privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி!

காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி!

-

காஷ்மீர்-இந்திய-அரசின்-கொலைவெறிகாஷ்மீர் மாநிலம்  பாரமுல்லா மாவட்டத்திலுள்ள போனியார் என்ற நகர்ப்புறத்தில் கடந்த ஜனவரி மாதம் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அல்டாஃப் அகமது ஸூத் என்ற 25 வயது இளைஞர் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து போனார்; 70 வயதான அப்துல் மஜித் கான் என்ற முதியவரும், பர்வாயிஸ் அகமது கான் என்ற மற்றொரு இளைஞரும் காயமடைந்தனர்.  இத்துப்பாக்கிச் சூடு துணை இராணுவப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலோ அல்லது காஷ்மீரின் விடுதலையைக் கோரும் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையோ அல்ல.  “தங்கள் பகுதிக்குத் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும்” என்ற சாதாரணமான, அதேசமயம் அடிப்படைத் தேவைக்கான கோரிக்கையை முன்வைத்து ஊரி மின்சார நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலாகும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த பொதுமக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஐநூறுதான் எனப் பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.  அதேசமயம், அம்மின்சார நிலையத்தைப் பாதுகாத்து வந்த மத்திய தொழிற்பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்களின் எண்ணிக்கையோ ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காகத் திரண்டிருந்த பொதுமக்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்ததையும் அச்சிப்பாய்கள் நிராயுதபாணியாக ஆர்ப்பாட்டம் நடத்த வந்த மக்கள் மீது துப்பாக்கியால் பல ரவுண்டுகள் சுட்டுத் தள்ளியதையும் அப்படையின் தலைமை அதிகாரி என்.ஆர். தாஸ் பத்திரிக்கையாளர்களிடம் எவ்விதக் குற்ற உணர்வுமின்றி அகங்காரத்தோடு விவரித்திருக்கிறார்.   “ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்” என்ற கொலைவெறியோடுதான் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.

காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீரைச் சேர்ந்த முசுலீம் மக்களை எந்த அளவிற்குப் புழுபூச்சிகளைவிடக் கீழாக மதிக்கிறார்கள் என்பதற்கு இந்தத் துப்பாக்கிச் சூடு மற்றொரு உதாரணமாகும்.  துணை இராணுவப் படையால் இந்த ஆர்ப்பாட்டத்தை மூடிமறைக்க முடிந்திருந்தால், சுட்டுக் கொல்லப்பட்ட அல்டாஃப் அகமதுவும் காயம்பட்ட இருவரும் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டிருப்பார்கள்.

இப்படுகொலை தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஐந்து சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, கொல்லப்பட்ட அல்டாப் அகமதுவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் சொன்ன கையோடு, “இந்த ஐந்து பேருக்கும் தக்க தண்டனை வாங்கிக் கொடுப்பேன்” எனச் சவால்விட்டுள்ளார்.

ஆனால், இந்தக் கைதும், காஷ்மீர் முதல்வரின் சவடாலும் ஊரை ஏய்க்கும் நாடகம் என்பது காஷ்மீர் மக்களுக்குத் தெரியாத விசயமல்ல.  காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள இராணுவமும் துணை இராணுவப் படைகளும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், கலவரப் பகுதிச் சட்டம், மத்திய ரிசர்வ் படைச் சட்டம் ஆகிய கருப்புச் சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன.  இச்சட்டங்கள் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, கொட்டடிச் சித்திரவதை, ஆள் கடத்தல், சட்டவிரோத துப்பாக்கிச் சூடு என அனைத்துவிதமான மனித உரிமை மீறல்கள், அட்டூழியங்களை காஷ்மீர் மக்களின் மீது ஏவிவிடும் அதிகாரத்தையும், ஆணவத்தையும் இந்திய இராணுவத்திற்கும் துணை இராணுவப் படைகளுக்கும் வழங்கியுள்ளன.  மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இராணுவ, துணை இராணுவப் படை சிப்பாய்கள், அதிகாரிகளின் மீது காஷ்மீர் மாநில அரசு வழக்குத் தொடுக்க வேண்டுமென்றால்கூட,  அதற்கு மைய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிபந்தனை ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திலும் மத்திய ரிசர்வ் போலீசு சட்டத்தின் 17ஆவது பிரிவிலும் உள்ளது.

காஷ்மீரில் பாகிஸ்தானால் தூண்டிவிடப்படும் பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டுமென்றால் தமக்கு இப்படிபட்ட அதிகாரமும் பாதுகாப்பும் வேண்டுமென இராணுவம் கூறி வருகிறது.  இச்சட்டத்தில் சில்லறை சீர்திருத்தங்களைச் செய்வதற்குக்கூட காங்கிரசும், பா.ஜ.க.வும், இராணுவமும் சம்மதிப்பதில்லை.  ஏதோ தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காகத்தான் இராணுவத்திற்கு இந்த அதிகாரமும் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதைப் போல நம்மை நம்பவைக்க ஆளும் கும்பல் முயன்று வருகிறது.  ஆனால், இது அப்பட்டமான பொய்; அரசியல் உரிமைகளுக்காகப் போராடும் காஷ்மீரிகளை மட்டுமல்ல, தெருவில் நடந்துபோவோரைக்கூடச் சுட்டுக் கொல்வதற்கும் இராணுவம் இச்சட்டத்தைப் பயன்படுத்தி வருகிறது என்பது பல நூறு முறை அம்பலமாகியிருக்கிறது.

காஷ்மீர்-இந்திய-அரசின்-கொலைவெறிகிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பிவந்த 16 வயதான ஜாஹித் ஃபரூக், 14 வயதான வாமிக் ஃபரூக், 16 வயதான பஷாரத் அகமது, 14 வயதான முஷ்டாக் அகமது மிர் உள்ளிட்டு எண்ணற்ற சிறுவர்களை இச்சட்டத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசுப் படைகள் சுட்டுக் கொன்றுள்ளன.  காஷ்மீரின் பாரமுல்லா, பண்டிபோரா, ஹந்த்வாரா, குப்வாரா ஆகிய நான்கு மாவட்டங்களில் அரசுப் படைகளால் கொல்லப்பட்டு, இரகசியமாகப் புதைக்கப்பட்ட 2,730 சடலங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இந்த இரகசியக் கல்லறைகள் குறித்து காஷ்மீர் மாநில அரசின் மனித உரிமை ஆணையம் நடத்திய ஆய்வில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டுப் புதைக்கப்பட்ட இவர்களுள் 574 பேர் உள்ளூர்வாசிகள் என்பது தெரியவந்துள்ளது.  இப்படி அப்பட்டமாக அம்பலமான மனித உரிமை மீறல் வழக்குகளில்கூட இராணுவத்தினர் தண்டிக்கப்படுவதை இச்சட்டத்தைப் பயன்படுத்தித் தடுத்து வருகிறது, மைய அரசு.

காஷ்மீர் மாநில அரசு இந்திய இராணுவ, துணை இராணுவப் படைகள் மீது 50 மனித உரிமை மீறல் கிரிமினல் வழக்குகளைத் தொடுத்து, அவற்றில் தொடர்புடைய சிப்பாய்கள்/அதிகாரிகளை விசாரிப்பதற்கான அனுமதி வழங்கக் கோரி மைய அரசிடம் விண்ணப்பித்திருந்தது.  இந்த 50 வழக்குகளில் 31 வழக்குகள் பாலியல் வன்முறை மற்றும் கொலை தொடர்புடையவை;  11 வழக்குகள் சட்டவிரோதக் கைது, சித்திரவதை தொடர்பானவை.  இவ்வழக்குகள் குறித்து காஷ்மீர் மாநில போலீசு விசாரணை நடத்தி, அதில் உண்மை இருப்பதைக் கண்டுபிடித்து ஏற்றுக்கொண்டு, அதன்பிறகுதான் மைய அரசிடம் குற்றமிழைத்த இராணுவத்தினரை விசாரிப்பதற்கு அனுமதி கோரியது.

இதில் ஒரு கொலை வழக்கு 1991 ஆம் ஆண்டு நடந்ததாகும்.  பட்வாரா என்ற ஊரைச் சேர்ந்த முகம்மது ஆயுப் பட் என்ற அப்பாவியை இந்திய இராணுவம் கொலை செய்து, அவரது சடலத்தை தால் ஏரியில் வீசியெறிந்தது.  இப்படுகொலையை அப்பொழுது சிறீநகர் பகுதியில் பணியாற்றிவந்த பிரிகேடியர் குல்ஷன் ராவ்தான் செய்தார் என்பது காஷ்மீர் மாநில போலீசு நடத்திய விசாரணையில் அம்பலமானது.  கொலை நடந்து பதினெட்டு ஆண்டுகள் கழித்து, மார்ச் 3, 2009 அன்று அந்த அதிகாரியை விசாரிக்க அனுமதிக்க முடியாது என அறிவித்தது மைய அரசு.

பீர்வாஹ் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை மேஜர் பதவியிலிருந்த இராணுவ அதிகாரி பாலியல் பலாத்காரப்படுத்த முயன்ற சம்பவம் 1997ஆம் ஆண்டு நடந்தது.  நான்கு ஆண்டுகள் கழித்து, 2001இல்தான் குற்றவாளியை அடையாளம் காண முடிந்தது.  இதற்குப் பின் பத்து ஆண்டுகள் கழித்து, குற்றவாளியான அந்த இராணுவ மேஜரை விசாரிக்க அனுமதிக்க முடியாதென செப்.12, 2011இல் அறிவித்தது, மைய அரசு.  பல ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டு வைத்திருந்த இந்த 50 வழக்குகளில் 42 வழக்குகளைக் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் ஒவ்வொன்றாக எடுத்து, “ஆதாரம் இல்லை’’, “விசாரணை மேலோட்டமாக நடத்தப்பட்டுள்ளது’’, “இராணுவத்தின் மரியாதையைக் கெடுக்கும் வண்ணம் புனையப்பட்ட பொய்க் குற்றச்சாட்டு” என்ற மொன்னையான காரணங்களைக் கூறி, அந்த வழக்குகளில் சம்மந்தப்பட்ட இராணுவ, துணை இராணுவத்தினரை விசாரிக்க அனுமதிதர மறுத்துவிட்டது,மைய அரசு.

அப்பாவிகளை எல்லைப்புறத்திற்குக் கடத்திக் கொண்டு போய் போலி மோதலில் சுட்டுக் கொல்வது மட்டுமல்ல, மோதல் நடந்திருப்பதாகப் பொய்க் கணக்குக் காட்டி பரிசுப் பணத்தைச் சுருட்டிக் கொள்வது, பதவி உயர்வுகளைப் பெறுவது என இராணுவமும் துணை இராணுவமும் காஷ்மீரில் நடத்தியிருக்கும் கிரிமினல் குற்றங்களுக்கும் மோசடிகளுக்கும் அளவே கிடையாது.  1990ஆம் ஆண்டு தொடங்கி 2007ஆம் ஆண்டு முடியவுள்ள பதினேழு ஆண்டுகளில் காஷ்மீரில் ஏறத்தாழ 70,000 பேர் துப்பாக்கிச் சூடு, போலி மோதல், கொட்டடிக் கொலைகள் ஆகிய அரசு பயங்கரவாத அட்டூழியங்களுக்குப் பலியாகியுள்ளனர்.  அரசுப் படைகளால் விசாரணைக்கு இழுத்துச் செல்லப்பட்ட 8,000 பேர் காணாமல் போயிருப்பதாக மற்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.  காஷ்மீரிலிருந்து இராணுவத்தை விலக்கவும், ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கவும் கோரி கடந்த 2010ஆம் ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.  காஷ்மீரில் அரசுப் படைகள் நடத்தியிருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து அம்மாநில மனித உரிமை ஆணையத்திடம் மட்டும் கடந்த 14 ஆண்டுகளில் 5,699 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

உண்மை இவ்வாறிருக்க, கடந்த இருபது ஆண்டுகளில் வெறும் 50 வழக்குகளில் மட்டுமே குற்றமிழைத்த இராணுவத்தினரை விசாரிக்க மைய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.  இந்த 50 வழக்குகளில் தற்பொழுது 42 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.  தப்பித்தவறி மீதமுள்ள எட்டு வழக்குகளில் அனுமதி வழங்கப்பட்டாலும், வழக்கு விசாரணையை சிவில் நீதிமன்றங்களில் நடத்த மைய அரசு சம்மதிக்காது.  உண்மையும் நீதியும் இராணுவ நீதிமன்றங்களில் புதைக்கப்படும்.  இந்த அநீதியைத் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் காஷ்மீரிகள் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்?

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_____________________________________________________________

_____________________________________________________________

_____________________________________________________________

_____________________________________________________________