privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்குஜராத்-இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!

குஜராத்-இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!

-

குஜராத்-படுகொலைகுஜராத் மாநிலத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்து மதவெறிப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடந்த பிப்ரவரி 27, 2012 அன்று அப்படுகொலை நிகழ்வில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு உரிய நீதி வழங்கக் கோரி பல்வேறு முசுலீம் அமைப்புகளும், ஜனநாயக  மனித உரிமை இயக்கங்களும் நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.  அதே பத்தாண்டுகளுக்கு முன்பு கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவுவண்டியின் இரு பெட்டிகள் தீக்கிரையாகி, 59 பேர் இறந்துபோன வழக்கில் 11 முசுலீம்களுக்குத் தூக்கு தண்டனையும், 20 முசுலீம்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கும்பொழுது,  இந்து மதவெறிப் படுகொலை வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

நீதிமன்றத்தை எட்டியிருக்கும் இப்படுகொலை வழக்குகளுள் பத்துபதினைந்து வழக்குகளில் மட்டும்தான் விசாரணை முடிவடையும் தருவாயில் இருப்பதாகக் கூறப்படுகிறது.  இப்படுகொலை வழக்குகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்து மதவெறிக் குண்டர்கள் பலரும் சிறைக்குப் போன வேகத்தி லேயே பிணையில் வெளியே வந்துவிட்டனர்.  உள்ளூர் அளவில் இப்படுகொலைகளைத் தலைமையேற்று நடத்திய பாபு பஜ்ரங்கி, ஜெய்தீப் படேல், மாயா கோத்நானி உள்ளிட்ட பலரும் பிணையில் வெளியே வந்து சுதந்திரமாகச் சுற்றித் திரிவதோடு, படுகொலை வழக்குகள் தொடர்பான சாட்சியங்களைப் மிரட்டிப் பணிய வைக்கும் வேலைகளையும் பகிரங்கமாகச் செய்து வருகின்றனர்.  இவை அனைத்திற்கும் மேலாக,  இந்து மதவெறி பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி நரேந்திர மோடிக்கு எதிராக, தொடுத்த வழக்கில், மோடி மீது குற்றச்சாட்டு பதியப்படுமா என்பதைக்கூட இன்றுவரை நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

இப்படுகொலையை நடத்திய இந்து மதவெறிக் கும்பலே கடந்த பத்தாண்டுகளாக குஜராத்தை ஆண்டு வருவதும்; குஜராத் போலீசு, நீதித்துறை உள்ளிட்ட அம்மாநில அரசு நிர்வாக இயந்திரம் முழுவதும் காவிமயமாக்கப்பட்டிருப்பதும், மோடியின் கைக்கூலிகளால் நிரப்பப்பட்டிருப்பதும்; இன்னொருபுறம் இப்படுகொலை தொடர்பான சில வழக்குகளில் தலையிட்டு விசாரணை நடத்தி வரும் குஜராத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், சிறப்புப் புலனாய்வுக் குழு போன்ற அமைப்புகள் பல்வேறு சமயங்களில் இந்து மதவெறிக் கும்பலுக்கு ஆதரவாக, அனுசரணையாக நடந்துகொண்டு வருவதும் முசுலீம்களுக்கு நீதி மறுக்கப்படுவதற்குக் காரணங்களாக உள்ளன.  சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த மோடி தொடங்கி தெருவில் இறங்கி இப்படுகொலையை நடத்திய மோடியின் கடைசி அடியாள் வரை  இவர்கள் அனைவருக்கும் எதிராக ஏராளமான சாட்சியங்கள், ஆதாரங்கள் இருந்தாலும், போலீசு, சிறப்புப் புலனாய்வுக் குழு, நீதித்துறை என்ற இந்தக் கூட்டணி சட்டத்தின் ஓட்டைகள், வரம்புகளைக் காட்டியும், இந்து மனோநிலையிலிருந்தும் அக்கொலைகாரர்களைத் தண்டனையிலிருந்து தப்பவைத்து விடுகிறது.  இந்த அநீதி கடந்த பத்தாண்டுகளாக நடந்து வருவதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

குஜராத் போலீசு:     

குஜராத்-படுகொலைநரேந்திர மோடி குஜராத் முதல்வராகப் பதவியேற்றவுடனேயே, அம்மாநில போலீசு துறையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு காவிமயமாக்கும் திருப்பணியைச் செய்யத் தொடங்கினார்.  அம்மாநில அரசில் இருந்துவரும் 65 ஐ.பி.எஸ். பதவிகளுள் 64 பதவிகளை ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அனுசரணையாக நடந்துகொள்ளும் அதிகாரிகளைக் கொண்டு நிரப்பினார்.

இந்து மதவெறிப் படுகொலை தாண்டவமாடியபொழுது,போலீசார் மோடியின் உத்தரவுப்படி, “இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதை’’த் தடுக்காததோடு, பல இடங்களில் இந்து மதவெறி குண்டர்களுக்குத் தேவையான ஆயுதங்களையும் கொடுத்தனர்.  விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கி, ரமேஷ் தாவே, அனில் படேல் ஆகியோர் இந்த உண்மைகளை வாக்குமூலமாக தெகல்கா இதழின் நிருபர் ஆஷிஷ் கேதானிடம் ஆரவாரத்தோடு கூறியுள்ளனர்.

இப்படுகொலையில் போலீசுக்கும் நேரடியாகத் தொடர்பிருப்பதால், 2,107 வழக்குகள் போலீசு நிலையத்திலேயே மங்களம் பாடி புதைக்கப்பட்டன.  இப்படி விசாரணையின்றி மூடப்பட்ட வழக்குகளில் 1,594 வழக்குகளை மீண்டும் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், குஜராத் போலீசு வெறும் 117 வழக்குகளில் மட்டும் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ஜாகியா ஜாஃப்ரி மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில் இப்படுகொலை தொடர்பாக 38 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளையும் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.  அகமதாபாத் நகரிலுள்ள நரோடா பாட்டியா, நரோடா காவ்ன் பகுதிகளில் நடந்த படுகொலைகளுக்கு எம்.கே.டாண்டன், பி.பி. கோந்தியா என்ற இரு போலீசு உயர் அதிகாரிகள் உடந்தையாக இருந்ததை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, அக்குற்றச்சாட்டை உறுதிப்படுத்தினாலும், அவர்கள் இருவர் மீதும் கிரிமினல் வழக்குத் தொடரப் பரிந்துரைக்காமல், துறைரீதியான நடவடிக்கை எடுத்தால் போதும் எனக் கூறிவிட்டது.

மதவெறிப் படுகொலையின்பொழுது, இந்து மதவெறிக் குண்டர்களோடு கைகோர்த்துக் கொண்ட போலீசாருக்குப் பிற்பாடு பதவி உயர்வு அளிக்கப்பட்டது;  கொலைகாரக் கும்ப லைக் கைது செய்யத் துணிந்த அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.  இதனை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, “இது வழக்கமான நிர்வாக நடைமுறைதான்; இதில் மோடி அரசிற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது” எனக் கூறியது.

நானாவதி  ஷா கமிசன்: 

இக்கமிசனின் நீதிபதிகளுள் ஒருவரான ஷாவை, “எங்க ஆளு” என்றும், மற்றொரு நீதிபதியான நானாவதியை, “பணத்துக்காகத்தான் அவர் கமிசனில் சேர்ந்திருக்கிறார்” என்றும் குறிப்பிட்டு, குஜராத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியா தெகல்கா நிருபர் ஆஷிஷ் கேதானிடம் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.  அக்கமிசனின் விசாரணை முறையும், அதன் உண்மை சொரூபத்தைக் கடந்த பத்தாண்டுகளில் பலமுறை காட்டிக் கொடுத்திருக்கிறது.

நீதிபதி நானாவதி, தான் கமிசனில் சேர்ந்தவுடனேயே, “கலவரங்களைக் கட்டுப்படுத்த போலீசு எடுத்த நடவடிக்கைகளில் எந்தக் குற்றங்குறையும் காணமுடியவில்லை” எனப் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்தார்.  “சபர்மதி விரைவுவண்டியின் பெட்டிகள் எரிக்கப்பட்டது மிகப் பெரிய சதிச்செயல்” என மோடிக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருக்கும் கமிசன், மதவெறிப் படுகொலைகள் பற்றிய விசாரணையை இழுத்தடிக்கும் வேலையைத்தான் கடந்த பத்தாண்டுகளாகச் செய்துவருகிறது.  குறிப்பாக, படுகொலை நடந்து கொண்டிருந்த சமயத்தில், அந்த இடங்களில் இருந்த சங்கப் பரிவார அமைப்புகளின் தலைவர்களுக்கும் போலீசுஅதிகாரிகளுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் அடங்கிய ஒலித்தகடை, கமிசன் இன்றுவரை ஆய்வு செய்யவே மறுத்து வருகிறது.

நீதிபதி ஷா மார்ச், 2008இல் இறந்த பிறகு, அவர் இடத்திற்கு அக்சய் மேத்தா என்ற நீதிபதியை மோடி அரசு நியமித்தது.  நீதிபதி அக்சய் மேத்தா நரோடா பாட்டியா மற்றும் நரோடா காவ்ன் என்ற இரு இடங்களில் நடந்த படுகொலைகளைத் தலைமை தாங்கி நடத்திய பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கியைப் பிணையில் வெளியே அனுப்பி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழமை நீதித்துறை:

குஜராத் மாநில விசுவ இந்து பரிசத் பொதுச் செயலர் திலீப் திரிவேதி, விசுவ இந்து பரிசத்தின் சபர்கந்தா மாவட்டத் தலைவரான பாரத் பட், பாஞ்ச்மஹால் மாவட்ட விசுவ இந்து பரிசத்தின் தலைவர் பியுஷ் காந்தி என இவர்களைப் போன்ற சங்கப் பரிவார ஆட்கள்தான் மதவெறிப் படுகொலை வழக்குகள் அனைத்திலும் அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டனர்.  மேலும், மதவெறிப் படுகொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்குரைஞர்களை, அரசு வழக்குரைஞர்களாக நியமித்த கேலிக்கூத்தும் நடந்திருக்கிறது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்து மதவெறிக் குண்டர்களுக்கு விரைவாகப் பிணை கிடைக்க ஏற்பாடு செய்வது; சாட்சிகளை மிரட்டுவது, கலைப்பது அல்லது சாட்சிகளிடம் பேரம் நடத்தி வழக்கையே நீர்த்துப் போகச் செய்வது போன்ற சட்டவிரோத வேலைகளைத்தான் இந்தக் கும்பல் அரசு வழக்குரைஞர் என்ற போர்வையில் செய்து வருகிறது.  கீழமை நீதிமன்ற நீதிபதிகள் இந்தச் சட்டவிரோதச் செயல்களைக் கண்டுகொள்ளவில்லை என்பதோடு, அந்நீதிமன்றங்கள் மோடியின் இன்னொரு மூளையாகத்தான் செயல்பட்டு வருகின்றன.  கீழமை நீதிமன்ற நீதிபதிகள் குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டு வருவதை பெஸ்ட் பேக்கரி வழக்கு நாடெங்கும் அம்பலப்படுத்தியது.

நானாவதி  ஷா கமிசனின் சிறப்பு அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட அரவிந்த் பாண்டியா, “ஒவ்வொரு நீதிபதியும் தொலைவில் இருந்துகொண்டே எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள் … ஏனென்றால், அவர்கள் அனைவரும் அடிப்படையில் இந்துக்கள்” என நீதிபதிகளின் இந்து மனோபாவத்தை வெளிப்படையாகவே புட்டு வைத்தார்.

உச்ச நீதிமன்றம் மற்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு:

குஜராத்-படுகொலை-1
பெட்டிச் செய்தி -1

நரேந்திர மோடியைக் குற்றவாளியாகச் சேர்க்கக் கோரி ஜாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கு, பெஸ்ட் பேக்கரி வழக்கில் மறுவிசாரணை நடத்தக் கோரிய வழக்கு ஆகியவற்றில் குஜராத் உயர் நீதிமன்றம் மோடிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கியது.  குஜராத் அரசு இயந்திரம் எந்த அளவிற்கு காவிமயமாகி இருக்கிறது என்பதற்கான சான்றுகளாகத்தான் உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்புகளைப் பார்க்க முடியும்.

குஜராத்தில் நடந்த மதவெறிப் படுகொலை தொடர்பான 9 முக்கிய வழக்குகளைத் தனது கண்காணிப்பின் கீழ் விசாரிப்பதற்குச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருந்தாலும், இவ்வழக்குகளின் முடிவுகள் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதியை வழங்கும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது.  நீதிபதிகள் வழக்கு விசாரணையின்பொழுது அடிக்கும் சவடால்களும் இறுதியில் அவர்கள் எழுதும் தீர்ப்புகளும் நேருக்கு மாறாக இருப்பதைப் பல வழக்குகளில் காணமுடியும்.

குஜராத்-படுகொலை-2
பெட்டிச் செய்தி - 2

அந்த 9 வழக்குகளுள் ஒன்றான சர்தார்புரா வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருந்தாலும், சதிக் குற்றச்சாட்டின் கீழ் அவர்களுள் ஒருவர்கூடத் தண்டிக்கப்படவில்லை. சபர்மதி விரைவுவண்டியின் இரு பெட்டிகள் தீக்கிரையான வழக்கில் 11 முசுலீம்களுக்குத் தூக்கு தண்டனையும், 20 முசுலீம்களுக்கு ஆயுள் தண்டனையும் அளித்து வழங்கப்பட்ட தீர்ப்பில்,  சிறப்பு நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், சிறப்புப் புலனாய்வுக் குழு ஆகிய நான்கும் ஜாடிக்கேத்த மூடியாய்ச் செயல்பட்டுள்ளன.

‘‘முசுலீம்கள் அனைவரும் அடிப்படைவாதிகள்” என இந்து மதவெறி விஷத்தைக் கக்கிவரும் நோயல் பார்மர் என்ற ஐ.பி.எஸ். அதிகாரியைத்தான் சிறப்புப் புலனாய்வுக் குழு இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக முதலில் நியமித்தது.  மனித உரிமை அமைப்புகளும், குற்றஞ்சுமத்தப்பட்ட முசுலீம்களும் பார்மரின் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிறகு, பார்மரின் வலது கையான ரமேஷ் படேல் என்பவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.  பிறகெப்படி இவ்வழக்கு விசாரணை நடுநிலையாக நடந்திருக்க முடியும்?  இந்த இரண்டு நியமனங்களையும் உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லல்லு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபொழுது அமைத்த பானர்ஜி கமிசன், “சபர்மதி விரைவுவண்டியின் பெட்டிகள் தீக்கிரையானது சதிச் செயல் அல்ல’’எனத் தீர்ப்பளித்தது.  இந்த அறிக்கையைத் தடை செய்ததோடு, அதனைச் சட்ட விரோதமானது என்றும் கூறி 2005  இல் தீர்ப்பளித்தது குஜராத் உயர் நீதிமன்றம்.  அத்தீர்ப்பைத் தடைசெய்ய முடியாது என 2006  இல் தீர்ப்பளித்தது, உச்ச நீதிமன்றம்.  சிறப்பு நீதிமன்றம் சபர்மதி விரைவுவண்டியின் பெட்டிகள் தீக்கிரையானதைப் பயங்கரவாதிகளின் சதிச்செயல் எனத் தீர்ப்பளித்து, முசுலீம்களுக்கு தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கியிருப்பதை உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.

நரேந்திர மோடி உள்ளிட்டு 63 பேருக்கு எதிராக ஜாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கில், மோடியை விடுவிக்கும் உள்நோக்கத்துடன்தான் தனது விசாரணையை சிறப்புப் புலனாய்வுக் குழு நடத்திவந்தது. “விசாரணைக்கும் அதன் இறுதியில் வந்தடைந்த முடிவுகளுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை” என இந்த உள்நோக்கம் பற்றி பட்டும் படாமல் கருத்துத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற நண்பனாக ராஜூ ராமச்சந்திரன் என்ற வழக்குரைஞரை நியமித்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கைககளை ஆய்வு செய்து, தனியாக அறிக்கை தருமாறு உத்தரவிட்டது.  எனினும், மோடி மீது குற்றச்சாட்டினைப் பதிவு செய்ய வேண்டிய தருணத்தில், அந்த இக்கட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள, சட்டத்தின் வரம்பினைக் காட்டி, இது பற்றி முடிவெடுப்பதை அகமதாபாத் பெருநகர நீதிமன்றத்திடம் தள்ளிவிட்டது, உச்ச நீதிமன்றம்.  மேலும், மோடிக்கு எதிரான ஜாகியா ஜாஃப்ரியின் வழக்கை இனி கண்காணிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தது.

ஜாகியா ஜாஃப்ரி இந்த வழக்கில், மோடி மீது 32 குறிப்பான குற்றச்சாட்டுக்களை ஆதாரத்தோடு கூறியிருந்தார்.  இந்த 32 குற்றச்சாட்டுகளுள், சபர்மதி விரைவு வண்டியின் இரண்டு பெட்டிகள் தீக்கிரையான அன்றிரவு நரேந்திர மோடி தனது அதிகாரபூர்வ இல்லத்தில் நடத்திய அதிகாரிகள் கூட்டத்தில், “இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள் என  உத்தரவிட்டார்” என்ற குற்றச்சாட்டு மிக முக்கியமானதாகும்.  ஜாகியா ஜாஃப்ரி, தனது இக்குற்றச்சாட்டுக்குச் சாட்சியமாக, படுகொலை நடந்தபொழுது குஜராத் மாநில அரசின் உளவுத் துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பட்டைக் குறிப்பிட்டிருந்தார்.  மோடி நடத்திய இக்கூட்டத்தை, “மிகப் பெரிய சதியின் தொடக்கம்” எனக் குறிப்பிட்டு வரும் சஞ்சீவ் பட்,  சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன் ஆஜராகி, தான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதற்கான ஆதாரங்களைத் தந்து, இக்குற்றச்சாட்டை உறுதிப்படுத்தினார்.

குஜராத்-படுகொலைசிறப்புப் புலனாய்வுக் குழு தற்பொழுது அகமதாபாத் பெருநகர நீதிமன்றத்திடம் அளித்துள்ள அறிக்கையில் சஞ்சீவ் பட் அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாகக் கூறுவதை நம்ப முடியாது எனக் கூறியிருக்கிறது.  இந்த அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் ஊடகங்கள் வாயிலாக கசிந்து வெளிவந்துவிட்டன.

மோடி நடத்திய அந்தக் கூட்டத்தில் சஞ்சீவ் பட் உள்ளிட்டு எட்டு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.  அந்தக் கூட்டத்தில் பட் கலந்துகொண்டது பற்றிய கேள்விக்கு மற்ற ஏழு அதிகாரிகளுள் மூன்று பேர் நினைவில்லை எனப் பதில் அளித்துள்ளனர்; மூன்று பேர் “வரும், ஆனா வராது” என்ற பாணியில் தெளிவில்லாத பதிலை அளித்துள்ளனர்.  ஒரேயொரு அதிகாரி மட்டும்தான் பட் கலந்து கொள்ளவில்லை எனப் பதில் அளித்தார்.  இந்த ஏழு அதிகாரிகளுள் மூன்று பேர் மோடிக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததால், அவர்கள் தமது பதவி ஓய்விற்குப் பின்பு மோடியின் தயவால் பசையான பதவியில் அமர்ந்துள்ளனர்.  ஒருபுறம் இந்த ஏழு அதிகாரிகளையும் நம்பமுடியாத சாட்சியங்கள் எனக் குறிப்பிடும் சிறப்புப் புலனாய்வுக் குழு, இன்னொருபுறம் சஞ்சீவ் பட் விவகாரத்தில் இந்த நம்ப முடியாத ஏழு அதிகாரிகளின் சாட்சியங்களைக் கொண்டு, சஞ்சீவ் பட் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என முரண்பாடான முடிவை அறிவித்திருக்கிறது; சஞ்சீவ் பட் அக்கூட்டத்தில் கலந்து கொண்டதை நிரூபிக்கும் வேறு சாட்சியங்களை விசாரிக்கவும் மறுத்துவிட்டது.(பார்க்க பெட்டிச் செய்தி)

 

குஜராத்-படுகொலைஜாகியா ஜாஃப்ரி மோடிக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் நீதிமன்ற நண்பனாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் ராஜூ ராமச்சந்திரன் அளித்திருக்கும் அறிக்கை, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையிலிருந்து ஓரளவிற்கு வேறுபட்டிருக்கிற உண்மையும் ஊடகங்கள் வாயிலாகக் கசிந்து வெளிவந்துவிட்டது.  குறிப்பாக, அவரது அறிக்கை மோடி நடத்திய கூட்டத்தில் பட் கலந்து கொண்டிருக்கக்கூடும் என்பதற்குப் பல்வேறு சந்தர்ப்ப சாட்சியங்களை முன்வைத்துள்ளது. மேலும், சஞ்சீவ் பட்டின் சாட்சியத்தை நீதிமன்றத்தின் முன் வைத்து, அவரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது.

‘‘நரேந்திர மோடிக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரமோ, விசாரிக்கத்தக்க சாட்சியமோ இல்லை; இப்படுகொலை தொடர்பாகச் சில சில்லறைத் தவறுகள் நடந்திருக்கலாமேயொழிய, மோடிக்குக் கிரிமினல் உள்நோக்கம் எதுவுமில்லை; அந்தத் தவறுகளும்கூட மோடி மீது குற்றஞ்சுமத்தி வழக்குத் தொடுக்கும் அளவிற்கு வலுவானவையல்ல” எனக் கூறி, மோடியின் மீது சுமத்தப்பட்ட 32 குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவித்துவிட்டது, சிறப்புப் புலனாய்வுக் குழு.

குஜராத்தில் கடந்த பத்தாண்டுகளாக முசுலீம்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதற்குப் பல சான்றுகள் உள்ளன.  இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதி வழங்குவது ஒருபுறமிருக்கட்டும்; அவர்களுக்கு உரிய நட்ட ஈடுகூட வழங்காமல் வக்கிரமாக நடந்துவருகிறது, மோடி அரசு.  இப்படிபட்ட நிலையில், மோடிக்கு இந்த இனப்படுகொலை தொடர்பாக எந்தவிதமான கிரிமினல் உள்நோக்கமும் கிடையாது என்ற முடிவை அறிவிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு துணிகிறதென்றால், இதிலிருந்தே இந்தக் குழு காவிச் சிந்தனையில் ஊறிப் போன நயவஞ்சகக் கும்பல் என்பதை நாம் புரிந்துகொண்டுவிடலாம்.  இந்த அறிக்கை மோடியைப் பிரதமராக்கிவிடத் துடித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனக் கும்பலின் வக்கிரத்தை விசிறிவிடத்தான் பயன்படுகிறது.

அதே சமயம், ஊடகங்களால் பெருத்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கப்பட்ட ராஜூ ராமச்சந்திரனின் அறிக்கையோ, இம்மதவெறி படுகொலை தொடர்பான சதித் திட்டத்தில் மோடிக்கு உள்ள பங்கு குறித்துப் பேசாமல், இரண்டு மதத்தைச் சேர்ந்தவர்களிடையே பகைமையைத் தூண்டிவிடுதல், சட்டத்தை மதிக்காது அரசு ஊழியர் நடத்தல் போன்ற இரண்டாம்பட்சமான குற்றச்சாட்டுகளைத்தான் மோடி மீது சுமத்தியிருக்கிறது.  அகமதாபாத் பெருநகர நீதிமன்றம் ஒருவேளை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை நிராகரித்துவிட்டு, ராஜூ ராமச்சந்திரனின் அறிக்கையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டால், இவ்வழக்கு விசாரணையின் முடிவில், ஒருவேளை நரேந்திர மோடிக்கு  மூன்று ஆண்டுவரை சிறை தண்டனை கிடைக்கக்கூடும்.

குஜராத்-படுகொலைஇட்லர் நடத்திய யூத இனப்படுகொலைக்கு இணையான, ராசபக்சே நடத்திய ஈழத்தமிழர் படுகொலைக்கு இணையான குற்றங்களைச் செய்திருக்கும் மோடியின் மீது, குஜராத்தில் பல போலி மோதல் கொலைகளை நடத்தியிருக்கும் மோடியின் மீது வெறும் மூன்றாண்டுகள் சிறை தண்டனை அளிக்கக்கூடிய குற்றச்சாட்டுகளைத்தான் பதிவு செய்ய முடியும் என்றால், இதைவிடக் கேலிக்கூத்தும் கையாலாகத்தனமும் வேறெதுவும் இருக்க முடியாது.

மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பாதுகாப்பு என நீட்டி முழங்கும் எந்தவொரு ஓட்டுக்கட்சியும் இந்த வெட்கக்கேட்டைக் கண்டிக்க முன்வரவில்லை.  இது மட்டுமல்ல; காங்கிரசு, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு மதச்சார்பின்மை பேசும் ஓட்டுக்கட்சிகளில் ஒன்றுகூட,  கடந்த பத்தாண்டுகளில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதற்கு ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை.  மோடி தன்னைத் தற்காத்துக் கொள்ள முன்வைக்கும் இந்து மதவெறியும் குஜராத் பெருமையும் கலந்த அரசியலை எதிர்கொள்ளத் திராணியற்று, இந்த ஓட்டுக்கட்சிகள் ஒடுங்கிக் கிடந்தனர் என்பதே உண்மை.  “மோடியைக் கொல்ல முசுலீம் தீவிரவாதிகள் குஜராத்திற்கு வருவதாக” உளவுத் தகவல்களை அனுப்பி, மோடியின்இந்து மதவெறி அரசியலுக்குத் தீனிபோடும் வேலையைத்தான் காங்கிரசு செய்து வந்தது.  தீஸ்தா செதல்வாத், ஹர்ஷ் மந்தேர், மல்லிகா ஷெராவத் போன்றவர்கள்தான் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு ஆதரவாக, மோடியை எதிர்த்துக் களத்தில் நிற்கிறார்கள்.

துக்ளக் சோ போன்ற பார்ப்பன பாசிஸ்டுகள் போலி மோதல் கொலைகள் மூலம்தான் முசுலீம் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட முடியுமே தவிர, சட்டம்  நீதிமன்றம் மூலம் இதனைச் சாதிக்க முடியாது என வெளிப்படையாகவே கூறிவருகின்றனர்.  அரசியல் செல்வாக்குமிக்க இந்து மதவெறி பயங்கரவாதிகளான மோடி, அத்வானி, பால் தாக்கரே போன்றவர்களைச் சட்டப்படி தண்டிக்க முடியாது எனும்பொழுது, சோவின் வாதத்தை இக்கும்பலுக்கு நாம் ஏன் பொருத்தக்கூடாது?

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________