privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபழனியில் ஆட்டம் போட்ட ஜீயர் + இந்துமதவெறிக் கும்பலுக்கு அடி உதை !

பழனியில் ஆட்டம் போட்ட ஜீயர் + இந்துமதவெறிக் கும்பலுக்கு அடி உதை !

-

பொள்ளாச்சியை சேர்ந்த விவசாயி துரை என்பவர் மணப்பாறையில் இருந்து 7 மாடுகளை வாங்கிக் கொண்டு பழனி புறநகர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அதே சாலையில் மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார செண்பக மன்னார் சம்பத்குமார ஜீயர் (வைணவர மடத்து சாமியார்), பொள்ளாச்சி அருகே கொளத்துப்புதூரில் உள்ள பெருமாள் கோயில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தார். தனக்கு முன்னே மாடுகளை ஏற்றி செல்வதை கண்டு ‘கடமை’ உணர்வோடு மினி வேனை மடக்கி விசாரித்திருக்கிறார்.

அப்போது இந்த கன்றுகளை, மணப்பாறையில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தேவனூர் புதூருக்கு கொண்டு செல்வதாக வேன் ஓட்டுநரும், விவசாயி துரையும் கூறியுள்ளனர். விவசாயியும், வண்டி ஓட்டுனரும் சொல்வதை ஏற்க மறுத்த “ஆன்மிக சங்கி” அவர்களை வம்படியாக பழனி புறநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மாடுகளை துன்புறுத்துகிறார்கள் என்று கூறி வழக்கு போடுமாறு வற்புறுத்தியுள்ளார். என்ன இருந்தாலும் வட இந்தியா போல தமிழகத்தில் இன்னும் மாடு காக்கும் காவி பயங்கரவாதிகள் ரிசல்ட் காட்ட வில்லை அல்லவா? அதில் தனது பெருமாள் கணக்கு முதலில் இருக்கவேண்டுமென்று ஜீயர் நினைத்திருப்பார் போலும்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட கம்யுனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ்.டி.பி.ஐ கட்யினர் திரண்டு காவல் நிலையம் சென்று, மாடுகளை விடுவிக்குமாறும், ஜீயர் மீது வழக்கு போடகோரியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல் நிலையத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் மாட்டின் உரிமையாளர் மீது CSR மட்டும் பதிவு செய்து அனுப்பி விட்டனர். பாருங்கள், மாட்டுச் சந்தையில் ஒரு விவசாயி வாங்கிய அதிகாரப் பூர்வ மாடுகளுக்கு கூட இங்கே இவ்வளவு தடைகள் இருக்கின்றது.

அதன் பிறகு காவல் நிலையம் வந்த இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து பரிவாரங்கள் “மாட்டை எப்படி அனுப்பலாம்” என்று நாட்டாமைத் திமிருடன் வாக்குவாதம் செய்தனர். வி.சி.க -கட்சியினரிடமும் பிரச்சனை செய்துள்ளனர். போலிசு இரு தரப்பினரிடமும் பேசிக்கொண்டிருக்கையில் காவல் நிலைய வளாகத்தில் இருந்து வந்த கல் பாஜகவினரைத் தாக்கியது. இதனை தொடர்ந்து பெரும் கலவரமாக மாற்றினர் இந்து பரிவாரங்கள். இதற்கென அவர்களே கூட கல் எறியும் நாடகத்தை செட்டப் செய்திருக்கலாம்.

இந்த சம்பவம் நடக்கையில் இதன் சூத்திரதாரியான தொந்தி பெருத்த வைணவ மற்றும் இந்துமுதவெறியரான ஜீயர் தனது காரை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார். அவர் காரையும் கல் ஒன்று நலம் விசாரித்ததாக கூறுகிறார்கள். பெருமாளே என்று கத்திக் கொண்டு ஜீயர் காரில் தில்லிக்கும், கமலாலயத்திற்கும் போன் போட்டு துக்கம் விசாரித்திருப்பார்.

அவர் போனால் என்ன பழனி நகரமே நமது கையில் என்ற உரிமையுடன் அந்த வழியாக வந்த பேருந்தின் மீது கல் வீசி வீசினர் இந்து மதவெறி அமைப்பினர். பரிவாரங்களின் கலவரம் அதிகரிக்கவே கடுப்பாகி போன காவல்துறை காவி உடை அணிந்த கும்பலை விருதுநகர் புரோட்டாவை பிய்த்து எடுப்பது போல கந்தலாக்கினர். இதில் என்ன ஆச்சரியம் என்றால் பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி, சிவசேனாக கும்பலைச் சேர்ந்த ‘வீரர்கள்’ யாரும் அடிவாங்கும் போது “பாரத் மாதாகி ஜெய்”, வந்தே மாதரம் சொல்லவில்லை. ஐயோ, அம்மா என்றே கதறினார்கள்.

எனினும் இந்த கலவரத்திற்கு முக்கிய காரணமான “இந்து பரிவாரங்களை” தப்பவிட்டுவிட்டு விசிக-வை சேர்ந்த ஜெயசீலன், சிஐடியு- வினர் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது போலீசு. கலவரத்தில் மண்டை உடைபட்ட சங்க பரிவார குண்டர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் “பசு புனிதம்” என்று கூறி கலவரங்களை நடத்தி வரும் பரிவாரங்கள் தமிழகத்தையும் கலவரக்காடாக மாற்ற முயற்சி செய்கிறது. அவர்களின் ஆட்டம் இங்கு ஒருபோதும் செல்லாது. இந்துத்துவ காலிகளுக்கு எதிராக “அனைத்து கட்சிகள்” சார்பாக  பழனியில் 01.07.2017 அன்று ஆர்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.