Thursday, December 12, 2024
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்அவதார் சிங்: இந்திய அரசு ஒளித்து வைத்திருந்த பயங்கரவாதி தற்கொலை!

அவதார் சிங்: இந்திய அரசு ஒளித்து வைத்திருந்த பயங்கரவாதி தற்கொலை!

-

அவதார்-சிங்காஷ்மீரில், இந்திய இராணுவத் துணைப்படையான ராஷ்ட்ரிய துப்பாக்கிப் படையின் மேஜர் பொறுப்பில் பணியாற்றிய அவதார் சிங், 1996 மார்ச் மாதத்தில் காஷ்மீரின் பிரபல மனித உரிமை வழக்குரைஞரான ஜலீல் அந்த்ராபியைக் கடத்திச் சென்று, கொட்டடியில் அடைத்து வதைத்துக் கொன்ற மிகக் கொடிய அரசு பயங்கரவாதியாவான். இக்கொட்டடிக் கொலைக்கு எதிரான போராட்டங்கள் காஷ்மீரில் வலுத்து, 1996-இல் மனித உரிமையாளர்கள் தொடுத்த வழக்கின்படி காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் அவதார் சிங் முதன்மைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளான். இதுதவிர, மேலும் 10 அப்பாவி காஷ்மீரிகளின் படுகொலைகளுக்கு அவதார் சிங்கும் அவனது தலைமையிலான 7வது ராஷ்டிரிய துப்பாக்கிப் படையினரும்தான் காரணம் என்று போலீசு குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவில் குடியேறி குடும்பத்தோடு வாழ்ந்து வந்த அவதார் சிங் மீது பத்தாண்டுகளுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அவதார் சிங்கை கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு 2007-ஆம் ஆண்டில் காஷ்மீர் உயர் நீதிமன்றம் இந்திய இராணுவத்திடம் கோரியது.  ஆனாலும் இந்திய இராணுவம் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்த நிலையில், கடந்த 2012 ஜூன் 21 அன்று விசாரணை நடத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே, ஜூன் 9ஆம் தேதியன்று  தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளைச் சுட்டுக் கொன்றுவிட்டு,  அவதார் சிங் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

அவதார்-சிங்-இடைப்பட்ட காலத்தில், ஜலீல் அந்த்ராபி படுகொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய சாட்சியான சிக்கந்தர் கானீ என்பவர், விசாரணைக்கு முன்பே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த்ராபி கொலை வழக்கை, சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்ட காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி பிலால் நாஸ்கி, உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். 1997-இல் காஷ்மீர் உயர் நீதிமன்றம் அவதார் சிங்கைக் கைது செய்ய உத்தரவிட்ட போதிலும், அவன் இந்திய இராணுவப் பாதுகாப்புடன் பஞ்சாபில் சுதந்திரமாகத்தான் இருந்தான். பின்னர், அவன் 2003-இல் கனடாவுக்குத் தப்பிச் சென்றதை இந்திய அரசு தடுக்கவில்லை. அங்கு அவன் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்ததை கனடா அரசு ஏற்காததால், 2007இல் குடும்பத்தோடு அமெரிக்காவுக்குத் தப்பியோடி, கலிபோர்னியாவிலுள்ள செல்மா நகரில் சட்டவிரோதமாகக் குடியேறி, சரக்குந்து முதலாளியாக வாழ்க்கையை நடத்தியுள்ளான். அங்கு அவன் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்ததையொட்டி,  அமெரிக்க உள்துறையும் குடிபெயர்ந்தோர் துறையும் விசாரணை நடத்தி வந்துள்ளன. கனடாவிலும் அமெரிக்காவிலும் அவன் இருந்ததைப் பற்றி அறிந்திருந்த போதிலும், அவனைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்திய அரசும் உளவுத்துறையும் அதிகார வர்க்கமும் நீதித்துறையும் இராணுவமும் அமைச்சர்களும் இப்பயங்கரவாதச் சதியில் ஈடுபட்டுள்ளதையும், அவதார் சிங்கைத் தப்பிக்கவைத்து விசாரணையை இழுத்தடித்து வந்துள்ளதையும்  இந்த விவகாரம் அம்பலப்படுத்திக் காட்டுகிறது.

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. காஷ்மீரில் அப்பாவியா…??????எல்லாம் பயங்கரவாத கும்பல்தானப்பா இருக்கு….இருந்த அப்பாவி எல்லாரையும்தான் முஸ்லீம் பயங்கரவாதிகள் கொன்னு குவிச்சிட்டானுங்களப்பா….ஆப்புறம் ஏது அப்பாவி…???/

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க