privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்அருந்ததி சாதி சிவகுருநாதனைக் கொன்ற ஆதிக்க சாதி வெறியர்கள் !

அருந்ததி சாதி சிவகுருநாதனைக் கொன்ற ஆதிக்க சாதி வெறியர்கள் !

-

ளவரசன், கோகுல்ராஜ், சங்கர் வரிசையில் இன்னுமொரு ஆதிக்க சாதிவெறிப் படுகொலை !

நெல்லை மாவட்டம் மேல இலந்தைகுளம் கிராமத்தில் தேவர் சாதி பெண்ணை காதலித்ததற்காக அருந்ததிய இளைஞர் சிவகுருநாதனை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள் தேவர் சாதி வெறியினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகில் உள்ள பாப்பம்பட்டி கிராமத்தின் இளைஞர் சிவகுருநாதன், அருந்ததி சாதியைச்சேர்ந்தவர். எம்.எஸ்.சி முடித்து மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். நெல்லை மாவட்டம் மேல இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண் செவிலியர் வேலை கிடைத்து பாப்பம்பட்டி-நெய்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார். தேவர் சாதியைச் சார்ந்தவர். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சிவகுருநாதன். கொலை செய்த இலட்சுமணப் பெருமாள்.
கொலை செய்யப்பட்ட சிவகுருநாதன். கொலை செய்த இலட்சுமணப் பெருமாள். படம் நன்றி: நக்கீரன்.

தாங்கள் காதலை பெற்றோர்களிடம்  தெரியப்படுத்தியிருக்கிறார் கஸ்தூரி. “சக்கிலிய பயலை எப்படி காதலிக்கலாம்”, என்று ஆத்திரமுற்ற பெற்றோர் பெண்ணிற்கு பணியிட மாற்றம் பெற்று செங்கோட்டைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதுவும் பயனளிக்காமல் போகவே கடந்த 20 நாட்களாக அப்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.

வீட்டிலும் உணவை மறுத்து தனது போராட்டத்தை தொடர்ந்துள்ளார் கஸ்தூரி. கஸ்தூரியின் நிலையை கண்டு எரிச்சலைடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் இப்பிரச்சனையை உடனடியாக தீர்ப்பதென திட்டமிட்டுள்ளனர். அதனடிப்படியில் கஸ்தூரியின் தாய் மாமா உள்ளிட்ட உறவினர்கள் சிவகுருநாதனை தங்களிடம் வந்து பேசுமாறு அழைத்துள்ளனர். தங்கள் காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்துவிட்டதாக கருதியஅப்பாவி கஸ்தூரியும் சிவகுருநாதனை வரவழைத்துள்ளார். சிவகுருநாதனும் அது உண்மையென நம்பி மேல இலந்தைகுளம் கிராமத்திற்கு சென்றுள்ளார்.

கிராமத்தில் நடந்த சம்பவம் குறித்து தகவல் குறித்து போலீசாரிடம் பேசியதிலிருந்து திண்டுக்கல் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் சக்திவேல் எங்களிடம் கூறியதாவது,” பெண் வீட்டிற்கு சென்ற சிவகுருநாதனை சாதி வெறியுடன் வீட்டின் உள்ளே கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. வாசலிலேயே தடுத்து அருகில் இருக்கும் கோவிலில் வைத்து பேசிக் கொள்ளலாம் என்று அழைத்து சென்றிருக்கிறார்காள். அங்கு பெண்ணின் தந்தை, தாய் மாமா, மற்றும் சில இளைஞர்கள் இருந்திருக்கிறார்கள். பெண்ணின் தந்தை மாற்று திறனாளி, கால் ஊனமானவர்.

அவர்கள் கஸ்தூரியை மறந்துவிடுமாறும் தங்களால் திருமணம் செய்து வைக்க முடியாது என்றும் கூறி மிரட்டியிருக்கிறார்கள். சாதியைக் குறிப்பிட்டு எப்படி மகளைக் கொடுக்க முடியும் என்று சாதிவெறியோடு கூறியிருக்கிறார்கள்.

தான் படித்து நல்ல வேலையில் இருப்பதாகவும் அதே போல கஸ்தூரியும் நல்ல வேலையில் இருப்பதால் கஸ்தூரியை தன்னால் நன்றாக பார்த்துக்கொள்ள முடியும் என்று அவர்களிடம் சுயமரியாதையுடன் பேசியிருக்கிறார் சிவகுருநாதன்.  இப்படி அவர் விடாப்பிடியாக மறுத்து பேசவே  சாதிவெறியேறிய நபர்கள் அவரை கொலை செய்திருக்கிறார்கள். அப்பெண்ணின் மாமாவும் தற்போது சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார். மாற்றுதிறனாளியான கஸ்தூரியின் தந்தை மட்டும் இக்கொலையை செய்திருக்க முடியாது.

இது வாக்குவாதத்தால் வந்த உணர்ச்சி வசப்படுதலால் செய்த கொலை அல்ல. ஊர்மானம், சாதி மானம் என்று வெறியேறி திட்டமிட்டு குழுவாக சேர்ந்து கொலை செய்திருக்கிறார்கள். கொலை நடந்த சமயத்தில் இரண்டு இளைஞர்கள் தெருவழியே ஓடியதை கிராம மக்கள் பார்த்திருக்கிறார்கள். அவ்விளைஞர்கள் குறித்து கஸ்தூரியின் மாமாவிடம் விசாரணை நடந்துவருவதாக சங்கரன்கோவில் டி.எஸ்.பி என்னிடம் கூறினார்” என்கிறார் சக்திவேல்.

தேவர்சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட சிவகுருநாதன்.
தேவர்சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட சிவகுருநாதன். படம் நன்றி: நக்கீரன்.

மேலும் சிவகுருநாதன் தானாக பெண்வீட்டிற்கு சென்றார் என்று சில பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருப்பதை மறுக்கிறார் சக்திவேல். சிவகுருநாதன் மற்றும் கஸ்தூரியின் செல்போன்களை கைப்பற்றியுள்ள போலீசார் அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் கஸ்தூரி மற்றும் அவர்களது வீட்டின் அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றிருக்கிறார் என்பதை உறுதிசெய்துள்ளதாகவும், சங்கரன்கோவில் டி.எஸ்.பி தன்னிடம் தெரிவித்த தகவலை தெரிவித்தார் சக்திவேல்.

இச்சம்பவம் குறித்து திருநெல்வேலி மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் அக்கிராமத்தினரிடம் விசாரித்து கூறியதாவது ”பெண்வீட்டாரின் அழைப்பின் பேரின் சிவகுருநாதனும் அவரது நண்பர்களும் பெண்வீட்டிற்கு பேச சென்றிருக்கிறார்கள். வீட்டின் வாசலில் வைத்தே சிவகுருநாதனை கம்பியால் அடித்திருக்கிறார் பெண்ணின் அம்மா. இதை எதிர்பார்க்காத சிவகுருநாதனும் அவரின் நண்பர்களும் ஓட முயற்சித்திருக்கிறார்கள்.ஆனால் சிவகுருநாதன் மீது அடி பலமாக இருக்கவே அவரால் ஓட முடியவில்லை.

அக்கிராம் தெருக்களின் வழியே ஓடிய அவரது நண்பர்களை பக்கத்து கோனார் சாதி தெருக்கார்கள் ஏதோ திருடிவிட்டி ஓடும் நபர்கள் என பிடித்து விசாரித்திருக்கிறார்கள். பின்னர் ஆட்டோவில் ஏறி அவர்கள் சென்றதாக தெரிகிறது. அடிபட்டு சுருண்டு விழுந்த சிவகுருநாதன் பின்னர் அருகில் இருக்கும் கோவில் வாசலில் வைத்து கொல்லப்பட்டிருக்கிறார்.” என்கிறார்.

போலீசாரிடம் பேசியதிலிருந்து சக்திவேல் கூறுவதிலும், கொலை நடந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுவதிலும் சில தகவல்கள் வேறுபட்டாலும் இது ஒரு திட்டமிடப்பட்ட தேவர் சாதிவெறி கொலை என்பது மட்டும் உறுதி. தற்போது தன் உறவினர்களையும், கொலையில் ஈடுபட்ட இளைஞர்களையும் காப்பாற்றும் நோக்கில் சரணடைந்துள்ளார் கஸ்தூரியின் தந்தை லெட்சுமணப் பெருமாள்.

சிவகுருநாதன் குடும்பம்

சிவகுருநாதனின் தந்தை சின்னகண்ணு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக இருக்கிறார். அவரது இரண்டு சகோதரகள் கல்லூரியில் படித்து வருகிறார்கள். முதல் தலைமுறை இளைஞராக எம்.எஸ்.டி படித்து வேலை பார்த்து வரும் சிவகுருநாதன் தனது படிப்பும் வேலையும் தங்களது காதலுக்கு கைகொடுக்கும் என்று நம்பியிருக்கிறார். அதனடிப்படையில் பெண்வீட்டிற்கு சென்று பேசியிருக்கிறார். ஆனால் சாதிவெறி அவரைக் கொன்று விட்டது.

சிவகுருநாதனது தந்தையை மிரட்டி கொல்லப்பட்டவரது உடலை அவர்களது வழக்கப்படி புதைக்காமல் எரிக்க வைத்திருக்கிறது போலீசு. தலித் சாதிகளிலேயே கடை நிலையில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் சிவகுருநாதனது தந்தையும் தேவர் சாதிவெறியையோ இல்லை அந்த சாதிவெறியை காத்து நிற்கும் அதிகார வட்டங்களையோ எதிர்த்து நிற்கும் நிலையில் இல்லை.

சிவகுருநாதன் ஒரு நிலையான வேலையில் நல்ல சம்பளத்துடன் வேலை பார்த்தவர். அவரது காதலும் விடலைப் பருவ காதல் அல்ல. அதே போல கஸ்தூரியும் தேவர் சாதிவெறிக்கு பெயர் போன வட்டாரத்தில் இருந்து வந்தாலும் அதை தள்ளியெறிந்து உண்மையாக காதலின் பக்கம் நின்றிருக்கிறார். இப்படி அநேக ‘பொருத்தங்களுடன்’ இருந்த ஒரு காதல் இணையை பிரித்து காதலனை கொன்றிருக்கிறார்கள் தேவர் சாதி வெறியர்கள்.

சாதி மாறி காதலித்தால் அதுவும் தலித் சாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் காதலித்தால் அதை பண்பாட்டு ‘சீரழிவு’ என்று நரித்தனமாக எதிர்க்கும் ராமதாஸ்கள் நிறைந்திருக்கும் தமிழகத்தில், கோவைப் பகுதியில் கோகுல்ராஜ்களைக் கொன்று விட்டு நெல்லைப் பகுதிகளில் தெனவெட்டாக திரியும் யுவராஜ்களின் காலத்தில் சிவகுருநாதனது காதல் எப்படி நிறைவேறும்?

இந்துமதவெறியர்கள் தமது இயக்க இருப்பையும் விஸ்தரிப்பையும் அதிகரிப்பதற்கு இத்தகைய ஆதிக்க சாதி வெறியர்களையே நம்பியிருக்கின்றனர். அதே போன்று தமிழ் தேசியம் பேசும் இனவாதிகளும் ஆதிக்க சாதிவெறியை கண்டிக்காமல் தமிழன் என்ற பெயரில் ஆதரிக்கின்றனர். ஓட்டுக் கட்சிகளோ, அதிகாரி – போலிஸ் வட்டாரங்களோ ஆதிக்க சாதி இட்ட சட்டங்களை நிறைவேற்றும் கருவிகளாக செயல்படுகின்றனர்.

அதனால்தான் இளவரசன் துவங்கி உடுமலைப் பேட்டை சங்கர் வரை இவர்களைக் கொலை செய்த குற்றவாளிகள் இங்கே தண்டிக்கப்படுவதில்லை. அந்த பட்டியலில் சிவகுருநாதனையும் சேர்க்கப் போகிறோமா? பிறப்பால் தேவர் சாதியில் பிறந்திருப்போரும், ஏனைய ஆதிக்க சாதிகளின் பெயர்களை சான்றிதழ்களில் பயன்படுத்துவோரும் இத்தகைய கொலைகளை பகிரங்கமாக கண்டிப்பதோடு, பொதுவெளியில் சாதி மறுப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும். இல்லையேல் நாம் காட்டுமிராண்டிகளின் காலத்திற்கு திரும்ப வேண்டியிருக்கும்.

– வினவு செய்தியாளர்.