privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்மோடியின் பலிபீடம் : 7 நாளில் 33 பேர் பலி !

மோடியின் பலிபீடம் : 7 நாளில் 33 பேர் பலி !

-

வம்பர் 8 இரவு செல்லாத நோட்டை அறிவித்து விட்டு மோடி ஜப்பான் சென்றார். புல்லட் ரயில், அணு மின்சாரத்திற்காக பிடில் வாசித்தார். பிறகு கோவா வந்தார். விமான நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் கிளிசரின் வடித்தார். பிறகு உத்திரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றார். மக்கள் தம்மை ஆதரிப்பதாக கூறினார். 50 நாட்களில் நிலைமை சரியாகும் என்றார். பிறகு பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளை சந்திக்கிறேன் என்று சவால் விட்டார்.

பெருமுதலாளிகளுக்கு வராக்கடனாகவும், கடனாகவும் இலட்சம் கோடிகளை வாரி வழங்கும் இந்திய அரசு சார்பில் சாதாரண மக்களின் பணத்தை பிடுங்கும் திட்டமே மோடியின் செல்லாத நோட்டு திட்டம். இதனால் அம்பானி – அதானி கருப்புப் பண முதலைகள் மனம் மகிழ உழைக்கும் மக்களை வதைத்து வருகிறது மோடியின் அரசு. இந்த ஏழு நாட்களில் இது வரை செல்லாத நோட்டுக்களை மாற்ற முடியாமல் மாரடைப்பில், தற்கொலையில், நிலை குலைந்து இறந்து போனோர் 33 பேர். இதில் ஒரு கொலையும் உண்டு.

black money surgical operation_cartoon
படம் : துரை

ஹஃப்பிங்டன் போஸ்ட் வெளியிட்டிருக்கும் இந்தப் பட்டியல் பல்வேறு முக்கிய ஊடகங்களின் செய்திகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்க்கும் போது ஊடகங்கள், காவல் நிலையங்களுக்கு வராத சாவுகள் இன்னும் பிரம்மாண்டமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.

1. பஞ்சாபின் தார்ன் தரன் பகுதியைச் சேர்ந்தவர் சுக்தேவ் சிங். அவரது மகளுக்கு திருமணம் நடக்க நான்கு நாட்களே இருக்கின்றன. அப்போது மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பைக் கேட்டவர் அதிர்ச்சியடைந்து மாரடைப்பால் காலமானர். “எங்களது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனது கணவர் பெரும் பதட்டத்தில் இருந்தார். மார்பு வலிக்கிறது என்று கூறிக்கொண்டே இறந்து போனார்” என்கிறார் சுக்தேவ் சிங்கின் மனைவி சுர்ஜித் கவுர்.

2. உத்திரப் பிரதேசத்தின் புலன்ஷ்தார் பகுதியைச் சேர்ந்த மாணவன் சுமித். இவனது தந்தை எல்லைப் பாதுகாப்பு படையில் பணிபுரிகிறார். செல்லாத நோட்டு காரணமாக தனது தாய் சில்லறை நோட்டுக்களை தரமறுத்ததால் சுமித் தற்கொலை செய்து கொண்டான்.

Women waiting ATM3. ஒடிசாவின் சம்பல்பூரில் இரண்டு வயது குழந்தையை சிகிச்சைக்காக ஆட்டோவில் ஏற்றிச் செல்ல ஓட்டுநர் மறுத்துவிட்டார். காரணம் பெற்றோர்களிடம் சட்டவிரோதமான 500 நோட்டு மட்டும் இருந்தது.

4. தெலுங்கானா மாநிலத்தின் செகந்தராபாத்தில் செல்லாத நோட்டுக்களை மாற்றுவதற்காக 2 மணி நேரமாக வரிசையில் நின்ற 75 வயது பெரியவர் லஷ்மி நாராயணா நிலை குலைந்து மயங்கி இறந்து போனார். கையிலிருந்த ஒன்றே முக்கால் இலட்சம் பணத்தை சேமிப்பு கணக்கில் போடுவதற்காக அவர் வங்கிக்கு சென்றிருந்தார்.

5.பீகாரின் அவுரங்காபாத்தில் வங்கி வரிசையில் நின்ற முதியவர் சுரேந்திர சர்மாவும் இறந்து போயிருக்கிறார்.

6. மத்திய பிரதேசத்தின் சட்டார் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான ஹல்க் லோதி மோடி அறிவிப்பின் விளைவால் தற்கொலை செய்து கொண்டார். ராபி பருவ சாகுபடிக்கான உரங்களை வாங்குவதற்கு திட்டமிட்டிருந்த அவரிடம் மோடி அறிவித்த செல்லாத நோட்டுக்கள் மட்டுமே இருந்தன.

7. உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அசிஸ் அன்சாரி எனும் 60 வயது தொழிற்சாலை தொழிலாளி, வங்கி வரிசையில் நோட்டை மாற்றுவதற்காக நிற்கும் போது மாரடைப்பால் மரணமடைந்தார்.

8. கிழக்கு உத்திரப்பிரதேசத்தின் ஜலூன் பகுதியைச் சேர்ந்த ரகுநாத் வர்மா ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். அவரும் வங்கி வரிசையில் மரணமடைந்தார். “திருமண செலவுகளுக்காக கையில் இருக்கும் 2 இலட்சத்தை மாற்றுவதற்காக அவர் மூன்று நாட்களாக வங்கி சென்று வந்தார். வங்கி மேலாளரின் காலில் விழுந்து கெஞ்சினாலும் பலனில்லை”, என்கிறார் அவரது மகன் ரவி.

9. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரான மகேஷ் சர்மாவிற்கு சொந்தமான கைலாஷ் மருத்துவமனையின் கிளை ஒன்று, மேற்கு உத்திரப்பிரதேசத்தின் புலன்ஷாரில் இருக்கிறது. நோய்வாய்ப்பட்ட குழந்தை ஒன்றை சேர்க்கும் போது மருத்துவமனை நிர்வாகம் பத்தாயிரம் ரூபாயை முன்பணமாக கட்டுமாறு பெற்றோரிடம் சொன்னது. மோடியின் செல்லாத நோட்டுக்கள் மட்டுமே வைத்திருந்த பெற்றோர் கதறியும் நிர்வாகம் ஏற்கவில்லை. குழந்தை இறந்து போனது.

10. தில்லியைச் சேர்ந்த 24 வயது ரிஸ்வானா மூன்று நாட்களாக செல்லாத நோட்டுக்களை மாற்ற முடியவில்லை என்ற அதிர்ச்சியில் மின் விசிறியில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

11. குஜராத்தின் சூரத்தில் இரு குழந்தைகளின் 50 வயது தாய் ஒருவர், தற்கொலை செய்து கொண்டார். காரணம் கடைக்காரர்கள் மோடியின் செல்லாத நோட்டுக்களை பெற மறுத்ததால் தனது குடும்பத்திற்கு தேவையான உணவை அவரால் அளிக்க முடியவில்லை.

12. வங்கி சென்று புதிய நோட்டு பெறமுடியாமல் தனது சகோதரன் திரும்பியதைக் கண்டு மனமுடைந்த மேற்கு உத்திரப்பிரதேசத்தின் ஷாம்லியைச் சேர்ந்த 20 வயது ஷாபனா, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

13. கர்நாடகா மாநிலத்தின் சிக்பல்லபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், தனது குடிகார கணவனுக்குத் தெரியாமல் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த 15,000 ரூபாய் பணத்தை இருப்பு வைக்க வங்கிக்குச் சென்றார். அங்கே யாரோ அவரது பணத்தை திருடியதையடுத்து தற்கொலை செய்து கொண்டார்.

14. சட்டீஸ்கரின் ராஜ்காரைச் சேர்ந்த 45 வயது விவசாயி ஒருவர் மூன்று நாட்களாக வங்கி சென்றும் 3,000 ரூபாயை மாற்ற முடியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டார். அந்த பணத்தை தமிழகத்தில் மாட்டிக் கொண்ட தனது குழந்தைகளுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தார்.

15. குஜராத்தின் லிம்பிடி நகரைச் சேர்ந்த 69 வயது பெரியவர் செல்லாத நோட்டுக்களை மாற்றுவதற்காக இந்தியன் வங்கிக் கிளை ஒன்றில் நிற்கும் போது நிலை குலைந்து மாரடைப்பால் காலமானார்.

16. கான்பூரைச் சேர்ந்த யாருமற்ற ஒரு முதிய பெண் பணத்தை எண்ணும் போது மரணமடைந்தார். அவரது உடலருகே மோடி அறிவித்த செல்லாத நோட்டுக்கள் 2.69 இலட்சம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

17. அதே கான்பூரில் ஒரு இளைஞர், மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு வந்து காலமானார். அதற்கு முந்தைய தினம்தான் பல மாதங்களாக விற்காமல் இருந்த அவரது நிலம் விலை பேசப்பட்டு ரூ 70 இலட்சத்தை முன்பணமாக பெற்றிருந்தார்.

18. செல்லாத நோட்டுக்களை வைத்திருந்த காரணத்திற்காக மும்பை மருத்துவமனை ஒன்று புதிதாக பிறந்த குழந்தை ஒன்றை சிகிச்சைக்காக சேர்க்க மாட்டோம் என்று மறுத்தது. அதனால் குழந்தை இறந்து போனது. அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பழைய பணம் செல்லுபடியாகும் என்று மோடி அறிவித்திருந்தார்.

19. ஆந்திராவின் விசாகப்பட்டனத்தைச் சேர்ந்த கோமலி எனும் 18 மாதக் குழந்தை இறந்து போனது. குழந்தையின் பெற்றோர் மருந்து வாங்குவதற்காக புதிய நோட்டுக்கள் தரவில்லை என்று மருத்துவமனை மறுத்துவிட்டது.

20. உத்திரப் பிரதேசத்தின் மனிபுரியில் இருந்த மருத்துவர்கள் ஒருவயது குழந்தையான குஷ்ஷின் அதிக காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். பழையை 500, 1000 நோட்டுக்கள் மட்டும் வைத்திருந்ததால் பெற்றோர்கள் வேறு வழியின்றி குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்ததும் அது மரணமடைந்தது.

21. ராஜஸ்தானில் பாலி மாவட்டத்தில் ஒரு பிறந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது. குழந்தையின் தந்தையான சம்பலால் 500, 1000 நோட்டுக்களுக்குப் பதில் 100 ரூபாய் நோட்டுக்களை ஏற்பாடு செய்து கொண்டு வரும்போது குழந்தை மரித்துவிட்டது.

22. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சலவைத் தொழில் செய்யும் பெண்மணி வங்கிக் கணக்கில் தன்னிடம் உள்ள இரு 1000 ரூபாய் நோட்டை போடச் சென்றார். அப்போது அந்த நோட்டுக்கள் செல்லாது என்று சிலர் சொன்ன போது என்ன ஏது என்று புரியாமல் அதிர்ச்சியடைந்து மரணமடைந்தார்.

23. தெலுங்கானாவின் மகுபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது கண்டுக்குறி வினோதா தன்னிடம் உள்ள சேமிப்பு பணமான 55 இலட்சம் ரூபாய் செல்லாது என்று அறிந்த போது தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்ப நிலத்தை விற்று அந்தத் தொகை மூலம் கணவரின் சிகிச்சை, மகளின் வரதட்சணை, மற்றும் ஒரு சிறு நிலத்தை வாங்குவதற்கும் அவர் திட்டமிட்டிருந்தார்.

24. மேற்கு வங்கத்தின் ஹவ்ராவைச் சேர்ந்த ஒரு கணவன் அவனது மனைவியான மது திவாரியை கொலையே செய்து விட்டான். செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு அவனது மனைவி ஏ.டி.எம் சென்று வெறுங்கையோடு திரும்பியதே காரணம்.

25. பீகாரின் கைமூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது ராம் அவாத் ஷா கடும் மாரடைப்பால் காலமானார். காரணம் அவர் சேமித்து வைத்திருந்த ரூ. 35,000 பணம் மோடி அறிவித்த செல்லாத நோட்டாக இருந்ததால் அவரது வருங்கால மருமகன் அதை ஏற்க மாட்டான் என்பதே.

26. கேரளாவின் தலசேரியைச் சேர்ந்த 45 வயது உண்ணி, கேரள மின்வாரியத்தில் பணிபுரிந்தவர். மோடி அறிவிப்புக்கு முந்தைய தினம்தான் அவர் கடனாக வங்கியிலிருந்து ரூ 5 இலட்சத்த்தை வாங்கியிருந்தார். மறு தினம் இதை எப்படி மாற்றுவது என்று தத்தளித்தவர் வங்கிக்குச் சென்று பணம் செலுத்தும் சீட்டை நிரப்பும் போது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து போனார்.

27. மும்பை வங்கி ஒன்றில் பழைய செல்லாத நோட்டுக்களை இருப்பு வைக்கச் சென்ற 72 வயது விஸ்வாஸ் வர்தக், மாரடைப்பால் காலமானார்.

28. தனது பண்ணையில் வேலை செய்த தொழிலாளிகளுக்கு கூலி கொடுப்பதற்காகாக வங்கி சென்று பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காக வரிசையில் நின்ற பர்கத் ஷேக் மாரடைப்பால் காலமானார். குஜராத்தின் தாராபூரைச் சேர்ந்த அவருக்கு வயது 47.

29. கேரளாவின் ஆலப்புழையில் பணத்தை மாற்றுவதற்காக ஒரு மணிநேரமாக வங்கி வரிசையில் நின்ற 75 வயது முதியவர் கார்த்திகேயன் நிலை குலைந்து மரணமடைந்தார்.
Old man
30. அதே போன்று கர்நாடகாவின் உடுப்பியில் வரிசையில் நின்ற 96 வயது கோபால ஷெட்டி மரணமடைந்தார். அப்போது வங்கி திறந்திருக்க கூட இல்லை.

31. மத்தியப் பிரதேசத்தின் சாகரைச் சேர்ந்த 69 வயது வினய் குமார் பாண்டே ஒரு ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர். அவரும் நோட்டுக்களை மாற்றச் சென்ற போது வங்கியில் காலமானார்.

32. மத்தியப் பிரதேசத்தின் போபாலில், ஸ்டேட் வங்கி கிளை ஒன்றின் காசளரே இறந்து போனார். நீண்ட வரிசையில் இருக்கும் மக்களை சமாளிப்பதற்கு வங்கி ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்ய பணிக்கப்பட்டனர்.

33. உத்திரப்பிரதேசத்தின் பைசாபாத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் மோடி அறிவிப்பைப் பார்க்கும் போதே நெஞ்சு வலிப்பதாக உணர்ந்தார். மருத்துவர் வருவதற்குள் மரணமடந்தார்.

இவை போக தமிழகத்திலும் ஏனைய இந்தியாவிலும் இறந்தவர்கள் கணக்கு நமக்கு தெரியவில்லை. வட கிழக்கு இந்தியா உள்ளிட்டு பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கிராமங்களில் பணமில்லாமல் மக்கள் படும் அவதிகள் நாளிதழ்களில் வந்திருக்கின்றன. ஆகவே இந்த கொலைப்பட்டியல் இன்னும் நீளும். அடுத்து விரலில் மை வைக்க வேண்டும் என்று தாக்குகிறார்கள். அதில் எத்தனை பேர் பலியாவர் என்பது தெரியவில்லை.

வரிசையில் நின்று மரிக்கும் மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் நாம் வீதியில் இறங்க வேண்டும். அரசையும் பொருளாதாரத்தையும் பாசிச மயமாக்கி வரும் மோடி அரசை தூக்கி எறியாமல் இந்தியாவில் அமைதியோ, வாழ்வோ வரப்போவதில்லை.

நன்றி : THE HUFFINGTON POST

  1. இரக்கமற்ற ஹிட்லர் மணிகண்டன்…,

    மோடியின் இந்த செல்லா நோட்டு திட்டத்துக்கு பின் அதன் நேரடி விளைவாக இதுவரையில் இந்தியாவில் 33 பேர் உயிர் இழந்து உள்ளார்கள். அவர்களின் உங்கள் தாய் அல்லது தந்தையும் ஒருவராக இருந்தால் இப்படி மூர்க்க தனமாக மோடிக்கு ஆதரவு தெரிவித்துகொண்டு இருப்பீர்களா?

  2. தினத்தந்தி நாளிதழில் இரண்டு மரணங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கோவையில் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்த ஒரு தொழிலாளர்… மற்றும் வேறு ஒரு ஊரில் முதியவர் ஒருவர் உயிர் இழந்த செய்திகள் அதில் பதிவாகி யுள்ளன…
    //இவை போக தமிழகத்திலும் ஏனைய இந்தியாவிலும் இறந்தவர்கள் கணக்கு நமக்கு தெரியவில்லை//

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க