Saturday, July 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 640

காவிமயமாகும் நீதித்துறை – HRPC கண்டன ஆர்ப்பாட்டம்

6

மோடி அரசின் நீதித்துறை ஆணைய மசோதா ! நீதித்துறையை காவி மயமாக்கும் சதி !

தேசிய நீதித்துறை ஆணைய மசோதாவும், அதை அங்கீகரிக்கும் அரசியல் சட்டத்திருத்த மசோதாவும் மக்களவை, மாநிலங்களவையில் கடந்த 13, 14.08.14–ம் தேதிகளில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. மோடி அரசு முன் மொழிந்த மசோதாவை எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. நீதித்துறை ஊழலைப் பேசுவது போல மார்க்கண்டேய கட்ஜூ மூலம் விவாதத்தைத் தொடங்கி, ஊடகங்கள் மூலம் ஒரு மாத கால தொடர் பிரச்சாரம் செய்து, ஊழலை ஒழிக்கும் நோக்கத்துக்காகவே இம்மசோதா கொண்டுவரப்படுவது போல ஒரு கருத்தை உருவாக்கி, இந்த மசோதா மிக அவசரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

யோக்கிய சிகாமணி மார்க்கண்டேய கட்ஜூவின் நாடகம்!

கட்ஜூ சொன்ன நீதித்துறை ஊழல் தொடர்பான விசயங்கள் புதியவையல்ல. முன்சீப் கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை ஊழலால் அழுகி நாறுவது மக்களும், வழக்கறிஞர்களும் நன்கு அறிந்ததுதான். பல்வேறு வழக்குரைஞர்களும், மனித உரிமை அமைப்புகளும், புரட்சிகர அமைப்புகளும்இதனை ஏற்கெனவே அம்பலப்படுத்தியுள்ளனர். இன்று வாய் கிழியப் பேசும் கட்ஜூ காங்கிரஸ் ஆட்சியில் நீதித்துறை ஆணைய மசோதா கொண்டுவரப்பட்ட போது வாய் திறக்கவில்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளில் எட்டு பேர் ஊழல் பேர்வழிகள் என்ற பிரசாந்த் பூசனின் மனுக் குறித்து எதுவும் பேசியதில்லை. உயர்நீதிமன்ற, உச்சநீதி மன்ற ஊழல் நீதிபதிகள் மீது நாடாளுமன்றத்தில் இம்பீச்மென்ட் கொண்டுவந்தாலன்றி நடவடிக்கையே எடுக்க முடியாது என்ற அயோக்கியத்தனமான சட்டப்பாதுகாப்பு பற்றி எதுவும் பேசியதில்லை. “ஜெயலலிதா நீதித்துறையின் மாண்புகளை மதித்தார்” “ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்று ஆனந்த விகடன் பேட்டியில் அவர் சொல்லியிருப்பதிலிருந்தே அவருடைய யோக்கியதையையும் நோக்கத்தையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

நீதித்துறையை விழுங்குவதே ஆர்.எஸ்.எஸ்- பி.ஜே.பி.யின் நோக்கம்!

பன்னாட்டு நிறுவனங்கள், அம்பானி, அதானி, மிட்டல், டாடா, கலாநிதி மாறன் போன்ற முதலாளிகளின் சொத்துக்களை பல மடங்கு உயரச் செய்த தனியார்மயக் கொள்கையையும், பார்ப்பன மேலாதிக்கத்திற்கான வருணாசிரமக் கொள்கையையும் தங்கு தடையின்றி நிறைவேற்றவே பா.ஜ.க. இன்று அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. உளவுத்துறை அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள், அரசு செயலர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் எனப் பல மட்டங்களில் தங்களின் ஆட்களை நியமித்து வரும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி-யினரின் அடுத்த இலக்கு நீதித்துறையைக் கைப்பற்றுவதாகும். பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய பெரு முதலாளிகளுக்கு பொதுச்சொத்துகளையும் பொதுத்துறையையும் விரைவாக வாரிக்கொடுப்பதற்கு ஏற்ற விதத்தில் நீதித் துறையின் அதிகாரங்களைக் குறைத்து, டிராய், பசுமைத் தீர்ப்பாயங்கள், மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் அமைக்கப்பட்டு முதலாளிகளுக்கு ஆதரவான நபர்கள் அங்கெல்லாம் பதவியில் அமர்த்தப்பட்டு விட்டனர். இதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகிறது மோடி அரசு.

கடந்த மே 6, 2014 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான நீதிபதிகள் குழுவால் (கொலீஜியம்) பரிந்துரைக்கப்பட்ட முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தின் நியமனத்தை மோடி அரசு நிராகரித்தது. இதைத் தொடர்ந்து ஜூன் 25-ம் தேதி கோபால் சுப்பிரமணியம் நீதிபதி நியமனத்துக்கான தனது ஒப்புதலை திரும்பப் பெற்றுக் கொண்டார். சோராபுதீன் ஷேக் போலி மோதல் கொலை வழக்கில் தான் நீதிமன்றத்தின் நண்பராக செயல்பட்டதால்தான் மோடி அரசாங்கம் தன் மீது களங்கம் கற்பித்து, அவதூறு பரப்பும்படி உளவுத்துறையை மோடி அரசு பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். அதன் பின்னர் கோபால் சுப்பிரமணியன் இடத்தில் மோடியின் வழக்கறிஞர் உதய் லலித் உச்சநீதிமன்ற நீதிபதியாக்கப்பட்டுள்ளார். குஜராத் படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கும், மோடி அரசுக்கும் ஆதரவாக ஆஜரான வழக்குரைஞர்களே சொலிசிட்டர் ஜெனரல், அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கன்றனர். இதற்கெல்லாம் வழக்குரைஞர்கள் மத்தியிலிருந்து எந்த எதிர்ப்பும் வராததை சாதகமாக்கிக் கொண்டு, அடுத்த தாக்குதலை தொடுத்திருக்கிறது மோடி அரசு.

நேற்று அன்னா ஹசாரே, இன்று கட்ஜு !

நீதித்துறை ஊழல் பற்றி கட்ஜூ அரங்கேற்றியிருக்கும் நாடகத்துக்கும் அலைக்கற்றை ஊழல் விவகாரத்தின் பின்புலத்தில் அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு நாடகத்துக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அன்னாவின் பின்புலத்தில் ஆர்.எஸ்.எஸ் இருந்தது. அன்று மோடிக்கு நற்சான்று கொடுத்தார் ஹசாரே. இன்று ஜெயலலிதாவுக்கு நற்சான்று கொடுக்கிறார் கட்ஜு. தமிழ்நாடுதான் ஊழலின் உறைவிடம் என்பது போலவும், வட இந்திய, ஆதிக்க சாதி நீதிபதிகளெல்லாம் யோக்கிய சிகாமணிகள் போலவும் ஒரு தோற்றம் இந்த விவாதத்தின் மூலம் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது.

தனியார்மயம், தாராளமயம் என்ற மக்கள் விரோத கொள்கையின் மூலம் மக்களின் வாழ்வாதாரங்களையும் பொதுச்சொத்துகளையும் கார்ப்பரேட் முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் பகற்கொள்ளையடிக்கும் பிரச்சினையை பின்னுக்கு தள்ளிவிட்டு, அரசியல்வாதிகளின் ஊழல் மட்டும்தான் ஒரே தேசியப் பிரச்சினை என்று சித்தரித்தார் அன்னா ஹசாரே. மூலமுதல் திருடர்களான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சொந்தமான ஊடகங்கள் அன்னா ஹசாரேயை விளம்பரப்படுத்தின. தற்போது கட்ஜு விசயத்தில் நடப்பதும் அதுதான்.

ஊழல், மதவெறித் தாக்குதல்கள், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறைகள், பாலியல் குற்றங்கள், போலீசின் அத்துமீறல்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரவர்க்கத்தினரின் மெகா ஊழல்கள், தனியார்மயக் கொள்கையின் விளைவாக நடக்கும் இயற்கை வளக்கொள்ளைகள் போன்ற பல பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளில் நீதித்துறை செய்திருப்பதென்ன? கொத்து கொத்தாக தலித் மக்கள் கொல்லப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகள் மொத்தமாக விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். வோடபோன் நிறுவனத்தின் பல்லாயிரம் கோடி வரி ஏய்ப்பு நீதிமன்றத்தால் நியாயப்படுத்தப் பட்டிருக்கிறது. நர்மதை அணைக்காக பல இலட்சம் பழங்குடி மக்கள் மாற்று இடம் கூடத் தரப்படாமல் துரத்தப்படுவதை உச்ச நீதிமன்றம்தான் சாத்தியமாக்கியது. பல ஊழல் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் விடுவித்தது மட்டுமல்ல, தற்போது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை இத்தனை ஆண்டு காலம் இழுப்பதற்கு உச்சநீதிமன்றம்தான் துணை நின்றிருக்கிறது. சிதம்பரம் கோயிலை தீட்சிதர் வசம் ஒப்படைத்ததும், தகுதி வாய்ந்த பார்ப்பனரல்லாத அரச்சகர்க மாணவர்களை தெருவில் நிறுத்தியிருப்பதும், பாபர் மசூதிதான் இராமன் பிறந்த இடம் என்று தீர்ப்பளித்திருப்பதும் இந்த நீதித்துறைதான். அநீதியான இந்த தீர்ப்புகள் அனைத்தும் சட்டப்படிதான் வழங்கப்பட்டிருக்கின்றன. அவ்வளவு ஏன், பிரேம்குமார் எஸ்.பி தனக்கு இழைத்த வன்கொடுமைக்கு எதிராக நல்லகாமன் என்ற இராணுவ வீரர் 25 ஆண்டு வழக்கு நடத்தி மதுரை உயர்நீதிமன்றத்தில் பெற்ற நீதியை, எவ்வித விசாரணையும் இன்றி இரண்டே நிமிடத்தில் ரத்து செய்தவர் ஊழலற்ற உத்தமர் என்று பீற்றிக் கொள்ளும் இதே கட்ஜுதான்.

இந்த நீதித்துறை அமைப்பு மக்களுக்கு நீதி வழங்கவில்லை என்ற மையமான உண்மையை கட்ஜு வேண்டுமென்றே திசை திருப்புகிறார். நீதித்துறையில் புறையோடியிருக்கும் ஊழலை ஒழிப்பது பற்றிக்கூட யோக்கியமான முறையில் அவர் பேசவில்லை. மாறாக சில ஊழல் நீதிபதிகள் மட்டும்தான் பிரச்சினை போலவும், அவர்களால்தான் நீதித்துறை கெட்டுவிட்டது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி மோடி அரசு நீதித்துறையை கைப்பற்றிக் கொள்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறார்.

இந்த மசோதா நிறைவேறினால் ?

1993-ம் ஆண்டு மூன்று நீதிபதிகள் வழக்கில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிபதிகள் நியமனத்தில் “கொலீஜியம் முறை” கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நியமன முறையில் நீதிபதிகளின் மீதான மக்களின் கண்காணிப்பு என்பதற்கான வாய்ப்பு அறவே கிடையாது. ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகார வர்க்கத்தைப் போல மக்கள் மீது திணிக்கப்படுபவர்களாகவே நீதிபதிகளும் இருக்கிறார்கள். இதிலும் ஏராளமான ஊழல்கள் ! ஆளும் கட்சித் தலையீடு, சாதி, பணம் என்று எல்லா முறைகேடுகளும் நீதிபதிகள் நியமனத்தில் நிரம்பியிருப்பது நாம் அறியாததல்ல. இதில் நீதித்துறையும் அரசும் கூட்டுத்தான். நீதித்துறை சுதந்திரம் என்று சொல்லப்படுவதன் உண்மை நிலை என்ன என்பது வழக்குரைஞர்கள் அறியாததல்ல.

தற்போது மோடி அரசு கொண்டு வந்திருக்கும் மசோதாவின்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவருடன் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் இருவர், மத்திய சட்ட அமைச்சர் மற்றும் இரு தகுதிவாய்ந்த நபர்கள் என ஆறு நபர்கள் ஆணையத்தில் பதவி வகிப்பார்கள். தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் தகுதி வாய்ந்த நபர்களைத் (EMINENT PERSONS) தோ்ந்தெடுப்பர். உதாரணமாக தகுதிவாய்ந்த நபர்களாக சுப்பிரமணியசாமியும், சோ.ராமசாமியும் நியமிக்கப்படலாம். எந்தவொரு உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதியின் நியமன உத்தரவையும் தகுதி வாய்ந்த இரு உறுப்பினர்கள் எதிர்த்தால் நியமனம் செய்ய இயலாது என இச்சட்டம் கூறுகிறது. தலைமை நீதிபதி பணி மூப்பின் வாயிலாக நியமிக்கப்படுவதையும் இச்சட்டம் மாற்றுகிறது. மத்திய அரசு நீதிபதிகளின் நியமன அதிகாரம் கொண்ட அமைப்பாக இச்சட்டம் மூலம் மாறுகிறது.

ஆளும் கட்சியின் கொள்கையை எதிர்ப்பவர்கள் கூட இனி நீதிபதியாக முடியாது. நீதிபதி நியமனத்துக்கு உளவுத்துறை அறிக்கை ஒரு அடிப்படையாக இருக்கிறது. ஏற்கனவே ஐ.பி.யில் 50 சதவீதம் பேர் பார்ப்பனர்களாகவும், ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களாகவுமே உள்ளதால் என்ன நடக்கும் என்பதை எளிதில் நாம் யூகிக்கலாம். மேலும் மாநில அளவிலான நீதித்துறை ஆணையங்கள் அமைவதும் மறுக்கப்பட்டுள்ளது. தற்போது 275 உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் மேற்படி இடங்களில் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி ஆட்கள் விரைந்து நியமிக்கப்படுவர். இந்த சட்டம் அமலானால், இன்னும் 20 வருடங்களுக்கு மோடி அரசால் நியமிக்கப்படும் நீதிபதிகளே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகவும், தலைமை நீதிபதியாகவும் வருவார்கள். ஏட்டளவில் இருக்கும் மதச்சார்பின்மையும் இத்தகைய நீதிபதிகளின் தீர்ப்புகளால் ரத்து செய்யப்பட்டு, எல்லா துறைகளிலும் இந்து ராஷ்டிரம் சட்டபூர்வமானதாக்கப்பட்டுவிடும்.

குஜராத் படுகொலை தொடர்பான வழக்குகள் ஒரு சிலவற்றில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கும் நிலையைக் கூட இனி எதிர்பார்க்க முடியாது. சாதி ஒடுக்குமுறை தொடர்பான வழக்குகளுக்கும் இதே கதிதான் ஏற்படும். இந்த மசோதா நிறைவேறினால், ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் சொல்லி வருவதுபோல் 25 ஆண்டுகளுக்கு அவர்கள் ஆட்சிதான் நடக்கும். அது சர்வாதிகாரமாகத்தான் இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போதே இணைய தளங்களில் மோடிக்கு எதிராக எழுதுவோர் கைதுசெய்யப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள். ஜனநாயகம், உரிமை பேசுவோர் ஒடுக்கப்படுகிறார்கள். பெயரளவில் இருக்கும் கருத்துரிமை கூட இனி இல்லாமல் போய்விடும்.

ஏற்கெனவே இந்தித் திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, பாடத்திட்டங்களில் வரலாற்றுப் புரட்டு என்று மோடி அரசின் பார்ப்பன இந்து மதவெறி நடவடிக்கைகள் முழு வீச்சில் தொடங்கி விட்டன. அதன் தொடர்ச்சிதான் இந்த மசோதா. இதனை எதிர்த்து முறியடிப்பதற்கான முதல் குரல் தமிழகத்திலிருந்து எழும்ப வேண்டும். ஜனநாயகத்தை நேசிக்கும் எல்லோரும் இதில் பங்கேற்க வேண்டும்.

இவ்வகையில், பார்ப்பன இந்து மதவெறி பாசிஸ்டு நரேந்திர மோடியின் நீதித்துறை நியமன மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் 25.08.2014 அன்று காலை 10.00 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் முன்பு நடைபெற்றது. வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

நீதித்துறையை காவிமயமாக்கும் மோடி அரசின் ஆர்.எஸ்.எஸ் உடனான கூட்டுசதியை அம்பலப்படுத்தும் வகையில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சுமார் 40 வழக்கறிஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மோடி அரசின் நீதித்துறை மீதான தாக்குதலைக் கண்டித்து வழக்கறிஞர்கள் பலர் உரையாற்றினர்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞருமான மு.திருநாவுக்கரசு அவர்கள் பேசும்போது, “நீதித்துறையின் மீதுதான் மக்களுக்கு ஓரளவு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையையும் மோடி அரசின் நீதித்துறை ஆணைய மசோதா பறிக்கிறது. இதன்மூலம் இந்தியா முழுவதிலுமுள்ள உயர்நீதிமன்றங்களில் 275 நீதிபதி பதவிகளுக்கான காலியிடங்களை ஆர்.எஸ்.எஸ் காரர்களால் நிரப்பி நீதித்துறையை காவிமயமாக்க முயற்சிக்கின்றனர். “நெருங்குதடா! இருள் நெருங்குதடா! காவிஇருள் நெருங்குதடா!” என்ற ம.க.இ.க.வின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. இதை நாம் அனுமதித்தோமேயானால் இன்னும் 20 ஆண்டுகள் வரை நீதித்துறை மோடியின் கட்டுப்பாட்டில் இருக்கும. எனவே இச்சதியை முறியடிக்க வழக்கறிஞர்கள் நாடுமுழுவதும் அணி திரண்டு போராட வேண்டும். மதுரையில் பற்றியிருக்கும் இந்தத் தீப்பொறி நாடுமுழுவதும் பரவவேண்டும்” என்று தனது கருத்தை பதிவு செய்தார்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும், வழக்கறிஞருமான பீட்டர் ரமேஷ்குமார் அவர்கள் பேசும்போது, “இந்திய பாராளுமன்றத்தில் 33% கிரிமினல்கள் உள்ளனர். இந்தக் கிரிமினல்களால் தேர்வு செய்யப்படும் நீதிபதிகளின் யோக்கியதை எப்படி இருக்கும் என்பதை விளக்கித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. இந்த மசோதாவிற்கு எதிராக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறுமானால் அது உயர்குடிப்பிறப்பாளர்கள் என்று சொல்லிக் கொண்டு திரியும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்” என்று விளக்கிப் பேசினார்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இக்பால் அவர்கள் பேசும் போது, “நீதித்துறை ஊழல் நிறைந்ததாக மாறிவிட்டது. ஊழலுக்கு எதிராக போராட வேண்டியது நமது கடமை. இந்த சட்டம் ஊழலை ஒழித்து விடுமா? இவர்களால் தேர்வுசெய்யப்படும் நீதிபதிகள் எப்படி செயல்படுவார்கள் என்பது தெரியாதா? அரசியல்வாதிகள் தங்கள் மீதுள்ள கிரிமினல் வழக்குகளிலிருந்து தப்பிக்கவே இந்த சட்டம் பயன்படும். அதனால் தான் இந்த மசோதாவை ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் யாரும் எதிர்க்கவில்லை. இந்தப்போராட்டம் ஒரு ஆரம்பம் தான், இந்த மசோதா வாபஸ் பெறப்படும்வரை இப்போராட்டம் தொடரும்” என்று குறிப்பிட்டார்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வின்சென்ட் அவர்கள் பேசும் போது, “பா.ஜ.கவிற்கு தேவையான ஆட்களை ஆர்.எஸ்.எஸ் தேர்வு செய்து அனுப்பிக் கொண்டிருக்கிறது. அதேபோல பா.ஜ.க வுக்கு தேவையான உத்தரவுகளை வழங்குவதற்கு தேவையான நீதிபதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புதற்கே இந்த ஆணையம் அமைக்கப்படவுள்ளது. மக்கள் இலவசங்களைக் கண்டு ஏமாறுகிறார்கள். இந்தநிலை மாற போராட வேண்டும். மோடி அரசின் இந்த நீதித்துறை ஆணைய மசோதாவை எதிர்த்துப் போராடியதின் மூலம் நாம் இன்று ஒரு மிகப்பெரிய எதிர்ப்பை பதிவுசெய்திருக்கிறோம்” என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.

சமநீதிவழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினரும், மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞருமான திரு.ராஜேந்திரன் அவர்கள் பேசும் போது, “இந்தவருடம் நீதித்துறை ஆணைய மசோதா, அடுத்த வருடம் ராமர் கோயில் எல்லாமே ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டப்படி நடக்கிறது. இந்த மசோதா நிறைவேறினால் இனிமேல் ஆர்.எஸ்.எஸ் வக்கீல்கள் மட்டுமே நீதிபதிகளாக முடியும்.” என்று மோடி அரசின் எதிர்கால மக்கள் விரோத போக்கு எவ்வாறிருக்கும் என்பதைப் பற்றி விளக்கிப்பேசினார்.

சமநீதிவழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினரும், மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞருமான திரு.கதிர்வேல் அவர்கள் பேசும் போது, “குஜராத் படுகொலையை முன்னின்று நடத்தியவரான மோடி போன்ற ஒருவர் பிரதமராவது என்பது இந்தியாவில் மட்டும் தான் நடக்கும். எனவே ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளுக்கு எதிராக முன்பை விட அதிகஅளவில் போராட வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது” என்று நமது நாட்டின் தற்போதைய நிலைமையையும் மக்களுக்கு இருக்கும் கடமையையும் பற்றி விளக்கிப்பேசினார்.

மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு.ரத்தினம் அவர்கள் பேசும் போது, “எல்லா இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல் அதிகமாக இருக்கிறது. எல்லா அலுவலகங்களிலும், நீதிபதிகளின் அறைகளிலும் பல்வேறு சாமி படங்களை வைத்து பூஜை நடைபெறுகிறது. மேல்மருவத்தூர், திருப்பதி கோவில்களுக்கு சென்று ஊழலில் சேர்த்த பணத்தை காணிக்கையாக போட்டு விடுகின்றனர். அம்பேத்கர் சமஸ்கிருதம் படித்தார். அதனால் தான் அவரால் பார்ப்பனர்களின் யோக்கியதையை அம்பலப்படுத்தமுடிந்தது. நாம் அம்பேத்கரின் நூல்களைப் படிக்காமல் இருப்பதை நினைத்து வெட்கப்படவேண்டும்.

காந்தி பிறந்தமண் என்பதால் குஜராத்தில் மட்டும் மதுவிலக்கு இருக்கிறது. இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொணடு வரமுடியுமா. நாம் அறிவை ஆயுதமாக்கி ஒருபடையாக எழுவோம், நம்மால் முடியும். ஒரு புதிய சமூகத்தை கட்டமைக்க முடியும். அம்பேத்கரும், இடதுசாரிகளும் அதைத்தான் செய்தார்கள். இந்த சமூகம் வேகமாக சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதை மாற்ற நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு பிறருக்கு கற்பிப்பதற்கும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த பாசிசக் கும்பலுக்கு எதிராக போராட நாம் நமது அறிவை ஆயுதமாக்குவோம்” என்ற அனுபவப்பூர்வமான பேச்சு அனைவரையும் கவர்ந்தது.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க பொறுப்பாளரான வழக்கறிஞர் அப்பாஸ் அவர்கள் பேசும் போது, “பா.ஜ.க சிறுபான்மை இனத்தைச் சர்ந்த மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து இந்து சமூக மக்களுக்கும் எதிரி. ஆனால் அது எப்போதும் பார்ப்பானுக்கு கீழே மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களை வைத்திருக்கிறது. இதைத்தான் மனுதர்மம் என்று கூறுகின்றனர். விரைவில் பா.ஜ.க தலைவர்கள் அக்கட்சியை ஆதரிக்கும் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக இதே கொடுமையை திணிக்கும்.” என்று குறிப்பிட்டார்.

ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்டத் துணைச்செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசும் போது, “இது நீதித்துறை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல இது மக்கள் பிரச்சனையும் கூட கட்ஜூ சொன்ன, நீதித்துறை ஊழல் புதியது அல்ல. ஆனால் இவர் உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போதோ காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலோ இப்பிரச்சனை தொடர்பாக பேசியதே இல்லை. ஆனால் தற்போது மோடியுடன் சேர்ந்து கொண்டு இப்போது திடீரென பேசுகிறார். அதுவும் தமிழகம் மட்டுமே நீதித்துறையில் தலையிட்டதாகவும் மற்ற மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள் எல்லாம் யோக்கியமாக இருந்து வந்ததைப்போலவும் பேசியுள்ளது மற்றும் ஜெயலலிதா நீதித்துறையை மதித்து நடப்பவர் என்று நற்சான்றிதழ் வழங்கியுள்ளது உள்ளிட்ட செயல்கள் கட்ஜுவின் யோக்கியதையை வெளிச்சம் போட்டுகாட்டுகிறது. மேலும் இதுபோன்று திடீர் விவாதத்தை திட்டமிட்டு ஊடகங்களில் ஒளிபரப்பச்செய்து உடனடியாக அவசரஅவசரமாக இந்த மசோதாவைத் தாக்கல் செய்வதில் இருந்தே இது நீதித்துறையை காவி மயமாக்கும் முயற்சி என்பது பட்டவர்த்தனமாகியுள்ளது. இதை எதிர்த்துப் பெரியார் பிறந்த மண்ணிலிருந்து போராட்டத்தை தொடங்குவோம்” என்று நீதித்துறை ஆணைய மசோதா தாக்கல் செய்துள்ளதன் பின் ஒளிந்திருக்கும் உண்மைகளை விளக்கினார்.

இறுதியாக ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்ட துணைத் தலைவரும் மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞருமான பா.நடராஜன் அவர்கள் சமூக முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மனிதஉரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக்கிளையின் வழக்கறிஞர்கள் பா.வெங்கடேசன், எஸ்.லூயிஸ், எஸ்.ராஜசேகர், சி.ராஜசேகர், டீ.அஸ்வின், எம்.பாசில், சு.கருணாநிதி, பினயகாஸ், பி.சரணவச்செல்வி, சி.மன்மதன் ஆகியோர் உள்ளடங்கிய சுமார் 40 வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 75 பேர் கலந்து கொண்டனர். இப்போராட்டம் வழக்கறிஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
————————————————————–

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மதுரை மாவட்டக்கிளை.
தொடர்புக்கு – 9865348163, 9443471003.

மைக்கேல் பிரௌன் – அமெரிக்க சொர்க்கத்தின் நரபலி !

4

மைக்கேல் ப்ரௌன் 18 வயதே ஆன அமெரிக்க கருப்பின இளைஞன். அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்திற்கு உட்பட்ட செயின்ட் லூயிஸ் பகுதியில் அமைந்துள்ள பெர்குசன் நகரத்தைச் சேர்ந்தவர். மைக்கேல் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி இரவு தன் பாட்டி வீட்டிற்கு நண்பன் டோரியன் ஜோன்சனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த டேரன் வில்சன் என்கிற வெள்ளையின போலீசு அதிகாரி, இந்த இளைஞர்களைத் தடுத்து நிறுத்துகிறார்.

பெர்குசன் போலீஸ்
மைக்கேல் பிரவுன் கொல்லப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை தாக்கும் பெர்குசன் போலீஸ்

கருப்பர்கள், வெள்ளை போலீசு அதிகாரிகளால் சோதனை என்கிற பெயரில் துன்புறுத்தப்படுவது அமெரிக்காவில் வழமையானது தான். தெருவில் நடமாடாமல் உடனடியாக ஓடிப் போகுமாறு ஆத்திரமாக கூச்சலிடுகிறார் டேரன் வில்சன். அவருக்கு பதிலளித்த மைக்கேல், தாங்கள் செல்லும் இடம் அருகில் தான் இருப்பதாகவும், சீக்கிரம் சென்று விடுவோம் என்றும் பதில் அளித்துள்ளார்.

தனது உத்தரவிற்கு கீழ்ப்படியாமல் ஒரு கருப்பினத்தவன் எதிர்வாதம் புரிந்து கொண்டிருப்பதைக் கண்டு ஆத்திரமுற்ற போலீசு அதிகாரி, அவரது ரோந்து காரின் முன்பக்க ஜன்னலின் வழியே மைக்கேலின் சட்டையைப் பிடித்து இழுத்துள்ளார். அவரிடமிருந்து போராடி விடுவித்துக் கொண்ட மைக்கேல் உடனடியாக தனது நண்பனை அழைத்துக் கொண்டு ஓடியிருக்கிறார். ஆத்திரம் தலைக்கேறிய டேரன் வில்சன் காரில் இருந்து வேகமாக இறங்கி, முன்னே பத்து மீட்டர் தொலைவில் ஓடிக் கொண்டிருந்த மைக்கேலை தனது பிஸ்டலால் இரண்டு ரவுண்டுகள் சுடுகிறார்.

குண்டடிபட்ட மைக்கேல் கைகளை உயர்த்தியவாறே தன்னிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். மைக்கேலின் கதறல்களைக் காதில் போட்டுக் கொள்ளாத வில்சன், நிராயுதபாணியாக நின்று கொண்டிருந்த அந்த இளைஞனை நோக்கி மேலும் நான்கு முறை துப்பாக்கியால் துளைக்கிறார். ஆறு குண்டுகளை உடலில் தாங்கி கீழே சரியும் மைக்கேல் ப்ரௌன் அதே இடத்தில், அடுத்த மூன்று நிமிடங்களில் உயிர் துறக்கிறார்.

மைக்கேலின் மரணம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. பெர்குசன் பகுதி கருப்பின மக்கள் அடர்த்தியாக வாழும் கெட்டோ (Ghetto) எனப்படும் சேரியைக் கொண்டதாகும். அவர்களில் அனேகர் வெள்ளை இனவெறியால் கல்வி, வேலை வாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட ஏழைகள். மைக்கின் குடும்பமும் ஒரு ஏழைக் குடும்பம் தான். மைக் அப்பொழுது தான் பள்ளிக் கல்வியை  முடித்துவிட்டு, குளிர்சாதனங்கள் பழுது பார்க்கும் தொழில்நுட்பத்தை கற்று வந்தார்.

ஆர்ப்பாட்டம்
“எனது கருப்பு நிறம் ஒரு ஆயுதமல்ல”

மிசௌரி மாகாணம் வெள்ளை இனவெறிக்குப் பெயர் போன பகுதிகளில் ஒன்று. 1860-களில் தீவிரமடைந்திருந்த அமெரிக்க உள்நாட்டுப்போர் காலத்தில் கருப்பின அடிமை முறையை தக்க வைத்துக் கொள்ள போர் புரிந்த தென்மாநிலங்களில் ஒன்று மிசௌரி.  பின்னர் 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தின் வெள்ளை இனவெறி பயங்கரவாதக் குழுவான கூ க்ளக்ஸ் கிளான் செல்வாக்கு இந்தப் பகுதியில் மிகுந்திருந்தது. நியோ நாஜிகளின் வெளிப்படையான செயல்பாடுகள் மிகுந்த இப்பகுதியில் தற்போது கன்சர்வேட்டிவ் சிட்டிசன் கவுன்சில் என்கிற கவுரவமான பெயரில் பழைய கூ கிளக்ஸ் கிளான் மற்றும் நியோ நாஜிகள் வெளிப்படையாக வெள்ளை இனவெறி பேசி வருகிறார்கள்.

இந்தியாவில் பார்ப்பனியத்தின் பிடியில் தலித்துகள் – பழங்குடி மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு சற்றும் குறையாத சித்திரவதைகளை அமெரிக்க கருப்பினத்தவர்கள் வெள்ளை இனவெறியின் கீழ் அனுபவித்து வருகிறார்கள்.

வரலாற்று ரீதியில் கருப்பின மக்கள் அனுபவித்து வந்த இனவெறிக் கொடுங்கோன்மை அவர்களிடையே கோபாவேச உணர்வைத் தோற்றுவித்திருந்தது. மைக்கின் மரணம் காய்ந்து கிடந்த சருகுகளின் மேல் மின்னல் போல பாய்ந்ததற்கு ஒப்பான விளைவை உடனடியாகவே ஏற்படுத்தியது. கருப்பின மக்கள் இந்த முறை தனித்து விடப்படவில்லை; அவர்களோடு  ஜனநாயகவாதிகளும், நிறவெறி எதிர்ப்பாளர்களும் கைகோர்த்தனர். அவற்றில் வெள்ளையின மக்களும் அடக்கம். ஃபெர்குசன் பகுதி மக்கள் ஒன்று கூடி மைக்கின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிப் பேரணி ஒன்றை  நடத்தினார்கள்.

ஆனால் போலிஸ் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் இந்தக் கொலையை எப்படி மூடி மறைப்பது என்பதில் கவனமாக இருந்தார்கள். நடந்த படுகொலை பற்றி முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாமல், சாட்சிகளை விசாரிக்காமல் பாராமுகம் காட்டிய போலீசு நிர்வாகம், ஊடகங்களில் மாறுபாடான குழப்பமான செய்திகள் வெளியாகுமாறு பார்த்துக் கொண்டது. முக்கியமாக மைக்கை கொன்ற போலிஸ்காரன் யார் என்ற தகவலைக் கூட தெரிவிக்காமல் மறைத்து கொலைகாரனைக் கைது செய்யாமல் பாதுகாத்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்பவரை கைது செய்யும் போலீஸ்
ஆர்ப்பாட்டம் செய்பவரை அடித்துக் கைது செய்யும் போலீஸ்

போலீசின் அதிகாரத்துவ திமிர் மக்களிடையே ஆத்திரத்தை உண்டாக்குகிறது; மெல்ல மெல்ல போராட்டங்கள் வலுத்து சில நூற்றுக்கணக்கில் கூடிய போராட்டக் கூட்டம், சில ஆயிரங்களாக வளர்ந்தது. போராட்டம் பெரிதாகப் பெரிதாக மைக்கின் அநியாய மரணம் குறித்த செய்திகள் பிற பகுதிகளுக்கும் பரவுகிறது. உடனடியாக போராட்டத்தை அடக்கி, விவகாரத்தை அமுக்கி விட எத்தனித்த போலீசு, போராட்டம் நடந்த இடங்களில் கூடியிருந்த மக்களை அடித்து துவைத்தனர்.

ந்த நிலையில் தான் ஆகஸ்ட் 17-ம் தேதி இரவு, மைக்கின் மரணத்திற்க்கு நீதி கேட்டு ஒரு அமைதியான ஊர்வலம் பெர்குசன் நகரில் நடந்தது. ஆரம்பத்தில் இருந்தே போலிசார் பல கெடுபிடிகளை செய்ய தொடங்கினார்கள். குறிப்பாக ஊடகங்கள் மூலம் விவகாரம் நாட்டின் பிற பகுதிகளுக்கு உண்மை சென்று சேர்வதைத் தடுக்க பத்திரிகையாளர்களைக் குறிவைத்தனர்.

பேரணியின் நடுவே செய்தி சேகரித்துக் கொண்டிருந்த கார்க் ஆக்ஸ் ரேடியோவின் நிருபர் முஸ்தபா உசைனை பார்த்து போலிஸ்காரர் ஒருவர், “கேமரா விளக்குகளை அணைத்து விட்டு  வெளியே போ, இல்லையென்றால் கொன்று விடுவேன்” என மிரட்டியுள்ளார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வெளிவந்து பரபரப்பு தொற்றிக் கொண்டது, மெல்ல பிற நிருபர்களும் அந்த இடத்தில் தாங்கள் போலிஸாரால் மிரட்டப் பட்ட விடயத்தை பகிர ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்காவில் புகழ் பெற்ற எம்எஸ்என்பிசி செய்திச் சேனலின் முக்கிய செய்தியாளரான கிறிஸ்டபர் ஹேயிஸ் போரட்டங்களை பற்றி தகவல் சேகரிக்கச் சென்ற போது, போலிசாரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் இன்னொரு பிரபல பத்திரிகையான பைனான்ஸியல் டைம்ஸ் நிருபர் நீல் முன்ஷி, தன்னை போலிசார் மிரட்டியதாகவும் கைது செய்து பின்னர் விடுவித்ததாகவும்,  டிவிட்டரில்  பகிர்ந்துள்ளார்.

ராணுவமா, போலீசா?
ராணுவமா, போலீசா?

அதே போல் செய்தி சேகரிக்கச் சென்ற வாஷிங்டன் போஸ்ட்  நிருபர் வைஸ்லே லோவ்ரி மற்றும் ஹஃபிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபர் ரேயன் ரேய்லியை உணவகம் ஒன்றில் சாப்பிட்டு கொண்டிருந்த போதே மடக்கிய போலிசார், கைது செய்து பின்னர் விடுவித்தனர். பல பத்திரிகையாளர்கள் போராட்டம் நடந்த இடங்களுக்குச் செல்லவோ, செய்தி சேகரிக்கவோ முடியாதபடி காவல் துறையினரால் தடுக்கப்பட்டுள்ளனர். விஷயம் தேசிய அளவில் வெளிச்சத்திற்கு வந்த பின் பவிசான ஜனநாயக முகமூடிக்குள் ஒளிந்திருந்த அமெரிக்க வெள்ளை இனவெறியின் உண்மை மூஞ்சி அம்பலத்திற்கு வந்தது.

இவ்வளவிற்கும் இந்த ஊடகங்கள் அமெரிக்க வல்லரசின் ஊதுகுழல்களாகத்தான் இயங்கி வருகின்றன. எனினும் அங்கே அமெரிக்க வல்லரசின் பண்பாட்டு முகமான வெள்ளை நிறவெறிக்கு எதிராகவும், போலீசை அம்பலப்படுத்தியும் செய்தி வருவது கூட சாத்தியமற்ற நிலை இருக்கிறது. இங்கே இந்துமதவெறியர்களால் மிரட்டப்படும், தாக்கப்படும் முசுலீம் மக்கள் குறித்த செய்திகளுக்கும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.

வேறு வழி இல்லாத போலிஸ், கொலை செய்த  காவலரை கைது செய்துவிட்டதாகவும், அவரின் பாதுகாப்பு கருதி அவர் பெயரை வெளியிட மாட்டோம் எனவும் கூறியது. இதற்குள் ஃபெர்குசனில் பற்றிய நெருப்பின் புகை அமெரிக்காவின் பிற பகுதிகளுக்கும் பரவி, ஜனநாயகவாதிகளும் சில ஊடகங்களும் போலீசாரைக் கடுமையாக விமர்சிக்கத் துவங்கினர்.

இதற்கிடையே கைதான காவலர் “வில்சன்” பற்றிய மேல் விவரங்களும் ஊடகங்களில் கசியத் துவங்கியது. அவர் ஒரு இன வெறியர், கொடுமைக்காரர் என்று அவரை பற்றிய தகவல்கள் அவர் நண்பர்கள், உடன் வேலை செய்தவர்களிடமிருந்து வெளியே வர, நிலைமை பதட்டமாகியது. மக்களின் எதிர்ப்பலை குரல்வளையை நெறிக்கத் துவங்கி இதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியாது என்கிற நிலை ஏற்பட்ட பின் தாமதமாக வாய் திறந்த அமெரிக அதிபர் ஒபாமா, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்படும் என அறிவித்துள்ளார். ஒரு கருப்பரே அதிபர் ஆனாலும் அங்கே வெள்ளை நிறவெறிதான் கோலோச்சுகிறது, கோலோச்ச முடியும் என்பதை இப்போதாவது ஒபாமாவை ஆதரித்த அசடர்கள் புரிந்து கொள்வார்களா?

கைது செய்யப்பட்ட பெண்
பாதையை மறித்ததற்காக கைது செய்யப்பட்டு அழைத்துப் போகப்படும் பெண்.

இன்னொரு பக்கம் பெர்குசன் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நகர் முழுவதும் தீவிரவாத முறியடிப்பு உத்திகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற தேசிய காவல் படையினரைக் குவித்துள்ளார்.

ல பத்தாண்டு கால தூக்கத்தில் இருந்து இப்போது தான் விழித்துக் கொண்டது போல் நடிக்கும் அமெரிக்க ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைகள் ”அய்யோ பாசிசம் வந்து விட்டதோ” என்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றன. பத்திரிகையாளர் ஒருவர் “அமெரிக்க போலீசு போர்க்கோலம் பூண்டு மக்களை எதிர்த்து நின்ற காட்சி இராணுவத்தை நினைவூட்டுகிறது” என்று புலம்புகிறார்.  இதே அமெரிக்க இராணுவம் ஈராக்கிலும், ஆப்கானிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் கொன்ற கணக்கும், கொடூரமும் இவர்களுக்கு எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. அது தேசபக்தி என்றால் இதையும் அதே தேசபக்தியை காவல்துறை காட்டாதா என்ன?

ஒரு பரபரப்புச் செய்தி என்கிற அளவில் ஃபெர்குசன் சம்பவத்தை வைத்து 24/7 திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட திரைக்கதைகளை அவிழ்த்து விட்டு டி.ஆர்.பியை எகிற வைத்துக் கல்லா கட்டலாம் என்று நாக்கில் எச்சில் வடிய ஓடி வந்த அமெரிக்க கார்ப்பரேட் ஊடகங்கள், இனவெறித் தீயை விட்டு பாதுகாப்பான தொலைவில் இருந்தால் தான் கதகதப்பாக இருக்கும் என்பதையும், கிட்டே நெருங்கித் தீண்டினால் தன்னையும் சுடும் என்பதை அதிர்ச்சிகரமாக உணர்ந்துள்ளது. இருந்தாலும் ஒரு பிளான் B ஆக, தான் அடிவாங்கியதை ஒட்டி இனவுரிமைக்காக குரல் கொடுத்து ஃபெர்குசன் போலீசை விமர்சித்து எழுதி வருவதன் மூலம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்கு கல்லாவை நிரப்பி வருகின்றது.

கருப்பின மக்களோ, ஊடகங்களின் ஆதரவிற்காகவோ அதன் வெளிச்சத்திற்காகவோ ஏங்கி நிற்கவில்லை. அவர்கள் இன்றும் போராடி வருகிறார்கள். ஏற்கனவே வேலை இல்லை, விலைவாசி உயர்வு, பசி பட்டினி, என்று இருந்த ஏழை கறுப்பின மக்கள் தங்களுக்கு நீதியும் இல்லை என்றவுடன் வெடித்தெழுந்துள்ளனர். இது அரசுக்கும் நன்றாகவே தெரியும்.

எதிர்ப்பு பேரணி
எதிர்ப்பு பேரணி

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு சிறிய துப்பாக்கி சூடு, லண்டன் நகரில் கிளப்பிய போராட்டங்களை அமெரிக்கா நினைவில் வைத்துள்ளது. இந்த முறை பெர்குசன் நகரில் அப்படி எதுவும் நடந்து விடக் கூடாது என்பதில் குறிப்பாக உள்ளது; எனவே, போராடும் மக்களைக் கடுமையாக தாக்குவதன் மூலம் நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைக்கத் துடிக்கிறது. எரியும் காட்டுத் தீயை வைக்கோல் போரால் மூடி அணைக்க எத்தனிக்கிறது அமெரிக்கா.

ஓரளவுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை கொண்ட அமெரிக்க அறிவுத் துறையினர் சிலர் “அமெரிக்க அரசு தோற்றுவிட்டது. இனவெறியையோ, சமுக ஏற்றத் தாழ்வையோ அது கட்டுப்படுத்தவில்லை, அதன் விளைவாகத் தான் இந்த சம்பவம் மக்களை கிளர்ந்தெழச் செய்துள்ளது” என்கிறார்கள்.

ஊர்ப் பெண்களையெல்லாம் கையைப் பிடித்திழுக்கும் காமவெறி கொண்ட மைனர், தன் வீட்டுப் பெண்களை எப்படி மதிப்பான்? தனது முதலாளிகளின் நலனுக்காக ஈராக், ஆப்கான் துவங்கி மத்திய கிழக்கெங்கும் வெறியாட்டம் போடும் அமெரிக்கா, தனது குடிமக்களை – அதுவும் ஏழைகளை – மட்டும் கவுரவமாகவா நடத்தப் போகிறது?

நீதியைத் தேடும் அமெரிக்கர்கள் டாம்ஹாக் எரிகணைகளுக்கும், ட்ரோன் தாக்குதல்களுக்கும், அமெரிக்க துவக்குகளுக்கும் இலக்காகி மடிந்த மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்கான போராட்டமும் தங்கள் சொந்த நாட்டைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்கான போராட்டமும் வேறு வேறல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதைப் புரிந்து கொள்ளும் போதுதான் மைக்கேல் ப்ரௌனின் கொலைக்கான நீதியையும் ஈராக்கிய ஆப்கானியக் குழந்தைகளின் கொலைகளுக்கான நீதியையும் சேர்த்து வென்றெடுக்க முடியும்.

–    ஆதவன்.

மேலும் படிக்க

மெட்ரிக் கொலைக்கூடங்கள்!

2

குடந்தை பள்ளித் தீயில் தனது பிள்ளையைப் பறிகொடுத்த ஒரு தாய், நீதிமன்ற வளாகத்தில் தன்னைத்தானே நொந்து புலம்பிக் கொண்டிருந்தாள். குடந்தை கிருஷ்ணா பள்ளி உரிமையாளரின் மனைவி, ஆங்கில வழிக்கல்வி, தரமான கல்வி என்ற ஆசை காட்டியதையும், அதற்கு மயங்கி தன் பிள்ளையை அங்கு சேர்த்து நெருப்புக்கு பலி கொடுத்து விட்டதையும் நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தாள் அந்தத் தாய்.

அருண்ராஜ்
தனியார் கல்விக்கொள்ளைக்கு பலியான இளந்தளிர்கள் – புதுக்கோட்டை குரும்பக்காடு, லாரல் மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவன். அருண்ராஜ்

பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. அன்று குடந்தைப் பள்ளிக்கு தேடிச்சென்று ஆள் பிடித்தார்கள் என்றால், இன்றைக்கு பெற்றோர் தனியார் மெட்ரிக் பள்ளிகளைத் தேடிச் சென்று தமது பிள்ளைகளை விட்டில் பூச்சிகளா கருகக் கொடுக்கிறார்கள். மாணவர் தற்கொலை அல்லது மர்ம மரணம் என்ற செய்தி இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது.

கடந்த ஜூலை-9 அன்று, கடலூர் செயிண்ட் ஜோசப் கல்வி குழுமத்தின் தனியார் கலை – அறிவியல் கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு பயின்றுவந்த மாணவர் ராம்குமார், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதே கல்லூரியில் போஸ், ஆல்வின் ஜோஸ், பரதன் ஆகிய மாணவர்களின் மர்ம மரணத்தை தொடர்ந்து இது அடுத்த மரணம். நிர்வாகம், இது தற்கொலை என்றது. புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் பொதுமக்களை அணிதிரட்டிச் சென்று சம்பவம் நடந்த அறையின் பூட்டை உடைத்தனர். பூட்டிய அறைக்குள் இருந்த இரத்தச் சிதறல்களும், சுவர்களில் படிந்திருந்த இரத்தக் கறைகளும் ராம்குமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதை உறுதிப்படுத்தின. போலீசு வழக்கு பதிவு செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என்று போராடிய மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டு, 6 தோழர்கள் சிறை வைக்கப்பட்டனர். ஆனால், நிர்வாகத்தினர் யாரும் கைது செய்யப்படவில்லை.

ஜூன் 27 அன்று, சென்னை, திருவொற்றியூரில் ஸ்ரீ சங்கர வித்யாலயா கேந்திரா மெட்ரிக் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி வைஷ்ணவி மாலை வீடு திரும்பவில்லை; பள்ளியில் தன் பிள்ளை இருக்கிறதா என்று தேடவும் பெற்றோர்கள் அனுமதிக்கப்படவில்லை. இரவு 7.30 மணிக்கு பள்ளியின் ஒவ்வொரு அறையாக பெற்றோர் தேடிக்கொண்டிருக்கும்பொழுதே, மர்மமான முறையில் மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்து தம் பெற்றோர்கள் கண்ணெதிரிலேயே துடிதுடித்து இறந்துபோனாள் வைஷ்ணவி. இங்கும் பு.மா.இ.மு தோழர்கள் தலையிட்டு போராட்டம் நடத்திய பின்னர்தான் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நிர்வாகத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை.

ராம்குமார்
தனியார் கல்விக்கொள்ளைக்கு பலியான இளந்தளிர்கள் – கடலூர் செயின்ட் ஜோசப் கலை – அறிவியல் கல்லூரி மாணவர் ராம்குமார்.

புதுக்கோட்டை குரும்பக்காடு, லாரல் மேநிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவன் அருண்ராஜ், சென்னை மணலி – சி.பி.எல். நகர் தனியார் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி பூஜா ஆகியோர் உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக பள்ளி நிர்வாகத்தால் அவமானப்படுத்தப்பட்டு, அதன் விளைவாகத் தற்கொலை செய்து கொண்டனர்.

நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் அருண்குமாரும்; கூடுவாஞ்சேரியிலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் தமிழரசனும்; திருச்சி காட்டூர் மான்போர்டு பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டனர். காரணம், தேர்வில் மதிப்பெண் குறைவாகப் பெற்றதால், மாற்றுச்சான்றிதழ் வாங்கிக் கொண்டு வேறு பள்ளிக்குச் செல்லுமாறு நிர்வாகம் அளித்த மிரட்டல்.

இவை மட்டுமல்ல, கடந்த சில மாதங்களில் மட்டுமே இன்னும் பல மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அத்தனையும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. எந்தவொரு சம்பவத்திலும் இத்தகைய அநியாய மரணம் குறித்து பள்ளி நிர்வாகங்கள் வருத்தமோ அதிர்ச்சியோ அடையவில்லை. பெற்றோர் வந்து கதறினாலும் இவர்களது கல்மனம் கரைவதில்லை.

நாமக்கல் ராசிபுரம் வட்டாரத்தில், ஊருக்கு வெளியே பொட்டல் காட்டில், பல நூறு ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ள பிராய்லர் பள்ளிகளில் மாணவர்களின் மர்ம மரணங்கள் மிகவும் சகஜமாகிவிட்டன. மாணவனின் உடலை மருத்துவமனையில் கொண்டு வந்து போட்டு, சவப்பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்துவிட்டுத்தான், பெற்றோருக்கு சாவுச்செய்தியையே தெரிவிக்கின்றன பள்ளி நிர்வாகங்கள். பெற்றோர் குமுறினாலும் கொந்தளித்தாலும் அனைத்தும் மருத்துவமனை வளாகத்தில்தான். அதிகபட்சம் அங்கேயே சாலை மறியல் செய்யலாம். போலீசு வந்து அப்புறப்படுத்தும் வரை கத்திவிட்டு பிறகு ஓய்ந்து போவதைத் தவிர பெற்றோருக்கு வேறு வழி கிடையாது. சம்பந்தப்பட்ட பள்ளிகளோ எதுவுமே நடக்காதது போல இயங்கிக் கொண்டிருக்கும். இது மிகையான கூற்று அல்ல.

ஹேமலதா
தனியார் கல்விக்கொள்ளைக்கு பலியான இளந்தளிர்கள் – சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவி ஹேமலதா

ஜூலை, 16, 2007 அன்று திருச்செங்கோடு வித்ய விகாஷ் பள்ளியின் +1 மாணவி திவ்யா, இரவு நேர வகுப்புக்கு வரவில்லை என்பதற்காக விடுதி வார்டனால் அடிக்கப்பட்டு இறந்திருக்கிறாள். போலீசு கொடுத்த அறிக்கையை சம்மந்தப்பட்ட நீதிபதிக்கு அனுப்பவேண்டுமென்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும் கடந்த 7 ஆண்டுகளாக எதுவும் நடக்கவில்லை. திவ்யாவின் தந்தை நித்தியானந்தனின் விடாமுயற்சியின் விளைவாக, ஜூலை3, 2014 அன்று சென்னை உயர்நீதி மன்றம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

டிச, 21, 1999 அன்று சின்னசேலம் செயின்ட் லிட்டில் பிளவர் மழலையர் பள்ளியில் படித்து வந்த தனது 5 வயது மகன் சுரேஷை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக அன்று மாலை பள்ளிக்குச் சென்றபோது, பிள்ளையைக் காணவில்லை. பள்ளி நிர்வாகம் தங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டது. இரண்டு நாட்களுக்குப் பின் பள்ளியிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள கிணற்றில் அந்தச் சிறுவனின் உடலை உறவினர்கள் கண்டெடுத்தனர். பள்ளியில் உள்ள பாதுகாப்பற்ற தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த சிறுவனின் உடலை நிர்வாகம் கிணற்றில் வீசியிருப்பது தெரியவந்தது. ஆத்திரமுற்ற மக்கள் பள்ளிக்கு எதிராகப் போராடினர். சிறுவனின் தந்தை 2003-ல் உயர்நீதி மன்றத்தில் மனுச் செய்தார். போலீசோ, கல்வித்துறை அதிகாரிகளோ நீதிமன்றத்துக்கும் பதிலளிக்கவில்லை. தங்கள் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளே இல்லையென்றும், அந்த மாணவன் தங்கள் பள்ளியில் படிக்கவே இல்லையென்றும் நீதிமன்றத்தில் வாதாடியது பள்ளி நிர்வாகம். அது பொய்யென்று அம்பலமானதால், அம்மாவட்ட போலீசு சூப்பிரெண்டு வழக்கை விசாரிக்கவேண்டுமென்றும், அலட்சியம் காட்டிய தமிழக அரசு 3.75 லட்சம் நிவாரணம் தரவேண்டுமென்றும், அக்குழந்தை செத்து 15 ஆண்டுகளுக்குப் பின் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

“மாணவர் மரணங்கள் போலீசு நிலையத்தில் நிகழும் கொட்டடிக் கொலைகளுக்கு ஒப்பானவை. பள்ளி – கல்லூரி நிர்வாகத்தை நம்பித்தான் பெற்றோர் தமது பிள்ளையை ஒப்படைக்கின்றனர். கொட்டடிக் கொலைகளுக்கு எப்படி போலீசைப் பொறுப்பாக்குகிறோமோ அதுபோல, பள்ளி தாளாளர்களையும், கல்லூரி முதல்வர்களையும்தான் இந்த மரணங்களுக்குப் பொறுப்பாக்கி சிறையிலடைக்க வேண்டும்.” என்கிறார் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜு.

தட்சிணாமூர்த்தி
விருத்தாச்சலம், விருதகிரி எஜுகேஷனல் டிரஸ்ட் மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறையிலேயே தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட அப்பள்ளியின் +2 மாணவன் தட்சிணாமூர்த்தி.

கைதிகளை போலீசார் வளைத்துப் பிடித்துச் செல்கின்றனர். பிள்ளைகளைப் பெற்றோர்களே விரும்பி ஒப்படைக்கின்றனர் என்ற வேறுபாட்டைத் தவிர, போலீசு நிலையத்துக்கும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. குற்றவாளிகளிடமிருந்து எத்தகைய கொடூரமான வழிமுறைகளைக் கையாண்டாவது, தாங்கள் விரும்பும் வகையில் உண்மையை வரவழைக்க போலீசு முயற்சிப்பதைப் போலத்தான், மாணவர்களிடமிருந்து மதிப்பெண்களை வரவழைக்க முயற்சிக்கின்றன இத்தகைய பள்ளிகள். இந்த முயற்சியில் மாணவன் அடிபட்டு செத்தாலும் சரி, அல்லது உளவியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டாலும் சரி, அதுபற்றி பள்ளி நிர்வாகங்கள் கவலைப்படுவதில்லை.

சிறையிலிருக்கும் தூக்கு தண்டனைக் கைதியைக் கூட மனுப்போட்டு பார்த்துவிடலாம் நாமக்கல் உறைவிடப்பள்ளியில் படிக்கும் சொந்தப் பிள்ளையைக்கூட பெற்றோரால் அவ்வளவு எளிதில் பார்த்து விடமுடியாது. இருந்த போதிலும், அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமென்ற தங்களது இலட்சியத்தைப் பிள்ளை நிறைவேற்ற வேண்டுமானால், இத்தகைய கட்டுப்பாடுகளைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டுமென்று பல முட்டாள் பெற்றோர்கள் நினைக்கின்றனர்.

நாமக்கல் சாலை மறியல்
நாமக்கல் பிராய்லர் பள்ளியொன்றில் 9-ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் இறந்து போனதையடுத்து நாமக்கல் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் நடத்திய சாலைமறியல் போராட்டம்.

மாட்டுக்கு ஊசி போட்டு பால் கறப்பதைப் போல, கறிக்கோழிக்கு எடை கூட்டுவதைப் போல, எப்படியாவது மாணவர்களின் மதிப்பெண்ணைக் கூட்டவேண்டும். அதை நாளேடுகளில் விளம்பரம் செய்து, அடுத்த ஆண்டுக்கான கட்டணக் கொள்ளையை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே தனியார்பள்ளிகளின் நோக்கம். அரசுப்பள்ளிகளில் தேர்வின் போது சில மாணவர்கள்தான் பிட் அடிப்பார்கள் என்றால், இப்பள்ளிகளில் நிர்வாகமே அதற்கு ஏற்பாடு செய்து தருகின்றது. லஞ்சம் கொடுத்து தேர்வுக்கு வருகின்ற கண்காணிப்பாளர்களைச் சரிக்கட்டுகிறது.

கொள்ளை இலாபத்துக்காக உணவுப்பொருளில் கலப்படம் செய்யும் வியாபாரியைப் போல, பொதுச்சொத்தைத் திருடுவதற்காக ஆவணங்களை போர்ஜரி செய்யும் கிரிமினலைப் போலத்தான் மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள் நடந்து கொள்கின்றன. இவர்கள் நேர்மையானவர்களாக இருக்க முடியாது. ஆற்றுமணல் கொள்ளையன் ஆறுமுகசாமி, கனிம மணல் கொள்ளையன் வைகுண்டராசன், கிரானைட் கொள்ளையன் பழனிச்சாமி ஆகியோரைப் போல இவர்கள் கல்விக்கொள்ளையர்கள். அந்தத் தொழில்களைப் போலவே இவற்றிலும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதலீடு செய்திருக்கிறார்கள். அல்லது முதலீடு செய்தவர்கள் அதனைப் பாதுகாத்து வளர்ப்பதற்காக அரசியல்வாதியாகவும் ஆகிவிடுகிறார்கள்

இலஞ்சம், ஊழல், போர்ஜரி, கள்ளக்கணக்கு, கொலை உள்ளிட்ட அனைத்தும் இந்தத் தொழிலின் அங்க லட்சணங்கள். ஆற்று மணலாவது அள்ள அள்ளக் குறையும். கல்வித்தொழில் என்பது அள்ள அள்ளப் பணம் ஊறும் கேணி. வேலைவாப்பின்மையால் போட்டியும், எதிர்காலம் குறித்த அச்சமும் மாணவர்களிடம் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு இவர்களின் கொள்ளையும் அதிகரிக்கிறது.

மெட்ரிக் கொலைக் கூடங்கள்

நாடு முழுதும் ஆண்டொன்றுக்கு 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் உருவாகின்றனர். இது சீனாவிலும் அமெரிக்காவிலும் சேர்த்து ஒரு ஆண்டில் உருவாகும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையை விட அதிகம். இந்தியாவில் ஆண்டுக்கு அதிகபட்சம் 1.5 லட்சம் பொறியியல் வேலைவாய்ப்புகள்தான் உருவாக்கப்படுகின்றன. உண்மைநிலை இவ்வாறு இருந்தும் காம்பஸ் இன்டர்வியூ, பிளேஸ்மென்ட் உறுதி என்று தொலைக்காட்சியில் மோசடியாக விளம்பரம் கொடுக்கின்றன பொறியியல் கல்லூரிகள். பொறியியல் கல்லூரியில் இடம் பிடிக்க வேண்டுமானால், எங்கள் பள்ளியில் சேருங்கள் என்று கடை விரிக்கின்றன மெட்ரிக் பள்ளிகள். ஒரு மாணவனைச் சேர்த்து விட்டால் இத்தனை ஆயிரம் கமிசன் என்று அலைகிறார்கள் தரகர்கள்.

தனியார் கல்வி என்று கவுரவமாக அழைக்கப்படும் இந்தத் தொழிலின் யோக்கியதை இதுதான். அப்பட்டமான பகற்கொள்ளை என்று தெரிந்தும் அரசு இதனை ஊக்குவிக்கிறது. காரணம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்திலும் தனியார்மயம், தாராளமயம் என்பதே அரசின் கொள்கை. அதனால்தான், மாணவர்களின் தற்கொலைகள், மர்ம மரணங்கள் நாள்தோறும் நடந்தாலும், அரசு அவர்களுடைய குற்றங்களை மூடி மறைக்கிறது. பெயரளவில் கூட நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. தனியார்மயத்தால் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதைப் போலவே, மனித வளமான இளைய தலைமுறையும் சூறையாடப்படுகிறது.

கல்வியை வணிகமாக நடத்தும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தையும் ஒழிப்பதும், கல்வி வழங்குவது அரசின் கடமை என்பதை நிலைநாட்டுவதும்தான் மாணவச் செல்வங்களை மரணத்திலிருந்து காப்பாற்றும்.

________________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
________________________________

திருச்சி கால்டுவெல் நினைவு கருத்தரங்க நிகழ்வு – படங்கள்

1

மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பு தேசிய இன அடையாளங்களை அழிக்கும் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு” என்ற தலைப்பில் திருச்சியில் மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரையும் அழைக்கும் விதமாக புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பாக (22-8-2014) அன்று காலை பல்வேறு கல்லூரிகளில் பிரசுர விநியோகம் செய்யப்பட்டது. கல்லூரி பேராசிரியர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

மோடி அரசு அகண்ட பாரத கனவோடு, இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துத்துவா கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் வண்ணம் இந்தித் திணிப்பு, சமஸ்கிருத மீட்பு நடவடிக்கைகள், தேசிய இன அடையாளங்களை அழிக்கும் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு, தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபு இவை குறித்து விளக்கி பேசி மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

குறிப்பாக, பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மரபை விளக்கி திருச்சியில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் பெரியார் போல் வேடமணிந்து மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் பிரசுர விநியோகம் செய்து கருத்தரங்கிற்கு பிரச்சாரம் செய்யப்பட்டது. பார்ப்பனிய மரபுக்கு எதிராக தந்தை பெரியாரே நேரில் வந்து பிரச்சாரம் செய்தது போல் உணரப்பட்டது. பெரியார் வேடமணிந்தவர் கல்லூரிக்கு வரும் மாணவர்களை அழைத்து, “பார்ப்பனிய மரபுக்கு எதிராகவும், சமஸ்கிருதத்திற்கு எதிராகவும், தமிழ்மொழியை மீட்கவும் நாம் போராட வேண்டும்” என்று பேசியது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கல்லூரிக்கு வரும் பேராசிரியர்களும் பெரியார் வேடமணிந்ததைப் பார்த்து அவரிடம் கைகுலுக்கி, கருத்தரங்கிற்கு வாழ்த்து தெரிவித்து ஆதரவு தெரிவித்தனர். இதே போல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் பெரியாரே நேரில் வந்து பிரசுரம் கொடுத்தது போல் உணர்ந்து மரியாதையுடனும் வாங்கிக் கொண்டனர். பார்ப்பனிய எதிர்ப்பு, தமிழ் மரபு மீட்பு என்ற தந்தை பெரியாரை நினைவு கூறும் வண்ணம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அன்று மாலை நடந்த (22-08-2014) கருத்தரங்கத்தின் முதல் நிகழ்ச்சியாக ம.க.இ.க தோழர். ஜீவா வரவேற்புரையாற்றினார்.

2.jeeva

பேராசிரியர். கருணாநிதி (UDC கல்லூரி) இவர் வைத்ததிருந்த நூல்கள் அனைத்தையும் நமது அமைப்பிற்கு அன்பளிப்பாக கொடுத்தார்.

4.karunanithi

அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர் பேசுகையில், “ம.க.இ.கவை 30 ஆண்டுகளாக எனக்கு தெரியும். இவர்களது பிரச்சாரம், கலைநிகழ்ச்சி, பத்திரிக்கை அனைத்தையும் பார்க்கிறேன். இன்றைக்கு தமிழகத்தில் உணர்வுப்பூர்வமாக போராடக் கூடியவர்கள் இவர்கள் தான். நான் செய்தது உதவியல்ல (நூல்கள்), ஒவ்வொரு போராளிகளுக்கும் நாம் செய்ய வேண்டிய கடமை” என்று கூறினார்.

தலைமை உரை : தோழர்.காளியப்பன்

3.kaliyappan

”யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதெங்கும் காணோம்” என்று பாரதி பாடினார். இன்னும் பல பேர் தமிழ் மொழியைப் பற்றிப் பாடினார்கள். இவற்றையெல்லாம் அறிமுகப் படுத்தியவர் கால்டுவெல். இதுவரைக்கும் சமஸ்கிருதம் தான் அனைத்து மொழிகளுக்கும் மூலம் என்று பேசி வந்ததை முறியடித்து, அருமையான மொழி தமிழ் மொழிதான் என்ற உண்மையை எழுதினார். சமஸ்கிருதமே தமிழில் இருந்து கடன் வாங்கப்பட்டது. இந்தியாவிலேயே நாம் முற்போக்கு சிந்தனையுடன் இருக்கிறோம் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் கால்டுவெல்.

இந்த உண்மைகளை அழித்து அறிவியல் ரீதியில் எந்த ஒரு விசயத்தையும் பார்க்க கூடாது என்று மூர்க்கத்தனமாக எதிர்ப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள். சாதி அமைப்பு முறை சரியானது என்பது இவர்களது கொள்கை. சாதி, மத மோதலை உருவாக்குவது அதன் மூலம் ஆட்சியைப் பிடிப்பது, அகண்ட பாரதம் என்கின்ற கோட்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டு்ம் என்று துடிக்கிறார்கள். இந்த தருணத்தில் கால்டுவெல் நமக்கு கொடுத்த செல்வத்தை பயன்படுத்தி இந்துத்துவ கருத்திற்கு எதிராக போராட வேண்டும் என்றார்.

கருத்துரை : பேரா. அரசு

6.arasu

ம.க.இ.க தோழர்களை பல ஆண்டுகளாக போராட்டம், பிரச்சாரம், ஒலிப்பேழை, கலைநிகழ்ச்சி, பத்திரிக்கை இவற்றின் மூலம் நன்கு அறிவேன். கால்டுவெல்லுக்கு கருத்தரங்கம் நடத்துவதில் பெருமைப்படுகிறேன். கால்டுவெல்லின் பின்புலத்தை நாம் அறிந்து கொள்வது அவசியம். கி.மு 2-ம் நூற்றாண்டில் கிரேக்க வரலாற்றில் சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், அறிவியல் அறிஞர்கள் கிடைத்தார்கள். பிறகு உலகம் முழுவதும் காலனிய ஆதிக்கத்தை 16-ம் நூற்றாண்டில் இருந்து காலனியவாதிகள் கொண்டுவந்தார்கள். அந்த காலகட்டத்தில் பல்வேறு அறிவியல் நிகழ்வு ஏற்பட்டன. பண்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பா நாடுகளில் மொழி பற்றிய ஆய்வை கையில் எடுத்திருக்கிறார்கள். மனிதர்கள் பேசும் மொழிகள் பற்றி ஆராய்ச்சி செய்தனர். இந்த சூழ்நிலையில் தான் கால்டுவெல் வளா்ந்தார்.

ஐரோப்பிய காலனிய ஆட்சி உருவான பிறகு 1784-ல் வில்லியம் ஜோன்ஸ் மொழி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இந்தியாவும் சமஸ்கிருதம் வேதம் பற்றிய இந்தியவியல் ஆராய்ச்சி செய்தது. இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்குகிறார்கள். இதற்கு வேதம், இராமாயணம், சமஸ்கிருதம் அடிப்படை என்று கூறினார்கள். அயோத்தியில் இராமன் பிறந்தான் என்று உச்ச நீதி மன்றம் சொல்வது என்றால் இதை விட கேவலம் எதுவும் இல்லை. பார்ப்பனிய கருத்தைதான் இந்துத்துவ கருத்து என்கிறார்கள்.

இந்த வரலாற்றுச் சூழலில் கால்டுவெல்லின் பணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் உணர வேண்டும். மொழி பற்றிய ஆய்வில் கால்டுவெல்லின் பங்களிப்பை நாம் மறக்க முடியாது. 1830-ல் தொடங்கி பழங்குடி மக்கள் பேசக் கூடிய மொழி எவை. அவை பழமையான மொழியா என்று ஆய்வு செய்தார் கால்டுவெல். 24 திராவிட மொழிகள் பேசியதை கண்டு பிடித்தார். ஏறக்குறைய 37 திராவிட மொழிகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 75 சதவீதம் பேர் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள், 25 சதவீதம் ஆரிய மொழி பேசக் கூடியவர்கள் என்றும் அவர் கண்டுபிடித்தார்.

ஒடுக்கப்பட்ட பள்ளர், பறையர், சக்கிலியர் போல அதே முறையில் சாணார்களும், இதர சூத்திர மக்களும் ஒடுக்கப்பட்டனர். 200 ஆண்டுகளில் தான் மாற்றம் ஏற்றப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களை ஆரியர்கள் அடிமையாக்கி வைத்துள்ளனர். இவர்களையும் சேர்த்து விடுதலை பெற செய்ய வேண்டும் எழுதினார் கால்டுவெல்.

19-ம் நூற்றாண்டின் இறுதியில் அயோத்திதாசர் சூத்திரர் பற்றி எழுதுகிறார். ஆனால் கால்டுவெல் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. அயோத்திதாசர் சொல்லும் திராவிட மொழி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம். பார்ப்பனிய சார்ந்த கருத்துக்களை இந்து மதத்தை ஒழிப்பதன் மூலம் தான் தமிழ் விடுதலை பெறும் என்று எந்த சமரசமும் இன்றி எழுதினார். கால்டுவெல், அயோத்திதாசர், பெரியார் பேசிய திராவிட கருத்துக்கள் எல்லாம் பார்ப்பனிய எதிர்ப்பு கருத்துக்கள். எனவே, நாமும் பார்ப்பனிய கருத்துக்களை எதிர்த்து போராட வேண்டும் என்று பேசினார்.

புலவர். பொ. வேலுசாமி

8.velusamy

கால்டுவெல்லை பற்றி தமிழ் வரலாற்றில் அதிகமாக பேசப்படவில்லை. 17,18 நூற்றாண்டில் வடமொழி தான் தமிழுக்கு அடிப்படை என்று எழுதினர். இதை திருத்தி தமிழ் மொழி தான் அனைத்திற்கும் அடிப்படை என்று நிரூபித்தார் கால்டுவெல்.

ராஜராஜன் காலத்திலேயே தமிழ் மொழியில் படித்தார்களா என்று சான்றுகள் இல்லை. ஆனால் வடமொழியில் படித்ததற்கான சான்றுகள் உள்ளன. ராஜராஜ சோழனுடைய குருவாக பார்ப்பனர்கள் இருந்தனர். இதனால் தமிழ் படிப்பவர்கள் இல்லாமல் போனதால் ஓலைச்சுவடிகள் கேட்பாரற்று போனது.

1888-ல் உ.வே. சாமிநாதர் ஐயர் தமிழர்களுக்கு தனி அடையாளம் பிறந்தது என்று கூறினார். நமது கலாச்சார பண்பாடு வாயிலாகத்தான் நமது அடையாளம் கண்டறியப்படும். மொழி ஒரு இனத்திற்கு அடையாளம் என தத்துவார்த்த ரீதியாக நிலை நிறுத்தியவர் கால்டுவெல். தமிழுக்காக போராடிய மாவீரனை நினைவு கூா்வது தேவையா இல்லையா என்று முடிவு செய்யுங்கள் என்று பேசினார்.

பாராளுமன்றத்திலேயே இந்துத்துவா தான் இந்துவின் அடையாளம் என பகிரங்கமாக பேசுகிறார்கள். மறுபுறம் தமிழினவாதம் பேசுகிறவர்கள். பெரியாரை கொச்சைப்படுத்தி பேசும் போக்கு உள்ளது. சீமான், இராமதாசு போன்ற தமிழ் பற்றி பேசக்கூடியவர்கள் சாதிக் கட்சிகளுக்கு அங்கீகாரம் தருவது,சாதி பெருமையை பேசுவது, சாதி நிலை புதுப்பிப்பது என்பது தான் உள்ளது. இவா்களுடன் இன்று ஒன்று சேர்வது தான் பார்ப்பனிய கொள்கை.

நாம் வேதமறுப்பு, சமஸ்கிருத மறுப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு என போராட வேண்டும் என்று இறுதியாக தோழர். காளியப்பன் பேசினார்.

மேலும் இக்கருத்தரங்கத்தை சிறப்பிக்கும் வண்ணம் கல்லூரி மாணவர் பு.மா.இ.மு உறுப்பினர் தோழர். ராஜா, தமிழ் மொழியின் சிறப்பு பற்றி கவிதை வாசித்தார்.

9.raja

இக்கருத்தரங்கத்திற்கு மாணவர்கள், பேராசிரியர்கள், பொது மக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இறுதியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் திருச்சி மாவட்ட செயலர் தோழர் சரவணன் நன்றியுரையாற்றினார்.

10.saravanan

இவண்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
திருச்சி
9095604008

ஃபேஸ்புக்கில் இந்தித் திணிப்பு – சிக்கியது மோடி அரசு

10

மோடி அரசு பதவி ஏற்ற அடுத்த நாள், அனைத்து அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும், பொதுத் துறை நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் டுவிட்டர், பேஸ்புக், கூகிள், யூடியூப், வலைப்பதிவுகள் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிகார பூர்வ கணக்குகளில் இந்திக்கு முன்னுரிமை கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. அகண்ட பாரதத்தை அமைப்பதற்கு முன், சிக்கிய இந்தியாவில் இந்தியைத் திணிக்கும் இந்துமதவெறியர்களின் இயல்பான முயற்சிக்கு நாடு முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்தது.

இதையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நாட்டின் அனைத்து மொழிகளையும் பரப்புவதற்கு அமைச்சகம் கடமைப்பட்டுள்ளது” என்று டுவீட் செய்தார். உள்துறை இணை அமைச்சர் கிரண் ராஜூ, அனைத்து துறைகளிலும், பொது வாழ்க்கையிலும் ஹிந்தியை முன்னிறுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என்றாலும் அது மற்ற மொழிகளை பின்தள்ளுவதாக அமையாது என்று உறுதியளித்தார். வஞ்சப் புகழ்ச்சி போல இது சமத்துவத்தின் பெயரில் நடைபெறும் நாடகம் என்பதை எத்தனை பேர் அறிவர்?

இந்த சுற்றறிக்கை தொடர்பாக உள்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தில் “அலுவல் மொழிக்கான துறை 1963 அலுவல் மொழி சட்டத்தின்படியும் 1976 அலுவல் மொழிகள் விதிமுறைகளின் படியும் அவ்வப்போது அலுவல் மொழிக் கொள்கையை அமல்படுத்த சுற்றறிக்கைகள் அனுப்பி வருகிறது. அதன்படி சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பிய சுற்றறிக்கையின் தொடர்ச்சியாக, மார்ச் மாதம் 10-ம் தேதி அனைத்து அமைச்சகங்கள், துறைகள், துணை அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஹிந்தி அல்லது ஹிந்தி-ஆங்கிலத்தை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி உள்துறை அமைச்சகம் மே 27 தேதியிட்ட சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது.” என்று விளக்கம் சொல்லியிருந்தது.

இந்த சுற்றறிக்கை இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டும்தான் பொருந்தும், இந்தி பேசாத மாநிலங்களுக்கு பொருந்தாது என்றும் கூறினார்கள்.

நேஷனல் புக் டிரஸ்ட்
இந்தி மயமாகும் நேஷனல் புக் டிரஸ்ட் பேஸபுக் பக்கம்

உண்மையில் நடைமுறை மாறியிருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய இந்தி பேசும், மற்றும் இந்தி பேசாதா மாநிலங்கள் அனைத்துக்கும் பொதுவான மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் (மனித வளத் துறை) கீழ் இயங்கும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் பேஸ்புக் கணக்கை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். இந்த நிறுவனம்தான் இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட இதர தேசிய மொழிகளில் பல்வேறு நூல்களை வெளியிடும் மிகப்பெரும் மத்திய அரசு நிறுவனம்.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இன்று வரையிலான 100 நிலைத்தகவல்களை எடுத்து அவை எந்த மொழியில் இடப்பட்டுள்ளன என்று ஆய்வு செய்தோம்.

இந்தி மொழி பயன்பாடு துலக்கமாக அதிகரித்த ஜூலை இறுதி வரையிலான கால கட்டத்துக்கு முன்னும் பின்னும் என இந்த நிலைத்தகவல்களை பிரித்துக் கொண்டால்,

ஜனவரி 27 முதல் ஜூலை 24 வரை (சுமார் 6 மாதங்களில்)

ஆங்கிலம்

53

72%

இந்தி

15

20%

மற்றவை

6

8%

மொத்தம்

74

ஜூலை 24 முதல் இன்று வரை (சுமார் 1 மாதம்) பேஸ்புக் நிலைத்தகவல்களின் நிலவரம்

ஹிந்தி

20

77%

ஆங்கிலம்

5

19%

மற்றவை

1

4%

மொத்தம்

26

அதாவது, மோடி நிர்வாகம் தனது முடிவுகளை செயல்படுத்த ஆரம்பித்த கால கட்டத்திலிருந்து பார்க்கும் போது அது வரை ஆங்கிலம் முதன்மையான மொழியாக (70%) இருந்த நிலை மாறி இந்தி முதன்மையான மொழியாக மாற்றப்பட்டு (77%), ஆங்கிலம் இரண்டாம் நிலைக்கு (19%) தள்ளப்பட்டுள்ளது.

நேஷனல் புக் டிரஸ்ட் இந்தித் திணிப்புஜூலை மாதத்துக்கு முன்பு இந்தி நூல்கள் பற்றிய நிலைத்தகவல்கள் இந்தியிலும், மற்ற நிலைத்தகவல்கள் ஆங்கிலத்திலும் இருந்தன. கடந்த ஒரு மாதத்தில் பொதுவான நிலைத்தகவல்கள் இந்தியிலும், ஆங்கில நூல்கள் பற்றிய நிலைத்தகவல்கள் மட்டும் ஆங்கிலத்திலும் என்று மாறியிருக்கிறது.

மோடி அரசு பதவி ஏற்ற நாளிலிருந்தே பார்த்தாலும், இந்தி, ஆங்கிலத்துக்கு நிகராக பாதிக்குப் பாதி இடத்தை பிடித்திருக்கிறது.

இந்த கால கட்டம் முழுவதிலும் தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளுக்கு நேஷனல் புக் டிரஸ்டின் சமூக வலைத்தள தகவல் பரிமாற்றத்தில் இடமே இல்லை.

இந்த 100 நிலைத்தகவல்களில் பல ஆங்கில, இந்தி நூல்கள் பற்றிய செய்திகள் உள்ளன. ஒரு உருது மொழி புத்தகம் பற்றிய நிலைத்தகவல் உள்ளது. மற்ற எந்த இந்திய மொழி பற்றியும் எந்தத் தகவலும் இல்லை.

சரி, 2012-13 ஆண்டு மத்திய அரசிடமிருந்து (நாடு முழுவதும் வாழும் மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணத்திலிருந்து) சுமார் ரூ 44 கோடி நிதி உதவி பெற்ற இந்நிறுவனம்  வெளியிடும் புத்தகங்கள் பற்றிய விபரங்களை ஆய்வு செய்தோம்.

2012-13ம் ஆண்டு வெளியிடப்பட்ட மொத்தம் 1,553 புத்தகங்களில் 25% மக்கள் பேசும் இந்தி (511), மராத்தி (460) மொழிகளுக்கு 63% இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. (இந்தி மொழி பேசுபவர்களில் ராஜஸ்தானி, போஜ்பூரி, அவதி, சத்திஸ்கரி மொழி பேசுபவர்களை சேர்க்காமல்).

மூன்றாவது இடத்தில் ஆங்கிலம் (244) சுமார் 16% பங்கை பெற்றிருக்கிறது.

ஆங்கிலம் - இந்தி
ஆங்கில தகவலுக்கு இந்தியில் பதில்.

26 கோடி மக்கள் (17% மக்கள் தொகை) பேசும் வங்க மொழி (83), பஞ்சாபி (56), அசாமிய மொழி (48), உருது (45), குஜராத்தி (34) ஆகிய மொழிகளிலான புத்தகங்கள் சுமார் 17% இடத்தை மட்டும் பிடித்திருக்கின்றன.

ஒடியா (19), தெலுங்கு (16), மலையாளம் (10), தமிழ் (9), கன்னடம் (9), ஆகிய மொத்தம் 24 கோடி மக்கள் (20% மக்கள் தொகை) பேசும் பெரிய தேசிய மொழிகளுக்கு மொத்தம் 63 புத்தகங்கள் (4%) என ஏதோ போகிற போக்கில் பங்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, தென்னிந்திய மொழிகளை புறக்கணித்து இந்தி, மராத்தி மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இந்தி, ஆங்கில மொழி புத்தகங்களைத் தவிர பிற மொழி புத்தகங்கள் குறித்து நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் பேஸ்புக்கில் பேசவே இல்லை என்பது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 100 நிலைத்தகவல்களில் தெரிய வருகிறது.

அனைத்தையும் இந்தி மயமாக்குவதற்கான உதாரணமாக நிலைத்தகவல் ஒன்றை குறிப்பிடலாம். சென்ற மாதம், லூதியானாவிலிருந்து நேஷனல் புக் டிரஸ்ட்டின் நகரும் புத்தகக் கண்காட்சியை புகைப்படங்கள் எடுத்து, ஆங்கில தகவலுடன் அனுப்பி வைத்திருக்கிறார் ஜிதேந்தர் சிங் நேகி என்பவர். ஆனால், பேஸ்புக்கில் அதை பகிர்ந்து கொண்ட நேஷனல் புக் டிரஸ்ட் அதற்கான பதிலை இந்தியில் எழுதியிருக்கிறது.

இதிலிருந்து இந்து-இந்தி-இந்தியா என்ற கொள்கையை பின்பற்றும் மோடி அரசு பதவி ஏற்ற பிறகு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்திய நாட்டில், பெரும்பான்மை மக்களின் தேசிய மொழிகள் ஏற்கனவே புறக்கணிக்கப்பட்டு வரும் நிலை தொடர்வதோடு, இந்தித் திணிப்பு இன்னும் தீவிரமாக்கப்படுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.

இந்த தமிழ் விரோத, ஜனநாயக விரோத இந்துமதவெறி அரசைத்தான் திராவிடத்தை தனது கட்சி பெயரில் தக்க வைத்திருக்கும் வைகோ என்ற சந்தர்ப்பவாதி ஆதரித்தார், ஆதரிக்கிறார். இந்த பாஜகவைத்தான் விகடன், தினமலர், குமுதம், தினமணி, தி இந்து உள்ளிட்ட ஊடகங்கள் தலையில் வைத்து கொண்டாடுகின்றன. இன்னொரு புறம் இதே ஊடகங்கள்தான் தமிழுக்காக கவலைப்படுவதாக வேறு நடிக்கின்றன.

பாஜக அரசு இந்தியை திணிக்கவில்லை என்றெல்லாம் பல்வேறு அறிஞர் பெருமக்கள் சத்தியமடிக்காத குறையாக சாதித்தார்கள். ஆனால் உண்மை நிலை என்ன என்பது இந்த கட்டுரையை படிக்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும்.

“இந்து ராஷ்டிரம்” என்பதற்கான முன்னறிவிப்புதான் இந்த இந்தித் திணிப்பு. இதை தமிழக மக்கள், தமிழார்வலர்கள், ஜனநாயக அமைப்புகள் அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.

பாஜக மற்றும் அதற்கு பல்லக்கு தூக்கும் துரோகிகளை இனம் காண வேண்டும்.

இணைப்பில் உள்ள சுவரொட்டிகளை பரவலாக பகிருமாறும், நேஷனல் புக் ட்ரஸ்ட் ஃபேஸ் புக் பக்கத்திற்கு சென்று கருத்து பதிவு செய்யுமாறும் கோருகிறோம்.

மோடி இந்தித் திணிப்பு மோடி இந்தித் திணிப்பு

மேலும் படிக்க

அரசாங்கத்தில் கார்ப்பரேட்டுகள் – தரகர்களாக என்.ஜி.வோக்கள்

1

ஆம் ஆத்மி : பிறப்பு இரகசியம் 3

டந்த ஏப்ரல் (2014) புதிய ஜனநாயகம் இதழில் இடம் பெற்றிருந்த “ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம்” என்ற கட்டுரையில் சிந்தனைக் குழாம்கள் மற்றும் குடிமைச் சமூகங்கள் ஆகிய இரு புதிய விஷயங்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம். அவற்றின் தொடர்ச்சியாக, கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களின் கூட்டணிகள் மற்றும் அவற்றின் அரசியல் முன்னெடுப்புகள் என்ற மேலுமொரு புதிய விஷயத்தை த் தமிழ் வாசகர்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டியதை – இங்கே வலியுறுத்துகிறோம். இம்மூன்று விஷயங்களின் தொகுப்பில் ஆம் ஆத்மி கட்சியின் பிறப்பு இரகசியம் பொதிந்திருக்கிறது.

ஹெரிடேஜ் பவுண்டேசன்
பிரிட்டிஷ் பிரதமர் வழிநடத்திய ஹெரிடேஜ் பவுண்டேசன் எனும் சிந்தனைக் குழாமின் அடையாளச் சின்னம்.

மேலைநாடுகளில் இருந்து நிதிபெற்று இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பதாக அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள் மீது முன்பு காங்கிரசும், இப்போது பா.ஜ.க.வுக்காக ஐ.பி. என்ற இந்திய உளவு நிறுவனமும் குற்றஞ்சாட்டின. அணுஉலை எதிர்ப்பு மக்கள் போராட்டக் குழுவின் உதயகுமாரன், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் கெஜரிவால் போன்ற பலர் இவ்வாறான குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கிறார்கள். மேலைநாடுகளில் இருந்து நிதி பெற்றதாகத் தனது அரசுசாரா தொண்டு நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டைக் கடுமையாக எதிர்க்கும் உதயகுமாரன், அமெரிக்க ஆய்வாளர் ஒருவருக்காகத் தான் செய்த ஆய்வு வேலைக்கான ஊதியம் பெற்றதாக ஒப்புக்கொள்கிறார். அது என்ன ஆய்வு வேலை என்பதை மட்டும் சொல்லவில்லை. ஆனால், தன் மீது குற்றஞ்சாட்டியவர்களின் வாயடைக்கும் வகையிலான வழமையான கேள்வியொன்றை உதயகுமாரன் வீசியிருக்கிறார். “மேலைநாடுகளில் இருந்து நிதிபெற்று இந்திய அரசுக்கு எதிராக அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் வேலைசெய்வது உண்மையானால் இந்திய அரசு ஏன் அதைத் தடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை?” இதற்கு இந்தியா அரசு பதில் கூறவில்லைதான்.

அதனாலேயே அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மேலைநாடுகளில் இருந்து நிதி பெறவில்லை என்பது உண்மையாகிவிடுமா? இந்திய ரிசர்வ் வங்கி அறியவும் சட்டப்படியேயும் மேலைநாடுகளிருந்து அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் நிதி பெறுகின்றன. அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்குக் காரணம் அவற்றின் செயல்பாடுகளில் இந்திய அரசுக்கு சில அதிருப்தியிருந்தாலும், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளடங்கிய குடிமைச் சமூகங்கள் தடையின்றிப் பாதுகாப்பாகச் செயல்படுவதற்காக இந்திய அரசு தனது எஜமானர்களான மேலைநாடுகளுக்கு உத்திரவாதமளித்துள்ளதோடு, அதற்குரிய ஐ.நா. ஒப்பந்தத்திலும் கைச்சாத்தளித்திருக்கிறது.

ஆகவே, மேலைநாடுகளில் இருந்து நிதிபெறும் உண்மையைவிட நமது அக்கறைக்குரியது, அமெரிக்க மேல்நிலை வல்லரசின் வல்லாதிக்கத்தின் கீழ் தேசங்கடந்த, பன்னாட்டுக் கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களின் கூட்டணிகளுடைய உலகச் செயற்திட்டத்தின் கைக்கைூலிகளாக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளடங்கிய குடிமைச் சமூகங்கள் செயல்படுகின்றன என்பதுதான்!

11-captionகூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் வேலைஅளிப்பு (production and employment) விவகாரங்களில் எப்போதும் நேரடிச் செல்வாக்குச் செலுத்தி வந்ததை அனைவரும் அறிவர். ஆனால், அளவிலும் எண்ணிக்கையிலும் அவை வளர்ந்தபிறகு, பொருளாதாரத்தில் மட்டுமல்ல, அரசியலிலும் நேரடிச் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன; இதைப் பலரும் கண்டுகொள்வதில்லை. தனியொரு கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனம் தனது நேரடி, உடனடி நலனுக்காகவும் வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்வதற்காகவும் நன்கொடை, ஆள்பிடிப்பு மூலமாக அடிக்கடி அரசியல் தலையீடு செய்வதையும் அரசு, பொதுத் துறை ஆகியவற்றில் தனக்குச் சாதகமான செயல் திட்டங்களை வகுப்பதையும் முன்தள்ளுவதையும் அனைவரும் அறிவர்.

ஆனால் இப்போது, தனிப்பட்ட முறையில் பொருளாதாரத்திலும் அரசியலிலும் செல்வாக்குச் செலுத்துவதோடு கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்கள் நிறைவு கொள்வதில்லை. இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து அவை ஒட்டு மொத்தமாகத் தமது அதிகாரச் சக்தியை அதிகரிக்கவும் தமக்குச் சாதகமாக முடிவுகளெடுக்குமாறு அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொள்ளவும் சதிகளில் ஈடுபட்டு வருகின்றன. 1970-களில் வியத்நாம் உட்பட இந்தோ-சீன நாடுகளில் அமெரிக்காவுக்கு நேர்ந்த பின்னடைவோடு, கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களின் இலாப விகிதங்கள் வீழ்ச்சி கண்டன. உலகமெங்கும் அமெரிக்க ஆதிக்கத்தையும் கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களையும் எதிர்க்கும் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களும் பரவின. அதனால், தொழிற்கழகங்களின் அதிகாரத்தைத் தட்டிக்கேட்டதோடு அவற்றின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறு அரசாங்கங்களும் நிர்பந்திக்கப்பட்டன. 1967-1977 ஆகிய பத்தாண்டுகளில் அமெரிக்காவில் எடுக்கப்பட்டதொரு கருத்துக் கணிப்பின்படி பெரும் தொழிற்கழகங்களின் மீதான நம்பிக்கை 55 சதவிகிதத்தில் இருந்து 16 சதவிகிதமாகச் சரிந்தது.

தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் தொழிற்கழகங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பெருமளவு சுற்றுச்சூழலைப் பாதிப்பது, மாசுபடச் செய்வது, நுகர்வோர் ஏமாற்றப்படுவது, மக்கள் கொள்ளையிடப்படுவது, தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவது – ஆகியவற்றுக்கு எதிரான இயக்கங்கள் பெருகின. இப்பிரச்சினைகளில் கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களுக்கு எதிராக உலகின் பல நாட்டு அரசுகள் சட்டங்கள் இயற்றித் தடைகளும் கட்டுப்பாடுகளும் விதித்தன. “உலகமெங்கும் ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனத்தின் அதிகாரத்துக்குச் சவால் விடப்படுகிறது. அதன் அதிகார உரிமை நொறுங்கிப்போகிறது” என்று அமெரிக்காவின் பெரிய கார்ப்பரேட் நிறுவன இயக்குநர் புலம்பினார். நமது பொருளாதார சுதந்திரத்தை அரசாங்கம் கைப்பற்றிக்கொள்வதற்கெதிரான சண்டையில் நாம் தோற்றுக் கொண்டிருக் கிறோம்” என்றார், அமெரிக்க தேசிய சுயதொழிற்கழகங்களின் தேசிய கூட்டமைப்பின் தலைவர்.

இந்நிலைமைக்கு எதிர் வினையாற்றும் முகமாக அரசியல் ஆதரவைத் திரட்டிக் கொள்ளவும் தமது ஆதிக்கத்தை மறுவுறுதி செய்து கொள்ளவும் அமெரிக்கா மற்றும் மேலைநாடுகளின் தலைவர்கள் தொழிற்கழகங்களின் வலைப்பின்னல்களை உருவாக்கினார்கள். அவை உலகின் பல நாடுகளிலுள்ள அரசாங்கங்களை வசியம் செய்வதில் இறங்கின. இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டணிகளும் அவற்றின் துணை அமைப்புகளும் அரசாங்கங்களிடமிருந்து அதிகாரத்தைக் கைமாற்றம் செய்யும் வழிவகைகளையும் திசைவழிகளையும் வகுக்குமாறு சிந்தனைக் குழாம்களின் வலைப் பின்னல்களிடம் ஏராளமான டாலர்களைக் கொண்டு போய்க்கொட்டின.

11-thinktanksஅமெரிக்காவில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் தொழிற்பேரவை, தேசிய உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகிய பழைய அமைப்புகளோடு, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக தொழில் வட்டமேசை, சிறு தொழில்களுக்காக சிறு தொழில்கள் சட்டப் பேரவைகள் ஆகியன உருவாக்கப்பட்டன. பிரிட்டனில், பிரிட்டிஷ் உற்பத்தியாளர்கள் தேசிய சங்கம், பிரிட்டிஷ் தொழில்கள் மற்றும் பிரிட்டிஷ் தொழிலதிபர்கள் கூட்டுப்பேரவை ஆகியவற்றோடு இணைந்து பிரிட்டிஷ் தொழில்கள் கூட்டுப்பேரவை உருவாகியது. தனது கருத்துக்களைக் கேட்டுத்தான் உயர்மட்ட அளவில் பிரிட்டிஷ் அரசாங்கம் சட்ட திட்டங்களை வகுத்துக்கொண்டதாக பிரிட்டிஷ் தொழில்கள் கூட்டுப்பேரவை கூறிக்கொண்டது. வேறு எந்தத் தொழில் நிறுவனத்தையும்விட அதிக அளவு பிரிட்டிஷ் தொழில்கள் கூட்டுப்பேரவை பிரிட்டிஷ் அரசாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், கருத்துருவாக்கம் செய்பவர்கள், ஊடகங்கள் ஆகியவர்களோடு தொடர்புகளின் வலைப்பின்னலை பெற்றிருந்தது.

அமெரிக்க, பிரிட்டிஷ் கார்ப்பரேட் தொழிற் கூட்டமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு ஐரோப்பாவிலும் ஆஸ்திரியாவிலும்கூட முறையே ஐரோப்பிய தொழிலதிபர்களின் வட்டமேசை மற்றும் ஆஸ்திரிய தொழில்கள் கூட்டுப்பேரவை ஆகியன நிறுவப்பட்டன. நாட்டின் பொதுமக்களுக்கு மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே தெரியாமல் நாடாளுமன்ற நிலைக்குழுக்கள், அமைச்சரவைக் குழுக்கள், உயர்மட்ட அதிகாரவர்க்கக் கமிட்டிகள் கூடி கார்ப்பரேட் தொழிற் கூட்டமைப்புகளின் ஆலோசனைகள், கருத்துக்களைக்கேட்டு அரசின் பொருளாதார, தொழிற்கொள்கைகள் மீது முடிவெடுக்கத் தொடங்கின.

அப்போதிருந்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கங்களிடமிருந்து உரிமையுடன் கேட்டுப் பெறுவது, தலையீடு செய்வது என்ற ‘தற்காப்பு’ நிலையிலிருந்து, அதாவது தமது பொருளாதார சுதந்திரத்தைக் காத்துகொள்வது என்ற தற்காப்பு நிலையிலிருந்து, தமது அரசியல் மற்றும் பிற நலன்களுக்காகப் ‘பேராடுவது’ என்ற தாக்குதல் நிலைக்கு மாறின. இப்போது அவை தமது அதிகாரத்தை, ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொடுக்கும்படியும் தொழிற்சங்கங்களை அழித்து ஒழித்துவிடும்படியும் கோருகின்றன. அரசாங்கத்தின் கேந்திரமான கொள்கை வகுப்பு மற்றும் பிற சேவை வாய்ப்புகளையும் கைப்பற்றிக்கொண்டுவிட்டன. மேலும் மேலும் இதைச் சாதிப்பதன் மூலம், “ஜனநாயக அமைப்புகளின்” அதிகாரம் கீழறுக்கப்பட்டு சீர்குலைக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசியல் அதிகாரம் அதிகரித்துக்கொண்டே போகிறது.

11-2-captionகார்ப்பரேட் நிறுவனங்களின் மேல்நிலைப் பதவி வகிக்கும் தலைமை நிர்வாகிகளும், தலைவர்களும், இயக்குநர்களும் மேலைநாடுகளில் ஏகாதிபத்திய, ஏகபோக முதலாளிய வர்க்கத்தன்மை கொண்டவர்களாக உள்ளனர். கீழை நாடுகளில் தரகு, தேசங் கடந்த முதலாளிய வர்க்கத் தன்மைகொண்டவர்களாக உள்ளனர். அவர்கள் இப்போது வழமையான குறிப்பிட்ட தொழிற்கழகங்களின் வட்டார நலன்களையும் தாண்டி பொதுவான, உலக அளவிலான செயல் திட்டங்களை முன்வைத்துச் செயல்படுகிறார்கள். இவர்கள் உலக அரசியல் அரங்கங்களில் ஏகாதிபத்திய, பன்னாட்டு, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கூடுதலான அதிகாரத்துக்காக வாதிடுகிறார்கள். இத்தகைய நோக்கங்களுக்காக ஒவ்வொரு நாட்டிலும், உலக அளவிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தேசங்கடந்த பன்னாட்டு தொழிற் கழகங்கள் அடங்கிய கூட்டணிகள் கட்டமைக்கப்படுகின்றன.

1970-களில் தொழிற்துறையை வீழ்த்திவிடும் அளவுக்கான ஆபத்து, தாக்குதல் வருவதாக அவர்கள் சித்தரித்துக் கொண்டவை கடந்த கால வரலாறாகிப்போன அதேசமயம், பெரும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியலில் தலையிட்டு செல்வாக்கைத் திரட்டிக்கொள்வது வேகம் பிடித்தது. தமது மூர்க்கமான, நேரடி அரசியல் அதிகாரத் தலையீடுகள் பிரச்சனைகளைக் கிளப்பும் என்று பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அஞ்சவில்லை. இவ்வகையான வெற்றி, முதலாளியச் சந்தைப் பொருளாதாரமே சிறந்தது என்ற சித்தாந்தத்தை உலகம் முழுவதும் நிலைகொள்ளச் செய்தது. விளைவாக, தொழிற்சங்கங்கள், தொழிற்சட்டங்கள், அரசு தொழில்களை நெறிப்படுத்துவது போன்றவற்றை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முற்றாக நிராகரித்தன.

11-us-protest1980-கள் மற்றும் 1990-களில் கொழுத்த நிதி ஆதரவு பெற்ற சிந்தனைக் குழாம்கள் மற்றும் அதிகாரத் தரகு-தொடர்பு நிறுவனங்களின் அணிவரிசையைக் கொண்ட பெரும் கார்ப்பரேட் தொழிற் கூட்டமைப்புகளும் குழுக்களும் பெருகின. அவை முந்தைய கால அதிகாரத் தரகு-தொடர்புப் பணிகளை மட்டும் கவனிக்கவில்லை. அதிகரிக்கும் கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களின் அதிகாரங்களையும் சுயேச்சைத் தன்மையையும் அரசுக் கொள்கை உறுதிசெய்யும்படி கொள்கை உருவாக்கம் செய்பவர்களை நிர்ப்பந்திக்கின்றன. இந்தக் கூட்டணிகள் பலவற்றின் வீச்சு இப்போது நவீனக் கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களின் தேசங்கடந்த தன்மைக்கேற்ப உலக அளவினதாகி விட்டன. இதன் காரணமாக அவை இப்போது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான திறந்த வாய்ப்புகளைக் கொண்ட கொள்கைகளைக் கடைப் பிடிக்கும்படி உலகம் முழுவதுமுள்ள அரசாங்கங்களை நிர்பந்திக்கின்றன.

“ஜனநாயக” அரசாங்கங்களின் இடத்தைத் தாம் கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியை கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள் தொடங்கினர். வடஅமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய கார்ப்பரேட் நிறுவனங்களின் முன்னாள் – இன்னாள் – தலைவர்கள் மத்தியிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட மேட்டுக்குடியினர்களைக் கொண்டதுதான் சர்வதேசக் கொள்கை உருவாக்க உயர் மட்ட முத்தரப்பு ஆணையம். அதன் நிறுவனரும் தலைவருமான டேவிட் ராக்ஃபெல்லர் “நிர்வாகத்தில் அரசாங்கத்தின் பங்கு குறைக்கப்பட வேண்டும் என்று தொழிற் துறையினர் கூறுகையில் அரசாங்கத்தின் இடத்தை வேறுசிலர் எடுத்துக்கொள்ள வேண்டும்; அதைச் செய்வதற்கானவர்கள் தர்க்க நியாயப்படி தொழிற்துறையினர்தாம்” என்று எழுதினார். அதாவது, அரசாங்க அதிகாரத்தைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிறார்.

தற்போதைய “ஜனநாயக அரசமைப்பு முறை’’க்கு மாற்றாக அரசாங்கத் தலைவர்கள், அதிகாரிகளை உள்ளடக்கிய தொழிற்துறையினரின் வலைப் பின்னலைக் கட்டமைப்பதற்கு இந்த முத்தரப்பு ஆணையம் ஒரு உதாரணம். 1975-ல் இந்த முத்தரப்பு ஆணையம், ஒரு நூலைப் பதிப்பித்தது. “நிர்வாகத்தின் சில பிரச்சனைகள் அதிகமான ஜனநாயகத்தினால் விளைபவை. அதற்குப் பதிலாக, ஜனநாயகத்தை ஓரளவு மிதமாக்குவதுதான் தேவையானது” என்கிறது, “ஜனநாயகத்தின் நெருக்கடி” என்னும் அந்நூல்.

கடந்த நூற்றாண்டில் கலப்புப் பொருளாதாரமும் மக்கள் நலத் திட்டங்களும் அவற்றில் உறுதியான அரசாங்கமும் ஓரளவு மக்கள் சேவைகளில் ஈடுபட்டு வந்தன. முதலாளியத்தின் தொட்டிலான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில்கூட பல மக்கள்நலத் திட்டங்களும் அரசுப் பொதுத்துறை செயல்பாடுகளும் இருந்து வந்தன. புதிய தாராளமயக் கொள்கை புகுத்தப்பட்டதோடு, மக்கள்நலத் திட்டப் பொறுப்புகளைக் கைகழுவிவிட்டு, மிகக் குறைவான பங்கேற்பையே அரசாங்கத்திடம் கார்ப்பரேட் முதலாளிகள் வலியுறுத்துகின்றனர்.

முதலாளியத்துக்கு எப்போதும் சந்தை விரிவாக்கமும் பொருளாதார வளர்ச்சியும் தேவை. ஆனால், தற்போதைய சந்தை சுருங்கிவிட்டதால் கார்ப்பரேட் முதலாளிகள் தனிப்பட்ட தேசங்களில் இருந்து உலக அளவில் விரிவாக்கிக் கொள்ள விழைகிறார்கள். இதற்கு முன்பு சந்தைப் பொருளாக இல்லாத தனிப்பட்ட வாழ்க்கை, சமூக உறவுகள் மட்டுமல்ல; வழமையாகச் சந்தைக்கு வெளியிலுள்ளதாகக் கருதப்பட்ட அரசாங்க நடவடிக்கைகள், பொறுப்புகள், கடமைகள்கூட விற்பனைச் சரக்குகளாக, இலாபமீட்டும் சந்தைப் பொருட்களாக மாற்றப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிதண்ணீர், அடிப்படைக் கல்வி, பொதுசுகாதாரம், பொதுப் பாதுகாப்பு, சாலைப்போக்குவரத்து, முன்னேறிய வேலை நிலைமைகள் போன்றவைகூட சேவைச் சரக்குகளாக, வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டன. பொதுநலன்களுக்காகத் தனிமனிதத் திறமையையும் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தையும் நெறிப்படுத்துவதுதான் ஜனநாயகம் என்பதுபோய், கார்ப்பரேட் முதலாளிகளின் தொழில், சந்தை வியாபார நலன்களுக்காக அரசாங்கக் கட்டுமானங்களையும், சமூகத்தையும் சட்டதிட்டங்களையும் நெறிப்படுத்துவதாக மாற்றப்படுகின்றன.

இந்த மாற்றங்களைக் கொண்டுவரும் கார்ப்பரேட் (கூட்டுப்பங்கு)நிறுவனங்களின் சதியில் சிந்தனைக் குழாம்களும் குடிமைச் சமூகங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. குறிப்பாக, நமது நாட்டில் நடந்து முடிந்த 14-வது நாடாளுமன்றத் தேர்தல்களிலும், அதன் பிறகும், மோடியின் அரசியல் சதிகள் மூலமாகவும், ஆம் ஆத்மிக் கட்சியின் அறிமுகம் மூலமாகவும் முன்னுக்கு வந்திருக்கும் சிந்தனைக் குழாம்களையும் குடிமைச் சமூகங்களையும் பற்றிப் பேசாமலிருப்பது புரட்சிகர அரசியலுக்கேகூட குறையாகவே இருக்கும்.

(தொடரும்)

ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் ! – 1
ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் ! – 2
______________________________

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________

பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான்

163

பாராளுமன்ற தேர்தலை ஒட்டி  நடந்த நாம் தமிழர் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய சீமான், தேர்தலுக்கு பிறகு புலிபாய்ச்சல் என்ற வேலைத் திட்டத்தை வைத்து சீறிப்பாயப் போவதாக அறிவித்திருந்தார். புலிக்குட்டி எதுவும் சீறிப்பாய்வது போல தெரியவில்லை. ஆனால், சீமானை பற்றி பல பூனைக்குட்டிகள் தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

புலிப்பார்வை என்ற திரைப்பட வெளியீட்டு விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பச்சமுத்துவுடன் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசிய சீமான், ‘பெருமகனார் – பெருந்தமிழர்’ பச்சமுத்துவின் வள்ளல் தன்மையை விதந்தோதி புகழ்ந்துள்ளார். பச்சமுத்து ஏழை மாணவர்களை படிக்க வைக்கிறாராம்.

உலகமே காறி துப்பும் ஒரு கல்விக் கொள்ளையனான பச்சமுத்துவை பற்றி எஸ்.ஆர்.எம் மாணவர்களிடமோ இல்லை பணம் கட்டிய பெற்றோர்களிடமோ கேட்டால் வண்டிவண்டியாக சொல்வார்கள். ஆனால் கூச்சமே இல்லாமல் ஒரு கல்விக் கொள்ளையனை போற்றி புகழ்கிறார் சீமான்.

ஒரு வேளை பச்சமுத்து புலி ஆதரவளாரக இருப்பாரோ என்று நீங்கள் எண்ணினால் இந்த வீடியோவை பார்ப்பது அவசியம்.

புலிகளையும் பிரபாகரனையும் வண்டி வண்டியாக கழுவி கழுவி ஊற்றுகிறார் பச்சமுத்து. ‘என் அண்ணன் பிரபாகரன்’ என்றும் ‘இடப்புறத்தில் விழுந்த உணவைக் கூட சாப்பிடாத மானப் புலி பரம்பரை நாங்கள்’ என்றும் பேசித்திரியும சீமான் இதைக் கேட்டபிறகு என்ன செய்திருக்கவேண்டும். நரம்புகள் புடைக்க, ரத்தம் சூடேறி வாங்கடா தம்பிகளா என்று கூறி புதிய தலைமுறையையும், எஸ்.ஆர்.எமையும் முற்றுகையிட்டு மன்னிப்பு கேள் என்று போராடியிருக்க வேண்டும்.

சீமான், பொன்னார், பச்சமுத்து
புலிப்பார்வை என்ற திரைப்பட வெளியீட்டு விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பச்சமுத்துவுடன் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசிய சீமான், ‘பெருமகனார் – பெருந்தமிழர்’ பச்சமுத்துவின் வள்ளல் தன்மையை விதந்தோதி புகழ்ந்துள்ளார்.

சீமான் கேட்காமல் இருந்திருக்க மாட்டார். “ஏன்யா, என் தலைவனைப் பழித்துப் பேசினாயாமே” என்று கோபப்பட்டு சீறியிருப்பார். பிறகு, பாரிவேந்தர் பேசிய பஞ்சாயத்து டீல் சீமானுக்குப் பிடிச்சுப் போயிருக்க கூடும். யார் கண்டது?

ஏன் பாரிவேந்தரை எதிர்க்கவில்லை என்று நாம் கேட்டால், “நான் ஈழம் சென்றபோது…” என்று ஆரம்பித்து,  “அங்கு மறைவிடத்தில் அண்ணன் எனக்கு பயிற்சியளித்தபோது…” என்று நீட்டி “தம்பி நன்றாக கேட்டுக்கொள், பச்சமுத்து நம்ம அண்ணன் அவரை கண்ணீர் வராமல் நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்.” என்று தலைவர் சொன்னார் என்று எதையாவது அடித்து விடுவார்.

பிரபாகரனை பற்றி அவர் கூறி வரும் கதைகளை நம்பும் ஆக்சன் திரைப்பட ரசிகர்கள் கூட்டம் இருக்கும் வரை இதுபோன்ற கதைகளுக்கு பஞ்சமிருக்காது. பிராபகரனை தான் சந்தித்த போது நடந்தாக கூறும் கதைகளை தம்பிமார்கள்
யாராவது தொகுத்து புத்தகமாக போட்டால் காந்தி தொகுதிகளைவிட அதிகமான தொகுப்புகளை பெறமுடியும் என்பது மட்டும் நிச்சயம்.

“வணக்கத்திற்குரிய ஐயா பெருந்தமிழர் பாரிவேந்தர்” என்ற அடைமொழியுடன் கூழைக் கும்பிடு போட்டு மண்டியிடுகிறார் இந்த மண்டியிடாத மானத்துக்கு சொந்தக்காரர். சுற்றுலா வந்த புத்த பிக்குகளை தாக்கிய ‘வீரம்’ பச்சமுத்துவின் முன்னால் இருக்கும் இடம் தெரியாமல் ஒளிந்துகொண்டது ஏன் என்று எந்த தம்பியும் சீமானிடம் கேள்வி எழுப்பவில்லை.

பாரிவேந்தர்  கல்வியை விற்பனை சரக்காக்கும் ஒரு கல்வி கொள்ளையன். தமிழ் மாணவர்களை சுரண்டுபவர். நரவேட்டை மோடியை ஆதரித்தவர். இத்தனைக்கும் மேலாக சீமான் தன் தலைவராக கூறும் “பிரபாகரன் தான் ஈழ இன அழிப்புக்கு முக்கிய காரணம். பிரபாகரன்தான் ஈழத்தை பற்றி பேசுகிறார். மக்கள் பேசவில்லை. மக்களை மனித கேடயமாக பயன்படுத்தினார்” என்று பேசியிருப்பவர். ‘இத்தகையவரின் கூட்டத்திற்கு செல்கிறோமே, நாலு பேரு காறி துப்புவானே’ என்ற அச்சம் கூட இல்லாமல் போகிறார் என்றால், வலுவான காரணம் எதுவும் இல்லாமல் அண்ணன் இதைச் செய்வதற்கு வாய்ப்பே இல்லை.

“இலங்கையுடன்யாரும் அன்னந்தண்ணி புழங்கக்கூடாது” என்று மற்றவர்களுக்கு செய்த நாட்டாமையை, இவர்கள் யாரும் பெருந்தமிழர் பெருமகனாருக்கு செய்யவில்லை. தமிழகத்திலிருந்து சினிமா துணை நடிகர்கள் யாரும் இலங்கைக்கு செல்கிறார்களா என்று விமான நிலையங்களில் ஸ்லீப்பர் செல் போட்டு இவர்கள் கண்காணித்துக் கொண்டிருந்த காலத்தில் “எஸ்.ஆர்.எம் லங்கா” என்று இலங்கை அரசுடன் இணைந்து பல்கலைக்கழகம் அமைத்துக் கொண்டிருந்தார் பச்சமுத்து.

வழக்கமாக ஓலைப்பாயில் நாய் மூத்திரம் போனதை போல சத்தம் நிக்காமல் பேசும் திறமை வாய்ந்த வீரர்கள் யாரும் அப்போது ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

வைகோ, சீமான், நெடுமாறன்சீமானை மட்டும் நாம் குறை சொல்லமுடியாது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆரம்பித்து இன்று வரை பச்சமுத்துவுடன் கூட்டணியில் இருக்கிறார் தன்மான சிங்கம் வை.கோ. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிரேக்கத்தில் நடந்தது எல்லாம் நினைவில் வைத்திருக்கும் வை.கோவுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபாகரன் மீது பாரிவேந்தர் காறிதுப்பியது மறந்து விட்டது.

சீமான் அப்படிப்பட்ட ஞாபக மறதிக்காரர் அல்ல. “பெருமதிப்புக்குரிய ஐயா பாரிவேந்தர் அவர்கள் நம்முடைய நட்பு சக்தி, அன்னார் அவர்களை எதிர்த்து களமாட போவதில்லை” என்று கட்சி செயற்குழுவில் அறிவித்தார். சீமானைப்போல அதிகமான நட்புசக்திகளை கொண்டவர்களை இந்த பூலோகத்தில் எவரும் பார்க்க முடியாது.

காடுவெட்டி குரு இவருக்கு நட்புசக்தி, பா.ம.க தூண்டி விட்ட சாதி வெறியால் கொல்லப்பட்ட இளவரசனின் நத்தம் காலனி மக்களும் நட்புசக்தி, பெருமகனார் பால்தாக்கரே நட்புசக்தி, யாசின்மாலிக்கும் நட்புசக்தி, குஜராத்தின் கடனை அடைத்து மிச்ச பணத்தை உலக வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் மோடி நட்புசக்தி, இலை மலர்ந்தால் ஈழத்தை மலரவைக்கும் அம்மாவும் நட்புசக்தி, இடிந்தகரை மக்களும் நண்பர்கள், வைகுண்டராஜனும் நண்பன், கத்தி லைக்காவும் நண்பன், ‘நண்பனுக்கு நண்பன் எனக்கும் நண்பனே’ என்ற சசிகுமார் தத்துவப்படி ராஜப்க்சேவும் நண்பன்.

அப்போ யாருதான்யா எதிரி என்று கேட்கிறீர்களா?

தம்பிமார்கள் முகநூல் வாயிலாகவே யூரின் டெஸ்ட் செய்து யார் யார் மலையாளி, தெலுங்கன் என்று கண்டுபிடித்து முத்திரை குத்தி  வைத்திருக்கிறார்கள். ஆகவே, நமக்கு எதிரிகளே இல்லையே என்று தமிழினம் கவலை கொள்ளத் தேவையில்லை.

இதுநாள் வரை பச்சமுத்துக்கு தமிழினவாதிகள் ஆதரவளித்து வந்தது புதிய தலைமுறையில் முகம் காட்டத்தான் என்று பாமரத்தனமாக எண்ணியிருந்தோம். ஆனால், மேற்கண்ட நிகழ்ச்சியில் பேசிய சீமான் தனக்கும் பச்சமுத்துவுக்குமான டீல் என்ன என்பதை இலைமறைகாயாக வெளியிட்டார். அதாகப்பட்டது எம்பெருமான் பச்சமுத்து தன் கல்லூரி நிகழ்ச்சிக்கு சீமானை அழைத்திருக்கிறார். இருவரும் அருகருகே அமர்ந்து அளவளாவிக் கொண்டிக்கும் போது, யாருக்கும் கேட்காமல் சீமானின் காதருகே வந்திருக்கிறார் பச்சமுத்து.

வந்து, “நீங்கள் (ஏழை) மாணவர்களை அனுப்பி வையுங்கள் நான் படிக்க வைக்கிறேன்” என்றாராம். அன்றிலிருந்து இவரும் அனுப்பி வைக்க வைக்க அவரும் படிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். எத்தனை சீட், என்ன என்று எந்த விவரமும் கூறவில்லை. பெருந்தமிழர் என்பதால் பெரிய எண்ணிக்கையில்தான் இருக்கும் என்று ஊகிக்கலாம்.

இதே போலத்தான் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் இல்ல திருமண விழாவிற்கு சென்று  சிறப்பித்து வந்தார். ராஜபக்சேவின் நண்பர்களான லைக்கா குழுமம் தயாரித்திருக்கும் கத்தி படத்தையும் ஆதரிக்கிறார். இது குறித்து கேள்வி எழுப்பியவர்களிடம் “எதிர்க்க முடியாது, என்னான்ற? படத்தை தடுத்துப்பார் என்று நான் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன செய்துவிடமுடியும் உங்களால்?“ என்று கத்தி பட முதலாளிகளின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் போல சீறுகிறார் சீமான்.

seeman-puli

அடுத்து இவர் முன்வைக்கும் வாதம் தான் நகைச்சுவையின் உச்சம். இந்தக் காட்சியில்தான்  உண்மையிலேயே ஹீரோ என்ட்ரி ஆகிறார். “நானும் விஜயும் சண்டை போட வேண்டும். இது தான் இவர்களின் நோக்கம். ஈழ ஆதரவாளர்களை விட விஜய் ரசிகர்கள் அதிகம். படத்தை நிறுத்தணும் என்று சொன்னால் அவன் ரசிகர்கள் எதிரிகளாகி விடுவார்கள். தேவையற்ற சிக்கல் ஏற்படும்” என்கிறார். இந்த டீலுக்கான பின்புலம் மற்றுமொரு தருணத்தில் வெளியாகலாம்.

அடுத்ததாக அவர் கூறுவது  “கருத்தைத்தான் பார்க்கணும், யார் எடுத்தார்கள் என்று பார்க்கக்கூடாது”  இதுதான் முக்கியமான லா பாயின்ட். பணப்பற்றாளரும், சாதிப் பற்றாளரும், ஆர்.எஸ்.எஸ் பற்றாளரும், சமஸ்கிருதப் பற்றாளரும், தமிழ்ப்பற்றாளருமான பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு விருதளித்து கொண்டாடியவர் நெடுமாறன். அப்புறம் விளார் நடராசன் (சசிகலா) சேர்த்து வைத்திருந்த தமிழ் மக்களின் பணத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டியவர். இதையெல்லாம் ஏனென்று கேட்காத தமிழ் கூறும் நல்லுலகம் தன்னை மட்டும் வறுப்பது ஏன் என்பது சீமானின் ஆதங்கம்.

சீமானை முகநூல் மூத்திரச்சந்துகளில் பலரும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சந்தடி சாக்கில், வை.கோவின் தம்பிகளும்  முக்காடு போட்டுக் கொண்டு சேர்ந்து அடிக்கிறார்கள். இந்த அநீதியை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?

கத்தி விவகாரத்தில் அண்ணன் நெடுமாறனைக் கலந்தாலோசித்து விட்டுத்தான் முடிவெடுத்ததாக பண்பலை வானொலிப் பேட்டியில் ஒரு “பிட்”டைப் போட்டிருக்கிறார் சீமான். அன்று இதே போன்ற ஒரு சூழ்நிலையில் சிவகாசி ஜெயலட்சுமி பொங்கி எழுந்ததன் விளைவாகத்தானே “ஏட்டு முதல் எஸ்.பி வரை” என்ற இலக்கியம் வெளியானது!

ஆகவே, இது தனக்கு மட்டுமே நேர்ந்த அவலம் என்று சீமான் வருந்தத் தேவையில்லை. ‘பெருந்தமிழர்’ தமிழுக்காக விருது வழங்கும் விழாவில் வைகோ கலந்து கொள்ளப் போகிறார். பல அறிஞர்களுக்கு விருது கொடுக்கப்போகிறார் பாரி வேந்தர். நாளைக்கு இதெல்லாம் வரலாற்று பாடத்துல வரும். மாணவர்கள் எல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க.

பாரிவேந்தர் ஈந்த கார்களின் மீது படரும் முல்லைக்கொடிகளின் எண்ணிக்கை போகப்போக, கூடும். அப்புறம் “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று ஆகிவிடும்.

அறத்துக்கு அத்தாரிட்டியான ஜெயமோகனே வேந்தர் ஈந்த காரின் மீது படர்ந்திருக்கும் போது, சீமானை மட்டும் தாக்குகிறார்களே!

கவுண்டமணி சொன்னதுபோல, சத்திய சோதனை தான்!

– ரவி

‘தி இந்துவுக்கு’ கண்டனம், கருவாடுக்கு வந்தனம் – சீறும் பேஸ்புக்

28

கோயம்பேடு சந்தையில், கடைகளில் கருவாடு விற்பதை நிறுத்திய மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு ‘தி இந்து’வை கண்டித்து சமூகவலைத்தளங்களில் நண்பர்கள் எழுதிய கருத்துக்களின் தொகுப்பு.

அதிஷா

கருவாட்டு நாற்றம்

karuvadu-9கோயம்பேடு காய்கனி சந்தையில் விதவிதமான கருவாடுகள் மிக அதிக அளவில் விற்கப்படுவதாகவும் இதனால் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மிகவும் அஷௌகர்யம் உண்டாவதாகவும் சில நாட்களுக்கு முன்பு ஒரு தின பத்திரிகை குமட்டிக்கொண்டே செய்தி வெளியிட்டது.

1996-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஷட்டப்படி காய்கறிச் சந்தையில் காய்கறி மட்டும்தான் விற்கப்படவேண்டும் என்பதை மீறி இப்படி ஷைவ உணவு ஷாப்பிடுபவர்களுக்கு ஷங்கடம் வரும்படி கருவாடு விற்பது முறையா என்று அந்த செய்தி நீண்டிருந்தது. இதையடுத்து நேற்று மாநகராட்சியினர் கோயம்பேடு மார்க்கெட்டில் புகுந்து பல லட்சரூபாய்.. மன்னிக்கவும் ரூபாய் இருபதாயிரம் மதிப்புள்ள பல ஆயிரம் டன் கருவாடுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து ஷைவ உணவு ஷாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளாக நானும் என்னுடைய குடும்பத்தினரும் கருவாட்டினை விரும்பி உண்டு வருகிறோம். எனக்கெல்லாம் கருவாடு என்பது என்னோடே வளர்ந்த ஒரு தம்பி மாதிரி. தினமும் என்னோடு இருந்திருக்கிறான். ஒரு சட்டி பழைய சோற்றை கூட ஒரு துண்டு கருவாடிருந்தால் உற்சாகமாக சாப்பிட்டுவிட முடியும். காலை ப்ரேக்ஃபாஸ்ட் அப்படித்தான் நமக்கெல்லாம் இருந்திருக்கிறது. கறிசோறு தராத ருசியை கருவாட்டுக் குழம்பு தந்துவிடும்.

karuvadu-1கோவையில் உக்கடம் பகுதியில் கருவாடுக்கென்றே பிரத்யேகமான சந்தை உண்டு. அங்கு போனால் உலகின் எவ்வகை கருவாடும் சல்லிசு ரேட்டில் கிடைக்கும். அம்மாவுக்கு நங்கு கருவாடு, எனக்கு நெத்திலி, தங்கைக்கு துண்டு கருவாடு , வவ்வா, கொடுவா அவா இவா என கருவாடுகளில் நிறைய வெரைட்டி உண்டு.

சென்னைக்கு புலம்பெயர்ந்துவிட்ட பின் இந்த கருவாடு சந்தையை ரொம்பவே இழந்திருந்தோம். அண்ணாச்சி கடையில் கூட பாக்கெட் கருவாடு கிடைக்கும். தக்னியூண்டு துண்டு, வெரி சுமால் கருவாடு இரண்டு பீஸ் ஐந்து ரூபாய் என்று  விற்றார்கள். அதை வாங்கி குழம்பு வைக்கவும் முடியாது. சுட்டு திங்கவும் முடியாது. நல்ல ஃப்ரஷ்ஷான நெத்திலி கருவாடு கிடைக்காது. நங்கு கருவாடு கிடைக்காது. அம்மாவுக்கு தினமும் சாப்பாட்டோடு ஒரு சின்ன துண்டு கருவாடு இல்லையென்றால் ஒருவாய் கூட உருப்படியாக இறங்காது. அம்மாவின் வருத்தம் அதிகமான ஒருநாளில் பக்கத்துவிட்டு ஆன்ட்டி ஒருவரது தகவலின்பேரில் கி.பி.2007 தொடங்கி கோயம்பேடு சந்தையில் கருவாடு வாங்கத் தொடங்கினோம்.

கோயம்பேடு காய்கனி சந்தையில் இருக்கிற நூற்றுக்கணக்கான கடைகளில் வெறும் பத்து பதினைஞ்சு கடைகளில்தான் கருவாடு விற்கப்படும். மிக குறைந்த அளவிலேயே விற்கப்படும். அதுவும் மளிகை கடைகாரர்களுக்கு விற்க பாக்கெட்டில் அடைத்துவைத்த கருவாடுகளே கிடைக்கும். ஊரில் விற்பதுபோல நன்றாக குவித்து வைத்து பரப்பியெல்லாம் மணக்க மணக்க விற்கமாட்டார்கள். கருவாடுக்கென்று இருக்கிற கொஞ்சநஞ்ச மரியாதையையும் உறிஞ்சிவிட்டுத்தான் இங்கே விற்கிறார்கள். கருவாட்டின் மணம் பார்க்காமல் எப்படி வாங்குவது. இருந்தாலும் கோயம்பேடுதான் கடைசி வாய்ப்பு என்பதால் அங்குதான் மொத்தமாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது நம்முடைய வழக்கம்.

karuvadu-4இந்த கருவாட்டுக் கடைகளில் வாசனை சுத்தமாக இருக்காது. இதனால் யாருக்கும் எந்த பிரச்சனையுமே இருந்து நான் கண்டதில்லை. அதே பகுதியில் அழுகின காய்கனிகளின் நாற்றம்தான் குடலை கிழித்துக்கொண்டு குமட்டும்! அந்த உச்சபட்ச துர்நாற்றத்தை பொருத்துக் கொள்கிற ஒருவரால் உலகின் எந்த நாற்றத்தையும் புன்னகையோடு ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் என்னமோ இந்த நாலுபாக்கெட் கருவாட்டினால்தான் நாட்டுக்கு தீங்கு விளைந்துவிட்டது போல… அதைதான் இப்போது துப்பறிந்து கண்டறிந்து செய்தி வெளியிட்டு ஷூத்தப்படுத்தியிருக்கிறார்கள். கருவாட்டை விற்று விதிமுறைகளை மீறிவிட்டார்களாம்?

என்னிடம் இப்போது தொக்கி நிற்கிற முதற்கேள்வி ‘இனி நானும் என் தாயும் கருவாட்டுக்கு என்ன செய்வோம்? எங்க போவோம்…?’ என்பதுதான். நாளை முதல் மீண்டும் அந்த அண்ணாச்சி கருவாடு விற்றால் (அவரும் கோயம்பேட்டில் கொள்முதல் பண்றவர்தான்) ஒரு துண்டோ இரண்டு துண்டோ வாங்கி நக்கிக்கொள்ள வேண்டியதுதான்.

ஒருவேளை இனி ஷூத்த பத்தமாக கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கி சாப்பிடப்போகிற ஷைவ பட்சிணிகள் ஒன்று சேர்ந்து முகப்பேர் பக்கம் என்னை போன்ற ஏழை கருவாட்டு ப்ரியர்களுக்காக ப்ரத்யேக சந்தை கட்டிக்கொடுப்பார்களா என்பதை தெரிந்துகொள்ளவும் ஆர்வமாக இருக்கிறது.

கருத்துக்கள்:

விநாயக முருகன் எனக்கு ஒரு சந்தேகம்.. அவங்க வளர்க்குற நாய்க்குக் கூட தயிர்சாதம்தான் ஊட்டி விடுவாங்களா?

அதிஷா அதிஷா – விநாயக முருகன் நிஜமாகவே தயிர்சாதம் மட்டுமே சாப்பிட்டு வளர்ந்த நாய்களை நான் அச்சத்தோடு சந்தித்திருக்கிறேன்.

karuvadu-7கவிதா சொர்ணவல்லி  ஏது விட்டா….இனி நம்ம கழுத்துல எல்லாம் “கறி கருவாடு சாப்பிட மாட்டேன்”னு எழுதி டேக் கட்டிக்கிட்டு தான் அலையணும் போல !

Nagarajan Nathamuni சமஸ் மீனவர் படும்பாடு பத்தி உருக்கமா எழுதி ஒரு வாரம் முடியல அதுக்குள்ளே….. ஆப்பு

Sunil Kumar எல்லாம் அவாளோட சிறுவாட்டுத்தனம் தான் வோய் ..

Puthiya Parithi ஏன்டா அங்க கருவாடு விக்க விடமாட்டுறிங்கன்னு கேக்காம,, அங்க கிடைக்கும் இங்க கிடைக்கும் என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளும் வரை லட்ச அதிஷாக்கள் அம்மாவுடன் இந்த பெருநகரத்தில் கருவாடு தேடி அலையவேண்டியதுதான்..

கவிதா சொர்ணவல்லி Puthiya Parithi & கோயம்பேடு என்ன அவா வசிக்கிற இடமா என்ன ???? இவா தொல்லை எல்லாம் இடங்களுக்கும் தொடருதே. கருவாடு நாறும். குளிக்க தண்ணி இல்லாதவங்க நாருவாங்க. SLUM நாறும். எல்லாத்துக்கும் மாற்று இடம் பாத்து, திருவண்ணாமலை பக்கம் கொண்டு விட்டுருவாங்க. சென்னைனு சொல்லி. இதுக்குதான் அதிகாரத்தை கை நம்ம கைல வச்சுக்கணும். படிக்கணும்னு. பெரியவங்க எல்லாம் சொல்லிருக்காங்க.

karuvadu-2Puthiya Parithi இந்த உலகமே அவாவுக்காக படைக்கப்பட்டது அவாவுக்கு வேலை செய்ய படைக்கப்பட்ட அற்ப மானிடப் பதர்கள்தானே நாமெல்லாம்…

கவிதா சொர்ணவல்லி நம்மள மாதிரி தெருவுல இறங்கி கூச்சல் போடுரவளா அவா எல்லாம். உக்காருற இடத்துல இருந்தே அதிகாரத்தை அசைக்கிறவா தான ???? விடுங்க பாஸ். எல்லாரும் வெஜ் ஆகி, அவா வீட்டுக்கு சாப்பிட போயிடலாம் ! உக்கார வச்சு அவாளோட FAMOUS அக்கார வடிசல் சமைச்சு போடுராளா பாக்கலாம் !

Jeyamahesan Chandrakanthan அரிசி பருப்பு எண்ணெய் போன்ற பொருட்களும் விற்க கூடாது என செய்தியில் உள்ளதே.

அதிஷா அதிஷா Jeyamahesan Chandrakanthan இருக்கு ஆனா பறிமுதல் செஞ்சது வெறும் கருவாடுதான்றதுதான் காமெடியே

karuvadu-8வினோத் குமார் சேகர் மேற்கு வங்கத்துல மீன் எல்லாம் சைவத்துல தான் வருது… அவா எல்லாம் மீன் சாப்டுவா….குஜராத்ல முட்டை கூட கிடைக்காது….என்ன பண்றது…இங்க நம்ம விரும்பினத கூட நம்மால சாப்ட முடியல…ஹோட்டல் போனா அடுத்தவன் தட்ட பாத்து ஆர்டர் பண்ற ஆளுங்க தான் அதிகம்….ஆதம்பாக்கதுல வீடு சும்மா இருந்தாலும் இருக்கும்.. மத்தவாளுக்கு வாடகைக்கு தர மாட்டேன்றா…இப்டி போனா திருவண்ணாமலை இல்ல….இமய மலைக்கே கூட அனுபிடுவாங்க….

Mahendhiran Kilumathur இந்த கருவாட்டு சிக்கல் இவாள்களால் மட்டும் இல்லை, வீகன், கீகன் என்று தங்களை தாங்களே அழைத்துக்கொண்டு, நாங்க பால் கூட குடிக்க மாட்டோம் எனச் சொல்லும் நவீன அவாள்களும் கூட இப்படி ஒரு சில ஹோட்டல்களில் ரசம், குழம்பு என்று கலந்து கட்டி அடிக்கும் போது பக்கத்தில் யாராவது அப்பாவி ஒரு சிக்கன் தந்தூரியை சுவைத்துக் கொண்டிருந்தால் அழுகிய முட்டையை முகர்ந்தது போல் முகத்தை வைத்துக் கொண்டு கூட வந்திருக்கும் பாகன்களோடும் மோகன்களோடும் கண்ணைக் கண்ணை காட்டிக் கொண்டு பேசும் பக்கிகள் வாயில் அப்படியே ஒரு முழு துண்டு கோழியை தினிக்கும் ஆத்திரம் வரும். கோழியின் விலை கருதி அதைச் செய்வதில்லை. கருவாடென்றால் கேட்கவா வேண்டும். இவர்கள் ஏன் அவாள்களுக்கென்று ஒரு தனிச் சந்தையை உண்டாக்கிக் கொள்ளக் கூடாது?, அவாள்களே விவசாயம் செய்து அவாள்களே விற்று வாங்கி உண்டு கிடக்கலாமே? # மை ஃபூட்

masi-sambalகவிதா சொர்ணவல்லி ஷைவம் ஷாபிடும் மக்கள் எல்லாம், ஏன் கறி சாப்பிடும் மக்கள் உண்டாக்கும் காய்கறிகளை புறக்கணித்து, தங்களுக்கென்று ஒரு சொந்த மார்கெட்டை உண்டாக்கி காய் கனி வாசனைகளில் மிதக்கக் கூடாது?

கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ் செய்தி என்னவோ கருவாடு என்பதை விட காலகாலமாக நாம் உண்ணும் ஒரு பொருள் அதை பெரும்பான்மையான நுகர்வோர் வந்து பெற்றுச் செல்லும் சந்தையில் விற்க மறுக்கப்பட்டதே… இந்த நிலைத்தகவல் சகோதரர் அதிஷா அவர்களின் பிற நிலைத்தகவல் போல மேம்போக்காக நக்கலுக்கான கமெண்டுகளை பெரும் தகவல் அல்ல. அவர் உணர்ச்சிக்கொந்தளிப்பில் இங்கு பதிந்துள்ளார் அதை உள்வாங்கி பின்னூட்டம் வந்த மாதிரி தெரியவில்லை. அவரது எண்ணத்தை எழுத்தாகியுள்ளார். அவரைக் காட்டிலும் அப்பொருள் அதிகம் தேவைப்படுவோரால் இவ்வளவு சரியான வீரியமான நிலைத்தகவலை வெளியிட இயலாது. மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு சந்தை தனது மக்களுக்கு ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளை தர மறுக்கிறது என்பது மிக கேவலமான ஒரு சுதந்திர நாட்டின் மட்ட ரக மறைமுக தாக்குதல் அரசியல். இது துவக்கமாயின் இதுபோல அராஜக அத்துமீறல் வட மாநிலங்களுக்கு வேண்டுமாயின் சரிவரலாம். இங்கே மிகவும் கடுமையான விளைவை இந்த தடுப்புக்கு காரணமான அரசியல் கட்சிகள் சந்திக்கும். தமிழகம் அதன் இயல்பு நிலையில் தான் இனியும் இருக்கும். மாற்றம் கொண்டுவர எண்ணுபவர்கள் எப்பவுமே மாயமாகி விடுகின்றனர்.

karuvadu-3வினோத் குமார் சேகர் அறந்தாங்கி பகுதியில் கல்யாணத்துல கறி சோறு போடதும் ஆடி மாசம் அம்மனுக்கு கூழோட கருவாடு படைக்கறதும் என்னவாம். சேகர் மக்களின் தேவைக்கேற்ப அடகுகடையில் ரீசார்ஜ், பெட்ரோல் பங்கில் சூப்பர் மார்க்கெட், மெடிக்கல் ஷாப்ல பேஸ்ட் பிரஷ் சோப் போன்ற புரவிஷன் கிடைக்கதான செய்யுது

Mahendhiran Kilumathur கடற்கரை எப்போதும் மீனவனுக்குத்தான் சொந்தமாய் இருந்தது நம்மைப் போல பொது மக்கள் போய்தான் தாங்கொனாக் குப்பைகளையும், பிளாஸ்டிக்குகளையும் வேடிக்கை பார்க்கிறோம் பேர்வழி என்று கருவாடு காயவைக்கக் கூட மீனவனுக்கு லாயக்கில்லாத இடமாய் மாற்றி வைத்திருக்கிறோம், முதலில் மீனவர்களால் கடற்கரை காப்பாற்றப் பட்டு வந்தது. இன்று ரிசார்ட்டுகளாலும், கடல் பார்க்கும் வசதிகளோடும் வீடுகளையும் கட்டிடங்களை எழுப்பி கடற்கரையினை மாசு படுத்திக் கொண்டிருப்பது நாம் தான். கடற்கரை என்பதை மீனவனுக்குச் சொந்தம் இல்லை எனபது போல ஆக்கி இன்று வாழ்வாதாரம் இல்லாத ஒரு சமூகத்தை உண்டாக்கி வைத்திருப்பதும் நாம்தான். நீங்கள் சொல்வது போல கபாலீஸ்வரர்களுக்கும் பெருமாள் கோவில்களுக்கும் வேண்டுமானால் கருவாடு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களைப் போல கருவாட்டின் வாசனை பிடிக்கும் சாமிகளுக்கெல்லாம் கருவாடு படைத்துக் கொண்டும் சமைத்துக் கொண்டும்தான் இருக்கிறோம். யாரையும் யாரும் வற்புறுத்தி வாங்கவோ, சமைத்து சாப்பிடவோ சொல்லவில்லை. ஆனால் இப்போது கருவாட்டுக்கு கண்டனம் தெரிவிக்காவிட்டால் நாளையே முனியாண்டி விலாசில் மாட்டுக் கறியும், ஆட்டுக் கறியும் கிடைக்காமல் போகலாம், சைவ உணவுக் காரனை அசைவம் சாப்பிட்டே ஆகவேண்டும் என்பதற்கும், அசைவம் சாப்பிடும் ஒருவனை அசைவம் சாப்பிடாதே என்பத்ற்கும் ஒரு வித்யாசமும் இல்லை. கடற்கரை மாசுபாடுகள் எல்லாம் பற்றிப் பேசும் நீங்கள் கடற்கரையை சுத்தம் செய்தால் மீனவன் எங்கே போவான் என்பது பற்றியோ மீனவத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு சமூகம் என்ன ஆகும் என்பது பற்றியோ கருவாடு விற்கும் வாங்கும் சமூகம் என்ன ஆகும் என்பது பற்றியோ கவலை கொள்ளாதது வருத்தமளிக்கிறது

karuvadu-6எம்.ஏ. காதர் கருவாட்டோடு உங்களுக்கு உள்ள உறவு ! அப்பப்பா அருமை. நீங்க கருவாட்டு “மனம்” என்றே தலைப்பிட்டு இருக்கலாம். நாமதான் 6 மாதம் வீட்டு தேவைக்கான கருவாட்டை மாலத்தீவில் இருந்து கொண்டு போய்விடுகிறோமே! என்று சும்மா இருக்க முடியலே. கோயம்பேடு சந்தையில் தொடங்கிய கருவாட்டு கடைகளின் அடைப்பு தமிழகம் முழுவதும் தொடர வாய்ப்புள்ளது. அப்படி தொடர்ந்தால்,எங்க ஊர் ‘செங்கோட்டை” சந்தையில் உள்ள இரண்டு கடைகளையும் அடைத்தால், என் சொந்தங்கள் இதை வைத்து நீ தரும் கருவாடு இனி பத்தாது அதிகம் கொண்டு வா என்று மிரட்டுவார்களோ என்று பயமாக இருக்கிறது. எனவே இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

Ilangovan Balakrishnan அசைவக்காரர்கள் சைவக்காரர்களை கீழ்த்தரமாய் நடத்துவதோ, ஏளனப்படுத்துவதோ, ஒதுக்கி வைப்பதோ, விரட்டி விடுவதோ இல்லை. ஆனால் சைவக்காரர்கள் அசைவக்காரர்களை அப்படி செய்யும் குரூர புத்தியுடன் இருக்கிறார்கள். விலங்கு, தாவரம் இரண்டுக்கும் உயிரும் உண்டு, உணர்ச்சியும் உண்டு. விலங்குகளைக் கொல்வது மட்டும் உயிர்க்கொலை என்றும், தாவரத்தைக் கொல்வது உயிர்க்கொலை ஆகாது என்ற வாதம் மூன்று நூற்றாண்டுக்கு முந்தைய முட்டாள்த்தனம்.

karuvadu-5அசைவ உணவு சாப்பிடும் ஐரோப்பிய- அமெரிக்கர்கள் அறிவுத்துறையில் வியத்தகு சாதனைகள் சாதிக்கிறார்கள். அசைவ உணவு சாப்பிடும் ஆப்பிரிக்க- சீன, ஜப்பானியர் உடல் உழைப்பிலும் உடல் உறுதியிலும் உலகளாவிய சாதனையை படைக்கின்றனர். அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியும், வாழ் நாளும் இந்திய சைவக்காரர்களை விட கூடுதலாக இருக்கின்றது.

ஆக, யாரேனும் அசைவம் வேண்டாம் என்றால் அது அவன்/அவள் தலை எழுத்து. அதற்காக அடுத்தவர்களை டார்ச்சர் பண்ணுவது குசும்பு.

ஹோமோசெபியன்ஸ் எனப்படும் மனித குலம் இயல்பாக மாமிச பட்சிணியே. இந்த மண்ணின் முதுகுடி யாவரும் இரண்டரை லட்சம் ஆண்டுகளாய் மாமிசம் சாப்பிட்டு வளர்ந்தவர்களே. இன்று சைவம் உபதேசிக்கும் பார்ப்பனர்கள் கூட, வேதகாலத்தில் அவிர்பாகமாய் மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்த குறிப்புகளும் வேதங்களில் இருக்கிறது. சமண- பௌத்த சமயத்தினரின் புகழைக் கண்டு பொறுக்காமல் வைதீக சமயத்தினர் அவர்களிடமிருந்து காப்பி அடித்துக் கொண்ட தப்பான காரியம்தான் இந்த சைவப்பழக்கம்.

அந்த முட்டாள்த்தனத்தை உயர்வான சங்கதியாகவும் இயல்பான உணவுப்பழக்கத்தைக் கொண்ட அசைவர்களை தாழ்வானவார்களாகவும் கருதுவதும் வக்கிரப்பார்வை. ருசி, மணம் என்பவை பயிற்சியின் விளைவாய் வருபவை.மேட்டிமைத்தனத்துடன், சகஜீவன்களை வெறுக்கும் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே கருவாடு ” வீச்சம்” என்ற கருத்துருவாக்கமும், வன்மப்பயிற்சியும்.

சக மனிதர்களை, ருசியை, மணத்தை வெறுப்பின் அடிப்படையில் அணுகப் பயிற்சி செய்து கொண்டிருப்பவர்கள் தனது கெட்ட புத்திக்காக தாம்தான் அந்த இடத்தை விட்டு ஓடிப் போகவேண்டுமே ஒழிய எந்தப் பாவமும் அறியாத அந்த எளியவர்களை விரட்டி விட அந்த வன்மக் காரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

பேஸ்புக்கில் நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் August 19

காய்கறி விக்குற கோயம்பேடு மார்கெட்டுல கருவாடு விக்க கூடாதாம்…. கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசனை…

கருத்துக்கள்

Anthony Fernando அவனுங்க அலுவலகத்தில் மாமிச உணவுகளை சாப்பிட அனுமதி கிடையாது என்று சொன்ன போதே நம்மாளுங்க உள்ளே புகுந்து பாடம் கற்ப்பித்து இருந்தால் இன்றைக்கு நாம நம்ம வீட்டில என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிட கூடாது என்று சண்டித்தனம் பண்ணுகிற அளவிற்கு அவனுங்க வந்திருக்க மாட்டார்கள் …
இனியாவது நம்மவர்கள் விழித்து கொண்டால் நல்லது

M Mohamed Rafiq என்ன மாதிரி ஆளுங்க இவனுங்க..கருவாடு வாசத்த முன்ன பின்ன அனுபவிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்…

பேஸ்புக்கில் பரிமள ராசன்

நாற்றம் புடிச்ச மாட்டோட ‘கக்கா’,மூத்திரம் இதையெல்லாம் கரைச்சு ‘பஞ்சகவ்யம்’னு குடிக்கிறியே?
அதவிட கருவாடு என்ன நாறுதாடா உங்களுக்கு?
கருவாடு மணக்கும்டா !
ஒரு தடவ கருவாட்ட தின்னுபாரு அப்புறம் கருவாட்ட உடமாட்ட !
நினைச்சாலே நாக்குல எச்ச ஊரும் அற்புதமான சுவைகொண்ட உணவு கருவாடு.
கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் கருவாடு விற்கக்கூடாது என எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் !
i support ‘KARUVADU’

கருத்து

Abu Aafreen I support karuvaadu, karuvaadu thingaadhavan kazudhaiyaadhaan iruppaan

பேஸ்புக்கில் திருமுருகன் காந்தி

கோயம்பேட்டில கருவாடு வித்தா உங்களுக்கு என்னடா?…

மீனவன இலங்கைக்காரன் கொன்னா, அதுக்கு “மீனவன் எல்லைதாண்டுறான்”னு கட்டுரை போட்டு நியாயப்படுத்துறான். ஏழைகளும்-உழைப்பாளிகளும் எளிய சத்துமிகுந்த உணவு வித்தா அதுக்கு கட்டம் கட்டி கட்டுரை போடுறான்.

தி இந்து அலுவலகத்துக்கு பக்கத்துல கையேந்தி பவன் நடத்துன தோழரோட கடைய அடிச்சு , பிரிச்சு உடைக்க வைச்சான். செய்து வைத்த மதிய உணவினை ரோட்டுல போட்டானுக இந்த பத்திரிக்கை அலுவலர்கள் .

தீண்டாமையை தொடர்ந்து தூக்கிப் பிடிக்கிற ‘தி இந்து’வுக்கு 2009 இனப்படுகொலை முடிந்த பொழுதே இழுத்து மூடவைத்திருக்க வேண்டும். ஒன்றரை லட்சம் தமிழர்களைகொலை செஞ்சதை நியாயப்படுத்துன பத்திரிக்கை தமிழர்களால் புறக்கணிக்கப்படாமல் இருப்பது அவமானகரமானது.

கோயம்பேட்டில் கருவாடு மட்டுமல்ல, ஆடு-கோழி-மாட்டுக்கறியும் , பன்றிக் கறியும் விற்பதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும். சிக்கன் கறி திருவிழா என்று ’தி இந்து’ இதழில் விளம்பரம் போட்டு காசு பார்ப்பதற்கு எந்த சனதானமும் இவனுகள தடுக்கவில்லை…உழைப்பாளிகள், ஏழைகளின் வணிகத்தில் கைவைப்பதே இவனுகளுக்கு தொழில். தி இந்துவை இழுத்து மூடுவோம்.

கருத்துக்கள்

Abdul Khader சென்னையில கஞ்சா விற்றால் கண்டுகொள்ள மாட்டான் ….கருவாடு விற்றால் தடையா ? அரசும் அரசு நிர்வாகமும் அதுக்கு சொம்பு தூக்கும் முற்போக்கு பாப்பானின் பத்திரிகையும் …..நல்லா இருக்கு ….

Vanna Serr ஹிந்து ராம் எதை எதையெல்லாம் சிங்கள அரசுக்கு வித்தும், கொடுத்தும் வயிறுகழுவும் பொழுது, அப்பாவிகள் வயிற்றுப்பிழைப்புக்கு கருவாடு விற்றால் என்னவாம்??!!

Fisher Folk மீன் வெட்டிபோட்டு (நாம காட்டுற மீன கண் முன்னாடியே வெட்டுவானுங்க), நண்டு, இறால், கருவாடு பாக்கெட் போட்டு விக்கிற H Mart-ல தான் (அமெரிக்காவில்) ஐயர் எல்லாரும் பழம், காய்கறி எல்லாம் வாங்கிறான். இத்தனைக்கும் H Mart ஒரே கடை. கோயம்பேடு மார்கெட்ல தனித் தனி கடை.

அப்புறம் ஏன் பார்ப்பானுக்கு இவ்வளவு நடிப்பு!. இந்திய ஐயர் வேற! அமெரிக்க ஐயர் வேறயா!. PS: H mart-famous south korean large one hall super market chain in US with variety of fruits, vegetables, and fish, crap etc. Vegetables, fruits மலிவாகவும், தரமாகவும் கிடைக்கும் என்பதால் அவ்வளவு பார்பனர்களையும் அங்கு பார்க்கலாம். ஹிந்து பத்திரிகைக்கு ஏழைகளின் வணிகத்தில் கைவைப்பதே தொழில்

Thambi Prabha கருவாடு விக்கிற பகுதியில இந்து பத்தரிக்கை விற்கலாம்! ஆனால் மார்கெட்டில் மட்டும் கருவாடு விற்க கூடாதா? இந்து பத்திரிக்கை கருவாடு மடிச்சு கொடுக்கத்தான் பயன்படுது!

Thiru Rajan கழுதைகளுக்கு தெரியுமா கருவாட்டு வாசனை…முழுக்க ப்ரஷர் வந்தவனுங்க…பார்ப்பான் கட்டம் கட்டி போட்டுட்டான்னா உடனே சட்டம் பாய்ஞ்சிடுது…ஏழைதமிழனுக்கு பிரச்சினைன்னா மட்டும் ஒடுக்குது..

Subash Chandra Bose தனக்கு ஒவ்வாதவற்றை தடை செய்வது பார்ப்பனிய சிந்தனை. அதைத்தான் பார்ப்பான் இந்து ராம் செய்துள்ளான். கடவுள் மறுப்பு என்பது விஞ்ஞானம். அதை மக்கள் தளத்திற்கு கொண்டு சென்றது பெரியார் அவ்வளவுதான்.

பேஸ்புக்கில் Pichaikaaran Sgl

எங்க ஏரியாவில் கருவாட்டுக்கடை பக்கத்தில் காய்கறி கடைகள் உள்ளன.. காய்கறி வாசம் எனக்கு பிடிக்கவில்லை.. அவற்றை அகற்ற மாண்புமிகு அம்மா அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன்.

பேஸ்புக்கில் Aazhi Aazhi Aazhi வினவு கட்டுரையை பகிர்ந்திருந்தார்

கருத்துக்கள்

Nambi Arulnambi அந்த ………………………மனது உள்ளே முழுவதும் துர்நாற்றம் வீசும். அதை முதலில் அவா கழுவட்டும். அவா க்கு என்ன தெரியும் அருமையான நெத்திலி கருவாடு வறுவல் சுவை பற்றி.  என் தமிழன் ரசம் வைத்து , நெத்திலி பொடி வறுவலுடன் பழைய அமுது உண்டு விட்டு ஒரு நாள் முழுவதும் நான் உற்சாகமாக வேலை பார்ப்பேன் …….அவாக்கு வேணும்னா காய்கறி, அரிசி, பருப்பு, மிளகாய், மல்லி எல்லாம் அவா அடுப்படில நட்டு வளர்த்து அதுலயே சமைச்சிக்க சொல்லுங்க ……………கடுப்புகள கிளப்பிட்டு. உள்ள விட்டதே தப்பு இதுல நம்ம மீதே வழக்கா ????

கருவாடு karuvadu_en

போலி மோதல் புகழ் மோடியை காந்தியாக்கும் ஊடகங்கள்

2

சோராபுதீன் ஷேக் முதல் இஷ்ரத் ஜகான் வரை பல அப்பாவிகளை போலி மோதலில் கொன்ற, 30-க்கும் மேற்பட்ட போலீசு அதிகாரிகள் குஜராத் சிறையில் இருக்கின்றனர். இத்தகைய கொலைகார போலீசு படைக்கு தலைமை தாங்கிய அன்றைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், முதல்வர் நரேந்திர மோடியும் முறையே பா.ஜ.க தலைவர், பிரதமர் ஆகியிருக்கின்றனர். இப்பேற்பட்டவர்களது “அரசு போலி மோதல் கொலைகள் மீது எந்த சகிப்புத் தன்மையும் காட்டாது” என்று அறிக்கை அளித்திருக்கிறதாம். நம்ப முடிகிறதா? நம்பித்தான் தீர வேண்டும். தி இந்து நாளிதழும், டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் “அப்பாவி மக்கள் கொல்லப்படுவதில் மத்திய அரசு சகிப்புத்தன்மை காட்டாது”, “Zero tolerance for fake encounters: Modi govt tells SC” என்று நான்கு காலம் தலைப்புச் செய்தியாக அறிவித்திருக்கின்றன.

போலி மோதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
போலி மோதல் கொலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (2011-ம் ஆண்டு)

மோடி எப்போது ஜனநாயக காவலர் ஆனார்? பாம்புகள் எப்போதிருந்து எலியை வெறுத்து விட்டன?

மணிப்பூரில் மத்திய ஆயுதப்படைகளாலும், மாநில காவல்துறையினாலும் நடத்தப்பட்ட போலி மோதல் கொலைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம், நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கமிஷனை நியமித்தது. அந்த கமிஷன் அளித்த ஆய்வறிக்கை மீது உச்சநீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதிலில் “மத்திய அரசு போலி மோதல்கள் தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அத்தகைய சட்ட விரோதமான கொலைக்குற்றவாளி யாராயிருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறியிருக்கிறது. இதன்படி பார்த்தால் மோடி ஆதரவு ஊடகங்கள் சொல்வது போல பாஜக அரசு ஜனநாயகக் காவலராக மாறியிருப்பதாக தோன்றும்.

“இனிமே நான் சத்தியமா லஞ்சம் வாங்க மாட்டேன்…” என்று ஒரு அரசு அதிகாரி சத்தியம் செய்வதான புல்லரிப்பு நமக்கு ஏற்படும். ஆனால், இது போல பல சத்திய பிரமாணங்களை கேட்டு பழகிய நமக்கு, “நான் என்ன சும்மா கொழுப்பெடுத்தா லஞ்சம் வாங்குறேன். மேலதிகாரிகளுக்கு கொடுத்தே ஆகணும்கிறதுக்காகத்தான் வாங்க வேண்டியியருக்கிறது. விக்கிற விலை வாசி, பசங்க படிப்பு செலவு, சொந்தமா வீடு கட்டுவதுன்னு நியாயம நான் வாழ்றதுக்கு வாங்குற சம்பளம் போதுமா? யார் சார் இந்த உலகத்துல லஞ்சம் வாங்காம, தப்பு செய்யாம இருக்காங்க? காசு வாங்குனாலும் வேலையை சுத்தமா செய்யறனா இல்லையா?” என்று பேசுவதை போலவே, போலி மோதல்கள் தொடர்பான மோடி அரசின் அறிக்கையும் பேசுகிறது.

போலி மோதல்
ஆயுதப் படைகளால் கடைக்குள் அழைத்துச் செல்லப்படுபவர், மோதலில் கொல்லப்பட்டதாக சோடிப்பு.

இதெல்லாம் டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இந்து நாளிதழ்களுக்கு தெரியாதது அல்ல. இருப்பினும் மோடிக்கு கூஜா தூக்க வேண்டும் என்று வரும் போது அவர்கள் எந்தக் கூச்சமும் அடைவதில்லை.

“மணிப்பூர் சட்ட விரோத கொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சங்கம்” மற்றும் “மனித உரிமை கண்காணிப்பு” ஆகிய தொண்டு நிறுவனங்கள், “கடந்த 30 ஆண்டுகளில் மணிப்பூரில் நிகழ்த்தப்பட்ட 1,528 சட்ட விரோத கொலைகளில் குற்றவாளிகளை தண்டிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்திருந்தனர். இத்தகைய கொலைகளை செய்யும் ஆயுதப் படையினரை பாதுகாக்க ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (AFSPA) பயன்படுத்தப்படுகிறது என்றும், சமீபத்தில் நடத்தப்பட்ட போலி மோதல் கொலைகள் குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்கும்படியும், அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. கொல்லப்பட்டவர்களில் 12 வயது சிறுவனும் அடக்கம்.

இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தரும்படி நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் திரு ஜே.எம்.லிங்டோ, மற்றும் டாக்டர் அஜய் குமார் சிங் அடங்கிய விசாரணை குழுவை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

போராட்டம்
அவரது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர் போலி மோதலில் கொல்லப்பட்டதை எதிர்த்து போராட்டம்.

பொது நல வழக்கில் பட்டியலிடப்பட்டிருந்த போலி மோதல் கொலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சமீபத்திய 6 வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் ஆயுதப் படையினரின் சாட்சியங்களை விசாரித்தும், கொல்லப்பட்டவர்களுக்கு கடந்த கால குற்றப் பின்னணி உள்ளதா என்று கண்டறிந்தும், இந்தக் குழு 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

முதலாவது வழக்கில், ஆசாத் கான் என்ற 12 வயது சிறுவன் அவனது வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டதாக அவனது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆயுதப் படையினர் தரப்பிலோ “ஆசாத் கான் ஒரு பயங்கரமான தீவிரவாதி. நாங்கள் அவன் வீட்டை நெருங்கும் போது இன்னொரு சிறுவனோடு வீட்டின் பின்புறமாக தப்பித்து ஓடினான், ஓடும் போது 8 மிமீ துப்பாக்கியால் எங்களை நோக்கிச் சுட்டான். தற்காப்புக்காக ஏகே 47 தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டதில் ஆசாத் கான் குண்டடி பட்டு விழுந்து விட்டான். இன்னொரு சிறுவன் தப்பி ஓடி விட்டான்” என்கின்றனர் ஆயுதப் படையினர்.

demo-against-afspa
AFSPA சட்டத்தை எதிர்த்து கங்களா இல்லம் முன்பு பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் (ஜனவரி 25, 2014)

“ஏகே 47 துப்பாக்கி ஏந்திய 20 பாதுகாப்புப் படையினர் 8 மிமீ கைத்துப்பாக்கியால் சுட்ட சிறுவனை தற்காப்புக்காக சுட்டுக் கொன்றனர் என்பது நம்ப முடியாதது. மேலும் சிறுவர்கள் தரப்பில் 2 குண்டுகள் சுடப்பட்டதாக கூறும் ஆயுதப் படையினர் 65 முறை சுட்டிருக்கின்றனர். பட்டப் பகலில் நடந்ததாக கூறப்படும் இந்த மோதலில் ஆயுதப் படையினர் யாரும் காயமடையவில்லை. மணிப்பூர் காவல் துறை  அளித்த தகவல்களின்படி ஆசாத் கானுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு தொடர்பு இருப்பதாகவோ, குற்றப் பின்னணி இருப்பதாகவோ நிரூபிக்கப்படவில்லை.

எனவே, முகமது ஆசாத் கான் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு மோதல் இல்லை என்றும் படையினர் தற்காப்புக்காக சுட்டதில் அவன் கொல்லப்படவில்லை” என்றும் ஹெக்டே விசாரணை குழு முடிவு செய்திருக்கிறது.

இரண்டாவது வழக்கில், 20 வயதான கும்போங்மயூம் ஓர்சன்ஜியை நோக்கி ஏகே 47 முதலான கனரக ஆயுதங்களால் 41 முறை சுட்டு 10 குண்டு காயங்களை ஏற்படுத்திய பாதுகாப்புப் படையினர், அதற்கு காரணமாக கும்போங்மயூம் தங்களை நோக்கி 8 மிமீ கைத்துப்பாக்கியால் சுட்டதாக (ஒரு முறை) கூறியிருக்கின்றனர். கும்போங்மயூமின் அம்மா, சம்பவ தினத்தன்று தனது மகன் தனது ஸ்கூட்டரை ரிப்பேர் செய்ய வெளியில் போனதாகவும், வெளியூர் போவதற்கு முன்பு மகனுடன் தொலைபேசியில் பேசியதாகவும், வெளியூர் போன பிறகு அவர் கொல்லப்பட்டதாக தொலைபேசி தகவல் வந்ததாகவும் கூறியிருக்கிறார். கும்போங்மயூம் கொல்லப்பட்ட சம்பவம் மோதல் இல்லை என்றும் பாதுகாப்புப் படையினர் சுயபாதுகாப்புக்காக சுட்டனர் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் விசாரணை குழு அறிக்கை அளித்திருக்கிறது.

தங்ஜம் மனோரமா
2004-ம் ஆண்டு கொல்லப்பட்ட தங்ஜன் மனோரமா

மூன்றாவது வழக்கில், வெளியில் டீ குடிக்கச் சென்ற கோபிந்த் மேய்த்தேயும், அவரது உறவினர் நோபோ மேய்த்தேயும் வீடு திரும்பவில்லை என்கின்றனர் அவர்களது குடும்பத்தினர். ஆனால், தங்களை தாக்கிய இந்த இளைஞர்களை தற்காப்புக்காக தாங்கள் சுட்டதாக பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர். இந்த சம்பவம் உண்மையான மோதல் இல்லை, பாதுகாப்புப் படையினர் திட்டமிட்டு இவர்களை கொன்றிருக்கின்றனர் என்று ஹெக்டே கமிஷன் முடிவு செய்திருக்கிறது.

நான்காவது வழக்கில், காணாமல் போன பசு ஒன்றைத் தேடி மிதி வண்டியில் வெளியில் போன 20 வயதான கிரன்ஜித் சிங், இம்பால் மண்டல மருத்துவ நிலையத்தின் பிணவறையில் உயிரற்ற உடலாகத்தான் பார்த்ததாக கூறுகிறார் அவரது தந்தை. இந்த வழக்கிலும் தற்காப்புக்காக சுட்டதில் கிரன்ஜித் சிங் இறந்து விட்டார் என்று பாதுகாப்புப் படையினர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது ஹெக்டே கமிஷன் அறிக்கை.

ஐந்தாவதாக, சொங்தாம் உமாகாந்தா அவரது நண்பரை பார்க்கப் போன இடத்தில் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவரை இம்பால் அரசு மருத்துவமனை பிணவறையில் அடுத்த நாள் பிணமாக பார்த்ததாகவும் அவரது அம்மா புகார் கூறியிருக்கிறார். அவரது நண்பரின் தாய் கொல்லப்பட்ட சொங்தாம் தன் மகனை சந்திக்க வந்தபோது அவருடன் ஆயுதம் ஏந்திய இரண்டு நபர்கள் வந்ததாகவும், சிறிது நேரத்தில் பாதுகாப்புப் படையினர் வந்து அவரை இழுத்துச் சென்றதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவத்திலும், பாதுகாப்புப் படையினர் மோதலில் தற்காப்புக்காக உமாகாந்தாவை கொன்று விட்டதாக  சொல்வதை நிராகரித்திருக்கிறது கமிஷன்.

தங்ஜம் மனோரமா
ஆயுதப் படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட தங்ஜம் மனோரமாவின் உடல்.

ஆறாவது வழக்கில், ஊறுகாய்களுக்கான பாலிதீன் பைகள் வாங்கப் போன அகோய்ஜம் பிரியோப்ரதா வீடு திரும்பவில்லை. அடுத்த நாள் மாலையில் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்ததாக அவரது அம்மா புகார் தெரிவித்திருக்கிறார். இவரது மரணமும் மோதலில் நடக்கவில்லை, பாதுகாப்புப் படையினர் அடித்ததில் இறந்திருக்கிறார் என்று ஹெக்டே அறிக்கை முடிவு செய்திருக்கிறது.

இந்த அறிக்கைக்கான பதிலில்தான் மோடி அரசு தனது தோலில் உள்ள வரிகளை அழித்துக் கொண்டு விசமற்ற சாது பாம்பாக மாறி விட்டதாக தி இந்து நாளிதழும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் பூரித்திருக்கின்றன. ஆனால், தலைப்புச் செய்தியைத் தாண்டி படிக்கும் போது மோடி அரசின் உண்மையான பாசிச முகம் தெரிகிறது.

“போலி மோதல் கொலைகள் பற்றிய விசாரணை என்ற பெயரில் நல்ல எண்ணத்துடன், மோசமான நோக்கமின்றி பணியாற்றும் அப்பாவி பாதுகாப்புப் படையினர் அலைக்கழிக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டும்” என்று தொடர்கிறது உள்துறை அமைச்சகத்தின் பதில். அதாவது ‘நல்ல எண்ணத்துடன்’, ‘மோசமான நோக்கமின்றி’ பணியாற்றுவதற்கு இந்திய அரசால் ஏகே 47 துப்பாக்கிகள் கொடுத்து அனுப்பப்படும் ஆயுதப் படையினரை அவர்களது நடவடிக்கைகள் தொடர்பாக கேள்வி கேட்டு தொந்தரவு செய்யக் கூடாதாம். அவ்வாறு செய்வது, மோடியோ, அல்லது உயர் பதவிகளில் இருக்கும் ஏதாவது ஒரு கேடியோ உத்தரவிட்டால் கண்மூடித்தனமாக அடிபணிவதற்கு அவர்களுக்கு மனத்தடையை ஏற்படுத்தி விடுமாம்.

ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்களை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தீக்குளித்த பேபாம் சித்தரஞ்சன்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மணிப்பூர் மாநிலத்தை இந்தியாவிலிருந்து பிரிக்கும் நோக்கத்துடன் பல தலைமறைவு அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும், அதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய அவர்கள் தயாராக இருப்பதாகவும், தீய வழிகளிலும், வெளிநாடுகளிலிருந்தும் திரட்டிய பணத்தை அதற்கு பயன்படுத்துவதாகவும் மோடி அரசின் பதில் தெரிவிக்கிறது. ஆனால், இந்திய அரசின் பாதுகாப்புப் படைகள் அப்படிப்பட்ட தலைமறைவு அமைப்புகளை எதிர்கொள்ளும் பெயரில் தங்ஜம் மனோரமா முதல் ஆசாத் கான் வரை ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்திருக்கின்றனர்.

“பாதுகாப்புப் படைகள் இத்தகைய பாதிக்கப்பட்ட பகுதியில் இயங்கி வருகின்றனர். ஆனால், போராளிகளின் ஆதரவாளர்கள் எந்த ஒரு மோதல் கொலையையும் போலி என்று பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர். இது போன்ற ‘போலி’ மோதல் கொலைகளில் ஏதாவது அப்பாவி பாதுகாப்புப் படைவீரர் அலைக்கழிக்கப்பட்டால், அது ஆயுதப் படைகளின் மன உறுதியை குலைத்து விடும்.” 12 வயது சிறுவன், தொலைந்து போன பசுவை தேடிப் போனவர், டீ குடிக்க போனவர், ஸ்கூட்டர் ரிப்பேர் செய்ய போனவர், நண்பனை பார்க்கப் போனவர் இவர்கள்தான் மோடி அரசு சொல்லும் தலைமறைவு அமைப்புகள். கொல்லப்பட்ட 1,528 பேரில் ரேண்டமாக எடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் போலி மோதல் என்று விசாரணை கமிஷன் முடிவு செய்திருக்கிறது. ஆயுதப் படையினர் சொல்லும் கதையின் அடிப்படையிலேயே கூட இந்த ‘பயங்கரமான பயங்கரவாதிகள்’ ஏந்தியிருந்த ஆயுதம் 8 மிமீ கைத்துப்பாக்கிகள்.

பேபாம் சித்தரஞ்சன் நினைவு
பேபாம் சித்தரஞ்சன் நினைவு

“பகைமையான, பாதுகாப்பற்ற சூழலில் இயங்கும் ஆயுதப் படையினருக்கு அடிப்படையான, மிகக் குறைந்த சட்ட பாதுகாப்பை ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் வழங்குகிறது. எனவே ஆயுதப் படையினர் உள்ளூர் காவல்துறையிடமிருந்தும், குற்றவழக்கு விசாரணைகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.” என்கிறது மோடி அரசின் அறிக்கை. உள்ளூர் சாதி வெறியன் முதல் உச்சநீதிமன்ற நீதிபதி வரை பாலியல் குற்ற முதலைகளே தப்பித்து போய்க் கொண்டிருக்கும் அளவிலான ஓட்டைகளைக் கொண்ட காவல்துறை விசாரணை வலையில் கூட தங்கள் செல்ல ஆயுதப் படைகள் சிக்கி விடக் கூடாது என்பதுதான் மோடி அரசு மணிப்பூருக்கு வழங்கும் ‘ஜனநாயகம்’. இதன்படி ஆயுதப் படைகளின் கொலை, கொள்ளை, வன்முறை உள்ளிட்ட எந்த குற்றச் செயலையும் மாநில காவல் துறை விசாரிக்க முடியாது.

மணிப்பூரில் அந்த சட்டத்தை நீட்டிப்பதற்கு மாநில சட்டசபையின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற பரிந்துரையையும் அரசு நிராகரித்திருக்கிறது. “அப்படி செய்தால், தேவைப்படும் நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாமல் போய் விடும்” என்றது. மணிப்பூரில் கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டம் முழுவதும் மாதக் கணக்கில் 144 தடையுத்தரவுக்கு உட்படுத்தப்படுவதும், கோவையில் புரட்சிகர அமைப்புகள் பொதுக் கூட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்த விடாமல் தடுக்கப்படுவதும், கடலூர் மாவட்டத்தில் யாரும் பேரணி நடத்தக் கூடாது என்ற காவல் துறை அடாவடியும் ஆன இந்திய ‘ஜனநாயக’ நடைமுறைகளின் அதி உயர்ந்த வடிவம்தான் மணிப்பூரில் இயங்கி வரும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம்.

இவ்வாறு, மணிப்பூரை தொடர்ந்து ஆக்கிரமித்து ஆட்சி செய்யும் தனது உத்தேசத்தை தெரிவித்திருக்கும் மோடி அரசு, அதற்கான நியாயமாக ஒரு காரணத்தை எடுத்து வெளியில் விடுகிறது.

"இந்தியா ராணுவமே, எங்களை ரேப் செய்"
“இந்தியா ராணுவமே, எங்களை ரேப் செய்” – 2004-ல் தங்ஜம் மனோரமா படுகொலையைக் கண்டித்து கங்களா இல்லத்தின் முன்பு மணிப்பூர் தாய்மார்கள் ஆர்ப்பாட்டம்.

மனம் போன வன்முறையில் ஈடுபடும் போராளிகளின் முக்கிய இலக்காக அதிகாரிகள் இருக்கின்றனராம். 1,528 பேர் போலி மோதல் கொலைகளில் கொல்லப்படுவதற்கு காரணமான அதிகாரிகள் மீதான வன்முறை எப்படிப்பட்டது? கடந்த சில ஆண்டுகளில் 27 அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். “பல  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இந்த மனிதத் தன்மையற்ற கசாப்புக்கு உயிரை பலி கொடுத்திருக்கின்றனர். இந்த அபாயங்களுக்கு மத்தியில்தான் மணிப்பூர் நிர்வாகம் எப்படியோ செயல்பட்டு சாதாரண குடிமகனுக்கு அடிப்படை சேவைகளை வழங்க முடிந்திருக்கிறது.” 1,528 பேரைக் கொன்ற அடிப்படை சேவையை வழங்கும் பணியில் 27 அதிகாரிகள் மனிதாபிமானமற்ற முறையில் தமது உயிரை பலி கொடுத்திருக்கிறார்கள்.

இந்த சட்டத்தை எதிர்த்து 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி மணிப்பூர் மாணவர் பேபாம் சித்தரஞ்சன் தீக்குளித்தார். முன்னதாக, அந்த ஆண்டு ஜூலை மாதம் தங்ஜன் மனோரமா பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து மணிப்பூரின் பெண்கள் 17 அசாம் ரைஃபிள்ஸ் ஆயுதப்படையினர் ஆக்கிரமித்திருந்த கங்களா இல்லத்தின் முன்பு தமது ஆடைகளை களைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து அசாம் ரைஃபிள்ஸ் படையினரின் முகாம் கங்ளாவிலிருந்து மாற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை பற்றி ஆய்வு செய்ய நீதிபதி ஜீவன் ரெட்டி கமிட்டி நியமிக்கப்பட்டது. சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்த அந்த கமிட்டியின் அறிக்கையை மத்திய அரசு குப்பைக் கூடையில் போட்டு விட்டது.

தற்போது, ஹெக்டே கமிஷனின் விசாரணையின் போது பாதுகாப்புப் படையினருக்கு குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படியான அடிப்படை உரிமைகள் கூட கொடுக்கப்படாமல், அவர்கள் தம்மைத் தாமே குற்றம் சாட்டிக் கொள்ளக் கூடிய வகையில் சாட்சி சொல்ல கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்கிறது. அதாவது, ‘குற்றம் புரிந்தவனை விசாரித்தால் உண்மை வெளிப்பட்டு விடும், எனவே விசாரணை கூடாது’ என்ற மகத்தான ஜனநாயக தத்துவத்தை மோடியிசத்தின் அடுத்த கண்டுபிடிப்பாக மத்திய அரசு முன் வைத்திருக்கிறது.

போலி மோதல் கொலைகள் பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு இவ்வாறு இருக்க அது குறித்த செய்திக்கு,  முற்றிலும் எதிரான, நேர்மறை டுவிஸ்ட் கொடுத்திருக்கும் ஊடகங்களின் அயோக்கியத்தனத்தை, அல்லது மொள்ளமாரித்தனத்தை பற்றி என்ன சொல்வது?

டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஜால்ரா ஆஃப் மோடி என மாறி நீண்ட காலம் ஆகி விட்டது தெரிந்த விஷயம் என்றாலும், முற்போக்கு, மனித உரிமை என்று சீன் போடும் தி இந்து நாளிதழின் ஆளும் வர்க்க சாய்வு இங்கு அம்பலமாகியிருக்கிறது. கூடவே இராணுவம், போலீசின் அடக்குமுறையை வெளிப்படையாக ஆதரிக்கும் பாசிசத்தின் முன்னுரையும் மோடி அரசால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

–    செழியன்

மேலும் படிக்க

வாழ்க்கையை புரிய வைப்பதே கல்வி

1

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலனுடன் நேர்முகம் – 5 (இறுதிப் பகுதி) :
கல்விக் கொள்கையும், வரலாற்றுப் பார்வையும்

பாடத்திட்டம்
அரசாங்கத்தின் கல்விக் கொள்கை இன்னது எனத் தெரியாமலேயே பாடத் திட்டக் குழு பாடத்திட்டத்தை வகுக்கிறது.

முன்னர் பாடத்திட்டக் குழுவை துவக்கி வைக்க அமைச்சர் வருவார். அரசாங்கத்தின் கல்விக் கொள்கை இதுதான் என்று அப்போது அவர் பேசுவார். இப்போதெல்லாம் அதனை துவக்கி வைக்க அரசு செயலரே வருவதில்லை. எனவே அரசாங்கத்தின் கல்விக் கொள்கை இன்னது எனத் தெரியாமலேயே பாடத் திட்டக் குழு பாடத்திட்டத்தை வகுக்கிறது. அரசாங்கத்திற்கு மொழிக் கொள்கை, கல்விக் கொள்கை தனியாக இல்லை. எனக்கு நெருங்கிய உறவில் இருந்த காரணத்தால் இதனையெல்லாம் எம்.ஜி.ஆரிடமே சொன்னேன். “ஐயா மெட்ரிக் பள்ளிகளை அனுமதித்தால் இலவச கல்வி அழியும், தமிழ் வழிக் கல்வி அழியும்” என்றெல்லாம் எச்சரித்தேன். ஆனால் நிதியில்லை என்று கைவிரித்து விட்டார்.

நம்மிடம் ஒருவழிச் சிந்தனைகள்தான் உள்ளன. மாற்றுச் சிந்தனைகள் வளர வேண்டுமானால் கட்டுப்பாடற்ற கல்விதான் அவசியம். “இருசக்கர வாகனத்தில் மாணவர்கள் கல்விக் கூடங்களுக்கு வரக் கூடாது” என்று உயர் கல்வி இயக்குநர் கட்டளை பிறப்பித்துள்ளார். “ஓட்டுநர் உரிமம் மாணவர்களுக்கு வழங்கக் கூடாது” என்று சட்டம் போடலாம், அதையெல்லாம் விட்டுவிட்டு, “மாணவன் டூவீலரில் வந்தால் முதல்வரை இடைநீக்கம் செய்வேன்” என்பது முட்டாள்தனம். கல்வி பயிலும் இடத்தில் ஐந்து மணி நேரமும் இருசக்கர வாகனம் சும்மாதான் இருக்கப் போகிறது. மீதி நேரம் முழுவதும் அவன் சாலையில் தான் போகப் போகிறான். இந்த விதி நான்கு சக்கர காரில் வருபவனுக்கு பொருந்தாதா? வசதியான மாணவன் காரில் வருவதை அரசு தடை செய்யவில்லை.

சோவியத் வகுப்பறை (ஓவியம்)
சோவியத் வகுப்பறை (ஓவியம்)

பெற்றோர்களை வகுப்பறைகளுக்குள் அனுமதிப்பதில்லை. பள்ளி வளாகத்துக்கு வெளியேவே நிறுத்தி அந்நியப்படுத்தி விடுகிறார்கள். இது தவறு.

இங்கிலாந்தில் ஒரு நர்சரி பள்ளிக்கு சென்றிருந்தேன். அங்கு பதினைந்து குழந்தைகளுக்கு மேல் வகுப்பறையில் கிடையாது. வகுப்பிற்கருகில் அம்மாக்களின் அரட்டை மையம் என்று ஒன்று உள்ளது. அதில் இருக்கும் ஒரு அம்மாவிடம் ஒரு நிமிடம் வகுப்பை பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு ஆசிரியர் என்னிடம் பேச வந்தார். அடுத்த ஒரு நிமிடம் கழித்து அவர் மீண்டும் வந்த போது “எப்படி இந்த ராஸ்கல்களை உன்னால் சமாளிக்க முடிகிறது” என்று ஆச்சரியமாக கேட்கிறார் அந்த தாய். “இப்போது உனக்கு எங்களுடைய வேலை புரிகிறதா” என்று அந்த ஆசிரியை அவரிடம் தனது வேலைப்பளுவை புரிய வைக்கிறார்.

சோவியத் ஒன்றியத்தில் எந்த பெற்றோரும் எந்த வகுப்பிலும் சென்று பாடத்தை கவனிக்க உரிமை இருந்தது. நம்மிடம் இரண்டாயிரம் ஆண்டு கால அடிமைப் புத்தி இருப்பதால், நாமே வகுத்துள்ள கட்டுப்பாடுகளை மீறி நடக்கவும், சுதந்திரம் என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவும் நமக்கு பல மாற்றங்கள் தேவைப்படும்.

முரளி மனோகர் ஜோஷி - மோடி
முரளி மனோகர் ஜோசி அறிவியல் படித்திருந்துமே தனது மதவாத நம்பிக்கையின் பிடிமானத்தில் இருந்தவர்.

முரளி மனோகர் ஜோசி விட்டுச் சென்ற பணியைத்தான் மோடி அரசின் கல்விக் கொள்கையும் பின்பற்றும். எனவே வேதபாடம் வருவது எல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் ஸ்மிருதி இரானிக்கு தங்களது இந்துத்துவா கொள்கை பற்றிய அறிவே முழுமையாக இருக்குமா என்பது சந்தேகத்திற்கிடமான ஒன்றுதான். அவரது கல்வித் தகுதியை விட கலாச்சார பின்னணிதான் இந்த பதவியை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது.  அவர் ஒரு தொலைக்காட்சி நடிகை என்பதை தாண்டி பெரிய அளவில் அனுபவமுள்ளவர் அல்ல. முரளி மனோகர் ஜோசி இயற்பியல் பேராசிரியர், நிரம்ப படித்தவர். சிறுவயதில் இருந்தே இந்துமகா சபாவில் ஜனசங்கில் இருந்தவர். அவர் அறிவியல் படித்திருந்துமே தனது மதவாத நம்பிக்கையின் பிடிமானத்தில் இருந்தவர். அவர் சொல்வதை ஒரு பிடிமானத்தின் அடிப்படையில் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். இந்த அம்மா சொல்வதெல்லாம் ஒரு கத்துக்குட்டியின் சொல்தான்.

வரலாற்றை மாற்றி எழுத முற்படுவது, வேத கல்வி, சமஸ்கிருத திணிப்பு, இந்தி திணிப்பை எதிர்கொள்ள அல்லது சரிசெய்ய கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்கி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். நெருக்கடி காலத்தில் தான் அது பொதுப்பட்டியலுக்கு போனது. இப்போதுதான் நெருக்கடி இல்லையே.

இப்போது கூட தனியார் சட்டக் கல்லூரியை துவங்க கூடாது என தமிழக அரசு சட்டமியற்றுகிறது. இதற்கு மாநில அரசுக்கு உண்மையில் உரிமையில்லை. ஆனால் நீதிமன்றம் இதற்கு தடை போடும். கடைசியில், “நான் முயற்சி செய்தேன் நீதிமன்றம்தான் தடை போட்டு விட்டது” என்று தப்பித்துக் கொள்ளத்தான் மாநில அரசின் இம்முயற்சி உதவப் போகிறது. பெங்களூரு மத்திய சட்டக் கல்லூரியில் மூன்று மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் வீதம் இருந்தும் தமிழ் நாட்டில் இருந்து இரு மாணவர்கள்தான் இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட பீகார் மாநிலத்திலிருந்து அதனை விட அதிகமாக இருக்கிறார்கள். மாணவர்களுக்கு நாம் நிறைய வழிகாட்ட வேண்டியிருக்கிறது.

வரலாற்றுக் கல்வி
தன்னைப் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்வதில் இருந்துதான் வரலாற்றை அங்கு கற்றுத் தரத் துவங்குவார்கள்.

வேலை வாய்ப்பை பொறுத்தவரையில் நமது அரசு புதிய வேலைகளை உருவாக்குவதாக இல்லை. சிறுசிறு வேலைகளை உருவாக்க வேண்டும். பெரிய பெரிய கார் கம்பெனிகள் இங்கு தேவையில்லை. காரைக்குடி சிக்கரி உதவியுடன் குன்றக்குடி அடிகளார் குன்றக்குடியில் இதனை சாதித்தார். ஒவ்வொரு வீடும் ஒரு தொழிற்சாலையாக மாறியது. சென்னையிலும் மத்திய தோல்துறை தொழிற்பயிற்சி நிறுவனம் இதற்கு முயற்சி செய்கிறது.

அடுத்து வாழ்க்கை என்றால் என்ன என்ற புரிதலை கல்வி தர வேண்டும். பைக் ரேசிங் செய்ய முயன்று  கொல்லப்பட்ட அந்த பையனையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு யமஹாதான் வாழ்க்கை என்று நினைத்தான். அதுவே எமகாதகனாக போய் விட்டது. எது வாழ்க்கை என்ற புரிதல் மாணவர்களிடையே இல்லை. அதைக் கற்றுத் தருவதும் கல்வியின் நோக்கம் தான்.

ஊரும் பேரும்
இன்று எத்தனை பேருக்கு தங்களது ஊர் பெயருக்கான காரணம் தெரியும்.

பிரிட்டனில் வரலாற்றை சொல்லித் தருகையில் மாணவனது குடும்ப பின்னணி வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ள சொல்லுவார்கள். பாட்டன், முப்பாட்டன் என எந்தளவு செல்ல சாத்தியமோ அதுவரை தன் குடும்ப வரலாற்றை ஆராய சொல்வார்கள். அதில் ஒரு மாணவன் தன் மூதாதையர் செருப்பு தைக்கும் தொழில் செய்தார்கள் என்பதைக் கூட தெரிந்து கொள்வான். இப்படி தன்னைப் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்வதில் இருந்துதான் வரலாற்றை அங்கு கற்றுத் தரத் துவங்குவார்கள்.

இப்படி சிந்திக்கிறவர்கள் பாடத்திட்டம் வகுக்கும் குழுவில் இருக்க மாட்டார்கள், அல்லது வகுப்பறைகளுக்கு செல்ல மாட்டார்கள் என்பதுதான் இப்போதைய நிலைமை. நம்பிக்கைதான் வரலாறு என்று இப்போது இந்திய வரலாற்று ஆய்வுக் கழக இயக்குநர் கூறியிருப்பது வரலாற்றுக்கான அவரவரது ஊடாடல்களில் ஒன்றே தவிர முழு வரலாறல்ல. உதாரணமாக,  கோத்ரா சம்பவத்தை ஒட்டி, “இன்று மகாத்மா உயிரோடிருந்தால் உண்ணாவிரதமிருந்திருப்பாரா? மோடியை சந்திக்க சென்றிருப்பாரா?” என்பதை தலைப்பாக கொடுத்து மாணவனை விவாதிக்க சொன்னால் அது வரலாறு. “வைசிராயை சந்தித்தது போல ஆளுபவரைத்தானே அவர் சந்திக்க வேண்டும்” என்று சொன்னால் அவன் வரலாற்று மாணவன் என்றுதான் அர்த்தம். ராமர் பாலம் உண்மை என்றெல்லாம் எழுதி விடுவார்கள் என்று அஞ்ச வேண்டியதில்லை.

வினவுதல்
மாணவன் கேள்வி கேட்பதால் ஏதாவது ஏடாகூடமான கேள்விகள் வந்து விடுமோ என்று நாம் பயப்படுகிறோம்

இன்று எத்தனை பேருக்கு தங்களது ஊர் பெயருக்கான காரணம் தெரியும். ரா.பி. சேதுப்பிள்ளை ஊரும் பேரும் எழுதியதை தொடர்ந்து இதற்கான முயற்சிகள் நடந்தாலும் பெரியளவில் எந்த முயற்சியும் அதன்பிறகு நடைபெறவில்லை. கோயமுத்தூர் மாவட்டத்தில் செட்டிப் பாளையம் பதினைந்தாவது இருக்கும். கவுண்டம் பாளையம் இருக்கிறது, முதலி பாளையம் இருக்கிறது, பெரிய கவுண்டம் பாளையம் இருக்கிறது. சாதியின் பெயரால் ஏன் ஊர் பெயர்கள் ஏற்பட்டன, பாளையம் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். பாளையம் என்றால் ஒன்றாக வாழும் கூட்டம். ஏன் அப்படி மக்கள் ஒன்றாக கூட்டம்கூட்டமாக வாழ்ந்தார்கள்? இதுதான் வரலாற்றில் விவாதிக்க வேண்டிய விசயம்.
வரலாறு என்பதே கற்பதோ சொல்லிக் கொடுப்பதோ அல்ல, விவாதிப்பது தான். விவாதிப்பதன் மூலம் அவரவர் ஒரு முடிவுக்கு வந்துகொள்ள வேண்டியதுதான். பல பேருக்கு தன் பெயருக்கான காரணம் கூட தெரியாது. ஆனால் இங்கிலாந்தில் உள்ள குழந்தைகளுக்கு தன் பெயர்க் காரணம் தெரியும். சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் வரும் குழந்தைகளுக்கு அனுஷ்கா, மோனிஷ்கா என வடமொழிப் பெயர்களாகவே இருக்கிறது. இதில் எந்தக் குழந்தைக்கும் தன் பெயர் காரணமும் தெரியாது, அர்த்தமும் தெரியாது.

தீவிரமான காலிஸ்தான் இயக்கம் நடந்த போது அங்கு சில ஆசிரியர்கள் அவர்களது அரசியல் காரணத்துக்காக சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அங்கிருந்தும் அரியானா, தில்லியில் இருந்து அநேகமாக பாதி ஐஏஎஸ் அதிகாரிகள் அந்த ஆண்டு தேர்வானார்கள். நான் அங்கு ஒரு கல்லூரிக்கு சென்ற போது பாபர் பற்றிய வகுப்பில் அங்குள்ள நூலகத்தில் அவரைப் பற்றி உள்ள புத்தகங்கள், அவர் பற்றி கட்டுரைகள் வந்துள்ள பத்திரிகைகளை சொல்கிறார் ஆசிரியர். பிறகு குழுக்களாக பிரித்து அதுபற்றி ஆராய்ந்து அறிக்கை தரச் சொல்கிறார். கலைந்து சென்ற மாணவர்கள் பிறகு வந்து அவரவர் அறிக்கையை தருகின்றனர். அதில் எதனை ஏற்கலாம், ஏற்க முடியாது என்பதை விவாதித்து அவர்களையே முடிவு எடுக்க வைக்கிறார். ஒழுங்குபடுத்தும் வேலையை மாத்திரம்தான் ஆசிரியர் மேற்கொள்கிறார்.

இங்கு மாணவன் கேள்வி கேட்பதால் ஏதாவது ஏடாகூடமான கேள்விகள் வந்து விடுமோ என்று நாம் பயப்படுகிறோம். பஞ்சாபில் சாத்தியமானதை இங்கு சாத்தியமாக்க முடியாதா? ஆசிரியர்கள் எப்போதும் கற்பதற்கு தயாராக இருக்க வேண்டும். கற்றுக்கொள்ள தயாராக இருப்பவர்கள்தான் ஆசிரியராகவும் இருக்க முடியும். கற்றுக்கொள்வதை நிறுத்தும்போது அவர் ஆசிரியராக இருப்பதற்கான தகுதியையும் இழக்கிறார்.

ss-rajagopalan-2

(நிறைவடைந்தது)

முந்தைய பகுதிகள்

கம்போடியா – விரட்டப்படும் விவசாயிகள்

0

ம்போடியாவின் தலைநகர் நாம் பென்-இல் உள்ள பிரதமரும், சர்வாதிகாரியுமான ஹூன் சென் வீட்டை நோக்கி ஒரு பேரணி. அதில் கலந்து கொண்ட கிராட்டி மாகாணம், ஸ்நோல் மாவட்டத்தின் ஒரு கிராமத்தை சேர்ந்த நிலம் பறிக்கப்பட்ட விவசாயிகள் 300 பேர் மீது அரசு பாதுகாப்பு படைகள் மின்சார லத்திகளால் கடந்த திங்கள்கிழமை (18-08-2014) தாக்குதல் நடத்தியுள்ளனர்.

போராட்டம்
போராடும் விவசாயிகள்

காலை 8 மணிக்கு நடந்த இந்த தாக்குதலில் நான்கு வயது குழந்தைக்கு தலையில் அடிபட்டுள்ளது. பிரம் சந்தா என்ற நாற்பத்தி ஐந்து வயது பெண்ணின் குழந்தை அது. அதுவரை தாயை கடுமையாக அடித்து கீழே தள்ளி மின்சார ஷாக் வைக்க முயன்ற போலீசார், குழந்தையின் தலைப்பகுதியில் காயம் கடுமையாக இருக்கவே விட்டுவிட்டனராம். ஆனால் மொத்தமாக நடந்த தாக்குதலில் பத்து பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.

மக்களிடமிருந்து ஏறக்குறைய 1,500 ஹெக்டேர் விளைநிலத்தை (1652) மிளகு மற்றும் மரவள்ளிக் கிழங்கு போன்றவற்றை பயிரிடுவதற்காக தென்கொரியாவில் இருந்து செயல்படும் ஹரிஸான் விவசாய அபிவிருத்தி கழகம் என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு மாவட்ட இணை ஆளுநர் சாம் நால் பிடுங்கிக் கொடுத்துள்ளார். ஏறக்குறைய 1987 முதல் இந்த இடங்களில் விவசாயம் செய்து வந்த இம்மக்களை ஒரேயொரு புகார் மூலம் இந்நிறுவனம் விரட்டியடித்துள்ளது. அதாவது சட்டவிரோதமாக தங்கள் நிலத்தில் பயிர் செய்கிறார்கள் என்று.

25 ஆண்டுகளாக கம்போடிய பிரதமராக உள்ள ஹூன் சென், 2013-ல் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றார்.  தனது 74வது வயது வரை அதாவது 2026 வரை பிரதமராக தொடருவேனென அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார். அப்படித்தான் கம்போடியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியுமாம். மேற்படி கிராமத்தில் இருந்த 1500 ஹெக்டேர் விளைநிலத்திற்கும் முறையான பட்டாவை 2013 தேர்தலுக்கு முன்னர் 2012-ல் தான் விவசாயிகளுக்கு அரசாங்கம் கொடுத்தது.

கம்போடிய பிரதமர் ஹூன்சென்
கம்போடிய பிரதமர் ஹூன்சென்

இப்போது, “பன்னாட்டு விவசாய கம்பெனி வந்தவுடன் உள்ளூர் அதிகாரிகள் மக்கள் நலனில் போதிய அக்கறை செலுத்தவில்லை” என்றும், “நிலத்தை அளப்பதற்காக முன்வந்த மாணவ தன்னார்வ தொண்டர்கள் திறமையாக செயல்பட முடியாவிடில் பதவி விலகுங்கள்” என்றும் செவ்வாய்க்கிழமை (19-08-2014) நடைபெற்ற அதிகாரிகளுக்கான உணவுப் பாதுகாப்பு பயிற்சிப் பட்டறையில் பேசிய பிரதமர் எச்சரிக்கை விடுத்து நாடகமாடியிருக்கிறார். இவ்வளவிற்கும் மேற்படி நிறுவனத்தின் பெரும்பங்கை கையில் வைத்திருப்பவர் அவரது அமைச்சரவையில் தொழில்துறை, சுரங்கத் துறை, மின்துறை அமைச்சர் சூய் செம்-ன் மனைவி தான். அவரது நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விரும்பாத ஹூன் சென் உள்ளூர் அரசியல்வாதிகள், மாணவர்கள் மீது பழியைப் போட்டு தப்பிக்க பார்க்கிறார்.

“மக்களது பிரச்சினைகளை தீர்க்க முடியாக அலுவலர்கள் எல்லாம் வீட்டுக்கு போகலாம்” என்று பயிற்சிப் பட்டறையில் திட்டவட்டமாக சொல்லி விட்டார் சென். அந்த வகையில் ‘அவரால் தான் தங்களது நிலத்தை மீட்டுத் தர முடியும்’ என்று அவரது வீடு நோக்கி ஊர்வலம் வந்த மக்களின் கணக்குப்படி அவர்தான் முதலில் பதவி விலகிட வேண்டியவராக இருக்கிறார். ஆனால் அதற்கு இன்னும் ஒரு பன்னிரெண்டு ஆண்டுகள் நிலத்தை இழந்த விவசாயிகள் கொலை பட்டினி கிடக்க வேண்டும்.

இரண்டு வாரங்களுக்கு முன் நிலத்தை மீட்பதற்காக தலைநகருக்கு வந்த 90 குடும்பங்களும், கடந்த வெள்ளிக்கிழமைக்குள் பிரச்சினையை தீர்த்து வைத்து தங்களது நிலங்களை திரும்பித் தர வேண்டும் என்று அரசுக்கு கெடு  வைத்திருந்தனர். இதற்காக அங்குள்ள கட்டுமானப் பணிகள் நடக்கும் இடமொன்றில் கூடாரங்களை அமைத்து இந்த விவசாயிகள் தங்கியிருந்தனர். எதிர்க்கட்சியான தேசிய மீட்புவாத கட்சியினர் அவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி போராட்டத்தை தூண்டுவதாக ஆளும் கம்போடிய மக்கள் கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

உண்மையில் அவர்களது இளைஞர் அணியினர் கட்சி கட்டளையையும் மீறி விவசாயிகளை சந்தித்து உணவுப் பொருட்களையும், போர்வைகளையும் நேரில் சென்று தந்திருக்கின்றனர். தலைநகரின் பெரும்பாலான மக்களும் இப்போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஹூன் சென் எதிர்ப்பு
பிரதமர் ஹூன் சென், அவரது மனைவியின் புகைப்படங்களை ஏந்திப்படி அவரது வீடு நோக்கிச் செல்லும் மக்கள்

2003லிருந்து ஏறக்குறைய 21 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களை இப்படி தனியாருக்கு தாரை வார்த்த வகையில் அங்குள்ள 4 லட்சம் மக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி நிலத்தை பறிகொடுத்த மக்கள் வரிசையாக தலைநகருக்கு வந்து இழப்பீடுகளை பெற்றுச் சென்ற வண்ணமிருக்கின்றனர். வான் சொபாத் என்ற மனித உரிமை ஆர்வலர் இவர்களுக்கு தங்க இடமளித்து வருகிறார். அவருக்கு அரசு தரப்பில் இருந்து மிரட்டல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

கம்போடிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லா மெங் கின் நிறுவனமான சுகாகு இங்க்-உடன் அரசு போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி 8 கோடி டாலருக்கு 99 ஆண்டுகளுக்கு 133 ஹெக்டேர் பரப்பளவில் தலைநகரத்தில் இருக்கும் போயங் காக் ஏரி குத்தகைக்கு விடப்பட்டது. ஏறக்குறைய 4,252 குடும்பங்கள் அங்கிருந்து 20 கிமீ தொலைவில் நகரத்திற்கு வெளியே தூக்கியடிக்கப்பட்டார்கள். 2007-ல் இந்த ஒப்பந்தம் கையெழுத்தான போது மூன்றுவித நட்ட ஈடுகளில் ஒன்றை தெரிவு செய்ய மக்கள் பணிக்கப்பட்டார்கள். ஒன்று 20 கிமீ தூரத்தில் ஒரு வீடு, இன்னொன்று வேறு ஏதாவது ஒரு இடத்தில் அரசு விரும்புகையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புடன் 500 டாலர் நட்ட ஈடு, இல்லாவிடில் 8500 டாலர் நட்ட ஈடு.

இதை வாங்கிக் கொண்டு வெளியேறிய மக்கள் தாங்கள் இழந்த நிலத்திற்கும், இந்த தொகைக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என்பதை பிபிசிக்கு செவ்வியாக தெரிவித்திருந்தனர். நாம் பென் நகரத்தின் 11 சதவீத அடித்தட்டு மக்கள் இப்படி வெளியேற்றப்பட்ட பகுதிகள் கம்போடியாவின் செம்மஞ்சேரிகள் தான் என்பதை அந்தப் பேட்டிகள் உறுதி செய்கின்றன. இந்த நிறுவனத்துக்கு 2013 பிப்ரவரியில் கம்போடிய நிதி அமைச்சகம் நாட்டின் வறுமையை குறைக்க பாடுபட்டதாக சொல்லி விருது கொடுத்தது தான் காலக் கொடுமை.

அரசு சார்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் யாரும் மனுக்களை வாங்க கூடாது என்று பிரதமர் எச்சரித்துள்ளார். இந்த தடியடிக்கு முன்னர் எதிர்க்கட்சி எம்பிக்கள் இருவர் வெளியில் வந்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கியிருக்கின்றனர். ஆளும் கம்போடிய மக்கள் கட்சி கேம்ரூஜ் இயக்கத்தில் இருந்து பிரிந்த வியட்நாமிய ஆதரவு பெற்ற போலி கம்யூனிஸ்ட் கட்சி. இந்தியாவில் நந்திகிராமில் நிலத்தை பறிப்பதை எதிர்த்த மக்களை, போலீசு குண்டர்களுடன், இணைந்து தாக்கிய, பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய தொண்டர்களைப் பெற்ற மார்க்சிஸ்டுகளின் கூட்டணி ஆட்சிக்கு கூட இடது சாரி முன்னணி என்றுதான் பெயர். போலிகள் எங்கிருந்தாலும் கொள்கையால், நடைமுறையால் ஒன்றுபடுகிறார்கள் என்பதற்கு கம்போடியாவும் நமக்கு ஒரு சாட்சி.

இருப்பினும் இந்த செய்தியை ஊடகங்களில் பிரபலமாக்கி பேசும் மேற்குலக ஊடகங்கள், விவசாயிகளின் நிலங்களை பறிப்பதற்கு அடிப்படையான பன்னாட்டு நிறுவனங்கள், உலகமயத்தை ஆதரிக்கின்றனர் என்பதே உண்மை. அதனால்தான் இந்த சம்பவம் போலிசின் தடியடி என்பதாக மட்டும் சுருக்கி பார்க்கப்படுகிறது.

மறுகாலனியாக்கத்தில் இந்தியா, கம்போடியா என்று வேறுபாடு இல்லை. இதை உணர்ந்து போராடாத வரை விவசாயிகளுக்கும் விடியல் இல்லை.

ஹூன் சென் வீட்டின் முன்பு…

ஆன்மிகக் கண்காட்சியா, நுகர்வு கலாச்சார சாட்சியா ?

4

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி அனுபவங்கள் – 4

ந்து ஆன்மீக கண்காட்சியில் உதவி பலகை மேசையில் இருந்தவரை அணுகினோம்.

“இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சியின் நோக்கம் என்ன சார்?” என்றோம்.

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி
இதுதாங்கஜி இந்த ஈவென்டோட தீம்

“நமது நாடு பழம்பெருமைமிக்க நாடுஜி. இந்து ஆன்மிகத்தில் புதைந்துள்ள இயற்கை வழிபாடு, ஜீவராசிகளை வழிபடுவது, நதிகளை வழிபடுவது, பெற்றோர்கள், ஆசிரியர்களை தெய்வமாக போற்றுவது, பெண்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் கன்னி பூஜை, சநாதன தர்மத்தை பின்பற்றுவது, நாட்டுப் பற்றை அதிகரிக்கும் விதத்தில் பாரதமாதாவையும், பரம்வீர் சக்கரா விருது பெற்றவர்களையும் ஆராதனை செய்வது இதுதாங்கஜி இந்த ஈவென்டோட தீம்” என்று ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் வரும் சீரியல் ஆக்டர் போலவே விளக்கம் அளித்தார்.

காவிரி நதியை பூஜை போடும் உரிமை கர்நாடக ஜிக்கு மட்டும்தானே என்று கேட்ட போது அரசியல் செய்யதீர்கள் என்றார் அந்த ஜி.

ஹலோ எஃப்.எம் 106.4-ன் கடைக்குப் போனோம். ரேடியோவிற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம்? “நீங்க எதுக்கு பாஸ் இங்கே ஸ்டால் போட்டிருக்கீங்க” ஸ்டாலில் இருந்தவரிடம் கேட்ட போது,

“நாங்க இதுக்கு ஸ்பான்சர் பன்னியிருக்கோம் பாஸ் அதனால எங்களுக்கும் ஒரு ஸ்டால் கொடுத்திருக்காங்க” என்றார்.

“சரிங்க ஆனா உங்களுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம்” என்றோம்.

ஹலோ எஃப்எம்
“ஒரு சம்பந்தமும் இல்லைங்க”

“ஒரு சம்பந்தமும் இல்லைங்க” என்றார்.

“சரி இங்கே மக்கள் வர்றாங்களா” என்றோம்.

“வர்றாங்க, பேசுறாங்க.”

“எதுக்கு வர்றாங்க, என்ன சொல்றாங்க?”

“எங்க எஃப்எம் மின் நிகழ்ச்சிகளை பத்தி கருத்து சொல்றாங்க. என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தலாம்னு ஆலோசனை சொல்றாங்க” என்றார். இந்து தர்மத்துக்கு காசு, ரேடியோ தர்மத்துக்கு கருத்துக் கேட்பு என்று பரஸ்பர ஆதாயத்தோடு பட்டையைக் கிளப்பினார்கள்.

இஷேத்ரா பன்னாட்டு உறைவிடப் பள்ளி சார்பாக ஒரு கடை போட்டிருந்தார்கள். “பாரத தருமத்தை இயற்கையான முறையில் சொல்லிக் கொடுக்கிறோம். படிப்பு என்றால் பாடப் புத்தகத்தில் மட்டும் கிடைப்பதில்லை. அதற்கேற்ற சூழல், முறையாக பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள், நூலகங்கள், விளையாட்டு வசதிகள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பள்ளிதான் எங்களுடையது. 60 ஏக்கர் நிலத்தில் அமைந்த பள்ளியில் நமது பாரம்பரிய சூழலில் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். சுத்த சைவ உணவுதான் போடுகிறோம்; யோகா, தியானம் சொல்லித் தருகிறோம்” என்றார்.

“இதற்கெல்லாம் எவ்வளவு ஃபீஸ்?”

“சராசரியா வருஷத்துக்கு ரூ 1.25 லட்சம் வரும்”

ishetra
பாரத தருமத்தை சொல்லிக் கொடுக்கறதுக்கு இவ்வளவு பணமா

“என்னங்க இது பாரத தருமத்தை சொல்லிக் கொடுக்கறதுக்கு இவ்வளவு பணமா. நம்ம நாட்டோட எல்லாக் குழந்தைகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும் படி இலவச கல்வி எல்லாம் இல்லையா?”

“அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க. அங்க நிக்கிறாங்களே அவங்கதான் இதுக்கு நிர்வாகி, போய் கேட்டுக்கோங்க” என்று நழுவி விட்டார். பாரம்பரிய இந்து ஞானமரபின் கல்விக்கு ஒன்றேகால லட்சமெல்லாம் ஒரு விசயமே இல்லை.

வழியில் இரு பள்ளி மாணவர்கள் தட்டில் டம்ளரோடு தண்ணீரை நீட்டினர். அப்போது தாகம் இல்லாததால் வேண்டாம் என்று கூறிவிட்டு நடந்தோம்.

“தம்பி இங்கே வாங்க தண்ணியை எடுத்து குடிங்க” என்றார் ஒரு அந்த ஸ்டாலில் இருந்த பெண்மணி.

சரி குடித்துவிடுவோம் என்று எடுத்து குடிக்கப்போகும் போது ‘ஓம் நமச்சிவாயா’ன்னு சொல்லிட்டு குடிங்க என்றார். எதிரில் ஒரு பள்ளி மாணவர் கூட்டம் வந்துகொண்டிருந்தது, அதில் ஒரு மாணவன் தண்ணீரை குடிப்பதற்கு முன்பு ஓம் நமச்சிவாயாவுக்கு பதிலாக ‘ஜெய் ஆஞ்சநேயா’ என்றான்.

அது என்ன டயலாக் என்று அவனிடமே கேட்டோம்.

“சும்மா ஒரு தமாஷுக்கு தான்”

“அது என்ன ஜெய் ஆஞ்சநேயா.”

“அது ஒரு தெலுங்கு பட டயலாக்ண்ணா”.

“என்ன டயலாக்”

“ஒரு தெலுங்கு படத்துல டிரெய்ன் மேல ஏறி பாலகிருஷ்ணா ஃபைட் பண்ணிட்ருப்பாரு. அப்ப எதிர்ல இன்னொரு ட்ரெய்ன் வரும் அது பக்கத்துல வரும் போது அதை தடுத்து நிறுத்துறதுக்காக கையை நீட்டி ஜெய் ஆஞ்சநேயான்னு சொல்லுவாரு டிரெய்ன் அப்படியே நின்னுடும், செம்ம காமெடி அது, அந்த டயலாகை தான் சொன்னேன்” என்றான்.

அடுத்து ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ என்கிற ஸ்டால். ஸ்டால்காரர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் புலம்பிக்கொண்டிருந்தார்.

“எப்ப பார்த்தாலும் எனக்கு சின்ன ஸ்டாலா தான் தர்றா, வர்றவங்கள் எல்லாம் என்ன இவ்வளவு சின்னதா இருக்குன்னு கேக்குறாங்க நிர்வாகத்திடம் கொஞ்சம் சொல்லுங்கோ, அடுத்த முறையாவது கொஞ்சம் பெருசா வேணும்” என்று தனக்கு சின்ன கடை ஒதுக்கப்பட்டது குறித்து புலம்பிக் கொண்டிருந்தார்.

பக்கத்து ஸ்டாலில் ஒருவர் தினசரி நாம் எப்படி எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று விளக்கிக்கொண்டிருந்தார். அது என்ன ஸ்டால் என்று பார்த்தால் அதன் பெயர் ‘ஸனாதன் ஸன்ஸ்தா’ நாமும் அருகில் போய் நின்று கொண்டோம்.

  • எப்படி குளிக்க வேண்டும்
  • பெண்கள் முடியை அவிழ்த்து விடக்கூடாது, முடிந்து வைக்க வேண்டும், அதை எப்படி முடிய வேண்டும்.
  • எந்த திறப்பு விழாவாக இருந்தாலும் அதை ரிப்பன் வெட்டி திறக்காமல் இந்து முறைப்படி தேங்காய் உடைத்து திறக்க வேண்டும்.
  • ஒரு விழாவில் விளக்கேற்றும் போது மெழுகுவர்த்தியை பயன்படுத்தாமல் திரி விளக்கை பயன்படுத்தி விளக்கேற்ற வேண்டும்
  • குழந்தைகளின் பிறந்த நாட்களை கொண்டாடும் போது கேக் வெட்டி கொண்டாடாமல் பலகையில் உட்காரவைத்து இந்து முறைப்படி கொண்டாட வேண்டும்.
  • பேண்ட், ஷர்ட் போன்ற வெளிநாட்டு உடைகளை அணியாமல் நமது பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும்

என்றெல்லாம் விளக்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவரே ஜீன்ஸ் பேண்ட் தான் அணிந்திருந்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

“நீங்க மட்டும் ஏன் ஜீன்ஸ் போட்டிருக்கீங்க”

“சில தவிர்க்கமுடியாத நேரங்களில் இப்படி இருக்க வேண்டியிருக்கிறது” என்றார். “மற்றபடி நமது பாரம்பரிய உடைகளை உடுத்துவது தான் சரியானது.” என்றார். “சரிங்க ஜி நீங்களே பின்பற்ற முடியாத ஒன்றை மற்றவர்களுக்கு உபதேசிப்பது சரியா” என்றால், “இந்து தர்மத்துக்கு உதவுவது எதுவுமே தப்பே இல்லை” என்றார். குற்றமனசு இல்லாமல் செய்யும் எதுவுமே தவறு இல்லை என்ற சதுரங்க வேட்டை வசனம் நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பில்லை.

பசு பாதுகாப்புக்காக பல கடைகள் இருந்தன.

“கால்நடைகள் அழிந்தால் விவசாயமே அழிந்து விடும். நம் ஊரிலிருந்து ஆண்டிற்கு 5000 டன் அளவிற்கு இறைச்சிக்காக கேரளாவிற்கு மாடுகள் கடத்தப்படுகின்றன. இவற்றை கண்காணித்து, தடுக்க வேண்டிய விலங்குகள் நல வாரியம் எதுவுமே செய்வதில்லை. நாங்கள்தான் கால்நடைக் கடத்தல்களை செக்போஸ்ட்டில் தடுத்து நிறுத்தி வருகிறோம்” என்றார் ஒரு பசுப் பாதுகாப்பு ஸ்டால்காரர்.

“உண்மை தான் சார் ஆனால் நீங்கள் பசுக்களுக்காக மட்டும் தான் பேசுகிறீர்கள், மற்ற விலங்குகள் பாவம் இல்லையா” என்றோம்.

“சரிதான் ஆனால் பசு தான் உலகத்தின தாய், அதன் பயன்பாடு தான் அதிகம்”.

“இல்லையே இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் தான் என்று காந்திஜி கூறியுள்ளார். அந்த விவசாயிகளுக்கு உதவியாகவும், பயன்படுபவையாகவும் இருப்பவை காளை மாடு, எருமை மாடு, ஆடு, கோழி, நாய்கள் போன்ற விலங்குகள் தானே அன்றி பசு இல்லையே”

“இப்படி எல்லாம் விதண்டாவாதம் செய்துகொண்டிருந்தால் பதில் கூற முடியாது, எங்களுக்கு பசுதான் முக்கியம்”.

பசுக்களை காக்கும் இந்த மனிதாபிமானிகள் அதன் சாணி, மற்றும் மூத்திரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பை ப்ரோடக்ட்கள் மற்றும் மூர் மார்கெட்டில் கூறு பத்து ரூபாய் என்று வாங்கி வந்த பாசிமணி ஊசி மணிகளையும் அங்கே விற்றுக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில் செட்டிலான என்ஆர்ஐ அம்பிகளிடம் காசு வாங்கிக் கொண்டு பசுக்களை ஜீவகாருண்யத்துடன் பராமரிப்பதாக கூறும் இவர்கள் தம் வாழ்நாளில் பசு மாட்டை தொட்டது கூட கிடையாது. பால் கறப்பது, சாணி அள்ளுவது, மாட்டை குளிப்பாட்டுவது என்று பசுக்களை பராமரிப்பது என்று அனைத்தையும் செய்வது நமது உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த குமார் அண்ணன் தான். கண்காட்சிக்கு கொண்டு வந்திருந்த மாட்டை பராமரிப்பதற்கு அவரை கூடவே அழைத்து வந்திருந்தார்கள்.

‘இவங்ககிட்ட சம்பளமெல்லாம் எதிர்பாக்க முடியாது தம்பி, சாப்பாடு போடுவாங்க அப்பப்ப செலவுக்கு காசு கொடுப்பாங்க அவ்வளவு தான்’ என்றார் குமார். பசுவுக்கு கருணை காட்டும் ஜிக்கள் மனிதர்களுக்கு காட்டமாட்டார்கள் என்பது ஆச்சரியமல்லவே?

காளை மாடுகளை துன்புறுத்தும் நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டி விளையாட்டான ஜல்லிக்கட்டை ஆதரிக்கக்கோரும், ஆன்மீக ஜல்லிக்கட்டு என்கிற ஸ்டாலுக்கு அருகில் வந்தோம். அங்கே இருந்தவரிடம்,

“ஆன்மீகத்திற்கும் ஜல்லிகட்டிற்கும் என்ன சார் சம்மந்தம், ஆன்மீக ஜல்லிக்கட்டு என்றால் என்ன” என்றோம்.

“ஆன்மிகத்திற்கும் ஜல்லிக்கட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை சார், ஆன்மீகம்னு ஒரு வார்த்தையை சேர்த்துக்கொண்டால் தான் ஸ்டால் கொடுப்போம்னு சொன்னாங்க, அதற்காக தான் ஆன்மீக ஜல்லிக்கட்டுன்னு போட்ருக்கோம்” என்றார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

“அதுமட்டுமில்லைங்க எங்க குடும்பத்திற்கே பெரியார் மீதும், கம்யூனிஸ்டுகள் மீதும் பெரிய மரியாதை இருக்கு. மக்களுக்கு ஜல்லிக்கட்டைப் பற்றியும், அதன் மரபை பற்றியும் விழிப்புணர்வூட்டுவதற்காக தான் இது போன்ற கண்காட்சிகளில் ஸ்டால் போடுகிறோம் அதற்கு இந்து, ஆன்மீகம் என்கிற முகமூடிகள் தேவைப்படுகிறது. மற்றபடி ஆன்மீகத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை” என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல், கண்காட்சிக்கு ஆள் பிடிக்கும் வித்தையை அறியத்தந்தார்.

அதையடுத்து, பாழடைந்த பழைய மண்டபங்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்ற ரீச் என்கிற அமைப்பின் (நன்கொடைகளுக்கு வரி விலக்கு உண்டு) ஸ்டாலுக்கு சென்றோம்.

‘பழமை மாறாமல் கோவில்களை புனரமைக்க வேண்டுமா எங்களை அழையுங்கள் நாங்கள் வருகிறோம்’ என்று விளம்பரம் வேறு. இந்திய நகரங்களில் குளிர்காலம் வந்தால் ஒண்ட இடமின்றி ஏழைகள் இறந்து கொண்டிருக்கும் போது பாழடைந்த பழைய ஹைதர் காலத்து கட்டிடங்கள் எல்லாம் இருப்பதால்தான் என்ன பயன்? இது தவிர வெஜிடேரியன் ஒன்லி போர்டு போல ஐ சப்போர்ட் வெஜிடேரியன், உப்பு போடாமல் சாபிடுவோர் சங்கம், பானி பூரி லவ்வர்ஸ் போன்ற பக்கோடா என்.ஜி.ஓ கள் எல்லாம் நோட்டீஸ்களில் வரி விலக்கு உண்டென ஆன்மீக பொருட்களை விற்றுக் கொண்டிருந்தனர்.

ஒரு ஸ்டாலில் எக்கோ டூரிசம் போவதற்கு சாவு வீட்டில் சங்கீதத்தை ரசிக்கும் மனநிலையுடன் நடுத்தரவர்க்கம் கூட்டம் கூட்டமாக பதிவு செய்து கொண்டிருந்தது. மூன்று இரவு, இரண்டு பகலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 560 புண்ணிய திருத்தலங்கள், 300 புண்ணிய தீர்த்த குளியல்கள் என அடுத்த உத்தராஞ்சல் பயங்கரத்திற்கு ஆட்களைத் திரட்டி கொண்டிருந்தனர் ஓம் யாத்ரா என்கிற ஆன்மீக சுற்றுலா கம்பெனியார். சேவைத்துறையில் இந்துமதத்தையும் சேர்த்துவிட்டால் நமது ஜி.டி.பி எகிறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

temple-worshippersஅடுத்து அக்க்ஷர்தம் கோவிலின் ஸ்டால். அருகில் சென்றதுமே “அக்க்ஷர்தம் கோவிலை பற்றி கேள்விப்பட்ருக்கீங்களா, மொத்தம் 105 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருக்கு. அதில் 35 ஏக்கர் கோவில். கோவில் முழுவதும் தங்கம். வெளியே கண்காட்சி அது இது என்று, ஸ்ரீ மாருதி நகர், சென்னைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது, பத்தே நிமிடத்தில் ரெயில் நிலையம், அருகிலேயே மருத்துவமனை” என்று ரியல் எஸ்டேட் தரர்களை போல கோவிலைப் பற்றி அவர் விளக்கிக்கொண்டிருந்தார்.

இந்த கோவில் டெல்லியில் இருக்கிறது. மொத்தம் உள்ள 105 ஏக்கரில் 35 ஏக்கர் தான் கோவில், மீதம் உள்ள இடம் முழுவதும் கண்காட்சியாம். என்ன கண்காட்சி என்றால் கல்யாண ஆல்பம் மாதிரி ஒன்றை திறந்து காட்டினார், அதில் பலவகையான சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. பிறகு பூங்காக்கள். உள்ளுக்குள்ளேயே ஒரு தியேட்டர் இருக்கிறது, அந்த தியேட்டரில் வருடம் முழுவதும் ஒரே படம் தான் ஓடுமாம். ‘bhagavan mystic india’ என்பது தான் படத்தின் பெயர். ஸ்வாமி நாராயண் என்கிற அந்த கோவிலில் உள்ள கடவுள் தான் படத்தின் ஹீரோ. மேலும் உலகம் முழுவதும் உள்ள தண்ணீர் அனைத்தையும் கொண்டு வந்து அங்குள்ள குளத்தில் கொட்டி வைத்திருக்கிறார்களாம். கோவிலுக்கு செல்வதற்கு தான் காசு இல்லை. மற்ற எழுபது ஏக்கரையும் சுற்றிப் பார்க்க வேண்டுமானால் துட்டு வேண்டும்.

“அந்தப் படத்தை நீங்கள் இங்கிருந்தே கூட பார்க்கலாம் எங்களிடம் DVD இருக்கிறது வாங்கிக்கொள்ளுங்கள்” என்று நைசாக நீட்டினார், “வேண்டாம்” என்று கிளம்பினோம்.

ஒரு செயற்கையான மரத்தில் பலவகையான அட்டைகளை கட்டி தொங்கவிட்டிருந்தனர். அது என்ன என்று சென்ற போது தான் அது பேசும் மரம் என்றனர்.  அது மெதுவாக பேசி கொண்டிருந்தது. மரத்திற்குள் ஸ்பீக்கர் வைத்திருக்கிறார்கள். “இந்த உலகம் என்னால் தான் இயங்குகிறது. இங்கே நடப்பவை அனைத்தும் என்னால் தான் நடக்கிறது. இந்த அரங்கில் கூறப்படுபவை அனைத்தும் எனக்காகவே கூறப்படுகின்றன. சநாதன தர்மம் தான் சரியானது, சநாதன தர்மம் என்பது பிறருக்கு உதவி செய்வது தான்” என்று பேசிக்கொண்டிருந்தது. கண்காட்சியில் பங்குபெறும் நிறுவனங்கள், மற்றும் ‘பாரதமாதாவை’ பிளந்தெறிந்துகொண்டிருக்கும் கார்ப்பரேட்டு கம்பெனிகளின் பெயர்களை எல்லாம் அதில் எழுதி தொங்கவிட்டு அதற்கு சனாதன தர்ம விருட்சம் என்று பெயரிட்டுள்ளனர்.

treeஇந்து ஆன்மீக சேவைக் கண்காட்சிக்கு ‘ஸ்பான்சர்’ செய்த கார்ப்பரேட்டுகளின் பட்டியலில் இந்தியாவை கூறு போட்டு பன்னாட்டுக்கு விற்றுக் கொண்டிருக்கும் டால்மியா, பி.கே.பிர்லா, லார்சன் & டியூப்ரோ, எஸ்ஸார், டிவிஎஸ், பஜாஜ், முருகப்பா குழுமம் போன்ற இந்திய தரகு பெரு முதலாளிகளோடு, ஐ.பி.எல் சூதாட்ட புகழ் இந்தியா சிமென்ட்ஸ், சொல்வதெல்லாம் உண்மை புகழ் ஜீ டிவி ஆகிய நிறுவனங்களும் உண்டு.

மறுகாலனியாக்க காலகட்டத்தில் அனைத்தும் நுகர்ந்து எறியப்பட வேண்டிய பண்டங்கள் தான் அதற்கு மதமும் விலக்கல்ல. இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி என்கிற இந்த அரங்கு ஒரு நுகர்வுக்கான காடு என்பதை சனாதன மரத்தின் ஸ்பான்சர் விழுதுகளே அறிவிக்கின்றன. கல்வி நிறுவனங்களும், கட்டுமான நிறுவனங்களும் என்ன ஆன்மீக உணர்வை வளர்க்கவா இங்கே ஸ்டால் போட்டிருக்கிறார்கள்? அருண் எக்ஸ்செல்லோவுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம்?

இந்த கண்காட்சிக்கு ஸ்பான்சர் செய்திருக்கும் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் அனைத்தும் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இந்த நாட்டின் கனிம வளங்களை எல்லாம் கொள்ளையடிக்கும் பினந்தின்னி கழுகுகள். எஸ்ஸார் என்கிற தரகு முதலாளித்துவ கார்ப்பரேட் கம்பெனி ஒரிசாவிலும், சட்டீஸ்கரிலும் நிலக்கரியையும், இரும்புத் தாதுக்களையும் வெட்டி எடுப்பதற்கு வெறியுடன் அலைந்துகொண்டிருக்கிறது. அதுவும் இந்த ஆன்மீக சேவைக் கண்காட்சிக்கு ஸ்பான்சர் செய்திருக்கிறது. அதேநேரம் கண்காட்சி அரங்கில் ஆர்.எஸ்.எஸ் சின் வனவாசி சேவா கேந்திரம் பழங்குடிகளின் உரிமைகளுக்காக ஸ்டால் போட்டிருக்கிறது.

எப்படிப்பட்ட கைக்கூலித்தனம்? ஒரிசாவையும், சட்டீஸ்கரையும் குடைந்தெடுக்கப் போகின்ற கம்பெனியிடம் காசு வாங்கிக்கொண்டு அதனால் சாகப்போகின்ற பழங்குடிகளுக்கான அமைப்பையும் இவர்களே நடத்துவார்களாம். ஆகா எப்பேர்பட்ட தேஷபக்தி!

–    தொடரும்.

–    வினவு செய்தியாளர்கள்.

முந்தைய பகுதிகள்

  1. ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !
  2. வாங்கோ நீங்க ஐயரா ஐயங்காரா ?
  3. ஆன்மீக வியாபாரிகளின் அடிதடி

கருவாடுக்கு எதிராக ‘தி இந்து’வின் பார்ப்பனத் திமிர் !

111

னநாயகத்தின் நான்காவது தூண், சமயத்தில் நான்கு தூண் பாரத்தையும் சுமப்பதாக காட்டிக் கொள்ளும். அவ்வகையில் ஊடகங்கள் மக்கள் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் போல நேரடி நடவடிக்கைகள் எடுத்து தமது கீர்த்தியை பறைசாற்றுவார்கள். இந்த நடவடிக்கைள் பெரும்பாலும் சாலை பள்ளம், விளக்கு பழுது, தேங்கிய குப்பை போன்ற ஆபத்தில்லாத விசயங்களில் இருக்கும். கொஞ்சம் விறுவிறுப்பு வேண்டுமென்றால் பாலியல் பிரச்சினைகளுக்காகவும் சாதாரண நபர்கள், சிறு குற்றவாளிகள் மீது நடவடிக்கைகள் எடுத்து ஆக்சன் ஹீரோவாக காட்டிக் கொள்வார்கள்.

கருவாடுஇதற்கெல்லாம் அதிகார மற்றும் போலீஸ் வர்க்கத்திடம் சில தொடர்புகள் இருந்தால் போதும். செய்திக்கு செய்தி, நடவடிக்கைக்கு நடவடிக்கை என வாசகர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஆனால் இந்த ஊடக புலிகள் எவையும் மக்கள் பிரச்சினைகளுக்கு காரணமான முதலாளிகள் அல்லது பெரும் நிறுவனங்களை மட்டும் தவிர்த்து விடுவார்கள். புரவலர்களின் தருமத்தை நாடி பிடித்து பார்ப்பது ஊடக அறமல்ல.

பொதுவாக பெருமாளுக்கு காக்கும் தொழில்தான் பார்ப்பனிய இந்து மதத்தில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுவே மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்றால் வேர்க்க விறுவிறுக்க கனஜோராக தொழில் நடக்கும்.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விதிகளை மீறி கருவாடு விற்பனை நடப்பதாக 17.08.2014 தேதியிட்ட “தி இந்து” (தமிழ்) நாளிதழில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த விதிமுறை மீறலுக்கு, “கௌரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்த்” போல லா பாயிண்டையும் எடுத்து போட்டிருக்கிறார், உலகளந்த பெருமாள்.

“தமிழ்நாடு குறிப்பிட்ட பொருள்களின் அங்காடி (அமைவிடம் முறைப்படுத்துதல்) சட்டம் 1996-ன்படி கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளை மட்டுமே விற்க வேண்டும்”. இதை மீறி கருவாடு விற்றதால் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்று மாம்பலம் மாமா-மாமிகள் சார்பாக பொங்கியிருந்தார், லார்டு லபக்குதாஸ்.

பெருமாளுக்கு கோபம் வந்து விசுவரூபம் எடுத்தால் லோகம் தாங்காது என்று பயந்த, கோயம்பேடு அங்காடி வளாக நிர்வாகக் குழு முதன்மை அலுவலர் பாஸ்கரன் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அலுவலக சகபாடிகளுக்கு உத்திரவு போட்டிருக்கிறார். உதவிப் பொறியாளர் ராஜன் பாபு தலைமையிலான ஊழியர்கள் திங்களன்று (18.08.2014) சோதனை நடத்தி 18 கடைகளில் கருவாடு விற்றதாக கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

விதியை மீறியதால் இந்த 18 கடைக்காரர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்புவார்களாம். தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டால் கடை உரிமம் ரத்து செய்யப்படுமென்றும் அதிகாரிகள் கூறியிருப்பதாக உப்பிலியப்பன் தனது வெற்றிச் செய்தியில் வெளியிட்டிருக்கிறார்.

இனி கோயம்பேடு வளாகத்தில் காய்கறி வாங்க வரும் சைவ உணவுப் பழக்கம் கொண்ட அவாள்கள், வெற்றிக்களிப்புடன் பூணூலை இழுத்து விட்டுக் கொண்டே சுத்தபத்தமான சூழலில், நறுமணத்துடன் காய்களை வாங்கி இன்புறலாம். கூடவே காலை நரசுஸ் காஃபி அருந்திக் கொண்டே தி இந்துவை படிக்கும் போது “நம்மவா என்னமா லோகத்துக்கு ஷேமம் செஞ்சுண்டுருக்கா” என்று புளகாங்கிதமும் அடையலாம்.

சீலா கருவாடு
சீலா கருவாடு

தமிழகத்தில் உள்ள நூற்றுக்கு நூறு பலசரக்கு கடைகளிலும் கதவருகே சரம் சரமாக தொங்க விடப்பட்டிருக்கும் கருவாடு பாக்கெட்டுகளை பார்க்கலாம். அங்கேயெல்லாம் எந்த ஜென்மமும் மூக்கை சுளித்ததில்லை. சுளித்திருந்தால் அண்ணாச்சிகளே வெளுத்திருப்பார்கள். இவ்வளவிற்கும் இந்த கடைகளில் இருக்கும் கருவாடுகளெல்லாம் விலை அதிகமில்லாத சிறு வகை கருவாடுகள்தான். இவற்றில் உப்பும், ஈக்கல் போன்ற எலும்பையும் தவிர வேறு எதுவும் இருக்காது. எனினும் உழைக்கும் மக்கள் மலிவு, மணம் கருதி சோற்றுக்கு தொடுகாயாக இதை சமைத்து உண்பார்கள். அறுசுவை விருந்துக்கோ குறைந்த பட்சம் காய்கறிகள் போட்டு செய்யும் சாம்பார் கூட பல குடும்பங்களில் வழியில்லை.

பழையதோ, கொஞ்சம் மோர் விட்டுக் கொண்டு கருவாட்டை பொறித்தோ வதக்கியோ சாப்பிடும் மக்கள் மீது இந்த பார்ப்பன வெறியர்களுக்கு என்ன ஒரு வன்மம்?

வஞ்சிரம், இறால் போன்ற விலை அதிகம் உள்ள கருவாடுகளெல்லாம் சற்று வசதிபடைத்தோரே வாங்குவார்கள். நீல்கிரிஸ், ரிலையன்ஸ் பிரஃஷ், ஃமோர் போன்ற தரகு முதலாளிகளின் தொடர் கடைகளில் கூட இறால், வஞ்சிரம் மீன்களின் ஊறுகாய் பாட்டில்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இது விதிமுறை மீறல் என்று ஆழ்வார்களின் ஆண்டவன் புகார் கடிதம் எழுதி அம்பானி மீது நடவடிக்கை எடுப்பாரா?

ஏற்கனவே “தி இந்து” அலுவலகத்தில் யாரும் அசைவ உணவு எடுத்துக் கொண்டு வரக் கூடாது என்று ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை இணையத்தில் பிரபலம். மகா விஷ்ணுவிடம் குப்பை கொட்டும் ஒரே குற்றத்திற்காக எது சாப்பிட வேண்டும், எது கூடாது என்பதையெல்லாம் கடைபிடிக்க வேண்டுமென்றால் இது பத்திரிகை அலுவலகமா இல்லை சங்கர மடமா?

ஜெயா, மோடிக்கு அஞ்சி, அஞ்சி பத்திரிகை நடத்தும் தி இந்துக் குழுமம், அதற்காக தனது ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் பலரை வெளியேற்றியிருக்கிறது. நல்லி எலும்போ, இல்லை மாட்டுக்கறி வறுவலோ சாப்பிடாத ஜென்மங்கள் மோடிக்கும், லேடிக்கும் இடுப்பெலும்பு முறிய சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதில் என்ன ஆச்சரியம்?

கருவாடு வறுவல்
கருவாடு வறுவல்

இந்த கருவாடு என்கவுண்டர் செய்தி வந்த அதே பக்கத்தில் “மண்ணடியில் தண்ணீர் விற்ற கடைகளுக்கு நோட்டீஸ் – ‘தி இந்து’ செய்தி எதிரொலி: ஒரே நாளில் அதிரடி” என்று மற்றொரு வெற்றி செய்தி வந்திருக்கிறது. சென்னை பாரிமுனை, மண்ணடியில் உள்ள பெட்டிக்கடைகளில் பிளாஸ்டிக் தொட்டிகளை வைத்து, தனியார் லாரிகள் மூலம் நீர் நிரப்பி, குடம் பத்து ரூபாய் என மக்களுக்கு விற்கிறார்களாம். இதை பரப்பிரம்மம் அம்பலப்படுத்திய பின் அதிகாரிகள் ஒரே நாளில் சோதனை செய்து நடவடிக்கை எடுத்து முடித்து விட்டார்கள்.

அரசு முறையாக நீர் கொடுக்க மறுப்பதினால்தானே இங்கே பெட்டிக்கடைகளிலேயே தண்ணீர் விற்கும் நிலை இருக்கிறது. நடுத்தர வர்க்கம் கேன் வாட்டரை 40, 50 ரூபாய்க்கு வாங்குவதெல்லாம் சாதாரண மக்களுக்கு சாத்தியமில்லை. முக்கியமாக இங்கே தண்ணீரே இல்லை. அந்த பெட்டிக்கடைக்காரர்கள் என்ன கஞ்சா விற்றார்களா, இல்லை தி இந்துவில் வரும் பங்கு சந்தை பக்கத்தில் மோசடி செய்யும் பெரும் நிறுவனங்களின் விளம்பரங்களை போட்டு நடுத்தர வர்க்க மக்களைத்தான் ஏமாற்றுகிறார்களா? இல்லை தண்ணீர் விற்பனையை எதிர்க்க வேண்டுமென்றால் பெப்சி, கோக்கை எதிர்த்து எழுதி ஒரே நாளில் நடவடிக்கை எடுத்து காட்டட்டுமே?

இவ்வளவு ரூல் பேசுகிறவர்கள் தமிழில் “தி இந்து” ஆரம்பித்த போது பாசிச ஜெயாவின் விஷன் 2020 எனும் இலவச இணைப்பை என்ன அறத்தில் கொண்டு வந்தார்கள்? இது பெயிட் நியூஸ் இல்லையா? அரசு விளம்பரங்கள் பெறுவதற்காக அதிமுக அரசுக்கு கூஜா தூக்கும் அடிமைத்தனம் இல்லையா? இதே போல சந்திரபாபு நாயுடு பதவியேற்பின் போதும் வெளியிட்டார்களே? உங்கள் அடிவருடித்தனத்தை கண்டிப்பதற்கு இங்கே மக்களிடம் அதிகாரம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் கருவாடு சாப்பிடும் எளிய மக்கள் மீது அடக்குமுறை செய்வீர்களா?

கோயம்பேடுக்கு வரும் பலசரக்கு கடை அண்ணாச்சிகள் மொத்தமாக காய்கள் வாங்குவது போல இந்த கருவாடு பாக்கெட்டுகளையும் வாங்கி மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். விற்பனைக்கு வழியில்லாத சிறிய மீன்களே இப்படி கருவாடாக தயாரிக்கப்பட்டு கடைகளுக்கு வருகின்றன. அந்த வகையில் மீனவர் மக்களுக்கு இது ஒரு சிறிய உதவியாக கிடைத்து வருகிறது. காரசாரமாக சாப்பிட ஆசையிருந்தும், மட்டனையோ, சிக்கனையோ அடிக்கடி வாங்க முடியாத மக்கள் அதிகம் விலையுள்ள மீன்களையும் வாங்குவது சாத்தியமல்ல.

இந்த இடத்தில்தான் அனைத்து தேவைகளையும் கருவாடு பூர்த்தி செய்கிறது. இதையும் கூட ஒழிக்க வேண்டுமென்றால் அவன் இந்த உலகிலேயே மிகப்பெரும் பயங்கரவாதியாக இருக்க வேண்டும். மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு சாட்சாத் தான்தான் அந்த பயங்கரவாதி என்று கம்பீரமாக தெரிவிக்கிறார்.

இன்றைய ‘தி இந்து’ நாளிதழில் எம்ஜிஆருக்கு கருவாடு விற்ற சைதாப்பேட்டை வணிகரைப் பற்றியெல்லாம் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். புரட்சித் தலைவியின் விருப்பத்திற்குரிய தலைவரின் கருவாடுக்கு தனி கவனிப்பு. புரட்சி நடத்த போகும் உழைக்கும் மக்களின் கருவாட்டுக்கு மட்டும் கருவறுப்பா? நடுப்பக்கத்தில் சமஸ் என்பவர் தமிழக மீனவ கிராமங்களுக்கு சென்று உயிரற்ற முறையில் மலிவான என்சைக்ளோப்பீடியா பாணியில் மீன்கள் குறித்தும்,கடல் குறித்தும் எழுதுகிறார். ஆனால் உயிருள்ள மக்கள் சாப்பிடும் கருவாடு மீது இவர்களுக்கு அருவெறுப்பு! சமஸ் கட்டுரை முதன்முதலாக கடலோர மக்கள் வாழ்க்கையை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டுகிறது என்று இந்து பத்திரிகையும் சொன்னது,அதையே பல கருவாடு சாப்பிடாத சைவ உணவுக்காரர்கள் பின்னூட்டங்களில் அங்கீகரித்தார்கள். இது நடிப்பு என்பதற்கு இந்துக் கருவாடு வெறுப்பே சாட்சி.

உழைக்கும் மக்கள், ஜனநாயக அமைப்புகள், மீனவர் சங்கங்கள், வணிகர் சங்கங்கள் அனைவரும் “தி இந்து”வை கண்டிக்க வேண்டும். அரசிடமும் விற்பனைக்கு அனுமதிக்குமாறு போராட வேண்டும். இதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் இணைய சுவரொட்டிகளை நண்பர்கள் பரவலாக பகிர்ந்து பரப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். மகா விஷ்ணு தொடுத்திருக்கும் பயங்கரவாதப் போருக்கு எதிராக படை சேருமாறும் அழைக்கிறோம்.

கருவாடு karuvadu_en

திஹார் சிறையில் சஹாராவின் கார்ப்பரேட் அலுவகம் !

7

ளவாணிகளுக்கு நம் ஊரில் என்ன மதிப்பு என்பது நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும். பேருந்தில் எதேச்சையாக மாட்டிக் கொள்ளும் ஜேப்படித் திருடர்களை பொதுமக்கள் ‘கவனிப்பதும்’ நாம் காணாத காட்சிகள் அல்ல. சொம்பு களவாணிகளும், கோழி களவாணிகளும் பிறப்பெடுத்ததே அவ்வப்போது போலீசு பூட்சுகளின் உறுதியை சோதித்துப் பார்த்துக் கொள்வதற்காகத் தான் என்பதும் எழுதப்படாத சட்டம்.

சுப்ரதா ராய்
‘சுல்தான்’ சுப்ரதா ராய்

ஆனால், நமது புண்ணிய பாரதத் தாய் வெள்ளைக்காரனிடம் இருந்து விவாகரத்து பெற்று இந்திய ஓனர்களின் கையில் மாட்டிக் கொண்ட சம்பவ நாளிலிருந்து – அட, அதுதாங்க ‘சுதந்திரம்’ பெற்ற நாளில் இருந்து யாருக்காக சேவை ஆற்றி வருகிறாள் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள இன்றைக்கு சகாராவின் சுப்ரதா ராய் வாழ்ந்து வரும் வாழ்க்கையைப் புரிந்து கொண்டாலே போதுமானது.

சுப்ரதா ராய் குறித்து வினவு வாசகர்களுக்கு புதிதாக அறிமுகம் செய்யத் தேவையில்லை. ஈரோட்டு ஈமு கோழி யாவாரத்தை அகில இந்திய அளவில் மிகப் பெரிய பிளேடு கம்பேனிகளின் பெயர்களின் கீழ் நடத்திய சூட்டு கோட்டு போட்ட பிளேடு பக்கிரி தான் சுப்ரதா ராய்.

தங்களைத் தாங்களே முதலீட்டாளர்கள் என்று மூடநம்பிக்கை வைத்திருக்கும் பேராசை கொண்ட அப்புராணிகளிடமிருந்து முதலீடு என்ற நாகரீகமான பெயரில் 17,000 கோடி ரூபாய்களை சுப்ரதா ராய் ஆட்டையைப் போட்டிருந்தார்.

லோக்கல் திருடர்கள் என்றால் திருடிய காசில் உல்லாசமாக இருக்க தினத்தந்தியின் ‘அழகிகளிடம்’ செல்லும் வழியில் போலீசு மடக்கி பிடரியில் ரெண்டு தட்டி பிடித்து வந்து கைலியோடு குந்த வைத்து போட்டோ பிடித்து நாளிதழ்களில் விளம்பரம் கொடுப்பார்கள். மீட்கப்பட்ட தேட்டையில் போலீசு அடித்த உள்திருட்டு போக எஞ்சியதை பரிகொடுத்தவர்களுக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் வழங்கும் வைபவமும் தினத்தந்தி புகைப்படக் கலைஞரின் முன்னிலையில் நடக்கும். நாம் தான் பலமுறை பார்த்திருக்கிறோமே?

ஆனால், சுப்ரதா ராய் அகில இந்திய அளவில் தொழில் அதிபர் அல்லவா?

எனவே அவரைக் கோழி அமுக்குவது போல் அமுக்கி மயிலைப் பராமரிப்பது போல் சீராட்டி வருகிறது மத்திய அரசு. அன்னார் தனது முதலீட்டாளர்களிடம் ஜேப்படி செய்த தொகையில் ஒரு பகுதியை – அதாவது சுமார் 9.7 ஆயிரம் கோடி ரூபாய்களைத் திரட்ட அன்னாருக்குச் சொந்தமாக லண்டனிலும், நியூயார்க்கிலும் உள்ள இரண்டு ஆடம்பர விடுதிகள் உள்ளிட்ட மூன்று நட்சத்திர விடுதிகளை விற்க தற்போது முயற்சித்து வருகிறார்.  அன்னாரின் முயற்சிக்கு உறுதுணையாக திகார் சிறையில் சுமார் 600 சதுர அடிக்கு நவீன பாணி அலுவலகம் ஒன்றை சிறை நிர்வாகம் அமைத்துக் கொடுத்துள்ளது.

இந்த நவீன அலுவலகத்தில் இருந்து சுப்ரதா ராய் இணையம் பாவித்துக் கொள்ளலாம், தொலைபேசிக் கொள்ளலாம், எந்த நேரத்திலும் யாரும் அவரை வந்து சந்திக்கலாம், காணொளிக் கலந்துரையாடல்களில் (video conference) பங்கெடுத்துக் கொள்ளலாம். இந்த நவீன வசதிகளைப் பயன்படுத்தி மேற்படி பிளேடு பரந்தாமன் வரும் ஆகஸ்டு 20-ம் தேதிக்குள் பணத்தைத் திரட்ட வேண்டும் என்று நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. ஆனால், பாருங்கள் அவரால் நீதிமன்றம் கெடுவுக்குள் விற்க முடியாமல் போய் விட்டது. எனவே தனது சுகபோகங்களுக்கு மேலும் பதினைந்து நாள் நீட்டிப்பு கேட்டிருக்கிறார்.

தற்போது புருனே சுல்தான் மேற்படி நட்சத்திர விடுதிகளை வாங்க யோசிப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஒரு சுல்தானின் கஷ்டத்தை இன்னொரு சுல்தான்தான் புரிந்து கொள்ள முடியும். ஆனால் புருனேயில் சுல்தான்தான் கடவுள், இங்கேயும் சுல்தான்கள் கடவுள்தான் என்றாலும் ஏகப்பட்ட பேர்கள் இருப்பதால் தனி மரியாதை சுற்று முறையில்தான் வரும்.

பதினைந்து நாட்களுக்குப் பிறகாவது அவரைக் குப்புறப் போட்டு பல்ராம் நாயுடுவின் ஹைதரபாத் லாட்டின்னா என்னவென்று காட்டுவார்களா என்ன? கிடையாது, அதன் பின் வெளியே வந்து சொந்தக் காசில் சுக போகங்களைத் தொடர்வார்.

சீமைப் பசு போஸ்டர் தின்னும் காட்சியைக் கூட பார்த்து விடலாம்; ஆனால் இந்தியாவில் முதலாளிகளுக்கு வியர்த்து பார்க்கவே முடியாது. அதிலும் அந்த வியர்வைக்கு நீதிமன்றமோ அரசாங்கமோ தெரியாமல் கூட காரண கர்த்தாவாக  இருந்து விட முடியாது. ஏற்கனவே சென்ற ஆண்டு தனது ஊழியர்கள் 11 லட்சம் பேரை ஒரே நேரத்தில் தேசிய கீதம் பாட வைத்து கின்னஸ் சாதனை வேறு படைத்திருக்கிறார். பாரத மாதவுக்கே பன்னீர் தெளித்த தேச பக்தரை, பாரத மாதாவின் தவப்புதல்வரான மோடி ஆட்சியில் கை விடுவார்களா என்ன?

“துறவிய போல ஜெயா – சசி” கேலிச்சித்திரம்

0

140819-jaya-sasi-caption

ஜெயா - சசி சொத்துக்குவிப்பு

ஒரு ரூபா சம்பளம் வாங்கின காலத்தில இருந்து இப்ப வரைக்கும் ஒரு ‘தொறவிய’ போல ஜனங்களுக்காக, ‘ஒழச்சு ஒழச்சு’ ஓடா தேய்ஞ்சுகிட்டு இருக்கிற ஒங்கள போயி சொத்து குவிப்பு… அப்படி… இப்படின்னு… கேஸப் போட்டாங்களேக்கா…!

இந்த வழக்குக்காக நாம அலைஞ்ச நேரத்த உருப்படியா செலவு செஞ்சிருந்தா இந்நேரம் தமிழ்நாட்ட ‘வாடகைக்கு’ விட்டுருக்கலாம்!

படம் : ஓவியர் முகிலன்