Monday, November 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 817

அங்காடித் தெருவில் சொல்லப்படாதது என்ன?

204

vote-012அறுசுவைகளில் இனிப்பை மட்டும் ருசியாக கொண்டாடும் குஷிப் பேர்வழிகளைத் தவிர்த்து அனைவரையும் அங்காடித் தெரு ஏதோ ஒருவிதமாய் பாதித்திருப்பதில் வெற்றியடைந்திருக்கிறது.

தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரு பேரங்காடியில் குவிக்கப்பட்டிருக்கும் வண்ணமயமான பொருட்களோடு பொருளாக ஆனால் சாயம் போய் வாடிப்போயிருக்கும் உயிருள்ள மனிதர்களை, சிப்பந்திகளை காட்டுவதற்கு ஒரு தமிழ் சினிமா இயக்குநர் துணிந்திருப்பது ஆச்சரியமானது. அதனால் பாராட்டுக்குரியது. ஆனால் பாராட்டியவர்களும், படத்தின் சோகத்தை அருந்தியவர்களும் இந்த நவீன கலை ஊடகத்தின் பிரதியினால் ஒரு பொதுவான மனிதாபிமானம் என்பதைத் தாண்டி ஒரு அழுத்தமான பாதிப்பை அடைந்திருப்பார்களா என்பதில் நிறைய ஐயமிருக்கிறது.

ஏழ்மையை பார்த்து மட்டுமே உணரும் எவரிடமும் ஏற்படும் மனிதாபிமானம் எத்தகையது? குறிப்பாகச் சொன்னால் ஏழ்மையை சுலபமாக புரிந்து கொள்ளமுடியுமா?

விபத்து, தற்கொலை, இரத்தம், எதிர்பாராத அடிகள், துன்பங்கள் என்பதைக் காட்டித்தான் ஏழ்மையைக் காட்ட முடியுமென்று வசந்த பாலன் நினைத்திருப்பது பா வரிசைப் படங்களிலிருந்து தமிழ் சினிமா மரபு கொண்டிருக்கும் உத்திதான். நல்லதங்காள் கதையைக் கேட்டு வளர்ந்த நாடுதானே இது? ஆனால் இன்று நல்லதங்காள் என்ற சோகத்தின் அரசி கதையில் அல்ல, அன்றாடம் நாளிதழில் அடிபடும் ஒரு செய்தித் துணுக்காக மாறிவிட்டாள். நமக்கும் நல்லதங்காள் உத்தி இன்று போதுமானதல்ல.

_________________________________________

கண் முன்னே கொடுரமாக அடிபட்டுத்தான் ஒரு எளியவனின் துன்பத்தை உணர முடியுமென்றால் நாம் எந்தக் காலத்திலும் உழைக்கும் வர்க்கத்தின் அவலத்தை புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் ஏழ்மையின் வாழ்வில் இத்தகைய திடுக்கிடும் திருப்பங்களை விட மெல்லக் கொல்லும் ‘அமைதியான’ வாழ்க்கைதான் கண்முன் காணும் உண்மை. அந்த உண்மையை ஊடுறுவிப் பார்ப்பது எப்படி? ஒரு விபத்தில் செத்துத்தான் ஒரு ஏழை தனது அவலத்தை புரியவைக்க முடியுமென்றால் சாகாத ஏழைகளின் கதி?

கே.கே நகர் விபத்து, லிங்கத்தின் தந்தை விபத்து, இரக்கமற்ற முதலாளி அண்ணாச்சி, கொடுரமான கங்காணி அண்ணாச்சி, இதயத்தை உலுக்கும் அந்த காதல் பெண்ணின் தற்கொலை, அவள் காதலனது மனமுடைந்த அவலம், கனியின் தங்கை நாகம்மையின் சித்தரிப்பு,  நின்ற கால் வியாதியால் சாகும் தொழிலாளி, மந்தைகளைப் போல அடைந்து வாழும் சிப்பந்திகள் என்று படம் முழுவதும் வரும் சோகங்கள், அவை கற்பனையல்ல உண்மை என்றாலும் படத்தில் அதிர்ச்சியை மிகையாக ஏற்படுத்த வேண்டுமென்பதாக மாறிவிட்டன. இவை அளவாக பயன்பட்டால் இயக்குநர் தான் காட்டவிரும்பும் கதை உணர்ச்சியை உணர்த்த முடியாது என்று நினைத்திருப்பரானால் அது அவரது பலவீனம். இயல்பாக செய்திருந்தால் அது அவரது அறியாமை.

அழகான, சுத்தமான, நவீனமான வாழ்க்கையில் முங்கித் திளைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தை இப்படிக் காட்டித்தான் அழவைக்க முடியுமென்றால் அந்த அழுகையின் காலம் சிலமணித்துளிகள் மட்டும்தான். சாரமாகச் சொன்னால் ஏழைகளின் அவலத்திற்கு காரணமான வாழ்க்கையை வாழக்கூடியவர்களில் நானும் ஒருவன் என்ற எண்ணத்தை ஆழமாக உணர்த்த வைப்பதுதான் கடினமென்றாலும், தேவையானது. அது அங்காடித் தெருவில் இல்லை.

ஒரு மலக்குழிக்குள் இறங்கும் தொழிலாளியின் நிலையைப் புரிந்து கொள்ள காமராவும் கூட இறங்குவது தவறென்று சொல்லவில்லை. ஆனால் சாக்கடைகளின் வாழ்க்கையை அறியாத ‘சுத்தமான’ சாக்கடைகளை அது மட்டுமே சுத்தப்படுத்திவிடாது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஜி – 8 குழும நாடுகளது அதிபர்களின் கூட்டத்திற்கு மேலைநாடுகளின் தன்னவார்வக்குழுக்கள் MAKE POVERTY HISTORY வறுமையை வரலாற்றாக்கு என்ற முழக்கத்துடன் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகளை நடத்தின. மேற்கத்திய நாடுகளின் பிரபலமான எல்லாப் பாடகர்களும் அதில் பங்கேற்றனர். இவர்களது கோரிக்கை வறுமையில் இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளின் கடன்களை மேலைநாடுகள் இரத்து செய்யவேண்டுமென்பதுதான். ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையே ஏகாதிபத்தியங்களின் உற்பத்தியென்பதை மறுக்கும் இந்த அபத்தத்தை விட்டுவிட்டு பார்த்தால் ஒரு காட்சி மட்டும் இப்போது நினைவுக்கு வருகிறது.

இசை நிகழ்ச்சிகளின் இடையில் அவ்வப்போது ஆப்பிரிக்க நாடுகளின் வறுமை புள்ளவிவரங்களையும், சில ஆவணப்படங்கள் போன்ற காட்சித் துணுக்குகளையும் காட்டினார்கள். ஒரு ஆப்பிரிக்க குடிசையில் தாயும் சிறு குழந்தைகளும். குழந்தைகள் அம்மாவிடம் பசிக்கிறது என்று அடிக்கடி பலவீனமான குரலில் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அம்மாவும் சமையல் தயாராகிறது என்று அடுப்பையும், பாத்திரத்தையும் காட்டியவாறு இருக்கிறாள். பாத்திரத்திலிருந்து சமையலின் புகை பரவுகிறது. அதைப் பார்த்தவாறே குழந்தைகள் பின்னர் ஏக்கத்தில் தூங்கிப் போகிறார்கள். உண்மையில் அந்தப் பாத்திரத்திலிருந்த நீரில் ஏதோ சில மரக்குச்சிகள் மட்டுமே இருந்தன. ஏதோ ஒன்று சமைப்பதாக குழந்தைகளை போக்குகாட்டி தூங்கவைக்கும் அந்தப்பெண்ணுக்கு இது தினசரி வாடிக்கை. எந்தக்குறுக்கீடோ, தயாரிப்போ, திட்டமோ இன்றி எடுக்கப்பட்ட இது போன்ற பல காட்சிகளைக் காட்டினார்கள்.

ஆப்பிரிக்க குழந்தைகளின் எலும்புக்கூடு தோற்றம், வயிறு வீங்கிய உடம்பு, ஈ மொய்க்கும் உதடுகள், அப்புறம் எத்தனை இலட்சம் பேர் இறந்தார்கள் என்ற காட்சிகளும், செய்திகளும், புள்ளிவிவரங்களும் உணர்த்தத் தவறிய ஒரு வேதனையை அப்போது நான் உணர்ந்தேன். நான் இலக்கியவாதி இல்லையென்பதால் அந்த உணர்ச்சியையும், காட்சியையும் இங்கே அப்படி பதிவு செய்திருப்பேனா என்பது சந்தேகம் என்றாலும் யாரும் அந்த தாயின் வேதனையைப் புரிந்து கொள்ளலாம்.

நேரிட்டு பார்க்கும் யதார்த்தம் மட்டுமே உண்மையல்ல. யதார்த்தம் பற்றி பழக்கடுத்தப்பட்ட பார்வை வழியாகவே நாம் பார்க்கிறோம். அதுவே தன்னளவில் உண்மையை வழங்கிவிடாது. விக்கிபீடியாவிலோ, இல்லை பல புள்ளிவிவரங்களிலோ இருக்கும் செய்திகளையும், கணக்குகளையும் பலர் உண்மைகளாக நம்புகிறார்கள். அந்த செய்தியை அதனோடு தொடர்புள்ள ஏனைய சமூக வாழ்வின் இயக்கத்தை அல்லது வரலாற்றின் உணர்ச்சியில் பொருத்தித்தான் புரிந்து கொள்ள முடியும். அல்லது உண்மையைக் கண்டுபிடிக்கமுடியும்.

___________________________________________________

வசந்த பாலன் அங்காடித் தெருவை எடுப்பதற்காக நிறைய முயற்சிகள் செய்து விவரங்கள் சேகரித்திருக்கிறார். இதையெல்லாம் உள்ளொளியில் கண்டு கொள்ளலாம் என்ற ஜெயமோகன்களது மேதைத்தனம் அவரிடமில்லை என்பது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் இயக்குநர் சேகரித்த விவரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, முரண்பட்டு, வேறு ஒரு உண்மையை, யதார்த்த்த்தை, புதிய கண்டுபிடிப்பை உணரும், கலையும் தத்துவமும் இணைந்து சாத்தியமாக்கும் கதையை அவரால் எழுதமுடியவில்லை. அதுதான் மிகையான சோகக்காட்சிகள் மூலம் காட்டிவிடலாம் என்று போயிருக்குமோ?

முதலாளி அண்ணாச்சியின் சித்தரிப்பு ஒரு எடுத்துக்காட்டு. தீவிர கடவுள் பக்தர், எச்சக்கையை ஆட்டினால் இங்கேயே ஆள் கிடைக்குமென்ற திமிரான எக்காளம், விளம்பரத்திற்காக சினேகாவை முந்தானையை  விரித்து ஆடச் சொல்வது, பொய்ப் புகார் மூலம் கடைச் சிப்பந்தியான லிங்கத்தை போலீசு மூலம் அடிக்க வைப்பது, வியாபார நலனுக்காக எப்போதும் இரக்கமின்றி பேசுவது எல்லாம் முதலாளி அண்ணாச்சியைப் பற்றிய உண்மையான சித்தரிப்புகள் என்றாலும், அண்ணாச்சிகள் என்று பார்த்தாலும், நவீன முதலாளிகள் என்று போனாலும் அவையே முழு உண்மையல்ல.

அம்பானியோ, டி.வி.எஸ், ஹூண்டாய் முதலாளிகளெல்லாம் அண்ணாச்சிகள் போல கடுஞ்சொல் பேசி சாட்டையைச் சுழட்டும் நம்பியார் டைப் வில்லன்களல்ல. ஒரு வேளை வசந்த பாலன் அவர்களைப் பற்றி படமெடுக்க விவரங்கள் சேகரித்திருந்தால் அவரால் மணிரத்தினத்தின் குரு போலவோ அல்லது அதற்கு கம்மியாகவோதான் எடுத்திருக்க முடியும். ஆனால் இந்த நாகரீக முதலாளிகள்தான் அநாகரீக அண்ணாச்சி முதலாளிகளை விட தொழிலாளிகளை மட்டுமல்ல முழு சமூகத்தையும் இழிவாகவும், சுரண்டியும் நடத்தி வருகிறார்கள். சோப்பு, சீப்பு, பாத்திரம், துணி விற்பதற்காக சிநேகவை பளிச்சென்று சிவப்பு கலர் சேலையில் குத்தாட்டம் போடச்சொல்லும் அண்ணாச்சியை விட, கிங்ஃபிஷரின் காலண்டருக்காக ஏதோ ஒரு தீவில் பிகினி, முக்கால் நிர்வாணப் பெண்களைக் கூட இருந்து படமெடுக்கும் விஜய் மல்லையாக்கள்தான் ஆபத்தானவர்கள்.

படத்தின் கதையில் நாயகர்களான கடைச் சிப்பந்திகளது வில்லன்களாகத்தான் அண்ணாச்சி வருகிறார். ஆனால் முதலாளிகளான அண்ணாச்சிகளது ஆளுமையை அப்படி வில்லன் பார்வை இல்லாமலே கூட சாரத்தைச் சரியாகச் சித்தத்திருப்பதன் மூலம் அந்த நோக்கத்தை இன்னும் பரந்த அளவில் செய்திருக்க முடியும். ஏனெனில் அண்ணாச்சிகளின் உருவாக்கம் என்பது அவர்களது தனிப்பட்ட பண்புநலன்களால் மட்டும் உருவாகிவிடுவதில்லை. பல்வேறு சமூகக்காரணிகளின் பின்புலத்தில்தான் அவர்கள் ‘அப்படி’ இயங்குகிறார்கள்.

____________________________________________________

ஏதோ ஒரு தீபாவளி நாளில் கடைத்தெருவுக்கு சென்ற போது எல்லா கடைகளும் பூட்டியிருந்தன. திறந்திருந்த ஒரு அண்ணாச்சி கடையில் தீபாவளிக்கு ஊருக்கு போகவில்லையா என்று கேட்டேன். “பொழப்புக்காக மஞ்சப்பையை எடுத்துட்டு என்னைக்கு வந்தமோ அன்னையிலிருந்து தீபாவளியாவது, பொங்கலாவது” சலிப்புடன் சொன்னார்.

அண்ணாச்சியாக நடித்திருக்கும் பழ.கருப்பையாவின் செட்டியார் சாதிதான் தமிழகத்தின் மரபார்ந்த வணிக சாதி. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உழைப்பே இல்லாத சுரண்டல் வட்டிக்கடையின் மூலம் சொத்து சேர்த்து பர்மாத் தேக்கில் அரண்மனை வீடுகள் கட்டி இன்று ப.சிதம்பரமாகவும், எம்.ஏ.எம். சிதம்பரமாகவும், ஸ்பிக் முத்தையாவாகும், அரசுவேலை, தொழில் என்று நடுத்தரவர்க்கமாகவும் இருக்கும் செட்டியார்களுக்கும், புதிய வணிக வர்க்கமாக தலையெடுத்திருக்கும் நாடார்களுக்கும் பாரிய வேறுபாடு உண்டு.

பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பில் கடைநிலையில் இருந்த நாடார் மக்கள் பொதுவான சீர்திருத்தத்தின் மெதுவான முன்னேற்ற வளர்ச்சியில் மாறியவர்கள். சுயசாதி முன்னேற்றம், கூட்டுதவியின் மூலம் சற்று நிறுவன மயமான சாதியும் கூட. எனினும் பெரும்பாலான நாடார் மக்கள் செட்டியார்களைப் போல முழுதாக வாழ்க்கையின் பங்கைப் பெற்றவர்களல்ல. சிலர் முதலாளிகளாகவும், பெரும் வியாபாரிகளாகவும் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் சிறு கடைகளை வைத்து அதற்குமேல் முன்னேற முடியாத நிலைமையில்தான் காலம் தள்ளுகிறார்கள்.

இந்த சிறு கடை அண்ணாச்சிகளின் வாழ்க்கை அங்காடித்தெரு காட்டும் உக்கிரத்தை விட அவலமானது. அதே போல இந்தக்கடைகளில் பயிற்சிக்காகவும், எதிர்கால பிழைப்புக்காகவும் வரும் இளைஞர்களின் நிலையும் அப்படித்தான். சரவணா ஸ்டோர் அண்ணாச்சியைப் போலவோ இல்லை இன்னும் அதிகமாகவோ இந்த சிறு கடை வியாபாரிகள் தனது பணியாட்களை நடத்துவார்கள். “அப்படித்தான் நானும் கஷ்டப்பட்டு இளமையைத் தொலைத்து, தொழிலைக் கற்று கடைவைத்தேன்” என்று அவர்களால் அதை நியாயப்படுத்தவும் முடியும்.

இன்று இந்த சிறு கடை அண்ணாச்சிகளது வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறிவிட்டது என்றாலும் எல்லாவகை அண்ணாச்சி முதலாளிகளும், வியாபாரிகளும் இப்படி கடினமாக நடந்து கொள்வதை இப்படித்தான் பேசுகிறார்கள். அது ஜனநாயகமற்ற நிலவுடைமைச் சமூகத்தின் அழிவிலிருந்து பொருளாதார ரீதியாக மாறும் சிரமத்தில் வேர் கொண்டிருக்கிறது. வேறு வகையில் சொன்னால் ஒரு குறைந்தபட்ச வாழ்க்கையை நேர்மையோடு அமைத்துக் கொள்வதற்கே இவ்வளவு சிரமப்படவேண்டியிருக்கிறது என்றால் அவர்களது தனிப்பட்ட நடவடிக்கைகளில், தொழிலில் ஜனநாயக உணர்வுகள் இருப்பதற்கு அடிப்படை இல்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

குறிப்பிட்ட காரணங்களினால் பெரும் கைகளாக உருவெடுத்திருக்கும் சரவணா ஸ்டோர், சரவண பவன் போன்ற சென்னையின் பணக்கார நாடார்களோ, அது போல இதயம் நல்லெண்ணெய் போன்ற பணக்கார விருதுநகர் நாடார்களோ, தினத்தந்தி குழும நாடார்களோ ஆரம்பத்தில் இப்படி இருந்தது உண்மையென்றாலும் அவர்களது ஆளுமையில் நிலவுடமை ஆதிக்கத்தின் சாதகங்களை பயன்படுத்திக் கொள்ளும் பொருளாதார நலன் சேர்ந்திருக்கிறது.

அவர்களது உழைப்பு, அதற்கு சமூகம் அளித்த வாய்ப்பு, அதைப் பயன்படுத்தி நிதி ஆதாரம் பெறுதல், ஆளும் வர்க்கங்களுடன் சமரசம் செய்து முன்னேறுதல் மூலம் பணக்காரர்களான இந்த நாடார்கள் தமது நிலையை தங்களது ‘உழைத்து முன்னேறிய’ கதையாக மட்டும் கருதிக் கொள்கிறார்கள். பணம் பெருகப் பெருக இந்தக் கருத்து முன்னிலும் உறுதியாக மாறுகிறது. அதே நேரம் தனது சாம்ராஜ்ஜியத்தைப் பெருக்கிக் கொள்ள இந்த சுய முன்னேற்ற கொசுவத்தி இமேஜ் காரணமாக சுயசாதியின் ஏழைகளை நயவஞ்சகமாக சுரண்டுவதற்கும் பயன்படுகிறது.

________________________________________________

சுயசாதி ஏழைகளை வைத்து தொழில் நடத்தும் முதலாளிகளைப் பற்றி தோழர் கார்க்கி அவரது அங்காடிப் பட விமரிசனத்தில் எழுதியிருக்கிறார். அதைப் படியுங்கள். அங்காடித் தெருவில் வசந்த பாலன் காட்டத் தவறிய முக்கியமான விசயம் இந்த சுயசாதி ஏழைகள் சாதிப்பற்று காரணமாக தமது முதலாளிகளை சுயமரியாதை இன்றி ஏற்கவும் செய்கிறார்கள் என்ற உண்மைதான். அதனால்தான் பொதுவில் சாதிக்காரர்கள் மட்டுமோ அல்லது பெரும்பான்மையாகவோ இருக்கும் தொழில்களில் தொழிற்சங்கம் கட்டுவது கடினம். தொழிலாளி வர்க்க உணர்வை சாதிக்காரணம் சொல்லி அழிப்பது முதலாளிகளுக்கு வசதியென்றால், அதற்கு பலியாகியிருக்கும் தொழிலாளிகளைப் பொறுத்தவரை அது விமரிசக்கப்பட வேண்டியது.

தேவர் சாதி நா.சேதுராமன் நடத்தும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மக்களிடம் கொள்ளையடிப்பதற்கு பெயர் பெற்றது. எல்லா சாதி மக்களும் வந்தாலும் அங்கே வேலை பார்க்கும் பெரும்பாலான சுயசாதி ஊழியர்கள் என்ன பிரச்சினை வந்தாலும் நிர்வாகத்தை காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பதை ஒரு சொந்த அனுபவத்தோடு ஒரு நண்பர் சொன்னார். அந்த வகையில் இந்த சுயசாதி பற்று சரவணா ஸ்டோர் ஊழியர்களிடமும் இருக்கிறது என்பதை வசந்த பாலன் காட்டியிருக்க வேண்டும். அவர்களது அவலத்தின் முக்கிய அஸ்திவாரமே இங்கேதான் இருக்கிறது. நெல்லையில் நாடார்களாக பார்த்து அதுவும் குடும்பப் பொறுப்புகள் அதிகமிருக்கின்ற இளைஞர்களை பொறுக்கி வரும் விடயத்தைப் போல இதுவும் முக்கியமான ஒன்று.

சரவணா ஸ்டோரில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்காமல் அடிமைகளாக வாழும் துயரத்தின் வலிமை இந்த சுயசாதிப் பற்றில்தான் பொதிந்திருக்கிறது. அதே போல அந்தக் கடை அண்ணாச்சியின் எடுபிடிகளது இரக்கமற்ற நடைமுறைகளும் இந்த சுயசாதி பலத்தை வைத்தே ஆடுகிறது. அங்காடித் தெரு இதை விரிவாக பேசியிருந்தால் படம் இன்னும் கொஞ்சம் ஆழமாக பயணித்திருக்கும். வில்லனைப் போல இடம் பெற்றிருக்கும் அண்ணாச்சியின் சித்திரிப்பு, ஊழியர்களின் சாதிப்பற்றை விமரிசித்திருந்தால் மட்டுமே முழுமையடைந்திருக்கும்.

இது சரவணா ஸ்டோரோடு முடியவில்லை, இந்தியா முழுமைக்கும் உள்ள பிரச்சினை. தங்களது சொத்து மரபுரிமையால் கிடைத்ததாக எண்ணும் நிலவுடைமைப் பண்ணையாரும், உழைப்பினால் பெற்றதாக கருதும் முதலாளிகளும் பல விசயங்களில் வேறுபட்டிருக்கிறார்கள். பண்ணையாரின் ஆதிக்கத்தை பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பும், முதலாளிகளின் ஆதிக்கத்தை முதலாளித்துவத்தின் ‘ஜனநாயக’மும் நியாயப்படுத்துகின்றன. மக்களும் அவற்றை இயற்கையான நீதியாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

சில அறிவாளிகள் கருதுவது போல மேற்கத்திய கல்விமுறை, மேலாண்மைப் படிப்புகள் மூலம் முதலாளிகள் ஜனநாயக உணர்வு பெறுவதில்லை. அவர்களுக்கு அதை கற்றுக் கொடுப்பது தொழிலாளிகள்தான். அதனால்தான் தொழிலாளிகளின் எழுச்சியைப் பார்த்து பீதியடைந்த முதலாளித்துவ வர்க்கம் தனது வரலாற்றுப்பாத்திரத்தை கழுவிவிட்டு பிற்போக்கான நிலவுடைமை வர்க்கங்களையும் ஆதரிப்பது என்ற நிலையை எடுத்திருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் அம்பானியின் சொந்த மாநிலத்தின் வணிக சாதி மக்கள் கணிசமான அளவில் பங்குதாரர்களாக இருப்பது தற்செயலான ஒன்றல்ல.

___________________________________________

அங்காடித் தெருவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று பலர் நினைக்கலாம். சில மேதைகள் படம் பார்த்த எழுச்சியில் கம்யூனிஸ்டுகள் சரவணா ஸ்டோரில் ஏன் சங்கம் கட்டவில்லை என்று அதிகார தோரணையில் கவலைப்படுகிறார்கள். கஷ்டப்படும் மக்களுக்காக கம்யூனிஸ்டுகள் மட்டும்தான் சங்கம் கட்டவேண்டும் என்பதில்லை. அங்காடித் தெருவுக்காக மனிதாபிமானத்தை சிரமப்பட்டு நினைவு கூறுபவர்களும் அதைச் செய்யலாம்.

சரவணா ஸ்டோரில் தொழிற்சங்கம் கட்ட முடியாது என்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று சாதிப்பற்றும், சொந்த வாழ்க்கைக்கையின் சிரமங்களும் ஏற்படுத்தும் அடிமைத்தனம். இரண்டு இத்தகைய கடுமுழைப்பு வேலை செய்யும் தொழிலாளிகள், பொழுது போக்கு என்பதற்கே வாய்ப்பற்ற நிலையில் தொழிற்சங்கம் என்ற பணிக்கு சமூக நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கும் யதார்த்தம்.

ஆனால் சரவணா ஸ்டோரில் சங்கம் கட்ட முயன்று தோல்வியடைந்ததாக வைத்துக் கூட இதைவிட ஒரு நல்ல படம் எடுத்திருக்க முடியும். இதனால் நாங்கள் சினிமாவை ‘கட்சிப் பிரச்சாரத்திற்காக’ விமரிசிப்பதாக எண்ணும் நண்பர்கள் இங்கே சங்கம் கட்ட முயன்று தோற்றதைத்தான் படமெடுக்கமுடியும் என்ற வாக்கியத்தையும் நினைத்து விட்டு பேசவும்.

தலித்துக்கள், ஏழைகள் போன்ற ஒடுக்கப்படும் பிரிவினர் அவர்களது அடிமைத்தனத்தை மூடியிருக்கும் உலகத்தில் இருந்து கொண்டு மட்டும் விடுதலையை உணர முடியாது. அது அவர்களது உலகிற்கு வெளியிலிருந்தே வருகிறது. கிராமத்தில் இருக்கும் வரையிலும் தீண்டாமையை காலம் காலமாக இருக்கும் ஒரு பழக்கம் என்று சகித்துக் கொள்ளும் ஒரு தலித் அவனது வாழ்க்கைத் தேவைக்காக கிராமத்தை விட்டு வெளியேறலாம் என்ற ஒரு அரசியல் சூழல் உருவாகி நகரத்துக்கு சென்று அங்கே சமத்துவத்தை கண்டு, அனுபவித்து பின்னர்தான் தனது கிராமத்துக்கு திரும்பும் போது அந்த தீண்டாமையை எதிர்க்க வேண்டுமென்ற உணர்வைப் பெறுகிறான்.

அடுப்படியில் அடைபட்டிருக்கும் பெண்கள் கூட ஆண்கள் நிறைந்திருக்கும் சமூகவெளியில் புழங்கும்போதுதான் தமது சமூக அடிமைத்தனத்தை உதறவேண்டுமென்ற விருப்பத்தை அடையமுடியும். இங்கே வலியுறுத்துவது அடிமைகளின் உலகிலோ, இல்லை அடிமைகளின் மூளைகளிலோ அவர்களது விடுதலைக்கான அவா பிறக்க முடியாது. அது வெளியிலிருந்தே வருகிறது.

அங்காடித் தெரு அந்த ‘வெளிப் பார்வையை’க் கொண்டிருக்கவில்லை. மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளின் மூலம் ஊழியர்களின் சோகத்தை காட்டியிருப்பதற்குப் பதில் இந்த வெளியுலகோடு அவர்களை பிணைக்கும் வகையில் யோசித்திருந்தால் ‘அமைதியான’ முறையிலேயே அந்த அவலத்தை வியப்பூட்டும் வண்ணம் பார்வையாளர்களுக்கு நெஞ்சில் அறைந்து சொல்லியிருக்கலாம்.

_____________________________________________

எல்லா வகை ‘கருத்துச் சுதந்திரமும்’ உள்ள சென்னை மாநகரில் வாழும் அந்த கடை ஊழியர்கள் தனித்த பாலைவனத்தில் வாழ்வது போல வாழ்கிறார்கள். இது ஒருவகையில் உண்மையென்றாலும் மற்றொரு வகையில் உண்மையல்ல. பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளை எதிர்த்துக் கேட்கும் வல்லமைக்கு சான்றுகள் பெருகி வரும் காலத்தில் ஒரு சூபர்வைசர் மானாவாரியாக அடிப்பதும், கண்ட இடத்தில் கை வைத்தும் பெண் ஊழியர்களை அவமானப்படுத்துவது எப்படிச் சாத்தியம்? இவை சரவணா ஸ்டோரில் நடந்திருக்கலாம். அதையொத்த பல நிறுவனங்களில் அப்படித்தான் நடக்கிறது. நடக்க வாய்ப்பும் இருக்கிறது. ஆயினும் சமூக யதார்த்தம் என்று வரும்போது இதை நாம் இப்படியே சொல்வது சரியா?

பாலியல் வன்முறைகள் எவ்வளவு நடக்கிறது என்பதை விட அதை எதிர்த்து அவ்வப்போது பெண்கள் காட்டும் எதிர்ப்பும் வளருகிறது என்பதே முக்கியம். சரவணா ஸ்டோரில் எல்லா சூபர்வைசர்களும் அப்படி விகாரத்துடன் நடப்பவர்களாக இருக்க முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதை எப்போதும் பொறுமையாக ஏற்குமளவு அந்தப் பெண்கள் அனைவரும் அடிமைகளாக இருக்க முடியாது.

படத்தில் இந்த எதிர்ப்பு பாதிக்கப்பட்ட கனியின் காதலன் என்ற முறையில் லிங்கத்திடம் இருந்தே வருகிறது. காதலித்த குற்றத்திற்காக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்வதாக இருக்கட்டும், இல்லை பெண் ஊழியர்கள் பாலியல் வக்கிரத்துடன் தண்டிக்கப்படும் சமயங்களாக இருக்கட்டும், இதை எல்லோ ஊழியர்களும் அடிமை போல ஒரு முணுமுணுப்புக் கூட இன்றி பேசா மடந்தைகளாக ஏற்றுக் கொள்வதாகவே படத்தில் வருகிறார்கள். சூபர்வைசரின் தலையில் ஒரு மூட்டையைப் போட்டு அவமானப்படுத்தும் காட்சியும், அதன் பிறகு வரும் பாடலும் இந்த பிரச்சினையை ஒரு காமடி போலத்தான் சித்தரிக்கிறது. பாலியல் கொடுமைகளை எதிர்ப்பதற்கு நகைச்சுவையை கையிலெடுத்திருக்கும் இயக்குநரின் உத்தியை ஏற்க்க முடியவில்லை. முதலாளித்துவத்தின் கொடுமைகளை நகைச்சுவையின் மூலம் காட்டிய சார்லிசாப்ளினின் படங்களில் அவை இறுதியில் வெறும் காமடியாக மட்டும் உணரமுடியாத வண்ணம் அழுத்தமான சோகத்தை உணர வைக்கிறது.

அந்தப் பேரங்கடியில் அண்ணாச்சியின் கருங்காலிகளாக வேலை பார்ப்பவர்கள் ரவுடி போல இருப்பது பிரச்சினையல்ல. இதை ஏற்றுக் கொண்டு வேறு வழியின்றி வாழ வேண்டிய நிலையில் இருந்தாலும் ஊழியர்களின் ‘அமைதி’தான் முக்கியமானது. இடித்துரைக்கப்பட வேண்டியது. தன் காதலியின் மீது கைவைத்தான் என்று சூபர்வைசரை பந்தாடும் லிங்கம், கூடவே அமைதியான அடிமைகளாக இருக்கும் தனது சக ஊழியர்களையும், தன்னையும் வார்த்தைகளால் சுட்டிருக்க வேண்டும். தென்மாவட்டங்களின் உழைக்கும் வர்க்கப் பின்னணியிலிருந்து வந்திருக்கும் அந்த பெண்களையும் உள்ளிட்ட இளைஞர்கள் இதையெல்லாம் கண்டும் காணாமல் பாராமுகமாக போய்விடக்கூடியவர்கள் இல்லை. அவர்களுக்கு தேவை ஒரு நெருப்பு. அதை படத்திலாவது இயக்குநர் பற்ற வைத்திருக்கலாம்.

_____________________________________________________

கடை ஊழியர்களை நாயக நாயகியாக்கியிருப்பதற்குப் பதில் ஒரு சூபர்வைசரை மையமாக்கி அங்காடி தெருவின் கதையைக் காட்டியிருந்தால் சரவணா ஸ்டோரின் எல்லாவகைப் பரிமாணங்களையும் ஒரு இழையில் காட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. பேஜ் 3 படத்தின் இயக்குநர் மது பண்டார்கர் முதலில் அந்தப் படத்தை மேட்டுக்குடியினரது வாகன ஓட்டுநர்களின் பார்வையில் சொல்ல நினைத்து பின்னர் மாற்றிக் கொண்டாராம். அதை ஏன் என்று அவர் விளக்கவில்லை. ஆனால் பேஜ் 3 உலகத்தின் போலித்தனத்தை அந்த உலகில் வாழக்கூடிய ஒரு பெண் பத்திரிகையாளரின் தடுமாற்றங்களிலிருந்து புரிந்து கொள்வதைப் போல ஏழை ஒட்டுநர்களின் பார்வையில் நிச்சயம் வாய்ப்பில்லை.

சூபர்வைசர்கள் சிப்பந்திகளாகவோ இல்லை அண்ணாச்சியின் உறவினர்களாகவோ இருந்து வந்திருக்கலாம். அவர்களுக்கு கீழ்மட்டத்தின் இயக்கமும், முதலாளியின் இயக்கமும், கடையின் வெற்றிக்கான பின்னணியும் தெரியும். நேர்மையானவராகவும், மனிதாபிமானியாகவும் ஆரம்பிக்கும் ஒரு சூபர்வைசர் பின்னர் அமைப்பின் இயங்குதளத்தில் மெல்ல மெல்ல பக்காவான சூபர்வைசராக மாறுகிறார். அதில் நிலை கொள்ள முடியாமல் தோல்வியடையும் ஒருவரது பார்வையில் இந்தப்படம் சொல்லப்பட்டிருந்தால் அது நாமறியாத அந்தப் பேரங்காடியின் முழுமையை உணர்த்தியிருக்கலாம்.

_________________________________________________

ஏழைகளும், நடுத்தர மக்களும் சரவணா ஸ்டோரை ஏன் விரும்புகிறார்கள் என்பதும், அதற்கு அண்ணாச்சி என்ன செய்தார் என்பதையும் அங்காடித் தெரு மருந்துக்கு கூட காட்டவில்லை. மற்ற கடைகளை விட மலிவு என்ற முறையில் மக்களிடம் இருக்கும் அங்கீகாரத்தை கேள்விக்குள்ளாக்காமால் என்ன சோகத்தை ஏற்படுத்த முடியும்? விலை குறைவு, அதிக விற்பனை என்ற சூத்திரத்தை அமல்படுத்தக் கூடிய எல்லா நிறுவனக் கட்டுமானங்களின் மூலம் உலகமெங்கும் ஆதிக்கம் செய்யும் வால்மார்ட்டைப் பற்றி கேள்விப்பட்டிராத ஒரு அண்ணாச்சி தனது கடையில் அதை அனுபவத்தின் மூலம் செய்து காட்டியிருக்கிறார்.

சரவணா ஸ்டோரில் பொருள் வாங்கினால் அதிகம் உழைக்காது என்று பேசும் மேல்தட்டினர் அதிகம் ‘உழைக்கக்’ கூடிய பெரிய நிறுவனங்களின் உடைகளை உயர் விலை கொடுத்து வாங்கினாலும் அவர்கள் அந்த உடைகளை கிழிந்து போகுமளவுக்கு பயன்படுத்தப் போவதில்லை. ஒரு ஆடையை அணிந்த பிறகு பல சுற்று முடிந்த பிறகே அதை மீண்டும் அணிய முடியும் என்ற நிலையில் அவை பழைய துணிகளாக வெளியேறுகிறது. அதுவே பத்து ரூபாய் ரெடிமேடாக தி.நகரின் பாதையோர வியாபாரிகளால் விற்கப்படுகிறது.

சரவணா ஸ்டோரின் விலை மலிவுக்கு என்ன காரணம்? வால்மார்ட்டின் மலிவுக்கான வலியை சீனத் தொழிலாளிகள் சுமப்பது போல ரங்கநாதன் தெருவின் மலிவுக்காக பல சிறு முதலாளிகளும், அவர்களது தொழிலாளிகளும் சுமக்கிறார்கள். எவர்சில்வர் பாத்திரங்களை தயாரிப்பவர்கள், பிளாஸ்டிக் பொருள் சிறு முதலாளிகள், தங்க நகை ஆசாரிகள், பட்டு நெய்யும் நெசவாளிகள் எல்லாரும் சரவணா ஸ்டோருக்காக கொத்தடிமைகளாக வாழ்கிறார்கள். அற்ப கூலிக்காக பீஸ் ரேட்டில் நெஞ்செலும்பை இழைத்து பாத்திரங்களை பளபளவைக்கும் அந்த தொழிலாளிதான் படோபடமான அங்காடித் தெருவின் அடிப்படை. சரவணா ஸ்டோர் போன்று பெரிய ஆர்டர்கள் வரும் போது அதை ஏற்கும் சிறு முதலாளிகளும் தமது மார்ஜினை தக்கவைப்பதற்கு தொழிலாளிகளை மேலும் சுரண்ட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஏக ஏழைகளுக்கு கிடைக்கும் மலிவுக்கு இன்னொரு ஏழையே தியாகம் செய்கிறான்.

சரவணா ஸ்டோருக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதே அங்கிருக்கும் ஊழியர்களின் மையமான வேலையாக இருப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். அவர்கள் ‘விற்பனை’ செய்வதற்கான நேரமும், தேவையும் அங்கில்லை. தீபாவளி சமயத்தில் கடை வாசலில் நிற்கும் செல்வரத்தினம் அண்ணாச்சி மக்களை வேறு கடைகளுக்கு போகச்சொல்லி கும்பிட்டவாறே வேண்டுகோள் விடுப்பாராம். பண்டிகைக் காலங்களில் தி.நகரின் மக்கள் கடைகள் அனைத்தும் மக்களை பன்றிக்கூட்டத்தைப் போல நடத்துவார்கள் என்பதை வேலை செய்த தோழர்கள் கூறக் கூட்டிருக்கிறேன். விலை மலிவு என்ற உண்மையில் விற்பவரும், வாங்குபவரும் தங்களது நாகரிகத்தைப் பற்றி கவலைப்படாத யதார்த்தம் சிப்பந்திகளிடம் என்ன உளவியலை ஏற்படுத்தியிருக்கும் என்பது ஒரு சுவராசியமான கேள்வி. கேரள ஓட்டல் தொழிலாளிகளின் நடத்தையில் அலட்சியத்தைக் கண்டுபிடித்த ஜெயமோகன், மனமொப்பி எழுதக்கூடிய வசனங்களுக்கு இந்த சீனில்தான் அதிகம் வாய்ப்பு.

_______________________________________________

கடை சிப்பந்திகளது மின்னல்வேக பணிகள் இடையறாது நடந்து கொண்டிருக்கும் போது அவர்கள் ஒரு வகை மனித ரோபாக்கள் போலத்தான் இருப்பார்கள். சரவணா ஸ்டோரின் இந்த உடல்மொழி படத்தில் இல்லை. இந்த மனித எந்திர அடிமை வாழ்க்கையை சென்னையின் சேரிகளைச் சேர்ந்த ஒரு உதிரிப்பாட்டாளி ஏற்கமாட்டான். வேறுவழியின்றி அவன் ஏற்றாலும் பல்வேறு வகைகளில் முதலாளிகளுக்கு தொந்தரவு கொடுப்பான். எனவேதான் தென்மாவட்டங்ளிலிருந்து வெள்ளேந்தியாக வரும் ஏழைகள் இதற்குத் தேவைப்படுகிறார்கள். அவ்வகையில் சரவணா ஸ்டோர் மலிவாக விற்க வேண்டுமென்றால் இப்படித்தான் மலிவாக தொழிலாளிகளை நடத்த முடியும். இது பற்றிய கேள்வியை படம் எழுப்பவில்லை.

நாயகி கனியின் கல்லூரி மாணவி போன்ற பாவனைகளை எக்காலத்திலும் அந்தக் கடையில் பார்க்க முடியாது. சமீபத்திய ஆண்டுகளாகத்தான் அங்கே அதிகம் பெண் ஊழியர்களைப் பார்க்கிறேன். முன்னர் அவர்களது எண்ணிக்கை வெகு சொற்பம். ஏழை ஆண்களை விட பெண்களை அடக்கி ஒடுக்கி சுரண்டுவது சுலபம் என்பது தமிழகத்தில் சமீப காலமாக நடக்கும் புதிய போக்கு. அந்தக் கோணத்தையும் வசந்த பாலன் உணர்ந்திருக்கவில்லை.

கனியை சற்று அழகாக காட்டவேண்டுமென்பதற்காக மற்ற பெண்களை வேண்டுமென்றே கருப்பைக் கூட்டிக் காண்பித்திருப்பது நல்ல இரசனையல்ல. சொல்லப் போனால் நாயகியே அப்படி கருப்பாக இருந்திருந்தால் பிரச்சினையல்ல. சிப்பந்திகளின் அவலத்தை கருப்பான நாயகியின் மூலம் உணர்த்துவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றால் நாம் எந்த அவலத்தை பற்றி முதலில் கவலைப்படவேண்டும்?

கடுமுழைப்பில் இருக்கும் இத்தகைய தொழிலாளிகளின் வாழ்வில் சினிமா, கிரிக்கெட் போன்றவைதான் முக்கியமென்றாலும் அது விரும்பிய பொழுதுபோக்கா, இல்லை எளிதில் கிடைக்கும் பொழுதுபோக்கா என்பது பரிசீலனைக்குரியது. விளம்பரத்திற்காக சிநேகா அக்கா வருவதை திருவிழா போல சிப்பந்திகள் கொண்டாடுவது பிரச்சினையல்ல, பொய்யுமல்ல. ஆனால் விளம்பரமே தேவைப்படாத அந்தக் கடைக்கு பல இலட்சம் செலவழித்து விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமும், அந்த செலவின் சிறிய பங்கு கூட தொழிலாளிகளின் வாழ்வை நன்கு மேம்படுத்தியிருக்கும் என்பது ஒரு வசனமாகவோ, காட்சியாகவோ வந்திருக்கவேண்டும்.

இந்த விமரிசனத்தில் கூறப்பட்டிருக்கும் எல்லா விசயங்களையும் ஒரு சினிமாவாக எடுக்க முடியுமா, எடுத்தால் அது சினிமாவாக இருக்குமா என்று சிலருக்குத் தோன்றலாம். சினிமா நவீன கலை, இலக்கியங்களின் முன்னேறிய வடிவம். இரண்டு மணி நேரத்தில் இரண்டாம் உலகப் போரையே காட்ட முடியுமென்றால் அதோடு ஒப்பிடும்போது சரவணா ஸடோரின் களமும், காலமும் குறுகியதுதான். அதைக் கண்டுபிடிக்கும் கலையை இயக்குநர் அறிந்திருக்கவில்லை என்பதே பிரச்சினை. அவர் வெறும் விவரங்களின் சேர்க்கையில் ஒரு காதல் கதையை எழுதியிருக்கிறார். மற்றபடி படத்தில் எந்தத் தேவையுமின்றி வரும் ஊர்க்காட்சிகளும், பாடல்களும் நிறைய அடிகளைச் சாப்பிட்டிருக்கின்றன.

தமிழக ஓட்டுக்கட்சிகள், அதிகாரவர்க்கத்திற்கு சென்னையின் தி.நகர் என்பது எப்போதும் அள்ளிக்கொடுக்கக் கூடிய ஒரு அமுதசுரபி. அதனால் மட்டும்தான் அந்த குறுகிய தெருவில் எல்லா வகை விதிகளையும் மீறி சரவணா ஸ்டோர் போன்ற கடைகள் பிரம்மாண்டமாக எழுந்திருக்கின்றன. தி.மு.கவின் தில்லை நகர் தளபதி ஜே. அன்பழகனைப் போன்றவர்கள் யாரேனும் படத்தில் ஒரு பாத்திரமாக வந்திருக்க வேண்டும். கடைச் சிப்பந்களின் அடிமைத்தனத்தை காப்ப்பாற்றுவதில் அரசே முக்கிய பங்கு வகிக்கிறது.

______________________________________________

இதற்கு மேல் படத்தில் வசனம் எழுதியிருக்கும் ஜெயமோகனைப் பற்றி குறிப்பிட வேண்டுமென்ற அவசியம் இல்லை என்றாலும் பக்தர்களின் நலனுக்காக சில சாம்பிள்கள். கொத்தனார் வேலை பார்க்கும் தொழிலாளி தனது மகனை பி.இ படிக்க வைக்கப் போவதாக பேசுவது அபத்தத்திலும் அபத்தம். அவரால் தனது மகனுக்கு கலைக் கல்லூரி படிப்பை அதுவும் அரசு கல்லூரியில் மட்டுமே அதிகபட்சம் தரமுடியும். ஆனாலும் நாயகர்களை குறுகிய காலத்தில் வென்று காட்டும் சூப்பர்மேன்களாக கருதும் மனநிலையிலிருந்து ஜெயமோகனும் மாறவில்லை.  ஏழைகள் எவரும் நடுத்தர வர்க்கத்தைப் போல கனவுலகில் வாழ்வதில்லை. விருப்பங்கள் இருந்தாலும் அவர்கள் யதார்த்தத்தின் எல்லையை மீறாமல்தான் சிந்திப்பார்கள், பேசுவார்கள்.

மாடிப்படியில் தண்ணீர்  குடித்ததைப் போட்டுக் கொடுத்த சக ஊழியனை கோபத்தில் அடிக்கும் லிங்கம், வீட்டில் தான் ஒரு துரும்பு கூட எடுக்காமல் இருக்கும் வண்ணம் தந்தை பாராட்டி வளர்த்திருக்கிறார், இப்போது அவரில்லாத குடும்பத்தின் கஷ்டத்திற்காக இந்த அடிமைத்தனத்தை சகிப்பதாகவும்  பேசுவான். இது சூபர்வைசரிடம் அடிபட்ட சோகத்தை அதிகப்படுத்துவதற்காக காட்டப்படும் மிகையான பொய். விவசாயிகள், கிராமப்புறத்தினர் போன்ற உழைக்கும் வர்க்க பின்னணியிலிருந்து வரும் இளைஞர்கள் இயல்பாகவே தமது வீட்டில் பல வேலைகளைச் செய்வார்கள். அதில் கூச்சமெல்லாம் பார்க்க மாட்டார்கள். வீட்டிற்கு வெள்ளையடிப்பதோ, சமயத்தில் சமைப்பதோ, மூட்டைகள் தூக்குவதோ சாதாரணம்.

வறுமையென்றாலும் விசாலமான கிராமப் புறத்தில் வாழும் அவனுக்கு நகர்ப்புறத்து அடைசல் வாழ்க்கையில் ஒன்றுவதுதான் கடினமாக இருக்கும். மற்றபடி பட்டினி, இருப்பதை வைத்து வாழும் பண்பு, அதை  நினைத்து எப்போதும் எரிச்சலடையாமல் இருப்பது என்பன போன்ற அவர்களது உளவியலை ஜெயமோகன் அறிந்திருக்கவில்லை. கிராமப்புற ஏழைகள் உழைப்புக்கும், வசதிகள் இல்லாத வாழ்க்கைக்கும் அஞ்சுபவர்களல்ல. ஏதோ அவர்களெல்லாம் வாழ்ந்து கெட்டவர்கள் போல ஜெயமோகன் கருதுகிறார். அல்லது எல்லா ஏழைகளும் விடுதலை பெற ஒரே வழி அவர்களெல்லாம் முதலாளிகளாவாது என்பதே இப்படி சுய புலம்பல் வசனங்களாக வருகிறது.

அதே போல கனி தனது சொந்த வாழ்க்கைத் துயரங்களை அழது கொண்டு கூறுவதும் யதார்த்தமல்ல. உழைக்கும் பெண்கள் யாரும் தமது துயரங்களை வரவிருக்கும் பொற்கால வாழ்க்கையின் கசப்பு நினைவுகளாக கருதுவதில்லை. அது அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் யதார்த்தம். சரியாகச் சொன்னால் ஒரு சோகமான புன்னகையோடு, கொஞ்சம் கிண்டலாக  கனி சொல்லியிருந்தால் கூட போதுமானதாக இருந்திருக்கும். இதிலும் ஜெயமோகனது வாழ்ந்து கெட்டவர்கள் என்ற நடுத்தர வர்க்கத்தின் உளவியலே வேலை செய்கிறது. ஏழைகளைப் பற்றிய பார்வை இயக்குநருக்கே சரியாக இல்லாத போது வசனகர்த்தாவிடம் அதை எதிர்பார்ப்பது அதிகமோ?

“யானை இருக்கிற காட்டில்தான் எறும்பும் இருக்கும்” என்ற பொருளற்ற, காலத்தின் உணர்வற்ற, கவித்துவமான வசனமெல்லாம் நம்மை ஈர்க்கவில்லை. ஆனால் கனியின் தங்கை நாகம்மை பெரிய மனிசியாக மாறிய பின் வரும் காட்சியில் தனது தங்கை லிங்கத்தை யாரென்று அடிக்கடி கேட்டதாக கனி கூறும் போது “நீ என்ன சொன்னாய்” என்று லிங்கம் கேட்பான். ஒரு அழகான மௌனம், புன்னகைக்குப் பிறகு, சிரிச்சேன் என்று கனி கூறுவதுதான் நம்மைக் கவர்ந்த ஒரே இடம். ஆக ஜெயமோகன் எழுதாமல் அமைதியாக அடங்கும் இடம்தான் பிடித்திருக்கிறது என்றாலும் இந்தக் காட்சியின் அழகு அதை சிறப்பாக படமாக்கியிருக்கும் இயக்குநரின் பங்கின்றி மிளிர்ந்திருக்காது என்பதும் உண்மை.

“தன் வீட்டில் சொத்தில்லை, உனது வீட்டில் டவுரி கொடுக்குமளவு வசதியில்லை” என்பதாலேயே இரு குடும்பங்களின் நன்மைக்காக காதல் பற்றி தயக்கம் அடைந்ததாக லிங்கம் பேசுவது யதார்த்தமாக இருந்தாலும் பொருத்தமாக இல்லை. ஏழைகள் ஆண்டைகளைப் பற்றி கேலிதான் பேசுவார்களே தவிர அந்த இடத்தில் தங்களை பொருத்திப் பிரச்சினைகளை பேசமாட்டார்கள். அப்படிப் பேசினாலும் அது விதியை நொந்து கொள்ளும் சுய எள்ளலாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது.

ஏழைகள் வாழ்வில் என்னதான் பிரச்சினை இருந்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிச் செல்லும் ஒரு எளிமையான அழகான கனவு அவர்களிடம் உழைப்பு என்ற வர்க்கப் பண்பாய் வெளிப்படுகிறது. அதுதான் அவர்களைத் திரட்டி அந்த ஏழைமையை விரட்ட முடியுமென்ற நடைமுறை நம்பிக்கையை கம்யூனிஸ்ட்டுகளிடம் தோற்றுவித்திருக்கிறது. ஏழ்மையின் அந்த ‘அழகை’ இயக்குநரும், வசனம் எழுதியவரும் புரிந்து கொள்ளவில்லை.

_____________________________________________

இறுதியாக இந்த விமரிசனங்கள் இருந்தாலும் அங்காடித் தெருவை அனைவரும் பார்க்க வேண்டிய படமென்றே கருதுகிறோம். குறைந்த பட்சம் தமிழக வாழ்க்கையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் சரவணா ஸ்டோர் என்ற பேரங்காடியின் பின்னே இருக்கும் உழைப்பாளிகளது வாழ்வை காட்ட முனைந்திருப்பது நிச்சயம் வரவேற்க்கப்படவேண்டும். இந்த விமரிசனம் கூட அத்தகைய முயற்சியில் ஒன்றுதான்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

முதலாளித்துவ கரசேவையில் மோடியின் இந்துத்வ ஆட்சி !!

நாமெல்லோரும் இந்துக்கள் என்று கூறிக்கொண்டு இந்துவெறி பயங்கரவாத ஆட்சியை நிறுவியுள்ள மோடியின் அரசுக்கு எதிராக, இப்போது குஜராத்தின் ‘இந்துக்களே’ போராடத் தொடங்கியுள்ளனர். இந்துவெறி பயங்கரவாத மோடியின் கட்சியைச் சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பா.ஜ.க. அமைச்சர்களும், மோடி அரசுக்கு எதிராக உழைக்கும் மக்களுடன் இணைந்து போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.

குஜராத்தின் பவநகர் மாவட்டத்தில் உள்ள மாகுவா பகுதியில், பிரபல சோப்புக் கம்பெனியான நிர்மா நிறுவனம், சிமெண்ட் ஆலை நிறுவுவதையும் சுண்ணாம்புக் கல் தோண்டுவதற்காக விளைநிலங்களைப் பறிப்பதையும் எதிர்த்து அப்பகுதிவாழ் விவசாயிகள் கடந்த ஓராண்டு காலமாகப் போராடி வருகின்றனர்.

சோப்பு மட்டுமின்றி பல்கலைக்கழகம், தனியார் மின்நிலையம் என விரிவடைந்துள்ள மிகப் பெரிய ஏகபோக நிர்மா நிறுவனத்துக்கு, சிமெண்ட் ஆலை தொடங்குவதற்காக 288 ஹெக்டேர் நிலம் மற்றும் சுண்ணாம்புக் கல் சுரங்கம் தொடங்க 3000 ஹெக்டேர் நிலம் அளிக்க குஜராத் அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. மாகுவா பகுதியில் உள்ள நிலம், முப்போகம் சாகுபடியாகும் நல்ல விளைச்சல் நிலமாகும். இங்கு வெங்காயமும் தென்னையும் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.

இப்பகுதியிலுள்ள பஞ்சாலை, வெங்காயப் பதப்படுத்தும் ஆலை முதலானவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். விவசாயம் சார்ந்த சிறுதொழில் நிறுவனங்களில் 3000-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். மக்களின் வரிப்பணத்தில் உருவான சிறிய நீர்த்தேக்கங்கள் மூலம், இப்பகுதியில் உப்புநீர் பரவாமல் தடுத்து விவசாயம் செய்யப்படுகிறது. இவை அனைத்தையும் நாசமாக்கும் வகையில் நிர்மா திட்டம் அமைந்துள்ளது. மேலும், சிமெண்ட் ஆலையால் 50,000 விவசாயிகளின் வாழ்வுரிமை பறிக்கப்படும். சுற்றுச் சூழல் நாசமாகும். அதேசமயம், நிர்மா உருவாக்கும் ஆலையால் ஏறத்தாழ 500 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.

அரசின் கொள்கை முடிவை எதிர்த்தும், நிர்மா நிறுவனத்தின் குண்டர்களையும் போலீசையும் எதிர்த்தும் விடாப்பிடியாக விவசாயிகள் போராடியதைத் தொடர்ந்து, முன்னாள் தலைமைச் செயலரான ஷீலத் தலைமையிலான குழுவை அமைத்து, மக்களின் புகார்களைப் பரிசீலித்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப் போவதாக மோடி அரசு நாடகமாடியது. அதற்கேற்ப இந்தக் குழு, பாதிக்கப்படும் மக்களையோ, அல்லது இந்தப் பகுதியையோ பார்வையிடாமலேயே இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து, கடந்த டிசம்பர் 13-ஆம் நாளன்று விவசாயிகள் வன்கார் எனும் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடத்தத் தீர்மானித்தனர். இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த இப்பகுதியின் எம்.எல்.ஏ. கனுபாய் கல்சாரியா, மூத்த காந்தியவாதியான சுனிபாய் வைத்யா ஆகியோர் போலீசாரால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டனர். உள்ளூர் விவசாயத் தலைவர்களை நிர்மா நிறுவனத்தின் அடியாட்கள் தாக்கினர். கூட்டத்துக்கு வந்த விவசாயிகளை போலீசார் அடித்து விரட்டினர்.

கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதியன்று, நிர்மா நிறுவனத்தின் சிமெண்ட் ஆலைத் திட்டத்துக்கு எதிராக அமைதியாக ஊர்வலம் நடத்திய விவசாயிகள் மீது போலீசு தடியடித் தாக்குதல் நடத்தி விரட்டியது. பொய்வழக்கு சோடிக்கப்பட்டு முன்னணியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அதற்கு அடுத்த நாளில் தோலியா கிராமத்துக்குச் செல்லும் வழியில் எம்.எல்.ஏ. கனுபாய் கல்சாரியாவும் அவரது மனைவி மற்றும் உறவினர்களும் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டனர். அவர்களது வாகனங்கள் நாசமாக்கப்பட்டன.

அரசின் ஆதரவோடு தொடர்ந்து இத்தகைய தாக்குதல்கள் நடப்பதால், இந்த விவகாரத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி பொதுக் கருத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு, இப்பகுதி விவசாயிகள் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதியன்று, அகமதாபாத்தில் காந்தி உருவாக்கிய சபர்மதி ஆசிரமத்திலிருந்து காந்திநகர் நோக்கி பெருந்திரளாக ஊர்வலம் நடத்தி, அதிகாரிகளிடம் மனு கொடுப்பதற்காகத் திரண்டனர். இந்த மனுவில் பாதிக்கப்படும் விவசாயிகள் 11,111 பேர் தமது இரத்தத்தால் கையெழுத்திட்டுள்ளனர்.

பெண்கள்-குழந்தைகள் என்றுகூடப் பாராமல், ஊர்வலம் நடத்திய விவசாயிகள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்திய போலீசார், 5,500-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். மூத்த காந்தியவாதியான சுனிபாய் வைத்யா, இப்பகுதியின் பா.ஜ.க.எம்.எல்.ஏ.வான கனுபாய் கல்சாரியா, முன்னாள் பா.ஜ.க. நிதியமைச்சரான சனத்பாய் மேத்தா, சமூக சேவகி இலாபென் பதக், மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் ஷா ஆகியோர் உள்பட பல பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் தமது வாழ்வுரிமைக்காகத் தொடர்ந்து போராடி வருவதால், நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து உள்ளூர் பா.ஜ.க.வினரும் இந்த நியாயமான போராட்டத்தை ஆதரிக்கின்றனர். பயங்கரவாத மோடி அரசோ, இந்த வட்டாரத்தில் மக்களிடமிருந்து – அதாவது, பெரும்பான்மை இந்துக்களிடமிருந்து முற்றாகத் தனிமைப்பட்டு நிற்கிறது.

தமது கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக விவசாயிகளோடு சேர்ந்து பா.ஜ.க.வினர் போராடிய போதிலும், அக்கட்சித் தலைமை அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. பிற பகுதியிலுள்ள பா.ஜ.க.வினரும் இப்போராட்டத்தை எதிர்க்க முன்வரவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்த போது, “குஜராத்தை விற்பனை செய்வதை நிறுத்துங்கள்!” என்று எச்சரித்த உயர்நீதி மன்ற நீதிபதி, இத்திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார்.

சட்டிஸ்கரின் தண்டேவாடா, மே.வங்கத்தின் லால்கார், மகாராஷ்டிராவின் ஜெய்தாப்பூர், ஒரிசாவின் நாராயணப்பட்னா போலவே இன்று குஜராத்தின் மாகுவா மாறியுள்ளது. போராடும் மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. எந்த ஓட்டுக் கட்சியானாலும் எந்த மாநிலமானாலும் இவற்றில் எந்த வேறுபாடும் இல்லை. மக்களின் வாழ்வுரிமையை விட முதலாளிகளின் சூறைாடல்தான் ‘வளர்ச்சி’க்கு முக்கியமானது என்பதுதான் அனைத்து ஓட்டுக் கட்சிகளின் ஒரே கொள்கையாகிவிட்டது.

டாடாவின் நானோ கார் தொழிற்சாலை தொடங்க தாராள சலுகைகளை அள்ளிக் கொடுத்து, தொழில் ‘வளர்ச்சி’யில் குஜராத் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுவதாகக் காட்டிக் கொண்ட மோடி அரசு, இப்போது தமது மாநில மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து, அத்தகைய ‘வளர்ச்சி’யை அடக்குமுறை மூலம் சாதிக்கக் கிளம்பியிருக்கிறது. இந்துத்துவ ஆட்சி என்றால் அது உள்நாட்டு – வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் சூறையாடலுக்கு விசுவாச சேவை செய்யும் பயங்கரவாத ஆட்சிதான் என்ற உண்மையையும் நாட்டு மக்களுக்குப் புரிய வைத்திருக்கிறது.

_______________________________________

– புதிய ஜனநாயகம், ஏப்ரல்-2010.

_______________________________________

உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஒரு சோகம்!!

10


vote-012திருவண்ணாமலையை சேர்ந்த 108 ஆம்புலன்ஸில் ஓட்டுனராக பணிபுரியும் ஏழுமலை, தனது வேலையிலிருந்து நீக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரின் கருணைக்காக படி ஏறி இறங்கி அலைந்துகொண்டிருக்கிறார். இவர் செய்த குற்றம்தான் என்ன? முதலாளிகளுக்கே பிடிக்காத சம்பள உயர்வு கேட்டதுதான்.

வேலைக்கு சேர்ந்தபோது ஒவ்வொரு ஆண்டுக்கும் சம்பள உயர்வு உண்டு என்று நிர்வாகம் கூறியதை நம்பி ஒன்றரை ஆண்டாகியும் சம்பள உயர்வு தரவில்லையே என்று தலைமை அலுவலகத்தில் கேட்க “அதெல்லாம் கிடையாது. இஷ்டம் இருந்தா இருங்க. இல்லைன்னா வேலையைவிட்டு போங்க” என்ற பதிலால் விரக்கதியடைந்தார்.

கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் இது எனபதால் இந்த மாவட்டத்திலுள்ள ஓட்டுனர்களை திமுகவின் அடிப்படை உறுப்பினராக ஒன்று சேர்த்து  முதல்வரிடம் மனுக்கொடுப்போம் என்று திட்டமிட்டார். அவ்வாறு 22 ஓட்டுனர்களையும் திமுகவில் இணைத்தும்விட்டார்.

“நாம் காசைக்கொட்டி முதல்போட்டு தொழில் தொடங்கி இவனுங்களுக்கு வேலை கொடுத்தால் நம்மையே கேள்வி கேட்குறானுங்க” என்று முதலாளிகள் கோபப்படும் படும்போது, சங்கம் கட்டுறோம், மனுக் கொடுக்கிறோம்னு கிளம்பினால் முதல் போட்டவன் சும்மா இருக்க முடியமா?

திருவண்ணாமலைக்கு துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தபோது அவரிடம் மனுக்கொடுத்த குற்றத்திற்காக ஏழுமலைக்கு வேலை போய்விட்டது.

மற்ற ஓட்டுனர்களெல்லாம் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்ததால் அம்மாவட்டத்தின் நிர்வாக அதிகாரி EO( Executive Officer)  அறிவுக்கரசு அனைவரையும் தனித்தனியாக “வேலையைவிட்டு தூக்கிடுவோம்” என்று மிரட்டியிருக்கிறார்.

_____________________________________________

இந்த ஓட்டுனர்களது கோரிக்கையையின் நியாயத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவர்களின் தொழிலைப் பற்றியும் சம்பளம் பறறியும் நாம் அறிந்து கொள்ளத்தான் வேண்டும்.

“குட்மார்னிங். திருவாடானை EMT – ங்களா?

குட்மார்னிங். ஆமாம்.

கேஸ் (case) –ல இருக்குறீங்களா?

இல்லை. Free –யா இருக்கிறோம்.

ஓகே! திருவாடானை தாலுகா.

ஓகே.

வலசைப்பட்டினம்

ஓகே

கிழக்குத்தெரு

ஓகே

அரசு தொடக்கப் பள்ளிக்கு அருகில்

ஓகே

Caller name (அழைத்துள்ளவர் பெயர்) அறிவழகன்

ஓகே

Phone number (தொலைபேசி எண்) 9487985126

ஓகே

ID number ( case ID number) 8745674

ஓகே. புறப்பட்டுடோம்.”

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள கஸதூரிபாய் காந்தி பிரசவ மற்றும் குழந்தைகள் மருத்துவமனை  கட்டிடவளாகத்தின் ஒரு பகுதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் GVK EMRI ( GVK Emergency management Research institute) செயலகத்தின் செய்தி அனுப்பும் பிரிவிலிருந்து (dispatch section) வரும் செய்தியை செல்பேசியில் பேசிக்கொண்டே தகவல் வந்த நேரத்தையும் சேர்த்து மளமளவென்று குறிப்பேட்டில் குறித்துக்கொள்கின்றனர் இந்த EMT (Emergency Medical Technician) எனப்படும்  ஆம்புலன்ஸ் வண்டியின் மருத்துவ உதவியாளர்கள்.

அடுத்த கணம் வண்டியை நகர்த்திக்கொண்டே ஆம்புலன்ஸ் உதவி கேட்டவரின் தொலைபேசிக்கு தொடர்புகொண்டு “108 புறப்பட்டு வந்துகொண்டு இருக்கிறது. இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவோம். (பெரும்பாலும் அரை மணி நேரத்தில் சென்றடையக்கூடிய வகையிலேயே 108ன் வாகனங்கள் 30கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒன்று என நிறுத்தப்பட்டுள்ளன) உங்கள் தொலைபேசியை ஸ்விட்ச்ஆஃப் (switch-off) செய்துவிடாதீர்கள். பிஸியாக வைத்திருக்காதீர்கள்” என்ற தகவலை சொல்லிவிட்டு ‘சைரன் ஒலிக்க’ செயலில் சுறுசுறுப்பையும் மனதில் நிதானத்தையும் கொண்டு விரைந்திடும் இவர்களின் சேவை வெறுமனே சொற்களால் மட்டும் பாராட்டக் கூடியதாக இல்லை.

விபத்து அல்லது நோயாளியின் இடத்தை அடைந்ததும் மளமளவென்று இறங்கி ஸ்ட்ரெச்சரை எடுத்து பாதிக்கப்பட்டவர்களை வண்டியில் ஏற்றி புறப்படும்வரை  அவர்கள் அங்கிருப்போரின் மனநிலையை சமாளிப்பது ஒரு நெருக்கடியாகவே உள்ளது. நோயாளிக்குத் தகுந்தவாறான அமைப்பில் ஸ்ட்ரெச்சர் அல்லது தள்ளு வண்டியைப் பயன்படுத்தி மேலும் பாதிப்பு உண்டாகாத நிலையில் நோயாளியை ஏற்றுவதற்குள் அங்கிருப்போரின் ‘எப்படியாவது சீக்கிரம் வண்டியில் ஏற்றுப்பா’ என்ற அவசர மனநிலையை சமாளித்து பின் வரும் உயிர்நிலைச் சோதனையை (Vital Test) செய்யவேண்டும். இதனடிப்படையிலேயே முதலுதவியைச் செய்ய வேண்டும் எனபதால் இது அவசியமாகும். முதலுதவி என்பதைவிட, செயலகத்திலிருந்து  தொடர்புக்கு வந்துவிடும் மருத்துவருடைய வழிகாட்டுதல்படி நோய்க்கான சிகிச்சையையே தொடங்கிவிடுகின்றனர். அதற்கான சிறப்பு பயிற்சியும் பெற்றவர்கள் இந்த EMT எனப்படுபவர்கள்.

உயிர்நிலைச் சோதனைகள்;

1. கண்விழிச் சோதனை. (Pupil Test): மயக்கமாகவோ, மூச்சு பேச்சற்றோ இருப்பவர்களின்  இமையை நீக்கி கண்ணில் டார்ச் ஒளியைசை செலுத்தி கண்விழிப் பாப்பா (Pupil) விரிந்து சுருங்குகிறதா என்று சோதிக்கவேண்டும். விரிந்து சுருங்கினால்தான் உயிர் இருப்பதாகப் பொருள்.

2. விலக்கப்படும் இரத்தம் மீளும் சோதனை (Capillary Test): விரல்நுனியில் இரத்தம் விலக அழுத்தி மீண்டும் இரத்தம் நிரம்பும் நேரத்தைக் கணக்கிடல். 2 வினாடிகளுக்குள் நிரம்பவேண்டும்.

3. நாடித்துடிப்புச் சோதனை. (Pulse rating test)

4. இரத்த அழுத்தம்  (Blood pressure) சோதனை.

5. உடலின் நீர்ச்சத்து நிலை (SpO2 saturation status)

கடைசி மூன்று சோதனைகளும் பாதிக்கப்பட்டவரை இசிஜி (ECG) எந்திரத்துடன் இணைப்பதன் மூலம் அறிந்து குறிப்பேட்டில் குறித்துக்கொள்கின்றனர்.

உயிர் இல்லை என்பது நிச்சயமாகிவிட்டால், இருதயம் நின்று 5 நிமிடத்திற்குள் இருக்கும் என்று யூகித்திருந்தால் இருதயத்தை மீண்டும் இயங்கவைக்கும் எந்திரமான De-fibrillation வசதியுள்ள ஆம்புலன்ஸ் வண்டியிலுள்ள EMT -கள்  அதனைப் பயன்படுத்தி உயிர்பிழைக்கவைக்க முயற்சிப்பர்.

அடுத்து நிறையபேர் உடன் வருகிறோம் என்று வண்டியில் ஏறுவதை சமாளிக்கவேண்டும். அதிகபட்சம் 2 பேர்களுக்கு மட்டுமே அனுமதியாம். அப்பொழுதுதான் வண்டிக்குள் வைத்து தேவையான மருத்துவ வசதிகளை செய்ய முடியும் எனகின்றனர். ஆனால் நோயாளிகளின் உறவினர்கள் பெரும்பாலும் அதற்கு ஒப்புக்கொளள்ளாமல் நான்கைந்து பேராக உடன் செல்லவே முயற்சிப்பார்களாம். அவர்களின் மனநிலையில் அது சரியாகப் பட்டாலும் நோயாளிக்கு அது பாதகமாகவே முடியும் என்பதால் இரு துணை நபர்களை மட்டும் ஏற்றிச் செல்வதற்கு சற்று சிரமப்படுகின்றனர்.

அடுத்ததாக மருத்துவமனையை தேர்ந்தெடுப்பதில் மூன்று விதிமுறை உள்ளன.

  1. நோயாளியின் விருப்பம்  அல்லது துணைக்கு வருபவர்களின் விருப்பம் (Attender”s Choice)
  2. அருகில் வசதியுள்ள மருத்துவமனை. EMT-ன் பரிந்துரை
  3. கொண்டு செல்லப்பட்ட மருத்துவமனை போதிய வசதியில்லாதபோது வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது. இதற்கு அம்மருத்துவமனை மருத்துவர் தக்க காரணத்துடன் செயலகத்திலுள்ள மருத்துவருக்கு பரிந்துரைத்து எழுதிக்கொடுக்க வேண்டும்.

நோயாளியோ, துணைக்கு வருபவர்களோ தேர்ந்தெடுக்கும் மருத்துவமனை தகுந்த வசதியில்லாததாக இருந்தால் நோய்க்கு தகுந்தவாறான மருத்துவமனைகளை EMT பரிந்துரைக்கிறார். முற்றிலும் பொருத்தமில்லாத மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்துவிடுகின்றனர்.

இதற்கிடையில் செயலகத்தின் மருத்துவரின் வழிகாட்டல் செல்லிடைபேசியில் தொடர அவருடன் தமது குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டு மருத்துவர் கூறும் சிகிச்சையை ஆரம்பித்து விடுகின்றனர்.

இவர்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமான மக்கள் பிரச்சனையை நேரில் சந்திக்கும் சற்று ஆபத்தான தொழிலில் உள்ளவர்கள். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பாதிப்புக்குள்ளானவர்களின் இடத்திற்குச் செல்லாவிட்டால் கடுமையான விளைவுகளையும் சந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

அதுவும் ஆளுங்கட்சிக்காரர்களின் அழைப்பு என்றால் ஆபத்து கூடுதலாகவே உள்ளது. காலதாமதத்திற்கு சாலை அமைப்பு, போக்குவரத்து இடையூறு, வண்டியில் எற்படும் பழுது போன்று ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் என்ற ஊரில் திருமணவீட்டில் லாரி ஒன்று புகுந்து பலபேர் காயமுற்றும் நான்கைந்துபேர் உயிர் கவலைக்கிடமாக இருந்தபோது அவ்வூருக்கு அருகிலுள்ள திருவாடானையின் 108,  மற்றும் தேவிபட்டினம் 108ம் வேறுநோயாளிகளுக்காக சென்றுவிட்டதால் சற்று கூடுதல் தொலைவிலுள்ள நைனார்கோவில் 108, தங்களின் வரம்புக்கு உட்படாத ஊராக இருந்தும் விபத்தினை ஏற்றுகொண்டு சென்றுள்ளனர். கூடுதல் தொலைவாக இருந்தும் அரைமணி நேரத்தில் சென்றுள்ளனர். ஆனாலும் காலதாமதமாக வந்ததாக அந்த 108 கல்லெறி தாக்குதலுக்கு உள்ளானது. திருமண விருந்தில் மப்பு கூடுதலாக இருந்த கருப்பு-சிவப்பு வேட்டிக்கரை அல்லக்கைகள் தங்கள் வீரத்தைக்காட்ட உயிர் காக்கப் போனவர்கள் உயிர்பிழைக்க தப்பி ஓடவேண்டியதாகிவிட்டது. (18-02-2010 தினகரன் நாளிதழின் மதுரைப் பதிப்பை பார்க்க)

நாளொன்றுக்கு இருமுறை வண்டியை சுத்தம் செய்வது, வண்டியிலேயே பிரசவமானால் பிரசவம் பார்த்து குழந்தையைப் பராமரிப்பது, அதனால் எற்படும் கழிவுகளை சுத்தம் செய்வது, மலம் சிறுநீர் கழித்துவிட்டால் சுத்தம் செய்வது போன்ற வேலைகளையும் இவர்களே செய்ய வேண்டும்.

எய்ட்ஸ் நோயாளியா எனபது தெரியாமல் அந்நோயாளிகள் இரத்தக் காயமுற்றிருந்தாலும் பராமரிக்க வேண்டிய அபாயமும் இவர்களுக்கு உண்டு. ஒரு நோயாளியை இவர்கள் ஏற்றுக்கொண்டால் 17 பதிவுக் குறிப்பேடுகளில் விவரங்களை இவர்கள் பதிவு செய்ய வேண்டும்.

தங்களின் உயிரைப் பணயம் வைத்து உணர்ச்சிபூர்வமான மனநிலையில் உள்ள மக்களுக்கு சேவைசெய்யும் இவர்களின் வாழ்க்கை அத்துக்கூலிக்கு அல்லல்படும் கொத்தடிமையாக உள்ளது.

__________________________________________________

சத்யம் EMRI ஆக இருந்து அதன் முதலாளி ராமலிங்க ராஜு மொத்தமாக சுருட்டிக்கொண்டு திவாலக்கிய பிறகு, GVK-EMRI ஆன இந்த நிறுவனம் தமிழக அரசுடன் செய்துக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் “இலாப- நட்டமற்ற சேவைக்கான ஒப்பந்தம்” (No Loss – No Profit) என்று கூறுகிறது. இப்படி கருணை உள்ளம் கொண்ட GVK- விற்கு தமிழகஅரசு ஆண்டுக்கு வழங்கும் தொகை 4200 கோடி ரூபாய்கள். அது மட்டுமல்லாது ஒரு பிரசவ சேவைக்கு 2000 ரூபாயும், பிற வகையின சேவை ஒன்றுக்கு 1500 ரூபாயும் தனி.

ஏற்கனவே தமிழக அரசு 1056 என்று இயக்கிய ஆம்புலன்ஸ் வண்டிகளை 108க்கு வழங்கப்பட்டே தமிழகத்தில் இச்சேவை தொடங்கப்பட்டது. மொத்தம் இயங்கும் வண்டிகள் 385. இரண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் (Portable), Nebulizer, ECG போன்ற அனைத்து வகை கருவிகளுடனான ஒரு ஆம்புலன்ஸ் வண்டியின் மதிப்பு ஏற்குறைய 15 இலட்சங்களாம். இதில் ALS  என்று அழைக்கப்படும் வண்டிகளில் இதயம் நின்ற 5 நிமிடத்திற்குள் மீண்டும் உயிரூட்டும் Automate External Defibrillator (AED) என்ற கருவியும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்வகை வண்டிகள் மாவட்டத்திற்கு ஒன்று அல்லது இரண்டு, மாநகராட்சிக்கு 4 என சுமார் 50 உள்ளன.

இப்படி அனைத்து வசதிகளுடனான ஆம்புலன்ஸ் வண்டிகளையும், ஆண்டுக்கு 4200 கோடிகளையும், ஒரு கேஸ் அழைத்துச் சென்றால் அதற்கான செலவுத் தொகையையும் பெற்றுக்கொண்டு சல்லிக்காசு இலாபமில்லை என்று சத்தியம் செய்து நம்மை நம்பச்சொல்லும் GVK EMRI, 8 மணி நேரம் வேலை 16 மணிநேரம் ஓய்வு, வாரம் ஒருநாள் விடுப்பு என்று வேலைக்கு சேர்ததுவிட்டு  12மணிநேர வேலை, 12 மணிநேர ஓய்வு, வாரம் 12 மணிநேரம் மட்டுமே விடுப்பு என்று வேலைவாங்கிக்கொண்டு,  EMT (Emergency Medical Technician) கொடுக்கும் ஊதியம் பிடித்தம் போக ரூ 5571, வண்டி ஓட்டுனர்களுக்கு (Pilot)  4716.

இந்த சம்பளத்திற்குள்ளேயே போக்குவரத்துச் செலவு, மூன்றுவேளை உணவு, தங்குமிடம் இன்னும் பிறவற்றையும் செலவு செய்தது போக குடும்பத்திற்கு 2000த்திலிருந்து 2500 ரூபாய்வரை கொடுப்பதே பெரும்பாடாக உள்ளது என்கின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு என்று கூறிய நிர்வாகம் ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை கண்டுகொள்ளவே இல்லை. வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ளதால் 12 மணிநேர வேலையையும் பொறுட்படுத்தாது, நிர்வாகம் வாக்களித்த சம்பள உயர்வாவது கிடைக்காதா என்று துணைமுதல்வரிடம் மனுக்கொடுக்கப்போய் ஏழுமலை இன்று வேலையை இழந்து நிற்கிறார்.

அடுத்து இலட்சக்கணக்காணோர் இந்தவேலைக்கு வரிசையில் (ரிசர்வ் பட்டாளம்) உள்ளதால் GVK-EMRI தனது எடுபிடிகளான அதிகாரிகளை வைத்து அனைவரையும்.மிரட்டுகிறது. 5500 சம்பளத்தில் கொத்தடிமைகளாக இவர்கள் பணியாற்ற, மாண்புமிகு துணைமுதல்வரோ 108 எங்கள் ஆட்சியின் சாதனை என்று பொன்னகரம் இடைத்தேர்தலில் உச்சிமோந்து வாக்காளர்களை ஏமாற்றி ஓட்டு கேட்கிறார்.

இதுதான் நவீன முதலாளித்துவக் கொத்தடிமைத்தனத்தின் தனிச்’சிறப்பு’. மக்கள் நலத்திற்காக உருவான அரசுகள் இன்று தமது சேவைகளைக்கூட முதலாளிகளுக்கு ஆதாயம் அடையும் வண்ணம் மாற்றிவிட்டனர். இத்தகையச் சுரண்டலிலிருந்து மீள்வதற்கு தி.மு.கவில் சேருவதும், மனுக் கொடுப்பதும் பலனளிக்காது என்பதை தொழிலாளிகள் இப்போது உணர்ந்திருப்பார்கள்.

முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை அதன் சமூகம் தழுவிய அளவில் புரிந்து கொண்டு வேலை செய்யும் புரட்சிகர அமைப்புக்களில் அவர்கள் அணிதிரண்டால் இந்த உயிர்காக்கும் சேவையின் முக்கியத்துவத்தை, எவருக்கும் எந்த ‘மொழி’ தேவைப்படுகிறதோ அதில் புரியவைக்கலாம்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

வீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை !

vote-012அதிகாலையிலேயே எழுந்து ஓட்டமும் நடையுமாக நடுத்தர – மேட்டுக்குடிவர்க்கத்தினர் வீடுகளுக்குப் பாத்திரங்கள் விளக்கி, வீடு பெருக்கக்  கிளம்பிச் செல்லும் கண்ணம்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)-வின் கதை இது. எட்டுவயதில் வீட்டு வேலைகள் செய்ய ஆரம்பித்த கண்ணம்மா (வயது 43)  இப்போது சென்னை ராயப்பேட்டை பகுதியில் நான்கு வீடுகளில் தினமும் வேலை செய்கிறார். காலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் இவரது ஒருநாள்  வாழ்க்கை, மதியம் கிடைக்கும் இரண்டு மணி நேர ஓய்வுக்குப் பின்னர், மீண்டும் வேலை எனத் தொடர்கிறது. வீடு திரும்ப தினமும் இரவு 9 மணி  ஆகிவிடுகிறது. நான்கு வீடுகளில் கடினமாக உழைத்தாலும் கிடைக்கும் சம்பளமோ, வீட்டுவாடகை, மளிகைச் செலவு போன்றவற்றிற்குப் போதுமானதாக இல்லை.
கண்ணம்மாவைப் போல, அடுத்தவர்களின் வீட்டு வேலைகளைச் செய்யும் வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை இந்தியா முழுக்க 9  கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. இதில் 20 சதவீதத்திற்கும் மேல் குழந்தைத் தொழிலாளர்கள்.

எங்கிருந்து இவர்களெல்லாம் வருகின்றனர்? கிராமப்புறங்களில் அழிக்கப்பட்டு வரும் விவசாயம், பல குடும்பங்களை நகரை நோக்கி  விரட்டுகின்றது. நகரங்களில் கிடைக்கும் வேலைகளை ஆண்கள் செய்தாலும், அதில் கிட்டும் வருமானம், குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுவதற்கே  போதுமானதாக இல்லாததால், பெண்கள் வீட்டுவேலைகளுக்குச் செல்லத் தயாராகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களுக்குக் காடுகளையும் மலைகளையும் கிராமங்களையும் தாரைவார்த்த தனியார்மய உலகமயக் கொள்கை, அங்கிருக்கும் இலட்சக்கணக்கான பழங்குடியினரை விரட்டியடித்து வருகிறது. அவர்களில் கணிசமான பேர்கள் இந்தப் பணிகளுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

நாளொன்றுக்கு சராசரியாக 12 மணிநேரத்திற்கும் மேலாக வேலை செய்யும் வீட்டுப் பணியாளர்களுக்கு உடற்சோர்வு, மயக்கம், தோல் எரிச்சல்,  ஒவ்வாமை, முதுகுவலி போன்ற தொழில்சார்ந்த நோய்கள், மாதம் ஒருமுறையாவது முடக்கிப் போட்டுவிடும். அதனால் வேலைக்கு வர இயலாத நாட்களுக்கு பல வீடுகளில் சம்பளத்தைப் பிடித்துவிடுவதை, ஏன் என்று கேட்கமுடியாது. கேட்டால் ‘நாளையிலிருந்து நின்றுகொள்’ எனச் சொல்லிவிட்டு, வேறு ஆட்களை வேலைக்கு வைத்துக் கொள்வார்கள். சிகிச்சைக்கென மருத்துவரிடம் போனாலோ குறைந்தது ரூ. 100 ஆகிவிடும் என்பதால், பெரும்பாலும் கைப்பக்குவத்திலேயே வைத்தியம் பார்த்துக் கொள்கின்றனர். இவர்களை விடக் குறைவான ஊதியத்துக்கு வேலை செய்ய ஆட்கள் நிறைய இருப்பதால், சம்பளத்தை உயர்த்தச் சொல்லிப் பேரம் பேசுவது கூட இவர்களின் வேலைக்கு வேட்டு வைத்துவிடுகிறது.

வீட்டுப்பணிகளில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் நிலையோ பரிதாபகரமானது. 8 அல்லது 9 வயதிலேயேபெற்றோரை விட்டுப் பிரிந்து,  வேலைசெய்யும் வீட்டில் வாழ்வதும், தன் வயதொத்த அதே வீட்டாரின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் எவ்வித வசதிகளும் தங்களுக்கில்லா ஏக்கத்திலும், வீட்டு எஜமானர்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் வேலை செய்து, ஓய்வென்பதையோ, சிறுவயதுக்குரிய விளையாட்டுக்களையோ காணமுடியாமல் வளரும் சோகம், மிகக் கொடுமையானது. பெரியவர்களைவிட மிகக் குறைந்த கூலி பெற்றுக் கொண்டு, உழைத்து ஓய்ந்துபோகும் சிறுவர், சிறுமியரின் வேலைகளில் தென்படும் சிறுசிறு தவறுகளுக்கெல்லாம் அடி, உதை அல்லது கேவலமான வசைகள் என்பன சர்வசாதாரணம்.

நொய்டா (உ.பி.) போன்ற திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரங்களில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில், வீட்டுப் பணியாளர்  தங்குவதற்கென்றே சமையலறையை ஒட்டினாற்போல் ஓர் அறை ஒதுக்கிக் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் பீகார், ஜார்க்கண்ட், தமிழ்நாடு எனப் பல்வேறு  மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் கோழிக்கூடு போன்ற சிறிய அறைகளில் தங்கிக்கொண்டு நடுத்தர – மேட்டுக்குடி வர்க்கத்தினரின் வீடுகளில் வேலை செய்கின்றனர். இவர்கள் அவசரத்திற்கு உறவினர்களிடம் பேசக்கூட அவ்வீட்டுத் தொலைபேசியைப் பயன்படுத்த முடியாது. மிச்சமீதியைத்தான் உண்ணமுடியும். நண்பர்களையோ, உறவினர்களையோ சந்திக்க வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது எனப் பல நிபந்தனைகளுடன், யாருமே வாழத் தகுதியற்ற வெளிச்சமோ காற்றோட்டமோ இல்லாத அறைகளில் கொத்தடிமைகளாக வாழ்கின்றனர். வெளியுலகே தெரியாமல், தனிமையில் வாழும் இப்பெண்கள் சில சமயங்களில் மனநோயாளிகளாகவும் மாறியுள்ளனர். எப்போது வேண்டுமானாலும் வேலையிலிருந்து நீக்கப்படலாம் எனும் நிச்சயமற்ற நிலையில்தான் பணியில் நீடிக்கின்றனர்.

அருகிலுள்ள மேட்டுக்குடியினர் வீடுகளில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் வீட்டுப்பணியாளர்களான பல பெண்களின் கொஞ்சநேர  நிம்மதியையும், அரசு நடத்தும் டாஸ்மாக் சாராயக் கடைகள் பறித்து விடுகின்றன. வீட்டுவேலைக்குப் போகும் பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களின் கணவன்மாரில் 70 சதவீதம் பேர் குடிக்கு அடிமைகள் என்பதும், 60 சதவீதப் பெண்கள் வீட்டுக்குவந்தால், குடிகாரக் கணவர்களின்  சித்திரவதையை அனுபவிக்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.

காலையிலேயே வேலைக்குக் கிளம்பிப்போய், வீடு திரும்ப இரவு 8 மணிக்கும் மேலாகிவிடுவதால், தங்கள் குழந்தைகளைப் பராமரிக்க  இப்பெண்களுக்கு நேரமிருப்பதில்லை. இது, அவர்களின் வளரும் குழந்தைகளின் ஆளுமையையும், கல்வியையும் சீரழிக்கிறது. சரியாகப் படிக்க இயலாத குழந்தைகள் 10 அல்லது 12 வயதானதும் இதே வேலைக்கு வந்துவிடுகின்றனர்.

இந்த சேவைக்காக மாநிலம் விட்டு மாநிலம் செல்வதும் அதிகரித்துள்ளது. டெல்லி போன்ற மாநகரங்களில் வீட்டு வேலை செய்வதற்கென்றே சேலம் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து குவிந்திருக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளபடி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு இவ்வேலைகளுக்கென 5 ஆயிரம் ரூபாய் வரை முன்பணம் கொடுத்து பெண்களை அனுப்பிவைக்கும் தரகர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவ்வாறு செல்லும் பெண்களில் பலர் பாலியல் வன்முறையால் கேரளாவில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த வேலைகளுக்கு வீடுகளுக்கு தகுந்த ஆட்களை அனுப்புவதற்கென பெருநகரங்களில் பல கங்காணிகள் பெருந்தொழில் நிறுவனங்களாக  உருவெடுத்துள்ளனர். இவர்களிடம் பெயரைப் பதிவு செய்தவர்களை மேட்டுக்குடியினரின் வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனம், இவர்களுக்கு தர வேண்டிய சம்பளத்தை வீட்டு உரிமையாளர்களிடம் பெற்றுக் கொண்டு, அதில் கணிசமான தொகையைச் சுரண்டிக் கொண்டுதான்  வீட்டுப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குகிறது.

சென்னை போன்ற நகரங்களில், இவர்களுக்கு கிடைக்கும் அற்ப சம்பளத்துக்குள் குடிசைகளில்தான் குடியிருக்க முடிகிறது. நகரை  அழகுபடுத்தும் திட்டங்கள், இக்குடிசைகளை விட்டுவைப்பதில்லை. கூவம், பக்கிங்காம் கால்வாய் ஓரங்களில் குடியிருந்து வரும் இவர்களை, நகருக்கு  வெளியே துரத்தும் பணி ஆரம்பித்து விட்டது. செம்மண்சேரி போன்ற புறநகர்ப்பகுதிகளுக்கு அகற்றப்படவிருக்கும் இப்பணியாளர்கள், தினமும் நகருக்குள் வந்து செல்வது என்பது இன்னமும் வாழ்வை சிக்கலாக்கியுள்ளது.

இந்த அவல வாழ்வு வாழும் பெண்களை ‘திருடர்களாகப்’ பார்க்கும் பொதுக்கருத்தை ஆளும் வர்க்கம் உருவாக்கி வைத்துள்ளது. பல  அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வேலைக்கு செல்பவர்களின் கைரேகை, குடும்பப் பின்னணி போன்றவற்றை அருகிலுள்ள போலீசு நிலையத்தில் பதிந்து வைக்க வேண்டும் என்று போலீசு கட்டாயப்படுத்துகிறது. சில பத்திரிக்கையாளர்களோ, வீட்டு வேலைக்காரிகளை, வீட்டு எஜமானர்களை மயக்கும் சக்களத்திகளாகச் சித்தரித்து துணுக்குகளை எழுதுகின்றனர்.

ஏட்டளவில் இருக்கும் இந்தியத் தொழிலாளர் நலச் சட்டங்கள் கூட வீட்டுப் பணியாளருக்கென்று இல்லை. மேலும், இவர்கள் சங்கமாக  அணிதிரட்டப்படாமலும் உள்ளனர். இவர்களுக்குச் சட்ட ரீதியாகத் தொழில் அங்கீகாரம் தரக் கோரி பல ஆண்டுகளாக கோரிக்கைகள் எழுப்பப்பட்டு  வந்துள்ளன.

உலகமயமாக்கம் தீவிரப்படுத்தப்பட்டபோது, இச்சேவைப்பணியில் ஈடுபடுவோர் இலட்சக்கணக்கணக்கில் பெருகியதால், இவர்களுக்கு சட்டப்  பாதுகாப்பு தேவை என சர்வதேச அளவில் கோரிக்கைகள் எழுந்தன. பல தன்னார்வ நிறுவனங்கள் இதனை வாய் ப்பாகப் பயன்படுத்தி, பல குழுக்களை  இப்பெண்களிடையே உருவாக்கி, இக்கோரிக்கையை எழுப்ப வைத்தன. தமிழ்நாடு அரசும், 2007-இல் வரைவு சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.  இதன்படி, இச்சேவையில் ஈடுபடுவோர், வீட்டுப்பணியாளர்கள் நலவாரியம் ஒன்றில் இணைக்கப்படுவர். ஆனால் தமிழ்நாடு அரசின் சட்டம், குறைந்தபட்சக் கூலியை இன்றுவரை வரையறுக்கவில்லை. 2005-இலேயே கேரள, கருநாடக அரசுகள் உருவாக்கியுள்ள சட்டத்தின்படி, 8 மணிநேர வேலைக்கு மாதத்துக்கு ரூ. 1800-மும், வேலை செய்யும் வீட்டில் 4 பேருக்கு மேலிருந்தால் ரூ. 2200-உம் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இவர்களுக்காக ஆரம்பித்திருக்கும் நலவாரியம் பற்றிய செய்தியோ, அரசின் இணையதளத்தில் மட்டும்தான் உள்ளது. அந்த  வாரியம், எங்கே இயங்குகின்றது எனும் தகவலைக் கூட அரசு விளக்கமாக அறிவிக்கவில்லை. கண்ணகி நகர் போன்ற சென்னைப் புறநகரில் தங்கி  இருந்து, வீட்டுவேலை செய்யும் பெண்கள் தங்களைப் பதிவு செய்ய வேண்டுமானால், ஒருநாள் வேலைக்கு செல்லாமல் காஞ்சிபுரம் போய் தேடி அலைந்து வாரியத்தில் பெயர் பதிய வேண்டும் எனும் நிலைதான் உள்ளது. இதிலிருந்தே அரசுக்கு இந்தப் பணியாளர்கள் மீதான அக்கறை என்ன என்பது தெரிகிறது.
வேலை உத்திரவாதம், மருத்துவ வசதி, குறைந்தபட்ச விடுமுறைகள், தங்கள் குழந்தைகளின் கல்வி, ஆயுள் காப்பீடு போன்ற உடனடித்  தேவைகளை இப்பணியாளர்கள் போராடிப் பெற வேண்டியுள்ளது. பிழைப்புக்கான இடத்தின் அருகிலேயே குடியிருப்பு வசதி, ஈ.எஸ்.ஐ. மருத்துவ வசதி, சேமநலநிதி போன்றவையும் இவர்களுக்குச் சட்டப்படி அளிக்கப்பட வேண்டும். இதற்காக இத்தொழிலாளர்கள் அனைவரும் சங்கமாக ஓரணியில் திரள வேண்டும். கடுமையான உழைப்புச் சுரண்டலுடன் சட்டபூர்வ உரிமைகளையும் உலகமயம் பறித்துவரும் இன்றைய நிலையில், அல்லற்பட்டுவரும் இப்பணியாளர்கள் அமைப்பாகத் திரண்டு, மறுகாலனியாதிக்கக் கொள்கைகளுக்கு எதிராக இதர பிரிவு உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடுவதன் மூலம் மட்டுமே, தமது நலனையும் விடுதலையையும் சாதிக்க முடியும்.

–    புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

தமிழக அகதி முகாமில் தத்தளிக்கும் ஈழத்து வாழ்க்கை!

30

ஈழத்தின் நினைவுகள் – பாகம் 11

vote-012ஈழத்திலிருந்து உயிர் தப்பி, சிதறடிக்கப்பட்ட கனவுகளோடு அந்நிய தேசத்தில் அகதி நான். என் வாழ்வின் அடுத்த நிகழ்ச்சி நிரல் என்ன என்பதை இனி யாரால் அல்லது எந்த சட்டதிட்டங்களால் தீர்மானிக்கப்படும், தெரியவில்லை. என் சொந்த எதிர்காலத்தை கூட நிர்ணயிக்க முடியாத பரிதவிப்போடும், என் மீது வலிந்து திணிக்கப்பட்ட  அகதிநிலை பற்றி பல விடை தெரியாக் கேள்விகளுடனும் மனம் பாறையாய் இறுகிக்கிடந்தது. நான் அகதி என்ற யதார்த்தத்தை என்னையுமறியாமல் எனக்குள் மறுதலித்துக்கொண்டே இருந்தேன். மனித மனம் ஓர் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதன் முதற்படிநிலை அதை “மறுதலித்தல்” என்பதுதான் என்ற அறிவு எனக்கு அன்று இருக்கவில்லை.

அந்த உணர்வலைகள் எனக்குள் சற்றே அடங்கியிருந்த வேளையில் என்னை சுற்றிக் கவனித்தேன். அங்கிருந்த ஆயிரக்கணக்கானோரும் ஏதேதோ பேசினார்கள், பெருமூச்சு விட்டார்கள், சாபம் போட்டார்கள், அழுகைக்கும் பேச்சுக்குமிடையே வார்த்தைகளுக்கு தவித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் புதிதாக வந்தவர்களிடம் எந்த ஊரிலிருந்து வருகிறார்கள் என்று தெரிந்து ஈழத்தில் மற்றவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்று விசாரித்தார்கள். யார், யாரோ பெயர்களை எல்லாம் சொல்லி அவர்கள் நலமா என்று ஆவலுடன் பதில் தெரியாத கேள்விகளை கேட்டு பதிலுக்காய் எங்கள் வாயை பார்த்துக்கொண்டிருந்தார்கள். “இந்த பொம்மரும், ஆமியும் இல்லையெண்டால் ஊரிலேயே இருந்திருக்கலாம்” என்று எதார்த்தமாய் அங்கலாய்த்தார்கள். எங்களைப்போல் புதியவர்களின் வருகையால் பாதிக்கப்படாதவர்களும் இருந்தார்கள். இவர்கள் தான் யதார்த்தவாதிகள் என்று நினைத்துக்கொண்டேன்.

யார் எப்படி இருந்தாலும் ஈழம், அகதி என்ற பொதுவான ஒற்றுமையைத்தவிர வேறெந்த வேறுபாடும் அங்கே இருந்தது போல் எனக்கு தெரியவில்லை. எனது உணர்வுகளை கடந்து யதார்த்தம் என் அறிவை சுடத்தொடங்கிய போதுதான் அகதி முகாமின் அடிப்படை வசதிகள், வேலை வாய்ப்பு(??), கல்வி, எல்லாவற்றுக்கும் மேல் சுதந்திரமான நடமாட்டம் இவை பற்றியெல்லாம் சிறிது, சிறிதாக மனம் கிரகிக்கத் தொடங்கியது.

இவர்களில் இனி நானும் ஓர் அங்கம். இந்த வலிகளை இனி ஜீரணிக்க என்னை நான் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். ஓர் ஓலைக்குடில், அதில் நான்கைந்து சமையல் பாத்திரம், ஓர் அடுப்பு இதையெலாம் உங்கள் வரிப்பணத்தில் தமிழக அரசு கொடுத்தது. இன்ன பிற வசதிகள் என்றால் நான்கு தண்ணீர் குழாய்கள் மட்டுமே. உங்கள் மண்ணில் ஒண்டிக்கொள்ள இடம் கொடுத்து, இரண்டு வேளை சாப்பாடும் கொடுத்ததிற்கு என் போன்ற ஈழத்தமிழர்கள் சார்பில் உங்கள் எல்லோருக்கும் நன்றி.

முகாம் என்ற பெயரில் ஒற்றை மரம் கூட இல்லாத பொட்டல் வெளியில் போடப்பட்ட குடிசைகளுக்கு நடுவே நிழலுக்காய் மனம் தவித்த போது என் வீட்டு மாமரமும், தென்னையும் என் உயிருக்குள் நிழற்குடை விரித்தன. அகதி முகாமில் அதிகாலை இரண்டு மணிக்கும் மூன்று மணிக்கும் இடையே குளிரக்குளிர குளித்த போதெல்லாம் ஈழத்தில் என் வீட்டு கிணற்றடியும் நான் குளிப்பதற்காய் கட்டப்பட்ட மறைப்பும் என் நினைவுகளில் வந்து, வந்து போயின. கண்கள் பனித்தன. அதிகாலை மூன்று மணிக்கு இருள் கவிழ்ந்திருந்தாலும் என் அந்தரங்கம் இப்படி பொது வெளியில் கடை விரிக்கப்பட்டு விட்டதோ என்ற ஓர் உணர்வு என் மெய் தாள வைத்தது. இது தவிர, அதிகாலையில் சூரியன் சந்திரனை எதிர்த்திசையில் விரட்டுமுன், அந்த இருள் பிரியாத பொழுதிலேயே முகாமிலிருந்து நீண்ட தொலைவிலிருந்த சவுக்குத்தோப்பில் காலைக்கடன் முடித்தாக வேண்டும். இதுவே ஓர் அகதி முகாம் பெண் அகதியின் அன்றாட நிகழ்ச்சி நிரல்.

இதையெல்லாம் படிப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று கூடத் தோன்றலாம். அப்படி ஒரு வாழ்கையை வாழ்ந்து பார்த்தால் தான் அதிலுள்ள கஷ்டமும், வலியும் புரியும். இந்த அன்றாட நிகழ்வுகளின் ஒவ்வோர் அங்கத்திலும் என் மண்ணும், வீடும், மனிதர்களும் என் நினைவுகளை நிலை கொள்ள விடாமல் அலைக்கழித்தன. மறுபடியும் என் ஊருக்கே திரும்பி ஓடவேண்டும் போல் துக்கம் தொண்டையை அடைக்கும். அந்த உணர்வுகளிலிருந்து தப்பிக்கொள்ள எனக்கு மட்டுமா இந்த விதி, இது இங்குள்ள எல்லோருக்கும்தானே என்று என்னை நானே சமாதப்படுத்த முயன்று தோற்றும் போனேன். எனக்கு பைத்தியம் பிடிப்பததை தவிர்க்க என்னை சுற்றி நடப்பதை வேடிக்கை பார்ப்பதும் என் வழமைகளில் ஒன்றாய்ப்போனது. அந்த அகதி முகாமில் வெயில், மழை, காவற்துறை, அதிகாரிகள், அகதி மனிதர்கள் இவற்றை தவிர வேறேதும் என் கண்ணில் படவில்லை. ஓர் அசுவாரசியத்தோடு இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்தேன். இதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்?

என்னால் ஏற்கவும் முடியாமல், மறுப்பதற்கு மாற்று வழியும் இல்லாமல் அந்த அகதி முகாம் வாழ்க்கைக்கும், வழமைக்கும்  என்னை பழக்கப்படுத்திக்கொள்ள ஆரம்பத்தில் நிறையவே சிரமப்பட்டேன். அகதி முகாமில் எல்லோரும் பெயரளவில் உண்டு, உறங்கி, இவையிரண்டிற்கும் இடையே எந்தவொரு வேலைவெட்டியும் அல்லது வெட்டி வேலையும் இல்லாமல் இருப்பதை முரண் நகையாய் பேசித் தீர்த்தார்கள். அப்படி அவர்கள் பேசி தீர்த்த வார்த்தைகளில் ஒளிந்திருந்த வலிகள் என் மனதை ஆழமாய் கீறிவிட்டுச் சென்றன. நான் முகாமிலிருந்த காலங்களில் யாருமே ஏதாதவது வேலை கிடைத்ததாக சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை, பார்த்ததில்லை.

சமீப காலங்களில் கூட இங்குள்ள தமிழ் தொலைக்காட்சியில் தமிழகத்தில் ஒளிபரப்பான ஈழத்தமிழர்களின் அகதி முகாம் வாழ்வு பற்றிய Talk Show பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களின் பற்றாக்குறை வாழ்வு, மூட்டை தூக்கிப்பிழைப்பதைத் தவிர வேறு வழியில்லாத அவலம், உயர் கல்விக்கு வாய்ப்போ, வசதியோ இல்லாமை, ஓர் முகாமிலுள்ள அகதி TVS 50 வாங்குவதில் கூட உள்ள சிக்கல்கள் பற்றியெல்லாம் கண்ணீருக்கும், சிரிப்புக்கும் நடுவே சொல்லித் தீர்த்தார்கள். எங்களுக்குத்தான் எங்கள்  உறவுகள் படும் அவஸ்தைகள் வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போலிருந்தது. ஈழத்தமிழா இது தான் உன் விதியா என்று நெஞ்சு கனத்தது. இலங்கை வான்படை, தரைப்படை, கடற்படை என்று எந்த படை உயிர் குடிக்கும் என்று தெரியாத நிலையிலும் ஈழத்தில் நாங்கள் எதையோ செய்து சுயதேவைகளை பூர்த்தி செய்து கொண்டோம்.

அகதியான அவலம் மானம் “மானியமாய்” எங்களைப் பார்த்து பல்லை இளித்தது. கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கியது ராவணனின் நெஞ்சம் மட்டுமல்ல, எங்களினதும்தான். வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடான இந்தியாவின் வறுமைக் கோட்டைத் தாண்டத் துடிக்கும் மக்கள், அதை அழிக்கமுடியாத அரசியல், பொருளாதார கொள்கை வகுப்புகள் இதையெல்லாம் நினைத்துப்பார்க்கும் போது இந்த மானியம் போதுமா அல்லது பற்றாக்குறையா என்று கணக்குப்பார்க்க, குறை கூற மனம் ஒப்பவில்லை. இது தான் எங்கள் விதியோ? இதுவே நிரந்தரமாகிவிடுமோ என்றபயமும், தன்மானமும் தான் உயிரை பாடாய்ப் படுத்தியது. சொந்த மண்ணில் எல்லோருக்குமே ஏதோவொரு தொழில், போதுமோ, போதாதோ ஏதோ வருமானம் என்று எல்லாத்தையுமே போர் தின்றது போக இப்போது மீதியுள்ளது உயிர் மட்டுமே. அந்த உயிரும் கூட இந்த அகதி முகாம் வாழ்வில் கசந்து முகாமிற்கும் ஈழத்திற்குமிடையே அல்லாடிக்கொண்டிருந்தது.

குண்டுகள் உயிர் குடிக்கவில்லை. ஒருவேளை உணவேனும் உயிர்ப்பயமின்றி உண்ண முடிகிறது. சரி, அடுத்தது என்ன என்று யோசித்தபோது குறுக்கும், மறுக்குமாக “ஆமி, பெடியள்” விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள்தான் கண்ணில் பட்டார்கள். தலைமுறைக்கும் இவர்கள் இதைத்தான் விளையாடப் போகிறார்களா? அவர்களின் எதிர்காலம் அகதி முகாமுக்குள்ளேயே முடக்கப்படப் போகிறதா? என் அடுத்த தலைமுறைக்கு நான் எதை விட்டுச் செல்லப்போகிறேன்? அகதி அந்தஸ்தையும், அவலச் சொத்தையுமா? அல்லது, இந்த உலகம் பழிக்கும் படி, படிக்காத முட்டாள் கூட்டம் என்ற அவப்பெயரா? அகதி வாழ்வின் எச்சங்கள் இவைகள் தானென்றால் எங்களுக்கு ஓர் சேரியும், இருண்ட எதிர்காலமும்தான் விதியாகிப் போகும்.

ஆகவே, ஈழத்தமிழன் எதை இழந்தாலும் கல்வியை இழக்கக்கூடாது. முகாமில் எங்கள் அடிப்படை தேவை ஏதோ வகையில் திருப்தி இல்லாமலே தீர்ந்தாலும், அடுத்து கல்விக்கும் இந்த அகதிமனம் ஆசைப்பட்டது. அது பற்றி விசாரித்த போதுதான் சொன்னார்கள். அந்த ஊரிலிருந்து நிறைய தூரத்தில் ஓர் சிறிய பாடசாலை மட்டுமே இருக்கிறதாம் என்று. பள்ளிக்கூடம் இருக்கிறது. அறிவும், திறமையும் எங்கள் குழந்தைகளிடமும் இருக்கிறது. ஆனால், நிர்வாகம் எதிர்பார்க்கும் இத்யாதிகள் ஈழத்தமிழர்களிடம் இருக்கிறதா, தெரியவில்லை. ஆனால், ஒரு சில மாணவர்கள் பள்ளிக்கூடம் சென்று வருவதை பார்த்த பின்தான் தெரிந்து கொண்டேன், அகதி அட்டையை காட்டினால் அனுமதி கிடைத்தது என்று சொன்னார்கள். பிறகேன் எல்லாக்குழந்தைகளும் பாடசாலை செல்லவில்லை? நூறு குழந்தைகள் படிக்குமிடத்தில் எப்படி ஆயிரம் குழந்தைகள் படிக்க முடியும். உங்கள் கல்வியை பங்கு கேட்க நாங்கள்!

இப்போது புரிந்தது ஏன் முகாமிலுள்ள எல்லாக்குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகவில்லை என்று. பிச்சை புகினும் கற்கை நன்றே. யார் சொன்னது? ஞாபகமில்லை. ஆனால், அந்த சொற்கள் மட்டும் பசுமரத்தில் ஆணியாய் மனதில் பதிந்து போனது. அடிமை சகதியிலிருந்து விடுபட எங்களுக்கு கல்வியும் முக்கியம். எங்கள் வலிகளிலிருந்து அதை புரிந்து கொண்டு எல்லா ஈழத்தமிழர்களும் படிக்க வேண்டும் என்று மனம் எதிர்பார்க்கிறது. இப்போதெல்லாம் அகதி முகாமிலிருந்து கொண்டே படித்து ஒரு சிலர் மட்டுமே அப்படி தமிழ்நாட்டில் முன்னேறியதாக கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன்.  தமிழ்நாட்டில் அகதி முகாமில் எல்லாக்குழந்தைகளுக்கும் கல்வி கற்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறதா தெரியவில்லை. ஆம் கிடைக்கிறது என்று நீங்கள் யாராவது சொன்னால் சந்தோசப்படுவேன். உலகில் எந்த குழந்தைக்கும் கல்வி கனவாய் போகாமல் அது மெய்ப்பட வேண்டும். கல்விக்காகவே அன்று நாங்கள் முகாமிலிருந்து வெளியேற வேண்டுமென்று நினைத்தோம்.

சிங்கள ராணுவம் இல்லாத இடமெல்லாம் எங்களுக்கு சொர்க்கபுரிதான். அது அகதி முகாமே ஆனாலும். முட்கம்பி இல்லாத முகாம், காலில் பூட்டப்படாத விலங்குகளோடு சுதந்திர அடிமைகளாய் வலம் வந்தோம். போர் பூமியைத்தாண்டி, அகதி முகாமிற்கு வெளியே இன்னோர் இயல்பான உலகம் இயங்குவதை பார்க்க, அதில் நாங்களும் ஓர் அங்கமாக கலந்து போக ஆசைதான். ஆனால், சங்கடங்களும் எங்களுக்கு அங்கே தான் ஆரம்பித்தன.

முதலில், முகாமை விட்டு யாருமே வெளியே போக முடியாது என்றார்கள். பிறகு, சிலர் வெளியே சென்று வந்ததைப் பார்த்து, விசாரித்தோம். வெளியே சென்று வருவதன் நடைமுறைகளை சொன்னார்கள். யாராவது முகாமிற்கு வெளியே வேலையாக செல்வதானாலும் பொறுப்பிற்கு இரண்டு பேரை முகாமில் விட்டுச் செல்ல வேண்டும். மறுபடியும் திரும்பி முகாமிற்கு வருவோம் என்று கையெழுத்து போட்டு கொடுத்து விட்டுத்தான் செல்லமுடியும். யாரும் எங்களை அடிபணிய வைத்து அழைத்து வரவில்லை. சங்கிலிகளால் எங்கள் கை, கால்கள் பிணைக்கப்படவில்லை. ஆனாலும், முகாமிற்குள் முடக்கப்பட்ட போது அடிமை போல் உணர்ந்தேன். அதை தவிர்க்க முடியவில்லை.

இப்போது நான் அகதியா அல்லது அடிமையா? எனக்குள் குழம்பிக்கொண்டிருந்தேன். இந்த குழப்பத்துடனேயே முகாமில் என் நாட்கள் கழிந்தன. ஒரு நாள் அடித்துப் பெய்த மழையில் அங்கிருந்த குடிசைகள், பாத்திரங்களோடு நாங்களும் இரவிரவாய் தூங்காமல், உட்காரவும் இடம் இல்லாமல் கால்கள் கடுக்க மழை வெள்ளத்தில் மிதந்தோம். வெள்ளம் வடிகிற மாதிரி தெரியவில்லை. அதற்கு பிறகு வருவது வரட்டும் என்று முகாமை விட்டு அன்றோடு வெளியேறினோம்.

முகாமிலிருந்து வெளியேறி உறவினர் ஒருவரின் உதவியுடன் வெளியே வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். வீடு கட்டி முடித்த கையோடு, புத்தம் புது வீட்டில் வாடைகைக்கு அமர்த்தப்பட்டோம். முகாமில் ஒரு விதமான கஷ்டம் என்றால் வெளியில் அது வேறோர் விதமாக இருந்தது. இதை சொல்வதா வேண்டாமா என்று பலமுறை யோசித்து விட்டு தயக்கத்தோடுதான் சொல்கிறேன்.

நாங்கள் இருந்த தெருவில் இருந்தது எல்லாமே பிராமண சமூகத்தினரின் வீடுகள்தான். நாங்களிருந்த வீட்டின் உரிமையாளரும் பிராமணரல்லாத ஒருவர். அந்த தெருவில் எங்கள் வீட்டிற்கு அருகில் ஓய்வுபெற்ற ஒரு பிராமணர் இருந்தார். அவருடைய வாழ்நாள் குறிக்கோள் அந்த தெருவை ஓர் “அக்ரஹாரம்” ஆக்குவதுதான் என்று அவரே சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் இருந்ததோ பிராமணரல்லாத ஒருவரின் வீடு. அவருடைய ஆசைக்கு குறுக்கே அந்த வீடும், நாங்களும் இருந்தது அவருக்கு பொறுக்கவில்லை என்பது அவரின் பேச்சில் வெளிப்படையாகவே தெரிந்தது. அந்த வன்மைத்தை எல்லாம், “கள்ளத்தோணிகள், நீங்கள்ளாம் பெரியாரின் ஆட்களடி, உங்கள இங்கிருந்து தொரத்தணும்” இப்படியெல்லாம் தான் கொட்டித்தீர்த்தார். அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.

எங்களைப்பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் காவல் துறையிடம் பற்றவைத்தார். இவரின் உளவியல் சித்திரவதை தாங்க முடியாமல் ஒருநாள் வீட்டை காலி செய்கிறோம் என்று வீட்டின் உரிமையாளரிடம் சொன்னோம். அவர் ஏன் என்று காரணங்களை  கேட்டு விட்டு, “நீங்கள் வீட்டை காலி செய்யவேண்டியதில்லை. மிகுதியை தான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார். அவர் யாரிடம் என்ன பேசினாரோ தெரியவில்லை. கொஞ்ச நாள் பிரச்சனையில்லாமல் இருந்தோம். நான் தமிழ்நாட்டில் என்றென்றும் நன்றி சொல்லவேண்டிய மனிதர்களில் ஒருவர். இன்னொருவர் எங்களை தன் சொந்த சகோதரிகளைப்போல் பாசம் காட்டிய ஓர் ஆட்டோக்காரர். எப்பொழுதாவது சினிமாவுக்கும் எங்களை இவர்தான் கூட்டிக்கொண்டு போவார். சினிமா ஆரம்பிக்கவும் தூங்குகிறவரை, அது முடிந்ததும் பத்திரமாய் தட்டியெழுப்பி கூட்டி வருவோம்.

அடுத்து, நாங்கள் இருந்த தெருவிலிருந்த மற்றைய பிராமணர்கள். “நீங்கள்ளாம் சிலோன் அகதிகளா…” என்று தொடங்கிய நட்பு. எங்களிடம் பாரபட்சம் பார்க்காமல் நட்பு கொண்டவர்கள். என் கசப்பான அகதி வாழ்க்கைக்கு சின்ன, சின்ன சுவாரசியங்களை சேர்த்த மனிதர்கள்.

தமிழ்நாட்டில் வெளியே தங்கியிருப்பதால் காவல் துறையிடம் பதிந்துகொள்ள வேண்டும் என்று வேறு சொன்னார்கள். அந்த நடைமுறையை செவ்வனே செய்துமுடிக்கு முன், பேசாமல் ஊருக்கே திரும்பி போய் குண்டடிபட்டு அல்லது சிங்கள ராணுவத்திடம் சித்திரவதைப்பட்டு செத்துப்போகலாம் என அழுகைதான் வந்தது. அப்படி எங்களை நாய் படாத பாடாய்   படுத்திவிட்டார்கள். இவ்வளவு அக்கப்போருக்கு நடுவிலும் என்னால் என்னையே சமாதானப்படுத்திக்கொள்ள மனமும், வாழ்வும் ஒட்டவில்லை. ஈழத்திற்கு ஓடிப்போக வேண்டும்போலிருந்தது. வீட்டில் அழுது புரண்டு ஒப்புதல் வாங்கி மறுபடியும் நான் இலங்கை போனேன்.

இந்த பதிவை முடிக்குமுன், இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு மேலாக ஈழத்தமிழ் அகதிகள் தஞ்சம் கோரியிருக்கிறார்கள். அண்மையில் கூட சிலபேர் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். புலத்திலிருந்து பணம் வருபவர்கள் ஓரளவுக்கு வசதியாய் இருக்கிறார்கள். முகாமிலிருப்பவர்களின் வாழ்வுதான் இன்னும் சவால்களுடனேயே நகர்கிறது. அண்மையில் கூட இவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவது பற்றிய அரசியல் அறிக்கைகள், தொலைக்காட்சி வழங்கப்பட்டது என்று செய்திகள் மூலம் அறிந்து கொண்டேன்.

இதையெல்லாம் ஏற்பதும், மறுப்பதும் அவர்களின் தனிப்பட்ட முடிவு. யார் அகதியானாலும் அவர்கள் அரவணைக்கப்பட வேண்டியவர்களே. அதில் எங்களுக்கு நிச்சயமாய் வருத்தமில்லை. ஆனால், என் நெஞ்சை அறுக்கும் விடயம் இந்தியாவில் திபெத்திய அகதிகளுக்கு கிடைக்கும் அடிப்படை வசதி, உயர்கல்வி, வாழ்வாதாரத்திற்கேற்ப வருமானம் தரும் வேலை வாய்ப்புகள் எல்லாமே ஈழத்தமிழ் அகதிகளுக்கு சாத்தியமற்றுப் போகிறதே, ஏன்? தமிழ்நாட்டையும் தாண்டி படகுகளில் கடல் மேல் தங்கள் உயிரை பணயம் வைத்து அவுஸ்திரேலியா தங்களை அரவணைக்கவில்லை என்று தெரிந்தும் அங்கே போய் உயிர் தத்தளிக்கிறார்களே ஏன்? புரியவில்லை. யோசித்தால் வலி தான் மிஞ்சுகிறது.

–          ரதி

vote-012

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம் – ஏப்ரல், 2010 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. மோசடி தொழில் நிறுவனத்தின் அட்டூழியத்துக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் அதிரடி போராட்டம்!
  2. அணு உலை விபத்து இழப்பீடு மசோதா: அமெரிக்காவின் இலாபவெறிக்கு இந்திய மக்கள் பலிகிடா!
  3. பட்ஜெட்: வலுத்துவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை
  4. பழங்குடியினத் தலைவர் லால் மோகன் டுடூ படுகொலை: அரசு பயங்கரவாத அட்டூழியம்!
  5. சாதி கௌரவக் கொலைக்கு உச்சநீதி மன்றத்தின் வக்காலத்து
  6. தரகு முதலாளித்துவ சேவையில் மோடியின் இந்துத்துவா ஆட்சி
  7. பாரம்பரிய விவசாயத்தை அழிக்க வரும் கருப்புச் சட்டம்
  8. கருப்புப் பணம்-காமக் களியாட்டம்: இதுதான் கார்ப்பரேட் ஆன்மீகம்!
  9. ராஜபக்சே குடும்பத்தின் பாசிசப் பிடியில் இலங்கை
  10. “அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்!” – மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் (HRPC ) போராட்டம்
  11. “லியோ பாஸ்ட்னர்ஸ் நிர்வாகத்தின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” – போராடும் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் – பொதுக்கூட்டம்.
  12. சாலையா? மரணக் கிணறா? –ஓட்டுக் கட்சிகளின் மிரட்டலையும் மீறி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்
  13. அனைத்துலக உழைக்கும் மகளிர் தினம்: கொண்டாட்டமா? போராட்டமா?
  14. தகவல் அறியும் உரிமைச் சட்டம்: சோளக் காட்டுப் பொம்மை
  15. மோடி கும்பலைக் காக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு
  16. கொட்டமடிக்கும் ஆதிக்க சாதி வெறியன்! உடந்தையாக நிற்கும் அதிகார வர்க்கம்!
  17. “ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங் – சுகதேவ் நினைவை நெஞ்சிலேந்துவோம்!” – புரட்சிகர அமைப்புகளின் உறுதியேற்பு!
  18. ஓட்டுப் போடாதே! புரட்சி செய்! – வி.வி.முவின் இடைத்தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம்
  19. தொழிற்சங்கத்தை உடைக்க முதலாளி – போலீசு கூட்டுச் சதி! போராடும் தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு! கோவையில் தலைவிரித்தாடும் முதலாளித்துவப் பயங்கரவாதம்!
  20. காவி இருளில் சிக்கித் தவிக்கும் கடலோரக் கர்நாடகா!
  21. சட்டப் பேரவையின் எழிலும் தொழிலாளர்களின் அவலமும்

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 10 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

தொடர்புடைய பதிவுகள்

மீன்பிடி ஒழுங்குமுறை மசோதா: மீனவர் மீதான இந்திய அரசின் போர்!


vote-012தினந்தோறும் உயிரைப் பணயம் வைத்து, ஆழ்கடலில் நெடுந்தொலைவு சென்று நம் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களால்தான், இந்தியாவின் புரதத் தேவையில் பாதியளவு நிறைவு செய்யப்படுகிறது. இம்மீனவர்களின் வாழ்வுரிமையையும் அன்றாடச் செயல்பாடுகளையும், இந்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள “மீன்பிடித்துறை ஒழுங்குமுறை மசோதா” முடக்கிப் போடப் போகின்றது.

மீன் பிடித் தொழிலில் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தை வகிக்கும் தமிழ்நாட்டிலுள்ள 2.5 லட்சம் மீனவர்கள், 6200 மீன்விசைப் படகுகள், 50 ஆயிரத்து 360 பாரம்பரியக் கலன்களைக் கொண்டு அண்மைக்கடல், தூரக்கடல் பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நம் நாட்டின் மீன் உற்பத்தியைப் பெருக்குவதற்கென ’70-களில் நீலப்புரட்சித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத் திட்டத்தின்படி, விசைப்படகுகள் வாங்கக் கடனுதவி, டீசலுக்கு மானியம் போன்றவை கடந்த 35 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அரசு கொண்டுவந்துள்ள புதிய மசோதா, விசைப்படகுகள் மற்றும் பாரம்பரியப் படகு வகைகளுக்கிடையே உள்ள பாரதூரமான வேறுபாடுகளையோ, அவற்றின் மீன்பிடித் திறன்களையோ கருத்தில் கொள்ளாமல் அனைத்தையும் “மீன்பிடிக் கலன்” என ஒரே வார்த்தையில் வரையறுத்து, அனைவரையும் மீனவர்கள் என்று பொதுவில் வகைப்படுத்தி விதிமுறைகளையும் தண்டனைகளையும் வகுத்துள்ளது.

இச்சட்டப்படி, எல்லா வகைப் படகுகளும் மத்திய அரசிடம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறும்போதே பிடிக்கப்போகும் மீன் இனங்கள், எந்த இடத்தில் எத்தனை மாதங்கள் மீன்பிடிக்கப்படும், எந்த முறையில் மீன்பிடிப்பு நடக்கும் முதலான அனைத்தையும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்; என்ன நோக்கத்துக்காக மீன் பிடிக்கப்படுகிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்; இதற்கான அனுமதிகளையும் மீனவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் காலந்தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்க வேண்டும். பிழைப்புக்கா, வணிகத்துக்கா, ஆய்வுக்கா என்றெல்லாம் துருவிக் கொண்டிருக்கப் போகிறது அரசு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண்டு அனுபவித்து வரும் கடலை மீனவர்களிடம் இருந்து பிரித்து, அவர்களை நாட்டினுள் ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகளைப் போல கேள்வி மேல் கேள்வி கேட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமையைப் பறித்தெடுக்கத் துடிக்கிறது, அரசு.

நாட்டின் பாதுகாப்புக் காரணத்தையோ அல்லது அரசு தீட்டும் கடல் அல்லது மீன்வளம் சார்ந்த திட்டத்தைக் காட்டியோ மீனவர்களுக்குத் தரப்படும் அனுமதிகளையும் சலுகைகளையும் ரத்து செய்யும் அதிகாரமும் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. திடீரென சில குறிப்பிட்ட வகை மீனினங்களைப் பிடிக்கக் கூடாது எனக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறும் மீனவர்களுக்குத் தரப்படவுள்ள தண்டனைகளையும் இச்சட்டம் பட்டியலிட்டுள்ளது. மீன்பிடிப் படகில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மீன்கள் இருக்குமானால், படகு பறிமுதல் செய்யப்படும். படகை விடுவிக்க வேண்டுமானால் படகின் மதிப்பில் பாதியைப் பிணையாகக் கட்ட வேண்டும். அப்படகில் இருந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சோதிக்க விடாமல் தடுப்பவர்களுக்கு, பத்து லட்சம் ரூபாய் வரை அபராதம்; பன்னிரண்டு கடல்மைல் தாண்டினால் ஒன்பது லட்சம் அபராதம்; படகின் சொந்தக்காரருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும் உண்டு. மீன்களும் பறிமுதல் செய்யப்படும். படகின் நீளம் 12 மீட்டருக்கு மேல் இருந்தாலும் தண்டனை உண்டு.

கரையோரப் பகுதிகளில் மீன்வளம் குறைந்துவருவதால், 12 கடல்மைல்களைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லாவிட்டால் பிழைக்கவே முடியாது என்பதுதான் மீனவர்களின் இன்றைய நிலைமையாக உள்ளது. விசைப்படகேறி, கடலில் நெடுந்தொலைவு பயணித்து, பல நாட்கள் தங்கியிருந்து, மீன் பிடிக்க ஒரு முறை போய்வரும் செலவு மட்டுமே ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஆகிறது. இந்நிலையில், இவ்வாறான கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவருமாயின் மீனவர்கள் இனி கடல் இருக்கும் திசைப்பக்கமே தலைவைத்துப் படுக்க முடியாது.

விதிமுறைகளை மீறும் மீனவரைக் கைது செய்தல், படகு மற்றும் மீன்பிடிக் கருவிகளைப் பறித்தல் போன்றவற்றிற்கு இழப்பீடும் கோரமுடியாது. சந்தேகத்தின்பேரில் தவறான நபர்களைப் பிடித்தாலும், அவற்றிற்காக கடலோரக் காவல்படையைக் குற்றம் சாட்ட முடியாதபடிக்கு இச்சட்டம் கடலோரக்காவல் படைக்கு எல்லையற்ற அதிகாரத்தைக் கொடுக்கிறது.

ஏற்கெனவே மீனவர்களின் வாழிடங்கள் உல்லாச விடுதிகள் கட்டுவதற்கென கரையோரங்களிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தீவிரமாகியிருக்கும் உலகமயத்தினால் அதிகரிக்கும் கப்பல் போக்குவரத்து, கடலோர நகரங்களிலிருந்து தினமும் கடலில் கொட்டப்படும் நச்சுக்கழிவுகள், சாக்கடைகள், அனல் மின்நிலைய சாம்பல்கள் போன்றவையும், ஏற்கெனவே இருந்த மீன்வளத்தை அழித்துக் கொண்டு வரும் சூழ்நிலையில், மீனவர்களின் மேல் இன்னுமோர் பேரிடியாக ஏன் இந்தக் கெடுபிடிச் சட்டம்?

இதற்கு இந்திய அரசு, “ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பிற நாட்டு அமைப்புகளுக்கு மீன்களையும் மீன் பொருள்களையும் ஏற்றுமதி செய்வதென்றால், இந்தியாவில் அதற்கான ஒழுங்குபடுத்தும் ஆணையம் இருக்க வேண்டுமென்ற அந்நாடுகளின் எதிர்பார்ப்புக்கிணங்கவும், இந்தியாவின் மீனவர் உரிமைகளை நிலைநாட்டவும் இந்தச் சட்டம் தேவை” எனக் கூறுகிறது.

வேளாண்மைத் துறை அமைச்சகமோ, கடல்வழியாக பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடுந்தாக்குதல்கள் போல இனி நடைபெறாமல் தடுக்க, நமக்கு உரிமையுள்ள கடல் பரப்பை நிர்ணயிப்பதும், அதில் நமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதும் அவசியம் என்பதால் இந்த மசோதா கொண்டுவரப்படுவதாகச் சொல்கிறது. ஆனால் உண்மையோ வேறு.

1990-களில் நரசிம்மராவ் அரசால் அறிவிக்கப்பட்ட மீன்வளக் கொள்கை, ‘கூட்டு முயற்சி’ எனும் பெயரில் பன்னாட்டு ஆலைக் கப்பல்கள் இந்தியக் கடல்களில் மீன்பிடிக்க உரிமம் வழங்கியது. இம்முடிவுதான், மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது பன்னாட்டு நிறுவனங்கள் படிப்படியான தாக்குதலைத் தொடுத்திட வழிகோலியது. இந்தியக் கடல் எல்லைக்குள் நிறுத்தப்பட்டுள்ள இந்நிறுவனங்களின் கப்பல்கள், நவீன கருவிகளைக் கொண்டு முட்டை, குஞ்சு வேறுபாடின்றி அப்படியே மீன் ஆதாரங்கள் அனைத்தையும் உறிஞ்சி எடுத்து, மீன்களை இரகம் வாரியாகப் பிரித்தெடுத்து இன்னொரு கப்பலுக்குக் கைமாற்றி விடுகின்றன. எஞ்சிய மீன்குஞ்சுகளையும், முட்டைகளையும், சில சமயங்களில் துடுப்பு வெட்டப்பட்ட சுறாவின் உடல்களையும் கழிவாகக் கடலில் கொட்டிவிடுகின்றன. மீன்வளத்தின் ஆதாரமான முட்டைகளைத் துப்புரவாகத் துடைத்தொழித்து வரும் இவற்றின் அகோரப் பசிக்கு இடையூறாக இருக்கும் இந்திய மீனவர்களை முற்றிலுமாக கடலிலிருந்து துரத்துவதுதான் ஏகாதிபத்தியத்தின் அடுத்த இலக்கு.

அந்த நோக்கத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த சட்டம், அதற்காகக் கடுமையான நிபந்தனைகளையும், தண்டனைகளையும் வரையறுத்துள்ளது. அதே நேரத்தில் மீனவர்களை அத்தொழிலில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் மாற்றுத் தொழில் கற்றுத் தரும் நூற்றுக்கணக்கான தன்னார்வக் குழுக்கள், சுனாமி பேரழிவுக்குப் பிறகு இந்தியக் கடற்கரை நெடுக வலை விரித்துள்ளன. ரொட்டி தயாரிப்பு, உள்ளீடற்ற செங்கல் தயாரிப்பு போன்ற சிறுதொழில்களுக்கு மீனவர்களை மாற்றும் சதித்திட்டத்தில் நாகை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் கரையோரங்களில் இவை இயங்கி வருகின்றன. ஒரே நேரத்தில் அடக்குமுறை சட்டம் மூலமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமும் மீனவர்கள் மீது ஏகாதிபத்தியமும் இந்திய அரசும் போரைத் தொடுத்துள்ளன.

இச்சட்டத்திற்கு மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ள பரவலான எதிர்ப்புக்கூட ஏகாதிபத்திய உலகமயமாக்கத்தின் சதிகளுக்கெதிராகப் போராடாமல், இலக்கற்ற போராட்டங்களாகவே உள்ளன. அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுடன் இணைந்து, நமது கடல்வளத்தைக் கொள்ளைகொண்டு போகவரும் ஏகாதிபத்தியங்களை விரட்டியடிக்கும் திசையில் மீனவர்களின் போராட்டம் முன்னேறாவிடில், நமது கடல் இனி நம்முடையதாக இருக்காது.

–          புதிய ஜனநாயகம், மார்ச் – 2010.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

மரணத்தில் சூதாடும் மருத்துவ பயங்கரவாதிகள் !!

vote-012காலாவதியான மருந்துகளைப் புதிய லேபிள்களில் அடைத்தும்,  போலி மருந்துகளைத் தயாரித்தும் தமிழகமெங்கும் விற்பனை செய்த கும்பல் சமீபத்தில் பிடிபட்டுள்ளது. இருப்பினும் இது புதிய செய்தியல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ’கேப்ஸ்யூல்ஸ்’ எனப்படும் கூட்டு மாத்திரையில் வெறும் மஞ்சள் பொடியை அடைத்து விற்பனை செய்த கம்பெனியொன்று பஞ்சாப்பில் பிடிபட்டதை நாம் அறிவோம். இருப்பினும் இப்போதுதான் இது போன்று  நடப்பதைப்போல செய்திகள் பரப்பப்படுகின்றன.

போலி மருந்து எனும் சொல்லே மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. எத்தனை ஆண்டுகளாக இவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன? குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், முதியவர்கள், ஊனமுற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், என எத்தனையாயிரம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? எத்தனையாயிரம் பேர் இதனால் மரணமடைந்திருப்பார்கள்? எத்தனையாயிரம் பேர் இதனால் மரணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பார்கள்? அரசு மருத்துவமனைகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் போலி, மற்றும் காலாவதியான மருந்துகள் இருக்கிறதா? அரசு மருத்துவமனைகளிலே ஒரு நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரம் பேர் சாகக்கூடிய இந்தியாவில்  இக்கேள்விகள் எதற்கும் பதிலில்லை.

மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், எனப் படித்திருக்கிறோம், பார்த்துமிருக்கிறோம். அவர்களெல்லாம் மருந்துகளினால் பலனின்றி உயிரிழந்தார்களா? அல்லது மருந்துகளின் பலனால் உயிரிழந்தார்களா? யாருக்கும் தெரியாது. மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கும் இந்தக் கொலைபாதகச் செயலை நம்மால் மன்னிக்க முடியுமா?

ஏராளமான அல்லது போதுமான அளவிற்கு சொத்து; கையிருப்பாகக் கணிசமாகப் பணம்; அதிகபட்ச செலவுகளையும் கூடத் தாக்குப் பிடிக்குத் தாண்டுமளவிற்கான சேமிப்பு; எல்லாச் செலவுகளும் போக மீதம் வரக்கூடிய அளவிற்கான மாத வருமானம்; எதற்கும் எந்தப் பய தயவும் தேவையில்லை என யாரையும் எதிர்பாராது இறுமாப்போடு வாழும் நிலை; இவைகளெல்லாமிருப்பதால் சமூகம், நாடு, மக்கள் குறித்த அக்கறைப்பட வேண்டிய அவசியமில்லை என  சுயநலத்தோடு தெனாவட்டாக பேசிக்கொண்டு வாழ்கின்ற பலர் கூட இந்தப் போலி மருந்துச் செய்தியைக் கேட்டுப் பதறுகிறார்கள். இந்தப் பதட்டம் தரும் டென்ஷனினால் ஏற்கனவே பிரஷ்ஷருக்காகப் பயன்படுத்தும் மருந்துகளைப் பயன்படுத்தவும் அவர்கள் தயங்குகிறார்கள்,

தற்போது சரணடைந்து சிறையிலிருக்கிற மீனாட்சிசுந்தரம் விற்பனை உரிமம் எடுத்திருந்த மருந்துக் கம்பெனியை ஒரு பன்னாட்டு மருந்துக் கம்பெனி வாங்கும்போது அதன் விற்பனையைக் குறித்த அறிக்கையை ஆய்வு செய்த போதுதான் இந்த விசயம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.. தாங்கள் செய்கிற வேலையை ஒரு மீனாட்சி சுந்தரம் செய்வதா? என்கிற வகையில் தான் இந்த விசயத்தைக் கசிய விட்டிருக்கிறது அந்தப் பன்னாட்டுக் கம்பெனி. நித்யானந்தாவைத் தர்மானந்தா போட்டுக்கொடுத்தது போல ஒரு காலாவதியை ஒரு போலி போட்டுக்கொடுத்த நல்ல காரியம் நடந்திருக்கிறது. ஆனாலும் இதன் முழுப்பரிமாணத்தையும் மக்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இது அதிர்ச்சியும், பயமும் தரக்கூடிய விசயமாக மட்டுமே ஊடகங்கள் எழுதி, பீதியைக் கிளப்பிவிடுகின்றன. ஆனால் இது அவ்வாறான பிரச்சினை மட்டுமே அல்ல, மாறாக கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு மருத்துவப் பயங்கரவாதிகளும் அரசும் விளையாட்டுக் காட்டுகின்ற பிரச்சினை. மக்களைப் பாதிப்படையவைக்கின்ற  ஒரு குற்றப் பிரச்சினை. அரசுதான் இதில் முதல் குற்றவாளி.

தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கையினால் உருவாக்கப்பட்ட, புதிய மருந்துக் கொள்கையினை இந்திய ஆட்சியாளர்கள் நடைமுறைப் படுத்திய பிறகுதான், மருத்துவப் பயங்கரவாதிகள் துணிச்சலாக இந்தகைய  குற்றங்களைச் செய்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டன.

பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் முதலாளிகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுமில்லாமல் மருந்து தயாரிக்க அனுமதியளித்திருக்கிறது இந்திய அரசு. அயல் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பல ஆபத்தான மருந்துகளும் கூட இந்தியாவில் தயாரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சில மருந்துகள் வெளிப்படையாகவும், சில மருந்துகள் ரகசியமாகவும் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமின்றி அயல் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்ல, இப்பன்னாட்டுக் கம்பெனிகள் தங்களின் புதிய மருந்துகளைப் பரிசோதனை செய்வதற்கு இந்திய மக்களைப் பயன்படுத்துகின்றன. 2001 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் ஒரு அமெரிக்கக் கம்பெனியின் புதிய மருந்தினை மக்கள் மீது பரிசோதனை செய்து பார்த்த செய்தி வெளிவந்ததைப்  பார்த்தோம். இந்தப் பரிசோதனை செய்வதிலேயே ஆண்டொண்டிற்கு ஒரு மருந்துக்கு சுமார் 1500 கோடி ரூபாய்கள் சம்பாதிக்கின்றன. எந்தக் கட்டுப்பாடுமில்லாமல் நடத்தப்படுகின்ற இந்தப் பல்வகைக் கொள்ளைத் திட்டத்தின் ஒரு பகுதிதான் காலாவதி, மற்றும் போலி மருந்துகளைத் தயாரித்து செய்யும் விற்பனை. போலி மருந்துகளின் விற்பனையில் மட்டும் இந்தியாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கோடி ரூபாய் புழங்குவதாக முன்னர் அவுட்லுக் ஏடு வெளியிட்டிருந்தது.

துவக்கத்தில், புகார்கள் வந்தபோது போலியான மற்றும் காலாவதியான மருந்துகளைக் கண்டறிய போலீசும், மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் சென்றார்கள். ஒரு பத்திரிக்கையாளர், ”மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் இதில் பங்கு உள்ளதாகக் கூறப்படுகிறதே”, எனக் கேட்கிறார், ”அவர்களும் எங்களோடுதான் வருகிறார்கள், அவர்கள்தான் ஆய்வு செய்து கண்டுபிடிக்கிறார்கள், அவர்கள் மீது எந்தப் புகாரும் வரவில்லை. அப்படி ஏதும் புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று பதில் கூறுகிறது போலீசு.

பல இடங்களில், பலகோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புடைய போலி மற்றும் காலாவதியான மருந்துகள் கிட்டங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது தமிழகமெங்கும் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இது தொடரவும் சுதாரித்த மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், ”போதுமான அதிகாரிகள் இல்லை, தமிழ்நாடு முழுவதிற்குமே 50 பேர்தான் இருக்கிறோம். எனவே, எங்களால் முழுமையாகக் கண்காணிக்க முடியவில்லைஎனப் பதட்டத்துடன் பேட்டி கொடுக்கிறார்கள்.

இதற்கிடையில் மருந்துக்கடைக்காரர்கள் தங்களிடமிருக்கும் காலாவதியான மருந்துகளை நள்ளிரவுகளில் சாக்கடைகளிலே கொட்டுகிற வேலையும் தமிழகமெங்கும் நடைபெறுகிறது. மருந்து விற்பனையாளர்கள் சங்கமோ, கடைகளை ஆய்வு செய்ய வரும்போது, போலீசு வரக்கூடாது, அதிகாரிகள் மட்டும் வந்தால் போதும். எங்களது கடைகளின் முன்னால் இந்தக்கடையில் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படவில்லைஎன்று போர்டு மாட்டி வைத்துவிடுகிறோம், என அறிக்கை விடுகிறார்கள். மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளோடு இனி போலீசுமல்லவா மாமூலுக்கு வந்துவிடும் என்பது அவர்கள் கவலை.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் இவர்களின் வாக்குமூலமே இவர்களைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. 50 பேர் போதாது என்றால் அதை அதிகரிப்பதற்காக மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் என்ன முயற்சி எடுத்திருக்கிறார்கள்? அவர்களது சங்கம் இதற்காகப் போராடியதுண்டா? ஆட்களைக் கூடுதலாக நியமித்தால் பங்குத்தொகை குறைந்துவிடுமே என்பதற்காகத் தானே இவர்கள் பேசாமல் இருந்தார்கள். எப்பேர்ப்பட்ட பிரச்சினை இது! உண்மையாகவே, ஒரு உயிராதாரமான இந்தப் பிரச்சினையில் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அக்கறையில்லை என்பதோடு அதை அலட்சியமானதாகவும் நினைக்கிறார்கள். இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அலட்சியப்படுத்தக் கூடிய கூட்டமே மக்கள் என்கிற சிந்தனையில் அரசாங்கமே இருக்கும் போது அதன் ஊழியர்கள் மட்டும் வேறுமாதிரியாகவா இருப்பார்கள்!.

மருந்துக்கடைக்காரர்களோ மாதந்தோறும் மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மாமூல் கொடுக்கிறார்கள். திருட்டுசி.டி, கள்ளநோட்டு, போலிமது, என்கிற வரிசையில் மருந்தையும் சேர்த்துவைத்து கப்பம் கட்டுவதுதானே இங்கே நடந்துகொண்டிருக்கிற உண்மை.

அரசு மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்பில்லாமல், இந்த குற்றங்கள் நடந்திருக்கும் என்பதை முட்டாள் கூட நம்பமாட்டான். ஆனால் எல்லோரையுமே அடிமுட்டாள்களாக நினைத்துக் கொண்டு கதைகதையாய் அவிழ்த்துவிடுகிறார்கள் அரசு அதிகாரிகள். அவர்கள் மாதந்தோறும் கப்பம் கட்டுகிற  ஆளுங்கட்சிக்காரர்கள் தங்களைக் காப்பாற்றிவிடுவார்கள் என்கிற நம்பிக்கையே அவர்களை அவ்வாறு பேசவைக்கிறது.

மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மட்டுமல்ல, மருந்து விற்பனையாளர்களே அரசியல்வாதிகளின் செல்வாக்கோடுதான் இந்தக் குற்றங்களைச் செய்கிறார்கள். உதாரணமாக, தற்போது பிடிபட்டிருக்கிற மீனா ஹெல்த்கேர் மற்றும் வசந்தா பார்மசி நிறுவனத்தின் உரிமையாளன் காரைக்குடி மீனாட்சி சுந்தரம் கூட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் நெருங்கிய உறவினரென்றும் அவருக்காக வங்கியில் 150 கோடிரூபாய்களுக்கும் மேல் கடன் வாங்கிக் கொடுத்திருக்கிறாரென்றும் தினகரன் பத்திரிகையில் செய்திகள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்தான் பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு ஆஸ்தான வழக்கறிஞர் என்பது நாமறிந்ததே!.

மருத்துவத்திற்கான மருந்துகள் மட்டுமல்ல, விவசாயத்திற்கான பூச்சிக்கொல்லி மருந்துகளிலும் காலாவதியும் போலியும் தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அது அசலாக வேலை செய்வது மனிதர்கள் தற்கொலை செய்து கொள்ளச் சாப்பிடும்போது மட்டும்தான்.

இன்று போலி மற்றும் காலாவதி மருந்துகளை ஆய்வுசெய்து கண்டுபிடிப்பதாகச் சொல்கிறார்கள். காலாவதியான மருந்துகளைப் பழைய பேக்கிங்களிலிருந்து பிரித்து எடுத்து புதிய பேக்கிங்குகளில் வைத்திருக்கிறார்களென்றால், காலாவதியான மருந்துகள் எவை என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

ஒரு அட்டையிலிருந்து ஒரு மாத்திரையை மட்டும் பிரித்தெடுத்து ஆய்வு செய்து போலி இல்லை அல்லது காலாவதி இல்லை என்று சொன்னால், அதே அட்டையிலுள்ள இன்னொரு மாத்திரை போலியானது இல்லை என்று மருந்துக்கட்டுப்பாட்டு அதிகாரிகளால் உத்திரவாதம் தர முடியுமா? முடியாது. இதே போன்றுதான் ஊசிமருந்துகளையும் கண்டுபிடிக்க முடியாது, குழந்தைகளுக்கான ஸிரப் போன்றவைகளையெல்லாம் ஒவ்வொன்றாகச் சோதனை செய்தாலொழிய, போலிகளைக் கண்டுபிடிக்கவே முடியாது. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் போலிகளே இல்லை என்று மருத்துவ இணை இயக்குநர் பத்திரிகையில் அறிவிப்புக் கொடுத்திருக்கிறார். இதற்கும், ப,சிதம்பரம்- மீனாட்சி சுந்தரம்- உறவினர்-  சிவகங்கை மாவட்டம் என்பதற்கும் சம்பந்தமில்லாமலா இருக்கும்.

போலியான, காலாவதியான மருந்துகள் தமிழகமெங்கும் விற்பனை செய்யப்பட்டிருப்பதால் உடனடியாக தமிழகம் முழுவதுமுள்ள இருப்பு மருந்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்து, அப்புறப்படுத்தி விட்டு நன்கு சோதிக்கப்பட்ட புதிய மருந்துகளை விற்பனை செய்ய வைப்பதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும். ஆனால் அவ்வாறு நடக்கும் என்பதற்கு நம்பிக்கை தரக்கூடிய எதுவும் தமிழகத்தில் இல்லை. .மக்கள் தெருவில் இறங்கி, அரசியலையே தொழிலாக்கியுள்ள இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களையும், அவர்களின் எஜமானர்களாகிய பன்னாட்டுக் கம்பனி முதலாளிகளையும் அடித்து விரட்டு வதைத் தவிர.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

என்று மடியும் இந்த அடிமையின் மோகம் ?

7

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 13

vote-012அலுவலக வாயிலில் அந்த வேலைக்காரப் பெண்கள் அவசர அவசரமாக பெரியதொரு ரங்கோலிக் கோலம் போட்டுக் கொண்டிருந்தனர். வழக்கமான வேலைகளோடு கூடுதலாய் சேர்ந்துவிட்ட வேலை அது. ’எஜமானி அம்மாக்கள்’ வழக்கத்துக்கு மாறாக சற்று முன்னதாகவே அணிதிரளத் தொடங்கிவிட்டதால், நேரமாகிவிட்டதே என்ற பதட்டம் வேறு.  எனவே வண்ணங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தனர்.

உள்ளே நுழைந்ததும் ஒரு மேசையில் பாங்காய் அமர்ந்திருந்த குடத்துக்குத் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. அது பூரணகும்பம்.  யாருக்கு? யாரோ அதிகாரக்கொம்பின் உச்சாணிக்கிளையைப் பிடித்துவிட்ட ஒரு அம்மணிக்கு. அவர் போன்றவர்கள்தான் இவர்களுக்கு ஆதர்ஷ புருஷிகள்.

இரும்புப் பெட்டியில் புழுங்கிக்கொண்டிருந்த தங்க நகைகளும், தங்க சரிகைச் சேலைகளும் பரோலில் வெளிவந்து எங்கும் பளபளத்தன. [கல்யாணம் கார்த்தி, அலுவலக விழாக்கள்.. இப்படி அவற்றுக்குக் கூட அடிக்கடி விடுதலை கிடைப்பதுண்டு] தடபுடலான விருந்து உபசாரங்கள், சம்பிரதாயச் சொற்பொழிவுகள் எல்லாம் நடந்தேறின. கூடவே, ஆண்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.  எதற்கு… சரிக்கட்டவா? தெரியவில்லை. விமர்சனங்கள் அற்ற இந்த விழாவே ஆணினத்துக்கு வழங்கிய இனிப்புதான் என்றாலும் பார்த்தறியத்தக்க பளபளப்புடன், வழங்கப்பட்ட சுவைத்தறியத்தக்க இனிப்பு ஒரு இலவச இணைப்பு.

எந்த ஆணுக்கும் உதட்டோரத்தில் வழிந்தோடிய எளக்காரச் சிரிப்பு தவிர்த்து இந்த விழா பற்றி வெளிப்படுத்த வேறு கருத்தில்லை.  ஆனால், வாயைப் பிடுங்கியபோது, “உலக ஆண்கள் தினம் என்னைக்கி வச்சுக்கலாம்” என்று கேட்டவர்களும் உண்டு. என்ன இருந்தாலும் நான் ”மேல் சாவனிஸ்டு தாங்க,  நீங்க என்ன சொல்றீங்க” என்றும் ஒருவர் கேட்டார்.  “நான் ஆணாதிக்கவாதி இல்லை, அட் லீஸ்ட், அப்படி இருக்க விரும்பவில்லை” என்றேன். “ஆங்.. என்று மடக்கிவிட்டது போல் சிரித்தார்”.  இருக்க விரும்பாதவனிடத்தும் அனிச்சையாய் ஒட்டியிருக்கும் அளவுக்கு வேர்விட்டு இருக்கும் அம்சம் பற்றிய சுய விமர்சனம் அது என்று அவருக்குப் புரியவில்லை.

இந்த கொண்டாட்டத்துக்குப் பெயர் உலக மகளிர் தினம் என்கிறார்கள். ஆயி, அப்பனிக்கு திதி வருவதை அய்யிரு வந்து அறிவிப்பார், அல்லது அம்மாசி அன்னைகோ, வைகுண்ட ஏகாதசி அன்னைக்கோ மொத்தமாய் கொடுப்பாங்க.. இந்த உலக மகளிர் தினத்தை நாள்காட்டியே அறிவித்துவிடுகிறது.. வித்தியாசம் வேறென்ன?  இதை கொண்டாடுவதும், கொண்டாடும் விதமும் கூட இங்கு ஒரு சடங்காகிப் போனது.

இந்த நாள் எதற்காக அனுஷ்டிக்கப்படுகிறது, தெரியுமா? இந்த செய்கைகளின் மூலம் யாரைக் கேவலப்படுத்துகிறீர்கள் என்று தெரிகிறதா? என்ற கேள்விகள் என்றைக்குமே அவர்களது மேக்கப்பைக் கலைத்ததில்லை. வேறு எப்படிக் கேட்பது என்று எனக்கும் புரியவில்லை.  எனவே சென்றமுறை ”என்று மடியும் இந்த அடிமையின் மோகம்” என்று பெரிதாக டைப் செட் செய்து எனது இருக்கையின் பக்கத்தில் ஒட்டியிருந்தேன். அதைப் பார்ப்பதைத் தவிர்க்கவே முடியாத அருகிலுள்ள ஓரிருவர் தவிர யாரும் அதைச் சீண்டவில்லை. யாரையும் அது சீண்டவும் இல்லை.

அவர்களது சொந்த வாழ்க்கை என்ற மதில் சுவரைத் துளைக்கவும் என்னால் முடியவில்லை.  பெருக்கியவர்களும், கோலம்போட்டவர்களும், எச்சில்தட்டு கழுவியவர்களும் அவர்களது சமூகத்தில் இல்லாததால், விரிந்த சமூக வாழ்க்கையில் பெண்களின் நிலை பற்றிய கருத்து அவர்களிடம் எடுபடவில்லை. ஆனால், அந்த உதாரணத்துக்கு மட்டும், ”அவர்களுக்கும் ஃப்ரீயாவே சாப்பாடு ஏற்பாடு பண்ணிட்டோம், பேமெண்டும் தனியா பண்ணிட்டோம்” என்று தர்மகர்த்தா பாணியிலான பதில் கிடைத்தது.

இதை எல்லாம் பார்க்கும்போது இது, உலக மகளிர் தினமா? உலக உழைக்கும் மகளிர் தினமா? தாழ்த்தப்பட்ட சாதியினர் என்றாலே உழைப்பாளி வர்க்கம் என்று கொள்ளத்தக்க வகையில், ஒப்பீட்டளவில் இன்றளவும் இருக்கிறதே.. அதுபோல் பெண்கள் என்றாலே, ஒடுக்கப்பட்ட மக்கள், உழைக்கும் பெண்கள் என்று கொள்ளமுடியுமா? இப்படிப்பட்ட கேள்விகள் என்னுள் மோதின. சாதகமானதும், பாதகமானதுமான பதில்கள் சமூகத்தில் விரவிக் கிடக்கின்றன.  உங்களுக்கும் இப்படிப்பட்ட கேள்விகள் எழுந்தது உண்டுதானே? பெண்கள் என்று பொதுமையில் பார்க்கும்போது, சாதகமானதைக் கொள்வதே சரியானது; சமூகத் தட்டுகள் கடந்து ஒடுக்குமுறை பல கோணங்களில் பெண்கள்மேல் செலுத்தப்படுகிறது என்றே தொன்றுகிறது.

அதற்கு ஒரு உதாரணம் பொருத்தமாக உலக மகளிர் தினத்தன்றே ஹிண்டு பேப்பரில் வெளிவந்திருக்கிறது.  அது, ஆணாதிக்கத் தந்தைவழி சமூகம் மற்றும் சாதிய அமைப்புமுறையின் மிருகத்தனமான தாக்குதலுக்கு இலக்கான சுஷ்மா [திவாரி] வின் போராட்டக் கதை.

________________________________________________________

உ.பி. மாநில பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த சுஷ்மா தாழ்த்தப்பட்ட சாதியான கேரளத்து ஈழவ சாதியில் பிறந்த பிரபு நொச்சில் என்பவரைக் காதலித்து மணந்தார்.  இதனால் ஆத்திரமுற்ற அவளது மூத்த சகோதரன் திலீப் திவாரி ஆட்களுடன் வந்து மும்பை அருகில் வசித்த அவர்கள் வீட்டில் புகுந்து அவளது கணவர், மாமனார் மற்றும் வீட்டில் இருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட கிட்டத்தட்ட புகுந்தவீட்டார் அனைவரையும் படுகொலை செய்தனர், இருவரைப் படுகாயப்படுத்தினர்.  உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்ததால், கர்ப்பிணியான சுஷ்மா அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்.

மகாராட்டிர குற்றவியல் நீதிமன்றம் சுஷ்மாவின் சகோதரர் திலீப் திவாரிக்கும் அவர் கூட்டாளிகளுக்கும் மரணதண்டனை விதித்தது. பின்னர் மும்பை உயர் நீதிமன்றம் அத்தீர்ப்பை உறுதிசெய்தது. ஆனால், உச்ச நீதிமன்றமோ கடந்த டிசம்பர் 2009ல் அந்த மரண தண்டனையை 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றம் இப்படுபாதகச் செயலை செய்த கொலைகாரர்களின் மரண தண்டனையை ரத்து செய்த தனது தீர்ப்பை விளக்குகையில், ”இளைய சகோதரி வழக்கத்துக்கு மாறாக எதையும் செய்யும்போது, அச்செயலைத் தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு நியாயப்படுத்தக்கூடிய வகையிலோ அல்லது மாறாகவோ சமூகத்தால் அவளது மூத்த சகோதரனின் தோள்களில் சுமத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட வழக்கில், இது ஒரு ரகசியக் காதல் விவகாரத்தால் நிகழ்ந்துவிட்ட சாதி கடந்த, சமூகம் கடந்த திருமணமாக இருக்கிறது”.

மேலும், “அவன் தனது தவறான ஆனால் தூய்மையான சாதிய உணர்வுக்குப் பலியாகியிருப்பானானால், அச்செயல் அவனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நியாயப்படுத்தாது… சாதியம், சமூகம், மதம் எனும் நச்சுப்பிடி, முற்றிலும் நியாயப்படுத்தப்பட முடியாததாயினும், அதுதான் இன்றைய மூர்க்கமான எதார்த்தம்” என்று கூறியிருக்கிறது.  அந்த மூர்க்கமான எதார்த்தத்துக்குத் தலைவணங்குகிறோம் என்று முடித்திருக்க வேண்டும்.  ஆனால் அந்த வரி மட்டும் அசரீரியாய் ஒலிக்கிறது. [Bold/ Italics என்னுடையது]

வழக்கத்துக்கு மாறாக, அதாவது, மரபு மீறிய அல்லது சாதிய நெறி மீறிய செயலுக்குப் பார்ப்பனீயம் மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியும் விட்டது. ஈழவக் குடும்பம் முழுவதும் எழவு விழுந்துவிட்டது.  உயர் சாதி கவுரவம் காப்பாற்றப்பட்டுவிட்டது.  பெருமை மிகு இச்செயலுக்கு மரண தண்டனை மூலம் களங்கம் ஏற்படுத்தலாமா?

இதில் அண்ணனாகிய ஒரு ஆண் தான் கட்டிக்காக்கக் கடமைப்பட்டுள்ள தர்மத்துக்காக, சாதிய, ஆணாதிக்க சமூகத்தால் தன் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்காக ஒரு தவறு தானே செய்துள்ளான். அவனுக்கு மரண தண்டனை விதிப்பது நியாயமானதா?

இல்லை, கூடாது, கூடவே கூடாது என்கிறது உச்ச நீதிமன்றம்.  சாதிய ஒழுக்கத்துக்கு சப்பைக்கட்டு கட்டுவதற்கு, இது ஒரு ரகசியக் காதல் விவகாரத்தால் நிகழ்ந்துவிட்ட சாதி கடந்த, சமூகம் கடந்த திருமணமாக இருக்கிறது என்று கொச்சைப்படுத்துகிறது. அது என்ன ரகசியக் காதல் விவகாரம்?  கனம் நீதிபதிகள் வெளிப்படையாக நீச பாஷையில் பேசமாட்டார்கள் என்றாலும், தினத்தந்திகளின் மொழியில் சொல்ல வேண்டுமானால், அது என்ன கள்ளக் காதல்?  வயதுவந்த ஒரு ஆணும் பெண்ணும்தானே காதலித்து மணந்தனர்.  ஏனிப்படிக் கீழ்த்தரமாக நினைக்கிறார்கள்.

மேலும், சாதிமறுப்புத் திருமணம் என்ற கூர்மையை மழுக்க எதற்கு இங்கே சமூகத்தையும் சேர்த்து இழுக்கிறார்கள்? திவாரி வீட்டுப் பெண் த்ரிவேதி வீட்டு அல்லது சதுர்வேதி வீட்டு அல்லது முகர்ஜி, பேனர்ஜீ வீட்டுப் பையனைத் திருமணம் செய்திருந்தால் இப்படி ஒரு நிகழ்வு அல்லது எழவு விழுந்திருக்குமா?

அச்செயலைத் தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு நியாயப்படுத்தக்கூடிய வகையிலோ அல்லது மாறாகவோ சமூகத்தால் அவளது மூத்த சகோதரனின் தோள்களில் சுமத்தப்படுகிறது என்று வியாக்கியானம் செய்கிறார்களே, இச்செயல் நியாயப்படுத்த முடியாதது என்று அறுதியிட்டுக் கூற சமூகம் நீதிபதிகளுக்கு ஏன் மனம் வரவில்லை? ’மாறாகவோ’ என்ற மழுப்பல் எதற்கு? நியாயப்படுத்த முடியாதாயினும் இதுதான் இன்றைய மூர்க்கமான எதார்த்தம் என்று அது கண்டு அஞ்சுகிறார்களா? அல்லது எதார்த்தத்தின் பின்னால் ஒளிகிறீர்களா, ஒத்துப்போகிறார்களா? கனம் நீதிபதிகள் சமூகத்துக்கு மேலும் ஒரு கேள்வி. நீங்கள் ’சமூகம்’ என்று சொல்வது எந்த சமூகத்தை? அல்லது உங்கள் நீதி பிரதிபலிப்பது எந்த சமூகத்தை?

இச்செயலுக்கு எதிர்வினையாக ஈழவ சமூக சகோதரர்கள், ஏன், சகோதரிகளும் கூட தங்கள் தோள்களில் சுமத்தப்பட்ட கடமையாகக் கருதி திலீப் திவாரியின் குடும்பத்தை ஒருக்கால், பூண்டோடு ஒழித்திருப்பார்களானால் அங்குதான் மரண தண்டனைக்கு மாறான மனிதாபிமானத்தைக் காட்டி தண்டனையைக் குறைக்க முடியும் என்று தோன்றுகிறது. இந்த நீதிபதிகளுக்கு மட்டும் ஏன் இதற்கு எதிராகத் தோன்றுகிறது?

மரபுக்கு மாறான ஒன்றைத் தடுத்து நிறுத்தவேண்டிய சமூக நிர்ப்பந்த்த்துக்கு மதிப்புக் கொடுப்பதானால், அந்த மரபுதான் ஐந்து வயதுப் பெண்குழந்தையை அறுபது வயதுக் கிழவன் மணமுடிக்க நெடுங்காலம் இந்நாட்டில் வழிவகை செய்தது. ஆறாவது வயதிலேயே அதன் தாலி அறுத்து மொட்டையும் போட்டது; வீட்டிலேயே பூட்டிவைத்தது; உடன்கட்டை ஏறச்செய்தது; தீட்டு, துடைப்பு, புனிதக் குறைவென்று இரண்டாம்தரமாய் அடக்கிவைத்தது. இன்னும் இந்த மரபு ஏரா..ளம் செய்தது. அவ்வப்போது கடுமுயற்சியால் அந்த நச்சுமரத்தின் கிளைகள் வெட்டப்பட்டன.  ஆனால், சாதிமறுப்புத் திருமணம் என்ற பெயரில் அதன் ஆணிவேரை அசைத்துப் பார்க்கும் செயலை மட்டும் செய்யக்கூடாது, அதன் நச்சுப் பிடிதான் இன்றைய எதார்த்தம்.  அந்த எதார்த்தத்தைப் பற்றி ஒழுகுவதுதான் இன்றைய நீதி.  இந்த எதார்த்தத்தை ‘நச்சுப் பிடி’ என்று சொல்ல வைத்துவிட்டது எங்களது இன்றைய துர்ப்பாக்கிய நிலை… இதுதானே உச்ச நீதி.

இப்படி இருக்க அம்பை [திலீப்கள்] தூக்கில் ஏற்றுவது இருக்கட்டும், எய்தவனை, அதான் சாதியத்தை, மனுநீதியைக் கூண்டிலேனும் ஏற்ற மனம் வருமா அவர்களுக்கு?

இந்த உச்ச ’நீதிக்கு’த் தலைவணங்கும் மரபையும் சேர்த்து முறிக்க ஒரு பெண் – அருந்ததிராய் – ஏற்கனவே வழிகாட்டியிருக்கிறார். அவர்கள் தலையில் ஒரு கொட்டு வைத்திருக்கிறார். இப்போது, இதோ, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தேசிய இளம்பெண்கள் சிறப்புப் பேரவைக்கு வந்திருந்த இன்னொரு பெண், சுஷ்மா உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து வழக்காடுகிறார்.

“இத் தண்டனைக் குறைப்பு சாதிமறுப்புத் திருமணம் செய்ய விழையும் எல்லோருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை போல் இல்லையா? சாதிய வெறுப்புணர்ச்சி என்பது தன்னிலையிலேயே கொடுங் குற்றமில்லையா?” என்று அவர் கேட்கிறார். ”என்னுடையதும், எனது ஐந்து வயது மகளுடையதுமான தனித்த பாதுகாப்புக்காக இல்லாவிடினும் மனிதப் பண்பைக் காப்பதற்கேனும் இந்த மரண தண்டனை உறுதிசெய்யப்பட வேண்டும்” என்று போராடுகிறார்.

இச் செய்தி மகளிர் தினத்தன்றே வெளிவந்திருப்பது குறைந்த பட்சம் மகளிர் கண்களையாவது திறவாதா? மகளிர் தினம் அதன் உண்மைப் பொருளில் உணரப்படாதா? என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?

____________________________________________________

– அனாமதேயன்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சமூகம் > பெண்

y choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள் – அன்னா

12

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 12
*இக்கட்டுரை சமூகத்தால் ஆணுக்கென அங்கீகரிக்கப்பட்ட குணங்களுடன் அப்பாலினத்திற்கு சமூகம் அமைத்த கட்டமைப்புக்குள் வாழும் மனிதர்களிற்கு சமூகம் கொடுக்கும் சலுகைகளைப் பற்றியது.

நான் பெண்ணுரிமை பற்றிக் கதைக்கத் தொடங்கினால், இப்போது எல்லாம் பெண்களுக்கு எல்லா சுதந்திரமும் உண்டு, இனியும் எதற்கு இதைப் பற்றியே கத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்ற பதிலைப் பலரிடமிருந்து கேட்டுள்ளேன். இப்பதிவு அவர்களைப் போன்றவர்களை சிறிது சிந்திக்க வைப்பதற்காக…….

எமது சமூகம் ஆண்டாண்டு காலமாக ஆணுக்காகவே உருவாக்கப்பட்டு எல்லோராலும் கட்டிக் காக்கப்பட்டு வருவதால் சமூகத்தில் பல விடயங்களில் ஆண்களுக்கு நிறைய சலுகைகள் உள்ளன. சமூகம், கலாச்சாரம் என்றால் இவ்வாறுதான் இருக்க வேண்டுமென்றே காலம், காலமாக எமது சிந்தனைகள் கட்டியமைக்கப்படுவதால் அதுவே இயல்பு நிலையாகி விடுகிறது. ஒரு ஆணின் நிலையை, உணர்வுகளை பெண்களினதையும் விட உயர்வாக வைத்திருப்பது இயல்பானதாகவும், அதுவே இயற்கையான நிலையாகவும் பார்க்கப்படுகின்றது. இவற்றைப் பற்றி யாருக்கும் யோசிக்கவே தோன்றுவதில்லை.

அவ்வாறு ஆணாயிருப்பதால் வரும் எனக்குத்தோன்றிய சில‌ சிறப்புரிமைகளை இங்கே தருகின்றேன். ‍இவற்றில் சில வெளிப்படையானவை. சில பரம்பரை பரம்பரையாக பின்பற்றுபவையாதலால் உணரப்படாதவை.

  • ஆணாகப் பிறந்ததிலிருந்தே சமூகத்திற்கும்/குடும்பத்திற்கும் மிகவும் வேண்டப்பட்டவர் ஆவீர்கள். மிகவும் மதிக்கப்படுவீர்கள்.

உங்கள் அம்மாவின் “மதிப்பு” கூட ஒரு ஆண் பிள்ளைக்குத் தாய் என்ற ஒரு காரணத்தினாலேயே ஒரு படி கூடிவிடும். இங்கு எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் திருமணம்.  மணப்பெண்ணின் அப்பா சில வருடங்களிற்கு முன் இறந்து விட்டார்.அவர்களுக்குப் பெரிதாக இங்கு ஆட்களைத் தெரியாது. அதனால் அவரின் அம்மாவிற்குப் பதிலாக என்னையும் எனது வாழ்க்கைத் துணைவரையும் தெத்தம் பண்ணிக் கொடுக்கக் கேட்டார்கள். கேட்டவர்களில் ஒரு பெண்மணியே சொன்னார், “உங்களுக்கு மகன் இருப்பதால் இன்னும் விஷேசம், அதனால் நீங்களே செய்யுங்கள்” என்று.

எமது குடும்பத்தில் நாம் ஜந்து பெண் பிள்ளைகள். என் பெரியப்பாவே, என் அப்பா போன பிறப்பில் நிறையப் பாவங்கள் செய்ததாலேயே இப்பிறப்பில் நாம் ஜவரும் பெண்களாகப் பிறந்துள்ளோம் என்று சொன்னார்.

என் பெற்றோர் மிகவும் எளிமையானவர்கள். எதற்கும் ஆடம்பரமாக செலவழிக்க மாட்டார்கள். அவர்கள் நாம் பிறக்கு முன்னும் அவ்வாறே வாழ்ந்தவர்கள். ஆனாலும் நாம் பிறந்ததும் சிலர் அவர்களின் எளிமையைப் பார்த்துக் கேட்பது “என்ன, இப்பவே சேமிக்கத் தொடங்கியாச்சுப் போல?” ‍ ஜந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது நான் அடிக்கடி கேட்டு வளர்ந்த‌ பழமொழி. இவற்றைப் போன்ற பல சிறு சிறு அனுபவங்களால் என் சமூகம் சொல்வது, நினைப்பது பிழை என நிரூபிக்கவேண்டும் என்ற இலட்சியம்/வெறி எனக்கு 8‍, 9 வயதிருக்கும் போது முளைவிட்டது, ‍ எனது முதலாவது பெண்ணிய சிந்தனை இதுவேன்றே நினைக்கின்றேன்.

ஆண் பிள்ளை ஒரு சொத்து பெண் பிள்ளை ஒரு பொறுப்பு என்றே இன்னமும் எம்சமூகம் சொல்லிக்கொண்டிருக்குது. இங்கு நியூசிலாந்திலேயே இன்னமும் இந்திய இளம் தம்பதியினர் பெண் குழந்தை என்ற ஒரே காரணத்திற்காக கருக் கலைப்பிற்கு வைத்தியர்களிடம் வருகின்றனர். நம்பமுடியவில்லை.

  • வளரும் போது ஆண் பிள்ளைகள் சுதந்திரமாக, தைரியமாக‌ தன்னம்பிக்கையுடன் வளரக் கூடிய சந்தர்ப்பம் கொடுக்கும் சமூகம் பெண் பிள்ளைகளை திருமணத்திற்காக மட்டுமே வளர்க்கிறது. அடக்கவொடுக்கம், பொறுமை, கீழ்ப்படிதல் போன்ற குணங்களே போதிக்கப் பட்டு சிறுவயதிலிருந்தே படிப்புடன் வீட்டுவேலைகள், சமையல் எல்லாவற்றையும் அவளையே செய்யப்பழக்கி விடுகிறது.
  • வளரும் போது ஆண்களின் உடலில் நடைபெறும் மாற்றங்களால் உங்களின் வாழ்க்கை திடீரென குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே கொண்டு வரப்படாது.
  • ஆண்கள் திருமணமானவராயின், வீட்டில் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் அநேகமாக அவர்களின் மனைவியே செய்து முடிப்பார். குழந்தைகள் பிறப்பின், அக்குழந்தைகளின் அன்றாடத் தேவைகள் அனைத்திற்கும் மனைவியே பொறுப்பெடுத்துக் கொள்வார். மனைவி வீட்டுக்கு வெளியே வேலை செய்கிறாரோ இல்லையோ அதைப் பற்றி எவரும் கணக்கெடுக்கப் போவதில்லை. she has to be a super woman.

பல இடங்களில் ஒரே தகுதியுடன் ஒரே வேலை செய்யினும் ஆண்களுக்கு கூடிய கூலி கிடைக்கும்.

  • திருமணம் ஆண்களை நிர்ணயிப்பதில்லை.

திருமணச் சடங்குகள் எல்லாம் ஒவ்வோரு சமயத்திலும் ஆண்களை ஒரு சுதந்திரமான, மன முதிர்ச்சியடைந்த, சுய சிந்தனை உடைய மனிதப் பிறவியாக அங்கீகரிக்கின்றன. ஆண்களை யாரும் யாருக்கும் தானம் செய்வதில்லை/கொடுப்பதில்லை. அவர்களுக்குத்தான் லட்ச லட்சமாக லஞ்சத்துடன் தாம் பெற்ற பெண்ணை கொஞ்சமும் யோசிக்காமல் தாரை வார்ப்பர். எவ்வளவோ சொல்லிலடங்கா கொடுமைகளுக்கு ஆளான பின்னரும் ஈழத்தில் இந்தமாதிரியான முட்டாள்த்தனமான பண்பாட்டைத்தான் இன்னமும் கட்டிக்காத்துக் கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் இப்பவும் டாக்டர்மாருக்குத்தான் மிகக் கூடிய விலை. இதன் மூலம் வெறும் புத்தகப் படிப்பு மட்டும் எதையும் மாற்றாது என்பது தெரிகிறது.

திருமணத்திலிருந்து பெண்ணிடம் பெற்றவர் குடும்பத்திற்கு உரிமையில்லை. ஆண்கள் குடும்பப் பரம்பரைப் பெயரையோ தங்கள் பெயரையோ மாற்றி ஒரு புது மனிதனாக உருவெடுக்கத் தேவையில்லை. பழைய காலத்தில் அடிமைகளும் தமது எஜமானின் பெயரைத் தான் last name ஆக‌ வைப்பார்களாம். அவ்வடிமை யாருக்குச் சொந்தம் என்று கண்டு பிடிக்க.

திருமணத்திற்கு  முன்னும் பிறகும் ஆண்களை விளிக்கும் சொல் ‘திரு’ வாகவே இருக்கும். ஏனெனில் 18 வயதிலிருந்தே ஆண்கள் மன முதிர்ச்சியடைந்த, சுய சிந்தனை உடைய மனிதப் பிறவியாக சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுவிடுவர். பெண்கள் எப்போது திருமணம் முடிக்கிறார்களோ அப்போதுதான் ‘செல்வி’ யிலிருந்து ‘திருமதி’ ஆவார்கள். மனைவி ‘கணவனை’ விளிக்கும் போதும் அவரின் உன்னதத் தன்மையை/ மதிப்பை உணர்ந்து மரியாதையுடனே அவரை அழைப்பார். கணவன் அவளை எப்படி அழைத்தாலும் திட்டினாலும் அவளுக்கு உறைக்காது. அப்படி அவளுக்கு கொஞ்சமேனும் சூடு சுரணை இருந்தால் அவள் வில்லியாக மாற்றப்பட்டிருப்பாள்.

திருமணத்திற்குப் பிறகு பிள்ளைகள் குறுகிய காலத்தில் பிறக்காவிடில் சமூகத்திற்கு ஆண்களின் உடலுறுப்புகளில் கூடப் பிழையிருக்குமென சிந்திக்கவே தோன்றுவது இல்லை.

மனைவி இறந்தால் ஆண்களின் வாழ்க்கை திடீரென்று முடிவிற்கு வராது. அவர்களின் நடத்தைகளில்/உடைகளில் எந்தவித மாற்றமும் தேவையில்லை. அவர்களை மங்களமில்லாதவர்களென எவரும் நினைக்கவோ பேசவோ மாட்டார்கள். எமது அப்பா மிகவும் உடல் நலம் சரியில்லாமல் இருந்த காலத்தில் எதோ ஒரு விழாவிற்கு மங்கள விளக்கு ஏற்ற எமது அம்மாவை அழைத்தார்கள். அம்மா தனக்கு அவ்வாறெல்லாம் செய்ய விருப்பமில்லை என்று சொல்ல, அவர்கள் சொன்னது, “உங்களால் இன்னுமொரு கொஞ்சக்காலத்திற்குத் தான் இவை எல்லாம் செய்யலாம், அதற்குப் பிறகு முடியாது!!!”

ஆண்கள் வாழ்க்கையில் எந்தவொரு நிலையிலும் நீங்கள் மனைவியைச் சார்ந்து நீங்கள் வாழவேண்டிய அவசியமில்லை. மனைவி இருக்கிறாரோ இல்லையோ ஆண், ஆண்தான். கணவன் இல்லாவிடில் பெண் ஒன்றுமில்லை.

கன்னி, விதவை இவற்றிற்கு ஆண்பாற் சொற்கள் என்ன? விதவைக்கு தபுதாரன் எனக் கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் இது எத்தனை பேருக்குத் தெரியும்?

  • ஆண் ஒரு பெண்ணை பாலியல் வன்புணரின், அநேகமாக அவள் அதை எவரிடமும் சொல்ல மாட்டாள். அப்படியே அவள் புகாரிட முற்பட்டாலும் அவளின் மானம் மட்டுமல்ல, முழுக் குடும்ப மானமுமே போய்விடும் என்று அவளின் குடும்பத்தவர் தடுத்து விடுவர். எனக்கு தெரிந்த‌ குடும்பத்தினரில் ஒருவருக்கு இவ்வாறே நடந்தது. யாருக்கும் வெளியே தெரியாது. அப்படியே தப்பித் தவறி அவள் புகார் கொடுத்தாலும் அந்த ஆணின் குற்றத்திற்கு தண்டனை வழங்குவதற்கு முன், அப்பெண் அந்த ஆணை ஊக்குவிக்க என்ன செய்தாள், அவள் என்ன உடை உடுத்திருந்தாள், அவளின் நடத்தை என்ன, அவள் ஏன் தனியாக‌ வெளிக்கிட்டவள், என அவளையே ஆணின் செயலுக்கு பொறுப்பேற்க வைக்க சமூகம் மிகப் பாடுபடுமென ஆண்கள்  நம்பலாம்.
  • பெண்களை மிகக் கீழான நிலயில் வைத்திருப்பதாலும் அந்நிலைக்கு வருவது கேவலமாகப் பார்க்கப்படுவதாலும், ஆண்கள் கோபத்தில் மற்ற ஆண்களைக் கேவலப்படுத்த அவர்களைத் தூற்றுவதற்கு ‘பொட்டைப் பய’ போன்ற‌வையோடு சேர்த்து பெண்ணின் பாலியல் அங்கங்களைக் குறிக்கும் சொற்களையும் பயன் படுத்துவர். இவற்றைக் கேட்கும் போது பெண்களுக்கே கோபம் வராதளவு அச்செய்கை சமூகத்தில் இயல்பு நிலையாகிவிட்டது. ஆண்களை இவ்வாறு கேவலப்படுத்துவதோடு அவர்களின் அம்மாவையும் விட்டு வைக்கமாட்டார்கள் (உதாரணத்திற்கு, நீயெல்லாம் ஒரு அப்பனுக்கு பிறந்தவனா).
  • பெண் உரிமைகள் பற்றிக் கதையெடுக்கும் போது பலர் “அப்ப நீங்களும் புகையும் குடியுமென அலையப் போறியளோ” என்பர். புகையும் குடியும் நாம் செய்தால் பிழையெனில் அவை ஆண்கள் செய்தாலும் பிழையே.

மேற்சொன்ன பல சலுகைகளைப் பார்த்தீர்களேயானால் பெண்களுக்கு பல அடிப்படை மனித உரிமைகளே இன்னும் கிடைக்கவில்லை என்பது தெளிவாகும். மனித உரிமைகள் எவை என நீங்கள் நினைக்கிறீர்களோ அவையே பெண்களின் உரிமைகளும் ஆகும்.

_________________________________

–          அன்னா

அன்னா, நியூசிலாந்தில் குடும்பத்துடன் வாழ்கிறார்.
அவரது வலைப்பூ முகவரி:
http://annatheanalyst.blogspot.com/

____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

நாப்கின் – சங்கரி.

166

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 11

பிள்ளத்தாச்சிப் பெண் மீது எல்லோருக்கும் ஒரு அனுதாபம் உண்டு. என்னைக்கேட்டால் பத்து மாதம் சுமக்கும் துன்பம் (அப்படி சொல்லக் கூடாதோ) ஒரு தடவை இரண்டு தடவையில் முடிந்து விடும். கருத்தரிக்காததனால் மாதம் தோறும் அனுபவிக்கும் துன்பம் இருக்கிறதே, அதுதான் ஆயுள்தண்டனை.

ஃப்ரீடம்,  ஸ்டேஃப்ரீ, விஸ்பர்  … எல்லா நாப்கின் விளம்பரங்களிலும் துள்ளித் திரியும் பெண்கள்… எந்தக் கவலையும் இல்லாமல் தூங்கி, காலையில் முழு உற்சாகத்துடன் சிரித்தபடி படுக்கையிலிருந்து எழும் பெண்கள்…

மெடிக்கல் ஷாப்களின் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த நாப்கின்களை தூரத்திலிருந்தே ஏக்கத்துடன் பார்த்தபடி செல்லும் ஏழைச் சிறுமிகளைப் பார்க்கிறேன். இந்த ஏக்கத்தை நான் அனுபவித்ததில்லை. நான் பருவத்துக்கு வந்த நாளில் இதெல்லாம் இருந்ததா என்றே எனக்குத் தெரியாது.

தாமதமாகப் பூப்பெய்துவது ஏழ்மை பெண்ணுக்கு அளிக்கும் வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும். எனக்கு அப்போது வயது 16. அரை வயிறு சோறு. அதுவும் ஒரு நாளைக்கு  ஒரு வேளை. அதுவும் நிச்சயமில்லை.  பள்ளி இறுதியாண்டு.  அரைப் பரீட்சை நெருங்கிய நேரம். என்ன ஏது என்று அப்போது புரியவில்லை. வீட்டில் என்னை வைத்து ஒரு சின்ன கொண்டாட்டம். கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.

முதல் ஆறு மாதங்களுக்கு வலி எதுவும் இல்லை.  அப்புறம் அந்த நாட்களில் உதிரப் போக்கு அதிகமானது. இரண்டு கி.மீ நடந்து பள்ளிக்கூடம் போகவேண்டும். பஸ்ஸுக்கு காசு கிடையாது. காலையில் கிளம்பினால் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வரும் வரை தாக்குப் பிடிக்கின்ற அளவுக்கு பழந் துணிதான் பாதுகாப்பு. ஈரமான பகுதியைக் கீழே மாற்றி, உலர்ந்த பகுதியை மேலாக மாற்றி மடித்து வைத்துக் கொண்டு நடக்க வேண்டும்.

நல்லவேளையாக அது பெண்கள்  பள்ளி. அரசுப் பள்ளியின் கழிப்பிட  வசதி பற்றிக் கேட்க வேண்டுமா?  தண்ணீர்  இருக்காது. 10 நிமிட இடைவெளியில் வகுப்பில் உள்ள எல்லாப் பெண்களும் சென்று வரவேண்டும். இடையில் கேட்டால் டீச்சர் திட்டுவார்களோ என்று பயம். நடந்து வீட்டுக்கு வரும்போது ரத்தக்  கசிவினால் ஈரமான துணி இருபக்கத் தொடையையும்  உரசிப் புண்ணாக்கி இருக்கும்.

வீட்டுக்கு வந்தால் கழிப்பறை எப்போதும் மூடியே இருக்கும். நீண்ட காம்பவுண்டின் கோடியில் பத்து வீட்டுக்கும் பொதுவாக ஒரு கழிப்பறை.  குழாய் கிடையாது. 2,3 முறை வந்து தண்ணீரை எடுத்துப் போக வேண்டும். இரவிலும் போக வேண்டியிருக்கும். வீட்டு ஓனரின் மகன் ஒரு பொறுக்கி. இருட்டில் வந்து மார்பில் கை வைப்பான். துணைக்கு அம்மாவைக் கூப்பிடலாம் என்றால், தம்பியோ தங்கையோ அம்மாவிடம்  பால் குடித்துக் கொண்டிருப்பார்கள். அப்பாவைக் கூப்பிடலாம். இருந்தாலும் கூச்சம்.

பள்ளி முடிந்து ஐ.டி.ஐ யில் சேர்ந்தேன். இடுப்பெலும்பில் வலி ஆரம்பித்தது. இடுப்பெலும்பின்  சுற்று வட்டம் முழுவதும் அதன் நடுப் பகுதியில் ஒரு கம்பியை விட்டுக் குடைவது போன்றிருக்கும். வயிற்றின் முன்பக்கம் கீழ்ப்பகுதியில் தொடங்கி சிறுநீர்த்துவாரம் வரை அழுத்தும் வலி, தலை பாரம், கண்ணை இமை அழுத்தும். இடையிடையே வாந்தி, 4 நாட்களுக்கு அதிகமான உதிரப்போக்கு, எப்போதும் வாந்தி வருவது போன்ற உணர்வு, சாப்பிடப் பிடிக்காது, சாப்பிடவும் முடியாது, குளிர்ச்சியாக ஒரு சோடாவோ குளிர்பானமோ குடித்தால் கொஞ்சம் இதமாக இருக்கும். முடியாது. வறுமையில் அது ஒரு ஆடம்பரச் செலவு. படுத்துக் கொண்டு அம்மா, அம்மா என்று அரற்றுவேன். உருளுவேன். பரால்கான் மாத்திரை சாப்பிட்டு ஒரிரு மணி நேரங்களில் அரற்றலும் உருளலும் குறைந்து அசையாமல் படுத்து கொஞ்ச நேரம் அரை உறக்கத்திலிருப்பேன். அந்த 4 நாட்கள் முடிந்து விட்டால்.. அதுதான் சுதந்திரம்!

மாத விலக்குக்கு ஒரு வாரம் இருக்கும் போதே பயமாக இருக்கும்.  வெறுப்பும் விரக்தியும் தோன்றும். ஆனால் யாரிடம் சொல்வது?  எங்கே ஓடி  ஒளிவது?  நாள் நெருங்க நெருங்க செத்துப்போய் விட்டால் நல்லது என்று தோன்றும். வலி குறைந்தவுடன் இன்னும் மூன்று வார காலம் வலியின்றி  இருப்போம், அடுத்த முறை வலி வருவதற்குள் செத்துப்போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

அம்மாவுடன்  ஈ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு போனேன். இந்த வலிக்கு மருந்தில்லை,   கல்யாணமானால் சரியாகி விடும் என்றார் டாக்டர்.  திருமணம் என்றால் மாலைதானே போடுகிறார்கள், அந்த மாலையை இப்போதே போட்டுக் கொண்டால்? அந்த அளவுக்குத்தான் அன்றைக்கு விவரம் தெரியும். அதையும் அம்மாவிடம் சொல்ல பயம்.

மாதங்கள் செல்லச் செல்ல உபத்திரவம் அதிகரித்தது. நான் படித்தது பெண்களுக்கான ஐ.டி.ஐ தான் என்றாலும் சில பாடங்களுக்கு ஆண் லெக்சரர்கள் வருவார்கள். ஒரு வகுப்பு முடிந்து அடுத்த வகுப்புக்கு ஆங்கில லெக்சரர் வருவதற்குள் கழிவறைக்குச் சென்று வந்துவிட எண்ணி அவசரமாய் வெளியேறினேன். அப்போதும் துணி தான் உபயோகம். துணி நழுவிக் கீழே விழுந்தது. லெக்சரரின் கண்ணிலிருந்து அது தப்பியிருக்காது.  கூசிப்போனேன்.

1977, 78 இருக்கும். சானிட்டரி நாப்கின் பற்றி அப்போது வாரப் பத்திரிக்கைகளில் பார்த்திருக்கிறேன். வகுப்பில் கொஞ்சம் வசதியான பெண்களும் இருந்தனர். தோழி சாரதாவிடம் கேட்டதற்கு எலாஸ்டிக் பெல்ட் தாங்கி நிற்கும் நாப்கின் இருப்பதாகச் சொன்னாள். வீட்டில் காசு கேட்க முடியாது. வீட்டிலிருந்தது கல்லூரிக்கு வர இரண்டு பஸ் மாற வேண்டும்.  மொத்தம் 7 கி.மீ தூரம். ஒரு பஸ்ஸுக்கு மட்டும்தான் வீட்டில் காசு தருவார்கள். டிக்கெட் விலை 25 பைசா. கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி மொத்த தூரத்தையும் நடந்து காசு சேர்த்தேன். அதில் பெல்ட் தாங்கி நிற்கும் நாப்கினை சாரதா வாங்கித் தந்தாள். துணியை ஒப்பிடுகையில் மிகவும் மெலிதாக பார்க்க அழகாக இருந்தது. முதல் முறை உபயோகித்து பத்திரமாக  உறையில் சுற்றி வீட்டுக்கு எடுத்து வந்தேன். இவ்வளவு சுலபமான வழி நமக்கு தெரியவில்லையே என்ற நினைத்துக் கொண்டேன். சோப் போட்டுக் கசக்கினேன். நாப்கின் துண்டு துண்டானது.

யூஸ் அண்டு த்ரோவெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. ஒரு நாள் சுதந்திரத்தின் விலை எத்தனை கிலோ மீட்டர் நடை? இப்போது நினைத்தாலும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது.

படிப்பு முடிந்து ஒரு எலக்ட்ரிகல் சாமான் கடையில் வேலை. மாதம் 100  ரூபாய் சம்பளம். தம்பி தங்கைகளுக்கு ஒரு வேளை சாப்பாடு நிச்சயம் ஆனது. எனக்கு அளவு கடந்த நிம்மதி. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை. வீட்டிலிருந்து கடை 5 கி.மீ. தூரம். மாதத்தின் முதல் 10 நாட்கள் பஸ்ஸில். மீதி நாட்கள் நடை. எனது நெருங்கிய தோழியும் அங்கு வேலைக்கு சேர்ந்தாள். துணைக்கு ஆள் வந்தது எனக்கு பெரிய பலம் போல இருந்தது. காலையிலும் சரி, மாலையிலும் சரி, ஒரு டீ குடிக்க வேண்டும் என்றால், ஓனர் சொல்வாரா என்று காத்திருக்க வேண்டும். டீ சொல்வதும் சொல்லாததும் வாங்கி வரச்சொல்லும் நேரமும் அவர்களது மூடைப் பொறுத்தது. மாத விலக்கு சமயத்தில் தொண்டையும் நாக்கும் உலர்ந்து ஒரு டீ கிடைக்காதா என்று தவிக்கும்.

இந்த சமயம் பார்த்து ஸ்டாக் எடுக்கும் வேலையும் வரும். ஏணியில் ஏறி, உயரமான ஷெல்ஃபுகளில் இருக்கும் பொருட்களை  இறக்கி, எண்ணி  எழுதி தூசி தட்டி வைக்க வேண்டும். எத்தனை முறை ஏறி இறங்குவது?  நானும் அவளும் சேர்ந்து தான் செய்வோம். வலி உயிர் போகும். ஸ்டாக் எடுக்கும் வேலையை ஆண்களைச் செய்யச் சொல்லுங்கள் என்று அவள் ஓனரிடம் ஒருநாள் தைரியமாக சொல்லி விட்டாள். அவள் சம்பளத்தை நம்பி குடும்பம் இல்லை. எனக்கோ தம்பி தங்கைகளை நினைத்தால் தைரியம் வராது.

ஒரு நீளமான பழைய வீட்டைத்தான் கடைக்காக வாடகைக்கு எடுத்திருந்தார்கள். கழிவறைக்கு மேலே மேலே கூரை கிடையாது.   நின்றால் பக்கத்து மாடி வீடு, கடைகளில் உள்ளவர்களுக்குப் பார்க்க முடியும்.  அங்கும் தண்ணீர்ப் பிரச்சினை. மாத விலக்கின் இரண்டாம் நாள் ஞாயிற்றுக் கிழமையாக இருந்தால் லீவு போட வேண்டாம். மற்ற நாட்களாக இருக்கும் பட்சத்தில் லீவு போடுவேன். ஓனர் கோபமாகக் கேள்வி கேட்பார். அழுவதற்கு என் தன்மானம் இடம் கொடுத்ததில்லை. வேலை செய்து கொண்டு அழுகையை அடக்கிக் கொள்வேன். ஒரு நாள் இரண்டாவது பார்ட்னரின் மனைவி கடைக்கு வந்தார். வசதியான குடும்பத்திலிருந்து வந்தாலும் மனிதாபிமானி. நான் ரொம்பவும் சோர்ந்திருப்பதைப் பார்தது, “ஏன் இப்படி இருக்கிறாய்” எனக் கேட்டார். “என்ன செய்வது, செத்துப்போய் விட வேண்டும் என்று தான் நினைக்கிறேன், ஆனால் சாக முடியவில்லை” என்று சொல்லி விட்டேன். அப்போது எனக்கு வயது 20.  மிகவும் வருத்தப்பட்டார்.

ஒரு பெண் டாக்டரிடம் அழைத்துப் போனார். மருந்துகள் சாப்பிட்டும் வலி நிற்கவில்லை. “வலி நிவாரணிகள் தவிர வேறு வழி இல்லை, வேறு சில மருந்துகள் உள்ளன, ஆனால் அதையெல்லாம் தொடர்ந்து உபயோகித்தால் வேறு பக்க விளைவு வரும். திருமணமானால் படிப்படியாக சரியாகி விடும்” என்றார். அன்று திருமணம் என் தேவையாக இல்லை. குடும்ப நிலைமை அப்படி. “கர்ப்பப் பையை எடுத்து விட்டால் இந்தப்பிரச்சினை இருக்காது என்கிறார்களே டாக்டர், செய்வீர்களா” என்றேன். “இந்த வயதில் அதைச் செய்ய முடியாதும்மா” என்றார் சோகம் கலந்த புன்னகையுடன். அப்புறம் நான் டாக்டரை பார்ப்பதில்லை. நான் லீவு போட்டால் ஓனரும் என்னைத் திட்டுவதில்லை.

அப்புறம் கொஞ்சம் நல்ல வேலை கிடைத்தது. எனினும் நாப்கின் வாங்கும் அளவு வசதி கூடிவிடவில்லை. துணிக்கு பதிலாக கட்டுக்கட்டாக பஞ்சு. வலி நீடித்தாலும், தொடை உரசிப் புண்ணாவது பெரிதும் குறைந்தது. அன்று அதுவே பெரிய சந்தோஷம்.

பின்னர் திருமணம். அந்த நாட்களில் நான் பட்ட வேதனையைப் பார்த்து அவரது கண்ணில் நீர் வழிந்தது. வலியை மறக்கும் அளவுக்கு அதுவே சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருந்தது. இரண்டாவது மாதம்  சற்றே சோகமாக இருந்தார். மூன்றாவது மாதம் அந்த சமயத்தில் சினிமாவுக்குக் கிளம்பி விட்டார். கேட்டதற்கு “ஆமாம், உனக்கு வலியாக இருக்கும்போது நான் என்ன செய்வது? நானாவது சினிமாவுக்குப் போய் பொழுதுபோக்கிக் கொள்கிறேன்” என்றார். துக்கம் தொண்டையை அடைத்தது. என் வலியை அவரால் வாங்கிக் கொள்ள முடியாது. ஆனால் அவர் இது போன்றொரு அவஸ்தையிலிருக்கும்போது நான் சந்தோஷம் தேட நினைத்திருப்பேனா?

வலியுடன் இரவு நேரத்தில் வாந்தி வருவதும் வாடிக்கையாகியிருந்தது. திருமணத்துக்கு முன் அம்மாவோ, தம்பியோ, தங்கையோ வந்து முதுகை நீவி விடுவார்கள். முடிந்தவுடன் கொஞ்சம் வெந்நீர் கொடுப்பார்கள். இதமாக இருக்கும். ஒருநாள் இரவில் வாந்தி வந்தது. நடுநிசி. அவரை எழுப்பி விட்டு அவசரமாக பாத்ரூமுக்கு ஓடினேன். வாந்தி எடுக்கும்போது முதுகை நீவிவிடும் கை இல்லை. திரும்பி வந்தேன். நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். மனம் கனத்தது. நாம் கூப்பிட்டது கூடத் தெரியாமல் அசந்து தூங்குகிறார் என்று சமாதானப் படுத்திக்கொண்டேன். “நான் கூப்பிட்டது கூடத் தெரியாமல் அசந்து தூங்கி விட்டீர்களா?” என்று கேட்டு விட்டு ஆமாம் என்ற பதிலுக்காக காத்திருந்தேன்.  “நான் தூக்கத்தை விட்டு வருமளவிற்கு இது என்ன பிரச்சினை, எப்பவும் வரும் வாந்தி தானே” என்றார். வலித்தது. இந்த மாதிரியான வலிகளும் கூட பெண்களுக்கே உரியவை. இல்லையா?

அவர் கொடுமையான ஆணாதிக்கவாதியெல்லாம் இல்லை. மனைவியின் குடும்பத்தையும் தன் குடும்பமாக நினைத்து உதவும் அளவுக்கு நல்லவர். கை நீட்டாதவர். இருந்தாலும்.. எப்போதாவது சொற்களால் மட்டுமே சுடுகின்ற சராசரி ஆண். நான் சொன்ன சம்பவம் ஆண்களின் மனதைத் தொடுமா என்று தெரியவில்லை. சின்ன உதாசீனங்களை நான் பெரிது படுத்துவதாகக் கூட நினைக்கலாம். ஆனால் ஒரு தலைவலியைச் சமாளிப்பதற்குக் கூட மனைவியின் துணையைத் தேடும் ஆண்கள், வீக்கர் செக்ஸ் என்று பெண்களை சொல்கிறார்களே, சிரிப்புதான் வருகிறது.

இதைப் படிக்கின்ற ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்கள் சிலருக்கும் கூட கொஞ்சம் அலுப்பாக இருக்கலாம். இன்றைய நடுத்தர வர்க்கப் பெண்களுக்கு ‘ஃப்ரீடம்’ இருக்கிறது. எனவே ‘கேர் ஃப்ரீ’ யாகவும் இருக்கலாம். ஆனால் இன்றைக்கும் சாதாரண ஏழைப்பெண்களுக்கு இது பிரச்சினைதான். இதை பெண்ணின் பிரச்சினை என்று சொல்வதா, ஏழையின் பிரச்சினை என்று சொல்வதா தெரியவில்லை.

குறிப்பிட்ட நாட்களில் லீவு போட்டால், ஆண்களின் ஏளனமான சிரிப்பு, இதை சாக்கு வைத்துக் கொண்டு வேலையை தட்டிக் கழிக்கிறார்கள் என்று கிண்டல், கடமையை வலியுறுத்தும் மேலதிகாரிகள், அவர்களிடம் தனது பிரச்சினையைச் சொல்வதற்கு தன்மானம் இடம் கொடுக்காததால் தவிக்கும் பெண் ஊழியர்கள்…  நடுத்தர வர்க்கத்துப் பெண்களும் கூட அன்றாடம் இதையெல்லாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சமீபத்திய தினமணியில் பார்த்தேன். இந்தியாவில் 65 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது என்று ஒரு கட்டுரை. கிராமமோ நகரமோ, காலைக் கடனைக் கழிப்பதற்கே விடிவதற்கு முன் பெண்கள் புதர்களைத் தேடி ஓட வேண்டும். பிறகு இருட்டும் வரையில் காத்திருக்க வேண்டும்.

பொறுக்க முடியாத வலி என்பது என்னைப் போன்ற சில பெண்களைப் பிடித்த சாபக்கேடு. ஆனால் அந்த நாட்களின் உதிரப்போக்கும், களைப்பும் பெண்கள் அனைவருக்கும் உடன் பிறந்தவை. தாங்க முடியாத போது இப்போதெல்லாம் நான் லீவு போட்டு விடுகிறேன். அலுவலகத்தில் தரமான பாத்ரூம் இருக்கிறது. எனக்கு வாழ்க்கை மாறியிருக்கிறது.

ஆனால் வீட்டு வேலை செய்யும் பெண்கள், கடைகளில் நாள் முழுவதும் நின்று கொண்டிருக்கும் பெண்கள், கார்ப்பரேசன் பள்ளிகளின் படிக்கும் சிறுமிகள்.. இவர்கள் யாருக்கும் வாழ்க்கை மாறவில்லை. என்னைப் போல இவர்கள் விவரம் தெரியாத அசடுகள் இல்லை என்றுதான் நினைக்கிறேன். பெண்களுக்கு  ‘ஃப்ரீடம்’ இருக்கிறது என்பது இவர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த ‘ஃப்ரீடம்’ தங்கள் கைக்கு எட்டாது என்பதும் புரிந்திருக்கும்.

இடுப்பு எலும்பைக் குடையும் அந்த வலியுடன் நாப்கின் வாங்குவதற்காக போன மாதம் கடையில் நின்று கொண்டிருந்தேன். சாலை ஓரத்தில் மழைநீர் வடிகால் வேலை நடந்து கொண்டிருந்தது. ஒரு 16 வயதுச் சிறுமி கலவைக்கு ஜல்லி அள்ளிக் கொண்டிருந்தாள். கறுப்பான பொலிவான முகம். கொஞ்சம் சாயம் போன பாலியெஸ்டர் பட்டு பாவாடை சட்டை. வயசுக்கு வந்ததைக் கொண்டாட வாங்கித் தந்ததாக இருக்குமோ? நானும் அந்த நாளில் இப்படி ஏதோ ஒரு புதுப் பாவாடை சட்டை போட்ட ஞாபகம்.

கருங்கல் ஜல்லியை சட்டியில் அள்ளிப்போட்டு விட்டு சுற்றுமுற்றும் பார்த்தாள். தூக்கி விட ஆள் இல்லை. அவள் யாரையும் கூப்பிடவும் இல்லை. உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு அந்தச் சட்டியைத் தூக்கினாள். எனக்குச் சுரீர் என்று வலித்தது.

அழுகையை அடக்கிக் கொண்டு, எலக்டிரிகல் கடையில் ஏணியில் ஏறி ஸ்டாக் எடுத்த அந்த நாள், நினைவுக்கு வந்தது. கல்லைக் கொட்டிவிட்டு அடுத்த நடைக்கு திரும்பிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். பார்த்தேன். கொஞ்சம் கர்வமாகவும் இருந்தது.

_____________________________________

–          சங்கரி

தோழர் சங்கரி ஒரு ம.க.இ.க ஆதரவாளர். தனியார் நிறுவனத்தில் வேலை, சென்னையில் குடும்பத்துடன் வாழ்கிறார்.
__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

உதைபடும் பெண்வாழ்வு – முத்துலட்சுமி.

25

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 10

vote-012நான் வீடு என்கிற மிகச்சிறிய வட்டத்திற்குள் இருந்து சற்றே இணையத்தின் மூலம் வெளியுலகை கவனிப்பவள். பெண்கள் பற்றிய என் கருத்துக்களைப் பகிர முல்லை என்னை அழைத்திருந்தார்.

பொதுவாக கணவனும் மனைவியும் சில நேரம் குழந்தைகளும் கூட கலந்தாலோசித்து குடும்பம் நடத்துவதென்பது இக்காலக்கட்டத்தில் அதிகரித்தே வருகிறது. கணவனோ மனைவியோ யாராவது ஒருவருடைய கை ஓங்கி இருக்கும் நிலையும் கூட இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட ஆளுமைத்திறன் காரணமாக இருக்கக்கூடும். ஆனால் ஆண் என்பதற்காக ஆதிக்கமோ அல்லது பெண் என்பதற்காக பச்சாதாபமோ அங்கே நுழைகின்ற போது அழகு குலைகிறது.

எப்பொழுதெல்லாம் பெண்கள் குரல் எழுப்புகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்களை தடுக்க என்று முன்பே கட்டமைக்கப்பட்ட ஒரு திட்டம் இருக்கிறது. அது முள்ளை முள்ளால் எடுப்பது என்பது போல பெண்ணைப் பெண்ணால் வீழ்த்துவது என்றும் சொல்லலாம்.
______________________________________________

என் வீட்டில் வேலைக்கு உதவும் பெண்ணை வெளிப்படையாகப் பார்த்தால் அவருக்கு அமைந்திருப்பது நல்ல கணவர்தான். அந்தக் கணவர் அவர்கள் குடியிருப்பில் மற்ற ஆண்களைப் போல குடிக்கவில்லை, சூதாடவில்லை. ஆனால் குழந்தைகள்
சண்டையிட்டுக் கொண்டால், குழந்தைகள் படிக்காவிட்டால் போன்ற குடும்பத்து பிரச்சனைகளுக்கெல்லாம் எட்டி உதைத்து விளையாட மனைவி வேண்டும் அவருக்கு.

கால்கள் வீங்கியோ அடிபட்டோ வேலைக்கு வரும் அந்தப் பெண்ணிடம், ” நல்ல மனநிலையில் மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் கணவரிடம் கேட்பீர்களா ? ஏன் அடிக்கிறீர்கள், பிரச்சினை தீரவா செய்யும்? குழந்தைகள் முன் இப்படி செய்யலாமா என்றெல்லாம் ஏன் கேட்பதில்லை?” என்று கேட்பேன்.

“கேட்கலாம். ஆனால் அந்நேரத்தில் அடித்துவிட்டு இரவில் அவரே கூட அதிக அழுத்தம் காரணமாக உடல்நிலை முடியாமலோ, ஃபிட்ஸ் வந்தோ சிரமப்படுவார். பலநேரங்களில் சிறு சிறு சலசலப்புக்கே மாமியார் வந்து நின்று அவருக்கு சப்போர்ட்டாக பேசும்போது எதும் சொல்ல இயலாது அக்கா” என்பார்.

பொறுக்க முடியாமல் அபூர்வமாக ஒரு நாள் அப்படிக் கேட்டதற்கு, “பெண்தான் சரியான முறையில் பிள்ளைகளை வளர்க்கனும். டீவியில், சினிமாவில் வரலையா..அம்மாவை அடித்தால் பிள்ளை சரியான பாதைக்கு வரும்” என்று பதில் சொல்லி இருக்கிறார், அந்தக் கணவர். ஒரு முறை எட்டி உதைத்ததில் கணவருடைய கால் சுளுக்கி பிரச்சனையாக இருந்தபோது அவர் மாமியார் “அடிவாங்கிவிட்டு சபித்திருப்பாள். அதனால்தான் மகன் கால் இப்படியாகியது” என்று புலம்புவதும் நிகழ்ந்திருக்கிறது.

உதைபட்ட பெண்ணின் வலியைவிட உதைத்தவனது வலிதான் அந்த மாமியாருக்கு பிரச்சினை என்பதோடு அதற்கும் உதைபட்டவளேயே கரித்துக் கொட்ட வேண்டுமென்றால் இத்தகைய ஏழைப் பெண்களுக்கு என்ன விமோச்சனம் இருக்கிறது? இதையும் கூட பெண்ணுக்கு பெண்தான் எதிரி என்று மடக்கிப் பேசுவதற்கு அநேக ஆண்களும் தயாராகத்தான் இருக்கிறார்கள்.

தன் கணவர் 5000 சம்பாதித்தாலும் ஆண் குழந்தை வேணுமென்கிற காரணத்துக்காக இரண்டு பெண்களுக்கு பிறகு பெற்ற பையனுக்குமாக சேர்த்து அவர் சம்பாத்தியம் (குழந்தைகளின் படிப்பு செலவுக்கு) போதாதே என்று வீட்டு வேலைகளைச் செய்து பணம் (ஏறக்குறைய 2500) சம்பாதித்துக் கொடுக்கிறாள் அந்தப் பெண். உழைக்கும் பெண் என்பதால் அவருக்கு இருக்கும் ஒரே கௌரவம், “நான்தானே சோறு போடுகிறேன்” என்ற வார்த்தை மட்டும் அவர் கணவனால் கூறமுடியாது என்பதே. தான் உழைப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்பார் அந்த தங்கை.

மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்து சொந்த வீட்டு வேலைகளையும், வருமானத்திற்காக மற்ற வீட்டு வேலைகளையும் எந்திரம் போல ஓடியாடி செய்து ஓய்ந்து போயிருக்கும் அவருக்கு சந்தோஷத்தை தராவிட்டாலும் துன்பத்தையாவது அளிக்காமல் அவர் கணவன் இருக்கலாமே? தமிழ்நாட்டில் சொந்த தோட்டத்தில் உழைத்து வந்த அந்த பெண்ணுக்கு இங்கே இப்படி வேலை செய்ய நேர்ந்தாலும் தன் குடும்பத்தில் தன் நிலையை கொஞ்சமேனும் தன்மானத்தோடு நிலை நிறுத்த இதுவே வழியாகப்படுகிறது. இதுவும் இல்லையென்றால் அவருக்கான சித்திரவதைகள் இன்னும் பலமடங்கு அதிகரித்திருக்கலாம்.

அவர்களின் பெண்குழந்தைகளை கணினி மற்றும் தையல் போன்ற எதாவது தொழில் கற்றுக் கொள்ளச் சொல்லி இருந்தேன். பெரியவள் தையல் சென்றாள். கணினி படிக்கவும் முயன்று வருகிறாள். இவையெல்லாம் எதுவும் மாற்றம் கொண்டுவருமா என்று எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்கும் பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் திருமணமாகப் போகிறது. அவர்கள் கணவன்மார்கள் குடிக்காமல், சூதாடாமல், அடிக்கிற கையால் அணைத்துச் செல்பவராயும் வரவேண்டும் என்றுமட்டும்தான் அவர்களின் வேண்டுதல் இருக்குமென்று நினைக்கிறேன். மகிழ்ச்சி நிறைந்த வருங்காலக் கற்பனைகளைவிட துன்பம் தரும் நிகழ்கால எதார்த்தங்கள் இல்லாமல் போகவேண்டுமென்பதையே கனவாக கொண்டிருக்க வேண்டுமென்றால் இந்த உலகம் என்பது பெண்களைப் பொறுத்தவரை நரகம்தானோ?
_____________________________________________

இன்னமும் வரதட்சணை இருக்கிறது. சில மணமகன்கள் அது வேண்டாமென்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாமல் குடும்பத்தினர் வாங்குகிறார்கள். நடுத்தர வகுப்புகளில் கல்லூரி முடித்தால் திருமணம் ஆகும், என்ற நிலை மாறி வேலைக்குச் சென்றால்தான் திருமணம் என்ற நிலை வந்திருக்கிறது. சில பெண்கள் திருமணம் ஆக வேண்டிய காரணமாகவே  வேலைக்குச் செல்கிறார்கள். வேலை வாங்கிக் கொடுத்து கல்யாணம் கட்டிக்கொண்டவர்களும் உண்டு. ஆக படிப்பும், வேலையும் பெண்ணை விற்பதற்கான தகுதிகளாகத்தான் மாறியிருக்கிறது என்றால் பெண்ணுக்கு என்று எந்த சுதந்திரமான தனித்துவமான வாழ்வும் இல்லை என்றுதானே பொருள்?

ஒரு காலத்தில் நான் விரும்பிய படிப்புகளை பெண் என்ற காரணத்தால் படிக்க இயலாமல் போய்விட்டது. தூர தொலைவுகள், தங்கும் வசதிகள் இன்னபிற காரணங்கள் பெண்களுக்குத்தான் தடைக்கல்லாக இருக்கிறது. அப்போதெல்லாம் பெண்ணாக
பிறந்ததற்காக மிகவும் அழுதிருக்கிறேன்.

நான் வேலைக்கு செல்லவேண்டும் என்று வளர்க்கப்படவில்லை. எங்கள் குடும்பத்தின் முதல் வட்டத்தில் யாரும் முன்மாதிரியாக வேலைக்குச் செல்லவில்லை. ஆனால் என் தாத்தாவுக்கு நான் வேலைக்கு செல்லவேண்டும் என்று ஆசை இருந்தது. விடுமுறைக்குச் சென்ற இடத்தில்  தாத்தவின் வீட்டிலிருந்தபடி 4 மாதங்கள் நான் வேலை செய்திருக்கிறேன். பிறகு திருமணம் ஆகிவிட்டது.

இப்போது இருக்கின்ற ஊரில் எனக்கு மொழிப்பிரச்சனை காரணமாக நான் முயற்சி செய்யவில்லை. குழந்தைகள் காரணமாக பின்னால் வேலைக்குச் செல்ல இயலவில்லை. ஆனால் எனக்கு அடுத்து குடும்பத்தில் பல பெண்கள் முதலில் வேலைக்குச் சென்று விட்டு கல்யாணம் செய்திருக்கிறார்கள். {அழகன் படத்தில் வருவது போல.. கொஞ்ச வருசம்  கழிச்சி பிறந்திருக்கலாம் :)}. காலம் சற்றே மாறி இருப்பதாகவே படுகிறது. அவர்களின் சம்பாத்தியப் பணம் யாரிடம் குடுக்கிறார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. விசாரிக்கவில்லை. ஆனால் என் வீட்டுவேலை செய்யும் பெண்ணின் கதையைப் பார்க்கும் போது இந்தத் துயரம் ஏழைகளுக்கு மட்டுமல்ல, நடுத்தர வர்க்க பெண்களுக்கும் கூட – என்ன அடிதடி இல்லையென்றாலும் – இருக்கும் என்றே தோன்றுகிறது.

அதேநேரம் என் அத்தை, மாமாவின் இறப்பிற்கு பிறகு அரசாங்க வேலைக்கு பயிற்சி பெற்று தற்போது வேலை செய்து வருகிறார்கள். அவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தைக் காண்கிறேன். நிச்சயமாக பெண்களின் நிலையில் வேலையும், வெளியுலகமும், மாற்றத்தையும், தன்னம்பிக்கையும் தரும் என்கிற விசயத்தை அத்தையின் மூலம் ஆணித்தரமாக உணர்ந்திருக்கிறேன்.
______________________________________________

தடாலடியாக வரும் மாற்றம் கலவரப்படுத்தக்கூடியது. இதுவோ மெதுவாக மிக மெதுவாக நிகழ்கிற மாற்றம்.. 100 ஆண்டுகளாக கோரிவருகிற கோரிக்கைகள். அதற்கும் முன்பிருந்து இருக்கின்ற பிரச்சினைகள். உலகம் முழுவதுமே இருக்கின்ற நிலை. தினம் தினம் செய்திகளில் அதுவும் வடநாட்டில் பெண்களை டௌரிக்காகவும் மற்ற காரணங்களுக்காகவும் வீட்டை விட்டு துரத்துவதும், கொலை செய்து கட்டில் பீரோக்களில் ஒளித்து வைத்த கணவர்களையும் குடும்பங்களையும் பற்றி படிக்கிறேன். குடும்பப் பெயருக்கு ‘களங்கமேற்படுத்திய’ பெண்களை ஊரும் , உறவுகளும் பார்க்கும்போதே கொலை செய்கிற நிகழ்வுகள் நடக்கின்றன.

சிறிது நாட்களுக்கு முன், தில்லியில் ஒரு அப்பா தன் மூன்று மகள்களையும் மனைவியையும், வெளிஉலகம் மிகக் கொடுமையானது என்று கூறி வீட்டிற்குள் அடைத்து வைத்துவிட்டு தான் மட்டும் வேலைக்கு சென்று வந்திருக்கிறார். தன் பேச்சைக் கேட்காத மகளை அடித்ததில் அவள் கழுத்து காலத்திற்கும் கோணியே போய்விட்டது. கண்ணாடி  ஜன்னல் கதவுகள் பேப்பர் வைத்து மூடப்பட்ட இருட்டு சிறைகளில் அவர்கள் பல ஆண்டுகள் வசித்திருக்கிறார்கள். ஒளி படாத வெளிறிய பெண்களை ஒரு மகள் தப்பிச்சென்று  என் ஜி ஓ ஒன்றின் மூலமாக வெளியுலகிற்கு கொண்டுவந்தாள்.

ஆனால் அவர்களை மீட்கச் சென்றிருந்த அமைப்பாளர்களில் ஒரு பெண் சொல்கிறார்: ” எத்தனையோ மக்களின் மிக மோசமான குடியிருப்புகளுக்கு உதவச் சென்றிருக்கிறோம். ஆனால் அந்த வீட்டின் நெடி தாக்கி நான் மயக்கமே அடைய இருந்தேன்.”  .. ஒரு நொடி எட்டிப்பார்க்கும் அவருக்கே அந்த நிலை என்றால் அக்குடியிருப்பில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த அப்பெண்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்.

வாழ்க்கையின் பல நன்மைகளைப் பெற்று நல்ல தகப்பன், நல்ல கணவன், நல்ல சகோதரனைப் பெற்றுவிட்டதால் நாங்கள் சுகமாய் இருக்கலாம். நீங்கள் நல்ல தகப்பனாய், நல்ல கணவனாய், நல்ல சகோதரனாய், நல்ல நண்பனாய் இருப்பதால் மட்டுமே உலகம் சுபிட்சம் அடைந்துவிடவில்லை. “பெண்கள் முன்னேறிவிட்டார்கள் அவர்களிடம் இருந்து ஆண்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தாருங்கள்” என்று தந்திரமாக சொல்கிறவர்களும் இருக்கிறார்களே?

…எண்ணிப்பாருங்கள்.

இப்படிப்பட்ட சைக்கோக்கள் எவ்வாறு உருவாகிறார்கள், யார் உருவாக்குக்கிறார்கள்? பெண்கள் குடும்பத்தின் மானத்தைக் காக்கும் குலதெய்வங்களாக அக்காலத்தில் குழியிலும் உயிரோடு சமாதியிலும் இறக்கிய காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் என்ன வித்தியாசம்?
__________________________________________

மாற்றங்களின் முதல் படி நம்மிலிருந்து நம் வீட்டிலிருந்து
தொடங்கவேண்டியது என்ற கருத்தோடு செய்யவெண்டியவை என்று பார்த்தால்- அடுத்த தலைமுறை பெண்ணாக என் மகளுக்கு தன்னம்பிக்கையோடு வாழ்வை மேம்படுத்த உதவவேண்டியதும், பெண் என்பதற்காக சலுகைகளை எதிர்பர்க்காமல்,பெண் என்பதற்காக பழிக்கப்படும் போது, அடக்கப்படும்போது எதிர்க்க தைரியம் உள்ளவளாக வளர்க்கவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆண் குழந்தையை ஆண் என்பதால் விளக்கமாற்றை தொடக்கூடாது அல்லது அடுக்களையில் உதவக்கூடாது எனப் பிரித்துப் பார்க்காமல், ஆண் என்கிற அகந்தை இல்லாத  பெண்ணிற்கு நிகரான அன்பும் விட்டுக் கொடுத்தலுமான வாழ்க்கைக்கு பழக்கப்படுத்த வேண்டியதும் மற்றொரு கடமை. குடும்பத்தில் மட்டும் வாழும் என்னைப் போன்ற பெண்கள் இதை மட்டுமாவது சரியாகச் செய்யவேண்டுமென்பது எனக்குத் தெரிந்த கடமையாக கருதுகிறேன்.

கஷ்டப்படும் யாருக்காவோ இறங்கிச் செயல்படமுடியாத தளைகள் என்னை வருத்தமுறச் செய்தாலும் எவருக்கும் நேரடியான துன்பம் இழைக்காத வண்ணம் வாழ முயற்சிக்கிறேன்.

பதிவிட அழைத்த முல்லைக்கும் பதிவினை வலையேற்றிய வினவுக்கும் நன்றி.
_______________________________________

–   முத்துலட்சுமி.

–     “இளங்கலை வேதியியல் மற்றும் விளம்பரத் துறையில் டிப்ளமோ பெற்றிருக்கிறேன். பள்ளி செல்லும் இரண்டு குழந்தைகளின் தாய்.  தில்லியில் வசிக்கிறேன். கவிதைகள் , புகைப்படங்கள் ,அனுபவக்கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் ஓவியம் , அனிமேசன் போன்று வாழ்வில் நானெடுக்கும் சிறு சிறு முயற்சிகளை ”சிறுமுயற்சி “ ப்ளாகில் பதிவிட்டு சேமிக்கிறேன்”

–  முத்துலட்சுமியின் வலைப்பூ: http://sirumuyarchi.blogspot.com/

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சமூகம் > பெண்

அவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி.

39

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 9

இலைதழை அடைத்த வாசல்சந்துகளின் வழி
அவள் கவைகூட்டித் தணல் தள்ள
புகைசூழ்ந்து வேகும் சுண்ணாம்புச் சூளையில்

குருவியும் பறக்க அஞ்சிக் கூடிருக்கும் வெயிலில்
அவள் மடிகூட்டிச் சேர்த்தெடுத்து
மலையென்று குவிந்திருக்கும் பருத்தியில்

இருபது நிமிடப் பேருந்துக் காத்திருப்பால்
களைத்த முகங்கள் இளநீரில் இளைப்பாறும் சாலையொன்றில்
தீமீது தவம்புரிந்து அவள் உருக்கி ஊற்றும் தாரில்

தலையெல்லாம் மயிரும் மயிரெல்லாம் நூலும் சுமந்திருக்க
அக்குள் ரவிக்கையின் வியர்த்த வெள்ளை வரிபடிய
அவள் சுற்றித் தேய்ந்திருக்கும் கதர்க்கடை ராட்டையில்

பேசாத சாமிக்கு ஆச்சாரம் துலங்கவந்து
யாரெல்லாமோ சாத்த
முக்குக்கடை வாசலில் பாலுரிஞ்சும் குழந்தையுடன்
பத்துவிரல் உழைத்து அவள் கட்டித் தந்திருக்கும் மாலையில்

குருடர்கள் உணராத நிறங்களென விரவி ஒளிர்கிறது

அவள் கருப்பை முட்டை வெடித்துச் சிதறும் உதிரம்

______________________________________________

சமூகத் தளங்களில் பங்கெடுக்க ஆரம்பித்திருந்த பதின்மக் காலகட்டங்களில் இந்த மகளிர் தினம் சார்ந்த கொண்டாட்டங்களில் பெரிய ஈடுபாடு இருந்தது. காரணம்… இருந்த ஆர்வங்களுக்கேற்ற வாய்ப்புகளை அத்தகைய கொண்டாட்டங்களும் கொண்டுவந்து கைகளில் சேர்த்தன. அந்த அங்கீகார, புகழ்ப் போதைகளை விலக்கிய போதி மரங்களும் விரைவில் கிடைத்தன. சில வருடங்கள் இருக்கும். அப்போதுதான் அறிமுகமாகியிருந்த தமிழ்வலைப்பதிவுகளில் எண்ணிவிடக்கூடிய மிகச்சில பெண்பதிவர்களே இருந்தார்கள்.

அப்போதும் இப்படியொரு மகளிர் தினம் வந்தது. பெண்பதிவர்களில் சிலருக்கு அது அதீத ஆர்வம் தந்து கொண்டாட வைத்தது. பரபரவென்று பெண்பதிவர்களின் பட்டியலைத் தயாரிப்பதிலும், அந்த வெற்றிகளை அறிவித்துக்கொள்வதிலும் ஆர்வமாக இருந்தார்கள். இது குளிரூட்டிய அறைக்குள் விரைத்துவிடாதிருக்கக் கணினி வெப்பம் தேடி வந்திருக்கும் வசதியான சிறுகூட்டம்தானே? இந்தக்கூட்டத்தின் வெற்றிக்கும் மகளிர் தினத்துக்கும் எப்படி முடிச்சிட முடியும்? என நினைத்துக்கொண்ட மனம் விலகியே இருந்தது.

இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கையில் அசுரன் தன் பதிவில் அடித்தட்டுப் பெண்களின் படம் ஒன்றைப் போட்டு “மகளிர் தினம் யாருக்கு?” என்று ஒற்றைவரியை மட்டும் பொட்டிலடித்தாற் போல் போட்டிருந்தார். அது பிடித்திருந்தது. எனவே நன்றி சொல்லிப் பின்னூட்டம் இட்டேன். அவரின் அமைப்போ அரசியலோ அல்லது வேறு எதுவுமோ தெரியாது. ஆனால் அந்தக் கேள்வியின் நியாயம் அங்கே பிடித்து வைத்தது.

இப்போது தங்கள் அமைப்பை, அரசியலை முன்வைத்து இந்தத் தளத்தை வினவு நண்பர்கள் நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து வாசித்தாலும் கருத்தெழுதுவது எப்போதாவதுதான். அப்படி எழுதுகிற சமயத்திலும், சில தனிமடல் உரையாடல்களிலும் அவர்களோடு நான் அதிகம் காட்டியது சண்டைக்கோழி பாவனைதான். வேறுமாதிரி சொன்னால் விமரிசனங்கள்.

விமர்சனங்களை முன்வைப்பவர்களில் பலவகை இருக்கலாம். விரும்புபவர்கள்  சறுக்கல்களைச் சுட்டிக்காட்டவும் விமர்சிக்கலாம், அதையே எதிர்மறையாக, ஒழிக்க விரும்புவர்கள் சறுக்கல்களையே கொண்டாட்டமாகவும் விமர்சிக்கலாம். இதில் வினவுக்கு நான் விமரிசனங்களாக வைப்பவை எந்த வகையைச் சேரும் என வாசிப்பவர்களோ, வினவு நண்பர்களோ அறிந்துகொள்ள முடியும் என்றுதான் கருதுகிறேன். அப்படிப் புரிந்துகொண்டவர்கள் அதை எனக்குத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் புரிதலின் புள்ளியில்தான் இப்போது வினவுக்காக இந்த இடுகையை எழுத ஆரம்பித்தேன். ஏற்கனவே வேறு ஒரு தொடர் எழுத மடல்வழி உடன்பாடு நிகழ்ந்து பிறகு அதற்கான தயாரிப்புகளும், வாசிப்பும் தடைபட்டதால் எழுத இயலவில்லை. அந்தச் சோம்பேறியிடம்தான் இப்போது மகளிர் தினம் சார்ந்து கட்டுரை கேட்டார்கள். இதையும் தாமதமாகவே இப்போதுதான் தர முடிந்தது. அதற்காக மன்னிக்கவும்.

சனநாயகமும், விடுதலையும் சட்டப்படி வந்து அறுபத்திச் சொச்சம் ஆண்டுகள் கழித்து மகளிர் மசோதா ஒரு அவையில் நிறைவேற்றப்பட்டதைக் கொண்டாடும், அதை இன்னொரு சபையில் என் பிணத்து மீதுதான் நிறைவேற்ற முடியும் என சவாலிட்டு நிற்கும், உள் ஒதுக்கீடு ஏன் தேவை, ஏன் தேவையில்லை என விவாதித்து நிற்கும் நம் அரசியலை எழுதலாம். நாளொன்று பெண் ஒருத்தியின் மீதான பாலியல் வன்முறையின்றிக் கழிகிறதா என ஐ.நா வின் புள்ளி விவரம் வரை குறிப்பிட்டு எழுதலாம். அவளின் மீது ஏற்றிவைக்கப்பட்ட கற்பு இறக்க முடியாத சுமையாக  பேரழிவு புரிவதையும், எங்கே இறங்கிவிடுமோ எனப்பதறிப் பண்பாட்டுத் தட்டிகளோடு அலையும் பெண் கற்பின் காவலர்களையும் எழுதலாம்.

பெண்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் எனப் பேசிக் கொண்டிருக்கும்போதே  மேலே வந்தவர்கள் சந்திரிகாக்களாய், செயலலிதாக்களாய், சோனியாக்களாய் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று எழுதலாம்.  போகிற போக்கில் “பெண் உடல் நுகர்வுப் பொருள் அல்ல” என்பதும் விளம்பரமாகி அதைப் பொதுசனத்திற்குச் சொல்வதற்காய் ஒரு முக்கால் நிர்வாணப்பெண் தன் உடல்மொழி கொண்டு நிற்பாளோ  என்றும் தோன்ற ஆரம்பித்திருக்கும் கணினி யுக அழகிப் போட்டிகளை எழுதலாம். கொஞ்சம் எழுத்தும், வாசிப்பும் இருந்துவிட்டால் “மகளிர் தின” த்துக்கு எழுத விடயங்கள் அதிகம்தான்.

எனக்கு இங்கே பகிர்ந்து கொள்ளத் தோன்றியது வேறுவிதமானது. அவை சில பெண்களைப் பற்றியது. அவர்கள் மகளிர் தினத்துக்கு எந்த மேடையிலும் வராதவர்கள், எந்த ஊடகத்திலும் எழுதாதவர்கள், புரட்சியை அறியாதவர்கள்; ஆனால் தன்னளவில் வாழ்வை வைராக்கியத்தோடு ஒரு போராட்டமாக நடத்தியவர்கள். வறட்டுக்கரை மணலில் நான் ஆடோட்டித் திரிந்த காலத்திலிருந்து என்னால்  கவனிக்கப்பட்டவர்கள்; என் தோல்விகளின் விரக்தியில், கனவுகளில் வந்து கைபிடித்துத் தூக்கிவிட்டவர்கள்; வாழ்வு என்பது துணிச்சலிலும், நேர்மையிலும் உள்ளதென்று உணரவைத்தவர்கள் அந்தப் பெண்கள்.

_____________________________________________________

தாயா…. தாயா பண்ணைகளின் ஏவலில் கூலி வேலைக்காரி. கணவன் இறக்க ஒரே மகன். மழையோ, வெயிலோ கூலிக்குப் போனால் சோறு அல்லாவிட்டால் பட்டினி.  குடிசைக்குக் கூரையும், கட்டிக்கொள்ளத் துணியும், கால்வயிற்றுக் கஞ்சியும் போதுமென்ற நிறைவை நெஞ்சில் நிறுத்தியிருந்தால் தாயாவின் பின் அவர் மகனும் அதே பண்ணைகளுக்கு ஒரு அடிமையாய் வந்திருப்பார். எதோ ஒரு தீயும்,  சமூகம் தந்த ஆறாத காயங்களும்  கனன்று கனன்று கனவை விதைத்திருந்தது. எப்பாடு பட்டேனும் மகனைப் படிக்க வைத்துப் பட்டணம் அனுப்பி விடுவது. கிராமங்கள் தேசத்தின் முதுகெலும்போ, கலாச்சாரத்தின் தொல்லியல்போ மட்டுமல்ல. கிராமங்களின் வேர்கள் சாதிப் புற்றுநோய்க் கிருமிகளின் வெகுநல்ல தங்குமிடங்களும் கூட. தயா இதை அறிந்திருந்ததே கூடத் தன் மகனை அதன் முடிச்சுகளிலிருந்து விடுவித்து அனுப்பிவிடும் கனவினை விதைத்திருக்கலாம். எத்தனையோ போராட்டங்களைத் தாண்டி ஒற்றை மனுசியாய் அந்த நினைப்பை நிறைவேற்றினார்.

மலையேறி விறகு வெட்டிப் பொழுது விடியச் சந்தையில் விற்று வீடு திரும்பும் வாழ்க்கை பழனிக்கு. நெடுநெடுவென்ற உயரமும் கன்னத்தில் சிறுபந்தாய் அடக்கிய வெற்றிலைக் குதப்பலும் வாயில் சீலையும் வேத்து வரி விழுந்த ரவிக்கையும் அவர் உருவம். கூடவே கையில் வெட்டிக் கொண்டு போய் விற்ற கட்டிலிருந்து உருவிய ஒரு நீள விறகுக் கட்டையும். பொழுது விடியும் முன்பு பொம்பளை ஒருத்திதானே தனியாகப் போகிறாள் என்று காதுத் தோட்டுக்கோ, வேறெந்தக் கருமத்துக்கோ பின்னால் வந்த ஆம்பளை ஒருவனைக் கையிலிருந்த விறகுக்கட்டையாலேயே ரத்தம் வர மொத்தி அனுப்பியபின் வீரப் பழனியாக வெளித்தெரிந்தவர். அதற்குப் பிறகு ஊரில் ஆம்பிளைகள் சிலர் பழனி எதிர்க்க வந்தால் வெளிக்குப் போவது போல் வேலியோரமாய் உட்கார்ந்து கொண்டது பெண்களுக்கு நகைச்சுவைக் கதைகளாயின.  பானை உடைந்ததுக்கும் பதறி அழுத பெண்களுக்குப் பழனி முன்னுதாரணமும் ஆனார்.

ஒரு சிறுநகரத்தின் கல்யாண மண்டபம். வந்த சனம் தின்றது செரிக்க வழி தேடிக்கொண்டிருக்கையில்தான் அங்கே மாப்பிள்ளையைத் தேடும்படி ஆனது. பொண்ணு பார்க்க வந்தபோது நல்லாப் பார்க்கவில்லையென்றும், இன்றுதான் பெண்ணுக்கு ஒருகண் மட்டுமே உண்டென்றென்று தெரிந்ததென்றும் சொல்லி தாலிகட்ட முடியாதென்று ஓடிப்போனார் மாப்பிள்ளை.  ஊரும், உறவுகளும் ஏளனப்படுத்தி நிற்க அதே மண்டபத்தின் ஒரு மூலையிலிருந்த தன் கணவனை அழைத்து வந்து “என் தங்கைக்கு நீயே தாலிகட்டு எவன் என்ன சொல்வான்னு பாக்கறேன்” என நடத்தித் தன் நான்கு குழந்தைகளோடு தங்கைக்குப் பிறந்த ஒரு குழந்தையையும் வளர்த்தெடுத்து அத்தனை பேரையும் நல்ல வேலைகளுக்கனுப்பிய லட்சுமி டீச்சர், வாழ்வின் அத்தியாயங்களில் இன்னொரு பெண்.

மூன்று குழந்தைகளும், பால் வியாபாரமும் விக்கித்து நிற்க விபத்தொன்றில் இறந்துபோன பால்காரரின் மனைவி மாரம்மாள். பொட்டையும், பூவையும் அழித்துத் தாலி பிடுங்க வந்த உறவுகளிடம் முடியாதெனத் திருப்பியனுப்பி மூன்றுமாதம் கழித்துத் திருமணமாகாதிருந்த உறவினர் ஒருவரிடம் தானே சென்று “என் வாழ்வுக்கு ஒரு ஆண் தேவை, நீ என்னைக் கல்யாணம் செய்துகொள்ள விருப்பமா?” எனக் கேட்டு மணமும் முடித்து, இருந்த குழந்தைகளோடு தலைநிமிர்ந்த வாழ்வும் சூடி வாழ்ந்தது அவர் கதை.

தாயாவும், பழனியும், லட்சுமியும், மாரம்மாளும் நம்மோடுதான் பயணிக்கிறார்கள் ஆனால் வேறு வேறு பெண்களாக. அவர்கள் சீதையும், கண்ணகியும், ஐஸ்வர்யாராயும், ரஞ்சிதாவும் அல்ல, அவர்கள் வேறு பெண்கள்.

______________________________________

இந்தப் பெண்களின் பிரச்சினைகள் பற்றிய அக்கறை பெண்ணியம் போற்றும் பெரும்பாலான அமைப்புகளுக்கும் கூட இருக்கிறதா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் நமது சமூகங்களில் கடந்த காலங்களில் பங்குபெற்ற, கவனித்து வந்த மகளிர் தினக் கொண்டாட்டங்கள் பலவற்றிலும் இவர்களுக்கான குரல்களும், இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேவையான முகங்களும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன என்றே உணர்கின்றேன். வெள்ளைக்காலர் வேலைகளை எட்டிப்பிடித்திருக்கிற பெண்களுக்கு அவரவர் பணிபுரிகின்ற வேலைசார்ந்த சங்கங்களேனும் அவர்கள் பணியிடங்களில் பெண் என்ற ரீதியில்  பாதிக்கப்படுகிறபோது கொஞ்சமேனும் குரல்கொடுக்க முன்வருகின்றன. இயன்றால் நீதிமன்றங்களுக்கும், ஊடகங்களுக்கும் கூட எடுத்துச்செல்ல முடிகின்றன.

ஆனால் உடல் உழைப்பை மட்டுமே நம்பி, பொருளாதாரத்தின் ஆகக் குறைந்த அடுக்குகளில் வாழும் பெண்களுக்கு அவர்களின் பணி சார்ந்து நடக்கிற எத்தகைய வன்முறைகளாயினும் அவை வெளியுலகுக்குத் தெரியவராமலே முடிந்து விடுகின்றன. புகார் கொடுக்கக் காவல் நிலையம் போனால் அங்கே இன்னொரு முறை அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. பாதிப்பை ஏற்படுத்தியவர்கள், சட்டப்படி மரணதண்டனை வரை பெற வேண்டிய குற்றவாளிகள் என்றாலும் கூட ஒரு வட்டச் செயலாளர் பெயரையோ, எம். எல். ஏவின், எம். பி யின், மந்திரியின் பெயரைச் சொல்லி சமூகத்தில் சகல செல்வாக்கோடும் உலவ முடிகிற கொடுமை நமக்கே உரித்தான “சட்டத்தின் ஆட்சியின்” லட்சணம்.

இத்தனை கண்ணிகளும் தங்களைச் சுற்றி வேடன் விரித்திருக்கும் வலைகளாகப் பரவிக்கிடக்கிற ஒரு சூழலில்தான் தாயாவும், பழனியும், மாரம்மாக்களும் வாழ்ந்து வருகிறார்கள். வெயிலிலும், காற்றிலும், மழையிலும் உழைத்துக் காப்புக் காய்த்துக் கன்னிப்போன தோல்களுக்குள்ளும், எலும்புகளுக்குள்ளும் அவர்களின் உயிரை ஒட்ட வைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது அவர்களிடம் இருக்கும் நெஞ்சுரம் மட்டும்தான். வாழ்வு தொண்டை வரளும் அவர்களின் தாகத்துக்கான நீரை ஒரு உச்சி மலையில் வைத்திருக்கிறது. ஒரு நைந்துபோன தொங்கும் கயிறு கொண்டே அவர்கள் மலையேற வேண்டும், அதுவும் எந்த நேரத்திலும் அறுந்து சாகடிக்கலாம்.

அப்படியொரு நிலையிலும் தளராது சுமந்திருக்கும் அவர்களின் உறுதி எனக்கு நிறையக் கற்றுத் தந்திருக்கிறது. அந்த அவர்களின் வலிகளையோ வாழ்வையோ நாம் இலக்கியத்தில் எழுத வேண்டும். கலைகளில் காட்சிப்படுத்த வேண்டும், ஆவணங்களாகப் பதிவு செய்யவேண்டும். அது நமது வாழ்வின் சாட்சியாய், வரலாற்றின் படித் தடங்களாய் தலைமுறை தாண்டியும் சிந்திக்க வைக்க வேண்டும். எழுதவும், பேசவும் வாய்ப்புக் கிடைத்திருக்கிற பெண்களுக்கு இந்தக் கடமை நிச்சயம் இருக்கிறது என்பதை உணர்கிறேன்.

அரை நூற்றாண்டுக்கும் மேலான பெண்ணுரிமைப் போராட்டங்களின் பயன் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. பெண்கள் தங்களின் உரிமைகளை உணர்ந்திருக்கிறார்கள். அரசாங்கங்கள் பெண் மீதான பாலியல் வன்முறையைக் கடுமையான சட்டங்கள் கொண்டு ஒடுக்கி வருகின்றன. ஆனால் நமக்கு இன்னும் அவை சாத்தியமாகவில்லை. இங்கே தன்னந்தனியாக ஒரு பெண்ணாகச் செய்ய முடிகிற பயணங்களை, வேலைகளை நாம் நம் அமைப்பில் ஒரு ஆண் துணையில்லாமல் செய்வது பகீரதப் பிரயத்தனமாக இருக்கிறது.

ஒரு வெளியூருக்குப் போய் விட்டுத் தனியாக ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்குவதற்கான சுதந்திரத்தையோ, பாதுகாப்பையோ கூட நாம் இன்னும் எட்டிப் பிடிக்காமல் இருக்கிறோம் என்பதையெல்லாம்தான் மகளிர் தினத்தில் நினைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் செய்தித் தாள்களில் பார்த்த மகளிர் தினக் கொண்டாட்டப் புகைப்படங்களில் கனிமொழியும், சுதா ரகுநாதனும் சிரிப்பதைத் தாண்டி நமது நிதர்சனங்கள் குறித்த கவலைகள் பேசப்படுவதில்லை. பல பத்திரிக்கைகள் செய்யாத, கவனிக்காத பக்கத்தைக் கையிலெடுத்து வித்தியாசமான மகளிர் தினத்தைத் தன் வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக “வினவு” க்கு நன்றி.

நமது பெண் விடுதலையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நமது சமூக அமைப்பை உள்வாங்கவேண்டும். பெண்களே என்றாலும் எல்லோரின் பிரச்சினைகளும் ஒன்றல்ல. அது பொருளாதாரம் சார்ந்த மேல்தட்டு, நடுத்தரவர்க்கம், கீழ்த்தட்டு என்றுகூடப் பிரித்துவிட எளிதானது அல்ல. படித்த, படிக்காத பெண்கள் என்று வகைப்படுத்திவிட முடியக்கூடியதும் அல்ல.

சாதி………ஆமாம், சாதி சார்ந்தும் பெண்களின் பிரச்சினைகள் வேறுபட்டுக் கிடக்கின்றன நம் சமூகத்தில். உயர்சாதிப் பெண்களின் விடுதலை ஆணாதிக்கத்தின் பிடிகளில் இருந்து விடுபடுவதாக இருக்கிறது. ஒரு தலித் பெண்ணின் விடுதலை என்பது ஆணாதிக்கத்தின் பிடிகளில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல, இன்னொரு பெண்ணிடமிருந்தே சாதி அடக்குமுறைக்கெதிராக விடுதலை அடைவதாகவும் அது இருக்கிறது. தலைநோவு, கைகால் குடைச்சல் வியாதியும், மூச்சுவிடவே ஆக்சிஜன் வேண்டியிருப்பதும் ஒரே பிரச்சினை அல்ல. எனவே பெண்கள் சமத்துவம் பற்றிப் பேசினால் அதில் தாயாவும், பழனியும், மாரம்மாளும் கூடப் பேசப்படவேண்டும். ஏனென்றால் அவர்கள் வேறு பெண்கள்.

___________________________________________

–     செல்வநாயகி.

அவரது வலைப்பூ முகவரி: http://selvanayaki.blogspot.com/
________________________________________
வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்? – மு.வி.நந்தினி

36

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 8

vote-012உதடுகளில் சாயத்தோடும், தோளில் பையோடும் வேலைக்குச் செல்லும் ஒரு பெண் உங்களைக் கடந்து போகும் போது நீங்கள் நினைக்கக்கூடும், ‘பாருங்கப்பா பெண்கள் எவ்வளவு முன்னேறிவிட்டார்கள்’ என்று. அப்படி நினைத்தீர்களானால் உங்களுக்கு பெண்களின் வாழ்நிலை குறித்தோ, அவளின் இருப்பு குறித்தோ எந்தவித அக்கறையும் இல்லை என்றே சொல்வேன். வார்த்தைகள் தடிப்பானவையாக இருக்கலாம். ஆனால் நண்பர்களே நான் சொல்வது உண்மையிலும் உண்மை. பெண் ஜனாதிபதியாகிவிட்டார், பெண் முதலமைச்சர் ஆகிவிட்டார்,  பெண் அதுவாகிட்டார், இதுவாகிவிட்டார்…எதுவானாலும் பெண் எப்போது பெண்ணாக இருந்திருக்கிறாள்?

___________________________________________________

பெண்? திருமணத்துக்கு முன்…

“ஆண் குழந்தைகளோடு விளையாடக்கூடாது. தனிமையில் ஆடினாலும் சொப்பு வைத்து சோறு வடி. வீட்டு வாசலைத் தாண்டி தெருவுக்கு போய்விடக்கூடாது. அப்படி போனால் அப்போதே அவளின் எதிர்காலம் பெற்றோருக்கும் உற்றோருக்கும் தெரிந்துவிடும். வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே இது இழுத்துக்கிட்டு போகப் போவுது பார்த்துக்க.

வீட்டை விட்டு வரக்கூடாது, ஆண்கள் வீட்டுக்குள் வந்தால் கக்கூஸுக்குள்ளோ கிச்சனுக்குள்ளோ அடைக்கலம் புகுந்து கொள். தலைவாரி-பொட்டு வைத்து-பூச்சூடு (பின்னாளில் கணவனை கவர்ந்து கைக்குள் போட்டுக் கொள்வதற்குத்தான்). பாத்திரம் கழுவு, வீட்டைக் கழுவு, அண்ணன்-தம்பி குண்டியைக் கழுவ (கணவன் வீட்டில் உள்ள அத்தனை பேரின் அத்தனையையும் கழுவ பயிற்சி) கற்றுக்கொள்.”

“வயசுக்கு வந்த பொண்ணுக்கு படிப்பெதுக்கு? சேர்த்து வைத்த தட்சணையை வரனுக்கு கொடுத்து தத்தளித்துக் கொண்டிருப்பவளை கரை சேர்த்துவிடலாமில்லையா? படிக்கப் போனவள் வீடு வந்து சேர்வதற்க்குள் மடியில் இருக்கும் நெருப்பு கனன்று கொண்டே இருக்கும், எப்போ அவள் பத்திக்குவாளோ என்று. வீட்டு பட்ஜெட்டில் மாசமாசம் பெரிய்ய சேலையோ வேட்டியோ விழுந்தாலும் கூட படித்தவள் வேலைக்குப் போகக்கூடாது. வேலைக்குப் போய் சம்பாதிச்சுக் கொடுத்து ஒண்ணும் ஆகப்போறதில்லை. சீவிச் சிங்காரித்து (கவனிக்க…வீட்டில் இருக்கும்போது பயிற்சிக்காக மட்டுமே இதை செய்ய வேண்டும்) அப்படியே வேலைக்குப் போனாலும் வரதட்சணைப் பணத்துக்குத்தான் ஆகப்போகுது. காலகாலத்துல கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்துக்காம அப்படியே இருந்து புரட்சி செய்யப்போறீயா?”

______________________________________________

திருமணத்துக்குப் பின்…

“கணவன் + அவன் குடும்பத்தினர் அத்தனை பேரின் கால்களிலும் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு வீட்டு வேலையைச் செய். வேலைக்குப் போனாலும் இந்த சாஷ்டாங்க சடங்கை செய்தாக வேண்டும். புர்காவைப் போல சுடிதார் இருக்க வேண்டும். புடவை கவர்ச்சியான உடை என்பதை ஆண்கள் தெரிந்து கொண்டுவிட்டார்கள். கழுத்தில் தாலியும் கால்களில் மெட்டியும் குளிக்கும் போதுகூட கழற்றப்படக்கூடாது & அப்படி கழற்றினால் நீ வேசையாவாய்! ஏனெனில் தாலியும் மெட்டியும் இல்லாமல் உன்னைப் பார்க்கும் ஆண்கள், உன்னை வசீகரித்து, உன்னிடம் கள்ளக்காதல் கொள்ள ஏதுவாகப் போய்விடும்.”

“புத்தகம் படிக்கக்கூடாது, பேப்பர் படிக்கக்கூடாது. சிறந்த குடும்பப் பெண் ஆவது எப்படி என கற்றுத்தரும் சீரியல்களையும் கணவனை முந்தானையில் முடிந்து கொள்ளும் ரகசியத்தைச் சொல்லும் பெண்கள் பத்திரிகைகளையும் பார்க்கலாம், படிக்கலாம். திருமணம் ஆன அடுத்த நாளே வாந்தி எடுக்க வேண்டும். அப்படியில்லை என்றால் அதற்கு அடுத்த நாள் வாழைப்பழத்தோடு புள்ளைப்பூச்சியை விழுங்க வைத்து (டெஸ்ட் டியுப் பேபி போன்ற நவீன சிகிச்சை முறையெல்லாம் வந்துடுச்சே என்கிறவர்களுக்கு பாரம்பரியத்தை போதிக்க ஆட்டோவில் ஆள் அனுப்பப்படும்) பிள்ளை பிறக்க வழி செய்யப்படும். அப்படியும் எந்த பூச்சியும் பிறக்கவில்லை என்றால் காத்துக்கிடக்கும் மலடி பட்டம். மலடன் என்கிற வார்த்தை தமிழில் இல்லையாம்!  பிள்ளை பிறந்துவிட்டால் கழுவும் வேலையை செய். வேலைக்குப் போவதற்கு பெரிய முற்றுப்புள்ளி வை. பிறகு வாழ்க்கை முழுவதும் ஏராளமான முற்றுப்புள்ளிகளை வைக்கக் கற்றுக் கொள்.”

___________________________________________________

தினக் கூலியாக இருந்தாலும் கார்ப்பரேட் கூலியாக இருந்தாலும் பெண் என்பவள் மேலே சொல்லப்பட்டிருக்கும் வரையறைகளுக்குள் வளர்க்கப்பட்டவளாகத்தான் இருப்பாள். வரையறைகளை மீறுவதற்கும் அப்படியே மீறி வந்தால் ஏற்றுக்கொள்வதற்கும் இந்த சமூகம் ஒருபோதும் இடம் தராது. ஆணின் சுகிப்புக்கும் அவனது வாரிசை உருவாக்குவது உள்ளிட்ட தேவைகளுக்குமே பெண் வளர்க்கப்படுகிறாள். இந்த வரையறைகளை வகுத்தவர் யார் ?

இதற்கு இந்த சமூகத்தின் ஒவ்வொரு துரும்பையும் குற்றம் சொல்ல வேண்டியிருக்கும். குற்றம் சொல்வது இருக்கட்டும், இந்த வரையறைகள் எல்லாம் அப்பட்டமான பெண்ணடிமைத்தனம் என்று எத்தனை பேருக்குத் தெரியும்-? அழுக்கு மூட்டைகளுக்கு கலாச்சாரம், பாரம்பரியம் என்று பெயர் கொடுத்திருக்கும் இந்திய சமூகத்தின் அவலம் இது.

என்னைப் பொறுத்தவரை ஆண்கள் பரிதாபத்துக்குரியவர்கள்! நம்பகத்தன்மை இல்லாதவர்கள். தன்னைப் பற்றிக்கூட அவர்கள் எப்போதும் சந்தேகித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த பலவீனத்தை மறைக்கத்தான் மதம், கலாச்சாரம், பண்பாடு, குடும்பம், இத்யாதி…இத்யாதி சமாச்சாரங்கள் எல்லாம் தேவைப்படுகின்றன.

ஆண்களின் தேவைக்காக, ஆண்களால் உருவாக்கப்பட்ட இத்யாதி வகையறாக்கள் பெண்களுக்கு கண்ணும் கருத்துமாக போதிக்கப்படுகின்றன. ஞானம் பெற்ற பெண்கள் அவற்றை, தலைமுறை தலைமுறையாக தாங்கள் பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஊட்டி வளர்க்கிறார்கள். இந்த சங்கிலித் தொடர் செயல்பாட்டில் ஏதேனும் மாறுதல் வரும்போது ஆண் இனம் சீறிப் பாய்கிறது.

______________________________________________

இறுதியாக இறைஞ்சுதல்…

பெண் உயர்ந்தவள்-ஆண் தாழ்ந்தவன் என்கிற தர்க்கம் இப்போது தேவையே இல்லை. பெண்ணை சக உயிராகக் கூட மதிக்காத சமூகத்தில் பெண்ணின் மேன்மை குறித்து பேச என்ன இருக்கிறது? என்னைச் சுற்றியுள்ள பெண்களின் நிலைமையை கூர்ந்து பார்க்கும்போது, மிகுந்த மனஉளைச்சலும் வெறுப்புணர்வும் ஏற்படுகிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒருவகையில் பிரச்சினை என்றால் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இரண்டு வகையிலும் பிரச்சினைதான். நான் பணியாற்றும் ஊடகத்துறையில் இரண்டையும் சமாளிக்க முடியாமல் எத்தனை பெண்கள் ஓடி மறைந்துவிட்டார்கள் தெரியுமா?

சக பணியாளர்களான ஆண்களின் கிசுகிசுக்களும் தன் குடும்பத்தாரின் நிர்பந்தமும் பெண்களை சமையலறைக்குள் துரத்திக் கொண்டிருக்கின்றன. ஊருக்கே கலெக்டராக இருந்தாலும் வீட்டு வேலை செய்யாத பொம்பளை பொம்பளையே இல்லை! என்பது போன்ற சினிமா வசனங்களை உச்சரித்து, பெண்களுக்கு பாடம் நடத்தாத ஆணைப் பார்ப்பது அரிதாகத்தான் இருக்கிறது.

இங்கே இன்னொரு விஷயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பெண்ணடிமைத்தனத்தை சிதைக்காமல் காப்பாற்றும் வேலையை இந்திய சினிமாக்கள் கச்சிதமாகச் செய்கின்றன. சினிமாவைப் பார்த்து பால் குடித்து, சினிமாவைப் பார்த்து உடையணிந்து, சினிமாவைப் பார்த்து மோகம் கொள்ளும் ஆண்களிடம் எப்படி மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்?

சினிமாவில் பேண்ட் அணிந்த கதாநாயகியைப் பார்த்து காமுறும் கதாநாயகனை சுவீகரித்துக் கொண்ட ஆணுக்கு, தன் வீட்டுப் பெண் வசதிக்காக பேண்ட் அணியும் போது மற்ற ஆண்கள் அவளைப் பார்த்து காமுறக்கூடுமே என்கிற எண்ணம் மேலோங்குகிறது. அறியாமையில் இருக்கும் ஆண்களைவிட ‘புரட்சி’ பேசுகிற ஆண்கள் ஆபத்தானவர்களாகப் படுகிறார்கள். இவர்களுடைய புரட்சி என்பது ஏட்டு சுரைக்காய் போல, வாழ்க்கைக்கு உதவாது. நீண்ட கூந்தலில் பூச்சூடி, வட்ட பொட்டு வைத்து தாவணிப் போட்ட கிராமத்துப் பெண் வேண்டும் என்று தேடிப்பிடித்த புரட்சிகர ஆண்களை கண்டு புன்முறுவலடைந்திருக்கிறேன்.

திருமணம்தான் பெண்களை முடக்குவதில் முக்கிய நிறுவனமாகச் செயல்படுகிறது என்கிற காரணத்தால்தான் பெண்ணைப் பற்றி சொல்வதற்கு திருமணத்துக்குப் பின், முன் என்று பிரித்துக் கொண்டேன். திருமண அமைப்பே வேண்டாம் என்று சொல்கிற அளவுக்கு நாம் இன்னும் செல்லவில்லை. அதுவரைக்கும் இப்போதிருக்கிற அமைப்பில் இயங்குவது சமூகத்தை பின்நோக்கித்தான் செலுத்தும்.. நாம் வேண்டுவதெல்லாம் அமைப்பில் மாற்றம் வேண்டும் என்பதே. திராவிட பாரம்பரியத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கிற கட்சிகளும், இயக்கங்களும் இந்த விஷயத்தில் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்கிற கேள்வியும் இந்நேரத்தில் எழுகிறது. இப்போதிருக்கும் ஊடக வளர்ச்சியை ஏன் இந்த இயக்கங்கள் பயன்படுத்திக் கொள்ள மறுக்கின்றன?

திரும்ப திரும்ப பெண்ணை குடும்பம்-திருமணம் என்கிற வட்டத்துக்குள் வைத்து மட்டுமே விவாதத்திற்கு உட்படுத்துவது (சிறப்பு கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் எங்கள் எல்லோருடைய கருத்தும் இந்த புள்ளியில் இணைவது எதிர்பாராதது அல்ல) பலருக்கு எரிச்சலூட்டலாம். முதலில் மாற்றம் ஏற்பட வேண்டியது இந்த அமைப்புகளில்தான். அதுதான் எங்கள் எல்லோருடைய இறைஞ்சுதலும். கணவன், தகப்பனாக இருக்கிற ஆண்கள்தான் வேலையிடங்களிலும் சக பணியாளர்களாக இருக்கிறார்கள். குடும்பத்தில் மாற்றம் பிறந்தால் அது வேலையிடத்திலும் பிரதிபலிக்கும்.

மற்றொரு புறம் அமைப்புகளை தூக்கி எறிந்து புரட்சி செய்கிற பெண்களின் மீது படும் முதல் கல், ஓர் ஆணுடையதாகத்தான் இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் புரட்சி, தொடர் இயக்கமாக நீடிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணமே ஆண்களின் அறியாமையை அவர்களுக்கு உணர்த்தாமல் விட்டதுதான். பெண்ணின் நிலையை உணர்ந்து பார்க்கும் ஆணால்தான் மாற்றத்தை துவக்கி வைக்க முடியும். பெண்ணிய இயக்கங்கள் இனி செயல்பட வேண்டியது ஆண்களிடத்தில்தான்!

இத்தகையதொரு உரையாடலை துவக்கி வைத்திருப்பதற்கும், பங்கேற்க அழைத்தமைக்கும் வினவுக்கு நன்றி…

_________________________________________________

–   மு.வி.நந்தினி

(ஊடகவியலாளர், சென்னையில் வாழ்கிறார். நந்தினியின் வலைப்பூ:  http://mvnandhini.wordpress.com)

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சமூகம் > பெண்

2010-ல் இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும் !!

429

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 7

வீட்ல யாரது?” கதவைத் தட்டியதும் உள்ளே கலகலவென்று கேட்டுக் கொண்டிருந்த பெண்களின் குரல்கள் கப்சிப் என அடங்கி சில வினாடிகள் அமைதியாகக் கழிந்தன.

“மீண்டும் வீடல யாரது?” என்று கேட்டதும் “யாரு?” என்று உள்ளிருந்து பதில் வினாவாக கேட்க…
“நான்தான் சாகித் வந்திருக்கிறேன். கஹாரின் இருக்காங்களா?”
“அவுங்க கடைக்கு போயிருக்காங்களே” பதிலாக பெண்குரல்.
அந்தக்குரல் எனது நண்பனுடைய துணைவியாரின் குரல் எனபது பழக்கப்பட்ட எனக்கு எளிதாக அடையாளம் தெரிந்தது.

“எப்ப வருவாங்க?”
“கொஞ்சம் நேரமாகும் என்று சொல்லிட்டுப் போனாங்க”
“அப்படியா! வந்தவுடன் நான் வந்துட்டுப் போனதாக சொல்லுங்க. அப்புறமா வர்ரேன்”
“சரி சொல்றேன்.”
கதவைத் திறக்காமலேயே உள்ளிருந்தபடியே பதில் சொன்னார் என் நண்பனின் மனைவி. அரைக்கால் ட்ரவுசரை போட்டுக் கொண்டு தெருவில் விளையாடிய போதிலிருந்தே அவன் எனக்கு நணபன்.
_____________________________________________

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன், 1980களின் வாக்கில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இசுலாமியர்களின் வீடுகளுக்குச் செல்லும் ஒரு ஆடவரின் அனுபவம் இப்படியாகத்தானிருக்கும். பெரும் நகரங்களில் சற்று வேறுபாடாக கதவுகளில் மாட்டப்பட்டுள்ள பாதுகாப்புச் சங்கிலிக்கு அந்தப் பக்கமிருந்து சிறிது நீக்கப்பட்ட இடைவெளியில் பதில் கிடைக்கும். அதுவே சந்திக்கச் சென்ற நபர் வீட்டிலிருந்தால் கதவைத் திறந்து யார் என்று பார்ப்பதுக்கு முன்னே வீட்டினுள் தாராளமாக புழங்கிக் கொண்டிருந்த பெண்கள் உள் அறைகளுக்கோ அல்லது அடுப்படிப் பக்கமோ ஒதுங்கிக் கொண்ட பிறகே உற்ற நண்பராக இருந்தாலும், அந்நிய ஆண்களாக, ஓரளவு பழக்கமுள்ள உறவினர்களாக எவராக இருந்தாலும் வீட்டினுள் வரவேற்கப்படுவர். மாமா, மச்சான், சித்தப்பா என்று நெருங்கிய ஆனால் குடும்ப உறவில் அதிக தொடர்புள்ளவர்கள் மட்டுமே இதற்கு விதி விலக்கு.

உங்களின் நண்பர் உங்களை வரவேற்று உட்காரச்சொல்லி பேசிக் கொண்டிருக்கும்போது உங்களுக்காக தேனீர் தயாரிக்கச் சொல்லியிருந்ந்தால் அதனைத் தயாரித்துக் கொண்டுவரும் உங்கள் நண்பரின் துணைவியார் கதவுகளுக்குப் பின்னால் நின்றுகொண்டு “ஏங்க, டீ கொண்டு வந்திருக்கேன்” என்று சொன்னதும், உங்களின் நண்பர் சென்று தேனீர் டம்ளரை பெற்றுவந்து உங்களுக்குத் தருவார். அல்லது வீட்டில் பருவமடையாத சிறுமிகளிருந்தால் அவர்கள் எடுத்து வருவர். நண்பரின் துணைவியார் கதவுகளுக்குப் பின்னால் நின்றுகொண்டு “ நல்லா இருக்கீங்களா? ஊட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்களா?” என்று நலம் விசாரிப்பார். அநேகமாக அவர் பேசிய சொற்கள் அவ்வளவாகத்தானிருக்கும்.

நண்பரின் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் ஓடிவந்து “மாமா” என்று மடியில் உட்கார்ந்து கொள்ளும் அவரது மகள் பர்ஹானா பருவமடைந்து விட்டதால் தாய்க்கு அருகில் நின்று கொண்டே “மாமா” நல்லா இருக்கீங்களா? எப்பவந்தீங்க? என்று நலம் விசாரிக்கும் பண்புக்கு மாறிவிட்டாள்.
____________________________________________

பொதுவாக இசுலாமியர்கள் ஒரு சிறு நடைப்பகுதி தலைவாசலில் இருக்குமாறுதான் தங்களின் வீடுகளைக் கட்டுவர். 70, 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சுற்றுக்கட்டு முற்றம் உள்ள வீடுகளாக இருந்தாலும் தலைவாசல் பகுதியில் ஒரு அடைப்புச் சுவர் இருக்கும். இதுவே அந்நிய ஆடவர்களுக்கான எல்லையாக இருந்தது.

ஆனால் தான் மதிப்புமிக்க கௌரவமான குடும்ப பாரம்பரியம் கொண்டவர்கள் என தன்னைக் கருதிக் கொள்ளும் நடுத்தரவர்க்கத்தின் மத்தியில் மட்டுமே இந்தப் பண்பாடு காணப்பட்டது. இவர்களே இசுலாமிய சமுதாயத்தின் பிரதான தூண்களாகவும் இருந்தனர். சமூக குற்றச்சாட்டுக்களும், உலமாக்களின் கண்டிப்புகளும் ஒரு ஆணோ பெண்ணோ மாற்றங்களை விரும்பினாலும் தடுக்கும் சக்திகளாக இருந்தன.

உழைக்கும் பெண்களிடமும் கடைநிலையில் இருந்த அன்றாடங்காச்சி களிடமும் இந்தப் பண்பாடு வேறாகத்தானிருந்தன. வண்ணாரப்பேட்டை ஜான் பாட்சா (இவர் மாந்திரீகர்) வீதியில் இருந்த அவருடைய லைன் வீடுகளில் (17வீடுகள் _ 1974களில் உள்ள நிலை) ஒரே ஒரு அறையும் அடுப்பாங்கரையாக இருந்த முன் நடையையும் தவிர மறைந்துகொள்ள அல்லது மறைத்துக்கொள்ள ஏதும் அற்ற இல்லங்களில் வசித்த இசுலாமியர்களின் பண்பாடும், திருச்சி குத்பிஷா நகர் பீடி சுற்றும் தொழிலாளர்கள், பாலக்கரை ஆற்றோரத்தின் அருகில் புறம்போக்கு நிலத்தின் குடிசைகளில் வாழும் அன்றாடங்காச்சிகள், பாலையங்கோட்டை பீடி சுற்றும் தொழிலாளர், ஓட்டு மண்வீடும் சில முந்திரி (நிலஅளவு 16 முந்திரி 1 ஏக்கர்) நிலமும் உடைமையாகக் கொண்ட இசுலாமிய விவசாயக் குடும்பங்கள் என தமிழமெக்கும் இவர்களின் பண்பாடு வேறாகத்தானிருந்தது.

எனது நண்பர் கஹாரின் தாயார் விவசாயி. அவர் திருமணம் செய்ததிலிருந்து அவரை கதவுகளும் பாதுகாப்பு செயினும் தடுக்கவில்லை. தலையில் சாணம் சுமந்து விவசாயம் செய்தவர். ஆனால் கஹாரி எலக்ட்ரிசியன் பட்டப்படிப்பு படித்துவிட்டு ஓரளவு சுமாராக சம்பாதிக்கத் தொடங்கியதால் நடுத்தரவர்க்கத்தின் பண்பாட்டினையே கௌரவம் என வரித்துக் கொண்டுவிட்டார்.

உலமாக்கள், இந்திய இசுலாமிய அமைப்புகள் போன்றவர்கள் கிராமங்களிலுள்ள ஏழை விவசாயிகளை தன்னுடைய சமூக அங்கமாக ஏற்றுக்கொண்டாலும் சேரிகளில் வாழ்பவர்களையும், அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் பெண்களின் குடும்பங்களையும் கண்டுகொள்வதே இல்லை. இவர்களின் உழைக்கும் வர்க்க பண்பாடு இசுலாமியக் கோட்பாடுவாதிகளுக்கு நெருடலாக இருப்பதே காரணம்.

இசுலமியப் பெண்களுக்கிடையே பண்பாடுகளின் மாற்றம், முன்னேற்றம் அகியவற்றினைப் பற்றி முழுமையாக எழுதவேண்டுமானால் இந்த சிறு கட்டுரை போதாது. சமூக நலன் கருதி இப்படிப்பட்ட விரிவான ஒரு ஆய்வு வேண்டும். இது இங்கு முடியாது. மிகவும் பிரச்சனைக்குரிய முதன்மை தரக்கூடிய சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.
__________________________________________

புர்கா

இசுலாமியப் பெண் எனள்ற விவாதம் தொடங்கினாலே முதன்மைப்படுத்தப்படும் பொருள் புர்காவாகத்தான் உள்ளது. தஸ்லிமா நஸ்ரினுடைய புர்கா பற்றி ஒரு கட்டுரையை கன்னடத்தில் மொழிபெயர்த்து (கன்னட நாளிதழ் நன்று) வெளியிட்டதற்காக லத்திஜார்ஜ் துப்பாக்கிசசூடு என்று பெரும் கலவரமே கர்நாடகாவின் பல நகரங்களில் சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்துள்ளது. வினவில் கூட சுமஜ்லா என்ற பிளாக்கரின் புர்கா பற்றிய தம்பட்டத்தாலும் சூடான விவாதம் நடந்துள்ளது. இசுலாமியப் பெண்களின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும்போது நடைமுறை வாழ்க்கையின் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் இசுலாமியர்கள் புர்கா என்றதும் சூடாகி விடுவது ஏன்?

பொதுவாக எந்த மதத்தினராக அல்லது மதம் சாராதவர்களாக இருந்தாலும் தங்கள் வீட்டு பெண்களை எவராவது சைட் அடித்தாலோ, இல்லை சாதாரணமாக பார்த்தாலோ அல்லது காதலித்தாலோ ஏற்றுக் கொள்வதில்லை. தொண்டி என்ற சிறு நகரத்தின் வாலிபர்கள் பிற மதத்தின் பெண்களை சூன்காளி (அழகிய பெண்) பூதிகாளி (அசிங்கமான பெண்) என்று ஒன்றுகூடி விமர்சித்தாலும் தன் மதத்தினுடைய பெண்களை அவ்வாறு நாலுபேர் நின்று கமெண்ட் அடிக்கவிடுவதில்லை. தகராறுதான்! அடிதடிதான்! இதே நடைமுறையில் சைட்அடித்துக்கொண்டு திரிந்து இன்று அப்பாவாக தாத்தாவாக மாறியுள்ளவர்களும் தங்கள் வீட்டுப் பெண்களை பிறர் கமெண்ட் அடிக்க விடுவதில்லை. இது எல்லா சமூகத்தினருக்கும் பொதுவானதுதான். ஆனால் பிற மதத்தினரிடம் தன் வீடு என்று சுருங்கியுள்ள உணர்வு இசுலாமியர்களிடம் தம் சமூகம் என்று விரிந்துள்ளது. அதற்காக இசுலாமிய வாலிபர்களும் குமரிகளும் தமக்குள் ஒருவர் ஒருவரை காதலிப்பது இல்லையா என்று கேட்க வேண்டாம். அதனையும் இக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

இந்த சைட் அடிக்கும் பிரச்சனைதான் “புர்கா” என்றதும் இசுலாமியர்களை கொதித்தெழவைக்கிறது. சமூக ஆர்வாலர்கள் அப்பெண்களுக்கு புர்காவினால் ஏற்படும் சிரமங்களை முன்வைக்கும் போது அது அப்படி இல்லை என்று மறுப்பதும் அதனையே பெண்களை விட்டு பேசவைப்பதும் விவாதத்தில் எட்டப்படாத முடிவாக உள்ளது.

கண்கள் தவிர பிறவற்றை மறைக்க வேண்டும், திரை மறைவுக்குப் பின் நின்றே அந்நிய ஆடவர்களுடன் உரையாற்ற வேண்டும், என்று கோட்பாடு கூறினாலும் நடைமுறை அவ்வாறு இல்லை. புர்காவின் இன்றைய நிலைதான் என்ன? பொதுவாக தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் இந்த கருப்பு வண்ண புர்கா அணியும் பழக்கமில்லை என்பது நாம் அறிந்ததுதான். பத்தானியர்கள் (பட்டாணியர்கள்) என்றழைக்கப்படும் உருதுவை தாய்மொழியாகக் கொண்டவர்களே அதிகம் அணிந்தனர். அதுவும் அவர்களிடம் ஒரு சடங்குத்தனமான மனநிலை இருக்கிறதேயொழிய கடவுள், கோட்பாடு, சொர்க்கம் என்ற உணர்விலெல்லாம் அணிவது இல்லை.

தமிழ் முசுலீம்களிடம் கருப்பு அங்கி என்ற பண்பாடு முற்றிலும் இல்லாவிட்டாலும் வெள்ளை வேட்டியை தமது கலர் சேலைக்குமேல் சுற்றிக்கொண்ட வழக்கமிருந்தது. இன்று அந்த வெள்ளைவேட்டி அகன்றுவிட்டது. கருப்பு அங்கி அல்லது எதுவும் இல்லை (சேலை, சுடிதார் போட்டுக்கொண்டுதான்) என்ற நிலை பொதுப்பண்பாக மாறியுள்ளது. குமரிப் பெண்கள், பள்ளி கல்லூரிகளுக்கு படிக்கச் செல்வது அத்திபூத்தது போன்று அரிதாக இருந்த அன்றைய நிலையில் புர்கா அணிந்து சென்றதில்லை. ஆனால் பரவலாக இன்று அனைவரும் படிக்கவைக்கும் நிலையில் அந்த பெண்கள் புர்கா அணிந்தாலும் படிக்கச்செல்ல முடிகிறதே என்ற சந்தோஷத்தில் புர்காவை ஒரு அடக்குமுறையாகக் கருதுவதில்லை. ஒரு சில தீவிர மதப்பற்று இல்லாத குடும்பங்கள் அல்லது பெண்கள் மட்டுமே புர்கா அணியாத நிலையில் பள்ளி கல்லூரிகளுக்குச் சென்றாலும் பெரும்பாலனவர்கள் புர்கா அணிவதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை.

மூன்று சகோதரிகளுடன் மட்டும் பிறந்து கல்லூரிக்குச் செல்லும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆயிஷா தன் தமக்கைகளிடம் “இந்த பாரு யார் என்ன சொன்னாலும் பெரியவங்க சொல்லிட்டாங்க என்பதற்காக அப்படியே ஏத்துக்கக்கூடாது. நாமும் சிந்தித்து பார்க்கனும். ஆனாலும் அவர்களிடம் விவாதம் பண்ணிக்கிட்டு இருக்காம காலச் சூழ்நிலைக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்துகிட்டு நம்ம காரியத்தை சாதிக்கனும்” என்று கூறுகிறார். கணினித் துறையில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் இவரும் இவரது தந்தைக்கும் புர்கா என்பதில் நம்பிக்கை இல்லை. தம்மைச் சுற்றியுள்ளவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாக வேண்டாமே என்பது அவர்களின் கருத்து. இவரின் தாய்வழி சுற்றம் எந்த பெண்களையும் பருவமடைந்த பிறகு பள்ளிக்கூடம் அனுப்பியதில்லை என்பது குறிப்பிடதக்கது.

ஸகனாஸ் கணினித் துறையில் பொறியியல் வல்லுனர். புர்கா இல்லாமல் கல்லூரிக்குச் சென்றதில்லை. கை நிறைய சம்பளம் வாங்கும் பணிக்குச் செல்லும் போதும் புர்கா அணியவே செய்வார். புர்கா பற்றி பெருமையாகவும் சொன்னவர்தான். ஆனால் கல்லூரியில் படிக்கும்போது ஒரிசாவைச் சார்ந்த மாணவரைக் காதலித்து முஸ்லீமாக ஒரு திருமணச்சடங்கு, ஒரிசா சென்று கணவரின் குடும்பத்தினருக்காக ஒரு இந்துமத திருமணச் சடங்கு. இன்று தாய் வீட்டுக்கு வந்தால் புர்கா, தனது வீட்டிலும் பணியிடத்திலும் அது இல்லை. பிள்ளைகளுக்கும் இரண்டிரண்டு பெயர்கள்.

மதுரைச் சேர்ந்த பாத்திமா, ராகேஷ்ஷுடன் இந்துவாக மாறித் திருமணம் செய்தார். திருச்சியைச் சேர்ந்த பானு, அகஸ்டின் தங்கராஜுடன் கிறித்தவராக மாறி திருமணம். இவர்களும் புர்காவின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான். இன்று குடும்ப உறவுகளும் தொடரத்தான் செய்கிறது.

திருமணவிழா மண்டப்பத்திலே 18 வயது ஜுவைரியா புர்காவுடன் “வணக்கம் தோழர்” என்று எமது தோழர்களுக்கு கை கூப்பி வரவேற்கிறார். திருமண விழாக்களில் புர்காவுடன் வலம் வரும் பெண்கள், ஆண்களின் கூட்டத்திடையே இயல்பாக வலம் வருகின்றனர். எதிர் எதிர் வரிசையில் அமர்ந்து விருந்துண்ணுகின்றனர். யாரும் எதற்கும் சங்கடப்படுவதில்லை எல்லாம் இயல்பாக குற்றமற்ற செய்லபாடுகளாக நாம் காணுகிறோம்.

அன்று ஜவுளிக்கடை, நகைக்கடை, வளையல்கடை போன்றவற்றிற்கு மட்டும் ஆண்களுடன் சென்றுவந்த பெண்கள் இன்று தனியாகவும்
சென்றுவருகின்றனர். கடைத்தெருவுக்கு செல்லும் பெண்களை “ஊர் மேய்பவள்” என்று இழித்துரைத்த காலம் கண்ணாடி பெட்டகத்திற்குள் ஒளிந்து கொண்டுவிட்டது. அன்றாடத் தேவைகளுக்கு ஆண்களே கடைத்தெருவுக்குச் செல்லும் காலமும் மலைஏறிவிட்டது. காதுகளையும், நகை அலங்காரங்களையும் மறைத்துக்கொள்ளும் புர்காவெல்லாம் இன்று கிடையாது. இதுவே அவர்களின் புர்கா பற்றிய கோட்பாடு சார்ந்த இன்றைய யதார்த்த மதிப்பீடுக்குச் சான்றாக உள்ளது. இன்னும் ஏராளமான சான்றுகளை நாம் காணலாம்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற இசுலாமிய அமைப்புகள் தமிழக இசுலாமியப் பெண்களை புர்கா அணியச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களின் இலக்கு 30, 35க்குள் உள்ள பெண்கள் மட்டுமே. சற்று வயதானவர்கள் தம் நிலையில் மாற்றமில்லாமலயே தொடரமுடிகிறது. புர்கா அணிபவர்களோ, “புர்காதானே அணிந்துவிட்டு போகிறோம், ஆனால் நாங்கள் வேலைக்கு போவதையே, படிப்பதையோ தடுக்க முடியாது” என்கின்றனர். இன்று பரவலாக இதில் மட்டுமே என்றில்லாமல் அனைத்துத் துறைகளிலும் இசுலாமியப் பெண்கள் வேலை செய்வதை நாம் காண்கின்றோம். அவர்கள் அணியும் புர்காவே இதற்கு சாட்சியாகவும் உள்ளது.

________________________________________

பெண் உழைப்பு

“ஆண்கள், பெண்களை நிர்வகிப்பவர்கள். பெண்கள் உங்களுக்கு விளைநிலங்கள்” என்று குர்ஆன் கூறுகிறது. உழைக்கும் பெண்களைப் பொருத்தவரை அன்றும் இன்றும் ஏற்ப்பட்டுள்ள வேறுபாடு முதலாளித்துவத்தின் பண்பாடுதானேயொழிய குனர்ஆனுக்கும் இவர்களுக்கும் வெகுதூரம்.

ஆமினாம்மாள்! நெல் அவித்து அரிசி விற்பதில் கடந்த 40 ஆண்டுகாலமாக தன் காலத்தை கழித்துக் கொண்டிருப்பவர். தெருக்குழாயில் தண்ணீர் பிடித்து மேன்மைமிக்க குடும்பங்களுக்கு சேவை செய்து வயிறு பிழைக்கும் ஜமால்மாமி நடுத்தர வர்க்கத்தினராக வளர்ந்து வறுமையின் காரணமாக தொழில் செய்து பிழைப்பவர். இவர்களின் பண்பாடு வேறாகத்தான் உள்ளது. பருவமடைந்த அல்லது பருவம் அடையாத, திருமணமான அல்லது விதவைகள் என்ற எந்த வேறுபாடும் இல்லாத பெண் உழைப்பு சமூகத்தின் கட்டாயமாகிவிட்டது.

“தானும் உயர்குடியே. தமக்கென்று ஒரு தராதரம் உள்ளது. தராதரத்திற்கேற்ற சமூகத்துடன்தான் நாம் பழக வேண்டும்” என்று கருதுபவர்கள், முதலாளித்துவப் பண்பாட்டினை செரித்துக்கொண்டு தாங்கள் வறுமையில் வாடினாலும் முதலாளித்துவம் வழங்கும் சமூக மதிப்பீடுகளுடன் உறவாடவே விரும்புகின்றனர். இதனை குட்டி முதலாளித்துவ பண்பாடு என்று சொல்லலாம். ஆனால் புதிய பொருளாதாரத்தால் விழுங்கப்பட்டு சாறுபழியப்பட்ட சக்கைகளாக வெளித் தள்ளப்பட்ட பின் இவர்களும் உழைக்கும் பெண்கள் அணியில் (தமது தராதர மதிப்பீட்டின் உண்மைநிலை உணர்ந்து) ஒன்றிணைகின்றனர். அகலத்திறந்த கதவுகளில் தஞ்சமடைகின்றனர். சமூக மதிப்பீடுகளும் மாறிவிட்டன..

ஃபாத்திமா. இவர் மின்னணு பொறியியல் பட்டதாரி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பறக்கும் படையில் ஒரு அதிகாரியாக கைநிறைய சம்பளம் வாங்கும் தொழில். கணவர் ஒரு ஆசிரியர். இவருக்கு வெளிநாட்டில் மிகவும் உயர்ந்த சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கிறது. வீடு, கார், குடும்பத்திற்கான விசா என்று அனைத்தும் வழங்கப்படும் வேலை. கணவரை, வேலையை விட்டுவிட்டு உடன்வர அழைக்கிறார். ஆனால் “பெண்ணின் உழைப்பில் உட்கார்ந்து தின்பதா? அல்லது அவள் வெளிநாடு சென்று சம்பாதிக்க நாம் இங்கே ‘பொட்டையைப்’ போல் பிரிந்து வாழ்வதா?” சுய கௌரவம் இடம்தரவில்லை. சமூகம் தனக்கு வழங்கியுள்ள விவாகரத்து என்ற அங்குசத்தை நீட்டத் தொடங்கினார்.

பாத்திமாவோ “எதுவானாலும் பரவாயில்லை, நான், எனது முன்னேற்றத்தை கெடுத்துக்கொள்ள முடியாது” என்று உறுதியாக வீசிய கவண்கல் வேலை செய்தது. அது “இருவர் சம்பளத்திலும் சொகுசாக வாழ்ந்த வாழ்க்கையை இழக்க முடியுமா” என்ற கனியில்பட்டு பறித்தெடுத்துவிட்டது. இன்று இவர்கள் வெளிநாட்டில் கோடிஸ்வரர்களாக!.

நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. தான் சம்பாதிக்கும் தொகையை தனது பெற்றோர்களுக்கு கொடுப்பதில் கட்டுப்பாடு இருக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொள்ளும் பெண்களும் இவர்கள் மத்தியில் வளர்ந்து கொண்டுதான் வருகின்றனர். இசுலாமிய பெண் உழைப்பை முதலாளித்தவம்தான் தீர்மானிக்கிறதேயொழிய மதக் கோட்பாடுகள் இல்லை.

_________________________________________

தலாக் – விவாகரத்து

ஆணின் ஆளுமை அதிகாரத்தினால் தலாக் தலாக் தலாக் என்று மும்முறை ஒருவன் கூறிவிட்டால் அவனது மனைவி விவாகரத்து செய்யப்பட்டவளாக கருதப்படும் நிலையே அன்றும் இன்றும் உள்ளது. இதற்கு சாட்சிகள் தேவையில்லை. அல்லாவே சாட்சியாக உள்ளதால் இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே சமூகம் உள்ளது. ஒருவன் சச்சரவினால் ஏற்பட்ட கோப உணர்ச்சியின் உந்துதலில் இப்படி தலாக் செய்து விட்டாலும் அது விவாகரத்து ஆனதாகவே கருதப்படும். அவன் மனம் மாற்றம் அடைந்து இவ்வாறு செய்துவிட்டதாக வருந்தினாலும் தலாக் தலாக்தான். அவன் விரும்பினாலும் மீண்டும் இணைந்து வாழ முடியாது. ஏனெனில் இவ்வுறவு சமூக கட்டுமானத்தினுடைய ஆளுகையின் கீழ் உள்ள உறவு.

இந்த மூன்று முறை தலாக் என்று சொல்லும் உரிமை, சிந்தித்து தெளிவாக நிதானமாக முடிவெடுத்தாலும் ஒரு பெண்ணிற்கு கிடையாது. தனக்கு பொறுப்பானவர்கள் மூலம் தன் கணவனை இந்த உறவிலிருந்து விடுவிக்கச் செய்துகொள்ளத்தான் ஒரு பெண்ணுக்கு இருக்கின்ற உரிமையாகும்.

தலாக் என்பது போல்தான் குளலா என்பதும் என்று சில இசுலாமிய பெண் அமைப்புகள், தாங்களும் நேரிடையாக தலாக் செய்துகொள்ள உரிமையுண்டு என்று வாதாடினாலும் ஆண்களால் மட்டுமே நிர்வாகிக்கப்படும் உலமாக்கள் சபை அதை நிராகரித்துவிட்டது. குலா என்பதன் பொருள் “விவாகரத்து செய்துவிடச் சொல்லுங்கள்” என்று கோரிக்கை வைப்பதே ஆகும்.

ஆனால் விவாகரத்து வழக்குகளில் இன்றைய நடைமுறை மதக்கோட்பாட்டிற்கு வெளியே ஜமாத்துகளால் தீர்மானிக்கப்படுகின்றன. ஆண் தலாக் செய்தால் தான் கொடுத்த மகர் தொகையை (திருமணத்தின்போது ஆண் பெண்ணிற்கு வழங்கப்படும் பொருள்) இரட்டிப்பாக்கித் தரவேண்டும். இது கோட்பாடு. நடைமுறையில் அப்பெண்ணிற்கு இருக்கும் குழந்தைகளின் பால், வயது ஆகியனக் கணக்கிடப்பட்டு அதற்குப் பாதுகாப்பு தரும்வகையில் தண்டத்தொகையாக தீர்மானிக்கப்பட்டு ஆணிடமிருந்து பெற்று பெண்ணிற்கு வழங்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட வரதட்சனைகள், நகைகள், சீதனங்கள் திருப்பியளிக்கப் படுகின்றன. ஜீவனாம்சம் என்றச் சொல் மட்டும உச்சரிக்கப்படுவதில்லை.

குழந்தைகள் ஆண்களுக்கே உரியன. அவர்கள் அவர்களை தமது பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே கோட்பாடு. நடைமுறையில் ஒரு சிலர் அவ்வாறு தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டாலும் பலரும் அதனால் ஏற்படும் மறுமண வாழ்க்கைகான இடையூறுகளைக் கணக்கிட்டு ரொக்கத் தொகைக்கு விலை பேசிவிடுகின்றனர். ஆனால் சம்பாதிக்கும் பருவத்தில் உள்ள ஆண்பிள்ளைகளாக இருந்தால் ஆண்களின் பாசம் கரைகடந்து ஷரியத் சட்டம் கோலேச்சுகிறது. கணவன்களால் மட்டுமே தான் கர்ப்பமுற்று குழந்தை பெற்றெடுப்பதாகவும், அதில் தனக்கு பங்கேதுமில்லை என்று இன்னும் இப்பெண்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதால் இப்பிரச்சனையில் தமக்கு ஏதும் உரிமை இல்லை என்பதை எவ்வித மனவருத்தமுமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். அதுவே குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு இவள்மீது சுமத்தப்படும்போது இயல்பாகவே உள்ள தாய்ப்பாசம் அதனை தன் தலையில் கட்டும் ஏமாற்றம் என்று கருதுவதற்கு இடமளிப்பது இல்லை.

பெண்ணின் விருப்பத்திற்கிணங்க விவாகரத்து நடந்தால் பெண், தான் பெற்ற மகர் தொகையுடன் சிறுதொகை ஒன்றையும் (திட்டவட்டமான அளவு இல்லை) கொடுக்க வேண்டும். அல்லது மகர் தொகையை மட்டுமாவது கொடுக்கவேண்டும், என்று கோட்பாடு கூறுகிறது. நடைமுறை அவ்வாறு இல்லை. பெண் தலாக் செய்யச் சொல்லும் சூழ்நிலை பரிசீலிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக குடிகாரக் கணவன், விபச்சாரிகளுடன் சுற்றும் கணவன், சமூக குற்றங்களைச் செய்வதால் தொடர்ந்து சிறைசென்று வரும் பொறுக்கி போன்ற அடிப்படை நிகழ்வுகள் பரிசீலிக்கப்பட்டு தீர்த்து வைக்கின்றனர். குற்றம் கணவன் மீது என்றால் கணவனுக்கு தண்டத்தொகையும். மனைவி மீது என்றால் மனைவிக்கு தண்டத்தொகையும் தீர்மானிக்கப்படுகிறது.

ஆண் தலாக் செய்ய மறுத்தாலும் வலுக்கட்டாயமாக விவாகரத்தை பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பும் இன்று பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மாற்றத்தின் முன்னேற்றம். சமூகத்தின் இன்றையநிலை பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றமும், பெண்ணுழைப்பும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. “கல்லானாலும் கணவன்…” மலை ஏறிக் கொண்டிருக்கிறது.

______________________________________________________

இத்தா : காத்திருத்தல்

இத்தா என்பது பற்றிய விரிவான விளகத்தை பறையோசையில் கர்பப்பை இல்லாவிட்டாலுமா! படித்துக் கொள்ளுங்கள். அன்றும் இன்றும் என்ற ஒப்பீட்டை மட்டும் பார்ப்போம். இதன் மதிப்பீடு நானறிந்த வரையில் அன்றும் இன்றும் மாறவே இல்லை. கோட்பாட்டின்படி சிறிதும் பிசகாமல் கடைபிடிக்கப்படுகிறது. ஆனாலும் ஒரு சந்தேகம் எனக்கு உண்டு.

முகம்மது நபி (ஸல்) அவர்கள் போர் ஒன்றிற்குச் சென்று திரும்பியதும் தமது வெற்றியை அறிவித்துவிட்டு “கணவன் இறந்த பெண்கள் மழித்துக் கொள்ளுங்கள் (மொட்டையடித்துக் கொள்ளுவது)” என்று கூறுகிறார். அந்த அறிவிப்பைத் தவிர அது தொடர்பான வேறு எதனையும் சான்றாக நான் படிக்கவுமில்லை. பார்க்கவும் இல்லை. அது அன்றைய நடைமுறையாக இருந்தால் அது இன்று இல்லை என்பது மட்டுமே மாற்றமாகும். இந்தியச் சூழ்நிலையில் அன்று “வெள்ளை புடவை” இந்துமதத்தைப் போல இவர்களும் அணிந்தாலும் இன்று அது நடைமுறையில் இல்லை.

தன் கர்பப்பையில் உள்ளதை மறைக்க வேண்டிய அவசியமற்ற காலச் சூழ்நிலையிலும், அது அவசியம் தான் என்றால் அறிந்துகொள்ள மிக நவீன கருவிகள் இருக்கும் இந்தக் காலத்திலும் இத்தா இன்னும் ஏன் தொடர்கிறது? கணவன் இறந்துவிட்ட துயரத்தில் உள்ள பெண் அந்த பசுமையான வாழ்க்கையின் நினைவாக இந்த இத்தாவை ஒரு சுமையாக கருதுவதில்லை. அது தனது கணவனை சொர்க்கத்திற்கு இட்டுச் செல்வதில் பங்காற்றும் நன்மைகளின் எண்ணிக்கையை கூட்டும் என்றும் அவள் மனதார நம்புவதால்அப்பெண்களின் மனதில் எவ்வித எதிர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. சமூக ஆர்வலர்களும் இதில் தலையிட்டதும் இல்லை. அது ஏன் என்று எனக்கும் புரியவில்லை.

விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் இத்தாவைக் கடைபிடிக்கும் நிலையிலும் மாற்றம் இல்லை. விவாகரத்து விரும்பியோ விரும்பாமலோ நடந்தாலும் கணவன்மீது ஏற்பட்டுள்ள “கசப்புணர்வு” அங்கே ஏற்பட்டுள்ளது என்பது தெளிவான ஒன்றே. அப்படியிருந்தும் அவர்கள் இந்த இத்தாவை கடைபிப்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்கு ஏற்படவில்லை. எனவே இப்படிப்பட்டவர்களின் மனநிலையை அறிந்தவர் எவரேனும் இருந்தால் இங்கே எழுதுங்களேன்.

முகம்மது நபி (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமாவின் கணவனரான அலியிடம் “என் மகளே ஆனாலும் பெண்கள் சொல்வதைக் கேளாதீர்கள்” என்று கூறியிருந்தாலும் அவரின் மரணத்திற்குப்பின் அவரது மனைவி ஆயிஷா அரசியலில் மிகவம் முக்கியமான பங்காற்றத் தொடங்கியதிலிருந்து இன்று வரை மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டேதான் வருகின்றன. இந்த மாதம் மகளிர் மாதமாக உள்ள நிலையில் ஒவ்வொரு இசலாமியப் பெண்களும் தங்களை சுற்றியுள்ள சூழ்நிலைகளையும் அதன் காரண காரியங்களையும் தன்சுய விருப்பு வெருப்புக்கு அப்பாற்பட்டு ஆய்வு செய்து பெண்களின் உரிமைகளைப் பெற பங்காற்றுவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். கடவுள் நம்பிக்கைக்கும் இம்மாற்றத்திற்கும் இடையில் முடிச்சுவிழாமல் இதுவேறு அதுவேறு என பிரித்திட்டு செயலாற்ற வேண்டும்.

– சாகித்

http://paraiyoasai.wordpress.com/
_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்