4.3.2011ல் தமிழகம் முழுவதும் சுமார் 53 ஆயிரம் வழக்கறிஞர்கள் வாக்களிக்கும் பார் கவுன்சில் தேர்தல் நடந்தது. 25 உறுப்பினர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்தலையொட்டி நடந்த பிரச்சாரங்களில்,
‘அன்பார்ந்த வழக்கறிஞர்களே… உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள்… முதல் ஓட்டை அளியுங்கள்…’ என்ற குரல், தமிழக நீதிமன்றங்களில் கடந்த ஒரு மாதமாகக் கேட்டது.
கூடவே இன்னொரு ரகசியக் குரலும் ஒலித்தது. ‘சார், தம்பி, மாப்பிள்ள… நைட் பார்ட்டி இருக்கு, பாரின் சரக்கு, பிரியாணி ரெடி. அவசியம் வந்திருங்க. கூடுதலாக கொடைக்கானல், ஊட்டி, கோவா, கொடநாடு டூரும் உண்டு….’ பார் கவுன்சில் தேர்தலை இப்படியாக திருமங்கலம் இடைத்தேர்தல் தரத்துக்கு மாற்றி தமிழக வழக்கறிஞர்களை, நீதித்துறையை கவுரவப்படுத்தி அழகிரியை மிஞ்சியிருக்கிறார்கள், தற்போதைய பார் கவுன்சில் வேட்பாளர்கள் பலரும் அவர்களின் கைத்தடிகளும். பத்தாண்டுகளுக்கு முன்புவரை சீந்தபடாமல் இருந்த பார் கவுன்சில் தேர்தல் இன்று சாதி, சாராயம், காசு, பார்ட்டிகள் எனத் தூள் பறக்கிறது.
நாகர்கோயில் வழக்கறிஞர் சங்கம் 16 லட்சத்திற்கு மூடி முத்திரையிட்ட டெண்டர் மூலம் ஏலம் விடப்பட்டு வசூலில் டாஸ்மாக் பாரை மிஞ்சியிருக்கிறது. மேலும் சில மாவட்டங்களின் வழக்கறிஞர் சங்கங்கள் ஓசியில் ஏ/சியாக மாற்றப்பட்டுள்ளன. சிவகங்கையில் கோவா டூர் சென்று வந்துள்ளார்கள். ஓட்டு கேட்கும் வேட்பாளர்களிடம் பல ஊர்களில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் ‘IPL ஏலம்தான் சம்மதமா? ஏற்கனவே 4 பேர் கேட்டிருக்கிறார்கள்’ என வெளிப்படையாக ஒட்டு மொத்த வழக்கறிஞர்களின் வாக்குரிமைகளை விலை பேசியிருக்கிறார்கள். ஓட்டுக்காக வழக்கறிஞர்கள் சாதி ரீதியாக அணி திரட்டப்படுகிறார்கள். ரூ.3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஓட்டுக்கு விலை பேசப்படுகிறது. தேர்தலில் கள்ள ஓட்டு, பெட்டியை மாற்றுவது போன்ற அயோக்கியத்தனங்கள் எல்லாம் தனி! மொத்தத்தில் இடைத்தேர்தலில் ஓட்டுச் சீட்டு அரசியலில் கட்சிக்காரர்கள் பின்பற்றும் அத்தனை பிராடு, பித்தலாட்டங்களும் பார் கவுன்சில் தேர்தலில் பின்பற்றப்படுகிறது.
வேட்பாளர்கள் தகுதி
அகில இந்திய பார்கவுன்சில் துணைத் தலைவர் தனபால்ராஜ் சட்டக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கிச் செய்த ஊழல் சேவைக்காக இன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டே களத்தில் நிற்கிறார்.
தமிழ்நாடு பார்கவுன்சில் சேர்மன் சந்திரமோகன் ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்காக நீதிபதிகளிடம் கொடுக்கல் & வாங்கல் செய்ததற்காக உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார், அவரும் நிற்கிறார்.
தமிழ்நாடு – பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கக் கூட்டமைப்பின் சேர்மனாக வழக்கறிஞர் உரிமைகளை பாதுகாக்க முடியாத பரமசிவம், பார்கவுன்சில் பதவியை பிடித்து பாதுகாக்க இன்று களத்தில் பையும், கையுமாக, பார்ட்டி சகிதம் நிற்கிறார்.
நீதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் லாபியிங் வேலை பார்ப்பதற்காகவே தனியாக சங்கம் தொடங்கிய வழக்கறிஞர் பிரபாகரன், தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை களத்தில் இறக்கியிருக்கிறார். ஊர், ஊருக்கு பார்ட்டி கொடுக்கிறார். இன்னும் சில அருமை பெருமைகள் கொண்ட வேட்பாளர்களும் நிற்கிறார்கள்.
ஓட்டுக்கு காசு கொடுப்பவன் வழக்கறிஞர் நலனுக்கு எதிரி
ஓட்டுக்கு காசு கொடுத்து, பல லட்சம் செலவு செய்து, உறுப்பினராக வருபவர்கள் எப்படியாவது போட்ட பணத்தை எடுக்கவே நிச்சயம் முயற்சிப்பார்கள். வழக்கறிஞர் நலனுக்குக் குழிபறிப்பார்கள். பார்கவுன்சில் சேர்மன் தேர்ந்தெடுப்பதில் ஊழலைத் தொடங்கும் இவர்கள், அடுத்த ஐந்தாண்டுகளில் வழக்கறிஞர்களைக் கூறுபோட்டு விற்க மாட்டார்களா? வெல்பேர் ஸ்டாம்பில் தொடங்கி, காசு வாங்கிக் கொண்டு ஆளும் கட்சி ஆதரவு கருங்காலி வக்கீல் சங்கங்களுக்கு அங்கீகாரம் தருவது வரை அனைத்தையும் செய்வார்கள். போலீசு அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் தரகு வேலை பார்ப்பார்கள். ஏற்கனவே சீரழிந்த நீதித்துறையை இன்னும் ஊழல் படுத்துவார்கள். இத்தகைய ஊழல் பெருச்சாளிகளுக்கு ஓட்டுப் போடுவதென்பது திருடனுக்கு வழக்கறிஞர்களே வீட்டுச் சாவியைக் கொடுத்து திருட அனுமதி கொடுப்பதைப் போன்றது.
நீதித்துறை ஊழலைப் பேச மறுப்பவர்கள்
தற்போது தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் பலர் முதல் போட்டு செய்யும் தொழிலைப் போல காசைத் தண்ணீராய் இறைக்கிறார்கள். போலி வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். அச்சுறுத்தும் நீதித்துறை ஊழல், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் தாக்கப்பட்ட பிப்ரவரி – 19 சம்பவம், பன்னாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவிற்கு வருவது உள்ளிட்ட வழக்கறிஞர் சமூகத்தின் அடிநாதப் பிரச்சனைகளை மறந்தும் பேச மறுக்கிறார்கள்.
இன்று மட்டுமல்ல இதற்கு முன்பாக தமிழக வழக்கறிஞர்கள் உயிரைக் கொடுத்து நடத்திய பல்வேறு போராட்டங்களில் இன்று ஓட்டுக்காக அலையும் பலரையும் நாம் பார்த்திருக்க முடியாது. போராட்டத்துக்கு வராதது மட்டுமல்ல. போராடும் இளம் வழக்கறிஞர்களையும் வேலை இல்லாதவர்கள், பிழைக்கத் தெரியாதவர்கள் என்று ஏ.சி அறையில் அமர்ந்து பேசி போராட்டத்தை பின்னுக்கு இழுத்தவர்கள்தான் இன்றைய பல வேட்பாளர்கள்.
வழக்கறிஞர் சமூகத்தின் வீரம் செறிந்த போராட்டங்கள்
அரசு காக்கிச்சட்டை பயங்கரவாதம், நீதித்துறை ஊழல், சி.ஆர்.பி.சி & சி.பி.சி திருத்தச் சட்டங்கள், காவிரி, மீனவர் பிரச்சனைகள் என மக்களுக்கான அனைத்துப் போராட்டங்களிலும் வழக்கறிஞர்கள் தமிழகத்தில் முன்நின்றிருக்கிறார்கள்.
தலைமை நீதிபதி சுபாசன் ரெட்டியை ஊழலுக்காக தமிழகத்தை விட்டே விரட்டியடித்தது, ஈழத் தமிழ் மக்களுக்காக சமரசமின்றி போராடி ரத்தம் சிந்தியது எனத் தமிழக வழக்கறிஞர் சமூகம் சமூகநீதியில் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருந்திருக்கிறது.
கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதர்களாக வலம் வந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் ஊழலை அவர்கள் முகத்திற்கு நேராக அம்பலப்படுத்தி சிறைக்கு அஞ்சாமல் போராடிவரும் சாந்திபூசன் பிரசாந்த்பூசன் ஆகியோர் வழக்கறிஞர் சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான்.
பொதுநல வழக்குகள் மூலம் அரசின் அத்துமீறல்களை, நீதித்துறையின் மௌனத்தை அர்ப்பணிப்போடு எதிர்த்து போராடி மக்கள் உரிமைகளை ,நலன்களை பாதுகாக்கும் எண்ணற்ற வழக்கறிஞர்கள் சமூகத்தில் உள்ளார்கள்.
வாக்குரிமையை விற்க வழக்கறிஞர்களுக்கு உரிமை இல்லை
வழக்கறிஞர்களின் தீவிரமான போராட்டங்கள் சில தோற்றதற்கு முக்கியக் காரணம் வழக்கறிஞர்களை வழிநடத்துவதாகச் சொன்ன பிழைப்புவாத ஊழல் தலைமைதான். இன்றும் அதே கும்பல்தான் முன்னணியில் பார்கவுன்சிலைக் கைப்பற்ற வழக்கறிஞர்களை ஊழல்படுத்தி ஓட்டுக் கேட்டு வருகிறது. வழக்கறிஞர்கள் வாக்கை விற்கப் போகிறார்களா? அல்லது எதிர்த்துப் போராடி மோசமான வேட்பாளர்களை நீதித்துறையிலிருந்தே விரட்டியடிக்கப் போகிறார்களா? என்பதே கேள்வி!
மக்களுக்கான நீதியின் பங்களிப்பில் வழக்கறிஞர்கள் பாத்திரம் முக்கியமானது, தவிர்க்க முடியாதது. கல்வியறிவற்ற பாமர மக்களை விமர்சிக்கின்ற கற்றறிந்த வழக்கறிஞர்கள் ஓட்டுக்களை விலை பேச முடியுமா? அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறதா?
அரசின் அடக்கு முறையிலிருந்து மக்களைக் காக்க வழக்கறிஞர்களின் தொழிலுரிமை, வாழ்வுரிமை பறிக்கப்படுவதைத் தடுக்க நீதித்துறையின் தராசு சாயாமல் இருக்க வேண்டும். அதற்கு வழக்கறிஞர்கள் ஊழலுக்கு உடன்பட மறுப்பதோடு எதிர்த்தும் போராட வேண்டும்.
தவறான வழியில் தலைமைக்கு வருபவர்கள் வழக்கறிஞர் சமூகத்தை துரோகத்தின் எல்லைக்கே இட்டுச் செல்வார்கள். தற்போது கூட வழக்கறிஞர் சேம நலநிதி தொடர்பான அரசாணை வழக்கறிஞர்களுக்கே எதிராக இருக்கும் நிலையில் அதற்கு தேர்தல் ஆதாயம் கருதி பார்கவுன்சில் சேர்மனும், ஃபெடரேசன் சேர்மனும் ஒப்புதல் அளித்துள்ளனர். எனவே, லஞ்சப் பணத்தை முன்னிறுத்தாத நேர்மையுள்ள சாதாரண வேட்பாளர்களை வழக்கறிஞர்கள் தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து மக்களுக்காகப் போராட வேண்டும். அது வழக்கறிஞர்களின் கடமையும்கூட.
சே.வாஞ்சிநாதன்
வழக்கறிஞர் – மதுரை உயர்நீதி மன்றம்
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
_______________________________________________________
வறுமைக்குள் மூழ்கடிப்பட்ட ஏழைகளை குறிவைத்து நடத்தப்படும் கிட்னி திருட்டுக்குப் பின் இப்போது குறைவான முதலீட்டில் கொள்ளை லாபம் பெறும் வியாபாரமாய் உருவாகியிருப்பது ஏழை பெண் குழந்தைகளை கடத்தி விற்பதுதான். சில மாதங்களுக்கு முன்பு கிரிஜா என்னும் பெண் கடலூர், புதுவை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் 10,000 ரூபாய் மட்டுமே கொடுத்து பல குழந்தைகளை வாங்கி ஐம்பதாயிரம் ரூபாய் முதல் ஒரு இலட்சம் வரை வெளிநாடுகளுக்கும் உள்நாட்டு பணக்கார எஜமானர்களுக்கும் விற்றுள்ளார்.
விழுந்துவிட்ட விவசாயம், பஞ்சாலைத் தொழில், நலிவடைந்து போன சிறு வணிகம், வேலையிழப்பு என்று தமிழகத்தின் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் கடும் பஞ்சம் நிலவுகிறது. கடனிலிருந்து மீள உணவுக்காக என கந்து வட்டிக்கு வாங்கும் கடன் கழுத்தை நெறித்து குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 3,000 -க்கும் மேல்.
என்னை மிகவும் பாதித்த நிகழ்வு சேலம் காரியப்பட்டியைச் சார்ந்த ஜெயலட்சுமியின் கதைதான். அவர் வறுமை காரணமாக குள்ளம்பட்டியில் உள்ள குளத்தில் தனது மூன்று குழந்தைகளையும் வீசி விட்டு அவரும் குதிக்கிறார். மூன்று குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி இறந்து விட ஜெயலட்சுமி உயிர் தப்பி விடுகிறார்கள். இப்போது அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினீல் வெளி வந்திருக்கிறார் என நினைக்கிறேன்.
பல லட்சம் கூலித் தொழிலாளர்களின் நிலை இன்று இப்படித்தான் உள்ளது. தனியார்மயமும் தாரளமயமும் இணைந்து ஏழைகளுக்கு வழங்கியிருக்கும் பரிசு இதுதான். மிகக் கொடூரமான வறுமை.
இந்த வறுமை நிலையும் , தற்கொலைகளும் இரண்டு புதிய வியாபாரங்களை தமிழகத்திற்குக் கொண்டு வந்தன, 2004- இல் சுனாமி வந்து எல்லா வாழ்வாதரங்களையும் இழந்த மீனவ மக்களை குறிவைத்து கிட்னி திருடர்கள் கிளம்பினார்கள். தமிழகமெங்கிலும் லட்சக்கணக்கான மீனவ மக்களும் தலித்துக்களும் வறுமை காரணமாக வெறும் நாற்பதாயிரம் ரூபாய்க்கு கிட்னிகளை இழந்தனர். எண்ணூர் சுனாமி நகரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் இப்படி கிட்னியை இழந்திருக்கிறார்கள்.
இதில் கைது செய்யப்பட்ட மருத்துவர் வெளியில் வந்து இப்போது வேலை செய்து கொண்டிருக்கிறார். சென்னை தி.நகரில் இருக்கும் பாரதிராஜா மருத்துவமனையும் இதில் ஒன்று. இப்போது அந்த மருத்துவமனை வாசலில் கருணாநிதியின் ஆளுயர விளம்பரப்பலகை வைத்து “கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் படி இலவச மருத்துவம்” பார்க்கப்படும்” என்ற போர்ட் வைக்கப்பட்டுள்ளது. சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு கோடீஸவர மருத்துவமனை, கோவையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனை என கிட்னி திருடி ஆயிரக்கணக்கான மக்களின் வறுமையை பயன்படுத்தி வாழ்வை பறித்திருக்கிறார்கள். ரகசியமாக விசாரித்த போலீசும் அப்படியே இதை மௌனமாக்கி விட்டது.
தனலெட்சுமி – ஒரு குழந்தைப் படுகொலை!
சிறுமி தனலட்சுமி – சடலமாக
அந்த வகையில் இப்போது கூட சேர்ந்திருப்பது பெண் குழந்தை விற்பனை. கடலூரைச் சார்ந்த செல்லப்பன், அஞ்சலையின் 11 வயது குழந்தை தனலெட்சுமி
கொலைகார தம்பதி – வக்கீல் ஜோஸ் சூரியன் – சிந்து
என்னும் தனம். வறுமை காரணமாக தனலட்சுமி ரூபாய் இருபதாயிரத்திற்கு கேரளாவைச் சார்ந்த வக்கீல் குடும்பத்திற்கு வீட்டு வேலைக்காக விற்கப்பட்டிருக்கிறார். வக்கீல் ஜோஸ் குரியனும் , மனைவியான சிந்து என்பவரும் சேர்ந்து குழந்தை தனலெட்சுமியை நாய்க் கூண்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். சிறுமி தனத்தை பல நாட்கள் நிர்வாணமாகவே அடைத்து வைத்து உதைத்தும் துன்புறுத்தியிருக்கிறார்கள்.
கடந்த வியாழன் அன்று ஆலுவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி தனம் அன்றே மருத்துவமனையில் இறந்தும் போயிருக்கிறாள். உடல் முழுக்க தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட தனத்தின் உடல் ஆலப்புழா மருத்துவமனையில் போஸ்ட் மார்டம் செய்யப்பட்ட போது உடல் முழுக்க எண்பது வகையான காயங்கள் இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள் மருத்துவர்கள். வயிற்றில் காயங்கள், தீக்காயங்கள், சிகரெட்டால் சுட்ட வடுக்கள், முதுகில் காயங்கள், என கொழுப்பெடுத்த சைக்கோ தம்பதிகளிடம் ஏழை தனம் சிக்கிக் கொண்டாளோ என்னவோ?
வெள்ளிக்கிழமை IPC 302 (கொலை வழக்கு)இன் படி பதிவு செய்து குரியனையும், சிந்துவையும் கைது செய்திருக்கிறது போலீஸ். தனத்தின் சித்திரவதையான இந்தப் படுகொலையைக் கண்டு மனம் பொறுக்காத ஆலுவா மக்கள் குரியனையும், சிந்துவையும் தாக்கப் பாய்ந்திருக்கிறார்கள். நிச்சயமாக ஆயுள் முழுக்க சிறையில் வைக்கப்பட வேண்டியவர்கள்தான் இவர்கள். என்றாலும் வறுமையை ஒழிக்காமல் தனங்களின் கொலைகளை எப்படி சரி செய்ய முடியும்?
வறுமையை ஒழிப்பது என்பது சில பணக்காரர்களின் கருணை மனப்பான்மையால் நடப்பதல்ல. செல்வந்தர்கள் உயர உயர வறுமையும் உயர்கிறது. இந்த வளர்ச்சியைத்தான் இந்தியாவின் வளர்ச்சி என்று தாராளமயதாசர்கள் கூப்பாடு போடுகிறார்கள். நாம் இந்த வளர்ச்சியை கருவறுக்கும்போது மட்டும்தான் தனம் போன்ற ஏழைச் சிறுமிகளை காப்பாற்ற முடியும்.
“லேன்செஸ்” பன்னாட்டு நிறுவனத்தின் அபாயகரமான ரசாயனப் பொருட்கள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மறைமுக ஆதரவுடன் தயாரிப்பு!
தொழிலாளர்கள் போராட்டத்தால் அம்பலமானது !
மதுரை நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் விமான நிலையத்திற்கு அருகே உள்ள “லேன்செஸ்” இந்தியா பிரைவேட் லிமிடெட்” மற்றும் ‘பெனார் ஸ்பெசாலிட்டி புரொடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ ஆகிய இரண்டு தொழிற்சாலைகள் மிகவும் அபாயகரமான வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பல ஆண்டுகளாக சத்தமில்லாமல் ஈடுபட்டுள்ளன. 1977ஆம் ஆண்டு “சதர்ன் சின்டான்ஸ்” என்ற பெயரில் குடிசைத்தொழிலாக ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை இன்று 130 தொழிலாளர்களுடன் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன், பன்னாட்டு கம்பெனிகளின் கூட்டுடன் நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது அந்த கம்பெனியை மூடுவதற்கு அதன் முதலாளிகள் முடிவெடுத்துள்ள நிலையில் அங்கு பணியிலிருக்கும் தொழிலாளர்களது போராட்டத்தால் பல்வேறு ரகசியங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. இவற்றை மூடிமறைக்க நிர்வாகம் – அரசு அதிகாரிகள் – அரசியல்வாதிகள் – போலீசு கூட்டணி அமைத்து தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
பெனார் ஸ்பெஷாலிட்டி புரொடக்ட்ஸ் பி லிட், என்கிற கம்பெனி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த ஊரான கானாடுகாத்தானுக்கு (காரைக்குடி) அருகிலுள்ள கோட்டையூரைச் சேர்ந்த பி.நாராயணன் செட்டியார் என்பவருக்குச் சொந்தமானது. இவருடைய தம்பி பி.சுப்பையா செட்டியாருடன் இணைந்து 1977ல் இந்தத் தொழிலில் நுழைந்தார். ஆனால் இப்போது தம்பியைப் பின் தொடர்ச்சி, பாத்தியங்கள் ஏதும் அற்ற நிலையில் வெட்டி விட்டுள்ளார். இவர் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உறவினர் என்றும், அவருடைய ஆதரவுடன்தான் கம்பெனி நடைபெறுவதாகவும் சுற்றுப்புற கிராமங்களில் செய்தி பரப்பப்பட்டுள்ளது.
பன்னாட்டு கம்பெனிக்கு பினாமி
பெனார் கம்பெனி நாராயணன் செட்டியாருக்கு சொந்தமானது. ஆனால் “லேன்செஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்” என்கிற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்காக இங்கே உற்பத்தி நடைபெறுகின்றது. லேன்செஸ் நிறுவனம் உற்பத்தியை நடத்தினாலும், தொழிலாளர்கள், நிலம், கட்டிடங்கள், இயந்திரங்கள் எல்லாமே பெனார் நிறுவனத்திற்குச் சொந்தமானது. குத்தகை ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி நடைபெறுகிறது. லேன்செஸ்-க்கும் தொழிலாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உற்பத்திக்கு ஏற்றவாறு ஒப்பந்தப்படி எல்லா தொகையையும் பெனார் முதலாளி வாங்கிக் கொண்டு தொழிலாளர்களுக்கு அவர்தான் சம்பளம் உள்ளிட்ட சகலமும் கொடுக்க வேண்டும். தொழிலாளர்கள் அவர் கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டும். மேலே எதுவும் கேட்க முடியாது. தொழிலாளர்கள் அனைவரும் பெனார் கம்பெனியை பொறுத்தவரையில் கொத்தடிமைகள்தான்.
தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருட்கள்
இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் முதன்மையானது தோல் பதனிடும் வேதிப்பொருள்கள், பூச்சிக் கொல்லி, துணிகளுக்கு ஏற்றப்படும் சாயம், ரப்பர், பெயிண்ட் தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள் ஆகியவை. தோல் தொழிற்சாலை, சாயப்பட்டறை, பூச்சிக் கொல்லி மருந்துகளினால் ஏற்படும் விளைவுகளை அனைவரும் அறிவர். இவை மூன்றும் மண், குடிநீர், காற்று ஆகியவற்றை வெகுவாக மாசுபடுத்தும் தன்மை கொண்டவை. 1984ல் 25 ஆயிரம் பேரை கொன்று குவித்த போபாலில் பூச்சிக் கொல்லி மருந்துதான் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையிலிருக்கும் இந்தக் கம்பெனி வெளியிட்டுள்ள பட்டியலில் 29 வேதிப் பொருட்கள் அபாயகரமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவை வருமாறு:
LIST OF HAZARDOUS CHEMICALS
The following Raw Materials are declared as Hazardous as defined in the above Act under Rule 2000 and are used in our process.
இவையெல்லாம் ஐரோப்பிய நாடுகளில் தடைசெய்யப்பட்டவை. ஆனால் இங்கே மலிவு விலையில் உழைப்பை உறிஞ்சி, கொத்தடிமைகளை வைத்து இவை ரகசியமாகத் தயாரிக்கப்படுகின்றன. இதிலே கேதோன் என்ற வேதிப்பொருள் மிகவும் அபாயகரமானது. இது தண்ணீர் மூலமாக வேகமாக பரவி ஆபத்து விளைவிக்கக் கூடியது என்று சொல்கிறார்கள். அதாவது வியட்நாமில் மரம், செடி கொடிகைள அழிக்க அமெரிக்கா பயன்படுத்திய ஏஜெண்ட் ஆரஞ்சு என்ற பயங்கர ரசாயன ஆயுதத்தை அடுத்து போராளிகளை அழிக்க பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டன. அதிலிருந்து தப்பிக்க மக்கள் நீர்நிலைகளில் குதித்துத் தப்பித்தார்கள். இதை அறிந்த அமெரிக்கக் கொலைகாரர்கள் தண்ணீரில் குதித்த பின்னரும் உடலெல்லாம் பரவும் ஒருவகை ரசாயன குண்டுகளைக் கண்டுபிடித்து அதனைப் பயன்படுத்தி மக்களைக் கொன்று குவித்தனர். அந்த வகையைச் சேர்ந்தது இந்த ரசாயனம் என்று தொழிலாளர்கள் சொல்கின்றனர்.
இந்த ரசாயனம் பட்ட இடத்தில் தண்ணீர் பட்டால் தோல் பலூன் போல ஊதிப்பெருத்து விடும் என்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அபாயகரமான உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொழிற்சாலையில் செய்து தரப்படவில்லை. பல தொழிலாளர்கள் காசநோய், புற்று நோய், தோல் நோய்களால் பாதிக்கப்பட்டு அவர்களில்சிலர் இறந்தும் போயுள்ளனர். ஜே.ஐவன் என்ற தொழிலாளி தற்போது மரணப்படுக்கையில் உள்ளார். பல தொழிலாளர்கள் விரல் போன்ற உறுப்புக்களை இழந்துள்ளனர். தொழிற்சாலையின் உள்ளே மருத்துவமனை கிடையாது. முதல் உதவி என்று பெயருக்கு உள்ளது. வாரம் ஒரு மருத்துவர் 1 மணி நேரம் வந்துவிட்டுப் போவார்.
நிலத்தடி நீர், காற்று, சுற்றுச்சூழல் நாசம்
இந்தத் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள சின்ன உடைப்பு, பாப்பானோடை, ராமன்குளம், போக்குவரத்து நகர், பெருமாள் நகர், வலையங்குளம் போன்ற கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டு, கருப்பு நிறத்தில்தான் நிலத்தடி நீர் மாறி வருகிறது. இம்மாசுபட்ட நீரை எந்த தேவைக்கும் பயன்படுத்த இயலவில்லை. ரசாயனக் கழிவுகள் சட்டவிரோதமாக பூமிக்கு அடியில் புதைக்கப்படுவதுதான் இதற்கு காரணம். தவிர தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் அடர்த்தியான புகையினால் (பெரும்பாலும் நள்ளிரவில்தான் சிம்னி வழியாக திறந்து விடப்படும்) சுற்றியுள்ள கிராம மக்கள் தோல் நோய், கண் நோய், நுரையீரல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கண்மாய்களில் மீன்கள் செத்து மிதக்கின்றன. அங்கே தண்ணீரைக் குடிக்கும் கால்நடைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றன.
அவ்வப்போது எதிர்த்துப் போராடும் மக்களை நிர்வாகமும், அதிகாரிகளும் காவல்துறையை வைத்தும், நன்கொடை என்ற பெயரில் ஆட்களை விலைக்கு வாங்கியும் சமாளித்து விடுகின்றனர். மதுரை மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையர் பீமராஜ் என்பவருக்கு மாதம் ரூ. 5 லட்சம் தரப்படுவதாக நிர்வாகப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
34 ஆண்டுகளில் 9 கம்பெனிகள்- ஆனால் ஒரே முதலாளி- பலே!
1977ல் சதர்ன் சின்டான்ஸ் என்ற பெயரில் குடிசைத் தொழிலாக ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கம்பெனி கடந்த 34 ஆண்டுகளில் (2) பி.என்.கெமிக்கல்ஸ், (3) பெனின்சுலார் கெமிக்கல்ஸ் (4) இந்தியன் சின்டான்ஸ் பி லிட், (5) பேயர் இண்டியன் சின்டான்ஸ் லிட்(இது பன்னாட்டு நிறுவனம்), (6)பெனார் ஸ்பெசாலிட்டி புரொடக்ட்ஸ் பி லிட்(1998)), (7) பேயர் ஸ்பெசாலிட்டி கெமிக்கல்ஸ், (8) பேயர் கெமிக்கல்ஸ் பி லிட், (9) லேன்செஸ் இந்தியா பி லிட் என பல அவதாரங்கள் எடுத்து தற்போது அதையும் மூடுவதாக அறிவித்துள்ளது.
இதிலிருந்தே நாராயணன் செட்டியார் அவர்களின் தனித்திறன் வாய்ந்த திருவிளையாடல்களைப் புரிந்து கொள்ளலாம். தற்போது நிரந்தரப் பணியில் தொழிலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் 76 பேர், மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 54 பேர் ஆக 130 பேர் இங்கே பணி புரிகின்றனர். இவர்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மொத்த சம்பளம் ரூ.8500/- மட்டும். இதர படி வகைகள் ஏதும் கிடையாது. பணிக்காலம் குறைவாக உள்ள நிரந்தர தொழிலாளர்களுக்கு ரூ.4500/- முதல் ரூ.5000/- வரை மட்டுமே சம்பளம். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.100/- கடந்த மாதம் ஆலை மூடல் முடிவிற்கு பின் உற்பத்தியை விரைந்து முடிக்க அவர்களின் தினக்கூலி ரூ.200/- என உயர்ந்துள்ளது.
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எந்தச் சலுகையும் கிடையாது. நிரந்தர தொழிலாளர்களுக்கு சதவீத அடிப்படையிலான போனஸ் கிடையாது. நிர்வாகம் நிர்ணயிக்கும் தொகைதான் போனஸ். வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி (ESIC) காப்பீடு போன்றவற்றுக்கு பிடித்தம் செய்யப்பட்டாலும், அது பற்றிய எந்த விபரமும் தொழிலாளிகளுக்குத் தெரிவிக்கப்படவில்லை. கம்பெனி பெயர் மாற, மாற தொழிலாளர்களிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி (ஒப்புதல்) பெறப்பட்டு கம்பெனி மாற்றப்படுவார்கள். தொழிலாளர் நல அதிகாரிகள், ஆய்வாளர்கள, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எல்லோரும் செட்டியாரின் செல்லப்பிள்ளைகள்.
கொத்தடிமை சாசனம்:
இதிலிருக்கிற தொழிலாளர்கள் கடந்த 30 ஆண்டுகளாக கூலி உயர்வு, சலுகைகள் போன்ற எதற்காகவும் போராட்டப்பாதையை தேர்ந்தெடுக்கவோ, சங்கம் கட்டவோ இல்லை என்பது வேதனையின் உச்சம். சமீபத்தில் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து உரிய சம்பளம், சலுகை கேட்ட 6 தொழிலாளர்களில் ஒருவர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். மீதி 5 பேருக்கு சம்பளம் தவிர வேறு சலுகை எதுவும் கிடையாது என்று பழிவாங்கப் பட்டுள்ளனர். இதில் ஒப்பந்தப் பணியாளர்கள் அவ்வப்போது 8 மணி நேர பணி முடித்த பின் 8 மணி நேரம் ஓவர் டயம் பார்க்க பணிக்கப்படுவார்கள்.
நல்ல குடிநீர் கிடையாது, பெயருக்கு கேன்டீன், மோசமான கழிப்பறை, தொழிலாளர் ஓய்வு அறை ஆயிரம் கண்ணுடைய கொட்டகை என்று செட்டியாரின் கருணை வெள்ளம் பாய்ந்தோடுகிறது. அரசு அதிகாரிகள் அருகில் நின்று தியானம் செய்கின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்ந்த தொழிலாளர்கள் விடுதலை முன்னணியுடன் இணைக்கப்பட்டுள்ள பெனார் ஸ்பெஷாலிட்டி ப்ராடக்ட்ஸ் பி லிமிடெட் தொழிலாளர் & நலச் சங்கம் 2010ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எல்லா பணியாளர்களும் அதில் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஒப்பந்தத் தொழிலாளர்கள் பதிவு செய்யப்படாத ஒப்பந்தக்காரர்கள் மூலம் சப்ளை செய்யப்படுகின்றனர். நிர்வாகமும், ஒப்பந்தக்காரரும் ஏற்படுத்திக் கொண்டுள்ள பதிவு செய்யப்படாத ஒப்பந்தப் பத்திரம் அடிமை சாசனத்திற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டு. சுருங்கச் சொன்னால் முதலாளிகளின் நலனுக்காகக் கொடுக்கும் கூலிக்கு மேலாக எதையும் எதிர்பார்க்க மாட்டோம் இது சத்தியம், சத்தியம், சத்தியம் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. படித்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.
ஆக்கிரமிப்பு:
கடந்த 34 ஆண்டுகளில் செட்டியார் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை சுற்று வட்டாரத்தில் அடிமாட்டு விலைக்கு வாங்கிக் குவித்துள்ளார். தற்போது தொழிற்சாலை உள்ள சுமார் 150 ஏக்கர் நிலத்தில்
8 3/4 ஏக்கர் அளவில் ஊருணி உள்ளது. அது அரசு புறம்போக்கு. செட்டியாரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. மேலும் ஆலையின் குறுக்காக வலையங்குளம் செல்லும் 30 அடி பாதையை (தார்ச்சாலை) இரும்புக்கதவு போட்டு அடைத்து தன்வசம் வைத்துள்ளனர் திருவாளர் நாராயணன் அன் கோ. கேட்பார் யாருமில்லை. இன்னும் உள்ளே போய் பார்த்தால் என்னென்ன தில்லுமுல்லுகள் இருக்குமோ “நாராயணனுக்கே” வெளிச்சம். கை தேர்ந்த கிரிமினல் முதலாளிதான் இவர்.
நாராயணன் செட்டியாரின் மிகத் தேர்ந்த நிர்வாகத் (கிரிமினல்) திறனுக்கு எடுத்துக் காட்டு – ஆலையில் சட்ட விரோதமாக உற்பத்தி செய்யப்படும் ரசாயனங்கள், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் போன்றவற்றையெல்லாம் வீடியோவில் பதிவு செய்து வைத்துக் கொண்டு லேன்செஸ் பன்னாட்டு நிறுவன முதலாளிகளிடம் காட்டி அவர்களையே மிரட்டி பணம் பறிக்கின்ற வேலையைச் செய்து வருகிறாறென்றால் இவருடைய திறமை ப.சிதம்பரத்தின் திறமைக்கு சற்று கூடுதலாகத் தெரிகிறது அல்லவா?
லேன்செஸ் நிறுவனம் தனது ஜாகையை மோடியின் குஜராத்திற்கு மாற்றிக்கொள்ள முடிவெடுத்து விட்டது. எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு விட்டன. இந்த வைசியனோடு மாரடிக்க முடியாது என்று அந்த பன்னாட்டு பகாசுரன் ஓடிவிடத் தயாராக உள்ளான். இதில் செட்டியாருக்கும், பன்னாட்டு முதலாளிக்கும் ஏற்பட்டுள்ள உள்குத்து விவகாரங்கள் குறித்து நமக்கு தெரியவில்லை. ஆனால் மதுரையில் ஏற்பட்ட பாதிப்பு இனி குஜராத்திற்கும் வரும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.
ஆலை மூடல், வேலை நிறுத்தம்:
30/06/11 உடன் பெனார் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியானவுடன், தொழிலாளர்கள் விழித்துக் கொண்டு களத்தில் இறங்கினர். தொழிலாளர் துணை ஆணையர், மதுரை அவர்களிடம் பெனார் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் (பதிவு எண் 421/TVR/2010) தங்களுக்கு சட்டப்படி சேரவேண்டிய இழப்பீடு கோரி கடந்த பிப்ரவரி 5 அன்று மனுக் கொடுத்துள்ளனர். தொழிலாளர் அலுவலர் (LO) இதுவரை 4 முறை பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் நிர்வாகத் தரப்பில் யாரும் வரவில்லை. அதிகாரமற்ற தொழிலாளர் துறை அதிகாரிகள் தங்களுடைய சடங்குகளைப் பொறுமையாக நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இழுத்தடிப்பை ஏற்றுக் கொள்ளாத தொழிலாளர்கள் கடந்த 15 நாட்களாக உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது உள்ளிருப்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் 5 நாட்களாக நடைபெற்று வருகிறது. தங்களுக்குள் ஒரு போராட்டக்குழுவை அமைத்துக் கொண்டு பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். போராட்டம் மேலும் தொடர்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தொழிலாளர் விடுதலை முன்னணி, ம.க.இ.க., பு.மா.இ.மு., உள்ளூர் சங்கங்கள் சில மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் போன்ற அமைப்புகள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடி வருகின்றனர.
மதுரை மாவட்ட ஆட்சியருக்கும், உயர் அதிகாரிகள், அமைச்சர் பெருமக்கள், உள்ளூரில் இருக்கும் ஏழைப் பங்காளன், அஞ்சா நெஞ்சன், தூங்கா நகரம் அண்ணன் அழகிரிக்கும் செய்தி சென்றடைந்து விட்டதாகத் தகவல். எதற்கும் மூச்!
இதோடு இந்த கெமிக்கல் நிறுவனம் மூடப்பட்டு முதலாளி வேறு நாடு சென்று விடுவார் என அப்பாவி தொழிலாளர்கள் நம்பியுள்ளனர். இந்த சச்சரவெல்லாம் முடிந்தவுடன் 150 ஏக்கர் நிலத்திலுள்ள சொத்தை விட்டுவிட்டு முதலாளி சென்றுவிட மாட்டார். இழுத்தடித்து, தொழிலாளர் குடும்பங்களைத் துவளச் செய்து சொற்பத் தொகைகளை வீசியெறிந்து விட்டு, சில மாதங்கள் கழித்து வேறு ஒரு புதிய பெயரில் வேறொரு பன்னாட்டு நிறுவனத்தின் பெயருடன் நிறுவனம் தொடங்கி அதில் போராடுபவர்களில் சிலர் கூட அடிமாட்டு விலைக்கு புதிய தொழிலாளர்களாக சேர்க்கப்படலாம், அல்லது இதே குடும்பத்தைச் சேர்ந்த வேறொரு அடிமை சேர்க்கப்படலாம்.
தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கலின் பின்னணியில் உள்ளூர் முதலாளிகளின் கோர முகமும் இதுதான்.பன்னாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யும் நாராயணன் செட்டியார் தொழிலாளர்களின் இந்த சாத்வீகப் போராட்டத்திற்கா அஞ்சுவார்? அவர் தயாரிக்கும் பயங்கரமான ரசாயனம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தொழிலாளர்கள் ஒரு குண்டு தயார் செய்ய வேண்டும். அது வெடிக்கும் என்றால் நாராயணன் இறங்கி வரக்கூடும்.
_____________________________________________________________________ தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு, மதுரை மாவட்ட கிளை
_____________________________________________________________________
மனித உரிமை பாதுகாப்பு மையம் கடலூர் மாவட்ட கிளையின் சார்பில் விருத்தாசலம் பகுதியில் கடந்த ஆறுமாத காலமாக அனைத்து பள்ளி வாசல்களிலும் சென்று நீதியரசர் கோவிந்தராசன் கமிட்டி அறிவித்த கட்டணத்தை அச்சடித்து விநியோகித்தோம்.பெற்றோர்களை திரட்டி விளக்கி ஆலோசனை கூட்டம், பிறகு மூன்று நாட்கள் நகரத்தின் பல பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம், அதன் மூலம் பெற்றோர்களிடம் கூடுதல் பணம் கட்டியதற்கான ரசீதுடன் புகார் மனு என தொடர்ந்து பிரச்சாரம் செய்தோம்.
இறுதியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை முற்றுகையிடுவோம் என நகரம் முழுவதும் சுவரொட்டி மூலம் அறிவித்தோம்.பள்ளி நிர்வாகத்திடம் நேரில் கட்டணத்தை கட்டமாட்டோம் என சண்டை போட்டோம்.கட்டணத்திற்காக பள்ளி நிர்வாகத்தால் துன்புறுத்தபட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்காக நேரில் சென்று நியாயம் கேட்டபோது, கட்டுபடியாகாது பள்ளியை மூடவேண்டியதுதான் என்ற பதில் தந்தது நிர்வாகம்.
உயர்ந்த தரத்தில் கல்வியை விற்கின்ற பள்ளி ஒன்றில், பெற்றோர்களை அழைத்து கூட்டம் போட்ட நிர்வாகம், “அரசு கட்டணம் வேண்டும் என்பவர்கள் கை தூக்குங்கள்” என்றவுடன் பெற்றோர்களிடம் அமைதி நிலவியது. உடனே “அரசு கட்டணம் வேண்டுவோர் அரசு பள்ளிகளுக்கே சென்று விடுங்கள், இங்கே யாரும் வெத்தல பாக்கு வைத்து அழைக்க வில்லை, கட்டணத்திற்காக நான் பிச்சைகாரிபோல அலைய வேண்டய அவசியம் இல்லை” என்று ஆண்டை, அடிமைகளிடம் பேசுவது போல பேசினார் ஒரு நிர்வாகி.
கடலூர் மாவட்ட தனியார் பள்ளி முதலாளிகள் சங்கம் அவசரமாக கூடி “பணம் கட்ட முடியாதவர்கள் நகராட்சி பள்ளிக்கு செல்லலாம், ஏழை பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு அஞ்சல் வழிக்கல்வி, நடமாடும் கல்வி, திறந்த வெளிகல்விககூடங்களை அமைக்கலாம்”,என ஆலோசனை சொன்னதுடன் “நீதியரசர் கோவிந்தராசன் கமிட்டி கட்டணம் எங்களுக்கு கட்டுபடியாகாது, ஆண்டுக்கு 15 சதவீதம் ஏற்றிதரவேண்டும் என தீர்மானம் போட்டார்கள்.
பிறகு கடலூரில் காங்கிரசு எம்.பி அழகிரி, திமுக எம்.எல்.ஏ அய்யப்பன் ஆகியோரை அழைத்து இந்தக் கோரிக்கைகளுக்காக மாநாடு நடத்தி முடித்து விட்டனர்.
கூடுதல் கட்டணம் கட்டியதற்கான ரசீது, மேலும் கட்ட சொல்லி மாணவர்களை துன்புறுத்தல் புகாரை அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பிவிட்டு 1-3-2011 அன்று மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக, மீண்டும் நகரம் முழுவதும் பிரச்சாரம் செய்த்து மனித உரிமை பாதுகாப்பு மையம். பிறகுபள்ளிகள் தோறும் பிரசுரம், வீடு தோறும் தாய்மார்களிடம் அச்சம் தவிர்க்க விளக்கி அழைப்பு விடுத்தோம். காவல் துறை பேரணிக்கு அனுமதி மறுத்தது.தடையை மீறி விருத்தாசலம் பேருந்து நிலையத்திலுருந்து புறப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டோம்.
டி.இ.ஒ. “எனக்கு அதிகாரமில்லை” என எங்களுக்கு ஆறுதல் சொன்னார். போலீசார் சுற்றி வளைத்து மறித்தனர். அதிகாரம் பெற்ற நபர் பேசும் வரை முற்றுகை தொடரும்,என மக்களும், தோழர்களும் உறுதியாக அறிவிக்கவே “மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் இன்றே போராட்டக்காரர்களை அரசு மேல்நிலைபள்ளியில் சந்திக்கிறார்” என்பது உறுதியானவுடன் முற்றுகை தற்காலிகமாக விலக்கப்பட்டது.
மதியம் குறித்த நேரத்தில் காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பெற்றோர்களை ஆட்டோ பிரச்சாரம் மூலம் வீதி வீதியாக விசயத்தை சொல்லி அணிதிரட்டினோம்.மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டண கொள்ளையை கொட்டி தீர்த்தோம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் “தமிழகம் முழுவதும் இப்படிதான் நடக்கிறது, பெற்றோர்கள் ஏன் கூடுதலாக பணம் கட்டுகிறீர்கள்,கட்டண பட்டியலை அறிவிப்பு பலகையில் ஒட்ட சொல்லி மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் உத்திரவிட்டுள்ளார், நாங்கள் கண்காணித்து வருகிறோம்” என்று கூசாமல் பொய்யை சொன்னார்.
அதற்கு மக்கள் “விருத்தாசலத்தில் எத்தனை பள்ளி கூடத்திற்கு சென்று கண்காணித்தீர்கள், ஒரு பள்ளி கூடத்தில் கூட ஒட்டவில்லை, உங்கள் உத்திரவை எந்த பள்ளி முதலாளி மதிக்கிறார்”என எதிர்கேள்வி கேட்டு உண்மையை எடுத்துரைக்க ஆய்வாளர் அமைதி காத்தார்.
“மனித உ¡¢மை பாதுகாப்பு மையத்தின் சார்பில் திரட்டிய ஆதாரங்களை உங்களிடம் புகாராக கொடுத்துள்ளோம், நடவடிக்கை எடுப்பீர்களா?“என்றதற்கு “எடுக்கிறேன், எங்கள் துறை சார்பில் விண்ணப்பம் கொடுத்துள்ளார்கள், அதை ரசீது ஆதாரங்களுடன் ஒரு வாரத்திற்குள் எனக்கு அனுப்புங்கள்” என்றார். இதை தமிழகம் முழுவதும் விநியோகித்து வருகிறோம்.
தனியார் பள்ளி முதலாளிகள் கட்டுபடியாகாது என கூடுதலாக கட்டணம் வசூலிப்பது ஊரறிந்த உண்மை. அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர்களுக்கு அரசு உத்தரவை மீறும் தைரியத்தை வழங்கியது யார்? எனக் கேட்டோம். பெற்றோர்கள் யாரும் ஆதாரங்களுடன் எங்களுக்கு புகார் அனுப்பவில்லை என்று கூறினார் அந்த ஆய்வாளர்.
“கண் முன்பு தவறு செய்பவர்களை பிடிப்பதற்கு புகார் கேட்கிறீர்களே, புகார் பெறுவதற்கு என்ன முயற்சி செய்தீர்கள்? பெற்றோர்கள் அச்சத்தை போக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு எத்தனை முறை எச்சரிக்கை செய்தீர்கள்? நாங்கள் உங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை,தனியார் பள்ளிகள் மீது கட்டணத்திற்காக நீங்கள் போட்ட உத்திரவை ஏன் அமுல்படுத்த வில்லை” என்று கேட்கிறோம், ஆறுமாதம் நாங்கள் பிரச்சாரம் செய்து 60 க்கு மேற்பட்ட புகார் மனுக்களை பெற்றோர்களிடம் பெற முடியும் என்றால் ,அரசு அதிகாரியாகிய உங்களால் ஏன் முடியாது? என்றோம்.
பொதுமக்களின் கேள்விகணைகளால் திணறிய அதிகாரிஇறுதியாக “உங்கள் கோரிக்கையை நடைமுறைபடுத்துகிறேன், பத்திரிகையாளர்களே எழுதிகொள்ளுங்கள், அனைத்து தனியார் பள்ளிகளிலும் நீதியரசர் கோவிந்தராசன் கமிட்டி அறிவித்த கட்டண விபரத்தை பொதுமக்கள் பார்வைக்கு அறிவிப்பு பலகையில் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கிறேன், நாளை 12-00 மணிக்குள் நடக்கும்,மேலும் அரசு கட்டணத்திற்கு கூடுதலாக பெற்றோர்கள் கட்டவேண்டாம். தனியார் பள்ளிகளும் வசூலிக்க கூடாது. மாணவர்களை துன்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு எழுதுவதற்கும் கட்டணம் கட்டுவதற்கும் தொடர்பில்லை பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம்,“என ஆவேசமாக அறிவித்தார்.
அவரை அனுப்பி விட்டு வந்திருந்த பெற்றோர்களிடம் தொடர்ந்து அரசையும், தனியார் பள்ளி முதலாளிகளையும், கண்காணிக்க வேண்டும், அப்போதுதான் நமது கல்வி உரிமையை பாதுகாக்க முடியும் என்றோம். தனியார் பள்ளி முதலாளிகள் கட்டணத்தில் மட்டுமல்ல, புத்தகம் விற்பதில், யூனிபார்மில், செருப்பில், அடிக்கிற கொள்ளை, மேலும் தாய்மொழி தமிழ் வழிக்கல்வியை, சமச்சீர்கல்வியை எதிர்த்து போராடுகிறார்கள், தடையுத்திரவு பெறுகிறார்கள், உச்சநீதிமன்றம் வரை கொள்ளையடித்த பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள், ஆங்கிலம் மட்டும் கற்பதற்கு நாம் என்ன அடிமைகளா?குழந்தைகளை பணையக்கைதியாக வைத்து பணம் பறிப்பதற்கு எதிராக நாம் தொடர்ந்து போராட வேண்டும்”என்பதை விளக்கி “தனியார் பள்ளிகளின் மாணவர்கள் நல பெற்றோர் சங்கம்” என்று உருவாக்கி தனியார் பள்ளிகளை கண்காணிப்பதுடன் பெற்றோர்களை சங்கமாக திரட்டவேண்டும். இந்த வெற்றி செய்தியை பிரசுரமாக அச்சடித்து நகரம் முழுவதும் விநியோகிக்க வேண்டும், என்ற முடிவுடன் புதிய சங்கத்திற்கு நிர்வாகிகள் தேர்வுடன் பெற்றோர்கள் அச்சம் கலைந்து நம்பிக்கையுடன் கலைந்து சென்றனர்.
மனித உரிமை பாதுகாப்பு மையம், மக்களுக்கு உரிமைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அதை அடைவதற்கு தடையை மீறி பாதிக்கபட்டவர்களின் கையை பிடித்து அழைத்து சென்று அவர்களது போராட்டத்தின் மூலம் அதை அடைவதற்கு கை கொடுக்கிறது என்பதறத்கு இந்த அனுபவம் ஒரு நிரூபணம்.
தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்க்காக பெற்றோர் இனியும் அஞ்ச வேண்டியதில்லை. மக்கள் சக்தியாக ஒன்று திரண்டால் விருத்தாசலத்தில் நடந்த இந்த நிகழ்வு தமிழகம் முழுமைக்கும் பரவும்.
_____________________________________________
– மனித உரிமை பாதுகாப்பு மையம், விருத்தாசலம் _____________________________________________
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !
போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!
கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!!
” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸ¤ல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் வேலை, பஸ் டே வேணுமாம் இவனுங்களுக்கு? போலீஸ் அதான் உள்ள பூந்துட்டானுங்க, ரவுடிப்பசங்க போலீசையே அனுபிச்சுட்டான் பாரு “
23ம் தேதி காலையில் போலீஸ் புகுந்ததும், மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் முகப்பிலே தலைப்புச்செய்தியாகபெரும்பான்மையான பத்திரிக்கைகளின் வெளியாகி இருந்தது. அதைப்படித்த மற்றும் 22ம் தேதி தொலைக்காட்சியில் அச்செய்தியை கவனித்த பலரின் எண்ணங்களில் உதித்தவை மேலே கூறிய வார்த்தைகளாகத்தான் இருக்கும்.
ஒரு கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதி இன்றி நுழைந்து வெறியாட்டம் போட்ட போலீசின் நடவடிக்கை பலரின் பார்வையின் படி சரியென்றாகிறது. ஊடகங்கள் மற்றும் போலீசு என்றைக்காவது உண்மையைச் சொல்லி இருக்கிறதா? லஞ்சம் வாங்குவதையும் மக்களை கொடுமைப்படுத்துவதையும் மட்டுமே வேலையாகக் கொண்ட காவல்துறை மக்கட் நலனுக்காகத்தான் பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியது என்பதில் இம்மியளவாவது உண்மையிருக்குமா?
மேலே வெளிப்பட்ட வார்ர்த்தையின் வடிவத்தை மட்டுமே மாற்றியமைத்து ஒவ்வொருமுறையும் வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் , மீனவர்கள், என போராடும் மக்கள் மீது போலீசு நடத்தும் கொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்தி ஊடகங்கள் முதல் பலரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ” குளிக்கும் போது கோபிகையர்களின் உடைகளைத் திருடி மானபங்கப்படுத்தியவன், திரவுபதிக்கு சேலையைக் கொடுத்தானாம்”. கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்பது போலல்லவா இருக்கிறது.
இப்போது 23-ம் தேதிக்குச் செல்வோம், எழும்பூரில் 1.30 மணிக்கு கிளம்பிய பேருந்திற்கு மாணவர்கள் அனைவரும் பயணச்சீட்டு எடுத்து “பஸ் டே” விழாவை கொண்டாட வந்தவர்கள் ஆனால் அவர்களை போலீசு அடித்து பேருந்திற்குள் திணித்தது. பேருந்து கல்லூரியை நெருங்கும் போது கல்லூரிக்கு வெளியே மாணவர்களை தாக்க வேண்டும் என்ற முன்திட்டத்தோடு (preplan) ஆயுதப்படை போலீசு குவிக்கப்பட்டிருந்தது மாணவர்களுக்குத் தெரியவில்லை. வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்குள்சென்று பச்சையப்பன் சிலைக்கு பால் மற்றும் தண்ணீர் ஊற்றியுள்ளனர்.
ஏற்கனவே கல்லூரிக்குள்ளும் முன்திட்டத்தோடு குழுமியிருந்த போலீசுப்படையின் டி.சி லட்சுமி மீது தண்ணீர்த்துளிகள் பட்டதும் “லத்தி சார்ஜ்” ஆரம்பமானது. தப்பி ஓடிய மாணவர்களை வெறிகொண்டு தாக்கியது போலீசு கும்பல், அறிவியல் பிரிவு கட்டிடத்திற்குள் (science block) தஞ்சம் அடைந்த மாணவர்களை பூட்டியது. பின்னர் உண்மையில் எதற்கு வந்தார்களோ அந்த வேட்டைக்குக் கிளம்பியது.
தங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். நேற்றுவரை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் பிளவுகள் இருந்திருக்கலாம், பிளவுகள் தானாய்ச் சேர்ந்தன, தடைகள் சுக்கு நூறாய் உடைந்தன. ஆசிரியர்களின் கதறல்கள், ஓடி ஒளிந்த மாணவனை திருப்பி அழைத்தது. தோட்டத்திற்கு தண்ணீரைப்பாய்ச்சி தன் வியர்வையை சிந்திய பணியாளின் ரத்தக்கவுச்சி அறைகூவியது, தினமும் காலையில் புன்சிரிப்புடன் “தம்பி” என உரிமையோடு அழைக்கும் அலுவலகப்பணியாளின் அழுகை, கண்ணீர் எல்லாம் ஒன்று சேர்ந்து மாணவனை போர்க்களத்திற்கு இழுத்து வந்தது.
அவர் அந்த ஆசிரியர் மதிப்பெண் போடமாட்டார், அவர் எப்போதும் ஆப்செண்ட் போடுவார் , என்ற எண்ணங்கள் எல்லாம் மறைந்து போய் உண்மையாக மாணவர்களாக களமிறங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மீண்டும் காவல் துறை மாணவர்களை கல் கொண்டு தாக்கியது, அதை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தார்கள் மாணவர்கள். வெறியடங்காத போலீசிடம் மாணவர்களுக்காகவும், அத்துமீறி நுழைந்ததற்காகவும் சண்டையிட்டார்கள் பேராசிரியர்கள். மதியம் 2.15க்கு தொடங்கிய வெறியாட்டம் 3.30 வரை நீடித்தது.
இணை ஆணையர் சாரங்கனோ தாக்குதலை நியாயப்படுத்தினார். அவரிடம் “ஏன் சார் இப்படி ரவுடித்தனமா நடந்துக்குறீங்க?” என்றனர் பேராசிரியர்கள். அதற்கு “நீ நிறுத்துறீயா? நான் நிறுத்துறேன்?” என்றிருக்கிறார். என்னவோ இரு ரவுடிகள் பேசிக்கொள்வது போல பதிலளித்து இருக்கிறார் இணைஆணையர் சாரங்கன். மாணவர்கள் மீது வழக்கு பதியப்படாதென அவர் உறுதியளித்ததன் பேரில் உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
காவற்படை தாக்குதலில் படுகாயமுற்ற பல மாணவர்கள் கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கேயும் போலீஸ் மிரட்டியது, அவர்களுக்கு மருத்துவம் செய்யக்கூடாது என நிர்வாகத்தை நிர்பந்தித்தது. ஒவ்வொரு வருடமும் பீஸ் கூட கட்ட வக்கற்ற அந்த ஏழை மாணவர்கள் ரத்தம் சிந்தியபடி அலைந்தார்கள். ஆறாத ரத்தத்துடன் அலைந்தபடியே வேறுவழியின்றி வீடுகளுக்கு சென்றார்கள்.
இதோ காலவரையின்றி கல்லூரி மூடப்பட்டிருக்கிறது மாணவர்களுக்கு மட்டும், வேலை நாளாக கணக்கு காட்டிவிட்டு கல்லூரியில் கையெழுத்து போட்டுவிட்டு வெதுப்பிக்கிடக்கிறார்கள் ஆசிரியர்களும், அலுவலர்களும். 170 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை , எளிய மாணவர்களுக்காக திறந்திருந்த அக்கல்லூரியின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. விடுதிகளில் இனி இடம் கிடைக்குமா என தள்ளாடிக்கொண்டிருக்கிறர்கள் மாணவர்கள். வெளியே ரத்தவெறியோடு காத்திருக்கிறது போலீசு.
ஆம் உண்மைதான், தள்ளாடிக்கொண்டிருக்கிறது மாணவர் சமூகம், ஆறாத செங்குருதியோடு உலாவிக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே வெளியே அடித்த போலீசு ஏன் கல்லூரிக்குள்ளும் நுழைந்து மாணவர்களையும் அவர்களோடு பேராசிரியர்களையும் பணியாட்களையும் தாக்கியது? ஏன் அறிவியல் கட்டிடத்திற்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள மேசைகளையும், மின் விளக்குகளையும் அடித்து நொறுக்கியது? எதற்காக பச்சையப்பனின் சிலையை உடைத்தது? ஆயிரம் கேள்விகள் எழும் அதற்கு பதிலாக சாரங்கன் சொன்ன பதிலை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.
” நீ நிறுத்தறீயா , நான் நிறுத்தறேன் “
எதை நிறுத்தச்சொன்னார் இணை ஆணையர்? இதற்கு காலத்தினை சற்று பின்னோக்கி சுழற்றுவோம். மெட்ரோ ரயில் திட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரியின் நிலம் அபகரிப்பதற்கான எல்லா வேலையும் நடந்து முடிந்து விட்டன. 170 ஆண்டு காலம் ஓங்கி வளர்ந்த மரங்கள், நிமிர்ந்த கட்டிடங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பொது மக்கள் பிரச்சினைக்காக குருதி சிந்திய இந்த செம்மண், தங்கள் ஊண், உயிரான உருவான பச்சையப்பன் கல்லூரி, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உருவான அந்த அறக்கட்டளையை இழப்பது பற்றி மாணவர்களும் பேராசிரியர்களும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்தக்கொடூரம் நிகழ்ந்தே விட்டது, பச்சையப்பன் சிலை வரை முதற்கட்டமாக அடித்து நொறுக்கப்படும் என்ற செய்தி அவர்களின் கண்களை பணிக்க வைத்தது.
பேராசிரியர்கள் உண்ணாவிரமிருந்து எதிர்ப்பைக் காட்டினார்கள், அவர்களுக்கு பக்கபலமாய் களத்திலிறங்கினார்கள் மாணவர்கள், தொடர் பிரச்சாரம் மூலம் பச்சையப்பன் கல்லூரியின் நிலப்பறிப்புக்கெதிராய் போராடினார்கள், போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு மக்களுக்காக மாறிய அச்சமயத்தில், திட்டமிட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பொறுக்கிகள் , ரவுடிகள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு, தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கிறது காவல் துறை. 400 மாணவர்கள் மீது பத்திற்குமேற்பட்ட வழக்குகளைத்தொடுத்து யாரும் நில அபகரிப்பிற்கெதிராய் பேசக்கூடாதென்கிறது கருணாநிதியின் போலீசு.
பூந்தமல்லி சாலையில் அமையவுள்ள இந்த மெட்ரோ ரயில்திட்டப்பாதை முன்னர் இடது புறம் தான் திட்டமிடப்பட்டது, பின்னர் இடது புறம் முழுக்க பெருமுதலாளிகளின் சொத்து என்பதால் அவர்களின் செல்வ’ வாக்கில் முழுக்க முழுக்க அரசின் இடங்களாக இருக்கும் வலப்புறத்திற்கு மாற்றப்பட்டது. சில முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போடுவதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கக்கூடியபச்சையப்பன், கந்தசாமி நாயுடு, செல்லம்மாள்ஆகிய கல்லூரிகளின் நிலங்கள் முதற்கட்டமாக அபகரிக்கப்படப்போகின்றன. மூன்று கல்லூரிக்கும் ஒரே அறக்கட்டளை என்பதால் அலேக்காக தூக்கி கொடுத்து விட்டார்கள் நிர்வாகிகள்.
இந்த ரயில்திட்டப்பாதை செல்லும் இடங்களெல்லாம் நேரு பூங்கா, கேஎம்சி மருத்துவமனை, நெய்வேலி இல்லம், ஆகிய அரசு மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்விடங்களே. அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களை வெளியேற்றி விட்டு பணக்காரர்களுக்காக சிங்காரச்சென்னை உருவாக்கப்படுகின்றது. சென்னையின் நெரிசலைக் குறைக்கிறேன் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் யாருக்காக? ஏழை எளிய மக்களுக்காகவா? அங்கு சீசன் டிக்கெட் எடுத்துகொண்டு போக முடியுமா? இல்லை, அது முற்றிலும் உண்டுகொழுக்கும் பணக்காரர்களுக்கானதே! ஏசி வசதியுடைய ரயில்கள்தான் வரப்போகின்றன மெட்ரோ ரயில் திட்டத்தில்.
அன்னிய முதலீடுகள் இந்தியாவிலே தங்குதடையின்றி நுழைய வேண்டுமென்றால் அதற்கு ஏசி பேருந்துகளும் ஏசி ரயில்களும் தங்க நாற்கரச்சாலை திட்டங்களும்தான் தேவைப்படுகின்றன. அதற்குத் தடையாய் இருக்கும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. காசுமீர் முதல் பச்சையப்பன் கல்லூரி வரை பன்னாட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக காத்திருக்கின்றன விழுங்குவதற்காக.
காசுமீரை அபகரிக்க உள்ளே நுழைந்த ராணுவத்திற்கும், பச்சையப்பன் கல்லூரியை அபகரிக்க உள்ளே நுழைந்த கருணாநிதி போலீசிற்கும் என்ன வித்தியாசம்? நோக்கம் ஒன்று தான் !. இந்திய தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ராணுவத்தை ஏவி சேவை புரிகின்றது மத்திய அரசு, பச்சையப்பன் கல்லூரியை அபகரித்து ஜப்பானின் ஜிகா-JICA ( மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் ) நிறுவனம் கொழுப்பதற்காக மானங்கெட்ட கருணாநிதி அரசு முண்டியடிக்கிறது. தேசம் காக்கப் போராடும் காசுமீரிகளை தீவிரவாதிகளாகவும், தாராவி போன்ற சேரிகளில் வாழும் உழைக்கும் மக்களை திருடர்களாகவும் சித்தரிக்கும் அதே ஊடகங்கள்தான் கல்லூரியைக் காக்கப் போராடும் மாணவர்களை ரவுடிகள் என்கிறது. ” சென்னையின் மத்தியில் இப்படிப்பட்ட கல்லூரி தேவையா? ” என எழுதுகிற பத்திரிக்கைகளின் நோக்கம் இனியும் நமக்குப் புரியாமலிருக்கப்போகின்றதா என்ன?
ஈராண்டுகளுக்கு முன்புவரை “ரூட்” பிரச்சினைக்காக அடித்துக்கொண்ட மாணவர்கள் தற்போது வேறுபாடுகளை மறந்து கல்லூரியைக்காக்க களத்தில் நிற்கிறார்கள். அதனால்தான் தங்களினுடைய ஆசிரியர்களின் கதறல்களை பொறுக்கமுடியவில்லை அவர்களால். தாங்கள் ஓடிப்பிடித்து விளையாடிய கல்லூரி மைதானத்தை, சோற்றுக்கே வழியின்றி இருந்த தங்களுக்கு வாழ்வளித்த கல்லூரி நொறுக்கப்படுவதை, தாங்கள் சாய்ந்திருந்த இருக்கைகள், எழுதி கிறுக்கிய மேசைகள் எல்லாம் உடைக்கப்படுவதை அவர்களால் பொறுக்கமுடியாது கிளர்ந்தெழுந்து பேராசிரியர்களையும், கல்லூரி அலுவலர்களையும் காத்தார்கள் மாணவர்கள்.
உடைக்கப்பட்டது பச்சையப்பன் சிலை மட்டுமல்ல அது நம் வாழ்வுரிமையை உடைப்பதாய் உணர்கிறார்கள் மாணவர்கள். சிலையுடைப்பின் தொடர்ச்சி கல்லூரி அபகரிப்பில் முடியுமென்று புரிந்து கொண்டார்கள் மாணவர்கள். அதனால்தான் இப்போதும் உறுதியாய் களத்தில் நிற்கிறார்கள்.
இது ஏதோ “பஸ் டே” பிரச்சினை என்று மட்டும்தான் வெளிப்படுத்தப்படுகின்றன. இது பஸ்டே பிரச்சினை அல்ல என்பது மற்றவர்களை விட இணை ஆணையர் சாரங்கனுக்கு நன்றாகவே தெரியும். இதே பச்சையப்பன் கல்லூரியில் 81-ம் ஆண்டுப்பிரிவில் படித்த அவர் எத்தனை பேருந்துகளை உடைத்து இருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருக்கிறாரா தெரியவில்லை. தாங்கள் மாணவர் பருவத்தில் செய்த சிறுசிறு தவறுகளைத்தான் இப்போதைய மாணவர்களும் செய்கிறார்கள். அப்போது இனித்தது, இப்போது கசக்கிறது. இழுத்துப்போட்டு மாட்டைப்போல் அடிப்பதால் மட்டும் இப்பிரசினை தீர்ந்து விடப்போவதில்லை. மாணவர்களை கலாச்சார ரீதியிலேயே மாற்ற வேண்டியிருக்கிறது. ஆக ஒரு விசயம் மட்டும் தெளிவாகப் புலனாகிறது பஸ்ஸிலே ரூட் அடிப்போருக்கும் , கல் விடுவோருக்கும் எந்த வேலை கிடைக்கிறதோ இல்லையோ இணை ஆணையர் பதவி கண்டிப்பாய் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது.
NDTVக்கு பேட்டியளித்த இணை ஆணையர் சாரங்கன் ” மாணவர்கள் இந்த அளவுக்கு எதிர்ப்பை காட்டுறங்கன்னா உள்ள ஏதோ சக்தி அவங்கள இயக்குது” என்றார். அவருக்குத்தெரியுமோ தெரியாதோ நமக்குத் தெரியாது. அந்த சக்திக்குப்பெயர் “மாணவர் சக்தி “. தன் கல்லூரி ஆசிரியர்கள் தாக்கப்படுகையில், தன் கல்லூரி அடித்து நொறுக்கப்படுகையில், தன்னைப்போன்ற ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளுக்காக அது எரிமலையாய் வெடித்துக்கிளம்பும்.
மாணவர்களுக்காக ஆசிரியர்களும், ஆசிரியர்களுக்காக மாணவர்களும், இருவரும் கல்லூரிக்காக போராடும் தருணம் வந்து விட்டது. இதை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கையிலே அத்தருணத்திலே கூட போராடும் மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் போராடினார்கள்-போராடுகிறார்கள்-போராடுவார்கள்.
நிகழ்காலத்தின் நிகழ்வுகள் தான் வரலாறாய் மாறுகின்றன. இந்தி எதிர்ப்புப்போரில் முக்கியக் களமாய் நின்ற பச்சையப்பன் கல்லூரியின் பழைய மாணவர் வரலாறு மீண்டும் திரும்புகிறது.
மாணவர்களாக, முன்னாள் மாணவர்களாக, பேராசிரியர்களாக, அலுவல பணியாளர்களாக, மனசாட்சியுள்ள மனிதர்களாக, உழைக்கும் மக்களாக ஒன்று சேர வேண்டிய நேரமிது. ராணி மேரிக்கல்லூரி மாணவிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தை நினைவு கூர்வோம். ” கடந்த நேரமும், தவறவிட்ட வாய்ப்பும்” மீண்டும் கிடைப்பதில்லை. இந்த நல்ல’ நேரத்தைப் பயன்படுத்தி மாணவ-பேராசிரியர்களுக்குத் தோள் கொடுப்போம். இல்லையெனில் கொடுக்கப்பட்ட வாய்ப்பு இறந்த காலமாகிவிடும்.
இதோ !!!!
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உங்கள் தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில் கல்லூரியைக் காக்கும் போராட்டத்தில் உங்களையும் அழைக்கிறார்கள். உங்களை மீண்டும் மாணவ பருவத்திற்கு ஒரே ஒரு முறை கொண்டு செல்லுங்கள். இப்போது சொல்லுங்கள் என்ன செய்யப்போகிறோம் நாம் ?
இந்திய அரசே, தமிழக மீனவர்களுக்குத் துப்பாக்கி வழங்கு !
கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை உறுதி செய் !
மதுரை உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கு!
சட்டம் யாருக்கு, எந்த வர்க்க நலனுக்கு சாதகமாக இருக்கிறது என்பது மீண்டும் அம்பலமாகியிருக்கிறது.
உலகிலுள்ள எந்த நாடும் கடல் எல்லை தாண்டும் மீனவர்களை சுட்டுக் கொல்வதில்லை. பாகிஸ்தான் கூட எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதே வழக்கமாக இருந்திருக்கிறது. காரணம், சர்வதேசகடல் சட்டம் சரத்து 73, மீனவர்களை கடலில் சுடுவதை தடைசெய்திருக்கிறது. இச்சட்டத்தில் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் கையொப்பம் இட்டுள்ளன. இதில், இந்தியாவும், இலங்கையும் கூட அடக்கம்.
ஆனால், இச்சட்டத்தை இலங்கை அரசு இதுவரை மதித்து நடந்ததில்லை. இந்திய அரசும் இதை தட்டிக் கேட்டதில்லை. பதிலாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை குருவிகள் போல சுட்டுத் தள்ளுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. இதுவரை 500 க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் இப்படி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மீது 600க்கும் மேலான முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டு விசாரணையின்றி கடலோர மாவட்டங்களில் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் கொலை, கொலை முயற்சி மற்றும் ஆயுத சட்டப்படியான கடுமையான குற்றங்கள். இக்குற்றவாளிகளை இந்திய நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த இந்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 12.01.2011 மற்றும் 22.01.2011 ஆகிய தேதிகளில் வீரபாண்டியன், ஜெயக்குமார் ஆகிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொடூரமாக சுடப்பட்டு, கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ளனர். இது சர்வதேச கடல்சட்டங்களை மீறிய செயலாகும். 2008ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி வெளியிடப்பட்ட இந்திய – இலங்கை கூட்டறிக்கைப்படி இந்திய மீன் பிடி படகுகளை சுடக்கூடாதென ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசு இதையும் நடைமுறைப்படுத்தவில்லை.
இந்திய அரசியல் சட்டம் சரத்து 19 (1) ( g) ன் படி மீன்பிடி உரிமை, தமிழக மீனவர்களின் அடிப்படை உரிமையாகும். அதே போல் இந்திய அரசியல் சட்டம் சரத்து 21ன்படி மீனவர்களூக்கு வாழ்வுரிமையும் அடிப்படை உரிமையாகும். தனது குடிமக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டியது அரசியல் சட்டப்படி அரசின் கடமையாகும். இப்படி தனது குடிமக்களின் அடிப்படை உரிமைகளான தொழில் உரிமை, வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய இந்திய அரசு அக்கடமையிலிருந்து தவறியிருக்கிறது.
அத்துடன் இலங்கையில் தனது மேலாண்மையை நிலைநாட்டுவதற்க்காக தனது சொந்த நாட்டு மக்களின் நலன்களைப் பலியிட்டு வெறுமனே ராஜதந்திர நாடகங்களை நடத்தி வருகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் பணக்கார மாணவர்கள் சிலர் பாதிக்கப்பட்ட போதும், மும்பையில் தாஜ் ஓட்டல் தாக்கப் பட்டபோதும், சிலிர்த்து எழுந்தது. தேசபக்தி நாடகமாடி மக்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பியது. குஜராத் தொழிலதிபர்களின் கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சோமாலியா கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு ஒரு உயிர் கூட சேதமடையாத நிலையில் இந்திய கடற்படையை விரைந்து அனுப்பி நடவடிக்கை எடுத்தது.
இப்படி ஆளும் வர்க்க நலனுக்காக மட்டுமே செயல்படும் இந்திய அரசு, தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. இதனால் தமிழக மீனவர்கள் இந்திய அரசு தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார்கள். ஆகவே மீனவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கி லைசென்சும், இலவசமாகத் துப்பாக்கியும் இந்திய அரசு வழங்க வேண்டும். இத் தற்காப்புரிமை இந்திய தண்டணைச் சட்டம் பிரிவுகள் 96 – 100; வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதி 3 ஆகியவற்றின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படை செய்துள்ள குற்றங்கள், அது தொடர்பான வழக்குகள், வழக்குகள் மீதான இந்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து ஒரு நீதிபதியை நியமித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ் நாடு அமைப்பின் மதுரைக் கிளை துணைச் செயலரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சே.வாஞ்சி நாதன், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.
அதேபோல் மற்றொரு வழக்கில் ராமேசுவரம் மன்னார் வளைகுடாப் பகுதியானது, பல்வேறு அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் நிரம்பிய பகுதி என்பதால் இந்திய அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சீசன் நேரங்களில் மீனவர்கள் இப்பகுதியில் மீன் பிடிப்பார்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4 லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது.
இந்திய – இலங்கை ஒப்பந்தங்கள் 1974, 1976 ன் படி கச்சத் தீவுப்பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓப்பந்தங்களின்படி நேரடியாக கச்சத்தீவை இந்தியா, இலங்கைக்கு அளித்தால் அரசியல் சட்ட திருத்தம் தேவைப்படும் என்பதால் சூழ்ச்சியாக கடல் எல்லையை வரையறுப்பது என்ற அடிப்படையில், கச்சத்தீவிலிருந்து இந்திய கடல் எல்லையை வரையறுக்காமல் திட்டமிட்டே, கச்சத்தீவு இலங்கை கடற்பகுதியில் வருமாறு மாற்றி வரையறுக்கப்பட்டு தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. எனவே கச்சத்தீவை மையப்படுத்தி தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்தியாவின் கடல் எல்லையை இந்திய அரசு புதிதாக வரையறுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மேற்படி வழக்குகள் 15.02.2011 ல் நீதிபதிகள் பால்வசந்தகுமார், சுப்பையா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜராகி வாதிட்டார். இதனையடுத்து கச்சத் தீவு மற்றும் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மற்றும் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது..
இந்த வழக்கு தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிக முக்கியமான வழக்காகும். இதில் எழுப்பட்டுள்ள கேள்விகளுக்கு உயர்நீதிமன்றம் என்ன விடை தரும், வழக்கை தள்ளுபடி செய்யுமா என்றெல்லாம் வாசகருக்கு கேள்வி எழலாம்.
எனினும் சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற வக்கில்லாத அரசின் கீழ் வாழும் இந்த மீனவர்கள் தங்களது பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்தும் உரிமையை கோருவது சட்டப்படியும், அரசியல்ரீதியாகவும் சரியானதே. நீதிமன்றம் இதற்கு முகங்கொடுக்காமல் போனால் நாம் மக்கள் மன்றத்தில் இந்த கோரிக்கையை வைத்து போராடுவதே சரியாக இருக்கும்.
தனது இரு மகன்களுடன் படுகொலை செய்யப்பட்ட ஸ்டெயின்ஸ் பாதிரியார் – அவரை படுகொலை செய்த இந்து பயங்கரவாதி தாராசிங்
ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் மதப் பிரச்சாரம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர். இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.
இவ்வழக்கின் மேல்முறையீட்டில், ஒரிசா உயர் நீதிமன்றம் தாரா சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது; ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 12 குற்றவாளிகளுள் மகேந்திரா ஹெம்ப்ராம் என்பவனின் தண்டனையை மட்டும் உறுதி செய்து, மீதி 11 குற்றவாளிகளையும் நிரபராதிகள் என விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
ஒரிசா உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இம்மி பிசகாமல் உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறது. “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்க வேண்டும்; அதுவும் அந்தந்த சம்பவத்தின் உண்மை நிலை, சூழ்நிலையை பொறுத்தே அமைய வேண்டும்; இவ்வழக்கில் பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களைக் கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” எனக் குறிப்பிட்டு, தாரா சிங்கின் தண்டனை குறைக்கப்பட்டதை நியாயப்படுத்தியிருக்கிறது. இவ்வழக்கில் சதித் திட்டம் தீட்டப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
1999-ஆம் ஆண்டு ஸ்டெயின்ஸ் பாதிரியார் தனது குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்டபொழுது நாட்டில் நிலவிய சூழ்நிலை என்ன? அப்பொழுது வாஜ்பாயின் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடி மக்களும் இந்து மதத்தில் இருந்து தப்பித்து ஓடுவதைத் தடுக்கும் முகமாக, “மதமாற்றம் பற்றித் தேசிய விவாதம் நடத்த வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூச்சல் போட்டுக் கொண்டிருந்ததோடு, மைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவும் முயன்று கொண்டிருந்தது.
இதற்கு இணையாக இன்னொருபுறம் குஜராத்திலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிறித்தவர்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதலை நடத்தி வந்தது, ஆர்.எஸ்.எஸ். இத்தாக்குதலுக்கு அம்மாநில பா.ஜ.க. அரசு துணை நின்றது. இதே காலகட்டத்தில் ஒரிசாவில் பா.ஜ.க. – பிஜு ஜனதாதள் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வந்தது. நாடெங்கிலும் கிறித்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்தும் சதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது போல ஸ்டெயின்ஸ் பாதிரியாருக்கு ஒரு பாடம் புகட்டுவது மட்டும்தான் தாரா சிங்கின் நோக்கம் என்றால், அவர் தனது இரு குழந்தைகளோடு தூங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து ஜீப்பைக் கொளுத்தியிருக்க வேண்டிய அவசியமே கிடையாது. அவரை எழுப்பி மிரட்டிவிட்டு, ரெண்டு தட்டுதட்டிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால், தாரா சிங் தலைமையில் வந்த கும்பலோ, மனோகர்பூர் கிராமத்திற்குள் நுழைந்தவுடன், அக்கிராமத்தின் தகவல் தொடர்புகளைத் துண்டித்தனர். தீ வைக்கப்பட்ட ஜீப்பில் இருந்து அம்மூவரும் தப்பித்துவிடாதபடி ஜீப்பைச் சுற்றி நின்றுகொண்ட அக்குண்டர்கள், அம்மூவரும் கருகி இறந்தபின்தான் அக்கிராமத்தை விட்டுத் தப்பிச் சென்றனர்.
ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்திக் கொல்லுவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். கும்பல் மதம் மாற்றும் பாதிரியார்கள், மதம் மாறிய பழங்குடியினரை மட்டுமின்றி, நாடெங்கிலும் உள்ள சிறுபான்மை கிறித்தவ சமூகத்தினர் மத்தியில் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை உருவாக்க முயன்றது என்பதுதான் உண்மை. இந்தியத் தண்டனைச் சட்டங்களின்படி பயங்கரவாதக் குற்றமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டிய இக்கொலையை, நீதிபதிகள் சாதாரண கொலை வழக்காக நீர்த்துப் போகச் செய்துவிட்டனர்.
ஒரு உயிரற்ற கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில், அப்பாவியான அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை அளிக்கத் தயங்காத உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்டு மூவரை உயிரோடு கொளுத்திக் கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்காமல் கருணை காட்டியிருக்கிறது. எப்பேர்பட்ட நடுநிலை! எப்பேர்பட்ட மதச்சார்பின்மை!
இப்படுகொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட வாத்வா கமிசன், “1991-க்கும் 1998-க்கும் இடைபட்ட காலத்தில் ஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் – படுகொலை நடந்த பழங்குடியின மக்கள் வசித்து வரும் மாவட்டம் – குறிப்பிடத்தக்க அளவில் கிறித்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இக்காலகட்டத்தில் கிறித்தவ மக்கள் தொகை அதற்கு முந்தைய காலத்தைவிட 575 எண்ணம்தான் அதிகரித்திருக்கிறது. இது இயற்கையான உயர்வுதான்” எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ இந்த உண்மையை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மதம் மாற்றுவதைத்தான் அபாயகரமானதைப் போலத் தீர்ப்பு எழுதியுள்ளனர்.
‘‘பலவந்தமாகவோ, ஆசை காட்டியோ, மதம் மாற்றியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்தது என்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களது நம்பிக்கைகளில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது” என்ற நீதிபதிகளின் சூக்குமமான வார்த்தைகளுக்கு, “கிறித்தவர்கள் மருந்து கொடுத்து, கல்வி கொடுத்துப் பழங்குடியின மக்களை மதம் மாற்றுவது சட்டப்படி குற்றம்” என்ற ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள்கையைத்தான் பொழிப்புரையாக எழுத முடியும்.
இக்காவித் தீர்ப்பைக் கண்டித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தவுடன், “பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களை கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” என்ற வரிகள் வரும் பத்தியைத் தீர்ப்பில் இருந்து நீதிபதிகள் நீக்கிவிட்டனர்.
இதை நீக்கியவுடன், ” தாரா சிங்கிற்கு மரண தண்டனை அளிக்கப்படாதது ஏன்?” என்ற கேள்வி வந்துவிடும் என்பதை உணர்ந்திருந்த நீதிபதிகள், “குற்றம் நடந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டதால், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை அதிகரிக்கத் தேவையில்லை” எனத் தீர்ப்பைத் திருத்தியும் விட்டனர்.
தாரா சிங்கிற்கு அதிகபட்ச தண்டனை அளிக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டுதான் நீதிபதிகள் செயல்பட்டுள்ளனர் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?
600-க்கும் மேற்பட்ட முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட மும்பக் கலவரம் நடந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. 2,000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட குஜராத் கலவரம் நடந்து 8 ஆண்டுகள் மறைந்துவிட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பார்த்தால், இக்குற்றச் செயல்களைப் புரிந்த இந்து மதவெறி பயங்கரவாதிகளுள் ஒருவருக்குக்கூட அதிகபட்ச தண்டனை அளிக்கவே முடியாது.
“பலவந்தமாகவோ, ஆசை காட்டியோ, மதம் மாற்றியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்தது என்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களது நம்பிக்கைகளில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது” என்பதற்குப் பதிலாக, “மற்றவர்களின் மத நம்பிக்கையில் எந்த வழியில் தலையீடு செய்வதையும் நியாயப்படுத்த முடியாது” எனத் தீர்ப்பு தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. முழுக்க நனைந்த பின்னும் முக்காடு போட்டுத் திரிவது என்பது இதுதானோ! __________________________________________________
பாண்டிச்சேரி கெம்பாப் ஆலை விஷவாயு கசிவை கட்டுப்படுத்தும் முயற்சி
மறக்க முடியுமா? போபால் விஷவாயு படுகொலைகளை!
போபால் விஷவாயுக் கசிவால் ஏற்பட்ட கொடூரங்களை நம்மில் எவரும் மறந்திருக்க மாட்டோம். பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்குப் பிறக்கும் குழந்தைகளும் (இரண்டாம் தலைமுறையினர்) அதன் கொடூரத்தை தனது கருவிலிருந்தே சுமக்கின்றனர். இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இது தொடரும் என்று தெரியவில்லை.
ஆனாலும் மக்கள் விரோத அரசாங்கமோ இது போன்ற ஆலைகளைத் தடை செய்ய தொடர்ந்து மறுத்து வருகிறது. “இது போன்ற பேரழிவுகளை விபத்து என்றும், எதிர்பாராமல் நடைபெறும் இவைகளுக்கு பாதுகாப்பு வழிகளை சரி செய்து கொண்டால் விபத்தினைத் தவிர்த்து விடலாம்; நாட்டுக்குத் தேவையானதை உற்பத்தி செய்ய வேண்டுமல்லவா?” என்றெல்லாம் சில அறிவுஜீவிகள் கூறுகின்றனர்.
இது விபத்தா? ஒரு விபத்தின் மூலம் முதலாளித்துவம் பாடம் கற்றுக் கொள்ளுமா? நாட்டின் தேவை என்பது உண்மையில் யாருக்கானது?
அழிவின் விளிம்பில் பாண்டிச்சேரி மக்கள்
போபால் போன்று ஒரு பெரும் அழிவுக்கு உட்பட வேண்டிய நிலையிலிருந்து பாண்டிச்சேரியும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் தப்பித்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல. இது வெறும் பீதியூட்டலோ, ஊதிப்பெருக்கி வெறுப்பைக் காட்டுவதற்காகவோ இதனைக் குறிப்பிடவில்லை.
கடந்த ஜனவரி 26 அன்று காலை சுமார் 7-30 க்கு குடியரசு தின அணிவகுப்புகளும் கலைநிகழ்சிகளும் பாண்டிச்சேரியின் கடற்கரையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும்போது பாண்டிச்சேரியின் இன்னொருபுறம் காலாப்பட்டு என்ற இடத்திலுள்ள மக்கள் அலறியடித்துக் கொண்டு அரசு பொது மருத்துவமனையை நோக்கிச் சென்றுள்ளனர்.
பாண்டிச்சேரி கெம்ஃபாப் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் வி.ஆர். ரகுராமன் கூறுவதைப் படியுங்கள்.
“குளோரின் வாயுவைக் கொள்கலனுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகக் கசிந்துள்ளது. இவ்வாறு கசிவு ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யும் “குளோரின் உணர்கருவி” அன்று வேலை செய்யவில்லை. ஆனாலும் அங்கு வேலைசெய்து கொண்டிருந்த தொழிலாளி அதை உணர்ந்து எச்சரிக்கை செய்துவிட்டு உடனடியாக அதை நிறுத்தி விட்டார். இரண்டு நிமிடங்களில் தவறு கண்டுபிடிக்கப்பட்டு கசிவை தடுத்து நிறுத்தி விட்டோம். காற்று சற்று பலமாக இருந்ததால் தென்பகுதியில் கொஞ்சம் பரவி விட்டது.”
மருத்துவமனைக்கு தூக்சிச் செல்லப்படும் தொழிலாளி
கெம்ஃபாப் அல்காலிஸ் லிமிடெட் (Chemfab Alkalis Limited) , பாண்டிச்சேரியிலுள்ள காலாப்பட்டு என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் கெமிக்கல் ஆலை இது. நாளொன்றுக்கு 106 டன் காஸ்டிக் சோடாவும், சுமார் 90 டன் திரவ குளோரினும், ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஹைட்ரோ ஹைப்போ குளோரைட், ஹைட்ரஜன் வாயு போன்றவை இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிறுவனத்திற்கு இதேபோல பெரிய கெமிக்கல் ஆலை ஒன்று கடலூரில் உள்ளது. பாண்டிச்சேரி தவளக்குப்பம் என்னுமிடத்தில் இவர்களுக்குச் சொந்தமான ஒரு ஆலையும் பிரச்சினையால் மூடப்பட்டுவிட்டது.
போபால் விஷவாயுக் கசிவு எதனால் ஏற்பட்டது? கொள்கலனுள் வைக்கப்பட்ட மிதைல் சயனேட் என்ற வாயு குளிரூட்டப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும். அந்த குளிரூட்டும் எந்திரம் பழுதாகி வேலை செய்யவில்லை. தொழிலாளர்கள் இதனை முறையிட்டும் நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. சில டிகிரி வெப்பம் ஏற கொள்கலன் வால்வுகள் வெடித்து விஷவாயு வெளியேறி விட்டது. பல இலட்சம் மக்களின் வாழ்க்கையே அழித்தொழிக்கப்பட்டு விட்டது.
கெம்ஃபாப் நிறுவனத்திலுள்ள எச்சரிக்கை மணி குளோரின் கசிந்தால்தான் வேலை செய்யும். அதனால் அது வேலை செய்கிறதா இல்லையா என்பது யாருக்கும் முன்கூட்டியே தெரியாது. எதேச்சையாக அந்த தொழிலாளி கவனித்து விட்டதால் (அதுவும் இரண்டு நிமிடத்தில்) வால்வை அடைத்து நிறுத்தி விட்டார். காற்றின் போக்கு தொழிலாளியின் பக்கமாக திரும்பியிருந்தால், தொழிலாளி முதலில் மயக்கமடைந்து இங்கும் ஒரு போபால் நிகழ்ந்திருக்கும். இது வெறும் பீதியூட்டல் இல்லை. இரண்டே நிமிடம்தான் என்று சொல்ல ரகுராமன் கூட உயிருடன் இருந்திருக்க முடியாது.
பழுது பார்க்கச் சொன்னதையே பழுது பார்க்காத மூலதனம் பழுதா இல்லையா என்று தெரியாததை பழுது பார்க்குமா? முதலாளித்துவத்தின் இலாப விதிதான் அதனை அனுமதிக்குமா? அப்படி முறையாக பராமரித்திருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
இரண்டே நிமிடம்தான் என்றுச் சொல்லியுள்ளார் ரகுராமன். அந்த இரண்டு நிமிடக் கசிவு அருகிலுள்ள மரஞ்செடி கொடிகளின் இலைகளை பொசுக்கி விட்டது. அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு தலைசுற்றலும் குமட்டலும் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை பதிவுப்படியே 395 பேருக்கு பாதிப்பு என்று தினமலர் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. அதில் குழந்தைகள் 13 பேர்.
இந்தத் தொழிற்சாலையில் இருந்து ஏழு கிலோமீட்டர் சுற்றளவிலேயே பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துமனை, புதுவை பல்கலைக்கழகம், புதுவை பொறியியல் கல்லூரி. புதுவை சட்டக் கல்லூரி போன்றவை அமைந்துள்ளன. அந்தக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள நான்கு ஊர்களின் மக்களையும் சேர்த்தால் 30,000- பேர் இப்பகுதியிலேயே வசிக்கிறார்கள்
இது மக்கள் அரசாங்கமா?
புதுநகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் இதுகுறித்த தகவலை தெரிவிக்க காவல் நிலையம் சென்றுள்ளார். மக்களின் நண்பர்களான போலீசு “நீ ஒருவன்தான் ஊரில் இருக்கியா, போயா போய் உன் வேலையைப்பாரு” என்று விரட்டி விட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் பயந்துபோய் அரசு பொது மருத்துவமனைக்கும், அருகிலுள்ள பாண்டிச்சேரி….(பிம்ஸ்)….. என்ற தனியார் மருத்துவமனைக்கும் பதறியடித்துக் கொண்டு சென்றுள்ளனர். கருணைமிக்க மருத்துவர்களும் செவிலியர்களும் “காசு வாங்குவதற்காக சும்மா நடிக்கிறீர்களா?” என்று மக்களைக் கேவலப்படுத்தியுள்ளனர். மேலும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், புறநோயாளியாக வைத்திருந்து முதலுதவி மாத்திரம் செய்து அவர்களை அவசர அவசரமாக வெளியே விரட்டியுள்ளனர்.
மக்கள் அரசாங்கமாகவும், மருத்துவர்கள் அதன் ஊழியர்களாகவும் உண்மையாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? மருத்துவமனைக்கு வந்த மக்களுக்கு முறையான உடனடி தீவிர சிகிச்சையும், பாதிக்கப்பட்ட இடத்திற்கு மருத்துவக்குழுவாக சென்று அங்குள்ள அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியும் இருக்க வேண்டும். முதலாளிகளைக் காப்பாற்றி அவர்கள் போடும் எலும்புத் துண்டுக்காக அலைபவர்களிடம் இதனை நாம் எதிர்பார்க்கலாமா?
விபத்து நடந்த பிறகும் வழக்கம் போல அரசு எந்திரங்கள் எதன் மீதோ பெய்த மழையாக இருக்க, பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதும் ஓடோடி வந்தது அரசு. 144 தடையுத்திரவை பிறப்பித்து ஆலைக்கு அரண் அமைத்து அங்கே மறியலில் ஈடுபட்ட மக்களை கலைத்துள்ளனர்.
1990 களிலும் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பும் இதே போல விபத்து இந்த ஆலையில் நடந்துள்ளது. இந்த ஆலை வெளியேற்றும் கழிவு நீரால் கடலின் மீன் வளம் பாதிப்படைந்து பலமுறை இப்பகுதி மீனவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அன்றும் அரசு அதிகாரிகள் ஆலையை மூடி சீல் வைப்பதாக நாடகமாடியுள்ளனர். இன்றும் அதே நாடகம்.
பாதிக்கப்பட்ட பகுதி மக்களை ஏமாற்றுவதில் மக்கள் பிரதிநிதிகள், வாழ வழிவிடாத சகோதரன் எழவு வீட்டில் ஒப்பாரி வைப்பது போல ஓடோடி வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் தொழிற்சாலையை மூடி விட்டதாகவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் புளுகி விட்டு கார்களில் பறந்து விட்டனர்.
அன்றாடம் பருகும் நகராட்சி குடிநீரில் கிருமிகள் உள்ளன என்று பன்னாட்டு “அக்வாபினாய’ பருகும் இந்த கனவான்கள், மக்கள் வசிக்கும் பகுதியில் ஆபத்தான விஷவாயுத் தொழிற்சாலையை அனுமதித்ததன் மூலம் மக்களின் உயிர்களை மயிரளவுக்கும் மதிக்கவில்லை என்பது அப்பட்டமான உண்மை.
காலாப்பட்டு எம்.எல்.ஏ.வும், கல்வி அமைச்சருமான ஷாஜகான் (இந்த உத்தமரின் அப்பா பரூக்மரைக்காயர் முதல்வராக இருந்த போதுதான், இந்தக் கொலைகார இரசாயன ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது) இப்படி ஒரு ஆபத்தான இரசாயன தொழிற்சாலை தனது தொகுதியில் இருக்கிறதே; இதில் விபத்து ஏற்பட்டால் நமது தொகுதியில் வாழும் 30,000 மக்களின் உயிர்களும் போய்விடுமே என்ற அக்கறை கொஞ்சமும் இல்லாமல், விபத்து நடந்த நான்காவது நாளே (31-01-2011) தங்கத் தேரிழுத்து, பால்குடம் சுமக்க விமரிசையாக தனது பிறந்தநாளை காலாப்பட்டில் கொஞ்சமும் அருவெறுப்பின்றி கொண்டாடினார்.
சீல் வைக்கப்பட்ட ஆலைக்குள் இரகசியமாக வேலைகள் நடைபெற்று, 14 டேங்கர் லாரிகளில் குளோரினை நிரப்பி இரவோடு இரவாக அனுப்பியுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டு ஆலைக்கு மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். மாவட்ட உதவி ஆட்சியர் அங்கு வந்து, “ஆலையில் உள்ள கெமிக்கல்களைப் பாதுகாக்க சில எந்திரங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதற்காகத்தான் சில எந்திரங்களை இயக்கினர். அது போல கெமிக்கல்களை அப்புறப்படுத்தவே டேங்கர் லாரிகளை அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.
சீல் வைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை அரசாங்கம் கையகப்படுத்திக் கொள்வது சரியானதா? அல்லது அந்த நிர்வாகத்தையே பராமரிக்க அனுமதிப்பதா? குறைந்த பட்சம் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் வெளிப்படையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் நடப்பதோ முதலாளிகளுக்கான விசுவாசம். முதலாளிகளுக்கான சிறு இழப்பைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் விற்றுக் காசாக்கிக் கொள்ள துணை போகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பான சூழ்நிலையில் இப்படிப்பட்ட ஆபத்தான கெமிக்கல்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று எண்ணுவது போன்ற முட்டாள்தனம் வேறில்லை.
கொடூர இரசாயன ஆயுதம் : குளோரின்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீரில் குளோரின் மிகச் சிறிய அளவில் கலக்கப்படுகிறது, அதாவது, நமது நகராட்சி மற்றும் பேரூராட்சியால் வழங்கப்படும் குடிநீரில் 5000 லிட்டருக்கு ஒரு மாத்திரை வீதம் கலந்தே நமது வீடுகளுக்கான குடிநீர் குழாய்களில் வழங்கப்படுகிறது. இதனால் வயிற்றுப்போக்கு, காலரா போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது குளோரின் கலந்த குடிநீர்தான்.
குளோரின் வாயுவின் அளவு காற்றில் 0.2 முதல் 0.5 PPM வரை இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. அதுவே, 2 PPM இருந்தால் இருமல், வாந்தி ஏற்படும். 30 PPM இருந்தால் நுரையீரல் பாதிக்கும். 60 PPM இருந்தால் உயிரையே குடித்து விடும். PPM என்பது PARTICLES PER MILLION – அதாவது 10,00,000 காற்று துகள்களில் வெறும் 60 குளோரின் துகள்கள் இருந்தாலே, அது நமது உயிரை குடித்துவிடும். நமது நாட்டின் சுகாதாரத் தேவை மற்றும் சாயப்பட்டறைகளில் துணிகளை பிளீச்சிங் செய்வதற்கு தேவையான அளவுக்கு மேல் உற்பத்தி செய்யப்படுதாக அறிய முடிகிறது.
அதிலும் திரவ குளோரின் முழுக்க முழுக்க ஏகாதிபத்தியத்தின் கொலைவெறிக்கு உதவும் இரசாயன ஆயுதங்களை உற்பத்தி செய்யவே பயன்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் போது குளோரின் நச்சு வாயுவைப் பயன்படுத்தி ஜெர்மனி பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழித்தது. ஈராக் (2007) போரின் போது அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கிற்கான குளோரின் சப்ளையை நிறுத்தி 5 இலட்சம் குழந்தைகளைக் கொன்றது, அதாவது. ஈராக் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் கலக்கப் பயன்படும் மிகச்சிறிய அளவிலான குளோரினையும் தடை செய்ததன் மூலம் சுகாதாரமற்ற. குளோரின் கலக்காத குடிநீரை குடித்த ஒன்றுமறியாத 5 இலட்சம் ஈராக் இளம் பிஞ்சுகள் வயிற்றுப்போக்கு மற்றும் காலரா நோயினால் துடிதுடித்து செத்தார்கள்.
திடநிலையிலுள்ள குளோரினையும் தமது ஆயுதமாக ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்த முடியும் என்பதை அறியும்போது முதலாளித்துவம் தன்னை நம்பியுள்ள தன் சொந்த மக்கள் மீது கொஞ்சம் கூட இரக்கம் காட்டாதா என்ற கேள்வி மனதைச் சுடுகிறது.
எங்களிடம் பேசிய புதுநகரைச் சேர்ந்த பெரும்பாலானோர், ‘சமையல் எரிவாயு உலையில் இருந்து வாயு கசிவதாகவே முதலில் நினைத்தோம்’ என்று கூறினார்கள். ஒருசிலர் பிளீச்சிங் பவுடர் வாசனை வந்ததாகவும், அதன்பின் மூச்சுத்திணறல் வந்ததாகவும் கூறினர். இதே புதுநகரைச் சேர்ந்த கிருத்திகா “எங்கள் வீட்டின் பின்பக்கத்தில் இருந்து பிளீச்சிங் பவுடர் வாசனை வந்தது. என்ன இது என்று பார்ப்பதற்குள், வீட்டின் பின்பக்கம் இருந்த மரம், செடி கொடிகள் எல்லாம் கருகியது. எனக்கும் தலைசுற்றல் வந்ததால் என் வீட்டுக்காரருடன் மருத்துவமனைக்குச் சென்று விட்டேன்’ என்றார்.
செல்வி என்ற மீன் விற்கும் பெண் “இந்த கம்பெனி ஆரம்பிக்கும் போது சோடா கம்பெனி ஆரம்பிக்கிறோம் என்றுதான் சொன்னான்க. இப்ப என்னடான்னா எங்க எல்லாத்தையும் சாவடிச்சுடுவான்க போல’ என்று ஆத்திரப்படுகிறார். ஆண்டாள் என்ற வயதான பாட்டி ‘ஐயா, நாங்க எல்லாம் வாழ்ந்துட்டோம். எங்க புள்ளங்க எல்லாம் வாழ வேணுமில்ல. அதனால, தயவு செய்து இந்த கம்பெனிய எடுத்துடுங்க. வேற எந்த கம்பெனி வேணா வச்சுக்குங்க’ என்று பரிதாபமாக புலம்புகிறார்.
முதலாளித்துவ அரசு மக்கள் நலன் காக்காது என்பது தெள்ளத் தெளிவானது. நம் முன் உள்ள கேள்வி கெம்ஃபாப் போன்ற கொலைகார ஆலைகளை போராடி அகற்றப் போகிறோமா? அல்லது பல ஆயிரக்கணக்கான நம் மக்களை பலிகொடுத்து விட்டு, அய்யோ பாவம் என்று ஒப்பாரி வைக்கப் போகிறோமா? என்பதே.
_____________________________________________________________________________________________________ தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பாண்டிச்சேரி
______________________________________________________________________________________________________
அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் கடந்த நான்கு தலைமுறைகளாகப் போராடிவந்த முதுபெரும் மனித உரிமைப் போராளி தோழர் கே.ஜி.கண்ணபிரான், நீரழிவு நோயினால் கடந்த டிசம்பர் 30 அன்று தனது 81-வது வயதில் காலமாகிவிட்டார்.
1960-களின் தொடக்கத்தில் ஆந்திர உயர் நீதிமன்ற வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கிய கண்ணபிரான், ஆந்திரப் பிரதேசக் குடியுரிமைக் கழகத்தில் (APCLC) 15 ஆண்டுகளாகத் தலைவராகவும், பத்தாண்டுகளாகக் குடியுரிமைக்கான மக்கள் கழகத்தின் (PUCL) அனைத்திந்தியத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தள்ளாத வயதிலும் தற்போது அரசியல் கைதிகள் விடுதலைக்கான கமிட்டியின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.
1973-இல் தொடங்கப்பட்ட ஆந்திரப் பிரதேசக் குடியுரிமைக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவர்தான் கண்ணபிரான். 1975-இல் இந்திராவின் அவசரநிலை பாசிச ஆட்சிப் பிரகடனப்படுத்தப்பட்டுப் புரட்சிகர ஜனநாயக இயக்கங்களும் எதிர்க்கட்சிகளும் ஒடுக்கப்பட்ட நிலையில், கொடிய “மிசா” சட்டத்தை எதிர்த்து கண்ணபிரான் நீதிமன்றத்தில் சட்டரீதியாகப் போராட்டம் நடத்தினார். அவசரநிலை பாசிசத்துக்கு எதிரான முதல் சட்டரீதியான போராட்டமும் இதுதான். அவசரநிலை பாசிச ஆட்சிக் காலத்தில் ஆந்திராவின் நக்சல்பாரிப் புரட்சியாளர்களான தோழர்கள் பூமையா, கிஸ்த கவுடா ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது, அவர்கள் அரசியல் கைதிகள் என்பதால் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமென சட்டரீதியாக மனு செய்து நீதித்துறையிடம் போராடினார். இப்பாசிச ஆட்சிக் காலத்தில் சிறையிடப்பட்ட 500-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் மற்றும் சாமானிய மக்களுக்களின் விடுதலைக்காக அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
அவசரநிலை பாசிச ஆட்சிக் காலத்தில் நடந்த போலீசின் மோதல் படுகொலைகளுக்கு எதிராக அமைக்கப்பட்ட தார்குண்டே கமிசனில் கண்ணபிரான் முன்னணிப் பாத்திரமாற்றினார். இப்படுகொலைகள் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட பார்கவா கமிசனில் கண்ணபிரான் வாயிலாக ஆதாரபூர்வமான உண்மைகள் செய்தித்தாள்களில் வெளிவரத் தொடங்கியதும், பீதியடைந்த அப்போதைய ஆந்திர முதல்வரான வெங்கல்ராவ், இந்த விசாரணையை இரகசியமாக நடத்தும்படி உத்தரவிட்டார். இதை எதிர்த்து கண்ணபிரானும் ஆந்திரப் பிரதேசக் குடியுரிமைக் கழகமும் இந்த விசாரணையில் பங்கேற்காமல் புறக்கணித்து, இம்மோதல் படுகொலையின் பின்னேயுள்ள பாசிச அரசியலை அம்பலப்படுத்திக் காட்டினர்.
1980-களில் ஆந்திராவில் நக்சல்பாரி புரட்சிகர விவசாய இயக்கம் தெலுங்கானா பகுதியில் முன்னேறியபோது, அவற்றை ஒடுக்க மோதல் படுகொலைகளை போலீசு தீவிரப்படுத்தியது. போலீசின் இரகசிய கூலிப்படைகளால் புரட்சியாளர்களும் மனித உரிமைப் போராளிகளும் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வந்த இருண்ட காலம் அது. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழல் நிலவிய அக்காலத்தில், போலீசு பயங்கரத்துக்கு எதிராகத் துணிவோடு கண்ணபிரான் தொடர்ந்து போராடினார். விசாரணைகள் மூலமும் வழக்குகள் தொடுத்தும் இப்படுகொலைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். 1997முதல் 2007 வரை ஆந்திராவில் 1800 மோதல் படுகொலைகள் நடந்துள்ளதை ஆதாரங்களுடன் அவர் அம்பலப்படுத்தியதால், இப்படுகொலைகளுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், சுயேச்சையான நீதி விசாரணை நடைபெற வேண்டும் என்றும் ஆந்திர உயர் நீதிமன்றம் கூறியது. இது, போலி மோதல் படுகொலைகளுக்கு எதிரான சட்ட ரீதியான போராட்டத்தின் முக்கியமானதொரு வெற்றியாகும்.
போலீசின் பயங்கரவாதத்தையும் அதற்கெதிரான நக்சல்பாரி புரட்சியாளர்களின் நியாயமான போராட்டங்களையும் சமப்படுத்தி, இரண்டையும் “வன்முறை” என்று கூறும் சில மனித உரிமை அமைப்புகளின் போலித்தனமான ‘நடுநிலைக்கு’ மாறாக, அரசு பயங்கரவாதத்தை முதன்மை எதிரியாக அவர் உணர்த்தினார். “மக்களின் நல்வாழ்வுக்காகவும் சமத்துவத்துக்காகவும் மாவோயிஸ்டுகள் உள்ளிட்டு பலதரப்பட்ட இயக்கங்கள் போராடி வருகின்றன. இவற்றுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமேயன்றி, இதைச் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாகப் பார்த்து, போலீசுக்கும் உளவுத்துறைக்கும் எல்லையற்ற அதிகாரத்தை வழங்கி வன்முறைகளில் ஈடுபட அரசு அனுமதிப்பதும், கிரிமினல் சட்டங்களை ஏவி அரசியல் இயக்கங்களை ஒடுக்குவதும் நியாயமென்றால், நமது ஜனநாயகத்தின் பொருள்தான் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
முற்போக்கு – ஜனநாயக இயக்கங்களின் மீது அரசால் சோடிக்கப்பட்ட சதிவழக்குகளையும், ஏறத்தாழ 400-க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளையும் எவ்விதக் கட்டணமுமின்றித் தானே வழக்காடி, பாதிக்கப்பட்டோரை அடக்குமுறைகளிலிருந்து தோழர் கண்ணபிரான் மீட்டுள்ளார். சட்டிஸ்கர் முக்தி மோர்ச்சா எனும் தொழிற்சங்க இயக்கத்தின் தலைவரான தோழர் சங்கர் குகா நியோகி, 1993-இல் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது, கூலிப்படையினர் மட்டுமல்லாது முதலாளிகளையும் கைது செய்ய வைத்துக் குற்றவாளிக் கூண்டிலேற்றினார்.
ஈழ அகதிகள் நடுக்கடலில் சுற்றி வளைக்கப்பட்டு இந்தியாவில் சிறையில் வதைக்கப்பட்டபோதும், வீரப்பனுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டிப் பழங்குடியின மக்கள் “தடா” சட்டத்தில் வதைக்கப்பட்ட போதும், கோவை குண்டு வெடிப்பு வழக்குகளில் அப்பாவிகள் சித்திரவதை செய்யப்பட்ட போதும், அவர் நீதிமன்றங்களில் போலீசின் பயங்கரத்துக்கு எதிராகப் பல வழக்குகளில் வாதிட்டார். அக்கறையுள்ள குடிமக்கள் கமிட்டியின் சார்பில் அவர் குஜராத்தில் நடந்த இந்துவெறி பாசிச பயங்கரவாதப் படுகொலைகள் பற்றி விசாரணை நடத்தும் குழுவிலும் இடம் பெற்றார். சர்வதேச கடல் பகுதியில் பயணித்த விடுதலைப் புலிகளின் படகை அடாவடியாகக் கைப்பற்றி இந்திய அரசு வழக்கு தாக்கல் செய்த போது, பழ.நெடுமாறன் சார்பில் வாதிட்டு அந்த வழக்கில் வெற்றி பெற்றார். முன்னாள் இராணுவ சுபேதார் நல்லகாமன் தொடுத்திருந்த போலீசு எஸ்.பி.பிரேம்குமார் மீதான வழக்கில், மதுரை உயர் நீதிமன்றத்தில் வாதிட்ட தோழர் கண்ணபிரான், இப்போலீசு அதிகாரியின் சட்டவிரோத பயங்கரவாதத்தைத் திரைகிழித்துக் காட்டித் தண்டிக்க வலியுறுத்தினார்.
தனது வாழ்நாள் முழுவதும் அரசு பயங்கரவாதத்துக்கு எதிராகவும் மனித உரிமைகளுக்காகவும் தொடர்ந்து பாடுபட்ட உன்னதப் போராளி அவர். மறுகாலனியாக்கமும் பாசிச அடக்குமுறையும் தீவிரமாகிவரும் இன்றைய சூழலில், மனித உரிமைக்கான போராட்டங்களை ஏகாதிபத்தியங்கள் நிறுவனமயமாக்கிவரும் இன்றைய சூழலில், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகத் தொடர்ந்து உறுதியாகப் போராடுவதுதான், நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.
சென்னையிலுள்ள அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படித்துவரும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கடந்த டிசம்பர் 21 அன்று சென்னை – அண்ணா சாலையில் நடத்திய சாலை மறியல் போராட்டம், அம்மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காகத் தமிழக அரசால் நடத்தப்படும் நல விடுதிகள் அனைத்தும் மாட்டுக் கொட்டகைகளைவிடக் கேவலமாக இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.
‘‘கடந்த பல ஆண்டுகளாகவே முறையாகப் பராமரிக்கப்படாததால், சிதிலமடைந்துவிட்ட கட்டிடங்கள்; உடைந்து போன கழிவு நீர் செல்லும் குழாய்கள் மாற்றப்படாததால், மலமும், சிறுநீரும் விடுதிக்குள்ளேயே குட்டையைப் போலத் தேங்கி நின்று, அதனால் வீசும் துர்நாற்றம்; 52 அறைகளில் 595 மாணவர்கள் தங்க வேண்டும் என்ற அரசின் கணக்கே அளவுக்கு அதிகமானது எனும்பொழுது, இப்பொழுது அந்த 52 அறைகளில் 1,600 மாணவர்கள் (ஒரு அறைக்கு 30 மாணவர்கள்) அடைபட்டுக் கிடக்கும் அவலம்.” – இதுதான் சென்னை – சைதாப்பேட்டையிலுள்ள எம்.சி.ராஜா விடுதியின் குறுக்குவெட்டுத் தோற்றம்.
சென்னையிலுள்ள மற்ற 16 விடுதிகளும், தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள விடுதிகளும் எம்.சி.ராஜா விடுதியைப் போன்று அல்லது அதைவிடக் கேவலமான நிலைமையில்தான் இருக்கின்றன.
இவ்விடுதிகள் ஒவ்வொன்றிலும் மாவரைக்கும் இயந்திரங்கள், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், குடிநீரைச் சுத்திகரிப்பதற்கான கருவிகள் இருக்க வேண்டும் என ஆதிதிராவிடர் நலத் துறையின் கொள்கைக் குறிப்பு கூறுகிறது. ஆனால், இவ்விடுதிகளில் காலைக் கடன்களைக் கழிப்பதற்கும், குளிப்பதற்கும்கூட முறையான, போதுமான வசதிகள் கிடையாது என்பதுதான் உண்மை.
இவ்விடுதிகளில் தங்கிப் படிக்கும் ஒவ்வொரு கல்லூரி மாணவன் மற்றும் பள்ளி மாணவனின் உணவிற்காக மாதமொன்றுக்கு ரூ.550/- வரை நிதி ஒதுக்கப்படுவதாக அரசு கூறுகிறது. இந்த ஒதுக்கீடைத் தின்று தீர்ப்பது அதிகார வர்க்கம்தான் என்பதை இவ்விடுதிகளால் போடப்படும் உணவே காட்டிக் கொடுத்துவிடுகிறது. புழுத்துப் போன அரிசிச் சோறுதான் இவ்விடுதிகளால் போடப்படும் ஒரே ‘சத்தான’ உணவு. குழம்புக்கும் காய்கறிக்கும் மாணவர்கள் தங்கள் கைக்காசைத்தான் போட்டுக் கொள்ள வேண்டும். உணவிற்காகவும், கல்விச் செலவிற்காகவும் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்குப் போவதாகக் குறிப்பிடுகிறார்கள், இம்மாணவர்கள். .
இப்படிபட்ட இழிந்த சூழ்நிலையில் தங்க நிர்பந்திக்கப்பட்டுள்ள ஏழை தாழ்த்தப்பட்ட மாணவனால், தனது படிப்பில் முழுமையான கவனத்தை எப்படிச் செலுத்த முடியும்?
அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டிய கடமையை அரசு புறக்கணிக்கிறது என்பதாக மட்டும் இந்தப் பிரச்சினையைப் பார்க்க முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகப் பட்டம் சூட்டிக் கொண்டுள்ள திருமா., ரவிக்குமார் போன்றவர்களால் ஆதரிக்கப்படும் தி.மு.க. ஆட்சி, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மீது கொண்டுள்ள தீண்டாமை மனோபாவத்தையும் பிரதிபலிப்பதாகவே இதனைப் பார்க்க முடியும்.
ஹைத்தியில் நடைபெற்ற இயற்கைப் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றிய அவர்கள் தான் உண்மையான நாயகர்கள். தன் நாட்டுக்கு மிக அருகிலேயே நடைபெற்ற இந்த மனிதப்பேரழிவிலிருந்து மக்களை காப்பது தான் எங்கள் கடமை என்று வட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதியேற்ற போதிலும், அவர்களை காப்பாற்றியது என்னவோ வட அமெரிக்கா எதிரியாக கருதும் கூபா தான். ஆம் கூப மருத்துவர்களும், செவிலியர்களும் ஆற்றிய பணிகள் தான் வட அமெரிக்காவின் உண்மையான முகத்தை மக்களுக்கு தோலுரித்து காட்டியது என்றால் அது மிகையாகாது.
1,200 கூபர்களைக் கொண்ட ஒரு மருத்துவப்படையணி நிலநடுக்கத்தாலும், காலராவாலும் பாதிக்கப்பட்ட ஹைத்தி முழுக்க பணியாற்றி வருகின்றார்கள். கூப அதிபர். பிடல் காசுட்ரோவின் பன்னாட்டு மருத்துவ திட்டம் சோசலிச கூபாவிற்கு பல நண்பர்களை உருவாக்கி தந்திருக்கின்றது, ஆனால் உலக அளவில் இந்த திட்டத்திற்கான அங்கீகாரம் என்பது மிக மிக சிறிய அளவிலேயே உள்ளது ஒரு நகைமுரணாகும்.
2,50,000 பேர் உயிரிழந்து, 15 இலட்சத்திற்கும் மேலான மக்கள் வீடிழந்த ஹைத்தி நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இன்னல்களைச் சரி செய்து மக்களை காப்பாற்றி வருவது பன்னாட்டு தொண்டு நிறுவனங்கள் தான் என நீங்கள் எண்ணியிருந்தால் உங்களை ஆண்டவர் மன்னிப்பாராக. 1998லிருந்து 350 கூப மருத்துவ ஊழியர்கள் ஹைத்தி மக்களுக்கு மருத்துவம் செய்து வருகின்றார்கள். நில நடுக்கம் ஏற்பட்ட உடனே இந்த 350 பேர் கொண்ட மருத்துவக்குழு வேலையில் இறங்கியது. வட அமெரிக்காவிலிருந்தும், இங்கிலாந்து அரசிடமிருந்தும் உதவிகள் வரும் என்று உலக ஊடகங்கள் கூவிக்கொண்டிருந்த வேளையில், நூற்றுக்குமேற்பட்ட கூப மருத்துவர்களும், செவிலியர்களும் எந்த ஒரு சிறு அறிவிப்பும் இன்றி ஹைத்தியில் வந்திறங்கினார்கள். பெரும்பாலான நாடுகளின் உதவிக்குழுக்கள் வழமை போலவே கூப மருத்துவர்கள் குழுவையும், எல்லையில்லா மருத்துவர்கள் குழுவையும்(Doctors without Borders) தனியே விட்டு விட்டு இரண்டு மாதங்களில் பெட்டியைக் கட்டிக்கொண்டு தங்கள் நாடுகளுக்கு பயணமாகினார்கள். கூப மருத்துவ குழுவும், எல்லையில்லா மருத்துவர்கள் குழுவும் தான் ஏழ்மையில் வாடும் மேற்கிந்திய தீவு மக்களுக்கு மருத்துவம் அளிக்கும் முதன்மை அமைப்புகளாகும்.
2010 ஒக்டோபரில் இருந்து இன்று வரை 30,000ற்கும் அதிகமான காலரா நோயாளிகளை 40 மருத்துவ மையங்களில் உள்ள கூப மருத்துவக்குழு குணப்படுத்தியுள்ளது என தற்பொழுது வெளியாகியிருக்கும் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. ஹைத்தியில் உள்ள 40விழுக்காடு காலரா நோயாளிகளைக் குணப்படுத்தியுள்ள கூப மருத்துவர்கள் குழு தான் ஹைத்தியிலுள்ள மிகப்பெரிய வெளிநாட்டு மருத்துவக்குழு ஆகும்.இதுமட்டுமன்றி அண்மையில் ஹைத்தியில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் ஒரு குறிப்பிட்ட நோயினால் மரணமடைவதை அறிந்ததும் கூபாவின் இயற்கைப் பேரழிவு, சிறந்த மருத்துவ நிபுணர்களைக் கொண்ட அவசர காலக் குழுக்களில் ஒன்றான ஹென்றி ரீவ் மருத்துவ படையணியும் ஹைத்திக்கு வந்து சேர்ந்தது.
கூபாவில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ள மருத்துவ மையமான Escuela Latinoamericana de Medicina en cuba (Elam)வில் 1998லிருந்து 550 ஹைத்தி மருத்துவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்துள்ளது. மேலும் பணம் இல்லாத காரணத்தினால் தனது நாட்டில் மருத்துவம் படிக்க முடியாத திறமையான 400 மாணவர்கள் இன்று கூபாவில் மிக மிக குறைந்த செலவில் மருத்துவ படிப்பு பயின்று வருகின்றார்கள்.
கனடாவின் டல்கௌவுசி பல்கலைக்கழகத்தில் இலத்தின் அமெரிக்க கற்கைகளுக்கான விரிவுரையாளர் சான் கிர்க் கூபாவின் பன்னாட்டு மருத்துவக்குழுக்களைப் பற்றி பகுப்பாய்வு (Research) செய்துள்ளார். அவர் கூறுகையில்
“ஹைத்தி நிலநடுக்கத்தில் பெரும்பாலான மருத்துவப்பணிகளை கூப மருத்துவக்குழு மட்டுமே செய்துள்ளது, ஆனால் இதைப்பற்றி யாரும் வாய்திறக்காமல், இதை ஏதோ உலக இரகசியம் போன்று வைத்துள்ளது உலக நாடுகள்”.
இது ஏதோ இன்று புதிதாக நடக்கும் ஒன்றல்ல, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிலே நாட்டுக்கு 1960ல் ஒரு மருத்துவ படையணி சென்றதையும், 1963ல் அல்சீரியா நாட்டிற்கும் 50 பேர் கொண்ட மருத்துவக்குழு சென்ற தகவல்களும் உலகால் மறைக்கப்பட்ட ஒன்று தான். புரட்சி நடந்து நான்கு ஆண்டுகளில் மேற்கூறிய நிகழ்வுகளை கூபா நடத்தி காட்டியது. இந்த காலகட்டத்தில் நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட(7,000) மருத்துவர்கள் வட அமெரிக்காவை நோக்கி பறந்து கொண்டிருந்த காலம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இது போன்று பல நாடுகளுக்கு பயணம் செய்யும் மருத்துவ குழுக்கள் மூலமாக கூப நாட்டிற்கு பல நண்பர்கள் உலகம் முழுவதும் உருவாகியுள்ளார்கள் .
இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்த திட்டம் என்றால் “ஒப்பரேசன் அதிசயத்தை” கூறலாம். கூபாவிற்கு வெனிசுவேலா கொடுக்கும் எண்ணெய்க்கு பதிலாக கூப கண் மருத்துவர்கள் வெனிசுவேலாவில் ஏழ்மையில் வாடும் கண் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே அத்திட்டமாகும். இந்த திட்டத்தை தொடர்ந்து 35 நாடுகளில் 18 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் கண் தொடர்பான பிரச்சனைகள் கூப மருத்துவர்களால் களையப்பெற்று அவர்களுக்கு எல்லாம் கண் பார்வை மீளக்கிடைத்துள்ளது. இதில் 1967 சே குவாராவைக் கொன்ற பொலிவிய காவலாளியான மரியோ தெரனும் அடங்குவார் (அவரது கண் பார்வையையும் மீட்டுக்கொடுத்தது கூப மருத்துவக்குழுவே).
கத்ரினா புயலுக்குப் பின்னர் பல வட அமெரிக்க மருத்துவர்களும் (முன்னாள் கூபர்கள்) ஹென்றி ரீவ் மருத்துவ படையணியில் சேர்ந்துகொண்டார்கள். இந்த மருத்துவ படையணி தான் 2005ல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பாகிசுதானுக்கு முதலில் சென்று மருத்துவ உதவி செய்தது, வழமை போலவே மற்ற எல்லா தொண்டு நிறுவனங்கள் கிளம்பிய பிறகும், ஆறு மாதங்கள் கழித்தே இவர்கள் நாடு திரும்பினார்கள்.
விரிவுரையாளர் கிர்க் மேலும் கூறுகையில்
“உலக நாடுகளில் வாழும் மக்களுக்கு ஆதரவளிப்பது(Solidarity) என்ற கொள்கைக்காக மட்டும் இல்லாமல் கூப அரசியலமைப்பில் உள்ள வறுமையில் வாடும் நாடுகளுக்கு தேவைப்படும் பொழுது எல்லாம் உதவ வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டே இம்மருத்துவ படையணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. “கூபாவில் குறைந்த அளவு மட்டுமே ஊதியம் பெறும் இம்மருத்துவர்கள் இந்த குழுக்களுடன் பயணிப்பதன் மூலம் அதிகமான ஊதியம் கிட்டுவதுடன், தாங்கள் படித்த நோய்களைப் பற்றி மேலும் தெரிந்து கொண்டு அதை தடுக்கும் வழிமுறைகளில் அவர்கள் ஈடுபடவும் உதவுகின்றது. அதிபர் பிடலின் முக்கியக் கொள்கையான இந்த மருத்துவ குழுக்களினால் ஐக்கிய நாடுகள் சபையில் கூபாவிற்கு ஆதரவாக வாக்குகளும் விழுந்துள்ளது”.
எல் சாவேதார், மாலி, கிழக்கு திமோர் உள்பட 77 வறிய நாடுகளில் 25,000 கூப மருத்துவர்களும்(கூபாவின் மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு), 10,000ற்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களும் வேலை செய்து வருகின்றார்கள். இவ்வளவு மருத்துவர்கள் கூபாவை விட்டு வெளியே பணியாற்றி வந்த போதும் கூபாவில் 220 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் உள்ளது என்பதும், இது தான் உலகிலேயே முதல் பெரிய விகிதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் 370 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதமே இதற்கு அடுத்ததாகும். எங்கெல்லாம் கூப மருத்துவர்கள் அழைக்கப்படுகின்றார்களோ அந்த பகுதிகளில் எல்லாம் அவர்கள் நோயை தடுக்கும் வழிமுறைகளை செயல்படுத்தியும், வீடுகளுக்குச் சென்று மருத்துவம் செய்வதும், குறிப்பாக பிரசவ கால பெண்களின் உடல்நிலையையும், குழந்தைகளின் உடல்நிலையை தொடர்ந்து கவனித்தும் வருகின்றார்கள். இந்த முறைகளின் மூலமாக “மிகப்பெரிய வித்தியாசத்தை” எல் சாவேதார், கௌதமாலா, கோண்டுராஸ் நாடுகள் கண்டுள்ளன. பிரசவ கால, குழந்தைகள் இறக்கும் விகிதம் குறைந்துள்ளது, குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களின் விழுக்காடு குறைந்தும் உள்ளது. மேலும் அந்தந்த நாடுகளில் இருக்கும் மருத்துவர்களுக்கு தேவையான் பயிற்சியையும் இந்தக்குழு அளிக்கின்றது என சான் கிர்க் தனது பகுப்பாய்வின் மூலம் நிறுவி உள்ளார்.
கூபாவில் மருத்துவ பயிற்சி ஆறு ஆண்டுகாலமாகும்(இங்கிலாந்தை விட ஒரு ஆண்டு அதிகம்). பயிற்சி முடிந்த பின்னர் ஒவ்வொருவரும் குடும்ப மருத்துவர்களாக குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வேலை செய்யவேண்டும். இவர் வாழும் சமூக கூட்டமைப்பில் உள்ள 150லிருந்து 200 மக்களுக்கு மருத்துவம் பார்க்கவேண்டும், இவருக்கு உறுதுணையாக ஒரு செவிலியர் இருப்பார்.
இந்த திட்டத்தின் மூலமாக கூபா உலகில் எந்த நாடும் அடைய முடியாத பல்வேறு மருத்துவ முன்னேற்றங்களை அடைந்துள்ளது, ஆனால் ஒரு இதற்காக ஒரு ஆண்டிற்கு நபர் ஒன்றுக்கு அரசு செய்யும் செலவு 400 டாலர் மட்டுமே. இதுவே இங்கிலாந்தில் நபர் ஒன்றுக்கு அரசு செய்யும் செல்வு 3000 டாலர்களாகவும், வட அமெரிக்காவில் 7,500 டாலர்களாகவும் இருக்கின்றது என பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கான கூட்டமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு நாட்டிலுள்ள மருத்துவதுறையில் செயல்பாடுகளை அறியும் மிக முக்கியமான குறியீடான பிரசவத்தின் போது குழந்தைகள் இறக்கும் விகிதம் 1000ற்கு 4.8 ஆக உள்ளது. இது இங்கிலாந்தில் உள்ள விகிதத்திற்கு சமமாகவும், வட அமெரிக்காவில் உள்ள விகிதத்தை விட குறைவானதும் ஆகும். நீண்ட கால உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிப்பது பிறந்த குழந்தையின் எடையாகும். கூபாவில் 5 விழுக்காடு குழந்தைகளே பிறக்கும் போது குறைவான எடையுடன் பிறக்கின்றார்கள். மேலும் பிரசவ காலத்தின் போது ஏற்படும் இறப்பு விகிதத்தில் இலத்தின் அமெரிக்காவிலேயே கூபா தான் மிகக்குறைவான இறப்பு விகிதம் கொண்ட நாடாகும். இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் உலக சுகாதார நிறுவனத்தால்(WHO) எடுக்கப்பட்டவையாகும். கூபாவில் உள்ள மருத்துவ மையங்கள் 24 மணி நேரமும் இயங்குகின்றன. அவசர மற்றும் சிறப்பு மருத்துவ மையங்கள் குடும்ப மருத்துவமையங்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவையாகும், இந்த மையங்களில் முழு நேர மருத்துவ ஆலோசகர்களும், சிறப்பு மருத்துவர்களும் உள்ளார்கள். இந்த இரண்டு மையங்கள் மூலமாகவும் 15,000லிருந்து 20,000 வரையிலான நோயாளிகள் 24 மணி நேரமும் மருத்துவ உதவி பெறுகின்றார்கள்.
கூபாவின் மூன்றாவது பெரிய நகரமான காமாகுவேயில் நடைபெறும் பன்னாட்டு மருத்துவ ஊழியர்களுக்கான பயிற்சிப்பட்டறையை தலைமை ஏற்று நடத்தும் டெர்பியைச்(இங்கிலாந்து) சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான இமிதி சோனாரா கூறுகையில் “கூபாவில் உள்ள மருத்துவத்துறை மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக குடும்ப மருத்துவர்கள், அவர்களின் தன்னார்வம் நோய் உருவாகும் வாய்ப்புகளை தடுக்கின்றது…இதில் வேடிக்கையான நிகழ்வென்னவென்றால் புரட்சி வெற்றி பெற்ற பின்னர் இங்கிலாந்து வந்து தேசிய சுகாதார மையம்(NHS) எவ்வாறு வேலை செய்கின்றது என பார்த்து கற்றுக்கொண்டு, அதை மேலும் முறைப்படுத்தி அடுத்த நிலைக்கு அவர்கள் கொண்டு சென்றுள்ளார்கள், ஆனால் இங்கிலாந்தோ இன்று வட அமெரிக்கா மாதிரியை( (தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களைச் சார்ந்தது) நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது”.
கூப மருத்துவதுறையில் பெரும்பாலான இடங்களில் அரசியல் ஊடுவிச்செல்கின்றது. வட அமெரிக்காவின் தடையின் மூலமாக(வட அமெரிக்கா மற்ற நாடுகள் கூபாவுக்கு மருத்துவ கருவிகள் ஏற்றுமதி செய்வதையும் தடுத்து வருகின்றது) தங்களுக்கு கிடைக்காத மருந்துகள், மருத்துவ கருவிகளின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் மருத்துவ மனைகள் தயார் செய்து அரசிடம் கொடுக்கின்றன. 2009/10 ஆண்டிற்கான பட்டியலில் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்று நோயை குணப்படுத்துவதற்கான மருந்துகள், எச்.இ.வி, அர்திரிடீசு நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்துகள், சில மயக்க மருந்துகள், நோய்களை கண்டறியவும், உடல் உறுப்புகளை பாதுகாப்பாக வைக்க உதவும் சில வேதிப்பொருட்களும் தங்களிடம் இல்லை என அறிவிக்கின்றது. கூபாவில் உள்ள மருந்தகங்களை ஒரு நீண்ட வரிசையிலான மக்களைக் கொண்டு எளிதாக அடையாளம் காணலாம், ஒரு சில முறையான மருந்துகள் மட்டுமே ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கும். மீதமுள்ள மருந்துகள் எல்லாம் ஒழுங்கற்றே வைக்கப்பட்டிருக்கும்.
சுகாதார அமைச்சகத்தில் பணிபுரியும் அந்தோனியோ பெர்ணான்டசு கூறுகையில் “எங்களுக்கு தேவையான் 80 விழுக்காடு மருந்துகளை நாங்களே உற்பத்தி செய்கின்றோம், மீதமுள்ள 20 விழுக்காடு மருந்துகளை சீன, முன்னாள் சோவியத் நாடுகள், ஐரோப்பிய நாடுகளிடமமிருந்து(எங்களுக்கு மருந்துகளை கொடுக்கும் மற்ற நாடுகளிடமிருந்தும்) இறக்குமதி செய்து கொள்கின்றோம். தொலைத்துரத்திலிருந்து இந்த மருந்துகள் வரவேண்டி இருப்பதால், இதற்கான செலவு மிக அதிகமாகின்றது” என்கின்றார்.
மொத்ததில் பார்க்கையில் ஹைத்தியிலும், மற்ற வறிய நாடுகளிலும் தாங்கள் செய்யும் பணிகளைக் கண்டு கூப மக்களுக்கு மகிழிச்சியே, உலக நாடுகளில் தங்களது தகுதிக்கும் அதிகமான மருத்துவ பணிகளையே அவர்கள் செய்துவருகின்றார்கள். வெளிநாடுகளில் பகுதி மருத்துவர்கள் இருப்பதால் உள்நாட்டில் மருத்துவர்களைப் பார்க்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக சில மக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள். எல்லா பொருட்களைப் போலவே மருந்துப் பொருட்களும் கூபாவில் கள்ளச் சந்தைகளில் கிடைக்கின்றது. இதை கள்ளச்சந்தையில் வாங்கும் போதோ, விற்கும் போதோ பிடிபட்டால் அவர்கள் பெரும் தொகையை அபராதமாக செலுத்த நேரிடும்.
பன்னாட்டு பயணம் என்பது கூபர்களுக்கு இயலாத ஒன்று, ஆனால் தகுதி வாய்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் தங்களது பயிற்சி முடிந்து பின் இது போன்ற மருத்துவ குழுக்களில் இருப்பதன் மூலம் ஐந்தாண்டுகளுக்கு பல நாடுகளைச் சென்று பார்க்கும் வாய்ப்பு கிட்டுகின்றது.
எல்லா உழைக்கும் மக்களைப் போலவே, மருத்துவர்களுக்கும் குறைவான மாத ஊதியமே(20 டாலர்) வழங்கப்படுகின்றது. அரசு தரப்பு ஆவணங்களில் இல்லாத ஊழல் மருத்துவ துறையின் சில இடங்களில் காணப்படுகின்றது. தங்களுக்கு தேவையான சிகிச்சைகளில் முன்னுரிமை வழங்குவதற்காக மருத்துவர்களுக்கு தேவையான உணவையோ அல்லது சில பெசோக்களையோ(கூப நாட்டு ரூபாய்) நோயாளிகள் மருத்துவர்களுக்கு கொடுக்கின்றார்கள்.
பன்னாட்டு மருத்துவதுறையை கட்டமைப்பதென்பது கூபாவின் மிக முக்கியமான செயலுத்தியாகும். ஹைத்தியில் அரசின் பொது மருத்துவ முறைகளை மேம்படுத்துவதற்காக கூப அரசு அதிகாரிகள் பிரேசிலுடனும், வெனிசுவேலாவுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார்கள். இதில் இவ்விரண்டு நாடுகளுமே இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்க ஏதுவாக உள்ளன.
கூபா நடத்தும் மருத்துவ பயிற்சிகள் மற்றுமொரு முன்மாதிரியாகும். 30ற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்துள்ள 8,281 மாணவர்கள் Escuela Latinoamericana de Medicina en cuba (Elam)ல் மருத்துவ பயிற்சி மேற்கொண்டுவருகின்றார்கள். Elam மருத்துவ மையம் கடந்த மாதம் தனது பதினொன்றாம் ஆண்டு விழாவை கொண்டாடியுள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் தங்கள் நாடுகளிலுள்ள வறிய சமூகங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற சமூக சிந்தனையையும் மாணவர்கள் மனதில் பதியவைக்க எண்ணியுள்ளது கூப அரசு.
வட அமெரிக்காவிலிருந்து கூபா வந்து மருத்துவம் பயிலும் 171 மாணவர்களில்(இதில் 47 மாணவர்கள் ஏற்கனவே படித்து முடித்து விட்டார்கள்) ஒருவரான டேமியன் சோயல் சுவாரேசு கூறுகையில் “இங்கு சேகுவார ஒரு தேசிய தலைவர் ஆவார், ஆனால் அவரை நாங்களும் ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என இங்கு ஒருவரும் எங்களை வற்புறுத்துவதில்லை” என்கிறார். மேலும் அவர் கூபாவின் பரப்புரை இயந்திரங்களில் Elam ஒன்று என்பதையும் அவர் மறுதளித்துள்ளார்.
இலத்தின் அமெரிக்க கண்டத்தில் ஒரு இலட்சம் மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்று 2005ல் உறுதி மொழி ஏற்றுக்கொண்ட பிடல் காசுட்ரோவும், ஊகோ சாவேசும் இணைந்து உருவாக்கிய El Nuevo Pograma de Formacion de Medicos Latinoamericonos திட்டத்தில் இதுவரை 41,000 மாணவர்கள் இதுவரை பதியப்பட்டு அவர்களுக்கான மருத்துவ பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இதை விமர்சிப்பவர்கள் இதில் பயிற்சி பெறும் மாணவனின் திறமை எவ்வாறு இருக்கும் என கேள்விகள் எழுப்பியுள்ளார்கள்.
ஆனால் மேற்கூறிய விமர்சனத்தை மறுக்கும் விரிவுரையாளர் கிர்க்
“இலண்டன், டோராண்டோவில் மக்களுக்கு வழங்கப்படும் அதி நவீன மருத்துவ சிகிச்சை என்பது மூன்றாம் உலக நாடுகளில் வறுமையில் இருக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கு தேவை இல்லாதது. கூபர்கள் வழங்கும் மருத்துவ பயிற்சிகளை விமர்சிப்பதென்பது இவர்களுக்கு எளிதான ஒன்று, ஆனால் மருத்துவர்களே இல்லாத பகுதிகளில் வாழும் மக்களுக்கு மருத்துவர் கிடைப்பதென்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு நிகழ்வேயாகும்”.
கண்டிப்பாக கிர்க் மேற்கூரிய கருத்தை தொன்னூறு இலட்சம் ஹைத்தி மக்களும் ஒப்புக்கொள்வார்கள்.
மூலப்பதிவு:Cuban medics in Haiti put the world to shame
உலகம் இதுவரை கற்பித்து வந்த கம்யூனிசுட்டுகள் எல்லாம் உலகை அழிக்க வந்தவர்கள் என்ற மெக்கார்த்தேயிச கற்பிதத்தை பொடிப்பொடியாக்கும் இது போன்ற உண்மையான நிகழ்வுகள் எல்லாம் உலக ஊடகங்களில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்ப்பது அறிவீனம். “நடுநிலைமை” எனக்கூறும் உலக ஊடகங்கள் எல்லாம் ஒரு பக்கம் மட்டுமே சாய்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மருத்துவர்களின் பணி நோயைக் குணப்படுத்துவது மட்டுமல்ல அந்த நோய் வராமல் தடுப்பது என்ற அடுத்த கட்ட தாவலை கூப மருத்துவ துறை எப்பொழுதோ எட்டிவிட்டது. ஆனால் தற்பொழுது இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவ மனைகள் எல்லாம் இறந்த பிணத்தை வைத்துக் கூட எப்படி பணம் கறக்கலாம் என எண்ணும் போது, அவர்கள் நோயை குணப்படுத்தினாலே அது ஒரு பெரிய விடயம் தான், இதில் நீங்கள் கூபாவைப் போல நோயை தடுக்கும் நிலை வேண்டும் என்று எண்ணினால் கண்டிப்பாக உங்களுக்கு பித்து பிடித்து விட்டது எனத்தான் உங்கள் உறவினர்களும், நண்பர்களும் எண்ணுவார்கள். மக்களின் பாதுகாவலர்களாக தங்களை காட்டிக்கொள்ளும் இந்திய சனநாயகவாதிகள் மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான மருத்துவ துறையை இலாபத்தை மட்டுமே தனது குறியாகக் கொண்ட தனியாரிடம் முழுமையாக விற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதையே நடைபெற்றுவரும் நிகழ்வுகள் நமக்கு கூறுகின்றன. இதைப் பற்றி ஒரு நண்பரிடம் விவாதிக்கும் போது அவர் கூறியது “இந்தியாவில் இந்நிலையில் உங்களுக்கு இருக்கவிருப்பமில்லை எனில் நீங்கள் ஏன் மருத்துவம், கல்வி போன்றவற்றை இலவசமாகவே வழங்கும் கூபாவிற்கோ, வெனிசுவேலாவிற்கோ செல்லக்கூடாது” என்பதே. இது தான் இன்றைய இந்தியாவின் சனநாயகம் (சர்வாதிகாரம்)………
பார்ப்பன சாதியை சேராதவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும்; சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்றும் கூறி, திமுக அரசு 2006ஆம் ஆண்டில் தொடங்கிய அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஒன்றரை ஆண்டுகாலம் பயிற்சி பெற்ற 207 மாணவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க கூடாது என மதுரையைச் சேர்ந்த பார்ப்பன பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர். அர்ச்சகர் பயிற்சி பெற்ற இம்மாணவர்களை ‘அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்’ என சங்கமாக திரட்டியது மனித உரிமைப் பாதுகாப்பு மையம். உடனடியாக உச்சநீதிமன்றம் சென்று இச்சங்கத்தையும் ஒரு தரப்பினராக வழக்கில் இணைத்ததோடு பல்வேறு போராட்டங்களையும் நடத்தி உடனிருந்து வழிகாட்டி வருகிறது மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.
1970இல் பொரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, 1971ல் அர்ச்சகர் வேலையில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழிக்கும் சட்டமொன்றைக் கொண்டு வந்தது திமுக அரசு. இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில்; ‘அர்ச்சகர்கள் எனப்படுவோர் இந்து அறநிலையத் துறையால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அதில் வாரிசுரிமையைக் கோர முடியாது என்றும் தகுதியான நபர்களை அரசு தெரிவு செய்யலாம்’ என்றும் கூறிய உச்சநீதிமன்றம், ‘அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உயர்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்படவேண்டும்’ என்றும் வலியுறுத்தியது. ‘இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும்’ என்று கூறி, சாதியையும், ஆலயத்தீண்டாமையையும் அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். 1972இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத் தடை விதித்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற அடிப்படை மத உரிமை கூட இல்லாத பார்ப்பன இந்து மதத்தில் உள்ள தீண்டாமைக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில் பார்ப்பனமயமான மற்றொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில், தட்டச்சர் ஜவான், பலவேலை, திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி, ஓடல் தீபம், ஓதுவார், மணியடி (தட்டு கும்பம்), யானைப்பாகன் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பை 05.01.2011 அன்று வெளியிட்டது இந்து அறநிலையத்துறை. அந்த அறிவிப்பு விளம்பரத்தில் திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பணியிடங்கள் சிலையை திருமுழுக்கு (அபிஷேகம்) செய்வது மற்றும் கோயில் பிரசாதம் தயாரிப்பதற்கான பணியிடங்களாகும். பார்ப்பனர்கள் அல்லாமல் வேறு சாதியினர் இந்த வேலைகளைச் செய்தால் ‘புனிதம்’ கெட்டுவிடும் என்று மற்ற சாதியினரை இழிவுபடுத்தும் பார்ப்பன சாதிவெறியை அப்பட்டமாக தோலுரித்துக்காட்டும் அந்த அறிவிப்பை வெளியிட்டது வேறுயாருமில்லை, இந்து அறநிலையத்துறைதான். ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி பெற்று அர்ச்சகர்களாக முடியாமல் தவித்துக்கொண்டிருந்த பார்ப்பனரல்லாத மாணவர்கள் இந்த ‘லட்டு’ செய்யும் பணியிலாவது சேரலாம் என்றெண்ணி அப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தனர்.
பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்
இதே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு. அரங்கநாதன், உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்கு பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்கிற அறிவிப்பு சாதி வேற்றுமையை தூண்டுவதாகவும், ஆலயத்தீண்டாமையைக் கடைபிடிப்பதாகவும் அரசியலமைப்பு சட்டம் ஷரத்துக்கள் 14, 16 மற்றும் 17 ஆகியவற்றிற்கு எதிராகவும் இருப்பதால் அந்த பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என அறிவித்த அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுத்துக்கட்டளை மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு 07.02.11 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. உறுத்துக்கட்டளை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இடைக்கால தடைவிதிக்கக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு ‘இத்தகைய’ பழக்கவழக்கங்களை அரசியலைப்பு சட்டம் ஷரத்து 13 அங்கிகரிப்பதாகவும் தெரிவித்தார். அரங்கநாதனுக்காக வழக்காடிய வழக்குரைஞர் சகாதேவன் சாதி வேற்றுமை மற்றும் தீண்டாமை காரணமாக பணிவழங்க மறுப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கும் சமத்துவ வேலை வாய்ப்பிற்கான உரிமைக்கு எதிரானது என வாதிட்டதை ஏற்காமல் மத உரிமையில் சமத்துவம் (வெங்காயம்!) எல்லாம் கிடையாது என்பதை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 கூறியிருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு நிலுவையில் இருப்பதால் எதுவும் தற்போது செய்யவியலாது என தடையானை மனுவை தள்ளுபடி செய்து பார்ப்பன மேலாதிக்கத்திற்கு மயிலிறகால் வருடிவிட்டிருக்கிறார் நீதிபதி சுகுணா. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது என்பது வேறுவழக்கென்றும், அது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு. ஆனால், இந்தப் பணி கோயில் பணிவிடைகளுக்கான வேலை என்று வாதாடியதையும் நிராகாரிதுள்ளார் நீதிபதி.
பார்ப்பனரல்லாதோர், கோயிலில்; மணியாட்டினால் பூசை செய்தால் கடவுள் சிலையைவிட்டு வெளியேறிவிடுவார் என்று உச்சநீதிமன்றமும், பார்ப்பனரல்லாதோர் பிரசாதம் செய்தால், தண்ணீரெடுத்து சிலையை குளிப்பாட்டினால் இந்துமத உரிமைக்கு எதிரானது என உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்குகிறது.
இத்தனை நடக்கும்போதும் சாதியா? அது பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது குழந்தைகளிடம் கேட்பதனால்தான் உருவானது என்பதுபோல் பார்ப்பன புரட்டையும் வெட்கமில்லாமல் பேசித்திரிகின்றனர் பார்ப்பன மற்றும் ‘கருப்பு’ அம்பிகள்.
இத்தகைய பார்ப்பன மயமான தீர்ப்பை வழங்கும் நீதிபதி நேர்மையானவராக, பார்ப்பனர் அல்லாதவராக இருந்தால் சரியான தீர்ப்பை வழங்கிவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கையை இந்த தீர்ப்பு சாட்டையால் அடிக்கிறது. ‘காசு வாங்கிக்கொண்டு தீர்ப்பை எழுதினார்’ என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகாதவர் நீதிபதி சுகுணா! ஆனால், பிரச்சனை நீதித்துறை காவி மயமாக இருப்பது, நீதிபதி பார்ப்பன ஆதரவாளராக இருப்பது. அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்துக்கள் 13, 15 மற்றும் 26 ஆகியவை இந்து மதத்தின் தீண்டாமை, பிற்போக்குதனம், சாதி ஒழிப்பு என்பதை ஊறுகாய் போல தொட்டுவிட்டு, மதம் என்பது என்ன? சாதி என்பது என்ன? இந்து மதத்தின் சாதி தொடர்வது ஏன்? மதச்சார்பின்மை என்பது என்ன? என்பதையெல்லாம் விளக்காமல் சாதுர்யமாக பழைய கழிவுகளை கரண்டியில் அள்ளிப் பானையில் போட்டு பொங்கல் வைத்து சமத்துவம் பேசுகிறது ‘அரசியலமைப்புச் சட்டம்’. நீதித்துறை அதற்கு மகுடம் சூட்டுகிறது.
அதன் லட்சணம்தான் இன்று பல்லிளிக்கிறது. இந்துமத பழக்கவழக்கத்தின்படி, லட்டு, புந்தி கூட ‘அவா…’ செஞ்சாத்தான் லோகம் ஷேமமா இருக்கும்னு உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடிகிறது.
செயலாளர்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னைக் கிளை
ஒரே வாக்கியத்தில் குறிப்பிட வேண்டுமென்றால், ‘மக்கள்புரட்சியில்எகிப்துபற்றிஎரிகிறது‘ என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்படி நடக்கும் என ஏகாதிபத்தியங்கள் முன்பே கணித்திருந்ததோ இல்லையோ அதை நிச்சயம் விரும்பவில்லை. தங்களால் முடிந்தவரை புரட்சி வராமல் பார்த்துக் கொள்ள எவ்வளவோ முயற்சித்தன. கலகமாகவும், சின்ன எழுச்சியாகவும் மறைத்து மூடிவிட முயன்றன. ஆனால், ஒன்றிணைந்த மக்களின் தொடர் போராட்டமும், சலிப்படையாத எழுச்சியும் புரட்சிக்கான கருவை எகிப்தில் விதைத்துவிட்டன.
இனி அமெரிக்காவின் தலைமையில் ஏகாதிபத்திய நாடுகள் ஒன்றிணைந்து எகிப்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினாலும் சரி அல்லது இப்போதைய அதிபர் ஹோஸ்னி முபாரக்கையே தொடர்ந்து ஆட்சி நடத்த முட்டுக் கொடுத்தாலும் சரி, அதிபராக இருப்பவரின் கழுத்தில் உழைக்கும் மக்களின் வெப்ப மூச்சு வீசிக் கொண்டே இருக்கும். அந்த வெப்பம், எப்போது வேண்டுமானாலும் தன் கழுத்தை நெறிக்கலாம் என்ற அச்சத்திலேயே அதிபர் ஆட்சி நடத்த வேண்டும்.
ஏனெனில் எகிப்தில் இன்றைய தினம் போராடுபவர்கள் மசூதிக்கு சென்று தொழுகை மட்டும் நடத்திவிட்டு செல்லக்கூடிய ‘இஸ்லாமியர்கள்’ அல்ல. இவ்வளவு வருடங்களும் அரபு உலகின் ஆளும் வர்க்கமும், அமெரிக்காவும் மதத்தை வைத்து ஏமாற்றி வந்த தந்திரங்கள் இப்போது பலிக்கவில்லை.
எகிப்தில் இன்று போராடுபவர்கள் தொழிலாளர்கள், கூலிகள், வேலையில்லா பட்டதாரிகள், கல்லூரி படிக்கும் மாணவ – மாணவிகள். மொத்தத்தில் அடித்தட்டு உழைக்கும் மக்கள்தான் எகிப்தில் 90% வாழ்கிறார்கள். இந்த வர்க்க உணர்வைத்தான் எகிப்து மக்களிடம் ஜனவரி 25ஆம் தேதி முதல் நடந்து வரும் மக்கள் எழுச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
எகிப்திய தொழிலாளர் வர்க்கம் இன்றைய தினம் அணிதிரண்டு தங்கள் எதிர்கால பயணத்துக்கான முதல் அடியை எடுத்து வைத்திருப்பது நிச்சயம் அசாரணமான ஒன்று. இன்று ஆட்சி மாற்றம், அரசாங்க மாற்றம் என்பாதாக இருக்கும் எகிப்தின் போராட்டம் விரைவிலேயே இல்லை தாமதமாகவோ அடிப்படையான சமூக மாற்றத்தை நோக்கி சென்றாலும் செல்லலாம் என்ற உண்மை அமெரிக்காவை பிடித்து ஆட்டுகிறது. இருபதாம் நூற்றாண்டோடு கம்யூனிசம் ஒழிந்துவிட்டது என்று இறுமாந்திருந்தவர்களின் இதயம் இப்போதைய எகிப்தின் எழுச்சியால் பதட்டமடைந்திருக்கிறது.
இந்த உண்மையை சற்று தாமதமாக புரிந்து கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கிவிட்டது. அதன் விளைவாக வெள்ளை மாளிகை முன்பைவிட பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தொலைபேசிகள் ஓயாமல் மத்திய கிழக்கு நாடுகளை தொடர்பு கொண்டபடியே இருக்கின்றன. அந்தந்த நாட்டு அதிபர், மன்னர்களுடன் விடாமல் உரையாடிக் கொண்டிருக்கின்றன. யேமன், துருக்கி, ஜோர்டான், அல்ஜீரியா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலும் அடுத்தடுத்து மக்கள் எழுச்சி ஏற்படலாம் என்ற அச்சம், அமெரிக்காவின் சாம்ராஜ்ஜியத்தில் காய்ச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதை தடுப்பதற்கான – தணிப்பதற்கான – நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கிறது.
இதன் ஊடாக அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் எகிப்தை ஒட்டி தங்கள் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்துவிட்டன. ஜனநாயகத்துக்கு எதிராக, மக்கள் உணர்வுக்கு முரணாக, சர்வாதிகாரத்துக்கு மறைமுக ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்பதை உலக மக்களுக்கு தெளிவுபடுத்தி விட்டார்கள். எகிப்து நிகழ்வுகளை ஏகாதிபத்தியங்கள் அணுகுவதிலிருந்தே இதை புரிந்து கொள்ளலாம்.
உண்மையில் எகிப்தின் மக்கள் எழுச்சியை, ‘மேட் இன் அமெரிக்கா’ (Made in America) என்று பறைசாற்றத்தான் அமெரிக்கா விரும்பியது. ஜனவரி மாத நடுப்பகுதியில் வட ஆப்பிரிக்க தேசமும், எகிப்துக்கு அருகாமையில் இருக்கும் நாடுமான துனிசியாவில் மக்கள் கிளர்ந்து எழுவதற்கு முன்பே –
எகிப்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கலாம் என்று அமெரிக்கா கணித்திருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே எகிப்தின் நிலை சரியாக இல்லை. ரோமர்களின் காலத்தில் பண்டைய எகிப்து, ஐரோப்பாவின் உணவுக்களஞ்சியமாக விளங்கியது. அப்படிப்பட்ட உணவுக் களஞ்சியமாக எகிப்து இன்று இல்லை. உலகமயம், தாராளமயம் என மறுகாலனியாதிக்க கொள்கைகள் எகிப்தை நாசம் செய்துவிட்டன. அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையேற்றம், வேலையில்லா பிரச்னை, வருமானக் குறைவு, விலைபோகும் கல்வி என மக்களை வாட்டும் பிரச்னைகளே அரசாங்கத்தின் கருவூலத்தில் இன்று நிரம்பி வழிகின்றன.
அரபு தொழிலாளர் அமைப்பின் (ALO) சமீபத்திய தேசிய கருத்தரங்கில் வெளிவந்த புள்ளிவிவரங்கள் இதை தெளிவாக படம்பிடித்து காட்டுகின்றன. எகிப்து மக்களிடையே காணப்படும் சமூக நிலைமைகள் மிக மோசமாக உள்ளன என்றும், நாள் ஒன்றிற்கு 2 டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்க்கை நடத்துபவர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதத்திற்கும் மேலாக இருக்கிறது என்றும் அந்த விவரங்கள் முகத்தில் அறைகின்றன. அதாவது 8.5 கோடி மக்கள் வாழும் எகிப்தில் கிட்டத்தட்ட 43 சதவிகிதத்தினர் வறுமையில் வாழ்கின்றனர். அதேபோல் உலகளவில் மனித உரிமை மீறல்களும், சித்திரவதைகளும், காவல்நிலையத்தில் நடக்கும் படுகொலைகளும் அதிகமாக நடைபெறும் நாடுகளில் எகிப்தும் ஒன்று.
இதனையொட்டியே இணையதள சமூக வலைத்தளமான ‘ஃபேஸ் புக்’கில் ‘ஏப்ரல் 6 இயக்கம்’ தோன்றியது. எகிப்திலுள்ள El-Mahalla El-Kubra என்ற தொழில் நகரத்தில் உரிமை கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதற்காக 2008ல் அகமத் மஹர் என்பவரால் இத்தளம் உருவாக்கப்பட்டது. படித்த, இணையதளம் பயன்படுத்தக் கூடிய எகிப்து இளைஞர்கள் மெல்ல மெல்ல இத்தளத்தில் சேர ஆரம்பித்தார்கள். டிவிட்டர் தளத்திலும் கால் பதித்தார்கள். ப்ளாக் என்னும் வலைத்தளங்களையும் தனித்தனியே உருவாக்கினார்கள். நாட்கள் செல்லச் செல்ல அரசாங்கத்துக்கு எதிரான தளமாக ‘ஏப்ரல் 6 இயக்கம்’ உருவாகியது. எந்தக் கட்சியையும் சார்ந்தவர்களாக இவர்கள் முன்னிறுத்திக் கொள்ளாதது இவர்களின் பலமாயிற்று. எல்லாக் கட்சிகளையும் பார்த்து மக்கள் சலித்திருந்தார்கள் என்பதுதான் இவர்களது கட்சி சார்பற்ற பலத்தின் அடிப்படை. அதே நேரம் இந்த இளைஞர்கள் முபாரக்கை மாற்ற வேண்டும் என்பதைத் தாண்டி வேறு காத்திரமான அரசியல், சமூக மாற்றத்தை கோரியவர்கள் அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்வது நல்லது.
இதை மோப்பம் பிடித்த அமெரிக்கா, ஃபேஸ் புக்கிலும், வலைத்தளங்களிலும் (ப்ளாக்) துடிப்புடன் இயங்கும் சில இளைஞர்களை தங்கள் செலவில், தங்கள் நாட்டுக்கு அழைத்து இணையதள தொழில்நுட்பங்களை பயிற்றுவித்தது. ஹிலாரி கிளிண்டன் போன்றவர்கள் கூட இவர்களுடன் சில மணி நேரங்களை செலவிட்டார். எகிப்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் உருவாக வேண்டும் என்பது குறித்த கலந்துரையாடல் இச்சந்திப்பின் ஹைலைட்டாக அமைந்தது. அதாவது, கம்யூனிசம் கூறுவது போன்ற அடிப்படை சமுகத்தை மாற்றும் புரட்சி சார்பாக இளைஞர்கள் சென்றுவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா குறியாக இருந்தது. அரசுமாற்றமல்ல; ஆட்சிமாற்றமேதேவை என்பதான கருத்துக்கு அந்த இளைஞர்கள் குழு வந்ததும் – வர வைத்ததும் – எகிப்துக்கு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
ஹிலரி கிளின்டனுடன் எகிப்திய பிளாகர்கள்
முபாரக்கை ஆதரித்த அமெரிக்கா அவரை மாற்றுவதையும் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதில் பெரிய முரண்பாடு ஏதுமில்லை. முடிந்த வரை முபாரக், அவர் போய்விட்டால் தனக்கு விசுவாசியான அடுத்த நபர் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம் மற்றும் நடைமுறை. இதனால் உலகமெங்கும் உள்ள மக்கள் போராட்டங்களை காயடித்து அதை வெறுமனே ஒரு அடையாள எதிர்ப்பாக மட்டும் மாற்றுவதற்கு அமெரிக்கா எப்போதும் முயல்கிறது. இப்படித்தான் எகிப்தின் விவகாரத்திலும் அது தனது மூக்கை நுழைத்தது.
துனிசியாவில் மக்கள் எழுச்சி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் நிகழ்ந்தது. இதனையடுத்து துனிசிய அதிபர், பென் அலி சவூதி அரேபியாவுக்கு ஓடிப் போனார். இந்த நிகழ்வு படித்த – குறிப்பாக இணையதள பயன்பாடுள்ள – எகிப்து மக்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியது.
காரணம், கடந்த டிசம்பர் மாதம் காலித் சைத் என்னும் எகிப்திய இளைஞன் போலீஸ் வன்முறைக்கு பலியாகி இருந்தான். போலீசாரின் அத்துமீறல் குறித்த வீடியோவை இணையத்தில் அவன் வெளியிட்டதால், காவலர்களால் அவன் கொல்லப்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். ஆனால், காலித் சைத் போதைப்பொருள் உட்கொண்டதால்தான் மரணமடைந்தான் என போலீஸ் கதைவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த எகிப்து இளைஞர்கள், ஜனவரி 25ம் தேதியை ஆர்ப்பாட்டத்துக்கான நாளாக ‘ஏப்ரல் 6 இயக்க’த்தின் தளமான ‘ஃபேஸ் புக்’கில் அறிவித்தார்கள். ஜனவரி 25ம் தேதியை போலீசுக்கு எதிரான நாளாக அவர்கள் தேர்ந்தெடுத்ததற்கு காரணமிருக்கிறது. அன்றுதான் ஆண்டுதோறும் எகிப்தில் ‘போலீஸ் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. தவிர, அன்று தேசிய விடுமுறையும் கூட.
எனவேதான் காவலர்களுக்கான நாளில், காவலர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை கடைப்பிடிக்க முடிவு செய்தார்கள். இதற்கு மக்களிடம் பெருமளவு ஆதரவு கிடைத்தது. எதிர்க் கட்சிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் களமிறங்க முடிவு செய்தன. ஆனால், ‘துனிசிய மாதிரி’யாக இல்லாமல், ஆட்சி மாற்றமாக இது நடைபெற வேண்டும் என திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள். அதற்கேற்ப ‘மாற்றீட்டு பாராளுமன்றம்’ என்கிற ‘மக்கள் பாராளுமன்றத்தை’ முன்னிலைப்படுத்தினார்கள். அதாவது எதிர்க் கட்சிகளை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் பங்கேற்கும் விதமாக அந்த அறிக்கை இருந்தது.
உஷாரான அதிபர் ஹோஸ்னி முபாரக், ஜனவரி 25 அன்று காவலர்களை எகிப்து முழுக்க, அனைத்து நகரங்களிலும் ஆயுதங்களுடன் நிறுத்தினார். எந்த காவலருக்கும் அன்று விடுமுறை தரப்படவில்லை. விடுமுறையில் இருந்தவர்களும் கட்டாயமாக பணிக்கு அழைக்கப்பட்டார்கள்.
விபரீதத்தை உணர்ந்த அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்தப் போராட்டம் அரசுக்கு எதிராக செல்லாதபடியும், ஆட்சிக்கு எதிராக மட்டுமே இருக்கும்படியும் தனது இணையதள விசுவாசிகள் மூலம் பார்த்துக் கொண்டது.
ஒருவேளை மக்கள் எழுச்சி நூறு சதவிகிதம் இருந்தால், ஹோஸ்னி முபாரக்கை பதவியிலிருந்து இறக்கிவிட்டு வேறு நபரை ஆட்சியில் அமர்த்தலாம். அதன் மூலம் எகிப்து மக்களின் கொந்தளிப்பை மட்டுப்படுத்தி, மக்கள் எழுச்சியை, ‘மேட் இன் அமெரிக்கா’ (Made in America) ஆக மாற்றலாம் என கணக்குப் போட்டது.
ஆனால், அது தப்புக் கணக்காகிவிட்டது. தனித்தனியாக மக்கள் சிதறி இருக்கும்வரைதான் ஏகாதிபத்தியம் வெற்றி பெறும். அதுவே மக்கள் திரளாக அவர்கள் ஒன்றிணைந்துவிட்டால், எப்படிப்பட்ட சூப்பர் பவர் ஏகாதிபத்தியமும் தவிடு பொடியாகிவிடும்.
இந்த புரட்சிக்கான விதையை நடைமுறையிலிருந்து கற்றுக் கொண்ட எகிப்து மக்கள், மீண்டும் அதையே நடைமுறையாக்கினார்கள். நகரம் முழுக்க காவலர்கள் ஆயுதங்களுடன் நிரம்பியிருந்தது அவர்களது கொந்தளிப்பை அதிகரித்தது. தனித்தனியாக இருக்கும்வரைதானே பயம்? ஒன்றாக சேர்ந்து சாலையில் இறங்கினால்…
இறங்கினார்கள். மெல்ல மெல்ல முன்னேறினார்கள்.
1977ல் நடந்த ரொட்டி எழுச்சிக்குப் பின், எகிப்தில் பேரணி நடத்தவும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் சட்டப்படி தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தச் சட்டத்தை மக்கள் மீறினார்கள். விளைவு… 30 ஆண்டுகளாக எகிப்து கண்டிராத மக்கள் போராட்டத்தை – எழுச்சியை – அன்றைய தினம் கண்டது.
ஆம், எந்த காவலர்களை பார்த்து இத்தனை ஆண்டுகளாக பயந்து நடுங்கினார்களோ… அதே காவலர்கள் முன்பு தைரியமாக தடையை மீறினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையினர் 30 வயதுக்குட்பட்டவர்கள். இதற்கு முன்பு எந்த அரசியல் போராட்டத்திலும் கலந்து கொள்ளாதவர்கள். எந்தக் கட்சியின் உறுப்பினர்களாகவும் இல்லாதவர்கள். அதுமட்டுமல்ல, தங்கள் வாழ்நாளில் எந்தவொரு மக்கள் எழுச்சியையும் அவர்கள் கண்ணால் பார்த்ததும் இல்லை; காதால் கேட்டதுமில்லை. அஹ்மத் அஷ்ரப் என்னும் 26 வயது வங்கி ஊழியர், ‘நாங்கள்தான் இப்போது சாலையை கட்டுப்படுத்துகிறோம். காவலர்கள் அல்ல…’ என்று பெருமிதத்துடன் அன்றைய தினம் குறித்து ஊடகங்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.
எந்த மத அமைப்பும் அம்மக்களை வழி நடத்தவில்லை. தொழிலாளர்களும், வேலையில்லா பட்டதாரிகளும், அடித்தட்டு உழைக்கும் மக்களும்தான் இந்த எழுச்சியை வழிநடத்தி இருக்கிறார்கள்.
சுதந்திரத்தின் சுவையை மட்டுமல்ல, கூட்டிணைவின் மகிழ்ச்சியையும் அன்றைய தினம் எகிப்து மக்கள் யாரும் கற்றுத் தராமலேயே உணர்ந்தார்கள். காவலர்களின் துப்பாக்கி சூட்டுக்கு ஆங்காங்கே மக்கள் பலியானபோதும் ஆர்ப்பாட்டத்தை அவர்கள் நிறுத்தவும் இல்லை. சிதறி ஓடவும் இல்லை.
அலெக்சாந்திரியா நகரில் வயதான பெண்கள், வீட்டு பால்கனியில் நின்றபடி அழுகிய தக்காளிகளையும், கல்லையும் காவலர்கள் மீது வீசினார்கள். இப்படியாக ஜனவரி 25 ஆர்ப்பாட்டம், ஒட்டுமொத்த எகிப்து மக்களின் எழுச்சியாக உருவெடுத்தது.
வரலாறு முழுக்கவே மக்கள் திரள் ஒன்றிணைந்து இதுநாள் வரை தங்களை பிணைத்திருந்த அச்சம் என்னும் சங்கிலியை அறுத்து எறியும்போது, பூமிப் பந்திலுள்ள எந்த ஆற்றலும் – சக்தியும் – அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பின் வாங்குகிறது என பதிவு செய்திருக்கிறது. அந்தப் பதிவு மீண்டும் எகிப்து வரலாற்றில் எழுதப்பட்டது.
அன்று மாலை அரசு தொலைக்காட்சி முன்பு தோன்றிய அதிபர் ஹோஸ்னி முபாரக், ஆட்சியிலிருந்து தான் விலகப் போவதில்லை என்றும், மக்களின் பிரச்னைகளை தீர்க்க துணை அதிபராக ஓமர் சுலைமானை நியமிப்பதாகவும் அறிவித்ததுடன், தனது அமைச்சரவையை கலைப்பதாகவும், விரைவில் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என்றும் உரையாற்றினார். இது மக்களின் கோபத்தை அதிகரிக்கவே வழி வகுத்தது.
இரவு வீடு திரும்பியவர்கள் மீண்டும் சாலையில் இறங்கி போராட்டத்தை தொடர்ந்தார்கள். இது அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்தது.
ஃபேஸ் புக், டிவிட்டர், ப்ளாக்… என இணையத்திலுள்ள சகல வலைத்தளங்களிலும் இளைஞர்கள் போராட்டத்தை குறித்து விவாதித்தார்கள். 26 பக்க போராட்ட வழிமுறைகள் பிடிஎஃப் ஆக மின்னஞ்சலில் சுற்றுக்கு விட்டார்கள். படித்தவர்கள் அதை தெரிந்தவர்களுக்கு எல்லாம் ஃபார்வர்ட் செய்தார்கள்.
அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் தூதுவர் உடனடியாக விமானம் மூலம் அமெரிக்கா சென்றார். இதன் மூலம், எகிப்தை உண்மையில் ஆள்பவர்கள் யார் என்பது வெட்ட வெளிச்சமானது. மத்திய கிழக்கு நாடுகளின் தளப் பிரதேசமாக எகிப்தை ‘நிர்வாகம்’ செய்து வரும் அமெரிக்கா, இந்த மக்கள் எழுச்சியால் கவலையடைந்தது. இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக இராணுவ தளவாடங்களை அதிகளவு அமெரிக்கா விற்பது எகிப்துக்குத்தான். அந்நாட்டில் இருக்கும் சூயஸ் கால்வாய், அமெரிக்காவின் வணிகத்துக்கு தேவை. அத்துடன் இஸ்ரேலினால் பொருளாதார தடை விதிக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் காசா பகுதி, சூயஸ் கால்வாயை ஒட்டியே இருக்கிறது. எனவே எக்காரணம் கொண்டும் எகிப்தை இழக்க அமெரிக்கா தயாராக இல்லை.
அதேபோல் பாலஸ்தீனியர்களை அடக்கவும், அரபு நாடுகளை மிரட்டவும் இஸ்ரேலுக்கு தனது அண்டை நாடான எகிப்தின் துணை தேவை. எனவே எகிப்துடன் ஈருடல் ஓருயிர் என்ற நட்பையே இஸ்ரேல் கடைபிடித்து வருகிறது. இப்போது எகிப்தின் துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஓமர் சுலைமான், அப்பட்டமான சிஐஏ கைக்கூலி. எகிப்தின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி. மனித உரிமை மீறலுக்கும் அரசியல் படுகொலைகளுக்கும் காரணமானவர். இஸ்ரேலின் அனைத்து அராஜக – அடாவடித்தனங்களுக்கும் துணை போனவர்.
எனவே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எகிப்து தங்கள் கையை விட்டு போகாமல் இருக்க, அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்கள் விசுவாசியும், நீண்ட ஆண்டுகள் நண்பருமான ஹோஸ்னி முபாரக்கை கை கழுவ இப்போது தயாராகிவிட்டன. இதன் மூலம் புரட்சி ஏற்படாமல், வெறும் ஆட்சி மாற்றத்தின் மூலம் மக்களின் கோபத்தை தணிக்கலாம் என முடிவு செய்துவிட்டன. அமெரிக்க – இங்கிலாந்து வெளியுறவுத் துறை அதிகாரிகளும், அமைச்சர்களும் ஊடகங்களுக்கு தரும் பேட்டியை நாள்தோறும் உன்னிப்பாக கவனித்து வருபவர்கள் இதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
அதன் பலனாக இப்போது எகிப்தின் முக்கிய எதிர்க் கட்சித் தலைவரும், நோபல் பரிசு பெற்ற சர்வதேச அணுசக்தி முகமையின் முன்னாள் தலைவருமான எல்பரதேய் ஊடகங்களால் முன்னிலைப்படுத்தப்படுகிறார். இவர், துனிசிய புரட்சி நடந்த ஈரம் காய்வதற்குள் ‘கார்டியன்’ இதழுக்கு, ‘எகிப்தும் ஒரு துனிசிய வகையிலான வெடிப்பை எதிர்நோக்கியிருக்கிறது’ என்று எச்சரித்தவர்தான். கூடவே ‘துனிசிய முன்மாதிரி போல் அல்லாமல், ஒழுங்கான முறையில் மாற்றம் வரும் என்று, தான் நம்புவதாகவும், இருக்கும் முறையில் இருந்தே மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தேவையான வழிவகைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும்’ குறிப்பிட்டு, மக்கள் புரட்சியில் தனக்கு நம்பிக்கையில்லை என்பதையும், அமெரிக்காவுக்கு தான் விசுவாசமானவன்தான் என்பதையும் அறிவித்தவர்தான்.
இதுபோன்ற எடுபிடிக்காகவே காத்திருந்த அமெரிக்கா, எல்பரதேய்யை எகிப்துக்கு அனுப்பியது. நடக்கப் போவதை ஓரளவுக்கு ஊகித்துவிட்ட ஹோஸ்னி முபாரக், உடனே அவரை வீட்டுக் காவலில் வைத்தார்.
இந்நிலையில்தான் வெள்ளிக்கிழமை (28.01.2011) விடிந்தது. அன்றைய தொழுகை முடிந்ததும் அதிபருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி மக்கள், சாலையில் இறங்கி ஊர்வலம் போக ஆரம்பித்தார்கள். அதிபர் மாளிகையை முற்றுகையிட்டார்கள். நகரங்களில் இருந்த ஆளுங்கட்சி அலுவலகம் தீக்கரையானது. அரசியல் கைதிகள், சிறைச்சாலையை கைப்பற்றி வெளியே வந்தார்கள்.
அரசாங்கமும் சும்மா இருக்கவில்லை. குற்றவாளிகளை விடுதலை செய்து, மக்களின் உடமைகளை திருடச் சொன்னது. சீருடை அணிந்த காவலர்களில் சிலரும் இந்த வழிப்பறியில் – கொள்ளையில் இறங்கினார்கள். மக்கள் அவர்களை கைது செய்தார்கள். தங்களுக்குள்ளாகவே குழுவை அமைத்து தங்கள் உடமைகளை கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு பாதுகாத்துக் கொண்டார்கள்.
ஜனவரி 31ம் தேதி முடிய பொது மக்களுக்கும் பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 150 பேர் பலியாகியுள்ளனர். 4 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இது அறிவிக்கப்பட்ட கணக்கு மட்டுமே. பலியானோர் எண்ணிக்கை இன்னமும் அதிகமாக இருக்கக் கூடும். என்றாலும், இந்த எண்ணிக்கை எந்தவிதத்திலும் எகிப்து மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கவில்லை. பலியானோரின் சடலத்தையே, உணர்வெழுச்சிக்கான ஆயுதமாக மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். காயமடைந்தோரும், ரத்தம் வழிய வழிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். நாள்தோறும் அலைகடலென திரண்டு வரும் மக்களை கட்டுப்படுத்த வழியின்றி பாதுகாப்புப் படை திகைத்து நிற்கிறது.
நேர்மையான பல காவலர்கள் மக்களுடன் இணைந்து இப்போது போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்த வேண்டிய இராணுவ வீரர்கள், அமைதி காக்கிறார்கள். மக்களுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று பகிரங்கமாக இராணுவம் அறிவித்திருப்பது முபாரக்குக்கு மட்டுமல்ல அமெரிக்காவிற்கும் பிரச்சினைக்குரிய ஒன்று.
ஆனால், முன்னாள் விமானப்படை அதிகாரியான ஹோஸ்னி முபாரக்கால் இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. தரைப்படை அமைதிகாத்தால் என்ன… விமானப்படையை அனுப்புகிறேன்… மக்கள் பயத்துடன் கலைந்து செல்வார்கள் என போர் விமானங்களை நகரங்களின் மீது பறக்க விட்டிருக்கிறார். முதலில் அதிர்ந்த மக்கள், பிறகு இந்த போர் விமானங்களை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘முதலில் நாங்கள் பயந்தோம். ஆனால், இப்போது இசையை ரசிப்பது போல் போர் விமானங்களின் ஒலியை ரசிக்க ஆரம்பித்துவிட்டோம்’ என்கிறார்கள்!
அரசின் சமூக – அரசியல் – ஆட்சி இயக்கமே இராணுவத்தின் பாதுகாப்பில்தான் மையம் கொண்டிருக்கிறது. இந்த அச்சு இன்று எகிப்தில் மாறியிருக்கிறது. இராணுவ தளவாடங்கள் வேண்டுமானால் அமெரிக்காவில் தயாரானதாக இருக்கலாம். ஆனால், இராணுவ வீரர்கள் எகிப்தின் அடித்தட்டு, நடுத்தர மக்கள்தானே? எகிப்தின் மக்கள் எழுச்சியால் ஈர்க்கப்பட்ட இராணுவ வீரர்கள் – இதுநாள் வரை அரசின் துருப்பாக இருந்தவர்கள் – வர்க்க அடிப்படையில் மக்களுடன் இரண்டற கலந்துவிட்டார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு மக்களுடன் இராணுவம் தொடர்பு கொள்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு புரட்சி வலிமை பெறும் என்பது விதி. அந்த விதி, எகிப்தில் இப்போது மையம் கொண்டிருக்கிறது. கிடைத்த உணவை மக்களுடன் இணைந்து இராணுவ வீரர்களும், காவலர்களும் பகிர்ந்து உண்ணும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.
இதோ வீட்டுச் சிறையிலிருந்து வெளியே வந்த எல்பரதேய், ஏதோ தான்தான் இந்த மக்கள் எழுச்சியை வழிநடத்துவது போல் ஊடகங்களுக்கு பேட்டியளித்தும், புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தும் தன் இருப்பை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சிக்கிறார். ஆனால், எகிப்து மக்கள் இவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. காரணம், பலருக்கு இவர் யார் என்றே தெரியவில்லை!
எகிப்தின் இன்றைய மக்கள் எழுச்சியை யாரும், எந்தக் கட்சியும் முன்னின்று நடத்தவில்லை. எனவே மக்கள் மெல்ல சோர்வடைந்து பின்வாங்கி விடுவார்கள் என்று நம்பிய ஹோஸ்னி முபாரக், இப்போது மூக்குடைந்திருக்கிறார். நாள்தோறும் முந்தைய நாளின் தீவிரத்தை விட அதிக வலிமையுடன் அனைத்து நகர தெருக்களிலும் மக்கள் இறங்கி போராடுகிறார்கள். தலைநகர் கெய்ரோவிலுள்ள தாஹீர் சதுக்கத்தை சுற்றிச் சுற்றி வருகிறார்கள். இத்தனைக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தொடர் போராட்டத்தினால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வீட்டில் சமைக்க பொருட்களில்லை. உணவு விடுதிகள் திறக்கப்படவேயில்லை. ஆயினும் கிடைத்ததை பகிர்ந்துக் கொண்டு சோர்வடையாமல் உறுதியுடன் போராடி வருகிறார்கள்.
இராணுவம் தன்னை கைவிட்ட நிலையில், இப்போது ஹோஸ்னி முபாரக், தனது ஆதரவாளர்களை போராடும் மக்களுக்கு எதிராக ஆயுதங்களுடன் நிறுத்தியிருக்கிறார். உண்மையில் இந்த ஆதரவாளர் குழுவில் இருப்பவர்கள் பெரும்பாலும் காவலர்கள்தான். முபாரக்கின் விசுவாசிகள்தான். சிவிலியன் உடையில் சாலையில் நடமாடும் இந்த அதிபரின் ஆதரவாளர் குழுவுக்கும், மக்கள் திரளுக்கும் இடையில் பிப்ரவரி மாத தொடக்கம் முதல் மோதல் நடந்து வருகிறது. இதில் பலர் காயமுற்றனர். சிலர் பலியாகினர். அருகிலுள்ள மசூதியை மருத்துவமனையாக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எகிப்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக புரட்சியை உயர்த்திப் பிடித்திருக்கும் மக்கள் திரளுக்கும் – எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கும் அதிபரின் ஆதரவாளர் குழுவுக்கும் இடையில் மோதலும் உயிர்ச்சேதமும் இனிவரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும். ஆனால், அதிபரின் இந்தச் செயலே மக்கள் புரட்சியை மேலும் செழுமைப்படுத்தும். அரசின் குண்டாந்தடிகள்தானே புரட்சியை வலிமையாக்குகின்றன?
1905ல், ரஷ்யாவில் புரட்சி நடந்ததும் அப்போது மன்னராக இருந்த ஜார் இரண்டாம் நிக்கோலஸ், அக்டோபர் அறிக்கையை வெளியிட்டு என்னவெல்லாம் தேனொழுக மக்களிடம் பேசினாரோ அதையே இப்போது ஹோஸ்னி முபாரக் எதிரொலிக்கிறார். ‘இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன். தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்துவேன். என்னை நம்புங்கள்…’ என்ற அதிபரின் இரண்டாவது உரையும் உழைக்கும் மக்களை சமாதானப்படுத்தவில்லை. மக்கள் எழுச்சியை மட்டுப்படுத்தவில்லை. ஆனால், நடுத்தர வர்க்கத்தை ஓரளவு அதிபரின் இந்த இரண்டாவது உரை ஊசலாட வைத்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. என்றாலும் நடுத்தர வர்க்கம் இன்னமும் களத்திலிருந்து பின்வாங்கவில்லை.
மாக்கியவெல்லி ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பார். ‘மக்களிடம் அன்பை பொழிவது அரசாங்கத்தின் வேலையல்ல. பயத்தை உண்டாக்குவதே எந்தவொரு அரசாங்கம் நிலவவும் அடிப்படை…’ என்று. இதுநாள்வரை ஹோஸ்னி முபாரக்கும் பயம் காட்டித்தான் வந்தார். இப்போது அது தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் அவரை பயமுறுத்தி வருகிறார்கள்!
‘மன்னிக்கவும் முபாரக். உன்னை நாங்கள் நம்பவில்லை. உடனே அதிபர் பதவியை விட்டு விலகு. உனக்காக விமானம் காத்திருக்கிறது…’ என ஒரே குரலில் கோஷமிடுகிறார்கள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அமெரிக்க இராணுவம், தயார் நிலையில் இருக்கிறது. ஹோஸ்னி முபாரக், பதவி விலகி வேறொரு நாட்டில் தஞ்சம் அடைய வேண்டியதுதான் பாக்கி. அடுத்த நொடியே எகிப்தை தன் கட்டுப்பாட்டுக்குள் அமெரிக்கா கொண்டு வந்துவிடும். ஏனெனில் அரசு மாற்றத்தை அது விரும்பவில்லை. ஆட்சி மாற்றத்தையே அது விரும்புகிறது. அதனாலேயே எல்பரதேய்யை ஆதரிக்கிறது. அதேநேரம் இப்போது துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஓமர் சுலைமான் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கவும் முபாரக்குக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இன்னொரு நாசர், இன்னொரு கோமேனி அரபு நாடுகளில் உருவாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.
என்ன சவூதி அரேபியாவில் ஹோஸ்னி முபாரக் தஞ்சமடைந்தால், துனிசிய முன்னாள் அதிபர் பென் அலியுடன் தேநீர் அருந்தியபடி ‘மலரும் நினைவுகளை’ பகிர்ந்துக் கொண்டு மாலைப் பொழுதை கழிக்கலாம். இல்லாவிட்டாலும் ஒன்றும் நஷ்டமில்லை. எஞ்சிய வாழ்நாளை மனமுவந்து அவர் கழிக்கும்படி அமெரிக்கா ஏற்பாடு செய்து தந்துவிடும்.
ஆனால், எகிப்து?
இந்தக் கேள்விதான் உலகம் முழுக்க தொக்கி நிற்கிறது. முக்கியமாக ‘இஸ்லாம் சகோதரத்துவ கட்சி’ இன்னமும் செல்வாக்குடன் எகிப்தில் இருக்கிறது. எல்பரதேய் போலவே இக்கட்சியும் ‘துனிசிய மாதிரி’ புரட்சியை விரும்பவில்லை. ஆட்சி மாற்றத்தையே விரும்புகிறது. எகிப்தின் அனைத்து பிரச்னைகளுக்கும் ஹோஸ்னி முபாரக்தான் காரணம் என்றும் பிரச்சாரம் செய்து வருகிறது.
ஜனவரி 25 அன்று ஆரம்பித்து இன்று வரை தொடரும் மக்கள் எழுச்சியில் – புரட்சியில் – அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்கள் எதிரொலிக்கவேயில்லை. ஆளுங் கட்சி அலுவலகத்தை தீக்கரையாக்கிய மக்கள், அமெரிக்க தூதரகத்துக்கு ஒரு சின்ன கீறலைக் கூட ஏற்படுத்தவில்லை. சிறந்த அதிபர் என உலக வங்கி ஹோஸ்னி முபாரக்குக்கு விருது கொடுத்து கெளரவித்திருக்கிறது. அந்தளவுக்கு மறுகாலனியாதிக்க கொள்கைகளை முழு மூச்சுடன் அவர் எகிப்தில் அமல்படுத்தியிருக்கிறார். அதனால்தான் வேலையில்லா திண்டாட்டமும், தொழிலாளர்களின் வேலை பறிப்பும், ஏழ்மையும், உயர் கல்வி கட்டண உயர்வும், உணவுப் பொருட்களின் விலையேற்றமும் நிகழ்ந்தன.
ஹோஸ்னி முபாரக் போய் எல்பரதேய் அல்லது வேறு யார் அதிபரானாலும் இதேநிலைதான் தொடரும். பஞ்சமும் பசியும் ஒழிய வேண்டுமானால் ஆட்சி மாற்றம் தீர்வாகாது. நிலவும் அரசமைப்பு மாற வேண்டும். சமூக மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு புரட்சிகர கம்யூனிச கட்சியின் கீழ் உழைக்கும் மக்கள் ஒன்று திரள வேண்டும்.
திரள்வார்கள். பல ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதானே மக்கள் திரளின் வலிமையை, இராணுவத்தை எதிர்க்கும் பலத்தை, வர்க்க உணர்வின் எழுச்சியை, ஒவ்வொரு எகிப்தியனும் உணர்ந்திருக்கிறான்? இந்த உணர்வு நிச்சயம் அரசமைப்பு மாற்றத்துக்கு வருங்காலத்தில் வழிவகுக்கும். இன்று கருநிலையில் இருக்கும் புரட்சி நாளை செயல் வடிவம் பெறும்.
சூயஸ் கால்வாயை நாட்டுடைமையாக்கி பிரான்ஸ், இங்கிலாந்து அரசின் ஏகபோகத்தை ஒழித்த நாசர் ஆண்ட மண்ணல்லவா எகிப்து? ஸ்டாலினை நேசித்த நாசர் பிறந்த பூமி, இன்று ஒவ்வொருவரையும் புரட்சியாளனாக உருவாக்கியிருக்கிறது.
நேற்று துனிசியா. இன்று எகிப்து. நாளை? அல்ஜீரியா, யேமன், ஜோர்டான் என அடுத்தடுத்து பல நாடுகள், நாட்டு மக்கள், எழுச்சிக்காக – புரட்சிக்காக காத்திருக்கிறார்கள். துனிசிய நடைமுறை எகிப்தின் வர்க்க அணி சேர்க்கைக்கு வழிவகுத்தது. எகிப்தின் நடைமுறை நாளை பிற நாடுகளில் நடைபெறப் போகும் மக்கள் எழுச்சியில் எதிரொலிக்கப் போகிறது.
முதல் உலகப் போருக்குப் பின் ஏகாதிபத்தியங்கள், ஒன்றுபட்ட அரபு நாடுகளை துண்டாடி, பெயரளவுக்கு சுதந்திரம் கொடுத்து தங்களுக்குள் பங்கீடு செய்து கொண்டன. அதற்கு தோதாக சர்வாதிகாரிகளையும், மன்னர்களையும் ஆட்சியில் அமர்த்தி பாதுகாத்தன. அதன்மூலம் தங்களுக்கான சுரண்டல் காலனியாக மாற்றின. மறுகாலனியாதிக்கத்தை அறிமுகப்படுத்தி நாட்டின் வளத்தை உறிஞ்சின. ஏகாதிபத்தியங்கள் செய்த அந்தப் பங்கீட்டை – மறுகாலனியாதிக்கத்தை – இப்போது மக்கள் ஒன்றுதிரண்டு புரட்சிக்கான கருநிலையில் மறுவார்ப்பு செய்து வருகிறார்கள்.
‘நியூயார்க் டைம்ஸ்’ சுட்டிக் காட்டியுள்ளபடி, அரபு நாடுகள் அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தலைமைக்காக மீண்டும் எகிப்தையே இன்று எதிர்நோக்கியிருக்கின்றன.
மக்கள் திரளின் மீது நம்பிக்கைக் கொண்டு சோர்ந்து போகாமல் தீரமுடன் களத்தில் நிற்கும் ஒவ்வொரு எகிப்தியனுக்கும் புரட்சிகர நல்வாழ்த்துகள்.
கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).