privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஏழைகளை கணக்கிடுவதில் நேர்மையின்மை - உத்சா பட்னாயக்

ஏழைகளை கணக்கிடுவதில் நேர்மையின்மை – உத்சா பட்னாயக்

-

ஏழ்மையை அளவிடும் மட்டத்தை தொடர்ந்து தாழ்த்திக் கொண்டே போவதன் மூலம் திட்டக் கமிஷனின் சந்தேகத்திற்கிடமான வழிமுறை ஏழ்மையில் வீழ்ச்சியை காண்பிக்கிறது.

டைமுறையில் சாத்தியமில்லாத அளவுக்கு ஏழைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக சொல்லி திட்ட கமிஷன் இன்னும் ஒரு முறை நாட்டு மக்களை அவமானப்படுத்தியிருக்கிறது. அதன் மதிப்பீட்டின்படி நகர்ப்புறங்களில் மாத வருமானம் ரூ 1,000 அல்லது தின வருமானம் ரூ 33.3-க்கும், கிராமப் புறங்களில் மாத வருமானம் ரூ 816 அல்லது தின வருமானம் ரூ 27.2-க்கும் குறைவாக பெறுபவர்கள்தான் ஏழைகள். நகர்ப் புறங்களில் ஒரு ஆண் முடி வெட்டிக் கொள்வதற்கே இந்த ‘பெரும்’ தொகை சரியாக போய் விடும் என்பதுதான் நடைமுறை. இந்த நிலையில் இந்தத் தொகைக்குள் அனைத்து உணவு மற்றும் உணவு அல்லாத தேவைகளை ஒருவர் முடித்துக் கொள்ள வேண்டுமாம்.

ஏழ்மை
படம் : நன்றி தி ஹிந்து.

இதன் அடிப்படையில், 2009-10-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது வறுமை பெருமளவு குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவியதையும், வேலை வாய்ப்புகள் குறைந்திருப்பதையும், எப்போதும் இல்லாத அளவுக்கு உணவுப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பதையும் நாம் பார்த்திருந்தாலும் நகர்ப்புறங்களில் 8 சதவீத புள்ளிகளும், கிராமப் புறங்களில் 7 சதவீத புள்ளிகளும் வறுமை குறைந்திருக்கிறது என்கிறது திட்ட கமிஷனின் மதிப்பீடு.

வறுமையை கணக்கிடும் இதே பிழையான முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டால், 2014-15 ஆண்டில் நகர்ப்புற வறுமை கிட்டத்தட்ட இல்லாமல் ஆகி விடும் என்றும் கிராமப் புறத்தில் வறுமை 12 சதவீதம் மட்டுமே இருக்கும் என்றும் உறுதியாகிறது. நடைமுறையில் இல்லாமையின் தீவிரமும், வறுமையின் அதிகரிப்பும் எவ்வளவு கூடினாலும் அதிகாரபூர்வமாக இப்படித்தான் அறிவிக்கப்படும்.

கணிசமான உயர்வு

வறுமைக் கோட்டின் மட்டம் குறைந்திருப்பது குறித்த அதிகார பூர்வ மதிப்பீடுகள் அனைத்தும் தவறான வழி முறையின் சந்தேகத்திற்கிடமான விளைவுகள்தான். நடைமுறையில் வறுமை உயர் மட்டத்தில் இருப்பதோடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது. 2009-10 ஆண்டில் உணவு அல்லாத அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு (அடிப்படை உற்பத்தி பொருட்கள், பயனீட்டு சேவைகள், வீட்டு வாடகை, போக்குவரத்து, மருத்துவம், கல்வி), 75.5 சதவீதம் கிராமப் புற மக்கள் அடிப்படைத் தேவையான ஒரு நாளைக்கு 2,200 கலோரிகள் சக்தி கொடுக்கும் உணவு உண்ண முடியவில்லை, அது போலவே 73 சதவீத நகர்ப்புற மக்கள் ஒரு நாளைக்கு 2,100 கலோரி உணவுத் தேவையை பெற முடியவில்லை. ஒப்பீட்டு அளவில் 2004-05-ம் ஆண்டு இந்த சதவீதங்கள் கிராமப் புறத்தில் 69.5 ஆகவும் நகர்ப்புறத்தில் 64.5 சதவீதம் ஆகவும் இருந்தன.

2011-12-ம் ஆண்டின் தேசிய மாதிரி கணக்கீட்டில் திரட்டப்பட்ட ஊட்டச்சத்து நுகர்வுகள் பற்றிய விபரங்கள் வெளியான பிறகுதான் அது வரையிலான மாற்றங்களை நாம் பரிசீலிக்க முடியும். ஆனால், உயர் அளவிலான பண வீக்கத்தையும், வேலை வாய்ப்பு வீழ்ச்சியையும் வைத்து பார்க்கும் போது நிலைமை நாம் கணிக்கும் அளவை விட அதிகமாக இல்லா விட்டால் கூட அந்த அளவு மோசமாகத்தான் இருக்கும் என்று சொல்லலாம்.

நமது மதிப்பீடுகள் திட்ட கமிஷனே கொடுத்துள்ள வறுமைக் கோட்டுக்கான வரையறையிலிருந்து பெறப்பட்டவைதான். தனியார் மருத்துவ சேவை, கல்வி, மின்சாரம், பெட்ரோல், சமையல் வாயு போன்றவற்றின் விலைகள் வெகு வேகமாக உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், உணவுப் பொருள் விலையேற்றம் கடுமையாக இருப்பதையும், ஏழைகளில் பெரும்பாலானவர்கள் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருட்களை பெறுவதில்லை என்பதையும் சேர்த்து பார்க்கும் போது பெரும்பகுதி மக்கள் திரள் மேலும் மேலும் வறியவர்கள் ஆகிக் கொண்டிருப்பதாக மதிப்பிடலாம். அவர்களது ஊட்டச் சத்து நுகர்வு முன்னெப்போதையும் விட வேகமாக வீழ்ச்சியடைந்திருப்பதும் ஆச்சரியத்துக்குரியது இல்லை.

திட்ட கமிஷனின் முறையில் இருக்கும் அடிப்படை பிரச்சினை என்ன? கள நிலவரம் எப்படி இருந்தாலும் தொடர்ச்சியாக குறைந்து கொண்டே போகும், தாழ் மட்டத்திலான ஏழ்மை மதிப்பீடுகளை அது எப்படி தருகிறது? 1973-72-ல் ஒரே ஒரு முறை பயன்படுத்திய பிறகு வறுமை அளவுகளை மதிப்பிடுவதற்கான அதன் சொந்த வரையறையை திட்ட கமிஷன் நடைமுறையில் கை விட்டு விட்டது. அதற்குப் பிறகு கடந்த 40 ஆண்டுகளில் ஒரு முறை கூட நடைமுறை செலவுகளை வைத்து வறுமைக் கோட்டை நிர்ணயிப்பது குறித்து ஆய்வு செய்ததே இல்லை. அத்தகைய கணக்கீடுதான் உணவல்லாத செலவுகள் அனைத்தையும் நிறைவு செய்து கொண்ட பிறகு அதே வாழ்க்கை தரத்தை பராமரிப்பதற்கு தேவையான வருமானத்தை தர முடியும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் தேசிய மாதிரி கணக்கீட்டில் அந்த தரவுகள் கிடைக்கத்தான் செய்கின்றன.

இருப்பினும், இதற்கு மாறாக திட்ட கமிஷன் 1973-74-ன் மாதாந்திர ஏழ்மை கணக்கிடும் அளவீடுகளான கிராமப்புறத்தில் மாத வருமானம் ரூ 49, நகர்ப்புறத்தில் மாத வருமானம் ரூ 56 ஆகியவற்றை விலை குறியீட்டு எண்களின் அடிப்படையில் அதிகரித்து ஒவ்வொரு ஆண்டும் வறுமைக் கோட்டுக்கான வருமானத்தை கணக்கிடுகிறது. டெண்டூல்கர் கமிட்டி இந்த முறையை மாற்றவில்லை, பயன்படுத்த வேண்டிய குறியீட்டு எண்ணை மட்டும் மாற்றியது.

நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது விலைக் குறியீட்டு எண் நடைமுறை செலவினங்களில் ஏற்படும் உயர்வை முழுமையாக பிரதிபலிப்பதில்லை. இத்தகைய ஏழ்மை மதிப்பீடுகளை கணக்கிடும் அதிகாரிகள் தமது சம்பளம் விலைவாசி உயர்வை அடிப்படையாக வைத்து மட்டும் அதிகரிக்கப்படும் என்றால் அதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 1973-74-ல் உயர் மட்டத்தில் உள்ள ஒரு அரசு அதிகாரியின் மாதச் சம்பளம் ரூ 1,000 ஆக இருந்தது. விலைக் குறியீட்டு எண்ணை வைத்து மட்டும் கணக்கிட்டிருந்தால் அவரது சம்பளம் இப்போது ரூ 18,000 ஆகத்தான் இருக்க வேண்டும்.

ஆனால், நடைமுறை வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பை விலைக் குறியீட்டு எண் முழுமையாக பிரதிபலிப்பதில்லை என்ற உண்மையை அரசே அங்கீகரித்துள்ளது. எனவே, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள கமிஷன்களை நியமித்து, ஊதிய விகிதங்களை மறு கணக்கீடு செய்கிறது. அதன் மூலம் மேற் குறிப்பிட்ட பதவிக்கான இன்றைய சம்பளம் நான்கு மடங்கு அதிகமாக ரூ 70,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வறுமை குறித்த மதிப்பீடுகளை கணக்கிடும் அதிகாரிகள், 1974-ம் ஆண்டு கணக்கிடப்பட்ட வறுமைக் கோடு அளவீட்டை விலைக் குறியீட்டு எண்ணால் அதிகரித்து கிடைக்கும் வருமானத்தை வைத்து ஏழைகள் அதே வாழ்க்கை தரத்தை பராமரிக்க முடியும் என்ற கற்பனையை தொடர்ந்து பராமரித்து வருகிறார்கள். அவர்கள் நிர்ணயிக்கும் வறுமைக் கோட்டு மட்டங்களில் ஊட்டச் சத்து நுகர்வு கடுமையாக குறைந்து கிட்டத்தட்ட அரைப் பட்டினி கிடப்பவர்களாகத்தான் வாழ முடியும் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

மோசமாகி வரும் இல்லாமை

ஆண்டுகள் போகப் போக அதிகார பூர்வ வறுமைக் கோடு நடைமுறையில் மேலும் மேலும் குறைவான வாழ்க்கை தரத்தையே தருகிறது. நடைமுறையில் ஏழ்மை அதிகரித்துக் கொண்டே போனாலும் தொடர்ந்து குறைக்கப்பட்டு வரும் தரத்தின் அடிப்படையில் ஏழ்மை நிலை மேம்படுவது போலவே தோற்றமளிக்கின்றது.

சென்ற ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவீதத்தை இந்த ஆண்டு சதவீதத்துடன் ஒப்பிட வேண்டுமானால் தேர்ச்சி மதிப்பெண் மாறாமல் இருக்க வேண்டும் என்பது ஒரு பள்ளி மாணவருக்கு கூடத் தெரிந்த விஷயம். பள்ளித் தலைமை ஆசிரியர் பொது மக்களுக்கு தெரிவிக்காமலேயே சென்ற ஆண்டு நூற்றுக்கு 50 என்று இருந்த தேர்ச்சி மதிப்பெண்ணை இந்த ஆண்டு நூற்றுக்கு 40 என்று குறைத்து விட்டு பள்ளியின் செயல்பாடு மேம்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? சென்ற ஆண்டு 75 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்கள், (இந்த ஆண்டு குறைக்கப்பட்ட தேர்ச்சி மதிப்பெண் அடிப்படையில்) 80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்று சொல்ல முடியுமா? பழைய தேர்ச்சி அளவான 50 மதிப்பெண் என்ற நிலையில் இந்த ஆண்டு 70 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளார்கள் என்று நமக்கு தெரிய வந்தால் பள்ளியின் செயல்பாடு மேம்படுவதற்கு பதிலாக வீழ்ச்சியடைந்திருக்கிறது என்றுதான் சொல்ல முடியும். அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்தப் பள்ளி இதே தவறான முறையை பின்பற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டால் ஒரு கட்டத்தில் தேர்ச்சி மதிப்பெண் 0 ஆக நிர்ணயிக்கப்பட்டு 100 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெறுவது நடந்தே தீரும்.

இது போன்றதான ஒரு விவகாரம்தான் அதிகாரபூர்வ வறுமைக் கோடுகளுடையதும். கடந்த 40 ஆண்டுகளில் வறுமைக் கோட்டுக்கான நிர்ணயங்கள் தொடர்ச்சியாக குறைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அதன் மூலம் ‘வறுமை’ நடைமுறையில் மிக அதிகமாகவும், ஆண்டுக்காண்டு மோசமாகி வருவதாகவும் இருந்தாலும், அதிகார பூர்வ கணக்கின்படி அது இல்லாமல் ஆகி விடுவதற்கு சில ஆண்டுகள் எதுவும் செய்யாமல் காத்திருந்தாலே போதும்.

கமிஷனின் வறுமைக் கோடு நிர்ணயத்தின் அடிப்படையில் டெல்லி நகரத்தில் மாத வருமானம் ரூ 1,040 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவ்வளவு செலவழிக்கும் ஒருவர் மற்ற அடிப்படைத் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்த பிறகு 1,400 கலோரிகள் ஆற்றலை தரும் உணவு மட்டுமே உட்கொள்ள முடியும். 2,100 கலோரிகள் தரும் உணவை பெறுவதற்கான சரியான மாத வருமானம் ரூ 5,000.

ரூ 5,000 என்ற கோட்டுக்கு கீழ் மலைக்க வைக்கத்தக்க அளவில் 90 சதவீதம் பேர் உள்ளனர். 2004-05ல் சரியான வறுமைக் கோடான ரூ 1,150-க்கு கீழ் 57 சதவீதம் பேர் மட்டுமே இருந்தனர் என்பதுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். மிக அதிக அளவிலான உணவுப் பொருள் விலை உயர்வு, அதிகரித்துக் கொண்டு வரும் தனியார் மருத்துவ செலவுகள் மற்றும் பிற சேவைகளுக்கான கட்டணங்கள், செலவுகள் இவற்றுக்கு மத்தியில் மக்கள் உணவு உட்கொள்வதை குறைத்து வருவது ஆச்சரியப்படுத்தவில்லை.

டெல்லியில் முன் எப்போதும் இல்லாத அளவாக சராசரி கலோரி உட்கொள்ளுதல் 1,756-க்கு வீழ்ந்திருக்கிறது. நிலையான வருமானம் உடைய, ஒரு குடும்பத்துக்கு தவணை முறையில் பல கார்களை வாங்க முடியும் சிறுபான்மையினரான பணக்கார குடும்பங்களுக்கு மத்தியில் அவர்களது கண்களுக்கு புலப்படாத பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும் வர்க்கம் பிழைத்திருக்கவே போராடிக் கொண்டிருக்கிறது. 55 சதவீதம் நகர்ப்புற மக்கள் ஒரு நாளைக்கு 1,800 கலோரி அளவை கூட பெற முடியாத நிலை நிலவுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு 25 சதவீதத்துக்கும் குறைவானவர்களே அந்த நிலையில் இருந்தனர்.

உயல் கல்வி கற்ற திட்ட கமிஷனின் பொருளாதார நிபுணர்கள் நடைமுறையை புறக்கணித்து சரியில்லாத முறையை தொடர்ந்து பின்பற்றுவது ஏன் என்று சிலர் கேட்கலாம். ரூ 1,040 மாத வருமானம் 1,400 கலோரி அளவில் அடிப்படை உயிர் பிழைத்தலுக்கான உணவு நுகர்வை மட்டும்தான் சாத்தியமாக்குகிறது என்பதை நம்மைப் போல அவர்களும் பார்க்கத்தான் செய்கிறார்கள். ஆனால், வறுமைக் கோடு இந்த அளவில் நிர்ணயிக்கப்படுவது ஏன்?

முதலாவதாக, தவறான முறையை பயன்படுத்துவது உலக அளவில் நடைமுறையில் உள்ளது. உலக வங்கியின் பொருளாதார நிபுணர்கள் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் உள்ளூர் நாணயத்தில் கணக்கிடப்பட்ட அதிகார பூர்வ மதிப்பீடுகளையே தங்கள் மதிப்பீடுகளுக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றனர். ஆசியாவில் வறுமை வீழ்ச்சியடைந்திருக்கிறது என்று சொல்லும் உலக வங்கியின் கூற்றும் இதே அளவு போலியானது.

நடைமுறையில் வேலை வாய்ப்பு வளர்ச்சி வீழ்ச்சியடைந்ததுடன் பெருமளவிலான உணவுப் பொருள் விலை வாசி உயர்வும் இணைந்து ஏழ்மை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதை ஒத்துக் கொண்டால், உலகளாவிய ஏழ்மையை மதிப்பிடுவதற்கு பல நூறு பொருளாதார நிபுணர்களை வைத்து தவறான மதிப்பீடுகளை உருவாக்கிக் கொடுக்கும் பிரம்மாண்டமான அமைப்பு கரையான் அரித்து உளுத்துப் போன்ற வீடு போல நொறுங்கி விழுந்து விடும்.

இரண்டாவதாக, இந்த முறையில் போலியாக வறுமை குறைவதாக காட்ட முடிவதால், உலக மயமாக்கலும், புதிய தாராளவாத கொள்கைகளும் மக்களுக்கு பலன் அளிக்கின்றன என்று பிரச்சாரம் செய்வதற்கு வசதியாக உள்ளது.

ஆனால் உண்மையை நீண்ட காலம் மறைத்து வைத்திருக்க முடிவதில்லை.

(உத்சா பட்னாய்க், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் சிறப்பு பேராசிரியர்)
நன்றி : தி ஹிந்து –  The dishonesty in counting the poor
தமிழாக்கம்
: அப்துல்