Sunday, July 21, 2024
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்அரசு பயங்கரவாதத்தின் அரணாக உச்ச நீதிமன்றம்!

அரசு பயங்கரவாதத்தின் அரணாக உச்ச நீதிமன்றம்!

-

இந்திய-அரசு-பயங்கரவாதம்

கடந்த 2000-மாவது ஆண்டு மார்ச் மாதத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன்  இந்தியாவுக்கு வருவதற்கு  சில மணி நேரங்களுக்கு முன்பாக,  காஷ்மீரின் சட்டிசிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். எல்லை தாண்டிய பயங்கரவாதம் எனக்காட்டி பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதற்காகவும், காஷ்மீரில் நடக்கும் போராட்டம் விடுதலைக்கான போராட்டமல்ல, இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்படும் இனவெறியாட்டம் என்று கிளிண்டனுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் காட்டுவதற்காகவும் உளவுத்துறையின் ஏற்பாட்டின்படி  இந்திய இராணுவத்தால் இப்படுகொலை நடத்தப்பட்டது. இந்திய அரசும் ஊடகங்களும், பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் லஷ்கர்இதொய்பா  தீவிரவாதிகள் இந்திய இராணுவ உடையில் இரகசியமாக வந்து  சீக்கியர்களைக் கொன்று காஷ்மீரில் இனக்கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாக  கதையளந்தன.

இப்படுகொலை நடந்த அடுத்த சில நாட்களிலேயே சட்டிசிங்புராவை அடுத்துள்ள பத்ரிபால் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ராஷ்ட்ரிய துப்பாக்கிப்படை எனும் துணை ராணுவப் படை சுட்டுக் கொன்றது. இவர்கள்தான் சீக்கியர்களைப் படுகொலை செய்த லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி,  பாகிஸ்தான் ஏவிவிட்ட பயங்கரவாதிகள் என்று காட்டுவதற்காக, அவர்களுக்குச் சீருடை அணிவித்து, ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டபோது அவர்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் கூறியது. உண்மையில், அவர்கள் பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்ட தீவிரவாதிகள் அல்ல;  அவர்கள் இந்திய இராணுவத்துடன் ஆயுத மோதலிலும் ஈடுடவில்லை. சுமைக்கூலி வேலைக்கு வருமாறு நைச்சியமாக இந்திய இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட அவர்கள், பத்ரிபால் மற்றும் அருகிலுள்ள  கிராமங்களைச் சேர்ந்த அப்பாவிகள்.

இராணுவத்தின் பயங்கரவாதப் படுகொலைகளை எதிர்த்தும், இந்திய ராணுவம் கொண்டு சென்ற தம் உறவினர்களைத் திரும்ப ஒப்படைக்க கோரியும், பத்ரிபாலில் இராணுவம் கொன்று புதைத்த ஐந்து பேரின் பிணங்களையும் தோண்டியெடுத்துப் பிரேதப் பரிசோதனை நடத்தக் கோரியும் காஷ்மீர் மக்கள் தொடர்ந்து போராடினர்.  2000-மாவது ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி அனந்த்நாக் நகரில் 5000க்கும் மேற்பட்டோர் திரண்டு நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவமும் துணை இராணுவப் படைகளும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இத்தகைய தொடர் போராட்டங்களின் விளைவாக,  கொல்லப்பட்ட ஐந்து பேரின் பிணங்களும் தோண்டியெடுக்கப்பட்டு உறவினர்களால் அடையாளம் காணப்பட்டன. இருப்பினும், குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்தது மட்டமின்றி, தடயங்களை அழிக்கவும் இந்திய இராணுவம் முயற்சித்தது. இராணுவத்தின் மோசடிகள் அம்பலமானதால், மக்கள் ஆத்திரமடைந்ததைத் தொடர்ந்து,
2002-இல்  காஷ்மீர் மாநில அரசு, இந்த வழக்கை மையப் புலனாய்வுத்துறையிடம்  (சி.பி.ஐ.) ஒப்படைத்தது.

நான்காண்டு விசாரணைக்குப் பின்னர், 5 இராணுவ அதிகாரிகள் மற்றும் 7 ராஷ்ட்ரிய துப்பாக்கிப் படை சிப்பாய்கள் மீது வழக்கு பதிவு செய்து, ஜூலை 2006-இல் சிறீநகர் முதன்மைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. கொல்லப்பட்டவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அல்ல, காஷ்மீரி மக்கள் என்றும், அவர்கள் போலி மோதலில்தான் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் சி.பி.ஐ.இன் குற்றப்பத்திரிகை உறுதி செய்தது. கடத்தல், படுகொலை மட்டுமின்றி, சாட்சியங்களை அழிக்கும் கிரிமினல் நடவடிக்கைகளிலும் இராணுவ அதிகாரிகளும் சிப்பாய்களும்  ஈடுபட்டதாகவும் சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

இது, இராணுவத்தினர் தமது கடமையைச் செய்யும் போக்கில் தவறுதலாகவோ தவிர்க்கவியலாமலோ நேர்ந்துவிட்ட மரணம் அல்ல; சதி செய்து திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பதால், இதனைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு கொலை வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், வழக்கமாக இராணுவத்தினருக்கு வழங்கப்படும் இறையாண்மை மிக்க விதிவிலக்கு வழங்கப்படக் கூடாது என்றும் சி.பி.ஐ. வாதிட்டது.

ஆனால் குற்றவியல் நீதிமன்றமோ, இவ்வழக்கை இராணுவக் கோர்ட்டில் விசாரிப்பதா, வழக்கமான குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிப்பதா என்று இராணுவமே முடிவு செய்து கொள்ளட்டும் என்று தீர்ப்பளித்தது.

1990-ஆம் ஆண்டின் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்படி, இராணுவப் படையினர் மீது விசாரணை நடத்த வேண்டுமென்றால், மைய அரசின் அனுமதியைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதன்படி, மைய அரசிடம் முன் அனுமதி பெறாமல் சி.பி.ஐ.  விசாரணை நடத்தியுள்ளதால், சி.பி.ஐ. நடத்தியுள்ள புலனாய்வே சட்டத்துக்கு எதிரானது என்று இராணுவம் எதிர்த்தது.  இந்தப் படுகொலை ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்ட விதிகளின் கீழ் வராது என்றும், எனவே மைய அரசிடம் முன்அனுமதி வாங்கத் தேவையில்லை என்றும் சி.பி.ஐ. வாதிட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. யின் வாதம் சரியானதென ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் முன்கூட்டியே மைய அரசிடம் அனுமதி வாங்கத் தேவையில்லை என்று ஜூலை 2007-இல் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இராணுவம் மனு தாக்கல் செய்து, சாட்சியங்களை திரட்டவோ, விசாரிக்கவோ சி.பி.ஐ.க்கு உரிமை கிடையாது என்றும், அதன் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும் கோரியது. இது, இந்திய இராணுவ அதிகாரிகளும் சிப்பாய்களும்  நடத்திய பச்சைப் படுகொலைதான் என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் வரம்புகளுக்கு அப்பால் நடந்துள்ள கொலை என்பதால், மைய அரசிடம் முன்அனுமதி வாங்க அவசியமில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கும் சிப்பாய்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வாதிட்டது.

இந்திய-அரசு-பயங்கரவாதம்கடந்த மே முதல் நாளன்று இந்த வழக்கில், படுகேவலமானதொரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இராணுவ அதிகாரிகளும் சிப்பாய்களும் நடத்திய படுகொலையை நிரூபிக்கும் வகையில் சி.பி.ஐ. சமர்பித்த ஆதாரங்களை ஆய்வு செய்யக்கூட உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. “இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் அத்துமீறல்கள்  குற்றங்களை இராணுவ கோர்ட்டில்தான் விசாரிக்க முடியும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இராணுவ கோர்ட்டில் விசாரணை நடத்த முன்வராவிட்டால், மைய அரசிடம் அனுமதி கேட்டு கிரிமினல் குற்றவியல் நீதி மன்றத்தில் மையப் புலனாய்வுத்துறை வழக்கு தொடுத்து விசாரணையை நடத்த வேண்டும்” என்று தீர்ப்பளித்துள்ளது  உச்ச நீதிமன்றம்.

பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் இராணுவம் என்ன கூறியதோ, அதையே இன்று தனது தீர்ப்பாகக் கூறுகிறது உச்ச நீதிமன்றம். மத்திய அரசின் கைப்பாவையான சி.பி.ஐ, இராணுவத்திற்கு எதிராக இவ்வளவு தூரம் இந்த வழக்கில் வாதிட்டதே மிப்பெரும் அதிசயம். காஷ்மீர் மக்களின் கோபத்தை தணிக்கவும், இந்திய அரசின் மீது கொஞ்சம் நம்பிக்கை ஏற்படுத்தவும் பயன்படும் என்ற காரணத்தினால்தான் வழக்கை சி.பி.ஐ. இவ்வளவு தூரம் நகர்த்திச் சென்றிருக்கிறது. இருப்பினும், அரசியல் சட்டத்தின் காவலனாகவும், மக்களுடைய அடிப்படை உரிமைகளின் காவலனாகவும் தன்னை சித்தரித்துக் கொள்ளும் உச்ச நீதிமன்றம், இராணுவத்தின் காவலனாக இருப்பதையே முதன்மைக் கடமையாக கருதுகிறது என்பது இத்தீர்ப்பிலிருந்து வெளிச்சமாகிறது.

பனிரெண்டு ஆண்டுகாலப் போராட்டத்தையும் இந்த பாசிசத் தீர்ப்பு ரத்து செய்து விட்டது. கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என எத்தகைய குற்றங்களில் இராணுவத்தினர் ஈடுபட்டாலும், அவை மறுக்க முடியாமல் நிரூபிக்கப்பட்டாலும், அத்தகைய குற்றங்கள் அனைத்தும், இராணுவத்தினர் தம் கடமையைச் செய்யும் போக்கில் நிகழ்ந்துவிட்ட தவறுகளாகவே கருதவேண்டும் என்பதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் உட்பொருள். இராணுவத்தையும் போலீசையும் காட்டிலும் கொடியதும், நயவஞ்சகம் நிறைந்ததும் உச்ச நீதிமன்றம்தான் என்பதை இத்தீர்ப்பு நிரூபித்திருக்கிறது.

முள்ளிவாய்க்கால் போர்க்குற்றங்களைப் பற்றி இலங்கையில் ராஜபக்சேயும் என்ன கூறுகிறாரோ, அதைத்தான் இந்த காஷ்மீர் தீர்ப்பில் உச்ச நீதிமன்றமும் கூறுகிறது.

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________________________________________

_____________________________________________________________

_____________________________________________________________

_____________________________________________________________

_____________________________________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க