Thursday, May 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 813

சினிமா பாடல்: பரவசத்தில் மனுஷ்ய புத்திரன் !

41

மனுஷ்ய புத்திரன் சினிமா பாடல்

மனுஷ்ய புத்திரனைத் தெரியுமா? தீவிர இலக்கியவாதி, உயிர்மை இதழ், பதிப்பகத்தின் ஆசிரியர், வெளியீட்டாளர், அப்புறம் கவிஞர். இவர் சினிமாப் படம் ஒன்றுக்கு பாடல் எழுதிய கதையை குமுதம் 27.05.09 இதழ் வெளியிட்டிருக்கிறது.

கமல் ஒரு நாள் நம்ம கவிஞரை தொலைபேசியில் அழைத்து வருமாறு கேட்டாராம். கவிஞரும் ஆச்சரியத்துடன் பார்க்கப் போனாராம். அங்கே கமல், அவர் மகள் ஸ்ருதி, இயக்குநர் சக்ரி மூவரும் இருந்தார்களாம். “உன்னைப் போல் ஒருவன்” படத்தில் ஒரு முக்கியமான பாடலை எழுதுமாறு கவிஞரை, உலக நாயகன் பணித்தாராம். உடனே கவிஞருக்கு இன்ப அதிர்ச்சியாம். அதுவும் கமல், மோகன்லால் என இரண்டு திரையுலகப் பிரம்மாக்களின் படத்தில் அறிமுகமென்றால் கேட்கணுமா? மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

இயக்குநர் சக்ரி பாடல் இடம்பெறும் சூழலை விளக்க, படத்தின் இசையமைப்பாளர் ஸ்ருதி இந்தியில் ஒரு சரணத்தைப் பாடி இசையமைத்து அதைப்பற்றி விளக்கி கவிஞரிடன் கொடுத்தாராம். இந்தி தெரியாதென்றாலும் ஸ்ருதி அந்தப்பாடலில் வெளிப்படுத்திய ஆழ்ந்த துயரம் கவிஞரின் மனதைக் கசியச் செய்ததாம்.

அடுத்து வீட்டில் உட்கார்ந்து கவிஞர் எழுதிய பாடலை ஸ்ருதி அவரது மெட்டுக்கு கச்சிதமாகப் பொருந்துவதாக கூறியதும் கவிஞருக்கு சந்தோஷமாம். அடுத்து கமல் சினிமாவில் பாடும் பாடல்கள் கவிஞருக்கு சின்ன வயதிலேயே பிடிக்குமாம். எண்ணெற்ற பாவங்களும், உணர்ச்சிகளும் வெளிப்படும் குரலாம் அது. அந்தக் குரல்தான் இந்தப் பாடலைப் பாடவேண்டுமென கவிஞர் விரும்பினாராம். அந்த ஆசையும் நிறைவேறியதாம்.

ஸ்ருதியின் இசையில் கமல் அந்தப் பாடலை பாடிய போது மனதைக் கரையச் செய்யும் வேறொரு கலைப்படைப்பாக மாறியதைக் கண்டு கவிஞரின் கண்களில் நீர் தளும்பியதாம். அவருக்கே நீர் வந்துவிட்டதால் இந்தப் பாடல் நம் காலத்தின் மாபெரும் துயரை வெளிப்படுத்தும் பாடலாக எல்லோருடைய இதயத்தையும் தொடுமாம்.

அடுத்து ஸ்ருதியின் ஆளுமையை, ” பல்வேறு ஆற்றல்களைக் கொண்ட நுட்பமான பெண், சினிமாவைத் தாண்டி ஒரு ஆளுமையை உருவாக்கிக் கொண்டவர், மிகப்பெரிய சாதனைகளையும், வெற்றிகளையும் எதிர்காலத்தில் குவிப்பார்” என்றெல்லாம் கவிஞர் உணர்ச்சிகரமாக நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறார்.

இதற்கு முன்னரே ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற தீவிர இலக்கியவாதிகள் சினிமாவுக்கு வந்திருக்கின்றனர். இதில் மனுஷ்ய புத்திரன் சமீபத்திய வரவு. பொதுவில் இந்த இலக்கியவாதிகளெல்லாம் சினிமாக்காரராக மாறுவதற்கு முன்னர் சினிமாவை சந்தைக் கலாச்சாரம், சதையை விற்கும் வியாபாரம் என்று பயங்கரமாக தாக்குவார்கள். ஆனால் சான்ஸ் கிடைத்துவிட்டால் போதும் மற்ற சினிமா உலகினரை விட நா கூசும் அளவில் வாய்ப்பு கொடுத்த புண்ணியவான்களை பயங்கரமாக ஐஸ் வைப்பார்கள். இதற்கு வாரமலரில் கவிதை எழுதுபவர்கள் தேவலாம்.

மேற்கண்ட சம்பவத்தில் ஒரே ஒரு சினிமாப் பாடல் எழுத சான்ஸ் கிடைத்ததும் கமலையும் அவரது மகளையும் எத்தனை தடவை உணர்ச்சிவசப்பட்டு, நெகிழ்ச்சியுடன், நுட்பம், ஆற்றல் என்றெல்லாம் உருகுகிறார் பாருங்கள். அந்தக்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் தங்களுக்கு பொற்காசுகள் கொடுக்கும் மன்னர்களை இந்திரனே, சந்திரனே என்று வாய்நிறைய பாடுவார்கள். இந்தக்காலத்து சிற்றிலக்கியவாதிகளோ அந்த வார்த்தைகளை கொஞ்சம் மாற்றிப்போட்டு பாடுகிறார்கள். இதுதான் காலம்காலமாக தொடர்ந்து வரும் தமிழ் மரபு போலும்!

vote-012
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

சுயநிதிக் கல்லூரிகள்: கல்வியா? கொள்ளையா? மொட்டையா?

இந்த ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியில் ஜெகத்ரட்சகன் மற்றும் செட்டிநாடு மருத்துவக் கல்லூரிகளின் பகிரங்க கொள்ளை வெளிவந்து சில தினங்களுக்குள்ளேயே சூடு தணிந்துவிட்டது. தமிழக அரசும் பெயருக்கு சில கல்லூரிகளில் ரெய்டு என்று யாரையும் தண்டிக்காமலேயே கடமையை செய்து விட்டது. பெற்றோர்களும் வழக்கம் போல கடன் வாங்கி சில இலட்சங்களை இறைத்து தமது வாரிசுகளுக்கு பொறியியல் கல்லூரிகளில் இடம் வாங்கினால் பல ஆயிரம் சம்பளம் உள்ள வேலை உறுதி என்ற மூடநம்பிக்கையின்படி அலைகிறார்கள்.

அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் சுயநிதிக் கல்லூரிகள் கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்த, கட்டணத்தை கல்லூரிகளே தேவைக்கேற்றபடி உயர்த்தி நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று சக முதலாளிகளின் சோகமறிந்து கிழக்கு பதிப்பகம் பத்ரி தீர்வு சொல்கிறார். அதாவது வீடு புகுந்து கொள்ளையடிக்கும் வழிப்பறிக்காரனின் குற்றத்தை தடுத்து நிறுத்த அந்த வீட்டுக்காரரே பணத்தையும், நகையையும் கொடுத்துவிட்டால் பிரச்சினை இல்லையல்லவா! உலகமய தாசர்கள் இப்படித்தான் தனியார் மயத்திற்கு பச்சையாக ஜே போடுகிறார்கள்.

உண்மையில் புற்றீசல் போல பெருகி வரும் இந்த சுயநிதிக் கல்லூரிகளால் யாருக்கு ஆதாயம்? இந்த உயர்கல்வியினால் மாணவர்களுக்கு உத்திரவாதமான எதிர்காலம் உண்டா? உலகெங்கிலும் தனியார் கல்லூரிகள் குறைவாக இருக்கும்போது இந்தியாவில் மட்டும் பகாசுர வளர்ச்சியில் செல்வதன் காரணமென்ன? கல்விக்கான பொறுப்பில் அரசு விலகுவதால் யாருக்கு நட்டம்? இந்த கேள்விகளுக்கு இந்த கட்டுரை விடை தருகிறது. இதை நீங்கள் படிப்பதோடு குறிப்பாக மாணவர்களிடம் கொண்டு செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நட்புடன்

வினவு

********************************************

dsc_0006

கடந்த 2007 ஜூன் மாதம் 20ம் தேதியன்று, பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் வளவெட்டிக்குப்பம் தெற்குத் தெருவைச் சேர்ந்த பன்னீர் செல்வம் எனும் காய்கறி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பன்னீர் செல்வத்தின் கதை,  நக்கீரன், ஜூ.வியில் வந்த சினிமா நடிகை பத்மாவின் கதை போல புலனாய்வுத் தொடருக்கான சுவாரஸ்யங்கள் நிறைந்த “சமூகப் பிரச்சினையல்ல.’ மாறாக, பொறியியல் கல்லூரியில் படிக்கும் தனது மகனுக்கு கல்விக் கட்டணம் கட்ட முடியாத ஒரு ஏழையின் “வழக்கமான தனிப்பட்ட பிரச்சினை.’ எனவே, தன் மகனை “அவையிடத்து முந்தியிருப்பச் செய்ய’ முடியவில்லையே எனக் குமைந்த அந்த ஏழைத் தகப்பனின் கதையை பத்திரிக்கைகள் அன்றோடு முடித்துக் கொண்டன.

அந்தச் சுவாரசியமற்ற கதை இதுதான். தெருத் தெருவாய் காய்கறி விற்ற பன்னீர் செல்வமும், கூலி வேலை செய்யும் செங்கமலமும் தமது பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க ஆசைப்பட்டனர். வறுமைக்கு மீறிப் படித்த மூத்த மகன் சுரேஷ் பிளஸ்டூவில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறி பொறியியல் படிக்க ஆசைப்பட்டான். பலர் கையில், காலில் விழுந்து பணம் திரட்டி இரண்டாண்டுகள் படிக்க வைத்தார் தந்தை பன்னீர்செல்வம்.

மூன்றாமாண்டுப் படிப்பிற்குக் கட்டணம் கட்ட நேரம் வந்தது. “எவ்வித நிபந்தனையும் இல்லாமல், வங்கிகள் கல்விக் கடன் வழங்க வேண்டும்’ என்ற செட்டிநாட்டு சிதம்பரத்தின் சத்தியப் பிரகடனத்தை பத்திரிக்கைகளில் படித்துவிட்டு அதை நம்பி வங்கிகளுக்கு நடையாய் நடந்தார். சென்ற இடங்களிலெல்லாம் அவமதிப்பையும், நிராகரிப்பையும் சந்தித்தார். ஒரு கையாலாகாத தகப்பனாக தன் மகனுக்கு முன் நிற்க விரும்பாமல் தற்கொலை செய்து கொண்டார். இப்பொழுது வங்கிகள் அவரது மகனுக்கு கல்விக் கடன் தர முன்வந்திருக்கின்றன.

இது வெறுமனே ஒரு தனிநபரின் சோகக் கதையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பாக கேரளாவில் கல்விக் கடன் கிடைக்காததால், ஏழாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்ட பொறியியல் கல்லூரி மாணவி ரெஜினாவின் துயரக் கதையும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

செஞ்சி சக்கராபுரம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் துப்புரவுப் பணி செய்யும் பழனியம்மாளுக்கு மகனை பொறியியல் படிக்க வைக்க ஆசை. ஆனால் அவரது மாதச்சம்பளம் ரூ.400. அவரது கணவர் மின் நிலையத்தில் துப்புரவுப் பணியாளர். அவரது சம்பளம் ரூ.850. பத்மாவதி பொறியியல் கல்லூரியில் பையனுக்கு இடம் கிடைத்து விட்டது. ஆண்டுக் கட்டணம் ரூ.36,250. அரும்பாடு பட்டு 16,250 புரட்டிவிட்டார்கள். மீதிப்பணத்துக்கு வங்கியில் கல்விக்கடன் கேட்டால் “சொத்து இருக்கிறதா’ என்று கேட்கிறார்களாம். “கல்விக் கொடையாளர்கள் உதவுங்கள்’ என்று கோரிக்கை விடுக்கிறது தினமணி (செப்4).

ஒவ்வொரு கல்வியாண்டு துவங்கும்போதும் இத்தகைய சோகக்கதைகள் வந்தவண்ணமிருக்கின்றன. இந்த ஆண்டு இப்பிரச்சினை இரண்டு அரசியல் பரிமாணங்களை எடுத்தது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக நன்கொடைக் கொள்ளையடிக்கும் சுயநிதிக் கல்லூரிகள்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார் ராமதாஸ். புகார் கொடுத்தால்தானே நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீசுக்காரனைப் போல தந்திரமாகப் பேசிச் சமாளித்துப் பார்த்தார் கல்வி அமைச்சர். சமாளிக்க முடியாத அளவுக்கு கல்விக்கொள்ளை தலைவிரித்து ஆடவே மொட்டைக் கடிதாசி போட்டாலும் நடவடிக்கை எடுக்கிறோம் என்றார். பிறகு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் கட்டணம் வாங்கும் தனியார் கல்லூரிகளுக்கு எதிராக அதிரடி சோதனை நாடகங்கள் நடந்தன. பிரச்சினை அத்தோடு முடிந்து விட்டதா என்ன?

கல்விக் கட்டணம்: தீர்மானிப்பது யார்?

தகவல் தொழில் நுட்ப வேலை வாய்ப்பை வாங்க உதவும் பொறியியல் கல்வியில், ஒவ்வொரு ஆண்டும் 7 இலட்சம் மாணவர்கள் சேருகின்றனர். இதில் தமிழகத்தில் மட்டும் விரல் விட்டு எண்ணத்தக்க சில அரசுக் கல்லூரிகளோடு சேர்த்து, 262 (தற்போது சுமார் 300) பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவ்வாண்டு பொறியியல் கலந்தாய்வின் மூலம், அரசு நிரப்பவுள்ள இடங்களின் மொத்த எண்ணிக்கை 62,337. இவற்றில், சுயநிதிக் கல்லூரிகளில், ஒரு மாணவனுக்கான கல்விக் கட்டணம் ரூ.32,000/ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, 37,838 இடங்கள் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் வருகின்றன. இவற்றுக்கான கட்டணம் சாராயக் கடை ஏலத்தைப் போல பல லட்சங்களில் கல்வி வள்ளல்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது.

அதிகக் கட்டணம் வசூலிக்கும் பிரச்சினை இருக்கட்டும். நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமே நியாயமானதுதானா? நான்கு வருடத்திற்கு கல்விக் கட்டணமாக ரூ.1,20,000 அடங்கலாக இதர செலவுகள் சேர்த்து ஏறத்தாழ 2 லட்சம் ரூபாய் முதலீடாகப் போடுவதற்கு இந்த நாட்டின் எத்தனை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களால் முடியும்? மருத்துவக் கல்லூரியிலோ இதனை விடவும் லட்சங்களின் எண்ணிக்கை கூடுகிறது. மக்களின் வெறுப்பைச் சமாளிக்க, சொத்து ஜாமீன் கேட்காமல் கடன் கொடுக்க வேண்டும் என்று அரசு வங்கிகளுக்கு உத்திரவு போட்டார் சிதம்பரம்.

அப்படிக் கடன் வாங்கும் மாணவர்கள் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்காவிட்டால் அவர்களால் கடனை அடைக்க முடிவதில்லை. பட்டம் பெற்றவுடன் மாணவர்களுக்கு சிதம்பரம் வேலை வாங்கித் தருவாரா அல்லது வாராக்கடனை அவர் அடைப்பாரா? அரசு வங்கிகளுக்கு உத்திரவு போடும் சிதம்பரம் தனியார் வங்கிகளுக்கு உத்தரவு போடாத மர்மம் என்ன என்று கேள்வி எழுப்புகிறார்கள் அரசு வங்கி ஊழியர்கள்.

சிதம்பர இரகசியம்!

“அம்பானிக்கும் டாடாவுக்கும் வாராக்கடனை வாரிக் கொடுக் கிறாயே, ஏழைகளுக்குக் கொடுத்தால் என்ன கேடு? அரசு வங்கிப் பணம் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா?” — என்பது ஏழைப் பெற்றோர்கள் அரசு வங்கி அதிகாரிகளுக்கு எதிராக எழுப்பும் கேள்வி. தங்களுக்கு வழங்கப்படும் கடன் என்பது உண்மையில் தங்களுக்கு வழங்கப்படுவது அல்ல, அது சுயநிதிக்கல்லூரி முதலாளிகளுக்கு தங்கள் வழியாகப் போய்ச்சேரும் மக்கள் பணம் என்பதை ஏழைப் பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை. ஏழை மாணவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக அல்ல, சீட்டு நிரம்பாமல் கஷ்டப்படும் சுயநிதிக் கொள்ளையர்களின் கண்ணீரைத் துடைக்கத்தான் வங்கிப் பணத்தை வாரிவிடச் சொல்கிறார் சிதம்பரம் என்கிற உண்மையையும் அவர்கள் விளங்கிக் கொள்வதில்லை.

பன்னீர் செல்வத்தின் தற்கொலை, ராமதாசின் கிடுக்கிப்பிடி, பொன்முடியின் அதிரடி, சிதம்பரத்தின் எச்சரிக்கை, நீதிமன்றங்களின் உத்தரவு, கல்வி வள்ளல்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி.. என இவையனைத்தும் யாருக்கும் ஏனென்றே புலப்படாத அதிபயங்கரமான சக்திகள் கல்வித்துறையை ஆட்டிப் படைப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

90களுக்குப் பிறகான உயர்கல்விக் கொள்கைச் சீர்திருத்தங்களின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று கல்விக்கடன். உயர் கல்வி வழங்கும் பொறுப்பை அரசு கைவிட்டு, அதை முதலாளிகளிடம் ஒப்படைப்பது என்ற இந்தச் “சீர்திருத்தத்தின்’ விளைவுதான் கல்விக்கடன். பம்பர் லாட்டரி தொழிலதிபர்களைப் போல சுயநிதிக் கல்லூரி முதலாளிகள் இப்படிக் கல்விச் சேவையில் தங்களை “அர்ப்பணித்துக்’ கொள்ள வேண்டுமென யார் அழுதார்கள்?

தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் சீட் நிரப்பிக் கொடுக்கும் சிரமத்திற்குள்ளாகி, பொன்முடி போன்ற அமைச்சர்கள் வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பதை விட, உயர்கல்வி முழுவதையும் அரசே ஏற்று நடத்தலாமே! இந்தக் கேள்வியை மட்டும் யாரும் எழுப்புவதில்லை. கவனமாகத் தவிர்க்கப்படும் இந்தக் கேள்விக்குள்தான் அரசின் உடைந்து விட்ட உயர்கல்வி அமைப்பும், அதனை வழிநடத்தும் சூத்திரதாரிகளும் மறைந்து கொண்டிருக்கிறார்கள்.

உயர்கல்வி: ஒரு சின்னத்தனமான வரலாறு

இந்திய உயர்கல்வித் துறை நேருவின் அரைவேக்காட்டு சோசலிசக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் முறையில் துவக்கப்பட்டது. “லைசன்ஸ் ராஜ்’ என இன்று முதலாளித்துவவாதிகளால் இகழப்படும் அன்றைய காலகட்டத்தில்தான் இன்று உயர்கல்வியில் பெயரளவு அதிகாரத்தோடு இயங்கும் பல்கலைக் கழக மானியக் குழு (யூ.ஜி.சி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.) போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 1950-51களில் 49.4 சதவிகிதமும், 1986-87களில் 75.9 சதவிகிதமுமாக, உயர் கல்விக்கான நிதி வரவு பெரும்பான்மையாக அரசைச் சார்ந்தே பெறப்பட்டது.

இக் காலகட்டத்தில்தான், மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணமாக பெறப்பட்ட நிதி வரவு 36.8 சதவிகிதத்திலிருந்து, 12.6 சதவிகிதமாகக் குறைந்தது. மேலும், இந்தியாவின் அறிவுக் கோவில்கள் என கொண்டாடப்படும், ஐ.ஐ.டி முதலான உயர் கல்வி நிறுவனங்களும் இக்காலகட்டத்தில்தான் உருவாக்கப் பெற்றன. எனினும், பொதுவில் கல்விக்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில், உயர்கல்விக்கு பத்து சதவிகிதம் மட்டுமே இதுவரை ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறது.

ஸ்டான்லி வோல்போர்ட் எனும் ஆய்வாளர் குறிப்பிடுவதைப் போல, “”நவீன இந்திய அதிகாரம் மற்றும் வாய்ப்பு வசதிகளின் சிகரங்களைத் தொடுவதற்கான வேகமான வழியாக, உயர்கல்வித் துறையை நடுத்தர வர்க்கம் உணரத் துவங்கியது.” அதிகரித்து வரும் உயர்கல்வித் தேவையை ஈடு கட்ட, புதிய நிறுவனங்களை உருவாக்கவும், சீட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுமான தேவை உருவாகியது.

இச்சூழலில்தான் 90களின் துவக்கத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன. 1994, 1995ல் வெளியிடப்பட்ட உயர் கல்வி குறித்த அறிக்கைகளில், “”கல்விக்கான ஒதுக்கீடு அதிகரித்து வருவதால், அடிப்படை மற்றும் பள்ளிக் கல்வியில் முழுமையான, தரமான, நியாயமான வாய்ப்புக்களை வழங்குவதில் போதுமான நிலையை அடையாத நாடுகளில், பொது வளங்களில், உயர்கல்விக்கு அதிகபட்ச ஒதுக்கீடு கூடாது” என சாணக்கியத்தனமான நீதியை உலக வங்கி முன்வைத்தது. உயர்கல்வியை பள்ளிக் கல்வியின் எதிரியாகக் காட்டுவதன் வாயிலாக, அதிலிருந்து அரசு விலகுவதற்கு வழி சொல்லிக் கொடுத்தது. உலக வங்கியின் இந்தப் பொன்மொழி உயர் கல்விக்கான புதிய மனுநீதியாக இந்திய ஆளும் வர்க்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

யாருக்கு லாபம்?

1997இல் இந்திய அரசின் பொருளாதார அமைச்சகம் வெளியிட்ட””இந்தியாவில் அரசு மானியங்கள்” என்ற அறிக்கை உயர்கல்வியின் எதிர்காலத்தைக் கோடிட்டுக் காட்டியது. உயர்கல்வி சமூக நன்மை தராத சேவை என்பதாலும், அதற்கான மானியங்களின் சமூகப் பலனை விடவும், தனிநபர் பலன்களே அதிகமிருப்பதாலும் உயர்கல்விக்கு மானியங்கள் அளிக்கப்படக்கூடாது என வாதிட்டது. ஏதோ அடிப்படைக் கல்விக்கும், பள்ளிக் கல்விக்கும் கோடி கோடியாகக் கொட்டி முன்னேற்றப் போவதைப் போலக் கொள்கைகள் வகுக்கப்பட்டன. கடந்த பத்தாண்டுகளில் எத்தகைய “முன்னேற்றம்’ ஏற்பட்டுள்ளதென்று கூற புள்ளிவிவரங்கள் தேவையில்லை.

உடனடியாக, “நன்மை தரக் கூடிய சமூகநலப் பட்டியலிலிருந்து’ உயர்கல்வி நீக்கப்பட்டது. பின்னர் “இரண்டாம் பட்ச சமூகநலப் பட்டியலில்’ சேர்க்கப்பட்டது. விவசாயத்தை மாநிலப் பட்டியலுக்குத் தள்ளிவிட்ட மத்திய அரசு, கல்வியை மட்டும் பொதுப்பட்டியலிலேயே வைத்துக் கொண்டது. இதைக் காரணம் காட்டி, கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டுமென பொன்முடி இப்பொழுது வாதிடுகிறார்.

கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்து விட்டால், ஜேப்பியாரையும், உடையாரையும் பொன்முடி உள்ளே தள்ளி விடுவாரோ? அவர்களுடைய காசில் தானே எல்லா ஒட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளின் கல்லாப் பெட்டியும் நிரம்பிக் கொண்டிருக்கிறது. கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தால், இன்னும் பல நூறு ஜேப்பியார்கள்தான் அதிகரிப்பார்கள் என்பது வெளிப்படை.

2001ல் உயர்கல்வி சீர்திருத்தங்களை ஆய்வு செய்ய “மாபெரும் கல்வியாளர்களான’ முகேஷ் அம்பானி மற்றும் குமாரமங்கலம் பிர்லா ஆகியோரை உள்ளடக்கிய கமிட்டியை அரசு அமைத்தது. அக்கமிட்டி உலக வங்கியின் புதிய மனுநீதியை அச்சுப் பிறழாமல் வாந்தியெடுத்தது. மத்தியக் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வரவை அதிகரிக்க அரசும், பல்கலைக் கழக மானியக் குழுவும் உருவாக்கிய நீதிபதி புன்னையா கமிட்டி, சுவாமிநாதன் கமிட்டி, பைலி கமிட்டி, அனந்த கிருஷ்ணன் கமிட்டி, முகமதுஉர்ரெஹ்மான் கமிட்டி என அனைத்துக் கமிட்டிகளும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்துவதையே முக்கிய நடவடிக்கையாக வழிகாட்டின.

கல்விக் கடன் வழங்குவதன் மூலமும், கல்விக் கட்டணத்தை உயர்த்துவதன் மூலமும்தான் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கான செலவை நிறுவனங்கள் திருப்பி எடுக்க முடியும் என கொள்கை வகுப்பாளர்களால் வழிகாட்டப்பட்டது. இதன் மூலம் அரசு உயர் கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து நழுவிக் கொண்டு கல்வி வியாபாரிகள் கடை விரிக்க வழி வகுத்தது.

மறுபுறம் கல்விக் கடன் மூலமாக சுமையை வங்கிகளுக்கும், வங்கிகள் மூலமாக தனிநபர்களுக்கும் மாற்றி விட்டது என்கிறார் கல்வியாளர் கீதா ராணி. (“இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களும், உயர் கல்வி நிதி முதலீடும்’, 2003). மேலும், உலகளாவிய அனுபவத்தின் அடிப்படையில் கல்விக் கடன்கள் சரியாகத் திருப்பியளிக்கப்படுவதில்லையென காலப் போக்கில் கைவிடப்பட்டதையும், பெண்களுக்கு எதிர்மறை வரதட்சிணையாகக் கருதப்படுவதையும், நமது நாட்டில் பின்தங்கிய பிரிவினரின் குறிப்பான தகவல்கள், பொருளாதார நிலை, பின்புலம், அதற்கேற்ற வழிமுறைகள், வட்டி, தவணைகள் என சிறப்புக் கவனமின்றி பொத்தாம் பொதுவாக வழங்கப்படுவதைச் சுட்டிக் காட்டும் அவர், நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் கல்விக் கடன் என்பது தொடராது. மாறாக சிறிது சிறிதாக நிறுத்தப்பட்டு விடும் என ஆணித்தரமாக வாதிடுகிறார்.

கல்வி: முதலாளித்துவக் கொள்ளையனுக்கே பாடம் சொல்லும் இந்தியா!

இக்கொள்கைகளின் விளைவாக 90களுக்குப் பிறகு, அரசுக் கல்லூரிகளில் சுயநிதி படிப்புப் பிரிவுகள் துவக்கப்பட்டன. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் கடுமையான எதிர்ப்பு, போராட்டத்திற்கிடையே பல்கலைக் கழகங்களோடு இணைக்கப்பட்டன. தனியார் பல்கலைக் கழகங்கள் புற்றீசல் போலப் பரவின. 2002-04 ஆண்டுகளில் மட்டும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை நாட்டில் 96% உயர்ந்திருக்கிறது. சுயநிதிக் கல்லூரிக் கொள்ளைக்கோ அளவே இல்லை.

2005ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி அமெரிக்காவில் உயர்கல்வி பெறும் மாணவர்களில் 23.2% பேர்தான் தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கின்றனர். இந்தியாவிலோ உயர்கல்வி பயிலும் மாணவர்களில் 63.2% பேர் சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கின்றனர். முதலாளித்துவக் கல்விக் கொள்ளையில் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பனாகிவிட்டது இந்தியா.

தரமான பொருளுக்கு விலை அதிகமாகத்தான் இருக்கும் என்ற முதலாளித்துவ மூட நம்பிக்கை வலிமையான பொதுக் கருத்தாக மாற்றப்பட்டு விட்டதால், இந்த அநீதிக்கு எதிரான போராட்டம் மிக அரிதாகவே இருக்கிறது. உயர்கல்வியின் விலை அதிகரித்து விட்ட காரணத்தால்தான்,

17-24 வயது வரையுள்ள வயதுப் பிரிவினரில் 7 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி பயிலச் செல்லுகின்றனர். வல்லரசு ஜம்பமடிக்கும் இந்தியாவை விடப் பின்தங்கிய நாடுகள் என அழைக்கப்படும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இதனை விட அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர்கல்வியைப் பெறுகின்றனர்.

கடந்த இருபது ஆண்டுகளில் நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகள், தனியார் கொள்ளைக்கே வழி வகுத்திருக்கின்றன. 2003 சௌரப் சௌத் வழக்கில், நீதிபதி லட்சுமணன், நிலவும் சூழலை விவரிக்கிறார்.””ஒவ்வொரு ஆண்டும் அட்மிஷன் காலங்களில் தொழில்முறைப் படிப்புகளில் சேர விரும்பும் லட்சக்கணக்கான மாணவர்கள் அளவில்லாத உளைச்சலையும், முறைகேடுகளையும் அனுபவிக்கிறார்கள். தெளிவில்லாத கொள்கைகள், முரண்பாடான முறைகள், தகவல் பற்றாக்குறை ஆகியவை இதற்குக் காரணம். தொழில் முறைப் படிப்புகளுக்கான கல்லூரிகளும், இடங்களும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்க, புதிய புதிய படிப்புகள் வந்து குவிய, கல்வி வாய்ப்புகளைத் தேடி மாநில எல்லைகளைக் கடந்து மாணவர்கள் அலைய வேண்டியிருக்கிறது. பெற்றோர், மாணவர்களின் துயரங்கள் ஒவ்வோரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன”. கல்லும் கரைந்துருகும் விதத்தில் பேசும் நீதிபதி, கல்வி வியாபாரமாக்கப்பட்டது தான் இவையனைத்திற்கும் காரணம் என்பதை மட்டும் கூறாமல் தவிர்த்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

சுயநிதிக் கல்வி: வரமல்ல, சாபம்

கல்வி என்பது “சமூக மேம்பாட்டிற்கான லாப நோக்கற்ற சேவை’ என்ற நிலையிலிருந்து, விற்கத் தக்க, லாபமீட்டக் கூடிய தொழிற் சேவை என உலக வங்கியாலும், உலக வர்த்தகக் கழகத்தாலும் வரையறுக்கப்பட்டு அதைக் கொள்கை ரீதியில் அரசு பின்பற்றி வருகிறது. எனினும் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் சேவை நிறுவனங்களாகக் கருதப்பட்டு, அவற்றின் வருமானத்திற்கு இன்றளவும் வரிவிலக்கும் அளிக்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை.

இந்த ஆண்டும் கவுன்சலிங்கில் நிகழ்ந்த குளறுபடிகள், செட்டிநாடு மருத்துவக் கல்லூரி ஒரு சீட்டிற்கு 14 லட்சம் வசூலிப்பது, நீதிமன்றக் குழப்படிகள், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கு சீட்டுகளை நிரப்பித் தருவதில் அரசு காட்டும் முனைப்பு என திக்குத் தெரியாத காடாக, ஐந்திலக்கச் சம்பளக் கனவில் பணத்தைத் தொலைக்கும் லாட்டரியாக உயர்கல்வி, குறிப்பாக பொறியியல் கல்வி மாறி நிற்கின்றது.

நுனி நாக்கு ஆங்கிலமும், டீசென்டான’ நடை, உடை பாவனைகளும், தோற்றமும் இல்லாதவர்களுக்கு கல்விக் கடன் மட்டும் மறுக்கப்படவில்லை, பன்னாட்டுக் கம்பெனிகளின் நுழைவாயில்களும் திறக்க மறுக்கின்றன. அவ்வாறு உபரியாகக் கழித்துக் கட்டப்படும் இளைஞர்கள் சென்னையிலும், பெங்களூரிலும் சில ஆயிரங்களுக்கு, சில இடங்களில் சம்பளம் கூட இல்லாமல் கொத்தடிமைகளாக வேலை செய்கிறார்கள். பலர் சொல்லப்படும் பொறியியல் கல்வி தேவைப்படாத கடைநிலைப் பணிகளுக்கு வேறு வழியின்றி தள்ளப்படுகிறார்கள்.

பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் (குமுதம், 18.7.2007) சுட்டிக் காட்டுவதைப் போல, 2004ல் ரயில்வேயில் கடைநிலைப் பணியான கலாசி வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் 20,000 பேர் பொறியியல் படிப்புப் படித்தவர்கள் என்றால், அங்கே தெரிகிறது உயர்கல்வியின் லட்சணம்! மேலும், தமிழகத்திலிருந்து ஒவ்வோராண்டும் வெளியேறும் 70,000 பொறியியல் பட்டதாரிகளில் பத்து சதவிகிதத்தினருக்குத்தான் வேலை உத்திரவாதமுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

கல்வியாளர் பி.ஜி. திலக்கின் சொற்களில் சொல்வதானால்,””கணக்கு வழக்கில்லாத சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளும், மேலாண்மை நிறுவனங்களும் உயர் தகுதி வாய்ந்த அறிவியல், தொழில் நுட்ப மனித வளத்தை உருவாக்கவில்லை. மாறாக, ஐ.டி. கூலிகளைத் தான் உருவாக்கியிருக்கிறது. முழுமையாகக் குழம்பிக் கிடக்கும் சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல், பொருளாதார அரங்குகளின் நிகழ்வுகள் கண்டு மாணவர்களிடையே பயபீதியைத் தோற்றுவித்துள்ளது.” (“இந்தியாவில் உயர்கல்வித் தனியார்மயம்’, 2002)

இத்தனைக்குமிடையில் இந்தியா டுடே, தினமணி முதல் பல வண்ணப் பத்திரிக்கைகளும், கல்வி, வேலைவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஊதிப் பெருக்குகின்றன. எதிர்கால வேலை வாய்ப்புகளின் புள்ளி விவர மதிப்பீடுகளை அள்ளி வீசுகிறார்கள். ரீடெய்ல் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட், ஏர்ஹோஸ்டஸ் மேனேஜ்மென்ட் என புதிய, புதிய படிப்புகள் சேவைத் துறைக்கு பொற்காலம் வரப் போவதாக உறுமியடிக்கப்படுகின்றன.

இத்தகைய தனித் திறன் தேர்ச்சிப் படிப்புகள் நீண்ட கால அடிப்படையில் உதவாது என்பதையும், ஊதிப் பெருக்கப்படும் துறைகளின் சந்தைத் தேவையின் நிச்சயமற்ற தன்மை, கொள்ளளவு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, சில ஆண்டுகளில் இச் சந்தைக்கான தேவைகள் தீர்ந்து தேவையற்ற உபரியாக இளைஞர்கள் கழித்துக் கட்டப்படுவார்கள் என கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். மொத்தத்தில், ஒருபுறம் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான தரமான, உத்திரவாதமான உயர் கல்வி என்பது இந்தப் பகற்கொள்ளையில் காணாமற் போய்விட்டது. இன்னொருபுறம் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு உயர் கல்வி நிர்த்தாட்சண்யமாக மறுக்கப்படுகிறது.

உயர்கல்வி சமூக நன்மை தராத சேவை அதற்கான மானியங்களின் சமூகப் பலனை விடவும், தனிநபர் பலன்களே அதிகம். எனவே, உயர்கல்விக்கு மானியங்கள் அளிக்கப்படக்கூடாது என்று கூறும் அரசின் கொள்கை அறிவிப்பை இப்போது பரிசீலித்துப் பாருங்கள். அரசு இப்படிக் கூறும்போது “கடன் கொடு’ என்று அரசு வங்கிகளுக்கு சிதம்பரம் ஏன் உத்தரவிட வேண்டும்?

பன்னாட்டுக் கம்பெனிக்கு ஆள் சப்ளை

இது சுயநிதிக் கொள்ளையர்களின் லாபத்துக்காக மட்டும் அன்று. ஃபோர்டு, ஹூண்டாய்க்குத் தேவையான பொறியியல் பட்டதாரிகளையும், வால் மார்ட்டுக்கும் அம்பானிக்கும் தேவையான ரீடெய்ல் மேனேஜ்மென்ட் பட்டதாரிகளையும் சப்ளை செய்யப் பொறுப்பேற்றிருக்கும் அரசு, அந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப “உங்களை நீங்கள் உங்களுடைய சொந்தக் காசிலேயே தயார் செய்து கொள்ளுங்கள்’ என்று மக்களிடம் கூறுகிறது. பணமில்லாவிட்டால் கடன் கொடுக்கிறேன் என்றும் முன்வருகிறது.

கட்டினால் பெற்றோரின் பணம். கட்டாவிட்டால் அரசு வங்கிகளில் உள்ள மக்கள் பணம். மக்கள் ஆதரவோடு அரசுத்துறையைக் கொல்லுகின்ற ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வேலை இது. விவசாயக்கடன் என்பது உரம், பூச்சிமருந்து, விதை முதலாளிகளுக்குப் போவதைப் போல, வங்கிக் கடன் வள்ளல்களின் கல்லாவுக்குப் போகிறது. பயிற்றுவிக்கப்படும் மாணவனின் திறமையையோ செலவே இல்லாமல் பன்னாட்டு நிறுவனங்கள் வரவு வைத்துக் கொள்கின்றனர்.

அடுத்ததாக, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உள்ளே நுழைவதற்கான சட்ட மசோதா தயாராகி வருகிறது. தனியார் பல்கலைக் கழக மசோதாவும் பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மருத்துவமனைகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதைப் போல பல்கலைக் கழகங்களும் பங்குச்சந்தையில் குதிக்கின்றன. (பார்க்க: பெட்டிச் செய்தி)

லாட்டரியாக மாறி விட்ட உயர்கல்வியை மென்மேலும் மேலிருந்து சீர்திருத்தங்கள் அல்லது முறைப்படுத்துதல்களைச் செய்வதன் மூலம் மாற்ற முடியாது. கமிசன்களும், நீதிமன்றங்களும் கவைக்குதவாதவை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. உலக வங்கியும், உலக வர்த்தகக் கழகமுமே நாட்டின் உண்மையான எஜமானர்களாக விளங்க, அவர்களுடைய கைத்தடிகளான ஓட்டுப் பொறுக்கிகளிடம், நாம் என்னதான் தொண்டை கிழியக் கத்தினாலும், உயர்கல்வியை அரசு ஏற்று நடத்தப்போவதில்லை.

இது வெறுமனே உயர் கல்வி சார்ந்த பிரச்சினையும் அல்ல. விவசாயத்திலிருந்து விவசாயிகள் விரட்டியடிக்கப்படுவதும், ஆலைகளிலிருந்து தொழிலாளர்கள் துரத்தப்படுவதும், மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படுவதும் தனித்தனிப் பிரச்சினைகளல்ல. பன்னீர் செல்வமும், ரெஜினாவும், தற்கொலை செய்து கொண்டு மடிந்த 3000க்கும் மேற்பட்ட ஆந்திர விவசாயிகளும், விதர்பா விவசாயிகளும், சுட்டுக் கொல்லப்பட்ட நந்திகிராம் விவசாயிகளும் வெவ்வேறு எதிரிகளால் கொல்லப்பட்டவர்களல்ல. எனவே, இப்புதிய மனுநீதிக்கெதிராக, மறுகாலனியாக்கம் எனும் இந்த பகாசுர எதிரிக்கு எதிராக, கல்வியுரிமை மறுக்கப்படும் மாணவர்களும், மக்களும் முழுமையாக, தீர்க்கமாக அணிதிரண்டு போராடுவதைத் தவிர இதற்கு வேறு தனிப்பட்ட தீர்வு ஏதுமில்லை.

பன்னீர் செல்வம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பின்னிருக்கும் சூத்திரதாரிகளை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு கனரா வங்கி அதிகாரிதான் எதிரியாகப்பட்டிருப்பார். கடன் வாங்கப்போன பன்னீர் செல்வத்தின் வாழ்க்கையையும், கடன் கொடுக்க மறுத்த கனரா வங்கியின் நிதி நிர்வாகத்தையும் ஆட்டிப்படைப்பவை உலக வங்கி போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள்தான் என்பதை நாம் புரிந்து கொள்ளாத வரை, பன்னீர் செல்வங்கள் கொத்து கொத்தாக செத்து மடிவதை நாம் தடுக்க முடியாது.

பல்கலைக்கழகப் பங்குகளில் இன்றைய விலை…!

அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகமான மும்பை பல்கலைக் கழகத்தை லாபமீட்டும் நிறுவனம் என்று அறிவித்து, அதனைப் பங்குச் சந்தையின் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாற்றவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு டாயிஷ் வங்கி என்ற ஜெர்மன் பன்னாட்டு வங்கியிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது பல்கலைக் கழக நிர்வாகம். இதனை அமல்படுத்த வேண்டுமானால் பல்கலைக் கழகங்கள் குறித்த மத்திய மாநில அரசின் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

“உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் ஒரு அரசுப் பல்கலைக்கழகம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதில்லை.. ஒரு கல்வி நிறுவனத்தைத் தொழில் நிறுவனமாக மாற்றினால் பிறகு செனட், சிண்டிகேட் முதலிய அமைப்புகள் அதனை நிர்வகிக்க முடியாது. கல்வித்துறை மேம்பாடும் அதன் நோக்கமாக இருக்க முடியாது. பங்குதாரர்களுக்கு அதிகமான லாப ஈவுத்தொகையை ஈட்டித் தருவது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கும். கல்வி என்பது வெறும் வியாபாரம் அல்ல” என்று கூறி இம்முடிவைக் கண்டித்திருக்கிறார் மும்பை பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் எம்.ஆர்.மய்யா. (பிசினெஸ் ஸ்டாண்டர்ட், ஆகஸ்டு 22, 2007)

“அதுக்காக இப்படியா’ என்று பங்குச் சந்தைக் காரர்களே பயந்து அலறும் அளவுக்கு அம்மணமாக ஆடுகிறது முதலாளித்துவ லாபவெறி. கல்வியை தொழில்வர்த்தகத் துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டியது மட்டும்தான் பாக்கி!

– புதிய கலாச்சாரம், செப்டம்பர்’2007

vote-012
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பழ.நெடுமாறன் – கககபோ!

70

nedu_a-copy

ஐயா பழ.நெடுமாறன் புலிகள் இயக்கத்தின் ஆலோசகர். புலம் பெயர் தமிழர்கள் பலரின் மதிப்புக்கு உரியவர். ஈழத்தமிழர்க்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் எனப் போற்றப்படுபவர்.

நேற்றைய தினமணி நாளிதழில் “தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்’ என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார் நெடுமாறன். “இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை விட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும்” என்று தொடங்குகிறது அவரது கட்டுரை.

“Loyal than the king” – ராஜ விசுவாசத்தில் மன்ன்னையே விஞ்சியவர்கள் எனப்படுவோர் எப்படி இருப்பார்கள் என்று புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஐயாவின் கட்டுரையைப் படித்துப் புரிந்து கொள்ளலாம்.

இந்திய அரசு ராஜபக்சேவுக்குத் துணை நின்றதற்கு எம்.கே.நாராயணன், மேனன், நம்பியார் போன்ற மலையாளிகளின் தமிழர் விரோத உணர்வுதான் காரணம் என்று நமக்குத் தெளிவு படுத்தியிருந்தார்கள் தமிழ் தேசியவாதிகள். மேற்படி மலையாளிகள் போதுமான அளவுக்கு இந்திய மேலாதிக்க உணர்வு இல்லாதவர்கள் என்பதும், நெடுமாறன் அளவுக்கு ‘நுண்மான் நுழைபுலமும் அறிவாற்றலும்’ இல்லாத கபோதிகள் என்பதும் அவரது கட்டுரையைப் படித்த பின்னர்தான் நமக்கு வெளிச்சமாகிறது.

நேற்றுவரை தொப்பூள்கொடி உறவு, தமிழ்ச் சொந்தங்கள் என்று கூறி ஈழத்தமிழரை ஆதரிக்குமாறு தமிழக மக்களிடம் கூறி வந்த ஐயா நெடுமாறனின் இரத்த நாளங்களுக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் இந்திய மேலாதிக்க கொலஸ்ட்ராலின் அளவை இந்தக் கட்டுரை துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.

தமிழ் உணர்வைத் தூக்கிக் கடாசிவிட்டு, சிங்கள அரசால் ஏமாற்றப்பட்டு விட்ட இந்திய மேலாதிக்கவாதியின் உணர்விலிருந்து, அதாவது பார்ப்பன தேசிய உணர்விலிருந்து அல்லது ஆரிய உணர்விலிருந்து சிந்திக்குமாறு இந்திய தேசபக்தர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார் நெடுமாறன். அந்தக் கட்டுரையின் சாரமான பகுதிகளை மட்டும் கீழே தருகிறோம்:

“…ஆனால் இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை விட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும். 1980-களில் தொடங்கி இன்று வரை இலங்கையில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் இந்துமாக்கடலின் முக்கியக் கடல், வான் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஆதிக்கப் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது.”

“1977-ம் ஆண்டு ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது இந்தியாவின் மேலாதிக்கத்தில் இருந்து விடுபட விரும்பியது. அதற்கு ஒரே வழி அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் உள்ள உறவுகளை வலுப்படுத்துவதேயாகும் எனத் திட்டமிட்டு செயல்பட்டது….”

“…இலங்கையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் வளர்ந்தோங்கிய நிலையில் இந்திய அரசின் கருத்துகள் எதற்கும் சிங்கள அரசு மதிப்புக் கொடுக்கவில்லை. எனவே அதற்கு எதிராக சிங்கள அரசை மிரட்டுவதற்காக பிரதமர் ராஜீவ்காந்தி காலத்தில் அதாவது 1987-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி இந்திய ராணுவ விமானங்கள் முற்றுகைக்கு ஆளாகியிருந்த யாழ்ப்பாணத்தின் மீது பறந்து சென்று உணவுப் பொதிகளை வீசின. இதைக் கண்டு சிங்கள அரசு அச்சம் அடைந்தது. 1987-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி இந்திய இலங்கை உடன்பாட்டில் கையெழுத்து இட்டாக வேண்டிய நெருக்கடி ஜயவர்த்தனவுக்கு ஏற்பட்டது…”

“…இந்திய அரசு அவரை மிரட்டியபோது மேற்கத்திய நாடுகள் ஒன்றுகூட அவருக்கு உதவ முன்வரவில்லை. சின்னஞ்சிறிய இலங்கைக்காகத் தங்கள் பொருள்களின் விற்பனைக்கான மிகப் பெரிய சந்தை நாடான இந்தியாவுடன் முரண்பட மேற்கு நாடுகள் தயாராகவில்லை என்பதே உண்மையாகும்…”

“…இலங்கையில் சீனாவின் ஆயுதக்கிடங்கு அமைவது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென் ஆசியப் பகுதிக்கே ஆபத்தானதாகும். இப்பகுதியில் உள்ள நாடுகளுக்குத் தேவைப்படும் போது உடனுக்குடன் ஆயுத உதவிகளைச் சீனா செய்யமுடியும்….”

“….இதன்மூலம் சேதுக்கால்வாயில் செல்லும் அனைத்து நாட்டு சரக்குக் கப்பல்கள் மற்றும் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஆகியவற்றை சீனா தொடர்ந்து கண்காணிக்க முடியும். 1974 ஜூலை 8-ம் தேதி இந்திரா காந்தி காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்திய இலங்கை உடன்பாட்டின்படி இந்தத் துரப்பணப்பணியை இந்தியாவும் இலங்கையும் கூட்டாக மேற்கொள்ளவேண்டும். ஆனால் அந்த உடன்பாட்டை மீறும் வகையில் இந்தப் பணி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது….”

“…சீனாவுடனும் அதன் கூட்டாளிகளுடனும் கூட்டு வைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே புலிகளுக்கு எதிரான ராணுவ வெற்றிகளை அடைய முடியும் என இலங்கையை உணரச் செய்வதே சீன அரசின் நோக்கம் என்பதையும் அந்த நோக்கத்தில் அது வெற்றி பெற்றுவிட்டது என்பதையும் இந்தியா உணரவே இல்லை…”

“… பாகிஸ்தானுடன் சீனா கொண்டுள்ள நெருக்கமான உறவு கூட இந்தியாவுக்கு பெரும் அபாயமாக விளங்குகிறது. அதே அளவுக்கு இப்போது உருவாகியிருக்கும் இலங்கை சீன உறவு எதிர்காலத்தில் தென்னிந்தியாவிற்குப் பெரும் சவாலாக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை…”

“… இலங்கையரசுக்கு சீன அரசு ராணுவ ரீதியில் உதவி வருவது எதிர்காலத்தில் வணிக நலன்களை கருதி அல்ல. இந்தியா அமெரிக்காவுடன் கொண்டுள்ள கூட்டணியின் விளைவாக இந்துமாக்கடல் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் தான் தனிமைப்பட்டுவிடக்கூடாது எனக் கருதுவதனாலேயேயாகும். ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியில் இப்பகுதியில் உள்ள இலங்கை, நேபாளம், வங்கதேசம், மியான்மர், மலேசியா ஆகிய நாடுகளுடன் மிக நெருக்கமான உறவை சீனா வளர்த்து வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான், ஈரான் ஆகியவை சீனாவின் கூட்டாளிகளாகிவிட்டன…”

“…இலங்கையின் இந்தப் போக்கினை கண்ட இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான ரவி கவுல் என்பவர் இந்துமாக்கடலும் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த நிலையும்என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் பின்வருமாறு கூறியுள்ளார். பிரிட்டன் பாதுகாப்புக்கு அயர்லாந்து எவ்வளவு முக்கியமானதோ, சீனாவின் பாதுபாப்புக்கு தைவான் எவ்வளவு இன்றையமையாததோ அதைப்போல இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மிக முக்கியமானதாகும். இந்தியாவின் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும் வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளமுடியாது. ஏனென்றால் இந்தியாவின் பாதுபாப்புக்கு அதனால் அபாயம் நேரிடும்.‘ “

“அமெரிக்காவுடன் இந்தியா செய்த கொண்ட அணுசக்தி உடன்பாட்டின் விளைவாக விரிவடையப்போகும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்க வலிமையானது எதிர்காலத்தில் தனக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்ற கலக்கம் சீனாவுக்கு உள்ளது. இந்தியாவில் ராணுவ, பொருளாதார முக்கியத்துவம் மிக்க பகுதியாக மாறிவரும் தென்னிந்தியாவின் பாதுபாப்பினை உறுதி செய்வதற்கு இலங்கை தனது முழுமையான கட்டுபாட்டிற்குள் வரவேண்டும் என்பது இந்தியாவின் அவசியத் தேவை என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளது.”

” இலங்கையில் தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கும், விடுதலைப் புலிகளை ஓரங்கட்டுவதற்கும், தான் அளித்த உதவியினால் எதிர்காலத்தில் இலங்கை தனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட ஒரு நாடாக இருக்கும் என இந்தியா கருதியது குறுகிய காலத்திலேயே பகற்கனவாய் போய்விட்டது. தனது நோக்கம் நிறைவேறியவுடன் இந்தியாவைத் தூக்கியெறிய இலங்கை தயங்கவில்லை. இந்தியாவின் தயவு இனி இலங்கைக்குத் தேவையில்லை…” இதுதான் அய்யா நெடுமாறனின் கட்டுரை சாரம்சம்.

ஒரு பெரிய நாடு, தனது சிறிய அண்டை நாட்டை ஆதிக்கம் செய்வது நியாயம். சிறிய நாடு அதற்கு அடங்கி நடப்பதுதான் தருமம். நாடுகளுக்கு இடையிலான சமத்துவம், சுதந்திரம் என்றெல்லாம் ஒரு சிறிய நாடு பேச முடியாது. பேசக்கூடாது என்பதே நெடுமாறனின் கருத்து. “ஈழத்தமிழர்களை ஆதரித்திருந்தால், இந்தியாவின் விசுவாசமிக்க அடிமைகளாக தமிழர்கள் இருந்திருப்பார்கள். இப்படி சிங்களனை நம்பிக்கெட்டாயே பாரதமே” என்று புலம்பியிருக்கிறார் நெடுமாறன்.

இலங்கை அரசு ஈழத்தமிழர்களை ஒடுக்குகிறது என்ற காரணத்தினால்தான் இலங்கையின் மீதான இந்திய மேலாதிக்கத்தை அவர் நியாயப்படுத்துகிறார் என்று யாரும் கருதிக் கொள்ளவேண்டாம். இலங்கை அரசுக்கும், அதற்கு துணைநின்ற பாகிஸ்தான் அரசுக்கும் மட்டும் இந்த நியாயத்தை நெடுமாறன் கூறவில்லை. தமிழர்களை எந்த விதத்திலும் ஒடுக்காத, நேபாளம், பூடான், வங்கதேசம் உள்ளிட்ட எல்லா தெற்காசிய நாடுகளும் இயற்கையிலேயே இந்திய மேலாதிக்கத்துக்கு அடிமையாக இருக்க கடமைப்பட்டவர்கள் என்கிறார் நெடுமாறன். யாரிடம் ஆயுதம் வாங்குவது, எந்த நாட்டு முதலாளிகளை தொழில் தொடங்க அனுமதிப்பது, எந்த நாட்டுடன் நட்புறவு கொள்வது என்று தீர்மானிக்கும் உரிமை சிறிய நாடுகளுக்கு இருக்க முடியாது என்ற மேலாதிக்க நீதியை நிலைநாட்டுவதற்கு ரவி கவுல் எனும் இந்திய கடற்படை அதிகாரியையும் மேற்கோள் காட்டுகிறார்.

மேலாதிக்கம் என்பது என்ன? அதனால் ஆதாயம் அடைபவர்கள் யார்? இந்திய மேலாதிக்கம் என்பது இந்திய மக்களுக்கோ, இந்திய அரசால் ஒடுக்கப்படும் தெற்காசிய நாடுகளின் மக்களுக்ககோ என்ன நன்மையைச் செய்யும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பிரணாப் முகர்ஜியோ சிவசங்கர் மேனனோ எப்போதுமே பதில் சொல்வதில்லை. அரூபமான இராணுவ அபாயங்களைக் காரணம் காட்டுவதன் மூலம் மேலாதிக்கத்தை அவர்கள் நியாயப்படுத்துக்கிறார்கள். அதையேதான் நெடுமாறனும் செய்கிறார்.

டாடா, பிர்லா, அம்பானி, இந்துஜா, மிட்டல் போன்ற எந்த இந்தியத் தரகு முதலாளிகளுக்காக இந்திய மக்களை இந்திய அரசு ஒடுக்குகிறதோ, அதே முதலாளிகளின் லாப வேட்டைக்கு சிறிய நாடுகளையும் உட்படுத்துவதுதான் மேலாதிக்கத்தின் நோக்கம். எளிமையாகச் சொன்னால், வங்கதேசத்தின் சணல் ஆலைகளை இந்தியத் தரகு முதலாளிகள் கைப்பற்றிக் கொண்டதும், நேபாளத்தின் மின் நிலையங்களையும், ஆற்றுநீரையும், தொழில்களையும் இந்தியா கட்டுப்படுத்துவதும்தான் மேலாதிக்கத்தின் நோக்கம். இதனைப் பாதுகாக்கும் நோக்கத்தை மறைப்பதற்குத்தான் பாதுகாப்பு அபாயம் என்ற புருடாக்கள். வாஜ்பாயியும் முஷாரப்பும் நடத்திய எக்ஸிபிஷன் மாட்ச் ஆன கார்கில் போரின் போது, இரண்டு பக்கமும் நூற்றுக்கணக்கான சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். ஆனால் குஜராத்தில் பாக் எல்லையில் இருக்கின்ற, 25,000 கோடி மதிப்பிலான அம்பானியின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது மட்டும் பாகிஸ்தான் ஒரு கல்லைக் கூட எறியவில்லை.

இராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்தது, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கா, குர்து மக்களுக்கு இன உரிமை வாங்கித்தருவதற்கா? இராக்கின் எண்ணெய் வயல்களை அமெரிக்க கம்பெனிகள் அபகரித்துக் கொள்வதற்குத்தான் அந்தப் போர் என்பது பாமரனும் அறிந்த உண்மை. சிறிய நாட்டின் மக்களுக்குச் சொந்தமான தொழில்களையும், இயற்கை வளங்களையும் பெரிய நாடு ஆக்கிரமித்துக் கொள்வதும், ஆதிக்கம் செய்வதும் நியாயம்தான் என்பதே நெடுமாறனின் வாதம். எனவேதான் இந்தியாவின் புவிசார் நலன்கள் என்றெல்லாம் சுற்றி வளைக்காமல், இந்திய மேலாதிக்கம் என்று பச்சையாகச் சொல்லியே அதனை ஆதரிக்கிறார். நெடுமாறன் முதலான தமிழ்த் தேசியவாதிகளும், தமிழக ஓட்டுக் கட்சிகளும் இந்திய மேலாதிக்கத்தை ஆதரிக்கும் மனோபாவத்தை ஈழத்தமிழ் மக்களுக்கும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். “நேபாளத்தை ஒடுக்குகிறாயா ஒடுக்கு, வங்கதேசத்தை சுரண்டுகிறாயா சுரண்டு, சிங்கள ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கு எங்களுக்கு மட்டும் உதவி செய்” என்று கேட்கும் அநீதிக்கும் அடிமைத்தனத்திற்கும் அவர்களைப் பழக்கியிருக்கிறார்கள்.

நெடுமாறன் கூறுகின்ற நியாயப்படி தனது பாதுகாப்புக்கு கியூபாவும், வெனிசூலாவும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்ற அமெரிக்காவின் கவலையும், அதன் அடிப்படையில் அந்த நாடுகளில் அமெரிக்கா நடத்தும் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளும் நியாயமானவை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அயர்லாந்தை ஒடுக்கியதும் நியாயம். தற்போது நேபாளத்தில் இந்தியா நடத்தியிருக்கும் ஆட்சிக்கவிழ்ப்பும், வங்கதேசத்திலும், மாலத்தீவிலும் நடத்திய தலையீடுகளும், சிக்கிமை இணைத்துக் கொண்டதும் நியாயமே.

ஒரு சிறிய நாடு, பெரிய அண்டை நாட்டுடன் சம உரிமை கோர முடியாது. பெரிய நாடு என்பது ண்டை நாடல்ல, ண்டை நாடு என்று வலியுறுத்துகிறார் நெடுமாறன். இதே நியாயத்தைத் தான் ராஜபக்சேவும், ஜாதிய ஹெல உறுமயவும் தமிழர்களிடம் கூறுகிறார்கள். பெரிய இனத்துடன் சிறிய இனம் எப்படி சம உரிமை கோர முடியும் என்பதுதானே அவர்களது கேள்வி. அவர்கள் மட்டுமா? பெரும்பான்மை இந்துக்களுடன சிறுபான்மை முஸ்லீம்கள் எப்படி சம உரிமை கோர முடியும் என்று கேட்கிறார் மோடி. பெரும்பான்மை சாதி இந்துக்களுக்கு சிறுபான்மை தலித் எப்படி ஊராட்சித் தலைவராக வரமுடியும் என்று கூறித்தான் மேலவளவு முருகேசனை வெட்டினார்கள் தேவர் சாதி வெறியர்கள். “இந்திய மேலாதிக்கம் ஏமாந்துவிட்டதே” என்று பதறித்துடிக்கும் ஐயா நெடுமாறனின் உணர்வும், “சாதி ஆதிக்கம் சரிந்து விட்டதே” என்று குமுறும் ஆதிக்க சாதி ஆண்டையின் உணர்வும் எந்தவகையில் வேறுபட்டவை என்பதை தமிழ் உணர்வாளர்கள்தான் விளக்க வேண்டும்.

ஒருவேளை, நெடுமாறனின் ஆதரவு பெற்ற புரட்சித்தலைவி 40 தொகுதியிலும் வென்று தமிழ் ஈழத்தையும் வாங்கிக் கொடுத்திருந்தால் அதன்பின் இலங்கையில் என்ன நடக்ககக் கூடும்? ஈழத்தமிழர்கள் இந்தியாவின் அடிமைகளாகி இருப்பார்கள். சீனாவின் அடிமைகளாக சிங்களர்கள். அதன்பின் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நடக்கக் கூடிய பதிலிப்போரில், இந்திய மேலாதிக்கத்தைக் காப்பாற்றும் பொருட்டு, சீனக்கைக்கூலி சிங்கள அரசுக்கு எதிராக, ஈழத்தமிழ் அடிமைகள் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடத்தி தங்களைக் காவு கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

வேறுவிதமாகச் சொன்னால், இன்று கருணாநிதி செய்த அதே வேலையை செய்யும் “அதிகாரம்’ பிரபாகரனுக்கு வழங்கப்பட்டிருக்கும். தமிழ் ஈழம் யாரிடம் ஆயுதம் வாங்குவது, தமிழ் ஈழத்தில் யார் ரோடு போடுவது, கடை போடுவது என்பனவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் டாடா, பிர்லா, அம்பானிக்குக் கிடைத்திருக்கும். “அத்தகைய பொன்னான வாய்ப்பை கெடுத்து விட்டாயே நாராயணா” என்று தலையிலடித்துக் கொள்கிறார் நெடுமாறன்.

முன்னர் சீனப்போரைக் காரணம் காட்டி திராவிட நாட்டை மூட்டை கட்டினார் அண்ணா. இன்று அதே சீனாவைக் காரணம் காட்டி ஈழத்தில் தனிநாடு வாங்கித்தரச் சொல்கிறார் நெடுமாறன். “திராவிடத்தால் வீழ்ந்தோம்! – திரவிட, திரமில, தமில, தமிழ – எனவே தனித் தமிழ்நாடுதான்” என்றெல்லாம் முழங்கி, 45 ஆண்டுகளுக்குப் பிறகு கடைசியாக சுற்றி வந்து சேர்ந்திருக்கும் இடம் சீரங்கம். எங்க சுத்தியும் ரெங்கனைச் சேவி! எல்லாம் பேசிவிட்டு கடைசியில் “சீன அபாயத்திலிருந்து பாரதத்தைக் காப்பாற்றும் விபீஷணாழ்வார்கள் ஈழத்தமிழர்கள்தான்” என்று பகவான் நாராயணனுக்கு அவதார ரகசியத்தைப் புரிய வைக்கிறார் நெடுமாற முனிவர்.

அமெரிக்க-இந்திய அணுசக்தி உடன்பாட்டின் விளைவாக விரிவடையப்போகும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்க வலிமை தனக்கு அச்சுறுத்தலாக மாறும் என்பதாலும், இந்து மாக்கடல் பகுதியில் தான் தனிமைப்பட்டுவிடக் கூடாது என்பதனாலும்தான் சீனா இலங்கை அரசுக்கு உதவுகிறது என்கிறார் நெடுமாறன்.

இந்து மாக்கடல் பகுதியில் அமெரிக்காவுக்கு என்ன வேலை என்ற கேள்வி மட்டும் அவருக்கு எழும்பவேயில்லை. தெற்காசியாவில் மேலாதிக்கம் செய்ய இயற்கையாகவே இந்தியா பெற்றுள்ள உரிமையை அங்கீகரிக்கும் அவருடைய ஆதிக்க சிந்தனை, உலகை மேலாதிக்கம் செய்வதற்கு இயற்கையாகவே அமெரிக்கா பெற்றுள்ள உரிமையையும் அங்கீகரிக்கத் தானே செய்யும்? புரியும்படி சொல்லவேண்டுமானால், தலித் மக்கள் மீது ஆதிக்கம் செய்வதைத் தங்களது பிறப்புரிமையாகக் கருத்தும் சாதி இந்துக்கள், பார்ப்பன மேலாண்மையை இயற்கையாகவே அங்கீகரிப்பது போலத்தான் இதுவும்.

சீனாவையும் ரசியாவையும், அந்நாடுகளின் கடல்வழிப் பாதைகளையும் உலக அளவில் முற்றுகையிட்டு வருகிறது அமெரிக்கா. அமெரிக்காவின் உலகப் போர்த்தந்திர வியூகத்தில் தெற்காசியாவின் அடியாளாக இந்தியா நியமிக்கப் பட்டிருக்கிறது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், இராணுவ ஒப்பந்தம் ஆகியவற்றின் நோக்கம் அதுதான். இதற்கு சீனா வகுத்திருக்கும் எதிர் வியூகம் இந்தியாவைச் சுற்றி வளைப்பது. சிங்கள இனவெறி அரசை ஆதரிப்பது மட்டுமல்ல,  பர்மாவின் இராணுவ ஆட்சியையும் சீனா ஆதரிக்கிறது. பிலிப்பைன்சில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மூலம் மலாக்கா நீரிணையை அமெரிக்கா கட்டுப்படுத்துவதால், அதற்கு மாற்றாக சீனாவிலிருந்து பர்மாவுக்கு 1300 கி.மீ நீள எண்ணெய் குழாயும் அமைக்கிறது. மேலை நாடுகளோ பர்மாவில் ஆங் சாங் சுயியை ஆதரிக்கின்றன.

இதுதான் ஆட்டம். அமெரிக்காவின் தற்போதைய உலக மேலாதிக்கத் திட்டம், அதற்குப் போட்டியாக சீனாவும் ரசியாவும் இணைந்து 2005 இல் உருவாக்கிய ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு, அதில் சேருமாறு ரசியாவும் சீனாவும் இந்தியாவை அழைத்த மறுகணமே நடைபெற்ற கண்டலிசா ரைஸின் டெல்லி விஜயம், அமெரிக்க இந்திய அணுசக்தி- இராணுவ ஒப்பந்தங்கள், அதன் தொடர்ச்சியாக ஜப்பானுடன் இணைந்து சீனக்கடற் பகுதியில் இந்திய கடற்படை நடத்திய கூட்டுப்பயிற்சி, தற்போது டாலர் மேலாதிக்கத்தை அசைக்க சீனாவும் ரசியாவும் மேற்கொள்ளும் முயற்சிகள்.. இவை பற்றி விரிவாக எழுதுவதற்கு இது இடமல்ல. ஆனால் சீனாவையும், இந்தியாவையும், பாகிஸ்தானையும், ரசியாவையும், கியூபாவையும், வெனிசூலாவையும் ராஜபக்சேவுக்கு ஆதரவாக அணிவகுக்கச் செய்த காரணிகளில் முக்கியமானவை இவை.

ஒரு இனப்படுகொலைக்குத் துணை நின்ற குற்றத்துக்காக  சீனாவையும் பாகிஸ்தானையும் நாம் கண்டிப்பதென்பது வேறு. இந்திய மேலாதிக்க நலனை நிலைநாட்டும் பொருட்டு சீனத்தை கண்டிப்பது என்பது வேறு. நெடுமாறனோ, இந்திய மேலாதிக்கத்தின் ராஜதந்திரம் தோற்றுவிட்டதற்காகக் கண்ணீர் விடுகிறார்.

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக நெடுமாறன் தமிழில் எழுதியிருக்கும் இந்தக் கருத்துகளை, இந்தியில் மொழிபெயர்த்தால் உடனே அதன் கீழே கையெழுத்துப் போட்டு தன்னுடைய சொந்த அறிக்கையாகவே வெளியிட்டுவிடுவார் அத்வானி. இதே கருத்துகளை அத்வானி இந்தியில் சொன்னால் அதன் பெயர் பார்ப்பன இந்து தேசியம். அதையே நெடுமாறன் தமிழில் சொல்லும்போது அதற்குப் பெயர் தமிழ்த் தேசியம்.

நெடுமாறனிடம் இயல்பாக வெளிப்படும் பாகிஸ்தான் எதிர்ப்பு உணர்வை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் ஒரு ராஜதந்திர ஆலோசகர் என்ற முறையில் சூழ்நிலையையும் அவர் புரிந்து கொள்ளவேண்டும். பாகிஸ்தான் எதிர்ப்பு தேசபக்தி சவடால்களை கொஞ்சகாலத்துக்கு நிறுத்தி வைக்குமாறும், பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்தியத் துருப்புகளை வாபஸ் பெறுமாறும் ஒபாமா மன்மோகனுக்கு உத்தரவிட்டு, இந்தியப் படையையும் வாபஸ் வாங்கியாகிவிட்டது. இதுபற்றி அத்வானி கூட சவுண்டு கிளப்பவில்லை என்பதை நெடுமாறன் கவனிக்கவேண்டும். அமெரிக்க ஆசியுடன் பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட தலிபானை ஒழிப்பதற்கான போரில் பாகிஸ்தானே இப்போது ஈடுபட்டிருக்கிறது – புலிகளை ஒழிப்பதற்கு இந்தியாவே போரில் ஈடுபட்டதைப் போல. தலிபானை முடித்த பின் சீனாவுக்கு எதிராக இந்தியாவையும் பாகிஸ்தானையும் “பாய்.. பாய்” சொல்லவைப்பது அமெரிக்காவின் திட்டம்.

“எனவே சீன எதிர்ப்பு இந்திய தேசியம்தான்” அமெரிக்காவின் இப்போதைய திட்டமாகத் தெரிகிறது. பாகிஸ்தான் எல்லையிலிருந்து ராணுவத்தை வாபஸ் வாங்கிய மன்மோகன் அரசு, படையை சீன எல்லைக்கு அனுப்பியிருக்கிறது. எனவே “இலங்கையின் மூலம் தென்னிந்தியாவுக்கு சீன அபாயம்” என்று நெடுமாறன் ஊதியிருக்கும் ‘தமிழ்ச்சங்கு’ டெல்லியின் காதில் விழுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

யார் கண்டது? “ரவிசங்கர் கொடுத்த சி.டியைப் பார்த்தேன். தமிழ் ஈழம்தான் தீர்வு” என்று ஜெயலலிதா சொல்வார் என்று யாராவது எதிர்பார்த்தார்களா என்ன? “சிவசங்கர் (மேனன் தான்) கொடுத்த சி.டியைப் பார்த்தேன். ஈழம்தான் தீர்வு” என்று நாளை மன்மோகனும் சொல்லக்கூடும். டாலர் ஆதிக்கத்துக்கு அபாயம் அதிகரிக்க அதிகரிக்க, தெற்காசியாவில் சீன அபாயமும் அதிகரிக்க வாய்ப்புண்டு. 5 வது ஈழப்போரை அமெரிக்காவின் ஆசியுடன் மீண்டும் ரா (RAW) ஸ்பான்சர் செய்வதற்கும் வாய்ப்புண்டு.

“தனி ஈழம் வாங்குவதற்காகத்தான் இந்திய மேலாதிக்கத்தை ஆதரிப்பது போல நடிக்கிறார்கள்” என்று ஐயா நெடுமாறனைப் பற்றித் தவறாகப் நினைத்துக் கொண்டிருந்த அயலுறவுத்துறை அதிகாரிகள், “இந்திய மேலாதிக்கத்தைக் காப்பாற்றும் பொருட்டுத்தான் நெடுமாறன் ஈழத்தை ஆதரித்திருக்கிறார்” என்ற உண்மையை காலம் கடந்தேனும் புரிந்து கொள்வார்களா பார்ப்போம். சம்பளத்துக்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் உண்மையான ராஜவிசுவாசிகளின் உணர்வை என்றைக்குப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?

என்ன செய்வது? பாகிஸ்தானை உடைத்த துர்க்காதேவி என்று வாஜ்பாயியால் புகழப்பட்டவரும், இந்திய மேலாதிக்கத்தின் அன்னையுமான இந்திராவின் உயிரைக் காப்பாற்றியதற்காகத்தான் ஐயா நெடுமாறனுக்கு “மாவீரன்” பட்டம் கிடைத்தது என்ற வரலாற்று உண்மை கூடத் தெரியாத மரமண்டைகள் டெல்லி அதிகாரவர்க்கத்தில் நிரம்பியிருக்கும்போது, உண்மையான ராஜ விசுவாசிகள் சந்தேகிக்கப் படுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

“அடிமையாக இருக்கிறேன் என்று தமிழன் ஆயிரம் முறை சொன்ன பிறகும் தமிழன் மீது நம்பிக்கை வைக்காமல், சிங்களனோடு சேர்ந்து கொண்டு தமிழினத்தைக் கருவறுத்திருக்கிறது இந்திய அரசு என்றால், அதற்குக் காரணம் ஆரியம் அன்றி வேறு என்ன?” என்று தமிழர் கண்ணோட்டம் இதழில் குமுறியிருக்கிறார் மணியரசன். நியாயம்தானே! “அடிமைச் சேவகம் செய்கிறேன்” என்று மன்றாடிய பிறகும் அந்த அடிமையின் விசுவாசத்தை மதிக்கவில்லை என்றால், அப்படிப்பட்ட ஆண்டைக்கு எதிராக விடுதலைப் போராட்டம் நடத்துவதைத் தவிர ஒரு அடிமைக்கு வேறு என்ன வழி இருக்கமுடியும்?

எனினும் மணியரசனைப் போல ஐயா நெடுமாறன் கோபப்படவில்லை. தினமணி கட்டுரையின் மூலம் டெல்லிக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ராஜவிசுவாசம் நிரம்பிய தமிழ்த் தேசியவாதிகளின் கையில் பொறுப்பை ஒப்படைப்பதன் மூலம் இந்திய தேசியத்தையும், மேலாதிக்கத்தையும் பாதுகாத்துக் கொள்வதா அல்லது தமிழ்த்தேசியவாதிகளின் ராஜவிசுவாசத்தை அலட்சியப் படுத்துவதன் மூலம் விடுதலைக்குப் போராடும் துர்ப்பாக்கிய நிலைக்கு அவர்களைத் தள்ளுவதா என்பதை டெல்லி ஆண்டைகள் முடிவு செய்தாக வேண்டும்.

எந்த நாட்டின் வரலாற்றிலும் ஆண்டை வர்க்கம் சந்தித்திருக்கவே முடியாத சவால் இது.

பின் குறிப்பு:

1. ஈழத்தின் இனப்படுகொலையை வழிகாட்டி இயக்கியது மட்டுமின்றி, இறுதி நாட்களில் புலிகள் இயக்கத் தலைவர்களை அடையாளம் கண்டு கொலை செய்வதற்கு சிங்கள இராணுவத்துடன் ரா அதிகாரிகளும் உடனிருந்தனராம். இந்திய அரசின் கொடூரம் குறித்து, நமக்கெல்லாம் தெரியாத ஏராளமான பல உண்மை விவரங்கள் ஐயா நெடுமாறனுக்குத் தெரிந்திருக்கக் கூடும். இந்திய தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்த, தேசிய கீதத்துக்கு விரைப்பாக நின்று கொண்டிருந்த பல வெவரங்கெட்ட தேசபக்தர்களுக்குக் கூட ஈழப்படுகொலைக்குப் பின்னால் ‘பக்தி’ போய்விட்டது. ஆனால் ரொம்பவும் வெவரமா ஐயாவுக்ககோ, தேச பக்தி மட்டுமல்ல, மேலாதிக்க வெறியும் ஒரு மில்லி கூட இறங்கவில்லை. குடிமகன் என்றால் இவரல்லவோ இந்தியக் குடிமகன்!

2. தினமணி கட்டுரையைப் படித்த தேசபக்தர் ஒருவர், “ஏங்க, ஐ.ஏ.எஸ் படிச்சவனைத்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரா நியமிக்கணுமா? இந்த மரமண்டை நாராயணனுக்குப் பதிலா நெடுமாறனை அந்த போஸ்ட்ல நியமிக்க கூடாதா என்ன?” என்று கேட்டார்.

எதிர்பாராத இந்தக் கேள்வியால் நான் திகைத்துப் போனேன். கலைஞர் தொலைக்காட்சியில் 23 ஆம் புலிகேசி ஓடிக்கொண்டிருந்த்து. “கககபோ” என்றார் வடிவேலு.

இதிக்கி மேலா நாஞ்சொல்றதுக்கு என்ன இருக்கி?
vote-012
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு

9

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – 10

சூடான்ஐரோப்பிய நகரமொன்றின் சனநெருக்கமுள்ள மையப்பகுதி. பலர் கூடும் இடத்தில் நான்கு பக்கமும் கண்ணாடியிலான கூண்டு. அதற்குள்ளே ஒரு வானொலி நிலையம். வானொலி அறிவிப்பாளராக, தொழில்நுட்ப பணியாளராக சில வெள்ளை இளைஞர்கள். உறைய வைக்கும் குளிர்கால கிறிஸ்துமஸ் நாட்களில், ஒரு சிறிய கண்ணாடிக் கூண்டுக்குள், அந்த இளைஞர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

அவர்கள் ஒரு பிராந்திய வர்த்தக வானொலி சேவையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.   சூடானில் டார்பூர் மாநிலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு உதவுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விளம்பர நடவடிக்கை. அந்த நிகழ்ச்சி வேடிக்கை பார்க்க வரும் பொது மக்களின் அதீத ஆர்வம் காரணமாக மில்லியன் யூரோக்களை சேர்த்து விட்டிருந்தது.  இதைத் தவிர டார்பூர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு, பல உதவி நிறுவனங்கள் கூட்டாக ஊடகங்களில் விளம்பரம் செய்து கொண்டிருந்தன. ஊடக கருத்துக் கணிப்பொன்று, பெரும்பான்மை மக்கள் டார்பூர் பிரச்சினை குறித்து அதிக அக்கறைப் படுவதாக தெரிவித்தது. அப்போது தான் அமெரிக்காவும், ஐ.நா.சபையும் டார்பூரில் இனப்படுகொலை நடப்பதாக அறிவித்திருந்தன. நாஸி ஜெர்மனியில் யூத இனப்படுகொலை நடந்த பிற்பாடு, ஐ.நா.சபை மிகக் கவனமாக ஆராய்ந்த பின்னர் தான் இனப்படுகொலை அறிவிப்பு செய்வது வழக்கம். சூடான் மீது இனப்படுகொலை குற்றஞ்சாட்டுமளவிற்கு அங்கே என்ன நடக்கிறது?

நாள் தோறும் சின்னத்திரையில் காட்டப்படும் பிம்பங்கள் பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை. எங்கோ ஒரு ஆப்பிரிக்க நாட்டில், பட்டினியால் பரிதவிக்கும் மக்கள், கால்நடைகளாக இடம்பெயரும் மக்கள், முகாம்களுக்குள் அகதிகள், இவற்றை பின்னணியாக கொண்டு மனிதப் பேரவலம் பற்றி விபரிக்கும் செய்தியாளர்கள். தொலைக்காட்சி கமெராக்கள் பார்வையாளரின் மனதை நெகிழ வைக்கும் படங்களை பதிவு செய்யும்.

darfur1சூடானில் டார்பூர் போரில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை? 30 லட்சம் என்கின்றன ஐ.நா.விற்கு அறிக்கை சமர்ப்பித்த நிறுவனங்கள். இல்லை, 2 லட்சம் மட்டுமே என்று சொல்கிறது சூடான் அரசு. இனப்படுகொலையில் ஈடுபட்ட துணைப்படைக்கு சூடான் அரசு உதவி வழங்கியது என்பது ஐ.நா. குற்றச்சாட்டு. நாம் உதவி செய்யவில்லை, அவர்கள் சாதாரண கொள்ளைக்காரர்கள், என்று மறுக்கிறது சூடான் அரசு. டார்பூர் பிரச்சினையில் உலகம் இரண்டாக பிரிந்து நிற்கிறது. அமெரிக்கா போன்ற பல மேற்குலக நாடுகள் அரசுக்கெதிரான போராளிக் குழுக்கள் வழங்கும் தகவல்களை நம்புகின்றன. அரபு-இஸ்லாமிய நாடுகள் சூடான் அரசுக்கு ஆதரவாக நிற்கின்றன.

சூடான் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய தேசம். எகிப்துடனான வடக்கு எல்லை முதல் உகண்டாவுடனான தெற்கு எல்லை வரை, லண்டனில் இருந்து மொஸ்கோ போகுமளவு தூரம்.  உலகின் நீளமான நைல் நதியின் பிறப்பிடம். இயற்கை அன்னை வழங்கிய கொடையான நைல் நதியில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.  வெள்ளம் வடிந்த பின்னர் தேங்கிவிடும் மணல் விவசாய விளைநிலமாக மாற்றப்படும். முரண்நகையாக நைல் நதியோர விவசாயத்தின் பலன்களை உள்நாட்டு மக்கள் அனுபவிப்பதில்லை. இங்கே பயிரப்படும் உணவுப்பொருட்களில்  பெரும்பகுதி வளைகுடா அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது. பணக்கார பாலைவன நாடுகள் உணவுக்காக அமெரிக்காவில் தங்கியிருப்பதை தவிர்க்க, சூடானின் விளைநிலங்களை குத்தகைக்கு எடுத்துள்ளன.

115 மொழிகளைப் பேசும், பலவித கலாச்சாரம் கொண்டவர்களின் தாயகமாக இருந்த போதிலும், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரபு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள். அரபுக்களைப் பற்றி உங்களுக்கு தெரிந்த பொதுவான கட்டமைப்பில் இருந்து சூடானிய அரபுக்கள் மாறுபடுகின்றனர். அவர்கள் கருநிற மேனியராக ஆப்பிரிக்கர்களைப் போல தோற்றம் கொண்டவர்கள். மொழி, பண்பாடு, மதம் என்பன மட்டுமே அவர்களை அரபுக்கள் என அடையாளப்படுத்தும் காரணிகள். இதைப் பற்றி இன்னொரு தடவை டார்பூர் பிரச்சினையில் நாம் பார்க்கப் போகிறோம். இந்தியத் தமிழரை விட, ஈழத்தமிழர்கள் தீவிரமான தமிழ் தேசியவாதிகளாக இருப்பதை அவதானிக்கலாம். அதே போல பிற அரபுநாடுகளில் வாழும் இஸ்லாமிய-அரேபியரை விட, சூடான் அரபுக்கள் மத்தியில் மதப்பற்றும், இனப்பற்றும் மேலோங்கி காணப்படுகின்றது.  உண்மையில் நவீன மத அடிப்படைவாதக் அரசியல் கருத்துகள் யாவும், 19 ம் நூற்றாண்டு மஹ்தி என்ற விடுதலைப் போராளியின் காலத்திலேயே நிறுவனமயப் படுத்தப்பட்டிருந்தன.

gold3சூடானின் வடக்குப் பகுதி 8000 வருடங்களுக்கு முன்னரே நாகரீகமடைந்த சமுதாயத்தைச் கொண்டிருந்தது. அன்று எகிப்தின் தெற்குப் பகுதியையும் (அஸ்வான்) சேர்த்துக் கொண்டு,  “நுபியர்களின் ராஜ்யம்” சீரும் சிறப்பும் பெற்று விளங்கியது. தமக்கு அருகில் இருந்த மகிமை பொருந்திய எகிப்தில் இருந்து, மதத்தையும், கட்டடக் கலையையும் கடனாக பெற்றிருந்தனர். எகிப்தில் இருப்பதை விட நுபியாவில் அதிகளவு பிரமிட்கள் கட்டப்பட்டதாக, அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். நுபியப் பாலைவனத்தில் நிமிர்ந்து நிற்கும் காலத்தால் அழியாத பிரமிட்கள் அதற்கு சாட்சி. கி.மு. 1500 ற்கு பின்னர், “மெரோயே” அரசாட்சியில் ஐரோப்பாவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான சர்வதேச வர்த்தகம், தேசப் பொருளாதாரத்தை வளர்த்தது. நுபிய வியாபாரிகள் தான் முதன் முதலாக ஒட்டகங்களை சுமை தூக்கும் வாகனமாக பயன்படுத்தினர்.  “நுப்” என்றால் நுபிய மொழியில் தங்கம் என்று அர்த்தம். அன்று உலகம் முழுவதும் தங்கம் ஏற்றுமதி செய்து வந்ததால், பிறநாட்டவரால் நுபியா என அழைக்கப்பட்டிருக்கலாம். பொறாமை கொண்ட எகிப்தியரால் அடிக்கடி படையெடுப்புக்கு உள்ளானாலும், கி.பி. 324 ம் ஆண்டு வரை தனது சுதந்திரத்தை காப்பாற்றிக் கொண்டது.

அப்போது கிழக்கே எத்தியோப்பியாவில் “அக்சும்” என்ற கிறிஸ்தவ ராஜ்யம் தோன்றியிருந்தது. அக்சும் படையினரால், நுபியா போரில் தோற்கடிக்கப்பட்டது.  வெற்றிகொள்ளப்பட்ட நுபிய மக்கள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். கிரேக்கத்தில் இருந்த கிறிஸ்தவ சக்கரவர்த்தியும், மதம் மாற்றும் பணிக்காக பாதிரியார்களை அனுப்பிவைத்தார். கி.பி.700 ம் ஆண்டு வேறொரு மதம் கிழக்கே இருந்து வந்தது. இஸ்லாம் என்றார் புதிய மதத்தை கொண்டுவந்த அரேபியர்கள், நுபியர்களையும் முஸ்லிம்களாக மாற்றினார்கள். அன்று வந்த அரேபிய ஆக்கிரமிப்பாளருக்கு ஒரு சாம்ராஜ்யம் நிறுவுவதை விட, மதக் கருத்துகளை பரப்புவதே முக்கியமானதாகப் பட்டது. நுபியாவில் “சென்னர்” என்ற (கறுப்பின)  சுல்த்தான் ஆட்சி உருவானது. தேசங்கடந்த வியாபாரிகளிடம் வரி அறவிட்டு, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி, தனது பொருளாதார சுதந்திரத்தை நிலைநாட்டிக் கொண்டது. 14 ம் நூற்றாண்டில் வடக்கே இருந்து படையெடுத்த “மம்மலுக்” துருக்கி வீரர்கள், சுதந்திர சுல்த்தான் ஆட்சிக்கு முடிவு கட்டினர். 19 ம் நூற்றாண்டு வருவதற்குள், சூடான் முழுவதும் துருக்கியின்   ஓட்டோமான் சாம்ராஜ்யத்துடன் இணைக்கப்பட்டது.

19 ம் நூற்றாண்டில் புதிய உலக வல்லரசொன்றின் பிரசன்னம் ஆப்பிரிக்காவில் தோன்றியது. பிரித்தானியாவிற்கும், ஓட்டோமான் துருக்கிக்கும் இடையில் அப்போது நட்புறவு ஏற்பட்டிருந்தது. குறிப்பாக எகிப்தில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட முகம்மது அலி பாஷாவின் படைகளுக்கு பிரிட்டிஷ் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி வந்தனர். சூடானில் நிலை கொண்டிருந்த துருக்கியப் படைகளுக்கு உள்ளூர் மக்கள் மத்தியில் நற்பெயர் ஏற்பட்டிருக்கவில்லை. “நாகரீகமடையாத” தெற்கு சூடான் மக்கள், அடிமை வியாபாரிகளின் மனித வேட்டையால் அதிகளவு பாதிக்கப்பட்டனர். மொத்த சனத்தொகையில் 5% அடிமைகளாக்கப் பட்டனர்.  “நாகரீகமடைந்த” வடக்கு சூடானை சேர்ந்த மக்கள், அதிக வரி கேட்டு கசக்கி பிழியப்பட்டனர். துருக்கி ஆக்கிரமிப்பு இராணுவம் வரி என்ற பெயரில் மக்களை சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருந்தது. 1880 ல் இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட கிளர்ந்தெழுந்தார் மஹ்தி என்ற மாவீரன்.  துருக்கி ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டினார்.

அல் மஹ்தி அல் முந்தசார்அல் மஹ்தி அல் முந்தசார் (சரியான பாதையில் வழிநடத்த தெரிவானவர்), தன்னை இறைத்தூதர் முஹம்மது நபியின் வழிதோன்றல் என அழைத்துக் கொண்டார். ஆட்சியில் இருந்த ஊழல் அதிகாரிகளுக்கு எதிரான விடுதலைப் போரை, அதாவது “ஜிஹாத்” அறிவித்தார். சூடானின் மேற்குப் பகுதி மாநிலமான டார்பூரில் பல்லாயிரம் இளைஞர்கள் ஜிஹாத்திற்கு அணிதிரண்டனர்.  துருக்கி ஆக்கிரமிப்பு படைக்கு, பிரிட்டிஷ் இராணுவ உதவி கிடைத்த போதும், மஹ்தியின் போராளிகளை எதிர்த்து நிற்க முடியவில்லை. அப்போது லண்டனில் இராணியில் மாளிகையில் கூட மஹ்தியை பற்றி சிலாகிக்கும் அளவிற்கு,  மஹ்தி பிரிட்டிஷாரின் வெறுப்புக்கு ஆளாகியிருந்தார். அன்றைய காலகட்டத்தில், “மாக்ஸிம்” என்ற இயந்திர துப்பாக்கியை கண்டுபிடித்திருந்த, ஒரு உலக வல்லரசான பிரிட்டனால் கூட, சில ஆயிரம் போராளிகளை வெல்ல முடியவில்லை. தலைநகர் கார்ட்டூம் முற்றுகையிடப்பட்டு, பிரிட்டிஷ் படைகளுக்கு தலைமை தாங்கியவரும், கவர்னருமான மேஜர் ஜெனரல் சார்லஸ் கோர்டன் உட்பட, ஆயிரக்கணக்கான அரசாங்க சார்பானவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.

இருப்பினும் சூடானின் சுதந்திரம் அதிக காலம் நீடிக்கவில்லை. நெருப்புக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட மஹ்தி மரணமடைந்தவுடன் ஏற்பட்ட, பதவிக்கான போட்டி பூசல் மஹ்தி இராணுவத்தை பலவீனமாக்கியது. இதே நேரம் பிரிட்டனுக்கு சூடான் இழக்க முடியாத பொக்கிஷமாகப் பட்டது. இது 1898 ம் ஆண்டு, சுயெஸ் கால்வாய் திறக்கப்பட்டு ஆசியாவிற்கான கப்பல் போக்குவரத்து நேரத்தை வெகுவாக குறைத்து விட்டிருந்தது. சுயெஸ் கால்வாய் அமைந்துள்ள செங்கடல் பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது.  இதே நேரம் ஆப்பிரிக்காவை ஐரோப்பிய வல்லரசுகள் தமக்குள் பங்கு போட்டிருந்தன. பிரான்ஸ் செனகல் முதல் சாட் வரை உரிமை கொண்டாடியது.  பிரிட்டன் அவசர அவசரமாக சூடானை பிடிக்க பெரும் பிரயத்தனப் பட்டது. இம்முறை பிரிட்டிஷ் படைகள், எகிப்தின் துருக்கிப் படைகளுடன் இணைந்து மஹ்தி இராணுவத்தை தோற்கடித்து, சூடான் முழுவதையும் கைப்பற்றின. அன்றிலிருந்து சூடான் பிரிட்டிஷ் காலனியாகியது.

sd03_00aபிரிட்டிஷ் காலனியானவுடன் பருத்தி பயிரிடும் பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டு, பருத்தி ஐரோப்பாவிற்கு ஏற்றுமதியானது. பிரிட்டிஷார் சூடானிலும் பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கினர். தெற்குப்பகுதி மாநிலங்களில் டிங்கா, நுவெர் போன்ற பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். குடும்பம், குலம், குலத்தலைவன் இதற்கப்பால் அவர்களது சமூக நிறுவனம் விரிவடையவில்லை. 18 ம் நூற்றாண்டில் தான் அந்த மக்கள் வெற்றினத்தவரை (துருக்கியர்) பார்த்தார்கள்.  கால்நடை வளர்ப்பை தவிர வேறு பொருளாதார அபிவிருத்தி கிடையாது. குலதெய்வங்களை வழிபட்டு வந்த இவர்களை, ஆங்கிலேயர்கள் கிறிஸ்தவமயப்படுத்த ஆரம்பித்தனர். மிஷனரிகள் ஆங்கில வழிக் கல்வி புகட்டின. கூடவே ஐரோப்பிய கலாச்சாரத்தையும் கற்பித்தன. அதே நேரம் இந்த பழங்குடியின மக்கள் அபிவிருத்தியடைந்த வடக்கு சூடானில் வேலை தேடிச் செல்வது தடை செய்யப்பட்டது. வடக்கு சூடானியர்கள் தென் பகுதி  வருவதும் தடை செய்யப்பட்டது. வடக்கையும் தெற்கையும் ஆளரவமற்ற சூனியப்பகுதி ஒன்று பிரித்தது. பிரிட்டிஷார் இந்த பிரித்தாளும் கொள்கையை 1930 ம் ஆண்டு சட்டம் போட்டு நடைமுறைப்படுத்தினர்.

1956 ம் ஆண்டு, இரண்டாம் உலகப்போரில் பலவீனமடைந்த பிரிட்டன், சூடானுக்கு சுதந்திரம் வழங்கி விட்டு வெளியேறியது. போகும் போது ஆட்சிப்பொறுப்பை அரபு மொழி பேசும் பெரும்பான்மையினரின் கையில் ஒப்படைத்து விட்டு சென்றது. தேசியவாத, மதவாத சக்திகளின் பிடியில் இருந்த அரசியல் கட்சிகள், நாடுமுழுவதும் அரபுமயமாக்கும் நடவடிக்கையில் இறங்கின. தெற்கு மாநிலங்களில் இருந்து கிறிஸ்தவ மிஷனரிகள் வெளியேற்றப்பட்டன. அந்த இடத்தில் மதம் பரப்புவதற்கு இஸ்லாமிய மிஷனரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தெற்குப் பழங்குடியின மக்கள் இதனை எதிர்த்து கிளர்ச்சி செய்தனர். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இராணுவம் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் வரட்சி, உணவுப்பற்றாக்குறை மக்களை பாதித்தது. தொழிலாளர்கள், மாணவர்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இராணுவ ஆட்சியாளர்கள் திரும்ப பாராளுமன்றத்தை இயங்க அனுமதித்த போதும் மக்கள் புரட்சி அடங்கவில்லை.

numeiry1969 ம் ஆண்டு மீண்டும் ஒரு இராணுவ சதிப்புரட்சி ஏற்பட்டது. இம்முறை ஆட்சியை பொறுப்பெடுத்த நிமேரிக்கு சூடான் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு வழங்கியது.  கம்யூனிஸ்ட் கட்சி மூலமாக சோவியத் யூனியனின் ஆதரவு கிடைத்தது. சில சோஷலிச சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன. நிறுவனங்கள்  தேசியமயமாக்கப்பட்டன. 1971 ம் ஆண்டு டார்பூர் பிராந்தியத்தில், முதன் முதலாக எண்ணை கண்டுபிடிக்கப்பட்டது. ஜனாதிபதியாக இருந்த நிமேரி ஒரு கம்யூனிஸ்டோ, அல்லது சோஷலிஸ்டோ அல்ல. தேவைக்கு யாரையும் பயன்படுத்தும் சந்தர்ப்பவாதி. நிமேரி லிபியாவுடனும், எகிப்துடனும் ஒரு பொருளாதார கூட்டமைப்பை ஏற்படுத்தும் திட்டங்களில் இறங்கினார். இது கம்யூனிஸ்ட் கட்சிக்கு எரிச்சலூட்டியது. முரண்பாடுகள் தீர்க்கமுடியாமல் போன கட்டத்தில், கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர், அல்லது கொலை செய்யப்பட்டனர். தலைவர்கள் நாட்டை விட்டோடி வெளிநாடுகளில் புகலிடம் தேடினர். இதன் விளைவாக சோவியத் யூனியன் தனது உறவை துண்டித்துக் கொண்டது.

சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்த அமெரிக்கா நிலைமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி நுளைந்தது. சூடான் அரசுக்கு ஆயுத, நிதி உதவி வழங்கியது. நிபந்தனையாக தெற்குப் பகுதி கிளர்ச்சியாளருடன் பேச்சுவார்த்தையில் தீர்வு காணும்படி வற்புறுத்தப்பட்டது. சர்வதேச அழுத்தத்தின் பிரகாரம் (எத்தியோப்பிய தலைநகர்) “அடிஸ் அபெபா”வில்   கைச்சாத்திட்ட சமாதான ஒப்பந்தம் சில வருடங்கள் அமுலில் இருந்தது. கம்யூனிஸ்ட்களை விரட்டி விட்டு, மத்திய அரசில் வலதுசாரிகளோடு கூட்டுச் சேர்ந்திருந்த நிமேரி, இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமுல் படுத்தினார். சிறுபான்மையினங்களுக்கு இடையில் பூசல்களை ஏற்படுத்தும் நோக்கோடு, தெற்குப் பகுதியை மூன்று நிர்வாக அலகுகளாக பிரித்தார். நாடாளாவிய ஷரியா சட்ட ஆட்சியை எதிர்த்து தென்பகுதி மாநிலங்கள் கிளர்ந்தெழுந்தன.

“பொர்” நகரில் இருந்த இராணுவ முகாம்களில் சிப்பாய்க் கலகம் மூண்டது. கிளர்ச்சியை அடக்க அனுப்பபட்ட கேணல் ஜோன் கறேங் கிளர்ச்சியாளருடன் சேர்ந்து கொண்டார். சூடான் மக்கள் விடுதலை இயக்கம் (SPLM)  ஆரம்பிக்கப் பட்டது.  தென் பகுதியில் டிங்கா இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்வதும், ஜோன் கறேங் ஒரு டிங்கா இனத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்காவில், எதுவும் எப்போதும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறும் குணவியல்பு கொண்டவை.  SPLM ஆரம்ப காலங்களில் மார்க்ஸிஸம் பேசியது. அதற்கு காரணம், அமெரிக்கா மத்திய அரசை ஆதரித்தது மட்டுமல்ல. அயலில் இருந்த (கம்யூனிச) எத்தியோப்பியாவின் உதவி கிடைத்து வந்ததும் தான்.

தெற்கில் பிரச்சினை தீர்ந்த நேரம், வடக்கில் பிரச்சினை ஆரம்பமாகியது. சமாதான உடன்படிக்கை வடக்கில் இஸ்லாமிய கடும்போக்காளர்களை தீவிரப்படுத்தியது.  “தெற்குப் பயங்கரவாதிகளிடம் தேசத்தை அடமானம் வைத்து விட்டதாக” செய்த பிரச்சாரத்திற்கு ஆதரவு பெருகியது. மீண்டும் கார்ட்டூமில் சதிப்புரட்சி இடம்பெற்றது. பதவியில் இருந்த நிமேரி, எத்தியோப்பிய யூதர்களை இஸ்ரேலுக்கு செல்ல உதவியமை, ஐரோப்பிய அணுக்கழிவுகளை கொட்டுவதற்கு அனுமதித்தமை போன்ற காரணங்களும் சதிப்புரட்சிக்கு மேலதிக மக்கள் ஆதரவை கொடுத்திருந்தன. 1989 ல் , இராணுவத் தளபதி பஷீர், இஸ்லாமிய மத அடிப்படைவாத கட்சியான தேசிய இஸ்லாமிய முன்னணியுடன்(NIF) சேர்ந்து ஆட்சியை கைப்பற்றினார். (பிரிட்டிஷ் கால) அரசியல் நிர்ணய சட்டம் இரத்து செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக முழுமையான இஸ்லாமியச் சட்டத்தை அமுல்படுத்தியது. கடும்போக்காளரான NIF தலைவர் ஹசன் அல் துரபி, பாரிஸ் சொர்போன் பல்கலைகழகத்தில் கற்ற விரிவுரையாளர்.  அரபு-இஸ்லாமிய காங்கிரஸ் ஸ்தாபகர்களில் ஒருவர்.

_45087085_splm226afpபுதிய சூடானிய அரசாங்கத்தில், அமெரிக்க எதிர்ப்பு இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஆதிக்கம் நிலவுவதை அமெரிக்கா விரும்பவில்லை. உடனடியாக மத்திய அரசுடனான உறவை துண்டித்துக் கொண்டது. அதற்குப் பதிலாக தெற்கில் இருந்த கிளர்ச்சியாளருக்கு (SPLM) உதவி செய்தது. அதே காலகட்டத்தில் எத்தியோப்பியாவில் கம்யூனிச அரசு கவிழ்ந்திருந்தது. அதனால் SPLM ற்கு அமெரிக்காவின் உதவி ஒரு வரப்பிரசாதம். நான் சந்தித்த முன்னாள் SPLM போராளிகள் சிலர், யார் உதவி செய்தாலும் தமது நலன்களே முக்கியம் என்று நியாயப்படுத்தினர். அதே நேரம் தாம் தென் சூடானில் கிறிஸ்தவ மதத்தை பாதுகாக்க போராடுவதாக கூறுவது கூட, மேற்குலகை கவரும் தந்திரம் மட்டுமே என ஒப்புக் கொண்டனர். இந்த முன்னாள் போராளிகள் கொடுத்த தகவல்களின் படி, SPLM தலைவர்கள் எண்ணைக் கம்பெனிகளை அச்சுறுத்தி வாங்கும் கப்பப்பணத்தில் தம்மை வளம் படுத்திக் கொள்கின்றனர். மேற்குலக மக்கள், SPLM கிறிஸ்தவ சிறுபான்மையினரின் உரிமைக்காக, இஸ்லாமிய பேரினவாத வடக்குடன் மோதிக் கொண்டிருப்பதாக கருதிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் போர் முழுக்க முழுக்க எண்ணை உற்பத்தியில் கிடைக்கும் வருமானத்தை பங்கு போடுவதற்காகவே நடக்கிறது.

மேற்குலக நாடுகள் சூடான் அரசிற்கும், தென்பகுதி போராளிக் குழுக்களுக்கும் கொடுத்த அழுத்தம் காரணமாக நடந்த பேச்சுவார்த்தையின் நிமித்தம், 2002 ம் ஆண்டு ஒரு அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டது. 2005 ம் ஆண்டு அமுலுக்கு வந்த Comprehensive Peace Agreement (CPA), தென் மாநிலங்களுக்கு 6 வருடங்கள் தன்னாட்சி அதிகாரம் வழங்கியது. தலைநகராக ஜூபாவை கொண்ட மாநில அரசு சொந்தமாக கொடி வைத்திருக்க முடியும்.  2011 ம் ஆண்டு நடைபெறவுள்ள வாக்கெடுப்பின் மூலம் சூடானுடன் இணைந்திருப்பதா, அல்லது சுதந்திரமாக பிரிந்து போவதா என தீர்மானிக்கப்படும். மத்திய அரசிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு கிளர்ச்சித் தலைவர் ஜோன் கறேங் உப-ஜனாதிபதியானார். சமாதானமும் கண்காணிக்க ஐ.நா. மன்றம் UNMIS என்ற சமாதானப் படையை அனுப்பி வைத்தது.

Darfur-Mapஅமைதி உடன்படிக்கையின் பின்னரான காலத்தில், தென் பகுதி மக்களுக்கு மெல்ல மெல்ல மாயத்திரை விலகியது. அரசியல் சுதந்திரம், அதிகாரப் பரவலாக்கல் எல்லாம் சரி தான். ஆனால் பிரதேச அபிவிருத்திக்காக சர்வதேச சமூகம் வாக்களித்த நிதியுதவி எங்கே? இதுவரை சொற்பத் தொகை மட்டுமே வந்து சேர்ந்துள்ளது. அதைவிட தெற்கிற்கு உரிமையான எண்ணை வருமானத்தில் ஒரு பகுதி இன்று வரை கிடைக்கவில்லை. சர்வதேச சமூகம் சண்டையிட்டுக் கொண்டிருந்த இருபகுதியினரையும் சமாதானம் செய்து வைத்தவுடன் தமது மத்தியஸ்தம் முடிந்து விட்டதென்று ஒதுங்கி விட்டனர். அவர்களுக்கு சூடானில் இன்னுமொரு வேலை பாக்கி இருந்தது. 2003 ம் ஆண்டு மேற்கு சூடானில் உள்ள டார்பூர் பிராந்தியத்தில் கிளர்ச்சி வெடித்தது. அது தென் பகுதி கிளர்ச்சியை விட, அதிகளவு சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

Fur இன மக்களின் உறைவிடம் என அர்த்தப்படும் டார்பூர், ஒரு மலைப்பிரதேசம். Fur இன மக்கள் ஒரு பகுதியினர் சொந்த மொழியும், ஒரு பகுதினர் அரபு மொழியும் பேசினாலும், இஸ்லாம் மதத்தை பின்பற்றும் கறுப்பின மக்கள். டார்பூரில் இனப்படுகொலை நடப்பதாக தீர்மானங்களை நிறைவேற்றிய ஐ.நா.சபையும், அமெரிக்காவும் சர்வதேச நாடுகளும் பிரச்சினையின் பரிமாணங்களை புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. கறுப்பின இனங்களை, அரேபிய இனம் அழித்து வருவதாக சுலபமாக கூறிவிட்டுச் செல்கின்றனர். அதை நம்பி டார்பூர் சென்ற உதவி நிறுவன ஊழியர்களும், ஊடகவியலாளரும் வெளி உலகம் அறியாத உண்மைகளை கண்டுபிடித்தனர்.

தென் பகுதி மாநிலங்கள் சுதந்திரம் கோரி போராடியதன் காரணம், தெளிவாகத் தெரியும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள். நகரமயமாக்கல், தொழிற்துறை அபிவிருத்தி எல்லாம் வடக்கே மட்டும் காணப்பட்டன. தெற்கு வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது. தென் பகுதி ஆப்பிரிக்க பழங்குடியினரின் பின்தங்கிய நிலை காரணமாக, வடக்கில் அவர்கள் தாழ்ந்தவர்களாக பார்க்கப்பட்டனர். தலைநகர் கார்ட்டூமில் வாழும் இரண்டு லட்சம் டிங்கா பழங்குடியினர் “நாகரீகமடையாத மனிதக்குரங்குகள்”, “அடிமைகள்” என்றெல்லாம் அரபு பேசும் மக்களால் தூற்றப்படுகின்றனர். பெரும்பான்மை சமூகத்தில் இனவாதம் நன்றாக வேரூன்றியுள்ளது. இதே போன்ற பொருளாதார, கலாச்சார ஏற்றத்தாழ்வு டார்பூரிலும் நிலவுகின்றது. சூடானில் டார்பூரில் தான் முதன் முதல் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் வருவாய் முழுவதும் கார்ட்டூமில் தங்கிவிடுகின்றது. டார்பூரின் அபிவிருத்திக்காக அரசு பணம் செலவழிப்பதில்லை. தென்பகுதி SPLM இயக்கத்தின் ஆயுதப்போராட்டத்தை முன்மாதிரியாக கொண்டு, டார்பூர் விடுதலை முன்னணி தொடங்கப்பட்டது.

3306626052_07c97a7a46இதற்கிடையே ஜனாதிபதி பஷீரின் ஆலோசகர் அல் துரபி, தெற்கு சூடானில் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டதை எதிர்த்து வந்தார்.  இதனால் பஷீர் துரபியை வீட்டுக்காவலில் வைத்துவிட்டார். துரபி பின் லாடனின் நெருங்கிய நண்பர் என்பது உலகறிந்த உண்மை. துரபியின் ஆதரவாளர்கள், அல் கைதாவுடன் சேர்ந்து அரசுக்கெதிரான ஆயுதப்போராட்டத்தை டார்பூரில் இருந்து ஆரம்பித்தனர். Justice and Equality Movement (JEM) என்ற இயக்கத்தை ஸ்தாபித்து, பிராந்திய போலீஸ நிலையங்களை தாக்கி கைப்பற்றினர். ஒரு சில நாள் சண்டையிலேயே 550 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். பிற அரச நிறுவனங்களும் தாக்கப்பட்டன. அதே நேரம் எரித்திரியா ஆதரவைப் பெற்ற SLM (முன்னாள் டார்பூர் விடுதலை முன்னை) அரசுக்கெதிரான போரில் இணைந்து கொண்டது. அரசு பதிலடியாக கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சு நடத்தி கிளர்ச்சியை அடக்கியது.

மத்திய அரசு ஆயுத, நிதியுதவியில் “ஜன்ஜவீட்” என்ற துணைப்படை அமைக்கப்பட்டது. இந்த துணைப்படை தான் நேரடியாக இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு உள்ளானது. “குதிரையில் வரும் பிசாசுகள்” என்ற பொருள்படும் ஜன்ஜவீட் கிளர்ச்சியாளருக்கு ஆதரவான கிராமங்களை தாக்குவதற்கு தடை எதுவும் இருக்கவில்லை. கண்ணில் பட்ட ஆண்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாகினர், குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. சில இடங்களில் மொத்த கிராமமே பூண்டோடு அழிக்கப்பட்டது.  மக்கள் அகதிகளாக அயல்நாடான சாட்டிற்கு இடம்பெயர்ந்தனர். சில நேரம் சாட் எல்லை கூட அவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கவில்லை. அரசாங்கம் கலாச்சார வேறுபாடுகளை அடிப்படையாக கொண்டு, ஜன்ஜவீட் எதிர்ப்புரட்சியாளரை உருவாக்கியுள்ளது.

கொல்பவர்களும், கொல்லப்படுபவர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள், ஒரே மதத்தை பின்பற்றுபவர்கள். ஆனால் அவர்களை இரு வேறு கலாச்சாரங்கள் பிரிக்கின்றன. ஒரு பகுதி (ஜன்ஜவீட்) அரபு கலாச்சாரத்தையும், மறு பகுதி (போராளிக் குழுக்கள்)  புராதன ஆப்பிரிக்க கலாச்சாரத்தையும் பின்பற்றுகின்றனர். சில நேரம் இந்த வித்தியாசம் அவ்வளவு தெளிவாக தெரிவதில்லை. இதற்கிடையே JEM இஸ்லாமிய அடிப்படைவாத போராட்டத்தை முன்னெடுக்கின்றது. அல் கைதாவுடன் தொடர்புள்ளது. ஆனால் அதைப் பற்றி சர்வதேச சமூகம் அதிக அக்கறை கொள்ளவில்லை. JEM இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக காண்பிக்கப்படுகின்றது. JEM தலைவர்கள் தமக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்த சந்தோஷத்தில்,  கடும்போக்கு இஸ்லாமிய முகத்தை வெளிநாடுகளில் காட்டுவதில்லை.

bashir2006 ம் ஆண்டு,  சர்வதேச அழுத்தம் காரணமாக, டார்பூர் போராளிக் குழுக்களுக்கும், சூடான் அரசுக்குமிடையில் ஒரு சமாதான ஒப்பந்தம் போடப்பட்டது. அத்துடன் பிரச்சினை முடிந்தது என்று யாரும் நிம்மதிப் பெருமூச்சு விட முடியவில்லை. இம்முறை குட்டையைக் குழப்பியது சர்வதேச சமூகம் (மேற்கத்திய நாடுகள் என்று திருத்தி வாசிக்கவும்). சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் டார்பூர் போர்க்கால குற்றங்கள் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டன. அதன் பிரகாரம், சூடான் அதிபர் பஷீர் குற்றவாளியாக காணப்பட்டு, கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. சூடான் அரசு சர்வதேச நீதிமன்றத்தை அங்கீகரிக்கவில்லை என்று அறிவித்தது. நீதிமன்றத்திற்கு சவால் விடுவது போல பஷீர் அரபு நாடுகளிற்கு விஜயம் செய்தார். சர்வதேச நீதிமன்ற விசாரணைகள் சூடானில் அமைதியைக் கெடுக்கும் என்று அரபு நாடுகளின் சங்கம் கருத்துத் தெரிவித்துள்ளது. இதே நேரம், தமது பங்காளி  குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டு விட்டதால், தாம் இனிமேல் சமாதான ஒப்பந்தத்தை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கிளர்ச்சிக் குழுக்கள் அறிவித்துள்ளன.

உலக நாடுகளால், டார்பூர் யுத்தம் ஒரு இனப்படுகொலை என்று புரிந்து கொள்ளப்பட்டாலும், அது தண்ணீருக்காக நடந்த யுத்தம் என்றும் கருதப்படுகின்றது. மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்தே இயற்கை வளத்தை கைப்பற்றுவதற்கான போட்டியால் விளைந்த யுத்தங்கள், வரலாறு நெடுகிலும் காணக்கிடைக்கின்றன. டார்பூர் பிராந்தியத்தில் உள்ள நீர் நிலைகள், மக்கள் பெருக்கத்தினால் ஏற்பட்ட தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக இல்லை. இதனால் கிணறுகள், குளங்களை கைப்பற்றுவதற்காக இனக்குழுக்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழமை. இதனால் “ஒரு இனம் மற்ற இனத்தினை கொன்று  குடியிருப்புக்களை எரித்து, நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கை”, நவீன அரசியல் அகராதியின் படி இனப்பிரச்சினை என்று கூறப்படுகின்றது. டார்பூரில் அபரிமிதமான  நிலத்தடி நீர் காணப்படுவதாகவும், இதை பாவனைக்கு கொண்டுவரும் வேளை இனங்களுக்கிடையிலான பூசல்கள் மறையும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே அமெரிக்காவிற்கும், சீனாவுக்கும் இடையிலான பனிப்போர் காரணமாகவும் சூடான் மக்கள் தொடர்ந்து இரத்தம் சிந்தி வருகின்றனர். மேற்குலக எதிரிகளின் பட்டியலில் முதன்மையான இடம்வகிக்கும் சூடான், சீனாவுடன் சிறந்த வர்த்தக உறவுகளைப் பேணி வருகின்றது. மேற்குலகம் பொருளாதார திட்டங்களுக்கு, மனித உரிமை பிரச்சினையை நிபந்தனைகளாக விதிப்பதைப் போல, சீனா நடந்து கொள்வதில்லை. சீனா உள்நாட்டு பிரச்சினையில் தலையிடாத போக்கை கடைப்பிடிக்கின்றமை, சூடானிய அரசுக்கு அனுகூலமானது. சூடானில் உள்ள என்னைக் கிணறுகள் யாவும் சீன நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. அமெரிக்கா என்ன தான் மனித உரிமைகளுக்காக பாடுபடுவதாக வெளி உலகிற்கு காட்டிக் கொண்டாலும், சூடான் எண்ணை வளத்தின் மீது கண் வைத்திருப்பதை மறைக்க முடியாது. நைல் நதியின் நீர்வளத்தை வர்த்தக நோக்கோடு பயன்படுத்தும் திட்டமும் உள்ளது. மனித உரிமை மீறல்களை காரணமாக காட்டி, சீனா சூடானுடனான இராஜதந்திர உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என, அமேரிக்கா ஐ.நா.சபை மட்டத்தில் அழுத்தம் பிரயோகித்து வருகின்றது. ஆனால் இப்போதெல்லாம் சீனாவோ மனித உரிமை மாய்மாலங்களுக்கு ஏமாறும் வகையாக தெரியவில்லை.

(தொடரும்)

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

தொடர்புடைய பதிவுகள்:

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா –
காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம் !
ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை !
நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !
ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் !
கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள் !
அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD
கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்
சிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு!

தோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு முதலில் சுவிஸ் நாட்டிலும் பின்னர் அந்த நாட்டு அரசின் இனப்பாகுபாடு அரசியலால் வெறுப்புற்று நெதர்லாந்திலும் வாழ்பவர். அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, அதனால் ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் குறித்த சட்டங்களைத் தெரிந்து கொண்டமை, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம், நெதர்லாந்து கம்யூனிஸ்ட்டு கட்சியுடனான தொடர்பு, நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபட்டமை எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தையும் முக்கியமாக பல்நாட்டவரின் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அரசியலையும் கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இத்தளத்தில் பங்கேற்பதில் வினவு மகிழ்ச்சி அடைகிறது. அவரது வலைப்பூ முகவரி http://kalaiy.blogspot.com

எங்கே தமிழன்? எங்கே எட்டாவது சீட்டு? ராமதாசு சீற்றம் !

37

ராமதாஸ்

“ஈழத்தில் தமிழின அழிப்பில் ஈடுபட்ட, துணைநின்ற இனப்பகைவர்களை அடையாளம் காண்போம்!” என்ற தலைப்பில் பா.ம.க ராமதாசின் வன்னிய சொந்தங்களுக்காக நடத்தப்படும் தமிழ்ப் படைப்பாளிகள் இயக்கம் 10.06.2009 புதனன்று சென்னை அண்ணா கலையரங்கத்தில் ஒரு மாலை நேரக் கருத்தரங்கை நடத்தியது. மாபெரும் கருத்தரங்கமென்றாலும் உள்ளே சுமார் 250 தலைகளே இருந்தன. ஓவியர் வீர.சந்தானம் தலைமை வகிக்க, புதுவை செயமூர்த்தி என்ன பிழை செய்தோமென்ற பாடலைப் பாட கவிஞர் ஜெயபாஸ்கரன், கவிஞர் பச்சியப்பன் கவிதை வாசிக்க கருத்தரங்கம் தொடங்கியது. யார் யார் என்ன தலைப்பில் பேசினார்கள் என்பதை அந்த அழைப்பிதழில் உள்ளபடியே கீழே தருகிறோம்

தமிழகச் சக்திகள்- அய்யா பழ.நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு

இந்திய அரசின் நிலைப்பாடு- திரு. எம்.ஜி. தேவசகாயம், இ.ஆ.பி.(பணிநிறைவு)

ஊடகங்கள்- தோழர் தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

போர்க்குற்றவாளிகள்- வழக்கறிஞர் சுரேஷ், தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழநாடு-புதுவை.

இந்திய வெளியுறவுக் கொள்கை- தோழர் இராசேந்திர சோழன், ஆசிரியர், மண்மொழி, திங்களிதழ்.

சர்வதேசச் சக்திகள்- மருத்துவர் நா.எழிலன், அமைப்பாளர், இளைஞர் இயக்கம்

நிறைவுரை

தமிழினப் போராளி மருத்துவர் அய்யா ச.இராமதாசு

நன்றி

கவிஞர் விஜேந்திரா,

சென்னை மாவட்டச் செயலாளர், தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம்.

இந்த தலைப்புக்களைப் பார்த்த பிறகு ஏதோ பயங்கரமான ஆய்வு நடந்திருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். எல்லாம் ஜெ தலைமையிலான கூட்டணி தேர்தலில் தோல்வி அடைந்ததைப் பற்றி ஒரு மூச்சு அழுதுவிட்டு தமிழர்களை திட்டி விட்டு ஈழத்திற்காக தாங்கள் என்னவெல்லாம் சாதித்தோம் என ஒருவருக்கொருவர் முதுகு சொறிந்து கொள்ளத்தான்.

பேசியோர் அனைவரும் சதீஸ்நாயர், விஜய நம்பியார், ஏ.கோபிநாத், எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன் உள்ளிட்ட கேரள மலையாளிகள்தான் இதற்கெல்லாம் காரணம் என திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்துப் பேசினர். இந்த மலையாள பூச்சாண்டி பற்றி வினவில் தனியாகவே ஒரு பதிவு எழுதுவோம்.

கூட்டத்தலைவர் வீரசந்தானம், நெடுமாறனை பேச அழைக்கும் போது, “பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என விடை தெரியாது தமிழகமே தவித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு விடை தந்து நம்பிக்கையூட்ட அய்யாவை பேச அழைக்கிறேன்” என்றார்.

அய்யா நெடுமாறனோ, இத்தனை அழிவுகளுக்கும் காரணம் கருணாநிதிதான் என்று ஆரம்பித்தவர்,”அனைத்துக்கட்சி கூட்டத்தில் நாங்களெல்லாம் மத்திய மந்திரிகளை மட்டும்தான் ராஜினாமா செய்வது என்று பேசினோம்.ஆனால் கலைஞர்தான் ஒருபடி மேலேபோய் எம்.பி.க்கள் அத்தனைபேரும் ராஜினாமா செய்வார்கள் என அறிவித்தார். ஆனால், பிரணாப் இலங்கை சென்றுவந்தது மனநிறைவு தருகிறது எனக்கூறி, தான் முன்பு கூறியது போல எம்.பிக்களெல்லாம் ராஜினாமா பண்ணத்தேவையில்லை, தில்லி அரசு பார்த்துக்கொள்ளும் என நாடகமாடினார். அன்று மட்டும் அவர் அவ்வாறு முடிவெடுக்காமல், எம்.பிக்களை ராஜினாமா செய்ய வைத்திருந்தால் தில்லி அரசு பயந்திருக்கும். ஒரு இலட்சம் தமிழர்கள் இறந்திருக்க மாட்டார்கள். இதன் மூலம் வரலாற்றுப்பிழையை கருணாநிதி இழைத்துவிட்டார். மத்திய அரசின் நடவடிக்கையை எப்போதும் இவர் நியாயப்படுத்தியே பேசிவருவதால், தில்லி அரசும் மாநில அரசு நம்பக்கம் இருக்கிறது, எனவே, தமிழக மக்கள் குரலுக்கு நாம் செவிசாய்க்க தேவையில்லை என கருதுகிறது. அதற்கேற்ப கருணாநிதியும் மக்கள் எழுச்சியை ஒடுக்கும் வேலையைத்தான் செய்து வருகிறார்” என்று வழக்கமான கருணாநிதி பழிப்பு புராணத்தை பேசினார்.

ஈழத்திற்கு கருணாநிதி துரோகம் செய்வது எல்லோரும் ஒத்துக்கொள்ளக் கூடியதே. ஆனால் அவர் ராஜினாமா நாடகம் மட்டும் தடைபடாமல் நடந்திருந்தால் ஒரு இலட்சம் ஈழ மக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் என அளந்தாரே அதுதான் தாங்க முடியவில்லை. ஏதோ கருணாநிதிக்குப் பயந்துதான் இந்தியாவும், இலங்கை அரசும் அங்கே போர் நடத்திக் கொண்டிருந்ததைப் போல கருணாநிதியே எதிர்பார்த்திராத வல்லமையை அய்யா நெடுமாறன் கருணாநிதிக்கு அளித்தாரே அதுதான் கொஞ்சம் கூட ஒட்டவில்லை. ஒரு வேளை தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்தால் ஈழமக்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று நெடுமாறன் ஏன் பேசவில்லை? கருணாநிதிக்கு ஒரு நீதி, ஜெயலலிதாவுக்கு ஒரு நீதியா?

பேசியவர்கள் அனைவரும் ஜெயலலிதாவை பற்றி மட்டுமல்ல, ஜெ.என்ற வார்த்தையைக் கூட எவரும் உச்சரிக்க வில்லை. குறிப்பாக ராமதாசு பேசவேயில்லை. போயஸ் தோட்டத்திலிருந்து தொலைவில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வு எடுத்துவரும் அம்மாவைப் பற்றி அத்தனைபேருக்கும் அவ்வளவு மரியாதை இல்லையில்லை பயம்.

வழக்கமாக இத்தகைய கூட்டங்களில் ‘சே’ படம் பொறித்த டி.சர்ட்டில் வலம் வரும் ஒரு சில இளசுகளைத் தவிர எல்லாமே பெருசுகளின் தலைகள் பெரும்பாலும் தென்பட்டன.

நேற்றுவரை இந்த தேர்தல் முடிவுதான் ஈழத்தின் தலையெழுத்தையே தீர்மானிக்கப் போகும் சக்தியென முழங்கி வந்த தியாகு, இக்கூட்டத்தில், மிகவும் கம்மியான குரலில் “நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தாலும், இதில் எப்படி தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர் என்பதை அய்யா (ராமதாசு) அவர்கள் காட்சி விளக்கமே தந்துவிட்டார். எனவே நம்மை பொருத்தவரை இந்த தேர்தலில் பெறும் வெற்றி தோல்விகள் முக்கிய விசயமல்ல” என போகிற போக்கில் பேசிவிட்டுப் போனார்.

இறுதியாக அய்யா ராமதாசு முழங்க வந்தார். தேர்தலுக்கு முந்தைய மணித்துளி வரை ஈழத்தின் பிணங்களைக் காட்டி சதை வியாபாரம் செய்து ஏழு இடங்களையும் அள்ளிவிடலாம் என மனப்பால் குடித்த அந்த தமிழினக் காவலர் என்ன பேசினார் என்பதை கீழே அப்படியே தருகிறோம்.

இங்கே பேசிய தலைவர்கள் அவர்களுக்கான தலைப்பில் மிகச்சுருக்கமாப் பேசினார்கள். குறிப்பாக தியாகு பேசிய தலைப்பிற்கு இரண்டு மணிநேரம் வேண்டும். இரண்டுமணி நேரம் வேண்டும் என்றால் அதை கேட்க இரண்டாயிரம் இளைஞர்கள் வேண்டும். அவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும். தமிழ் இளைஞர்களாக இருக்க வேண்டும். தமிழ் உணர்வாளர்களாக இருக்கவேண்டும். அவன் தமிழச்சிக்குப் பிறந்தவனாக இருக்க வேண்டும். தமிழை ஊட்டி வளர்ப்பவர்களாக இருக்க வேண்டும். தமிழை நேசிப்பவர்களாக இருக்கவேண்டும். வீட்டில் தமிழை பேசுபவர்களாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் தமிழ் படிப்பவராக இருக்க வேண்டும். இரண்டுமணி நேரம் அதற்கு கொடுக்கலாம்.

ஆனால், இங்கு ஒவ்வொருவரும் பேசிய இந்திய ஆட்சிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற மிகுந்த அக்கறை காட்டி *** முதன்மை செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற தேவசகாயம் அவருக்கு இரண்டுமணி நேரம் வேண்டும், பி.யூ.சி.எல். சுரேசுக்கு இரண்டு மணிநேரம் வேண்டும். இங்கு பேசிய எல்லோருக்கும் இரண்டுமணி நேரம் வேண்டும். இராசேந்திர சோழனுக்கு இரண்டுமணி நேரம் வேண்டும். ஒவ்வொருத்தருக்கும் இரண்டுமணி நேரம் வேண்டும். ஆனால், மாணவர்கள் வேண்டும், இளைஞர்கள் வேண்டும். எங்கே இளைஞர்கள்? நாங்க அரைச்சமாவையே அரச்சிகிட்டிருக்கிறோம். அரைச்ச மாவையே அரைக்கலை… இங்க பேசினவங்கல்லாம், அரைக்கலை… ஆனா வந்தவர்களே கேட்டவர்களே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கேட்டவர்களே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் வந்தவர்களே வந்து கொண்டிருக்கிறார்கள். ஆறுகோடி தமிழன் எங்கே? தமிழனை தேடுங்க. தேடுங்க எங்கே இருக்கிறான் தமிழன்?

இராசேந்திர சோழன் சொன்னார், நாமெல்லாம் போராட்டம் நடத்தினோம், பேரணி நடத்தினோம், உண்ணாவிரதம் இருந்தோம். நாம நடத்தாத போராட்டமில்லை. எல்லாம் நடத்திட்டோம் எல்லாம் சொல்லிட்டோம், என்னன்ன வழி இருக்குதோ அதெல்லாம் செய்தோம்

தனித்தனியாகச் செய்தோம், கூட்டாகச் செய்தோம், இயக்கம் கண்டு செய்தோம், இன்று படைப்பாளர் பேரியக்கம் அவங்களோடு பங்கை நிறைவேற்றுகிறார்கள்.

இவ்வளவும் செய்தோம் ஆனால் ஒன்னும் பலனில்லை. *** மீதித் தமிழன் எங்கே? தமிழன் காயடிக்கப்பட்டு விட்டானா? இல்லை தமிழனே இல்லையா? எங்கே போனான் தமிழன்? நமக்குள்ளே பேசிக்கொண்டிருக்கிறோம். தியாகு சொன்னார் கடைசித் தமிழன் இருக்கிற வரைக்கும் அங்கே தமிழ் ஈழம் மலரும் நாள்வரும். ஆனால் இங்கேயிருக்கிற தமிழ்நாட்டு தமிழன் 6.5கோடி, 7 கோடி இந்தியாவிலிருக்கிற தமிழன் என்ன செய்யப்போகிறான்? இவனை எங்கே தேடுவது? எங்கே போயிருக்கிறான்?

நாங்கள் தேர்தலில் பேசாத பேச்சா? எல்லாம் சொன்னோம். உலகத்திலிருக்கிற கதைகளெல்லாம் படிச்சோம். எல்லாத்தையும் சொல்லிப் பார்த்தோம். ஆனால், எவ்வளவுச் சொல்லியும் தமிழன் உணரவில்லையே?

இங்கே தமிழோசை படிக்கிறவர்கள் எத்தனைப்பேர்? மக்கள் தொலைக்காட்சிப் பார்க்கிறவங்க எத்தனை பேர்? இத ரெண்ட தவிர இந்த செய்தியை கொண்டு போறது யாரு? நானும் அய்யா நெடுமாறனும், தியாகு, இராசேந்திர சோழன், வை.கோ., நாங்கதான் ஊர் ஊரா போனாம். ஊர் ஊரா சொன்னோம்.

யாரைப் போயி சொல்றது? எங்கே போயி சொல்றது? இல்ல எங்கப் போயி முட்டிக்கிறது? எந்த சுவத்துல, எந்த குட்டி சுவத்துல முட்டிக்கிறது? யாருகிட்ட சொல்றது? எங்கே தமிழன்? அவன் எங்க இருக்கிறான்? தமிழர்கள் எங்கே இருக்கிறார்கள்? இருக்கிறார்கள் எல்லாம் தமிழச்சிதான். 6.5 கோடின்னு சொல்றோம், 6 கோடி இருப்பான், 5.5 கோடியாவது இருப்பான். ஆனால் உணர்வுள்ள தமிழன் எத்தனைபேர்? உணர்வை எப்படி ஊட்டப்போறோம்?

தோழர் தியாகுவின் பேச்சுக்களை எத்தனை கல்லூரிகளில் கேட்கத் தயாராயிருக்கின்றன? தமிழ் மன்றங்கள் எங்கே போச்சு? இவர்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்? சினிமா கொட்டகைகளில், குடிகாரதமிழர்களாக இளைஞர்களை ஆக்கி வைத்திருக்கிற இந்த கொடுமைக்கு நாம் என்ன முடிவு காணப்போறோம்.

எவ்வளவோ புத்திமதி சொன்னோம். இன்னும் பேசப்போறோம். இதுக்கு முன்னாடி பேசுனோம், போராட்டம் நடத்தினோம். இனியும் பேசுவோம் இன்னும் ஒருமணிநேரம் சட்டையை பிழிஞ்சு வேர்வையை நனைச்சுட்டு ஊத்தோ ஊத்தோன்னு வெயில்ல பேசப்போறோம். சொல்லப் போறோம். ஆனால், என்ன நடக்கப் போகிறது? என்ன நடந்துகிட்டிருக்குது?

எல்லாத்துக்கும் மொத்தமா சொல்லிட்டாரு நம்முடைய தமிழக முதல்வர். என்ன சொல்லிட்டார் நான் அடிமை நான் அடிமைன்னா அப்ப நாமெல்லாம்? நாமெல்லாம் அடிமைகள்தான். அந்த ஒரு வார்த்தை சொன்னதற்காக கலைஞரை நான் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அய்யா கலைஞர் அவர்களே நீங்கள் மட்டும் அடிமையில்லை. நாங்களும்தான் அடிமை. 6.5 கோடி, 7 கோடி, 6.25(ஆறேகால்) கோடி என்னமோ ஒரு கணக்கு தமிழ்நாட்டு கணக்கு புள்ளிவிவரம். எல்லாம் அடிமை. வாயற்ற பூச்சிகளாயிருக்கிறோம். ஒன்னும் நடக்கவில்லையே?

இரண்டு தீர்மானங்களை தமிழக முதல்வர் ஒன்று அய்யகோ தீர்மானம். அடுத்து டெல்லிகோ போனோம். இப்படியெல்லாம் சொன்னோம்.

யார் யார் என்ற அதிகாரிகளின் பட்டியலையே சொன்னார். விஜய நம்பியார், கோபிநாதன், எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன். என் பட்டியல் நீளுது.

அங்கே ஒரு வங்காளிப் பாதிக்கப்பட்டால், ஒரு மலையாளி பாதிக்கப்பட்டால், நிலைமை வேறு. ஆனால், ஒரு இந்தியத் தமிழன் பாதிக்கப்பட்டால் ஒன்றுமே இல்லியே, நடக்கலியே.

ஆக நமக்குள்ளேயே நாம பேசிக்கொள்வது. தமிழனை அடையாளம் காணவேண்டும். தோழர் தியாகு அவர்களே தமிழனை கொஞ்சம் அடையாளம் காட்டுங்கள். டாக்டர் எழிலன் தமிழனை கொஞ்சம் அடையாளம் காட்டுப்பா. நம்முடைய அருமை மிகு இங்குள்ள எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன் கொஞ்சம் அடையாளம் காட்டுங்கள்.

இங்கே, நம்முடைய அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் சொன்னார்கள், நம்முடைய மிகப்பெரிய ஆபத்து சீனா, பாகிஸ்தான். தியாகுகூடச் சொன்னார், வடக்குதான் ஆபத்தாயிருந்தது இப்ப கிழக்கு தெற்கயும் வந்துட்டான். மேற்குல பாகிஸ்தான் இருந்துச்சு அதே பாகிஸ்தான் இப்ப தெற்கேயும் வந்துட்டான். இரண்டுபேரும் சங்கமிக்கிறான், தமிழனை அழிக்கனும், பூண்டோடு அழிக்கனும்,கூண்டோடு அழிக்கணும் தமிழினமே இருக்க கூடாது என்பதற்காக.

வெளியுறவுத்துறை அமைச்சரைப் பார்த்து உன் வேலையைப் பார் என்கிறான். இலங்கைக்காரனே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டான். நான் எங்களுக்காகப் போரை நடத்தவில்லை. இந்தியாவிற்காகத்தான் போரை நடத்தினோம் என்று.

நாம் எத்தனை தீர்மானங்களை நிறைவேற்றினோம். எத்தனை உண்ணாவிரதங்கள். நீங்களும் உண்ணாவிரதம் இருந்தீர்கள். அதை கொச்சைப்படுத்திக்கூட பேசினோம். இப்போது பேச விரும்பலை.

இந்தியாவுக்கானப் போரை நாங்கள் நடத்தினோம். தமிழின அழிப்புப் போரை நாங்கள் நடத்தினோம்.உங்க வேலையைப்பார் என்கிறான். மைன்ட் யுவர் ஒர்க்ஸ்* (ஒன்ஸ) என்கிறான், எஸ்.எம்.கிருஷ்ணாவை. என்ன செய்யப் போறோம். என்ன சொல்லப் போறோம். இனி நாம் என்ன செய்யப் போகிறோம். என்னப் பேசப் போகிறோம்.

பேசுவோம். எல்லா அமைப்புகளும் சேர்ந்து எல்லா தலைவர்களும் சேர்ந்து பேசுவோம். ஒரு நாளு பேசுவோம். ஒருமணிநேரமல்ல, ஒருநாளை இதற்காக ஒதுக்கி நிறைய பேரெல்லாம் இருக்கக் கூடாது.

ஒவ்வொரு உணர்வுள்ள அமைப்புக்கு ஒருவராக ஒரு இருபது முப்பது பேராக உட்கார்ந்து பேசுவோம். இந்த அடிமை விலங்கை தகர்ப்பதற்கு நீங்கள்தான் ஒரு வழியை சொல்ல வேண்டும்.

ஒன்னும் புரியலை ஒன்னுமே புரியலை எங்களுக்கும் ஒன்னும் புரியலை. ஆக நாமெல்லாம் முட்டாள்களாக்கப்பட்டிருக்கிறோம் அது மட்டும் நமக்கு புரியுது. மீண்டும் நாம் கூடுவோம், ஆனாலும்கூட துன்பப்படுகிற அந்த ஈழத்தமிழர்களை பற்றி நினைக்கின்றோம். ஆனால், நினைக்கிறோமே தவிர வேறு ஒன்றும் நம்மாலே செயலளவிலே செய்ய முடியாத அளவிலிருக்கிறோம்.

தமிழ் ஈழம், தமிழ் ஈழம் மலரும், தமிழ் ஈழம் ஒருகாலத்தில் உருவாகும் என்கிற எண்ணம் அந்த ஒரு வேட்கை இருக்கிறது.

ஆகையால் இதை எப்படிநாம் சாதிக்கப்போகிறோம். என்பதை நாம் உட்கார்ந்து ஒருநாள் பேசுவோம். ஒருநாள் பூராவும் பேசுவோம். அடுத்து இதை எப்படி கொண்டு செல்லப்போகிறோம் என்பதையும் பேசுவோம்.

இங்கே பேசியவர்களெல்லாம் மிகச்சுருக்கமாக 15 நிமிடங்களில் பேசி அமர்ந்தார்கள். இரண்டு மணிநேரம் கொடுக்க வேண்டும். ஆனால், கேட்பதற்கு ஆள்வேண்டும். கேட்பதற்கு தமிழர்கள் வேண்டும். தமிழ் இளைஞர்கள் வேண்டும். புதுப்புது இளைஞர்கள் வேண்டும். கேட்டவர்களே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். வந்தவர்களே வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணம் மாற்றம் வேண்டும் என யோசிப்போம்”…

இதுதான் அய்யா தமிழினக் காவலர் ராமதாசு பேசிய பேச்சு. இதற்கு தனியே விமரிசனம் தேவையா என்ன? தமிழன் எங்கே என்று அய்யா பேசும்போது எல்லோரையும் பார்த்து சிரிக்க சிரிக்க பேசினார். அரசனை நம்பி புருசனை கை விட்ட கதையாக ஒரு சீட்டுக்காக அணி மாறிய அய்யா ஒரு சீட்டு கூட தேறாமால் மண்ணைக் கவ்வினார். கல்லாக் கட்டிய மந்திரிப் பதவி போச்சு. தமிழோசைக்கும், மக்கள் டி.விக்கும் வந்த விளம்பரங்கள் போச்சு. அமைச்சராக இருந்து தேற்றிய கைக்காசு பலநூறு கோடி தேறினாலும் இனி கட்சிக் கம்பெனியை கைக்காசு போட்டு நடத்த வேண்டுமே என்ற கவலை. இதெல்லாம் சேர்ந்துதான் அய்யா எங்கே தமிழனென்று சிரித்துக்கொண்டே தேடுகிறார்.

ஈழத்திற்காக தமிழகத்தில் நடந்த போராட்டங்களால் எந்தப் பயனுமில்லை என அய்யாவுக்கு இப்போதுதான் புரிந்ததாம். ஆனால் ஜெவை ஈழத் தாயாக்கி இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என பிலிம் காட்டினாரே அப்போது ஏன் உரைக்க வில்லை? தேர்தலில் தோற்றதால் ஈழத்திற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கத்தை பாதுகாப்பாக எழுப்புகிறார் ராமதாசு. ஒரு வேளை தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றிருந்தால்? நிச்சயம் தமிழனைக் காணவில்லை என புலம்பமாட்டார். மாறாக இரண்டு இலட்சம் தமிழர்கள் சாகவேண்டியது தங்கள் ஆட்சியினால் ஒரு இலட்சமாக குறைந்திருக்கிறது என்று சாதனையாக அறிவிப்பார்.

தேர்தலில் தோற்றால் தமிழனுக்கு சுரணையில்லை என்ற இந்த சோக நாடக புலம்பலை தமிழக மக்கள் கருணாநிதியின் புண்ணியத்தில் பலமுறை பார்த்திருக்கிறார்கள். இந்த முறை அந்த இடத்தை அய்யா ராமதாசு எடுத்திருக்கிறார். தனது சொந்த தேர்தல் தோல்விக்காக தமிழன் இலாயக்கில்லை என்று கிண்டலடிக்கும் இந்த சுயநலக் கோமாளிகளையெல்லாம் ஈழத்து மக்கள் நம்புகிறார்களே என்ன செய்ய? இறுதி தாக்குதலில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட போதும் தேர்தலுக்காக வாய் கிழிய ஈழம் ஈழம் என முழங்கிய அ.தி.மு.க கூட்டணி ஒரு மாலை நேர ஆர்ப்பாட்டம் கூட செய்யவில்லையே? அய்யா ராமதாசு அவர்களே முதலில் உங்களுக்கும், உங்கள் அணி தலைவிக்கும் சுரணையும், நன்றியுணர்வும் உள்ளதா என்பதை விளக்குங்கள். அப்புறம் தமிழனைப் பற்றி கவலைப்படலாம்.

இறுதியாக தற்போது ராமதாசின் கவலை என்ன தெரியுமா? வன்னியில் வதை முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் மக்களை காப்பாற்றுவது குறித்து என்று நினைத்து விடாதீர்கள். அய்யா அம்மாவுடன் ஒப்பந்தம் போட்ட போது ஏழு சீட்டுக்கு பிறகு எட்டாவது சீட்டை நாடாளுமன்ற மேலவை தேர்தலில் அ.தி.மு.க தரவேண்டும் என்று பேசியிருந்தார்கள். இப்போது கொடநாட்டில் குப்புறப்படுத்திருக்கும் புரட்சித் தலைவி தேர்தல் தோல்வி கோபத்தில் அந்த எட்டாவது சீட்டை தரமாட்டேன் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? இந்தப் பிரச்சினைக்கு தீர்வும் ஆறுதலும் தர விரும்புவர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு கையில் விளக்குமாற்றுடன் செல்லலாம்.

vote-012
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

தொடர்புடைய பதிவுகள்

ஈழத்தின் இரத்தத்தை வியாபாரம் செய்யும் பா.ம.க ராமதாஸ் !

ஈழம்: சோனியாவிடம் பா.ம.க பம்முவது ஏன்? கருத்துப்படம் !!

வருண்காந்திக்கு புயல்வேகத்தில் நீதி !

7

varun copy

உத்திரப் பிரதேசத்தின் பிலிபிட் மக்களைவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வருண்காந்தி, மேனகா காந்தியின் செல்லப்பிள்ளை, முசுலீம்களின் கையை வெட்டுவேன் என்றெல்லாம் பா.ஜ.கவின் மதவெறி அனலைக் கக்கும் பேச்சாளர்களையும் விஞ்சி பேசி இந்துமதவெறியைப் பரப்புவதற்கு நேரு பரம்பரையும் எந்த விதத்திலும் குறைந்ததில்லை என்று நீருபித்தார். இதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசு அவரைக் கைது செய்யப் போனபோது வருண்காந்தியின் அடிப்பொடிகள் போலீசைத்தாக்கி கலவரம் செய்தனர். இதனால் மாயாவதி அரசு அவர் மேல் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது.

இதனால் மாயாவதி முசுலீம்களின் வாக்குகளை தேர்தல் நேரத்தில் பெறலாம் என்பதைத் தாண்டி இப்போது பா.ஜ.க அரசமைப்பதற்கு மாயவாதியிடம் தூதுவிடுகிறது என்பதையும் இங்கே சேர்த்துப் பார்க்கவேண்டும்.

தன் செல்லப்பிள்ளை சிறையில் அடைக்கப்பட்டதை வைத்து மேனகா காந்தி எல்லா ஆர்ப்பாட்டங்களையும் செய்தார். வருண்காந்தி அப்படிப் பேசியதில் உடன்பாடில்லை என பா.ஜ.கவும் அடக்கி வாசித்தது. ஆனாலும் நேரு பரம்பரையின் புதிய இளவரசரை இந்துமதவெறியின் தொண்டர்கள் வராது வந்த மாமணியாகக் கொண்டாடினர். தான் வேட்பாளர் என்பதால் தன்னை ஜாமீனில் வெளியே விடவேண்டும் என்று வருண் எடுத்த எடுப்பிலேயே உச்சநீதிமன்றம் சென்று கோரியதை பரிசீலித்த நீதிமன்றம் அவருக்கு மே 14 வரை பரோலில் விடுவித்தது.

இதற்கிடையில் அவரை தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற ஆய்வுக்குழு, அந்த சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்யுமாறு உ.பி அரசுக்கு பரிந்துரைத்தது. இதை எதிர்த்து உ.பி அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இதை உடனே விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு ஆய்வுக்குழு தீர்ப்பையே உறுதி செய்தது. தீர்ப்பு வெளியான ஒரு மணிநேரத்திலேயே உ.பி அரசு அந்த சட்டத்தின் கீழ் கைது செய்ததை ரத்து செய்தது.

ஆக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நேரு பரம்பரையின் குலக்கொழுந்து சில நாட்கள் சிறையில் இருந்து விட்டு விடுதலையாகிவிட்டார். இங்கே சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் போன்றோரெல்லாம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சில மாதங்கள் கழித்தே விடுதலையாகினர். பாசிச ஜெயா ஆட்சியில் இதே சட்டத்தில் கைது செய்யப்பட்ட ம.க.இ.க தோழர்களெல்லாம் ஆறேழு மாதங்கள் சிறையில் இருக்க நேரிட்டது.

ஆனால் வருண்காந்தி என்பதால் எத்தகைய சட்டமும் நீதிமன்றமும் புயல் வேகத்தில் பணிவிடை செய்யும் போலும். இதே போல உயர்நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் அண்ணாச்சிக்கு உச்சநீதிமன்றம் உடனே பிணை வழங்கியிருக்கிறது. வழக்கமாக உயர்நீதிமன்றத்தால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டால் ஓரிரு ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர்தான் உச்சநீதிமன்றம் அந்த மேல்முறையீடை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். இங்கே அண்ணாச்சி பணபலத்தால் உச்சநீதிமன்றத்தை விலைக்கு வாங்கியிருக்கிறார்.

ஆக இந்த விவகாரங்களில் கிடைக்கும் நீதி என்ன? ஒன்று நீங்கள் மேன்மக்களாக பிறந்திருக்கவேண்டும் அல்லது நீதிபதிகளை விலைக்கு வாங்கும் அளவு பணக்காரராக இருக்கவேண்டும்!
vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

பொட்டை!

25

பொட்டை

நேற்று மாலை பெருநகர ரயில் வண்டியில் ஒரு திரைப்படம் பார்த்து விட்டு நானும், அம்மாவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். தீடீரென ஒரு கைத்தட்டல் ஒலி.. நிமிர்ந்து பார்த்தால் ஒரு திருநங்கை கைத்தட்டியவாறு நின்று கொண்டிருந்தாள். பின்னர், சீட்டில் சரிந்து நின்றவாறு தனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு முப்பத்தைந்து வயதிருக்கலாம் அல்லது வயதுக்கு மீறிய மூப்பாக இருக்கலாம். அழுக்குப் பிடித்த சேலை… அவலட்சணமான முகம்… நெற்றியில் விழும் ஒழுங்கற்ற சிகை… உண்மையைச் சொன்னால், பரிதாபமாகவும், அதே வேளை அசூயையாகவும் இருந்தது.

ரயில் கடகடத்துக் கொண்டிருந்தது. வேறெங்கோ தலை திருப்பி நின்றிருந்த அத்திருநங்கை சட்டென திரும்பினாள். கண்களில் கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. ஒரு கணம் நான் அதிர்ச்சியடைந்தேன். அவள் எதை நினைத்துக் கலங்கக் கூடும்? பிச்சையெடுத்து வாழ நேர்ந்த அவலம் குறித்தா? பிறவியில் நேர்ந்த ஊனம் குறித்தா? இனி ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாத குடும்பத்தினரின் நினைவு குறித்தா? அந்தக் கண்ணீரில்… ஒரு கணம் பீதியூட்டும் அவளது முகத்தில்… சுயபச்சாதாபமும், சீரழிவும் கூடி நின்றன. நான் ஜன்னலுக்கு வெளியே பார்க்கத் தொடங்கினேன்.

மறுபடியும் கைத்தட்டல்… அவள் இப்பொழுது கையேந்தியவாறு முன்நகரத் தொடங்கினாள். பலரும் அவளை ஏறிட்டுப் பார்க்காமலிருக்க பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். நான் ஒரு ஐந்து ரூபாயை அவளது விரல்கள் பட்டு விடக் கூடாதென்ற எச்சரிக்கையோடு அவள் கையில் போட்டேன். எனது இருக்கையிலிருந்து இரு இருக்கைகள் தள்ளி, தனது குடும்பத்தினரோடு இருந்த ஒருவன் சிரித்தவாறு, தீடீரென அவளைப் போலவே கைதட்டினான். அவனது குடும்பப் பெண்கள் சிரிக்கத் தொடங்கினார்கள். திருநங்கை திரும்பிப் பார்த்தாள். நேரே அவனிடம் சென்று ஏதோ காரசாரமாக சொன்னவாறு அவனது முகத்துக்கு நேராக கைதட்டினாள். அவன் பதிலுக்கு ஏதோ ஏளனமாக சொன்னான். மயிலாப்பூர் ஸ்டேஷன் நெருங்கியது.

அவனைப் பார்த்து ஏதோ வசைபாடியவாறு வாசலை நோக்கி விரைந்தாள். சிரித்து கெக்கலி காட்டி கொண்டிருந்த அவனது முகம் இருளத் தொடங்கியது. “இதுக்கு மேல ஏதாவது பேசுன, அடிதான்!” என விரல் காட்டி எச்சரித்தான். என்னை கடந்து சென்ற திருநங்கை, வாசலருகே நின்று சற்று உரக்கவே சொன்னாள். “போடா பொட்டை!” கோபம் கொப்பளிக்க அவன் வாசலை நோக்கி விரைந்தான். நான் தலை திருப்பிப் பார்த்தேன். கண்ணிமைக்கும் பொழுதில் அவன், அத்திருநங்கையை தாக்கி ரயிலிருந்து பிளாட்பாரத்தில் தள்ளினான். விருட்டெனத் திரும்பி தனது இருக்கையை நோக்கி விரைந்தான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு வன்முறை நடந்து முடிந்து விட்டிருந்தது. “ஏய், ஹலோ, இது என்ன? அவளை ஏன் அடித்தீர்கள்? உங்களால் பிச்சை போட முடியாதென்றால், சும்மா இருக்க வேண்டியதுதானே, எதற்காக கேலி செய்கிறீர்கள்?” என இருக்கையிலிருந்து எழுந்து கத்தினேன். அவன் இந்த எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீ உட்கார், அவள் தண்ணியடித்திருக்கிறாள்” என்றவாறு சங்கடத்தோடு இருக்கையில் நெளியத் துவங்கினான். எனது அம்மா என்னை “உட்கார், உட்கார்” என கைகாட்டிக் கொண்டிருந்தாள். அதற்குள் உள்ளே வந்த திருநங்கை கோபத்தோடு அவனை நோக்கிக் கத்தத் துவங்கினாள். என்னிடம் தனது சிராய்த்த முழங்கையைக் காட்டி முறையிட்டாள். நான் கோபத்தில் என்ன செய்வதென்று புரியாமல் நின்று கொண்டிருந்தேன். “நீ முதலில் இங்கிருந்து போம்மா, இல்லையென்றால் நீ மேலும்தான் அடிபடுவாய்!” என்றேன். அவள் அங்கிருந்து நகர்ந்தாள். நான் இருக்கையில் அமர்ந்தேன். என்னை முறைத்துப் பார்த்த அவன், ஜன்னல் பக்கம் தலையை திருப்பிக் கொண்டான்.அவனது குடும்பப் பெண்கள் இப்பொழுது சிரிக்கவில்லை.

ரயில் நிலையத்தை நெருங்கியது. அம்மா என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். எல்லோரும் எதுவுமே நடவாதது போல அமைதியாக இருந்தார்கள். அந்த அமைதியை விடவும் அவள் அசிங்கமானவளில்லை எனத் தோன்றியது.

பி.கு: நேற்றிலிருந்து வித்யாவின் எழுத்துக்கள் நினைவில் எழும்பிக் கொண்டிருக்கின்றன.

நன்றி : போராட்டம்

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

கூலித் தொழிலாளர்களைக் கொன்றது சுடுநெருப்பா? இலாப வெறியா?

May 09நாமக்கல் நகருக்கு அருகே இயங்கி வரும் வைகை எம்.பி.ஆர். அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் (பி) லிமிடெட் என்ற ஆலையில் கடந்த 06.05.2009 அன்று இரவு நடந்த தீ விபத்து 17 தொழிலாளர்களின் உயிரைக் காவுவாங்கிவிட்டது. இந்த ஆலை தவிட்டில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஆலையாகும். தவிட்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களுள் 9 பேர் தப்பி வர வழியில்லாமல் தீக்குள்ளேயே சிக்கி எரிந்து கரிக்கட்டையாகிப் போனார்கள். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தொழிலாளர்களுள் 8 பேர் சிகிச்சைப் பலன் அளிக்காமல் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து இறந்து போனார்கள். அநியாயமாக இறந்து போன இத்தொழிலாளர்களுள் சண்முகம் என்பவர் மட்டும்தான் நாமக்கல்லுக்கு அருகிலுள்ள வளையப்பட்டியைச் சேர்ந்தவர். மீதமுள்ள அனைவரும் பீகார் மாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடித் தமிழகத்திற்கு வந்த அயல் மாநிலத் தொழிலாளர்கள்.

இவ்வாலையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்த சண்முகத்திற்கு ஒன்பது வயதில் மகள் இருப்பதோடு, அவரது மனைவி வளர்மதி தற்பொழுது கருவுற்றிருக்கிறார். இறந்து போன பீகார் தொழிலாளர்கள் அனைவரும் அவ்வாலையில் தவிட்டு மூட்டைகளை ஏற்றி இறக்கும் சுமைக்கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். அத்தொழிலாளர்களுள் ஒருவரின் வயது 17தான் இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது; மற்ற அனைவரும் 20 முதல் 25 வயதிற்குட்பட்ட இளம் தொழிலாளர்கள்.

தீ விபத்திற்கு என்ன காரணம்? தீ பிடித்த பின் கிடங்கிற்குள் இருந்த தொழிலாளர்களால் ஏன் தப்பித்து வெளியே வர முடியவில்லை? இக்கேள்விகளுக்கு, “கொதிகலனைக் குளிர்விக்கும் சாதனம் பழுதடைந்து சில மாதங்கள் ஆகிவிட்டது; ஆலையில் தீயணைப்புச் சாதனங்கள் போதுமளவிற்கு இல்லை; ஆபத்துக்கான அவசர வழியில் தவிட்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு, அவ்வழி தடுக்கப்பட்டிருந்தது; தவிட்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இரண்டு கிடங்குகளிலும் போதிய காற்றோட்ட வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை” என போலீசும், தீயணைப்புத் துறை அதிகாரிகளும் காரணங்களைக் ‘கண்டுபிடித்து’ அடுக்கி வருகின்றனர்.

எளிதில் தீப்பற்றக்கூடிய தவிடைப் பயன்படுத்தும் இவ்வாலையில் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு, திடீரென விபத்து நடந்துவிட்டால் சேதம் அதிகமின்றித் தப்பித்துக் கொள்வதற்கு என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டுமோ, அவை எதுவுமேயின்றி இவ்வாலை இயங்கி வந்திருப்பதைத்தான் அதிகாரிகள் ஒப்புதல் வாக்குமூலமாகத் தந்திருக்கிறார்கள். ஆலை முதலாளிகளின் இலாபவெறியும், அம்முதலாளியிடம் கையூட்டு வாங்கி வந்த அதிகாரிகளின் அலட்சியமும்தான் 17 தொழிலாளர்களின் உயிர் பறிபோனதற்குக் காரணம். எனவே, இதனை அப்பட்டமான கொலைக்குற்றமாகக் கருத இடமிருக்கிறது.

ஆனால், போலீசோ இந்தச் சாவுகளைக் கொலைக் குற்றமாகப் பதிவு செய்யவில்லை. கவனக் குறைவால் நேர்ந்துவிட்ட விபத்தாகவும், அதனால் நேர்ந்துவிட்ட மனிதச் சாவாகவும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது, போலீசு. எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி இவ்வாலை இயங்கி வந்ததை வேடிக்கை பார்த்து வந்த அதிகாரிகளுள் ஒருவரின் பெயர்கூட போலீசின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அவ்வறிக்கையில் ஆலையின் முதலாளி மணியின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அவரையும் இதுநாள் வரை கைது செய்ய முடியாமல் போலீசு தேடிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அம்முதலாளியோ, ‘தலைமறைவாக’ இருந்து கொண்டு போலீசார் தன்னைக் கைது செய்யக்கூடாது எனக் கோரி, முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு போட்டிருக்கிறார்.

இவ்வாலையில் தவிட்டு மூட்டைகளை ஏற்றி இறக்கும் வேலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும், நாமக்கல்லுக்கு அருகிலுள்ள எம்.மேட்டுப்பட்டியிலுள்ள அகதி முகாமைச் சேர்ந்த ஈழத் தமிழர்களும் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வேலையைச் செய்யும் தொழிலாளர்களின் பெயர், முகவரி; அவர்கள் வேலை செய்யும் ‘ஷிப்டு’ விபரம்; அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் உள்ளிட்ட எந்தப் பதிவும் இல்லாமல் இத்தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து வந்திருக்கிறது, நிர்வாகம். இதனால், தீயில் எரிந்து கருகிப் போன தொழிலாளர்களை அடையாளம் காணவும், இறந்து போன மற்றும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்குத் தகவல் கொடுக்கவும் முடியாமல் அரசாங்கம் திணறிப் போய்விட்டது.

ஊரு விட்டு ஊரு வந்து இறந்து போன பீகார் தொழிலாளர்களுக்காகத் தமிழகத்தில் யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள் என்ற மிதப்பில் ஆலை நிர்வாகம் பீகாரிலிருந்து வந்த அத்தொழிலாளர்களின் உறவினர்களிடம் வெறும் இருபதாயிரம் ரூபாயை நட்ட ஈடாகக் கொடுத்துக் கைகழுவியது. அதிகாரிகளோ இதுவே அதிகம் என்பது போல நடந்து கொண்டனர். குறிப்பாக, மோகனூர் போலீசு நிலைய ஆய்வாளர் சி.பெரியசாமி, “20 ஆயிரம் ரூபாய் போதாதா? கொடுப்பதை வாங்கிச் செல்லுங்கள்” என இறந்து போன சண்முகத்தின் மனைவி வளர்மதியிடமும், பீகார் தொழிலாளர்களின் உறவினர்களிடமும் அதிகாரத் திமிரோடு உபதேசித்துள்ளார். வாய்க்கரிசி போடுவதற்கு ஏற்பாடு செய்ததையே பெரிய மனிதாபிமான உதவியாகக் காட்டிக் கொண்ட தமிழக அர”, அதற்கு மேற்பட்டு எந்தவொரு நிவாரண உதவியும் செய்ய மறுத்து விட்டது.

இந்த ‘விபத்து’ நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாகத்தான் நடந்தது. தீயில் சிக்கிக் கொண்டு மாண்டு போனவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களாக இருந்திருந்தால், ஓட்டுக்கட்சிகளிடையே ஒப்பாரி வைப்பதில் பெரும் போட்டியே நடந்திருக்கும். பீகார் தொழிலாளர்களின் பிணங்களோ ஓட்டு பொறுக்குவதற்குப் பயன்படாத பிணங்களாகப் போய்விட்டதால், போலி கம்யூனிஸ்டுகள்கூட இப்பிரச்சினையைச் சீந்தாமல் விட்டுவிட்டனர்.

பல ஆண்டுகளுக்கு முன் தலைநகர் தில்லியில் உபஹார் என்ற திரையரங்கில் தீ விபத்து ஏற்பட்டு, அத்திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த பலரும் தீயில் சிக்கி மாண்டு போயினர். முதலாளித்துவ பத்திரிகைகள் அனைத்தும் இவ்விபத்தை மாபெரும் ‘தேசிய’ சோகமாகச் சித்தரித்து எழுதியதோடு, அத்திரையரங்க உரிமையாளர்கள் தண்டிக்கப்படும் வரை அவ்விபத்து குறித்து தொடர்ந்து எழுதி வந்தன. ஆனால், நாமக்கல்லில் 17 தொழிலாளர்கள் தீயில் கருகி இறந்து போனதோ வெறும் மாவட்டச் செய்தியாகச் சுருக்கப்பட்டு விட்டது.

May 09ஓட்டுக்கட்சிகளும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் அலட்சியப்படுத்தி ஒதுக்கித்தள்ளிய இச்சாவுகளை, அதற்குப் பின்னே மறைந்துள்ள முதலாளித்துவ இலாபவெறியை நாமக்கல்லில் செயல்பட்டு வரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம்தான் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று அம்பலப்படுத்தியது. இத்தீ விபத்தில் இறந்து போன தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 இலட்சம் நிவாரணமாக வழங்கக் கோரியும், அந்த ஆலையின் முதலாளியை மட்டுமின்றி, பாதுகாப்பற்ற முறையில் ஆலை இயங்கி வந்ததைக் கண்டும் காணாமல் இருந்த அதிகாரிகளையும் கைது செய்யக் கோரியும் நாமக்கல்லில் 18.5.2009 அன்று மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பாக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இந்தப் பிரச்சினையைக் கமுக்கமாக அமுக்கிவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்த மோகனூர் போலீசு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தராமல் இழுத்தடித்ததை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் மட்டுமின்றி, இறந்து போன தொழிலாளர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக, இறந்து போன தொழிலாளி சண்முகத்தின் மனைவி வளர்மதி, தனது கணவரை ஆலை நிர்வாகம் இரவு பகல் பாராமல் கசக்கிப் பிழிந்து வேலை வாங்கி கொன்று போட்டதைக் கண்ணீர் மல்க எடுத்துரைத்தார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சி.ரா”, சேலம் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் மாயன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டதில் வலியுறுத்திய கோரிக்கைகளை நிறைவேற்றித் தர தமிழக அரசிற்கு உத்திரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளது, மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.

இது உலகமயக் காலக்கட்டம். கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி இந்தியாவிற்குள் நுழையும் வெளிநாட்டு மூலதனத்தைப் பாதுகாப்பதற்குப் புதிது புதிதாகச் சட்டங்கள் போடப்படுகின்றன. ஆனால், வேலை தேடி ஊரு விட்டு ஊரு செல்லும் தொழிலாளிக்கோ குறைந்தபட்ச பாதுகாப்புகூடக் கிடைப்பதில்லை. இந்த உலகமயத்திற்குச் சேவை செய்வதற்காகவே, தொழிலாளர்கள் வேலை உத்திரவாதம் பற்றிக் கேட்கக்கூடாது எனத் தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. இனி, தொழிலாளர்கள் பணியிடங்களில் உயிர் உத்திரவாதம் பற்றியும் கேட்கக் கூடாது என்றுகூடச் சட்டங்கள் திருத்தப்படலாம். எனவே, தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து இந்த அபாயத்திற்கு எதிராகப் போராடாவிட்டால், தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுவதை ஒழித்துக்கட்ட முடியாது.

______________________________________

புதிய ஜனநாயகம், ஜூன்’2009
______________________________________

ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?

அன்பார்ந்த நண்பர்களே,

வினவின் அடுத்த கட்ட பயணமாக ” புதிய ஜனநாயகம்” மார்க்சிய லெனினிய அரசியல் ஏட்டின் அனைத்துக் கட்டுரைகளையும் பி டி எஃப்பாகவும் (PDF), தமிழ் யூனிகோடிலும் இந்த மாதம் முதல் வெளியிடுகிறோம். இந்த சேவை புதிய ஜனநாயகம் வெளிவந்த அன்றே உங்களுக்கு கிடைக்கும். இதற்கு அனுமதியும், உதவியும் அளித்த புதிய ஜனநாயகம் தோழர்களுக்கு எமது நன்றிகள்.

சவால்கள், சபதங்கள், சவடால்கள் என்று ஒட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிகைகள் மத்தியில், அன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை, அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு புதிய ஜனநாயகம்.

பல்வேறு இடர்ப்பாடுகளுக்கிடையே இந்த புரட்சிகர அரசியல் ஏடு தமிழகத்தில் 24 ஆண்டுகளாக வெளிவருகிறது. தமிழகத்தில் காங்கிரசு, தி.மு.க, போலிக் கம்யூனிஸ்டுகள் முதலான பெரிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ கட்சிப் பத்திரிகைகளின் விநியோகத்தை விட புதிய ஜனநாயகத்தின் விநியோகம் அதிகம். ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் தோழர்களால் நேரடியாக மக்களிடையே விற்பனை செய்யப்படும் இந்த இதழ் கால் நூற்றாண்டுகளாக தமிழகத்தின் அரசியல் வரலாற்றை மட்டுமல்ல அதற்கு தீர்வையும் வைத்து பரந்து பட்ட மக்களை புரட்சிகர அரசியலுக்காக அணிதிரட்டி வருகிறது.

நாடு மீண்டும் காலனியாக்கப்படுவதற்கு எதிராகவும், இந்து வெறி பார்ப்பன பாசிசத்துக்கு எதிராகவும் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வூட்டும் புதிய ஜனநாயகம் இதழ் இம்மாதம் முதல் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது என்பதில் வினவு மகிழ்ச்சியும் உற்சாகமும் கொள்கிறது. கூடிய விரைவில் இவ்விதழின் பழைய இதழ்களை ஆவணப்படுத்தும் வேலையை செய்து முடிப்போம். இந்த பயனை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதோடு மற்ற நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் பரந்து பட்ட மக்களுக்கு புரட்சிகர அரசியலை கொண்டு சேர்ப்பதற்கு உதவி செய்ய முடியும்.

நட்புடன்

வினவு

……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?

ஈழ விடுதலைப் போர் மிகக் கொடிய பேரழிவைச் சந்தித்துக் கசப்பானதொரு முடிவை எட்டியிருக்கிறது. இது, புலிகள் இயக்கத்தின் தோல்வி மட்டுமல்ல; ஈழ விடுதலைப் போராட்டம் சந்தித்திருக்கும் ஒரு பாரிய பின்னடைவு. இத்தகையதொரு நிலைமை நெருங்குகிறது என்பதைக் கடந்த சில மாதங்களில் களநிலைமைகளிலிருந்து அனைவருமே புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும், இம்முடிவு நம்மை மாளாத் துயரத்தில் ஆழ்த்துகின்றது.

கொட்டகைகள், கூடாரங்கள், பதுங்குக் குழிகள் என 3 சதுர கி.மீ. பரப்பளவில் சிக்கித் தவித்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு போர்த் தாக்குதலை நடத்தி ஈவிரக்கமின்றி கோரமாகக் கொன்றொழித்திருக்கிறது, இனவெறி பிடித்த சிங்கள பாசிச அரசு. சூடானின் டார்ஃபரில் நடந்த இனப்படுகொலையை ஒத்ததாக நடந்துள்ள ஈழத் தமிழினப் படுகொலையில், கடந்த மே முதல் நாளிலிருந்து 19ஆம் தேதி வரை நாளொன்றுக்குச் சராசரியாக 1000 பேர் வீதம் குண்டு வீச்சினால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இந்நாட்களில் மட்டும் 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த “தி டைம்ஸ்” நாளேடு கூறுகிறது. செயற்கைக் கோள் மூலம் பிடிக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையிலும், போர் நிறுத்தப் பகுதியில் பணியாற்றிய மருத்துவர்கள் கூறிய சாவு எண்ணிக்கையின் அடிப்படையிலும் அந்நாளேடு வெளியிட்டுள்ள இச்செய்தி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஏறத்தாழ 50,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு வாய்ப்புள்ளது என ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உற்றார் உறவினர்களைப் பறிகொடுத்துவிட்டு, யாருமே இல்லாத அனாதைகளாக படுகாயமடைந்தும் கைகால்கள் முடமாகியும், முட்கம்பியிடப்பட்ட வதை முகாம்களில் வேதனையில் துடிக்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள். 1983 ஜூலை கலவரத்தையடுத்து சிங்கள இனவெறி ஜெயவர்த்தனே அரசுக்கு எதிராகவும், ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் பொங்கி எழுந்த தமிழகம், இன்று ஒரு பார்வையாளனாக நிற்கிறது.

இக்கொடிய இன அழிப்புப் போரில் சீனாவும் பாகிஸ்தானும் ஆயுதங்களை வழங்கியுள்ளதோடு, சிங்கள பாசிச அரசுக்கு அரணாகவும் நின்றிருக்கின்றன. அமெரிக்காவையும் மேற்குலக நாடுகளையும் ராஜபக்சே அலட்சியப்படுத்திப் பேசிய பின்னரும் அந்நாடுகள் எதையும் செய்யவில்லை. ஐ.நா. மன்றமும் தலையிடவில்லை. எல்லாம் முடிந்த பிறகு எட்டிப் பார்த்துவிட்டு, கடமை முடிந்ததென பறக்கிறார் பான்கிமூன்.

இந்திய அரசோ, இந்த இனப்படுகொலைக்கு இறுதிவரை துணை நின்று வழிநடத்தியிருக்கிறது. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் நிர்பந்தத்தால், ஐ.நா மனித உரிமை பாதுகாப்புபு பேரவையில் மேலை நாடுகள் இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளதாகக் குற்றம் சாட்டி கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யா, சீனா, பாகிஸ்தானோடு இந்தியாவும் இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்று அத்தீர்மானத்தைத் தோற்கடித்துள்ளது. “நாங்கள் பயங்கரவாதப் புலிகளுக்கு எதிராக நடத்திய போர் எங்களுக்காக மட்டுமல்ல; இந்தியாவுக்காகவும்தான்” என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார், ராஜபக்சே.

ஈவிரக்கமின்றி நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் இந்தப் படுகொலையின் கடைசி நாட்கள், இந்திய மேலாதிக்கத்தின் கோரமுகத்தை நமக்குக் காட்டுகின்றன. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, இறுதித் தாக்குதலைத் தீவிரப்படுத்துமாறு இலங்கை அரசுக்கு வழிகாட்டி இயக்கியிருக்கிறது இந்திய அரசு. தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவாளர்களோ, மே 16 அன்று தேர்தல் முடிவுகள் வரும்வரை இறுதி முடிவு எதையும் எடுக்க வேண்டாமென புலிகளுக்கு ஆலோசனை கூறியிருப்பார்கள் போலும்!

மூன்று சதுர கி.மீ. பரப்பளவே கொண்ட நிலப்பரப்பில், தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட நிலையிலும் “துப்பாக்கிகளை மவுனிக்கச் செய்வது” என்ற தங்களது இறுதி முடிவை அறிவிப்பதற்கு இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் (மே 16) தெரியும்வரை புலிகள் காத்திருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தோல்வியை நோக்கித்தான் தள்ளப்பட்டுள்ளோம் என்பதும், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கோரிக்கைகளை ராஜபக்சே அரசு நிராகரித்து விட்டது என்பதும் அவர்கள் அறியாததல்ல. இருப்பினும், அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்களும் புலிகளும் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட போதிலும், கடைசியாக எஞ்சியிருந்த புலிகள் இயக்கத் தலைவர்களே கொல்லப்படும் நிலை ஏற்பட்ட போதிலும், டெல்லியில் ஆட்சி மாறினால், மறுகணமே போர் நிறுத்தம் ஏற்பட்டு விடும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். கடைசி நாட்களின் நிகழ்வுகள் இதனைத் தெளிவாக நமக்குக் காட்டுகின்றன. இந்த மூட நம்பிக்கை மிகவும் பாரதூரமான இழப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

ஒருவேளை தமிழினவாதிகள் எதிர்பார்த்தது போல, ஜெயலலிதாவும் பாரதீய ஜனதாவும் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் மறுகணமே போர்நிறுத்தம் வந்திருக்குமா? அப்படியொரு பிரமை புலிகளுக்கு இருந்திருந்தால், இங்கிருக்கும் தமிழினவாதிகள் அவர்களுக்குத் தெளிவை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மாறாக, அத்தகையதொரு பிரமையை உருவாக்கும் பணியைத்தான் தமிழினவாதிகள் இங்கே செய்து கொண்டிருந்தார்கள்.

தேர்தலில் ஈழ எதிரி ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து அவரையே தனிஈழம் தேவையெனப் பிரச்சாரம் செய்ய வைத்தனர். போரில் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர்கள் மீது தமிழக மக்கள் கொண்டிருந்த அனுதாபத்தையும், இனப்படுகொலைக்கு எதிராக தமிழகத்தில் நடந்த தீக்குளிப்புகளையும் வைத்து மாபெரும் ஆதரவு இருப்பதாக நம்பி, இதையே தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் மதிப்பிட்டனர். போர்நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசுக்கு அமெரிக்கா உதட்டளவில் விடுத்த கோரிக்கையை, ஏதோ அமெரிக்க வல்லரசே தலையிட்டுப் போர்நிறுத்தம் செய்யக் கிளம்பி விட்டதைப் போல பிரமையூட்டி, ஒபாமாவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நோக்கி ரோசாப் பூங்கொத்து ஊர்வலம் நடத்தினார், பழ.நெடுமாறன்.

இவர்கள் உருவாக்கிய பிரமைக்குத் தங்கள் உயிரையும் கவுரவத்தையும் பலி கொடுத்திருக்கிறார்கள், தமிழீழ விடுதலைப் புலிகள். தேர்தலின் போது தனி ஈழம் பற்றி சவடால் அடித்த ஜெயலலிதா, தேர்தல் தோல்விக்குப் பிறகு கோடநாடு எஸ்டேட்டுக்குச் சென்று படுத்துக் கொண்டார். தேர்தலுக்குப் பின் அவர் விடுத்த அறிக்கையில் தனி ஈழம் பற்றியோ, ஈழத் தமிழினப் படுகொலை பற்றியோ, ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்றோ ஒரு வார்த்தை கூட இல்லை. இந்த அம்மையாரின் வெற்றிதான் போர் நிறுத்தத்தைக் கொண்டு வரும் என்று ஈழத் தமிழ் மக்களையும் புலிகளையும் நம்ப வைத்து படுகுழியில் தள்ளியிருக்கிறார்கள், இந்த ஈழ ஆதரவாளர்கள். இவர்கள் யாரை ஆதரித்தார்களோ, அந்தப் புலிகளையே காவு வாங்கிவிட்டது இவர்களின் பிழைப்புவாத அரசியல்!

தமிழீழத்தின் தலைநகராக புலிகளால் சித்தரிக்கப்பட்ட கிளிநொச்சி, சிங்கள இராணுவத்தால் கடந்த ஜனவரியில் தாக்கி அழிக்கப்பட்ட பின்னர் புலிகள் பின்வாங்கி முல்லைத் தீவுக்கு நகர்ந்தார்கள். சிங்கள இராணுவத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, ஏறத்தாழ 3 லட்சம் மக்கள் புலிகளோடு முல்லைத் தீவு நோக்கி நெடும்பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

இம்மக்கள் கூட்டத்தின் நடுவே இருந்தால் சிங்கள இராணுவம் தங்கள் மீது பாரிய தாக்குதல் தொடுக்காது என்றும், அதையும் மீறி தாக்குதல் தொடுத்தால், மக்கள் கொல்லப்படுவதன் விளைவாக மேலைநாடுகள் தலையிட்டுப் போரை நிறுத்துமாறு சிங்கள அரசை நிர்பந்திக்கும் என்றும் புலிகள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால், சிங்கள இராணுவமோ, கனரக ஆயுதங்களைக் கொண்டும் பாஸ்பரஸ் குண்டுகளை வீசியும் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றொழித்தது. வாயளவில் கண்டனம் தெரிவித்தற்கு மேல் எந்தவொரு மேலை நாடும் சிங்கள அரசை நிர்பந்திக்கவோ, தலையீடு செய்யவோ முன்வரவுமில்லை.

எந்த மக்களைப் பாதுகாப்புக் கேடயமாக புலிகள் கருதினார்களோ, அந்த மக்கள் சிங்கள இராணுவத்தின் கொடிய போர்த் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தவிக்க, புலிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தக் கையறு நிலையில், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேற ஆரம்பித்தார்கள். புலிகளால் இதனைத் தடுக்கவும் இயலவில்லை. பின்வாங்கும் பயணம் நீண்டு போகப் போக, புலிகள் தமது ஆயுதக் கிடங்குகளையும் பாதுகாப்பு அரண்களையும் கைவிட்டு செல்ல வேண்டியதாயிற்று. எந்த ஆயுதங்களைத் தமது விடுதலைக்கான அச்சாணியாக புலிகள் கருதினார்களோ, அவையெல்லாம் பெருஞ்சுமையாக மாறிப்போயின. சிங்கள இராணுவமோ, நவீன ஆயுதங்களைக் கொண்டு கொடூரத் தாக்குதலை வகைதொகையில்லாமல் கூட்டிக் கொண்டே போனது.

கொரில்லாப் போர் முறையிலிருந்து முன்னேறி, கிரமமான இராணுவத்தையும் வான்படையையும் கட்டியமைத்து வலுவடைந்த புலிகள், பிந்தைய அசாதாரண நிலையை கவனத்தில் கொண்டு, தமது நிலையைத் தக்க வைத்துக் கொள்ளவும், இலட்சக்கணக்கான மக்களைப் பாதுகாக்கவும் இராணுவ ரீதியில் தமது செயல்தந்திரங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய தேவை எழுந்த போதிலும் அதனை உதாசீனப்படுத்தினார்கள். கிரமமான படைகளைக் கலைத்துவிட்டு, மீண்டும் தற்காப்பு கொரில்லா போர்முறைக்கு மாற வேண்டிய கட்டாயத்துக்கு புறநிலைமைகள் நிர்பந்தித்த போதிலும், அதை ஏற்க மறுத்தார்கள். மேலைநாடுகள் சிங்கள அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கும், இந்தியத் தேர்தல் முடிவுகள் போர்நிறுத்தத்தைக் கொண்டு வரும் என்று குருட்டுத்தனமாக நம்பிப் பேரழிவையும் பின்னடைவையும் சந்தித்துள்ளார்கள்.

புலிகள் மட்டுமே தமிழீழத்தின் ஏகபோக பிரதிநிதிகளாகச் சித்தரிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், புலிகள் இயக்கத் தலைவர்களும் தளபதிகளும் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டு, புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்டுள்ள பெருந்தோல்வியால், இன்று ஈழ விடுதலைப் போராட்டம் தலைமை ஏதுமின்றித் தத்தளிக்கிறது. புலிகளின் சர்வதேசத் தொடர்பாளரான பத்மநாபன், தமிழகத்தின் ஈழ ஆதரவாளர்களால் ‘துரோகி’ என்று முத்திரை குத்தப்பட்டுள்ள நிலையில், இயக்கத்தை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்ல எவருமே இல்லாத அவலம் நீடிக்கிறது. ஈழத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வந்த இதர குழுக்களும் தனிநபர்களும் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டு புலிகளால் ஒடுக்கப்பட்டு விட்ட நிலையில், இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திச் செல்ல தலைமை ஏதுமின்றி, ஒரு பாரிய வெற்றிடம் நிலவுகிறது.

இது கசப்பான உண்மை என்ற போதிலும், இத்தகைய பின்னடைவுக்கும் பேரழிவுக்கும் காரணம் என்ன? சீனாவும் பாகிஸ்தானும் சிங்கள பாசிச அரசுக்கு நவீன ஆயுதங்களை வழங்கி ஆதரவாக நின்றதும், இந்தியா இந்த இனப்படுகொலைப் போருக்கு இறுதிவரை துணை நின்று வழிநடத்தியதும் தான் காரணமா? அல்லது ஐ.நா. மன்றமும் மேலை நாடுகளும் பாராமுகமாக இருந்ததுதான் காரணமா?

இவையெல்லாம் புறக்காரணிகள்தாம். இத்தகைய நிலைமைகளை எதிர்கொண்டு இயக்கத்தை வழிநடத்திச் செல்லும் ஆற்றல்மிக்கதாகச் சித்தரிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் மூடத்தனமும் இராணுவ சாகசவாதமும்தான் இப்பேரழிவுக்கும் மீளமுடியாத பின்னடைவுக்கும் பெருந்தோல்விக்கும் முதன்மையான காரணங்கள். புலிகளிடம் சரியான அரசியல் தலைமை இல்லாமை, சரியான இராணுவ உத்திகள் இல்லாமை, யாரையும் பயன்படுத்திக் கொண்டு காரியம் சாதிப்பது என்கிற சந்தர்ப்பவாதம்; அரசியல் நேர்மையற்ற அணுகுமுறை, புலிகள் இயக்கத்துக்குள்ளும் ஜனநாயகமற்ற பாசிச சர்வாதிகாரம் முதலான ஈழ விடுதலைக்கே எதிரான போக்குகளே இப்பேரழிவையும் மீண்டெழ முடியாத தோல்வியையும் தோற்றுவித்துள்ளன.

எந்தவொரு விடுதலைக்கான இயக்கமும் இலட்சியத்தையும் கடமைகளையும் வகுத்துக் கொண்டு, அந்த இலட்சியத்தை அடைவதற்குத் தடையாக நிற்கும் எதிரிகள் யார், நண்பர்கள் யார், ஊசலாட்டம் கொண்ட சமரச சக்திகள் யார், எந்தச் சக்திகளுடன் ஐக்கியப்பட வேண்டும், எந்த சக்திகளை வென்றெடுக்க வேண்டும்  என்பதைத் தெளிவாக வகுத்துக் கொண்டு தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் விடுதலைப் புலிகளோ தொடக்கம் முதலே இந்த அடிப்படையான பிரச்சினையில் தெரிந்தே தவறிழைத்தார்கள்.

ஈழ விடுதலைக்குத் தொடக்கம் முதலே எதிரியாக இருந்து சீர்குலைத்த இந்திய அரசுடன் பகைத்துக் கொள்ளாமல், “தாஜா” செய்ததோடு, இந்திய உளவுப் படையான “ரா” (RAW)விடம் ஆயுதங்களும் பயிற்சியும் நிதியும் பெற்று, அதன் வழிகாட்டுதலின்படி அப்பாவி சிங்கள குடிமக்களைக் கொன்றும், ஈழத்திலிருந்து இசுலாமியர்களைக் கெடு வைத்து விரட்டியும், இதர போராளிக் குழுக்களை அழித்தொழித்தும், தமது ஏகபோக சர்வாதிகாரத்தை நிறுவிக் கொண்டனர்.

எந்தவொரு விடுதலைக்கான இயக்கமும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஜனநாயகப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்க வேண்டும். மக்கள் மத்தியில் எந்தளவுக்கு ஜனநாயகம் பேணப்படுகிறது என்பது, இனவிடுதலையின் மீது கொண்டுள்ள உறுதிக்கு ஒரு அளவுகோல். ஆனால் சிங்கள இனவெறியை எதிர்த்தும் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் நின்று, புலிகளின் மனித உரிமை மீறல்களையும் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளையும் விமர்சித்த குற்றத்திற்காக ராஜினி திரணகம, வசந்தன் முதலாலோனார் உள்ளிட்டு ஏராளமானோர் புலிகளால் கொன்றொழிக்கப்பட்டார்கள்; அல்லது அவர்கள் காணாமல் போனார்கள். புலிகள் இயக்கத்துக்குள்ளேயே பல முன்னணித் தலைவர்களும் தளபதிகளும் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். பிரபாகரனும் அவரது வட்டாரத்தைச் சேர்ந்த விசுவாசிகளும் கொண்ட சிறுகும்பலாக இயக்கத் தலைமை மாறிப் போனது.

தேசிய இன விடுதலை என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்டதாகவும் சுயசார்பானதாகவும் இருக்க வேண்டும். எந்த அளவுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஒரு தேச விடுதலை இயக்கம் ஊன்றி நிற்கிறது என்பதுதான் அதன் புரட்சிகர தன்மைக்கான அளவுகோல். இன்றைய சூழலில், ஏகாதிபத்திய உலகமயமாக்கலை எதிர்க்காமல், எந்தவொரு தேசிய இனமும் விடுதலையைச் சாதிக்கவும் முடியாது.

ஆனால் புலிகளோ, எந்த ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து எந்தப் போராட்டத்தையும் நடத்தியதேயில்லை. தமது தலைமையிலான தமிழீழம் இந்தியாவுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் கீழ் படிந்தே இருக்கும் என்று புலிகள் வாக்குறுதி அளித்து, அந்நாடுகளைத் “தாஜா” செய்தார்கள். கிழக்கு திமோர், கொசாவோ பாணியில் மேலைநாடுகள் தலையிட்டு தமக்கென தனி ஈழத்தை அமைத்துத் தரும் என்று நம்பினார்கள். அந்த அளவுக்குத்தான் அவர்களது உலக அரசியல் கண்ணோட்டம் இருந்தது. ஏகாதிபத்திய உலகக் கட்டமைவில் தேசிய இன விடுதலை என்பது எவ்வளவு சிக்கலானது, உலக நாடுகளின் மக்கள் மத்தியில் இதற்கு ஆதரவாக பொதுக்கருத்தையும் பொது நிர்பந்தத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பன போன்ற விரிந்த அரசியல் பார்வை புலிகளிடமோ, அவர்களின் ஊதுகுழலாகச் செயல்பட்ட தமிழக பிழைப்புவாத அரசியல்வாதிகளிடமோ இருந்ததில்லை. மேலை நாடுகள் தங்களைப் பயங்கரவாதிகள் எனத் தடை செய்திருப்பதற்கான உலக அரசியல் சூழல் மற்றும் பிற காரணிகளைப் புலிகள் புரிந்து கொள்ளவுமில்லை.

ஒருபுறம் அமெரிக்க உலக மேல்நிலை வல்லரசு; அதன் தெற்காசிய விசுவாச அடியாளாக இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசு. மறுபுறம், உலகமயமாக்கலைச் சாதகமாக்கிக் கொண்டு புதிய சந்தைக்காகவும் ஆதிக்கத்துக்காகவும் விரிவடைந்து வரும் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் போட்டா போட்டி. இந்துமாக் கடலில் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை, இன்று இந்த ஆதிக்க சக்திகளின் பகடைக் காயாக மாற்றப்பட்டிருக்கிறது. ஏகாதிபத்திய சக்திகளின் போட்டியையும் கூட்டையும் பயன்படுத்திக் கொண்டு, ஈழ விடுதலைப் போரை அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் ராஜபக்சே அரசு எவ்வித எதிர்ப்புமின்றி நசுக்கும் சூழலைப் பற்றி புலிகள் பாரதூரமாக உணரவில்லை. அதற்கேற்ப தமது அரசியல்  இராணுவ செயலுத்திகளை வகுத்துக் கொள்ளவுமில்லை.

இன்னும் சொல்லப்போனால், மக்களைத் திரட்டி எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் புலிகள் நடத்தியதேயில்லை. கடந்த பத்தாண்டுகளில் போர் நிறுத்தத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் அணிதிரட்டலையும் அரசியல் போராட்டங்களையும் நடத்த புலிகள் முயற்சிக்கவேயில்லை. அரசியல் பிரிவு என்றழைக்கப்பட்ட ஒரு குழுவை புலிகள் உருவாக்கியிருந்த போதிலும், அது மக்களிடம் அரசியல் பிரச்சாரம் எதையும் செய்ததுமில்லை. மக்களின் அளப்பரிய ஆற்றலைக் கொண்டு மாபெரும் அரசியல் எழுச்சிகளைத் தோற்றுவித்து எதிரியை மண்டியிடச் செய்ய முடியும் என்பதை புலிகள் எந்தக் காலத்திலும் உணரவுமில்லை.

அவர்களது கவனமெல்லாம் நவீன ஆயுதங்களின் இருப்பை அதிகரிப்பதிலும் சாகசவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும்தான் இருந்தது. சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக இராணுவ ரீதியில் மேலாண்மை பெற்றுவிட்டாலே, ஏகாதிபத்திய நாடுகள் சிங்கள அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து தனி ஈழத்தை உருவாக்கித் தரும் என்று கணக்கு போட்டு, ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவைப் பெறுவதுதான் அவர்களது ‘அரசியல்’ வேலையாக இருந்தது.

சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சே கும்பலின் இனவெறி பாசிச சர்வாதிகாரத்தை எதிர்க்கும் அரசியல் சக்திகளுடன் இணைந்து, பொது எதிரிக்கு எதிராக பரந்த ஐக்கிய முன்னணி கட்டியமைத்துப் போராட சாத்தியப்பாடுகள் இருந்தபோதிலும், அரசியல் மூடத்தனத்தால் அவற்றை புலிகள் அறிந்தே புறக்கணித்தார்கள். இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே தேர்தலில் தோற்றதற்கும், ராஜபக்சே கும்பல் ஆட்சிக்கு வந்ததற்கும் மிக முக்கிய காரணமே புலிகளின் சந்தர்ப்பவாத அரசியல்தான்.

இந்த சந்தர்ப்பவாதம் 2002இல் தாய்லாந்து நாட்டில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானபோது அப்பட்டமாக வெளிப்பட்டது. தேசிய சுயநிர்ணய உரிமைக்கு சந்தர்ப்பவாதமாகவும் துரோகத்தனமாகவும் “பிரதேச தன்னாட்சி” என்று விளக்கமளித்தார், புலிகளின் அரசியல் தலைமை குருநாதர் ஆண்டன் பாலசிங்கம். ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் கீழ் வடக்கு  கிழக்கு மாகாணங்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டு தமது ஏகபோக ஆட்சி அமைவதையே “பிரதேச தன்னாட்சி” என்று விளக்கமளித்தார். அதேசமயம், தனிஈழம் கோரிக்கையை இன்னமும் கைவிட்டுவிடவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக இது “இடைக்காலத் தீர்வு” என்று பூசி மெழுகினார்.

இப்படி சந்தர்ப்பவாதமும் சாகச வழிபாடும் தனிநபர் துதியும் கொண்ட புலிகள், முப்பதாண்டு காலமாக பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் கண்ட ஈழ விடுதலைப் போராட்டத்தை மீளாய்வு செய்து படிப்பினைகளைப் பெற முன்வராமல், தொடர்ந்து பிரமைகளில் மூழ்கிப் போயினர். மறுபுறம், ஏகாதிபத்தியங்களின் ஆசியோடும், சிங்கள இனவெறி சக்திகளின் ஆதரவோடும், நவீன ஆயுதங்களின் வலிமையோடும் மிகக் கொடிய போரை ராஜபக்சே கும்பல் ஈழ மக்கள் மீது ஏவியது. உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இனவெறிப் படுகொலைகளில் ஒன்றாக அமைந்த இப்போரில், பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களோடு, புலிகளின் தலைமையும் கொன்றொழிக்கப்பட்டு, ஈழ விடுதலைப் போராட்டம் பேரழிவையும், பின்னடைவையும் சந்தித்து கையறு நிலையில் தத்தளிக்கிறது. ஈழத் தமிழினத்தையே தோற்கடித்து விட்ட வெற்றிக் களிப்பில் கூத்தாடுகிறது, சிங்கள இனவெறி.

இன்றைய சூழலில், சிங்கள இராணுவ வதை முகாம்களிலிருந்து ஈழத் தமிழர்களை மீட்டு அவர்களை மீளக் குடியமர்த்துவது, தமிழர் பகுதிகளைச் சிங்கள காலனியாக்க முயலும் இந்தியஇலங்கை அரசுகளின் கூட்டுச் சதியை முறியடிப்பது, ராஜபக்சே கும்பலை போர்க்குற்றவாளியாக அறிவித்துத் தண்டிப்பது, ஈழ மக்களின் நியாயமான சுயநிர்ணய உரிமைப் போரை மீண்டும் கட்டியமைப்பது  ஆகிய பெரும் போராட்டக் கடமைகள் ஈழ மக்களின் முன்னே, புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் முன்னே, ஈழ ஆதரவாளர்களின் முன்னே நிற்கிறது. கடந்த முப்பதாண்டு கால ஈழ விடுதலைப் போராட்டத்தை விருப்பு வெறுப்பின்றி மீளாய்வு செய்து படிப்பினைகள் பெறுவதும், ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்குவதும், ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிரான இயக்கப் போக்கின் ஒரு பகுதியான ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு அனைத்துலக மக்களிடம் ஆதரவு திரட்டுவதும் இதற்கு முன்தேவையாக இருக்கிறது.

புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு விட்டாலும், ஈழத் தமிழ் மக்கள் தமது நியாயமான விடுதலைப் போராட்டத்தைத் தொடர்வதற்கு துணை நிற்க வேண்டியது புரட்சிகர  ஜனநாயக சக்திகளின் கடமை; நம் கடமை.

புதிய ஜனநாயகம், ஜூன்’2009

புதிய ஜனநாயகம், ஜூன்’2009 மின்னிதழ் வடிவில் PDF கோப்பாக பெற இங்கே சொடுக்கவும்

புதிய ஜனநாயகம், ஜூன்’2009 இதழ் MS WORD கோப்பாக பெற இங்கே சொடுக்கவும்

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

சிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு!

23

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – 9

சிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு!சிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு!“படுகொலை, படுகொலை” என அலறின பிரிட்டிஷ் பத்திரிகைகள். முன்பக்கத்தில் ஒரு இரத்தம் வழியும் வெள்ளைக்காரனின் முகம், கீழே சிம்பாப்வேயில் “கறுப்பு இன வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி விவசாயி” என தடித்த எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தது.  சிம்பாப்வே பிரச்சினை பற்றிய பிரிட்டிஷ் பத்திரிகைகளின் செய்தியறிக்கைகள் ஒரளவு காலனிய ஆட்சிக்காலத்தை நினைவுபடுத்தியது. அப்போது சுதந்திரப் போராளிகளால் வெள்ளையின அதிகாரிகள் கொல்லப்பட்டபோது அதனைப் பயங்கரவாதமென்றும், இனவாதப் படுகொலைகள் என்றும் பத்திரிகைகள்  சித்தரித்தன. அதேநேரம், வெள்ளை அதிகாரிகளால் கறுப்பினப் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை திட்டமிட்ட முறையில் மூடிமறைத்தன,  “அரசு சாராத சுதந்திர” ஊடகங்கள். இவையெல்லாம், காலனித்துவக் கால கட்டம் இன்னமும் தொடர்கிறதா என ஐயமுறவைக்கின்றன.

ஐரோப்பியர் காலனியக் காலங்களில் சில நாடுகளை நிரந்தரமாகக் குடியேறவென தேர்ந்தெடுத்தனர். அவற்றில் “தென்னாபிரிக்கா”, “சிம்பாப்வே”, ஆகியன முக்கியமானவை. 19 ம் நூற்றாண்டில், தென்னாபிரிக்காவில் ஏற்கெனவே தனது அதிகாரத்தை நிலைநிறுத்திவிட்ட பிரிட்டிஷ் காலனித்துவப் படைகள், வடக்கு நோக்கி முன்னேறின. துப்பாக்கியேந்திய பலமான பிரிட்டிஷ் படைகளுடன் மோதமுடியாத, அம்பு-வில் போன்ற புராதன போர்க் கருவிகளை பயன்படுத்திய கறுப்பர்களின்  படைகள் தோல்வியுற்றுச் சரணடைந்தன. தோற்றவர்களின் நிலங்களை வென்றவர்கள் அபகரித்துக் கொண்டார்கள். தாய்நாடான பிரிட்டனிலிருந்து “விவசாயிகள்” வந்து குடியேறினர்.இவ்வாறு வெள்ளையின ஆதிக்கத்தின் கீழ் வந்த நிலங்களை இணைத்து “ரொடீஷியா” என்ற நாடு உருவாக்கப்பட்டது.

சிசில் ரோட்ஸ்தென்னாபிரிக்காவிலிருந்து படையெடுப்பு நடாத்தி வென்ற ஆங்கிலேயத் தளபதி “சிசில் ரோட்ஸ்” ன் தலைமையில் இங்கு வெள்ளையாட்சி நடாத்தப்பட்டது. இவனது பெயர் காரணமாகவே இந்நாட்டிற்கு “ரொடீசியா” என்ற பெயரும் சூட்டப்பட்து. சோவியத் ஒன்றியம் லெனின் கிராட் என்று பெயர் வைத்தால், அதனை அரசியல் பிரச்சாரம் என்று கண்டித்த மேற்குலக புத்திஜீவிகளுக்கு, ரொடீசியா கண்ணில் படவில்லை. தற்கால அரசியலின் அடிப்படையில் சொன்னால்: ரோட்ஸ் ஒரு சர்வாதிகாரி, நிறவெறியன், இனப்படுகொலை செய்தவன், நாகரிக உலகம் ஏற்காத இனவாத ஆட்சி நடத்தியவன். இந்த இனவாதச் சர்வாதிகார ஆட்சி 1980 வரை நீடித்தது.  உலகெங்கும் நடந்த, காலனியாதிக்க எதிர்ப்பு  சுதந்திரப் போராட்டங்களால் உந்தப்பட்ட ரோடீசியாவின் படித்த கறுப்பின இளைஞர்கள்,  ZANU-PF ஏன்ற பெயரில் நிறுவனமயமாகினார்கள். ரொபேட் முகாபே தலைமையில் நிறவெறி அரசுக்கெதிரான ஆயுதமேந்திய கிளர்ச்சி நடைபெற்றது. கொரில்லாப் போர்த்தந்திரங்கள் பாவிக்கப்பட்டன. இறுதியில் பிரிட்டிஷ் ரொடீசிய அரசுகள் நிபந்னையடிப்படையிலான சுதந்திரம் கொடுக்க ஒப்புக்கொண்டன. அதாவது, பதவியேற்கும் கறுப்பின அரசாங்கம் வெள்ளையின விவசாயிகளை , முதலாளிகளை அவர்களின் போக்கில் விடவேண்டுமென்பதே முன்வைக்கப்பட்ட நிபந்தனையாகும். நீதித்துறையில் பிரிட்டிஷ் அரசு வகுத்திருந்த சட்டங்களே தோடர்ந்தும் பேணப்படவேண்டும் (இந்தச் சட்டங்களும் வெள்ளையின முதலாளிகளுக்கு வேண்டிய சுதந்திரத்தை உறுதிப்படுத்தன.) என்பதும் நிபந்தனையாகவிருந்தது. இவ்வடிப்படையிலேயே அபிவிருத்தி உதவிகளும் வழங்க பிரிட்டிஷ் நிர்வாகம் உடன்பட்டது. நிபந்தனைகளையேற்று, ரொடீசிய அரசிற்கெதிரான ஆயுதப்போராட்டத்தில் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்த ZANU-PF, “லங்கஸ்டர்” ஒப்பந்த்தில் கைச்சாத்திட்டது. இதையடுத்து ரொடீசியா, “சிம்பாப்வே” என ஆப்பிரிக்கமயப்படுத்தப்பட்டது.

zimbabwe-povertyசுதந்திரத்தின் பின்னர் வந்த அரசாங்கம் இந்த ஒப்பந்த்திற்கேற்ப, அதாவது பிரிட்டிஷார் விருப்பத்திற்கிணங்க அமைக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் மாக்ஸீயத்தைத் தனது கட்சியின் சித்தாந்தமாக அறிவித்த ZANU-PF அதை நடைமுறைக்குக் கொண்டுவரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. நாட்டில் அரசுத் துறைகள் மட்டுமே கறுப்பினத்தவர் வசம் வந்தன. பொருளாதாரத்தில் வெள்ளையினத்தவரின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்தது. தம்மை “விவசாயிகள்” எனக் கூறிக்கொள்ளும் இவர்கள், உண்மையில் விவசாய முதலாளிகளாவர். நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களான புகையிலை, தேயிலை போன்றவற்றை நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் உற்பத்தி செய்வதுடன், ஏற்றுமதி வர்த்தகத்தையும் தமது கைகளில் வைத்திருந்தனர். இவ்வகையில் இவர்கள் அனைவருமே செல்வந்தர்களாகவும் இருந்தனர். இதற்கு மாறாக, காலனித்துவ காலத்தில் நிலங்களைப் பறிகொடுத்த கறுப்பின மக்கள் இன்று வரை ஏழைகளாக வெள்ளை முதலாளிகளுக்குச் சொந்தமான நிலங்களில் வேலை செய்து வாழும் தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். காலத்தின் மாற்றத்திற்கேற்ப வெள்ளையின முதலாளிகள் தாம் “நிற வேற்றுமை பார்க்காதவர்கள்”, “கறுப்பினத் தொழிலாளர்களைச் சமத்துவமாக நடாத்துபவர்கள்” என்றெல்லாம் காட்டிக்கொள்கின்றனர். இவர்கள் சிம்பாப்வே  என்ற புதிய நாட்டின் குடியுரிமையை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமல்ல , உள்ளூர் மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடியவர்கள். சில வெள்ளையினப் பிள்ளைகளுக்கு ஆபிரிக்கப் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன.

எது எப்படியிருத்தபோதும், எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பது சொத்துரிமை என்பதை மறந்துவிடலாகாது. இவர்கள் அப்போது இனவாதிகளாக நிறவேற்றுமை காட்டியதும் சொத்துரிமையைப் பாதுகாக்கத்தான். இன்று சிம்பாப்வே தேச பக்தர்களாகக் காட்டிக் கொள்வதும் அதே நோக்கத்தோடுதான். அவர்களின் விவசாய உற்பத்தியில் ஏகபோகம், காலனிய  ஸ்தாபனத்தை நிறுத்தும் பணி என்பனவற்றுக்காகத்தான், மேற்கத்திய தொடர்பூடகங்கள் வெள்ளையின விவசாயிகள் ஆதரவுப் பிரச்சாரம் செய்கின்றன. “நாம் இந்த விவசாயிகளைக் கைவிட முடியாது. எனெனில் நாம்தான அவர்களை அங்கு அனுப்பினோம்” என இதனை பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேரடியாகவே சொன்னார். பிரிட்டனில் ஒருபுறம் மூன்றாம் உலக நாடுகளின் அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் சிம்பாப்வேயிலிருந்து வரும் “வெள்ளை அகதி” களுக்கு வந்த உடனேயே வீடும், வேலைவாய்ப்பும், தேவையேற்படின் நிலமும் வழங்கப்படுகின்றன. “மனிதாபிமானமிக்க, இனவெறியற்ற, ஜனநாயக” பிரிட்டிஷ் அரசின் இரட்டை வேடமிது.

reigerpark_wideweb__470x3030சிம்பாப்வேயில் மொத்தச் சனத்தொகையில் ஒரு வீதமான வெள்ளையினத்தவருக்கு, 80 வீதமான நிலங்கள் சொந்தமாகவிருக்கின்றன.  அதே வேளை பெரும்பான்மை மக்கள் சொந்த நிலமின்றி இருப்பது எந்த வகையில் நியாயமென, எந்தவொரு “ஜனநாயகவாதி”யும் கேட்டதாகத் தெரியவில்லை. ஆண்டாண்டு காலம் அனுபவித்த பெரும் நிலப்பிரபுக்களான வெள்ளையர்கள், உள்ளூர் கறுப்பின மக்களிடமிருந்து தமது மூதாதையர் பறித்த நிலங்களை நேர்மையாக அவர்களிடம் திருப்பிக் கொடுக்காதது ஏன்? என்றும் எந்தவொரு மனித உரிமைவாதியும் கேட்கவில்லை. ஆனால் சில புரட்சியாளர்கள், வெள்ளையினத்தவருக்குச் சொந்தமான நிலங்களைத் திடீரென முற்றுகையிட்டுப் பலவந்தமாகப் பறித்து, அவற்றை நிலமற்ற கறுப்பின விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தபோது மட்டும், “ஜனநாயகம், மனித உரிமைகள்” என்று மேற்கில் சிலர் சாமியாடத் தொடங்கியுள்ளனர். இதனால்தான் மனித உரிமைகள் என்ற பெயரில் மேற்கத்தைய அரசியல் ஆதிக்கம் பரப்பப்படுவதாக ஆப்பிரிக்காவில் சிலர் விமர்சிக்கின்றனர்.

COMMONWEALTH ZIMBABWE QUITமுகாபேயின் அரசாங்கம் ஊழல்வாதிகளால் நிரம்பி வழிவதும், தமக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பதவிகள் கொடுப்பதும் உண்மைதான்.  சரிந்துவரும் செல்வாக்கை மீளப்பெறுவதற்காகத்தான் முகாபே நிலச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்ததும் மறுப்பதற்கில்லை. இருப்பினும், தனியாக நின்று ஏகாதிபத்தியத்துடன் மோதும் துணிச்சலைப்பாராட்ட வேண்டும். கடந்த பதினைந்து ஆண்டுகளாக உலகவங்கியோ, அல்லது வேறெந்தச் சர்வதேச நிதிநிறுவனமோ சிம்பாப்வேக்கு நிதியுதவி வழங்குவதில்லை. தென்னாபிரிக்காவையும், லிபியாவையும் விட்டால் வேறு குறிப்பிடத்தக்க வர்த்தகக் கூட்டாளிகள் கிடையாது. இப்படியான கடினமான நேரத்திலும் சிம்பாப்வே இன்றுவரை ஏகாதிபத்திய உத்தரவுகளுக்கு அடிபணியவில்லை.  ஒரு வருடம் வெளிநாட்டு கடனுதவி கிடைக்காவிட்டால் பொருளாதாரம்  ஸ்தம்பித்துவிடும் என்று,  நமது அரசாங்கங்கள் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருப்பது இங்கே நினைவுகூறத்தக்கது.

_38435185_zanupf_ap300அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் நீங்காத அச்சமென்னவெனில், சிம்பாப்வேயின் “புரட்சிகர நிலச்சீர்திருத்த அலை” பிற ஆபிரிக்க நாடுகளிலும் பரவலாம் என்பதே. தென்னாபிரிக்கக் குடியரசிலும், நமீபியாவிலும் பெரும்பான்மை விவசாய நிலங்கள், தேசியப் பொருளாதாரம் என்பன, இன்னமும் வெள்ளையினத்தவரின் கைகளில் இருக்கின்றன. தென்னாபிரிக்க நிலமற்ற கறுப்பின விவசாயிகள் சிம்பாப்வேயில் நடந்தது போல அங்கேயும் நிலச்சீர்திருத்தம் கொண்டுவரப்படவேண்டுமென எதிர்பார்க்கின்றனர். தென்னாபிரிக்க வெள்ளையின விவசாயிகள் இனறும் கூட சட்டபூர்வமற்ற, ஆனால் அரசு தலையிடாத தனியான சுயாட்சிப் பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மத்தியில் பாஸிஸ அமைப்புகள் செல்வாக்குச் செலுத்துவதுடன், ஆயுதபாணிகளாகவும் இருக்கின்றனர். வெளியில் சொல்லப்படாது பாதுகாக்கப்படும் இரகசியங்களில் ஒன்று; இந்த வெள்ளையினத் தீவிர வாதக்குழுக்கள் இரசாயன, உயிரியல் ஆயுதங்களையும் பதுக்கி வைத்திருப்பதுதான்.

ZIMBABWEஇஸ்ரேல்-பலஸ்தீன பிரச்சினை போன்றதொரு சூழ்நிலை தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் முன்னர் நிலவியது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளையினக் குடியேறிகளால் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட தென்னாபிரிக்கா, ரொடீசியக் குடியரசுகளில் வெள்ளையர்கள் சிறுபான்மையாகவிருந்தனர். அத்துடன் நாடுமுழுவதும் பரவலாக பெருமளவு நிலங்களைக் கைப்பற்றி காலனிகளை அமைத்தும் இருந்தனர். இந்த வெள்ளைக் காலனிகளைச் சேர்ந்தோர் மட்டும் அனைத்து உரிமைகளையும் பெற்று முதற்தரப் பிரஜைகளாகவிருந்தனர். இதே நேரம், பெரும்பான்மைக் கறுப்பினத்தவர் இரண்டாந்தரப் பிரஜைகளாக பின்தங்கிய நிலையில் வைக்கப்பட்டனர். கல்வி, மருத்தவ வசதி, என்பனகூட வெள்ளையினத்தவருக்கே வழங்கப்பட்டன. முன்னாள் ரொடீசியா பின்னர் சிம்பாப்வேயாக மாறி முகாபேயின் ZANU-PF ஆட்சிக்கு வந்தபின்னர் தான் கருப்பினத்தவரை முன்னேற்றும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் கட்டப்பட்ட மருத்துவமனைகள், பாடசாலைகள் என்பன சமுக முன்னேற்றத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள். பிரிட்டன் முன்மொழிந்த “லங்கஸ்டர்” சுதந்திர ஒப்பந்தம், சமுக அபிவிருத்திக்கு பணம் ஒதுக்குவதைக் குறைக்க விரும்பியதை இவ்விடத்தில் கூறவேண்டும்.

zimbabweசிம்பாப்வேயின் பொருளாதார வீழ்ச்சிக்கு, முகாபேயின் நிலச்சீர்திருத்தக் கொள்கைதான் காரணம் என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் உலகவங்கி, சர்வதேச நாணய சபை போன்றவற்றின் பொருளாதாரத்திட்டங்கள் ஏற்கெனவே நாட்டைப் பாழ்படுத்தியிருந்தன. தொன்னூறுகளில் இந்த நிறுவனங்களின் தவறான முகாமைத்துவம் குறித்து முகாபே விமர்சித்த போது பிரச்சினை கிளம்பியது. தொடரும்  நில அபகரிப்புக் காரணமாக, பெருமளவு வெள்ளையின முதலாளிகள் தமது வர்த்தகச் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளுக்குப் போய் தங்கிவிட்டனர்.   சர்வதேச வர்த்தகம் வெள்ளையினத்தவர் ஆதிக்கத்தில் இருந்ததால்,  பொருளாதார வீழ்ச்சியேற்பட்டது. அவர்கள் வெளியேறிய பின்னர், சர்வதேச சமூகம் தொடர்பை முறித்துக்கொண்டது. ஆனால் இவை எல்லாம் மேற்கத்தைய தொடர்பூடகங்களால் மூடிமறைக்கப்பட்டு, எல்லாவற்றிற்கும் முகாபேயின் தவறான அரசியல்தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.  “பயங்கரவாத்திற்கெதிரான போர்” சிம்பாப்வே மீதும் தொடுக்கப்பட வேண்டுமென பிரிட்டன் எதிர்பார்க்கிறது. சிம்பாப்வேயில் எதுவித பொருளாதார-இராணுவ நலன்களும் இல்லாதபடியால் அமெரிக்கா இதைத் தட்டிக் கழித்தபடியுள்ளது. இருப்பினும் நிலைமை இப்படியே நீடிக்க பிரிட்டன் விடவில்லை.  இராஜதந்திர, பொருளாதார அழுத்தங்களின் மூலம் உள் நாட்டு கிளர்ச்சிகள் தூண்டிவிடப்பட்டன.  நவ காலனித்துவம் என்றால் என்ன என்பதற்கு சிம்பாப்வே ஒரு சிறந்த உதாரணம். வெள்ளையர்கள் வெளியேறி விட்டனர் தான், ஆனால் அவர்களது மூலதனம் நம்மை இப்போதும் ஆண்டுகொண்டிருக்கிறது.

(தொடரும்)

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…



தொடர்புடைய பதிவுகள்:

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா –
காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம் !
ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை !
நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !
ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் !
கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள் !
அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD
கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்

தோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு முதலில் சுவிஸ் நாட்டிலும் பின்னர் அந்த நாட்டு அரசின் இனப்பாகுபாடு அரசியலால் வெறுப்புற்று நெதர்லாந்திலும் வாழ்பவர். அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, அதனால் ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் குறித்த சட்டங்களைத் தெரிந்து கொண்டமை, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம், நெதர்லாந்து கம்யூனிஸ்ட்டு கட்சியுடனான தொடர்பு, நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபட்டமை எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தையும் முக்கியமாக பல்நாட்டவரின் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அரசியலையும் கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இத்தளத்தில் பங்கேற்பதில் வினவு மகிழ்ச்சி அடைகிறது. அவரது வலைப்பூ முகவரி http://kalaiy.blogspot.com

2011: அல்கைதா ஆதரவுடன் உலக்கோப்பை கிரிக்கெட் ??

23

ஒருவழியாக ஐ.பி.எல் போட்டிகள் முடிந்திருக்கின்றன. அடுத்து ட்வென்டி-20 உலகக் கோப்பைப் போட்டி நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்றாலும் 2011 இல் நடைபெற இருக்கும் (50 ஓவர்) உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிதான் அனைவரின் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது. அந்தப் போட்டி இக்கட்டுரைத் தலைப்பில் உள்ள சாத்தியங்களுடன் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் எதிர்காலத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்களை அறிவியல் புனைகதை போல கணிக்க முடியுமென்பதாலும் இந்த எதிர்காலக் கட்டுரையை நிகழ்காலத்தில் வெளியிடுகிறோம்.

2011

இந்தியா, பாக்கிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் இவ்வாண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பற்றி நீங்கள் அறிந்ததே. அந்தப் போட்டி நடத்துவது குறித்து தற்போது மிகப்பெரிய அரசியல் சிக்கல் ஒன்று எழுந்திருக்கிறது. இதைத் தாண்டி இந்தப் போட்டியை எப்படியாவது இந்தியத் துணைக் கண்டத்தில் நடத்துவதற்கு ஐ.சி.சி முனைந்திருக்கிறது. அதற்கு முன் அந்த அரசியல் பிரச்சினையை பார்க்கலாம்.

2009ஆம் ஆண்டில் பாக்கிஸ்தானில் நடந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் குறித்து உங்களுக்கு நினைவிருக்கலாம். கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த சம்பவத்திற்குப் பிறகு இலங்கை அணி தொடரை ரத்து செய்துவிட்டு உடன் தாயகம் திரும்பியது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகளும் நடைபெற இருந்தது. ஏப்ரல்,மே மாதத்தில் தேர்தல் நடைபெற இருந்த நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது சிரமம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. எனவே எப்படியாவது போட்டியை நடத்த வேண்டும் என முனைந்த ஐ.பி.எல் நிர்வாகம் இந்தியாவை தவிர்த்து விட்டு தென்னாப்பிரிக்காவில் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியது.

தேர்தலையும் மீறி இந்தப் போட்டிகள் பெரும் வரவேற்பை பெற்றது. ஜக்கி வாசுதேவ் முதலான பிரபலமான சாமியார்களும், நடிகர்-நடிகைகளும், முதலாளிகளும், அரசியல்வாதிகளும் தென்னாப்பிரிக்கா சென்று போட்டிகளை ரசித்தனர். இதே காலத்தில் இலங்கையில் ஈழத்தமிழின மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை விட ஐ.பி.எல் போட்டி அதிக நேரத்தை சானல்களில் எடுத்துக் கொண்டது.

பாக்கிஸ்தானில் பயங்கரவாதிகள் கிரிக்கெட் வீரர்களைத் தாக்கியதால் அங்கு சென்று விளையாட எந்த நாடும் தயாரக இல்லை. எனவே உலகக்கோப்பை போட்டியை அங்கு நடத்துவது குறித்த கேள்வி அப்போதே எழுந்தது. இறுதியில் பாக்கிஸ்தானில் நடைபெற இருந்த போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் நடக்குமென ஐ.சி.சி முடிவு செய்திருந்தது. இதனால் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வருமானத்தை இழக்குமென்றாலும் அதனால் இதற்கு மாற்று ஏதும் செய்ய முடியவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளைத் தாக்குவோம் என அல்கைதாவின் செய்தித் தொடர்பாளர் பின்லேடன் ஒப்புதலுடன் தெரிவித்திருக்கும் செய்தியை அல்ஜசிரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. இதனால் உலகக் கோப்பை போட்டி நடக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

ஏற்கனவே 2009ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற இருந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக ஆஸ்திரேலியா அணி பங்கேற்கவில்லை. இதை இந்திய டென்னிஸ் பேரவை கண்டித்திருந்தாலும் உலக டென்னிஸ் பேரவை ஆஸ்திரேலியா அணிக்கு ஐந்து இலட்ச ரூபாய் அபராதம் மட்டும் விதித்து விட்டு பிரச்சினையை முடித்துக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக இப்போது அல்கைதா வெளிப்படையாக அறிவித்திருக்கும் மிரட்டலால் இந்தியாவில் எந்த நாடும் விளையாட்டு போட்டிகளுக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதை ஆராய்ந்து தீர்ப்பதற்கு மும்பையில் இந்திய துணைக்கண்ட கிரிக்கெட் சங்க வாரியங்களும், ஐ.சி.சியும் அவசரமாக சந்தித்து பேசினார்கள். இந்தக் கூட்டத்தில் இந்திய ஐ.பி.எல் அணிகளை விலைக்கு வாங்கியிருக்கும் விஐய் மல்லையா, ஷாருக்கான் முதலான முதலாளிகளும், போட்டியின் ஒளிபரப்பும் உரிமையை பெற்றிருக்கும் சோனி நிறுவனம், மிகுந்த தொகையை ஸ்பான்சர் கட்டணமாக அளித்திருக்கும் பெப்சி, கோக் முதலான நிறுவனங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் டெஸ்ட் போட்டி ஆடும் நாடுகளின் கிரிக்கெட் சங்க வாரியப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த அவசரக் கூட்டத்தில் பல்வேறு யோசனைகள் விவாதிக்கப்பட்டன. இவற்றை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும் பல்வேறு பத்திரிகைகளில் வந்த செய்திகளை இங்கு தொகுத்து தருகிறோம்.

அல்கைதா மிரட்டல் வந்தவுடனே இந்திய வாரியம் உள்துறை அமைச்சரான ப.சிதம்பரத்தை அணுகி இதைத் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்த முடியுமா என்று கேட்டதற்கு அவரிடமிருந்து திருப்தியான பதில் வரவில்லையாம். மேலும் ஆஸ்திரேலேயா, இங்கிலாந்து வாரியங்கள் அல்கைதா மிரட்டல் இருக்கும் பட்சத்தில் தமது வீரர்களின் உயிரைப் பணயம் வைக்க முடியாது என உறுதியாக நின்றன. இதனால் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளை வங்கதேசம், இலங்கையில் நடத்தலாமா என்று யோசித்ததில் இந்தியாவையே தாக்கப்போவதாக மிரட்டியிருக்கும் அல்கைதாவுக்கு வங்கதேசத்தில் நுழைய என்ன தடை என்றும், இலங்கையில் புலிகளின் கொரில்லாத் தாக்குதல் ஆங்காங்கே நடைபெறுவதலும் இந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.

மேலும் போட்டிகள் அதிகம் இந்தியாவில் நடந்தால்தான் தமக்கு வருமானமிருக்கும் என்பதை ஸ்பான்சர் நிறுவனங்களும், ஐ.சி.சியும் உணர்ந்தேயுள்ளன. இதன் பொருட்டே வெளிநாடுகளில் போட்டியை நடத்தும் யோசனையும் தயக்கமின்றி முதலிலேயே நிராகரிக்கப்பட்டது. எனில் உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்துவதற்கு என்ன செய்வது என்று பரிசீலித்ததில் 2009ஆம் ஆண்டு பலதடைகள் வந்தபோதும் ஐ.பி.எல் போட்டிகளை தென்னாப்பிரிக்காவில் வெற்றிகரமாக நடத்திக்காட்டிய சாதனையாளர் லலித் மோடியிடமே இந்தப் பிரச்சினையை தீர்க்குமாறும் அதற்கு அவருக்கு எல்லாவிதமான உரிமைகளையும், தேவையான பணத்தையும் வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. மோடியும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டார். இதன் கால இலக்காக ஒரு மாதம் அவருக்கு வழங்கப்பட்டது.

முதலில் லலித் மோடி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள புகழ்பெற்ற தனியார் பாதுகாப்பு மற்றும் துப்பறியும் நிறுவனங்களின் தலைமைப் பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். இதன் பொருட்டு பல நாடுகளுக்கும் அவர் சென்று வந்தார். இதில் பலரும் குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள் கூறிய விடயம் என்னவென்றால் அல்கைதாவின் தாக்குதலை தடுப்பது மிகவும் சிரமம் என்பதாகும். இதில் பலர் சி.ஐ.ஏவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களின் ஆலோசனைப்படி நேரடியாக அல்கைதாவையே சந்தித்து ஆதரவு பெறலாம் என்பதே இந்த பிரச்சினைக்கான இறுதி தீர்வாக முன்வைக்கப்பட்டது. இதில் லலித்மோடிக்கு ஆரம்பத்தில் சற்று அதிர்ச்சி ஏற்பட்டாலும் போகப்போக இதுதான் யதார்த்தம் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

ஆனால் அல்கைதாவுக்கு எதிராக அமெரிக்கா தீவிரமான போரில் இருக்கும் இந்த சூழ்நிலையில் இதை எப்படி சாத்தியமாக்க முடியும் என்பதை அவர் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சில அதிகாரிகளிடம் பேசிப் பார்த்தார். இதன்படி இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா முக்கியமாகவும், இந்தியா, பாக்கிஸ்தான் நாடுகள் இரண்டாம் பட்சமாகவும் சம்மதம் தெரிவிக்க வேண்டுமாம். இதை நிறைவேற்றுவதற்காக மோடி போட்ட திட்டப்படி அமெரிக்க அரசிடம் சம்மதம் வாங்குவதை பெப்சி நிறுவனமும், பாக்கிஸ்தான் அதிபர் ஜர்தாரியிடம் அனுமதி பெறுவதற்கு பாக் கிரிக்கெட் வாரியமும், இந்திய அரசிடம் அனுமதி பெற இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராகவும், வேளான் அமைச்சராகவும் இருக்கும் சரத்பவார் முயற்சி செய்ய வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

இத்திட்டப்படி பெப்சிநிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி அதிபர் ஒபாமாவை சந்தித்து இந்தப் போட்டியின் முக்கியத்துவம் குறித்து விளக்கி விட்டு அல்கைதா ஆதரவு பெற அனுமதிக்குமாறு கோரினார். இந்தப்போட்டியில் அமெரிக்க நிறுவனங்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும், அதனால் எத்தனை அமெரிக்கர்கள் பலனடைவர் போன்ற புள்ளி விவரங்களைக் கேட்டுகொண்டு ஒபாமா சிலநாட்கள் ஆலோசனைக்குப் பிறகு இதை ஏற்றுக்கொண்டார் என தெரிகிறது. இதன்படி போட்டி நடைபெறும் காலத்தில் அமெரிக்கா அல்கைதா மீதான போரின் வீச்சை பெருமளவு குறைப்பதாகவும் ஒப்பதல் அளித்திருக்கிறது.

அமெரிக்காவே ஒத்துக்கொண்டபடியால் பாக்கிஸ்தானும், இந்தியாவும் சம்மதம் தருவதில் பிரச்சினை இருக்கவில்லை. பாக் அதிபர் போட்டி நடைபெறும் காலத்தில் எல்லைப்புற மாகாணாங்களில் தாலிபானுடன் நடக்கும் போரை அமெரிக்க ஒப்புதலுடன் நிறுத்தி வைப்பதாக உறுதியளித்தார். இந்தியாவின் காங்கிரசு அரசு இதற்கு சம்மதம் தெரிவித்தாலும், இதை வைத்து பா.ஜ.க, இடதுசாரிகள் தம்மை பலவீனமான அரசாக பிரச்சாரம் செய்வார்கள் என்பதால் சிறு தயக்கம் இருந்தது. இதற்கு மோடி பா.ஜ.க தலைவர் அத்வானியிடம் பேசி இதை அரசியலாக்கமாட்டோம் என உறுதிமொழியை பெற்று பிரதமருக்கு தெரியப்படுத்தினார். அதேபோல இந்த போட்டி கல்கத்தாவிலும், திருவனந்தபுரத்திலும் நடைபெறுவதால் சி.பி.எம் கட்சி இதை எதிர்க்க கூடாது என்று கோரியதற்கு அதன்பொதுச் செயலாளர் காரத், ” கிரிக்கெட் போட்டிக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மக்கள் எங்களை வில்லனாகப் பார்ப்பார்கள் ” என இரட்டை சம்மதம் அளித்ததாகவும் தெரிகிறது.

இப்படி எல்லா அரசாங்கங்களிலும் சம்மதம் வாங்கிய மோடி சி.ஐ.ஏ மற்றும் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனங்களின் உதவியுடன் பாக்கின் எல்லைப்புற மாகாணத்தில் இருக்கும் அல்கைதாவினரைத் தொடர்பு கொண்டு ஆதரவு கோரியதாகவும் தெரிகிறது. ஆரம்பத்தில் அவர்கள் அடம்பிடித்தாலும் பின்னர் அவர்கள் ஒரு பெருந்தொகை கேட்டதாகவும் அதை நேரில் பேசலாமென மோடி தெரிவித்தாகவும் செய்திகள் வருகின்றன. இறுதியில் சென்ற மாதத்தின் ஏதோ ஒருநாள் அவர் அவசரமாக தனி விமானத்தில் பாக் சென்று அங்கிருந்து ஐ.எஸ்.ஐ உதவியுடன் எல்லைப்புற மாகாணத்தில் ஏதோ ஒரு இடத்தில் பின்லேடனை சந்தித்தாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் பாதுகாப்பு காரணமாக பின்லேடனை சந்திக்க முடியவில்லை எனவும் அதற்குப்பதிலாக அவரது தூதுவர் ஒருவரை சந்தித்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இதை நம்மால் உறுதி செய்ய முடியவில்லை.

பின்லேடன் உடன் நடந்ததாகக் கூறப்படும் அந்த சந்திப்பில் பேசப்பட்ட விசயங்களை பார்க்கலாம். அவருக்கு கிரிக்கெட் போட்டி என்றால் என்ன என்பதே தெரியவில்லையாம். கால்பந்து விளையாட்டை மட்டும் ஓரளவு ரசிக்கும் பின்லேடனுக்கு கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்த பல வீடியோக்களை போட்டுக்காட்டி மோடி விளக்கினராம். ஆனாலும் வெள்ளையர்கள்தான் இந்த போட்டியை கண்டுபிடித்தனர் என்ற வரலாறு பின்லேடனுக்கு தெரியுமென்பதால் இந்த கிறித்தவ விளையாட்டு இசுலாத்திற்கு விரோதமானது என அவர் உடும்புப் பிடியாக மறுத்தாராம்.

அதன்பிறகு உலகக் கோப்பை போட்டிக்கு எவ்வளவு வருமானங்கள் வருகிறது என்பதை மோடி விளக்கி அதில் ஒரு தொகையை அல்கைதாவுக்கு அளிக்க விரும்புவதாகவும் தெரிவித்தாராம். இதை ஏற்றுக் கொண்ட பின்லேடன் ஆரம்பத்தில் மிகப்பெரிய தொகை ஒன்று கேட்டதாகவும் இறுதியில் மோடி நிர்ணயித்த 5000 கோடி என்பதை ஏற்றுக்கொண்டாராம். இதன்படி இந்தியாவில் போட்டி நடத்துவதற்கு இனி தடையில்லை. கூடுதலாக மோடி இந்தப் போட்டியை பாக்கிலும் நடத்தலாமா என்று கோரியதற்கு பின்லேடன் பாக் ஒரு இசுலாமிய நாடு என்பதால் மறுத்துவிட்டாராம். நல்லவேளையாக அவருக்கு வங்கதேசமும் ஒரு இசுலாமிய நாடு என்பது நினைவுக்கு வரவில்லை.

பின்லேடனின் உதவியாளர் ஒருவர் எல்லாப்போட்டிகளும் நடக்கும் மைதானத்தில் அல்கைதா ஆசி பெற்ற உலகக் கோப்பை போட்டி என விளம்பரம் செய்ய விரும்பியதாகவும் அதில் உள்ள சிரமங்களை மோடி விளக்கியபிறகு அதை வற்புறுத்தவில்லையாம். அல்கைதாவுக்கு அளிக்கப்படும் பணம் அமெரிக்க டாலராக ஏதோ ஒரு நாட்டு வங்கியின் கணக்கில் இந்நேரம் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இப்படி வெற்றிகரமாக பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து காரியத்தை சாதித்த மோடிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டு குவிகிறது.

கிரிக்கெட் போட்டிக்காக சர்வதேச அரசியல் கூட சற்று வளைந்து கொடுக்கும் என்பது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இந்தப்போட்டியில் பல ஆயிரம் கோடி ரூபாயை வருமானமாகப் பெறப்போகும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் இந்த அதிரடி நடவடிக்கையின் சூத்திரதாரிகள். மோடியுடன் ஒரு இந்திய நிறுவனம் மற்றும் ஒரு அமெரிக்க நிறுவனத்தின் பிரதிநிதிகளும் சென்று பின்லேடனை சந்தித்தாக கூறுகிறார்கள். ஒரு விளையாட்டுப் போட்டிக்காக பன்னாட்டு நிறுவனங்கள் நினைத்தால் பயங்கரவாதிகளுடனான போரையே நிறுத்த முடியும் என்பதை பல அப்பாவிகளால் புரிந்து கொள்ளமுடியவில்லை. இதே பின்லாடன் அமெரிக்காவின் உதவியால் சோவியத் ரசியா ஆக்கிரமித்திருந்த ஆப்கானில் போரிட்டு போராளியானார் என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. மேலும் அமெரிக்கா ஆரம்பித்திருக்கும் இந்த பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்பதே அமெரிக்காவின் மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள பயன்படும் ஒரு முகாந்திரம் என்பதும் அவர்களுக்கு தெரியாது.

இந்த செய்திகள் பல்வேறு வெளிநாடு மற்றும் இந்திய பத்திரிகைகளில் வந்தாலும் இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லையென மறுத்திருக்கிறார்கள். ஆனால் அல்கைதா மிரட்டலை மீறி இந்தியாவில் போட்டி எப்படி நடத்தப் போகிறீர்கள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து முதலான நாடுகளின் வீரர்கள் இந்தியா வருவதற்கு எப்படி சம்மதித்தார்கள் என்ற கேள்விகளுக்கு இவர்களிடம் விடையில்லை. அதற்கு எல்லோரிடமும் ஒத்திசைவாக வெளிப்படுவது ஒரு மர்மச் சிரிப்புதான்.

2011: அல்கைதா ஆதரவுடன் உலக்கோப்பை கிரிக்கெட் ??

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்…..15-வது பாராளுமன்றம்…

47

எங்கப்பா டாக்டர் அதனால நானும் டாக்டர்.

எங்கப்பா பாடகர் அதனால் நானும் பாடகர்.

எங்கப்பா பத்திரிகை நடத்தினார் அதனால நானும் நடத்துகிறேன்.

எங்கப்பா சினிமா இயக்குநர் அதனால் நான் ஹீரோ…

எங்கப்பா முதல்வர் நான் துணை முதல்வர்.

எங்கப்பா மத்திய அமைச்சர் நான் எம்.பி.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...அரசியல், சினிமா, ஊடகம் என எல்லா துறைகளுமே வாரிசுகளால் நிரம்பி வழிகிறது. வலிக்காமல் அப்பாவின் கல்லாவில் அமர்ந்து விடுகிற இவர்களுக்கு கிடைப்பதோ இளைஞர்கள், திறமையானவர்கள், துடிப்பானவர்கள் என்கிற பட்டம். உலகிலேயே ஆகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொண்ட இந்திய நாடாளுமன்றம் இன்று அரசியல் வாரிசுகளின் களியாட்டக் கூடாரமாக ஆகியிருக்கிறது. எல்லா மாநில வாரிசுகளும் பொழுதுபோக தேர்ந்தெடுத்திருக்கும் கிளப்தான் இந்த பாராளுமன்றம்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்களின் பிரதிநிதிகள் என்று மார்தட்டிக் கொண்டவர்கள் இப்போது வாரிசுகளை டில்லிக்கு அனுப்பி பதவிகளைப் பெற்றிருக்கிறார்கள். பெரும் கோடீஸ்வரர்கள், ராஜ குடும்பத்தினர், தொழிலதிபர்கள், முன்னாள் இராணுவ அதிகாரிகளின் பிள்ளைகள் என்று இந்தச் சமூகத்தின் செல்வாக்குப் பெற்ற பெரிய மனிதர்கள் இவர்களின் பிள்ளைகள் இவர்களின் அடுத்த வாரிசுகளாக பாராளுமன்றத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதோடு இப்போது வெறுமனே எம்.பிக்களாக மட்டுமே இவர்கள் இருந்து விட்டுப் போவதில்லை.பதவிகளைக் கைப்பற்றி மக்கள் பணத்தை விஞ்ஞான ரீதியில் கொள்ளையடிக்கும் கொள்ளைக் கும்பலாகவும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். கொள்ளையடிப்பதும் அதிலிருந்து எப்படித் தப்புவது என்பதும் இவர்களுக்கு கைவந்த கலை.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...காஷ்மீர்ல் தொடங்கி நாம் பார்த்தோமானால் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா காஷ்மீர் மாநில  முதல்வராக உள்ளார். அவரது மருமகன் சச்சின் பைலட் இணைஅமைச்சர். பரூக் அப்துல்லாவோ மத்திய எரிசக்தித்துறை அமைச்சர். ஆந்திராவில் என். டி.ராமாராசின் மகள் புரந்தேஷ்வரி இணை அமைச்சர். சரத்பவார் மகள் சுப்ரியா சுலே எம்.பி. முலயாம்சிங் யாதவ்வின் மகனும் எம்.பி, பிஜூபட்நாயக்கின் மகன் நவீன் பட்நாயக் ஒரிசாவின் முதலமைச்சர். ராஜஸ்தானின் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த  ஜோதிராதித்ய  சிந்தியா – தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர். தமிழகத்திலிருந்து கருணாநிதியின் வாரிசுகள் அனைவருக்கும் கேபினெட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி.

மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் சகோதரர் திலீப், மகாராஷ்டிர மாநில அமைச்சராக உள்ளார். தேஷ்முக்கின் மகன் அமித்தும் எம்.பி.காங்கிரஸ் கட்சி அல்லது அவரது ஆதரவாளார்கள் என்று இருக்கிற அனைவருமே தங்களின் வாரிசுகளை இம்முறை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள்.

சுனில்தத், சரத்பவார், அர்ஜூன்சிங், என ஒவ்வொரு மாநிலத்தையும் பட்டா போட்டு ஆண்டு கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இதற்கு பிஜேபி மட்டும் விதிவிலக்கல்ல. மும்பையின் தாதா பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...பால்தாக்கரேயின் ஒட்டு மொத்த குடும்பத்தின் கையில்தான் கட்சி இருகிறது. பிரமோத் மகாஜன், அத்வானி, என அனைவரின் குடும்பமுமே கட்சியையும் பதவியையும் பங்கிட்டுக் கொண்டிருக்கிறது. பீகார் லல்லுவுக்கு, சட்டீஸ்கர் சிபுஷோரனுக்கு, கேரளா கருணாகரனுக்கு (ஆனால் கேரளாவில் இவர்களுக்கு பலத்த அடி). தமிழ்நாடு கருணாநிதிக்கு  என இந்தக் கேவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு அமைச்சரையும், அரசியல்வாதிகளின் குடும்பப் பின்னணியையும் ஆராய்வத்ற்குள் போதுமடா இந்தக் கேவலம் என்றாகி அப்பாடா என்று அமர்ந்தால் அறிவிப்பு வருகிறது, மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் என்று… இந்தக் கேவலத்தை முதன் முதலாக துவங்கி வைத்தது யார்? என்று பார்த்தால் இந்திய அரசியலில் வாரிசு அரசியலை தொடங்கி வைத்தது நேரு மாமாதான்.

INDIA-POLITICS-CABINETஇந்திய அமைச்சரவையிலேயே இளவயது அமைச்சர் என்று புகழப்படும் அகதா சங்மாவுக்கு வயது 28. அகதாவின் அப்பாதான் முன்னாள் காங்கிரஸ் பிரமுகரும் சபாநாயகருமான பி.ஏ.சங்மா. இவர் சோனியாவை இத்தாலி நாட்டுப் பெண்ணை இந்தியாவின் அன்னையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூவியவர். சோனியா பிரதமராவதை கடுமையாக எதிர்த்து வந்தவர். இப்போது அதே சோனியா அவரது மகள் அகதா சங்மாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கிறது என்றால், இப்போது மட்டும் இத்தாலித் தாய் இந்தியத் தாயாகிவிட்டாளா? என்ன?

பதவியேற்ற பிறகு கௌகாத்தியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அகதா, “சோனியாவை அப்பா விமர்சித்தது எல்லாம் பழைய கதை, இப்போது ராகுல்காந்தி பிரதமராவதற்கு எந்தத் தடையும் இல்லை”” என்றிருக்கிறார். ஸ்டாலின் துணை முதல்வரானதற்கு ராமதாஸின் மகன் அன்புமணி வாழ்த்துச் சொல்வதையும், சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரமும், கனிமொழியும் சேர்ந்து கருத்து அமைப்பைத் துவங்கியதை இத்தோடு இணத்து சிந்தித்துப் பார்க்கவும்.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...இந்த வாரிசுகளின் தகப்பனார்கள் வாக்குகளை நம்பி மக்களிடம் மண்டியிட்டு பிச்சை எடுத்தது போலெல்லாம் இவர்கள் எடுப்பதில்லை. கருணாநிதியின் அரசியல் வாரிசுகளான தயாநிதியும்,அழகிரியும் அவரவர் தொகுதியில் என்ன கேவலங்களை எல்லாம் செய்தார்கள் என்பதை எல்லோரும் வேடிக்கை பார்த்தோம். அதே கேவலத்தைத்தான் எல்லா வரிசுகளும் செய்கிறார்கள். ஓட்டு என்றால் தங்களுக்கு மட்டும்தான் மக்கள் ஓட்டுப் போட வேண்டும். தொழில் என்றால் தாங்கள் மட்டுமே செய்ய வேண்டும். கட்சியில் தங்களுக்கு இணையாக வேறு யாரும் வளர்ந்து விடக் கூடாது அல்லக்கைகளுக்கு மட்டுமே கட்சியில் இடம் என்று வெளிப்படையாக ஒளிவு மறைவில்லாமல் செய்லபடுகிற இந்த ரௌடிவாரிசுகளுக்கு மக்கள் கொடுத்திருக்கும் அடை மொழியோ துணிச்சலானவர், சொன்னதை செய்து முடிக்கக் கூடியவர் என்பதுதான்.அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை என்று நினைக்க வேண்டாம். ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை என்பதுதான் இங்கு பிரச்சனை. ஆனால் ஜெவின் வாரிசு அரசியல் பங்கை இங்கே சசிகலா குடும்பம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...தொழில் வளர்ச்சி, ஹைடெக் சிட்டி, நகரை தூய்மையாக வைத்தல், புகையிலை ஒழிப்பு, என்று மக்களுக்கான நிவாரணங்களைப் பேசுதல் என்பதோடு அந்நிய மூலதனங்களை கொண்டு குவிப்பதன் மூலம் மக்களை நேர் வகிடாக பொருளாதார ரீத்யீல் தரம் பிரித்து வறுமைப் பட்ட மக்களை நகரத்தை விட்டு துரத்தியரடிப்பது அல்லது நவீனக் கொத்தடிமைகளாக ஏழைகளை சுவீகரிப்பது என்பதுதான் இவர்களின் மனதில் உதிக்கும் மக்கள் திட்டம்.

மற்றபடி,

இடஒதுக்கீடு, சிறுபான்மையினர் உரிமை, சிவில் உரிமை, தமிழ், தமிழர், ஈழம், சமூக நீதி என இவர்கள் எந்த பொதுப் பிரச்சனை குறித்தும் கருத்துச் சொல்ல மாட்டார்கள். வேறு எந்த சண்டை சச்சரவுகளுக்கும் போகவும் மாட்டார்கள். ஆனால் தொழில் பாதிக்கிறது என்றால் எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் எரித்து குடும்பத்துக்குள்ளேயே அடித்துக் கொள்வார்கள். ஆனால் பதவியும் அதிகாரமும் பறி போய் விடுமோ என்றால் காலில் விழுந்து நக்காத குறையாக நக்கி அடித்துத் துரத்தியவர்களிடமே அண்டி நாயைப் போல அடங்கி ஒடுங்கிவிடுவார்கள். இதற்கு இந்த திருட்டுக் குமபல் வைத்திருக்கும் பெயர் பெருந்தன்மை.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...கடந்த 16-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான போது ஆங்கில சேனல் ஒன்று தயாநிதியிடம் பேட்டி எடுத்தது. அந்தப் பேட்டியில் தயாநிதி சொன்னது என்ன தெரியுமா, “இலங்கைப் பிரச்சனை ஒரு பிரச்சனையே அல்ல. அதை தமிழக மக்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை “என்று பேசிவிட்டு “ஈரோட்டில் ஜெயித்த மதிமுக எம்பி எங்கள் கட்சிக்கு  வந்தால் வரவேற்போம்”” என்றார். என்ன கேவலம் பாருங்கள். சுரணை உள்ள எந்த பத்திரிகையாளனும் “அப்படி என்றால் எதற்கு உங்கள் தாத்தா போர் நிறுத்தம் கேட்டு உண்ணாவிரதம் இருந்தார்,அப்போ அது நாடகம் என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்களா? “என்று ஒரு கேள்வி கூட கேட்கவில்லை.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...பதவி போதை இவர்களை கொலை செய்யத் தூண்டுகிறது. சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து தப்பிக்கத் தூண்டுகிறது. சமீபத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் பல நூறு கோடி ரூபாய் லஞ்சம் பெற்று சிக்கினார் சுமதி ரவிச்சந்திரன் என்ற பெண் பாஸ்போர்ட் அதிகாரி. அவரது உயர் கல்விச் சான்றிதழே தவறு என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது. அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது நீதிமன்றம். அடுத்த நாள் அந்த நீதிபதி மாற்றப்பட்டார். அடுத்த சில நாட்களில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அப்படி என்றால் அவரைக் காப்பாற்றியது யார்? என்ற கேள்வியை  எந்த மீடியாவும் கேட்கவில்லை. அவர் யாரின் வாரிசு என்றும் எந்த மீடியாவும் சொல்லவில்லை. அவர் மாநில கல்வி அமைச்சர் அன்பழகனின் நெருங்கிய உறவுக்காரப் பெண். காங்கிரஸ் கட்சியின் ஜெயந்தி நடராஜனின் தாயாரும் சுமதி ரவிச்சந்திரனின் தயாரும் அக்காளும் தங்கையுமாம். மத்திய மாநில அரசுகளின் செல்வாக்குள்ள சுமதி நூறு கோடி அல்ல எத்தனை கோடி வேண்டுமானாலும் ஊழல் செய்யலாம், அவரை எந்த இந்தியத் தண்டனைச் சட்டமும் தண்டிக்கப் போவதில்லை.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...சரி தலைவர்கள்தான் இபப்டி என்றால் அரசியல் கட்சிகளின் ஏனைய பொறுப்பாளர்கள் மட்டும் விடுவார்களா என்ன? மாவட்டம், வட்டம், என்று ரௌடிகளாக அரசியலுக்கு வருகிறவர்கள், வந்து கொண்டிருப்பவர்கள், வரப்போகிறவர்கள் மட்டும் சாதாரண தொண்டனுக்கு வழிவிடுகிறானா?என்ன தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி என்கிற ரீதியில் மாவட்ட செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் என எல்லோருமே அவர்களின் வாரிசுகளை அரசியலுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். விளைவு தொண்டன் காசு கொடுத்தால் வேலை பார்க்கிறேன் என்று பணத்தை வாங்கிவிட்டு கட்சிக்கு வேலை பார்க்கிறான். காசு வரவில்லை என்றால் எந்தக் கட்சி காசு கொடுக்குமோ அந்தக் கட்சிக்கு வேலை செய்கிறான். அல்லது வேலை செய்யாமல் இருந்து விடுகிறான். ஏனென்றால் முன்னரெல்லாம் வேலை செய்ய பணம் கொடுப்பார்கள். இப்போது வேலை செய்யாமல் இருக்கவும் பணம் கொடுக்கிறார்கள்.

பணக்கார வாரிசுகளின் காஃபி கிளப்.....15-வது பாராளுமன்றம்...இந்த தேர்தல் நடைமுறையில் எதையும் நம்மால் சாதிக்க முடியாது என்பதை நாம் உணர்ந்து கொண்டோம். ஈழத்தில் நாம் ஏமாற்றப்பட்டோம், நமது வேலை பறிபோனது, விலைவாசி அச்சுறுத்துகிறது,  கல்வி, சுகாதாரம், என வாழ்வதற்கான அனைத்து உரிமைகளுமே மக்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இதை இனியும் மக்களாட்சி என்று நம்பிக் கொண்டிருக்கிற நாம் நாளை மன்னாராட்சியை எதிர் கொள்ள நேரிடும். வரும்காலம் எப்படி இருக்கும் என்பதற்கான சாட்சிதான் இன்றைய பாராளுமன்ற போலி ஜனநாயகம். அரசியல் ஆதாயம் உள்ள, கோடீஸ்வரர்களையும், பண்ணைகளையும், தொழில் முதலாளிகளையும் பாதுகாக்கவே வாக்குச் சீட்டும், பாராளுமன்றமும், இவர்கள் ஜனநயகம் என்னும் பெயரில் மன்னராட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஓவ்வொரு ஐந்து வருடமும் காத்திருந்து இவர்களை துரத்தி விடலாம் என்று ஏமாந்ததுதான் மிச்சம். வாரிசுகள் மேல் வாரிசுகளாக வந்து கொண்டே இருக்கும் இவர்களை அடியோடு வெட்டி வீச இனி இந்த நாட்டுக்குத் தேவை புதிய ஜனநாயகப் புரட்சி. ஆமாம் எப்படி ஈழத்துக்காக நமது இரத்தம் கொதிக்கிறதோ அதே கொதிப்பு பணக்காரர்களைக் காக்கும் அவர்களை மட்டுமே உருவாக்கும் இந்த அமைப்புக்கு எதிராகவும் வர வேண்டும்.

— தொம்பன்

( எமது நண்பர் தோழர் தொம்பன் வினவில் ஏற்கனவே சட்டக்கல்லூரி ‘கலவரம்’ தொடர்பாக “ஆனந்த விகடனின் சாதிவெறி” என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார். இத்தளத்தில் அவ்வப்போது எழுதுவார் )

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…


ஏழ்மையை ஒழிப்பானாம் சினிமா கந்தசாமி !

62

கந்தசாமி

(படத்தை பெரியதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்)

“ஸ்விஸ் வங்கியில் இருக்கும் இந்தியாவின் கருப்புப் பணம் அறுபத்துநான்கு இலட்சம் கோடிகள் பற்றிய செய்தி ஒரு பக்கம். வறுமையின் கொடுமையால் தனது மூன்று குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட ஏழ்மைத் தாயைப் பற்றிய செய்தி மறுபக்கம். உலகிலுள்ள ஏழை மக்களில் முப்பது சதவிகிதம் இந்தியாவில்தான் இருக்கிறார்கள் என்றொரு அதிர்ச்சி செய்தி வேறொரு பக்கம். செய்தித்தாள்களில் இந்தச் செய்திகளையெல்லாம் பார்க்கும் போது இந்தக் கொடிய ஏழ்மையையும், ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே வளமையில் செழிப்பதையும் மாற்ற, ஒரு சூப்பர் ஹீரோ பிறக்க மாட்டானா என்ற அதீத ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இந்தப் படம். இந்தியாவின் ஏழ்மையைப் போக்க முடியுமென நிரூபித்துக் காட்டும் செல்லூலாய்ட் அவதாரம்தான் இந்த ‘கந்தசாமி’ ” என்கிறார் இயக்குநர் சுசி கணேசன், குமுதம் இதழில்.

ஏழ்மையை இதற்கு மேல் யாரும் கேவலப்படுத்த முடியாது என்பது ஒருபுறமிருக்க, ஏழைகளின் அவலத்தை துடைக்க வந்த இந்த சினிமாவின் பட்ஜெட்டும் ஏழைகளைப் போல இருக்கும் என நீங்கள் நினைத்தால் தவறு.

இதற்கு இயக்குநர் என்ன கூறுகிறார் என்றால் கதையே பிரம்மாண்டத்தை டிமாண்ட் பண்ணும் கமர்ஷியலான கதையாம். ஏழைகளை கடைத்தேற்ற வந்த நாயகன் விக்ரமின் காஸ்ட்யூமிற்கு மட்டும் முக்கால் கோடி, ஏழைகளுக்கு தொண்டு புரியும் நாயகனை குஷிப்படுத்தும் ஸ்ரேயாவின் கர்ச்சீப் துணி காஸ்ட்யூம் ஒண்ணேகால் கோடி, இருவரும் டூயட் பாடும் மெக்சிகோ ஷூட்டிங்கிற்கு எட்டுக்கோடி, இத்தாலி படப்பிடிப்பிற்கு இரண்டு கோடி, ஏழ்மையை க்ராபிக்ஸ்ஸில் காட்டுவதற்கு மூன்று கோடி இப்படி ஏழைப்பங்காளான் கந்தசாமியின் மெகா பட்ஜெட் நீள்கிறது. எதையும் பிரம்மாண்டமாக நடத்திக்காட்டும் தாணு இந்தக் கருமத்தின் பாடல் வெளியீட்டிற்காக இத்தாலியிலிருந்து அழகிகளை குத்தாட்டம் ஆடுவதற்காக கொண்டு வருகிறாராம்.

கந்தசாமி எனும் சூப்பர்மேன் கோலத்தில் விகரம் எதையே முறைத்துப் பார்க்க பக்கத்தில் அடுத்தவன் கண்ணீரை துடைப்பவனே கடவுள் என்ற தலைப்பில் இந்தப் படத்திற்காக வரும் விளம்பரங்களை நீங்களும் பார்த்திருக்கலாம். அதில் பூஜையன்று இந்த படக்குழு இரண்டு கிராமங்களை தத்து எடுத்ததையும், பாடல் வெளியீடன்று முப்பது கிராமங்களை முப்பது வி.ஐ.பிகள் தத்து எடுக்கப் போவதாகவும் மார் தட்டியிருந்தார்கள். புரட்சிப்புயலின் சீடரான கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த ஏழைகளுக்கான கலைப்படைப்பை மார்கெட் செய்யும் இந்த தத்தெடுப்பு நாடகத்திற்கு எத்தனை ஆயிரங்களை பிச்சை போட்டார்கள் என்ற பட்ஜெட் ரகசியத்தை மட்டும் தெரிவிக்கவில்லை. அது அநேகமாக ஸ்ரேயா அணியும் உள்ளாடைகளின் விலையை விட நிச்சயமாக அதிகமிருக்காது.

அதே விளம்பரத்தின் இறுதியில் எல்லாம் அரசாங்கமே செய்து விடும் என இருக்காமல் நாமே உழைத்து முன்னேற வேண்டுமாம் என்ற அரதப் பழசான தத்துவத்தையும் பொறித்திருந்தார்கள். உன்னால் முடியும் தம்பி என்ற இந்த சுய முன்னேற்ற கப்சாவின் யோக்கியதயை அமெரிக்க ரிடர்ன் எம்.எஸ். உதயமூர்த்தியிடம் கேட்டால் அழுது புலம்புவார். ஏதோ முன்னேறுவதற்கான வழி தெரியாமல்தான் இந்த நாட்டின் ஏழைகள் கால் வயிற்றுக் கஞ்சி குடித்துக்கொண்டும், வழி தெரிந்த சுறுசுறுப்பான அம்பானி போன்ற அறிவாளிகள் பத்தாயிரம் கோடி செலவில் வீடு கட்டியும் வாழ்கிறார்கள்! அம்பானிகள் அம்பானிகளாக ‘முன்னேற’ வேண்டுமென்றால் ஏழைகள் மேன்மேலும் ஏழைகளாக மாறினால்தான் முடியும். இதைத்தான் ஒரு வர்க்கத்திடமிருந்து எடுக்காமல் இன்னொரு வர்க்கத்திற்கு கொடுக்க முடியாது என்றார் மார்க்ஸ்.

அது போகட்டும், தமிழ் சினிமா முண்டங்கள் இப்படி காஸ்ட்லியாக ஏழ்மையை ஒழிப்பதற்கு பதில் அரசாங்கத்திடம் சொல்லி ஏழைகளை ஆங்காங்கே குண்டு போட்டு கொன்றுவிட்டால் சுலபமாக ஏழ்மையை ஒழித்துவிடலாமே?

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…


பினாயக்சென் விடுதலை: அரசை எதிர்த்ததால் இரண்டாண்டு சிறைவாசம்!!

binayak-sen

மருத்துவரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்திருப்பவருமான பினாயக் சென் 27.05.09 அன்று இரண்டாடண்டு சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையாகியிருக்கிறார். சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்காகப் போராடும்  மாவோயிஸ்ட்டு கட்சியினருக்கு உதவி செய்தார் என்ற பொய் குற்றச்சாட்டிற்காக இந்த இரண்டாண்டு சிறைவாசம். உண்மையில் அந்த மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்குவதற்காக மாநில அரசு சல்வாஜூடும் என்ற பெயரில் பழங்குடி மக்களைக் கொன்று வருவதை பினாயக் சென் சர்வதேச அளவில் அம்பலப்படுத்தியதுதான் அதற்குக் காரணம். அதனால்தான் பொடாவை ஒத்த ஒரு சட்டப்படி பினாயக் சென் கைதுசெய்யப்பட்டு இத்தனை காலம் பிணைகூட கிடைக்காமல் சிறையில் கழித்தார். இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பலமனித உரிமை அமைப்புகள், தன்னார்வக் குழுக்கள், இடதுசாரியினர் அம்பலப்படுத்தினாலும் இப்போதுதான் உச்சநீதிமன்றம் பிணையில் விடுவித்திருக்கிறது. அவர் மீதான பொய்க்குற்றசாட்டின் பெயரில் பதியப்பட்ட வழக்கு இன்னும் தொடர்கிறது. பினாயக் சென் கைதாகும் போது நடந்த பின்னணி விசயங்களை விளக்கி புதிய ஜனநாயகத்தில் வெளிவந்த கட்டுரையை இங்கே பதிவு செய்கிறோம்.

*****

“நக்சல்பாரிகள், மாவோயிஸ்டுகள்… இந்தியா ஒரு போலீசு அரசாக மாறப் போகிறது. நிலவுவதை யார் ஏற்க மறுக்கிறார்களோ, அவர்கள் தீவிரவாதிகளாக அழைக்கப்படுவார்கள். இசுலாமிய தீவிரவாதிகள் இசுலாமியராக இருந்தாக வேண்டும். எனவே, நம் அனைவரையும் குறிக்க அது போதாது. அவர்களுக்கு பெரிய வலை தேவைப்படுகிறது. எனவே, தெளிவின்றி வரையறுப்பதும், வரையறுக்காமலே விடுவதும் ஒரு சரியான உத்திதான்.

ஏனெனில், நாம் அனைவரும் மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என அழைக்கப்படவும், மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் என்றால் யாரென்று தெரியாத அல்லது கவலைப்படாத நபர்களால் நமது கதை முடித்து வைக்கப்படுவதுமான காலம் வெகு தொலைவில் இல்லை.”

2007 பிப்ரவரி மாதம் “தெஹல்கா’ வார ஏட்டுக்கு அளித்த பேட்டியொன்றில், நந்திகிராம மக்கள் போராட்டத்தை நக்சல்பாரிகள்தான் தூண்டிவிட்டதாக மேற்கு வங்க அரசு பிலாக்கணம் பாடி வந்ததை அம்பலப்படுத்திப் பேசும் பொழுது, மேற்குறிப்பிட்ட கருத்தை எழுத்தாளர் அருந்ததிராய் குறிப்பிட்டார். 2007 மே மாதம் 14ஆம் தேதி சத்தீஸ்கரில் மனித உரிமைப் போராளி, மருத்துவர் பினாயக் சென்னை கைது செய்து சிறையிலடைத்தன் மூலமாக அம்மாநில அரசு இக்கருத்து மிகையல்ல என்பதை நிரூபித்திருக்கிறது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 2004 மற்றும் தடா, பொடாவையெல்லாம் விஞ்சக் கூடிய கருப்புச் சட்டமான “”சத்தீஸ்கர் சிறப்புப் பொதுப் பாதுகாப்புச் சட்டம் 2005” ஆகியவற்றின் கீழ் பினாயக் சென் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம் என்ன? அவர் மாவோயிஸ்டுகளோடு தொடர்பு உடையவர் என்பது சத்தீஸ்கர் போலீசு வைக்கும் குற்றச்சாட்டு.

அந்தப் போலி குற்றச்சாட்டின் யோக்கியதையைப் பார்க்கும் முன்னால், பினாயக் சென் யாரென்பதை முழுமையாகப் புரிந்து கொள்வது அவசியம். பினாயக் சென் சத்தீஸ்கரில் மக்களின் மதிப்பைப் பெற்ற ஒரு குழந்தை நல மருத்துவராவார். ஒரு மருத்துவர் என்ற முறையில் அவர் அம்மாநிலத்தின் ஏழை, எளிய மக்களுக்கு கணக்கற்ற சேவைகள் புரிந்துள்ளார். சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா எனும் முற்போக்கு ஜனநாயக அமைப்பினால் வறிய மக்களுக்காக நடத்தப்படும் சங்கர் குகா நியோகி மருத்துவமனையை உருவாக்குவதிலிருந்து, அதனை தொடர்ந்து நடத்துவதிலும் உறுதுணையாக இருந்தார். சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய, பழங்குடியினர் பகுதிகளில் ஜன ஸ்வஸ்த்யா சஹ்யோக் (மக்கள் ஆரோக்கிய உதவி) எனும் குறைந்த செலவிலான, சமூக மருத்துவ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முன்னணியாகப் பணிபுரிந்தார். தம்தாரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினருக்கான வாராந்திர மருத்துவமனையிலும் அவர் பணிபுரிந்து வந்தார். மேலும் அவர், மக்கள் மருத்துவம் குறித்து ஆய்வு அறிக்கைகளும், நூல்களும், பத்திரிகைகளுக்குக் கட்டுரைகளும் எழுதியும் வந்தார். வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியின் வாழ்நாள் மருத்துவ சேவைக்கான பால் ஹாரிசன் விருதையும் பெற்றுள்ளார்.

பினாயக் சென், குடிமை உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (பி.யூ.சி.எல்) எனும் மனித உரிமை அமைப்பின் சத்தீஸ்கர் மாநில செயலாளராகவும் அவ்வமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார். போலீசு கொட்டடிச் சாவுகள், போலி மோதல்கள், பட்டினிச் சாவுகள் முதலான எண்ணற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மை அறியும் குழுக்களில் முன்னணியாக நின்று செயல்பட்டார். குறிப்பாக, கடந்த ஜூன் 2005 முதல் சத்தீஸ்கர் மாநில அரசும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளும், போலீசு மற்றும் மத்திய ரிசர்வ் படையும் இணைந்து நக்சல்பாரிகளை ஒடுக்குவது என்ற முகாந்திரத்தில் “சல்வா ஜூடும்’ (அமைதி இயக்கம்) என்ற பெயரில் தனது மாநில மக்களின் மீது நடத்தி வரும் உள்நாட்டுப் போரின் வரலாறு காணாத அரசு பயங்கரவாதத்தை, பித்தலாட்டங்களை உறுதியோடு அம்பலப்படுத்தி வந்தார். அனைத்துலக மற்றும் உள்நாட்டு ஊடகங்களில் இது பற்றி தொடர்ச்சியாக எழுதியும், பேசியும் வந்தார்.

கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் சத்தீஸ்கரில் ஆதாரபூர்வமாக 155 போலி மோதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதிகாரபூர்வ தகவல்களின்படியே 400க்கும் மேற்பட்டோர் சல்வா ஜூடுமால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2007 மார்ச் 31ஆம் தேதியன்று சந்தோஷ்பூரில் மாவோயிஸ்டுகள் என்ற பெயரில், 12 பழங்குடியினர் “சல்வா ஜூடும்’, மற்றும் நாகா பட்டாலியனால் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். பினாயக் சென் முதலான தலைவர்கள் இதனை அம்பலப்படுத்தி போராடத் துவங்கிய பின்னர், புதைக்கப்பட்ட பிணங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. கொல்லப்பட்டவர்கள் மாவோயிஸ்டுகள் அல்ல என்பதும் அம்பலமாகியது. ஒரு சல்வா ஜூடும் உறுப்பினரது ஒப்புதல் வீடியோ ஆதாரம் கிடைத்த பின்னரும், சல்வா ஜூடும் சீருடையணிந்து கொண்டு மாவோயிஸ்டுகளே இக்கொலையை செய்திருக்கலாம் என வெட்கமின்றிச் சொன்னது போலீசு. இப்படித் தொடர்ச்சியாக தனது பயங்கரவாதம் அம்பலப்படுத்தப்படுவதை அரசு பொறுக்க முடியாததன் விளைவாகவே தற்பொழுது சென் கைது செய்யப்பட்டுள்ளார்.

பினாயக் சென் கைது செய்யப்பட்டதற்காக அரசு சொல்லும் காரணமும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள “ஆதாரங்களுக்கும்’ சத்தீஸ்கர் மாநில அரசு மற்றும் போலீசின் திமிருக்கு சிறந்த அடையாளங்களாகும். மாவோயிஸ்ட் தலைவரான நாராயண் சன்யாலை 30 முறை சிறையில் பினாயக் சென் சென்று சந்தித்தாராம். பத்திரிகையாளர் பிரஃபுல் பித்வாய் சொல்வது போல, “”இது அடிமுட்டாள்தனமான வாதம். அதிகாரிகளுடைய அனுமதி பெற்று, அவர்களது முன்னிலையில்தான், சென் சன்யாலை சந்தித்துள்ளார். ஒரு மனித உரிமை செயல்வீரர் என்ற முறையில் கைதிகளைச் சந்தித்து, அவர்களுடைய அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவது என்பது சட்டத்திற்குட்பட்ட அவரது நியாயமான கடமையே. அவர் 30 முறை சந்தித்தாரா, 100 முறை சந்தித்தாரா என்பதெல்லாம் அர்த்தமற்றவை.”

சில அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு துண்டுப் பிரசுரங்கள், போலி மோதல்கள் குறித்த தகவல் அறிக்கைகள், செய்தித் துணுக்குகள், மனித உரிமை சித்திரவதைக்கு ஆட்பட்டோரின் கடிதங்கள் முதலானஅபாயமான’ ஆதாரங்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இவை எந்தவொரு மனித உரிமை செயல்வீரரது வீட்டிலும் இருக்கக் கூடிய “ஆதாரங்கள்’ தான். இணையத்திலும், பத்திரிகைகளிலும் வெளிப்படையாக கிடைக்கக் கூடிய ஆதாரங்கள்தான். இதற்கெல்லாம் ஒருவரை கைது செய்ய வேண்டுமென்றால், ஒட்டுமொத்த உளவுத்துறை போலீசுதான் முதலில் உள்ளே போக வேண்டும். அவர்கள்தான் ஒன்று விடாமல் இத்தகைய “ஆதாரங்களை’ சேர்த்து வைத்திருக்கிறார்கள். ”

மேலும், மதன் என்ற மாவோயிஸ்ட் தலைவர், சென்னிற்கு எழுதியுள்ள கடிதத்தைத்தான் முக்கிய ஆதாரமாக போலீசு குறிப்பிடுகிறது. அக்கடிதத்தில் ராய்ப்பூர் சிறையில் கைதிகளின் மோசமான நிலை குறித்து எழுதியுள்ள மதன், அவர்களுடைய நிலையை மேம்படுத்த உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்கடிதத்தின் துவக்கத்தில் “அன்பிற்குரிய பினாயக் சென் அவர்களுக்கு’ என அவர் விளித்துள்ளார். இவ்வாறு விளிப்பது மாவோயிஸ்டுகளுக்கும், பினாயக் சென்னிற்குமான தொடர்பைக் காட்டுகிறதாம்! சிறைக் கைதிகளின் நிலை குறித்து மனித உரிமை அமைப்புத் தலைவருக்கு எழுதாமல், ஜெயில் சூப்பிரெண்டெண்டுக்கா எழுத முடியும்? இது மடத்தனமல்ல; வெளிப்படையான திமிர்! ஒன்று, நீ இந்த கொடுங்கோன்மை அரசை ஆதரிக்க வேண்டும்; அப்படி இல்லையென்றால், நீ தீவிரவாதிகளைத்தான் ஆதரிக்கிறாய் என்ற புஷ்ஷின் சித்தாந்தம்தான் சத்தீஸ்கர் அரசு நமக்கு புரிய வைக்க விரும்பும் செய்தி.

சென் கைதுக்கு எதிராக வட மாநிலங்களிலும், சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் மனித உரிமை அமைப்புகளும், ஜனநாயக அமைப்புகளும் கடந்த மே மாதம் முதல் தீவிரமாகப் போராடி வருகின்றன. இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய பி.யூ.சி.எல்.இன் சத்தீஸ்கர் மாநில தலைவர் ராஜேந்திர சைல்ஐ வேறு ஒரு மொன்னை வழக்கை முன்வைத்து கைது செய்து சிறையிலடைத்தது போலீசு. பினாயக் சென் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் என்ற காரணத்திற்காக மருத்துவர் இலினாவையும் கைது செய்யப் போவதாக அச்சுறுத்தியது. இந்த அடக்குமுறைகளை மீறியும் மனித உரிமை அமைப்புகள் தலைமையில் பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தில்லியில் முன்னாள் நீதிபதி ராஜேந்திர சச்சார், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், அருந்ததி ராய் முதலானோர் அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி, பத்திரிக்கைகளின் மூலம் பரவலாக இச்செய்தியை வெளிக் கொணர்ந்தனர்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அருந்ததி ராய், “”மருத்துவர் சென்னிற்கு என்ன நேர்ந்ததோ, அதுதான் சத்தீஸ்கர் மக்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கிறது. சத்தீஸ்கர் மக்கள் எவராலும் செவிமடுக்கப்படாதவர்கள்; குரல்களற்றவர்கள்; இவையனைத்தும், சல்வா ஜூடுமின் உருவாக்கத்திலிருந்தே துவங்குகின்றன. காங்கிரசும், பா.ஜ.க.வும் ஓரணியாக நின்று வேலைவாய்ப்பற்றவர்களை சிறப்பு போலீசு அதிகாரிகளாக்கி, ஒரு கூலிப் படையை ஏற்படுத்தியுள்ளன. இது ஒரு அபாயகரமான போக்கு. இது சமூகம் முழுவதும் ஆயுதபாணியா வதில் போய் முடியும்” என்றார்.

ஆம், சல்வா ஜூடுமின் உருவாக்கத்திலிருந்து தான் இப்போர் துவங்குகிறது. 1990இல் பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக என தனி மாநிலமாக, சத்தீஸ்கர் மாநிலம் இந்தியாவின் மத்தியப் பகுதியில் உருவாக்கப்பட்டது. 1947இலிருந்தே எவ்வித வளர்ச்சிப் பணிகளும் நடைபெறாத, ஓட்டுக் கட்சிகளுக்கு “பிரயோசனமில்லாத’ பழங்குடியினர் வாழும், அரசின் கரம் தீண்டாத தண்டகாரண்யாவில் பஸ்தார், காத்சிரோலி முதலான பகுதிகளில் மாவோயிஸ்டுகள் 1993 முதலே கொரில்லாக் குழுக்களை கட்டி வருகின்றனர். 1995இல் பெரும்பான்மைப் பகுதிகளில் தமது சங்கங்களைக் கட்டி, கிராமப் பஞ்சாயத்துகளுக்கு முடிவு கொண்டு வந்தனர். 2000இல் மக்கள் விடுதலைப் படையையும் கட்டி, தண்டகாரண்யா பகுதியை கொரில்லா மண்டலமாகவும், எதிர்கால விடுதலைப் பிரதேசமாகவும் அறிவித்தனர்.

ஜூன் 2005இல் மாவோயிஸ்டுகளுக்கெதிராக பழங்குடியினர் தன்னெழுச்சியாக அணிதிரண்டு “சல்வா ஜூடும்’ படையை உருவாக்கியதாக அரசு இன்று வரை கதையளக்கிறது. மகேந்திர கர்மா எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த, எதிர்கட்சி காங்கிரசு எம்.எல்.ஏவின் தலைமையில் பா.ஜ.க. அரசும், போலீசு துறையும் இணைந்து மக்கள் இயக்கம் என்ற பெயரில் இச்சதித் திட்டத்தை தீட்டி அரங்கேற்றின. மகேந்திர கர்மா எனும் இந்த அயோக்கியன் மீது 1998லேயே பழங்குடியினரை ஏமாற்றி நில மோசடி செய்ததாக சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், இன்று வரை அவ்வழக்கில் வேறு எவ்வித முன்னேற்றமுமில்லை.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக பலவந்தமாக பழங்குடியினரை மிரட்டி உருவாக்கப்பட்டது சல்வா ஜூடும். ஒன்று, சல்வா ஜூடுமில் சேர வேண்டும்; இல்லையென்றால் சுட்டுக் கொல்லப்படுவார்கள்; ஊரே தீ வைத்துக் கொளுத்தப்படும்; பெண்கள் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுவார்கள். ஒவ்வொரு பழங்குடியினர் கிராமத்திற்கும் செல்வது, சல்வா ஜூடும் கூட்டங்களை நாகா பட்டாலியன் சூழ நடத்துவது, எவரெல்லாம் கலந்து கொள்ளவில்லையோ, எவரெல்லாம் ஏற்க மறுக்கிறார்களோ அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பது, வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டு வருபவர்களை கிராமங்களை விட்டு விரட்டி, தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் கொண்டு அடைப்பது என ஒரு நடைமுறையாகவே நிகழ்த்தப்பட்டிருப்பதை சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில மனித உரிமை அமைப்புகளின் உண்மை அறியும் குழுக்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.

இதன் மூலம் காடுகளில் உள்ள மாவோயிஸ்டுகள் சார்ந்திருக்க மக்களே இல்லாத நிலையில், வேறு வழியின்றி சரணடைய வேண்டும் அல்லது சாக வேண்டும் என்பதுதான் தனது திட்டமாக சல்வா ஜூடும் அறிவித்திருக்கிறது. இதன் விளைவாக இன்று 50,000க்கும் மேற்பட்ட மக்கள் தமது கிராமங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இம்முறையில் 600க்கும் மேற்பட்ட கிராமங்கள் காலி செய்யப்பட்டிருக்கின்றன. 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2000க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. வயல்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கில் மக்கள் ஆந்திராவிற்கு தப்பியோடியுள்ளனர். முகாம்களில் தார்பாய் விரிப்புகளில் உணவின்றி, வாழ வழியின்றி கிடக்கின்றனர். 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்ட பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிட்லரின் நாஜி படைகள் ருஷ்ய கிராமங்களில் இரண்டாம் உலகப் போரின் பொழுது நிகழ்த்திய போர்க்குற்றங்களை விட மிகப் பயங்கரமான முறையில் இவை நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன.

அயான் வெல்ஷ் முதல் ஆந்திர மனித உரிமை செயல்வீரர் பாலகோபால் வரையிலான மனித உரிமை ஆர்வலர்களும், அனைத்துலக மற்றும் உள்நாட்டுப் பத்திரிக்கைகளும் குறிப்பிடுவது போல, மாவோயிஸ்டுகள் கொன்ற நபர்களின் எண்ணிக்கைதான் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சல்வா ஜூடுமின் கொலைப் பட்டியல் இதுவரை யாருக்கும் தெளிவாகத் தெரியாது.

தற்பொழுது நந்தினி சுந்தர் முதலான ஜனநாயக சக்திகள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையொட்டி, உச்சநீதி மன்றம் சத்தீஸ்கர் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. பினாயக் சென்னை கைது செய்தது குறித்து உள்துறை அமைச்சகம் விளக்கம் கோரியுள்ளது. திட்டக் கமிசன், பஞ்சாயத் அமைச்சகம் முதலானவை சல்வா ஜூடுமுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரியுள்ளன. ஆனால், மேற்புறத்தில் இது போன்ற சில நாடகங்களை அரசு நிகழ்த்தினாலும், அதனுடைய திட்டத்தில் உறுதியாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில், பழங்குடியினரை கிராமங்களிலிருந்து அப்புறப்படுத்தி விரட்டியடிப்பது என்ற திட்டத்தின் பிரதான நோக்கம் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது மாத்திரமல்ல; மாறாக முதலாளித்துவப் பத்திரிக்கையான பிசினஸ் வேர்ல்டு (ஆகஸ்ட் 2006) சொல்வது போல, தாது வளம்மிக்க சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா மாநிலங்களை டாடா, எஸ்ஸார், மித்தல், வேதாந்தா (ஸ்டெர்லைட்), ஜிந்தால், பாஸ்கோ, அம்பானி முதலான முதலாளிகளுக்கு வேட்டைக் காடாக திறந்து விடுவதே பிரதான நோக்கமாகும். அமெரிக்க “”நியூயார்க் டைம்ஸ்” நாளேடு சொல்கிறபடி, தாது அகழ்வில் 1.8 பில்லியன் டாலர் முதலீட்டிற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன. அதன் விதிகள் விவரங்கள் யாருக்கும் தெரியாது. கிராமப் பஞ்சாயத்துக்கள் கூட்டப்பட்டு துப்பாக்கி முனையில் பன்னாட்டுதரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு நிலக் கையகப்படுத்தல்களுக்கான, பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி உரிமம் பெறுவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் “டவுன் டு எர்த்’ போன்ற பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.

சல்வா ஜூடுமின் கிராமப்புற சூறையாடல்களையும், கிராமங்களை காலி செய்வதையும், நியாயப்படுத்த, “”நோயின் மூலத்தை வெட்டியெறியாத வரை, நோய் இருக்கவே செய்யும். அம்மூலம் கிராம மக்கள்தான்” என மகேந்திர கர்மா கூறுவதாக “”நியூயார்க் டைம்ஸ்” குறிப்பிட்டுள்ளது.

மாவோயிஸ்டுகளை மட்டும் நோய் என கர்மா குறிப்பிடவில்லை. பழங்குடியினரின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை, தமது காடுகளையும், நிலங்களையும், வாழ்க்கையையும் காப்பாற்ற அவர்களை உந்தித் தள்ளும் இயல்பான நாட்டுப் பற்றையும், மக்கள் சமூகப் பற்றையும் சேர்த்துதான், பன்னாட்டு நிறுவனக் கழுகுகள் சத்தீஸ்கரை சூறையாடுவதைத் தடுக்கும் நோய் எனக் குறிப்பிடுகிறான்.

கிழக்கிந்தியக் கம்பெனியை விட ஒரு கொடூர கொள்ளைக் கூட்டத்தின் வெறியில் ஒரு மாநிலமே பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் சத்தீஸ்கர் மாநில “”துரை”தான் மகேந்திர கர்மா. போர் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. கலிங்கா நகர், சந்தோஷ்பூர், சிங்கூர், நந்திகிராம் என பிணங்களின் மீதேறி நாடெங்கும் பரவுகிறது. ரத்தம் ஆறாக ஓடுகிறது. இனி ஒளிந்து கொள்ள இடமில்லை. நடுநிலைமை வகிக்க வாய்ப்பில்லை. மூலதனத்தின் தீராத, ஈவிரக்கமற்ற நோயின் மூலமான இந்த அரசியல் அமைப்பின் வேரை நாம் வெட்டியெறியாத வரை, இந்த இரத்த ஆறு நிற்கப் போவதில்லை.
– புதிய ஜனநாயகம், ஜூலை’ 2007

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…


பஞ்சாப் ‘கலவரம்’ – தலித் மக்களின் போராட்டம் !

16

பஞ்சாப் சீக்கிய தலித்துக்கள் போராட்டம்

ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் ஒரு சீக்கிய குரு கொல்லப்பட்டதையடுத்து பஞ்சாப் முழுவதும் பெரும் கலவரம் நடப்பதாகவும் இது சீக்கிய இனத்தின் எழுச்சியாகவும் பலரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்தக் கலவரம் சீக்கிய மக்களிடம் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் என்பதும் பலருக்கு தெரியாத ஒன்று.

சீக்கிய மதம் கோட்பாடு ரீதியாக பார்ப்பனிய இந்து மதத்தின் சாதியத்தை எதிர்க்கிறது என்றாலும் நடைமுறையில் இங்கும் சாதி பலமாக வேர்விட்டிருக்கிறது. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த குரு ரவிதாஸை தங்களது முன்னோடியாக தலித் சீக்கியர்கள் கருதுகின்றனர். இந்தப் பார்வையில் உருவானதுதான் தேரா சச் காந்த் எனும் சீக்கிய மதப்பிரிவு. பஞ்சாப் முழுவதும் செல்வாக்கோடு இருக்கும் இந்தப் பிரிவில் தாழ்த்தப்பட்ட சீக்கியர்களே பின்பற்றுபவர்களாக உள்ளனர்.

ஆனால் இந்தப் பிரிவை ஆதிக்க சாதி சீக்கியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஜாட் முதலான ‘மேல்’சாதி சீக்கியர்கள் இன்றும் தாழ்த்தப்பட்ட சீக்கியர்களை சமூகரீதியாக அடக்கியே வாழ்கின்றனர். மேலும் தேரா சச் காந்த் பிரிவில் குருநாதர்கள் இப்போதும் உண்டு. இதற்கு மாறாக மைய நீரோட்ட சீக்கியப் பிரிவில் வாழும் குருநாதர்கள் இல்லை. அவர்களைப் பொறுத்த வரை பத்தாவது குரு கோவிந்த் சிங்கோடு குருநாதர் பரம்பரை முடிகிறது.அவர்களைப் பொறுத்தவரை கிரந்தசாகிப் புனித நூல்தான் வழிபடப்பட வேண்டும். தலித் மரபில் குருமார்கள் தொடருகிறார்கள். இப்படி மதரீதியிலும் ஆதிக்க சாதி சீக்கியர்கள் தலித் சீக்கியர்களை ஏற்றுக்கொள்வதில்லை. இந்தப் பிரச்சினை நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்தது.

இந்நிலையில் தேரா சச் காந்த்தின் தலைவர் குரு சாந்த் நிரஞ்சன் தாஸூம், இந்த பீடத்தின் இரண்டாவது தலைவரான குரு சாந்த் ராமா நந்தும் ஆஸ்திரியாவின் வியன்னா நகரிலிருக்கும் ஸ்ரீ குரு ரவிதாஸ் ஆலயத்திற்கு மதச் சடங்கு ஆற்ற சென்றார்கள். இந்த ஆலயத்திற்கு இவர்கள் வந்து செல்வதை வியன்னாவில் இருக்கும் ஆதிக்கசாதி சீக்கியர்கள் விரும்பவில்லை. அங்கே மொத்தம் 3000 சீக்கிய மக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த ஆலயத்திற்குள் துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் புகுந்த ஆதிக்க சாதி சீக்கிய வெறியர்கள் ஆறுபேர் அங்கு கண்மூடித்தனமாக தாக்குகிறார்கள். உள்ள இருந்த நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட சீக்கியர்கள் அதை எதிர்த்து போராடுகிறார்கள். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த குரு சாந்த் ராமா நந்த் (57) இறந்து போகிறார். மற்றொரு குருவான நிரஞ்சன்தாஸ் (68) அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதி சீக்கியர்களை கோவிலில் உள்ள மக்கள் திருப்பித் தாக்கியதில் அவர்களில் இரண்டுபேர் அபாய கட்டத்திலிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களை கைது செய்த வியன்னா போலிசு விசாரணையை நடத்தி வருகிறது.

குரு சாந்த் ராமா நந்த் இறந்த செய்தியைக் கேட்ட உடனே ஆத்திர மடைந்த தலித் சீக்கிய மக்கள் அதுவும் வெளிநாட்டில் கூட தனது குருநாதரை ஆதிக்க சாதி சீக்கிய வெறியர்கள் கொன்றதைக் கேட்டு பதறி கோபம் கொண்ட மக்கள் பஞ்சாப்பில் தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். பொதுவில் ஆதிக்க சாதி சீக்கியர்கள் வர்க்க ரீதியிலும் மேல்நிலைமையில் இருப்பதால் அவர்களது அலுவலகம், வாகனங்கள், கடைகள் அனைத்தும் எரிக்கப்பட்டன. கூடவே அரசு அலுவலகங்கள், ரயில்கள் எல்லாம் தாக்கப்பட்டன.

பஞ்சாப்பின் நான்கு முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலிசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இராணுவமும் பஞ்சாப்பில் அமைதியைக் கொண்டுவர இறக்கி விடப்பட்டுள்ளது. தலித் சீக்கியர்கள் அதிகமிருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.  ஆதிக்க சாதி சீக்கிய வெறியர்கள் இத்தனை காலமும் அடங்கிக் கிடந்த தலித் சீக்கியர்கள் ஆவேசத்துடன் எழுந்திருப்பதைக் கண்டு பொருமுகிறார்கள்.

மற்ற படி எந்த அரசியல் கட்சியும் தலித் சீக்கியர்களின் பக்கம் இல்லை, எல்லாம் உயர் சாதி தரப்பை ஆதரித்துத்தான் இயங்குகின்றன. வெளிநாட்டில் கூட தமது மக்கள் ஆதிக்க சாதி சீக்கிய வெறியர்களால் தாக்கப்படுவதைக் காணசகிக்க முடியாமல் பஞ்சாபின் தலித் மக்கள் போராடுகிறார்கள். வரலாற்று ரீதியாகவே வஞ்சிக்கப்படும் இந்த சமூகம் இப்போது திருப்பித் தாக்குகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் எப்போதும் ஒடுங்கிப் போவதாகவே இருக்க மாட்டார்கள். அதனால்தான் இந்த பஞ்சாப் ‘கலவரம்’ மற்றபடி இந்த உண்மையை மறைத்து பிரதமரும், சிரோன்மணி அகாலி தள கட்சியும் சீக்கிய மக்களை அமைதி காக்குமாறு வேண்டுவதெல்லாம் பலனளிக்காது. ஆதிக்க சாதி சீக்கிய வெறி தண்டிக்கப்பட்டால்தான் இந்தக் ‘கலவரம்’ தணியும்.

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…