த வேலையில்லா இளைஞனின் முகம் நினைவில் வந்து தனக்குச் சமூகப் பொறுப்பை நினைவூட்டியது என்றார் – இது நேர்மறை எடுத்துக்காட்டு.

யதார்த்தத் துணுக்கு சிதறியிருக்கும் சந்தைக் கலையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள முனையலாம்; யதார்த்தத்தை முழுமையாகக் கொடுக்கும் லூசுன் போன்ற வரை முன்னோடிகளாகவே கொள்ளலாம். அவர்களிடம் யாருக்குப் படைக்கிறோம் என்ற கண்ணோட்டம் இருக்கிறது. முதலாமவருக்கு எதிர்மறைத் தேவை; லூசுனுக்கோ நேர்மறைத் தேவை இருந்தது. இவை தேவையாக இராத மேட்டுக்குடிக் கலைஞர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும்?

மேட்டுக்குடிக் கலைஞர்கள், பல சமூக இயக்கங்களின் கலை, கலாச்சாரப் பங்களிப்பைக் கூட தரம் தாழ்ந்ததென்றே எள்ளி நகையாடுகிறார்கள். அண்மையில் சாகித்திய அகாடமியினர் “அண்ணா எழுதியது இலக்கியமே அல்ல” என்ற முடிவு எடுத்திருக்கிறார்கள்.

தி.மு.க. கலைஞர்கள் மத்தியில் வர்க்க உள்ளடக்கம் காரணமாக, நிலப்பிரபுத்துவ, குட்டி முதலாளித்துவ பிழைப்புவாதக் கண்ணோட்டம் காரணமாக வக்கிர மனோபவம் இருந்தது. இது மறுக்க முடியாத விஷயம். ஆனால் அன்று அவர்கள் பெருவாரியான மக்களைச் சென்றடையும் இலக்கியத்தைப் பற்றிச் சிந்திக்காமல் உயர்ந்த தரம் பற்றி மட்டுமே சிந்திதிருந்தால் பெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்திருக்க முடியாது.

அவர்களின் சீர்திருத்த இயக்கத்தின் பலனை அனுபவித்து கல்வி, அறிவு, கலை நுணுக்கம் பெற்றவர்கள் இன்று பார்ப்பனர்களின் கண்ணோட்டத்துக்குத் தாவிவிட்டார்கள். அவ்வாறு ‘தரமில்லாத’ அந்த இயக்கம் நடந்திராவிடில் இவர்கள் இன்னும் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்!

எனவே, தொகுப்பாக, மக்களைச் சென்றடையும் எந்த ஒரு சரியான கலை இலக்கியமும் தரம் பற்றிய பிரச்சனையில் மாவோ சொல்வதுபோல இயங்கியல் கண்ணோட்டத்தையே வைக்க முடியும். மக்களின் தேவையை ஒட்டியே தரம் வளர்க்கப் பட வேண்டும். ”புரட்சிகரமான உள்ளடக்கம், சாத்தியமான அதி உயர்ந்த அளவு நிறைவடைந்த கலையியல் வடிவம் – இரண்டினது ஒற்றுமையை நாம் கோருகின்றோம்” என்றார், மாவோ தனது உரையில்.

***

யாருக்காக, எப்படி எழுத வேண்டும் என்ற நிலைப்பாடு – கண்ணோட்டம் ஆகிய தெளிவுகள் மக்கள் கலைஞனுக்கு அவசியம் தேவை. அதைப்பற்றி அக்கறை கொள்வதற்கே மார்க்சிய – லெனினியக் கல்வியும், சமுதாயக் கல்வியும் தேவை. இந்த அறிவுத் தேட்டம் இருந்தால்தான் கடந்து போன காலத்திலிருந்து எவற்றைக் கற்பது, எப்படிக் கற்பது என்ற தெளிவு கிடைக்கும்; அதே போல நிகழ் கால கலாச்சாரப் பிரச்சனைகள் மீது சரியான விமர்சனமும் தெளிவாக வைக்க முடியும்.

மேலே பார்த்த விவாதம் சுட்டிக் காட்டும் இன்னொரு சுவாரசியமான விஷயம் சந்தை இலக்கியம், கலை கலைக்காக எனும் உயர்குடி இலக்கியம் இரண்டும் ஆளும் வர்க்க கலையின் இரு தோற்றங்களே; இரண்டு முகங்களே. 99 சதம் மக்களை சந்தை இலக்கியம் என்ற கொக்கியைப் போட்டு இழுத்து மாட்டிவிட்டு, 1 சதம் மக்களுக்கு மட்டும் போலித்தனமான கலைரசனை வித்தை காட்டுகிறார்கள். இந்த சகாப்தத்தின் முத்திரைச் சொல்: “சந்தையே கடவுள்!” இந்தக் கடவுளுக்கே 100 சதம் மக்களும் அடிமை என்று சந்தை விளம்பரம் கதறுகிறது.

இந்த சந்தைக் கலாச்சாரத்திலிருந்து உடனே மக்களைக் காப்பாற்றியாக வேண்டும். அரூபமான, காலங்கடந்த, ‘காலத்தால் வெல்ல முடியாத’, அழிவற்ற, நிரந்தரமான அரசியல் மதிப்பீடுகளை வைத்து அவற்றை நாம் முறியடிக்க முடியுமா? முடியாது. அதை வீழ்த்தாமல் நல்ல புதிய அழகியல் ரசனையை உருவாக்கி வளர்ப்பது சாத்தியமில்லை; அதை வீழ்த்தவில்லை எனில், கலைக்கே வழியில்லை; கலை அழிந்து போகும். கலை இருந்தால்தானே தரத்தைப் பற்றியும், தரத்தை உயர்த்துவதைப்பற்றியும் பேச முடியும். புரட்சிக் கலாச்சார இயக்கம் அதற்கு என்ன வேலைகள் செய்ய வேண்டும்?

இந்திய, தமிழ்ச் சூழலில் இன்று மேல் வர்க்க, மேல்சாதி மனோபாவமே சந்தைக் கலாச்சாரத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது. இந்த மனோபாவத்தை வெட்டி வீழ்த்த என்ன வேலைகள் செய்ய வேண்டும்?

– இராசவேல்
_____________________________
புதிய கலாச்சாரம் ஜனவரி 1994
_____________________________

அரசுப் பள்ளிகளை பாதுகாக்க HRPC போராட்டம் !

6

தமிழக அரசே !

  • அரசுப் பள்ளிகள் அனைத்திலும் போதிய ஆசிரியர்களைப் போர்க்கால அடிப்படையில் உடனே பணியமர்த்து!
  • மாணவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை, சமையலறை வசதிகளை வழங்காத அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடு !
  • பள்ளிகளில் விளையாட்டு மைதானம், போதிய வகுப்பறை, நூலக வசதி ஆகியவற்றை அலட்சியப்படுத்தும் அதிகாரிகளை சஸ்பென்ட் செய்!

பெற்றோர்களே!

  • நமது சங்கத்தில் உறுப்பினர்களாக சேருங்கள்!
  • அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் முழுமையாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க பெற்றோர்களாகிய நமக்கு உரிமை உண்டு.
  • வாத்தியார் இல்லா வகுப்பறை! மரத்தடியில் மாணவர்கள்!! அழியும் அரசுப் பள்ளிகள் !!!
  • உன் பிள்ளைக்கு நீ போராடாமல் யார் போராடுவார்கள்.

விருத்தாசலத்தில் ஆகஸ்ட் 15 – பேரணி – மறியல்
மாணவர்களின் எதிர்காலம் காக்க பெற்றோர்களே அணி திரள்வீர்!

ன்பார்ந்த பெற்றோர்களே வணக்கம் !

வாத்தியார் இல்லாத வகுப்பறை, மரத்தடியில் மாணவர்கள், மதிய உணவில் பல்லி, அழுகிய முட்டையால் வாந்தி மயக்கம், கழிப்பறை இல்லை, சுகாதாரமான குடிநீர் இல்லை என்ற செய்திகள் அரசுப்பள்ளிகளைப் பற்றி தினமும் வந்து கொண்டே இருக்கின்றன.

உங்கள் பிள்ளைகளிடம் “இன்று பள்ளியில் என்ன கற்றுக் கொண்டாய்? ஆசிரியர் நடத்திய பாடம் உனக்குப் புரிந்ததா? என கேட்டீர்களா?” உங்கள் பிள்ளை படிக்கும் பள்ளியில் போதிய ஆசிரியர் இருக்கின்றாரா? விளையாட்டு வாத்தியார் இருக்கிறாரா? நூலகம் இருக்கிறதா? வகுப்பறை இருக்கிறதா? என்று என்றைக்காவது சென்று பார்த்திருப்பீர்களா? உங்கள் பிள்ளைகள் பெயிலானதற்கு, மார்க் அதிகம் எடுக்காததற்கு அவர்கள் மட்டுமே காரணம் அல்ல, தரமான கல்வி கற்பிக்கப்படுவதில்லை. நம் ஊரிலேயே பல பள்ளிகளில் போதிய வகுப்பறை, ஆசிரியர்கள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
aug-15 poster -final
அரசின் தனியார்மயக் கொள்கையாலும், தனியார் பள்ளிகள் தரமானது என்ற கவர்ச்சி விளம்பரத்தாலும், கட்டண கொள்ளையடிக்கவும், பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு நிர்ப்பந்தமாக தள்ளப்படுகின்றனர். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றி பல பள்ளிகளில் சிறந்த மாணவர் தேர்ச்சியை காட்டி வருகின்றனர். தகுதியானர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் காலி ஏன்?

தமிழகத்தில் எண்பது சதவீத மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் பெருமளவில் மாணவர்கள் பெயிலானால் ஆசிரியர்கள் மீதும், கண்காணிக்காத அதிகாரிகள் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. சாதி பாகுபாடில்லாமல், ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல், அனைவரும் சமமாக கூடும் ஒரே இடம் பள்ளிக் கூடம் மட்டுமே. 5,000 ரூபாய்க்கு ஒரு பள்ளி 50,000 ரூபாய்க்கு ஒரு பள்ளி என மாணவர்களை கூறு போட்டால் சமூகம் எப்படி சமத்துவத்தறிற்கு செல்லும்.

தமிழகத்தில் 16,421 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள், 2,253 பள்ளிகளில் ஒரு ஆசிரியம் மட்டுமே கொண்டு இயங்குகின்றன. ஏறத்தாழ நான்கரை லட்சம் மாணவர்கள் 100 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என படிக்கின்றனர். இச்சூழலில் எப்படி மாணவர்கள் தரமான கல்வி கற்க முடியும்? நம் கண்முன்னே நம் பிள்ளைகளில் எதிர்காலம் சரிந்து விழுவதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்?

மாணவர்கள் இன்று தக்கை மனிதர்களாக வளருகின்றனர். தன்னம்பிக்கை, ஒழுக்கம், நேர்மை, சிந்திக்கும் ஆற்றல், சமூக பொறுப்புணர்வு, வாதிடும் திறமையை, ஜனநாயகத்தை, நாட்டுப் பற்றை போதிக்கும் தரமான கல்வியை அரசு பள்ளிகளால் மட்டுமே வழங்க முடியும். அத்தகைய கல்வி முறைக்காக நாம் போராட வேண்டும்.

இன்று உயர் பதவிகளில் இருக்கும் தலைமை நீதிபதி, விஞ்ஞானிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உட்பட பலரும் அரசுப் பள்ளிகளில் படிதவர்களே. காசு உள்ளவனுக்குத்தான் கல்வி, மருத்துவம், குடிநீர், மின்சாரம் எல்லாம் என்றால் ஆகஸ்ட் 15 சுதந்திரத்தால் நாம் அடைந்த பயன் என்ன? இயற்கை வளங்கள் அனைத்தையும், தாய்க்குச் சமமான தண்ணீரையும் பன்னாட்டு கம்பெனிக்கு விற்பதுதான் அரசின் கொள்கை என்றால் ஆகஸ்ட் 15 அர்த்தம் என்ன?

அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவதன் மூலம்தான் நல்ல மாணவர்களை உருவாக்க முடியும். அவர்கள்தான் இந்நாட்டின் உண்மையான சுதந்திரத்திற்காக போராடுவார்கள்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்

702/5 ஜங்சன் ரோடு, விருத்தாசலம், கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு 9345067646

பெறுதல்
அரசு செயலாளர் அவர்கள்,
பள்ளிக் கல்வித் துறை,
தலைமைச் செயலகம்,
செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
சென்னை.

பொருள்
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் போதிய ஆசிரியர்களை பணியமர்த்துதல் – மாணவர்களுக்கு பாதுகாப்பான, குடிநீர்-கழிப்பறை-சமையலறை வழங்குதல்

அய்யா வணக்கம்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் கடந்த பல ஆண்டுகளாக மாணவர்களின் கல்வித்தரம் வெகுவாக பாழடைந்து வருகிறது. தரமான கல்வி வழங்குவதை அதிகாரிகளும் கண்காணித்து உத்திரவாதப்படுத்த தவறுகின்றனர். இதனால் பல மடங்கு கல்வி கட்டணத்தில் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு போக நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

2012-2013 ஆன் ஆண்டுக்கான மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி 16 பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. 2,253 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர்தான். 16,421 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணி புரிகின்றனர். மேலும் நூறு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையில் நான்கரை லட்சம் மாணவர்கள் கல்வி பயிலும் அவலமான சூழலில் அரசு பள்ளி மாணவர்கள் உள்ளனர்.

போதிய வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் கல்வி பயிலுதல், பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை இல்லை. மதிய உணவில் பல்லி, அழுகிய முட்டை, வாந்தி, மயக்கம் என நாள் தோறும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. பல பள்ளிகளில் ஆசிரியர்களும் எதிர்காலத் தலைமுறையை உருவாக்குகிறோம் என்ற பொறுப்புணர்வு இன்றி மாணவர்களுக்கு ஏனோ தானோ என கல்வி கற்பிக்கின்றனர். தேர்ச்சி விகிதம் படு மோசமாவதற்கும், தேர்ச்சி அடைந்த மாணவர்களும் குறைந்த மதிப்பெண் பெற்று மேல்நிலைக் கல்வி தொடர முடியாமல் இடையிலேயே கல்வியிலிருந்து நிறுத்தப்படும் அவலமும் தொடர்கிறது.

அரசுப் பள்ளியின் இத்தகைய நிலையால் கிராமப் புற பெற்றோர்கள் தரமானது என புற்றீசல்களாக ஆங்கிலவழி தனியார் பள்ளிகளை சென்றடைகின்றனர். அத்தகைய மாணவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாமல் தமிழும் தெரியாமல் கற்பித்தல், ஜனநாயகம் என்ற சிந்தனை மாணவர்களிடமிருந்து உருவப்பட்டு பிராய்லர் கறிக்கோழிகளாக மாற்றப்படுகின்றனர். மாணவர்களை சுய சிந்தனை, முழுமையான ஆற்றல் இல்லாமல் உதிரிகளாக மாற்றும் தனியார்மயக் கல்வி புற்று நோயாக எதிர்கால மனித வளத்தை அரித்து வருகிறது. இதே நிலை இன்னும் சில ஆண்டுகள் நீடித்தால், அரசு பள்ளிகள் அனைத்தும் மாணவர்கள் இல்லை என்று மூடப்படுவதும், கடன் சுமையால் விவசாயிகள் போல கல்வி கட்டணச் சுமையால் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும்.

எனவே அரசுப் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதை அரசு உத்திரவாதப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  1. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதித்தில் போதிய ஆசிரியர்களை நியமித்தல்
  2. போதுமான வகுப்பறைகள்
  3. சுகாதாரமான குடிநீர்
  4. போதிய கழிப்பறை வசதிகள்
  5. விளையாட்டு மைதானம்
  6. பாதுகாப்பான சமையலறை
  7. நூலக வசதி
  8. கற்றல், கற்பித்தல் சரியாக நடைபெறுகிறதா என்பதை மாதம் தோறும் கண்காணிக்க போதுமான கல்வி அதிகாரிகளை நியமித்தல்

போன்றவைகள் தரமான கல்வி கற்க அடிப்படையானவைகள்.

மாணவர்களின் கல்வி உரிமை என்பது வாழ்வுரிமையின் அங்கமாகும். அரசுப் பள்ளிகளில் இவற்றை தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள், மாணவர்களிடம் கையொப்பம் பெற்று இந்த கோரிக்கை மனுவை சமர்ப்பிக்கின்றோம். நன்றி.

தகவல்

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கம்
விருத்தாசலம். பேச : 9345067646, 9345180948

மாநகராட்சி ஆணையரை பணிய வைத்த ஆட்டோ ஓட்டுனர் சங்கம் !

9

திருச்சி மாநகராட்சி ஆணையரின் திமிரான போக்குக்கு ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கத்தினரின் பதிலடி !

திருச்சியில் கடந்த 20.07.2013 அன்று காலை 11 மணி அளவில் இப்ராகிம்பார்க் தேவர் ஹாலில் அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களையும் வரவழைத்து மைக்கை பிடித்த ஆணையர், மேடையில் அனைத்து அதிகாரிகள் இருந்தும் யாரையும் சட்டை செய்யாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருந்தார்.

posterஅவர் பேசுகையில் எந்த நோக்கத்திற்காக அத்தனை ஓட்டுனர்களும் வந்திருந்தார்களோ, அதற்கு மாறாக, அவர்கள் தலையில் இடியை இறக்கியதைப்போல எந்த ஆட்டோ ஸ்டாண்டுகளுக்கும் அங்கீகாரம் என்பதே கிடையாது என்று கூறி எல்லா ஸ்டாண்டுகளையும் கலைக்கப் போவதாக அறிவித்தார்.

இது “ஏம்பா, எல்லோரும் கோவணத்துடன் நிக்கிறீங்க எல்லோருக்கும் வேட்டி தரேன்” என்று சொல்லி அழைத்து ஒட்டு மொத்தமாக இருக்கிற கோவணத்தையும் உருவியதைப்போல இருந்தது. “ஸ்டாண்டுகள் இல்லாமல், தொழிற்சங்கம் இல்லாமல், கட்சி இல்லாமல், கொடி இல்லாமல், போர்டு இல்லாமல், என்னுடைய கட்டுப்பாட்டில் நான்கு கோட்டமாகப் பிரித்து அதில் உங்களை சேர்ப்பேன். நீங்கள் இதுவரை தொழில் செய்த இடம் எதுவாக இருந்தாலும் உங்களுக்கு ரேசன் கார்டு எந்த லிமிட்டில் வருகிறதோ அங்குதான் நீங்கள் வண்டி ஓட்ட முடியும்” என்று சர்வாதிகாரமாக அறிவித்தார்.

அதைக் கேட்டவுடன் பழைய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அதிர்ச்சி, ஸ்டாண்டு இல்லாத புது ஆட்டோ ஓட்டுனர்களுக்கோ ஓரே ஆனந்தம். கைத்தட்டல்களும், விசில்களும் பறந்ததை ஆணையர் கள்ளு குடித்த குரங்காக ஏற்றுக்கொண்டார். இத்தனை ஆட்டோ ஓட்டுனர்களையும் ஒன்று திரட்டிய பெருமை என்னைத்தான் சாரும் என்றும் மார் தட்டிக் கொண்டார். எல்லா ஸ்டாண்டுகளுக்கும் அனுமதி கிடைக்கும் என்று நம்பி வந்த கூட்டம், புது ஸ்டாண்டுகளை ஏற்படுத்தி தருவார் என்று வந்த ஸ்டாண்ட் இல்லாத ஓட்டுனர்கள் கூட்டம் என்பது புரியாமல் பெருமையுடன் பீற்றிக்கொண்டார் ஆணையர். மேலும் அவர் பேசுகையில், “திருச்சியின் 80% இடங்கள் என்னுடைய கையிலும் 20% இடங்களில் நானாக பார்த்து உங்களுக்கு ஸ்டாண்ட் போடும் உரிமையை கொடுக்கிறேன். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வண்டி ஓட்டிக் கொள்ளலாம்” என்று புது ஓட்டுனர்களுக்கும் பழைய ஓட்டுனர்களுக்கும் சண்டை மூட்டுவது போல் பேசிவிட்டு, ஐந்து நபர்களை மட்டும் கருத்து தெரிவிக்குமாறு முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட நபர்களிடம் கூறினார்.

உடனே ஐந்து பேர் முன்வரிசையில் இருந்து எழுந்து போகும் போது, எமது சங்கத்தின் பொதுச் செயலாளர் மணலி தாஸ் எழுந்து மேடைக்கு சென்றார். மற்றவர்களெல்லாம் திட்டமிட்படி ஆணையரை தேனே! மானே! என்று புகழ்ந்தபோது உச்சி குளிர்ந்த ஆணையர் எமது தோழர் பேசும்போது, “அடிப்படை தேவையான பழைய ஸ்டாண்டுகளுக்கு அங்கீகாரமும், புது ஓட்டுனர்களுக்கு புது ஸ்டாண்டுகளையும் வழங்கினாலே போதும். அதை விட்டு விட்டு ஸ்டாண்டுகளே இல்லை என்று ஸ்டாண்டுகளை கலைக்கும் முயற்சி என்பது கூடாது. மேலும் நிலையில்லாத பெட்ரோல் விலை உயர்வுக்கு நடுவில் நீங்கள் அறிவிக்கும் முறை சாத்தியமில்லை” என்று பேசிய போது உடனே ஆணையர் மேடையில் இருந்து எழுந்து இப்படியெல்லாம் பேசக் கூடாது என்று மைக்கை பிடுங்கினார். அவரிடம் தோழர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.

bannerஉடனே ஆணையர் மைக்கை பிடுங்கி, இத்துடன் இந்த கூட்டம் முடிந்ததாக அறிவித்தார். அறிவித்தவுடன் கூட்டம் கலைகிறது. தோழரும் மற்ற நிர்வாகிகளும் வெளியில் வந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் உங்கள் ஆணையரின் அதிகார போதைக்கு துணை போகாதீர்கள் என்று கடுமையாக வாதிட்டார்கள். பிறகு மற்ற நிர்வாகிகளை ஒருங்கிணைத்து ஆணையரை கண்டித்து, ஆணையரின் அதிகார போதையை தெளிய வைப்பேன் என்று கூறினார்.

அதன்படி போஸ்டர் அடித்து அனைத்து ஆட்டோக்களில் ஒட்டுவதும், சங்க பாகுபாடு இல்லாமல் திருச்சியின் அனைத்து ஆட்டோக்களுக்கும் துண்டு பிரசுரம் வினியோகமும் நிர்வாகிகள் மூலம் செய்யப்பட்டன. அதன் விளைவாக இந்த பிரச்சினை குறித்து ஓட்டுனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், தாக்கமும் ஏற்பட்டது. இந்த விஷயத்தில் மற்ற தொழிற்சங்கங்கள் எல்லாம், மாவட்டத்தை கேட்க வேண்டும், மாநிலத்தை கேட்க வேண்டும் என்று ஒதுங்கிக் கொண்டன.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுகொடுக்க வருமாறு அனைத்து ஸ்டாண்டுகளுக்கும் மீண்டும் பிரசுரம் மூலம் அழைத்ததன் பேரில் பெருவாரியான ஓட்டுனர்கள் கலந்து கொண்டு, ப்ளக்ஸ் பேனர், கொடி (பு.ஜ.தொ.மு கொடி) பிடித்துக் கொண்டு முழக்கமிட்டு காவல்துறை அதிகாரிகளின் தடுப்பையும் மீறி ஆட்சியர் அலுவலத்துக்குள் சென்று மனு கொடுத்த போது, ஆணையரின் தன்னிச்சையான போக்கை, ஏற்றுக் கொள்ள முடியாது என்று வாதிட்டோம்.

பிறகு, ஆட்சியர் சம்பந்தப்பட்ட ஆணையரை அழைத்த போது அவருக்கு பதில், ஒரு பெண் அதிகாரி வந்தார். அவரிடம், “உங்கள் ஆணையர் செய்வது சரியல்ல, உடனடியாக சம்பந்தப்பட்ட அனைத்து தொழிற்சங்க தலைவர்களையும் அழைத்துப் பேசி ஒரு சுமுகமான தீர்வு காண வேண்டும்” என்று உத்தரவிட்டார். பிறகு அவர் அளித்த உத்திரவாதத்தையே போஸ்டராக அடித்து அனைத்து ஆட்டோக்களிலும் ஒட்டப்பட்டது.

இது, நமது சங்க உறுப்பினர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து ஓட்டுனர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நடவடிக்கையின் மூலம் தொழிற்சங்க உரிமைகளை பெற வேண்டுமென்றால் புரட்சிகர தொழிற்சங்கத்தின் அணுகுமுறைதான் பலன் தரும் என்பதை மாற்று சங்க உறுப்பினர்களும் புரிந்து கொண்டார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்.]

மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சமர்ப்பித்த மனு

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கம், திருச்சி
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.

அடைதல்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

அம்மையீர்,

பொருள் : ஆட்டோக்களை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் சங்கங்களின் கருத்தைக் கேட்காமல், இருக்கின்ற முறைகளை குலைத்து சீர்குலைவை உருவாக்கும் படி புதிய முறைகளைப் புகுத்தப் போவதாக அறிவித்த மாநகராட்சி ஆணையரின் தன்னிச்சைப் போக்கான உத்தரவை தடுத்து நிறுத்தக் கோருவது – நியாயமான கட்டணத்துடன் மீட்டர் முறையை அமுல் படுத்தக் கோருவது – தொடர்பாக.

கடந்த 20-ம் தேதி பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டு ஆட்டோ ஓட்டுனர்களுக்கான கருத்துக் கேட்பு கூட்டம் ஒன்றை மாநகராட்சி ஆணையர் கூட்டினார். ஆட்டோ ஓட்டுனர்களின் நிறுத்தங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது, கடைவீதி உள்ளிட்ட ஆட்டோ நிறுத்தமில்லாத பகுதிகளில் நிறுத்தம் வழங்குதல் என்ற அறிவிப்பின் படி பெருத்த எதிர்பார்ப்புடன் 500-க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் அரங்கில் குவிந்தனர். ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பையும் தவிடுபொடியாக்கி, சோர்வும் எரிச்சலும் அடைச் செய்தது ஆணையரின் பேச்சு. ஏற்கனவே இருக்கிற நிறுத்தங்கள் அனைத்துக்குமான அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். ஆண்டாண்டு காலமாக தாங்கள் நடைமுறை அனுபவத்தில் உருவாக்கிய ஸ்டேண்டு முறை, அதில் வரிசைக் கிரமமாக சவாரி எடுக்கும் ஒழுங்கு, ஒரு ஆட்டோ ஸ்டேண்டு அருகில் மற்றொரு ஓட்டுனர் சவாரி எடுக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு ஆகிய அனைத்தையும் அனுமதிக்கப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்தார். ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இனி சங்கமெல்லாம் கூடாது என்றும், தான் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு, எந்த ஓட்டுனர் எங்கே ஓட்ட வேண்டும் என்று தான் அறிவிக்கும் இடத்தில் போய் ஓட்ட வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

இப்படி உத்தரவுகளை பிறப்பித்த பின் ஏற்கனவே பேசி வைத்து ஜால்ரா போடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட 4 பேரிடம் மட்டும் ‘கருத்து’ கேட்டு விட்டு அடுத்து வந்த ஆட்டோ ஓட்டுனரும் எமது சங்கப் பொதுச் செயாலளருமான தோழர் மணலிதாசை பேச விடாமல் தடுத்ததுடன் அவரிடம் இருந்து மைக்கைப் பிடுங்கிக் கொண்டு, கூட்டம் அத்துடன் முடிந்ததா அறிவித்தார். இப்படி கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்தியதை ஜனநாயகம் என்றோ நாகரீகமான செயல் என்றோ யாரும் கூற முடியாது.

நகரத்தின் விரிவாக்கம், ஆட்டோ ஓட்டுனர்களின் எண்ணிக்கை உயர்வு ஆகியவற்றுக்கேற்ப புதிய இடங்களில் ஸ்டேண்டுகளை உருவாக்கி புதிதாக வரும் ஓட்டுனர்களுக்கு வழி செய்து தராமல், காலம் காலமாக ஒரு முறையை உருவாக்கி வைத்து அன்றாடம் பிழைப்பை நடத்தி வரும் சாதாரண ஓட்டுனர்களின் பிழைப்பில் கை வைப்பதுடன், புதிய ஓட்டுனர்களை பழைய ஓட்டுனர்களுக்கெதிராக மோத விடும் இந்த முயற்சி ஒரு பொறுப்புள்ள அதிகாரிக்கு அழகானதல்ல என்று கருதுகிறோம். இது ஆட்டோ தொழிலில் ஒரு ஒழுங்கின்மையையும், கலவர சூழலையும் உருவாக்கத்தான் உதவும் என்று கருதுகிறோம்.

எனவே, மாநகராட்சி ஆணையரின் மேற்கூறிய ஜனநாயக விரோத முடிவையும் அது தொடர்பான மற்ற நடைமுறைகளையும் உடனே நிறுத்தி வைக்கக் கோருகிறோம்.

பொது மக்களுக்கான பொது போக்குவரத்து என்ற வகையில், இருக்கின்ற அனைத்து ஆட்டோ நிறுத்தங்களுக்கும் அங்கீகாரம் வழங்குமாறும் (கடைவீதிகள் உள்ளிட்டு) காலத்திற்கேற்ப புதிய இடங்களில் ஆட்டோக்கள் நிறுத்த இடம் ஒதுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

சென்னை போன்றல்லாத் சின்னஞ்சிறிய திருச்சி மாநகராட்சியில், ஆணையரின் கணக்குப்படிய 3,200 ஆட்டோக்கள் என்பது அதிகப்படியானது. இத்தனை ஆட்டோக்களும் தினசரி ரூ 400, 500-க்கு வண்டி ஓட்டினால்தான் வண்டி வாடகை (அ) வங்கித் தவணை, எரிபொருள் செலவு போக வீட்டிற்கு ஏதோ கொஞ்சம் கொண்டு போக முடியும் என்பது தாங்கள் உணர முடியாததல்ல. இந்த நிலைழில், இப்போதிருக்கும் ஸ்டேண்டு முறையில் 10 சவாரியாவது எடுத்தாக வேண்டும். 10 வண்டி உள்ள ஒரு ஸ்டேண்டில் ஒரு சவாரி எடுத்த பின் மீண்டும் அடுத்த சவாரி எடுக்க 2 மணி நேரமாவது காத்திருக்க வேண்டியுள்ளது. ஒரு நாளில் 12 மணி நேரம் ஓட்டினால் கூட 10 சவாரி எடுக்க முடிவதில்லை. எனவே, ஆட்டோ ஓட்டுனர்களும், பொது மக்களும் விரும்பும் மீட்டர் முறையை அமுல்படுத்த ஆவன செய்ய ஓட்டுனர்களையும் அதன் சங்கங்களையும் கூட்டி ஆலோசனை கலந்து முடிவு செய்ய வேண்டும் என்றும் அடிக்கடி உயரும் பெட்ரோல், எரிவாயு விலை மற்றும் விலைவாசி உயர்வுக்கேற்ப கட்டணத்தை உயர்த்துவதற்கேற்ப ஒரு கட்டண நிர்ணய முறையை உருவாக்க வேண்டுமாயும் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

இப்படிக்கு,
மணலிதாஸ்,
ஆ.ஓ.பா.ச. பொதுச் செயலாளர்,
திருச்சி.

பத்திரிகைச் செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
பு.ஜ.தொ.மு., திருச்சி.

அறம் தின்ற ஜெயமோகன் !

56

“கலிகாலம் முத்திடுச்சி. பசங்க எல்லாம் பெரியவங்க சொன்னா கேட்கறதில்ல. அது அது ஜீன்ஸ் பேன்டும், டி-ஷர்ட்டும் போட்டுக்குதுங்க, ராத்திரி எல்லாம் பார்ட்டின்னு கும்மாளம் அடிக்குதுங்க, வெளிநாட்டு பண்டமா தின்னாத்தான் செரிக்கும்னு அலையுதுங்க. பெரியவங்களுக்கு மரியாதையே இல்ல. எப்ப பார்த்தாலும் பேஸ்புக்லையே விழுந்து கிடக்கிறாங்க. சீரியசா வாசிப்பே இல்லாம ஆகிட்டிருக்கு. தமிழ் இலக்கியம் தொடருமா என்ற அச்சமாயிருக்கிறது.”

அறம் - ஜெயமோகன்இப்படி எல்லாம் உலகம் ‘சீரழிந்து’ கொண்டிருந்தாலும், யுக யுகமாக உலகைத் தாங்கிப் பிடித்து நிற்கும் ஒரு விழுமியம் இருக்கிறது. அதுதான் அறம்.

தொலைக்காட்சியின் விளம்பர விளக்கு வெளிச்சங்களுக்கு அப்பால், பத்திரிகைச் செய்திகளின் பரபரப்பை தொட்டு விடாத மூலைகளில், சிறு கிராமங்களின் கால் படாத பசுமை வெளிகளில், நகர காங்கிரீட் காடுகளின் நிழல் தொடாத விழுதுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில அபூர்வ மனிதர்கள் பலர் அறத்தின் இலக்கணமாக வாழ்கிறார்கள். அதுதான் இந்த உலகை பெரிய பிரச்சினைகள் இன்றி சுமூகமாக இயக்கிக் கொண்டிருக்கிறது. உன்னத இலக்கியங்களை படைக்கவும் வைக்கிறது. சலிப்புறும் மனித குலத்தை தட்டிக் கொடுத்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த சமாச்சாரத்தை சமஸ்கிருதத்தில் தருமம் என்று சொல்கிறார்கள். சமஸ்கிருத அறிவில் கூட ஷத்திரிய தருமம், பிராமண தருமம், வைஸ்ய தருமம், சூத்திர தருமம் என்று குலத்துக்கு ஏற்ப தருமம் வேறுபடுகிறது. ஆனால், தமிழில் பயன்படுத்தப்படும் அறம் என்ற சொல்லுக்கு ஒரு பொருள்தான் உண்டு என்பதோடு அதன் பொருள் விளக்கமும் மிக மிக ஆழமானது. காலத்தைத் தாண்டி, இடங்களைத் தாண்டி மனித உள்ளங்களில் மின்சாரமில்லாமல் ஒளிரும் உள்ளொளி அது. அந்த உள்ளொளிதான் பில்கேட்சை தூண்டி விட்டு மைக்ரோ சாப்ட் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை நிறுவ வைத்திருக்கிறது. ஜெயமோகனைப் போன்றோரை எழுத வைத்திருக்கிறது.

மனித குலத்தின் இலட்சியமனைத்தையும் அந்த இலட்சியவாதத்திற்காக செய்யப்படும் தியாகத்தையும், அத்தகைய தியாகத்தை பொருள் கூறி புகழ் பாடுவதும் என அறத்தின் விளக்கம் விரிந்து சென்று கொண்டே இருக்கும்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்று தவறு செய்யும் ஆட்சியாளர்களை கொன்று போடும் வல்லமை உடையது என்று சிலப்பதிகாரத்தில் அறம் போற்றப்படுகிறது. திருவள்ளுவர் முப்பால்களில் முதல் பாலாக அறத்துப் பாலை வைத்தார். அறம் பாடுவது தமிழ் புலவர்களின் வலிமையான ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அறிவை இழிவு படுத்தும் எவரையும் அறம் பாடி ஒழிக்கும் வல்லமையை தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் கைகளில் வைத்திருந்தார்கள்.

இப்படிப்பட்ட அறத்தை ஒவ்வொரு கால கட்டத்திலும் இலக்கிய மேதைகள் அடையாளம் கண்டு சமூகத்துக்கு அறியத் தருகிறார்கள். அந்த வரிசையில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு சமகால இலக்கிய ஆளுமையான ஜெயமோகன், அறம் என்ற பெயர் சூட்டபட்ட வரிசையில் சில சிறுகதைகள் எழுதினார். அந்தக் கதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாகவும் வெளி வந்தன. அவரது வாசகரிடையே அக்கதைகள் பெருத்த வரவேற்பை பெறுவதற்கு அறம் குறித்த மானுடத்தின் தொன்ம தொடர்ச்சியே காரணம் என்றாலும் அந்தத் தொடர்ச்சியை கதறக் கதற பிடித்து வந்து அடையாளம் காட்டிய ஜெயமோகனது மேதைமை சாதாரணமான ஒன்றல்ல.

அப்போது நாங்களும் கூட அறம் சிறுகதைகளை படித்து மதிப்புரை ஒன்றை எழுதுவது என்று முடிவு செய்து விவாத அமர்வுகளை நடத்தினோம். இரண்டு அமர்வுகளாக பல மணி நேரம் நீடித்த அந்த விவாதங்களை தொகுத்து கட்டுரையாக எழுத வேண்டும் என்று தீர்மானித்திருந்தோம். அது தொடர்பான குறிப்புகள் சில ஆயிரம் சொற்களுக்கு நீண்டிருந்தன. என்ன இருந்தாலும் அறம் அல்லவா? ஒரு குறுகிய நேரத்தில், குறு வடிவில் அறம் குறித்து ‘விவாதி’க்க முடியாது என்பது எங்களது அனுபவம். பல்வேறு வேலைகளுக்கு நடுவில் அறம் சிறுகதைகள் பற்றி எழுத வேண்டிய கனமான வேலைக்கு போதுமான நேரம் ஒதுக்க முடியாமல் பொருத்தமான ஒரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி அந்த குறிப்புகள் சேமிப்பில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

ஆனாலும் எங்களது நேரப்பற்றாக்குறையை கண்டு இறங்கிய விஷ்ணுபுரத்து தேவதை ஒன்று, “தம்பி வினவு இனி அறம் கதைகள் குறித்து எழுதும் தேவையிருக்காது, அறம் கொல்லப்பட்டு விட்டது, படித்தாயா அந்த செய்தியை” என்று எழுப்பியது.

எழுத்தாளர் ஜெயமோகனது அறம் சிறுகதை தொகுப்புக்கு பாரி வேந்தர் பச்சமுத்துவின் எஸ்ஆர்எம் பல்கலை அறக்கட்டளை வழங்கும் தமிழ்ப்பேராய விருது அளிக்கப்பட்ட தகவல்தான் மேற்கண்ட தேவதையின் செய்தி. இந்த விருது ஒன்றரை லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது என்று ஜெயமோகன் தளத்தில் வெளியான சந்தோஷக் குறிப்பு தெரிவிக்கிறது. அறம் குறித்து அவரது தளத்தில் வெளியான பாராட்டுக்களில் இதுதான் இலட்சியவாதத்தை பாராட்டிய இலட்சம் என்பது முக்கியமானது.

இப்படி அறத்தை விருது கொடுத்து பாராட்டும் அந்த பெருந்தகை குறித்தும் நாம் பேச வேண்டுமல்லவா! எனினும் பாரிவேந்தர் பச்சமுத்துவின் அருமை, பெருமைகளை நாம் பெரிதாக விவரிக்க வேண்டியதில்லை. கல்வி, பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, மருத்துவமனை, போக்குவரத்து என்று பல்வேறு துறைகளிலும் தனது கறை படிந்த வியாபார கரங்களை பரப்பி நிற்கிறது எஸ்ஆர்எம் குழுமம். அதன் ‘பேரும் புகழும்‘ வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவையே.

ஜெயமோகன், பச்சமுத்துஅந்தக் குழுமத்தின் ஒரு பகுதியாக தமிழ்ப் பேராய விருது என்பது நடைமுறையில் இருப்பதும் சமகால தமிழ் இலக்கியத்தின் சாதனைகளை அங்கீகரிப்பது அதன் பணியாக இருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லைதான். எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் முனைவர் த. இரா. பச்சமுத்து தமிழ்ப்பேராயத்தின் புரவலராகவும், அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு. பொன்னவைக்கோ தலைவராகவும் உள்ளார் என்று தமிழ்ப் பேராயத்தைப் பற்றிய விக்கிபீடியா குறிப்பு தெரிவிக்கிறது. அதாவது அண்ணல் பச்சமுத்து அவர்கள் தமிழ்ப் பேராய நடவடிக்கைகளில் நேரடியாக ஆர்வம் காட்டுகிறார்.

தலா ஒன்றரை லட்சம் ரூபாய் வெகுமதியுடன் புதுமைப் பித்தன் பெயரில் படைப்பிலக்கிய விருது, பாரதியார் பெயரில் கவிதை விருது, அழ வள்ளியப்பா பெயரில் குழந்தை இலக்கிய விருது என்ற வரிசையின் உச்சமாக, இறுதியாக 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பச்சமுத்து பைந்தமிழ் விருதும் வழங்கப்படுகிறது. ஆக, ஆண்டுக்கு மொத்தம் ரூ 20.5 லட்சம் முதலீட்டில் இலக்கியப் பணி செய்து வருகிறார் வள்ளல் பச்சமுத்து.

எதற்கு எடிட்டிங்? விருது குறித்த செய்தியை  முழுமையாகவே தருகிறோம்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தமிழ்ப் பேராயம் சார்பில் வழங்கப்படும் “பாரிவேந்தர் பைந்தமிழ்’ விருதுக்கு தமிழறிஞர் தமிழண்ணல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்துவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 24-ல் நடைபெறும் விழாவில், தமிழ் பேரறிஞரும், வாழ்நாள் சாதனையாளருமான தமிழண்ணலுக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், பாராட்டுப் பட்டயமும் வழங்கி கெüரவிக்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தரும், தமிழ்ப் பேராயம் தலைவருமான எம்.பொன்னவைக்கோ கூறினார்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்த ஆண்டுக்கான தமிழ்ப் பேராய விருதுகள் பெறுவோர் பட்டியலை எம்.பொன்னவைக்கோ வெளியிட, பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயம் புரவலருமான டி.ஆர்.பச்சமுத்து பெற்றுக் கொண்டார்.

பின்னர் பொன்னவைக்கோ செய்தியாளர்களிடம் கூறியது:

பாரிவேந்தர்
தமிழ்ப் பேராயம் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் பட்டியலை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர். பச்சமுத்துவிடம் வழங்குகிறார் தமிழ்ப் பேராயம் தலைவர் எம். பொன்னவைக்கோ. உடன் தமிழ்ப் பேராயம் செயலர் பி.எம். அபிபுல்லா, ஒருங்கிணைப்பாளர் பாக்யவதி ரவி. (படம் : நன்றி தினமணி)

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்ப் பேராயம் அமைப்பை நிறுவி ஆண்டுதோறும் சிறந்த தமிழ்ப் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள் மற்றும் சாதனையாளர்களைத் தேர்வு செய்து மொத்தம் ரூ. 20 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பரிசு விருதும், பாராட்டுப் பட்டயமும் வழங்கி கௌரவித்து வருகிறோம். கடந்த ஆண்டு பாரிவேந்தர் பைந்தமிழ் விருது தமிழறிஞர் இளங்குமரனாருக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது “அறம்’ நூலாசிரியர் ஜெயமோகனுக்கும், பாரதியார் கவிதை விருது “பெருநயப்புரைத்தல்’ நூலாசிரியர் இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்துக்கும், அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது பெ.கருணாகரன், கொ.மா.கோதண்டம், கமலா கந்தசாமி ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் பரிசும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்படும்.

ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு விருது “அசடன்’ நூலாசிரியர் எம்.ஏ.சுசீலாவுக்கும், பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது “நேனோ-அடுத்த புரட்சி’ நூலாசிரியர் மோகன் சுந்தரராஜனுக்கும், ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது “இராஜராஜேச்சரம்’ நூலாசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியனுக்கும், முத்துத் தாண்டவர் தமிழிசை விருது “பண்ணும் இலயமும்’ நூலாசிரியர் இ.அங்கயற்கண்ணிக்கும், வளர்தமிழ் விருது “திணைக்கோட்பாடும் தமிழ்க் கவிதையியலும்’ நூலாசிரியர் க.ஜவகருக்கும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கும் தலா ரூ.1.5 லட்சம் பரிசும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்படும். அயல்நாட்டுத் தமிழ்ப் படைப்பாளிகளுக்கான விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது “அமெரிக்கக்காரி’ நூலாசிரியர் அ.முத்துலிங்கத்துக்கும் வழங்கப்படுகிறது.

பரிதிமாற்கலைஞர் விருது கோவை ஞானிக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்றார்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயம் புரவலருமான டி.ஆர்.பச்சமுத்து பேசும்போது, சிறந்த தமிழ் அறிஞர்களையும், நூலாசிரியர்களையும் கெüரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்ப் பேராயம் விருதுகள் வழங்கி கெüரவித்து வருகிறது. விருதுகளுக்கான நூலாசிரியர்கள் மற்றும் அறிஞர்களை நீதியரசர் எஸ்.ஜெகதீசன் தலைமையில் ஐவர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து தேர்வு செய்துள்ளனர் என்றார்.

தமிழ்ப் பேராயம் செயலர் பி.அபிபுல்லா, ஒருங்கிணைப்பாளர் பாக்யவதி ரவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஜெயமோகனது அறம் சிறுகதைகளில் வழிந்தோடும் இலட்சியவாதத்தை பாராட்டிய இலட்சங்களின் யோக்கியதை என்ன?

கர்நாடகாவில் இரும்புச் சுரங்க ஊழலில் கொள்ளை அடித்த கூட்டத்தைச் சேர்ந்தவர் தன் மகளை எஞ்சினியரிங் படிக்க வைக்க கொடுத்த கல்வி நன்கொடையும், ஆந்திராவில் விவசாயிகளை சுரண்டிய பண்ணையார் தனது மகனை மருத்துவ கல்லூரியில் படிக்க கொடுத்த கல்விக் கட்டணமும், இப்படியாக இந்தியாவின் பெரும் பணக்கார சிகாமணிகளின் நன்கொடை எனும் கொள்ளைப் பணத்தை வைத்து எஸ் ஆர் எம் எனும் கொள்ளைக் கம்பெனியை நடத்தப் பயன்படும் நிதிதான் அறம் சிறுகதை தொகுப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கவும் பயன்படுகிறது என்பதை அறிந்து மெய் மறந்து நிற்கிறோம்.

அறம் கதைகளில் ஊடும் பாவுமாக மனதைத் தொடும் இலட்சியவாதம் எனும் அபூர்வ விழுமியத்தின் மதிப்பை பாரிவேந்தர் படித்து ருசித்து உணர்ந்த படியாலேயே விருது கொடுக்க முடிவாகியிருக்கிறது எனும் போது என்ன தோன்றுகிறது?

விஷ்ணுபுரத்து தேவதை “தம்பி வினவு, இனி நீ அறம் கதை குறித்து எழுதத் தேவையில்லை” என்று சொன்னதன் தாத்பரியம் இப்போது விளங்குகிறதா?

வால்மார்ட்டிற்கு நாட்டை விற்கும் காங்கிரசு மாமா கும்பல் !

13

“உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவித்து பொருளாதாரத்தை வளர்க்க வேண்டியதுதானே” என்று கேட்டால்,

  • அன்னிய முதலீடு மூலம்தான் வெளி நாடுகளில் பயன்படுத்தப்படும் புதிய தொழில் நுட்பங்கள் நம் நாட்டுக்கு வந்து சேரும்.
  • அன்னிய நிறுவனங்களின் புதுமையான வணிக முறைகளால் உள்ளூர் தொழில்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • போக்குவரத்து, பொருள் சேமிப்பு போன்ற நாட்டின் உள்கட்டமைப்புகள் மேம்படவும் அன்னிய முதலீடு தேவை.

என்று புதிய பொருளாதாரக் கொள்கைகளின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

வால்மார்ட்
சில்லறை வணிகத்தின் அமெரிக்க பெரு நிறுவனம் வால்மார்ட்.

‘இந்தியாவின் சில்லறை வணிகத் துறை மிகவும் பிற்போக்காக உள்ளது, காய்கறிகளையும், பழங்களையும் குளிர்பதனப்படுத்தி சேமிக்கவும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்லவும் தேவையான உள் கட்டமைப்புகள் இல்லாததால், பெருமளவிலான விவசாய விளைபொருட்கள் வீணாக்கப்படுகின்றன. எனவே இந்தத் துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும்’ என்று பன்னாட்டு நிறுவனங்களின் விசுவாச சேவகர்களான காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. தமது ஆட்சியின் போது சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கொள்கை வகுத்த பாஜகவோ இந்த முடிவுகளை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமில்லாமல், அவற்றுக்கு மறைமுக ஆதரவையும் தெரிவித்தது.

சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள 4 கோடிக்கும் அதிகமான சிறு வணிகர்களும் அவர்களைச் சேர்ந்த 20 கோடி மக்களும் பாதிக்கப்படுவார்களே என்று கேட்டதற்கு,

  • 10 லட்சம் பேருக்கு அதிகமான பேர் வசிக்கும் நகரங்களில் மட்டுமே அன்னிய நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.
  • அன்னிய நிறுவனங்கள் தாம் விற்கும் பொருட்களில் 30% உள்நாட்டில் சிறு தொழில்களிடமிருந்து வாங்க வேண்டும்

என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. கூடவே மொத்த முதலீட்டில் 50%-ஐ கிராமங்களில் குளிர் பதன சேமிப்பு கிடங்குகளை உருவாக்குவது, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது போன்ற உள் கட்டமைப்பு வசதிகளில் அன்னிய நிறுவனம் முதலீடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டிருந்தது. இதன் மூலம் நாட்டின் சில்லறை வினியோக உள் கட்டமைப்பு மேம்படுவது உறுதி செய்யப்படும் என்று அரசு நியாயம் பேசியது.

அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் வால்மார்ட், பார்தி (ஏர்டெல்) குழுமத்துடன் சேர்ந்து கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த சில்லறை விற்பன பெரு நிறுவனம் டெஸ்கோ டாடா குழுமத்துடன் கை கோர்த்துள்ளது. பிரான்சைச் சேர்ந்த கேரஃபோர் இன்னமும் இந்திய தரகு முதலாளி கூட்டாளியை அடையாளம் காணவில்லை. இந்தியாவில் சில்லறை வணிகத்தில் முதலீடு செய்ய இப்படி எல்லாம் நிபந்தனை விதித்தால் நாங்கள் இந்தியாவில் கடை திறக்க மாட்டோம் என்று வால் மார்ட், கேரஃபோர், டெஸ்கோ போன்ற அன்னிய சில்லறை வணிக நிறுவனங்கள் சொல்லி விட்டிருக்கின்றன.

மத்திய அமைச்சரவை
மக்கள் முகத்தில் கரியைப் பூசிய மத்திய அமைச்சரவை (கோப்புப் படம்)

இந்நிலையில் மத்திய அமைச்சரவை சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கான நிபந்தனைகளை ரத்து செய்து மக்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது.

முதலாவதாக, 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை உடைய நகரங்களிலும் மாநில அரசுகள் அனுமதித்தால் அன்னிய நிறுவனங்கள் கடை திறக்கலாம்.

இரண்டாவதாக, 30% பொருட்கள் வாங்குவதற்கான நிபந்தனைக்காக, ரூ 12 கோடி வரை மூலதனம் உடைய நிறுவனங்களையும் சேர்த்துக் கொள்ள அனுமதித்துள்ளது அமைச்சரவை. இதற்கு முன்பு ரூ 6 கோடி வரை மூலதனம் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே சிறு நிறுவனங்களாக கருதப்பட்டன.

மேலும், அன்னிய நிறுவனம் வாங்க ஆரம்பிக்கும் போது மட்டும் மூலதன மதிப்பு ரூ 12 கோடிக்குள் இருந்தால் போதும் என்றும், பின்னர் அதன் கூடுதல் முதலீடு செய்யப்பட்டாலும் 30% நிபந்தனைக்கு அதே நிறுவனத்தை கணக்கு காட்டலாம் என்றும் சொல்லி இந்த நிபந்தனையை நடைமுறையில் ரத்து செய்து விட்டிருக்கிறது அமைச்சரவை

தினமணி 5-8-2013 தேதியிட்ட தனது தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பது போல, இதன் மூலம் அன்னிய நிறுவனங்கள் ரூ 12 கோடி முதலீட்டில் பினாமி நிறுவனங்களை ஆரம்பித்து நிபந்தனையை நிறைவேற்றுவதாக சொல்லி விட்டு அடுத்தடுத்து அவற்றில் மூலதனத்தை அதிகரிப்பது சாத்தியமாகிறது.

மூன்றாவதாக, மொத்த முதலீட்டில் 50%-ஐ உள்கட்டமைப்பில் செலவிட வேண்டும் என்ற நிபந்தனை, முதல் முறை கொண்டு வரும் $100 மில்லியன் (சுமார் ரூ 600 கோடி) முதலீட்டில் மட்டும் 50% செலவிட்டால் போதும் என்று மாற்றப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் ரூ 2,000 கோடி முதலீடு செய்ய வரும் நிறுவனம் முதல் தவணையில் ரூ 600 கோடி மட்டும் கொண்டு வந்து விட்டு அதில் ரூ 300 கோடியை மட்டும் உள்கட்டுமானத்தில் செலவிட்டதாக காண்பித்து விடும். அதன் பிறகு மீதித் தொகையை தன் விருப்பப்படி விளம்பரங்கள், கடைகள் உருவாக்குதல், விற்பனை சலுகைகள் என்று செலவழிக்க பயன்படுத்த முடியும்.

தரகு முதலாளிகள்
நாட்டை கொள்ளயடிக்கும் அன்னிய நிறுவனங்களும், தரகு முதலாளிகளும்.

ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் இன்னும் திருப்தியடையவில்லை என்று ஒரு அன்னிய சில்லறை விற்பனை நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்திருக்கிறார். இப்போது அனுமதிக்கப்படும் அன்னிய முதலீட்டு வரம்பு 49%-ஐ 74% உயர்த்துவதை அன்னிய நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. மாநில அரசுகள் கடைகள் திறப்பதை கட்டுப்படுத்தலாம் என்ற நிலைமையையும் அன்னிய நிறுவனங்கள் விரும்பவில்லை. குறைக்கப்பட்டு விட்டாலும் இன்னும் கணிசமான தொகையை உள் கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்வதையும் அவர்கள் எதிர்க்கின்றனர்.

இந்தப் பிரச்சினைகளையும் படிப்படியாக, தீர்த்து வைத்து அன்னிய முதலீட்டாளர்கள் அவர்களது விருப்பம் போல முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க மத்திய அமைச்சரவை வழி செய்து கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திய அமைச்சரவை அன்னிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளான இந்திய தரகு முதலாளிகளின் உத்தரவுகளை சிரமேற் கொண்டு செயல்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. இவர்களுக்கு மாற்றாக வைக்கப்படும் நரேந்திர மோடியின் சாதனையாக, அன்னிய நிறுவனங்களை அனுமதிப்பதில் ஈட்டிய வெற்றிதான் வைக்கப்படுகிறது என்பதை வைத்துப் பார்க்கும் போது ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என்ற பாகுபாடின்றி இந்தியாவை மொத்தமாகவோ, சில்லறையாகவோ விற்பதற்கு இவர்கள் தயாராகியிருக்கிறார்கள் என்பது புரிகிறது.

மேலும் படிக்க

டாஸ்மாக் கடையை தடுத்து நிறுத்திய சுவரொட்டி !

5

மக்கள் போராட்டத்தின் முன் மண்டியிட்டது அதிகாரவர்க்கம் !
HRPC போராட்டத்தை அறிவித்து போஸ்டர் ஒட்டியவுடனே டாஸ்மாக் திறக்கும் முயற்சியை கைவிட்டது அரசு !

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கூத்தைப்பார் கிராமம், பர்மா காலனி, திடீர் நகர் பகுதியில் உள்ள TELC தேவாலயம் அருகே டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதாக தெரிந்துகொண்ட அப்பகுதி மக்கள் நம் அமைப்பின் தோழர்களை அணுகினார்கள்.

அப்பொதுமக்கள் நம்மிடம், டாஸ்மாக் கடை அமைக்க அரசு உத்தேசித்துள்ள இடம் பர்மா காலனி, திடீர் நகர், பெல்பூர், குமரேசபுரம், எழில் நகர், திருவேங்கடநகர், கணேசபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் முக்கியமான சாலை என்றும், அருகில் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி, செவிலியர் பயிற்சிப் பள்ளி உள்ளதென்றும் பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவருக்கும் தகராறுகளும், பிரச்சனைகளும் ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக பேச திருச்சி கலெக்டரை போன் மூலமாக அணுகினோம். பிரதமர் மன்மோகன்சிங் வருகை காரணமாக பிசியாக இருந்த கலெக்டரிடம் மக்கள் பிரச்சனையைப் பற்றி பேசமுடியவில்லை. கலெக்டரின் உதவியாளர் அச்செல்போனில் டாஸ்மாக் அதிகாரிகளிடம் நம் பிரச்சனைப் பற்றி தெரிவிக்கச் சொன்னார். திருவெறும்பூர் தாசில்தாருக்கு பலமுறை போன் செய்தும் போனை எடுக்கவில்லை. பின்னர் டாஸ்மாக் நிர்வாகத்தை கவனித்துவரும் சப்-கலெக்டர்(கலால் பிரிவு) பரமேஸ்வரியிடம் நம் கோரிக்கையை தெரிவித்தற்கு, ”அந்த இடத்தில் டாஸ்மாக் திறப்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டது. உங்களைப் போல யாரோ சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை”,என்று அலட்சியமாக கூறினார். நாம் அவரிடம், “இனிமேல் உங்களை போராட்டக் களத்தில் சந்திக்க வேண்டியதுதான்“, என அறிவித்துவிட்டு வந்துவிட்டோம்.

உடனே நம் அமைப்பும் பர்மா காலனி, திடீர் நகர் குடியிருப்போர் நலச் சங்கமும் இணைந்து, ”குடிகெடுக்கும் தமிழக அரசே, டாஸ்மாக் நிர்வாகமே, வீதிகள் தோறும் கடை திறந்து இளைஞர்களை சீரழிக்காதே!”, என்ற முழக்கத்துடன் 2.8.2013 வெள்ளியன்று காலை 10 மணியளவில் திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்து மாநகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டினோம்.

img016

பதறிப் போன காவல்துறையும், வருவாய்த் துறை அதிகாரிகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று பலமுறை போன் மூலமாக நம் தோழர்களை அழைத்தனர். அவர்களிடம், ”அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை ஆரம்பிக்கமாட்டோம் என்று தாசில்தார் எழுதித் தர வேண்டும். அப்போதுதான் நாங்கள் பேச்சு வார்த்தைக்கு வரமுடியும்”,என்று நாம் விதித்த முன் நிபந்தனையை ஏற்றுக்கொண்டார்கள். பின்னர்தான் திருவெறும்பூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தையில் HRPC திருச்சி மாவட்ட செயலாளர் ஆதி நாராயணமூர்த்தி, பர்மா காலனி, திடீர் நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் 10 பேர் கலந்துகொண்டோம்.

போராட்டம் நடந்தால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும், அதனால் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை திருவெறும்பூர் காவல்நிலைய போலிசாரிடம் எழுதி வாங்கிக் கொண்டு தாசில்தார் அமைதிப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். தாசில்தார் நம் செயற்குழு உறுப்பினர் தண்டபாணியைப் பார்த்து, ”நீங்கள் நேற்று மதியம் போன் செய்த போதே நான் பேசியிருந்தால் இந்த அளவுக்கு பிரச்சனை சென்றிருக்காது”,என்று தன்னைத் தானே நொந்துகொண்டார். வந்திருந்த டாஸ்மாக் மேலாளர் விஜய்,”நீங்கள் யாரிடமும் மனுக் கொடுக்கவில்லை. நீங்களாகவே திடீரென போராடினால் எப்படி?”, என்று கேட்டார். சப்-கலெக்டர்(கலால் பிரிவு) பரமேஸ்வரி அலட்சியமாக பேசியதை சுட்டிக்காட்டிய நாம், ”கோரிக்கை மனுவோடு பல நாட்கள் அலைய வைக்கும் அதிகாரவர்க்கத்தை போராட்டம்தான் உடனே பணிய வைக்கும். வேறு வழி எதுவுமில்லை”,என்று தெரிவித்தோம்.

மேலும் டாஸ்மாக் கடையை ஒருவரது சொந்த பட்டா நிலத்தில், அவரது அனுமதி பெற்றுத் தான் அமைக்க வேண்டும் என்ற விதி அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதையும் அவ்வாறு கடை திறக்க, மேற்படி இடத்தின் சொந்தக்காரர் என்று முத்தமிழ்செல்வன் என்பவர் வழங்கிய ஆவணம் போலியானது என்பதையும் அம்பலப்படுத்தினோம். இப்படி அரசாங்க அதிகாரிகளுக்கே முத்தமிழ்செல்வன் போலி ஆவணம் கொடுத்து அல்வா கொடுத்தது -அவரின் திறமை என்பதா? அல்லது அந்த போலி ஆவணங்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்கள் என்பதா?

அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க மாட்டோம் என்று தாசில்தாரும், டாஸ்மாக் மேலாளரும், காவல்துறையினரும் எழுதி கையெழுத்துப் போட்டு கொடுத்தனர். அதே நேரத்தில் அத்துடன் நில்லாமல் மக்களின் எதிர்ப்பை அரசுக்கு பதிவு செய்யும் முகமாக அந்தப் பகுதியில் டாஸ்மாக் அமைக்கக்கூடாது என்று கோரிக்கை மனு எழுதி ஆயிரக்கணக்கான மக்களிடம் கையொப்பம் பெற்றுக்கொடுத்தோம். கடந்த மாதம் வீடுகளை காலி செய்துவிடுவதாக ரயில்வே துறையினரின் மிரட்டலுக்கெதிராக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஏற்கனவே வெற்றி பெற்ற இப்பகுதி மக்களுக்கு மீண்டும் ஒரு வெற்றி கிட்டியுள்ளது.

போராட்ட அறிவிப்பு செய்த மாத்திரத்திலேயே இந்தப் போராட்டம், நெடுஞ்சாலை சாராயக் கடைகளை ஊருக்குள் கொண்டுவரும் முயற்சியை எதிர்த்து தமிழகமெங்கும் நடக்கும் மக்கள் போராட்ட பயணத்தில் ஒரு மைல் கல்லாய் தன் முத்திரையை பதித்துள்ளது. குடியிருப்போர் நல சங்கத்தினரும் பகுதி மக்களும் அமைப்பாய் திரண்டதன் பலனை மீண்டும் ஒருமுறை தன் சொந்த அனுபவத்தில் உணர்ந்து ஒவ்வொரு உறுப்பினரும் உணர்வுபூர்வமாக சங்கத்தை வலுப்படுத்திவருகின்றனர்.

துவக்கத்திலிருந்தே இதே பகுதியில் குடியிருந்துவரும் சிபிஎம்-ன் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மாசிலாமணியிடம் இக்கோரிக்கையை மக்கள் கொண்டு சென்ற போது, ”இது அரசாங்க திட்டம். இதை எப்படி தடுக்க முடியும்?” என்றாராம். மக்களுக்கு உண்மையையும், போலிகளையும் பிரித்துப் பார்க்க இப்போராட்டம் உதவியுள்ளது.

இடையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் திருச்சி மாவட்ட செயற் குழு உறுப்பினர் தண்டபாணியை தொடர்பு கொண்டு டாஸ்மாக் பார் வைக்க ஏற்பாடு செய்திருந்த ஒரு நபர் பேரம் பேசினான். இது போன்ற கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடக் கூடாது என்று அவனை எச்சரித்துள்ளோம்.

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு
திருச்சிக் கிளை.

ஏழைகளை கணக்கிடுவதில் நேர்மையின்மை – உத்சா பட்னாயக்

8

ஏழ்மையை அளவிடும் மட்டத்தை தொடர்ந்து தாழ்த்திக் கொண்டே போவதன் மூலம் திட்டக் கமிஷனின் சந்தேகத்திற்கிடமான வழிமுறை ஏழ்மையில் வீழ்ச்சியை காண்பிக்கிறது.

டைமுறையில் சாத்தியமில்லாத அளவுக்கு ஏழைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக சொல்லி திட்ட கமிஷன் இன்னும் ஒரு முறை நாட்டு மக்களை அவமானப்படுத்தியிருக்கிறது. அதன் மதிப்பீட்டின்படி நகர்ப்புறங்களில் மாத வருமானம் ரூ 1,000 அல்லது தின வருமானம் ரூ 33.3-க்கும், கிராமப் புறங்களில் மாத வருமானம் ரூ 816 அல்லது தின வருமானம் ரூ 27.2-க்கும் குறைவாக பெறுபவர்கள்தான் ஏழைகள். நகர்ப் புறங்களில் ஒரு ஆண் முடி வெட்டிக் கொள்வதற்கே இந்த ‘பெரும்’ தொகை சரியாக போய் விடும் என்பதுதான் நடைமுறை. இந்த நிலையில் இந்தத் தொகைக்குள் அனைத்து உணவு மற்றும் உணவு அல்லாத தேவைகளை ஒருவர் முடித்துக் கொள்ள வேண்டுமாம்.

ஏழ்மை
படம் : நன்றி தி ஹிந்து.

இதன் அடிப்படையில், 2009-10-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது வறுமை பெருமளவு குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவியதையும், வேலை வாய்ப்புகள் குறைந்திருப்பதையும், எப்போதும் இல்லாத அளவுக்கு உணவுப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பதையும் நாம் பார்த்திருந்தாலும் நகர்ப்புறங்களில் 8 சதவீத புள்ளிகளும், கிராமப் புறங்களில் 7 சதவீத புள்ளிகளும் வறுமை குறைந்திருக்கிறது என்கிறது திட்ட கமிஷனின் மதிப்பீடு.

வறுமையை கணக்கிடும் இதே பிழையான முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டால், 2014-15 ஆண்டில் நகர்ப்புற வறுமை கிட்டத்தட்ட இல்லாமல் ஆகி விடும் என்றும் கிராமப் புறத்தில் வறுமை 12 சதவீதம் மட்டுமே இருக்கும் என்றும் உறுதியாகிறது. நடைமுறையில் இல்லாமையின் தீவிரமும், வறுமையின் அதிகரிப்பும் எவ்வளவு கூடினாலும் அதிகாரபூர்வமாக இப்படித்தான் அறிவிக்கப்படும்.

கணிசமான உயர்வு

வறுமைக் கோட்டின் மட்டம் குறைந்திருப்பது குறித்த அதிகார பூர்வ மதிப்பீடுகள் அனைத்தும் தவறான வழி முறையின் சந்தேகத்திற்கிடமான விளைவுகள்தான். நடைமுறையில் வறுமை உயர் மட்டத்தில் இருப்பதோடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது. 2009-10 ஆண்டில் உணவு அல்லாத அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு (அடிப்படை உற்பத்தி பொருட்கள், பயனீட்டு சேவைகள், வீட்டு வாடகை, போக்குவரத்து, மருத்துவம், கல்வி), 75.5 சதவீதம் கிராமப் புற மக்கள் அடிப்படைத் தேவையான ஒரு நாளைக்கு 2,200 கலோரிகள் சக்தி கொடுக்கும் உணவு உண்ண முடியவில்லை, அது போலவே 73 சதவீத நகர்ப்புற மக்கள் ஒரு நாளைக்கு 2,100 கலோரி உணவுத் தேவையை பெற முடியவில்லை. ஒப்பீட்டு அளவில் 2004-05-ம் ஆண்டு இந்த சதவீதங்கள் கிராமப் புறத்தில் 69.5 ஆகவும் நகர்ப்புறத்தில் 64.5 சதவீதம் ஆகவும் இருந்தன.

2011-12-ம் ஆண்டின் தேசிய மாதிரி கணக்கீட்டில் திரட்டப்பட்ட ஊட்டச்சத்து நுகர்வுகள் பற்றிய விபரங்கள் வெளியான பிறகுதான் அது வரையிலான மாற்றங்களை நாம் பரிசீலிக்க முடியும். ஆனால், உயர் அளவிலான பண வீக்கத்தையும், வேலை வாய்ப்பு வீழ்ச்சியையும் வைத்து பார்க்கும் போது நிலைமை நாம் கணிக்கும் அளவை விட அதிகமாக இல்லா விட்டால் கூட அந்த அளவு மோசமாகத்தான் இருக்கும் என்று சொல்லலாம்.

நமது மதிப்பீடுகள் திட்ட கமிஷனே கொடுத்துள்ள வறுமைக் கோட்டுக்கான வரையறையிலிருந்து பெறப்பட்டவைதான். தனியார் மருத்துவ சேவை, கல்வி, மின்சாரம், பெட்ரோல், சமையல் வாயு போன்றவற்றின் விலைகள் வெகு வேகமாக உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், உணவுப் பொருள் விலையேற்றம் கடுமையாக இருப்பதையும், ஏழைகளில் பெரும்பாலானவர்கள் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருட்களை பெறுவதில்லை என்பதையும் சேர்த்து பார்க்கும் போது பெரும்பகுதி மக்கள் திரள் மேலும் மேலும் வறியவர்கள் ஆகிக் கொண்டிருப்பதாக மதிப்பிடலாம். அவர்களது ஊட்டச் சத்து நுகர்வு முன்னெப்போதையும் விட வேகமாக வீழ்ச்சியடைந்திருப்பதும் ஆச்சரியத்துக்குரியது இல்லை.

திட்ட கமிஷனின் முறையில் இருக்கும் அடிப்படை பிரச்சினை என்ன? கள நிலவரம் எப்படி இருந்தாலும் தொடர்ச்சியாக குறைந்து கொண்டே போகும், தாழ் மட்டத்திலான ஏழ்மை மதிப்பீடுகளை அது எப்படி தருகிறது? 1973-72-ல் ஒரே ஒரு முறை பயன்படுத்திய பிறகு வறுமை அளவுகளை மதிப்பிடுவதற்கான அதன் சொந்த வரையறையை திட்ட கமிஷன் நடைமுறையில் கை விட்டு விட்டது. அதற்குப் பிறகு கடந்த 40 ஆண்டுகளில் ஒரு முறை கூட நடைமுறை செலவுகளை வைத்து வறுமைக் கோட்டை நிர்ணயிப்பது குறித்து ஆய்வு செய்ததே இல்லை. அத்தகைய கணக்கீடுதான் உணவல்லாத செலவுகள் அனைத்தையும் நிறைவு செய்து கொண்ட பிறகு அதே வாழ்க்கை தரத்தை பராமரிப்பதற்கு தேவையான வருமானத்தை தர முடியும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் தேசிய மாதிரி கணக்கீட்டில் அந்த தரவுகள் கிடைக்கத்தான் செய்கின்றன.

இருப்பினும், இதற்கு மாறாக திட்ட கமிஷன் 1973-74-ன் மாதாந்திர ஏழ்மை கணக்கிடும் அளவீடுகளான கிராமப்புறத்தில் மாத வருமானம் ரூ 49, நகர்ப்புறத்தில் மாத வருமானம் ரூ 56 ஆகியவற்றை விலை குறியீட்டு எண்களின் அடிப்படையில் அதிகரித்து ஒவ்வொரு ஆண்டும் வறுமைக் கோட்டுக்கான வருமானத்தை கணக்கிடுகிறது. டெண்டூல்கர் கமிட்டி இந்த முறையை மாற்றவில்லை, பயன்படுத்த வேண்டிய குறியீட்டு எண்ணை மட்டும் மாற்றியது.

நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது விலைக் குறியீட்டு எண் நடைமுறை செலவினங்களில் ஏற்படும் உயர்வை முழுமையாக பிரதிபலிப்பதில்லை. இத்தகைய ஏழ்மை மதிப்பீடுகளை கணக்கிடும் அதிகாரிகள் தமது சம்பளம் விலைவாசி உயர்வை அடிப்படையாக வைத்து மட்டும் அதிகரிக்கப்படும் என்றால் அதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 1973-74-ல் உயர் மட்டத்தில் உள்ள ஒரு அரசு அதிகாரியின் மாதச் சம்பளம் ரூ 1,000 ஆக இருந்தது. விலைக் குறியீட்டு எண்ணை வைத்து மட்டும் கணக்கிட்டிருந்தால் அவரது சம்பளம் இப்போது ரூ 18,000 ஆகத்தான் இருக்க வேண்டும்.

ஆனால், நடைமுறை வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பை விலைக் குறியீட்டு எண் முழுமையாக பிரதிபலிப்பதில்லை என்ற உண்மையை அரசே அங்கீகரித்துள்ளது. எனவே, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள கமிஷன்களை நியமித்து, ஊதிய விகிதங்களை மறு கணக்கீடு செய்கிறது. அதன் மூலம் மேற் குறிப்பிட்ட பதவிக்கான இன்றைய சம்பளம் நான்கு மடங்கு அதிகமாக ரூ 70,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வறுமை குறித்த மதிப்பீடுகளை கணக்கிடும் அதிகாரிகள், 1974-ம் ஆண்டு கணக்கிடப்பட்ட வறுமைக் கோடு அளவீட்டை விலைக் குறியீட்டு எண்ணால் அதிகரித்து கிடைக்கும் வருமானத்தை வைத்து ஏழைகள் அதே வாழ்க்கை தரத்தை பராமரிக்க முடியும் என்ற கற்பனையை தொடர்ந்து பராமரித்து வருகிறார்கள். அவர்கள் நிர்ணயிக்கும் வறுமைக் கோட்டு மட்டங்களில் ஊட்டச் சத்து நுகர்வு கடுமையாக குறைந்து கிட்டத்தட்ட அரைப் பட்டினி கிடப்பவர்களாகத்தான் வாழ முடியும் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

மோசமாகி வரும் இல்லாமை

ஆண்டுகள் போகப் போக அதிகார பூர்வ வறுமைக் கோடு நடைமுறையில் மேலும் மேலும் குறைவான வாழ்க்கை தரத்தையே தருகிறது. நடைமுறையில் ஏழ்மை அதிகரித்துக் கொண்டே போனாலும் தொடர்ந்து குறைக்கப்பட்டு வரும் தரத்தின் அடிப்படையில் ஏழ்மை நிலை மேம்படுவது போலவே தோற்றமளிக்கின்றது.

சென்ற ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவீதத்தை இந்த ஆண்டு சதவீதத்துடன் ஒப்பிட வேண்டுமானால் தேர்ச்சி மதிப்பெண் மாறாமல் இருக்க வேண்டும் என்பது ஒரு பள்ளி மாணவருக்கு கூடத் தெரிந்த விஷயம். பள்ளித் தலைமை ஆசிரியர் பொது மக்களுக்கு தெரிவிக்காமலேயே சென்ற ஆண்டு நூற்றுக்கு 50 என்று இருந்த தேர்ச்சி மதிப்பெண்ணை இந்த ஆண்டு நூற்றுக்கு 40 என்று குறைத்து விட்டு பள்ளியின் செயல்பாடு மேம்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? சென்ற ஆண்டு 75 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்கள், (இந்த ஆண்டு குறைக்கப்பட்ட தேர்ச்சி மதிப்பெண் அடிப்படையில்) 80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்று சொல்ல முடியுமா? பழைய தேர்ச்சி அளவான 50 மதிப்பெண் என்ற நிலையில் இந்த ஆண்டு 70 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளார்கள் என்று நமக்கு தெரிய வந்தால் பள்ளியின் செயல்பாடு மேம்படுவதற்கு பதிலாக வீழ்ச்சியடைந்திருக்கிறது என்றுதான் சொல்ல முடியும். அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்தப் பள்ளி இதே தவறான முறையை பின்பற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டால் ஒரு கட்டத்தில் தேர்ச்சி மதிப்பெண் 0 ஆக நிர்ணயிக்கப்பட்டு 100 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெறுவது நடந்தே தீரும்.

இது போன்றதான ஒரு விவகாரம்தான் அதிகாரபூர்வ வறுமைக் கோடுகளுடையதும். கடந்த 40 ஆண்டுகளில் வறுமைக் கோட்டுக்கான நிர்ணயங்கள் தொடர்ச்சியாக குறைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அதன் மூலம் ‘வறுமை’ நடைமுறையில் மிக அதிகமாகவும், ஆண்டுக்காண்டு மோசமாகி வருவதாகவும் இருந்தாலும், அதிகார பூர்வ கணக்கின்படி அது இல்லாமல் ஆகி விடுவதற்கு சில ஆண்டுகள் எதுவும் செய்யாமல் காத்திருந்தாலே போதும்.

கமிஷனின் வறுமைக் கோடு நிர்ணயத்தின் அடிப்படையில் டெல்லி நகரத்தில் மாத வருமானம் ரூ 1,040 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவ்வளவு செலவழிக்கும் ஒருவர் மற்ற அடிப்படைத் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்த பிறகு 1,400 கலோரிகள் ஆற்றலை தரும் உணவு மட்டுமே உட்கொள்ள முடியும். 2,100 கலோரிகள் தரும் உணவை பெறுவதற்கான சரியான மாத வருமானம் ரூ 5,000.

ரூ 5,000 என்ற கோட்டுக்கு கீழ் மலைக்க வைக்கத்தக்க அளவில் 90 சதவீதம் பேர் உள்ளனர். 2004-05ல் சரியான வறுமைக் கோடான ரூ 1,150-க்கு கீழ் 57 சதவீதம் பேர் மட்டுமே இருந்தனர் என்பதுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். மிக அதிக அளவிலான உணவுப் பொருள் விலை உயர்வு, அதிகரித்துக் கொண்டு வரும் தனியார் மருத்துவ செலவுகள் மற்றும் பிற சேவைகளுக்கான கட்டணங்கள், செலவுகள் இவற்றுக்கு மத்தியில் மக்கள் உணவு உட்கொள்வதை குறைத்து வருவது ஆச்சரியப்படுத்தவில்லை.

டெல்லியில் முன் எப்போதும் இல்லாத அளவாக சராசரி கலோரி உட்கொள்ளுதல் 1,756-க்கு வீழ்ந்திருக்கிறது. நிலையான வருமானம் உடைய, ஒரு குடும்பத்துக்கு தவணை முறையில் பல கார்களை வாங்க முடியும் சிறுபான்மையினரான பணக்கார குடும்பங்களுக்கு மத்தியில் அவர்களது கண்களுக்கு புலப்படாத பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும் வர்க்கம் பிழைத்திருக்கவே போராடிக் கொண்டிருக்கிறது. 55 சதவீதம் நகர்ப்புற மக்கள் ஒரு நாளைக்கு 1,800 கலோரி அளவை கூட பெற முடியாத நிலை நிலவுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு 25 சதவீதத்துக்கும் குறைவானவர்களே அந்த நிலையில் இருந்தனர்.

உயல் கல்வி கற்ற திட்ட கமிஷனின் பொருளாதார நிபுணர்கள் நடைமுறையை புறக்கணித்து சரியில்லாத முறையை தொடர்ந்து பின்பற்றுவது ஏன் என்று சிலர் கேட்கலாம். ரூ 1,040 மாத வருமானம் 1,400 கலோரி அளவில் அடிப்படை உயிர் பிழைத்தலுக்கான உணவு நுகர்வை மட்டும்தான் சாத்தியமாக்குகிறது என்பதை நம்மைப் போல அவர்களும் பார்க்கத்தான் செய்கிறார்கள். ஆனால், வறுமைக் கோடு இந்த அளவில் நிர்ணயிக்கப்படுவது ஏன்?

முதலாவதாக, தவறான முறையை பயன்படுத்துவது உலக அளவில் நடைமுறையில் உள்ளது. உலக வங்கியின் பொருளாதார நிபுணர்கள் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் உள்ளூர் நாணயத்தில் கணக்கிடப்பட்ட அதிகார பூர்வ மதிப்பீடுகளையே தங்கள் மதிப்பீடுகளுக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றனர். ஆசியாவில் வறுமை வீழ்ச்சியடைந்திருக்கிறது என்று சொல்லும் உலக வங்கியின் கூற்றும் இதே அளவு போலியானது.

நடைமுறையில் வேலை வாய்ப்பு வளர்ச்சி வீழ்ச்சியடைந்ததுடன் பெருமளவிலான உணவுப் பொருள் விலை வாசி உயர்வும் இணைந்து ஏழ்மை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதை ஒத்துக் கொண்டால், உலகளாவிய ஏழ்மையை மதிப்பிடுவதற்கு பல நூறு பொருளாதார நிபுணர்களை வைத்து தவறான மதிப்பீடுகளை உருவாக்கிக் கொடுக்கும் பிரம்மாண்டமான அமைப்பு கரையான் அரித்து உளுத்துப் போன்ற வீடு போல நொறுங்கி விழுந்து விடும்.

இரண்டாவதாக, இந்த முறையில் போலியாக வறுமை குறைவதாக காட்ட முடிவதால், உலக மயமாக்கலும், புதிய தாராளவாத கொள்கைகளும் மக்களுக்கு பலன் அளிக்கின்றன என்று பிரச்சாரம் செய்வதற்கு வசதியாக உள்ளது.

ஆனால் உண்மையை நீண்ட காலம் மறைத்து வைத்திருக்க முடிவதில்லை.

(உத்சா பட்னாய்க், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் சிறப்பு பேராசிரியர்)
நன்றி : தி ஹிந்து –  The dishonesty in counting the poor
தமிழாக்கம்
: அப்துல்

தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும் : புதைந்துள்ள உண்மைகள் !

36

ந்தியாவின் 29-வது மாநிலமாக தெலுங்கானா உருவாகப் போகிறது என்று நாடு முழுவதும் பரபரப்பை மூட்டி விட்டிருக்கிறது மத்தியில் ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு.

தெலுங்கானா, சீமாந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகராக, யூனியன் பிரதேசமாக ஐதராபாத் நீடிக்கும். 10 ஆண்டுகளில் சீமாந்திராவுக்கு புதிய தலைநகர் உருவாக்கப்பட்ட பிறகு ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்துடன் சேர்க்கப்பட்டு விடும். இத்தகைய புதிய தலைநகரை உருவாக்குவதற்கு ரூ 4 முதல் 5 லட்சம் கோடி தேவைப்படும் என்று தெலுகு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு சொல்லியிருக்கிறார்.

தெலுங்கானா அறிவிக்கப்பட்டால் பதவி விலகப் போவதாக வீரம் பேசிய முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டியும், அமைச்சர்களும் தங்கள் நாற்காலிகளை இறுகப் பிடித்துக் கொண்டு பதவியில் தொடர முடிவு செய்திருக்கிறார்கள். தெலுங்கானா அரசியல்வாதிகள் மத்தியில் யார் தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் ஆவது என்ற குடுமிப்பிடி சண்டை ஆரம்பித்திருக்கிறது. மாநிலம் பிரிக்கப்பட்டதும் அந்தந்தப் பகுதிகளின் இப்போதைய சட்ட மன்ற உறுப்பினர்களை கொண்டு புதிய சட்ட மன்றங்கள் அமைக்கப்படும். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்து அதன் ஆதரவுடன் முதலமைச்சர் ஆகி விடுவார் என்று ஆருடங்கள் சொல்லப்படுகின்றன.

தெலுங்கானா உருவாக்கத்தை எதிர்த்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் முழு அடைப்பு, வேலை நிறுத்தம், மறியல்கள், ஆர்ப்பாட்டங்கள் வலுத்திருக்கின்றன. ஆந்திராவை பிரிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விட மாட்டோம் என்று ஆந்திர அரசியல்வாதிகள் சூளுரைத்திருக்கின்றனர்.

மேற்கு வங்காளத்திலிருந்து கோர்க்காலாந்து, அசாமிலிருந்து போடோலாந்து, மகாராஷ்டிராவிலிருந்து விதர்பா, உத்தர பிரதேசத்திலிருந்து  மூன்று மாநிலங்கள் என்று கோரிக்கைகள் இடதும் வலதுமாக பறக்கத் தொடங்கியுள்ளன. கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா டார்ஜிலிங்கில் காலவரையற்ற முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

மும்பையை மகாராஷ்டிராவிலிருந்து பிரித்து யூனியன் பிரதேசம் ஆக்க வேண்டும் என்று ஷோபா டே டுவீட்டியது மராட்டிய அரசியல்வாதிகளுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வன்னியர் நாடு, தேவர் நாடு, நாடார் நாடு என்று தனிமாநிலங்கள் ஏற்படுத்தி தமது குடும்பத்தினரை முதலமைச்சராக்க கனவு காணும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளும் கைகளை தேய்த்து விட்டுக் கொண்டு தெலுங்கானா அறிவிப்பை வரவேற்றிருக்கின்றனர்.

ந்தச் சூழலில், தெலுங்கானா தனி மாநில கோரிக்கையைப் பற்றியும் அதை ஆதரித்தும் எதிர்த்தும் நடக்கும் போராட்டங்கள் குறித்தும் 2010, ஜனவரி புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரையை மீண்டும் வெளியிடுகிறோம். ஆளும் வர்க்கங்களுக்கிடையேயான அதிகார பகிர்வுக்கான போட்டியில் விளையும் இத்தகைய நிர்வாகபிரிவினைகள் மக்கள் வாழ்க்கை பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மக்கள் போராட்டங்கள் புறக்கணிக்கப்படவும், ஒடுக்கப்படவும்தான் உதவும் என்பதை கட்டுரை விளக்குகிறது. தெலுங்கானா கோரிக்கை என்பது ஜனநாயகத்திற்கான கோரிக்கை அல்ல என்பதை இக்கட்டுரை நிறுவுகிறது. அதே நேரம் தெலுங்கானாவை எதிர்க்கும் ஏனைய ஆந்திர முதலாளிகள், நிலப்பிரபுக்களையும் ஆதரிக்க முடியாது என்பதையும் இக்கட்டுரை பேசுகிறது.

___________________________________________________

தெலுங்கானா : புதைந்துள்ள உண்மைகள்

தெலுங்கானாந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, தெலுங்கானா தனி மாநில விவகாரம். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவின் தொடர் உண்ணாவிரதம், உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம், உயிர்த்தியாகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, காங்கிரசு தலைவி சோனியாவின் பிறந்த நாளான டிசம்பர் 9-ம் தேதியன்று, தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டது, ஆளும் காங்கிரசு கூட்டணி அரசு. இதை எதிர்த்து ஆந்திராவின் பிற பகுதிகளில் போராட்டங்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல், அதைத் தொடர்ந்து, ஒருமித்த கருத்து உருவாகும்வரை உடனடியாகத் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கப் போவதில்லை என்று காங்கிரசு ஆட்சியாளர்கள் அடித்த பல்டி, அதை எதிர்த்து தெலுங்கானாவில் மீண்டும் போராட்டம் – என ஆந்திர மாநிலம் தொடர் போராட்டங்களால் நிலைகுலைந்து போயுள்ளது.

கடலோர மாவட்டங்கள், ராயலசீமா, தெலுங்கானா என மூன்று பெரும் பிராந்தியங்களைக் கொண்டதுதான் ஆந்திரப் பிரதேசம். இதில் தெலுங்கானா ஒப்பீட்டளவில் பெரியது. வாரங்கல், அதிலாபாத், கம்மம், மெஹ்பூப் நகர், ரங்கா ரெட்டி, கரீம் நகர், நிஜாமாபாத், மேடக், நலகொண்டா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிதான் தெலுங்கானா என்றழைக்கப்படுகிறது. முன்பு நிஜாம் சமஸ்தானமாக இருந்த காரணத்தால், தெலுங்கானாவில் பேசப்படும் தெலுங்கில் உருது கலப்பு அதிகமாக உள்ளது. கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மாபெரும் தெலுங்கானா பேரெழுச்சியைத் தொடர்ந்து, போலி சுதந்திரத்துக்குப் பின்னர் கடுமையான அடக்குமுறைக்குப் பிறகு, தெலுங்கானா சமஸ்தானம் இந்தியாவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டது.

காந்தியவாதியான பொட்டி சிறீராமுலு, தெலுங்கு பேசும் மக்களுக்கான தனி மாநிலம் கோரி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்ததன் விளைவாக, அன்று சென்னை ராஜதானியில் இருந்த ஆந்திரப் பிரதேசம், மொழிவழி மாநிலமாக 1953-ல் பிரிக்கப்பட்டது. அப்போது கர்நூல்தான் அதன் தலைநகர். பின்னர், மொழிவாரி மாநிலம் என்ற அடிப்படையில் தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட தெலுங்கானாவையும் உள்ளடக்கிய ஆந்திரப் பிரதேசமாக 1956-ல் ஒருங்கிணைக்கப்பட்டது. தெலுங்கானா பிராந்தியத்தைக் கொண்ட நிஜாம் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்த ஐதராபாத், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரானது. ஒட்டுமொத்த ஆந்திராவின் மக்கள்தொகையில் நான்கு சதவீதம் மட்டுமே உள்ள ரெட்டிகளும், சவுத்திரிகளும் தெலுங்கானா பகுதியில் அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்டனர். நிலப்பிரபுக்களான இவர்களின் ஆதிக்கம், அரசாங்கப் பதவிகளில் இவர்கள் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றிக் கொண்டதன் காரணமாக, தெலுங்கானா பிராந்திய நடுத்தர வர்க்கத்தினர் ஆந்திராவுடன் இணைய மறுத்து, தனி மாநிலமாக்கக் கோரினர்.

அதன் பின்னர், 1961 தேர்தலுக்குப் பிறகு உருவாகும் அம்மாநில சட்டசபை, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆந்திரப் பிரதேசத்தில் இணைவதாகத் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும், தெலுங்கானா பிராந்தியத்தை ஆந்திரப் பிரதேசத்துடன் இணைப்பது; இல்லையேல், தனிமாநிலமாக நீடிக்க அனுமதிப்பது என்று அன்றைய மாநில மறுசீரமைப்புக் கமிஷன் பரிந்துரை செய்தது. அப்பரிந்துரையையும் இதர எழுதப்படாத ஒப்பந்தங்களையும் மைய அரசு கைகழுவியது. இதனால் தெலுங்கானா பிராந்திய நடுத்தர வர்க்கத்தினர் அதிருப்தியடைந்தனர். தனி மாநிலக் கோரிக்கை அவ்வப்போது குமுறலாக வெளிப்பட்டு வந்தது.

ஆந்திராவின் பிற பகுதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள்-முதலாளிகளின் ஆதிக்கம், கல்வி – வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளில் தெலுங்கானா நடுத்தர வர்க்கத்துக்கு உரிய பங்கு கிடைக்காமை ஆகியவற்றினால் ஏற்பட்ட குமுறல்களின் காரணமாக 1969-ல், தெலுங்கானா பகுதியில் மாணவர்கள்-இளைஞர்கள் தனித் தெலுங்கானா மாநிலம் கோரிப் போராட்டங்களை நடத்தினர். ஏறத்தாழ 360 பேர் அப்போராட்டத்தில் உயிரிழந்தனர். கடும் அடக்குமுறைக்குப் பிறகு, அந்தப் போராட்டம் படிப்படியாக நீர்த்துப் போனது.

தனியார்மய-தாராளமயமாக்கலைத் தொடர்ந்து கல் குவாரி, நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள், வீட்டுமனைத் தொழில், தகவல் தொழில்நுட்பத்துறை, சேவைத் துறை, சினிமாத் துறை, காடுகள் முதலானவற்றில் தெலுங்கானாவுக்கு வெளியேயுள்ள பிற மாவட்டங்களின் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களின் ஆதிக்கமும் சூறையாடலும் தெலுங்கானா பிராந்தியத்தில் தீவிரமடைந்தன. ஆடம்பர, உல்லாச, களிவெறியாட்டங்களில் இக்கும்பல் கொட்டமடித்தது. இப்புதுப் பணக்கார கும்பலின் வாரிசுகள் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளைப் பெருமளவில் கைப்பற்றிக் கொண்டனர். தெலுங்கானா நடுத்தர வர்க்கம் அவர்களோடு போட்டியிட இயலாமல் குமுறியது.

அதன் எதிரொலியாக, தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகிய சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற புதியகட்சி 2001-ல் உருவாகியது. தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க வேண்டும் என்பதே இக்கட்சியின் மையமான கோரிக்கை.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவைத் தொடர்ந்து, காங்கிரசில் நிலவும் கோஷ்டிச் சண்டையைச் சாதகமாக்கிக் கொண்டு, தோல்வியடைந்து கிட்டத்தட்ட முடமாகிவிட்ட தமது கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன், தனித் தெலுங்கானா கோரி கடந்த நவம்பர் இறுதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், சந்திரசேகரராவ். அதை ஆதரித்து மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். மாணவர்கள் மீதான போலீசின் கண்மூடித்தனமான தடியடித் தாக்குதலைத் தொடர்ந்து ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள், அறிவுத்துறையினர் – என அம்மாநிலமெங்கும் போராட்டத்தை ஆதரித்து நடுத்தர வர்க்கத்தினர் அணிதிரண்டனர். தனித்தெலுங்கானா மாநிலம் கோரி சிலர் தற்கொலை செய்து கொண்டதும், உணர்ச்சிமிகு போராட்டமாக அது மாறத் தொடங்கியது.

இதற்கு மேலும் தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கையைத் தட்டிக் கழித்தால், தெலுங்கானா பிராந்தியத்தில் காங்கிரசு செல்லாக்காசாகிவிடும் என்பதாலும், இதேபோல நாட்டின் இதர பகுதிகளிலும் தனி மாநிலம் கோரி போராட்டங்கள் பெருகத் தொடங்கிவிடும் என்ற அச்சத்தாலும், போராட்டத்தைச் சாந்தப்படுத்தி நீர்த்துப் போக வைக்கும் உத்தியுடனும் காங்கிரசு ஆட்சியாளர்கள் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை கொள்கையளவில் ஏற்பதாக அறிவித்தனர். தனி மாநில அறிவிப்பைத் தொடர்ந்து சந்திரசேகர ராவ், உண்ணாவிரதத்தைக் கைவிட்டதோடு, போராட்டங்களை நிறுத்திக் கொள்வதாக அறிவித்து, 2014-க்குள் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கித் தருமாறு மைய அரசிடம் கோரினார்.

ஆனால்,தெலுங்கானா மாநிலம் உருவானால், அது இன்றைய ஆந்திரப் பிரதேசத்துக்கு இழப்பாக இருக்கும், தலைநகரான ஐதராபாத் தெலுங்கானாவுக்குப் போய்விடும் என்றெல்லாம் வாதங்களை வைத்து, தெலுங்கானா கோரிக்கையை ஆந்திராவின் பிற பகுதிகளில் உள்ள பெருமுதலாளிகளும், புதுப் பணக்கார நில மாஃபியா-சுரங்க மாஃபியாக்களும் எதிர்க்கின்றனர். தெலுங்கானா பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதும் இவர்கள்தான். ஐதராபாத் மற்றும் தெலுங்கானா பிராந்தியத்திலுள்ள பெருநகரங்களில் சினிமாத் துறை, வீட்டுமனைத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை முதலானவற்றில் கோடிகோடியாய் முதலீடு செய்து சூறையாடுவதும் இந்தக் கும்பல்கள்தான். இவர்கள்தான் இப்போது தெலுங்கானா எதிர்ப்புப் போராட்டத்தை பின்னணியிலிருந்து இயக்குகிறார்கள்.

அரசியல் சட்டப்படி, புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு, அரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று, கருத்தறிவதற்காக அம்மாநிலச் சட்டமன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டும். சட்டமன்றத்தின் கருத்தை நாடாளுமன்றம் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் காங்கிரசு ஆட்சியாளர்களோ, இத்தீர்மானம் ஆந்திர சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒருமித்த கருத்தின்படி முடிவு செய்யப்படும் என்று கூறுகின்றனர். காங்கிரசின் நிதியாதாரமாக உள்ள புதுப் பணக்கார மாஃபியா கும்பலைச் சாந்தப்படுத்தவும், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று காரணம் காட்டி,மீண்டும் இழுத்தடிக்கவுமே காங்கிரசு கயவாளிகள் முயற்சிக்கின்றனர். இதனாலேயே, தனித் தெலுங்கானாவை எதிர்த்து நடக்கும் போராட்டங்களைக் காரணம் காட்டி, தீர்மானம் நிறைவேறாத வகையில் ஆந்திர சட்டமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மைய அரசு கொள்கை அளவில் இசைவு தெரிவித்துள்ளதன் எதிரொலியாக, பல்வேறு பெரிய மாநிலங்களிலும் இத்தகைய கோரிக்கை எழுந்துள்ளது. வன்னியர் நாடு என்ற கோரிக்கையுடன் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று முன்பு கோரி வந்த பா.ம.க.வின் ராமதாசு, இப்போது மீண்டும் சென்னையைத் தலைநகராகக் கொண்ட வட தமிழ்நாடு என்றும், மதுரையைத் தலைநகராகக் கொண்ட தென் தமிழ்நாடு என்றும் பிரிக்க விரும்புவதாக சாதிய அடிப்படையில் அறிவித்துள்ளார். இந்திய அரசியல் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் கடந்த 50 ஆண்டுகளில் 12 புதிய மாநிலங்கள் உருவாகியுள்ளதைக் காட்டி, உ.பி. மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கக் கோருகிறார், மாயாவதி. உ.பி.-பீகாரிலிருந்து போஜ்பூர், அசாமிலிருந்து போடோலாந்து, உ.பி.-ம.பி.யிலிருந்து பண்டேல்கண்ட், மகாராஷ்டிராவிலிருந்து மரத்வாடா மற்றும் விதர்பா, ஒரிசாவிலிருந்து மகா கவுசல், பீகாரிலிருந்து மிதிலாஞ்சல், ராஜஸ்தானிலிருந்து முரு பிரதேஷ், உ.பி.யிலிருந்து பூர்வாஞ்சல், குஜராத்திலிருந்து சௌராஷ்டிரா – எனத் தேசிய இன அடிப்படையில் அல்லாமல், ஒரே இனம் – ஒரே மொழி பேசும் மாநிலத்திலேயே, பிராந்திய அடிப்படையில்-சாதிய அடிப்படையில், மொழிச் சிறுபான்மையினர் அடிப்படையில் தனி மாநிலக் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கட்டுமானத்தில், நிர்வாகத்தைத் துறை வாரியாகப் பிரிப்பதும், அது போல மாநிலங்களையும், மாவட்டங்களைப் பிரிப்பதும் நடக்கக்கூடியதுதான். அவ்வாறு மாவட்டங்களைப் பிரிக்கக் கோரி மக்கள் போராடுவதை ஜனநாயகக் கோரிக்கையாகக் கருத முடியாது. பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூரைச் சேர்க்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டமும், செங்கல்பட்டில் இருந்து மாவட்ட நீதிமன்றங்களை காஞ்சிபுரத்துக்கு மாற்ற வேண்டும், மாற்றக் கூடாது என்று அந்தந்த பகுதிவாழ் மக்கள் நடத்திய போராட்டமும், அரசுத் திட்டங்கள்-சலுகைகளைப் பெறுவதற்கான பொருளாதாரப் போராட்டம்தானே தவிர, அது முற்போக்கான – ஜனநாயகக் கோரிக்கையுடன் நடத்தப்படும் போராட்டமல்ல.

இப்படித்தான் தெலுங்கானா தனி மாநிலப் போராட்டத்தையும் பார்க்க முடியும். பிராந்திய உணர்விலிருந்து எழும் பொருளாதாரவாதக் கோரிக்கைதான் இது. ராயலசீமா மற்றும் கடற்கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களின் ஆதிக்கம்-சூறையாடலைக் கண்டு குமுறி, அவர்கள் இடத்தை தாங்கள் பிடிக்க வேண்டும் என்ற ஏக்கத்திலிருந்துதான் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கான போராட்டம் நடக்கிறது. தெலுங்கானா பிராந்தியத்தில் வீட்டுமனை, கல்குவாரிகள், கனிமச் சுரங்கங்கள், காட்டுவளம் முதலானவற்றைச் சூறையாடி ஆதிக்கம் செலுத்திவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களுக்கு எதிராக தெலுங்கானா பிராந்திய மக்கள் இதுவரை எந்தவொரு போராட்டத்தையும் கட்டியமைக்கவில்லை. மாறாக, தாங்கள் வளர்ச்சித் திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாக, பின்தங்கிய நிலையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே நடுத்தர வர்க்கம் குமுறுகிறது. உயர்கல்வி, வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகள் முதலானவற்றில் தாங்களும் அமர வேண்டும் என்ற வேட்கையே தனி மாநிலக் கோரிக்கையாக எழுந்துள்ளது.

ஆனால் மாவோயிஸ்டுகளோ, அரசுக்கு எதிரான எந்தப் போராட்டத்தையும் நாம் ஆதரிக்க வேண்டும், அது முற்போக்கான போராட்டம் என்று கருதுகின்றனர். போராட்டத்தின் கோரிக்கையைப் பற்றிப் பரிசீலிக்காமல், அப்போராட்டத்தைப் போர்க்குணமிக்கதாக மாற்றுவதன் மூலம், அதை புரட்சிகரப் போராட்டமாக வளர்த்தெடுக்க முடியும் என்றும் குருட்டுத்தனமாக நம்புகிறார்கள். ஏற்கெனவே, காலிஸ்தான் போராட்டத்தை இந்த நோக்கத்தில்தான் ஆதரித்தனர். பின்னர், ’80-களில் தனித் தெலுங்கானா போராட்டத்தை முன்னெடுப்பது என்ற பெயரில் தெலுங்கானா பகுதியில் சில சாகசவாத நடவடிக்கைகளிலும் இறங்கினர். இப்போது நடந்த தனித் தெலுங்கானா போராட்டத்தையும் இந்த அடிப்படையிலேயே ஆதரித்து பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கின்றனர்.

ஓட்டுக்காக, சந்தர்ப்பவாதமாக பல கட்சிகள் தனிமாநிலக் கோரிக்கையை ஆதரிக்கின்றன. தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கைக்கான போராட்டத்தை இந்துவெறி பா.ஜ.க.வும் ஆதரிக்கிறது. அது, ஒரே மொழி பேசும் ஒரு தேசிய இனத்தைக் கொண்ட மாநிலத்தை, நிர்வாக வசதிக்காகப் பிரிப்பதில் தவறில்லை என்று வாதிடுகிறது. இதன்மூலம் நிர்வாகம் எளிமையானதாகவும் சிறப்பாகவும் அமையும் என்கிறது. ஆனால் பா.ஜ.க.வின் நோக்கம் வேறானது. ஒரே மொழி பேசும் ஒரே இனத்தைச் சேர்ந்த மாநிலம் என்றால், அங்கு தமிழ்நாடு போல தேசிய இனப் போராட்டங்கள் எழும்; தேசிய ஒருமைப்பாடு கந்தலாகிப் போகும்; ஒரே இனத்தை பல மாநிலங்களாகக் கூறு போட்டால், அத்தகைய போராட்டங்கள் எழுவது நீர்த்துப்போகும். எனவே, தேசிய இன-மொழி அடையாளங்களுக்கு அப்பால், இந்துத்துவ அடிப்படையில் “தேசிய’ ஒருமைப்பாட்டை நிறுவவே அது விழைகிறது. காங்கிரசும் இதே நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது.

மேலும், பெரிய மாநிலம் என்றால் பிராந்திய கட்சிகள் செல்வாக்கு செலுத்தி மைய அரசை ஆட்டிப் படைக்கின்றன. எனவே, மாநில அளவில் செல்வாக்கு பெற்றுள்ள பிராந்திய கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் கூடுதல் பங்கு கேட்டு நிர்ப்பந்திப்பதைத் தடுக்க, சிறிய மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்பதே ராகுல் காந்தியின் பிரித்தாளும் சூழ்ச்சித் திட்டம். இதனால்தான் வெள்ளோட்டமாக இப்போது தெலுங்கானாவைப் பிரிப்பதாக அறிவித்து, விளைவுகளைப் பரிசீலித்து, அடுத்த கட்டமாக பிற மாநிலங்களையும் பிரிக்க மைய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்போல, மொழி-இன அடிப்படையில் அல்லாமல், நிர்வாக அடிப்படையிலான பிரிவினை கொண்டதாக, பெரிய மாநிலங்களை மாற்றியமைக்கும் நோக்கத்துடன்தான், தற்போது மாநில மறுசீரமைப்புக் கமிசன் உருவாக்கப்படுகிறது.

மறுபுறம், ஒரே தேசிய இனத்தைக் கொண்ட பெரிய மாநிலம் என்றால், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மறுகாலனியாக்கச் சூறையாடலுக்கான ஒப்பந்தங்களைப் போடுவதில் பல சிக்கல்கள் எழுகின்றன. பிராந்திய நலன்களை முன்வைத்து, அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் இத்தகைய ஒப்பந்தங்களை எதிர்த்து நிறைவேற்ற முடியாமல் இழுத்தடிக்கின்றன. சிறிய மாநிலங்கள் என்றால், பின்தங்கிய மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை வாயடைக்கச் செய்து, இத்தகைய மறுகாலனியச் சூறையாடலுக்கான ஒப்பந்தங்களை அதிக சிக்கல் இல்லாமல் நிறைவேற்ற முடிகிறது. இதற்கு, சிறிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட ஜார்கண்டும், சட்டிஸ்கரும் சான்றுகளாக உள்ளன. ஏகாதிபத்தியவாதிகள் இந்த நோக்கத்தோடுதான் நிர்வாக வசதிக்காக சிறிய மாநிலங்களாகப் பிரிப்பதை ஆதரிக்கின்றனர். ஏகாதிபத்தியவாதிகளின் விருப்பத்தையே தேசியக் கட்சிகளும்எதிரொலிக்கின்றன. இந்த உண்மைகளைக் காண மறுத்து, தனி மாநிலக் கோரிக்கையை குருட்டுத்தனமாக ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அடிப்படையிலேயே தவறானதாகும்.

எனவே தற்போது தனி தெலுங்கானா கோரி நடக்கும் போராட்டம், பொருளாதாரவாதக் கோரிக்கைதானே தவிர, அது தேசிய இன உரிமைக்கான போராட்டமே அல்ல. அரசுக்கு எதிரான போராட்டம், மக்களின் நீண்டகால விருப்பம் என்பதை வைத்து அதை முற்போக்கான-ஜனநாயகக் கோரிக்கையுடன் நடக்கும் போராட்டமாகவும் கருத முடியாது. அதேசமயம், தெலுங்கானா பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி சூறையாடிவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்கள், தெலுங்கானா பிரிவினையை எதிர்த்து, ஒரே ஐக்கியப்பட்ட ஆந்திரா என்ற கோரிக்கையுடன் நடத்தும் எதிர்ப்போராட்டமும் நியாயமானதல்ல. அரசாங்கப் பதவிகளுக்கும் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்குமான போட்டாபோட்டியில், பாட்டாளி வர்க்கம் இதில் எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது.

_________________________________
புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010

_________________________________

அரச குழந்தை ஆய் போனாலும் அது செய்தி !

12

டந்த திங்கட்கிழமை ஜூலை 22-ம் தேதி இங்கிலாந்து நேரப்படி மாலை 04:24 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 09:54 மணி) இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு புது வாரிசு பிறந்தது. இனி இந்த நேரத்தை வைத்து இந்தியாவின் பிரபல ஜோதிட ஏமாற்றுக்காரர்கள் ஜாதகம் எழுதி அனுப்பி வைத்து அக்னாலட்ஜ்மெண்ட் வந்தால் அதை பிரேம் செய்து மாட்டி வைப்பது உறுதி. அதையும் அடுத்த ஆண்டில் ராஜ் டிவியிலோ, விஜய் டிவியிலோ பார்க்கலாம்.

வில்லியம், கேத்தரீன்
20 சதவீதம் முதல் 40 சதவீத மக்கள் இந்த அரச குடும்பம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என கருதுகிறார்கள்

எடின்பர்க் இளவரசர் ஃபிலிப் மற்றும் இப்போதைய இங்கிலாந்து ராணி எலிசெபத்தின் கொள்ளு பேரன், இளவரசர் சார்லஸ், டயனா தம்பதிக்கு பேரன், இளவரசர் வில்லியமின் முதல் மகன். அடுத்த பட்டம் சூடும் வரிசையில் நேரடியாக மூன்றாவதாக இருக்கும் இளவரசர். இப்படி ஏகப்பட்ட அடையாளங்கள். இதைப் பார்த்தால் அடையாளங்களின் மொத்த விற்பனையாளர்களான பின் நவீனத்துவவாதிகளே தற்கொலை செய்து கொள்வார்கள்.

இங்கிலாந்து அரச குடும்பத்தைப் பற்றி நமக்கு அறிமுகம் தேவையில்லை, ஜனநாயகம் தழைத்தோங்கும் இங்கிலாந்து என மார்தட்டிக் கொண்டாலும், ஆளும் வர்க்கங்கள் அரச குடும்பத்தை முதன்மைப்படுத்தியும், அதற்கு விசுவாசமாக இருப்பதை வலியுறுத்தியும் தான் மக்களை ஏமாற்றுகின்றன. ஜனநாயக இங்கிலாந்தின் தேசிய கீதம் இன்னும் ராணியை (ராஜா) காப்பாற்று என கடவுளை கோருகிறது.

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த கருத்துக்கணிப்பில் சுமார் 20 சதவீதம் முதல் 40 சதவீத மக்கள் இந்த அரச குடும்பம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என கருதுகிறார்கள். இங்கிலாந்தின் அரச குடும்பம் என்பது மக்கள் வரிப்பணத்தை வீணாகவும், போலி ஆடம்பரத்திற்கும் செலவு செய்யும் மிக மோசமான அமைப்பாக உள்ளது.

அரச குடும்பம் பெரும்பாலும் மக்களிடம் செல்வாக்கை இழந்து விட்ட நிலையில், இங்கிலாந்து ஊடகங்களோ, அவர்களை புனிதப் படுத்துவதையும், அவர்களை பற்றிய கிசுகிசுக்களை தலைப்பு செய்திகளாக்குவதையும் தொடர்ந்து செய்தபடி தான் உள்ளன. அந்த வகையில் அரச குடும்பத்தின் செல்வாக்கு கிசுகிசு ஆவல் வழியாக நிலைநாட்டப்படுகிறது. இதன்படி ராயல் விக்டோரியன் ராஜதர்மம் அந்தப்புரத்து ஜன்னல் வழியாக தழைத்தோங்குகிறது.

முன்பு ஊடகங்களுக்கு பெரும் தீனி போட்ட இளவரசி டயானா பத்திரிகையாளர்களின் செய்தி வேட்டையிலேயே உயிரிழந்தார். அவர் உயிரோடு இருந்த போது கண்ணிவெடி, பசி-பட்டினி போக்க வந்த தேவதையாக ஆளும் வர்க்கத்திறத்கு பயன்பட்டார். மேலும் அரச குடும்பத்தில் ஒரு சாதாரண மக்கள் பிரதிநிதி என்பதாகவும் டயானா போற்றப்பட்டார். அரச குடும்பத்தின் புகழ் பாடுவதற்கு இப்படி ஒரு உத்தி. இது போதாதென்று முர்டோக்கின் பத்திரிகைகள் அரச குடும்பத்தின் அறைகளில் ஒட்டுக் கேட்கும் கருவிகளை வைத்து அவர்களின் ரகசியங்களை தலைப்பு செய்தியாக்கி பணம் சம்பாதித்தன என்பது அம்பலமாகி பெரும் சர்ச்சையானது.

ஆனால் ஹாலிவுட் படமான “பேங்க் ஜாப்” படத்தை பார்த்தீர்களென்றால் 70-களிலேயே இவர்களது கிசுகிசு, புகைப்படங்களாக எடுக்கப்பட்டு கட்டைப் பஞ்சாயத்து பேர்வழிகளுக்கு எப்படி பயன்பட்டது என அறியலாம். அன்று அரச குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்ற நீதிபதிகள் கூட குற்றவாளிகளை விடுவித்தார்களாம். ஆக தனது சுரண்டலை மறைக்க உதவும் அரச குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற இங்கிலாந்து ஆளும் வர்க்கம் எதையும் செய்யும்.

கிரீடம்
அதிக அளவு ஊடங்களால் தொல்லைப் படுத்தப்பட போகும் குழந்தையாக இந்த குழந்தை இருக்கும் என பத்திரிகைகள் கவலைப்பட்டன.

கடந்த சில வருடங்களாக இங்கிலாந்து கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் அங்கு மக்கள் போராட்டங்கள் பெருகி வருகின்றன. ஆனால் முதலாளிகளோ, அரசாங்கமோ மக்கள் போராட்டங்களை கண்டு கொள்ளாமல் தலைப்பு செய்திகளாக்க ஏதேனும் கிசுகிசு கிடைக்காதா என்ற நிலையில் ஏங்கித் தவிக்க, அவர்களின் வாய்க்கு கிடைத்த அவல் தான் இந்த அரச குடும்பத்தின் புது வாரிசு.

இளவரசர் வில்லியமின் மனைவி கேதரின், தான் கருவுற்றிருப்பதாக கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவித்தார், அதைத் தொடர்ந்து குழந்தை பிறப்பு ஜூலை மாதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வளவுதான் ஊடகங்கள் தம் அருவருப்பான ஆட்டத்தை தொடங்கின. சிஎன்என் முதல் பிபிசி வரை பல்வேறு உலகத் தொலைக்காட்சிகளிலும், செய்தி சானல்களிலும், அரச குடும்பத்தின் புது வரவான “ராயல் பேபி”யை பற்றி சிறப்பு செய்திகள், பேட்டிகள் வர தொடங்கின.

கேதரினுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் முதல், அவருக்கு பணிவிடை செய்யும் நர்சுகள் வரை, ஏற்கனவே பக்கிங்காம் அரண்மனையில் தாதிகளாக இருந்தவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை பேட்டிகள், கருத்துகள், கருத்துக்கணிப்புகள், பிறக்கப் போகும் குழந்தைக்கு நட்சத்திர பலன் பார்ப்பது, குழந்தை எந்த தேதியில் பிறக்கும், ஆணா பெண்ணா? போன்ற பந்தயங்கள், போட்டிகள் என ஊடகங்களில் நிகழ்ச்சிகள் களை கட்டின. இதில் ஆஸ்திரேலிய வானொலியின் அருவெருப்பான நடத்தை காரணமாக ஒரு செவிலியர் தற்கொலையே செய்து கொண்டார்.

இந்த செய்திகளை வைத்து எவ்வளவு காசு பார்க்க முடியுமோ அவ்வளவு காசு பார்க்கப்பட்டது. ”ரஜினி எப்பொழுது முதலமைச்சர் ஆவார்” என டெம்ப்ளேட் கவர் ஸ்டோரியை குமுதம், விகடன் வெளியிடுவது போல், சில டெம்ப்ளேட்டுகளை பாரம்பரிய பத்திரிகைகள் வெளியிட்டன.

ஜூலை இரண்டாவது வாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்த நிலையில், கேதரின் இடுப்பு வலி வந்து மருத்துமனைக்கு சென்ற செய்தி வெளியானது. அவ்வளவு தான் பிபிசி முதல் பல லைவ் சேனல்களின் காமிராக்கள் லண்டனில் உள்ள செயிண்ட் மேரி மருத்துவமனை வாசலில் குவிந்து விட்டன.

எந்நேரமும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் யார் முதலில் அந்தச் செய்தியை சொல்லப் போவது? என ஒரே பரபரப்பு. குழந்தை பிறந்த செய்தியை முதலில் சொல்வதோடு அது ஆணா, பெண்ணா? என்ற செய்தியை முதலில் சொல்ல ஊடகங்கள் நடுவில் பெரும் போட்டி நிலவியது.

பல சீரியசான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கையான கார்டியன் கூட முதல் பக்கத்தில் பாதியளவை ராயல் பேபிக்காக ஒதுக்கியது. அரச குழந்தை பிறந்தவுடன், கார்டியனில் இது வரை அரச பரம்பரை வாரிசு வரவுகளை எப்படியெல்லாம் மக்களுக்கு அறிவித்துள்ளது என ஒரு சிறப்பு கட்டுரையை வெளியிட்டது.

கேட், வில்லியம்
அரச குழந்தை தன் முதல் நாப்பியை மாற்றி விட்டது என ஒரு செய்தி

இதில் நகை முரணாக அதிக அளவு ஊடங்களால் தொல்லைப் படுத்தப்பட போகும் குழந்தையாக இந்த குழந்தை இருக்கும் என பத்திரிகைகள் கவலைப்பட்டன. அரச பரம்பரையோ இந்த பிரபலத்தை ரசித்துக் கொண்டே வழக்கமாக சொல்லும் “எங்களுக்கு தனிமை வேண்டும் “ என்ற பல்லவியை பாடியது.

கடும் விலை வாசி உயர்வு, கல்விக் கட்டண உயர்வு, பொருளாதார நெருக்கடி, மக்கள் நலத் திட்டங்களில் வெட்டு, தேசிய மருத்துவ சேவையின் தடுமாற்றம் என இங்கிலாந்து எரிந்து கொண்டிருக்க ஜூலை 22 அன்று எல்லா ஊடகங்களிலும் அந்த குழந்தை பிறப்பை பற்றி கிசுகிசு, மொறுமொறு செய்திகள். ஒரே ஆறுதல், கார்டியன்; தன் தளத்தில் “நான் அரச பரம்பரையின் ஆதரவாளனில்லை” என்ற ஒரு சுட்டியை கொடுத்தது. அதை க்ளிக்கினால் அரச குடும்பத்து குழந்தையை பற்றிய செய்திகள் வடிகட்டப்பட்டன.

குழந்தையைப் பற்றிய செய்தியில் முன்னணியில் இல்லையென்றாலும், வேதாளத்தை துரத்தும் விக்கிரமாதித்தியனாக விடா முயற்சியுடன் பல ஊடகங்கள் புது விதமான செய்திகள், கட்டுரைகள் மூலம் இதை காசாக்கி கொண்டுதான் இருக்கின்றன.  வில்லியமின் குழந்தை பேறுக்கான தந்தை விடுமுறை, அது எத்தனை நாட்கள், இது வரை கொள்ளுப் பேரன் பேத்தியை பார்த்த அரசர்கள் யார்? என்று கட்டுரைகள். இதை சார்ந்த கேள்வி பதில் போட்டிகள், இங்கிலாந்து அரசர்களின் வரலாறு என அல்லோலப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

இதனுடைய உச்சம், பல நூறாண்டு கால அரச பரம்பரை வரலாற்றில், “நாப்கின் போடும் முதல் குழந்தை இது தான் என ஒரு செய்தி, (வில்லியம் நாப்கின் போடவில்லியாம்), அரச குழந்தை தன் முதல் நாப்பியை மாற்றி விட்டது என ஒரு செய்தி. முதல் பால், முதல் அழுகை, முதல் ஆய், முதல் சிறுநீர் என செய்தியின் பட்டியல் நீளலாம்.

ஊடகங்கள் இப்படி கிசுகிசு, மொக்கைச் செய்திகளுக்கு மக்களின் ரசனையை தாழ்த்துவது உலகம் முழுவதும் நடக்கும் ஒன்று தான். ரஜினிக்கு முறுக்கு பிடிக்கும், ரம்பாவுக்கு வாழைப்பழம் பிடிக்கும், தனுஷின் குழந்தைக்கு விஜய் பிடிக்கும், அஜித் மகள் பருப்பு சாதம் சாப்பிடும், கல்யாண கவரேஜ், கருமாதி கவரேஜ், என கிசு கிசு டிட்பிட்ஸ்களில் தான் இதழியல் இயங்கி கொண்டிருக்கிறது.

இந்த ஊடகங்கள் உண்மையான மக்களை புறக்கணிப்பதும், அவர்களது வாழ்க்கை போராட்டங்களை புறக்கணிப்பதும், அவர்களின் ரசனையை தாழ்த்துவதும் மூலமாக அவர்களை ஒடுக்கப்படும் பாமரர்களாகவே வைத்திருக்க விரும்புகின்றன, இது அவர்கள் ஆளும் வர்க்கத்தினருக்கும் செய்கின்ற சேவை.

அரச பரம்பரை, ஆளும் வர்க்கம் ஆகிய பாஸிஸ்டுகளை விட அவர்களுக்கு விளக்கு பிடித்து வெளிச்சம் போட்டு காட்டும் இந்த ஊடகங்கள் தான் உழைக்கும் மக்களின் முதல் விரோதி. ஏழை நாடுகளின் ஆயிரக்கணக்கான குழந்தைகள் அன்றாடம் இறக்கும் காலத்தில்தான் இங்கிலாந்து அரச குடும்பத்தின் குழந்தை குறித்த கொண்டாட்டங்கள் அருவெருப்புடன் முன்வைக்கப்படுகின்றன. ஊர், சேரியைக் கொளுத்தி வாழும் பண்ணையார் தனக்கு பேரன் பிறந்தால் கொஞ்சமாட்டானா என்ன?

– ஆதவன்

மேலும் படிக்க

மதுரவாயில் போலீசு மாமூல் வெறிக்கு தண்டனை !

4

சென்னை-மதுரவாயல் பகுதியிலுள்ள ஈ.வெ.ரா.பெரியார் சாலையில் கே.தர்மராஜ், சேதுராமன் உள்ளிட்ட ஐந்து பேர் கூட்டாகச் சேர்ந்து ஒரு சிறிய உணவகத்தை நடத்தி வருகின்றனர். மதுரவாயல் போலீசார் இவர்களிடம் மாமூல் வசூலிப்பதை எவ்விதத் தடங்கலுமின்றி நடத்திவந்த வேளையில், ஆறாண்டுகளுக்கு முன்பு அப்போலீசு நிலையத்தில் ஆய்வாளராகப் பதவியேற்ற எஸ். சீதாராமன் இவர்களிடம் மாமூல் வசூலிப்பதில் ஒரு கேவலமான மாற்றத்தைக் கொண்டுவந்தார். “மாமூலைப் பணமாகத் தருவதற்குப் பதிலாக, போலீசு நிலையத்தைச் சேர்ந்த நான்கு போலீசாருக்கும் மூன்று வேளை சாப்பாடை மாமூலாகத் தர வேண்டும்” என அந்த அதிகாரியிடமிருந்து உத்தரவு பறந்தது. இதன்படி நடந்துவந்த அவர்கள், சில மாதங்களுக்குப் பின் சாப்பாடு கொடுப்பதை நிறுத்திவிட்டனர்.

ஈனப்பிறவிகள்மாமூல் நிறுத்தப்பட்டதைத் தமது அதிகாரத்துக்கு விடப்பட்ட சவாலாகக் கருதிய ஆய்வாளர் சீதாராமனும், தலைமைக் காவலர் திருவேங்கடமும் கடந்த மார்ச் 19, 2007 அன்று அந்த உணவகத்திற்குச் சென்று, அங்கிருந்த தர்மராஜ், சேதுராமனிடம் அவர்களது வாகனத்துக்கான உரிமத்தைக் கேட்டனர். அவர்கள் அந்த உரிமத்தைக் கொடுத்தவுடன், அதனை வாங்கி கிழித்துப் போட்ட அவ்விரண்டு போலீசாரும் மீண்டும் உரிமத்தைக் கொடுக்குமாறு அடாவடித்தனம் செய்தனர். தர்மராஜும் சேதுராமனும் இதனைத் தட்டிக் கேட்டவுடனேயே, அவர்களைத் தாக்கி, போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்று சட்டவிரோதக் காவலில் அடைத்தனர். இருதய நோயாளியான தர்மராஜுக்கு இந்தத் தாக்குதலில் மண்டை உடைந்து இரத்தம் வழிந்த போதும் அவரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப மறுத்தார் ஆய்வாளர் சீதாராமன். தர்மராஜின் வியாபாரக் கூட்டாளிகள் இந்த அத்துமீறல் பற்றி விசாரிக்க போலீசு நிலையத்திற்கு வந்தவுடன், அவர்களையும் சட்டவிரோதக் காவலில் அடைத்ததோடு, வாகனச் சோதனை நடத்திய பொழுது தர்மராஜும் அவரது கூட்டாளிகளும் தலைமைக் காவலரைத் தாக்கியதாகப் பொய் வழக்குப் போட்டு புழல் சிறைக்குள் தள்ளியது, மதுரவாயல் போலீசு.

நீதிமன்றத்தில் இது பொய் வழக்கு என நிரூபிக்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மதுரவாயல் போலீசின் இந்த அத்துமீறலுக்கு எதிராக தர்மராஜ் மனித உரிமை ஆணையத்தில் தொடுத்த வழக்கில், “பாதிக்கப்பட்ட ஐவருக்கும் தலா ரூ.50,000/- வீதம் ரூ.2,50,000/-ஐத் தமிழக அரசு வழங்க வேண்டும்; இத்தொகையை அவ்விரு போலீசாரின் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ள வேண்டும்; அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தித் தண்டிக்க வேண்டும்” என ஆறாண்டுகள் கழித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

14-cartoonமதுரவாயல் போலீசார் அந்த ஐந்து பேரையும் தொடர்ந்து மிரட்டி மாமூல் வசூலித்து வந்துள்ளனர்; நியாயமான அடிப்படையில் அவர்கள் மாமூலைத் தர மறுத்தபொழுது, போலீசார் அவர்களை அடித்தும் சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்தும் துன்புறுத்தியுள்ளனர்; மாமூல் தர மறுத்த ஒரே காரணத்திற்காக அவர்கள் பொய் வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இத்துணை சட்டவிரோதச் செயல்களையும் செய்த போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்; சிறையில் தள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தீர்ப்போ அபராதம் என்ற மொன்னையான தண்டனையை மட்டும்தான் அவர்களுக்கு விதித்திருக்கிறது. அதுவும் அப்போலீசார் வாகன உரிமத்தைக் கேட்ட சமயத்தில் மனித உரிமைகளை மீறி நடந்துகொண்டதற்காக மட்டும்தான் இத்தண்டனை என்றால், மாமூல் கேட்டு அவர்கள் துன்புறுத்தப்பட்டதை, பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதைச் சகித்துக் கொள்ள வேண்டியதுதானா?

இது விதிவிலக்காக நடந்துவிட்ட சம்பவம் அல்ல என்பதையும் போலீசு ஒரு ஒட்டுண்ணிக் கும்பல் என்பதையும் நாம் ஒவ்வொருவரும் அறிவோம். தமக்குள்ள வானளாவிய அதிகாரத்தின் காரணமாக, கூச்சநாச்சமின்றியும் தண்டிக்கப்படுவோம் என்ற பயமின்றியும் நாலாவிதமான குற்றங்களையும் செய்து வருகிறது, போலீசு. இது போன்ற அத்துமீறல் ஒவ்வொன்றும் போலீசு என்ற அமைப்பையே கலைக்கக் கோரிப் போராட வேண்டும் என்பதை நோக்கி நம்மை உந்தித் தள்ளவில்லையா!

________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2013
________________________________________________________________________________

அசோக் லேலாண்ட் சிஐடியு துரோகம் ! நிர்வாகிகள் விலகல் ! !

1

30.07.2013, ஓசூர்.

சூரில் கனரக வாகனங்களை உற்பத்தி செய்துவரும் தரகு முதலாளித்துவ நிறுவனமான அசோக் லேலாண்டு, தனது பிளாண்ட்- 1 ல், காண்ட்ராக்ட், அவுட்சோர்ஸ், சி.எல் முறைகளை புகுத்தி அதன் மூலம் உபரியாகும் தொழிலாளர்களை யூனிட்- 2 க்கு இடமாற்றம் என்ற பெயரில் துரத்தியடித்து விட்டு ஆட்குறைப்பு செய்து விடுவது என்ற திட்டத்தை தனது அடியாள் படையாக அங்கீகரித்து வைத்திருக்கும் துரோக தொழிற்சங்கத் தலைமையான சி.ஐ.டி.யு மற்றும் மைக்கேல் அணியின் மூலமாகவே செய்துள்ளது.

“காண்ட்ராக்ட், அவுட்சோர்ஸ், சி. எல், முறைகளை புகுத்த நிர்வாகம் எத்தனித்தால்…? அதற்கு சங்கம் துணை நின்று அனுமதித்தால்…? அதனை எதிர்த்து சி.ஐ.டி.யு அணி இறுதிவரை தொழிலாளர் வர்க்க உணர்வுடன் போராடி முறியடிக்கும்” என்று வாய் கிழிய பேசிவிட்டு செயலில் ஆலை நிர்வாகத்தின் ஆணையை தொழிலாளர்கள் மீது சொந்த அணிகளையே மதிக்காமல் சர்வாதிகாரமாக நிறைவேற்றிக் கொடுத்துள்ளது. இதன் மூலம் தாங்கள் தொழிலாளர் இயக்கத்தில் ஒளிந்திருக்கின்ற வர்க்க துரோகிகள்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் கொண்டனர். இதனை வாசகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் சி.ஐ.டி.யு அணியிலிருந்து வெளியேறிய லேலாண்டு அணி நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்களின் விலகல் கடிதங்களை இங்கே அப்படியே பிரசுரிக்கிறோம்.

நன்றி!

தகவல்: பு.ஜ செய்தியாளர், ஓசூர்.
______________________
சி.ஐ.டி.யு அணித் தலைமைக்கு….

அனுப்புனர்
அணி நிர்வாகிகள்,
சி.ஐ.டி.யு. அணி.
அசோக் லேலண்ட் 1, ஓசூர்.

பெறுநர்
திரு பொதுச் செயலாளர்/ தலைவர் அவர்கள்.
சி.ஐ.டி.யு. அணி.
அசோக் லேலண்ட், ஓசூர்.

பொருள் :
அணியின் தொழிலாளர் வர்க்கத் தன்மை செயலிழந்ததைத் தொடர்ந்து அணியின் நிர்வாக பொறுப்பிலிருந்து விலகுவது சம்பந்தமாக.

மதிப்பிற்குரிய பொதுச் செயலாளர், தலைவர் அவர்களுக்கு,

நாங்கள் இந்தக் கம்பெனியில் சேர்ந்தது முதல் இன்று வரை எங்களை இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு சேர்ந்து செயல்பட்டு வருகிறோம். சி.ஐ.டி.யுவின் மீது கொண்ட பற்றுதல் காரணமாகவும், கொள்கை பிடிப்பு காரணமாகவும், முழு ஈடுபாட்டுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட்டு வந்திருக்கிறோம்.

சமீப காலமாக மட்டுமன்றி கிட்டத்தட்ட சில வருடங்களாகவே அணியின் செயல்பாடுகள் தனிமனித செயல்பாடாகவும், அணியின் தொழிலாளர் வர்க்கத் தன்மை செயலிழந்து, ஜனநாயகப் பாதையை மறுத்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்பொழுது அணியின் நிர்வாகிகள் என்கிற முறையில் இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை நன்கு கவனித்துக்கொண்டு வந்திருக்கிறோம்.

இந்த பேச்சுவார்த்தையின் போது ஆரம்பத்தில் அணியின் நிர்வாகக்குழு, பொதுக்குழு எடுத்த நிலைப்பாட்டிற்கும், முடிவிற்கும் மாறாகவும், (அணியின் தீர்மானம் 1. எம்.டி.வி. அவுட்சோர்ஸ், 2. மேன் பவர் இடமாற்றம்.) அணியின் செயல்பாடு இருக்கிறது.

அதன்பிறகு மாவட்டக் குழு முன்னிலையில் நடந்த அணி நிர்வாகிகள் கூட்டத்தில் அவுட் சோர்ஸ், காண்ட்ராக்ட் சி.எல். போன்ற தொழிலாளர் விரோத கொள்கைகளை சி.ஐ.டி.யு ஒத்துக்கொள்ளாது என்றும் அப்படி ஏதாவது சங்கம் இது சம்பந்தமாக முடிவு எடுக்கும் பட்சத்தில் சி.ஐ.டி.யு அதை எதிர்த்து போராடும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அந்த நிலைப்பாட்டிற்கு மாறாக பகிரங்கமாகவே தற்பொழுது அணி, நிர்வாகத்தின் பக்கம் நிற்பதையும், அதற்கு தகுந்தாற்போல் 10.7.13 அன்று மாவட்டச் செயலாளர் தோழர் பீட்டர் முன்னிலையில் நடைபெற்ற அணியின் நிர்வாகிகள் கூட்டத்தில் அணி சங்க நிர்வாகி தோழர் பெத்து முருகேசன் அவர்கள் தற்பொழுது கையெழுத்தாகும் ஒப்பந்தம் முழுக்க முழுக்க ஒரு அவுட் சோர்ஸ், ஒப்பந்தமாகவே இருக்கும். நிர்வாகம் கேட்ட அவுட் சோர்ஸ், காண்ட்ராக்ட் சி.எல், இவைகளை ஒத்துக்கொண்டு அதன் மூலம் உபரியாகும் தொழிலாளர்களை யூனிட் 2-க்கு இடமாற்றம் செய்வது போன்ற அனைத்து தொழிலாளர் விரோதக் கொள்கைகளும் ஒத்துக் கொள்ளப்படும் என்ற சங்கத்தின் நிலைப்பாட்டை பகிரங்கமாகவே தெரிவித்த பிறகும் சங்கத்தின் செயல்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் அணித் தலைவர், செயலாளர் அதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் அதை எதிர்க்காமல் ஆமோதித்து அமைதியாக இருந்தனர். இது வர்க்க விரோத செயலாகும்.

தற்பொழுது கம்பெனியின் புறச்சூழ்நிலைகளும், அகச்சூழ்நிலைகளும் எவ்வாறு இருந்தாலும் சி.ஐ.டி.யு அணியானது தன் கொள்கைகளையோ இந்த ஒப்பந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்தவோ அல்லது தொழிலாளர்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகளை தடுக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்தின் அடாவடிக்கு எதிராக எந்தவித எதிர்வினைகளையும் பதிவு செய்யும் வகையில் எவ்வித இயக்கமும் நடத்தப்படவில்லை.

ஒரு தொழிலாளி ஒரு இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது என்பது தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், தன்னைப் போல் சக தொழிலாளர்களுக்கு அந்த இயக்கம் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்காகவுமே தவிர வேறெந்தக் காரணங்களும் இருக்க முடியாது. இந்த சங்கம் தொழிலாளர் வர்க்கத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் என நம்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. எனவே இந்த இயக்கத்தில் நாங்கள் தொடர்ந்து இருக்கவோ, செயல்படுவதோ என்பது தொழிலாளர் வர்க்க விரோத செயல்பாடாகவே கருதுகிறோம். எனவே நாங்கள் அணியின் நிர்வாக பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் எங்களை விலக்கிக்கொள்கிறோம் என்பதை தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கனம்
அணி நிர்வாகிகள்.

இடம்: ஓசூர்.
தேதி: 12.7.2013.

லேலாண்டு தொழிலாளர்களுக்கு…..

சி.ஐ.டி.யு அணியிலிருந்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அதன் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து விலகிக் கொள்வது தொடர்பாக……

நமது சங்கம் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான கோரிக்கைகளை நிர்வாகத்திடம் கொடுத்தவுடன், நிர்வாகத்தரப்பிலிருந்து வழக்கம் போல் ஆட் தூக்கி சரத்துக்கள் வெளியிடப்பட்டன.

ஏ.எல்.டி.எஸ். என்ற சட்ட விரோத உற்பத்தி முறை மூலம், நிரந்தரத் தொழிலாளர் வேலை முறையிலிருந்து, காண்ட்ராக்ட் வேலை முறையை வலுப்படுத்துவது முதல், இடமாற்றம் என்ற பெயரில் ஆட்குறைப்பு, காண்ட்ராக்ட் சி.எல்., புகுத்துதல்…..என படமெடுத்தது நிர்வாகம். தொழிலாளர்கள் மத்தியில் விவாதம் கிளம்பியது. இப்பொழுது கிளம்பியிருப்பது சாதாரண நாகம் அல்ல, கடும் விச ஜந்து. இது கடித்தால் ஆள் பிழைப்பது கடினம் என்ற பொதுப் பார்வையில் பேசப்பட்டது. தொழிலாளர்களை தூண்டில் போட முதலில் ஒரு தொகை அறிவிக்கப்பட்டது.

“நமது அணியும், சங்கத்தலைமையும் நம்மைக் கைவிடாது. நம்மை எப்படியும் காப்பாற்றியே தீரும்.” என்று தொழிலாளர்கள் சமாதானம் ஆனார்கள். ஒரு நீண்ட அமைதி- உற்பத்தி, அமைதி- உற்பத்தி இது மேலும் வளர்ந்து மயான அமைதி சூழ்ந்தது. உடனே நிர்வாகத்தின் பசி லே-ஆஃப் கேட்டது.

“நிர்வாகத்துடன் எந்த அளவுக்கு நாம் ஒத்துழைக்கிறோமோ, அந்த அளவுக்கு நிர்வாகம் ஒப்பந்த பேச்சு வார்த்தையில் முன்னேறி வரும்.” என சங்கத் தலைவர் மைக்கேல் அவர்களின் அறிவிப்பு வெளி வந்தது. நிர்வாகமும் பசியைத் தீர்த்துக்கொண்டது. மீண்டும் வெறுமையின் பயணம் உற்பத்தியை மட்டும் இழுத்துக் கொண்டு சென்றது. தொழிலாளர்கள் மத்தியில் சங்கத்தின் மீதான நம்பிக்கையில் “முணு முணுப்பு” வெறும் தூறலாய் வந்து போனது.

வெறுமை பத்து மாதங்களை விழுங்கிவிட்டு தெனாவட்டாக நகர்ந்து கொண்டிருந்தது. சந்தை நிலவரம் தொழிலாளர்களை மட்டும் பயமுறுத்தியது. மீண்டும் லே-ஆஃப். சங்கம் சந்தர்ப்பம் பார்த்து போராட்டம் நடத்துவதாக நம்பச் சொன்னது. “சம சர்வீசுக்கு சம சம்பளம்” எனும் முழக்கத்தை முன்வைத்து அடையாள உண்ணாவிரதம், கேண்டீன் புறக்கணிப்பு, நான் கோஆப்பரேசன் என ‘முன்னேறுகிறது சங்கம்’. அடுத்து “ஃபைவ் டிஜிட் சம்பளம் கூட கிடைக்காது” என்பதை போட்டுடைக்கிறார் ஆலை வாயிலில் தலைவர் மைக்கேல். போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு வந்தால் ஒப்பந்தப் பேச்சு வார்த்தையில் முன்னேறி வருவதாக நிர்வாகத்தின் நிலையாய் மீண்டும் மைக்கேல் அறிவிப்பு வெளிவருகிறது.

அடுத்தடுத்த பேச்சு வார்த்தை என்று எவ்வளவுதான் நகர்ந்தாலும் நிர்வாகம் 400 பேர் இடமாற்றத்தில் உறுதியாக இருப்பதாக அறிவிப்பு. இழுத்தடிப்பு, அறிவிப்பு என அதே ஒப்பாரி.

முன்னேற்றம் இல்லையென்றால் போராட்டம் என சொன்ன சங்கம் சம்பிரதாயப் போராட்டத்திற்கும் முழுக்குப்போட்டது. இந்நிலையில் இடமாற்றத்திற்கான எந்த அடிப்படை நியாயமும் இல்லை என்பதை விளக்கி தொழிலாளர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை சங்கத் தலைமையிடம் கொடுத்த பொழுது ‘இடமாற்றம் என்பது சங்கத்தின் நிலைபாடே இல்லை‘ என்று சொல்லி தொழிலாளர்களை அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் அணி பொதுக்குழு கூட்டப்பட்டது. நிர்வாகத்தின் நிலைப்பாட்டை ஒட்டி விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்தின் முடிவில் மேன்பவர் இடமாற்றம், மேன்பவர் அவுட்சோர்ஸ் போன்றவை ஒத்துக் கொள்வதில்லை என முடிவு எட்டப்பட்டு ஒரு மனதாக சி.ஐ.டி.யு தீர்மானம் இயற்றப்பட்டு அறிவிக்கப்பட்டது.

மேலும் இது சம்பந்தமாக சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நமது அணியின் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது. சி.ஐ.டி.யு. ன் கொள்கைக்கு எதிரான தொழிலாளர் விரோத கோரிக்கைகளான அவுட்சோர்ஸ், காண்ட்ராக்ட் சி.எல். போன்றவைகளை அனுமதிப்பதில்லை எனவும், இதனால் ஏற்படப்போகும் யூனிட் 2 இடமாற்றத்தை தடுத்து நிறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

மேற்கண்ட அணியின் முடிவுகளை செயல்படுத்த சி.ஐ.டி.யு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. அணி உறுப்பினர்கள் இது தொடர்பாக இயக்கம் எடுக்கச் சொல்லி அணித் தலைமையிடம் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

அணி உறுப்பினர்கள் தமது சொந்த முயற்சியில் தொழிலாளர்களை திரட்டி நிர்வாகத்தின் தாக்குதலுக்கு எதிராக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோதும் அணித் தலைமை நிர்வாகத்தின் பக்கம் இருந்துகொண்டு வேடிக்கை பார்த்தது அனைவரும் அறிந்ததே.

எல்லாவற்றுக்கும் மேலாக அணி நிர்வாகிகள் கூட்டத்தில் சங்க நிர்வாகி என்று சொல்லிக்கொள்ளும் பெத்து முருகேசன் “ஆமாம், இது காண்ட்ராக்ட், அவுட்சோர்ஸ் ஒப்பந்தம்தான்” என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்.

ஆகவே, அணி நிர்வாகிகள் உட்பட, உறுப்பினர்களின் பெரும்பான்மைக் கருத்தை நிராகரிக்கும், ஜனநாயக விரோத, தனி நபர் அதிகாரம் கொண்ட கூடாரமாக அணித் தலைமை விளங்குவதால்…..

சி.ஐ.டி.யு. அணி பொதுக் குழுவின் தீர்மானத்தை காலில் போட்டு மிதிக்கும் சர்வாதிகார தலைமையாக விளங்குவதால்……

தொழிலாளர் விரோத கொள்கைகளான நிரந்தர வேலைகளை அவுட்சோர்ஸ் செய்வதற்கு பச்சைக் கொடி காட்டியதால்…..

காம்பனெண்ட் அவுட்சோர்ஸ் ஏற்றுக்கொண்டதால்….

ஆட்குறைப்பு செய்வது.

சி.எல்.— க்கு சிக்னல் காட்டியது.

போன்ற நிர்வாகத்தின் தொழிலாளர்கள்மீதான தாக்குதல்களுக்கு எட்டப்பன் வேலை செய்யும் சி.ஐ.டி.யு. அணியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து விலகுவதை பெருமையாகக் கருதுகிறோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்
முன்னாள் சி.ஐ.டி.யு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்.  ———————————————————————————————————————-

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – வீரமணியின் கபட நாடகம் !

253

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க தி.க செய்தது என்ன?

ஆகஸ்டு 1 ஆர்ப்பாட்டம் –கல்வி வியாபாரி வீரமணியின் கபட நாடகம்!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

“அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகஸ்டு 1-ம் தேதியன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இதில் திமுக தொண்டர்களும் கலந்து கொள்வார்களென கருணாநிதி அறிவித்திருக்கிறார். திராவிடர் கழகத்துக்கு இந்த கோரிக்கையின் மீது தோன்றியிருக்கும் திடீர் அக்கறை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மதுரை
மதுரையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசும் அர்ச்சகர் மாணவர் (கோப்புப் படம்).

1970-ல் பெரியார் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது அன்றைய திமுக அரசு. அதற்கெதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பார்ப்பனர்கள், ஆகம விதிப்படி தாங்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்றும், பிற சாதியினர் சாமியைத் தொட்டால் சிலை தீட்டாகிவிடும் என்றும் வாதிட்டனர்.

“அர்ச்சகர்கள் தங்கள் வேலைக்கு வாரிசுரிமை கோர முடியாது” என்று உச்ச நீதிமன்றம் கூறிய போதிலும், “மத சம்பிரதாயப்படி தகுதியான நபர்களை மட்டுமே அரசாங்கம் அர்ச்சகராக நியமிக்க முடியும்” என்றும் கூறியது. சாதி, தீண்டாமையை இந்து மத உரிமையாக அரசியல் சட்டத்தின் 25, 26-வது பிரிவுகள் அங்கீகரிப்பதை இத்தீர்ப்பு எடுத்துக் காட்டியது. இந்நிலையை மாற்றும்பொருட்டு அரசியல் சட்டத்தை திருத்துவதற்கு திமுக முயற்சிக்கவில்லை. மாறாக, “அர்ச்சகர் பணி வாரிசுரிமையல்ல” என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்ட பின்னரும், 1972-க்குப் பின் இன்று வரை திமுக, அதிமுக அரசுகளால் நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சகர்களில் பெரும்பான்மையினர் வாரிசுரிமை மற்றும் சிபாரிசின் அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதனை எதிர்த்து வீரமணி போராடியதில்லை. விமரிசித்ததும் இல்லை.

பெரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியை 1993-ல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டமாக ம.க.இ.க நடத்தியது. தனது தோழமை அமைப்புகளுடன் இணைந்து ம.க.இ.க நடத்திய இப்போராட்டத்தில் பெரியார், அம்பேத்கர் படங்களுடன் எமது தோழர்கள் கருவறைக்குள் புகுந்து அரங்கநாதன் சிலையைத் தீண்டினர். தோர்களைத் தாக்கி மண்டையை உடைத்தது பார்ப்பனக் கும்பல். கோயிலுக்கு தீட்டுக் கழிப்பு சடங்கும் நடத்தியது. அன்று தமிழகமே ஆதரித்த இந்தப்போராட்டத்தைக் கண்டித்தவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் ராம.கோபாலன், இன்னொருவர், “வன்முறைப் போராட்டம்” என்று இதனைக் கண்டித்த வீரமணி.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கப் போவதாக 1992-லேயே அறிவித்தார் ஜெயலலிதா. சமூக நீதிகாத்த வீராங்கனையென்று அவருக்குப் பட்டமளித்த வீரமணி, 1996 வரை அதனை அமல்படுத்துமாறு போராடவில்லை. 2001 -ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கிடா வெட்டுத் தடை சட்டம் கொண்டு வந்து, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் கிடாவெட்டி சாமி கும்பிடுவதையே கிரிமினல் குற்றமாக்கினார். ம.க.இ.க அதனை எதிர்த்து கிடா வெட்டும் போராட்டம் நடத்தியது. திராவிடர் கழகமோ சட்டத்தை ஆதரித்து காவடி எடுத்தது.

பத்திரிகை பேட்டி
பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு, சிவனடியார் ஆறுமுகச் சாமி மற்றும் அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதன். (கோப்புப் படம்)

2006 -ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க அவசர சட்டம் கொண்டுவந்தார். உடனே கருணாநிதிக்கு தஞ்சையில் பாராட்டு விழா நடத்தினார் வீரமணி. பார்ப்பனரல்லாத அர்ச்சகர் கருவறையில் பூசை செய்வது போலவும், பார்ப்பனர்கள் வெளியே நின்று சாமி கும்பிடுவது போலவும் சிலை செய்து கருணாநிதிக்கு பரிசளித்தார். கருணாநிதிக்குப் பாராட்டு விழா நடத்திய சாதனைக்காக வீரமணியைப் பாராட்டி சென்னையில் ஒரு ஆடம்பர விருந்து வைத்தார்கள் அவரது தொண்டர்கள். விருந்து செரிப்பதற்குள் அந்த சட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்று விட்டார்கள் பார்ப்பன அர்ச்சகர்கள்.

இதன் விளைவாக 2007-08 இல் அர்ச்சகர் பள்ளியில் பயிற்சி முடித்த 206 மாணவர்கள் தெருவில் நின்று கொண்டிருந்தார்கள். கட்சித்தலைவர்கள் மனது வைத்தால் நடந்து விடும் என்று நம்பிய அந்த அப்பாவி மாணவர்கள் எல்லா தலைவர்களையும் பார்ப்பதற்கு நடையாய் நடந்து கால் தேய்ந்தார்கள். தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்கள் முதல் கருப்புச் சட்டை ஆதீனம் வரை அனைவரையும் பலமுறை பார்த்தார்கள். “வழக்கு இருப்பதால் எதுவும் செய்யமுடியாது” என்பதுதான் மாணவர்களுக்கு கிடைத்த பதில்.

இம்மாணவர்களை, தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று சந்தித்து, அவர்களை சங்கமாகத் திரட்டினார்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த எமது வழக்குரைஞர்கள். உச்ச நீதிமன்ற வழக்கில் மாணவர்களையும் ஒரு தரப்பாக சேர்த்தார்கள். மாணவர்களை வைத்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி நாளேடுகள், வார இதழ்கள், ஆங்கிலப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் மூலம் மக்கள் மன்றத்தில் இப்பிரச்சினையை பிரபலப் படுத்தினார்கள். படித்து முடித்து தீட்சையும் பெற்று விட்ட இம்மாணவர்களுக்கு சான்றிதழைக் கூட திமுக அரசு வழங்கவில்லை. அதனைப் போராடிப் பெற்றுத் தந்தார்கள். தமிழகம் முழுவதும் பல நகரங்களில் அர்ச்சக மாணவர் சங்கமும் மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் இணைந்து உண்ணாநிலைப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார்கள். உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருக்கும் மதுரை மீனாட்சி கோயில் அர்ச்சகர்களை எதிர்த்தும், வழக்கை விரைந்து நடத்த முயற்சிக்காத தமிழக அரசைக் கண்டித்தும் மதுரை மீனாட்சி கோயிலை முற்றுகையிடும் போராட்டம் நடத்திக் கைதானார்கள்.

வழக்கறிஞர் ராஜு
உண்ணாவிரதத்தில் உரையாற்றும் தோழர் ராஜு (கோப்புப் படம்).

செப், 2010 பெரியார் பிறந்தநாளன்று, திருவண்ணாமலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்கள் அர்ச்சக மாணவர்கள். அந்தப் புகைப்படம் ஊடகங்களில் பிரபலமாகவே, ஆத்திரம் கொண்ட இந்து முன்னணிக் காலிகளால் தாக்கப்பட்டார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் அரங்கநாதன். “திருவண்ணாமலைக் கோயிலில் பிரசாத லட்டு பிடிப்பதற்குக் கூட பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்” என்று திமுக ஆட்சியில் அறநிலையத்துறை விளம்பரம் கொடுத்தது. உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவுடன் அதனை அரசு திரும்பப் பெற்றது.

2009 முதல் இன்றுவரை உச்ச நீதிமன்ற வழக்குக்காக சுமார் 15 முறையாவது டெல்லிக்கு அலைந்திருக்கிறார்கள் எமது வழக்குரைஞர்கள். பார்ப்பன அர்ச்சகர்கள் மூத்த வழக்குரைஞர் பராசரனை அமர்த்தியிருப்பதால், அதனை எதிர்கொள்ளும் பொருட்டு நமது தரப்புக்கு காலின் கன்சால்வேஸ், அந்தி அர்ஜுனா போன்ற மூத்த வழக்குரைஞர்களை அமர்த்தியிருக்கிறார்கள். வழக்கு தொடர்பாக இதுவரை ஆகியிருக்கும் செலவை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மட்டுமின்றி ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு போன்ற எமது அமைப்புகள் திரட்டித் தந்திருக்கிறார்கள்.

தற்போது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், பார்ப்பன அர்ச்சகர்களுடன் பேசி சுமுகத் தீர்வுக்கு வரவிருப்பதாகக் கூறி, நீதிமன்றத்தில் 6 மாத அவகாசம் பெற்றது தமிழக அரசு. “இது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை குழி தோண்டிப் புதைக்கும் முயற்சி; ஆகம விதிப்படி அமையாத சிறு கோயில்களில் சூத்திர அர்ச்சகர்களுக்கு வேலை போட்டுக் கொடுத்து வாயை அடைத்துவிட்டு, பெருங்கோயில்களின் அர்ச்சகர் பதவியை பார்ப்பனர்களே வைத்துக் கொள்வதற்கான சூழ்ச்சி” என்று அம்பலப்படுத்தி ஜனவரி 2013-ல் சென்னையில் ஒரு ஆர்ப்பாட்டமும் பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தப்பட்டது. இதற்குப் பிறகுதான், “ஆறுமாதம் தவணை வாங்கி அரசு செய்தது என்ன” என்று அறிக்கை விட்டார் கருணாநிதி.

அர்ச்சகர் மாணவர்
உண்ணாவிரதத்தில் உரையாற்றும் அர்ச்சகர் மாணவர்.

இவையெல்லாம் இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பவர்கள் எமது தோழர்கள்தான் என்பதற்கான ஆதாரங்கள். ஆனால் ஆகஸ்டு 1 ஆர்ப்பாட்டத்தையொட்டி தி.க போட்டிருக்கும் வெளியீட்டில் இவை பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடப்படவில்லை. உண்மையைச் சொன்னால் இந்த வழக்கில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதுகூட இவர்களுக்குத் தெரியாது. ஆகஸ்டு 1 ஆர்ப்பாட்டம் என்பதே ஒரு நாடகம் என்பதனால்தான் இதில் கலந்து கொள்ள முடியாதென்று ம.உ.பா.மைய வழக்குரைஞர்களும் அர்ச்சக மாணவர் சங்கத் தலைவரும் தி.க வினரின் அழைப்பை பல ஊர்களில் நிராகரித்து விட்டார்கள்.

பெரியாரின் மறைவுக்குப் பின், கடந்த 40 ஆண்டுகளில் இந்தக் கோரிக்கைக்காக வீரமணி உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதை தி.க வின் வெளியீட்டைப் படித்தாலே புரிந்து கொள்ள முடியும். கல்வி வியாபாரம் செய்து கல்லா கட்டுவதும், பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை மேலும் பெருக்குவதும்தான் வீரமணி நடத்திவரும் தொழில் சாம்ராச்சியத்தின் இலட்சியம். பெரியாரின் சொத்துககு மட்டுமின்றி, அவரது எழுத்துக்கும் வாரிசுரிமை கோரியவரல்லவா வீரமணி! அர்ச்சக மாணவர்களுக்காக மற்றவர்கள் போராடினாலும், பெரியார் எழுப்பிய கோரிக்கை என்பதால், வாரிசுரிமை என்ற அடிப்படையில் அதற்குரிய பெருமை தனக்கே சேரவேண்டும் என்றுகூட அவர் எண்ணக்கூடும்!

இதுவரை இக்கோரிக்கையில் அக்கறை செலுத்தாத வீரமணி தற்போது திடீரென்று களத்தில் குதித்திருப்பது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. “ஆலயத் தீண்டாமையை மத உரிமையாக அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறதா அல்லது அதனைக் குற்றம் என்று கூறப்போகிறதா” என்பதுதான் இவ்வழக்கின் மையமான கேள்வி. இதனைப் புறந்தள்ளிவிட்டு, மயிலை, திருவரங்கம், மதுரை போன்ற பெருங்கோயில்களின் அர்ச்சகர் பதவியை பார்ப்பனர்களே வைத்துக் கொள்ள அனுமதித்து விட்டு, ஏதேனுமொரு மாரியாத்தா கோயிலில் மாணவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முயற்சிக்கிறது ஜெ அரசு. இந்த திட்டத்தை சுமுகமாக நிறைவேற்றித் தருவதுதான் வீரமணிக்கு வந்திருக்கும் திடீர் அக்கறையின் நோக்கமா?

அல்லது தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிவெறியை ராமதாசு தூண்டி வருகின்ற சூழலில், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் ஆதிக்கவெறியை எதிர்த்துப் போராடாமல் திசைதிருப்புவதற்காக இந்த பார்ப்பன எதிர்ப்பா? “அரசியல் சட்டத்தை திருத்தினால்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும்” என்று கருணாநிதியும், “திருத்தாமலேயே ஆக முடியும் “என்று வீரமணியும் முரண்பட்டுப் பேசிக்கொண்டே ஒன்றுபட்டு நிற்பதாகவும் கூறிக் கொள்கிறார்களே, அடிப்படையான இந்த வேறுபாட்டுக்கு என்ன விடை? இந்தப் போராட்டமென்பது தனக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காகவும், இக்கோரிக்கைக்காக உண்மையாகவே உழைத்தவர்களை இருட்டடிப்பு செய்வதற்காகவும் வீரமணி நடத்தும் நாடகம் என்பதில் ஐயமில்லை. இப்போது இதனை நடத்துவதற்கான நோக்கம் என்ன என்பதுதான் நாம் விடை காண வேண்டிய கேள்வி.

பெரியாரின் தொண்டர்களே, சாதி மறுப்பாளர்களே, தமிழ் மக்களே, போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்!

31.7.2013
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

கேப்டன் டிவி விவாதம்

மக்கள் டிவி விவாதம்

மதுரை உண்ணாவிரதப் போராட்டம் – 1

மதுரை உண்ணாவிரதப் போராட்டம் – 2

பிராட்லி மேனிங் – அமெரிக்க போராளிக்கு 150 ஆண்டு சிறை ?

10

மெரிக்க ராணுவம் ஈராக்கில் நிகழ்த்தியப் போர்க் குற்றங்களை உலகிற்கு அம்பலப்படுத்திய பிராட்லி மேனிங் எனும் அமெரிக்க ராணுவ வீரர், அமெரிக்க நீதித்துறையின் மரண தண்டனையில் இருந்து தப்பியுள்ளார் அதே நேரம் நீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் அவருக்கு சுமார் 150 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2001 இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு பின் பயங்கரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற காரணம் காட்டி ஈராக்கின் எண்ணை வளங்களை அபகரிக்க ஈராக் மீது போர் தொடுத்தது அமெரிக்கா. அமெரிக்க மக்களிடம், ஈராக்கில் சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி ஜனநாயகத்தை நடைமுறைபடுத்துவதாகவும், பேரழிவு ஆயுதங்களை கைப்பற்றி அழிப்பதாகவும், உலகின் கொடிய தீவிரவாத இயக்கமான அல்கைதாவை ஒழிப்பதாகவும் பொய் பிராச்சாரங்களை அமெரிக்க அரசு அவிழ்த்து விட்டது.

ஆனால் அமெரிக்க ராணுவம் ஈராக்கில் பொது மக்களை சுடுவது, பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவது, சொத்துக்களை அழிப்பது, யாரை வேண்டுமானாலும் சுடுவது என அப்பாவி மக்களையும், பத்திரிகையாளர்களையும் கூட கொன்று குவித்தது.

பிராட்லி மேனிங் எனும் கணிப்பொறி வல்லுனர், ராணுவத்தின் மீது கொண்ட நன்மதிப்பால், ராணுவத்தில் இணைந்தார். பின்பு கணிப்பொறி தகவல்களை ஆய்வு செய்யும் ஊழியராக அமெரிக்க ராணுவத்திற்கு உதவுவதற்காக ஈராக் சென்றார்.

பிராட்லி மேனிங்
பிராட்லி மேனிங்

ஈராக்கில் பிராட்லி மேனிங் கண்ட, கேட்ட நிகழ்ச்சிகள் மூலமாகவும், அவரது பணி தொடர்பாக கணிப்பொறியில் பார்க்கக் கிடைத்த அமெரிக்க ராணுவ நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்ததிலும், அமெரிக்க அரசின் உண்மை முகத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அமெரிக்க ராணுவம் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதையும், உண்மையில் அமெரிக்க மக்கள் நினைப்பது போன்று ஈராக்கில் ஜனநாயகத்தை கொண்டு வருவதற்காக படையெடுப்பு நடக்கவில்லை என்பதையும் அறிந்து கொள்கிறார்.

உலக மக்களுக்கு இந்த உண்மைகளை தெரியப்படுத்த வேண்டும், என அதற்கான தகவல்களையும், ஆதரங்களையும் சேகரிக்கிறார். கவனிக்கவும், குவிந்து கிடக்கும் ராணுவ ரகசியங்கள் மத்தியில் தவறுகளை அம்பலப்படுத்தும் ஆவணங்களை மாத்திரம் கவனமாக சேகரித்து விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கிறார்.

தன் நாட்டை காட்டிக் கொடுக்க வேண்டும் என்பது அவர் எண்ணமில்லை, அமெரிக்க அரசு தவறு செய்கிறது அதை மறைத்து அமெரிக்க மக்களுக்கு பொய் சொல்லுகிறது, உண்மையில் ஈராக்கில் என்ன நடக்கிறது என்று மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் , அவர்களுக்கு அதை தெரிந்து கொள்ள முழு உரிமை இருக்கிறது.

விக்கிலீக்ஸ் மேனிங்கிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான ஆவணங்களை பெற்று உலகிற்கு அறிவிக்கிறது. அமெரிக்க பத்திரிகையான நியுயார்க் டைம்ஸ், இங்கிலாந்து பத்திரிகையான கார்டியன் ஆகியவற்றின் உதவியுடன் இந்த ஆவணங்கள் வெளி வருகின்றன.

எதிர்ப்பு
மேனிங்கை விடுதலைச் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்.

கொதித்தெழுந்த அமெரிக்க அரசும், ராணுவமும் விசாரணை நடத்தி பிராட்லி மேனிங்கை அடையாளம் கண்டு கைது செய்கின்றனர். அவர் சிறையில் சித்திரவதை செய்யப்படுகிறார். பிராட்லி மேனிங் ராணுவ ரகசியங்களை அமெரிக்க எதிரிகளுக்கு கொடுத்து உதவினார், அல்கைதாவிற்கு உதவினார் என சென்டிமெண்டை பயன்படுத்தி அவரை அமெரிக்காவின் வில்லன் ஆக்க முயற்சிக்கிறது

பிராட்லி மேனிங் மீது மரண தண்டனைக்கு உரிய “எதிரிக்கு உதவுதல்”(Aiding the Enemy), போர்க் காலத்தில் ராணுவ தகவல்களை எதிரிக்கு கொடுப்பது, போர்க் கால ராணுவ ரகசியங்களை வெளியிடுவது போன்ற குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்கிறது. இது போன்ற சுமார் 22 குற்றச் சாட்டுகளும் 3 இதர குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்படுகிறது.

சுமார் மூன்று வருடங்கள் வரை ராணுவ நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகள் நடகின்றன. ஒரு பக்கம் அமெரிக்க அதிபர் முதல் பல வலதுசாரிகள் வரை மேனிங்கை குற்றவாளி என கருத்து தெரிவிக்க பொதுவான அமெரிக்க மக்களும், உலக மக்களும் மேனிங்கிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

விசாரணையின் போது பிராட்லி மேனிங், தான் அமெரிக்க மக்களுக்கு உண்மையாக இருந்ததாக திரும்பத் திரும்ப கூறினார். தன் நாட்டு மக்களையே வேவு பார்க்கும் அமெரிக்க அரசாங்கத்தை மேலும் கோபப்படுத்த இதுவே போதுமானது.

விசாரணைகளும் வாதங்களும் முடிந்துவிட்ட நிலையில் ஜூலை 30-ம் தேதி மதியம் 1 மணிக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேனிங்
தீர்ப்புக்குப் பிறகு அழைத்துச் செல்லப்படும் மேனிங்

எதிரிக்கு உதவி செய்தல் என்ற குற்றச் சாட்டு மேனிங்கிற்கு மரண தண்டனை பெற்றுத் தரலாம் என்ற நிலையில் அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றத்தின் முன் குவிந்து முழக்கங்கள் எழுப்பினார்கள். பிராட்லி மேனிங் அமெரிக்காவின் ஹீரோ என்று மக்கள் கருத்து தெரிவித்தனர். உலகின் பல ஜனாநாயக சக்திகள் தீர்ப்பை உற்று கவனித்தன.

ராணுவ நீதி மன்றத்தில் இறுதித் தீர்ப்பை படித்த நீதிபதி, மேனிங் மீது சுமத்தப்பட்டிருந்த ”எதிரிக்கு உதவி செய்தல்” என்ற வழக்கில் அவரை நிரபராதி என விடுவித்தார், இதனால் அவருக்கு மரண தண்டனை இல்லை என்பது உறுதியானது. ஆனால் அவர் மேல் சுமத்தப்பட்டிருந்த இதர 21 குற்றச்சாட்டுக்களில் 4-ல் மட்டும் அவரை நிரபராதி என அறிவித்து சுமார் 17 வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பளித்தார். அந்த குற்றங்களுக்கான தண்டனையை மறு நாள் அறிவிப்பேன் என தன் உரையை முடித்துக் கொண்டார். இந்த குற்றங்களுக்கு சுமார் 150 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம் என கருதப்படுகிறது.

ஈராக்கில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அவற்றுக்கான ஆதாரங்கள் வெளியான பிறகும் எந்தவித விசாரணையும் இன்றி உல்லாசமாக இருக்க, அமெரிக்க மக்களுக்கு உண்மையை கூறியதற்காக மேனிங் சிறைத் தண்டனை அனுபவிப்பது தான் அமெரிக்காவின் ஜனநாயகம் போலும்.

அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி மக்களுக்கு உள்ள அடிப்படை உரிமைகளில் முக்கியமானவை கருத்து சுதந்திரம், தனி நபர் சுதந்திரம், வெளிப்படையான அரசு நிர்வாகம் போன்றவை. ஆனால் பிராட்லி மேனிங் அமெரிக்க சட்டங்களின் படி குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டிருப்பதிலிருந்து அத்தகைய கருத்துச் சுதந்திரம் என்பது வெறும் ஏமாற்று மட்டுமே என்பது நிரூபணமாகிறது. நடைமுறை அமெரிக்கச் சட்டங்கள் மக்களுக்கு எதிராக இருப்பதையும், அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படுவதையும் இவ்வளவு அப்பட்டமாக யாராலும் அமபலப்படுத்த முடியாது. அம்பலபடுத்தியவர்கள் அமெரிக்க நீதித் துறையும், ராணுவமும்.

அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் நடக்கும் மக்கள் விரோத செயல்களைப் பற்றிய உண்மைகளை வெளி உலகிற்கு சொல்லுபவர்களை விசில்ப்ளோவர்கள் என்று அழைப்பார்கள். அமெரிக்காவின் வெளிப்படையான அரசு நிர்வாகம் என்பதை இவர்கள் தமது பலமாகக் கொண்டு தம்மை காத்துக் கொள்ளும் சட்டமாக கருதுகிறார்கள். ஆனால் உலகின் மிக முக்கிய விசில் ப்ளோவரான மேனிங் குற்றவாளி என்று தண்டிக்கப்பட உள்ளார்.

மேனிங் வெளியிட்ட ஆவணங்களில் அவர் அமெரிக்க ரகசியம் எதையும் வெளியிடவில்லை, அந்த ஆவணங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடிய ரகசியமில்லாத ஆவணங்கள் தான், அதை வெளியிட்ட மேனிங்கை உண்மையில் பாராட்ட வேண்டும், அதை விடுத்து அவரை குற்றவாளி ஆக்குவது எந்த விதத்தில் நியாயம்?

தேசபக்தி, தேசிய வெறியை கொண்டு அமெரிக்க அரசு ஈராக்கில் நிகழ்த்தி வந்த போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தியுள்ளார் மேனிங். அவரது நடவடிக்கைகள் அமெரிக்க அரசு சொந்த நாட்டு மக்களையே வேவு பார்ப்பதை அம்பலபடுத்திய எட்வர்ட் ஸ்னோடனுக்கு முன்னுதாரணமாக இருந்து.

தன் வாழ்க்கை, தன் வீடு, தன் சுகம் என வாழ்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பணி புரிவதை விட, மக்களின் நலனுக்காக அவர்களுக்கு உண்மை தெரிவதற்கு தன் வாழ்க்கையை ஆபத்துக்குள்ளாக்கிக் கொண்ட பிராட்லி மேனிங் தான் உண்மையான மக்கள் ராணுவ வீரர். ஹீரோ.

மேலும் படிக்க

தன் மீதான வழக்குகளின் தீர்ப்பை கேட்பதற்கு அழைத்துச் செல்லப்படும் மேனிங்

இரத்தப் பலி கேட்கும் அந்நிய முதலீட்டாளர்கள் !

17

2007-08-ல் 40.24 ஆக இருந்த டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வெகு வேகமாக வீழ்ச்சியடைந்து 60 ரூபாய்க்கு வந்துவிட்டது. மூலதனத்துக்கும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கும் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களையே சார்ந்திருப்பதுதான் ரூபாயின் மதிப்பு தள்ளாடுவதற்கு அடிப்படையான காரணம் என்று முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்களே ஒப்புக்கொள்கின்றனர். தாங்கள் போட்ட முதலீட்டுக்குக் கொள்ளை இலாபத்தை உறிஞ்சி வந்த பன்னாட்டு நிதி நிறுவனங்கள், அமெரிக்க அரசு தனது நாட்டில் முதலீட்டுக்கான வட்டி வீதத்தைத் தற்சமயம் சற்று உயர்த்தியவுடனேயே, வெட்டுக்கிளிக் கூட்டம் போல இந்தியாவிலிருந்து வெளியேறி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தொடங்கி வைத்ததோடு, துரிதப்படுத்தியும் வருகின்றன.

11-cartoonஇன்னொருபுறம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை. “மார்ச் 2014-க்குள் 172 பில்லியன் டாலர் அந்நியக் கடனை இந்தியா திருப்பிக் கொடுக்க வேண்டும். இது அந்நிய செலாவணி கையிருப்பின் 60 விழுக்காட்டை விழுங்கி விடும்” என்கிறது 29.6.2013 இந்து நாளேட்டின் தலைப்பு செய்தி. கடந்த ஆறே ஆண்டுகளில் அந்நியக் கடன் 3 மடங்கு அதிகரித்திருக்கிறதாம். அது மட்டுமல்ல, இந்த 172 பில்லியனில் 44 சதவீதத் தொகையானது, டாடா – அம்பானி போன்ற இந்தியத் தரகு முதலாளிகள் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் வாங்கியிருக்கும் கடன். இந்தக் கடனுக்கும் இந்திய அரசுதான் (அதாவது இந்திய மக்கள்தான்) பொறுப்பு. இதுபோக, தற்போதுள்ள நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டுமானால், 90 பில்லியன் டாலர் அந்நிய மூலதனத்தை இந்தியா கவர்ந்திழுக்க வேண்டும் என்று கூறுகிறது பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில்.

ஆனால், கடந்த ஒரு மாதத்திற்குள் 5 பில்லியன் டாலர் அந்நிய மூலதனம் வெளியேறியிருப்பதாக கூறுகிறது மும்பை பங்குச் சந்தை. “நெருக்கடியான” இந்தச் சூழ்நிலைமையில் அந்நிய மூலதனத்தைக் கவர்ந்திழுக்க வேண்டுமானால், அவர்களுடைய இரத்தப் பசிக்கு தீனி போடும் வகையில் தனியார்மய-தாராளமயக் கொள்கையைத் தீவிரப்படுத்துவதைத் தவிர வேறுவழியில்லை என்று மன்மோகன் சிங் கும்பல் வாதாடும்.

வேறுவழியின்றியோ, நெருக்கடியின் காரணமாகவோ அந்நிய மூலதனத்துக்கு அடிபணிவதாக இவர்கள் கூறுவது பித்தலாட்டம் என்பதையும், ஒப்பீட்டளவில் நெருக்கடி இல்லாத காலங்களிலும் அந்நிய மூலதனத்துக்கு நாட்டை விலை பேசுவதுதான் இவர்களது கொள்கையாக இருந்தது என்பதையும் ஆதாரங்ளுடன் விளக்குகிறது இக்கட்டுரை.

– ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்.

*****

ந்தியப் பொருளாதாரம் அந்நிய முதலீடுகளின் வரவைப் பெரிதும் சார்ந்திருப்பதனால் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களின் (Foreign Institutional Investors) உத்தரவுகளுக்கு அடிபணிவதைத் தவிரத் தனக்கு வேறு வழியில்லை என்று நிதியமைச்சர் கூறுகிறார். 2007-08 -ல் நிகர உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதமாக இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, 2011-12 -ல் முன்னெப்போதும் இல்லாத வகையில் 4.2 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. 2012-13 -ல் இது 5 விழுக்காட்டைத் தாண்டி விடும் என்பது உறுதி. அந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இது 6.7 சதவீதமாக இருந்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் அபாயகரமான நிலையைப் பார்க்கும்போது, முதன்முறையாக நிதியமைச்சர் எதார்த்த நிலையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகிறது.

ஆனால் ஆள்வோர், அந்நிய மூலதனத்தின் காலில் விழுந்து கும்பிடுவதற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் அபாயகரமான நிலைமைதான் காரணம் என்பது உண்மையல்ல. 2001-04 -ல் நடப்புக் கணக்கு உபரியில் இருந்தபோதும் இவர்கள் அந்நிய மூலதனத்தின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கிடந்தனர் என்பதே இதற்கு சான்று.(1)

2007-08 -லும் இது தெளிவாக வெளிப்பட்டது. அந்த ஆண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நிகர உள்நாட்டு உற்பத்தியில் 1.3 விழுக்காடாக இருந்தது. அந்நிய மூலதன வரவோ, இதனைவிடப் பன்மடங்கு அதிகமாக, நிகர உள்நாட்டு உற்பத்தியில் 8.6 விழுக்காடாக இருந்தது. இதன் காரணமாக இந்த முதலீட்டு வரவு, அந்நியச் செலாவணிக் கையிருப்பில் சேர்க்கப்பட்டது. இந்த நடவடிக்கை பல்வேறு விதங்களில் பொருளாதாரத்தின் மீது சுமையைக் கூட்டியதுடன் அதனைச் சிதைக்கவும் செய்தது. எனவே, அந்நிய மூலதனத்தின் முன் மண்டியிடுவது என்பது குறிப்பிட்ட சூழ்நிலைக்கான எதிர்வினை அல்ல. இதற்கான வரலாற்று வேர்கள் இன்றைய இந்திய ஆளும் வர்க்கங்கள் உருவாகி வந்த நிகழ்ச்சிப்போக்கிலேயே இருக்கின்றன.

எனவே, நிதியமைச்சருடைய நடவடிக்கைக்கான உண்மையான தூண்டுதல் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை திடீரென படுமோசம் அடைந்திருப்பதல்ல. மாறாக, சில்லறை வணிகத்தை அந்நிய நேரடி முதலீட்டுக்குத் திறந்து விடுவது உள்ளிட்ட, கடும் எதிர்ப்பைச் சந்திக்கின்ற எல்லாவிதமான நடவடிக்கைகளையும் அமல்படுத்துவதற்கான ஒரு முகாந்திரம். இந்நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களிடம் சிதம்பரம் தனது பட்ஜெட் உரையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

“என்னுடைய மிகப்பெரும் கவலை நடப்புக் கணக்குப் பற்றாக்குறை. அது தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த ஆண்டு, ஏன் அடுத்த ஆண்டும்கூட நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமாளிக்க நாம் 75 பில்லியன் டாலர்களைக் கொண்டு வந்தாக வேண்டும். நமக்கு முன்னே மூன்று வழிகள்தான் இருக்கின்றன. அந்நிய நேரடி முதலீடு, அந்நிய நிதி நிறுவன முதலீடு அல்லது வெளிநாட்டு வர்த்தகக் கடன்.”

11-cartoon-2அந்நிய மூலதனத்தைத் திருப்திப்படுத்த முதலாவதாகவும் முதன்மையானதாகவும் பட்ஜெட் கையாளும் வழிமுறை அரசு செலவினத்தை குறைப்பதாகும். 2013-14-ம் ஆண்டிற்கு நிதிப்பற்றாக்குறை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 4.8% என்பதை மாற்றவியலாது என்பதாலும், பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள வருவாய் இனங்களிலிருந்து நிதி வருவாய் ஈட்டுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதாலும், இந்த ஆண்டின் மத்தியிலேயே அரசு செலவினங்கள் மேலும் வெட்டப்படும் என்பது, அநேகமாக முன்கூட்டியே தெரிந்துவிட்ட முடிவாக இருக்கிறது. நிதிப்பற்றாக்குறையைச் சரிக்கட்டுவதற்கு செலவினங்களை கண்மூடித்தனமாக வெட்டக்கூடியவர் சிதம்பரம். இதை அவர் 2012-13-லேயே நமக்கு நிரூபித்திருக்கிறார்.

இரண்டாவதாக, ஷோமே கமிட்டியின் சிபாரிசுகளுக்குத் தனது ஒப்புதலை வழங்குவதன் மூலம் அந்நிய மூலதனத்தை மகிழ்விக்கும் வகையில் பட்ஜெட் அமையவேண்டும். சென்ற பட்ஜெட்டில் அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி “வரி தவிர்ப்புநடவடிக்கைகளுக்கு எதிரான பொதுவிதிகளை” (General Anti Avoidance Rules)-அறிவித்திருந்தார். வரியைத் தவிர்ப்பதைத் தவிர வேறு எந்த வணிக உள்ளடக்கமோ நோக்கமோ இல்லாத பரிமாற்றங்கள் மற்றும் ஏற்பாடுகளுக்கு (எடுத்துக்காட்டாக மொரிசியஸ் வழியாக இந்தியாவில் முதலீடு செய்ல்) வரிச்சலுகைகளை ரத்து செய்யும் அதிகாரத்தை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வழங்குகின்ற அந்த அறிவிப்பு, அந்நிய நிதி முதலீட்டாளர்களின் ஆத்திரம் கொண்ட எதிர்வினையைத் தூண்டிவிட்டது.

முகர்ஜியின் இடத்துக்கு சிதம்பரம் வந்தவுடன், வரித் தவிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான பொது விதிகளை ஒழித்துக் கட்டுவதற்கான வழிமுறைகளைக் கண்டறியும் பொருட்டு ஷோமே கமிட்டியினை நியமித்தார். என்னவிதமான சிபாரிசுகள் அந்தக் கமிட்டியிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டனவோ அவற்றை அந்தக் கமிட்டி கச்சிதமாக வழங்கியது. அதன் பெரும்பான்மையான சிபாரிசுகளை ஏற்பதாக ஜனவரி 14-ம் தேதியன்று சிதம்பரம் அறிவித்தார். வரி தவிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான பொதுவிதிகளை ஏறத்தாழ குழி தோண்டிப் புதைக்கின்ற இந்த முடிவு பட்ஜெட் உரையில் இடம்பெறுகிறது. வேறு எந்தவித வணிக நோக்கமும் இல்லாமல், வரித் தவிர்ப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒரு ஏற்பாட்டை செய்து கொண்டு வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட வோடாஃபோன் நிறுவனத்துடன் ஒரு சுமுகத் தீர்வை எட்டுவதற்கு நிதியமைச்சகம் இப்போது முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

மேலும், அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, அவற்றுக்கு வசதிகள் செய்து கொடுப்பது, நாணயச் சூதாட்டத்தில் ஈடுபட அவர்களை அனுமதிப்பது, குறிப்பிட்ட துறைகளில் அந்நிய முதலீடுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் உச்சவரம்புகளை நீக்குவது போன்ற பல நடவடிக்கைகளுக்கு பட்ஜெட் உரை கணிசமான முக்கியத்துவம் அளிக்கிறது.

இருப்பினும் இத்தனை சலுகைகளையும் பொருட்படுத்தாது, பட்ஜெட் நாளன்று தங்களது கோபம் முழுவதையும் நிதி மசோதாவின் ஒரேயொரு அம்சத்தை நோக்கித் திருப்பின அந்நிய முதலீட்டு நிறுவனங்கள். அந்த அம்சம் இந்தியாவுடன் வரி சார்ந்த ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் நாடுகளின் வழியாக வருகின்ற முதலீடுகள் பற்றியது.

இந்தியாவுக்கும் மொரிசியஸுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. இதன்படி மொரிசியஸில் தங்குமிட உரிமை பெற்ற நிறுவனங்கள், தாங்கள் செலுத்த வேண்டிய மூலதன ஆதாய வரியை மொரிசியஸில்தான் செலுத்தும். இந்தியாவில் அல்ல. மொரிசியஸிலோ மூலதன ஆதாய வரியே கிடையாது. எனவே அந்நிய முதலீட்டாளர்கள் மொரிசியஸில் பெயர்ப்பலகை நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் தமது முதலீடுகளை இந்தியாவுக்குள் கொண்டு வருகிறார்கள். ஆம், இந்தியாவில் போடப்பட்டிருக்கின்ற அந்நிய நேரடி முதலீடு மற்றும் அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு ஆகியவற்றில் மொரிசியஸ்தான் முதலிடம் வகிக்கிறது. சிங்கப்பூருக்கு இரண்டாவது இடம். சிங்கப்பூருடனும் இந்தியா வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.

தற்போது கொண்டுவரப்பட்ட நிதி மசோதாவின் ஒரு பிரிவுதான் அந்நிய நிதி முதலீட்டு நிறுவனங்கள் கோபம் கொள்ளக் காரணம் என்று தெரிகிறது. ஒரு நிறுவனம் மொரிசியஸில் தங்குமிட உரிமை பெற்றது என்ற சான்றிதழை மட்டும் காட்டி மொரிசியஸ்-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான வரிச்சலுகையை இந்திய அரசிடமிருந்து பெறவியலாது என்றும், இறுதியில் இந்த வரிச்சலுகையின் ஆதாயத்தைப் பெறுகின்றவர் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறுகிறது இந்தப் பிரிவு. மேலும், இந்தச் சலுகையைப் பெறுகின்றவர் மொரிசியஸைச் சேர்ந்தவராக இல்லாத பட்சத்தில், அந்த நிறுவனங்களிடமிருந்து இந்திய வருவாய்த்துறை அதிகாரிகள், மூலதன ஆதாய வரியை வசூலிக்க முடியும் என்றும் இந்தப் பிரிவு கூறுவதாகத் தெரிகிறது. இந்திய வரிச்சட்டங்கள் எனப்படுபவை வெறும் கேலிக்கூத்தாக ஆகிவிடாமல் தடுக்க வேண்டுமானால், இப்படி ஒரு நிபந்தனை அவசியம் என்பதை யாரும் விளங்கிக் கொள்ள இயலும்.

ஆனால், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பட்ஜெட் தினத்தன்றே, பங்குகளை விற்கத் தொடங்கியதன் மூலம மோதலைத் துவக்கினர். வரி தொடர்பான தங்குமிடச் சான்றிதழுக்கு மேல் இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் போக மாட்டார்கள் என்றும், அந்நிய முதலீட்டாளர்களின் தங்குமிடத் தகுதியைக் கேள்விக்குள்ளாக்க மாட்டார்கள் என்றும் நிதியமைச்சர் மறுநாளே அறிக்கை வெளியிட்டார். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய வரிச் சட்டங்களைத் தொடர்ந்து கேலிக் கூத்தாக்கலாம் என்று உத்திரவாதம் அளித்தார். (2)

இத்தகைய பெருமுயற்சிகளுக்குப் பின்னரும் தன்னுடைய பட்ஜெட்டை வைத்து அந்நிய முதலீட்டாளர்களை நிதியமைச்சரால் திருப்திப்படுத்த இயலவில்லை என்றே தெரிகிறது. தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் உண்மையில் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை அவர்கள் இடையறாத கண்காணிப்பில் வைத்திருக்கிறார்கள். புதிய சலுகைகளையும் நடவடிக்கைகளையும் கோரித் தொடர்ந்து நிர்ப்பந்தங்களையும் கொடுத்து வருகிறார்கள்.

அடிக்குறிப்புகள் :

(1) இந்தக் காலகட்டத்தில் அரசுக் கருவூலத்திலிருந்தும் மக்களிடமிருந்தும் பணத்தைப் பிடுங்கி, அந்நிய நிதி முதலீட்டாளர்களுக்கு வழங்கிய பளிச்சென்று தெரியும் இரண்டு முடிவுகளைப் பார்ப்போம்.

“மொரிசியஸில் உள்ள பெயர்ப்பலகை நிறுவனங்கள் மூலம் தங்களுடைய முதலீடுகளை இந்தியாவுக்குள் அனுப்புவதன் மூலம், மொரிசியஸுடனான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஒரு அந்நிய முதலீட்டாளர் தன்னுடைய ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்வாரேயானால், அதனைக் கண்டுபிடிப்பது அரசின் வரி வசூல் நிர்வாகத்துடைய கடமை” என்று 2002-ல் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அக்டோபர் 2002-ல் மைய அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தன் விளைவாக, “மொரிசியஸ் பாதை” யின் மூலம் நடக்கும் பிரம்மாண்டமான வரி ஏய்ப்பு இன்று வரை தொடர்கிறது. இரண்டாவதாக, ஒரு முதலீட்டாளர் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கிய நாளில் இருந்து ஒரு ஆண்டுக்குப் பின்னர் விற்பனை செய்வாரேயானால் அதற்கு மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்கு அளித்தது 2003-04 பட்ஜெட்.

(2) இந்த மொத்த நிகழ்வுமே 2000 ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்களின் மறுபதிப்புத்தான். அன்று அரசாங்கம் ஒரு சுற்றறிக்கையை (எண். 789) அனுப்பி, வரி உறைவிடச் சான்றிதழ் கொடுத்துவிட்டால் போதும்; அதனை ஆராயாமல் நாங்கள் கண்ணை மூடிக் கொள்கிறோம் என்று அரசு விளக்கமளித்தது.

(Aspects of India’s Economy, Issue No.53 இல் வெளிவந்த “FIIs:Difficult to please” என்ற கட்டுரையின் தமிழாக்கம்.)
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2013
________________________________________________________________________________

பத்ரியின் ஓட்ஸ் கஞ்சி ஒரு நாள் செலவு ரூ 1320 !

25

திவுலகத்தில் டெண்டூல்கரை போல இன்று வரை சளைக்காமல் நின்று அடித்தாடும் மூத்த பதிவரான பத்ரி நாட்டின் முக்கியமான பிரச்சினைகள் அனைத்துக்கும், குறிப்பாக பொருளாதார பிரச்சினைகளுக்கு முடிந்த வரை தனது கருத்தை சொல்லி விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வரிசையில் வறுமைக் கோடு பற்றிய தனது சிந்தனைகளை சென்ற வாரம் வெளியிட்டிருந்தார்.

இந்தியாவில் வறுமை குறைந்து விட்டது என்று திட்ட கமிஷன் சொல்கிறது, அதற்கு அளவீடாக நகர்ப் புறங்களில் ஒரு நாளைக்கு ரூ 33.33-ம் (மாத வருமானம் ரூ 1000) கிராமப் புறங்களில் ஒரு நாளைக்கு ரூ 28-ம் (மாத வருமானம் ரூ 816) நுகர்பவர் வறியவர் இல்லை என்று வரையறுத்துள்ளது. இதன்படி நகர்ப்புறங்களில் 13.7 சதவீதம் மக்களும் கிராமப்புறங்களில் 25.7 சதவீதம் மக்களும் மட்டுமே வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். 2009-10ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது வறியவர்களின் எண்ணிக்கை ஊரக, நகர்ப் புற பகுதிகளில் முறையே 8 சதவீத புள்ளிகளும் 7 சதவீத புள்ளிகளும் குறைந்திருக்கிறது. இதே கணக்கீட்டில் பார்த்தால் 2014-15 கணக்கீட்டில் வறுமையே ஒழிக்கப்பட்டு விடும்.

இதை ‘போலி முற்போக்காளர்களான’ இடது சாரிகள் விமர்சிக்கிறார்கள். என்னதான் பத்ரிக்கு ஒப்புதல் இல்லாத காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும், பொருளாதார விஷயங்களில் ‘வலது சாரி’யான, சில சமயங்களில் ‘லிபர்டேரியனா’ன அவரால் திட்ட கமிஷனின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா மீது வைக்கப்படும் ‘அவதூறு’களை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இந்த ‘ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ரூ 30 செலவு’ என்ற சமாச்சாரத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறார். நேர்மையான அணுகு முறையை பின்பற்றி, தன்னிலிருந்து ஆய்வை தொடங்குகிறார். தனது வாழ்க்கை முறை பற்றிய சுய விமர்சனத்தோடு, தானும், மனைவியும், மகளும் பின்பற்றும் உணவு பழக்கத்தை விளக்குகிறார். அந்த அடிப்படையில் உணவு சாப்பிட்டால் ஒரு நாளைக்கு ஒரு ஆளுக்கு ரூ 50-தான் செலவாகிறது என்ற முடிவுக்கு வருகிறார்.

பத்ரிதமிழின் முன்னணி பதிப்பகமான கிழக்கு பதிப்பகத்தின் முதலாளி என்பதால் பத்ரியை நாம் ஒரு தொழிலதிபர் என்று அழைக்கலாம். இதனால் அவரது முதலீடும், இலாபமும் கோடிகளில் இருக்கும் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். எனினும் வருமானத்தில் கோடிகளை குவித்தாலும் பத்ரி என்ன சாப்பிடுகிறார் என்று பார்த்தால் அனைவரும் அதிர்ச்சியடைவார்கள். காலையில் சிறு தானியக் கஞ்சி, மதியம் சோறு அல்லது சப்பாத்தி, இரவு ஓட்சு கஞ்சி – இவைதான் பத்ரியின் ஒரு நாளைய உணவு. அவர் நினைத்தால் ஐந்து நட்சத்திர விடுதிகள், இல்லையென்றால் அஞ்சப்பர், சரவண பவன் போன்ற உயர்தர உணவகங்களிலேயே வயிற்றை நிரப்ப முடியும். ஆனால் உடல் நலம் கருதியும், இந்தியாவின் வறுமைக் கோட்டை அழிப்பதற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அவர் ஓட்ஸ் கஞ்சி குடித்தே காலம் தள்ளுகிறார். தனக்கே இத்தனை மலிவாக உணவு கிடைக்கும் போது சக இந்தியர்களும் அப்படி சாப்பிட்டு சிக்கனமாக வாழ்ந்தால் இந்தியாவில் ஏழைகள் என்று யாரும் இருக்க வேண்டிய தேவை இல்லையே என்று அவர் கண்டுபிடிக்கிறார்.

ஆனாலும், அத்தோடு நின்று விட அவருக்கு மனதில்லை. நம்மைப் போன்ற அசைவ சாப்பாட்டு ராவணன்களுக்காக கூடுதலாக முட்டை, பால், பழங்கள், இறைச்சிக்கும் இடம் கொடுக்க விரும்புகிறார். சமையல் செலவையும் சேர்க்கிறார். அதை எல்லாம் சேர்த்தால் ஒரு நாளைக்கு கூடுதலாக ரூ 70 வரை செலவாகலாம்.

இதன் மூலம் பத்ரி வந்தடையும் முடிவு : சென்னை மாநகரில் வாழும் ஒரு குழந்தை, பெற்றோர் கொண்ட குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ஆகும் உணவு செலவு அதிகபட்சம் ரூ 120 குறைந்த பட்சம் ரூ 50. ரேஷன் கடையில் ஓட்ஸ் கிடைக்கவில்லை என்றாலும் தரமான பிராண்டட் ஓட்ஸ் வாங்கிக் குடித்தாலும் ரூ. 50-ஐ தாண்டாது என்பது பத்ரியின் கள ஆய்வு மட்டுமல்ல, சொந்த அனுபவமும் கூட.

“அரசு தரும் விலை மலிவான அரிசி, கோதுமை ஆகியவற்றை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், ஒரு நாளைக்கு ரூ. 30-க்குள்ளேயே ஒருவருடைய உணவுத் தேவைகள் பூர்த்தி ஆகிவிடும் என்று சொல்லலாம். அதற்கு மேலும் ஒருவர் செலவு செய்யலாம்; பணம் இருந்தால். ஆனால் இதற்குள்ளாகவே அடிப்படைப் பசியை எளிதில் போக்கிவிடலாம். போஷாக்கான உணவும் கிடைத்துவிடும்.”

பத்ரியே இவ்வளவு ஆய்வு செய்து இந்தியாவில் யாரும் பட்டினி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கண்டுபிடித்ததை கொஞ்சம் நாமும் ஆய்வு செய்து பார்ப்போம்.

சாலையோரம் வசிக்கும் பிச்சைக்காரர்களைத் தவிர வேறு எந்த ஒரு குடும்பத்திலும் உணவுக்கான செலவு மட்டும் இடம் வகிப்பதில்லை. வீட்டு வாடகை (அல்லது வீட்டுக் கடன் தவணை), மின் கட்டணம், தண்ணீர் செலவு, குழந்தைகளின் கல்விச் செலவு, மருத்துவம், வேலைக்குப் போவதற்கான போக்குவரத்து செலவு இவற்றுக்கு ஒதுக்க வேண்டிய வரிசையில்தான் உணவுச் செலவும் வருகிறது.

அந்த கணக்கை பத்ரியின் பட்ஜெட்டோடு சேர்த்து போட்டு பார்க்கலாம். பத்ரி வசிப்பது சென்னையின் மையப் பகுதியில் உள்ள குடியிருப்பு, சுமார் 3,000 சதுர அடி பரப்பளவு என்று வைத்துக் கொண்டால், அவரது வீட்டுக்கு மாத வாடகை (அல்லது சொந்த வீடென்றால் வாடகைக்கு இணையான செலவு) ரூ 30,000.

பத்ரியின் குழந்தைக்கு கல்விக் கட்டணம், யூனிஃபார்ம், போக்குவரத்துச் செலவு, மற்ற சிறப்பு பயிற்சிகள், புத்தகங்கள் எல்லாம் மாதத்துக்கு குறைந்த பட்சம் ரூ 10,000 வரை ஆகலாம். பத்ரியின் குழந்தை பிராண்டட் பள்ளியில் படிக்க வாய்ப்பிருக்கிறது என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

இதே போல பத்ரியின் மனைவியின் உணவு தவிர மேக்கப் உள்ளிட்ட இதர செலவுகளை ரூ 5,000 என்று வைத்துக் கொள்ளலாம்.

ஓட்ஸ் கஞ்சி தினமும் அருந்த வேண்டுமென்றால் பத்ரி தனது உடலை வேர்வை சிந்தும் எந்த உடலுழைப்புக்கும் ஒதுக்க முடியாது. அதனால் அவர் பேருந்து, ரயில், நடை மூலம் அலுவலகம் செல்ல முடியாது என்பதை வாசகர்கள் கருணை கூர்ந்து பரிசீலிக்க வேண்டும். அதனால் தினமும் அலுவலகத்துக்குப் போய் வருவதற்கான போக்குவரத்து செலவு, அவரது சொந்த காரிலோ, அதற்கு இணையான கால் டாக்சியிலோ வைத்துக் கொண்டால் மாதத்துக்கு ரூ 15,000 ஆகலாம்.

இதே போல ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் இதர வசதிகள் இருந்தால்தான் வீட்டில் வியர்வை சிந்தாமல் இருக்க முடியும். பத்ரி சூரியத் தகடுகள் மூலம் மின்சாரத்தை வீட்டில் உற்பத்தி செய்கிறார் என்றாலும் அதன் மூலதனச் செலவு அல்லது மின் கட்டணம் மாதத்துக்கு ரூ 5,000 வரை ஆகலாம். குடி தண்ணீருக்கு மாதத்துக்கு ரூ 4,000. மற்ற தண்ணீருக்கு ரூ 1,000.

இது தவிர அவசர மருத்துவ செலவு அல்லது வழக்கமான பரிசோதனைகளுக்கு மாதம் ரூ 10,000 என்று வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் உடல் சுகவீனம் வந்தால் பத்ரி அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போக மாட்டார், அப்பல்லோ, எம்ஆர்ஐ ஸ்கேன் என்றுதான் போவார் என்று நாங்கள் ஊகிக்கிறோம்.

மூன்று பேரின் தொலைபேசிச் செலவுகள் ரூ 5,000, தொலைக்காட்சி டிஷ் இணைப்பு, இணையம் இவற்றுக்கான செலவு ரூ 3,000.

இவை தவிர, கல்யாணங்கள், மொய், பரிசுப் பொருட்கள், பயணங்கள், கோயில் குளங்கள், திரைப்படம் போன்ற செலவுகளுக்கு மாதம் குறைந்தது ரூ 20,000 ஒதுக்கலாம்.

இவற்றில் ஏதாவது விட்டுப் போயிருந்தால் அல்லது மிகைப்படுத்தப்பட்டிருந்தால் பத்ரியே சரியான கணக்கு கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கு மேல் வெளியில் போய் சாப்பிடுவது, உள் நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணங்கள், உடைகள், நகைகள் வாங்குவது என்று மற்ற செலவுகளையும் சேர்த்துக் கொள்ளட்டும்

இவை எல்லாவற்றையும் கூட்டினால் 3 பேர் கொண்ட பத்ரியின் குடும்பத்துக்கு உணவு செலவை சேர்க்காமல் மாதச் செலவு குறைந்த பட்சம் ரூ 1,08,000. அதாவது ஒரு நாளைக்கு ரூ 3,600 மூன்று பேருக்கு வருகிறது. அதாவது ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ 1,200. இந்த ரூ 1,200 செலவுகளை கவனித்த பிறகுதான் சமச்சீரான, ஆரோக்கியமான உணவை வாங்கி உண்ண முடியும் என்பதை கவனிக்க வேண்டும். இந்த ரூ 1,200 இல்லாத நிலையில் உணவில் கடுமையான வெட்டுகளை நடத்தி, சத்துக்களைப் பற்றி கவலைப்படாமல் வயிற்றை நிரப்பவோ, அல்லது அரை வயிற்றுக்கு சாப்பிடுவதையோ செய்ய வேண்டியிருக்கும்.

அதன் படி அவரது கணக்கில் வரும் ரூ 120 உணவுச் செலவையும் எடுத்துக் கொண்டால் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு குறைந்த பட்ச நுகர்வாக ரூ 1,320 தேவைப்படுகிறது.

அதாவது, பத்ரியின் எளிமையான உணவு பழக்கத்துக்கு (ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ 50 மட்டும் செலவு) பின்பு பல ஆயிரம் ரூபாய்கள் செலவில் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை முறை இருக்கிறது. அதே போல, ஒரு எளிய, உழைக்கும் குடும்பத்தின் அடிப்படை உணவு தேவைகளுக்குக் கூட குறைந்த பட்ச வாழ்வாதாரங்கள் தேவைப்படுகின்றன.

பத்ரி போன்று இயற்கையிலேயே குண்டாக இல்லாமல், டயட் இருக்க வேண்டிய தேவை இல்லாமல், உழைக்கும் கட்டாயத்தில் இருப்பவரின் குடும்பத்தை எடுத்துக் கொள்வோம். அந்தக் குடும்பத்திலும் அம்மா, அப்பா, ஒரு குழந்தை என்று மூன்றே பேர் என்றே வைத்துக் கொள்வோம். அவர்கள் பத்ரியின் வீட்டிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் ஒரு குடிசைப் பகுதியில் வசிப்பதாக வைத்துக் கொள்வோம்.

அவர்களது பட்ஜெட் எப்படி இருக்கும்?

அடிப்படை தேவைகள்

வீட்டு வாடகை – ரூ 1,000
மின்சாரம் – ரூ 300
செல்போன் பில் – ரூ 200
மருத்துவம் – ரூ 200
கேபிள் டிவி – ரூ 100
கோவில் – ரூ 40
பேஸ்ட், சோப் முதலியன – ரூ 250
பள்ளி – ரூ 500
முடி வெட்டு – ரூ 100
போக்குவரத்து – ரூ 1,000

மொத்தம் – ரூ 3,690

உணவு வகைகள்

தண்ணீர் – ரூ 50
கேஸ், மண்ணெண்ணெய் – ரூ 450
பால் – ரூ 300
காய்கறி – ரூ 1,000
மளிகை – ரூ 1,800 (இலவச அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டு இதர மளிகை)
கடை தேநீர் மற்றும் நொறுக்குத் தீனி – ரூ 300
இறைச்சி – ரூ 300 (மாதத்துக்கு ஒரு முறை மட்டும்)

மொத்தம் – ரூ 4,200

அதாவது ஒரு நாளைக்கு 3 பேருக்கு ரூ 140, ஒருவருக்கு ரூ 46.67 உணவுக்கு செலவிட்டால்தான் மூன்று வேளை ஓரளவு சாப்பிட முடியும். அதற்கு முன்பு அடிப்படை தேவைகளுக்காக ரூ 3,690 செலவிட்டிருக்க வேண்டும். அதாவது மூன்று பேருக்கு உணவல்லாத செலவு ஒரு நாளைக்கு ரூ 123, ஒருவருக்கு ரூ 41. இந்த ரூ 41 இல்லை என்றால் அது நேரடியாக உணவு நுகர்வை பாதிக்கும்.

இந்த கணக்கின்படி பார்த்தால் மிகவும் அடித்தட்டில் உள்ள ஒரு குடும்பத்துக்குக் கூட மாத வருமானம் ரூ 7,890 இருந்தால்தான் வறுமையை விரட்டி அடிக்க முடியும். அதாவது ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ 87.67 நுகர்வு குறைந்த பட்சம் இருந்தால்தான் ஒருவரை ஏழை இல்லை என்று சொல்ல முடியும். இதற்கு மேல் பணம் இருந்தால்தான், புத்தகங்கள் வாங்குவது, உடைகள் வாங்குவது, திரைப்படங்களுக்கு போவது, உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா போவது, கார் வாங்குவது என்று ஆடம்பரமாக வாழ்ந்து கொள்ளலாம்.

உழைக்கும் மக்கள்கடின உழைப்பில் ஒரு நாளைக்கு ரூ 300-லிருந்து ரூ 500 வரை ஈட்டும் தொழிலாளிகள் தமது உடல்வலியை போக்க டாஸ்மாக்கிற்கு ரூ 100 மொய் எழுதி விட்டு,  இரு வேளை உணவுக்காக வெளியில் ரூ 100 செலவழித்து விட்டு மீதி 200 இல்லது 300-ஐ வீட்டில் கொடுத்தால் பெரிய விசயம். இதன்படி பார்த்தாலும் மேலே உள்ள குடும்ப பட்ஜெட் கணக்கு சரியாக வருகிறது. ஒருவேளை ஏசி ரூமில் இருந்து பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தை பார்க்கும் வேலையில் இருந்தால் உடல் வலியும் வராது, டாஸ்மாக்கிற்கு மொய் எழுத வேண்டிய தேவையும் இருக்காது.

இத்தகைய உழைக்கும் மக்களுக்கு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் அரிசி, மண்ணெண்ணெய் கிடைக்க வேண்டும்; இலவச பள்ளிக் கல்வி, அரசு மருத்துவமனை இவை இயங்க வேண்டும். பத்ரியும், மான்டேக் சிங் அலுவாலியாவும் முன் வைக்கும் வலதுசாரி அல்லது லிபர்டேரியன் பொருளாதார அமைப்பில் இவை அனுமதிக்கப்படப் போவதில்லை. திட்ட கமிஷனின் திட்டப்படி ரூ 32-க்கு அதிகமாக ஒருவருக்கு நுகர்வு கிடைத்தால் அவர் ஏழை இல்லை, அவருக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் இல்லை.

உண்மையில் 2009-10ல் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய பிறகு ஒரு நாளைக்கு 2,200 கலோரி வழங்கக் கூடிய உணவைப் பெற முடியாத மக்கள் கிராமங்களில் 75.5 சதவீதம், 2,100 கலோரி உணவை நுகர முடியாதவர்கள் நகரங்களில் 73 சதவீதம் இருக்கிறார்கள். 2004-05ல் இது கிராமப் புறங்களில் 69.5 சதவீதமாகவும், நகர்ப் புறங்களில் 64.5 சதவீதமாகவும் இருந்தது. இதன் மூலம் வறுமையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருக்கிறது என்று தெரிகிறது.

திட்ட கமிஷன் நிர்ணயிக்கும் வறுமைக் கோடு அளவானது, 1973-74ம் ஆண்டின் விலைவாசிகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் விலைக் குறியீட்டு எண் உயர்வின் (பணவீக்கத்தின்) அடிப்படையில் அதிகரித்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் பண வீக்கத்தின் அடிப்படையில் மட்டும் கணக்கிடுவது வாழ்வாதார தேவைகளை முழுமையாக பிரதிபலிப்பதில்லை என்பதுதான் நடைமுறை. உதாரணமாக, 1973-74ல் 1,000 ரூபாய் மாதச் சம்பளம் வாங்கிய ஒரு அரசு ஊழியருக்கு பண வீக்கத்தின் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கியிருந்தால் அவரது சம்பளம் ரூ 18,000 ஆக இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் நியமிக்கப்படும் சம்பள கமிஷன்களின் படி அத்தகைய அரசு ஊழியரின் ஊதியம் இப்போது ரூ 70,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திட்ட கமிஷனின் அலுவாலியாவும், கிழக்கு பதிப்பகத்தின் பத்ரியும், சுவாமிநாதன் அங்கேலேஷ்வர் அய்யர் போன்ற பொருளாதார நிபுணர்களும் தமது சொத்துக்களையும் வருமானங்களையும் விட்டுக் கொடுத்து விட்டு, மாதம் ரூ 3,000 வருமானத்தில் (மூன்று பேர் குடும்பத்திற்கு) ஒரு பெருநகரத்தில் வாழ்ந்து காண்பித்தால் அவர்கள் பேசுவதில் இருக்கும் அபத்தத்தை புரிந்து கொள்ளலாம்.

தொழிலதிபர் பத்ரியின் எளிமையான வாழ்க்கை மற்றும் ஓட்ஸ் கஞ்சியின் பின்னே இப்படி ஒரு உண்மை இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

மேலும் படிக்க