இதைவிட கொடூரம் ஏதாவது இருக்க முடியுமா? இதைவிட வக்கிரம் ஏதாவது இருக்கத்தான் முடியுமா? மனித இனம் குடிக்கத் தண்ணீர்பெறும் மிகச்சாதாரண உரிமையைக் கூட எதிர்க்கிறார்கள், மனித இனத்தின் கொடிய எதிரிகளான ஏகாதிபத்தியவாதிகள்.
கடந்த ஜூலை 28-ஆம் தேதியன்று அனைத்து மக்களும் தூய குடிநீரும் சுகாதார வசதியும் பெற வேண்டும் என்று ஐ.நா. மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தூய குடிநீர் பெறுவதென்பது அடிப்படை மனித உரிமை என்றும், அனைத்து நாடுகளும் இம்மனித உரிமையைக் காக்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.
2000 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் பொலிவியாவின் மூன்றாவது பெரிய நகரமான கோச்சபம்பாவில் தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து மக்கள் மாபெரும் பேரெழுச்சியில் இறங்கினர். அப்போராட்டத்தை வழிநடத்திய “”சோசலிசத்துக்கான இயக்க” த்தின் தலைவரான இவா மொரேல்ஸ், 2005-இல் பொலிவியாவின் அதிபரானார். பொலிவிய மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை எதிரொலிக்கும் வகையிலும், தண்ணீரை மனித இனத்தின் அடிப்படை உரிமையாக்கும் உணர்விலும் அவர் ஐ.நா.வில் இத்தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார். 192 நாடுகள் கொண்ட ஐ.நா.மன்றத்தில், பொலிவியா அதிபர் கொண்டுவந்த இத்தீர்மானத்தை ஆதரித்து இந்தியா உள்ளிட்டு 122 நாடுகளும், எதிராக 41 நாடுகளும் வாக்களித்துள்ளன. உலகின் ஏகாதிபத்திய நாடுகளும் பணக்கார நாடுகளுமான அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஆஸ்திரியா, இஸ்ரேல், நெதர்லாந்து, டென்மார்க் முதலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதர நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை நாடகமாடியுள்ளன.
இத்தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என்றும், தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறி அதை நீர்த்துப்போக வைக்கவும் ஏகாதிபத்திய நாடுகளும் தண்ணீர் ஏகபோக நிறுவனங்களும் கடும் முயற்சி செய்தன. ஏனெனில், இன்று உலகின் வேகமாக வளர்ந்து வரக்கூடிய, கொள்ளை இலாபம் தரக்கூடிய தொழிலாக தண்ணீர் வியாபாரம் முன்னணிக்கு வந்துள்ளது. இதனாலேயே தண்ணீரை “நீலத் தங்கம்” என்று பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகள் அழைக்கின்றன. கடந்த ஆண்டில், எண்ணெக் கம்பெனிகளின் இலாபத்தில் ஏறத்தாழ 40 சதவீதத்தை தண்ணீர் கம்பெனிகள் அடைந்துள்ளன. இந்தக் கம்பெனிகள், உலகின் தண்ணீர் ஆதாரங்களில் 5% அளவுக்கு சொந்தம் கொண்டாடுகின்றன. இதிலேயே இவ்வளவு இலாபம் என்றால், இதர நீர் ஆதாரங்களையும் அவைக் கைப்பற்றிக் கொண்டால் அவற்றின் இலாபம் எவ்வளவு மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
விவெண்டி, சூயஸ், பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ள பத்து நிறுவனங்கள், 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன. உலக வர்த்தகக் கழகம் தண்ணீரையும் ஒரு சரக்காகவே ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே தண்ணீரும் ஏற்றுமதி வியாபாரமாகிறது. ஏழை நாடுகளில் உலக வங்கியின் கடன் திட்டங்களில் பெரும்பாலானவை தண்ணீர் தனியார்மயத்தை நிபந்தனையாகக் கொண்டுள்ளன. இதன்படி, தண்ணீர், சுகாதாரம் முதலான மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் செய்து தர வேண்டியதில்லை என்பதுதான் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் விதி.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகில் நடந்த எல்லா வன்முறைப் படுகொலைகளையும் விட தண்ணீர் தொடர்பான நோகளால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கையே அதிகம். ஆண்டுதோறும் தூய குடிநீர் கிடைக்காமலும் சுகாதார வசதி இல்லாமலும் உலகெங்கும் ஐந்து வயதுக்கும் குறைவான 21 இலட்சம் குழந்தைகள் மாண்டு போகின்றன. மிகக் கொடிய இருபெரும் நோகளான எயிட்ஸ் மற்றும் மலேரியாவினால் கொல்லப்பட்டவர்களை விட, தூய குடிநீர் கிடைக்காமல் நோ தாக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.
ஐ.நா.வின் கணக்கீட்டின்படி, உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். உலகின் 88 கோடியே 40 இலட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. 260 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. உலகின் வளரும் நாடுகளிலுள்ள ஏறத்தாழ 40 % மக்களுக்கு முற்றாக இத்தகைய வசதிகள் இல்லை. ஐ.நா. மதிப்பீட்டின்படி, 2025-ஆம் ஆண்டுக்குள் உலகில் 48 நாடுகள் குடிநீர் பற்றாக்குறையால் தவிக்க நேரிடும். ஏற்கெனவே ஆயிரக்கணக்கான கிராமங்கள் நீரின்றி மக்கள் வெளியேறும் போக்கு பல ஆப்பிரிக்க நாடுகளிலும், ஈரான், சீனா மற்றும் பாகிஸ்தானிலும் நிகழ்ந்து வருகிறது. இவர்கள் “தண்ணீர் அகதிகள்” என்று குறிப்பிடப்படுகின்றனர்.
இந்தியாவில் 1985-இல் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை 750. இது 1995-இல் 65,000 கிராமங்களாக அதிகரித்து விட்டதாக அரசாங்கமே ஒப்புக் கொள்கிறது. இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட நதிகள் மற்றும் ஏரிகளின் நீர் மாசுபட்டுள்ளது. அந்நீரைக் குடிக்கவோ குளிக்கவோ பயன்படுத்த முடியாது. நாட்டின் மூன்றில் இரு பங்கு மக்களுக்குப் போதுமான சுகாதார வசதிகள் கிடையாது. இந்தியாவில் நடந்துவரும் தண்ணீர் வியாபாரத்தின் ஓராண்டு மதிப்பு ஏறத்தாழ 10 ஆயிரம் கோடி ரூபா என்கிறது ஒரு ஆய்வு. தண்ணீர் தனியார்மயத்தை உள்நாட்டில் தீவிரமாகச் செயல்படுத்திவரும் இந்திய அரசு, உலக அரங்கில் தண்ணீர் மட்டுமின்றி, பல்வேறு மனித உரிமை விவகாரங்களில் முற்போக்கு நாடகமாடிக் கொண்டு பித்தலாட்டம் செய்து வருகிறது.
தண்ணீர் மனித இனத்தின் அடிப்படைத் தேவை. ஆனால், அந்தத் தேவை என்பது உங்களது வாங்கும் சக்தியைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. எனவே அது விற்பனைக்கானது. மாறாக, உரிமை என்பது நீங்கள் பெற்றே ஆகவேண்டிய விசயம். அதை வியாபாரப் பொருளாக்க முடியாது. இத்தனை காலமும் வெறுமனே அடிப்படைத் தேவை என்று குறிப்பிட்டு வந்த ஐ.நா.மன்றம், இப்போது தண்ணீர் என்பது மனித இனத்தின் அடிப்படை உரிமை என்று ஏற்றுக் கொண்டுள்ளது.
தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், உலக நாடுகளைக் கட்டுப்படுத்தாத வெறும் காகிதத் தீர்மானம்தான். கட்டுப்படுத்தும் என்றால் இத்தனை நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரிக்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எனினும், பெயரளவிலான இத்தீர்மானத்தைக் கூட ஏகாதிபத்திய தண்ணீர் ஏகபோக நிறுவனங்கள் எதிர்த்து நின்று சதி செய்கின்றன. இது நடைமுறைக்கு வந்துவிட்டால் ஆபத்து என்று அலறுகின்றன. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று பிற நாடுகளில் தலையீடு செயும் ஏகாதிபத்தியங்கள், மிகச் சாதாரண தண்ணீர் பெறும் உரிமையை நிலைநாட்டக் கோரும்போது, அதை நிராகரித்து எதிராக நிற்கின்றன. மனித உரிமை என்றெல்லாம் தமது ஆதிக்க நலன்களிலிருந்துதான் ஏகாதிபத்திய நாடுகள் கூச்சலிடுகின்றனவே தவிர, மக்கள் நலனிலிருந்து அல்ல.
மனித இனம் குடிக்கத் தண்ணீர்கூட கிடைக்காமல் செத்து மடிந்தாலும் பரவாயில்லை, தண்ணீர் ஏகபோக நிறுவனங்களின் கொள்ளை லாபத்துக்கும் சூறையாடலுக்கும் எவ்வித சிறு இடையூறும் நேரக்கூடாது என்பதுதான் ஏகாதிபத்தியவாதிகளின் நியாயவாதம். இதுதான் பெருமையாகப் பீற்றிக் கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மகிமை!
கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).
உமாசங்கரின் தற்காலிகப் பணிநீக்கத்தை திரும்பப் பெற்று அவரை டான்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமித்திருக்கிறது தமிழக அரசு. பேச்சுவார்த்தைக்கோ பேரத்துக்கோ சமரசத்துக்கோ பணிய மறுத்த்தால் வேறு வழியின்றி ஒரு அடி பின்வாங்கியிருக்கிறது கருணாநிதி அரசு.
உமாசங்கரின் மீதான நடவடிக்கையை எதிர்த்தும், அவர் எழுப்பியிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை கோரியும் கடந்த வாரம் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் 12 மாவட்ட மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்த்து. கோட்டைக்கு முன் மறியல் போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்திருந்தது. மக்கள் சக்தி கட்சி, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி, பசுபதி பாண்டியன் ஆகியோரும் இப்பிரச்சினை தொடர்பாகப் போராடி வருகின்றனர்.
இத்தகைய பின்புலத்தில்தான் திமுக அரசின் இந்த முடிவு வந்திருக்கிறது. இம்முடிவில் நேர்மையோ நாணயமோ கடுகளவும் கிடையாது. தன் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்று மறுப்பதுடன் உமாசங்கர் நிறுத்திக் கொள்ளவில்லை. ராசாத்தி அம்மாள், அழகிரி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தையும், கருணாநிதியையும், தற்போதைய தலைமைச் செயலர் மாலதி உள்ளிட்ட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் அவர் சந்திக்கு இழுத்திருக்கிறார். தொடர்ந்து அவர் தற்காலிகப் பணி நீக்கத்தில் வைக்கப்பட்டிருந்தால், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பார், பேசுவார். அவருக்கு ஆதரவான போராட்டங்கள் அதிகரிக்குமே தவிரக் குறையாது. இவை அனைத்தையும் நிறுத்துவதற்கு தற்போது திமுக அரசு செய்யக்கூடிய ஒரே காரியம் இதுதான்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதற்காக இருபது ஆண்டுகளுக்கு முன் பொய்யான சாதிச்சான்றிதழ் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான குற்றப்பத்திரிகை இறுதியாக்கப்பட்டு, அவருக்கு எதிரான இலாகா பூர்வமான விசாரணை தொடங்க இருப்பதனால் உமாசங்கரின் தற்காலிகப் பணிநீக்கம் திரும்ப பெறப்படுவதாக கூறுயிருக்கிறது அரசின் உத்தரவு. (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், செப்,3) அதாவது, இது வழமையான நடவடிக்கைதானாம். மீசையில் மண் ஒட்டவில்லையாம்!
அவருக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுவிட்டதா, அதில் என்ன கூறப்பட்டிருக்கிறது, அதற்கு உமாசங்கர் அளிக்கும் பதில் என்ன என்பன போன்ற விவரங்கள் இனி பொதுமக்கள் பார்வைக்கு வராது. பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற முறையில், சட்டப்படி அவர் இனி பொதுவெளியில் பேசவும் கூடாது. அந்த அளவில் கருணாநிதி அரசுக்கு நிம்மதி.
யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக, ஒரு குறிப்பிட்ட போர்க்களத்திலிருந்து பின்வாங்குவது என்ற உத்தியைத்தான் கையாண்டிருக்கிறது கருணாநிதி அரசு. இந்த வெற்றியை நாம் கொண்டாடிக் கொண்டிருக்க கூடாது. உமா சங்கருக்கு வேலை திரும்பக் கிடைத்திருக்கலாம். என்ன காரணத்துக்காக அவரது வேலை பறிக்கப்பட்டதோ அந்தக் காரணம் அப்படியே இருக்கிறது.
எல்காட் ஊழல், சன் குழுமத்தின் கிரிமினல் நடவடிக்கைகள், குவாரி ஊழல், வீட்டு வசதிவாரிய ஊழல.. என பல்லாயிரம் கோடி ஊழலில் சம்மந்தப்பட்டிருக்கும் கருணாநிதி குடும்பத்தினர், அவர்களது கூட்டாளிகளான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆகியோர் அனைவரும் அப்படியே இருக்கிறார்கள்.
ஊழல் அதிகாரிகளைப் பாதுகாப்பதற்காகவும் அவர்களது ஒத்துழைப்புடன் ஆளும் வர்க்கமும் ஆளும் கட்சியினரும் பொதுச்சொத்தைக் கொள்ளையடிப்பதற்காகவும் உருவாக்கப் பட்டிருக்கும் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்ககம் (Directorate of Vigilance and Anti Corruption) அப்படியே இருக்கிறது.
ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கி கையும் களவுமாகப் பிடிபட்டாலும் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடுப்பதைத் தடுத்து, திருடர்களைப் பாதுகாப்பதற்கு முதல்வர் தலைமையிலான குழு பெற்றிருக்கும் முறைகேடான (ஆனால் சட்டபூர்வமான) அதிகாரம் அப்படியே இருக்கிறது.இவற்றையெல்லாம் வெளிக்கொண்டு வந்த உமாசங்கரின் தற்காலிகப் பணிநீக்கம் மட்டுமே ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
கழுதையின் முதுகில் ஏற்றப்பட்ட சுமையை அப்படியே வைத்துகொண்டு, ஒரே ஒரு துணியை மட்டும் எடுத்து அதன் முகத்துக்கு எதிரே ஆட்டிவிட்டால், சுமை குறைந்து விட்டதாக நம்பி, சந்தோசமாகப் பொதியைச் சுமந்து செல்லுமாம் கழுதை.
இது கழுதைகளின் வரலாறு. கழுதையினத்துக்குக் கூட வரலாறு உண்டா என்று கேட்கிறீர்களா? நியாயமான கேள்விதான். தனக்கு வரலாறு இருப்பதாக சொல்லிக் கொள்ளும் இனம் கழுதையினமாக இருக்கமுடியாது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
தானைத்தலைவர், தமிழ்த்தாயின் தலைமகன், முன்னவர், மூத்தவர், முதல்வர் டாக்டர் கலைஞர் மார்க்சிஸ்டுகள் மீது வெறுப்பையும் சத்துணவு ஊழியர்கள் மீது நெருப்பையும் கக்கியிருக்கிறார். பணி நிரந்தரம் கோரி சத்துணவு ஊழியர்கள் அறிவித்த கோட்டை முற்றுகைப் போராட்டம்தான் அவரது வெறுப்புக்கு காரணம்.
“கம்யூனிஸ்டுகள் நடத்தும் கிளர்ச்சி எதுவாயினும் அதற்கு ஒரு போர்க்கள முத்திரையை குத்தாமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பார்கள். பிறகு கண்டன ஆர்ப்பாட்டம் என்பார்கள். அதற்கடுத்து மறியல் என்பார்கள். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலக முற்றுகை என்பார்கள்… அவர்கள் வைத்த கொள்ளிதான் சில மாநிலங்களில் மாவோயிஸ்ட் தாக்குதல், அராஜகம், உயிர்ப்பலிகள் என்ற அளவுக்கு கொழுந்து விட்டு எரிகிற காட்சியைப் பார்க்கிறோம்…”
“அரசுக்கு சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக போர்முனைக்கு வாருங்கள் என்று திமுகவோ, திகவோ ஒரு போதும் மக்களைத் திரட்டியதில்லை. எந்தப் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தினாலும் அதற்கான கிளர்ச்சியை அமைதியான முறையில் அறவழியில் நடத்தி பழக்கப்பட்டவர்கள் நாங்கள்” என்று சொல்லியிருக்கிறார் கலைஞர்.
தட்டிக் கேட்க ஆளில்லைன்னா அண்ணன் சண்டப்பிரசண்டன்தான். அறவழி தவிர “பிறவழி” எதுவுமே தெரியாத தலைவரின் வாரிசுக்கு எதற்கு தளபதி பட்டம்? எதற்கு இந்த போர்க்கள முத்திரை? எந்த தலையானங்கனத்தின் செறுவென்ற செழியன் அவர்?
திக வுல இருக்கும் போது அண்ணாத்துரைக்கு பேரும் தளபதி அண்ணாதான். “உங்க தளபதி எங்கய்யா படை நடத்துறாரு?” ன்னு எம்.ஆர்.ராதா அன்று கேலி செய்தார். திக விலிருந்து விலகி திமுக ஆரம்பிச்சதும் “தளபதி” அப்டியே “அறிஞர்” ஆயிட்டாரு. நாளைக்கு ஸ்டாலின் முதல்வர் ஆனதும் அடுத்த தளபதி உதயநிதியாக இருக்கும்.
போராட்டத்துக்கு போர்க்கள முத்திரை குத்துகிறார்களாம் கம்யூனிஸ்டுகள்! அதுவாவது பரவாயில்லை. மத்தியான சாப்பாட்டுக்கப்புறம் 3 மணி நேரம் தூங்கி, வீங்கின மூஞ்சிக்கு ரோஸ் பவுடர் போட்டு, மீசைக்கு மை தடவி, ராத்திரி பொதுக்கூட்டத்துல வந்து வாய்ச்சிலம்பம் ஆடுற அண்ணன், தம்பியெல்லாம், தம் பேருக்கு முன்னால தளபதி, பிரிகேடியர், அவில்தார், சுபேதார்னு எதுனா ஒரு போர்க்கள முத்திரையை குத்திக்கொண்டு திரிகிறார்களே, அறவழி அண்ணன் அதுக்கென்ன சொல்கிறார்?
தம்பி பேரு தளபதியாம் அண்ணன் அஞ்சாநெஞ்சனாம். ஆனா அவுக வழி மட்டும் அறவழியாம். அஞ்சாநெஞ்சன் மதுரையில நடத்தற கட்டப்பஞ்சாயத்தெல்லாம் அறவழியில்தான் நடக்கிறதோ?
திமுகவுக்கு அறவழியத் தவிர “பிறவழி” எதுவும் தெரியாதாம். உடன்பிறப்புகளின் அறவழிப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் இதயம் வெடித்துத்தான் அண்ணன் தா.கிருஷ்ணனும் லீலாவதியும் தற்கொலை செய்து கொண்டார்களோ? மதுரை தினகரன் ஆபீசில் மேயர் தலைமையில் போலீசு அதிகாரிகள் முன்னிலையில் அட்டாக் பாண்டி ஒரு போராட்டம் நடத்தினாரே, அதுவும் கூட அறவழிப் போராட்டம்தானா? அறவழிப் போராட்டத்தின் விளைவாக 3 பேர் உயிர் விட வாய்ப்பில்லை என்பதனால்தான் நீதிதேவன் எல்லோரையும் விடுதலை செய்து விட்டாரோ?
திமுக வின் உட்கட்சி தேர்தல் ஒவ்வொண்ணுலயும் கழக உடன்பிறப்புகள் கையில் தக்கிளியும் பஞ்சும் வைத்துக் கொண்டுதான் திரிகிறார்களோ? திருச்சி கிளைவ் ஆஸ்டல் தாக்குதல், சிம்சன் தொழிலாளிகள் மீதான தாக்குதல், அண்ணாமலைநகர் உதயகுமார் படுகொலையில் தொடங்கி, சமீபத்தில் செட்டிநாட்டரசருக்காக 3 வெளிமாநில மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கொலை செய்யப்பட்டது வரை அத்தனையும் அறவழிப் போராட்டங்கள்தானோ!
“சத்துணவு ஊழியர்கள் பணி நிரந்தரம் கேட்டு கோட்டையை முற்றுகையிடுவார்கள், நாங்கள் இவர்கள் படைக்கு முரசு கொட்டி வரவேற்பு வழங்க வேண்டுமா?” என்று கேட்கிறார் கருணாநிதி. பதவிப் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு குடும்பத்தோடு சோனியா வீட்டுக்குப் படையெடுத்தாரே தலைவர், அது முற்றுகைப் போராட்டம் இல்லையா?
சன் டிவி, கலைஞர் டிவி, கேபிள் நெட்வொர்க், சினிமா கொட்டகைகள், கலாநிதி, தயாநிதி, உதயநிதி மற்றும் பிற நிதிகளின் சினிமாக் கம்பெனிகள், சிமென்டு கம்பெனிகள், சாராயக் கம்பெனிகள், ரியல் எஸ்டேட், மந்திரி பதவிகள் என்று திருக்குவளைக் குடும்பம் தமிழகத்தையே முற்றுகையிட்டிருக்கிறதே இது முற்றுகையில்லையா?
இதெல்லாம் அற வழியாம். சத்துணவு ஊழியர்களின் போராட்டம் அறம் கொன்ற வழியாம்!
அரசுக்கு எதிராக எப்ப போராட்டம் நடத்தினாலும் அமைதியாக அறவழியில்தான் திமுக போராடுமாம். அதென்னமோ உண்மைதான். அதிகாரத்தில் அம்மா அமர்ந்திருந்த சூழ்நிலையில், அடிவாங்கும் வாய்ப்பு அதிகம் என்பதால் அந்த மாதிரி நேரத்திலெல்லாம் அண்ணன் காட்டும் வழி அறவழிதான். “தலையையே எடுப்பேன்” என்று வேதாந்தி மிரட்டினாலும், “மண்டை போனால் போகட்டும் உடன்பிறப்பே, மகுடம் முக்கியம்” என்று மவுனம் காத்தாரே கலைஞர், அப்பவும் அறவழிப் போராட்டம்தான். அவ்வளவு ஏன், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதல் எந்த எடுபட்ட காங்கிரசுக்காரன் கழகத்தலைவரின் முகத்தில் காறித்துப்பினாலும் கலைஞருக்கு கோபம் வராது. அடுத்த தேர்தல் முடியும் வரைக்கும் அண்ணன் வழி அறவழிதான்.
ஆனால், சத்துணவு ஊழியர்கள், மாஞ்சோலைத் தோட்டத்தொழிலாளிகள், ஸ்ரீபெரும்புதூர் மக்கள் போன்ற இளித்தவாயர்கள் போராடும்போது மட்டும் கதை வேறு. பாராளுமன்றத்தில் பேசவே முடியாத அழகிரிக்கு முழு சம்பளம். அவர் முழுநேரப் பணியாளர். அடுப்பு ஊதும் சத்துணவுப் பணியாளருக்கு அரைச் சம்பளம், தொகுப்பூதியம். ஏனென்றால் இவர்கள் பகுதிநேரப் பணியாளர்கள்.
உலக முதலாளிகள் உடல் நோகாமல் வந்து இறங்குவதற்கு இவர்கள் இன்டர்நேசனல் ஏர்போர்ட் கட்டுவார்கள். அதற்காக உள்ளூர் தமிழர்களெல்லாம், மாடு கன்று மரம் மட்டை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, பாயைச் சுருட்டிக் கொண்டு “யாதும் ஊரே யாவரும் கேளிர்”னு செம்மஞ்சேரிக்கோ கம்மஞ்சேரிக்கோ கிளம்பிவிடவேண்டும். இல்லாவிட்டால் அடித்து உரித்து விட்டு அப்புறம் அறவழியை வலியுறுத்தி இப்படி ஒரு அறிக்கை விடுவார் கருணாநிதி.
காந்தி நேரு ரேஞ்சில் விமரிசனங்களுக்கு அப்பாற்பட்ட திருவுருவமாக தமிழ்நாடே தன்னைக் கொண்டாடவேண்டும் என்பது முதியவர் கருணாநிதியின் ஆசை. அவர் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்டிருக்கும் பிம்பத்தின் மீது சத்துணவு ஊழியர் மாதிரி சாதாரண ஆட்கள் லேசாக உரசி விட்டால் போதும், உடனே “எனக்கு இன்னொரு பேரு இருக்கு” என்று பாட்சா கருணாநிதியின் குரல் அவருக்கே தெரியாமல் வெளியே வருகிறது.
பள்ளிப் பிள்ளைகளுக்கு ஒருநாள் சோறு போடத் தவறிய குற்றத்துக்காக நூறுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை தற்காலிகப் பணிநீக்கமும் செய்திருக்கிறார் கருணாநிதி. அப்பனுக்கு சாராயம் ஊற்றிக் கொடுக்கத் தவறினாலும் குற்றம், பிள்ளைக்கு சத்துணவு போடத் தவறினாலும் குற்றம்! மனுநீதிச் சோழன் அரசாட்சியா கொக்கா?
இந்தப் போடு போட்ட பிறகாவது மார்க்சிஸ்டுகளுக்கு கோவம் வராதா, கருணாநிதியை நறுக்காக நாலு கேள்வி திருப்பிக் கேட்கமாட்டார்களா என்று ஆவலுடன் நேற்றைய நாளிதழைப் புரட்டினால், கருணாநிதிக்கு தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் மார்க்சிஸ்டு செயலர் இராமகிருஷ்ணன்.
மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகளின் வன்முறையை எதிர்த்து மார்க்சிஸ்டு கட்சி போராடிக் கொண்டிருக்கிறதாம். மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் மம்தா பானர்ஜியை கருணாநிதி கண்டிக்கவில்லையாம். போராட்டத்தை கருணாநிதி திசை திருப்புகிறாராம். சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவேண்டுமாம். இதுதான் ராமகிருஷ்ணனின் அறிக்கை.
“முதல்வரின் கருத்து துரதிருஷ்டவசமானது. முதல்வர் இனிமேல் இத்தகைய தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கோவையில் பேசியிருக்கிறார். வலது கம்யூ தலைவர் ஏ.பி.பரதன்.
அடி வாங்கினவன் பேசுகிற பேச்சு மாதிரியா இருக்கிறது? அடடா, எப்பேர்ப்பட்ட அரசியல் நாகரிகம்! இப்படிப்பட்ட அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்கச் சொல்லித்தானே கலைஞர் கரடியாக கத்துகிறார்.
வலது, இடது கட்சிகளின் அணிகளை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. வாங்க வேண்டிய அடியை வாங்கியாகிவிட்டது. திருப்பி அடிக்க முடியாவிட்டாலும், நச்சென்று நாலு கேள்வியாவது திருப்பிக் கேட்டிருக்கலாம்.
அப்படி ஒரு கோபம் மார்க்சிஸ்டு தலைவர்களுக்கு வந்திருக்காது என்று சொல்ல முடியாது. நிலைமை அவர்களுடைய வாயைக் கட்டியிருக்கிறது. 80 களில் எதைக்கேட்டாலும் வங்கத்தைப் பார் என்பார்கள். இப்போது வேறு எந்தக் கட்சிக்காரனாவது வங்கத்தைப் பார் என்று பேச ஆரம்பித்தால் இவர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கிறது. மேற்கு வங்கத்தில் தொகுப்பூதியம் கொடுத்துக்கொண்டு இங்கே வந்து பணி நிரந்தரம் கேட்கிறாயா என்று மடக்குகிறார் கருணாநிதி. “சிறுதாவூர் சீமாட்டியை முதல்வராக்குவதுதான் உங்கள் நோக்கம்” என்று சீண்டுகிறார். இதுக்கெல்லாம் மார்க்சிஸ்டுகள் ஆமாம்னு சொல்லவும் முடியாது. இல்லைன்னு சொல்லவும் முடியாது. “நாங்கள் மாவோயிஸ்டுகள் அல்ல” என்பது மட்டும்தான் அவர்கள் தைரியமாகச் சொல்ல முடிந்த பதில். அதை சொல்லிவிட்டார் இராமகிருஷ்ணன்.
முன்னர் ஒருமுறை ஜனசக்தி பத்திரிகையின் ஆண்டு விழாவில் பேசிய திரைப்பட இயக்கநர் வி.சேகர், “கருணாநிதி உங்களுக்கெல்லாம் ஏன் ரெண்டு சீட் – ஒரு சீட் கொடுக்கிறார் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு ஒரு கணம் பேச்சை நிறுத்தியிருக்கிறார்.
“இந்தப் புதிருக்குத்தானய்யா விடை தேடிக்கொண்டிருக்கிறோம்” என்று மேடையில் இருந்த நல்லகண்ணு முதல் மார்க்சிஸ்டு தலைவர்கள் வரையிலானோர் ஆவலுடன் சேகரின் வாயைப் பாத்திருக்கின்றனர். “ஏன்னா, அரை சீட்டுன்னு ஒண்ணு இல்லை. இருந்தா அதைத்தான் உங்களுக்கு கொடுத்திருப்பார்” என்று சொல்லி சிரித்தாராம் சேகர்.
விக்கிரமாதித்தனின் சரியான பதிலைக் கேட்ட பின்னரும், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. முருங்கை மரத்தை வேண்டுமானால் நாம் வெட்டலாம். ஆனால் தலைகீழாய்த் தொங்கியே பழக்கப்பட்ட வேதாளத்தை நிமிர்த்துவது ரொம்ப கஷ்டம்.
ஆயத்த ஆடைகள் உருவாக்கத்தின் தொடக்கமென்பது நூல் உள்ளே வந்து இறங்குவதிலிருந்து தொடங்குகிறது. அதுவே பின்னலாடையாக மாற்றம் பெறுவதற்கு பின்னலகம் என்ற நிட்டிங் எந்திரங்கள் இருக்கும் பகுதிக்குச் செல்கிறது. மார்பு அளவுகளைப் பொறுத்து தனித்தனியாக உள்ள எந்திரங்கள் மூலம் தேவைப்படும் அளவிற்கு துணியாக உருவாகின்றது. இப்போது அந்த துணி இரண்டு பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். வெள்ளை என்றால் சலவை பட்டறை. பல நிற வண்ணமென்றால் சாயப்பட்டறைகள்.
வெள்ளையை மட்டும் உருவாக்கி கொடுப்பவர்களுக்கு எளிய மூதலீடுகள் போதுமானது.. வணணமாக்க ஐம்பது லட்சத்தில் தொடங்கி நூறு கோடி வரைக்கும் அவரவர் தகுதியைப் பொறுத்து உருவாக்கி வைத்துருப்பார்கள். 10 கிலோ துணி கொள்ளவு முதல் ஆயிரம் கிலோ வரைக்கும் எட்டு மணி நேரத்தில் விரும்பும் நிறமாக வெளியே தள்ளும் ராட்சச எந்திரங்கள் நவீன எந்திரங்கள் உண்டு. எந்திரங்களுக்கான முதலீடு தவிர தேவைப்படும் மற்ற வசதிகளுக்குத்தான் பணத்தை வாரி இறைக்க வேண்டும்.
கை படாத ரோஜாவாக பளபளவென்ற பட்டாடை போல அடித்து துவைத்து நிறமாக்கி உலர வைத்து வெளியே தள்ளும். வேண்டிய அளவுகளில் விதவிதமாய் ரகரகமாய் ஜொலிப்பாய் மடிப்பு கலையாத புத்தம் புது ரோஜா போல் வந்து சேரும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நவீனம். ஆனால் அத்தனையும் வெளிநாட்டு மூளைகளின் நளினம். ஒரே கூரையின் கீழ் மொத்த வசதிகளையையும் வைத்திருப்பவர்கள் விடாத மழை என்றாலும் கவலைப்படாது கப்பலில் 365 நாளும் ஏற்றிக் கொண்டே இருக்க முடியும். அவர்களின் வங்கிக் கணக்கு என்றுமே சொங்கிப் போய்விடாது.
என்னுடைய நண்பர் மற்றவர்களைப் போல பெரிய முதலீடுகளை முடக்காமல் வௌ்ளையை மட்டும் விருப்பமான தொழிலாக தொடக்கம் முதல் செய்து கொண்டிருக்கிறார். எது நம்மால் முடியாது என்று தெரிகின்றதோ? அதில் நுழையாமல் இருந்தாலே நம்முடைய தொழில் வெற்றி உறுதி என்று என்னை உணர வைத்தவர். சாயக்கழிவு நீரை ஒப்பிடும் போது சலவைப்பட்டறையில் இருந்து வெளிவரும் நீரின் நச்சுத்தன்மை குறைவானதே. ஊரில் துவைத்துக் கொடுப்பவர்கள் வெள்ளாவி என்று கேள்விப்பட்டு இருப்பீங்களே? அதைப் போல சற்று கொஞ்சம் நவீனம்.
நீங்கள் பத்திரிக்கைகள் படிப்பவரா? ஒரு பக்கவாட்டில் இந்த சாயப்பட்டறை குறித்து துணுக்கு செய்திகளாக படித்து இருக்க வாய்ப்புண்டு. திருப்பூரில் ஆயத்த ஏற்றுமதி தொழில் சூடு பிடிக்காமல் இருந்த 1984 ல் இந்த துறையில் சுமாராக 30 நிறுவனங்கள் செயல்பட்டு இருக்கலாம். தொடக்கத்தில் பெரிய அளவிற்கு நவீன உபகரணங்கள் இல்லை. ஏதோ ஒரு இடம் கிடைத்தால் போதும். சொந்த இடம், வாடகை அல்லது ஒத்திக்கு எடுத்து எவர் வேண்டுமானாலும் இந்த தொழிலில் இறங்கலாம் என்ற சூழ்நிலை.
செவ்வக வடிவில் ஒரு இரும்புத் தொட்டி. 70 லிட்டரில் தொடங்கி 700 லிட்டர் முதல் அதிகபட்ச கொள்ளவு வரைக்கும் கிலோ பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு தொட்டியின் மேல் கம்பி உருளைகள். இதனை இயக்க மின்சார மோட்டார் மற்ற உபகரணங்கள். கம்பி உருளையில் கொண்டு வரப்படும் துணிகள் ஏற்றப்பட்டு, சுழன்று அது தண்ணீரில் மூழ்கி ஒவ்வொரு சுற்றாக சுற்றி வந்து கொண்டிருக்கும்.
தண்ணீரில் நன்றாக மூழ்கி வந்து கொண்டிருக்கும் துணி தன்னுடன் வைத்திருக்கும் பஞ்சு போன்ற தேவையில்லாத சமாச்சாரங்களை உதறித்தள்ளும். நனைந்த துணியில் பிற்பாடு ஊற்றப்படும் வெட்டிங் ஆயில் தான் சாயம் கலப்பதற்கு முன் செய்யப்படும் சடங்கு மந்திரம் போன்றது.
ஆனால் இந்த தொழிலுக்கு முக்கியத் தேவை தண்ணீர் வசதி. சிலருக்கு இயல்பாக நிறுவனங்களுக்குள் ஆழ் குழாய் வசதிகள் இருக்கும். வசதி இல்லாதவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் நீருக்கு பக்கத்து ஊரில் உள்ள விவசாய கிணற்றில் இருந்தது டேங்கர் லாரி கொண்டு வந்து சேர்க்கும். தொடக்கத்தில் வயல் விவசாயத்தை விட இந்த தண்ணீர் விற்று பணக்காரர் ஆனவர்கள் பலபேர்கள்.
ஆனால் இப்போது எல் அண்டு டி நிறுவனம் உள்ளே வந்து இதற்கென்று ஒப்பந்தம் எடுத்து மிகப் பெரிய தொழிலாக செய்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு லிட்டர் ரெண்டு பைசா என்று விற்றுக் கொண்டுருந்தவர்கள் இப்போது ஆறு பைசா வரைக்கும் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள். இவர்கள் போட்டுள்ள ஆழ் குழாய் கிணறு என்பது பூமியில் உள்ள நெபுலா தீக்கோளம் வரைக்கும் ஊடுருவிச் செல்லும் சக்தி வாய்ந்தது. பவானி ஆற்றை நம்பி விவசாயம் செய்தவர்கள் பாவமாகிப் போனார்கள்.
சாய்பபட்டறைகளுக்குள் பெரிய மூதலீடுகளை போட்டு வராக்கடன்களை வசூலித்து தம் கட்ட வசதியிருந்தால் வாய்ப்புகள் தேடி வரும். இதுவே இந்த தொழில் தொடங்க போதுமானது. முதலாளிகள் முதல் தொழிலாளிகள் வரைக்கும் தங்களுக்குள் இருக்கும் அனுபவம் மட்டுமே மிகப் பெரிய முதலீடு என்று நம்பி ஜெயித்தவர்கள். அதை வைத்துக் கொண்டு தான் சாதித்து மேலேறினார்கள்.
இந்த சாயப்பட்டறை மற்றும் சலவைப்பட்டறைகளில் பணிபுரியும் 90 சதவிகித தொழிலாளிகள் தஞ்சாவூர்,திருவண்ணாமலை,இராமநாதபுரம், மதுரை, சிவகெங்கை, கம்பம்,தேனி,போடி,சுற்றுவட்டார பகுதியில் இருந்த வந்த 16 முதல் 40 வயது வரைக்கும் உள்ள நல்ல உடல்வலிமை உடைய இளைஞர்கள்..படிப்பை பாதியில் விட்டு ஓடி வந்தவர்கள் முதல் வாழ்க்கையை வாழ்ந்தாகி விட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் வரைக்கும். மிகப் பெரிய ஆச்சரியம் கடைசி வரைக்கும் உடல் உழைப்பாளியாகவே இருந்து விடுவது தான். விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில்தான் சிலர் மேலேறி வருகிறார்கள். .
சாயமேற்ற வேண்டிய 20 கிலோ நனைந்த துணியை தூக்குவதற்கு சாதாரணமானவர்களுக்கு தனிப் பயிற்சி வேண்டும். ஆனால் நம் மக்கள் அட்டாகாசமாக தூக்கிக் கொண்டு விஜயகாந்த் கதையை பேசிக் கொண்டு நகர்ந்து கொண்டிருப்பார்கள். பார்க்கும் நமக்கு மூச்சுப் பிடிப்பு வந்து விடும்.
முதலாளிகளும் பெரிய படிப்பு படித்தவர்களோ, கெமிக்கல் இன்ஜினியரிங் அறிவு பெற்றவர்களோ அல்ல. ஒன்று ஏதோ ஒரு இடத்தில் பணிபுரிந்து இருப்பார்கள். அல்லது பார்த்துக் கொண்டு வந்து ஆசையில் தொடங்கியிருப்பார்கள். தொடக்கத்தில் உள்ளே வராத நவீனங்கள் குறித்து எவருக்கும் அக்கறையில்லை. அவரவருக்குண்டான அயராத உழைப்பே அத்தனையும் வெற்றியாக்கியது.
ஒவ்வொரு முதலாளிகளும் பெற்ற வெற்றிகள் அவர்களை பணக்காரர் வரிசையில் கொண்டு போய் நிறுத்தியது. கல்லு பூமியெல்லாம் இவர்கள் கடைக்கண் பட்டு காசு கொழித்த பூமியாக மாறியது. ஆனால் விவசாய பூமிகளை மட்டுமே நம்பி வாழ்ந்த சமூகத்தின் முகவரியே இன்று மொத்தமாய் மாறி அலற வைத்து விட்டது.
ஒரு கிலோ துணியை விரும்பும் நிறத்திற்கு கொண்டு வரவேண்டுமென்றால் எட்டு முதல் பத்து லிட்டர் தண்ணீர் வேண்டும். ஒரு கிலோ என்பது மூன்று அல்லது நான்கு ஆடைகளை உருவாக்க உதவும். துணிகள் நிறமான பிறகு வெளியேற்றப்படும் அந்த நீர் என்பது மற்றொரு போபால் விஷ வாயுவுக்கு சமமானது. உப்பும், அமிலமும், காரத் தன்மையும் கலந்து சகிக்க முடியாத நாற்றத்துடன் பூமியில் கலக்க வைத்து விடுவார்கள்.
துணிகள் மற்றும் ஆடைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டுக்கு அந்நிய செலவாணியைத் ஈட்டித் தந்தாலும் இதற்குப் பின்னால் உழைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு சுவாச கோளாறு முதல் நரம்பு பிரச்சனைகள் வரைக்கும் உருவாக்கும். இன்று வந்துள்ள நவீனங்கள் முடிந்தவரைக்கும் கட்டுப்படுத்தியுள்ளது. சாயப்பட்டறை, சலவைப்பட்டறைக்கு தேவைப்படும் கொதிநீருக்கு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய காடுகளில் இருந்து விறகு வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறது. டீஸல் போட்டு நீரை கொதிக்க வைக்க முடியாதவர்கள் அத்தனை பேர்களுக்கும் விறகு தான் வரப்பிரசாதம். சில நிறுவனங்கள் பயன்படுத்தும் இது போன்ற கொதிகலன்கள் நீர்மூழ்கி கப்பலில் பயன்படுத்தப்படும் உயர் அதிக அழுத்தம் உடையது. ஏதோ ஒரு தவறு நிகழ்ந்து வெடித்து சிதறினால் சுற்றிலும் உள்ள இடங்களை சர்வநாசமாக்கி விடும்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே பணியில் இருந்த நீதியரசர் கற்பக வினாயகம் பார்வை பட்டபிறகு தான் இங்குள்ள சாயப்பட்டறை முதலாளிகளுக்கு ஜுரம் வரத் தொடங்கியது. இது திருப்பூர் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. கரூர், ஈரோடு வரைக்கும் பரந்து பட்டு இடையில் இருக்கும் அத்தனை விளைநிலங்களையும் பாழாக்கிய பெருமை இந்த சாயம் போன முதலாளிக்கேச் சேரும். தும்பை விட்டு வாலை பிடித்துக் கொண்டு ஓடி இன்று இங்குள்ள பல நிறுவனங்களுக்கு வாழ்வாதார பிரச்சனையாகி விட்டது.
சாயப்பட்டறை முதலாளிகளின் கூட்டங்கள். ஏற்றுமதியாளர்களின் சங்கங்கள், எதிர்ப்பு காட்டிக் கொண்டிருக்கும் விவசாயிகள் என்று மும்முனை போராட்டமாக முடிவே தெரியாமல் இன்று வரை போய்க் கொண்டே இருக்கிறது. விவசாயிகளின் எதிர்பபால் நீதிமன்றம் வரைக்கும் சென்று கடைசியில் டெல்லி உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்ற போதிலும் எந்த மாற்றமும் இல்லை. சவ்வு போல் இழுவையாக முதலாளிகளும் விவசாயிகளும் இரண்டு பக்கம் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். முதலாளிகளுக்கு அரசாங்க மானியம் வேண்டும். விவசாயிகளுக்கு சாயத்தண்ணீர் பூமியில் கலக்க விடக்கூடாது. அரசியல் வியாதிகளுக்கு ஓட்டுக் கணக்கு வேண்டும்.
திருப்பூர் ஆடை உற்பத்தியில் வௌ்ளை ஆடைகளை விட வண்ண ஆடைகளுக்குத் தான் அதிக கிராக்கி. நிறங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இங்குள்ளவர்களின் வாழ்வாதரம் வகை தொகையில்லாமல் அழிந்து கொண்டிருக்கிறது. காரணம் விரும்பும் ஒவ்வொரு நிறத்திற்கும் பயன்படுத்தும் சாயத்தின் அடர்த்தி பொறுத்து வெளியாகும் கழிவு நீரில் நச்சுத்தன்மை அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.
வைரமுத்து சொன்ன எட்டில் பிரித்த வாழ்க்கை போல் துணிகளை சாயமேற்ற எட்டு விதமாக அலசி துவைக்க இறுதியில் விரும்பும் நிறத்தில் வந்து விடுகின்றது.
துணிகளை சாயமேற்ற இரண்டு வகையான உத்திகள் உண்டு.
அதிக நவீனம் இல்லாத வின்ஞ் என்பது ஒரு இயல்பான முறை. சற்று மேம்பட்ட நவீன வசதிகள் என்பது சாப்ட் புளோ, தொட்டிக்குள் திணிக்கப்பட்ட துணிகள் தண்ணீருடன் கலந்து உள்ளே வெளியே என்று குதியாட்டம் போடும். தற்போது வந்துள்ள நவீன உபகரணங்கள் என்பது கணினி வழியே கட்டுப்படுத்தி கனகச்சிதமாக குறிப்பிட்ட நேரத்திற்குள் வண்ணத் துணியாக மாற்றிவிட முடியும்.
தொட்டியில் நீர் நிரப்பி துணியை நனைக்க வெட்டிங் ஆயில் என்ற வஸ்துவை ஊற்றி தண்ணீர் துணிகளில் நன்றாக ஊடுருவ வைக்கிறார்கள். பிறகு தான் வேதியல் சமாச்சரங்களை அளவோடு கலந்து விடுகிறார்கள். ஒவ்வொரு சாயமாக சேர்த்துக்கொண்டே வரவேண்டும்.
துணியை இளக்க, இளக்கிய துணியை சாயத்தோடு ஒட்ட வைக்க, ஒட்ட வைத்த சாயத்தை உறுதியாக்க, உறுதியான சாயத்துணியை தரமாக்க, வண்ணத்துணியை அதன் தராதரம் பார்க்க இறுதியில் சிறிய அளவிலான துண்டு வெட்டி சரி பார்த்துக் கொள்கிறார்கள். சேர்த்த கலவை சரியில்லை என்றாலோ சேராத சாயங்கள் சிரித்தாலோ எட்டு அலசலுக்குப் பிறகு மேற்கொண்டு இரண்டு அலசலில் அந்த துணி வண்ணமாய் ஈரத்தோடு சிரிக்கும்.
ஓவ்வாரு அலசலுக்கும் பிறகு அந்த தண்ணீர் தேவையில்லாமல் வெளியேற்றப்படுகின்றது. மீண்டும் புதிய தண்ணீர். ஒவ்வொரு முறை வெளியேறும் தண்ணீரும் சோடாவாக, ஆசிட்டாக, அடர்வேதியல் சாயமாக, குழாய் மூலமாக வெளியேற்றப்படுகின்றது. குழாய்கள் வழியே செல்லும் இந்த சாயத்தண்ணீர் அருகே உள்ள சாக்கடை வழியே சென்று இறுதியில் நொய்யல் ஆற்றில் கலந்து கரூர் வரைக்கும் சென்றடைகின்றது. ஈரோடு என்றால் பவானி தாண்டி பயணிக்கும்..
பணம் படைத்தவர்களின் மனத்தை போலவே திருப்பூர் பூமியும் கல் பாறையால் ஆனது. சில இடங்களில் நூறு அடிகளில் ஆழ் குழாய் இறங்கும். ஆனால் இறக்க உதவும் எந்திரங்கள் கண்ணீர் விடாமலே கதறும். இத்தனை இறுக்கமான பூமியில் மிச்சமான பாறைக்குழி என்ற வட்ட வடிவ குளம் போன்ற குட்டைகள் இங்கு ஒவ்வொரு இடங்களிலும் அதிகம் உண்டு,
இந்த இடம் தான் இன்று வரையிலும் பல சாய நிறுவனங்களுக்கு பொக்கிஷம். கழிவு நீர் வெளியேற்ற எந்த வசதியும் செய்யாமல் இருக்கும் முதலாளிகள் நடு இரவில் டேங்கர் வண்டியில் சாயத் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி விட்டு காணாமல் போய் விடுவார்கள். அருகே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் விழித்து பார்ப்பதற்குள் அந்த குட்டை நீரில் வாழ்ந்த உயிர்கள் செத்து மிதந்து கொண்டிருக்கும்.
ஒரத்துப்பாளையம் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்
அரசாங்கத்தின் சட்டதிட்டங்களும், எதிர்ப்பு காட்டிய விவசாயிகளும் ஒன்று சேர்ந்து இன்று பொது சுத்திகரிப்பு நிலையம், தனியாருக்குச் சொந்தமாக சுத்திகரிப்பு நிலையம் என்று பல வசதிகள் வந்து உள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளிலும் இருக்கும் சாயப்பட்டறைகள் தாங்கள் வெளியேற்றும் இந்த கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்ப வேண்டும். சுத்திகரித்த பிறகு உப்பில்லாத சாயமில்லாத தண்ணீராக பயன்படுத்த முடியும். ஆனால் செலவு பிடிக்கும் சமாச்சாரம். பின்பற்ற விரும்பாமல் கொள்ளை லாபம் வேண்டி இன்று வரைக்கும் பலரும் நடு இரவு சேவை செய்து கொண்டுருக்கிறார்கள். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு மாதமானால் மாமூல். சென்னையில் இருப்பவர்களுக்கு தேவைப்படுவது மாதாந்திர அறிக்கை.
இதிலும் சிறப்பான பல நிறுவனங்களும் உண்டு. பிரச்சனை வராத காலத்திற்கு முன்பே இதை சமூகப் பிரச்சனையாக பார்த்து ஜீரோ டிஸ்சார்ஜ் என்று சாயத் தண்ணீரை சுத்திகரித்து வெளியே அனுப்பத் தொடங்க இன்று அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட அந்த சாய நீரை இன்று தென்னைகளுக்கு பாய்ச்சும் அளவுக்கு கொண்டு வந்து உள்ளனர்.
ஒரு நாளைக்கு திருப்பூரில் இருந்து வெளியாகும் சாயக்கழிவு நீர் தோராயமாக பத்தாயிரம் கோடி லிட்டர். 1400 நிறுவனங்கள் சுறுசுறுப்பாக சாயமேற்றி சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். நல்ல அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் ராக்கோழி போல திடீர் வருகை தந்து இன்று 700க்கும் குறைவான நிறுவனங்களே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிலர் செலவு செய்ய முடியாமல் இழுத்து மூடி விட்டு சென்று விட்டனர். பலர் அதிகாரிகள் எப்போது எந்த பாதையில் வருவார்கள் என்று ஆட்கள் வைத்து தடம் கண்டு கொண்டு இருக்கின்றனர்.
கற்பனையில் கொண்டு வாருங்கள். உங்கள் ஊரின் குளத்தை, ஆறு, ஏரிகளின் நீள அகலங்களை அதன் கொள்ளவுகளையும். அத்தனை வளமும் ஒரே நாளில் உள்ளே வந்து விழுகின்ற இந்த சாய வேதியல் சமாச்சாரங்கள் சாவைத்தரும் என்றால் சம்மதமா ? இந்த சாய நீர் பயணித்து வரும் பாதை மட்டுமல்லாமல் பயணிக்காத பாதையிலும் இதன் கெமிஸ்ட்ரி உருவாக்கும் கழிவுகள் அத்தனையும் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் விட்டுச்செல்லும் வினைகள்?
அகமதாபாத்தில் குடிசை தொழிலாக தொடங்கிய சாயங்கள் தரம் வாரியாக தகுதியான நிறுவனங்களால் முத்திரை குத்தப்பட்டு உள்ளே வந்து கொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் தேவைகளும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதுவே இன்று குறிப்பிட்ட சாயங்கள் தான் உபயோகிக்க வேண்டும் என்ற பன்னாட்டு சட்டதிட்டங்களால் ஸ்விஸ் முதல் ஜெர்மனி வரை அத்தனை நாடுகளிலும் இருந்து சாயங்கள் இறக்குமதியாகிக் கொண்டுருக்கிறது.
எத்தனை முறை சிவகாசி வெடி விபத்து நம்மை விசும்ப வைத்ததாலும் பல லட்சம் மக்களின் வயிற்றுப்பிரச்சனையாக இருப்பதால் நாங்கள் பேயோடு வாழ்ந்தாலும் பராவாயில்லை ஏதோ பசியில்லாமல் வாழ முடிகின்றது என்ற சமூக அமைப்பால் தான் அத்தனை சட்டங்களும் அமைதி காக்கின்றது.
திருப்பூருக்கு என்று ஒரு ராசி. எல்லா ஊர்களிலும் மழை வராதா என்ற ஏக்கம் தான் அதிகம் இருக்கும். ஆனால் இங்கோ வந்த மழை எப்போது நிற்கும் என்று ஏக்கமாய் இருக்கும். காரணம் சாயமேற்றப்பட்ட ஆடைகளுக்கு வெயில் இருந்தால் தான் சிறப்பு. மழை தொடர்ந்து கொண்டே இருந்தால் ஈரமாக இருக்கும் ஆடைகளை உலர வைக்க காசு செலவழிக்க வேண்டும்.
மழை தொடர பல ஏற்றுமதி நிறுவனங்களின் வங்கிக் கணக்கும் ஒழுகத்தொடங்கி பல சமயம் தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடும், மழை நிற்கும் போது திருப்பூரைச் சுற்றியுள்ள அத்தனை வயல்பிரதேச தண்ணீரும் ஒன்றாக ஓடி வந்து கால்வாயில் கலக்கும் போது நமக்கு அந்த கலங்கிய சாயத் தண்ணீர் பலவற்றையும் புரிய வைக்கும். சென்னையைப் போலவே திருப்பூரையும் மழை வந்து தான் ஒவ்வொரு முறையும் சுகாதாரப்படுத்தி விட்டுச் செல்கின்றது.
மொத்த நிறுவனங்களின் சாயக் கழிவுக்ளும் கடைசியில் சென்றடையும் இடம் ஓரத்துப் பாளையம் அணை தொடங்கி விட்ட குறை தொட்ட குறையாக குளித்தலை வரைக்கும் சென்று விடும் போலிருக்கிறது.பல நாட்கள் காத்து இருந்து மழை பெய்ய, வந்து சேரும் நீருடன் சாயக் கழிவு நீரும் ஒன்றாக சேர்ந்து விட அத்தனையும் பாழாகிப் போய்விடுகின்றது..
சாயப்பட்டறை கழிவுநீரால் நிரம்பி வழியும் ஒரத்துப்பாளையம் அணை
ஓரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் 20 அடி உயர்வு,சாயக்கழிவு கலந்த நீரால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.
செய்தித்தாளில் படிக்கும் போது பலருக்கும் இதன் விபரீதம் புரிவதில்லை. நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக வருகின்ற தண்ணீரை தேக்கிவைக்க அனுமதியில்லை. தண்ணீரை நம்பி வாழும் மனிதர்களும், கால்நடைகளும், விவசாய நிலங்களின் தற்போதைய நிலையை விரைவில் நாம் ஆவண படமாக பார்க்க வாய்ப்புள்ளது.
காரணம் மழை நீரை தேக்கி வைத்தாலும் கலந்து வருகின்ற சாய நீரால் உள்ளே வாழ்ந்து கொண்டுருக்கின்ற ஜீவன்கள் இறந்து உருவாக்கும் நாற்றத்தை பொறுத்துக் கொண்டு மக்களும் வாழப் பழகிவிட்டார்கள். அரசாங்கமும் அமைதியாய் இருக்கிறது..
பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபமே முதல் குறி. உள்ளுரில் இருக்கும் ஒவ்வொரு நிறுவனமும் வந்து இறங்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் விரும்பும்படி தனியாகவே குட்டி உற்பத்திக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதன் மூலம் அவர்கள் விரும்பும் உற்பத்தியையும் தரத்தையும் கொடுக்கின்றார்கள்
ஆனால் உள்ளுரில் இருக்கும் எந்த பெரிய நிறுவனங்களும் இந்த சாயக்கழிவால் அடுத்து வருகின்ற தலைமுறையே அழியப் போகும் அவலத்தை செய்து கொண்டுருக்கின்றோம் என்பதை உணர்வதே இல்லை. டாலர் சிட்டியின் இலாபம் நீரின் சுத்தத்தை அழிக்கும் வில்லனாக உள்ளது. இங்கே ஒற்றுமையும் இல்லை. உரக்கச் சொல்ல தைரியமும் எவரிடமும் இல்லை,
“உத்தரப் பிரதேசத்தில் 4 குழந்தைகள் சாவு: பிரேத பரிசோதனையில் காரணம் தெரியவில்லை உத்தரப் பிரதேசத்தின் மோகன்லால்கஞ்சில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சனிக்கிழமை 4 குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. 9 மாதத்துக்கும் குறைவான
4 குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுத்த பிறகு உடலில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களது பெற்றோர்கள் மருத்துவமனைகளுக்கு தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை செல்வதற்குள் குழந்தைகள் இறந்துவிட்டன. தட்டம்மை மருந்து கொடுத்த பின்னர் குழந்தைகள் இறந்ததால் தங்களது குழந்தைகளுக்கு கெட்டுப்போன மருந்தை கொடுத்ததாகவும், அந்த மருந்தே தங்களது குழந்தைகளின் உயிரை பறித்துவிட்டதாகவும் அக்குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.” – தினமணி செய்தி
நோய்நொடி இல்லாமல் தடுத்து ஆரோக்கியமான வாழ்வை தமது குழந்தைகளுக்கு தருவதற்கு தடுப்பூசி போட நினைத்ததுதான் பெற்றோரின் தவறா? தடுப்பூசி போடுமுன்னர் தான் இவ்வாறு நிகழுமென்று அவர்கள் எதிர்பார்த்திருக்கத்தான் வேண்டுமா? தடுப்பூசி போட்டதற்காக நான்கு குழந்தைகள் இறந்து போனார்கள் என்ற சம்பவம் அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ நடக்க முடியுமா?
அல்லது இந்தியக் குழந்தைகள் தான் பரிசோதனை எலிகளா? வல்லரசு நாட்டுக் குழந்தைகளின் நலனுக்காக மூன்றாம் உலக நாடுகள்தான் பரிசோதனைக்கூடங்களா?
________________________________________________________________________________
ஈராக்கிலிருந்து வாபஸ்! அமெரிக்காவின் அடுத்த ஆக்கிரமிப்பு எது?
ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் 50 ஆயிரத்திற்க்கும் குறைவான எண்ணிக்கையில் குறைக்கப்பட்டிருக்கிறது. அதிபர் ஒபாமா ஏற்கனவே அறிவித்தது போல் ஆகஸ்ட் – 31க்குள் பெரும்பாலான அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படும் என சொல்கிறார்கள். ஆனால் இதிலிருந்து ஈராக்குடனான ராஜ்ஜிய உறவுகளில் எந்த பாதிப்பும் வாரது என துணை அதிபர் கூறியிருக்கிறார்.
ஈராக்கில் நினைத்தது போல நாட்டையும் மக்களையும் அடக்குவதற்கு அமெரிக்காவால் முடியவில்லை. புதைகுழிக்குள் புதைந்து கொண்டே போனதன் விளைவுதான் இந்த படை திருப்பம். நினைத்தது போல அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களால் போதுமான அளவில் ஈராக்கின் எண்ணெயை குடிக்க முடியவில்லை. படை இருக்கும் செலவுக்கு ஏற்ற ரிடர்ன்ஸ் கிடைக்க வில்லை. அதே சமயம் அரசியல் ரீதியாக ஈராக் என்பது அமெரிக்காவின் காலனி நாடாக மாற்றப்பட்டது. வளைகுடாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற அமெரிக்க நிலையிலிருந்து எள்ளளவும் மாற்றம் இல்லை.
ஈராக்கிலிருந்து வாபஸ் என்றாலும் அமெரிக்க படைகள் அடுத்து ஆக்கிரமிக்கப் போகும் நாடு எது? ஈரானா, வடகொரியாவா?
________________________________________________________________________________________
“கேப்டனிடம் கருப்புப் பணம்!” கலைஞரிடம் இருப்பது வெள்ளையா?
அ.தி.மு.க மற்றும் தி.மு.க இரண்டும் ஊழல் கட்சிகள் என்று விஜயகாந்த் சொன்னது கலைஞருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் தாங்கள் ஊழல் செய்யவில்லை என்று கூறவில்லை. நீ மட்டும் யோக்கியமா என்று விஜயகாந்த் கருப்பு பணமாக வருவாயை பெருக்கியிருப்பதை கேட்கிறார். அடுத்து சினிமா படங்களுக்கு வசனம் எழுதி வந்த பணத்தையும், கோபாலபுரம் வீட்டையும் மக்களுக்கு வழங்கியதை ஒரு பண்ணையாருக்குரிய பெருமையோடு பட்டியலிடுகிறார்.
வசனம் எழுதுவதற்கு இந்தியாவிலேயே அதிக வருமானம் பெறுபவர் நம்ம கலைஞர்தான். இருந்தாலும் வசனம் எழுதுவதை விட தமிழின் எல்லா படங்களும் கலைஞர் குடும்ப வாரிசுகளால்தான் ரிலீஸ் செய்யப்படுகிறது. வசனத்திற்கே இவ்வளவு வருமானமென்றால் படத்தயாரிப்பு, வினியோகத்தில் எவ்வளவு இலாபம் கிடைக்கும்? அதெல்லாம் வெள்ளையா, கருப்பா, சிவப்பா யாருக்கும் தெரியாது. மேலும் தான் சில்லறைகளை வீசி தானம் செய்ததை பட்டியிலிடும் கருணாநிதி தனது குடும்ப வாரிசுகளின் மொத்த சொத்து, வருமானங்களை ஏன் பட்டியலிடவில்லை?
கேப்டன் கருப்பில் வாங்கியது உண்மைதான், மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இதை சொன்னவரின் உள்ளம் மட்டுமல்ல வெளியேயும் இருப்பது கருப்புதான்.
_____________________________________________________________
மக்கள் தாலியறுத்தா புதிய விமான நிலையம்?
ஸ்ரீபெரும்புதூர் அருகே கிரீன் பீல்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கு 15க்கும் மேற்பட்ட கிராம மக்களின் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியிரிடம் மனு கொடுக்க வந்த மக்கள் மீது போலிஸ் தடியடி பிரயோகிக்கப்பட்டது. இதையெல்லாம் வளர்ச்சி திட்டங்களுக்கு காண்பிக்கப்படும் எதிர்ப்பு, இதனால் மக்களுக்குத்தான் இழப்பு என்று கருணாநிதி பேசுகிறார்.
ஏற்கனவே மீனம்பாக்கம் விமான நிலையம் இருக்கிறது. இது போக புதிய விமான நிலையத்தின் அவசியம் என்ன? அரசுப் பேருந்துகளிலும், இரயில்களிலும் மந்தை போல அடைத்துக் கொண்டு பயணம் செல்லும் மக்கள் வாழும் நாட்டில் இத்தகைய அழகுமிகு பச்சைப் பசுமையான விமானநிலையம் என்பது ஆபாசமில்லையா? பன்னாட்டு நிறுவன நிர்வாகிகளின் கண்களுக்கு குளிர்ச்சியாக விமானநிலையம் அமைப்பதைத்தான் அரசுகள் விரும்புகின்றன. அதற்கு தடையாக இருக்கும் கிராமங்களும், மக்களும் கேள்வி கேட்பாரின்றி தூக்கி எறியப்படுவர். ஆனாலும் இந்த ஆட்டம் இப்படியே நடக்க வேண்டும் என்பதில்லை. ஒரு காலம் வரும். இப்போது தூக்கி எறியப்படுபவர்கள் இந்த அரசுகளை தூக்கி எறிவார்கள்!
_________________________________________________________
ஊதிய உயர்வும், சுயமரியாதையும்!!
புதிய ஊதிய உயர்வின் படி படிகள் எல்லாம் சேர்த்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறும் ஊதியம் மொத்தம் 1.40 இலட்சம் ரூபாய்கள். இது கூட போதாது என்று பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் இரகளை செய்தார்கள். ஆவேசமாக கேள்வி எழுப்பினார்கள். சபையையே முடக்கினார்கள். அவர்களது ஊதிய உயர்வின் நியாயம் குறித்து பல வாதங்களை முன்வைத்தார்கள்.
மக்களுக்கு தொண்டாற்றுவதற்கு அதிக பணம் தேவை என்று யாரும் சொல்லவில்லை. அவர்களின் கவலை எல்லாம் அரசுத்துறை செயலர் 80,000 ரூபாய் சம்பளம் வாங்கும் போது தங்களுக்கு மட்டும் 50,000 ரூபாய்தானா என்றுதான் கொந்தளித்தார்கள். உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்தெல்லாம் அவர்கள் அவமரியாதையாக எண்ணவில்லை. ஆப்டரால் ஒரு செக்கரட்டரி சம்பளம் கூட எங்களுக்கு இல்லையா என்பதே அவர்களைப் பொறுத்தவரை இழிவாக கருதப்படுகிறது.
மற்றபடி பாராளுமன்றம் முன்னெப்போதை விடவும் அரட்டை அரங்கமாக மாறிவரும் நிலையில், கேள்வி கேட்பதற்கு கூட பணம் வாங்கிக் கொண்டு செயல்படும் நிலையில், நம்பிக்கை வாக்களிப்பிற்காக குதிரை பேரத்தில் ஈடுபடும் நிலையில் இவர்களைப் பற்றி மக்களுக்கு எந்த ஆர்வமோ, மரியாதையோ இல்லை. அதனால் ஊதிய உயர்வு என்பது விலைவாசி உயர்வினால் தத்தளிக்கும் பெரும்பான்மை மக்களிடம் மேலும் கெட்ட பெயரைத்தான் ஏற்படுத்தும். எனினும் அதைப்பற்றிக் கூட சுரணையற்ற இந்த ஜந்துக்கள் கவலைப்படப் போவதில்லை.
_______________________________________________________________________
ரக்ஷா பந்தன் – பார்ப்பனியத்தின் பெண்ணடிமைத்தனம்!!
ரக்ஷா பந்தன் விழா என்றால் சைட்டடிக்கும் இளைஞர்களை கலாய்ப்பதற்காக பெண்கள் கையில் கையிறு கட்டி அண்ணன்களாக்கி நோகடிப்பார்கள் என்ற அளவுதான் இங்கே அது புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாக்களிலும் அவ்வாறே காட்சிபடுத்தப்பட்டிருந்தது.
ஆனால் உண்மையில் ரக்ஷா பந்தன் விழா வடக்கில்தான் முதன்மையாக கொண்டாடப்படுகிறது. தெற்கில் இந்த விழாவை ஆர்.எஸ்.எஸ் பிரபலமாக்க முயற்சிக்கிறது. அப்படி இந்த கயிறு கட்டலின் வரலாறு என்ன?
பெண்கள் தங்கள் மானம், உயிர், கற்பு, உடமை அனைத்திற்கும் தனது சகோதரனே காப்பு என்று கயிறு கட்டுவதுதான் இதன் வரலாற்று வழக்கம். பெண்களையே சாதி, இன, மத கௌரவமாக ஆணாதிக்க சமூக அமைப்பு வைத்திருக்கிறது. குழுச் சண்டையில் கூட எதிர்க்குழுவின் பெண்ணை பாலியல் வன்முறை செய்வதே பெரிய நடவடிக்கையாக இருக்கிறது. அப்படி எல்லா கௌரவங்களையும் சுமந்து திரியும் பெண்களது கற்பை எப்பாடுபட்டாவது பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த விழாவின் நோக்கம்.
தனது கற்பையும், உயிரையும் தனது சகோதரனது பாதுகாப்பில்தான் ஒரு பெண் காப்பாற்ற முடியுமென்றால் அந்த சமூகம் எவ்வளவு பெரிய வன்முறை சமூகமாக இருக்க வேண்டும்? கூடவே ஆண்களின் கவுரவப் பாதுகாப்பில்தான் பெண்களின் உயிர் சிக்கியிருக்கிறது என்பது பச்சையான அடிமைத்தனமாக இருக்கிறது. பார்ப்பனியம் கற்றுத் தந்த எல்லா பண்டிகைகளையும் அதன் வரலாற்று பொருளோடு புரிந்து கொண்டால் அவற்றை புறக்கணிக்க வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்ளலாம்.
ஆந்திரத்துக்கு ரேஷன் அரிசி கடத்தலில் ஆறு பெண்கள் கைது : தினமணி செய்தி
இதை படிக்கும் நம் அனைவரின் மனதிலும் “என்ன தைரியம், இந்த காலத்துலே பொம்பளைங்களுக்கு” என்ற வரி நிச்சயம் ஓடியிருக்கும். “எல்லாம் அரிசி கிலோ 1 ரூபாய்க்கு கொடுக்கறதாலேதான்” என்றும் “ஒரு கிலோ ஒரு ரூபான்றதாலே மாசம் 30 கிலோ வாங்கி சந்தோஷமா மக்கள் வாங்கி சாப்பிடுறாங்க’ என்றும் கருத்துகள் வெளிப்படலாம்.
இது நிச்சயம் நமக்கு புதிதல்ல. அவ்வப்போது நாம் கேள்விப்படுவதுதான். ஆந்திரத்துக்கு கடத்தல், கேரளத்துக்கு கடத்தல் என்றும் மாவட்ட அளவிலான பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்படுவதும் புதிதல்லதான். இங்கு குறைந்த விலையில் வாங்கப்படும் அரிசி வெளியில் பாலீஷ் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதற்காகவே கடத்தப்படுகிறது. இதில், நிச்சயம் ரேஷன்கடை அதிகாரிகளும், ஊழியர்களுக்கும், வட்டார பெரும் புள்ளிகளுக்கும் பங்கு இருக்குமென்று நிச்சயம் ஆருடம் சொல்லலாம்தான்.
எதற்காக கடத்தவேண்டும்?
மலிவு விலை அரிசிக்கும் அதை வெளிமார்கெட்டில் விற்பதற்கும் தேவை இருக்கின்றது என்பது கடத்தலை விட கவலைப்படவேண்டிய விசயம். தமிழக மக்கள் மலிவு விலையில் வாங்கும் அரிசியை அண்டை மாநில மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். சந்தையில் பகிரங்க விலைக்கு வாங்கப்படும் அரிசியின் பின்னே பதுக்கலும், கடத்தலும் மாபெரும் தொழிலாக கோலேச்சுகிறது.
நமது பொருளாதார மேதை மன்மோகன்சிங், உள்துறையில் கோலோச்சும் சிதம்பரம், செங்கோல் வழுவாதபடி அரசாளும் சோனியா, விலையுயர்வால் சற்றும் பாதிப்படையாத தரகு முதலாளிகள், ‘மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்துள்ளது’ என்று மந்திர வார்த்தைகளை உதிர்க்கும் கும்பல் என்று இவர்கள் யாரும் ரேஷன் அரிசியை சாப்பிடுவதில்லை. விலைவாசி உயர்வால் பாதிப்படைவதுமில்லை. விலைவாசி உயர்வால் ஆதாயம் அடையும் பெருச்சாளிகளின் பிரதிநிதிகள்தானே, இவர்கள்?
தாரளமயமாக்கல், ஆன்லைன் வர்த்தகம், பொருட்கள் பதுக்கல், அசகாயமாக உயரும் அத்தியாவசிய பண்டங்களின் பகாசுர விலைகள், உயர்ந்து வரும் பணவீக்கம், இவற்றை விடவா அரிசிக் கடத்தல் முக்கிய விசயமாகப் போகிறது?
அரிசியைக் கடத்தும் நபர்களை கைது செய்து தண்டிக்க முடியும். ஆனால் நாட்டையும், மக்களையும் திருடி விற்பனை செய்யும் கயவர்களை யார் தண்டிப்பது?
_______________________________________________________________
கலைஞர் கம்பெனி பிரைவேட் லிமிடெட்!
//என் மகன், பேரன்கள் என்று வரிசையாக கலைத்துறையில் வருவதை ஏன் கேலி செய்கிறார்கள். எனக்கு வாரிசுகள் இருக்கக்கூடாதா? கபூர் குடும்பத்தில் அனைவரும் சினிமாவுக்கு வரலாம். ரஜினியின் மருமகன் தனூஷ், மகள்கள் சினிமா வாரிசுகளாக வரலாம். கருணாநிதியின் சந்ததி மட்டும் வரக்கூடாதா? நான் திராவிட இனத்துக்காக வாழ்கிறேன் என்பதாலேயே இந்த பாரபட்சம்.// என்று வரலாற்று சொற்பொழிவை கலைஞர் ஆற்றி உள்ளார் .
திராவிட இனத்துக்காக பாடுபடும் கலைஞர் பதிலுக்கு திராவிட இனத்திடமிருந்து ரிடர்ன்ஸ் எதிர்பார்ப்பது தவறில்லைதான். ஆனால் திரவிட இனத்துக்குரிய டி.வி, சினிமா அத்தனையிலும் அவரது வாரிசுகள் மட்டுமே கோலேச்சுவதற்கு அவர் என்ன செய்வார்? அவரது வாரிசுகள் அத்தகைய திறமையாளர்களாக சட்டபூர்வமாகவே வெற்றியை ஈட்டி ஏகபோகமாக வளர்ந்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு இந்த திறமை இல்லை என்றுதானே அர்த்தம்?
ஒரு வாரம் தீராத விளையாட்டு பிள்ளை வருகிறது என்றால் மறுவாரம் விண்ணை தாண்டி வருவாயா அப்புறம் வேட்டைக்காரன், சுறா, சுறா தூக்கினால் சிங்கம், சிங்கம் எடுத்தால் மதராசப்பட்டினம் , பையா இதை எடுத்தால் தில்லாலங்கடி அதற்க்கு அடுத்த வாரம் வம்சம் , இந்த வாரம் ” நான் மாகான் அல்ல” . இப்படி வாரா வாரம் எல்லாப் படங்களையும் கலைஞர் கம்பெனி ரிலீஸ் செய்கிறது. திரையுலகில் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களை அழித்து விட்டு ஏகபோக ஆட்சி நடத்தும் கலைஞர் கம்பெனியின் தலைமை பிதாமகர் கருணாநிதி அடுத்து வசனம் எழுதும் படம் “இளைஞன்”. கதையின் கருப்பொருள் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாம்.
தொழிலில் ஏகபோகம். கலையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு. நல்ல நியாயம்தான்.
_____________________________________________________________
ரெட்டிக்கு எடியூரப்பா, விவசாயிகளுக்கு கோயிந்தா!
மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகளுக்கு மாறாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காக கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியம் விவசாய நிலங்களை கையகப்படுத்தி உள்ளது.
அர்க்காவதி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள 2100 ஏக்கர் நிலத்தை மாநில அரசு கையகப்படுத்த உள்ளது. இந்நிலத்தில் பகுதியளவில் திராட்சை, வாழை, உருளைக்கிழங்கு பயிரிடலும், குவாரி தொழிலும் நடந்து வருகிறது. மே 28, 2008 ல் மைய அரசு தனது கெஜட்டில் மாநில அரசுகளுக்கு நிலம் கையகப்படுத்துவதில் தரிசு நிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்படி வழிகாட்டி உள்ளது. இதனை மீறிதான் நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தி உள்ளது. உள்நாட்டுக்கு தேவையான விவசாயமா வெளிநாடுகளுக்கு தேவையான சேவைத்துறையா என்ற கேள்வி வருகையில் விவசாயத்தை புறக்கணித்துதான் அரசு முடிவு எடுத்துள்ளது.
ஆனால் ரெட்டி சகோதரர்களின் குவாரிகளை கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் எடியூரப்பா அரசு மறுத்து வருகிறது. ரெட்டிகளுக்கு பேச எடியூரப்பா இருக்கிறார். கர்நாடக விவசாயிகளுக்காக பேச யாருமில்லை.
_______________________________________________________________
பிராண்டு மோகம்! பிராடு வேகம்!!
பாலாஜி (32), பெங்களூருவை சேர்ந்த பட்டதாரி இளைஞர் நேற்று மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். சென்னைக்கு வேலை தேடி வந்தவர், பயன்படுத்தப்பட்ட கார்களை மறுவிற்பனை செய்யும் தொழிலில் இறங்கினார். ஏற்கெனவே கார் உற்பத்தி அதிகமான நிலையில் பழைய கார் விற்பனை மந்தமானது.
புதிய மாடல் கார்களை குறைந்த விலையில் வாங்கித் தருவதாக ஒரு மோசடியை அரங்கேற்ற முனைந்தார். இதற்காக “நடிகைகள் அவ்வப்போது சந்தையில் வரும் கார்களை வாங்குவதற்காக சமீபத்தில் வாங்கிய கார்களை விற்று விடுவார்கள், அதைத்தான் உங்களுக்கு தருகிறேன்” என்று கூறி சிலரிடம் முன்பணமும் பெற்றுக் கொண்டார். இப்படி ஏமாந்தவர்களில் அவர் வாடகைக்கு இருந்த வீட்டின் உரிமையாளரும் ஒரு பொறியாளரும் அடக்கம்.
கிடைத்த பணத்தில் ஓட்டல்களிலும் சினிமாவிலும் நடனமாடிக் கொண்டிருந்த பாலாஜி சமீபத்தில் மதுரையில் ஒரு திரையரங்கில் தனது மோசடி வேலையை நடத்தியதில் கைது செய்யப்பட்டார். புதிய தொழில்நுட்ப வசதிகளை செய்து தருவதாக கூறி அங்கும் மோசடி செய்துள்ளார். பத்து லட்ச ரூபாய் அளவுக்கு இம்மோசடி நடந்துள்ளது.
ஏமாற்றியவன் செய்த தவறை நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். “குறைந்த விலைக்கு பிராண்டட் கார் கிடைக்குதுன்னு போனவங்க மேலதான் தப்பு” என்றார் அவர். எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. ஆடி தள்ளுபடிக்காக அவர் பிராண்டு ஷர்ட்டுக்காக அலைந்த கதை எனக்கல்லவா தெரியும்! ஒரு சட்டைக்கே இவ்வளவு பிராண்ட் மோகம் இருக்கும் போது கார்களுக்கும் அதை கைப்பற்ற துடிக்கும் கனவான்களுக்கும் எவ்வளவு இருக்கும்? ஆக மொத்தம் பாலாஜிகளுக்கு யோகம்தான்.
__________________________________________________________
பிளாக்பெர்ரி: திருடன் போலீஸ் விளையாட்டு!
பிளாக் பெர்ரி செல்பேசியின் சேவைகளை -சமிக்ஞைகளை கண்டு பிடிக்க முடியாது என்பதால் மத்திய அரசு அதை மாற்றுவதற்கு அந்த நிறுவனத்திடம் பேசி வருகிறது. இந்த சேவையை பயன்படுத்தி தீவிரவாதிகள் திட்டம் போட்டால் என்ன ஆகுமென்பது அரசின் கவலை. ஆனால் பிளாக்பெர்ரியின் தனிச்சிறப்பே அதன் பிரைவசியின் பாதுகாப்பில்தான் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. அந்த தனிச்சிறப்பே அரசுக்கு பிரச்சினையாக உள்ளது. இந்த உள்முரண்பாடை எப்படி புரிந்து கொள்வது?
புதிய செல்பேசி வாங்குபவர்களிடம் அடையாள அட்டை சரிபார்த்து விற்க வேண்டும் என்று அரசு கூறினாலும் இதையெல்லாம் வாடிக்கையாளர்கள் தொந்தரவாக கருதுவார்கள் என்பதால் விற்பனையாளர்கள் அலட்டிக்கொள்வதில்லை. அந்த கணக்கில் தீவிரவாதிகள், மிதவாதிகள் என்று எல்லோரும் நினைத்த போது வாங்கலாம். வாங்குபவரின் அடையாளத்தை விட விற்பனை முக்கியம் என்பதால் இந்த திருடன் போலிஸ் விளையாட்டு இப்போதைக்கு தீராது!
____________________________________________________________
சாராயக்கடை மூடப்பட்டது!
சென்னை சேத்துப்பட்டில் மக்கள் குடியிருப்பில் ஒரு டாஸ்மார்க் கடை முன்னர் தனியாருக்கு சொந்தமாக இருந்த காலத்திலிருந்து இயங்கி வருகிறது. இதை மூடுவதற்கு மனு கொடுத்து பலனில்லை என்பதால் ம.க.இ.க தோழர்கள் மக்களைத்திரட்டி பூட்டுபோடும் போரட்டத்தை நடத்தினர். ஆனால் இந்த சாராயக்கடையின் உரிமையை பாதுகாக்கும் பொருட்டு போலீஸ் தோழர்களை கைது செய்தது. இந்த போராட்டத்தோடு கூடவே நீதிமன்றத்திலும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உதவியோடு வழக்கு தொடரப்பட்டது. இறுதியில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் அந்த கடை மூடப்பட்டது. ஒரு சரக்குக் கடையை மூடுவதற்கே மக்கள் இவ்வளவு காலம் தொடர்ச்சியாக போராட வேண்டியிருக்கிறது. ஆனாலும் சேத்துப்பட்டு மக்கள் தோழர்களின் நீண்ட போராட்டத்தில் கடைசி வரை கைகோர்த்தார்கள். இந்த சாராயக்கடையை நடத்துவதற்கு பாதுகாப்பு அளிக்க முயன்ற லோக்கல் தாதாக்கள் இப்போது கையைப்பிசைகின்றனர். மக்கள் சக்தி சேர்ந்தால் தாதா, சரக்கு எல்லாவற்றையும் ஒரு கை பார்க்கலாம் போலும்!
________________________________________________________
கேப்டனின் ரேட்டு என்ன?
மதுராந்தகம் அருகே மாமண்டூரில் தன் பெயரில் ஒரு திருமண மண்டபத்தை விஜயகாந்த் திறந்திருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பேசும் போது தே.மு.தி.க ஊழல் இல்லாத கட்சிகளோடு கூட்டணி சேரும், தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி என்பது முடிவு செய்யப்படும், தே.மு.தி.க இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று கேப்டன் பிளந்து கட்டியிருக்கிறார்.
தன்கட்சியில் ஊழல் செய்யாதவன்தான் சேர முடியும் என்று அறிவித்தால் கேப்டன் கட்சியே கலைந்து விடும். தி.மு.க, அ.தி.மு.க என்று கொட்டை போட்ட பெருச்சாளிகள்தான் அங்கேயும் இருக்கின்றனர். இதுவரை செய்த செலவுக்கு கேப்டனும், அவர்களும் கணக்கு வைத்திருக்க கூடும். அதனால்தான் தங்கள் ரேட்டுக்கு கட்டுப்படியாகும் கூட்டணியை எதிர்பார்க்கிறார்கள். அதை ஓபனாக சொல்வதை விடுத்து இப்படி ஊழல், கீழல் என்ற சீனெல்லாம் கேப்டனது வீரத்துக்கு அழகாக இல்லையே?
______________________________________________________
தொடர்கிறது அமெரிக்கா திவால்!!
சென்ற வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் அமெரிக்காவில் எட்டு வங்கிகள் திவால் ஆகியுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 118 வங்கிகள் திவாலாகியிருக்கின்றன. இந்த வேகத்தைப் பார்த்தால் சென்ற ஆண்டு 140 வங்கிகள் திவாலாகியிருக்கும் ரிக்கார்டு முறியடிக்கப்படும் போலத் தெரிகிறது. பூலோக சொர்க்கத்தில் வேலை இழப்பு அதிகரித்து கடன் அடைபடும் வழி முடங்கி வங்கிகள் இப்படி ராக்கெட் வேகத்தில் திவாலாகி வருகின்றன. உலகத்துக்கே படியளந்த பெருமாள் இப்போது தனது உண்டக் கட்டிக்கே திண்டாடுகிறார்.
_______________________________________________
பத்தாண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் நடந்த ஒரு பாலியல் வன்முறை (கற்பழிப்பு) வழக்கில் நீதிமன்றம் குற்றவாளியை விடுதலை செய்தது. அந்தக் குற்றவாளி 45 வயதுடையவன், காரோட்டும் பயிற்சி அளிக்கும் போது ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவன். கீழ் நீதிமன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவன் மேல் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டான். காரணம் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்டட அந்தப் பெண் சம்பவம் நடக்கும் போது இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தாளாம். அதை அந்தப் பெண்ணின் அனுமதியில்லாமல் அகற்ற முடியாது என்பதால் நடந்தது கற்பழிப்பு இல்லை என விளக்கமளித்த நீதிமன்றம் மேலும் அந்தப் பெண்ணின் விருப்பத்தோடு நடந்த உறவு என்று அவனை விடுதலையும் செய்தது.
கார்டியன் செய்தித்தாளில் ஜூலி பின்டல் எழுதிய கட்டுரையை ஜூலை மாதம் இந்து பேப்பர் வெளியிட்டிருந்தது. ஆணாதிக்கத்தின் திமிரோடு படு பிற்போக்காக தீர்ப்பளித்திருக்கும் நீதிமன்றம் பத்தாண்டுகள் கழித்து இப்போது அந்த விளக்கத்தை வேறு ஒரு வழக்கில் திருத்திவிட்டதாம். தனது கூட்டாளியின் பதினாறு வயது மகளைக் கற்பழிக்க முயன்ற கயவன் மேற்கண்ட இறுக்கமான ஜீன்சு பேண்டு விளக்கத்தை வைத்து வாதிட்டபோது நீதிமன்றம் அதை ஏற்கவில்லையாம்.
இந்த சுயவிமரிசனத்தை எடுத்துக்கொள்வதற்கு பல போராட்டங்களும், பத்தாண்டு காலமும் ஆகியிருக்கிறது. பாலியல் வன்முறையின் பால் பல நீதிமன்றங்கள் உலகெங்கும் இப்படிப்பட்ட அணுகுமுறையைத்தான் கையாளுவதாக ஜூலி குறிப்பிடுகிறார். அதாவது ஒரு பெண் என்ன உடை அணிந்திருக்கிறாள், எப்படி நடந்துகொள்கிறாள் என்பதெல்லாம் கற்பழிப்பு வழக்குகளில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால் பல குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகள் வழியாக தப்பித்துக் கொள்கின்றனர். உலகெங்கும் பாலியல் வன்முறைகளுக்காக தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் விகிதம் குறைவாகத்தான் உள்ளது.
தன்னை வல்லுறவுக்குள்ளாக்கிய அயோக்கியனை ஒரு பெண் பொது அரங்கில் தண்டிக்க நினைப்பதே அரிது. இந்தியா போன்ற நாடுகளில் அது இன்னமும் கடினமான ஒன்று. கற்பு, புனிதம் என்ற சங்கிலியில் பூட்டப்பட்டிருக்கும் ஒரு பெண் தான் கற்பழிக்கப்பட்டவள் என்று நீதி கோரினாலே அவள் வாழ்க்கை அத்துடன் முடிந்தது. பார்ப்பனியத்தின் விழுமியங்களால் இயங்கிவரும் சமூகம் அவளை புனிதம் கெட்ட அபலையாகத்தான் பார்க்கிறது. தமிழ் சினிமாவில் கூட கற்பழித்தவனைக் காப்பாற்றுவதற்கு வழக்குரைஞர் பாதிக்கப்பட்ட பெண்ணிடன் அவன் எங்கே கை வைத்து என்ன செய்தான் என்று வாதிடும்போது, எதுவும் சொல்ல முடியாமல் அந்தப் பெண் அழுது அரற்றுவாள். நிழலில் மட்டுமல்ல நிஜத்திலும் இதுதான் யதார்த்தமாக உள்ளது. சிதம்பரம் பத்மினி போன்ற வீரப் பெண்கள்தான் இந்தப் போராட்டத்தை எதிர் கொண்டு நீதியை நிலைநாட்டியிருக்கின்றனர். இவையெல்லாம் விதிவிலக்குகள்தான் என்ற போதும் சட்டமும், நீதிமன்றங்களும்கூட இதற்குத் தோதாகத்தான் இயங்குகின்றன என்பது முக்கியம்.
நீதிமன்றங்கள் மட்டுமல்ல கற்பழிப்புக்கு ஓரளவு பெண்களும் காரணமாக இருக்கின்றனர் என்பது உலகத்தின் பொதுப்புத்தியாக இருக்கிறது என்கிறார் ஜூலி. அம்னஸ்டி அமைப்பு சென்ற வருடம் உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் பதிலளித்த கால்பங்கினர் கற்பழிப்புக்கு பகுதியளவோ, முழுமையாகவோ பெண்களும் செக்சியான உடை அணிவதின் மூலம் காரணமாக இருக்கின்றனர் என்று தெரிவித்தனராம். இதையே அயர்லாந்தில் நடந்த ஆய்விலும் நாற்பது சதவீதம் பேர் வழிமொழிந்திருக்கின்றனர்.
ஆண்களின் கற்பழிப்பு நடவடிக்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் இந்தக் கருத்துக்கள் இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளுக்கு மட்டுமல்ல முன்னேறிய நாடுளுக்கும் சொந்தமாக இருக்கிறது. ஒரு பெண் உடை அணிவதன் மூலம் ஒரு ஆணை கற்பழிப்பு நடவடிக்கைக்கு ஈர்க்கிறாள் என்ற வாதம் உண்மையில் பெண்ணைத்தான் குற்றவாளி ஆக்குகிறது. தப்பு செய்யும் ஆண்களெல்லாம் சூழ்நிலையின் கைதிகளாக கருதப்படுகிறார்கள். இதுதான் உலகத்தின் பொதுக்கருத்து என்றால் பெண்கள் சமூக வாழ்க்கையில் எத்தகைய அபாயத்துடன் வாழ வேண்டியிருக்கும்?
நைஜீரியாவில் ஒரு செனட்டர் ஒரு மசோதாவை முன்மொழிந்திருக்கிறாராம். அதன்படி ஒரு பெண் தனது அங்கங்கள் தெரியும் வண்ணம் உடையோ, குட்டைப் பாவாடையோ அணிந்து பொது இடத்தில் வலம் வந்தால் மூன்று மாதம் சிறை தண்டனையாம். இது அமலுக்கு வரும் பட்சத்தில் நைஜீரியாவின் சார்பில் ஒலிம்பிக் ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்ட வீராங்கனைகள் அனைவரும் குற்றவாளியாகி விடுவார்கள்! இதே போல போலந்திலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தெரு விபச்சாரத்தையும் கற்பழிப்புகளையும் குறைப்பதற்கு குட்டைப் பாவாடை அணிவதற்குத் தடை செய்யும் மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு திட்டமிட்டிருக்கிறாராம். வடக்கு மலேசியாவில் ஒரு பழமைவாத நகரக் கவுன்சில் குதிகால் செருப்புக்களையும், கண்ணைப் பறிக்கும் உதட்டுச் சாயங்களையும் தடை செய்வதன் மூலம் கற்பழிப்புக்களையும், முறையற்ற பாலியல் உறவுகளையும் குறைக்க திட்டமிட்டிருக்கிறதாம்.
இந்த விசயத்தில் இசுலாமியவாதிகளை யாரும் மிஞ்ச முடியாது. ஒரு தண்டியான சாக்குப்பையை உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு சுண்டுவிரலைக்கூட காட்டாமல் பெண்கள் நடமாடவேண்டும் என்பது அவர்கள் கருத்து. இதில் அனைவரும் தாலிபான்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் ஆண்களின் காமம் தலைவிரித்து ஆடுமாம். ஏன்தான் ஆண்களை அப்படி காமவெறி பிடித்தவர்களாக அல்லா படைத்தார் என்பது தெரியவில்லை.
இறுதியாக ஜூலி பின்டால் பெண்களைப் பற்றி புனையப்பட்டிருக்கும் இக்கருத்துக்களைச் சாடி ஒரு பெண் என்ன அணிவது என்பதை அவள் தீர்மானிக்கட்டும், அதை மற்றவர்கள் கட்டளையிடத் தேவையில்லை, ஒரு பெண் குடித்திருந்தாலும், குட்டைப் பாவாடை அணிந்திருந்தாலும் யாரும் அவளைக் கற்பழிக்க முடியாது, அப்படி நடந்து கொண்டால் அது குற்றமே, அதற்கு பெண்ணைக் காரணமாக சொல்வதை ஏற்கமுடியாது என்கிறார்.
உண்மைதான். ஒரு பெண் சாக்குத் துணியை மூடியிருந்தாலும், திறந்த மார்பகத்தோடு நடமாடினாலும் அவளைக் கற்பழிக்க முடிவெடுத்து விட்ட கயவர்களுக்கு உடை ஒன்றும் ஒரு பொருட்டல்ல. ஒரு பெண் தனியாக ஆள் நடமாற்ற பகுதியில் சிக்குவதுதான் அவர்களுக்குத் தேவையான ஒன்று. இதைக் கடுமையான சட்டத்தின் மூலமே தண்டிக்க முடியுமேயன்றி பெண்கள் ஆபாசமாக ஆடை அணிகிறார்கள் என்று சால்ஜாப்பு சொல்வது பெண்ணை அடிமையாகக் கருதும் வெளிப்படையான ஆணாதிக்கத் திமிராகும்.
ஆனால் ஜூலி பின்டாலின் கருத்தோடு கூடுதலாக நாம் சொல்வதற்கு சில விசயங்கள் இருக்கின்றன. ஒரு பெண் எந்த ஆடை உடுத்த வேண்டும் என்பது அவளது விருப்பம, சுதந்திரத்தைப் பொறுத்தது என்பதில் சிறிய சிக்கல் இருக்கிறது. இன்றைய பெண்களின் நடை, உடை, பாவனைகளை அவர்கள் தெரிவு செய்வதில்லை. மாறாக பன்னாட்டு அழகு சாதன நிறுவனங்கள்தான் அவற்றைப் பயன்படுத்துமாறு பெண்களை நிர்ப்பந்திக்கின்றன. இந்நிறுவனங்களின் நோக்கம் பெண்களின் சுதந்திரத்தைப் பெற்றுத் தருவது அல்ல. மாறாக ஆணின் போகப்பொருளாக பெண்ணுடல் மாற்றப்பட வேண்டும் என்பதுதான். ஏனெனில் ஆண்களைக் கவருதற்குத்தான் ஆயிரக் கணக்கில் பொருட்கள் பெண்களின் மேக்கப் உலகில் குவிக்கப்படுகின்றன.
இந்தியாவில் பூவும், பொட்டும், வளையலும் அணிந்து ஒரு பெண் செல்வதற்கு காரணமென்ன? கணவனைக் கவருவதற்குத்தான். ஆனால் ஆண்கள் யாரும் பெண்களைக் கவருவதற்கு மல்லிகையைச் சூடுவதில்லை. தெருவோரம் நிற்கும் விலைமாது கூட இந்த அலங்காரங்களோடுதான் தனது வாடிக்கையாளரைக் கவருகிறாள். இவையின்றி அவளால் தொழிலைச் செய்ய முடியாது.
ஆண்களின் இன்பத்திற்காகப் பெண்களைக் கடைச்சரக்காக்கும் இந்த மாயவலையில் இருந்து பெண்கள் விடுபடவேண்டும். அரை நிர்வாண உடையுடன் நடக்கும் பேஷன் ஷோக்கள் எல்லாம் பெண்களின் விடுதலைக்காகவா நடத்தப்படுகின்றன? எந்த அளவுக்கு ஆண்களைக் கவர முடியும் என்பதே அவற்றின் அழகியல் விதி. உள்ளாடைகளைக்கூட ஆண்களின் கவர்ச்சிக்காகத் தயாரிக்கிறார்களேயன்றி பெண்களுக்கு அவை சிறப்பாகப் பயன்படவேண்டும் என்பதற்கல்ல.
எல்லா விளம்பரங்களிலும், ஏன் ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களுக்குக் கூட பெண் மாடல்கள்தான் தேவைப்படுகிறார்கள். இப்படி எல்லா வழியிலும் அல்லும் பகலும் பெண்ணுடல் என்பது உலக முதலாளித்துவ நிறுவனங்களால் அன்றாடம் கற்பழிக்கப்படுகின்றன. அதனால்தான் சொல்கிறோம் ஒரு பெண் தனக்குரிய ஆடைகளை அணிவதற்கு சுதந்திரமில்லை. இதைப்பெறவேண்டுமானால் போகப்பொருளாகக் கருதி திணிக்கப்படும் இந்த அழகியல் பொருட்களை மறுக்க வேண்டும். இவற்றைத் துறப்பதில்தான் பெண்ணழகு உண்மையாக மலர முடியும். ஆண்களைக் கவரும் விசயத்திலிருந்து பெண்கள் விடுதலையாவதுதான் அவளின் சுதந்திரத்திற்கான முதல் நிபந்தனை.
சமத்துவமான பெண்ணுரிமை என்பது அப்படித்தான் மீட்கப்பட முடியும். அப்போதுதான் நீதிமன்ற உதவியோடு ஆணாதிக்கம் நடத்தும் பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் போராட முடியும். இது குறித்து பெண் வாசகர்கள், பெண் பதிவர்கள் என்ன நினைக்கிறார்கள்? அதனால் ஆண்கள் கருத்துச் சொல்லக்கூடாது என்பதல்ல. விவாதத்திற்காகக் காத்திருக்கிறோம்!
ஈழத்தின் உரிமைக் குரலுக்கு உரம் சேர்க்கும் வண்ணம் தமிழகத்தில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பு.மா.இ.மு , பெ.வி.மு ஆகிய அமைப்புகள் மாவட்ட தலைநகரங்களில் 21.8.2010 சனிக்கிழமை அன்று நடத்திய ஆர்ப்பாட்ட காட்சிகள்.
திருச்சி
சென்னை – குரோம்பேட்டை
கோவை
கிருஷ்ணகிரி
நாமக்கல்- பள்ளிபாளையம்
தஞ்சாவூர்
வேலூர்
லண்டன்
இதே நாளில் இலண்டனில் “புதிய திசைகள்” எனும் ஈழத்தமிழர் அமைப்பு சார்பாக பல பிரிவினரும் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது
இலங்கை அரசிற்கும் இந்திய அரசிற்கும் எதிரான முழக்கங்களுடன் லண்டனிலும் தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலை நரங்களிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. லண்டனின் சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தில் வேறுபட்ட அமைப்புக்கள் கலந்துகொண்டன. தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த லண்டன் வெஸ்ட்மினிஸ்டரில் நடைபெற்ற போராட்டத்தின் போது இலங்கை அரசின் இனவழிப்பைக் வெளிப்படுத்தும் துண்டுப்பிரசுரப் போராட்டம் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்டது. புதிய திசைகள் அமைப்பு மேற்கொண்ட இந்தப் போராட்டத்தின் இறுதியில் ஆங்கிலத்திலும் தமிழிலும் உரைகள் நிகழ்த்தப்பட்டன. தமிழ் நாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் துணை அமைப்புக்களும் போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன. கொட்டும் மழையில் நடைபெற்ற போராட்டங்களில் மக்கள் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டனர். வேலூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு பின்னதாக விடுதலை செய்யப்பட்டனர். போராடும் சக்திகளின் இணைவு நம்பிக்கை தருவதாக புதிய திசைகள் அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. போராட்டம் குறித்த ஏனைய ஒளிப்படங்கள் பின்னதாக இனியொருவிலும் ஏனைய ஊடகங்களிலும் பதிவுசெய்யப்படும்
“வேதாந்தா” முறைகேடு: கொள்ளை போகும் இந்திய வளங்கள் ?
பச்சை வேட்டை, காடுகள் வேட்டை, மாவோயிஸ்ட் வேட்டை என்ற பெயரில் ஒரிஸ்ஸா, சதீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து காடுகள் அழிக்கப்பட்டு அங்கு பல்லாண்டுகளாக வசித்து வரும் பழங்குடியினரை துரத்தி பாக்சைட், இரும்பு, அலுமினியம் போன்ற கனிம வளங்களை மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு இந்திய அரசு சட்ட விரோதமாக அனுமதித்து வருகிறது என தொடர்ந்து வினவு தளத்திலும், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற இதழ்களிலும் எழுதப்பட்டு வருவது இந்த தளத்தின் வாசகர்களுக்கு நன்கு தெரியும். இந்த மாநிலங்களிலெல்லாம் வேதாந்தா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை திரட்டி தன்னெழுச்சி போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கிறது.
சில ஆங்கில நாளிதழ்கள் வேதாந்தாவிற்கும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கும் உள்ள உறவுகளையும், மாவோயிஸ்ட் அழிப்பு என்ற பெயரில் மனித வேட்டை நடைபெற்றுவருவதையும் சுட்டிக் காண்பித்திருந்தன.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னதாக மத்திய திட்டக் குழுவின் உறுப்பினர் திரு என்.சி.சாக்சேனா என்பவர் தலைமையில் 4 நபர்கள் கொண்ட குழு ஒன்றினை மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகத்தினால் நியமிக்கப்பட்டு வேதாந்தாவின் சுரங்க திட்டங்களின் மீதான விசாரணை மேற்கொள்ள பணிக்கப்பட்டது.
17-08-2010 காலை ஆங்கில செய்தித்தாள்களில் “வேதாந்தா சுரங்க திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடு” திரு சாக்சேனா தலைமையிலான குழு அறிக்கை மூலம் தெரிய வந்தது என செய்தி. ஆனால் இந்த செய்தி எந்த தமிழ் செய்தியிலும் வெளிவரவில்லை. மாறாக முப்பதாயிரம் கோடி ஊழல் என சந்தி சிரித்துக் கொண்டிருக்கும் காமன் வெல்த் விளையாட்டு ஊழலுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பது போல் ஒரு புறம் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி சிரித்துக் கொண்டு மறுபுறம் இந்த விளையாட்டிற்கான கொள்கை பாடலை இசைக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாய்ப்பு என்ற அவர் பக்கத்தில் நின்று சிரித்துக் கொண்டு புகைப்படத்துடன் செய்தி, இங்கொன்றும் அங்கொன்றுமாக சில விபத்துச் செய்திகள், மனித உறவு முறைகேடுகளைச் சொல்லும் செய்திகள், வழக்கம் போல் உயர்நீதிமன்றம் 40 வருடமாக போராடிக் கொண்டிருந்த ஒரு பென்சன் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்த தீர்வு, இலவச தொலைக்காட்சி பெட்டிகள் தமிழக அரசு வழங்கியதில் தவறொன்றுமில்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பு, தஞ்சை ராஜராஜன் விழா ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு மற்றும் இன்னபிற சினிமா செய்திகளோடு அப்பாவி தமிழர்களின் வாழ்வு துவங்கியது.
வேதாந்தா சுற்றுப்புற சூழல் விதிகள், காடுகள் சட்டம் ஆகியவற்றை முற்றிலுமாக தனது சுரங்க திட்டத்தில் பின்பற்றவில்லை என்றும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக இரண்டு வகை பழங்குடியினரின் வாழ்வினை பாழடித்தது இந்த தேசத்தின் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை உடைத்தெறிவதாக அமைகிறது என நிபுணர் சாக்சேனா அறிக்கை கூறுகிறது. இது குறித்து செய்தியாளர்கள் மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகத்தின் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை கேட்ட போது 10 நிமிடங்களுக்கு முன்பாகத்தான் மேற்படி நிபுணர் குழு அறிக்கை எனக்கு வந்தது. இந்த நாட்டில் துரதிருஷ்டவசமாக ஒரு முறை உள்ளது. அதாவது ஏதேனும் ஒரு பெரிய தவறு கண்டுபிடிக்கப்பட்டால் அதிலிருந்து தப்புவதற்கு ஒரு ஜன்னல் “அபராதம் செலுத்து – செல்” என்கிற வகையில் திறந்திருக்கிறது என்றார். மேலும் தவறு நிரூபிக்கப்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார். இதோடு இந்த நாடகத்தின் காட்சிகள் முடிவுற்றுவிடும். மக்களும் நாளை காலை இதை மறந்திருப்பார்கள். இந்த நிபுணர் குழு விசாரணை, அவர்கள் சில தவறுகளை சுட்டிக்காட்டுவது என்பதெல்லாமே வேதாந்தா நிறுவனத்தின் மீது பெரிய அளவில் மக்கள் எழுச்சி வலுப்பெற்று விடக்கூடாது என்பதற்காக அரசே திட்டமிட்டு நடத்தும் நாடகமே.
இப்படி ஒரு புறம் செய்தியிருக்க அதே செய்தித்தாளில் கைரன் இந்திய என்கிற பெரிய பன்னாட்டு எண்ணை வள நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை 960 கோடி லாடருக்கு வாங்குவதாக வேதாந்தா நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்றொரு செய்தி. அதைப்பற்றி எழுதிய டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் மறைமுகமாக இப்படி நாட்டின் எண்ணை வளத்தின் பெரும் பகுதியை ஒரு பன்னாட்டு நிறுவனம் வாங்க அனுமதிப்பது என்பது இந்த நாட்டின் பாதுகாப்பிற்கே குந்தகம் விளைவிப்பதாக அமைந்துவிடும் என்கிறது.
ஆனால் இதைப்பற்றியோ அல்லது, சாக்சேனா குழு கூறியுள்ள குற்றச்சாட்டுக்களைப்பற்றியோ சிறிதளவும் கவலைப்படாமல் வேதாந்தா நிறுவனம் தனது பத்திரிகை செய்திக் குறிப்பில் நாங்களும் மற்றொரு பன்னாட்டு அமைப்பான சீசா கோவா என்ற நிறுவனமும் சேர்ந்து 665 கோடி டாலர் மதிப்பிற்கு கைரன் இந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டினை கைப்பற்றும் அளவிற்கு பங்குகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம் என தைரியமாக அறிக்கை விடுகிறது. இந்த வரத்தக பரிமாற்றமெல்லாம் இந்திய அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட வேண்டும். இருக்கவே இருக்கிறார்கள் உலக வங்கி நாயகர்கள் மன்மோகன் சிங், மான்டேக் சிங் அலுவாலியா, உள்துறை சிதம்பரம் போன்றவர்கள் என்கிற நம்பிக்கையில் இத்தகைய திமிரான அறிக்கையை வேதாந்தா வெளியிட்டிருக்கிறது.
சரி இந்த கைரன் இந்தியா என்ற நிறுவனம் யார் என பார்ப்போமானால்- அதுவும் இந்த நாட்டின் எண்ணை வளங்களை சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கிற பன்னாட்டு நிறுவனமே. இதன் தலைவர் சர் பில் கேம்மல் என்கிற அயல்நாட்டவர் என்பதோடு இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழுமத்தில் (போர்டு டைரக்டர்கள்) உள்ள பெரும்பான்மையினரும் அந்நிய நாட்டவரே.
இந்த நிறுவனத்திற்கும் மத்திய அரசிற்குமுள்ள உள்ள மகிழ்ச்சியான உறவுகளை மேற்கண்ட புகைப்படங்கள் பறைசாற்றும். ஓஎன்ஜிசி என்று சொல்லப்படும் மத்திய பொதுத்துறை நிறுவனமான எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு கழகம் இந்திய கடற்பகுதிகளில் 30 சதவீத எண்ணை பேசின்களையும் இந்த கைரன் இந்தியா என்கிற பன்னாட்டு நிறுவனம் 70 சதவீத எண்ணை பேசின்களையும் கைவசம் கொண்டிருக்கிறது என்றால் இதன் செல்வாக்கை புரிந்திருப்பீர்கள். குஜராத் கடற்பகுதியில் இந்த கைரன் இந்தியா 150 எண்ணை கிணறுகளையும், 3111 சதுர கிலோமீட்டர் அளவிலான எண்ணை பேசினையும் தன்னகத்தே கொண்டது.
அதே போல் மன்னார் வளைகுடா கடலில் சுமார் 1450 சதுர கி.மீ, பரப்பளவிலான எண்ணை பேசினை தன்வசம் கொள்ள ராஜபக்ஷேயுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
காடுகளை அழித்து இந்தியாவின் பாக்சைட், இரும்பு தாது, அலுமினியம் போன்ற கனிம வளங்களை கொள்ளை கொண்டுபோகிறது வேதாந்தா நிறுவனம் என்கிற விமர்சனங்கள் பலமாக எழுந்து அதில் தற்போது தற்காலிகமாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளதால், நாட்டின் கனிமவள சுரண்டலை தற்காலிகமாக நிறுத்திவைத்து எண்ணை வளங்களை சுரண்ட முனைந்துள்ளது வேதாந்தா. இது குறித்து இரண்டு நிறுவனங்களும் அனுமதி கேட்டு வரட்டும் நாங்கள் கவனமாக இருப்போம் என இன்று இந்தியாவின் ஓட்டுப்பொறுக்கி அமைச்சர்களும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளும் தெரிவித்திருக்கும் அறிக்கைகளை நம்ப முடியாது. இப்படி ஒரு அறிக்கை என்றால் எங்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதற்காக வெளியிடப்பட்ட அறிக்கையாகவே கருத வேண்டும்.
இத்தகைய நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சம் விளைவிக்கிற, நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கிற வேதாந்தா, கைரன் இந்தியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து மக்கள் ஒன்றிணைந்து போராடி நாட்டை மீட்க வேண்டிய தருணமிது.
ஈழத்தின் உரிமைக் குரலுக்கு உரம் சேர்க்கும் வண்ணம் தமிழகத்தில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் மாவட்ட தலைநகரங்களில் 21.8.2010 சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றன.
சிங்கள் இனவெறி அரசே,
ஈழத்தமிழ்ப் பகுதிகள் மீதான ஆக்கிரமிப்புகளை நிறுத்து
இராணுவ முகாம்கள் மற்றும் சிங்களக் குடியேற்றங்களைத் திரும்பப்பெறு!
முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களைத் அவர்தம் வாழ்விடங்களில் மீள்குடியேற்று!
அரசியல் கைதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் விடுதலை செய்!
______________________________________________________________________________
இந்திய மேலாதிக்க அரசே,
இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சேவைப் பாதுகாக்காதே!
வளர்ச்சித்திட்டம் என்ற பெயரில் ஈழத்தமிழ்ப்பகுதிகளை ஆக்கிரமிக்காதே!
_________________________________________________________________________
தமிழக மக்களே,
50,000 தமிழ் மக்களைக் கொன்றொழித்த போரக்குற்றவாளி இராஜபக்சே கும்பலைக் கூண்டில் ஏற்றுவோம்!
இலங்கை இனவெறிப் பாசிச அரசுக்கும் அதனைப் பாதுகாக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் எதிராக சர்வதேசப் பாட்டாளிவர்க்கத்தையும், ஜனநாயக சக்திகளையும் ஒன்றுதிரட்டுவோம்!
ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்குக் குரல் கொடுப்போம்!
யாரங்கே?
டௌ கெமிக்கல்சை எதிர்த்து சவுண்டு கொடுப்பவன் எவன்?
முதலில் இந்த வீடியோவை பாருங்கள்
வெறி கொண்ட வலதுசாரி சானலான டைம்ஸ் நௌவுக்கே பொறுக்க முடியவில்லையா? அல்லது தனது கோர முகத்தை மறைத்துக் கொள்ள அந்த தொலைக்காட்சிக்கு இப்படி ஒரு அமெரிக்க எதிர்ப்பு சவடால் தேவைப்பட்டதா, தெரியவில்லை. அடேங்கப்பா, அமெரிக்க அரசை அம்பலப்படுத்தி விட்டது டைம்ஸ் நௌ.
விசயத்துக்கு வருவோம். இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள பறவைப்பார்வையில் சில விவரங்கள்.
போபால் நீதிமன்றம் கேசவ் மகிந்திராவை ஜாமீனில் விட்டதைத் தொடர்ந்து மறுபிறவி எடுத்த போபால் பிரச்சினையைக் கேள்விப்பட்டு, துணுக்குற்றுப்போன நமது பிரதமர் “யாரங்கே, போபால் வழக்கில் என்ன நடந்தது என்ற ரிப்போர்ட் பத்து நாளில் என் டேபிளுக்கு வரவேண்டும்” என்று உத்தரவிட்டு அமைச்சர் குழுவின் தலைவராக ப.சிதம்பரத்தையும் நியமித்தார். எட்டே நாளில் அறிக்கையை பிரதமரின் டேபிளுக்கு கொண்டுவந்தார் சிதம்பரம்.
இப்பேர்ப்பட்ட சுறுசுறுப்புக்கு காரணம் என்ன? இந்தோ அமெரிக்கன் சி.இ.ஓ ஃபோரம் அமெரிக்காவில் கூட இருந்தது. போபால் பிரச்சினை குறித்த இந்திய அரசின் அதிகாரபூர்வமான முடிவை, அந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே அறிவிக்காவிட்டால் அமெரிக்க முதலாளிகள் அப்பிரச்சினையை அந்தக் கூட்டத்தில் கிளப்புவார்கள் என்பது இந்திய முதலாளிகளின் அச்சம்.
2001 இல் யூனியன் கார்பைடு நிறுவனத்தை டௌ கெமிக்கல்ஸ் வாங்கியது. 1984 இல் நடைபெற்ற விபத்து மற்றும் அதற்கான நிவாரணம் போன்றவையெல்லாம் யூனியன் கார்பைடுடன் முடிந்த்து. அதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்பது டௌ கெமிக்கல்சின் முதல் வாதம்.
போபாலில் யூனியன் கார்பைடு ஆலை அமைந்துள்ள நிலம் அரசுக்கு சொந்தமானது. அது யூனியன் கார்பைடுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த நிலத்தை யூனியன் கார்பைடு ம.பி அரசிடம் ஒப்படைத்து விட்டதால், அங்கே குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான டன் இரசாயனக் கழிவுகளைச் சுத்தம் செய்வதும் (இதற்கான உத்தேச செலவு 150 கோடி ரூபாய்) அந்தக் கழிவுகளை வேறு எங்காவது கொண்டு சென்று அப்புறப்படுத்துவதும் தன்னுடைய பொறுப்பல்ல, ம.பி அரசின் பொறுப்புதான் என்பது டௌவின் இரண்டாவது வாதம்.
போபாலில் யூனியன் கார்பைடு ஒரு மருத்துவமனையை நடத்தி வருகிறது. அந்த மருத்துவமனையை நடத்தும் செலவுக்கும் தான் பொறுப்பேற்க இயலாது. அதையும் அரசாங்கம்தான் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பது டௌ கெமிக்கல்சின் மூன்றாவது வாதம்.
“கூடுதல் நட்ட ஈட்டை அரசே வழங்கும். ஆலையின் கழிவுகளை அரசே சுத்தம் செய்யும். மருத்துவமனையை அரசே ஏற்று நடத்தும்” இவை மூன்றும் மேற்கூறிய பிரச்சினைகளில் சிதம்பரம் தலைமையிலான குழு அறிவித்த முடிவுகள்.
இந்திய அரசின் தரப்பிலிருந்து டௌ கெமிக்கல்சுக்கு மனவருத்தம் ஏற்படுத்தும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. டௌ கெமிக்கல்சுக்கு எதிராக இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பல தனிநபர்கள் தொடுத்திருக்கும் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்வதற்கும் மன்மோகன் அரசு உறுதியாக மறுத்து வருகிறது. இப்படியெல்லாம் வழக்கு போட்டு தொந்திரவு செய்தால் அமெரிக்க முதலாளிகள் இந்தியாவில் மூலதனம் போடமாட்டார்கள் என்றும், அத்தகைய எல்லா வழக்குகளையும் மூட்டை கட்டிவிட வேண்டும் என்றும் ப.சிதம்பரம், கமல்நாத் ஆகியோர் பிரதமருக்கு சிபாரிசு செய்திருக்கின்றனர்.
ஆக, டௌ வுக்கு எதிராக இந்திய அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பதே உண்மை. தனக்கெதிராக எந்தவித நடவடிக்கையும் இந்தியாவில் எடுக்கப்படாதபோது, டௌ வுக்கு ஏன் கோபம் வருகிறது? நடவடிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தனக்கு எதிராக இந்தியாவில் பேசுகிறார்களே அவர்கள் வாயையும் அடைக்கவேண்டும். அதுதான் டௌ எழுப்பும் பிரச்சினை.
போபால் பிரச்சினையை மையப்படுத்தி இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்று, போபால் நச்சுவாயுவால் பாதிக்கப்பட்ட மக்கள் 50 பேரை அழைத்து வந்து, சென்ற ஆண்டு சென்னையில் உள்ள டௌ கெமிக்கல்ஸ் அலுவலக வாயிலில் ஒரு போராட்டம் நடத்தியது. தனக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதையும் தனது தொழிலுக்கு இடையூறு விளைவிப்பதையும் தடுக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டௌ கெமிக்கல்ஸ் ஒரு மனு தாக்கல் செய்ததுடன், போராடியவர்கள் 20 இலட்சம் ரூபாய் நட்ட ஈடு தரவேண்டும் என்று வழக்கும் தொடுத்த்து. ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்காக இந்தியக் குடிமகனின் கருத்துரிமையைத் தடை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தார் நீதிபதி சந்துரு. மேல்முறையீடு செய்து அந்த தீர்ப்புக்கும் ஒரு தடையாணை வாங்கி வைத்திருக்கிறது டௌ கெமிக்கல்ஸ். இது போன வருசத்துக் கதை.
தற்போது நாடாளுமன்றத்தில் போபால் பற்றி நடந்த விவாதத்தில் பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜும், மார்க்சிஸ்டுகளும் கொஞ்சம் சவுண்டு கிளப்பினர். பா.ஜ.க மற்றும் மார்க்சிஸ்டுகளின் சவுண்டு பற்றி அமெரிக்கா கவலைப்படுவதுமில்லை, கவலைப்படத் தேவையுமில்லை.
வேறு யார் “குரல்” எழுப்புவதைப் பற்றி அமெரிக்க அரசு மான்டேக் சிங் அலுவாலியாவிடம் கவலை தெரிவிக்கிறது? டௌ கெமிக்கல்சுக்கு எதிராக குரல் எழுப்புவதைக் கூட அமெரிக்க முதலீட்டாளர்களால் சகித்துக் கொள்ள இயலாது என்கிறார் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் துணைச் செயலர்.
அலுவாலியா பேசிய விசயம் உலகவங்கியிடம் கடன் வாங்குவது குறித்த பிரச்சினை. பேசியதோ பாதுகாப்புத் துறை துணைச்செயலரிடம். அவர் அளித்த பதிலோ அமெரிக்க கார்ப்பரேட் நிறவனங்களின் நலனை மட்டுமின்றி, இந்தியக் குடிமக்களின் ஜனநாயக உரிமையை நசுக்க கோருகிறது. அரசியல் வேறு, பொருளாதாரம் வேறு, இராணுவம் வேறு என்று கூறும் அறிஞர்களின் பார்வைக்கு இதனை சமர்ப்பிக்கிறோம்.
பாதிக்கப்பட்ட மக்களின் குமுறலை, இந்திய மக்களின் குரலை சித்தரிக்க அமெரிக்க அதிகாரி பயன்படுத்தும் வார்த்தையைக் கவனித்தீர்களா? NOISE!
போலி சுதந்திரம், மறுகாலனியாதிக்கம், அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று நாம் சொன்னால் உடனே முகம் சுளிக்கும் இந்திய யுப்பிகள் (yuppies) இதற்கென்ன சொல்வார்கள்? kewl dude…என்பார்களோ? அதை அர்னாப் கோஸ்வாமியிடம் சொல்லட்டும்.
ஆனானப்பட்ட அர்னாபுக்கே ஆத்திரம் வருகிறது என்றால் என்ன சொல்வது?
“டைம்ஸ்…. தே ஆர் சேஞ்சிங்..” என்ற பாப் டைலனின் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது.
ஜார்ஜ் கார்லின் – 5 கிராமி விருதுகள் பெற்ற அமெரிக்காவின் நகைச்சுவையாளர், நடிகர், எழுத்தாளர் மற்றும் அரசியல் விமரிசகர் . ‘அமெரிக்க கனவு’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையின் சிறு பகுதியே இந்த காணொளி. அமெரிக்கா பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் மாயையை அமெரிகர்களுக்கு புரியும் மொழியில் அம்பலப்படுத்துகிறார்.
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இலங்கையைத் தோற்கடித்திருக்கிறது. இது பத்தோடு ஒன்றாய் சாதரண கிரிக்கெட் செய்தியாக வந்திருக்க வேண்டியது பெரும் விவாதமாய் எழுந்திருக்கிறது.
நேற்றைய போட்டியில் இந்திய வீரர் சேவக் 99 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஒரு ரன்னை சேவக் எடுத்து விட்டால் இந்திய அணி வெற்றி பெறுவதோடு, சேவக் தனது 13வது சதத்தையும் அடித்திருக்கலாம். இறுதி ஓவரை வீசிய இலங்கை அணி சுழற்பந்து வீரர் ரந்திவ் வேண்டுமென்றே “நோ பால்” வீசினார். இதையடுத்து இந்தியா வெற்றி பெற்றாலும், சேவக் சதமடிக்கவில்லை. இதுதான் இப்போது இந்தியாவின் அதி முக்கிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு செயலர் ரணதுங்கா இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார். நன்னடத்தைக்காக ஐ.சி.சியிடம் மூன்று முறை விருது வாங்கிய தங்கள் அணியா இப்படி நடந்திருக்கிறது என்று அவர் அங்கலாய்த்துள்ளார். இலங்கை அணித் தலைவர் சங்ககராவும் இந்த செயலுக்கு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பாளர்களும் இந்த விவாகரத்தை முடித்துக் கொள்ளலாமென்று பெருந்தன்மையுடன் அறிவித்துள்ளனர்.
ஆனால் இந்தியாவின் ஊடகங்கள் இதை முடிப்பதாக இல்லை. இது இந்தியாவின் மாபெரும் கவுரவப் பிரச்சினை போல மாற்றி வருகின்றனர். எல்லா செய்தி சானல்களிலும் இது பெரும் விவதாகமாக காட்டப்படுகிறது. தினசரிகளின் விளையாட்டு செய்திகளில் இதுவே கருப்பொருளாக பேசப்படுகிறது.
கேப்டன் சங்ககராவை வில்லன் என்று பேசுகிறது தினமலர். ஸ்டம்ப் மைக்கில் அவர் பேசியது பதிவாகியிருக்கிறதாம். அது என்ன என்று பார்த்தால் “ஹாய் ரந்திவ், பந்தை சேவக் அடித்துவிட்டால் சதமடித்து விடுவார்” என்று மட்டும் இருக்கிறது. இதில் என்ன சதி இருக்கிறது? சேவக் அடிக்காமல் இருக்கும் வகையில் பந்து வீசச் சொல்வதில் என்ன குற்றம்?
இருப்பினும் சங்ககரா இந்திய இரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். பிறகு ஐ.பி.எல்லில் விளையாடும் வாய்ப்பும், வருமானமும் முக்கியம் என்ற விதத்தில் அவரது கவலை இருந்திருக்கும். இந்திய ரசிகர்களுக்கோ சேவக் சதமடிப்பது ஒரு ரன்னில் போய்விட்டதே என்று கவலை. தினமலரின் வாசகர்கள் பலர் இதை வைத்து சிங்களவன் என்றால் இப்படித்தான் அழுகுணி ஆட்டம் ஆடுவான் என்று குறிப்பிடுகிறார்கள்.
முள்ளிவாய்க்காலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்ட எண்ணிக்கையை விட சேவக் கோட்டை விட்ட ஒரு ரன் என்ற எண்ணிக்கை முக்கியமா? ஈழத் தமிழ் மக்களை வதைமுகாமில் அடைத்து வைத்திருப்பதலிருந்து புரியாத சிங்கள இனவெறி இந்த ஒரு ரன் பிரச்சினையில் புரிந்து கொள்வதாகச் சொல்வது அயோக்கியத்தனமில்லையா?
புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் ஈழத் தமிழ் மக்களின் அனைத்து ஆதாரங்களையும் கைப்பற்றிய ராஜபக்சேவுக்கு இந்தியா எல்லா விதங்களிலும் உதவி செய்திருக்கிறது. அதில் போகாத இந்திய மானமா இந்த ஒரு ரன்னில் போய்விடப்போகிறது?
ஈழத்தின் மீதான இறுதிப்போரை அதன் அழிவைப் பற்றியெல்லாம் தேசிய விவாதம் நடத்தாத இந்திய ஊடகங்கள் இந்த ஒரு ரன்/நோ பால் பிரச்சினையை பற்றி மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? இந்தியாவின் கிரிக்கெட் இரசிகனை விட ஈழத்தமிழர்களின் உயிர் மிகவும் மலிவான ஒன்றா?
ஈழத்தை அழிக்க சிங்கள இனவெறி அரசுக்கு இந்திய அரசு ஆதரவளித்ததற்கும், இந்த ஒரு ரன் பிரச்சினைக்கும் பின்னணியாக இருப்பது இந்திய முதலாளிகளின் நலன்தான். ஒன்றுபட்ட இலங்கை என்பதே இந்திய தரகுமுதலாளிகளின் தேவை என்றால், கிரிக்கெட்டை வைத்து நுகர்பொருள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் இந்திய முதாளிகளுக்கு சேவக் ஒரு ரன்னை இழந்ததும் அதனால் இரசிகன் அடையும் எரிச்சலை தணிப்பதும் அவசியமாக இருக்கிறது.
அதே போல இந்திய கிரிக்கெட் சந்தையின் தயவில்தான் வாழ முடியும் என்ற நிலையிலிருக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியமும் இதை பெரிது படுத்தாமல் மன்னிப்பு கேட்டு முடிக்க நினைக்கிறது. ஐ.பி.எல் மூலம் பெரும் வருமானத்தை ஈட்டும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்த மன்னிப்பு தேவையாக இருக்கிறது. அரசியலும் விளாயட்டும் அதன் பொருளாதார நலன்களிலிருந்தே தீர்மானக்கப்படும் என்பதற்கு இதை விட எடுப்பான சான்று வேறு ஏது?
அசின், கருணாஸ் போன்ற நடிகரெல்லாம் இலங்கை சென்றதை எதிர்க்கும் சீமானின் “நாம் தமிழர்” போன்ற சூரப்புலிகள் இந்திய அணி இலங்கை சென்றதை ஏன் எதிர்க்கவில்லை என்று தெரியவில்லை. ஒருவேளை எதிர்த்திருந்தால் அதை நாம் தமிழர் தொண்டர்களே எதிர்த்திருப்பார்களோ என்னமோ? ஏனெனில் மற்ற எல்லாவற்றையும் விட கிரிக்கெட் மிகப்பெரும் மதமாயிற்றே?
ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி கிரிக்கெட் இப்படி பேசு பொருளாக இருப்பது இந்தியாவின் இழிந்த நிலையையே காட்டுகிறது. அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகளை விட கிரிக்கெட் பிரச்சினை முக்கியமான ஒன்றாக இருப்பது எந்த விதத்திலும் நல்லதல்ல.
உணவு உத்தரவாதம் – வறுமைக் கோட்டுக்கு மேல் [APL], வறுமைக் கோட்டுக்குக் கீழ் [BPL] மற்றும் இந்தியன் ப்ரீமியர் லீக் [IPL] பித்தலாட்டங்கள் – பி.சாய்நாத்
படம் - http://www.thehindu.com
பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலைக் கட்டுப்பாட்டை விலக்கிய ஆணை வெளியிடப்பட்ட நேரத்தில் அது முரண்நகையான ஒன்றாக இருந்தது. டீசல் மற்றும் மண்ணெண்ணையின் கடுமையான விலை உயர்வை உள்ளடக்கிய, கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கும்படியான முடிவு இது. ”அனைவரையும் தழுவிய வளர்ச்சி”யின் [inclusive growth] அவசியம் பற்றி டொரொண்டோவில் உலகத் தலைவர்களுக்கு மன்மோகன் சிங்கே உபதேசித்துக்கொண்டிருந்த வேளையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டதுதான் அதிலுள்ள முரண்நகை. மேலும், அந்த வேளையில்தான் நாமும் “உணவு உத்தரவாதம்” பற்றியும், எந்த அளவுக்கு சிறப்பான முறையில் அதை சட்டபூர்வமானதாக்க முடியும் என்றும் முடியைப் பிய்த்துக் கொண்டிருந்தோம். உணவுப் பொருட்களின் விலையேற்றம் 17 சதவீதத்தை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தபோதும், பொதுப் பணவீக்கம் இரண்டிலக்கத்தில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருந்த போதும்தான் இந்த முடிவு வெளியிடப்பட்டது. எனில், இந்த வளர்ச்சியில் நாம் யாரைத் ”தழுவிக்கொள்ள” முயல்கிறோம்?
இந்த பெட்ரோலிய விலைக் கட்டுப்பாடு நீக்கம் பற்றிய செய்தி-ஊடகங்களின் எதிர்வினையோ அந்த நடவடிக்கைக்குச் சற்றும் குறைவிலாக் கொடுமையாகவே இருந்தது. கேபினெட் அமைச்சர்களே இந்த முடிவிலிருந்து விலகி நிற்பதாகக் காட்ட முயன்ற வேளையில், பெரும்பாலான பத்திரிகைகளின் தலையங்கங்களோ இதை மாபெரும் வெற்றி விழாக் கொண்டாட்டம் போலக் காட்டி முடைநாற்றத்தைக் கிளப்பின. ”இறுதியில் வெற்றியடா” என எக்காளமிட்டது ஒரு தலைப்புச் செய்தி; ”வரவேற்கத்தக்க துணிகரச் செயல்” என எட்டுக் கட்டையில் செவிப்பறை கிழித்தது மற்றொன்று. அரிதாய் சில விதிவிலக்குகள் தவிர்த்து – திங்களன்று நடத்தப்பட்ட பந்த் பெற்ற பல பத்து லட்சம் மக்களின் ஆதரவுக்கு நேர்மறாக- இந்த வெகுஜன ஊடகங்கள் விரிந்த எதார்த்த உண்மையில் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்கின்றன என்பதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்திக் கொண்டன.
மறைந்த முர்ரே கெம்ப்டன் கூறி வந்தது போல, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த தலையங்க ஆசிரியர்கள் செய்கின்ற வேலை என்னவென்றால், “போர் ஓய்ந்ததும் குன்று மறைவுகளில் இருந்து வெளிப்பட்டு, இறங்கி வந்து காயம்பட்டுக் கிடப்போரைச் சுட்டுக் கொல்வதே.” செய்தி ஊடகங்கள் இன்று இந்த வரையறுப்பைப் பெருமிதத்துடன் நிறுவி இருக்கின்றன. இந்த மாதத்திலேயே போபால் தொடர்பாக இப்படியும் ஒரு தலையங்கம் வந்தது. போர் ஓயும் வரை கூட இம்முறை அவர்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. “குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் மனித உரிமை அமைப்பினர்” என்று துயர்மிகு போபாலின் வில்லன்களாக அவர்களைச் சித்தரித்தது அந்த தலையங்கம். “போபாலில் ஒரு துணை நிறுவனத்தைத் தொடங்குவது பற்றி தனது பங்குதாரர்களிடையே பெருமையுடன் அறிவிக்கும் முன்னர் உலகின் எந்த ஒரு தொழிற்கழகமும் ஒருமுறைக்கு இருமுறை தயக்கத்துடன் யோசிக்கும்படி நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறது” என்று தனது உண்மையான துயரத்தை வெளிப்படுத்தி துக்கம் கொண்டாடியது. ”யூனியன் கார்பைட்” என்ற சொல்லே அத் தலையங்கத்தில் ஒரு முறை கூட இடம் பெறவில்லை. சுடுகிறார்கள் .. தப்பிச் செல்லுங்கள் கெம்ப்டன். [Roll over Kempton. The shooting’s on]
பத்திரிகைகளில் அன்றாட முக்கிய செய்திகளுக்கு ஊடாக விலையேற்றத்துக்கு எதிரான தொடக்க நிலை எதிர்ப்புகளும் சற்றே இடம்பிடித்தன. நமது மிகப் பெரிய ஆங்கில தினசரியில் மூன்று, நான்கு பத்திகளும் சில விரற்கடை அகலமும் கொண்ட தாராளமான இடத்தை அச்செய்தி ஆக்கிரமித்தது. மும்பையில் ஒரு மாடல் அழகியின் தற்கொலைச் சாவு செய்திக்கு, ஒரு விளம்பரம் கூட இடம்பெறாத முழுப் பக்கத்தை அதே தினசரி அடுத்தடுத்த இரு நாட்களில் அற்பணித்திருந்தது. சர்வதேச கிரிகெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு நமது உணவு மற்றும் வேளாண் அமைச்சர் தேர்வு செய்யப்பட்டது பற்றிய செய்தி சென்ற வாரம் பெரிதாய்க் கருத்தேதும் கூறப்படாமல் கடந்து சென்றது. தேசத்தின் கவனம் முழுவதும் உணவுப் பொருள் விலையேற்றம் மற்றும் உணவு உத்தரவாதம் பற்றிய விசயத்தில் குவிந்திருந்த அதே நேரத்தில்தான் இதுவும் நிகழ்ந்தது.
திரு சரத் பவார் பிரதமரிடம் தனது அமைச்சக வேலைப் பளுவைக் குறைக்கக் கோருவார் என்று அவரை மேற்கோள் காட்டி எழுதப்பட்டது. (AFP, New Delhi, July 2) “அமைச்சுப் பணியில் எனக்கு உதவுவதற்குக் கூடுதல் நபர்களை நியமிக்க நான் பரிந்துரைப்பேன். நான் மூன்று அமைச்சர்களைக் கேட்டிருந்தேன். ஆனால் அவர்கள் எனக்கு ஒரே ஒருவரை மட்டுமே அளித்திருக்கிறார்கள்… நான் எனது வேலைகளில் சிலவற்றைக் குறைக்கக் கோருவதன் மூலமாக நாம் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்” என செய்தியாளர்களிடையே பவார் கூறினார். எனினும், “அரசாங்கத்தில் எனக்குள்ள பணிகள் பாதிப்படைவதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்றும் அவர் நமக்கு உறுதியளிக்கிறார். அப்..பா, நிம்மதியாக இருக்கிறது. உணவு மற்றும் வேளாண் அமைச்சரை உணவு மற்றும் வேளாண் துறையுடன் இணைப்பதையும் தழுவியதாக தனது ’அனைத்தும் தழுவிய வளர்ச்சி’யை விரிவுபடுத்திக்கொள்ள பிரதமருக்கு இதுவே தக்க தருணமாக இருக்கலாம். (அல்லது நாம் அத்துறையுடன் கிரிக்கெட்டையும் இணைத்துவிடலாம்.) ஒரே துறைக்கு நான்கு அமைச்சர்கள் …. இது உண்மையிலேயே அனைவரையும் தழுவிய வளர்ச்சிதான்.
இருப்பினும் எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டை நீக்கிய செயல் ஒன்று விடாமல் எல்லாப் பொருட்களின் மீதும் தனது ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே உணவுப் பொருள் விலையேற்றம் சுருள்கத்தி போல வீசியடிக்கும் அதே நேரத்தில் இதுவும் சேர்ந்துகொள்கிறது. அதை இடைமறித்துப் பேசும் அமைச்சர்கள் மற்றும் ஐ.மு.கூ. வெட்டிப் பேச்சாளர்களின், “ஒருசில மாதங்களின் விலையேற்றம் படிந்தே தீரும்” என்ற தொடர்ந்த வெற்று சவடால்களும் வந்த வண்ணம் இருக்கின்றன.
உணவுப் பொருள் உத்தரவாத மசோதா ஒட்டுமொத்தப் புதுப்பித்தலுக்கு உட்படுத்தப்படலாம் என்ற செய்திகள் இப்போது வருகின்றன. அவ்வாறாயின் அது வரவேற்கத் தக்கது என்றே நினைக்கிறேன் – அது எப்படியும் முந்தைய தயாரிப்பு முயற்சிகளின் அளவுக்குப் படுமோசமாக இருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக ஒன்றைப் பாருங்கள். அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு [Empowered Group of Ministers] ஃபிப்ரவரி மாதம் கூடியது. ”முன்வைக்கப்பட்ட தேசிய உணவு உத்தரவாத மசோதாவை சட்டமாக்குவது தொடர்பாக விவாதிக்க” அவர்கள் கூடியிருந்தனர். இந்த அமைச்சர்கள் குழு முடிவு செய்த முத்தான முதல் விசயம் இதுதான்: 2.1(a) “உணவு உத்தரவாதம் என்பதன் வரையறுப்பு குறிப்பாக உணவு தானியங்கள் (கோதுமை, அரிசி) பற்றியது என்ற அளவுக்கு வரம்பிடப்பட வேண்டும்; அது ஊட்டச்சத்து உணவு உத்தரவாதம் (nutritional security) என்ற விரிந்த பொருளில் இருந்து துண்டிக்கப்பட வேண்டும்.”
ஊட்டச்சத்து உணவு உத்தரவாதம் என்பதில் இருந்து துண்டிக்கப்பட்ட உணவு உத்தரவாதமா? ஊட்டச்சத்து உணவு உத்தரவாதம் என்பது “விரிவானதொரு விஷயம்” என்பதை அதே சொற்றொடர்களே ஏற்கின்றன என்பதைக் கவனியுங்கள். அவ்வாறு இருக்க அவை இரண்டையும் எதற்காகப் பிரித்துப் பார்க்க வேண்டும்?
கிலோ மூன்று ரூபாய் விலையில் 35 கிலோ அரிசி, அதுவும் மக்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும், என்பதுதான் உணவு உத்தரவாதமா? சுகாதாரம், ஆரோக்கியம், சத்துணவு, வாழ்வாதாரம், வேலை, உணவுப் பொருட்களின் விலை இப்படி உணவு உத்தரவாதத்தைத் தீர்மானிக்கும் வேறெந்தக் காரணிகளுமே இல்லையா? இந்த உணவு உத்தரவாதம் தொடர்பான விவாதத்தில் இருந்து எரிபொருள் விலையேற்றத்தையும் கூட நாம் துண்டித்து விடலாமா? அல்லது வேண்டுமென்றே ஒழித்துக்கட்டப்படும் பொது வினியோக முறையையும்; கோதுமை, பருப்பு வகைகள், எண்ணை வகைகள் என எல்லா உணவுப் பொருட்களிலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்துகொண்டிருக்கும் முன்பேர வர்த்தகம் தோற்றுவிக்கும் பேரழிவுகளையும் கூட இந்த உணவு உத்தரவாதம் தொடர்பான விவாதத்தில் இருந்து துண்டித்துவிடலாமா?
தானே முன்வைக்கும் உணவு உத்தரவாதம் தொடர்பாக எவ்வளவுக்கு எவ்வளவு செலவைக் குறைக்க முடியும் என்பதற்கான வழியைத் தேடி அலைகிறது அரசு என்பதே உண்மை. பட்டினியை வரையறுப்பது பட்டினி கிடப்போரின் எண்ணிக்கை அல்ல; மாறாக, அரசு அதற்காகச் செலவிட விரும்பும் தொகைதான் அதைத் தீர்மானிக்கிறது. அதன் விளைவுதான் வ.கோ.கீ.யின் ஆகக் குறைந்த எண்ணிக்கையைப் பெருவதற்கான இந்த முடிவிலாத் தேடல். அரசைப் பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில், அதிகாரபூர்வமாக அமைக்கப்பட்ட மூன்று கமிட்டிகளுமே வறுமை பற்றி செய்திருந்த மதிப்பீடுகள் அரசின் மதிப்பீட்டை விடப் பாரதூரமான அளவு அதிகமாய் இருந்தன. ஆளும் மேட்டுக்குடிகளின் உலகக் கண்ணோட்டத்துடன் பெரிதும் ஒத்துப்போன டெண்டுல்கர் கமிட்டி கூட கிரமாப்புற வறுமை 42% அளவுக்கு உயர்ந்திருப்பதாக்க் காட்டியது. (பலவீனமானதும், எளிதில் தகர்ந்துவிடக் கூடியதுமான அடிப்படையில் அமைந்த உண்மை இது. இருப்பினும், இது அரசின் மதிப்பீட்டைவிட அதிகம்)
என்.சி. சக்சேனா தலைமையிலான வ.கோ.கீ வல்லுனர் குழுவின் மதிப்பீட்டின்படி இது 50%. அதே நேரத்தில், முறைசாராத் துறைத் தொழில்களின் தேசிய ஆணையம் தனது அறிக்கையின் முதல் பக்கத்தில் 83 கோடியே 60 லட்சம் இந்திய மக்கள் (நமது மக்கள் தொகையில் 77 சதவீதத்தினர்) ரூபாய் 20 அல்லது அதற்கும் குறைவான தொகையில் ஒருநாள் பொழுதைத் தள்ளுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. இதை ஒத்துக்கொள்ளுவது என்பதன் பொருள் பட்டினிக் கொடுமையைப் போக்க மேலும் சில ஆயிரம் கோடிகளைச் செலவிடுவது என்பதாகும். ஆனால் இந்த அரசின் வரையறுப்போ மிக எளிமையானது. பட்டினி கிடப்பவனுக்கெல்லாம் நம்மால் சோறுபோட முடியாது. எனவே, நம்மால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குப் பட்டினிப் பட்டாளத்தை வெட்டிச் சுருக்க வேண்டியதுதான் என்பதே அது.
”காசு இல்லை” என்று கைவிரிக்கும் போக்குதான் அனைத்திலும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். புதியதொரு விமான நிலையம் அமைக்க இந்த நாடு ரூ.10,000 கோடி செலவு செய்கிறது. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த ரூ.40,000 கோடியோ அதற்கும் மேலோ கூட செலவு செய்யப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.60,000 கோடிகளை மகிழ்ச்சியாய் இழக்க முடிகிறது. மத்திய பட்ஜெட்டில் ஆகப்பெரும் பணக்காரர்களுக்கும் பெரும் தொழிற்துறைக்கும் மூன்றே மூன்று செலவினங்களின் கீழ் ரூ.5 லட்சம் கோடியைத் தள்ளுபடி செய்ய முடிகிறது. ஆனால், பட்டினி கிடப்பவர்களுக்குக் கொடுப்பதற்கு மட்டும் பணம் கஜானாவை விட்டுக் கிளம்ப மறுக்கிறது. பொது வினியோக முறையை அனைவருக்குமானதாக்க அப்படி என்ன செலவாகிவிடும்? எல்லா இந்தியக் குடிமக்களுக்கும் கிலோ ரூ.3 விலையில் அரிசி/கோதுமை கிடைக்கச் செய்ய வேண்டுமானால் வரும் பட்ஜெட்டில் உணவு மானியத் தொகையாக ரூ.84,399 கோடியை ஒதுக்க வேண்டியிருக்கும் என மதிப்பிடுகிறார்கள் பர்வீன் ஜா மற்றும் நிலச்சல் ஆச்சார்யா. இந்த ஆண்டு பட்ஜெட்டில் பணக்காரர்களுக்குச் செய்த வரித் தள்ளுபடிகளில் ஆறில் ஒரு பங்குதான் இந்தத் தொகை. (இதற்கு ஆகும் கூடுதல் செலவு ஆண்டுக்கு ரூ.45,000 கோடியைத் தாண்ட வாய்ப்பில்லை என்கின்றன பிற மதிப்பீடுகள்.)
உலகப் பட்டினிப் பட்டியலில் உள்ள 88 நாடுகளில் 66ம் இடத்தைப் பிடித்துள்ள ஒரு நாட்டில்; குழந்தைகளின் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையில் சகாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகளைக் காட்டிலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஒரு நாட்டில்; ஜ.நா-வின் மனிதவள முன்னேற்றப் பட்டியலில் பூட்டான், லாவோசுக்கும் கீழாக 134வது இடத்தில் இருக்கும் ஒரு நாட்டில் பட்டினிக் கொடுமையைப் போக்கப் பணம் ஒதுக்க முடியாதென்றால் அதன் விலை – அல்லது விளைவு – என்னவாக இருக்கும்?
உலகப் பெரும் பணக்காரர்களாக, ஃபோப்ஸ் பட்டியலில் 49 பேர் இடம் பிடித்திருப்பதும் இதே நாட்டில் இருந்துதான். (அந்த பெரும் பணக்காரர்களில் பெரும்பாலோர் பல வடிவங்களில் இந்த அரசாங்கத்திடம் இனாம் வாங்குகிறார்கள். இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர்பான இனாம்களைப் பெற்றவர்கள் சிலர்) தனது குடிமகன் பட்டினி கிடக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய ஒரு முயற்சி கூட எடுக்க முடியாது என்றால், அப்படிப்பட்ட அரசு அதிகாரத்தில் இருக்கவும் வேண்டுமா? இந்தியக் குடிமக்கள் அனைவரின் உணவுக்கான உத்தரவாதம் என்பது எங்களது குறிக்கோளுமல்ல, விருப்பமும் அல்ல என்பதையாவது குறைந்தபட்சம் நேர்மையாக வெளிப்படுத்துமா இந்த அரசாங்கம்? தனது பெயருக்கு நேர் எதிரானதைச் சட்டபூர்வமானதாக்கும் ஒரு மசோதாவுக்கு “உணவு உத்தரவாத மசோதா” என்ற போலிப் பெயர் எதற்கு? அனைவரும் பெற முடியாத ஒன்றை ‘உரிமை’ என்ற பெயரால் எவ்வாறு அழைக்க முடியும்?
ஒரு தெரிவிப்பு: வ.கோ.கீ. வல்லுனர் குழுவில் நானும் ஒரு உறுப்பினராய் இருந்தேன். அக்குழுவின் அறிக்கையுடன் இணைக்கப்பட்ட குறிப்பு ஒன்றில், உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் கண்ணியமான வேலை ஆகிய நான்கு துறைகளில் வாய்ப்பு அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும் என விவாதித்து இருக்கிறேன். அரசின் கொள்கையை வழிநடத்தும் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் அவ் விவாதம் அமைந்திருக்கிறது. நமது மக்களின் உரிமைகள் அவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையில் அமைந்திருக்கிறதே அன்றி அவர்களின் வாங்கும் சக்தியால் அல்ல. வ.கோ.கீழ் (BPL) ஆகவோ வ.கோ.மேல் (APL) ஆகவோ இருப்பதனால் அல்ல. ( IPL ஆசாமியாக இருப்பதனாலும் அல்ல.) உரிமைகள் அதன் வரையறைப்படி பொதுவானவை, பிரிக்க முடியாதவை.
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்த உணவு உத்தரவாத மசோதாவில் காணப்படும் அம்சங்கள் நமது வழிகாட்டு நெறிமுறைகளை முன்னெடுத்துச் செல்கின்றனவா? அல்லது பலவீனப்படுத்துகின்றனவா? அரசியல் சட்டப்படியான உரிமைகளைக் கரைத்துக் காணாமல் போகச் செய்து தயாரிக்கப்பட்ட இந்த நீர்த்துப்போன சரக்கை ஒரு முற்போக்கான சட்டம் போல் முன்வைப்பது ஒரு மோசடி வேலை. செயல்படக் கூடிய ஒரே பொது வினியோக முறை என்பது அனைவருக்குமானதாக இருக்கும் ஒன்றே. அனைவருக்கும் பொதுவான முறைமைக்கு சற்றே நெருக்கமாய் செயல்பாட்டு உள்ள – கேரளா, தமிழ்நாடு – மாநிலங்களில் மட்டுமே இந்த பொது வினியோக முறை சிறப்பாய் செயல்பட்டிருக்கிறது.
150 மாவட்டங்களில் “பரீட்சார்த்தமாக” பொது வினியோக முறையின் மூலம் உணவு தானியங்களைப் (அதாவது, பிரதானமாக கோதுமை, அரிசி) பெறும் வாய்ப்பை “அனைவருக்குமானதாக” [universal] செய்து பார்ப்பது என்ற பேச்சு தற்போது அடிபடுகிறது. கருத்தளவில் இது ஒரு படி முன்னேற்றமாகத் தோன்றினாலும் நடைமுறையில் இது தவறு என்பது நிரூபிக்கப்படும். இது மாறுவேடத்தில் வரும் ”இலக்கைச் சென்றடையும்” [targeting] வரம்பிடப்பட்ட செயல்பாடே தவிர வேறல்ல. “யுனிவர்சல்” மாவட்டங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு உணவு தானியங்கள் வெகுவாய்க் கடத்தப்படும்போது இந்த வகை ஏற்பாடு ஆட்டங்காணும். பரீட்சார்த்த நடவடிக்கைகளைத் தவிர்த்து இறுதி இலக்குக்கே நேரடியாய்ச் செல்வது நல்லது. உணவு உத்தரவாதத்தை அனைவருக்குமானதாக ஆக்குங்கள்.
________________________________________________________
– பி. சாய்நாத், நன்றி தி ஹிந்து – 07 Jul 2010
– தமிழாக்கம்: அனாமதேயன்
________________________________________________________