privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் – அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் – 1

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் – அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் – 1

-

விசுவாசி : சுவாமி அசீமானந்தா சங் பரிவாரத்துக்கு செய்த தீவிர பணிகள் – லீனா கீதா ரகுநாத்

பாகம் – 1

அசீமானந்தா
இந்து தீவிரவாத பயங்கரவாதத்தின் மிக பிரபலமான முகம் அசீமானந்தா.

“ஸ்வாமிஜியை கூப்பிடு,” என்று சிறை அதிகாரி உத்தரவிட்டார். இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள் அதிகாரியின் அலுவலகத்திலிருந்து வெளியேறி சிறை வளாகத்துக்குள் விரைந்தார்கள். சுவர்களுக்கு வெளியே நூறு மனிதர்கள் ஒரே நேரத்தில் ஓலமிடுவது போன்ற காதைப் பிளக்கும் சத்தம் அறை முழுவதும் பரவியது. 2012 ஜனவரி தொடக்கத்தில் ஒரு நாளில் அம்பாலா மத்திய சிறையின் பார்வையாளர்கள் நேரம் இது.

2006-க்கும் 2008-க்கும் இடையே நாடு முழுவதும் பொது மக்கள் மீது பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட ஸ்வாமி அசீமானந்தா சில நிமிடங்களுக்குப் பிறகு சிறை அதிகாரியின் அலுவலக வாயிலில் தோன்றினார். அவர் காவி வேட்டியும் முட்டி வரை தொங்கிய காவி குர்த்தாவும் அணிந்திருந்தார். அவரது உடைகள் மிடுக்காக தேய்க்கப்பட்டிருந்தன. கம்பளியால் ஆன குரங்குக் குல்லாய் ஒன்று அவரது நெற்றி வரை இழுத்து விடப்பட்டிருந்தது; ஒரு காவி போர்வை அவரது கழுத்தை சுற்றி சுற்றப்பட்டிருந்தது. என்னைப் பார்த்து அவர் கொஞ்சம் குழம்பியது போலத் தோன்றியது. நாங்கள் பரஸ்பரம் வணக்கம் சொல்லிய பிறகு, அவர் என்னை பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றார். அந்த அறையில் வெள்ளை வேட்டி, குர்த்தா அணிந்த குமாஸ்தாக்கள் பெரிய பெரிய லெட்ஜர்களில் ஆழ்ந்திருந்தார்கள். கதவுக்குப் பின்புறம் இருந்த பெரிய மரப் பெட்டியின் மீது அவர் உட்கார்ந்து கொண்டார். அருகில் இருந்த மேஜையிலிருந்து ஒரு நாற்காலியை இழுத்துக் கொள்ளும்படி என்னிடம் கூறினார்.  இயல்பாக விருந்தாளியை உபசரிப்பது போல அவர் என் வருகையின் நோக்கம் குறித்து கேட்டார். “உங்கள் வாழ்க்கை கதையையும் உலகுக்கு யாராவது சொல்ல வேண்டுமே” என்றேன் நான்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அசீமானந்தாவிடம் நான் எடுத்த 4 பேட்டிகள் இப்படித்தான் ஆரம்பமாயின. குறைந்தது 82 பேரைக் கொன்ற குண்டு வெடிப்புகள் தொடர்பாக கொலை, கொலை முயற்சி, கிரிமினல் சதித் திட்டம், தேச துரோகம் ஆகிய குற்றங்களுக்கான வழக்குகளை அவர் இப்போது எதிர் கொண்டு வருகிறார். இன்னும் இரண்டு குண்டு வெடிப்பு வழக்குகளின் குற்றப்பத்திரிகைகளில் அவரது பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது; அவற்றில் முறையாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற விசாரணை  இன்னும் தொடங்கவில்லை. அந்த 5 தாக்குதல்களும் மொத்தம் 119 பேரைக் கொன்றிருக்கின்றன. இந்திய சமூக நல்லிணக்கத்தை அரித்துக் குலைப்பதாக அவை நிகழ்ந்திருக்கின்றன. அசீமானந்தாவின் அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம்.

எங்கள் உரையாடல்கள் வளர வளர, அசீமானந்தா மேலும் மேலும் நட்புடனும், திறந்த மனதுடனும் பேசினார். அவரது வாழ்க்கை குறித்து அவர் சொன்ன வரலாறு, பிரமாதமானதாகவும், அதிர்ச்சியடைய வைப்பதாகவும் இருந்தது. அவர் நடத்திய வன்முறை செயல்கள் குறித்தும் அவரது வாழ்க்கையின் கொள்கைகள் குறித்தும் அவர் வெறித்தனமான பெருமை கொண்டிருந்தார். அவர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்துத்துவத்தை விசுவாசமாக வளர்த்துக் கொண்டிருந்தார். அதில் பெரும்பகுதி காலத்தில் அவர் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கின் (ஆர்.எஸ்.எஸ்) பழங்குடியினர் பிரிவான வனவாசி கல்யாண் ஆசிரமம் (வி.கே.ஏ) சார்பாக, சங்கத்தின் பார்வையிலான இந்து மதத்தையும் அதன் பார்வையிலான இந்து ராஷ்டிரத்தையும் பரப்பும் வேலையை செய்து வந்திருக்கிறார். தனது அறுபது வயதுகளை எட்டியிருக்கும் அசீமானந்தா தனது வாழ்வின் பல்வேறு கட்டங்களின் ஊடாகவும் தனது நம்பிக்கைகளின் தீவிரத்தை ஒரு போதும் நீர்த்துப் போகச் செய்திருக்கவில்லை.

1949-ம் ஆண்டு மோகன்தாஸ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு நாதுராம் கோட்சேவும் அவரது கூட்டாளி நாராயண் ஆப்தேவும் தூக்கிலிடப்பட்டு அம்பாலா சிறையிலேயே புதைக்கப்பட்டனர். அவர்களது கூட்டுச் சதியாளர் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சேவுக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. “கோபால் கோட்சேவை வைத்திருந்த அதே சிறை அறையில்தான் நான் வைக்கப்பட்டிருக்கிறேன்” என்று அசீமானந்தா பெருமையுடன் கூறுகிறார்.

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ்
குண்டு வெடிப்பில் சிதைக்கப்பட்ட சம்ஜவுதா எக்ஸ்பிரசின் முன்பதிவு இல்லாத பெட்டியின் உள்பக்கம்.

இன்றைக்கு, இந்து தீவிரவாத பயங்கரவாதத்தின் மிக பிரபலமான முகமாக அசீமானந்தா விளங்குகிறார். இந்த குண்டு வெடிப்புகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு அவரை சந்தித்த பத்திரிகையாளர்கள், அவரை அதீதமான திமிர் பிடித்தவராகவும், சகிப்புத் தன்மை இல்லாதவராகவும் சித்தரிக்கிறார்கள். சிறை கோப்புகள் வைக்கப்பட்டிருக்கும் அந்த இருண்ட அறையில் நான் சிறை வாசத்தினால் அடங்கிப் போயிருந்த ஆனால், குற்றவுணர்வு அறவே இல்லாத ஒரு மனிதரை சந்தித்தேன். “எனக்கு என்ன நேர்ந்தாலும் அது இந்துக்களுக்கு நல்லதுதான். அது மக்களின் மத்தியில் இந்துத்துவத்தை கிளரச் செய்யும்” என்று அவர் சொன்னார்.

2007-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் டெல்லி ரயில்வே நிலையத்தின் 18-வது நடைமேடையிலிருந்து தனது வழக்கமான பயணத்தை தொடங்கியது. சம்ஜவுதா அல்லது “நட்புறவு எக்ஸ்பிரஸ்” இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான இரண்டே ரயில் இணைப்புகளில் ஒன்று. அன்று ரயிலில் பயணித்த சுமார் 750 பயணிகளில் முக்கால் பங்கு பேர் ஊருக்குத் திரும்பும் பாகிஸ்தானியர்கள். நள்ளிரவுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு – ரயில் தனது பயணத்தைத் தொடங்கி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு – 16 பெட்டிகள் கொண்ட ரயிலின் முன்பதிவு செய்யாதவர்களுக்கான பெட்டியில் எளிதில் கிடைக்கும் பொருட்களால் செய்த வெடிகுண்டுகள் (ஐ.ஈ.டிக்கள்) வெடித்தன. இரவைக் கிழித்துக் கொண்டு பாய்ந்த ரயில் இப்போது தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

பெட்டிகளிலிருந்து வெளியில் போகும் கதவுகளை குண்டு வெடிப்புகள் இறுகச் செய்து அடைத்து விட, பயணிகள் உள்ளேயே மாட்டிக் கொண்டனர். “அந்தக் காட்சி கொடூரமாக இருந்தது. எரிந்த, பாதி எரிந்த பயணிகளின் உடல்கள் பெட்டிகளில் நிரம்பியிருந்தன” என்று ஒரு ரயில்வே பரிசோதகர் ஹிந்துஸ்தான் டைம்சுக்கு பேட்டி அளித்திருந்தார். சம்பவ இடத்தில் சூட்கேசுகளில் பொதியப்பட்டிருந்த இரண்டு ஐஈடிக்கள் பின்னர் கண்டறியப்பட்டன. அந்த குண்டுகளில் PETN, TNT, RDB, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற வேதிப் பொருட்கள் இருந்தன. அந்தத் தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

அசீமானந்தா குற்றம் சாட்டப்பட்ட ஐந்து தாக்குதல்களில் இது இரண்டாவதும் மிகக் கொடூரமானதுமான தாக்குதல். சம்ஜவுதா விரைவு ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் அவர் இப்போது முதல் குற்றவாளி; 2007-ம் ஆண்டு மே மாதம் 11 பேரைக் கொன்ற ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் மூன்றாவது குற்றவாளி; 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்க்காவில்  மூன்று பேரைக் கொன்ற குண்டு வெடிப்பில் ஆறாவது குற்றவாளி. மேலும், செப்டம்பர் 2006 மற்றும் செப்டம்பர் 2008-ல் மகாராஷ்டிராவின் மாலேகானில் நடந்த 37 பேரின் உயிரைப் பறித்த இரண்டு குண்டு வெடிப்பு தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளிலும் குற்றவாளியாக  அவரது பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்திரேஷ் குமார்
ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் சதியாளர்களுக்கு தார்மீக ரீதியாகவும், பொருளாதய ரீதியாகவும் ஆதரவு அளித்தார்.

இந்தக் குற்றங்களில் பெரும்பாலானவை, மும்பை பயங்கரவாத எதிர்ப்பு அணி (ஏ.டி.எஸ்), ராஜஸ்தான் ஏடிஎஸ், தேசிய புலனாய்வு ஏஜன்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் வெவ்வேறு  கால கட்டங்களில் விசாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்த ஐந்து வழக்குகளிலும் குறைந்தது ஒரு டஜன் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. முறையாக குற்றம் சாட்டப்பட்ட முப்பத்தியொரு பேர்களில் அசீமானந்தாவின் நெருங்கிய தொடர்புகளான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) தேசிய செயற்குழு உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் இந்தூர் மாவட்டத்தின் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில் ஜோஷி ஆகிய இருவரும் அடங்குவர். இந்த தாக்குதல்களை திட்டமிடுவதில் அசீமானந்தா மையமான பங்கு வகித்தார் என்று அனைத்து புலனாய்வு அமைப்புகளும் முடிவு செய்திருக்கின்றன. அசீமானந்தா தானாகவே சொன்ன விபரங்களின் அடிப்படையிலும், அவர் இந்த தாக்குதல்களுக்கு திட்டமிடும் அமர்வுகளை ஏற்பாடு செய்தார்; இலக்குகளை தேர்ந்தெடுத்தார்; வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கு நிதி வழங்கினார்; குண்டு வைத்தவர்களை பாதுகாத்தார்; மேலும் பிற வழிகளில் உதவி செய்தார் என்று தெரிகிறது.

டிசம்பர் 2010-லும், ஜனவரி 2011-லும் டெல்லியிலும் அரியானாவிலும் உள்ள நீதிமன்றங்களில் கொடுத்த இரண்டு வாக்குமூலங்களில் அசீமானந்தா தான் தாக்குதல்களுக்கு திட்டமிட்டதை ஒத்துக் கொண்டார். அவர் வாக்குமூலம் அளித்த சமயத்தில், தனக்கு வழக்கறிஞர் தேவையில்லை என்று சொல்லியிருந்தார். ஒவ்வொரு வாக்குமூலத்தையும் அளிப்பதற்கு முன்பு அவர் 48 மணி நேரம் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். எனவே மனதை மாற்றிக் கொள்வதற்கு அவருக்கு போதுமான வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. இரண்டு முறையும், அசீமானந்தா குற்றங்களை ஏற்றுக் கொள்வதில் உறுதியாக இருந்து, அவரது வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார். இந்த தாக்குதல்கள் குறைந்தது ஒரு மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவரின் இசைவோடுதான் நடந்ததாக அவரது ஒப்புதல் வாக்குமூலத்திலும், அவரது சக கூட்டு சதியாளர்கள் தமது ஒப்புதல் வாக்குமூலங்களிலும் கூறியிருக்கின்றனர்.

2011-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி அசீமானந்தா வழக்கறிஞர் பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொண்டார். அடுத்த நாளே அவர் தனது ஒப்புதல் வாக்குமூலங்களை நிராகரித்தார் அவை சித்திரவதையின் மூலம் வாங்கப்பட்டவை என்றார். விசாரணை நீதிமன்றத்தின் முன்பு அவர் சமர்ப்பித்த ஒரு விண்ணப்பத்தில், “அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லப்படுவது ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டது அதிர்ச்சியூட்டுவதும், வேண்டுமென்றே செய்யப்பட்டதும் ஆகும். ஆளும் கட்சியின் அரசியல் நோக்கங்களுக்காக இந்த வழக்கை அரசியலாக்கி, ஊதிப் பெருக்கி, ஊடகங்களிலேயே ஒரு விசாரணை நடத்தி முடித்து, இந்து பயங்கரவாதம் என்ற கருத்தாக்கத்தை உலக அளவில் உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.” என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்குகளில் வாதிடும் வழக்கறிஞர்கள் அனைவரும் சங் பரிவாரின் உறுப்பினர்கள் என்று அசீமானந்தாவும், தொடர்புடைய பல வழக்கறிஞர்களும் என்னிடம் கூறினார்கள். ஆர்.எஸ்.எஸ்-சின் சட்டப் பிரிவான அகில பாரதிய அதிவக்தா பரிஷத் கூட்டங்களில் இந்த வழக்கை விவாதிப்பதாக ஒரு வழக்கறிஞர் சொன்னார்.

நான் அவரை பேட்டி கண்ட போது, தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவோ, அவரது ஒப்புதல் வாக்குமூலங்கள் வலுக்கட்டாயமாக பெறப்பட்டவை என்பதாகவோ சொல்லப்படுவதை அசீமானந்தா மறுத்தார். அவர் குண்டு வெடிப்புகளுக்காக சிபிஐயால் கைது செய்யப்பட்ட போது, “அனைத்தையும் பற்றி சொல்வதற்கு இதுதான் சரியான தருணம்” என்று தீர்மானித்ததாக கூறினார். ”இதற்காக நான் தூக்கிலிடப்படலாம், ஆனால் எனக்கு ஏற்கனவே வயதாகி விட்டிருக்கிறதே” என்றார்.

எங்கள் உரையாடல்கள் வளர வளர, அசீமானந்தாவின் சதித் திட்டம் பற்றிய அவரது விவரிப்பு மேலும் மேலும் துல்லியமாகி வந்தது. எங்களது மூன்றாவது மற்றும் நான்காவது பேட்டிகளில், அவரது பயங்கரவாத செயல்கள் ஆர்.எஸ்.எஸ்-சின் இப்போதைய  தலைவரும் அப்போதைய பொதுச் செயலாளருமான மோகன் பாகவத் வரையிலான உயர் மட்ட தலைமையின் ஒப்புதலை பெற்றிருந்தன என்றார். “இதைச் செய்து முடிப்பது மிகவும் முக்கியமானது. ஆனால், இது சங்க பரிவாரத்துடன் இணைக்கப்படக் கூடாது” என்று இந்த வன்முறை சதித் திட்டம் குறித்து பாகவத் சொன்னதாக அசீமானந்தா என்னிடம் கூறினார்.

மோகன் பாகவத்
ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் (சர்சங்-சாலக்) மோகன் பாகவத்.

ஜூலை 2005-ல் நடைபெற்ற ஒரு சந்திப்பைக் குறித்து அசிமானந்தா என்னிடம் கூறினார். சூரத்தில் நடைபெற்ற ஒரு ஆர்.எஸ்.எஸ் உள்வட்டக் கூட்டத்துக்குப் பிறகு மோகன் பாகவத்தும், மற்றும் ஆர்.எஸ்.எஸ்-சின் அதிகாரம் உடைத்த ஏழு உறுப்பினர் தேசிய செயற்குழுவில் இடம் பெற்றுள்ள இந்திரேஷ் குமாரும் மற்ற மூத்த சங்க தலைவர்களும் இரண்டு மணி நேர கார் பயண தொலைவில் உள்ள அசீமானந்தா வாழ்ந்து வந்த குஜராத்தின் டாங்ஸிலுள்ள கோயிலுக்கு பயணித்தார்கள். கோயிலிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆற்றங்கரையில் போடப்பட்ட கூடாரம் ஒன்றில் மோகன் பாகவத், இந்திரேஷ் குமார் இருவரும் அசீமானந்தாவையும் அவரது கூட்டாளி சுனில் ஜோஷியையும் சந்தித்தனர். இந்தியா முழுவதும் உள்ள பல இஸ்லாமிய இலக்குகளில் குண்டு வைக்கும் திட்டம் குறித்து ஜோஷி, மோகன் பாகவத்துக்கு விளக்கினார். இரண்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். “சுனிலுடன் சேர்ந்து இதில் நீங்கள் பணி புரியுங்கள். இதில் நாங்கள் தலையிட மாட்டோம், ஆனால் நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதாக நீங்கள் கருதிக் கொள்ளலாம்” என்று மோகன் பாகவத் அவரிடம் கூறியிருக்கிறார்.

“பிறகு அவர்கள் என்னிடம், ‘சுவாமிஜி நீங்கள் இதைச் செய்தால் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும். நீங்கள் செய்தால் எதுவும் தவறாகப் போய் விடாது. அது குற்றச் செயலாக பார்க்கப்பட மாட்டாது. அதை ஒரு பயங்கரவாத செயலாக நாம் செய்ததாக யாரும் சொல்ல மாட்டார்கள். மாறாக, அது சித்தாந்தத்துடன் இணைக்கப்பட்டு விடும். இது இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானது. இதை நிச்சயம் செய்யுங்கள். உங்களுக்கு எங்களது ஆதரவு உண்டு’ என்று கூறினார்கள்” என்று அசீமானந்தா தொடர்ந்தார்.

புலன் விசாரணை அமைப்புகள் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகைகளில் இந்திரேஷ் குமார் சதியாளர்களுக்கு தார்மீக ரீதியாகவும், பொருளாதய ரீதியாகவும் ஆதரவு அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அவை எதுவுமே மோகன் பாகவத் மட்டத்திலான மூத்த தலைவர் யாரையும் குற்றம் சாட்டவில்லை. இந்திரேஷ் குமார் ஒரு முறை சி.பி.ஐயால் விசாரிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் புலன் விசாரணையை மேற்கொண்ட தேசிய விசாரணை ஏஜன்சி அசீமானந்தா, பிரக்யா சிங் தரப்புக்கு மேல் ஆர்எஸ்எஸ் தலைமைக்குள் இந்த சதித்திட்டத்தின் வேர்களை ஆய்வு செய்யவில்லை. (குண்டுகளை உருவாக்கி, வைத்தவர்கள் உள்ளிட்டு சதித்திட்டத்தின் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைத்தவராக சொல்லப்படும் சஞ்சய் ஜோஷி டிசம்பர் 2007-ல் மர்மமான சூழலில் கொல்லப்பட்டிருந்தார்.)

இந்தத் தாக்குதல்களில் இந்திரேஷ் குமாருக்கு பங்கு உள்ளது என்று குற்றச்சாட்டுகள் 2010-ம் ஆண்டு வெளியானதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் அவர் பின்னால் அணி திரண்டிருக்கிறது. ஒரு ஆர்.எஸ்.எஸ் சர்சங்-சாலக் இது வரை செய்திராதபடி இந்திரேஷ் குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்றில் மோகன் பாகவத் கலந்து கொண்டார். பாரதிய ஜனதா கட்சியும் அவரை ஆதரித்தது. அவர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட போது பா.ஜ.கவின் தேசிய பத்திரிகை தொடர்பாளர் மீனாட்சி லேகி அவரது வழக்கறிஞராக செயல்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவரின் வழக்கறிஞர், “சர்சங்-சாலக் ஆகக் காத்துக் கொண்டிருக்கும் இந்திரேஷ் குமார் தனது முன்னேற்றத்தில் மிகவும் துடிப்பானவர்” என்று என்னிடம் கூறினார்.

புலன் விசாரணை அமைப்புகளில் ஒன்றைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தன் பெயரை சொல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட ரகசிய அறிக்கையை என்னை பார்க்க அனுமதித்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிரான ஆதாரங்களின் அடிப்படையில் அதை ஏன் தடை செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்கும் நோட்டீஸ் ஒன்றை அதன் பொறுப்பாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பும்படி அந்த அறிக்கை கோருகிறது. உள்துறை அமைச்சகம் அந்த பரிந்துரையின் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை.

1948-ல் காந்தி கொல்லப்பட்ட பிறகு ஒரு சிறிய காலமும், 1975-ல் அவசர நிலை காலத்தின் போதும், 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் தடை செய்யப்பட்டது போல தடை செய்யப்பட்டு விடுவோமோ என்ற பயம் ஆர்.எஸ்.எஸ்-சின் மீது எப்போதுமே கவிந்து இருக்கிறது. அதன் உறுப்பினர்கள் மீது பயங்கரவாத வன்முறை குற்றங்கள் சுமத்தப்படும் போதெல்லாம், நாதுராம் கோட்சே தொடர்பாக எடுத்த அதே நிலைப்பாட்டைத்தான் ஆர்.எஸ்.எஸ் எடுக்கின்றது. குற்றமிழைத்தவர்களை ஏற்றுக் கொள்வது அல்லது நிராகரிப்பது குறித்த எந்த கேள்வியும் எழவில்லை என்றும், ஏனெனில் அவர்கள் அனைவரும் சங்கத்திலிருந்து ஏற்கனவே விலகி விட்டவர்கள் அல்லது அமைப்புடன் தொடர்பு இன்றி சுயேச்சையாக செயல்படுகின்றனர் அல்லது வன்முறையை தழுவியதன் மூலம் அமைப்பிலிருந்து தனிமைப்பட்டு விட்டனர் என்று ஆர்.எஸ்.எஸ் கூறி விடுகிறது.

ஆனால், அசீமானந்தா ஆர்.எஸ்.எஸ்-சுக்கு ஒரு பெரிய தலைவலியாக வந்திருக்கிறார். அசீமானந்தா கிட்டத்தட்ட தனது வாழ்நாள் முழுவதையும் 1952-ல் உருவாக்கப்பட்டதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் மையமாக விளங்கும் வனவாசி கல்யாண் ஆசிரமத்துக்கு பணி புரிவதில் அர்ப்பணித்திருக்கிறார். தாக்குதல்களை திட்டமிட்ட சமயத்தில், அசீமானந்தா அவருக்காகவே உருவாக்கப்பட்ட வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் சமயப் பிரிவின் தேசியத் தலைவராக 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்திருக்கிறார். பயங்கரவாத சதித் திட்டத்தை துவங்குவதற்கு முன்பாகவே, அவர் பின்பற்றும் நடைமுறைகளில் ஒருங்கிணைப்பட்ட மதக் கலவரங்கள் உள்ளிட்ட திட்டமிடப்பட்ட வன்முறைகள் மிகப் பிரபலமானவையாக இருந்திருக்கின்றன.

2005-ம் ஆண்டு மத்தியில் மோகன் பாகவத்தும், இந்திரேஷ் குமாரும் பயங்கரவாத சதித்திட்டத்தில் அசீமானந்தாவின் பங்களிப்பு பற்றி அறிந்து கொண்டார்கள். ஆனால், அசீமானந்தா ஒதுக்கி வைக்கப்படவில்லை. மாறாக, அந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது மற்றும் மிகவும் போற்றப்படும் தலைவரான எம்.எஸ். கோல்வால்கரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவருக்கு ரூ 1 லட்சம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பழுத்த பாஜக தலைவரும் முன்னாள் கட்சித் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி அந்த நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கினார். இந்திரேஷ் குமார் மீதான குற்றச்சாட்டுகளைக் குறித்த முழுமையான விசாரணையிலிருந்து அவர் பாதுகாக்கப்பட்டிருந்தாலும், அசீமானந்தாவுடன் தனது உறவுகளை ஆர்.எஸ்.எஸ் முழுமையாக மறுப்பது கேள்விக்கு அப்பாற்பட்டது.

–    தொடரும்

தமிழாக்கம் – பண்பரசு

நன்றி : லீனா கீதா ரகுநாத், கேரவான் 

படங்கள் நன்றி : கேரவான்