Thursday, May 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 812

ஸ்லம்டாக் மில்லினியர் – அமெரிக்காவின் ஆசி பெற்ற இந்தியாவின் சேரி திரைப்படம்!

ஸ்லம்டாக்

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதியன்று சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை ஸ்லம்டாக் மில்லியனர் (கோடீசுவரனான சேரி நாய்) திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கோடாக் அரங்கத்தின் மேடையில் விருதைக் கையில் ஏந்தியபடி,‘எல்லாப் புகழும் இறைவனுக்கே!எனத் தமிழில் உற்சாகமாக மொழிந்தார். அடுத்த கணம் இந்தியா முழுவதும் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கிலச் செய்தி ஊடகங்கள், ஒரே குரலில் ஜெய் ஹோ’ (வெற்றி உண்டாகட்டும்!) என ஆரவாரிக்க தொடங்கினர். ஒரு வாரத்திற்கும் மேலாக ஆரவாரம் அடங்கவில்லை. ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசினார், எனவே இது தமிழுக்கு, தமிழனுக்கு கிடைத்த வெற்றி என ஒரு பக்கம் கொண்டாட்டம். மற்றொரு புறம், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இது ஒரு மாபெரும் அங்கீகாரம், யாரும் சாதிக்காத சாதனை என ஆரவாரம்.

ஒட்டு மொத்தமாக இவ்வாண்டு ஆஸ்கர் விழாவை இத்திரைப்படம் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதாக மேலைநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின. இத்திரைப்படத்தின் இணை இயக்குனராகப் பணியாற்றிய லவ்லீன் டாண்டன், “ஏ.ஆர்.ரகுமான் போல இன்னும் பல திறமை மிக்கவர்கள் நம்மிடம் எப்போதுமே உள்ளனர். ஆனால் உலகம் இப்பொழுதுதான் விழித்துக் கொண்டுள்ளதுஎனக் குறிப்பிடுகிறார். அமெரிக்காவிற்கான முன்னாள் இந்தியத் தூதர் லலித் மான் சிங், “இந்தியாவின் சக்தியை உலகம் அங்கீகரிக்கத் துவங்கி விட்டதன் வெளிப்பாடாகவே இத்திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை எடுத்துக் கொள்ள வேண்டும்எனக் கூறுகிறார்.

உலகத்தின் அங்கீகாரம் இருக்கட்டும். எந்த இந்தியாவைக் கதைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்டதோ, அந்த இந்திய மக்கள் இத்திரைப்படத்தை அங்கீகரித்தார்களா? ரகுமானுக்கு விருது கிடைக்கும் வரை பெரும்பாலோனோருக்கு இத்திரைப்படம் குறித்து ஏதும் தெரியாது. ஜனவரி இறுதியில் இந்தியாவில் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. ரகுமானுக்கு விருது கிடைத்த செய்திக்குப் பிறகு சற்றே முன்னேற்றம் இருந்தாலும், அமெரிக்காவில் ஏற்பட்ட அலை இங்கே அடிக்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு?

புனைவுகளும், புனைசுருட்டுகளும்!

ஒவ்வொரு கேள்விக்கும் ஆயிரங்களில் தொடங்கி கோடிகள் வரை பரிசளிக்கப்படும் கோடீசுவரனாக விரும்புவது யார்?’ வினாடி வினா நிகழ்ச்சியை (கோன் பனேகா கரோர்பதி) தொலைக்காட்சியில் பார்த்திருப்போம்.சேரியில் பிறந்த, ஒரு கால் சென்டரில் தேநீர் வழங்கும் பணியாளனாகப் பணியாற்றும் ஜமால் மாலிக் எனும் இளைஞன் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறான். பத்து மில்லியன் வரை ஜெயித்து இருபது மில்லியனுக்கான கேள்விக்காகக் காத்திருக்கிறான். அவன் ஏதேனும் மோசடி செய்திருக்க வேண்டும் எனக் கருதும் நிகழ்ச்சியின் தொகுப்பாளன் அவனை போலீசில் ஒப்படைக்கிறான். போலீசு அவனை அடித்து, துன்புறுத்தி, மின்சாரம் பாய்ச்சி விசாரிக்கிறது. நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் தனது வாழ்வில் எதிர்கொண்ட சம்பவங்களோடு தொடர்புடையதால் தான் அப்பதில்களை அறிந்திருப்பதாக அவன் கூறுகிறான். நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்வியும், ஜமாலின் கடந்தகால வாழ்க்கையில் அதனோடு தொடர்புடைய சம்பவங்களும் மாறி மாறி எழுகின்றன.

ஆசியாவிலேயே மிகப்பெரிய சேரிப்பகுதியான மும்பையின் தாராவியில் ஜமாலும், அவனது அண்ணன் சலீமும் வளருகிறார்கள். காவியுடையணிந்த மத வெறியர்களின் தாக்குதலில் அவர்களது தாய் கொல்லப்படுகிறாள். ஏன், எதற்கு என்று பார்வையாளர்கள் விளங்கிக்கொள்ள வழியில்லை. அனாதைகளான சிறுவர்கள் தங்களைப் போலவே நிர்க்கதியாக நிற்கும் லத்திகா என்ற சிறுமியைத் தங்களோடு இணைத்துக் கொள்கிறார்கள். தெருவோரச் சிறார்களை ஊனமாக்கி பிச்சையெடுக்க வைக்கும் கும்பலிடம் சிக்கி, பின்னர் அதிலிருந்து இருவரும் தப்புகிறார்கள். லத்திகா மட்டும் சிக்கிக் கொள்கிறாள். கதியிழந்த சிறார்களாக ரயிலில் பயணிக்கும் இருவரும் டூரிஸ்ட் கைடுகளாகிறார்கள்; திருடுகிறார்கள். லத்திகாவை மறக்காத ஜமால் அவளைத் தேடிச் செல்கிறான். ஜமாலுடன் செல்லும் சலீம், லத்திகாவை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சிக்கும் கும்பலின் தலைவன் மம்மோனை சுட்டுக் கொல்கிறான். ஆனால் மறுகணமே லத்திகாவை தனக்கு உரிமையாக்கிக் கொண்டு துப்பாக்கி முனையில் ஜமாலை விரட்டியடிக்கிறான்.

கால் சென்டரில் தேநீர் வழங்கும் ஜமால், சுறுசுறுப்பும், சமயோசிதமும் உடையவனாக விளங்குகிறான். சலீமை மீண்டும் கண்டுபிடிக்கிறான். ஒரு நிழல் உலக தாதாவிடம் தற்பொழுது வேலை செய்வதாக கூறும் சலீம் தன்னை மன்னிக்கக் கோருகிறான். அந்த தாதாவின் வைப்பாட்டியாக லத்திகா இருப்பதையும் ஜமால் கண்டுபிடிக்கிறான். ஜமாலோடு சேர்ந்து தப்பிக்க முயலும் லத்திகாவின் முயற்சி தாதாவின் அடியாட்களால் முறியடிக்கப்படுகிறது. மீண்டும் லத்திகாவை தேடிக் கண்டறிய முடியாத ஜமால், ‘கோடீசுவரனாக விரும்புவது யார்?’ நிகழ்ச்சியின் மூலம் லத்திகா தன்னைப் பார்க்கக் கூடும் என அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறான். இறுதியில் சலீம் தாதாவைக் கொன்று தியாகம் செய்ய, ஜமாலும், லத்திகாவும் இணைகிறார்கள். ஜெய் ஹோ’ (வெற்றி உண்டாகட்டும்) என ரகுமான் பாடத் துவங்குகிறார். நாயகனும், நாயகியும் கைகோர்த்து நடக்கிறார்கள். சுபம்.

Slumdog-Millionaire-10

ஒரு பாட்டிலேயே நமது ஏழை தமிழ்ப்பட ஹீரோக்களெல்லாம் கோடீசுவரர்களாகும் பொழுது இது எம்மாத்திரம் என்கிறீர்களா?ஆஸ்கர் விருதுக்கு பொழிப்புரை வழங்கும் அறிவுஜீவிகளோ, இப்படத்தை வழக்கமான மசாலா எனச் சொல்ல முடியாது என்கிறார்கள். இந்தத் திரைப்படம் சேரி வாழ்க்கையைக் காட்டுகிறது. மதக் கலவரத்தைக் காட்டுகிறது. மும்பையின் தாதாக்களைக் காட்டுகிறது. சிவப்பு விளக்கு விபச்சாரிகளைக் காட்டுகிறது. எனவே இந்தியாவின் யதார்த்தத்தை, வறுமையின் அழகியலோடு காட்டும் திரைப்படம், இது ஒரு சிறுவர் கதை போன்ற புனைவு என வாதிடுகிறார்கள்.

இல்லை, இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது… நமது சாதனைகளைப் பற்றி இல்லாமல், நமது சேரிகளைப் பற்றி திரைப்படம் எடுப்பதன் மூலம் நமது வறுமையைக் காசாக்குகிறார்கள், இது வறுமையை ரசிக்கும் மேலைநாட்டு வக்கிர மனோபாவம்என ஒளிரும் உலகமய இந்தியர்கள் கொதித்தார்கள்.

இந்த நாட்டில் சேரிகள் இருப்பது அவமானமில்லை. அங்கே புழுக்களைப் போல மக்கள் வாழ்வது அவமானமில்லை. அறுபதாண்டு ஜனநாயக சோசலிசக் குடியரசில் அவமானம் கொள்வதற்கான அனைத்து சமூக நிலைமைகளை மாற்றாமல் சத்தமின்றி ஏற்றுக் கொள்ளும் தேசபக்தர்கள், அதனை வெளிநாட்டவர் பேசினாலோ, திரைப்படமாக எடுத்தாலோ உடனடியாக இந்தியாவை இழிவுபடுத்துகிறார்கள் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். பிரச்சினை இந்தியாவின் அவமானங்களை சித்தரிப்பதல்ல, அது சித்தரிப்பின் முழுமையும், நேர்மையும் குறித்ததாகும்.

இது தவிர, ‘சேரி நாய்என்ற சொல் சேரி மக்களை இழிவுபடுத்துவதாக உள்ளது, அப்பெயரை நீக்க வேண்டும் என மும்பையிலும், பீகாரிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இப்படியாக பல வண்ணக் கதம்பமாக இத்திரைப்படத்திற்கான எதிர்வினைகள் இந்தியாவில் எழும்பிய போதும், ஆஸ்கர் விருது கிடைத்த மறுநொடியே எல்லா முணுமுணுப்புகளும், எதிர்ப்புகளும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டன. எங்கு பார்த்தாலும், ‘ஜெய் ஹோமட்டும் ஒலிக்கத் துவங்கியது. இப்பொழுது தேசப்பற்றுக்கு புதிய விளக்கம் தொடங்கியது. பரிசுத்தமான ஆஸ்கர் மேன்மக்களின் கௌரவப் பிரச்சினைகளைக் கழுவிச் சுத்தம் செய்து விட்டதால், ஆஸ்கர் விருது பெற்றுத் தந்த திரைப்படத்தையும், கலைஞர்களையும் விமர்சிப்பது நாட்டுப்பற்றற்ற செயல் என்றாகியது. ஜெய் ஹோபாடலை யார் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது என பா.ஜ.கவிற்கும், காங்கிரசுக்கும் ஒரு பெரிய அக்கப்போரே நடந்தது. ரகுமானே கூச்சப்படும் அளவிற்கு அவரை சென்னையின் மொசார்ட்என ஒரு பத்திரிக்கை புகழ்ந்து தள்ளியது.

பிரிட்டிஷ்அமெரிக்க திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களால் முதலீடு செய்யப்பட்டு, டானி பாய்ல் என்ற பிரிட்டிஷ் இயக்குனரால் எடுக்கப்பட்ட திரைப்படத்தை, இந்தியத் திரைப்படம் என்று கொண்டாடுவது அறிவீனம் மட்டுமல்ல, அமெரிக்க ஆஸ்கருக்கான அடிமை மோகத்தின் வெளிப்பாடாகும். ஆஸ்கர் விருது, அமெரிக்கத் திரைப்படங்களுக்காக, அமெரிக்க குடிமக்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட கமிட்டியால் தெரிவு செய்யப்படும் திரைப்பட விருது. ஒரு வேளை டானி பாய்ல் இத்திரைப்படத்தை இயக்கா விட்டால், இந்தியாவில் வெளியிடப்படுவதற்கு முன்பே அமெரிக்காவில் வெளியிட்ட ராபர்ட் முர்டோச்சின் ஃபாக்ஸ் செர்ச்லைட் இத்திரைப்படத்தை தயாரிக்காமல் இருந்திருந்தால், ஒரு மூன்றாம் உலக நாட்டுக்காரன் தயாரித்து வெளியிட்டிருந்தால், இத்திரைப்படத்திற்கு விருது கிடைத்திருக்குமா என சிலர் வாதிடுகிறார்கள். விசயம் யார் தயாரித்தது என்பது மட்டுமல்ல, என்ன சொல்லப்பட்டது, எப்படிச் சொல்லப்பட்டது என்பதும்தான் முக்கியம்.

உதாரணமாக, தாஜ்மகாலை சுற்றி பார்க்க வரும் ஒரு அமெரிக்கத் தம்பதியர் உண்மையான இந்தியாவைக் காண விரும்புவதாக கைடாக வேலை செய்யும் ஜமாலிடம் கூறுகிறார்கள். அவர்களைப் பரந்து விரிந்த யமுனை நதிக்கரையோரம் வட மாநிலத்தவர்கள் நூற்றுக்கணக்கான துணிகளைத் துவைத்துக் காயப் போடப்பட்டிருக்கும் காட்சியைக் காண ஜமால் அழைத்துச் செல்கிறான். அதற்குள் அவர்களது காரின் டயர் முதற்கொண்டு அனைத்துப் பாகங்களையும் சலீம் களவாடி விடுகிறான். திரும்பி வரும் அமெரிக்க தம்பதியினர் அதிர்ச்சி அடைகின்றனர். ஜமாலும் திருடர்களின் கூட்டாளி என ஆவேசமுறும் இந்திய வாகன ஓட்டுனர், அவனைக் கீழே தள்ளி உதைக்கிறான். தங்களது உடைமைகளை இழந்த அந்த நேரத்திலும் ஜமால் அடிபடுவதைக் காணச் சகியாமல், தமது கரங்களால் அணைத்து அவனைக் காப்பாற்றுகின்றனர் அமெரிக்கத் தம்பதியினர். தனது கிழிந்த உதடுகளிலிருந்து கசியும் இரத்தத்தை துடைத்தவாறே, ‘உண்மையான இந்தியாவைக் காண வேண்டுமென்றீர்களே, இது தான் உண்மையான இந்தியா!எனக் கூறுகிறான் ஜமால். கவலைப்படாதே, உனக்கு உண்மையான அமெரிக்காவை காட்டுகிறேன்எனக் கூறி டிப்ஸாக ஒரு நூறு டாலர் நோட்டைத் தருகிறாள் அமெரிக்கப் பெண்.

உண்மையான அமெரிக்காவைஇராக்கின் பிணக்குவியலிலும், குவாண்டனமோவின் நிர்வாணச் சித்திரவதைகளிலும், ஆப்கானிஸ்தானின் தீராத ரணத்திலும் உலகம் தரிசித்தது. ஆனால், உண்மையான அமெரிக்காவின் மனிதாபிமானமிக்க முகத்திற்கு ஒற்றை வரியில் நுட்பமாக புதிய பொழிப்புரை வரைகிற இந்தக் ஒற்றைக் காட்சிக்காகவே ஒரு ஆஸ்கரென்ன, நூறு ஆஸ்கர் வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

slumdog_award

கோடீசுவரனான சேரி நாய், ஆஸ்கர் விருது வாங்கிய இந்தியா!

விகாஸ் ஸ்வரூப் என்ற இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி வினாடி வினாக்களில் ஆர்வமுடையவர். சேரி மக்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துகிறார்கள்என்ற பத்திரிக்கைத் துணுக்கு அவருக்கு ஒரு சுவாரசியமான கற்பனையைத் தோற்றுவித்தது. கோடீசுவரனாக விரும்புவது யார்?’ என்ற புகழ்பெற்ற நிகழ்ச்சியில் சேரியில் பிறந்த இளைஞனொருவன் வெற்றி பெறுவதாக இலண்டனில் தனது ஓய்வு நேரத்தில் பொழுதுபோக்காக ஒரு கதை எழுதினார். வினாடி வினா நிகழ்ச்சி என்ற பெயரில் கோடீசுவரனாக விரும்புவது யார்?’ என்ற சூதாட்ட நிகழ்ச்சியை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த செலடார் பிலிம்ஸ் என்ற பிரிட்டிஷ் நிறுவனம் இந்தக் கதையைப் பற்றிக் கேள்விப்பட்டு, இக்கதைக்கான உரிமைகளை வாங்கியது. ஐந்து மில்லியன் டாலர் முதலீடு செய்த வார்னர் இன்டிபெண்டன்ட் நிறுவனம் வட அமெரிக்காவிலும், கனடாவிலும் உள்ள இந்தியச் சமூகங்களிலும், கலைப் பட விரும்பிகள் மத்தியிலும் இத்திரைப்படத்தை வினியோகித்து இலாபமீட்டலாம் எனத் திட்டமிட்டது. இப்படிப் பிறந்ததுதான் சேரி நாயின்மீதான அக்கறை.

எனவே, இந்தியாவில் சேரிகள் இருப்பதோ, இங்கே சிக்னல்களில் சிறுவர்களும் சிறுமிகளும் பிச்சையெடுக்கிறார்கள் என்பதோ இந்த மாபெரும் கலைப் படைப்பின் தூண்டுகோலாக இருக்கவில்லை. மேலை நாடுகளில் ஏற்கெனவே புகழ் பெற்றிருந்த கோடீசுவரனாக விரும்புவது யார்?‘ நிகழ்ச்சிதான் மையமான கலாச்சார இணைப்புப் பாலமாக விளங்குகிறது. அந்த வகையில் இது ஒரு உலகமயப் படம்.

பிரச்சினை வெளிநாட்டவரின் பார்வை என்பதல்ல. அமெரிக்காவில் வாழும் மீரா நாயர் மும்பைத் தெருவோரச் சிறார்களின் வாழ்வின் கோலங்களை சலாம் பாம்பேஎனும் திரைப்படமாக எடுத்தார். கனடாவில் வாழும் தீபா மேத்தா ஃபயர்மற்றும் ‘1947 எர்த்முதலான திரைப்படங்களை இந்தியாவைக் கதைக்களனாக கொண்டு எடுத்தார். இவையெதுவும் தட்டையான சித்திரங்களில், குறியீடுகளால் இந்தியாவை சித்தரிக்க முனையவில்லை. ஆனால், ‘ஸ்லம்டாக் மில்லியனர்தாராவி + தாஜ்மகால் +சிவப்பு விளக்குப் பகுதிகள் + பிச்சையெடுக்கும் குழந்தைகள் + தாதாக்கள் + மதக்கலவரங்கள் + கால்சென்டர் + கோடீசுவரனாக விரும்புவது யார்?’ + சிகரமாக ஒரு காதல் = இந்தியா என்ற சூத்திரத்தின் அடிப்படையில்தான் எடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் உச்சரிப்போடு கதாநாயகன், பெரும்பாலும் ஆங்கிலத்திலும், ஒரிஜினாலிட்டிக்காக அவ்வப்போது இந்தியிலும் விரையும் உரையாடல்கள், ஒட்டாத காதல் கதை, ஊறுகாய் போல தொடப்பட்டுள்ள சேரிகளும், சிவப்பு விளக்குப் பகுதிகளும் எனத் தட்டையான கருத்தமைவுகளில் உருவான இந்த சராசரிப் படம் இந்திய மக்களின் மனதில் ஒட்டவில்லை.

ஆஸ்கர் விழாவில் இத்திரைப்படத்தின் செய்தியாக, ‘நம்பிக்கை! இத்திரைப்படம் நம்பிக்கையைப் பேசுகிறது!எனக் குறிப்பிட்டனர். இதுகாறுமான வாழ்க்கையில் ஜமால் பட்ட காயங்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜமாலை தோற்கடிக்க செய்யும் முயற்சிகள், போலீசு செய்யும் சித்திரவதைகள் அனைத்தையும் தாண்டி நம்பிக்கையினால் ஜமால் வெற்றி பெறுகிறான் என விளக்கவுரை எழுதுகிறார்கள். மூல நாவலில் லத்திகா என்றொரு கதாபாத்திரமே இல்லை. டைட்டானிக் கப்பல் மூழ்கிய அவலத்தைக் காதலில் மூழ்கடித்த ஸ்பீல் பெர்க்கைப் போல, சேரிநாய் கோடீசுவரனான கதையும் காதலையே மைய இழையாகக் கொள்கிறது. என்ன இருந்தாலும் நாயகனுக்கு ஒரு இலட்சியம் அவசியமல்லவா? கேவலம் பணத்துக்காக அவன் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் விளையாடினான் என்றா கதை சொல்வது?

உலகப் பொருளாதாரமே அதல பாதாளத்தை நோக்கி சரிந்து கொண்டிருக்கும் இருண்ட சூழலில், திரைப்படத்தின் நாயகன் ஒரு சூதாட்டப் போட்டியில் ஜெயிப்பதை யதார்த்தத்தில் உலக சூதாட்ட முதலாளித்துவத்தினால் தோற்றுக் கொண்டிருக்கும் அமெரிக்க மக்கள் ரசிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஸ்பீல்பெர்க்கின் படத்தயாரிப்பு நிறுவனம், அம்பானியின் ரிலையன்ஸ் அடா நிறுவனத்துடன் 1.2 பில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. யூ டிவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், ஃபாக்ஸ் செர்ச்லைட்டுடன் ஒப்பந்தமிட்டுள்ளது. நெட்வொர்க் 18 நிறுவனத்துடன் அமெரிக்காவின் வயாகாம் குழுமம் கூட்டு வைத்துள்ளது. ஹாலிவுட்டில் 50 மில்லியன் செலவழித்து எடுக்க வேண்டிய ஒரு திரைப்படத்தை இங்கே 2 மில்லியன் தொகையில் எடுக்கலாம் என்பதும், அதே வேளையில் உலகளாவிய வலைப்பின்னல் வினியோகத்தில் அதிகபட்சமான லாபம் சுருட்டலாம் என்பதும் புரிந்த பிறகு, ‘இந்தியாவின் சக்தியை உலகம் அங்கீகரிப்பதைத்தவிர வேறென்ன உலகத்திற்கு வழி இருக்கிறது?

ஒரு காட்சியில் லத்திகாவிடம் ஜமால் சொல்லுகிறான். நாம் இருவரும் இணைவது விதி!’. இந்தியர்களிடையே விதி என்கிற கருத்தாக்கம் எவ்வளவு வலிமையானது என ஒரு பேட்டியில் விளக்குகிறார் டானி பாய்ல். ஸ்ல்ம்டாக் மில்லியனர் ஆஸ்கர் விருது பெற்றதும் கூட விதிதான், சந்தையின் விதி! உலகிலேயே அதிகமான திரைப்படங்களை தயாரிக்கும் நாட்டின் திரைப்பட நுகர்வு சந்தையில் உறுதியான அடியெடுத்து வைப்பதற்கான விதி.

ஹாலிவுட்டுக்கும் பாலிவுட்டுக்குமான இணைப்பின் அடையாளம் என ஒரு சராசரிப் படத்தைப் போற்றிப் புகழ்வதை சகித்துக் கொள்ள முடியாமல், சென்னையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரும், விமர்சகருமான ஹரிஹரன் கசப்போடு தமது கட்டுரையில் குறிப்பிடுகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆஸ்கர் கமிட்டிகளில் நான் நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் அழகுப் பொருட்கள் சந்தையை விரிவுபடுத்துவதற்காக இந்திய மாடல்களுக்கு உலக அழகிப் பட்டங்கள் வழங்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு அழகிப் போட்டி நடுவர்கள் ஆளானதைப் போல, இவர்களும் நிர்ப்பந்தங்களில் சிக்கி கொண்டு விட்டார்கள். வெட்கக்கேடு!என்கிறார். எனவே, ஆஸ்கர் கொடுத்தேயாக வேண்டும் என முடிவோடு செயல்பட்ட அமெரிக்காவிற்கு, ‘எல்லாப் புகழும் அமெரிக்காவுக்கே!என நேரடியாக நன்றி கூறி விடுவது நேர்மையானது.

__________________________________________

புதிய கலாச்சாரம் மே 2009
__________________________________________

ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?

ratan‘‘கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற கம்பனின் கூற்றுப்படி பார்த்தால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் துயரம்தான் கொடிய துயரம். அத்தகைய துயரத்திற்கு, வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கின்ற நிலைக்கு ஆளாகிப் போனாராம், நம் நாட்டு தரகுப் பெருமுதலாளி ரத்தன் டாடா. பன்னாட்டு முதலாளியாக வளர்ந்துவிட்ட டாடாவிற்குக் கடனா? அதை அடைக்க முடியாமல் தவித்துப் போனாரா? இதைக் கேள்விப்படும்பொழுது இந்திய மக்களுள் பலருக்கு அதிர்ச்சிகூட ஏற்படலாம். இதைவிட அதிர்ச்சியான விசயம் என்னவென்றால், டாடா தனது கடனை அடைக்கச் செய்திருக்கும் தகிடுதத்தங்கள்தான்!

டாடாவின் இந்தக் கடன் துயரம் 2007-ஆம் ஆண்டில் தொடங்கியது. அந்த ஆண்டில் இந்தியாவின் டாடா நிறுவனம் இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப்பெரிய, ஏகபோக இரும்புத் தொழிற்சாலை நிறுவனமான “கோரஸை’’யும், உலகப் புகழ் பெற்ற ஜாகுவர் மற்றும் லேண்ட் ரோவர் என்ற கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையையும் பலத்த போட்டிக் கிடையே விலைக்கு வாங்கியது. முதலாளித்துவ வியாபாரக் கலாச்சாரத்தின்படி, ரத்தன் டாடா தனது சோந்தக் கைக்காசைப் போட்டு இந்தத் தொழிற்சாலைகளை வாங்கவில்லை. சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கித்தான் இந்த நிறுவனங்களை டாடா கைப்பற்றியது. கோரஸை வாங்கிய டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலையில் 450 கோடி அமெரிக்க டாலர் கடனும் (23,850 கோடி ரூபா) ஜாகுவர் கார் தொழிற்சாலையை வாங்கிய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலையில் 15,900 கோடி ரூபா கடனும் விழுந்தது.

ரத்தன் டாடா இந்த இரு ஏகபோக நிறுவனங்களையும் வாங்க முட்டிமோதிக் கொண்டிருந்தபொழுதே, இந்தியாவைச் சேர்ந்த சில பொருளாதார அறிஞர்கள் உலகப் பொருளாதாரத்தின் போக்கைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இவ்வளவு விலைக்கு இந்த அந்நிய நிறுவனங்களை வாங்கத் தேவையில்லை என அவருக்கு அறிவுரை சோன்னார்கள். ஆனால், டாடா நிறுவன அதிகாரிகளும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் கைகோர்த்துக் கொண்டு, அறிவுரை சோன்ன பொருளாதார நிபுணர்களை, “உலகமயத்தைப் புரிந்து கொள்ளாத கிணற்றுத் தவளைகள்” எனச் சாடினார்கள். இந்த ஏகபோக நிறுவனங்களை டாடா கைப்பற்றியதை, இந்தியா வல்லரசாகிவிட்டதன் வெளிப்பாடாக ஊதிப் பெருக்கிய இந்திய அரசு, சர்வதேச நிதி நிறுவனங்களிடம் டாடா கடன் வாங்குவதற்குப் பக்கபலமாக நின்றது.

ரத்தன் டாடா, இலாபத்துடன் இயங்கி வந்த இந்த நிறுவனங்களை வாங்கியபொழுது, அடுத்த ஒரே ஆண்டில் உலகப் பொருளாதாரமே அதல பாதாளத்தில் விழுந்துவிடும் எனக் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். 2008-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கார் விற்பனை படுத்துப்போனதால், ஜாகுவர் லேண்ட் ரோவர் கார் தொழிற்சாலையை இழுத்து மூடிவிட வேண்டிய அபாயம் ஏற்பட்டது.

இத்தாலி, சுவிட்சர்லாந்து, தென்கொரியா, அர்ஜென்டினா நாடுகளைச் சேர்ந்த சில நிறுவனங்கள், டாடாவின் “கோரஸ்” இரும்பு உருக்காலையுடன் போட்டுக் கொண்டிருந்த 10 ஆண்டு கால வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ததால், கோரஸ் ஆலையை விற்க வேண்டிய அல்லது மூடவேண்டிய நிலைக்கு டாடா தள்ளப்பட்டார். பட்ட காலிலே படும் என்பது போல, இந்த நெருக்கடியான நேரத்தில் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலக்கெடுவும் நெருங்கியது.

டாடா, கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் இந்திய விவசாயிகளைப் போல சூதுவாது தெரியாத அப்பாவியா? ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையே தனது கடனை அடைக்கும் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார், டாடா.

“நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள கோரஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களை மீட்பதற்கு   இங்கிலாந்தின் வங்கிகளில் இருந்து 50 கோடி பவுண்ட் கடனும், ஐரோப்பிய முதலீட்டு வங்கியில் இருந்து 34 கோடி பவுண்ட் கடனும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்; இல்லயென்றால், இந்த நிறுவனங்களை மூடிவிடுவதற்கு அனுமதியுங்கள்” என டாடா இங்கிலாந்து அரசிடம் பேரம் பேசினார். டாடா, தனது கடனை அடைக்க இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தைப் பிணையக் கைதியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் இந்த மிரட்டலின் பொருள்.

இந்த பேரத்தின் முடிவில் டாடா, ஐரோப்பிய முதலீட்டு வங்கியிடமிருந்து 17.5 கோடி பவுண்ட் கோடி கடனாகப் பெற்றுக் கொண்டார். இந்தக் கடனை வழங்குவதற்கு கோரஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், அதனை டாடா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

இங்கிலாந்து அரசின் தலையைத் தடவிய டாடா, அடுத்து இந்திய மக்களைக் குறி வைத்தார். கடனை அடைக்க முடியாமல் டாடா தலை குனிந்தால், அது இந்தியாவிற்கே ஏற்பட்ட தலைகுனிவாகும் என உருவேற்றிய இந்திய அரசு, டாடாவின் கடன் பிரச்சினையைத் ‘தேசிய’ப் பிரச்சினையாக்கியது. இந்திய அரசு வங்கியும் அதன் பத்து துணை வங்கிகளும், டாடா இந்திய நிதிச் சந்தையில் இருந்து 4,200 கோடி ரூபா கடன் திரட்ட துணை நின்றதோடு, இந்தக் கடன் முழுவதற்கும் தாங்கள் உத்தரவாதமளிப்பதாகவும் உறுதி கூறின. டாடா இந்த 4,200 கோடி ரூபாயை, ஜாகுவார் கார் நிறுவனத்தை வாங்குவதற்கு பட்ட கடனில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.

மேலும், இந்த கார் தொழிற்சாலையைத் தூக்கி நிறுத்துவதற்காக லேண்ட் ரோவர் கார்களை இந்திய இராணுவத்தின் தலையில் கட்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. இவை ஒருபுறமிருக்க, ஜாகுவார் நிறுவனத்தை வாங்கியுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து 5,800 கோடி ரூபா அளவிற்கு மூலதனத்தைத் திரட்டிக் கொள்ளவும், அதனைத் தனது சர்வதேசக் கடனை அடைக்கப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய நடுத்தர வர்க்கத்திடம் டாடாவின் “நானோ” காரை வாங்குவதற்கு இருந்த ஆசையையும், தனது கடனை அடைப்பதற்கு நரித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டார், டாடா. டாடாவின் நானோ காருக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 10 தொடங்கி ஏப்ரல் 25 வரை நடந்தது. “காரை முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் விலை முன்னூறு ரூபா. வங்கிக் கடன் மூலம் காரை முன்பதிவு செய்யும்பொழுதே காருக்கான முழுத் தொகையையும் வங்கியிடமிருந்து வாடிக்கையாளர் பெயரில் டாடா நிறுவனம் வசூலித்து விடும். அந்தத் தொகைக்கான வட்டியாக கார் மாடலை பொறுத்து ரூ.2,500 முதல் ரூ.4,000 வரை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே செலுத்த வேண்டும்” என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் 2,03,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவு மூலம் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2,500  கோடி ரூபாயை இந்திய மக்களிடமிருந்து வசூலித்துள்ளது.

‘‘டிமாண்டில்” உள்ள காரை வாங்குவதற்கு முன்பதிவு செய்யும்பொழுது, அக்காரின் விலையில் நான்கில் ஒரு பங்கைத்தான் முன்பணமாகச் செலுத்தும் வழக்கமும், குலுக்கலில் கார் கிடைக்காதவர்களுக்கு அம்முன்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும் வழக்கமும்தான் நடைமுறையில் இருந்து வருகிறதாம். ஆனால், டாடாவோ, பாம்பு-கீரிச் சண்டையைக் காட்டப்போவதாகக் கூறியே அப்பாவிகளிடம் காசு பறித்துவிடும் மோடி மஸ்தான் போல, நானோ பிரியர்களிடம் முழுத் தொகையையும் வசூலித்து விட்டார்.
இந்த 2,03,000 நானோ பிரியர்களுக்கும் கையில காசு வாயில தோசை என்றபடி உடனே கார் கிடைத்துவிடாது. இவர்களுள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு இலட்சம் பேருக்கு 2010-ஆம் ஆண்டில்தான் கார் கிடைக்கும். மீதிப் பேருக்கு 2011-ஆம் ஆண்டின் இறுதியில் கிடைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஒரு நானோ காரைத் தயாரிப்பதற்குப் பல்வேறு வரிச் சலுகைகளின் மூலம் 60,000 ரூபாயை மானியமாக ஏற்கெனவே டாடாவிற்கு வழங்கிவிட்டார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்பொழுது இந்திய நடுத்தர வர்க்கத்திடமிருந்து எவ்வித ஈடும் இன்றி, வெண்ணிலையாக 2,500 கோடி ரூபாயைச் சுருட்டிக் கொண்டுள்ளார், டாடா.

இந்த 2,500 கோடி ரூபாயும் டாடாவின் கடன் நெருக்கடியைத் தீர்க்கப் பயன்படக் கூடும். டாடா தனது கடனை அடைக்க 2,03,000 இந்தியர்களின் சட்டைப் பைக்குள் கையை விட்டுள்ளார். நடிகர்-நடிகைகள் தங்களது கவர்ச்சியைக் காட்டி அப்பாவி ரசிகர்களை வீழ்த்துவதைப் போல, டாடா தனது நிறுவனத் தயாரிப்புகளுக்கு இருக்கும் கவர்ச்சியைக் காட்டி, இந்திய நடுத்தர வர்க்கத்தை வீழ்த்தியிருக்கிறார். இந்த வேசித்தனத்திற்கு இந்திய அரசும், இந்திய அரசு வங்கியும் மாமா வேலை பார்த்துள்ளன.

டாடா இப்படி ஊரான் பணத்தை விழுங்குவது புதிய விசயமல்ல. இந்தியப் பொதுத்துறை நிறுவனமாக
இருந்த விதேஷ் சன்சார் நிகாமை (வீ.எஸ்.என்.எல்.) ரத்தன் டாடா கைப்பற்றியபொழுது, அந்நிறுவனத்தின் சேமிப்பாக இருந்த 1,000 கோடி ரூபாயை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தனது தொலைதொடர்பு நிறுவனத்தைக் காப்பாற்றக் கடத்திக் கொண்டு போனார், அவர். வெளியில் அம்பலமாகாத ரத்தன் டாடாவின் நிதி மோசடிகள் இன்னும் எத்தனை இருக்குமோ? மாட்டிக் கொள்ளாதவரை எல்லா முதலாளிகளும் யோக்கிய சிகாமணிகள்தானே!

_________________________________________

புதிய ஜனநாயகம் ஜூலை 2009
_________________________________________

ஈழத்தின் நினைவுகள்

83

ஈழத்தின் நினைவுகள் - ரதி

எந்தப் பிரச்சினையுமற்று பாதுகாப்பாக வாழ்வபவர்களுக்கு அகதி என்ற வார்த்தையும் அது தரும் ரத்தமும் சதையுமான வாழ்க்கையும் அது தரும் வலிகளையும் எந்த அளவுக்கு புரிந்து கொள்ள முடியும்? ஏகாதிபத்தியங்களின் உலகமய ஆதிக்க காலத்தில் உள்நாட்டிலேயே அகதிகளைப் போல வாழ்வு மாற்றப்பட்டு வரும் சூழ்நிலையில் தேசிய இன ஒடுக்குமுறைகளுக்காக உலகமெங்கும் மக்கள் அகதிகளாய் துரத்தப்படுகிறார்கள். வல்லரசு சூதாட்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த மக்களின் அவலத்தை புரியவைப்பதற்கான முயற்சியே இந்தப் பதிவு. நமக்கு தெரிந்த ஈழத்தின் அகதி வாழ்க்கை பற்றி வினவு தளத்தில் பல விவாதங்களில் பங்கு கொண்டு உங்களுக்கு அறிமுகமான வாசகர் ரதி இங்கே அந்த முயற்சியை தருகிறார். ஈழத்திலும் பின்னர் தமிழகத்திலும் தற்போது கனடாவிலும் அகதி என்ற பெயரில் வாழ்க்கைய நகர்த்திக்கொண்டிருக்கும் ரதி ஒரு பெண் என்ற முறையிலும் இந்த நாடோடி வாழ்க்கையின் கசப்புகளை கூடுதலாக உணர்ந்திருப்பார். ஈழம் தற்போது பாரிய பின்னடைவு கண்டிருக்கும் நேரத்தில் ஈழத்தின் நினைவுகளை மீட்டிக் கொண்டு வரும் முயற்சியாகவும், வினவில் வாசகராக அறிமுகமாகும் நண்பர்களை படைப்பாளிகளாக உயர்த்த வேண்டுமென்ற எமது அவாவினாலும் இங்கே தோழர் ரதியின் நினைவுகளை பதிவு செய்கிறோம். இந்த நினைவுகள் நாம் எவ்வளவுதான் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் ஈழப் போராட்டத்தின் கடமைகளை செய்வதற்கு ஒரு சிறிய தூண்டுகோலாகாவாவது இருக்குமென்று நம்புகிறோம். ரதியை உற்சாகப்படுத்துங்கள், அவரது நினைவுகளை உங்கள் நினைவலைகளில் அரசியல் உணர்வோடு சேமித்து வையுங்கள். நன்றி.

நட்புடன்
வினவு

……………………………………………………..

நான் அரசியல் பேசப்போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். எங்க‌ள் வாழ்வு எப்படி போர் என்ற சகதியில் சிக்கி சின்னாபின்னப்பட்டது என்று என் அனுபவத்தைதான் சொல்ல வருகிறேன்.

இவை என் மனக்குமுறல்கள் மட்டுமே. உலகத்தமிழ் உறவுகள் இந்த பூகோளப்பந்தில் பத்து கோடியாம். அதில் பாதிக்கு மேல், ஆறரை கோடி, தமிழ்நாட்டு உறவுகள். ஆனால், ஈழத்தில் மட்டும் நாங்கள் உயிரோடு இருப்பவர்களை எண்ணாமல், தினம், தினம் செத்துமடிபவர்களைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறோம். இதுதான் ஈழத்தமிழனின் தலைவிதியா என்று யாரிடம் கேள்வி கேட்பது, ஐ.நா. விடமா அல்லது சர்வதேசத்திடமா? தமிழனுக்கு என்று ஒரு நாடு இருந்தால் அந்த நாடு நிச்சயமாக தன் உறவுகளுக்கு நடந்த கொடுமைகளை சர்வதேசத்திடம் தட்டி கேட்டிருக்கும். ஆனால், உலகத்தில் தமிழன் பத்து கோடி என்றாலும் அனைவருமே இரண்டாந்தர, மூன்றாந்தர பிரஜைகளாகத்தானிருக்கிறோம். தமிழனுக்கு என்று ஒரு தாய்நாடு இல்லாமல் போனதற்கு யார் காரணம்? நினைத்தாலே வேதனையாக இருக்கிறது. தண்ணீருக்கு என்று ஒரு தனிக்குணம் உண்டு. அதை எந்த பாத்திரத்தில் நிரப்புகிறோமோ அதன் வடிவத்தை அது பெறும். அதேபோல்தான் ஈழத்தமிழனையும் இந்திய ஆளும் வர்க்கமும் சர்வதேசம் மற்றும் ஐ. நா. சபையும் எங்களை எந்த பாத்திரத்தை அவர்கள் விரும்புகிறார்களோ அதை நிரப்பச்சொல்கிறார்கள். எதிர்த்தால் எங்கள் நியாயமான போராட்டங்களை கூட மழுங்கடிக்கிறார்கள். எங்கள் மறுக்கப்பட்ட உரிமைகள், வதைமுகாம்களில் உள்ள உறவுகள் பற்றி பேசினால் அவர்கள் மெளனிகளாகி விடுகிறார்கள். சரி, ஈழத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் இனஅழிப்பு நடந்த‌தே, அதையாவது இந்த ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேசமும் “இனஅழிப்பு” என்றாவது ஒப்புக்கொண்டார்களா? அதுவும் இல்லை. இன்று உலக இயங்குவிதிகள் இரண்டு என்று நினைக்கிறேன், ஒன்று பணம் (மூலதனம்) மற்றது வல்லாதிக்கப்போட்டி. இன்று இந்துமாசமுத்திரத்தில் இந்த இயங்கு விதிகளில் ஒன்றான உலகநாடுகளின் வல்லாதிக்கப்போட்டியில் ஈழத்தமிழன் வாழ்வா சாவா பிரச்சனை அதை நிர்ணயிக்கும் ஒரு காரணியாகவே மாறிவிட்டது அல்லது மாற்றப்பட்டுவிட்டது. இதில் நாங்கள் முற்றாக அழிக்கப்படுவோமா அல்லது மீண்டு வருவோமா? எங்களுக்கான நீதி கிடைக்குமா?

இதையெல்லாம் தாண்டி மறுக்கப்பட்ட எங்கள் உரிமைகளுக்காக தசாப்தங்களாக நடந்த போராட்டம், எங்கள் போரியல் வாழ்வு, அதன் தாக்கங்கள் என்பவற்றைதான் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். போர் என்பது பொதுவாகவும் ஒவ்வொரு தனிமனிதனையும் நிறையவே பாதிக்கிறது. போர்ச்சூழலில் மரணம், உளவியல் தாக்கங்கள், மற்றும் சமூக பொருளாதார காரணிகள் எவ்வாறு தனிமனித வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது என்பதை என் அனுபவங்கள் மூலம் சொல்ல முனைகிறேன்.

நான் உலகில் அதிகம் நேசிப்பது மழலைகள், அவர்களின் மொழி, மற்றது பூக்கள். நான் மதிப்பது பெண்களின் மானம், அவர்களின் உரிமைகள், அடுத்தவரை பாதிக்காத அடிப்படை மனித உரிமைகள். நான் அதிகம் வெறுப்பது உங்களில் அனேகமானோருக்கு தெரிந்திருக்கும், “போர்”. நான் விரும்பும், மதிக்கும் அத்தனையுமே என் மண்ணில் போரின் பெயரால் நாசமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. போர் என்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான் என்பது என் கருத்து. அதற்காக நான் என் தமிழ்சோதரர்களின் இன்னல்களை குறைத்து கூறவில்லை.பொதுவாகவே குழந்தைகள், பெண்கள் என்றால் அவர்களின் இன்னல் கண்டு மனம் இரங்குவார்கள். ஆனால், சிங்கள பேரினவாதிகளிடமும் ராணுவத்திடமும் இதையெல்லாம் எதிர்பார்த்தால், அதைப்போல் முட்டாள்தனம் உலகில் வேறொன்றுமில்லை. வன்னித்தமிழன் முழு இலங்கைக்கும் சோறு போட்டான் என்றார்கள். ஆனால், அவன் குழந்தைகள் வன்னியில் தண்ணீரின்றியே சாகடிக்க‌ப்பட்டார்கள். அந்த பிஞ்சுகுழந்தைகள் என்ன சோறு கேட்டார்களா அல்லது தமிழீழம் கேட்டார்களா? தவித்த வாய்க்கு தண்ணீர்தானே கேட்டார்கள். இது ஒரு குற்றமா? அவர்களுக்கு கிடைத்தது என்னவோ குண்டுமழைதான். வன்னியில் அந்த பிஞ்சுக்குழந்தைகள் “தண்ணீ, தண்ணீ….” என்று அழுதது எப்பொழுது நினைத்தாலும் என் நெஞ்சை அடைக்கிறது. இப்படி தண்ணீர் இல்லாமல் செத்துமடிந்த எங்கள் செல்வங்கள் எத்தனையோ? இதுவும் போர் விதியா? குழந்தைகளுக்கே இந்த கதி என்றால் என் சோதரிகளின் நிலை சொல்லவே வேண்டாம். சிங்களகாடையர்களாலும் ராணுவத்தாலும் காமப்பசி தீர்க்கும் சதைப்பிண்டங்களாகவே பார்க்க்ப்படுகிறார்கள், நித்தம், நித்தம் சிங்களராணுவத்தால் என் சகோதரிகள் நாசமாக்க்ப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுவும் போர் முறையோ? உலகில் குழந்தைகள் பெண்களின் உரிமைகள் பேசும், காக்கும் அமைப்புகள் எல்லாம் என்ன செய்துகொண்டிருக்கின்றன? அவர்களுக்கு நாங்கள் தான் சொல்லவேண்டியிருக்கிறது ஈழத்தில் எங்கள் குழந்தை செல்வங்களும் பெண்களும் உரிமைகள் மறுக்கப்பட்டு, உயிர்வாழ அனுமதி மறுக்கப்படுகிறார்கள் என்று.

ஈழத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லை என்பதால், பூக்களுக்கு கூட நாங்கள் வேலை கொடுப்பதில்லை, ஒரு மனிதனின் இறுதி ஊர்வலத்தில் பங்குகொள்வதற்கு. மனித உடல்களை எரித்துவிட்டோ அல்லது புதைத்து விட்டோ, அதற்கு பக்கத்தில் பதுங்குழி வெட்டி கொண்டோம். பிறகு அதிலேயே பிணங்களாயும் ஆனோம்.

போர் என்ற பெயரில் வாழ்வுரிமை கூட மறுக்கப்பட்டு என் இனம் ஈழத்தில், என் மண்ணில், செத்துமடிவதுதான் விதியா என்று நினைத்தால், என் நெஞ்சுவெடித்து என் உயிர் போய்விடாதா என்றிருக்கிறது. பொதுவாகவே என்னை தெரிந்தவர்கள் சொல்வார்கள், எனக்கு துணிச்சல் அதிகம் என்று. ஆனால், என் உறவுகளின் தாங்கொணா துன்பங்களை நினைத்து நான் தனிமையில் அழாதநாட்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எங்கள் சொந்தமண்ணிலேயே நாங்கள் அகதிகளாய், ஏதிலிகளாய் மூன்றாந்தர பிரஜைகளாக்கூட இல்லாமல் மிருகங்கள் போல் நடத்தப்படுகிறோம். தமிழனாய் பிறந்ததால் எங்கள் உரிமைகள் மறுக்கப்படுகிறதா? ஏன் தமிழர்கள் என்றால் மனிதர்கள் இல்லையா?

நான் அகதியாய் ஈழத்திலும், இந்தியாவிலும் தற்போது கனடாவிலும் என் அனுபவங்களை மீட்டிப்பார்க்கிறேன். என் தன்மானம் என்னை எத்தனையோ தடவைகள் சாட்டையாய் அடித்திருக்கிறது. எதற்கு இந்த “அகதி” என்ற பெயர் என்று. கூனிக்குறுகி பலதடவை இந்த அகதிவாழ்க்கை தேவையா என்று என்னை நானே வெறுக்கிற சந்தர்ப்பங்களும் உண்டு. ஏன் எல்லா மானிடப்பிறவிகள் போலும் என் இருத்தலை, என் உயிரை என்னால் நேசிக்கமுடியவில்லை? காரணம், நான் தமிழ் என்பதலா? அல்லது நான் சுதந்திரத்தை அதிகம் நேசிப்பதாலா? நான் சட்ட‌ப்படியான உரிமைகளோடும், தன்மானத்தோடும் என் மண்ணில் வாழ நினைப்பது ஒரு குற்றமா? நான் அகதியாய் அன்னியமண்ணில் மடிவதுதான் விதியா?

ஈழத்தில் என் பதுங்குழி வாழ்க்கை, இடப்பெயர்வு, கல்விக்கூடங்கள், வாழ்விடங்கள் எதுவும் சந்தோசம் நிறைந்தவை அல்ல. என் சந்தோசமான மாணவப்பருவம் மற்றும் பாடசாலை நாட்களில் கூட போரியல் வாழ்வின் காயங்கள் நிறையவே உண்டு. ஆனால், சுதந்திரம் வேண்டுமென்றால் இதெல்லாம் விலையோ என்று எங்களை நினைக்கத்தூண்டிவிட்டது சிங்கள அடக்குமுறை.

என் அனுபவங்கள் தொடரும்…..

-ரதி

இது எனக்கு ஒரு கன்னி முயற்சி. நான் முன்பு இப்படி நீண்ட பதிவுகள் எழுதி பழக்கமோ அனுபவமோ இல்லை. வினவு கொடுத்த தைரியத்தில் எழுத தொடங்கிவிட்டேன். ஏதாவது குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன். என்னை எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்த வினவு, நண்பர் RV க்கும் என் நன்றிகள். என்னை உண்மையில் எழுததூண்டியது பொல்லாதவன்/சரவணகுமார் என்ற ஒரு தமிழ்நாட்டு சகோதரர் சொன்னதுதான். தமிழ்நாட்டில் சாதாரண மக்களுக்கு ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை எந்த ஊடகங்களும் சொல்வதில்லை என்பதுதான்.

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்.

வேலுப்பிள்ளை பிரபாகரன்தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் பிரபாகரன் மீதும் உண்மையான விசுவாசம் கொண்ட அணிகளும், ஆதரவாளர்களும், அனுதாபிகளும் தாம் நெஞ்சிலே சுமந்த அந்தத் தேசியத் தலைவன் பிரபாகரன் வீரச்சாவை எய்தினார் என்றெண்ணி வீர அஞ்சலி – வீர வணக்கம் செலுத்துவதா அல்லது அவர் பாதுகாப்பானதொரு இடத்தில் நலமாக இருக்கிறார் என்ற செய்தியை இன்னமும் நம்பி ஆறுதல் அடைவதா என்று முடிவு செய்ய முடியாமல் திகைத்துப் போயுள்ளனர். ஆனால், ஈழத்தின் வன்னி-முள்ளிவாக்கால் களப்பிரதேசத்தில் உண்மையில் நடந்தது என்னவென்று இதுவரை நமக்குக் கிட்டியுள்ள தகவல்களைத் தர்க்கரீதியில் தொகுத்துப் பார்க்கும்போது பின்வரும் முடிவுக்கு வர முடிகிறது:

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் “இறுதிப் போர்” அறிவிப்பு செய்து, மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்திய சிங்கள இராணுவம், பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்திப் புலிகளின் தலைமையகமாக விளங்கிய கிளிநொச்சியைக் கைப்பற்றியது. அடுத்து, புலிகள் பின் நகர்ந்து சென்ற முல்லைத் தீவை முற்றுகையிட்டு, புலிகள் நிலை கொண்டிருந்த புதுக்குடியிருப்பையும் தாக்கிக் கைப்பற்றியது. அதன் பிறகும் புலிகள்  பின்வாங்கியபடியே நகர்ந்து சென்றனர். இறுதியாக, மே முதல் வாரத்தில், பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் ஆண்டனி; பொட்டு அம்மன், சூசை, நடேசன் ஆகிய தலைவர்கள் – தளபதிகள் உட்பட 2,000 விடுதலைப் புலிகள், சுமார் ஒரு இலட்சம் ஈழத் தமிழர்களுடன் ஈழத்தின் வடகிழக்குக் கோடியில் நந்திக்கடலுக்கும், இந்துமா கடலுக்கும் இடையில் உள்ள முள்ளிவாக்கால் பகுதியில் ஒரு சில சதுரக் கிலோமீட்டர் பகுதிக்குள், அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய 50,000 சிங்கள இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தனர். சிங்கள இராணுவத்தின் முற்றுகையை முறியடித்து – புலிகளின் சொற்களில் கூறுவதானால் ஊடறுத்து – புலிகள் வெளியேறுவதற்கான வாய்ப்பு சிறிதுகூட இருக்கவில்லை. கடல் வழியே புலிகள் தப்பிவிடாமல் சிங்களக் கப்பற்படையோடு இந்தியக் கடற்படைக் கப்பல்கள் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தன; ஏற்கெனவே கடற்புலிகளின் படகுகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன.

rajapakse_pranabஅந்த நிலையில், சிங்கள இராணுவம் தீர்மானகரமான தாக்குதல் நடத்தி இருந்தால், ஓரிரு நாட்களிலேயே புலிகளின் தற்காப்பு நிலைகள் அனைத்தையும் அழித்து, இறுதி வெற்றி ஈட்டியிருக்க முடியும். ஏற்கெனவே, புலித் தலைமையை, குறிப்பாக பிரபாகரனைப் போர்க்களத்திலேயே கொன்று விடவேண்டும், கைது செய்தாலும் உயிரோடு வைத்திருக்கக் கூடாது என்று அயலுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளை நேரடியாக கொழும்புக்கு அனுப்பி, இலங்கை அதிபரிடமும், இராணுவத் தலைமையிடமும் வலியுறுத்தியிருந்தது இந்தியா; இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள் முடியும் வரை இறுதித் தாக்குதல்கள் நடத்துவதை தள்ளி வைக்கும்படியும் கேட்டுக் கொண்டிருந்தது. இந்தியாவின் இந்த விருப்பங்கள் நிறைவேற்றப்படுவதை மேற்பார்வையிடுவதற்கென்றே தனிச்சிறப்பாக இந்திய இராணுவ மற்றும் உளவுப்படை “ரா” அதிகாரிகள் களத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொருத்தவரைக்கும் ஒன்று சிங்கள இராணுவத்துக்கு எதிராகப் போரிட்டு மடியவேண்டும்; அல்லது அவர்கள் எப்போதும் கழுத்தில் அணிந்திருக்கும் சயனைடு குப்பிகளைக் கடித்து பெருந்திரளாகத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்; அல்லது மிக மோசமான வாப்பாக சிங்கள இராணுவத்திடம் சரணடைய வேண்டும். இவை தவிர, வேறொரு தெரிவு எதுவும் விடுதலைப் புலிகளிடம் இருக்கவில்லை. இத்தகையதொரு நிலை ஏற்படுவதற்கு சிங்கள – இந்தியக் கூட்டின் இராணுவ ரீதியான கொலைவெறித் தாக்குதல் முக்கியமானதொரு காரணம் என்றாலும், கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கி, முல்லைத் தீவுக்குள் முடங்கிய போதே தப்பிச் செல்வதற்கான எல்லாக் கதவுகளையும் அடைத்துக் கொண்டு, “பொந்தில் பதுங்கி இரையாகிப் போவது” என்பது விடுதலைப் புலிகளே தெரிவு செய்து கொண்டதுதான். இவ்வாறான “சுய அழிவு” முடிவெடுத்ததற்கான விளக்கம் எதுவும் புலித்தலைமையிடமோ, புலி விசுவாசிகளிடமோ ஒருபோதும் இல்லை.

ஆனாலும், இயக்கம் விடாது, தலைவர் பெரிய திட்டமொன்று வைத்துள்ளார்; இந்தியா வரும், அமெரிக்கா வரும்; ஜெயலலிதா, வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் தூக்கி நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள் புலி விசுவாசிகள். புலித் தலைவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இந்த எதிர்பார்ப்பினாலேயே இன்று புலிகள் தங்கள் அழிவிற்குத் தாங்களே காரணமாகிப் போனார்கள். இதே போன்றதொரு குருட்டு நம்பிக்கையில்தான் பிரபாகரன் விசுவாசிகள் இன்னமும் இருத்தி வைக்கப்படுகிறார்கள்.

மே 13-ந் தேதியோடு இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்து போயின. கழுத்துவரை பேரழிவு ஆயுதங்களை நிரப்பி வைத்திருந்த சிங்கள இராணுவம் அடுத்த நாளே – மே 14-ந் தேதி வியாழக்கிழமை – “வங்கினுள் பதுங்கிய இரையான” புலிகளைத் தாக்கி அழிக்கும் இறுதித் தாக்குதலைக் கொடூரமான முறையில் தொடங்கியது. மூன்றே நாட்களில் எல்லாம் முடிந்து போயின. முள்ளிவாக்கால் கிராமத்தில் பதுங்கியிருந்த பல ஆயிரம் ஈழத் தமிழர்களும், புலித்தலைமை உட்பட புலிப்படைப் போராளிகள் அனைவரும் சிங்கள இனவெறி இராணுவத்தால் கொடூரமாகக் கொன்றொழிக்கப்பட்டனர்.
புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப்படும் “புதினம்” என்ற இணையதளம், கடந்த ஆறாண்டுகளாகத் தனது நிறுவனத்தின் இரத்தமும் சதையுமாக இயங்கி, உண்மைச் செய்திகளை மட்டுமே அளித்துவந்த அந்த  செய்மதி  நிருபர், “என்னுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு இதுதான் கடைசியாகவும் இருக்கலாம்” என்று நினைப்பதாகக் கூறி அனுப்பிய செய்தியைப் பின்வருமாறு வெளியிட்டிருக்கிறது:

“கடந்த இரண்டரை வருடங்களாக – உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் துணையுடன் சிறீலங்கா நடத்திவரும் தமிழின அழிப்புப் போர், அதன் இறுதிக் கட்டத்தை இன்று திங்கட்கிழமை காலை அடைந்திருப்பதாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும் மிஞ்சியிருக்கும் முள்ளிவாக்கால் கிராமத்தில் இருந்து ‘புதினம்’ செய்தியாளர், செய்மதி  மூலம் சோன்னவை அவரது வார்த்தைகளிலேயே:

2009051957540101“பீரங்கிக் குண்டுகள் நாலாபுறங்களிலும் இருந்து வந்து எங்கள் மீது வீழ்ந்து வெடிக்கின்றன. கனரக மற்றும் சிறுரக துப்பாக்கிச் சன்னங்கள் எல்லாப் பக்கத்தில் இருந்தும் சீறி வருகின்றன. தாக்குதல் நிகழும் இந்தப் பகுதிக்குள் இன்னமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். காயப்பட்டு வீழ்ந்து தூக்கி எடுக்க யாருமற்றுக் கிடப்போரின், மக்களின் மரண ஓலங்களே எங்கும் கேட்கின்றன. விடுதலைப் புலிகளின் பக்கத்தில் இருந்து குறிப்பிட்டுச் சோல்லுமளவுக்கு எதிர்த் தாக்குதல்கள் ஏதுமற்ற நிலையிலும், சிறீலங்கா படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நான்கு பக்கங்களிலும், சகலவிதமான நாசகார ஆயுதங்களைப் பாவித்தும் மேற்கொண்டவாறு மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள்; கொல்லப்பட்டு வீழ்ந்த மக்கள் எல்லோரினது உடல்களும் நாலாபுறமும் சிதறிக் கிடக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் பிணக்குவியல்களாகவே இருக்கின்றன. கொல்லப்பட்டோரது உடல்கள் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக அகற்றப்படாத காரணத்தினால், அந்தப் பகுதி எங்கும் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது. இன்றைய இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுடன் இங்குள்ள மக்கள் அனைவருமே சிறீலங்கா படையினருக்கு இரையாகிவிடுவர். படுகாயமடைந்தவர்கள் இந்தப் பகுதியெங்கும் விழுந்து கிடந்து அலறுகின்றனர். படுமோசமான காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சையளிக்க எந்த வழியுமற்ற நிலையில் கதறும் பொதுமக்கள், அங்கே இருக்கும் போராளிகளிடம் தம்மை சுட்டுக் கொன்றுவிடுமாறு மன்றாடுகின்றனர். அதேபோல காயமடைந்து சிகிச்சைக்கு வழியற்றுக் கிடக்கும் போராளிகள், தமது ‘சயனைட்’ வில்லைகளைத் தந்துவிடுமாறு கதறுகின்றனர். பதுங்குக் குழிகளுக்குள் இருந்தபோதே கொல்லப்பட்டுவிட்ட மக்களின் உடல்களுக்கு மேலேயே, உயிரோடு எஞ்சியிருக்கும் மக்கள் பாதுகாப்புக்கா பதுங்க வேண்டிய அவலம் நிலவுகின்றது. “இப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் மனிதப் பேரவலம் கண் முன்னால் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, ஆயுதப் போராட்டத்தையே விட்டு விடுகின்றோம் என விடுதலைப் புலிகள் சோல்லிவிட்ட பின்பு, யாராவது வந்து எம்மை காப்பாற்ற மாட்டார்களா என மக்கள் இங்கு ஏங்கித் தவிக்கும்போது – மனித உயிர்களைக் காப்பதற்காகவேனும் இந்த உலகம் ஏன் எதனையும் செய்யாதிருக்கின்றது? என்று தழுதழுத்த குரலில் கேள்வி எழுப்பினார்.”

அந்தக் கடைசி மூன்று நாட்களில் என்ன நடந்தது? புலித் தலைமை என்ன செய்தது? எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதைத்தான் எஞ்சியுள்ள புலிகளின் பிரதிநிதிகளும், விசுவாசிகளும் பேச மறுக்கின்றனர். அல்லது முரண்பட்ட விளக்கங்களும் தகவல்களும் கொடுத்து, உண்மையை மூடி மறைக்கின்றனர். ஈழப் போரின் கடைசி மூன்று நாட்களில் நடந்த சம்பவங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைச் சுற்றித் தாம் கட்டியெழுப்பியிருந்த பெருமைக்குக் களங்கம் ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தால், அவை குறித்துப் பரிசீலிக்கவோ, மக்கள் முன் உண்மை விளக்கமளிக்கவோ மறுக்கின்றனர். அவ்வாறான முயற்சியில் ஈடுபடுவோருக்கு எதிரான அவதூறுகளை ஆத்திரம் ஆத்திரமாகக் கொட்டித் தீர்க்கின்றனர். ஆனால், இந்த உண்மைகளைக் கண்டறிந்து, மக்கள் முன் வைப்பதன் மூலம்தான் ஈழ விடுதலைப் போரின் இந்தப் பேரழிவு – பேராபத்துக்குக் காரணமான எதிரிகளின் வக்கிரமான பாசிச இனவெறிப் பேயாட்டங்களை மட்டுமல்ல, சதிகாரர்களையும் துரோகிகளையும்கூட வெளிச்சத்திற்குக் கொண்டு வரமுடியும். ஆனால், நடந்த உண்மைகளை மூடி மறைப்பது ஈழத்தின் எதிரிகளையும் சதிகாரர்களையும் துரோகிகளையும் காப்பாற்றவே பயன்படும்.

சிங்கள இராணுவம் ஈழத் தமிழின அழிப்புப் போரின் இறுதி தாக்குதலைக் கொடூரமான – வெறித்தனமான முறையில் நடத்திக் கொண்டிருந்த அதேசமயம், பல ஆயிரம் ஈழத் தமிழர்களை ஒரே நாளில் கொன்ற அவப்பெயர் தமக்கும், இறுதிவரைப் போராடி வீரமரணமடைந்த பெருமை புலித் தலைமைக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு சர்வதேச சதியிலும் ஈடுபட்டிருந்தது, சிங்கள பாசிச ஆளும் கும்பல். பிரபாகரன் உட்பட புலித் தலைமையையும், இறுதிவரை புலிகளோடு விசுவாசமாகத் தங்கியிருந்த தமிழர்களையும் படுகொலை செய்து விடுவது என்பதில் உறுதியாக இருந்தது. சிங்கள பாசிச ஆளும் கும்பலும் இராணுவமும். அவர்களுக்குத் தப்பிப் போவதற்கான வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, யுத்தமும் – சாவும் அவர்கள் தொண்டைக் குழிவரை வந்துவிட்ட நிலையில், புலித் தலைமையின் இந்தக் கையறு நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றிச் சரணடைய வைத்து இலகுவாகப் பலியிடுவது என்ற சதியை நன்கு திட்டமிட்டு, “ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்தால் பொது மன்னிப்பு” என்ற தூண்டிலை அமெரிக்க – இந்திய – நார்வே நாட்டுச் சதிகாரர்கள் மூலம் புலித் தலைமையின் முன்பு வீசியது. புலித் தலைமையை முழுமையாக நம்ப வைக்க சில வெளிப்படையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அமெரிக்க பசிபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங், இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரைச் சந்தித்த பின், 15.5.2009-இல் வெளியிட்ட அறிக்கை இந்த சதி நாடகத்தின் வெளிப்படையான ஒரு அங்கமாகும். அந்த அறிக்கை இலங்கை அரசுடனான கூட்டுச் சதியை நாசூக்காக வெளிப்படுத்துகின்றது. “இலங்கையில் போர்ப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன” என்று அவர் 15.5.2009 அன்று அறிவிக்கின்றார். அத்துடன், “போர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான வழிகளைக் கண்டறிய அமெரிக்க குழு இலங்கை சென்றது. எவ்வகையில் உதவி செய்ய முடியும் என்ற அறிக்கையையும் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வழியாக வெளியுறவுத் துறைக்கு வழங்கியுள்ளது”. அதில் “போர் பகுதியில் தமிழர்களுக்கு அமெரிக்கக் கடற்படை வழியாக உதவுவதற்கான பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளோம்” என்கிறது, அந்த அறிக்கை.

xin_0901032610043101779510நார்வே அமைச்சர் எரிக் சோல்கைம் இந்த நாடகத்தின் மற்றொரு சதிகாரன். 17.5.2009 அன்று பல தரம் (வெளிநாட்டு – உள்நாட்டு) புலியுடன் தான் தொடர்பில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். இப்படி மோசடி செய்து கொல்ல உதவிய பின், நடந்ததை, “இது மிகவும் கோரமானது” என்கிறார். இதேபோல் கடைசி நிமிடங்களில் ஐ.நா.வைச் சேர்ந்த விஜயய் நம்பியாரும் (வெளிநாட்டு – உள்நாட்டு) புலியுடன் தொடர்பில் இருந்துள்ளார். இவையெல்லாம் இவர்கள் கூறியவைகள்தான். இந்தச் சதியின் மற்றொரு வெளிப்பாடாக மீண்டும் நம்பியார் இலங்கை சென்றார், எல்லாம் இதற்காகத்தான். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் அடிக்கடி இலங்கை சென்றதும் இதற்காகத்தான். “ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்தால் பொது மன்னிப்பு” என்ற சர்வதேச சதிகாரர்களால் வீசப்பட்ட தூண்டிலைப் புலித் தலைமை கவ்வியதா, இல்லையா? பிரபாகரன் உட்பட புலித் தலைமையின் சாவில் மிகவும் சர்ச்சைக்குரிய கூறாக விளங்குவது இதுதான்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் மே 17-ஆம் தேதி அன்று ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அதில், “நாம் எமது ஆயுதங்களை அமைதியாக்கிச் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு வருகிறோம்… விடுதலைப் புலிகளின் அச்சமற்ற தன்மையையும், தங்கள் கொள்கை மீதுள்ள முடிவில்லாத கடமையுணர்ச்சியையும், அதன் மீது எம்மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் எவரும் சந்தேகப்பட முடியாது. எமது அழைப்பை எமது பிள்ளைகள் எந்தவொரு கேள்வியுமில்லாமல், மரணத்துக்குப் பயமற்று எடுத்துள்ளார்கள். எமது போராட்டம் எம்மக்களுக்காகவே என்பதை நாம் மறந்துவிடவில்லை என்றும் இப்போதைய நிலைமையில், இந்த யுத்தத்தை சிறீலங்கா இராணுவம் இம்மக்களைக் கொன்று குவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பாவிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்… மிகச் துணிச்சலோடு நாங்கள் எழுந்து நின்று எமது ஆயுதங்களை அமைதியாக்குகிறோம், எமது மக்களைக் காப்பாற்றுமாறு தொடர்ந்து சர்வதேசச் சமுதாயத்துடன் கேட்டுக் கொள்வதை விட, வேறு தெரிவு எங்களுக்கு இல்லை” என்று அறிவிக்கிறார்.

அதன் பிறகு புலி ஆதரவு இணைய தளமான தமிழ் நெட்டிற்கு பத்மநாதனே வழங்கிய பேட்டியில் “எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிரிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. எங்களின் முடிவை நாம் சர்வதேசத்துக்குக் கூறியிருந்தும், சிறீலங்காவின் தாக்குதல்களை நிறுத்தச் சோல்லிக் கேட்டிருந்தும், கொழும்பானது அதைப் பொருட்படுத்தாது, இதுதான் முடிவென்று இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்தது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி சரணடைந்து, வெள்ளைக் கொடியைத் தாங்கிச் சென்ற போராளிகளையும் தலைவர்களையும் சர்வதேச மரபைப் பொருட்படுத்தாது இரக்கமில்லாமல் கொன்றுள்ளது. சர்வதேச சமூகமும் சிறீலங்காவுக்கு எதிராக ஒரு திடமான நிலையை எடுத்து, சிறீலங்காவை ஒரு முறையான முடிவை எடுக்கச் சோல்லி ஊக்குவிக்கவில்லை. நடந்த நிகழ்வுகளையிட்டு நாங்கள் துக்கத்திலுள்ளோம்” என்கிறார்.
அதேசமயம் மே 17 அன்று, எப்போதும் இல்லாத வகையில் திடீரென்று புலிகளின் இராணுவத் தளபதிகளில் ஒருவரான சூசை, “மக்கள் வலையத்தினுள் இருக்கும் அனைத்து மக்களையும், ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்துடன் நேரடியாக செல்வராசா பத்மநாதனூடாகத் தொடர்பு கொண்டு வெளியேற்றுமாறு கேட்டிருந்தோம்” என்று பேட்டியளித்திருந்தார். நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் சரணடைய விரும்புவதாக வடபகுதியில் பணியாற்றிய சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமிருந்தும் சனிக்கிழமை (16.05.09) மாலை தனக்குப் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பாலித கொஹனா பிரித்தானிய ஊடகமொன்றிடம் கூறினார். “இதற்கு ஒரே வழிதான் உண்டு. இராணுவ முறைப்படி கையில் வெள்ளைக் கொடியுடன் பயமுறுத்தாத வகையில் மெதுவாக வந்து சரணடைய வேண்டும் என நான் கூறியிருந்தேன்” என்கிறார் கொஹனா. “அவ்வாறு அவர்கள் சரணடைந்தால், உயிர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதுதானே” என்று கேட்டு நார்வே அமைச்சர் இறுதியாகத் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியையும் கொஹனா அந்த ஊடகத்திடம் காண்பித்துள்ளார்.

இவற்றையும், இவற்றோடு பிரபாகரனைச் சிங்கள இராணுவ வெறியர்கள் சித்திரவதை செய்தும், கோடாறியால் மண்டையைப் பிளந்தும் கொன்ற பின், அவரது உடலை அவமானப்படுத்தி சிதைக்கப்பட்ட உடலை ஒட்டு வேலை செய்து ஊடகங்களுக்குக் காட்டியதை, “வீடியோ” படமாக, டக்ளஸ் தேவானந்தா கருணா ஆதரவு இணைய தளங்கள் சிறிது நேரம் வெளியிட்டு அகற்றியதையும் ஆதாரமாக வைத்து, பிரபாகரன் உட்பட புலித் தலைமை சரணடைந்து படுகொலை செய்யப்பட்டதாக மே 21 அன்றே புலம் பெயர் தமிழரான இரயாகரனின் இணைய தளம் (Tamilcircle.net) செய்தி வெளியிட்டது.

பழ நெடுமாறன்அதன்பிறகு, மே 22 அன்று பிரபாகரன் சாகவில்லை, உயிருடன் பாதுகாப்பாக – நலமாக இருக்கிறார் என்று அறிக்கை வெளியிட்ட செல்வராசா பத்மநாதன், ஒரு வாரத்துக்குப் பிறகு பிரபாகரன் வீரச் சாவெதியதாக பி.பி.சி.க்குப் பேட்டியளித்தார். செல்வராசா பத்மநாதனின் முதல் அறிக்கை அடிப்படையில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறிவந்த நெடுமாறன் போன்ற தமிழினவாதத் தலைவர்கள், செல்வராசா பத்மநாதன் பிரபாகரன் சாவை உறுதி செய்தவுடன் “அவர் பன்னாட்டுப் போலீசு அமைப்பால் தேடப்படும் கிரிமினல் குற்றவாளி, அவரது கூற்று ஏற்கத்தக்கதல்ல” என்று ஒதுக்கிவிட்டு, பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற பிரச்சாரத்தைத் தொடர்கின்றனர். ஜூன் 18-ந் தேதி அன்று, புலிகளின் வெளியகப் பணிப் பிரிவு புலனாவுத் துறை பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அறிவழகன் “பிரபாகரன் சரணடையவோ, அல்லது கைது செய்யப்படவோ இல்லை; சிறீலங்கா படையினருடன் போரிட்டே வீரக்காவியம் ஆனார்” என்று கூறி, செல்வராசா பத்மநாதனின் நிலையை ஆதரித்துள்ளார். இதன் பிறகு தமிழகத் தமிழினவாதிகள் உட்பட, புலி விசுவாசிகள் பிரபாகரன் மரணம் குறித்து மவுனம் சாதிக்கின்றனர்.

இதற்கிடையே யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் குழு தனது அறிக்கையில், பிரபாகரன் சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்குப் பின் கொடூரமாகக் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது. கடைசியாக ஜூன் இறுதியில் வெளியிடப்பட்ட ஜூனியர் விகடனில், இலங்கை இராணுவம் “சரீன்” மயக்க மருந்து கலந்த இரசாயனக் குண்டு போட்டு பிரபாகரனைப் பிடித்துச் சித்திரவதை செய்து கொன்றதாக எழுதுகிறது. பிரபாகரன் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை; போரிட்டே வீரக்காவியம் ஆனார் என்று புலிகளின் அயலுறவு புலனாவுத்துறை சோன்னாலும், இந்தப் போர் எப்போது, எங்கே எவ்வாறு நடந்தது என்று கூறவில்லை! அதுவும் ஆயுதங்களை அமைதியாக்கிக் கொள்வதாக புலிகள் அறிவித்த பிறகு, இவ்வாறான போர் நடந்திருக்கக் கூடுமா? இல்லை, சிறீலங்கா இராணுவம் கூறுவதைப் போல பிரபாகரன் ஆம்புலன்சில் தப்பிச் செல்லும்போது (ஊடறுத்துச் செல்லும்போது) சிறீலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டாரா? அப்படியானால் சித்திரவதை செய்யப்பட்டதாகக் காட்டும் வீடியோ, பிரபாகரன் உடலை அவமானப்படுத்துவதாகக் காட்டும் புகைப்படங்கள் ஆகிய ஆதாரங்களெல்லாம் வெறும் ஒட்டு வேலைகள்தானா?

இதற்கெல்லாம் மேலாக பிரபாகரனுக்கு என்ன நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்பது ஒருபுறம் இருக்க, சிறீலங்கா பாசிச ஆளும் கும்பலிடமும், இராணுவத்திடமும் ஆயுதங்களை அமைதியாக்கி விட்டுச் சரணடைவது என்கிற முடிவுக்கு புலித்தலைமை வந்து விட்டிருந்தது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. “மேலை நாடுகள் சிலவற்றின் முயற்சியில கடைசி நேரத்தில் போர் நிறுத்தப் பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது. சிங்களப் படை அழைத்ததன் பேரில், வெள்ளைக் கொடியுடன் பேச்சு நடத்தப்போன அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசன், அமைதிப் பேச்சுச் செயலகத் தலைவர் புலித்தேவன் உள்ளிட்டோரை சிங்களப் படை சுட்டுக் கொன்றது” என்று புலிகளின் விசுவாசியான மணியரசன், தனது பத்திரிக்கையில் எழுதுகிறார்.

ஆயுதங்களை அமைதியாக்குவதாகப் புலித்தலைமை விடுத்த அறிவிப்பிற்கு முதல் நாளே, அதாவது மே 16-ந் தேதி இரவே,  புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பாலசிங்கம் நடேசன் “ஆயுதங்களை ஒப்படைக்கிறோம். ஒபாமா அரசு, இங்கிலாந்து அரசு ஆகியவற்றிடம் பாதுகாப்பு உறுதி கிடைக்க வேண்டும். புலிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஐ.நா. அதிகாரியான விஜய நம்பியார் அங்கே இருக்க வேண்டும்” என்று இங்கிலாந்து “சண்டே டைம்ஸ்” நாளேட்டின் பெண் செய்தியாளர் மேரி கால்வினுக்கு தொலைபேசி மூலம்  வேண்டுகோள் விடுத்தார். பிறகு, இலங்கை நாடாளுமன்ற தமிழ் உறுப்பினரான ரோகன் சந்திரா நேருவை அழைத்து நடேசன் பேசியிருக்கிறார். மேரி கால்வின் – விஜய நம்பியார் வழியேயும் ரோகன் சந்திரா நேரு வழியேயும் அதிபர் இராஜபக்சேவுக்கு செய்தி போனது; சிறீலங்கா அரசு இந்தச் சரணடைவை ஏற்பதாக பாசிச இராஜபக்சே கூறியதாக, நேரு வழியேயும் விஜய நம்பியார் – மேரி கால்வின் வழியேயும் மே 17-ந் தேதி காலையே நடேசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. மணியரசன் கூறுவதிலிருந்து சில மேற்கு நாடுகளும் இந்த ஏற்பாட்டில் பங்கு பெற்றிருக்கின்றன. இந்த ஏற்பாட்டை நம்பிச் சரணடையப் போனபோதுதான் நடேசனும் புலித்தேவனும் வேறு சிலருடன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

நடேசனும் புலித்தேவனும் மேற்கொண்ட சரணடைவு முயற்சிகள் எல்லாம் பிரபாகரன் உட்பட புலித் தலைமையின் ஒப்புதலுடன் நடந்தனவா, இல்லையா? பிரபாகரன் எதிரிகளுடனான பேச்சு வார்த்தைகள் எதிலும் நேரடியாக ஈடுபட்டதே இல்லை, அரசியல் பிரதிநிதிகளை அனுப்புவதைத்தானே வழக்கமாகக் கொண்டிருந்தார். இதுவும் அப்படி நடந்ததுதானா? அல்லது பிரபாகரன் ஒப்புதல் இல்லாமலேயே நடந்ததா? அப்படியானால் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரைத் தியாகிகளாகப் புலி விசுவாசிகள் போற்றுவது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு புலிகளிடமும் அவர்களின் விசுவாசிகளிடமும் பதில் இல்லை. இன்னும் இரண்டு கேள்விகள் உள்ளன. பிரபாகரன் போரிட்டே மரணமடைந்தார், சித்திரவதை செய்து கொல்லப்படவில்லை என்ற நிலைப்பாடு சிறீலங்கா ஆளும் கும்பல் மீதான சர்வதேச கிரிமினல் போர்க்குற்றவாளி என்ற குற்றச்சாட்டிலிருந்து காப்பதாகாதா? பிரபாகரன் வெளிப்படையாக சம்பந்தப்படவில்லை என்றாலும், சிறீலங்கா பாசிச கும்பலைப் பற்றி அறிந்திருந்தும் நடேசன் வழி மேற்கொள்ளப்பட்ட சரணடைவு முயற்சிகள் அரசியல், இராணுவ ரீதியில் சரியானவைதானா? அது பற்றிய ஆய்வுக்குள் எஞ்சியுள்ள புலிகளும், அவர்களின் விசுவாசிகளும் போக மறுப்பது ஏன்? இந்தக் கேள்விகளுக்கான விடையை அறிந்து கொள்ளும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு.

புதிய ஜனநாயகம், ஜூலை-2009

புதிய ஜனநாயகம் ஜூலை 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

அங்கோலாவின் அலங்கோலம் : பனிப்போரின் பதிலிப் போர்

3

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – 12

Africa---Angola-mapஇங்கிலாந்து அரசவம்சத்தின் கவர்ச்சி நட்சத்திரமான டயானா, அங்கோலாவில் கண்ணிவெடி அகற்றும் தொண்டராக சென்ற போது, தொலைக்காட்சிக் காமெராக்களும் பின்தொடர்ந்தன. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்நாட்டு யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட அங்கோலாவை அப்போது தான் பலர் “கண்டுபிடித்தார்கள்”. சர்வதேச அரசியல் அறிவுள்ளவர்களுக்கு, அங்கோலாவின் தசாப்தகால சூடான பனிப்போர் ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். அங்கோலாவின் உள்நாட்டுப் போரை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். ஒன்று, பனிப்போர் காலகட்டம். பதினைந்து வருடங்களாக நடந்த யுத்தத்தில் இருதரப்பாலும் வெல்ல முடியவில்லை. இரண்டு, உலகமயமாக்கல் காலகட்டம். இதில் அரச படைகள் இறுதியாக வெற்றியீட்டியுள்ளன. நவீன கால போரியல் வரலாறு குறித்து அறிய விரும்புவோருக்கு, அங்கோலா போர் ஒரு நல்ல பாடம்.

16 ம் நூற்றாண்டில் போர்த்துகேயர் வரும் வரை, அங்கோலாவின் தலைநகர் லுவாண்டாவில் இருந்து வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலுமாக மூன்று இராஜ்யங்கள் இருந்துள்ளன. ஒரு இராஜ்யத்தை ஆண்ட “நுகொலா (கிளுவஞ்சே)” என்ற மன்னனின் பெயரை, போர்த்துகேயர் முழு நிலப்பரப்பிற்கும் வைத்து விட்டனர். காலனிய காலகட்டத்தில் ஐரோப்பியர்கள் காலனி நாடுகளுடன் இரண்டு வகையான உறவைக் கொண்டிருந்தனர். ஒன்று, வர்த்தக மையம் ஒன்றை நிறுவி வியாபாரம் செய்வது. இரண்டு, அந்தப் பிரதேசத்தை தமது நேரடியான ஆட்சியின் கீழ் கொண்டுவருவது. ஆரம்பத்தில் போர்த்துக்கேயர்கள், அங்கோலா மன்னனுடன் சமமான இராஜதந்திர உறவை பேணி வந்துள்ளனர். இந்த நல்லுறவு காரணமாக மன்னனும் கத்தோலிக்க மதத்தை தழுவி, தேவாலயம் கட்டவும் அனுமதி அளித்துள்ளான்.

பிரேசிலுக்கு தேவையான அடிமைகளை போத்துக்கேயர்கள் அங்கோலாவில் பிடித்து ஏற்றுமதி செய்து வந்தார்கள். மன்னர்களுடன் ஏற்பட்ட வியாபாரப் பிரச்சினையை தொடர்ந்து, போர்த்துக்கேய இராணுவ நடவடிக்கைகள் அரசாட்சிக்கு முடிவு கட்டின. கரையோரப் பகுதிகளை கைப்பற்றியதுடன் நில்லாது, கனிம வளங்களை தேடி நாட்டின் உள்பகுதிகளுக்கும் படையெடுத்துச் சென்று ஆக்கிரமித்தனர். இவ்வாறு போர்த்துகேய காலனிய காலகட்டம் ஆரம்பமாகியது. 19 ம் நூற்றாண்டில், பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகளை அடக்கக் கூடிய அளவு பரந்த நிலப்பரப்பை தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.

19 ம் நூற்றாண்டில், அடிமை வியாபாரத்தின் மீது சர்வதேச தடை வந்தது. போத்துகல்லும் அதற்கு இணங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அங்கோலாவை முழுமையான காலனியாக மாற்றும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அங்கோலா கறுப்பர்களை “நாகரீகப்படுத்துவதற்காக” கிறிஸ்தவ மதம் பரப்புபவர்களை அனுப்பி வைத்தார்கள். கத்தோலிக்க மிஷனரிகள் மட்டுமல்ல, புரட்டஸ்தாந்து மிஷனரிகளும் தாராளமாக ஆட்சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு மதப்பிரிவுகளுக்கும் இடையில் ஒரேயொரு வித்தியாசம் மட்டுமே இருந்தது. கத்தோலிக்க மதத்தை தழுவுபவர்கள் போர்த்துக்கேய மொழியை சரளமாக கற்று, மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்.

போர்த்துக்கேயர்கள் ஆப்பிரிக்கர்களை “நாகரீகப் படுத்திய” பின்னரும் அவர்களுக்கு சம உரிமை வழங்கவில்லை. சமூக மேல்தட்டில் வெள்ளையர்களும், அவர்களுக்கு கீழே கலப்பின “mestiços” உயர்ந்த அந்தஸ்தில் இருந்தனர். வெள்ளையின ஆணுக்கும், கறுப்பின பெண்ணுக்கும் பிறந்த பிள்ளைகளே கலப்பினத்தவர்கள் ( mestiços). அன்றைய காலத்தில் ஒரு வெள்ளையின பெண் கறுப்பின ஆணுடன் உறவு வைப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. தடையை மீறிய உறவு கொள்ளும் வெள்ளைப் பெண்ணை அவமானப்படுத்தி ஒதுக்கி வைப்பதுடன், கறுப்பு ஆணை கொலை செய்து விடுவார்கள். போர்த்துகேய மொழி சரளமாக பேசத் தெரிந்த ஆப்பிரிக்க கறுப்பர்கள் தனது அந்தஸ்தை உயர்த்த முடிந்தாலும், அவர்கள் மூன்றாவது தட்டிலேயே வைக்கப்பட்டனர். இதனால் இந்த மூன்றாவது பிரிவை சேர்ந்தவர்கள் assimilados என அழைக்கப்பட்டனர். போர்த்துக்கேய மொழி பேசும், மேலைத்தேய கல்வி கற்ற, கத்தோலிக்க assimilados, பிற ஆப்பிரிக்கர்களை விட நாகரீகமடைந்தவர்களாக கருதப்பட்டனர்.

Antonio_Salazar1910 ம் ஆண்டு, அங்கோலா போர்த்துக்கல் நாட்டின் ஒரு பகுதியாகியது. 1932 ல் போர்த்துக்கல்லில் ஆட்சியை கைப்பற்றிய பாஸிஸ சர்வாதிகாரி சலசார் காலத்தில், வெள்ளையர்கள் அங்கோலா சென்று குடியேறுமாறு ஊக்குவிக்கப்பட்டது. அதற்கு முன்பு, போர்த்துகல்லில் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளை பிடித்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அதாவது பிரிட்டிஷ் இந்தியாவில் அந்தமான் தீவைப் போல, போர்த்துகல்லுக்கு அங்கோலா பயன்பட்டது. பிற்காலத்தில் திரவியம் தேட விரும்பும் போர்த்துகேய பிரசைகள் அனைவருக்கும் அங்கோலா திறந்து விடப்பட்டது. பெருந்தோட்டங்களில் மேலாளராக, மாவட்ட வரி அறவிடுவோராக பணியாற்ற ஆயிரக்கணக்கான வெள்ளையினத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சி காரணமாக புதிய தொழில் வாய்ப்புகள் பெருகின. எண்ணை அகழ்வு, வைரக் கல் பட்டறைகள் என்பன தொழிற்துறை வளர்ச்சி கண்டன. இதைத் தவிர தாயகத்தில் வாய்ப்பற்ற வெள்ளையின உழவர்கள், அங்கோலாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரனாக முடிந்தது. அங்கோலாவில் குடியேறிய வெள்ளையர்கள், மொத்த சனத்தொகையில் 6 சதவீதமாக மாறிவிட்டிருந்தனர். 1974 ம் ஆண்டு, அங்கோலா சுதந்திரமடையும் வரை மூன்று லட்சம் வெள்ளையினத்தவர்கள் வாழ்ந்து வந்தனர்.

அங்கோலாவின் வரலாற்றில் அசிமிலாடோஸ்(assimilados) உருவாக்கம் குறிப்பிடத்தக்கது. இவர்கள் தூய வெள்ளையரோ, அல்லது கலப்பினமோ அல்ல. கருப்பினத்தவரில் இருந்து தோன்றிய மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். எமது சமூகத்தில் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கருதும் “தமிங்கிலர்கள்” என்றொரு பிரிவு உண்டல்லவா? அங்கோலாவின் அசிமிலாடோக்கள் அந்த வகையை சேர்ந்தவர்கள் தான். போத்துக்கேய மொழியை பேசுவதில் மட்டுமல்ல, கலாச்சாரத்தை பின்பற்றுவதிலும் பெருமை கொண்டவர்கள். தாம் இருக்க வேண்டிய இடம் ஐரோப்பா என்று நினைத்துக் கொள்பவர்கள். இந்தப் பிரிவை சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை போர்த்துக்கல்லிற்கு உயர்கல்விக்காக அனுப்பி வைப்பார்கள். பெற்றோர் தமது பிள்ளை போர்த்துக்கல்லில் படிப்பதாக ஊர் முழுக்க பெருமையடித்துக் கொண்டு திரிவார்கள்.

சனத்தொகையில் அசிமிலடோக்களின் தொகை முப்பதாயிரத்தை தாண்டி விட்டிருந்தாலும், என்னதான் போர்த்துகேய பண்பாட்டை வழுவுறாது பின்பற்றி வந்தாலும், வெள்ளையர்கள் அவர்களை சமமாக மதிக்கவில்லை. சிறந்த அரச பதவிகள் எல்லாம் ஒன்றில் வெள்ளையருக்கு, அல்லது கலப்பினத்தவருக்கே ஒதுக்கப்பட்டன. அரசின் இனப் பாகுபாட்டுக் கொள்கை அசிமிலாடோக்கள் மத்தியில் விரக்தியை தோற்றுவித்தது. இளைஞர்கள் மத்தியில் தேசியவாத சிந்தனைகள் தோன்றின. அவர்களில் ஒருவர் அகொஸ்திஞோ நேட்டோ, போத்துக்கல்லில் மருத்துவப் பட்டம் பெற்ற கவிஞர். நேட்டோவும் அவரது தோழர்களும் போர்த்துக்கல் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் போது, மார்க்சிஸ அரசியலில் ஈடுபாடு காட்டினர். போத்துகேய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஆப்பிரிக்கர்களை சமமாக மதித்தது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் ஆப்பிரிக்கர்கள், தமது தாயகத்திற்கான தேசிய விடுதலைக்காக போராடுவது நியாயமானது என்று கம்யூனிஸ்ட்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

angolhha_lllk_klஅங்கோலா விடுதலைக்கான மக்கள் இயக்கம் என்ற MPLA (Movimento Popular de Libertação de Angola) ஸ்தாபிக்கப்பட்ட போது, சில வெள்ளையின கம்யூனிஸ்ட்களும் காலனியாதிக்க எதிர்ப்பு போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர். இதன் காரணமாக அங்கோலா விடுதலைப் போராட்டம், ஒரு போதும் அனைத்து வெள்ளயினத்தவர்களுக்கும் எதிராக திரும்பவில்லை. இன்றும் பல வெள்ளையினத்தவர்கள் அங்கோலா பிரசைகளாக வாழ்வதைக் காணலாம். மார்க்சிஸ-லெனினிச தத்துவத்தை வரித்துக் கொண்ட MPLA, நகர்ப்புற ஏழை மக்கள் மத்தியில் ஆதரவுத் தளத்தை கொண்டிருந்தது. இன்று MPLA மார்க்சிஸ சித்தாந்தத்தை கைகழுவி விட்டாலும், பொதுத் தேர்தல்களில் மாநகர சேரிகளில் MPLA க்கு அதிக வாக்குகள் கிடைக்கின்றன.

ஒரு சாராரால், படித்த புத்திஜீவிகளின் இயக்கமாக MPLA கருதப்பட்டது. அங்கோலாவில் மேலும் இரண்டு இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டன. அங்கோலா தேசிய விடுதலை முன்னணி (FNLA) என்றொரு கம்யூனிச விரோத, பழமைவாத கட்சியொன்று இருந்தது. இழந்த மன்னராட்சியை மீட்பது அவர்களது கொள்கை. அதாவது ஆண்ட பரம்பரைக் கனவுகளை கொண்ட வலதுசாரி தேசியவாதம் பேசியது. 1975 ம் ஆண்டு, சுதந்திரம் கிடைத்த கையோடு, MPLA க்கும், FNLA க்கும் இடையில் அதிகாரத்திற்காக சண்டை மூண்டது. FNLA க்கு அயல்நாடான காங்கோ, மற்றும் சி.ஐ.ஏ., ஆகியன உதவி செய்தன. இருப்பினும் ஒரு வருட யுத்தத்தின் இறுதியில் FNLA தோல்வி கண்டது. எஞ்சிய உறுப்பினர்கள் காங்கோவில் தஞ்சம் புகுந்தனர். மூன்றாவது இயக்கமான “அனைத்து அங்கோலா சுதந்திரத்திற்குமான தேசிய கூட்டணி” (União Nacional para a Independência Total de Angola) UNITA பல தசாப்தங்களுக்கு நின்று பிடித்து சண்டையிட்டது. இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

அங்கோலாவின் விடுதலைப் போராட்டம், 1960 ம் ஆண்டு விவசாயிகளின் எழுச்சியுடன் ஆரம்பமாகியது. காலனிய அரசு பருத்தி பயிரிடுமாறு விவசாயிகளை கட்டாயப்படுத்தியது. விவசாயிகள் இந்த உத்தரவுக்கு அடிபணிய மறுத்து கலகம் செய்தனர். அதே நேரம் இன்னொரு பக்கத்தில் கோப்பி தோட்ட முதலாளிகள் நிலங்களை அபகரித்துக் கொண்டிருந்தனர். இந்த நெருக்கடிகள் போதாதென்று, அதிகரிக்கப்பட்ட வரி வேறு விவசாயிகளை சுரண்டிக் கொண்டிருந்தது. விவசாயிகளை கிளர்ந்தெழ வைக்க ஏதுவான காரணங்கள் அங்கே நிலவின. அங்கோலாவின் வட பகுதியெங்கும் புரட்சித்தீ பற்றியது. காலனிய அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருந்த இரண்டாயிரம் போர்த்துக்கேயர்கள், கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டனர். போர்த்துக்கேய இராணுவம் பதிலடி கொடுப்பது என்ற பெயரில், கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி நசுக்கியது. குறைந்தது இருபதாயிரம் கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர். ஒரு லட்சம் பேர் அகதிகளாக அயல்நாடுகளில் தஞ்சம் கோரினர்.

விவசாயிகள் எழுச்சி அடக்கப்பட்டாலும், விடுதலை இயக்கங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகியது. MPLA, FNLA, UNITA ஆகிய இயக்கங்கள் காலனிய அரசுக்கு எதிரான கெரில்லா போராட்டம் நடத்தின. காலனிய அரசினால் கெரில்லாக்களை எதிர்த்து போரிட முடியாமல் போனதால், புதிய தந்திரம் ஒன்றை நடைமுறைப்படுத்தியது. அங்கோலா முழுவதும் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்கள் அங்கே தங்கவைக்கப்பட்டனர். மக்கள் என்ற தண்ணீரையும், கெரில்லாக்கள் என்ற மீன்களையும் பிரிக்கும் வேலையில் போர்த்துக்கேயர் ஓரளவு வெற்றிபெற்றனர் எனலாம். 1975 ம் ஆண்டு, சுமார் 75000 போர்த்துகேய படையினரும், 20000 கெரில்லாக்களும் மீள முடியாத போர்ச் சகதிக்குள் சிக்கியிருந்தனர். அவ்வருடம் போர்த்துக்கல்லில் இடம்பெற்ற அரசியல் மாற்றம், போரில் திருப்புமுனையாக அமைந்தது.

1974portugal[1]போர்த்துகல்லில் இராணுவ இயந்திரம் சர்வாதிகாரி சலசாரின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தியது. இடதுசாரி இராணுவ அதிகாரிகள் புரட்சிக்கு தலைமை தாங்கினர். இளம் போர்வீரர்களை அரசியல்மயப்படுத்தினர். முகாம்களில் இருந்த படைகளை தலைநகர் லிஸ்பனை நோக்கி வழிநடத்திச் சென்றனர். ஒரு சில மணிநேரமே நீடித்த துப்பாக்கிச் சண்டையின் பின்னர், சலசார் நாட்டை விட்டு ஓடினான். மிகக் குறைந்த உயிரிழப்புகளுடன், போர்த்துக்கல்லில் சோஷலிச புரட்சி வென்றது. கம்யூனிஸ்ட்களும், சோஷலிஸ்ட்களும் லிஸ்பனில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினர். புதிய இடதுசாரி அரசாங்கம் ஆப்பிரிக்க காலனிகளுக்கு சுதந்திரம் வழங்க முன்வந்தது. அங்கோலா விடுதலைக்காக போராடிய மூன்று இயக்கங்களும், போர்த்துகேய அரசும், 15 ஜனவரி 1975 அன்று, “அல்கார்வே” என்ற இடத்தில் வைத்து, ஒரு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. 11 நவம்பர் 1975 அன்று பூரண சுதந்திரம் வழங்கப்பட்டது.

சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்ட நேரம், MPLA, FNLA, UNITA ஆகிய மூன்றும் சேர்ந்து கூட்டு அரசாங்கம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த மூன்று இயக்கங்களும் தாம் மட்டுமே ஆள வேண்டுமென விரும்பினார்கள். போர்த்துக்கேய கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுதலின் பேரில், சோவியத் யூனியன் MPLA க்கு ஆதரவளித்தது. தலைநகர் லுவான்டாவும், எண்ணை வளமுள்ள கரையோர பகுதிகளும் MPLA இன கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அமெரிக்கா FNLA, UNITA வுக்கு ஆதரவளித்து வந்தாலும், ஒரு கட்டத்தில் உதவியை நிறுத்திக் கொண்டது. MPLA சந்தர்ப்பத்தை பயன்படுத்தி FNLA யை ஒழித்துக் கட்டியது. ஆனால் UNITA மட்டும் நிலைத்து நின்றது. எதிர்பாராவிதமாக தென் ஆப்பிரிக்காவின் ஆதரவு கிடைத்தது அதற்கு காரணம்.

அப்போது தென் ஆப்பிரிக்காவை வெள்ளை நிறவெறி அரசாங்கம் ஆட்சி செய்தது. பாசிச தென் ஆப்பிரிக்கா தனது எல்லையில் ஒரு சோவியத் சார்பு கம்யூனிச நாடு வருவதை விரும்பவில்லை. மறுபக்கத்தில் இந்த சந்தர்ப்பவாத கூட்டணியை MPLA தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. ஐரோப்பிய ஒன்றிய கூட்டத் தொடரில் UNITA வுக்கு தென் ஆப்பிரிக்க உதவி கிடைப்பதை அம்பலப்படுத்தியது. தென் ஆப்பிரிக்காவை சார்ந்து நிற்பது மனித விழுமியங்களுக்கு எதிரானதாக கருதப்பட்ட காலத்தில், அனைத்து ஆப்பிரிக்க நாடுகளும் MPLA அரசாங்கத்தை அங்கீகரித்ததில் வியப்பில்லை. இன்னொரு பக்கத்தில் UNITA விற்கு சீனாவிடம் இருந்தும் உதவி கிடைத்து வந்தது. மாவோவின் “மூன்றுலகத் தத்துவம்” நடைமுறையில் இருந்த காலம் அது. அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆகியன இரு வேறு உலகங்களாகவும், மிகுதியுள்ள நாடுகள் எல்லாம் மூன்றாவது உலகமாகவும் பார்த்த சித்தாந்தம் பின்னர் காலாவதியாகிப் போனது. அனேகமாக MPLA க்கு சோவியத் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதால், அதற்குப் போட்டியாக சீனா UNITA வுக்கு உதவியது.

அப்போதெல்லாம் MPLA இராணுவம் பலமானதாக இருக்கவில்லை. MPLA அரசின் நிர்க்கதியான நிலைமையை பயன்படுத்தி, தென் ஆப்பிரிக்கா அங்கோலா மீது படையெடுத்தது. அங்கோலாவின் தெற்கு எல்லையில் இருக்கும் நமீபியா, அப்போது நிறவெறி தென் ஆப்பிரிக்காவினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. தென் ஆப்பிரிக்க படையெடுப்பை சமாளிக்க முடியாமல் MPLA இராணுவம் பின்வாங்கிக் கொண்டிருந்தது. தக்க தருணத்தில் பிடல் காஸ்ட்ரோ தலையிட்டு இருக்காவிட்டால், தென் ஆப்பிரிக்கா அங்கோலாவை ஆக்கிரமித்திருக்கும். காஸ்ட்ரோ தனிப்பட்ட முறையில் அன்றைய சோவியத் அதிபர் குருஷோவுடன் தொடர்பு கொண்டு, ஆயுதங்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். MPLA அரசை தூக்கி நிறுத்துவதற்காக 250 கியூபா வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். கியூபா படையினர் சோவியத் ஆயுதங்களை கையாள்வது தொடர்பான பயிற்சி அளிப்பதிலும், இராணுவ ஆலோசனை வழங்குவதிலும் ஈடுபட்டனர்.

தென் ஆப்பிரிக்க ஆக்கிரமிப்புப் படைகளை கியூபர்கள் விரட்டியடித்த பிறகு அமெரிக்கா விழித்துக் கொண்டது. கியூபா படைகளை வெளியேற்றினால், நமீபியாவிற்கு சுதந்திரம் கிடைக்க வழிவகுப்பதாக இராஜதந்திர நகர்வை மேற்கொண்டது. அதே நேரம் அமெரிக்கா UNITA வுக்கு சாம்பியா ஊடாக ஆயுதங்களை வழங்கி வந்தது. பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த காலம் அது. MPLA வும், UNITA வும் சமபலத்துடன் போரிட்டு வந்தார்கள். போரில் யாரும் வெல்லமுடியாது என்ற எண்ணம் நிலவியது. MPLA கரையோர பிரதேசங்களில் பலமாக இருந்தது. உள் நாட்டுப் பகுதிகள் பல UNITA வின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த கோர்பசேவ் காலத்தில் கள நிலைமை வேகமாக மாறியது.

1991 மே முதலாம் திகதி, அமெரிக்கா, சோவியத், ஐ.நா., மேற்பார்வையின் கைச்சாத்தான சமாதான உடன்படிக்கை போரை முடிவுக்கு கொண்டுவருமென அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் இறுதியில் பல தீர்மானங்கள் எட்டப்பட்டன. அனைத்து அந்நியத் துருப்புகளும் வெளியேற வேண்டும். UNITA போராளிகள் தேசிய இராணுவத்தில் சேர்க்கப்பட வேண்டும். ஆயுதங்கள் வாங்குவது நிறுத்தப்பட வேண்டும். பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவற்றை கண்காணிக்க Unavem என்ற ஐ.நா. சமாதானப்படை நிறுத்தப்படும். அதே ஆண்டு சோவியத் யூனியனும் மறைந்து போனதால், அமெரிக்கா உலகின் ஒரேயொரு வல்லரசாக மாறி விட்டிருந்தது. ஒப்பந்தப் படி கியூப படைகளை வெளியேற்றிய MPLA அரசு, அமெரிக்கா பக்கம் சாயத் தொடங்கியது. ஏற்கனவே அங்கோலாவின் எண்ணைக் கிணறுகளை அமெரிக்க கம்பெனிகள் நிர்வகித்து வந்தன. அங்கோலா எண்ணை முழுவதும் இனி தனக்குத்தான் என்ற மகிழ்ச்சியில், அமெரிக்கா MPLA அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது. பகைவர்கள் நண்பர்களான இன்னொரு கதை இது.

இதற்கிடையே UNITA இயக்கம் சர்வதேச அரசியல் மாற்றங்களை கவனிக்காமல் தப்புக்கணக்கு போட்டது. UNITA போரை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாகவே கருதியது. தனது பலத்தில் கொண்ட அசாத்திய நம்பிக்கையினால் மட்டுமல்ல, அமெரிக்க செனட் சபையில் இருந்த நண்பர்களையும் கருத்தில் கொண்டு, அமெரிக்க ஆதரவு தொடரும் என்று கருதியது. இதற்கிடையே 1992 ம் ஆண்டு, பொதுத் தேர்தல் இடம்பெற்றது. சர்வதேச கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற சர்வசன வாக்குப் பதிவு, எந்த வித அசம்பாவிதமும் இன்றி நடந்தேறியதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் மொத்தம் 220 ஆசனங்களில், MPLA 129 ஆசனங்களை கைப்பற்றியது. எதிர்பார்த்த படி பெரும்பான்மை கிடைக்காத UNITA, இந்தத் தேர்தல் ஒரு மோசடி என்று பிரேரித்தது. தேர்தலை கண்காணித்த ஐ.நா. உயரதிகாரி UNITA வின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அந்த உயரதிகாரி “வைரக் கடத்தல்காரர்” என்று தூற்றப்பட்டார். உண்மையில் UNITA இயக்கத்தின் முக்கிய வருமானம் வைர விற்பனையால் கிடைத்து வந்தது. போரின் இறுதிக் காலங்கள், வைரச் சுரங்கங்களை யார் கட்டுப்படுத்துவது என்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டது.

p155374-Angola-Children_of_warபனிப்போர் காலத்தில், அமெரிக்க, சோவியத் எதிர் வல்லரசுகள் தமது பதிலிப் போர்களை மூன்றாம் உலக நாடுகளில் நடத்திக் கொண்டிருந்தன. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ உலக ஒழுங்கின் கீழ் பதிலிப் போர்கள் தேவையற்றுப் போயின. அங்கோலா அரசாங்கமே அமெரிக்காவின் கைகளுக்குள் வந்த பின்னர், UNITA என்ற போராளிக் குழுவிற்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் அங்கிருக்கவில்லை. ஆயினும் UNITA இந்த உண்மையை உணரவில்லை. அமெரிக்கா அதரவு நிலையானது என்ற இறுமாப்பில் யுத்தத்திற்கு தயார் படுத்தியது. மறு பக்கத்தில், MPLA அரசும் இறுதிப்போருக்கு தயாராகவே இருந்தது. தனக்கு சார்பான பொது மக்களுக்கும் ஆயுதங்களை வழங்கியது. தேர்தல் நடந்த அதே ஆண்டு, அக்டோபர் மாதம் மீண்டும் யுத்தம் வெடித்தது. இரகசியத் திட்டமொன்றின் படி, தலைநகர் லுவான்டாவில் UNITA ஆதரவாளர்கள் அனைவரும் ஒழித்துக் கட்டப்பட்டனர். போரினால் நாடு முழுவதும் சுடுகாடாக்கியது.

அங்கோலாவின் மத்தியில் அமைந்துள்ளது “குய்த்தோ” நகரம். பொதுத் தேர்தலில் UNITA விற்கு ஆதரவாக இந்தப் பகுதியில் பெருமளவு வாக்குகள் கிடைத்தன. பொதுத் தேர்தலில் UNITA விற்கு வாக்களித்த அத்தனை பேரும் ஆதரவாளர்கள் என்று சொல்ல முடியாது. தசாப்த கால யுத்தத்தினால் மக்கள் வெகுவாக கலைத்து போயிருந்தனர். குய்த்தோ போன்ற UNITA கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள், எப்படியாவது UNITA சமாதானமாகப் போனால் நல்லது என்ற எதிர்பார்ப்பில் வாக்களித்துள்ளனர். UNITA மக்களின் அபிலாஷைகளை மதிக்கத் தவறியதும், அதன் தோல்விக்கு ஒரு காரணமாகும். இறுதியாக நடந்த போரில் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த குய்த்தோ நகரை, UNITA போராளிகள் சுற்றி வளைத்தனர். 9 மாதங்களாக நான்கு சதுர மைல் நிலப்பரப்பிற்குள் முப்பதாயிரம் மக்கள் அடைபட்டுக் கிடந்தனர். கண்மூடித்தனமான ஷெல் வீச்சுக் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

போர்க் காலத்தில் ஐ.நா. சமாதானப் படையின் கைகள் கட்டப்பட்டிருந்ததை உணர முடிந்தது. ஐ.நா. அதிகாரிகள் கோரிய சர்வதேச உதவி கடைசி வரை கிட்டவில்லை. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள், எப்படியாவது போரில் ஒருவர் வெல்லட்டும் என்று வாளாவிருந்து விட்டனர். UNITA சமாதானமாகப் போகாமல் முரண்டு பிடிக்கின்றது என்ற ஏமாற்றத்தால் விளைந்த ஓரவஞ்சனை காரணமாக இருக்கலாம். சர்வதேச நாடுகளின் மௌனம் அரசுக்கு சார்பாக அமைந்தது. UNITA தலைவர் சாவிம்பி, அரச படைகளின் திடீர் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர், போர் முடிவுக்கு வந்தது.

அடுத்த ஆறு மாதங்களில் எஞ்சிய போராளிகள் அனைவரும் சரணடைந்தனர். போர் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், UNITA தளபதி ஒருவரும் அவரது ஆதரவாளர்களும், அரசுடன் சேர்ந்து கொண்டார்கள். “புதிய UNITA” என்ற கட்சியை ஸ்தாபித்து, அரச இராணுவத்தின் துணைப்படையாக செயற்பட்டனர். UNITA வின் வீழ்ச்சிக்கு முன்னாள் தளபதியின் துரோகம் மட்டும் காரணமல்ல. யுத்தம் தொடங்கிய நேரம், UNITA கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இயங்கிய சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்களை அரசு வெளியேற்றியிருந்தது. UNITA சில தொண்டர்களை வெளியேற விடாமல் பணயக் கைதிகளாக வைத்திருந்தும், நிலைமை அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை.

அங்கோலா யுத்தம் ஒரு வழியாக முடிவுற்று, சமாதானம் நிலவினாலும், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. அங்கோலா ஆப்பிரிக்காவின் மிகவும் வறிய நாடுகளில் ஒன்று. பல இடங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்படாததால், விவசாய உற்பத்திகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதைத் தவிர பல்லாயிரம் மக்கள் அங்கவீனர்களாக எஞ்சிய காலத்தை கழிக்க வேண்டிய பரிதாப நிலை. நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் எதோ ஒரு வகையில் போரினால் பாதிக்கப் பட்டுள்ளது. போரினால் ஏற்பட்ட ஆழமான வடுக்கள் காரணமாக, மக்கள் மத்தியில் சமாதானத்திற்கான ஏக்கம் அதிகரித்து வருகின்றது. இன்று அனைவரும் அரசை ஆதரிக்கிறார்கள் என்பது இதன் அர்த்தமல்ல. நீண்ட கால போரின் விளைவாக, அரசிற்கெதிரான எதிர்ப்பு மழுங்கிப் போயுள்ளது. இதனால் வறுமை கூட சகித்துக் கொள்ளப் பட வேண்டிய ஒன்றாகி விட்டது.

angola_oilfield_service_oil_field_sticker-p217709700012365669qjcl_400இன்று அங்கோலா அமெரிக்காவிற்கு எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று. இதன் காரணமாக இரு நாடுகளிற்கும் இடையில் சிறந்த நட்புறவு நிலவுகின்றது. ஒரு காலத்தில் இருந்த சோஷலிசப் பொருளாதாரம் கைவிடப்பட்டு, முதலாளித்துவ மயமாகி விட்டது. MPLA தலைவர்கள் கூட எண்ணை விற்று கிடைத்த லாபத்தில் பணக்காரர்களாக வாழ்கின்றனர். இவையெல்லாம் அமெரிக்காவிற்கு உவப்பான செய்திகள் தான். இருப்பினும் அங்கோலாவின் அசைக்க முடியாத இராணுவ பலமும், காங்கோவில் அதன் சாகசங்களும் அமெரிக்காவின் கண்ணை உறுத்துகின்றது. இன்று உலகம் எவ்வளவோ மாறி விட்டது. மூன்றாம் உலக நாடுகள், மேற்குலகம் விதிக்கும் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு அடங்கிக் கிடந்த காலம் ஒன்றிருந்தது. ஆனால் இன்று அங்கோலா போன்ற சில நாடுகள் தேசிய அரசியல், பொருளாதாரத்தை தாமே தீர்மானிக்க வேண்டுமென விரும்புகின்றன. அங்கோலா நிலையான ஆட்சி, பலமான இராணுவம் போன்ற அரசியல் ஸ்திரத் தன்மையும், பெற்றோலியம், வைரம் போன்ற அதிக வருவாய் ஈட்டித் தரும் பொருளாதார வளங்களையும் ஒருங்கே கொண்டது. இவையெல்லாம் அங்கோலா மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உதவுமா?

அங்கோலாவில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. ஆரம்பத்தில் MPLA க்கும், UNITA விற்கும் இடையிலான போரில் சில இன வேற்றுமைகள் தொக்கி நின்றன. அசிமிலாடோஸ் என அழைக்கப்பட்ட போர்த்துகேய மயப்பட்ட கறுப்பர்கள், கலப்பினத்தவர்கள், வெள்ளையினத்தவர்கள் எல்லோரும் MPLA இற்கு ஆதரவளித்தனர். அதற்கு மாறாக உள்நாட்டில், பாரம்பரிய ஆப்பிரிக்க சமூக கட்டமைப்பை பேணி வரும் இனங்களின் வாழ்விடங்கள், UNITA வின் ஆதரவுத் தளமாக இருந்தது. போருக்குப் பின்னான காலத்தில், அரசுடன் ஒத்துழைக்கும் முன்னாள் UNITA பிரமுகர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டாலும், அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்திய மக்களின் குறைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இன்று வரை அரசாங்கம், கண்ணிவெடி இன்னும் அகற்றப்படாமல் இருக்கும் பிரச்சினை குறித்து மட்டுமே பேசி வருகின்றது.

இதற்கிடையே கபிண்டா மாகாணத்தின் பிரச்சினை, சர்வதேச கவனத்தைப் பெறாவிட்டாலும், அதுவும் இன்னும் தீர்க்கப்படவில்லை. அங்கோலாவின் பெரு நிலப்பரப்புடன் சேராமல், கொங்கோ எல்லையிலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் தனியான மாகாணம் கபிண்டா. சுருக்கமாக அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துடன் ஒப்பிடலாம். அங்கோலாவிற்கு சொந்தமான 3000 சதுர மைல் நிலப்பரப்பு, பிராசவில்-கொங்கோவிற்கும், கின்சாசா கொங்கோவிற்கும் நடுவில் அமைந்துள்ளது. மாகாணம் சிறிதாக இருந்தாலும் அதன் மகாத்மியம் பெரிது. அங்கோலாவின் 70 வீதமான எண்ணை கபிண்டாவில் இருந்து அகழ்ந்து எடுக்கப்படுகின்றது. அதாவது அங்கோலாவின் பெருமளவு அந்நிய வருமானத்தை கபிண்டா வழங்குகின்றது.

FLEC என்ற ஒரு ஆயுதமேந்திய இயக்கம் கபிண்டாவின் விடுதலைக்காக போராடி வருகின்றது. 30 வருடங்களாக ஆயுதப் போராட்டம் நடத்தியும், அங்கோலா அரசுக்கு தலைவலியை தவிர வேறெந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. FLEC இன்று சிறு குழுக்களாக பிரிந்துள்ளதால், அவர்களது போராட்டம் இனியும் வெல்லுமா என்பது சந்தேகமே. கபிண்டாவில் அங்கோலா படையினர் பல்வேறு மனித உரிமை மீறல் குற்றங்களை புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கபிண்டா விடுதலை இயக்கத்தினருக்கு உள்ள ஒரேயொரு சர்வதேச ஆதரவு, ஐ.நா.சபையின் “பிரதிநிதித்துவப் படுத்தாத நாடுகளின் மன்றம்”(UNPO). எந்த வித அரசியல் அதிகாரமும் இல்லாத இந்த மன்றத்தில், திபெத், மேற்கு சஹாரா, போன்ற சுதந்திர தேசத்திற்காக போராடும் பல அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.

FLEC தனது தேசியவாதத்திற்கு இன அடிப்படை இருப்பதாக கூறுகின்றது. காங்கோலிய இனத்தை சேர்ந்த “பகொங்கோ” மக்களின் தாயகமாக கபிண்டாவை வரையறுக்கின்றனர். அங்கோலா அரசு இந்த தேசிய இனக் கருத்தியலை நிராகரிக்கின்றது. வட அங்கோலா மாகாணமான ஸயரிலும் பகொங்கோ இனத்தவர்கள் வாழ்வதை சுட்டிக் காட்டி, கபிண்டர்களின் போராட்டம் வெறும் பொருளாதாரக் காரணத்தை மட்டும் கொண்டுள்ளதாக பதிலளித்து வருகின்றது. கபிண்டா விடுதலை இயக்க தலைவர்களும் பெற்றோலிய வருமானத்தை பங்கிடுவதை தமது பிரதான கோரிக்கையாக முன்வைக்கின்றனர். செல்வத்தை சமமாகப் பங்கிடாவிட்டால் அங்கோலாவின் பிற பகுதிகளும் எதிர்காலத்தில் கொந்தளிக்க வாய்ப்புண்டு.

(தொடரும்)

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

தொடர்புடைய பதிவுகள்:

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா –
காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம் !
ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை !
நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !
ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் !
கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள் !
அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD
கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்
சிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு!
நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு

லைபீரியா : ஐக்கிய அடிமைகளின் குடியரசு

தோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு முதலில் சுவிஸ் நாட்டிலும் பின்னர் அந்த நாட்டு அரசின் இனப்பாகுபாடு அரசியலால் வெறுப்புற்று நெதர்லாந்திலும் வாழ்பவர். அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, அதனால் ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் குறித்த சட்டங்களைத் தெரிந்து கொண்டமை, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம், நெதர்லாந்து கம்யூனிஸ்ட்டு கட்சியுடனான தொடர்பு, நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபட்டமை எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தையும் முக்கியமாக பல்நாட்டவரின் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அரசியலையும் கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இத்தளத்தில் பங்கேற்பதில் வினவு மகிழ்ச்சி அடைகிறது. அவரது வலைப்பூ முகவரி http://kalaiy.blogspot.com

கலாவதியின் துயரக்கதையும் ராகுல் காந்தியின் வக்கிரப் புத்தியும்

கலாவதிகாங்கிரசின் தேர்தல் வெற்றிக்குப் பின், “இளவரசர்” ராகுல் காந்திக்கு மகுடாபிஷேகம் பண்ணி வைக்கும் வேலையில் முதலாளித்துவப் பத்திரிகைகள் இறங்கியுள்ளன. ” அவர்தான் இந்தியாவின் ஒபாமா” என ராகுலைப் புகழ்ந்து தள்ளுகிறது, தெகல்கா வார இதழ். அவரது மேடைப் பேச்சுக்கும் மட்டுமல்ல, அவரது “ஸ்டைலுக்கும்” ஒரு பொருள் இருப்பதாகக் கண்டுபிடித்து எழுதுகிறது, இந்தியா டுடே இதழ். எதிர்கால இந்தியாவுக்கு ராகுலை விட்டால் வேறு சிறந்த தலைவன் யாரும் கிடையாது என்றொரு கருத்து, பாமர மக்களிடம் திட்டமிட்டுத் திணிக்கப்படுகிறது.

தன்னை மக்கள் தலைவனாகக் காட்டிக் கொள்ளும் நடிப்பில் ராகுலும் சளைத்தவராகத் தெரியவில்லை. திடீரெனத் தாழ்த்தப்பட்டோர் வீடுகளுக்கு “விஜயம்” செய்து, அப்பாவி மக்களைத் திக்குமுக்காட வைக்கிறார். ஏழை விவசாயிகளைத் தேடிப்போய்ப் பேசுகிறார். அவர்களது துயர வாழ்க்கையை நாடாளுமன்றத்தில் எடுத்துப் பேசித் தன்னை ஏழைப் பங்காளனாகக் காட்டிக் கொள்கிறார். ராகுல், தனது பிறந்த நாளன்று இலண்டனில் குதூகலமாக இருந்தாலும், அவரது அடிப்பொடிகள் இந்தியாவில் அவரது பிறந்த நாளை சமூக நல்லிணக்க நாளாகக் கொண்டாடினர்.

திராவிடக் கட்சிகளின் அரசியலைப் பார்த்தவர்களுக்கு ராகுலின் இந்தக் கவர்ச்சி அரசியல் புதிதாகத் தெரியப் போவதில்லை. பழைய கள்ளு, புதிய மொந்தை; அவ்வளவுதான்!
இதோ, இந்தப் படத்தில் இருக்கும் தாயின் பெயர் கலாவதி. மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பகுதியைச் சேர்ந்த ஏழை விவசாயி. விதர்பா பகுதியைப் பிடித்தாட்டி வரும் சாபக்கேடு இவரது குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை. கலாவதியின் கணவர், தான் பட்ட 90,000 ரூபாய் கடனை அடைக்க வழி தெரியாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

ராகுல் காந்தி கடந்த ஆண்டு திடீரென கலாவதியின் குடிசைக்கு விஜயம் செய்து, அவரது துயரக் கதையைக் கேட்டுவிட்டு, அவருக்கு ஒரு வீடு ஒதுக்கித் தருமாறு அதிகாரிகளிடம் கூறுவதாக “அருள்” பாலித்துவிட்டு “மறைந்து” போனார். இடதுசாரிக் கட்சிகள் மன்மோகன் சிங் அரசிற்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டபொழுது, கலாவதியின் துயரக் கதையை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் எடுத்துப் பேசி, அவர்களை மடக்கினார். பத்திரிகைகள் அனைத்திலும் கலாவதியின் துயரக் கதையும், ராகுல் அவருக்கு அளித்திருந்த வாக்குறுதியும் பிரசுரமாயின.

கலாவதி நம்பிக்கையோடு ஒவ்வொரு அதிகாரியாகத் தேடிப் போய்ப் பார்த்து, ராகுல் காந்தியின் வாக்குறுதியை நிறைவேற்றித் தருமாறு கேட்டார். அந்தோ பரிதாபம்! அவர் ஒவ்வொரு அதிகாரியாலும் பந்தாடப்பட்டார். “ஐயா, ராகுல் காந்தியே, நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை ஒரு சான்றிதழாக எழுதித் தாருங்கள்” என இப்பொழுது கலாவதி ராகுல் காந்திக்குத் தனது கதையை நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்.
கலாவதிக்குத் தான் அளித்த வாக்குறுதி அதிகார வர்க்கத்தால் உதாசீனப்படுத்தப்படும் என்பதை அறியாத அப்பாவி அல்ல ராகுல் காந்தி.  தனக்கு விளம்பரம் தேடிக் கொள்ளவே, அந்தப் பாமர ஏழை விவசாயத் தாயின் துயரத்தை ராகுல் காந்தி பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை.

கலாவதியின் கதை, ராகுல் காந்தி தாழ்த்தப்பட்டோர் மீதும், ஏழைகளின் மீதும் காட்டும் திடீர் கரிசனம் வக்கிரம் நிறைந்த நாடகம் என்பதை அம்பலப்படுத்திவிட்டது. எனவே, உழைக்கும் மக்களே, ராகுல் காந்தி உங்கள் பகுதிக்கு வரப் போகிறார் எனக் கேள்விப்பட்டால், ஆரத்தித் தட்டிற்குப் பதிலாகத் துடைப்பத்தைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்!

புதிய ஜனநாயகம், ஜூலை-2009

புதிய ஜனநாயகம் ஜூலை 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

ஈழத் தமிழினப் படுகொலைக்கு வாழ்த்து: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் கேலிக்கூத்து!

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் கேலிக்கூத்து!

முள்ளிவாக்காலில் இலங்கை இராணுவம் நடத்திய இறுதித் தாக்குதலில் மட்டும் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலநூறு பேர் படுகாயமுற்றும், உடல் ஊனமுற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் அல்லலுறுகின்றனர். மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு கண்காணிப்பு முகாமில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி அவதிப்படுகின்றனர். இப்படி தட்டிக்கேட்க ஆளின்றி இலங்கை அரசு நடத்திவரும் அட்டூழியங்கள் குறிப்பாக, புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஆத்திரத்தை தோற்றுவித்து அவர்களும் மேலைநாடுகளில் தொடர்ச்சியாக போராடி வந்தனர். இது இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஓரளவு நெருக்கடியைத் தோற்றுவித்தது. இதை தணிப்பதற்கு மேலைநாடுகள் முயன்றபோது கை கொடுத்ததுதான் ஐ.நா.சபை தீர்மானம்.

சுவிட்சர்லாந்து தலைநகரம் ஜெனிவாவில் ஐ.நா.சபையின் மனித உரிமைக் கவுன்சில் உள்ளது. இதில்  இலங்கை, இந்தியாவையும் உள்ளிட்டு 47 நாடுகள் உறுப்பினர்களா உள்ளன. 2006-ஆம் ஆண்டு முதல் செயயல்பட்டு வரும் இந்தக் கவுன்சில், உண்மையில் எந்தவித அதிகாரமும் அற்ற ஒரு அலங்காரக் கவுன்சிலாகும். குறிப்பிட்ட நாடு மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பதாக இந்தக் கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாலும், அந்த நாட்டில் இதை வைத்தே தலையிடுவதற்கு இந்தக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை. அதை ஐ.நா. பொதுச்சபை விவாதித்து பாதுகாப்பு கவுன்சில் அங்கீகரித்தால்தான் செய்ய முடியும்.

இந்நிலையில் மனித உரிமைக் கவுன்சிலில் சுவிட்சர்லாந்து அரசு இலங்கை நடத்திய போர் மீது ஒரு தீர்மானத்தை கொண்டு வர முயன்றது. பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போன்று இந்த தீர்மானம் இலங்கை அரசின் இனப்படுகொலையை கண்டித்து எழுதப்பட்டதல்ல. மாறாக, புலிகள்தான் மக்களை பணயக்கைதிகளா பிடித்து வைத்திருந்ததாகவும் அவர்கள்தான் சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதையும் உள்ளிட்டு ஏனைய மனித உரிமை மீறல்களை இலங்கை அரசே விசாரிக்க வேண்டுமெனவும் இந்தத் தீர்மானம் முன்மொழிந்தது. மற்றபடி, சிங்கள இராணுவத்தின் போர்க்குற்றங்கள் குறித்து இந்தத் தீர்மானம் தந்திரமாக மவுனம் சாதித்தது. இதுபோக, இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அவர்களது சோந்த இடத்திற்குப் போக வழி ஏற்படுத்துதல், முகாமில் இருக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கொடுப்பது, சர்வதேச தொண்டு நிறுவனங்களை இம்முகாம்களுக்கு அனுமதித்தல் முதலியவையும் இந்த தீர்மானத்தில் இருந்தன.

இந்த டுபாக்கூர் தீர்மானத்தைத்தான் ஊடகங்கள் ஏதோ இலங்கையின் போர்க் குற்றங்களைத் தண்டிக்கப் போகின்ற மாபெரும் நடவடிக்கையாகச் சித்தரித்தன. ஆனால், இந்த மயிலிறகு தீர்மானத்தைக்கூட இலங்கை சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை. வாக்கெடுப்புக்கு வந்தபோது தீர்மானத்திற்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, கனடா, சிலி, மெக்சிகோ உள்ளிட்ட 17 நாடுகள் வாக்களித்தன. எதிராக இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரசியா, மலேசியா உள்ளிட்ட 22 நாடுகள் வாக்களிக்க, எட்டு நாடுகள் நடுநிலைமை வகிக்க, இறுதியில் சுவிட்சர்லாந்து தீர்மானம் தோல்வியடைந்தது.

dt14இதன் கூடவே இலங்கை அரசு மற்றொரு தீர்மானத்தை முன்மொழிந்தது. இதில் இலங்கையில் பயங்கரவாதிகளை வீழ்த்திய இலங்கை அரசுக்கு வாழ்த்து, மற்றும் ‘பணயக்கைதிகளா’ பிடிபட்டிருக்கும் மக்களை மீட்டு ‘மனித உரிமையை’ நிலைநாட்டிய இலங்கை இராணுவத்துக்கு பாராட்டு, முகாமிலிருக்கும் மக்களின் மறுவாழ்வுக்கு சர்வதேச நாடுகள் உதவுதற்கான வேண்டுகோள் எல்லாம் உண்டு. இப்படி ஆடுகளுக்கா அழும் ஓநாயின் தீர்மானத்திற்கு ஆதரவா 29 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் கிடைக்க, 6 நாடுகள் நடுநிலை வகித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து ஐ.நா.வுக்கான இலங்கைப் பிரதிநிதி தயான் ஜெயதிலகே கூறும் போது “மனித உரிமைக் கவுன்சில் தனது எண்ணத்தை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாக” பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

இப்படி எல்லா ஐசுவரியங்களும் கூடிவர, இலங்கை தனது போர்க்குற்றங்களுக்கு ஐ.நா. சபை மூலம் பூமாலை சூடிக்கொண்டது. இதுபோக, இலங்கை வந்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், இலங்கை அரசை பகிரங்கமாகப் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் இந்த காக்கா தீர்மானத்தை சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், தன்னார்வக் குழுக்களும், ஈழ ஆர்வலர்களும் கண்டித்திருக்கின்றன. எனினும், ஐ.நா. சபையின் பின்னணியில் மேலை நாடுகள் நடத்தியிருக்கும் இந்த நாடகத்தின் நோக்கம் என்ன?

முதலில் ஐ.நா. சபை என்பது ஏகாதிபத்தியங்களின் அரசியல் நோக்கத்திற்கு சேவை செய்யும் பஜனை சங்கமாகும். குறிப்பாக, அமெரிக்காவின் நோக்கத்திற்கேற்ப இசுரேலின் மனித உரிமை மீறலை அங்கீகரிக்க வேண்டுமா, வடகொரியா, கியூபாவை மிரட்ட வேண்டுமா – இதற்கெல்லாம் ஐ.நா. அம்பிகள் தவறாமல் ஆஜராவார்கள். அமெரிக்காவின் நலனுக்கு எதிராகச் சென்றார் என்பதற்காக யூகோஸ்லாவிய அதிபர் மிலசோவிச்சை, போஸ்னிய முசுலீம்களை கொன்றார், போர்க்குற்றங்களைச் செய்தார் என்று சர்வதேச நீதிமன்றத்தில் விசாரித்தார்கள். விசாரணை நடக்கும்போதே மிலசோவிச் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அதேபோல, பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக ஒரு பச்சைப் பொயைக் கூறி ஈராக்கின் எண்ணெ வயல்களுக்காக அந்நாட்டை ஆக்கிரமித்த அமெரிக்கா, அதிபர் சதாம் உசேனைப் பிடித்து, அவர் ஒரு ஷியா கிராமத்தில் 113 மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாயிருந்தார் எனக் குற்றம் சாட்டி, அமெரிக்க கைக்கூலிகளால் நடத்தப்பட்ட ஈராக் நீதிமன்றத்தில் அவசரமாக விசாரிக்க வைத்து, தூக்கிலேற்றி கதையை முடித்தது.

இதனால் மிலசோவிச்சும், சதாம் உசேனும் அப்பாவிகள், தவறேதும் செய்யாதவர்கள் என வாதிடவில்லை. ஆனால், அமெரிக்கா  போடும் மனித உரிமை நாடகம்தான் முக்கியமானது. இதே சதாம் உசேனுக்கு வேதியியல் ஆயுதம் கொடுத்து, அதை அவர் ஈரான் மீதான போரில் பயன்படுத்தி பல வீரர்களைக் கொன்றதை விசாரித்தால், சாதாமுக்கு உதவிய அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளைத் தூக்கிலேற்ற வேண்டியிருக்கும். இதேபோன்று சதாம் உசேன் குர்தீஷ் மக்களை ஒடுக்கியதை விசாரித்தால், கூடவே அமெரிக்காவின் அடியாள் துருக்கியின் அத்துமீறலையும் விசாரிக்க வேண்டியிருக்கும். வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தியதால் சர்வதேச பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதே சோதனையை அமெரிக்காவின் கூட்டாளிகள் இந்தியாவும், பாகிஸ்தானும் செய்திருந்தாலும் அந்த தடையை அமல்படுத்துமாறு அமெரிக்கா கோரவில்லை.

எனவே இந்த உலகில் இனப்படுகொலையும், போர்க்குற்றங்களையும் செய்து வரும் அரசுகள் எல்லாம் அமெரிக்காவின் விருப்பத்திற்கேற்ப கண்டுகொள்ளாமலோ அல்லது விசாரிக்கப்படவோ செய்யப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்காவின் அத்துமீறலை மட்டும் வாயளவில் கூட யாரும் அதிகாரப்பூர்வமாக கண்டிக்க முடியாது. இதுதான் நிலைமை என்றால், இலங்கை அரசு அதன் போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்படவில்லை என்பதன் முக்கிய காரணம் அமெரிக்காவும் அதன் அணியிலுள்ள மேலை நாடுகளும் அதை கண்டுகொள்ளாமல் விடவே விரும்பியதெனலாம். மற்றபடி, ஐரோப்பிய நாடுகளில் போராடிய ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு மன ஆறுதலாக இருக்கட்டும் என்பதற்காகவே சுவிட்சர்லாந்து தீர்மானம் உயிரின்றி கொண்டு வரப்பட்டது. இப்படி இந்த விசயத்தில் மேற்கத்திய நாடுகள் பச்சையான அழுகுணி ஆட்டம் நடத்தியிருக்கின்றன.

எனவே, இந்த தீர்மானத்தை ஒட்டி ஏற்பட்ட இருவேறு அணிகளில் பெரிய சண்டையோ சச்சரவோ ஏதுமில்லை என்பதும் முக்கியம். இருப்பினும், இலங்கை அரசுக்கு வெளிப்படையான ஆதரவு கொடுக்க ரசியா, சீனா முதலிய நாடுகள் முன்வரக் காரணம், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவிற்குப் போட்டியாக இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்த வேண்டுமென்ற ஆசைதான். அமெரிக்காவின் அணியிலிருக்கும் பாகிஸ்தான், இலங்கையை ஆதரித்ததற்கு – அது ஏராளமான ஆயுதங்களை விற்றதும், இந்தியாவுக்கு போட்டியாக இலங்கையை தாஜா செய்ய வேண்டுமென்ற காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவோ ஈழத்தில் மறைமுகப் போரை நடத்தி இலங்கைக்கு உற்ற துணைவனாக இருந்தாலும், அதைவிட இலங்கை சீனா பக்கம் சாவதால் ராஜபக்சேயை  ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம். கூடவே மனித உரிமை விசாரணை வந்தால் ஆயுதங்கள் கொடுத்த வகையில் இந்தியாவும், சீனாவும், பாக்.கும் கூட விசாரணைக்கு பதில் சோல்ல வேண்டுமென்ற நிர்ப்பந்தம் -இவையெல்லாம் சேர்ந்து இந்த நாடுகள் சிங்கள அரசை ஆதரிக்க வைத்திருக்கின்றன.

அமெரிக்காவின் பல்லாண்டுத் தடைகளை மீறி உயிர்த்திருப்பதற்குப் போரடும் கியூபா, எப்போதும் அமெரிக்காவின் எதிர்ப்பு அணியிலேயே இருக்குமென்பதால் அந்நாடு இலங்கைக்கு ஆதரவா வாக்களித்தது. இப்படி எல்லா அரசியல் புறச்சூழல்களும் பொருத்தமாக கூடி வந்ததால், ராஜபக்சே அரசு தனது இனப்படுகொலைக்கு சர்வதேச நாடுகளிடம் பாராட்டு வாங்க முடிந்திருக்கிறது.
இலங்கை அரசை ஒப்புக்குக் கூட சர்வதேச நாடுகள் கண்டிக்க முன்வரவில்லையே என ஈழத்து மக்களிடம் ஒரு விரக்தி இருக்கிறது. ஆனால், உலகமய காலகட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பும் அதற்கெதிரான உலக மக்களின் ஆதரவும் இல்லாமல், ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டம் வெல்லவோ, நீடித்திருக்கவோ முடியாது என்ற பாடத்தையும் அவர்கள் இதிலிருந்து கற்றுக்கொண்டு தங்களது போராட்டத்தை தொடரவேண்டும்.

புதிய ஜனநாயகம், ஜூலை-2009

புதிய ஜனநாயகம் ஜூலை 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

லால்கர்: சி.பி.எம்.- காங்கிரசு அரசுகளின் பயங்கரவாதம்!

lalgarh1835

லால்காரில் அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது; பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது” என்று எக்காளமிடுகின்றன டெல்லி மைய அரசும், மே.வங்க மாநில அரசும். மாவோயிஸ்டுகளைப் பயங்கரவாதிகள்என்று முத்திரை குத்தி, அவ்வமைப்புக்கு மைய அரசு சட்டபூர்வமாகத் தடை விதித்துள்ளது. மே.வங்க லால்கார் வட்டாரத்தின் ஜித்கா காடுகளிலிருந்து மாவோயிஸ்டுகளை வெளியேற்றுவோம் என்று மே.வங்க இடதுசாரிஅரசின் போலீசுப் படையும், மைய அரசின் துணை இராணுவப் படைகளும் அதிரடிப் படைகளும் அதிநவீன ஆயுதங்களுடன் தேடுதல் வேட்டை நடத்துகின்றன. போலீசு – துணை இராணுவப் படைகளின் அடக்குமுறைக்கு அஞ்சி, லால்கார் பழங்குடியின மக்கள் காடுகளிலிருந்து வெளியேறி அகதி முகாம்களில் அவதிப்படுகிறார்கள்.

தமது வாழ்வுரிமைக்காகவும், அரசு மற்றும் சி.பி.எம். குண்டர்களின் அடக்குமுறைக்கு எதிராகவும் போராடி வரும் லால்கார் பழங்குடியின மக்களை வன்முறையாளர்கள், அராஜகவாதிகள் என்று குற்றம் சாட்டுகிறது, மே.வங்க இடதுசாரிஅரசு. “இம்மக்களை இடதுசாரி அரசுக்கு எதிராகத் தூண்டி விட்டு வன்முறைப் போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டும், அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதச் செயல்களிலும் மாவோயிஸ்டுகள் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரசு, இவர்களுடன் கள்ளக்கூட்டுச் சேர்ந்து மாநிலமெங்கும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, இடதுசாரி ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறது” என்று மே.வங்கத்தை ஆளும் சி.பி.எம். கட்சியும் ஆட்சியும் குற்றம் சாட்டுகின்றன.

லால்கார் பழங்குடியின மக்களோ எப்போதுமே அமைதியானவர்கள்; உண்மையானவர்கள். அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வறுமையில் உழலும் அவர்கள், சாலை வசதியே இல்லாத கரடுமுரடான காட்டுப் பாதையில் நீண்ட நெடும்பயணமாக கண்ணீர் மல்க நோயுற்ற தமது அன்புக் குழந்தைகளை தூக்கிக் கொண்டு மாவட்ட மருத்துவமனைக்கு ஓடி, அங்கே சிகிச்சை பலனளிக்காமல் குழந்தைகள் மாண்டு போகும்போது அவர்கள் கதறியழுவார்கள். லால்கார் வட்டாரத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தில்லாத போதும், மருத்துவர்களே இல்லாதபோதும், அவர்கள் தமது விதியை நொந்து கொண்டு அமைதியாகவே இருந்தார்கள்.

கோடை காலங்களில் குடிநீர் இல்லாமல் தத்தளிக்கும்போதும், காட்டுக் கிழங்குகளை வேகவைத்து பசியாறிக் கொண்டு பட்டினியால் பரிதவித்த போதும், ஆரம்பப் பள்ளி இல்லாமலும் ஆசிரியரே இல்லாத பள்ளியாலும் தமது குழந்தைகள் தொடக்கக் கல்விகூடக் கற்க முடியாத அவலத்தைக் கண்டபோதும் – இவையெல்லாம் தலைமுறை தலைமுறையாக உள்ள விசயம்தானே என்று தமக்குத்தாமே ஆறுதல்பட்டுக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.

lalgarh_1-1இன்று அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ள லால்கார் பழங்குடியின மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ய கொல்கத்தாவிலிருந்து சென்ற மருத்துவர்கள், “இப்போது இம்மக்களுக்கு மருந்து – மாத்திரைகள் அவசியமில்லை; சத்தான உணவுதான் உடனடித் தேவையாக உள்ளது” என்கின்றனர். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான அமர்த்யா சென், இம்மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர், “பசியும் பட்டினியும்தான் மிகக் கொடிய வன்முறை” என்றார். தமது மக்களுக்கு உணவளிக்காத அரசுதான், அம்மக்கள் மீது வன்முறையை ஏவும் கொடிய குற்றவாளி என்று அவர் சாடியுள்ளார். அவரது வாதப்படி, குற்றவாளியான மே.வங்க இடதுசாரி அரசு, பசி-பட்டினி எனும் வன்முறையை லால்கார் பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து ஏவி வந்துள்ள போதிலும், இம்மக்கள் நல்வாழ்வை எதிர்பார்த்து அமைதியாகவே காத்திருந்தார்கள்.

ஒவ்வொரு முறையும் சட்டமன்ற – நாடாளுமன்ற – உள்ளாட்சித் தேர்தல்களில், ஏழைகளின் நண்பனாகக் காட்டிக் கொள்ளும் இடதுசாரிக் கூட்டணி கட்சிகளுக்கே அவர்கள் வாக்களித்தார்கள். வாக்குறுதிகள் வீசப்பட்டனவே தவிர, அவை லால்கார் வட்டார மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. வறுமை ஒழிப்புக்காகவும், வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி அவர்களைச் சென்றடையவும் இல்லை. நாட்டின் பங்குச் சந்தை புள்ளிகள் நாலுகால் பாச்சலில் முன்னேறிய போதிலும், ஏகபோகக் கம்பெனிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளது ஊதியம் கோடிக்கணக்கில் அதிகரித்த போதிலும், இந்தியா வல்லரசாகஒளிர்ந்த போதிலும், இவையெல்லாம் லால்கார் பழங்குடியின மக்களின் வாழ்வில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

இருப்பினும், இவையெல்லாம் வன்முறையே அல்ல என்பதுதான் புரட்சி பேசும் போலி கம்யூனிஸ்டுகளின், ஆளும் வர்க்கங்களின், மேட்டுக்குடி கும்பல்களின், அவர்களின் ஊதுகுழல்களான தேசியபத்திரிகைகளின் வாதம். பழங்குடியின மக்களைப் போலீசார் இழுத்துச் சென்று வதைத்தாலும், பொ வழக்குப் போட்டுச் சிறையிலடைத்தாலும் அவை வன்முறையோ, பயங்கரவாதமோ அல்ல. சி.பி.எம். குண்டர்கள் மற்றும் போலீசின் அடக்குமுறையின் கீழ் அவர்கள் இருத்தி வைக்கப்பட்டாலும், அது வன்முறை அல்ல; புதிய விசயமும் அல்ல.

வறுமையையும் அடக்குமுறையையும் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்த பழங்குடியின மக்கள் மெதுவாக விழித்தெழுந்து போராடத் தொடங்கினால், அது சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் வன்முறை! பழங்குடியினக் கிராமங்களைச் சுற்றி வளைத்துச் சூறையாடி விடிய விடிய வதைத்த போலீசாரின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடி, போலீசாரை அப்பகுதியிலிருந்து விரட்டியடித்தால், அது பயங்கரவாதம்!

அவர்கள் போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியை நிறுவினார்கள். அந்தக் கமிட்டி கிராமங்களில் மருத்துவ – சுகாதார வசதியும், பள்ளிகள் – சாலைகள் – பாலங்கள் உள்ளிட்டு மின்சார வசதியும் ஏற்படுத்தித் தரக் கோரி கடந்த எட்டு மாதங்களாகப் போராடி வருகிறது. அடக்குமுறையில் ஈடுபட்ட போலீசார் மக்கள் முன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்; அதுவரை போலீசாரையோ அரசு அதிகாரிகளையோ இப்பகுதியினுள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மக்களைத் திரட்டிப் போராடி வருகிறது.

lalgarh_2-1இவையெல்லாம் சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் அராஜக – வன்முறைகள் என்று சாடுகிறது. மே.வங்க இடதுசாரி அரசு. ஆனால், இந்த அராஜக – வன்முறையாளர்கள், மக்களின் சுயவிருப்ப உழைப்பின் மூலம் 20 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைத்துள்ளார்கள். இடதுசாரிஅரசின் பஞ்சாயத்து நிர்வாகம் சாலையே போடாமல், ஒரு கி.மீ. சாலை அமைக்க ரூ. 15,000 வீதம் செலவிட்டதாகக் கணக்கு காட்டி ஏக்கும் நிலையில், 20 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க மொத்தம் ரூ. 47,000 செலவாகியுள்ளதாக அவர்கள் கணக்குகளை எழுதி மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார்கள்.

இது மட்டுமின்றி, கடந்த எட்டு மாதங்களில் அவர்கள், தூர்ந்து போன குடிநீர்க் கிணறுகளைச் சீரமைத்தும் புதிய கிணறுகளைத் தோண்டியும், பள்ளிக்கூடங்களை நிறுவியுமுள்ளார்கள். நிதியில்லை என்று இடதுசாரி அரசு புறக்கணித்து இழுத்து மூடிவிட்ட கண்டபாஹரி கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தை அவர்கள் சீரமைத்து உள்ளூர் மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குச் சிகிச்சையளிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, காடுகளை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலங்களை, நிலமற்ற பழங்குடியினருக்கு விநியோகிக்கச் சட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படாத நிலையில், கண்டபாஹரி, பன்ஷ்பேரி கிராமங்களை அடுத்துள்ள புறம்போக்கு நிலங்களை, நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளார்கள். இந்நடவடிக்கைகளுக்காக அவர்கள் இடதுசாரி அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்கவில்லை. எதிர்பார்த்தாலும், அது கிடைக்கப் போவதுமில்லை.

கடந்த நவம்பரில் போலீசு பயங்கரவாத அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய லால்கார் பழங்குடியின மக்கள், லால்கார் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரை விரட்டியடித்து, போலீசு நிலையத்தை இழுத்து மூடினர். லால்கார் காடுகளை அழித்து 5000 ஏக்கர் பரப்பளவில் ஜிண்டால் எனும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனம் தொடங்கவுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்தை முற்றாக ரத்து செய்யவும், அடக்குமுறையை ஏவிய போலீசார் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் கோரி இம்மக்கள் தொடர்ந்து போராடி வந்ததால், இப்பகுதிக்குள் போலீசாரோ, அரசு அதிகாரிகளோ நுழைய முடியவில்லை. அதன்பிறகு நாடாளுமன்றத் தேர்தலின்போது, வாக்குப் பதிவைக் கண்காணித்து முறைப்படுத்துவது என்ற பெயரில் போலீசு முகாமிட முயற்சித்தது. போலீசுடன் கூட்டுச் சேர்ந்து சி.பி.எம். குண்டர்கள் இப்பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அதிகாரவர்க்க – போலீசு ஆட்சியை நிறுவ எத்தணித்தனர். அந்த முயற்சியையும் லால்கார் மக்கள் தமது போராட்டங்களால் முறியடித்தனர்.

தேர்தல் முடிந்த பிறகு, இப்போது மீண்டும் தமது அதிகாரத்தை நிலைநாட்ட போலீசும் – அதிகார வர்க்கமும் கிளம்பின. அதனுடன் கூட்டுச் சேர்ந்து சி.பி.எம். குண்டர்கள் ஆள்காட்டிகளாகவும் அடியாட்களாகவும் செயல்பட்டனர். இவர்களின் கூட்டுச் சதிகள் – சூழ்ச்சிகள் – தாக்குதல்களை முறியடித்த லால்கார் பழங்குடியின மக்கள், கடந்த ஜூன் 15-ஆம் தேதியன்று சி.பி.எம். குண்டர்படைத் தலைவர்களது வீடுகளையும் உள்ளூர் சி.பி.எம் கட்சி அலுவலகங்களையும் தாக்கித் தீயிட்டுக் கொளுத்தினர்.

இதற்கு முன்னதாக, நந்திகிராமம் – கேஜூரி பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு வெற்றி பெற்றதும், ஹேதியா நகரிலுள்ள சி.பி.எம். வட்டாரக் கமிட்டி அலுவலகம் ஜூன் 9-ஆம் தேதியன்று திரிணாமுல் காங்கிரசு கட்சியினரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அரசு அதிகாரத்தைக் கொண்டும் குண்டர் படைகளைக் கொண்டும் தேர்தலின் போது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்ட சி.பி.எம். உள்ளூர் தலைவர்களது வீடுகளும் கட்சி அலுவலகங்களும் நந்திகிராமம் பகுதியில் அடுத்தடுத்து திரிணாமுல் காங்கிரசு கட்சியினரால் தாக்கப்பட்டுத் தீயிடப்பட்டன.

இவற்றை அரசியல் வன்முறை என்று சாடும் சி.பி.எம் கட்சி, லால்கார் மக்கள் போராட்டத்தை மட்டும் பயங்கரவாத வெறியாட்டம் என்று குற்றம் சாட்டுகிறது. லால்கார் மக்கள் சி.பி.எம். அலுவலகங்களையும் குண்டர்படைத் தலைவர்களது வீடுகளையும் மட்டும் தாக்கித் தீயிடவில்லை. அவர்கள் போலீசாரையும் அதிகார வர்க்கத்தையும் அடித்து விரட்டி விட்டு, அரசு அடக்குமுறையிலிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துக் கொண்டு, தமது சோந்த ஆட்சியை நடத்துகிறார்கள். அதுதான் பயங்கரவாதம் என்கிறது இடதுசாரிஅரசு. சட்டத்தின் ஆட்சிக்கு எதிராக, அதிகார வர்க்க – போலீசு ஆட்சிக்கு எதிராக தமது சோந்த ஆட்சியை நிறுவக் கிளம்பிவிட்டார்களே, அதுதான் பயங்கரவாதம் என்கிறது சி.பி.எம். அரசு.

இப்பயங்கரவாதத்தையும், அதைப் பின்னாலிருந்து கொண்டு இயக்கி வரும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளையும் முறியடிக்க மாநிலப் போலீசுப் படை போதாது; மைய அரசின் துணை ராணுவப் படைகளையும் அனுப்ப வேண்டும்” என்று டெல்லிக்குப் பறந்தார், போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. அரசியலில் எதிரெதிர் முகாம்களில் உள்ள காங்கிரசும் சி.பி.எம்.மும் லால்கார் மக்களின் பயங்கரவாதத்தைஒழிப்பதில் ஓரணியில் நின்றன. முதலில் மூன்று கம்பெனி துணை இராணுவப் படைகளை அனுப்பிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அடுத்ததாக “கோப்ரா” அதிரடிப்படையையும் எல்லைப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவினரையும் லால்காருக்கு ஏவினார். மொத்தம் எவ்வளவு போலீசு – துணை ராணுவப் படையினர் லால்காரில் குவிக்கப்பட்டனர் என்ற விவரத்தை இன்றுவரை அரசு அறிவிக்கவில்லை. மாவோயிஸ்டுகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்த மைய அரசு, லால்கார் காடுகளிலிருந்து அவர்களை வெளியேற்றி அழிப்பது என்ற பெயரில் இவ்வட்டாரமெங்கும் அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. மே.வங்க இடதுசாரி அரசு அதற்கு ஒத்தூதியது.

lalgarh1836இப்பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க லால்கார் பழங்குடியின மக்கள் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டும் அகலமான குழிகளை வெட்டியும் தடையரண்களை ஏற்படுத்தி, வில்-அம்பு, கோடாரிகளுடன் அரசு பயங்கரவாதப் படைகளை மறித்து நின்றார்கள். “அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தாதீர்கள்; நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக உள்ளோம்” என்று பழங்குடியின மக்களின் போராட்டக் கமிட்டி மத்திய-மாநில அரசுகளிடம் பலமுறை கோரிய போதிலும், அவை ஏற்க மறுத்துவிட்டன. மறித்து நின்ற மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கிராமங்களைச் சூறையாடி கண்ணில்பட்டவர்களைக் கொடூரமாகத் தாக்கி போலீசும் துணை இராணுவப் படைகளும் வெறியாட்டம் போட்டன. இப்படி ஒவ்வொரு கிராமமாகச் சுற்றி வளைத்து அரசு பயங்கரவாதிகள் தாக்குவதையும், இதற்குத் துணையாக வான் படையின் ஹெலிகாப்டர்கள் வட்டமிடுவதையும் கண்டு அஞ்சிய மக்கள், கிராமங்களை விட்டு வெளியேறி நகரத்திலுள்ள பள்ளிகள் – மைதானங்களில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்.

லால்கார் பகுதிக்குள் பத்திரிகையாளர்களோ, மனித உரிமை அமைப்பினரோ, தன்னார்வக் குழுக்களோ நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அரசு பயங்கரவாத அட்டூழியங்கள் வெளியுலகுக்குத் தெரியாமல் மூடிமறைக்கப்படுகின்றன. இக்கொடுஞ்செயலுக்கு எதிராக பிரபல வரலாற்றியலாளரான சுமித் சர்க்கார், பிரபல எழுத்தாளர் பிரஃபுல் பித்வா, மகாசுவேதாதேவி, கலைஞர்களான தருண் சன்யால், கௌதம் கோஷ், அபர்ணா சென் முதலானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவில் மனித உரிமை இயக்கத்தினரும் அறிவுத்துறையினரும் கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர்.

லால்கார் மக்களை மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் தூண்டிவிட்டு அரசுக்கெதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று போலி கம்யூனிச ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும்போதே, எந்த மாவோயிஸ்டு தூண்டுதலும் இல்லாமல் பிர்பூம் மாவட்டம் போல்பூரில் மே.வங்க அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக விவசாயிகள் தன்னெழுச்சியாகத் திரண்டு அண்மையில் போராட்டத்தை நடத்தியுள்ளனர். போராடிய விவசாயிகளை போலீசும் சி.பி.எம். குண்டர்களும் கூட்டுச் சேர்ந்து தாக்கி ஒடுக்குவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே படம் பிடித்து அம்பலப்படுத்துகின்றன.

புரட்சி சவடால் அடித்து வந்த போலி கம்யூனிஸ்டுகள், மறுகாலனியாக்க சூழலில் உழைக்கும் மக்களின் எதிரிகளாகவும் குண்டர்படைகளை ஏவி மக்களைக் குதறும் பாசிச பயங்கரவாதிகளாகவும் சீரழிந்து விட்டதை சிங்கூர்-நந்திகிராமம் முதல் இன்று லால்காரில் நடந்துள்ள வெறியாட்டங்கள் வரை திரும்பத் திரும்ப நிரூபித்துக் காட்டுகின்றன. காங்கிரசு அரசும் மே.வங்க இடதுசாரிஅரசும் கூட்டுச் சேர்ந்து பயங்கரவாத வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டு, லால்காரை விடுதலைசெய்து அமைதியை நிலைநாட்டிவிட்டதாக அறிவிக்கின்றன. இவ்வளவுக்குப் பின்னரும் நாட்டு மக்கள் நடுநிலை வகிக்கவோ இடதுசாரிஅரசு மீது நம்பிக்கை வைக்கவோ அடிப்படை இல்லை. அரசு பயங்கரவாத அடக்குமுறைக்கு உழைக்கும் மக்கள் அடங்கிக் கிடந்ததாக வரலாறுமில்லை.

புதிய ஜனநாயகம், ஜூலை-2009

புதிய ஜனநாயகம் ஜூலை 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

தொர்புடைய பதிவு

போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

லைபீரியா : ஐக்கிய அடிமைகளின் குடியரசு

3

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – 11

liberia_map380“யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” என்று சொல்வார்கள். உள்நாட்டு யுத்தத்திலே மூழ்கிப் போயிருந்த, மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவின் மீதான அமெரிக்கப் படையெடுப்புப்பற்றிய கதைகள் அடிபட்ட நேரத்தில் வந்த (முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி) புஷ்ஷின் ஆபிரிக்க விஜயம் அமெரிக்காவின் வருங்காலத் திட்டங்களை கட்டியம் கூறியது. நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்ட ஆபிரிக்கக் கண்டத்தை, இறுதியில் அமெரிக்க அரசு  “கண்டுபிடித்து” விட்டது  என்று பலர் நினைத்தார்கள்.

புஷ் விஜயம் செய்த நாடுகளின் பட்டியல், அமெரிக்க அரசின் உண்மையான நோக்கங்களை எடுத்துக் காட்டுகிறது. காம்பியா : புதிய எண்ணைவள நாடு, தென்னாபிரிக்கா : தென்பகுதிப் பிராந்திய வல்லரசு, நைஜீரியா : எண்ணை ஏற்றுமதி செய்யும் ஆபிரிக்க நாடுகளில் முதன்னையானது. இதைத் தவிர கொடூரமான உள்நாட்டு யுத்தத்தால் உலகச் செய்திகளில் முதலிடம் பெற்ற  லைபீரியா பற்றிய அமெரிக்க நிலைப்பாடு குறித்தே பலர் அறிய ஆவலாயிருந்தனர்.

லைபீரியா, முழு ஆபிரிக்கக் கண்டத்திலேயே முதன்முதலாக (1847) சுதந்திரமடைந்த நாடு.  இதே காலகட்டத்தில் பிற ஆபிரிக்க நாடுகள் ஐரோப்பியக் காலனிகளாகிக் கொண்டிருந்தன. யூதர்கள் இஸ்ரேலுக்குத் திரும்பியதுபோல், “தாயகம்” திரும்பிய அமெரிக்க-ஆபிரிக்க அடிமைகள் குடியேற்றப்பட்ட நாடுதான் லைபீரியா. விடுதலை செய்யப்பட்ட “அமெரிக்க அடிமைகளின் தாயகம்” என்ற பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்ட லைபீரியாவை, இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் அதுதான் ஆபிரிக்காவில் உருவான முதலாவது அமெரிக்கக் காலனி என்ற உண்மை தெளிவாகும்.

ஆப்பிரகாம் லிங்கன்19 ம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்கக் குடியரசை ஸ்தாபித்த வட மாநிலங்களுக்கும் , தென் மாநிலங்களுக்கும் இடையில் போர் மூண்டது.  அமெரிக்காவின் உள்நாட்டு யுத்தமென இது வரலாற்று பாடப்புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் போருக்கு பொருளாதார முரண்பாடுகளும் முக்கிய காரணியாகும். புதிய அமெரிக்கக் குடியரசான வடமாநிலங்கள் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையை வரித்துக் கொண்டன. இதற்கு மாறாக ஆபிரிக்க அடிமைகளின் உழைப்பில் தங்கியிருந்த தென்மாநிலங்களில், நிலவுடைமை சார்ந்த பொருளாதாரம் இருந்து வந்தது. தெற்கில் நிலவுடைமைப் பொருளாதாரத்தை அழித்து, அங்கே ஐக்கிய அமெரிக்கக் குடியரசை விஸ்தரிக்கும் நோக்கோடுதான், அன்றைய ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனால் அடிமை முறை ஒழிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

தென்மாநிலங்கள் தம்மிடமிருந்த கறுப்பின அடிமைகளை விடுதலை செய்து முதலாளித்துவப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை வந்தது. அப்போது இன்னொரு பிரச்சினை உருவானது. அமெரிக்கப் பிரஜைகளாகப் போகும் விடுதலை செய்யப்பட்ட கறுப்பின அடிமைகள் வருங்கால அமெரிக்காவின் தீர்க்கமான அரசியற் சக்தியாக வருவதை பலர் விரும்பவில்லை. இதனைக் கருத்தில் கொண்ட முன்னாள் அடிமைகளின் எஜமானர்கள் “அமெரிக்கக் காலனியச் சங்கம்” என்ற ஒன்னை உருவாக்கினார்கள். “விடுதலை செய்யப்பட்ட அடிமைகளை அவர்களது தாயகத்தில் குடியேற்றுவது” என்ற முற்போக்கானதாகக் காட்டிக்கொண்ட குறிக்கோளைக் கொண்ட அந்தச் சங்கம் அதற்கென மேற்கு ஆபிரிக்காவில் ஒரு பகுதி நிலத்தை வாங்கியது. அந்த நிலம்தான் லைபீரியா.

1822 ல் லைபீரியாவில்  அமெரிக்காவிலிருந்து வந்த முன்னாள் அடிமைகளின் முதலாவது காலனி உருவாகியது. அமெரிக்கக் காலனிய சங்கத்தால் வாங்கப்பட்ட நிலம், யாருமே வாழாத சூனியப் பிரதேசமாக இருக்கவில்லை. அங்கு 16 வேறுபட்ட இன மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களிலே , இஸ்லாமியர்களான மான்டே மொழி பேசும் மக்கள் போர்த்துக்கீசருடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர். லைபீரியா என்ற அமெரிக்கக் காலனி உருவான பின்பு , இன்றுவரை இந்தப் பூர்வீக இனமக்கள், அரசியல் பொருளாதார ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர். மொத்தச் சனத்தொகையில் 15 வீதமான அமெரிக்கக் குடியேறிகளே, ஆளும் வர்க்கமாகத் தொடர்கின்றனர்.

மான்ரோவியாஆரம்பத்திலிருந்தே புதிய குடியேறிகளை, பூர்வீக மக்கள் அவநம்பிக்கையுடன் நோக்கினர். புதிதாகக் குடியேறிய அந்நியர்கள்  வினோதமான மொழியை (ஆங்கிலம்) பேசினர், விசித்திரமான மதத்தைப் (கிறிஸ்தவம்) பின்பற்றினர். மறுபக்கத்தில் அமெரிக்கக் குடியேறிகள், தம்மை மட்டும் நாகரீகமடைந்தவர்களாக கருதிக் கொண்டனர். பூர்வீக மக்களை “நாகரீகமடையாத காட்டுவாசிகள்” என அழைத்தனர். பூர்வீக  மக்களின்  விருப்பங்களை புறக்கணித்து, தம் இஷ்டப்படி மொன்றோவியாவை (அமெரிக்க ஜனாதிபதி மொன்றோவின் பெயரால்) தலைநகராகக் கொண்ட லைபீரியக் குடியரசை அமைத்தனர். புதிய தேசத்தின் அரசியல் நிர்ணயச் சட்டம் அமெரிக்காவில்தான் தயாரிக்கப்பட்டது. அமெரிக்கக் கொடியை போன்ற கொடி, தேசியக் கொடியாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை எல்லாம் அமெரிக்காவில் இருந்து தான் இறக்குமதியாகிக் கொண்டிருக்கின்றன.

இன்றைய லைபீரியா ஆட்சியாளர்கள் அனைவரும்,  முன்னாள் அமெரிக்க அடிமைகளின் வழித்தோன்றல்கள். இன்றுவரை தமது தந்தையர் நாடான அமெரிக்காவுடன் சிறந்த நட்புறவுகளைப் பேணிவருகின்றனர். அமெரிக்க வர்த்தக ஸ்தாபனங்கள் லைபீரியாவின் கனிப்பொருள் வளங்களின் மீது ஏகபோன உரிமை பெற்றுள்ளன. உதாரணமாக ரப்பர் ஏற்றுமதிக்கு “ஃபயர்ஸ்டோன்” , “குட்றிச்” ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் 99 வருட ஒப்பந்தம் போட்டுள்ளன. இதைவிட பல எண்ணைதாங்கிக் கப்பல்கள் இளகிய சட்டங்களைக் கொண்ட லைபீரியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முக்கியத்துவம் காரணமாக லைபீரிய அரசியல் ஆட்டம் காணும்போதெல்லாம் அமெரிக்கா தலையிட்டு ஸ்திரப்படுத்தி வந்தது.

நீண்ட காலமாக பொருளாதார வளர்ச்சி, பொதுமக்களின் வாழ்க்கை வசதிகளை அதிகரித்திருந்த போதும் என்பதுகளில் ஏற்பட்ட உலகப் பொருளாதாரப் பின்னடைவு, லைபீரியாவிலும் பல தாக்கங்களை உருவாக்கியது. ஏற்றுமதி குறைந்து வேலைவாய்ப்பின்மை  அதிகரித்தது. அரிசி விலையுயர்வால் மக்கள் கலகம் செய்தனர். ஊழல் ஆட்சி, எதிர்க்கட்சிகளின் மீதான தடை, இவற்றிற்கு மத்தியில் “லைபீரிய தேசபக்த முன்னணி” என்ற ஆயுதமேந்திய குழு அரசபடைகளுடன் சண்டையிட்டு பல பகுதிகளைக் கைப்பற்றியது. இந்த ஆயுத பாணிக் குழுவின் தலைவர் சார்ல்ஸ் டெய்லர், கடைசி நேரத்தில் தலைநகரில் தோன்றிய வேறு சில அரசியல் குழுக்களுடன் அரசாங்கத்தைப் பங்குபோடவேண்டியதாயிற்று.

சார்ல்ஸ் டேலர்பின்னர் நடந்த பொதுத் தேர்தலில், முன்னாள் போராளியான சார்ல்ஸ் டெய்லர்  ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டெய்லரின் கட்சிக்கு அயல் நாடான சியாரா லியோனிலிருந்து உதவி கிடைத்து வந்தது. லிபியாவும் ஆதரவளித்தது. இன்று ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நீதிமன்றம் சியாரா லியோன் தொடர்புக்காக விசாரணை மேற்கொள்ள விரும்புகிறது. வைரக்கற்கள் ஏற்றுமதி செய்யும் சியாரா லியோனை முன்பு ஆண்ட போராளிக்குழு “சட்டவிரோத” வைரக்கல் விற்பனையிலீடுபட்டு வந்தது. இதில் சார்ல்ஸ் டெய்லருக்கும் பங்கிருக்கலாம் என நம்பப்படுகிறது. நீண்டகாலமாக சர்வதேச வைர வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தன மேற்கத்தைய நாடுகள். லாபத்தில் பங்கு கேட்டு, உள்ளூர் அரசியல் சக்திகள் உரிமை பாராட்ட விரும்பியபோதுதான் பிரச்சினை வந்தது.

அன்று சொந்த நாட்டின் வளத்திற்காக உரிமை பாராட்டியவர்கள் அனைவரும், பின்னர் சர்வதேச மட்டத்தில் போர்க்குற்றவாளிகளாகத் தூற்றப்பட்டனர். இன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்படும் சார்லஸ் டெய்லர்,  பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாகவும் வேண்டப்படும் நபராகியுள்ளார். யுத்தம் நடந்த காலத்தில் டெய்லரின் கட்சியைச் சேர்ந்த போராளிகள் பல மனித உரிமை மீறல்களைச் செய்தது உண்மைதான். அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை, பாலியல் வல்லுறவுகள், எதிரிகளை அங்கவீனப்படுத்தியமை போன்ற பல குற்றச் செயல்கள் நடந்துள்ளன. ஆனால், இவற்றிற்கு டெய்லரின் குழு மட்டுமே பொறுப்பல்ல.

இன்று ஆட்சியில் இருக்கும் அரசபடைகளும் இதுபோன்ற குற்றங்களை இழைத்துள்ளன. இன்று செய்தி ஊடகங்களால் நல்லவர்கள் போல் காட்டப்படும் கிளர்ச்சியாளர்களும் மேற்கண்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். டெய்லரை விரட்டும் முயற்சியிலிறங்கிய அமெரிக்கா கிளர்ச்சியாளருக்கு மறைமுக உதவி வழங்கியது. சமாதானமும் நிலைநாட்டவென, ஐ.நா பாதுகாப்புச் சபையின் உத்தரவின்பேரில் வந்திறங்கியுள்ள, பிராந்திய வல்லரசு நைஜீரியா தலைமையிலான சமாதானப் படைகளுக்கும் அமெரிக்கா பின்னணியிலுள்ளது. சமாதானப் படைக்கு மேலதிக நிதி வழங்குமாறு அமெரிக்காவை நைஜீரியா கேட்டதிலிருந்தே இது தெளிவாகும்.

bush_africa-thumbமுன்னாள் அமெரிக்க ஜனாதிபது புஷ்ஷின் ஆபிரிக்க விஜயத்திற்கும், லைபீரியப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதற்கும் உள்ள தொடர்பென்ன ? இந்தத் திடீர் அக்கறைக்குக் காரணம் எண்ணை தான், வேறு என்ன?  அமெரிக்காவின் மொத்த எண்ணை இறக்குமதியில் 18 வீதம், ஆப்பிரிக்க கண்டத்தில்  இருந்து வருகின்றது.  பெருமளவு நீண்டகால எண்ணை ஏற்றுமதி நாடுகளான நைஜீரியா, அங்கோலாவிலிருந்து வருகின்றது. கம்றூன், சாட், சூடான் போன்ற இன்னபிற நாடுகளின் பெற்றோலிய உற்பத்தி வருங்காலத்தில் அதிகரிக்கப்படவிருக்கிறது. மேலும் ஆப்பிரிக்க எண்ணை, வளைகுடா எண்ணை போலன்றி உயர்தரமானது. அதாவது அதிகமாகச் சுத்திகரிக்கப்பட வேண்டிய தேவையில்லை. இவற்றைவிட, எண்ணைவள நாடுகளை சூழவிருக்கும்  கிணியா குடாக்கடலிலிருந்து, அத்லாந்திக் சமுத்திரத்தினூடாக, அமெரிக்கா நோக்கிய கப்பல் போக்குவரத்து இலகுவானது, மலிவானது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால் வருங்காலத்தில் ஆப்பிரிக்க எண்ணை உற்பத்தி அதிகரிக்கப்படும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

லைபீரியாவில் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த பிள்ளைகள் அமெரிக்காவில் உயர்கல்வி கற்றுத் திரும்புவது சர்வசாதாரணம். போர்க் குற்றவாளி டெய்லரும்  அவ்வாறான அமெரிக்கப் பட்டதாரிதான். இதைவிட 1997 ம் ஆண்டு சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் நடந்த பொதுத் தேர்தலில் ஜனநாயக பூர்வமாக பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிதான் டெய்லர்.  பல தடவை தாம் சர்வாதிகாரிகளுக்கெதிராக செயற்படுவதாகத் தெரிவிக்கும் “சர்வதேச சமூகம்” லைபீரியாவில் ஜனநாயகத்திற்கெதிராகச் செயற்பட்டது கவனிக்கத்தக்கது.

(தொடரும்)
vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

தொடர்புடைய பதிவுகள்:

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா –
காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம் !
ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை !
நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !
ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் !
கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள் !
அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD
கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்
சிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு!
நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு

தோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு முதலில் சுவிஸ் நாட்டிலும் பின்னர் அந்த நாட்டு அரசின் இனப்பாகுபாடு அரசியலால் வெறுப்புற்று நெதர்லாந்திலும் வாழ்பவர். அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, அதனால் ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் குறித்த சட்டங்களைத் தெரிந்து கொண்டமை, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம், நெதர்லாந்து கம்யூனிஸ்ட்டு கட்சியுடனான தொடர்பு, நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபட்டமை எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தையும் முக்கியமாக பல்நாட்டவரின் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அரசியலையும் கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இத்தளத்தில் பங்கேற்பதில் வினவு மகிழ்ச்சி அடைகிறது. அவரது வலைப்பூ முகவரி http://kalaiy.blogspot.com

சிறுகதை: ‘பால்’ திரிந்த வேளை!

பெண்ணுரிமை

சும்மாவா சொன்னாங்க ஆண அடிச்சு வளர்க்கணும்; பொண்ண புடிச்சு வளர்க்கணும்னு, ஒரு குடும்பம் நடத்துற பயலா இவன்? மணி ஆறாகுது.. இன்னும் தூங்கிட்டு கெடக்கான்…மாமியார் மரகதம்மாள் குரல் ஊடுருவ திடுக்கிட்டு எழுந்தான் மூர்த்தி.

அய்யய்யோ இவன வேற ஸ்கூலுக்கு கௌப்பணும்.. சாப்பாடு வேற கட்டணும்.. தலைவலின்னு நேத்து போட்ட மாத்திரை ஆளையே அசத்திடுச்சு… மனதில் பதட்டத்தின் ரேகைகள் கூட டேய் எழுந்திரு, எழுந்திருமகன் ராகுலை எழுப்ப கண்களை திறக்காமலே எழுந்தவன், அந்த இடத்திலே ஒண்ணுக்கு போக டவுசரைத் தூக்க.. டேய்.. டேய்.. மாடு கண்ணத் தொறயேன்.. என்று கத்தியபடி.. பாத்ரூமுக்குள் அவனைத் தள்ளிக் கொண்டு போய் நிறுத்தினான்.

மனைவி முகத்தைப் பார்த்தே சரியில்லை என்று புரிந்து கொண்ட மூர்த்தி அவசர அவசரமாக கேஸ் அடுப்பைப் பற்றவைத்து பால் பாத்திரத்தை வைத்தான்.

ஆமாம்.. இவன் டீயப் போடுறதுக்குள்ள.. நான் ஆபீசுக்கே போய் சேர்ந்துடுவேன். வந்து வாச்சுது பாரு எனக்குன்னு.. ஒரு குடும்பப் பய காலைல எழுந்தமா, வேலையப் பாத்தமான்னு இருக்கணும்.. பொண்டாட்டில்ல வந்து எழுப்ப வேண்டியிருக்கு.

தோ.. ரெடியாயிடுச்சு.. இடைப்பட்ட நேரத்தில் அரையும் குறையுமாக பல் துலக்கியபடி.. ராகுலைத் தேட, அவன் பாத்ரூமிலேயே நின்று கொண்டிருந்தான். எருமை மாடு.. ஒண்ணுக்கு போக சொன்னா அங்கேயே நின்னுக்கிட்டு கெடக்கிறியே.. வா இங்க.. நீங்க கொஞ்சம் அவன் முகத்த கழுவக் கூடாதா? மனைவி சுதாவைப் பார்த்து கேட்டபடி ராகுலை இழுத்து வைத்து அவன் தேம்பத் தேம்ப முகத்தை பாத்திரம் கழுவுவது போல சலிப்புடன் கழுவி எடுத்தான்.

நீ சீக்கிரம் எழுந்து வேலையப் பாக்காம.. கோவம் வேற வருதா.. வேலைக்கு லாயக்கில்ல. வாய்தான் நீளுது.. ஆயி, அப்பன் வளர்ப்பு அப்படி.. சுதா தலைவாரிக் கொண்டே பொரிந்து தள்ளினாள்.

மரகதம்மாளும் சேர்ந்து கொண்டாள்.. எல்லாம் உன் அவசரம். வேற பையன் பாக்கலாம்னா பாத்தவுடனேயே புடிச்சு போச்சுன்ன.. உங்க அப்பாவும் பாய்ஞ்சுகிட்டு முடிச்சாரு ! அந்த வைத்தீஸ்வரன் கோயில் சோசியன் அப்பவே சொன்னான்.. இது கேட்ட நட்சத்திரம்.. ஒத்து வராதுன்னு. அதான் கேட்டவங்கள அடிச்சது.. அவுரு போய் சேர்ந்துட்டாரு .. ! இப்ப குத்துது கொடையுதுன்னா..

எதிர்த்துப் பேசினால் வம்பு அதிகமாகும் என்பதைப் புரிந்து கொண்ட மூர்த்தி.. மாமியாரை ஒரு திராவகப்பார்வை மட்டும் பார்த்துவிட்டு திரும்புவதற்குள் அவன் மனசாட்சியைப் போலவே சோறும் பொங்கியது. அவசர அவசரமாக அடுப்பை சின்னது செய்துவிட்டு.. டீ ஆற்றி எடுத்து வந்தான்.. இந்தாங்க டீ..

மணி என்னாவுது.. உன் டீய குடிச்சிகிட்டு உட்கார்ந்தா அங்க வேலை போயிடும்.. மொதல்ல டிபனை கொடு.. கௌம்புறேன்… மனைவி அரக்க பறக்கடிக்க.. வேகமாக மதிய உணவைக் கட்டி டிபன் பாக்சு அடியை கைலி தலைப்பால் துடைத்துக் கொடுத்தான்… இட்லி ரெண்டாவது சாப்புட்டு போங்க.. கெஞ்சினான்.. திருப்திதான.. நீயே தின்னுட்டு நிம்மதியா தூங்கு.. மேற்கொண்டு பேச நேரம் அனுமதிக்காததால் வசவியபடியே கிளம்பிப் போனாள் சுதா.

சே ஒருநாள் லேட்டா எழுந்திருச்சது எவ்வளவு தப்பா போச்சு.. என்று தன்னைத்தானே நொந்தபடி.. மகனுக்கு அவசர அவசரமாக இட்லியை வாயில் திணித்தபடி.. மாமி ராகுலை ஸ்கூல்ல விட்டு வர்றீங்களா.. நான் தண்ணி தூக்கியாந்துர்றேன்.. மூர்த்தியின் வேண்டுகோளைக் கேட்டு ஆத்திரமானாள் மரகதம்மாள்.

என்னமோ நடக்குதாம் கதையில.. எலி ரவிக்கை கேட்டுதாம் சபையிலன்னு.. நானே மவ சாப்பிடாம போயிட்டாளேன்னு வேதனையில இருக்கேன். இந்த கால வெய்யில்ல நம்பாள முடியாதுப்பா.. இதுவும் வேற ரோட்ல எங்கிட்ட அடங்காது..என்று வெடுக்கென மறுத்தாள்.

வேறு வழியில்லாமல் மகனை ஸ்கூலுக்கு கொண்டுபோய் விட்டுவிட்டு தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் நினைப்போடு ஓடிவந்தவனை, என்ன மூர்த்தி நேத்து சொர்க்கம் பாத்தியா.. என்று எதிர்வீட்டு மணி ஆரம்பிக்க.. நீ வேற நம்ப பாடே நரகமா இருக்கு! ஒரு நாள் லேட்டா எழுந்திருச்சதுக்கு இன்னிக்கு நான் பட்டபாடு எனக்குதான் தெரியும். இந்தக் கெழம் வேற மவளை நிண்டி விடுது.

என் மாமியார் பரவாயில்ல.. கூடமாட வேல பாக்குது. மவள் புரியாம பேசுனா கூட, அவன் பொழுதுக்கும் வேல செய்யுறான்.. தண்ணி கூட எழுந்திருச்சு குடிக்கக் கூடாதான்னு மவளையே கண்டிக்கும். என் வீட்ல இப்படி.. உனக்கு வாச்சது அப்படி.. என்னா பண்றது. ஆணா பொறந்தா எல்லாத்தையும் அனுபவிச்சுதான் ஆகணும்..

சரி வாரேன்.. மலையாய் குவிந்திருக்கும் துணியும், சமைத்த பாத்திரங்களும் கண்ணில் நிழலாட.. தண்ணீர் குடத்தின் எடை அதை விட குறைவானது போல வேகமாக வந்தான் மூர்த்தி.. களைப்பும், வறட்சியும் ஒருசேர, காலையில் மனைவிக்கு போட்டு அவள் குடிக்காமல் வைத்துச் சென்ற தேநீர் கண்ணில் பட்டது. ஆறிப்போய் அந்நியமாக இருந்த தேநீரை ஆதரவாக ஊற்றிக் கொண்டான். துணிகளை அலசி எடுத்து நிமிரும்போது இடுப்பு தனியாகக் கழண்டு விழுவது போல் வலி பின்னியெடுத்தது. தஸ், புஸ் என்று நாவில் குழறிய காற்றின் வழி அம்மாஎன்று தனக்குத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

மதியம் சாப்பிடவே மணி இரண்டரை ஆனது. சற்று கண்ணயர்ந்த வேளையில் கேஸ்.. சார் கேஸ்என்று குரல் வர வெடுக்கென விழித்துக் கொண்ட மூர்த்தி வர்றேன்என்றாவாறு கூடத்தில் படுத்திருந்த மாமியாரை லாவகமாகக் கடந்து போனான். காஸ் சிலிண்டரை வாங்கி வைத்த கையோடு கடிகாரத்தைப் பார்த்தான்.. மணி மூணரை. இனி எங்கே படுப்பது.. போய் மகனை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வர வேண்டும். மூர்த்தி வேகமாகக் கிளம்பினான்.

என்ன ராகுலப்பா, ரேசன்ல இந்த அம்பது ரூவா சாமான்லாம் வாங்கிட்டீங்களா?” பையனை அழைத்துப்போக வந்திருந்த ராஜன் விசாரிக்க, மூர்த்தி சலிப்போடு எங்க வாங்கறது.. மொதல் வாரம் போனா அப்புறம் வாங்குறான். கடைசி வாரம் போனா இல்லேங்குறான். நமக்கிருக்குற வேலைல சரியா போக முடியாது.. இன்னிக்கு கூட போகலாம்னா.. மிளகா, மல்லி வேற காய வச்சிருக்கேன். கொழம்புப் பொடியே இல்ல.. அத மொதல்ல அரைச்சிட்டு வரணும்.. இன்னொரு பையனிடம் பேசிக்கொண்டே விளையாடிக்கொண்டு வந்த ராகுலைக் கண்டதும் டேய் இங்க வாடா..அவசரமாய் கையைப் பிடித்து இழுத்தான். கண்கள் பையன் மேல் இருந்தாலும் மனம் அடுத்த வேலையில் மூழ்கியிருந்தது.

மிளகாய்த்தூள் அரைத்து வருவதற்குள் காத்திருப்பும் புழுக்கமும் இன்னொருமுறை குளிக்கலாம் போலிருந்தது.. இந்தக் களைப்புக்கு யாராவது ஒரு காபியோடு வந்து கையில் கொடுத்தால் அப்படியே கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் போல உடல் ஏங்கியது.. காபியா போட்டிருக்க.. மணி ஆறாகுதேன்னு கேட்டேன்..மாமியார் குரல், நினைப்பில் தீ மூட்ட.. அடுப்படிக்கு நகர்ந்தான்.

ஏய் காப்பி குடிச்சிட்டு.. புக்க எடுத்து வச்சு படி.. நான் காயற துணிய எடுத்துட்டு வந்துடறேன்.. இந்தாங்க.. மாமியாருக்கு காபி டம்ளரை தந்துவிட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்தான் மூர்த்தி.

மூர்த்தி ! ஏம்பா ராத்திரிக்கு என்ன செய்யப் போற!.. சாப்பாடா? டிபனா?.. இடுப்பொடிய வேலை பார்த்துவிட்டு சற்றுநேரம் வேலைகளை மறந்து தலைசீவிக் கொண்டிருந்தவனை மரகதம்மாளின் பேச்சு எரிச்சலூட்டியது. பீறிட்டுவந்த கோபத்தை அடக்கிக் கொண்டவன் நையாண்டி தோரணையில் ஏன்! என்ன வேணும் உங்களுக்கு? என்று நேர்படவே கேட்டான்.

எனக்கு ஒண்ணுமில்ல.. பொழுதுக்கும் சோறு, சோறுன்னு மூஞ்சில அடிச்சமாதிரி இருக்கும்பா உன் வீட்டுக்காரி.. காலைலயே வேற மொணவிகிட்டு போனா.. அவளுக்கு பூரின்னா புடிக்கும்.. பேசாம, பூரியே போட்டுறேன்..

அவளுக்கு புடிக்குமோ, உனக்கு புடிக்குமோ! என்று வாய்க்குள்ளேயே முணகிக் கொண்டவன்.. வெங்காயத்தையும் அரிவாள்மனையையும் எரிச்சலோடு கொண்டுவந்து வைத்தான். மர கழண்டு போச்சு.. சே!என்று மூர்த்தி சலித்துக்கூற.. வெடுக்கென ஆனந்தம் டி.வி. தொடரில் மூழ்கியிருந்த மாமியார் திரும்பினாள். சுதாரித்துக் கொண்ட மூர்த்தி வாங்கி ஒரு மாசம் கூட ஆகல தேங்கா துருவி கழண்டுகிச்சு..!என்றான் மாமியாரைப் பார்த்தவாறு.. தேங்காய் துருவியையும், மருமகன் கண்களையும் மாற்றி மாற்றி பார்த்தபடி மரகதம்மாள் சந்தேகப் பார்வையுடன் டி.வி. பக்கம் முகத்தைத் திருப்பியபடியே வாங்கறப்பவே பாத்து வாங்கலேன்னா இப்படித்தான்என்றாள் தன் பங்குக்கு. பாக்குறப்ப எல்லாம் நல்லாத்தான் தெரியுது.. பழகப் பழகத்தானே தெரியுது.. சுத்த வேஸ்ட்டுன்னு..மூர்த்தியும் விடுவதாயில்லை. மரகதம்மாளும் ஏதோ கூற வாயெடுக்க.. அலுவலகப் பையைக் கழட்டிய களைப்புடன்.. சுதா வீட்டிற்குள் நுழைந்தாள்.

மனைவி வந்ததும் அரிவாள்மனையைப் படுக்க வைத்தபடி ஒரு டம்ளர் தண்ணீரோடு பின் தொடர்ந்தான் மூர்த்தி.. என்ன வெங்காயம் வாட வருது.. அதே கையோட தண்ணி மொண்டியா.. கைய கழுவிட்டு வேற எடு.. அய்யோ!.. என்று தலையில் தட்டிக் கொண்டாள்.

அப்பாடா இந்த பஸ்ல வர்றதுக்குள்ள உடம்பே விண்டு போவுது.. என்று அவள் முடிப்பதற்குள் கூடத்தில் டி.வி.க்கு நேராக ஈஸி சேரை தயாராக வைத்தான் மூர்த்தி. டி.வி.யின் ஆனந்தத்தில் அவளும் பங்கெடுத்துக் கொண்டாள். பார்த்துக் கொண்டே இருந்தவளுக்கு கண் எரிச்சல் தந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவள் அறிவில்ல இப்பதான் அலுத்துப் போயி வந்து உட்கார்ந்துருக்கேன்.. பக்கத்துல உக்காந்து வெங்காயம் நறுக்குறியே.. கண் எரியுதுல்ல.. இதைக் கூட சொல்லணுமா.. எடு .. அந்தப் பக்கம்.. போ உள்ளாற.. சத்தமாகக் கத்தினாள்.

அதானா.. நான் கூட ரொம்ப நேரம் டி.வி. பாக்குறோமே, அதான் கண் எரியுதோன்னு பார்த்தேன்.. ஏம்பா அந்த வெங்காயத்த தண்ணியில போட்டு நறுக்கக் கூடாது.. மாமியாரும் சேர்ந்து கொண்டாள். டி.வி. பார்க்கும்போது குறுக்கே மிக்சி போட்டால் வேறு மனைவிக்கு கோபம் வரும் என்பது தெரிந்ததால், துருவியவைகளை அரைக்காமல், முதலில் தயார்செய்து வைத்திருந்த பூரிமாவை வட்டவட்டமாக பூரிக்கட்டையால் தேய்க்கத் தொடங்கினான். கூடத்தில் உட்கார்ந்தாலாவது கொஞ்சம் காற்றோட்டம் வாய்த்திருக்கும்.. ஆறுக்கு மூணு அடுப்படியில் புழுங்கித் தொலைத்தது, முதுகுத்தண்டில் வலி ஊர்ந்தது. அவனைப் பார்த்து பரிதாபப்பட்ட மாதிரி பூரிமாவு அவன் இழுத்த இழுப்புக்கு கொஞ்சம் இணங்கி வந்தது.

என்ன ரெடியா? மொதல்ல அவனுக்கு வையி.. மகனுக்கு கேட்கும் சாக்கில் அடுப்படி நிலவரத்தை ஆராய்ந்தாள் சுதா. தோ குருமா.. ரெடியாயிடுச்சு.. ராகுல் தட்டில் ஆவி பறந்தது. பூரியும், குருமாவும் அப்படியே எனக்கும் வச்சிடேன்?.. தோ எடுத்துட்டு வர்றேன்.. மனைவிக்கு கருகாமல் எடுக்க வேண்டுமே என்ற பயத்துடன் கொதிக்கும் எண்ணெயிடம் இரக்கம் வேண்டியவனைப் போல பார்த்தான் மூர்த்தி.

இந்தாங்க.. சுதாவுக்கு பூரி வைத்த வேகத்தில் அடுப்படிக்கு ஓடினான். தண்ணி உங்க அப்பன் வைப்பானா? தண்ணி வக்கிற பழக்கமே கிடையாது.. வளர்த்திருக்காங்க பாரு.. சுதா முன்பு பதட்டத்துடன் வந்து டம்ளரை வைத்தான். சுடச்சுட நாலு பூரியை அமைதியாக விழுங்கியவள், “ஊம் இது என்ன குருமாவா சரவண பவன்ல வெக்கறானே அது எப்படி இருக்கு? அவன் மட்டும் என்ன வானத்துலேர்ந்து வர்ற பொருளை வச்சா செய்யுறான்.. உனக்குந்தான் எல்லாப் பொருளும் வாங்கித் தர்றேன்.. ஒரு டேஸ்ட் இல்ல. நீ எல்லாம் டிபனுக்கு லாயக்கில்ல… வேஸ்டு… பேசாம சோறு பொங்க வேண்டியதுதான்.. அதுக்குத்தான் லாயக்கு.. எங்க சோறு இருக்கா? அதையாவது தின்னு தொலைக்கலாம்.. சுதாவின் கோபம் பூரி போடுகையில் கையில் தெறித்த எண்ணெயை விட மூர்த்தியின் மேல் தனலாக விழுந்தது.

அய்ந்தாறு பூரி தின்ற பிறகு வழக்கம்போல அவள் இப்படி ஆரம்பிப்பாள் என்று தெரிந்து, ஏற்கெனவே அவன் கொஞ்சம் சோறு செய்திருந்தது நல்லதாகிப் போனது. ஏதோ வேண்டா வெறுப்பாகச் சாப்பிட்டதைப் போல முழுச் சோற்றையும் சாப்பிட்டாள் சுதா.. சாப்பிட்டு முடித்து அடுத்து வெற்றிலை பாக்கைப் போடுபவள் போல.. டி.வி.க்கு நேராகப் போய் அரசிராதிகாவின் வசனத்திற்கு ஏற்ற மாதிரி வாயை அசைத்துக் கொண்டு கிடந்தாள். ஒரு இடத்தில் ராதிகா தேசப்பற்றோடு வசனம் பேச தன்னையறியாமல் கொட்டாவி விட்டபடி படுக்கைக்குப் போனாள்.

மாமியாரும், மகனும் கூட படுத்துவிட்ட கூடத்தில் அரசி ராதிகாதனியாகப் பேசிக் கொண்டிருந்தாள். டி.வி.யைக் கூட யாரும் அணைக்கவில்லை. அடுப்படியில் எந்த சுவாரசியமும் இல்லாமல் ஒரு பாத்திரம் விடாமல் துலக்கி வைத்தான் மூர்த்தி.. பொத்தென்று விழுந்து படுத்தால் தேவலாம் என்று நினைத்தான். மனைவிக்கு கால் அமுக்காவிடில் அதன் பாதிப்பு மறுநாள் பேச்சில் வரும் என்பதால்.. சுதாவின் கால்களைப் பக்குவமாகப் பிடித்துவிட்டான். இதமாக இருக்க.. அப்பா அப்படித்தான் இந்தக் காலையும் புடி.. என்று புரண்டு படுத்தாள் சுதா.. தூக்கத்தை விடுத்து அமுக்கிவிடச் சொல்வதிலேயே குறியாக இருந்தாள் .. ஏய்! அதே இடத்துலேயே அமுக்குறீயே.. ஒருநாள் சொன்னா தெரியாதா.. இந்தப் பாதத்தைப் புடியேன்.. தானா அறிவா யோசிக்க மாட்டியா!.. கண்களைப் பிசைந்த தூக்கத்தைக் கலைத்தபடி அவள் சொன்னபடியெல்லாம் கைகளை அழுந்தினான்.

அப்படித்தான்.. ரெண்டு நாளா அந்தப் பையன் டவுசர்ல பட்டன் இல்லாம.. ஊக்க மாட்டி வுடறியே ஒழிய.. சும்மா இருக்குற நேரத்துல அதை தச்சி வைக்கக் கூடாது.. இல்ல டெய்லர்கிட்ட தரக்கூடாது.. எல்லாம் உனக்கு சொல்லணும்.. என்ன மூளையோ.. சுதா பொரிந்து தள்ள.. அழுகை பீறிட்டது மூர்த்திக்கு.. காலைலேர்ந்து படுக்குற வரைக்கும் உடம்பு நோவுது.. ஒரு நேரம் ஓய்வில்ல.. ஆள் வைக்காமல் அவ்ளோ வேலை பாக்குறேன்.. உங்களுக்கு இரக்கமே இல்லையா.. சும்மா இருக்குறப்பன்னு சொல்றீங்களே.. எப்போ சும்மா இருக்குறேன் சொல்லுங்க.. மறுமொழி பேசியதுதான் தாமதம், சுதாவுக்கு சூடு ஏறியது. ஓகோ! அப்ப நான்தான் சும்மா இருந்தனா.. இதுல எனக்கு இரக்கம் வேற இல்லாம வேல வாங்குறனா!.. திமிரு அதிகந்தான் ஆயிடுச்சு.. வாய்க்கொழுப்ப கொறச்சா சரியா போயிடும்.. விடு கால..என்று கடுப்போடு ஓங்கி ஒரு உதை உதைத்தாள்.

அந்த உதை நெஞ்சில் நங்கென்று விழ.. நிலை குலைந்த மூர்த்தி என்று அலறியே விட்டான்.

மூர்த்தியின் அலறலைக் கேட்டு பதட்டத்துடன் கணவன் அருகே வந்தாள் சுதா. கையில் கொண்டு வந்த பால் டம்ளரை தள்ளி வைத்துவிட்டு, கணவனின் தோளை உலுக்கியபடி என்னங்க.. என்னங்க.. என்று எழுப்பினாள். வெடுக்கென்று தூக்கத்தில் இருந்து விழித்த மூர்த்தி ஒருவாறு பிரமை பிடித்தவன் போல மனைவியை உற்றுப் பார்த்தான். கண்களைக் கசக்கியபடி மீண்டும் இமைகளை உதறி ஏதோ எல்லாம் தலைகீழாய் மாறிப்போனது போல அதிர்ச்சியடைந்தவன் சுற்றுமுற்றும் பார்த்தபடி மனைவியை வெறித்தான். ஏங்க, என்னங்க ஆச்சு.. ஏன் அலறுனீங்க? தூக்கத்துல ஒரே சத்தமா கத்துனீங்க.. ஏதாவது கெட்ட கனவா.. என்றபடி ஆதரவாக அவன் கைகளைப் பிடிக்க, இவ்வளவு நேரம் நடந்ததெல்லாம் கனவுதான் என்ற புரிதல் மூர்த்திக்கு வந்தது. இருந்தாலும் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் அவன் கண்களில் பீதி உறைந்திருந்தது. சரி, சரி எதாவது பயந்தா கொணமா இருக்கும்.. நான் வேலைய முடிச்சுட்டு வர்றதுக்குள்ள தூங்கிட்டீங்க. இந்தாங்க இந்தப் பாலைக் குடிங்க.. என்று டம்ளரை எடுத்தவள், “அய்யய்ய, பால் திரிஞ்சிடுச்சு.. இருங்க வேற ஆத்தி எடுத்துட்டு வர்றேன்என்று அவனிடம் ஆறுதலாகப் பேச அவனோ ஏதோ யோசித்தவன் போல பரவாயில்ல.. கொடு..! கொடுஎன்று அவள் முகத்தையே வெறித்தபடி டம்ளரை வாங்கப் போனான்.

அவனுடைய நடவடிக்கை விசித்திரமாகப்பட, லேசான சிரிப்புடன், “என்ன கனவு கண்டதுல ஆளே மாறிட்டீங்களா.. நல்லா கத்துனீங்க. இருங்க வேற கொண்டாறேன்’’, என்றபடி நகர்ந்தாள். மனைவி சென்றதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மூர்த்தி. அப்பாடா நல்லவேளை கனவு என்பது போல விழித்தான்.

· துரை. சண்முகம்,
______________________________________

புதிய கலாச்சாரம் மே 2009

______________________________________

பரகாலஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள்!

பத்ரி

தில்லைக் கோவிலை அரசு மேற்கொண்டதை அடுத்து அதிர்ச்சியடைந்த இந்து மதவெறி அமைப்புக்கள் அரசு நிர்வாகத்தால் அந்தக் கோவில் சீரழியும் என அரற்றினார்கள். அதையே தினமணி தலையங்கம் எழுதி வழிமொழிந்தது.

உண்மையில் தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் பார்ப்பன மேல்சாதியினரிடத்தில் இருந்தபோது எவ்வளவு கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பது நீதிக்கட்சி காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்டன. இதெல்லாம் பழங்கதையென்றால் இப்போதைய நிலவரம் என்ன?

சங்கரமடத்தில் கொலை முதல் காமக்களியாட்டம் வரை எல்லாம் நடந்திருக்கின்றன. திருவாடுதுறை ஆதீனத்தில் இளையவர் பெரியவரைத் தீர்த்துக்கட்ட போட்ட திட்டம், தில்லைக் கோவிலின் ஆண்டு வருமானம் வெறும் முப்பதாயிரம் ரூபாய் எனக் கணக்கு காட்டும் தீட்சிதர்களின் கொள்ளை.. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்தப் பட்டியலில் சமீபத்திய வரவு திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்) இருக்கும் பரகால ஜீயர் மடம். இந்த மடத்தில் நடக்கும் கூத்துக்கள் பற்றி குமுதம் ரிப்போர்ட்டர் 29.01.09 இதழில் அதன் நிருபர் ஷானு விரிவாகப் பதிவு செய்திருக்கின்றார்.

திருவரங்கத்தில் இது போன்று பல ஜீயர் மடங்கள் இருக்கின்றன. இவற்றுக்கு ஏராளமான சொத்துக்களும், அந்த சொத்துக்களை மடத்தின் அதிகாரபீடத்தில் உள்ளவர்கள் பினாமிகள் மூலம் தனியார் வசம் விற்பதும், அதில் ஏராளமான ஊழலும், இதற்கு உதவ மறுக்கும் சாமியார்களை ஊழல் செய்யும் சாமியார்கள் வெளியே தெரியாமல் கொலை செய்வதும் இங்கே சகஜம். வைணவத் தலமான திருவரங்கம் இந்திய அளவில் புகழ் பெற்றிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதும் அவர்கள் இந்த மடங்களுக்கு தான தர்மம் செய்வதும், அது பின்னர் ஸ்வாகா செய்யப்படுவதும் இங்கு வாடிக்கைதான்.

பெருமாளைப் பாடும் பாகவதர்கள் வந்தால் தங்குவதற்காக அந்தக்கால பணக்காரர்கள் சிலர் கட்டிய மடம்தான் இந்த பரகால ஜீயர் மடம். மடத்திற்கு திருச்சியைச் சுற்றி பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த வருமானத்தைக் கொண்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதும், மடத்தில் உள்ள சாமிக்கு பூஜை செய்வதும் நடைமுறையாம். இம்மடத்தின் சொத்து மதிப்பு அறுபது கோடிக்கு அதிகமாம்.

ஒரிசாவிலிருந்து வந்த பார்ப்பனரான பத்ரி நாரயண ராமானுஜதாசன் ஆரம்பத்தில் இம்மடத்திற்கு சமையல்காரராக வந்தவர். பின்னர் மடத்தின் இன்றைய ஜீயரான லக்ஷ்மண நாராயண ஜீயரின் பலவீனங்களை அறிந்து கொண்டு அதற்கான தேவைகளைச் செய்து கொடுத்து, அவரை மடக்கி பவர் ஆஃப் அட்டர்னிவாங்கிக் கொண்டு அடுத்த ஜீயராகப் போகின்றவர் என்ற தகுதியில் சொத்துக்களை அனுபவித்து வருகிறார். சைவ ஆதீனங்களைப் போல வைணவ ஜீயர்கள் பிரம்மச்சாரிகள் கிடையாது. எல்லா ஜீயர்களும் பேஷாக ஒன்றுக்கு இரண்டாகக்கூட திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டிகளைப் பெற்றெடுத்து சுபமாக வாழ்க்கை நடத்தலாம். இது ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள் திருமணம் செய்யமாட்டார்கள், புராட்டஸ்டண்டு பாதிரியார்கள் திருமணம் செய்யலாம் என்பதோடு ஒப்பிடத்தக்கது.

மற்றபடி பாதிரியார்களும், ஆதீனங்களும் தத்தமது பாலியல் தேவைகளைக் கள்ளத்தனமாக அனுபவிப்பது வேறு விசயம். ஆனால் ஜீயர்களுக்கு இப்படி வசதி இருப்பதால் மடத்திற்கு வரும் பக்தைகளைப் பணத்தால், வசதியால் மடக்கிப் பெண்டாளுவது திருவரங்கத்துக்கே தெரிந்த விசயம். அப்படித்தான் திருச்செங்கோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவியான செல்வி என்ற பெண் தன் தோழியுடன் இந்த மடத்திற்கு வந்தார். எப்படியோ அந்தப் பெண்ணை வசியம் செய்து கொண்ட பத்ரி அவளது பெற்றோருக்கு தெரியாமல் மறைத்தும் வைத்திருக்கின்றார். இத்தனைக்கும் இந்த பத்ரிக்கு ஒரிசாவைச் சேர்ந்த கோதாராணி என்ற மனைவியும் உண்டு.

ஆனால் நாளொன்றுக்கு ஒரு மாது என்று அனுபவிக்கும் வசதி கொண்ட பத்ரி மனைவியை எல்லாம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. 83 வயதான ஜீயரும், கோதாராணியும் அங்கே ஆயுள்கைதிகளைப் போல காலந்தள்ளுகிறார்கள். அறுபது கோடி சொத்து என்பதால் பத்ரிக்கு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என எல்லா மட்டங்களிலும் செல்வாக்கு உண்டு.

இந்நிலையில் செல்வியின் பெற்றோர் தமது மகள் காணாமல் போனது குறித்தும், அவள் பத்ரியின் கட்டுப்பாட்டில் இருப்பதை வைத்தும் திருவரங்கம் காவல் நிலையத்தில் அழுதவாறே புகார் கொடுத்தனர். அதனால் செல்வியின் பெற்றோருடன் அந்த மடத்திற்கு சென்ற போலீசாரை பத்ரி திமிருடன் எதிர்த்தார். இது இந்துத் துறவியின் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல், இந்துப் பீடத்தின் மீது தாக்குதல், இந்து மதம், அதன் சம்பிரதாயங்கள் மீது தாக்குதல் எனச் சாமியாடியிருக்கின்றார். உயர்மட்ட அதிகாரிகளுக்கும் போன் போட்டு இந்தியிலும், ஆங்கிலத்திலும் புகார் செய்திருக்கின்றார்.

இதனால் பதறிய போலீசு அவரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி செல்வியை மீட்டு வந்தனர். செல்வியோ தான் மேஜர் என்றும், தான் பத்ரி சாமியாருடன்தான் வாழப் போவதாகவும் பேச, செல்வியின் தந்தை வயது கொண்ட பத்ரியோ, சட்டப்படி தான் செல்வியைத் திருமணம் செய்வதில் என்ன தவறு எனப் போலீசிடம் சட்டம் பேசியிருக்கின்றார். எனவே இந்தப் பிரச்சினையைப் போலீசார் திருவரங்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு தள்ளி விட்டனர். அதன்பிறகு அங்கு நடந்த பஞ்சாயத்தில் செல்வி கவுன்சிலிங் செய்யப்பட்டு பெற்றோருடன் அனுப்பப்பட்டார்.

ஒரு செல்வி போனால் என்ன இன்னும் ஓராயிரம் செல்விகள் கிடைப்பார்கள் என்பதனாலோ என்னவோ பத்ரி அலட்டிக் கொள்ளாமல் மடத்திற்கு திரும்பினார். இவ்வளவுக்கும் இந்தத் திமிரெடுத்த ஒரியாப் பார்ப்பானுக்கு பிளட் கேன்சராம். அதனால் செல்வி கோவிலுக்குச் சென்று அங்கே படுத்துக் கிடக்கும் பெருமாளிடம் தன் வாழ்க்கையில் பாதியைப் பத்ரிக்கு கொடுக்குமாறு வேண்டிக்கொள்ள அதைப் பெருமாளும் அங்கீகரித்து விட்டதாகவும் இந்தப் பத்ரி காவல்நிலையத்தில் பேசியிருக்கிறான் என்றால் என்னத்தைச் சொல்ல?

தற்போது இந்த மடத்தின் தொண்டுக் கிழமான லக்ஷ்மண நாராயண ஜீயரைக் காணவில்லையாம். எனவே அடுத்த ஜீயர் நான்தான் என பத்ரி தன்னைத்தானே நியமித்துக் கொண்டார். உண்மையில் பெரிய ஜீயரைப் பத்ரி கொன்று விட்டதாகவும், அவரை அடுத்த ஜீயராக்க அனுமதிக்கக் கூடாது என்றும் ஒரு வைணவ ஐயங்கார் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார். மடத்தின் அதிபர் பதவியைக் கைப்பற்றுவதில் இந்த ஆன்மீகவாதிகள் கொலை வரைக்கும் போவார்கள் என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

இரத்தப் புற்றுநோயினால் சாகப்போகின்ற பார்ப்பன ஐயங்கார் ஜீயருக்கே இவ்வளவு கொழுப்பு இருக்கின்றது எனில் நோயில்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் ஜீயர்களை நினைத்தால் திகிலாக உள்ளது. ஒரு தில்லைக் கோவிலை அரசுடைமையாக்கியதைப் போல எல்லா ஜீயர், ஆதீனங்களையும் அரசு கைப்பற்றி மடத்தலைவர்களுக்கு மடத்திலேயே ஏதாவது எடுபிடி வேலைகள் கொடுப்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதற்கு ஒரே வழி!

மற்றபடி பெண்டாளும் ஒரு ஃபிராடு சாமியாரைக் கைது செய்யப் போனால் அது இந்துமதத்திற்கு ஆபத்து வருகிறது, இந்துமத சம்பிரதாயங்களின் மீதான தாக்குதல் என்றால் இதைவிட இந்து மதத்தை நாம் கேவலப்படுத்தத் தேவையில்லை. திருவரங்கத்தானைப் பார்ப்பதற்கு பாரததேசம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களுக்கு இந்த ஜீயர்களின் உண்மைக் கதைகளை முத்து காமிக்ஸ் போல படக்கதையாகப் பல்வேறு மொழிகளில் வெளியிட்டால் அது நிச்சயம் இந்துமதத்திற்கு செய்யப்படும் பேருதவியாக இருக்குமே!

-புதிய கலாச்சாரம், மே’2009

புதிய கலாச்சாரம் மே 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

தொடர்புடைய பதிவு

‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் !

வாழத்துடிக்கும் பெண்ணினம் ! வாழ்க்கை மறுக்கும் சமூகம் !

வாழத்துடிக்கும் பெண்ணினம்! வாழ்க்கை மறுக்கும் சமூகம்!!

மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம். சமையலறையிலும், குழந்தைப் பேறுவளர்ப்பிலும், பாலியல் இச்சைக்காகப் படுக்கையறையிலும் காலங்காலமாகக் கட்டிப் போடப்பட்ட பெண்கள், மனித குல வரலாற்றில் தங்களுக்கும் சரிபாதிப் பங்குண்டு என வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டு செந்நீர் சிந்தி, சில உயிர்களைப் பலிதானமிட்டு உணர்ந்த நாள் மார்ச் 8. ஆனால் 21 ஆம் நூற்றாண்டில் மனித சமூகம் அடியெடுத்து வைத்திருக்கும் இக்காலத்திலும், நவீன வாழ்க்கையின் அடையாளமாக எத்தனையோ வசதிகள் சகஜமாகிவிட்ட இச்சூழ்நிலையிலும் பெண்கள் தங்கள் தளைகளை அறுக்க முடியாமல் அடிமைகளாக நீடித்திருக்கும் நிலையே தொடர்கின்றது.

முக்கியமாக ஒரு பெண் தன் காதலை, திருமணத்தை, குடும்பத்தை, வேலையை, மொத்தத்தில் வாழ்வை தான் விரும்பியபடி தெரிவு செய்யும் சுதந்திரம் இல்லை. வேலைக்குச் சென்று தனது பொருளாதார சுயேச்சை நிலையை அடைந்திருக்கும் பெண்ணுக்குக் கூட முழுச் சுதந்திரத்தை இந்தச் சமூகம் கொடுத்து விடுவதில்லை. சமூகம் மரபாகப் பின்பற்றி வரும் எல்லாப் பிற்போக்குத்தனங்களுக்கும் பெண்தான் முதல் பலிகடாவாகின்றாள். சாதி, மத, இனங்களின் கவுரவமே ஒரு பெண்ணின் தூய்மையைவைத்தே அளவிடப்படுகின்றது. கீழ்க்கண்ட இரண்டு உண்மைச் சம்பவங்களைப் பார்த்துவிட்டு இந்த விமரிசனத்தை மேற்கொண்டு பரிசீலிக்கலாம்.

___________

ரோடு மாவட்டம், குன்னத்தூரைச் சேர்ந்தவர் சங்கீதா. வெண்ணெய்க்குப் பிரபலமான ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் சதாசிவம். சொந்த மண்ணில் வாழ வழியில்லாதவர்களுக்கு சற்றே சிரமமென்றாலும், ஒரு குறைந்தபட்ச வாழ்வை உத்திரவாதம் செய்யும் திருப்பூருக்கு இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பதற்கு வந்தனர். தமிழகத்தின் தெற்கு, கிழக்கு, மேற்கு என எல்லாப் பகுதிகளிலுமிருந்தும் இலட்சக்கணக்கான தொழிலாளிகள் திருப்பூரில் குவிந்துள்ளனர். பனியன் தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கில் ஆண்களும், பெண்களும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருப்பதால் மற்ற ஊர்களில் சிரமப்படும் காதல் வாழ்க்கை இங்கே ஒப்பீட்டுரீதியில் சற்றே சுலபமானது எனலாம்.

அப்படித்தான் சதாசிவமும், சங்கீதாவும் காதலித்தனர். பிழைப்பதற்கு வந்த ஊர் காதலுக்கு வழியேற்படுத்தினாலும், அவர்களின் பிறந்த ஊர்கள் இந்தக் காதலை அடியோடு நிராகரித்தன. இந்த உண்மைக்கதையை வெளியிட்டிருக்கும் ஜூனியர் விகடனில் (28.01.09) அவர்களின் சாதி குறித்த விவரமில்லை. இருப்பினும் இருவரும் ஓரே தகுதி கொண்ட வெவ்வேறான சாதிகளாகவோ, அல்லது இருவரில் ஒருவர் சற்றே ஆதிக்கசாதியாகவோ இருக்கலாம். எப்படியும் இருவரின் குடும்பத்தாரும் இவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டவில்லை என்பதோடு உறவை அறுத்துக்கொண்டு தலைமுழுகினர். வேறுவழியின்றி இந்த ஜோடிகள் திருப்பூர் கோவிலொன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகாவது தன் குடும்பம் தன்னை எற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் தந்தைக்கு தொலைபேசியில் பேசினார் சங்கீதா. தந்தையோ உன் குடும்பத்தில் பிள்ளை பிறந்தாலும் எங்களுக்குச் சொல்லாதே! இழவு விழுந்தாலும் எங்கிட்ட வராதேஎன வெட்டு ஒன்று துண்டு இரண்டென பேசி முடித்துக் கொண்டார். சதாசிவம் வீட்டிலும் இதே கதைதான் என்பதால், இந்தப் புதுமணத் தம்பதியினர் திருப்பூரில் தங்கள் குடும்ப வாழ்க்கையைத் துவங்கினர். சொந்த பந்தங்களின் ஆதரவின்றி ஒருவருக்கொருவர் ஆறுதலாக அந்த வாழ்க்கை நகர்ந்தது.

முதல் வருடத்திலேயே சங்கீதாவுக்கு ஒரு குழந்தை மூளை வளர்ச்சியின்றி இறந்தே பிறந்தது. தலைப்பிரசவத்துக்கு ஒரு பெண் தயாராகும்போது சுற்றமும் உற்றமும் புடைசூழ பார்த்துக் கொள்ளும். ஆனால் சங்கீதாவுக்கு அவளது கணவனைத் தவிர யாரும் துணையில்லை, வந்து பார்க்கவுமில்லை. பேறுகாலச் சிரமங்களை மிகுந்த சிரமத்துடன் பொறுத்துக்கொண்ட சங்கீதா அதன் பின் நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் கர்ப்பமானார்.

உறவுகள் அற்றுப்போய் தனித்தீவுகளில் வாழ்வது போல தனிமைப்பட்டிருந்த அந்த ஏழைத் தம்பதியினருக்கு ஒரு குழந்தையின் மூலம் புதிய உறவு வரப்போகின்றது என அளவில்லாத மகிழ்ச்சி! தன் மனைவியை அவளது தாய் பார்ப்பது போல பராமரித்து வந்த சதாசிவம், சங்கீதா கர்ப்பமான ஒன்பதாவது மாதத்தில் அதிக இருமலும் சளியுமாக அவதிப்பட்டார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் காட்டிய போது அவருக்கு காசநோய் முற்றியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். ஏதோ ஒரு நோய், கோவை சென்றால் சரியாகிவிடும் என்று புரிந்து கொண்ட அந்தப் பெண் கணவனைக் கோவைக்கு அழைத்துச் சென்றாள்.

திருப்பூரின் சாயப்பட்டறைகளினால் நொய்யல் ஆறு ரசாயன ஆறாக மாறி உயர்நீதி மன்றம் அதற்கு பல உத்திரவுகளைப் பிறப்பித்து சரி செய்வதற்கு முயன்ற விசயம் வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் பனியன் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகள் பலருக்கு பஞ்சுத் தூசியினால் ஆஸ்துமாவும், காசநோயும், தோல் வியாதிகளும் இருக்கின்றது என்ற விசயம் அரசால் கூட கவனிக்கப் படவில்லை. திருப்பூர் மருந்துக் கடைகளில் இந்த நோய்களுக்கான மருந்துகள்தான் அதிகம் விற்பனையாகின்றது என்றால் இதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ளலாம். அமெரிக்காவின் வால்மார்ட்டுக்காக ஆர்டர்கள் எடுத்திருக்கும் திருப்பூரின் முதலாளிகள் இப்படி தொழிலாளர்களின் நுரையீரலையும், எலும்புகளையும் சிதைத்துத்தான் ஆயத்த ஆடைகளைத் தயாரிக்கின்றனர் என்பது யாரும் கவலைப்படாத ஒன்று.

சங்கீதா நிறைமாதக் கர்ப்பிணியாய் தனக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்பது தெரியாமல் கணவனைக் கருத்தாகப் பார்த்துக் கொண்டாலும், கோவை அரசு மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றாலும் காசநோய் முற்றிய சதாசிவம் ஒரு சில நாட்களில் இறந்து போகின்றார். இந்த உலகில் தனக்கென இருந்த ஒரே உறவையும் தொலைத்து விட்ட அந்தப் பெண் அழுது புரண்டாள். பிறகு கணவனின் பிணத்தை எரிப்பதற்கு பணமில்லாமலும், தூக்குவதற்கு ஆளில்லாமலும் தவித்த அந்த அபலைப்பெண் பைத்தியமாய்ச் சுற்றியிருக்கின்றாள். சவக்கிடங்கில் இருக்கும் கணவனின் பிணத்தைத் தொட்டு அழுவதற்குக் கூட வாய்ப்பில்லாமல் தனது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் உதவுமாறு கேட்டிருக்கின்றாள் சங்கீதா.

எந்தச் சனியன் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கென்ன என குடும்பத்தினர் இரக்கமின்றி முறித்துக் கொண்டனர். பிறகு தோழமை அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தைக் கேள்விப்பட்டு அவர்களின் உதவியை நாடியிருக்கின்றாள் சங்கீதா. இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் கணவனது இறுதிச் சடங்கை முடித்த சங்கீதாவுக்கு தற்போது குழந்தை பிறந்திருக்கும். இருந்த ஒரே துணையையும் இழந்தவருக்கு ஆறுதலாக யாருமில்லை என்பதால் கைக்குழந்தையுடன் அவதிப்படப்போகும் சங்கீதாவின் எதிர்காலம் எப்படி நகரும்?

_____________

புது தில்லியில் இருக்கும் ஜவஹர்லால் நேரு மேல்நிலைக் கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சியளராகப் பணிபுரியும் மீரா நந்தா அவரது சொந்த ஊரான சண்டீகரில் அவர் கண் முன்னே ஒரு இளம் பெண் கடத்தப்படுவதைப் பார்த்துவிட்டு அந்த அனுபவத்தை தி ஹிந்துதினசரியின் ஞாயிறு மலரில் (01.03.09 ) எழுதியிருக்கின்றார்.

பிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில் சண்டீகருக்கு வந்த மீரா நந்தா ஒரு பகல் பொழுதில் தனது வீட்டிலிருந்து அருகாமையில் இருக்கும் நீதிமன்ற வளாகத்தைக் கடந்து கடைத்தெருவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைக் கடந்து ஒரு இளம்பெண் வேகமாகச் சென்று கொண்டிருந்தாள். திடீரென வந்த ஒரு வெள்ளை வேனில் இருந்து இறங்கிய நான்கைந்து இளைஞர்கள், அவர்களைப் பார்த்துப் பதறி ஓடிய அந்தப் பெண்ணை விரட்டுகின்றார்கள். கணப்பொழுதில் அவளைப் பிடித்து தரதரவென இழுத்து அடித்து வேனில் ஏற்றிச் செல்கின்றார்கள்.

அதிர்ச்சியில் உறைந்திருந்த மீரா நந்தா அந்த வண்டியின் எண்ணைக் குறித்துக் கொண்டிருந்தபோது, நீதிமன்றத்தில் இருந்த மக்கள் கூட்டம் இச்சம்பவத்தைப் பார்த்து கூடுகின்றது. அந்தப் பெண் கடத்தப்பட்டதைப் போலீசிடம் புகார் கொடுக்கலாம் என்று அவர்கள் பேசியபோது கூட்டத்தில் நடுத்தர வயதிலிருக்கும் ஒரு சீக்கியர் குறுக்கிடுகின்றார். அந்த பெண்ணுக்கு ஒன்றும் ஆபத்தில்லை எனவும், தான் அவளது தந்தை, வேனில் பிடித்துச் சென்றது அவளது சகோதரர்கள்தான் என்றும் அவர் நிதானமாகத் தெரிவிக்கின்றார்.

உடனே மீரா நந்தா பெற்ற மகளையே இப்படி அடித்துக் கடத்துகின்றீர்களே! நீங்களெல்லாம் ஒரு தந்தையா, உங்களுக்கு வெட்கமில்லையா என்று கோபத்துடன் கேட்கிறார். தனது மகள் பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு புத்திசாலிப் பெண்ணென்றும், அவளை ஒரு முசுலீம் இளைஞன் காதலிப்பதன் மூலம் அவளது வாழ்க்கை பாழாகக் கூடும் என்பதால் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருந்த அந்தக் காதலர்களைப் பிரிப்பதற்கு தான் எடுத்த நடவடிக்கை சரியானது என்றும் அந்தச் சீக்கியர் வாதிடுகின்றார்.

இதைக் கேட்டவுடன் கூட்டம் சமாதனத்துடன் கலைந்து செல்கின்றது. மீராவுடன் நான்கைந்து இளைஞர்கள் மட்டும்காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கலாம் என முடிவு செய்கின்றார்கள். காவல் நிலையத்தில் பொறுப்பிலிருந்த அதிகாரி சீக்கியரின் விளக்கத்தைக் கேட்டவுடன் திருப்தி அடைகின்றார். இப்போது மீராவுடன் ஒரு இளைஞர் மட்டுமே இருக்கின்றார். அந்த இளம்பெண் ஒரு மேஜர் என்பதால் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு அவளுக்கு முழு உரிமை உண்டென மீரா அதிகாரியிடம் வாதிடுகின்றார். உங்கள் மகளுக்கு இப்படி நடந்திருந்தால் என்ன செய்வீர்கள் என அந்த அதிகாரி மீராவின் பதிலுக்குக்கூட காத்திராமல் அந்தத் தந்தையின் செயலை நியாயப்படுத்துகின்றார். அந்தச் சீக்கியரோ தான் குறுகிய எண்ணம் கொண்டவனல்ல, தனது மகள் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரனைக் காதலித்திருந்தால் கூட அதை ஏற்றுக் கொள்வாரெனவும், ஆனால் ஒரு முசுலீமைத் தனது மகள் காதலிப்பதை ஏற்க முடியாது என்றும் வாதிடுகின்றார்.

இறுதியில் மீரா போலீசு இதில் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தான் இந்தப் பிரச்சினையை ஊடகங்களுக்குக் கொண்டு செல்வதாக மிரட்டியதும் அந்த அதிகாரி இதைப் பற்றிக் கண்டிப்பாக விசாரிப்பதாக உறுதியளிக்கின்றார். அவரது செல்பேசி எண்ணை வாங்கிவிட்டு மீரா திரும்புகின்றார். அன்று மாலையே அந்த இன்ஸ்பெக்டர் மீராவுக்கு தொலைபேசியில் பேசுகின்றார், அதன்படி அந்தப் பெண்ணைச் சந்தித்து விட்டதாகவும், அவள் தனது சொந்த விருப்பத்தில் குடும்பத்துடன் சேர்ந்து இருக்க விரும்புவதாகவும் கூறிவிட்டு அந்தப் பெண்ணையே பேச வைக்கின்றார். அந்தப் பெண்ணும் ஏதோ கடமைக்குப் பேசுவது போல தனக்கு ஒரு பிரச்சினையுமில்லை எனவும் சுரத்தில்லாமல் கூற, எந்தப் பிரச்சினை என்றாலும் தனது செல்பேசி எண்ணுக்கு அழைக்குமாறு கூறிவிட்டு மீரா இந்த சம்பவத்தை அசை போடுகின்றார். துயரம் தோய்ந்த அந்தப் பெண்ணின் முகம் அவரைத் தொந்திரவு செய்கின்றது.

___________

ங்கீதா செய்த குற்றம்சாதி மாறித் திருமணம் செய்தது, சண்டீகர் பெண் செய்த குற்றம்மதம் மாறிக் காதலித்தது. சங்கீதாவின் பெற்றோரும், உறவினரும் அவளைப் புறக்கணித்து எந்த உதவியும் செய்யாமல் இருந்ததன் மூலம் அவளைத் தண்டித்தார்கள். சண்டீகர் பெண்ணின் குடும்பமோ அவளை வன்முறையின் மூலம் மிரட்டி அவளது காதலை நசுக்கித் தண்டிக்கின்றார்கள். தாங்கள் விரும்பியபடி மணவாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்ற அந்தப் பெண்களுக்கு இந்தச் சமூகம் ஒப்புதல் தரவில்லை.

சாதிவெறியும், மதவெறியும் பெண்ணின் இரத்தக் கலப்பில்லாத தூய்மையை வைத்ததே தத்தமது கவுரவத்தைக் காப்பாற்ற நினைக்கின்றன. ஆனால் இந்தப் புனிதக்கடமை ஆண்களுக்கில்லை. ஆதிக்கசாதி ஆண்கள் ஊருக்கு வெளியே இருக்கும் தலித் பெண்களைப் பாலியல் வன்முறை செய்வது இந்தியா முழுவதும் நடக்கும் விசயம். இதை மட்டும் சாதியின் கவுரவக் குறைச்சலாகக் கருதாமல், ஆதிக்கசாதி ஆண்களின் கம்பீரமாக இந்தச் சமூகம் பார்க்கின்றது. மேலும் தன்மானத்துடன் வாழ நினைக்கும் தலித் மக்களைக் கேவலப்படுத்துவதற்கும் அடக்குவதற்கும் ஆதிக்கசாதி வெறியர்கள் செய்யும் முதல் விசயம் தலித் பெண்களைப் பாலியல் வன்முறை செய்வதுதான். ஒரு ஆதிக்கசாதிப் பெண் ஒரு தலித் ஆணைக் காதலித்து திருமணம் செய்தால் ஊரே பற்றி எரியும். இந்தக் காதலை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சூழலே இந்தியாவெங்கும் இருக்கின்றது.

வட இந்தியாவில் ஒரு ஆதிக்கசாதி அல்லது பிற்படுத்தப்பட்ட பெண் ஒரு முசுலீமைக் காதலித்தால் மேற்கண்ட வெறியால் இன்னும் தீவிரமாக எதிர்க்கப்படும். இதைத் தடுப்பதற்கென்றே இந்தி பேசும் மாநிலங்களில் இந்து மதவெறியர்கள் தனி இயக்கமே நடத்துகின்றார்கள். சண்டீகர் பெண்ணின் தந்தை கூறியதைப் பாருங்கள், இந்துமதத்தில் இருக்கும் தலித் ஆணைக் கூட ஏற்றுக் கொள்வாராம், ஆனால் ஒரு முசுலீமை ஏற்றுக்கொள்ள மாட்டாராம். உண்மையில் அப்படி ஒரு தலித்தை அந்த சீக்கியப் பெண் காதலித்தாலும் இதுதான் நடக்கும். என்றாலும், முசுலீம் என்றால் அந்தக் கவுரவ வெறி சில மடங்கு அதிகமாக இருக்கின்றது.

உலகெங்கும் முசுலீம்களைப் பற்றிய வெறுப்பும், தவறான கற்பிதங்களும் திட்டமிட்டே பரப்பப்படுகின்றன. இதில் இந்தியாவைப் பொறுத்தவரை பிரிவினை காலந்தொட்டு நடந்துவரும், இந்துமதவெறியர்களால் இயக்கப்படும் இந்துமுசுலீம் கலவரங்கள் அந்த வெறுப்பைப் பிரச்சாரம் ஏதுமின்றி ஒரு இந்துவின் மனதில் ஏற்படுத்தி விடுகின்றன. எனவேதான் இந்தி பேசும் மாநிலங்களில் இதற்காக அதாவது இந்து மற்றும் ஆதிக்கசாதியின் கவுரவத்தைக் காப்பாற்றும் விதமாக யாரெல்லாம் அந்த எல்லையை மீறுகின்றார்களோ அவர்களெல்லாம் கொல்லப்படுவது சகஜமாக இருக்கின்றது. இந்தக் கவுரவக் கொலைகளில் பத்து சதவீதம் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் நடக்கின்றது. முக்கியமாக இந்தக் கொலைகளுக்கு ஆளாவதில் பெரும்பான்மையினர் பெண்கள்தான்.

____________

விஜய் டி.வியில் நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் காதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா, அப்ரோச்சா என ஒருமுறை விவாதிக்கும் போது எப்படி கடலை போடுவது, எதிர்பாலைக் கவருவது அல்லது கவிழ்த்துவது, இன்ன பிற அயிட்டங்களையெல்லாம் பயங்கரமாக அலசினார்கள். ஆனால் கலப்பு மணம் செய்தால் அதைத் தீர்மானிப்பது அரிவாள்தான் என்பதை அங்கிருக்கும் நடுத்தர வர்க்க அறிவாளிகள் எவரும் மருந்துக்குக் கூட தொட்டுப் பேசவில்லை.

இந்த விவாதம் நடந்து சில மாதங்கள் இருக்கலாம். இதே காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜிராவ் எனும் தலித் இளைஞரும், லட்சுமி எனும் கள்ளர் சாதிப் பெண்ணும் காதலிக்கின்றார்கள். கள்ளர் சாதி கோலோச்சும் இம்மாவட்டத்தில் இருக்கும் அபாயத்தைக் காதலர்கள் உணர்ந்திருந்ததால் யாருக்கும் தெரியாமல் திண்டுக்கல் சென்று ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றார்கள். இதை எப்படியோ மோப்பம் பிடித்த லட்சுமியின் மூன்று அண்ணன்கள் ஒரு டாடா சுமோவில் சில ரவுடிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் சென்று லட்சுமி கதறக் கதற அவளது கணவனை அடித்து வண்டியில் எற்றுகிறார்கள். சில நாட்கள் கழித்து அந்த தலித் இளைஞன் கொடைக்கானல் சாலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கின்றான்.

தனது அண்ணன்கள் கொலை செய்யுமளவு துணிய மாட்டார்கள் என நம்பிய அந்தப் பெண் இன்றும் அழுது கொண்டிருக்கின்றாள். சில ஆண்டுகளுக்கு முன் விருத்தாச்சலம் அருகே ஒரு தலித் ஆணும் வன்னிய சாதிப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள அந்தப் பெண்ணின் ஊர்க்காரர்கள் அதாவது வன்னியர்கள் முன்னிலையில் அந்தக் காதல் ஜோடி உயிரோடு எரித்துக் கொளுத்தப்பட்டது. வழக்கு இன்றும் நடக்கின்றது என்றாலும் மொத்த ஊரே இதில் சம்பந்தப்பட்டிருக்கும் போது யாரைத் தண்டிப்பது?

ஸ்ரீராம் சேனா என்ற இந்து மதவெறி இயக்கத்தினர் மங்களூர் பஃப்புகளில் இருந்த மேல்தட்டுப் பெண்களைத் தாக்கியதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். இதே போல காதலர் தினத்தில் சங்க பரிவாரங்கள் இந்தியா முழுவதும் செய்த அராஜகங்களையும் அறிவோம். ஆணாதிக்கத்தினோடு இந்து மதவெறியும் சேரும்போது அதனுடைய வெறி தீவிரமாகத்தான் இருக்கின்றது. இங்கும் கூட கவனியுங்கள் பெண்தான் குறிவைக்கப்படுகின்றாள். ஆண்கள் டாஸ்மாக் தொட்டு நட்சத்திர விடுதி மதுவறைகள் வரை குடித்து விட்டு ஆடலாம். ஆனால் இதை இயல்பு எனக் கருதும் இந்து மனம் பெண்கள் குடிப்பதை மாபெரும் கவுரவக் குறைச்சலாக நினைக்கின்றது. ஸ்ரீராம் சேனாவின் அத்துமீறலைக் கண்டித்து பல பெண்கள் அமைப்புக்கள் அந்த சேனாவின் தலைவருக்கு பிங்க் நிற ஜட்டிகள் அனுப்பித் தங்களது எதிர்ப்பைக் காண்பித்தன.

ஒரு பெண்ணுக்கு பஃப்புக்கு செல்வதற்கு சுதந்திரம் தேவை எனப் போராடுவதை விட சங்கீதாவும், சண்டீகரின் சீக்கியப் பெண்ணும் நடத்தும் போராட்டம் மிகவும் கடினமானது. மதுவறைகளுக்கு மேல்தட்டு பெண்கள் செல்வதை போலீசு உதவியுடன் கூட செய்து விடலாம். ஆனால் சங்கீதாவுக்கும், லட்சுமிக்கும் கறுப்புப் பூனைகள் போட்டாலும் பாதுகாக்க முடியாது. ஏனெனில் இங்கே முழுச் சமூகமுமே அந்த அபலைகளை எதிர்த்து நிற்கின்றது.

மேலும் மாநகரங்களைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களிடத்தில்இவர்களில் ஐ.டி துறையில் பணிபுரியும் இளைஞர்களும் உண்டுஎடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் படி 75% பேர் பெற்றோர் நிச்சயம் செய்யும் திருமணத்தைத்தான் செய்யப் போவதாகத் தெரிவித்திருந்தார்கள். படித்து, சற்றே வசதியுடன் வாழும் இந்த வர்க்கத்துக்கே இதுதான் கதியென்றால் அந்த ஏழைப் பெண் சங்கீதா என்ன செய்ய முடியும்?

ஆகவே பெண்ணுக்கு உரிமை என்பது தனிநபர் உரிமையாக சுருக்கிப் பார்த்தால், பஃப்புக்கு செல்வது, மானாட மயிலாட அல்லது ஜோடி ஒன்று நிகழ்ச்சியில் பங்கேற்பது, பார்வையாளராகச் செல்வது, தனியாக ஸ்கூட்டரிலோ, காரிலோ ஓட்டிச் செல்வது, வேலைகளில் ஏற்றத்தாழ்வின்றி எல்லா வகை வேலைகளுக்கும் செல்வது… இப்படித்தான் பலரும் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இத்தகைய தனிநபர் உரிமைகளைப் பெற்றுள்ள பெண்கள் தமது மணவாழ்க்கையைச் சுயேச்சையாக முடிவெடுக்க முடியாது. அப்படி மீறி எடுத்தால் கொலைவெறியைச் சந்திக்க வேண்டும் எனும் போது இங்கே எது பெண்ணுரிமை? ஏது பெண்ணுரிமை?

இந்தக் கட்டுரை எழுதும் சமயத்தில் சங்கீதாவுக்கு குழந்தை பிறந்திருக்கலாம், சண்டீகர் பெண்ணுக்கு வேறு மணம் கூட நடந்திருக்கலாம். ஆனால் அந்தப் பெண்கள் தனிமையில் கதறி அழுதவாறு இந்த வாழ்க்கையை எப்படி ஓட்டப் போகின்றோம் என விரக்தியில் உறைந்திருப்பார்கள். ஒருவேளை தற்கொலைக்குக் கூட முயற்சிக்கலாம். பரவாயில்லை, விரும்பியபடி வாழ்வதற்கு கதியில்லாத போது உயிரை முடித்துக் கொள்வது ஒன்றும் மோசமானதல்ல.

-புதிய கலாச்சாரம் மே’ 2009

புதிய கலாச்சாரம் மே 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் !

கன்னியாஸ்திரிகள்

இந்தியாவின் கிறித்தவப் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் எண்ணிக்கையில் அறுபது சதவீதத்தை அளிக்கும் கேரளாவில் அண்மையில் வெளிவந்த ஒரு புத்தகம் கிறித்தவ உலகில் ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றது. ஆமென் ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறுஎன்ற அந்த நூல், 33 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்து பின்னர் சபையிலிருந்து விலகிய ஜெஸ்மி என்ற 53 வயது சகோதரியால் எழுதப்பட்டது.

ஆமென் - ஒரு கன்னியாஸ்திரியின் சுயசரிதைகாங்கரகேஷன் ஆஃப் மதர் ஆஃப் கார்மெல் எனும் கன்னியாஸ்திரி சபையில் சகோதரியாகப் பணியாற்றிய ஜெஸ்மி, ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று, கடைசியாக திருச்சூரில் இருக்கும் பிரபலமான விமலா கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். 35 இலட்சம் உறுப்பினர்களுடன் இயங்கும் இந்தியாவின் மிகப்பெரிய, பணக்கார கத்தோலிக்க சர்ச்சான ஸிரோ மலபார் சர்ச்சால்தான் விமலா கல்லூரி நடத்தப்படுகின்றது. இச்சபையில் இருக்கும் முறைகேடுகளை எதிர்த்துக் குரல் கொடுத்ததால் ஜெஸ்மிக்கு பைத்தியகார பட்டம் சூட்டி தனிமைப்படுத்த நினைத்த தலைமைப் பாதிரியார்களின் சதியை முறியடிக்கும் வண்ணம் அவர் இந்த சுய வரலாற்று நூலை எழுதியிருக்கின்றார்.

இந்நூலில் சகோதரிகளிடம் நிலவும் ஒரினச்சேர்க்கை, முக்கியமாக தலைமைப் பொறுப்பிலிருக்கும் சகோதரிகள் புதிய இளைய சகோதரிகளைத் தமது ஓரினப் பாலியல் இச்சைக்கு மிரட்டிப் பணியவைப்பது, ஆண் பாதிரியார்களும் புதிய சகோதரிகளைத் தமது அதிகார வலிமையால் பாலியல் வன்முறை செய்வது, இவற்றை எதிர்த்து வரும் குரல்களை சர்ச்சின் கௌரவம்தான் முக்கியமானது என்று புறந்தள்ளுவது என அனைத்தையும், தன் சொந்த அனுவபங்களோடு ஜெஸ்மி பகிர்ந்து கொள்கிறார். மேலும் பண விசயங்களில் நடக்கும் முறைகேடுகளையும், ஊழல்களையும் சேர்த்தே அம்பலப்படுத்துகின்றார். பத்திரிகைகள் பலவும் இந்நூலில் உள்ள செக்ஸ் பிரச்சினைகளை மட்டும் செய்தியாக்கி இருக்கின்றன. வெளிவந்த ஒரே மாதத்தில் மூன்று பதிப்புக்களைக் கண்ட இந்நூல் கேரளத்தில் ஒரு பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றது.

ஆனால் இந்த அதிர்ச்சி அலைக்கு முரணாக 2008 அக்டோபர் மாதம் கேரள கிறித்தவ உலகமே பெரும் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. காரணம் 1946ஆம் ஆண்டு மரணமடைந்திருந்த அல்போன்சா என்ற கேரள கன்னியாஸ்திரிக்கு போப்பாண்டவர் புனிதர் என்ற பட்டத்தைக் கொடுத்ததுதான். வாட்டிகனில் வழங்கப்பட்ட இந்த பட்டமளிப்பு விழாவில் கேரளாவிலிருந்து பேராயர்கள், ஆயர்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், பக்தர்கள் எனப் பலரும் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர். கேரள மார்க்சிஸ்டு அரசு தன்னை மதச்சார்பற்ற இடதுசாரி முன்னணி என அழைத்துக் கொள்ளும் அரசு இந்த விழாவிற்கென ஒரு அமைச்சரையே அனுப்பி வைத்ததென்றால் இதன் முக்கியத்துவத்தை அறியலாம். கேரளாவில் கிறித்தவ மக்களின் விகிதம் அதாவது ஓட்டு அதிகமென்பதுதான் மார்க்சிஸ்டுகளின் இந்த முற்போக்குநடவடிக்கை உணர்த்தும் செய்தி.

அல்போன்சாவின் கல்லறை இருக்கும் பரனங்கானம் என்ற ஊர் இன்று அகில இந்திய சுற்றுலாத்தலமாக மாறி விட்டது. கடவுளின் தேசமென்று அழைக்கப்படும் கேரளாவில் முதல் இந்தியக் கிறித்தவர் ஒருவருக்கு கிடைத்திருக்கும் புனிதர் பட்டம் கொண்டாடப்படுவது அதிசயமில்லை.

அல்போன்சாஅல்போன்சா எனும் அந்த எளிய பெண்மணி 1910இல் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து கன்னியாஸ்திரியாக மாறி அதிகமும் கல்விப்பணி புரிந்து பின்னர் வெகுகாலம் நோய்வாய்ப்பட்டு 1946இல் இறக்கின்றார். 1953ஆம் ஆண்டு அல்போன்சாவை தேவனின் சேவகிஎன்று வாட்டிகன் ஏற்கின்றது. கேரளாவில் அவரைப் புனிதராக்கும் முயற்சிகள் தொடங்குகின்றன. புனிதர் பட்டம் பெற வேண்டுமென்றால் அந்த நபர் இரண்டு அற்புதங்களை செய்திருக்க வேண்டுமாம். அப்படி அற்புதங்கள் செய்ததாக 1984இல் போப் இரண்டாம் ஜான் பால் அறிவித்துவிட்டு 1986 ஆம் ஆண்டு கோட்டயத்திற்கு வந்தபோது அல்போன்சாவை ஆசிர்வதிக்கப்பட்டவர் என அறிவிக்கின்றார். இறுதியில் 2008இல் போப் பதினாறாம் பெனடிக்ட் அல்போன்சாவை புனிதர் என அறிவிக்கின்றார். இதுதான் ஒரு இந்தியர் முதன் முதலாகப் புனிதர் பட்டம் பெற்ற கதை.

இப்படி இந்தப் புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் சம்பந்தப்பட்ட சபையின் பிஷப், ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு செய்து பின்னர் மேல்கமிட்டி அதைப் புலனாய்வு செய்து அதன் பிறகு வாட்டிகன் சோதித்தறிந்து, இரண்டு அற்புதங்களைப் பற்றி ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து உறுதி செய்து, இறுதியில் போப் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். நமது நீதிமன்றங்களில் ஒரு சிவில் வழக்கு பத்தாண்டுகளாக இழுக்கப்படுவதற்கு ஒப்பானது இது என்றாலும், அந்த அளவுக்கு புனிதர் பட்டத்திற்கு மவுசு இருக்கிறது என்பதால்தான் இந்த ஜோடனைகள்.

புனிதர் பட்டம் பெற்ற அல்போன்சாவும், திருச்சபையின் பாலியல் உள்ளிட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஜெஸ்மியும் ஸிரோ மலபார் சர்ச்சைச் சேர்ந்தவர்கள்தான். சென்ற ஆண்டு மகிழ்ச்சியில் திளைத்த இந்த சர்ச் இந்த ஆண்டு மருண்டு போயிருக்கின்றது. திருச்சபையின் செய்தித் தொடர்பாளர் அருட்தந்தை பால் தேலக்காட் கூட இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இந்தப் பாலியல் முறைகேடுகள் இருப்பதை ஒத்துக்கொண்டு, அதைச் சரிசெய்ய முடியுமெனவும் கூறியிருக்கிறார். இதிலிருந்து திருச்சபையே இதை மூடிமறைக்க முடியவில்லை என்பது தெளிவு. ஆனால் ஜெஸ்மியை மனநோயாளி என முத்திரை குத்த நடந்த முயற்சி குறித்து தேலக்காட் அலட்டிக் கொள்ளவில்லை. அது அவரது மன ஆரோக்கியம் குறித்த பிரச்சினை எனச் சமாளிக்கிறார்.

இதே தேலக்காட் இந்திய கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் தலைவரான 82 வயது கார்டினல் வர்கி விதயாதிலின் சுயசரிதையை எழுதியிருக்கின்றார். அதில் திருச்சபையில் கன்னியாஸ்திரிகள் அச்சத்துடன் வாழ்வதாகவும், பலர் பாதிரியார்களின் எடுபிடி சேவகர்களாகக் காலம் கழிப்பதாகவும் விதயாதில் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயம் திருச்சபையின் கவுரவத்தை விட்டுக்கொடுக்காமல், தப்பு செய்பவர்களின் முயற்சிக்கு சபை ஒருபோதும் உதவாது என்றும் தெரிவித்திருக்கிறார். எல்லாம் திருச்சபையின் முடைநாற்றம் முச்சந்திக்கு வந்தபின்பு தவிர்க்க இயலாமல் தெரிவிக்கப்படும் பாவ மன்னிப்புக்கள்.

தேவனை நம்பும் எளிய மக்கள் தமது தவறுகளை திரைத் தடுப்புக்கு அப்பால் உள்ள பாதிரியார்களிடம் கூறி மன்னிப்பைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இங்கே ஒரு மனிதனின் தவறு அவனது சுயவிமரிசனம் மற்றும் மற்றவர்களின் விமரிசனத்திற்கு உட்பட்டு திருத்தப்படுவதில்லை. அதற்கு மாறாக அவனது தவறுகள் பொதுவான காரணங்களினால் மன்னிக்கப்பட்டு, அதாவது தவறை தேவனின் பிரதிநிதியிடம் கூறியதற்காகவே குற்றவாளி என்ற நிலையிலிருந்து விடுவிக்கப்படுகின்றான். இம்மை, மறுமை, பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம், சாத்தான்கள், பரிசுத்த ஆவி என்று கற்பனையாகக் கட்டியமைக்கப்பட்ட மதிப்பீடுகள் நிகழ்காலத்தின் நெறிமுறையை மதத்தின் நம்பிக்கை என்ற பெயரால் வடிவமைக்கின்றன. இந்தக் கற்பனையான விடுவித்தலில் எளிய தவறுகள் செய்யும் சாதாரண மக்களுக்குப் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை.

ஆனால் வார்த்தைக்கு வார்த்தை கடவுள் அமெரிக்காவை ஆசிர்வதிப்பார் என்று பேசும் அமெரிக்க அதிபர்களுக்கு ஈராக்கிலும், ஆப்கானிலும் அப்பாவி மக்கள் அமெரிக்கத் துருப்புக்களால் கொல்லப்படுவது தெரியும். போபாலில் பல ஆயிரம் பேரைக் கொன்ற ஆண்டர்சனோ, பங்குதாரர்களை ஏமாற்றிய என்ரானின் தலைவரோ தேவாலயம் சென்று பாவமன்னிப்பு பெறுவார்களா என்ன? தொழில் வேறு மதம் வேறு என்பதோடு, அவர்களைப் பொறுத்தவரை மதம் என்பது மக்களை நயம்பட ஏமாற்றுவதற்கான தந்திரம்தான்.

பகுத்தறிவால் நாத்திகரானவர்களை அறிந்திருப்போம். ஆனால் பூசாரிகள் அத்தனைபேரும் நாத்திகர்கள்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? கருவறைக்குள்ளிருக்கும் சாமியின் உருவத்தைத் தாங்கியிருக்கும் கல் வெறுமனே கல்தான் என்பதை மற்றவர்களை விட பூசாரி நன்கறிவான். அதனால்தான் சபரிமலையின் தலைமைப் பூசாரி சுத்த பத்தமாக இருப்பதற்காக விலைமாதர்களிடம் செல்வதும், தில்லை வாழ் தீட்சிதர்கள் நள்ளிரவில் நடராசப் பெருமானின் சன்னிதியில் டாஸ்மார்க் பாரை நடத்துவதும் சாதரணமாகியிருக்கின்றது. இந்த விதி பாதிரியார்களுக்கும் பொருந்தும்.

பால் ஷேன்லிஅமெரிக்காவில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிரியார்கள் சிறுவர்களிடம் பாலியல் முறைகேடுகள் செய்ததாக வழக்கு நடக்கின்றது. இதில் பாஸ்டனைச் சேர்ந்த பாதிரியார் ஒருவருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு எட்டாண்டு சிறைத் தண்டனையே கிடைத்திருக்கின்றது. இந்தப் பாலியல் முறைகேடுகளுக்காக மட்டும் அமெரிக்க திருச்சபை சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை அபராதமாகவும், நிவாரணமாகவும் கட்டியிருக்கின்றது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போப் இதற்காகவே மன்னிப்பு கேட்டிருக்கிறார். அமெரிக்க கிறித்தவ சபைகளில் நிலவும் இந்த ஒழுக்கம்எல்லா நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றது என்பதைத் தனியாக விளக்கத் தேவையில்லை.

ஒரு மனிதனின் தவறு என்பது அவனது சமூகத்தாலும், சமூக நடவடிக்கைகளாலும்தான் திருத்த முடியும். ஒரு கணவனால் கொடுமைக்குள்ளாக்கப்படும் இசுலாமியப் பெண்ணொருத்தியின் தீர்வுக்கு குர்ஆனையும், ஹதீசையும் புரட்டுவதால் என்ன பயன்? பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டா மதத்தின் தீர்வுகள் முடிவு செய்யப்படுகின்றன?

எல்லா மதங்களும் மனித சமூகத்தின் தவறுகளைப் பாவம், புண்ணியம் என்ற மத நம்பிக்கையின் மூலம்தான் அணுகுகின்றன. 21ஆம் நூற்றாண்டின் மனிதகுலப் பிரச்சினைகளுக்கு மிகப் பழைய நூற்றாண்டின் புண்ணிய நூல்களில் தீர்வுகள் தேடப்படுகின்றன. உண்மையில் மதத்தை வைத்து ஆதாயம் தேடும் ஆளும் வர்க்கத்தின் பல பிரச்சினைகள் இத்தகைய மத நூல்கள் மூலம் கேள்வியின்றி தீர்க்கப்படுகின்றன.

ஜெஸ்மி தனது சுய வரலாற்றில் ஒரு பாதிரியார் எல்லா கன்னியாஸ்திரிகளையும் கட்டித்தழுவி முத்தம் கொடுப்பதைக் குறிப்பிட்டு, தான் மட்டும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாகவும் அதற்கு அந்தப் பாதிரியார் முத்தம் கொடுப்பதை நியாயப்படுத்தும் வாசகத்தை பைபிளிலிருந்து படித்துக் காண்பித்ததாகத் தெரிவிக்கின்றார். பச்சையான பாலியல் இச்சைகளையும், வன்முறைகளையும் கூட பைபிளின் பெயரால் நியாயப்படுத்த முடியும் என்றால் கன்யாஸ்திரிகளுக்கு விடுதலை என்பது எப்படி சாத்தியம்?

மற்றவர்களின் பாவங்களுக்கு தேவனின் பிரதிநிதியாய் இருந்து மன்னிப்பை வழங்கும் ஒரு பாதிரியார் தனது பாவம் என்பது தேவனால் அங்கீகரிக்கப்பட்டது என்று காட்ட முயல்வதன் மூலம் கடவுள் என்பவரே கற்பனையானவர் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்கின்றார். ஏசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும் ஒரு ஏழை அல்ல; ஏசுவின் தரகர்களாக வலம் வந்து பாவ புண்ணியங்களைத் தீர்மானிக்கும் இந்தப் பாதிரியார்கள்தான் அபாயகரமானவர்கள். இந்த அபாயம் பக்தர்களின் கேள்விக்கிடமற்ற நம்பிக்கை தரும் துணிச்சலிலிருந்து எழுகின்றது.

எல்லா மதங்களும் தமக்கு வேண்டிய நம்பிக்கைகளைக் கண்டிப்பான கண்மூடித்தனமான முறையில்தான் ஒரு கட்டளையைப் போலவே பக்தர்களிடம் கோருகின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு மத நம்பிக்கையில் ஐயமோ, சந்தேகமோ, நம்பிக்கையின்மையோ வரக்கூடாது என்பதால்தான் மதப் பூசாரிகளின் அட்டூழியங்கள் அதற்குரிய பொருளில் பார்க்கப்படுவதில்லை. நடிகைகளோடு கூடிக்குலாவியும், சங்கர ராமனை ஆள் வைத்துக் கொன்றவர் என்றாலும் ஜகத்குரு என உலாவரும் சங்கராச்சாரியை பெரும்பான்மையான பார்ப்பன மேல்சாதியினர் இன்னமும் புனிதவானாக நம்புகின்றார்கள் என்றால் இந்தப் பக்தர்களின் விமரிசனமற்ற நம்பிக்கைதான் நமது விமரிசனத்திற்குரியது.

carl-bloch-jesus-and-the-little-childrenரோமாபுரிப் பேரரசின் அடிமைகளை விடுதலை செய்வதற்கு முயன்ற ஏசுநாதரின் பெருமை அவர் செய்த அற்புதங்களின் பெயரால்தான் வியந்தோதப்படுகின்றது. இன்றும் தினகரன் முதல் பல நற்செய்தியாளர்களும், சாய்பாபா, கல்கி, பிரேமானந்தா முதலான இந்துச் சாமியார்களும் அற்புதங்கள் மூலம்தான் தமது ஆன்மீகச் சந்தையை உருவாக்குகின்றனர்.

ஏசுநாதர் முடவர்களை நடக்க வைத்து, குருடர்களைப் பார்க்க வைத்து, தொழுநோயாளிகளைக் குணப்படுத்தி, அப்பங்களைப் பல்லாயிரமாகப் பெருக வைத்து அற்புதங்களைச் செய்தார் என்பதுதான் இன்றும் கிறித்தவத்தின் அடிப்படை நம்பிக்கையாக இருக்கின்றது. உண்மையில் ஏசுநாதர் அவர் காலத்தில் இப்படி சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் மேல் அன்பு காட்டினார் என்பதைத் தாண்டி அவர் எந்த அற்புதங்களும் செய்யவில்லை. அப்படி யாரும் செய்யவும் முடியாது. இன்றைக்கு கிறித்தவ நற்செய்திக் கூட்டங்களில் அந்த அற்புதங்களுக்கான சாட்சிகள் செட்டப் செய்யப்பட்டு மேடையேற்றப்படுகின்றனர்.

இப்படித்தான் மதத்தின் மூடநம்பிக்கை நசிந்து போகாமல் காப்பாற்றப்படுகின்றது. அந்த அற்புதங்கள் உண்மை என்றால் இன்று கிறித்தவ மிசினரிகள் நடத்தும் எண்ணிலடங்கா மருத்துவமனைகளுக்கு என்ன காரணம்? அதற்குப்பதில் தேவ செய்தியாளர்களை வைத்து எல்லா நோயாளிகளையும் சடுதியில் குணமாக்கி விடலாமே? மேலும் ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்புப் போரினால் உறுப்புக்களை இழக்கும் ஈராக், ஆப்கான் நாடுகளைச் சேர்ந்த அப்பாவிகளுக்கும் அந்த உறுப்புக்களை மீண்டும் தருவிக்கலாமே?

இப்படி கலப்படமில்லாத பொய்மையின் வலிமை கொண்டுதான் மதங்களின் சிறப்புக்கள் முழுமுதல் உண்மை போல இறைக்கப்படுகின்றன. இதையே நவீன இந்து சமய சாமியார்கள் யோகம், தியானம் என்று எல்லா வளங்களையும் தரும் உடனடி லாட்டரிகளைப் போல அள்ளித் தெளித்து தமது ஆன்மீக சாம்ராஜ்ஜியங்களை விரிவாக்குகின்றனர்.

அல்போன்சாவின் புனிதர் பட்டத்தின் கதையைக் கூட எடுத்துக் கொள்வோம். அவர் இறந்த பிறகு அவரது கல்லறையில் பிரார்த்தனை செய்த இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடந்திருக்கின்றதாம். அதில் ஒரு கேரள தம்பதியினர் பிறவியிலேயே ஊனமுற்ற தமது மகன் அல்போன்சாவின் அருளால் ஊனம் நீங்கி நடப்பதைத் தெரிவித்தார்களாம். இதை ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து உண்மையென உறுதி செய்து வாட்டிகனுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு ஏற்கப்பட்டதாம். இந்த மருத்துவர் குழுவில் இருக்கும் மருத்துவர்களும் கேள்விக்கிடமற்ற நம்பிக்கை கொண்டு திருச்சபையை மதிக்கும் பக்தர்கள் என்பதுதான் உண்மை.

அன்னை தெரசாவுக்கும் இப்படித்தான் இரண்டு அற்புதங்கள் ஜோடிக்கப்பட்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. கிறித்தவ மதத்திற்காகத் தொண்டூழியம் செய்பவர்களை அவர்கள் மட்டுமின்றி யாரும் ஏன் போப்பும் கூட செய்ய முடியாத அற்புதங்கள் எனும் மோசடி கொண்டுதான் அளவிட வேண்டுமா? அல்போன்சா தனது வாழ்வை ஆசிரியப் பணிக்கு அர்ப்பணித்து விட்டு வெகுநாட்கள் நோய்வாய்ப்பட்டு இளம் வயதிலேயே இறந்து விட்டார். இதைத் தவிர அந்த அப்பாவி கன்னியாஸ்திரியின் கல்லறைக்குச் சென்று பிரார்த்தித்தால் அற்புதங்கள் நிகழும் என்று ஜோடிக்க வேண்டிய அவசியமென்ன?

நீங்களும் உடனடி பக்திமானாகலாம்மேற்குலகில் கிறித்தவத்தின் நம்பிக்கை வெகுவாக வடிந்திருக்கும் நிலையில் மூன்றாம் உலக நாடுகளிலிருக்கும் மந்தைகளைத்தான் தேவனின் செய்தியால் மாற்ற முடியும் என்ற ஒரே காரணத்தால்தான் அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. டெண்டுல்கர் சதமடித்தாலோ, ரஜினி பஞ்ச் டயலாக் பேசினாலோ முழு நாடே கொண்டாடும் சூழலில் ஒரு முதல் இந்தியருக்கு அளிக்கப்பட்ட புனிதர் பட்டமும் அப்படித்தான் கொண்டாடப்படுகின்றது. மேலும் பாதிரியார்களையும், கன்னியாஸ்திரிகளையும் அள்ளி வழங்கும் கேரளத்தின் சேவையைக் கணக்கில் கொண்டும் இந்தப் புனித மோசடி கச்சிதமாக நடந்திருக்கின்றது.

இலட்சக்கணக்கான பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் வாழும் உலகில் இப்படி ஒரு சிலர் மட்டும்தான் அற்புதங்களைச் செய்ய முடியுமென்றால் மற்றவர்களெல்லாம் பாவிகளா இல்லை சாத்தானின் அவதாரங்களா? நோய்வாய்ப்பட்டு பலமாதங்கள் துயருற்ற அல்போன்சாவை அவர் காலத்திய பாதிரிகள் அற்புதம் செய்து குணமாக்கியிருக்கலாமே, என் அப்படி நடக்கவில்லை? ஆக மதநம்பிக்கையைப் பரப்புவதிலேயே இத்தகைய பச்சையான மோசடிகளும் ஊழலும் இருக்கும்போது, கன்னியாஸ்திரிகள் மீதான பாலியல் வன்முறையை மட்டும் தனிச்சிறப்பான மோசடி என்று எப்படிக் கூற முடியும்?

எனவேதான் திருச்சபையில் இருக்கும் ஆன்மீக ஊழல்களும், லவுதீக ஊழல்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை வலியுறுத்திச் சொல்கின்றோம். அற்புதங்கள் என்பது எப்படியும் நிகழாத ஒன்று என உறுதியாகத் தெரிந்திருக்கும் ஒரு பாதிரி, சபையில் சேரும் இளம் கன்னியாஸ்திரியை பாலியல் வன்முறை செய்வது ஒன்றும் தெய்வக் குற்றமில்லை என ஏன் நினைக்க மாட்டான்? தெய்வமே இல்லை என்றாகும்போது தெய்வக்குற்றம் மட்டும் எப்படி இருக்க முடியும்?

பேசாத அம்மன் சிலையை வெறும் கல்லென்று தெரிந்து கொண்டு கைகளால் கழுவி அபிஷேகம் செய்யும் ஒரு பூசாரி கோவிலுக்கு வரும் ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறை செய்வது அவனுடைய தனிப்பட்ட தவறு மட்டுமில்லை, தவறையே தனது ஆன்மாவாகக் கொண்ட மதத்தின் தவறாகவும் இருக்கிறது. மதத்தின் ஆன்மாவே தவறுகளின் மேல் கட்டப்பட்டிருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்ளாத வரைக்கும் வாழ்க்கையில் நடக்கும் தவறுகளை மட்டும் வெட்டியெடுத்து திருத்திவிட முடியாது.

ஜெஸ்மி தனது முப்பது வருட கன்னியாஸ்திரி வாழ்க்கையைத் துறந்து விட்டு, அதன் காரணங்களையும் வெளி உலகிற்கு தெரிவித்து விட்டார். இல்லையேல் அவர் ஒரு மனநோயாளி என ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பார். இப்போதும் கூட அவர் கிறித்தவ மதத்திலிருந்து வெளி@யறவில்லை. இவரது பிரச்சினை கிளப்பிய புயலில் அரண்டுபோன திருச்சபையும் இந்தப் பாலியல் முறைகேடுகளைச் சரி செய்யும் நுட்பத்தை அமல்படுத்தப் போவதாகப் பேசுகின்றது. ஏற்கனெவே சகோதரி அபயா கொலை வழக்கில் 2 பாதிரியார்களும் 1 கன்னியாஸ்திரியும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மூத்த கன்னியாஸ்திரிகளின் கொடுமை தாங்காமல் சகோதரி அனூப் மேரி தற்கொலை செய்து கொண்டார். இவையெல்லாம் கேரளாவில் அம்பலத்திற்கு வந்த திருச்சபையின் குற்றங்கள்.

மதம் மற்றும் திருச்சபையின் முறைப்படியே ஆண் பாதிரிகளுக்கு உரிய தகுதியும், பதவியும் பெண் கன்னியாஸ்திரிகளுக்கு கிடையாது. இப்படி வழக்கத்திலேயே ஆணாதிக்கம் கோலோச்சும் ஒரு நிறுவனத்தில் சேரும் இளம்பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? ஜெஸ்மி தன்மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை குறித்து ஒரு மதர் சுப்பீரியரிடம் முறையிட்ட போது அந்த தலைமைச் சகோதரி சொன்னாராம் இந்தக் குற்றச்சாட்டை விட சர்ச்சின் கவுரவம் முக்கியமானது என்பதால், இவற்றைக் கண்டுகொள்ளாமல் கர்த்தருக்கு பணியாற்றுவதுதான் முக்கியம்

புதிய கலாச்சாரம் பத்திரிகையை பல இளம் பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் தவறாமல் படிக்கிறார்கள் என்ற நல்ல விசயம் எங்களுக்குத் தெரியும் என்பதால், அவர்களிடம் ஒரு கேள்வியை உங்கள் மதத்தால் சாத்தானென்று கருதப்படுகிறோம் என்றாலும் கேட்க விரும்புகின்றோம். நீங்கள் எப்போது சபையை விட்டு வெளியேறி உண்மையான மக்கள் பணி ஆற்றப் போகின்றீர்கள்?”

சர்ச்சின் கவுரவம் பெரியதா, அல்லது உங்களின் மனச்சாட்சி பெரியதா? முடிவு செய்யுங்கள்.

-புதிய கலாச்சாரம், மே’2009

தொடர்புடைய பதிவுகள்

யேசுவே நீரும் இல்லை – அன்னை தெரசா !

புதிய கலாச்சாரம் மே 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வைகையில் முன்பதிவில்லாமல் ஒரு பயணம் !

11

train

மே தினத்தில் வினவின் புதிய வலைத்தளம் பார்த்துவிட்டு தஞ்சையில் நடக்கும் மே தினப்பேரணிக்கு செல்லலாம் என்பதால் எழும்பூரிலிருந்து 12.25க்குப் புறப்படும் வைகை அதிவிரைவு வண்டியில் ஏறி அரியலூரில் இறங்கி தஞ்சைக்கு பேருந்தில் செல்வதாகத் திட்டம். ஆனால் தொழில்நுட்ப வேலைகள் முடியாததினால் புதிய வினவை பார்க்காமலே கிளம்பி விட்டேன்.

வழக்கமாக அநேக ரயில் பயணங்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்வதுதான் பழக்கம். கடைசி நேரத்தில் திட்டமிடப்படும் பயணங்களுக்கு இதுதான் சரிப்பட்டுவரும். எழும்பூரை அடையும் போது மணி 11. பயணச்சீட்டு வாங்குவதற்கு நின்ற வரிசையில் அரைமணிநேரம் சென்ற பிறகே சீட்டு கிடைத்தது. காலையிலே உணவருந்தவில்லை, வண்டியிலும் அவ்வளவு கூட்டத்திற்கிடையில் பொட்டலம் வாங்கி சாப்பிடுவது கடினம் என்பதால் வெளியே சென்று உணவருந்தினேன். மீண்டும் நிலையம் வந்தபோது மணி 12. அரை மணிநேரம் இருப்பதால் எப்படியும் உட்காருவதற்கு இடம் கிடைத்தாலும் கிடைக்கும் என்றொரு நம்பிக்கை.

மைய நுழைவாயிலை அடைந்தபோது அதிர்ச்சி. வாயிலிலிருந்து இன்ஜினுக்குப் பின்னால் இணைக்கப்பட்டிருக்கும் முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பெட்டி வரைக்கும் ரயில்வே போலீசின் முறைப்படுத்துதலோடு ஒரு பிரம்மாண்டமான வரிசை. இதையே பாதி தூரம் சென்ற பிறகே கவனித்தேன். தமிழ்நாட்டிலிருந்தாலும் இத்தகைய வாழ்க்கை நிலவரங்கள் நமக்கு தெரியமலே போனதே என்று ஒரு அவமான உணர்வு. சரி, உட்காருவதற்கு நிச்சயம் இடம் கிடைக்காது. பெட்டியில் நுழைவதற்காவது போலிசு அனுமதிக்க வேண்டுமே என்றொரு பயம். நிரம்பிவிட்டது இனி அடுத்த வண்டியை பிடியுங்கள் என்று சொல்லிவிட்டால்? எனில் நிலையத்தில் ஒரு அளவுக்கு மேல் சீட்டு கொடுக்கமலே நிறுத்தி விடலாமே என்றெல்லாம் யோசனை.

நல்லவேளை வரிசையில் நின்ற எல்லோரையும் உள்ளே நுழைய விட்டார்கள், கிடையில் நுழையும் ஆடுகளைப் போல. உள்ளே இருக்கை நிரம்பி, நடைபாதையும் நிரம்பி நிற்பதற்குக் கூட இடமில்லை. கூட்டம் ஏற ஏற நிற்பவர்களின் விரிந்த கால்கள் குறுகிக்கொண்டே வந்தது. என்னைப் போல சராசரி இந்தியனுக்கும் மேலே வளர்ந்தவர்கள் பாடு திண்டாட்டம்தான். ஒரு வழியாய் வண்டி புறப்பட்டது. இந்தப் பெட்டிக்குதான் டாடா காட்டுபவர்கள் இல்லை, வெளியே லத்தியை வைத்து போலிசுதான் மிரட்டிக்கொண்டிருந்தது.

வண்டியின் வேகம் சற்றே அதிகரித்தபோது மக்களும் சற்றே நிதானமடைந்தார்கள். குழந்தைகளோடு வந்தவர்கள் தொட்டில் கட்ட ஆரம்பித்தார்கள். கொடுத்து வைத்த குழந்தைகளைப் பார்த்து என்னைப் போன்ற ஆளான குழந்தைகளுக்குப் பொறாமை. பெண்கள் அவர்களது பேசித்தீராத பாடுகளைப் பேச ஆரம்பித்தார்கள். ஆண்கள் உலகத்தில் எல்லாம் பேசியாகிவிட்டதைப் போல ஒரு தோரணையில் பேசுவதற்கு ஒன்றுமில்லையென ஆழ்ந்திருந்தார்கள். இரு வரிசையிலும் தலா மூவர் அமரலாம். நாலாவதாக வருபவர்கள் கெஞ்சியவாறு ஒரு கால் இடத்தைப் பெற்று தமது முழு இடுப்பையும் அதில் ஒட்டவைத்தார்கள். கோடையின் வெப்பம் மேற்கூரைத் தகரத்தை ஊடுறுவி எல்லோரையும் வறுக்க ஆரம்பித்தது.

தண்ணீர் கொண்டு வந்தவர்கள் குடித்துப் பிழைக்க முயன்றார்கள். நானும் பெரிய மனதுடன் ஒரு லிட்டர் பாட்டிலை வாங்கியிருந்தேன். ஒரு காலத்தில இந்த பாட்டிலை பணக்காரர்கள் மட்டும்தான் பயன்படுத்துவார்களென எண்ணியிருந்ததை நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. தண்ணீர் தனியார்மயமாகிவிட்டதால் வாழ்க்கை பாணியும் சமத்துவமாகி வருகிறதோ?

வண்டி தாம்பரத்தை அடைந்து சரியாக ஒரு நிமிடம் நின்று புறப்பட்டது. அந்த நிமிடத்தில் பலர் அடித்துப்பிடித்து ஏறினர். எங்கள் பெட்டியின் வாயில் வரையிலும், வாயிலுக்கு வெளியிலும் நின்றவாறு கூட்டம். யாரும் இங்கே டெக்னிக்கலாக நுழைய முடியாதெனினும், வரமுயன்றவர்களை யாரும் எதிர்க்கவில்லை, அது அவர்களுடைய சாமர்த்தியம் என்பது போல. பெருங்கூச்சலுடனும் அலறலுடனும் ஒரு பெரிய குடும்பம் நுழைய முயன்றது. பாதி குடும்பம் தொத்திக்கொண்டதுமே வண்டி நகர ஆரம்பித்தது. இதை மனிதாபிமானத்துடன் பார்த்து வண்டியை நிறுத்தும் வல்லமை படைத்த கார்டு ஏறக்குறைய அரை கிலோ மீட்டருக்குப் பின்னால் இருப்பதால் சிக்னல் கிடைத்த நொடியில் ஒட்டுநர் வண்டியைக் கிளப்பிவிட்டார்.

இறுதியில் அந்தக் குடும்பத்தில் இருபெண்களும், ஒரு ஆணும், மூன்று அரை டிக்கெட்டுகளும் மிகுந்த பிரயத்தனத்துடன் கூட்டத்தைக் குடைந்து புகுந்து விட்டனர். சில நிமிட ஆசுவாசப்படுத்தலுக்குப் பிறகுதான் மீதி குடும்பம் ஏறவில்லை என்பதை கண்டு திடுக்கிட்டனர். அதிவேகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் வண்டியிலிருந்து என்ன செய்யமுடியும்? அடுத்த நிறுத்தத்தில் இறங்கலாமா, அவர்கள் பேருந்தில் வருவார்களா, டிக்கெட் யாரிடமுள்ளது என மகா குழப்பம். இறுதியில் செல்பேசி கைகொடுத்தது. ஒரு பெண் அலைபேசியில் அநேகமாக அவளது கணவனிடம் “இரண்டு பிள்ளைகளை வச்சுகிட்டு நா ஏறிட்டேன், உங்களுக்கு ஒரு கூறு வேணாமா” என மதுரைத் தமிழில் எரிந்து கொண்டிருந்தார். கடைசியில் பயணச்சீட்டு வண்டியில் இருப்பவர்களிடம் இருப்பதால், ஏறாதவர்கள் பேருந்தில் வருவதாக முடிவெடுத்தார்கள். இதற்குள் வண்டி செங்கல்பட்டை அடைந்து விட்டது.

இங்கு வண்டி ஒரு சில நிமிடங்கள் நின்றதால் ஒரு இளம் கன்யாஸ்தீரியும், அவளது அண்ணன் குடும்பத்தினரும் ஒரு வழியாக ஏறி வந்தனர். இடமில்லையென்றாலும் அள்ளிக் கொடுக்கும் அமுதசுரபி போலத் திகழும் எங்கள் பெட்டியை தாராளமாய் வாழ்த்தினேன். நடுவழியில் நந்தி போல நின்று கொண்டிருந்த எனக்கு பின்னே அந்த சகோதரியும் முன்னே அவளது அண்ணன் குடும்பமும். அங்கே இருக்கையில் பர்தாவுடன் அமர்ந்திருந்த ஒரு அம்மா அந்த இளம் சகோதரியை தன்னருகில் பாசத்துடன் அமரவைத்தார். நீர் கொடுத்தார். கருப்புடையும், வெள்ளையுடையும் சில மணித்துளிகளில் சங்கமித்தன. சகோதரி பாண்டிச்சேரியில் ஏதோ ஒரு சர்ச்சில் இருக்கிறார். திண்டுக்கல் சொந்த ஊர். தனது அண்ணனுடன் ஊருக்கு செல்கிறார். இதற்காக புதுவையிலிருந்து கிளம்பி செங்கல்பட்டில் வண்டியைப் பிடித்திருக்கிறார்கள்.

அப்போதுதான் புதிய கலாச்சாரம் மே இதழில் திருச்சபையின் புனிதத்தைப் பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அந்த நெரிசலிலும் அந்த சகோதரியின் எதிர்காலம் குறித்து கொஞ்சம் கவலைப்பட்டேன். என்ன செய்ய முடியும்? ஆனாலும் இசுலாமும், கிறித்தவமும் இயல்பாக இணைந்து உறவாடியதை மதத்தைத் துறந்த நான் நிச்சயமாக ரசித்துக் கொண்டிருந்தேன்.

ஒடும் ரயிலில் வேர்வை மழையில் கைக்குட்டையை துடைத்தவாறு பாட்டிலை எடுத்து தண்ணிரைக் குடித்து முடித்த போது என்னருகில் நின்று கொண்டிருந்த பெரியவர் என்னை உற்று நோக்கியதைப் பார்த்தேன். அவருக்கும் தாகமாக இருக்குமோ என தயக்கத்துடன் கேட்க முனைந்த போது அவரே வாங்கிக் குடித்தார். அதற்காக அந்த கூட்டத்திலும் மிகத் திறமையாக வந்து கூடையில் வெள்ளரிக்காய், கடலை விற்பவர்களிடமிருந்து எனக்கும் வாங்கிக் கொடுத்தார், நான் வேண்டாம் என்று சொன்ன போதும்.

விழுப்புரத்தில் மின்சார என்ஜினை விலக்கி டீசல் என்ஜினை மாற்றுவார்கள் என்பதால் ஒரு 20 அல்லது 25 நிமிடம் வண்டி நின்றது. பெரியவர் வெளியே சென்று எதோ ஒரு உணவுப் பொட்டலமும், பாட்டிலுமாக வந்தார். ஐந்தாறு முறை எனக்கு நீர் வேண்டுமா என கேட்டுக் கொண்டே இருந்தார். இன்னும் சற்று நேரத்தில் இறங்கப் போகிறேன், அவரோ மதுரை வரை போகிறார் என்பதால் தாகமிருந்தாலும் குடிக்கவில்லை. அதற்குள் அவரது பாட்டிலை யாரோ காலி செய்து விட்டார்கள். இங்கு யார் வேண்டுமானாலும் தென்படும் பாட்டிலை எடுத்து குடிக்கலாம். அதே போல நிறுத்தம் வரும்போது வெளியே இறங்குபவர்கள் மொத்தமாக எல்லா பாட்டில்களையும் எடுத்து நிரப்பி வருவார்கள். மக்கள் உருவாக்கியிருக்கும் இந்த சோசலிச முறை எனக்கு பிடித்திருந்தது. என்றாலும் என் பாட்டிலை மட்டும் யாரும் எடுக்கவில்லை, அந்த அளவுக்கு தோற்றத்தில் அச்சுறுத்தும் வண்ணம் இருப்பேனோ என்றொரு சம்சயம்.

சரியாக 4.20க்கு அரியலூரை அடைந்தேன். வண்டி 12 நிமிடம் தாமதம் என்றாலும் மதுரையை அடையுமுன் வேகத்தில் இந்த தாமதத்தை சரி செய்து விடுவார்கள். நான்கு மணிநேர நில் பயணத்தை முடித்து விட்டு என் சக பயணிகளை -பின்னொரு நாளில் பதிவிடும்போது நினைத்துப்பார்ப்பேன் என்பது கூட தெரியாமல்-விட்டுப் பிரிந்தேன். அப்போதுதான் ஒரிசாவில் இதைவிட கூட்டமுள்ள வண்டி ஒன்றில் பயணித்து பின் பயணிக்க முடியாத கதை நினைவுக்கு வந்தது.

அந்தப் பயணத்தில்தான் ஏழ்மையின் அவலம் எத்தனை உக்கிரமானது என்பதை உணர்ந்தேன். இப்போதே எழுதி விடலாம்தான். ஆனாலும் அந்த கதைக்கு இந்த கதை முன்னுரை போல இருப்பதால் பிற்பாடு சொல்வதுதான் சரி.

தொடர்புடைய இடுகை

ரிலையன்ஸ் ஃபிரஷ்ஷில் மனிதக்கறி !

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

நந்தனை மறைத்தது நந்தி – நீதிமன்ற தீர்ப்பினை மறிக்குது தீட்சிதன் தொந்தி !!

நந்தனை மறைத்தது நந்தி - நீதிமன்ற  தீர்ப்பினை மறிக்குது தீட்சிதன் தொந்தி !!

தில்லை நடராசர் கோயில் தீட்சிதருக்குச் சொந்தமானதல்ல, கோயிலின் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிப்ரவரி 2009 இல் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு வெளியான உடனே கோயிலுக்கு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். கோயிலுக்குள் உண்டியல் நுழைந்த்து. பின்னாலேயே சு.சாமியும் நுழைந்தார். அப்புறம் உயர்நீதிமன்ற முட்டை வீச்சு, போலீசு நடத்திய கலவரம்… இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த கதை.

தெரியாத கதையும் இருக்கிறது. நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டதும், உண்டியல் வைக்கப்பட்டதும் நடந்த்தே தவிர, நீதிமன்றத் தீர்ப்பின்படி நிர்வாக அதிகாரியிடம் கோயிலின் நிர்வாகத்தை, இதுவரை தீட்சிதர்கள் ஒப்படைக்கவில்லை. அதாவது, கோயிலின் நகை நட்டுகள், பண்ட பாத்திரங்கள், சொத்து ஆவணங்கள் முதலானவற்றை, அதாவது சாவிக்கொத்தை தீட்சிதர்கள் நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கவில்லை. தீட்சிதர்களின் யோக்கியதை தெரிந்துதான் “தீர்ப்பை அமல்படுத்த தீட்சிதர்கள் ஒத்துழைக்கவேண்டும்” என்று நீதிபதி பானுமதி தனது தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருந்தார்.

இருந்தும் அவாள் ஒத்துழைக்கவில்லை. இவாள் (அரசாங்கம்) நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசை வைத்து நீதிமன்ற உத்தரவை அறநிலையத்துறை அமல் படுத்தியிருக்க முடியும். அல்லது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்க முடியும். கோர்ட் உத்தரவு வந்தவுடனே புல்டோசரை வைத்து இடிப்பதெல்லாம், தரைக்கடை வியாபாரிகள் போன்ற சாமானியர்களுக்கு கிடைக்கும் நீதி. தீட்சிதர்கள் சாமானியர்களா என்ன? நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துமாறு மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எவ்வளவோ “தைரியம்” சொல்லிப்பார்த்தார்கள். நடக்கவில்லை.

தற்போது தில்லைக் கோயிலில் ஆனித்திருமஞ்சனம் என்ற திருவிழா. அதற்கு “தீட்சிதர் கட்டுப்பாட்டில் இருக்கும் தில்லைக் கோயில்” என்று கொட்டை எழுத்தில் போட்டு அழைப்பிதழ் அடித்திருக்கிறார்கள் தீட்சிதர்கள். அப்பறமும் அரசாங்கத்துக்கு சொரணை வரவில்லை. ஆனால், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தீட்சிதர்கள் செய்துள்ள மேல்முறையீடு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. இதில் இடைக்காலத்தடை வாங்கிவிட்டால், மறுபடியும் வழக்கை ஆண்டுக்கணக்கில் ஆறப்போடலாம் என்பது தீட்சிதர்கள் திட்டம். இத்தனை ஆண்டுகளாக நடந்து வந்தது இதுதான்.

இனிமேலும் இதனை அனுமதிக்க கூடாது என்பதற்காகத்தான் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் நேற்று (23.06.09)சட்டமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. “புனிதமான சட்டமன்றத்தின் வாசலில் மக்கள் சத்தம்

போடக்கூடாது, உள்ளே மக்கள் பிரதிநிதிகள்தான் சவுண்டு கொடுக்கலாம்” என்பதனால், ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து எல்லோரையும் கைது செய்த்து போலீசு.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கோரிக்கை மிகவும் எளிமையானது. கோர்ட், வழக்கு, வாய்தாவெல்லாம் வேண்டாம். அரசு ஒரு சிறப்பு ஆணை பிறப்பித்து எல்லாக் கோயிலையும் போலவே தில்லைக் கோயிலையும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் எடுக்க முடியும். எடுக்க வேண்டும். எடுத்த மறுகணமே, நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து, தீட்சிதர்கள் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை இடிக்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்படாத தீட்சிதர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும்.

இவை மூன்றும்தான் கோரிக்கைகள். சட்டமன்றம் நடக்கிறது. இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு வர இருக்கிறது. கச்சத்தீவை சிங்கள அரசிடமிருந்து மீட்கும் சாகசத்தை செய்வதற்கு ஒரு முன்னோட்டமாக, தில்லைக் கோயிலை தீட்சிதர்களிடமிருந்து மீட்குமா திமுக அரசு? பார்ப்போம்.

பின்குறிப்பு:

சென்ற ஆண்டு சிற்றம்பல மேடையில் தமிழ் பாடச்சென்ற ஆறுமுகசாமியையும் உடன் சென்ற எமது தோழர்களையும் தடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரையே தாக்கிய தீட்சிதர்களின் ‘வீர’ சாகசத்தை இந்த உலகமே தொலைக்காட்சியில் பார்த்தது. தமிழ் பாடும் உரிமையை நிலைநாட்டப் போராடியவர்கள் மீது தெற்குவாயிலில் போலீசு நடத்திய தடியடியையும் நாடு பார்த்தது. மாலை சம்பவத்துக்காக 35 தோழர்கள் மீதும் காலை சம்பவத்துக்காக 11 தீட்சிதர்கள் மீதும் வழக்கு போடப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். சிதம்பரம் கிளைச்சிறையில் வைக்கப்பட்ட தீட்சிதர்கள் தனியே சமைத்து சாப்பிட அடுப்பும் அரிசி பருப்பும் வழங்கியது சிறை நிர்வாகம். இதெல்லாம் பழைய கதை.

புதுக்கதை என்னவென்றால், மாலை தடியடி வாங்கிய தோழர்கள் மீதான வழக்கில் சுறுசுறுப்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது போலீசு. காலையில் போலீசு சூப்பரெண்டை தீட்சிதர்கள் அடித்தார்களே, அந்த வழக்கில் மட்டும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. நம்ப முடிகிறதா?

அரசியல் சட்டம் என்ற ஒரு கருமாந்திரம் இருப்பதால் வேறு வழியின்றி தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்துவிட்டார்கள். நீதி என்று வரும்போது.. மனு நீதிதான்.

தமிழ் நாட்டில் தமிழர்கள் கட்டிய கோயில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்பதும், அங்கே தமிழர்களுக்கு தமிழில் வழிபாடு செய்யும் உரிமை வேண்டும என்பதும்தான் பிரச்சினை. இந்த “அடாத” கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இப்படியொரு விடாத போராட்டம்!

தொடர்புடைய பதிவுகள்

உண்டியலை எடு! தில்லை தீட்சிதர்கள் ஊர்த்வ தாண்டவம்!

தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்! ம.க.இ.க போராட்டம் வெற்றி!!

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…