Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 740

ரஜினிக்கு 240 கோடி, ராபர்ட் வதேராவுக்கு 300 கோடி…எப்படி?

8
ஹன்ஸ்-ராஜ்-சக்சேனா
ஹன்ஸ் ராஜ் சக்சேனா

“நதிமூலம், ரிஷிமூலம் மட்டுமல்ல தரகு முதலாளிகளுக்கு வரும் நிதிமூலத்தையும் ஆராயக் கூடாது.” அப்படித்தான் இந்திய அரசும் இந்திய ஊடகங்களும் நினைக்கின்றன.

இதற்கு உதாரணம், சக்சேனா. ஹன்ஸ்ராஜ் சக்சேனா. முன்னாள் சன் பிக்சர்சின் தலைமை செயல் அதிகாரியான இவர், சென்ற ஆண்டு கைது செய்யப்பட்டார். சன் பிக்சர்சுக்கு தமிழ்ப் படங்களை வாங்கிய விதத்தில் ஏகப்பட்ட முறைகேடுகளை செய்ததாகவும், பண விஷயத்தில் தயாரிப்பாளர்களை ஏமாற்றியதாகவும் புகார் வந்ததை அடுத்து இந்த கைது நடவடிக்கை அரங்கேறியது. உடனே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர், பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

இதெல்லாம் பழைய செய்திகள். அனைவரும் அறிந்த தகவல்கள். இதனை தொடர்ந்து காவலர்கள் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக நீதி மன்றத்தில் இவர் அழுத காட்சி, உருக்கமான புகைப்படமாக நாளிதழ்களில் வெளியாகின. தொடையில் காயம், முக வீக்கம், நடக்க முடியாமல் தடுமாற்றம் என பீம்சிங் படங்களுக்கு இணையான உணர்ச்சிப்பூர்வமான கட்டம், காட்சி ஊடகங்களை நிரப்பின. இவருடன் கைதானவரும், இவருடன் இணைந்து பணிபுரிந்தவருமான அய்யப்பன், தன் இடுப்பில் வேட்டியை கட்ட முடியாமல் கட்டியிருந்தார். செய்தியாளர்கள் முன்பு வாய் விட்டு கதறி அழுதார்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், இந்தக் கைது நடவடிக்கை நடந்ததால், ‘அம்மாவின்’ வீரம் பக்கம் பக்கமாக புகழப்பட்டது. இனி தமிழ்ச் சினிமா பிழைக்கும்… மாஃபியாக்களின் ஆதிக்கத்தில் இருந்து தமிழ்ச் சினிமாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்திருக்கிறார்…’ என்றெல்லாம் பிரபலங்கள் பேட்டி கொடுத்தார்கள். கடந்த ஆட்சியில் சன் பிக்சர்ஸ் அடித்த கொட்டங்கள் கவர் ஸ்டோரியாக மின்னின.

சில மாதங்கள் கழித்து சக்சேனா, அய்யப்பன், தம்பிதுரை ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இவர்கள் மூவரையும் உடனடியாக சன் நெட் ஓர்க் பணி நீக்கம் செய்தது. இதன் மூலம், சன் நெட் ஓர்க் புனிதமான நிறுவனம் போலவும், அதன் பெயரைச் சொல்லி சக்சேனா மட்டுமே அடாவடி செய்ததாகவும் ஒரு சித்திரம் உருவானது.

இதுவரை சொல்லப்பட்டவை அனைத்தும் கடந்த ஆண்டு நிகழ்ந்தவை.

இந்த ஆண்டு இதற்கு நேர் மாறாக சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன. ‘அது வேற வாய்… இது நார வாய்…’ என்ற வடிவேலுவின் நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது!

தன்னுடன் சன் பிக்சர்சில் பணியாற்றியவர்களும், தன்னுடன் சேர்ந்து குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்களும், தன்னுடன் சேர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுமான அய்யப்பன், தம்பிதுரை ஆகியோருடன் இணைந்து இப்போது சக்சேனா, தமிழ்ப் படங்களை வெளியிட்டு வருகிறார். எந்த தயாரிப்பாளர் சங்கம் இவர்கள் கைது செய்யப்பட்டதை பட்டாசு வெடித்து கொண்டாடியதோ, அதே கவுன்சிலை சேர்ந்தவர்கள் இப்போது சக்சேனாவுடன் பட வெளியீடு குறித்து பேசி வருகின்றனர்.

அத்துடன் ‘சன் பிக்சர்ஸ்’ போல ‘சாக்ஸ் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தையும் இவர் தொடங்கியிருக்கிறார். ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை குறித்து உருவான ‘சாருலதா’ படத்தை தமிழகம் முழுக்க வெளியிட்டது ‘சாக்ஸ் பிக்சர்ஸ்’தான்.

இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு சத்யம் திரையரங்கில் நடந்தது. அப்போது பேசிய சக்சேனா, சன் டிவி தன்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டதையும், தனக்கு ஏற்ப்பட்ட துன்பங்களிலிருந்து தான் மீண்டடெழுவதற்கு முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார். அந்த முயற்சின் தொடக்கமே ‘சாக்ஸ் பிக்சர்ஸ்’ எனவும் குறிப்பிட்டார். இந்த பேனரில் மேலும் படங்களை அவர் தயாரிக்கவுள்ளதாகவும், அது தவிர வரும் ஜனவரி 15, தைப்பொங்கல் தினத்தில் புதிய தமிழ் தொலைக்காட்சியை ஆரம்பிக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டார். இத் தொலைக்காட்சிச் சேவை சிறுபடத் தயாரிப்பாளர்களுக்கு உதவும் நோக்கினை முதன்மையாகக் கொண்டிருக்கும் என்றும் திருவாய் மலர்ந்தார்.

அதாவது எந்த சிறு தயாரிப்பாளர்களை சாக்ஸ் அழிக்க முயற்சித்தார் என முன்பு குற்றம்சாட்டப்பட்டாரோ, அதே சிறு தயாரிப்பாளர்களைத்தான் இப்போது ஆதரித்து கரை சேர்க்கும் அவதாரமாக மலர்ந்திருக்கிறார்.

இதையே ‘சுண்டாட்டம்’ பட ஆடியோ வெளியீட்டின்போதும் குறிப்பிட்டிருக்கிறார். தன்னால் தமிழகம் முழுக்க 200 திரையரங்குகளில் ஒரு படத்தை வெளியிட முடியும் என்று சொல்லியிருக்கிறார்.

அதாவது அக்யூஸ்டின் கையில்தான் கஜானா சாவி இப்போதும் இருக்கிறது!

இவையனைத்தையும் தூக்கி சாப்பிடும் விதமாக ஒரு செய்தி, தமிழ்த் திரையுலகம் முழுக்க பரவி வருகிறது. ரஜினியை வைத்து படம் தயாரிக்க இவர் முடிவு செய்திருக்கிறாராம். இதற்காக ரஜினியை அணுகி பேசியிருக்கிறாராம். 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும். நாள் ஒன்றுக்கு ரூபாய் 8 கோடி வீதம், ரூபாய் 240 கோடியை சம்பளமாக தருகிறேன் என தூண்டில் வீசியிருப்பதாகவும், யோசித்து சொல்வதாக ரஜினி சொல்லியிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

இதை சாக்ஸ், மறுக்கவில்லை. ‘எல்லா தயாரிப்பாளர்களையும் போல் நானும் ரஜினியை வைத்து படம் தயாரிக்க விரும்புகிறேன்…’ என பட்டும்படாமலும் பதில் சொல்லியிருக்கிறார். ஆனால், ரூ.240 கோடி சம்பளமா என்பதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். ஒருவேளை ரஜினி, இவர் தயாரிப்பில் நடித்தாலும் உண்மையான சம்பளம் வெளியில் தெரியாது என்பதே உண்மை.

இது ஒருபுறம் இருக்கட்டும்.

தலைமை செயல் அதிகாரியாக சன் பிக்சர்சில் பணிபுரிந்த இவர், லட்சங்களில் சம்பளம் வாங்கியவர். சன் டிவிக்கு படம் வாங்கிய வகையில் கமிஷன் அடித்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு. மற்றபடி சாதாரண குமாஸ்தாவின் மகன். கலாநிதி மாறனின் கல்லூரி கால நண்பர். பரம்பரை சொத்தெல்லாம் கிடையாது.

அப்படிப்பட்டவருக்கு இப்போது எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது? சிறு படங்களை தொடர்ச்சியாக வெளியிட ஆரம்பித்திருப்பவர், தனியாக தொலைக்காட்சி ஒன்றை உருவாக்க இருப்பவர், ரஜினியை வைத்து படம் தயாரிக்க விரும்புபவர், இவர்தான். பகிரங்கமாக இதை சொல்லியிருப்பவரும் இவரேதான். இதற்கெல்லாம் மூலதனம் எங்கிருந்து வருகிறது? யார் கொடுக்கிறார்கள்?

சாதாரணமாக ஒரு மாடு வாங்க வேண்டும் என்றால் கூட என்ன சொத்து இருக்கிறது… எப்படி வட்டியுடன் திருப்புவாய், யார் ஜாமீன் கையெழுத்து போடுவார்கள்… என்றெல்லாம் கடன் கொடுப்பவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள். அப்படியிருக்க கோடிக்கணக்கில் எந்த உத்திரவாதத்துடன் யார் இவருக்கு கடன் கொடுக்கிறார்கள்? யார் இவர் சார்பாக ஜாமீன் கையெழுத்து போடுகிறார்கள்?

சன் டிவியால், தான் ஏமாற்றப்பட்டதாக அழுது புலம்புகிறார். ஆனால், இவர் வெளியிடும் அனைத்துப் படங்களின் தொலைக்காட்சி உரிமங்களையும் சன் டிவியே வாங்கியிருக்கிறது. அவ்வளவு ஏன்,  ‘சாக்ஸ் பிக்சர்ஸ்’ பெருமையுடன் வழங்கும் என்ற லோகோவுடன் ரிலீசான ‘சாருலதா’ படத்தின் சேட்டிலைட் உரிமை சன் டிவியிடம்தான் இருக்கிறது. அப்பட தொடர்பான புரொமோஷன் நிகழ்ச்சிகளும் சன் டிவியில்தான் அதிகளவில் ஒளிபரப்பானது. தவிர, அய்யப்பனின் உறவினர் வில்லனாக நடித்த ‘தடையறத் தாக்க’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தையும் அதே சன் டிவிதான் வாங்கியிருக்கிறது.

காங்கிரசு கட்சியின் தலைவியான சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா இப்படித்தான் ரூபாய் 300 கோடிக்கு அதிபதியாகி இருக்கிறார். என்ன தொழிலை அவர் செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், ரூபாய் 50 லட்சம் மூலதனத்தில் அவர் தொடங்கிய தொழில், இப்போது ரூபாய் 300 கோடி மதிப்புள்ளதாக மாறியிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய வீடு, மனை, நிலம் விற்பனை நிறுவனமான டி.எல்.எஃப்., வதேராவுக்கு நம்பிக்கையின் பேரில் வட்டியில்லாமல் ரூபாய் 65 கோடியை கடனாக கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், இதுபோல் எல்லா நிறுவனங்களுக்கும் எந்தப் பிணையும் இல்லாமல் டி.எல்.எஃப்., ரூபாய் 65 கோடியை வாரி வழங்குமா?

விடை தெரியாத கேள்வி அல்ல. பதில் சொல்ல விருப்பமில்லாத வினா இது.

வதேராவுக்கு எதன் பேரில் டி.எல்.எஃப்., ‘கடன்’ கொடுத்ததோ, அப்படித்தான் சக்சேனாவுக்கும் ‘கடன்’ கிடைக்கிறது போலும். சோனியாவின் மருமகன் என்ற அந்தஸ்து வதேராவுக்கு இருப்பதால் அவரால் குறுகிய காலத்தில் மிகப்பெரும் தொழிலதிபராக உயர முடிந்திருக்கிறது. அவருக்கு உதவிய டி.எல்.எஃப் போன்ற நிறுவனங்கள் பிரதிபலனாக தமது தொழிலை விரிவுபடுத்தியிருக்கின்றன.

ஆனால் அரசியல்வாதிகளின் இத்தகைய ஊழல்கள் வெளிவருவது போல முதலாளிகளின் ஊழல்கள் வெளிவருவதில்லை. அதுதான் சக்சேனா விசயத்திலும் நடக்கிறது. இவருக்கு ஏது இவ்வளவு பணம் என்ற கேள்வியை எந்த ஊடகமும் எழுப்பவில்லை. மேலும் யாருடைய பணம் ரஜினிக்கு 240 கோடி ரூபாய் வருமானமாக போகிறது என்பதும், அவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தின் வசூலை எப்படி எடுப்பார்கள், இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் கருப்பு பணமாய் மட்டும் செய்யப்படும் மர்மம் எல்லாம் கண்டுபிடிக்க முடியாதவை.

ஆனால் ரஜினி படத்திற்கு கிடைக்கும் விளம்பர வருவாயை மனதில் கொண்டு ஊடகங்கள் அனைத்தும் இது பற்றி கள்ள மௌனம் சாதிக்கும். அதனால்தான் வதேரா கேள்விக்கு உட்படுத்தப்பட்டது போல சக்சேனா விசாரணைக்குள் வரமாட்டார்.

நதிமூலம், ரிஷிமூலம் மட்டுமல்ல தரகு முதலாளிகளுக்கு வரும் நிதிமூலத்தையும் ஆராய வேண்டும். பகிரங்கமாக அம்பலப்படுத்த வேண்டும். அப்போதுதான் கஜானாவின் சாவி திருடர்களிடமே இருக்கும் விந்தையை மக்கள் அறிந்து கொள்வார்கள்.

படிக்க

மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு? மெடிகல் ரெப் விளக்குகிறார்….

19

மருந்து-கம்பெனி

“டாக்டர் ஆகனும் நாட்டுக்காக சேவை செய்யனும் அதுதான் என் லட்சியம்” பத்தாம் வகுப்பு வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளிவந்ததும் தமிழக பத்திரிகைகளில் மாணவர்களின் புகைப்படங்களுடன் இது போன்ற செய்திகள் வரும். அடுத்த வருடம் அதே செய்தி வேறு மாணவர்களின் புகைப்படத்துடன் வரும். இவர்கள் அனைவருமே மருத்துவர்களாகிவிடுகிறார்களா ?

எனது நண்பனும் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியானதும் இப்படித்தான் சொன்னான். பிறகு பன்னிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண்கள் குறைந்ததால் சீட் கிடைக்கவில்லை. வழியின்றி எம்.எஸ்.சி. மைக்ரோபையாலஜி படித்தான். வேலை தேடி அலைந்தபோது, சரியான வேலை கிடைக்காததால் மருந்து விற்பனைப் பிரதிநிதி (மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ்) ஆனான். அது சென்னை நிறுவனம். மாதம் பத்தாயிரம் சம்பளம், பெட்ரோல் அலவன்ஸ், செல்போன் பில், இன்சென்டிவ் என சுகமான வாழ்க்கை அவன் விரும்பிய மருத்துவ துறையிலேயே கிடைத்தது.

ஓரிரு ஆண்டுகளில் பதவி உயர்வுடன் ஒரு பன்னாட்டு கம்பெனிக்கு சென்றுவிட்டான். மாதச்சம்பளம் பதினெட்டாயிரம், புது வண்டி, புளூ பேன்ட், புளூ ஷர்ட், புளூ டை, ஷூ என்று அவன் வீட்டிலிருந்து வெளியே வரும் ஒவ்வொரு நாளும் எனக்கு பொறாமையாக இருக்கும்.   விரைவில் தனது கல்விக்கான கடனைக்கூட அடைத்துவிட்டான். இப்போது வீடு கட்டிக்கொண்டிருக்கிறான். நான் இன்னும் அதே ஓட்டை வண்டியில் தான் சுற்றிக்கொண்டிருக்கிறேன். எங்கள் தெருவில் அனைவருமே அவனை பாராட்டுவார்கள்.

அவன் பணிபுரியும் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட, அந்த மருந்து கம்பெனியில் மொத்தம் ஐம்பது வகையான மருந்துகளை விற்கிறார்கள். இவனுடைய பிரிவின் கீழ் மட்டும் பதினெட்டு வகை மருந்துகள். காலையிலும் மாலையிலும் வெவ்வேறு பகுதி மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவர்களை சந்தித்து, தனது கம்பெனி மருந்துகளை அறிமுகப்படுத்தி அவை என்னென்ன நோய்களை எல்லாம் குணப்படுத்தும் என்பதை மருத்துவர்களுக்கு கூறுவான். அதன் பிறகு சில சந்திப்புகளில் மருத்துவருடனான நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டதும் சில இலவச மருந்துகளை கொடுத்து டிரை பன்னி பாருங்க சார் ரிசல்ட் நல்லா இருக்கும் என்று சில மருந்துகளை இலவசமாக கொடுப்பான்.

மருத்துவர்களும் அவற்றை சிலருக்கு இலவசமாக வழங்குவார்கள். அந்த மருந்து அட்டைகளில் விலை அச்சிடப்பட்டிருக்காது. இலவச மருந்துகள் வேலை செய்கிறதா ? என்பதை அறிந்துகொண்ட பிறகு, மருத்துவர் அதை பரிந்துரைப்பார். அத்துடன் தனது மருத்துவகத்திற்கு அருகில் உள்ள மருந்துக் கடைகளில் அந்த குறிப்பிட்ட மருந்துகளை வாங்கி வைக்கச் சொல்லிவிடுவார். உடனே இவன் அந்த கடையை அணுகி டாக்டர் இந்த மருந்துகளை பரிந்துரைக்கத் துவங்கிவிட்டார். அவை எங்களுடைய கம்பெனி மருந்துகள் தான் உங்களுக்கு இந்த மருந்தில் இத்தனை சதம் கமிஷன், எவ்வளவு வேண்டும் என்று ஆர்டர் எடுத்துக்கொள்வான். அத்துடன் நமது நண்பன் கம்பெனி கொடுக்கும் சிறு சிறு அன்பளிப்புகளை உடனுக்குடன் டாக்டரிடம் வழங்கி தனது நிறுவன மருந்துகளையும் நினைவில் நிறுத்துவான்.

மருந்து-கம்பெனி-3நீங்கள் செல்லும் மருத்துவமனைகளில் பார்க்கலாம். பேப்பர் வெயிட் இருக்கும். உள்ளே ஒரு மாத்திரையின் பெயர் இருக்கும். உடற்கூறு படம், டார்ச் லைட், எடைபோடும் இயந்திரம், முட்டியைத் தட்டிப் பார்க்கும் கருவி, பிரசர் செக் கருவி என அனைத்தும் இருக்கும். அனைத்திலும் பலவகையான விளம்பரங்கள் பதிக்கப்பட்டிருக்கும். இவை அனைத்தையும் மருத்துவர்களுக்கு மருந்து கம்பெனிகள் தான் வழங்குகின்றன.

இப்படி எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் இவன் அறிமுகம் செய்த மருந்துகளை பரிந்துரைத்த மருத்துவர் திடீரென்று அவற்றை குறைத்துக் கொண்டாலோ, அல்லது வேண்டுமென்றே வேறு மருந்துகளை பரிந்துரைத்தாலோ நண்பன் உடனே தனது மேனேஜரை அழைத்துக்கொண்டு மருத்துவரை சந்திப்பான்.

சில புதிய ஆஃபர்கள் வந்திருப்பது போல பேசி மீண்டும் தனது மருந்துகளையே பரிந்துரைக்க வைப்பான். அதற்காக தான் மேனேஜரை உடன் அழைத்துச் செல்கிறான். அவர் இப்போது தூண்டிலில் சில பெரிய புழுக்களை போடுவார். மருத்துவரை மொத்தமாக அமுக்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்களையும், FAMILY TOUR கூப்பன்களையும் வழங்குவார். அவை உள்நாடு வெளிநாடு என்று பேரத்தை பொருத்து அமையும். மருத்துவர் அதற்கும் அடங்கவில்லை என்றால் நேரடியாக பணம் வெட்டப்படும் !

சூளைமேட்டில் ஒரு மருத்துவர், மனைவி நகைகளை எல்லாம் விற்று கடன்பட்டு புதிதாக ஒரு மருத்துவமனை கட்டியிருக்கிறார். இவரைப் போன்ற சிலர் கடனைக் கட்ட வேண்டும் என்ன செய்வது ? என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இலவச மருந்துகள் வேண்டாம், பொருட்களும் வேண்டாம் நேரடியாகவே விசயத்திற்கு வருகிறோம் என்று ஒவ்வொரு கம்பெனியுடனும் ஒரு உடன்பாட்டிற்கு வருகிறார்கள். அவை அனைத்தும் மிகப்பெரிய மருந்து கம்பெனிகள்.

டயாபடீஸ் ஸ்பெசலிஸ்டா ?

வருசத்துக்கு பத்து லட்சத்துக்கு பரிந்துரைத்தால் எனக்கு எத்தனை சதவீதம் ?

என துறை வாரியாக சதவீத கணக்கில் பேரம் பேசி பரிந்துரை செய்கிறார்கள்.

எனக்கு தெரிந்து தி.நகரில் உள்ள அகார்டு ஓட்டலில் மாதம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை துவங்கி நள்ளிரவு வரை கீழ்தளத்தில் விருந்துகள் நடைபெறும். DOCTOR’S CONFERENCE என்கிற பெயரில் நடத்தப்படும் சோரம் போகும் இந்த விழாவில் பேருக்கு சில மருத்துவர்களை பேச சொல்வார்கள். பிறகு தான் உண்மையான டாக்டர்ஸ் கான்பரன்ஸ் துவங்கும் ! அந்த மருந்து கம்பெனியின் மூத்த அதிகாரிகள் பேசுவார்கள். பிறகு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வண்ண வண்ண மது வகைகள் விருந்தளிக்கப்படும். அதன் பிறகு உணவு வகைகள் பரிமாறப்படும். இந்த கூட்டங்களுக்கு பெண் மருத்துவர்களும் வருவதுண்டு. ஒவ்வொரு கூட்டங்களிலும் மருத்துவர்கள் போதை அதிகமாகி சரிந்து விழுவது நடக்கும்.

கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விசயம் இங்கு வரும் மருத்துவர்கள் யாரும் சொந்த வாகனங்களில் வருவது இல்லை.இவர்களை அழைத்து வருவதற்காக விலையுயர்ந்த தனியார் வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தப்படுகின்றன. மாலை கூட்டம் துவங்கியது முதல் நள்ளிரவு வீட்டில் கொண்டு சேர்ப்பது வரை அனைத்தையும் மெடிக்கல் ரெப்புகள் செய்வார்கள். கவனிப்புகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் இது போன்ற சிறப்பு கவனிப்புகள் குறிப்பிட்டவகை ஸ்பெஷலிஸ்டுகளுக்கு மட்டும் தான்.

கம்பெனிகளுக்கு மிகவும் அதிக வருமானம் ஈட்டித் தரும் மருத்துவர்களையும், பிரபல மருத்துவர்களையும் கவனிக்கும் விதமே வேறு. இவர்களுக்கான டாக்டர்ஸ் கான்பரன்ஸ் அயல்நாடுகளில்தான் நடக்கும். அதிலும் மது, மாது, உணவு என சகல சௌபாக்கியங்களும் உண்டு. அதே நேரத்தில் அனைத்து மருத்துவர்களும் இவ்வாறு இல்லை. எனினும் ஏதோ ஒரு வகையில் அனைத்து மருத்துவர்களும் மருந்து கம்பெனிகளிடமிருந்து எதையாவது பெறுகிறார்கள். ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் மிகப்பெரும்பான்மையினர் இப்படி தான் உள்ளனர்.

அடுத்து ஒரு குறிப்பிட்ட மருந்தின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று நிறுவனம் முடிவு செய்துவிட்டால், அதற்கு தேவை இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை, அதை விற்றாக வேண்டும். மருந்துகளை மொத்தமாக விற்கும் விற்பனையாளர்களையும், மருந்து கடைக்காரர்களையும் அணுகி வழக்கமா கொடுக்கிற கமிஷனை விட அதிகமா தர்றோம், கூடவே இலவச மருந்துகளையும் தருகிறோம் என்று பேசி அந்த குறிப்பிட்ட வகை மருந்துகளை தள்ளிவிடுகின்றனர்.

மருந்து-கம்பெனிஇன்னொரு முக்கியமான விசயம். மருத்துவர்களுக்கு வழங்குவதற்காக கொடுக்கப்படும் இலவச மருந்துகளை குறிப்பிட்ட அளவுதான் கொடுக்க முடியும். மீதம் உள்ளதை என்ன செய்கிறார்கள் ? இங்கே தான் ராதாகிருஷ்ணன் வருகிறான். ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் ராதாகிருஷ்ணன் விலை அச்சிடப்படாத இந்த இலவச மருந்துகளை மொத்தமாக அள்ளிச் செல்கிறான் !

பத்து ரூபாய் மருந்துக்கு இரண்டு ரூபாய் ஐம்பது பைசா தருகிறான். இந்த கழிவு விலையில் மெடிக்கல் ரெப்புகள் தமது அறைகளில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து மருந்துகளையும் ராதாகிருஷ்ணன் வரும் ஒரு நல்ல நாளில் விற்றுவிடுவார்கள். அவற்றை ஆந்திராவுக்கு எடுத்துச்செல்வது தான் ராதாகிருஷ்ணனின் வேலை. அதன் பிறகு அவை எந்த மாநிலத்து ஏழை மக்களுக்கு வழங்கப்படுகின்றன என்பது தெரியவில்லை !

அரசு நிறுவனங்களால் ஐம்பது பைசா, ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அதே மாத்திரைகள் இப்போது பன்னாட்டு நிறுவனங்களால் ஏழு ரூபாய்க்கும், எட்டு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு உள்நாட்டில் அதிகபட்சமாக 8,800 ரூபாய்க்கு தயாரிப்பட்ட மருந்துகள், பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மருந்து சந்தைக்குள் நுழைந்த பிறகு ஒரு லட்சம் வரை விற்கப்படுகிறது.

♦♦♦♦

நானும் உழைச்சு தான் சாப்பிடுகிறேன் என்கிறார்கள் மெடிக்கல் ரெப்புகள் ! மருத்துவர்களுக்கு நடப்பதை போலவே இவர்களுக்கும் மாதா மாதம் மீட்டிங் நடைபெறுகிறது. அதில் மருத்துவர்களை எப்படி அணுக வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்படி வீழத்த வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சி உரைகளுக்கு பிறகு இவர்களை உற்சாகப்படுத்த உற்சாக பானங்களும், உணவும், பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

பன்னாட்டு நிறுவனங்களுக்காக மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் இப்படித்தான் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்களும் மருந்துச் சீட்டு எழுதும் போது நோயாளியின் நோயைப் பற்றி மட்டும் நினைத்துக் கொள்வதற்குப் பதில் தனக்கு கிடைக்கும் பரிசு, சலுகைகளை நினைத்தவாறு எழுதுகிறார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருக்கும் மருத்துவத் துறை இப்படித்தான் இயங்குகிறது. முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் தொழில் அறம் என்பது இதுதானே?

மேலும் படிக்க


______________________________

– மல்லன்.
___________________________

வெனிசுவேலா: இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் நாடு!

9

வெனிசுவேலாவில் வீட்டில் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பெண்களின் வேலை அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் வயதான காலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக முறை சாரா துறைகளில் வேலை பார்க்கும் உழைக்கும் மக்களும், வெளியில் சென்று வேலை பார்க்காமல் குடும்பத்தை கவனித்துக் கொள்வதில் தமது வாழ்நாளை செலவிடும் பெண்களும் வயதான பிறகும் தொடர்ந்து உழைக்க வேண்டியிருக்கிறது, முடியா விட்டால் தமது குழந்தைகள் அல்லது உறவினர்கள் தயவில் அல்லது தரும பிரபுக்களின் தயவில் காலத்தை ஓட்டி வேண்டியிருக்கிறது.

உழைக்க முடியாதபடி உடல் நிலை தளரும் போது சாகும் வரை ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் கௌரவத்துடன் வாழ்வது போல மற்ற பிரிவினர் வாழ முடிவதில்லை என்பது நிதர்சனம்.

திரிசூலம் ரயில் நிலையம் அருகில் மலைக்கு போகும் வழியில் ஒரு பாட்டியை பார்த்தோம். அவருக்கு சுமார் 70 வயது இருக்கலாம். இரண்டு மகள்களாம். தஞ்சாவூரைச் சேர்ந்த அவரது கணவர் சிறு வயதிலேயே இறந்து போயிருக்கிறார். இவர் சென்னைக்கு குழந்தைகளுடன் வந்து வீட்டு வேலை பார்த்து வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். இப்போது இரண்டு பெண்களும் கல்யாணம் ஆகி குடும்பத்தோடு வாழ்கிறார்களாம். ‘என்ன ஆனாலும் மருமகன் வீட்டில் போய் இருக்கக் கூடாது’ என்றார்.  தினமும் அருகில் விமான நிலையத்தின் குப்பை கூடைகளில் வீசப்படும் தண்ணீர் பாட்டில்களை சேகரித்து கோணிப்பைகளில் நிரப்புகிறார்.

நாங்கள் பார்க்கும் போது மூன்று பைகளை நிரப்பியிருந்தார், இரண்டு நாள் வேலையின் பலன் என்று சொன்னார். அவற்றை கடையில் கொடுத்தால் ரூ 200 கிடைக்குமாம். ‘என் வயித்துப்பாட்டுக்கு அது போதும், என்னைக்கு என்னால முடியாதுன்னு ஆகுதோ அன்றைக்கு தற்கொலை செய்து கொண்டு செத்து போவேன்’ என்று இயல்பாக சொன்னார்.

இது போன்று கோடிக்கணக்கான முதியவர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள். தமது குழந்தைகள் அல்லது மற்ற உறவினர் வீடுகளில் போய் வசித்தாலும் அவர்களுடைய ‘தயவில்’ வாழ வேண்டிய அவலம். மூன்றாம் நபர்களின் தயவில் அடிமைத்தனத்தை ஏற்றுக் கொண்டு வாழ்வது அதை விட குறுகிப் போகச் செய்யும் ஒன்று.

உடலில் தெம்பு இருக்கும் வரை சலிக்காமல் உழைக்கும் விவசாயிகள், பெண்கள், கூலி தொழிலாளர்கள் முதிய வயதில் கௌரவத்துடன் வாழ வழி செய்து கொடுப்பது எத்தனை சமூகங்களில் நடக்கிறது?

வெனிசுவேலா-2

வெனிசுவேலாவின் மக்கள் ஆட்சி நிர்வாகம் இந்த திசைகளில் சிந்திக்கிறது. இப்போதைய அதிபரான ஹூயுகோ சாவெஸ் 1998-ல் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு 1999-ல் புதிய அரசியல் அமைப்பு சட்டம் எழுதப்பட்டது. பொதுவாக ஆவணங்கள் எழுதப்படும் போது குடிமக்களை குறிப்பதற்கு அவன் (ஆங்கிலத்தில் he) என்ற சொல்லைத்தான் பயன்படுத்துவார்கள். வெனிசுவேலாவின் அரசியல் அமைப்பு சட்டம் பாலின வேறுபாடு இல்லாத மொழியில் எழுதப்பட்டது. அந்த அடிப்படை சட்டத்திலேயே பெண்களுக்கான உரிமைகள் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டன.

  • ஒரே வேலையை செய்யும் போது ஆண்களுக்கு  சமமான ஊதியம் பெறும் உரிமை,
  •  வீட்டிலும் பொது இடங்களிலும் வன்முறைக்கு ஆளாகாமல் வாழும் உரிமை,
  •  குழந்தைப் பேறு காலத்தில் தேவையான அரசு உதவிகளையும் அரசாங்கம் மூலம் பெறும் உரிமை

என்று ஆண்களையோ பிற உறவினர்களையோ சார்ந்திராமல் தமது வாழ்க்கையை சுதந்திரமாக நடத்துவதற்கான உரிமையை பெண்களுக்கு பதிவு செய்தது அரசியலமைப்பு சட்டம்.

தொடர்ந்து வந்த 13 ஆண்டுகளில் இன்னும் பல நல்வாழ்வு திட்டங்களும் அமல் படுத்தப்பட்டுள்ளன.

  • பணக்கார நிலப்பிரபுக்களின் நிலம் கைப்பற்றப்பட்டு ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட போது, பெண்களை குடும்பத் தலைவராக கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
  • நாடெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள சமூகக் குழுமங்களில் 70% உறுப்பினர்கள் பெண்கள்.
  • உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து மத்திய அரசு வரை ஒவ்வொரு மட்டத்திலும் பெண்கள் அதிகார பதவிகளை வகிக்கிறார்கள்.

உலகிலேயே எண்ணெய் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் வெனிசுவேலா நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஆதாயங்கள் கடந்த 13 ஆண்டுகளில் மக்கள் நலத்திட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. வெனிசுவேலா நாடு தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. 9.16 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் (தென்னிந்தியாவை விட ஒன்றரை மடங்கு பெரியது) 2.9 கோடி மக்கள் வசிக்கும் நாடு (கேரளாவை விட கொஞ்சம் குறைவு).

1980களில் எண்ணெய் விலைக் குறைவால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட போது ஐஎம்எப் உலக வங்கியின் பரிந்துரைகளின் படி புதிய தாராளமய, தனியார்மய கொள்கைகள் அமல் படுத்தப்பட்டன. அது மக்களின் வாழ்க்கையை இன்னமும் கடும் நெருக்கடிக்குள் செலுத்தியது. மொத்த மக்கட் தொகையில் 80 சதவீத மக்கள் வறுமையிலும் பட்டினியிலும் பரிதவிக்க, 20 சதவீத தரகு முதலாளித்துவ மேட்டுக் குடியினரும் அதிகார வர்க்கத்தினரும் மட்டுமே ஆடம்பர சுகபோகங்களில் மூழ்கித் திளைத்தனர்.

வாழ்விழந்த மக்கள் தனியார்மய தாராளமயத் தாக்குதல்களுக்கு எதிராக தன்னெழுச்சியாகத் திரண்டு போராடினர். ஏதுமற்ற மக்கள் நகர்ப்புற சூப்பர் மார்க்கெட்டுகளைச் சூறையாடுவது பலமுறை நடந்தது. துறைமுகங்களில் இறக்குமதியாகும் உணவுப் பொருட்களைப் பட்டினிப் பட்டாளம் பறித்தெடுப்பதும் தொடர்ந்தது. அன்றைய அமெரிக்கக் கைக்கூலி அதிபர் கார்லோசின் அரசு, நாடெங்கும் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி, இராணுவத்தை ஏவி இப்போராட்டங்களை ஒடுக்கி, பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்றொழித்து பாசிச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது.

சாவேஸ்

முன்னாள் ராணுவ அதிகாரியான ஹூயுகோ சாவெஸ் 1998 அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தனியார்மய தாராளமயக் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தி வந்த சூழலில், சாவெஸ் இவற்றை எதிர்த்து மக்கள் நலக் கொள்கைகளை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தார். ஓட்டுக் கட்சிகளின் ஊழல் ஒடுக்குமுறை ஆட்சிகளால் வெறுப்புற்றிருந்த உழைக்கும் மக்கள், தமது உணர்வுகளைப் பிரதிபலித்த சாவெசை ஆதரித்தனர்.

அவரது தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பிறகு, வெனிசுவேலாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான PDVSA நாட்டுடமையாக்கப்பட்டு பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் ஆதிக்கம் வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டது. பெண்கள், குழந்தைகள், பழங்குடி மக்கள் உள்ளிட்ட பரவலான உழைக்கும் மக்களுக்கு தேவையான நல வாழ்வு திட்டங்களுக்கு எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாய் பயன்படுத்தப்படுகிறது.

  • கடந்த 10 ஆண்டுகளில் சமூக நல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு 60.6% அதிகரித்திருக்கிறது. ஆண்டுக்கு $77 பில்லியன் அல்லது சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது.
  • 70% அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலையிலும் மதியமும் இரண்டு வேளை சத்துணவு வழங்கப்படுவதோடு மாலை வீட்டுக்குப் போவதற்கு முன்பு சிற்றுண்டியும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து குறைவு வீதம் வெகுவாக குறைந்திருக்கிறது.
  • நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. வெனிசுவேலாவின் எண்ணெயை கியூபாவுக்கு ஏற்றுமதி செய்து அங்கிருந்து மருத்துவ சேவைக்காக மருத்துவர்களையும், பிற ஊழியர்களையும் வரவழைத்திருக்கிறார்கள். குழந்தை பிறப்பின் போது பெண்களின் இறப்பு வீதம் வெகுவாக குறைந்திருக்கிறது. அரசு மருத்துவ திட்டத்தின் கீழ் குழந்தை பெறும் பெண்களில் 99.3% பேர் உயிர் பிழைக்கிறார்கள்.
  • சிறு குழந்தை இறப்பு வீதம், வறுமை வீதம் போன்றவையும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.
  • பெண்களுக்கான வங்கி அமைக்கப்பட்டு பெண்கள் சிறு தொழில் செய்ய ஊக்கம் அளிக்கப்படுகிறது. 25 லட்சம் பெண்களுக்கு 1.5 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹூயுகோ சாவெஸ் தலைமையிலான வெனிசுவேல அரசு உள்நாட்டில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதோடு மட்டுமில்லாமல் பன்னாட்டு அரங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உலக நாடுகளை அணி திரட்டும் முயற்சியிலும் ஈடுபடுகிறது.

  • சாவெஸ், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பை வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார்.
  • அமெரிக்க எதிர்ப்பாளரான கியூபா அதிபர் காஸ்ட்ரோவை தனது ஆசான் என்று போற்றி ஆதரிக்கும் அவர், பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள கியூபாவுக்குச் சலுகை விலையில் பெட்ரோலிய எண்ணெய் கொடுத்து உதவுகிறார்.
  • வெனிசுலாவிலிருந்து தெற்கே அர்ஜெண்டினா வரை எரிவாயு குழாய் பதித்து தென்னமெரிக்க கண்டத்து நாடுகளுக்கு மலிவு விலையில் எரிவாயுவை விநியோகிப்பதை சாவெஸ் தனது நீண்டகாலத் திட்டமாக அறிவித்துள்ளார்.
  • மேற்கத்திய ஏகாதிபத்திய நிறுவனங்கள் அல்லாமல், இந்தியா, சீனா, ரஷ்யா முதலான இதர நாடுகளை இத்திட்டத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைத்துள்ளார். இத்திட்டமானது அமெரிக்க எதிர்ப்பு கொண்ட பிராந்திய ஐக்கியத்தைக் கட்டியமைக்கும் என்று கூறுகிறார்.
  • தென் அமெரிக்காவில் ஐஎம்எப்பின் ஆதிக்கம் கிட்டத்தட்ட முற்றிலும் இல்லாமல் ஆகி விட்டது. 2005-ம் ஆண்டில் இந்த பிராந்தியம் ஐஎம்எப்பிடமிருந்து வாங்கப்பட்ட கடன்களில் 80%ஐ செலுத்திக் கொண்டிருந்தது. 2004ம் ஆண்டில் $100 பில்லியனாக இருந்த ஐஎம்எப் கடன்களின் மதிப்பு  2008-ம் ஆண்டு $20 பில்லியனாக குறைந்தது.  உலகளாவிய கடன்களில் 1%மான $50 மில்லியன் மட்டுமே இந்த பகுதியில் கொடுக்கப்பட்டிருந்தது.

ஐரோப்பாவில் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரேக்க நாடு வெனிசுவேலாவின் முன்னுதாரணத்தை பின்பற்ற வேண்டும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன.

வெனிசுவேலா-4

மக்கள் நலனில் அக்கறை கொண்ட பல சீர்திருத்த நடவடிக்கைகளை சாவெஸ் தலைமையிலான அரசாங்கம் செயல்படுத்தியிருந்தாலும் இன்னும் பல சவால்கள் வெனிசுவேலாவின் முன்பு இருக்கின்றன.

  1. அதிபர் சாவெஸ் தேர்தல் மூலம் பதவிக்கு வந்துள்ளாரே தவிர, அந்நாட்டின் ஆளும் வர்க்கங்களான தரகுப் பெருமுதலாளிகளும், நிலப்பிரபுக்களும் வீழ்த்தப்படவில்லை. அவர்களின் சொத்துக்கள் நட்டஈடின்றி பறிமுதல் செய்யப்படவில்லை.
  2. இந்த ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் வகையில் பாசிச முறையில் கட்டியமைக்கப்பட்டுள்ள அரசு எந்திரம் அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை, சிறைச்சாலை அடங்கிய ஒட்டுமொத்த அரசு எந்திரம் தூக்கியெறியப்படவில்லை.
  3. மக்கள் போராட்டங்களால் தற்காலிகமாக ஆளும் வர்க்கங்கள் பின்வாங்கிக் கொண்டுள்ளதே தவிர, அதன் பொருளாதார பலமும் ஆதிக்கமும் வீழ்த்தப்படவில்லை. தேசிய வருமானத்தில் பெரும் பகுதியை ஈட்டித் தரும் அரசு பெட்ரோலியத் துறையை, நிர்வகித்துக் கட்டுப்படுத்தம் அதிகாரம் கொண்டதாகவே மேட்டுக்குடி கும்பல் இன்னும் நீடிக்கிறது. நாடாளுமன்றம், நீதித்துறை, மாநில அரசுகளின் நிர்வாகம் முதலானவற்றில் எதிர்த்தரப்பு பலமிக்கதாகவே உள்ளது.
  4. பத்திரிகை ஊடகத் துறையில் சாவெஸ் எதிர்ப்பு தரகு முதலாளிகளே ஏகபோகமாக உள்ளனர். பெரும்பான்மை அதிகார வர்க்கமும் சாவெஸ் எதிர்ப்பாளர்களாகவே உள்ளனர். ‘எனது கொள்கைகளைச் செயல்படுத்த முடியாமல் பெரும் முட்டுக் கட்டையாக இருப்பது அதிகார வர்க்கம்தான்” என்று சாவெஸ் வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறார்.
  5. அமைப்பாக்கப்படாத கூலித் தொழிலாளர்கள் சாவெஸ் அரசை ஆதரிக்கும் அதேசமயம், அமைப்பு ரீதியிலான மேட்டுக்குடி தொழிலாளர்கள் அரசியல் உணர்வின்றி, ஆளும் வர்க்கங்களுக்கு விலைபோகுமளவுக்கு பிழைப்புவாதத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். கிராமப்புற விவசாயிகளும் நகர்ப்புற ஏழைகளும் சாவெசுக்கு ஆதரவாக உள்ள போதிலும், அவர்கள் புரட்சிகரமான கட்சி ஒன்றால் திரட்டப்படவில்லை.
  6. வெனிசுவேலாவின் பொருளாதாரம் இன்னமும் எண்ணெய் ஏற்றுமதியையே பெருமளவு சார்ந்திருக்கிறது. ஏற்றுமதி வருமானத்தில் சுமார் 95%, மத்திய அரசின் வருவாயில் 40%, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12% எண்ணெய் துறையிலிருந்தே வருகின்றன. ஆனால், அரசுத்துறை எண்ணெய் நிறுவனத்தின் மூலம் ஏறத்தாழ 45,000 தொழிலாளிகளே வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். இது வெனிசுவேலாவின் மொத்த உழைப்பாளர் எண்ணிக்கையில் 1%க்கும் குறைவானதாகும்.

வெனிசுவேலாவின் ஏற்றுமதியைச் சார்ந்த எண்ணெய் உற்பத்தியும் விரிவாக்கமும் உலக ஏகாதிபத்தியப் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது; அதன் ஆதிக்கம், கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. புரட்சி என்பது, இத்தகைய ஏகாதிபத்திய கட்டுமானத்தைத் தகர்த்தெறிவதாகும். ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, சுயசார்பான தேசிய பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதாகும்.

  1. பின்தங்கிய ஏழை நாடான வெனிசுவேலாவில் விவசாயத்துக்கு முன்னுரிமையும், விவசாயத்துக்கு உதவும் வகையிலும் சமூகத் தேவைகளை ஈடு செய்யும் வகையிலும் சிறுதொழில் உற்பத்திக்கு இரண்டாம்பட்ச முன்னுரிமையும், கனரகபெருந்தொழில் துறைக்கு மூன்றாம்பட்ச முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும். இதன் மூலமே சுயசார்பான தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்து, ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து வெனிசுவேலா விடுதலையடைய முடியும். ஆனால் சாவெசின் பொருளாதாரத் திட்டங்கள் கனரக எண்ணெய் தொழிற்துறைக்கு முதல் முக்கியத்துவமளிப்பதாகவும், எண்ணெய் உற்பத்தியை விரிவுபடுத்த ஏகாதிபத்திய நிதிமூலதனத்தைச் சார்ந்திருப்பதாகவும் திரும்பத் திரும்ப உலக ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கட்டமைவில் பின்னிப் பிணைவதாகவுமே உள்ளன. எண்ணெய் ஏற்றுமதியில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, நிலச்சீர்திருத்தம் விவசாய சீர்திருத்தங்களுக்கான முதலீட்டைப் பெறுவது என்ற சாவேசின் திட்டம் இதனாலேயே முன்னேற முடியாமல் நிற்கிறது.
  2. நிலப்பிரபுக்களின் பயன்படுத்தப்படாத பெரும்பண்ணைகளை (லத்திபண்டியா) கிராமப்புற விவசாயிகள் எழுச்சியின் மூலம் கைப்பற்றி தமது அதிகாரத்தை நிறுவுவது என்ற புரட்சிகரப் பாதைக்குப் பதிலாக, நிலப்பிரபுக்களுக்கு நட்டஈடு கொடுத்து அரசே நிலத்தைக் கைப்பற்றி அவற்றை விவசாயிகளுக்கு விநியோகித்து, கூட்டுறவு மூலம் விவசாயத்தை உயிர்ப்பித்து தன்னிறைவையும் சுயசார்பையும் நிலைநாட்டுவது என்கிற முதலாளித்துவ சீர்திருத்த வழியையே சாவெஸ் செயல்படுத்த விழைகிறார். ஆனால் நகரங்களில் குவிந்துள்ள மக்களை நாட்டுப்புறங்களுக்கு அனுப்பி விவசாயத்தை உயிர்ப்பிக்க வேண்டுமானால், அரசு கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஆதரவளிக்க வேண்டும். எண்ணெய் வருவாயிலிருந்து இம்முதலீட்டைச் செய்ய வேண்டுமானால், வெனிசுவேலாவின் எண்ணெய் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் அதிகரிக்க வேண்டும்; சந்தைக்கும் விரிவாகத் திட்டங்களுக்குமான முதலீடுகளுக்கு மீண்டும் ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கட்டமைவையே சார்ந்திருக்க வேண்டும். இது மீள முடியாத நச்சுச்சூழல்.

இந்த சீர்திருத்தங்கள் ஏகாதிபத்திய சக்திகளின் இடைவிடாத தாக்குதல்களுக்கு இடையில்தான் நடத்தப்படுகின்றன.

வெனிசுவேலா-5

  1. 2002-ம் ஆண்டு சாவெஸ் தலைமையிலான அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளைக் கண்டு ஆத்திரமடைந்த பன்னாட்டு எண்ணெய் ஏகபோக நிறுவனங்களும் தரகுப் பெருமுதலாளிகளும் நிலப்பிரபுக்களும் அதிபர் சாவெசைப் பதவியிலிருந்து தூக்கியெறிய கூட்டுச் சதியில் இறங்கி கலகங்களைத் தூண்டி விட்டனர்.

பத்திரிகை முதலாளிகள் சாவெசுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். ஊழல் அதிகாரிகள் அதிபரின் உத்தரவுகளைச் செயல்படுத்த மறுத்து முட்டுக் கட்டை போட்டனர். 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதியன்று அமெரிக்காவின் ஆசியுடன் திடீர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டு, அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டு சாவெஸ் சிறையிடப்பட்டார். அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. திட்டமிட்டுக் கொடுத்த இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு, ‘ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை” என்ற அமெரிக்க அரசின் துணை அமைப்பு கோடிக்கணக்கான டாலர்களை வாரியிறைத்தது. அமெரிக்கக் கைக்கூலியான எண்ணெய் நிறுவன முதலாளி புதிய அதிபராக்கப்பட்டார்.

அதிபர் சாவெசை ஆதரித்து நகர்ப்பற ஏழைகளும் கிராமப்புற விவசாயிகளும் நாடெங்கும் போராடத் தொடங்கினர். சாவெசை ஆதரித்து இராணுவமே பிளவுபட்டது. எல் வேலவின் சேரிப் பகுதியில் பெண்கள், ராணுவ தலைமையகத்தை சூழ்ந்து கொண்ட கூட்டத்தை ஒருங்கிணைத்து, மக்களை எதிர் கொள்ள வந்த ராணுவ வீரர்களை இடித்துரைத்து ஆயுதங்களை கீழே போட வைத்தார்கள். தனது நண்பர்களை திரட்டி மோட்டார் பைக்குகளில் போய் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியிருந்த தொலைக்காட்சி நிலையத்தை மீட்டார் ஒரு பெண்.

வெனிசுவேலாவில் பெருகிய அதிருப்தி கலகத்தாலும், அமெரிக்காவையும் அதன் எடுபிடி கொலம்பியாவையும் தவிர, இதர தென்னமெரிக்கக் கண்டத்து நாடுகள் எவையும் இச்சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரிக்காததாலும் அம்பலப்பட்டுத் தனிமைப்பட்டு போன நிலையில், இத்திடீர் ஆட்சிக் கவிழ்ப்பு 28 மணி நேரத்தில் படுதோல்வியடைந்தது. சாவெஸ் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றார்.

  1. சாவெஸ் முன்வைக்கும் சோசலிசத் திட்டங்களுக்கு ஏற்ப அந்நாட்டின் அரசியல் சட்டத்தைத் திருத்தியமைப்பதா, கூடாதா என்பதற்கான கருத்துக் கணிப்புத் தேர்தல் 2007-ம் ஆண்டு இறுதியில் நடைபெற்றது. ஏறத்தாழ 90 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட வெனிசுவேலாவில், இக்கருத்துக் கணிப்புத் தேர்தலில் 45% பேர் வாக்களிக்கவில்லை. எஞ்சிய 55% வாக்காளர்களில் 28% பேர் சாவேசின் திட்டங்களுக்கு எதிராகவும், 27% பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர்.

வெனிசுவேலாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளிப்படையாகவே அரசியல் சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தது. அமெரிக்கக் கொலைகார உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வும் அமெரிக்காவின் “”எயிட்”, “”நெட்” முதலான நிறுவனங்களும் கோடிக்கணக்கான டாலர்களை வாரியிறைத்து பிரச்சாரம் செய்ததோடு, வதந்திகளைப் பரப்பி மக்களைப் பீதியூட்டின. ஏகாதிபத்திய கைக்கூலி நிறுவனங்களான தன்னார்வக் குழுக்களும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் சாவேசின் திட்டங்களை எதிர்த்துப் பிரச்சாரம், விளம்பரங்களில் ஈடுபட்டதோடு வீதிகளில் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தன.

வெனிசுவேலாவின் தரகு முதலாளிகள் சாவெஸ் எதிர்ப்புக் குழுக்களுக்கு வெளிப்படையாக நிதியுதவி செய்ததோடு, அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கிச் செயற்கையான தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் உருவாக்கினர். வெனிசுவேலா உழைக்கும் மக்களின் குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து, கட்டாயக் கல்வியின் பெயரால் குழந்தைகளைப் பள்ளிகளில் அடைக்கத் திட்டமிட்டுள்ளதாக வதந்திகளைப் பரப்பி, தனியார் தொலைக்காட்சிகள் அவதூறு பிரச்சாரம் செய்தன.

கத்தோலிக்க மதகுருமார்களும் திருச்சபைகளும் சாவேசுக்கு எதிராக அணிவகுத்துப் பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி, வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன. இக்கும்பல் நடத்திய சாலை மறியல் போராட்டத்தைத் தடுத்த சாவெஸ் ஆதரவாளர், கிறித்துவ மதவெறி குண்டர்களால் கொல்லப்பட்டார். சாவெஸ் அரசின் ஆளுநர்களும் மாநகராட்சித் தலைவர்களும் ஏகாதிபத்தியாவதிகளால் விலை பேசப்பட்டனர்; அல்லது நடுநிலை வகிக்குமாறு நிர்பந்திக்கப்பட்டனர். அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் அதிபர் சாவெஸ் நிரந்தரமாகச் சர்வாதிகாரம் செய்யத் துடிப்பதாக எதிர்த்தரப்பினர் திரும்பத் திரும்பக் குற்றம் சாட்டினர்.

வெனிசுவேலா-6

அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதற்கான வரம்பை நீக்கிவிட சாவெஸ் விழைவதையே இப்படி சர்வாதிகாரியாகத் துடிப்பதாக ஏகாதிபத்தியவாதிகள் சித்தரித்து அவதூறு செய்கின்றனர். ஆனால் சாவெஸ் அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் தனிநபர் சர்வாதிகாரத்தை நிலைநாட்ட விழையவில்லை. மாறாக, ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்ட மாற்றுப் பொருளாதார அரசியலமைப்பு முறை தொடர்ந்து நீடிக்கவே விழைந்தார். அத்தகைய கொள்கைகளைச் செயல்படுத்தும் நிறுவனமாக அதிபர் பதவியைக் கருதி, அதனைக் காலவரம்பின்றி நீடிக்க விரும்பினாரே தவிர, தனிநபர் என்ற முறையில் பதவி சுகத்தை வரம்பின்றி அனுபவிப்பவதற்காக அல்ல. ஏகாதிபத்தியக் கைக்கூலிகளை அதிபராகக் கொண்ட மறுகாலனியாதிக்கக் கொள்கை தொடர்ந்து நீடிப்பதா, அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களை அதிபராகக் கொண்ட சுயசார்பான கொள்கை தொடர்ந்து நீடிப்பதா என்பதுதான் அந்த கருத்துக் கணிப்புத் தேர்தலில் மையமான விவகாரம்.

வெனிசுவேலாவின் தரகுப் பெருமுதலாளிகளும் வர்த்தக சூதாடிகளும் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி, செயற்கையான தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் செய்தபோது, அதற்கெதிராக சாவெஸ் அரசு உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. தட்டுப்பாட்டைப் போக்க பல கோடிகளைச் செலவிட்டு வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்தபோதிலும், ஊழல் மிகுந்த அதிகார வர்க்கத்தின் இழுத்தடிப்புகளால் அவை உழைக்கும் மக்களுக்குப் போய்ச் சேரவில்லை.

அரசியல் சட்டத்தைத் திருத்தக் கூடாது என்று எச்சரிக்கும் வகையில், தரகுப் பெருமுதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் வெனிசுவேலாவில் போட்டுள்ள முதலீடுகளை திரும்பப் பெறப் போவதாக வதந்தியைப் பரப்பி பீதியூட்டின. தனியார் வங்கிகளும் இதற்குப் பக்கபலமாக நின்று நாட்டின் பொருளாதாரத்தையே அச்சுறுத்தின. ஆட்சிக் கவிழ்ப்பு நடக்குமோ எனுமளவுக்குப் பீதி நிலவியது. இருப்பினும், இதற்கெதிராக சாவெஸ் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுமாறியது.

2007-ம் ஆண்டு கருத்துக் கணிப்பின் தோல்விக்குப் பிறகு பிப்ரவரி 2009-ம் ஆண்டு நடத்தப்பட்ட அதிபர் பதவிக்கான வரம்புகளை ரத்து செய்வது பற்றிய கருத்துக் கணிப்பில்  சாவெஸூக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவாயின.

2009-ம் ஆண்டு பரவிய உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக உலகப் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ள வெனிசுவேலாவில் நிதி நெருக்கடி ஏற்பட்டது, 2011-ம் ஆண்டில் பண வீக்கம் 28% ஆக அதிகரித்துள்ளது. 2011-ல் அரசின் வரவு செலவு பற்றாக்குறை உள்நாட்டு உற்பத்தியில் 5.2% ஆக இருக்கிறது. வெனிசுவேலா நாணயத்தின் மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.

இன்னும் மூன்று மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. 13 ஆண்டுகளாக நாட்டின் அதிபராக இருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹியூகோ சாவேஸூம், தான் ‘அனைத்து தரப்பினரையும் பிரதிநிதிப்படுத்துவதாக’ சொல்லும் ஹென்ரிக் கேப்ரில்ஸூம் அக்டோபர் 7-ம் தேதி தேர்தலில் போட்டியிட பதிவு செய்துள்ளனர்.

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ‘அவரது உடல் நிலை பற்றிய சந்தேகங்களை நீக்கி, தன்னை மக்கள் முன் நிறுத்திக் கொண்டால் வரும் தேர்தலிலும் இனி வரும் தேர்தல்களிலும் சாவெஸ் வெற்றி பெறுவது உறுதி, 2030-ம் ஆண்டு வரை அவர் அதிபராக இருப்பதற்கு தேவையான மக்கள் ஆதரவை பெற்றிருக்கிறார்’ என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் சாவேஸின் பலம் மக்கள் நலன் சார்ந்த பார்வையும், விருப்பமும் என்றால் அதை முற்றிலும் செயல்படுத்தக்கூடிய மக்களை அமைப்பாக்கித் திரட்டி வைத்திருக்கும் கட்சியாக அவரது பின்னணி இல்லை என்பதே பலவீனம். தனிநபராக இருந்து மட்டும் ஒரு நாட்டை அப்படி முன்னேற்றிவிட முடியாது. சோசலிசம் என்பது உடமை வர்க்கங்களுக்கும், உடமையற்ற வர்க்கங்களுக்கும் இடையே நிலவும் வர்க்கப் போராட்டத்தின் விளைவாக மலருவது. அதை கற்பனை விருப்பங்களால் நிறைவேற்றிட முடியாது. இந்த சூழல்தான் சாவேஸை இறுதியில் வெல்லமுடியாதபடி அலைக்கழிக்கிறது.

பெண்கள் உள்ளிட்ட மனித குலத்தின் முழுமையான விடுதலையை சாத்தியமாக்கும் சோசலிச சமூகத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றின் தலைமையிலான புரட்சி ஒன்றே வழியாகும்.

சோசலிசம் என்பது பாட்டாளி வர்க்கக் கட்சியால் தலைமை தாங்கப்படும் பாட்டாளி வர்க்கப் புரட்சியில் மலர்வதேயின்றி, தேர்தல் மூலம் அதிகாரத்துக்கு வருவதல்ல. அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்பட்ட ஏகாதிபத்தியவாதிகள், தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களின் சொத்துக்களையும், உரிமைகளையும் பறித்து, உழைக்கும் மக்கள் தமது சர்வாதிகாரத்தைச் செலுத்தி அதிகாரம் செய்வதுதான் சோசலிசமே அன்றி, சுரண்டும் வர்க்கங்களுக்கு ஜனநாயகப் பன்மைவாதம் அளிப்பதல்ல. பாட்டாளி வர்க்க சித்தாந்தமோ, பாட்டாளி வர்க்கப் புரட்சியோ, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமோ இல்லாமல் சோசலிசத்தை நிறுவ முடியாது; தனிநபரின் உயர்ந்த நோக்கங்களால் சோசலிசத்தைக் கட்டியமைக்கவும் முடியாது.

வலுவான, அரசியல் படுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் சோசலிச புரட்சி ஒன்றை நிறைவேற்ற முடியாத சூழல் நிலவினாலும், ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் முதலாளித்துவ சக்திகளுக்கு எதிராகவும் வெனிசுவேலா மக்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு உலகெங்கிலும் உள்ள புரட்சிகர சக்திகள் ஆதரவு அளிக்கின்றன.

________________________________________________

– செழியன்
________________________________________________

குறிப்பு – இந்தக் கட்டுரை கடந்த மாதத்தில் எழுதப்பட்டது. நேற்று (08/10/2012) வெளியான தேர்தல் முடிவுகளின்படி சாவேஸ் மீண்டும் வென்றிருக்கிறார்

கூடங்குளம்: போர்க்குணம் கமழும் எழுச்சி! – போராட்டத் தொகுப்பு!

21
கடலில் மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்தும் இடிந்தகரை மக்களை அச்சுறுத்தும் வகையில் தாழப்பறந்து செல்கிறது, கடற்படை விமானம்
கடலில் மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்தும் இடிந்தகரை மக்களை அச்சுறுத்தும் வகையில் தாழப்பறந்து செல்கிறது, கடற்படை விமானம்

ணு உலைக்கு எதிராக இடிந்தகரை, கூடங்குளம் மக்கள் செப்டம்பர் 9, 10 தேதிகளில் நடத்திய போராட்டமும், அம்மக்கள் மீது ஏவப்பட்ட கொடிய போலீசு அடக்கு முறையும், தமிழக மக்களின் பொதுக்கருத்தை அணுஉலைக்கு எதிராகக் குறிப்பிடத்தக்க அளவிற்குத் திருப்பியிருக்கின்றன. மின்வெட்டு முன்னைவிட அதிகரித்திருந்த போதிலும், ‘அணு மின்சாரமே சரணம்’ என்ற ஆலாபனை மக்களிடம் எடுபடாத சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இந்த மாற்றத்தைச் சாதித்ததில் ஜெயலலிதாவுக்கும் அவரது அபிமான போலீசுக்கும் பெரும்பங்கு உண்டு.

மார்ச் 18 அன்று ஜெ. அரசால் தொடுக்கப்பட்ட போலீசு தாக்குதல், ஜெயலலிதா குறித்த பிரமையை அகற்றியதென்றால், செப்.10 தாக்குதல் மூலம் போலீசும் நீதிமன்றமும் தங்கள் மீதான பிரமைகளையும் கைவிட்டு விடுமாறு வலியுறுத்தியிருக்கின்றன.

செப்.6 – ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, செப்.11 அன்று அணு உலையில் எரிபொருளை நிரப்ப இருப்பதாக என்.பி.சி.ஐ.எல். அறிவித்தது. அணு உலையை நோக்கி அமைதியான முறையில் ஊர்வலமாகச் செல்ல இருப்பதாக செப்.7-ஆம் தேதியன்று அறிவித்தார் உதயகுமார்.

ஏற்கெனவே மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் அப்பகுதியைக் கலவரப் பகுதி போல மாற்றியது போலீசு. ராஜேஷ் தாஸ், ஜார்ஜ், வரதராஜு, பிதாரி ஆகியோர் தலைமையிலான போலீசு படைகள் கூடங்குளம்- இடிந்தகரை வட்டாரம் முழுவதையும் சுற்றி வளைத்தன. இக்கட்டான இத்தருணத்தில் போராடும் மக்களுக்குத் துணை நிற்கும் பொருட்டு, செப்.9 அன்று காலை, கடல் வழியே இடிந்தகரைக்குச் சென்று விட்டார்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் 9 பேர்.

செப்.9 அன்று காலை, அணு உலையின் வாயிற்புறம் நோக்கி ஊர்வலமாக மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்து, கைது செது கொண்டு செல்வதற்கான பேருந்துகளுடன் போலீசு காத்திருக்க, அணு உலையின் பின்புறம் நோக்கி, கடலோரமாகச் செல்லத் தொடங்கியது மக்களின் பேரணி.  இதனைச் சற்றும் எதிர்பாராத போலீசார் மக்களைத் தடுத்து நிறுத்துவதற்காக அணு உலையின் பின்புறத்துக்கு வந்து சேர்வதற்குள், மக்கள் அணு உலைக்கு சுமார் முக்கால் கி.மீ. தூரத்திற்கு வந்து விட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருபுறம் நிற்க, பல வண்ணச் சீருடை அணிந்த போலீசு படைகள் அவர்களை வழிமறிக்க, மக்கள் அனைவரும் அப்படியே கடலோரம் அமர்ந்து விட்டனர்.

வயது முதிர்ந்தவர்கள் சிலரைத் தவிர, முற்றுகைப் போராட்டத்திற்கு ஊரே திரண்டு வந்திருந்தது. சிறுவர்-சிறுமியர் மட்டுமல்ல, தாமார்கள் கைக்குழந்தைகளையும் போராட்டத்திற்குக் கொண்டு வந்திருந்தார்கள். வெயில் ஏறிக் கொண்டிருந்தது. தாகத்தால் தவிக்கும் மக்களுக்காக கடல் வழியே படகுகள் மூலம் கொண்டு வந்து இறக்கிய தண்ணீர் பாக்கெட்டுகளை, போராட்டத்தை ஒடுக்க வந்த போலீசு படையினரும் கேட்டு வாங்கி குடித்துக் கொண்டார்கள்.

கையில் மைக்குடன் மக்களை நோக்கி வந்த போலீசு எஸ்.பி, உயர்நீதிமன்றம் நன்றாக ஆலோசித்து அணு உலையை திறக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. முதல்வர் அமைத்த குழுவும் அணு உலை பாதுகாப்பானது என்று கூறியிருக்கிறது. வேண்டுமானால் நீங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு அப்பீல் செயலாம். இங்கே 144 தடை உத்தரவு போட்டிருக்கிறோம். நீங்கள் இப்படிக் கூடுவது சட்டவிரோதம். கலைந்து செல்லுங்கள்” என்று மைக்கில் அறிவித்தார்.

முன்வரிசையில் இருந்த ஒரு பெண் மைக்கை அவரிடமிருந்து வாங்கி, இந்த மண்ணும் கடலும் எங்களுடையது. நாங்கள் வாழ விரும்புகிறோம். நீங்கள் சோல்லும் யார் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் போகமாட்டோம்” என்று அறிவித்தார்.

தமிழகப் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட தூத்துக்குடி மீனவர் அந்தோணி ஜான் (இடது) | இந்தியக கடற்படையால் கொல்லப்பட்ட இடிந்தகரை மீனவர் சகாயம்
தமிழகப் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட தூத்துக்குடி மீனவர் அந்தோணி ஜான் (இடது) | இந்தியக கடற்படையால் கொல்லப்பட்ட இடிந்தகரை மீனவர் சகாயம்

உதயகுமாரைக் கூப்பிடு” என்று ராஜேஷ்தாஸ் அதட்ட, உதயகுமார் எதற்கு? எங்களுடன் பேசு!” என்றார்கள் மக்கள். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ்தாஸ், இடிந்தகரைக்கே வந்து உதயகுமாரைத் தூக்கிடுவேன்” என்று சோல்ல, மறுகணமே யாரடா தூக்குவே” என்று கிளம்பினார்கள் இளைஞர்கள். அடிபட்ட நாயைப் போல ஒரு உறுமலுடன் பின்வாங்கியது போலீசு.

நாங்கள் இங்கேயே தொடர்ந்து உட்கார்ந்திருப்போம். அரசியல் கட்சித் தலைவர்களும் சிவில் சமூகத்தினரும் இங்கே வந்து எங்களுக்கு ஒரு நியாயம் சோல்லட்டும்” என்று மக்கள் கூட்டத்தின் வேறொரு பகுதியில் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்தார் உதயகுமார்.

9-ஆம் தேதி இரவு முழுவதும் சில்லென்ற கடற்காற்றில், நடுக்கும் குளிரில் கடல் நீர் காலைத் தொட்டுச் செல்லும் தூரத்தில், சின்னஞ்சிறு குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் கடற்கரையிலேயே உறங்கினர். போலீசார் திருமண மண்டபங்களுக்கு உறங்கச் சென்று விட்டனர். இரவு முழுவதும் மக்களுக்கு காவல் நின்றார்கள் சில இளைஞர்கள். வேறு சிலர் கூட்டத்தின் பக்கவாட்டிலிருந்து போலீசு உள்ளே நுழைய முடியாமல் தடுப்பதற்காக அந்தப் பகுதிகளில் வலைகளை இழுத்துக் கட்டிக்கொண்டிருந்தார்கள்.

செப்-10 அன்று காலையிலேயே தாக்குதலுக்கான முன் தயாரிப்புகளைத் தொடங்கிவிட்டது போலீசு. ராஜேஷ்தாஸ் தலைமையில் வந்த அதிரடிப்படை வலைகளை அறுத்தெறிய, மக்கள் முட்களை பிடுங்கிப் போட்டு போலீசைத் தடுத்தனர். தடியடி தொடங்கியது. கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், பார்வையையும் செவிப்புலனையும் தாக்கி நிலைகுலைய வைக்கும் ஸ்டன் கிரனேடு எனும் எறிகுண்டுகளையும் வீசியபடியே, மேற்குப் புறத்தின் மேட்டுப் பகுதியிலிருந்து அதிரடிப்படை மக்கள் மீது இறங்கியது. மக்களைக் கடலை நோக்கித் துரத்தியது.

தடியடிக்கு அஞ்சி மக்கள் சிதறியோடவில்லை. மாறாக, மணலை அள்ளி வீசியும், முட்களை எறிந்தும் போலீசை விரட்டினர். கண்ணீர்ப் புகை குண்டுகளை எதிர்கொள்ளும் முறை மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. மேலும், மக்கள் மீது வீசப்பட்ட ஸ்டன் கிரெனேடுகள் 2001-ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட காலாவதியான குண்டுகள். கண்களும் மூக்கும் உதடுகளும் எரியவே செவதறியாமல் மக்கள் திகைத்தனர். கடலில் இறங்கி, தம் எதிர்ப்பைத் தொடர்ந்தனர்.

அதேநேரத்தில், குண்டுகளை வீசியபடியே இடிந்தகரை ஊருக்குள் நுழைந்த ஒரு போலீசு படை போராட்ட பேனர்களைக் கிழித்து எறிந்ததுடன், மேடையில் சிறுநீர் கழித்தது. மாதாகோயில் சிலையையும் சேதப்படுத்தியது. சுனாமி காலனி மற்றும் அருகாமையில் உள்ள வைராவி கிணறு ஆகிய பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையடித்ததுடன், பொருட்களை உடைத்து நாசப்படுத்தியும், பெண்களை கேவலமாக ஏசியும் தாக்கியும் தனது வக்கிரங்களைத் தீர்த்துக் கொண்டது.

போலீசின் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து உதயகுமார் உள்ளிட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப் படுத்தப்பட்டு விட்டனர். போராட்டப் பந்தலில் யாருமில்லை. போலீசு தாக்குதலுக்கு யாரும் அஞ்சவில்லை. மாறாக, பின்வாங்க நேர்ந்ததை எண்ணி அவமான உணர்ச்சிக்கு ஆளாகியிருந்தனர். ஊருக்குள் புகுந்து போலீசு மீண்டும் தாக்குதல் தொடுக்கும் என்று எதிர்பார்த்ததால், பந்தலுக்கு வராமல் மக்கள் ஆங்காங்கே சிதறியிருந்தனர்.

கைதாகப் போவதாக அறிவித்த உதயகுமாரைச் சுற்றி நின்று தடுக்கும் இடிந்தகரை மக்களின் உணர்ச்சிப் பெருக்கு
கைதாகப் போவதாக அறிவித்த உதயகுமாரைச் சுற்றி நின்று தடுக்கும் இடிந்தகரை மக்களின் உணர்ச்சிப் பெருக்கு

போலீசால் தாக்கப்படுவதில் தனிப்பட்ட அவமானம் ஏதும் இல்லை என்றும், தாக்குதலுக்கு அஞ்சாமல் போராட்டத்தைத் தொடர்வதுதான் சரியான பதிலடியாக இருக்கும் என்றும் விளக்கி இளைஞர்களைத் திரட்டினார்கள், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்கள். ம.உ.பா.மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவை,  போராட்டப் பந்தலில் உரையாற்றுமாறு கோரிய இளைஞர்கள், கோயில் மணியை அடித்து மக்களைப் பந்தலில் திரட்டினார்கள். போலீசால் உடைத்தெறியப்பட்ட மைக்குகளை சரி செதார்கள். இந்தத் தாக்குதல் மூலம் நம்மை சிதறச் செவதும் ஆத்திரமூட்டுவதும்தான் போலீசின் நோக்கம். அந்த நோக்கத்தை முறியடிக்க வேண்டும். நமக்காக தமிழகமெங்கும் மக்கள் போராடத் தொடங்கியிருக்கும் சூழலில், மீண்டும் இதே இடத்தில் ஒன்றுதிரண்டு போராடுவது நம் கடமை” என்று பேசினார் தோழர் ராஜு. அதன்  பிறகு ஊர்க்கமிட்டியுடன் பேசி, 48 மணி நேர உண்ணாவிரதம் தொடங்குவதாகப் போராட்டக் குழுவின் சார்பில் அறிவித்தார், மை.பா.யேசுராசன்.

பத்தாம் தேதியன்று காலை கடற்கரையில் தாக்குதல் நடக்கும்போதே, அணு உலையின் வாயிற்புறத்தில், கூடங்குளம் மக்கள் போலீசுக்கு எதிராக வீரமிக்க போராட்டமொன்றை நடத்தினர். இடிந்தகரையில் பல்லாயிரக்கணக்கில் போலீசு குவிக்கப்பட்டிருப்பதால், அம்மக்கள் கொடூரமாகத் தாக்கப்படுவர் என்றஞ்சி, அப்படையின் ஒரு பிரிவினை தம் பக்கம் இழுப்பதற்காக, அங்கே தாக்குதல் தொடங்கியவுடனே, இங்கே சாலை மறியலைத் தொடங்கினர்.

கலைந்து செல்லுமாறு மெகா போனில் பேசிய டி.எஸ்.பி, இடிந்தகரை மீனவர்களுக்கும் கூடங்குளம் நாடார் சாதியினருக்கும் ஏற்கெனவே நடந்த மோதல்களை நினைவுபடுத்தி, சாதிப்பிளவை ஏற்படுத்த முயன்றார். அதனைக் காறி உமிழ்ந்து நிராகரித்து விட்டனர் கூடங்குளம் மக்கள். முன்வரிசையில் நின்ற மாணவர்கள் போலீசின் கண்ணீர்ப் புகை குண்டுகளை எதிர்கொண்டனர்.

சின்னஞ்சிறிய அந்த ஊரின் முக்கிய சாலையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கே, அவ்வூர் இளைஞர்களுடன் போலீசு பல மணி நேரம் யுத்தம் நடத்த வேண்டியிருந்தது. போலீசுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு ‘லைவ் டெலிகாஸ்ட்‘ செய்த தொலைக்காட்சிகள் தம்மையுமறியாமல் மக்களின் இந்த வீரத்தை ஒளிபரப்பினர்.

செப்.11 காலை ‘மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தும் பொருட்டு, தான் கைதாக முன்வருவதாக’ தொலைக்காட்சிகள் மூலம் அறிவித்தார் உதயகுமார். இந்த முடிவு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் பரப்பியது. “இம்முடிவு தவறானது, இதன் மூலமெல்லாம் போலீசு அடக்குமுறையை நிறுத்தமுடியாது. இந்த முடிவு போராட்டத்தின் பின்னடைவுக்கே வழி வகுக்கும்” என்று இடிந்தகரை போராட்ட மேடையில் அன்று காலையிலேயே பேசினார், தோழர் ராஜு.

எனினும், தனது முடிவில் உறுதியாக இருந்த உதயகுமார் அன்று பிற்பகல் இடிந்தகரை பந்தலுக்கு வந்து, தான் கைதாகவிருப்பதாக ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். உணர்ச்சிமயமான ஒரு தருணத்தில், ‘கைதாகக் கூடாது’ என்று கூறி, அவரை அங்கிருந்து படகில் தூக்கிச் சென்றனர் இளைஞர்கள். அதன் பின்னர், அன்று இரவு இடிந்தகரை வந்த கேஜ்ரிவாலும் கைதாகக் கூடாது என்ற கருத்தையே வலியுறுத்தினார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற துறைமுக முற்றுகைப் போராட்டம்
தூத்துக்குடியில் நடைபெற்ற துறைமுக முற்றுகைப் போராட்டம்

செப்.12 அன்று வழக்குரைஞர் தோழர் வாஞ்சிநாதன் தலைமையில் ம.உ.பா.மையத்தின் சார்பில் பத்து வழக்குரைஞர்கள் கொண்ட உண்மை அறியும் குழு கூடங்குளம் சென்று, போலீசு அடக்குமுறைக்கு ஆளான மக்களை வீடுவீடாகச் சென்று சந்தித்தது. போராடிய குற்றத்துக்காக அந்த ஊர் முழுவதையுமே போலீசு வேட்டையாடியிருந்தது. வீடுகள், சோத்துகள், வாகனங்கள், வேன்கள் நாசமாக்கியது மட்டுமின்றி, பொருட்களையும் இரு சக்கர வாகனங்களையும் போலீசு திருடியும் சென்றிருந்தது. வீடு வீடாகப் புகுந்து பெண்களை இழிவுபடுத்தி, பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கும் ஆளாக்கியிருந்தது. ஊர் முழுவதும் தண்ணீர் சப்ளை துண்டிக்கப்பட்டிருந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ராஜத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் கைது செயப்பட்டிருந்தனர். ஊரில் வயது முதிர்ந்தவர்கள் சிலரைத் தவிர, ஆண்களே இல்லை. எனினும், இத்தனை அடக்குமுறைகளுக்குப் பின்னரும், அணு உலை எதிர்ப்பிலிருந்து கடுகளவும் அப்பெண்கள் பின்வாங்கவில்லை.

போலீசு அராஜகம் குறித்த விவரங்களைத் தொகுத்துக் கொண்டு உண்மையறியும் குழு அன்றிரவு இடிந்தகரை வந்தது. கூடங்குளத்தில் போலீசு நடத்திய வன்முறை பற்றி, தோழர் வாஞ்சிநாதன் பேசியதை, மிகுந்த அக்கறையுடனும் அனுதாபத்துடனும் இடிந்தகரை மக்கள் கேட்டனர். இரு பகுதி மக்களுக்குமிடையிலான ஐக்கியத்தையும் தோழமை உணர்ச்சியையும் இது மேம்படுத்தியது.

செப்.13 காலை முதல் ‘கடலில் மனிதச் சங்கிலி’ என்ற அறிவிப்பு மக்களிடையே பெரும் உற்சாகத்தை தோற்றுவித்திருந்தது. போராட்டம் துவங்கு முன்னர், மக்களிடையே உரையாற்றுமாறு அழைக்கப்பட்ட தோழர் ராஜு, தேடப்படும் குற்றவாளியென உதயகுமாரைச் சித்தரிக்கும் வாய்தா ராணி ஜெயலலிதாவின் அரசை எள்ளி நகையாடினார். அணு உலைக்கு எதிராக கல்பாக்கத்திலும் மற்ற கரையோர கிராமங்களிலும் தொடங்கிவிட்ட போராட்டத்தைச் சுட்டிக்காட்டி, கிரிமினல் வழக்கு போடுவதன் மூலம் மக்கள் போராட்டத்தை ஒடுக்கவும் முடியாது, நீதிமன்றத் தீர்ப்பைக் காட்டி அணு உலையை இயக்கவும் முடியாது என்று விளக்கினார்.

போராட்ட முழக்கங்களை வாஞ்சிநாதன் எழுப்ப, ஆயிரக்கணக்கான மக்கள் விண்ணதிரும் முழக்கங்களுடன் கடலில் இறங்கினர். அச்சுறுத்தும் நோக்கத்துக்காகவே தலைக்கு மேலே பத்தடி உயரத்தில் பறந்த கடற்படை விமானம் மக்களின் ஆத்திரத்தை மேலும் தூண்டியது. மீண்டும் மீண்டும் தலைக்கு மேலே சீறிச்சென்ற விமானத்தின் ஒலியால் பலர் மயங்கி விழுந்தனர். ஒரு சிறிய பாறையின் மீது நின்று மக்களுக்கான பாதுகாப்பு கயிறுகளைக் கட்டிக் கொண்டிருந்த மீனவர் சகாயத்தின் தலைக்கு மிக அருகில் விமானம் பறந்ததால், அவர் நிலைகுலைந்து மயங்கிச் சரிந்தார். அபாயகரமான நிலையில் அன்றிரவே நாகர்கோயில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

செப்.14 மதியம் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஒலியின் அதிர்ச்சி காரணமாக மூளை மற்றும் இதயத்தின் ரத்தநாளங்கள் வெடித்ததுதான் அவரது மரணத்துக்குக் காரணம். தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது போல நழுவிக்கொள்ள முயன்றது போலீசு. மருத்துவமனையிலேயே உடனிருந்த ம.உ.பா.மையத்தின் நாகர்கோயில் செயலர் வழக்குரைஞர் பூபதி, வழக்கு பதிவு செது உடலைப் பரிசோதனைக்கு அனுப்புமாறு போலீசுடன் போராடினார். சகாயத்தின் மனைவி மற்றும் உறவினர்களும் இதில் உறுதியாக இருந்தனர்.

செப்.15 அன்று சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செது அவரது உடலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தது போலீசு. அடுத்து, மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்கும் பொருட்டு, பிரச்சினையை ஆறப்போடுவதற்காகப் பிரேத பரிசோதனையை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் நாடகம் அரங்கேறத் தொடங்கியது.

இடிந்தகரை மக்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலைக் கண்டித்து, திருச்சி ம.க.இ.க, பெ.வி.மு. அமைப்புகள், செப்.13 அன்று சிறீரங்கத்துக்கு வந்த ஜெயாவிற்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்திய பொழுது அ.தி.மு.க. குண்டர்களால் மண்டை உடைக்கப்பட்ட தோழர்
இடிந்தகரை மக்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலைக் கண்டித்து, திருச்சி ம.க.இ.க, பெ.வி.மு. அமைப்புகள், செப்.13 அன்று சிறீரங்கத்துக்கு வந்த ஜெயாவிற்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்திய பொழுது அ.தி.மு.க. குண்டர்களால் மண்டை உடைக்கப்பட்ட தோழர்

செப்.16, ஞாயிறு அன்று காலை தோழர் ராஜு தலைமையில் ம.உ.பா. மைய வழக்குரைஞர்கள், அருகாமை மீனவ கிராமத்து இளைஞர்களை இணைத்துக் கொண்டு மருத்துவமனை வாயிலிலேயே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது கடற்படை நடத்திய படுகொலை என்றும், சிறுவனைச் சுட்டுக் கொன்ற சென்னை இராணுவ அதிகாரியைக் கைது செதது போல, கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செது கைது செயவேண்டும் என்றும், மக்கள் அஞ்சலி செலுத்தும் பொருட்டு சகாயத்தின் உடலை கரையோர கிராமங்கள் வழியே கொண்டு செல்வது மக்களின் உரிமை என்றும் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளித்தார் ராஜு. ஞாயிற்றுக்கிழமையும் சவப்பரிசோதனை நடக்கவில்லை.

செப்.17 காலை மருத்துவமனை வாயிலில், சகாயத்தின் உறவினர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் சில இளைஞர்கள் உடலைப் பெறுவதற்காகக் காத்திருந்தனர். 50 வேன்களில் நூற்றுக்கணக்கான அதிரடிப்படை போலீசாரும், வஜ்ரா வேன்களும், கண்ணீர்ப் புகை குண்டுகளும் வந்து இறங்கின. உடலைப் பெற்றவுடனேயே வேனில் ஏற்றியது போலீசு. வழிநெடுக அஞ்சலி செயக் காத்திருந்த மக்களை, அவர்களைவிட எண்ணிக்கையில் அதிகமான போலீசார் சுற்றி வளைத்திருந்தனர்.

வழியில் எங்குமே மக்களை அஞ்சலி செலுத்த அனுமதிக்காமல், நேரே இடிந்தகரை எல்லையில் கொண்டு போ உடலை ஒப்படைத்தது போலீசு. போர்க்குணமிக்க முழக்கங்களுடன் ஊர்வலமாக மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சகாயத்தின் உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கடற்படையால் கொல்லப்பட்ட சகாயம், மணப்பாடு கிராமத்தில் அநீதியான முறையில் நேருக்குநேர் சுட்டுக்கொல்லப்பட்ட அந்தோணி ஜான் ஆகியோரது தியாகங்கள் நீதிக்காகக் காத்திருக்கின்றன.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு, ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் அளித்து வரும் ஆதரவென்பது, அடையாள ஆதரவோ தார்மீக ஆதரவோ அல்ல. அணு உலைத் திணிப்பின் அரசியல் பின்புலத்தை அம்பலப்படுத்தும் வகையிலும், மின்வெட்டைக் காட்டி அணு உலையை நியாயப்படுத்தும் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையிலும் தமிழகமெங்கும் இவ்வமைப்புகள் தொடர்ந்து பிரச்சாரம் செது வருகின்றன. பிப்ரவரி 11 அன்று கூடங்குளத்தில் நடத்திய போராட்டத்தை அடுத்து, சென்னையில் மிகப்பெரும் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது.

தொடர்ந்து, மார்ச் மாதத்தில் ஜெ. அரசின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்ட நாட்களில், ம.உ.பா.மையத்தின் வழக்குரைஞர்கள் இடிந்தகரையிலும் கூடங்குளத்திலும் மக்களுடன் இருந்தனர். தற்போது செப்.9 முற்றுகைப் போராட்டத்திலும் மக்களோடு மக்களாக உடனிருந்து பணியாற்றியிருக்கின்றனர்.

அதேபோல, போலீசு அடக்குமுறைகளை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து வந்த சூழலில், போராட்ட நிலைமைகள், போலீசு அடக்குமுறைகள் குறித்த செதிகளை ‘வினவு’ இணையதளம் உடனுக்குடன் வெளிக்கொண்டு வந்தது. முள்ளிவாக்காலைப் போல போலீசால் முற்றுகையிடப்பட்டிருந்த அந்தப் பகுதியிலிருந்து நேரடி பேட்டிகளையும் ஒலிபரப்பியது. இத்தளத்தின் மூலம் களநிலைமைகள் ஏராளமான வாசகர்களைச் சென்றடைந்தன.

இடிந்தகரை மக்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலைக் கண்டித்து, உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களைத் திரட்டி, மனித உரிமைப் பாதுகாப்பு மையன் சென்னையில் நடத்திய கோட்டை நோக்கிச் செல்லும் பேரணி
இடிந்தகரை மக்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலைக் கண்டித்து, உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களைத் திரட்டி, மனித உரிமைப் பாதுகாப்பு மையன் சென்னையில் நடத்திய கோட்டை நோக்கிச் செல்லும் பேரணி

செப்.10 அன்று நடைபெற்ற போலீசு அடக்குமுறைக்கு எதிராக, செப்.11 அன்றே ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பல இடங்களில் தோழர்கள் கைது செயப்பட்டனர். மதுரை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களைத் திரட்டி சாலை மறியல் போராட்டமும், சென்னையில் கோட்டை முன் வழக்குரைஞர்களின் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டன. தூத்துக்குடியில் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து நூற்றுக்கணக்கானோர் நடத்திய போராட்டத்தில், அந்நகரைச் சேர்ந்த ம.உ.பா.மைய வழக்குரைஞர்கள் முன்நின்றார்கள்.

செப்.13 அன்று சீரங்கத்துக்கு வந்த ஜெயலலிதாவுக்கு, விமான நிலையத்திலிருந்து வரும் பாதையில் கருப்புக் கொடி காட்டினார்கள் திருச்சி ம.க.இ.க; பெ.வி.மு. தோழர்கள். அ.தி.மு.க. காலிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, 3 குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் பொவழக்கில் சிறை வைக்கப்பட்டார்கள்.

செப்.22 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற துறைமுக முற்றுகைப் போராட்டத்திலும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் கலந்து கொண்டனர். கூடங்குளத்தில் போலீசின் மனித உரிமை மீறல்கள் குறித்து, நீதி விசாரணை கோரி வழக்குரைஞர் வாஞ்சிநாதன் தொடுத்துள்ள வழக்கு மதுரை உயர் நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.

ŽŽŽ        செப். 9 முற்றுகைப் போராட்டமும், அதில் இடிந்தகரை, கூடங்குளம் மக்கள் காட்டிய போர்க்குணமும், அரசையும் ஆளும் வர்க்கத்தையும் அச்சம் கொள்ள வைத்திருக்கிறது. போர்க்குணமிக்க மக்கள்திரள் போராட்டங்களுக்கும், போராட்ட முறைகளுக்கும் ஊக்கம் தந்திருக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டக் கரையோர மக்களை அணு உலைக்கு எதிரான போராட்டக் களத்திற்குள் இழுத்து வந்திருக்கிறது.

அணு உலையின் அபாயம் குறித்து ஆழமாகப் புரிந்து வைத்திருக்கும் அந்த மக்களிடம், அதிகார வர்க்கத்தின் நைச்சியமான பேச்சுகளோ, போலீசின் உருட்டல் மிரட்டல்களோ செல்லுபடியாகவில்லை. அம்மக்கள் போராட்டத்தில் காட்டிய உறுதி, கண்மூடித்தனமான அணுஉலை ஆதரவுக் கருத்து கொண்ட நபர்களையும் சிந்திக்க வைத்திருக்கிறது.

இதற்கு நேர் மாறாக, நாராயணசாமியின் உளறல்களும், அணுசக்தி துறை அதிகாரிகளின் முன்னுக்குப்பின் முரணான, பித்தலாட்டமான பேச்சுகளும், அவர்கள் மீதான அவநம்பிக்கையை அதிகரித்திருக்கின்றன. அணு உலை ஆதரவு சவடால் அடித்து வந்த தமிழகத்தின் காங்கிரசு, பா.ஜ.க. கும்பல்கள்கூட இன்று அடக்கி வாசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இன்னொருபுறம், அணு உலையின் பாதுகாப்பு குறித்து அசாத்திய அக்கறை கொண்டுள்ளதைப் போல, வாச்சவடால் அடித்துவரும் உச்ச நீதிமன்றம், பொயான நம்பிக்கையை மக்களிடம் விதைத்து வருகிறது. குறிப்பிட்ட சில பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செத பின்னர், அணு உலையை இயக்குமாறு உத்தரவிடுவதற்கு மேல் வேறு எதையும் உச்சநீதிமன்றம் செயாது. செயவும் இயலாது என்பதே உண்மை நிலை.

அணுமின் நிலையங்களுக்கு எதிராக அறிவியல்பூர்வமாக எத்தனை ஆதாரங்களை எடுத்து அடுக்கினாலும், வாதங்களை முன்வைத்தாலும் அவையெல்லாம் அரசின் முடிவைத் மாற்றப் போவதில்லை. ரசியாவுடனான ஒப்பந்தம், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவை பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளை இலாபத்துக்காகவும், இந்திய அரசின் இராணுவ நோக்கத்துக்காகவும் போடப்பட்டவை; மக்கள் நலனுக்கு எதிரானவை; நாட்டின் பொருளாதாரத்தைச் சூறையாடுபவை என்று தெரிந்தேதான், அவை நம்மீது திணிக்கப்படுகின்றன.

ஜெயா, பா.ஜ.க., மமதா போன்றவர்களைப் பொருத்தவரை, அவர்கள் தேர்தல் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் அணு உலை எதிர்ப்பு, வால்மார்ட் எதிர்ப்பு பேசுகிறார்கள். இருப்பினும் இவர்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்துபவர்கள், போகாத ஊருக்கு வழிகாட்டுகிறோம் என்று தெரிந்தேதான் மக்களுக்கு இந்தப் பிரமையை ஊட்டுகிறார்கள்.

அணு உலை எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வைகோ, ராமதாசு, நெடுமாறன் உள்ளிட்டோராக இருக்கட்டும், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு முதலீட்டையும், மின்சாரம் தனியார்மயத்தையும் எதிர்ப்பதாக கூறும் வலது-இடது கம்யூனிஸ்டுகளாக இருக்கட்டும், அவர்கள் இதனை இந்த நாடாளுமன்ற ஜனநாயக அரசியலுக்கு உட்பட்டுச் சாதிக்க முடியாது என்று தெரிந்தும், மக்களுக்குப் போலி நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நடந்து கொண்டிருப்பது ஒரு போர். தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தி வரும் ஆளும் வர்க்கங்கள், சிங்குர், நந்திகிராம், கலிங்கா நகர், குர்கான், மானேசர் என்று பல இடங்களில் இது போர்தான் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டார்கள். இடிந்தகரையிலும் கூடங்குளத்திலும் இன்னுமொருமுறை இதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

இந்தப் போரில் எதிரியைத் தோற்கடிப்பது ஒன்றுதான் நம் முன் திறந்திருக்கும் ஒரே வழி. வேறு வழிகள் எதுவும் இல்லை. இதனைப் புரிந்து கொள்வதும், இதற்குப் பொருத்தமான முறையில் மக்களை போராட்டத்திற்கு அணிதிரட்டுவதும்தான் நம் முன் உள்ள பணி.

____________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2012
__________________________________________________

படிக்க

இருண்டது தமிழகம்: கையாலாகாத ஜெயாவே, பதவி விலகு!

17
அறிவிக்கப்படாத பல மணிநேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்ட சிறுதொழில்
அறிவிக்கப்படாத பல மணிநேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்ட சிறுதொழில்

நான்காண்டுகளுக்கு முன்பு தொடங்கிய மின்வெட்டு பிரச்சினை இன்று பூதாகரமாகி, தமிழகத்தை இருளில் தள்ளியுள்ளது. சென்னையைத் தவிர, பிற பகுதிகளில் நாளொன்றுக்கு 12 மணி முதல் 16 மணி நேரத்துக்குத் தொடரும் மின்வெட்டால் தமிழக மக்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு சிறுதொழில்களின் உற்பத்தியும், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியும் அடியோடு முடங்கிப் போயுள்ளன. ஏறத்தாழ 20 லட்சம் தொழிலாளர்கள் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் வேலையிழந்துள்ளனர். மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் 30 சிறுதொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் தினமும் 12 மணிநேர மின்தடையால் அச்சுத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் தினமும் 15 கோடி ரூபா அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. பட்டறைகளுக்குப் பூட்டு போட்டு சாவியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதைத் தவிர வேறு வழிதெரியவில்லை என்கின்றனர், நவீன விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கத்தினர். கோவை – திருப்பூர் பகுதிகளில் நாளொன்றுக்கு 16 மணிநேர மின்வெட்டினால் விசைத்தறிகள், துணி பதனிடும் ஆலைகள், சலவை ஆலைகள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், என்ஜினியரிங் ஆலைகள், உணவுப் பொருட்கள் தயாரிப்பு ஆலைகள் என 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டு 8 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து பரிதவிக்கிறார்கள். 3 ஷிப்ட்டுக்குப் பதிலாக ஒரு ஷிப்ட்டில்தான் ஆலைகள் இயங்குவதாகவும், உற்பத்தி பாதிப்பால் தமிழகம் ஜவுளிச் சந்தையை இழந்து நிற்கிறது என்றும் புலம்புகிறார்,தென்னிந்திய மில் உரிமையாளர் சங்கத் தலைவர்.

காவிரி டெல்டா பகுதியில் மும்முனை மின்சார சப்ளை ஒரு மணி நேரம்தான் கிடைப்பதால் தண்ணீர் இறைக்க முடியாமல் சம்பா பயிருக்கு நாற்று விடக்கூட முடியவில்லை. கருகும் பயிர்களைப் பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் மின்விசிறி இல்லாமல் பச்சிளம் குழந்தைகளும் தீக்காயமடைந்தோரும் வேதனையில் துடிக்கிறார்கள். பிணவறைகளுக்கு மின்சாரம் இல்லாமல் துர்நாற்றம் தெருவரை வீசுகிறது. விவசாயம் செய முடியாமல் விவசாயிகள் பாதிப்பு, சிறுதொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு நட்டம், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு, மாணவர்களின் படிப்பு பாதிப்பு, குழந்தைகளும் முதியோரும் நோயாளிகளும் தூக்கமின்மையாலும் கொசுக்கடியாலும் பாதிப்பு – என அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களையும் வாட்டி வதைக்கும் ஜெயா அரசு, மின்வெட்டுக்கு எதிராகத் தன்னெழுச்சியாக சாலை மறியல், ஆர்ப்பாட்டங்களை நடத்தும் மக்கள் மீதும் போலீசை ஏவி ஒடுக்கும் பேயாட்சியாக மாறிவிட்டது.

கடும் மின்வெட்டால் விவசாயம் அழிந்து உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவிய போதிலும், அரசாங்கமோ பன்னாட்டு கம்பெனிகளுக்கும் ஷாப்பிங் மால்களுக்கும் வாசல் முதல் கழிப்பறை வரை தடையில்லா  மின்சாரத்தை அள்ளி வழங்குகிறது. கரண்டு தர முடியாத கையாலாகாத அரசு என்று சாடும் மக்கள், இந்த நிலை தொடர்ந்தால் இனி ஊரெங்கும் கஞ்சித் தொட்டி திறக்க வேண்டியதாகிவிடும் என்கின்றனர்.

ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் மின்வெட்டைப் போக்குவேன் என்று வாக்குறுதி தந்த ஜெயா ஆட்சியில், கடந்த 15 மாதங்களில் ஒரு மெகாவாட் மின்சாரத்தைக் கூட கூடுதலாக உற்பத்தி செய முடியவில்லை. ஜெயா ஆட்சியின் திறமையற்ற நிர்வாகத்தால் தமிழகத்தின் மின் உற்பத்தி 2300 மெகாவாட் குறைந்ததுதான் மிச்சம். மின்சாரம் எப்போது வரும் , மின்தடை எப்போது நீங்கும் என்பதற்கு எவ்விதமான பொறுப்பான பதிலும் அரசிடம் இல்லை. மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, எடுக்கப் போகிறது என்பது சிறீரங்க நாயகிக்கே வெளிச்சம்.

கோவையைச் சேர்ந்த சிறுதொழில் அதிபர்கள் - தொழிலாளர்கள் மின்வெட்டைக் கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம்
கோவையைச் சேர்ந்த சிறுதொழில் அதிபர்கள் – தொழிலாளர்கள் மின்வெட்டைக் கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம்

மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அதிகாரிகளோ, ஏற்ற இறக்கத்தோடு காற்று வீசுவதால் காற்றாலைகளில் மின் உற்பத்தி குறைந்துவிட்டதாலும், மத்திய மின்தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு 1000 மெகாவாட் மின்சாரம் குறைவாகவே கிடைப்பதாலும்,  நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இல்லாததால் நீர் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாலும், மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதென்றும், இந்தக் குறை எப்போது தீரும் என்று நம்பிக்கையே இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனாலும் மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், டிசம்பர் மாத இறுதிக்குள் மின்தடை பிரச்சினை சீராகிவிடும் என்றும், 2013 முதல் தமிழகம் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுவிடும் என்றும் அம்மாவின் ஆசிப்படி ஆரூடம் கூறுகிறார்.

அன்று கருணாநிதி ஆட்சியின் போது, மின்வெட்டுத்துறை அமைச்சர் என்று ஆற்காடு வீராசாமிக்குப் பெயர் சூட்டி, ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையும் ஊழலும்தான் மின்வெட்டுக்குக் காரணம் என்பதாக பெருங்கூச்சல் போட்ட பார்ப்பன ஊடகங்கள், இன்று  அதைவிடக் கேவலமான நிலைமை ஜெயா ஆட்சியில் தொடர்ந்த போதிலும் வாமூடிக் கிடக்கின்றன. மின்சார வாரியத்தில் பெரிய தொழிற்சங்கமாக உள்ள போலிகம்யூனிஸ்டுகள்,ஜெயா அரசின் நிர்வாகச் சீர்கேட்டை அம்பலப்படுத்திப் போராட முன்வராமல் ஒதுங்கி நிற்கின்றனர்.

கடந்த தி.மு.க. ஆட்சியின் கடைசி ஆண்டில் 7 மின் உற்பத்தித் திட்டங்களுக்கு மத்திய – மாநில அரசுகளின் ஒப்புதல் கிடைத்து, மின் உற்பத்தியைத் துவக்கலாம் என்ற அனுமதியைத் தரவேண்டிய நேரத்தில் ஆட்சி மாறியது. தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டம் என்பதால், மொத்தத்தில் 7,798 மெகாவாட் கிடைக்கும் இத்திட்டங்களை விரைவுபடுத்த ஜெயா ஆட்சியில் முறையாக முயற்சிகள் மேற்கொள்ளப்படாததால் பயனுக்கு வராமல் உள்ளன. மறுபுறம், தமிழகத்தில் புதிய மின்நிலையங்களை உருவாக்கும் திட்டமோ, குறுகிய கால புதிய மின் திட்டங்களோ  எதுவும் அரசிடம் இல்லை. முன்பு கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட மின்திட்டங்கள் நிறைவேறினால்தான் ஓரளவுக்காவது மின்சாரம் கிடைக்கும் என்ற நிலைமைதான் உள்ளது.

காற்றாலை மூலம் தொடர்ச்சியாக மின்சாரம் கிடைக்கவில்லை என்றும்,  கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு செல்லவும் பயன்படுத்தவும் அதற்கான கிரிட் இல்லை என்றும் கூறி, அந்த மின் உற்பத்தியையே அரசு நிறுத்தி விட்டது. காற்றாலைகளை மூடிவிடுமாறு  தங்களுக்கு அரசு அறிவித்துள்ளதாகக் காற்றாலை முதலாளிகளே பேட்டியளிக்கின்றனர்.

தமிழகத்தில் நி0லவும் மின்பற்றாக்குறை காரணமாக பிற மாநிலங்களிலிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியதால் மின் வாரியத்துக்கு நட்டம் ஏற்பட்ட போதிலும், அந்த நட்டத்தை ஓரளவு மாநில அரசு ஏற்கும் என்று சோல்லி தமிழகத்தின்  மின்பற்றாக்குறையைத் தீர்க்க முனைந்தது முந்தைய தி.மு.க. அரசு.  தனியார்மயம் என்ற போதிலும் தற்போதைய நெருக்கடியான நிலைமையில் அதைக்கூட செயல்படுத்த ஜெயா அரசு முனையவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் புதுவை எல்லையருகே அமைந்துள்ள கோட்டைக்குப்பம் கிராம மக்கள் மின்வெட்டைக் கண்டித்து நடத்திய சாலைமறியல் போராட்டதைக் கலைக்க போலீசு நடத்திய தடியடி
விழுப்புரம் மாவட்டத்தில் புதுவை எல்லையருகே அமைந்துள்ள கோட்டைக்குப்பம் கிராம மக்கள் மின்வெட்டைக் கண்டித்து நடத்திய சாலைமறியல் போராட்டதைக் கலைக்க போலீசு நடத்திய தடியடி

முந்தைய கருணாநிதி ஆட்சியில் பற்றாக்குறை நீடித்த போதிலும், குறிப்பிட்ட நேரத்தில் மின்தடை இருக்கும், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையாவது இருந்தது. இப்போது அத்தகைய நேரப் பட்டியல் ஏதும் கிடையாது. வரும், ஆனா வராது என்ற நிலைமைதான் உள்ளது. இதனால் சிறுவீதத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை வேலைக்கு வரச்சோல்லிவிட்டுப் பின்னர் மின்சாரம் இல்லாமல் தவிப்பதும், மின்சாரம் வராத நேரத்தில் வேலைக்கு வரவேண்டாம் என்று அறிவித்த பிறகு, திடீரென மின்சாரம் சில மணி நேரங்களுக்கு வருவதுமாகி சிறுதொழில் முதலாளிகள் என்ன செவதென்று புரியாமல் தடுமாறுவதும் பெருத்த  நட்டமடைவதும் தொடர்கிறது. மின் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள மின்வெட்டை சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்குப் பகிர்ந்தளிப்பது பற்றிய கொள்கையும் இல்லை. வெறுமனே அலங்கார விளக்குகள் பயன்படுத்தக்கூடாது என்று மின்வாரிய அதிகாரிகள் அறிவித்ததற்கு மேல் வேறெந்த நடவடிக்கையும் இல்லை. பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கும் தடையற்ற மின்சாரத்தை வழங்கிச் சாதமாக நடந்து கொள்ளும் ஜெயா அரசு, ஒருதலைப்பட்சமாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில்  தீராத மின்வெட்டைத் திணித்து வருகிறது.

தொகுப்பாகக் கூறினால், ஜெயா ஆட்சியில் இன்று எந்த நிர்வாகமும் இல்லாமல் போனதே மின்வெட்டு தீவிரமானதற்குக் காரணமாகும். மின் பகிர்மானம் ஒருதலைப்பட்சமாக இருப்பதாலேயே தமிழகத்தின் பிற பகுதிகள் இருளில் தவிக்கின்றன.  இருப்பினும், நிர்வாகச் சூரப்புலி என்று ஒரு பிம்பத்தை ஊடகங்கள், பிழைப்புவாதிகள் மூலம் உருவாக்கிக் கொண்டு, அதை விளம்பரப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு முயற்சியும் ஜெயா அரசிடமில்லை.  சென்னையிலும் மின்வெட்டு அதிகமானால் ஒட்டுமொத்த தமிழக மக்களிடம் மேலும் அம்பலப்பட்டுத் தனிமைப்பட நேரிடும் என்பதால், சென்னையில் மட்டும் ஓரிரு மணி நேரத்துக்குத் தொடரும் மின்வெட்டைக் காட்டி, இதேபோலத்தான் தமிழகமும் இருப்பதாக மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி ஜெயா அரசு ஏத்து வருகிறது.

மின்வெட்டுக்கு எதிராகத் தமிழகமெங்கும் தன்னெழுச்சியாகப் போராடிவரும் மக்கள், தமிழகத்தை இருளில் தள்ளி தண்டித்துவரும் கேடுகெட்ட ஜெயா ஆட்சிக்கு உரிய தண்டனையை வழங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

____________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2012
__________________________________________________

கடவுளை நொறுக்கிய துகள்!

16

கடவுள்-துகள்

“கடவுள் துகள்” என்ற பெயரில் ஹிக்ஸ் போசோன் அழைக்கப்படும் காரணத்திற்காகவே, “அறிவியலால் கடவுளை வரையறுக்க முடியுமா?” என்ற தலைப்பில் என்.டி.டி.வி ஆங்கிலத் தொலைக்காட்சி ஒரு விவாதத்தை ஒளிபரப்பியது. கடவுள் இருப்பது அங்கீகரிக்கப்பட்ட உண்மை போலவும், அதனை வரையறுக்கும் ஆற்றல் அறிவியலுக்கு இருக்கிறதா இல்லையா என்பது மட்டுமே பிரச்சினை போலவும் காட்டுகின்ற ஒரு பித்தலாட்டத் தலைப்பு!

ஜக்கி வாசுதேவ், டில்லி கத்தோலிக்க திருச்சபையின் டொமினிக் இமானுவேல், விவேகானந்தா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆத்ம பிரியானந்தா – இவர்கள் ஆன்மீகத்தரப்பு. புஷ் பார்கவ், மாலிகுலார் பயாலஜிஸ்ட் மற்றும் பேரா. ராஜாராமன், இயற்பியல் பேராசிரியர் இருவரும் அறிவியல் தரப்பு.

முகத்தில் முட்டாள் திமிரும், அசட்டுத் தற்பெருமையும் பளிச்சிட, மிகை நடிப்புத் தோரணையில், “அறிவியலும் தேடுகிறது, ஆன்மீகமும் தேடுகிறது” என்று கார்ப்பரேட் ஆன்மீக வியாபாரிகளுக்கே உரிய சொல்விளையாட்டை தொடங்கினார் ஜக்கி. “நீ தேடுவது வேறு அறிவியல் தேடுவது வேறு, அறிவியல் தேடுகின்ற முறையும் வேறு” என்று நாகரிகமான மொழியில் அதைக் கத்தரித்தார் பார்கவ்.

“பிரபஞ்சத்தின் 4% மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக அறிவியலாளர்களே கூறியிருக்கிறார்கள். மிச்சமுள்ள 96 விழுக்காடு பிரபஞ்சம் பொருளால் ஆனது அல்ல, அதைத்தான் ஆன்மீகம் என்கிறோம்”

என்றார் ஜக்கி. “பட்டா இல்லாதவன் சொத்தெல்லாம் என் சொத்து. கண்டுபிடித்தது அறிவியலுக்கு, கண்டுபிடிக்காததெல்லாம் கடவுளுக்கு” என்று விளக்கும் இந்த தில்லுமுல்லு வாதத்தின் மீது ராஜாராம் காறி உமிழ்ந்த பிறகும் ஜக்கி சளைக்கவில்லை.

“அறிவியல் எல்லாவற்றையும் அறுத்து உண்மையைத் தேடுகிறது. அணுவைப் பிளந்து பார்க்கிறது. உங்களை அறுத்துப் பார்த்து நீங்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள முடியுமா?”

என்று பொளந்து கட்டவே, ‘முடியல‘ என்று சரிந்து விட்டனர் அறிவியலாளர்கள். “பிரபஞ்சம் மலை, சிற்றெறும்பாகிய நாம் மலையை எப்படி அறிய முடியும்?” என்றார் துணைவேந்தரான சாமியார். தன் முன் இருப்பது மலை என்பதை தெரிந்து கொள்ள முடிந்த எறும்பால், மலையின் இரகசியத்தை ஏன் தெரிந்து கொள்ள முடியாது என்று அந்த துணைவேந்தருக்கு உரைக்கவில்லை.

“அறிவியல் ஒரு துகளோடுதான் போராடிக் கொண்டிருக்கிறது. இன்னும் அது பொருளையே என்னவென்று அறியவில்லை. ஆன்மாவை ஆராய்ந்து பார்ப்பதற்கு அது இன்னும் வெகுதூரம் போகவேண்டும்”

என்று மீசையில் மண் ஒட்டாத தோரணையில் பேசினார் இமானுவேல்.

“அதிருக்கட்டும். பைபிள் கூறும் படைப்புக் கோட்பாடு இனியும் செல்லுபடியாகுமா?” என்று அவரைக் கேட்டதற்கு,

“ஆதி ஆகமத்தில் சொன்னபடி 6 நாளில் கடவுள் உலகத்தைப் படைத்திருக்க வேண்டும் என்றில்லை. இப்போது அறிவியல் சொல்வது போல பெருவெடிப்பாக இருக்கலாம். இதுவும் கடவுளின் படைப்புதான்”,

கோட்டையில்லே கொடியும் இல்லே, அப்பவும் நான் ராஜா என்றார் கூச்சமே இல்லாமல்.

புலன்களால் அறிய முடியாதது, கலையைப் போல ஒரு மாறுபட்ட அறிதல் முறை, காதல் போன்றதொரு உள்ளுணர்வு என்று கடவுளுக்கு பலவிதமாக முட்டுக்கொடுத்தார்கள் இந்த ஆன்மீக வல்லுநர்கள் – இது என்.டி.டி.வி விவாதம்.

இன்னொரு புறம் வாழும்கலை ஸ்ரீஸ்ரீரவிசங்கர்ஜி, அவரது வெள்ளைக்கார பக்தர்கள் மற்றும் ஜீன்ஸ் அணிந்த மாமிகளிடம், பெருவெடிப்பு பற்றி ரிக் வேதத்திலேயே எழுதப்பட்டிருக்கிறதாகவும்,  தற்போது ஹிக்ஸ் போசோன் பற்றி விஞ்ஞானிகள் விளக்கிய பின்னர்தான், ரிக் வேதத்தின் ஆழமான உட்பொருளை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்வதாகவும் அரைக்கண்ணை மூடியபடி, அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தார். அதாவது ரிக் வேதம் ஏற்கெனவே கண்டுபிடித்துக் கூறியிருப்பதைத்தான், செர்ன் ஆய்வுமையம் தற்போது கண்டுபிடித்திருக்கிறது என்ற உண்மையை, தான் இப்போதுதான் கண்டுபிடித்திருப்பதாக கூறிக்கொண்டிருந்தார் ரவிசங்கர்ஜி.

அதிகம் சொல்வானேன். மதம், ஆன்மீகம், தேடல் என்ற பெயர்களில் தமது வணிகத்தை நடத்திவரும் இந்த வல்லுநர்கள் அனைவர்க்குமான ஒரு பொதுத்தன்மை என்னவென்றால், முடிந்தவரை இவர்கள் அறிவியல் பார்வையை ஆதரிப்பவர்கள் போலப் பேசுகிறார்கள். இவர்களுடைய ஆன்மீகத்தை ஆய்வுக்கு உட்படுத்த முயன்றால், அறிவியலின் அளவுகோலால் எங்களை அளக்க முடியாது என்று சீறுகிறார்கள். அறிவியலின் வரம்பு பற்றி எச்சரிக்கிறார்கள். பிரபஞ்ச ரகசியத்தை கண்டுபிடித்துவிட முடியுமா என்று அச்சுறுத்துகிறார்கள்.

அறிவியலோ, இயற்கையின் ரகசியத்தை கண்டுபிடித்துவிட்டோம் என்று மார்தட்டுவதுமில்லை. பொருத்தமானதொரு விடை கிடைத்து விட்டதென்று, தனது ஆய்வினை நிறுத்துவதுமில்லை.

 ♠ ♠

பீட்டர்-ஹிக்ஸ்
பீட்டர் ஹிக்ஸ்

ஹிக்ஸ் போசோனுடன் கடவுளை இணைத்து முடிச்சு போடுவதற்கு ஆன்மீகவாதிகளின் கையில் அகப்பட்ட நூல், கடவுள் துகள் என்று பெயரிடப்பட்ட லேடர்மேனின் புத்தகம். ‘விடை இந்தப் பிரபஞ்சம் என்றால், கேள்வி என்ன?‘ என்று அட்டையிலேயே கேட்கிறார் லேடர்மேன். 1993 இல் இயற்கை விஞ்ஞானத்தில் அவர் எழுப்பிய இதே கேள்வியை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தத்துவஞானத் துறையில் இந்தியாவில் எழுப்பினார்கள், நமது மரபின் ஆதி முதல் பொருள் முதல்வாதிகளான சாருவாகர்கள்.

“கடவுள்தான் இந்த உலகத்தைப் படைத்தான் என்போரே, வறுமையும் பசியும் பிணியும் நிறைந்த இந்த உலகத்தை கடவுள் எதற்காகப் படைத்தான்? எதற்காகப் பிறப்பு, எதற்காக இறப்பு? இவையெல்லாம் இறைவனின் லீலையென்போரே, உங்கள் இறைவன் எத்தனை வக்கிரமானவன்?”

என்று கேட்டார்கள் சாருவாகர்கள்.

அறிவியல் கண்ணோட்டத்தின் ஊற்று விடையல்ல, கேள்வி. ஒரு கேள்விக்கு விடையாக பல ஊகங்கள் முன்வைக்கப்படலாம். சோதனையில் எந்த ஊகம் நிரூபிக்கப்படுகிறதோ அது மட்டுமே விடையாகிறது. எல்லா ஊகங்களும் பொய்ப்பிக்கப்பட்டு புதியதோர் விடையும் சோதனையில் கிடைக்கலாம். ஒருவேளை செர்ன் ஆய்வகத்தில் நடைபெற்ற சோதனையில் ஹிக்ஸ் போசோன் என்ற துகள் கிடைத்திருக்கவில்லையானாலும், அதனை தோல்வி என்று அறிவியல் கருதுவதில்லை. பருப்பொருளின் தோற்றம் குறித்த தனது ஆய்வு முயற்சியையும் அறிவியல் கைவிடப்போவதில்லை.

அறிவியல் என்பது அறிவியலின் வரலாறாகவும் இருக்கிறது என்பார் வரலாற்றறிஞர் டி.டி.கோசாம்பி. கலீலியோ, நியூட்டன், ஐன்ஸ்டீன், போஸ், ஹிக்ஸ், அப்துல்சலாம் என்று வெவ்வேறு நாடுகளையும் கண்டங்களையும் சேர்ந்த அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு பொது இழையில் சேர்ந்து மனித குலத்தின் பொதுவான அறிவாக மாறுகின்றன. அவை தொழில்நுட்பங்களாக உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும்போது, பிரம்மாண்டமான சமூக ஆற்றலாகின்றன.

ஆன்மீகம் என்ற பெயரில் தத்துவஞானத் தளத்தில் ஒன்று சேர்ந்து கொள்ளும் மதவாதிகள், உலகம் தோன்றியதெப்படி என்று வேதங்களும், பைபிளும், குர் ஆனும் கூறுவதை நிரூபிப்பதற்கோ, ‘கடவுளுக்குப் பொதுவாக‘ தமக்குள் ஒரு முடிவுக்கு வருவதற்கோ என்றுமே முயன்றதில்லை. ஞாயிறுதோறும் பைபிளை ஜெபித்தாலும் அதிலிருந்து படைப்பின் கோட்பாட்டை யாரும் புரிந்து கொள்வதில்லை. அதே நேரத்தில் நியூட்டனின் மூல நூலைப் படிக்காத ஒரு பள்ளி மாணவனுக்குக் கூட புவி ஈர்ப்பு விசைக் கோட்பாடு புரியாமல் இருப்பதில்லை.

இயற்கையின் இயக்கம் குறித்த விஞ்ஞானிகளுடைய கண்டுபிடிப்புகள் அவர்களுடைய தனிநபர் அனுபவங்கள் அல்ல. அவை யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கத்தக்க பொது அனுபவங்கள் அல்லது முடிவுகள். இதன் காரணமாகத்தான் ஒரு விஞ்ஞானியின் அறிதல் சமூகத்தின் பொது அறிவாக மாற முடிகிறது. அறிவியலுக்குள் ஒரு வரலாற்று தொடர்ச்சி வந்துவிடுகிறது. நியூட்டனின் ஆப்பிள் நம்முடைய ஆப்பிளாகிவிடுகிறது.

தங்களுடைய அறிதல் முறை புலன்சாராத அறிதல் என்று கூறும், மதவாதிகள், ஜக்கி, நித்தி, ரவிசங்கர்ஜிக்களின் அறிதல்கள், கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் ரகத்தை சேர்ந்தவை. புலனறிவுக்கும், பகுத்தறிவுக்கும் மொழியின் சாத்தியத்துக்கும் அப்பாற்பட்டவையாக அவர்களால் சித்தரிக்கப்படுபவை. எனவே அவை நம்முடைய ஆப்பிளாக முடியாதவை.

சமஸ்கிருதத்தில் மர்மமான சொற்களில் முனிவர்கள் எழுதிச் சென்றவைகளுக்கு கவர்ச்சிகரமான ஆங்கிலத்தில் வியாக்கியானம் கூறி, மேற்குலகின் மீது இந்தியாவின் ஆன்மீக மேன்மையை நிலைநாட்டுவதும், காசு பார்ப்பதும் எளிது, என்று இந்தக் கும்பலைத் தோலுரிக்கிறார் கோசாம்பி.

இயற்கை விஞ்ஞானம் கடவுளை விண்ணுலகின் கோள்களிலிருந்து விரட்டி விரட்டி அகற்றி வருகிறது. ஆறு நாட்களில் கடவுள் உலகத்தைப் படைத்ததாகக் கூறும் ஆதியாகமத்தை மறுப்பதற்கு ஒருவன் அவிசுவாசியாக இருக்கத் தேவையில்லை. அந்த விடயத்தில் ஆர்ச் பிஷப்புகளே தேவனைக் கைவிட்டு விட்டார்கள். இருப்பினும் கடவுள் ஒழிந்து விடவில்லை.

  ♠ ♠

கேலக்சிகாரா பாலைவனத்தின் பெரு மணற்பரப்புதான் இந்தப் பிரபஞ்சமென்றால், அதில் ஒரு மணற்துகளே இப்பூமி என்று அறிவியல் அறுதியிட்டுக் கூறிவிட்டது. ஆயினும் என்ன? இந்த மணற்துகளில் பிறந்து வளரும் நுண்ணுயிர்கள் முதல் விலங்குகள் மனிதர்கள் வரையிலான அனைத்து உயிரினங்களின் ஆயுட்காலத்தையும், பெங்களூரு நீதிபதியுடைய பதவிக்காலத்தையும், சொத்துக்குவிப்பு வழக்கின் வாய்தா தேதிகளையும் முன் கூட்டியே தீர்மானித்து இயக்குகின்ற பேரறிவு ஒன்று இருப்பதாகவும், ஒரு ஐயரை வைத்து அந்தப் பேரறிவை சரிக்கட்டுவதன் மூலம் வாய்தா தேதியைத் தள்ளிப்போடமுடியும் என்றும் ஜெயலலிதா நம்புகிறார். அரசன் முதல் ஆண்டி வரை பலரும் பலவிதமாக நம்புகிறார்கள்.

கடவுள் தகர்க்கப்பட்டு விட்டார். நம்பிக்கையைத் தகர்க்க முடியவில்லை. எனவே நம்பிக்கைக்குள் ஒளிந்து கொள்கிறார் கடவுள். முதலாளித்துவ சமூகம் தோற்றுவிக்கின்ற அனுமானிக்க முடியாத நிச்சயமின்மையும், இச்சமூக உறவுகள் தோற்றுவிக்கும் சிக்கல்களும், கடவுள் என்ற அனுமானத்தை வாழ வைக்கின்றன. வானத்தில் கிடைக்காத இடுக்குகளை கடவுளுக்கு பூமியில் வழங்குகின்றன. இதே இடுக்குகளுக்குள் பாதுகாப்பாகப் பதுங்கியிருக்கும் பழைய புதிய மதவாதிகளும் அறிவியலுக்கு எதிராக ஆர்ப்பரிக்கிறார்கள்.

“நவீன அறிவியலால் வெளிக்கொணரப்படும் புதிர்களும், பிரபஞ்சத்தின் விதிகளும், கடவுளின் ஆளுமையைத்தான் காட்டுகின்றன”

என்கிறார் வாடிகனின் வானவியல் வல்லுநர் கய் கன்சால்மேக்னோ.

அவரது கருத்துப்படி கடவுள் எல்லாமறிந்த ஆளுமையாகவே இருக்கட்டும். குவான்டம் இயற்பியல், துகள் இயற்பியல், உயிர் வேதியல் உள்ளிட்ட பல்துறை அறிவு கடவுளுக்கு உண்டு என்பதை, அதாவது விவிலியம் அறிந்திராத தேவனின் மகிமைகளை, நவீன அறிவியல்தானே போப்பாண்டவருக்கு கண்டு பிடித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது! அறிவியலின் ‘ஆளுமை‘ எவ்வளவு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்குத்தானே கடவுளின் ஆளுமை குறித்த திருச்சபையின் புரிதலும் அதிகரிக்கிறது!

‘காட் டெலூஷன்‘ (இறை மயக்கம்) நூலின் ஆசிரியரும் பிரிட்டனின் பிரபல இறை மறுப்பாளருமான பேரா. ரிச்சர்டு டாகின்ஸின் கூற்று, அறியாமையின் செருக்கு நிறைந்த அந்தப் பிதற்றலுக்குப் பொருத்தமான பதிலாக அமைகிறது.

“அறிவியல் நமக்கு அளிக்கின்ற பிரமிப்பூட்டும் ஆச்சரிய உணர்ச்சி என்பது, மனித மனம் எட்டிப் பிடிக்கக் கூடிய மிக உன்னதமான உணர்ச்சிகளில் ஒன்று. அற்புதமானதொரு இசையும் கவிதையும் அளிக்கின்ற ஆழ்ந்த அழகியல் உணர்ச்சிக்கு இணையானது அது. இந்த உலகமும், பிரபஞ்சமும் அழகானவை, அற்புதமானவை – அவற்றை எந்த அளவுக்கு நாம் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு! -… அறிவியல் என்பது எதார்த்தத்தின் கவிதை.”

அறிவியலையும் பகுத்தறிவையும், வெறுமனே அறுத்துப் பார்க்கும் ஆய்வு முறையாகவும், அழகியல் உணர்ச்சியற்றவையாகவும், இதயமற்றவையாகவும் காட்டும் ஆன்மீகப் பித்தலாட்டத்தின் மீது டாகின்ஸின் கூற்றில் உள்ள உண்மை ஒளிவெள்ளம் பாய்ச்சுகிறது.

“தன்னையே தான் அறிதல் என்று கூறிக்கொண்டு, இந்திய முனிவர்கள் மர்மமான மொழியில் சூக்குமமாக எதையோ எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். லூயி பாஸ்டர் போன்ற விஞ்ஞானிகளோ தம் உயிரையும் பணயம் வைத்து நுண்ணுயிர் குறித்த புரிதலையும் தடுப்பு மருந்துக் கோட்பாட்டையும் மருத்துவ உலகிற்கு அளித்திருக்கிறார்கள். இதுதான் தவம், இவர்கள்தான் நவீன உலகின் போதி சத்துவர்கள்” என்று அறிவியலின் இதயத்தையும் ஆன்மீகத்தின் இதயமின்மையையும் வேறு விதமாக எடுத்துச் சொல்கிறார் கோசாம்பி.

பிரம்மம், ஞானம், அவித்யை என்ற சில சொற்களையே சோழிகளாக உருட்டிப் போட்டு, அதைக்கண்டு வாய்பிளந்து நிற்கும் புளித்த ஏப்ப வர்க்கத்தினரின் மூளைகள் மீது கீழைத்தேயத்தின் ஆன்மீக மேன்மையை நிலைநாட்டி பணம் பண்ணிக் கொண்டிருக்கும் நித்தி, ஜக்கி, ரவிசங்கர்ஜி முதலான ஆன்மீக கழைக்கூத்தாடிகள், அறிவியலுக்கு அடக்கம் வேண்டுமென்று அறிவுரை சொல்கிறார்கள்.

அறிவியல் ஆணவம் கொண்டு ஆடுவதைப் போலவும், ஆன்மீகத்தை அடக்கத்தின் திருவுருவாகவும் சித்தரிக்கும் ஜக்கி வாசுதேவ், அறியாமையின் தீவிரத்தை உணரவேண்டுமென உபதேசிக்கிறார். அறிவைத் தேடுபவன் மட்டும்தான், தனது அறியாமையின் தீவிரத்தையோ, ஆழத்தையோ புரிந்து கொள்ள முடியும். அறியாமையையே வரப்பிரசாதமாக கருதி வழிபடும் ஆன்மீகம், அறியாமையின் தீவிரத்தை எந்தக்காலத்திலும் உணரமுடியாது.

பருப்பொருளின் தோற்றத்தைக் கண்டறியும் முயற்சியில் அறிவியல் ஈடுபட்டிருக்கும் இந்தக் காலத்தில், பெருவெடிப்பையே சிறிய அளவில் நிகழ்த்திப் பார்க்குமளவுக்கு அறிவியல் முன்னேறியிருக்கும் இக்காலத்தில்,அபத்தமானவையும் அருவெறுக்கத் தக்கவையுமான இத்தகைய கருத்துகளை ஆன்மீகம் என்ற பெயரில் எங்ஙனம் கடைவிரிக்க முடிகிறது? ஹிக்ஸூம் ரவிசங்கர்ஜியும் அக்கம்பக்கமாக நிலவுவது எப்படி சாத்தியமாகிறது?

   ♠ ♠

றுதியான தத்துவஞான அடித்தளத்தின் மீது நிற்காத வரை, முதலாளித்துவக் கருத்துகளின் தாக்கத்திலிருந்தும் முதலாளித்துவ உலக கண்ணோட்டத்தின் மீட்டுருவாக்கத்திலிருந்தும், இயற்கை விஞ்ஞானமோ, பொருள்முதல்வாதமோ தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாது. தன்னுடைய போராட்டத்தில் சொந்தக் காலில் தாக்குப் பிடித்து நிற்பதற்கும், வெற்றியை சாதிப்பதற்கும், ஒரு இயற்கை விஞ்ஞானி”. இயங்கியல் பொருள்முதல்வாதியாக இருக்கவேண்டும்‘என்பார் லெனின். (தொகுதி-38, பக்கம் 146-47)

“இயற்கை விஞ்ஞானம் அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதன் அனைத்து துறைகளும் தீவிரமான கொந்தளிப்பான மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் இந்தச் சூழலில் அது தத்துவஞான முடிபுகளைத் தவிர்த்து நிற்கமுடியாது.”  (லெனின், தொகுதி-33, பக்கம் 232-34)

லெனின்இயற்பியல் துறையில் பெரு முன்னேற்றம் கண்ட இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில்தான் பருப்பொருளின் மறைவு குறித்துப் பேசிய புறவய கருத்து முதல்வாதமான மாக்கிசம் எனும் கருத்துமுதல்வாத தத்துவப் போக்கு ஐரோப்பாவில் எழுந்தது. இதனை எதிர்த்து மார்க்சியமும் அனுபவ வாத விமரிசனமும் என்ற நூலை எழுதிய லெனின், இயற்பியலின் புதிய கண்டுபிடிப்புகள் பொருளுக்கும் இயக்கத்துக்கும் இடையிலான ஒற்றுமை குறித்த மார்க்சியக் கோட்பாட்டை உறுதி செய்வதை எடுத்துக் காட்டினார்.

இயற்கையின் இயக்கம் குறித்த விதிகளைக் கண்டறிகிறது நவீன அறிவியல். எனினும் அறிவியலின் இந்தக் கண்டுபிடிப்புகளுக்கும், பழைய வகையிலான சிந்தனை முறைகளுக்கும் இடையில் ஒரு முரண்பாடு இருக்கத்தான் செய்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் சிந்தனை மரபில் வேரோடியிருக்கும் கருத்துமுதல்வாதமும், இயக்க மறுப்பியல் கண்ணோட்டமும் அறிவியலாளனின் சிந்தனைக்கு உள்ளேயும் கூட ஆழமாக வேரோடியிருக்கிறது.

அதனால்தான், முதலாளித்துவ உலகில் அறிவியலின் முன்னேற்றம் என்பது உணர்வு பூர்வமானதாக இருப்பதில்லை என்றும், அது உண்மையை நோக்கி சரியான திசையில் முன்னேறும் சந்தர்ப்பங்களிலும் கூட உண்மைக்கு முதுகைக் காட்டியபடிதான் நகர்ந்து செல்கிறது என்றும் கூறுகிறார் லெனின். (தொகுதி-14, பக்கம்-313)

இன்று முதலாளித்துவம் பிரம்மாண்டமாக வளர்ந்து உலகு தழுவியதாக மாறியிருக்கிறது. அறிவியல் ஆய்வை ஒரு அறிவியலாளன் தனித்துச் செய்து பார்த்த காலம் மலையேறி விட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பணபலமும், பிரம்மாண்டமான ஆய்வகங்களும், பல்துறை ஆய்வாளர்களின் ஒத்திசைவும் இல்லாமல் ஒரு அறிவியல் சோதனை என்பது இன்று சாத்தியமற்றது. 60 களிலேயே ஹிக்ஸ் தனது கண்டுபிடிப்பை காகிதத்தில் வெளியிட்டு விட்டார். செர்ன் ஆய்வு மையத்தைப் போன்றதொரு நிலத்தடி ஆய்வு மையத்தை அமைப்பதற்கான பணிகளையும் 90 களிலேயே தொடங்கியது அமெரிக்கா.

உலகத்தை தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்காக ஆண்டுக்கு 600 பில்லியன் டாலர் ராணுவத்துக்கு செலவு செய்யும் அமெரிக்க அரசு, பிரபஞ்சம் தோன்றியது எப்படி என்று அறிந்து கொள்வதற்கு 10 பில்லியன் டாலர் செலவு செய்வதை வீண் என்று கருதி, தோண்டிய சுரங்கத்தை மூடியது. பின்னர் ஐரோப்பிய நாடுகளின் கூட்டு முயற்சியாகத்தான் செர்ன் ஆய்வு மையம் உருவாக்கப்பட்டது.

ஏகாதிபத்திய முதலாளித்துவம், மனிதனுக்கேயுரிய அறிவுத்தாகத்தால் உந்தப்பட்டோ, இயற்கையைப் பேணும் பொருட்டோ, அல்லது இயற்கை இடர்களிலிருந்து மனிதகுலத்தைக் காக்கும் பொருட்டோ அறிவியல் ஆய்வைத் தொடங்குவதில்லை. போர் அல்லது இலாபம் – இவைதான் முதலாளித்துவத்தின் கீழ் அறிவியலை உந்தித் தள்ளுகின்றன.

அந்த வகையில், கண்காணிப்பதற்கும், வேவு பார்ப்பதற்கும், அழிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள்தான், நவீன மருத்துவக் கருவிகளைப் பிரசவித்திருக்கின்றன. இது போன்றவை முதுகைக் காட்டியபடி நடந்ததில் கிடைத்த முன்னேற்றங்கள்.

இயற்பியல், வேதியல், வானவியல் உள்ளிட்ட எந்த துறையின் ஆய்வும் தனித்து மேற்கொள்ளப்பட இயலாத அளவிற்கு இன்று அறிவியல் முன்னேறிவிட்டது. எந்த ஒரு ஆய்விலும் ஈடுபடுகின்ற தனித்துறைகளுக்கு இடையே ஒருங்கிணைவும் ஒத்திசைவும் தேவைப்படுகிறது. அந்த ஒத்திசைவு முதலாளித்துவ சமூக அமைப்புடனும், அதன் உலக கண்ணோட்டத்துடனும் நேரடியாக முரண்படுகின்றது. முதலாளித்துவத்திற்கு கடவுள் தேவைப்படுகிறார்.

‘ஆன்மீகத் தீர்வுகள்’ என்ற நூலின் ஆசிரியரும், அமெரிக்காவில் வாழும் மருத்துவருமான தீபக் சோப்ரா, அத்வைதத்தை ரீ மிக்ஸ் செய்து தருவதன் மூலம் பொருள்முதல்வாத தத்துவத்திலிருந்து முதலாளித்துவ உலகைக் காப்பாற்றுகிறார்:

“இந்தப் பிரபஞ்சம் ஏன் என்ற கேள்வி அறிவியலாளர்களால் மட்டுமே பதிலளிக்க முடிந்தது அல்ல. மாற்று விளக்கத்தின் படி இப்பிரபஞ்சமே உணர்வு (பிரக்ஞை) பூர்வமானது. நம்முடைய பிரக்ஞையின் மூலமும் அதுதான். நாம் வருகிறோம் என்பது இந்தப் பிரபஞ்சத்துக்குத் தெரியும். நாம் கடவுளுடைய பேரறிவின் ஒரு பகுதியே. எனில் கடவுள்தான் இப்போது கடவுள் துகளையும் கண்டுபிடித்திருக்கிறார்.”

இதற்கு நேர் எதிராக பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்குமான உறவை பொருள்முதல் வாத நோக்கில் விளக்குகிறார், பிரபல அமெரிக்க விண்வெளி விஞ்ஞானியும் நாத்திகருமான கார்ல் சாகனின் மாணாக்கரும், வானவியல் இயற்பியல் வல்லுநருமான நீல் டிகிராஸ் டைசன்:

‘நாம் ஒருவரோடு ஒருவர் உயிரியில் ரீதியாகப் பிணைக்கப்பட்டிருக்கிறோம், இப்பூமியுடன் வேதியல் ரீதியாகப் பிணைக்கப்பட்டிருக்கிறோம், பிரபஞ்சத்துடன் அணுவால் பிணைக்கப் பட்டிருக்கிறோம். இதை எண்ணும்போதே நான் முறுவலிக்கிறேன். அகண்டமானவனாக உணர்கிறேன். நாம் பிரபஞ்சத்தினும் மேலானவர்கள் அல்ல, அதன் அங்கமானவர்கள். நாம் பிரபஞ்சத்தில் இருக்கிறோம், பிரபஞ்சம் நம்முள் இருக்கிறது”

நவீன விஞ்ஞானம்பெரும் பாய்ச்சலில் முன்னேறத் தொடங்கியிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு பற்றி எங்கெல்ஸ் இவ்வாறு எழுதினார்:

“இயற்கைக்குப் புறத்தில் நிற்கும் ஒருவனைப் போல இயற்கையின் மீது நாம் எவ்விதத்திலும் ஆளுகை புரியவில்லை என்பதும், அதற்குப் பதிலாக, நமது ரத்தம், சதை, மூளை இவற்றுடன் இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம். அதன் நடுவில் நிலைவாழ்கிறோம் என்பதும், இயற்கையின் நியதிகளைக் கற்றுக் கொண்டு அவற்றைப் பொருந்தியவாறு கடைப்படிப்பதில் இதர எல்லாப் பிராணிகளைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்பதிலேயே அதன் மீது நமது ஆளுகை அடங்கியுள்ளது.”

இயற்கையின் இயக்கத்தை அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொள்வது மட்டுமல்ல, தானே உருவாக்கிக் கொண்ட சமூகத்தின் இயக்கத்தையும் அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொண்டு வினையாற்றும்போதுதான், மனிதன் தானே உருவாக்கிய கடவுளையும் அகற்ற முடியும். அந்த சோதனையில் மோதவிடுவதற்கு புரோட்டான்களோ, ஹாட்ரான் கொலைடரோ தேவையில்லை.

_______________________________________________

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012
_____________________________________________________

24×7களின் உண்மை முகம்!

15
ஊடகம்

24x7செய்தி தொலைக்காட்சிகளின் வியாபார போட்டி எந்த எல்லை வரை போகும்? கீழே உள்ளது கடந்த வார உதாரணம்…

அமெரிக்காவின் போனிக்ஸ் (Phoenix) நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் ஒரு தம்பதியினர் சாப்பிட்டுக்கொண்டிருக்க… அவர்களின் காரை ஒருவன் திருடிக்கொண்டு போகிறான். விஷயம் அறிந்து அவர்கள் போலீஸுக்குத் தகவல் சொல்கின்றனர். போலீஸ் காரை துரத்துகிறது. போலீஸை நோக்கி திருடன் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே செல்கிறான். திடீரென வானத்தில் ஒரு ஹெலிகாப்டரும் இந்த சேஸிங்கில் இணைந்துகொள்கிறது. அந்த ஹெலிகாப்டர், Fox News  சேனலின் லைவ் வாகனம்.

அந்த பரபரப்பான திருடன் & போலீஸ்’ காட்சியை மேலும் பரபரப்புக் கூட்டி, ஹெலிகாப்டரில் இருந்தபடியே லைவ் செய்கிறார் தொகுப்பாளர் ஷெப்பர்டு ஸ்மித். செப்டம்பர் 28 காலை 11 மணிக்கு கார் திருடு போன அடுத்த ஒரு மணி நேரத்தில் இது நடக்கிறது. லைவ் என்பதால் பார்வையாளர்கள் ஒரு ஆக்ஷன் படத்துக்கான த்ரில்லுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இடையிடையே விளம்பர இடைவேளைகளும் உண்டு. ஏறத்தாழ 90 நிமிடங்களை கடந்து கலிபோர்னியா எல்லையில் ஒரு பாலைவனத்தில் திருடன் ஓட்டிய கார் நிற்கிறது.

பின்னால் துரத்திச் சென்ற போலீஸ் வாகனம் சற்று எச்சரிக்கையுடன் வண்டியை நிறுத்த… காரில் இருந்து இறங்கிய திருடன் முன் பக்கம் போகிறான். “என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலை.. நமக்கு நெர்வஸா இருக்கு..’” என பதற்றத்துடன் விவரித்துக்கொண்டிருக்கிறார் ஸ்மித். யாரும் எதிர்பாராத வகையில், திருடன் துப்பாக்கியை தன் தலையில் வைத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொள்கிறான். இரத்தம் தெறிக்கும் காட்சிகள் திரையில் விரிந்த உடனேயே, சட்டென நேரடி ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டு விளம்பர இடைவேளை விடப்படுகிறது.

இடைவேளை முடிந்ததும், ‘நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. இதற்காக மன்னிப்புக் கேட்கிறோம்’ என்று சொன்னார் ஸ்மித். சேனல் நிர்வாகமும், “லைவ் என்பதால் காட்சிகள் 5 முதல் 10 விநாடிகள் தாமதமாகவே வந்து சேரும். அதனால் எங்களால் அப்படி நடக்கும் என யூகிக்க முடியவில்லை. பார்வையாளர்கள் மன்னிக்க வேண்டும்’” என்று சொல்லியிருக்கிறது. இந்தக் கூற்றுக்கு பின்னே உண்மை இல்லை என்பதை ஃபாக்ஸ் தொலைக்காட்சியின் வரலாற்றை அறிந்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

ஹெலிகாப்டரில் இருந்து துரத்துவதும் போலீஸ்தான் என்று நினைத்து பீதியடைந்து அந்த திருடன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம்’ என்ற கோணத்தில் பார்த்தால் இந்த தற்கொலையில் ஃபாக்ஸ் நியூஸுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. இதைக் கடந்து, அனைத்தையும் பரபரப்பான செய்தியாக’ மாற்றத் துடிக்கும் செய்தி தொலைகாட்சிகளின் வியாபாரப் போட்டியைதான் நாம் இங்கே பேச வேண்டும். மேலே உள்ள ஃபாக்ஸ் நியூஸ் டி.வி.யின் லைவ் நிகழ்ச்சி தற்செயலாக நிகழ்ந்தது.

ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒன்றும் நமக்கு புதிதல்ல. ஏ.எக்ஸ்.என்., ஸ்டார் வோர்ல்டு, டிஸ்கவரி, ஹிஸ்டரி உள்ளிட்ட பல ஆங்கில சேனல்களில் இத்தகைய நிகழ்ச்சிகள் ஏராளமாக வருகின்றன. அவை அனைத்தும் அந்தந்த நாட்டு காவல்துறையின் கூட்டணியுடனேயே படம் பிடித்து ஒளிபரப்பப்படுகின்றன. கற்பனை பொழுதுபோக்கில் சுவாரஸ்யம் குறைந்துவிடுவதால், அரசாங்கமும், தனியார் தொலைகாட்சிகளும் கூட்டாக உழைத்து மக்களுக்கு இத்தகைய உண்மையான அதிரடிக் காட்சிகளை வழங்கி வருகின்றன.

அப்படி வழங்கப்பட்ட சேவை’களில் ஒன்றுதான் 1998-ல் நடந்த டேனியல் ஜேம்ஸின் லைவ் தற்கொலை. அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தை சேர்ந்த டேனியல் 40 வயதை கடந்துவிட்டாலும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு எய்ட்ஸ், கேன்ஸர் உள்ளிட்ட பல நோய்கள் இருந்தன. டேனியல், ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்தார். நோய்களுக்கு சிகிச்சை எடுக்க போதுமான பணம் அவரிடம் இல்லை. அவர் HMO (Health maintenance organization) என்ற நிறுவனத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தார். அது ஒரு ப்ரீபெய்டு சர்வீஸ். பணம் இருக்கும் வரைதான் சிகிச்சை. மேற்கொண்டு சிகிச்சை தேவை எனில் ‘டாப்&அப்’ செய்ய வேண்டும். டாப்-அப்புக்கு டேனியலிடம் பணம் இல்லை. ஆகவே அவருக்கு சிகிச்சையும் இல்லை.

நோய்களின் கொடுமையில் சிக்கி துயருற்ற டேனியல், வேதனையின் உச்சத்தில் இருந்த ஒரு நாள்… தன் காரை ஒரு தெருவில் நிறுத்திவிட்டு துப்பாக்கியை வெளியே எடுக்க… ஏரியா பரபரப்பானது. பாதைகள் அடைக்கப்பட்டு போலீஸ் வந்தது. தொலைகாட்சிகளில் ‘லைவ்’ தொடங்கியது. பேச்சுவார்த்தைகள் எடுபடவில்லை. அவர் காருக்குள் ஏறிக்கொன்டு தீ வைத்துக்கொண்டார். உடம்பு எங்கும் எரியும் தீயுடன் வெளியில் விழுந்து உருண்டு புரண்டார். பிறகு தன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அனைத்தும் ‘லைவ்’ செய்யப்பட்டது.

***

ஊடகம்1980-ல் அமெரிக்காவில் ஒளிபரப்பாகத் துவங்கிய சி.என்.என்&தான் உலகின் முதல் 24 மணி நேர செய்திச் சேனல். அதைத் தொடர்ந்து மீடியா முதலை ரூபர்ட் முர்டோச்சால் ஃபாக்ஸ் நியூஸ் சேனல் துவங்கப்பட்டது. பிறகு இந்த 24x7 அலை உலகம் எங்கும் ஒரு மேனியாவாக பரவி செய்திச் சேனல்கள் பல்கிப் பெருகின. தம்ழிநாட்டில் சன் நியூஸ்தான் முதல் 24 மணி நேர செய்திச் சேனல். இப்போது புதிய தலைமுறை, என்.டி.டி.வி. இந்து, கலைஞர் செய்திகள், ராஜ் நியூஸ், கேப்டன் நியூஸ், ஜெயா ப்ளஸ், ஜிடி.வி.எஸ்.பி.வி’வி, சத்யம் டி.வி. போன்றவையும் இணைந்திருக்கின்றன. விரைவில் பாலிமரில் இருந்தும், தினமலரில் இருந்தும் ஒவ்வொரு நியூஸ் சேனல்கள் வரப்போகின்றன. ஏ.சி.சண்முகம் ‘வானவில்’ என்ற பெயரில் ஒரு செய்தி சேனல் கொண்டு வரப் போகிறார். ஆக, தமிழ்நாட்டில் மட்டுமே பன்னிரண்டு, 24x7 செய்தி தொலைகாட்சிகள்.

இந்திய அளவில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம். இந்தியில் 32 நியூஸ் சேனல்கள், அஸ்ஸாமி மொழியில் 19, ஆங்கிலத்தில் 19, கன்னடத்தில் 7, மலையாளத்தில் 10, மராத்தியில் 7, ஒரிய மொழியில் 8, தெலுங்கில் 25 என நாடு முழுவதும் செய்தி தொலைகாட்சிகளின் எண்ணிக்கை மலைக்க வைக்கின்றது. இவை அனைத்தும் சாட்டிலைட் சேனல்களின் எண்ணிக்கை மட்டுமே. அந்தந்த மாவட்ட, வட்டார அளவில் வரும் லோக்கல் சேனல்களையும் கணக்கில் கொண்டால் இந்திய செய்தி தொலைகாட்சிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தொடலாம். இவர்கள் அத்தனை பேருக்கும் எல்லா நாளும், எல்லா நேரமும் எப்படி செய்தி கிடைக்கும்? “ஒரு நாள் நியூஸ் கிடைக்கலேன்னா என்ன பண்ணுவீங்க?’” என ஊடகங்களில் பணிபுரிபவர்களிடம் அவ்வப்போது கேட்கப்படுவதுண்டு. இது ஒரு சுவாரஸ்யமான விடைக்கான கேள்விதான்.

ஒரு பொருளை, ஒரு ரசனையை, ஓர் உணர்ச்சியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக நுகர்ந்து அதை சக்கையாக்கிவிட்டு, அடுத்ததை நோக்கி நகர்வதே நுகர்வுக் கலாச்சாரத்தை பரப்பி வரும் உலகமயத்தின் பண்பு. இது கொள்கையின் குணம் மட்டுமல்ல… அதை  அனுபவிக்கும் மக்களின் குணமாகவும் மாறுகிறது. உதாரணமாக, உச்சகட்ட விளம்பரங்களுடன் வெளியிடப்பட்டு ஒரே வாரத்தில் முடிந்தவரை கல்லா கட்டும் சினிமாக்கள், தன்னிடம் இருப்பது நன்றாக இயங்கிக் கொண்டிருந்தாலும் புதிய மாடல் செல்போனை வாங்க அலையும் மக்கள்… என இரு உதாரணங்கள் சொல்லலாம். இதன் சாரத்தை செய்தி தொலைகாட்சிக்கும் நீட்டிக்க முடியும். ஆற அமர உட்கார்ந்து ஆய்வு செய்து உண்மையை கண்டறிவது எல்லாம் அவர்களுக்கு தேவை இல்லாதது. அந்த நேரத்தில் மக்களை பார்க்க வைக்க ஒரு காட்சி பதிவு வேண்டும். அது நித்தி-ரஞ்சி வீடியோவாக இருக்கலாம். சிவகாசி வெடிவிபத்தாக இருக்கலாம். அவர்களை பொருத்தவரை அது பிரைம் டைம் புல்லட்டின் பரபரப்பு மட்டுமே. மக்களும் இந்த ‘பெட்டிக்கு வெளியே’ சிந்தித்து அறிந்துகொள்ள விரும்பவில்லை என்பதால் இந்த வியாபாரம் தொய்வின்றி தொடர்கிறது.

உண்மையில், அனைத்தையும் அந்தந்த நேரத்து பரபரப்பாக மாற்றத் துடிக்கும் செய்தி தொலைகாட்சிகளின் இந்த வியாபாரப் போட்டி, இன்றைய நவீன உலகின் மிகப்பெரிய அபாயம். 24 மணி நேரமும் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் மிகுந்த தீனி இவர்களுக்கு தேவை. யதார்த்தத்தில் ஒவ்வொரு நிமிடமும் அப்படியான சுவாரஸ்யங்கள் நிகழ்வதில்லை. ஆகவே ஒரு செயற்கையான பரபரப்பு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அது, மத்திய பிரதேசத்தின் சிறு கிராமத்தில் ஒரு சிறுத்தைப்புலி கிணற்றுக்குள் விழுந்துவிட்ட செய்தியாக இருக்கும். கிணற்றை சுற்றி பதினைந்து லைவ் வாகனங்கள் நின்றுகொண்டு, ஒவ்வொரு டி.வி. ஸ்டுடியோவிலும் இரண்டிரண்டு பேர் அமர்ந்துகொண்டு… தங்கள் முகங்களை மிகுந்த பதற்றத்துடன் மெயின்டெய்ன் செய்து… நடிகர் திலகங்களாகவே மாறி விடுகின்றனர்.

ஒரு சராசரி மனிதனை அறைக்குள் பூட்டி, தொடர்ந்து ஒரு வாரத்துக்கு செய்தி தொலைகாட்சிகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொன்னால், நிச்சயம் அவர் நாடே கடும் பதற்றத்தில் பற்றி எரிவதாகதான் நினைத்துக் கொள்வார். அந்த அளவுக்கு இந்த செய்தி தொலைகாட்சிகள், ஒட்டுமொத்த தேசமும் பதற்ற நிலையில் இருப்பதை போல செயற்கையான தோற்றத்தை உண்டு பண்ணுகின்றன. டைம்ஸ் நவ்வில் அருணாகோஸ்சுவாமியும், சி.என்.என்.ஐ.பி.என்’னில் ராஜ்தீப் சர்தேசாயும் கொடுக்கும் சவுண்டுக்கு இந்நேரம் புரட்சி முடிந்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் மக்களின் நலனில் இருந்து அல்லாமல் ஒரு சண்டை படத்தின் விறுவிறுப்புடன் மட்டுமே செய்திகளை வழங்குகின்றனர். ஆகவே இந்திய நடுத்தர வர்க்கத்துக்கு அது ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது. அதனால்தான் கூடங்குளம் லைவ் காட்சிகளின் விளம்பர இடைவேளையில் “உலகத்தரம் மிக்க எஸ்.ஆர்.எம். ஹாஸ்பிட்டலின்’” மேன்மை குறித்து முரண்படாமல் பார்க்க முடிகிறது. “ஸ்பைஸ் ஜெட்’ பயணக் கட்டண தள்ளுபடி”யை மனம் குறித்துக்கொள்கிறது.

எண்ணிக்கையில் பெருகிவிட்ட இந்த செய்தி சேனல்களுக்கு ஒவ்வொரு நாளும் ‘எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோரி’ கொடுக்க வேண்டிய நிர்பந்தம். ‘மற்ற டி.வி.யை விட நாங்கதான் பெஸ்ட்’ என நிரூபிக்கத் துடிக்கிறார்கள். அரசியல் தலைவர்களின் பிரஸ் மீட்டின் போது மைக் நீட்டுவதில் அடித்துக் கொள்வதில் இருந்தே இது தொடங்குகிறது. கோரமான மும்பை தாக்குதலின் போது இந்திய சேனல்கள் அனைத்தும் பற்றி எரியும் ஹோட்டலின் முன்பு நின்றபடி, அந்த வன்முறை காட்சிகளை பரபரப்பான சண்டை படத்தை போல வர்ணித்ததை கண்டோம். அத்தனை பேரும் மறக்காமல், ‘ஒன்லி ஆன் ….. டி.வி.’ என்று கூச்சமே இல்லாமல் இழவு வீட்டில் பெருமை தேடுவதில் குறியாய் இருந்தார்கள்.

ஊடகம்-3இப்படி முதலில் செய்திகளை தருவதில் போட்டிப் போடும் இவர்கள், உண்மையை தருவதில் போட்டிப் போடுவது இல்லை. கூடங்குளத்தில் காவல்துறையின் அடக்குமுறையை ஏற்றுக்கொள்ளும் வகையில் நியாயப்படுத்துவதில்தான் இவர்களிடையே போட்டியேத் தவிர, மக்கள் போராட்டத்தின் நியாயத்தை வெளியே கொண்டு வருவதில் அல்ல. இலங்கையில் நடந்த இன அழிப்பின் போதும் இதுதான் நடந்தது. இந்திய அயலுறவு கொள்கையை ஏற்றுக்கொண்டு ‘இலங்கையா…? அது எங்கேயோ ஆப்பிரிக்கா பக்கத்துலல்ல இருக்கு’ என்பது மாதிரிதான் நடந்துகொண்டன ஊடகங்கள். இல்லாத செய்திகளை ஊதிப் பெரிதாக்கும் 24 நேர செய்தி தொலைகாட்சிகள் எதுவும் இலங்கை இன அழிப்பை கண்டுகொள்ளவே இல்லை.

வேளச்சேரி ஐந்து பேர் என்கவுண்டர் முதல் தஞ்சாவூர் தமீம் அன்சாரி கைது வரை அனைத்து பிரச்சினைகளிலும் போலீஸுக்கும், அரசாங்கத்துக்கும் பி.ஆர்.ஓ. வேலை பார்ப்பதையே முதன்மை பணியாக செய்கின்றன செய்தி தொலைகாட்சிகள். சுருங்கச் சொன்னால் இவர்களின் போட்டி எல்லாம் ஆளும் வர்க்கத்துக்கு யார் அதிகமாக அடிபணிந்து சேவகம் செய்வது என்பதில்தானே ஒழிய, மக்களின் நலன் அல்ல. ஆனாலும் இந்த ஜனநாயகத்தின் நான்காவது தூண்களுக்கு நடுநிலை வேடம் போட வேண்டிய அவசியம் இருப்பதால், அவ்வப்போது கோட்டை தாண்டி வந்து இந்தப் பக்கம் வந்து நான்கு வரி டயலாக் பேசிக்கொள்வார்கள். ஊடகங்களின் இந்த விழாக்கால சமூக அக்கறை’யில் மனம் மகிழும் காரியவாத போராளிகள் பலர், இவர்களின் பச்சையான வியாபாரத்துக்கு கொள்கை சாயம் பூசுகின்றனர்.

உண்மையில் ஒரு நாளின் 24 மணி நேரமும், ஒரு வாரத்தின் 7 நாட்களும் இடைவிடாமல் ஊடகங்களில் வெளிக்கொண்டு வர வேண்டிய மக்கள் பிரச்சினைகள் ஏராளம் இருக்கின்றன. காவிரி பிரச்னையில் அரசியல் கட்சிகளின் துரோகங்கள், அழிக்க வரும் அந்நிய முதலீடு, பாடாய்படுத்தும் பவர் கட், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, கேஸ், மளிகை, வீட்டுவாடகை, கல்வி கட்டணம், மருத்துவச் செலவுகள், ரியல் எஸ்டேட், பொருளாதார மோசடிகள், வரதட்சணை, சாதி, அதிகரிக்கும் வேலைநேரம், சீரழியும் சுற்றுச்சூழல்… என அனுதினமும் ஆயிரமாயிரம் புதிய பிரசிச்னைகள் மக்களை அச்சுறுத்துகின்றன. இந்தப் பிரச்சினைகளின் அடிப்படைகளை மறைத்து வெறுமனே சென்சேஷனாக மாற்றுவதை மட்டும் சேனல்கள் செய்து வருகின்றன.

இந்த தொலைகாட்சிகள் ஏன் மக்கள் பிரச்சினைகளில் அக்கறை காட்டுவது இல்லை என்ற கேள்விக்கு அவற்றின் உரிமையாளர் யார் என்று பார்த்தால் விடை தெரிந்துவிடும். தனியார் கல்வியில் பெரும் சூறையாடலையே நிகழ்த்தும் எஸ்.ஆர்.எம். குழுமம், ‘புதிய தலைமுறை’’யின் முதலாளி. கட்சியிலும், ஆட்சியிலும் கொள்ளையடித்த மக்கள் பணத்தில் உருவானதே ‘சன் நியூஸ்’’. ரியல் எஸ்டேட் ஊழல் குற்றச்சாட்டால் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்ட மடிப்பாக்கம் வேலாயுதம், ‘ஜிடி.வி.எஸ்.பி.வி’வி’யின் உரிமையாளர். கிறிஸ்தவ மக்களிடம் இயேசுவின் பெயரை சொல்லி சுரண்டும் நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் ‘சத்யம் டி.வி’’யின் முதலாளி. இப்படி அனைத்து ஊடக உரிமையாளர்களுமே சுரண்டு கொழுத்த பண முதலைகள்தான். இவர்கள் தங்களின் சுரண்டல் முகத்தை மறைத்துக்கொள்ளவும், ஊழல் பணத்தை பாதுகாக்கவும், பெருக்கவுமே ஊடகத் தொழிலை செய்கிறார்களே அல்லாமல் மக்களின் நலன் சார்ந்து அல்ல!

படிக்க

______________________________________________

– வளவன்
________________________________________________

நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்!

14

நாமக்கல்-பள்ளிகள்

ள்ளிப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் தினசரி செய்தித்தாள்களைக் கவனிக்கும் எவருமே ‘நாமக்கல் பள்ளிகளின்’ விளம்பரங்களை அடிக்கடி காணலாம். நாமக்கல் நகரப் பள்ளிகளின் சார்பாக வெளியாகும் அவ்விளம்பரங்களில் அந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்வுகளில் அவர்களிடம் படித்த மாணவர்கள் எத்தனை பேர் சாதனை படைத்துள்ளார்கள் என்கிற விவரங்கள், புகைப்படங்களோடு வெளிவந்திருக்கும். கூடவே அந்தப் பள்ளிகளின் இமாலய வசதிகள், மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களும் இடம் பெற்றிருக்கும்

அந்த விளம்பரங்களின் சாராம்சம்,  “எங்களிடம் படிக்கப் போகும் உங்கள் பிள்ளைகளுக்கு தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றுத்தருவது லட்சியம் – இல்லா விட்டால் நல்ல கல்லூரியில் இடம் கிடைப்பதாவது நிச்சயம்” என்பது தான். இந்த லட்சியத்தை எட்டுவதற்கான விலை சில லட்சங்களில் இருக்கும் – அது அந்தந்த பள்ளியின் முந்தைய சாதனைகளையும், பாரம்பரியத்தையும் பொறுத்து கொஞ்சம் கூடக்குறைய இருக்கலாம். இது போக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாநில அளவில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கென தனிச் சலுகைகளும் உண்டு.

நாமக்கல் பள்ளிகள் நடுத்தர வர்க்கப் பெற்றோரின் கனவு. அவர்தம் வாழ்க்கை லட்சியங்களை எட்டுவதற்கான உத்திரவாதமான ஏணி. பல பெற்றோர்கள் இந்த விளம்பரங்களால் கவரப்பட்டு, இந்தப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். இது போன்ற பள்ளிகள் மாணவர்களைத் தயாரிக்கும் விதம் தனிச்சிறப்பானது.

இம்மாணவர்கள் உள்ளூரிலேயே இருந்தாலும் பள்ளி விடுதிகளில்தான் தங்க வேண்டும். இவர்களின் ஒரு நாள் வாழ்க்கை அதிகாலையில் துவங்கி  இரவு வரையில் நீளும். ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு மாதிரித் தேர்வுகள் இருக்கும். வகுப்பில் உடன்படிக்கும் மாணவர்களோடு பேசத் தடை; ஆசிரியர்களோடு மதிப்பெண் பெறுவதைத் தாண்டி பாட சம்பந்தமான வேறு சந்தேகங்களைக் கூட கேட்கத் தடை; விளையாடத் தடை, சிரிக்கத் தடை, அழத் தடை,  டி.வி பார்க்கத் தடை; மாணவர்களைப் பெற்றோர்கள் சுதந்திரமாக வந்து சந்திக்கத் தடை, மதிப்பெண்களைத் தாண்டி வேறெதையும் சிந்திக்கவும் கூட தடை. சுருக்கமாகச் சொன்னால் நாமக்கல் பள்ளிகள் என்பது மதிப்பெண் இயந்திரங்களைத் தயாரிக்கும் கொத்தடிமைக் கூடங்கள்.

இங்கே நடத்தப்படும் மாதிரித் தேர்வின் வினாத்தாள்களைத் தயாரிப்பதும், விடைத்தாள்களைத் திருத்துவதும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள். பெரும்பாலும் அந்தந்த வட்டாரங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளின் ஆசிரியர்கள், அரசாங்க சம்பளத்தையும் வாங்கி கொண்டு இது போன்ற பள்ளிகளிலும் பணிபுரிகிறார்கள். ஒரு சில தனியார் பள்ளிகளில் அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மறைமுகமான பங்குதாரர்களாகவும் இருக்கிறார்கள். இது போன்ற ஆசிரியர்களைக் கொண்டே வகுப்புகளும் நடத்தப்படுகின்றது.

நாமக்கல் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் பெற்றோரின் ஒரே லட்சியம் – அதிக மதிப்பெண்கள். ஓரிரு ஆண்டுகள் நீடிக்கும் இந்தக் கொத்தடிமை வாழ்க்கையை எப்பாடுபட்டாவது தங்கள் பிள்ளைகள் சகித்துக் கொண்டால் அதன் பின் ஒளிமயமான ஒரு எதிர்காலம் உத்திரவாதம் என்கிறார்கள்.

இந்தக் கொத்தடிமை வாழ்வின் விதிகள் திணிக்கப்படும் மாணவர்களில் பெரும்பாலானோர் கடுமையான உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள் என்றும், மாணவர்களின் விடலைப் பருவ வாழ்க்கை கெட்டுப் போகிறது என்றும், இவர்களெல்லாம் உலகமே அறியாத கிணற்றுத் தவளைகளாகவும், ப்ராய்லர் கோழிகளைப் போன்றும் உருவாகிறார்கள் என்றும் சில முதலாளித்துவ பத்திரிகைகளே எச்சரிக்கை செய்கின்றன.

ஆனால் இந்த எச்சரிக்கைகளையும், அதன் விளைவுகளையும் எல்லாம் பெற்றோர்கள் முழுமையாக அறியாதவர்கள் என்று சொல்லி விட முடியாது. ஒரு சிறப்பான எதிர்காலத்தை அடைவதற்கு இது போன்ற சின்னச் சின்ன தியாகங்களைப் பிள்ளைகள் சகித்துக் கொள்ளத் தான் வேண்டும் என்கிறார்கள் பெற்றோர்கள். மேலும், இப்போது சில லட்சங்களைச் செலவு செய்து விட்டால், பின்னால் மருத்துவமோ பொறியியலோ சேர்க்கும் போது ‘மெரிட்டில்’  சேர்த்து விட முடியும்; எப்படியாவது 90 சதவீதத்திற்கு மேல் தம் பிள்ளை மதிப்பெண்களை வாங்கிவிட்டால் மருத்துவம், பொறியியல் தவிர்த்த வேறு படிப்புகளில் சேர்க்கும் போது செலவு குறைவாக இருக்கும் என்கிறார்கள்.

கடும் உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாகும் மாணவர்கள் சிலர், அதன் பின் எதற்கும் பயன்படாத தக்கைகளாக சமூகத்தினுள் துப்பப்படுகிறார்கள். சிலர் தற்கொலை முடிவுகளைக் கூட நாடுகிறார்கள். இந்தப் பள்ளிகளின் கொடுமை தாளாத சில மாணவர்கள் லேசாகச் சுணங்கினாலும், அவனது பெற்றோரை வரவழைத்து ‘இது தேறாத கேசு’ என்கிற பாணியில்  பள்ளிகள் அச்சுறுத்துகின்றன. லட்சங்களை அள்ளிக் கொடுத்து, இந்தக் கல்வி வியாபாரிகளின் கொழுப்பு கூட காரணமாய் இருக்கும் பெற்றோர்களோ, இது போன்ற பெற்றோர் – ஆசிரியர்கள் சந்திப்புகளில் பம்மிப் பதுங்கி, பிச்சைக்காரர்கள் போல் சுயமரியாதையற்று நிற்கிறார்கள் என்று இப்பள்ளிகளின் நடைமுறைகளை நன்கு அறிந்த நண்பர் ஒருவர் கூறினார்.

நாமக்கல் பள்ளிகள் என்று இங்கே நாம் குறிப்பிட்டாலும், இதே போல் மதிப்பெண்களைக் குறிவைத்து மாணவர்களைத் தயாரிக்கும் மதிப்பெண் தொழிற்சாலைகள் தற்போது தமிழகமெங்கும் பரவி வருகின்றன. விருத்தாச்சலத்தில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவன் தட்சிணாமூர்த்தியின் மரணமே அதற்கு சமீபத்திய உதாரணம்.

எனினும் நாமக்கல் பிராய்லர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே இந்தப் பள்ளிகள் உத்திரவாதமளிப்பது போல் அதிக மதிப்பெண்களைப் பெறுவதில்லை என்பதே எதார்த்தம். குறிப்பிட்ட இரண்டாண்டுகளில் இம்மாணவர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள் அவர்களை வேறொரு வகையில் உளவியல் ரீதியில் தயார் செய்கின்றது. அடிமைத்தனம், பந்தயத்தில் வெற்றி பெற்றேயாக வேண்டிய வெறி, காரியவாதம், சமூக உறவுகளின்மை என்று பலவற்றை அந்த மாணவர்கள் பெறுவதோடு, வாழ்க்கை முழுவதும் அப்படியே வாழவும் வேண்டியிருக்கிறது.

இலக்கைத் துரத்தும் இந்த ஓட்டம் பள்ளியோடு மட்டும் நின்று விடுவதில்லை. கல்லூரியில் அது இன்னும் மேம்படுத்தப்பட்டு மெருகூட்டப்படுகிறது. கேம்பஸ் தேர்வில் வெல்வது அங்கே குறிக்கோள். அதுவும் புகழ்பெற்ற பன்னாட்டுக் கம்பெனியின் தேர்வு என்றால் இன்னும் சிறப்புக் கவனம். கல்லூரியில் கேம்பஸ் தேர்வுக்கு மாணவரை அனுப்பும் அதிகாரம் கொண்ட பேராசிரியர்களிடம் (Placement officers) ‘வம்பு’ வைத்துக்கொள்ளக் கூடாது; கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்துப் பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. மற்றபடி உரிமையைக் கேட்பதைப் பற்றியோ, அதற்காகப் போராடுவதைப் பற்றியோ கற்பனையாகக் கூட சிந்திக்க முடியாது – கூடாது.

இதையும் தாண்டி, இண்டர்னல் மதிப்பெண்கள், ரிக்கார்டு மதிப்பெண்கள், ப்ராஜக்ட் மதிப்பெண்கள் என்று ஒரு மாணவனை அச்சுறுத்தி, அடக்கி வைக்க வேறு பல்வேறு வழிமுறைகளும் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ளது. நாமக்கல் பள்ளிகளும் சரி, முன்னாள் சாராய ரவுடிகள் நடத்தும் கல்லூரிகளும் சரி,  எல்லாமும் எல்லா வசதிகளையும் கொண்டிருப்பதில்லை. மாணவர்களிடம் வசூல் அதிகரிப்பதற்கேற்பவே அந்த வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வரப்படுகின்றன.

நாமக்கல்-பள்ளிகள்-2ஒன்பதாம் வகுப்பிலிருந்தே ஒரு மாணவனை இந்த மனப்பான்மைக்கு உளவியல் ரீதியில் தயாரிப்பதில் கல்வி நிறுவனங்கள் பிரதான பாத்திரம் வகிக்கின்றன. இதில் நாமக்கல் பள்ளிகள் ஒரு எடுப்பான உதாரணம் தான். மற்ற இடங்களில் வழிமுறைகள் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், நோக்கம் இது தான். பள்ளிகள் பயிற்றுவிக்கும் முறைகளால் உளவியல் ரீதியிலான தாக்குதல் ஒருபுறமென்றால் இதன் பின்னே செய்யப்படும் செலவுகளின் பொருளாதாரத் தாக்குதல் இன்னொரு புறம். பள்ளியில் சேர சில லட்சங்கள் மொய் வைக்கப்படுகிறது என்றால், மருத்துவம் போன்ற உயர் கல்விகளுக்காக பல லட்சங்களில் ஆரம்பித்து சில கோடிகள் வரை செலவு செய்யப்படுகிறது.

தற்போது மதிப்பெண் தொழிற்சாலைகள் வேகமாகப் பெருகி வருவதாலும், பல பெற்றோர்கள் தனிச்சிறப்பான கவனமெடுத்தும் செலவு செய்தும் மாணவர்களைத் தயாரிப்பதாலும் மருத்துவம் போன்ற உயர் படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச (Cut&off)  மதிப்பெண்களை எடுக்கும் மாணவர்களின் சதவீதம் கூடியிருக்கின்றது.  96 சதவீதம் எடுக்கும் மாணவன் கூட தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் (management quota)  தான் சேர முடிகின்றது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலருக்கும் வங்கிகள் அளிக்கும் கல்விக்கடன்கள் தான் ஒரே வாய்ப்பு.

படித்து முடித்து விட்டு, சமூகத்தினுள் காலடியெடுத்து வைக்கும் போதே தலைக்கு மேல் லட்சக்கணக்கில் கடனை வைத்துக்கொண்டு ஒரு அழுத்தத்தோடு தான் நுழைகிறார்கள். ஒரு பக்கம் போட்ட காசை சீக்கிரத்தில் எடுத்து விட வேண்டும் என்கிற நெருக்கடி – இன்னொரு பக்கம் பள்ளி, கல்லூரிகளிலிருந்து கற்றுக்கொண்டு வந்துள்ள அடிமைப் புத்தி.  இவையிரண்டும் ஒன்றை ஒன்று பரஸ்பரம் வளர்த்துக் கொண்டு,முடிவில் காரியவாதமாகவும், தனிநபர்வாதமாகவும் பரிணமிக்கிறது.

மிகச் சரியாக இது போன்ற ‘தயாரிப்புகளைத்’ தான் பன்னாட்டுக் கம்பெனிகள் விரும்புகின்றன. உலகமயமாக்கலின் விளைவாய் சந்தையும், உற்பத்தியும் கூட உலகமயமாகியுள்ளது. இந்தியாவின் பெங்களூருவிலோ சென்னையிலோ உள்ள பன்னாட்டுக் கம்பெனியின் கிளையில் இருந்து ஒரு பொருளின் அல்லது ஐ.டி சேவையின் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர், அதன் முழுமையான தொழில்நுட்பத்தை அறிந்திருக்க வேண்டியது அவசியமற்றதாகின்றது.

ஒரு பொருளின் உற்பத்தின் பல்வேறு கட்டங்கள் சின்னச் சின்ன கட்டங்களாகப் பிரித்து (smaller processes) வெவ்வேறு குழுக்களால் செய்யப்படுகிறது. அதன் உச்சபட்சமான தொழில்நுட்ப இரகசியம் அமெரிக்காவிலோ, வேறு ஐரோப்பிய நாட்டிலோ இருக்கும் தலைமையகத்தில் உள்ளவர்களுக்குத் தான் தெரிந்திருக்கும்.

இந்தச் சூழலில் இங்கே பணிபுரிவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், எந்தக் கேள்வி முறையுமின்றி சொன்னதைச் செய்தாலே போதுமானது. சொந்தமான மூளையோ, சிந்திக்க வேண்டிய அவசியமோ தேவையில்லை. இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு (Target)நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதை வாராந்திரமாகவோ, தினசரியோ பரிசீலித்து ஊழியர்களை விரட்ட சில கங்காணிகள் இருப்பார்கள். இந்த உலகத்தின் விதிகள் மிகவும் எளிமையானது. சொன்னதைச் செய்ய வேண்டும் – அதில் இலக்கை எட்ட வேண்டும். குறுக்கே கேள்விகள் கேட்பதோ, உரிமைகள் பற்றிப் பேசுவதோ, அதற்காகப் போராடுவதோ கூடவே கூடாது. சுருங்கச் சொன்னால் பஞ்சு மூளைகள் கொண்ட தக்கை மனிதர்களே உலகமயமான உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் போதுமானவர்கள்.

தங்கள் நிலத்தை விற்று, நகை நட்டுகளை அடகு வைத்து, போதாததற்கு வங்கிகளிடம் கையேந்தி கல்விக் கடன் பெற்று, லட்சக்கணக்கில் செலவு செய்து, ’தங்கள் பிள்ளைகளுக்கு இருப்பதிலேயே ஆகச் ‘சிறந்ததைக்’ கொடுக்க வேண்டும்; தனது பிள்ளைகளுக்கு நல்ல அறிவாற்றல் கொண்ட மூளை வேண்டும்’ என்றெல்லாம் கனவு காணும் பெற்றோர்கள், அந்த சிறந்த உலகத்தில் அறிவாற்றலுக்கும், மூளைக்கும் வேலையே இல்லையென்பதை அறிந்திருப்பதில்லை. பன்னாட்டுக் கம்பெனிகளால் பொறுக்கியெடுக்கப்படும் தேர்ந்த மதிப்பெண் இயந்திரங்களின் வேலைக்கான உத்திரவாதமென்பது அவர்களது சொந்த உழைப்பினால் விளைந்த பலன் என்று அவர்களே நம்பிக் கொள்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.

உலகமய பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புச் சந்தையும் உலகமயமாகியுள்ளது. உலகின் வேறெங்கோ நிகழும் ஏற்ற இறக்கங்கள் இங்கேயும் பாதிப்புகளை உண்டாக்குகிறது – அமெரிக்காவுக்கு காய்ச்சல் என்றால் இந்தியாவுக்கு நெறிக் கட்டுகிறது; ’சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தை அனுமதிக்கா விட்டால் இந்தியாவுக்கு நாங்கள் தரும் ஐ.டி சேவைத் துறை வேலைகளை நிறுத்துவோம்’ என்று மிரட்டுகிறார் ஒபாமா. ‘நாமக்கல்’ மூளைகளால் ஒபாமாவிடம் போய் ‘நான் மாநிலத்திலேயே முதலாவதாக வந்தவனாக்கும்’ என்றெல்லாம் காலர் தூக்கிவிட முடியாது.

மாதம் முழுவதும் ஓய்வொழிச்சலற்ற வேலை – இடையே கிடைக்கும் வார இறுதிகளில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள குடியும், கூத்தும் தான் இவர்களின் ஒட்டுமொத்த உலகம். இந்த மொன்னை ‘உழைப்பின்’ தகுதிக்கு மிஞ்சி இவர்களுக்கு வழங்கப்படும் ஐந்திலக்கச் சம்பளத்தை எப்படிச் செலவு செய்ய வேண்டுமென்பதையும் சந்தையை இயக்கும் நுகர்வுக் கலாச்சாரமே தீர்மானிக்கிறது. இவர்களின் அரசியல் கண்ணோட்டமோ இந்த வாழ்க்கை அளித்திருக்கும் சவுகரியங்களின் வரம்புகளுக்குட்பட்டு இன்பங்களை இழக்காத வகையிலேயே வெளிப்படுகிறது.

நாமக்கல் பள்ளிகளைப் போன்றே நடத்தப்படும் வேறு பல மதிப்பெண் தொழிற்சாலையிலிருந்தும் உற்பத்தி செய்யப்பட்டு சமூகத்தினுள் அறிமுகமாகும் ‘தயாரிப்புகள்’  பன்னாட்டு மூலதனத்துக்கு மட்டுமல்ல; அவர்களின் சேவகர்களான இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் மிக உவப்பான குடி மக்கள். இந்த அடிமை இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை இன்று பழைய சாராய முதலைகளும், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுமே பெரும்பாலும் நடத்தி வருகிறார்கள். நல்ல லாபம் கொழிக்கும் இந்தத் தொழிலில் நுழைவதற்குத் தயாராக பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களும் வரிசைகட்டி நிற்கின்றன.

இப்போது முடிவு செய்ய வேண்டியது நாம் தான். நமது பிள்ளைகள் அறிவு பெற கல்வியளிக்கிறோமா அல்லது அடிமையாவதற்காகக் கல்வியளிக்கிறோமா? அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குறைந்த பட்சமாகவாவது ஒரு சமூக அறிமுகம் கிடைக்கிறது. அவர்களுக்கு பல்வேறு வர்க்கத் தட்டைச் சேர்ந்தவர்களோடு பழகவும், அவர்களது வாழ்க்கையை அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. பள்ளிக்குச் செல்வது மதிப்பெண்களைப் பெறுவதற்காக மட்டுமா அல்லது  மனித ஆளுமையை உருவாக்கிக் கொள்வதற்கா? அதைச் சில முதலாளிகள் தீர்மானிப்பதா ? என்பதைப் பெற்றோர்கள் முடிவு செய்யட்டும்.

_________________________________________________

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012
_______________________________________________________

6000 குழந்தைகள் கொலையும் சூர்யாவின் இதயத் துடிப்பும்!

12

டிகர் சூர்யா  அப்போலோ மருத்துவமனையின்  துடிக்கும் 100 கோடி இதயங்கள் (Billion Hearts Beating) என்ற இருதய நோய் சிகிச்சைக்கான விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்து இருந்ததை பார்த்து இருப்போம்.

அதில் அவர் உலக இளைஞர்களின் மொத்த எண்ணிக்கையில் 50% இந்தியர்களாக இருப்பதை நினைக்கும் பொழுது, ”ஜிவ்வென்று ஒரு எனர்ஜி ஏறுவதாக” குறிப்பிட்டு இருப்பார். “அட! நாமும் கொஞ்சம் ஜிவ்வை ஏற்றிக்கொள்ளலாமே என இந்திய பிறப்பு-இறப்பு-வயது விவரங்களை தேடிப் படிக்க முயன்றோம். அப்போது நமக்கு கிடைத்த தகவல்கள் திடுக்கிட வைத்தன

“இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு 6000 குழந்தைகள் பட்டினியால்  இறக்கிறார்கள்” என்ற  செய்தியை மார்ச் 29, 2008 அன்று, ஐ.பி.என் லைவ் வெளியிட்டிருந்தது. அதற்கு சான்றாக உத்திரபிரதேசம் மாநிலத்திலுள்ள வாரணாசி மற்றும் லலித்பூர் மாவட்டங்களில் நிகழ்ந்த குழந்தை பட்டினிச்சாவுகள், ஊட்டச்சத்துக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, அவற்றுக்கான காரணங்கள் பற்றிய விபரங்களை சேகரித்து, ஒரு செய்தி வீடியோவையும் வெளியிட்டிருந்தது. மனதை உறைய வைக்கும் அந்த படத்திலிருந்து சில காட்சிகளை இங்கே பாருங்கள்

தன்னுடைய ஒரே மகனை அவனுடைய நாலாவது வயதில் பறி கொடுத்த தாய், தன்னிடம் பணம் இல்லாத ஒரே காரணத்தால், அவனுக்கு தேவையான உணவு, மருந்து கூட வாங்கி தர முடியாது போனதை நினைத்து அழுகிறார். நான்கு வயதில் வெறும் 6.5 கிலோ எடை மட்டும் இருந்த அந்த பிஞ்சு ஊட்டச்சத்துக்குறைவின் கொடுமையால், மாண்டு விட்டான். கணவனை இல்லாமல், புடவைகளுக்கு தையல் வேலைப்பாடு செய்து ஒரு நாளைக்கு ரூ.10 – 15 வரை சம்பாதித்து தன் வாழ்க்கையை நடத்தும் அந்தத் தாய், தன் குழந்தைகளுக்கு ஒரு வேளை சோறு போடுவதற்கு எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாகியிருப்பாள்.

இதே போல், வாரணாசி அருகிலுள்ள கிராமத்தில், ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள 6 வயது நிரம்பிய ஒரு சிறுவன், பானையைப் போல வயிறு வீங்கி, பிற உடல் பாகங்கள் மெலிந்து காணப்படுகிறான். புரதச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட அவனால் சாதாரண குழந்தைகளை போல விளையாடுவதோ, பேசுவதோ இயலாது. மேலும் டி.பி, சிறுநீரகக் கோளாறு, மூச்சுத் திணறல் பிரச்சினைகளாலும் பீடிக்கப்பட்டு தன்னுடைய வாழ்நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறான்.

லலித்பூரில் மட்டும் இப்படி 60% குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘9 மாதங்களில் தளபேஹட் என்ற சிறு நகரத்தில் மட்டும் 183 குழந்தைகள் ஊட்டச்சத்து குறை பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றும் ‘அவர்களில் 116 குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது’ என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

போதிய மருத்துவ வசதிகள் இல்லாத அந்தப் பகுதியில் அரசு குழந்தை மருத்துவமனை கிட்டத்தட்ட செயல்பாட்டில் இல்லை. மருத்துவர், செவிலியர், உதவியாளர்கள், சுத்திகரிப்பு ஊழியர்கள், இல்லாமல் எப்படி ஒரு மருத்துவமனையை நடத்தமுடியும்? ‘இதன் பாதிப்பால் மக்கள் சிரம்பபடுகிறார்கள்’ என்று அங்கலாய்க்கிறார் ஹிங்கோரா ஆரம்ப சுகாதார நிலையத்தின் டாக்டர் சஞ்சிவ் குமார்

இப்படி உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைப்பாடு என்ற காரணங்களால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 6 வயதுக்குட்பட்ட 20 லட்சம் குழந்தைகள்  இறக்கிறார்கள்

இது 2008-ன் புள்ளிவிவரம் என்று எண்ணிவிட வேண்டாம்.

இதன் தொடர்ச்சியாக 2009 இல் ‘இந்தியாவில் ஓரு நாளைக்கு 5 வயது கூட நிரம்பாத 5000 குழந்தைகள் இறக்கிறார்கள்’ என்ற யூனிசெப்பின் (UNICEF)  அறிக்கையை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.

2010 இல் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில்,  இந்தியாவில் பணக்கார குழந்தைகளுக்கான இறப்பு வீதத்துடன் ஒப்பிடும் போது பரம ஏழைகளின் குழந்தைகள் 5 வயதிற்கு முன்னே இறப்பதற்கான சாத்தியம் மூன்று மடங்காக  உள்ளது என்றும் ஒவ்வோரு ஆண்டும், இந்தியாவில் பிறக்கும் 2 கோடியே 60 லட்சம் குழந்தைகளில், 18 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தங்களுடய 5 வயதுக்கு முன்பே இறக்கின்றனர் என்றும் பிறந்து ஒரு மாதத்திற்க்குள் 9 லட்சம் குழந்தைகள் இறக்கும் சூழ்நிலை இந்தியாவில் நிலவுகிறது என்றும் எழுதியிருக்கிறது.

மாநில வாரியாக பதிவாகியுள்ள தகவல்கள்:

 

மாநிலம் ஐந்து வயதுக்கு முன்னரே உயிர் இழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை
கேரளா பிறக்கும் 1000 குழந்தைகளில் 14  பேர் இறக்கின்றனர்
மத்திய பிரதேசம் பிறக்கும் 1000 குழந்தைகளில் 92பேர் இறக்கின்றனர்
உத்திர பிரதேசம் பிறக்கும் 1000 குழந்தைகளில் 89 பேர் இறக்கின்றனர்
ஒரிசா பிறக்கும் 1000 குழந்தைகளில் 89 பேர் இறக்கின்றனர்

 

மாநிலம் பிறந்த உடனே உயிர் இழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 
கேரளா பிறக்கும் 1000 குழந்தைகளில் 7 பேர் இறக்கின்றனர்
மத்திய பிரதேசம் பிறக்கும் 1000 குழந்தைகளில் 48பேர் இறக்கின்றனர்
உத்திர பிரதேசம் பிறக்கும் 1000 குழந்தைகளில் 45 பேர் இறக்கின்றனர்
ஒரிசா பிறக்கும் 1000 குழந்தைகளில் 47 பேர் இறக்கின்றனர்

 

இந்தியாவில் மிகவும் வறிய பிரிவில் இருக்கும் குடும்பங்களில் 5 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் இறப்பதாகவும் உயர் பணக்கார குடும்பங்களில் 1 லட்சத்து 78 ஆயிரம் குழந்தைகள் இறப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யூனிசெப் வருடம் தவறாமல் இது தொடர்பான தகவல் அறிக்கையினை சமர்ப்பித்து, திட்டங்கள் பல தீட்டுகிறது.  2012 இல் யூனிசெப் கொடுத்துள்ள அறிக்கையின் பிரதியை வாசிக்க இங்கே அழுத்தவும்

இதன் கணிப்புப்படி தெற்கு மற்றும்  மத்திய ஆசிய நாடுகளிலும், ஆப்ரிக்க நாடுகளிலும் தான் குழந்தைகள் இறப்பு வீதம் அதிகமாக உள்ளது. அதற்கு 6 காரணங்களை முன் வைக்கிறது யூனிசெப்

  • வயிற்றுப் போக்கு
  • மலேரியா
  • பிறந்தவுடன் ஏற்படும் தொற்றுநோய்கள்
  • நிமோனியா என்கிற கபவாத நோய்
  • குறைப் பிரசவம்
  • பிறக்கும் போது ஏற்படும் ஆக்சிஜன் குறைவு

இவை 50 % குழந்தை இறப்புக்கு காரணமாக இருந்தாலும்

  • சத்துணவு போதாமை
  • சுகாதாரமான தண்ணிர், சூழ்நிலை இல்லாமை

இவற்றால்தான் குழந்தைகள் இறப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது என்ற தகவல்களை முன்வைக்கிறது.

படிக்க

கிரிக்கெட், சினிமா, அண்ணா ஹசாரே போன்ற சவடால் அரசியல், ஆபாசக் கூத்து மற்றும் பொழுதுபோக்கு போராட்டங்களுக்காக  பக்கங்களையும், பிரைம் டைம்களையும் ‘லம்பாக’ ஒதுக்கும் ஊடகங்கள் நாட்டின் பிஞ்சுத் தளிர்கள் பரிதாபமாக உயிர் இழக்கும் அவல நிலையை ஜஸ்ட் லைக் தட்,  ஒரு செய்தியாக கடந்து போகின்றன.

நிமிடத்துக்கு 4 குழந்தைகள் இறக்கும் இந்த நாட்டில்தான் பெருமளவு முதலீடு செய்து மேட்டுக் குடியினருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் இருதய பராமரிப்புக்கான கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறது அப்போலோ மருத்துவமனை. அந்த கட்டமைப்பை சந்தைப்படுத்தி அப்போலோவின் பேங்க் பேலன்சை வளப்படுத்துவதற்காக இந்திய இளைஞர்களின் இதயத்தைப் பற்றி நடிகர் சூர்யா கவலைப்படுகிறார்.

இந்தியாவில் தினந்தோறும் இறக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பெற்றோர்கள் அடிப்படை மருத்துவ சேவைக்கு கூட பணமில்லாத ஏழைகள் என்பதால் சூர்யாக்களும், அப்போலோக்களும் அவர்களை கண்டு கொள்வதில்லை. அரசோ, மக்களின் அடிப்படைத் தேவைகளான  உணவு, மருத்துவ, சுகாதார வசதிகளை செய்து தருவதை தவிர்த்து அவர்களை தனியார் லாபத்திற்காக சந்தையில் அடமானம் வைக்கும் பணியை சிரமேற்கொண்டு செய்து வருகிறது

இனி இந்த புள்ளி விவரம் பல ஆயிரங்களில் ஏறலாம், அதனாலென்ன, செலவழிகக்கூடியவர்கள் மட்டும்தானே இந்தியர்கள், அந்த இந்திய இதயங்களை அப்போலோ வசம் ஒப்படைக்க அட்டைகத்தி நாயகர்கள்  தயார், அவர்களை இருக்கும் திசையை நோக்கி கேமராவும் வேனுமாக ஊடகங்களும் தயார்.

வாழ்க இவர்களது இந்திய இதயங்களின் மீதான  அக்கறை.

அந்நிய முதலீட்டுக்காக!

3
for-fdi

For the Sake of Foreign Investments – C.P. Chandrasekhar- Volume 29 – Issue 19 :: Sep. 22-Oct. 05, 2012.
தமிழில் சித்ரகுப்தன்

ந்த விலை கொடுத்தாவது அந்நிய மூலதனத்தின் “விசித்திரமான” நம்பிக்கையை பெறுவதற்கான முயற்சியே தற்போது மத்திய அரசின் மிக முக்கியமான நோக்கமாக உள்ளது.

அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழப்பதின் மூலம் அந்நிய முதலீடுகளை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் இருப்பது போல் மன்மோகன் சிங்கின் அரசு பாசாங்கு செய்கிறது.  அத்தகைய பயத்தை உறுதி செய்யும் வகையில் “பொது எதிர்ப்பு தவிர்ப்பு சட்டவிதி (GAAR)”யை அமுல்படுத்துவதிலிருந்து பின்வாங்கியது அவரின் அசாதாரணமான நடவடிக்கையை காட்டியது.  சட்டத்தில் உள்ள சில விதிகளை தவறாக பயன் படுத்தியும், வரி விதிப்பிலிருந்து “சட்டப்படி”யாக தப்பித்து சட்டம் இயற்றியதன் நோக்கத்தையும், தேச நலனையும் பாதிக்கும் தனியாரின் லாப நோக்க முயற்சியை தடுப்பதே (கர்) பொது எதிர்ப்பு தவிர்ப்பு சட்டத்தின் நோக்கமாகும்.

விதிகள் சட்டப்படியாகவும் நேர்மையானதாகவும் இருப்பதால், சர்வதேச அளவில் சரியான நடைமுறையாகவும் கருதப்படுகிறது. அவைகள் சட்டத்தில் உள்ள பிரிவுகளை தெளிவுபடுத்துவதுடன், அவைகளை அமுல்படுத்து வதற்கான நிர்வாக முறையையும் விளக்குகிறது.  கனடா போன்ற பல வளர்ந்த நாடுகள், இந்த “கர்(GAAR)” போன்ற விதிகளை பயன்படுத்தி வருகின்றன.  வரி ஏய்ப்பிற்கு எதிரான இந்த விதிகளை அங்கீகரித்து, “நேரடி வரி விதிப்பு சட்டதொகுப்பு” (வரிவிதிப்பை எளிமைப்படுத்தவும், முறைப்படுத்துவதுமான நோக்கத்தில்) மற்றும் 2012-13 வரவு செலவு அறிக்கை இந்த கர் விதிகளை அமுல்படுத்திட முனைந்தன.  குறிப்பிட்ட பிரிவுகள் மீது விவாதம் இருப்பினும், இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியவையே.

ஆனால், ஆச்சரியப்படும் வகையில், சில உள்நாட்டு, வெளிநாட்டு பெரு நிறுவனங்களின் (கார்ப்பரேட்) எதிர்மறையான விமர்சனங்களாலும், அதை மிகைப்படுத்திய கார்ப்பரேட் ஊடகங்களாலும், மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் அதிகார மையத்தில் உள்ள சிலரின் அறிவுறுத்தலால் இந்த சட்டம் அமுல்படுத்துவதிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டது.  தற்போது 2013 வரை அமுல்படுத்துவது தள்ளிப் போடப்பட்டிருந்தாலும், பார்த்தசாரதி ஷோம் குழுவின் பரிந்துரையின்படி சிறப்பு குழு ஆலோசனை ஒரு ஏற்புடை நடைமுறை என்றால்,இந்த “கர்” சட்ட அமுல் மேலும் மூன்றாண்டுகளுக்கு தள்ளிவைக்கப் படும். அதன் பின், எந்த வகையில் பார்த்தாலும், இந்த சட்டம் அமுல் படுத்தப் படாமலேயே போய்விடும்.  அறிவிக்கப்பட்ட ஒரு சட்டத்தை நிறுத்தி வைப்பதற்காக போடப்பட்ட ஒரு குழு மிகக் குறுகிய காலத்தில் தனது முடிவை அறிவித்து வரலாற்றில் இதுதான் முதல் முறை.

“கர்” விதிக்கு கல்லறை கட்டுவது

அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்பதற்காக கர் விதிகளை சுற்றி கற்சுவர் எழுப்பி கல்லரையில் போட உடன்படுவதன் மூலம் பிரதம மந்திரியும், அவரது அமைச்சரவை சகாக்கள் சிலரும், தங்களை “சீர்திருத்தர்களாக”,  எல்லாவற்றிலும் வெளிப்படைத் தன்மையை கடைபிடிப்பவர்கள் என்று தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டே, அந்த வெளிப்படை தன்மையை மீறுகின்றனர். மாற்றியமைத்தல் என்ற பெயரில்  முந்தைய நிதி அமைச்சர் திரு பிரணாப் முகர்ஜி, இந்த சட்டத்தை முன் தேதியிட்டு அமுல்படுத்துவதன் மூலம், வோடபோன், எஸ்ஸார் நிறுவனத்தை கையகப்படுத்திய போது, மூலதன சேர்ப்பு வரியிலிருந்து தப்பித்துக் கோள்ளும் முயற்சிகள் போன்றவற்றிற்கு தண்டம் விதித்து தேச நிதி நலன் காக்கும் அவரது திட்டத்தையே மாற்றிவிடும் ஒரு முயற்சியாகும்.  தற்போது இவை இரண்டுமே அமுல்படுத்தப்படுவது நிச்சயமற்றது.  அந்நிய முதலீட்டாளர்களை திருப்திப்படுத்த வேண்டுமென்பதே, இந்த முற்றிலும், அறிவு பூர்வமான கொள்கைகளை விலக்கிக் கொள்வதற்கான காரணமாக காட்டப்படுகிறது.

ஆனால் உண்மையில் இது எந்த விலை கொடுத்தாவது அந்நிய முதலீட்டாளர்களின் “விசித்திரமான நம்பிக்கையை”, பெறுவதற்கும், உறுதி செய்து கொள்வதற்குமான, ஒரு முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.  இது இந்திய திருநாட்டில் தற்போது புதிய உருவெடுத்துள்ள “பொருளாதார கொள்கை”யாகும்.  இந்த “கர்”(GAAR) உதாரணம் இந்தியா சுதந்திரம் அடைந்தபின், அதன் வெளிநாட்டு மூலதனத்துடனான உறவுகள் மீது ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.  1950 களில் அந்நிய மூலதனத்திலிருந்து எந்த அளவிலாவது சுதந்திரம் பெறுவதே இந்தியாவின் அரசியல் சுதந்திரத்திற்கான அளவுகோலாக கருதப்பட்டது.

ஆனால், இன்றோ அந்நிய மூலதனத்திற்கு அங்கீகரிப்பதே இந்திய பொருளாதார வெற்றிக்கான ஒரு சிறந்த முதலீட்டு மையம் என்ற எண்ணம் வளர்ந்துவிட்டது. இந்தியா தற்போது ஒரு முதிர்ச்சியடைந்த ஜனநாயக நாடாகிவிட்டதால், இதன் இறையாண்மைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என சிலர் வாதாடுகிறார்கள்.  எனவே அந்நிய மூலதனத்தைப் பற்றிய அச்சம் தேவையற்றது என்றும், அதை “அங்கீகரிப்பதே” நமது பொருளாதார சிறப்பு பற்றிய ஒரு அளவு கோலாக இருக்கும் எனவும் கூறிவருகின்றனர்.  எனினும், தாராளமயம் அமுல்படுத்தப்பட்ட காலம் துவங்கி, இந்த அந்நிய முதலீட்டில் குறிப்பாக நிதி மூலதனத்தால் நமது இறையாண்மை பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளதற்கு சான்றுகள் நிறையவே உள்ளன.  சுதந்திர இந்தியா அந்நிய மூலதனத்திலிருந்து விடுபட்டு, சுதந்திரமானதாக இருந்தால்தான்- அது தனது உள்நாட்டு மூலதனத்திற்கான ஒரு பகுதியை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதே அதன் காரணமாகும்.  மேலும் அத்தகைய சுதந்திரமான உள்நாட்டு மூலதன கொள்கை மட்டுமே, நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதுடன், மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்த முடியும்.

சுதந்திரத்திற்கு பிந்திய நான்கு சகாப்தத்தில், இத்தகைய மூலதன கொள்கையில் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வதுடன், அந்நிய மூலதனத்தின் அளவையும், வழிமுறைகளையும் நாட்டில் முறைப்படுத்த முடிந்தது.  அதன் விளைவாக, முற்றிலும் நிதி மூலதனம் தடுக்கப்பட்டது, சில துறைகளில் அந்நிய முதலீடுகள் தடை செய்யப்பட்டது.  சிலவற்றில் அந்நிய முதலீட்டின் அளவு கட்டுப்படுத்தப்பட்டது,  அந்த இடத்தில் உள்நாட்டு மூலதனம் பராமரிக்கப்பட்டது, உற்பத்தி உபகரணங்கள் மாறுதல்கள் கூட முறைப்படுத்தப்பட்டது.  இந்த வகையில், இந்த துறையில், அந்நிய மூலதனத்தினோடான உள்நாட்டு மூலதனத்தின் உறவுகளை, தேச நலனை பிரதானமாகக் கொண்டு மாநிலங்கள் முடிவெடுத்துக் கொள்ள வழிவகுக்கப்பட்டது.  இப்படியாக, உள்நாட்டு மூலதனத்திற்கு வேலி அமைத்து, ஒரு சில அந்நிய முதலீடுகளுக்கு மட்டும் கதவை திறந்துவிடும் முறை கடைபிடிக்கப்பட்டது.

1991 ன் துயரம்

ஆனால் துரதிருஷ்டவசமாக, உள்நாட்டு நில உடமையாளர்கள் மற்றும் ஏகபோக முதலாளிகளின் ஆதிக்கத்தை குறைப்பதில் ஏற்பட்ட தோல்வி, உள்நாட்டு முதலீட்டுக்காக பாதுகாக்கப்பட்ட இடத்தை முற்றாக பயன்படுத்த இயலாமல் போயிற்று.  இந்த சூழலில், புதிய முதலீட்டு இடங்களை தேடிக் கொண்டிருந்த அந்நிய முதலீட்டாளர்கள், அந்த மூலதனத்தை வெகுவாக எதிர்நோக்கியிருந்த சில தனியாரின் திட்டத்தால், உள்ளே நுழைந்து அந்த இடங்களை கைப்பற்றிக் கொண்டனர்.  1980 களிலிருந்து ஒரு எதிர்பாராத வளர்ச்சி வேகம் பதிவு செய்யப்பட்டது.அரசு தனது உள்நாட்டு செலவினத்தை சந்திக்க (மூலதன செலவின்றி) உள்நாட்டு கடனை அதிகமாக வழங்கியது.

ஏற்கனவே, உற்பத்தி குறிப்பாக விவசாயம் சார் உற்பத்தி தேக்க நிலையில் உள்ள காலத்தில், இத்தகைய கடன் உயர்வு பணவீக்கத்தை உயர்த்தியது. இந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், உற்பத்தி குறைவை சரிக்கட்டவும் பொருட்களை இறக்குமதி செய்ய அந்நிய கடனை கோர வேண்டியதாயிற்று.  அவ்வாறு மிகவும் கடினமாக சேர்த்த அந்நிய செலாவணியை, மேல்தட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்களை வாங்குவதற்கு திருப்பிவிடப்பட்டது.  விளைவு,இந்தியாவின் அந்நிய கடன் விகிதம் அதனது உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதாச்சாரத்தைக் காட்டிலும் அதிகமானது.

இந்த அந்நிய கடன் உயர்வுடன், குறைந்துவரும் செலவின வகையிலான அந்நிய செலவாணி இருப்பு, உலகளவில் கடன் பெறும் தகுதயில் சரிவு, தனது கையிருப்பிலிருந்து கொஞ்ச நஞ்ச அந்நிய செலாவணியையும் செலவழிக்க வேண்டிய கட்டாயம் 1991 ன் துயரத்திற்கு இட்டுச் சென்றது.  இத்தகைய கொள்கை, அந்நிய மூலதனத்தின் மீது தான் சார்ந்திருப்பதற்கான விளைவு பற்றிய எச்சரிக்கையை பதிவு செய்தது. விசித்திரமாக, இத்தகைய ஒரு துயர காலத்தில் அமுல்படுத்தப்பட்ட தாராளமயக் கொள்கை, அந்நிய கடன்கள் மீதான சார்பை, கடனற்ற மூலதனமின்றி அந்நிய ஸ்தாபன முதலீடு (FII) மேலான சார்பாக மாறிவிட்டது.

தாராளமயக் கொள்கை அமுலாக்கப்பட்டது தொடங்கி அந்நிய முதலீட்டாளர்கள் மீதான கட்டுப்பாடு, முறைப்படுத்துதல் கொள்கை ரீதியாகவே மறையத் தொடங்கியது.  இத்தகைய அந்நிய மூலதனத்தின் பாய்ச்சல், குறிப்பாகஇந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில், தறிகெட்ட அந்நிய மூலதனத்தின் விகிதாச்சாரம் அதிகமாக குவியத் துவங்கியது.  நாட்டின் சுதந்திரமடைந்தத முதல் ஆண்டுகளில் எதிர்பார்த்தது போல், இந்த அந்நிய மூலதனத்தின் வரத்து, உள்நாட்டு மூலதனத்திற்கான இடத்தை ஆக்கிரமித்துவிட்டது.

தற்போதைய எந்த ஒரு கொள்கை முடிவுகளும், அது அந்நிய மூலதனம் சார்ந்தோ (மூலதன சந்தை மாற்றங்கள் மீதான வரி) இல்லையோ (உணவு பாதுகாப்பு சட்டம்),இறுதி ஆய்வில், அவையெல்லாம், அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்கான முயற்சிக்கான அளவு கோலை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது.  மேலும் மக்களில் பெரும்பான்மையினர் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய கொள்கை முடிவுகள் மீதான மாற்றுக் கருத்துக்களால் (தற்போது சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகள்) அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்ற நிலைக்கே தள்ளிவிடும் என்ற பிரச்சாரம் செய்யப்படுகிறது.

தற்போதுநிலைமை பகுத்தறிவை தாண்டி சென்றுவிட்டது.  உதாரணமாக மேலே சொன்ன “பொது எதிர்ப்பு தவிர்ப்பு விதி” (கர்) யையே எடுத்துக் கொள்ளலாம்.  ஊடகங்களில் ஒரு பகுதியினரே, அவர்கள் சீர்திருத்தத்தை, அது சம்பந்தமாக வெளிப்படைத் தன்மையை ஆதரிப்பவர்களாக இருந்தாலும், மற்றொரு புறம்,  இந்த விதியைத் திரும்ப பெற்றதால்தான் பங்கு சந்தையிலும், நிதித்துறையிலும் முதலீடு செய்து அதிர்ச்சியில் உள்ள முதலீட்டாளர்களை காப்பாற்ற முடியும் என்ற அரசின் முடிவை நியாயப் படுத்துகின்றனர்.  இந்த கருத்தின் மூடத்தனத்தை  பார்க்க வேண்டியுள்ளது. தேசிய நலனுக்காக, மூலதனக் கொள்கைகள் நியாயமானதாக, நேர்மையானதாக இருக்கும் காலத்தில், சந்தையில் முதலீடு செய்ய முன்வராததோடு, அத்தகைய முதலீட்டாளர்கள் இருப்பதைக் காட்டிலும், இல்லாமலிருப்பதே மேல்.  இரண்டாவதாக அனைத்து அந்நிய முதலீட்டாளர்களும், வரியை தவிர்க்க அனுமதிக்கவில்லை என்பதற்காக லாபம் தரும் துறையில் முதலீடு செய்ய தயங்குவதில்லை.

மொரீஷியசிற்கு உள்ள வரிவிதிப்பற்ற சலுகை தவறாக பயன்படுத்தப்பட்டு, அதிகப்படியான அந்நிய முதலீடுகள் அந்த நாட்டின் மூலம் இந்தியாவிற்குள் வரத்தொடங்கிய காலம் தொட்டே “கர்(GAAR)” விதிகள் விவாதத்தில் இருந்து வந்தது.  மேலும் நேரடி வரி விதிப்பு சட்ட குழு மையத்தின் விவாதத்திலும் கர் விதிகள் விவாதப்பொருளாக இருந்திருக்கிறது. எனவே,தற்போது “கர்”ஐ ஒரு இடையூறாக நினைக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவிற்குள் வருவதை எப்போதோ தவிர்த்திருக்கலாம், இங்குள்ள மூலதனத்தை திரும்ப பெற்றிருக்கலாம்.  ஆனால் அதற்கான அறிகுறியே தெரியவில்லை.

முதலீட்டாளர்கள் ஓட்டமில்லை

இறுதியில், சமீபத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் அதிகமாக நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக பேசப்பட்டாலும், அதற்கான சாட்சியங்கள் எதுவுமில்லை. உண்மையில் என்ன நடந்தது என்றால், இதுவரை இருந்துவந்த அந்நிய முதலீட்டின் பொருண்மை மட்டும் மாறியுள்ளது.  2011-12-ம் ஆண்டிற்கான மொத்த அந்நிய முதலீட்டை ஆய்வோமானால், வெவ்வேறு துறையில் போடப்பட்ட அந்நிய முதலீடு என்பது நேரடி அந்நிய முதலீடாக மாறியருப்பதை காண முடியும்.  11.9ஒட்டுமொத்த தனியார் மூலதனம் பங்குச் சந்தை மூலதனமாக மாறியதுடனான விகிதாச்சாரம் 39 பில்லியன் டாலரிலிருந்து 40 பில்லியன் டாலர் என்ற அளவில்தான் 2010-11 மற்றும் 2011-12 காலத்தில் இருந்துள்ளது.  வெவ்வேறு துறை முதலீடு என்பதற்கும், நேரடி அந்நிய முதலீட்டிற்குமான மாற்றம் என்பது பெயரளவில் உள்ள வித்தியாசமே.

ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஒரு அந்நிய முதலீட்டாளர் 10 சதவீதத்திற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பங்காக வாங்குகிறார் என்றால், அந்த முதலீட்டை அந்நிய முதலீடு என்கிறோம்.  அப்படியில்லையென்றால், அதை அந்தந்த துறை முதலீட்டு பெட்டியில் வைக்க வேண்டியதுதான்.  ஆகவே, துறை முதலீட்டாளர்கள் போல், இந்த நேரடி முதலீட்டாளர்களாக சொல்லப்படுபவர்களும், நீண்ட கால நிகர வரத்துக்காக இல்லாமல், மூலதன லாபத்தையே எதிர் நோக்கியுள்ளனர் என்பதோடு அவர்களும் எந்த நேரமும் வெளியேறும் நிலையில்தான் உள்ளனர்.  மேலும், பங்குச்சந்தை பலவீனமாகவும் ஸ்திரமின்றி இருப்பதால், முதலீட்டாளர்கள் இந்திய வர்த்தக கூட்டமைப்பின் முறையை,தங்களது முதலீட்டிற்கு அனுசரிக்க மாட்டார்கள்.  இதுவும் கூட துறைவாரியான முதலீட்டை குறைக்கும்.  துறை முதலீட்டிலிருந்து, நேரடி முதலீட்டிற்கான மாற்றம், முதலீட்டாளர்கள் நம்பிக்கை குறித்து அநேகமாக எதுவும் குறிப்பிடவில்லை.  ஏனென்றால் அந்த நம்பிக்கை அந்நிய நாடு வாழ் இந்தியர்களின் சேமிப்பானது 2010-11ல் 3.2 பில்லியன் டாலரிலிருந்து 2011-12 காலத்தில் 11.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதிலிருந்து தெளிவாகிறது.

சுருக்கமாக சொன்னால், அந்நிய முதலீட்டாளர்கள்  அதிர்ச்சியடைந்துள்ளார்கள் என்ற காரணம் காட்டி, இந்திய அரசு உடனடியாக அதிர்ச்சியடையத் தேவையில்லை.  அந்நிய முதலீட்டாளர்களை திருப்திப்படுத்த பொது வரி தளர்ப்பு எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்துவதில் காட்டிய தயக்கத்தைப்போல் இன்றும் அரசு பின் வாங்கினால், அது இரண்டு நீண்ட கால காரணத்திற்காக மட்டுமே இருக்கும்.

முதலாவதாக அந்நிய முதலீட்டின் அதிகப்படியான வரத்து பற்றிய திட்டம், அந்நிய முதலீட்டாளர்களை தொடர்ந்து திருப்திப்படுத்துவதாக இருக்க வேண்டும்.  ஆனால் இன்று போல் நிகழ்கால நிதிப் பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டிருக்கும் சூழலில், இந்த திட்டம் குறிப்பாக வலுவற்றதாகிவிடும்.  இரண்டாவதாக, அந்நிய முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் குறைந்து தங்களது முதலீடுகளை திரும்ப பெற்றால் அந்நிய முதலீடுகளின் சேமிப்பை சார்ந்துள்ள அந்நிய செலாவணி மற்றும் பணப்புழக்கத்தில் குழப்பம் ஏற்படும்.

“கர்(GAAR)” உதாரணம் மற்றொரு காரணத்திற்காக சொல்லப்படுகிறது.  இந்த சட்டம் அரசின் வருவாயை கவர்ந்திட வழிவகுக்கும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், (இதை தொடர்ந்த, மூலதன லாபத்தில் வரிவிதிப்பை முன் தேதியிட்டு அமுல்படுத்தியது) இதன் மூலம் அரசு பெரிய அளவில் இந்த வரிவிதிப்பின் மூலம் அதிகப்படியான வருமானத்தை பெற்றிடும் என்பதில் எந்த உறுதியும் இல்லை.  இந்தியாவின் பெரும்பான்மையானவர்களான எளியவர்களை காக்க வேறு திட்டங்கள் உள்ளது.

அவை, விரிவாக்கப்பட்ட வேலை வாய்ப்பு திட்டத்தில் துவங்கி, பொது விநியோகத்திட்டத்தின் மூலம் மானிய விலையில் உணவுப் பொருள் வழங்கும் திட்டம், குறைந்தபட்ச சமூக பாதுகாப்பு திட்டம், குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டம், மருத்துவ வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், மற்றும் சுகாதாரம்.  இவைகளுக்கு நிறைய முதலீடுகள் தேவைப்படுகிறது. நிதி பற்றாக்குறை என்ற ஒரே காரணம் காட்டி இந்த திட்டங்களில் முதலீடுகள் செய்வது முற்றிலும் இல்லை, அல்லது போதுமானதாக இல்லை.  மேலும், நிதி பற்றாக்குறை காலத்தில் இத்தகைய திட்டங்களுக்கு ஒதுக்கீடு என்பது நிதி பற்றாக்குறையை மேலும் அதிகமாக்கும் என்பதுடன், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைத்துவிடும்.  இவ்வாறாக, அந்நிய முதலீட்டார்களை திருப்திப்படுத்தும் இத்தகைய முயற்சியில், கொள்கை முடிவுகளுக்கான இடத்தை குறைப்பது என்பது அந்நிய முதலீட்டாளர்களுக்கான அதிகபட்ச சலுகைகளுக்கும், லாபங்களுக்கும், இத்தகைய உதவிகள் பெரிதும் தேவைப்படும்.  பெரும்பாலான மக்களுக்கு, கிடைப்பதில்லை என்பதும், நேரடி எதிர்மறையானது என்பதுடன், நாட்டின் வளர்ச்சியில் எந்த பங்கும் நீண்ட காலத்திற்கு இவர்களுக்கு கிடைக்காமலேயே போகிறது.

சுருங்க சொன்னால், அந்நிய முதலீடுகளை தொடர்ந்து அனுமதித்து அதனால் வரும் என்று எதிர்பார்க்கப்படும் வளர்ச்சிக்கான திட்டம் என்பது, ஏற்கனவே வசதியாக உள்ளோரை மேலும் வசதி உள்ளவர்களுக்கும் என்பதோடு எளியவர்களுக்கு எதுவுமே கிடைக்காது ஏமாற்றப்படுவர்.  தனியார் முதலீட்டாளர்கள் தாங்கள் சரியாகவோ, தவறாகவோ ஏற்கனவே கைப்பற்றியுள்ளவற்றால், ஏற்பட்டுள்ள சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை இத்திட்டம் மேலும் மோசமாக்கும்.  இது இன்றும் எந்த பகுதிகளில் அவர்கள் லாபம் அடைய முடியுமோ அந்த பகுதிகளை விரிவாக்கும்.  புதிய வரிவிதிப்பு மூலம் வெவ்வேறு வகையிலான நில விற்பனை மேலும் அரிதான சொத்துக்களை தனியார் துறைக்கு மிகக் குறைந்த விலையில் கொடுப்பது போன்றவற்றால், அரசு லாபத்தில் பணவீக்கத்தை உண்டாக்கும்.

வரியில்லாத கோட்டைகள்

கடந்த காலங்களில் மூலதன வரத்து வளர்ச்சிக்கு உதவியாக இருக்க பல்வேறு வகையில் அரசின் நடவடிக்கை இருந்தது.  நாடுகளுக்கிடையே நிதி மூலதன வரத்து அதிகரித்து வரும் இன்றைய உலக பொருளாதாரச் சூழலில், இந்திய அரசு தனது நடவடிக்கையில் விரும்பத்தக்க நாடு என்ற பலனை பெற்றுள்ளது.  இந்த அந்நிய ஸ்தாபன முதலீட்டின் வரத்து அதிகரிப்பதற்கு முன்பு, ஒரு வேளை 2002-03 காலத்தில் இந்த முதலீட்டின் வரத்து வெகுவாக குறைந்திருந்ததால் எச்சரிக்கப்பட்டோ என்னவோ, அன்றிருந்த நிதிச்சுமைகள் 2002-03 நிதி நிலை அறிக்கை உரையில்- “மூலதன சந்தையை ஊக்குவிக்கும் முகமாக 2003 மார்ச் 1ம் நாள் அல்லது அதற்கு பின்போ வெற்ற மற்றும் ஓராண்டு அதற்குமேல் காலந்தாழ்த்தி விற்கப்பட்ட அனைத்து சமமான ஈட்டுப் பங்கிற்கும் மூலதன லாப வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது” என்றார் அன்றைய நிதியமைச்சர்.

நீண்ட கால மூலதன லாப வரி விதிப்பு அந்த நேரத்தில் 10 சதவீதம் என்ற வகையில் சலுகை காட்டப்பட்டது.  இத்தகைய மேலதிக சலுகைகளால் அந்நிய மூலதன வரத்தை அதிகமாக்கியதுடன், இந்தியாவின் பங்கு சந்தையை வரியில்லா கோட்டையாக்கியது.  இந்த அதிதீவிர சூழலில், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை மெதுவாகிவிட்டதால், அந்நிய முதலீட்டாளர்கள் ஆர்வம் குறைந்துவிட்டது என்ற பேரில், தனியார் மூலதனத்தை ஊக்குவிக்கும் தாரளமயத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் அரசின் நடவடிக்கை நியாயப்படுத்தப்படுகிறது.

இத்தகைய புதிய தாராளமயக் கொள்கையை தூக்கிப்பிடிக்கும் பகுதியினர், பலவகை சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு, அல்லது பொதுத்துறை நிறுவனவங்கிகளின் பங்குகளை அந்நிய முதலீட்டாளர்களுக்கு விற்பது போன்ற பெரிய அளவிலான அறிவிப்பை அரசு அறிவித்ததால் அந்நிய முதலீட்டாளர்கள் நம்பிக்கை வளரும் என்பதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மீறும்.  இதன் அர்த்தம் என்னவென்றால் சமீபத்தில் வோடபோன் நிறுவனம் சட்டத்திலுள்ள ஓட்டைகளை பயன்படுத்தி இந்திய மண்ணில் வாங்கிய செல்போன் பங்குகளுக்கு வரி ஏய்ப்பு செய்தது போல், அந்நிய முதலீட்டாளர்கள் செய்வதை அரசு தடுக்கக் கூடாது என்பதுதான்.

எது மறைக்கப்பட்டது என்றால், அந்நிய முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு இன்றும் ஓடவுமில்லை, இந்த “பெரிய அளவிலான சலுகைகள்” கொடுக்கும் போதுதான் வந்தவர்களுமில்லை.  எனவே இத்தகைய வாதங்கால் ஒட்டுண்ணிகள் போல் தொடர்ந்து சலுகைகளை பெற்று வளர்ச்சிக்கு முதலீடு செய்யப்படும் என்று கூறி அரசுக்கு வலைவீசும் அந்நிய முதலீடுகள் மற்றும் அதன் மீது அரசின நிலைப்பாட்டை, தாராளமய ஆதரவாளர்கள் வெளிக்கொணர்கிறார்கள்.  முடிவில் அந்நிய மூலதனத்திற்கும், இந்தியாவிற்கும் இடையேயான உறவு ஒரு மோசமான நிலைக்கு மாறிவிட்டது என்பதுதான் உண்மை.

குறிப்பு: 1947 போலி சுதந்திரம் அல்லது அதிகார மாற்றத்தின் போது உள்நாட்டு மூலதனத்திற்கு பாதுகாப்பும், அந்நிய முதலீட்டிற்கு கட்டுப்பாடும் இருந்ததாக கட்டுரையாளர் கூறுகிறார். இது முதலாளிகள் விரும்பி செய்தவை அல்ல. அன்று இலாபமில்லாத அடிக்கட்டுமான துறைகளில் முதலீடு செய்வதற்கு முதலாளிகள் விரும்பவில்லை. அவர்களது மூலதனமெல்லாம் உடனடி இலாபம் கொண்ட துறைகளில் மட்டும் என்பதாக இருந்தன. இன்று அந்த அடிக்கட்டுமானங்களின் வளர்ச்சியில் முதலாளிகள் அனைத்திலும் முதலீடு செய்து இலாபம் பெறுவதற்கு முயல்கின்றனர். அதனாலேயே இன்று அன்னிய முதலீடு அளவு கடந்து வருகிறது. ஏகாதிபத்திய மூலதனம் செல்லுமிடமெல்லாம் பேரழிவையும், நாடுகளை சூறையாடுவதையும் செய்யும் போது அவற்றுக்கு சில கட்டுப்பாடுகள், வரம்புகள் மட்டும் இருந்தால் உள்நாட்டு தொழிலும், மூலதனமும் பாதுகாக்கப்படும் என்று பார்ப்பது சரியாக இருக்காது.

வினவு

ஹிக்ஸ் போசான் துகள்! ஒரு வரலாற்று விளக்கம்!!

65

கடவுள்-துகள்-வரலாறுடந்த மாதத்தில் உள்ளூர் பத்திரிகைகள் முதல் உலகப் பத்திரிகைகள் வரை தலைப்புச் செய்தியாக இருந்தது – ‘கடவுள் துகள்’. ஐரோப்பாவின் செர்ன் ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘கடவுள் துகளை’க் கண்டுபிடித்து விட்டனர் என்பதே இச்செய்திகளின் சாராம்சம். விஞ்ஞான மொழியில் சொல்வதானால் தற்போது ‘பிடிபட்டிருக்கும்’ துகளை ஹிக்ஸ் போசான் துகள் என்று சொல்லலாம். இதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றிப் பார்க்கும் முன் இந்த ஆராய்ச்சியைப் பற்றியும் அந்தத் துகளைப் பற்றியும் விஞ்ஞானம் சொல்லும் விளக்கங்களைச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.

இந்தப் பிரபஞ்சம் தோன்றியது எப்படி என்பது ஒரு சுவாரசியமான கேள்வி – சொல்லப் போனால் இந்தக் கேள்விக்கான பதிலில் தான் அந்தக் கடவுளின் உயிரே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஆதியிலே ஒன்றுமில்லாத வெளி இருந்ததாகவும், நேரம் போகாமல் போரடித்துக் கொண்டிருந்த தேவன் எதையாவது படைத்துத் தொலைப்போமே என்கிற படைப்பு அவஸ்தையில் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்பதும் மதவாதிகள் சொல்லும் விளக்கம். அதாவது, ‘நாம் காணும் சகலமும் அந்த ஆண்டவனின் படைப்புகள்’ என்கிற இந்த ஆறுவார்த்தைகளைத் தாண்டி மதவாதிகளின் மூளைகள் செல்லவில்லை.

ஆனால், வரலாறு நெடுக விஞ்ஞானிகள் இந்த அம்புலிமாமா கதையை எள்ளி நகையாடியிருக்கிறார்கள். அவர்கள் இதற்கு மாற்றாக பெரு வெடிப்புக் கொள்கையை முன்னிறுத்தினர். அதன்படி, இன்று நாம் காணும் மொத்த பிரபஞ்சமும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு சுருங்கிய வடிவில் அபரிமிதமான வெப்பத்துடனும் கற்பனைக்கெட்டாத அடர்த்தியுடனும் ஒடுங்கியிருந்ததாகவும், அதனுள்ளே ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாக அது வெடித்துச் சிதறி விரிவடைந்து வருவதாகவும் சொன்னார்கள். அப்படிச் சிதறிய துகள்கள் பொருண்மையைப் பெற்றதன் விளைவாகவே பல அண்டங்களும் பேரண்டங்களும், அவற்றினுள் சூரியன்களும் கோள்களும் தோன்றின என்றும் விளக்கினர்.

வெடித்துச் சிதறிய அதீத வெப்பம் கொண்ட துகள்கள் ஒரு குறிப்பிட்ட விசைப்புலத்தைக் கடக்கும் போது அதன் ஆற்றல் நிறையாக மாறும் என்பதை ஹிக்ஸ் எனும் விஞ்ஞானி சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் விளக்கினார். அந்த விளக்கம் தான் தற்போதைய சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

‘கடவுளை’ லாரியில் அடிபட்ட நாயைப் போல் விசிறியடித்துள்ள இந்த விளக்கத்தை மதவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் பொருள் வேறு ஆற்றல் வேறு என்றனர். ஆற்றலைக் கடவுளாக விளக்கியவர்கள், அந்தக் ‘கடவுள்’ ஏதுமற்ற சூனியத்திலிருந்து இந்த பிரபஞ்சம் மொத்தத்தையும் விரல் சொடுக்கும் நேரத்தில் உண்டாக்கி விட்டாரென்று சொன்னார்கள். அதாவது கருத்து தான் அனைத்துக்கும் மூலம் என்கிற கருத்துமுதல்வாதம் தான் இது.

ஆனால், பொருளில் இருந்து தான் சகலமும் துவங்கியது என்று சொன்ன பொருள்முதல்வாதிகளான விஞ்ஞானிகளோ, பொருளிலிருந்து துவங்கும் ஆற்றல் மீண்டும் பொருளாக மாறும் என்றும், அந்த ஆற்றலின் விளைவாய் நிறையைப் பெறும் என்றும் விளக்கினர். இந்த விளக்கத்தை நிரூபிக்க அவர்கள் ஆற்றலில் இருந்து பொருள் எப்படி பொருண்மையைப் பெறுகிறது என்பதை சோதனைப் பூர்வமாக நிறுவ வேண்டியிருந்தது.

ஹிக்ஸ் முன்வைத்த கோட்பாட்டு ரீதியிலான விளக்கத்தை ஆய்வுகளின் மூலம் நிரூபிக்க 50 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த காலதாமதத்திற்கு காரணங்கள் இல்லாமலில்லை. சுமார் 20 ஐரோப்பிய நாடுகள் இணைந்து, 6000 விஞ்ஞானிகளோடு, பல பில்லியன் டாலர் செலவில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகளோடு தான் இச்சோதனை மோற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சோதனைக்கு முன்னோட்டமாக இன்னும் சில துகள்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டியிருந்தது. தோன்றியதிலிருந்து லட்சத்து கோடிக்கோடியில் ஒரு பங்கு விநாடியில் ஹிக்ஸ் போசான் வேறு துகள்களாக மாறிவிடும். அதற்குள் அதைப் படம் பிடித்தாக வேண்டும்.

அணுவிற்குள் இருக்கும் புரோட்டான் என்ற நேர்மின்சுமையுடைய துகள்களை ஆயிரம் கோடி தடவை எதிரெதிராக மோத விட்டால்தான் ஒரு போசானை பார்க்க முடியும். இதற்காக பூமிக்கடியில் 175 மீட்டர் ஆழத்தில் வட்ட வடிவ பாதையில் 1200 பெரிய காந்தங்களை அடுக்கி அதற்கு நடுவில் இரண்டு இஞ்ச் அகலமுள்ள குழாய் வழியாக புரோட்டானை விநாடிக்கு 3 லட்சம் கிமீ வேகத்தில் (ஒளியின் வேகம்) எதிரெதிர் திசையில் மோத விட்டுதான் இது சாத்தியமானது.

இந்த ஆய்வுக்காக அமைக்கப்பட்டுள்ள குழாயின் (Large Hadron Collider)  சுற்றளவு 27 கிமி. இதை 100 நாடுகளைச் சேர்ந்த 10,000 விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் சேர்ந்து 9 பில்லியன் டாலர்கள் செலவில் உருவாக்கியுள்ளனர். பல அணுகுண்டுகள் சேர்ந்து வெடித்தாற்போல நடக்கும் இந்நிகழ்வில் வெளிப்படும் வெப்பத்தை தணிக்க மிகவும் குளிர்ச்சியூட்ட வேண்டி இருக்கும். அதற்காக மிகுந்த பொருட் செலவில் குளிர் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

பிரபஞ்சத்தின் ரகசியங்களைக் கண்டறிய ஒவ்வொரு முறை விஞ்ஞானம் முயற்சி செய்யும் போதும் மதவாதிகள் அதன் கால்களை உடைப்பதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள். இந்த சோதனைகள் துவங்குவதற்கு முன்பும் கூட, இதனால் உலகமே அழியப் போகிறதாக்கும் என்றெல்லாம் பூச்சி காட்டிய மதவாதிகள், சோதனையின் முடிவுகள் வந்ததும் அதை எந்தக் கூச்சமும் இன்றி செரித்துக் கொள்ள முடியுமா என்று பார்க்கிறார்கள். எப்படி இருந்தாலும், கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் துகளுக்குப்பெயர் ‘கடவுள்’ துகள் தானே என்று கூறி அற்பத்தனமாக மகிழ்ந்து போகிறார்கள்.

உண்மையில், 1993-ம் ஆண்டு ஹிக்ஸ் துகள் பற்றிய தனது நூல் ஒன்றுக்கு விஞ்ஞானி லியோன் லேடர்மேன் ‘விளங்காத துகள்’ என்று பொருள் வரும் வகையில் Goddamn Particle எனப் பெயரிடுகிறார். வியாபார பரபரப்பிற்காக அந்நூலின் தலைப்பை அதன் பதிப்பாளர் GOD particle (கடவுள் துகள்) என்று சுருக்கி வைத்துள்ளார் – இதைத் தவிற ஹிக்ஸ் போசான் துகளுக்கும் ஆண்டவனுக்கும் மயிர் நுனியளவிற்கும் தொடர்பில்லை என்பதே உண்மை. ஆனால், செருப்படி வாங்கியது ராமனென்றாலும் அடித்தவர் பெயர் ராமசாமி (பெரியார்) தானே என்று ஆறுதலடையும் மயிலை பார்த்தசாரதிகளைப் போல் உலகெங்கும் உள்ள மதவாதிகள் தங்கள் கொதிப்பை ஆற்றுப்படுத்திக் கொள்கிறார்கள்.

மதவாதிகள் விஞ்ஞானத்தை கண்மூடித்தனமாய் எதிர்த்தாலும் அதன் பலன்களை – செல்போனில் இருந்து விமானம் வரை – பயன்படுத்திக் கொள்ள தயங்குவதில்லை; அதற்காக கூச்சப்படுவதுமில்லை. ‘ஆன மட்டும் கழுத்தைப் பிடிப்பது; ஆகாத மட்டில் காலைப் பிடிப்பது’ என்கிற இவர்களின் இந்த பித்தலாட்டத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. அது பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய டெமாக்ரடிஸின் காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது.

பண்டைய கிரேக்க பொருள்முதல்வாதிகள் துவங்கி இன்றைய ‘கடவுள்’ துகள் வரை விஞ்ஞானம் அடைந்த படிப்படியான வளர்ச்சியை இப்போது ஒரு பருந்துப் பார்வையில் பார்ப்போம்.

சுமார் 2500 வருடங்களுக்கு முன் இந்த பிரபஞ்சத்தின் புதிர்கள் விளக்கப்படவே முடியாதவையென்று கருதி வந்த காலத்தில், உலகம் அணுக்களால் ஆனது என்றும், அவ்வணுக்களை இணைப்பது சூன்யம் என்றும், அணுக்களது சேர்க்கை மற்றும் பிரிவினால் தான் பருப்பொருளில் மாற்றம் வருவதாகவும் கிரேக்கத் தத்துவஞானி டெமாக்ரிட்டஸ் முன்வைத்தார்.

ஏறக்குறைய அதே காலகட்டத்தில் இந்தியாவில் வேதமதத்தை எதிர்க்கும் நாத்திகர்களான சாருவாகர்கள் இந்திய பதிப்பான பார்ப்பன கடவுள் கொள்கை உள்ளிட்ட கருத்து முதல்வாத தத்துவங்களை எதிர்த்துப் போராடுகிறார்கள். சடப்பொருளிலிருந்து தன்மையிலேயே வேறுபட்டதான உயிர்ப்பொருள் எப்படித் தோன்ற முடியும் என்று கேள்வி எழுப்பி, அதன் மூலம் கடவுள் உலகைப் படைத்தார் என்று நிலைநாட்ட முயற்சிக்கிறார்கள் கருத்துமுதல்வாதிகள்.  பசியை ஆற்றப் பயன்படும் அரிசி, புளிக்கவைக்கப் படும்போது தன்மையிலேயே வேறுபட்டதான மதுவாக மாறி போதையூட்டுவதை உதாரணம் காட்டி, பஞ்ச பூதங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஒன்று சேரும்போது உயிர் தோன்றுகிறது. இறந்த பின் ஆன்மா என்று எதுவும் எஞ்சியிருப்பதில்லை. உடல் மீண்டும் பஞ்சபூதங்களுடன் கலந்து விடுகிறது என்று வாதாடியிருக்கிறார்கள் சாருவாகர்கள்.  சாருவாகம் என்பது முரணற்ற பொருள்முதல்வாதம். பவுத்தமோ இயங்கியலைப் பேசியது. எரிந்து கொண்டிருக்கும் சுடரைக் காட்டி, சென்ற கணத்தில் நாம் கண்ட சுடரல்ல, இந்தக் கணத்தில் நாம் காண்பது என்று கூறி இயங்கியலை விளக்குகிறது பவுத்த தத்துவம். பஞ்ச பூதங்களால் உலகை விளக்க இவர்களனைவருமே முயன்றனர். அறிவியலும் தொழில் நுட்பமும் வளராத அந்தக் காலத்தில், எளிய நடைமுறை எடுத்துக் காட்டுகள் மூலம், தர்க்க முறையிலும், கோட்பாடாகவுமே பொருள்முதல்வாதத்தை அவர்கள் பேச முடிந்தது.

அதன் பின் மிக நீண்ட காலத்திற்கு தத்துவஞானத் துறையில் எந்த முன்னேற்றமும் இல்லை. நிலவுடமை சமூக அமைப்பின் கீழ் உற்பத்தி சாதனங்களிலும், தொழில் நுட்பத்திலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், தத்துவஞானத்துறையின் குரல்வளை மீது மதபீடங்கள் அமர்ந்திருந்தன. இந்தியாவில் பார்ப்பனீயமும், ஐரோப்பாவில் கிறித்தவமும் அறிவியல் வளர்ச்சியை மறித்து நின்றன.

16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோபர்நிகஸ், டெமாக்ரடிஸுக்கும் முந்தையவரான தாலமி முன்வைத்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து சூரிய மையக் கோட்பாட்டை முன்வைக்கிறார். இதே கோட்பாட்டை வலியுறுத்திய புரூனோ ரோம் நகரில் திருச்சபையால் தீவைத்து எரிக்கப்படுகிறார். ‘உங்கள் தீர்ப்பைக் கேட்டு நான் அஞ்சுவதைக் காட்டிலும், தீர்ப்பை வழங்கிய நீங்கள்தான் அதிகம் நடுங்குகிறீர்கள்‘ என்று தீர்ப்பு  வழங்கிய நீதிபதிகளை புருனோ எள்ளி நகையாடியதும், மன்னிப்பு கேட்டு உயிர் பிழைக்க வாய்ப்பளிக்கப்பட்டும் அதனை அவர் மறுத்ததும்,  ஐரோப்பிய அறிவுத்துறையினர் மத்தியில் புருனோ மேனியாவாக காட்டுத்தீயாய் பரவி, திருச்சபையை அச்சுறுத்தின. தொலைநோக்கி வழியாக சூரிய மையக்கோட்பாட்டை நிரூபிக்கமுயன்ற குற்றத்துக்காக 32 ஆண்டுகள் வீட்டுச்சிறையில் தள்ளப்படுகிறார் கலீலியோ.

பின்னர் ஹெப்ளர், தனது தொலைநோக்கிச் சோதனைகளின் மூலம் கோபர்நிகஸின் முடிவுகளை உறுதிசெய்ததோடு கோள்களின் இயக்கத்திற்கான விதிகளையும் வகுத்தளிக்கிறார். இந்த ஆய்வு முடிவுகளும் திருச்சபையின் தணிக்கைக் குழுவினால் நீண்டகாலம் முடக்கப்படுகின்றன.

அதன் பின் பேகனும், டெகார்ட்டும் முறையே முன் அனுமானித்துப் பின் தர்க்கித்தலையும், சோதனை அறிவியலையும் வலியுறுத்துகின்றனர். இதனை கணித வடிவத்துடன் இணைத்து அறிவியலாக்கியவன்  நியூட்டன். பருப்பொருட்களின் இயக்கத்திற்கான விதிகளையும் வகுத்தளித்த அவரது காலத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய ஐயுறவு அப்படியே தான் நீடித்தது.

பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய வானவியலின் தேக்கம் மேலும் உடைபட வேறு சில விஞ்ஞான சாத்தியப்பாடுகள் தேவைப்பட்டன. லவாய்ஸியரின் ஆற்றல் அழிவின்மை விதியும் அணுவைப் பிளக்க முடியும் என்கிற ஜேஜே தாம்சனின் கண்டுபிடிப்பும் பிரபஞ்சத்தின் புதிர்களை அவிழ்க்கும் பாதையில் விஞ்ஞானத்தை வெகு வேகமாக அழைத்துச் சென்றன.

தாம்சனின் மாணவர்களான ரூதர்போர்டும் சாட்விக்கும் அணுமையத்தை எலக்ட்ரான்கள் வட்டப்பாதையில் சுற்றிவருவதாக கண்டறிந்து சொல்கிறார்கள். அதை இன்னும் வளர்த்துச் செல்லும் நீல்ஸ் போர், அந்த சுற்றுப் பாதை நீள்வட்டமாக இருந்தால் தான் சுழற்சியால் ஏற்படும் ஆற்றல் இழப்பை தவிர்க்க முடியும் என்கிறார். அதனைத் தொடர்ந்து விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அணுவைப் பிளக்க முடியும் என்பது நிறுவப்படுகிறது.

அணுவின் உள்ளே எலக்ட்ரான்கள், மியூவான்கள், டாவோ மற்றும் இவற்றின் எதிர்த்துகள்கள் 3 உட்பட 12 அடிப்படைத் துகள்களும், 4 நான்கு விசைகளும் இருப்பது கண்டறியப்படுகிறது. ஆனால், இந்த பதினாறும் சேர்ந்தாலும் அணுவின் நிறையைக் கணக்கீடு செய்வதில் குறைபாடு இருந்ததால், பதினேழாவதாக ஒன்று இருக்க வேண்டும் என்கிற கருத்தை இந்திய விஞ்ஞான போஸ் முன்வைக்கிறார் – அதை ஐன்ஸ்டீனும் ஒப்புக் கொள்கிறார்.

அதே காலகட்டத்தில் ஒளி மற்றும் வெப்பம் பற்றிய விஞ்ஞானமும் வளர்கிறது. டி பிராக்லி ஒளியானது துகளாகவும் அலையாகவும் பரவுவதாகச் சொல்கிறார். அதே நேரத்தில் காந்தம் மற்றும் மின்சாரத்திற்கிடையிலான தொடர்பை ஃபாரடே சோதனை மூலம் நிரூபிக்க, அவ்விரு விசைகளின் தொடர்பை கணிதச் சூத்திரமாக மாற்றுகிறார் மேக்ஸ்வெல்.

இப்போது பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய புதிரை விளக்கப் போகும் பெருவெடிப்புக் கொள்கையின் முதற்படியான விசை ஒருங்கிணைப்பு கோட்பாடு பிறக்கிறது. அதாவது, மின்விசையும் காந்தவிசையும் இணைந்த மின்காந்த விசை கண்டறியப்படுகிறது. ஒளியும் மின்காந்த அலைகளாக பரவுவதாக ஐன்ஸ்டீன் விளக்குகிறார் – இதிலிருந்து தான் போசான்களுக்கான முன்மொழிவை பெறுகிறார் போஸ்.

1963-ல் ஹிக்ஸ் விசைப்புலம் மற்றும் போசான் துகளைக் கோட்பாட்டு ரீதியில் நிறுவுகிறார் ஹிக்ஸ். தன்னளவில் நிறை பெற்றிராத இந்த போசான்கள் அதிக ஆற்றல்லைப் பெறுமாறு தூண்டப்பட்டால் விசைப்புலம் ஒன்று உருவாகி அப்புலமே அத்துகள்களை ஒருங்கிணைத்து நிறையாக மாற்றும் எனக் கணக்கிட்டார். 70களில் பாகிஸ்தான் விஞ்ஞானி அப்துல் சலாம் மற்றும் வெய்ன்பெர்க்  எலக்ட்ரானை அணுக்கருவுடன் இணைத்து வைத்திருக்கும் விசைகளை ஒருங்கிணைத்துப் புரிந்துகொள்ள விழைகின்றனர். பெருவெடிப்பின் போது இவையனைத்து துகள்களும் ஒன்றாக இருந்துதானே பிரிந்திருக்கும் என கருதினர். எண்பதுகளிலேயே நிறையை வழங்கும் போசானைத் தவிர மற்ற 3 போசான்கள் கண்டறியப்பட்டு விட்ட நிலையில், தற்போது நிறையை வழங்கவல்ல போசானைக் கண்டுபிடிக்க அப்துல் சலாமின் முன்மொழிவு உதவியுள்ளது.

இது தான் பொருட்கள் ஆற்றலை இழந்து நிறை பெற காரணம். 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான பிரபஞ்சத்தில் தோன்றிய துகள்கள் பஞ்சால் உறிஞ்சப்படும் நீரைப் போல நிறையைப் பெற்றது இப்படித்தான். இச்சோதனையின் முடிவு பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் பெருவெடிப்புக் கொள்கையை உறுதி செய்துள்ளது. பொருட்களுக்கு நிறை கிடைத்தது எப்படி என்பது முதல், கோள்கள் உருவானது வரைக்குமான நிகழ்வுகளுக்கு விளக்கம் கிடைத்துள்ளதுடன் இயங்கியலின் விதிகளையும் சரியென்று நிறுவியிருக்கின்றது.

இந்த ஆய்வின் மூலம் துகள்களை ஒருங்கிணைத்துப் புரிந்து கொள்வது சாத்தியமானாலும், ஈர்ப்பு விசைக்குக் காரணமான க்ராவிட்டான் என்ற துகளும், நமது பிரபஞ்சத்தில் கண்டு ஆராயப்படாத 96% கரும்பொருள் மற்றும் கரும் சக்தி பற்றி இன்னமும் விளக்கங்கள் வரவேண்டியுள்ளது – அது சாத்தியப்படும் காலம் மிக அண்மையில் தான் இருக்கிறது.

மதவாதிகள் இதை தங்களது வழமையான குயுக்தியுடனே எதிர்கொள்கிறார்கள் – அதாவது, எதெல்லாம் அறியப்பட்டதோ அதெல்லாம் கடவுளின் துணையால் என்றும் எதெல்லாம் அறியப்படாதததோ அதெல்லாம் சாட்சாத் அந்தக் கடவுளே தானென்றும் சாதிக்கிறார்கள். ஒளியின் கதிர்கள் ஊடுறுவாத இருளின் பலத்தில் வாழும் பரிதாபகரமான நிலையிலேயே ‘கடவுள்’ இருக்கிறார் – விஞ்ஞானம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தைப் பரவலாக்கி வருகிறது.

_________________________________________________

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012
_______________________________________________________

‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!

மதாத்மா காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை !

மகாத்மா-காந்திதமிழகத்தைச் சேர்ந்த சேலம் வேலு காந்தி எனும் 82 வயது முதியவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், சாதி நம்பிக்கையற்றோர், “கலப்பு’த் திருமணம் செய்து கொண்டவர்கள், அனாதைக் குழந்தைகள், மதம் மாறியோர் ஆகிய நான்கு வகையினரைக் கொண்டு, “காந்தி சாதி’ என்ற ஒரு புதிய சாதியை உருவாக்க உத்தரவு தருமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் சாதிகள் ஒழிய வழிபிறக்கும் என வாதிட்டார். அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஒரு புதிய சாதியை உருவாக்க தமக்கு அதிகாரம் இல்லையெனக் கூறி, நீதிபதிகள் அம்மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

நாமகரணங்கள் நமக்கு புதியனவல்ல. ஹரியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்டினார் காந்தி. காந்தியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்ட வேண்டுமென ஆதங்கப்படுகிறார் காந்தியின் சீடர். பெயர் சூட்டுவதிருக்கட்டும். “பீ’யள்ளப் போவது யார் என்பதல்லவா கேள்வி. அன்றே காந்தியின் சாதி ஒழிப்பு சண்ட பிரசண்டங்களுக்கும், அவரது நடைமுறைக்குமான முரண்பாட்டை அம்பேத்கர் திரை கிழித்திருக்கிறார். ஆனால், காந்தி தனது வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.

குறைந்தபட்சம் காங்கிரசில் உறுப்பினராக சேர தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கூடாது என ஒரு விதியைக் கொண்டு வருவதற்குக் கூட காந்தி தயாராக இருந்ததில்லை. காந்தியால் சோசலிசத்திற்கு மாற்றாக வைக்கப்பட்ட தருமகர்த்தா முறையை நடைமுறைப்படுத்தக் கிளம்பிய வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தின் தோல்வி காந்தியத்தின் தோல்வியல்ல என்பது போல மூடி மறைக்கப்பட்டு விட்டது. எனினும் காந்தி மீண்டும் மீண்டும் மக்கள் அரங்கில் முன்நிறுத்தப்படுவது மட்டும் இன்றளவும் நின்றபாடில்லை.

ஆனால், காந்தி சொன்ன கிராமப் பொருளாதார முறையை 1947லேயே காங்கிரசு கைக்கொள்ளவில்லை. காங்கிரசைக் கலைக்கச் சொன்ன காந்தியின் யோசனையை ஒரு பொருட்டாகக் கூட எவரும் கருதவில்லை. குடும்பக் கட்டுப்பாடு கூடாது, ஆலைத் தொழில்கள் கூடாது போன்ற “அற்புதமான’ கருத்துக்களை மட்டுமல்ல; ஜனாதிபதி மாளிகையை இலவச மருத்துவமனையாக்க வேண்டுமென்ற தேசப்பிதாவின் “சின்ன சின்ன ஆசைகளை’க் கூட யாரும் கண்டு கொள்ளவில்லை.

எனினும், ஐநூறு ரூபாய் நோட்டிலும், காந்தி ஆசிரமங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள சிலைகளிலும், அரசாங்க உரைகளிலும் காந்தி ஒரு மந்திரம் போல தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகிறார். காந்தி பிறந்த குஜராத்தில் திரையிட மறுக்கப்பட்ட “பர்சானியா’ திரைப்படம், குஜராத் முசுலீம் இனப்படுகொலையால் மனம் உடைந்து போகிற ஒரு வெளிநாட்டு காந்திய மாணவனை கதாபாத்திரமாகக் கொண்டிருந்தது. சோனியா காந்தியோ சத்தியாக்கிரகத்தின் “மகிமையை’, “உலகப் பொருளாதார மன்ற’த்தில் வியந்தோதுகிறார்.

காந்தியால் மீண்டும் மீண்டும் குழப்பப்பட்ட சத்தியாக்கிரகம், இன்றும் கூட மக்கள் எதிர்ப்பை மழுங்கடிப்பதில், வன்முறை குறித்த நியாயத்திற்கு அப்பாற்பட்ட தார்மீக அச்சத்தை உருவாக்குவதில் முன் நிற்கிறது. மணிப்பூரில், இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக, இந்திய அரசின் கொடூரச் சட்டமான “ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை’ திரும்பப்பெறக் கோரி, கடந்த ஏழு ஆண்டுகளாக உண்ணாவிரதமிருந்து வரும் ஐரோம் சர்மிளா இதற்கு ஒரு உதாரணம். சர்மிளா செத்துப் பிணமானால் கூட இந்திய அரசு அச்சட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை.

காந்தியின் தெளிவற்ற, மூடு மந்திரமான மதச்சார்பின்மை 1947 பிரிவினையின்போதே படுதோல்வியடைந்த போதிலும், இன்றும் காங்கிரசாலும், போலி கம்யூனிஸ்டுகளாலும் உதாரணமாக முன்வைக்கப் படுகிறது. ஷாபானு வழக்கிலும், ராம ஜென்ம பூமி விவகாரத்திலும், குஜராத் படுகொலையிலும் காந்திய மதச்சார்பின்மை வெங்காயம் மொத்தமாய் உரிந்து போனது. காவிப் படையின் கொலை வெறியாட்டத்திற்கு சொல்லில் மௌன சாட்சியாகவும், செயலில் நம்பகமான கூட்டாளியாகவும் காங்கிரசு துணை போனது. ஆனால், இன்னமும் மதச்சார்பின்மைக்கு போலித்தனமான நடுநிலைமையே விளக்கமாக அளிக்கப்படுகிறது.

உண்மையில், காந்தி வாழ்ந்த காலத்திலேயே காந்தியம் தோற்றுப் போய் விட்டது. ஆனால் அந்த உண்மைகள் மூடி மறைக்கப்படுகிறது. அரை உண்மைகள் ஊதிப்பெருக்கப்படுகின்றன. பொய்கள் அதிகாரப்பூர்வ வரலாறாகிறது. அப்படித்தான் நாம் காந்தியை ஏற்றுக் கொள்ளச் செய்யப்பட்டிருக்கிறோம். அவ்வாறு மூடி மறைக்கப்பட்ட சில வரலாற்று உண்மைகளின் ஒளியில், இப்பொய்களை அடையாளம் காண்போம்.

****
காந்தி அவரது காலத்திலேயே தமது முரண்பாடுகளுக்காக மிகப் பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஒரு விவாதத்தில்,

“”எனது முரண்பட்ட நிலைகளைக் குறித்த நிறைய குற்றச்சாட்டுக்களை நான் படித்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். ஆனால், அவற்றிற்கு நான் பதில் கூறுவதில்லை. ஏனெனில், அவை வேறு யாரையும் பாதிப்பதில்லை. என்னை மட்டுமே பாதிக்கின்றன”

என காந்தி எழுதினார். ஆனால், இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தரும் “பொறுப்பை’ ஏற்றிருந்த காந்தியின் முரண்பட்ட நிலைகள் எவ்வாறு இந்த நாட்டின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே பாதித்தது என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது.

அகிம்சைதான் காந்தியத்தின் அடிப்படைக் கொள்கையாகச் சொல்லப்படுகிறது. உலகிலேயே முதன்முறையாக காந்தி கண்ட அறவழிப் போராட்ட முறையாக சத்தியாக்கிரகம் முன் வைக்கப்படுகிறது. ஆனால், உலக வரலாற்றில், நியாயமான கோரிக்கைகளுக்காக, எதிர்த்துத் தாக்காமல், துன்பங்களை தாமே முன்வந்து ஏற்றுக் கொள்ளும் சாத்வீகப் போராட்ட முறை இயேசு, துவக் கால கிறிஸ்தவர்களிலிருந்து ரசியாவின் டியூகோபார்கள் எனப்படும் பிரிவினர் வரை பலரால் ஏற்கெனவே கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், காந்தி தனது சத்தியாக்கிரக முறை சாத்வீக போராட்ட முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதென விடாப்பிடியாக சாதித்தார்.

காந்தியும் அவரது காலங்களும்’ என்ற நூலில் காந்தியம் எனும் கருத்தாக்கம் உருவான முறையை சாரமாக எழுத்தாளர் மன்மத்நாத் குப்தா இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“”புத்திசாலித்தனமாக கணக்கற்ற தார்மீக, தத்துவார்த்த, ஆன்மீகச் சரடுகளை சுற்றிக் காட்டியதன் மூலம், முந்தைய சாத்வீக இயக்கங்களிலிருந்து சத்தியாக்கிரகம் மாறுபட்டதென காட்ட முயன்றார். நூற்றாண்டுகளைக் கடந்த இந்துக் கலாச்சாரத்தின் மீதேறி சுலபமாகப் பயணிக்க முயன்றார். அவரே ஒத்துக் கொண்டதைப் போல, இதற்கு தேவையான தயாரிப்புகள் இல்லாத போதும், வறட்டுப் பிடிவாதத்தின் மூலமாக மட்டுமே அவரால் தனக்கென ஒரு கருத்தாக்கத்தை உருவாக்க முடிந்தது.”

தமது ஆன்மீகச் சொல்லாடல்களின் மூலம் எக்கருத்தையும் தனக்கேற்ற முறையில் காந்தியால் வளைக்க முடிந்தது. சிறையிலிருக்கும் புரட்சியாளனின் உண்ணாவிரதத்தைக் கூட காந்தி “வன்முறை’ என்றார். ஏனெனில் அவனது உள்ளத்தில் வன்முறை இருக்கிறதாம். நிலப்பிரபுக்களுக்கு விவசாயிகள் வரி கொடுக்க மறுத்து, சாத்வீக முறையிலேயே போராடிய போதும் கூட, அது வன்முறை என்றார்.

இவ்வாறு வன்முறைக்கும், அகிம்சைக்கும் கணக்கற்ற விளக்கங்கள் அளித்த காந்திதான், தென்னாப்பிரிக்காவில், முற்றிலும் அநீதியான வகையில் ஜூலூ கலகப் போரிலும், போயர் யுத்தத்திலும், முதல் உலகப் போரிலும், பிரிட்டிஷ் சிப்பாய்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை செய்தார். இதனைக் கேள்வி கேட்டவர்களுக்கெல்லாம்,

“”இதன் மூலம் பிரிட்டிஷ் பிரஜை என்ற முறையில் தமது கடமையை ஆற்றினால்தான், உரிமைகளைப் பெற முடியும்”

என விளக்கமளித்தார்.

முதல் உலகப் போரில் ஆங்கிலப் படைகளுக்கு சேவை செய்த பொழுது, அவரது நெருங்கிய நண்பர்களே அவரை விமர்சித்ததற்கு,

“”போரில் பங்கேற்பது என்பது அகிம்சையோடு ஒருக்காலும் பொருந்தாது என்பதை நானறிவேன். ஆனால் ஒருவருக்கு அவரது கடமைகள் குறித்து, எல்லாச் சமயங்களிலும் தெளிவான பார்வை பெற வாய்ப்புகள் இருப்பதில்லை. சத்தியத்தின் பாதையில் பயணிப்பவன் பல சமயங்களில் இருட்டில்தான் செல்ல வேண்டியிருக்கிறது”

என நியாயம் கற்பித்தார்.

பின்னர், 1921இல் தமது கண்கள் திறந்து விட்டதாகவும், அவ்வாறு கருதியது தவறு என்றும், பிரிட்டிஷ் அரசு தம்மை பிரஜையாகவே கருதவில்லையென்றும், எந்த உரிமைகளும் அற்ற ஒரு தாழ்த்தப்பட்ட பராரியாகவே இந்த அரசின்கீழ் தான் உணர்வதாகவும் “யங் இந்தியா’வில் குறிப்பிட்டார். ஆனால், அக்கண்கள் நீண்டநாள் திறந்திருக்கவில்லை. மீண்டும் 1928இல் முதல் உலகப் போரின் பங்கேற்பு குறித்த நிருபர்களின் கேள்விக்கு,

“போருக்கு எதிராக என்னுள் இப்பொழுது இருக்கும் அதே அளவிலான எதிர்ப்புணர்வு அப்பொழுதும் இருந்தது. ஆனால், இந்த உலகத்தில் நாம் விரும்பாத பல விசயங்களை நாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.”

பச்சை அயோக்கியத்தனத்தை இயலாமையாகக் காட்டித் தப்பிக்க முயலும், அறிவு நாணயமற்ற மனிதனால் மட்டுமே இவ்வாறு விளக்கம் அளிக்க முடியும்.

“”சுதந்திரம் என ஒன்று வருமானால், அது மாபெரும் பிரிட்டிஷ் அரசுடன் ஒரு கண்ணியமான ஒப்பந்தத்தின் மூலமே வரவேண்டும்”

என 1929இல் காந்தி எழுதினார். காந்திய சுதந்திரப் போராட்டத்தின் சாராம்சத்தை, அதன் திசைவழியை, இந்த ஒற்றை வரியை விட வேறெதுவும் விளக்கிவிட முடியாது. காந்தி முரண்பாடற்று, கடைபிடித்த ஒரே கொள்கை இதுதான். ஏனெனில், சுதந்திரம் மக்களால் சமரசமற்று வென்றெடுக்கப்படுமாயின், அது பிரிட்டிஷ் ஆட்சியை மட்டுமல்ல, முதலாளிகளையும், நிலப்பிரபுக்களையும் மட்டுமல்ல, தன்னையும் சேர்த்தே தூக்கி எறிந்து விடும் என்பதை காந்தி தெளிவாக அறிந்திருந்தார். அதனால்தான், நடைமுறையில் மக்கள் சக்தியின் இயல்பான கோபாவேசத்தின் சிறுபொறி எழும்பினால் கூட, உடனடியாக அப்போராட்டத்தையே கைவிட்டு மக்களை திகைத்துப் பின்வாங்கச் செய்தார்.

இதனை 1921 ஒத்துழையாமை இயக்கம் முதல் 1942 தனிநபர் சத்தியாக்கிரகம் அல்லது வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை, நாம் காண முடிகிறது. காந்தி நடத்திய மூன்று இயக்கங்களிலும், போராட்டத்தின் போக்கில் மக்கள் போலீசு மீது எதிர்த்தாக்குதல் தொடுப்பதும், அவர்களைச் சிறை பிடிப்பதும், அரசுச் சொத்துக்களை நாசப்படுத்துவதும் தன்னியல்பாக நிகழ்ந்தது.

1921இல் சௌரி சௌரான் விவசாயிகள் காவல் நிலையத்திற்கு தீ வைத்ததையொட்டி, ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதாக இருக்கட்டும்; 1930இல் மக்களின் போராட்டத் தீ பற்றி எரிந்த வேளையில் வைஸ்ராய் இர்வினோடு ஒருதலைப்பட்சமான ஒப்பந்தத்திற்கு முன்வந்து, போராட்டத்தை கைவிட்டதாக இருக்கட்டும்; 1942இல் “தான் எந்தப் போராட்டத்தையும் அறிவிக்கவில்லை. மக்களது வன்முறைக்கு தாம் பொறுப்பல்ல’ என ஆகஸ்டு போராட்டத்தை கைகழுவியதாக இருக்கட்டும், காந்தியின் வன்முறைக்கெதிரான பரிசுத்த வேடத்திற்குள், போராட்டம் தனது கைகளிலிருந்து நழுவ விடக்கூடாதென்ற இடையறாத அச்சம் ஒளித்து கொண்டிருந்தது.

காந்தியப் போராட்டத்தினுடைய வர்க்கச் சார்பு முதலாளிகளையும், வணிகர்களையும் சார்ந்திருந்தது தற்செயலானதல்ல. அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தின் அனுபவத்திலிருந்தும், பர்தோலி விவசாயிகளின் வரிகொடா இயக்க போராட்டத்திலிருந்தும், தொழிலாளர், விவசாயிகளின் வர்க்க கோரிக்கைகளுக்காக போராடுவதும், அவர்களை விடுதலைப் போராட்டத்தில் களமிறங்கச் செய்வதும் அபாயகரமானது எனத் தான் உணர்வதாக காந்தி வெளியிட்ட அறிக்கைகளை, அன்றே தமது “இளம் அரசியல் தொண்டர்களுக்கு‘ எனும் கட்டுரையில் மாபெரும் புரட்சியாளர் தோழர் பகத்சிங் சுட்டிக் காட்டினார். சுருக்கமாகச் சொன்னால், காந்தியப் போராட்டத்தின் வர்க்க உள்ளடக்கம்தான் அப்போராட்டத்தின் வடிவத்தையும் வரம்புகளையும் தீர்மானித்தது. அகிம்சை, சத்தியாக்கிரகம் என்பதெல்லாம் வெறுமனே வார்த்தைப் பூச்சுக்கள் மட்டுமே.

1929இல் சுதந்திரம் கிடைக்காமலேயே சுதந்திரக் கொடியேற்றும் கோமாளித்தனத்தை அரங்கேற்றினார், காந்தி. வீரதீரமாக “முழுச் சுதந்திரமே இலட்சியம்’ என்று அறிவித்த கையோடு வைஸ்ராய்க்கு எழுதிய நீண்ட கடிதத்தில்,

“”என்னால் இயன்ற வரை, தங்களுக்கு எத்தகைய அனாவசியமான தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தும் எண்ணம் எனக்கில்லை” எனக் குழைந்தார். வைஸ்ராய், ஒரு அலட்சியமான பதிலை வீசியெறிந்தார். “”நான் மண்டியிட்டு உணவு கேட்டேன். ஆனால், எனக்கு கல்தான் கிடைத்திருக்கிறது”

எனப் புலம்பினார் காந்தி. வைஸ்ராய்க்கு “தர்மசங்கடத்தை’ ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை காந்திக்கு ஏற்பட்டுவிட்டது. அந்த தர்மசங்கடத்திற்கு பெயர்தான் “தண்டி யாத்திரை’.

ஆனால், ஆங்கில அரசு குயுக்தியாக காந்தியின் சகாக்களை கைது செய்தது; காந்தியை மட்டும் கைது செய்யாமல் விட்டு, அவரைச் சிறுமைப்படுத்தியது. உடனே அகிம்சாமூர்த்தி ஒரு அழகான தந்திரம் செய்தார். உப்புக் கிடங்குகளைச் சோதனையிட்டு, உப்பைப் பறிமுதல் செய்ய முடிவு செய்தார். வேறு வழியின்றி, அவரை அரசு கைது செய்ய நேர்ந்தது. பறிமுதல் செய்வது சத்தியாக்கிரகம் என்றால், வங்கியை கொள்ளையடிப்பது கூட சத்தியாக்கிரகம் தானே? “தனது தலைமையை காப்பாற்றிக் கொள்வது’ என்ற ஒரே நோக்கத்துக்காகத்தான், சத்தியாக்கிரக வடிவத்தைக் கைவிட்டு, “பறிமுதல்’ என்ற போராட்ட வடிவத்துக்கு மாறினார் காந்தி. அதே நேரத்தில், “”உப்பை மட்டுமல்ல, மொத்த சுதந்திரத்தையுமே பறித்தெடுக்க வேண்டும்” என்று கூறிய பகத்சிங் முதலான புரட்சியாளர்களை, “தீவிரவாதிகள், வன்முறையாளர்கள்’ என்றார் காந்தி.

சட்ட மறுப்பு இயக்கத்தை “இரகசியம்’ சூழ்ந்து விட்டதாகக் கூறி, காந்தி அதனைக் கைவிட்டு, இர்வினிடம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் சரணாகதி அடைந்த பொழுது,

“”ஒரு அரசியல் தலைவர் என்ற முறையில் காந்தி தோல்வி அடைந்து விட்டதாக நாங்கள் ஐயமின்றிக் கருதுகிறோம். தனது வாழ்நாள் கொள்கைகளுக்கே முரணின்றி நடக்க இயலாத காந்தி மேலும் தலைவராக நீடிப்பது நியாயமற்றது”

என சுபாஷ் சந்திர போஸும், வித்தல்பாய் படேலும் வியன்னாவிலிருந்து பகிரங்கமாக அறிக்கை விடுத்தனர். இருப்பினும் பார்ப்பனபனியாக் கட்சியான காங்கிரசுக்கு, மக்களை ஏய்க்க காந்தியின் “முகமூடி’ தேவைப்பட்டது. ஆங்கில அரசுக்கோ, இத்தகைய விசுவாசமான “எதிரி’ கிடைத்ததை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?

இவ்வாறு முப்பதாண்டுகளுக்கும் மேலாக, ஆளும் வர்க்கத்தின் மனம் நோகாமல், காந்தி நடத்திய “அரசியல் பரிசோதனை’களுக்கு “சோதனைப் பிராணி’களாக இந்திய மக்கள் அடிபட்டார்கள். உதைபட்டார்கள். இரத்தம் சிந்தினார்கள். சொத்துக்களை இழந்தார்கள். சிறையில் வாடினார்கள். ஒவ்வொரு போராட்டத்தின் கழுத்தறுப்பிற்கு பிறகும் விரக்திக்கும், வேதனைக்கும் தள்ளப்பட்டார்கள். இதைவிடக் கொடூரம்,

“”போராட்டத்தின் தோல்விக்கான காரணம், மக்களின் ஆத்ம சுத்தி போதவில்லை”

என காந்தி சொன்ன குற்றச்சாட்டையும் மௌனமாக ஏற்றுக் கொண்டார்கள்.

1942இல் யுத்தத்தில் ஜெர்மனி-ஜப்பான் முகாம் வெற்றி பெறலாம் என்ற கணிப்பில், அரை மனதோடு, காந்தி “வெள்ளையனே வெளியேறு‘ முழக்கத்தை முன்வைத்த மறுகணமே, காங்கிரசின் அனைத்து முக்கியத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இம்முறை மக்களின் போர்க்குணம் முழுமையாக வெளிப்பட்டது. தந்திக்கம்பிகள் அறுக்கப்பட்டன. ரயில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. போலீசும், இராணுவமும் தாக்கப்பட்டனர். ஷோலாப்பூர் போன்ற பல இடங்களில் இராணுவமோ, போலீசோ பல நாள்களாக உள்ளே நுழையக் கூட முடியவில்லை. கொடூர அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

“காங்கிரசு சோசலிஸ்டுகள்’தான் வன்முறைக்கு காரணமென்று, காங்கிரசுத் தலைவர்கள் ஆள்காட்டி வேலையில் ஈடுபட்டார்கள். எதற்கும் உதவாத அகிம்சையை, மக்கள் நடைமுறையில் வீசியெறிந்தனர். சிறையிலிருந்து விடுதலையான காந்தி, போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். 1921இல் ஒத்துழையாமை இயக்கத்தின் பொழுது, சாதி, மத வேறுபாடுகளற்று நாடே கிளர்ந்தெழுந்த பொழுது, சுதந்திரம் வாயிற்படி வரை வந்ததென்றால், 1942இல் சுதந்திரம் வீட்டிற்குள்ளேயே கால் வைத்தது. ஆனால் இந்த முறையும் காந்தி அதன் காலை வாரிவிட்டார்.

தலைமையை விஞ்சி எழும்பும் மக்களின் போர்க்குணத்தை அதன் திரண்ட வடிவத்தில் 1942இல் காந்தி கண்டார். அதனால்தான் பின்னர் பிரிவினைக் கோரிக்கை எழுந்த பொழுது, பிரிவினைக் கோரிக்கையை ஆதரிப்பதைத் தவிர காந்திக்கு வேறு வழி இருக்கவில்லை. ஏனெனில் இன்னொரு “மக்கள்திரள் அரசியல் போராட்டம்’ என்பது ஒட்டுமொத்த நிறுவனத்தையும் பெயர்த்தெடுக்காமல் அடங்காது என்பதைக் காந்தி புரிந்து கொண்டார். பிரிவினைக் கோரிக்கையை ஏற்பதற்கான காங்கிரசுத் தீர்மானத்தின் முன்மொழிவில், இதனைக் குறிப்பிடவும் செய்தார்.

பிரிவினைக் காலத்தில், கலவரம் நடந்த ஒவ்வொரு இடத்திற்கும் காந்தி சென்றார். ஆனால், அவரது சமரச முயற்சிகளும், போதனைகளும் இந்துமகா சபா வெறியர்களிடமும், முசுலீம் லீக் வெறியர்களிடமும் எடுபடவில்லை. காந்தியின் ஆத்மார்த்த சீடர் ஆச்சார்ய கிருபாளனியே, காந்தியினுடைய முயற்சிகளின் பலனைக் கீழ்க்காணும் முறையில் விவரிக்கிறார்.

“”அவர் நவகாளிக்கு சென்றார். அவரது முயற்சிகளால் நிலைமை சற்றே முன்னேறியது. இப்பொழுது பீகாரில் இருக்கிறார். நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாபில் கொழுந்து விட்டெரியும் வன்முறையில் எந்த மாற்றமும் இல்லை. மொத்த இந்தியாவிற்கான இந்துமுசுலீம் ஒற்றுமைப் பிரச்சினையை பீகாரில் தீர்க்கப் போவதாகக் கூறுகிறார். ஒருவேளை அவ்வாறு நடக்கலாம். ஆனால் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவார் என்பது சிக்கலாகவே தோன்றுகிறது. சாத்வீகமாக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தைப் போல, இலக்கை அடைவதற்கான எத்தகைய தீர்க்கமான வழிமுறைகளும் இதில் இல்லை.” பின்னர், “”பீகாரில் தங்களது அகிம்சை எவ்வாறு வேலை செய்தது?” எனக் கேட்டபொழுது “”அது வேலையே செய்யவில்லை. மோசமாகத் தோல்வியடைந்தது”

என்றார் காந்தி.

காந்தியின் ஆசிரமம் தாக்கப்பட்டது. தில்லியில் நடத்திய கடைசி உண்ணாவிரதத்தின் இறுதியில் காந்தி

“நான் எனது ஓட்டாண்டித்தனத்தை ஒத்துக் கொள்கிறேன்”

என தனது இயலாமையை வெளியிட்டார். அகிம்சையின் தந்தை காஷ்மீருக்கு படைகள் அனுப்ப ஆதரவளித்தார். தான் சர்வாதிகாரியாக இருந்தால், மதத்தையும் அரசியலையும் பிரிப்பேன் என்றார். அடுத்த கணமே,

“”மதம்தான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். வார இறுதி விசயமாக அல்லாமல், ஒவ்வொரு நொடியும் மதத்திற்காகச் செலவிடப்பட வேண்டும்” என்றார். காந்தியால் தனது அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்ட நேரு, “காந்தியின் பொருளாதாரக் கொள்கைகள் காலங்கடந்தவை’ என அவருக்கே கடிதம் எழுதினார். “”காந்தி தனது இறுதி நாள்களில் இருளில் தடுமாறிக் கொண்டிருந்தார்”

எனத் தெரிவிக்கிறார் கிருபாளனி.

இதே காலகட்டத்தில் இந்திய தேசிய இராணுவம் தொடுத்த தாக்குதல்களும், 1945 கப்பற்படை எழுச்சியும், தொழிலாளர் போராட்டங்களும் காந்தியின் அரசியல் முடிவை முன்னறிவித்தன. இரண்டாம் உலகப் போரில் பலவீனமடைந்த ஆங்கில அரசு, நேரடியாகத் தனது காலனிகளை இனிமேலும் அடக்கியாள முடியாது என்ற நிலையில், இந்தியா, இலங்கை மற்றும் பிற காலனிகளின் தரகு முதலாளிகளுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கைமாற்றிக் கொடுக்க முன்வந்தது.

காந்திஅரசியல் அரங்கத்தால் புறந்தள்ளப்பட்ட காந்தியின் பிம்பம், இன்றளவும் பாதுகாக்கப்படுகிறதென்றால், அதற்கு கோட்சேயின் நடவடிக்கைதான் உதவி செய்தது என்று சொல்ல வேண்டும். காந்தியம் வெளுத்து, அதன் பூச்சுக்கள் உதிர்ந்த நிலையில், காந்தி ஒருவேளை தொடர்ந்து வாழ்ந்திருப்பாரேயானால், காந்தியம் தவிர்க்கவியலாமல் செத்துப் போயிருக்கும். கத்தியின்றி, இரத்தமின்றி, சுதந்திரத்தின் கழுத்தறத்ததுதான், “காந்தி’ எனும் ஊதிப் பெருக்கப்படும் “சோளக்காட்டுப் பொம்மை’யின் சுருக்கமான அரசியல் வரலாறு.

“”என்னதான் இருந்தாலும், காந்தியிடமிருந்து பின்பற்றுவதற்கு எதுவுமே இல்லையா?” என அரசியல் பொழுதுபோக்காளர்கள் கேட்கக் கூடும். காந்தியிடமிருந்து நாம் பின்பற்ற எதுவுமில்லை. ஆனால், “வாடிக்கையாளரே நமது எசமானர்’ என்ற அவரது பொன்மொழியை மட்டும், கட்சிப் பாகுபாடின்றி சகல இந்திய ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளும் இம்மி பிசகாமல் பின்பற்றுகிறார்கள். அவர்கள் மக்களைத் தமது எசமானர்களாகக் கருதுவதில்லை. பன்னாட்டு முதலாளிகள் என்ற தமது வாடிக்கையாளர்களைத்தான் எசமானர்களாகக் கருதுகிறார்கள். இந்த விசயத்தில் குருவை மிஞ்சிய சீடர்களாகவும் நடந்து கொள்கிறார்கள். அந்த வகையில் காந்தியம் இன்னமும் உயிரோடிருக்கிறது என்பது உண்மைதான்.

______________________________________________________
புதிய கலாச்சாரம், ஜனவரி 2008
(மீள்பதிவு)
______________________________________________________

மோடியின் பெண்ணழகும், உண்மை நிலையும்!

4

சொற்களுக்கான அர்த்தம் அகராதியில் இருக்கிறதா அல்லது பொருளாதார வாழ்க்கையில் அடங்கியிருக்கிறதா?

சில நாட்களுக்கு முன் அமெரிக்க பத்திரி‌கையான ‘வால்ட் ஸ்டிரீட் ஜர்ன’லுக்கு குஜராத் மாநில முதல்வரான நரேந்திர மோடி பேட்டி அளித்திருந்தார். அதில்,

”உணவுமுறை அடிப்படையில், குஜராத் சைவ உணவை உட்கொள்ளும் மாநிலம். பொருளாதார அடிப்படையில் பார்த்தாலும், நடுத்தர பிரிவினர் அதிகம் வாழும் மாநிலம், குஜராத்தான். ஆனால், மாநிலத்தில் உள்ள நடுத்தர வகுப்பு பெண்கள், தங்கள் உடல்நலன்களில் அக்கறை செலுத்துவதைக் காட்டிலும், தங்களை அழகுபடுத்திக் கொள்வதிலேயே அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். இதன்மூலம், தாங்களாகவே, தங்களது உடல்நலத்தை கெடுத்துக்கொள்கின்றனர். நடுத்தர வகுப்பு குடும்பங்களிடையே, உடல் நலன் மற்றும் அழகுக்கு என ஒரு பெரும் போராட்டமே நடைபெற்று வருகிறது. பால் குடித்தால் நோய்களிலிருந்து காத்துக் கொள்ளலாம் என்று மகளுக்கு தாய் அறிவுரை கூறினால், ‘பால் குடித்தால் குண்டாகி விடுவேன். இதனால் எனது அழகு கெ‌ட்டுவிடும். எனவே பால் குடிக்கமாட்டேன்…’ என்று மகள் கூறும் நிலைமையே இங்கு அதிகளவில் உள்ளது. அதனால்தான் குஜராத்தில் ஊட்டச்சத்துக் குறைவால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்…”

என திருவாய் மலர்ந்திருக்கிறார்.

”மோடியின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், குற்றச்சாட்டுகளைப் பற்றி கவலைப்படாமல் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து வருகிறார் மோடி. குடும்பத்துக்காக தனது உணவை அர்ப்பணிப்பவள் பெண். இதைக் கருத்தில் கொள்ளாமல் அழகைக் கருத்தில் கொள்வதால்தான் பெண்கள் சாப்பிடுவதில்லை என்று மோடி குறிப்பிடுகிறார். இதைவிட மோசமான அறிக்கை வேறு எதுவாக இருக்க முடியும்? குஜராத்தில் மீண்டும் போட்டியிடும் தகுதியை மோடி இழந்து விட்டதாகவே நான் கருதுகிறேன்…” என்று இந்தப் பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி.

”ஒவ்வொரு பெண்ணுக்கும் தங்களுடைய உடல் நிலையைக் கருத்தில் கொள்ள உரிமை உண்டு. இதனைப் பற்றி வேறு யாராவது நினைத்தால் அது அவர்களுடைய அறியாமையையே வெளிச்சமிட்டு காட்டுவதாக அமையும்…” என முஷ்டியை உயர்த்தியிருக்கிறார் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத்.

”குஜராத்தில் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள தோல்வி காரணமாகத்தான் மோடி இதுபோன்ற கருத்துகளை கூறுகிறார். மாநில முதல்வர் இவ்வாறு பேசுவது சரியில்லை’’ என்கிறார் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் தாரிக் அன்வர்.

”இப்படி ஒரு கருத்தை சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. இதை விட மிகப் பெரிய பிரச்சினைகள் உள்ளன. அது மோடிக்கு தெரியாமல் போனது வருத்தமானது…” என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கவலைப்பட, ”ஜி.டி.பி குறித்து மட்டுமே கவலைப்படுகிறார் மோடி. கல்வி, சுகாதாரம் குறித்து அவர் கவலைப்படவில்லை…” என ஆவேசத்துடன் மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதாம்பிகா பால் குரல் எழுப்ப, ”மோடி தனது கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும். பெண்களை மிகவும் ஏழ்மையானவர்கள், வறுமையானவர்கள், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாதவர்கள் என்பது போல இது காட்டுகிறது…” என தீர்ப்பு வழங்கி இருக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் கிரிஜா வியாஸ்.

ஆக, மோடியின் திமிரான பேச்சுக்கு, ‘தப்பு பாஸ்… பெண்கள் நம் வீட்டின் கண்கள்… குடும்பத்துக்காக தியாகம் செய்பவர்கள்… அவர்களை இப்படி சொல்லக் கூடாது… என்னதான் இருந்தாலும் அவர்கள் பாவமில்லையா..?’ என தோளில் கைபோட்டு இப்படித்தான் எதிர்வினை ஆற்றியிருக்கிறது காங்கிரஸ்.

ஆனால், உண்மையில் குஜராத் மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைவால் பெண்கள் பாதிக்கப்பட என்ன காரணம்? சில புள்ளிவிவரங்களில் இருந்து இதற்கான விடையை தேடலாம்.

குஜராத்-பட்டினிகுஜராத் மாநிலத்தில் உள்ள 89% ஆண் மற்றும் 98% பெண் தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள். எனவே அதிகப்படியான நேரங்கள் உழைத்தாலும் குறைவான கூலியையே பெறுகிறார்கள். அந்த வருமானத்துக்குள் வாழ்வதற்காக அவர்களால் என்ன வாங்கி சமைக்க – சாப்பிட முடியுமோ அதைதான் வாங்குகிறார்கள். கிடைக்கும் கூலியில் அவர்களுக்கு கிடைப்பது ஊட்டச்சத்தற்ற உணவுகள்தான் என்று சொல்லாமலேயே விளங்கும்.

அதேபோல், நகர்புறமோ அல்லது கிராமப்புறமோ… தற்காலிகமோ அல்லது நிரந்தரத் தொழிலாளர்களோ… இவர்களுக்கு கிடைக்கும் வருமானம், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. சமீபத்தில் எடுக்கப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலக புள்ளிவிவரம் இதைதான் உணர்த்துகிறது. கிராமப்புறங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு ஆண்களுக்கு ரூபாய் 69-ம், பெண்களுக்கு ரூபாய் 56-ம் கூலியாக கிடைக்கிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களுக்கான தினக் கூலியில் குஜராத், 14வது இடத்திலும், பெண்களுக்கான தினக் கூலியில் 9வது இடத்திலும் இருக்கிறது.

நகர்ப்புறங்களை பொருத்தவரை ஆண் தொழிலாளர்களுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 109-ம், பெண்களுக்கு ரூபாய் 56-ம் கிடைக்கிறது. இதுவும் மற்ற இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவுதான்.

மேலே சொன்ன இந்த விகிதாச்சாரம், தற்காலிக நாட்கூலிகளுக்கானது. அதற்காக நிரந்தர தொழிலாளர்களின் வருமானம் அதிகம் என்று நினைத்துவிட வேண்டாம். கிராமப்புறங்களில் ஆண்களுக்கு ரூ.152-ம், பெண்களுக்கு ரூ.108-ம் நாள் ஒன்றுக்கு கிடைக்கிறது. இது, நிரந்தர தொழிலாளர்களின் நாள் கூலி. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த விகிதாச்சாரம், மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டுடன்தான் இருக்கிறது. ஆண்களின் வருமானத்தில் 17வது இடத்திலும், பெண்களுக்கான வருமானத்தில் 9வது இடத்திலும் குஜராத் இருக்கிறது.

நகர்ப்புறங்களை பொருத்தவரையிலும் பெரிய வேறுபாடெல்லாம் இல்லை. ஆண்கள் ரூ.205-ம், பெண்கள் ரூ.182-ம் தினமும் பெறுகிறார்கள். இந்த ஊதிய விகிதத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், ஆண்களுக்கான தினக்கூலியில் 18வது இடத்திலும், பெண்களுக்கான தினக்கூலியில் 13வது இடத்திலும் குஜராத் இருக்கிறது.

மாநில வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில் தொழிலாளர்களின் வருமானம் மட்டும் அதளபாதாளத்தில் இருக்கிறது. அப்படியிருக்க கிடைக்கும் வருமானத்தில் சத்துள்ள உணவுகளை எப்படி மக்களால் வாங்க முடியும்?

இதுதவிர, குடிநீர் விநியோகமும், சுகாதார கழிவறைகளும் சொல்லிக் கொள்ளும் நிலையில் மாநிலத்தில் இல்லை. கிராமப்புறங்களில் பெரும்பாலான மக்கள் தினமும் பல மைல்கள் நடந்துச் சென்றுதான் குடிநீரை எடுத்து வருகிறார்கள். 67% கிராம வீடுகளில் கழிப்பறையே கிடையாது. எனில், உடல் ஆரோக்கியம் எப்படி பெறும்?

உண்மை இப்படி இருக்க, மாநில முதல்வர் திமிருடன் ‘குஜராத் பெண்கள் அழகுக்காக செலவிடுகிறார்களே தவிர, ஊட்டச்சத்துள்ள உணவுகளுக்காக செலவிட மறுக்கிறார்கள்…’ என பேட்டி அளிக்கிறார். எதிர்கட்சியான காங்கிரசும், மக்களின் பொருளாதார வாழ்க்கைத் தரம் குறித்து கவலைப்படாமல் ‘இப்படியெல்லாம் பேசக் கூடாது…’ என செல்லமாக குட்டுகிறது.

இப்போது சொல்லுங்கள், சொற்களுக்கான அர்த்தம் அகராதியில் இருக்கிறதா அல்லது பொருளாதார வாழ்க்கையில் அடங்கியிருக்கிறதா?

படிக்க

___________________________________

– அறிவுச்செல்வன்
_______________________________

சிவாஜி கணேசன்: ஒரு நடிப்பின் கதை !

99
சிவாஜி-கனேசன்-2

சிவாஜி-கனேசன்-2

“இந்தியாவின் ஐம்பது ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலை சிறந்தவர்; நடிப்புக் கலையின் பல்கலைக் கழகம்; இன்றைய நடிகர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தவர்; அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்கள் ஏதுமில்லை; தமிழ் மொழியின் ஆகச்சிறந்த உச்சரிப்புக் கலைஞர்; அவரது திரைப்படங்களைப் பார்க்காத எவரும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழகத்தைப் புரிந்து கொள்ள இயலாது; தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்” என்று அனைத்துப் பிரிவினராலும் போற்றப்படுகிறார், நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசன்.

அவரது நடிப்பை மிகை நடிப்பு என்று விமரிசிப்பவர்கள் கூட சிவாஜியின் திரையுலகச் சாதனையை மறுப்பதில்லை. பொதுவில் அவரது வாழ்க்கையைப் பொறுத்தவரை கலையுலகில் சாதனையாளராகவும், அரசியல் அரங்கில் பிழைக்கத் தெரியாத தோல்வியாளராகவும் அனுதாபத்துடன் மதிப்பிடப்படுகிறார்.

ஆனால் அவரது சமகால வரலாறும், அவரது திரைப்படங்களும், அதில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களும், அவரால் உருவாக்கப்பட்ட நடிப்பு பாணியும், ஒரு நட்சத்திரமாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அவர் செய்த முயற்சிகளும், அதையொட்டி மாறிய அவரது அரசியல் வாழ்க்கையும், ‘இமேஜ்’ கரைந்து போன பிற்காலத்தில் அவர் நடித்த கேவலமான படங்களும், வளர்ப்பு மகன் திருமணத்தில் வாழ்ந்து கெட்ட நல்ல மனிதரைப் போன்று பங்கேற்றதும், 80 – களின் இறுதியில் வேறு வழியின்றி அரசியல் துறவறம் மேற்கொண்டதும் – நமக்கு வேறு ஒரு மதிப்பீட்டைக் காண்பிக்கின்றன.

அவை சிவாஜி பற்றிய பாராட்டுரைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதோடு தவறு என்பதையும் தெரிவிக்கின்றன. கூடவே திராவிட இயக்கங்களின் அரசியலையும் – அதையொட்டிய திரையுலகத்தையும், அவையிரண்டின் வளர்ச்சியையும் – சமரசத்தையும் அதிலிருந்து பிரிக்க முடியாத சிவாஜி எனும் கலைஞனின் வாழ்க்கையையும் நமக்கு புரிய வைக்கின்றன.

பராசக்தி கால சமூகப் பின்னணி!

‘பராசக்தி’ தயாரிப்பளாருக்கு பண உதவி செய்த ஏ.வி.எம் செட்டியாருக்கு, புதுமுகமான சிவாஜியின் நடிப்பு பற்றி நம்பிக்கையில்லை. அதையும் மீறி கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில், கருணாநிதி வசனமெழுத 1952 – இல் வெளியான இப்படம் பெரும் வெற்றியடைந்தது. மேடை நாடகங்களில் கணீரென வசனம் பேசிக் கொண்டிருந்த சிவாஜிக்கு இப்பட வாய்ப்பு தற்செயலாக கிடைத்திருந்தாலும், பராசக்தியின் வெற்றிக்குத் தேவைப்பட்ட அவசியமான சூழ்நிலைகள் அப்போது உருவாகியிருந்தன.

அன்றைய திரையுலகம் பாட்டிலிருந்து வசனத்திற்கு மாறிக் கொண்டிருந்தது. புராணக் கதைகளில் சிக்கியிருந்த திரைக்கதை, பார்ப்பனியத்தின் அநீதியை எடுத்துரைக்கும் சமூக நோக்கம் கொண்டதாக விரிவடைய ஆரம்பித்திருந்தது. மவுசிழந்த தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா போன்ற நட்சத்திரங்களுக்குப் பதிலாக, திராவிட இயக்கக் கலைஞர்கள் புகழ் பெற ஆரம்பித்திருந்தனர்.

கலையுலகின் இம்மாற்றத்திற்கு முன்பாகவே அரசியல் உலகமும் மாறத் துவங்கியிருந்தது. காங்கிரசின் மேட்டுக்குடி நலனுக்கான அரசியல் பின்தங்கி, கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு முன்னணிக்கு வந்தது. இன்னொரு புறம் மொழிவழி மாநிலங்களுக்கான போராட்டப் பின்னணியில் திராவிட இயக்கமும் வளர ஆரம்பித்திருந்தது. மொழி – இனப் பெருமையை வைத்து, சாமானிய மக்களின் குரலாக உருவெடுத்து, விரைவிலேயே தமிழ் மக்களின் பிரதிநிதியாக இவ்வியக்கம் தன்னை முன்னிருத்திக் கொண்டது. அதற்கு அவ்வியக்கத் தலைவர்கள் தமது பிரச்சாரத்தை எளிய வடிவில் மக்களிடம் கொண்டு சென்றது ஒரு முக்கியமான காரணமாகும்.

திராவிட இயக்கமும் திரைப்பட முதலாளிகளும் !

1967 – இல் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும் வரை முதன்மையான எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்டுகளை அபாயமாகக் கருதிய முதலாளிகள், திராவிட இயக்கத்தை தமக்கு சாதகமானது என்று சரியாகவே கருதினர். சமூக அரங்கில் வரவேற்பைப் பெற்றிருந்த திராவிட இயக்க படைப்புக்களை திரையுலகில் ‘ஸ்பான்சர்’ செய்வதற்கு முதலாளிகள் தயாராயினர். இரு பிரிவினரும் தமது அரசியல் நலனைக் காப்பாற்றிக் கொண்டு பண ஆதாயம் பெறுவது உறுதி செய்யப்பட்டது.

அப்போதே அண்ணாவும், கருணாநிதியும் தமது வசனங்களுக்காக ஆயிரக்கணக்கில் ஊதியம் பெற்றனர். சிவாஜி தவிர எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.இரேசேந்திரன், கே.ஆர்.ராமசாமி, என்.எஸ். கிருஷ்ணன் போன்ற திராவிட இயக்க நடிகர்கள் புகழ் பெற ஆரம்பித்திருந்தனர். 47 – க்குப் பின் பிரச்சினையின்றி தனது படத்தில் பாரதி பாடலைச் சேர்த்த ஏ.வி.எம். செட்டியார் போன்ற முதலாளிகள் தயாரிப்பாளரானார்கள். ‘பராசக்தி’ காலப் படங்களில் பார்ப்பனிய எதிர்ப்பும், சமூகப் பிரச்சினைகளும் வீரம் – காதல் – கற்பு – பாசம் போன்ற ‘தமிழ் நெறி’களின் பின்னணியில் வெளிப்பட்டன. அந்தத் ‘தமிழ் நெறி’ அற்ப உணர்வாகவும், இனப்பெருமை சவடாலாகவும் சீரழிய அதிக காலம் ஆகவில்லை. அதுவே திராவிட இயக்கத்தின் அரசியல் வழிமுறையாகவும் உறுதியானது.

நட்சத்திர இலக்கணத்தில் சிவாஜியின் வளர்ச்சி !

சிவாஜி-கணேசன்-1இதனிடையே சிவாஜியின் சிம்மக்குரல் கர்ஜனையில் பணம், மனோகரா, இல்லற ஜோதி போன்ற படங்கள் வெளிவந்தன. இவை அவரது பாணி நடிப்பு – வசனமுறை உருவாவதற்கும், சிவாஜி என்ற நட்சத்திரம் உதிப்பதற்கும் அடித்தளமிட்டன. 50 -களில் எழுதப்பட்ட கதைகளில் சிவாஜி நடித்தார் என்ற நிலை மாறி, 60 – களில் சிவாஜிக்கு ஏற்ற கதைகள் எழுதுவது தொடங்கியது. அப்போது அவர் ‘இமேஜ்’ முழுமையடைந்த ஒரு உயர் நட்சத்திரமாகிவிட்டார்.

அவரது ‘இமேஜூ’க்குப் பொருத்தமான, அவரது நடிப்புக்கு தீனி போடும் வகையிலான பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதைச் சுற்றியே ஏனைய நடிகர்கள், ஒலி, ஒளி, பாடல், இசை, இயக்கம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டன. எம்.ஜி.ஆர், ரஜினி, அமிதாப் தொடங்கி ஹாலிவுட்டின் நடிகர்கள் வரை அனைத்து ‘சூப்பர் ஸ்டார்’ களுக்கும் இதுவே இலக்கணம்.

எம்.ஜி.ஆர் – ரஜனியின் நட்சத்திரச் சுமையை சண்டை, சமூக நீதிப் பாட்டு, கவர்ச்சி நாயகிகள், ஆடம்பர அரங்குகள், வில்லன்கள் போன்றோர் சுமந்தனர். கமலஹாசனுககு ஹாலிவுட்டிலிருந்து சுடப்பட்ட கதையும், வித்தியாசமான மேக் – அப்பும், மணிரத்தினம் – ஷங்கர் போன்ற இயக்குநர்களும் வேண்டியிருந்தது. ஆனால் சிவாஜி மட்டும் தன் சுமையை – தனது நடிப்பாற்றலால் – தானே சுமந்தார் என்பதே அவருக்குள்ள திறமையாகும்.

இத்தகைய நட்சத்திர நடிகர்கள், தமது ஒரு சில படங்களின் வெற்றியை வைத்து, வெற்றி பெரும் கதை, மக்களின் ரசனை, தமது திறமையின் மகிமை போன்றவை இன்னதுதான் என தமக்குத்தானே தீர்மானிக்கின்றனர். உலகமே தம்மை மேதைகளாக மதிப்பதாகவும் கருதிக் கொள்கின்றனர்.

திரையுலகில் திறமையும் – சமூக நோக்கமும் கொண்டவர்கள் நுழைய முடியாமல் இருப்பதும், இருந்தால் ஒழிக்கப்படுவதும் மேற்படி நட்சத்திர முறையின் முக்கிய விளைவுகளாகும். திரையுலகத்தைக் கோடிகளைச் சுருட்டும் மாபெரும் தொழிலாக மாற்றிவிட்ட முதலாளிகளுக்கு,இந்த ‘சூப்பர் ஸ்டார்கள்’ நம்பகமான மூலதனமாக இருப்பதால், நட்சத்திரங்களை அவர்களே திட்டமிட்டு உருவாக்கவும் செய்கின்றனர்.

நடிகர்களின் திறமை, முதலாளிகளின் ஆதரவு போக இந்த நட்சத்திரங்கள் எழுவதற்கும்,  குறிப்பிட்ட காலம் மின்னுவதற்கும், பின்னர் மங்குவதற்கும் குறிப்பான – சமூக வரலாற்றுக் காரணங்களும் தேவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரசின் மேட்டுக்குடி அரசியலுக்கு மாற்றாக தமிழினப் பெருமை பேசி வந்த திராவிட இயக்கம், உழைக்கும் மக்களின் ஏக்கப் பெருமூச்சாய் சில பத்தாண்டுகள் நீடித்தது. அதனால்தான் தி.மு.க.வின் தமிழ்ப் பண்பான காதல், வீரம், கற்பு, தாய்ப் பாசம், மொழி – இனப் பெருமை போன்றவை கலந்து ஒரு நாட்டுப்புற வீரனாய் உருவெடுத்த எம்.ஜி.ஆரின் இமேஜ் செல்வாக்குடன் பல ஆண்டுகள் நீடித்தது.

உயர்குடி மாந்தராக சிவாஜியின் இமேஜ் !

இதே காலப் பின்னணியில் உருவான சிவாஜியின் இமேஜ் வேறு ஒரு பின்புலத்தைக் கொண்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியிலும் – அதன் பின்னரும் பின்தங்கிய நிலவுடைமைச் சமூகம் மெல்ல மெல்ல மாறத் துவங்கியிருந்தது. தொழில் துறை – நகரங்களின் வளர்ச்சி, பழைய சமூக உறவுகளை அப்படியே நீடிப்பதற்கு அனுமதிக்கவில்லை. பார்ப்பன – பார்ப்பனரல்ல்லாத மேல்சாதிகளும், மேல்தட்டு வர்க்கங்களும் இந்த மாற்றத்தின் பொருளாதார ஆதாயங்களைப் பெற்றாலும் மறுபுறம், தமது பிற்போக்கான, பழமையான சமூக மதிப்பீடுகள் அழிவதாகவும் அரற்றிக் கொண்டன. இந்த முரண்பாட்டில் சிக்குண்ட மேல்தட்டு மனிதர்கள் மற்றும் வாழ்ந்து கெட்ட நல்ல மனிதர்களின் பெருமை, ஏக்கம், புலம்பல், இத்யாதிகளை, சற்று அழுத்தமான மிகை நடிப்பில் வெளிப்படுத்துவதற்கு ஒரு சிவாஜி தேவைப்பட்டார்.

பணக்கார விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாசமிக்க இளைஞனாக, இராமனுக்கேற்ற தியாகத் தம்பி பரதனாக, நவரசங்களையும் பிழிந்து தரும் உயர்குடி நாயகர்களாக, பக்தர்கள் மீது பழமையை நிலைநாட்டும் பரம்பொருளாக, கம்பீரம் குறையாமல் காதலிக்கும் நாதசுவரக் கலைஞனாக, குடும்ப வேதனையில் குமுறும் இளைஞனாக, வேலை செய்யும் வீட்டின் சுமை தாங்கும் விசுவாசமான வேலையாளாக, காதலியைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் மருத்துவராக, குற்றம் மறந்து நிம்மதி தேடும் கனவானாக, போதையில் விழுந்து புனர் ஜென்மமெடுக்கும் ‘தத்துவ’ இளைஞனாக, வெளிநாட்டு நாகரீக மனைவியைத் திருத்தும் பட்டிக்காட்டானாக, மகன்கள் தரும் சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கும் ஏகப்ப்டட தந்தைகளாக சிவாஜி நடித்தார், நடந்தார், ஆடினார், ஓடினார், பாடினார், கர்ஜித்தார், குமுறினார், கலங்கினார், அழுதார், அழ இயலாமல் தவித்தார், சிரித்தார், சிரித்தவாறே அழுதார் – என்று எதையெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்து காட்டினார்.

ஆண்டான் அடிமை படங்களும் ஜப்பானிய இரசனையும் !

ஜப்பானில் முத்து, எஜமான், அண்ணாமலை போன்ற ரஜினி படங்கள் வெற்றிகரமாக ஓடியது குறித்து வாசகர்கள் அறிந்திருக்கலாம். காட்சி உலகின் அதிநவீனக் கருவிகளை உலகிற்களிக்கும் முன்னேறிய ஜப்பான் நாட்டு மக்கள், ரஜினியின் ஆண்டான் – அடிமைக் காட்சிளை ரசிப்பது எங்ஙனம்? 19 – ஆம் நூற்றாண்டு வரை விவசாய நாடாக இருந்த ஜப்பான் பெரும் சமூகப் புரட்சிகள் ஏதுமின்றியே தொழில்துறை நாடாக மாறியது. எனவே ராஜ விசுவாசம், பழமைவாதம், அடிமைத்தனம், மூத்தோர் பக்தி, முதலாளி மரியாதை போன்ற நிலவுடைமைப் பண்புகள் மீதான மயக்கம் இன்றளவும் ஜப்பானில் நீடிக்கக் காண்கிறோம்.

“சோம்பேறிகள் இல்லாத உழைப்பாளிகளின நாடு, வேலை நிறுத்தம் கிடையாது, பழுதான எந்திரங்களைச் சரி செய்யாத பொறியியலாளர்கள் கூட தற்கொலை செய்வார்கள்” போன்ற முதலாளிகளின் சுரண்டலை மறைக்கும் மோசடியான கருத்துக்கள் உலவுவதற்கும் இதுவே அடிப்படை. எனவேதான் அடிமைத்தனமும் – அற்ப உணர்வுகளும் கொண்ட ரஜினியின் படங்கள் ஜப்பானிய மக்களை வசியம் செய்ய முடிந்திருக்கின்றது.

சாதரண மக்களும் உயர்குடி உணர்ச்சியும் !

சிவாஜி-கனேசன்-3ஆகவே முன்னேறிய ஜப்பானுக்கே கதி அதுவென்றால், இன்னமும் பின் – தங்கிய விவசாய நாடாக இருக்கும் இந்திய சமூகத்தின் அடிமை மனப்பான்மை பற்றிச் சொல்லவே வேண்டாம். மேலும் வரலாறு முழுவதும் இன்று வரை ஆளும் வர்க்கமே ஆளப்படும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. நமது நாட்டுப்புறக் கலைகளின் கதைகளோ, தற்போதைய நவீனக் கலைகளின் கதைகளோ எதுவும் உயர்குடி மாந்தர்களின் வாழ்வோடும் – உணர்ச்சியோடும்தான் நம்மை ஒன்ற வைக்கின்றன.

இன்றும் ஒரு பார்ப்பனன் பிச்சை எடுப்பதும், ஒரு பண்ணையார் தெருவில் நடப்பதும், இந்திராவைப் பறிகொடுத்த ராஜீவின் சோகமும், கேளிக்கைச் சீமாட்டி டயானவின் மரணமும், மூப்பனார் சைக்கிள் ஓட்டியதும், ஜெயலலிதாவை மன்னிக்கலாம் என்ற கருணையும், கருணாநிதியின் ‘ஐயோ’வும் -போன்ற உயர்குடி மனிதர்களின் அவலம், சோகம், எளிமை, வறுமை, இரக்கம் போன்ற உணர்ச்சிகள் சாதாரண மக்களின் சொந்த உணர்ச்சியில் கலந்து விடுகின்றன. ஆனால் இதே நெருக்கடிகளுக்கு ஆளாகும் சாதாதரண மனிதர்களின் அவலத்தை, மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. காரணம் அவை உழைக்கும் மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன; உயர்குடி மனிதர்களுக்கோ விலக்களிக்கப்பட்டிருக்கின்றன.

இப்படி விலக்களிக்கப்பட்ட உயர்குடி மனிதர்களின் வாழ்க்கையைத்தான் சிவாஜி மட்டுமல்ல அவரது சமகாலத் திரையுலகம், இயக்குநர்கள், நடிகர்கள் அனைவரும் பிரதிபலித்தனர். அப்போது இத்தகைய ‘குடும்பப் படங்கள்’ எனும் மதிப்புடன் வெளிவந்த கதைகளே வெற்றிக்குரிய சூத்திரமாகக் கருதப்பட்டன. அதில் சிவாஜி மட்டும் குறிப்பிடத் தகுந்த வகை நடிப்பைக் கொண்டிருந்தார் என்பதே அவருக்குரிய பங்காகும்.

சிவாஜியும் மிகை நடிப்பும்!

அதை மிகை நடிப்பு என்பாரின் விமரிசனமும், நமது கலைமரபின் தொடர்ச்சி என்பாரின் பாராட்டும், நடிப்பை மட்டும் கவனிக்கின்றன. கூத்தும், அதன் வளர்ச்சியான நாடகத்திலும் தொலைவிலிருக்கும் பார்வையாளருக்கு குரலையும், உடலசைவையும் உணர்த்திக் காட்ட மிகை நடிப்பு தேவைப்பட்டது. உலகெங்கிலும் உள்ள நாடக மரபுகளும் மிகை நடிப்பையே கொண்டிருப்பதால் இது நமக்கு மட்டுமே உள்ள மரபு அல்ல. எனவே நாடகப் பின்னணியில் தோன்றிய திரையுலகம் மட்டுமே சிவாஜியின் மிகை நடிப்புக்கு காரணம் என்று கூறிவிட முடியாது.

மேன்மக்களின் பாத்திரமேற்று நடித்த சிவாஜியின் சமகால நடிகர்களில் பலர் அவரைப் போல மிகையாய் நடிக்கவில்லை. உயர்குடி மாந்தர்களின் உணர்ச்சிகளையும், அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளையும் மிகைப்படுத்தி அவையே சமூகத்தின் பிரச்சினைகள் என்று நம்ப வைத்தன திரைக்கதைகள். அந்த ஜாடிக்கேற்ற மூடியாகப் பொருந்தி விட்டது சிவாஜியின் மிகை நடிப்பு.

தி.மு.க.வின் சவடால் அரசியலுக்கு ஏற்ற அலங்கார நடை அடுக்குத் தொடர் வசனங்கள் என்ற ஜாடிக்கும் இந்த மிகை நடிப்பு ஒரு பொருத்தமான மூடியாகவே இருந்தது.

முதலில் ஜாடிக்கேற்ற மூடி; பிறகு மூடிக்கேற்ற ஜாடி என்றவாறு அதாவது கதைக்கேற்ற நடிப்பு, பிறகு நடிகருக்கேற்ற கதை என்றவாறு அது முற்றத் தொடங்கியது.

கற்ற நடிப்பும் காட்டிய வித்தையும் !

சிவாஜி தனது நடிப்புத் திறனை எப்படி வளர்த்துக் கொண்டார்? அவரே கூறியிருப்பது போல பலரது வாழ்க்கைப் பாணிகளை பார்த்துப் பதிந்து கொண்டதுதான். ஆனால் யாரை – எதை பார்க்கப் பழகியிருந்தார் என்பதுதான் பிரச்சினை. சிவாஜியின் படங்களைப் போல அவரும் சமகால சமூகத்தைப் பற்றியும், அது மாறி வந்தது குறித்தும், மக்களின் யதார்த்தமான வாழ்க்கை – பிரச்சினைகளையும் அறியாதவராகவே இருந்தார். அப்படித் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையை அவரது படங்களும் – பாத்திரங்களும் கோரவில்லை. கூடவே அவரது அரண்மனை வீடும், காங்கிரசின் மேட்டுக்குடி நட்பும், திரைப்பட முதலாளிகளின் சூழலும் – உயர்குடி மனிதர்களைப் பற்றியே சிந்திக்க வைத்திருக்க முடியும். நடிப்பும் – வாழ்க்கையும், இமேஜூம் – கற்பனையும் ஒன்றையொன்று சார்ந்திருந்தன.

ஆகவே சிவாஜி கற்றுக் கொணடு நிகழ்த்திக் காட்டிய ஸ்டைலாக – புகைவிடுவது, கம்பளியுடன் இருமுவது, தலையைப் பிய்த்து நிம்மதி தேடுவது, தரை அதிரவோ – நளினமாகவோ நடந்து வருவது போன்ற ஜோடனைகளுக்கும், சர்க்கஸ் வித்தைகளுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. சீனியர் சங்கராச்சாரியையப் பார்த்து அப்பராக நடித்ததைப் பெருமையுடன் குறிப்பிடும் சிவாஜி, தனது வித்தியாசமான வேடங்கள் பலவற்றையும் எங்கிருந்து கற்றார் என்பதை எங்கேயும் கூறியதில்லை.

வீழ்ந்த நட்சத்திரம் !

சிவாஜி கால உயர்குடி மிகை யதார்த்தப் படங்களுக்கான வரலாற்றுக் காரணங்கள் மாறத் துவங்கிய போது அவரது நட்சத்திர இமேஜ் மங்கத் தொடங்கியது. அதைச் சரிகட்ட சிவாஜியும் – எம்.ஜி.ஆரும் 70 – களின் வண்ணப் படங்களில் நாயகிகளைத் துகிலுரிவதிலும், காதலைக் காமமாக மாற்றுவதிலும் போட்டியாக ஈடுபட்டனர். இதன் பின்னர் 80 – களின் துவக்கத்தில் பேரன் – பேத்திகளைப் பெற்றெடுத்த நிலையிலும் ‘தர்மராஜா’வில் ஸ்ரீதேவியுடனும், ‘லாரி டிரைவர் ராஜாக் கண்ணுவில்’ ஜெயமாலினியுடன் ஆடிப் பாடிய சிவாஜியை அவரது ரசிகர்களாலேயே சகிக்க முடியவில்லை.

இனிமேலும் அவர் ஒரு நட்சத்திரமில்லை என்பது முடிவு செய்யப்பட்டது. அதன் பின் சிவாஜி நடித்த ‘முதல் மரியாதை, தேவர் மகன்’ திரைப்படங்கள் அவரது யதார்த்தமான நடிப்பிற்காக வரவேற்கப் பட்டாலும், இவையும் வாழ்ந்து கெட்ட கவுரவமான மனிதர்களின் பாத்திரம்தான். இறுதியாக 90-களில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் இளைய தளபதி விஜயின் சில்லறைக் காதலுக்கு உதவிடும் சில்லறைத் தந்தையாக நடித்தார். இதுபோக அவர் பெரியாராக நடிக்க விரும்பிது நிறைவேறவில்லையே என்று சிலர் வருத்தப்படுகின்றனர். பெரியார் பிழைத்தார் என்று நாம் மகிழ்ச்சியடைவோம்.

சிவாஜியும் அரசியலும் !

சிவாஜி-கனேசன்-4அடுத்து ‘ அரசியலில் மட்டும் சிவாஜி தோல்வியடைந்தார்’ என்ற கருத்தைப் பரிசீலிக்கலாம். முதலில் இந்த மதிப்பீடே நேர்மையற்ற மதிப்பீடு. காரணம் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று அரசியலில் ஈடுபடும் ஒருவர் தோல்வியடைந்தால் அப்படி மதிப்பிடலாம். மாறாக தனது ‘நடிகர் திலகம்’ இமேஜைத் தக்க வைக்கவும், விரிவுபடுத்தவும், அதன்மூலம் அரசியலிலும் புகழடைய வேண்டும் என்ற சிவாஜியின் நோக்கமே பச்சையான சுயநலமாகும். இது பெருங்கனவாக வளருவதற்கு எம்.ஜி.ஆரின் போட்டி ஒரு காரணமாக இருந்தது.

திராவிட இயக்கத்தின் முன்னணிக் கலைஞராக வளர்ந்த சிவாஜி 1955- இல் திடீரென திருப்பதி சென்று வழிபட்டார். கொதித்தெழந்த உடன்பிறப்புகளோ “திருப்பதி கணேசா! திரும்பிப் பார் நடந்துவந்த பாதையை, நன்றி கெட்டுப்போனாயே நல்லதுதானா?”என்று கேட்டனர். திராவிட அரசியலும் -நாத்திகமும் தனது இமேஜை குறுக்கிவிடும் என்று கருதிய சிவாஜி தேசியமும் – தெய்வீகமும் உள்ளவராகக் காட்டிக் கொண்டார். அதன்படி அடுத்த சில ஆண்டுகளில் ஏ.பி.நாகராஜனின் புராணப் படங்களில் நடித்து, 50களில் புதையுண்டு போயிருந்த புராணப் புரட்டல்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

இதே ஏ.பி.நாகராஜன்தான் திராவிட இக்கங்களைப் பல படங்களில் கொச்சைப்படுத்தி கேலி செய்தவர். பராசக்தியில் சிவாஜியுடன் நடித்த எஸ்.எஸ். இராசேந்திரன் போன்றோர் புராண, கடவுள் படங்களில் நடிப்பதில்லை என்று உறுதியுடன் கடைபிடித்தார்கள். இந்தக் குறைந்த பட்ச நாணயம் கூட சிவாஜியிடம் இல்லை.

காங்கிரசில் சேர்ந்த ‘கூத்தாடி’ !

திரையுலகில் திராவிட இயக்கத்தின் செல்வாக்கினால் காழ்புணர்ச்சியடைந்த காங்கிரசு கட்சி நடிகர்களை ‘கூத்தாடிகள் ’ என்று கேவலப்படுத்தியது. கோபக்கார நடிகரான சிவாஜி இதில் மட்டும் ரோசமின்றி 62 – இல் காங்கிரசில் பகிரங்கமாகச் சேர்ந்து, 67 தேர்தலில் பிரச்சாரமும் செய்தார். ஒரு வகையில் சாதாரண பாத்திரங்களிலிருந்து உயர்குடி மாந்தர்களின் வேடங்களுக்கு மாறிய சிவாஜிக்கு இந்த மாற்றம் பொருத்தமாகவே இருந்தது.

50-களில் ‘தாராசிங் – கிங்காங்கை’ வைத்து மல்யுத்தக் காட்சிகள் நடத்திப் புகழ் பெற்ற சின்ன அண்ணாமலை என்ற காங்கிரசுக்காரர், 60 – களில் நடிப்புடன் யுத்தம் நடத்திக் கொண்டிருந்த சிம்மக் குரலோனை வைத்து அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் உருவாக்கினார். புதுப்படங்களுக்கு பூசை, தோரணம், அபிஷேகம், ஊர்வலம், ஒவ்வொரு படத்தின் பெயரிலும் ரசிகர்மன்றம் என்று ரசிகர்களை பொய்யான உணர்ச்சியில் மூழ்கடித்து, சினிமாவை முக்கியமான சமூக நிகழ்வாக மாற்றி சீரழித்ததில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சம பங்காற்றினர். இந்த ரசிகர் மன்ற நோய் பரவுவதற்கு, திரையுலகின் புகழையும், செல்வாக்கையும், கவர்ச்சியையும், அரசியலுக்கு கேடாகப் பயன்படுத்திய தி.மு.க.வும் காரணமாக இருந்தது.

பால்கனி, பெஞ்சு டிக்கட் என்ற இரு பிரிவையும் கவர்ந்த சிவாஜிக்கு சாதிகளைக் கடந்த ரசிகர்களே அதிகம். இருப்பினும் தேவர் சாதி மக்கள் இருக்கும் ஊர்களில் சிவாஜி மன்றாடியார் – தேவர்மகன் சிவாஜி ரசிகர் மன்றங்களாக இருந்ததை அவர் ஆதரித்தார். 70 – களின் சில படங்களில் ‘நான் தேவன்டா’ என்று அடிக்கடி வலிந்து பேசி தன் பெருமிதத்தைக் காட்டிக் கொண்டார். இவ்வளவு இருந்தும் பின்னாளில் அவர் ஆரம்பித்த தனிக் கட்சிக்கு டெபாசிட் வாங்கிக் கொடுத்த சில தொகுதிகளில் தேவர்சாதி மக்கள் அதிகம் கிடையாது.

பார்ப்பனர்களிடம் பறி கொடுத்த பிரஸ்டீஜ் !

அதே சமயம் தன் புகழ் உச்சத்திலிருக்கும் போதும் பார்ப்பனர்களுக்கு அடிபணிந்தும் போயிருக்கிறார். 71 – ஆம் ஆண்டில் அவரது ‘களம் கண்ட கவிஞன்’ எனும் நாடகத்திற்கு சென்னையின் ‘அவாள்’ சபாக்கள் இடம் கொடுக்கவில்லை. பார்ப்பனக் குடும்பக் கதைகளை மட்டும் நாடகங்களாக நடத்தும் சபாக்களின் விதிப்படி தனது நாடகத்தை விடுத்து, ‘வியட்நாம் வீடு’ என்ற நாடகத்தை சிவாஜி அரங்கேற்றினார். இதில் ‘பிரஸ்டீஜ் பத்மநாப அய்யராக’ நடித்து அவாளின் உள்ளம் கொள்ளை கொண்ட நடிகர் திலகம் தன்னுடைய ‘பிரஸ்டீஜ்’ பறி போனது குறித்து கவலைப்படவில்லை.

இக்காலத்தில் வெளியான ‘ராஜபார்ட் ரங்கதுரையில்’ தூக்கு மேடையேறும் பகத்சிங் “காந்தி வாழ்க” என்று பேசத் தொடங்கி அலையோசை, நவசக்தி போன்ற காங்கிரஸ் பத்திரிகைகளுக்கு விளம்பரம் செய்து கயிற்றில் தொங்குவார். இப்படி பகத்சிங்கையும் தன் பங்குக்கு கேவலப்படுத்தினார்.

அரசியல் வேண்டாம், ஆளை விடுங்கப்பா !

இடையில் இந்திராவிடமிருந்து பிரிந்து ஸ்தாபனக் காங்கிரஸ் ஆரம்பித்த காமராஜருடன் சேர்ந்தார். காமராஜர் இறந்ததும் இந்திராவிடம் திரும்பினார். 80 – களில் இவருக்கும் மூப்பனாருக்கும் நடந்த காங்கிரஸ் குழுச் சண்டையில் தோற்றார். எம்.ஜி.ஆர். இறந்ததும் அடுத்த புரட்சித் திலகம் நாம்தான் என்று முடிவு செய்து தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதுக்கட்சி ஆரம்பித்தார். 88 தேர்தலில் “234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 3 -இல் மட்டும் டெபாசிட் பெற்றது ” எனுமளவுக்கு கேவலமாகத் தோற்றார்.

அப்போதும் சளைக்காமல் வி.பி.சிங்கின் ஜனதா தளத்தில் சேர்ந்து மாநிலத் தலைவரானார். அந்தக் கட்சியும் கட்டெறும்பாக கரைந்த நிலையில் ‘அடங்கொப்புரானே, அரசியலும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம் ’ என்று அரசியல் துறவறம் மேற்கொண்டார். சிவாஜியின் அரசியல் சந்தர்ப்பவாதம் இத்தனை விகாரமாகத் தெரியக் காரணம், அதையே நேர்த்தியாக செய்யும் திறமை அவருக்கில்லை என்பதுதான்.

அண்ணாவும், தம்பி கணேசனும், நண்பர் கருணாநிதியும் !

அந்தத் திறமை அடுக்கு மொழியில் சவுடால் அரசியல் செய்து வந்த தி.மு.கவிடம் இருந்தது. திருப்பதிக்குப் போன சிவாஜியை உடன்பிறப்புகள்தான் எதிர்த்தனர். ‘அறிஞர்’ அண்ணாவோ ‘தம்பி கணேசன் எங்கிருந்தாலும் வாழ்க’ என்று தந்திரமாக சமரசம் செய்து கொண்டார். காரணம் அப்போது அண்ணா எழுதிய சில படங்களில் நடிப்பதற்கு சிவாஜி தேவைப்பட்டார். அதன் பின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று பகுத்தறிவுக்கு அவர் சமாதி எழுப்பிய பின் திரையுலகில் கொள்கையுமில்லை – வெங்காயமுமில்லை என்ற வணிகப் பண்பு நிலைபெற்றது.

அதனால்தான் பராசக்தி படத்தில் ஏழைகளின் துன்பத்தை எழுதி பேசிய கருணாநிதி – சிவாஜி ஜோடி, 1981 இல் ‘மாடிவீட்டு ஏழை’ படத்தில் இலட்சாதிபதியின் துன்பத்தை எடுத்துரைத்தது. அப்போது இருவரும் இலட்சாதிபதிகளாக இருந்தார்கள் என்ற விசயம் அவர்களது கொள்கையின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதிக்கு திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் இருவரும் கட்டிப்பிடித்து அழுதார்கள். எதை நினைத்து அழுதார்களோ தெரியவில்லை!

உயர்ந்த மனிதனின் இறுதிக் காட்சி !

இனியும் இந்தக் கட்டுரையை நீட்டினால் மிகையாகி விடும் என்பதால், புகழ் பெற்ற வளர்ப்பு மகன் திருமணக் காட்சியுடன் முடித்து விடுவோம். இத் திருமணத்தின் போது தமிழக மக்களால் வெறுக்கப்படும் முதல் நபராக ஜெயலலிதா இருந்தார். தமிழகத்தையே கொள்ளையடித்த ஜெயா-சசி கும்பல் தனது டாம்பீகத்தைக் காட்ட நினைத்த இத்திருமணத்தில் சிவாஜிக்கு தனது பேத்தியைக் கொடுப்பதில் முழு சம்மதமில்லை என்று கிசுகிசுக்கள் வெளியாயின. சிவாஜி அதை பகிரங்கமாக உறுதி செய்யவோ, மறுக்கவோ இல்லை. தனது நடிப்பு சாம்ராஜ்ஜியத்தில் அடங்கிக் கிடந்த நடிகையும், புதுப் பணக்காரியாக உருவெடுத்த நடிகையின் உயிர்த்தோழியும், பரம்பரைப் பணக்காரரான தன்னுடன் சரிக்கு சமமாக எப்படி சம்பந்தம் செய்யலாம் என்ற வேதனையாக இருக்கக் கூடும்.

இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் கூடிய அந்த மாபெரும் ‘வரலாற்றுப் புகழ் மிக்க’ நிகழ்ச்சியில், தூய வெள்ளை ஆடையுடன், அதிகம் பேசாமல், ஒரு வாய் கூட சாப்பிடாமல், சோகத்துடன் நின்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இங்கும் ‘வாழ்ந்து கெட்ட உயர்குடி மனிதராகவே’ காட்சியளித்தார் – நடிக்கும் தேவை எற்படவில்லை.

________________________________________

புதிய கலாச்சாரம், செப்டம்பர் – 2001
(மீள் பதிவு)

_________________________________________

பில்லியனர் மாயாவதி தலித்துக்களின் பிரதிநிதியா?

9
மாயாவதி
மாயாவதி

த்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் செல்வி மாயாவதியின் மீது போடப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. ஒன்பது ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கை பதிவு செய்ததற்காக மத்திய புலனாய்வு துறையை நீதிமன்றம் கண்டித்தது. 2002-ம் ஆண்டில் தாஜ் காரிடார் வழக்கு தொடர்பான அதன் உத்தரவு மாயாவதி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து வழக்கு பதிவு செய்யும்படி சொல்லவில்லை என்றது நீதிமன்றம்.

மாயாவதியின் இப்போதைய சொத்து மதிப்பு ரூ 111 கோடி என்று ராஜ்யசபை தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அவர் பதிவு செய்திருக்கிறார்.  2010-ன் உத்தர பிரதேச மேல் சபை தேர்தலில் போட்டியிடும் போது சொத்து மதிப்பு ரூ 88 கோடியாகவும், 2007-ல் ரூ 52.27 கோடியாகவும் இருந்தது. மாயாவதியின் சொத்து மதிப்பு கடந்த 15 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதை நிரூபிக்க முடியுமா, அதற்காக அவர் மீது வழக்கு தொடர வேண்டுமா என்பதை யார் முடிவு செய்கிறார்கள்?

நேர்மையாக செயல்படுத்தினால்,  இன்றைய அரசியல் தலைவர்கள், பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் யார் மேல் வேண்டுமானாலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை போடலாம். அதை முடிவு செய்வது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு. ஆளும் தரப்பினர் தமது நலன்களுக்கு எதிராக செயல்படுபவர்களை அடக்குவதற்கு பயன்படுத்தும் கருவியாகவே இத்தகைய வழக்குகள் நடத்தப்படுகின்றன.

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகாரின் முலாயம் சிங் யாதவ், 2G அலைக்கற்றை ஊழல் வழக்கில் தமிழ்நாட்டின் கருணாநிதி, பல்வேறு வழக்குகளில் உத்தர பிரதேசத்தின் முலாயம் சிங் யாதவ், மாயாவதி, ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி என்று தமக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை கட்டுக்குள் வைத்திருக்கவும், எதிராக செயல்படுபவர்களை அடக்குவதற்குமான கருவியாகவே மத்திய புலனாய்வுத் துறை பயன்படுத்தப்படுகிறது.

‘மாயாவதிக்கு எதிரான வழக்கு அரசியல் காரணங்களுக்காக பதிவு செய்யப்பட்டது’ என்கிறார் அவரது கட்சிக்காரரான மிஸ்ரா. தில்லி உயர் நீதிமன்றமும், வருமான வரி முறையீட்டு ஆணையமும் ‘அவர் மீது தவறு இல்லை’ என்று சொன்ன பிறகும் சிபிஐ வழக்கை திரும்ப பெறவில்லை என்கிறார் அவர்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 1984-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பஞ்சாபைச் சேர்ந்த கன்ஷிராம் என்ற தலித் தலைவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த போது மாயாவதியும் அதில் அடிப்படை உறுப்பினராக இருந்தார். மாயாவதி ஒரு நடுத்தரவர்க்க தலித் குடும்பத்தில் பிறந்து பட்டப் படிப்பு பெற்றவர். அவரது தந்தை அஞ்சல் துறையில் வேலை செய்து வந்தார்.

இந்தியாவின் நிலப்பிரபுத்துவ பிற்போக்கு சமூக அமைப்பில் தலித்துகள் கொடுமையாக அடக்கப்படுகின்றனர். தலித் மக்களுக்கு நிலவுடமை இல்லாமல் ஆதிக்க சாதியினரை சார்ந்தே வாழ்கின்றனர். அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு, வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்று சீர்திருத்தங்கள்  அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் பெரும்பான்மை தலித் மக்கள் அடக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர், பொருளாதார ரீதியாக சுரண்டப்படுகின்றனர்.

தலித்துகளின் பிரச்சனைகளுக்கு போராடி தலித் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதாக கூறிக் கொண்ட கட்சிதான் பகுஜன் சமாஜ் கட்சி. ‘தேர்தல் அரசியலில் பங்கு பெற்று தலித் மக்களின் வாக்கு வங்கியை உருவாக்கி, பிற முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு, அவர்களை பயன்படுத்திக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை பிடித்து தலித் மக்களுக்கு விடுதலை பெற்று விடலாம்’ என்று திட்டம் வகுத்தது அந்தக் கட்சி.

மாயாவதியின் ஆவேசமான உரைகள் தலித் வாக்காளர்கள் மத்தியில் அவரை பிரபலமாக்கியது. மனுவாதிகளை தாக்கும் அவரது அனல் பறக்கும் பேச்சுக்கள் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்தன. பல ஆண்டுகளாக உத்தர பிரதேசத்தில் தலித்துகளை தமது வாக்கு வாங்கியாக நடத்திய காங்கிரசுடன் ஒப்பிடும் போது பகுஜன் சமாஜ் கட்சி மேம்போக்காக முன் வைத்த தலித் மக்களுக்கு விடுதலை, சுய மரியாதை, புதிய வழி வகுத்தல் முதலானவை  தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றது.

பகுஜன் சமாஜ் கட்சி உத்தர பிரதேச மாநிலத்தில் வளர ஆரம்பித்தது. மாயாவதி நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக போட்டியிட்டு நான்காவது முயற்சியில் 1989-ல் பிஜ்னோர் தொகுதியில் 1,93,189 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அந்த கால கட்டத்தில் கட்சியின் நிலையைப் பற்றி பிற்காலத்தில் சொல்லும் போது கன்ஷிராம்,

‘நன்கு பணபலம் இருந்திருந்தால் 1987லேயே மாயாவதி நாடாளுமன்றத்திற்கு போயிருப்பார். அந்த தேர்தலில் பெரும் முயற்சிக்குப் பிறகு 87,000 ரூபாயை மட்டுமே திரட்ட முடிந்தது. பணத்தில் மிதந்த மற்ற கட்சிகளை தோற்கடிக்க அது போதவில்லை. அப்போதுதான், நாம் வளர வேண்டுமானால் நாம் கட்சிக்கு ஒரு நிதி அடிப்படையை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்’ என்று குறிப்பிட்டார்.

‘நமது கட்சியை வளர்க்க வேண்டும் என்பதால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிதி திரட்ட முயற்சிக்க வேண்டும். மற்ற கட்சிகள் பணத்தில் மிதக்கின்றன, அவற்றுடன் போட்டியிட வேண்டியிருக்கிறது. இப்போது நாம் ஆட்சியில் இருப்பதால் கட்சியின் வளர்ச்சிக்கு தேவைப்படும் பணம் பற்றி நீங்கள் மறந்து விடக் கூடாது. தில்லியில் அதிகாரத்தை பிடிப்பதுதான் கட்சியின் குறிக்கோள்’ என்று கட்சியினருக்கு வழி காட்டினார்.

இதுதான் தேர்தல் அரசியல் மூலம் அதிகாரத்தை பிடிக்க முயலும் எந்த ஒரு ஓட்டுக் கட்சிகளும் சந்திக்கும் நிதர்சனம்.

கன்ஷி-ராம்
கன்ஷி ராம்

தலித் மக்களுக்கு மட்டுமாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவு தளத்தை பரவலாக்கி, அதிகாரத்தைப் பிடிப்பது என்ற செயல் திட்டத்தை உருவாக்கிய மாயாவதி. 1993-ல் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு 39 வயதில் உத்தர பிரதேசத்தின் இளைய முதலமைச்சராகவும் இந்தியாவின் முதல் தலித் பெண் முதலமைச்சராகவும் ஆனார். 1997-லும் 2002-லும் பாரதிய ஜனதா எனும் பார்ப்பன ஆதிக்க சாதிகளின் பிரதிநிதியாக செயல்படும் கட்சியின் துணையுடன் முதலமைச்சரானார்.

அடுத்து இந்த இடைத்தரகர்கள் மூலம் ஆதிக்க சாதியினரின் வாக்கை பெறுவதை விட, நேரடியாக பகுஜன் சமாஜ் கட்சியையே அனைத்து பிரிவினரின் கட்சியாக மாற்றுவது என்ற அடிப்படையில், ‘தலித் மக்களுக்கு விடுதலை’ என்ற நிலைப்பாட்டை ‘அனைத்து சமூகத்தினருக்கும் சமவாய்ப்பு’ என்று மாற்றிக் கொண்டார். கொள்ளையடித்தவர்களையும் கொள்ளையடிக்கப்பட்டவர்களையும் சமமாக பாவிப்பதுதான் அனைத்து சமூகத்தினருக்கும் சம வாய்ப்பு என்ற முழக்கம்.

2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை நடந்த முலாயம் சிங் யாதவின் குண்டர் ஆட்சியினால் வெறுத்துப் போயிருந்த நிலையில் மக்களின் வாக்குச் சீட்டு சூதாட்டம் மூலம் 2007-ம் ஆண்டு தனிப் பெரும்பான்மையுடன் உத்தர பிரதேச மாநிலத்தின் ஆட்சியை பிடித்தார் மாயாவதி. அதை சாதிப்பதற்கு தலித் மக்களை ஒடுக்கி வரும் பார்ப்பன, பனியா சாதியினரின் ஆதிக்கத்தை கட்சிக்குள் அனுமதிக்க வேண்டியிருந்தது.

தேர்தல் அரசியலில் இன்னும் வளர, இந்தியா முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சியை பரப்புவதற்கு நிதி தேவைப்பட்டது, நிதியை வழங்குபவர்கள் தரகு முதலாளிகளும் அவர்களது ஏஜெண்டுகளும்தான். இதன் மூலம் நிதியை குவித்து பல மாநிலங்களில் கட்சியை பரப்ப முயற்சி செய்தார் மாயாவதி. தமிழ்நாட்டில் கூட பகுஜன் சமாஜ் கட்சி கிளை ஆரம்பிக்கப்பட்டது.

மாயாவதி முதன் முதலில் முதலமைச்சராகி 20 ஆண்டுகள் ஆகி விட்டன. அவரது கட்சி தனியாக அதிகாரத்தை பிடித்து 5 ஆண்டுகள் ஆட்சி நடந்து முடிந்திருக்கிறது. இருந்தும் உத்தர பிரதேசத்தில் வாழும் தலித் மக்களின் வாழ்க்கையில் எதுவும் மாறி விடவில்லை.

2010-ம் ஆண்டு அந்த மாநிலத்தின் மேற்கு பகுதி மாவட்டம் ஒன்றிலும், கிழக்கு பகுதி மாவட்டம் ஒன்றிலும் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ‘தலித் மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினரிடம் மட்டுமே தொலைக்காட்சி இருக்கிறது, 95% மக்கள் சமைப்பதற்கு விறகு அடுப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள். 10% மட்டுமே மோட்டர் சைக்கிள் வைத்திருக்கும் அளவு வசதி உடையவர்கள்’ என்று தெரிய வந்தது. தலித் குழந்தைகளில் சுமார் 35 சதவீதத்தினர் பள்ளிக்கு போவதில்லை. பெண் குழந்தைகளில் சுமார் 40 சதவீதம் பள்ளிக்கு போவதில்லை.

2009-ம் ஆண்டு இந்திய குற்றங்கள் பற்றிய ஆய்வறிக்கையின் படி தேசிய அளவில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் நாட்டிலேயே அதிக அளவாக 22.4% உத்தரபிரதேசத்தில் நடந்தன. தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் கொலை வழக்குகளில் 37.5 சதவீதமும், பாலியல் வன்முறைகள் 23.8 சதவீதமும் உத்தர பிரதேச தலித்துகளுக்கு எதிராக நடத்தப்பட்டன.

அனைத்து சமூகத்தினரையும் திருப்திப்படுத்தும் மாயாவதியின் கொள்கையின் காரணமாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்வதை மட்டுப்படுத்துமாறு மாயாவதி உத்தரவிட்டிருந்தார். கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய பலர் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து சட்டசபை உறுப்பினர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள்.

மாயாவதி தலித் விடுதலைக்கு சிறப்பாக முன் வைத்த நடவடிக்கை அம்பேத்கர், பூலே, கன்ஷிராம் போன்ற தலித் தலைவர்களுக்கு சிலைகளுக்கும் நினைவுச் சின்னங்களும் அமைப்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. ‘முந்தைய அரசுகள் தலித் தலைவர்களின் மீது போதிய மரியாதையை காட்டவில்லை’ எனவும், ‘அதை சரி செய்ய இந்த செலவு அவசியமானது’ என்றுத் அவர் சொன்னார்.

ஆனால் சிலைகளும் நினைவுச் சின்னங்களும், எதிரிகளை வசை பாடுவதும் தலித் மக்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ள போதுமானதாக இருக்கவில்லை. தலித் மக்களின் உண்மையான விடுதலைக்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இயலாத, அதற்கு எதிரான அரசியலில் தெரிந்தே நீந்திக் கொண்டு தம்மை நம்பி இருக்கும் கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு துரோகமிழைத்தார் மாயாவதி.  தரகு முதலாளிகளிடம் பணம் வசூலித்து, தனக்கு கொஞ்சம் பணம் ஒதுக்கிக் கொண்டு தன்னைச் சுற்றி இருக்கும் கட்சியினருக்கு மீதியை வினியோகிக்கும் ஒரு ஏஜென்டாக மட்டும் செயல்படுகிறார். அவர் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் தலித் மக்கள் இன்னமும் நிலப்பிரபுத்துவ கொடுமைகளிலும் மறுகாலனியாதிக்க சுரண்டலிலும் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

மாயாவதி போன்ற அரசியல்வாதிகளை கட்டுக்குள் வைத்திருப்பது தரகு முதலாளிகளுக்கும் நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கும் கைவந்த கலை. அவர் முதலமைச்சராக இருந்த போது நடந்த ஊழல்களை விசாரிக்க மத்திய புலனாய்வுத் துறை என்ற நாய் ஏவப்பட்டு வருமானத்துக்கு மேல் சொத்து சேர்த்த வழக்கு, தாஜ் காரிடார் வழக்கு என்று வரிசையான வழக்குகள் அணிவகுத்திருந்தன.

ஆட்சியை இழந்த பிறகு திமுகவினர் மக்கள் பிரச்சனைகளை புறக்கணித்து விட்டு, தமது கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவதை எதிர்த்து போராடுவதைப் போல பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதியின் சிலை உடைக்கப்பட்டது குறித்து மட்டுமே போராட முடிகிறது. உண்மையான மக்கள் பிரச்சனைகளுக்காக போராடினால் ஆளும் சக்திகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும், அப்படி அதிருப்திக்கு ஆளானால், சேர்த்து வைத்திருக்கின்ற ஊழல் மூட்டைகளை அவர்கள் அவிழ்த்து உதற ஆரம்பிப்பார்கள். அதனால் வாயை மூடிக் கொண்டு, கையை கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியிருக்கிறது, உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கு போராடுவதாக பாவலா காட்ட வேண்டியிருக்கிறது.

சுமார் 30 ஆண்டுகளில் ஒரு தலித் கட்சி போலி ஜனநாயகத்தின் எல்லா கட்டங்களையும் கடந்து சீரழிந்து நிற்கிறது. 1977-ம் ஆண்டு மாயாவதி கன்ஷிராமை முதன் முதலில் சந்தித்த போது நடந்த உரையாடலிலிருந்து அந்த சீரழிவின் ஆரம்பத்தை புரிந்து கொள்ளலாம்.

தில்லியின் இந்தர்புரி ஜேஜே காலனியில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டே ஐஏஎஸ் தேர்வுகளுக்காக தயாரித்துக் கொண்டிருக்கும் போது மாயாவதி கன்ஷிராமை சந்தித்தார்.

‘நீ ஒரு பெரிய தவறை செய்கிறாய் என்று நான் நினைக்கிறேன். உன் தைரியம், தலித் மக்கள் மீதான அர்ப்பணிப்பு மற்றும் பல இயல்புகள் எனது கவனத்துக்கு வந்திருக்கின்றன. நீ ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக ஆவதை விட பல ஐஏஎஸ் அதிகாரிகள் உன் முன் காத்திருந்து உத்தவுகளை பெற்றுச் செல்லும்படியான அரசியல் தலைவராக வேண்டும். அதன் மூலம் நீ உண்மையிலேயே சமூகத்துக்கு சேவை செய்து தலித்துகளை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கலாம்” என்று கன்ஷிராம் சொன்னாராம்.

பார்ப்பன சம்மேளனத்தில் மாயாவதி
பார்ப்பன சம்மேளனத்தில் மாயாவதி

உண்மையில், மாயாவதியை ஐஏஎஸ் படிப்பிலிருந்து காப்பாற்றிய கன்ஷிராமும் பெரிய தவறைத்தான் செய்திருக்கிறார். பார்ப்பனீய இந்துத்துவ சமூகத்தில் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் சுமார் 20% இருக்கின்றனர். இன்றைய போலி ஜனநாயக அமைப்பில் தேர்தல் மூலம் அதிகாரத்தைப் பிடிப்பதற்கு தலித்துகளை சுரண்டும் ஆளும் வர்க்கத்திடமே சமரசங்களை செய்ய வேண்டியிருக்கிறது.

அப்படி அதிகாரத்தைப் பிடித்து விட்டாலும், பிற்போக்கு சக்திகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றங்கள், மத்திய அரசு, பெருநிறுவனங்கள், ஊடகங்கள் ஆகியோரின் கட்டளைக்கிணங்கத்தான் செயல்பட முடிகிறது. மாயாவதியிடம் பல ஐஏஎஸ் அதிகாரிகள் உத்தரவு பெற்று சென்றாலும், அந்த உத்தரவுகளை பிறப்பிப்பவர்கள் மக்களை சுரண்டிக் கொண்டிருக்கும் தரகு முதலாளித்துவ சக்திகளும், நிலப்பிரபுத்துவ பிற்போக்கு வாதிகளும்தான்.

உண்மையில் தலித் மக்களுக்கு விடுதலை பெற வேண்டுமானால், உத்தர பிரதேச மக்கள் தொகையில் 21% (3.5 கோடி பேர்) இருக்கும் தலித் மக்கள் ஒடுக்கப்படும் மற்ற உழைக்கும் மக்களுடன் கை கோர்த்து அரசு அதிகாரத்தை கைப்பற்றும் புரட்சிகர அமைப்புகளில் சேர்ந்து போராட வேண்டும். அப்படித்தான் உழைக்கும் மக்களின் உண்மையான சர்வாதிகாரத்தை நிறுவமுடியும்.

மாறாக தற்போதைய அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ அமைப்பினுள் மாற்றங்களை செய்ய முயற்சிப்பவர்கள் அமைப்பின்  சூத்திரதாரிகளால் இயக்கப்படுபவர்களாகவே சீரழிவார்கள் என்பதுதான் மாயாவதியின் வரலாறு சொல்லும் பாடம்.

பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் மாயாவாதியின் இந்த துரோகப் பாதையையே பல்வேறு தலித் அறிவுஜீவிகள் இயக்கங்கள் நியாயப்படுத்தி வருகிறார்கள். கேட்டால் மற்றவர்கள் யோக்கியமா என்று தனது அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்துகிறார்கள். மற்ற கட்சிகள் இதுவரை சொத்து சேர்த்து அதிகாரத்தை ருசிக்கவில்லையா, இப்போதுதானே நாங்கள் சுவைக்க ஆரம்பித்திருக்கிறோம் என்று வெட்கமில்லாமல் பிழைப்புவாதத்தை சரியென்று கூறுகிறார்கள்.

மாயாவாதி தலித்துகளிடம் காசு திரட்டியிருந்தால் இப்படி 111 கோடி சுருட்டியிருக்க முடியாது. கோடிகளை வழங்கியவர்கள் முதலாளிகள் எனும் போது அந்தக் கட்சி மட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதாக எப்படி இயங்க முடியும்? உ.பியிலோ, பீகாரிலோ அன்று முதல் இன்று வரை நக்சல்பாரி அமைப்புகள்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் கலங்கரை விளக்காக செயல்படுகின்றன. இதை விடுத்து தேர்தல் அரசியலில் சங்கமிக்கும் எந்த தலித் அமைப்பும் ஆளும் வர்க்கத்தின் அடிமையாக மட்டுமே செயல்படமுடியும். அந்த அடிமைத்தனத்திற்க்காக சொத்தும், ஆடம்பர வாழ்க்கையும் கிடைக்கும் என்றாலும் தலித் மக்களுக்கு எதுவும் கிடைக்காது என்பதோடு அவர்களது விடுதலைக்கான அரசியல் வழி என்பது சாத்தியமில்லை என்றே இவர்கள் உரக்கக் கூறுகிறார்கள். அதனால் தலித் மக்கள் இத்தகைய பிழைப்புவதிகளை அவர்கள் தலித்துக்களே, தலித் கட்சிகளே ஆனாலும் புறக்கணிக்க வேண்டும். புரட்சிகர அமைப்புகளில் அணிதிரளவேண்டும்.

______________________________________________________

– அப்துல்.

_______________________________________________________