privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைகளக் கணிப்புஅரசியலில் ரஜினி - மாபெரும் சர்வே முடிவுகள் !

அரசியலில் ரஜினி – மாபெரும் சர்வே முடிவுகள் !

-

அரசியலில் ரஜினி – மாபெரும் சர்வே முடிவுகள் !

ஜினியின் அரசியல் அறிவிப்பு இணையத்தின் மெய்நிகர் உலகில் ஒரே சமயத்தில் பல்வேறு வகையான எதிர்வினைகளை உண்டாக்கியிருக்கிறது. ஓரளவுக்கு அரசியல் அறிமுகம் கொண்டவர்களும், அரசியல் உரையாடல்களுக்கு பழக்கமானவர்களாகவும் இருக்கும் தமிழ் சமூக இணைய மக்கள் ஒருபக்கம் மீம்ஸ்கள் மூலமாகவும், இன்னபிற வழிகளிலும் ரஜினியின் அரசியல் அறிவிப்பை கிண்டலும் கேலியும் செய்து வருகின்றனர். குறிப்பாக ஆண்டாள் விவகாரத்தில் நித்தியின் பெண் சீடர்கள் களமிறங்கிய பின் ரஜினியின் ஆன்மீக அரசியல் இந்த வட்டாரங்களில் கேலிக்குரியதாக மாறியுள்ளது.

சென்னை புத்தகக் காட்சி: கருத்துக்கணிப்பில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் இளைஞர்கள்

இன்னொரு பக்கம், ரஜினியின் பூர்வீகத்தை முன்வைத்து தமிழர் vs தமிழரல்லாதார் அரசியலை முன் தள்ளும் நாம் தமிழர் அல்லது அதைப் போன்ற இனவாத கருத்துக் கொண்டவர்களின் விமர்சனங்கள். மூன்றாவதாக வழக்கமாக தமிழ் இணைய உலகில் பாரதிய ஜனதாவுக்கு முட்டுக் கொடுக்கும் பார்ப்பனியக் கருத்துக்களை கொண்ட வலதுசாரி தரப்பினரின் ஆதரவுக் குரல்.

நடப்பு அரசியல் குறித்தோ மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்தோ எந்த வகையிலும் தலையிடுவதோ போராடுவதோ இல்லை என்கிற ரஜினியின் நிலைப்பாடு இணையத்தைப் பொறுத்தவரை பரவலாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. மெய்நிகர் உலகைப் பொறுத்தவரை ஏறக்குறைய ரஜினியின் பிம்பம் கோமாளித்தனமானதாக பார்க்கப்படும் நிலையில் மெய் உலகின் கருத்து என்னவென்பதை அறியும் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்த முடிவு செய்தோம். இதற்கென தமிழகத்தின் சில நகரங்கள் தெரிவு செய்யப்பட்டன.

ரஜினியின் அரசியல் நுழைவு குறித்த எட்டு கேள்விகளுக்கான பதில்களுடன் பாலினம், வயது மற்றும் வருமானம் ஆகிய மூன்று தனிப்பட்ட தகவல்களை மட்டும் பதிவு செய்து கொண்டோம். சென்னையில் ஏழு பேர் கொண்ட செய்தியாளர் குழு புறநகர் ரயில்களில் மக்களைச் சந்தித்தது. மற்றுமொரு குழுவைச் சேர்ந்த பத்து தோழர்கள் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் புத்தகச் சந்தை உள்ளிட்ட இடங்களில் கருத்துக் கணிப்பை எடுத்தனர். சென்னை தவிர தருமபுரி, கோவை, மதுரை, தஞ்சை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற நகரங்களிலும் பாண்டிச்சேரியிலும் எமது செய்தியாளர் குழுவினர் மக்களைச் சந்தித்தனர்.

திருச்சி கருத்துக்கணிப்பில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் இளைஞர்கள்

மொத்தம் 5,150 மாதிரிகள். இதில் 78% ஆண்கள், 21.73% பெண்கள் மற்றும் 0.27% மூன்றாம் பாலினத்தவர்.

வயதுவாரியாகப் பார்த்தால், 49.63%பேர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள். 31 -ல் இருந்து 50 வயதுக்குட்பட்டவர்கள் 36.82% பேர். மேலும் 13.55% பேர் ஐம்பது வயதைக் கடந்தவர்கள்.

வருமானப் பிரிவினர் என்று எடுத்துக் கொண்டால், வருமானமற்ற 16% பேர் (மாணவர்கள் அல்லது இல்லத்தரசிகள்); பத்தாயிரத்துக்கும் குறைவான வருமானம் கொண்டவர்கள் 48.56% பேர்; 10 -ல் இருந்து 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கொண்ட பிரிவினர் 25.15% பேர்; 20 -ல் இருந்து 50 ஆயிரம் வரையிலான வருவாய் கொண்டவர்கள் 6.31% பேர்; சுமார் 3.98% பேர் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வருவாய் கொண்ட பிரிவனராக இருந்தனர்.

கேள்விகளைப் பொறுத்தவரை, ரஜினியின் அரசியல் வருகைக்கு மக்களின் விருப்பு, அவர் பட வெளியீடுகளின் போது நடக்கும் பிளாக் டிக்கெட் விற்பனையும் அவரே சொல்லிக் கொள்ளும் அரசியல் தூய்மையும், ஆன்மீக அரசியல், பெண்கள் ஆதரவு, தேர்தல் வரைக்கும் கொள்கையோ மக்கள் பிரச்சினைகளுக்கு போராட்டமோ இல்லை என்கிற அறிவிப்பு, இந்த அரசியல் நுழைவின் மூலம் ஆதாயமடையப் போவது யார், ரஜினி-கன்னடர் என்கிற விமர்சனம் மற்றும் கடந்த தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என மொத்தம் எட்டுக் கேள்விகளை வடிவமைத்திருந்தோம்.

சென்னை மின்சார இரயிலில் ரஜினி சர்வே

இந்தக் கேள்விகளுக்கு மக்கள் தெரிவு செய்த பதில்கள் என்னவென்பதைக் குறித்த முடிவுகள் கீழே வழங்கப்பட்டுள்ளன. இக்கருத்துக் கணிப்பின் முடிவுகளை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது ரஜினியின் அரசியல் வருகைக்கு பாதியோ அல்லது அதற்கு சற்று குறைவான மக்களின் ஆதரவு இருப்பதான தோற்றம் கிடைக்கிறது.

எனினும், இம்முடிவுகளை அதன் முகமதிப்பை மட்டும் வைத்துக் கொண்டு புரிந்து கொள்வதற்கில்லை. கொஞ்சம் நெருக்கமாக முடிவுகளை ஆராய்ந்து பார்க்கும் போது சில நம்பிக்கையூட்டும் அம்சங்களும், எச்சரிக்கையூட்டும் அம்சங்களும் கலந்தே இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ரஜினியின் அரசியல் வருகைக்கு மக்கள் அளித்திருக்கும் ஆதரவு என்பது அப்படியே ஓட்டாக மாறக்கூடியதா?

“ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை விரும்புகிறீர்களா?” என்கிற கேள்விக்கு “ஆம்” என 43.09% பேரும் ”இல்லை” என 42.80% பேரும் “கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என 14.12% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே நேரம், “அவரது படங்களுக்கு ரூ 500, 1000 என்று பிளாக்கில் டிக்கெட் விற்கப் படும்போது அவரது கட்சி ஊழலற்ற அரசியல் நடத்தும் என்று நம்புகிறீர்களா?” என்கிற கேள்விக்கு “இல்லை” என 52.23% பேரும், “ஆம்” என 27.55% பேரும் ”கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என 20.21% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் அரசியல் நுழைவை ஒரு பொதுப் பார்வையில் இருந்து “எத்தனையோ பேர் இருக்கிறார்கள், இவரும் இருந்து விட்டுப் போகட்டுமே” என்பதன் அடிப்படையில் கணிசமானவர்கள் ஆதரித்துள்ளனர். எனினும், அவரது பட வெளியீட்டு சமயங்களில் லாபவெறியுடன் பிளாக்கில் டிக்கெட் விற்பதை ஊக்குவிப்பது, அதன் மூலம் கருப்புப் பணத்தை குவித்துக் கொள்வது என்பதைக் கடந்து அவரால் ஒரு ஊழலற்ற ஆட்சியை வழங்க முடியும் என 27.55% பேர் கருத்து தெரிவிப்பது கவனத்திற்குரியது. அதே நேரம் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இத்தகைய பிளாக் டிக்கெட் நடிகர் ஊழலற்ற ஆட்சி வழங்க முடியாது என்றே பதிலளித்திருந்தனர்.

மேலும், எமது கருத்துக் கணிப்பின் போது ரஜினியின் அரசியல் நுழைவை எதிர்த்து பதில்களைப் பதிவு செய்தவர்கள் பெரும்பான்மையாக நேர்ப்பேச்சிலும் மிக கடுமையாக ரஜினியை விமர்சிக்கத் தயங்கவில்லை. ரஜினி என்றதும் இது அவரது ரசிகர்கள் எடுக்கும் கருத்துக்கணிப்பு என்பதாகப் புரிந்து கொண்டு பலரும் கடுமையான ஆட்சேபத்தை வெளிப்படுத்தினர். “நாற்பது வருடமாக என்னத்தைக் கிழித்தான்?” “ராகவேந்திரா மடத்துக்கு 10 கோடி, புயலுக்கு வெறும் பத்து லட்சமா?” “வயசான காலத்தில் வேலை வெட்டியெல்லாம் முடிச்சிட்டு வேண்டிய வரைக்கும் சம்பாதிச்ச பின்னே பதவியும் வேற கேட்கிறதா?” – இவையெல்லாம் மக்கள் எம்மிடம் தெரிவித்த கருத்துக்களின் சில மாதிரிகள்.

விழுப்புரம் பகுதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு

ரஜினியை ஆதரித்தவர்களில் சிலரே கூட 500/1000 நோட்டு தடை செய்யப்பட்டதை ரஜினி ஆதரித்ததைக் குறிப்பிட்டுக் கண்டித்தனர். ஆதரவு தெரிவித்தவர்களில் சிலர், “அவருக்கென்னங்க.. . வேண்டிய அளவுக்கு சம்பாதிச்சிட்டாரு.. எங்களோட பிழைப்பு தான் சார் இப்படி தினம் தினம் நாறிக்கிட்டு இருக்கு” என்று சலித்துக் கொண்டதையும் கவனிக்க முடிந்தது. ரஜினிக்கு கணிசமாக உள்ள ஆதரவு பெரும்பாலும் அரசியலற்றவர்கள் அல்லது அரசியல் நடப்புகளையும் அவை தொடர்பான செய்திகளையும் பின்தொடரும் வாய்ப்பில்லாத பிரிவினரிடம் இருந்தே வந்தது. இந்தப் பிரிவில் இல்லத்தரசிகள், மாணவர்கள், அன்றாட பிழைப்புக்காக நிற்க நேரமின்றி ஓடும் கீழ்தட்டுப் பிரிவினர் போன்றோர் கணிசமாக இடம் பிடித்தனர்.

மறுபுறம், ரஜினியின் சந்தர்ப்பவாத அரசியல் ஓரளவுக்கு விழிப்புணர்வு பெற்ற பிரிவினரைச் சென்றடைந்துள்ளது. வெளிப்படையாக தமது அரசியல் நிலைப்பாடுகளைப் பேசி கருத்துருவாக்கம் செய்யும் இந்தப் பிரிவினர் ரஜினிக்கு எதிரான மனநிலையில் இருப்பது ஒரு சாதகமான அம்சம். எனினும், மாநில உரிமைகள் அடகு வைக்கப்படுவது, மோடி அரசு மக்கள் மேல் தொடுக்கும் பொருளாதார தாக்குதல்கள் போன்ற குறிப்பான அரசியல் தருணங்களில் ரஜினியின் வலதுசாரி சந்தர்ப்பவாத அரசியலை அம்பலப்படுத்தி வீச்சாக பிரச்சாரம் செய்வதன் மூலம் ரஜினியின் பின் திரளும் சாத்தியம் கொண்ட அரசியலற்ற பிரிவினரிடமும் இந்த விழிப்புணர்வைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை இந்தக் கருத்துக்கணிப்பு எடுப்பாக உணர்த்துகின்றது.

அடுத்து, “ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் என்பதன் பொருள் என்ன?” என்கிற கேள்விக்கு 26.74% பேர் “மதவாத அரசியல்” எனவும், 25.20% பேர் “சாதிமத நல்லிணக்க அரசியல்” எனவும், 48.06% பேர் “கருத்து இல்லை” எனவும் தெரிவித்தனர்.

அதே சமயம், “ரஜினி அவர்களின் அரசியல் பிரவேசத்தின் விளைவால் யாருக்கு ஆதாயம்?” என்கிற கேள்விக்கு பா.ஜக என 25.46% பேரும், “எடப்பாடி அரசுக்கு” என 2.58% பேரும், “தமிழக மக்களுக்கு” என 30.70% பேரும், “யாருக்குமில்லை” என 25.09% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் சந்தர்ப்பவாத அரசியல் குறித்த குறிப்பான கேள்விகளுக்கு அவருக்கு ஆதரவு நிலை எடுத்தவர்கள் கணிசமானவர்கள் என்பதோடு “கருத்து இல்லை” எனத் தெரிவித்தவர்கள் கணிசமான பேர் இருப்பது கவனத்திற்கு உரியது. இவ்வாறு தெரிவித்தவர்கள் தேர்தல் சமய நிலவரங்களைக் கொண்டு யாருக்கு ஓட்டளிப்பது என முடிவெடுத்துக் கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் என்பதை நேர்ப்பேச்சில் இருந்து உணர்ந்து கொள்ள முடிந்தது.

“ஆன்மீக அரசியல் அப்படின்னா என்னான்னு அவரே இன்னும் சொல்லவில்லையே சார்…?” என்றார் ஒரு இரயில் பயணி. “அவரு முதல்ல தேர்தல்ல நிக்கட்டும்.. அந்த நேரத்துல பாரதிய ஜனதா, மத அடையாளம்னு ஆரம்பிச்சாருன்னா வைச்சி செஞ்சிடுவோம் பாஸ்” என்றார் இன்னொருவர். ரஜினிக்கு ஆதரவாக பதிலளித்தவர்களில் சிலரே கூட இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தனர்; சென்னை புறநகர் இரயிலில் சந்தித்த ரஜினியின் ரசிகர்கள் இருவரே கூட “பாரதிய ஜனதா கூட சேர்ந்துட்டாருன்னா அப்புறம் நாங்களே ஓட்டுப்போடமாட்டோம் சார்” என்றனர். ரஜினியின் “ஆன்மீக” அரசியலும் பாரதிய ஜனதா கும்பலோடு அவர் கொண்டிருக்கும் கள்ளக்கூட்டணியும் போதுமான அளவுக்கு அம்பலப்படுத்தப்படவில்லை என்பதையே இந்தக் கேள்விகளுக்குக் கிடைத்த பதில்களும் உணர்த்துகின்றன.

அடுத்து, “சட்டசபை தேர்தலுக்கு முன் கட்சி, கொள்கை, போராட்டம் எதுவும் இல்லை” என ரஜினி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு ”கோழைத்தனம்” என 14.74% பேரும், “சந்தர்ப்பவாதம்” என 30.25% பேரும், “ராஜதந்திரம்” என 24.23% பேரும் கருத்து இல்லை என 30.78% பேரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆக, மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினை குறித்து ரஜினிக்கு இருக்கும் அலட்சியத்தை சுமார் 45% பேர் கண்டிக்கிறார்கள் என்பது இதில் நேர்மறையானது. அதே நேரம் கணிசமான பேர் (24.23 %) ரஜினியின் சந்தர்பவாதத்தை ராஜதந்திரமாக கருதுகின்றனர் என்பது நமது கவனத்திற்குரியது.

தனது மௌனத்தின் மூலம் மத்திய மாநில அரசுகள் மக்களின் மேல் கட்டவிழ்த்து விட்டிருக்கும் கொலைவெறித் தாக்குதல்களுக்கு ரஜினி அளித்து வரும் மறைமுக ஆதரவையும் – எந்தப் போராட்டமும் இன்றி நேரடியாக பதவி சுகம் அனுபவிக்கத் துடிக்கும் வெறியையும் அரசியல் ரீதியில் அம்பலப்படுத்த வேண்டிய தேவை இருப்பதை இது உணர்த்துகின்றது.

அடுத்து, “ரஜினி கன்னடர் என்பதால் தமிழ்நாட்டை ஆளக்கூடாது” என்ற கருத்தை     55.30% பேர் தவறு என கண்டிக்கின்றனர். அவ்வாறு சொல்வது சரி என 28.50% பேரும், கருத்து இல்லையென 16.19% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தன்னுடைய சினிமாக் கவர்ச்சி என்கிற சர்க்கரையை இந்துத்துவ பாசிச நஞ்சின் மேல் தடவி கடைவிரித்துள்ள ரஜினியின் அபாயகரமான அரசியலை “இனவாதம்” என்கிற மற்றொரு சிறிய நஞ்சைக் கொண்டு வீழ்த்த முடியாது என்பதை இந்தக் கேள்விக்கான முடிவு தெளிவாக உணர்த்துகின்றது.

ஒருபக்கம் பாஜக போன்ற மதவாத வலதுசாரிகள் ரஜினிக்கு நேர்மறையில் உதவிபுரியும் நிலையில், சீமான் போன்ற இனவாத வலதுசாரிகளின் பிரச்சாரங்கள் எதிர்மறையில் சேவை புரிந்து விடக்கூடும் என்பதை ஜனநாயக சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும். ரஜினியின் மக்கள் விரோத கருத்துக்கள், செயல்கள் வழி விமர்சிப்பதை விட அவர் தமிழர் இல்லை என்பதற்காக முன்வைக்கப்படும் கருத்துக்களை மக்கள் ஏற்கவில்லை. அதே நேரம் இந்த இனவாத கருத்துக்களை கால்வாசி மக்கள் ஆதிரிக்கின்றனர்.

இதை ஆதரவாக வைத்துக் கொண்டு இக்கருத்தை பெரும்பான்மை கருத்தாக மாற்றலாம் என நாம் தமிழர் இயக்கம் முடிவு செய்யுமானால் அது வளர்வதற்கு பதில் குறைந்து போகவே வாய்ப்பிருக்கிறது.

இதையே வேறு வார்த்தைகளில் பார்க்கலாம்.

இந்த ஒட்டு மொத்த சர்வேயின் படி கால்வாசி மக்கள் ரஜினியை ஆதரிக்கிறார்கள். பாதிக்கும் குறைவான மக்கள் ரஜினியை எதிர்க்கிறார்கள். கால்வாசிக்கும் அதிகமான மக்கள் கருத்தின்றி இருக்கிறார்கள்.

ரஜினியை ஆதரிப்போர் அரசியல் அற்ற பிரிவினராகவும், ரஜினியை எதிர்ப்போர் அரசியல் கருத்துள்ள பிரிவினராகவும் உள்ளனர். இடைப்பட்ட கருத்தற்ற மக்களை ஆளும் வர்க்கங்கள், ஊடகங்கள் திசை திருப்பி ரஜினி ஆதரவை அதிகரிக்க முயற்சி செய்யும்.

மேலதிகமாக தொலைக்காட்சி விவாதங்கள், சமூகவலைத்தள மீம்கள் – இவற்றைத் தாண்டி உள்ள மக்களே அதிகம். இவர்களிடம் பொதுவில் எந்த வகையான அரசியல் கருத்துக்களும் சென்றடைவதில்லை. அம்மக்களின் அன்றாட வாழ்க்கையில் அப்படி அரசியல் கருத்துக்கள் இடம்பெறும் வாய்ப்பு இல்லை. கூடவே கட்சிகள் பலவும் நேரடியாக மக்களிடையே அரசியல் பிரச்சாரம் செய்வதில்லை. அறிக்கைகள், பெயரளவு ஆர்ப்பாட்டங்கள், டிஜிட்டல் விளம்பரங்கள், மற்றும் தொலைக்காட்சி, சமூக வலைத்தளப் பிரச்சாரத்திற்கே கட்சிகள் முக்கியத்துவம் கொடுக்கின்றன.

எனவே ரஜினிக்கு ஆதரவாக ஆளும் வர்க்கங்கள், ஊடகங்கள் முயலும் போது அதை வீழ்த்துவதற்கு மக்களிடையே கடும் பிரச்சாரம் ஒன்றே தீர்வு என்பதை இந்த சர்வே காட்டுகின்றது.

இந்த சர்வேயில் மற்ற கட்சிகள், தலைவர்களை ஒப்பீடு செய்து கேள்விகள் கேட்கப்படவில்லை. மேலும் ரஜினி  கட்சி ஆரம்பித்தால் வாக்களிப்பீர்களா, அவர் முதல்வராக வருவாரா, மற்ற கட்சி தலைவர்களின் முதல்வர் வாய்ப்பு போன்ற கேள்விகளை நாங்கள் தெரிவு செய்யவில்லை.

பொதுவில் ரஜினி எனும் நபரின் செல்வாக்கு தமிழக மக்களிடம் என்ன  அளவில் நிலவுகிறது என்பதை தெரிந்து கொள்வதும், அதன் வழி அரசியல் பிரச்சாரம் குறித்த ஆய்வுமே எமது நோக்கம். இன்றைக்கு ஆண்டாள், தமிழ்த்தாய் வாழ்த்து, போக்குவரத்து கட்டண உயர்வு போன்ற அன்றாட பிரச்சினைகள் வரும் போது மக்களின் இந்த கருத்து நிலை அவ்வப்போது மாறலாம்.

எனினும் அடிப்படையில் களத்தில் நின்று மக்களிடையே நெருக்கமாக பணியாற்றுவதே ரஜினியை குறித்து மட்டுமல்ல, தோற்றுப்போன இந்த அரசியல் அமைப்பைக் குறித்தும் மக்களிடையே ஒரு ஆக்கபூர்வமான கருத்தை உருவாக்கும்.

( தொடரும் )

– வினவு கருத்துக்கணிப்பு குழு