privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்தி"கஷ்டம் தீர்க்கும் ஆலயம்": ஒரு புலனாய்வு ரிப்போர்ட்!

“கஷ்டம் தீர்க்கும் ஆலயம்”: ஒரு புலனாய்வு ரிப்போர்ட்!

-

செய்தி -76

டந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி நக்கீரன் இணைய தளத்தில் “கஷ்டம் தீர்க்கும் ஆலயம்” எனும் பெயரில் ஒரு செய்தி வந்திருந்தது. அதில் சிமியோன் என்கிற மூத்த பத்திரிக்கையாளர் அரகோணத்தில் சர்ச் கட்டுவதாகவும், அதற்கு கஷ்டபடுபவர்களிடம் இருந்து மட்டும் நன்கொடை வாங்கி கொள்வதாகவும், அவருக்கு பணம் கொடுப்பவர்களுக்கு கஷ்டம் தீர்ந்து விடுவதாகவும் செய்தி வந்திருந்தது.

இதைக் கேள்விப்பட்ட நாமக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கோடி ரூபாய் தர முன்வந்த போதும் சிமியோன் அதை மறுத்து விட்டாராம். ஒரே ஆளிடம் இவ்வளவு பெரிய தொகையை வாங்கிக் கொண்டால் கஷ்டப்படும் பலருக்கும் ‘சான்ஸ்’ கிடைக்காமல் போய் விடுமே என்பது தான் சிமியோனின் நல்லெண்ணமாம்.

செய்தியைப் படித்ததும் அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டோம். நம்மையும் கஷ்டப்படும் ஒரு அற்ப ‘ஆவி’ என்பதாக அறிமுகம் செய்து கொண்டு உரையாடத் துவங்கினோம். எக்குத்தப்பாக மாட்டிக் கொண்ட பாவ ‘ஆவி’யை சிமியோன் சாதாரணமாக விடத் தயாராக இல்லை. தான் கஷ்ட படுபவர்களுக்காக பிராத்தனை செய்வதாகவும், பிரச்சனை பனி போல் விலகி ஓடி விடுமென்றும் தனது பிரசங்கத்தைத் துவங்கினார்.

‘ஆபத்தை’ உணர்ந்த நாம் அதிரடியாக குறுக்கிட்டோம்,

“சார், நக்கீரன்ல சர்ச் கட்டும் வேலை நடந்து வருவதாக போட்டிருந்தாங்களே,  இப்ப வேலையெல்லாம் எந்தளவுல இருக்கு?” என்றோம்.

“அது வந்து பிரதர், இப்பத்தான் நிலமே வாங்கியிருக்கோம்  இனிமே தான் கட்டட வேலைகள் துவங்கனும்” என்றார் தயக்கமாக.

“சரி, எங்களோட கஷ்டத்துக்கு எவ்வளவு பீஸ் கட்டனும்?” என்றோம்.

“பிரதர், குறைந்தது 500 ரூபாயாவது கட்டுங்க. அதுக்கு மேல தருவது உங்கள் விருப்பத்தைப் பொருத்தது” என்றார்.  நாங்கள் அடுத்த வலையைப் போட்டோம்.

“சரிங்க எங்க நண்பர்கள் சிலரும் கஷ்டத்தில் இருக்காங்க. ஆனா அவங்கெல்லாம் பணக்காரங்க. கேட்டா முப்பதாயிரம் நாப்பதாயிரம் தருவாங்க. ஏன் ஒருத்தர் தன்னோட பிரச்சினை உறுதியா தீரும்னா ரெண்டு கோடி கூட தரத் தயாரா இருக்கார்” என்றோம்.

“தாராளமா தரச் சொல்லுங்க” என்றார் அவசரமாக. நாலு நாள் கேப்பில் நக்கீரனிடம் அளந்து விட்ட பொய்களையே மறந்திருக்கிறார்.

“கண்டிப்பா சொல்றேங்க. அது சரிங்க, இன்னிக்குத் தேதிக்கு 500 ரூபா தரக்கூட முடியாத நிலைல ஏகப்பட்ட பேர் இருக்காங்க அவங்களுக்கெல்லாம் கஷ்டம் தீரணும்னா என்னாங்க செய்யனும்?”  என்றோம்.

“அவங்கெல்லாம் ஏசுவுக்குள் வந்தா நிச்சயம் விடுதலை கிடைக்கும் சார்” என்றார்.

“ஓஹோ.. அப்ப முதலமைச்சர் ஜெயலலிதாவால வேலை நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு உங்களால வேலைவாங்கித் தர முடியுமா? ஜெபத்தால அம்மாவோட மனசை மாத்திக் காட்டுவீங்களா?” என்றோம்.

ஒரு நிமிடம் யோசித்தவர், “யார் சார் நீங்க. எதுக்கு இதெல்லாம் கேட்கறீங்க” என்று சந்தேகம் கொள்ள ஆரம்பித்தார்.

“இல்லை ஐயா, சும்மா ஒரு சந்தேகத்துக்குக் கேட்டோம். ஏசுவோட பவர் என்னான்னு காசு தரப் போற எங்க நண்பர்கள் கிட்டயும் சொல்லனும் இல்லையா? சரிங்க, இப்படி வசூலாகற பணத்தை எப்படி கையாள்றீங்க?” இப்போது அவர் முழுவதுமாக விழித்துக் கொண்டார்.

“ அதெல்லாம் கரெக்ட்டா ஹேண்டில் செய்யறோம். ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சிருக்கோம்” என்றார்.

“சரி, யாரெல்லாம் அந்த டிரஸ்டின் மெம்பர்கள்?” என்று கேட்டோம்.

“நானும் என்  அண்ணனும் தான் டிரஸ்ட். நீங்க காசு அனுப்பனும்னா இந்த வங்கி அக்கவுன்ட் நெம்பரை குறிச்சிக்கங்க.” என்றவாரே ஒரு வங்கிக் கணக்கு எண்ணைச் சொன்னார் – அது அவரது அண்ணனின் வங்கிக் கணக்கு எண்ணாம்.

“சரிங்க ஒருவேளை கஷ்டம் தீரலைன்னா வசூல் பண்ணதை ரீபண்ட் பண்ணுவீங்களா?” என்றோம்.

என்ன சார் கிண்டல் பண்றீங்களா? என்றவரை கொஞ்சம் சமாதானப் படுத்தினோம். தற்போது வெளியூரில் இருப்பதாகவும் திங்களன்று அழைக்குமாறும் கேட்டுக் கொண்டார். செல்பேசியை வைக்கும் நேரத்தில், இந்தக் சர்ச்சை கட்டி முடித்த பின் உலகில் இருக்கும் கஷ்டப்பட்டவர்கள் என்ன செய்வார்கள் வேறு சர்ச் கட்டுவீர்களா என்று கேட்டோம். பதில் பளிச்சென்று வந்தது “இப்போதைக்கு இந்த ப்ராஜக்ட்டில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறோம்” என்றவர் பட்டென்று கத்தரித்தார்.

ஏமாளிகள் இருக்கும் வரை நிதிநிறுவனங்களுக்கும் ஈமு கோழி கம்பேனிகளுக்கும் மட்டுமல்ல, மத வியாபாரிகளுக்கும் ஒரே கொண்டாட்டம் தான்.

இதையும் படிக்கலாம்

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

__________________________________________

__________________________________________